திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

1. வாசகர்களே! 2024 -03
2. குடும்பம் படும் பாடு
3. குடும்பம் ஒரு ஆலயம்
4. இல்லற வாழ்க்கையின் இரகசியம்
5. குடும்பத் தலைவன்
6. குடும்ப விளக்கு
7. குழந்தைச் செல்வம்
8. சிறந்த பிள்ளை வளர்ப்பு

வாசகர்களே!

தமிழினத்துக் கிறிஸ்தவத்தில் குடும்ப வாழ்க்கை கிறிஸ்தவ வேதத்தைப் பின்பற்றி இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தும்படி அமையாமல் சீரழிந்த பண்பாட்டு வழிமுறைகளுக்கு அடிமையாகியிருப்பதை அநேக தடவை இதழில் நான் விளக்கியிருக்கிறேன். இதைப் பண்பாட்டுப் பித்தர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். மெய்க் கிறிஸ்தவன் வாழ்க்கையின் அனைத்துப் பகுதியிலும் கிறிஸ்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற மனநிலையைக் கொண்டிருப்பதால் கிறிஸ்தவ வேதபோதனைகளின்படி குடும்ப வாழ்க்கையை நடத்தப் பெருமுயற்சி செய்வான். அத்தகைய மெய்க்கிறிஸ்தவர்களின் தொகை நம்மினத்தில் அருகிக் காணப்படுகிறது. அத்தோடு திருச்சபைகளும் பண்பாட்டிற்கு முக்கியத்துவமளித்து கிறிஸ்தவர்களின் திருமணத்தை அவ்வழியில் போவதற்கே வழிநடத்தி வருகிறார்கள். இதனால் சீர்திருத்த கிறிஸ்தவம் நம்மினத்தில் காலூன்றி நிலைத்திருப்பது கல்லில் நாருரிப்பது போன்ற கடுமையான பணி.

நம் பண்பாட்டில் ஆணாதிக்கம் (male chauvinism) வேறு இனங்களில் இல்லாதவகையில் ஊறிப் போயிருக்கின்றது. அதனால் ஆண்களை நம் பண்பாடு தலையில் தூக்கிவைத்து ஆடுவதில் ஆச்சரியமில்லை, பெண்ணுக்கு நம் பண்பாட்டில் இரண்டாவது இடம் மட்டுமே. இதற்கு விதிவிலக்குகள் இருந்துவிடலாம். இருந்தாலும் பொதுவாக ஆணின் கையிலேயே ஆதிக்கம். இந்த ஆணாதிக்கத்தின் அத்துமீறலால் பெண்ணைத் தாழ்வாக நடத்துவதும், அவளுடைய ஆசாபாசங்களுக்கு இடங்கொடுக்காமல் இருப்பதும், மனைவியின் பேச்சுக்கு மதிப்புக்கொடுக்காமல் போவதும், அப்படிப் பேசுவதைத் தனக்கு இழைக்கப்பட்ட அவமானமாகக் (Insult) கணவன் கருதுவதும், இதற்கெல்லாம் மேலாக மனைவியைத் திட்டுவதும், கைநீட்டி அடிப்பதும் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் பொதுவாகக் காணப்படும் வைரஸாக இருக்கிறது. இதை உணர்த்தி, கிறிஸ்தவ குடும்பத்தில் காணப்பட வேண்டிய வேத இலக்கணங்களை விளக்கும் பல ஆக்கங்களை உள்ளடக்கி இந்த இதழ் குடும்ப இதழாக உங்கள் கைக்கு வந்திருக்கிறது. வாசித்து சிந்தியுங்கள். நன்றி. – ஆசிரியர்

குடும்பம் படும் பாடு

இந்த இதழ் குடும்ப இதழாக மலர்ந்திருக்கிறது. இதழில் அனைத்து ஆக்கங்களும் குடும்பத்தின் வெவ்வேறுபட்ட அம்சங்களை அலசுவதாக இருப்பதைக் கவனிப்பீர்கள். ஏன் இதைக் குடும்ப இதழாக வெளியிட்டிருக்கிறோம் என்பதை இந்த ஆக்கத்தின் மூலம் உங்களுக்கு விளங்கவைக்க முயற்சி செய்திருக்கிறேன். நல்ல குடும்பங்கள் இருந்தால் சபை நல்லதாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் நல்ல குடும்பங்கள் என்று குறிப்பிட்டிருப்பது சீரழிந்த பண்பாட்டிற்கு முழுக்குப்போட்டு வேதபூர்வமாக குடும்பத்தை நடத்தி வருகிறவர்களைத்தான். அத்தகைய நல்ல குடும்பங்கள் இல்லாமல் எப்படி சபை உருவாக முடியும்? போலித்தனமும், பிரச்சனைகளும், ஆணாதிக்கமும், பெண்அடிமைத்தனமும் ஆண்டு வரும் குடும்பங்கள் சுவிசேஷ விடுதலை அடைய வேண்டியவை. சுவிசேஷத்தால் விடுதலை அடைந்து, குடும்பத்தைப் பற்றி வேதம் போதிப்பவற்றையெல்லாம் வாழ்க்கையில் வைராக்கியத்தோடு பின்பற்றும்போதுதான் குடும்பங்கள் சீரானதாக அமைய முடியும். அத்தகைய குடும்பங்களைக் கொண்டிருக்கும் போதகர்களும், சபைகளுமே கிறிஸ்துவின் நடமாட்டத்தைத் தங்கள் மத்தியில் கண்டுவரும் சபைகளாக இருக்கமுடியும்.

குடும்பத்தை நன்றாக நடத்தாதவன் போதகனாகவோ, உதவிக்காரனாகவோ அல்லது சபை அங்கத்தவனாகவோ இருக்கத் தகுதியற்றவன் என்கிறது கிறிஸ்தவ வேதம். இதனால்தான் வேதத்தின்படி நம்மினத்தில் சபை நடத்த முடியாது என்று பலர் வேதத்தை ஒதுக்கிவைத்துவிட்டு சபை நடத்தி வருகிறார்கள். அவர்கள் சீரழிந்த நம் பண்பாட்டிற்குத் தங்களை அடிமையாக்கிக் கொண்டிருக்கும் பச்சோந்திகள்.

சமீபத்தில் போதகர்களுக்கான மகாநாட்டிலும், ஒரு சபையின் விசேஷ கூட்டங்களிலும் விரிவுரைகளையும், செய்திகளைக் கொடுத்திருந்தேன். அதில் நானும் என் நண்பரொருவரும் திருச்சபை போதக ஊழியத்திற்கான இலக்கணங்களை அலசி ஆராய்ந்திருந்தோம். அந்த இலக்கணங்களில் ஒன்றான குடும்ப இலக்கணத்தை மட்டும் நான் எடுத்துக்கொண்டு ஏனையவற்றை என் நண்பனிடம் விட்டுவிட்டேன். இந்த நாட்டுப் பண்பாடு பற்றி எனக்கு ஆழமாகத் தெரியாததால் அதை நீங்களே செய்வதுதான் சரி, என்று நண்பனும் ஒத்துக்கொண்டார்.

போதக ஊழியத்திற்குரிய இலக்கணங்கள்

போதக ஊழியத்திற்கு அவசியமான நாற்பத்தி இரண்டு இலக்கணங்களில் (1 தீமோத்தேயு 3; தீத்து 1) ஒன்றுக்கு மட்டுமே பவுல் அப்போஸ்தலன் அதிக விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். மிக முக்கியமானதாக நாம் நினைக்கக்கூடிய ஏனைய எத்தனையோ இலக்கணங்களுக்கு அவர் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை; அவற்றைக் குறிப்பிடுவதோடு நிறுத்திக்கொண்டார். இதைப்பற்றி நாம் சிந்திக்காமல் இருக்கமுடியாது. அந்த இலக்கணமாகிய குடும்ப விசாரிப்புக்கு மட்டும் அவர் மேலதிக விளக்கத்தை அளிக்கக் காரணமென்ன? இந்த இலக்கணங்களிலெல்லாம் குடும்பத்திற்கு முக்கியத்துவமளிக்கக் காரணமென்ன? அதற்கான பதிலைப் பவுல் 1 தீமோத்தேயு 3:5ல் தருகிறார்,

ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை விசாரிக்க அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?

இப்போது தெரிகிறதா, குடும்பத்திற்கு பவுல் ஏன் அத்தனை முக்கியத்துவமளித்திருக்கிறார் என்று?

ஒருவன் நல்ல கணவனாக, தகப்பனாக இருந்து மனைவி மேல் சுவிசேஷ அன்பைக்காட்டி, மனைவியையும், பிள்ளைகளையும் கிறிஸ்து இயேசு தன் சபையைப் பராமரிப்பதுபோல பாசத்தோடு கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கிறவனாக இல்லாவிட்டால் அவனால் திருச்சபையை எந்தவிதத்திலும் பராமரித்து வழிநடத்த முடியாது என்கிறார் பவுல். மேற்குறிப்பிட்ட வசனத்தில் ‘விசாரிக்க’ என்ற வார்த்தைக்கு மூல மொழியின்படி நிர்வகித்த, ஆள என்பவையே அர்த்தங்கள். குடும்ப வாழ்க்கையில் தவறிழைத்து சக கிறிஸ்தவர்களுக்கு முன்னுதாரணமாக இல்லாமல் வாழ்ந்து வருகிறவனைப் போதகப் பணிக்கு நியமிக்கக்கூடாது என்கிறார் பவுல். ஆகவே, திருச்சபை அங்கத்தவர்கள் இதில் சிரத்தை காட்டி போதக ஊழியத்தில் ஆர்வம் காட்டுகிறவனுடைய குடும்ப வாழ்க்கையை நுணுக்கமாக ஆராய வேண்டியது அவர்களுடைய பெரும் கடமையாக இருக்கிறது.

நான் விரிவுரைகள் அளித்த போதக மகாநாட்டில் போதகப் பணி செய்கிறவர்களில் ஐந்து பேர் மட்டுமே அந்தப் பணிக்கான தகுதிகள் முறையாக ஆராயப்பட்டு சபை அங்கத்தவர்களால் அங்கீகரிக்கப்பட்டு அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இதை நான் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஏனையோர் தங்களைத் தாங்களே அப்பதவியில் இருத்திக்கொண்டவர்கள். இந்தவிதத்திலேயே நம்மினத்தில் திருச்சபை ஊழியம் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக், சகோதரத்துவ குழுக்கள் மற்றும் தனிஊழியம் செய்கிறவர்கள் மத்தியில் நடந்து வருகிறது. இது வேதம் அறியாத உலகத்தனமான முறை. அத்தோடு பாப்திஸ்து போன்ற சபைப்பிரிவுகளில் போதக நியமனம் குடும்ப அரசியலாலும், கமிட்டிகளின் ஆதிக்கத்தாலும் பாதிக்கப்பட்டு சடங்குபோல் நிகழ்ந்து வருகிறது. மொத்தத்தில் வேத இலக்கணங்களுக்கோ, திருச்சபை அமைப்பு, நிர்வாக முறைகளுக்கோ நம்மினத்து சபைகளிலும், ஊழியங்களிலும் எந்த இடமும் இல்லை. திருச்சபை பற்றி வேதத்தில் எதுவுமே இல்லை என்பது போலவே நம்மினத்தில் கர்த்தரின் பெயரில் ஊழியங்கள் நடந்து வருகின்றன. வேதத்தை ஒதுக்கிவைத்துவிட்டு உலகப்பிரகாரமான முறையில் நடந்துவரும் எந்த சபையிலும், ஊழியத்திலும் எப்படி இயேசு இருக்க முடியும்? இயேசுவின் பிரசன்னத்தைத் தம் மத்தியில் கொண்டிராத இந்த சபைகளும் ஊழியங்களும் யாருடைய ஊழியங்களாக இருந்து வருகின்றன என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நான் கொடுத்த செய்திகளைக் கேட்டு இருதயத்தில் குத்தப்பட்ட பலர் திருமணம் ஆன நாளில் இருந்து மனைவியை சரியாக நடத்தியதில்லை என்று தங்களுடைய பாவத்தை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர் தனிப்பட்ட முறையில் அதை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். பாவத்தை ஒத்துக்கொண்டிருக்கும் இவர்கள் இனித் திருந்திவாழத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. குடும்பவாழ்க்கையை சரிசெய்யாமல் தொடர்ந்தும் ஊழியம் செய்யலாமா? என்றும் கேட்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதைச் செய்வார்களா? என்பதற்கு காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும்.

பரவலாக நம்மினத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர் மத்தியில் மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் குடும்ப வாழ்க்கை சீரழிந்து சுவிசேஷ அன்போ, ஆவிக்குரிய வல்லமையோ இல்லாமல் காணப்படுவதற்குக் காரணமென்ன? அதுவும் கிறிஸ்தவர்கள் மத்தியில் அது மோசமான நிலையில் இருப்பதற்குக் காரணமென்ன? இதற்கெல்லாம் ஒரேயொரு காரணத்தைத்தான் நான் முன்வைக்க முடியும். அதற்கு நம்மினத்தின் சீரழிந்த பண்பாடுதான் பெருமளவில் காரணமாக இருக்கிறது. கிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் எடுத்தவர்களும் இந்துப் பண்பாட்டுச் சிறையில் இருந்து விடுபடாமலும், விடுபட முடியாமலும் கிறிஸ்தவ வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பதாலேயே குடும்பங்களில் சுவிசேஷ அன்பில்லை, ஏன் கிறிஸ்துவும் இல்லை. கிறிஸ்தவ சுவிசேஷத்திற்குத் தலை சாய்த்திருப்பவர்கள், அந்த சுவிசேஷம் வாழ்க்கையில் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படுத்த வேண்டிய அகப் புற மாற்றங்களுக்கு இடங்கொடுக்காதவர்களாக இருக்கிறார்கள். குடும்ப வாழ்க்கையில் கிறிஸ்துவைவிடப் பண்பாட்டின் ஆளுகைக்கே இடமளித்திருக்கிறார்கள்.

“தாம்பத்திய வாழ்வில் நெருக்கம்” எனும் என் நண்பன் அலன் டன்னின் நூலைத் தமிழில் வெளியிட்டிருந்தோம். ஆயிரக்கணக்கில் அதுபோன்ற நூல்கள் வந்தாலும் நம்மினத்துப் பண்பாட்டுப் பேயை அகற்றுவது கடினமே. அது நிகழ பரிசுத்த ஆவியானவரின் வல்லமையான கிரியை தேவையாக இருக்கிறது. சுயத்தாலும், மனித சிந்தனையாலும் அசைக்க முடியாததை அவர் மட்டுமே அசைத்துத் தூக்கியெறியக்கூடியவர்.

ஆணாதிக்கத் திமிர்

இந்திய நாட்டில் நாடு தழுவிய மிகப்பெரிய கொடுமைகளாக இருந்து வரும் இரண்டு காரியங்கள் என்ன தெரியுமா? 1. மதுவெறி. மதுவெறியால் நடந்து வரும் அலங்கோலங்களைச் செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அதை நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. அடுத்தது என்ன தெரியுமா? 2. கற்பழிப்பு. ஒரு செய்தி சொல்கிறது, ஒரு நிமிடத்திற்கு ஏழு பெண்மணிகள் இந்திய தேசத்தில் கற்பழிக்கப்படுகிறார்களாம். இதற்குக் காரணமென்ன தெரியுமா? இதுவரை அதுபற்றி சிந்தித்திராமல் இருந்தால் இப்போது வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள். சமுதாயத்தில் ஊறி உறைந்து பனிக்கட்டியாக இறுகி அசைக்கமுடியாதபடி காணப்படும் ஆணாதிக்கத் திமிரே அதற்கு முக்கிய காரணம் (male chauvinism). ஆணாதிக்கம் இந்தச் சமுதாயத்தில் ஆணிவேராக இருப்பதால்தான் கற்பழித்தவன் சாட்சிகளோடு பிடிபட்டபோதும் சில மாநிலங்களில் நீதிபதிகள் அவனுக்கு உரிய தண்டனை கொடுப்பதில்லை. ஆணைப் பொறுத்தவரை பெண் மேல் இச்சை கொள்வதும், கற்பழிப்பதும் சகஜம் என்று விட்டுவிடுகிறார்கள். ஆணைவிடத் தரத்தில் கீழானவளாகப் பார்க்கப்படும் பெண்ணுக்கு சமுதாயத்தில் நியாயம் கிடைப்பதில்லை. ஆணாதிக்கமே இதற்கு முழுக்காரணம். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண் வெறும் விளையாட்டுப் பொருள் மட்டுமே.

ஆணாதிக்கம் எல்லா இனங்களிலும் ஆண்களிடம் காணப்பட்ட போதிலும், ஏனைய இனங்களில் இல்லாதளவுக்கு ஆக்ரோஷமாக வெளிப்படும் இனம் நம்மினமாக இருந்து வருகிறது. ஒருவிதத்தில் நம்மினத்துப் பண்பாட்டை இறுக்கிக் கட்டிப்பிடித்துக் காத்து வரும் பலமான கயிறாக அது இருந்துவருகிறது. இதை இல்லாமலாக்கினால் நம்மினத்துச் சீரழிந்த பண்பாட்டிற்குப் பேராபத்து ஏற்படும். இதை நான் விளக்காவிட்டால் உங்களுக்கு இந்த ஆணாதிக்கத்தின் கோரத்தை விளங்கிக்கொள்ள முடியாது.

நம்மினம் ஆண்களை முன்வைத்தே எதையும் செய்து வரும் இனம். பெண்ணுக்கு அதிகம் மதிப்பளிக்காத இனம். உண்மையில் பெண்ணை இரண்டாவது இடத்திலேயே நம்மினம் வைத்திருக்கிறது. அதனால்தான் பெரும்பாலும் திருமணமானவர்கள் ஆண் குழந்தைகளை விரும்புகிறார்கள். ஆண் குழந்தை பிறந்துவிட்டால் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். பெண் பிறந்துவிட்டால் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. ஆண் பிள்ளைகளுக்கே வீட்டில் மதிப்பு. பெண் புகுந்த வீட்டுக்குப் போக வேண்டியவள் என்பதால் அவளை அதிகம் படிக்கவைப்பதில்லை. அதற்குச் செலவழிக்க பெற்றோர் தயங்குகிறார்கள். அதேநேரம் ஆணைப் படிக்கவைப்பார்கள், அவனுக்கு அதிகம் செலவழிப்பார்கள். அத்தோடு வயதுக்கு வந்தபின் எந்தளவுக்கு சீக்கிரமாகப் பெண்ணுக்குத் திருமணத்தை முடித்து வீட்டைவிட்டு அனுப்பமுடியும் என்பதில்தான் குறியாகவும் இருப்பார்கள். பெண்ணை ஒரு சுமையாகவே நம்மினம் கருதுகிறது. இது கிறிஸ்தவ சமுதாயத்திலும் தொடர்கிறது.

இருந்தபோதும், பெண் இந்த சமுதாயத்திற்குத் தேவையாக இருக்கிறாள் என்பது நம்மினத்திற்குத் தெரியும். ஆணுடைய தேவைகளைத் கவனித்துக்கொள்ளவே இந்த சமுதாயத்திற்குப் பெண் தேவைப்படுகிறாள். அந்த அடிப்படையிலேயே ஆணுக்குத் திருமணத்தையும் நிச்சயிக்கிறார்கள். திருமணத்திற்குப் பின் பெண் வீட்டில் தன்னுடைய விருப்பங்களையெல்லாம் அழித்துவிட்டு கணவனுடைய தேவைகளை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறாள். கணவனும் பெண்ணுடைய விருப்பு வெறுப்புகளிலெல்லாம் எந்த அக்கறையும் இல்லாமல் தன் வேலையைச் செய்து வருவான். அநேக குடும்பங்களில் வெளியில் தெரியாமல் அன்றாடம் சண்டையும் சச்சரவுமே காணப்படும். குடும்பத்தில் நிறைவான அமைதியும், சமாதானமும் இருக்காது. இதுவே நம்மினத்தில் இயல்பாகக் காணப்படும் குடும்ப வாழ்க்கை. கிறிஸ்தவ குடும்பங்களில் வேத வாசிப்பும், ஜெபமும் இருந்தாலும் இந்த அடிப்படை ஆண், பெண் உறவில் அதிகளவில் மாற்றமிருக்காது. இதற்கு விதிவிலக்காக சில குடும்பங்கள் இருந்துவிட முடியும் என்பதை மறுக்கமுடியாது. ஆனால், கிறிஸ்தவ குடும்பங்களிலும் நம்மினத்தில் பெண் இன்றும் அடிமையாகவே இருந்து வருகிறாள். ஆண், ஆணாதிக்கத்தோடு சுவிசேஷ அன்பு காட்டத் தெரியாதவனாக இயந்திர வாழ்க்கை வாழ்ந்து வருகிறான் என்பதுதான் நிதர்சனம்.

காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கப்போகும்வரை நாக்குக்குச் சுவையாக உணவு சமைத்துப், பரிமாறி, துணிகளைத்துவைத்து, பிள்ளைகளைக் கவனித்து, சட்டி பானைகளைக் கழுவி, அடுத்த நாளுக்கும் செய்யவேண்டியதைத் திட்டமிட்டு களைத்துப் போய் சரீர வலியையும் வெளியில் காட்டாமல் இயந்திரத்தைப் போல உழைத்து வரும் மனைவியைப் பார்த்து ஒரு நாளில் ஒரு தடவையாவது கணவன் நம்மினத்தில், அன்பே, இன்றைக்கு நீ செய்த சாப்பாடு அத்தனை சுவையாக இருந்தது. உனக்கு நன்றி என்று சொல்லியிருப்பானா? ஒரு நாளில் அப்படி எத்தனை தடவை மனைவிக்கு நன்றி சொல்லியிருப்பான்? தினமும் மனைவி சமைப்பதை சாப்பிடுகிறவன் ஒருநாள் அடுப்படிப் பக்கம் போயிருப்பானா? மனைவிக்கு காப்பி போட்டுத் தந்திருப்பானா? முழு நாளும் நின்று உழைத்து சமைத்திருக்கிறாளே என்று இரவில் இதமாக அவள் கால்களைப் பிடித்துவிட்டுத் தன் அன்பைக் காட்டியிருப்பானா? கிறிஸ்தவ கணவனைத்தான் சொல்லுகிறேன். உணவில் உப்போ புளியோ குறைவாக இருந்திருந்தால் மட்டும், உனக்கு இன்றைக்கு என்ன நடந்தது? என்று குரலை உயர்த்திப் பேச அவனுக்குத் தெரிந்திருக்கிறது. இடுப்பில் பாரமான தண்ணீர் குடத்தைச் சுமந்து பலதடவை நடந்து போயிருக்கும் மனைவியைப் பார்த்தும் எந்தக் கவலையும் இல்லாமல் தன் வேலையில் முழுகிப் போயிருப்பவன் கிறிஸ்தவ கணவனா? இது இங்கு நடைமுறையில் இல்லை என்று வாதாடுகிறவர்கள் கெட்டகுமாரன் உவமையில் வரும் மூத்த குமாரனைப் போன்ற எரிச்சல் பிடித்தவர்கள். அவர்கள் பி.ஜே.பியைப் போன்ற சீரழிந்த பண்பாட்டு பக்தர்கள்.

மனைவியை அடிப்பவன்

இதையெல்லாம்விட மோசமானது என்ன தெரியுமா? கணவன் தன் மனைவியைக் கைநீட்டி அடிப்பதுதான். என்ன, அப்படியும் செய்வார்களா? என்று திகைக்கிறீர்களா? சீரழிந்த நம்மினத்து ஆணாதிக்க சமுதாயத்தில் அது வழமையானது. ஒரு போதகர் சொன்னார், இது எல்லோர் வீட்டிலும்தான் நடக்கிறது, யாரிடம் இல்லை என்று. மனைவியைக் கைநீட்டி அடிக்காத ஒருவனை விதிவிலக்காகத் தான் நம்மினத்தில் பார்க்க முடிகிறது. அப்படி அடிப்பது கேவலமானது என்ற எண்ணமே அவனுடைய இரத்தத்தில் பதிந்திருக்கவில்லை. அதற்குக் காரணம் அவன் தன் தாத்தா, அப்பா மற்றும் உறவினர்களிடம் பார்த்திருப்பதெல்லாம் ஆணாதிக்க அடக்குமுறையை மட்டுமே. ஆணாதிக்கம் ஒருவனில் ஊறிப்போயிருப்பதால் மனைவியை அடிப்பதை அவன் மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறான். ஒரு கிறிஸ்தவர் சொன்னார், இப்படிச் செய்தால் மட்டுமே மனைவியை அடக்க முடிகிறது என்று. மனைவி குறை சொன்னாலோ, எதிர்த்துப் பேசினாலோ அவனுக்கு அன்போடு திருத்தத் தெரியவில்லை. அவனுக்குப் பழக்கமான ஆயுதம் அடிப்பது மட்டுமே. பலவீனமான மனைவியை ஆணாதிக்கத் திமிறால் கையை நீட்டி அடித்து அடக்கிவிடுகிறான். அதேபோல பிள்ளைகளையும் அடித்துவிடுகிறான். அடிப்பதற்கு அவன் கை துறுதுறுக்கிறது. அவனுக்குத் தெரியவில்லை, அது அவனுடைய பலமல்ல, பலவீனம் என்பது. இன்று நம் சமுதாயத்தில் இதற்கெதிரான கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்; காவல்துறையும் நடவடிக்கைகளை எடுக்கிறது. இருந்தபோதும் அவர்களும் அதே ஆணாதிக்க இனத்தைச் சேர்ந்தவர்கள்தானே. ஒட்டுமொத்தமாக சமுதாயம் மாறாதவரை அதில் காணப்படும் சட்டம் என்ன செய்துவிட முடியும்?

நம்மினத்தில் ஆண்கள் சபையில் கையை நீட்டுவதும், வாய்ச்சண்டையில் ஈடுபடுவதும், மூர்க்கத்தனமாகப் போதகர்கள் சக போதகர்களிடமும், ஆத்துமாக்களிடமும் நடந்துகொள்ளுவதும், அடுத்தவர்களை இழிவாகப் பேசுவதும், அவர்களைப் பற்றி எழுதுவதும் அவர்களில் காணப்படும் மோசமான இருதயக் கோளாறைத்தான் சுட்டுகிறது. இந்த இருதயக்கோளாறு சுலபமாகக் கைநீட்டுவதில் போய் முடிந்துவிடுவதில் எந்த ஆச்சரியமுமில்லை. இதுவே வீட்டிலும் சகஜமாகிவிடுகிறது. வீட்டுத் தலைவர்கள் மனைவி மீதும், பிள்ளைகள் மீதும் அடிக்கடி சகஜமாகக் கையை நீட்டி விடுகிறார்கள்.

இந்த ஆணாதிக்கமே நம்மினத்தவனை அடுப்படிப் பக்கம் போக வைப்பதில்லை. அடிமையான மனைவி இருக்கவேண்டிய இடமே அடுப்படி என்று அவன் நினைக்கிறான். இந்த ஆணாதிக்கமே மனைவி செய்யும் பணிகளுக்கு அவனை நன்றி சொல்ல முடியாமல் செய்கிறது. இந்த ஆணாதிக்கமே குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு எந்தக் கவலையும் இல்லாமல் ஒருவனை வெளிநாடு போய் வேலை செய்யவைக்கிறது. அவனுக்கு அங்கு இருக்கப்பிடிக்காமல் போனால் அது சாப்பாடு சரியில்லை என்பதற்காகத்தான் இருக்குமே தவிர, குடும்பத்தைப் பிரிந்திருக்கிறோமே என்பதற்காக அல்ல. இந்த ஆணாதிக்கத் திமிரே அவன் பெற்றோர் பேச்சைக் கேட்டு நடந்து மனைவியோடு எதையும் கலந்தாலோசித்துச் செய்யாமல் குடும்பத்தைப் பெற்றோருக்கு அடிமைப்படுத்தச் செய்கிறது. உணர்வுகள் மங்கி, ஜடமாக வீட்டில் இயங்கிவர வேண்டிய ஒரு இயந்திரம் மட்டுமே மனைவி இவர்களுக்கு. மொத்தத்தில் பெண்ணை ஒரு பொருட்டாகவே இந்த சமுதாயம் மதிப்பதில்லை. இப்படி ஆணாதிக்கத்தால் நம்மவர்கள் செய்து வரும் எத்தனையோ கொடுமைகளை நான் பட்டியலிட்டு வைக்கமுடியும்.

அன்பால் மனைவியைப் போஷித்து வழிநடத்துவது என்பது கிறிஸ்துவை அறிந்து மறுபிறப்பு கிடைத்தவுடன் உடனடியாக நிகழ்ந்துவிடப்போகிறதொன்றல்ல. மறுபிறப்படைந்தவன் இந்த விஷயங்களில் வேத ஞானத்தைப் பெற்று வைராக்கியத்தோடு கிறிஸ்துவுக்காக சுயத்தை அடக்கி, சுயக் கட்டுப்பாட்டுடன் மனைவியை நேசிக்கப் பழகினால் மட்டுமே அவளை அடிப்பதையும், திட்டுவதையும், அடிமைபோல நடத்துவதையும் நிறுத்த முடியும். இதுதான் நம் பண்பாடு என்று இளக்காரமாகப் பேசுகிறவன் மறுபிறப்பு அடைந்தவனல்ல. மனைவிமேல் எப்படி அன்பு காட்டுவது என்பதை இயேசு கிறிஸ்துவும் (எபேசியர் 5), பவுலும், பேதுருவும் புதிய ஏற்பாட்டில் விளக்காமலில்லை. இருந்தும் பண்பாட்டுப் பித்து அநேகர் கண்களை மறைத்து வேதத்தை ஒதுக்கிவைத்து பண்பாட்டிற்கு வக்காலத்து வாங்க வைக்கிறது.

தன் மனைவியைக் கைநீட்டி அடிக்கிறவனும், தள்ளிவிடுகிறனும், திட்டுகிறவனும் முதலில் ஆணாகவே இருக்க முடியாது. அவன் ஆண் தன்மைக்கே இழிவேற்படுத்துகிறவன். அவன் எப்படி கிறிஸ்தவனாக இருக்க முடியும்? உண்மையில் அப்படிச் செய்கிறவன் மீது திருச்சபை ஒழுங்குநடவடிக்கை கொண்டு வந்து சபை அங்கத்துவத்திலும், திருவிருந்தெடுப்பதிலும் இருந்து தற்காலிகமாக அவன் திருந்தும்வரை விலக்கிவைக்கவேண்டும். இதுவே வேதம் நமக்குக் காட்டுகிற கிறிஸ்துவின் வழி. மனைவி மீது கைநீட்டுவதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நம்மினத்து சீரழிந்த பண்பாட்டிற்குத் தீனிபோட்டு வரும் சபைகள் நிச்சயம் ஜீவனுள்ள கிறிஸ்து நடமாடும் திருச்சபைகள் அல்ல. அந்தச் செயலைச் செய்யும் போதகர்கள் போலிப்போதகர்கள். சபைத் தலைவர்களே இந்த விஷயத்தில் தவறு செய்து வந்தால் சபையைச் சேர்ந்தவர்கள் மீது அவர்களால் எப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்?

கர்த்தரின் திட்டத்தில் குடும்பம்

இப்போது தெரிகிறதா, பவுல் ஏன் வீட்டை விசாரிக்காதவன் (ஆற்றலோடு திறமையாகவும், அன்போடும் நடத்தாதவன்) சபையை எப்படி விசாரிப்பான் என்று சொன்னாரென்று. சபைத் தலைமைக்கு அவசியமான கண்காணிப்பை ஒருவன் தன் குடும்பத்தை எப்படி நடத்துகிறான் என்பதில் இருந்தே கற்றுக்கொள்கிறான் என்கிறார் பவுல். சாதாரண குடும்ப வாழ்க்கையை உதாரணமாகப் பயன்படுத்தி மேலான திருச்சபைத் தலைமைக்கான விளக்கத்தைக் கொடுக்கிறார் பவுல். இதிலிருந்து சாதாரணமாகவே குடும்ப நிர்வாகத்தில் கணவன் ஆற்றலும், திறமையும் உள்ளவனாக அன்போடு குடும்பத்தை நடத்தி வரவேண்டுமென்பதே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் போதனை என்பது தெரிகிறதா?

ஒரு கிறிஸ்தவன் எந்த நாட்டில், எந்த இனத்தில் எந்தப் பண்பாட்டில் பிறந்திருந்தாலும், அவன் திருமணமானதும் கிறிஸ்தவனாக கிறிஸ்துவின் வழியில் மட்டுமே குடும்பத் தலைவனாகச் செயல்பட வேண்டும். குடும்பம் என்பது மனிதனின் மனதில் தோன்றியதல்ல; அதைச் சமுதாயம் உருவாக்கவில்லை. குடும்பம் நம்மைப் படைத்த ஆண்டவரின் சித்தத்தில் உதித்து அவரால் உருவாக்கப்பட்டது. ஆணையும் பெண்ணையும் படைத்து கர்த்தர் ஆதியில் குடும்பத்தை உருவாக்கினார். அதுபற்றி அவர் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் போதித்து ஏதேனில் அருமையாக வாழச் செய்தார். ஆதாமுக்கு ஏற்ற துணையாக ஏவாள் இருந்தாள். அவர்களிருவருக்கும் குடும்ப வாழ்க்கையில் தங்களுடைய பொறுப்பு தெரிந்திருந்தது. ஆதாம் ஆண்டவரின் சித்தப்படி நல்ல அன்பான குடும்பத் தலைவனாக வாழ்ந்தான். ஏவாள் அவனுக்குப் பணிந்து அவனோடு இசைந்து நம்பிக்கைகுரிய நல்ல அன்பு மனைவியாக வாழ்ந்திருந்தாள். அவர்கள் குடும்பத்தில் எவருடைய தலையீடும் இருக்கவில்லை. கர்த்தரின் வார்த்தையின்படி அவர்கள் அற்புதமாக குடும்ப வாழ்க்கை நடத்தி வந்திருந்தார்கள். கர்த்தரின் சித்தப்படியும், திட்டத்தின்படியும் அவர்கள் அமைதியான ஆவிக்குரிய வாழ்க்கை நடத்தி வந்திருந்தார்கள். ஆனால், அதில் மண் விழுந்தது.

ஆதியாகமம் 3ன்படி பிசாசின் பேச்சைக்கேட்டு ஏவாள் அந்தச் சோதனைக்கு இடங்கொடுத்து தன் கணவனையும் தன் பேச்சுக்கு ஒத்துப் போகச் செய்து கர்த்தரின் வார்த்தையை மீறிப் பாவத்தைச் செய்தாள். தன் கடமையில் தவறி மனைவியின் தவறான வழிக்கு இணங்கிப் போய் கர்த்தரின் வார்த்தையை மீறி ஆதாமும் பாவத்தைச் செய்தான். இந்த மீறுதலை இருவருமே செய்ததால் பாவம் ஏற்பட்டு அவர்கள் பாவிகளானார்கள். குடும்பத்தில் இருவரும் இதுவரை வகித்து வந்த பொறுப்பில் இருந்து தவறினார்கள். ஏதேனில் அருமையாக இருந்த அவர்களுடைய குடும்ப வாழ்க்கையும் பூரணத்துவத்தை இழந்து பாவத்தால் பாதிக்கப்பட்டது. இதுவரை இருந்துவந்த அமைதி அழிந்தது.

ஏவாளுக்கு தண்டனையளித்த கர்த்தர் அவளோடு பேசிப் பின்வருமாறு சொன்னார்.

ஆதியாகமம் 3:16

அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.

மேற்குறிப்பிட்ட வசனத்தின் பிற்பகுதி முக்கியமானது. அதில் கர்த்தர் ஏதேனில் இதுவரை பாவம் ஏற்படுமுன் இருந்து வந்த கணவன் மனைவி உறவில் ஏற்படவிருக்கும் மாற்றத்தை விளக்குகிறார். ஆதாமினதும், ஏவாளினதும் வார்த்தை மீறலால் அவர்களுடைய உறவில் இப்போது இருக்கப்போகும் மாற்றத்தைக் கர்த்தர் இப்போது விளக்குகிறார். ஏவாளைப் பார்த்து அவர் சொன்னார், ‘உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும்’ என்று. இதற்கு எபிரேய மூல வார்த்தைகளின்படியான அர்த்தம், உன் கணவனுடைய தலைமை ஸ்தானத்தை நீ அடைய முயற்சி செய்வாய் என்பது. அதாவது, இதுவரை பணிவோடு நடந்து வந்த நீ, இனி, உன் கணவனை மதிக்காமல் அவனுடைய பேச்சுக்குத் தலை சாய்க்காமல் அதிகாரத்தோடு நடக்க முயல்வாய் என்கிறார் கர்த்தர். அத்தோடு அன்பான கணவனாக இருந்த ஆதாம் இனி உன்னைப் பாவகரமான முறையில் அடக்கி அடிமைபோல் நடத்த முயல்வான் என்றார் கர்த்தர். ஆதியாகமம் 3:16 வசனத்திற்கு இதுவே சரியான பொருள். இப்போது தெரிகிறதா? ஆண்களின் ஆணாதிக்கத் திமிருக்கான காரணமும், கணவனுக்கு இணங்கிப் போகாமல் எதிர்த்து நிற்கும் பெண்ணின் நடத்தைக்கான காரணமும். இது பாவத்தின் காரணமாக ஆணிலும், பெண்ணிலும் ஏற்பட்ட மாற்றங்கள். பாவ இயல்பு ஆணையும், பெண்ணையும் இந்த முறையில் மட்டுமே செயல்படச் செய்யும். அதுவே குடும்பங்கள் இந்த உலகில் நல்ல முறையில் வாழமுடியாமல் இருப்பதற்கான அடிப்படை காரணம். நம்மினத்தின் சீரழிந்த பண்பாட்டின் ஆணாதிக்கத்திற்கும், பெண்ணடிமைத் தனத்திற்கும் இதுவே காரணம். அதனால் நம் பண்பாட்டைத் தூக்கிப் பிடித்து அதற்கு கச்சை கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்குவது முழு மடமை.

பாவத்தால் சீரழிந்த குடும்ப வாழ்க்கைக்கு மீட்பு உண்டா? என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் உண்டு. அந்த மீட்பு ஆதாமும், ஏவாளும் மனந்திரும்பி இரட்சிப்பை அடைந்தபோதே வந்தது. கர்த்தர் ஏதேனைவிட்டுத் துரத்திய ஆதாமை மீண்டும் தேடிப்பிடித்து அவனுக்கும் அவனுடைய மனைவிக்கும் கிருபையால் இரட்சிப்பை அளித்தார். அதுவே அவர்களுக்கு நித்தியஜீவனையும், குடும்ப வாழ்க்கையை மறுபடியும் கர்த்தருக்காக வாழக்கூடிய கிருபையையும் அளித்தது. இருந்தபோதும் ஏதேனில் இருந்ததுபோலில்லாமல் இருவரும் இப்போது மிகுந்த முயற்சியெடுத்து பாவத்திற்கு இடங்கொடுக்காமல் தேவனுடைய வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு குடும்ப வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலை இருந்தது. இதுவரை ஏதேனில் இருந்திராத பிரச்சனைகளையும் உள்ளிருக்கும் பாவத்தால் அவர்கள் குடும்ப வாழ்க்கையில் எதிர்நோக்க வேண்டியிருந்தது. கிருபையாலும், ஆவியின் துணையோடும் அவர்கள் அன்றாடம் பாவத்தை மேற்கொண்டு ஒருவரில் ஒருவர் அன்புகாட்ட வேண்டியிருந்தது.

இன்று பாவ உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் அவர்கள் எந்த நாட்டையோ, பண்பாட்டையோ சேர்ந்தவர்களாக இருந்தாலும் கிறிஸ்தவ வேதம் கணவன், மனைவி பற்றி விளக்கும் சத்தியங்களை நிதர்சனமாக வாழ்க்கையில் வைராக்கியத்தோடு பின்பற்ற வேண்டும். திருமணத்தை வேதபூர்வமாக அணுக வேண்டும். குடும்ப வாழ்க்கை வேதம் விளக்குவதுபோல் பிறர் தலையீடு இல்லாமல் அமைய சகல முயற்சிகளையும் எடுக்க வேண்டும். முக்கியமாக ஆணாதிக்கத் திமிருக்கும், நம்மினத்துச் சீரழிந்த பண்பாட்டிற்கும் அடியோடு முடிவு கட்டி மனைவிமேல் கிறிஸ்துவின் அன்பைக் காட்டி கிறிஸ்து சபையை வழிநடத்துவது போல் குடும்பத்தை வழிநடத்தி கர்த்தரின் மகிமைக்காக குடும்பவாழ்க்கை இருக்கும்படி உழைக்க வேண்டும். இது ஒருவனுடைய கிறிஸ்தவ ஆராதனையின் ஒரு பகுதி என்பது ஒவ்வொரு கிறிஸ்தவ கணவனுக்கும் தெரிந்திருக்க வேண்டும். கொதிக்கும் பண்பாட்டு எண்ணையில் அன்றாடம் தவித்துக் கொண்டிருக்கும் நம்மினத்துக் குடும்ப வாழ்க்கைக்கு கிறிஸ்தவர்கள் விடுதலை தராதவரையில் மெய்யான கிறிஸ்தவத்தையும், சபைகளையும், போதகர்களையும் நம்மினத்தில் காண்பது என்பது முடியாத காரியம்.

குடும்பம் ஒரு ஆலயம்

குடும்பம் ஒரு ஆலயம் என்று கூறி குடும்பத்தை ஆலயத்திற்கு ஒப்பிட்டு நமது பெரியோர்கள் பேசியுள்ளார்கள். தேவனை அறியாத மக்கள் மத்தியிலும் குடும்பத்தின் பெருமை உணரப்பட்டு அதற்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலும் குடும்பத்தின் பெருமையைப் பற்றி வாசிக்கலாம். வள்ளுவர்கூட தன் நூலில் அதற்குப் பல அதிகாரங்களை ஒதுக்கியுள்ளார். இருந்த போதும், வேதம் மட்டுமே குடும்பம் என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும்? என்று அதிகாரத்துடன் கூறக்கூடிய உலகிலுள்ள ஒரே நூலாக இருக்கின்றது. தேவனை அறியாத மனிதர்களுக்கும் குடும்பத்தைப்பற்றிய அறிவைத் தருகின்ற ஒரே நூல் வேதமே.

இன்று பல நாடுகளிலும் தமிழ் மக்கள் மத்தியில் குடும்பத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலை நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் பணமோகமும், வாழ்க்கையில் அந்தஸ்து மோகமும், கலாச்சார பாதிப்பால் ஏற்பட்டுள்ள சுதந்திர வேட்கையும் பல குடும்பங்களைப் பாதித்து அழித்து வருகின்றன. தொட்டியில் இருந்து வெளியில் விழுந்த மீன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து உயிருக்கு மன்றாடுவது போன்ற நிலையிலேயே பல தமிழ்க் குடும்பங்கள் இன்று வாழ்கின்றன.

கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரிவினை மட்டுமல்லாது, பிள்ளைகளும் கலாச்சாரத்தாலும், குடும்பத்தின் நிலைமையாலும் பாதிக்கப்பட்டு கொஞ்ச நஞ்சம் இருந்த ஆன்மீக உணர்வையும் இழந்து கொண்டிருக்கின்றனர்.

