கிறிஸ்தவ வாழ்க்கை

இந்த இதழ் குடும்ப இதழாக மலர்ந்திருக்கிறது. இதழில் அனைத்து ஆக்கங்களும் குடும்பத்தின் வெவ்வேறுபட்ட அம்சங்களை அலசுவதாக இருப்பதைக் கவனிப்பீர்கள்.

ஏன் இதைக் குடும்ப இதழாக வெளியிட்டிருக்கிறோம் என்பதை இந்த ஆக்கத்தின் மூலம் உங்களுக்கு விளங்கவைக்க முயற்சி செய்திருக்கிறேன். நல்ல குடும்பங்கள் இருந்தால் சபை நல்லதாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் நல்ல குடும்பங்கள் என்று குறிப்பிட்டிருப்பது சீரழிந்த பண்பாட்டிற்கு முழுக்குப்போட்டு வேதபூர்வமாக குடும்பத்தை நடத்தி வருகிறவர்களைத்தான். அத்தகைய நல்ல குடும்பங்கள் இல்லாமல் எப்படி சபை உருவாக முடியும்? போலித்தனமும், பிரச்சனைகளும், ஆணாதிக்கமும், பெண்அடிமைத்தனமும் ஆண்டு வரும் குடும்பங்கள் சுவிசேஷ விடுதலை அடைய வேண்டியவை. சுவிசேஷத்தால் விடுதலை அடைந்து, குடும்பத்தைப் பற்றி வேதம் போதிப்பவற்றையெல்லாம் வாழ்க்கையில் வைராக்கியத்தோடு பின்பற்றும்போதுதான் குடும்பங்கள் சீரானதாக அமைய முடியும். அத்தகைய குடும்பங்களைக் கொண்டிருக்கும் போதகர்களும், சபைகளுமே கிறிஸ்துவின் நடமாட்டத்தைத் தங்கள் மத்தியில் கண்டுவரும் சபைகளாக இருக்கமுடியும்.

குடும்பத்தை நன்றாக நடத்தாதவன் போதகனாகவோ, உதவிக்காரனாகவோ அல்லது சபை அங்கத்தவனாகவோ இருக்கத் தகுதியற்றவன் என்கிறது கிறிஸ்தவ வேதம். இதனால்தான் வேதத்தின்படி நம்மினத்தில் சபை நடத்த முடியாது என்று பலர் வேதத்தை ஒதுக்கிவைத்துவிட்டு சபை நடத்தி வருகிறார்கள். அவர்கள் சீரழிந்த நம் பண்பாட்டிற்குத் தங்களை அடிமையாக்கிக் கொண்டிருக்கும் பச்சோந்திகள்.

சமீபத்தில் போதகர்களுக்கான மகாநாட்டிலும், ஒரு சபையின் விசேஷ கூட்டங்களிலும் விரிவுரைகளையும், செய்திகளைக் கொடுத்திருந்தேன். அதில் நானும் என் நண்பரொருவரும் திருச்சபை போதக ஊழியத்திற்கான இலக்கணங்களை அலசி ஆராய்ந்திருந்தோம். அந்த இலக்கணங்களில் ஒன்றான குடும்ப இலக்கணத்தை மட்டும் நான் எடுத்துக்கொண்டு ஏனையவற்றை என் நண்பனிடம் விட்டுவிட்டேன். இந்த நாட்டுப் பண்பாடு பற்றி எனக்கு ஆழமாகத் தெரியாததால் அதை நீங்களே செய்வதுதான் சரி, என்று நண்பனும் ஒத்துக்கொண்டார்.

போதக ஊழியத்திற்குரிய இலக்கணங்கள்

போதக ஊழியத்திற்கு அவசியமான நாற்பத்தி இரண்டு இலக்கணங்களில் (1 தீமோத்தேயு 3; தீத்து 1) ஒன்றுக்கு மட்டுமே பவுல் அப்போஸ்தலன் அதிக விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். மிக முக்கியமானதாக நாம் நினைக்கக்கூடிய ஏனைய எத்தனையோ இலக்கணங்களுக்கு அவர் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை; அவற்றைக் குறிப்பிடுவதோடு நிறுத்திக்கொண்டார். இதைப்பற்றி நாம் சிந்திக்காமல் இருக்கமுடியாது. அந்த இலக்கணமாகிய குடும்ப விசாரிப்புக்கு மட்டும் அவர் மேலதிக விளக்கத்தை அளிக்கக் காரணமென்ன? இந்த இலக்கணங்களிலெல்லாம் குடும்பத்திற்கு முக்கியத்துவமளிக்கக் காரணமென்ன? அதற்கான பதிலைப் பவுல் 1 தீமோத்தேயு 3:5ல் தருகிறார்,

ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை விசாரிக்க அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?

இப்போது தெரிகிறதா, குடும்பத்திற்கு பவுல் ஏன் அத்தனை முக்கியத்துவமளித்திருக்கிறார் என்று?

