துணிவான பிரசங்கியும், நேசமுள்ள மேய்ப்பனும்
ஜூலை மாதம், செவ்வாய்கிழமை 14ம் தேதி, 2025ல் ஜோன் மெக்காத்தர் தனது 86ம் வயதில் பரலோக வாழ்வை அனுபவிக்க கர்த்தரால் அழைக்கப்பட்டார்.
அவருக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கையையும், கர்த்தரின் பணியையும் விசுவாசத்தோடு முடித்துவிட்டு மெக்காத்தர் இறைபதம் அடைந்துவிட்டார். இது நிகழப்போகிறதென்று அவருடைய சபை முதல் நாளே அறிவித்திருந்தது. காரணம், நிமோனியா பாதிப்பினால் அவர் மிகவும் பலவீனமாக இருந்ததுதான். ஒரு முக்கியமான மனிதரை கிறிஸ்தவ உலகம் இழந்து நிற்கிறது.
1980 களின் ஆரம்பத்தில்தான் ஜோன் மெக்காத்தரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். என்னுடைய அமெரிக்க நண்பர் அவருடைய விசிரி. கெரிஸ்மெட்டிக் இயக்கம் வளர்ந்துகொண்டிருந்த காலப்பகுதி அது. கிறிஸ்துவை விசுவாசித்த அந்த ஆரம்ப காலத்திலேயே சீர்திருத்த விசுவாசத்தை நம்ப ஆரம்பித்திருந்த நான் கெரிஸ்மெட்டிக் இயக்கத்திற்கு எதிரான வேத சாட்சியங்களைக் கண்டலைவதில் அதி தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். அப்போதுதான் என் நண்பர் எனக்கு மெக்காத்தரின் The Charismatics என்ற புத்தகத்தைத் தந்தார். அதில் வாசித்த சில பகுதிகள் இன்றும் நினைவில் நிழலாடுகின்றன. அப்புத்தகம் அன்று எனக்கு உதவியது.
அந்நூலில் கெரிஸ்மெட்டிக் இயக்கத்தார் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிக் கொண்டிருந்த தவறான எண்ணத்தை மெக்காத்தர் பின்வருமாறு விமர்சித்திருந்தார், ‘தலைவலி மாத்திரையைப் பொதுவாகத் தண்ணீரில் போட்டு குடிப்பதற்காக அது கரையும்வரை நாம் காத்திருப்போம். ஆனால், ஒரு கெரிஸ்மெட்டிக் அது கரையும்வரை காத்திருக்கப் பொறுமையில்லாமல் கோப்பையை பலத்தோடு வெகுவேகமாக ஆட்டிக்கொண்டிருப்பான்.’ இங்கே தலைவழி மாத்திரையை அவர் பரிசுத்த ஆவியாக உருவகப்படுத்தியிருந்தார். இந்நூலை மறுபடியும் திருத்தி 1992ல் Charismatic Chaos என்ற பெயரில் காலத்தின் தேவை கருதி வெளியிட்டார் மெக்காத்தர்.
ஜோன் மெக்காத்தரைப் பற்றி அன்று எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. அதற்குப் பிறகு சீர்திருத்த போதனைகளில் தீவிர நாட்டம் காட்டியதால் அத்தகைய போதனைகளைத் தந்த எழுத்தாளர்களையே அதிகம் நாடினேன். நான் மெக்காத்தரை சந்தித்ததில்லை; கலிபோர்னியாவில் அவருடைய சபைக்குப் போகும் வாய்ப்பும் வந்ததில்லை.
இதே காலப்பகுதியில்தான் எனக்கு சீர்திருத்த பாப்திஸ்து போதகரும், பிரசங்கியுமான அல்பர்ட் என். மார்டினின் அறிமுகம் அவருடைய ஆடியோ கெசட் பதிவுகளின் மூலமாகக் கிடைத்தது. மார்டினுக்கு இப்போது 90 வயது; அவரும் சில சரீர பாதிப்புகளோடு பரலோகப் பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்த ஆடியோ செய்திகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நான் அவரை முதலில் இங்கிலாந்திலும், பின்பு ஆஸ்திரேலியாவிலும் நேரில் சந்தித்து, அவரோடும், அவர் பணிபுரிந்த சபையோடும் கடந்த நாற்பது வருடங்களாக நல்லுறவையும், நட்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்க முடிந்தது. இந்த இருபெரும் மனிதர்களில் போதகர் மார்டினின் செல்வாக்கு என்னில் அதிகம் இருந்து வந்தது.
