என்னுடைய இறையியல் மாணவர்களில் சிலர், நாங்கள் வாசிக்கக்கூடிய அளவுக்கு எளிமையான ஆங்கிலத்தில் முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூல் ஏதாவது இருக்கிறதா, என்று அடிக்கடி கேட்டிருக்கிறார்கள்.
அதனால் எப்போதுமே நம்மவர்கள் எளிதாக விளங்கிக் கொள்ளக்கூடிய ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இறையியல் நூல்கள் இருக்கின்றனவா என்று புதிதாக வெளிவரும் நூல்களின் மீது ஒரு கண் வைத்திருப்பது என் வழக்கம். அப்போதுதான் வெயின் குரூடமின் முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அது 1000 பக்கங்களுக்கு மேலுள்ள பெரிய நூல். அதன் முதல் பதிப்பு வெளிவந்தபோது அது பற்றிப் பெரியளவில் பேசப்பட்டது; பாராட்டுக்களும் குவிந்தன. பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி அத்தகைய நூல்களில் முதல் இடத்தையும் பெற்றிருந்தது. அத்தோடு பல்வேறு உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
அதேவேளை, சூட்டோடு சூடாக இந்நூல் பற்றிய சில முக்கிய குற்றச்சாட்டுகளும், எதிர்ப்புகளும் உடனடியாக எழுந்தன. அதில் மிக முக்கியமான குற்றச்சாட்டு, குரூடம், இயேசு கிறிஸ்துவின் நித்திய குமாரத்துவத்தை (The Eternal generation of the Son) நிராகரித்திருக்கிறார் என்பது. அது உண்மைதான் என்பதை அறிந்தபோது அவருடைய நூலால் பெரிய பயனொன்றும் இருக்காது என்று அதை வாங்குவதைத் தவிர்த்தேன். ஏனென்றால், திரித்துவப்போதனை தொடர்பான எந்த சத்தியத்தையும் நிராகரிப்பது கர்த்தரையே நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும்.
அதற்குப் பிறகு, 2016ல் இருந்து பலவிதமான கண்டனங்களுக்கு மத்தியில் வாக்குவாதங்களையும், பேச்சு வார்த்தைகளையும் இறையியல் அறிஞர்கள் அவரோடு நடத்தி, இறுதியில் குரூடம், தேவகுமாரனின் நித்திய குமாரத்துவத்தை இப்போது நம்புகிறேன் என்று அறிவித்து, அத்தோடு தன்னுடைய முறைப்படுத்தப்பட்ட இறையியலின் இரண்டாவது பதிப்பு வருகிறபொழுது முன்பெழுதியிருந்ததைத் திருத்திக்கொள்வதாகவும் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆகையால், இரண்டாவது பதிப்பு 2020ல் வெளிவந்தபோது சில வருடங்கள் கழித்து 2024ல் ஒரு பிரதியை வாங்கினேன். எதற்கும் நேரடியாகவே நூலை வாசித்து அது எத்தகையது என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். எதையும் வாசித்துப் பார்க்காமல் அதுபற்றி கருத்துச் சொல்லுவது தவறு. நல்லதாக இருந்தால் ஏனையோருக்கும் அதை அறிமுகப்படுத்தலாம்; தரமானதாக இல்லாதிருந்தால் எனக்குத்தான் பணம் இழப்பு. குரூடமின் நூலைப் பற்றிய கருத்துக்களை ஒரு சீர்திருத்த பாப்திஸ்து கிறிஸ்தவன் என்ற அடிப்படையில் ஆராய்ந்தே இந்தக் கருத்துக்களை முன்வைக்கிறேன். அதனால் ஒப்புக்கு வெறும் நல்ல வார்த்தைகளைச் சொல்லி, சொல்ல வேண்டியவற்றை மறைத்துவிடுகிற செயலை என்னால் செய்ய முடியாது. அத்தோடு, ஒரு போதகக் கண்ணோட்டத்தில் ஆத்துமாவின் ஆவிக்குரிய நலனையும், திருச்சபையின் நலனையும் கருத்தில் கொண்டே இதை எழுதியிருக்கிறேன்.
இம்முறையில் வெயின் குரூடமின் நூலை விமர்சிப்பது அவரைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாகாது. அவர் பக்திவிருத்தியுள்ள மனிதராகவும், என்னைவிடச் சிறந்தவராகவும்கூட இருக்கலாம். இந்த ஆக்கம் அவருடைய நூலையும், அவருடைய இறையியல் கருத்துக்களையுமே விமர்சிக்கிறது. இப்போது அவர் சரீரத் துன்பத்துக்காளாகியிருக்கிறார். அவர் விசுவாசிக்கும் தேவன் இவ்வேளையில் அவரோடிருந்து அவர் தன் விசுவாச ஓட்டத்தை வெற்றிகரமாக முடிக்கத் துணைசெய்யட்டும்.
வெயின் குரூடம்
வெயின் குரூடம் அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் செமினரியில் இறையியல் பேராசிரியராக இருந்து வருகிறார். அதற்கு முன் இருபது வருடங்களுக்கு திரித்துவ இவாஞ்சலிக்கள் இறையியல் கல்லூரியில் முறைப்படுத்தப்பட்ட இறையியல் பிரிவின் தலைவராக இருந்திருக்கிறார். இப்போது பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் English Standard Version ஆங்கில மொழிபெயர்ப்பை மேற்பார்வை செய்த கமிட்டியில் குரூடம் பணிபுரிந்திருக்கிறார். அத்தோடு ESV Study Bible தயாரிப்பில் பொது ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். இப்போது பார்கின்சன் வியாதியால் துன்பப்படும் அவரால் தொடர்ந்து பீனிக்ஸ் செமினரியில் இறையியல் வகுப்புக்களை நடத்த முடியவில்லை. அவர் 22 புத்தகங்களுக்கு மேலாக எழுதி இருக்கிறார். அவற்றில் பிரபலமானது இதுவரையில் இரண்டாவது பதிப்பாக வந்திருக்கும் முறைப்படுத்தப்பட்ட இறையியலே. இந்நூல் 75,000 பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. ஒரு முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூல் இந்த அளவுக்கு விற்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை.
நூலின் பாராட்டக்கூடிய அம்சம்
குரூடம் முறைப்படுத்தப்பட்ட இறையியலை சாமானியனும் ஆங்கிலத்தில் வாசித்து விளங்கிக்கொள்ளும் முறையில் இலகுவானதாக விளக்கி இருக்கிறார். அதைத்தான் இதைப் பாராட்டும் பெரும்பாலானோர் குறிப்பிட்டிருக்கிறார்கள். என் நாட்டில், எனக்குத் தெரிந்த ஒருவருடைய பெந்தகொஸ்தே சபைப் போதகரான அவருடைய உறவினர் இந்த நூலை வாசித்து அது பற்றிப் பெரியளவில் பாராட்டிப் பேசிக்கொண்டிருக்கிறார் என்று என்னிடம் சொன்னார். பொதுவாகவே இறையியலில் அடியோடு ஆர்வம்காட்டாத பெந்தகொஸ்தே பிரிவைச் சேர்ந்த ஒருவர் இத்தனை பெரிய இறையியல் நூலை வாசிக்கச் செய்யும் ஆர்வத்தை இந்நூல் தூண்டியிருக்கிறது.
தன் நூலின் ஒவ்வொரு அதிகாரத்தின் இறுதியிலும் பயன்பாடுகளைத் தந்து, ஒரு கிறிஸ்தவப் பாடலோடு தியானப் பாணியில் முடித்திருக்கிறார் குரூடம். டாக்டர் பீட்டர் மாஸ்டர்ஸ் அவர்களின் வார்த்தையின்படி, (மேலைநாட்டில்) ஒன்பதாம், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எழுதப்பட்டதுபோல் குரூடம் நூலை எளிமையாக எழுதியிருக்கிறார் (ஆடியோ செய்தியொன்றில் கேட்டது). முறைப்படுத்தப்பட்ட இறையியலை வேதப்பாடப் படிப்பு போல எளிமையாக விளக்கி எழுதியிருக்கிறார். அதன் காரணமாக, முறைப்படுத்தப்பட்ட இறையியல் புத்தகத்தில் சாதாரணமாகப் பயன்படுத்தப்பட வேண்டிய நுணுக்கமான டெக்னிக்கல் வார்த்தைகளையும், வரலாற்று இறையியலில் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தைப் பிரயோகங்களையும் இந்தப் புத்தகத்தில் அவர் பெருமளவுக்குத் தவிர்த்திருக்கிறார். உண்மையில், இறையியல் கல்லூரி மாணவனுக்கு இந்தப் புத்தகத்தில் இருப்பதைவிட மேலும் அதிகமான, நுணுக்கமான விளக்கங்கள் தேவைப்படும். அத்தகைய வரலாற்று இறையியலோடு தொடர்புடைய நுணுக்கமான இறையியல் ஆய்வுகளையும், விபரங்களையும் இந்நூலில் காண முடியாது.
புத்தகம் எழுதப்பட்டிருக்கின்ற முறையும், அதிகாரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்ற முறையும் பாராட்டுதலுக்குரியது. இதை அனேகர் வரவேற்றிருக்கிறார்கள். இறையியலை, இறையியல் மாணவர்களுக்கும், போதகப் பணியில் இருப்பவர்களுக்கும், இறையியல் போதிப்பவர்களுக்கும் எழுதாமல், (மேலை நாடுகளிலுள்ள) சாதாரண திருச்சபை அங்கத்தவர்கள் வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய ஆங்கில மொழிநடையில் இந்தப் புத்தகத்தை குரூடம் எழுதியிருக்கிறார். ஆகவே, பாராட்டக்கூடிய இத்தகைய அம்சங்கள் இந்நூலில் காணப்பட்டபொழுதும், கவலைக்குரிய, ஆபத்தான அநேக அம்சங்களை இதில் பரவலாகக் காணமுடிகின்றது.
இந்நூலைப் பற்றி
குரூடம் பாரம்பரிய வரலாற்றுச் சீர்திருத்த இறையியல் பின்னணியில் (Traditional Reformed) வந்தவரில்லை. இரட்சிப்போடு தொடர்புடைய பொதுவான கல்வினிசப் போதனைகளை மட்டும் அவர் கொண்டிருக்கிறார். அதனால் அவர் முழுமையான கல்வினிஸ்டு என்றும் கூறிவிட முடியாது. அந்தவிதத்தில் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதுமில்லை. அவரை “நடுத்தர” கல்வினிஸ்டு (moderate) என்றே கூறமுடியும். அதாவது இரட்சிப்புக்குரிய கல்வினிசப் போதனைகளில் வசதிக்கேற்ற ஒரு சில மாற்றங்களை அவர் செய்துகொண்டிருக்கிறார் (Ex: Reprobation). அதற்கு மேல் அவரிடம் பாரம்பரிய வரலாற்று சீர்திருத்த இறையியலை எதிர்பார்க்க முடியாது. பொதுவாக அவர் சுவிசேஷ இயக்கப் பின்னணியைக் (Broad Evangelical) கொண்டிருக்கிறவர். பேராசிரியராக அவர் இறையியல் போதித்து வரும் இறையியல் கல்லூரிகளும் அத்தகைய பின்னணியைக் கொண்டவையே. இதன் காரணமாக, குரூடம் பலவிதங்களில் பாரம்பரிய சீர்திருத்த போதனைகளோடும், வரலாற்று விசுவாச அறிக்கைகளோடும் முரண்படுகிறார். சபைப் பிரிவுகள், சபை வேறுபாடுகள் என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், அனைவருக்கும் பொதுவான போதனைகளை குரூடமின் புத்தகம் தருகிறது. ஒரு முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூல் வரலாற்று இறையியலை ஒதுக்கி வைக்காமல், முரண்பாடுகளுக்கு இடமில்லாமல், வரலாற்று விசுவாச அறிக்கைகளுக்கு முரணாக அல்லாமல், சத்தியத்தை விளக்க வேண்டும். அதை வெயின் குரூடமின் நூலில் காண முடியாது.
