திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

1. வாசகர்களே!
2. கற்பாறை நிலம்
3. முள்ளுள்ள இடங்கள்
4. நல்ல நிலம்

வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே! இவ்விதழை நேரத்தோடு பூர்த்தி செய்து உங்கள் முன் படைக்க கர்த்தர் உதவியிருக்கிறார். அதற்கு நண்பர் சிவா முக்கிய காரணம்.

நான் பிரசங்கம் செய்திருந்த “விதைநிலங்களின் உவமையின்” இறுதிப் பகுதிகளை எழுத்தில் பதிவுசெய்து அவர் எனக்கு உதவியதால் அவற்றை இந்த இதழில் இணைத்து உங்கள் முன் வைக்க முடிந்திருக்கிறது. இதழைத் தயாரிப்பதில் துணைபுரிந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.

இந்த இதழில் விதை நிலங்கள் பற்றிய உவமையின் இறுதி மூன்று நிலங்களை விளக்கியிருக்கிறேன். ஆர். சீ. ஸ்பிரவுல், இந்த “உவமையே உவமைகளிலெல்லாம் கடினமானது” என்று கூறியிருக்கிறார். அது நமக்கு ஆச்சரியமாயிருக்கலாம். இந்த உவமையே புரிந்துகொள்ள எளிதானது என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஸ்பிரவுல் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்.

உவமைகளை விளங்கிக்கொள்ளப் பயன்படுத்த வேண்டிய அவசியமான விதிகளைப் பயன்படுத்தாவிட்டால் அவற்றைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஆபத்து இருக்கிறது. நம்மினத்துப் பிரசங்கிகள் அவற்றிற்கு மனம்போன போக்கில் விளக்கம் கொடுத்து ஆத்துமாக்களை இருட்டில் வைத்திருக்கிறார்கள். விதைநிலங்களின் உவமையை எப்படி விளங்கிக்கொள்ளுவது என்பதை விளக்கி, அதோடு நிறுத்திவிடாமல் அதிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய பயன்பாடுகளையும் விளக்கியிருக்கிறேன். முக்கியமாக நல்ல நிலைத்தைப் பற்றிய அவசியமான இறையியல் போதனைகளை உங்கள் முன் வைத்திருக்கிறேன். இந்த உவமை போதிக்கும் உண்மையை மட்டும் அறிந்து கொள்ளுவதோடு நிறுத்திவிடாமல் உங்கள் இருதயம் எந்த நிலத்தை ஒத்ததாக இருக்கிறது என்பதை ஜெபத்தோடு ஆராய்ந்து பார்க்கத் தவறிவிடாதீர்கள். நாம் வேதபோதனைகளை அறிவைப் பெற்றுக்கொள்ளுவதற்காக மட்டும் கற்றுக்கொள்ளுவதில்லை; நம் ஆத்துமாவை அவை அசைத்துப் பிசைந்து நம்முடைய மெய்யான ஆவிக்குரிய நிலையை நம் கண் முன் நிறுத்தி, நமது தவறுகளை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டி இயேசு முன் மனந்திரும்ப வைப்பதற்கே அவற்றை நாம் கேட்கவும், படிக்கவும், உள்வாங்கிச் சிந்திக்கவும் செய்கிறோம். அதை மனதில் வைத்து இவ்விதழை வாசித்துப் பயனடையுங்கள். – ஆசிரியர்.

கற்பாறை நிலம்

மத்தேயு 13 ஆம் அதிகாரத்தில் ஒரு உவமையை ஆராய ஆரம்பித்தோம். அந்த அதிகாரத்தில் பல உவமைகள் காணப்படுகின்றன. அவற்றில் முதலாவது உவமையான விதைக்கிறவனின் உவமையைக் கடந்த இதழில் கவனித்தோம். அதில் முதலாவதாக விளக்கப்பட்டிருக்கும் வழியருகே விழுந்த விதையைக் கடந்த இதழில் விளக்கியிருக்கிறேன். இந்த ஆக்கத்தில் நாம் அதற்கு அடுத்து விளக்கப்பட்டிருக்கும் கற்பாறை நிலத்தில் விழுந்த விதையை ஆராயப் போகிறோம்.

மத்தேயு 13:5, 6

சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.

இதற்கான விளக்கத்தை கீழ்வரும் வசனங்களில் இயேசு கொடுக்கிறார்.

மத்தேயு 13:20, 21

கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.

ஆண்டவராகிய இயேசு விளக்கிய இந்த உவமைகள் பொதுவாகவே கிறிஸ்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் உவமை. வேதம் வாசிக்கிற கிறிஸ்தவர்களுக்கு, நல்ல பிரசங்கியின் கீழ் இருந்து வருகிற ஆத்துமாக்களுக்கு, விளக்கப்பட்டிருக்கும் அனைத்து உவமைகளிலுமே நன்றாகப் பரிச்சயமான உவமைதான் இந்த விதைக்கிறவனின் உவமை. இருந்தபொழுதும் ஆர். சி. ஸ்பிரவுல் என்ற சீர்திருத்த பிரசங்கி சொல்லுகிறார்,

“இயேசு கிறிஸ்துவின் போதனைகள் எல்லாவற்றிலுமே மிகவும் கடினமான போதனை இந்த உவமையில்தான் அடங்கியிருக்கிறது.”

நம் பார்வைக்கு அவை சாதாரணமான போதனையாகத் தெரியலாம், ஆனால் ஸ்பிரவுல் அப்படி சொல்லுவதற்குக் காரணமிருக்கிறது. முதலாவது காரணம், என்னைப் பொறுத்தவரை, இந்த உவமையைச் சரியாக புரிந்து கொள்ளாமல் அநேக பிரசங்கிகள் தேவையில்லாமல் அநேக காரியங்களை உட்புகுத்திப் பேசியிருக்கிறார்கள். மேலும் அவர்கள் இந்த உவமை என்னதான் சொல்லுகிறது என்பது தெரியாமல் தங்கள் மனம் போனபடி இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர். கடந்த ஆக்கத்தில் நான் விளக்கியபடி, எந்தவொரு உவமையும் ஒரு முக்கியமான போதனையைக் கொண்டிருக்கும். அந்தப் போதனையைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, உவமையின் அத்தனை பகுதிகளுக்கும் நாம் விளக்கம் கொடுக்க முற்படக் கூடாது. அதில் காணப்படும் முக்கியமான போதனை மட்டுந்தான் நமக்கு அவசியமானது.

வேதவசனத்திற்கு எப்போதுமே பொருள் ஒன்றுதான், அதில் பல அர்த்தங்கள் இருக்காது. அந்த முக்கியமான பொருளைக் கண்டுபிடிப்பதுதான் பிரசங்கியின் வேலை. உவமையை ஆழமாகக் கருத்தோடு நுணுக்கமாகப் படித்து அதன் பொருளைக் கண்டுபிடித்து உவமையை விளக்க வேண்டும். உவமைகளில் பல பயன்பாடுகள் காணப்படும்; அதற்கு அர்த்தம் ஒன்றுதான். எந்தவொரு வசனத்திலோ அல்லது வசனப் பகுதிகளிலோ ஒருபோதும் பல அர்த்தங்கள் காணப்படாது.

இரண்டாவதாக, இந்த உவமையின் தலைப்பை விதைக்கிறவனின் உவமை என்றுதான் நாமெல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறோம். வேதமும் அவ்வாறுதான் சொல்லுகிறது. ஆனால் இந்த உவமையை நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்கிறபோது அது விதைக்கிறவனைப் பற்றியல்ல, விதை நிலங்களைப் பற்றிதான் அதிகமாக விளக்குகிறது என்பதை அறியலாம். அதைப் பற்றிதான் நாம் சிந்திக்க வேண்டுமென்று இந்த உவமை எதிர்பார்க்கிறது. ஆகவே, இதை விதை நிலங்களின் உவமை என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும்.

நாம் உவமை விளக்குகின்ற ஒவ்வொரு நிலமாக ஆராய்ந்து வருகிறோம். கடந்த முறை நாம் வழியருகே என்ற நிலத்தைக் குறித்துக் கவனித்தோம். இப்போது கற்கள் நிறைந்த பகுதியை ஆராயப் போகிறோம். ஆண்டவர் சொல்லுகிறார்,

மத்தேயு 13:5

சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது.

பிறகு அதற்கான விளக்கத்தைக் கொடுக்கிறார். இந்த நிலம் மனிதனுடைய இருதயத்தோடு ஒப்பிடப்படுகிறது. அதாவது எந்தவொரு மனிதனும் தேவனுடைய வார்த்தையைக் கேட்க வருகிறபோது அவன் எந்தவிதமாக தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறான், அவனுடைய இருதயம் எந்த நிலையிலிருந்து தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறது என்பதைத் தான் ஆண்டவர் ஒப்பிட்டு இதில் விளக்குகிறார். நாம் ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்கிறபோது மிகவும் கவனத்தோடு கேட்க வேண்டும். இந்த உவமை வசனத்தைக் கேட்பதைக் குறித்துதான் விளக்குகிறது. ஆகவே இருதயம் எப்படி, எந்த நிலையிலிருந்து வசனத்தைக் கேட்கிறது என்பதை இந்த நிலங்கள் ஒப்பிட்டு விளக்குகின்றன.

இந்த ஆக்கத்தை எழுதுகிறபோது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஆண்டவர் இந்தளவுக்கு விதை நிலங்களைப் பிரித்து விளக்கியிருப்பதற்குக் காரணமென்ன? நான்கு நிலங்களில் மூன்று நிலங்களில் விதைக்கப்பட்ட விதை பயன்கொடுக்கவில்லை, ஒன்று மட்டுமே பயனளித்தது. அந்த நான்கு நிலங்களும் நான்கு வகையான இருதயங்களோடு ஒப்பிடப்பட்டிருக்கின்றன. ஆண்டவர் அவற்றை நல்ல நிலம், மோசமான நிலம் என இரண்டாகப் பிரித்துக் கூறியிருக்கலாம். அவற்றை ஒப்பிடுகின்றபோது நல்ல இருதயம், மோசமான இருதயம் எனப் பிரித்து விளக்கியிருக்கலாம். ஏன் அவர் நான்கு நிலங்களைப் பயன்படுத்தி நான்கு இருதயங்களை நம்முன் வைப்பதற்குக் காரணம் என்ன? அதை நான் அதிகமாக சிந்தித்துப் பார்த்தபொழுது நான் அறிந்துகொண்ட உண்மை, ஆண்டவர் எந்தளவுக்கு மனித இருதயத்தில் அக்கறை கொண்டிருக்கிறார் என்பதுதான். இரண்டு நிலங்களை மட்டும் காட்டி இரண்டு வகையான இருதயங்களோடு அவற்றை விளக்கியிருக்க முடியுமானாலும் அதற்கு மேலாய்ப்போய் இன்னும் இரு வகையான நிலங்களை அவர் நமக்கு விளக்கி, அந்த நிலங்கள் எத்தகைய இருதயங்களை நமக்குச் சுட்டிக்காட்டுக்கின்றன என்று நமக்கு விளக்குவதன் மூலமாக ஆண்டவர் நம் இருதயத்தில் எத்தனை அக்கறை கொண்டிருக்கிறார் என்பதைப் பார்க்கிறோம். ஆண்டவர் நம் இருதயங்களைப் பார்க்கிறார், அவருக்குத் தெரியாதது ஒன்றுமேயில்லை. நம் இருதயத்தின் சிந்தனை, அதன் போக்கு என அனைத்தையும் அவர் அறிந்து வைத்திருக்கிறார். அவருக்கு முன்பாக நாம் நாடகமாடலாம். கிறிஸ்தவனைப் போல நடிக்கலாம், கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு தவறான வாழ்க்கை வாழலாம், தவறுகள் செய்து திருந்தாமல் இருக்கலாம். ஆனால் இவை எல்லாமே ஆண்டவருக்குத் தெரியாமலிருக்காது. அவர் முன்பாக நாம் எதையும் மறைக்க முடியாது. அப்படிப்பட்டவர்தான் நம் ஆண்டவர்.

பியூரிட்டன் பிரசங்கிகளுக்கு ‘ஆத்தும வைத்தியர்கள்’ எனும் ஒரு பெயர் இருக்கிறது. அதற்கு அர்த்தம் ஆத்துமாக்களை அந்தளவுக்கு ஆழமாகத் தெரிந்திருந்து, அந்த ஆத்துமாக்களின் பிரச்சனைகளை நன்றாக அணுகி ஆராய்ந்து அவர்களுக்கு ஏற்றவகையிலே வேதத்திலிருந்து தேவையான ஆலோசனைகளை நுணுக்கமாகக் கொடுப்பதில் அவர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். இன்றைக்கு நம்மினத்தில் அவ்விதமான ஆத்தும வைத்தியர்களைக் காண்பது அரிது. ஏனெனில், அந்தளவுக்கு வேதமறிந்தவர்களோ, ஆத்துமாக்களை அறிந்தவர்களோ நம் இனத்தில் இல்லை. வேதத்தைக் கற்றுத் தேர்ந்திராதவர்கள் பிரசங்கத்தில் உளறத்தான் முடியுமே தவிர பிரசங்கிக்க முடியாது. இன்று இதைத்தான் அநேக இடங்களில் நாம் பார்க்கமுடிகிறது. ஆனால் பியூரிட்டன் பெரியவர்கள் வேதத்தை ஆழமாகக் கற்றிருந்தவர்கள். அதனால்தான் ஆத்துமாக்களின் தேவைக்கு ஏற்றவிதத்தில் அவர்களால் மருந்தைக் கொடுக்க முடிந்தது. ஆனால் அந்தப் பியூரிட்டன் பெரியவர்களைவிட ஒரு மேலான வைத்தியராக நம்முடைய இறையாண்மையுள்ள ஆண்டவர் இருக்கிறார். அந்தப் பியூரிட்டன்கள் கூட ஆத்தும வைத்தியத்தைக் கற்றுக் கொண்டது நம்முடைய ஆண்டவரிடத்தில் இருந்துதான். ஏனெனில் அவர் இருதயத்தை ஆழமாக ஆராய்ந்து அறிந்திருக்கும் தேவன்.

இந்த உவமை தேவனுடைய வசனத்தை எந்தவிதத்தில் கேட்க வேண்டும் என்பதைக் குறித்து விளக்குகிறது. ஒரு ஆத்துமா எந்த விதத்தில் வசனத்தை அணுகுகிறது, அதை எதிர்கொள்ளுகிறது என்பதைத்தான் ஆண்டவர் இங்கு விளக்குகிறார். ஆகவே அவருக்கு நம்முடைய இருதயத்தில் அக்கறை இருக்கிறது, எந்தவிதத்தில் அவருடைய வசனத்தைக் கேட்க வேண்டும் என்பதில் அக்கறை இருக்கிறது. இன்றைக்கு அநேகர் தங்களுடைய இருதயப் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளுவதற்கு சமுக விஞ்ஞானிகளிடமும், உளவியல் வல்லுநர்களிடமும் போகிறார்கள். அவை மிகவும் தவறான செயல்களாகும். ஒரு உளவியல் நிபுணனுக்கு ஆத்தும வைத்தியம் செய்யத் தெரியாது. ஆண்டவர் ஒருவரால் மட்டுமே அதைச் செய்ய முடியும்; அவருடைய மகனாக இருக்கின்ற ஒரு போதகனால் அதைச் செய்ய முடியும். இந்த ஆக்கத்தை வாசிக்கும்போது இந்த உவமையின் மூலம் நம் இருதயத்தை ஆண்டவர் ஆராய்கிறார் என்பதை மனதில் வைத்து வாசியுங்கள். உங்கள் இருதயம் எப்படி இருக்கிறது? அது எந்தவிதமான போக்கைக் கொண்டிருக்கிறது? தேவனைப் பற்றியும், அவருடைய வார்த்தையைப் பற்றியும், அவருடைய செயல்களைப் பற்றியும், அவருக்கும் உங்களுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றியும் அது எந்த விதமாகச் சிந்திக்கிறது? ஆண்டவர் இதிலெல்லாம் அதிக அக்கறை காட்டுகிறார் என்பதை இந்த உவமையில் நாம் கவனிக்கிறோம்.

இரண்டாவது நிலமான கற்பாறை நிலத்தை நாம் இப்போது ஆராய்வோம்.

மத்தேயு 13:5, 6

சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.

இப்படிப்பட்ட நிலமாகவே சில இருதயங்கள் காணப்படுகின்றன.

மத்தேயு 13:20, 21

கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.

இதே உவமையை மாற்கு நான்காம் அதிகாரத்திலும் லூக்கா எட்டாம் அதிகாரத்திலும் நாம் பார்க்கிறோம். இவை மூன்றையும் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என்பதைக் கவனிக்க முடிகிறது. எப்போதும் நாம் உவமைகளை ஏனைய பகுதிகளில் காணப்படும் அதேவித உவமைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது அந்த உவமைகளின் சகல அம்சங்களையும் நாம் விளங்கிக்கொள்ள முடியும். ஒரே ஒரு பகுதியை மட்டும் வைத்து அந்த உவமைக்கான பொருளை விளங்கிக்கொள்ள முயலக் கூடாது. அதோடு சம்பந்தப்பட்ட ஏனைய பகுதிகளையும் ஆராய்ந்து பார்த்து அதன் போதனையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு ஆண்டவர் நிலத்தின் தன்மையை மனிதனுடைய இருதயத்தின் தன்மையோடு ஒப்பிடுகிறார் என்பதை நாம் கவனிக்கிறோம்.

முதலாவதாக, இந்த நிலத்தைக் கவனிப்போம். அதன் பின் அந்த நிலம் யாருக்கு ஒப்பிடப்படுகிறதோ அவர்களைக் குறித்து சிந்திப்போம். இந்த நிலத்தைப் பற்றி சிந்திப்பது மிகவும் அவசியமானது. தமிழ் வேதத்தில் பார்க்கிறபோது அதிக மண்ணில்லாத கற்பாறை நிலம் என்று சொல்லப்படுகிறது. நம் பேச்சு வழக்கில் கற்பாறை என்றவுடன் நமக்கு எது மனதில் வரும்? ஒரு பெரிய பாறையைத் தான் நாம் நினைத்துப் பார்ப்போம். ஆனால் நிச்சயமாக அத்தனை பெரிய கற்பாறையை ஆண்டவர் இங்கு மனதில் கொள்ளவில்லை. இந்தப் பகுதியில் சொல்லப்படும் நிலம் சின்னஞ்சிறு கற்கள் நிறைந்த மண்தரையாக இருந்தது. இப்பகுதியில் பெரும் கற்கள் இருந்திருந்தால் நிச்சயமாக அந்த விவசாயி அங்கு பயிரிடத் துணிந்திருக்க மாட்டான் அல்லது அந்தப் பாறைகளை முதலில் அகற்றியிருப்பான். இச் சிறு கற்கள் கண்களுக்குத் தெரியாமல் நிலத்திற்கு அடியில் மறைந்திருந்தன. இந்நிலம் அதிகமாகவும், ஆழமாகவும் மண்ணில்லாமல் இருந்தது என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். நிலத்தில் விதை விதைக்கப்பட்ட பிறகு அந்த விதை ஆழமாக வேர்விட்டு வளர்வதற்கு அதிக மண் தேவை. ஆனால் இந்நிலத்தில் இரண்டு மூன்று அங்குல ஆழத்திற்குக் கீழ் மண் இல்லை. நிலத்தின் மேலே பார்க்கிறபோது அது மண் தரையாகத் தெரிந்தபோதும் அதில் மண் ஆழமாக இல்லை. விதை வளர வேண்டிய அளவுக்கு அந்த மண் ஆழமாக இருக்கவேண்டும். ஆனால் அந்தளவுக்கு மண் இந்த நிலத்தில் இல்லை. ஆகவேதான் வேதம் அதிக மண்ணில்லாத கற்கள் நிறைந்த பகுதியாக இருந்தது என்று விளக்குகிறது.

இந்த நிலத்தில் பிரச்சனைகள் உள்ளன. முதலாவது பிரச்சனை அதிகமாக மண் இல்லாதது. இரண்டு மூன்று அங்குலத்திற்குக் கீழாக அதில் நிறைய கற்கள் காணப்பட்டது. ஏன் இது பிரச்சனையானது? ஒரு விவசாயி விதையைத் தூவுகிறபோது அந்த விதையானது இப்படிப்பட்ட நிலத்தில் விழுந்தால் அந்த நிலத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். மண்ணில் ஈரப்பதம் இல்லாமல் இருந்தால் அந்த விதை வளர முடியாது. அப்படியே ஈரப்பதம் இருந்தாலும் அந்த விதை வேர்விட முடியாமல் அதற்குத் தடையாக அடியில் கற்கள் காணப்படுகின்றன. கற்கள் அதிகமாக இருப்பதினாலேயே அந்த வேர் அதற்குக் கீழாகப் போக முடியாமல் இருந்தது. அதனால் விதைவேர்விட்டு வளர முடியவில்லை. மேலும் அந்த வேர் கீழே செல்வதற்கு இடமில்லாததால் மேல் நோக்கி வர ஆரம்பிக்கும். ஏனென்றால் அந்தக் கற்களை உடைத்துக்கொண்டு போகும் அளவிற்கு அந்த விதைக்குப் பலமில்லை. ஆகவேதான் இது பிரச்சனை உள்ள நிலமாக இருக்கிறது. அதனால்தான் ஈரப்பதம் இல்லாததினால் விதை உலர்ந்து போயிற்று என்று இப்பகுதியில் வாசிக்கிறோம்.