நான் வாலிபக் காலத்தில் மதித்து வந்திருந்த, என்னில் செல்வாக்கு செலுத்தியிருந்த போதகர்களும், பிரசங்கிகளும் ஒவ்வொருவராகத் தங்களுடைய இவ்வுலக ஊழியப்பணியை முடித்துவிட்டு கர்த்தரிடம் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஜாம்பவான்களான அவர்களுடைய இடத்தில் இருந்து அதே செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு தலைமுறையை இன்று பார்க்கமுடியாதிருப்பது இக்காலத்து சமுதாயத்திற்குப் பேரிழப்பு. அத்தகையோருடைய இடத்தில் இருக்கக்கூடியவர்கள் இல்லாது போனாலும் கிறிஸ்துவின் திருச்சபை வல்லமையோடு தொடர்ந்து கட்டப்பட்டு வரும் என்ற நம்பிக்கை மட்டும் எனக்குண்டு.
மெக்காத்தரில் இறையியல் மாற்றங்கள்
மெக்காத்தரின் சத்தியப் பாதையில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது 1970களின் இறுதிப்பகுதியில். அடிப்படைவாத டெல்பொட் இறையியல் கல்லூரியில் படிக்கும்போதே மெக்காத்தர் சீர்திருத்த, பியூரிட்டன் நூல்களையும், பிரின்ஸ்டன் இறையியலறிஞர்களின் நூல்களையும் வாசிக்க ஆரம்பித்திருந்தார். அவரை மிகவும் கவர்ந்த நூல்களில் ஒன்று தோமஸ் வொட்சனின் The Body of Divinity. இன்னொன்று ஸ்டீபன் சார்நொக்கின் The Existence and the Attributes of God. ஜோன் கல்வினின் வேதவிளக்க நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார். இந்த வாசிப்பெல்லாம் சீர்திருத்த பியூரிட்டன் இறையியல் நம்பிக்கைகளை அவரில் வளர்த்தது.
இதெல்லாமே சில காலத்துக்குப் பின் டல்ல்ஸ் இறையியல் கல்லூரியின் சார்ள்ஸ் ரைரி, சேன் ஹொட்ஜஸ் போன்றோரின் போதனைகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி Not Ashamed of the Gospel நூலை வெளியிட வைத்தது. அதன் தொடர்ச்சியாக அவர் The Gospel According to Jesus எனும் நூலையும், The Gospel According to the Apostles நூலையும், வேறு சில நூல்களையும் வெளியிட்டார். அவர் வாழ்வில் ஏற்பட்ட இந்த இறையியல் மாற்றங்களால் பரவலான அடிப்படைவாத இயக்கத்திலிருந்து அவருக்கு எதிராக ஏற்பட்ட எதிர்ப்புகள் ஏராளம். இந்நூல்கள் மெக்காத்தருக்கு அன்று அவர் சார்ந்திருந்த தரப்பாரிடமிருந்து பெரும் எதிர்ப்பைக் கொண்டு வந்திருந்த போதும், மெய்யான சுவிசேஷத்தை நம்புகிறவர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றது.
இதற்குப் பிறகு மெக்காத்தர் சுவிசேஷத்திற்கு முரணான பாரம்பரிய காலப்பிரிவுக் கோட்பாட்டின் (Classic Dispensationalism) அடிப்படைப் போதனைகளைக் கைவிட ஆரம்பித்தார். முற்று முழுதாக காலப்பிரிவுக் கோட்பாட்டை அவர் கைகழுவி விட்டிராதிருந்த போதும், அதன் அடிப்படைப் போதனைகளுக்கு அவர் முழுக்குப் போட்டு இரட்சிப்பு பற்றிய சீர்திருத்தப் போதனைகளை நம்பிப் பின்பற்றினார். அதற்குப் பிறகு சீர்திருத்தப் போதகர்களான ரொபட் சார்ள்ஸ் ஸ்பிரவுல், அல்மோஹ்லர் ஆகியோருடனும், இயன் மரே போன்றோருடனும் அவருக்கு நட்பு அதிகரித்தது. அவர்களோடு பல சந்தர்ப்பங்களில் ஒரே மேடையில் பேசியிருக்கிறார். அவர் பணியாற்றிய Grace Community சபையும் இரட்சிப்பியலில் சீர்திருத்த பாதையைப் பின்பற்ற ஆரம்பித்தது.
