திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

1. வசகர்களே! 
2. பவுலின் சுவிசேஷம்
3. சிந்தித்துப் படிக்கவேண்டிய வேதம்
4. உண்மையாய்ச் சிந்தி, உண்மையைப் பேசு, உண்மையாய் நட
5. அமாநுஷ்ய விளக்கமளிக்கும் அர்த்தமற்ற செயல்
6. ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்பு
7. வசனத்தின் மெய்யான அர்த்தத்தைக் கண்டறிதல்

வணக்கம் வாசகர்களே! இன்னுமொரு இதழைப் பூர்த்தி செய்து உங்கள் முன் படைக்க கர்த்தர் துணை செய்திருக்கிறார். இதழ் பணியில் என்னோடிணைந்து தொடர்ந்து உழைத்து வருபவர்களுக்கு நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

வாசகர்களாகிய உங்களுக்கு இந்த இதழும் இதற்கு முன் வந்திருப்பவை போலவே ஆவிக்குரிய பலன்களை அளிக்க ஜெபத்தோடு அனுப்பி வைக்கிறோம்.

பவுல் ரோமாபுரியில் இருந்த சபைக்கு எழுதிய நிருபம் அவருடைய சுவிசேஷம் என்பதையும், அந்த சுவிசேஷத்தின் அடிப்படைப் போதனை “விசுவாசத்தினால் நீதிமானாக்குதல்” என்பதையும் விளக்கி ஒரு ஆக்கம் இதில் வந்திருக்கிறது. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படும் போதனைக்கு எதிராக அநேக போலிப் போதனைகள் முளைத்தெழுந்திருக்கின்ற வேளையில் இதை மீண்டும் சிந்தித்துப் பார்ப்பது நன்மை பயக்கும்.

இந்த இதழில் சத்திய வேதத்தைப் பற்றிய இன்னொரு ஆக்கம் வந்திருக்கிறது. வேதத்தை விண்ணிலிருந்து விழுந்திருக்கும் அற்புத நூலாகப் பலர் தவறாக எண்ணி வருகிறார்கள். வேதம், மனித மொழிகளில் எழுதப்பட்டு நம்மை வந்தடைந்திருக்கிறதென்ற உண்மையையும், அதன் அடிப்படையில் அதை வாசித்து, சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் இதில் விளக்கியிருக்கிறேன். அத்தோடு, மத்தேயு 5:34-37, யாக்கோபு 5:12 ஆகிய வசனங்களை எவ்வாறு விளங்கிக்கொள்ளுவது என்பது பற்றியும் விளக்கி ஒரு ஆக்கம் வந்திருக்கிறது. வேதவசனங்களுக்கு அமாநுஷ்ய விளக்கமளிக்கும் ஆபத்தை உணர்த்தும் ஒரு ஆக்கமும் உங்களுக்கு உதவும்.

ரேனியஸ் அவர்களின் நாட்குறிப்பின் தமிழ் மொழிபெயர்ப்பின் முதல் தொகுதியை இந்த இதழில் அறிமுகப்படுத்தி, விமர்சித்திருக்கிறேன். அதில் நன்மையானவற்றைப் பாராட்டிக் குறைகளையும் சுட்டியிருக்கிறேன். குறைபாடுகள் நீக்கப்பட்டு இது மறுபடியும் வெளிவருமானால் நல்லது. இத்தகைய விமர்சன விளக்கங்களை இன்று தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் காண்பதரிது. ஆர்த்தர் பிங்கின் வேதவிளக்க விதிமுறைகள் பற்றிய நூலில் இருந்து இன்னுமொரு அதிகாரத்தை இந்த இதழில் மொழியாக்கம் செய்து தந்திருக்கிறோம்.

இத்தனை காலமும் வழிநடத்தி வந்திருக்கும் தேவன் இந்த இதழையும் கவனத்தோடு தயாரித்து உங்கள் முன் படைக்க உதவியிருக்கிறார். எல்லா மகிமையும் அவருக்கே! – ஆசிரியர்

பவுலின் சுவிசேஷம்

– விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் –

பல வருடங்களுக்குப் பிறகு என் சபையில் பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் தொடர் வியாக்கியானப் பிரசங்கம் அளிக்கத் தீர்மானித்திருக்கிறேன்; அதற்கான வாசிப்பிலும் ஈடுபட்டு வருகிறேன்.

பவுலின் நிருபங்களில் தலை சிறந்தது அவர் ரோமருக்கெழுதிய நிருபம் என்று கூறுவதில் தவறில்லை. அற்புதமாகக் கர்த்தர் இந்நூலைப் பலருடைய வாழ்க்கையில் அவர்கள் இரட்சிப்படைவதற்குப் பயன்படுத்தியிருக்கிறார். ஆகஸ்தீன், மார்டின் லூத்தர், ஜோன் பனியன், ஜோன் வெஸ்லி போன்ற பிரபலமானவர்களின் மனந்திரும்புதலுக்கு இந்நூல் காரணமாக இருந்திருக்கிறது.