குரூடமின் நூலில் ஆமோதிக்கக்கூடிய பகுதிகள் அடியோடு இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. இறையியலில் பொதுவான போதனைகளைப் பொருத்தளவில் அவருடைய விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. உதாரணத்திற்கு, வேதவியல் (முதல் பாகம்), கர்த்தரியல், கர்த்தருடைய குணாதிசயங்கள் (இரண்டாம் பாகம்), மீட்பின் நடைமுறைச் செயலாக்கம் ஆகியவை. இந்த நூலைப் பற்றிய பிரச்சனை என்னவென்றால் நன்மையானவற்றோடு மிகவும் ஆபத்தான போதனைகளும், முரண்பாடான போதனைகளும், மேலெழுந்தவாரியான அழுத்தமற்ற குழப்பமான விளக்கங்களும் கலந்து காணப்படுவதுதான். இத்தகைய இறையியல் கலப்படம் கிறிஸ்தவனுக்கோ, சபைகளுக்கோ ஆகாது.
நம்மினத்து அரிசியில் கல்லிருப்பது இயற்கை. இருந்தும், முடிந்தவரை கற்களை அகற்றிவிட்டுத்தான் பெண்கள் சமைப்பார்கள். இறையியல் நூல்களில் அதற்கு இடமிருக்கக்கூடாது. காகித அட்டைகளைப் பயன்படுத்தி ஒரு கோபுரத்தைக் கட்டி முடித்த பிறகு, அதில் எந்தப் பகுதியிலிருந்தாவது ஒரு அட்டையை மெதுவாக நீக்கினாலும் முழு அட்டைக் கோபுரமும் சரிந்துவிடும். இறையியல் அதுபோன்றதுதான். அதன் அடிப்படைப் போதனைகளில் ஒன்றை நிராகரித்தாலோ அல்லது மாற்றங்களை ஏற்படுத்தினாலோ முழு இறையியலையும் அது பாதிக்கும். குரூடம் தன் இறையியல் கோபுரத்தில் செய்திருக்கும் மாற்றங்கள் அவருடைய கோபுரத்தைத் தொடர்ந்து நிற்க முடியாமல் செய்திருக்கிறது.
நம்மினத்தில் இறையியல் தேர்ச்சி இல்லாதவர்கள் குரூடமின் நூலை வாசித்து இதுதான் வேதம் போதிக்கின்ற இறையியல் என்று நம்பிவிடுகின்ற ஆபத்து இந்நூலில் இருக்கிறது. கீழைத் தேசத்து இறையியல் கல்லூரிகள் எல்லாவற்றிலும், ஆங்கிலிக்கன், லூத்தரன், பிரஸ்பிடெரியன் கல்லூரிகளிலிருந்து, பாப்திஸ்து, பெந்தகோஸ்தே, கெரிஸ்மேட்டிக் கல்லூரிகள் அனைத்திலும் இந்த நூல் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கேள்விப்படுகிறேன். அதற்கு முக்கிய காரணம், எல்லாச் சபைப் பிரிவுகளுக்கும் ஒத்துப்போகின்ற விதத்தில், கலப்படமாக சத்தியங்கள் இந்நூலில் விளக்கப்பட்டிருப்பதுதான். என்னைப் பொறுத்தவரையில் அதுவே மிகப் பெரிய ஆபத்து!
இன்றைய சமுதாயத்தில் காணப்படும் பிரச்சனையே, எது பிரபலமானதோ, எது அதிகம் விற்பனை ஆகிறதோ, எது கவர்ச்சி உள்ளதாக இருக்கிறதோ, எதை அதிகமானோர் ஆதரித்து பேசுகிறார்களோ அதற்குப் பின்னால் சிந்தித்துப் பார்க்காமல் எல்லோரும் ஓடுவதுதான். ராமாயணத்தில் சீதைக்கு முன்னால் வந்த மாயமான் கவர்ச்சி உள்ளதாகத்தான் இருந்திருக்கிறது. அதனால் வந்த பேராபத்து எத்தகையது என்பது நமக்குத் தெரியாதது அல்ல. கர்த்தரின் வார்த்தைக்கு எதிராகத், தான் ஏற்படுத்திய ஆராதனைக்கு யெரொபெயாம் கொடுத்த விளக்கம் இஸ்ரவேல் மக்களுக்கு மிகக் கவர்ச்சி உள்ளதாகத்தான் தெரிந்திருக்கிறது. அதிலிருந்த ஆபத்தை அவர்கள் உணரவில்லை. சிந்திக்காமல் அவன் வழியில் போன அனைவரும் அழிவையே சந்தித்தார்கள். தன் வார்த்தைக்கு முரணான ஆராதனையை காத்தர் அனுமதிக்கவில்லை.
வெயின் குரூடமின் நூலை அங்கீகரித்துப் பரிந்துரை (Endorcement) செய்திருப்பவர்களின் பட்டியல் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஜோன் பைப்பரின் பெயர் முதலாவதாக இருக்கிறது. அவர் வெயின் குரூடத்தைப்போலக் கெரிஸ்மெட்டிக் தாக்கத்தைத் தன்னில் கொண்டிருக்கிறவர். அத்தோடு பாரம்பரிய சீர்திருத்தவாதத்தில் இருந்து மாறுபட்டுக் காணப்படும் புதிய கல்வினிச மார்க்கத்தைச் சேர்ந்தவர் (New Calvinism). பட்டியலில் ஆச்சரியமளித்த பெயர் ஜிம் பெக்கர். ஜிம் பெக்கரும் அற்புத ஆவிக்குரிய வரங்களின் தொடர்ச்சியை வலியுறுத்துகிறவர். இவர்கள் எல்லோருமே ஆவிக்குரிய வரங்களைப் பொறுத்தவரையில் தொடர்வாதப் (Continuationist) பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்நம்பிக்கைக்கு எதிரானவர்களை இடைநிறுத்தவாதிகள் (Cesationist) என்று அழைப்பார்கள். நான் இடைநிறுத்தவாதத்தைப் பின்பற்றுகிறவன். நல்லவேளையாக பிரபலமான எந்தப் பாரம்பரிய சீர்திருத்த இறையியலறிஞரும் நூலுக்கு பரிந்துரை எழுதவில்லை. பொதுவாகப் பரவலாகக் காணப்படும் சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்தவர்களே பரிந்துரை அளித்திருக்கிறார்கள்.
இறையியலையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு நட்புக்காகப் பரிந்துரை தரும் வழமை இன்று மேலை நாடுகளில் வழமையாகி வருகிறது. நாம் மிகவும் மதிக்கும் ஒரு இறையியல் வல்லுனரும், பெரும் பிரசங்கியானவரும் தன் நூல்களுக்கு பரிந்துரை அளிக்க எவரையும் தேடிப்போவது தனக்குப் பிடிக்கவில்லை என்று என்னிடம் சொன்னார். அவருடைய வார்த்தைகளின் பொருள் எனக்குப் புரிந்தது. தன் புத்தகம் பிரபலமாகவேண்டும் என்பதற்காகப் பிரபலமானவர்களின் பரிந்துரையைத் தேடியலைவது இன்று வழமையாகிவிட்டது. இந்த முறையை நூல் அதிகம் விற்கவேண்டும் என்பதற்காகப் பலர் பின்பற்றுகிறார்கள்.
வெயின் குரூடமின் நூலில் காணப்படும் பிரச்சினைகள் யாவை என்பதை இனி ஆராய்வோம்:
- இது பாரம்பரிய வரலாற்று சீர்திருத்த இறையியல் பின்னணியைக் கொண்ட நூலல்ல
குரூடம் இந்த முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலை சீர்திருத்த பாரம்பரிய வலாற்று இறையியலின் அடிப்படையில் எழுதவில்லை. நம்மினத்தில் சீர்திருத்த இறையியல் கற்கும் ஆர்வமுள்ளவர்களுக்காக இதை நான் விளக்கவேண்டியிருக்கிறது. சீர்திருத்த இறையியல் அறிஞர்களான ஜோன் கல்வின், சார்லஸ் ஹொட்ஜ், ரொபர்ட் டெப்னி, ஜே. ஜே. டேக், லூயிஸ் பேர்கொவ், ரொபர்ட் ரேய்மன்ட் போன்றோருடையதைப் போன்றதல்ல குரூடமின் முறைப்படுத்தப்பட்ட இறையியல். இவர்களுடையதைப் போன்ற இறையியல் நிலைப்பாட்டைத் தன் நூலில் குரூடம் எடுக்கவில்லை; அவ்வகையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் இல்லை. எந்தவித சபைப்பிரிவுகளையும், இறையியல் பிரிவுகளையும் சார்ந்து நிற்காமல், பொதுவான சுவிசேஷ இயக்க இறையியல் என்றளவில் இதை எழுதியிருக்கிறார் குரூடம். ஒரு சீர்திருத்த கிறிஸ்தவனாக இதையே நான் குறைபாடுடையதாகக் காண்கிறேன்.
- குரூடம் பொதுவாகப் பெருமளவுக்கு சீர்திருத்த இறையியலறிஞர்கள் அல்லாதவர்களின் கருத்துக்களைச் சார்ந்தே நூலைத் தயாரித்திருக்கிறார்.
1600 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்த இறையியல் நூலில் அவர் ஆய்வுக்குப் பயன்படுத்தியிருப்பவர்களின் நூல் பட்டியல் ஏழு பக்கங்கள் மட்டுமே. அவற்றில் சீர்திருத்த, பியூரிட்டன் இறையியல் அறிஞர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இடம் மிகக் குறைவானது; விடப்பட்டு இருப்பவர்களின் தொகை அதிகம். வரலாற்று இறையியல் நூல்களுக்கோ, வரலாற்றில் எழுந்திருக்கும் விசுவாச அறிக்கைகளுக்கோ அவருடைய நூல் பட்டியலில் எந்த இடமும் தரப்படவில்லை. (மூன்று வரலாற்று விசுவாச அறிக்கைகளை மட்டும் பின்னிணைப்பாகத் தந்திருக்கிறார். அவற்றை ஆதாரமாக மேற்கோள் காட்டி எதையும் விளக்கவில்லை. குரூடம் பாப்திஸ்தாக இருந்தபோதும் 1689 விசுவாச அறிக்கையை இந்தப் பின்னிணைப்பில் தருவதைத் தவிர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தகுந்தது.) ஆர்மினியன் இறையியலாளர்களான ஜெக்கபஸ் ஆர்மீனியஸ், சார்ள்ஸ் பினி, ஸ்ட்ரோங், ஹென்றி தீசன், லூயிஸ் பேரி, சார்ள்ஸ் ரைரி, ரிச்சர்ட் வாட்சன், வில்லியம் ஜே. ரோட்மன் (கெரிஸ்மெட்டிக்), ஆகியோர் பழமைவாத சுவிசேஷ இயக்க இறையியல் அறிஞர்களாக (Conservative evangelical theologians) அடையாளங்காணப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் தன் நூல் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைவரையுமே பழமைவாத சுவிசேஷ இயக்க இறையியல் அறிஞர்களாகக் குரூடம் குறிப்பிட்டிருப்பது, பழமைவாத சுவிசேஷ இயக்கம் (Conservative evangelicalism) என்ற வார்த்தைப் பிரயோகத்தையே பொருளற்றதாக்கிவிடுகிறது. கிறிஸ்தவ இறையியலுக்கும், சீர்த்திருத்த இறையியலுக்கும் புதிதாக அறிமுகமாகி வருகிறவர்களுக்கு இது பெருந்தடுமாற்றத்தை ஏற்படுத்தும்; அவர்களுக்குத் தவறான வழியைக் காட்டும்.
