1. வாசகர்களே!
2. 30ம் வருடத்தை எட்டுகிறது திருமறைத்தீபம்
3. புத்தகக் கண்காட்சியும், அறியப்படாத கிறிஸ்தவமும்
4. தயாரித்துப் பிரசங்கம் செய்தல்
5. வழியருகே விழுந்த விதை
6. ஆவிக்குரிய போதகனா? அடக்கியாளும் ஆகாபா?
7. தோமா கிறிஸ்தவம் – கருத்துரை
வாசகர்களே!
வணக்கம் வாசகர்களே! இவ்வருடத்திற்கான முதல் இதழைப் பூர்த்தி செய்து உங்கள் முன் படைக்க கர்த்தர் உதவியிருக்கிறார். வழமைபோல் இதழைத் தயாரிப்பதில் துணைபுரிந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.
இந்த இதழில் பிரசங்கம் எப்போதும் தயாரித்தே செய்யப்பட வேண்டும் என்பதை விளக்கும் ஒரு ஆக்கத்தைத் தந்திருக்கிறேன். அதை ஆடியோவில் இருந்து எழுத்தில் பதிவு செய்து சகோதரன் சிவா உதவியிருக்கிறார். தயாரித்துப் பிரசங்கம் செய்வது எப்படி என்பதை இந்த ஆக்கம் விளக்கும்; பிரசங்கம் செய்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் அது தெரிந்திருக்க வேண்டிய உண்மை.
விதை நிலங்களின் உவமையில் முதலாவது நிலத்தை விளக்கும் ஒரு ஆக்கமும் இதில் வந்திருக்கிறது. அதையும் சிவாவே எழுத்தில் பதிவு செய்து உதவினார். இந்த ஆக்கமும் உங்களைச் சிந்திக்க வைக்கும். உவமைகளை எவ்வாறு புரிந்துகொள்ளுவது என்பதையும் இது கற்றுத் தரும்.
நமது இதழ் 2024ல் முப்பதாவது வருடத்தை ஆரம்பிக்கிறது. இத்தனை வருடங்களைக் கடந்து வந்திருப்பதைத் திரும்பிப் பார்க்கிறபோது அது வெறும் மனித முயற்சியாக எனக்குத் தெரியவில்லை. கர்த்தர் ஒருவரோடிருந்தால் மட்டுமே அது ஆகக்கூடியது. இம்மட்டும் கர்த்தர் இந்த இலக்கியப்பணியில் எங்களை வழிநடத்தி அநேகருக்குத் துணை செய்திருக்கிறார். இதழால் பயன்பட்டு வரும் நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் உங்கள் ஆதரவுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
“அறியப்படாத கிறிஸ்தவம்” எனும் ஒரு நூலை விமர்சித்து எழுதியிருக்கிறேன். கத்தோலிக்கம் சார்பான இந்நூல் கிறிஸ்தவ ஊழியங்கள் பற்றிய சில விபரங்களையும் தருகிறது.
தோமா கிறிஸ்தவம் நூலுக்கான கருத்துரையை சகோதரி ஷேபா மிக்கேள் ஜோர்ஜ் எழுதியிருக்கிறார். அவருடைய எழுத்துத் திறன் இதில் வளர்ந்திருப்பதைக் காண்கிறேன்.
இந்த இதழும் இதுவரை வந்திருக்கும் இதழ்களைப் போலவே உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் துணைபுரியட்டும். வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்! – ஆசிரியர்
30ம் வருடத்தை எட்டுகிறது திருமறைத்தீபம்
திருமறைத்தீபம் 1995ல் முதல் முறையாக வெளிவந்தபோது ஆசிரியரோ அவரைச் சார்ந்த சபையோ இதழ், முப்பதாவது வருடத்தை எட்டும் என்று எண்ணிப் பார்த்ததில்லை. கர்த்தரின் அளப்பரிய கிருபையால் 2024ல் இதழ் தன் 30ம் வருடத்தை ஆரம்பிக்கிறது. நினைத்துப் பார்க்கிறபோது இந்த இலக்கியப் பயணம் பெரும் மலைப்பை உண்டாக்குகிறது.
சிறு முயற்சியாக இதழ் எவ்வாறு ஆரம்பமானது என்பதை ஏற்கனவே இதழில் விளக்கி எழுதியிருக்கிறேன். அந்தப் பயணம் இம்மட்டும் கொண்டு சேர்க்கும் என்பது எங்களில் எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. இன்று ஏறக்குறைய 5000 பக்கங்களுக்கு மேல் சீர்திருத்த கிறிஸ்தவ இறையியலைத் தாங்கி ஏழு இதழ் தொகுதிகள் பவனி வருகின்றன. எட்டாவது தொகுதி வரவிருக்கும் ஜனவரி மாதத்தில் வெளிவரவிருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே சீர்திருத்தப் போதனைகளின் அடிப்படையில் மட்டுமே இதழை வெளியிடத் தீர்மானித்திருந்தோம். எந்தவித சத்தியப் பச்சோந்தித்தனத்திற்கும் இடமளிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தருக்கிருந்த வைராக்கியத்தில் கொஞ்சமாவது நமக்கிருக்க வேண்டாமா? கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவினரும் இதழை வாசிக்கவேண்டுமானால் சீர்திருத்த சத்தியத்தை மட்டும் வலியுறுத்தி எழுதாதீர்கள் என்ற ஆலோசனை ஒருதடவை என் காதில் விழுந்தது. எதற்குக் காதைக் கொடுக்க வேண்டும், கொடுக்கக்கூடாது என்பதில் சீர்திருத்தக் கிறிஸ்தவன் எப்போதும் நிதானமாகச் செயல்பட வேண்டும். அதன்படி அந்த ஆலோசனையை நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மாயமான்களைப் போன்ற பரவசக்குழுக்களும் (Charismatism and Pentecostalism), செழிப்புபதேசச் செந்தேள்களும் வரலாற்று வேதக்கிறிஸ்தவத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்று எழுதியது, கிருபையின் போதனையைப் பின்பற்றுபவர்களாகத் தங்களை இனங்காட்டி வந்த சில வேஷதாரிகளுக்குக் கசப்பூட்டியது. நம் இதழை இவர்கள் நிராகரித்தார்கள். பரவசக்குழுக்கள் 20ம் நூற்றாண்டில் உருவான வரலாற்றுக் கிறிஸ்தவம் அறிந்திராத, வேதம் சாராத ஒரு கூட்டம் என்பதை இவர்கள் அறிந்திருக்கவில்லை. காலம் அதை இனங்காட்டிவிட்டது. சீர்திருத்த கிறிஸ்தவத்திற்கும் பரவசக்குழுக்களுக்கும் ஒருக்காலும் தொடர்பிருந்ததில்லை; இருக்கப்போவதுமில்லை. அப்படி ஒரு தொடர்பை உண்டாக்க முயல்கிறவர்கள் சமயசமரசப் பச்சோந்திகள். அதையெல்லாம் சகித்துக் கொண்டு சத்தியத்திலிருந்து அணுவளவும் பிசகாமல் இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தோம். இதழில் வரலாற்றுச் சீர்திருத்தப் போதனைகளின் அடிப்படையில் 16ம், 17ம் நூற்றாண்டு சீர்திருத்தவாத, பியூரிட்டன் போதனைகளைத் தற்காலத் தமிழ் வாசகர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளக்கூடியவிதத்தில் படைத்து வந்திருக்கிறோம். 1689 விசுவாச அறிக்கையின் 32 அதிகாரங்களில் விளக்கப்பட்டிருக்கும் போதனைகளுக்கு மாறாக எதையும் இதழில் நாம் வெளியிட்டதில்லை; வெளியிடப்போவதுமில்லை.
நியாயப் பிரமாண நிராகரிப்புவாதம், சட்டவாதம், ஆர்மீனியனிசம், காலப்பாகுபாட்டுக் கோட்பாடு, செழிப்புபதேசம் போன்ற பழமையான போலிப்போதனைகளை மட்டுமல்லாது, இன்று புதிதாக வரலாற்றுக் கிறிஸ்தவப் போதனைகளுக்கும், விசுவாச அறிக்கைகளுக்கும் புதுவிளக்கமளிக்க முயலும், புதிய உடன்படிக்கை இறையியல், நியூ கல்வினிசம் ஆகிய நவீன இறையியல் போக்குகளையும், இவற்றின் தத்துப் பிள்ளைகளாக நம்மினத்தில் உலாவி வரும் போலிப் போதனைகளையும் நாம் தோலுரித்துக் காட்டுவதிலும் ஒருபோதுமே பின்நிற்கவில்லை. சமீபத்தில் வெளிவந்த “தோமா கிறிஸ்தவம்” நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் முளைத்திருக்கும் புதிய காளானை அடையாளம் கண்டு வாசகர்களை எச்சரிக்கிறது.
அத்தோடு நின்றுவிடாமல் கிறிஸ்தவ வரலாறு, சான்றோர்களின் வரலாறு, கிருபையின் போதனைகள், சீர்திருத்த விசுவாசம், விசுவாச அறிக்கைப் போதனை, வினாவிடைப் போதனை, போதக ஊழியம், பரிசுத்த நடைமுறைக் கிறிஸ்தவ வாழ்க்கை, திருச்சபைக் கோட்பாடுகள், பிரசங்க ஊழியம், சுவிசேஷப் பணி, இறுதிக் காலப் போதனைகள் போன்ற அத்தனை போதனைகளையும் வேத அடிப்படையில் விளக்கி வருகிறோம். இறையியல் தொடர்பான எதையும் இதழ் விட்டுவைக்கவில்லை. தமிழ் மட்டுமே தெரிந்த ஒரு ஊழியக்காரனுக்கு வாசிக்கத் தெரிந்தால் ஊழியப்பணிக்கு எதெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் அவன் திருமறைத்தீபத் தொகுதிகளில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்; அவன் வாசிக்கிறவனாக முதலில் இருப்பது அவசியம்.
இதில் சகோதரன் ஜேம்ஸின் உழைப்பு அதிகம். எழுதுவதும், மொழிபெயர்ப்பதும் என் பணி. அச்சுக்குக் கொண்டுபோகும்வரையுள்ள தொழில்நுட்பப் பணிகளனைத்தையும் அவரே செய்கிறார். இப்போது மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார். என்னோடும் அவரோடும் இணைந்து மேலும் இருவர் எழுத்துப் பிழை சரிபார்க்கும் பணியில் உதவுகிறார்கள். இது ஒரு கூட்டு முயற்சி. ஒலி நாடாக்களில் இருப்பவற்றைக் கேட்டுத் தட்டச்சில் பதிவுசெய்து துணைபுரியப் புதிதாக ஒருவர் எங்கள் அணியில் இந்த வருடம் இணைந்திருக்கிறார். அதுவும் கர்த்தரின் கிருபையான செயல். சென்னை கிருபை சீர்திருத்த சபை இதழை எல்லோருக்கும் விநியோகம் செய்யும் பணியைத் தலைமேல் சுமந்து ஆர்வத்தோடு செய்து வருகிறது.
இதழ் அநேகரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறது; அநேருக்கு சத்தியக் கண்ணாடியாக இருந்து வருகிறது. முறியமுடியாத உறவுகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. என்னோடிணைந்து பணி செய்யும் சபைகளுக்கு சத்தியப் பாதுகாவலானாக இருந்து வருகிறது. பலரை வாசிக்கத் தூண்டியிருக்கிறது இதழ்; ஒரு சிலரை எழுதவும் வைத்திருக்கிறது. ஐம்போதனைகள் மட்டுமே (கிருபையின் போதனைகள்) சீர்திருத்தவாதத்தின் முதலும் முடிவும் என்ற தவறான எண்ணம் கொண்டிருந்த அநேகர் தங்களுடைய தவற்றைத் திருத்திக்கொள்ளச் செய்திருக்கிறது. பரவசக்குழுவைத் தழுவி வாழ்ந்திருந்த போதகர்கள் பலரை அதைவிட்டு விலக வைத்திருக்கிறது. வெள்ளையடிக்கப்பட்ட பாரம்பரியச் சபைக்கல்லறைகளில் மூச்சடைபட்டு இருந்தவர்கள் சத்தியக் காற்றைச் சுவாசிக்க வைத்து அவர்களை உயிர்ப்பித்திருக்கிறது. திருமறைத்தீபம் செய்து வந்திருக்கும், செய்து கொண்டிருக்கும் செயல்களையெல்லாம் எழுத ஆரம்பித்தால் இந்த இதழ் மட்டுமே அதற்குப் போதாது.
வரப்போகும் புதிய வருடத்தில் திருமைறைத் தீபம் வலைதளத்தைப் புதுப்பித்து, வாசகர்கள் பயன்படுத்தும் பல்வேறு கணினித் தளங்களிலும் அவர்கள் தளத்தை இலகுவாகப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதற்கான முயற்சிகளை இப்போது ஆரம்பித்திருக்கிறோம். அது நிறைவேறக் கர்த்தரின் துணையை நாடி நிற்கிறோம். இது நிறைவேறும்போது நிச்சயம் அநேகருக்கு ஆசீர்வாதமாக அமையும்.
திருமறைத்தீபத்தின் 8வது தொகுதி ஜனவரி மாதம் அறுநூறு பக்கங்களோடு வெளிவரவிருக்கிறது. இதுவரை இருபத்தியொன்பது வருடங்களை இதழ் பூர்த்தி செய்திருக்கிறது. இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது புதிய தொகுதி ஏற்கனவே வெளிவந்திருக்கும். “சத்தியத்தைக் கபடமில்லாமல் எடுத்துக் கூறாமலும், கொள்கைப் பஞ்சத்தோடும் இருக்கும் பத்திரிகையை இலக்கியத் தொல்லை என்றுதான் கூறவேண்டும்” என்று பாப்திஸ்துப் பெரியவர் ஸ்பர்ஜன் சொல்லியிருப்பதைத் தலைமேல் சுமந்து முதல் இதழ் வெளிவந்தது. ஓர் “இலக்கியத் தொல்லை” (Literary nuisance) என்ற பெயரை வாங்கிவிடாமல் இருப்பதில் கண்ணும் கருத்துமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
தயாரித்துப் பிரசங்கம் செய்தல்
பெரும்பாலான தமிழ் பிரசங்கிகள் பிரசங்கங்களைத் தயாரித்துப் பிரசங்கம் செய்வதில்லை. அவர்கள் தயாரித்துப் பிரசங்கம் செய்வதை ஆவிக்குரிய செயலாகக் கருதுவதில்லை. ஆவியிருக்கிறவன் ஆவியானவரிடம் இருந்து நேரடியாகவே பிரசங்கத்தைப் பெற்றுக்கொள்ளும் ஈவைக் கொண்டிருப்பதாக அவர்கள் மிகத் தவறாக எண்ணி வருகிறார்கள். இது பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளைப் பற்றியும், பிரசங்கப்பணி பற்றியும் தெளிவான இறையியல் நம்பிக்கைகளைக் கொண்டிராததால் ஏற்படும் விளைவு. இதனால் பிரசங்கம் தமிழினத்தில் மிகவும் கீழான நிலையில் இருந்து வருவதை வாசகர்கள் அறிவார்கள். ஐந்து நிமிடம் ஒரு தமிழ்ப் பிரசங்கத்தைக் கேட்டாலே அது தயாரிக்கப்பட்ட பிரசங்கமா இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரையில் கவனத்தோடு தயாரிக்கப்பட்டுச் செய்யப்படும் பிரசங்கங்கள் மட்டுமே ஆவியானவரின் ஆசீர்வாதத்தைக் கொண்டிருக்கும் பிரசங்கங்கள். அத்தகைய பிரசங்கங்களைச் செய்வதற்குப் பயன்படுத்தவேண்டிய பத்துக் குறிப்புகளை நீங்கள் இந்த ஆக்கத்தில் வாசிக்கலாம். ஜெபத்தோடு இவற்றைப் பின்பற்றுகிற பிரசங்கி வீண்போக முடியாது. உங்கள் பிரசங்கங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமானால் இவற்றைப் பின்பற்றி உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்வதோடு, ஆத்துமாக்களுடைய இருதயங்களுக்கும் பாதுகாப்பளியுங்கள்.
- வேதம் தெரிந்திருக்க வேண்டும் (You must know your Bible).
ஒரு பிரசங்கியாக இருந்தால் கண்டிப்பாக வேதத்தில் நல்லறிவு இருக்க வேண்டும். நீங்கள் ஒரு போதகராக இருந்தால் வேதத்தைக் கற்றுத் தேர்ந்திராமல் இருப்பது மிகவும் ஆபத்தானதாகும். உங்களுக்கு ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியர் அளவுக்கு மட்டுமே வேத அறிவு இருக்கக் கூடாது. அதற்கு மேலாக வேதம் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக நீங்கள் மிகவும் கடினமாக உழைத்து அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதைப் பெற்றுக்கொள்ள முதலில் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் விசேஷம் வரையும் தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும். நாம் சொந்தமாக வாசித்து அதிலிருந்து குறிப்புகள் எடுத்துக்கொள்ள வேண்டும். குழப்பமான பகுதிகளுக்குப் பிறகு விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியம். அவ்வாறாக பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு எனத் தொடர்ந்து வாசித்து வேத அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு நூலிலும் உள்ள விசேஷ அம்சங்கள், அதன் ஆசிரியர், எழுதப்பட்ட காலம், அந்த நூலின் பின்னணி என ஒவ்வொன்றைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். இவையெல்லாம் தெரியாமல் நாம் பிரசங்கம் செய்யப் போகக் கூடாது. ஏனெனில் நாம் எந்தப் பகுதியிலிருந்து பிரசங்கித்தாலும் நமக்கு எல்லா பகுதிகளிலிருந்தும் குறிப்புகள் தேவைப்படுகிறது. ஆகவே நமக்கு வேதத்தில் நல்லறிவு அவசியம்.
வேதம் தெரியாமல் பிரசங்கிப்பவர்கள் அநேகர் இன்றைக்கு நம்மினத்தில் உள்ளனர். வேதம் தெரியாமல் இறையியல் ஆசிரியர்களாகக் கூட இருக்கிறார்கள். வேதம் கர்த்தருடைய வார்த்தை, அதோடு நாம் விளையாடக்கூடாது. வேதத்தை நாம் எப்போதும் தெளிவாகப் போதிக்க வேண்டும். ஏனெனில் வேதப்பிரசங்கம் கொடுக்கிற பொழுது பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாம் நாடுகிறோம், ஜெபிக்கிறோம். அவரும் அதற்கு உதவி செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். நாம் வேதம் தெரியாமல் போதிக்கும் பொழுது, நாம் சொல்லுகிறது பொய் என ஆவியானவர்அறியாமலிருப்பாரா? திரித்துவத்தின் மூன்றாவது ஆழ்த்தத்துவமாகிய ஆவியானவர் நமக்கு எப்படி உதவி செய்வார்? நிச்சயமாகச் செய்யமாட்டார். நமக்கு எதுவும் தெரியாமல் இருந்து, ஜெபம் செய்து பிரசங்கிக்கும் பொழுது பரிசுத்த ஆவியானவர் அற்புதமாக அதைப் பிரசங்க மேடையில் கொடுப்பார் என நாம் நினைக்கக்கூடாது. அப்படி அநேகர் நினைத்து பிரசங்கம் செய்வதுண்டு. ஆனால் ஒருபோதும் ஆவியானவர் அவ்வாறு செய்வதில்லை. அப்படிச் செய்தால் அவர் பொய்யராக மாறிவிடுவார். அவர் பரிசுத்தமான ஆவியானவர்; உழைப்புக்கு மதிப்புக் கொடுப்பவர். ஆகவே அவர் நமக்குத் தெரியாததைப் பிரசங்கத்தில் நமக்குத் தெரியப்படுத்தமாட்டார். ஆகவே முதலாவதாக, வேதம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அந்த அறிவைப் பெற்றுக்கொள்ள சகல முயற்சிகளிலும் நீங்கள் ஈடுபட வேண்டும்.
சபைகளில் பிரசங்கம் செய்பவர்களை வேதத்தில் நல்லறிவு பெறும்படியாக அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவர்கள் ஞாயிறு வகுப்புகள் எடுத்தாலும் சரி, வேதப்பாடம் எடுத்தாலும் சரி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் வேத அறிவைப் பெற்றுக்கொள்ள என்ன முயற்சி எடுக்கிறார்கள், அதற்காக அவர்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதைப் போதகர்கள் அறிந்திருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் தவறான நபர்களை வளர்த்து விட்டுவிடுவீர்கள். ஏனெனில் அவர்கள் சபையில் பிரசங்கித்த உடனேயே சிலர் விபரம் தெரியாமல் அவர்களைப் பாராட்டுவார்கள், உடனே அவர்களுடைய ஆர்வம் அதிகமாகிவிடும். வாலிபர்களிடம் அந்த ஆர்வம் அதிகமாகக் காணப்படும். அப்படிச் செய்வதால் பிரசங்கிப்பவர்களுக்கும் ஆபத்து, அதைக் கேட்கும் ஆத்துமாக்களுக்கும் ஆபத்தாக முடியும். ஆகவே அவர்களை முதலாவது படிக்க வைக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்களை ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவர வேண்டும். அவர்களை ஒழுங்காகப் படிக்க வைத்துப் பயிற்சியளிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வேத அறிவில் வளருவார்கள். அவ்வாறு இல்லையெனில் அவர்களைப் பிரசங்கிக்க விடக்கூடாது.
- வேதம் விளக்குகின்ற இறையியல் கல்வியைப் பெற்றிருக்க வேண்டும்.
இன்றைக்கு இறையியல் என்றால் அநேக சபைகள் ஏதோ கெட்ட வார்த்தையைக் கேட்டதுபோல் நடந்துகொள்கிறார்கள். அதைப் பெற்றுக்கொள்ளும் இயலாமை இருப்பதால் அதைத் தள்ளிவைத்து விடுகிறார்கள். அநேக இடங்களில் தலைப்பின் அடிப்படையில் பிரசங்கம் செய்வதற்கும், ஊக்குவிப்புப் பிரசங்கம் செய்வதற்கும், உலகத்தைப் பற்றிப் பேசுவதற்கும், சமுதாய சீர்திருத்தம் பற்றிப் பேசுவதற்கும் காரணம் வேத இறையியல் தெரியாமல் இருப்பதுதான். வேதத்தில் இறையியல் ஏராளமாக இருக்கிறது; அதில் அது நிறைந்து காணப்படுகிறது. ஆங்கிலத்தில் அது Theology என்று அழைக்கப்படுகிறது. அதற்குப் பொருள் என்னவெனில் கடவுளைப் பற்றிய போதனைகள் (The study of God). இறையியல் கட்டாயம் அவசியம். அதை அடைய நல்ல தரமான புத்தகங்களை வாங்கி வாசிக்க வேண்டும். உதாரணத்திற்கு நாம் தமிழில் வெளியிட்டுள்ள இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கை வாங்கி வாசிக்கலாம். அந்த புத்தகத்தில் இரட்சிப்பைக் குறித்த அனைத்துப் போதனைகளும் படிமுறையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு என்கிற தலைப்பில் ஆரம்பித்து மகிமையில் சென்று முடிகிறவரை ஒவ்வொன்றையுங் குறித்துத் தெளிவாக விளக்கப்பட்டுள்ள நூலது. மறுபிறப்பு, பரிசுத்தமாகுதல், நீதிமானாக்கப்படுதல், மகவேற்பு என அனைத்தையும் தெளிவாக அறிந்துகொள்ள இதுபோன்ற இறையியல் நூல்களை வாங்கி வாசிக்க வேண்டும். இவையெல்லாம் வேதப்பிரசங்கத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய போதனைகளாகும். பவுல் தன் நிருபங்களில் இறையியலைக் கையாண்டுள்ளார். ஆகவே இறையியலைப் படித்துக் கற்றுக்கொள்ளாவிட்டால் நாம் பிரசங்கங்களில் இறையியலற்ற வெறும் ஊக்குவிப்பு செய்திகளையும், வாக்குத்தத்தங்களையும் மட்டுமே கொடுத்துக்கொண்டிருப்போம்.