ஒருவன் நல்ல கணவனாக, தகப்பனாக இருந்து மனைவி மேல் சுவிசேஷ அன்பைக்காட்டி, மனைவியையும், பிள்ளைகளையும் கிறிஸ்து இயேசு தன் சபையைப் பராமரிப்பதுபோல பாசத்தோடு கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கிறவனாக இல்லாவிட்டால் அவனால் திருச்சபையை எந்தவிதத்திலும் பராமரித்து வழிநடத்த முடியாது என்கிறார் பவுல். மேற்குறிப்பிட்ட வசனத்தில் ‘விசாரிக்க’ என்ற வார்த்தைக்கு மூல மொழியின்படி நிர்வகித்த, ஆள என்பவையே அர்த்தங்கள். குடும்ப வாழ்க்கையில் தவறிழைத்து சக கிறிஸ்தவர்களுக்கு முன்னுதாரணமாக இல்லாமல் வாழ்ந்து வருகிறவனைப் போதகப் பணிக்கு நியமிக்கக்கூடாது என்கிறார் பவுல். ஆகவே, திருச்சபை அங்கத்தவர்கள் இதில் சிரத்தை காட்டி போதக ஊழியத்தில் ஆர்வம் காட்டுகிறவனுடைய குடும்ப வாழ்க்கையை நுணுக்கமாக ஆராய வேண்டியது அவர்களுடைய பெரும் கடமையாக இருக்கிறது.

நான் விரிவுரைகள் அளித்த போதக மகாநாட்டில் போதகப் பணி செய்கிறவர்களில் ஐந்து பேர் மட்டுமே அந்தப் பணிக்கான தகுதிகள் முறையாக ஆராயப்பட்டு சபை அங்கத்தவர்களால் அங்கீகரிக்கப்பட்டு அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இதை நான் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஏனையோர் தங்களைத் தாங்களே அப்பதவியில் இருத்திக்கொண்டவர்கள். இந்தவிதத்திலேயே நம்மினத்தில் திருச்சபை ஊழியம் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக், சகோதரத்துவ குழுக்கள் மற்றும் தனிஊழியம் செய்கிறவர்கள் மத்தியில் நடந்து வருகிறது. இது வேதம் அறியாத உலகத்தனமான முறை. அத்தோடு பாப்திஸ்து போன்ற சபைப்பிரிவுகளில் போதக நியமனம் குடும்ப அரசியலாலும், கமிட்டிகளின் ஆதிக்கத்தாலும் பாதிக்கப்பட்டு சடங்குபோல் நிகழ்ந்து வருகிறது. மொத்தத்தில் வேத இலக்கணங்களுக்கோ, திருச்சபை அமைப்பு, நிர்வாக முறைகளுக்கோ நம்மினத்து சபைகளிலும், ஊழியங்களிலும் எந்த இடமும் இல்லை. திருச்சபை பற்றி வேதத்தில் எதுவுமே இல்லை என்பது போலவே நம்மினத்தில் கர்த்தரின் பெயரில் ஊழியங்கள் நடந்து வருகின்றன. வேதத்தை ஒதுக்கிவைத்துவிட்டு உலகப்பிரகாரமான முறையில் நடந்துவரும் எந்த சபையிலும், ஊழியத்திலும் எப்படி இயேசு இருக்க முடியும்? இயேசுவின் பிரசன்னத்தைத் தம் மத்தியில் கொண்டிராத இந்த சபைகளும் ஊழியங்களும் யாருடைய ஊழியங்களாக இருந்து வருகின்றன என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நான் கொடுத்த செய்திகளைக் கேட்டு இருதயத்தில் குத்தப்பட்ட பலர் திருமணம் ஆன நாளில் இருந்து மனைவியை சரியாக நடத்தியதில்லை என்று தங்களுடைய பாவத்தை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர் தனிப்பட்ட முறையில் அதை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். பாவத்தை ஒத்துக்கொண்டிருக்கும் இவர்கள் இனித் திருந்திவாழத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. குடும்பவாழ்க்கையை சரிசெய்யாமல் தொடர்ந்தும் ஊழியம் செய்யலாமா? என்றும் கேட்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதைச் செய்வார்களா? என்பதற்கு காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும்.