- வரலாற்று இறையியலுக்கும், சீர்திருத்த பாரம்பரியத்திற்கும் நூலில் இடமளிக்கவில்லை
குரூடம் தன் போதனைகளுக்கு ஆதரவாக, உதாரணங்களாக வரலாற்று சீர்திருத்த இறையியல் பாரம்பரியத்திலும், சபை பிதாக்களிலும், வரலாற்று விசுவாச அறிக்கைகளிலும், சீர்திருத்த இறையியல் அறிஞர்களிலும் தங்கியிராமல், பொதுவாக 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வந்திருக்கும் சுவிசேஷ இயக்கத்தின் இறையியலாளர்களின் கருத்துக்களிலேயே தங்கியிருக்கிறார். 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின்வந்திருக்கும் பெரும்பாலானோரின் சிந்தனை அக்காலப்பகுதிக்கு முன்னிருந்தோரின் இறையியல் பார்வையைவிட்டுப் பெருமளவுக்கு விலகியிருக்கிறது என்பதைக் கிறிஸ்தவ வரலாறு நமக்குக் காட்டுகிறது. “குரூடம் பரந்தளவுக்கு பாரம்பரிய வரலாற்று சீர்திருத்தவாதத்தைக் கலந்தாலோசிக்கவில்லை. தற்கால சுவிசேஷ இயக்க இறையியலறிஞர்களான ஜோன் பிரேம், வில்லியம் லேன் கிரெக் போன்றவர்களையே அவர் சார்ந்து நிற்கிறார்” என்கிறார் கிரெக் ஏ. கார்ட்டர் (Credo Magazine, Vol 11, Issue 1, 2021)
- சத்தியத்தை நிலைநாட்டுவதில் தவறான இறையியல் அணுகுமுறை.
குரூடம் தன்னுடைய நூலை முறைப்படுத்தப்பட்ட இறையியல் என்று அறிவித்துக்கொண்டிருந்தாலும், அதை எழுதப் பாரம்பரிய இறையியலாளர்களின் அணுகுமுறையைக் கையாளவில்லை. வேதத்தில் ஒரு தலைப்பு தொடர்பான அத்தனை ஆதார வசனங்களையும் தொகுத்து அவற்றில் இருந்து நேரடியாக வேதஉட்பொருள் வசன ஆய்வை (Exegesis) நடத்தி, அதன் மூலம் தனக்கு உண்மையானதாகத் தோன்றியவற்றின் அடிப்படையில் மட்டும் தன் இறையியல் போதனையை அவர் தந்திருக்கிறார். அவர் கண்டுகொண்ட உண்மையைக் கிறிஸ்தவ வரலாற்று இறையியலையும், வரலாற்றில் எழுந்திருக்கும் விசுவாச அறிக்கைகளையும், சபைப்பிதாக்களின் போதனைகளையும், சீர்திருத்த, பியூரிட்டன் பெரியவர்களின் போதனைகளையும் பயன்படுத்தி ஆராய்ந்து தன் முடிவு சரியானதா? இல்லையா? என்ற தீர்மானத்திற்கு அவர் வரவில்லை. அவ்வாறு செய்வதை அவர் அடியோடு தவிர்த்திருக்கிறார். அப்படிச் செய்வது வரலாற்றையும், அதன் மூலம் உருப்பெற்றுள்ள சபைப் போதனைகளையும் வேத வசனங்களுக்குள் திணிக்கும் செயல் என்ற தவறான நோக்கத்தை அவர் கொண்டிருந்திருக்கிறார். வேதத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும் குரூடம், சபை வரலாறும், சபைப் பாரம்பரியமும் அங்கீகரித்துள்ள சத்தியங்களை அதற்கு எதிரானவையாகக் காண்பது ஆச்சரியமானது மட்டுமல்ல, பெரும் ஆபத்தானதுமாகும்.
குரூடம் கையாளும் இன்னுமொரு ஆச்சரியமானதும், ஆபத்தானதுமான வேதவிளக்க விதிமுறை, அவர் எந்த சத்தியத்தையும் வெளிப்படையாகத் (Explicit) தெளிவாகத் தரப்பட்டிருக்கும் வசனப்பகுதிகளில் மட்டுமிருந்து நிரூபிக்க முற்படுவது. உள்ளடக்கமாக (Implicit) மட்டும் சத்தியத்தை விளக்கும் வசனப்பகுதிகளுக்கு குரூடம் அடியோடு முக்கியத்துவமளிக்கவில்லை. இது சீர்திருத்த வரலாற்று வேதவிளக்க முறைக்கு முற்றிலும் புறம்பான போக்கு (1689 விசுவாச அறிக்கை, அதி. 1:6).
வேத சத்தியங்கள் அத்தனையும் வெளிப்படையாக அவற்றை விளக்கும் வசனப்பகுதிகள் மூலம் மட்டும் அல்லாமல், உள்ளடக்கமாக விளக்கப்பட்டிருக்கும் பல்வேறு வசனப் பகுதிகளின் மூலமும் தரப்பட்டிருக்கின்றன. அதிமுக்கிய கோட்பாடுகளான ஆராதனைக் கோட்பாடுகளையும் (Worship of God), திருச்சபைக் கோட்பாடுகளையும் (The Doctrine of the Church), உடன்படிக்கை இறையயிலையும் (Covenant Theology) வேதத்தில் உள்ளடக்கமாக அவற்றை விளக்கும் பரவலாகக் காணப்படும் பல்வேறு பகுதிகளைப் பயன்படுத்தியே பொதுவாக அனைத்து சீர்திருத்த இறையியலாளர்களும் விளக்கமளித்திருக்கின்றனர். அம்முறையிலேயே பரிசுத்த ஆவியானவர் அத்தகைய விளக்கங்களை நமக்கு அளித்திருக்கிறார்.
இதற்கு மாறாக வெளியரங்கமாக எதையும் விளக்கும் வசனங்களில் இருந்து பெறப்படும் சத்தியங்களை மட்டுமே அதிகாரமுள்ளவையாகக் கருதுவது பெருந்தவறு. அந்த முறையில் செயல்பட்டால் வேதத்தின் அனேக முக்கிய போதனைகளை நாம் இரண்டாந்தரப் போதனையாக, கட்டாயம் நம்பிப் பின்பற்ற அவசியமற்றதாகவே கருத முற்படுவோம். அந்த அணுகுமுறையைத்தான் குரூடமில் பரவலாகக் காண்கிறேன். இந்த அணுகுமுறையே அவருடைய குழப்பமானதும், ஆபத்தானதுமான பல்வேறு முடிவுகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. (Ryan M. Mcgraw மேலே நான் குறிப்பிட்ட சீர்திருத்த வேதவிளக்கவிதி பற்றி அருமையாகத் தன் சிறு நூலில் விளக்கியிருக்கிறார். By Good and Necessary Consequence, Reformation Heritage Books).
கிறிஸ்தவ இறையியல் ஒன்றுமில்லாததிலிருந்து உருவாவதில்லை. ஏற்கனவே வேதத்தில் இருந்து முன்னனுமானமாகத் (Presupposition) தீர்மானிக்கப்பட்டிருக்கும் சில உண்மைகளின் அடிப்படையிலேயே உருவாகின்றது. உதாரணத்திற்கு, கடவுள் இருக்கிறவராய் இருக்கிறார் (ஆதி 1:1) என்பது வேத முன்னனுமானம். அதுவே கடவுளைப் பற்றிய இறையியலின் ஆரம்பம். இந்த முன்னனுமானத்தை விவாதிக்க முடியாது; இது சந்தேகமில்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. திரித்துவப் போதனை இன்னுமொரு உதாரணம். அடிப்படைச் சத்தியங்களனைத்திலும் கிறிஸ்தவம் இத்தகைய அனுமானங்களைக் கொண்டிருக்கிறது. இதேவகையில்தான் வரலாற்று விசுவாச அறிக்கைகளும், சபைப் போதனைகளும் உருவாகியிருக்கின்றன. அவற்றை நிராகரித்துத் தனியொருவராக சிந்தித்துப் புதியதொரு இறையியலை உருவாக்க முடியாது.
எந்தக் கண்டுபிடிப்பாக இருந்தாலும் அது ஏற்கனவே கிறிஸ்தவம் முன்னனுமானமாகக் கொண்டிருக்கும் அடிப்படைச் சத்தியங்களை மீறக்கூடாது. இந்த விதியைக் குரூடம் மீறியிருக்கிறார். எதிலும் தங்கியிராமல் எதையும் நேரடியாக வேதத்தில் இருந்து தானே ஆராய்ந்து கண்டுகொள்வது குரூடமின் இறையியல் அணுகுமுறை. ஆகவே, வரலாற்று சபை அனுமானங்களை அவர் வெறும் மனித சிந்தனையில் இருந்து புறப்பட்டவையாகக் கருதுகிறார். அதன் காரணமாகவே அவருடைய வேதவசன உட்பொருள் விளக்கக் கண்டுபிடிப்புகள் பாரம்பரிய சபைப்போதனைகளை மீறி அமைந்துவிடுகின்றன. உதாரணமாக, திரித்துவ அங்கத்தவர்கள் பற்றிய அவருடைய விளக்கங்கள். குரூடமின் இறையியல் ஹைபிரிட் அணுகுமுறை (Theological Hybrid approach) தவறானது. அது வென்டீலியன் முன்னனுமான அணுகுமுறைக்கு (Van Tilian presuppositionalism) முற்றிலும் மாறானது. அத்தோடு, சார்ள்ஸ் ரொபட் ஸ்பிரவுலின் தர்க்கரீதியான சத்திய வாதாடல் முறைக்கும் (Apologetic) முற்றிலும் மாறானது.
குரூடமின் இம்முடிவும், போதனைகளும், இதுவரை நம்பிப் பயன்படுத்தக்கூடியவிதத்தில் நம்மத்தியில் இருந்து வந்திருக்கும் முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூல்களிலிருந்து (உதா: டெரடீன், சார்ள்ஸ் ஹொட்ஜ், லூயிஸ் பேர்கொவ்) அவருடைய நூலை விலக்கி வைக்கிறது. 19ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த ஆய்வு முறையும், போதனைகளும், சபைப் பாராம்பரியமும் இக்காலத்துக்கு உதவாது எனும் முடிவும், எதையும் கேள்விகளைக் கேட்டு வேதத்தை ஆராய்ந்து மட்டுமே நிரூபிக்க வேண்டும் என்ற முறையும் அடியோடு ஏற்றுக்கொள்ள முடியாததும், வேதத்தை விட்டு நாம் விலகிப்போவதிலுமே கொண்டு சேர்க்கும்.
- நித்திய குமாரத்துவமும், நித்திய கீழ்ப்படிவும்
திரித்துவப் போதனை கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளில் ஒன்று. நித்தியத்தில் பிதாவும், குமாரனும், ஆவியானவரும் ஒரே தன்மையையும் (equal in nature), ஒரே வல்லமையையும் (equal in power), ஒரே சித்தத்தையும் (one will) கொண்டிருக்கிறார்கள் என்பது மறுதலிக்கமுடியாத உண்மை. ஆதி சபைக்கால வரலாற்றில் இது குறித்து எழுந்த (Arianism) முரண்பாடான போலிப்போதனைக்கு திருச்சபை முகங்கொடுத்து “நைசீயா” கவுன்சில் அறிக்கை மூலம் அப்பிரச்சனைக்கு முடிவுகட்டியது. அன்றிலிருந்து திருச்சபை நைசியா கவுன்சில் அறிக்கைக்கு மாறான எந்தப் போதனையையும் போலிப்போதனையாகவே கருதி வந்திருக்கிறது.
