பரிசுத்த வேதாகமம் பற்றிய நம் நம்பிக்கைகள் எவ்வாறாக இருக்கவேண்டும் என்பதைப் பத்து அம்சங்களாகத் தந்திருக்கிறேன். சுருக்கமாக மனதிலிருத்திக்கொள்ள இது உதவும்.
இந்நம்பிக்கைகளைக் கொண்டிராமல் இருந்தால் நாம் கிறிஸ்தவ நம்பிக்கைகளை வேதம் தொடர்பாகக் கொண்டிருக்கவில்லை என்றுதான் அர்த்தம்.
1. வேதம் கர்த்தரின் சித்தத்தின் மொத்த வடிவம்; அதற்கு மேல் மனிதன் அறிந்துகொள்ள அவசியமான அவருடைய சித்தம் எதுவும் இல்லை. கர்த்தர் வேதத்தின் மூலமாக மட்டுமே தன் சித்தத்தை வெளிப்படுத்துகிறார்; அவர் நேரடியாக இன்று பேசுவதில்லை. இன்னொருவகையில் சொல்லப்போனால் கர்த்தரின் வெளிப்படுத்தல் நிறைவடைந்துவிட்டது.
2. வேதத்தின் மூலம் மட்டுமே மனிதன் நேரடியாகக் கடவுளைப் பற்றிய அறிவை அடைந்து, கிறிஸ்துவில் இரட்சிப்பை அடைய முடியும்.
3. வேதம், விசேஷமான முறையில் கர்த்தர் பரிசுத்த ஆவியினால் ஊதி அருளப்பட்ட தெய்வீகத் தன்மைகொண்ட வெளிப்படுத்தல். அதுபோன்று வேறெந்த எழுத்தோ, இலக்கியமோ உலகத்தில் இல்லை.
4. எபிரெய, கிரேக்க மொழியில் எழுத்தில் கர்த்தர் தந்து பாதுகாக்கப்பட்டிருக்கும் வேதம் தன்னில் எந்தத் தவறுகளையும் கொண்டிருக்கவில்லை; ஆனால், வேத மொழிபெயர்ப்புகள் குறைபாடுள்ளவையாக இருந்துவிடலாம்.
5. கர்த்தரின் வேதத்தோடு எதையும் சேர்க்கக்கூடாது; அதிலிருந்து எதையும் நீக்கவும் கூடாது. வேதத்தில் காணப்படுபவை மட்டுமே வேதம்; கர்த்தரின் வார்த்தை.
6. தெய்வீக வெளிப்படுத்தலாகிய வேதம் கர்த்தருக்குரிய சர்வஅதிகாரம் கொண்டது. வேதம் தன் அதிகாரத்தைத் தனக்குள்ளேயே கொண்டிருக்கிறது; அது தன் அதிகாரத்தை நிரூபிக்க படைக்கப்பட்ட எதிலும் தங்கியிருக்கவில்லை.
7. வேதம் அழியாது. அதாவது அதில் கொடுக்கப்பட்டிருப்பவைகள் நிச்சயம் நிறைவேறும்; அது ஒருபோதும் வீண்போகாது.
8. கர்த்தரின் சித்தத்தின் மொத்த வடிவமாகிய வேதம், அவருடைய சித்தத்தை இரண்டு விதங்களில் நமக்கு வெளிப்படுத்துகின்றது:
அ. நேரடியாக வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய விதத்தில் வெளிப்படையாகக் காணப்படுகின்றது.
ஆ. தன்னில் உள்ளடக்கமாகக் கொண்டிருந்து அவற்றை வெளிப்படுத்துகின்றது.
இரகசியமானவற்றைக் கர்த்தர் நமக்கு வெளிப்படுத்தவில்லை. அவர் மட்டுமே அதை அறிந்தவராக இருக்கிறார்.
9. வேதம் எப்போதும் ஒரு அர்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கும் (One sense); அதற்குப் பல அர்த்தங்கள் கிடையாது. ஒரு வேதபோதனையில் பல பயன்பாடுகள் இருக்கலாம், ஆனால், வேதத்தின் அர்த்தம் எப்போதும் ஒன்று மட்டுமே.
10. கிறிஸ்தவ வாழ்க்கை, திருச்சபை மற்றும் அனைத்து விஷயங்களிலும் வேதத்தின் தீர்ப்பு மட்டுமே இறுதியானது.