கிறிஸ்தவ வாழ்க்கை

2 இராஜாக்கள் 2:19-22 இந்த வேதப்பகுதியில் தேவனுடைய கிருபை எவ்வாறு சபிக்கப்பட்ட எரிகோவை வந்தடைந்தது என்பதை நாம் ஆராயவிருக்கிறோம்.

ஆங்கிலத்தில் அநேக நல்ல கீர்த்தனைகள் இருக்கின்றன. அதில் ஒன்று Grace it’s charming sound என்பதாகும். தமிழில் மொழிபெயர்த்தால்,

“கிருபை இனிய சத்தம் காதுக்கு இணக்கமானது,
போதுமானது கிருபை,
ஒருபோதும் வல்லமை இழக்காதது,
கிறிஸ்து எனக்குள் ஜீவிக்கிறார்,
எடுக்க எடுக்க குறையாத தன்மையோடு.”

இது கிருபையைப் பற்றி எழுதப்பட்ட ஓர் அற்புதமான பாடலாகும். நாம் கவனிக்கப்போகும் இந்த வேதப்பகுதி, வேதம் போதிக்கின்ற கர்த்தருடைய கிருபை எவ்வாறு எரிகோ பட்டணத்தை அடைந்தது என்பதை விளக்குகிறது. எரிகோ சபிக்கப்பட்ட ஒரு நகரமாக இருந்தது. அப்படி சபிக்கப்பட்ட நகரத்திற்கு ஆசீர்வாதத்தை எது கொண்டுவர முடியும்? கிருபை மட்டுமே அதைச் செய்ய முடியும். நம்மேல் இருக்கும் பாவமாகிய சாபத்தைக் கூட தேவனுடைய கிருபை மட்டுமே நீக்கிக் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக இரட்சிப்பைக் கொடுக்க முடியும்.

2 இராஜாக்கள் 2:19-22 வரையுள்ள கீழ்வரும் வசனங்களைக் கவனியுங்கள்.

பின்பு அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள். அப்பொழுது அவன்: ஒரு புதுத்தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டு வாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது, அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.

இந்த நான்கு வசனங்களும் ஓர் அருமையான வரலாற்றை நமக்கு விளக்குகின்றன. இந்த நான்கு வசனங்களும் அந்தக் காலத்தில் எரிகோவாகிய நகரம் எந்தளவுக்கு மோசமான நிலையில் இருந்தது என்பதை விளக்குகின்றன. இந்த வேதப்பகுதியை வேகமாக, சாதாரணமாக வாசித்துக் கடந்துபோனால் அதில் சொல்லப்பட்டிருக்கிற உண்மைகளை இலகுவாக நாம் புரிந்துகொள்ள முடியாது. இது நிறுத்தி நிதானமாகவும், வேறு வேதப்பகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தும் வாசிக்க வேண்டிய வேதப்பகுதியாக இருக்கிறது. அந்தவகையில் ஆராய்கிறபோதுதான் இந்த நான்கு வசனங்களும் எத்தனை பெரிய விஷயத்தை விளக்குகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இந்த வேதப் பகுதியை நாம் மூன்று தலைப்புகளின் கீழாக ஆராய்வோம்.

1. எரிகோ பட்டணத்திற்கு வந்த சாபம்

2. எரிகோ பட்டணத்திற்கு வந்த தீர்வு

3. எரிகோ பட்டணத்திற்கு வந்த கர்த்தரின் கிருபை

1. எரிகோ பட்டணத்திற்கு வந்த சாபம்

2 இராஜாக்கள் 2:15ல், தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எரிகோவில் எலிசாவை சந்தித்தார்கள் என்று நாம் வாசிக்கிறோம். இது பலமுறை எலிசா எரிகோவிற்குப் போய் வந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. ஆகவே இந்த 19 வது வசனத்தின் மூலம் முதல்முறை எலிசா எரிகோவிற்கு போனார் என்று நினைத்துவிடக் கூடாது. எலியா சுழல் காற்றினால் பரலோகத்திற்கு எடுத்துக் கொண்ட பிறகு எலிசா யோர்தானின் அக்கரையிலிருந்து சால்வையினால் நதியை அடித்து இக்கரை சேர்ந்து எரிகோவிற்கு வந்தார். அவ்வாறு வந்தபோது அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்தார் என்று வேதம் விளக்குகிறது. அவர் தங்கியிருந்த அந்த மூன்று நாட்களுக்குள்தான் அங்கிருந்த பட்டணத்து மனிதர்கள் எலிசாவைப் பார்க்க வந்தார்கள். 19 வது வசனத்தில்

2 இராஜாக்கள் 2:19

“பின்பு அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள்” என்று விளக்குவதை நாம் பார்க்கிறோம்.

இங்கு ஆண்டவன் என்ற வார்த்தை கர்த்தரைக் குறிக்காமல் பெரிய மனிதர்களை மரியாதையாக அழைக்கும் வார்த்தையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வசனத்தை நாம் எழுத்துபூர்வமாக வாசிக்கிறபோது, இங்கு சொல்லப்பட்ட சில காரியங்கள் மாறுபடுவதைக் காணமுடியும். இந்த வசனத்தை மூல மொழியிலிருந்து தமிழ் வேதத்திலும், நல்ல ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் கூட எழுத்துபூர்வமாக மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்க்கவில்லை. ஏனென்றால் எபிரெய மொழியில் இருக்கின்ற வார்த்தையின் அழுத்தம் மொழிபெயர்ப்புகளில் வரவில்லை. இந்த வசனத்தை எழுத்துபூர்வமாக மொழிபெயர்த்தால், “அந்தப்பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் கருச்சிதைவால் துன்பப்படுகிறது.” என்று இருக்க வேண்டும். இவ்விதமாக மொழிபெயர்க்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். அதற்குக் காரணமிருக்கிறது. NASB என்ற நல்ல ஆங்கில வேதம் கூட விளைச்சல் அற்ற நிலம் (unfruitful) என்றுதான் இதை மொழிபெயர்த்திருக்கிறது. அது உண்மைதான், ஆனால் அதற்கும் மேலாக அந்த நிலத்தைப் பற்றிய ஆழமான கருத்து எபிரெய மூல வார்த்தையில் காணப்படுகிறது. நான் பயன்படுத்துகிற NKJV என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு பாழ்நிலம் (barren) என்று மொழிபெயர்த்திருக்கிறது. ஆனால் நிலமும் கருச்சிதைவால் துன்பப்படுகிறது என்று மொழிபெயர்ப்பதே சரியானதாக இருக்கும். இதற்கான காரணத்தை இனி விளக்குகிறேன்.