பரவலாக நம்மினத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர் மத்தியில் மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் குடும்ப வாழ்க்கை சீரழிந்து சுவிசேஷ அன்போ, ஆவிக்குரிய வல்லமையோ இல்லாமல் காணப்படுவதற்குக் காரணமென்ன? அதுவும் கிறிஸ்தவர்கள் மத்தியில் அது மோசமான நிலையில் இருப்பதற்குக் காரணமென்ன? இதற்கெல்லாம் ஒரேயொரு காரணத்தைத்தான் நான் முன்வைக்க முடியும். அதற்கு நம்மினத்தின் சீரழிந்த பண்பாடுதான் பெருமளவில் காரணமாக இருக்கிறது. கிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் எடுத்தவர்களும் இந்துப் பண்பாட்டுச் சிறையில் இருந்து விடுபடாமலும், விடுபட முடியாமலும் கிறிஸ்தவ வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பதாலேயே குடும்பங்களில் சுவிசேஷ அன்பில்லை, ஏன் கிறிஸ்துவும் இல்லை. கிறிஸ்தவ சுவிசேஷத்திற்குத் தலை சாய்த்திருப்பவர்கள், அந்த சுவிசேஷம் வாழ்க்கையில் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படுத்த வேண்டிய அகப் புற மாற்றங்களுக்கு இடங்கொடுக்காதவர்களாக இருக்கிறார்கள். குடும்ப வாழ்க்கையில் கிறிஸ்துவைவிடப் பண்பாட்டின் ஆளுகைக்கே இடமளித்திருக்கிறார்கள்.

“தாம்பத்திய வாழ்வில் நெருக்கம்” எனும் என் நண்பன் அலன் டன்னின் நூலைத் தமிழில் வெளியிட்டிருந்தோம். ஆயிரக்கணக்கில் அதுபோன்ற நூல்கள் வந்தாலும் நம்மினத்துப் பண்பாட்டுப் பேயை அகற்றுவது கடினமே. அது நிகழ பரிசுத்த ஆவியானவரின் வல்லமையான கிரியை தேவையாக இருக்கிறது. சுயத்தாலும், மனித சிந்தனையாலும் அசைக்க முடியாததை அவர் மட்டுமே அசைத்துத் தூக்கியெறியக்கூடியவர்.

ஆணாதிக்கத் திமிர்

இந்திய நாட்டில் நாடு தழுவிய மிகப்பெரிய கொடுமைகளாக இருந்து வரும் இரண்டு காரியங்கள் என்ன தெரியுமா? 1. மதுவெறி. மதுவெறியால் நடந்து வரும் அலங்கோலங்களைச் செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அதை நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. அடுத்தது என்ன தெரியுமா? 2. கற்பழிப்பு. ஒரு செய்தி சொல்கிறது, ஒரு நிமிடத்திற்கு ஏழு பெண்மணிகள் இந்திய தேசத்தில் கற்பழிக்கப்படுகிறார்களாம். இதற்குக் காரணமென்ன தெரியுமா? இதுவரை அதுபற்றி சிந்தித்திராமல் இருந்தால் இப்போது வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள். சமுதாயத்தில் ஊறி உறைந்து பனிக்கட்டியாக இறுகி அசைக்கமுடியாதபடி காணப்படும் ஆணாதிக்கத் திமிரே அதற்கு முக்கிய காரணம் (male chauvinism). ஆணாதிக்கம் இந்தச் சமுதாயத்தில் ஆணிவேராக இருப்பதால்தான் கற்பழித்தவன் சாட்சிகளோடு பிடிபட்டபோதும் சில மாநிலங்களில் நீதிபதிகள் அவனுக்கு உரிய தண்டனை கொடுப்பதில்லை. ஆணைப் பொறுத்தவரை பெண் மேல் இச்சை கொள்வதும், கற்பழிப்பதும் சகஜம் என்று விட்டுவிடுகிறார்கள். ஆணைவிடத் தரத்தில் கீழானவளாகப் பார்க்கப்படும் பெண்ணுக்கு சமுதாயத்தில் நியாயம் கிடைப்பதில்லை. ஆணாதிக்கமே இதற்கு முழுக்காரணம். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண் வெறும் விளையாட்டுப் பொருள் மட்டுமே.

ஆணாதிக்கம் எல்லா இனங்களிலும் ஆண்களிடம் காணப்பட்ட போதிலும், ஏனைய இனங்களில் இல்லாதளவுக்கு ஆக்ரோஷமாக வெளிப்படும் இனம் நம்மினமாக இருந்து வருகிறது. ஒருவிதத்தில் நம்மினத்துப் பண்பாட்டை இறுக்கிக் கட்டிப்பிடித்துக் காத்து வரும் பலமான கயிறாக அது இருந்துவருகிறது. இதை இல்லாமலாக்கினால் நம்மினத்துச் சீரழிந்த பண்பாட்டிற்குப் பேராபத்து ஏற்படும். இதை நான் விளக்காவிட்டால் உங்களுக்கு இந்த ஆணாதிக்கத்தின் கோரத்தை விளங்கிக்கொள்ள முடியாது.