மேலை நாடுகளில்தான் இப்படியென்றால் தமிழர்கள் பெருமளவில் வாழும் அவர்களது சொந்த நாடுகளில் குடும்பத்தின் நிலைமை என்ன? இன்று தமிழ்நாட்டில் டெலிவிஷனாலும், வீடியோக்களாலும் பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை. நமது கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும் சிதறடித்து அந்நிய மோகத்தையும், ஆடம்பரத்தில் ஆசையையும் ஏற்படுத்தி குடும்பங்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது டெலிவிஷன். ஹாலிவுட் படங்களைப்பற்றிப் பேசுவதிலும், மைக்கல் ஜெக்சனைப்போல் நடப்பதிலும் இன்பம் காண்கிறான் நமது இளந்தமிழ்ச்சிறுவன். கணவனையும், மனைவியையும் சேலை மாற்றுவது போல் மாற்றி இன்பம் காணும் மேலைநாட்டுக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் டெலிவிஷன் சோப்புக்கள் நமது தமிழ்ப் பண்பாட்டை வேகமாகவே அரித்துக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் எத்தனையோ குடும்பங்களும் சிந்தனைக்குத் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு குடும்பமாக இத்தகைய கீழ்த்தரமான டெலிவிஷன் காட்சிகளை கண்டு களித்துக் கொண்டிருக்கிறார்கள். கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும், பெற்றோர் பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டிய நேரத்தைக் கொடுக்காமல், வேலை, வேலை என்று அலைந்து ஒருவரையொருவர் பார்க்கவும் நேரமின்றி, குடும்ப ஜெபத்தையும் குப்பையில் எறிந்துவிட்டு கூண்டோடு அநேகர் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். வேலையினிமித்தம் கணவன் வெளிநாட்டிலும், மனைவி சொந்த ஊரிலுமாக பிரிந்து வாழ்ந்து குடும்ப வாழ்க்கைக்கு ஆபத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் அநேகர்.

நிலைமை இப்படி இருக்கும்போது குடும்பம் புனிதமான ஒரு கோவிலாவதெப்படி? பிள்ளைகள் சரியாக வளர்வதெப்படி? தமிழினத்தைப் பிடித்துள்ள இச்சாபக்கேட்டிலிருந்து நமது குடும்பங்கள் விடுபடுவதெப்படி? குடும்பம் தேவனை ஆராதித்து அவர் வழிப்படி நடப்பதெப்படி? இதற்கான பதிலை நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம். ஆனால், அதற்கான பதிலை நாம் நவீன உளவியல் வல்லுனர்களின் (Psychologist) அணுகுமுறையைப் பயன்படுத்தியோ அல்லது மனிதநலவாதிகளின் (Humanist) அணுகுமுறையைப் பயன்படுத்தியோ கொடுக்கப் போவதில்லை.

இன்று குடும்ப வாழ்க்கையைப்பற்றி எழுதி வரும் சில கிறிஸ்தவர்கள் இத்தகைய அணுகுமுறையையே பயன்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு ஜேம்ஸ் டொப்சனைக் (James Dobson) கூறலாம். இவரது நூல்களில் சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் அவற்றிற்காக அவரது தவறான அணுகுமுறைகளை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. நவீன உளவியல் ரீதியிலான வழிமுறைகளைப் பின்பற்றி குடும்பவாழ்க்கை நடத்த முயல்வதும், அதன் பிரச்சனைகளைத் தீர்க்கப் பார்ப்பதும் வேதத்திற்கு முரணான செயலாகும். ஆகவே, தேவனை விசுவாசிப்பவர்கள் அவர் தந்துள்ள வேதத்தைப் பயன்படுத்தியே மானுடபிரச்சனைகளை ஆராய வேண்டும்; அவற்றிற்கு வழிகாண முயல வேண்டும்.

உலகில் ஆணையும், பெண்ணையும் உருவாக்கி குடும்பத்தை ஏற்படுத்தியவர் தேவனே. மனிதனோ, குடும்பமோ தானாக ஒருபோதும் தோன்றிவிடவில்லை. ஆதாமும், ஏவாளும் குடும்பமாக தன்னை ஆராதித்து தன் வழியிலேயே வாழ வேண்டும் என்று விதித்தவரும் தேவனே. தேவனை அறியாத உலக மக்களனைவரும் அவருடைய விதிகளின்படியே வாழக் கடமைப்பட்டுள்ளார்கள் என்று வேதம் போதிக்கின்றது. குடும்பத்தை உலகில் உருவாக்கிய தேவன் அக்குடும்பங்கள் வழிதவறிப் போய்விடக்கூடாதென்பதற்காக, அவர்கள் கடைபிடித்து வாழ தனது கட்டளைகளையும் தந்துள்ளார். தேவனின் கட்டளைகளைப் பின்பற்றி வாழ்ந்து வாழ்க்கையில் நன்மைகளையே அனுபவித்திருக்க வேண்டிய குடும்பம் ஏன் தீய வழியை நாடியது?

படைப்பில் குடும்பம்

குடும்பத்தைத் தேவனே உருவாக்கினார் என்று கூறினேன். ஆதியாகமம் முதல் மூன்று அதிகாரங்களிலும் குடும்பம் உலகில் தோன்றிய விதம் விபரமாகக் கூறப்பட்டுள்ளது. ஆதாமையும், ஏவாளையும் தேவன் உருவாக்கி தனக்குப் பணிந்து வாழும்படி கட்டளையிட்டுள்ளதை இவ்வதிகாரங்கள் விளக்குகின்றன. தேவனின் கட்டளைப்படி வாழ்ந்திருந்தால் ஆதாம் நல்ல குடும்பத் தலைவனாகவும், ஏவாள் பணிந்து நடக்கும் நல்ல மனைவியாகவும் இருந்து உலகில் நல்ல குடும்பங்களே தோன்ற வழி ஏற்பட்டிருக்கும். ஆனால், அதற்கு வழியில்லாதபடி ஆதாமும், ஏவாளும் தேவனின் கட்டளையை ஏற்று நடக்கத் தவறினர். முழு மனித குலத்தினதும் பெற்றோர்களாகிய இவர்கள் செய்த பாவத்தினால் உலகில் பாவம் தோன்றி குடும்பங்களனைத்தும் பாவத்தைச் சுமக்கத்தொடங்கின.

நல்ல குடும்பத்தலைவனாகவும், கணவனாகவும் இருக்க வேண்டிய ஆதாம், பாவத்தினால் இயற்கையாகவே அவ்வாறு இருக்கக்கூடிய நிலையை இழந்து ஏவாளை அன்போடு ஆளாமல் அதிகாரத்தோடு மட்டும் ஆளும் கணவனாக மாறினான். கணவனுக்குப் பணிந்து அவன் தலைமையை ஏற்று அன்போடு நடந்து கொள்ள வேண்டிய ஏவாள் அவனுக்குப் பணிய மறுத்து அவனை ஆண்டு கொள்ள முற்பட்டாள். பாவத்தினால் ஏற்பட்ட இந்நிலைமையே இன்று சமுதாயம் எங்கும், எல்லா நாடுகளிலும் எல்லாக் குடும்பங்களிலும் பார்க்கிறோம். இந்த உண்மையைத்தான் ஆதியாகமம் 3:16 வெளிப்படுத்துகிறது. “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும். அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான்” என்ற வசனங்களுக்கு மூலத்தில் இதுதான் பொருள். பாவத்தின் காரணமாக பெண்களுக்கு இயற்கையாகவே கணவனுக்கு அடிபணிந்து நடக்கும் எண்ணம் வராது. அதே நேரம் மனைவியை அன்போடு நடத்தும் வழக்கமும் கணவனுக்கு இயற்கையாகவே வராது. கல்வின் இதைக் குறித்து விளக்கும்போது, “ஏவாள் பாவம் செய்வதற்கு முன்பு தன் கணவனுக்கு இணங்கி தாழ்மையுடன் அவனுக்கு அடிபணிந்தாள். ஆனால், இப்போதோ பாவம் அவளை அதிகாரம் செய்யும்படியாகத் தூண்டுகிறது” என்று கூறுகிறார். இதனால்தான் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களாகிய கணவனும், மனைவியும் எவ்வாறு வாழ வேண்டும் என்று போதிக்கும் பவுல், கணவன் மனைவி மீது அன்பு செலுத்த வேண்டும் என்றும், மனைவி கணவனுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்று போதிக்கிறார் (எபேசியர் 5). இதற்குக் காரணம் என்ன? பாவத்திலிருந்து விடுபட்டு கிறிஸ்துவை அறிந்து கொண்டுள்ள கணவனும், மனைவியும், பாவத்தினால் இயற்கையாகத் தாம் நடந்து கொள்ளும் முறைகளை விட்டுவிலகி தேவனுடைய கட்டளைப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். கணவன் பாவசுபாவத்தோடு மனைவியை ஆள முற்படக்கூடாது, ஆனால், அன்புடன் அவளை வழிநடத்த வேண்டும். அதேவேளை, மனைவி கணவனை ஆளமுற்படாமல் அன்புடன் அவனுக்கு அடங்கி நடக்க வேண்டும்.

பாவத்தில் குடும்பம்

பாவம் இன்று ஆணையும், பெண்ணையும் தேவன் ஆரம்பத்தில் படைத்த நிலையிலிருந்து மாற்றியிருப்பதால்தான் குடும்பங்கள் இயற்கையாகவே தேவனின் வழிப்படி நடக்க முடியாமல் தவிக்கின்றன. கணவன், மனைவி உறவு சரியில்லாமல் இருப்பதற்கும், பெற்றோர்கள் பிள்ளை வளர்ப்பில் சிரத்தை காட்டாமல் இருப்பற்கும், பிள்ளைகள் பெற்றோருக்குக் கட்டுப்பட மறுப்பதற்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளோ அல்லது நாம் வளர்ந்த முறையோ அல்லது உளவியல் காரணங்களோ அடிப்படைக் காரணமல்ல. பாவமும் அது மனிதனில் தொடர்ந்து செய்துவரும் கிரியைகளுமே இதற்கான அடிப்படைக் காரணம். இதுவே கர்த்தரின் வேதம் போதிக்கும் உண்மை.

கிறிஸ்தவர்கள் அல்லாதோரின் குடும்பம்

இருந்தபோதும், பாவத்தால் பீடிக்கப்பட்டுள்ள மனிதன், தேவனின் சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், தனது பாவ நிலையிலும் குடும்பத்தை உருவாக்கி வாழவும், அதை சரியான முறையில் நடத்தவும் தேவனுக்கு முன் கடமைப்பட்டுள்ளான். நியாயப்பிரமாணம் அவர்களுடைய இருதயத்தில் எழுதப்பட்டிருப்பதாலும், பாவத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்குமுகமாக தேவன் பத்துக் கட்டளைகளைக் கடைபிடிக்கும்படி எல்லா மனிதர்களுக்கும் அதனைக் கொடுத்திருப்பதாலும், மனிதன் தேவனுக்குக் கடமைப்பட்டவனாகக் காணப்படுகிறான். எனவே, வேதம் பாவியான மனிதர்களும் தங்களுடைய குடும்பத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. கீழ்வரும் வசனங்கள் இதையே போதிக்கின்றன.

மத்தேயு 7:9-11

“உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்கு பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக்கொடுக்க அறிந்திருக்கும்போது பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?”

மேலும் எபிரெயர் நிருபத்தில், “நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்க வேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்” என்றும் வாசிக்கிறோம். இவ்வசனங்கள் உலகத்திலுள்ள தேவனை அறியாத மனிதர்களும் தங்களுடைய குடும்பத்தை நன்றாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. தேவனை அறியாத மக்களில் பலர் கிறிஸ்தவர்கள் வெட்கப்படும் அளவுக்கு தங்களுடைய குடும்ப வாழ்க்கையை நல்ல முறையில் வைத்திருப்பதற்கு இதுவே காரணம்.

கிறிஸ்தவக் குடும்பம்

வேதம் மனித குலமனைத்தும் குடும்ப வாழ்க்கையில் அக்கறையெடுத்து தேவனுக்கு மகிமையளிக்கும் வகையில் வாழ வேண்டும் என்று எதிர்பார்த்தாலும், பாவத்தின் காரணமாக மனிதன் அதில் இறுதி வெற்றி காண முடியாத நிலையில் இருக்கிறான். இதனாலேயே, இன்று ஒழுக்கக்குறைவான நிகழ்வுகள் உலகில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. குடும்பங்கள் அமைதி இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றன. ஆகவேதான், மனிதர்கள் இன்று கிறிஸ்துவை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. பாவத்திலிருந்து மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கே அவரது கட்டளைகள் புரியும்; அவரைத் தங்களுடைய குடும்ப வாழ்க்கையில் மகிமைப்படுத்த வேண்டும் என்ற வைராக்கியமும் தோன்றும். கிறிஸ்தவர்களில் கிறிஸ்து வாழ்வதால் ஆவியானவரின் அனுக்கிரகத்தால் கிறிஸ்துவின் கட்டளைகளைத் தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்க முடிகின்றது. அன்பு என்பதை அறியாதிருந்தவர்களுக்கு அதன் அருமையும் பெருமையும் புரிய ஆரம்பிக்கிறது. கணவனால் தனது பாவசுபாவத்தைக் கட்டுக்குள் அடக்கி மனைவியை நேசித்து, அவளுக்கு விசுவாசமாக இருக்க முடிகிறது. கணவனுக்கு மன அமைதியோடு மனைவியால் கட்டுப்பட்டு நடக்க முடிகின்றது. இவற்றைவிட மேலாக, உண்மையான தேவ அன்பை ஒருவர் மேல் ஒருவர் வைத்து குடும்பமாக தேவனை மகிமைப்படுத்த முடிகின்றது. பிறக்கப் போகும் பிள்ளைகளுக்காக ஜெபத்தில் இருந்தும், பிறந்தபின் அவர்களை கர்த்தருக்குள் வளர்ப்பதைப் பெருங்கடமையாகக் கொண்டும் வாழமுடிகின்றது.

இயேசு கிறிஸ்துவைத் தலைவராகக் கொண்டமையாத குடும்பங்களும் தேவனை மகிமைப்படுத்தும்படி வாழ வேண்டிய கடமைப்பாடு இருந்தபோதும், கிறிஸ்துவைத் தலைவராகக் கொண்டமைந்த குடும்பத்தால் மட்டுமே கிறிஸ்துவை மகிமைப்படுத்த முடியும். கிறிஸ்தவக் குடும்பத்தில் கிறிஸ்துவின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்கப்படும். கிறிஸ்து அங்கே ஆராதிக்கப்படுகிறார். கிறிஸ்து அக்குடும்பத்தில் ஆட்சி செய்கிறார். கிறிஸ்துவின் வார்த்தைக்கு முரணானவைகளைச் செய்ய அக்குடும்பம் தயங்கும். பாவத்தை அக்குடும்பம் வெறுத்து ஒதுக்கும். உலகப்பிரகாரமான வாழ்க்கைக்கும், உலக ஞானத்திற்கும் அக்குடும்பத்தில் இடமிருக்காது. டெலிவிஷன் அக்குடும்பத்தை ஆட்சி செய்யாது. நவீன உடையலங்காரத்திற்கும், பகட்டிற்கும், பண மோகத்திற்கும் அக்குடும்பத்தில் இடமிருக்காது. நவீன பெண்ணியல் போதனைகள் அங்கு தலைகாட்ட முடியாது. மொத்தத்தில் கிறிஸ்தவக் குடும்பமே மேலான குடும்பம். இதுவரை நாம் குடும்பத்தைப்பற்றி வேதம் போதிக்கும் அடிப்படையான உண்மைகளை ஆராய்ந்து அறிந்து கொண்டோம். இவை அடிப்படை உண்மைகளே தவிர இவை மட்டுமே குடும்பத்தைப்பற்றிய வேதமளிக்கும் முழுப் போதனைகளையும் அளித்துவிடவில்லை. குடும்பத்தைப்பற்றி வேதம் போதிக்கும் முழு உண்மைகளையும் நாம் படித்துப் புரிந்து கொள்ளுமுன் நாம் இதுவரை பார்த்த குடும்பத்தைப் பற்றிய அடிப்படைப் போதனைகளில் இருந்து எழும் சில முக்கிய பாடங்களைக் கவனித்தல் அவசியம்.

1. கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.

இங்கே நாம் முக்கியமாக கிறிஸ்தவக் குடும்பத்தையே கருத்தில் கொள்கிறோம். ஒரு குடும்பம் கிறிஸ்துவை மகிமைப்படுத்தி வாழ வேண்டுமானால் அக்குடும்பத்தின் பிரதான அங்கத்தவர்களான கணவனும் மனைவியும் கிறிஸ்தவர்களாக இருத்தல் வேண்டும். கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை மணமுடித்தல் ஆகாது. இன்று தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படும் பெரும்பாலான குடும்பப் பிரச்சனைகளுக்கு இதுவே அடிப்படைக் காரணமாக இருக்கின்றது.

ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தின் பிரதான அங்கத்தவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டுமென்று நாம் கூறும்போது, அவர்களுடைய சபை அங்கத்துவத்தையோ அல்லது அவர்களுடைய பெற்றோர்களின் விசுவாசத்தையோ அல்லது எந்தச் சமயக் குழுவை அவர்கள் சேர்ந்தவர்கள் என்பது பற்றியெல்லாம் நாம் கவலை கொள்ளவில்லை. இவையும் அவசியமானவை என்றாலும் முதலில் அவர்கள் இருவரும் உண்மையில் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களாக இருக்கிறார்களா? என்பதே மிக முக்கியமானதாகும். இன்று கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அநேகர் வெறுமனே “மெயின் லைன்” சமயக் குழுக்கள் என்று அழைக்கப்படும் சில சமயக் குழுக்களில் சம்பிரதாயத்திற்கு அங்கத்தவர்களாக இருக்கின்றார்களே தவிர அவர்களுடைய வாழ்க்கையில் கிருபையின் செயலோ அல்லது கிறிஸ்துவோ காணப்படுவதில்லை. சபைப்பாரம்பரியமும், சபை அங்கத்துவமும் ஒருவரைக் கிறிஸ்தவராக மாற்றிவிட முடியாது. இத்தகையோரைப் “பெயர்க் கிறிஸ்தவர்கள்” என்று அழைப்பதும் வழக்கம். அதாவது, வெறும் பெயருக்காகத் தம்மை இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்களே தவிர, அவர்கள் உண்மையில் கிறிஸ்தவர்கள் அல்ல. இதற்கெல்லாம் காரணம் உண்மைக் கிறிஸ்தவத்தைப் பற்றிய போதனைகள் தமிழர்கள் மத்தியில் சரிவரக் காணப்படாததுதான். பரவசக் குழுக்களும் மெய்யான மனந்திரும்புதலுக்கும், கிறிஸ்துவில் இருக்க வேண்டிய விசுவாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்காமல் வெறும் உணர்ச்சிகளுக்குத் தூபம் போடுவதால் அவர்கள் மத்தியில் மெய்க் கிறிஸ்தவர்களை அடையாளம் கண்டு கொள்வதும் கடினமே. இப்பகுதியில் நாம் உண்மையான, வேதபூர்வமான கிறிஸ்தவக் குடும்ப வாழ்க்கையைக் குறித்துப் பார்க்கிறோமே தவிர வெறும் பெயருக்கு கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களுடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றியல்ல. இன்று முறையான, வேதபூர்வமான போதனைகளை அளிக்கும் சில சபைகள் தமிழர் வாழும் நாடுகளில் தோன்றி வருவது மகிழ்ச்சி தருகிறது.

முக்கியமாக, போதக ஊழியத்தில் இருக்கும் சபைப் போதகர்கள் கிறிஸ்தவர்களை கிறிஸ்தவர்கள் அல்லாதோருக்கு மணமுடித்துவைக்க இடம் கொடுக்கக்கூடாது. திருமணம் முடிக்கவிருக்கும் இருசாராரையும் போதகர்கள் விசாரித்து அவர்கள் உண்மைக் கிறிஸ்தவர்கள்தானா? என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். பலர், சபையாருக்கும், பெற்றோருக்கும் பயந்தும், பிரச்சனைகளைச் சந்திக்கப் பயந்தும் இதைச் செய்ய முற்படுவதில்லை. இவ்வாறான நிலைமைகளை நானும் போதக ஊழியத்தில் சிலவேளைகளில் சந்திக்க நேர்ந்திருக்கிறது. சிலரை திருமணம் முடித்துவைக்க மறுக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. அத்தகைய நிலைமைகளில் போதகர்கள் தேவனுக்குப் பயந்து செயல்பட வேண்டுமே தவிர உலகப் பிரகாரமாக நடந்து கொள்ளக்கூடாது.

கிறிஸ்தவர்கள் ஏன் கிறிஸ்தவர்கள் அல்லாதோரைத் திருமணம் செய்துகொள்ளக்கூடாது? முதலில், வேதம் அவ்வாறே போதிக்கின்றது (2 கொரிந்தியர் 6:14-17; ஆமோஸ் 3:3). ஒரே தேவனை வணங்காத இருவர் அவருடைய வழிகளின்படி வாழ்வது இயலாது. வேதபோதனைகளுக்கு விரோதமாக கிறிஸ்தவர்கள் அல்லாதோரைத் திருமணம் செய்து கொள்பவர்கள் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை அனுபவிக்க முடியாது. இரண்டாவதாக, இருவரும் கிறிஸ்தவர்களாக இருந்தால்தான் கிறிஸ்துவிற்கு அடிபணிந்து, அவர்கள் கிறிஸ்தவக் குடும்பத்தை நடத்த முடியும். இருவரும் ஒரே தேவனை ஆராதிக்காவிட்டால், ஒரே சத்தியத்தை விசுவாசிக்காவிட்டால் குடும்பத்தில் பெரும் பிரச்சனைகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. அதுமட்டுமல்லாமல் பிறக்கப் போகும் குழந்தைகளை ஒரு மனதோடு இருவரும் தேவனுடைய வழியில் நடத்துவதும் முடியாத காரியமாகும். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர் அந்நியர்களோடு கொண்டிருந்த உறவு தவறான திருமண உறவாக சித்தரித்துக் காட்டப்பட்டிருக்கிறது.