இன்று பழைய ஏற்பாட்டில் மறுபிறப்பு இல்லையென்று பிரசங்கம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். சுவிசேஷக் கூட்டங்களில் மறுபிறப்பைக் குறித்துப் பேசுகிறவர்களையே காணமுடிவதில்லை. அதேபோன்று மனந்திரும்புதலைப் பற்றியும் அவர்கள் போதிப்பதில்லை. இந்த வாரம் நான் கொடுத்த பிரசங்கத்தால் சிலர் பாதிக்கப்பட்டு சில நாட்களாகவே அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர், உங்கள் தைரியத்தைப் பாராட்டுகிறேன் என்றார். இன்று நியாயத்தீர்ப்பைப் பற்றியும், நரகத்தைப் பற்றியும் எவரும் எச்சரிக்கை செய்வதில்லை, நீங்கள் தைரியமாக அதைச் செய்தீர்கள் என்றார். அதற்கு நான் அது பற்றி வசனத்தில் காணப்பட்டால் பிரசங்கித்துத்தானே ஆகவேண்டும் என்று பதிலளித்தேன். அவை பற்றிய இறையியல் உண்மைகள் தெரியாமல் அந்தப் பிரசங்கத்தை நான் அளித்திருக்க முடியாது.
ஆகவே இறையியலைக் கற்றுக்கொள்ள வேண்டும். அது மிகவும் அவசியம். நாம் சமீபத்தில் வெளியிட்டுள்ள பியூரிட்டன்களின் பார்வையில் மனந்திரும்புதல், பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் போன்ற புத்தகங்கள் மிகவும் அவசியமான இறையியல் நூல்கள் ஆகும். அவற்றை வாங்கி வாசித்து அவற்றிலுள்ள சத்தியங்களை அறிந்து கொள்ளுங்கள். திரித்துவத்தை நாம் புதிய ஏற்பாட்டில் மட்டுமல்லாது பழைய ஏற்பாட்டிலும் பார்க்கிறோம். இந்நூல்களை முறைப்படுத்தப்பட்ட இறையியல் போதனைகள் என்று சொல்லலாம். அவை நமக்கு மிகவும் அவசியமானவை. வேதத்தில் காணப்படும் ஒவ்வொரு இறையியல் போதனையைப் பற்றியும் நாம் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல் என இரட்சிப்பைக் குறித்த ஒவ்வொரு சத்தியத்தையும் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல் நாம் வேதத்தில் ஒரு வசனத்தையும் கையாள முடியாது. நாம் சரியாக முறைப்படுத்தப்பட்ட இறையியலைக் கற்றுக்கொள்ளாவிட்டால் இரட்சிப்பைப் பற்றிப் பொதுவாக விளக்குவோமே தவிர நாம் சொல்வதில் எந்தப் பொருளும் இருக்காது. மீட்பைக் குறித்த உண்மைகளைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். மீட்பிற்காக இயேசு செய்திருக்கிற பணிகள் என்ன, அவருடைய பணியின் மகத்துவங்கள் என்ன என்பதைக் குறித்த சத்தியங்களை அறிந்துகொள்ள வேண்டும். இதற்கு 1689 விசுவாச அறிக்கை நமக்கு மிகவும் உதவி செய்கிறது. அதிலுள்ள 32 அதிகாரங்களையும் திரும்பத் திரும்ப வாசித்து, ஆராய்ந்து படிக்க வேண்டும். அதைத் தமிழில் நாம் வெளியிட்டுள்ளோம். அதனை இன்னும் விரிவாகவும் கற்றுக்கொள்ளலாம். ஆகவே இறையியல் போதனைகள் நமக்கு மிகவும் அவசியம். இறையியல் தெரியாமல் ஒரு பிரசங்கி பிரசங்கம் செய்ய முடியாது. இதற்காக நேரமும் உழைப்பும் கட்டாயம் தேவை. ஒன்றை மட்டும் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், ஒருவன் ஊழியத்திற்காக அழைக்கப்பட்டிருந்தால் இவற்றை ஆர்வத்தோடு கட்டாயம் கற்றுக் கொள்வான். மேலும் ஒருவர் மெய்யாகவே அழைப்பட்டிருக்கிறாரா என்பதை அறிந்து கொள்ளவும் இது உதவும். யாருக்கு சத்தியத்தில் வளரவும், புத்தகங்களை வாங்கிப் படிக்கவும், உழைக்கவும் மனதில்லையோ அவர்கள் நிச்சயம் ஆண்டவரால் அழைக்கப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை வருமுன் சனிக்கிழமையில் ஒரு ஒருமணிநேரம் மட்டும் எதையாவது துழாவி விட்டு பிரசங்கத்தில் சாட்சி சொல்லிச் சமாளித்துவிட்டு வந்துவிடலாம் என்கிற எண்ணம் ஒருவருக்கிருந்தால் அதற்கெல்லாம் ஒரே காரணம், அவர் ஆண்டவரால் பிரசங்கப் பணிக்கு அழைக்கப்படவேயில்லை. இப்போது எனக்கு உடல்நிலை சரியாக இல்லை, இருந்தபோதும் ஒருநாளைக்கு மூன்று புத்தகங்களை ஒரே நேரத்தில் வாசித்துக்கொண்டு வருகிறேன். ஒரே புத்தகத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது சலிப்பு ஏற்படலாம், ஆகவே மூன்று புத்தகங்களையும் மாறி மாறி வாசித்து வருகிறேன். என்னுடைய படிப்பு மேஜையின் மீது வாசித்து முடிக்க வேண்டிய புத்தங்களை அடுக்கி வைத்துள்ளேன். மேலும் அதிலிருந்து குறிப்புகளை எடுத்துக் கொள்கிறேன். யாரோ எனக்குப் பின்னால் இருந்து இதையெல்லாம் செய்கிறேனா, என்று கவனிப்பதற்கு யாருமில்லை. ஆனாலும் அத்தகைய ஆர்வமும், உழைப்பும் எங்கிருந்து வருகின்றன? கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் ஒரு பிரசங்கிக்கு அடிப்படையிலேயே இருக்க வேண்டும். மெய்ப் பிரசங்கி இறப்பதற்கு முன்பு வரை கற்றுக்கொள்வான். தெரிந்திருக்கும் விஷயத்தையே இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளப் பார்ப்பான். அது அழைப்பு இருந்தால் மட்டுமே வரும். அழைப்பு இல்லாமல் அதை நினைத்தும் பார்க்க முடியாது. அதை யாரும் ஒருவனில் திணிக்கவும் முடியாது. அது ஆண்டவரிடத்தில் இருந்து வந்தாக வேண்டும்.
நாம் இந்த ஊழியத்திற்கு அழைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் கணக்குக் கொடுத்து வாழவேண்டும். எந்தவிதமாக நாம் பிரசங்கம் செய்து ஆத்துமாக்களை வளர்த்திருக்கிறோம் என்பதைப்பற்றியெல்லாம் கணக்கு கொடுக்க வேண்டும். உணவு தாயாரிப்பதற்கு ஒரு முறை இருப்பதுபோல, வாசிப்பு மூலம் நம்மை நாம் தாயாரித்துக்கொள்கிறோம். சத்தியங்களை வாசித்து, அவற்றைக்குறித்து குறிப்பு எடுப்பதன் மூலம் இன்னும் நாம் நம்மை வளர்த்துக்கொள்கிறோம். அதன் மூலமாகத்தான் பங்கு பங்காகவும் வகை வகையாகவும் ஆத்துமாக்களுக்குப் போதிக்கப் போகிறோம். உண்மையாகவே அழைப்பு இருந்தால் நமக்குக் கிடைக்கின்ற நேரத்தையெல்லாம் கவனமாகப் பயன்படுத்திக் கற்றுக்கொள்ளப் பார்ப்போம். எங்கிருந்தாலும் நல்ல புத்தகங்களைத் தேடி வாங்கி வாசிக்க வேண்டும் என்கிற இருதயம் நமக்கிருக்கும். எந்தப் பிரசங்கி இறையியலை அலட்சியம் செய்கிறாரோ அவருடைய பிரசங்கத்தில் எதுவும் இருக்காது. திரும்பத் திரும்ப ஒரே காரியத்தைத்தான் அவரால் சொல்ல முடியும்; கேட்பதற்கும் அது சுவையாக இருக்காது, சிந்திப்பதற்கு அதில் விஷயம் இருக்காது, கற்றுக்கொள்ள ஒன்றுமே இருக்காது. அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? ஆத்துமாக்கள் எப்படி இரட்சிக்கப்பட முடியும்? நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், மகிமையடைதல் போன்ற விஷயங்களை அவர்கள் மேலோட்டமாக மேய்ந்துவிட்டுப் போவார்களே தவிர பிரசங்கத்தில் தெளிவான போதனைகளோ, விளக்கமோ இருக்காது. வெறுமனே அந்த வார்த்தைகளைத் தெரிந்து வைத்திருப்பதினால் என்ன பயனிருக்கிறது? அதற்கான அர்த்தங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றைக் கோர்வையாக விளக்கிச் சொல்லுவதற்கான திறமையைப் பெற்றுக்கொள்ள ஆழமாகப் படிக்க வேண்டும்.
ஆங்கில நூல்களை வாசிக்க இயலாதவர்களுக்குத் துணை செய்வதற்காக தமிழில் திருமறைத்தீபம் நூலை எட்டுப் பாகங்களாக வெளியிட்டுள்ளோம். அவற்றை வாங்கிக் கடினமாக உழைத்து வாசியுங்கள். இறையியல் சத்தியங்கள் அனைத்தும் அதில் அடங்கியிருக்கின்றன. ஆங்கிலம் தெரியாத தமிழ் போதகர்களுக்குத் தேவையான அனைத்துச் சத்தியங்களும் அந்தத் தொகுதிகளில் காணப்படுகின்றன. அத்தொகுதிகள் ஒரு முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலகம். நமக்கு அனைத்து இறையியல் போதனைகளும் தெரிந்திருக்க வேண்டும். அவையெல்லாம் தெரிந்திருந்தால் மட்டுமே எந்த வசனத்தை எடுத்தாலும் அந்த வசனத்திற்கு விளக்கம் கொடுக்க முடியும். ஒவ்வொரு வசனத்தையும் அழகாக விளக்க இந்த சத்தியங்களெல்லாம் தேவை. ஊழியத்திற்கு வருகிறவன் வாழ்நாள் முழுவதும் சத்தியங்களைக் கற்றுக்கொள்ளவே வாஞ்சையாக இருப்பான். பிரசங்கம் தயாரிப்பதற்கு மட்டும் படிப்பவர் பிரசங்கியாகவே இருக்க முடியாது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வருடமும் என்ன வாசித்து இருக்கிறோம்? வாசித்ததில் எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
என்னுடைய நூலகத்தில் அநேக புத்தங்கள் இருக்கின்றன. அனைத்தும் இன்றியமையாதவைகளாகவே உள்ளன. தேவையில்லாத புத்தகங்களை நான் வாங்கி வைப்பது கிடையாது. இருந்தபோதும் இன்னும் படிப்பதற்குத் தேவையான புத்தகங்களை செலவழித்து வாங்கியுள்ளேன். அது அவசியமானதொன்றாக இருக்கிறது. காரணம் புதிய அணுகுமுறைகளைக் கற்றுக்கொள்ளலாம், அநேக சத்தியங்களை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ளலாம். துல்லியமாகச் சத்தியங்களில் தேர்ச்சி அடைய வாசிக்கும் பழக்கம் இருந்தால் மட்டுமே முடியும். இறையியல் தெரியாமல் பிரசங்கித்தால் எப்படி இருக்கும்? சரியான மற்றும் தேவையான பொருட்களைக் கொண்டு தயாரிக்காத உணவு போலவே பிரசங்கம் இருக்கும். உணவில் தேவையான அனைத்துப் பொருட்களும் சரியான அளவைக் கொண்டு தயாரிக்க வேண்டும். அப்பொழுதுதான் அது சாப்பிடுவதற்குச் சுவையாக இருக்கும். அது போலவே வேதப்பிரசங்கம் காணப்பட வேண்டும். அனைத்தையும் கற்றறிந்து பிரசங்கிக்க வேண்டும்.
- வேத விளக்க விதிகளை அறிந்திருக்க வேண்டும்.
வேதமானது வேத விளக்க விதிகளைத் தனக்குள்ளாகவே கொண்டிருக்கிறது. அநேக பிரசங்கிகளுக்கு அந்த விதிகள் தெரிவதில்லை. சற்று தெரிந்திருப்பவர்களும் அவற்றை உதாசீனம் செய்து விடுகிறார்கள். இதனை ஆங்கிலத்தில் Principles of Interpretation என்று அழைக்கிறார்கள். A.W. பிங்க் ஆங்கிலத்தில் இதற்கென ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அது வாசிப்பதற்கு இலகுவாக இருக்கும். அந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு விதிகளையும் விளக்கமாக எழுதியிருக்கிறார். திருமறைத்தீபத்தில் அதை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறோம்.
வேதத்தில் ஒரு வசனத்தை விளங்கிக்கொள்ள அதற்கென விதிகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகளை அறிந்திருக்கும்போது மட்டுமே அந்த விதிகளைப் பயன்படுத்தி வசனங்களுக்கான சரியான அர்த்தத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக ஒரு சங்கீதத்தை எடுத்துக் கொள்வோம். முதலில் அந்தச் சங்கீதம் எந்த இலக்கிய வகையைச் சார்ந்தது என்று ஒரு நன்கு கற்றறிந்த பிரசங்கி மட்டுமே ஆராய்வார். ஏனென்றால் சங்கீதம் வரலாறு அல்ல. ஆதியாகமம் ஒரு வரலாற்று நூல். ஆனால் சங்கீதம் பாடல் புத்தகம். வரலாறு என்பது நடந்த காரியத்தை விவரிப்பது. படைப்பைப பற்றி வாசிக்கின்றபோது நடந்த நிகழ்வை அது அப்படியே விபரிக்கின்றதைக் கவனிக்கிறோம். அதைச் சந்தேகிக்கவேண்டிய அவசியமில்லை. ஆண்டவரே அதை விளக்கியிருக்கிறார். ஆனால் சங்கீதம் என்பது ஒரு பாடல். இது இன்னொரு இலக்கிய வகையைச் சார்ந்தது; வித்தியாசமானது. சங்கீதம் பாடல் வகையைச் சார்ந்ததால் அதற்கென்று இலக்கணம் இருக்கிறது. அது இராகத்தோடு பாடக்கூடியதாக இருக்கும். ஒவ்வொரு வரியும் மற்றொன்றோடு பொருந்தி வருகிறதாக இருக்கும். முதல் வரியில் வந்த வார்த்தைகளே இரண்டாவது வரியிலும் திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கும். வேத விளக்க விதிமுறைகள் தான் அதைப் புரிந்துகொள்ள உதவும். ஒரு நூல் வரலாற்று இலக்கியமா, பாடல் இலக்கியமா, அடையாளமொழி வகையைச் சார்ந்ததா, உவமையா, உரைநடைப் பகுதியா என்பதை எல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்தப் பகுதிகளுக்கெல்லாம் சில இலக்கணங்கள் இருக்கின்றன. அந்த இலக்கணங்களைப் புரிந்துகொள்ள வேத விளக்க விதிகள் மட்டுமே பயன்படுகிறது. வேத விளக்க விதிகளை அறிந்து பயன்படுத்தும்போது பிரசங்கத்தில் அநேக ஆபத்துகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
சங்கீதங்கள் பாடலாக இருப்பதால், முதலாவது சொன்னதை இரண்டாவது இன்னொருவிதத்தில் விபரிக்கிறது என்பதை அறியாமல், அது இரண்டு விஷயங்களைச் சொல்லுகிறது என்று வேத விளக்க விதிகளை அறிந்திருக்காத ஒருவர் தவறாக விளக்கம் கொடுத்துவிடுவார். அது முற்றிலும் தவறானது. ஒரு உவமையை எடுத்துக்கொண்டால், அது ஒரு கதையின் மூலம் சத்தியத்தை விளக்கக்கூடியதாக இருக்கிறது. வேதவிளக்க விதியை அறிந்திராத ஒருவர் உவமையை எப்படி விளக்குவதென்று தெரியாமல் அந்தக் கதையை உண்மையென நினைத்து விளக்க ஆரம்பித்து விடுவார். உவமை என்பது ஒரு கதை. கதையின் மூலமாக சொல்லப்படுகின்ற சத்தியத்திற்கு மட்டுமே விளக்கம் கொடுக்கவேண்டுமே தவிர அந்தக் கதையில் வருகிற எல்லாப் பகுதிகளுக்கும் விளக்கம் கொடுக்க கூடாது என்று வேத விளக்கவிதிகள் கூறுகின்றன. ஆகவே வேத விளக்க விதிகள் தெரியாமல் வசனங்களைப் புரிந்துகொள்வது கடினம். தமிழில் வில்பிரட் கர்ட் என்பவர் எழுதிய திருமறையை விளக்கும் முறை என்ற நூல் மிகவும் எளிமையாகவும் சுருக்கமாகவும் காணப்படுகின்றது. இன்றைக்கும் அச்சில் இருக்கிறதா, என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் இத்தகைய அநேக புத்தகங்கள் இருக்கின்றன.
வேத விளக்க விதிமுறைகளில் ஒன்று, ஒரு வசனத்தை எடுக்கும்போது அந்த வசனத்தில் எந்த சத்தியமுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்கிறோமா, உண்மையிலே அதை நாம் சரியாகத்தான் புரிந்துகொண்டுள்ளோமா என்பதை அறிய, வேதம் முழுவதும் ஏனைய பகுதிகளில் அதுபற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை வைத்துத்தான் அதை நாம் தீர்மானிக்க வேண்டும். முழு வேதத்தின் பல பகுதிகள் அதோடு ஒத்துப்போனால் அது சரியானது. மாறாக ஒத்துப்போகவில்லை என்றால் நாம் படித்துப் புரிந்திருப்பது தவறு என்கிற முடிவுக்கு வரவேண்டும். ஏனென்றால் வேதம் பொய் சொல்லாது. பவுல் சொன்னதை பேதுருவும், அதுபோல யோவானும், இயேசுவும் ஒப்புக்கொள்ளவேண்டும். நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறபோது நீதிபதி என்ன கேட்பார், சாட்சி யாரென விசாரிப்பார். முதல் சாட்சி, இரண்டாம் சாட்சி, மூன்றாம் சாட்சி என விசாரிப்பார். மூன்று பேரும் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக சாட்சி சொன்னால் நீதிபதிக்குத் தெரியும் என்ன தீர்ப்பு கொடுக்கவேண்டும் என்று. அல்லது மூவரும் ஒரேமாதிரி சொன்னால் அந்த வழக்கு வெற்றியாக முடியும். அதுபோலவே வேதமும். பவுல் சொன்னதையே பேதுருவும், யோவானும், இயேசுவும் சொன்னால் பவுல் சொன்னது சரியாக இருக்கும். வேத விளக்க விதிகள் நாம் தவறு செய்வதிலிருந்து நம்மைக் காப்பது மட்டுமல்ல, வேத சத்தியத்தைத் தெளிவாக விளங்கிக்கொள்ளவும் உதவி செய்கின்றன. இப்போது நான் விளக்கியது ஒரு விதியைத்தான். இதுபோன்று அநேக விதிகள் உள்ளன. ஆகவே வேத விளக்க விதிமுறை புத்தகங்களை வாங்கிப் படித்து வேதத்தை எப்படி விளக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அது மிகவும் அவசியமானது.
இதுவரை நாம் கவனித்திருக்கும் முதல் மூன்று குறிப்புகளும் பிரசங்கிகளுக்கு அடிப்படையாக நான் சொல்ல விரும்பிய ஆலோசனைகளாகும். அடுத்து வரும் நான்கு முதல் பத்துவரையுமுள்ள குறிப்புகள் ஒரு பிரசங்கத்தை நாம் எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பதைப் பற்றியது.
- பிரசங்கம் தயாரிக்கின்ற போது ஜெபம் மிக அவசியம்.
பிரசங்கம் தயாரிக்கின்றபோது ஆரம்பம் முதல் பிரசங்கத்தைச் செய்து முடிக்கிறவரை ஜெப நிலையில் இருக்கவேண்டும். ஏனென்றால் இதற்கு ஆண்டவருடைய உதவி மிகவும் அவசியமானது. ஜெபம் செய்யாமல் இதை நாம் சரியானவிதத்தில் செய்து முடிக்க முடியாது. படிக்கிற போதும் ஜெபம் பண்ண வேண்டும், தயாரிக்கிற போதும் ஜெபம் பண்ணவேண்டும், தயாரித்த பின்பு மனதில் நிறுத்திக்கொள்ளவும் ஜெபம் பண்ணவேண்டும், பிரசங்க மேடையில் நிற்கிற போதும் ஜெப நிலையில் தொடர்ந்து பிரசங்கம் பண்ணவேண்டும், முடிந்த பிறகும் ஜெபிக்க வேண்டும். ஜெபம் மிகவும் அவசியம். அதன் மூலம் நாம் ஆவியானவரின் துணையை நாடுகிறோம். நாம் உழைக்காமல் ஆவியானவர் நமக்கு உதவி செய்யமாட்டார். பிரசங்கம் தயாரிக்கிற அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவர் துணை செய்கின்றார். வண்டி ஓடுகிற போது அச்சாணி மாதிரியிருந்து இந்தப் பிரசங்க ஊழியத்தில் அவர் நமக்கு உதவி செய்கிறார்.
- வேத வசன உட்பொருள் விளக்கப் பயிற்சி.
இதனை ஆங்கிலத்தில் Exegesis என்று அழைப்பார்கள். ஒரு வசனத்தையோ அல்லது வசனப் பகுதிகளையோ எடுத்து அந்தப் பகுதியில் இருக்கிற வார்த்தைகளுக்கும் ஏனைய வார்த்தைகளுக்கும் உள்ள இலக்கண பூர்வமான தொடர்பு என்ன? அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிற விதம் எப்படிப்பட்டது? அந்த வார்த்தைகள் ஏனைய பகுதிகளில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன? வேதத்திற்கு வெளியில் (Secular field) அந்த வார்த்தை எப்படியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது? வேதத்தை எழுதியவரை வைத்து ஆவியானவர் அந்த வசனப்பகுதிகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்? அவற்றிற்கான இலக்கணபூர்வமான அர்த்தம் என்ன? வேதத்தின் அர்த்தம் என்ன? என்பதையெல்லாம் வைத்து அந்த வசனப்பகுதிகளைச் சரியான விதத்தில் புரிந்துகொள்ளச் செய்யும் பயிற்சிதான் வேத வசன உட்பொருள் விளக்கப் பயிற்சி. இதற்கு உதாரணமாகத் தமிழ் வேதத்தை எடுத்துக்கொண்டால் தமிழ் இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் வேதம் (பழைய திருப்புதல்) அநேக இடங்களில் சொதப்பலான மொழிபெயர்ப்பைக் கொண்டுள்ளது. ஏனென்றால் தமிழ் மொழி வித்தியாசமான மொழி. மூல மொழியான கிரேக்க எபிரேய மொழிகளிலிருந்து தமிழ் வேதம் மொழிப்பெயர்க்கப்படவில்லை. ஜேம்ஸ் அரசன் (1611) ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே அது சார்ந்திருக்கிறது. அநேக இடங்களில் அதில் மூல மொழிகளில் காணப்படும் அழுத்தங்கள் சரிவர மொழிபெயர்க்கப்படவில்லை. ஒரு காற்புள்ளியையோ அல்லது அரைப்புள்ளியையோ தவறாகப் பயன்படுத்தினால் அதன் அர்த்தமே மாறித் தவறான பொருளைக் கொடுத்துவிடும். ஆகவே தமிழ் வேதத்தைப் புரிந்துகொள்ள நல்ல ஆங்கில வேத நூலைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக ஒருவர் என்னிடத்தில் தமிழ் வேதத்தில் காணப்படும் ஒரு கடுந்தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் கேட்டார். அதை ஆங்கில வேதத்தில் பார்த்துதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு அர்த்தம், வெட்கமில்லாமல் என்பதாகும். வார்த்தைகளைப் புரிந்துகொள்ள நல்ல ஆங்கில வேதாகமத்தை பயன்படுத்துவது நல்லது. ஆகவே தமிழ் வேதத்தைப் பயன்படுத்திப் பிரசங்கம் செய்கிறவர்கள் அதில் மட்டும் தங்கியிருக்காதீர்கள், அது உங்களுக்கு முழுமையாக உதவாது.
