1. பாவத்தைவிட மோசமானது எதுவும் இல்லை.
பாவத்தைவிட நமக்கு அதிக தீங்கை ஏற்படுத்தக்கூடியது எதுவும் இல்லை. பாவம், நமக்கு துன்பத்தையும், மரணத்தையும், பிசாசையும், நரகத்தையும்விட அதிக தீமையானது. பிரச்சனையும், துன்பமும், மரணமும், பிசாசும், நரகமும் பயங்கரமானதுதான். அவைகளிலிருந்து விடுதலைபெற நாம் கடவுளிடம் ஜெபிக்க வேண்டும். ஆனால், பயங்கரமான இந்தக் காரியங்கள் யாவும் நமக்குக் கொண்டு வரும் தீங்கைக் காட்டிலும் பாவகரமான வாழ்க்கை நமக்கு ஏற்படுத்தும் தீங்கு அதிகமானது.
முதலாவது, நம்முடைய வாழ்க்கையில் அநேக பிரச்சனைகளும், துன்பங்களும் உண்டு. கேடான வாழ்க்கை முறை அதையெல்லாம்விட மோசமானதா? ஆம், உண்மையாகவே அதையெல்லாம்விட மோசமானதுதான். இயேசு சொன்னார்,
“ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” (மத்தேயு 10:28).
நரகத்திற்குப்போய் அழிவதைக் காட்டிலும் சாவது மேலானது என்று சொல்லலாம். ஒருவன் துன்பங்களை அனுபவித்தும் பாவம் செய்யாமல் இருந்துவிட முடியும். ஆனால் பாவம் செய்த ஒருவன் துன்பங்களை அனுபவிக்காமல் போக வழியே இல்லை.
அ. துன்பப்படுவதைத் தெரிவுசெய்வது நமக்கு நல்லதாக அமைந்துவிடலாம். ஆனால் பாவம் செய்வதைத் தெரிவுசெய்வது ஒருபோதும் நன்மையைத் தராது. மூன்று இளம் வாலிபர்கள், கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் பாவம் செய்வதைவிட நெருப்பில் துன்பத்தை அனுபவிப்பதையே தெரிவுசெய்தார்கள் (தானியேல் 3). மோசே, கொஞ்சக்காலம் பாவத்தின் சந்தோஷங்களை அனுபவிப்பதைவிட, தேவனுடைய மக்களோடு, சிறுமைப்படுவதையே தெரிவுசெய்தார்.
அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, (எபிரெயர் 11:25).
துன்பங்களின் மூலமாக நமக்கு எந்தவொரு நன்மையும் ஏற்படாது என்று நாம் சொல்லிவிட முடியாது. தான் துன்பப்பட்டது நல்லது என்று சங்கீதக்காரன் அறிந்திருந்தார்.
நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். (சங்கீதம் 119:71).
ஆனால், பாவம் செய்தது நல்லது என்று நாம் ஒருபோதும் சொல்லமுடியாது. கேடான காரியங்களை, அவற்றை செய்வதற்கு முன்னும் செய்தபிறகும், ஒருபோதும் நல்லதாக இருக்காது.
ஆ. ஒரு விசுவாசிக்கு ஏற்படும் பிரச்சனைகள், அதனால் உண்டாகும் துன்பங்கள் அவனை கடவுளிடம் நெருங்கச் செய்வதால், அதைக் குறித்து அவன் சந்தோஷப்பட வேண்டும். ஆனால் பாவமோ கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கிறது. யாக்கோபு சொல்லுகிறார்,
“என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.” (யாக்கோபு 1:2-3).
கடவுள் தம்முடைய மக்களைத் துன்பங்களின் மூலமாக பரிசோதிப்பதை விரும்புகிறார். ஏனென்றால், அதன் மூலமாக அவர்கள் உறுதியான விசுவாசிகளாகிறார்கள் என்பதை அவர் அறிவார்.
இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். (ரோமர் 5:1).
இ. சோதனைகளின் காரணமாக துன்பங்களை அனுபவிக்கிறவர்களுக்கு வேதம் அநேக ஊக்கந்தரும் போதனைகளைத் தன்னில் கொண்டிருக்கிறது. ஆனால் பாவகரமான செயலை அது ஒருபோதும் ஊக்கப்படுத்துவதில்லை. பிரச்சனைகளில் நாம் சிக்கிக்கொண்டிருக்கிற வேளையில், கடவுள் நமக்கு உதவுவதாக வாக்களித்திருக்கிறார். ஆனால், நாம் கேடான காரியங்களைச் செய்கிறபோது, கடவுள் தம்முடைய பிரசன்னத்தை நம்மைவிட்டு விலக்கிக்கொள்ளுகிறார். நமக்கு ஏற்படும் பிரச்சனைகளின்போது கடவுள் நமக்கு ஆறுதலாக இருக்கிறார் என்பது அவர் நம்மீது அன்புகாட்டுகிறார் என்பதற்கான அடையாளம். நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருப்பதால் அவர் இதை நமக்குச் செய்கிறார். ஆனால் பாவகரமான செயலில் நாம் இன்பம் காண்போமானால், நாம் தேவனுடைய பிள்ளைகள் அல்ல என்பதற்கு அது அடையாளம்.