சீர்திருத்த வரலாற்றறிஞரான இயன் மரே, மெக்காத்தரைப் பற்றிய John McArthur: Servant of the Word and Flock எனும் ஒரு நூலை 2011ல் எழுதி வெளியிட்டார். அதில் மெக்காத்தரோடு தனக்கிருக்கும் இறையியல் வேறுபாடுகளை அவர் மறைத்துவிடாமல் குறிப்பிட்டுக் காட்டியிருந்ததோடு, நன்மையானவற்றை அங்கீகரித்தும் விளக்கியிருந்தார். மெக்காத்தரின் வாழ்வில் நிகழ்ந்த இறையியல் மாற்றங்களை இந்நூல் விளக்கி அவரைப் பற்றி அறிந்துகொள்ளத் துணைசெய்கிறது. மெக்காத்தரின் நட்பும் உறவுமே பின்னால் இயன் மரே ஏமி கார்மைக்கேலைப் பற்றி எழுதவைத்தது என்று எண்ணுகிறேன்.
பிரசங்க முறை
ஜோன் மெக்காத்தரின் பிரசங்கங்கள் உலகின் பல பாகங்களில் வாழும் கிறிஸ்தவர்களைத் தொட்டுப் பாதித்தது. வேதவசனங்களை வரிவரியாகப் பிரசங்கித்து வருவதை (expository preaching) ஆரம்ப காலத்திலிருந்தே மெக்காத்தர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அநாவசியக் கதைகளுக்கும், தன்னைப் பற்றிய சுவையான அனுபவக் குறிப்புக்களுக்கும் பிரசங்கத்தில் அவர் இடங்கொடுக்கவில்லை. அவரது பிரசங்கங்களைக் கேட்டு ஏதோவொருவிதத்தில் பாதிப்படையாதிருந்தவர்கள் மிகக் குறைவு. Grace To You அவருடைய பிரசங்கங்களை உலகெங்கும் கொண்டு சேர்த்தது. மெக்காத்தரின் எழுத்துப் பணியும் அவருடைய பிரசங்கங்களையும், வேத வியாக்கியானங்களையும் பலரும் பயன்படுத்திக்கொள்ள உதவி வருகிறது.
அந்நிய அக்கினி
கெரிஸ்மெட்டிக் இயக்கத்தின் செயல்கள் ஜொயல் ஒஸ்டின் போன்றோரால் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருப்பதைக் கவனித்த மெக்காத்தர் 2013ல் தன் சபையில் அந்நிய அக்கினி (Strange Fire) எனும் ஒரு மகாநாட்டை நடத்தினார். அதில் கெரிஸ்மெட்டிக் இயக்கத்தின் அத்துமீறிய செயல்களை மட்டுமல்லாமல் சீர்திருத்த கிறிஸ்தவத்தோடு அது ஒத்துப்போக முடியாது என்பதையும் அவர் ஆணித்தரமாக விளக்கினார். Strange Fire எனும் நூலையும் அவர் வெளியிட்டார்.
ஒரு வீடியோவில் அக்கூட்டத்தில் மெக்காத்தர் சொன்ன வார்த்தைகள் நினைவில் வருகின்றன. அது ஒரு கேள்வி நேரம். கூட்டத்தில் இருந்த ஒருவர் மெக்காத்தரைப் பார்த்துக் கேட்டார். ஜோன் பைப்பரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று. அதற்கு மெக்காத்தர் கண் இமைக்கும் நேரத்தில் பட்டென்று பதில் சொன்னார். ‘ஒருவர் கெரிஸ்மெட்டிக்காக இருந்து சீர்திருத்த போதனைகளைப் பின்பற்ற மாறலாம். ஆனால், சீர்திருத்த போதனைகளைப் பின்பற்றுகிற ஒருவர் கெரிஸ்மெட்டிக்காக மாற வழியில்லை.’ இதன் மூலம் இவை இரண்டும் இணைந்து பயணிக்க முடியாது என்பதை மெக்காத்தர் அன்று விளக்கத் தவறவில்லை.