நீங்கள் நல்ல ஆங்கில வேதத்தைப் பயன்படுத்த வேண்டும். அது ஏன் அவசியமென்றால் வேத உட்பொருள் விளக்கப் பயிற்சிக்கு அது மிகவும் உதவி செய்யும். வார்த்தைகளின் அர்த்தத்தை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எந்தவொரு வார்த்தையையும் ஊகம் பண்ணக்கூடாது. ஊகம் செய்வது தவறு. நம்முடைய மனம் என்ன சிந்திக்கிறதோ அதையே நாம் சரியென்று நினைத்துக்கொள்ளுவதே ஊகத்திற்குக் காரணம். வேத உட்பொருள் விளக்கப் பயிற்சி மிகவும் அவசியமானது. அதை நாம் பயன்படுத்தவில்லை என்றால் நமக்குதான் ஆபத்து. அதைத் தவிர வசனங்களை விளங்கிக்கொள்ள வேறு வழியே இல்லை. அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். மூல மொழியை ஆராய்ந்து வசனங்களின் அர்த்தங்களைப் புரிந்துகொள்வதற்கு வேத உட்பொருள் விளக்கத்தின் மூலம் முயற்சி செய்கிறோம். மூல மொழியே தெரியாத பட்சத்தில் ஆங்கில வேதாகமம் நமக்கு உதவும். மேலும் அதற்கு வேத அகராதி உதவும், ஒத்த வாக்கிய அகராதி உதவும். இவையெல்லாம் வேத உட்பொருள் பயிற்சிக்கு மிகவும் அவசியமானவை. ஒரு வேதபாடம் எடுத்தாலோ அல்லது பிரசங்கம் செய்தாலோ இது இல்லாமல் அவற்றைச் சரியாகச் செய்ய முடியாது. இது இல்லாமல் வேத வார்த்தையின் சரியான அர்த்தத்தைப் பெற்றுக்கொள்ள வேறுவழியே இல்லை. இதை உதாசீனப்படுத்தக்கூடாது.
- முழுப் பிரசங்கத்தையும் எழுத வேண்டும்.
நாம் இதற்கு முன்பு பார்த்த குறிப்புகள் வரைக்கும் சரியாக செய்து முடித்து விட்டால், அடுத்ததாக நாம் எடுத்திருக்கிற குறிப்புகளை வைத்து முழு செய்தியையும் எழுதி முடிக்க வேண்டும். அது ஒரு நல்ல பயிற்சி. நம்மினத்துப் பிரசங்கிகளுக்கு அது ஒரு கௌரவக் குறைச்சலாக இருக்கிறது. அதை எழுதி வைத்து, பேப்பர்களை வைத்துப் பிரசங்கித்தால் மதிப்பு குறைவாக எண்ணுகிறார்கள். எதுவுமில்லாமல் பிரசங்கித்தால் அதில் ஏதோ அதிக விசேஷமிருப்பதாக எண்ணுகிறார்கள். அது தவறு. குறிப்புகளெதுவும் இல்லாமல் பிரசங்கித்தால் உளறல் மட்டுமே வரும். நாம் அனைவரும் பெரிய பிரசங்கிகளோ, பரிசுத்தவான்களோ, ஞானிகளோ அல்ல, சாதாரண மனிதர்கள். ஜோன் கல்வின் போன்றோர் ஒவ்வொன்றையும் குழப்பமில்லாமல் சொல்லக்கூடிய அதீத ஞானத்தை ஆண்டவரிடத்தில் இருந்து பெற்றிருந்தார்கள். நாம் அவ்வாறு ஆசீர்வதிக்கப்படவில்லை. ஆகவே நாம் நிச்சயமாக முழுவதையும் எழுதி வைக்கவேண்டும். அது நமக்கு மிகவும் அவசியமானது. எவ்வளவு பெரிய பிரசங்கியும் அவ்வாறு எழுதி வைத்திருப்பார். சில நேரங்களில் அனுபவ முதிர்ச்சியின் காரணமாக அநேக பிரசங்கங்களைச் செய்து வளர்ந்திருப்பவர்கள், ஆரம்பத்தில் செய்ததைப்போல அநேக பக்கங்களை வைத்திருப்பதைவிட பின்னால் பக்கங்களைக் குறைத்திருக்கலாம். ஆனால் பிரசங்கக் குறிப்புகளை அவர்கள் எழுதிக் கையில் வைத்திராமல் இருக்கமாட்டார்கள்.
நாம் வாகனத்தில் ஒரு பயணம் மேற்கொள்ளும்போது போகவேண்டிய இடத்தைச் சரியாகச் சென்றடைவதற்குத் தேவையான கருவிகளைப் பயன்படுத்திப் பிரயாணம் செய்கிறோம். நாம் போய்ச் சேரக்கூடிய இடம் தெரியவில்லையெனில் பாதை மாறி எங்கோ சென்று கொண்டிருப்போம். அதுபோலவே பிரசங்கமும். ஒரு வரைமுறை இல்லையென்றால் பிரசங்கம் எங்கோ போய்க்கொண்டிருக்கும். நாம் பேசுகிற செய்திக்கு கோர்வையான ஆரம்பமும் முடிவும் மிக அவசியம். ஆகவே எழுதி வைப்பது மிகவும் அவசியம். நாம் எழுதி வைத்திருக்கும்போது நமக்கொரு தெளிவு கிடைக்கும். நாம் எழுதி வைத்திருந்தால் நாம் சொல்லவேண்டிய பொருளுக்கு நமக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதையும், தேவையான வசனங்களை எப்படிப் பயன்படுத்துவது என எல்லாவற்றையும் அறிந்திருப்போம். அப்படிச் செய்யும்பொழுது பிரசங்கமானது படிப்படியாக சரியான விதத்தில் பயணிக்கும். நாம் பிரசங்கம் செய்கிறபோது நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற நேரத்தில், அது ஒரு மணி நேரமோ அல்லது நாற்பது நிமிடங்களோ என்றால் அந்நேர அளவிற்குள் குறிப்புகளை எழுதி வைத்திருந்தால் மட்டுமே எல்லாவற்றையும் சரியாக சொல்லி முடிக்க முடியும். அப்படிச் செய்யாவிட்டால் அநேக காரியங்களை விட்டுவிடுவோம் அல்லது நம் பிரசங்கத் தயாரிப்பின்போது இருந்திருக்காத விஷயங்களையெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிடுவோம். இதுபோன்ற அநேக சிக்கல்களைச் சந்திப்போம். தயாரிப்பு இல்லாமல் பிரசங்கம் என்பது கிடையாது. ஆகவே எழுதிப் பிரசங்கம் செய்வது நல்லது, அது நல்ல ஒழுக்கமும் கூட. அவ்வாறு செய்யும்பொழுது நம்மை நாமே சரிசெய்து கொள்ளலாம். ஏனென்றால் தேவையில்லாமல் ஏதாவது பேசுகிறோமா என்பதை அறிந்துகொள்ளலாம், அடுத்த செய்தியைக் கொடுக்கின்ற நேரம் நம் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம். மேலும் நாம் எதுவும் உளறவில்லை என்கிற நிச்சயத்தை அது நமக்குக் கொடுக்கும். எழுதியதைப் பாதுகாத்து வைத்திருந்தால் மீண்டும் ஒருமுறை தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் அதில் தேவையான திருத்தங்களைச் செய்யலாம். ஆகவே தெளிவாக பிரசங்கத்தை எழுதிக்கொள்வது நல்லது.
- பிரசங்கத்தின் பயன்பாடுகளைத் தயாரிக்க வேண்டும்.
எல்லாப் பிரசங்கங்களிலும் அதற்கொரு முன்னுரை இருக்கும். முன்னுரை என்பது நாம் பிரசங்கத்தில் என்ன சொல்லப்போகிறோம் என்பதைக் குறித்த சுருக்கமான உரை. மூன்று நான்கு தலைப்புகளை வைத்துப் பிரசங்கம் தயாரித்திருந்தால் அந்தப் பகுதிக்குப் பெயர் விரிவாக்கம் (Explanation). நாம் எடுத்துக்கொண்ட வசனப் பகுதிளை அதன் மூலம் விளக்குகிறோம். அதை ஒரு உவமையிலிருந்து எடுத்தாலும் சரி, வரலாற்றுப் பகுதியிலிருந்து எடுத்தாலும் சரி, உரைநடைப் பகுதியிலிருந்து எடுத்தாலும் சரி அதற்கு சரியான விளக்கத்தை அந்தப் பகுதியில் கொடுக்கிறோம். விளக்கத்தைக் கொடுத்து முடித்த பிறகு அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளுகிற பாடம் என்ன? பயன்பாடுகள் என்ன? கேட்கின்ற ஆத்துமாக்கள் அதிலிருந்து அறிந்துகொள்ளவேண்டிய, செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதைப் பற்றிச் சொல்வதுதான் பயன்பாடுகள். அந்தப் பயன்பாடுகள் எப்போதும் நாம் விளக்கிய வேதப்பகுதியில் இருந்துதான் கொடுக்கவேண்டுமேயன்றி அதற்கு வெளியிலிருந்து கொடுக்கக் கூடாது. நாம் வேத உட்பொருள் விளக்கங்களையெல்லாம் பயன்படுத்திப் பிரசங்கம் தயாரிக்கிறபோது பயன்பாடுகளைக் கண்டுகொள்வதற்கு ஆண்டவரே நமக்கு உதவி செய்வார். அவற்றை நாம் தனியாகக் குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்தப் பயன்பாடுகளைத்தான் தான் பிரசங்கத்தின் முடிவில் ஒன்று, இரண்டு, மூன்றாக சொல்லப்போகிறோம்.
பயன்பாடுகளை ஒரு கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாம் அல்லது அது ஒரு அறிக்கையாக (Statement) இருக்கலாம். பயன்பாடுகள் என்பது கேட்ட பிரசங்கத்தின் அடிப்படையில் ஆத்துமாக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குவதாகக் காணப்படும். பிரசங்கத்தின் ஒரு பகுதியாக பயன்பாடுகள் இருக்க வேண்டும். சமீபத்தில் நான் ஒரு பிரசங்கியின் செய்தி கேட்டேன், அவர், பயன்பாடுகள்தான் பிரசங்கம் என்றார். அது தவறு. பிரசங்கத்தில் வசனத்தை விளக்காமல் எவ்வாறு பயன்பாட்டிற்கு வரமுடியும்? வசனத்தை விளக்கிய பிறகு அதிலிருந்து பயன்பாடுகளைக் கொடுக்கும்போது மட்டுமே அவற்றைக் கேட்டு நடைமுறைப்படுத்துகிறவர்களுக்கு அது உண்மைதான் என்ற தைரியம் வரும். ஏனென்றால், ஏற்கனவே அந்தப் பகுதிகளை விளக்கியிருக்கிறோம். கொடுத்த விளக்கத்திலிருந்து வரவேண்டியது பயன்பாடு.
பயன்பாடுகளைக் கவனத்தோடு தயாரிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் அவற்றைப் பயன்படுத்தி ஆத்துமாக்களின் இருதயத்தில் பேசுகிறார். இதையெல்லாம் செய்ய ஒவ்வொன்றுக்கும் நேரம் தேவைப்படும், கடின உழைப்பும் தேவைப்படும். கொடுக்கப்பட்டிருக்கிற நேரத்தில் இவைகளையெல்லாம் செய்து முடிக்க நமக்கு உதவியாகவும் இருக்கும். இந்தப் பயன்பாட்டை எழுதப்பட்ட பிரசங்கத்தின் இறுதிப் பகுதியாக சேர்த்து எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
- தயாரித்த பிரசங்கத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
ஒருவேளை பிரசங்கத்தை வெள்ளிக்கிழமை எழுதி முடித்துவிட்டீர்கள், ஞாயிற்றுக்கிழமை காலையில் அதை பிரசங்கிக்க வேண்டுமெனில், அதற்கு முன்பாக அதை மீண்டும் வாசிக்க வேண்டும், படிக்க வேண்டும், திருத்தங்கள் தேவைப்பட்டால் அதையும் செய்துகொள்ள வேண்டும். அவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். பிரசங்கத்தாள்கள் உங்கள் முன்பாக இருந்தபோதும் உங்களுக்கு ஏற்கனவே அதிலிருப்பவைகள் தெரிந்திருக்க வேண்டும். நாம் ஏற்கனவே அதை வாசித்திருக்காவிட்டால், மனதில் நிறுத்திக்கொள்ளாவிட்டால் பிரசங்கிக்கும்போது நாம் தடுமாறுவோம். முழுப் பிரசங்கத்தையும் முழுமையாகப் படித்து, மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் இதைத்தான் பிரசங்கிக்கிறோம், சொல்கிறோம் என்று நமக்கு ஒரு தெளிவு இருக்கும். இருந்தாலும் அதைக் கேட்பவர்களுக்கு அந்தத் தெளிவு உள்ளதா என்பதே மிக முக்கியம். அநேக சமயங்களில் நமக்குத் தெளிவு இருந்தாலும் கேட்பவர்களுக்குத் அதில் தெளிவிருக்காது. கேட்கிற மக்களின் நிலையைப் பார்த்தால் அவர்கள் பலதரப்பட்ட சூழ்நிலைகளிலிருந்து வருகிறார்கள். அவர்கள் வறியவர்களாக, செல்வந்தர்களாக, வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவித்தவர்களாக இருப்பவர்கள்; அல்லது ஓரளவுக்குக் கஷ்டங்கள் இல்லாதவர்கள் என வேறுபாடான மனநிலையில், சூழ்நிலையில் இருந்து சபைக்கு வந்திருப்பார்கள். மேலும் சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் செய்திகள் தெளிவாகச் சென்றடைய வேண்டுமெனில் பிரசங்கத்தில் குழப்பங்களில்லாமல் தெளிவு இருக்கவேண்டும். சில நேரங்களில் பிரசங்கித்த செய்தி மக்களை எவ்வாறாக சென்றடைந்திருக்கிறது என்று நான் நினைப்பதுண்டு. அதை நான் அவர்கள் கேட்கிற கேள்வியிலிருந்து அறிந்துகொள்வேன்; அவர்களுக்குப் புரிந்திருக்கிறதா இல்லையா என்று. சில நேரங்களில் நானே கேட்டு அறிந்துகொள்வேன், காரணம் நாம் பிரசங்கித்த செய்தி அவர்களைத் தெளிவாகப் போய்ச் சேர்ந்திருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள அது அவசியம். தெளிவாக அவர்களைச் சென்றடையாத எதுவும் பயனற்றது. இவ்வாறாகப் பிரசங்கம் தயாரிக்கிறபோது மட்டுமே பிரசங்கமானது மக்களைத் தெளிவாகச் சென்றடையும்.
- தயாரித்த பிரசங்கத்தை ஜெபநிலையில் ஆவியானவரில் தங்கியிருந்து பிரசங்கிக்க வேண்டும்.
பிரசங்கம் தயாரிக்கிறபோதே நாம் ஜெபத்தில் ஆரம்பித்திருந்தாலும் பிரசங்க மேடையில் எவ்வித சுயநல எண்ணங்களும் இல்லாமல், ஆண்டவருடைய மகிமையை மட்டுமே முன்னிலையில் வைத்து, ஆவியானவரின் உதவியைக் கேட்டு ஜெபிக்கவேண்டும். ‘ஆண்டவரே நான் வெறும் கருவிதான், நீர் பயன்படுத்தாவிட்டால் எந்தவிதமான பிரயோஜனமும் இருக்காது. நான் மிகவும் பெலவீனமானவன், மனித பலவீனங்களை நினைத்துப் பார்க்கிறபோது என்னில் அவை நிறையவே இருக்கின்றன. என் பலவீனங்கள் பிரசங்கத்தில் வராதபடிக்கு, என்னுடைய சுய ஞானத்தைப் பயன்படுத்தாதபடி, தேவ பயத்தோடும், ஆவிக்குரிய நடுக்கத்தோடும், ஆத்துமாக்களின் இருதயத்தின் நன்மையை மட்டும் மனத்தில் வைத்துத் தயாரித்த பிரசங்கத்தைத் தெளிவாக அவர்களுடைய ஆத்தும விருத்திக்காக விளக்குவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள் ஆண்டவரே’ என்று ஜெபிக்க வேண்டும். ஏனென்றால் நாம் சாதாரண மனிதர்கள், குறைபாடுகள் உள்ளவர்கள். நம்முடைய ஞானத்தைச் சார்ந்து பிரசங்கிக்கத் தொடங்கிவிடக் கூடாது. அது மிகவும் ஆபத்தானது. அதனால் அழிந்துபோனவர்கள் பலர். நாம் அவ்வாறு செயல்படும்போது பரிசுத்த ஆவியானவர் நம்மைவிட்டுப் போய் விடுவார். ஆகவே நாம் ஜெபிக்க வேண்டும். அந்த வசனங்கள் வீணாய்ப் போய்விடாதபடிக்கு அவர்களுடைய இருதயத்தில் பதிய வைக்கும்படியாக ஜெபிக்க வேண்டும். அவர்களுடைய தேவைக்கேற்றபடி அவர்கள் பிரசங்கத்தைப் பயன்படுத்திக்கொள்ள உதவி செய்யுங்கள், எனக்கும் உதவி செய்யுங்கள் ஆண்டவரே என ஜெபித்து, ஜெபநிலையில் பிரசங்கிக்க வேண்டும்.
இந்தக் குறிப்புகளில் இல்லை என்றாலும் முக்கியமாக சொல்லவேண்டிய தொன்றுண்டு. பிரசங்கிக்கு நல்ல மொழிநடை அவசியம்: அநேக பிரசங்கிகள் பிரசங்கத்தில் பயன்படுத்துகிற மொழிநடை சரியாக இல்லை. நம் ஊர்களில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான பேச்சு வழக்கு காணப்படும். ஆகவே நாம் தெளிவாகப் பிரசங்கிக்கிற விதத்தில் ஒரு நல்ல பேச்சு நடையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நான் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன் வரையும் ஏழு வருடஙகளுக்குத் தமிழில் பிரசங்கம் செய்யவில்லை. ஆங்கிலத்தில் தான் செய்திகளைக் கொடுத்து வந்திருக்கிறேன். தமிழ்நாட்டிற்கு வந்து நான் தமிழில் செய்திகளைக் கொடுத்தபோது என் தமிழின் மொழிநடையில் காணப்பட்ட குறைபாடுகளை நான் கண்டறிந்தேன். ஆனால் நான் அதை அப்படியே விட்டுவிடவில்லை. தொடர்ந்து வாசிக்க ஆம்பித்து, பேசி, எனக்கென ஒரு பேச்சு நடையை உருவாக்கிக் கொண்டேன். ஆகவே நமக்கென்று ஒரு பேச்சு நடை அவசியம். எளிமையாகத் தெளிவாகத் தமிழில் விளக்கி மக்கள் அதைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள கூடிய பேச்சு நடை நமக்குத் தேவை.
மொழியை நாம் உதாசீனம் செய்யக் கூடாது. மொழியில் கவனம் செலுத்தாமல் இருந்தால் பொதுவெளியில் மொழியை நாம் தவறாகப் பயன்படுத்திவிடுவோம். அதற்கென தெய்வ பாஷை என்று போய்விடக்கூடாது; அப்படி எதுவும் கிடையாது. தமிழ் உலக மொழி. சிலர் பேசுகிறபோது தமிழ் எங்கேயோ போய்விடும். வெறும் தமிழ் வேதமொழிபெயர்ப்பில் காணப்படும் 19ம் நூற்றாண்டின் வார்த்தைகளாக, வசனங்களாகப் பயன்படுத்துவார்கள். அதையெல்லாம் நாம் செய்யக்கூடாது. வேதத்தின் தமிழ் தெய்வ பாஷை கிடையாது. நம் நாட்டிற்கு வந்த மிஷனரிகள் ஆங்காங்கு கேட்ட 19ம் நூற்றாண்டுப் பிராமணத் தமிழை வைத்து வேதத்தை மொழிப்பெயர்த்திருக்கிறார்கள். அந்த மொழியில் நாம் பிரசங்கிக்கக் கூடாது. நாம் பிரசங்கிக்கிற செய்தி மக்களுக்குப் புரிகின்ற, அவர்களுக்குப் பரிச்சயமான மொழிநடையாக இருக்க வேண்டும். நாம் ஆண்டவர் கேட்பதற்காகப் பிரசங்கிக்கவில்லை, நமக்கு முன்னால் இருப்பவர்களுக்காகப் பிரசங்கிக்கிறோம். அவர்களுக்கு அது புரிய வேண்டும். அவர்களிடம் நாம் பேசுகிறது புரிகிறதா என்று கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். நான் சமீபத்தில் இணையத்தில் ஒரு பிரசங்கியின் செய்தியைத் தற்செயலாகக் கேட்டேன். அவர் சென்னையின் கொச்சைத் தமிழில் செய்தியைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதைச் சிறிது நேரத்துக்கு மேல் என்னால் கேட்கவே முடியவில்லை, பிறகு கேட்பதை நிறுத்திவிட்டேன். மிகவும் கொச்சையான நடையில் பிரசங்கமளிப்பது தவறு. தேவனுடைய செய்தியைக் கொடுப்பதற்கு தெளிவான எளிமையான பேச்சு நடை மிகவும் அவசியம். அதற்காக நாம் கடினமாக உழைத்து அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- இறுதியாக ஆண்டவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்
ஜெபத்தில் ஆரம்பித்து, ஜெபநிலையில் பிரசங்கித்த பிறகு, அன்றையதினம் வீட்டிற்குச் சென்று ஆண்டவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ‘குறைபாடு உள்ளவனாக இருந்தபோதும் எனக்கும் கூட மதிப்பு கொடுத்து என்னை பயன்படுத்தியுள்ளீரே. என்ன செய்திருக்கிறீர், என்ன நடந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. இருந்தாலும் என்னை இந்தளவுக்குப் பேச வைத்ததற்காக எனக்கல்ல, எனக்காக அல்ல, உங்களுக்கே எல்லா மகிமையும் ஆண்டவரே’ என்று சொல்லி நாம் ஜெபிக்க வேண்டும். ஏனென்று கேட்டால், நாம் பிரசங்கத்தை முடித்த பிறகு மக்கள் வந்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பார்கள். அப்பொழுது நாம் உற்சாகமடைந்து அந்த உற்சாகத்தில் தூக்கம் கூட வராது போய்விடும். ஆனால் நாம் அவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது. நம்மைத் தாழ்த்தி, ஆண்டவரை உயர்த்தி அவருக்கே கனத்தையும், மகிமையையும் கொடுக்க வேண்டும். நம்மில் பெருமை வந்துவிடாதபடிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். அது மிகவும் ஆபத்தானது. அப்படி நாம் பெருமையினால் ஆட்கொள்ளப்பட்டால் ஆவியானவர் நம்மோடு தொடர்ந்து வரமாட்டார். மக்கள் என்னதான் நேர்மறையான கருத்துக்களைச் சொன்னாலும், ஆண்டவரிடத்தில் நாம், ஆண்டவரே என் பாதங்கள் இரண்டும் தரையில் இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்ளும் என்று நாம் ஜெபிக்க வேண்டும். இறுமாப்பு உள்ளவனாக இருக்காதபடிக்கு எனக்கு உதவி செய்யும் என்று நாம் ஜெபிக்க வேண்டும். எல்லா மகிமையும் கர்த்தருக்கு என்று நாம் ஜெபித்து விட்டு அதற்கு நாம் எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்? ஏனென்றால் அவரில்லாமல் நாம் அதை செய்திருக்கவே முடியாது. அவருக்கே எல்லா மகிமையும் கொடுத்துவிட்டு அடுத்த பிரசங்கத்திற்காக இதேபோல முதலில் இருந்து ஆயத்தம் செய்ய வேண்டும். இதுவே ஊழியம், இதுவே பிரசங்கம்.