எரிகோ நகரத்திற்கு வந்துகொண்டிருந்த நீரூற்றுகள் மிகவும் மோசமானவையாக இருந்தன. அவை குடிநீராகப் பயன்படுத்த முடியாத வகையில் அதிமோசமானதாக இருந்தன, அதுமட்டுமல்ல அந்தத் தண்ணீர் எங்கு சென்று நிலத்தில் பாய்கிறதோ அங்கு ஒரு பயிரும் வளர முடியாதபடி அதை நாசமாக்கி விட்டது. ஆகவே அந்தத் தண்ணீரினால் எந்தவித நன்மையும் இல்லாமல் இருந்தது. அந்தத் தண்ணீரைக் குடிக்கிற மனிதர்களுக்கும் பல மோசமான வியாதிகள் வந்தன, நிலங்களும் பயிர் வளர்ந்து பலன் கொடுக்காதபடிக்கு மோசமானவையாக இருந்தன. ஆகவே அந்தத் தண்ணீர் நிலத்திற்கு மட்டுமல்ல, அந்த நிலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தத் தண்ணீரில் ஏதோவொரு மோசம் இருந்தது. அதற்குக் காரணமே அதற்குக் கொடுக்கப்பட்ட சாபம்தான். அந்த நகரமும் சபிக்கப்பட்ட நகரமாக இருந்தது. அந்த சாபத்தினால் அங்கிருந்த தண்ணீர் விஷத்தன்மை உடையதாக மாறியது. அது மனிதனுக்கும் நிலத்திற்கும் மிருக ஜீவன்களுக்கும் பேராபத்தை விளைவிக்கிறதாகவும் இருந்தது. இந்த 19 வது வசனத்தில் “நிலமும் கருச்சிதைவால் துன்பப்படுகிறது” என்று சொல்லப்படுகிறது. இங்கு நிலமும் என்ற வார்த்தை வெறும் நிலத்தை மட்டுமல்ல, அங்கு வாழ்ந்த மக்களையும் குறிக்கிறது. அந்த நிலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அந்தத் தண்ணீர் கருச்சிதைவை உண்டாக்கியது. அப்படியென்றால் அந்த நிலத்தில் வாழ்ந்து அந்தத் தண்ணீரைக் குடித்த திருமணமான பெண்களுக்கு பிள்ளை பெறமுடியாதபடி அது கருச்சிதைவை உண்டாக்கியது.

எரிகோ பட்டணத்திலிருந்த திருமணமான அநேக பெண்கள் பிள்ளைகள் இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். அவர்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டு பிள்ளைகளை இழந்து கொண்டிருந்தார்கள். அந்தளவுக்கு அங்கிருந்த தண்ணீரூற்றுக்கள் மோசமானவையாக இருந்தன. ஆகவே அங்கிருந்த மக்கள் ஊருக்கு வெளியில் இருந்துதான் தண்ணீரைக் கொண்டுவந்து பயன்படுத்தி இருப்பார்கள். பலவிதமான துன்பங்களோடு அந்த நகரத்தின் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்தளவுக்கு நகரமே மோசமானதாக இருந்ததற்கு காரணம் கர்த்தரின் சாபம்தான். நமக்குச் சில கேள்விகள் எழலாம், ஏன் அந்த நகரத்தின் அதிகாரிகள் அதற்கு ஒரு வழியைத் தீர்வாகக் கண்டுபிடிக்கவில்லை? அந்தத் தண்ணீரை சுத்தமாக்குவதற்கு அவர்கள் எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லையா? இந்தப் பகுதி அதைப் பற்றி நமக்கு விளக்கமளிக்கவில்லை. அவர்கள் எலிசா அங்கு வருகிற வரையும் காத்திருந்து அவரிடம் உதவி கேட்டதற்குக் காரணமென்ன? இதற்கு முன்னால் வேறு யாரிடமாவது அவர்கள் உதவி கேட்டிருந்தார்களா என்றும் நமக்குத் தெரியாது. நாம் பதில் தேட வேண்டிய கேள்விகள் இருக்கின்றன.

சென்னை போன்ற பெருநகரத்தில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் என்னவாகும்? அங்கு நிலத்தடியிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாமலும், வெளியிலிருந்து தண்ணீர் கொண்டுவரமுடியாமலும் இருந்து, கூவம் ஆற்றின் தண்ணீரைப் பயன்படுத்தும் நிலை வந்தால் இவ்வாறுதான் போய் முடியும். கூவம் ஆற்றின் தண்ணீரைக் குடிக்கிறவர்கள் எவ்வாறு உயிர் வாழமுடியும்? எரிகோ பட்டணத்து மக்களும் அவ்விதமான மோசமான நிலையில்தான் காணப்பட்டார்கள். எரிகோ பட்டணத்தில் எவ்வளவு காலமாக இவ்விதமான நிலை காணப்பட்டது? எவ்வளவு பேர் அதன் காரணமாக இறந்து போயிருப்பார்கள்? மக்கள், மிருக ஜீவன்கள், பயிர் வகைகள் போன்றவை எவ்விதமான மோசங்களைச் சந்திக்க நேரிட்டது என்ற கேள்விகள் எல்லாம் நமக்கு உருவாகும். இந்தக் கேள்விகளுக்குப் பதிலைக் கண்டு பிடிப்பதற்கு நாம் வரலாற்றைப் பின் நோக்கிச் சென்று ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.