இந்த நிலத்தில் இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. 6 வது வசனத்தில் ஆண்டவர் சொல்லுகிறார், “வெயில் ஏறினபோது” என்று. விதைகள் இந்நிலத்தில் விழுந்தன, மண்ணும் ஆழமாக இல்லை, ஈரத்தன்மையும் அதில் இல்லை, மத்தியான வேளைகளில் வெயில் அதிகரிக்கும். அவ்வாறு வெப்பம் அதிகரித்து மண்ணை நோக்கித் தாக்குகிறபோது, மண்ணும் சூடாகி அந்த விதைக்குப் பிரச்சனையை உண்டாக்குகிறது. மண் ஆழமாக இல்லாததினால் சூரியக் கதிர்கள் அந்தக் கற்களைத் தாக்கிக் கற்களும் அதிக வெப்பமடைந்து மேலேயும் கீழேயும் என இரண்டு பக்கமும் இந்த விதைக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. ஆகவே இந்த விதை “வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று” (மத்தேயு 13:6) என்று நாம் வாசிக்கிறோம். கற்கள் தடையாக இருப்பதனால் இங்கு வேரும் வளர முடியாது. மேலிருந்து வெப்பம் அதிகமாகி தாக்குகிறது, கீழிருந்தும் கற்கள் சூடாகி ஈரப்பதமும் இல்லாமல் இருப்பதனால் இது தீய்ந்து போகிறது. நான் இதை விளக்குகிறபோது ஒரு படம் போலப் புரிந்திருக்கும் என நம்புகிறேன். இதைத்தான் ஆண்டவர் இந்த உதாரணத்தைப் பயன்படுத்தி இங்கு விளக்குகிறார். அந்த விதைகள் வளருவதற்கு தேவையானவைகள் அந்த நிலத்தில் இருக்கவில்லை.

இரண்டாவதாக இந்த நிலம் யாரைக் குறிக்கிறது?

மத்தேயு 13:20

கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்.

மண் ஆழமாக இல்லாத கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்ட நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்டிருப்பவன் வசனத்தைக் கேட்கிறான். முதலாவது நிலமாகிய வழியருகே நிலத்தைப் போன்றவன் வசனத்தைக் கேட்கவே இல்லை. அவன் காதில் விழுந்த உடனேயே அதைத் தூக்கி எறிந்துவிடுகிறான், அதை அசட்டை செய்கிறான், அதை அவன் கவனிக்கவே இல்லை, அதில் அவனுக்கு அக்கறையே இல்லை, அதில் அவனுக்கு விருப்பமில்லாமல் போய்விடுகிறது, அதை இருதயத்தில் எடுத்துக் கொள்ளவுமில்லை, அதைப் பற்றி அவன் சிந்திக்கவுமில்லை. ஆனால் இங்கு கற்பாறை நிலத்தைப் போன்ற இருதயமுள்ளவன் வசனத்தைக் கேட்கிறான், அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளுகிறான், அதோடு அவன் ஒத்துப் போகிறான். முதலாவது இருதயத்தைக் கொண்டிருப்பவனை விட இரண்டாவது இருதயத்தைக் கொண்டிருப்பவன் பரவாயில்லை என்று சொல்லலாம். இவன் வசனத்தை அசட்டை செய்யவில்லை, அதைக் கேட்கிறவனாக இருக்கிறான். அவன் அதைக் கேட்டு அதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கிறான். அவன் சந்தோஷத்தோடு ஏற்றுக் கொள்ளுகிறான் என்பது வசனத்தில் ஆர்வம் காட்டுகிறான், அதை எதிர்த்து நிற்கவில்லை என்று அர்த்தம். அது நல்லதுதான், நான் கேட்பதில் உண்மையிருக்கிறது, எனக்குத் தேவையானதுதான் என்று வசனத்தில் அக்கறைகாட்டி அதை ஏற்றுக்கொள்ளுகிறான். வசனத்தைக் கேட்காமல் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது. கேட்டு அதில் விருப்பம் காட்டி எதிர்த்து நிற்காமல் அதற்கு உடன்படுகிறான் என்பதைதான் ஆண்டவர் சொல்லுகிறார். அப்படி இருந்தபொழுதும் இந்த இருதயத்தைக் கொண்டிருப்பவனில் பிரச்சனை இருக்கிறது. முதலாவது நிலத்தைப் போல அவன் வசனத்தை உதாசீனப்படுத்தாவிட்டாலும் அவனில் பிரச்சனை இருக்கிறது. அவன் கேட்கிறான் என்ற அம்சத்தை நாம் பாராட்ட வேண்டும். ஏனெனில், எத்தனையோ பேர் காது கொடுத்துக் கேட்பதில்லை. காது கொடுத்து வசனத்தைக் கேட்பது மிகவும் அவசியம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் பிரசங்கத்தை முடித்துப் பின்னால் கதவின் அருகே நின்று கொண்டிருந்தபோது ஒரு ஐந்து வயதுள்ள பையன் என்னிடம் வந்து ‘நீங்கள் இன்றைக்கு கொடுத்த பிரசங்கம் எனக்கு நன்றாகப் பிடித்திருந்தது, அதனால் உங்களுக்கு மிகவும் நன்றி’ என்று சொன்னான். அந்த ஐந்து வயது பையன் பிரசங்கத்தை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை நன்றாகக் கேட்டிருக்கிறான். அவன் அதற்கு எதிர்ப்புக் காட்டவில்லை, அவனுக்கு அது பிடித்திருந்தது. அவ்வாறு சொன்னதனால் அவன் விசுவாசி என்று நான் சொல்ல வரவில்லை, ஆனால் அவன் பிரசங்கத்தை உதாசீனப்படுத்தாமல் கவனத்தோடு கேட்டு அங்கீகரித்திருக்கிறான். அவன் சிறுவனாக இருந்தபோதும் அந்த வயதுக்கே உரியவிதத்தில் அதை அவன் கேட்டுப் பயனடைந்திருக்கிறான். இல்லையெனில் அவன் அவ்வாறு என் முன் நின்று சொல்லியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவன் வசனத்தில் அக்கறை காட்டுகிறான். அதைத்தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம்.

21 வது வசனத்தில் இந்த இருதயத்தின் பிரச்சனை என்ன என்பதை வேதம் நமக்குக் காட்டுகிறது. “ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.” இங்கு முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, அவன் கொஞ்சக்காலம் நிலைத்திருப்பான் என்ற வார்த்தைப் பிரயோகத்தை. வழியருகே போன்ற இருதயத்தில் வசனம் நிற்கவே இல்லை. அது உள்ளே போவதற்கே வழியில்லாமல் இருந்தது. மேலிருந்து சாத்தான் வந்து அதை எடுத்துக் கொண்டு போய்விட்டான். ஆனால் இங்கு கற்பாறை நிலத்தைப் போன்றவனில் வசனம் இருதயத்தில் கொஞ்சக்காலம் இருந்திருக்கிறது. இந்தக் கொஞ்சக்காலம் எவ்வளவு நாட்கள் என நாம் ஆராய்ச்சி செய்யக்கூடாது. ஏனெனில், கொஞ்சக்காலம் என்று ஆண்டவர் சொல்வதன் மூலம் அது நிரந்தரமாக அங்கு இருக்கவில்லை என்பதை விளக்குகிறார். அந்த விதை நிரந்தரமாக அங்கிருந்து தொடர்ந்து வளர்ந்து பலன் கொடுக்கிற அளவுக்குப் போகவில்லை. கொஞ்சக்காலம் என்பததற்குப் பொருள் வசனம் தற்காலிகமாக உள்ளே இருந்திருக்கிறது என்பதுதான். ஆனால் அது நிலைத்து நிற்கமுடியவில்லை, நிரந்தமான பயனைக் கொடுக்கிற அளவுக்கு அது கிரியை செய்யவில்லை. இதற்கெல்லாம் காரணமென்ன? வசனத்தினால் வந்த உபத்திரவம்தான் காரணம். வசனம், அதாவது அவன் கேட்டு ஆர்வம்கொண்டு சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டிருக்கிற அந்த வசனத்தினிமித்தம் உண்டான உபத்திரவங்கள், துன்பங்கள், தொல்லைகள், பிரச்சனைகள் காரணமாக அதற்கு பிறகு அந்த வசனத்தில் ஆர்வம் காட்டியதை அவன் நிறுத்திக் கொண்டான்.

இங்கிலாந்தில் மிகவும் பிரசித்தமான பிரசங்கிகளின் இளவரசன் என்று அழைக்கப்படும் ஸ்பர்ஜன் இருந்தார். கற்பாறை போன்ற இருதயத்தைக் கொண்ட மனிதனை தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவத்தை அவருடைய செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனிதன்தான் என் வாழ்க்கையில் அதிகமான துக்கத்தையும் கசப்பான கண்ணீரையும் வரும்படியாக செய்திருக்கிறான் என்று சொன்னார். ஏனெனில் ஸ்பர்ஜன் சொன்னார், “அந்த மனிதன் ஒருநாள் என் சபைக்கு வந்தான். அன்றைக்கு பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு அவன் அதிகமாகக் கண்ணீர்விட்டு அழுதான். முழு சபையும் கூட அதனால் மிகவும் ஆச்சரியப்பட்டது. அந்தப் பிரசங்கத்தைக் கேட்ட பிறகு முதல் நாளில் இருந்தே அவன் குடிப்பதை நிறுத்திவிட்டான். அவனுடைய ஊரில் அவனைப்பற்றி மக்கள் எல்லோரும் மோசமாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். ஏனெனில் அவன் நேரத்தை ஒவ்வொரு நாளும் மதுக்கடையில்தான் செலவிட்டான். ஆகவே அந்த ஊரில் யாருமே அவனை நல்ல மனிதனாகப் பார்க்கவில்லை. ஆனால் அவன் வசனத்தைக் கேட்டதிலிருந்து அவன் வாழ்க்கை மாறிவிட்டது. அவன் மதுக்கடைக்குப் போவதை முழுமையாக நிறுத்திவிட்டான். சபையின் எந்தக் கூட்டத்திலும் தவறாமல் கலந்து கொள்ளுவான். ஜெபக் கூட்டத்திலும் தவறாமல் கலந்துகொண்டு தனக்குத் தெரிந்தவரை ஜெபிக்கவும் ஆரம்பித்தான். இப்படிப்பட்டவனைத்தான் நான் இயேசு கிறிஸ்துவுக்கு பக்கத்தில் உட்கார வைப்பேன் என்று ஸ்பர்ஜன் சொன்னார்.” அவனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் ஸ்பர்ஜனுக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுத்தது. ஒரு இடத்தில் வேதப்பாடம் நடப்பதாக அவன் கேள்விப்பட்டால் அவன் ஏழு எட்டு மைல்கள் கூட நடந்துபோய் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுவதற்கு ஆர்வம் காட்டினான். சபை அங்கத்தினருக்குத் தேவையான காரியங்களில் உதவி செய்வதற்கு முன்னால் நிற்பவனாக இருந்தான். இதெல்லாம் அவன் வாழ்க்கையில் கொஞ்சக்காலம் தொடர்ந்தது. அவன் வாழ்க்கையில் இவ்விதமான மாற்றங்கள் 6 மாதம் முதல் 8 மாதம் வரை தொடர்ந்திருந்தது. ஆனால் அவனுடைய பழைய குடிகார நண்பர்கள் இவனைப் பார்த்து கேலிபண்ண ஆரம்பித்தார்கள். இவன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் இவனை அவர்கள் கேலி செய்யவும் திட்டவும் ஆரம்பித்தார்கள். அப்போது இவன் தான் அநாவசியமாக மாறிவிட்டேனோ, ரொம்பத் தீவிரமாக சமய விஷயத்தில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்துவிட்டேனோ என்று நினைக்கத் தொடங்கினான். அதனால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக சபை ஆராதனைக்கு வருவதை நிறுத்த ஆரம்பித்தான். அவனுடைய பழைய வழக்கங்கள் எல்லாம் திரும்ப வர ஆரம்பித்தன. சபையில் இருப்பவர்கள் சில பேர் அவன் வீதியில் குடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். அப்போது ஸ்பர்ஜன் இவனால் எனக்கு அதிக மனவருத்தம் ஏற்பட்டது என்று சொன்னார். அந்தச் செய்தியில் ஒரு வழியருகே விதைக்கப்பட்ட இருதயத்தைக் கொண்டவன் வசனத்தை உதாசீனப்படுத்துகிறவன். இந்தக் கற்பாறை நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்டிருப்பவனைப் பற்றி நான் பெரிதாக சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை என்று ஸ்பர்ஜன் சொன்னார். இந்த இரண்டு நிலங்களுமே மோசமானவை என்பதுதான் அவருடைய கருத்தாகும். அப்படியானால் இரட்சிப்பை அடையாமல் ஆண்டவருடைய வசனத்தைக் கேட்டு ஒரு வருடமளவுக்கு அதில் ஈடுபாடு காட்டி, சபைக்குப் போவதோடு, சபை மக்களோடு ஐக்கியத்தில் வந்து, ஜெபக் கூட்டத்தில் ஜெபம் செய்யவும் ஒருவனால் முடியும் என்பதைத்தான் இந்த உதாரணம் விளக்குகிறது.

என்னுடைய 37 வருட சபை ஊழியத்தில் இப்படிப்பட்ட சிலரை நான் சந்தித்திருக்கிறேன். இதை நான் எழுதுகிறபோது அவர்கள் என் கண்முன் வந்து போகிறார்கள். ஆத்துமாவில் கரிசனை காட்டுகிற எந்தப் போதகரும் அதை மறக்க மாட்டார்கள். வேறொரு நாட்டிலிருந்து எங்கள் நாட்டிற்கு வந்த ஒருவர் இருந்தார். அவர் தன் நாட்டில் இருந்தபோது தன்னை விசுவாசி என்று சொல்லி ஞானஸ்நானம் எடுத்துப் பிறகு வாழ்க்கையில் பின்வாங்கிப் போய் எத்தனையோ தவறுகளைச் செய்து எங்கள் சபைக்கு வந்து, என்னிடம் உண்மையை விளக்கிச் சொல்லி மன்னிப்பு கேட்டு ஆண்டவரிடத்தில் மறுபடியும் உறவுகொள்வதற்கு எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டார். நான் அதற்குத் தேவையான தகுந்த ஆத்மீக உதவிகளைச் செய்த பிறகு பல வருடங்கள் தொடர்ந்து சபையில் இருந்தார். அதற்கு பிறகு அவர் பழையபடி உலகத்தை இச்சித்து அதை நாடிப்போய்விட்டார். அவர் இன்னும் எங்கள் ஊரில்தான் எங்கோ இருக்கிறார், ஆனால் அவர் என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை. அநேகர் இந்தக் கதையைக் கேட்கிறபோது, இரட்சிப்பை ஒருதரம் அடைந்து பிறகு அந்த இரட்சிப்பை ஒருவன் இழந்துவிடலாம் என்ற போதனையைக் கொடுப்பார்கள். அப்படியானால் முதலாவது அவன் பின்வாங்கி இருந்த போது இரட்சிப்பை அடைந்திருந்தானா? இரண்டாவது முறை மன்னிப்புக் கேட்டுப் பல வருடங்கள் சபைக்கு வந்தபோது இழந்துபோன இரட்சிப்பை மறுபடியும் பெற்றுக் கொண்டானா? பிறகு எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பழையபடி உலகத்திற்குள் போனபொழுது இரண்டாவது முறை அடைந்த இரட்சிப்பை இழந்து போனானா? இதற்குப் பெயர்தான் போலிப்போதனை. ஏனென்றால் வேதம் அவ்வாறு எங்கேயும் போதிக்கவில்லை. இரட்சிப்பை ஒருமுறைதான் அடைய முடியும். உண்மையான விசுவாசி அடைந்த இரட்சிப்பைக் கடைசிவரை இழக்க மாட்டான். பின்வாங்கிப் போனான் என்பதைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. என்னைப் பொறுத்தவரை அவன் உண்மையாக ஆண்டவரை விசுவாசித்திருக்கவில்லை. கொஞ்சக்காலம் அந்த விதை வேலை செய்திருக்கிறது. உண்மையான விசுவாசி தான் கேட்ட அனைத்து சத்தியங்களையும் உதறி எறிந்துவிட்டு உலகத்தின் மீது முழு ஆசை வைத்துத் தேமாவைப்போலப் போய்விடமாட்டான். வேதத்தில் இல்லாத போதனைகளை நாம் உருவாக்கக் கூடாது. உண்மையான விசுவாசம் தொடர்ந்து நிலைக்கும். ஒருவேளை நான் அவனை மறுபடியும் சந்தித்தால் ஆத்தும வைத்தியராக அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன. அவனுடைய விசுவாசம் உண்மையாக இருந்திருந்தால் அவன் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையை வாழமாட்டான். ஏனென்றால் அவனுக்குக் குற்ற உணர்வு இல்லை, உலகத்தில் அவன் சந்தோஷமாக இருக்கிறான். ஆகவே இதையெல்லாம் உண்மையான விசுவாசமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

சபையில் எப்போதுமே பிரசங்கம் செய்த பிறகு ஒரு ஆணோ அல்லது பெண்ணோ வேதத்தைக் கேட்டு அக்கறை காட்டி நன்றாக இருக்கிறது என்று சொன்னால் சந்தோஷமாகத்தான் இருக்கும். யாருமே கர்த்தருடைய வார்த்தையில் காட்டுகிற சிறிதளவு அக்கறையும் கூடப் பாராட்டத்தக்கது, அதை நாம் ஊக்குவிக்க வேண்டும். ஆண்டவருக்கு நன்றி சொல்ல வேண்டும், அவர்களுக்காக ஜெபம் பண்ணவேண்டும். சில நேரம் அப்படி கேட்டவர்கள் தொடர்ந்து சபைக்கு வருவார்கள், பிரசங்கங்களைத் தொடர்ந்து கேட்பார்கள். கொஞ்சக் காலத்திற்கு அதைத் தொடருவார்கள். இதெல்லாம் நல்லதுதான். அதையெல்லாம் சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது. ஆனால் ஆர்வக் கோளாறினால் ரொம்பவும் சந்தோஷப்பட்டு அவர்களுக்கு உடனடியாக ஞானஸ்நானம் கொடுக்கக் கூடாது. நம் ஊரில் அவ்விதமாகச் செய்கிற போலிப் போதகர்கள் அநேகர் இருக்கிறார்கள், அது மிகவும் ஆபத்தானது. வசனத்தில் ஆர்வம் காட்டுகிறவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும், தொடர்ந்து வசனத்தைக் கேட்க வைக்க வேண்டும், ஆத்தும ஆலோசனைகளைக் கொடுக்க வேண்டும், அக்கறையோடு கவனிக்க வேண்டும். ஆனால் ஆண்டவராக அவனுக்கு இரட்சிப்பைக் கொடுத்து அவன் அதைப் பற்றிப் பேச வருகிறபோது அதையும் கேட்டு நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்காமல் ஞானஸ்நானம் கொடுக்கிறவன் போலிப் பிரசங்கியாக இருக்கிறான். அவனுக்குப் போதக ஊழியத்தைப் பற்றி எதுவும் தெரியாதவனாக இருக்கிறான். அதனால்தான் இதுபோல ‘கொஞ்சக்காலம்’ இருப்பவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து அவர்கள் சபையைவிட்டுப் போனபிறகு அவர்களுக்குப் ‘பின்வாங்கிப் போனவர்கள்’ என்று பெயரைக் கொடுத்துவிடுகிறார்கள். வேதம் அத்தகைய போதனையைக் கொடுக்கவில்லை. இது உண்மையான மனந்திரும்புதலும் அல்ல, உண்மையான விசுவாசமும் அல்ல.

ஒரு பெரியவர் இப்படியாகச் சொன்னார்: ‘அதிக உணர்ச்சி வசப்பட்டு சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ளுகிறவன், உண்மையாக மனந்திரும்பினவனாக இல்லாமலும் இருக்கலாம். அதே நேரம் உணர்ச்சிகளைக் காட்டாமல் விசுவாசிக்கிற ஒருவன் மனந்திரும்பவில்லை என்று சொல்லவும் முடியாது’ என்று. அது உண்மையான வார்த்தை. இந்த இரண்டுவிதமான மக்களையும் நாம் உதாசீனப்படுத்தக் கூடாது. உண்மையான மனந்திரும்புதல் என்று சொன்னால் அந்த மனந்திரும்புதலை காலம் நிரூபித்துக் காட்டும். ஒரு செடி கொஞ்சம் இலைகள் விட்டு வளர ஆரம்பிக்கும் போது நாம் சந்தோஷப்படுவோம், ஆனால் அதிக சந்தோஷப்பட மாட்டோம். அது கனி கொடுக்கிறபோது தான் அதிக சந்தோஷப்படுவோம். செடி கனி கொடுக்கிறவரை நாம் பொறுத்திராமல் இருந்தால் பிரச்சனை நம்மிடம்தான் இருக்கிறது. ஆகவே எப்போதும் வெறும் உணர்ச்சிவசப்படுகிறவர்களையும் வசனத்தில் ஆர்வம் காட்டுகிறவர்களையும் ஞானஸ்நானம் கொடுத்து அங்கத்தவர்களாக சபையில் இணைப்பது மிகப்பெரிய தவறு.

வேதம் இதுபோன்ற மனிதர்களைப் பல உதாரணங்கள் மூலம் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. அதனால்தான் ஆண்டவர் போதனையை மட்டும் கொடுக்காமல் உதாரணங்களையும் கொடுத்து நமக்கு உதவி செய்கிறார். ஏனெனில், நாம் மனிதர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்டவர் அதைச் செய்திருக்கிறார். ஆழமாக மண்ணில்லாத கற்பாறை நிலத்தைப் போன்ற இருதயமுள்ள மனிதர்களை வேதத்தில் நாம் பார்க்க முடியும். முதலாவதாக, யூதாஸ்காரியோத். அவன் கேட்காத பிரசங்கம் இல்லை. ஆண்டவருக்கு அருகிலேயே இருந்து அவருடைய போதனைகளைக் கேட்டு அக்கறை காட்டினான். மேலும் ஒரு பிரசங்கியாகவும் இருந்தான். ஆண்டவர் அவனைப் பிரசங்கம் செய்வதற்காக எழுபது பேரில் ஒருவனாக அனுப்பினார். மேலும் அற்புதங்களையும் செய்தவனாக இருந்தான். இந்தளவுக்கு வசனங்களில் அக்கறைகாட்டி ஆண்டவருக்குப் பக்கத்திலேயே இருந்து அவருடைய பணப் பெட்டிக்கும் பொறுப்புள்ளவனாக இருந்த ஒருவன், பணத்தாசையினாலே அவரைக் காட்டிக் கொடுத்த ஒருவனாக வரலாற்றில் மாறிப்போனான். கடைசியில் தற்கொலை செய்து இறந்து போனான் என்று வேதத்தில் நாம் வாசிக்கிறோம். இவனை நாம் ஆராய்ந்து பார்த்தால் இவன் ஒருக்காலும் விசுவாசிக்கவில்லை. கொஞ்சக்காலம் மட்டுமே அவன் வேதத்தில் காட்டிய அக்கறையும், கிறிஸ்தவத்தில் காட்டிய அக்கறையும், கிறிஸ்துவில் காட்டிய அக்கறையும், பிரசங்கம் செய்வதற்கு ஆசைப்பட்டதும், ஆண்டவருக்காக பணப்பெட்டியை வைத்திருந்ததும் காணப்பட்டது. அது நிரந்தரமாக அவனில் இருக்கவில்லை. அதனால்தான் பணத்தின் மீது ஆசை வைத்து ஆண்டவரையும் காட்டிக் கொடுத்து இறுதியில் தற்கொலையும் செய்துகொண்டான் என்று நாம் பார்க்கிறோம். அவனில் மனந்திரும்புதல் கடைசிவரையும் இருக்கவே இல்லை. அவன் கற்பாறை நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்டிருந்தான்.