வெயின் குரூடம், நைசீன் அறிக்கைக்கு மாறான ஒரு போதனையைத் தன்னுடைய முதலாவது பதிப்பில் வெளியிட்டார். அதில் அவர் திரித்துவத்தில் குமாரனின் நித்திய குமாரத்துவத்தை நிராகரித்தார். அதாவது, திரித்துவத்தின் இரண்டாம் ஆள்தத்துவமான குமாரன் நித்தியத்தில் இருந்து பிதாவுக்கு குமாரன் அல்ல என்பது அவருடைய வாதமாக இருந்தது. இந்த வாதம் திரித்துவப் போதனை பற்றிய நைசீன் அறிக்கையின் விளக்கதிற்கு எதிரானது. இந்த விளக்கத்தின் மூலம் குரூடம், குமாரனைப் பற்றிய அநேக தவறான போதனைகளுக்கு வித்திட்டார். உதாரணத்திற்கு, நித்தியத்தில் இருந்து இயேசு கிறிஸ்து குமாரனாக இல்லாதிருந்தால், எப்போது அவர் குமாரனானார்? எனும் ஏரியனிசப் பிரச்சனை (Arian controversy) மறுபடியும் தலைதூக்கும். அப்பிரச்சனைக்கு நைசீன் அறிக்கை (A.D. 325) ஏற்கனவே முடிவுகட்டியிருந்தது. சீர்திருத்த இறையியலாளர் கெவின் டீயொங்கின் வார்த்தைகளில் சொல்லப்போனால், “குமாரனின் நித்திய குமாரத்துவமில்லாமல் நமக்குப் பூரண இரட்சிப்பை அளிக்கக்கூடிய கிறிஸ்து இருக்க முடியாது. ஏனெனில், தெய்வீகத்தின் மொத்தக் குணாதிசயங்களையும் தன்னில் கொண்டிருக்கும் ஒரு குமாரனாக அவர் இருக்கமாட்டார்.” (Daily Doctrine, Kevin Deyong, 2024, pg 174).
2016ல் பல்வேறு இறையியல் அறிஞர்களின் கண்டனத்திற்கு முகங்கொடுத்த குரூடம், இதுபற்றிய தன்னுடைய கருத்தை மாற்றிக்கொள்ளுவதாக வாக்களித்து, தன் நூலின் இரண்டாம் பதிப்பில் முதல் பதிப்பிலிருந்த பகுதிகளை நீக்கிக்கொண்டார். அத்தோடு, திரித்துவம் போதிக்கும் குமாரனின் நித்திய குமாரத்துவத்தை ஏற்றுக்கொள்ளுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பிரச்சனை அதோடு முடிந்துவிட்டதாகக் கருதிவிடக்கூடாது. முதல் பதிப்பில் அவர் திரித்துவத்தைப் பற்றி வெளியிட்டிருந்த இன்னுமொரு கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அதாவது, கிறிஸ்து நித்தியத்திலிருந்து பிதாவின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிகிறவராக இருக்கிறார் (Eternal Functional Subordination of the Son) என்று குரூடம் குறிப்பிட்டிருக்கிறார். குரூடமின் விளக்கத்தில் பிரச்சனை காணப்படுகிறது. அவர், திரித்துவ அங்கத்தவர்கள் நித்தியத்தில் தங்களுடைய தன்மையில் (Essence) எந்தவித மாறுபாடும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை அங்கீகரிக்கிறார். ஆனால், பிதாவும், குமாரனும் தங்களுடைய பாத்திரத்திலும், பணிகளைச் செய்வதிலும் நித்தியத்திலிருந்தே அதிகாரப்பிரிவைக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்குகிறார். இவ்விளக்கம் அவருடைய நூலின் இரண்டாம் பதிப்பில் தொடர்ந்து காணப்படுகிறது. நைசீன் அறிக்கையிலிருந்து வரலாற்றில் உருவாகியிருக்கும் அத்தனை விசுவாச அறிக்கைகளும் குரூடமின் இந்தக் கருத்துக்கு எதிராகவே இருக்கின்றன.
உங்களுக்குப் புரியும்படி இதைச் சுருக்கமாக விளக்கவேண்டியது அவசியம். திரித்துவப் போதனையின்படி பிதா, குமாரன், ஆவியானவர்கள் நித்தியத்திலிருந்து ஒரே தன்மையையும் (Essence), ஒரே வல்லமையையும் (power), ஒரே சித்தத்தையும் (will) கொண்டிருந்து, அவர்களுடைய பாத்திரம் (Role) வெவ்வேறானவையாக இருந்தபோதும், திரித்துவத்தில் நித்தியத்தில் (Ontological Trinity) அதிகாரப் பிரிவுக்கு ஒருபோதும் இடங்கிடையாது. தன் விளக்கத்தின் மூலம் திரித்துவ அங்கத்தவர்களின் பாத்திரத்தை அவர்களுடைய தன்மையில் இருந்து பிரித்துவிடுகிறார் குரூடம். அவர்களின் தன்மையில் மாற்றமில்லாதிருந்தபோதும், பாத்திர வேறுபாட்டின்படி Ontological Trinityல் அதிகாரப் பிரிவிருப்பதாக அவர் விளக்குகிறார். இந்தவிதத்தில் பிரித்துவிளக்கமளிப்பதிலேயே பிரச்சனை காணப்படுகிறது. அதாவது, ஏதோவொருவிதத்தில் நித்தியத்திலிருந்தே பிதா குமாரனைவிட உயர்ந்தவர் என்று எண்ணுவதற்கு இது வழிகோலுகிறது. அதையே குரூடமின் நண்பரான புரூஸ் வெயரும் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன் சபை வரலாற்றில், வரலாற்றிறையியலில் எவரும் இந்தவிதத்தில் விளக்கமளித்திருக்கவில்லை. இது பற்றிய கெவின் டியொங்கின் எளிமையான விளக்கம் அவசியம் வாசிக்க வேண்டியது; அதுவே சீர்திருத்த கிறிஸ்தவ நம்பிக்கை. (Taxis, Daily Doctrine, Pg 70-71). கெவின் டியொங்கின் வார்த்தைகளில் சொல்லப்போனால், “திரித்துவத்தின் மூன்று அங்கத்தவர்களும் நித்தியத்தில் அவர்களுடைய பாத்திரங்களுக்கேற்ற அதிகாரத்தினாலும், கீழ்ப்படிவினாலும் பிரித்துக் காட்டப்படவில்லை.” (Taxis, Daily Doctrine, Pg 71).
பிதா, குமாரன் என்று திரித்துவத்தின் இரு அங்கத்தவர்களும் அழைக்கப்படுவது ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர், அதிகாரம் கொண்டவர் என்பதற்காகவல்ல; அவர்களுக்கிடையில் காணப்படும் உயர்தரமான தெய்வீக உறவையும், ஐக்கியத்தையும் வெளிப்படுத்துவதற்காகத்தான். இத்தகைய உறவை சாதாரண குடும்ப உறவுக்கு ஆதாரமாகவோ, இணையானதாகவோ விளக்கக்கூடாது. நித்தியத்திலிருந்து குமாரன் பிதாவிலிருந்து புறப்படுவது (Eternal generation) அவர்களுக்கிடையில் காணப்படும் மனித சிந்தனைக்கப்பாற்பட்ட உறவையும் ஐக்கியத்தையும் வெளிப்படுத்துகிறது.
இயேசு கிறிஸ்து மனிதகுமாரனாக பிதாவால் மீட்பை நிறைவேற்ற அனுப்பப்பட்டபோதே (Economical Trinity) பிதாவுக்குக் கீழ்ப்படியும் அவருடைய பணி ஆரம்பித்தது; நித்தியத்தில் அதற்கு அவசியமோ, இடமோ இருக்கவில்லை. நித்தியத்தில் மீட்புக்கான திட்டத்தைப் பிதாவும் குமாரனும் வகுத்து, குமாரன் பிதாவின் திட்டத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்டபோதும் அங்கே சகலவிதத்திலும் அவர் பிதாவுக்குச் சமமானவராகவே இருந்தார்.
குரூடமின் திரித்துவம் பற்றிய இந்த விளக்கம், வேத விளக்கமளிக்கும்போது முக்கியமாக திரித்துவ இறையியலில் எவரும் போகக்கூடாத இடத்திற்குள் நுழைந்திருக்கிறது. இது அவருடைய இறையியல் அணுகுமுறையின் தவற்றையும், பாரம்பரிய வரலாற்றுக் கிறிஸ்தவத்தில் இருந்து எந்தளவுக்கு அவர் விலகி நிற்கிறார் என்பதையும் சுட்டுகிறது.
- ஆண், பெண் பணிகளும், பாத்திரப் பிரிவும் (Complementarianism)
குரூடம், படைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் அடிப்படையில் கர்த்தர் விதித்திருக்கும் பணிப்பிரிவுகளை ஏற்றுக்கொள்ளுகிறார். அதேநேரம், வீட்டில் மனைவி கணவனின் அதிகாரத்திற்குக் கீழிருந்து பணிபுரிய வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறார். பிரச்சனை, திருச்சபையில் பெண்களின் பணிகளைப் பற்றியதே. பெண்கள் திருச்சபையில் ஆத்மீக ரீதியில் ஆண்களுக்கு சமநிலையில் பயன்படுத்தப்படுவதில்லை என்பது குரூடமின் பேராதங்கம். அதைச் சரிசெய்வதற்கான வழிமுறைகளைக் குரூடம் நாடுகிறார்.
குரூடம் பெண்கள் போதகர்களாக இருப்பதை வரவேற்காதபோதும், போதகர்களுடைய பணிகளாக அல்லாத சபைத் தலைமைக்குரிய அநேக பணிகளைப் பெண்கள் செய்ய அனுமதியளிக்கிறார். அவர்கள் உதவிக்காரர்களாக இருப்பதையும் அவர் ஆதரிக்கிறார் (அதி. 47). அதற்குக் காரணம் திருச்சபைத் தலைமை பற்றிய அவருடைய விளக்கங்கள் பாரம்பரிய, வரலாற்றுக் கிறிஸ்தவத்தை விடவும் மாறுபாடானதாகவும், வரையறுக்கப்பட்டதாகவும் இல்லாமலிருப்பதுதான். குரூடமின் திருச்சபைக் கோட்பாடு நடைமுறையில் காணப்படும் வேத ஆதாரமற்றதும், கட்டற்றதுமான (தளர்வானதுமான) பொதுவான சுவிசேஷ இயக்க திருச்சபை (General loose evangelical practice) அமைப்பைத் தழுவிக்காணப்படுகின்றது. பெண்கள் செய்யக்கூடியதும், செய்யக்கூடாதுமான பணிகளுக்கான 83 விதிகள் என்ற ஒரு ஆக்கத்தைக் குரூடம் எழுதியிருக்கிறார். (83 Rules of what women can do and can’t do in the church, Wayne Grudem). குரூடமின் நடைமுறைவாத விளக்கங்களின்படி (Pragmatic) வேதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படாத, சமுதாயத்தில் காணப்படும் அனேக பதவிகளைச் சபை கொண்டிருக்க முடிவதோடு, அப்பதவிகளைப் பெண்கள் வகித்து ஆணும், பெண்ணும் கூடிவரும் இடங்களிலெல்லாம் அவர்கள் போதனையளிக்கவும் முடியும். இது பாரம்பரிய வரலாற்றுக் கிறிஸ்தவத்திற்கு அப்பாற்பட்ட பரவலான நவீன தளர்வான சுவிசேஷ இயக்கத்தைச் சார்ந்த விளக்கங்களாகும்.
குரூடமின் இன்னுமொரு தவறு, குடும்பத்தில் கணவன், மனைவி ஆகியோருக்கிடையில் காணப்படும் அதிகாரப் பிரிவை வலியுறுத்தி நியாயப்படுத்துவதற்காக, அத்தகைய அதிகாரப்பிரிவு நித்தியத்திலிருந்து பிதா, குமாரன் ஆகியோருக்கிடையில் காணப்படுகின்றது என்று விளக்கியிருப்பதுதான். அதாவது, நித்தியத்திலிருந்து குமாரன் பிதாவின் அதிகாரத்திற்குக் கீழிருந்து செயல்படும் முறையே, குடும்பத்தில் கணவனுக்குக் கீழிருந்து மனைவி செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கிறதென்கிறார் குரூடம். இதே கருத்தை அவருடைய நண்பரான புரூஸ் வெயாரும், ஜோன் பிரேமும் கொண்டிருக்கிறார்கள். குரூடம், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்களிடம் காணப்படும் அதிகாரப்பிரிவையும், உறவையும் தழுவியே குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகளிடம் சமுதாயத்தில் உறவும், அதிகாரப்பிரிவும் அமைந்து காணப்படுகின்றது என்று விளக்கியிருக்கிறார்.