சமீபத்தில் நண்பர் ஒருவர் எனக்களித்த ஆங்கில நூலொன்றில் ஸ்ரீ லங்கா வேதாகமக் கல்லூரியில் ஒரு காலத்தில் விரிவுரையாளராக இருந்த டெனி மோசஸின் ஓர் ஆக்கத்தை வாசித்தேன். அது ரோமரின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கான விளக்கவுரை. அதில் டெனி மோசஸ் தந்திருந்த ஒரு விளக்கம் எனக்கு வியப்பேற்படுத்தியது. “பவுலின் இறையியலைப் புரிந்துகொள்ள, விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதல் என்ற போதனையே அதன் திறவுகோலாக இருக்கிறது என்பது சீர்திருத்தவாதிகளிடம் இருந்து வந்த பாரம்பரியக் கருத்து. இது மிகவும் குறுகிய பார்வை; அது இரட்சிப்பிற்கான பல்வேறு உருவக அணிகளில் (Metaphor) ஒன்று மட்டுமே. ஏனைய போதனைகளைத் தள்ளிவைத்துவிட்டு இதற்கு மட்டுமே அவர்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்” என்று அவர் எழுதியிருந்தார் (Journal of Lanka Bible College, Vol I, 2017, pg. 10). அத்தோடு, டெனி மோசஸ், பவுலின் இறையியலில் இன்னுமொரு முக்கிய போதனை, “யூதர்களும், புறஜாதியினரும் இணைக்கப்பட்ட வருங்கால புதிய உடன்படிக்கை சமுதாயம்” என்கிறார். இதே ஆக்கத்தில் இன்னொரு இடத்தில் டெனி மோசஸ் இளக்காரமாக, “நீதிமானாக்குதலை அடுத்து பரிசுத்தமாக்குதல் தொடருகிறது என்பதை விளக்குவதற்காக மட்டும் ரோமரில் ஆவியானவரைப் பற்றிச் சொல்லப்படவில்லை . . .” என்றும் எழுதியிருக்கிறார். இருந்தபோதும் வேறொரு பக்கத்தில் ரோமருக்கெழுதப்பட்ட நிருபத்தின் அடிப்படைப் போதனை 1:16-17ல் காணப்படுகிறது என்பதையும் அவர் ஒப்புக்கொள்ளுகிறார் (பக். 13).

டெனியின் இந்தக் குறிப்புகள் எனக்கு முறையானதாகப்படவில்லை. இதை நான் சாதாரணமானதொன்றாகவும் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. மோசஸின் விளக்கம் 16ம், 17ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் அதற்குப் பின் வந்திருக்கும் சீர்திருத்தவாதிகளனைவரினதும் ரோமருக்கான விளக்கங்களை ஓரங்கட்டிவிடுகிறது; தவறானதாகக் காட்டுகிறது. 20ம் நூற்றாண்டுக்குப் பின்வந்த வேதம் பற்றிய இறையியல் பார்வைக்குப் பெயர் நவீனத்துவம் (Modernism). ஆயிரத்தி எண்நூறு ஆண்டுகளாகத் திருச்சபை இந்தவிதத்தில் சிந்தித்ததில்லை! இந்த இறையியல் பார்வை இதற்கு முன் இருந்து வந்திருக்கும் வேதவிளக்கப் பாணியை விட்டு விலகி நவீன விஞ்ஞான, வரலாற்று ஆய்வுகள், பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வேத ஏட்டுச்சுவடுகள், மக்களின் பண்பாடு, நவீனத்துவ இறையியல் சிந்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வேதத்திற்கு விளக்கங்கொடுக்கிறது. இதில் தாராளவாத (Liberal) சிந்தனைகளும் அடங்கும். இந்த நவீனத்துவப் போக்கு வேதத்தின் அதிகாரத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்திருக்கும் நம்பிக்கையைத் தகர்த்துவிடுகிறது. இந்தப் பார்வையே இன்று மேலைநாடுகளில் அநேக இறையியல் கல்லூரிகளைப் பாதித்து வேதம் பற்றிய தாராளவாதப் “புதிய சிந்தனைகள்” உருவாகும் பட்டறைகளாக அவற்றை மாற்றியிருக்கின்றது. இதன் தாக்கத்தைக் கீழைத்தேய நாடுகளில் காணப்படும் பெரும்பாலான இறையியல் கல்லூரிகளிலும் காணலாம்.

சுவிசேஷத்தில் இருந்து நீதிமானாக்குதலைப் பிரிக்கும் பெருந்தவறு

என். டீ. ரைட் (N. T. Wright) போன்றவர்கள், பவுலின் போதனைகள் சீர்திருத்தவாதிகளின், பவுலின் இறையியல் பற்றிய போதனைகளைவிட வேறுபட்டுக் காணப்படுகின்றது என்று கூறி சீர்திருத்தவாதிகளுக்கும், பவுலுக்குமிடையில் ஒரு பிரிவை ஏற்படுத்த முயல்கிறார்கள். “பவுலைப் பற்றிய புதிய கண்ணோட்டம்” (NPP) என்ற இவர்களுடைய மிகத் தவறான நவீன போதனை இந்தக் கைங்கரியத்தைச் செய்திருக்கிறது. என். டீ. ரைட்டின் போதனைகளின் தவறை டீ. ஏ. கார்சன் வெளிப்படுத்தி அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களில் நல்ல பதிலளித்திருக்கிறார். 21ம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் அநேக சீர்திருத்த இறையியலறிஞர்கள் “பவுலைப் பற்றிய புதிய கண்ணோட்டப்” போதனையை நிராகரித்துப் பல நல்ல நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள். இது பற்றி விளக்கும் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த சீர்திருத்த இறையியலறிஞரான சின்கிளேயர் பேர்கசன், “இத்தகைய தவறான இருவகைப் பிரிவை (பவுலின் போதனை, சீர்திருத்தவாதிகளின் போதனை என்று) உருவாக்கியிருக்கிறவர்கள், விசுவாசத்தினால் நீதிமானாக்குதல் என்பது சுவிசேஷமல்ல; அது சுவிசேஷத்தில் உள்ளடக்கமாகக் காணப்படுவது மட்டுமே” என்கிறார்கள் என விளக்கியிருக்கிறார். “நீதிமானாக்குதலில் இருந்து கிறிஸ்துவைப் பிரித்துவிடும் இந்தத் தவறான போதனை, பலனைக் கொடுத்தவரில் இருந்து பலனைப் பிரித்துவிடுகிறது” என்கிறார் சின்கிளேயர். “கிறிஸ்து இல்லாமல் நமக்கு நீதிமானாக்குதல் கிடைப்பதில்லை. அதேநேரம், நீதிமானாக்குதல் இல்லாமல் கிறிஸ்து நமக்குக் கிடைப்பதில்லை” எனும் சின்கிளேயர் ஆணித்தரமாக, “கிறிஸ்துவே சுவிசேஷம்; விசுவாசத்தினால் நீதிமானாக்குதல் சுவிசேஷம் அல்ல, என்று சொல்ல முடியாது” என்கிறார். (https://www.ligonier.org/learn/articles/what-does-justification-have-do-gospel).