இரண்டாவதாக, 2 தீமோத்தேயு 4:10ல் பவுல் வெளிப்படையாகவே எழுதியிருக்கிறார். “ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்.”

தேமா பவுலோடு கூட சேர்ந்து ஊழியம் செய்தான், ஜெபம் பண்ணினான், அநேக சம்பாஷணைகளைச் செய்தான், வார்த்தையில் அதிக அக்கறை காட்டினான். இவையெல்லாம் செய்தபொழுதும் ஒரு காலம் வந்தது, அவனால் அதற்கு மேலேயும் நடிக்க முடியவில்லை, உலகம் அந்தளவுக்கு அவனைப் பிடித்துக் கொண்டது. அதுமட்டுமல்லாமல் பவுலுக்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளையும், சத்தியத்தின் காரணமாக வந்த போராட்டங்களையும், பல துன்புறுத்தல்களையும் தேமாவால் தாங்க முடியாததாக இருந்திருக்கிறது. இந்தளவுக்கு நான் ஏன் கஷ்டப்பட வேண்டும், உலகத்திலேயே இருந்துவிட்டுப் போய்விடலாமென்று தேமா பவுலுக்குக் கூடச் சொல்லாமல் போய்விட்டான் என்று நாம் பார்க்கிறோம். ஆண்டவரை விட உலகம் அவனுக்குப் பெரிதாகப் போய்விட்டது. ஆண்டவருக்காகத் துன்பப்படுவதும், சுயத்தை இழந்து ஊழியம் செய்வதும் அவனுக்குப் பெரிதாகப்படவில்லை.

வேதம் இப்படியானவர்களை நமக்கு இனம் காட்டுகிறது. இவர்கள் தற்காலிகமாக வேதத்தில் ஆர்வம் காட்டுவார்கள், சபைக்கு போவார்கள், ஆனால் அவர்கள் எவ்வளவு காலம் அதில் நிலைத்திருப்பார்கள் என்பதை சொல்லமுடியாது. ஆனால் ஒருகாலத்தில் அவர்களுடைய உண்மையான நிலை வெளிப்படும், அவர்களே தங்கள் நடத்தையினால் அதை வெளிப்படுத்திவிடுவார்கள். அவர்களைப் பற்றி எபிரெயர் 6:4-6 வேதம் சொல்லுகிறது. “ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.” இங்கு நான்கு காரியங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவதாக, பிரகாசிப்பிக்கப்பட்டும், அதாவது சத்தியத்தைக் கேட்டு அந்த சத்தியத்தினாலே இருதயம் உணர்த்தப்பட்டு அறிவைப் பெற்றுக்கொள்ளுவதாகும். இரண்டாவதாக, பரம ஈவை ருசிபார்த்தும், சத்தியத்தை விசுவாசிப்பதினால் வரக்கூடிய ஆசீர்வாதங்களை மனதில் அறிந்து கொண்டு சந்தோஷப்படுவதாகும். மூன்றாவதாக, பரிசுத்த ஆவியைப் பெற்றும், இதை நாம் தவறாகப் புரிந்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறவில்லை. அவர்கள் ஒருவிதத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமைக்குள்ளாக வந்திருக்கிறார்கள். அதாவது பிரசங்கி பிரசங்கம் செய்கிறபோது ஆவியானவர் கிரியை செய்கிறார். அந்த ஆவியானவரின் பொதுவான கிரியையின் மூலமாக வசனத்தில் ஆர்வம் ஏற்படுகின்ற ஒரு வாய்ப்பை மட்டும் இத்தகையோர் கொண்டிருந்தார்கள். ஆனால் ஆவியானவர் ஒருபோதும் அவர்களுக்குள் நிரந்தரமாக இருக்கவில்லை. நான்காவதாக, தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும் என்பதற்கு அர்த்தம், அவர்கள் சுவிசேஷ சத்தியங்களைப் புரிந்து கொண்டிருந்தார்கள், கிறிஸ்தவத்தைப் பற்றிய அறிவு அவர்களுக்கு ஓரளவுக்கு இருந்தது, ஆண்டவரைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தது, பாவத்தைப் பற்றித் தெரிந்திருந்தது, வரப்போகிற நியாயத் தண்டனையைப் பற்றி தெரிந்திருந்தது. இவையெல்லாம் தெரிந்திருந்தும் கூட அவையெல்லாம் வெறும் அறிவாக மட்டுமே இருந்தது. இந்த நான்கு காரியங்களையும் சுவிசேஷத்தின் மூலம் அறிந்திருந்த போதும் அது உண்மையான விசுவாசத்திலோ, மனந்திரும்புதலிலோ போய் முடியவில்லை. இத்தனையையும் அவர்கள் தூக்கி எறிகிறபோது என்ன செய்கிறார்கள்? தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறார்கள். ஆகவே உண்மையான விசுவாசத்தை அடையாமல் சுவிசேஷத்தின் வெளிப்புறமான பலன்களை ருசிபார்க்க முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவேதான் போதகர்கள் ஆத்துமாவை இனம் கண்டுகொள்ளுவது இலேசான காரியமல்ல, அதற்காக அவர்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் அதிக பக்தி விருத்தி உள்ளவர்களாக, இருதயங்களை அறிந்தவர்களாக, நுணுக்கத்தோடு ஆராய்ந்து வேதத்தின் அடிப்படையில் ஆத்துமாக்களைக் கவனிக்கக் கூடியவர்களாக இருப்பது அவசியமானது. ஏனெனில் போலியான மக்களுக்கும் ஞானஸ்நானம் கொடுத்துவிடுகின்ற பெரிய ஆபத்து அதிலிருக்கிறது. ஆகவே இத்தனையையும் அடைந்தவர்கள் இயேசுவைத் தூக்கி எறிந்துவிட்டால், அவர்கள் மனந்திரும்பும்படியாக ஆண்டவர் அதற்கு மேல் செய்யும்படியாக எதுவுமே இல்லை.

உங்களுக்கு சுவிசேஷம் கேட்கிற பாக்கியம் கிடைத்திருந்தால் அதைக் கேட்டு மனந்திரும்பி ஆண்டவருக்குக் கீழ்படியுங்கள். பெற்றோர்களாக நீங்கள் இருந்தால் உங்கள் பிள்ளைகளை ஆண்டவருக்குள் நன்றாக வளர்க்கக் கூடிய பொறுப்பு உங்களுக்கு அதிகமாக இருக்கிறது. அவர்கள் சத்தியத்தைத் தொடர்ந்து கேட்கக் கூடிய வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பிள்ளைகள் இந்தக் காலத்தில் சந்திக்கிற ஆபத்து மிகவும் பயங்கரமாக இருக்கிறது. ஆகவே பிள்ளைகள் சத்தியத்தைக் கேட்டுத் தொடர்ந்து வளருகிறபோது ஒருக்காலத்தில் ஆண்டவர் அவர்களுக்கு உண்மையான இரட்சிப்பைக் கொடுப்பார். அநேக பெற்றோர்களுக்கு உலக ஆசை அதிகமாக உள்ளது. தங்கள் பிள்ளைகள் உலகத்தில் பெரிய ஆளாக வர வேண்டும், உயர்ந்த பதவி அடைய வேண்டும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணங்களை அதிகம் கொண்டுள்ளனர். ஆனால் தங்கள் பிள்ளைகள் சபைக்குப் போகவேண்டும், சத்தியத்தைக் கேட்க வேண்டும், சத்தியத்திற்காகப் பாடுபட வேண்டும், ஆண்டவரிடத்தில் விருப்பம் காட்ட வேண்டும் என்கிற சிந்தனைகளைக் கொண்ட பெற்றோர்களைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. சபைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உலகக் காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் ஆண்டவருடைய தண்டனை பெரிதாகத்தான் இருக்கும். ஆண்டவருக்காக இழக்கத் தயாராக இல்லையென்றால் கிறிஸ்து உங்களுக்கு எதற்காகத் தேவை? தன்னை இழந்து ஆண்டவருக்குக் கொடுக்க வேண்டியதை கொடுக்காவிடில் கிறிஸ்து உங்களுக்குத் தேவையே இல்லை.

உண்மையான கிறிஸ்தவன் யார் தெரியுமா? உண்மையான கிறிஸ்தவன் என்பவன் இயேசுவுக்கு அடிமை. ஒரு அடிமை எப்படி இருப்பான் என்பதை ஒரு அகராதியை வாங்கி வாசித்துப் பாருங்கள். ஒரு அடிமை என்பவன் தன் எஜமான் இட்ட கட்டளைக்கு எந்தவிதத்திலும் மறுப்புக் கூறாமல், அவருக்காகவே சேவை செய்கிறவன்தான் அடிமை. ஆகவே ஒரு உண்மையான கிறிஸ்தவன் இயேசுவுக்கு அடிமையாக இருந்து அவர் இட்ட கட்டளைகளில் அன்பு பாராட்டி அதை பின்பற்றுகிறவனாக இருப்பான். ஆகவே நம் இருதயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தக் கற்பாறை போன்ற இருதயம் கொண்டவன் வேதத்திலும், இயேசுவிலும் காட்டுகிற அக்கறை எல்லாமே வெளிப்புறமானது. இப்படிப்பட்டவர்கள் செய்கிறதெல்லாம் வெளிப்புறமாகத்தான் தோற்றமளிக்கும். அவர்கள் உண்மையாகப் பாவத்தை உணர்ந்து, அதற்காக வருந்தி, அதை விட்டு விலகிய அனுபவம் இல்லாதவர்கள். மேலும் அவர்கள் கிறிஸ்துவை உண்மையாகவே விசுவாசித்திருக்கமாட்டார்கள்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பயன்பாடுகள்

1. வேத வசனங்களைக் கேட்பதற்கு நாம் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். பலர் வசனத்தைக் கேட்டு மனந்திரும்பாமல் போனால் அது வசனத்தினுடைய தவறல்ல, மனித இருதயத்தின் தவறாகும். ஆகவே இரட்சிப்பு கிடைக்கிறவரையும், அந்த இரட்சிப்பு தொடருகிறவரையும், அதை அடைந்த பிறகும் வசனத்தில் அதிக ஆர்வம் காட்டுவதும், அதைப் படிப்பதும் சிந்திப்பதும் ஆராய்வதும் நமக்கு வாழ்க்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் வசனம் நமக்கு உணவு போன்றது. அந்த வசனத்தின் மூலமாகத்தான் ஆண்டவர் நம்மைப் போஷிக்கிறார். ஆகவே வேத வசனத்திற்கு நாம் எந்தளவுக்குக் குறைவாக இடம் கொடுக்கிறோமோ அந்தளவுக்கு அதனுடைய பாதிப்பு நம்முடைய சிந்தனையிலும் செயலிலும் இருக்கும். யார் வேத வசனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் ஆண்டவர் நிச்சயமாக பெரிய காரியங்களைச் செய்வார். நீங்கள் எந்தளவுக்கு வேத வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள்? பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் ஒரு கேள்வியைக் கேட்கிறார், “அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?” (ரோமர் 10:14). ஆகவே ஒருவரும் வசனத்தைக் கேட்காமல் ஆண்டவரை விசுவாசிக்க முடியாது. யூதாஸ்காரியோத் அவ்வளவு வசனங்களைக் கேட்டும் அதினால் இரட்சிப்பை அவன் அடையவில்லை என்றால் அது வசனத்தினுடைய தவறு அல்ல, அவன் இறுதிவரையும் மனந்திரும்பாமல் இருந்ததுதான் தவறு. யூதாஸ்காரியோத் மனந்திரும்பவில்லை என்பது ஆண்டவருக்கு நன்றாக தெரிந்திருந்தது, சுற்றி இருந்தவர்களுக்குத்தான் அது தெரியவில்லை. மற்ற சீடர்கள் மனந்திரும்பி இருந்தார்கள், ஆனால் அவன் மனந்திரும்பவில்லை. காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று ஆண்டவர் சொல்லி இருக்கிறார். ஆகவே வசனத்தைக் கேட்கக் கூடிய, அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய, அதினால் இரட்சிப்பை அடையக்கூடிய விதமாக நம் இருதயத்தைப் பக்குவப்படுத்த வேண்டிய வேலை நம்முடையது. வசனத்தை நாம் தொடர்ந்து கேட்க வேண்டும். ஏனென்றால் வசனத்தின் மூலமாகத்தான் பரிசுத்த ஆவியானவர் நம் இருதயத்தில் செயல்படுகிறார். ஆகவே வசனப் பஞ்சத்திற்கு உங்கள் வாழ்க்கையில் இடம் கொடுக்காதீர்கள். நல்ல சத்தியங்களையும், நல்ல பிரசங்கங்களையும் கேட்பதற்கு வாழ்க்கையில் இடம் கொடுக்க வேண்டும்.

2. உண்மையான மனந்திரும்புதலையும் கிறிஸ்துவில் வைக்கிற விசுவாசத்தையும் அடைவதற்கு எத்தனை முயற்சிகள் செய்தாலும் அது போதாது. ஒருவேளை நீங்கள் ஆண்டவரைத் தெரியாமல் இருந்தால் உண்மையான மனந்திரும்புதலையும் கிறிஸ்துவில் வைக்கிற விசுவாசத்தையும் அடைவதுதான் உங்களுடைய இறுதி நோக்கமாக இருக்க வேண்டும். ஒரு செடி வளர்ந்து கனி கொடுக்காதவரை அதனால் எந்தப் பயனுமில்லை. ஆகவே உண்மையான மனந்திரும்புதலை அடைய வேண்டும், கிறிஸ்துவில் உறுதியான விசுவாசத்தை வைக்க வேண்டும். ஒரு நிலையான ஜீவனுள்ள ஆத்மீக வாழ்க்கை கிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலமாக ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பிக்கிற வாழ்க்கைதான் அவருக்காக இழந்து தொடரும்படியாகச் செய்யும். அநேகர் அப்படியாக இருப்பதில்லை, இவ்வாறு நான் ஆண்டவருக்கு இழந்து கொடுத்தால் எப்படி மூன்று வேளை சாப்பிடுவது என்று கேட்பார்கள். அப்படியாகச் சிந்திப்பவர்கள் இருதயத்தில் பிரச்சனை இருக்கிறது, அவர்கள் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள், அவர்கள் குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் ஆபத்து வராமல் இருக்காது. அதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

3. வசனத்தின் மூலம் ஆண்டவரை விசுவாசித்திருப்பவர்கள் உங்கள் வாழ்க்கையில் ஆத்தும வாழ்க்கைக்கும் சபை வாழ்க்கைக்கும் இடம் கொடுங்கள். சபை இல்லாமல் ஆத்தும வாழ்க்கையில் வளர முடியாது. சபை வாழ்க்கை இல்லாமல் இருப்பவர்கள் பாலைவனத்தில் இருப்பது போலக் காணப்படுவார்கள். பாலைவனத்தில் இருந்தால் தண்ணீர் கிடைக்காது, சாப்பாட்டிற்கும் கஷ்டமாக இருக்கும். கிறிஸ்துவில் நம் ஆத்மீக வாழ்க்கை தொடருவதற்கு சபை வாழ்க்கை மிகவும் அவசியமாகும். ஒரு நல்ல சபையை எப்போதும் இழக்காமல் இருக்கும்படியாக பார்த்துக்கொள்ள வேண்டும். சில நேரம் நம்முடைய பிரச்சனைகள் சபையை தவறாகப் பார்க்க வைக்கும். நாம் நல்ல நிலையில் இல்லாமல் இருந்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்களைத் தவறாகப் பார்ப்போம். காமாலைக் கண்ணனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும் என்பது போலதான் அந்தப் பிரச்சனை இருக்கும். ஆகவே சபை நமக்கு உறவாக, நல்ல குடும்பமாக இருக்க வேண்டும், அதில் ஐக்கியத்தை வளர்க்க வேண்டும். அது ஒரு நல்ல சபையாகவும், நல்ல பிரசங்கங்களைக் கொடுக்கின்ற சபையாகவும், நல்ல வேத போதனைகளைக் கொடுக்கின்ற சபையாகவும் இருக்க வேண்டும், அது கோமாளி சபையாக இருந்துவிடக் கூடாது.

கடைசியாக உங்கள் ஆத்மீக வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்பதற்காக உங்கள் முன் சில கேள்விகளை வைக்கிறேன்.

  1. ஆண்டவரைத் தொடர்ந்து தேடுகிற இருதயத்தைக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் ஆண்டவரை அடைந்து அவரை விசுவாசித்தவர்களாக இருக்கலாம், இருந்தபோதும் பசியுள்ளவன் ஒரு உணவைத் தேடுகிறதுபோல கர்த்தர் தேவை, அவருடைய வசனம் தேவை என்கிற இருதயம் இருக்கிறதா?
  2. உங்கள் வாழ்க்கையில் வேதத்தின் அதிகாரமும் அதன் ஆளுகையும் எந்தளவுக்கு இருக்கிறது? இயேசு நம்மை ஆளுகிறபோது வேதத்தின் மூலம்தான் ஆளுகிறார். வேத வசனத்திற்கு இடம் கொடுக்காமல், அதைப்பற்றி அதிகமாகத் தெரிந்திருக்காமல் வசனத்தின் பஞ்சத்தில் நாம் இருந்தால், கிறிஸ்துவின் ஆளுகையும் நம் வாழ்க்கையில் குறைவாகத்தான் இருக்கும். வேதம் தெரியாமல் இருக்கும்போது எவ்வாறு ஆண்டவருடைய கட்டளைகளுக்கு அடிபணிவது? வேதம் படிக்கிறபோது நாம் ஆண்டவருடைய சித்தத்தையும், அவர் எவ்வாறு சிந்திக்கிறார், நம்மிடமிருந்து அவர் எதை எதிர்பார்க்கிறார் என்பதைத் தெரிந்துக்கொள்ளுவதற்கு வேதம் மட்டுமே உதவுகிறது. எந்தளவுக்கு வேதத்தில் உங்களுக்கு அக்கறை இருக்கிறது?
  3. இயேசுவை நீங்கள் விசுவாசித்திருந்தால் எந்தளவுக்கு இயேசுவையும் மற்றவர்களையும் நேசிக்கிறீர்கள்?
  4. நீங்கள் எந்தளவுக்கு ஆண்டவருடைய பிரசன்னத்திற்காக அலைகிறீர்கள்? அவர் பிரசன்னத்தை அறிந்து கொள்ளுவதற்காக ஜெபிக்கிறீர்களா? உங்கள் குடும்ப ஜெபத்தில் அவரின் பிரசன்னத்தை உணர முடிகிறதா? சபை ஆராதனையில் உணர முடிகிறதா?
  5. உங்கள் வாழ்க்கையில் எந்தளவுக்கு சபைக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?
  6. உங்கள் வாழ்க்கையில் எந்தளவுக்கு ஆத்மீக ஒழுங்கு நடவடிக்கைகளை வைத்திருக்கிறீர்கள்? தவறாமல் வேதம் வாசிப்பது, ஜெபிப்பது, ஆண்டவருடைய சத்தியங்களை அறிந்துகொள்ள உழைப்பது, அவருடைய சபைக்கு செய்ய வேண்டிய காரியங்களைத் தவறாமல் செய்வது போன்ற காரியங்களில் ஒரு ஒழுங்கைக் கொண்டுள்ளீர்களா?
  7. மற்றவர்களை மன்னிக்கிற இருதயம் உங்களுக்கு இருக்கிறதா? இயேசு எதிரிகளுக்காக ஜெபித்தார், பிதாவே தெரியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும் என்று. ஆகவே தவறு செய்தவர்களையும் பாவம் செய்தவர்களையும் இயேசுவைப் போல மன்னிக்கிற இருதயம் உங்களுக்கு இருக்கிறதா? அல்லது அவர்களை எப்படியாவது அழித்துவிட வேண்டுமென்கிற இருதயம் உங்களுக்கு இருக்கிறதா?
  8. எந்தளவுக்கு பரலோகத்திற்கு போக வேண்டும், இயேசுவோடு இருக்க வேண்டும் என்கிற ஆதங்கம் இருக்கிறது? இந்த உலகத்தில் இயேசுவோடு இருப்பவர்களுக்கு அவரோடு எப்போதும் இருக்க வேண்டும் என்கிற ஆதங்கம் இல்லாமல் இருக்காது.

இந்தக் கேள்விகளுக்கு நீங்கள்தான் பதிலளிக்க வேண்டும். ஏனென்றால் அந்த ஆழமாக மண்ணில்லாத கற்பாறை நிலமாக நாம் இருந்துவிடக் கூடாது. ஒரு மனிதன் இயேசுவின் பெயரில் போலியாக வாழ்ந்துவிடலாம் என்று தெரிந்துதான் ஆண்டவர் இந்த உவமையைக் கொடுத்திருக்கிறார். மற்ற மனிதர்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம், ஆனால் ஆண்டவருக்கு அது தெரியும். அது நமக்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஆண்டவர் இந்த உவமையில் இந்த இரண்டாவது நிலத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். ஆகவே நீங்கள் ஜெபித்து உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் இருதயம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்து அதைச் சரி செய்துகொள்ளப் பார்க்க வேண்டும். ஆண்டவருடைய உதவியோடு அதை நாம் சரிசெய்து கொள்ளுகிறபோது நாம் சரியான பாதையில் போக முடியும். அப்போது கர்த்தர் நம்மோடு இருப்பார். இருதயத்தைப் பார்க்க மறுக்கிறவன் நிச்சயமாக ஆண்டவரில் எந்த அன்பும் இல்லாதவனாகத்தான் இருப்பான். அவன் சத்தியத்தில் ஆர்வம் காட்டமாட்டான். ஆகவே அதை உங்களுக்கு எச்சரிக்கையாக கொடுத்து இந்த ஆக்கத்தை முடிக்கிறேன்.