இந்தவகையில் திரித்துவ அங்கத்தவர்கள் மத்தியில் நித்தியத்தில் இருந்து அதிகாரப்பிரிவு காணப்பட்டதாக விளக்குவது, நான் ஏற்கனவே விளக்கியிருப்பதுபோல் நைசியா வரலாற்றுக் கிறிஸ்தவப் போதனைக்கு முற்றிலும் மாறுபாடானது; எதிரானது. குடும்பத்தில் காணப்படும் அதிகாரப் பிரிவையும் உறவையும் திரித்துவத்திற்குள் நுழைப்பது வேதமோ, சபை வரலாறோ கண்டிராத புதுமை விளக்கம். இதுவும் குரூடம் எந்தளவுக்குப் பாரம்பரிய வரலாற்றுக் கிறிஸ்தவத்திலிருந்து வேறுபட்டு நிற்கிறார் என்பதைச் சுட்டுகிறது.
- படைப்பு (Creation)
படைப்பைப் பற்றிய கோட்பாடுகளில் குரூடம், உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டது என்ற பாரம்பரிய வரலாற்றுப் போதனையை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் அதற்கு எதிரான, உலகம் பலகோடிக்கணக்கான வருடங்களுக்கு முன் படைக்கப்பட்டது என்ற வாதத்தையே சார்ந்து நிற்கிறார். “சுவிசேஷ இயக்கத்தார் அனைவருக்கும், கிறிஸ்தவ நிறுவனங்கள் அனைத்திற்கும் உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டது (young earth) அல்லது பலகோடிக்கணக்கான வருடங்களில் படைக்கப்பட்டது (old earth) ஆகிய இரண்டு கருத்துக்களுமே ஏற்புடையதாக இருக்கின்றது” என்று குரூடம் கூறுகிறார் (Chapter 15, Creation, pg 411). இந்த விஷயத்தில் மாறுபாடான கருத்துக்களைக் கொண்டிருப்பது வேதத்தை நாம் நம்புகிறோமா, இல்லையா? நாம் தாராளவாதத்தைப் பின்பற்றுகிறோமா அல்லது பாரம்பரியப் பழமைவாதத்தைப் பின்பற்றுகிறோமா? என்பது போன்ற விவாதத்தோடு தொடர்புடையதல்ல என்கிறார் குரூடம். அவரைப் பொறுத்தவரையில் வேதம் தவறுகளற்றது என்ற போதனைக்கும், வேதம் அதிகாரமுள்ளது என்ற போதனைக்கும் படைப்பைப் பற்றிய அவருடைய சொந்தக் கருத்தான உலகம் பலகோடிக்கணக்கான வருடங்களுக்கு முன் படைக்கப்பட்டது எனும் கருத்து முரணானதல்ல. அது எப்படி? என்பதுதான் எனக்கும் புரியவில்லை.
ஆறு நாட்களில் (24 மணிநேரங்கொண்ட ஒரு நாள்) உலகம் படைக்கப்படாதிருந்தால் கிறிஸ்தவ சபத்து நாளான வாரத்தின் முதல் நாளை ஓய்வுநாளாக அனுசரிப்பதற்கு வழியே இல்லை. நிச்சயம் குரூடமின் ஓய்வு நாள் பற்றிய நம்பிக்கையும் கேள்விக்குரியதாகவே காணப்படும். ஆதியாகமம் 1-3 அதிகாரங்களை வரலாறாகக் காண மறுத்தால் உலகத்தோற்றத்தைப் பற்றிய போதனைகளை மட்டுமல்லாமல் அடிப்படைப் போதனைகளில் பலவற்றை மறுதலிக்க நேரிடும்.
“உலகம் எத்தனை நாட்களில் படைக்கப்பட்டது என்ற போதனை வேதத்தில் வெளிப்படையாகத் தரப்படவில்லை என்றும், பல வசனங்களைப் பயன்படுத்தி ஊகித்தே அந்த முடிவுக்கு வரமுடியும்” என்கிறார் குரூடம் (Chapter 15, Creation, pg 412). இன்னொருவிதத்தில் சொல்லப்போனால் வெளிப்படையாகத் தரப்படாமல் உள்ளார்ந்தவிதத்தில் கர்த்தர் தந்திருக்கும் எந்தப் போதனையும் வலிமையானது அல்ல என்பது குரூடமின் முடிவு. இதன் மூலம் சீர்திருத்தவாத வேதவிளக்க விதிகளில் ஒன்றான, பல்வேறு வேதவசனங்களின் அடிப்படையில் தத்துவார்த்த ரீதியாக ஆராய்ந்து உள்ளார்ந்த விதத்தில் வேதத்தில் தரப்பட்டிருக்கும் போதனைகளைப் (Implicit teachings) பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முக்கிய விதியைக் குரூடம் நிராகரிக்கிறார். ஏற்கனவே இந்த ஆக்கத்தில் நான் விளக்கியிருப்பதுபோல் குரூடமின் வேத ஆய்வு அணுகுமுறையே இறையியல் பற்றிய அவருடைய பல்வேறு தவறான முடிவுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
வரலாற்று விசுவாச அறிக்கைகள் அனைத்தும் உலகம் ஆறுநாட்களில் படைக்கப்பட்டதாகவே விளக்குகின்றன. 19ம் நூற்றாண்டு காலத்து இறையியல் வல்லுனர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் வேதத்தை ஆராய்ந்து நிரூபிக்கும் வழிமுறையைப் பின்பற்றியே உலகம் பலகோடிக்கணக்கான வருடங்களுக்கு முன் படைக்கப்பட்டது என்ற முடிவுக்கு வந்தனர். இதுவே அன்றுமுதல் இறையியல் கல்லூரிகளனைத்தையும் பாதித்து இன்றுவரை தொடர்கின்றது. விஞ்ஞானம் வேதத்தோடு ஒத்துப்போக வேண்டுமே தவிர வேதத்தை நிராகரிக்கக்கூடாது.
- வெளிப்படுத்தளோடு தொடர்புடைய ஆவிக்குரிய வரங்கள் (Revelatory gifts)
குரூடம் பலவீனமான சுவிசேஷ இயக்கத்தைச் சார்ந்தவராக இருப்பதால் பல்வேறு கிறிஸ்தவப் பிரிவுகளோடும் அவர்களுடைய போதனைகளுடன் ஒத்துப்போகிறவராக இருக்கிறார். பொதுவாகக் காணப்படும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கத்தின் பல்வேறு நடைமுறைச் செயல்களை அவர் ஏற்றுக்கொள்ளாதபோதும் ஆவிக்குரிய வரங்கள் பற்றிய போதனைகளைச் சில திருத்தங்களோடு அவர் ஏற்றுக்கொள்ளுகிறார். அவரைப் பொறுத்தவரையில் வெளிப்படுத்தலோடு தொடர்புடைய, அப்போஸ்தலர்களின் காலத்தில் காணப்பட்ட பல்வேறு ஆவிக்குரிய வரங்களும் இன்றும் திருச்சபையில் தொடர்கின்றன. முக்கியமாக, தீர்க்கதரிசனம் இன்றும் தொடர்கிறதென்றும், இன்றைய தீர்க்கதரிசனம் அப்போஸ்தலர் காலத்து தீர்க்கதரிசனத்தைவிட சிறிது மாறுபட்டதென்றும் விளக்குகிறார். அதாவது, அப்போஸ்தலர் காலத்து தீர்க்கதரிசனம் ஒருக்காலும் பொய்க்கவில்லை என்றும், இன்றைய தீர்க்கதரிசனங்களில் எல்லாமே நிறைவேறாமல் போய்விடலாம் என்று விளக்கமளிக்கிறார். அதனால் தீர்க்கதரிசனம் சொல்லுவதைத் தவிர்க்கக்கூடாது என்கிறார் குரூடம்.
“பெரும்பாலான ஆவிக்குரிய வரங்களைப் பொறுத்தவரையில் அவை நிரந்தரமானவை என்றே புதிய ஏற்பாடு நமக்குக் காட்டுகிறது” என்கிறார் குரூடம் (Ch. 25. Gift of the Holy Spirit (1), pg 1264). வேதத்தைக் கவனமாக ஆராய்ந்து படித்தால் இத்தகைய விளக்கத்தை அதில் காணமுடியாது. 1 கொரி 12 ஐ மேலெழுந்தவாரியாக வாசித்துவிட்டு அதில் பவுலின் மொழிநடை, அதில் விளக்கப்பட்டிருக்கும் ஆவிக்குரிய வரங்களெல்லாம் இன்றும் நிரந்தரமாகத் தொடர்கின்றன என்ற விதத்திலேயே காணப்படுகின்றது என்கிறார் குரூடம். இவற்றை விளக்கப் பெரும்பகுதியை குரூடம் ஒதுக்கியிருக்கிறார். பாரம்பரிய வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் போதனைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது குரூடமின் விளக்கங்கள். இந்த விஷயத்தில் ஜோன் பைப்பரும் இவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். (இது பற்றி நான் எழுதி வெளியிட்டிருக்கும் “ஆதி சபையின் அற்புத வரங்கள்” என்ற நூலை வாசியுங்கள்).
- பொது ஆராதனை
திருச்சபை ஆராதனை பற்றிய குரூடத்தில் விளக்கங்கள் ஒரு சில பக்கங்களை மட்டுமே கொண்டன. அவருடைய விளக்கங்களில் வரலாற்றுக் கிறிஸ்தவம் விளக்கும் வரையறுக்கப்பட்ட ஆராதனைத் தத்துவத்திற்கு (Regulative Principle of Worship) எந்த இடமும் இல்லை. அப்படியொன்றிருப்பதாகவே அவர் கண்டுகொள்ளவில்லை. கர்த்தரால் ஆராதனை எவ்வாறு ஏற்படுத்தப்பட்டு, எந்த முறையில் பொது ஆராதனை நடத்தப்பட வேண்டும் என்றெல்லாம் பழைய ஏற்பாட்டில் தரப்பட்டிருக்கும் விளக்கங்களை அவர் அடியோடு விளக்கவில்லை. பழைய ஏற்பாட்டு ஆராதனை இஸ்ரவேலரின் ஆலய வழிபாட்டுக்கு மட்டுமானது எனும் காலப்பிரிவுக்கோட்பாட்டுப் போதனையின் (Dispensationalism) தாக்கத்தை இந்த விஷயத்தில் குரூடமில் காணமுடிகின்றது.
புதிய ஏற்பாட்டை மட்டுமே ஆராதனையைப் பற்றி விளக்க குரூடம் பயன்படுத்தியிருக்கிறார். புதிய உடன்படிக்கை ஆராதனைக்கு பழைய உடன்படிக்கை அடிப்படையாக இருக்கிறது என்பதை குரூடமின் விளக்கங்களில் அடியோடு காணமுடியவில்லை. திருச்சபை ஆராதனை பற்றிய விளக்கங்களில் சீர்திருத்தவாத, பியூரிட்டன்களில் பெயர்களோ, அவர்களுடைய அருமையான ஆலோசனைகளையோ காணமுடியவில்லை. வரலாற்றில் அப்படியொன்றிருந்திருப்பதாகவே அவர் காட்டிக்கொள்ளவில்லை.