மேலே குறிப்பிட்டவற்றை நான் விளக்கியிருப்பதற்குக் காரணம் “பவுலைப் பற்றிய புதிய கண்ணோட்டப்” போலிப்போதனை விசுவாசத்தினால் நீதிமானாக்குதலை சுவிசேஷத்தில் இருந்து அடியோடு பிரித்து சுவிசேஷத்தைக் கலங்கப்படுத்திவிடுகிறது என்பதைக் காட்டுவதற்காக மட்டுமல்லாமல், டெனி மோசஸைப் போல, விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதல் பவுலின் இறையியலின் அடிப்படைப் போதனை என்பதை நிராகரிப்பவர்களும் நவீனத்துவ இறையியல் கண்ணோட்டத்தில் சுவிசேஷத்தின் மதிப்பை அடியோடு குறைத்துவிடுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டத்தான். ரோமருக்கு எழுதிய நிருபத்தில், ஏதோ! பவுல் ஒருக்காலுமே சிந்தித்திராத ஒரு போதனையை சீர்திருத்தவாதிகள் அதில் திணித்து விளக்கியிருக்கிறார்கள் என்ற தோற்றத்தை டெனி மோசஸின் வார்த்தைகள் ஏற்படுத்துகின்றன. புதிது புதிதாக பவுலின் எழுத்துக்களில் இருந்து எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற நவீனத்துவ எண்ணப்போக்கே பவுலைப் பற்றிய புதிய கண்ணோட்டப் போதனைக்கு வழியேற்படுத்தியிருக்கிறது. இத்தகைய எண்ணப்போக்கே டெனி மோசஸின் வார்த்தைகளுக்கும் காரணம்.

பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் “விசுவாசத்தினால் நீதிமானாக்குதலைத்” தவிர வேறு எதையுமே விளக்கவில்லை என்பதல்ல என் வாதம்; டெனி விளக்குவதுபோல் வேறு எத்தனையோ அவசியமான சத்தியங்களும் அதற்குள் அடங்கிக் காணப்படுகின்றன என்பது நமக்குத் தெரிந்ததுதான். இருந்தபோதும், அந்த சத்தியங்கள் அனைத்தும் ரோமருக்கு எழுதப்பட்ட நிருபத்தில், அதன் அடிப்படைப் போதனையோடு (நீதிமானாக்குதல்) தொடர்புடையவையாக, அதிலிருந்து பிரிக்க முடியாத அம்சங்களாகவே விளக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சத்தியங்களை அந்நூலின் அடிப்படைப் போதனையில் இருந்து விலக்கி, அதோடு தொடர்பற்றவையாகவும், வேறு இறையியல் காரணங்களுக்காக அவை ரோமருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் விளக்கப்பட்டிருக்கின்றன என்றும் காட்ட முயல்வது மிகத் தவறான நவீனத்துவ இறையியல் கணிப்பு. வேதத்தின் எந்தப் பகுதியில் காணப்படும் விஷயமும் அது காணப்படும் உடனடிச் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் விளக்கப்பட வேண்டும் என்ற வேதவிளக்க விதி இறையியல் போதிக்கும் டெனி மோசஸுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. இந்த விதியை மீறி விளக்கம் தந்திருக்கிறார் மோசஸ். இதன் மூலம் “பவுலின் இறையியலை” (Pauline Theology) நியாயப்படுத்துவதாகக் கருதி அதைத் திசைதிருப்பியிருக்கிறார் டெனி. பவுலின் இறையியலை விளக்க முயன்ற பிலிப் மெலாங்த்தன் (லூத்தரின் சீடர்) ரோமருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் காணப்படும் பவுலின் தர்க்கரீதியிலான போதனையின் அடிப்படையிலேயே அதை விளக்கியிருக்கிறார். நூலை எழுதியவரின் நோக்கத்திற்கு மாறாக ஒருபோதும் எந்த நூலுக்கும் விளக்கம் கொடுத்தல் ஆகாது.

பவுல் ரோமில் இருந்த சபைக்கு இந்த நிருபத்தை எழுதியபோது, அதை இறையியல் வல்லுனர்களுக்காகவும், முனைவர் பட்டம் பெறப் படிக்கும் ஆய்வாளர்களுக்காகவும் எழுதவில்லை. ரோம சபையில் இருந்த சாதாரண யூத, புறஜாதிக் கிறிஸ்தவர்களுக்காக அதை எழுதினார். அவர்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளையும், ஆத்மீகப் பிரச்சனைகளையும் நன்கறிந்திருந்த பவுல் அந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில் போதகக் கண்ணோட்டத்தில் இந்நூலை எழுதினார். இது ஒரு போதகர் சபை மக்களுக்கு எழுதிய ஆத்மீக ஆலோசனையளிக்கும் நிருபம்; புத்திஜீவிகளுடைய அடங்கா ஆவலுக்கும், ஆய்வுக்கும் தீனிபோடும் எண்ணத்தில் எழுதப்பட்டதல்ல. இறையியல் ஆய்வு என்ற கண்ணோட்டத்தில் இந்நூலுக்கு விளக்கமளிக்கும் நவீனத்துவ விளக்கவுரையாளர்கள் இதை அடியோடு மறந்துவிட்டு பவுலின் அடிப்படை நோக்கங்களுக்கெதிராக நூலுக்கு விளக்கமளிக்கிறார்கள். அதுவே அவர்கள் விடும் பெருந்தவறு. பெருங்கல்விமானும், இறையியல் வல்லுனரும், பன்மொழிப்பாண்டித்தியமும் பெற்றவராகப் பவுல் இருந்தபோதும், சாதாரண கிறிஸ்தவ சமுதாயத்தை மனதில் கொண்டு, அவர்கள் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் புரிந்துகொள்ளும் விதத்தில் இந்நிருபத்தை எழுதியிருக்கிறார். இந்நூலைப் படித்துப் புரிந்துகொள்ளுவதற்கு எவரும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.