ஈ. கடவுள் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையிலிருந்து பாவகரமான ஆசைகளை அழிப்பதற்குப் பிரச்சனைகளையும் சோதனைகளையும் பயன்படுத்துகிறார். சங்கீதக்காரன் சொல்லுகிறார்,
“நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.” (சங்கீதம் 119:67).
நிச்சயமாக அது கடவுள் ஏற்படுத்திய உபத்திரவம், எனவேதான் அவர் கடவுளிடம் திரும்பினார். ஆகவே பாவம் செய்வதைவிட, சில சோதனைகளை எதிர்கொள்ளுவதே சிறந்தது. ஏனென்றால், பாவம் நம்மைக் கடவுளிடமிருந்து பிரிக்கவே செய்யும். கடவுள் தம்முடைய நல்ல நோக்கத்தின்படியாகவே, தம்முடைய மக்களின் வாழ்க்கையில் சிலவேளைகளில் உபத்திரவங்களை அனுமதிக்கிறார். ஆனால் கேடான செயல்களில் எந்த நல்ல நோக்கமும் இருப்பதில்லை. பாவத்தில் எந்த நன்மையும் இல்லை. உபத்திரவங்கள் விசுவாசிகளை மென்மேலும் பூரணப்படுத்துகிறது. பாவம் நம்மை மென்மேலும் சீர்குலைக்கிறது. தேவபக்தியற்ற எந்தப் பாவியும், கடவுளுக்குத் தூரத்தில் இருக்கிறான். அவனுக்கு வாழ்க்கையில் எந்தவொரு நம்பிக்கையும் இல்லை.
அக்காலத்திலே இயேசுகிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 2:12).
ஆனால் உபத்திரவப்படுகிற விசுவாசியோடு கடவுள் இருக்கிறார், அவனுடைய உபத்திரவத்தின் மத்தியிலும் அவனுக்கு ஒரு நம்பிக்கை உண்டு.
உ. கிறிஸ்துவினிமித்தமாகவும், தேவனிமித்தமாகவும், நீதியினிமித்தமாகவும் ஒருவன் உபத்திரவங்களையும் துன்புறுத்தல்களையும் சகித்தால், அவனுக்கு அது மகிமை. பாவகரமான சோதனைக்கு எதிராகப் போராடி, அவற்றிற்கு இரையாவதைத் தவிர்த்து, அதன் காரணமாக துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தாலும், அது கடவுளுடைய வல்லமை அழகாக நம்மில் செயல்படுகிறது என்பதையே காட்டுகிறது. கடவுளுடைய பரிசுத்த நீதியினால் கண்டிக்கப்பட்டவர்களாக, தீமைக்கு அடிமையாயிருப்பதைக் காட்டிலும், கடவுளுக்காக இரத்தசாட்சியாக சாவதே சந்தோஷமானது. (1 பேதுரு 4:1-16). பாவம் செய்வதைவிட துன்பங்களை அனுபவிப்பதே நல்லது.
இரண்டாவது, பாவத்தினால் வருகிற தீமை மரணத்தைவிட மோசமானது. மரணம் மனிதர்களுடைய பயங்கரமான எதிரி. ஆகவேதான் மனிதர்கள் மரணமடைவதற்கு விரும்புவதில்லை. ஆனால் பாவம் மரணத்தைவிட மிகவும் பயங்கரமான எதிரி.
மரணம் சரீரத்தையும் ஆத்துமாவையும் பிரிக்கிறது; அது நம்முடைய அன்புக்குரியவர்களையும், உடைமைகளையும் நம்மைவிட்டுப் பிரிக்கிறது. எனினும், ஒரு விசுவாசி இந்த உலகத்தில் தான் அனுபவித்த கடவுளுடைய நித்திய அன்பிலிருந்து அதனால் ஒருபோதும் அவனைப் பிரிக்கமுடியாது. கேடான வாழ்க்கை மரணத்தையும்விட மோசமானது. ஏனென்றால், ஒரு பாவியை, அவன் இந்த உலகத்தில் வாழ்கிறபோதே அது கடவுளுடைய தயவுள்ள அன்பிலிருந்து பிரிக்கிறது. பாவம் மரணத்தைவிட மோசமானது, ஏனென்றால், கீழ்ப்படியாமையாகிய முதல் பாவமே மனிதர்களுக்கு மரணத்தைக் கொண்டு வந்தது.
அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். (ஆதியாகமம் 3:6).
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். (ஆதியாகமம் 3:19).
“ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” (ரோமர் 5:12).
அ. மனிதனுக்கு மரணத்தைப் பற்றிய பயம் இருக்கிறது. மனிதர்கள் மரணமடைவதற்கு விருப்பமற்றவர்களாக இருப்பதுமட்டுமல்லாமல், அதைக்கண்டு அஞ்சுகிறார்கள். பாவம் மரணத்தின் கொடுக்கு.
மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். (1 கொரிந்தியர் 15:56).
அது பாவியைக் கடவுளிடமிருந்து நித்தியத்திற்கும் பிரிக்கிறது. பாவம் இந்த உலகத்தில் தோன்றாமல் இருந்திருந்தால், மரணமும் வந்திருக்காது; மரணத்தைப் பற்றிய பயமும் இருந்திருக்காது. விசுவாசத்தின் மூலமாக, கிறிஸ்துவினுடைய மரணத்தினால் பாவத்தின் கொடுக்கு எடுக்கப்பட்டுவிட்டால், மரணத்தைப் பற்றிய பயம் இல்லாமலாகிவிடும்.
ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். (எபிரெயர் 2:14-15).
ஆ. மரணம் இந்த உலக வாழ்க்கையை இழக்கச்செய்கிறது. பாவம் இந்த உலகத்தில் ஆவிக்குரிய வாழ்க்கையையும், மறுமையில் பரலோகத்தையும் இழக்கச்செய்கிறது. மரணம் நம்முடைய சரீரத்தைக் கொல்லுகிறது, ஆனால் பாவம் நம்முடைய ஆத்துமாவை நரகத்தில் சிறையாக்குகிறது. ஆகவே, மரணத்தினால் கொல்லப்படுவதைக் காட்டிலும் பாவத்தினால் கொல்லப்படுவது பயங்கரமானது என்று நாம் சொல்லலாம்.
நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்கா 12:5).
அதுபோல, மரணம் நம்முடைய சரீரத்தைச் சிதைக்கிறது, ஆனால், பாவமோ மனிதத் தன்மையின் மிக முக்கியமான பகுதியாகிய ஆத்துமாவைச் சிதைக்கிறது. கேடான செயல்கள் நம்முடைய சரீரத்தையும் ஆத்துமாவையும் சிதைக்கிறது என்று சொல்லுவதில் தவறில்லை. ஏனென்றால், பாவகரமான நடவடிக்கைகள் நம்முடைய சரீரங்களின் நலனைப் பாதிப்பதோடு, நம்முடைய ஆத்துமாவையும் சீரழிக்கிறது. பாவவாழ்க்கையினால் நமக்கு வரும் விளைவுகள் மரணத்தைவிட மோசமானது. மனிதர்களுக்கு மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தக்கூடியது, மரணமல்ல, மன்னிப்பைப் பெறாமல் மரணமடைவதுதான் என்று இயேசு சொல்லியிருக்கிறார்.
இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார். (யோவான் 8:21).
மூன்றாவது, பாவத்தினால் வரும் தீங்கு, பிசாசைவிட மோசமானது. ஏனென்றால், பாவகரமான செயலே பிசாசு தோன்றக் காரணமாக அமைந்தது. சாத்தானை, கேடான தேவதூதனாக கடவுள் படைக்கவில்லை. தன்னைப் படைத்த கடவுளுக்கு எதிராகச் செய்த பாவகரமான செயலின் காரணமாக பிசாசு கேடான நிலையில் இருக்கிறான்.
தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார். (யூதா 6)
பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; (2 பேதுரு 2:4).
ஆகவே, நாம் பாவம் செய்கிறபோது, பிசாசைவிட மோசமானவர்களாக இருக்கிறோம் என்பதைச் சுட்டுகிறோம்.
அ. பிசாசு நம்மை சோதிப்பான், ஆனால் சோதனையே பாவமல்ல. சோதனைக்கு அடிப்பணிந்து நாம் கேடான செயல்களைச் செய்கிறபோதுதான், பாவிகளுக்கான தீங்கு நம்மை வந்தடைகிறது. கேடாக நடக்கும்படி பிசாசு நம்மைச் சோதிக்கலாம். ஆனால் அந்தக் கேட்டைச் செய்யும்படி அவன் நம்மைக் கட்டாயப்படுத்தி அதற்குள் தள்ளுவதில்லை. பாவத்திற்கு சாய்ந்துபோகும் நம்முடைய இருதயமே, நாம் பாவம் செய்வதற்குக் காரணமாக இருக்கிறது.
அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். (யாக்கோபு 1:14).
பிசாசு சோதித்தாலும் சோதிக்காவிட்டாலும், பாவத்திற்கு வளைந்துகொடுக்கிற விதத்தில்தான் எல்லா மனிதர்களும் இருக்கிறார்கள், விசுவாசிகளும்கூட. ஹிப்போவின் ஆகஸ்டின் என்ற பழம்பெரும் சபை பிதாக்களில் ஒருவர். அவர் இவ்வாறாக ஜெபிப்பார்,
“தீய மனிதனிலிருந்து என்னை விடுவியும். அந்தத் தீயமனிதனே நான்தான்”.
பாவத்திற்கு வளைந்துகொடுக்கும் நம்முடைய சொந்தப் பாவத் தன்மையைவிட மோசமானது எதுவும் இல்லை. நாமோ, பிசாசோகூட அந்தளவுக்கு மோசமானவர்கள் அல்ல.