தளர்வானதும், பலவீனமானதுமான சுவிசேஷ இயக்கத்தின் நவீன ஆராதனை முறையைப் பொதுவாக அங்கீகரிக்கும் குரூடம் திருச்சபை ஆராதனையை நடத்தும் பொறுப்பு மூப்பர்களினுடையதாகக் காணவில்லை. அவரைப் பொறுத்தவரையில் போதகர்கள் அல்லாத நவீன “ஆராதனைத் தலைவர்கள்” (Worship leaders) ஆராதனையை நடத்த அவசியம். பீனிக்ஸில் குரூடம் அங்கத்தவராக இருக்கும் திருச்சபை அத்தகைய ஆராதனை முறையைக் கொண்டிருக்கும் நவீனகால சபையாக இருக்கிறது. குரூடத்தைப் பொறுத்தவரையில் ஆராதனையில் எந்த வாத்தியக் கருவியை வாசிப்பதற்கும் தடையில்லை; சத்தம் மட்டும் காது வெடித்துப் போகுமளவுக்கு இருக்கக்கூடாது. ஆராதனை வேளையில் கைகளைத் தட்டி ஆராதிப்பதும், கைகளைத் தூக்குவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், அதைக் கர்த்தருக்காக மட்டும் செய்யவேண்டும் என்கிறார் குரூடம். காலை ஆராதனை மட்டும் முறையானதாக இருந்து மாலை ஆராதனை சில நோக்கங்களுக்காகக் கச்சேரிபோல இருப்பதில் தவறில்லை என்கிறார் குரூடம் (pg 1249).
சபை ஆராதனையில் பழமையான பாடல்களைப் பாடுவதை விட்டுவிடத் தேவையில்லை என்றாலும் நவீன சமகாலப் பாடல்களைப் பாடுவதைக் குரூடம் அதிகம் விரும்புகிறார். கர்த்தரின் ஆராதனை பற்றிய குரூடமின் விளக்கங்கள் ஆராதனை பற்றிய வேத இறையியலை அடிப்படையாகக் கொண்டு அமையாமல் நாம் வாழும் காலத்து சூழ்நிலையையும், நடைமுறை வசதியையும் மட்டும் கணக்கில் கொண்டு அமைந்திருப்பது கவலைக்குரியது. திருச்சபை ஆராதனை பற்றிய போதனையில் குரூடமின் வேத ஆதாரமற்ற அலட்சியப்போக்கைக் கையாளாமல் வரலாற்றுக் கிறிஸ்தவத்தைப் பின்பற்றி அதை அருமையாக விளக்கி உதவியிருக்கிறார் இறையியலறிஞர் சாம் வோல்டிரன். (How Then Should We Worship, The Regulative Principle and Required Parts of the Church’s Corporate Worship, Evangelical Press)
- திருச்சபைக் கோட்பாடுகள்
அ. திருச்சபை தலைமையும், ஆட்சிமுறையும்
திருச்சபை தலைமையைப் பொருத்தளவில் குரூடம், சபையின் பிரதான அதிகாரிகளாக மூப்பர்களையும், உதவிக்காரர்களையும் கருதுகிறார். இருந்தபோதும் ஒரு சபை ஒரேயொரு போதகரைக் கொண்டிருக்கும் முறையையும், அசோசியேட் போதகராக ஒருவர் இருப்பதையும், சமுதாய நிறுவனங்களில் காணப்படும் கமிட்டிகள், போர்டுகள் போன்றவை அவசியத்தைப் பொறுத்து சபையில் காணப்படலாம் என்பது குரூடமின் நம்பிக்கை. இதெல்லாம் இக்காலத்தில் தொடர்ந்து நடைமுறையில் சுவிசேஷ இயக்க சபைகளில் பொதுவாகக் காணப்படுகிறது. அவற்றின் அடிப்படையிலேயே குரூடமின் விளக்கங்கள் காணப்படுகின்றன. வேதம் விளக்கும் மூப்பர், உதவிக்காரர் பதவிகளைத் தவிர வேறு பதவிகளைச் சபையில் ஏற்படுத்துவதை அவர் தவறாகக் கருதவில்லை. திருச்சபைக் கோட்பாடுகள் பற்றிய குரூடமின் விளக்கங்கள் வேதத்தோடு பொருந்திக் காணப்படவில்லை. அதற்குக் காரணம் திருச்சபை அதுபற்றி வெளிப்படையாக எதையும் விளக்கவில்லை என்பது அவருடைய கருத்து.
பாப்திஸ்துகள் பொதுவாகக் கொண்டிருக்கும் காங்கிரேகேஷனல் சபை (Congregational Church Government) அமைப்பைப்பற்றி விளக்குவதற்கு அவர் அதிகம் ஏ. ஹெச். ஸ்ட்ராங்கினுடைய முறைப்படுத்த இறையியல் நூலிலேயே தங்கி இருக்கிறார். குரூடமின் போதனையின்படி ஒரு சபையில் ஒரே போதகர் உதவிக்காரரின் துணையோடு இருவரும் மூப்பர்களாக சபையை ஆள முடியும். (pg 1145). மூப்பர்களுக்கும், உதவிக்காரர்களுக்கும் இடையில் காணப்படும் வேறுபாட்டையும், அதிகாரப் பிரிவையும் குரூடம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. சபையை ஆளும் அதிகாரம் உதவிக்காரர்களுக்குத் தரப்படவில்லை. பொதுவாக அனேக பாப்திஸ்து சபைகளில் உதவிக்காரர்கள் மூப்பர்களைப் போல நடந்துகொள்கிறார்கள். அது முழுத் தவறு.
காங்கிரேகேஷனல் சபை அமைப்பை குரூடம் வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் அடிப்படையில் விளக்கவில்லை. காங்கிரிகேஷனல் சபை அமைப்பு ஆதியில் இருந்ததை விட, அதாவது சவோய் விசுவாச அறிக்கையைப் பின்பற்றிய பியூரிட்டன் ஆன ஜோன் ஓவன் போதித்தைவிட இன்று வழக்கத்தில் மிகவும் மாறுபாடு உடையதாகக் காணப்படுகிறது. இதுபற்றிய எந்த விளக்கமும் இந்நூலில் இல்லை. இந்தச் சபை ஆட்சி முறையின்படி இறுதி அதிகாரம் உள்ளூர் சபைக்கு உண்டு. ஆனால், சபையை ஆளுபவர்கள் மூப்பர்களே. இதை ஜனநாயக முறையாகக் கருதிவிடக்கூடாது. தற்காலத்தில் பெரும்பாலும் காங்கிரேகேஷனல் சபை ஆட்சி முறை ஜனநாயக முறையாக, அதாவது எந்த தீர்மானத்தையும் அனைத்து அங்கத்தவர்களின் பெரும்பான்மை வாக்கின் மூலமே தீர்மானிக்கப்படுவதாக அமைந்திருக்கிறது. இந்த ஜனநாயக முறையை குரூடம் ஆதரிக்கவில்லை. புதிய ஏற்பாடு இது பற்றித் தரும் விளக்கத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமானால் சபையை ஆளும் அதிகாரம் மூப்பர்களின் கையிலேயே இருக்க வேண்டும் என்று அவர் சரியாகவே எழுதி இருக்கிறார் (pg 1147).
திருச்சபை ஆட்சியமைப்பு பற்றிய அதிகாரத்தின் இறுதியில் குரூடம் பின்வறுமாறு கூறுகிறார்,
“திருச்சபை ஆட்சியமைப்பு பற்றிய என்னுடைய விளக்கங்களை முடிவுக்குக் கொண்டுவரும்போது ஒன்றை நான் மிகத் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒரு சபை எத்தகைய ஆட்சி அமைப்பைக் கொண்டிருக்கிறது என்பது சத்தியத்தின் அதிமுக்கிய போதனை அல்ல. வித்தியாசமான ஆட்சி அமைப்புகளைப் பின்பற்றிக் கிறிஸ்தவர்கள் பிரச்சனைகளில்லாமல் இருந்து வந்திருப்பதோடு, பயனுள்ள முறையில் ஊழியங்களைச் செய்து வந்திருக்கிறார்கள்.” (pg 1150).
குரூடமின் இந்தக் கூற்று ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடைய சபையைக் கட்டுவேன் (மத். 16:18) என்று ஆணித்தரமாக சொன்ன இயேசு கிறிஸ்து அந்தச் சபை எந்தவகையில் அமைக்கப்பட்டு இயங்க வேண்டும் என்பதை வேதத்தில் தராமல் இருந்திருப்பாரா? அதை மனித சிந்தனைப் போக்குக்கு விட்டுவிடுவாரா? அப்போஸ்தலர், நடபடிகளிலும், ஏனைய புதிய ஏற்பாட்டு நிருபங்களிலும் பரவலாக திருச்சபைபற்றிக் கிறிஸ்து விளக்கமளித்திருக்கும்போது திருச்சபை ஆட்சியமைப்பு சத்தியங்களில் முக்கியமான போதனை அல்ல என்று எந்த அடிப்படையில் குரூடம் சொல்லுகிறார்? 1689 விசுவாச அறிக்கையில் மிக நீளமான அதிகாரம் திருச்சபை பற்றியது. திருச்சபை கோட்பாடு முக்கியமானதல்ல என்று எண்ணியிருந்தால் நம்முன்னோர்கள் அத்தனை நீளமான விளக்கங்களைத் தந்திருப்பார்களா?
16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதம் திருச்சபை சீர்திருத்தமாகவே இருந்தது. அதே சீர்திருத்தத்திலேயே பியூரிட்டன் பெரியவர்களும் 17ம் நூற்றாண்டில் ஈடுபட்டார்கள். இவர்களுக்கெல்லாம் திருச்சபை ஆட்சியமைப்பு சத்தியங்களில் முக்கியமானதாகத் தோன்றியிருக்காவிட்டால் சபை சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்திருப்பார்களா? திருச்சபைக் கோட்பாட்டு இறையியலை விளக்கும் ஜோன் கல்வினின் கிறிஸ்தவ கோட்பாடுகள் பற்றிய நூலிலும், ஜோன் நொக்ஸின் எழுத்துக்களிலும், ஜேம்ஸ் பேனர்மனின் திருச்சபை பற்றிய முக்கியமான நூலிலும், அல்பர்ட் என். மார்டினின் போதக இறையியல் வால்யூம்களிலும், கிரெக் நிக்கல்ஸ் எழுதிய திருச்சபைக் கோட்பாடு எனும் நூலிலும் திருச்சபை ஆட்சியமைப்பு பற்றிய குரூடமின் அலட்சிய வார்த்தைகளை ஒருபோதும் காணமுடியாது.
ஆ. திருச்சபை கூடிவருகையில் பெண்களின் பங்கு
திருச்சபைக் கோட்பாடுகளை விளக்கும் பகுதியில் குரூடம் சபையில் பெண்களின் பங்கு பற்றியும் விளக்கியிருக்கிறார். ஆண்களும் பெண்களும் கூடி வரும் சபையில் பெண்கள் பிரசங்கிக்கவோ, தலைமை தாங்கவோ குரூடம் அனுமதிக்காவிட்டாலும், வேறு பலவிதங்களில் அவர்கள் சபையில் பேசலாம் என்கிறார். அத்தகைய சபை ஆராதனைக் கூட்டங்களில் பெண்கள் சத்தமாக ஜெபிக்கவும், வேத வசனங்களை வாசிக்கவும், சாட்சி சொல்லவும், தனியாகப் பாடவும், ஒரு கூட்டத்தோடு இணைந்து பாடவும், நாடகமொன்றில் நடிக்கவும் அனுமதியுண்டு என்கிறார். (pg 1155, 1157). இதையெல்லாம் அவர் 1 கொரி 14, 1 தீமோ 2 ஆகிய அதிகாரங்களை வைத்துத் தன் போக்கில் சிந்தித்து விளக்கமளிக்கிறார். இந்தப் பகுதிகளை குரூடம் விளக்கும் முறை வழமையான வேதவசன உட்பொருள் விளக்க முறைக்கு மாறானது. இத்தகைய நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபடக்கூடாது என்று வெளிப்படையாக வேதம் விளக்கவில்லை என்பதே குரூடமின் வாதமாக இருக்கிறது. இந்த வாதமே மிகத் தவறானது. இது பற்றிய சீர்திருத்த பாப்திஸ்து இறையியலறிஞர் சாம் வோல்டிரனுடைய விளக்கங்களே சரியானவை; வேதபூர்வமானவை. அவருடையதைப் போன்ற வேதவசன உட்பொருள் விளக்க முறையை (Exegesis) குரூடம் கையாளவில்லை. (https://www.withallthymind.com/biblestudy/readings/TheRoleofWomenintheChurch.pdf)
இ. ரோமன் கத்தோலிக்க மதம்
மெய்யான கிறிஸ்துவின் திருச்சபைக்கான மூன்று இலக்கணங்களாகிய வேதப் பிரசங்கம், திருநியமங்களை முறையாக அனுசரித்தல், ஒழுங்கு நடவடிக்கை ஆகியவற்றை விளக்கும் குரூடம், இவற்றில் இரண்டை மட்டும் கொண்டிருந்து, அடிப்படைச் சத்தியத்திற்குப் புறம்பான சில போதனைகளைத் தன்னில் தொடர்ந்து கொண்டிருந்தபோதும், சில ரோமன் கத்தோலிக்க சபைகள் “மெய்யான சபைகள்” அல்ல என்று நம்மால் கூற முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார் (pg 1063). இந்தக் கூற்று மிகவும் பிரச்சனையும், ஆபத்துமுள்ளதாகவே எனக்குத் தெரிகிறது.
