கிறிஸ்தவ வாழ்க்கை

குடும்பம் பல அங்கத்தவர்களைக் கொண்டது. கணவன், மனைவி, பிள்ளைகள் என்று அமைந்துள்ள குடும்பம் நல்ல நிலையில் சீராக வாழ்ந்து வளர வேண்டுமானால் அது ஒழுங்காக ஓடும் நீரோடைபோல் கட்டோடு, அமைதியாக ஓட வேண்டும்.

கட்டுப்பாட்டோடும், கண்ணியத்தோடும் குடும்பம் இருக்க அதற்கு ஒரு தலைமை அவசியம். தலை இல்லாமல் சரீரம் இருக்க முடியாது. இதற்காகவே குடும்பத்தை ஏற்படுத்திய தேவன் அதற்குத் தலைமை அவசியம் என்பதால் கணவனுக்கு குடும்பத்தை நடத்தும் தலைமைப் பொறுப்பை அளித்துள்ளார். இது மனிதன் ஏற்படுத்திக்கொண்ட ஒரு வசதி அல்ல. இன்று கணவனுக்குச் சொந்தமான இத்தலைமைப் பொறுப்பைக் குறித்து கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக மேலை நாட்டுக் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெண்ணுரிமை சார்பான இறையியலாளர்கள் தேவன் ஏற்படுத்தியுள்ள கணவனுக்குச் சொந்தமான இத்தலைமைப் பொறுப்பிற்கு புது விளக்கம் கொடுத்து வருகிறார்கள். இது வெறும் விவாதப் பொருளாக மட்டும் அமையாமல் ஆண், பெண் உறவிலும், கணவன், மனைவி உறவிலும், குடும்ப வாழ்க்கையிலும், சபை வாழ்க்கையிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

இவ்வாறு மேலைநாட்டுக் கிறிஸ்தவர்களை பாதித்துள்ள பெண்ணுரிமை சார்பான இறையியல் நம்மைத் தொட்டுள்ளதா? என்று கேட்டால், நமது கலாச்சாரம் அதற்கு இதுவரை இடமளிக்காவிட்டாலும் அதன் சாயல்களை கிறிஸ்தவ சபைகளில் காண முடிகின்றது என்றே கூறவேண்டும். கணினி, இணையம், தொலை நோக்கி ஆகியவை உலகத்தை சிறிதாக்கி வரும் நாட்களில் இதுவும் இனிவரப்போகும் புதுப் புது இறையியல் விளக்கங்களும் நம்மை நிச்சயம் தொடத்தான் போகின்றன. கலாச்சாரக் குகைக்குள் இருந்து இனியும் நாம் குளிர்காய முடியாது. அதுமட்டுமல்லாமல் குடும்பத் தலைமைப் பொறுப்பு பற்றிய போதனையை நாம் இதுவரை கலாச்சார நோக்கில் மட்டும் ஏற்றுக் கொண்டு, நடைமுறையில் எதேச்சாதிகார முறையிலேயே வீட்டில் நடந்து வந்துள்ளோம். அதாவது, குடும்பத் தலைமை என்றால் என்ன என்று வேதம் போதிக்கும் விதத்தில் நடந்து கொள்ளாது அப்போதனைகளை மீறி ஆதிக்கத்துடன் நடந்து வரும் குடும்பத்தலைவர்கள்தான் குடும்பங்களில் அதிகம். ஆகவே, குடும்பத் தலைமை பற்றி வேதம் என்ன போதிக்கிறது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வேதம் போதிக்கும் குடும்பத் தலைமை

முன்னைய ஆக்கத்தில் குடும்பத்தின் தோற்றத்தைப்பற்றி வேதம் போதிக்கும் உண்மைகளை ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்களில் விளக்கமாகப் பார்த்தோம். அவ்வதிகாரங்களே சிருஷ்டியில் குடும்பம் எவ்வாறு தோற்றுவிக்கப்பட்டது என்ற விளக்கங்களைத் தருகின்றன. அங்கேயே குடும்பத் தலைமை பற்றிய உண்மைகளையும் நாம் பெற்றுக்கொள்கிறோம்.