ரோமருக்கு எழுதப்பட்ட நூலின் அடிப்படைப் போதனை

16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் வாழ்ந்த காலத்துக்கு நெடுங்காலங்களுக்கு முன் பவுல் ரோமருக்கெழுதிய நிருபத்தை எழுதியிருந்த போதும், “விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்” அந்நிருபத்தின் மிகமுக்கியமான, அடிப்படைப் போதனையாகக் காணப்படுகிறதா, இல்லையா? என்ற கேள்வியை இனி ஆராய்வோம்.

சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர், பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்திற்கு எழுதிய விளக்கவுரையின் அறிமுகப் பகுதியில், “இந்த நூலே புதிய ஏற்பாட்டில் களங்கமில்லாமல் தெளிவான சுவிசேஷத்தை விளக்கும் மிகமுக்கியமான நூல்” (purest gospel) என்று குறிப்பிட்டிருக்கிறார். சீர்திருத்தவாத இறையியலறிஞர்கள் அனைவருமே பவுல் ரோமருக்கு எழுதிய நிருபம் கிறிஸ்தவ சுவிசேஷம் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். இதையே பொதுவாக சுவிசேஷ இயக்க இறையியலறிஞர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். இதில் இவர்களுக்கிடையில் எந்த சந்தேகமும் இருந்தது கிடையாது. பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்திற்கு விளக்கவுரை எழுதிய இங்கிலாந்தைச் சேர்ந்த சீர்திருத்த பாப்திஸ்து போதகரான ஸ்டுவர்ட் ஒலியொட் அதற்குத் தந்திருக்கும் தலைப்பு, “உண்மையான சுவிசேஷம்” (The Gospel as it really is). ரோமரில் அப்போஸ்தலனான பவுல், மிகவும் கவனத்தோடு சுவிசேஷத்தை விளக்கியிருக்கிறார்” என்கிறார் ஆர். சீ. ஸ்பிரவுல். இதைத் தற்கால விளக்கவுரையாளரான டக்ளஸ் மூ தன்னுடைய விளக்கவுரையிலும் ஒத்துக்கொள்கிறார்.

பவுல் ரோமருக்கெழுதிய நூல் சுவிசேஷ நூலாக இருந்ததால்தான், கிறிஸ்தவ வரலாற்றில் பிரபலமான அனேகர் அதன் மூலம் கிறிஸ்துவை அறிந்து விசுவாசித்திருக்கிறார்கள். ஹிப்போவைச் சேர்ந்த ஆகஸ்தீனுக்கு ரோமருக்கு எழுதிய நிருபத்தை வாசித்துத்தான் மனந்திரும்புதல் ஏற்பட்டது. மார்டின் லூதர் அதை வாசித்துத்தான் கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசித்தார். அப்போது லூத்தர், “இதுதான் எனக்குப் பரலோக வாசலைத் திறந்துவைத்தது. அதற்குள் நான் நுழைந்தேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜோன் பனியனுடைய மனந்திரும்புதலுக்கும் ரோமருக்குப் பவுல் எழுதிய நூலே காரணமாக இருந்திருக்கிறது. ஜோன் வெஸ்லி லண்டனில் அல்டர்கேட் எனுமிடத்தில் இந்நூலில் இருந்து அளிக்கப்பட்ட பிரசங்கத்தைக் கேட்டே கிறிஸ்தவ அனுபவத்தை அடைந்தார்.

எது சுவிசேஷம்?

ரோமருக்கு எழுதப்பட்ட நிருபம் சுவிசேஷத்தை அறிவிக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளுகிற நாம், எது சுவிசேஷம்? என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்கமுடியாது. அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும், அருமையானதொரு விளக்கவுரையை ரோமருக்கு எழுதிய டேவிட், என். ஸ்டீல்-கர்டிஸ் சி. தொமஸ் ஆகியோர், “பவுலின் நற்செய்தி, விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதல் (Justification) கிடைக்கின்றது என்பதுதான்” என்று விளக்கியிருக்கிறார்கள். தற்கால இறையியல் அறிஞரான கொர்னேலியஸ் வெனிமா, “சுவிசேஷத்தின் வாக்குத்தத்தத்தை விசுவாசத்தின் மூலம் மட்டும் அரவணைக்கிறவர்களைக் கடவுள் நீதிமான்களாக்குகிறார்; நீதிமான்களாக அறிவிக்கிறார் என்பதே இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் தருகின்ற நற்செய்தி” என்று குறிப்பிட்டிருக்கிறார். இவ்விறையியல் அறிஞர்களின் வார்த்தைகளிலிருந்து சுவிசேஷத்திற்கும் நீதிமானாக்குதலுக்கும் இடையில் காணப்படும் பிரிக்கமுடியாத தொடர்பைப் புரிந்துகொள்கிறோம். அதனால்தான் சின்கிளேயர், “நீதிமானாக்குதலே சுவிசேஷம்” என்று சொல்லியிருக்கிறார்.

சுவிசேஷம் இன்று கொச்சைப்படுத்தப்பட்டுத் தரமற்றுப் பிரசங்கிக்கப்படுவதாலேயே அநேகருக்கு அதில் எப்படி நீதிமானாக்குதல் காணப்படுகின்றது என்ற தடுமாற்றம் இருக்கிறது. பாவத்தைப் பற்றி எதையும் விளக்காத சுவிசேஷச் செய்திகளையே பிரசங்க மேடை முதல் சமூகவலைத்தளங்கள்வரைப் பலரும் அலறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதற்கு மேல் சுவிசேஷத்தைப் பற்றிய அறிவு இல்லை. மேலெழுந்தவாரியாக, எந்தவித இறையியல் போதனைகளுமில்லாமல் உப்புச்சப்பற்ற மூன்றோ, நான்கோ விஷயங்களைத் திரும்பத் திரும்ப வருடம் முழுவதும் சுவிசேஷம் என்ற பெயரில் உளறிக் கொட்டிக் கொண்டிருப்பதற்கு இன்று பெயர்தான் சுவிசேஷப் பிரசங்கம். அதற்கு மாறாக 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் கடவுளைக் கண்டுகொள்ள வேதத்தைத் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தபோது, பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் சுவிசேஷம் எது என்பதை ஆவியின் அனுக்கிரகத்தால் அறிந்து கொண்டார்கள். சுவிசேஷத்தின் அடிப்படைச் செய்தியே நீதிமானாக்குதல்தான் என்பது அவர்களுக்கு ஆணித்தரமாகப் புரிந்திருந்தது. “பவுல் ரோமருக்கு எழுதிய நிருபம் மிகவும் விரிவாகவும், ஆழமாகவும் சுவிசேஷத்தை நமக்கு விளக்குகிறது” என்கிறார் எட்வர்ட் டொனலி.