பழைய ஏற்பாட்டில் யோசுவா நூலில் ஆறாவது அதிகாரத்தைக் கவனியுங்கள். யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேலர்கள் பல ஊர்களை ஒவ்வொன்றாகக் கைப்பற்றிக் கொண்டு வந்தார்கள். ஏனென்றால் அவ்வாறு அந்த ஊர்களை எல்லாம் கைப்பற்றித்தான் கானான் தேசத்திற்குள் நுழைய வேண்டும். யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேல் மக்கள் எரிகோ நகரத்திற்கு வருகிறார்கள். அதன் வரலாறு உங்களுக்குத் தெரியும். இஸ்ரவேல் மக்கள் ஏழு முறை எரிகோவைச் சுற்றி வந்து ஆண்டவருடைய வல்லமையின் மூலமாக அந்த நகரத்தைப் பிடித்தார்கள் என்று நாம் வாசிக்கிறோம். யோசுவா 6:26 வது வசனத்தில்

“அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்” என்று சொல்லப்படுகிறது.

யோசுவா இந்த மாதிரியான சாபத்தை தான் வெற்றி கண்ட ஒவ்வொரு நகரத்தின் மீதும் கூறினானா என்று கேட்டால், அவ்வாறு அவன் செய்யவில்லை என்பது தெரிய வருகிறது. ஆனால் இந்த எரிகோ நகரம் மட்டும் இவ்வாறு சபிக்கப்பட்டது என்பதை நாம் கவனிக்கிறோம். அந்த நகரத்தில் இருந்த அனைத்தையும் ஆண்டவர் அடியோடு அழிக்கும்படியாகச் சொன்னார், யோசுவா அப்படியே அதைச் செய்தான். செய்து முடித்த பிறகு இவ்வாறு சாபத்தையும் அறிவித்தான். கர்த்தர் இல்லாமல் யோசுவா இதைச் செய்திருக்க முடியாது. ஆகவே யோசுவா இந்த நகரத்தின் மீதிருந்த தனிப்பட்ட காரணத்தினாலோ, ஆத்திரத்தினாலோ இவ்வாறு செய்தான் என்று நாம் நினைக்கக்கூடாது. இது கர்த்தரே யோசுவாவின் மூலம் சொன்ன காரியமாகும். யாராவது அந்த நகரத்தைக் கட்ட நினைத்தால் தன் மூத்த குமாரனையும் இளைய குமாரனையும் சாகக் கொடுப்பான் என்று சாபம் கொடுக்கப்பட்டது. இதுதான் எரிகோ பட்டணத்தின்மேல் வந்த சாபம். இவ்வளவு பெரிய சாபம் அந்த பட்டணத்தின் மீது கொடுக்கப்பட்டதற்கு காரணமென்ன என்று நாம் யோசிக்கலாம். அதற்குப் பதில் நமக்குத் தெரியாது, ஆண்டவர் அதற்கு பதிலளிக்கவில்லை. எல்லாப் பட்டணங்களுக்கும் இவ்வாறு நிகழவில்லை, ஆனால் எரிகோ பட்டணத்திற்கு இது நிகழ்ந்திருந்தது. யோசுவா 6:27 வது வசனத்தில்,

“இவ்விதமாய்க் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று” என்று வேதம் சொல்லுகிறது.

இந்த வசனத்தை நாம் பார்க்கிறபோது யோசுவா கொடுத்த சாபத்திற்கும், கர்த்தர் அவனோடு இருந்தார் என்பதற்கும் தொடர்பு இருக்கிறது. ஆகவே இது யோசுவாவின் தனிப்பட்ட பிரச்சனையல்ல, அது கர்த்தருடைய திட்டம், அவர் அந்த சாபத்தைக் கொடுத்திருக்கிறார். யோசுவா செய்த காரியம் கர்த்தருக்குப் பிடித்த காரியமாக இருந்தது. யோசுவாவின் கீர்த்தி அதாவது அவனது புகழ் தேசமெங்கும் பரவியது என்று நாம் பார்க்கிறோம்.

இதற்குப் பிறகு நாம் 1 இராஜாக்கள் 16:34 ஆம் வசனத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அங்கேயும் எரிகோவைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். அந்நாட்களில் கொடூரமான ஆகாப் அரசன் இஸ்ரவேலை ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவனுடைய காலத்தில் மிகவும் குறைவானவர்களே வேதத்திற்கு மதிப்புக் கொடுத்து வாழ்ந்து வந்தார்கள். கர்த்தருடைய வார்த்தைக்கு அநேகர் அன்றைக்கு மதிப்பே கொடுக்கவில்லை. அப்படியிருந்தபோதும் ஒரு மனிதன் மட்டும் வீம்புக்கென்று இந்த நகரத்தை மறுபடியும் கட்டுவதற்கு தைரியத்தோடு முன் வந்தான். அப்படி அவன் முன்வந்தபோது,

1 இராஜாக்கள் 16:34

“அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்” என்று சொல்லப்படுகிறது.

இங்கு அவன் நாட்களில் என்று சொல்லப்படுவது ஆகாப் ராஜாவைக் குறிக்கிறது. யோசுவா காலத்தில் கொடுத்த சாபம் ஆகாப் காலம் வரையும் தொடர்ந்து அந்த பட்டணத்தைப் பாதித்துக் கொண்டிருந்தது. அது பாழடைந்த இடமாக இருந்திருக்கலாம், ஆனாலும் மக்களில் குறைந்தளவானவர்கள் அதில் தொடர்ந்தும் வாழ்ந்திருந்திருக்கக்கூடும்.