நம்மினம் ஆண்களை முன்வைத்தே எதையும் செய்து வரும் இனம். பெண்ணுக்கு அதிகம் மதிப்பளிக்காத இனம். உண்மையில் பெண்ணை இரண்டாவது இடத்திலேயே நம்மினம் வைத்திருக்கிறது. அதனால்தான் பெரும்பாலும் திருமணமானவர்கள் ஆண் குழந்தைகளை விரும்புகிறார்கள். ஆண் குழந்தை பிறந்துவிட்டால் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். பெண் பிறந்துவிட்டால் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. ஆண் பிள்ளைகளுக்கே வீட்டில் மதிப்பு. பெண் புகுந்த வீட்டுக்குப் போக வேண்டியவள் என்பதால் அவளை அதிகம் படிக்கவைப்பதில்லை. அதற்குச் செலவழிக்க பெற்றோர் தயங்குகிறார்கள். அதேநேரம் ஆணைப் படிக்கவைப்பார்கள், அவனுக்கு அதிகம் செலவழிப்பார்கள். அத்தோடு வயதுக்கு வந்தபின் எந்தளவுக்கு சீக்கிரமாகப் பெண்ணுக்குத் திருமணத்தை முடித்து வீட்டைவிட்டு அனுப்பமுடியும் என்பதில்தான் குறியாகவும் இருப்பார்கள். பெண்ணை ஒரு சுமையாகவே நம்மினம் கருதுகிறது. இது கிறிஸ்தவ சமுதாயத்திலும் தொடர்கிறது.

இருந்தபோதும், பெண் இந்த சமுதாயத்திற்குத் தேவையாக இருக்கிறாள் என்பது நம்மினத்திற்குத் தெரியும். ஆணுடைய தேவைகளைத் கவனித்துக்கொள்ளவே இந்த சமுதாயத்திற்குப் பெண் தேவைப்படுகிறாள். அந்த அடிப்படையிலேயே ஆணுக்குத் திருமணத்தையும் நிச்சயிக்கிறார்கள். திருமணத்திற்குப் பின் பெண் வீட்டில் தன்னுடைய விருப்பங்களையெல்லாம் அழித்துவிட்டு கணவனுடைய தேவைகளை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறாள். கணவனும் பெண்ணுடைய விருப்பு வெறுப்புகளிலெல்லாம் எந்த அக்கறையும் இல்லாமல் தன் வேலையைச் செய்து வருவான். அநேக குடும்பங்களில் வெளியில் தெரியாமல் அன்றாடம் சண்டையும் சச்சரவுமே காணப்படும். குடும்பத்தில் நிறைவான அமைதியும், சமாதானமும் இருக்காது. இதுவே நம்மினத்தில் இயல்பாகக் காணப்படும் குடும்ப வாழ்க்கை. கிறிஸ்தவ குடும்பங்களில் வேத வாசிப்பும், ஜெபமும் இருந்தாலும் இந்த அடிப்படை ஆண், பெண் உறவில் அதிகளவில் மாற்றமிருக்காது. இதற்கு விதிவிலக்காக சில குடும்பங்கள் இருந்துவிட முடியும் என்பதை மறுக்கமுடியாது. ஆனால், கிறிஸ்தவ குடும்பங்களிலும் நம்மினத்தில் பெண் இன்றும் அடிமையாகவே இருந்து வருகிறாள். ஆண், ஆணாதிக்கத்தோடு சுவிசேஷ அன்பு காட்டத் தெரியாதவனாக இயந்திர வாழ்க்கை வாழ்ந்து வருகிறான் என்பதுதான் நிதர்சனம்.

காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கப்போகும்வரை நாக்குக்குச் சுவையாக உணவு சமைத்துப், பரிமாறி, துணிகளைத்துவைத்து, பிள்ளைகளைக் கவனித்து, சட்டி பானைகளைக் கழுவி, அடுத்த நாளுக்கும் செய்யவேண்டியதைத் திட்டமிட்டு களைத்துப் போய் சரீர வலியையும் வெளியில் காட்டாமல் இயந்திரத்தைப் போல உழைத்து வரும் மனைவியைப் பார்த்து ஒரு நாளில் ஒரு தடவையாவது கணவன் நம்மினத்தில், அன்பே, இன்றைக்கு நீ செய்த சாப்பாடு அத்தனை சுவையாக இருந்தது. உனக்கு நன்றி என்று சொல்லியிருப்பானா? ஒரு நாளில் அப்படி எத்தனை தடவை மனைவிக்கு நன்றி சொல்லியிருப்பான்? தினமும் மனைவி சமைப்பதை சாப்பிடுகிறவன் ஒருநாள் அடுப்படிப் பக்கம் போயிருப்பானா? மனைவிக்கு காப்பி போட்டுத் தந்திருப்பானா? முழு நாளும் நின்று உழைத்து சமைத்திருக்கிறாளே என்று இரவில் இதமாக அவள் கால்களைப் பிடித்துவிட்டுத் தன் அன்பைக் காட்டியிருப்பானா? கிறிஸ்தவ கணவனைத்தான் சொல்லுகிறேன். உணவில் உப்போ புளியோ குறைவாக இருந்திருந்தால் மட்டும், உனக்கு இன்றைக்கு என்ன நடந்தது? என்று குரலை உயர்த்திப் பேச அவனுக்குத் தெரிந்திருக்கிறது. இடுப்பில் பாரமான தண்ணீர் குடத்தைச் சுமந்து பலதடவை நடந்து போயிருக்கும் மனைவியைப் பார்த்தும் எந்தக் கவலையும் இல்லாமல் தன் வேலையில் முழுகிப் போயிருப்பவன் கிறிஸ்தவ கணவனா? இது இங்கு நடைமுறையில் இல்லை என்று வாதாடுகிறவர்கள் கெட்டகுமாரன் உவமையில் வரும் மூத்த குமாரனைப் போன்ற எரிச்சல் பிடித்தவர்கள். அவர்கள் பி.ஜே.பியைப் போன்ற சீரழிந்த பண்பாட்டு பக்தர்கள்.

