வணக்கம் வாசகர்களே! இந்த இதழ் மூலம் மறுபடியும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இடது தோளில் ஆபரேசன் செய்து ஒரு வாரம் முடிந்த கையோடு இந்த இதழைத் தயாரிக்க கர்த்தர் உதவி செய்தார்.
அதுவும் பிரசங்கம் செய்யும் அவசியமில்லாமல் வீட்டிலிருந்து குணப்பட்டு வந்த காலத்தில் நேரத்தோடு இந்த இதழைத் தயாரிக்க முடிந்தது.
இந்த இதழில் மிகவும் முக்கியமானதொரு ஆக்கத்தை எழுதியிருக்கிறேன். முடிந்தவரையில் எளிமையாக எழுத முயற்சி செய்திருக்கிறேன். இறையியல் அறிவு பெரிதளவுக்கு இல்லாதவர்களுக்கு இது விளங்கிக்கொள்ளுவதற்கு சிறிது நேரமெடுக்கலாம். ஒருதடவைக்கு மேல் கவனத்தோடு சிந்தித்து வாசித்தீர்களானால் இதை விளங்கிக்கொள்ளுவது கடினமாக இருக்காது.
இந்த இதழில் வெயின் குரூடம் (Wayne Grudem) எனும் இறையியலறிஞரின் முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலை ஆராய்ந்து சீர்திருத்த இறையியல் கண்ணோட்டத்தில் என்னுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன். பிரபலமாகியிருக்கும் அந்நூலில் பிரச்சனைகள் அதிகம் காணப்படுகின்றன. அந்தப் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக அடையாளங்கண்டு அவற்றின் ஆபத்தைச் சுட்டிக்காட்டி கிறிஸ்தவர்கள் தவறான போதனைகளை தவிர்த்துக்கொள்ள துணைசெய்யும் விதத்தில் இந்த ஆக்கத்தை வரைந்திருக்கிறேன்.
இது தவிர 2 இராஜாக்களில் இருந்து ஒரு செய்தியையும், 1689 விசுவாச அறிக்கை பற்றிய ஷேபா (ஓமான்) அவர்களின் கருத்துரையையும், அடிப்படை வேதசத்தியங்கள் பற்றியும் அவ்வாறில்லாத விதத்தில் தரப்பட்டிருக்கும் சத்தியங்கள் பற்றியும் விளக்கி, 'உயிரை மாய்க்கும் நஞ்சும், கொசுத்தொல்லையும்' என்ற தலைப்பில் ஒரு ஆக்கத்தையும் தந்திருக்கிறேன். இந்த ஆக்கம் உங்களைச் சிந்திக்க வைக்கவேண்டும். “ஏனென்றால், அடிப்படைப் போதனைகளில் ஒற்றுமை, அவ்வாறில்லாத போதனைகளில் சுதந்திரம், அனைத்திலும் அன்பு" என்ற தத்துவத்தைப் பின்பற்ற இந்த ஆக்கத்தை விளங்கிக்கொள்ளுவது அவசியம்.
இந்த இதழைத் தயாரிக்கத் துணைபுரிந்த அனைவருக்கும் என் நன்றிகள்! இந்த இதழ் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கக் கர்த்தர் துணைபுரியட்டும். -ஆசிரியர்