2. கிறிஸ்தவத் திருமணத்தில் உலகப்பிரகாரமான காரியங்களுக்கு இடம் கொடுக்கலாகாது.

கிறிஸ்தவத் திருமணம் நடைபெறத் திருமணம் செய்து கொள்ளப்போகிற இருவரும் உண்மைக் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம். ஆனால், இப்படி இரு கிறிஸ்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கும் பெருந்தடைகள் ஏற்பட்டுவிடுகின்றன. இவற்றிற்கு நமது கலாச்சாரப் பாரம்பரியப் பின்னணியே காரணமாக அமைந்து விடுகின்றது. பாவத்திலிருந்து மனம்மாறி தேவனை அறிந்து கொண்டபோதும் பலர் தங்களுடைய பழைய சுபாவங்களையும், உலகப்பிரகாரமான எண்ணங்களையும் கைவிட்டுவிடத் தவறிவிடுகின்றனர். இத்தகைய நிலைமையால் பல பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் திருமணத்தின்போது கிறிஸ்துவின் போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது உலக காரியங்களுக்கே முதலிடம் அளித்து தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் குறுக்கிட்டு, அவர்களுடைய நிம்மதிக்கும் தடையாக இருந்துவிடுகின்றனர். உதாரணத்திற்கு சாதி, குலத் தொடர்புகளை ஆராய்ந்து அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதும், வேலைத் தகுதிகளை மட்டுமே ஆராய்ந்து பார்ப்பதும், திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்களின் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதிருப்பதும் இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிகளிலும் நம்மத்தியில் நடந்து கொண்டிருப்பதை வாசகர்கள் அறிவர். கிறிஸ்தவப் பெற்றோர்களும், போதகர்களும் இவற்றைக் கனவிலும் எண்ணிப் பார்ப்பது பெருந்தவறு. கிறிஸ்தவப் பெற்றோர்கள் கிறிஸ்துவுக்கும் வேதத்திற்கும் மதிப்புக் கொடுத்து தங்கள் பிள்ளைகளின் திருமண வாழ்க்கையின்மூலம் கிறிஸ்து மகிமை பெறும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்தவப் பெற்றோர்கள் வேதத்திற்கு முரணாக நடந்து தங்கள் பிள்ளைகளின் திருமண வாழ்க்கைக்குத் தடையாக இருக்கும்போது சபைப்போதகர்கள் இவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகூறி திருத்த வேண்டும். அத்தோடு சபையின் வாலிபர்களுக்கும், பெண்களுக்கும் தகுந்த போதனையளித்து அவர்களுடைய எதிர்காலத் திருமண வாழ்க்கைக்குத் துணையாக இருத்தல் அவசியம். இதுவரை கிறிஸ்தவப் பெற்றோர்கள் எவ்வாறு தங்களுடைய பிள்ளைகளின் திருமண வாழ்க்கைக்குத் தடையாக இருந்துவிடலாம் என்று பார்த்தோம். இனி கிறிஸ்துவை அறியாத பெற்றோர்களைக் கொண்டிருக்கிற கிறிஸ்தவ வாலிபர்களுடைய பிரச்சனைகளையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். இவர்கள் சமுதாயத்தில் பெரும் பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். தாங்கள் விரும்பும் கிறிஸ்தவ ஆண்களையும், கிறிஸ்தவப் பெண்களையும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் அவதிப்படும் அநேகரை நாம் அடிக்கடி சமுதாயத்தில் சந்திக்கிறோம். கலாச்சாரப்பாதிப்பால் இவர்கள்படும் தொல்லைகள் அநேகம். பெற்றோர் பார்த்துத் திருமணம் செய்து வைக்கும் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட சமுதாயத்தில் ஒரு கிறிஸ்தவ வாலிபனையோ அல்லது பெண்ணையோ விரும்பிய ஒரே காரணத்திற்காக பெற்றோராலும், போதகர்களாலும், சபையாலும் வெறுக்கப்பட்ட வாலிபர்களும், பெண்களும் அநேகர். இந்நிலைக்கு முதலாவது காரணம், இந்நூற்றாண்டிலும் நமது சமுதாயத்தில் ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணிலும், ஒரு பெண் ஆணிலும் அன்பு வைப்பது ஏதோ ஒரு தகாத காரியம்போல் எண்ணப்படுவதால்தான். கிறிஸ்தவர்கள் இத்தகைய எண்ணத்தைக் கொண்டிருப்பது தகாது. இவ்வாறாக ஒரு ஆண் ஒரு பெண்ணில் கொள்ளும் அன்பை கேடான இச்சையாகக் கருதுகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிலும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிலும் இருக்க வேண்டிய உண்மையான அன்பிற்கும், கேடான இச்சைக்கும் வித்தியாசம் தெரியாத சமுதாயத்தை என்னவென்று கூறுவது? இதைக் கிறிஸ்தவப் போதகர்கள் கண்டித்து சபைகளில் போதித்து தமது மக்கள் வேதபூர்வமான எண்ணங்களில் வளர உதவ வேண்டும்.

உண்மையான அன்பில்லாமல் ஒரு ஆண் ஒரு பெண்ணையோ, அல்லது ஒரு பெண் ஒரு ஆணையோ எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் அது எப்படி உண்மையான திருமணமாக இருக்க முடியும். ஒருவரில் ஒருவர் அன்பில்லாமல் இருவர் திருமணம் செய்து கொள்வது எப்படித் தகும்? இங்கே, நாம் அன்பு என்று எதைக் கூறுகிறோம் என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, ஒரு கிறிஸ்தவ ஆண்மகனுக்கு தான் திருமணம் செய்து கொள்ளப் போகிற பெண்ணைப் பிடித்திருக்க வேண்டும். பிடிக்காத ஒருவரை அவர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த முடியாது. இதேபோல் பெண்ணுக்கும் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிற ஆணைப் பிடித்திருக்க வேண்டும். இருவருக்கும் ஒருவரைப்பற்றி மற்றவருக்கு ஓரளவுக்கு தெரிந்திருக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள் மனிதப் பிறவிகளேயன்றி உயிரற்ற ஜடங்களல்ல. பிறருடைய மனதிருப்திக்காக ஒரு கிறிஸ்தவன் திருமணம் செய்து கொள்ள முடியாது. இத்தகைய அநாகரீகமான செயல்களைத் “தியாகம்“ என்ற பெயரில் பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும், தமிழ் சினிமாவிலும்தான் பார்க்கலாம். ஆனால், இதற்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கிறிஸ்தவ திருமணங்கள் கிறிஸ்துவை மகிமைப்படுத்த வேண்டும். அவை கிறிஸ்தவ வேதத்தின் போதனைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். ஆகவே, சமுதாயத்தின் வரம்புக்குட்பட்டு, வேதபூர்வமாக நடந்து கொள்ளும் பண்புள்ள கிறிஸ்தவர்கள் தாம் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு ஆணிலோ, பெண்ணிலோ தூய்மையான அன்பு வைப்பதில் எந்தவிதமான தவறுமில்லை; அதுமட்டுமல்ல, அத்தகைய தூய்மையான அன்பு இல்லாமல் ஒரு ஆண் ஒரு பெண்ணையோ அல்லது பெண் ஆணையோ திருமணம் செய்து கொள்வதை எண்ணிப் பார்க்கக் கூடாது. இதைக் கூடாத காரியமாக எண்ணுபவர்கள் தங்களுடைய போக்கை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

சபையில் அப்படி ஒரு கிறிஸ்தவ வாலிபன் கிறிஸ்தவ வாலிபப் பெண்ணை விரும்பினால் அதைக் கேலி செய்து, அவர்கள் ஏதோ பெரும் தவறு செய்துவிட்டதுபோல் நடத்திப் புண்படுத்தாது, அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். இப்படி ஒருவர் மேல் ஒருவர் அன்பு வைத்த ஒரே காரணத்துக்காக, அவர்களுக்குத் துணையிருந்து வழிநடத்த வேண்டிய போதகர்களே அவர்களுக்கு எதிரிகளாகவும் மாறிவிடுகிறார்கள். இதனால், போதகர் என்ன நினைப்பாரோ அல்லது பெற்றோர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து எல்லாவற்றையும் மனத்துள் புதைத்து வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவ வாலிபர்களும், பெண்களும் அநேகர். என்னடா, இவர் இப்படிக் கிறிஸ்தவ இளைஞர்களுக்காக வக்காலத்து வாங்குகிறாரே என்று நினைக்கிறீர்களா? இன்று இப்படி நம்மத்தியில் நடக்கவில்லை என்று எவராவது கூற முடியுமா? நான் சொல்வதெல்லாம், கிறிஸ்தவர்கள் வேத போதனைகளுக்கு மதிப்புக் கொடுத்து நமது இளைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதுதான். வழிகாட்டி நடத்த வேண்டிய பெற்றோர்களும், போதகர்களும், வழிப்பறிக் கொள்ளையர்கள் போல் நடந்து நமது இளைய சமுதாயத்தைக் கெடுத்துவிடக் கூடாதென்பதுதான். கலாச்சாரம் என்ற பெயரில் வேத போதனைகளை நாம் தூக்கி எறிந்து விடக்கூடாது என்றுதான் நான் கூறவருகிறேன்.

ஆகவே, இன்று கிறிஸ்தவ இளைஞர்களுக்குப் பெருந்துணையாக இருந்து வழிகாட்ட வேண்டிய போதகர்கள் அவர்களுடைய அன்பைப்பெற்று அவர்களை முறையாக வழிநடத்தி, அவர்களுடைய வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்க வேண்டியது அவசியம். நாம் இதுவரை பார்த்த உண்மைகளைப் போதித்து சபையாரையும் திருத்த வேண்டியது அவர்களது கடமை.

இல்லற வாழ்க்கையின் இரகசியம்

கிறிஸ்தவர்கள் மத்தியில் குடும்பவாழ்க்கையில் பல தவறுகள் ஏற்படுவதற்கான பிரதான காரணம் குடும்பத்தைப்பற்றியும், குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் வேதபூர்வமான அறிவைக் கொண்டிராததுதான். இவ்விதழில் வேதம், கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டு அமையும் குடும்ப வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைத் தொடர்ந்து ஆராய்வோம்.

குடும்பம் எதற்காக?

குடும்பத்தைத் தேவனே உருவாக்கினார் என்று கடந்த இதழில் பார்த்தோம். ஆனால் தேவன் அக்குடும்பத்தை ஏன் தோற்றுவித்தார்? ஆணையும், பெண்ணையும் உருவாக்கி உலகில் உலவ விடுவது மட்டும் அவருடைய நோக்கமாக இருக்கவில்லை. ஆணைப்படைத்த தேவன் அவன் தனக்கு ஒரு துணையைத் தேடிக்கொள்ள வேண்டுமென்பதில் ஆர்வமாயிருந்தார். ஆதி மனிதன் தனக்கென ஒரு துணையைத் தேவன் சிருஷ்டித்திருந்த அனைத்திலும் இருந்து தேடிக்கொள்ள முடியவில்லை. அவனால் தனக்கு ஒரு சரியான துணையைத் தேடிக்கொள்ள முடியாத நிலையில் தேவன் அவனுக்காக ஒரு துணையைத் தோற்றுவித்தார்.

ஆதியாகமம் 2:18-22

பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. அப்படியே ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

இவ்வதிகாரத்தின் இவ்வசனங்கள் போதிக்கும் மூன்று முக்கியமான உண்மைகளை முதலில் நாம் கவனிக்க வேண்டும்.

(1) முதலாவதாக, மனிதன் திருமணமாகி இல்லற வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்பதே சிருஷ்டிப்பில் தேவனுடைய எண்ணமாக இருந்தது (2:18). தனிமையில் இருப்பதற்காக மனிதனை தேவன் படைக்கவில்லை. அப்படி அவன் தனிமையில் இருப்பது தேவனைப் பொறுத்தவரையில் நல்லதல்ல. திருமண வாழ்க்கையில் ஈடுபடாமல் இருப்பது சிலருக்கு வரமாக இருக்கலாம் என்பதை நாம் 1 கொரிந்தியர் 7 இன் போதனையின் மூலம் புரிந்து கொள்கிறோம். புனிதமான தேவகாரியங்களுக்காக சிலருக்கு தேவன் அத்தகைய வரத்தை அளிக்கலாம். பவுல் இதற்கு ஒரு உதாரணம். பவுல் திருமணம் செய்யவில்லை என்று நாம் கூறமுடியாது. ஆனால், பவுலின் மிஷனரிப் பணிக் காலங்களில் பவுல் திருமண வாழ்வில் ஈடுபட்டிருக்கவில்லை என்பதை அறிந்துகொள்கிறோம். அவருடைய மனைவிக்கு என்ன நேர்ந்தது என்ற கவலை நமக்குத் தேவையில்லாதது. அவர் இறந்திருக்கலாம். அப்படி இறந்திருந்தால் பவுல் மறுமணம் செய்துகொள்ளவில்லை என்பதும் நமக்குத் தெரிகிறது. இதைப்பற்றிப் பேசும் பவுல், அத்தகைய வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு தனக்கும் மற்றவர்களைப் போல உரிமை இருக்கிறது என்று கூறுகிறார். இருந்த போதும் மேலான நோக்கங்களுக்காக அத்தகைய வாழ்க்கையில் பவுல் ஈடுபடவில்லை என்பதைப் புரிந்து கொள்கிறோம்.

அதுமட்டுமல்லாமல், 1 கொரிந்தியர் 7 இல் பவுல் திருமணம் ஏன் அவசியம் என்பதற்கு இன்னுமொரு காரணத்தையும் தருகிறார். மனிதர்கள் தங்களுடைய பாலுணர்வுகளைக் கட்டுப்படுத்தி திருமணவாழ்வில் புனிதமாகவும், முறையாகவும் பாலுறவில் ஈடுபட்டு இன்பம் காணவேண்டும் என்பதற்காகவும் திருமணம் அவசியமாக இருப்பதாக பவுல் கூறுகிறார்.

1 கொரிந்தியர் 7:1

எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.

திருமணவாழ்விற்கு வெளியில் ஒருவரும் பாலுறவில் ஈடுபட வேதம் அனுமதிக்கவில்லை. ஆணும், பெண்ணும் கட்டுப்பாட்டுடனும், அதேவேளை அனைத்து சுதந்திரத்துடனும் திருமணவாழ்வில் மட்டுமே பாலுறவில் ஈடுபடலாம்.

மத்தேயு 19:4, 5

அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?

ஆகவே, தனிமை இத்தகைய புனிதநோக்கங்களுக்கு தடையாக இருப்பது மட்டுமன்றி, மனிதர்கள் பாவத்துடன் விளையாடும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திவிடும். மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என்று இப்பகுதியில் தேவன் கூறியிருப்பதை நினைவுகூர வேண்டும்.

ஆகவே, சாதாரணமாக ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களுக்கு ஒரு துணையைத் தேடிக் கொள்ள வேண்டுமென்பதே படைத்தவரின் நோக்கமாக இருந்தது. திருமணம் படைப்பின் திட்டங்களில் ஒன்று (Creation Ordinance). ஆணும், பெண்ணும் தனிமையில் இருக்க முயற்சிப்பது தேவனின் படைப்பின் நோக்கங்களுக்கு விரோதமானது. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் திருமண வயதும், தகுதியும் வந்தபின் தங்களுக்கான ஒரு துணையைத் தேடிக்கொண்டு திருமண வாழ்வில் ஈடுபட வேண்டியது அவசியம். ஆகவே, கிறிஸ்தவ வாலிபர்களும், பெண்களும் வளரும்போதே திருமணத்தைப் பற்றிய புனிதமான, வேதபூர்வமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வெண்ணங்களை அவர்களுக்குப் போதிப்பது பெற்றோர்களினதும், போதகர்களினதும் கடமை.

அதேவேளை, இவ்வுண்மையில் இருந்து இன்னுமொரு பாடத்தையும் படிக்கிறோம். திருமணமான கணவனும், மனைவியும் அநாவசியமாக தனிமையை நாடிப்போவதோ அல்லது தனிமையில் இருக்கும் முயற்சியில் ஈடுபடுவதோ தவறு. கணவனும், மனைவியும் இணைந்திருப்பதற்காகவே திருமணத்தைக் கர்த்தர் உருவாக்கினார். இருவராக இருந்தபோதும் ஓருயிராகவும், ஈருடலாகவும் திருமணத்தில் இணைந்தபின் அவர்கள் தனிமையை நாடுவது திருமண வாழ்விற்கு குழிபறிக்கும் முயற்சியாகவே அமையும்.

மத்தேயு 19:6

இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.

பவுல் இதைப்பற்றி விளக்கும்போது, ஆன்மீக காரணங்களுக்காக மட்டும் சில காலம் பிரிந்திருப்பதற்கு தம்பதிகளுக்கு அனுமதியளிக்கிறார்.

1 கொரிந்தியர் 7:5

உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.

இதையும் அவர்கள் ஒருமனப்பட்டே செய்ய வேண்டும். இக்காலத்தை அவர்கள் தேவையற்றவிதத்தில் நீடிக்கவும் கூடாது. “ஜெபத்திற்கு வசதியாக இருக்கும்படி சிலகாலம் மாத்திரம் பிரிந்திருப்பதற்கு இருவரும் சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டொருவர் பிரிய வேண்டாம்” என்கிறார் பவுல். அத்தோடு, “இச்சையடக்கம் உங்களுக்கு இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடி மறுபடியும் கூடிவாழுங்கள்” என்றும் பவுல் அறிவுரையளிக்கிறார். இதற்குப் பொருளென்னவெனில், பாலுணர்வை முறையானவிதத்தில் கட்டுப்படுத்தி திருமண வாழ்க்கையை வேதபூர்வமாக வாழ வேண்டுமானால் தேவையற்றவிதத்தில் தனிமையை நாடுவதை தம்பதிகள் கைவிட வேண்டும் என்பது பொருள். தேவையற்றவிதத்தில் தனிமையில் நேரத்தை செலவிடும் கணவனும், மனைவியும் சாத்தானின் தூண்டுதலுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று வேதம் எச்சரிக்கிறது.

மனைவியை ஊரில் விட்டுவிட்டு வயிற்றுப் பிழைப்பிற்காக வெளிநாடுகளுக்குப் போய் உழைக்கும் கிறிஸ்தவர்கள் தங்களுடைய செயலைக்குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். திருமணம் செய்தபின் அத்திருமண வாழ்க்கையை வேதபூர்வமாக கர்த்தரின் மகிமைக்காக வாழாமல் உலகப்பிரகாரமான காரணங்களுக்காக மனைவியை விட்டுவிட்டு கணவனும், கணவனை விட்டுவிட்டு மனைவியும் பிரிந்து வாழ்வது ஆபத்தை விலைக்கு வாங்கும் செயல். கணவன் மனைவியின் தேவைகளையும், மனைவி கணவனின் தேவைகளையும் திருமண வாழ்க்கையில் நிறைவேற்ற தனிமையும், பிரிவும் தடையாக அமையும். இன்று பலவருடங்களுக்கு மனைவியையும், குழந்தைகளையும்விட்டுப் பிரிந்து எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் வேலை செய்யும் கிறிஸ்தவர்களைப் பார்க்கிறோம். இச்செயல் கிறிஸ்தவத்திற்கும், திருமண வாழ்க்கைக்கும் முரணானது.

அதுமட்டுமல்லாமல், மனைவியோடும் பிள்ளைகளோடும் நேரத்தை செலவிடாமல் தேவையற்ற விதத்தில் தனிமையில் வேறு பெண்களுடன் அதிக நேரத்தை செலவிட்டு சாத்தானின் தூண்டுதலுக்குப் பலியான ஊழியக்காரர்களைப் பற்றியும் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆகவேதான் ஊழியக்காரர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஊழியம், ஊழியம் என்று ஊருக்கு ஊழியம் செய்துவிட்டு உங்களுக்காக தேவன் கொடுத்த மனைவியின் தேவைகளை நிறைவேற்றாவிட்டால் அவ்வவூழியத்தால் எந்தப் பயனும் இல்லை. ஊழியக்காரர்கள் முக்கியமாக தங்கள் ஊழியம் குடும்பத்தைப் பாதித்துவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பையும் கொண்டுள்ளார்கள். அத்தோடு கணவன்மார் வீட்டில் டெலிவிஷன் முன்னால் காலத்தை செலவிடுவதும், வீட்டிற்கு நேரத்திற்குப் போகாமல் ஆபிஸில் காலத்தைக் கழிப்பதும் குடும்ப வாழ்விற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள்.

(2) இரண்டாவதாக இப்பகுதி, திருமணம் ஓர் ஆணையும், பெண்ணையும் ஓருயிராகவும், ஓருடலாகவும் இணைக்கிறது என்ற உண்மையைப் போதிக்கிறது. ஏற்கனவே, மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்ற கர்த்தரின் வார்த்தைகளைக் கவனித்தோம். இப்போது திருமணம் ஆணும், பெண்ணுமாகிய இருவரை எந்தளவுக்கு இணைக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆதியாகமம் 2:24 இல் புருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு (விலகி) தன் மனைவியோடு இசைந்திருப்பான் என்று கூறுவதைப் பார்க்கிறோம். இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள “விட்டு”, “இசைந்து” ஆகிய வார்த்தைகள் மிக முக்கியமானவை. ஏனெனில், இவ்வார்த்தைகள் ஒருவன் தன் மனைவியோடு முறையான குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கு தனது பெற்றோரை விட்டுப்பிரிந்து முதலில் தனிக்குடித்தனம் நடத்த வேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டுகின்றன. திருமணமானவன் தன் மனைவியோடு இசைந்து வாழ தனது பெற்றோரைவிட்டுப் பிரிந்து தனிமையாக ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும். வேதம் போதிக்கும் இவ்வுண்மையை அநேகர் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஒருவரில் ஒருவர் அன்பு செலுத்தி தமது தேவைகளையும், கடமைகளையும் வேதபூர்வமாக நிறைவேற்றிக்கொள்ள இவ்வாறு பிறர் தலையீடின்றி ஒரு குடும்பம் வாழ வேண்டியதவசியம். மனித உறவுகளில் பலவற்றை நாம் பார்க்கிறோம். பெற்றோர்களுக்கு பிள்ளைகளிடம் இருக்கும் உறவு, நண்பர்களுக்கிடையில் இருக்கும் உறவு ஆகிய உறவுகளையெல்லாம்விட மேலான, விசேஷமான உறவு கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் உள்ள உறவு. திருமணம் ஒரு ஆணையும், பெண்ணையும் ஒரே மாம்சமாக இணைக்கிறது (ஆதியாகமம் 3:24-25) என்று வேதம் போதிக்கிறது. இத்தகைய இணைப்பிற்கு எதுவும் தடையாக இருந்துவிடக்கூடாது.