மனைவியை அடிப்பவன்

இதையெல்லாம்விட மோசமானது என்ன தெரியுமா? கணவன் தன் மனைவியைக் கைநீட்டி அடிப்பதுதான். என்ன, அப்படியும் செய்வார்களா? என்று திகைக்கிறீர்களா? சீரழிந்த நம்மினத்து ஆணாதிக்க சமுதாயத்தில் அது வழமையானது. ஒரு போதகர் சொன்னார், இது எல்லோர் வீட்டிலும்தான் நடக்கிறது, யாரிடம் இல்லை என்று. மனைவியைக் கைநீட்டி அடிக்காத ஒருவனை விதிவிலக்காகத் தான் நம்மினத்தில் பார்க்க முடிகிறது. அப்படி அடிப்பது கேவலமானது என்ற எண்ணமே அவனுடைய இரத்தத்தில் பதிந்திருக்கவில்லை. அதற்குக் காரணம் அவன் தன் தாத்தா, அப்பா மற்றும் உறவினர்களிடம் பார்த்திருப்பதெல்லாம் ஆணாதிக்க அடக்குமுறையை மட்டுமே. ஆணாதிக்கம் ஒருவனில் ஊறிப்போயிருப்பதால் மனைவியை அடிப்பதை அவன் மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறான். ஒரு கிறிஸ்தவர் சொன்னார், இப்படிச் செய்தால் மட்டுமே மனைவியை அடக்க முடிகிறது என்று. மனைவி குறை சொன்னாலோ, எதிர்த்துப் பேசினாலோ அவனுக்கு அன்போடு திருத்தத் தெரியவில்லை. அவனுக்குப் பழக்கமான ஆயுதம் அடிப்பது மட்டுமே. பலவீனமான மனைவியை ஆணாதிக்கத் திமிறால் கையை நீட்டி அடித்து அடக்கிவிடுகிறான். அதேபோல பிள்ளைகளையும் அடித்துவிடுகிறான். அடிப்பதற்கு அவன் கை துறுதுறுக்கிறது. அவனுக்குத் தெரியவில்லை, அது அவனுடைய பலமல்ல, பலவீனம் என்பது. இன்று நம் சமுதாயத்தில் இதற்கெதிரான கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்; காவல்துறையும் நடவடிக்கைகளை எடுக்கிறது. இருந்தபோதும் அவர்களும் அதே ஆணாதிக்க இனத்தைச் சேர்ந்தவர்கள்தானே. ஒட்டுமொத்தமாக சமுதாயம் மாறாதவரை அதில் காணப்படும் சட்டம் என்ன செய்துவிட முடியும்?

நம்மினத்தில் ஆண்கள் சபையில் கையை நீட்டுவதும், வாய்ச்சண்டையில் ஈடுபடுவதும், மூர்க்கத்தனமாகப் போதகர்கள் சக போதகர்களிடமும், ஆத்துமாக்களிடமும் நடந்துகொள்ளுவதும், அடுத்தவர்களை இழிவாகப் பேசுவதும், அவர்களைப் பற்றி எழுதுவதும் அவர்களில் காணப்படும் மோசமான இருதயக் கோளாறைத்தான் சுட்டுகிறது. இந்த இருதயக்கோளாறு சுலபமாகக் கைநீட்டுவதில் போய் முடிந்துவிடுவதில் எந்த ஆச்சரியமுமில்லை. இதுவே வீட்டிலும் சகஜமாகிவிடுகிறது. வீட்டுத் தலைவர்கள் மனைவி மீதும், பிள்ளைகள் மீதும் அடிக்கடி சகஜமாகக் கையை நீட்டி விடுகிறார்கள்.