புத்தகக் கண்காட்சியும், அறியப்படாத கிறிஸ்தவமும்
சமீபத்தில் நவம்பர் மாதத்தில் தமிழகம் சென்றபோது சேலத்தில் கண்களில் பட்டது அங்கு நடந்துகொண்டிருந்த புத்தகக் கண்காட்சி. உடனே வாகன ஓட்டியை நிறுத்தும்படிச் சொல்லி அதற்குள் நுழைந்தேன். அன்றைய தினம் பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் கண்காட்சிக்கு வந்திருந்தனர். பள்ளி ஆசிரியர்கள் அதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் போல் தெரிந்தது. மாணவர்களுக்கு இந்தவகையில் புத்தகங்களை அறிமுகம் செய்து வைப்பது மிகவும் நல்ல காரியம். நான் படித்த ஆரம்ப காலங்களில் என் ஆசிரியர்கள் புத்தகங்களில் நான் நாட்டம் காட்டுவதைக் கவனித்து என்னை ஊக்குவித்திருக்கிறார்கள். அன்று இத்தகைய புத்தகக் கண்காட்சி ஒன்றையும் நான் கண்டதும் இல்லை; உள்ளே நுழைந்ததும் இல்லை. இக்காலத்து மாணவர்களுக்கு வசதி அதிகம்தான். இருந்தும் அவர்கள் வாசிக்க வேண்டுமே!
நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள் கடைகளில் தங்கள் நூல்களை அந்தப் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அங்கு அதிக நேரம் செலவிட வசதியில்லாமல் இருந்ததால் தேடிப்பிடித்து இரண்டு பதிப்பாளர்களின் கடைகளில் வைக்கப்பட்டிருந்த நூல்களை நோட்டம் விட்டேன். அவை காலச்சுவடு மற்றும் கிழக்குப் பதிப்பகக் கடைகள்.
காலச்சுவடு பதிப்பகம் சுந்தர ராமசாமி ஆரம்பித்தது. இப்போது அவருடைய மகன் கண்ணன் (எஸ். ஆர். சுந்தரம்) அதன் ஆசிரியர். நல்ல பல இலக்கியங்களைக் கடையில் கண்டேன். மறைந்த ஜெயகாந்தனின் நூல்களில் சிலவற்றை அவர்கள் வெளியிடும் அனுமதியைப் பெற்றிருக்கிறார்கள். நான் வாசிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்ததைப் போல அல்லாமல் இன்று நூல்கள் மிகத்தரமான மெப்லித்தோ பேப்பரில், தெளிவான அச்சில், கண்ணைக் கவரும் அட்டைகளோடு வெளிவருகின்றன. அது மாபெரும் முன்னேற்றம். சுந்தர ராமசாமி. அசோகமித்திரன், ஜெயகாந்தன், கு. அழகிரிசாமி, ஜானகிராமன், லா. ச. ராமாமிர்தம் போன்ற பழம் பெரும் எழுத்தாளர்களின் நூல்கள் புதிய எழுத்தாளர்களின் நூல்களுக்கு மத்தியில் ஒளி வீசின. சில வருடங்களுக்கு முன் எதிராளிகளால் ஓட ஓட விரட்டப்பட்டு இன்று மறுவாழ்வெடுத்திருக்கும் பெருமாள் முருகனின் நூல்களின் தொகுப்புகள் கண்களைக் கவரும் அட்டைகளோடு அருமையாக அச்சிடப்பட்டு விற்பனைக்கிருந்தன. வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பவர்கள் இன்று எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி தமிழில் நூல்கள் பெருகிக் காணப்படுகின்றன. இலக்கிய நூல்களைத்தான் சொல்லுகிறேன். அருமையான இலக்கிய நூல்கள் இருக்குமளவுக்கு தரமான ஆய்வு நூல்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
எத்தனை நாட்களுக்குத்தான் வில்லியம் கேரியின் மொழிப்பாண்டித்தியத்தையும், சார்ள்ஸ் ரேனியஸின் தமிழ்ப் பாண்டித்தியத்தையும் பேசிப்பேசி உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருப்பது? அவர்களிடம் காணப்பட்ட உழைப்பில் ஒரு அவுன்ஸாவது நம்மிடம் இருக்கிறதா? வேற்றுமொழியை அவர்கள் எத்தனை கஷ்டப்பட்டுக் கற்று நம்மினத்தவர்கள் மத்தியில் உழைத்திருக்கிறார்கள்; உயர்தர எழுத்துக்களைப் படைத்து ஆத்துமாக்களுக்குப் பணிசெய்திருக்கிறார்கள். அதேபோல மோட்சப் பயணத்தைப் மொழிபெயர்த்த சாமுவேல் ஐயரும் தமிழில் பாண்டித்தியம் பெற்று உதகமண்டலப் பகுதியில் கிறிஸ்தவப் பணியாற்றியிருக்கிறார். தற்காலத்துத் தமிழ் ஊழியர்களுக்குத் தரமான தமிழறிவில்லை என்பது பொறுத்துக்கொள்ள முடியாததொரு பலவீனம்.
அடுத்ததாக நான் நுழைந்த கடை கிழக்குப் பதிப்பகம். இது மார்க்ஸீய சமூகப் பார்வை கொண்ட பதிப்பகம். ராஜீவ் மல்கோத்திராவும், அரவிந்தன் நீலகண்டனும் கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு எதிராகத் திட்டமிட்டு எழுதிய “உடையும் இந்தியா” நூலையும் இதுவே வெளியிட்டது. கடையில் இருந்தவர் என்னைப்பற்றிய விபரங்களைக் கேட்டார். நான் எழுதி வெளியிட்ட “தோமா கிறிஸ்தவம்” நூலைப் பற்றிச் சொன்னேன். அதை நமது வலைத்தளத்தில் கவனித்து அருமையாகச் செய்திருக்கிறீர்கள் என்று அட்டைப்படத்தைப் பாராட்டினார். அதோடு, உங்களுடைய நூல்களையும் நாங்கள் வெளியிட அனுமதி தாருங்கள் என்று கேட்டார். என் நூல்கள் கிறிஸ்தவ நூல்கள், உங்களுடைய வாசகர்களுக்கு அவை பொருந்தி வராதே என்று மெல்லிய சிரிப்போடு பதிலளித்தேன்.
நேரமிருந்திருந்தால் இன்னும் பல பதிப்பாளர்களின் கடைகளை நோட்டம் விட்டிருக்கலாம். நூல்களுக்கு மத்தியில் நடமாடுவது ஒரு சுகமான அனுபவம். நூற்றுக்கணக்கான புத்தகக்கடைகளில் ஏதாவது கிறிஸ்தவ நூல்களை விற்கும் கடைகள் இருந்தனவா என்று தெரியவில்லை. இருந்திருந்தாலும் அவற்றில் தரமான நூல்கள் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. வாசிப்பு பொதுவாகவே அருகிக் காணப்படும் இக்காலத்தில் இத்தகைய புத்தகச் சந்தைகளை விடாமல் நடத்தி வருகிறவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். நிச்சயம் வாசிக்கிறவர்கள் இல்லாமல் இல்லை; அவர்கள் பெருந்தொகையில் இல்லாமல் இருப்பதே கவலை. வாசிப்பையும், எழுத்தையும் அடிப்படையாகக் கொண்ட கல்வித்தரம் அமையாதவரை வாசிக்கிறவர்கள் அதிகரிக்க முடியாது. காலம் போகப்போகத் தமிழ் மொழிக்கு என்ன நிகழப்போகிறது என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
கிழக்குப் பதிப்பகத்தில் கண் முன்னாலேயே “அறியப்படாத கிறிஸ்தவம்” எனும் நூலிருந்தது. கையிலெடுத்துப் புரட்டிப் பார்த்தபின் நூலின் இரண்டு பாகங்களையும் வாங்கினேன். அதை நிவேதிதா லூயிஸ் என்பவர் அதை எழுதியிருந்தார். மிகவும் ஆய்வு செய்து எழுதப்பட்ட, ஆயிரத்தி இருநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இரண்டு பெரிய பாகங்கள் அவை. தமிழ் கிறிஸ்தவத்தைப் பற்றியது இந்நூல் என்று ஆசிரியர் அறிவித்திருந்தாலும், நூல் கிறிஸ்தவ வரலாற்றை விளக்கவில்லை; தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்து மறைந்திருக்கும் பழம் கிறிஸ்தவர்களைப் பற்றியும், சமூக நிலைமைகளையும் மட்டுமே இது விளக்குகிறது. சாதாரண மக்கள் அறிந்திராத அநேக பழம் கிறிஸ்தவர்களைப் பற்றிய விபரங்களை நூல் தொகுத்தளிக்கிறது. குளோரிந்தா, வேதநாயக சாஸ்திரிகள், வேதமாணிக்கம் போன்ற சீர்திருத்த கிறிஸ்தவர்களைப் பற்றிய சில விபரங்களை இந்நூலில் அறிந்துகொள்ள முடிகிறது.
இந்நூல் கிறிஸ்தவத்தைப் பற்றியதா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லுவேன். ஏனெனில், இது கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவமாகக் கணித்து, அதைக் கிறிஸ்தவத்தோடு இணைத்து இரண்டும் ஒன்றே என்ற கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இது வரலாற்றுக்கும், கிறிஸ்தவ இறையியலுக்கும் முரணானதொரு பார்வை. ஆகவே, இது வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் அடிப்படையில் துல்லியமாக எழுதப்பட்ட நூல் அல்ல. இதை இரண்டாவது பாகத்தின் இறுதி அதிகாரமான “உலகக் கிறிஸ்தவம் – ஒரு பார்வை” என்பதில் இருந்து தெளிவாக அறிந்துகொள்ளலாம். அவ்வதிகாரத்தில் உண்மைக்கு மாறான வரலாற்று விபரங்களை ஆசிரியர் தந்திருக்கிறார். கத்தோலிக்க மதத்தைத் தாய்ச் சபை என்றும், அதிலிருந்து பிரிந்து போனதே சீர்திருத்தக் கிறிஸ்தவம் என்றும் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். இது கத்தோலிக்க மதக் கண்ணோட்டம்; திருச்சபை வரலாறு கூறும் உண்மையல்ல. அதைத் தன் வார்த்தைகளால் பிரதிபலித்திருக்கிறார் நிவேதிதா லூயிஸ். இறையாண்மையுள்ள கர்த்தர் மார்டின் லூத்தர் மூலமாக ஆரம்பித்து வைத்த திருச்சபை சீர்திருத்தம் வேதபூர்வமான திருச்சபையை இந்த உலகத்தில் உருவாக்குவதற்காகவே. அதனால்தான் கத்தோலிக்க குருவாக இருந்த லூத்தரை அவருடைய பாவத்தில் இருந்து இரட்சித்து கத்தோலிக்க மதத்திற்கெதிராகப் போராடச் செய்தார் கர்த்தர். வேதத்தை எவரும் வாசிக்கவோ, சுவிசேஷத்தை எவரும் அறிந்துகொள்ளவோ முடியாதபடி செய்திருந்த கத்தோலிக்க மதத்துக்கு சாவுமணி அடிக்க எழுந்த எழுப்புதலே திருச்சபை சீர்திருத்தம். தன்னைக் கிறிஸ்தவத்தின் ஒரு பகுதியாகக் காட்டிக்கொள்ள, வேதத்தின் அதிகாரத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் கத்தோலிக்க மதத்திற்கு எந்த உரிமையும் இல்லை.
இதே அதிகாரத்தில் கி. மு. 325ல் கூடப்பட்ட நைசீன் கவுன்சில் கூட்டமோ அல்லது கி. மு. 381ல் கூட்டப்பட்ட கொன்ஸ்டாட்டிநோபிள் கூட்டமோ ஏன் கூட்டப்பட்டது என்பதுகூட ஆசிரியருக்குத் தெரிந்திருக்கவில்லை. இவற்றைக் கத்தோலிக்க மதத்திற்கு சார்பான கவுன்சில் கூட்டங்களாக விளக்கி கத்தோலிக்க மதம் தொடர்ந்து நைசீன் கூட்ட அறிக்கையையே பின்பற்றி வருகிறது என்று கூறியிருக்கிறார். இது முழுப்பூசனிக்காயை சோற்றில் திணித்து மறைக்கப்பார்க்கும் செயலாகும். எப்படியெல்லாம் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவ வரலாற்றைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த எத்தனிக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். (நான் எழுதி வெளியிட்டிருக்கும் கிறிஸ்தவ வரலாற்றின் இரண்டு பாகங்களையும் வாங்கி வாசியுங்கள். உண்மையென்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.)
நூலாசிரியர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த பெண்ணியக் கோட்பாட்டைப் பின்பற்றும் சமூக ஆர்வலர் (https://wikitia.com/wiki/Nivedita_Louis). கத்தோலிக்க மதத்தைப் பற்றி எழுதவே அவர் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்ததாகக் கூறுகிறார். அவருடைய நண்பி ரோடாவின் வற்புறுத்துதலால் கிறிஸ்தவ பிரிவுகளைப் பற்றியும் எழுத முடிவு செய்திருக்கிறார். நூல் முழுவதும் கத்தோலிக்க மதத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் சம இடமளித்து விளக்கப்பட்டிருக்கிறது; இருப்பினும் கத்தோலிக்க வாடை அதிகம். நூலுக்கு முன்னுரை, அணிந்துரை கொடுத்திருப்பவர்களின் கருத்துக்களைக் கவனிக்கும்போது கத்தோலிக்க மதத்தை கிறிஸ்தவத்தின் ஒரு பகுதியாக இணைத்துப் பார்க்கும் அவர்களுடைய, அடிப்படையிலேயே தவறான கண்ணோட்டத்தைக் கவனிக்க முடிந்தது. அதனால் கிறிஸ்தவர்கள் இந்நூலைக் கவனத்தோடு வாசிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த முறையில் கத்தோலிக்கத்தை கிறிஸ்தவமாகக் கணிக்கின்ற தவறான போக்கு இந்திய தேசக் கிறிஸ்தவர்களில் மிகச் சாதாரணமாகக் காணப்படும் வழக்கம். கத்தோலிக்க மதம் கிறிஸ்தவத்தின் ஒரு பகுதியல்ல; அது கிறிஸ்தவ வேதத்திற்கு முற்றிலும் புறம்பானதொரு போலி மதம்.
சீர்திருத்த கிறிஸ்தவ அருட்பணியாளரான ரேனியஸ் கத்தோலிக்கர்கள் மனம் திருந்தி கிறிஸ்துவைத் தழுவிக்கொண்டபோது அவர்களுக்கு ஞானஸ்நானமளித்து சபையில் அங்கத்துவம் கொடுத்தார். இதை நிவேதிதா அறிந்திருக்கிறார் (276). நெடுவிளையில் மிக்கேல் எனும் ரோமன் கத்தோலிக்கர் கிறிஸ்துவை விசுவாசித்தாலேயே அவருக்கு ரேனியஸ் ஞானஸ்நானமளித்தார். மிக்கேல் பின்பு ரேனியஸின் இறையியல் கல்லூரியில் கற்று நெடுவிளையில் 40 வருடங்களுக்கு கிறிஸ்தவ பணி செய்திருக்கிறார். மிக்கேலின் இச்செயலை ஒரு கிறிஸ்தவ பிரிவை விட்டு விலகி இன்னொன்றில் இணைந்ததாகக் கருதுவது அடிப்படையிலேயே தவறு. அப்படியிருந்திருந்தால் ரேனியஸ் மிக்கேலுக்கு ஏன் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்? மறுபிறப்படைந்து மனமாற்றத்தை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே சீர்திருத்த கிறிஸ்தவம் ஞானஸ்நானம் கொடுக்கும். கிறிஸ்துவை விசுவாசிக்கும்வரை மிக்கேல் வெறும் கத்தோலிக்கர் மட்டுமே; அவருக்கு கிறிஸ்தவ விசுவாசமாகிய ஆத்மீக அனுபவம் இருக்கவில்லை. ரேனியஸ் பிரசங்கித்த சுவிசேஷம் அவரில் மனமாற்றத்தை ஏற்படுத்தி கிறிஸ்துவை மட்டுமே இரட்சிப்பிற்காக விசுவாசிக்கும்படிச் செய்தது. அத்தகைய இரட்சிக்கப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கைக்கு கத்தோலிக்க மதத்தில் எப்போதுமே இடமிருக்கவில்லை; இன்றுமில்லை. வெறும் கிரியைகளை மட்டுமே வற்புறுத்திய பரிசேயர்களின் யூத மதத்தைப் போன்றதே கத்தோலிக்க மதம். அதில் சுவிசேஷத்திற்கோ, இரட்சிப்பிற்கோ இடமில்லை.
முதல் தொகுதியில் நூலின் ஒரு அதிகாரத்தில் ஆங்கிலேய மிஷனரி கால்டுவெல்லைத் “திராவிட அரக்கன்” என்று தலைப்பில் குறிப்பிடப்பட்டிருந்ததால் அதை முதலில் வாசித்தேன். உண்மையில் தலைப்புக்கும் அவ்வதிகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கால்டுவெல்லைப் பற்றிய விபரங்களைத் தவறுகளில்லாமலேயே நிவேதிதா எழுதியிருந்தார். கால்டுவெல்லைத் திராவிட அரக்கனாகச் சித்தரிக்கிறவர்கள் இந்துத்துவா கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்களே. ராஜீவ் மல்கோத்திராவும், அரவிந்தன் நீலகண்டனும் இதற்கு நல்ல உதாரணங்கள். இந்த அதிகாரத்துக்கு சம்பந்தமேயில்லாமல் திராவிட அரக்கன் கால்டுவெல் என்ற தலைப்பைத் தந்திருப்பது அநாவசியம் மட்டுமல்ல ஆசிரியரின் நோக்கத்தையும் சந்தேகிக்க வைக்கிறது. கால்டுவெல் ஆங்கிலேய திருச்சபையைச் சார்ந்த சீர்திருத்த கிறிஸ்தவராக இருந்ததால் அவரை இவ்வாறு அழைப்பது நிவேதிதாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தவில்லை. அவர் கத்தோலிக்கராக இருந்திருந்தால் இதை அவர் செய்திருக்க மாட்டார்.
எனக்கு ஆச்சரியம் தரும்வகையில் மெய்ஞானபுரம் என்ற நெல்லைப் பகுதியின் ஊரைப் பற்றி விளக்கமளிக்கும் அதிகாரத்தில், 274-276 வரை, நெல்லையின் அப்போஸ்தலன் என்றழைக்கப்படும் சார்ள்ஸ் ரேனியஸைப் பற்றிய விபரங்களை நிவேதிதா தந்திருந்தார். ஊருக்கு அந்தப் பெயரைத் தந்தவரே ரேனியஸ்தான். நூலில் ரேனியஸைப் பற்றித் தரப்பட்டிருந்த விபரங்களில் பெரிய வரலாற்றுத் தவறுகள் எதுவும் காணப்படவில்லை; ஒருசில விஷயங்கள் மட்டுமே உண்மைக்கு மாறானவை. ஓரிடத்தில் (276) ரேனியஸுக்கும் சபைக்கும் 1831ல் மோதலேற்பட்டு அவர் சபையைவிட்டு வெளியேறி வடதமிழகம் சென்றதாக நிவேதிதா குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் சீ.எம்.எஸ். மிஷனரி நிறுவனத்துக்கும் அவருக்கும் இடையிலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டது; அவரமைத்திருந்த திருச்சபைகளோடு அல்ல.
ரேனியஸின் ஊழிய மகிமை பற்றி நிவேதிதாவுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. ஒரு மகத்தான இறைபணியாளருக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்நூலில் கிடைத்திருப்பது மூன்றே பக்கங்கள். ரொபட் கால்டுவெல் இடையான்குடி எனும் அடைக்கலப்பட்டணத்தை அமைத்ததற்குக் கொடுத்திருக்கும் பக்கங்களைக் கவனிக்கும்போது ரேனியஸின் பணிகள் பற்றி நூலாசிரியருக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை என்றுதான் அறிய முடிகிறது. அத்தகைய அடைக்கலப்பட்டணங்களை நெல்லை முழுவதும் ஆரம்பித்து வைத்தவரே சார்ள்ஸ் ரேனியஸ்தான். அதுவும் டோனாவூர் உட்பட இருநூறுக்கு மேற்பட்ட அடைக்கலப்பட்டணங்களை அவர் நிறுவியிருந்தார். கால்டுவெல்லைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் நூல்களோடு ஒப்பிடும்போது ரேனியஸைப் பற்றிய நூல்கள் மிக மிகக் குறைவு; அதுவும் ஆங்கிலத்தில் எனக்குத் தெரிந்து ரேனியஸின் மகன் வெளியிட்ட அவருடைய நாட்குறிப்பு மட்டுமே. தமிழுக்குச் செய்திருக்கும் பணியளவுக்கு கால்டுவெல் கிறிஸ்தவ திருச்சபைப் பணி செய்யவில்லை என்கிறார் நிவேதிதா. அது உண்மைதான். கால்டுவெல்லின் புகழுக்குக் காரணம் அவருடைய தமிழ்ப்பணியே.
கிறிஸ்தவர்கள் மத்தியில் சாதிப் பிரச்சனை பற்றி விளக்கும் நிவேதிதா, சீர்திருத்த கிறிஸ்தவ மிஷனரிகளைக் குற்றஞ்சாட்டியிருக்கிறார் (முதல் தொகுதி 518-19). ரேனியஸும், ரொபட் கால்டுவெல்லும், ஜி.யூ. போப்பும் அடியோடு சாதி முறையை வெறுத்து திருச்சபையில் அதற்கு இடங்கொடாதிருந்தார்கள். சாதி மறுத்து கிறிஸ்தவப் பணியாற்றியதாலேயே அவர்களுக்கு அதிக எதிர்ப்பும் இருந்தது. தஞ்சையில் ஆலயத்தில் வெள்ளாளரும், கடையரும் உணவருந்தும்போது தனித்தனியே அமருவதையும், ஆராதனையின் போதும் தனித்தனியே அமர்வதையும் கவனித்து ஜி. யூ. போப் வெகுண்டெழுந்து, அதைத் தவறு என்று சுட்டிக்காட்டி சமபந்திப் போஜனத்துக்கு ஏற்பாடு செய்தார் என்று 440ம் பக்கத்தில் நிவேதிதாவே குறிப்பிட்டிருக்கிறார். அப்படிச் செய்ததற்காக போப்பை வெள்ளாளர்கள் அடித்திருக்கிறார்கள். இது தெரிந்தும் சீர்திருத்த கிறிஸ்தவர்கள் சாதிப் பாகுபாட்டுக்கு ஆதரவாக இருந்ததாகக் காட்டியிருப்பது தவறு. ஒரு சில மிஷனரிகள் அந்தத் தவறைச் செய்திருப்பதையும் நான் மறுக்கவில்லை. நம்மினத்துப் பண்பாட்டைப் புரிந்துகொள்ள முடியாமலும், சாதியை எதிர்க்கத் துணிவில்லாமலும் சிலர் அந்தத் தவற்றைச் செய்திருக்கிறார்கள்.