இயன் மரே தன் நூலில் இதுபற்றி விளக்கும்போது, ’ . . . சீர்திருத்தவாதிகளினதும், பியூரிட்டன்களினுடையதும் போதனைகளைப் பின்பற்றினால் அவை கெரிஸ்மெட்டிக் நம்பிக்கைகளை நோக்கி வழிநடத்தும் என்பதை ஜோன் மெக்காத்தர் ஒருபோதும் நிச்சயமாக நம்பவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். (ibid, pg 210). இக்காலத்தில் உருவாகிய ’புதிய கல்வினித்துவத்திலும்’ (New Calvinism) மெக்காத்தர் அதிக அக்கறை காட்டவில்லை. ஏனெனில், அது கெரிஸ்மெட்டிக் நம்பிக்கைகளையும் உள்ளடக்கிய சாம்பார் இறையியல் பாதையில் போக ஆரம்பித்திருந்ததை மெக்காத்தர் அன்றே உணர்ந்திருந்ததுதான்.
நான் மிகவும் மதிக்கும் ஜோன் மெக்காத்தரோடு சீர்திருத்த கிறிஸ்தவனாக சில விஷயங்களில் முரண்படத்தான் செய்கிறேன் (கடைசிக்கால போதனைகள், காலப்பிரிவுக்கோட்பாடு, ஓய்வுநாள் அனுசரிப்பு). இருந்தபோதும் அவரில் நான் பாராட்டுகின்ற அம்சங்கள் என்ன தெரியுமா?
1. திருச்சபைக்கு அவர் கொடுத்த உயரிய இடம்.
தன் ஊழியத்தின் ஆரம்பத்திலிருந்து மெக்காத்தர் தன்னை ஒரு சபைப்போதகனாகவே கணித்தார். கடைசி மூச்சுவரை, ஐம்பது வருடங்களுக்கு மேல், அதன் போதகராக இருந்து அதை வளர்ப்பதிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்தார். வேறு எத்தனையோ பணிகளுக்கு அவர் தன் நேரத்தையும், கவனத்தையும் கொடுக்க வேண்டியிருந்தபோதும் திருச்சபைப் போதகனாக இருந்து அதற்குச் செய்யவேண்டிய பணிகளில் அவர் குறைவைத்ததாக செய்தியில்லை. கிறிஸ்துவின் திருச்சபைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு முன்னுதாரணமாக இருந்து வந்த மெக்காத்தர் நமக்கு அதில் நல்ல வழிகாட்டியாக இருந்திருக்கிறார். ஊழிய அழைப்பு என்றால் என்னவென்று தெரியாமல் கிறிஸ்துவின் பெயரில் எதையெதையோ செய்து, திருச்சபைக்கு வாழ்வில் இடங்கொடாதிருப்பவர்கள் மெக்காத்தரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
2. போதகக் கண்காணிப்பு
மெக்காத்தர் தன் சபை மக்களுக்கு வாழ்க்கையில் முக்கிய இடமளித்தார். அவர்களை அவர் இருதயபூர்வமாக நேசித்தார். அதேபோல் அம்மக்களும் அவரில் அன்புகாட்டினர். அத்தனை பெரிய சபையில் ஒரு போதகர் ஒவ்வொருவரோடும் சமமானவிதத்தில் நேரடித் தொடர்பு வைத்துக்கொள்வது மிகக் கடினம். இருந்தபோதும் அவருடைய சபை மக்களுக்குத் தேவையான போதகக் கண்காணிப்பைத் தன்னுடைய சக மூப்பர்களோடு இணைந்து அவர் கொடுக்கத் தவறியதில்லை. போதகக் கண்காணிப்பு என்றால் என்னவென்றே தெரியாது வெறும் பிரசங்கத்தை அளிப்பதிலேயே அநேகர் ஆர்வம் காட்டுகிறார்கள். மெக்காத்தர் இவை இரண்டையும் பிரித்துப் பார்க்கவில்லை. பிரசங்கமளிப்பதின் மறுபகுதியாக அவர் போதகக் கண்காணிப்பை நம்பினார்; கடைசிவரை அப்பணியை அவர் செய்துவந்தார்.