ஆதியாகமம் முதல் மூன்று அதிகாரங்களும் மிகத் தெளிவாக குடும்பத்தைத் தலைமை தாங்கும் பொறுப்பைத் தேவன் கணவனுக்கே கொடுத்திருக்கிறார் என்று தெரிவிக்கின்றன. முதலில் ஆணைப்படைத்த தேவன் பின்பு பெண்ணை ஆணுக்குத் துணையாயிருக்கப் படைத்தார் (ஆதியாகமம் 1:26-27; 2:18-25). ஆதாமும், ஏவாளும் பாவம் செய்தபின் கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டே முதலில் அதற்கு விளக்கம் கேட்டார் (ஆதியாகமம் 3:9). கர்த்தர் ஆதாமையும், ஏவாளையும் அவர்கள் செய்த பாவத்திற்காகத் தண்டித்தபோது, ஏவாளைப் பார்த்து, “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்வான்” என்றார். இது ஆங்கில வேதத்தில் Your desire shall be for your husband, And he shall rule over you என்றிருக்கிறது. இவ்வார்த்தைகளை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். இங்கே ஏவாளின் ஆசை அல்லது desire என்பது, அவள் கணவன் மேல் இனி அன்பு செலுத்துவாள் என்ற பொருளில் அமையவில்லை. அவள் ஏற்கனவே ஆதாம் மீது அன்பு வைத்திருந்தாள். ஆகவே, இதை மறுபடியும் கர்த்தர் இங்கே வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. இப்பதங்கள், ஏவாள் தன் கணவனின் தலைமைத்துவத்திற்கு மதிப்பளிக்காமல் பிசாசின் வார்த்தைகளைக் கேட்டதால், அவள் தொடர்ந்து தன் கணவனின் தலைமைத்துவத்தை நாடும் பாவத்தைச் செய்வாள் என்ற பொருளிலேயே அமைந்துள்ளன.

அடுத்ததாக, “அவன் (ஆதாம்) உன்னை ஆண்டு கொள்வான்” என்று கர்த்தர் ஏவாளைப் பார்த்துக் கூறினார். ஏற்கனவே குடும்பத்தை ஆளும் பொறுப்பு ஆதாமுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவன் பாவம் செய்தபின் இப்பொறுப்பைத் தண்டனையாக கர்த்தர் எப்படி வர்ணிக்க முடியும்? ஆகவே, இங்கேயும் உட்பொருள் வேறுபட்டுக் காணப்படுகின்றது. அதாவது, கர்த்தர் ஆதாமைப் பார்த்து, “குடும்பத்தை ஆளும் பொறுப்பை உனக்குக் கொடுத்திருந்தேன். ஆனால் அதை நீ முறையாக செய்யவில்லை. உன் மனைவி இனி அதை உன்னிடம் இருந்து பறிக்கும் ஆசையுடையவளாயிருப்பாள். நீ அவளை இனி அன்போடு ஆளாமல், அடக்கி ஒடுக்கும் அதிகாரத்துடன் ஆள முயல்வாய்” என்று கூறுகிறார். இப்பொருளிலேயே இவ்வார்த்தைகள் அமைந்துள்ளன. ஆதாமும், ஏவாளும் செய்த பாவம் கர்த்தர் ஏற்படுத்தித் தந்திருந்த குடும்ப உறவுக்கு எதிராக நடந்து கொண்டதே. ஆகவே, அவர்கள் செய்த பாவம் இவ்விதமாகத் தொடர்ந்து குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதைக் கர்த்தர் உணர்த்துகிறார். இதனால்தான் குடும்பங்கள் சிருஷ்டியில் ஏற்படுத்தப்பட்டிருந்த விதத்தில் இன்று வாழ முடியாமல் அவதிப்படுகின்றன.

ஆகவே, இவ்வேதப்பகுதி கர்த்தர் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் கொடுத்த தண்டனையை மட்டுமன்றி ஆரம்பத்தில் கர்த்தர் அவர்கள் எந்தப் பொறுப்புகளைச் சுமந்து குடும்பமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தாரோ அவற்றையும் நினைவுறுத்துகின்றது. அதாவது, ஆதாம் குடும்பத்தை ஆள்பவனாகவும், ஏவாள் அவனுக்கு அமைந்து நடப்பவளாகவும் இருக்க வேண்டுமென்பதே கர்த்தரின் கட்டளையாக இருந்தது. ஆகவே, குடும்பத்தை ஆள்பவனாக கணவனே இருக்கிறான். ஆனால், ஒரு கணவன் குடும்பத்தை எப்படி ஆள வேண்டும்? பாவத்தின் காரணமாக ஒவ்வொரு கணவனும் தன் மனைவியை அடக்கி ஒடுக்கி அதிகாரம் செலுத்தும் நிலையிலேயே இன்று இருக்கிறான். இது கர்த்தர் அவனுக்கு அளித்துள்ள தண்டனை. இயற்கையாகவே அவனால் உண்மையான வேதபூர்வமான குடும்பத்தலைவனாக இருக்கமுடியாது. கிறிஸ்துவை அறிந்து கொண்ட பின்பே அவனது தண்டனையின் பாரம் குறைந்து அவனால் உண்மையான குடும்பத்தலைவனாக இருக்க முடியம். ஒரு கிறிஸ்தவக் கணவன் எப்படிப்பட்ட குடும்பத் தலைவனாக இருக்க வேண்டும்?