இந்த ஆணாதிக்கமே நம்மினத்தவனை அடுப்படிப் பக்கம் போக வைப்பதில்லை. அடிமையான மனைவி இருக்கவேண்டிய இடமே அடுப்படி என்று அவன் நினைக்கிறான். இந்த ஆணாதிக்கமே மனைவி செய்யும் பணிகளுக்கு அவனை நன்றி சொல்ல முடியாமல் செய்கிறது. இந்த ஆணாதிக்கமே குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு எந்தக் கவலையும் இல்லாமல் ஒருவனை வெளிநாடு போய் வேலை செய்யவைக்கிறது. அவனுக்கு அங்கு இருக்கப்பிடிக்காமல் போனால் அது சாப்பாடு சரியில்லை என்பதற்காகத்தான் இருக்குமே தவிர, குடும்பத்தைப் பிரிந்திருக்கிறோமே என்பதற்காக அல்ல. இந்த ஆணாதிக்கத் திமிரே அவன் பெற்றோர் பேச்சைக் கேட்டு நடந்து மனைவியோடு எதையும் கலந்தாலோசித்துச் செய்யாமல் குடும்பத்தைப் பெற்றோருக்கு அடிமைப்படுத்தச் செய்கிறது. உணர்வுகள் மங்கி, ஜடமாக வீட்டில் இயங்கிவர வேண்டிய ஒரு இயந்திரம் மட்டுமே மனைவி இவர்களுக்கு. மொத்தத்தில் பெண்ணை ஒரு பொருட்டாகவே இந்த சமுதாயம் மதிப்பதில்லை. இப்படி ஆணாதிக்கத்தால் நம்மவர்கள் செய்து வரும் எத்தனையோ கொடுமைகளை நான் பட்டியலிட்டு வைக்கமுடியும்.

அன்பால் மனைவியைப் போஷித்து வழிநடத்துவது என்பது கிறிஸ்துவை அறிந்து மறுபிறப்பு கிடைத்தவுடன் உடனடியாக நிகழ்ந்துவிடப்போகிறதொன்றல்ல. மறுபிறப்படைந்தவன் இந்த விஷயங்களில் வேத ஞானத்தைப் பெற்று வைராக்கியத்தோடு கிறிஸ்துவுக்காக சுயத்தை அடக்கி, சுயக் கட்டுப்பாட்டுடன் மனைவியை நேசிக்கப் பழகினால் மட்டுமே அவளை அடிப்பதையும், திட்டுவதையும், அடிமைபோல நடத்துவதையும் நிறுத்த முடியும். இதுதான் நம் பண்பாடு என்று இளக்காரமாகப் பேசுகிறவன் மறுபிறப்பு அடைந்தவனல்ல. மனைவிமேல் எப்படி அன்பு காட்டுவது என்பதை இயேசு கிறிஸ்துவும் (எபேசியர் 5), பவுலும், பேதுருவும் புதிய ஏற்பாட்டில் விளக்காமலில்லை. இருந்தும் பண்பாட்டுப் பித்து அநேகர் கண்களை மறைத்து வேதத்தை ஒதுக்கிவைத்து பண்பாட்டிற்கு வக்காலத்து வாங்க வைக்கிறது.

தன் மனைவியைக் கைநீட்டி அடிக்கிறவனும், தள்ளிவிடுகிறனும், திட்டுகிறவனும் முதலில் ஆணாகவே இருக்க முடியாது. அவன் ஆண் தன்மைக்கே இழிவேற்படுத்துகிறவன். அவன் எப்படி கிறிஸ்தவனாக இருக்க முடியும்? உண்மையில் அப்படிச் செய்கிறவன் மீது திருச்சபை ஒழுங்குநடவடிக்கை கொண்டு வந்து சபை அங்கத்துவத்திலும், திருவிருந்தெடுப்பதிலும் இருந்து தற்காலிகமாக அவன் திருந்தும்வரை விலக்கிவைக்கவேண்டும். இதுவே வேதம் நமக்குக் காட்டுகிற கிறிஸ்துவின் வழி. மனைவி மீது கைநீட்டுவதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நம்மினத்து சீரழிந்த பண்பாட்டிற்குத் தீனிபோட்டு வரும் சபைகள் நிச்சயம் ஜீவனுள்ள கிறிஸ்து நடமாடும் திருச்சபைகள் அல்ல. அந்தச் செயலைச் செய்யும் போதகர்கள் போலிப்போதகர்கள். சபைத் தலைவர்களே இந்த விஷயத்தில் தவறு செய்து வந்தால் சபையைச் சேர்ந்தவர்கள் மீது அவர்களால் எப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்?

கர்த்தரின் திட்டத்தில் குடும்பம்

இப்போது தெரிகிறதா, பவுல் ஏன் வீட்டை விசாரிக்காதவன் (ஆற்றலோடு திறமையாகவும், அன்போடும் நடத்தாதவன்) சபையை எப்படி விசாரிப்பான் என்று சொன்னாரென்று. சபைத் தலைமைக்கு அவசியமான கண்காணிப்பை ஒருவன் தன் குடும்பத்தை எப்படி நடத்துகிறான் என்பதில் இருந்தே கற்றுக்கொள்கிறான் என்கிறார் பவுல். சாதாரண குடும்ப வாழ்க்கையை உதாரணமாகப் பயன்படுத்தி மேலான திருச்சபைத் தலைமைக்கான விளக்கத்தைக் கொடுக்கிறார் பவுல். இதிலிருந்து சாதாரணமாகவே குடும்ப நிர்வாகத்தில் கணவன் ஆற்றலும், திறமையும் உள்ளவனாக அன்போடு குடும்பத்தை நடத்தி வரவேண்டுமென்பதே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் போதனை என்பது தெரிகிறதா?