முள்ளுள்ள இடங்கள்

மத்தேயு 13வது அதிகாரத்தில் விதை நிலங்களின் உவமையை நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம். ஆண்டவர் முதலில் அந்த உவமையைச் சொல்லி விட்டு பின்பு அதற்கான விளக்கத்தைக் கொடுக்கின்றார்.

மத்தேயு 13:3-9

அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

ஆண்டவர் இந்த உவமைக்கான விளக்கத்தைப் பதினெட்டாவது (மத்தேயு 13:18) வசனத்திலிருந்து கொடுக்கிறார்.

மத்தேயு 13:18-23

ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.

இந்த உவமையில் தரப்பட்டிருக்கின்ற உதாரணங்களில் இரண்டு உதாரணங்களை நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். முதலாவதாக கொடுக்கப்பட்ட உதாரணம் வழியருகே என்ற பகுதி. விவசாயி அந்த காலத்திலே விதையெல்லாம் பயிரிடுகிறபொழுது அந்த நிலத்தை உழுது பண்படுத்தி அதற்குப் பிறகுதான் பயிரிடுவான். அப்படி அவன் பயிரிடப் போகிறபொழுது தன் தோளில் கூடையில் இருந்த விதையை அவன் தூவிக் கொண்டு போகிற பொழுது சில விதைகள் வழியருகே விழுந்து விடுகின்றன. அப்படி வழியருகே நிலத்தில் விழுகின்ற விதை பலன் கொடுக்காது என்று ஆண்டவர் சொல்லுகிறார். அந்நிலம் பண்படுத்தப்படாத ஒரு வெறும் பாதையாக கடினமாக இருப்பதனாலே அதில் விதை முளைத்து வேரிட வழியில்லாமல் இருக்கிறது. ஆகவே அதைப் பறவைகள் வந்து பட்சித்து விடுகின்றன. அதை ஆண்டவர் யாருக்கு உதாரணமாகக் காட்டுகிறார் என்றால் வேத வசனத்தைக் கேட்பதில் மிகவும் அசட்டையாக இருக்கிற ஒரு மனிதனுக்கு ஒப்பிடுகிறார். அவன் இருதயம் பாவத்தினால் கடினப்பட்டு போய், வேத வார்த்தைகளில் எந்தவிதமான ஆர்வமும் இல்லாமல் இருக்கிறான். அப்படி இருதயத்தில் ஆர்வம் இல்லாதவன் அதை காது கொடுத்துக் கேட்க மாட்டான், உதாசீனப்படுத்தி விடுவான். அவன் அப்படி செய்வதனால் என்ன நடக்கிறது? சாத்தான் வந்து கொடுக்கப்பட்ட வசனத்தை எடுத்துக் கொள்கிறான். அதனால் அவனுக்கு எந்தவிதமான பயனும் இல்லை.

இரண்டாவது நிலம் கற்பாறை நிலங்கள். அதைப் பற்றியும் விளக்கமாகச் சொன்னேன். அந்த நிலம் ஒரு அளவுக்கு விதை முளைக்க கூடிய அளவுக்கு ஒன்று அல்லது மூன்று அங்குலம் வரை மண் இருக்கிறது. ஆனால் அந்த மண்ணுக்கு கீழே கற்கள் காணப்படுவதனாலே அது வேரூன்றுவதற்கு வழியில்லை. ஆகவே மத்தியான வேளையிலே வெயில் வருகின்ற பொழுது சூரியக்கதிர்கள் மேலே இருந்து தாக்குவதனாலே அந்த மண் ஆழமாய் இல்லாததனால் அந்த விதை அதிக காலம் உயிர் வாழ முடியாது. மேலும் அந்த சூரிய வெப்பத்தினால் கற்களும் அதிக சூடு பிடிப்பதனால் மேலிருந்தும் கீழிருந்தும் வெப்பம் தாக்குகிறது, அதனால் வெப்பம் தாங்க முடியாமல் அந்த விதை பலன் கொடுக்காமல் போய்விடுகிறது. இதையும் ஒருவிதமான இருதயத்தை கொண்டிருக்கிற மனிதனுக்கு உதாரணமாக ஆண்டவர் காட்டுகிறார். இந்த மனிதனுக்கு பிரச்சனை என்ன? ஏற்கெனவே நாம் பார்த்தபடி இவன் காது கொடுத்து வசனத்தைக் கேட்கிறான். ஆரம்பத்தில் கொஞ்சம் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளுகிறான். விதை வளருகிறது ஆனால் வேர் விட முடியாமல் இருக்கிறது. அப்படி அது வளருகிற பொழுது வேதத்தில் கொஞ்ச காலத்திற்கு அந்த ஆர்வத்தைக் காட்டுகிறான். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையில் இடையூறுகளும் பிரச்சனைகளும் ஏற்படுகிற பொழுது, அதாவது வசனத்தினிமித்தம் துன்புறுத்தல்களும் கேலிப் பேச்சுகளும் பிரச்சனைகளும் ஏற்படுகிறபோது, ஏன் அநாவசியமாக இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டி என் வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லி, அவன் மறுபடியும் உலகத்துக்கே போய்விடுகிறான். அத்தகைய மனிதனைத்தான் இந்தக் கற்பாறை நிலம் நமக்கு விளக்குகிறது. ஆண்டவருடைய வசனத்தைக் கேட்டு இரட்சிப்பை அடையாமல் ஒரு வருஷம் கூட அதில் ஈடுபாடு காட்டி, சபைக்கு போவதும், சபை மக்களோடு ஐக்கியத்தில் வருவதும், ஜெப கூட்டத்தில் ஜெபம் பண்ணவும் கூட முடியும். யூதாஸ் அதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆண்டவரோடேயே இருந்து, அவருடைய சீடர்கள் ஒருவனைப் போல அப்போஸ்தலனாக வந்து, அவருடைய பணத்தைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்கிற ஒரு பதவியிலும் இருந்து, கடைசியில் அவரைக் காட்டிக்கொடுத்து இருக்கிறான் என்றால், நாம் எவ்வளவு தூரம் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

இந்த ஆக்கத்தில் நாம் மூன்றாவது நிலத்தைக் குறித்து பார்ப்போம். இந்த மூன்றாவது நிலத்தை நாம் பார்க்கின்ற பொழுது இதுவரைக்கும் பார்த்தது போல, முதலில் ஆண்டவர் கொடுத்திருக்கிற உதாரணத்தைப் பார்ப்போம். அதற்குப் பிறகு அந்த உதாரணத்திற்கான விளக்கத்தைப் பார்ப்போம். மூன்றாவதாக அதிலிருந்து ஆண்டவர் நமக்கு என்ன பாடங்களை கற்றுக் கொடுக்க விரும்புகிறார் என்பதைப் பார்ப்போம்.

ஆண்டவர் கொடுத்திருக்கிற உதாரணம்:

மத்தேயு 13:7

சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.

இதே விதமாகத்தான் லூக்கா எட்டாவது அதிகாரத்திலும், மாற்கு நான்காம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். இப்போது இந்த நிலத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். மற்ற நிலங்களைவிட இந்த நிலத்தில் இருக்கும் பிரச்சனை என்ன? இந்த நிலத்தில் விவசாயி எப்போதுமே நிலத்தை உழுது அதைப் பண்படுத்துகிறபோது முட்புதர்களை அகற்றி இருப்பான். அவன் அவ்வாறு அகற்றிவிட்ட பொழுதும் மண்ணின் ஆழத்தில் அவற்றின் வேர் இருந்திருக்கிறது. அதை அவன் கவனிக்காமல் விட்டிருக்கிறான். அப்போது என்ன நடக்கிறது? நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி, உரம் போட்டு, விதை விதைப்பதற்காகத் தயார் செய்து, அதில் விதைகளையும் தூவிய பிறகு, அந்த நிலத்தில் விதை மட்டும் வளரவில்லை, அதோடு சேர்ந்து அந்த ஆழத்தில் இருக்கின்ற முட்செடிகளின் வேர்களும் வளர ஆரம்பித்தன. அதுதான் இந்த நிலத்தில் காணப்படும் பிரச்சனையாக இருக்கிறது. இது ஓரளவுக்கு நல்ல நிலம்தான், விதைகள் வளரும்படியாகத்தான் இருந்தது. ஆனால் அந்த நிலத்தின் அடியில் காணப்படும் முட்புதர்களின் வேர்தான் பிரச்சனை. அதுவும் வேர்விட்டு வளர ஆரம்பித்து, கொஞ்ச காலம் போன பிறகு, அங்கே மூன்று முட்புதர்கள் சேர்ந்து வளர்ந்துள்ளன. ஏன் மூன்று முட்புதர்கள் என்று பின்னால் விளக்குகிறேன். இங்கு விவசாயி போட்ட விதை செடியாக வளர்ந்து இருக்கிறது. ஆனால் அதோடு இந்த மூன்று முட்புதர்களும் அழகாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவை அவன் விதைத்த செடியை நெருக்கி அதற்கு மேல் வளர விடாமல் அதை இல்லாமல் ஆக்கி விடுகின்றன. இந்தக் காட்சியைத்தான் படமாக இந்த உதாரணத்தின் மூலமாக ஆண்டவர் நமக்குக் காட்ட விரும்புகிறார். இதுபோல முட்புதர்கள் நிலத்தில் இருந்தால் எந்த ஒரு நல்ல செடியும் வளர முடியாது. மேலும் நல்ல செடியைத் தொடர்ந்து வளர முடியாதபடிச் செய்து அந்தச் செடியை அழித்துவிடும்.

இந்த உதாரணம் எதை விளக்குகிறது?

ஆண்டவர் இதற்கான விளக்கத்தை 22 வது வசனத்தில் கொடுக்கிறார்.

மத்தேயு 13:22

முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான்.

இந்த வசனத்தில் ஆண்டவர் இரண்டு முட்புதர்களை விளக்குகிறார். அதில் முதலாவது முட்செடி உலகக்கவலை, இரண்டாவது முட்செடி ஐசுவரியத்தின் மயக்கம் ஆகிய இவ்விரண்டும் வசனத்தை நெருக்கிப் போடுகின்றன. இதேயே மாற்குவும் சொல்லுகிறார், ஆனால் மாற்கு அதில் ஒன்றைக் கூட்டிச் சொல்லுகிறார்.

மாற்கு 4:18

வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்.

மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகள்தான் மூன்றாவது முட்செடி. இதனை லூக்கா ‘சிற்றின்பங்களினாலும்’ என்று விளக்குகிறார்.

லூக்கா 8:14

முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.

இவைகள்தான் இந்தச் செடிக்கு வந்திருக்கும் மூன்று ஆபத்துக்கள் ஆகும். இந்த மூன்றாவது உதாரணத்தில் சொல்லப்படுகின்ற இந்த முட்புதர் உள்ள நிலத்தில் வளருகிற செடிகளைப் போல் மனிதர்கள் சபைக்கு வருவது இயற்கைதான். அவர்கள் வந்து வசனத்தைக் கேட்கிறார்கள். அந்த வசனத்தைக் கேட்டு, அதில் ஈடுபாடு காட்டி, இயேசுவின் மேல் ஆர்வத்தைக் காட்டி, சபைக்கு தொடர்ந்து வருவதெல்லாம் கொஞ்சக்காலம் அவர்களில் காணப்படும். அதுமட்டுமல்லாமல், வசனத்தின் மூலமாக குற்றங்கள் உணர்த்தப்பட்டு, இந்த மாதிரியான குற்றங்களை நாம் செய்யக்கூடாது என்று சொல்லி, ஒழுக்க ரீதியில் கூடத் தங்களை மாற்றிக் கொள்வதற்கான முயற்சியிலும் அவர்கள் ஈடுபடுவார்கள். அப்பொழுது சபையார் அவர்களைப் பார்க்கிற பொழுது, அவர்கள் கிறிஸ்தவராக மாறிவிட்டது போலவும், வாழ்க்கையானது ஒழுங்காக இருப்பது போலவும், வசனத்தில் ஆர்வம் காட்டுவது போலவும் வெளிப்புறமாக அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இப்படியெல்லாம் இருந்தும் கூட அங்கு பிரச்சனை இருக்கிறது. அவர்களுக்கு பழைய வாழ்க்கையிலிருந்த மோகம் அவர்கள் இன்னும் விட்டபாடில்லை.

இந்த முட்புதர்களில் முதலாவது, உலகக் கவலைகள்.

உலகக் கவலைகள் என்பது என்ன? நான் இந்த உலகத்தில் தொடர்ந்து ஒழுங்கான ஒரு வேலையோடு வாழ்ந்துவிடுவேனா? வேலைக்கேற்ற ஒரு நல்ல வருமானம் எனக்குக் கிடைக்குமா? எனக்குச் சொந்தமானதாக இருக்கும்படியாக ஒரு வீடு வேண்டுமே. என் பிள்ளைகளுக்கு நான் என்ன சேர்த்து வைக்க முடியும்? இப்படியான உலகக் கவலைகள் அவனைப் பற்றிக்கொள்ளுகின்றன. இந்தக் கவலைகளை எல்லாம் எப்படிச் சமாளிப்பது என்று அவன் தெரியாமல் இருக்கிறான். அவன் ஆண்டவர் மேலும், சபை மேலும், வசனத்தின் மேலும் ஈடுபாடு காட்டுகிறான். ஆனால் இந்த உலகத்துக் கவலைகளை அவனால் விட்டுவிட முடியாமல் இருக்கிறது. கவலைப்படாதீர்கள் என்று கிறிஸ்தவர்களுக்கு ஆண்டவர் சொல்லியிருக்கிறார். ஒரு கிறிஸ்தவனாக இருந்தால் ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஏன் கவலைப்படாதே என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்? கவலைப்பட்டு உங்களால் ஆகப்போவது ஒன்றுமேயில்லை. கவலைப்பட்டால் சரீர ரீதியில் பிரச்சனைகள் வரும். இந்தக் கவலைகள் எல்லாம் அதிகரிக்கிற பொழுது அது நம்மை அரிக்க ஆரம்பித்துவிடும். வயிற்றில் அல்சர் வருவது இந்தக் கவலைகளால்தான். கவலைகளைத் தீர்த்துகொள்ள முடியாமல் குடியில் தஞ்சம் அடைவோர் அதிகம். ஆகவே இந்தக் கவலைகளால் நமக்கு ஒரு நன்மையும் இல்லை. ஆண்டவர் கிறிஸ்தவர்களுக்கு என்ன சொல்கிறார்? நீங்கள் கவலைப்படாதீர்கள், அதனால் உங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. ஆகவே உங்கள் துன்பங்கள் பிரச்சனைகளை எல்லாம் என்மேல் வைத்துவிட்டு அமைதியாக சமாதானத்தோடு இருங்கள் என்கிறார். பொதுவாக கவலைகள் எல்லோருக்கும் வரும், ஆனால் கிறிஸ்தவர்களுக்கு நன்றாகத் தெரியும் தன் தலையில் இருக்கிற ஒரு முடியைக் கூட ஒன்றும் பண்ண முடியாத நிலையில் இருக்கிறோம் என்று. நாம் கவலைப்பட்டுச் சாதிக்கப்போவது என்ன? ஒன்றுமேயில்லை. ஒரு கிறிஸ்தவன் என்பவன் கவலைகளை ஜெபத்தில் ஆண்டவர் மீது வைத்துவிட்டு, தைரியத்தோடும், பெலத்தோடும், ஜெபம் கேட்கிற தேவன் இதற்கு ஒரு வழி பண்ணுவார் என்கிற நம்பிக்கையோடு பொறுமையாகக் காத்திருப்பான். யோபுவை நாம் பழைய ஏற்பாட்டில் பார்க்கிறோம். அவனுக்கு வந்த பிரச்சனையை விட நம்மில் யாருக்காவது பெரிய பிரச்சனை வந்திருக்கிறதா? அவனோடு நம்மால் போட்டி கூட போட முடியாது, அந்தளவுக்கு அவனுக்குப் பிரச்சனைகள் இருந்தன. தான் கொண்டிருந்த எல்லாவற்றையும் அவன் இழந்தான். தோட்டம் துறவு அத்தனையையும் இழந்து, தன்னுடைய குடும்பத்தையும் இழந்து, நோய்களால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்தான். அப்படி இருந்தாலும்கூட ஆண்டவர், அவன் தன் நாவினால் எந்தவிதமான பாவத்தையும் செய்யவில்லை என்று சொல்லுகிறார். யோபு அந்தளவுக்குத் தன்னுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறான். ஆண்டவர் யோபுவை உதாரணமாகக் கொடுத்திருப்பதற்குக் காரணம், விசுவாசிகள் அதைப் பார்த்துப் படித்துச் சிந்திப்பதற்காகத்தான். கவலைப்படுவதால் நாம் ஒரு நன்மையையும் அடைவதில்லை. கர்த்தர் நம்மோடு இருக்கிறபொழுது நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்மேல் அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு நாம் அமைதியாக இருக்க முடியும். ஒரு விசுவாசியாக இல்லாத ஒருவன் அதைச் செய்ய முடியாது. அவன் காட்டுகின்ற ஆத்மீக ஆர்வம் அனைத்தும் இருதயத்தின் ஆழத்தில் இருந்து எழாததால் அவனால் அந்தக் கவலைகளை நிறுத்திக் கொள்ள முடியாது. ஆனால் அந்தக் கவலைகள் அவன் வாழ்க்கையில் மேலோங்கி விடுகின்றன. அப்படியாக அவன் நெருக்கப்படுவதனால் ஆண்டவர்மேல் அவன் காட்டுகின்ற ஆரம்ப ஆர்வமெல்லாம் குறைய ஆரம்பிக்கும்.

இரண்டாவது முட்புதர் பணமோகம்.

இதுவும் அவனுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. கிறிஸ்தவர்களில் அநேகர் அதில் அகப்பட்டு விடுகின்றனர். ஆண்டவரிடம் வந்து ஆண்டவரோடு இருக்க ஆசை, ஆனால் வேலை வேலை என்று வாரம் முழுவதும் செலவிட்டு ஆண்டவருக்குக் கொடுக்க வேண்டியதில் குறை வைப்பவர்கள் அநேகர். நீங்களே உங்களைக் கேட்டுப்பாருங்கள். எவ்வளவு நேரம் ஜெபம் பண்ணுகிறீர்கள்? எவ்வளவு நேரம் வேதம் வாசிக்கிறீர்கள்? எவ்வளவு நேரம் வேதத்தை ஆராய்ந்து படிக்கிறீர்கள்? தேவனுடைய மக்களோடு ஐக்கியத்தில் வருகிறீர்களா? சபை வாழ்க்கைக்கு உங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறீர்களா? நன்றாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் இந்த உலகத்துக் காரியங்களுக்குக் கொடுக்கின்ற நேரம் அதிகமாக இருக்கிறது, ஆண்டவரில் அன்பு செலுத்துகிறேன் என்று சொல்லுகிறீர்கள். ஆனால் அவருக்கு கொடுக்கின்ற நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது. அது என்ன கிறிஸ்தவம்? நம்முடைய நன்மைக்காகதான் ஆண்டவர் ஜெபத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார், பிரசங்கம் கேட்பதை ஏற்படுத்தி வைத்திருக்கிறார், சபையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார், சபை ஐக்கியத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். ஆனால் இவைகளைக் காட்டிலும் நம்முடைய சொந்தத் தேவைகளுக்காக நாம் கொடுக்கின்ற நேரம் மிகவும் அதிகமாக இருக்கிறது. இது வாழ்க்கையில் ஒரு பயிற்சியாகத் தொடருமானால் நீங்கள் எங்கே போகப் போகிறீர்கள் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். இது உங்களைப் பற்றியதாக இருந்தால் நான் கேட்க வேண்டிய கேள்வி, இதற்குப் பெயர்தான் ஆண்டவர் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பா? என்று நீங்களே உங்களை கேட்டுப் பார்க்க வேண்டும். பண மோகம் மோசமானது என்று ஆண்டவர் எச்சரித்திருக்கிறார். அது நம்மை இல்லாமல் ஆக்கிவிடும்.

மூன்றாவது முட்புதர் மற்றவைகளைப் பற்றி நமக்குள் உண்டாகின்ற இச்சைகள்.

லூக்கா இதனைச் சிற்றின்பம் என்று சொல்லுகிறார். இந்த உலகத்து இன்பங்களுக்காக ஆசைப்படும் இந்த மனிதனால் அதை விடமுடியவில்லை. அவன் வாழ்க்கையில் உலக ஆசைகளும் இன்பங்களும் மேலோங்கிக் காணப்படுவதால் என்ன நிகழ்கிறது? ஆண்டவரிலும், அவருடைய வசனத்திலும், சபையிலும் இருக்கின்ற ஆர்வம் குறைந்து போகிறது. அவன் இந்த உலகத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து விடுகிறான். எங்கிருந்து வந்தானோ அதற்கே தன்னுடைய வாழ்க்கையைக் கொடுத்துவிடுகிறான். வாழ்க்கையில் பணத்தையே தேடி அலையாதீர்கள். வேதத்தில் ஒருவன் தன்னுடைய தோட்டத்தில் பயிர் விளைச்சல் அதிகரித்து அதையெல்லாம் சேர்த்து வைத்து, இனிமேல் நான் உழைக்க வேண்டிய அவசியமே இல்லை, வாழ்நாள் முழுவதும் தேவையான பணம் சேர்த்து வைத்திருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டான். ஆனால் ஆண்டவர் அவனைப் பார்த்து இன்றைக்கு நீ இறக்கப் போகிறாய், இதையெல்லாம் என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார். நம் வாழ்க்கையில் நாளைக்கு என்ன நடக்குமென்று நமக்குத் தெரியாது. அதை நம்மால் தீர்மானிக்க முடியாது. நாம் போடும் திட்டங்கள் எல்லாமே கர்த்தரால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவே பண மோகமும் உலக ஆசைகளும் நம்மை அழித்துவிடும்.

