ஆசிரியரைப் பற்றி

போதகர் ஆர். பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து நகரில், சவரின் கிறேஸ் (சீர்திருத்த பாப்திஸ்து) சபையில் (ஆங்கிலம்) கடந்த 39 வருடங்களாகப் போதகராகப் பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழகப் பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, South Wales, UK) இறையியல் பயின்றவர்.

அவர் சுவிசேஷத்தைக் கேட்டு கிறிஸ்துவை விசுவாசித்த 1980களின் ஆரம்பத்தில் இருந்தே சீர்திருத்த சத்தியங்களில் அதிக நாட்டம் காட்ட ஆரம்பித்தார். டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸின் Faith on Trial நூல் விசுவாசத்தை அடைய இவருக்குக் கர்த்தர் பயன்படுத்திய ஒரு கருவியாக இருந்திருக்கிறது. அன்றிலிருந்தே, சார்ள்ஸ் ஸ்பர்ஜன், ஜோன் ஓவன், மார்டின் லொயிட் ஜோன்ஸ், ஜோன் மரே, ஆர்தர் பிங்க் ஆகியோரின் எழுத்துக்களை விரும்பி ஆர்வத்தோடு வாசிக்க ஆரம்பித்தார். கர்த்தரின் பராமரிப்பின்படி இச்சத்தியத் தேடலே சீர்திருத்த இறையியலை முறையாகக் கற்க இவரைத் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் கொண்டு சேர்த்தது. 

தமிழர்கள் மத்தியில் சுவிசேஷத்தையும், சீர்திருத்த போதனைகளையும் கொண்டு சேர்க்கும் பணிக்கான சந்தர்ப்பம் 1990ல் இவரை நாடிவந்தது. அன்றிலிருந்து இன்றுவரை இவர் தொடர்ந்து அப்பணியில் தளராது ஈடுபட்டு வருகிறார்.

இப்பணியில் ஈடுபடும்படி 1985ல் கர்த்தரின் கரமாக இருந்து, இவரை முன்னின்று ஊக்குவித்து, அதற்கான வித்தை இவரது இருதயத்தில் தூவியவர் ஆங்கிலேய மிஷனரியாகிய மறைந்த ஜோன் ஆப்பில்பி. மிக நெருங்கிய நண்பர்களில் சிலரும் கர்த்தரின் கருவியாக இப்பணியில் இவரை வலியுறுத்தி ஊக்குவித்துள்ளனர். சவரின் கிறேஸ் திருச்சபை இதில் தொடர்ந்து இவருக்குத்  தூணாகவும், துணையாகவும் நின்றுதவுகிறது. 

1990ல் ஆரம்பமான இப்பணி, சுவிசேஷத்தைப் பிரசங்கித்து சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகளை நிறுவுவதிலும், போதகப், பிரசங்கப் பணிக்குத் தகுதியுள்ளவர்களுக்கு சீர்திருத்த இறையியல் போதனையளித்துத் தயார் செய்வதிலும், 1995ல் இருந்து திருமறைத்தீபம் எனும் சீர்திருத்த காலண்டு இதழின் ஆசிரியராக அதைத் தயாரித்து வெளியிடுவதிலும், சீர்திருத்தப் போதனைகளைச் சுமந்த அநேக நூல்களைத் தமிழில் எழுதி வெளியிடுவதிலும், ஆங்கிலத்திலுள்ள தரமானதும், அவசியமானதுமான நூல்களையும், ஆக்கங்களையும் மொழிபெயர்த்து வெளியிடுவதிலும் இவரை ஈடுபடுத்தியது.

கருத்தாழமிக்க ஆக்கபூர்வமான ஆவிக்குரிய ஆக்கங்களையும் இவர் அடிக்கடி இத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் தொடர்ந்து காணொளி மற்றும் ஒலிநாடாக்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவதும், வாசகர்களை ஈர்க்கக்கூடிய எளிமையான இலக்கிய நடையில் சத்தியங்களைத் தமிழில் விளக்கி எழுதிவருவதும் இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.