ஆகாபின் காலத்தில் பெத்தேல் நகரத்தைச் சேர்ந்த ஈயேல் இந்த எரிகோ நகரத்தைத் திரும்பக் கட்ட முயற்சிகளைச் செய்தான். அப்படி அவன் செய்தபோது தன் மூத்த குமாரனையும் இளைய குமாரனையும் பலிகொடுக்க நேர்ந்தது. அங்கு என்ன நடந்தது? ஆண்டவர் தன் சாபத்தின்படி அவர்களைக் கொன்றார் என்று பார்க்கிறோம். ஏனென்றால் கொடுத்த சாபத்தை மீறிக் கட்ட வேண்டாம் என்ற கட்டளையை மீறி அவன் நகரத்தைக் கட்டியதால் அவ்வாறு நேரிட்டது. ஆகவே அந்த சாபம் அந்த எரிகோ பட்டணத்தின் மீது தொடர்ந்து இருந்தது என்று பார்க்கிறோம். யாராவது கர்த்தருடைய வார்த்தையைச் சோதித்துப் பார்த்தால் அவருடைய நீதியான நியாயமான கோபம் அவர்கள்மேல் வந்து இறங்கும். ஆகவே இந்த ஈயேல் செய்த காரியம் அவனைப் பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விட்டது. அவன் குடும்பத்தில் இரண்டுபேரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஏன் ஈயேல் இவ்வளவு தூரம் ஆணவத்தோடு கர்த்தருடைய வார்த்தையை மீறி இந்த நகரத்தைக் கட்ட முயன்றான்? அதற்கான காரணத்தை 33 வது வசனத்தில் பார்க்கிறோம். இவையெல்லாம் இங்கு தற்செயலாக எழுதப்பட்ட வார்த்தைகள் அல்ல.

1 இராஜாக்கள் 16:34

“ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப் பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான்.”

ஆகாப் எவ்வளவு மோசமான ராஜாவாக இருந்தான் என்று பாருங்கள். இதற்கு அடுத்த வசனத்திலேயே ஈயேல் எரிகோவைக் கட்ட முயன்றதைப் பார்க்கிறோம். அப்படியானால் ஈயேல் செய்ததற்குக் காரணமென்ன? தேவனுடைய வார்த்தையை அவன் மீறி நடந்தான் என்று நாம் பார்க்கிறோம். ஆகாபைப் போல ஒரு மோசமான அரசன் இருந்து, அவன் செய்த கொடுமைகளை எல்லாம் அந்நாட்டு மக்கள் அனுபவித்து, தேவனுக்கு எவ்வித மதிப்பும் கொடுக்காமல் அவருடைய வார்த்தையை மீறி நடந்து, புற தெய்வ வழிபாட்டில் அவர்கள் ஈடுபட்டு,  பத்துக் கட்டளைகளை எல்லாம் நிராகரித்து வாழ்ந்து வருகிற சமுதாயத்தில் வளர்கின்ற சந்ததியினர் எப்படி இருப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். பெத்தேலில் இருக்கிற ஈயேல் இவ்விதமாகச் செய்ததற்கு அவன் ஆகாபின் சந்ததியில் வந்திருந்தது ஒரு காரணம். ஏனென்றால் ஆகாபின் சந்ததியில் எவரும் கர்த்தருக்கும் அவருடைய வார்த்தைக்கும் எந்தவித மதிப்பும் தரவில்லை. அவ்விதமான சமுதாயத்தில் வந்தவன்தான் இந்த ஈயேல். தேவனை நிந்திக்கிற ஒரு சமுதாயத்தில் வந்த ஈயேல், வீம்புக்கென்று இந்தக் காரியத்தை செய்யப்போய் தன்னுடைய குடும்பத்தை இழந்தான் என்று பார்க்கிறோம்.

அதுமட்டுமல்ல இந்த 1 இராஜாக்கள் 16 ஆம் அதிகாரம் முடிந்து அடுத்த அதிகாரம் ஆரம்பிக்கிறபோது எவ்வாறு விளக்கப்படுகிறது என்பதைப் பாருங்கள்.

1 இராஜாக்கள் 17:1

“கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.”

இந்த வசனம் ஆங்கிலத்தில் And என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்கிறது. ஆனால் தமிழில் அது இல்லாமல் ஆரம்பிக்கிறது. 1 இராஜாக்கள் 16:33 -வது வசனத்தில் ஆகாப் எல்லா ராஜாக்களை விடவும் கொடுமையாக நடந்தான் என்றிருக்கிறது. 34 வது வசனத்தில் ஈயேல் செய்த அநியாயத்தையும் அதனால் அவனுக்கு வந்த ஆபத்தையும் பார்க்கிறோம். 1 இராஜாக்கள் 17:1 வது வசனத்தில் அடுத்த ஆபத்து வருகிறதைப் பார்க்கிறோம். தொடர்ச்சியாக ஆண்டவருடைய வார்த்தையை உதாசீனப்படுத்தி மீறி நடந்தால் அவர் அமைதியாக இருக்கமாட்டார். அவருக்கு அமைதியாக இருக்கத் தெரியும், அவரின் குணாதிசயங்களில் ஒன்று நீடிய பொறுமை. ஆங்கிலத்தில் Long suffering என்று அதற்கு அர்த்தம். எதற்கும் அவசரப்பட்டு உடனடியாகத் தண்டனை கொடுப்பவரல்ல கர்த்தர்.