ஆ. சாத்தான் நம்மைச் சோதிக்கலாம், தொல்லையும் கொடுக்கலாம். சாத்தானைக் “கெர்ச்சிக்கிற சிங்கம்” என்ற வேதம் விவரிக்கிறது.
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். (1 பேதுரு 5:8).
சாத்தான், நமக்கு வெளியிலிருந்துதான், நம்மைச் சோதிப்பதையும், நமக்குத் தொல்லை கொடுப்பதையும் செய்கிறான். ஆனால் அவன் நமக்குள்ளாக வந்து வாழ்ந்து நம்மைப் பாவம் செய்ய வைப்பதில்லை. நம்முடைய சொந்தப் பாவத்தன்மையே நம்மிலிருந்து நம்மைப் பாவம் செய்யவைக்கிறது. ஆகவே, அந்தப் பாவத்தன்மை, பிசாசையும்விட மோசமானது.
நான்காவது, மன்னிப்பைப் பெறாத பாவியின் சொந்த மனச்சாட்சியே, பிசாசைவிட நரகத்தில் ஒருவனை அதிகமான வேதனைக்குள்ளாக்கும். பாவியான மனிதன், தன்னுடைய சொந்தப் பாவச் செயலின் காரணமாகத் தான் நரகத்தில் இருக்கிறேன் என்பதை அறிவான். அதனால் அவனுடைய மனச்சாட்சி அவனைக் குற்றப்படுத்தி வேதனைக்குள்ளாக்கும். ஆகவே மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், மரணத்தையும், சாத்தானையும், நரகத்தையும்விட பாவமே மோசமானது என்பது உறுதியாகத் தெரிகிறது.
பாவியான மனிதனை, கடவுள் கிறிஸ்துவுக்குள்ளாக மன்னிப்பதும், பாவத்தின் சகல தொடர்விளைவுகளிலிருந்தும் மீட்பதுமாகிய செயல், எந்தளவுக்கு நன்மையானது என்பதை நாம் இப்போது ஆராயலாம்.
பாவம் எல்லாவற்றையும்விட நமக்கு மிகவும் தீமையானது, மிகவும் தீங்கிழைக்கக்கூடியது என்று இதுவரை நான் விளக்கினேன். அதைப்பற்றி மேலும் அதிகமாக மறுபடியும் விளக்குகிறேன்.
அ. பாவத்தினால் உலகத்திலிருந்து வருகிற எல்லா நன்மையைக் காட்டிலும், அதனால் வருகிற தீமையே மிக அதிகம். நாம் நோயுற்றால், அதிலிருந்து நாம் குணமடைவதற்கு, நாம் வாழுகிற இந்த உலகத்தில் அநேக மருந்துகள் உண்டு. ஆனால் நம்முடைய பாவ நோயைக் குணப்படுத்த எந்தவொரு மருந்தும் இந்த உலகத்தில் இல்லை. கடவுளின் அருளும் அவருடைய கிருபையுள்ள மன்னிப்பும் மட்டுமே அதற்கான ஒரே தீர்வு. பாவமற்ற தேவதூதர்களும் நமக்கு உதவமுடியாது. கடவுள் மட்டுமே நம்மை மறுபடியுமாக உருவாக்குகிறார். அதையே வேதம் “புது சிருஷ்டி” என்று குறிப்பிடுகிறது.
மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 4:24).
இதையே தாவீது இராஜா “சுத்த இருதயத்தை என்னில் சிருஷ்டியும்” என்று ஜெபித்தார்.
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். (சங்கீதம் 51:10).
ஆ. நம்முடைய கேடான செயல்களிலிருந்து நாம் மனந்திரும்பவேண்டும். நம்முடைய பல தவறான செயல்களின் காரணமாக நாம் கவலைப்படலாம், வேதனைப்படலாம், அல்லது துக்கப்படலாம். ஆனால் நம்முடைய எல்லாக் கேடான செயல்களிலிருந்து நாம் மனந்திரும்பவேண்டும் என்பதையே கடவுள் வலியுறுத்துகிறார். அதாவது, பாவத்தையும், அதன் அசிங்கத்தையும், அதன் கேட்டையும், கடவுளிடம் அறிக்கையிட வேண்டும். யாருக்காவது நாம் தீமை செய்திருந்தால், அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். அதுபோன்ற தீமையை மறுபடியும் செய்யாதிருக்கவேண்டும். மனந்திரும்புதல் என்பது தீவிரமான கண்டிப்பையும், கேட்டைவிட்டு விலகுவதையும் தன்னில் உள்ளடக்கியிருக்கிறது. இப்படித் தீவிரம் காட்டுவதே, பாவத்தினால் வருகிற தீங்கு எவ்வளவு மோசமானது என்பதை நமக்குக் காட்டுகிறது.
