வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே! மீண்டும் ஒரு புதிய இதழை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இதழாசிரியரான என்னோடு, இதழ் பணியில் இணைந்து உழைக்கும் போதகர் ஜேம்ஸ்,

சரிபார்க்கும் பணியைச் செய்யும் பாலசுப்பிரமணியம், ரோஸ்லின் ஜேம்ஸ் ஆகியோருக்கும் என் நன்றிகள். கர்த்தரின் கிருபையால் இன்னும் ஓர் இதழைத் தரமாகத் தயாரித்து வழங்க முடிந்திருக்கிறது.

ஆரம்ப ஆக்கம் ‘கர்த்தரின் உடன்படிக்கை இறையியல்’ பற்றியது. மிகவும் சிக்கலான ஓர் இறையியலின் முக்கிய அம்சங்களைச் சிக்கலில்லாமல் விளக்க முனைந்திருக்கிறேன். இந்தப் போதனை அநேகருக்குப் புதிதாக இருந்தால் அதில் ஆச்சரியமில்லை. கவனத்தோடு வாசியுங்கள்; புரிந்துகொள்ள கர்த்தர் உதவுவார்.

ஆர்தர் பிங்க் அவர்களின் ‘தசம பாகம்’ பற்றியது அடுத்துவரும் ஆக்கம். இதைப்பற்றியெல்லாம் இறையியல்பூர்வமாக சிந்திக்கும் வழக்கம் நம்மினத்தில் இல்லை. பிங்க் அவர்களின் இந்த ஆக்கம் மிகவும் முக்கியமானது. பழைய ஏற்பாட்டு தசமபாகம் புதிய ஏற்பாட்டில் தொடருகிறது என்பதை வேத ஆதாரங்களோடு அருமையாக விளக்கியிருக்கிறார் பிங்க். ஒன்றை சபையில் பின்பற்றினால் அதற்கு வேத ஆதாரம் அவசியம். வேதஆதாரமில்லாமல் நாம் நினைத்தபடி செய்யக்கூடாது. இனி தசமபாகத்தைக் கொடுக்கிறவர்கள் இதை வாசித்து மனநிறைவோடு அதை ஆண்டவருக்குக் கொடுக்கலாம்.

சகோதரி ஷேபா மிக்கேள் நமது நூல்களைக் கரைத்துக்குடித்துக் கருத்துரை வழங்குவதைச் சிறப்பாகச் செய்துவருகிறார். இது இதழில் அவரெழுதியிருக்கும் இரண்டாவது கருத்துரை. அவருடைய எழுத்துப் பணி வளரவேண்டும்.

இறுதி ஆக்கம் தமிழகத்துப் படைப்பாளி ஜெயமோகனின் கிறிஸ்தவ கருத்துக்கள் பற்றியது. அக்கருத்துக்களை ‘சிலுவையின் பார்வையில்’ எனும் நூலில் அவர் வடித்திருப்பதால் அதைப்பற்றி எழுத வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. நமக்குப் புறத்தில் இருக்கிறவர்கள் கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் பற்றி எத்தகைய சிந்தனைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இதில் நீங்கள் அறிந்துகொள்ளலாம். அத்தவறான கருத்துக்களை மறுதலித்து எழுதியிருக்கிறேன். – ஆசிரியர்.

© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.