2019 க்கு முன்பு பார்க்கிறபோது உலகம் பெரியளவுக்கு உலகளாவிய பிரச்சனைகள் இல்லாமல் தான் இருந்தது. நன்மை செய்கிறவர்கள் நன்மை செய்து கொண்டிருந்தார்கள், தீமை செய்கிறவர்கள் இன்னும் அதிகமாகத் தீமை செய்து கொண்டிருந்தார்கள். ஆண்டவர் பேச்சுக்கு எவரும் மதிப்பு கொடுக்காமல் வாழ்ந்து வந்தனர். பணத்தை அளவுக்கு அதிகமாக சம்பாதித்தனர், பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்காமல் நிந்தித்தனர், உலக சிற்றின்பங்களை அனுபவிப்பதிலேயே மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர். செல்வத்தில் நாடுகள் முன்னோக்கிப் போய்கொண்டிருந்தன, திட்டங்களை வகுப்பதில் அவை ஆர்வம் காட்டின. ஆனால் ஆண்டவருடைய நீடிய பொறுமைக்கும் ஒரு முடிவு வந்தது. கொரோனா என்ற ஒரு கிருமியை அவர் உலகம் சந்திக்க அனுமதித்தார். எல்லாவற்றையும் அது முடக்கிப் போட்டது. அது ஒருவரும் ஒன்றுமே செய்ய முடியாதபடியும், எங்கும் நகர முடியாதபடியும் செய்துவிட்டது. உலகம் முழுவதும் அதனால் பல இலட்சக்கணக்கானோர் இறந்து போனார்கள். அவ்வாறு நடந்ததற்கும் ஆண்டவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று நினைக்கிறீர்களா? இது நிகழ்வதற்குப் பல வருடங்களுக்கு முன்பு ஆண்டவர் சுனாமியை அனுப்பினார், அப்போதும் இலட்சக்கணக்கானோர் இறந்து போனார்கள். என்னதான் ஆண்டவர் சற்று இடைவெளிவிட்டு தண்டனையைக் கொடுத்தாலும் மனிதன் திருந்துவதாக இல்லை. உருவ வழிபாட்டை விடுவதாக இல்லை. ஆண்டவர் எவ்வளவு காலந்தான் பொறுமையாக இருப்பார். பழைய ஏற்பாட்டில் இதுபோல பல சம்பவங்கள் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் நமக்கு எதை விளக்குகின்றன? ஆண்டவர் அநாவசியமாகத் தொடர்ந்து எப்போதும் அமைதியாக இருக்கமாட்டார். பழைய ஏற்பாட்டில் நடந்த சம்பவங்களைப்போல நம் வாழ்நாட்களில் நாமும் அவற்றைச் சந்திக்க நேரிட்டிருக்கிறது. ஆண்டவர் இன்றும் நம்மோடு பேசுகிறார். இஸ்ரவேலோடு ஆண்டவர் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பேசியதுபோல இன்றும் பேசுகிறார். அன்று எரிகோ பட்டணத்திற்கு சாபம் வந்ததன் மூலம் அவர்களோடு பேசினார். நாம் நம் முதல் பெற்றோர்கள் ஆதியில் செய்த பாவத்தின் காரணமாக ஏற்பட்ட சாபத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அந்தப் பாவம் நம் ஒவ்வொருவரின் மீதும் இறங்கியிருக்கிறது. அது நீக்கப்படாதவரையும் நமக்கு ஆபத்தே காத்திருக்கிறது. எரிகோ பட்டணம் அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.

2. எரிகோ பட்டணத்திற்கு வந்த தீர்வு

அடுத்ததாக, எரிகோவின் பட்டணத்திற்கு எவ்வாறு தீர்வு ஏற்பட்டது என்பதைக் கவனிப்போம்.

2 இராஜாக்கள் 2:20-23

“அப்பொழுது அவன்: ஒரு புதுத்தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டு வாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது, அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.”

எலிசா ஒரு புதுத்தோண்டியில், அதாவது ஒரு சிறிய பாத்திரத்தில் உப்பைப் போட்டுக் கொண்டுவா என்றார். எலிசா அந்தப் பாத்திரத்தைக் கையில் வாங்கிக்கொண்டு நகரத்திற்கு எங்கிருந்து தண்ணீர் ஊற்று வந்ததோ அங்கு சென்று பாத்திரத்திலிருந்த உப்பை அதில் போட்டார். அதனால் அந்த தண்ணீர் ஆரோக்கியமாயிற்று என்று நாம் பார்க்கிறோம்.

இந்த அற்புதத்திலிருந்து நாம் எதைக் கற்றுக் கொள்ளலாம்? முதலாவதாக, இதை விளங்கிக்கொள்ளுவதற்கு இங்கு சொல்லப்பட்டிருக்கும் உப்பை வைத்து அநாவசியக் கதைகளைக் கட்டக்கூடாது. சில வேத விளக்கவுரையாளர்கள் கூட இந்த உப்பை வைத்துத் தேவையற்ற விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். ஆண்டவர் அவ்வாறு விளக்கமளித்திருந்தால் தவிர மற்றபடி உப்பை உப்பாக மட்டுமே பார்க்க வேண்டும். உப்புக்கும் பாத்திரத்திற்கும் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால் இந்த வேதப் பகுதி விளக்குகிற சத்தியத்தை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. எலிசா உப்பைப் பயன்படுத்தியதற்கு காரணமிருக்கிறது. ஏனென்றால் நாம் 2 இராஜாக்கள் புத்தகத்தைத் தொடர்ந்து வாசித்தால் நடந்திருக்கும் அத்தனை சம்பவங்களிலும் ஏதோ ஒரு பொருளை எலிசா பயன்படுத்தியிருக்கிறார். ஆண்டவரின் அனுமதியோடுதான் அவ்வாறு பயன்படுத்தி வந்திருந்தார். ஆகவே அதில் பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. உப்பு இங்கே வெளிப்புறமான அடையாளமாக இருக்கிறது. அந்த உப்போடு கர்த்தருடைய வார்த்தை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. வார்த்தையினால்தான் அற்புதம் நடந்ததே தவிர உப்பினால் அந்த அற்புதம் நடைபெறவில்லை. உப்பு அங்கு பயன்படுத்தப்பட்டபோதும் உப்போடு வந்த எலிசாவின் வார்த்தைகளே அந்த அற்புதத்தைக் கொண்டுவந்தன. எலிசா என்ன சொல்லுகிறார்? “இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்” என்று சொல்லுகிறார். இதிலிருந்து கர்த்தருடைய வார்த்தை கர்த்தருடைய தீர்க்கதரிசியின் மூலம் கர்த்தருடைய மக்களுக்கு கிருபையைக் கொண்டுவந்ததைப் பார்க்கிறோம். இதுதான் கர்த்தர் எலிசாவின் மூலம் செய்த பெரிய அற்புதமாகும். ஒரு சின்ன பாத்திரத்தைக் கொண்டுவரச்சொல்லி வெறும் உப்பைப் பயன்படுத்தி யோசுவா காலம் முதல் ஆகாப் ராஜாவின் காலம் வரைக்கும் சபிக்கப்பட்டு யாருக்கும் பயன்படாதிருந்த நிலத்தையும் தண்ணீரையும் அவ்வளவு சீக்கிரத்தில் எலிசா மாற்றிவிட்டார். அந்தச் சாபத்திற்கு ஒரு தீர்வைக் கொண்டு வந்தார். இதிலிருந்து நாம் எதைக் கவனிக்கிறோம்? கர்த்தருடைய கிருபையின் அற்புதத்தைப் பார்க்கிறோம். அது எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடியதாக இருக்கிறது என்பதை இங்கு பார்க்கிறோம். அது தேவனுடைய கிருபையின் மகத்துவத்தைக் காட்டுகிற அற்புதமாக இருக்கிறது.