1 தீமோத்தேயு 6:9, 10

ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. ஏனென்றால் பணமிருந்தால் அதிகமாகப் பாவம் பண்ண முடியும். நினைத்த பாவத்தையெல்லாம் பணத்தை வைத்துச் செய்ய முடியும். அதனால்தான் அது அதிக தீமைகளுக்கு வேராயிருக்கிறது. ஆகவேதான் வேதம் “போதுமென்கிற மனதோடு இரு” என்று சொல்லுகிறது. அதிகப்பணம் அதிக பாவத்தை செய்வதில் கொண்டு போய் விட்டு விடும். ஏனென்றால் எல்லாருக்கும் பணத்தில் கட்டுப்பாடு இருக்காது. ஆகவே பணம் இருந்தால் அதோடு கட்டுப்பாட்டையும் சேர்த்து ஆண்டவரிடம் கேட்க வேண்டும். ஆகவேதான் பவுல், “சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.” என்று சொல்லுகிறார். பண ஆசை விசுவாசத்தை விட்டு விலகிப்போவதில் கொண்டுபோய் விட்டுவிடும். இதெல்லாம் அவன் வாழ்க்கையில் மேலோங்கி நிற்பதால், ஆத்மீகரீதியில் அவன் என்ன காரியங்களையெல்லாம் நேசித்தானோ அத்தனையையும் விட்டு விலகிப் போய்விடுவான். இதுதான் முட்புதர்கள் உள்ள நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்டிருந்தவனின் நிலைமை. ஆகவேதான் யோவான் சொல்லுகிறார்,

1 யோவான் 2:15, 16

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.

உண்மையான கிறிஸ்தவர்களாக இருந்தால் வாழ்க்கையில் உலகம் பெரிதாக இருக்கக் கூடாது. உலகத்துக் காரியங்களில் உங்களுக்கு அன்பு அதிகமாக இருந்தால் ஆண்டவரின்மேல் உங்களுக்கு அன்பு இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று யோவான் சொல்லுகிறார். இந்த உலகத்தின் காரியங்களை இச்சித்து அன்புகூர்ந்தால் நாம் உலக மனிதர்களைப் போல மாறிவிடுகிறோம். அது நாம் ஆத்மீக வாழ்க்கையிலிருந்து வழுவிப் போவதற்குத்தான் உதவுமே தவிர, ஆத்மீக வாழ்க்கையில் சிறப்பாக இருப்பதற்கு உதவாது. பணம் இருப்பவர்களைப் பார்த்து பவுல் சொல்லுகிறார்,

1 தீமோத்தேயு 6:17

இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்.

பணம், செல்வாக்கு எல்லாமே நிலையில்லாதது. நமக்குத் தேவையான அனைத்தையுமே தருகிற ஜீவனுள்ள தேவன்மேல் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். எனக்குத் தெரிந்த உண்மையான கிறிஸ்தவர்களில் சிலர் பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பண ஆசையே இல்லாமல் இருக்கத் தங்கள் இருதயத்தில் பயங்கர கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தேவைக்கு மேல் பணத்தைச் செலவழிப்பதில்லை, மிகுதியான பணத்தை கிறிஸ்தவப் பணிகளுக்குக் கொடுத்துவிடுவார்கள். அவர்களிடத்தில் பணமிருந்தால் கூட பணமோகம் இல்லாதபடி தங்கள் இருதயத்தைப் பாதுகாத்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் அதை எல்லாராலும் செய்ய முடியாது, பண ஆசை நம் இருதயத்தை ஒழுங்காக இருக்க விடாது. பண ஆசை நம்மை இல்லாமல் ஆக்கிவிடும். இது நம்மினத்தில் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பண ஆசை காரணமாக விசுவாசத்தை விட்டு விலகி, அநேகர் குடும்பத்தையும் ஒழுங்காகப் பார்த்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள். கணவன் ஒரு நாட்டிலும், மனைவி ஒரு நாட்டிலும், பிள்ளைகள் இன்னொரு நாட்டிலும் வாழ்கிறார்கள். ஆனால் இப்படி இருப்பவர்களும் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளுவார்கள். வேதத்தில் இப்படியாக வாழும்படி ஆண்டவர் கற்றுக்கொடுத்து இருக்கிறாரா? மனைவியையும் பிள்ளைகளையும் நல்ல வழியில் நடத்தி, குடும்பமாக ஆலயத்துக்கு போய் ஆண்டவரை ஆராதித்து, அவருடைய வழியிலே எல்லோரும் ஒருமுகமாகப் போவதற்காகதான் குடும்பம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது குடும்பத்தைப் பிரிந்து, ஒவ்வொருவரும் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் செய்யாமல், இந்த உலக மக்களைப் போல வாழுகிற பொழுது எப்படித் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ள முடியும்? நிச்சயமாக அத்தகையோர் வாழ்க்கையில் கிறிஸ்து இருக்கிறாரா? என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறது.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்:

முட்புதர் நிலத்தில் வளருகின்ற விதையைப் போன்று இருதயத்தை கொண்டிருக்கிறவர்களைப் பற்றி மூன்று பாடங்களைப் படிக்கலாம்.

முதலாவதாக, நான்கு நிலங்களில் முதல் மூன்று நிலங்களில் எதுவுமே பலன் கொடுக்கவில்லை. வழியருகே நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்டிருக்கிறவர்கள், கற்பாறை நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்டிருக்கிறவர்கள், இந்த முட்புதர் நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்டிருக்கிறவர்கள் என மூன்று வகையான நிலங்களிலும், அவர்களுடைய வாழ்க்கையில் சுவிசேஷம் ஆழமாகப் பதிந்து அதுபோய் முடிய வேண்டிய கட்டத்தை அடையவில்லை. மூன்று பேருக்குமே இரட்சிப்பு கிடைக்கவில்லை, ஆனால் வெளிப்புறமாக சுவிசேஷத்தின் மூலமாகக் கிடைக்கின்ற சில பொதுவான நன்மைகள் சில காலத்திற்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருந்திருக்கின்றன. ஆனால் அவை அவர்களில் நிலைத்து நிற்கவில்லை என்று ஆண்டவர் சொல்லுகிறார். அவர்கள் காது கொடுத்து சுவிசேஷத்தைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அதை அவர்களால் உணர முடியவில்லை. அதை உணர்ந்து ஏற்று அதைப் பின்பற்றிக் காப்பாற்றிக்கொள்ள அவர்களால் முடியவில்லை. யூதாசைப் போல உலக இச்சையும் பண ஆசையும் அவர்கள் வாழ்வில் அழிவில்தான் போய் முடிந்திருக்கிறது. வெறும் முப்பது வெள்ளிக்காசுக்காக ஆண்டவரை யூதாசு காட்டிக் கொடுத்தான். தேமா உலக இன்பங்களை நேசித்து என்னைவிட்டு விலகிப் போய்விட்டான் என்று பவுல் எல்லாருக்கும் தெரியும்படியாக எழுதி வைத்திருக்கிறார்.

இரண்டாவதாக, ஒருவன் சுவிசேஷத்தைக் கேட்டு ஆவிக்குரிய வாழ்க்கையின் வெளிப்புற அடையாளங்களைக் கொண்டிருந்தும் மெய்யான மனந்திரும்புதல் இல்லாமல் இருந்து விட முடியும். இந்த மூன்று நிலங்களில் கற்பாறை நிலத்தைப் போன்றவர்களும், முட்புதர் நிலத்தைப் போன்றவர்களும் சுவிசேஷத்தைக் காது கொடுத்துக் கேட்டு, வெளிப்புறமாக ஒரு ஆர்வத்தைக் காட்டி, அது சொல்லுகிறபடி ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை எல்லாம் செய்திருந்தபோதும் மெய்யான மனந்திரும்புதல் அவர்களில் இருக்கவில்லை. கடந்த வாரம் என் சபையில் பிரசங்கித்த போது ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டேன். அதில், பாவத்தைப் பற்றி சரியாக உணராமல், அந்தப் பாவத்தை ஆண்டவருக்கு முன்பாக செய்திருக்கிறேன் என்ற வலி நெஞ்சில் ஏற்படாமல், அந்த பாவத்தில் இருந்து விலக வேண்டும், அதற்கு ஒரே வழி இயேசு கிறிஸ்து மட்டுமே, அவர் மட்டுமே பாவமன்னிப்பை கொடுக்கக் கூடியவராக இருக்கிறார், இவ்வளவு மோசமாக பாவத்தில் இருக்கிறேனே என்று நினைத்து வருந்தி, அதிலிருந்து விடுபடுவதற்காக ஆண்டவரிடத்தில் அதிகமாக ஜெபிக்காத ஒரு மனிதன் ஒருநாளும் இரட்சிப்பை அடைய முடியாது என்று சொன்னேன். பாவத்திலிருந்து ஆரம்பிக்காத ஒரு இரட்சிப்பு இரட்சிப்பே அல்ல. ஆகவே உண்மையான மனந்திரும்புதல் இந்த இரண்டு வகையான இருதயத்தைக் கொண்டிருப்பவர்களிடமும் இருக்கவில்லை. உண்மையான மனந்திரும்புதல் இருந்தால் நிச்சயமாக அது இரட்சிப்பில் போய் முடியும். ஏனென்றால் விசுவாசமும் மனந்திரும்புதலும் சேர்ந்து வரும். உண்மையாக பாவத்திலிருந்து மனந்திரும்பியவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கு நன்றி சொல்லி, தான் செய்த பாவங்களை நினைத்து மிகவும் துக்கமடைவான். அவன் திரும்பிப்போக மாட்டான், நாய் சாப்பிட்டதை வாந்தி எடுத்து திரும்பத் தானே சாப்பிடுவது போல உண்மையான மனந்திரும்புதலை அடைந்தவன் நடக்க மாட்டான்.

கோவிட் காலத்தில் மனந்திரும்புதலைப் பற்றி அதிகமாக செய்திகளைக் கொடுத்தேன். அதையெல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறோம். அதை வாங்கி அதிகமாக வாசித்துப் பாருங்கள். அதில் எந்த அளவுக்கு உண்மையான மனந்திரும்புதல் அவசியம் என்பதை விளக்கியிருக்கிறேன். இயேசுவை விசுவாசிக்கிறேன் என்று சொல்லிவிட்டால் போதாது. அப்படி சொல்லி ஆயிரக்கணக்கான பேர் ஆண்டவரை விட்டு விலகிப்போய் இருக்கிறார்கள். உண்மையான மனந்திரும்புதல் இருக்க வேண்டும், உண்மையான மனந்திரும்புதல் இல்லாதவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கக்கூடாது. சில காலத்திற்கு உண்மையான மனந்திரும்புதல் ஏற்பட்டிருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். கெட்ட குமாரனுடைய கதையில் நாம் பார்க்கிறோம், உண்மையான மனந்திரும்புதல் அவனுக்கு ஏற்பட்டது. ஏனென்றால் அவனைப் பற்றி வேதம் என்ன சொல்லுகிறது? அவன் தன்னுடைய நிலையை உணர்ந்தான். அவனது மனந்திரும்புதல் எத்தகையது என்பதை அவனுடைய நடவடிக்கைகளிலும் வாழ்க்கையிலும் பார்க்கிறோம். அவன் பரலோகத்தில் இருக்கின்ற என்னுடைய பிதாவுக்கு எதிராகவும், என்னுடைய தகப்பனுக்கு எதிராகவும் நான் பாவம் செய்துவிட்டேன் என்று சொல்லுகிறான். அப்படி செய்து விட்ட பாவத்தை நினைத்து எந்த அளவுக்கு அவன் வருந்துகிறான் என்பதை அவனுடைய நடவடிக்கைகள் நமக்குக் காட்டுகிறது. அப்பாவினிடத்தில் போய் நான் பெரிதாக ஒன்றும் கேட்கப் போகிறதில்லை. அவர் என்னை ஒரு வேலைக்காரனை விட மோசமாக வைத்திருந்தாலும் பரவாயில்லை, ஏனென்றால் அவ்வளவு கொடுமையான பாவத்தை செய்த பாவி நான் என்று சொன்னான். மேலும் எனக்கு மன்னிப்பு வேண்டுமென்று கேட்டான். அதுதான் உண்மையான மனந்திரும்புதல். உண்மையாக மனந்திரும்புகிறவன் பாவத்தை வெறுத்து, அதை விட்டு விலகி ஓடி, அதோடு எந்தத் தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளமாட்டான். அதற்காகத் துக்கப்பட்டு ஆண்டவரிடத்தில் சமாதானத்தை அடைவான். ஆகவே கற்பாறை மற்றும் முட்புதர் நிலத்தைப் போன்று இருக்கிறவர்களுக்கு உண்மையான மனந்திரும்புதல் இருக்கவில்லை. அவர்களில் சுவிசேஷ வாழ்க்கைக்குரிய வெளிப்புறமான அடையாளங்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. அது மிகவும் ஆபத்தானது என்பதை ஆண்டவர் நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். ஆண்டவர் நம்முடைய இருதயத்தை ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்படி சொல்லுகிறார். நம்முடைய இருதயம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? உண்மையாக ஆண்டவரை விசுவாசிக்கிறோமா? அல்லது போலிகளாக இருந்து விசுவாசத்தை விட்டு விலகிப் போகின்ற நிலையில் இருக்கிறோமா?

மூன்றாவதாக, ஆபத்து இல்லாத விஷயங்களால் நாம் அழிந்து போய்விடக்கூடிய ஒரு ஆபத்தை ஆண்டவர் உணர்த்துகிறார். அப்படியென்றால் என்ன, என்று நீங்கள் கேட்கலாம். பணத்தை எடுத்துக்கொள்ளுவோம், பணத்தில் பிரச்சனை இல்லை. பணத்தை யாருமே பாவமாகப் பார்ப்பதில்லை. அந்தப் பணத்தைப் பயன்படுத்துகிற விதத்தில்தான் பாவம் வந்துவிடுகிறது. பணம் பாவத்தைச் செய்யாது, அந்தப் பணத்தை வைத்திருக்கிற மனிதர்களும், சேகரிக்கும் மனிதர்களும் அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் பாவம் வந்து விடுகிறது. பணம் எல்லாருக்கும் தேவை. நாம் வேலை செய்வதற்கு வருமானம் தேவை. வருமானம் இருக்கிற பொழுது தான் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும், உணவுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும், தண்ணீரை வாங்க முடியும், மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியும். ஆகவே பணம் நமக்கு அவசியம் தேவை. பணத்தால் வருவதல்ல நமக்கு வரும் பிரச்சனைகள், அந்தப் பணத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் பிரச்சனை. ஆகவே பணம் ஆபத்தில்லாத ஒன்று, ஆபத்தில்லாத ஒன்றாலே அழிந்து போகக் கூடிய ஒரு நிலை ஏற்பட்டு விடுகிறது. அதைதான் ஆண்டவர் இந்த முட்புதர் நிலத்தை போல வசனத்தைக் கேட்டவனைக் குறித்து நமக்கு சொல்லுகிறார். பண மோகத்தால் சத்திய விலகல் அவன் வாழ்க்கையில் ஏற்பட்டது. ஆபத்தில்லாத விஷயம் அழிந்து போய் விடக்கூடிய நிலைக்கு அவனைக் கொண்டுபோய் விட்டது.

இதேபோலத்தான் உலகத்துக் கவலைகளும் அவனுக்கு அழிவைக் கொண்டு வந்தது. இந்த உலகம் நமக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது, இந்த உலகத்தில் கிறிஸ்தவர்கள் நீதியாகவும் நியாயமாகவும் அனுபவிக்க வேண்டிய நன்மைகள் இருக்கின்றன. ஒரு கிறிஸ்தவன் காட்டில் வாழ்வதற்காக உலகம் படைக்கப்படவில்லை. சொந்தமாக ஒரு வீடு வைத்திருப்பது தவறா? தவறே இல்லை. சொந்தமாக ஒரு கார் வைத்திருப்பதில் ஏதாவது தவறு இருக்கிறதா? இல்லவே இல்லை. ஆனால் நம்முடைய மோகம் அவற்றின்மேல் இருந்து அவற்றிற்காகவே நாம் வாழ்ந்து கொண்டிருந்தால் ஆபத்து இல்லாத அந்த விஷயங்களும் நமக்கு அழிவைக் கொண்டு வந்துவிடும். சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்றுதான் முதலில் ஒருவன் ஆசைப்படுவான். வாங்கிய பிறகு இன்னொரு வீடு வாங்குவோம் என்று யோசித்து அதற்காகக் கடன்களை வாங்கி, வீட்டைக் கட்டி அதை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க நினைக்கிறான். பிறகு ஆசை அதிகரித்து மூன்று நான்கு என வீடுகளைக் கட்டத் திட்டமிடுகிறான். பிறகு அவனால் கடன்களை அடைக்க முடியாததால் வீடுகளை வங்கி பறித்துக்கொள்ளுகிறது. ஆபத்தில்லாத விஷயங்கள் நமக்கு அழிவைக் கொண்டு வந்துவிடுகிறது. இப்படியாக அழிந்து போனவர்கள் அதிகம்பேர் உள்ளனர்.

ஆண்டவர் இயேசு கொடுக்கிற இரட்சிப்பு விலைமதிப்பில்லாதது. அதற்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கலாம். அப்படிப்பட்ட ஆண்டவரையும் இரட்சிப்பையும் அடைந்திருக்கிறபோது உலக ஆசைகளில் நம்மை ஏன் பலி கொடுக்க வேண்டும்? அதனால் நாம் அடையப் போகிற பயன் என்ன? நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். ஆகவே நாம் சத்தியத்தில் வெளிப்படையாகவும், வெளிப்புறமாகவும் ஆர்வம் காட்டுவதில்லை எந்த பிரயோஜனமும் இல்லை. லூக்கா எழுதின சுவிசேஷத்தில் ஆண்டவர் சொல்லுகிறார்,

லூக்கா 9:57-60

அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.

இவர்கள் எல்லாம் என்ன சொல்லுகிறார்கள்? ஆண்டவரைப் பின்பற்ற வேண்டுமென்று பெரிதாகப் பேசுகிறார்கள், ஆனால் இந்த உலகத்து விஷயங்களிலிருந்து அவர்களுக்குத் தங்களுடைய மனதை அகற்றிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. ஆண்டவர் அவர்களைப் பார்த்து உலகம் அதைப் பார்த்துக் கொள்ளட்டும், நீங்கள் என் பின்னால் வாருங்கள் என்று சொல்லுகிறார், ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை.

ஒரு பணக்கார இளம் வாலிபனை நாம் சுவிசேஷ நூல்களில் வாசிக்கிறோம், அவனுக்கு நித்திய ஜீவன் தேவையாக இருந்தது. ஆண்டவர் அவனைப் பார்த்து, உனக்கு இருக்கிற சொத்தை எல்லாம் விற்று மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு வா என்று சொன்னார். ஆனால் அவனால் அதை செய்ய முடியவில்லை. ஏனென்றால் பண ஆசையும், உலகத்து ஆசையும் அவனிடத்தில் காணப்பட்டது. பத்துக் கட்டளைகளில் ஒன்று இச்சை இருக்கக்கூடாது என்கிறது. அது அவனுடைய இருதயத்தில் இருந்தது. அந்தப் பாவம் அவனில் இருந்தது என்பதை அவனால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அதை ஆண்டவர் சுட்டிக் காட்டின பொழுதும் அதை விட்டுவிட மனதில்லாமல் துக்கத்தோடு திரும்பிப் போனான். அதனால் அவன் நித்திய ஜீவனை அதாவது இரட்சிப்பை அடைய முடியாமல் போனான். இந்த உலகமும் ஆண்டவரும் ஒருவனுக்கு நண்பர்களாக இருக்க முடியாது என்று ஆண்டவரும் சொல்லுகிறார், பவுலும் சொல்லியிருக்கிறார். கிறிஸ்துவை விசுவாசிக்கிற பொழுது இந்த உலகத்தில் இருந்து தான் அந்த வாழ்க்கையை வாழ வேண்டும். ஆனால் உலகப்பற்று அதிகமாக இருந்து அந்த விசுவாசத்தை அழித்து போடுகிறபடி இருக்கக் கூடாது.

இந்த மூன்று பாடங்களையும் நீங்கள் யோசித்துப் பார்த்து உங்களையே நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். எப்படிப்பட்ட ஒரு நபராக நீங்கள் இருக்கிறீர்கள்? வழியருகே நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்ட மனிதனைப் போலவா? கற்பாறை நிலத்தில் வளர்ந்த செடியைப் போன்ற ஒரு இருதயத்தைக் கொண்டிருக்கிறோமா? அல்லது இந்த முட்புதர்கள் வளர்ந்த ஒரு நிலத்தில் வளர்ந்த ஒரு செடியைப் போல ஆண்டவருக்கு அக்கறை கொடுப்பது போல ஒரு அளவுக்கு காட்டிக்கொண்டிருந்தாலும், இந்த உலக ஆசைகளை விட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோமா? நம் விசுவாசம் எப்படிப்பட்டது என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு இந்த உவமை உதவுகிறது.