சீர்திருத்த கிறிஸ்தவர்களைப் பற்றி எழுதும்போது நிவேதிதா, அவர்களுடைய பணியை “மதமாற்றம்” செய்வது என்று குறிப்பிட்டிருக்கிறார் (518). சீர்திருத்த கிறிஸ்தவம் மதமாற்றம் செய்வதில்லை. மதமாற்றத்திற்கும், சுவிசேஷப் பணியை வேதபூர்வமாகச் செய்வதற்கும் இடையில் வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் இருக்கும் அளவுக்கு வேறுபாடிருக்கிறது. கத்தோலிக்கரான நிவேதிதாவுக்கு அது புரியாமலிருந்திருப்பதில் ஆச்சரியமில்லை. அடைக்கலப் பட்டணங்களை ரேனியஸ் அமைத்தபோது ஆதிக்க சாதியினரிடமிருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கவே அவற்றை அமைத்தார். அவற்றில் பலவற்றில் ஒரே சாதியினர் இருந்ததற்குக் காரணம் அந்தச் சாதியினர் கிறிஸ்துவை வைராக்கியத்தோடு தழுவிக்கொண்டதுதான். அதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரே சாதிக்காக ரேனியஸ் அடைக்கலப் பட்டணங்களை நிறுவவில்லை.
விசுவாசத்தால் கிறிஸ்துவைத் தழுவிக்கொண்ட எல்லோருமே உடனடியாக சாதியை விட்டுவிடவில்லை என்பது உண்மைதான். சில வேளைகளில் அதில் மாற்றம் காலம் போகப் போகத்தான் ஏற்படும். அடிப்படையில் சாதி வேறுபாடு பார்ப்பது தவறு என்பதை மெய்க்கிறிஸ்தவன் உணர்வான். சமூகத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளை சமாளித்து அதற்கு விலகி நிற்பதற்கு அவன் வாழ்வில் நாளாக நாளாக மாற்றங்கள் வரும். ஒரு கிறிஸ்தவன் தொடர்ந்தும் சாதி வேறுபாடு காட்டி வாழ்கிறான் என்றால் அவனுடைய விசுவாசம் கேள்விக்குறியதாகிவிடும்.
வேதத்தை மீறி ரேனியஸோ, சீர்திருத்த கிறிஸ்தவர்களோ சாதியை அரவணைத்துக் கொண்டிருந்தார்கள் என்று கருதுவது முட்டாள்த்தனம். சாதி பார்க்கிறவர்களுக்கு ரேனியஸ் திருவிருந்து கொடுப்பதைத் திருச்சபைகளில் நிறுத்தியிருக்கிறார் என்பது நிவேதிதாவிற்குத் தெரியுமா? அது நியாயமாகக் கொண்டுவரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை. கத்தோலிக்க மதம் சாதியை அரவணைத்துக் கொண்ட மதம். அவர்களுடைய ஊழியர்களான டீ நொபிளியில் இருந்து அனைவருமே சாதிக்கும், இழிவான இந்துமதப் பண்பாட்டிற்கும் இடம்கொடுத்து மதமாற்றம் செய்திருக்கிறார்கள். சத்தியம் அறவேயில்லாத அந்த மதம் மதமாற்றத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தது, மறுபிறப்பிற்கோ, மனமாற்றத்திற்கோ அல்ல. அதனால்தான் இந்துக்களுக்கு கத்தோலிக்கத்தைப் பிடித்திருந்தது. இதை எப்படிக் கத்தோலிக்கரான நிவேதிதா ஒப்புக்கொள்ளப்போகிறார்.
அறியப்படாத கிறிஸ்தவம் நூலின் இரண்டாம் பாகத்தின் இறுதிப் பகுதியில், இந்தியக் கிறிஸ்தவத்தின் தோற்றத்தைப் பற்றி விளக்கும் நிவேதிதா, தோமாவின் இந்திய வருகை பற்றி அதிகம் எழுதியிருக்கிறார் (648-655). தோமா இந்தியா வந்தது வாய்வழிச் செய்தி என்றும், இதுவே தோமை கிறிஸ்தவர்களின் நம்பிக்கை என்றும் ஆரம்பத்திலேயே அவர் குறிப்பிட்டிருக்கிறார் (648). அத்தோடு “இந்தியாவுக்கு தோமா வந்தாரோ இல்லையோ” என்ற சந்தேகத்துடன் ஆரம்பித்து தோமா வருகை பற்றி கத்தோலிக்கர்களிடையே காணப்படும் நம்பிக்கைக்கான குறிப்புகளைத் தருகிறார். இந்தப் பகுதியில் தோமா வருகை பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பவைகள் ஏற்கனவே தெரிந்திருக்கும் வாய்வழிச் செய்திகள் மட்டுமே. முடிச்சுப் போடுவதில் மன்னனான மு. தெய்வநாயகத்தின் நூலின் ஒரு குறிப்பும் இதில் அடங்கும். அத்தோடு இரண்டுவித தோமாக்களைப் பற்றிய குறிப்புகளும் இருப்பதாகவும், இரண்டாவது தடவை தோமா தமிழகம் வந்தபோதே பிராமணர்களால் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மொத்தத்தில் இந்தக் குறிப்புகள் நம்பத்தகுந்த வரலாற்றுக்குறிப்புகளாகத் தெரியவில்லை. தோமா வருகை பற்றிய நம்பிக்கை கத்தோலிக்க மதத்தினரிடமே அதிகம் என்ற என் கருத்தை நிவேதிதா நிரூபித்திருக்கிறார். (இதுபற்றிய முழு விபரங்களை அறிந்துகொள்ள நான் எழுதி வெளியிட்டிருக்கும் தோமா கிறிஸ்தவம் நூலை வாங்கி வாசியுங்கள்.)
முழுக்க முழுக்க கத்தோலிக்க வாடையடிக்கும் “அறியப்படாத கிறிஸ்தவம்” நூலில் சீர்திருத்த கிறிஸ்தவம் பற்றிய சில உண்மைகளும், தமிழ் சீர்திருத்த கிறிஸ்தவர்களான சிலரைப் பற்றிய விளக்கங்களும் காணப்படுகின்றன. அவை கிறிஸ்தவர்கள் வாசிக்கக்கூடிய பகுதிகளே. அத்தோடு தமிழகத்தில் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்களின் செய்கைகளைப் பற்றியும் வாசித்து கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் அம்மதத்தின் வேதவிரோத செய்கைகளை நம்மால் அனுமானித்துக் கொள்ளவும் முடிகிறது. அந்தவகையில் நிவேதிதா நமக்கு நன்மை செய்திருக்கிறார். சிந்தித்து வாசிக்கும் கிறிஸ்தவ வாசகர்கள் இதைப் புரிந்துகொள்ளுவார்கள். உண்மை தெரிந்து நூலை வாசிப்பவர்களுக்கு இந்நூலின் சில பகுதிகள் பயனுள்ளவையாக இருக்கும். விபரம் தெரியாத வாசகர்களுக்கு இதனால் எந்தப் பயனுமில்லை. ஒரு கத்தோலிக்க ஆசிரியரிடமிருந்து மெய்யான திருச்சபை வரலாற்று நூலை எப்படி எதிர்பார்க்க முடியும்?
வழியருகே விழுந்த விதை
மத்தேயு 13 ம் அதிகாரத்தில் அநேக உவமைகள் இருப்பதை நாம் காணலாம். அதில் 7 உவமைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. இத்தனை உவமைகளை லூக்கா 15, 16 அதிகாரங்களில் நாம் வாசிப்பதில்லை. அங்கு 5 உவமைகள் மட்டுமே காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே சமயத்தில் ஆண்டவரால் சொல்லப்பட்டவையாகும்.
மத்தேயு 13:1
“இயேசு அன்றையதினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.”
அவருடைய ஊழியங்களை ஆரம்பித்த பொழுது கப்பர்நகூம் எனும் இடத்தை பிரதானமாகப் பயன்படுத்தித்தான் ஆண்டவர் எல்லா இடங்களுக்கும் போய் வந்து தன்னுடைய செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். இங்கு கடலோரத்தில் என்று சொல்லும்பொழுது அது ஒரு பெருங்கடலில்லை; உண்மையில் அது ஒரு ஏரி. ஆனால் மிகவும் ஆழமானதும், அகலமானதும், நீளமானதுமான பெரிய ஏரி. அந்தக் கடலோரத்தில் அவர் உட்கார்ந்திருந்த பொழுது அநேக ஜனங்கள் அவரைப் பார்ப்பதற்காகவும், பேசுவதற்காகவும், அவர் பேசுவதைக் கேட்பதற்காகவும் கூடி வந்தார்கள் என்று பார்க்கிறோம். வந்த கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் அவர் அங்கிருந்த ஒரு படகில் ஏறினார். அது மீன் பிடிக்கிறவர்கள் பயன்படுத்துகிற ஒரு படகு. அந்தப் படகில் ஏறிக் கடலுக்கு உள்ளே போனார். அவர் அதிக தூரம் போகவில்லை. அந்தக் கரையோரத்துக்குப் பக்கத்திலேயே கடலுக்குள் கொஞ்சதூரம் போய் அந்தப் படகிலிருந்து அவர் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். அப்படி அதைச் செய்ததற்குக் காரணம் ஜனங்கள் அலைமோதிக் கொண்டிருந்ததுதான். அவர் எல்லோரையும் ஒரே நேரத்தில் பார்ப்பதும் கஷ்டம். அதுமட்டுமில்லாமல் அவரது குரல் முன்னால் இருப்பவர்களுக்கு கேட்டாலும் பின்னால் இருப்பவர்களுக்குக் கேட்காமல் போய்விடும். ஆகவே, அவர் இப்படிக் கடலோரத்திலிருந்த அந்தப் படகில் போய் உட்காரும் பொழுது அநேகரையும் பார்க்கக்கூடிய ஒரு வசதி இருந்தது. அது மட்டுமல்லாமல் அவர் பேசுகிற குரலும் கூட பலருக்கும் போய்ச் சேர கூடிய ஒரு வசதி இருந்தது. ஆகவே ஆண்டவர் அவ்விதம் செய்தார். இங்கிருந்துதான் உவமைகளின் மூலமாக அவர் பேச ஆரம்பித்தார் என்று நாம் பார்க்கிறோம்.
இந்த உவமைக்குப் பெயர், பொதுவாகவே எல்லாருக்கும் தெரிந்திருக்கிற “விதைக்கிறவனின் உவமை” என்பதாகும். உண்மையிலேயே சொல்லப்போனால் இந்த உவமைக்கு நல்ல தலைப்பு “விதை நிலங்களின் உவமை” என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏன் அப்படிச் சொல்லுகிறேனென்றால் இந்த உவமையினுடைய பார்வை விதை நிலங்களின் மேல்தான் இருக்கிறது. ஆண்டவர் இங்கு விதை நிலங்களைப் பற்றியே பேசுகிறார். அந்த விதை நிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த உவமை பேசுவதினால் விதை நிலங்களின் உவமை என்ற பெயர் அதற்குப் பொருத்தமாக இருக்கும்.
அடுத்ததாக நாம் கேட்க வேண்டிய கேள்வி, உவமை என்றால் என்ன? உலகத்தில் இருக்கும் எல்லா மொழிகளிலுமே அந்த மொழிக்கு அழகு சேர்க்கும்படியாக பல வகையான அணிவகைகளைப் பயன்படுத்துவார்கள். அதில் ஒன்றுதான் உவமை. ஆண்டவர் பிரசங்கம் செய்தபொழுது அதிகமாகப் பயன்படுத்தியது உரைநடையே. அது எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடிய பேச்சு. இருந்தபோதும் வேறு அணிவகைகளையும் அவர் பயன்படுத்தாமல் இருந்ததில்லை. வேதத்தில் பார்க்கிற பொழுது உவமைகள், நீதிமொழிகள், பாடல்கள், சங்கீதங்கள் அதில் காணப்படுகின்றன. உருவகம் என்கிற ஒரு அணிவகையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லாருக்கும் தெரிந்த அடையாள மொழி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது குறிப்பாக வெளிப்படுத்தின விசேஷம் மற்றும் எசேக்கியல் போன்ற பகுதிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகவே வேதம் சத்தியத்தை நமக்கு விளக்குகிறபோது உரைநடையை மட்டும் பயன்படுத்தவில்லை. ஒரு மொழிக்குரிய அநேக அணிவகைகளையும் ஆண்டவர் பயன்படுத்தியிருக்கிறார்; வேதமும் பயன்படுத்தியிருக்கிறது.
ஆண்டவர் ஏன் உவமைகளாகப் பேசினார்? சீடர்கள் அவரிடம் வந்து கேட்கிறார்கள், நீங்கள் ஏன் உவமையைப் பயன்படுத்தி பேசுகிறீர்? அப்படியானால் அவர்களுக்கு உவமைக்கும் உரைநடைக்கும் இடையிலிருந்த வேறுபாடு தெரிந்திருந்தது. அப்பொழுது ஆண்டவர் சொல்கிறார், உங்களுக்கு கேட்கின்ற பாக்கியம் கிடைத்துள்ளது. அதனால் இது உங்களுக்குப் புரியும், ஆனால் அந்த பாக்கியம் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு புரியாதிருக்கும்படிக்கு உவமையில் பேசுகிறேன் என்றார். இதனை நாம் தவறாக விளங்கிக்கொள்ளக்கூடாது. உவமையில் பேசினால் ஒருவருக்கும் புரியாது என்று நினைக்கக்கூடாது. அவ்வாறாக ஆண்டவர் சொன்னதற்கு காரணம், யூதத் தலைவர்களான பரிசேயர்கள், சதுசேயர்கள், ஜெப ஆலயத்தலைவர்கள் எல்லாருமே ஆண்டவரைப் பரம எதிரியாகக் கருதினார்கள். அவர் யூத மதத்தை அழிப்பதற்காக வந்த மனிதனாகக் கருதி அவரை மேசியாவாகப் பார்க்க மறுத்தார்கள். அவர்களுடைய கடின இருதயத்தினால் வேதத்தைக் கேட்பதற்கோ தங்களுடைய இருதயத்தில் இடம் கொடுப்பதற்கோ அவர்கள் தயங்கியதால்தான் ஆண்டவர் சொன்னார், இதனை அறிந்துகொள்ளக்கூடிய பாக்கியம் அவர்களுக்கு இல்லை, ஆனால் உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது. இருந்தபோதும் ஆண்டவர் சொல்லுகிறார் காதுள்ளவன் கேட்கக்கடவன். ஏன் அவ்வாறு சொல்கிறார்? நம் எல்லோருக்கும் காது இருக்கிறதுதானே? அவர் அவ்விதம் சொல்லுவதற்கு அர்த்தம் ஒரு விஷயத்தில் அக்கறை செலுத்தி முழு மனதையும் அதில் ஈடுபாடு செலுத்தி கேட்கிறவனுக்குத்தான் வசனம் பயனடையும். வசனத்தை உதாசீனப்படுத்துகிறவர்களுக்கோ, கடின இருதயம் இருப்பவர்களுக்கோ, வேத வார்த்தையை அலட்சியப்படுத்துகிறவர்களுக்கோ வேத வார்த்தையின் மூலமாக எந்தப் பயனும் கிடைக்காது. ஆகவேதான் ஆண்டவர் சொல்லுகிறார் காதுள்ளவன் கேட்கக்கடவன். வசனத்தினுடைய பயனை நாம் அடைவதற்குக் கர்த்தருடைய உதவியும், ஆவியானவருடைய உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது.
உவமை என்பது என்ன? ஒரு கதையைச் சொல்லி ஒரு சத்தியத்தை விளங்கப்படுத்துவதாகும். இவை பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என வேதம் முழுவதும் அநேக உவமைகள் காணப்படுகின்றன. உதாரணத்துக்கு பழைய ஏற்பாட்டில் தாவீது மகா பெரிய பாவத்தைச் செய்துவிட்ட பொழுது நாத்தான் தீர்க்கதரிசி அவனிடத்தில் போய் அவனுடைய குற்றத்தை உணர்த்துவதற்கு உரைநடையைப் பயன்படுத்தவில்லை. ஒரு உவமையைப் பயன்படுத்தி ஒரு கதையைச் சொல்லி அந்த கதையின் மூலமாக அவனுடைய பாவத்தை உணர்த்தினான். அப்பொழுது அந்த கதையில் இருக்கின்ற மனிதன் தான்தான் என்பதை தாவீது உணர்ந்தான். ஆகவே ஒரு கதையின் மூலமாக ஒரு விஷயம் சொல்லப்படுகிறது. அதுபோல்தான் இங்கு ஆண்டவர் இந்த உவமையைப் பயன்படுத்தி சத்தியத்தை விளக்குகிறார்.
மத்தேயு 13:3-9
அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.”
இதற்கான விளக்கம் வசனம் பதினெட்டிலிருந்து கொடுக்கப்படுகிறது.
மத்தேயு 13:18-23
ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.”
இந்த உவமையில் வருகின்ற விதைக்கிறவன் பாத்திரம் ஆண்டவரைக் குறிக்கிறது. ஆண்டவர்தான் உண்மையாகவே சத்தியத்தை விதைக்கிறவர். விதைக்கப்படுகிற விதை சத்தியம், தேவனுடைய வார்த்தை, சுவிசேஷம் என்று சொல்லலாம். இந்த உவமையில் நான்கு வகை நிலங்களைப் பார்க்கிறோம். முதலில் பாதை அருகே, அதாவது வழியருகே உள்ள இடம். இரண்டாவதாக கற்பாறைகள் காணப்படுகின்ற ஒரு பகுதி. மூன்றாவது முட்செடிகள், களைகள் வளர்கின்ற இடம். நான்காவது நல்ல இடம். இந்த நான்கு நிலங்களும் எதைக் குறிக்கிறதென்று கேட்டால் அது நான்கு வகையான மனிதனுடைய இருதயத்தை விளக்குகின்றன. அதாவது தேவனுடைய வார்த்தை பிரசங்கிக்கப்படுகிற பொழுது எந்த நிலையிலிருந்து மனிதர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டுப் பயனடைகிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. அதாவது வழியருகே போன்ற நிலம், கற்பாறைகள் போன்ற இருதயம், முட்செடிகளும் களைகளும் காணப்படுகின்ற இருதயம், நல்ல நிலம் போன்ற இருதயம். இந்த நான்கு வகை நிலங்களில் இப்போது முதலாவது நிலத்தை குறித்துப் பார்ப்போம்.
நான்காவது வசனத்தில், “அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.” என்றிருக்கிறது. அதாவது, பறவைகள் வந்து கொத்தி எடுத்துக்கொண்டுபோய் விட்டது. மத்தேயு 13 அதிகாரத்தில் பார்க்கிற உவமையை மாற்கு 4 வது அதிகாரத்திலும், லூக்கா 8 வது அதிகாரத்திலும் பார்க்கலாம். மாற்குவும், லூக்காவும் இதை விளக்கியபோதும் மத்தேயு அளவுக்கு நீளமாக விளக்கவில்லை. இருந்தபோதும் ஒரு உவமையைப் புரிந்து கொள்ளுவதற்கு வேறு எந்தப் பகுதிகளில் அதே உவமை வந்திருக்கிறது என்று பார்த்து இந்த மூன்றையும் சேர்த்துப் படிக்கின்றபோது அதனுடைய முழுமையான அர்த்தத்தை நாம் எப்போதும் புரிந்துகொள்ளலாம். ஆகவே மாற்குவும் லூக்காவும் கூட இந்த உவமையைப் புரிந்துகொள்ள நமக்கு நிச்சயமாக உதவி செய்கிறார்கள். இந்த உவமையின் மூலமாக ஆண்டவர் தேவ ராஜ்யத்தின் ரகசியத்தை வெளிப்படுத்துகிறார். அதாவது சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். முதலாவது, இந்த உவமையில் வருகிற நிலம் வழியருகே உள்ள நிலம்.
நாம் இங்கே முதலில் ஆண்டவர் சொன்ன உவமையை அல்லது உதாரணத்தை அல்லது ஒரு எடுத்துக்காட்டை அல்லது கதையைப் பார்த்துப் புரிந்து கொண்ட பிறகு அது யாரைக் குறித்து பயன்படுத்தப்படுகிறது என்று பார்க்கலாம். இங்கே சொல்லப்படுகிற வழியருகே உள்ள நிலம் எது? அதைப் புரிந்துகொள்ள நாம் ஒரு வயல் நிலத்தை எடுத்துக் கொள்வோம். அந்தக் காலத்தில் இது மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் நிலத்தைத்தான் குறிக்கிறது. வயல் நிலங்கள் நமக்கு நன்றாகத் தெரியும். வயல் நிலத்தில் வரம்புகள் இருக்கும். விவசாயி நடந்து போவதற்கும், நிலத்தைத் தாண்டிப் போவதற்கும் பயனுள்ளதான ஒரு வழி இருக்கும். அந்த வழி ஒரு மூன்று அடிக்கு மேல் அகலமாக இருக்காது. அது நடந்து போவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தண்ணீர் எல்லா இடத்துக்கும் போகாமல் இருப்பதற்காகவும் இந்த வரம்பு கட்டப்படுகிறது. அது ஒரு பாதையாகவும் இருக்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களோடு அன்றைக்கு அங்கிருந்த விளைச்சல் நிலத்தில் நடந்து போனபொழுது சீடர்கள் அங்கிருந்த நிலத்திலிருந்த பயிரிலிருந்து மணிகளை எடுத்துச் சாப்பிட்டார்கள். அப்பொழுது பரிசேயர்கள் அதைப் பார்த்து அவரைக் குற்றம் சாட்டினார்கள். அப்படி அவர்கள் நடந்து போன பொழுது எப்படி நடந்துபோய் இருப்பார்கள்? இந்த வழியருகே உள்ள பகுதியில்தான் அவர்கள் நடந்து போய் இருப்பார்கள். ஏன் ஆண்டவர் இந்த உவமையில் வழியருகே உள்ள நிலத்தைப் பயன்படுத்தினார்? அதற்கு காரணம் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும்.
வழியருகே என்பது ஒரு சிறு குறும்பாதை. இந்தப் பாதையினுடைய தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும்? விதைகள் விதைப்பதற்காக இது பயன்படுத்தப்படுகிற ஒரு பகுதி அல்ல. ஏனெனில் விதை வளர்ப்பதற்காக ஏற்கனவே விவசாயி ஒரு இடத்தை நன்றாக பதப்படுத்தியிருப்பான். ஆனால் இது நடந்து போவதற்கு மட்டுமே உதவும். அதுமட்டுமல்லாமல் இது எந்த விதத்திலும் தயார் செய்யப்படாத ஒரு பகுதியாக இருப்பதால் அது மிகவும் கடினமாக இருக்கும். அதில் முட்கள் நிறைய இருக்காது, இருந்தாலும் கொஞ்சம் கடினமானதாக கற்கள் நிறைந்ததாக இருக்கும். அது மிகவும் இறுகிப்போய் கடினமாக இருக்கும். அந்தப் பகுதியில் சாதாரணமாகவே எந்த விவசாயியும் விதை விதைக்க மாட்டான். அவன் அதற்கான நிலத்தை ஏற்கனவே பதப்படுத்தி உழுது நன்றாகத் தயார் செய்திருப்பான். அப்படியாக உழுது தயார் செய்யப்பட்ட நிலத்தில் தான் விதைகள் பலன் கொடுக்கும். ஆகவே இந்தப் பாதையில் விதைக்கப்படுகிறது எதுவுமே ஒருகாலமும் பயன் கொடுக்காது. அதுதான் இங்கு சொல்லப்படுகின்ற உவமையாகும்.