3. எரிகோ பட்டணத்திற்கு வந்த கர்த்தரின் கிருபை

எரிகோ சபிக்கப்பட்ட நகரமாக இருந்தது. அவ்வாறு இருந்ததனால் அந்தப் பட்டணத்திற்குச் சென்று வாழலாம் என்று யாரும் சாதாரணமாக நினைக்கமாட்டார்கள். அது எல்லோரும் அறிந்திருந்த உண்மை; இரகசியமானதல்ல. அப்படிப்பட்ட அந்தப் பட்டணத்திற்கு ஆசீர்வாதமான கிருபை வந்து சேர்ந்திருக்கிறது. ஆண்டவர்தான் அந்த நகரத்திற்கு சாபத்தைக் கொண்டுவந்து தண்டித்தார். ஆனால் இப்போது சாபத்தை நீக்கி விடுதலையையும் கொண்டுவந்தார் என்று பார்க்கிறோம். இதுபோல வரலாற்றில் முன்பும் நடந்துள்ளது. என்றும் மாறாதவராக இருக்கிறேன் என்று சொன்ன ஆண்டவர் இதே காரியத்தை யாத்திராகமம் 15 ஆம் அதிகாரத்தில் செய்திருக்கிறார்.

யாத்திராகமம் 15:22-26

“பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர்வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது. அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள். மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும் ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து: நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.”

ஆண்டவர்தான் நமக்கு விடுதலையைக் கொண்டுக்கிறவர், அவரல்லாமல் யாருக்கும் விடுதலை வராது. மாரா என்பதற்கு கசப்பு என்று அர்த்தமாகும். இந்த கசப்பான தண்ணீர் குடிக்கக்கூடிய நல்ல தண்ணீராக மாறியது போல இங்கு சபிக்கப்பட்ட எரிகோவின் தண்ணீரும் நல்ல தண்ணீராக மாறியது. 2 இராஜாக்கள் 2 ஆம் அதிகாரத்தில் எதைக் காண்கிறோம்? ஒரு சாப நகரம் என்று பெயர் பெற்றிருந்த எரிகோ கிருபையின் நகரமாக மாறியது. அதைச் செய்தது எது? கர்த்தருடைய வார்த்தை கர்த்தருடைய தீர்க்கதரிசியின் மூலமாக கர்த்தருடைய மக்களுக்கு அவருடைய கிருபையைக் கொண்டுவந்தது என்று பார்க்கிறோம்.

இதே நேரத்தில் லூக்கா 19 அதிகாரத்தையும் கவனிப்போம். யோசுவாவின் காலத்தில் சபிக்கப்பட்ட அந்த நகரம் ஆகாபின் காலம் வரை தொடர்ந்திருந்தது. எலிசாவின் காலத்தில் கிருபை அந்த நகரத்திற்கு வந்தது. லூக்கா 19 ஆம் அதிகாரத்தில் புதிய உடன்படிக்கைக் காலத்தில் இயேசு எரிகோவிற்கு வருகிறார். “அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்” (லூக்கா 19:1) என்று வசனம் ஆரம்பிக்கிறது. அன்றைக்கு எரிகோவில் யாரைச் சந்திக்கிறார்? சகேயு என்ற ஆயக்காரனின் தலைவனைச் சந்திக்கிறார். 2 இராஜாக்களில் அந்த எரிகோ நகரம் குணப்பட்டதற்கு அங்கிருந்தவர்கள் ஆண்டவருக்கும் எலிசாவிற்கும் நிச்சயமாக நன்றி சொல்லியிருப்பார்கள். ஆனால் அவர்கள் ஆண்டவரை விசுவாசித்து அவரையே தேவனாக ஆராதித்திருப்பார்களா? அது நமக்குத் தெரியாது. அன்றைக்கு கிருபை கர்த்தரை நம்புவதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தது. இப்போது இயேசு தன்னுடைய காலத்தில் சகேயுவிற்கு இரட்சிப்பைக் கொண்டுவந்தார். அவனோடு கூட பலரும் நிச்சயமாக இயேசுவை விசுவாசித்திருப்பார்கள். எப்படியெனில் அவரே அங்கு சொல்லுகிறார்,

“இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.” (லூக்கா 19:10).

அவ்வாறு இழந்து போனவர்கள் எரிகோ பட்டணத்திலும் இருந்தார்கள். சபிக்கப்பட்டு விடுதலை எப்படி வந்ததோ அந்த நகரத்திற்கு இரட்சிப்பும் கிருபையின் மூலமாக வந்தது. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவும் இயேசு வந்தார் என்று நாம் பார்க்கிறோம். இங்கு நாம் கர்த்தருடைய குணாதிசயத்தை நிச்சயமாக அவதானிக்கிறோம்.