உண்மையான விசுவாசி இதற்கெல்லாம் தம்முடைய வாழ்க்கையிலேயே இடம் கொடுக்காமல் இறுதிவரையும் அவரில் நிலைத்திருக்கப் பார்ப்பான். இறுதி வரையும் அவரில் நிலைத்திருப்பதற்காக ஒரு விசுவாசியாக விடாமுயற்சியோடு செய்யவேண்டிய காரியங்களில் அவன் விடாப்பிடியாக இருப்பான். ஆகவேதான் வேதத்தின்படி சீர்திருத்த இறையியல் ஒரு போதனையை விளக்குகிறது. அதற்குப் பெயர் விசுவாசிகளின் விடாமுயற்சி. உண்மையான ஒரு விசுவாசி விடாமுயற்சியோடு விசுவாசத்தில் நிலைத்து நிற்பதற்கான காரியங்களையெல்லாம் தவறாது செய்வான். அப்படிப்பட்டவனைத்தான் ஆண்டவரும் பாதுகாக்கிறார். ஆண்டவர் உண்மையிலேயே நம்மைப் பாதுகாக்கிறாரா இல்லையா என்பதை எப்படித் தெரிந்துகொள்ள முடியுமென்றால், நாம் நம்முடைய ஆத்மீக விஷயங்களில் விடாப்பிடியாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். அப்படித் தொடர்ந்து விசுவாசத்தோடு ஆத்மீக காரியங்களைச் செய்து கொண்டிருந்தால் நிச்சயமாகக் கர்த்தர் நம்மைப் பாதுகாக்கிறார் என்கிற நம்பிக்கை நம் இருதயத்தில் கிடைக்கும். அப்படித் தொடராமல் இன்றைக்குக் கொஞ்சம், நாளைக்குக் கொஞ்சம், நிலைமை மாறின பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வாழ்ந்து கொண்டிருந்தால், நம் வாழ்க்கை ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது என்பதைத்தான் அது அடையாளம் காட்டுகிறது. ஆகவே நாம் எப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு இந்த உவமை நமக்கு உதவுகிறது. ஆண்டவர்தாமே உங்களோடு பேசட்டும். வேதத்தின் மூலமாக நம்மோடு பேசி நம்மைக் கண்டித்து நமது தவறை உணர்த்தினால் நாம் மனந்திரும்புவோம். தவறு இருக்கிறதென்று தெரிந்தால் மட்டும் போதாது, தவறைத் திருத்திக் கொள்ளுகிறவன்தான் உண்மையான விசுவாசி. அந்தத் தவறைத் தொடர்ந்து செய்யாமல் இருப்பதற்கான சகல முயற்சிகளையும் செய்யவேண்டும். ஆகவே ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்யட்டும். செய்த தவறை மீண்டும் செய்யாமல் திருந்தி வாழுகிற கிறிஸ்தவர்களாக இருப்போம். இந்த உவமை கற்றுத் தருகின்ற பாடங்களை அறிந்து கொண்டு ஆண்டவருக்கு விசுவாசமாக இருக்கப் பார்ப்போம்.

நல்ல நிலம்

மத்தேயு 13 அதிகாரத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விளக்கியிருக்கும் விதை நிலங்களின் உவமையை ஆராய்ந்து வருகிறோம்.

மத்தேயு 13:3-9

அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

ஒரு சகோதரர் என்னிடத்தில் இந்த உவமைகளைப் புரிந்து கொள்ளுவது கடினமான காரியமா? என்று கேட்டார். ஆண்டவர் உவமைகளாகப் பேசியதற்குக் காரணம் இருதயம் கடினப்பட்டு போயிருக்கிற யூதர்களுக்கு அவை புரியக் கூடாது என்பதற்காகதான் என்று அவரே சொன்னார். ஆனால் இந்த உவமைகளை நிச்சயமாக அவருடைய சீடர்கள் புரிந்துகொண்டிருந்திருக்கிறார்கள். உவமைகள் இலக்கியத்தில் வருகின்ற ஒருவிதமான அணி வகையாகும். எந்த மொழியாக இருந்தாலும் அதில் உரைநடை இருக்கிறது. உரைநடை என்பது எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் தெளிவாக வாசித்து விளங்கிக்கொள்ளக் கூடிய நடையாகும். உரைநடையை விளங்கிக் கொள்வதற்குக் கூட வார்த்தைகளுக்கான அர்த்தம் நமக்குத் தெரியவேண்டும். வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாவிட்டால் ஒரு வசனத்தைப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் உவமை வித்தியாசமானது. உவமை என்பது ஒரு கதையை அல்லது ஒரு எடுத்துக்காட்டை அல்லது ஒரு உதாரணத்தைச் சொல்லி அந்த உதாரணத்தின் மூலமாக ஒரு விஷயத்தை விளக்குவதாகும்.

ஆகவே உவமையை எப்படி விளங்கிக்கொள்ள வேண்டும், உரைநடையை எப்படி விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்கு எல்லா மொழிகளிலுமே சில விதிகள் இருக்கின்றன. வேதத்தில் உரைநடையையும் சரி அல்லது உவமைகளையும் சரி அவற்றை விளங்கிக் கொள்வதற்கு வேத விளக்க விதிகளை நாம் பயன்படுத்த வேண்டும். பிரசங்கம் செய்கிறவர்களுக்கு அவைகளெல்லாம் தெரிந்திருக்க வேண்டியது மிக மிக அவசியம். வேத விளக்க விதிகள் தெரியாமல் உவமைகளை விளக்க முடியாது. முக்கியமாக உவமை என்று வருகிற பொழுது அந்த உவமை எப்பொழுதுமே ஒரு முக்கியமான போதனையை மட்டும் கொடுக்கும். அந்த முக்கியமான போதனையைப் பெற்றுக்கொள்ளுவது தான் நம்முடைய வேலை. அந்த முக்கியமான போதனையை விட்டுவிட்டு அந்த உவமையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற பலவிதமான உதாரணங்கள் ஒவ்வொன்றிற்கும் நாம் விளக்கங்கள் கொடுக்கப் போகக்கூடாது. ஆகவே எந்த முக்கியமான போதனையைத் தருகிறது என்பதை அந்த உவமையே விளக்கும். இங்கும் கூட ஆண்டவர் ஒரு உவமையைச் சொல்லிவிட்டு அதற்கான பொருளை அவரே கொடுத்துவிட்டார். ஆகவே அதற்கு வேறு வித்தியாசமான பொருளை நாம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த உவமையில் முதல் மூன்று நிலங்களை நாம் இதுவரை ஆராய்ந்திருக்கிறோம்.

நான் முந்திய ஆக்கங்களில் சொன்னபடி விதைக்கிறவனின் உவமை என்றே பொதுவாக இதைச் சொன்னாலும் விதை நிலங்களின் உவமை என்று இதை அழைப்பதே சரியாக இருக்கும். ஏனென்றால் இந்த உவமை விதை நிலங்களைத்தான் நமக்கு அதிகமாக விளக்குகின்றது. இந்த உவமையில் முதலாவது உதாரணமாக வழியருகே விழுந்த விதை என்று நாம் பார்க்கிறோம். வழியருகே நிலத்தைப் போல இருதயத்தைக் கடினப்படுத்தி வார்த்தையை அலட்சியம் செய்கிறவர்களுக்கு அந்த வார்த்தைகளினாலே எந்தவிதப் பயனும் கிடைக்காது என்று ஆண்டவர் சொன்னார். கற்கள் நிறைந்த நிலத்தைப் பார்த்தால் மண்ணுக்கு அடியில் மண் ஆழமாக இருந்ததால் அந்த கற்களும் சூரிய வெப்பத்தினால் மிகவும் வெப்பமடைந்து, அதில் முளைக்கின்ற விதை மேலிருந்து வருகிற சூரியக் கதிர்களினாலும் பாதிக்கப்பட்டுத் தொடர்ந்து நிலைக்க முடியாமல் அழிந்து விடுகிறது. இது சிலர் வசனத்தைக் கேட்டவுடனே சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டாலும், வசனத்தின் காரணமாக சில காலங்களுக்குப் பிறகு வாழ்க்கையில் ஏற்படுகின்ற துன்பங்களைத் தாங்க முடியாமல் சத்தியத்தை விட்டு விலகிப் போய்விடுவார்கள் என்பதைக் காட்டுகிறது. முட்புதர்கள் நிறைந்த நிலத்தில் அந்த முட்புதர்களை விவசாயி அகற்றியிருந்தாலும் ஆழத்திலே காணப்படுகின்ற வேர்கள் அகற்றப்படாததனால் அவையும் இந்த விதையோடு சேர்ந்து வளர்கின்றன. சில காலம் போன உடன் வளர்ந்து வருகின்ற முட்புதர்கள் இந்த விதையின் மூலமாக வளர்கின்ற செடியை வளர முடியாமல் செய்து அதை இல்லாமல் ஆக்கி விடுகின்றன. இது உலகப் பொருள்களின் மேல் ஏற்படுகின்ற ஆசையினாலும் பண ஆசையினாலும், உலகத்தின் இன்பங்களினாலும் இருதயம் பாதிக்கப்பட்டு, ஆண்டவருக்கும் வசனத்துக்கும் எந்த இடமும் கொடுக்காமல் சில காலம் ஒரு கிறிஸ்தவனைப் போலத் தோற்றமளித்து வாழ்ந்து விட்டு அதன் பிறகு சத்தியத்தை விட்டு விலகிப் போய்விடுவார்கள் என்பதைக் காட்டுகிறது. ஆகவே இந்த மூன்று விதை நிலங்களைப் போல இருக்கக் கூடாது என்பதுதான் இதிலிருந்து ஆண்டவர் நமக்குக் கற்றுத்தருகிற பாடமாகும்.

இந்த ஆக்கத்தில் நான்காவது நிலத்தைக் குறித்து சிந்திப்போம்.

மத்தேயு 13:8

சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.

இருபத்தி மூன்றாவது வசனத்தில் ஆண்டவர் அதற்கான விளக்கம் கொடுக்கிறார்.

மத்தேயு 13:23

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.

இதுவரையும் நாம் பார்த்த விதமாக முதலாவதாக நிலத்தையும் அதன் தன்மையையும் ஆராய்வோம். இரண்டாவதாக அது யாரை குறிப்பதாக இருக்கின்றது என்பதை ஆராய்வோம். கடைசியாக இதன் மூலம் அடையும் பயன்பாடுகளைக் கவனிப்போம்.

முதலாவதாக, நல்ல நிலம் எது?

இது ‘நல்ல நிலம்’ என்று மத்தேயு 13:8ல் ஆண்டவரே சொல்லுகிறார். இதையே மாற்கு 4:8வது வசனத்திலும், லூக்கா 8:8வது வசனத்திலும் சொல்லப்படுகிறது. ஆகவே இது புரிந்து கொள்வதற்குக் கஷ்டமானதல்ல. இது நல்ல நிலம். வழியருகே நிலத்தைப் போலக் கடினமானதாக இல்லாமல், கற்கள் நிறைந்த நிலத்தைப் போல மண்ணின் அடியில் கற்கள் நிறைந்ததாக இல்லாமல், முட்செடிகள் உள்ள நிலத்தைப் போலில்லாமல் காணப்படும் நல்ல நிலம் என்று இந்த வசனத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு விவசாயி கண்ணில் படுகிற இடத்தில் எல்லாம் விதையைத் தூவி விடமாட்டான். அனுபவமுள்ள எந்த விவசாயியும் அதைச் செய்யமாட்டான். அவன் முதலில் செய்கிற காரியம் அந்த நிலத்தைப் பண்படுத்துவதுதான். ஏனென்றால் அந்த நிலத்தில் விதை விதைக்கப்பட்டு, அது வளர்ந்து செழித்துப் பலன் கொடுப்பதற்கு அதை உழுது பண்படுத்த வேண்டியது அவசியம். அதன் காரணமாக அந்த நிலம் விதைப்பதற்குத் தயாராக இருக்கும் நல்ல நிலமாக இருக்கிறது. முதல் மூன்று நிலங்களிலும் காணப்பட்ட பிரச்சனைகள் இந்த நிலத்தில் இல்லை. இதை அவ்வாறு பார்ப்பது தான் சரியானது. ஆண்டவர் இதை நல்ல நிலம் என்றே அழைத்திருக்கிறார். இந்த நிலம் மற்ற மூன்று நிலங்களோடு ஒப்பிடப்படுகிறது. அப்படி ஒப்பிட்டுப் பார்க்கிறபொழுது வழியருகே போன்ற நிலமாக இல்லாமல், கற்கள் நிறைந்த நிலமாக இல்லாமல், முட்புதர்கள் காணப்பட்ட நிலமாக இல்லாமல், அங்கு விதைக்கப்படுகிற விதை வளர்ந்து செழித்து பலன் கொடுப்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லாத நல்ல நிலமாக இது இருக்கிறது.

எந்தவொரு விவசாயியும் இப்படிப்பட்ட நல்ல நிலத்தில் விதைக்கிறபோதும் அவன் காலா காலம் செய்ய வேண்டிய பணிகள் இருக்கின்றன. நல்ல நிலமாக இருப்பதனால் விதை சாதாரணமாக வளர்ந்து பலன் கொடுக்கும் என்று நாம் நினைக்கக் கூடாது. அதில் குறிப்பிட்ட காலத்தில் களைகளைப் பிடுங்க வேண்டும், சரியாகத் தண்ணீர் பாய்ச்சவேண்டும், உரம் போடவேண்டும். நல்ல நிலத்திலும் பயிர் செழித்து வளர இதெல்லாம் அவசியம். ஆனால் முதல் மூன்று நிலங்களிலும் ஒரு விதை வளரமுடியாது முடியாமல் போவதற்கு என்னென்ன தடைகள் இருந்தனவோ அந்தத் தடைகள் இந்த நிலத்தில் காணப்படவில்லை. அதனால்தான் இது நல்ல நிலம் என்று ஆண்டவர் சொல்லுகிறார். இப்படியான நிலங்கள்தான் உண்மையிலேயே நாம் எந்த விதையை விதைத்தாலும் அது அருமையாகப் பயனளிக்கும். அதில் சிலது முப்பதாகவும், அறுபதாகவும், நூறாகவும் பலன் கொடுக்கும் என்று வாசிக்கிறோம்.

மாற்கு 4:8

சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.

ஆகவே அங்கு விதைக்கப்பட்ட விதை ஓங்கி நன்றாக வளர்கின்ற பயிராகி, பலன் அதிகமாகத் தந்தது என்று நாம் கவனிக்கிறோம்.

இரண்டாவதாக இந்த நிலம் யாரைக் குறிக்கிறது?

ஆண்டவர் மத்தேயு 13:28ல் சொல்லுகிறார்,

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான்.

ஆகவே இந்த நிலம் ஒரு மனிதனுக்கு ஒப்பிடப்படுகிறது. நான் கடந்த ஆக்கங்களில் சொன்னது போல, இந்த நிலம் ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறபோது எத்தகைய இருதயமுள்ளவனாக அதைக் கேட்கிறான் என்பதற்கு ஒப்பிடப்படுகிறது. இதையே ஆண்டவர் மாற்கு எழுதின சுவிசேஷத்தில் “வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு” (மாற்கு 4:20) என்று சொல்லுகிறார். லூக்கா எழுதின சுவிசேஷத்தில் “வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.” (லூக்கா 8:15) என்று சொல்லுகிறார். இந்த மூன்று சுவிசேஷ எழுத்தாளர்களும் வித்தியாசமாக இந்த நிலத்தைப் போன்ற இருதயத்தை கொண்டிருக்கிறவனுடைய தன்மைகளை நமக்கு விளக்குகிறார்கள். அது நாம் வசனத்தை சரியாக விளங்கிக் கொள்ளுவதற்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.

வழியருகே நிலத்தைப் போன்ற இருதயத்தைக் கொண்டவர்களும், கற்பாறை நிலத்தைப் போன்றவர்களும், முட்புதர் நிறைந்த நிலத்தைப் போன்றவர்களும் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருந்தார்கள். அப்படி அவர்கள் கேட்பதோடு நின்றுவிட்டார்களே தவிர அதற்கு மேல் பெரிதாக ஒன்றும் அவர்களில் நிகழவில்லை. வசனத்தைக் கேட்ட பின் அது எங்கு போய் முடிய வேண்டுமோ அதில் போய் முடியவில்லை. ஆனால் இங்கு இந்நிலத்தில் அது வித்தியாசமாகக் காணப்படுகிறது. இவன் வசனத்தைக் கேட்கிறான், அதை உணருகிறான். வசனத்தைக் கேட்டு அதோடு நிறுத்தி விடுவதால் எந்தப் பயனுமில்லை. வசனத்தைக் கேட்கின்ற பொழுது முழுக் கவனத்தையும் அதில் செலுத்தி, கேட்ட வசனத்திலிருந்து சிந்திக்கிற ஒரு பக்குவமுள்ளவனாக மனிதன் காணப்பட வேண்டும். கேட்டுச் சிந்திக்காமல் இருக்கிறவன் ஒருநாளும் கேட்கிற எதன் மூலமும் பயனடைய முடியாது. வசனத்தைக் கேட்பதோடு மட்டும் இருந்துவிடாமல் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்த வசனத்தின் மூலமாக என்ன சொல்லப்படுகிறது? சொல்லப்படுகிற காரியத்திற்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஆண்டவர் என்னிடத்திலிருந்து எதை எதிர்பார்க்கிறார்? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

ஆகவே உண்மையாக வசனத்தைக் கேட்பதென்றால் அதை உணருகிறபோதுதான் அதனால் பலன் இருக்கிறது. இவன் கேட்பதோடு மட்டுமல்லாமல் அதை உணருகிறவனாகவும் இருக்கிறான். இவன் எப்படிப்பட்டவன் என்று உணர்த்த மாற்கு மேலதிகமாக, “வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு” (மாற்கு 4:20) என்று விளக்குகிறார். அவன் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறான். வெறும் உணர்ச்சி வசப்பட்டு ஏற்றுக்கொள்ளுகிறவனாக இல்லாமல் அதைக்கேட்டுச் சிந்தித்து ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளுகிறவனாக இருக்கிறான். லூக்கா இதை, “வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்” (லூக்கா 8:15) என்று விளக்கமளிக்கிறார்.

ஏனைய மூன்று நிலத்தை போன்ற மனிதர்களைப் போலில்லாமல் இந்த மனிதர்களின் இருதயம் உண்மையும் நன்மையுமான விசேஷமான தன்மையுமுடையதாக இருக்கிறது. மற்ற மூன்றுபேரிலும் அத்தகைய இருதயம் அவர்களுக்கு இருக்கவில்லை. உண்மையும் நன்மையுமான இருதயம் இருப்பதனால்தான் வசனத்தைக் கேட்டு, அந்த வசனத்தை உணர்ந்து, எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இருதயபூர்வமாக அந்த வசனத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் இருதயத்திலே அதைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்று லூக்கா சொல்லுகிறார். அநேகர் வசனத்தைக் கேட்பார்கள், உணருவார்கள், ஆனால் இருதயத்திலே அவர்கள் காத்துக் கொள்ளுவதில்லை. வசனத்தைக் கேட்டுக் காத்துக்கொள்ளுவது என்பது அந்த வசனத்தின்படி அவர்கள் நடக்கிறவர்கள் என்பதைக் குறிக்கிறது. வசனத்தைக் கேட்டும் அதை உணர்ந்தும் அதன்படி நடக்காத மனிதன் எப்படி கிறிஸ்தவனாக இருக்க முடியும்? வசனத்தின்படி நடக்கிறவனே கிறிஸ்தவன். என்மேல் அன்புகூருவாயானால் என் கற்பனைகளைப் பின்பற்று என்று இயேசு சொன்னார். உண்மையும் நன்மையும் உள்ள இருதயமாக இருக்கிறவர்கள் வசனத்தை கேட்டு உணர்ந்து அதை ஏற்றுக்கொண்டு அதை காத்துக் கொள்வது மட்டுமல்ல, பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாக இருப்பார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதை கொஞ்ச காலத்திற்கு பொறுமையோடு நன்றாக வளர்ந்து இறுதியில் பலனையும் கொடுக்கும்.

நல்ல நிலத்தில் வளரும் விதைக்கும், அதன் மூலம் வளருகிற செடிக்கும் கூட சில பிரச்சனைகள் வரும், இருந்தபொழுதும் எந்த பிரச்சனைகளினாலும் அந்தச் செடி விழுந்து விடாது. ஏனெனில் நிலம் நல்லதாக இருப்பதனால் அது எந்தவிதமான பிரச்சனைகளையும் தாங்கிப் பொறுமையோடு தொடர்ந்து வளர்ந்து கனிகளைக் கொடுக்கும். அப்படிப்பட்ட இருதயம் உள்ளவர்கள்தான் இவ்விதமான மனிதர்கள். மேலும் அவ்விதமானவர்கள் நல்ல இருதயத்தைக் கொண்டிருந்து, நல்ல சிந்தனைகளைக் கொண்டிருந்து, உண்மையுள்ளவர்களாக இருந்து, வசனத்தைக் கேட்டு, அந்த வசனத்தை உணர்ந்து, அதை ஏற்றுக் கொண்டு, தங்களுடைய இருதயத்திலே அதைப் பொறுமையோடு காப்பதால், நீடிய பலன் அவர்களுடைய வாழ்க்கையிலேஅந்த வசனத்தினால் ஏற்படுகின்றது என்று ஆண்டவர் சொல்லுகிறார். ஆகவே இந்த நிலம் மற்ற மூன்று நிலங்களையும் விட அருமையான நிலமாக இருக்கிறது. அப்படிப்பட்ட மனிதர்கள்தான் உண்மையிலேயே மெய்யான கிறிஸ்தவர்களாக விசுவாசிகளாக இருக்கிறார்கள்.

ஆகவே இந்த நல்ல நிலத்தைப் போன்றவர்கள் உண்மையிலேயே தேவனுடைய வசனத்தை ஏற்று, அந்த வசனத்தின் மூலமாக ஆண்டவரிடமிருந்து கிருபையின் மூலமாக இரட்சிப்பை அடைந்து, அந்த இரட்சிப்புக்குரிய வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்ந்து, தங்கள் வாழ்க்கையிலே பல கனிகளைக் கொடுக்கிறவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் விசுவாசத்தின் நடவடிக்கைகளைப் பார்க்க முடியும். அவர்கள் நிலைத்து நிற்பார்கள். இதுதான் இந்த உவமை நமக்கு விளக்குகின்ற காரியம்.

மூன்றாவதாக இந்த உதாரணத்தின் மூலம் கற்றுக்கொள்ளுகிற பாடங்கள்

இதிலிருந்து அருமையான இறையியல் போதனைகளை நாம் கற்றுக்கொள்ளலாம்.

முதலாவதாக, இந்த நல்ல நிலம் என்று ஆண்டவர் சொல்லுகிறபோது அல்லது அந்த நிலத்தைப் போன்ற மனிதர்களைக் குறிக்கின்றபோது அந்த நிலம் அல்லது அந்த நிலத்தைப் போன்ற மனிதர்கள் ஆரம்பத்திலிருந்தே நல்லவர்களாக இருந்திருக்கவில்லை.