குடும்பத்தை ஆளும் கணவன்

கிறிஸ்தவக் கணவன் குடும்பத்தை ஆள்பவனாக இருக்க வேண்டும்.

எபேசியர் 5:23

கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.

அதாவது, குடும்பத்தை நடத்தும் பொறுப்புகளைச் சுமந்து, குடும்பத்தை நல்ல வழியில் நடத்த வேண்டியதற்கான தீர்மானங்களை எடுத்து அவற்றை நிறைவேற்ற வேண்டும். இத்தகைய தீர்மானங்களை எடுக்கும்போது நிச்சயம் அவன் தன் மனைவியையும் அதில் சம்பந்தப்படுத்தி, அவளது ஆலோசனைகளையும் கேட்டுப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தலையணை மந்திரம் கேட்பவன் என்ற கெட்ட பெயர் எடுக்கக்கூடாது. மனைவியை எல்லாம் செய்யவிட்டு, எந்த முடிவும் எடுக்கத் தைரியமில்லாமல் செயலிழந்தவனாக இருக்கக்கூடாது. எந்தத் தீர்மானத்தையும் தான்தோன்றித்தனமாக எடுத்து குடும்பத்தைத் துன்பத்தில் ஆழ்த்தக் கூடாது. எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தையும் குடும்பத்தின் நன்மையைக் கருத்தில் கொண்டே எடுக்க வேண்டும். பிள்ளைகள் இருந்தால் அவர்களை வளர்ப்பதில் அவனுக்குப் பெரும் பங்குண்டு. தன் ஆளுகைக்குள் குடும்ப அங்கத்தவர்கள் கட்டுப்பட்டு நடக்கும் விதமாக அவனது ஆளுகை அமைய வேண்டும். பிள்ளைகளைக் கட்டுக்குள் வைத்து வளர்க்க முடியாதவர்கள் சபை ஊழியத்திற்குத் தகுதியற்றவர்கள் (1 தீமோத்தேயு 3) என்று வேதம் போதிக்கின்றது.

வீட்டை ஆள்பவன் கணவனாதலால் அவன் வீட்டில் இருப்பது அவசியம். கிறிஸ்தவக் கணவன் வீட்டுக்கு வெளியில் அதிக நேரத்தையும், காலத்தையும் செலவிடுவது ஆபத்தை விலைக்கு வாங்குவதாகும். வீட்டுப் பொருளாதார நிலை அப்படி இருக்கிறது என்றும், கர்த்தரின் ஊழியம் அழைக்கிறது என்றும் வீட்டையும், மனைவி, பிள்ளைகளையும் விட்டுவிட்டு எங்கோ போய்விடுபவர்களுக்கு குடும்பம் தேவையில்லை. அவர்களால் வேதபூர்வமாக குடும்பத்தை ஆள முடியாது. அன்றாடம் குடும்பத்தலைவனைக் காணாத வீட்டில் வளரும் பிள்ளைகள் எப்போதுமே கட்டுக்கடங்காமல் போய்விடுகிறவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு தகப்பனின் அன்பும் தெரியாமல் போய்விடுகிறது.

மனைவியின் ஆன்மீக, சரீரத் தேவைகளை நிறைவேற்றி ஆள கணவன் குடும்பத்தில் இருப்பது அவசியம். அத்தோடு குடும்பத்தலைவரின் தேவைகளை மனைவி நிறைவேற்றி வைக்கவும் கணவன் வீட்டில் இருத்தல் அவசியம். கட்டிய மனைவியை விட்டுவிட்டு மாதக்கணக்காக வீட்டுக்கு வெளியில் இருப்பது திருமண வாழ்க்கைக்கு ஒவ்வாது. வீட்டை ஓட்டலாகக் கருதும் கணவனால் கிறிஸ்தவக் கணவனாக இருந்து குடும்பத்தை ஆள முடியாது.