இ. ஒரு மனிதன் பாவம் செய்வதை வாழ்க்கையில் தொடருகிறவனாக இருந்தால், அவனைப் பாவம் செய்வதற்கே கடவுள் விட்டுவிட்டார் என்பதை அது காட்டுகிறது. இது பற்றி மூன்று முறை ரோமர் 1ஆவது அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். (ரோமர் 1:24)
இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். (ரோமர் 1:26)
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். (ரோமர் 1:28).
கடவுள் நம்மைத் தொடர்ந்து வற்புறுத்தியும், அதற்கெதிராக ஒருவன் தொடர்ந்து பாவத்தைச்செய்து வாழ்ந்தால், அவன் கடவுளிடம் திரும்புவதிலிருந்து விலகிப் போய்க்கொண்டிருக்கிறான் என்பதையே அது காட்டுகிறது. இந்தளவுக்குப் பாவம் கேடானது.
ஈ. கேடான மனிதர்கள் செய்யும் பாவத்தின் காரணமாக, கடவுள் அவர்களை வெறுக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது.
வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர். (சங்கீதம் 5:5)
ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை. துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே. (நீதிமொழிகள் 6:16-19).
கடவுள் அன்புள்ளவராக இருந்தாலும், பாவத்தின் கேடான தன்மை, அவரில் வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. பாவத்தின் கேட்டை விவரிப்பதற்கு, இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
உ. தெய்வீகமும் மனிதத் தன்மையும் கொண்ட, தனித்துவமான நபராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே பாவத்திற்கான ஒரே சிறந்த இரட்சகர். ஆகவே அவர் தருகிற இரட்சிப்பு மட்டுமே சிறந்த இரட்சிப்பு. ஒரு பாவியை மீட்க மிகச்சிறப்பான இரட்சகர் ஒருவர் தேவையாக இருந்தால், பாவமே எல்லாத் தீமைகளிலும் மோசமான தீமையாக இருக்கவேண்டும்.
பாவமே எல்லாத் தீமையிலும் மோசமான தீமை என்பதை நான் இதுவரை விளக்கியவற்றிலிருந்து நீங்களும் ஒப்புகொள்ளுவீர்கள் என்று நான் நம்புகிறேன். பாவத்தினுடைய கேடான தன்மையோடு வேறெதையும் ஒப்பிடவே முடியாது.
இதுவரை நாம் படித்த இந்த உண்மை, கடவுளைப் பற்றியும் நம்மைப் பற்றியும் என்ன சொல்லுகிறது என்பதை இனி நான் விளக்குகிறேன்.
2. கடவுளுடைய பொறுமை எந்தளவுக்கு ஆச்சரியமானது என்பதை இதிலிருந்து நாம் கற்கிறோம்.
பாவம் மிகவும் கேடுள்ளதாகவும், கடவுளுக்கு எதிரானதாகவும் இருப்பதால், நிச்சயமாக கடவுளுடைய நீடிய பொறுமை மிகப்பெரியதும் ஆச்சரியமுமானதுதான். கடவுள், தனக்கு எதிராக இருக்கிற பாவிகளை, அவருடைய எதிரிகளை, தன்னிடம் ஒப்புரவாகும்படி அழைப்பது, மனித சிந்தனையால் புரிந்துகொள்ள முடியாத, கடவுளின் ஆச்சரியமான பொறுமையின் அடையாளமாக இருக்கிறது. பாவிகள் தன்னையும் தன்னுடைய அன்பையும் நிராகரித்தபோதும், கடவுள் தொடர்ந்து, பாவிகள் மனந்திரும்பவேண்டும் என்று தம்முடைய குமாரனுடைய வாழ்க்கை மற்றும் மரணத்தின் மூலமாக தன்னுடைய அன்பைக் காட்டி அறைகூவலிடுவது, அவருடைய பொறுமை மாபெரும் அற்புதம் என்பதையே காட்டுகிறது.
“நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” (புலம்பல் 3:22).
அ. உலகத்திலுள்ள பாவிகளின் எண்ணிக்கையைப் பற்றிச் சிறிது சிந்தியுங்கள். உலகத்தில் பாவிகள் சிறிய தொகையினராக இருந்தால், கடவுள் ஏன் இந்தளவுக்குப் பொறுமையாக இருக்கிறார் என்பதை ஓரளவுக்கு நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் உலகம் முழுவதுமே பாவத்தின் கீழ்தான் இருக்கிறது.
நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம். (1 யோவான் 5:19).
பாவம் செய்யாத, இதுவரை பாவமே செய்திராத ஒருவன்கூட இல்லை. அப்படியானால், கடவுளின் பொறுமை எந்தளவுக்கு ஆச்சரியமானது என்பதை எண்ணிப் பாருங்கள்.