நான் ஏற்கனவே சொன்னது போல எந்த விவசாயியும் ஒரு நிலத்தை உழுது பண்படுத்தாமல் விதைக்கமாட்டான். இயற்கையாகவே எந்த நிலமும் நல்ல நிலமாக இருந்து விடுவதில்லை. ஆவிக்குரியவிதத்தில் ஆண்டவர் அந்த எடுத்துக்காட்டை பயன்படுத்துகிற பொழுது, மனிதனுடைய இருதயமும் பிறப்பிலிருந்தே நல்லதாக இருந்துவிடவில்லை என்பதை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறார். அது இங்கு வெளிப்படையாக சொல்லப்படாவிட்டாலும் இறையியல்பூர்வமாக அந்த உண்மை இந்த உவமையில் அடங்கியிருக்கிறது. எப்படி ஒரு நிலம் உழுது பண்படுத்தப்பட வேண்டுமோ, அப்படியே மனிதனுடைய இருதயமும் பண்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. மனிதனுடைய இருதயத்தில் என்ன பிரச்சனை உள்ளது? அது பிறப்பிலிருந்தே பாவத்தில் இருக்கிறது. பவுல் ரோமர் 3:23ல் சொல்லுகிறார், எல்லோருமே பாவம் செய்து தேவனுடைய மகிமையை இழந்து நிற்கிறார்கள். யூதன், யூதன் அல்லாதவன் என்று எல்லோருமே எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் கர்த்தருக்கு முன்பாக பாவம் செய்து, தேவனுடைய மகிமையை இழந்து நிற்கிறார்கள். அதுதான் மனிதனுடைய உண்மையான நிலை. இன்னுமாக பவுல் ரோமர் 6:23ல் “பாவத்தின் சம்பளம் மரணம்;” என்று சொல்லுகிறார். அதாவது பாவத்தினாலே சரீர மரணம் மட்டுமல்ல, ஆவிக்குரிய மரணமும் ஏற்பட்டது.

ரோமர் 3:10-12

அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. இந்த உலகத்தை ஆண்டவர் பார்க்கிறபோது மனிதர்களில் எவருமே இயற்கையாக நீதிமான்களாக, நல்ல இருதயம் கொண்டவர்களாக இல்லை. மாறாக எல்லோருமே பாவிகளாக இருக்கிறார்கள். உணர்வுள்ளவன் இல்லை. ஆண்டவரை உணரக்கூடிய, சத்தியத்தை உணரக்கூடிய இருதயமுள்ளவன் ஒருவனும் இல்லை. தேவனைத் தேடுகிறவன் இல்லை. இயற்கையாக பாவத்தில் இருக்கிற, தேவ மகிமையை இழந்து நிற்கிற மனிதன் சுயமாக ஒரு நாளும் ஆண்டவரைத் தேடமாட்டான். எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள். ஆண்டவருடைய நியாயப்பிரமாணத்தை ஆண்டவருடைய கற்பனைகளை பின்பற்ற முடியாத இருதயத்தையும் வாழ்க்கையையும் கொண்டிருந்து, வழி விலகி, நியாயப்பிரமாணம் சொல்லுகின்ற சத்தியங்களுக்கு எதிரான விதமாக நடந்து எல்லோருமே கெட்டுப் போனார்கள். நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் ஒருவரும் ஒருநாளும் நன்மை செய்வே முடியாது. இதுதான் மனிதனுடைய இருதயம். இப்படிப்பட்ட மனிதர்களுடைய இருதயத்தில் எப்படி ஆவிக்குரிய விதை வளரும்? சிந்தித்துப் பாருங்கள். ஆகவேதான் மனிதன் சுயமாகவே சத்தியத்தைக் கேட்டு, அதை விரும்பி ஏற்றுக்கொள்ளுகிற இருதயம் கொண்டவனாக இருக்க மாட்டான். அவனுடைய இருதயம் மாற்றம் அடையாத வரையில், அவனுடைய பாவத்திற்கு எதுவும் நிகழாத வரையில் அவனால் கிறிஸ்துவை விசுவாசிக்கவே முடியாது. இயற்கையிலேயே மனிதன் தேவனுக்கு விரோதியாகவும், தேவனை விட்டு விலகி ஒடுகிறவனாகவும் இருக்கிறான். மனிதர்கள் எப்போதுமே தேவனுடைய கோபத்திற்கு உரியவர்களாகவும், அதன் பிள்ளைகளாகவும் இருக்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் Children of wrath என்றும், தமிழில் தேவ கோபாக்கினையின் பிள்ளைகள் என்றும் சொல்லுவார்கள்.

மேலும் அவர்கள் இருதயம் இருண்டு முட்டாள்களாக மாறிப் போனார்கள் என்று பவுல் சொல்லுகிறார்.

ரோமர் 1:21

அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

எபேசியர் இரண்டாவது அதிகாரத்தில் பவுல் சொல்லுகிறார்,

எபேசியர் 2:2-3

அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

பாவத்தில் இருப்பவன் கீழ்ப்படியாமையின் பிள்ளையாக இருக்கிறான். இங்கு கிரியைசெய்கிற ஆகாயத்துப் பிரபு என்று சொல்லுவது சாத்தானைக் குறிக்கிறது. அவனுக்கு ஏற்றபடி மனிதன் நடந்து கொள்ளுகிறான். பாவத்தின் காரணமாக மனிதனுடைய சரீரம் மட்டுமல்ல, அவனுடைய தன்மையும் கூட மாம்ச இச்சையாக இருக்கிறது. பிசாசுக்கு ஏற்ற வழியில் நடப்பதால், நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தில் மற்றவர்களைப் போல கோபாக்கினையின் பிள்ளைகளாய் இருந்தோம். ஆண்டவர் வேதத்தில் உலகத்தில் இருக்கிற அவிசுவாசிகளான மனிதர்களை அருமையாக நமக்குப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இதுதான் மனிதனுடைய நிலை.

சமூகவியலாளர்கள், உளவியலாளர்கள் போன்றவர்களிடத்தில் போய் பேசிப் பார்த்தால் மனிதன் சாதாரணமாகவே நல்லவன் என்று சொல்லுவார்கள். அந்தளவுக்கு ஒன்றும் அவன் கெட்டவன் இல்லை என்றும், சரியான வழிகளைச் சொல்லிக் கொடுத்தால் அவன் திருந்தி வாழக்கூடியவனாக இருக்கிறான் என்றும் சொல்லுவார்கள். அவர்களுக்கு ஊக்கம் தேவையாக இருக்கிறது, அவனுக்கு உதவி தேவையாக இருக்கிறது, ஒரு நல்ல கல்வியைக் கொடுத்து, சரியான ஒரு வளர்ப்பு முறையைக் கொடுத்தால் அவன் சரியாகிவிடுவான் என்று அவர்கள் சொல்லுவார்கள். இதை நூற்றாண்டுகளாகச் செய்து கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் இன்றைக்கும் நாம் வாகனம் ஓட்டிச் செல்லும்போது அருகில் போய்க் கொண்டிருக்கும் வாகனத்தை தெரியாத்தனமாக இடித்துவிட்டால் அதிலிருப்பவர்களுக்குக் கோபம் வந்துவிடுகிறது. அப்படியானால் கல்வியோ, சமுதாய வளர்ச்சியோ அவர்களை ஒழுக்கத்திற்குள் கொண்டுவரவில்லை. ஆதாம் காலத்திலிருந்தே மனுஷன் அப்படித்தான் இருக்கிறான். எதைச் செய்து பார்த்தும் மனுஷனுடைய நிலை மாறவில்லை.

மனிதன் பிறப்பிலேயே கோபாக்கினையின் பிள்ளையாக, கீழ்ப்படியாமையின் பிள்ளையாக, பாவியாக, எந்தவிதமான நன்மையும் தன்னுடைய இருதயத்தில் கொண்டிராதவனாக இருக்கிறான். மனிதனைப் பற்றிய இவ்விதமான நம்பிக்கை நமக்கு இல்லையென்றால் கிறிஸ்தவ வேதத்தைக் கேட்பதனாலும் படிப்பதனாலும் எவ்வித பிரயோசனமும் இல்லை. இன்றைக்கும் அநேக பிரசங்கிகள், மனிதனில் ஏதோ கொஞ்சம் நன்மை இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் சபைக்குக் கொஞ்ச காலத்திற்கு முன்பு வந்த வயதான இந்தியர் ஒருவர் என் பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு, ஏன் பாஸ்டர் மனிதனில் சொட்டு நன்மை கூடவா இல்லை? என்று கேட்டார். அப்பொழுது நான்: அப்படி ஏதாவது ஒரு சொட்டு நன்மையாவது அவனில் இருந்திருந்தால் இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வருவதற்கான அவசியமே ஏற்பட்டிருக்காது என்று சொன்னேன். மனிதன் முழுப் பாவியாகவும், ஆவிக்குரிய எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்தினால்தான் பிதா தன்னுடைய குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். ஆகவே இயற்கையிலேயே மனிதன் பாவியாக இருக்கிறான். அவனால் நேரான வழியில் போக முடியாது; போகத் தெரியாது. வழிதப்பி எல்லோரும் ஒட்டுமொத்தமாக கோபாக்கினையின் பிள்ளைகளாக இருந்து, தங்களுடைய மாம்ச இச்சையின்படியும், பாவத்தின் காரணமாக இயற்கையாகவே அவர்களில் எழுகின்ற சிந்தனைகளின்படியும் வாழுகிறவர்களாகவே இருப்பார்கள்.

பெற்றோர்களாக நீங்கள் இருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு பல விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்திருப்பீர்கள். அதில் பேட்டரி மூலம் இயங்கும் விளையாட்டுப் பொருட்களை நீங்கள் கவனித்துப் பார்த்தால், ரயில் போன்ற ஒரு விளையாட்டு பொருளில் அதன் ஸ்விட்ச்சை போட்டவுடன் அது ஒரே திசையில் சுற்றிச் சுற்றிப் போய்க் கொண்டிருக்கும். அதை வேறு திசையில் போக வைக்க முயற்சி செய்தால் அது போகுமா? இல்லை. ஏனென்றால் அது அவ்வாறு சுற்றும்படியாகத் தான் அதை வடிவமைத்திருக்கிறார்கள். அதை மீறி அதால் எதுவுமே செய்ய முடியாது. இது போலதான் மனிதனும் இருக்கிறான். அவன் பாவத்தில் பிறந்து அந்த பாவத்தின் வழிகளில் செல்லுவதைதான் இயற்கையாகவே கொண்டிருப்பான். திருக்குறளை ஆயிரம் முறை படித்தாலும் அவனால் திருந்த முடியாது. எந்தவிதமான நல்லொழுக்கங்களையும் கற்றுக் கொடுத்தாலும் அவன் திருந்தமாட்டான். கற்றுக் கொடுப்பதனால் பயன் இருக்கிறது. அவன் செய்கிற பாவத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்தலாம்; மிகவும் மோசமான நிலைக்கு போய் விடாதபடிக்கு ஒரு வரைமுறையை ஏற்படுத்தலாம். அதற்கு மேல் எதுவுமே செய்யமுடியாது.

என்னுடைய அப்பா எனக்கு ஒரு பெரிய நன்மை செய்தார். அவர் ஒரு ஜாதி இந்து, ஆனால் என்னை ஒரு வசதியான ஆங்கிலக் கத்தோலிக்க பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார். கல்லூரி அதிபர் பிரான்ஸ் (France) தேசத்தைச் சேர்ந்தவர். கல்லூரிக்குப் போவதற்கு முன்பு ஐந்து வருடம் அங்குதான் படித்தேன். அது ஒரு உறைவிடப் பள்ளி (Boarding school) ஆகும். விடுமுறை நாட்களைத் தவிர வீட்டுக்கு வர முடியாது. அதுபோன்ற ஒரு கண்டிப்பான பள்ளியை (Strict school) நான் பார்த்ததில்லை. அங்கு ஒரு இராணுவம் மாதிரி குறித்த நேரத்திற்கு எழ வேண்டும், குறித்த நேரத்திற்குப் படிக்க வேண்டும், குறித்த நேரத்திற்கு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். அங்கு ஒரு நொடியும் தப்பிக்க முடியாது. எதையும் மீறினால் அதற்கான தண்டனையை வழங்குவார்கள். எனக்குத் தண்டனைகள் பிடிக்காது, அதுவும் எல்லோருக்கும் முன்பாக தண்டனை பெறுவது பிடிக்கவே பிடிக்காது. அந்நாட்களில் மதிப்பெண் தரவரிசை அட்டைகளை வழங்குவார்கள். அதில் மிகக் குறைவாக மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் எல்லோருக்கும் முன்பாகக் கையிலோ பின்புறத்திலோ நீண்ட மூங்கில் கம்பினால் அடிப்பார்கள். அது ஒரு காலம். ஆகவே நன்றாகப் படித்து தொண்ணூறு மதிப்பெண்களுக்கு மேல் ஒவ்வொரு முறையும் எடுத்துவிடுவேன். அது பயத்தில் படித்து வாங்கினதுதானே தவிர ஆசையில் படித்து வாங்கின மதிப்பெண் அல்ல. அந்நாட்களில் எனக்குக் கொடுக்கப்பட்ட ஒழுக்கப் பயிற்சி இன்றைக்கும் எனக்கு உதவுகிறது. இன்றைக்கும் நான் எல்லாவற்றையும் குறித்த நேரத்திற்கு செய்கிற பழக்கம் அங்கிருந்துதான் வந்தது. ஆனால் அந்த ஐந்து வருட பள்ளிப் பருவத்திற்குப் பின்பு கல்லூரிக்குப் போனபொழுது எந்தவித மேற்பார்வையும் இல்லாததனால் நான் இஷ்டப்பட்டு விரும்பியதை எல்லாம் என்னால் செய்ய முடிந்தது. என் இருதயம் பாவம் நிறைந்ததாக இருந்ததனால் பாவத்தைச் செய்வதற்கு வசதிகள் அதிகரித்துவிட்டது. மனிதனுடைய இருதயத்தில் பாவம் இருக்கிறவரை அவனை எங்கு கொண்டுபோய் விட்டாலும் பாவம் செய்வான். மனிதர்களே இல்லாத ஒரு காட்டில் கொண்டுபோய் விட்டாலும் அங்கேயும் பாவத்தைச் செய்வதற்கு அவன் வழிகளைத் தேடிக் கொண்டிருப்பான். அதைத்தான் ரோமர் முதலாம் அதிகாரம் நமக்குச் சொல்லுகிறது. ஆகவே மனிதன் இயற்கையிலேயே பாவி, அவன் மாற்றப்பட வேண்டிய, பண்படுத்தப்பட்ட வேண்டிய ஒரு இருதயத்தைக் கொண்டிருக்கிறான் என்பதை ஆண்டவர் இங்கு நமக்கு விளக்குகிறார். நல்ல நிலம் என்ற பதத்திற்குள் அது அடங்கியிருக்கிறது.

இரண்டாவதாக, வசனத்தைக் கேட்டு, ஏற்று, அதைக் காத்துக் கொண்டவர்கள் அதைச் செய்வதற்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்டவர்கள் அல்லது பண்படுத்தப்பட்டவர்கள் ஆவர்.

ஒரு நிலம் நல்ல நிலமாக மாறுவதற்குப் பண்படுத்தப்படுவது போல, இந்த மனிதனும் கூட அந்த வசனத்தைக் கேட்டு, அதற்கு இணங்கி, வசனத்தை எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையில் கைக்கொண்டு காத்துப் பலன் கொடுப்பதற்கான செயல்களைச் செய்வதற்கு அவன் தயாரிக்கப்பட்டிருக்கிறான். அது எப்படி என்று நான் விளக்குகிறேன், கவனமாக வாசியுங்கள். எபேசியர் இரண்டாவது அதிகாரத்தில் ஒரு மனிதன் கிறிஸ்தவனாக வருவதற்கு முன் எப்படி இருந்தான் என்பதை அவ்வதிகாரத்தின் ஆரம்ப வசனங்கள் விளக்குகின்றன. மனிதர்கள் அவ்வளவு மோசமான நிலையில் கோபாக்கினையின் பிள்ளைகளாக இருந்தார்கள். ஆனால் ‘தேவனோ’ என்று நான்காவது வசனம் சொல்லுகிறது. ஆங்கிலத்தில் But God என்று சொல்லப்பட்டிருக்கிறது. மனிதன் அவ்வாறு இருந்தபொழுதும் கூட தேவன் தனது இரக்கத்தின் ஐசுவரியத்தினாலே அவனை உயிர்ப்பித்தார்.

எபேசியர் 2:4-5

தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.

அதாவது கர்த்தரால் உயிர்ப்பிக்கப்படாமல் பாவத்திலிருக்கிற எந்தவொரு மனிதனும் இயேசுவை விசுவாசிக்க முடியாது. இந்த உயிர்ப்பிக்கும் செயலைக் கர்த்தர் பரிசுத்த ஆவியின் மூலமாக ஒருவனில் செய்கிறார். அதற்குப் பெயர்தான் மறுபிறப்பு. அந்த இறையியல் உண்மை இந்த உவமையில் உள்ளடக்கமாக விளக்கப்பட்டிருக்கிறது.

ஆண்டவர் தன்னிடத்தில் வந்த நிகொதேமுவைப் பார்த்து என்ன சொன்னார்? அவன் ஒரு யூதன், ஒரு பரிசேயன், பழைய ஏற்பாட்டை எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தவன். இருந்தபொழுதும் யோவான் 3 ஆவது அதிகாரத்தில் அவனைப் பார்த்து ஆண்டவர்: நிக்கொதேமுவே நீ மறுபடியும் பிறக்க வேண்டும் என்று சொன்னார். மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதைக் கட்டளையாக அவர் சொல்லவில்லை. நீ மறுபடியும் பிறக்க வேண்டிய ஒரு அவசியம் இருக்கிறது என்று சொல்லுகிறார். மறுபடியும் பிறக்க வேண்டும் என்ற ஒரு வார்த்தையில் என்ன அடங்கியிருக்கிறது தெரியுமா? ஆவிக்குரியவிதத்தில் உன்னால் ஒன்றுமே செய்யமுடியாது, உனக்கு வெளியிலிருந்து (பரலோகத்திலிருந்து) அந்தச் செயல் உன்னில் நிகழவேண்டும் என்பதுதான் அதற்கு அர்த்தம். நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய், ஆனால் ஆவிக்குரியவிதத்தில் நீ பிறப்பதற்கு உனக்கு வெளியிலிருந்து ஒருவர் அதைச் செய்ய வேண்டும் என்று ஆண்டவர் சொல்லுகிறார். யார் அதைச் செய்கிறார்? வேதம் சொல்லுகிறது, உன்னதத்திலே இந்த உலகத்தோற்றங்களுக்கு முன்பாகத் திரித்துவ தேவர்களாகிய பிதாவும் குமாரனும் ஒரு பெரிய முடிவை எடுத்தார்கள். அந்த முடிவின்படி தாங்கள் படைக்கப் போகின்ற இந்த உலகத்திலே சிருஷ்டிகளாகிய மனிதர்களிலிருந்து ஒரு குறிப்பிட்டவர்களைத் தங்களுடைய மகிமைக்காகத் தெரிந்துகொள்ளுகின்ற ஒரு திட்டத்தை வகுத்தார்கள். அந்தத் திட்டம் மனிதன் பிறப்பதற்கு முன்பே வகுக்கப்பட்டதாக எபேசியர் முதலாவது அதிகாரம் நமக்குச் சொல்லுகிறது. அத்திட்டத்தின்படி தெரிந்துகொள்ளப்பட்ட அந்த மக்களுக்காக, அவர்களுக்கு இரட்சிப்பைக் கொடுப்பதற்காக, அவர்களுடைய பாவத்திலிருந்து அவர்களுக்கு விடுதலை கொடுத்து பரலோகத்துக்குப் போய்ச் சேரும்படி செய்வதற்காக இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்டார். அவர்கள் ஏற்கனவே தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அப்படித் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள், அவர்கள் சுவிசேஷத்தைக் கேட்கிற பொழுது ஆண்டவர் அவர்களை நல்ல நிலத்தில் விதை பலன் கொடுப்பதுபோல் ஆவிக்குரிய பலனடையக்கூடியவிதத்தில் தயாரிக்கிறார்.

பரிசுத்த ஆவியானவர் வருகிற பொழுது அவர் என்ன செய்வார்? வேதம் சொல்லுகிறது,

யோவான் 16:8

அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.

சுவிசேஷம் சொல்லப்படுகிற பொழுது, தெளிவாக வேதபூர்வமாக பிரசங்கிக்கிற பொழுது, அந்த சுவிசேஷமாகிய வார்த்தையை வைத்து மனிதனுடைய இருதயத்திலே அவனுக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்தி, நீதியைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து, அவன் தன்னுடைய பாவத்தை உணரும்படியாகச் செய்கின்ற செயலைப் பரிசுத்த ஆவியானவர் செய்கிறார். எத்தனையோ பேர் அந்த மூன்று நிலங்களைப் போல நடந்து பலன்கொடாமல் போய் விடுகிறபொழுதும், ஆண்டவரால் ஏற்கனவே தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள், அந்த சுவிசேஷப் பிரசங்கத்தின் கீழாக வருகிறபொழுது, சுவிசேஷப் பிரசங்கம் அவர்களில் பலன் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. அது எப்படி நடக்கிறது? பரிசுத்த ஆவியானவருடைய கிரியையினால் அது நிகழ்கிறது. ஏனென்றால் ஆவியானவர் ஒருவனைத் தொட்டு, சத்தியத்தின் மூலமாக அவனுடைய பாவத்தை உணர்த்தி, அவன் தன்னுடைய பாவ நிலையை உணர்ந்து, கிறிஸ்து எனக்குத் தேவை என்று சொல்லும் விதமாக, ஆண்டவரை நாடி வரும்படியாகச் செய்கிறவர் பரிசுத்த ஆவியானவர். ஆகவே அந்த நல்ல நிலம் பண்படுத்தப்படுகிறது. பண்படுத்தப்பட்ட இருதயமே கனி கொடுக்கும்.