ஒரு கிறிஸ்தவன் எந்த நாட்டில், எந்த இனத்தில் எந்தப் பண்பாட்டில் பிறந்திருந்தாலும், அவன் திருமணமானதும் கிறிஸ்தவனாக கிறிஸ்துவின் வழியில் மட்டுமே குடும்பத் தலைவனாகச் செயல்பட வேண்டும். குடும்பம் என்பது மனிதனின் மனதில் தோன்றியதல்ல; அதைச் சமுதாயம் உருவாக்கவில்லை. குடும்பம் நம்மைப் படைத்த ஆண்டவரின் சித்தத்தில் உதித்து அவரால் உருவாக்கப்பட்டது. ஆணையும் பெண்ணையும் படைத்து கர்த்தர் ஆதியில் குடும்பத்தை உருவாக்கினார். அதுபற்றி அவர் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் போதித்து ஏதேனில் அருமையாக வாழச் செய்தார். ஆதாமுக்கு ஏற்ற துணையாக ஏவாள் இருந்தாள். அவர்களிருவருக்கும் குடும்ப வாழ்க்கையில் தங்களுடைய பொறுப்பு தெரிந்திருந்தது. ஆதாம் ஆண்டவரின் சித்தப்படி நல்ல அன்பான குடும்பத் தலைவனாக வாழ்ந்தான். ஏவாள் அவனுக்குப் பணிந்து அவனோடு இசைந்து நம்பிக்கைகுரிய நல்ல அன்பு மனைவியாக வாழ்ந்திருந்தாள். அவர்கள் குடும்பத்தில் எவருடைய தலையீடும் இருக்கவில்லை. கர்த்தரின் வார்த்தையின்படி அவர்கள் அற்புதமாக குடும்ப வாழ்க்கை நடத்தி வந்திருந்தார்கள். கர்த்தரின் சித்தப்படியும், திட்டத்தின்படியும் அவர்கள் அமைதியான ஆவிக்குரிய வாழ்க்கை நடத்தி வந்திருந்தார்கள். ஆனால், அதில் மண் விழுந்தது.

ஆதியாகமம் 3ன்படி பிசாசின் பேச்சைக்கேட்டு ஏவாள் அந்தச் சோதனைக்கு இடங்கொடுத்து தன் கணவனையும் தன் பேச்சுக்கு ஒத்துப் போகச் செய்து கர்த்தரின் வார்த்தையை மீறிப் பாவத்தைச் செய்தாள். தன் கடமையில் தவறி மனைவியின் தவறான வழிக்கு இணங்கிப் போய் கர்த்தரின் வார்த்தையை மீறி ஆதாமும் பாவத்தைச் செய்தான். இந்த மீறுதலை இருவருமே செய்ததால் பாவம் ஏற்பட்டு அவர்கள் பாவிகளானார்கள். குடும்பத்தில் இருவரும் இதுவரை வகித்து வந்த பொறுப்பில் இருந்து தவறினார்கள். ஏதேனில் அருமையாக இருந்த அவர்களுடைய குடும்ப வாழ்க்கையும் பூரணத்துவத்தை இழந்து பாவத்தால் பாதிக்கப்பட்டது. இதுவரை இருந்துவந்த அமைதி அழிந்தது.

ஏவாளுக்கு தண்டனையளித்த கர்த்தர் அவளோடு பேசிப் பின்வருமாறு சொன்னார்.

ஆதியாகமம் 3:16

அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.

