கிறிஸ்தவ வாழ்க்கை

புதிய வருடம் (2025) உதயமாகியிருக்கிறது. நினைவலைகளைப் புரட்டிப் பார்க்கிறபோது பல்வேறு கனவுகளோடு 2024ஐ எதிர்கொண்டிருக்கிறோம். நாம் நினைத்தவை நடக்கவில்லை; நினையாதவைகள் நடந்திருக்கின்றன.

உலகம் இயற்கை அழிவுகளையும், போர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறது. கோவிட் கிருமியின் அட்டகாசம் நின்று போயிருந்தாலும், அதன் பலமான தாக்கங்களை இன்றும் நாடுகள் அனுபவித்து வருகின்றன. விலைவாசி கூரைக்குமேல் போயிருக்கிறது. பொதுவாகவே எல்லா நாடுகளிலும் வேலைக்கு ஆள் தட்டுப்பாடும், பணவீக்கமும் அதிகரித்துப் போயிருக்கின்றன. என் நாட்டிலும் கூட இரவு வேலைகளில் நாற்பது பேருக்கு ஒரு மருத்துவ தாதி பணிசெய்து கொண்டிருக்கும் இக்கட்டான நிலைமை. கோவிட்டுக்கு முன்பிருந்ததைப் போல உலகம் இன்றில்லை.

இதெல்லாம் உலகத்தில் நிகழாமல் இருக்காது என்று இயேசு கிறிஸ்து அறிவித்திருக்கிறார். உலகம் அமைதியையும், பாதுகாப்பையும், மகிழ்வான சூழலையும் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்ற தப்பான இறையியல் நம்பிக்கை சிலருக்கிருக்கிறது. ஆனால், அது அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டும் ஏராளமான வேதப்பகுதிகளை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். வெளிப்படுத்தல் விசேஷமும், மத்தேயு 24-25 அதிகாரங்களும் இதையே சுட்டுகின்றன. பாவத்தால் சீரழிந்திருக்கும் இந்த உலகத்தை நிர்மூலமாக்கி புதிய உலகத்தையும் பரலோகத்தையும் ராஜாவாகிய இயேசு உருவாக்கப்போகிறார். அதனால் நாம் வாழும்வரை இந்த உலகத்தில் கர்த்தருக்குப் பணி செய்து புதிய உலகத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதே நம் கடமை என்பது என் நம்பிக்கை.

அநேகர் அழியவிருக்கும் இந்த உலகத்தில் நம்பிக்கை வைத்து அறியாமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பாவத்தில் இருக்கும் இந்த உலகம் அதிகம் பிடித்துப் போயிருக்கிறது. அதனாலேயே சுவிசேஷ எச்சரிக்கைகளை அவர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள். அவர்களுடைய கடினமான இருதயம் சுவிசேஷத்துக்கு அசைய மறுக்கிறது. 1 யோவான் 2:15-17 வரையுள்ள வசனங்களைக் கவனியுங்கள்:

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

யோவானும், ஏனைய புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் நாம் கடைசிக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று எச்சரித்திருக்கிறார்கள். அது இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையோடு ஆரம்பித்துவிட்டது. இந்தக் காலம் இயேசுவின் இரண்டாம் வருகையையும், நியாயத்தீர்ப்பையும் நோக்கி வேகமாக அசைந்துகொண்டிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலங்களில் நல்லவையும், கேடானவையும்; அமைதியும், அமைதியின்மையும்; சமாதானமும், போரும் தொடர்ந்து மாறி மாறி நிகழ்ந்துகொண்டேயிருக்கும். முழு அழிவோ அல்லது பூரண சமாதானமோ இந்த உலகத்தில் இருக்காது. உலகத்து மக்கள் எதிர்காலத்தைப் பற்றிய பெருங்கனவுகளோடு வாழ்க்கையில் வெற்றியை எதிர்பார்த்து உழைத்துக்கொண்டிருக்கும்போது, எவரும் அறியாத நேரத்திலும் காலத்திலும் இயேசுவின் வருகை அமைந்திருக்கும். அது எவருக்கும் தெரியாததால் அதைக் கணக்கிட்டு நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருக்கக்கூடாது. அப்படியானால் நாம் செய்யவேண்டியது என்ன?

ஆண்டவரை அறியாதிருப்பவர்களும், விசுவாசமற்றவர்களும் சுவிசேஷத்தில் அக்கறைகாட்டி அதைக் கேட்க வேண்டும். சுவிசேஷத்தை அறியாமல் எவருக்கும் கிறிஸ்துவின் இரட்சிப்பு கிடைக்காது. பாவிகளுக்கு இயேசு செய்திருக்கும் பரிகாரமும், பாவமன்னிப்பும் சுவிசேஷத்தைக் கேட்பதன் மூலமே ஒருவருக்குக் கிடைக்கிறது. ஒருவரும் நீதிமானாக இந்த உலகத்தில் இல்லாமல் இருப்பதால் நீதிமானாக கர்த்தரால் அறிவிக்கப்படுவதற்கு, நீதியைத் தன் மரணத்தின் மூலம் சம்பாதித்திருக்கும் இயேசுவிடம் பாவிகள் ஒடிவர வேண்டும். இயேசு மட்டுமே பாவிகளுக்கு இரட்சகர். ஒழுக்க வாழ்க்கை வாழ்வதன் மூலமாகவோ, சுயமாக எதையும் செய்து பார்ப்பதன் மூலமோ எவரும் தங்களை ஆவிக்குரியவிதத்தில் இரட்சித்துக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை; எல்லோருமே பாவிகளாகி தேவமகிமையை இழந்து நிற்கிறோம். இரட்சிப்பு கர்த்தருடையது; அவர் மட்டுமே அதைத் தரமுடியும். அவர் மட்டுமே பரிசுத்த ஆவியின் மூலம் பாவியில் மறுபிறப்பை ஏற்படுத்த முடியும். அதனால் பாவிகளாகத் தங்களை உணர்கிறவர்கள் இயேசு கிறிஸ்து தன் மரணத்தின் மூலம் செய்திருக்கும் பாவநிவாரண பலியை முழு மனத்தோடு நம்பி இயேசு கிறிஸ்துவை இரட்சிப்புக்காக விசுவாசிக்க வேண்டும். இந்தச் செய்தியை அறிவிக்கும் சுவிசேஷத்தைத் தெளிவாக இக்காலத்தில் பிரசங்கிக்க வேண்டிய பெருங்கடமை சபைக்கிருக்கிறது. அதில் சபை தன் முழுக்கவனத்தையும் செலுத்தவேண்டும்.

இயேசுவை விசுவாசிப்பவர்கள் அவருக்காக முழு மனத்தோடு வாழவேண்டிய கடமை அவர்களுக்கிருக்கிறது. பரிசுத்தத்தை வாழ்க்கையில் கொண்டிருந்து சபைக்கு விசுவாசமாகவிருந்து வாழ்க்கையில் கர்த்தர் எதிர்பார்க்கும் அத்தனைக் கடமைகளையும் அவருடைய மகிமைக்காகச் செய்துவரவேண்டிய பெருங்கடமை விசுவாசிகளுடையது. அதை ஆவியின் வழிநடத்துதலோடு அவர்கள் நிறைவேற்றி வரவேண்டும்.

இந்தப் பகுதியின் தலைப்பு புரிகிறா? புரிந்தாலோ அல்லது புரியாவிட்டாலோ என்னைத் தொடர்புகொள்ளுங்கள். வாசகர்கள் அனைவருக்கும் என் புதுவருட வாழ்த்துக்கள்!

© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.