ஓர் ஆணையும், பெண்ணையும் இணைத்து திருமணம் ஏற்படுத்தும் இத்தகைய இணைப்பை பெண்ணின் கழுத்தில் கட்டப்படும் தாலியோ அல்லது கைவிரலில் மாட்டப்படும் மோதிரமோ ஏற்படுத்துவதில்லை. அவை இவ்விணைப்பிற்கான வெறும் அடையாளங்கள் மட்டுமே. இவ்விணைப்பைக் கணவன், மனைவி இருவரது உள்ளத்திலும், அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பே ஏற்படுத்துகின்றது. அத்தகைய அன்பை அவர்கள் இருவரும் ஒருவர் மேல் மற்றவர் தடையில்லாது காட்டி, வளர்த்து வளரவேண்டுமென்பதற்காகத்தான், அவர்கள் தங்களுடைய பெற்றோர்களை விட்டுப்பிரிந்து வாழ வேண்டுமென்று வேதம் போதிக்கிறது (ஆதியாகமம் 3:24; மத்தேயு 19:5). கணவன், மனைவி உறவுக்கு இடையில் வேறு எந்த உறவும் புகுந்து குழப்பிவிடக்கூடாது என்பதை வேதம் இதன் மூலம் வலியுறுத்துகிறது. பெற்றோர்கள் இதுவரை கொண்டிருந்த அதிகாரத்தை இனி இக்குடும்பத்தின் மேல் காட்டக்கூடாது. திருமணத்தின் மூலம் ஒரு ஆணும், ஒரு பெண்ணும், கணவன் மனைவியாக இணைந்து ஒரு குடும்பத்தை அமைப்பவர்கள். ஒரு புதிய உறவில் தம்பதிகளாக அன்போடு இணைந்து வாழ வேண்டியிருப்பதையும் இது உணர்த்துகிறது. ஆகவே, பெற்றோர்கள் மேல் இருக்கும் அன்பிற்கெல்லாம் மேலான அன்பை ஒரு கணவன், மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் காட்ட வேண்டியதையும் இவ்வசனம் உணர்த்துகிறது. இதற்காக அவர்கள் தங்கள் பெற்றோர்கள் மீது இனி அன்பு வைக்கக் கூடாதென்றோ அவர்களை நிராகரிக்க வேண்டுமென்றோ கூறவரவில்லை. ஆனால், கணவன், மனைவி இருவரும் இணைந்து வாழும் வாழ்க்கைக்கு குறுக்கே எவரும் வந்துவிடக்கூடாது.

இன்று பல குடும்பங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்குக் காரணம் மற்றவர்களின் தலையீடுதான். பெற்றோர் மட்டுமல்லாமல், உறவினர்களும்கூட தலையிடும் நிலை காணப்படுகின்றது. பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் நாம் அன்பும் மதிப்பும் கொண்டிருக்க வேண்டியதவசியம் என்றாலும் நமது குடும்பத்தில் அவர்கள் தலையிடுவதை தேவன் அனுமதிக்கவில்லை. இவ்விஷயத்தில் கிறிஸ்தர்கள், கலாச்சார பாரம்பரியங்களை உதறித்தள்ளிவிட்டு வேதத்திற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். சில வேளைகளில் பொருளாதார நிலைமை தனியாக வாழ்வதற்கு இடம் கொடுக்காமல் போகலாம். ஆனால், திருமணம் செய்துகொள்ளப்போகும் கிறிஸ்தவர்கள் இவற்றை ஆரம்பத்திலேயே சிந்தித்துப் பார்த்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். குடிசையில் வாழ்ந்தாலும் தனிமையாக வாழ்வதே குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நல்லது. இது கணவன், மனைவியின் நல்லுறவிற்கு மட்டுமல்லாமல், பிள்ளைகளை வேதபூர்வமாக வளர்ப்பதற்கும் அவசியமானது.

இது பெற்றோர்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை. தங்களுடைய பிள்ளைகள்மேல் உள்ள பாசத்தால் பல பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு திருமணமான பிறகும் அவர்களுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டு, அவர்களுக்காகத் தீர்மானம் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். பெற்றோர்கள் தங்களுடைய அதிகாரம் பிள்ளைகளின் திருமணத்தோடு முடிந்துவிட்டதென்பதை உணர வேண்டும். பிள்ளைகளுக்கு பெற்றோர் தொடர்பான சில பொறுப்புகள் தொடர்ந்திருந்த போதும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதிகாரம் செலுத்தி அவர்களுடைய வாழ்க்கைக்குரிய தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பு முடிவுக்கு வந்துவிட்டது. இதேபோல் திருமணமானவர்கள் தொடர்ந்தும் தங்கள் பெற்றோர்களில் தங்கியிருந்து தங்கள் திருமண வாழ்க்கையை குலைத்துக் கொள்ளக் கூடாது.

இவ்விரண்டாவது உண்மை போதிக்கும் இன்னுமொரு பாடத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது புருஷன் தன் மனைவியோடு இசைந்திருப்பான் என்ற ஆதியாகம வார்த்தைகள் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இருக்க வேண்டிய தூய்மையான பாலுறவுத் தொடர்பையும் சுட்டிக்காட்டுகிறது. இதைக் குறித்து ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். ஒரு ஆணையும், பெண்ணையும் திருமணத்தில் பிணைத்துவைப்பது பாலுறவே. பாலுறவே திருமணமாகிவிடாது. ஆனால், திருமணம் மட்டுமே ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில் அமைய வேண்டிய பாலுறவுக்கு அனுமதியளிக்கிறது. ஆகவே, கணவனும், மனைவியும் இவ்வுறவு தொடர்ந்திருக்கவும், இவ்வுறவில் ஒருவருக்கொருவர் எந்தவிதத்திலும் தடையாக இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். நம்நாட்டு மக்களிடத்தில் கலாச்சாரத்தின் காரணமாக பாலுறவை, ஏதோ பேசக்கூடாததொன்றாகக் கருதும் வழக்கம் உண்டு. இதைக் கிறிஸ்தவர்களிடத்திலும் காணலாம். இத்தகைய எண்ணங்களால் கணவனும், மனைவியும் அதைக் குறித்த வேதபூர்வமான அறிவில்லாமல் ஒருவரையொருவர் திருப்தி செய்யாமல் போய்விடலாம். ஆனால், வேதம் திருமணத்தில் மட்டுமே பாலுறவுக்கு இடமுண்டு என்று மட்டும் கூறாமல், திருமணத்தில் சகல சுதந்திரத்துடனும், கணவனும், மனைவியும் அதில் இன்பம் காண வேண்டும் என்றும் போதிக்கின்றது. இதில் தவறிழைக்கும் கணவனும், மனைவியும் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது.

1 கொரிந்தியர் 7:1-4

நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது. ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும். புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.

கணவனுடைய சரீரம் கணவனுக்கு சொந்தமில்லை. அதேபோல் மனைவியின் சரீரம் மனைவிக்கு சொந்தமில்லை என்று கூறுவதன் மூலம் பவுல், கணவனும், மனைவியும் எவ்வாறு ஒருவரையொருவர் அனுசரித்து இசைந்து நடந்து கொள்ள வேண்டும் என்று போதிக்கிறார். அதாவது, மனைவியின் தேவைகளை அறிந்து கணவனும், கணவனின் தேவைகளை அறிந்து மனைவியும் நடந்து கொள்ள வேண்டும். இன்று அநேக கிறிஸ்தவர்களும் இவ்வுறவு பற்றிய வேதபூர்வமான அறிவில்லாமலிருக்கிறது. இதனால், வெளியில் சொல்லமுடியாமல் வாழ்க்கையில் பிரச்சனைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிற கிறிஸ்தவ குடும்பங்களும் அநேகம்.

(3) இவ்வாதியாகம வேதப்பகுதி போதிக்கும் மூன்றாவது உண்மை, திருமணம் நிரந்தரமானது என்பதுதான்.

ஆதியாகமம் 2:24, 25

இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.

“அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” திருமண வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள், அதில் பிரிவுக்கு இடமில்லை என்பதை உணர வேண்டும். தேவன் திருமணத்தை ஏற்படுத்தியபோது அதில் பிரிவேற்படுவதையோ அல்லது விவாகரத்தையோ தமது சிந்தையில் கொண்டிருக்கவில்லை. கணவனும், மனைவியும் கூடி மகிழ்ச்சியோடு வாழ்வதையே அவர் விரும்புகிறார். ஆகவே, திருமணமானவர்கள் வாழ்க்கையை குழப்பிக் கொள்ளாமல், அமைதியான நீரோட்டத்தைப்போல் தொடர்ந்தோடி கர்த்தருக்கு மகிமை சேர்க்கும்படி வாழவேண்டும். விவாகரத்தையோ, பிரிந்து வாழ்வதையோ அவர்கள் கனவிலும் எண்ணிப் பார்க்கக்கூடாது.

ஒரே கூரைக்குக்கீழ், திருமணபந்தத்தை ஏற்படுத்திக் கொண்டும் வீட்டில் பிரிந்து வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். இது உண்மையான திருமண வாழ்க்கையல்ல. ஒரு முறை தன் மனைவியோடு பிரச்சனை என்று கூறி என்னை அணுகி ஆலோசனை கேட்க வந்த ஒருவர், தான் தன் மனைவியோடு ஒரே அறையில் முப்பது வருடங்களாக உறங்கியதில்லை என்று கூறினார். இதற்குக் காரணம், மனைவிக்கு அவர் குறட்டை விடுவது பிடிக்கவில்லை. இக்குடும்பத்தில் ஒற்றுமை இல்லை. கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் அனுசரித்துப்போகும் பக்குவம் இல்லை. அத்தோடு அவர்கள் சுயநலநோக்கால் பிரச்சனை ஏற்படுவதற்கான செயல்களையே செய்து வந்தார்கள். ஒரே மாம்சமாக இருக்க வேண்டியவர்கள் ஒரே அறையில் உறங்குவதையும் நிறுத்திக் கொண்டார்கள். இது தேவன் போதிக்கும் திருமணபந்தமில்லை. ஆகவே, வெறுமனே தாலிகட்டி நடக்கும் திருமணத்தையெல்லாம் திருமண வாழ்க்கை என்று கூறிவிடமுடியாது, திருமணத்திற்கான இலக்கணங்களைக் கொண்டமைந்த குடும்ப வாழ்க்கையே வேதபூர்வமான வாழ்க்கை. ஒருவீட்டில் குடியிருந்தால் மட்டும் போதாது. ஒரே உடலாகவும், ஒரே உயிராகவும் கணவனும், மனைவியும் வாழ வேண்டும்.

குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டு கணவனும், மனைவியும் பிரிந்துபோக வேண்டிய நிலை ஏற்படுவதற்கும், அல்லது கணவனோ, மனைவியோ தவறான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் நாம் மேலே இதுவரை பார்த்த காரியங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் இல்லாமல் இருப்பதே காரணம். எனவே தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர்கள், திருமணத்திற்கு முன் திருமணத்தைப்பற்றிய வேதபூர்வமான எண்ணங்களை தங்களுடைய சிந்தையில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், தாம் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் தனக்குப் பிடித்தவரா? தனக்குத் தகுதியானவர்தானா? ஆவிக்குரிய வாழ்க்கையில் தொடர்ந்து வளர்ந்து வருகின்றவரா? என்பதையெல்லாம் அறிந்து கொண்டு திருமணவாழ்க்கைக்குத் தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும். திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று நமது பெரியோர்கள் கூறுவார்கள். அதாவது, இது ஆயிரங்காலத்திற்கும் நின்று நிலைக்க வேண்டிய ஒரு உறவு. அத்தகைய உறவை கடைக்குப்போய் பணம் கொடுத்து வாங்கி அனுபவிக்கக்கூடிய ஒரு பொருளைப்போல எண்ணிவிடக்கூடாது. இல்லற வாழ்வின் இரகசியத்தை அறிந்து இல்லறம் நல்லறமாக நடக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

குடும்பத் தலைவன்

குடும்பம் பல அங்கத்தவர்களைக் கொண்டது. கணவன், மனைவி, பிள்ளைகள் என்று அமைந்துள்ள குடும்பம் நல்ல நிலையில் சீராக வாழ்ந்து வளர வேண்டுமானால் அது ஒழுங்காக ஓடும் நீரோடைபோல் கட்டோடு, அமைதியாக ஓட வேண்டும். கட்டுப்பாட்டோடும், கண்ணியத்தோடும் குடும்பம் இருக்க அதற்கு ஒரு தலைமை அவசியம். தலை இல்லாமல் சரீரம் இருக்க முடியாது. இதற்காகவே குடும்பத்தை ஏற்படுத்திய தேவன் அதற்குத் தலைமை அவசியம் என்பதால் கணவனுக்கு குடும்பத்தை நடத்தும் தலைமைப் பொறுப்பை அளித்துள்ளார். இது மனிதன் ஏற்படுத்திக்கொண்ட ஒரு வசதி அல்ல. இன்று கணவனுக்குச் சொந்தமான இத்தலைமைப் பொறுப்பைக் குறித்து கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக மேலை நாட்டுக் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெண்ணுரிமை சார்பான இறையியலாளர்கள் தேவன் ஏற்படுத்தியுள்ள கணவனுக்குச் சொந்தமான இத்தலைமைப் பொறுப்பிற்கு புது விளக்கம் கொடுத்து வருகிறார்கள். இது வெறும் விவாதப் பொருளாக மட்டும் அமையாமல் ஆண், பெண் உறவிலும், கணவன், மனைவி உறவிலும், குடும்ப வாழ்க்கையிலும், சபை வாழ்க்கையிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

இவ்வாறு மேலைநாட்டுக் கிறிஸ்தவர்களை பாதித்துள்ள பெண்ணுரிமை சார்பான இறையியல் நம்மைத் தொட்டுள்ளதா? என்று கேட்டால், நமது கலாச்சாரம் அதற்கு இதுவரை இடமளிக்காவிட்டாலும் அதன் சாயல்களை கிறிஸ்தவ சபைகளில் காண முடிகின்றது என்றே கூறவேண்டும். கணினி, இணையம், தொலை நோக்கி ஆகியவை உலகத்தை சிறிதாக்கி வரும் நாட்களில் இதுவும் இனிவரப்போகும் புதுப் புது இறையியல் விளக்கங்களும் நம்மை நிச்சயம் தொடத்தான் போகின்றன. கலாச்சாரக் குகைக்குள் இருந்து இனியும் நாம் குளிர்காய முடியாது. அதுமட்டுமல்லாமல் குடும்பத் தலைமைப் பொறுப்பு பற்றிய போதனையை நாம் இதுவரை கலாச்சார நோக்கில் மட்டும் ஏற்றுக் கொண்டு, நடைமுறையில் எதேச்சாதிகார முறையிலேயே வீட்டில் நடந்து வந்துள்ளோம். அதாவது, குடும்பத் தலைமை என்றால் என்ன என்று வேதம் போதிக்கும் விதத்தில் நடந்து கொள்ளாது அப்போதனைகளை மீறி ஆதிக்கத்துடன் நடந்து வரும் குடும்பத்தலைவர்கள்தான் குடும்பங்களில் அதிகம். ஆகவே, குடும்பத் தலைமை பற்றி வேதம் என்ன போதிக்கிறது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வேதம் போதிக்கும் குடும்பத் தலைமை

முன்னைய ஆக்கத்தில் குடும்பத்தின் தோற்றத்தைப்பற்றி வேதம் போதிக்கும் உண்மைகளை ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்களில் விளக்கமாகப் பார்த்தோம். அவ்வதிகாரங்களே சிருஷ்டியில் குடும்பம் எவ்வாறு தோற்றுவிக்கப்பட்டது என்ற விளக்கங்களைத் தருகின்றன. அங்கேயே குடும்பத் தலைமை பற்றிய உண்மைகளையும் நாம் பெற்றுக்கொள்கிறோம்.

ஆதியாகமம் முதல் மூன்று அதிகாரங்களும் மிகத் தெளிவாக குடும்பத்தைத் தலைமை தாங்கும் பொறுப்பைத் தேவன் கணவனுக்கே கொடுத்திருக்கிறார் என்று தெரிவிக்கின்றன. முதலில் ஆணைப்படைத்த தேவன் பின்பு பெண்ணை ஆணுக்குத் துணையாயிருக்கப் படைத்தார் (ஆதியாகமம் 1:26-27; 2:18-25). ஆதாமும், ஏவாளும் பாவம் செய்தபின் கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டே முதலில் அதற்கு விளக்கம் கேட்டார் (ஆதியாகமம் 3:9). கர்த்தர் ஆதாமையும், ஏவாளையும் அவர்கள் செய்த பாவத்திற்காகத் தண்டித்தபோது, ஏவாளைப் பார்த்து, “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்வான்” என்றார். இது ஆங்கில வேதத்தில் Your desire shall be for your husband, And he shall rule over you என்றிருக்கிறது. இவ்வார்த்தைகளை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். இங்கே ஏவாளின் ஆசை அல்லது desire என்பது, அவள் கணவன் மேல் இனி அன்பு செலுத்துவாள் என்ற பொருளில் அமையவில்லை. அவள் ஏற்கனவே ஆதாம் மீது அன்பு வைத்திருந்தாள். ஆகவே, இதை மறுபடியும் கர்த்தர் இங்கே வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. இப்பதங்கள், ஏவாள் தன் கணவனின் தலைமைத்துவத்திற்கு மதிப்பளிக்காமல் பிசாசின் வார்த்தைகளைக் கேட்டதால், அவள் தொடர்ந்து தன் கணவனின் தலைமைத்துவத்தை நாடும் பாவத்தைச் செய்வாள் என்ற பொருளிலேயே அமைந்துள்ளன.

அடுத்ததாக, “அவன் (ஆதாம்) உன்னை ஆண்டு கொள்வான்” என்று கர்த்தர் ஏவாளைப் பார்த்துக் கூறினார். ஏற்கனவே குடும்பத்தை ஆளும் பொறுப்பு ஆதாமுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவன் பாவம் செய்தபின் இப்பொறுப்பைத் தண்டனையாக கர்த்தர் எப்படி வர்ணிக்க முடியும்? ஆகவே, இங்கேயும் உட்பொருள் வேறுபட்டுக் காணப்படுகின்றது. அதாவது, கர்த்தர் ஆதாமைப் பார்த்து, “குடும்பத்தை ஆளும் பொறுப்பை உனக்குக் கொடுத்திருந்தேன். ஆனால் அதை நீ முறையாக செய்யவில்லை. உன் மனைவி இனி அதை உன்னிடம் இருந்து பறிக்கும் ஆசையுடையவளாயிருப்பாள். நீ அவளை இனி அன்போடு ஆளாமல், அடக்கி ஒடுக்கும் அதிகாரத்துடன் ஆள முயல்வாய்” என்று கூறுகிறார். இப்பொருளிலேயே இவ்வார்த்தைகள் அமைந்துள்ளன. ஆதாமும், ஏவாளும் செய்த பாவம் கர்த்தர் ஏற்படுத்தித் தந்திருந்த குடும்ப உறவுக்கு எதிராக நடந்து கொண்டதே. ஆகவே, அவர்கள் செய்த பாவம் இவ்விதமாகத் தொடர்ந்து குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதைக் கர்த்தர் உணர்த்துகிறார். இதனால்தான் குடும்பங்கள் சிருஷ்டியில் ஏற்படுத்தப்பட்டிருந்த விதத்தில் இன்று வாழ முடியாமல் அவதிப்படுகின்றன.

ஆகவே, இவ்வேதப்பகுதி கர்த்தர் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் கொடுத்த தண்டனையை மட்டுமன்றி ஆரம்பத்தில் கர்த்தர் அவர்கள் எந்தப் பொறுப்புகளைச் சுமந்து குடும்பமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தாரோ அவற்றையும் நினைவுறுத்துகின்றது. அதாவது, ஆதாம் குடும்பத்தை ஆள்பவனாகவும், ஏவாள் அவனுக்கு அமைந்து நடப்பவளாகவும் இருக்க வேண்டுமென்பதே கர்த்தரின் கட்டளையாக இருந்தது. ஆகவே, குடும்பத்தை ஆள்பவனாக கணவனே இருக்கிறான். ஆனால், ஒரு கணவன் குடும்பத்தை எப்படி ஆள வேண்டும்? பாவத்தின் காரணமாக ஒவ்வொரு கணவனும் தன் மனைவியை அடக்கி ஒடுக்கி அதிகாரம் செலுத்தும் நிலையிலேயே இன்று இருக்கிறான். இது கர்த்தர் அவனுக்கு அளித்துள்ள தண்டனை. இயற்கையாகவே அவனால் உண்மையான வேதபூர்வமான குடும்பத்தலைவனாக இருக்கமுடியாது. கிறிஸ்துவை அறிந்து கொண்ட பின்பே அவனது தண்டனையின் பாரம் குறைந்து அவனால் உண்மையான குடும்பத்தலைவனாக இருக்க முடியம். ஒரு கிறிஸ்தவக் கணவன் எப்படிப்பட்ட குடும்பத் தலைவனாக இருக்க வேண்டும்?