மாறாத தேவனாக இருக்கிறேன் என்று சொன்னவர் இந்த சபிக்கப்பட்ட நகரத்திற்கு விடுதலை கொடுத்ததுபோல சபிக்கப்பட்டவர்களாக இருக்கிறவர்களுக்கும், நியாயத்தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறவர்களுக்கும் தன்னுடைய கிருபையினால் விடுதலையைக் கொடுக்கக்கூடியவர் என்று அறிகிறோம். உங்களைப் பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் இயேசுவை உங்கள் இருதயத்தில் கடவுளாகப் பார்க்காதவர்களாகவும், அவருடைய வார்த்தையைக் காது கொடுத்துக் கேட்டு ஆனந்தம் அடையாதவர்களாகவும், பாவத்திலிருந்து விடுதலை பெறாதவர்களாகவும் இருந்தால் உங்களுக்கு இது என்ன செய்தியைத் தருகிறது? ஆண்டவர் எவ்வாறு சபிக்கப்பட்ட பட்டணத்திற்கு விடுதலை கொடுத்தாரோ அதேபோல ஆண்டவருடைய கோபத்தையும் சாபத்தையும் சுமந்து கொண்டிருக்கிற உங்களுக்கு அவர் நிச்சயமாக தன்னுடைய கிருபையின் மூலமாக மன்னிப்புக் கொடுக்கிற தேவனாக இருக்கிறார். எரிகோ பட்டணத்து மக்கள் எலிசாவிடம் வந்து தண்ணீரில் இருக்கும் கேட்டை நீக்கித் தரும்படிக் கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்குக் கிடைத்த விடுதலையை அவர்கள் அனுபவிக்கும் எந்தவிதமான தகுதியும் அவர்களுக்கு இல்லை. ஆண்டவருடைய சாபத்தையும் பாவத்தையும் சுமந்து கொண்டிருக்கிற நாமும் கூட அவருடைய கிருபையை அனுபவிப்பதற்கு எந்தவிதமான தகுதியையும் கொண்டிருக்கவில்லை. பாவம் செய்து அதனால் வரக்கூடிய சாபத்தை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம். அவருடைய கட்டளையை மீறினவர்களாக அவருக்கு முன்பாக நிற்கிறோம். தொடர்ந்தும் அவருடைய கட்டளையை மீறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் கிருபை நமக்கு இரட்சிப்பைத் தருவதற்காகக் காத்திருக்கிறது. அந்த தேவன் மாறாதவராக இருக்கிறார். யார் யாரெல்லாம் மனந்திரும்பி தேவனிடத்தில் வருகிறார்களோ அவர்கள் எல்லாருக்குமே இலவசமாகத் தன்னுடைய கிருபையின் மூலமாக இரட்சிப்பைக் கொடுக்கிறார்.

பவுல் கலாத்தியர் நிருபத்தில்,

“மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.” (கலாத்தியர் 3:13) என்று சொல்லுகிறார்.

இயேசு மரத்திலே சபிக்கப்பட்டவராகத் தூக்கப்பட்டிருந்தார். ஏன் தெரியுமா? வேதம் சொல்லுகிறது, நாம் சபிக்கப்பட்டவர்களாக பாவத்தைச் சுமந்து நிற்கிறோம். நமக்கு விடுதலை தர இன்னொருவர் தேவை. இந்த உலகத்தில் எந்த மனிதனும் நீதிமானுமில்லை, பரிசுத்தமானவனும் இல்லை. இந்த உலகம் நமக்குப் பாவ விடுதலையைக் கொடுக்க முடியாது. நம் குடும்பத்திலுள்ள பெரியவர்களால் அதைச் செய்ய முடியாது. நம்முடைய பாவத்திலிருந்தும், நம்மைப் பிடித்திருக்கிற சாபத்திலிருந்தும் விடுதலை வேண்டுமென்றால் பரலோகத்திலிருந்து அதற்கான வழி செய்யப்பட்டால் தவிர நாம் தொடர்ந்தும் பாவிகளாகவே இருந்து தேவ கோபத்தை நித்திய நரகத்தில் அனுபவிக்கிறவர்களாகவே இருந்திருப்போம். ஆனால் தேவன் ஜீவனுள்ள ஒரே குமாரனை உலகத்திற்கு அனுப்பி அதற்கு ஒரு முடிவு கட்டினார்.

பூரணப் பரிசுத்தத்தையும் பூரண தெய்வீகத்தையும் தன்னுள் கொண்டிருந்த இயேசு கிறிஸ்துவை மனித ரூபத்திலே பிறக்க வைத்து நம்மேல் இருந்த சாபத்தைக் கர்த்தர் சிலுவையில் அவர்மேல் கொட்டினார் என்று பார்க்கிறோம். நமக்காக அவர் சாபமானார் என்று வேதம் சொல்லுகிறது. நம்மேல் இருந்த சாபமும் தேவ கோபமும் அவர்மேல் சுமத்தப்பட்டது. பூரணப் பரிசுத்தமுள்ள முழு தெய்வீகமுள்ள ஒருவரால் மட்டுமே அதைத் தாங்க முடியும். ஆகவேதான் வேதத்தில் பிதாவே என்னை ஏன் கைவிட்டீர் என்று மானுடத்தில் இயேசு கிறிஸ்து கதறியதாக நாம் வாசிக்கிறோம். யாருமே சுமந்திருக்க முடியாத சாபத்தையும், யாருமே சுமந்திருக்க முடியாத பாவத்தையும் தேவ கோபத்தையும் இயேசு தன்னில் சுமந்தது மட்டுமல்ல, அந்தக் கணத்தில் தன் பிதாவோடு பிரிந்திருக்கிற மாதிரியான ஒரு உணர்வை அடைந்தார் என்பது பயங்கரமானது. அதனை இயேசு முழு விருப்பத்தோடு பிதாவின் வார்த்தைகளை ஏற்று நமக்காகச் செய்தார். இதிலிருந்து எதை அறிந்துகொள்கிறோம்? எப்படி எரிகோ பட்டணத்திற்குக் கிருபை வந்து சேர்ந்ததோ, அதுபோல இயேசு கிறிஸ்து தன் கிருபையினாலே நமக்கு விடுதலை கொடுப்பதற்காகத் தன்னையே சிலுவையில் ஒப்புக்கொடுத்தார் என்று பார்க்கிறோம்.