முதலாவதாக, கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நம்பித் திருநியமங்களை சரியாக அனுசரிக்கும் ரோமன் கத்தோலிக்கர்கள் தொடர்ந்தும் சில முக்கியமான அடிப்படைக் கிறிஸ்தவ சத்தியங்களில் முரண்பட்டு நிற்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவதாக, அத்தகைய சபைகள் தொடர்ந்தும் ரோமன் கத்தோலிக்க சபைகளாக இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விஷயத்தில் நடைமுறை அனுபவத்தில் தான் கண்டிருக்கும் சில ரோமன் கத்தோலிக்க சபைகளின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு குரூடம் இதுவரையில் இல்லாததொரு புதிய இறையியலை உருவாக்குவதாகத்தான் தெரிகிறது.
வழமையாகக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ இறையியலை அடிப்படையாகக் கொண்டு தனி நபருடையதும், எந்தச் சபையினதும் தன்மைகளை ஆராய்ந்து பார்ப்பார்கள். அதுவே வேதபூர்வமான அணுகுமுறை. அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டு இறையியலை உருவாக்குவது ஆபத்து. மெய்க்கிறிஸ்தவன் கிறிஸ்தவ சத்தியத்திற்கு மட்டும் அடிபணிந்து தன்னுடைய பழைய நம்பிக்கைகளையும், நடவடிக்கைகளையும் அடியோடு விட்டுவிடுவான். அந்தவிதத்தில் பழையதை ஒதுக்கித் தள்ளி அடிப்படைக் கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுக்காத எந்த ரோமன் கத்தோலிக்கரையும் மெய்க்கிறிஸ்தவராகக் கணிக்க வேதம் அனுமதி தரவில்லை. குரூடமின் பாதை ஆபத்தான இறையியல் பாதை.
கத்தோலிக்க மதத்திற்கும் புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவத்திற்கும் இடையில் காணப்படும் 13 இறையியல் வேறுபாடுகளைப் பட்டியலிட்டு இதற்கு அடுத்த பகுதியில் குரூடம் தந்திருக்கிறார் (pg 1080-1089). இந்தப் பகுதியைத் தெளிவாக விளக்கியிருக்கும் குரூடம், இந்தப் பதின்மூன்று வேறுபாடுகளுக்கும் அடியோடு முழுக்குப் போட்டு விசுவாசத்தின் மூலம் மட்டும் கிறிஸ்துவால் நீதிமானாக்கப்படாத கத்தோலிக்கர்களுக்கு வக்காலத்து வாங்குவது ஏன் என்பது கேள்விக்குறி. ரோமன் கத்தோலிக்க மதத்திற்குச் சார்பாகப் பேசி அதன் பக்கம் சரியப் பார்க்கும் போக்கு சுவிசேஷ இயக்கத்தில் என்றோ ஆரம்பித்துவிட்டது. அந்த இயக்கத்தைச் சார்ந்திருக்கும் குரூடம் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பற்றிய மிருதுவான கருத்துக்களை முன்வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை.
- குழப்பமளிக்கும் விளக்கங்கள்
வெயின் குரூடம் நூலின் பல்வேறு பகுதிகளில் முக்கிய போதனைகளுக்கு குழப்பமளிக்கும் விளக்கங்களைத் தந்திருக்கிறார். அவருடைய வார்த்தைகள், ஒரு பொருளை ஒரு கையால் கொடுத்துவிட்டு, மறுகையால் அதைத் திரும்ப வாங்கிக்கொள்ளுவதுபோல் அமைந்திருக்கின்றன. இறையியல் விளக்கங்களில் ஒருபோதும் எந்தவிதக் குழப்பத்தை ஏற்படுத்தும் விளக்கங்களும் இருக்கக்கூடாது.
குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு (Particular Redemption) எனும் போதனையை அளிக்கின்ற பகுதியில் (Pg 743) குரூடம், “சீர்திருத்தவாதப் போதனையான குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு எனும் போதனையே வேதத்தின் மொத்தப் போதனைகளோடும் பொருந்திப் போவதாக இருக்கிறதாக நான் காண்கிறேன்” என்று அதை ஆமோதித்து ஏற்றுக்கொள்ளுகிறபோது, அதே பகுதியில் இன்னொரு இடத்தில் மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பின்வருமாறு கூறுகிறார்,
“சீர்திருத்தவாதிகள் சில சமயங்களில் ஒருவரின் கோட்பாடுகள் பாரம்பரியக் கோட்பாடா (Orthodox)? இல்லையா? என்பதை ஆராய்ந்தறிவதற்கு குறிப்பிட்டவர்களுக்கான மீட்பாகிய போதனையைப் பயன்படுத்துவார்கள். ஆனால் வேதம் இதை ஒருபோதுமே மிக முக்கியமான சத்தியமாகக் கணித்து விளக்கமளிக்கவில்லை என்பதை உணர்வது நலமானது. அதேநேரம், ஒரு தடவையாவது வேதத்தில் விளக்கமாகத் தரப்பட்டிருக்கும் எந்த இறையியல் போதனையிலும் இது ஒரு கருப்பொருளாகக் காணப்படவில்லை. ஏனைய சத்தியங்களையும், நடைமுறைகளையும் விளக்குகின்ற வேதப்பகுதிகளில் அங்கும் இங்குமாக தற்செயலாக இதுபற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பவற்றிலிருந்தே இப்போதனையை அறிந்து கொள்ளுகிறோம். இது திரித்துவ அங்கத்தவர்களின் உள்ளார்ந்த ஆலோசனைக்குரிய விஷயமாக இருப்பதோடு இதுபற்றிய மிகக் குறைவான நேரடி வேதசாட்சியங்களே உள்ளன - இந்த உண்மை இந்த விஷயத்தில் நாம் கவனத்தோடு நடந்துகொள்ள வேண்டுமென்பதைக் காட்டுகிறது. சமநிலையான போதகக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்து சொல்வதானால், குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு எனும் போதனை நமக்கு உண்மையாக இருக்கலாம் என்று தோன்றினாலும், நம்முடைய இறையியல் நம்பிக்கைக்கு தர்க்கரீதியிலான ஒருமைப்படுத்தலைத் தந்தாலும் - இந்தப் போதனை குழப்பத்தை ஏற்படுத்துவதாலும், தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாலும், தவறான வாக்குவாதங்களையும், பிரிவினையையும் ஆத்துமாக்களின் மத்தியில் ஏற்படுத்துவதால்தான், யோவானும், பேதுருவும், பவுலும் ஞானமாக இதுபற்றி அழுத்தமான எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. அதனால் நாமும் அவர்களுடைய வழியையே பின்பற்ற வேண்டும்.”
குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு ஆகிய போதனையையே வேதம் போதிப்பதாக ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் குரூடம், அது வேதத்தில் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் விளக்கப்படவில்லை என்று இப்பகுதியில் கூறுவது அவருடைய இறையியல் வடிவமைப்பையே சந்தேகத்திற்குள்ளாக்குகிறது. குறிப்பிடப்பட்டவர்களுக்கான மீட்பு ஆகிய போதனை குறித்து அழுத்தமான விளக்கமளிப்பதை குரூடம் தவிர்த்திருக்கிறார். கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் அடித்தள அம்சமாக இதை விளக்காமல், ஒரு சில முக்கியமற்ற வசனங்கள் மட்டும் விளக்கும் இரண்டாம் நிலைப் போதனையாக இதற்கு விளக்கமளித்திருக்கிறார். குரூடமின் இந்த விளக்கம் முழு வேதமும் இதுபற்றி அளித்திருக்கும் தெளிவான, ஆரோக்கியமான விளக்கத்தை ஓரங்கட்டிவிடுகிறது. மத்தேயு 1:21; யோவான் 10:11; அப்போஸ்தலர் 20:28; ரோமர் 8:32-34, எபேசியர் 5:25; வெளிப்படுத்தின விசேஷம் 5:9-10 ஆகிய வசனங்கள் மிகத் தெளிவாகப் பிதாவினால் குமாரனின் கையில் கொடுக்கப்பட்டவர்களுக்கான பலிதமளிக்கும் நிச்சயமான பரிகாரப்பலியை விளக்குகின்றன. இதற்கு மேலாகவும் இதுபற்றிய வசனங்கள் வேதத்தில் உள்ளன.
குறிப்பிடப்பட்டவர்களுக்கான மீட்பு பற்றிய போதனையை ஆணித்தரமாகவும், அழுத்தமாகவும் விளக்குவது, எல்லோருக்குமாக சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டிய நம்முடைய கடமையை மட்டுப்படுத்திவிடுகிறது என்று கருதுகிறார் குரூடம். தன்னுடைய விளக்கத்தின் மூலம் வரலாற்று சீர்திருத்த கிறிஸ்தவத்தில் என்றுமே காணப்பட்டிராத அநாவசியமானதொரு பதற்றத்தை ஏற்படுத்துகிறார் குரூடம்.
வரலாற்றில் தோன்றியிருக்கும் கவுன்சில் அறிக்கைகளும், விசுவாச அறிக்கைகளும் ஜோன் ஓவன், பென்ஜமின் வோர்பீல்ட் ஜோன் மரே, சார்ள்ஸ் ஸ்பர்ஜன் ஆகியோரும் குறிப்பிட்டவர்களுக்கான மீட்பையும், எல்லோருக்குமான சுவிசேஷ அழைப்பைக் கொடுப்பதையும் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் சமநிலையில் வேதத்தில் தரப்பட்டிருக்கும் போதனைகளாக வலியுறுத்திக் காட்டியிருக்கின்றனர். இந்த இரண்டிற்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் தேவையற்ற எத்தனிப்பில் இவற்றில் ஒன்றின் அழுத்தத்தைக் குறைத்து விளக்குவதன் மூலம் குரூடம் ஒன்றோடொன்று ஒத்துப்போகும் வேத சத்தியங்களின் தெளிவான தன்மையைப் பலவீனப்படுத்திவிடுகிறார். கிறிஸ்துவின் மரணத்தை சாத்தியமானதொரு ஏற்பாடாக வேதம் விளக்காமல், வரலாற்றில் நிகழ்ந்த பலிதமளிக்கும் மீட்பாகவே விளக்குகிறது. பிதாவினால் குமாரனின் கையில் கொடுக்கப்பட்டவர்களுக்கான உடன்படிக்கையின் நிறைவேற்றமாகவே வேதம் இதை விளக்குகிறது.
குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு ஆகிய போதனை பற்றிய குரூடமின் பலவீனமான, குழப்பமுள்ள விளக்கங்களுக்கு மாறாகத் தலைசிறந்த பியூரிட்டன் இறையியலறிஞரான ஜோன் ஓவன் நம்பத்தகுந்த விதத்தில் தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டவர்களுக்கான மீட்பை ஆணித்தரமாக விளக்கும் விதத்தில், “கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்” (The Death of Death in the Death of Christ) எனும் நூலை எழுதியிருக்கிறார். குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு எனும் போதனையை அருமையாக விளக்கும் சீர்திருத்த சத்தியவாதாடல் (Apologetic) நூலிது.