இது எப்படி? என்று நீங்கள் கேட்கலாம். அதை நான் விளக்கத்தான் வேண்டும். கடவுளிடம் இருந்து நமக்கு வந்திருக்கும் நற்செய்தி எது? தனக்கெதிராகப் பாவம் செய்திருக்கும் மனிதனின் பாவத்திற்கு இயேசு கிறிஸ்து மூலம் கடவுள் நிவாரணம் அளிக்கிறார் என்று சுருக்கமாக அதற்குப் பதிலளிக்கலாம். ஆனால், அத்தோடு நிறுத்திவிட்டால் அது சுவிசேஷம் ஆகாது. கிறிஸ்து மூலம் கிடைக்கும் அந்த நிவாரணம் என்ன? என்ற அடுத்த கேள்வியில்தான் சுவிசேஷத்தின் அடித்தளமே தங்கியிருக்கிறது. அது என்ன? கடவுளுக்கு முன் குற்றவாளியாகத் தண்டனையை எதிர்நோக்கி நிற்கும் பாவியைக் கடவுள் நீதிமானாக்குகிறார்; நீதிமானாக அறிவிக்கிறார் என்பதுதான் அதற்குப் பதில். இதைத்தான் பவுல் ரோமருக்கு எழுதிய நிருபம் விளக்குகிறது. இதுதான் சுவிசேஷச் செய்தி. இதைத்தான் சீர்திருத்தவாதிகள் ரோமரில் ஆவியின் வழிநடத்தலால் கண்டுகொண்டார்கள். இது சீர்திருத்தவாதிகள் ரோமருக்குள் திணித்திருக்கும் அவர்களுடைய சொந்தப் போதனையல்ல; அப்படி எண்ணுகிறவர்களுக்கு சீர்திருத்த வரலாறோ, அதன் இறையியலோ அடியோடு தெரிந்திருக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

நீதிமானாக்குதல்

கடவுள் பாவியை நீதிமானாக்குவதே சுவிசேஷம் என்பதைப் பவுல் எவ்வாறு விளக்கியிருக்கிறார் என்பதை இனி ஆராய்வோம். பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் முதல் அதிகாரத்தில் அந்நூலுக்கான அடிப்படைப் போதனையை விளக்குகிறார். அதன் 16-17 வசனங்களில் அதைக் காணலாம். ரோமருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் இருந்து 12 வருடங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில், இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் செப்பலில் விளக்கவுரை அளித்தவர் மார்டின் லொயிட் ஜோன்ஸ். இவ்வசனங்களைப் பற்றி விளக்கும் டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ், “ரோமருக்கு எழுதிய நிருபத்தை விளங்கிக்கொள்ளுவதற்கு மிக அவசியமான வசனங்கள் இவை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.

இந்த வசனங்களை எழுதுமுன்பே பவுல் 15ம் வசனத்தில் ரோமாபுரியில் இருக்கிறவர்களுக்கு “இயன்ற மட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்” என்று விளக்கியிருக்கிறார். அத்தோடு பவுல் அந்தச் சுவிசேஷத்தைக் குறித்துத் தான் வெட்கப்படவில்லை என்றும், அதுவே விசுவாசிக்கும் எவருக்கும் இரட்சிப்பை அளிக்கும் தேவபலனாக இருக்கிறது என்றும் அழுத்தத்தோடு விளக்குகிறார். அதற்குக் காரணம் அதன் மூலமே தேவநீதி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (ஜோன் மரே). இதிலிருந்து, இரட்சிப்பை வெளிப்படுத்துவதும், தேவநீதியை வெளிப்படுத்துவதும் சமச்சீராகக் காணப்படும் உண்மைகள் என்பதும், இரண்டும் ஒரே கருத்தையே வெளிப்படுத்துகின்றன (ஜோன் மரே) என்றும் தெரிந்துகொள்கிறோம். தேவநீதி வெளிப்படுத்தப்படுவதைப் பற்றிய இந்த வார்த்தைகள் ஆழமான கருத்தைக் கொண்டிருக்கின்றன. வெறும் மனித அறிவுக்குப் புலனாவதை மட்டும் அவை குறிக்கவில்லை. “தேவநீதி ஒரு நடவடிக்கை மூலமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது; நடைமுறையில் இரட்சிக்கும்விதத்தில் அது நிதர்சனமாக வெளிப்படையாக நிகழ்ந்திருக்கிறது” என்கிறார் ஜோன் மரே. பேராசிரியர் மரேயின் இவ்வார்த்தைகள் கிறிஸ்து கல்வாரியில் தன்னைப் பலிகொடுத்ததன் மூலம் நீதிமானாக்குதலை நிறைவேற்றியதைக் குறிக்கின்றன. அதனால்தான் சுவிசேஷம் இரட்சிப்பை அளிக்கும் தேவபலனாக இருக்கின்றது.