குடும்பத்தை ஆளும் கணவன்

கிறிஸ்தவக் கணவன் குடும்பத்தை ஆள்பவனாக இருக்க வேண்டும்.

எபேசியர் 5:23

கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.

அதாவது, குடும்பத்தை நடத்தும் பொறுப்புகளைச் சுமந்து, குடும்பத்தை நல்ல வழியில் நடத்த வேண்டியதற்கான தீர்மானங்களை எடுத்து அவற்றை நிறைவேற்ற வேண்டும். இத்தகைய தீர்மானங்களை எடுக்கும்போது நிச்சயம் அவன் தன் மனைவியையும் அதில் சம்பந்தப்படுத்தி, அவளது ஆலோசனைகளையும் கேட்டுப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தலையணை மந்திரம் கேட்பவன் என்ற கெட்ட பெயர் எடுக்கக்கூடாது. மனைவியை எல்லாம் செய்யவிட்டு, எந்த முடிவும் எடுக்கத் தைரியமில்லாமல் செயலிழந்தவனாக இருக்கக்கூடாது. எந்தத் தீர்மானத்தையும் தான்தோன்றித்தனமாக எடுத்து குடும்பத்தைத் துன்பத்தில் ஆழ்த்தக் கூடாது. எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தையும் குடும்பத்தின் நன்மையைக் கருத்தில் கொண்டே எடுக்க வேண்டும். பிள்ளைகள் இருந்தால் அவர்களை வளர்ப்பதில் அவனுக்குப் பெரும் பங்குண்டு. தன் ஆளுகைக்குள் குடும்ப அங்கத்தவர்கள் கட்டுப்பட்டு நடக்கும் விதமாக அவனது ஆளுகை அமைய வேண்டும். பிள்ளைகளைக் கட்டுக்குள் வைத்து வளர்க்க முடியாதவர்கள் சபை ஊழியத்திற்குத் தகுதியற்றவர்கள் (1 தீமோத்தேயு 3) என்று வேதம் போதிக்கின்றது.

வீட்டை ஆள்பவன் கணவனாதலால் அவன் வீட்டில் இருப்பது அவசியம். கிறிஸ்தவக் கணவன் வீட்டுக்கு வெளியில் அதிக நேரத்தையும், காலத்தையும் செலவிடுவது ஆபத்தை விலைக்கு வாங்குவதாகும். வீட்டுப் பொருளாதார நிலை அப்படி இருக்கிறது என்றும், கர்த்தரின் ஊழியம் அழைக்கிறது என்றும் வீட்டையும், மனைவி, பிள்ளைகளையும் விட்டுவிட்டு எங்கோ போய்விடுபவர்களுக்கு குடும்பம் தேவையில்லை. அவர்களால் வேதபூர்வமாக குடும்பத்தை ஆள முடியாது. அன்றாடம் குடும்பத்தலைவனைக் காணாத வீட்டில் வளரும் பிள்ளைகள் எப்போதுமே கட்டுக்கடங்காமல் போய்விடுகிறவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு தகப்பனின் அன்பும் தெரியாமல் போய்விடுகிறது.

மனைவியின் ஆன்மீக, சரீரத் தேவைகளை நிறைவேற்றி ஆள கணவன் குடும்பத்தில் இருப்பது அவசியம். அத்தோடு குடும்பத்தலைவரின் தேவைகளை மனைவி நிறைவேற்றி வைக்கவும் கணவன் வீட்டில் இருத்தல் அவசியம். கட்டிய மனைவியை விட்டுவிட்டு மாதக்கணக்காக வீட்டுக்கு வெளியில் இருப்பது திருமண வாழ்க்கைக்கு ஒவ்வாது. வீட்டை ஓட்டலாகக் கருதும் கணவனால் கிறிஸ்தவக் கணவனாக இருந்து குடும்பத்தை ஆள முடியாது.

அன்பு காட்டும் கணவன்

கணவன் குடும்பத்தை ஆள்பவனாக இருந்தபோதும் அவன் மனைவி மீது அன்பு செலுத்துபவனாக இருக்க வேண்டும். பவுல் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் கணவர்களைப் பார்த்து, உங்கள் மனைவிமேல் அன்புகூர வேண்டும் என்று கூறுகிறார். இங்கே பவுல், மனைவியை ஆளுங்கள் என்று கூறாமல் அன்பு கூருங்கள் என்று மட்டும் கூறுவதற்குக் காரணமென்ன? கிறிஸ்தவரல்லாத கணவர்களுக்கு பாவத்தின் காரணமாக மனைவிமாரை வேதபூர்வமாக ஆள முடியாமலிருக்கிறது. ஆனால், கிறிஸ்தவக் கணவனால் மட்டுமே கிறிஸ்து நேசிப்பதுபோல் தனது துணைவியை ஆழமாக நேசிக்க முடியும். உங்கள் சொந்த சரீரத்தைப் போல் மனைவியை நேசியுங்கள் என்று பவுல் கூறுகிறார்.

எபேசியர் 5:28

அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.

கணவன் குடும்பத்தை ஆள்வதற்காகப் படைக்கப்பட்டவன் என்பது பவுலுக்குத் தெரிந்திருந்தபோதும் கிறிஸ்தவக் கணவன் தன் மனைவியை அன்போடு ஆள வேண்டுமென்பதற்காகத்தான் இங்கு அன்பை மட்டும் பவுல் குறிப்பிட்டுப் பேசுகிறார்.

ஆள்வதற்கும், அன்புக்கும் தொடர்பில்லை என்று எண்ணிவிடக்கூடாது. தலைமைத்துவமும், ஆளுமையும் அன்பின் அடிப்படையிலேயே எப்போதும் அமைய வேண்டும். கிறிஸ்துவை நேசிக்காத ஒரு மனிதனுக்கு இது புரியாது. இது கிறிஸ்தவனால் மட்டுமே முடிந்த காரியம். ஆகவேதான் பவுல் கிறிஸ்து தன் சபையை எப்படி நேசிக்கிறாரோ அதேபோல் கணவன் தன் மனைவிமேல் அன்புகூர வேண்டும் என்று போதிக்கிறார் (எபேசியர் 5:23; 25-29; கொலோசெயர் 3:19). இங்கே பவுல் இதைக் கட்டளையாகக் கொடுக்கவில்லை. இதை ஒவ்வொரு கிறிஸ்தவக் கணவனிடமும் அவர் எதிர்பார்க்கிறார்.

தன் மனைவியை நேசிக்கும் கணவன் அவளது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதில் பெரிதும் அக்கறை எடுப்பான். அவளுடைய மனம் கோணாமல் நடந்து கொள்வதில் கவனம் செலுத்துவான். அவளுடைய தவறுகளை அன்போடு திருத்துவான். அவளுடைய நல்ல ஆலோசனைகளை அன்புடன் கேட்பான். சமைப்பதும், பிள்ளை பெறுவதும்தான் அவளுடைய பணி என்று சமுதாயம் பெண்களை நடத்துவது போல் கிறிஸ்தவக் கணவன் தன் மனைவியை நடத்தமாட்டான். தன் மனைவி மேல் வைத்திருக்கும் அன்புக்குத் தடையாக எதையும் வரவும் விடமாட்டான்.

பராமரிக்கும் கணவன்

கணவன் குடும்பத்தின் தலைவனானதால் அவனே வீட்டுத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு உழைத்து ஊதியம் பெறவேண்டும். சபையின் தேவைகளனைத்தையும் நிறைவேற்றும் கிறிஸ்துவைப்போல் மனைவியின் தேவைகளை நிறைவேற்றி வைக்க வேண்டியது கணவனின் கடமை. மனைவிக்கு உணவும், உடையும் வழங்க வேண்டியது கணவனின் கடமை. பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் இது கணவனின் அடிப்படைக் கடமையாக சுட்டிக் காட்டப்படுகிறது. இதில் தவறுகிறவன் கிறிஸ்தவக் கணவனாக இருக்க முடியாது. வீட்டு வேலை செய்வதற்கும், சமையற்கட்டுக்கும்தான் மனைவி என்று இருந்துவிடக் கூடாது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் அடுப்படியில் வேலை செய்வது அவமானம் என்று கருதும் வீட்டுத் தலைவர்கள் இருக்கிறார்கள். இந்த நிலை மாறி மனைவிக்கு அடுப்படியிலும் துணை செய்யும் மனமுள்ள கிறிஸ்தவக் கணவர்களாக நாம் இருக்க வேண்டும். மனைவியை நேசிப்பவனுக்கு இது மானக்கேடாகத் தெரியாது.

மனைவியின் சரீரத் தேவைகளையும் கணவன் நிறைவேற்றி வைக்க வேண்டும். இதைக்குறித்து கடந்த இதழில் விபரமாக எழுதினோம். பிள்ளை பெறும் இயந்திரமாக மட்டும் மனைவியைக் கணவன் பயன்படுத்தக் கூடாது. பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதும் முக்கிய கடமையாக இருந்தபோதும் பாலுறவில் மனைவியின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதும் கணவனின் முக்கிய கடமையாகும். அதுமட்டுமல்லாது கணவன் தன் மனைவியில் மட்டுமே பாலுறவின்பத்தை அனுபவிக்க வேண்டும். அவன் மனதாலோ, அல்லது வேறு எந்தவிதத்திலோ ஏனைய பெண்களை நினைத்தும் பார்க்கக்கூடாது என்று மட்டும் வேதம் போதிக்காமல் (யாத்திராகமம் 20:17) தனது முழுத் திருப்தியையும் தன் மனைவியிலேயே அடைய வேண்டும் என்றும் போதிக்கின்றது.

மனைவியைப் பராமரிப்பதில் இதுவும் ஒரு அம்சமாகும். நீதிமொழிகள் பின்வருமாறு கூறுகிறது,

நீதிமொழிகள் 5:15-19

“உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம் பண்ணு. உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக. அவைகள் அன்னியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக. உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இள வயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்போழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.”

மனைவியின் சரீரத் தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாது அவளது ஆன்மீகத் தேவைகளையும் நிறைவேற்றுபவனாக கிறிஸ்தவக் கணவன் இருக்க வேண்டும். மற்ற எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றி இதில் தவறிழைக்கிறவன் கிறிஸ்தவக் கணவனாக இருக்க முடியாது. தானும் கிறிஸ்தவ வாழ்வில் வளர்ந்து தனது மனைவிக்கும் அவ்வாழ்வில் வழிகாட்டியாகவும், ஆசானாகவும் இருக்க வேண்டியது கணவனின் கடமை. குடும்ப ஆராதனையை வீட்டில் தவறாது முன்னின்று நடத்தி வேத போதனைகளை அளித்து மனைவி வேத அறிவில் சிறக்க கணவன் வழி காட்டுபவனாக இருக்க வேண்டும். தன் மனைவி மனத்திலும், ஆவியிலும் பலமுள்ளவளாக இருக்க கணவன் அவளுக்கு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் (1 பேதுரு 3:7). இன்று அநேக கிறிஸ்தவ மனைவிகள் போலிப்போதனைகளை சுலபமாக நாடி ஓடி தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறார்கள். பல கணவர்கள் இதைப் பார்த்தும் பேசாதிருந்துவிடுகிறார்கள். கணவன் ஒரு சபைக்கும், மனைவி ஒரு கூட்டத்திற்கும் என்று போவதும் வழக்கமாக இருக்கிறது. இது கிறிஸ்தவ குடும்பத்திற்கு ஏற்றதல்ல. இதற்குக் காரணம் குடும்பத் தலைவனான கணவன் தன் பொறுப்புணர்ந்து மனைவியை வழி நடத்தாததே. இன்று பெண்களின் பலவீனமறிந்து அவர்களை மயக்குவதற்கென்றே பல போலி ஊழியங்கள் நடந்து வருகின்றன. கிறிஸ்தவக் கணவன் தன் மனைவியை இத்தகைய ஆபத்திலிருந்து காப்பாற்ற அவளுக்கு நல்ல போதனைகளை வழங்க வேண்டும். போலிகளை அடையாளம் கண்டுகொள்ள உதவ வேண்டும். இதையெல்லாம் நிறைவேற்ற அவன் வேத அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். குடும்பமாக ஒரே சபைக்குப்போய் ஆராதனையில் ஈடுபடுவதையும் வழக்கமாகக்கொள்ள வேண்டும். ஒரே சத்தியத்தில் வளர்ந்து வரவேண்டும். இதையெல்லாம் செய்யாத கணவன் எப்படிக் கிறிஸ்தவக் கணவனாக இருக்க முடியம்? கிறிஸ்தவக் கணவனே! கிறிஸ்து தந்திருக்கும் பொறுப்புகளை இனியாவது உணர்ந்து நிறைவேற்றுவாயா?

குடும்ப விளக்கு

குடும்பத்திற்குத் தலைவன் கணவன் என்று முந்தைய ஆக்கத்தில் பார்த்தோம். கணவன் குடும்பத் தலைவன் என்றால், மனைவியைக் குடும்ப விளக்கு என்று கூறுவது நியாயமே. மனைவி குடும்பத்தில் விளக்கைப்போல ஒளியேற்றி வைக்க வருபவள். ஒரு நல்ல கிறிஸ்தவ மனைவி விளக்கைப்போல குடும்பத்திற்கு ஒளி கொடுப்பவள் மட்டுமல்ல, சுயநலமற்ற தனது வாழ்க்கையின் மூலம் திரியாக எரிந்து அதில் இன்பம் காண்பவள். நமது சமுதாயத்தின் புலவர்கள் பெண்களைப்பற்றி பெரிதாகப் பேசியும், எழுதியும் வந்துள்ளார்கள் என்றால் அதற்குப் பெண்களின் குணம்தான் காரணம். ஆனால், பெண்ணுக்கு எழுத்தின் மூலம் மதிப்புக் கொடுக்கும் அளவிற்கு நடைமுறையில் நம் மக்கள் மதிப்புக் கொடுக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். பெண்ணுக்கு இருந்த நிலை தொடர்ந்தும் நிலவுகிறது என்று கூறுவது பெரிதுபடுத்துவதாகாது. ஒவ்வொரு ஆணும் பெண்களைப்பற்றித் தன் மனத்தில் கொண்டுள்ள எண்ணத்தில் இன்றும் அதிக மாற்றமடையவில்லை. தொழில் நுட்பம் வளர்ந்துள்ள அளவிற்கு தமிழ் மக்களின் எண்ணங்களில் இந்த விஷயத்தில் துரித மாற்றங்கள் ஏற்படவில்லை. இவ்விதழில், வேதம் குடும்பத்தில் கிறிஸ்தவ மனைவியின் பங்கைப்பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம். கிறிஸ்தவ மனைவியின் பங்கைப்பற்றிப் போதிக்கும் முக்கியமான வேதப் பகுதிகள்:

  • எபேசியர் 5:22-23
  • கொலோசெயர் 3:18-21
  • 1 பேதுரு 3:1-7
  • தீத்து 2:3-5
  • 1 தீமோத்தேயு 5:9-16

ஆதியில் ஆணையும், பெண்ணையும் படைத்த தேவன் அவர்கள் தம்மை மகிமைப்படுத்தும் விதமாக ஆணைத் தலைவனாகவும், பெண் அவனுக்கு அடங்கி நடப்பவளாகவும் இருக்கும்படியாகப் படைத்தார் என்று ஆதியாகமத்தின் ஆரம்ப அத்தியாயங்களில் வாசிக்கிறோம். ஆனால் அவர்கள் பாவத்தில் வீழ்ந்தபின் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இருந்து தொடர்ந்து பணிபுரிய முடியாமல் ஆண், பெண்ணை அடக்கியொடுக்கி வைப்பதைப் பணியாகவும், பெண் கணவனுக்குக் கட்டுப்படாமல் நடப்பதைத் தன் நிலையாகவும் கொண்டு இன்றும் வாழ்ந்து வருவதை வேதம் சுட்டிக் காட்டுகின்றது. இந்த நிலையில் கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கும் கணவனும், மனைவியும் தங்களுக்கு ஆரம்பத்தில் தேவன் கொடுத்த கட்டளையின்படி வாழ வேண்டிய பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்து தரும் இரட்சிப்பு கணவன், மனைவி இருவரையும் வேதபூர்வமாக சிந்தித்து வாழ வேண்டிய பெரும் பொறுப்பிற்கு உட்படுத்துகிறது. அதன்படி கணவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று கடந்த இதழில் பார்த்தோம். இனி மனைவியினுடைய நிலையைப் பார்ப்போம்.

கணவனின் ஆத்மீகத் தோழி!

வேறு எவரும் அளிக்க முடியாத தோழமை உறவை மனைவி கணவனுக்கு அளிக்க வேண்டியவளாக இருக்கிறாள். கர்த்தருக்கும் நமக்கும் இருக்கும் ஐக்கியத்தைப் பிரதிபலிக்கும் உறவை மனைவி கணவனுக்கு அளிக்க வேண்டும். திருமணத்தின் மூலம் இதையே கர்த்தர் குடும்ப வாழ்வில் எதிர்பார்க்கிறார். இதுவரை தனது நண்பர்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் அடைந்திராத ஓர் ஐக்கியத்தை கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் அளிக்க வேண்டும். அவர்கள்கூடி வாழும் காலம் முழுவதும் இது அவர்களிடத்தில் காணப்பட வேண்டும். இத்தகைய உறவிற்காகவே ஆணும், பெண்ணும் திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், பாவம் இவ்வாறு வாழ்வதைப் பாதித்திருக்கிறது. கிறிஸ்தவக் கணவனும், கிறிஸ்தவ மனைவியும் கர்த்தரின் குழந்தைகளாக இருப்பதால் பாவத்திற்கு இடம் கொடுக்காமல் இத்தகைய உறவு குடும்பத்தில் நிலைத்திருக்கக்கூடிய எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வுறவிற்குப் பாதகமாக வரும் எதற்கும் அவர்கள் இடமளிக்கக்கூடாது.

இத்தகைய Companionship க்கு இடைஞ்சலாக வரக்கூடிய எதையும் அவர்கள் உதறித் தள்ள வேண்டும். அடுப்பறைக்கும், படுக்கையறைக்கும் மட்டுமே மனைவி என்று வாழும் கணவர்களும், மனைவிகளும் இன்று இதைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். திருமணத்தின் மூலம் இத்தகைய உறவு குடும்பத்தில் நிலவுகிறதா என்று வேதபூர்வமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். வயது வந்துவிட்டது என்பதற்காகவும், பெற்றோர்களுக்காகவும், சமுதாயத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவும் திருமணம் என்ற நிலை மாறி, மனைவி கணவனுக்கு வேறு யாரும் அளிக்க முடியாத ஒன்றை குடும்ப வாழ்வின் மூலம் அளிக்கும் ஓர் ‍ஐக்கிய வாழ்விற்காக உருவாக்கப்பட்டிருக்கிறாள் என்ற உண்மையை உணர வேண்டும். கிறிஸ்தவ மனைவிமார்களே, இத்தகைய ஆத்மீக உறவை நீங்கள் உங்கள் கணவனுக்கு அளிக்கிறீர்களா? அத்தகைய உறவை உங்கள் கணவனிடம் இருந்து பெற்றுக் கொள்கிறீர்களா? உங்கள் கணவன் மட்டுமே உங்களுடைய Soul-mate ஆக இருக்கத் தேவையான அனைத்தையும் செய்து அவ்வுறவைப் பாதுகாத்து வருகிறீர்களா?

கணவனுக்கு தகுந்த துணைவி (Help-meat).

ஆதாமுக்குத் துணையாக இருக்கவே ஏவாளைத் தேவன் படைத்தார். ஆகவே, மனைவி கணவனுக்கு அவனுடைய அனைத்துக் காரியங்களிலும் துணையாக இருக்க வேண்டும். வீட்டுக் காரியங்களில் ஈடுபடுவது மட்டுமன்றி கணவனுடைய ஏனைய காரியங்கள் அனைத்திலும் அக்கறை காட்டிக் கணவனுக்குத் துணைபுரிய வேண்டும்.

கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு பக்கத்து வீட்டாரோடு அரட்டையடிப்பதும், வீட்டு வேலைகளைச் செய்யாமல் டீ. விக்கு முன்னால் உட்கார்ந்திருப்பதும் நல்ல மனைவி செய்யும் செயல்களல்ல. கணவன் வீட்டுக்கு வெளியில் உழைத்துக் குடும்பத்தை நடத்தும் பொறுப்பைக் கொண்டவனாக இருப்பது போல் மனைவி வீட்டில் செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களையும் பொறுப்போடு செய்ய வேண்டும். கணவன் மனம் மகிழும் விதத்திலும், பாராட்டும் விதத்திலும் இக்காரியங்களைச் செய்ய வேண்டும். கிறிஸ்தவ மனைவி சோம்பேறியாக இருக்கமாட்டாள். கணவனை மற்றவர்கள் பாராட்டும்விதத்தில் குடும்ப வேலைகளை அக்கறையுடன் செய்பவளாக இருப்பாள்.