இங்கு சொல்லப்படுகின்ற உவமை எதைக் குறிக்கிறது? ஏனென்றால் எதையோ குறிப்பதற்காகத்தான் ஆண்டவர் இதைப் பயன்படுத்தியிருக்கிறார். இது ஒரு மனிதனுடைய இருதயத்தைக் குறிக்கிறது. அதாவது சிலவிதமான மனிதர்களின் இருதயத்தை குறிக்கிறது. எல்லா மனிதர்களும் இப்படிப்பட்டவர்கள் அல்ல. ஆனால் மனிதர்கள் மத்தியில் இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய இருதயம் இந்த வழியருகே என்ற பகுதியைப் போன்றது. வழியருகே உள்ள பாதையான இடமானது எவ்வளவு கடினப்பட்டிருக்குமோ அதேவிதத்தில் இவர்களுடைய இருதயமும் கடினப்பட்டுக் காணப்படும். விதை விதைக்கப்படுவதற்கும் பலன் கொடுப்பதற்கும் தகுதியில்லாத அந்தப் பாதையைப் போல இவர்களுடைய இருதயம் காணப்படும்.
ஒரு உவமை எப்பொழுதுமே ஒரு முக்கியமான பாடத்தைக் கொடுக்கும். அந்த முக்கியமான பாடத்தை அறிந்து கொள்ளுவதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். ஆகவே அந்த உவமையில் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டிருப்பவற்றிற்கு கண் காது மூக்கு வைத்து பொருள்கள் பார்க்கக் கூடாது. வேதம் எப்போதுமே ஒரு சத்தியத்தைத்தான் விளக்கும். அதனால் உவமையில் எல்லாப் பகுதிகளுக்கும் பொருள் காண முயற்சிக்கக்கூடாது. ஒரு உதாரணத்தை மிகைப்படுத்திக் கூறக்கூடாது, உவமையில் முக்கியமான கருத்தை மட்டும்தான் பார்க்க வேண்டும். வழியருகேயான நிலத்தைப் பற்றி நாம் எவ்வளவோ சொல்லலாம், ஆனால் அதெல்லாம் நமக்கு அவசியமில்லை. ஆண்டவர் அதை ஒரு காரணத்துக்காகத்தான் பயன்படுத்தியிருக்கிறார். அது என்ன காரணம்? ஒரு குறிப்பிட்ட வகை இருதயத்தை சுட்டிக்காட்டுவதற்குத்தான் பயன்படுத்தியிருக்கிறார். அந்த வழியருகேயான பாதையைப் போல இந்த இருதயமும் கடினமாக இருக்கிறது என்பது தான் இங்கே சொல்லப்படுகிறது.
இந்த நிலத்தை கடினமான இருதயமுள்ளவனுக்கு ஆண்டவர் பயன்படுத்துகிறார். அங்கு என்ன நடக்கிறது? ஒரு விவசாயி அந்தப் பாதையான பிரதேசத்தில் விதையைத் தூவிவிடுகிறான். யாருமே வேண்டுமென்றே அப்படிச் செய்வதில்லை. அந்தக் காலத்தில் விவசாயி தன்னுடைய நிலத்தில் நடந்துபோகிறபோது பெரிய கூடை ஒன்றைத் தோளில் வைத்திருப்பான். அந்தக் கூடையில்தான் விதைகள் இருக்கும். கூடையில் இருக்கிற விதைகளை அள்ளி அப்படியே முன்னாலேயும் பின்னாலேயும் தூவிக் கொண்டு நடந்து போவான். அப்படியாக அவன் ஒருபக்கம் நடந்து போன பிறகு மறுபடியும் அங்கிருந்து வந்து மற்ற இடங்களுக்கும் நடந்து விதையைத் தூவி விடுவான். அவன் அப்படியாக தூவுகிறபோது சில விதைகள் வழியருகேயுள்ள பாதைகளிலும் விழுந்து விடுவது வழக்கம். அவ்வாறு விழுவதொன்றும் ஆச்சரியமேயில்லை. அப்படி விழுகிறபோது என்ன நடக்கிறது என்று ஆண்டவர் சொல்லுகிறார், “பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.” (மத்தேயு 13:4). ஏனெனில் எப்போதும் விவசாயி இவ்வாறு விதைகளை விதைக்கிற பொழுது பறவைகள் மேலே வந்து சுற்றிக்கொண்டிருக்கும். தனக்கு வேண்டிய உணவு கிடைக்குமென்று பார்த்துக் கொண்டிருக்கும். விதைகள் இந்தப் பாதையில் விழுந்ததைப் பார்த்த உடனே வேகமாகக் கீழே வந்து கொத்திக் கொண்டு போய்விடும்.
இந்த உதாரணம் அங்கிருந்த எல்லாருக்கும் புரிந்தது. எவ்வளவு அருமையாக ஆண்டவர் மனிதனுக்குப் புரிகிற சாதாரண உதாரணங்களைப் பயன்படுத்திப் பிரசங்கம் செய்திருக்கிறார் என்பதைப் பாருங்கள்! இன்றைக்கு சில பிரசங்கிகள் கொடுக்கிற உதாரணம் மனிதனுடைய மூளைக்குள் நுழைய முடியாதபடி இருக்கின்றன. உதாரணங்களைப் பயன்படுத்துகிற பொழுது அவைகள் எளிமையாக இருக்க வேண்டும், இயேசு சொல்லுகிறது போல குழந்தைகளுக்கும் புரிகிற மாதிரி உதாரணங்களைப் பயன்படுத்த வேண்டும். அப்படித்தான் ஆண்டவர் இங்கே பயன்படுத்துகிறார். பறவைகள் வந்து அந்த விதையை கொத்திக் கொண்டு போய் விடுகிறது. அதனால் விதைக்கு என்ன ஆயிற்று? அதனால் ஒரு பயனும் இல்லை. மாற்குவிலும் லூக்காவிலும் சாத்தான் வந்து அதை எடுத்துக்கொண்டு போய் விடுகிறான் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் பறவைக்கும் சாத்தானுக்கும் தொடர்பு இருக்கிறது. இது எப்படிப்பட்ட ஒரு இருதயம்? இது அந்த நிலத்தைப் போல ஒரு கடினமான இருதயம். பிரசங்கத்தின் மூலமாக அந்த விதையான வார்த்தை அந்த இருதயத்தில் தூவப்படுகிறபோது, அப்படிப்பட்ட மனிதன் என்ன செய்து விடுகிறான்? அதனால் பயனடையாமல் போய்விடுகிறான். ஏன் பயனடையாமல் போய்விடுகிறான்? பறவைகள் கொத்திக் கொண்டு போவது போல சாத்தான் வந்து அதை எடுத்துக்கொண்டு போய் விடுகிறான். அதற்கு காரணம் என்ன? அதற்கு காரணம் அவனுடைய இருதயத்தின் பிரச்சனையே. அது என்ன பிரச்சினை? இந்தக் கடின இருதயம் கொண்டவன் உலக எண்ணங்களை தன்னுடைய இருதயத்தில் வளர்த்துக் கொண்டுள்ளான். அது தாராளவாதமாக இருக்கலாம் அல்லது அவன் கடவுளை நம்பாத ஒரு மனிதனாக இருக்கலாம் அல்லது கடவுளே இல்லையென்று சொல்லுகிறவனாக இருக்கலாம். இப்படியாக ஆவிக்குரிய எந்த விஷயத்துக்கும் தன்னுடைய இருதயத்திலும் மனதிலும் இடம் கொடுக்காமல் இந்த உலகத்து எண்ணங்களாலும் உலகம் போதிக்கின்ற போலித்தனமான விஷயங்களாலும் தன்னுடைய மனதையும் இருதயத்தையும் வளர்த்துக் கொண்டிருப்பதால் அந்த விதை விதைக்கப்படுகிற பொழுது, சத்தியம் சொல்லப்படுகிற பொழுது இவன் அந்த சத்தியத்தை ஜாக்கிரதையாக கவனத்தோடு கேட்பதில்லை. அது ஒரு காதில் விழுந்து மற்றக் காதின் வழியாகப் போய்விடுகிறது. அவன் சத்தியத்துக்கு கொடுக்க வேண்டிய ஒரு மரியாதையோடும் பயத்தோடும் அதைக் கேட்பதில்லை. அவனுக்கு அந்த சத்தியத்திலே எந்தவிதமான பற்றோ விருப்பமோ இல்லை. அவனுடைய காதும் மனதும் இருதயமும் அந்த சத்தியத்தைப் பெற்றுக் கொள்வதில் எந்தவிதமான அக்கறையும் காட்டாமல் அதை அலட்சியப்படுத்தி, அலட்சிய மனப்பான்மையோடு கேட்பதால் பிசாசு அதை எடுத்துக்கொண்டு போய்விடுகிறான். அதனால் அவனுக்குப் பயன் கிடைப்பதில்லை. பிசாசு அதை எடுத்துக் கொண்டு போய்விடுகிறான் என்று சொல்லுவதற்கு காரணம் இவன் அதனால் பயனடைவதற்கு எதையுமே செய்யவில்லை என்பதைத்தான் ஆண்டவர் இதன் மூலம் உணர்த்துகிறார்.
ஏன் இவ்விதம் நடக்கிறதென்று கேட்டால் கடின இருதயம் உள்ளவர்கள் அந்தக் கடினமான இருதயத்தைக் கொண்டிருப்பதற்கு காரணம் பாவம்தான். மனிதனைப் பிடித்திருக்கிற மூல பாவம்தான் அதற்குக் காரணம். இந்த மூல பாவத்தின் காரணமாக அவன் உலக மனிதனாக உலக விஷயங்களில் நாட்டம் காட்டி சத்தியத்திற்கும் ஆண்டவருக்கும் தேவ பக்திக்கும் எந்தவிதமான இடத்தையும் தன்னுடைய இருதயத்திலும் வாழ்க்கையிலும் கொடுக்காததால் அவனுடைய இருதயம் மிகவும் கடினப்பட்டு சத்தியத்தை மிதிக்கிறவனாக இருக்கிறான். ரோமர் முதலாவது அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். அதில் சத்தியத்தை அடக்குகிறவன் சத்தியத்தை மிதிக்கிறவனாக இருக்கிறான் என்று விளக்கப்பட்டிருக்கிறது. சத்தியத்தில் பயனடைகிற ஒரு இருதயத்தை அவன் கொண்டிருக்கவில்லை. அப்படிப்பட்டவனுடைய வாழ்க்கையில் யார் ராஜாவாக இருப்பார்? பிசாசுதான் ராஜாவாக இருப்பான். அந்தப் பிசாசு என்ன செய்கிறான்? தன்னுடைய வழிகளை இவன் பின்பற்றுவதனாலே அவன் சத்தியத்தினால் எந்தவிதப் பயனையும் அடைய முடியாது செய்துவிடுகிறான்.
மத்தேயு 13:19
“ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.”
இவன் சத்தியத்தை உணராது இருக்கிற பொழுது என்று சொல்லுவது அவன் சத்தியத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிற பொழுது என்று நாம் நினைக்கக் கூடாது. சத்தியம் புரியும்படியாக ஆண்டவர் எளிமையாகத்தான் பேசியிருக்கிறார். இவன் உணராது இருக்கும்போது என்று சொன்னால் அவனுடைய இருதயம் அந்த சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளவும் அதனால் பயனடையவும் முடியாத ஒரு நிலையில் இருக்கிறது. அதற்குக் காரணமென்ன? அவனைப் பிடித்திருக்கிற மூல பாவமே. அந்த மூல பாவத்தினால் இவன் உலக விஷயங்களில் நாட்டம் காட்டி அந்த விஷயங்கள் அவனுடைய மனத்தை ஆளுவதினால் அந்த சத்தியத்தைப் பெற்றுக் கொள்ளுகின்ற ஒரு நிலையில் அந்த இருதயம் இல்லாமல் இருக்கிறது. அதுதான் அந்த இருதயத்தின் பிரச்சினை.
இதுபோன்று எத்தனையோ மனிதரை நாம் பார்க்கிறோம். சபைக்கு வந்து சத்தியத்தைக் கேட்பவர்கள் இருப்பார்கள். இருந்தபோதும் கூட அவர்களுடைய இருதயம் அந்த சத்தியத்தைப் பெற்று பயனடையக் கூடிய பக்குவமில்லாத நிலையில் இருக்கிறது. அந்த இருதயம் வழியருகே உள்ள நிலத்தைப் போலக் கடினப்பட்டுப் போயிருக்கிறது. சத்தியத்தைப் பெற்றுக் கொள்ளுகின்ற ஒரு நிலையில் இல்லை. சத்தியத்தை கேட்கின்ற ஆர்வம் அதிலில்லை. ஒரு அக்கறை அதிலில்லை. கர்த்தரைப் பற்றிய ஒரு பயமில்லை. தன்னுடைய இருதயத்தை ஆளுகிற பாவத்தை அறிந்துகொள்ளும் உணர்வுகள் அந்த இருதயத்தில் இல்லை. அதனால்தான் கடின நிலத்தை ஆண்டவர் உவமையில் பயன்படுத்துகிறார். ஆண்டவரை அறிந்து கொண்டிருக்கிற விசுவாசிக்கிற நாம் இப்படிப்பட்ட இருதயத்தோடுதான் ஒரு காலத்தில் இருந்திருக்கிறோம். ஒரு காலத்தில் எனக்கு கிறிஸ்துவையும் கிறிஸ்தவ மதத்தையும் பிடிக்காமலேயே இருந்தது. உலகத்திலேயே மோசமான ஒரு மதம் கிறிஸ்தவம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தேன். கடின இருதயம் எனக்கும் இருந்திருக்கிறது. இந்த சத்தியத்தை வெறுத்து இயேசுவின் மீது ஒரு மரியாதை காட்டாத ஒரு பயமில்லாத இருதயமாகத்தான் இருந்தது. நாமெல்லாருமே சத்தியத்தை ஒதுக்கிவைத்து வாழ்ந்த ஒரு காலத்தை நினைவுகூர முடியும். கடின இருதயங்களால் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. இதுதான் உணராதிருக்கும்போது என்பதற்கு அர்த்தம். சத்தியம் புரியாமல் இல்லை, அதை ஏற்றுக்கொள்ளுகிற மனப்பக்குவமும் அதை விரும்பி ஏற்றுக்கொள்ளுகிற இருதயமும் இல்லை. சத்தியத்தை எதிர்க்கின்ற இருதயம்தான் கடின இருதயம். ஏனென்றால் விதை அங்கு விழுந்தால் வேர் விட்டு அது வளர முடியாது. பிசாசு ஆளுகிற ஒரு இருதயத்தில் சத்தியத்திற்கு எங்கு இடமிருக்க முடியும்? இதைத்தான் ஆண்டவர் இங்கு விளக்குகிறார்.
இப்படிப்பட்ட கடின இருதயத்தைக் கொண்டவர்களை வேதத்தில் நாம் அடையாளம் காணமுடியும். பவுல் சொல்லுகிறார்,
“எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.” (2 கொரிந்தியர் 4:3, 4)
எபேசியர் இரண்டாம் அதிகாரத்திலும் இதைச் சொல்லுகிறார். உலகத்து விஷயங்களாலே ஆளப்படுகின்ற மனிதனுடைய இருதயம் சத்தியத்துக்கு இடம் கொடுக்காது. அப்படிப்பட்ட நிலையில் தான் பொதுவாக மனித குலமே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட இருதயங்களில் ஒளி வீசுவதற்காகத்தான் சுவிசேஷமாகிய சத்திய ஒளி ஆண்டவரினாலே மனிதனுக்குக் கொடுக்கப்படுகிறது. வேதத்தில் ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.
பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலை அதிகமாக துன்பப்படுத்திய எகிப்து ராஜாவைப் பார்க்கிறோம். பார்வோனாகிய அவனைப்பற்றி வேதத்தில் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கிறது. அவன் தன் இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான் என்று யாத்திராகமம் 8:15, 19, 32 வசனங்கள் சொல்லுகின்றன.
யாத்திராகமம் 8:15, 19, 32
- இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்; கர்த்தர் சொல்லியிருந்தபடி ஆயிற்று.
- அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.
- பார்வோனோ, இந்த முறையும் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, ஜனங்களைப் போகவிடாதிருந்தான்.
ஆண்டவர் மோசேயை அனுப்பி தன் செய்தியைக் கொடுத்தார். எவ்வளவோ அற்புதங்களை அவன் கண் முன்னாலேயே பார்க்கும்படிச் செய்து காட்டினார். மோசேயின் மூலமாக பார்வோனுக்கு ஆண்டவருடைய வசனத்தை கேட்கின்ற ஒரு வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இருந்தபோதும், அவன் அநேக தடவை ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டபொழுதும் அவன் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். ஏனென்றால் அவன் இருதயம் பிசாசினால் ஆளப்பட்டு உலகத்தின் இச்சைகளையும் உலகத்தின் சிந்தனைகளையும் பின்பற்றி வந்ததால் அவனால் கர்த்தருடைய வார்த்தையின் மூலம் பலனடைய முடியவில்லை.
புதிய ஏற்பாட்டில் இன்னொரு உதாரணத்தையும் பார்க்கிறோம். அவன் ஏரோது; யோவான்ஸ்நானனை கொலை செய்தவன். தன்னுடைய சகோதரனுடைய மனைவியோடு முறைகேடாக வாழ்ந்து கொண்டிருந்தவன். அவன் செய்த அந்தப் பாவமான செயலை யோவான் ஸ்நானன் அடிக்கடி அவனுக்குச் சுட்டிக்காட்டி மனந்திரும்ப வேண்டுமென்று சொல்லியிருக்கிறான். அதற்கு அவன் என்ன செய்தான்? அவன் கோபத்தில் தன்னோடு வாழ்ந்து கொண்டிருந்தவளுடைய பேச்சைக் கேட்டு யோவான்ஸ்நானனை சிறையில் அடைத்தான். சிறையில் அடைத்த பொழுதும் யோவானின் செய்திகளில் விஷயம் இருக்கிறது என்று அவன் தெரிந்து ஒவ்வொரு இரவும் வந்து யோவானிடம் இயேசுவைப்பற்றிச் சொல்லும்படி அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். அவன் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டிருந்தது. யோவான்ஸ்நானன் சொல்லுகின்ற செய்தியில் அவனுக்கு ஓரளவுக்கு அக்கறை இருந்தது, அதைக் கேட்பதில் ஆர்வம் காட்டினான், தொடர்ந்து ஒவ்வொரு இரவும் வந்து கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால் இறுதியில் என்ன நடந்தது? இருதயம் கடினப்பட்டு பிசாசினால் ஆளப்பட்டு, அந்த இருதயத்தில் அந்த சத்திய விதை பலன் கொடுக்கவில்லை. தான் மனைவியாக்கிக் கொண்டவளுடைய பேச்சைக் கேட்டு, அவன் இறுதியில் யோவான்ஸ்நானனின் தலையை வெட்டிக் கொண்டு வரும்படிச் செய்தான். அவனைக் கொலை செய்து கடைசிவரைக்கும் தன் இருதயம் மாறவே இல்லை என்பதைக் காட்டினான். அந்த இருதயம் வழியருகேயான நிலத்தைப் போல மிகவும் கடினப்பட்டுப் போய் பிசாசால் ஆளப்பட்டது. அந்த இருதயத்திலே சத்திய பயம் இருக்கவில்லை. ஏரோதுவுக்குத் தான் செய்த பாவம் பற்றிய ஒரு பயம் இருந்தது, ஆனால் அந்த பாவத்திலிருந்து திருந்துகிற இருதயம் இருக்கவில்லை. குற்ற உணர்ச்சி மட்டுமே ஒருவனுக்கு இரட்சிப்பைக் கொடுக்காது. குற்ற உணர்ச்சி மனம் திரும்புதலில் போய் முடியாதவரையும் அதனால் எந்தப் பயனுமில்லை. சில பேர் குற்ற உணர்ச்சி வந்தால் அது போகும்படியாக நன்றாக மதுவைக் குடித்துவிட்டு தூங்கி எழும்புவார்கள். ஆனால் அந்தக் குற்ற உணர்ச்சி மனந்திரும்புதலில் போய் முடியவில்லை என்றால் அதால் எந்தப் பிரயோஜனமுமில்லை.
இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். இஸ்ரவேலை கவனித்துக்கொண்டிருந்த ரோமப் படைகளுக்குத் தளபதியாக இருந்தவன் பிலாத்து. இந்த பிலாத்துவுக்கும் கூட பலமுறை இயேசுவை சந்திப்பதற்கு பெரிய வாய்ப்புகள் கிடைத்திருந்தன. அவனால் இயேசுவோடு சிலதடவை சம்பாஷனை செய்ய முடிந்தது. அவன் இயேசுவைப் பார்த்து சத்தியம் எது என்று கேட்டான். இயேசு அதற்கு பதில் சொல்லவில்லை. எல்லா ஜனங்களும் சொல்லுவதைப் போல இஸ்ரவேலருக்கு நீ ராஜாவா என்று கேட்டிருக்கிறான். இயேசு அவனுக்கு பதிலும் சொல்லியிருக்கிறார், சில விளக்கங்களையும் கொடுத்திருக்கிறார். ஆகவே தேவ ராஜ்ஜியத்திற்குரிய செய்தியை பலதடவை கேட்க கூடிய வாய்ப்பு அவனுக்குக் கிடைத்திருந்தது. பிலாத்து மிகவும் மோசமானவன். அப்போஸ்தல விசுவாச அறிக்கையில் இவனைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இயேசுவைத் துன்புறுத்திய பிலாத்து என்று அது குறிப்பிடுகிறது. இயேசு இந்த உலகத்தில் கொலை செய்யப்பட்டதற்குக் காரணமான ஒருவனாக அது அவனைக் காட்டுகிறது. ஏனெனில் இவன் அனுமதி கொடுக்காமல் அது நடக்கவில்லை என்பதே உண்மை. சத்தியத்தைக் கேட்கின்ற வாய்ப்பு அவனுக்குக் கிடைத்த பொழுதும் அவனுடைய மனைவி கூட இயேசுவைப் பற்றி எச்சரிக்கை செய்திருந்தபோதும் அவன் கடைசிவரை அவருடைய மரணத்திற்குக் காரணமாக இருந்துவிடக்கூடாது என்று கை கழுவுவதற்குத்தான் முயற்சி செய்து கொண்டிருந்தான். அவன் மனைவி இந்த மனுஷனை ஒன்றும் செய்யாதே, அவர் ஒரு நீதிமான் போலத் தெரிகிறது, என்னுடைய கனவில் வந்து பலவிதமான பயத்தை இந்த மனிதர் ஏற்படுத்துகிறார், ஆகவே நீ கவனத்தோடு இரு என்று தன் புருஷனுக்கு ஆலோசனை சொன்னாள். ஆனால் அவன் எதற்கும் செவி கொடுக்கவில்லை.
யூதர்கள் பிலாத்துவிடம் சொன்னார்கள்: நீ இந்த மனுஷனை கொலை செய்யவில்லை என்றால் ரோமர்களோடு உனக்கு பிரச்சனை வரும். ஏனெனில் இவர் இஸ்ரவேலுக்கு ராஜா என்று சொல்லுகிறார். அது உண்மையானால் ரோம பேரரசர் இஸ்ரவேலுக்கு ராஜா இல்லை என்றாகிவிடும். அப்பொழுது பிலாத்துவிற்கு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அதினால் அவன் பேரரசரோடு தனக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். பிலாத்து சுயநலம் பிடித்தவன். அவனுக்கு சுவிசேஷத்தின் மேலோ இயேசுவின் மேலோ எந்தவிதமான அக்கறையும் இருக்கவில்லை. குற்ற உணர்வு ஏற்பட்ட பொழுதும் அவன் இறுதியில் அந்த யூதர்கள் கேட்டுக் கொண்டபடியே அனுமதி கொடுத்து ஆண்டவரைத் துன்புறுத்தி அவர்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தான் என்று வேதம் சொல்லுகிறது. பிலாத்துவுக்கும் கூட சத்தியம் அவன் காதுக்குப் போய்ச் சேரும் வசதிகள் கிடைத்த பொழுதும், இயேசுவை நேரடியாகச் சந்தித்திருந்த பொழுதும், அவருடைய வார்த்தைகளைக் கேட்டிருந்தபொழுதும் அவனால் மனந்திரும்ப முடியவில்லை. அவன் இருதயம் வழியருகேயான கடின இருதயமாகத்தான் இருந்தது. இதுபோன்ற இருதயத்தை கொண்டிருப்பவர்களுக்கு வசனத்தினால் பயன் ஏற்படாது. அதனால்தான் தேவனுடைய வசனத்தைக் கேட்கிறபோது அலட்சிய மனப்பான்மையோடு இருந்தாலோ, கவனக்குறைவாகக் கேட்டாலோ, மற்றவர்கள் ஏதாவது சொல்லுவார்கள் என்று நினைத்தாலோ அதனால் நமக்கு எந்தவிதமான பயனுமில்லை.