3. வியாக்கியானப் பிரசங்கம்
மெக்காத்தர் தன் ஊழியப்பணியை ஆரம்பித்த அடிப்படைவாத (Fundamentalism) சூழல் துல்லியமான வேத வியாக்கியானப் பிரசங்கத்தைச் செய்து வந்த சூழல் அல்ல. இருந்தபோதும் மெக்காத்தர் அதுவே வேதப் பிரசங்கத்தை நியாயப்படுத்தக்கூடிய சரியான சூழலாக ஏற்று வசனம் வசனமாக வேத நூல்களிலிருந்து பிரசங்கமளிப்பதைத் தன் பிரசங்கப் பாணியாகக் கொண்டிருந்தார். இதில் மார்டின் லொயிட் ஜோன்ஸ் தனக்கு முன்னோடி என்பதை அவர் குறிப்பிடத் தவறவில்லை. மெக்காத்தர் எழுதுகிறார், ‘என்னுடைய ஊழியத்தின் மெய்யான நோக்கம் முடிந்தவரை என்னுடைய சொந்தக் கருத்துக்களை பிரசங்கத்தில் சொல்லுவதைத் தவிர்ப்பதே. என்னுடைய கருத்துக்களை ஆண்டவருடைய கருத்துக்கள் என்று எண்ணிவிடுகின்ற ஒரு மாயத்தனத்தை ஆத்துமாக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்ற குற்றம் என்மீது சுமத்தப்படாமலிருப்பதில் நான் மிகக் கவனத்தோடிருக்கிறேன்.‘ (John McArthur, Servant of the Word and Flock)
ஆரம்ப காலத்தில் கிளாசிக்கள் காலப்பிரவு கோட்பாட்டை மெக்காத்தர் கொண்டிருந்ததால் அதனுடைய தாக்கங்கள் அவருடைய பிரசங்கங்களில் காணப்பட்டன. காலம் போகப்போக சீர்திருத்த இறையியலில் அவர் நாட்டம் காட்டித் தன்னுடைய பிரசங்கங்களையும் சீர்திருத்த இரட்சிப்பியலுக்கும், கிறிஸ்தவ வாழ்க்கைமுறைக்கும் முரணாக இல்லாதவிதத்தில் மாற்றிக்கொண்டார். சீர்திருத்த பியூரிட்டன் இறையியலில் தளராத நம்பிக்கை கொண்டிருந்த மெக்காத்தர், தன் பிரசங்கங்களில் தன்னைக் கல்வினித்துவாதி அல்லது சீர்திருத்தவாதி என்று குறிப்பிடுவதைத் தவிர்த்தார். அத்தோடு விசுவாச அறிக்கைகளையும் அவர் பிரசங்கத்தில் அதிகம் சுட்டிக்காட்டவில்லை. இதெற்கெல்லாம் காரணம் வேதவசனங்களை மட்டுமே விளக்கிப் பிரசங்கித்து அதிலிருந்தே சத்தியங்களை ஆத்துமாக்கள் உணரச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை அவர் கொண்டிருந்ததுதான். மெக்காத்தருடைய நோக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தாலும், விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப் போதனைகளையும் அவர் பயன்படுத்தியிருந்தால் ஆத்துமாக்கள் அவற்றை நாடிப் போய் பயன்படுத்தத் துணையாக இருந்திருக்கும் என்பதே என் கருத்து. அவற்றை வேறு எந்தவிதத்தில் சபைகளும், ஆத்துமாக்களும் பயன்படுத்த நாம் ஊக்குவிக்க முடியும்?
மெக்காத்தரின் குரல்வளம் அருமையானது. அது அவருக்குக் கர்த்தரளித்திருந்த ஈவு. பிரசங்கத்திற்கு ஏற்புடையதொன்று. கைகளையும் சரீரத்தையும் அதிகமாகப் பயன்படுத்தி, அநாவசியத்துக்குக் குரலை உயர்த்தி அவர் பிரசங்கமளிக்கத் தேவையில்லாதபடி கேட்பவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய குரல் வளத்தை ஆண்டவர் அவருக்கு அளித்திருந்தார். இதற்காக பிரசங்கம் செய்வதென்பது எளிதாகத் தனக்கு வருவதாக மெக்காத்தர் எண்ணவில்லை. அவர் உழைத்துப் பிரசங்கித்த உண்மைப் பிரசங்கி.