வேதத்தில் இப்போதனை, குரூடம் சொல்லுவதுபோல் தற்செயலாக அங்குமிங்குமாகத்தான் காணப்படுவதாக இருந்தால் வரலாற்றில் டோர்ட் சினட் குழுவினர் ஆர்மீனியனிசத்திற்கெதிரான ஐம்போதனையைக் கட்டமைத்து அதில் குறிப்பிட்டவர்களுக்கான மீட்பைப் பற்றி ஆணித்தரமாக விளக்கியிருப்பார்களா? ஜோன் ஒவனின் “கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்” நூலுக்கு தர்க்கரீதியிலான அருமையான இறையியல் முன்னுரை அளித்து குறிப்பிட்டவர்களுக்கான மீட்பை நிலைநிறுத்திய ஜிம் பெக்கர் எந்தக் கண்ணோட்டத்தில் குரூடமின் இந்நூலுக்கு பரிந்துரை அளித்தார் என்பது தெரியவில்லை.
- குரூடமின் ஏனைய இறையியல் விளக்கங்கள்
இந்நூலில் திருச்சபையின் பொது ஆராதனை பற்றி விளக்கமளித்திருக்கும் குரூடம் ஓய்வுநாள் கோட்பாடு பற்றி எந்த விளக்கத்தையும் அளிப்பதை அடியோடு தவிர்த்திருக்கிறார். குரூடமின் உடன்படிக்கை பற்றிய விளக்கங்களையும், அவருடைய பொதுவான பலவீனமான சுவிசேஷ இயக்க இறையியல் போக்கைக் கவனிக்கும்போது ஓய்வுநாளைப் பற்றிய பலவீனமான நம்பிக்கையையே அவர் கொண்டிருப்பார் என்றுதான் நம்பவேண்டியிருக்கிறது. அத்தோடு அவர் இந்த விஷயத்தில் புதிய உடன்படிக்கை இறையியலாளரின் பக்கம் (New Covenant Theology) சார்ந்து நிற்பதாகத் தெரிகிறது. இந்நூலுக்கு பரிந்துரை (endorcement) அளித்திருக்கும் பலர் ஒய்வு நாள் அனுசரிப்பை ஏற்றுக்கொள்ளாத புதிய உடன்படிக்கை இறையியலாளர்கள்.
நியாயப்பிரமாணத்தின் மூன்று பிரிவுகள் (Three fold division of the Law) பற்றிய விளக்கங்களும், அவற்றில் இன்றும் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய ஒழுக்கப் பிரமாணத்தைப் (Moral Law) பற்றிய எந்த விளக்கங்களும் இந்நூலில் இல்லை. பத்துக்கட்டளைகளை குரூடம் சில இடங்களில் மட்டும் குறிப்பிட்டிருந்தபோதும் விசுவாசியின் பரிசுத்தமாக்குதலில் அதற்கான பங்கைப் பற்றிய எந்த விளக்கத்தையும் தரவில்லை. பரிசுத்தமாக்குதலின் ஒரு அங்கமாக, கிறிஸ்தவன் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று விளக்கும் குரூடம், புதிய உடன்டிக்கையின் ஒழுக்கக் கட்டளைகளுக்கு மட்டுமே அவன் கீழ்ப்படிய வேண்டும் என்கிறார் (Ch. 38, Pg 932). பழைய உடன்படிக்கையின் ஒழுக்கப் பிரமாணத்தை அவர் புதிய உடன்படிக்கை இறையியலாளரைப்போல வலியுறுத்தாதிருந்திருப்பது அப்பட்டமாகிறது.
பாப்திஸ்தாக இருந்தபோதும், ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்து பற்றிய குரூடமின் விளக்கங்களும் உறுதியற்றதாகவும், பலவீனமானவையாகவுமே காணப்படுகின்றன. இத்திருநியமங்களை எந்தக் கிறிஸ்தவனும் கொடுக்கலாம் என்று குரூடம் விளக்கியிருக்கிறார். இவற்றைத் திருச்சபையோடும், சபைத் தலைமையோடும் இணைத்துப் பார்ப்பதை அவர் தவிர்த்திருக்கிறார்.
பழைய ஏற்பாட்டில் கர்த்தர் மனிதரோடு ஏற்படுத்திய வெவ்வேறு உடன்படிக்கைகளை குரூடம் விளக்கியபோதும், பாரம்பரிய வரலாற்று சீர்திருத்த கிறிஸ்தவமோ, சீர்திருத்த பாப்திஸ்துகளோ பின்பற்றும் உடன்படிக்கை இறையியல் விளக்கங்களை ஆணித்தரமாகப் பின்பற்றவில்லை. உடன்படிக்கை இறையியலைப் பற்றிய விளக்கங்களை அவர் தந்திருந்தபோதும் அவருடைய விளக்கங்களில் அழுத்தமோ, வலிமையோ காணப்படவில்லை. சுவிசேஷ இயக்க பாப்திஸ்தாக இருக்கும் குரூடம் உடன்படிக்கை இறையியலை அதிமுக்கியமானதாகக் கருதி விளக்காமல் இருந்திருப்பதில் ஆச்சரியமில்லை. மாறாகப் பெரும் சீர்திருத்த பாப்திஸ்தான சார்ள்ஸ் ஸ்பர்ஜனின் வார்த்தைகளை நாம் கவனிப்பது அவசியம். ஸ்பர்ஜன் சொல்கிறார், “உடன்படிக்கை இறையியல் இறையியலின் வேராக இருக்கின்றது. கிரியையின் உடன்படிக்கைக்கும், கிருபையின் உடன்படிக்கைக்கும் இடையில் காணப்படும் வேறுபாட்டை நன்றாக விளங்கிக்கொள்கிறவரே இறையியல் சாமர்த்தியர் என்று சொல்லப்படுகிறது. நியாயப்பிரமாண உடன்படிக்கை பற்றியும், கிருபை பற்றியதுமான அடிப்படைப் போதனைகளில் விடும் தவறுகளே அனேகரை வேதஇறையியலில் பெரும்பாலான தவறுகளை விடவைக்கிறது என்பதை நான் நம்புகிறேன்” என்கிறார். (https://www.monergism.com/covenant-theology-historic-christianity)
இறுதிக் காலப் போதனைகளைப் பொறுத்தவரையில் குரூடம் Progressive Dispensationalism போக்கையும், Historic Pre-millenialism கோட்பாட்டையும் பின்பற்றுகிறார். இதுவும் பாரம்பரிய வரலாற்று சீர்திருத்தப் போதனைகளோடு முரண்படும் கோட்பாடுகளாகும்.
முடிவுரை
இந்த ஆக்கத்தில் வெயின் குரூடமின் முறைப்படுத்தப்பட்ட இறையியலில் அதிமுக்கியமான போதனைகளை மட்டுமே ஆராய்ந்து விளக்கம் அளித்திருக்கிறேன். நூலில் நல்ல சில அம்சங்கள் இருந்தபோதும், எளிமையான விதத்தில் பல்வேறு போதனைகளுக்கு குரூடம் விளக்கமளித்திருந்தபோதும், நூலில் காணப்படும் ஆபத்தான குறைபாடுகளால் சீர்திருத்த கிறிஸ்தவர்களுக்கு அதை அறிமுகப்படுத்துவது எனக்குப் பிரச்சனையாக இருக்கிறது. பாலையும் தண்ணீரையும் பிரித்துப் பாலை மட்டும் குடிக்கத் தெரிந்திருக்கும் அன்னப் பறவையைப் போல, நூலில் இருக்கும் நல்லவைகளை மட்டும் பயன்படுத்திக்கொண்டு தவறானவற்றை ஒதுக்கிவிடலாமே என்று சிலர் சொல்லலாம். ஆனால், அந்தவிதத்தில் நல்லவைகளை மட்டும் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்கு இறையியல் ஞானமோ பக்குவமோ கிடையாது. எல்லா நூல்களிலும், நல்லவற்றிலும்கூட குறைகள் இருக்கத்தானே செய்யும் என்பார்கள் சிலர். உண்மைதான்! ஆனால், அத்தகைய நல்ல நூல்களில் காணப்படும் குறைபாடுகள் அதிமுக்கியமான சத்தியங்களைப் பற்றியதாக இருக்காது. இந்த நூலை அந்தப் பட்டியலில் வைக்க முடியாது. அதனால் என்னைப் பொறுத்தளவில் இறையியலே அடியோடு இல்லாத நம்மினத்துக் கிறிஸ்தவத் திருச்சபைகளுக்கு இந்த நூல் பொருந்தி வராது.
இறையியலைக் கற்றுக்கொள்ளும்போது நம்பகத் தன்மையுள்ள நூல்களிலிருந்தும், தரமான ஆசிரியர்களிடமுமிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும். அத்தன்மை இந்த நூலில் கிடையாது. பலவீனமான சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த ஆங்கிலிக்கன், பாப்திஸ்து, சகோதரத்துவ, கெரிஸ்மெட்டிக் கிறிஸ்தவர்களுக்கு இந்நூல் பொருந்திவரலாம். ஆனால், பாரம்பரிய, வரலாற்று, விசுவாச அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட, சீர்திருத்தப் போதனைகளை (Traditional historical confessional reformed doctrines) நாடிக் கற்றுக்கொள்ளும் இருதயமுள்ளவர்களுக்கு குரூடமின் நூல் நிச்சயமாகத் துணைபோகாது.
சமீபத்தில், கடந்த வருடத்தில் (2024) வெளிவந்திருக்கும் ஒரு முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலை நான் பெற்று வாசித்துப் பார்த்தேன். அந்த நூல் குரூடமின் நூலின் மொத்தப் பக்கங்களில் நான்கில் ஒரு பங்கை மட்டுமே (410 pgs) கொண்டிருக்கிறது. முறைப்படுத்தப்பட்ட இறையியலை அருமையாக வடிவமைத்து போதகர்கள், இறையியல் கல்லூரி மாணவர்கள், கிறிஸ்தவர்கள் என்று அனைவருமே வாசித்து பயன்படக்கூடிய விதத்தில் நூல் அமைந்திருந்தது. இது சுருக்கமானதாக, ஒவ்வொரு தலைப்பும் ஒன்றரைப் பக்கங்களை மட்டும் கொண்டிருந்து நாளுக்கு ஒன்றாக வாசித்துப் பயன்படும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும் சத்தியங்களை ஆழமாகவும், நுணுக்கமாகவும் விளக்க ஆசிரியர் தவறவில்லை.
இதை எழுதிய கெவின் டியொங் சீர்திருத்த பிரஸ்பிடீரியன் பிரிவைச் சேர்ந்தவர். அதனால், ஞானஸ்நானம் பற்றியும், உடன்படிக்கை இறையியல் பற்றியும், திருச்சபைக் கோட்பாட்டில் சில அம்சங்களையும் பற்றி அவர் கொடுத்திருந்த விளக்கங்களை பாப்திஸ்து என்ற முறையில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதைத் தவிர ஏனைய போதனைகள் பாரம்பரிய வரலாற்று சீர்திருத்த இறையியலின் அடிப்படையில் அமைந்திருந்தன. இறையியலின் முக்கியமான போதனைகளனைத்தையும், வரலாற்று இறையியல் உட்படத் தெளிவாக நுணுக்கமாக கெவின் டியொங் தந்திருக்கிறார். இந்த நூலைத் தயங்காமல் போதகர்களுக்கும், இறையியல் மாணவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் என்னால் அறிமுகப்படுத்த முடிந்தளவுக்கு, அளவில் பெரியதும், பிரபலமானதுமான குரூடமின் நூலை நம்பி அறிமுகப்படுத்த முடியவில்லை.