16ம் வசனத்தில் பவுல் விளக்கியிருக்கும் அந்தச் சுவிசேஷம் என்ன என்பதைத்தான் 17ம் வசனம் விளக்குகிறது. இந்த இடத்தில் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசன நூலான ஆபகூக்கில் (2:5) இருந்து ஒரு வசனத்தை எடுத்துக்காட்டும் பவுல், “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது” என்று அறிவிக்கிறார். இந்த வசனத்தில் வரும் “விசுவாசம்” என்ற பதம் ஒருவரின் உண்மையான நடத்தையைக் குறிப்பதாக என். டி. ரைட் மிகத்தவறாக விளக்கியிருக்கிறார். எந்த சந்தேகமுமில்லாமல் இந்தப் பதம், நாம் கிறிஸ்துவில் வைக்கவேண்டிய, கடவுளால் ஈவாக நமக்குக் கிடைக்கும் விசுவாசத்தை மட்டுமே குறிப்பிடுகிறது. விசுவாசம் மட்டுமே கிறிஸ்துவை நாம் அடைவதற்கு உரிய நியமமாக இருக்கிறது. அந்த விசுவாசத்தின் மூலமாகவே நாம் கர்த்தருக்கு முன்பாக நீதிமான்களாகிறோம்; அவரால் அவ்வாறாக அறிவிக்கப்படுகிறோம்.

நான் இறையியல் கற்ற காலத்தில் ரோமருக்கான விளக்கவுரையைத் தென் வேல்ஸில் தந்த மதிப்பிற்குரிய ஜோன் குக், “மனிதன் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளத்தக்க விதத்தில் காணப்படுவது அவனது விசுவாசத்திலேயே தங்கியிருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். (ஜோன் குக் அவர்களுடைய, 1980களில் அன்றிருந்த சாதாரண டைப்ரைட்டரில் டைப் செய்யப்பட்ட பவுல் ரோமருக்கெழுதிய நிருபத்தின் விரிவுரைக் குறிப்புகள் இன்றும் என் கையில் இருக்கின்றன. பழுப்பு நிறக் காகிதத்தில் ஒரு பக்கம் மட்டுமே டைப் செய்யப்பட்ட குறிப்புகள் அவை. மிக வயதான காலத்தில் அவர் இன்றும் தென் வேல்ஸில் ஒரு சபைப் போதகராகத் தொடர்ந்திருந்து வருகிறார்.) தேவநீதியை அடைவதற்கு ஆரம்பமுதல் கடைசிவரை அவசியமாக இருப்பது விசுவாசம் மட்டுமே என்பதையும் பவுல் இவ்வசனத்தில் உணர்த்துகிறார். சுவிசேஷத்தின் நோக்கமே தேவநீதியை வெளிப்படுத்துவது என்றும் பவுல் இதில் தெளிவாக விளக்கியிருக்கிறார். இதுவே சுவிசேஷத்தின் அடித்தளம். இப்படியிருக்கும்போது, தேவநீதியை, சுவிசேஷத்தில் இருந்து பிரித்து அதோடு தொடர்பற்றதாகப் பார்க்கிறவர்கள் வேத வசனங்களைப் புரிந்துகொள்ளுவதற்குப் பயன்படுத்தவேண்டிய அடிப்படை விதிகளையே மீறிவிடுகிறார்கள்.

பவுல் தேவநீதியைப் பற்றித்தான் எழுதுகிறாரே தவிர நீதிமானாக்குதல் என்ற பதத்தையே 17ம் வசனத்தில் பயன்படுத்தவில்லையே என்று யாராவது சிந்திக்கலாம். உண்மையில் இந்த வசனங்களில் பவுல் விளக்குகின்ற தேவநீதி நமக்குக் கிடைக்கும்படியாகக் கிறிஸ்துவால் நிறைவேற்றப்பட்டிருப்பதே நீதிமானாக்குதலாகிய செய்கை. கிறிஸ்து நம் பாவத்தையும், நம்மேலிருக்கும் தேவகோபத்தையும் தன்மேல் சுமந்து, நீதிக்கட்டளைகளனைத்தையும் பூரணமாகத் தன் வாழ்வில் நிறைவேற்றிப், பாவத்துக்கான தண்டனையை சிலுவையில் அனுபவித்து நிறைவேற்றிய நீதியை நாமடையும்படியாகத் தன் உயிரைத் தந்திருக்கிறார். அதன் காரணமாகவே, இரட்சிப்புக்காக அவரை விசுவாசிக்கிறவர்கள் கர்த்தரால் நீதிமான்களாகக் கருதப்படுகிறார்கள்; அறிவிக்கப்படுகிறார்கள். இதையே பவுல் ரோமர் 4ம் அதிகாரத்தில் ஆபிரகாமை உதாரணமாகக் கொண்டு விளக்குகிறார். ஆபிரகாமின் விசுவாசம் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதுபோல (4:22), கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற நமக்கும் அது நீதியாக எண்ணப்படும் (4:24) என்கிறார் பவுல். இதுவே கிறிஸ்துவின் நீதிமானாக்குதலாகிய கிரியை. இதைத்தான் ரோமர் 1:16-17 விளக்குகிறது. இந்த இடத்தில் நீதிமானாக்குதலைப் பற்றிப் பவுல் விளக்குகிறார் என்பதைத்தான் அவர் பயன்படுத்தியிருக்கும் தேவநீதி என்ற பதம் விளக்குகிறது.

ரோமருக்குப் பவுல் எழுதிய நூலை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

1. நீதிமானாக்குதலும் அதன் விளைவுகளும் (1-8).

2. யூதர்கள் தற்காலிகமாக விலக்கி வைக்கப்படிருப்பதும், யூதவிசுவாசிகளோடு புறஜாதியினர் இணைக்கப்படுதலும் (9-11).

3. ரோமாபுரியிலிருக்கும் விசுவாசிகளுக்கான ஆறுதல்களும், அவர்களுக்கான தனிப்பட்ட செய்திகளும் (12-16).

இந்த மூன்றில், முழு நூலுக்குமே அத்திவாரமாக அமைவது முதல் எட்டு அதிகாரங்கள்தான். முதல் எட்டு அதிகாரங்களும் நீதிமானாக்குதலைப் பற்றியும் (1-5), நீதிமானாக்கப்பட்டவர்களுக்கான வாழ்க்கையையும் விளக்குகின்றன (6-8). இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், சுவிசேஷத்தையும், சுவிசேஷத்தினால் அடைகின்ற வாழ்க்கையையும் இந்த அதிகாரங்கள் விளக்குகின்றன. இதிலிருந்தே தெரிகிறதல்லவா, சின்கிளேயர் பேர்கசன் சொன்னதுபோல், சுவிசேஷத்தில் இருந்து நீதிமானாக்குதலையோ, நீதிமானாக்குதலில் இருந்து சுவிசேஷத்தையோ பிரிக்கமுடியாதென்று.