4. அப்பழுக்கில்லாத சுவிசேஷப் பிரசங்கம்
சுவிசேஷப் பிரசங்கமென்ற பெயரில் எதையெதையோ பிரசங்கம் என்ற பெயரில் அநேகர் பிரசங்கித்து வரும் அமெரிக்க கிறிஸ்தவ சூழ்நிலையில், சுவிசேஷத்தை அதன் அடிப்படை அம்சங்களுக்கு எந்தக் குறையும் வைக்காமல் சுத்தமாகப் பிரசங்கித்து வந்திருந்தார் மெக்காத்தர். அவர் வளர்ந்து வந்திருந்த அடிப்படைவாத (Fundamentalism) கிறிஸ்தவ சுழலில் இது பலருக்கும் விநோதமாகத்தான் இருந்திருக்கும். கூட்டங்களில் இரட்சிப்புக்காக எவரையும் கைகளைத் தூக்க வைக்காமலும், கூட்டத்தில் முன்னால் வந்து ஜெபம் செய்ய வைக்காமலும், ஆத்துமாக்களின் உணர்வுகளை அலங்கார வார்த்தைகளால் அசைத்து கிறிஸ்துவுக்காகத் தீர்மானம் எடுக்கவைக்காமலும் வேத வாக்கியங்களை மட்டும் விளக்கிப் பிரசங்கத்தில் கிறிஸ்துவை இலவசமாக அனைவருக்கும் வழங்குவதே அவருடைய பிரசங்கப் பணியாக இருந்தது. ஆடம்பரமெதுவுமில்லாத, ஆணித்தரமான சுத்தச் சுவிஷேப் பிரசங்கமாக அவருடைய பிரசங்கமிருந்ததால்தான் பரிசுத்த ஆவியானவர் அதைப்பயன்படுத்தி அநேகரை இரட்சித்திருக்கிறார்; அவருடைய சபையையும் வளரச் செய்திருக்கிறார்.
5. சத்தியத்திற்குப் பாதுகாவல்
மெக்காத்தர் தன் காலத்தில் அடிப்படை வேத சத்தியங்களுக்கு முரணான எதையும் துணிச்சலாகவும், வெளிப்படையாகவும் எதிர்த்து நிற்கத் தயங்கியதில்லை. எதிர்க்க வேண்டுமென்பதற்காக எதிர்க்காமல் சத்தியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அவர் மிகத் தைரியமாக சத்தியத்திற்கு முரணானவற்றையும், அத்தகையவற்றைப் போதிப்பவர்களையும் தோலுரித்துக் காட்டினார். அது அவரை சர்ச்சையாளராகப் பலரை எண்ண வைத்தது. உண்மையில் அத்தகைய தன்மையை அவர் கொண்டிருக்கவில்லை. தான் நம்பிய சத்தியத்தை வெளிப்படையாகத் தைரியமாகப் பிரசங்கித்ததே அவருக்கு எதிர்ப்பாளரிடமிருந்து அத்தகைய பெயரைப் பெற்றுத் தந்தது. அந்தவகையில் பார்க்கப்போனால் இயேசு கிறிஸ்துவும், அப்போஸ்தலர்களும், சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும்கூட அந்தப் பெயரைத்தான் பெற்றிருந்தனர்.