நீதிமொழிகள் 31 இல் நாம் வாசிக்கும் பெண்ணைப்போல் வாழ்பவளே நல்ல மனைவி. அவ்வேதப் பகுதி ஒரு நல்ல மனைவி எப்படி இருப்பாள் என்று தெளிவாகப் போதிக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சியற்ற அந்தக்காலத்திலும்கூட குடும்பத்திற்காக அந்தப்பெண் பெருங்காரியங்களைச் செய்தாள். அவள் செய்த காரியங்கள் எதுவும் கணவனின் தலைமையையோ, மதிப்பையோ குறைப்பதாக இருக்கவில்லை. சோம்பலுடன், அரட்டை அடிப்பதில் மட்டும் காலத்தை செலுத்தும் பெண்ணாக அவள் இருக்கவில்லை. நேரத்தை சரியாகப் பயன்படுத்தி கணவனுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான அனைத்தையும் செய்து, வீட்டுக்கு வருபவர்களை மனங்கோணாமல் உபசரித்தும் எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றி தன் கணவனை மாற்றார் பாராட்டும் விதத்தில் நடந்து கொண்டாள். இந்நீதிமொழியை மேலெழுந்தவாரியாக வாசிக்கும்போது என்னடா? இவள் மட்டும் மாடுபோல் உழைக்க, கணவன் வெறுமனே மரத்தடியில் இருந்து வேடிக்கை பார்த்தானோ? என்று எண்ணத் தோன்றும். ஆனால், இவ்வேதப்பகுதி அந்த மனைவி நேரத்தைப் பயன்படுத்திக் கர்த்தரையும் தன் கணவனையும் பிரியப்படுத்தும் விதத்தில் எவ்வாறு நடந்து கொண்டாள் என்று மட்டுமே போதிக்கின்றது. தன் குடும்பவளத்திற்காக அவள் செய்யத்துணியாத காரியங்கள் இல்லை. அவளுடைய செய்கைகள் அனைத்தும் கணவனுக்குப் பெருமையையே தேடித்தந்தன.

கணவனுடைய காரியங்களில் அக்கறை எடுத்து அவனுக்குத் தேவையான நேரங்களில் நல்ல ஆலோசனை சொல்பவளாகவும் மனைவி இருக்க வேண்டும். கிறிஸ்தவ மனைவி கணவன் மீது ஆதிக்கம் செலுத்த முயலாமல் தகுந்த நேரத்தில் பொருத்தமான ஆலோசனைகளையும் தருபவளாக இருக்க வேண்டும். மனைவியின் நல்ல ஆலோசனைகளைத் தட்டி உதறும் கணவன் நல்ல கணவனாக இருக்க முடியாது.

கணவனுக்கு அடங்கி நடப்பவள்.

பவுல் எபேசியர் 5 இல் மனைவி தன் கணவனுக்கு அடங்கி நடக்க வேண்டும் (கீழ்ப்படியுங்கள்) என்று சொல்கிறார். இதையே பேதுருவும் போதிக்கிறார்.

1 பேதுரு 3:1

அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,

அதாவது, குடும்பத்தில் கணவனின் தலைமையை ஏற்று அவனுக்குப் பணிந்து நடக்க வேண்டுமென்பது இதற்குப் பொருள். கணவனுடைய தலைமைத்துவத்தை பாவகரமானதொரு ஆதிக்கமாக மனைவி நினைத்துவிடக்கூடாது. கர்த்தர் கணவனிடம் எதிர்பார்ப்பது அன்போடு கூடிய நல்ல தலைமையையே என்றுணர்ந்து அத்தகைய அன்புத் தலைமைக்கு மனைவி கட்டுப்பட வேண்டும். கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்காத மனைவி நல்ல கிறிஸ்தவ மனைவியாக இருக்க முடியாது. கிறிஸ்து தன் சபைமேல் அன்பு செலுத்தி ஆள்வது போல் கணவன் தன் குடும்பத்தை ஆள வேண்டிய கடமையைக் கொண்டிருப்பதால் அத்தகைய ஆளுகைக்கு மனைவி தன்னை ஒப்புக்கொடுத்து குடும்பத்தில் நடந்து கொள்ள வேண்டும். இன்றைய நவீன பெண்ணியல்பு சார்புக் கொள்கைகள் இப்போதனையை எதிர்க்கின்றன. கணவனுக்கு சமமாக எல்லாக் காரியங்களையும் மனைவி செய்ய வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையை வலியுறுத்துகின்றன. ஆனால், கிறிஸ்தவ குடும்பங்களில் இத்தகைய போட்டி மனப்பான்மைக்கோ, போராட்டத்திற்கோ இடமில்லை. மனைவி கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பது வேதபோதனை. கர்த்தரே அத்தகைய தலைமையைக் குடும்பத்தில் ஏற்படுத்தியிருக்கிறார் என்றுணர்ந்து மனைவி நடந்து கொள்ள வேண்டும். கணவனின் தலைமைத்துவத்திற்கு எந்தவித ஊறும் ஏற்படாத விதத்திலேயே மனைவி கணவனுக்கு நல்ல துணையாக இருக்க வேண்டும். “இந்தப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பெண்களும் நடந்து கொண்டார்கள்” என்று பேதுரு போதிக்கிறார். சாராளும், தன் கணவனை “ஆண்டவன் என்று சொல்லி அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்” என்றும் பேதுரு சொல்கிறார். பவுல் 1 கொரிந்தியர் 14 ஆம் அதிகாரத்தில் பெண்கள் சபைகளில் பேசக்கூடாது என்றும், அவர்கள் எந்தக் காரியத்தையும் தங்களுடைய புருஷர்களிடம் இருந்தே கற்றுக் கொள்ள வேண்டும் என்று போதிப்பதற்கும் கர்த்தர் கணவனுக்குக் கொடுத்திருக்கும் தலைமைப் பொறுப்பே காரணம். ஆண்களும், பெண்களும் கூடிவரும் சபைக்கூட்டங்களில் பெண்கள் எழும்பிப் பேசுவதும், கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதும் வேதத்திற்கு முரணான காரியம். இது கர்த்தர் கணவனுக்குத் தந்திருக்கும் தலைமைப் பதவியை உதாசீனம் செய்யும் காரியமாகும். மனைவி தன் கணவனைத் தவிர வேறு மனிதர்களிடத்தில் தனிமையில் ஆத்மீகக் காரியங்களில் ஆலோசனை பெறப் போகக்கூடாது. சபைப்போதகர்களிடம் கணவனோடு போய் ஆலோசனை பெறுவதே முறையானது.

ஒரு கிறிஸ்தவ மனைவி கிறிஸ்தவனல்லாத கணவனுடன் வாழும் நிலை ஏற்படும்போது அவள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? இதைப்பற்றி பேதுரு தனது முதலாம் நிருபத்தில் மூன்றாவது அதிகாரத்தில் விளக்குகிறார் (3:1, 2). இத்தகைய சந்தர்ப்பங்களில் கிறிஸ்தவ மனைவி தன்னுடைய நல்ல நடத்தையால் கணவன் தன்மீது நம்பிக்கை வைக்கும்படியாக நடந்து கொள்ள வேண்டும். பயபக்தியுள்ள கற்புடைய நடத்தை கொண்ட மனைவியைப் பார்த்து கணவன் திருந்தக்கூடிய வாய்ப்பிருப்பதைப் பேதுரு எடுத்துக் காட்டுகிறார். ஆகவே, இத்தகைய சந்தர்ப்பங்களில் மனைவி தனக்கு எல்லாம் தெரியும் என்று கணவனுக்கு போதிக்க முற்படுவதோ, அல்லது மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதோ சரியல்ல. தன்னுடைய நல்ல நடத்தையால் கணவனை ஆதாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே வேதம் போதிக்கின்றது. தேவனுடைய பார்வையில் விலைமதிப்புள்ளது பெண்ணின் நல்ல குணமே என்று பேதுரு கூறுகிறார்.

1 பேதுரு 3:4

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.

நல்ல தாயாக இருப்பவள்.

மனைவி நல்ல தாயாக இருப்பது அவசியம். பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதோடு அப்பிள்ளைகளுக்கு நல்ல தாயாக இருப்பது அவசியம். கணவன் வேலைக்குப் போனபின் பிள்ளைகளோடு அதிக நேரத்தை செலவிடுவது மனைவியே. ஆகவே, பிள்ளைகளைக் கண்டித்து சரியான வழியில் வளர்க்கும் பெரும் பொறுப்பை மனைவி தேவ பக்தியோடு செய்வதவசியம். கணவனும் மனைவியும் இதில் இணைந்து ஈடுபடுதல் அவசியம். இப்பொறுப்பு மனைவியுடையது என்று கணவன் பாராமுகமாக இருக்கக்கூடாது. கணவன் இக்காரியத்தில் மனைவிக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். முக்கியமான ஒழுங்கு நடவடிக்கைகளில் கணவன் இதில் முன்னின்று வழி காட்ட வேண்டும். கணவன் வீட்டில் இல்லாத வேளைகளில் மனைவி இப்பொறுப்பை நல்லபடியாக ஏற்று நடத்த வேண்டும். பிள்ளைகளை, நீங்கள் எப்படியாவது போங்கள் என்று விரட்டிவிட்டு அடுப்பறை வேலை, துணி துவைத்தல் என்று வீட்டு வேலைகளில் மட்டும் கவனமாக இருந்துவிடும் தாய் கர்த்தருக்கு முன் பெருந்தவறு செய்கிறாள். பிள்ளைகள் பள்ளிக் கூடத்தில் நன்றாகப் படிக்கிறார்களா என்று வீட்டுக்கு வந்தபின் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அவர்கள் பாடங்களில் அக்கறை எடுத்து அவர்களுக்குத் துணை செய்ய வேண்டும். அவர்கள் ஒழுக்கத்துடன் வளர்வதற்கான அனைத்துக் காரியங்களிலும் ஈடுபட வேண்டும். அவர்களுடைய நண்பர்கள் யார்? அவர்களுடைய பொழுது போக்கு என்ன? என்பதிலெல்லாம் அக்கறை காட்ட வேண்டும். பிள்ளைகள் நல்ல பேச்சு பேசுகிறார்களா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். பள்ளிக்கூடத்தில் மற்ற பிள்ளைகளிடம் இருந்து கற்று வரும் தவறான நடத்தையையும், பேச்சையும் திருத்தி நல்ல வழியில் செல்ல பிள்ளைகளை வழி நடத்த வேண்டும். எத்தனையோ வீட்டு வேலைகள் இருக்கும்போது பிள்ளைகளுக்கு எப்படி இவ்வளவு நேரத்தைக் கொடுப்பது என்று கேட்கும் பெண்கள் நல்ல தாய்களாக இருக்க முடியாது. சூசானா வெஸ்லிக்கு பத்தொன்பது பிள்ளைகள் இருந்தன. அவர் ஒவ்வொரு வாரமும் ஒரு மணி நேரத்தை தன்னுடைய பிள்ளைகள் ஒவ்வொருவருடனும் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் அதிக வேலையாட்கள் இருந்திருக்கக்கூடும். இருந்தாலும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட அவர் தவறவில்லை.

வீட்டில் டெலிவிஷன் இருந்தால் அதில் பிள்ளைகள் அதிகம் நாட்டம் காட்டிவிடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தாய் டெலிவிஷனே கதி என்றிருந்தால் பிள்ளைகள் அதுவே தெய்வம் என்று போகாமல் வேறு என்ன செய்வார்கள். இன்று போதகர்களும், அவர்களுடைய மனைவிமார்களும் இக்காரியத்தில் அதிக கவனமாக இருப்பதோடு சபை மக்களுக்கு முன் மாதிரியாகவும் இருக்க வேண்டும். டெலிவிஷனால் அழிந்து கொண்டிருக்கும் குடும்பங்கள் அதிகரித்து வரும்போது கிறிஸ்தவப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருந்து அவர்களை வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள்.

அன்றாடம் குடும்ப ஜெபத்தைக் கணவன் நடத்தும் போது அதில் அதிக அக்கறைகாட்டி கணவனுக்கு துணையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிள்ளையும் படுக்கப்போகுமுன் தனித்தனியாக ஜெபித்து அவர்களை படுக்கைக்கு அனுப்புவதும் அவசியம். தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்ல பெற்றோர்களாக இருக்க வேண்டுமானால் அதற்காகப் பெற்றோர்கள் இப்போதே உழைப்பது அவசியம். பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான் என்ற நீதிமொழிகளின் போதனையை நாம் மறக்கக்கூடாது.

நீதிமொழிகள் 22:6

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.

மனைவி கணவனின் மகிமையாக இருக்கிறாள்.

இவ்வுண்மையை குறிப்பாக 1 கொரிந்தியர் 11:7ம், உள்ளடக்கமாக எபேசியர் 5:22-33ம் போதிக்கின்றன. ஆதாமுக்குத் துணையாக இருக்க ஏவாளைப் படைத்த கர்த்தர், அவள் ஆதாமின் மகிமையாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தார். கணவனின் சரீரத் தேவைகளையும், பிள்ளைகளின் தேவைகளையும் மட்டும் நிறைவேற்றும் மனித இயந்திரமாக இருக்கும்படியாக பெண்ணைக் கர்த்தர் படைக்கவில்லை. நீதிமொழிகள் 31 இல் நாம் வாசிக்கும் பெண்ணைப் போல வாழ்ந்து அவள் தன் கணவனின் மகிமையாக இருக்க வேண்டும் என்பதே கர்த்தரின் சித்தம். கிறிஸ்தவ மனைவியால் மட்டுமே இவ்வாறு வாழமுடியும். ஆகவே, கிறிஸ்தவ கணவன்மார் தங்களுடைய மனைவி இப்படி வாழ்வதற்கான எல்லா உதவிகளையும் அவர்களுக்குச் செய்து தர வேண்டும். மனைவியரும் தங்களுடைய ஆத்மீக வாழ்வில் அக்கறை எடுத்து வேதத்தை முறையாகப் படித்து விசுவாச வாழ்க்கை நடத்த வேண்டும். சபைக் கூட்டங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும். வேதப்பாடங்களிலும் கலந்து கொண்டு வேத அறிவில் வளர்ந்து கர்த்தருடைய சித்தத்தைத் தங்கள் வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டும்.

கடைசியாக போதகர்களுக்கும், போதகர்களின் மனைவிகளுக்கும் ஒரு வார்த்தை. இன்று அநேக போதகர்களின் குடும்ப வாழ்க்கை வேதபூர்வமாக அமையவில்லை. சபைக்குப் போதிக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள நாம் நமது குடும்ப வாழ்க்கையில் அக்கறை காட்டாமல் இருக்க முடியாது. சொல்லைவிட செயல் அதிக பலன் தரும் என்று கூறுவார்கள். நமது வாழ்க்கை நன்றாக இருந்தால் நமது மக்கள் நமது போதனைகளில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆகவே, போதகர்களின் மனைவிமார் தங்கள் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தங்கள் கணவனுக்கு அதிக மரியாதை செலுத்துவதோடு, சபை மக்களுடன் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். சபையின் இளம் பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். தங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி அவர்கள் கீழ்ப்படிவுடன் நடந்து கொள்ளும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நம் பிள்ளைகள் கீழ்ப்படியாவிட்டால் சபை மக்களுக்கு பிள்ளை வளர்ப்பைப் பற்றி எப்படிப் போதிக்க முடியும்?

போதகர்கள் விருந்துபசாரத்தில் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டியிருப்பதால், போதகர்களின் மனைவிமார் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தங்கள் வீட்டிற்கு வருபவர்களை மனங்கோணாமல் உபசரிக்கிறவர்களாக இருக்க வேண்டும். இதற்காக எல்லோருக்கும் சாப்பாடு போட வேண்டுமென்று நான் கூறவரவில்லை. தம்மை நாடி வருபவர்களை அன்போடு உபசரித்து வரவேற்கும் வீடாக போதகர்களின் வீடு இருக்க வேண்டும். சபை மக்களுக்கு அது எப்போதும் திறந்திருக்க வேண்டும். இக்கடமையில் குடும்பப் பெண்ணுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. இதில் சிறக்காத போதகரின் மனைவி அப்போதகனின் ஊழியத்திற்கு ஆபத்தைத்தான் தேடித்தருவார்.

குழந்தைச் செல்வம்

குடும்பத்திற்கு தலைவன் கணவன், குடும்பத்திற்கு விளக்கு மனைவி என்று பார்த்தோம். குடும்பம் சிறக்க கணவனும் மனைவியும் எம்முறையில் கூடி வாழ வேண்டுமென்று வேதம் போதிக்கும் போதனைகளை இதுவரை ஆராய்ந்துள்ளோம். “படிப்பது வேதம் இடிப்பது சிவன் கோவில்” என்ற முறையில் கிறிஸ்தவர்கள் வாழக்கூடாது. கிறிஸ்தவத்திற்கும் குடும்ப வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எண்ணிவிடக்கூடாது. நமது போலித்தனமான பண்பாட்டிற்குப்பின் மறைந்து நின்று நாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தக்கூடாது. கிறிஸ்தவ கணவனும் மனைவியும் கர்த்தரை மகிமைப்படுத்தும்படி வாழ அவசியமான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.

கணவனும் மனைவியும் தம் மத்தியில் நல்லுறவேற்படுத்திக்கொண்டு நல்வாழ்வு வாழ்வது இன்னுமொரு முக்கியமான காரியத்திற்கு அவசியம். கர்த்தர் குடும்பங்களுக்கு ஈவாக அளிக்கும் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதற்கு கணவனும் மனைவியும் நல்லுறவோடிருப்பது அவசியம். ஆதியாகமம் குடும்பம் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

ஆதியாகமம் 1:22, 28

22. தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.

28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

சில வேளைகளில் கர்த்தருக்கு மட்டுமே தெரிந்த காரணங்களால் சில குடும்பங்களுக்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லாமல் போகலாம். ஆனால், பொதுவாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றே கர்த்தர் எதிர்பார்க்கிறார். பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும்போது கணவனுக்கும் மனைவிக்கும் பெற்றோராகும் ஒரு புது பொறுப்பு ஏற்படுகின்றது. இப்பொறுப்போடு அவர்களுடைய குடும்ப வாழ்க்கையும் மேலும் இறுக்கமடைகின்றது. கணவன் இப்போது தந்தையாகவும், மனைவி தாயாகவும் மாறுகிறாள். பிறந்த பிள்ளையை நல்ல முறையில் வளர்க்க வேண்டிய ஒரு பெரும் பொறுப்பு அவர்களை வந்தடைகின்றது.

பிள்ளை பெறுதல்

பிள்ளைகளை எப்போது பெற்றுக்கொள்வது? எத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வது? என்ற கேள்விக்கும் நாம் பதிலளித்தாக வேண்டும். தமிழர்கள் மத்தியில் பண்பாடு என்ற பெயரில் இதைப்பற்றிய பல தவறான எண்ணங்கள் உலவி வருவதை நாம் அறிவோம். திருமணமான முதல் வருடமே பிள்ளையில்லாத மனைவியை மலடி என்று பட்டம் கட்டிவிடுவார்கள். இல்லாவிட்டால் அவளுக்கு ஏதோ சரியில்லை என்று ஊர் பேசும். இப்படிப் பேசுவது பொதுவாக கர்த்தரை அறியாத மனிதர்களின் மனப்போக்கு. இத்தகைய எண்ணங்களுக்கு கிறிஸ்தவர்கள் தங்கள் மனத்தில் இடம் கொடுக்கக் கூடாது. பிள்ளையில்லாத மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறு யாரையும் திருமணம் செய்துகொள் என்று மனங்கூசாமல் சொல்லக்கூடியவர்களும் இருக்கிறார்கள். இதெல்லாம் தேவனை அறியாத மக்கள் செய்யும் காரியங்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் இப்படி எண்ணமாட்டார்கள்.

ஒரு குடும்பத்திற்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லாமல்போனால் அதைப் பெண்ணின் தவறாகக் கருதிவிடக்கூடாது. இதற்கு ஆணும் காரணமாக இருக்கலாம். கணவனோ, மனைவியோ யார் இதற்குக் காரணமாக இருந்தாலும் இது கர்த்தர்விட்ட வழி என்று எண்ணி அவர்கள் தொடர்ந்து இணைந்து மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்த வேண்டும். பிள்ளை வேண்டும் என்றால் ஒரு பிள்ளையை தத்தெடுத்துக் கொள்ளலாம். கணவன் மனைவியை விவாகரத்து செய்வதோ அல்லது இதற்காக மனைவியைத் துன்புறுத்துவதோ கர்த்தருக்கு அடுக்காத செயல். இவை கிறிஸ்தவர்கள் செய்யும் காரியங்களல்ல. கிறிஸ்தவர்கள் அல்லாத பெற்றோர்களைக் கொண்டுள்ள கிறிஸ்தவ தம்பதிகளுக்கு அப்பெற்றோர்கள் இத்தகைய தவறான ஆலோசனைகளை வழங்குவது நாம் அறிந்ததொன்றே. இதனால்தான் கிறிஸ்தவ தம்பதிகள் தம் குடும்ப வாழ்க்கையில் வேறு யாரும் தலையிடுவதற்கு இடம் கொடுக்கக் கூடாது. பெற்றோரையும் நம்மைவிடப் பெரியவர்களையும் நாம் மதிக்கத்தான் வேண்டும். ஆனால், நம் குடும்பத்தைக் கெடுத்துவிடக்கூடிய, கிறிஸ்துவுக்கு எதிரான எந்த ஆலோசனையை யார் சொன்னாலும் அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.

எப்போது பிள்ளை பெற்றுக் கொள்வது? திருமணத்திற்குப் பிறகு பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வேதம் போதிக்கின்றது. ஆகவே, திருமணமானதும் உடனடியாகப் பிள்ளை பெற்றுக்கொள்வதில் தவறில்லை. வேதபூர்வமாக நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள் இருந்தால் தவிர அதனைத் தள்ளிப் போடக்கூடாது. எத்தனை பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது? ஒவ்வொருவரும் தங்களுடைய வசதிக்கும், மனைவியின் சரீர சுகத்திற்கும் ஏற்றவிதத்தில் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம். உடல் நலமில்லாத ஒரு குடும்பத் தலைவியால் அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். சரீர நலம் கருதி பிள்ளை பெறுவதை அவர் நிறுத்திக் கொள்ள நேரிடலாம். ஆகவே, எத்தனை பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது என்பதை கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் வேதபூர்வமாக சிந்தித்து தங்கள் வசதிக்கேற்றவாறு தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

மேல் நாடுகளில் இதைக் குறித்த புதிய போதனை ஒன்று சில கிறிஸ்தவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. கர்த்தர் பல்கிப் பெருகு என்று கூறியிருக்கிறார், ஆகவே அதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது என்றும், கர்த்தரை நம்பி ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் பிள்ளைகளைப் பெற்றுத்தள்ள வேண்டும் என்று இவர்கள் போதித்து வருகிறார்கள். தங்கள் சபை மக்களில் குறைந்தளவு பிள்ளைகளை உடையவர்களுக்கு விசுவாசம் போதாது என்று இவர்கள் கூறுகிறார்கள். இத்தகைய எண்ணங்கள் முரட்டுத்தனமானவை. யாருக்கு எத்தனை பிள்ளைகள் இருக்க வேண்டும் என்பதை சபையோ, தனி ஒரு மனிதனோ தீர்மானிக்க முடியாது. ஒவ்வொரு குடும்பமும் கர்த்தரை விசுவாசித்து தங்கள் நிலைமைக்கேற்பவும், வசதிக்கேற்பவும் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களும், உடல் நலம் குறைந்தவர்களும் நம்மத்தியில் இருக்கிறார்கள் என்பதைக் கிறிஸ்தவர்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அதுவும் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், வருமானப்பற்றாக் குறைவாலும் நடக்கும் அட்டூழியங்களான பெண் குழந்தைகளைப் பிறக்குமுன் கருக்கலைப்பு செய்வது, பிறந்த குழந்தைகளை வீதியில் எறிந்துவிடுவது போன்ற செயல்கள் நிகழும் இந்திய நாட்டில் கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது.