“என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” (யோவான் 6:44) என்று ஆண்டவர் சொல்லுகிறார். இந்த இழுத்துக்கொள்ளுகிற காரியத்தை திட்ப உறுதியான அழைப்பு என்று சீர்திருத்த இறையியல் அருமையாகப் போதிக்கிறது. ஆங்கிலத்தில் இதனை Effectual calling என்று அழைப்பார்கள். சுவிசேஷ அழைப்பு போகிற பொழுது அதில் இரண்டு வகையான அழைப்பு காணப்படுகிறது. ஒன்று பொதுவான அழைப்பு, அது எல்லாருக்கும் கொடுக்கப்படுகிறது, ஆனால் எல்லோரும் அதைக் கேட்பதில்லை; அதனால் பயனடைவதில்லை. ஏனென்றால் எல்லோரும் தெரிந்து கொள்ளப்படவில்லை. இரண்டாவதாக சிறப்பான அழைப்பு, அப்படிக் கேட்பவர்களில் சிலர் அதற்குக் காது கொடுத்து, அதைக் கேட்டு, அதை உணர்ந்து, அதற்கு இடம் கொடுத்து, இயேசுவை விசுவாசித்து திட்ப உறுதியாக ஆண்டவராலே இழுத்துக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அழைக்கப்பட்டவர்களுக்குத்தான் பரிசுத்த ஆவியானவர் மறுபிறப்பைக் கொடுக்கிறார், அவர்களுடைய இருதயத்தை மாற்றுகிறார். அவர்களுடைய இருதயத்தில் ஆண்டவரை நேசிக்கும்படியாகச் செய்கிறார். அந்த இருதயத்திலே பாவ உணர்வுகள் ஏற்பட்டு, அவன் கர்த்தருக்கு முன்பாகத் தான் கொடும்பாவியாக நிற்கிறேன் என்பதை உணர வைத்து, அவன் இயேசு கிறிஸ்துவில் அன்பு செலுத்தும்படியாக அந்த இருதயத்தை முழுமையாக மாற்றுகிறார். ஆவியானவர் ஒரு மனிதனில் கிரியை செய்து அவனுடைய இருதயத்தை ஆண்டவரை நோக்கிப் போகும்படியாக மாற்றப்படுகின்ற அந்த மறுபிறப்பு நிகழாமல் எவருமே கிறிஸ்துவை விசுவாசிக்க முடியாது.

இன்றைக்கு நாம் ஒருவரிடத்தில் நீங்கள் எப்படி விசுவாசியாக மாறினீர்கள்? என்று கேட்டால், கிறிஸ்துவை நான் விசுவாசித்த போது விசுவாசி ஆனேன் என்றும், மறுபிறப்பு அடைந்தேன் என்றும் சொல்லுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இரட்சிப்பு என்பது அவர்கள் ஆண்டவரை விசுவாசித்தபோது நிகழ்ந்ததாக எண்ணி வருகிறார்கள். ஆனால் அது மிகவும் தவறு. வேதம் அவ்வாறு போதிக்கவில்லை. ஒருவன் இயேசுவை விசுவாசிப்பதற்கு முன்பு அவனில் நிகழ்வதுதான் மறுபிறப்பு என்று வேதம் சொல்லுகிறது. மறுபிறப்பு என்பது பரிசுத்த ஆவியானவர் இரகசியமாக நம்முடைய இருதயத்தில் நாம் உணராமல் இருக்கும்பொழுது நம்மில் செய்கிறார். அதன் காரணமாக நம்முடைய இருதயம் முழுமையாக மாற்றப்படுகிறது, அவ்வாறு மாற்றப்பட்ட பிறகு தான் அதை நாம் உணர ஆரம்பிக்கிறோம், ஆண்டவரை நோக்கிப் போக ஆரம்பிக்கிறோம். மறுபிறப்பு நிகழும் போதுதான் ஆண்டவர் நமக்கு விசுவாசத்தை ஈவாகக் கொடுக்கிறார், அதனால் இயேசு கிறிஸ்துவை நம்மால் விசுவாசிக்க முடிகிறது, இருதயத்திலே பாவத்தை உணர்ந்து மனந்திரும்ப முடிகிறது. ஆகவே மனந்திரும்புதலும் விசுவாசமும் மறுபிறப்பின் காரணமாக நமக்குக் கிடைக்கின்ற ஆசீர்வாதங்களாகும். மறுபிறப்பு நிகழாமல் மனந்திரும்புதலும் விசுவாசமும் நிகழாது. பரிசுத்த ஆவியானவர் நம்மில் நிகழ்த்துகின்ற மறுபிறப்பின் விதைகள்தான் விசுவாசமும் மனந்திரும்புதலும். ஆகவேதான் மனுஷன் இயற்கையாகவே பாவ நிலையில் கிறிஸ்துவை விசுவாசிக்க மாட்டான். அவனால் விசுவாசிக்கக்கூடிய எந்த ஆவிக்குரிய விஷயமும் அவனிடம் காணப்படவில்லை.

ஆவியானவர் மனிதனுக்கு மறுபிறப்பைப் கொடுக்கிறார், அதனால் அவன் இயேசுவை விசுவாசித்து அவரிடத்தில் சரணடைந்து விடுகிறான். அப்பொழுது ஆண்டவர் அவனுடைய பாவங்களை மன்னிக்கின்றார், இரட்சிப்பை அவனுக்கு வழங்குகின்றார். மேலும் மறுபிறப்போடு கூட வரக்கூடிய சகலவிதமான கிருபையின் ஆசீர்வாதங்களையும் அவனுக்கு அளிக்கிறார். திட்ப உறுதியான அழைப்பு மறுபிறப்பில் கொண்டு போய்விடுகிறது. மறுபிறப்பு மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் கொடுக்கின்றது. அதற்கு பிறகு அவன் நீதிமானாகிறான். ஆண்டவருக்கு முன்பாக அவன் நீதிமானாக எண்ணப்படுகிறான், பரிசுத்தமானது அவனில் நிகழ ஆரம்பிக்கிறது. அவன் மகிமையை நிச்சயமாக அடைவான். இதையெல்லாம் இரட்சிப்பின் ஆசீர்வாதங்களாக ஆண்டவர் அவனுக்குக் கொடுக்கிறார்.

யோவான் 6:37-40

பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

OS-3dஇந்த வேதப்பகுதியில் இயேசு அநேக முறை ‘என்னை அனுப்பினவர்’ என்று சொல்லுகிறார். ஒருவனும் சுயமாக ஆண்டவரிடத்தில் வரவில்லை, பிதா அவனைக் குமாரனிடத்தில் கொடுத்ததனால்தான் அவன் இயேசுவினிடம் வருகிறான். இயேசு கிறிஸ்துவிடம் வருகிறவன் பிதாவினாலே இழுக்கப்படுகிறான், ஆவியினாலே மறுபிறப்பை அடைகிறான், அதனால் அவன் இயேசுவை விசுவாசிக்கிறான், கடைசி நாளில் அவன் எழுப்பப்படுகிறவனாக இருக்கிறான். இதையெல்லாம் இன்னும் ஆழமாக விளங்கிக்கொள்ள வேண்டுமானால், நான் வெளியிட்டிருக்கும் “இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு” என்ற புத்தகத்தை வாங்கி வாசித்துப் பயனடையுங்கள்.

கடைசியாக, இப்படி ஒரு நல்ல இருதயத்தை கொண்டிருக்கிறவர்கள், அதாவது பண்படுத்தப்பட்ட தயாரிக்கப்பட்ட இருதயத்தைக் கொண்டிருக்கிறவர்கள்தான் தங்களுடைய இரட்சிப்புக்குரிய வாழ்க்கையில் நிலைத்திருந்து அதிக கனிகளைக் கொடுப்பார்கள்.

லூக்கா 8:15

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

ஒரு பயிர் வளர்ந்து, செடியாகி, கனி கொடுப்பதற்கு சில காலம் எடுக்கும். விவசாயி அதுவரை பொறுமையாக அதைக் கவனித்து வருவான். அதுபோலத்தான் இந்தவிதமாக இரட்சிப்பை அடைந்தவர்கள், ஆண்டவரால் பண்படுத்தப்பட்ட இருதயத்தைக் கொண்டிருந்து, மறுபிறப்பு அடைந்து, கிறிஸ்துவை விசுவாசித்து, அவர்கள் அந்த விசுவாசத்தில் இறுதிவரையும் நிலைத்திருந்து, விசுவாசத்தில் நல்லபடியாக வளர்ந்து கனி கொடுப்பார்கள். முப்பது, அறுபது, நூறு என்று மூன்று சுவிசேஷ நூல்களும் அதை ஒரே முறையில் சொல்லவில்லை. இரண்டு நூல்கள் முப்பது, அறுபது, நூறு, என்றும், ஒரு நூல் நூறு, அறுபது, முப்பது, என்றும் விளக்குகின்றது. அதனால் நமக்கு ஒன்றும் பிரச்சனையில்லை, அதுபற்றி விசேஷமாக அர்த்தம் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. சுவிசேஷ நூல்களை எழுதினவர்கள் தங்களுடைய பார்வைக்கு ஏற்ற முறையில் எழுதியிருக்கிறார்கள். அதன் அர்த்தம் என்ன? நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதை கனி கொடுக்கும், அது கனி கொடுக்காமல் போகாது. அவ்வாறு கனி கொடுப்பதும் கூட சில பேரிடத்தில் முப்பதும், சில பேரிடத்தில் அறுபதும், சில பேரிடத்தில் நூறாகவும் இருக்கும். ஆனால் அந்த நிலத்தில் விதைக்கப்படுகிற எதுவுமே கனி கொடுக்காமல் இருக்காது.

கனி கொடுக்காமல் இருக்கின்ற கிறிஸ்தவன் என்று வேதத்தில் எங்காவது வாசித்திருக்கிறீர்களா? வாசித்திருக்கவே மாட்டீர்கள். மெய்யான கிறிஸ்தவன் கனி கொடுக்கின்றவனாக இருப்பான், அப்படி கனி கொடுக்கும் விதமாகத்தான் ஆண்டவர் அவனை மாற்றியிருக்கிறார். கிறிஸ்தவர்கள் என்று நினைத்துக் கொண்டு எந்தவிதமான கனியும் கொடுக்காமல், தளர்ந்துபோய் பிரச்சனைகளுக்குள்ளாக வாழ்ந்து தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? உண்மையாகவே அவர்களுடைய வாழ்க்கையில் இரட்சிப்பு நிகழ்ந்திருக்கிறதா என்று கேட்டுப் பார்க்க வேண்டும். வண்டியில் பெட்ரோல் ஊற்றினால்தான் அது ஓடும். பெட்ரோல் இல்லாமல் வண்டி ஓடாது. உண்மையாகவே இரட்சிப்பு நிகழாவிட்டால், மறுபிறப்பு நடக்கவில்லையென்றால், சிலர் நான் கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு, அந்த கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு இருப்பார்களே தவிர, இரட்சிப்பில் இருக்க வேண்டிய அம்சங்களை அவர்களில் காணமுடியாது. இப்படி எவ்வளவோ பேரை நாம் பார்க்கிறோம். யூதாஸைப் பார்க்கிறபோது, அவன் பிரசங்கமும் செய்திருக்கிறான், அற்புதமும் செய்திருக்கிறான். ஆனால் அவன் ஆண்டவருடைய பிள்ளையுமல்ல, விசுவாசியுமல்ல. இதேவிதமாக இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலையும் சொல்லலாம். இன்று நம்மினத்தில் காணப்படும் போலிச் சபைகள் இத்தகையோரால் நிரம்பி வழிகின்றன.

உண்மையான கிறிஸ்தவன் வளருவான், நிலைத்திருப்பான், கனி கொடுப்பான். இரண்டு வேத பகுதிகளை மட்டும் நான் மேற்கோள் காட்டுகிறேன்.

முதலாவதாக பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில் சொல்லுகிறார்,

பிலிப்பியர் 1:4-6

நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி, உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

இந்த பிலிப்பியர் சபை மக்களைக் குறித்து பவுலின் நம்பிக்கையைப் பாருங்கள். அவர்களை அழைத்து, மறுபிறப்பைக் கொடுத்து, விசுவாசத்தையும் மனந்திரும்புதலையும் அவர்களில் நிகழுமாறு பார்த்துக் கொண்டிருந்த அந்த தேவன், அவர்களில் நற்கிரியை ஆரம்பித்து வைத்தவர் என்றும், அதை இயேசு கிறிஸ்துவின் நாள் வருமட்டும் அதை நடத்தி வருவார் என்றும் நம்பி, ஆண்டவரிடத்தில் ஸ்தோத்திரம் செய்கிறேன் என்று சொல்லுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆண்டவர் நற்கிரியை ஆரம்பித்து வைத்திருப்பதனாலே அவர் அதைப் பாதுகாத்து நடத்துகிறவராக இருக்கிறார்.

இரண்டாவதாக, பவுல் சொல்லுகிறார்,

பிலிப்பியர் 2:12-13

ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.

பவுல் இந்நிருபத்தை எழுதுகிறபோது சிறையில் இருக்கிறார். இதில் பவுல் ஒரு அருமையான போதனையை நமக்கு அளிக்கிறார். ஒரு நிலத்தைப் பண்படுத்துவது போல ஒரு இருதயத்தைப் பயன்படுத்தி விசுவாசத்தை அடையும்படிச் செய்கிறவர் கர்த்தரே. அது இறுதிவரை நிலைத்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுவதும் அவரே. அவ்வாறு அவர்கள் இரட்சிப்பை அடைந்தபோதும், பயத்தோடும் நடுக்கத்தோடும் தங்கள் இரட்சிப்பு நிறைவேற செய்யவேண்டிய ஆவிக்குரிய அனைத்தையும் செய்து அதில் பாடுபடுவார்கள். ஆகவே நம்முடைய விசுவாசத்தில் இந்த இரு பக்கமும் அடங்கியிருக்கிறது. ஒன்று ஆண்டவர் நம்மைப் பாதுகாப்பது, மற்றொன்று நாம் விசுவாசத்தோடு இரட்சிப்பிற்குரிய காரியங்களைக் கடைசிவரை செய்து நிலைத்திருப்பதாகும். இதில் ஒன்றில்லாமல் மற்றொன்று நடக்காது.

ஆண்டவர் நம்மைத் தொடர்ந்து பாதுகாக்காமல் விசுவாசத்தில் நாம் தொடர முடியாது. நாம் நல்ல விசுவாசத்தில் நடந்து போகின்ற பொழுது இது நம்முடைய சொந்த செய்கையாக இருக்குமோ என்று நினைக்கக் கூடாது. ஏனெனில், ஆவியானவரின் உதவியோடுதான் நாம் அதைச் செய்கிறோம். ஆண்டவர் நம்மைப் பாதுகாக்கிறார் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும்? நாம் விசுவாசத்திற்குரிய காரியங்களை பயத்தோடும் நடுக்கத்தோடும் பாவத்துக்கு விலகி இருந்து செய்துகொண்டு போகின்ற பொழுது நமக்கு இரட்சிப்பின் ஆனந்தம் ஏற்படுகிறது, அது நமக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது. இதையெல்லாம் நாம் செய்வதற்கும், சரியான பாதையில் போய்க் கொண்டிருப்பதற்கும் காரணம் ஆண்டவர் நம்மைத் தொடர்ந்து பாதுகாத்து நம்மில் கிரியை செய்வதால் தான். நாம் தளர்ந்து போய், பின்வாங்கிப் போய், சத்தியத்தைக் கேட்பதற்கு சபைக்குத் தொடர்ச்சியாகப் போகாமல், வேலை மற்றும் அது, இது, என்று சாக்குப்போக்குச் சொல்லி மற்ற விஷயங்களில் கவனத்தைச் செலுத்துகிறவர்களாக இருந்தால் ஆண்டவருடைய செய்கை நம்மில் குறைவாக இருக்கிறது என்பதுதான் அதற்கு அர்த்தம். அது தொடர்ந்திருந்தால் உண்மையிலேயே அவருடைய செய்கை நம்மில் இருக்கிறதா என்ற ஒரு பெரிய கேள்வியில் அது கொண்டுபோய்விடும். ஒரு நல்ல செடி நன்றாக வளர்ந்து கனி கொடுப்பதாகத்தான் இருக்கும், அதுதான் அதற்கு அடையாளம், அதனால்தான் அதற்கு அந்தப் பெயர் கிடைக்கிறது. அதுபோல ஒரு நல்ல கிறிஸ்தவன் கனி கொடுக்கிறவனாக முன்னோக்கிப் போய்க்கொண்டிருப்பான். சபைக்குப் போவதை நிறுத்தமாட்டான், அங்கத்துவப் பொறுப்புகளில் அலட்சியம் காட்ட மாட்டான், உலகத்திலேயே கண்ணை வைத்திருந்து அதற்காகவே எதையும் செய்யமாட்டான், எந்த நேரமும் பாவத்தில் விழுந்து எழுந்து கொண்டிருக்கமாட்டான், அது அவன் வாழ்க்கையில் தொடர்ச்சியாக இருக்காது. அவன் நல்ல விசுவாசியாக இருந்து, தனது மனைவி பிள்ளைகளையும் அந்த வழியில் வழிநடத்திக் கொண்டு முன்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறவனாக இருப்பான். ஆண்டவருக்கு எப்படியெல்லாம் என்னென்ன செய்யலாம் என்று யோசிக்கிறவனாக இருப்பான். அப்படி இருக்கிறவனைப் பார்த்து நாம் ஆண்டவர் அவனைப் பாதுகாக்கிறார் என்று உறுதியாகச் சொல்லமுடியும். அவனில் நற்கிரியை ஆரம்பித்து வைத்தவர் அவனில் தொடர்ந்திருந்து அவன் ஆவிக்குரிய பயணத்தை நல்லபடி நடத்தச் செய்வார். ஆகவே நல்ல விசுவாசத்திற்குரிய செய்கைகள் நம்மில் காணப்படாவிட்டால் அவர் நம்மோடு இருக்கிறாரென்று நாம் சொல்ல முடியாது.

நான் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன், நீங்கள் எப்படிப்பட்டவராக இருக்கிறீர்கள்? உங்கள் விசுவாச வாழ்க்கையில் எந்த நிலையில் இருக்கிறீர்கள்? உண்மையாகவே நீங்கள் மறுபிறப்பு அடைந்திருக்கிறீர்களா? விசுவாசமும் உண்மையான மனந்திரும்புதலும் உங்களில் ஏற்பட்டிருக்கிறதா? அதற்கு அடையாளமாக உங்கள் வாழ்க்கையில் இயேசு சொன்னவிதமாக முழுமனதோடு அவருக்குக் கீழ்ப்படிந்து, ஆண்டவருடைய வார்த்தையைப் பெரிதாகக் கருதி நடக்கிறீர்களா? இதற்கு நீங்கள் தான் பதில் சொல்லவேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் விசுவாசத்திற்குரிய கிரியைகளையெல்லாம் படிமுறையாகத் தொடர்ச்சியாக செய்யாமல் இருக்கிற பொழுது அங்கு பெரிய கேள்விக்குறி எழுந்துவிடும். நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்கிற பொழுது, ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்னைப் பாதுகாக்கிறார் என்று சொல்லும்விதமாக, நடுக்கத்தோடும் பயத்தோடும் அவருக்குரிய காரியங்களை விசுவாசத்தோடும் செய்கிறவர்களாக இருப்போமாக. அப்படிச் செய்யும்படியாக ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்யட்டும்.

விசுவாசம் என்பதும், இரட்சிப்பிற்குரிய வாழ்க்கை என்பதும் சாதாரண மனித செயல் அல்ல. நம்மை அழைத்த தேவனுடைய கிருபை நம்மை அப்படி மாற்றியிருக்கிறது, நம்மை அவ்வாறு வாழ வைக்கிறது. ஆகவே உங்களுடைய விசுவாச வாழ்க்கையைச் சாதாரணமாக நினைத்து விடாமல் இருதயத்தில் பயத்தோடும் நடுக்கத்தோடும், என்னென்ன குறைபாடுகளை ஆண்டவருடைய விஷயங்களில் வைத்து இருக்கிறீர்களோ அந்தக் குறைபாடுகளை எல்லாம் நீக்கி அவருக்கு மேலதிகமாக விசுவாசமாய் இருக்கப் பாருங்கள். எந்த அளவுக்கு அவருக்கு நீங்கள் விசுவாசமாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருந்து பரலோகம் போகும்படியாக அவர் பார்த்துக் கொள்ளுவார். அப்படித்தான் ஆபிரகாம் வாழ்ந்தார், தாவீது வாழ்ந்தார், இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் வாழ்ந்தார்கள், பவுல் அப்போஸ்தலன் வாழ்ந்தார். பவுல் இறப்பதற்கு முன்பு தன் வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்து, ஆண்டவருடைய கிருபையினால் என் விசுவாசத்தை வெற்றிகரமாக நான் நடத்தி முடித்துவிட்டேன் என்று சொன்னார். அது அவருடைய இரட்சிப்பின் நிச்சயத்துவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. தான் தடுக்கி விழுந்து பாவத்தை செய்து வீணாகப் போய் ஆண்டவரை மிகவும் அசிங்கப்படுத்திவிட்டேன் என்று அவர் சொல்லவில்லை. மாறாக என் விசுவாச வாழ்க்கையை நன்றாக நடத்தி முடித்துவிட்டேன், பரலோகம் போவேன் என்ற பெரிய நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஏனென்றால் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிற பொழுது எப்படி வாழ்ந்திருக்கிறேன் என்பது அவருக்கு அந்த தைரியத்தைக் கொடுக்கிறது. பவுல் அப்படிச் செய்ய முடிந்ததற்குக் காரணம், அவரில் அதை ஆரம்பித்து வைத்தவர் அவர் அதைச் செய்யும்படியாக அவரோடிருந்திருக்கிறார். அவர் பயத்தோடும் நடுக்கத்தோடும் தனது இரட்சிப்பிற்குரிய செயல்களை இறுதிவரை செய்திருக்கிறார். கிறிஸ்தவம் என்பது அதுதான். அது ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஆண்டவரை மகிமைப்படுத்துகிற ஒரு வாழ்க்கை முறையாகும். அவரில்லாமல் நாம் இல்லை. அதைத்தான் இந்த நல்ல நிலத்தைப் பற்றிய உவமை நமக்கு விளக்குகிறது.

 

 

© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.