இந்நூலின் முதல் எட்டு அதிகாரங்களில் 1-5 வரையுள்ள அதிகாரங்களே கிறிஸ்தவ விசுவாசம் எது, என்பதைத் தர்க்கரீதியிலும், இறையியல்பூர்வமாகவும் விளக்குகின்றன. சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின் சொன்னதுபோல், இந்த அதிகாரங்களே “கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படைச் சத்தியங்களைக் கொண்டிருக்கின்றன.” இவ்வதிகாரங்களின் ஆரம்பத்தில் விசுவாசத்தினால் நீதிமானாக்குதலுக்கான அவசியத்தை விளக்கியிருக்கும் பவுல், அதற்கான விளக்கத்தை 3:21ல் இருந்து கொடுக்க ஆரம்பிக்கிறார். இவை 5ம் அதிகாரத்தில் நிறைவடைகின்றன. இந்த அதிகாரங்கள் அபாரமானவை. அவை தியானத்தோடும், கவனத்தோடும், மெதுவாக வாசித்து சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டியவை.

3:21-31 – சுவிசேஷத்தின் அடித்தளமான விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதலுக்கான விளக்கம்.

4:1-25 – சுவிசேஷத்தின் அடித்தளமான விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதலை அனுபவத்தில் அடைந்த ஆபிரகாமின் உதாரணம்.

5:1-11 – விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதலினால் அடையும் சில ஆசீர்வாதங்கள்.

5:12-21 – விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதலை, கிறிஸ்துவின் இரட்சிக்கும் பணியை ஆதாமின் கண்டனத்துக்குரிய கிரியையோடு ஒப்பிட்டு விளக்குதல்.

பவுலின் தலைசிறந்த எழுத்துக்களில் முதன்மையானது ரோமருக்கு அவரெழுதியிருக்கும் நிருபம் என்று இறையியலறிஞர்கள் கூறியிருப்பதற்கு இந்த அதிகாரங்களில் தன் வாதத்திறமையைப் பயன்படுத்திப் பவுல் விளக்கும் விசுவாசத்தினால் நீதிமானாக்குதலாகிய போதனையே அடையாளமாக இருக்கிறது.

ரோமருக்கு எழுதிய நிருபத்திற்கு அருமையாக விளக்கவுரை அளித்திருக்கிறார் சமீபத்தில் மறைந்துவிட்ட போதகரும், இறையியல் அறிஞருமான எட்வர்ட் டொனலி. அவரை நெடுங்காலம் அறிந்திருக்கும் ஆசீர்வாதத்தையும், அவருடைய போதனைகளை நேரடியாகக் கேட்டிருக்கும் ஆசீர்வாதத்தையும் நான் அடைந்திருக்கிறேன். வேதத்தைத் துல்லியமாகவும், எளிமையாகவும் சிறு பிள்ளைகளும் புரிந்துகொள்ளும்படிப் பிரசங்கிக்கும் திறமையுள்ள வேறொரு பிரசங்கியை நான் அறியேன். டொனலி அவர்கள் ரோமருக்குப் பவுல் எழுதிய நிருபத்தைப் பின்வரும் தலைப்புகளில் விளக்குகிறார். இதில் நீதிமானாக்குதல் அடித்தளமாக அமைந்திருப்பதைக் கவனிக்க மறக்காதீர்கள்.

1:1-17 – அறிமுகம்
1:18-3:20 – மனிதனுக்குத் தேவையான நீதிமானாக்குதல்
3:21-8:37 – கர்த்தர் அளிக்கும் நீதிமானாக்குதல்
9-11 – நீதிமானாக்குதலை ஏற்க மறுக்கும் இஸ்ரவேலர்
12-16 – நீதிமானாக்குதலால் அடைந்திருக்கும் வாழ்க்கையை வாழும் முறை

சீர்திருத்தவாத இறையியலறிஞர்கள் அனைவருமே வெவ்வேறான முறைகளில் ரோமருக்கு எழுதப்பட்ட நிருபத்திற்கான அதிகாரப் பிரிவுகளை விளக்கியபோதும் அவை நீதிமானாக்குதலை அடிப்படையாகவே கொண்டு அமைந்திருப்பதைக் கவனிக்கலாம்.

இந்த வருட இறுதியில் வெளிவரவிருக்கும் ரோமருக்கு எழுதப்பட்ட நூலுக்கான ஒரு நடைமுறை விளக்கவுரை பின்வரும் பிரிவுகளை முன்வைக்கிறது. (ரொப் வென்ச்சூரா தான் எழுதி வெளியிடவிருக்கும் ரோமருக்கான விளக்கவுரையின் அச்சிடப்படாத பிரதியை வாசித்துக் கருத்துத் தெரிவிக்கும்படிக் கேட்டிருந்தார். அதிலிருந்து இந்த அதிகாரப் பிரிவைத் தந்திருக்கிறேன். )

மனிதகுலத்துக்கு அவசியமான தேவநீதி – 1:18-3:20
கிறிஸ்துவில் மட்டும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தேவநீதி – 3:21-3:26
விசுவாசத்தினால் மட்டும் அடையக்கூடிய தேவநீதி – 3:27-5:21
பரிசுத்தமாக்குதலில் அனுபவிக்கக்கூடிய தேவநீதி – 6:1-8:11
மகிமையில் தொடர்கின்ற தேவநீதி – 8:12-8:39
தெரிந்துகொள்ளப்படாத இஸ்ரவேலரால் நிராகரிக்கப்பட்ட தேவநீதி – 9:1-11:36
மனந்திரும்பிய வாழ்க்கையில் நிதர்சனமாகக் காணப்படும் தேவநீதி – 12:1-16:27

விசுவாசத்தினால் நீதிமானாக்குதல் ஏன் நிராகரிப்புக்குள்ளாகிறது?