குடும்பக் கட்டுப்பாடு

குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைபிடிப்பது சரியா? இதற்காகக் கருத்தடைச் சாதனைங்களைப் பயன்படுத்தலாமா? என்ற கேள்விக்கும் நாம் பதிலளிக்க வேண்டும். சிலர் எக்காரணத்தை கொண்டும் குடும்பக் கட்டுப்பாடு இருக்கக்கூடாது, அதற்கான சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று வாதிடுவர். இவர்கள் தங்கள் வாதத்திற்கு வேதத்தையும் ஆதாரமாகக் காட்டுவர். நல்ல பல கிறிஸ்தவர்கள் இத்தகைய எண்ணங்களைக் கொண்டுள்ளார்கள். இப்படி இலகுவாக பதில் கூறிவிடுவதால் இப்பிரச்சனையைச் சுலபமாகத் தீர்த்துவிட முடியாது. ஏனெனில், வேதம் இதைக் குறித்து அதிகாரத்தோடு நேரடியாகப் போதிக்காமல் பொதுவான போதனைகளை மட்டுமே தருகின்றது.

குடும்பக் கட்டுப்பாடு கூடாது என்று வாதிடுபவர்கள் ஆதியாகமம் 38:8-10ஐ உதாரணமாகக் காட்டுவர்.

ஆதியாகமம் 38:8-10

அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததியுண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான். அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.

ஆனால் இந்த வேதப்பகுதியில் ஓனான் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது தன் தமையனுக்கு சந்ததி உண்டாவதில் விருப்பமின்றித் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான் என்று வாசிக்கிறோம். கர்த்தர் இதன் காரணமாக அவனைத் தண்டித்தார். ஓனான் தன் தமையனுக்கு சந்ததி வராதபடி செய்ததனாலேயே கர்த்தர் அவனைத் தண்டித்ததாக இப்பகுதி போதிக்கிறதே தவிர ஓனான் கடைபிடித்த குடும்பக் கட்டுப்பாட்டு முறைக்காக அல்ல.

லேவியராகமம் 15:16-18

ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக. கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக. இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.

இந்த வசனப்பகுதியின் அடிப்படையில் இந்த விளக்கமே பொருந்துவதாக அமைகிறது. லேவியராகமப் பகுதியில் தீட்டுப்பட்டவர்கள் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி வாசிக்கிறோம். அங்கே இந்திரியம் கழிந்தவன் தண்ணீரில் முழுக வேண்டும் என்றுதான் எழுதியிருக்கிறதே தவிர அவன் பலிகள் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை. இந்திரியம் கழித்ததனால் ஒருவன் தீட்டுப்பட்டவனாக இருக்கிறானே தவிர பாவம் செய்தவனாகிறான் என்று இப்பகுதி போதிக்கவில்லை. உண்மையில் பாவம் செய்பவர்கள் பலிகள் கொடுக்க வேண்டும் என்று லேவியராகம விதிகள் கூறுகின்றன. இவ்வாறு தீட்டுப்பட்டவன் அத்தகைய பலிகள் செய்ய வேண்டுமென்று இப்பகுதி எதிர்பார்க்கவில்லை.

இதனால் குடும்பக் கட்டுப்பாடு செய்வது எச்சூழ்நிலையிலும் தவறானது என்ற வாதத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ரோமன் கத்தோலிக்க மதம் குடும்பக் கட்டுப்பாட்டை எதிர்க்கிறது. அதற்கு அவர்கள் வேதபூர்வமான எந்த விளக்கத்தையும் கொடுப்பதில்லை. இயற்கை விதிகளின் அடிப்படையில் மட்டுமே அவர்கள் இதை எதிர்க்கிறார்களே தவிர வேதபூர்வமாக அல்ல.

குடும்பக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள்

இதைக் குறித்தும் வேதம் வெளிப்படையாக நேரடியான போதனைகளை அளிப்பதில்லை. இதற்காக கிறிஸ்தவர்கள் சமுதாயத்தில் வழக்கில் காணப்படும் எல்லாவகையான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளையும் ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது. வேதத்திற்கு முரணான முறைகளும், சரீரத்திற்கு பாதகம் விளைவிக்கும் முறைகளும்கூட பின்பற்றப்படுவதால் எதையும் தீர ஆராய்ந்து பொதுவான வேதபோதனைகளோடு ஒத்துப்போவதாக இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்த்துப் பின்பற்ற வேண்டும்.

கருக்கலைப்பு செய்வதைக் குடும்பக் கட்டுப்பாட்டு முறையாக சில நாடுகளில் ஏற்றுக் கொள்கிறார்கள. ஆனால் வேதம் அதைக் கொலைக்கு ஒப்பிடுகின்றது. சிசுக் கொலை மலிந்த நம் நாடுகளில் கிறிஸ்தவர்கள் இதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது. கருப்பையில் இருக்கும் சில வாரக் குழந்தை உயிருடன் இருக்கும் முழு ஜீவன் என்பதை அறிவீனத்தால் பலர் உணர்வதில்லை. அதனைக் கருக்கலைப்பு செய்வது உயிரை அழிப்பதாகும். ஜோன் கல்வின், யாத்திராகமம் 21:22-25ற்கு விளக்கம் கொடுக்கும்போது, கருத்தரித்திருக்கும் தாயை ஒருவன் தாக்கி அவளுள் இருக்கும் குழந்தை உயிரிழந்தால் அத்தாயைத் தாக்கியவன் உயிரிழக்க வேண்டும் என்று கூறுகிறார்.

யாத்திராகமம் 21:22-25

மனிதர் சண்டைபண்ணி, கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததினால், அவளுக்கு வேறே சேதமில்லாமல் கர்ப்பம் விழுந்துபோனால் அடிபட்ட ஸ்திரீயின் புருஷன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தக்கதாயும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் தண்டம் கொடுக்கவேண்டும். வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும்.

ஏனெனில் கருவில் இருக்கும் குழந்தை ஜீவனுடன் இருப்பதால் அதை அழிப்பது கொடூரமான கொலையாகும். இது ஒருவனை வயல் வெளியில் கொல்லாமல் அவனுடைய வீட்டிலேயே வைத்துக் கொலை செய்வதற்கு ஒப்பானதாகும். ஆகவே பத்துக் கட்டளையின் ஆறாம் கட்டளையான உயிர்க்கொலை செய்யாதே என்ற கட்டளையோடு இப்பகுதி தொடர்புடையதென்று கல்வின் விளக்குகிறார்.

கருக்கலைப்பு செய்வதை வேதம் உயிர்க்கொலையாகக் கருதுவதால் எக்காரணத்தாலும் கிறிஸ்தவர்கள் அதற்கு உடன்படக் கூடாது. இது பற்றிப் போதகர்கள் தம் சபை மக்களுக்குத் தெளிவாகப் போதிக்க வேண்டும். இதைக் குடும்பக் கட்டுப்பாட்டு முறையாகப் பின்பற்றுவது பெரிய அறிவீனமும், அநியாயமும் ஆகும்.

அடுத்ததாக செயற்கை மலடாக்குதலும் (Sterelization) குடும்பக் கட்டுப்பாட்டு முறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இது நிரந்தரமாக ஒருவருக்கு பிள்ளை பெறும் வாய்ப்பை அழித்துவிடும். ஆண், பெண் இருவரும் இதனை செய்து கொள்கின்றனர். பிறக்கப்போகும் பிள்ளை குறையுள்ளதாகப் பிறந்துவிடும் என்ற காரணத்திற்காகவும், சமுதாய, பொருளாதாரக் காரணங்களுக்காகவும், பிள்ளை பெறுவது பெண்ணுக்கு உயிராபத்தானது என்ற காரணத்திற்காகவும் இம்முறை பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக இந்தியாவில் சமுதாய, பொருளாதார காரணங்களுக்காக தவறியும் பிள்ளை பிறந்துவிடக்கூடாது என்பதற்காக இம்முறை நிச்சயமானது என்று கருதிப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இக்காரணங்கள் எதுவும் மலடாக்குதல் வேதபூர்வமானதா என்ற கேள்விக்குப் பதிலளிப்பதாக இல்லை. கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் அதுவே முக்கியமான கேள்வியாகும். சமூக, பொருளாதாரக் காரணங்களுக்காகவும், வசதிக்காகவும், நாம் எதையும் செய்ய முனையக்கூடாது. முதலில் வேதத்தோடு அவை பொருந்திப் போகின்றனவா என்று ஆராய்ந்து பார்த்து செயல்பட வேண்டும்.

வேதத்தில் மலடுகளைக் குறித்து வாசிக்கிறோம். யூதர்கள் மலட்டுத்தன்மை பெறுவதற்கு அனுமதியில்லை. அதுமட்டுமல்லாமல் உபாகமம் 23:1 இன்படி மலடுகள் ஆராதனைகளில் கலந்து கொள்ளவும் அனுமதியில்லை.

உபாகமம் 23:1

விதையடிக்கப்பட்டவனும், கோசமறுபட்டவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

இதற்குக் காரணம் கர்த்தர் படைத்ததற்கு மாறாக அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டிருப்பதே. பிள்ளை பெறாமையை கர்த்தர் முகச்சுளிப்போடு பார்த்ததோடு (சாபக் கேடாகவும் கருதினார்), மலடாக்குதல் மூலம் கருத்தரியாமல் இருப்பதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

வேறு பல குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் வழக்கில் இருப்பதால் மலடாக்குதல் முறையை கிறிஸ்தவர்கள் நாடாமல் இருப்பது நல்லது என்பதே என்னுடைய கருத்து. மேலும் சிலரின் தன்நம்பிக்கையை இது பாதிக்கக் கூடியது. வேறு சிலருக்கு சரீரக்கோளாறுகளும் இதனால் ஏற்படலாம். ஆகவே பிள்ளை பெறுவதால் ஒருவருக்கு உயிராபத்து ஏற்படும் என்ற நிலையும், வேறு குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் உடல் நலத்திற்கு ஏற்றதல்ல என்றிருந்தாலொழிய செயற்கை மலடாக்கும் முறையை எவரும் நாடுவதை நான் தனிப்பட்ட முறையில் ஏற்றுக் கொள்ளவில்லை. பொதுவாக கிறிஸ்தவர்கள் வேறு குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்துவது நல்லது.

நாம் இங்கே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றித்தான் ஆராய்கிறோமே தவிர குறிப்பாக கருத்தடைச் சாதனங்களைப் பற்றி மட்டுமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் வேதம் நீங்கள் பல்கிப் பெருகுங்கள் என்றுதான் போதிக்கின்றது. ஆதியாகமம் 1:28, “நீங்கள் பல்கிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்” என்று சொல்கிறது. இங்கே பல்கிப் பெருகுவதை வேதம் நம் வாழ்வில் ஓர் ஆசீர்வாதமாகக் குறிப்பிடுகிறது. ஆகவே கர்த்தர் நாமடையும் ஆசீர்வாதமாகக் கருதும் பல்கிப் பெருகுதலை குடும்பக் கட்டுப்பாட்டின் மூலம் வாழ்நாள் முழுதும் தடை செய்து பிள்ளைகள் இல்லாமலிருப்பது வேதத்திற்கு முரணானதாகும்.

சிறந்த பிள்ளை வளர்ப்பு

பிள்ளை வளர்ப்பின் அவசியத்தைக் குறித்தும், அதற்காகப் பெற்றோர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நல்ல ஆலோசனைகளை ஜே, சீ. ரைல் தனது “ஆவிக்குரிய பிள்ளை வளர்ப்பு” என்ற நூலில் வழங்கியுள்ளார்.

ஜோன் சார்ள்ஸ் ரைல் (1816-1900) ஒரு அருமையான பிரசங்கி. இங்கிலாந்தில் சீர்திருத்தவாத பிரசங்கியாக, லிவர்பூலில், இங்கிலாந்து திருச்சபையில் போதகராக இருந்த ரைல் அநேக நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றில் இந்நூலும் ஒன்று. ரைல் இந்நூலில் பிள்ளை வளர்ப்புக்கான பதினேழு சிறந்த அறிவுரைகளை விளக்கமாக வழங்கியுள்ளார். ரைலின் போதனையின்படி பிள்ளைகள் தானாக வளர முடியாது. அவர்களைப் பெற்றோர்கள் பயிற்றுவிக்க வேண்டும். இப்பதினேழு அறிவுரைகளும் பிள்ளைகளை எப்படிப் பயிற்றுவிப்பது என்பது பற்றியே எடுத்துக் கூறுகின்றன.

இன்று அநேக கிறிஸ்தவ பெற்றோர்களுக்கு பிள்ளை வளர்ப்பில் அதிக அனுபவம் இல்லாதிருக்கின்றது. பிள்ளை வளர்ப்பில் அநேகர் பல தவறான செயல்களையும் செய்து வருகிறார்கள். பிள்ளை வளர்ப்பு என்பது ஒவ்வொரு நாட்டிலுமுள்ள பாடசாலைகள், கல்லூரிகளின் பொறுப்பு என்று எண்ணிவருகிறவர்கள்தான் எத்தனைபேர். பிள்ளை வளர்ப்பு பற்றியும் வேதம் போதிக்கின்றதா? என்று கேட்கும்விதத்திலேயே அநேக பெற்றோர்கள் நடந்து வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் பிள்ளை வளர்ப்பு பற்றி அவர்கள் அறியாமலிருப்பதுதான். அதற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்பது போலவே போதகர்களும், திருச்சபைகளும்கூட நடந்து வருகின்றார்கள். இந்நிலைமை மாறவேண்டும். இது மாறவேண்டுமானால் அதற்கு இரண்டு விஷயங்களில் கிறிஸ்தவர்களுக்கு தெளிவு இருக்க வேண்டும்.

(1) முதலாவதாக, கிறிஸ்தவம் என்பது பரலோகத்திற்குப் போவதற்காக கிறிஸ்துவை அறிந்து கொள்வது மட்டும்தான் என்ற தவறான எண்ணத்தை நாம் விட்டுவிட வேண்டும். இந்தவிதத்திலேயே தமிழர்கள் மத்தியில் கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. கிறிஸ்து கொடுக்கும் நித்திய ஜீவனுக்கும் நமது உலகவாழ்க்கைக்கும் தொடர்பில்லை என்பது போலவே பலர் வாழ்ந்து வருகின்றார்கள். இதற்குக் காரணம், இரட்சிப்புப் பற்றிய சரியான போதனை கொடுக்கப்படாததே. ஒருவரை கிறிஸ்து இரட்சிக்கும்போது, அந்நபர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் கிறிஸ்துவின் வேதத்தின் அதிகாரத்திற்குக் கீழ்கொண்டுவர வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கை கிறிஸ்துவின் முழுமையான ஆளுகையின் கீழ் வர வேண்டும். அதன்படி அவனது சொந்த வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் கிற்ஸதுவின் வேத அதிகாரத்தின் கீழ் வரல் அவசியம், கிறிஸ்துவில் நாம் வைக்கும் விசுவாசம் நமது வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும் பாதிக்கின்றது. இந்த உண்மை போதிக்கப்படாததாலும், புரிந்து கொள்ளப்படாததாலுமே இன்று நம்மத்தியில் காணப்படும் கிறிஸ்தவத்திற்கும் நமது குடும்ப வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்புமே இல்லாதுபோல் காணப்படுகின்றது.

(2) இரண்டாவதாக, பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும் என்ற உண்மை பெற்றோர்களுக்கு உறைக்க வேண்டும். அதுவும் அவர்கள் பெற்றோர்களால் வளர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு எழவேண்டும். தங்களுடைய கடமையைத் தட்டிக்கழித்துவிட்டு தாதிகளிடத்திலும்; உறவினர்களிடத்திலும் தங்கள் பிள்ளைகளை வளரும்படி விட்டுவிடும் பெற்றோர்களால் பிள்ளைகளை ஒருபோதும் பயிற்றுவிக்க முடியாது. பெற்றோர்கள் முதலில் இது தங்களுடைய பொறுப்பு என்பதை உணர வேண்டும். ஆகவே, பிள்ளை வளர்ப்பில் அக்கறை காட்டும்படி பெற்றோர்கள் முதலில் திருந்த வேண்டியது அவசியம். தேவன் கொடுத்திருக்கும் இப்பொறுப்பிற்கு அவர்கள் தேவனுக்கு முன் பதில் கூற வேண்டும் என்ற உண்மையையும் அவர்கள் உணர வேண்டும். பணம் வேண்டும். வாழ்க்கையில் வசதி வேண்டும் என்பதற்காக தங்கள் பிள்ளைகளை பூனைக்குட்டிகளைப்போல் அங்கும் இங்குமாக வளரவிடுவது கிறிஸ்தவப் பெற்றோர்கள் செய்யும் காரியமல்ல.

பவுல் எபேசியருக்கு எழுதியுள்ள நிருபத்தில் கூறியுள்ளதை நினைவுகூருங்கள். “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளை கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக (எபேசியர் 6:4) என்று பவுல் கூறுகிறார். சாலமோன் நீதிமொழிகளில், “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து” என்று கூறுகிறார்.

இனி ரைல் எழுதியுள்ள நூலுக்கு வருவோம். இந்நூலில் ரைல் தருகின்ற பதினேழு அறிவுரைகளும் வேதபூர்வமான சிறப்பான அறிவுரைகள். இவற்றைப் பெற்றோர்கள் விசுவாசத்துடனும், கருத்துடனும் பயன்படுத்தினால் தங்கள் பிள்ளைகளை நல்லபடியாக வழிநடத்தியவர்களாவார்கள். இவற்றைப் போதகர்கள் தங்கள் பிரசங்கத்தில் பயன்படுத்தி விளக்கமாக சபைகளில் நிச்சயம் போதித்தல் அவசியம். அத்தோடு தங்கள் சபைக்குடும்பங்கள் இந்நூலை வாசிக்குமாறும் வற்புறுத்த வேண்டும். பிள்ளை வளர்ப்பில் பிரச்சனைகளை சந்திக்கும் குடும்பங்களுக்கு ஆலோசனைகூற இந்நூலைப் போதகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், புதிதாக திருமணம் செய்துகொள்ளவிருப்பவர்களுக்கு போதகர்கள் திருமணம்பற்றி ஆலோசனைகள் கூறும்போது இந்நூலை நிச்சயம் அவர்கள் வாசிக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இறுதியாக, ரைல் கூறும் பதினேழு அறிவுரைகளில் ஒன்றை மட்டும் நான் இங்கே குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். பிள்ளை வளர்ப்பில் அக்கறையுள்ளவர்கள், “உங்களுடைய முன்மாதிரி அவர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை மனதில் கொண்டு அவர்களை பயிற்றுவியுங்கள்” என்று ரைல் கூறுகிறார். “குழந்தைகள் காதுகளினால் கேட்பதைவிட கண்களினால் காண்பவற்றால் அதிகம் கற்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். ஞாபக சக்தியைவிட வலிமையான கொள்கை மற்றவர்களைப்போல நடப்பதாகும். காதால் கேட்பதைவிட, அவர்கள் தங்கள் கண்களால் பார்ப்பவையே அவர்களுடைய வாழ்க்கையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே குழந்தைகளுக்கு முன்னால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்” என்று கூறும் ரைல், “குழந்தைகளுக்கு முன்னால் பாவம் செய்பவன் இரண்டு மடங்கு பாவம் செய்கிறான்” என்பது உண்மையான பழமொழி என்று நினைவுறுத்துகிறார். “குழந்தைகள் எதையும் விரைவாக கவனிப்பார்கள். மாய்மாலமானதை அவர்கள் எளிதில் கவனிப்பார்கள். நீங்கள் உண்மையில் என்ன நினைக்கிறீர்கள், எதை உணர்கிறீர்கள் என்பதை அவர்கள் விரைவில் கண்டுபிடிப்பார்கள். உங்களுடைய வழிகளையும் கருத்துக்களையும் விரைவில் பின்பற்றுவார்கள்; தந்தை எப்படியோ மகனும் அப்படியே என்பதை நீங்கள் பொதுவாகவே காணலாம்.”

ரைலின் இவ்வார்த்தைகள் எத்தனை பொருள் பொதிந்தவை. நாம் என்ன செய்கிறோம், எவ்வாறு வாழ்கிறோம் என்பதில் அக்கறையெடுக்காமல் பிள்ளை வளர்ப்பில் ஈடுபடுவதெப்படி? நமது பிள்ளைகளின் வளர்ச்சியில் பெரும்பங்கு நமது கைகளில் இருக்கின்றது என்பதைப் பெற்றோர்கள் உணரும்வரை அவர்களுடைய பிள்ளைகள் சிறப்பாக, கிறிஸ்துவிற்காக வளரமுடியாது.

© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.