ஆ. ஒருவேளை, உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் ஒரேயொரு முறை மட்டுமே பாவம் செய்திருந்தால், அது குறித்து இந்தளவுக்கு நாம் ஆராயவேண்டிய அவசியம் நமக்கு இருந்திருக்காது. ஆனால் நாம் அனைவரும், ஒவ்வொரு நாளும் எத்தனையோ விதங்களில் கடவுளுக்கு வெறுப்புண்டாக்குகிற காரியங்களைச் செய்கிறோம். இது மனித குலத்தின் முதல் ஜோடி, தன்னைப் படைத்தவருக்குக் கீழ்ப்படியாமல்போன அந்த நிகழ்விலிருந்து, காலங்காலமாகத் தொடருகிறதாக இருக்கிறது. இது உண்மையிலே கடவுளின் பொறுமை அற்புதமானது என்பதையே காட்டுகிறது.
இ. ஒருவிதத்தில், நம்முடைய பாவங்கள், கடவுளை நோக்கி நமக்கெதிராகக் கதறுகிறது என்று சொல்லலாம்.
அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. (ஆதியாகமம் 4:10).
நம்முடைய எதிரியாகிய பிசாசானவன், நம்முடைய தவறான செயல்களை அதிகரிக்கச் செய்வதிலேயே ஆர்வமாக இருக்கிறான். இருப்பினும், கடவுள் நம்முடைய கேடான செயல்களின் காரணமாக நம்மை அழிக்காமல், தம்முடைய இரக்கமுள்ள கைகளை நம்மை நோக்கி நீட்டியபடியே இருக்கிறார். அவருக்கெதிரானவர்களாக நாம் தொடர்ந்து வாழ்ந்து வந்தால், நமக்கு வரவிருக்கும் நித்திய தண்டனையை அவர் நமக்கு நினைவுறுத்தி நம்மை எச்சரிக்கை செய்கிறார்.
ஈ. கடவுள் நமக்கு நன்மையான காரியங்களைச் செய்துவந்தபோதும், நாம் தொடர்ந்து கேடான காரியங்களைச் செய்து வருவது, நம்முடைய பாவகரமான செயல்களின் கேட்டை அதிகரிக்கச் செய்கிறது.
அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? (ரோமர் 2:4).
வாக்குறுதி அளித்தும் தீர்மானங்களை எடுத்தும், அவற்றை நிறைவேற்றாமலேயே நாம் தொடர்ந்திருக்கிறோம். உடல்நலக் குறைவு ஏற்படுகிறபோது, இனி திருந்தி வாழுவேன் என்று சொல்லுகிறோம், ஆனால் சுகமடைந்தபிறகு, திருந்திய வாழ்க்கை வாழ்வதில்லை. இந்தவிதத்தில், நாம் கேடான செயல்களைச் செய்கிறது மட்டுமல்லாமல், நம்மிலுள்ள கேட்டை மேலும் அதிகரிக்கவே செய்கிறோம். ஏனென்றால், நாம் என்ன செய்யவேண்டும் என்பது நமக்குத் தெரிந்திருந்தும் அதை நாம் செய்வதில்லை. இருந்தபோதும், கடவுள் கிருபையுள்ளவராகவே இருந்து வருகிறார். ஆகவே, பாவத்தினுடைய தீமையின் அதிகரிப்பில், கடவுளுடைய நீடிய பொறுமையினால், அவருடைய கிருபையின் மகத்துவத்தை நாம் காண்கிறோம்.
3. பாவத்திற்கான கடவுளுடைய தண்டனை நீதியானது என்று நாம் அறிகிறோம்.
நாம் நினைப்பதைவிட கடவுள் மிகவும் பொறுமையுள்ளவர். சிலவேளையில், நாம் நம்முடைய பாவகரமான செயல்களைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால், மனந்திரும்பாத பாவச்செயல்களை அவர் தண்டிக்கிறார். பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்பாத யாவரும், தண்டனையைப் பெறுகிறார்கள். ஆகவே கடவுள் பாவத்திற்கான தண்டனையை வழங்குகிறாரே தவிர, அதற்கு மேலாக அவர் எவரையும் தண்டிப்பதில்லை.
அ. கடவுள் யார் என்பதை எண்ணிப் பாருங்கள். கடவுள் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுள்ளவர். நீதியான காரியங்களைத் தவிர்த்து வேறு எதையும் அவர் செய்யமுடியாது.
“சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ” (ஆதியாகமம் 18:25).
காயின், தனக்கு வழங்கப்பட்ட தண்டனை, தன்னால் தாங்க முடியாதளவுக்கு அதிகமானது என்றான்.
அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது. (ஆதியாகமம் 4:13)
ஆனால் தான் அந்த தண்டனையை அடைய வேண்டியவன் என்பதை அவன் ஏற்கவேண்டியிருந்தது. ஏவாள் சாத்தான்மீது புகார் தெரிவித்தாள்.
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். (ஆதியாகமம் 3:13).
சாத்தான் நிச்சயமாக நம்மைச் சோதிப்பான், ஆனால் அவன் நம்மைக் கட்டாயப்படுத்தி பாவகரமான செயலில் ஈடுபட வைப்பதில்லை. சோதனைகளைச் சந்திப்பதை நாம் தவிர்த்துக்கொள்ள முடியாது. ஆனால் பாவஞ் செய்வதிலிருந்து நாம் விலகியிருக்க முடியும். கடவுளுக்கு எதிராகவும் நாம் குறைகூற முடியாது.
அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான். (ஆதியாகமம் 3:12).
கடவுள் முதல் மனித ஜோடியை, அவர்கள் நல்வாழ்க்கை வாழ்வதற்கான சூழலில்தான் அவர்களை வைத்தார். அவர்கள் எதைச் செய்யக்கூடாது என்பதைப் பற்றி கடவுள் அவர்களை எச்சரிக்கவில்லையா? தமக்குக் கீழ்ப்படியாமல் போனால் அதனால் வரக்கூடிய விளைவுகளைப் பற்றி அவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கவில்லையா?
பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். (ஆதியாகமம் 2:17).
நாம் எப்படி வாழவேண்டும் என்பதை கடவுள் வேதத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறார். நம்முடைய ஒழுங்கற்ற வாழ்க்கைக்கான தண்டனையை நாம் அடைகிறபோது, கடவுளை எப்படிக் குறை சொல்லமுடியும்?
ஆ. பாவம் எப்படிப்பட்டது என்பதை எண்ணிப்பாருங்கள். பாவமும் தீமையும் கடவுளுக்கு எதிரானது. ஆகவே, பாவிகள் விரும்பி, தமக்கு எதிராகச் செய்யும் அநீதியான செயலுக்கு ஏற்றதைச் செய்வது கடவுளின் நீதியான செயல்.
“கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.” (எரேமியா 17:10)
இ. அவிசுவாசிகளின் நிலையை எண்ணிப்பாருங்கள். நம்முடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பாமல் மரிக்கும்போது, நித்தியத்திற்கும் பாவத்தன்மையோடு வாழும் தண்டனையைப் பெறுவோம். நித்தியத்திற்கும் பாவத் தன்மையோடு இருப்பவர்களை நித்தியத்திற்கும் தண்டிப்பது எப்படி முறையற்றதாகும்? கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் வாழ்ந்து, தன்னுடைய பாவத்தின் கடனை கடவுளுக்கு ஏற்றவிதத்தில் திரும்பக் கட்டுகிறவன் அவற்றிலிருந்து விடுதலை பெறுகிறான். ஆனால் தன்னுடைய கடனை திரும்பச் செலுத்தமாட்டேன் என்று சொல்லுகிறவர்கள், தங்களுடைய கேடான நிலைக்கான முடிவைத் தாங்களே ஏற்படுத்திக்கொள்ளுகிறார்கள். ஏனென்றால், அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள். அவர்கள் கடவுளிடம் மன்னிப்பிற்காக முறையிட முடியாது. தன் பாவத்தை உணர்ந்து, வருந்தி, மனந்திரும்பாத ஒருவனுக்காக கிறிஸ்து மரிக்கவில்லை. கடவுளுடைய இரக்கத்திற்காக, தன்னுடைய பாவத்திலிருந்து மனந்திரும்பி வருகிறவர்களுக்காகவே கிறிஸ்து மரித்தார். கிறிஸ்துவின் மூலமாக வருகிற கடவுளின் கிருபையை மறுத்தால், அதற்கான பலனை அவர்கள் பெறுவார்கள். கடவுள், தம்முடைய இரக்கத்தை நிராகரிக்கிறவர்களைத் தண்டிப்பது அநீதியான செயலல்ல. அதேவேளையில், தம்மைத் தேடுகிறவர்களுக்குக் கடவுள் இரக்கத்தையே காட்ட விரும்புகிறார்.
4. நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறுவது எத்தனை ஆச்சரியமானது!
பாவம் எந்தளவுக்குக் கடவுளுக்கு எதிரானது என்பதை நாம் ஆராய்ந்திருக்கிறோம். இருந்தும், கடவுள் பாவியான மனிதனுடைய பாவத்தை மன்னிக்கிறார் என்பது எத்தனை ஆச்சரியமானது. கடவுளுடைய இரக்கத்தின் சிறப்புகளைப் பின்வரும் விதங்களில் நாம் அறியலாம்.
அ. பாவத்திற்கான மன்னிப்பை வழங்கும் இரக்கம் புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதமாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் கடவுள், இஸ்ரவேல் மக்கள் கடவுளுடைய ஆசீர்வாதத்தைப்பெற, தம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அது கிரியைகளின் உடன்படிக்கை. ஆனால் கிறிஸ்துவினுடைய வாழ்க்கை மற்றும் மரணத்தின் மூலமாக, கடவுள் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தி, எந்த மனிதனும் தன்னுடைய இரட்சிப்பிற்காக கிறிஸ்துவை விசுவாசிக்கிறபோது, புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதத்தை அடையச்செய்கிறார். இந்தப் புதிய உடன்படிக்கை சிறப்பானது. ஏனென்றால், இது கடவுளுடைய கிருபையினால், கிறிஸ்துவின் மூலமாக, இலவசமான பாவ மன்னிப்பாகிய சிறப்பான ஆசீர்வாதத்தை கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு வழங்குகிறது.
இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார். அந்த முதலாம் உடன்படிக்கை பிழைத்திருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே. அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது. அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்தநாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை. ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். (எபிரெயர் 8:6-12).
இது கிறிஸ்துவினுடைய செயலின் மூலமாக விசுவாசிகளுக்கு வரும் ஆசீர்வாதமே தவிர, மனிதர்களுடைய செயலினால் வருவதல்ல. கிறிஸ்து, பிதாவினுடைய சித்தத்திற்கு ஏற்றபடி பரிபூரணமான வாழ்க்கையை வாழ்ந்தார். தன்னை விசுவாசிக்கிறவர்களுக்கான, முழுமையான பலியாக, பரிபூரண வாழ்க்கை வாழ்ந்த அவர் சிலுவையில் பலியானார்.
உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. (1 பேதுரு 1:18-19).
ஆ. இந்தப் பாவமன்னிப்பு, விசுவாசிகளுடைய ஆத்துமாவுக்கு ஆறுதலைத் தருகிறது. தன்னுடைய பாவகரமான செயலினால் குற்றவுணர்வுக்குள்ளானவர்கள், தங்களுடைய ஆத்துமாவில் இளைப்பாறுதலைப் பெறுகிறார்கள். கடவுளுடைய கோபத்தைக் குறித்து அவர்கள் எப்போதும் பயப்படுவார்கள். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாக தன்னுடைய பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்திருப்பதை உணர்ந்தவன், கடவுளோடு தனக்கு சமாதானம் ஏற்பட்டிருப்பதை அறிவான்.
இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். (ரோமர் 5:1).
பாவத்தைப் பற்றிய அறிவு நம்மை பெலவீனப்படுத்துகிறது. ஆனால் பாவமன்னிப்பைப் பற்றிய அறிவு நம்மை பெலனடையச் செய்கிறது. கேடான வாழ்க்கை பரிசுத்தமும் பரிபூரணமுமான கடவுளுக்கு எதிரானது என்றும், நமக்குத் தீங்கு ஏற்படுத்தக்கூடியது என்பதையும் அறிகிறபோது, ஒரு பாவியைக் கடவுள் மன்னிக்கிறார் என்ற கடவுளுடைய செயல் அற்புதமானது என்றுதான் சொல்லவேண்டும். நம்மில் நாமே செய்துகொள்ள முடியாததும், கடவுள் இதைச் செய்வார் என்று நாம் எதிர்பார்க்க முடியாததுமானதை, கடவுள் நமக்காகச் செய்திருக்கிறார். அதுவும் தம்முடைய குமாரனுடைய மரணத்தின் மூலமாகச் செய்திருக்கிறார். இது குறித்து மீகா தீர்க்கதரிசி வியப்படைந்ததில் ஆச்சரியமில்லை,
“தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.” (மீகா 7:18).
பாவம் எந்தளவுக்குத் தீமையானது என்பதை இப்போது நாம் அறிந்திருக்கிறோம். பாவகரமான எந்தவொரு செயலையும் நாம் ஒருபோதும் செய்யக்கூடாது என்பதையே இது நமக்குக் காட்டுகிறது. பாவகரமான செயல்கள், கடவுளுடைய சித்தத்திற்கு எதிரானவை, அவருடைய பரிசுத்தத்திற்கு எதிரானவை, அவருடைய அதிகாரத்திற்கு எதிரானவை, அத்தோடு, நமக்குத் தீங்கிழைக்கக் கூடியவை. பாவகரமான சிலசெயல்களின் மூலமாக, நமக்கு எவ்வளவுதான் நன்மை ஏற்பட்டாலும், அல்லது, அந்தவேளையில் எவ்வளவுதான் இன்பத்தை அது தந்தாலும், பாவம் செய்வதை எந்தவிதத்திலும் நாம் நியாயப்படுத்த முடியாது. ஏனென்றால், அது நம்மைப் படைத்தவரும், பரலோக பிதாவுமாகிய கடவுளுக்கு எதிரானது. கேடான செயலைச் செய்யலாமா கூடாதா என்ற விவாதத்தில்கூட நாம் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. இரண்டு ஆச்சரியமான காரியங்கள் உண்டு. ஒன்று, கடவுள் நமக்கு அதிகமான நன்மையைச் செய்திருக்கிறார், அதனால் அவருக்கு எதிராக யார்தான் தீமை செய்வார்கள். இன்னொன்று, நல்லவரான அந்தக் கடவுளுக்கு எதிராக நாமே தீமை செய்கிறோம். பரிசுத்த வாழ்க்கை வாழ்வதைப் போன்ற அழகான காரியம் கடவுளுடைய பார்வையில் வேறெதுவும் இல்லை. அதுவே நமக்கு நன்மையை ஏற்படுத்தக் கூடியது. இத்தனையையும் மீறி நாம் எப்படிக் கவனக்குறைவாகக்கூட பாவத்தைச் செய்துவிட முடியும்?