மேற்குறிப்பிட்ட வசனத்தின் பிற்பகுதி முக்கியமானது. அதில் கர்த்தர் ஏதேனில் இதுவரை பாவம் ஏற்படுமுன் இருந்து வந்த கணவன் மனைவி உறவில் ஏற்படவிருக்கும் மாற்றத்தை விளக்குகிறார். ஆதாமினதும், ஏவாளினதும் வார்த்தை மீறலால் அவர்களுடைய உறவில் இப்போது இருக்கப்போகும் மாற்றத்தைக் கர்த்தர் இப்போது விளக்குகிறார். ஏவாளைப் பார்த்து அவர் சொன்னார், ‘உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும்’ என்று. இதற்கு எபிரேய மூல வார்த்தைகளின்படியான அர்த்தம், உன் கணவனுடைய தலைமை ஸ்தானத்தை நீ அடைய முயற்சி செய்வாய் என்பது. அதாவது, இதுவரை பணிவோடு நடந்து வந்த நீ, இனி, உன் கணவனை மதிக்காமல் அவனுடைய பேச்சுக்குத் தலை சாய்க்காமல் அதிகாரத்தோடு நடக்க முயல்வாய் என்கிறார் கர்த்தர். அத்தோடு அன்பான கணவனாக இருந்த ஆதாம் இனி உன்னைப் பாவகரமான முறையில் அடக்கி அடிமைபோல் நடத்த முயல்வான் என்றார் கர்த்தர். ஆதியாகமம் 3:16 வசனத்திற்கு இதுவே சரியான பொருள். இப்போது தெரிகிறதா? ஆண்களின் ஆணாதிக்கத் திமிருக்கான காரணமும், கணவனுக்கு இணங்கிப் போகாமல் எதிர்த்து நிற்கும் பெண்ணின் நடத்தைக்கான காரணமும். இது பாவத்தின் காரணமாக ஆணிலும், பெண்ணிலும் ஏற்பட்ட மாற்றங்கள். பாவ இயல்பு ஆணையும், பெண்ணையும் இந்த முறையில் மட்டுமே செயல்படச் செய்யும். அதுவே குடும்பங்கள் இந்த உலகில் நல்ல முறையில் வாழமுடியாமல் இருப்பதற்கான அடிப்படை காரணம். நம்மினத்தின் சீரழிந்த பண்பாட்டின் ஆணாதிக்கத்திற்கும், பெண்ணடிமைத் தனத்திற்கும் இதுவே காரணம். அதனால் நம் பண்பாட்டைத் தூக்கிப் பிடித்து அதற்கு கச்சை கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்குவது முழு மடமை.

பாவத்தால் சீரழிந்த குடும்ப வாழ்க்கைக்கு மீட்பு உண்டா? என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் உண்டு. அந்த மீட்பு ஆதாமும், ஏவாளும் மனந்திரும்பி இரட்சிப்பை அடைந்தபோதே வந்தது. கர்த்தர் ஏதேனைவிட்டுத் துரத்திய ஆதாமை மீண்டும் தேடிப்பிடித்து அவனுக்கும் அவனுடைய மனைவிக்கும் கிருபையால் இரட்சிப்பை அளித்தார். அதுவே அவர்களுக்கு நித்தியஜீவனையும், குடும்ப வாழ்க்கையை மறுபடியும் கர்த்தருக்காக வாழக்கூடிய கிருபையையும் அளித்தது. இருந்தபோதும் ஏதேனில் இருந்ததுபோலில்லாமல் இருவரும் இப்போது மிகுந்த முயற்சியெடுத்து பாவத்திற்கு இடங்கொடுக்காமல் தேவனுடைய வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு குடும்ப வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலை இருந்தது. இதுவரை ஏதேனில் இருந்திராத பிரச்சனைகளையும் உள்ளிருக்கும் பாவத்தால் அவர்கள் குடும்ப வாழ்க்கையில் எதிர்நோக்க வேண்டியிருந்தது. கிருபையாலும், ஆவியின் துணையோடும் அவர்கள் அன்றாடம் பாவத்தை மேற்கொண்டு ஒருவரில் ஒருவர் அன்புகாட்ட வேண்டியிருந்தது.

இன்று பாவ உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் அவர்கள் எந்த நாட்டையோ, பண்பாட்டையோ சேர்ந்தவர்களாக இருந்தாலும் கிறிஸ்தவ வேதம் கணவன், மனைவி பற்றி விளக்கும் சத்தியங்களை நிதர்சனமாக வாழ்க்கையில் வைராக்கியத்தோடு பின்பற்ற வேண்டும். திருமணத்தை வேதபூர்வமாக அணுக வேண்டும். குடும்ப வாழ்க்கை வேதம் விளக்குவதுபோல் பிறர் தலையீடு இல்லாமல் அமைய சகல முயற்சிகளையும் எடுக்க வேண்டும். முக்கியமாக ஆணாதிக்கத் திமிருக்கும், நம்மினத்துச் சீரழிந்த பண்பாட்டிற்கும் அடியோடு முடிவு கட்டி மனைவிமேல் கிறிஸ்துவின் அன்பைக் காட்டி கிறிஸ்து சபையை வழிநடத்துவது போல் குடும்பத்தை வழிநடத்தி கர்த்தரின் மகிமைக்காக குடும்பவாழ்க்கை இருக்கும்படி உழைக்க வேண்டும். இது ஒருவனுடைய கிறிஸ்தவ ஆராதனையின் ஒரு பகுதி என்பது ஒவ்வொரு கிறிஸ்தவ கணவனுக்கும் தெரிந்திருக்க வேண்டும். கொதிக்கும் பண்பாட்டு எண்ணையில் அன்றாடம் தவித்துக் கொண்டிருக்கும் நம்மினத்துக் குடும்ப வாழ்க்கைக்கு கிறிஸ்தவர்கள் விடுதலை தராதவரையில் மெய்யான கிறிஸ்தவத்தையும், சபைகளையும், போதகர்களையும் நம்மினத்தில் காண்பது என்பது முடியாத காரியம்.

© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.