இயன் மரே தன் நூலில் மெக்காத்தர் 2008ல் குறிப்பிட்டிருந்ததைப் பின்வருமாறு தருகிறார், ’நான் இறையியல் கல்லூரியை விட்டு வெளியே வந்தபோது, நான் போராட வேண்டியிருந்த போராட்டங்களுக்கு முகங்கொடுக்கப் போகிறேன் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. என்னுடைய வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியைப் பரந்த சுவிசேஷ இயக்கத்தில் சுவிசேஷத்திற்காகவும், நற்போதனைக்காகவும் வாதாடுவதிலும் செலவிடப்போகிறேன் என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை.‘ (ibid, pg 209)
என்னைப் பொறுத்தவரையில் அடிப்படைச் சத்தியங்களுக்கு முரணான போதனைகளை, அவை நண்பர்களிடம் இருந்து புறப்பட்டாலும் துணிந்து எதிர்த்து நின்று ஆணித்தரமாகவும், பகிரங்கமாகவும் பிரசங்கித்த மெக்காத்தரைப் போன்ற ஒருவரைக் கடந்த நாற்பது வருடங்களில் நான் கேள்விப்பட்டதோ, கண்டதோ இல்லை. அப்படிச் செய்வது அவசியமா என்று சிலர் கேட்கலாம்; விவாதிக்க முற்படலாம். அத்தகைய சிந்தனை என் மனதில்கூட சில தடவைகள் தோன்றியிருக்கின்றது. உண்மையென்னவென்றால், அத்தகைய நிலைப்பாட்டை எடுக்க எல்லோராலும் முடியாது. சாதாரண மனிதர்களின் வார்த்தையை எவரும் பொருட்படுத்துவதில்லை. பிரபலங்கள் நமக்கேன் வம்பு என்று தங்களுக்கேற்படக்கூடிய இழப்பை எண்ணி வாளாவிருந்து விடுவார்கள். மெக்காத்தர் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மனதில் பட்டதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்; பிரசங்கித்திருக்கிறார். அதையும் செய்வதற்குத்தான் அவரை ஆண்டவர் எழுப்பியிருந்திருக்க வேண்டும்.
6. குணாதிசயம்
மெக்காத்தரைத் தெரிந்தவர்கள் அவருடைய தாழ்மையைப் பற்றிப் பேசாமல் இருக்கமாட்டார்கள். பிரசங்க ஊழியத்தில் மிக உயரத்திற்கு ஆண்டவர் அவரைக் கொண்டு சென்றிருந்தபோதும் ஜோன் மெக்காத்தரின் கால் தரையில் உறுதியாகப் பதிந்திருந்தது. பிரபலப் பிரசங்கியாக இருந்தபோதும் கிறிஸ்துவிடமிருந்து அவர் கற்றுக்கொண்ட தாழ்மை அவரைக் கிறிஸ்தவ விசுவாசத்திலும், கிறிஸ்தவப் பணியிலும் தன்நிலை இழக்காமல் இருக்க வைத்தது.
பிரபலமானவர்கள் என்றாலே அதோடு இணைந்து வரும் சோதனைகளுக்கு இடங்கொடுத்து விழுந்துவிடாமல் இருக்கவேண்டிய கடமைப் பொறுப்பையும் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கடமையில் மெக்காத்தர் தவறிழைக்கவில்லை. அவருடைய ஒரு சில இறையியல் நம்பிக்கைகளோடு ஒத்துப்போகாதவர்கள் அவர் மீது எச்சிலை அள்ளி வாரித்தெளித்தபோதும் மெக்காத்தர் நிலைதளராமல் தன் பணியில் தொடர்ந்தார். முரண்பாட்டாளர், சர்ச்சைக்குரியவர் என்ற பெயர்களைப் அவர் பெற்றிருந்தபோதும் கிறிஸ்தவ ஒழுக்கத்தில் எந்தக் குறைபாடும் இருப்பதாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டுக்கூட எழுப்பப்படவில்லை.
மெக்காத்தருக்குப் பின் . . .
Grace Community திருச்சபை தான் அன்புசெலுத்திய ஒரு அரும்போதகரை இழந்து நிற்கிறது. அவருடைய இடத்தை நிரப்புவது என்பது எவராலும் முடியக்கூடிய காரியமல்ல. திருச்சபைப் பணிகள் தொடரத் தேவையானவர்களை சபை கொண்டிருக்கிறது. இருந்தாலும் மெக்காத்தரின் இழப்பு அந்த சபைக்கு மிகப்பெரியது. மெக்காத்தரில் அவர்கள் அன்பு காட்டியபோதும், அவர் நேசித்த கிறிஸ்துமேல் அவர்கள் மேலதிக அன்புகாட்டி சபைக்கு விசுவாசமாக இருந்து தொடர வேண்டும் என்பதே என் ஆவலும், ஜெபமுமாகும்.