நம் இருதயம் வசனத்தைக் கேட்பதற்காகத் தயார் செய்யப்பட வேண்டும். எப்போதும் பிரசங்கம் கேட்பதற்கு முன் ஜெபம் பண்ண வேண்டும்.
“ஆண்டவரே இந்தப் பிரசங்கத்தினாலே என்னுடைய இருதயம் பாதிக்கும்படியாக, இருதயம் பலனடையும்படியாக உம்முடைய ஆவியின் மூலமாக எனக்கு உதவிசெய்யும். நான் கேட்கப் போவது சத்தியம், சத்தியத்தை நான் அரைகுறையாகக் கேட்டுவிடக்கூடாது, அதில் எல்லாவற்றையும் நான் பெற்றுக்கொள்ள வேண்டும். அதை பேசுபவருக்கும் உதவி செய்யும் ஆண்டவரே, அதேபோல அதைப் பெற்றுக்கொள்ளப் போகிற எனக்கும் உதவிசெய்யும் ஆண்டவரே” என்று ஜெபம் பண்ண கூடிய ஒரு விஷயம் சத்திய பிரசங்கத்தைக் கேட்கும் போது காணப்பட வேண்டும்.
நம் இருதயம் அதற்காகப் பக்குவப்படுத்தி தயார் செய்யப்பட வேண்டும். கடின இருதயம் கொண்டவர்கள் வசனத்தையும் ஆண்டவரையும் அலட்சியப்படுத்தி உலக இச்சைகளாலும் உலகப் போதனைகளாலும் நிறைந்து சத்தியத்திற்கு மதிப்பு கொடுக்கமாட்டார்கள். அவர்கள் சத்தியத்தினால் ஒருநாளும் பயனடைய முடியாது. உங்களுக்கு எப்படிப்பட்ட இருதயம் இருக்கிறது என்பதை யோசித்து பாருங்கள். நீங்கள்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.
மோட்சப் பிரயாணத்தை எழுதிய ஒரு பெரிய பியூரிட்டன் பெரியவரும், பாப்திஸ்து பிரசங்கியுமான ஜோன் பனியனை அருமையான நூல்களையெல்லாம் ஆண்டவர் எழுத வைத்திருக்கிறார். இந்த ஜோன் பனியன் ஆண்டவரை விசுவாசித்து கிறிஸ்தவரானார். அவர் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றி அருமையாக மோட்சப் பிரயாணத்தில் எழுதி இருக்கிறார். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் பனியன் ஆண்டவரிடம் வருவதற்கு முன்பு 30 வருஷங்களுக்கு இங்கிலாந்தில் பேட்ஃபேடு (Bradford) என்ற இடத்தில் மிகக் கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இயேசுவை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி கிறிஸ்துவுக்கும் கிறிஸ்தவத்திற்கும் தன்னுடைய இருதயத்தில் எந்தவிதமான இடத்தையும் கொடுக்காமல் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த அந்தக் கிராமத்திலேயே மிகவும் மோசமான தேவ பக்தியில்லாத மனுஷனாக இருந்தார். அப்படிப்பட்ட ஒரு கடின இருதயத்தைக் கொண்டிருந்தவராக ஜோன் பனியன் இருந்திருக்கிறார். அவர் தன்னைப் பற்றி ஒரு இடத்தில் சொல்லி இருக்கிறார், “ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவினுடைய வார்த்தையைக் கேட்டால் அவன் இரட்சிப்பு அடைந்து விடுவான் என்பது பிசாசுவுக்கும் கூட தெரிந்திருக்கிறது” என்று. இயேசுவின் வார்த்தையை ஜோன் பனியன் விசுவாசித்து இரட்சிப்பை அடைந்தார். ஆனால் அவருடைய வாழ்க்கை முப்பது வருடங்களுக்கு மோசமாக இருந்தது. ஆண்டவரை நிந்தனை செய்கிற, கடின இருதயத்தோடு இருக்கின்ற மனிதனை உடைக்கக் கூடியவர் ஆண்டவர் மட்டுமே.
கடின இருதயங்களை ஆண்டவரால் உடைக்க முடியாது என்று நினைத்துவிடாதீர்கள். கடின இருதயங்களை உடைக்கிறவர் அவர்தான். அவரால் மட்டும்தான் அது முடியும். ஆனால் கடின இருதயத்தோடு நாம் இருந்துவிடக்கூடாது. கடின இருதயம் கொண்டவர்களுக்காக நாம் ஜெபம் பண்ண வேண்டும். நம்முடைய இருதயம் கடினப்பட்டு விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு நம்முடைய கையில் இருக்கிறது. விசுவாசிகளும் கூட தங்களுடைய இருதயத்தை ஒருசில காரியங்களில் கடினப்படுத்திக்கொள்ள முடியும். வேதம் தங்கள் குற்றத்தை உணர்த்தும் என்பதற்காக அதைத் தள்ளி வைக்கப் பார்ப்பார்கள். பிரசங்கிகள் இதயத்தைப் பாதிக்கக்கூடிய பிரசங்கங்களைக் கொடுத்தால் அதை விரும்பாமல், தங்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய பிரசங்கங்களைத் தாருங்கள் என்று சொல்லக் கூடியவர்கள் இருக்கலாம். ஆனால் அப்படி இருக்கக் கூடாது. இருதயத்தை தாக்கிப் பிளக்கக்கூடிய பிரசங்கங்களை நாம் கேட்க வேண்டும். பாவத்தை உணர்த்துகிற பிரசங்கத்தைக் நாம் கேட்க வேண்டும். அதன் மூலமாகதான் நமக்கு ஜீவன் கிடைக்க முடியும். கடின இருதயம் நமக்கு உதவி செய்யாது. ஆகவே நம்முடைய இருதயத்தை நாம் ஆராய வேண்டும். மனுஷன் பொறுப்புள்ளவனாக இருக்கும்படி ஆண்டவர் அவனைப் படைத்திருக்கிறார். அவருக்குப் பதில் சொல்லக் கூடிய ஒரு நிலையில் நம்மை ஆண்டவர் படைத்திருக்கிறார். ஆகவே நம்முடைய இருதயத்தை நாம் தேவனுடைய வார்த்தைக்கு எதிராகக் கடினப்படுத்திக் கொள்ளக்கூடாது. சத்தியமாகிய விதையை ஒவ்வொரு தடவை கேட்கிற பொழுதும் இருதயத்திலிருந்து பலன் கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தோடுதான் நாம் சத்தியத்தைக் கேட்கவேண்டும். முக்கியமாக சுவிசேஷத்தை அந்த விதத்தில்தான் கேட்கவேண்டும்.
சுவிசேஷத்தை அறியாதவர்கள் இருந்தால் நீங்கள் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்காதீர்கள். உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதிருங்கள். பொல்லாதவனாகிய சாத்தான் உங்களை அழிப்பதற்குதான் முயற்சி செய்கிறான். அதிலிருந்து விடுதலை கொடுக்கக்கூடிய இயேசுவினுடைய வசனத்தைக் கேட்டு, அதை விருப்பத்தோடு ஏற்று, பாவத்திலிருந்து மனந்திரும்பி, தேவனாகிய இயேசு மட்டுமே அளிக்கக்கூடிய பாவமன்னிப்பையும் இரட்சிப்பையும் இரண்டு கரத்தையும் நீட்டி வாங்கிக் கொள்ளக் கூடிய இருதயமுள்ளவர்களாக இருக்க வேண்டும். விசுவாசிகளும் கூட வசனத்தை பதப்படுத்தப்பட்ட இருதயத்தோடு ஜெபத்தோடு எப்பொழுதும் கேட்டு வாங்கவேண்டும். அப்போதுதான் அதன் மூலமாக நமக்கு பலன் இருக்கிறது. இதற்காகத்தான் ஆண்டவர் இந்த உவமையைப் பயன்படுத்தியிருக்கிறார். தேவனுடைய வார்த்தைக்கும் நம்முடைய இருதயத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. எப்பொழுது நாம் விருப்பத்தோடும் தேவ பயத்தோடும் அந்த வசனத்தைக் கேட்கிறோமோ அப்பொழுது அதனால் நிச்சயமாக பயனடைவோம்.
உங்கள் இருதயம் எப்படி இருக்கிறது? அது கடினப்பட்டு இருக்கிற இருதயமா? அல்லது இளகிப் போய் ஆண்டவருடைய வசனத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் இருக்கிற இருதயமா? அதை நீங்கள்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இளகிப் போயிருக்கிற இருதயம் நிச்சயமாகச் சத்திய விதையினால் பயனடைய கூடியதாக இருக்கும். உலக இச்சைகளினாலே கடினப்பட்டு போயிருக்கிற இருதயம் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது. ஆண்டவர் உங்களை வசனத்தின் மூலமாக ஆசீர்வதிக்கட்டும். வசனம் மட்டும் தான் நமக்கு ஜீவனைக் கொடுக்கும். அந்த வசனத்திற்கு நாம் எதிர்த்து நிற்கக் கூடாது. தேவன் உங்களோடு கூட இந்த வசனத்தின் மூலமாக பேசட்டும்.
ஆவிக்குரிய போதகனா? அடக்கியாளும் ஆகாபா?
போலிப் பிரசங்கிகளையும், போலிப்போதகர்களையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். வேதம் அத்தகையோரைப் பற்றி எச்சரிக்கை செய்து சபைகளுக்குள் அவர்களுக்கு இடங்கொடுக்கக் கூடாது என்று தெளிவாகவே விளக்குகிறது. ஆனால், அந்தவிதத்தில் போதிக்கும் விஷயத்தில் முழுப் போலிகளாக இல்லாமல் திருச்சபையை நடத்துகின்ற விதத்தில் போலித்தனத்தைக் கையாளுகிறவர்களைப் பற்றி எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை. நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இந்தப் போலித்தனம் காட்டாறாகப் பாய்ந்தோடி எந்த ஆவிக்குரிய கூடுகையும் வேதபூர்வமான திருச்சபையாக இல்லாமல் இருக்கும்படிச் செய்து வருகிறது.
சமீபத்தில் நான் கேள்விப்பட்டேன். ஒரு சபைப்போதகர் திருச்சபை அங்கத்துவம் என்பது வேதத்தில் இல்லாததொன்று என்று சொல்லியிருக்கிறார். இந்த அறிவாளி அதை எங்கிருந்து கற்றுக்கொண்டார் என்று தெரியவில்லை. இந்த மனிதர் சொல்கிறார் என்பதற்காக வேதத்தில் சபை அங்கத்துவம் இல்லை என்று சொல்லமுடியுமா? நான் எழுதி வெளியிட்டிருக்கும் “அங்கத்துவம் இல்லாத திருச்சபையா?” எனும் நூலை வாங்கி வாசியுங்கள். வேதம் அதுபற்றி எந்தவகையில் விளக்குகின்றது என்பதை முதல் தடவையாகத் தெரிந்துகொள்ளலாம்.
நம்மினத்தில் பெரும்பாலான சபைப் போதகர்கள், பத்துப்பேரைக்கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு, தங்களைத் தாங்களே கேள்வி முறை எதுவும் இல்லாமல் போதகராக நியமித்துக் கொண்டு, எந்தவிதத் தரமான இறையியல் அறிவும் இல்லாமல், போதகப் பிரசங்கப் பயிற்சி பெறாமல், எவருக்கும் கீழிருந்து தாழ்மையோடு கற்று, அனுபவத்தை அடையாமல் ஊழியக்காரர்கள் என்ற பெயரில் ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பதே இந்த அவல நிலைக்குக் காரணம். ஒரு கிறிஸ்தவனாவது, “ஐயா, நீங்கள் போதகராக யாரால் நியமிக்கப்பட்டீர்கள்? உங்கள் அழைப்பிற்கும், பணிகளுக்குமான தகுதிகள் என்ன?” என்றே கேட்பதில்லை. கண்ணை மூடிக்கொண்டு அவர்களைப் பின்பற்றி அநேகர் ஏமாந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். ஒரு கடையில் பொருள் வாங்கும்போது கூட ஆயிரம் கேள்விகளைக் கேட்கும் நாம், ஆத்துமாவுக்கு பாதுகாப்பளிக்கின்ற தகுதியை ஒருவன் கொண்டிருக்கிறானா? என்று ஒரு கேள்வியைக்கூடக் கேட்காத பலவீனத்தோடு வாழ்ந்து வருகிறோம்.
திருச்சபை என்பது ஆவிக்குரிய ஒரு நிறுவனம். அது ஆவிக்குரியது மட்டுமல்ல, ஆவிக்குரிய நிறுவனம். இந்த இரண்டும் இல்லாததற்குப் பெயர் திருச்சபை அல்ல.
முதலில், ஆவிக்குரியது என்றால், கண்களுக்குச் தெரியாமல் காணப்படுவது என்று அர்த்தமல்ல. அது ஆவியினால் மறுபிறப்பை அடைந்தவர்களை மட்டுமே கொண்டிருக்கும் அமைப்பு என்பதே அதற்குச் சரியான பொருள். பாவியாகிய மனிதனின் பாவத்தைப் போக்கி ஆவியானவர் அவனுக்கு மறுபிறப்பைத் தந்து இரட்சித்திருக்கிறார். அதனால் அவன் ஆவிக்குரிய மனிதன். அத்தகையோரைக் கொண்டு கூட்டிச் சேர்க்கப்பட்டதே திருச்சபை. ஆவிக்குரியவர்களாக இல்லாதோருக்கு அதில் இடமில்லை. அதை அப்போஸ்தலர் நடபடிகள் நூலில் வாசிக்கலாம். திருச்சபையில் அத்தகையோரை மட்டுமே அப்போதலர்கள் இணைத்துக் கொண்டார்கள்.
இரண்டாவது, திருச்சபை ஆவிக்குரிய ஒரு நிறுவனம். நிறுவனம் என்ற வார்த்தை கட்டுப்பாட்டோடு இயங்கும் ஒரு அமைப்பு என்பதை விளக்குகிறது. உலகத்தில் காணப்படும் அரசு முதற்தொடங்கி அத்தனை நிறுவனங்களும் இந்தவகையில்தான் இயங்கி வருகின்றன. ஒரு நிறுவனம் அதில் இருப்பவர்களும், மேலாளர்களும் அந்த நிறுவனத்திற்குரிய இலக்கணத்தோடும் இலட்சியங்களோடும் நீதியான முறையில் இந்த உலகத்தில் இயங்கி வர அதற்கு அமைப்பும், சட்டவிதிகளும் தேவை. ஒவ்வொரு நிறுவனமும் அவற்றைக் கொண்டிருக்கும். இந்த முறையில் இஸ்ரவேல் பழைய ஏற்பாட்டில் இயங்கி வந்திருந்தது. அதற்கு நியாயப்பிரமாணத்தைக் கர்த்தர் இதற்காகக் கொடுத்திருந்தார். அதை மீறுகிறவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். இந்த முறை புதிய ஏற்பாட்டில் காணப்படவில்லை என்று நினைக்கிறவர்கள் வேத அறிவில்லாத ஞானசூனியங்கள். அப்படியில்லாமலா, இயேசு கிறிஸ்து சபையில் பாவம் செய்கிற ஒருவனை எப்படித் திருத்துவது என்பதற்காக மத்தேயு 18லும், 1 கொரிந்தியர் 7லும் இன்னும் அநேக பகுதிகளில் ஒழுங்கு நடவடிக்கையை சபையில் பின்பற்றும் முறைகளை விளக்கியிருக்கிறார். இந்த விதிகளையும், இதுபோன்ற வேதம் விளக்கும் ஏனைய விதிமுறைகளையும் கொண்டு அமைந்திருப்பதுதான் திருச்சபை சட்டவிதிகள். 1 தீமோத்தேயு, தீத்து ஆகிய பகுதிகளில் போதகர்கள், உதவிக்காரர்களுக்கான இலக்கணங்களைத் தந்து, இவற்றைக் கட்டாயமாகக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே சபைத்தலைவர்களாக இருக்கவேண்டும் என்றும் கர்த்தர் விளக்கியிருக்கிறார். இதையெல்லாம் சபை சட்டவிதிகள் தெளிவாக விளக்க வேண்டும்.
திருச்சபை சட்டவிதிகளையும், ஒன்றுக்கு மேற்பட்ட தலைவர்களையும் ஒரு சபை கொண்டிராது இருக்குமானால் அதை நடத்திவருகிற போதகன் எதையும் தான் நினைத்தபடி செய்து ஒரு போப்பாக, ரவுடியைப்போலத் தன்னிச்சையாக செயல்பட்டு, தன் சொந்தங்களுக்குப் பதவியளித்து, ஆத்துமாக்களுக்கு ஆபத்து விளைவிக்கிறவனாக இருந்துவிடுவான். அதுவே நம்மினத்தில் அதிகம் நிகழ்ந்து வருகிறது. ஆவிக்குரிய போதகனாக இருக்கின்ற ஒருவனுக்கும் கட்டுப்பாடு அவசியம், அவன் கணக்குக்கொடுத்து நடந்துகொள்ளுபடியாக ஒரு நிறுவன அமைப்பு அவசியம். சபை அமைப்பும், சபை சட்டவிதிகளும் இல்லாத ஒரு கூட்டத்தை திருச்சபை என்ற பெயரில் அழைக்கமுடியாது; அதற்கு வேதம் அனுமதி தரவில்லை. அவையில்லாத இடத்தில் ஒழுங்கு என்பதற்கு இடமேயிருக்காது. பணவிஷயங்களிலும் துணிகரமான பாவங்கள் நிகழும். அது நியாதிபதிகள் நூலில் பல இடங்களில் சொல்லப்பட்டிருப்பதைப்போல, “அந்நாட்களில் இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானபடி செய்து வந்தான்” என்றவிதத்தில் மட்டுமே செயல்படும். கர்த்தரின் வழிமுறைப்படி அமைக்கப்படாததும், சபை சட்டவிதிகள் மற்றும் விசுவாச அறிக்கையைக் கொண்டிருந்து கவனத்தோடும், தாழ்மையோடும் செயல்படாத கூடுகைகள் ஆத்துமாக்களுக்கு மிகவும் ஆபத்தானவை. வேத ஞானமில்லாமல் ஆத்துமாக்கள் தொடர்ந்திருப்பதாலும், தரமில்லாத ஊழியக்காரர்களின் தொகை பெருகிக் காணப்படுவதும், ஆவியானவரின் வல்லமையான கிரியைகளை நம்மினம் காணாமல் இருப்பதுமே இத்தகைய பலவீனமான நிலைக்குக் காரணம்.
கிறிஸ்தவ வேதத்தில் துல்லியமான ஞானமில்லாதவர்களெல்லாம் இந்த ஊழியத்துக்கு வந்துவிடுகிறார்கள். கர்த்தர் அழைத்தார் என்ற கனவின் உந்துதலால் உழைத்துப் பணம் சம்பாதித்து வாழ்வதற்கான ஒரு வேலையைத் தேடிக்கொள்ளாமல் பத்துப் பதினைந்து பேரைக் கூட்டிக்கொண்டு (பெரும்பாலும் பெண்கள்) அதைக் கிறிஸ்தவ ஊழியமாகக் கருதி கையில் எந்தப் பணமும் இல்லாமல் சுவிசேஷம் சொல்லப் புறப்பட்டுவிடுகிறார்கள். பணமில்லாமல் சொந்தத் தேவையைத் தீர்த்துக்கொள்ள வழிதெரியாமல் பணத்திற்காக அலைய ஆரம்பித்து விடுகிறார்கள். குறுக்குவழிகளைத் தேடிக் கண்டுபிடித்து பணத்தைப் பெருக்கிக் கொள்ளுகிறார்கள். உண்மையில் இவர்கள் கர்த்தரால் அழைக்கப்படவே இல்லை; அது அவர்களுடைய வெறும் கனவு மட்டுமே. இவர்களுக்கு வேத இறையியல் தெரியாது; போதக நுணுக்கமோ, அனுபவமோ இருக்காது. அவர்களுடைய விசுவாசமும் பலவீனமானதாக, பரிசுத்த வாழ்க்கையும் தடுமாற்றமுள்ளதாகக் காணப்படும். இத்தகைய அநேக ஊழியக்காரர்கள் யூடியுபில் நிரம்பி வழிகிறார்கள். அவர்களுடைய செய்திகள் உப்புச்சப்பற்றவையாக, ரசனையற்றவையாக, சத்தியப்புரட்டல்களாகக் காணப்படும். வேத ஞானத்தில் அவர்களைவிடத் தாழ்ந்த நிலையிலிருக்கும் கிறிஸ்தவர்கள் இவர்களை நம்பி மோசம் போய் வாழ்ந்து வருகிறார்கள். இதுதான் நம்மினத்தில் பரவலாகக் காணப்படும் அவல ஊழியம். பட்டிதொட்டியெல்லாம் இதைத்தான் காண்கிறோம். திருச்சபைக்குரிய வேத இலக்கணங்களையெல்லாம் இவர்கள் செய்யும் பணிகளில் காணவே முடியாது. சுயநல நோக்கத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு இவர்கள் இயங்கி வருகிறார்கள். ஊழியம் இவர்களுக்கு வியாபாரமாகி விட்டது; வாழ்வாதாரத்திற்குத் துணைபோகும் கருவியாகிவிட்டது.
இதெல்லாம் இருக்கட்டும், இன்று சபைகள் என்ற பெயரில் இத்தகைய போலித்தனமான கூட்டங்கள் எந்தவித அமைப்பையும் கொண்டிராமல் கேள்விமுறையில்லாமல் இயங்கி வருகிறபோது, சீர்திருத்த விசுவாசத்தைக் கொண்டிருப்பதாக மாரடித்துக்கொண்டு திருச்சபை நடத்தி வருகிறவர்கள் கர்த்தர் வேதம் தெளிவாகக் காட்டியிருக்கும் திருச்சபை அமைப்பையும், அது பரிசுத்தத்தோடு இயங்கிவருவதற்கான சட்டவிதிகளையும் கொண்டிருந்து, அவற்றிற்கு மதிப்புக்கொடுத்து, ஆத்துமாக்களுக்குப் பாதுகாப்பளித்து நடந்து வருகின்றனவா? சீர்திருத்தப் போதகர்கள் தங்கள் இருதயத்தைப் பாதுகாத்து, ஆத்துமாக்களுக்கு கணக்குக்கொடுத்து ஏனையோருக்கு ஆபத்தில்லாதவர்களாக, போப்பாகவோ அல்லது ரவுடித்தனத்தோடோ செயல்படாதவர்களாக இருந்து வருகிறீர்களா?