அன்பு காட்டும் கணவன்

கணவன் குடும்பத்தை ஆள்பவனாக இருந்தபோதும் அவன் மனைவி மீது அன்பு செலுத்துபவனாக இருக்க வேண்டும். பவுல் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் கணவர்களைப் பார்த்து, உங்கள் மனைவிமேல் அன்புகூர வேண்டும் என்று கூறுகிறார். இங்கே பவுல், மனைவியை ஆளுங்கள் என்று கூறாமல் அன்பு கூருங்கள் என்று மட்டும் கூறுவதற்குக் காரணமென்ன? கிறிஸ்தவரல்லாத கணவர்களுக்கு பாவத்தின் காரணமாக மனைவிமாரை வேதபூர்வமாக ஆள முடியாமலிருக்கிறது. ஆனால், கிறிஸ்தவக் கணவனால் மட்டுமே கிறிஸ்து நேசிப்பதுபோல் தனது துணைவியை ஆழமாக நேசிக்க முடியும். உங்கள் சொந்த சரீரத்தைப் போல் மனைவியை நேசியுங்கள் என்று பவுல் கூறுகிறார்.

எபேசியர் 5:28

அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.

கணவன் குடும்பத்தை ஆள்வதற்காகப் படைக்கப்பட்டவன் என்பது பவுலுக்குத் தெரிந்திருந்தபோதும் கிறிஸ்தவக் கணவன் தன் மனைவியை அன்போடு ஆள வேண்டுமென்பதற்காகத்தான் இங்கு அன்பை மட்டும் பவுல் குறிப்பிட்டுப் பேசுகிறார்.

ஆள்வதற்கும், அன்புக்கும் தொடர்பில்லை என்று எண்ணிவிடக்கூடாது. தலைமைத்துவமும், ஆளுமையும் அன்பின் அடிப்படையிலேயே எப்போதும் அமைய வேண்டும். கிறிஸ்துவை நேசிக்காத ஒரு மனிதனுக்கு இது புரியாது. இது கிறிஸ்தவனால் மட்டுமே முடிந்த காரியம். ஆகவேதான் பவுல் கிறிஸ்து தன் சபையை எப்படி நேசிக்கிறாரோ அதேபோல் கணவன் தன் மனைவிமேல் அன்புகூர வேண்டும் என்று போதிக்கிறார் (எபேசியர் 5:23; 25-29; கொலோசெயர் 3:19). இங்கே பவுல் இதைக் கட்டளையாகக் கொடுக்கவில்லை. இதை ஒவ்வொரு கிறிஸ்தவக் கணவனிடமும் அவர் எதிர்பார்க்கிறார்.

தன் மனைவியை நேசிக்கும் கணவன் அவளது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதில் பெரிதும் அக்கறை எடுப்பான். அவளுடைய மனம் கோணாமல் நடந்து கொள்வதில் கவனம் செலுத்துவான். அவளுடைய தவறுகளை அன்போடு திருத்துவான். அவளுடைய நல்ல ஆலோசனைகளை அன்புடன் கேட்பான். சமைப்பதும், பிள்ளை பெறுவதும்தான் அவளுடைய பணி என்று சமுதாயம் பெண்களை நடத்துவது போல் கிறிஸ்தவக் கணவன் தன் மனைவியை நடத்தமாட்டான். தன் மனைவி மேல் வைத்திருக்கும் அன்புக்குத் தடையாக எதையும் வரவும் விடமாட்டான்.

பராமரிக்கும் கணவன்

கணவன் குடும்பத்தின் தலைவனானதால் அவனே வீட்டுத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு உழைத்து ஊதியம் பெறவேண்டும். சபையின் தேவைகளனைத்தையும் நிறைவேற்றும் கிறிஸ்துவைப்போல் மனைவியின் தேவைகளை நிறைவேற்றி வைக்க வேண்டியது கணவனின் கடமை. மனைவிக்கு உணவும், உடையும் வழங்க வேண்டியது கணவனின் கடமை. பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் இது கணவனின் அடிப்படைக் கடமையாக சுட்டிக் காட்டப்படுகிறது. இதில் தவறுகிறவன் கிறிஸ்தவக் கணவனாக இருக்க முடியாது. வீட்டு வேலை செய்வதற்கும், சமையற்கட்டுக்கும்தான் மனைவி என்று இருந்துவிடக் கூடாது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் அடுப்படியில் வேலை செய்வது அவமானம் என்று கருதும் வீட்டுத் தலைவர்கள் இருக்கிறார்கள். இந்த நிலை மாறி மனைவிக்கு அடுப்படியிலும் துணை செய்யும் மனமுள்ள கிறிஸ்தவக் கணவர்களாக நாம் இருக்க வேண்டும். மனைவியை நேசிப்பவனுக்கு இது மானக்கேடாகத் தெரியாது.