நாம் வாழும் காலத்திலும் தேவன் நம்முடைய பாவத்தையும், சாபத்தையும், தேவ கோபத்தையும் நீக்கி விடுதலையைக் கொடுப்பதற்கு கிறிஸ்து இயேசுவின் மூலமாகத்தான் கிரியை செய்து வருகிறார். ஏனென்றால் அதற்கான அனைத்தையும் கிறிஸ்து தன்னை ஒரே பலியாகச் சிலுவையில் கொடுத்து நிறைவேற்றி இருக்கிறார். ஆகவே நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் பாவத்திலிருந்து விலகி ஆண்டவரிடம் மன்னிப்பிற்காகப் போக வேண்டியதுதான். நம்முடைய பாவத்திலிருந்து நம்மைக் குணப்படுத்தி, நம் இருதயத்தை மாற்றி, அழிவில்லாத நித்திய ஜீவனைக் கொடுக்கிறவர் நான் மட்டுமே என்று இயேசு விளக்கியிருக்கிறார். அவர் நானே ஜீவ தண்ணீர் என்று சொல்லுகிறார். அந்த ஜீவ தண்ணீரை சமாரியா பெண்ணிற்குக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டு வாழ்க்கை மாறிய அந்தப் பெண் தான் வாழ்ந்த நகரம் முழுவதும் அதைப் பற்றி அறிவித்ததால் அநேகர் அந்தத் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளுவதற்காக அவரிடம் வந்தார்கள் என்று பார்க்கிறோம்.

  • நீங்கள் ஏன் இன்னும் தள்ளி நிற்கிறீர்கள்?
  • இதை வாசிக்கும் நேரத்தில் உங்கள் இருதயம் எப்படி இருக்கிறது?
  • இயேசு கிறிஸ்துவை உங்கள் ஆண்டவராக விசுவாசித்து பாவ மன்னிப்பைப் பெற்று விடுதலை அடைந்தவர்களாக நித்திய ஜீவனை அனுபவிக்கிறவர்களாக அவரையே ஆராதித்து வாழ்கிறீர்களா?
  • இல்லையெனில் சபிக்கப்பட்ட எரிகோ பட்டணத்தைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா?
  • ஆண்டவருடைய சாபத்தையும் பாவத்தையும் சுமந்து தேவ கோபத்தையும் உங்கள் மேல் தாங்கி வரப்போகிற நியாயத்தீர்ப்பிலே அழிவைச் சந்திப்பதற்காகக் காத்திருக்கிறீர்களா?
  • அப்படி வாழ்ந்து வந்தால் உங்களுக்கொரு நல்ல செய்தி இருக்கிறது. சபிக்கப்பட்ட எரிகோவிற்கு வந்த விடுதலையைக் கர்த்தர் உங்களுக்கும் கொடுக்கத் தயாராக இருக்கிறார். அது கிருபையின் மூலமாக இயேசு கிறிஸ்துவிடமிருந்து மட்டுமே வருகிறது.

இன்றைக்கு நீங்கள் உங்கள் பாவத்திலிருந்து விலகி இயேசு மட்டுமே மெய்யான தேவன், தன்னுடைய மகா கிருபையின் மூலமாக எனக்கு விடுதலை தரத் தயாராக இருக்கிறாரே! எனக்குத் தேவையான எல்லாவற்றையும் சிலுவையில் செய்திருக்கிறாரே! அந்த இயேசுவை நான் விசுவாசிக்கிறேன். இன்று முதல் அவருக்காக மட்டுமே நான் வாழப் போகிறேன் என்று நீங்கள் அவரைப் பின்பற்றினால் உங்களுக்கும் எரிகோவிற்குக் கிடைத்த விடுதலை நிச்சயம் கிடைக்கும். இந்த நாள் கிருபையின் நாளாக இருக்கிறது. என்ன செய்யப் போகிறீர்கள்?

  • தொடர்ந்து பாவத்தோடும் சாபத்தோடும் வாழப் போகிறீர்களா?
  • இல்லையெனில் அதற்கெல்லாம் இயேசுவிடம் விடுதலை அடைந்து ஒரு புதிய மனுஷனாக மனுஷியாக வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறீர்களா?

நீங்கள்தான் அதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த வரலாறு இங்கு எழுதி வைக்கப்பட்டிருப்பதற்குக் காரணமே நாம் அதை வாசித்துச் சிந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான். மனுஷனும் மனுஷியும் சிந்திக்காமல் இருப்பதுபோல மோசமானது ஒன்றுமேயில்லை. ஏற்கனவே சொன்னதுபோல ஆண்டவருடைய பொறுமைக்கும் ஒரு முடிவு இருக்கிறது. அவர் என்றென்றும் பொறுமையாக இருக்கிற தேவன் இல்லை. அவருடைய பொறுமை ஒருநாள் முடிவுக்கு வரும் என்பதைத்தான் இந்தக் காலம் நமக்கு உணர்த்துகிறது.

  • இன்னும் மனந்திரும்பாமல் வாழப் போகிறீர்களா?
  • அல்லது இலவசமாக இயேசு கொடுக்கிற கிருபையின் இரட்சிப்பைப் பெற்றுக் கரையேறப் போகிறீர்களா?

ஆண்டவரிடமே இந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள் சொல்லுங்கள்.

© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.