என்னடா, ரவுடி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறாரே என்று சிந்திக்கிறீர்களா? தனக்குப் பிடிக்காததை ஒரு ஆத்துமா செய்துவிட்டது என்பதற்காக அவருடைய மகனின் பள்ளிப்படிப்புக்கான பணத்தை நிறுத்திவிட்ட ஒரு போதகனை ரவுடி என்று சொல்லாமல் வேறு எந்த வார்த்தையில் அழைப்பது? தன்னைக் கேள்வி கேட்டுவிட்டார்களே என்பதற்காக ஆத்துமாக்களை போலிஸை வைத்து மிரட்டுகிறவன் ரவுடியில்லாமல் வேறு யார்? சபைப் பணத்தைத் தான் நினைத்த முறையில் பயன்படுத்தி ஆத்துமாக்களுக்கு எந்தக் கணக்கையும் ஒழுங்காகக் காட்டாமல் இருந்து வருகிறவன் நீதியான போதகனா? சபையில் அடுத்த கட்டத் தலைவர்களை எழமுடியாமலும், அதற்கான எந்தப் பயிற்சியையும் எவருக்கும் கொடுக்காமல் தான் மட்டுமே தலைவன் என்று சாகும்வரை இருந்து வரப்பார்க்கிற சுயநலம் பிடித்தவனை எந்தப் பெயரில் அழைப்பது? இதெல்லாம் அத்துமீறிய செயல்கள். இருந்தாலும், இத்தகைய அத்துமீறிய செயல்களை ஒருவன் செய்வதற்கு எது அவனை வழிநடத்தியிருக்கிறது. வேதபூர்வமான திருச்சபை அமைப்போ, சபை சட்டவிதிகளோ, கணக்குக்கொடுத்து நடந்துவருவதற்கான விதிமுறைகளோ சபைகளில் இல்லாதபோதுதான் தான்தோன்றித்தனமான இந்த இழிவுச்செயல்கள் எதிலும் நிகழ முடியும். இதிலிருந்து சீர்திருத்த சபைகள் தங்களைக் காத்துக்கொள்ளாவிட்டால், நீங்கள் குறைகூறி இனங்காட்டி வரும் ஏனைய அமைப்புகளுக்கும் உங்களுக்கும் அடிப்படையில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. சீர்திருத்தம் பேச்சில் இருந்துவிட்டால் போதாது; அது உங்கள் வாழ்க்கையிலும், திருச்சபைப் பணியின் அத்தனை அம்சங்களிலும் நிதர்சனமாகக் காணப்பட வேண்டும். அத்தகைய தொடர்கின்ற சீர்திருத்தம் இருக்குமாறு ஜெபத்தோடும், நிதானத்தோடும் பணிசெய்து வருகிறீர்களா?
தோமா கிறிஸ்தவம் – கருத்துரை
– ஷேபா மிக்கேள் ஜோர்ஜ்
மோட்சப் பிரயாணம் நூலில் சந்தேகக் கோட்டை அரக்கனிடம் போராடி வெற்றி பெற்ற பின்பு பரலோகப் பயணிகளின் நன்மையைக் கருத்தில் கொண்டு பக்கத்து புல்வெளிப் படிக்கட்டுகள் அருகே விசுவாச வீரர்களால் ஏற்படுத்தி வைக்கப்பட்ட “எச்சரிக்கைப் பலகை” போல இந்த 21-ம் நூற்றாண்டில் மெய் கிறிஸ்தவத்திற்கு எதிராக உருவாகி ஆத்துமாக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் போலிப் போதனையான தோமா வழி கிறிஸ்தவத்திற்கு எதிராக உயர்த்தப்பட்டிருக்கும் எச்சரிக்கைப் பலகையாக இந்த “தோமா கிறிஸ்தவம்” நூலைப் பார்க்கிறேன்.
தோமா கிறிஸ்தவம் நூலின் சாராம்சத்தை நெருக்கமான உறவினர் மற்றும் நண்பர்கள் சிலரிடம் பகிர்ந்து கொண்டபோது, அவர்களின் பதில் கீழ் கண்டவாறாக இருந்தது:
ஒருவர் சொன்னார், தான் கேரளாவில் தோமா அமர்ந்து ஜெபித்த மலைக்குகையையும் அதில் இருக்கும் எழுத்துருக்களையும் தன் கண்களால் பார்த்திருப்பதால் தோமா இந்தியாவுக்கு வரவில்லை என்பதைத் தன்னால் நம்பவே முடியவில்லை என்றார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக, அது அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று கூறி, அதற்கானச் சான்றுகளை நூலில் இருந்து எடுத்துச் சொன்னப் பின்னரும் கிளிப்பிள்ளைப் போல மலை, குகை, எழுத்து என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.
மற்றொருவர் “இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான தோமா நம் இந்தியாவுக்கு வந்து நற்செய்தியை அறிவித்தார் என்பது இந்திய கிறிஸ்தவத்திற்கே உரிய தனிச்சிறப்பு, அதைப் போய் இல்லை என்று கூறுகிறாயே!” என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டார்.
போதகர் பாலாவின் எழுத்துக்களில் ஆர்வம் கொண்ட வேறொரு நபரும் “ஐயய்யோ! தோமா இந்தியா வரவே இல்லை என்றா எழுதியுள்ளார்?” என்று சொல்லிவிட்டு மிகவும் குழப்பத்துடன் சென்று விட்டார்.
ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு தோமாவின் இந்திய வருகையைக் குறித்து வினா எழுப்பி அதை முற்றாக நிராகரிக்கும் ஒரு நூலை நான் வாசிக்க நேர்ந்திருந்தால், அப்போதிருந்த ஆன்மீகக் குருட்டு நிலையில் நிச்சயமாக மேலே குறிப்பிட்ட நபர்களைப்போலவே நானும் ஒரு குழப்பமான எதிர்மறைக் கருத்தைத்தான் தெரிவித்திருப்பேன். ஏனென்றால் நூல் குறிப்பிடும் தோமா கிறிஸ்தவ “மாய மான்” போதனைகள் சிலவற்றில் மேலோட்டமாகச் சிக்கியிருந்த காலம் அது. ஆனால் இடைப்பட்ட இந்தக் காலத்தில் கர்த்தரின் கிருபையால் “தனித்துவமான கிறிஸ்தவ அனுபவத்தை” அடையும் பாக்கியம் பெற்றதோடு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி தீர்மானம் எடுப்பதில் வேதத்தின் ஆளுகை மேம்பட்டுள்ளது. எனவே திருமறைத்தீபத்தின் மூலம் தோமாவின் இந்திய வருகையைக் குறித்த பாரம்பரியப் புரட்டைக் கேள்விப்பட்ட போது அதை நிதானித்து ஏற்றுக் கொள்ள முடிந்தது.
நூலை வாசிப்பதற்கு முன்பு, நூலைக் குறித்த ஒரு குறுகிய கண்ணோட்டத்துடன், தோமா இந்தியாவுக்கு வந்திருக்கமுடியாது என்பதற்காக ஆசிரியர் தரும் சான்றுகள் என்னவாக இருக்கும்? தோமா இந்தியா வந்தார் அல்லது வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதால் எனது ஆத்துமாவுக்கு ஏதாவது நன்மைகள் இருக்கிறதா? என்பது போன்ற எண்ணங்களே மேலோங்கி நின்றது. ஆனால் நூலை வாசித்த பிறகுதான், தோமாவின் இந்திய வருகை குறித்த கட்டுக் கதைக்கும் சாது செல்லப்பா மற்றும் மு.தெய்வ நாயகம் அவர்களின் போதனைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை அறிந்துகொண்டதோடு, இந்தப் “பார்த்தீனிய விஷ வேரினால்” மெய்ச்சுவிசேஷத்துக்கும், வேதத்தின் அதிகாரத்திற்கும் உண்டாகியிருக்கிற பேராபத்தைக் குறித்தும் அறிந்துகொள்ள முடிந்தது. முழு நூலையும் வாசித்தபோது அதில் பவுல், பேதுரு, யோவான் மற்றும் யூதா ஆகியோரின் நிருபங்களிலும், கிறிஸ்தவ வரலாற்றிலும் வாசித்திருப்பது போன்ற ஒரு தீவிரமான சத்தியப் போராட்டத்தை உணரமுடிந்தது.
முதல் இரண்டு அதிகாரத்தை வாசிக்கும் போதே நூலின் கருப்பொருளை தோராயமாகப் புரிந்து கொள்ள முடிந்ததோடு, நூல் எடுத்துக்காட்டும் தோமா கிறிஸ்தவ போதனைகள் இந்திய கிறிஸ்தவத்தை இத்தனை தூரம் பாதித்திருப்பதற்கான மூலக் காரணம் என்ன? என்றும் கண்டுகொள்ள முடிகிறது. குறிப்பாகத் தற்கால கிறிஸ்தவத்தில் ஆழமாகக் கால் பதித்திருக்கும் தாராளவாத மற்றும் சமயசமரசக் கோட்பாடுகளின் தாக்கத்தை இந்நூல் வேர்பிரித்துக் காட்டுகிறது.
சத்தியத்திற்கு விரோதமாக எழும்பும் எந்த ஒரு அசத்தியப் புயலையும் தைரியமாக எதிர்கொண்டு சத்தியத்தை நிலைநாட்டும் வகையில் முதல் அதிகாரத்திலேயே “வேதத்தின் அதிகாரம்” என்ற அசைக்க முடியாத நங்கூரத்தை வாசகர்களின் சிந்தனைகளில் ஆழமாக இறக்கி, அதன்பின்பு அங்கே இங்கே என்று அவர்கள் எண்ணத்தை அலைமோதவிடாதபடி வேதத்தின் ஆளுகைக்குள் முழுமையாகச் சிறைப்படுத்தியிருப்பது மிகவும் அருமை. அதுமட்டுமல்லாமல் நூல் குறிப்பிடும் அனைத்து ஆளுமைகளினுடைய நம்பிக்கை, எண்ணம் மற்றும் அவர்களின் அறிவுத் தேடலின் பயனால் உருவான அனைத்து சித்தாந்தக் கொள்கைகளுக்கும், போதனைகளுக்கும் “சிம்ம சொப்பனமாக” இருந்து அவற்றையெல்லாம் அலறியடித்து ஓட வைப்பதும் ஆசிரியரின் “வேதம் மட்டுமே” என்ற ஒரே வாதம் தான் என்பது நூலை வாசித்திருப்பவர்களுக்கு நன்றாகவே புரியும்.
ஒரு கிறிஸ்தவன் அடிப்படையில் தான் கேட்கும், வாசிக்கும்போதனை சரியானதா? வேதபூர்வமானதா? என்பதை நிதானித்து தீர்க்கமாக முடிவெடுத்துப் பின்பற்ற வேண்டிய கடமைப் பொறுப்பைக் கொண்டுள்ளான் என்பது பொதுவாக எல்லோரும் அறிந்திருக்கும் உண்மை. ஆனால் இதில் சவாலான விஷயமே அது சரியா? அல்லது தவறா? என்பதை எப்படித் தீர்மானிப்பது என்பதில்தான் இருக்கிறது. இந்தக் குழப்பத்தைப் போக்குவதற்கான ஒரு சூத்திரத்தை (formula) நூலின் மூன்றாவது அதிகாரத்தில் அருமையாகக் கற்றுத் தருகிறார் நூலாசிரியர். அதனடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும் போது சாது செல்லப்பாவின் போதனைகளில் மலிந்து காணப்படும் சமயசமரச நோக்கம், பொருத்தமற்ற சூழிசைவு முறை மற்றும் தவறான வேத விளக்கமுறை ஆகியவற்றை எளிதாக இனம் கண்டு கொள்ளலாம்.
நான்கு முதல் எட்டு வரையிலான அதிகாரங்களில், மு.தெய்வநாயகம் எழுதிய நூல்களின் அடிப்படையில் தோமாவின் இந்திய வருகை மற்றும் திராவிட சமயங்களிலும், தமிழ் இலக்கியங்களிலும், இந்து மத நூல்களிலும் இயேசுவைக் காணும் அவரது கண்டுபிடிப்புகள் சம்மந்தப்பட்ட தனது எதிர் வாதங்களை எடுத்து வைத்து வேதத்தின் அடிப்படையில் மிக சாதுர்யமாக அவற்றையெல்லாம் தவறு என்று நிரூபிக்கிறார் நூலாசிரியர். இவற்றின் மூலமாக சில விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
- தோமா இந்தியா வந்தார் என்ற கருத்துக்கு உறுதியான சான்றுகள் எதுவும் இன்றி பெரும்பாலும் வாய்வழிக் கதைகளாகவும், பலவகையான ஊகத்தின் அடிப்படையிலும் குழப்பத்தையே நமக்குப் பதிலாகத் தருவதால், தோமா குறித்த மு. தெய்வநாயகத்தின் வாதத்தை ஒரு கதைக்குதவாத பேச்சாகவே நம்மை எண்ண வைக்கிறது. அதேவேளை வேதம் இந்தக் கருத்துக்கு முற்றிலுமாக முரண்பட்டு நின்று, அதற்கு எதிராகச் சாட்சி கொடுப்பதால், “தராசுத் தட்டு” இலகுவாக வேதத்தின் பக்கமாகச் சாய்ந்து, தோமா இந்தியா வந்திருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதிசெய்கிறது.
- தெய்வநாயகத்தின் தீவிர திராவிட பரப்புக் கொள்கையை நூலில் அம்பலப்படுத்தி இருப்பதன் மூலமாக, அவரது போதனைக்கான ஆதிமூலம் என்ன என்பதை நமக்குத் தெளிவாக கோடிட்டுக் காட்டுகிறார் ஆசிரியர்.
- திருக்குறளில் வரும் “ஐந்தவித்தான்” என்ற ஒரே வார்த்தையின் அடிப்படையில், திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்றும் திருக்குறள் கிறிஸ்தவ இலக்கியம் என்றும் அவர் வாதிடுவதை வாசித்தபோது, இதுதான் “மடுவை மலையாக்குதல்” என்பதோ! என்று எண்ண வைக்கிறது. திரித்துவத்துக்கும், புலால் மறுப்புக்கும், பிறவி சுழற்சிக் கோட்பாடுகளுக்கும், சிவனுக்கும், சிவலிங்கத்துக்கும் அவர் தரும் விளக்கங்கள் சிரிப்பை வர வைப்பதோடு, வேதத்தை விளக்குவதில் அவருக்கு இருக்கும் தீவிரமான குறைபாட்டை எடுத்துக் காட்டுகிறது.
- வெறும் ஊகத்தின் அடிப்படையில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைக் கொண்ட இவர்களது கொள்கைகளுக்காக கொடி பிடித்துக் கொண்டு, அதற்காக சர்வதேச மாநாடுகள் நடத்தி அவற்றையெல்லாம் நிரூபிக்க முற்படுவது ஒரு ஆக்கபூர்வமான செயலாகத் தோன்றவில்லை. அத்தோடு அது இந்துத்துவா கொள்கை உடையவர்களின் கோபத்தைத் தூண்டி மெய்கிறிஸ்தவத்துக்கு எதிராக ஆழமான காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்தியிருப்பது மெய்யாகவே எரிச்சலூட்டுகிறது.
புத்தகத்தின் இந்தப் பகுதிகள் தோமா கிறிஸ்தவப் போதனைகளில் இருக்கும் இறையியல் சார்ந்த தவறுகளைத் துகிலுரித்துக் காட்டி இது ஒரு தவறான போதனை என்று ஆணித்தரமாக நிரூபித்துக் காட்டுகிறது. அத்தோடு ஒரு கிறிஸ்தவன் தனது மார்க்கம் சார்ந்த புதிய போதனைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும்போது அதனை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான அடிப்படை வழிமுறையையும் கற்றுத் தருகிறது.
இதை வாசித்துக் கொண்டிருந்த போது ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு நானும் தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட எனது தோழியுமாகச் சேர்ந்து சித்தர்களின் பாடல்களிலும், திருவாசகத்திலும் கிறிஸ்துவைத் தேடிய காலங்களை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இன்றுபோலத் தேடி வாசிக்கும் அளவிற்கு அன்று இணையவசதிகள் இல்லாதபடியால் சிலைவணக்கத்துக்கு எதிரானது என்று நாங்கள் இருவருமே உறுதியாக நம்பின ஒரு பாடல் “நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே” என்று துவங்கும் சிவவாக்கியரின் பாடல். நூலை வாசிப்பதை இடையில் நிறுத்திவிட்டு சிவவாக்கியரின் இந்த பாடலுக்கான சரியான விளக்கத்தை இணையத்தில் தேடிப் படித்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக அது நாங்கள் அன்று நம்பியதற்கு நேர் எதிரான பொருளைத் தந்து என்னை வியப்பில் ஆழ்த்தியது. இந்த தோமா கிறிஸ்தவத்தின் பாதிப்பு எனக்குள்ளும் நடந்திருக்கிறது என்பது நூலை வாசித்த பின்புதான் புரிந்தது.
“உடையும் இந்தியா” நூலிலிருந்து பல பக்கங்களைப் பதிவிறக்கி வாசித்ததோடு, நூல் குறித்த ஒரு நேர்காணல் நிகழ்ச்சிக்கு அரவிந்த் நீலகண்டன் அவர்கள் அளித்துள்ள விளக்கத்தையும் கேட்டேன். “உடையும் இந்தியா” நூல் கிறிஸ்தவத்திற்கு எதிராக வெளிப்படுத்தும் வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் மெய்யாகவே மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்குகிறது. இந்திய மக்களின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து உழைத்த மிஷனரிகளான சீகன்பால்க், கேரி, கால்டுவெல், ஜி. யு. போப், ஆகியோரின் பணிகளைக் கொச்சைப்படுத்தி அவர்களின் பெயருக்கு ஏற்படுத்தியிருக்கும் களங்கம் ஒவ்வொரு மெய்க் கிறிஸ்தவனின் இதயத்திலும் ரண வேதனையை ஏற்படுத்தும். கிறிஸ்தவத்தின் பெயரில் பிசாசுக்கு ஊழியம் செய்து கிறிஸ்துவுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அபகீர்த்தியை உண்டாக்கும் செயலில் ஈடுபட்டு வரும் சில கபட வேடதாரிகளின் மீது கண்மூடித்தனமான கோபத்தை வரவைக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதேவேளையில் இந்தியாவை உடைக்க முயலும் சதிகளை அடையாளம் காட்டுகிறோம் என்கிற பெயரில் மறைமுகமாக சாதியம், சதி போன்ற இந்து மத சம்பிரதாயங்களுக்கு அங்கீகாரம் தேடுவதுடன் இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் மத சுதந்திரத்துக்கும், தனிமனித உரிமைக்கும் “உடையும் இந்தியா” நூல் ஆப்பு வைத்திருப்பதையும் நிதர்சனமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. கிறிஸ்தவர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பது இன்று நேற்று என்றில்லாமல் வரலாற்றில் தொடர்ச்சியாகவே நடந்து வருகிறது. ஆனாலும் ஒவ்வொரு மெய்க்கிறிஸ்தவனும் கிறிஸ்துவின் அன்பும் ஆவியும் உடையவனாக, எதிர்ப்புகளின் நடுவிலும் எவ்வித கலப்பும் இல்லாமல் சுத்தமாக சுவிசேஷத்தை அறிவிப்பதோடு, தனிப்பட்ட வாழ்க்கையில் கிறிஸ்துவை வெளிப்படுத்தியும் வாழ வேண்டிய பெரும் கடமைப் பொறுப்பு காலத்தின் கட்டாயமாக நம்முன் நிற்பதை “தோமா கிஸ்தவம்” நூலின் உடைகிறதா இந்தியா? என்ற அதிகாரத்தின் கீழ் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர்.
ஜெயமோகனின் “சிலுவையின் பெயரால்” என்ற நூலை வாசித்தது இல்லை. இருப்பினும் அவரது ஆன்மீகத் தேடலை அவரது சிறுகதை தொகுப்புகளில் கண்டிருக்கிறேன். பொதுவாகவே அவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் மதம் சார்ந்த பெயர்களை சுமந்து வருவதோடு, அதன் அழகாக சூழலை வர்ணித்து யதார்த்தமாக விவரிப்பதாகவும் இருக்கும். நாகர்கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பிரபலம் இல்லாத சில குல தெய்வங்களின் வரலாற்றையும் அவரது சிறுகதைகள் மூலமாக அறிந்து கொள்ளலாம். அவரது ஆன்மீகத் தேடல் உள்ளூர் மதங்களில் துவங்கி இரஷ்ய எழுத்தாளர்கள் வரை தொடர்ந்திருக்கிறது என்பது அவரது தேடலின் தீவிரத்தை நமக்குக் காட்டுகிறது. அந்தவகையில் நூலாசிரியர் குறிப்பிடுவது போல பவுலின் வார்த்தைகளில் சொல்வதானால், ஜெயமோகன் அவர்களை “மிகுந்த தேவதாபக்தியுள்ளவராகவே” எண்ண வைக்கிறது. ஆகவே அவரது ஆன்மீகத் தேடல் என்பது வெறும் அறிவு அளவில் நின்றுவிடாமல், இதயத்தின் ஆழத்திலிருந்து பற்றியெரியும் நெருப்பாக வெளிப்பட்டு மெய்யான கிறிஸ்துவை அடையும் வரையில் தொடரும் உயிர்த் தேடலாகத் தொடர பரிசுத்த ஆவியாகிய தேவன் உதவி செய்ய வேண்டும் என்ற ஆத்தும பாரத்தை ஏற்படுத்துகிறது. வேதம் ஏற்படுத்தி இருக்கும் வழியில் நின்று உண்மையாக அவரைத் தேடுபவர்களுக்கு தேவன் தன்னை வெளிப்படுத்துகிறார் என்றே வேதமும் சொல்கிறது.
நூலின் முதல் பத்து அதிகாரங்களிலும் பலமுறை, இப்படியான வார்த்தைப் பிரயோகங்களைக் காணமுடிகிறது; அதாவது, மெய்யான கிறிஸ்தவத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை!! மெய்யான கிறிஸ்தவ அனுபவத்தை அவர் அடைந்திருக்கவில்லை!! என்பது போன்றவை. எனவே நூலை வாசிக்கும் இரட்சிப்பை அடைந்திராத வாசர்களுக்கு, ஆசிரியர் எதைத்தான் மெய்யான கிறிஸ்தவம் என்று குறிப்பிடுகிறார்? என்ற கேள்வி கட்டாயம் எழும். அதற்கான அற்புதமான பதிலைத்தான் தனது கடைசி அதிகாரமாக எழுதி நூலை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் ஆசிரியர். தன்னைக் கிறிஸ்தவராக எண்ணிக் கொள்ளும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் தனது விசுவாசத்தையும் இரட்சிப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கும் இந்த அதிகாரம் உதவி செய்கிறது.
நூலை வாசிப்பதற்கு ஆரம்பத்தில் கொண்டிருந்த ஆர்வமும் விறுவிறுப்பும் இறுதி வரையில் குறையவே இல்லை. ஓரிரு முறை அருகில் உள்ளவர்கள் என்ன? என்று கேட்கும் அளவிற்கு வாய்விட்டு சிரித்தேன், பலமுறை “சபாஷ்” சரியான நெத்தியடி என்று எண்ணினேன். சிறுவயதில் இருந்தே “ரிக் வேதம்” என்று வாசித்துப் பழகி இருந்ததால் “இருக்கு வேதம்” என்று வாசிக்கும் போது முதலில் சிறிய தடுமாற்றம் உண்டான போதும், எப்போதும் போலவே ஆசிரியரின் எழுத்து நடை நூலை மிகவும் ரசித்து வாசிக்கத் தூண்டுகிறது! நேரம் எடுத்துச் சிந்திக்க வைக்கிறது! கடினமான அவரது உழைப்பு, தைரியம் மற்றும் அவரது கிறிஸ்தவ வைராக்கியம் ஆகியவை மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது!
நூலின் இறுதி ஆக்கத்தை வாசித்து முடித்ததும் பளிச்சென்று நினைவில் ஓடி வந்தது இந்த வேதவசனம்,
“ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப் போனார்கள்”.
ஆம், இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் ஆத்துமாவை இத்தகைய கொள்கையின் விபரீதங்களுக்கு விலக்கிக் காத்துக் கொள்ள வேண்டிய கடமைப் பொறுப்பைக் கொண்டுள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மை. அதனை நிறைவேற்றுவதற்கு அவசியமான வல்லமையை ஒவ்வொருவருக்கும் கர்த்தர் தரவேண்டும் என்பதற்காகவும், அசத்தியப் போதனைகளுக்கு எதிராகப் போர்க் குரல் எழுப்பி அவற்றை அடியோடு வேரறுக்கத் துடிக்கும் ஆசிரியரின் “சத்தியப் போராட்டம்” தடைகள் இன்றி மேலும் தொடர வேண்டியும் ஜெபிக்கிறேன்.