மனைவியின் சரீரத் தேவைகளையும் கணவன் நிறைவேற்றி வைக்க வேண்டும். இதைக்குறித்து கடந்த இதழில் விபரமாக எழுதினோம். பிள்ளை பெறும் இயந்திரமாக மட்டும் மனைவியைக் கணவன் பயன்படுத்தக் கூடாது. பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதும் முக்கிய கடமையாக இருந்தபோதும் பாலுறவில் மனைவியின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதும் கணவனின் முக்கிய கடமையாகும். அதுமட்டுமல்லாது கணவன் தன் மனைவியில் மட்டுமே பாலுறவின்பத்தை அனுபவிக்க வேண்டும். அவன் மனதாலோ, அல்லது வேறு எந்தவிதத்திலோ ஏனைய பெண்களை நினைத்தும் பார்க்கக்கூடாது என்று மட்டும் வேதம் போதிக்காமல் (யாத்திராகமம் 20:17) தனது முழுத் திருப்தியையும் தன் மனைவியிலேயே அடைய வேண்டும் என்றும் போதிக்கின்றது.

மனைவியைப் பராமரிப்பதில் இதுவும் ஒரு அம்சமாகும். நீதிமொழிகள் பின்வருமாறு கூறுகிறது,

நீதிமொழிகள் 5:15-19

“உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம் பண்ணு. உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக. அவைகள் அன்னியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக. உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இள வயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்போழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.”

மனைவியின் சரீரத் தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாது அவளது ஆன்மீகத் தேவைகளையும் நிறைவேற்றுபவனாக கிறிஸ்தவக் கணவன் இருக்க வேண்டும். மற்ற எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றி இதில் தவறிழைக்கிறவன் கிறிஸ்தவக் கணவனாக இருக்க முடியாது. தானும் கிறிஸ்தவ வாழ்வில் வளர்ந்து தனது மனைவிக்கும் அவ்வாழ்வில் வழிகாட்டியாகவும், ஆசானாகவும் இருக்க வேண்டியது கணவனின் கடமை. குடும்ப ஆராதனையை வீட்டில் தவறாது முன்னின்று நடத்தி வேத போதனைகளை அளித்து மனைவி வேத அறிவில் சிறக்க கணவன் வழி காட்டுபவனாக இருக்க வேண்டும். தன் மனைவி மனத்திலும், ஆவியிலும் பலமுள்ளவளாக இருக்க கணவன் அவளுக்கு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் (1 பேதுரு 3:7). இன்று அநேக கிறிஸ்தவ மனைவிகள் போலிப்போதனைகளை சுலபமாக நாடி ஓடி தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறார்கள். பல கணவர்கள் இதைப் பார்த்தும் பேசாதிருந்துவிடுகிறார்கள். கணவன் ஒரு சபைக்கும், மனைவி ஒரு கூட்டத்திற்கும் என்று போவதும் வழக்கமாக இருக்கிறது. இது கிறிஸ்தவ குடும்பத்திற்கு ஏற்றதல்ல. இதற்குக் காரணம் குடும்பத் தலைவனான கணவன் தன் பொறுப்புணர்ந்து மனைவியை வழி நடத்தாததே. இன்று பெண்களின் பலவீனமறிந்து அவர்களை மயக்குவதற்கென்றே பல போலி ஊழியங்கள் நடந்து வருகின்றன. கிறிஸ்தவக் கணவன் தன் மனைவியை இத்தகைய ஆபத்திலிருந்து காப்பாற்ற அவளுக்கு நல்ல போதனைகளை வழங்க வேண்டும். போலிகளை அடையாளம் கண்டுகொள்ள உதவ வேண்டும். இதையெல்லாம் நிறைவேற்ற அவன் வேத அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். குடும்பமாக ஒரே சபைக்குப்போய் ஆராதனையில் ஈடுபடுவதையும் வழக்கமாகக்கொள்ள வேண்டும். ஒரே சத்தியத்தில் வளர்ந்து வரவேண்டும். இதையெல்லாம் செய்யாத கணவன் எப்படிக் கிறிஸ்தவக் கணவனாக இருக்க முடியம்? கிறிஸ்தவக் கணவனே! கிறிஸ்து தந்திருக்கும் பொறுப்புகளை இனியாவது உணர்ந்து நிறைவேற்றுவாயா?

© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.