நீதிமானாக்குதல் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை சத்தியமென்பதை இன்று புரட்டஸ்தாந்து இறையியலறிஞர்களில் சிலரும், சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் பலரும் நிராகரிப்பதற்குக் காரணமென்ன? இறையிலறிஞரான ரொபட் கொட்பிரி சொல்லுவதுபோல், “இது அவர்களில் காணப்படும் ஆவிக்குரிய பிரச்சனை, அதுவும் மிகப் பாரதூரமான ஆவிக்குரிய பிரச்சனை.” வேதம் விளக்குகின்ற அடிப்படை சத்தியங்களான கடவுளைப்பற்றியும், பாவத்தைப் பற்றியும், தேவகோபத்தைப் பற்றியும், தேவநீதியைப் பற்றியும், கிருபையைப் பற்றியும், தேவ சமாதானத்தைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியாமல் அவற்றை எதிர்த்து நிற்பவர்கள் நிச்சயம் ஆவிக்குரிய பிரச்சனைகளை அனுபவித்துக்கொண்டிருப்பவர்களாக மட்டுமே இருக்கமுடியும்.

ரோமரில் காணப்படும் பவுலின் இறையியலில் விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதல் பற்றிய அடிப்படைப் போதனையை மண்ணுக்குள் புதைத்து, அதில் விளக்கப்பட்டிருக்கும் ஏனைய இறையியல் அம்சங்களுக்கு முக்கியத்துவமளித்து விளக்க முனைகிறவர்கள் பவுலின் இறையியலையோ, ரோமருக்கான விளக்கத்தையோ சரியாகப் புரிந்துகொள்ளவில்லை; அல்லது புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அத்தோடு, நீதிமானாக்குதலை சுவிசேஷத்தின் அடித்தளப் போதனையாக அங்கீகரிக்க மறுக்கிறவர்கள் சுயநீதிக்கே வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள். இப்போதனையைப் புரிந்துகொள்ளாமலோ அல்லது அலட்சியப்படுத்தியோ வாழ்கிறவர்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தையும், அதைப்போன்று மனிதனுடைய கிரியைகள் மூலம் கடவுளைக் கண்டுகொள்ள முயலும் ஏனைய மதங்களின் பக்கமே இச்சையோடு தங்களுடைய பார்வையைச் செலுத்தி வருகிறார்கள் என்று மட்டுமே கூறமுடியும்.

விசுவாசத்தினால் நீதிமானாக்குதல் கிறிஸ்தவத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் சொந்தமான இறையியல் போதனையல்ல; அது சுவிசேஷத்தின் உயிர்நாடி; சுவிசேஷத்தின் நாயகனான கிறிஸ்து நமக்காகச் செய்த தெய்வீகக் கிரியை; நீதிமானாக்குதலை உயிர்நாடியாகக் கொண்டிராத சுவிசேஷம் சுவிசேஷமே அல்ல. நீதிமானாக்குதலே சுவிசேஷம் என்ற சின்கிளேயரின் வார்த்தைகள் முற்றிலும் மெய்யானவை.

ஆங்கிலத்தில் ரோமருக்கெழுதிய நிருபத்தை விளக்கும் சில எளிமையான வியாக்கியான நூல்கள்

தமிழில் நல்ல விளக்கவுரை நூல்களை அடைவது அரிது; அத்தகைய நூல்களைத் தரமாகப் பழமைவாத (Conservative), சீர்திருத்தவாதக் கண்ணோட்டத்தில் அளிக்கக்கூடியவர்களும் அரிது. பிரசங்கிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் எளிமையாக விளக்கப்பட்டிருக்கும் சில நல்ல ஆங்கில நூல்களைப் பயன்படுத்த முழு முயற்சி எடுப்பது அவசியம். இது எல்லா வாசகர்களுக்கும் பொருந்தும். ஆங்கிலத்தில் தரமான விளக்கவுரைகள் என்று பொறுக்கியெடுத்தால் அவற்றில் முப்பதுக்கும் குறையாத நூல்களைக் குறிப்பிடலாம். ஆனால், பெரும்பாலானவை பொதுவாக நம்மவர்கள் வாசித்துப் புரிந்துகொள்வதற்கு இலகுவானதும், எளிமையானதும் அல்ல. கீழே நான் தந்திருக்கும் மூன்றும் எளிமையானவை மட்டுமல்ல, திருச்சபை மக்களை நோக்கில் கொண்டு எழுதப்பட்டவை. சாதாரணமாக ஆங்கில வாசிப்புப் பரிச்சயமுள்ளவர்களுக்கு இவை ஒருபோதும் பிரச்சனையாக அமையாது.

  • The Gospel As It really is by Stuart Olyott, Evangelical Press, UK
  • Romans, A Digest of Reformed Comment by Geoffrey B Wilson, The Banner of Truth
  • The Gospel of God by R. C. Sproul

சிந்தித்து படிக்க வேண்டிய வேதம்

கர்த்தரின் வேதத்தைப் பற்றிய மிக விளக்கமான நீண்டதொரு ஆக்கத்தைக் கடந்த இதழில் தந்திருந்தேன். வேதத்தின் மெய்த்தன்மை, அதனுடைய குணாதிசயங்கள் பற்றிய உண்மைகளை அறியாமலேயே வேதத்தைப் பயன்படுத்தி வருகிறவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.

கிறிஸ்தவ விசுவாசத்திற்கு ஆதாரமாக இருந்து, இரட்சிப்புக்கான சுவிசேஷத்தைத் தன்னுள் அடக்கிக் காணப்படும் வேதத்தைப் பற்றிய சத்தியங்களை அறிந்துகொள்ளாமல் அதனால் எப்படிப் பயன்பட முடியும்?

நாம் அன்றாடம் வாசித்து, சிந்தித்துப் பயன்படுத்த வேண்டிய நூல் கர்த்தரின் வேதம். அதை வெறுமனே வீட்டிலோ, கையிலோ வைத்திருந்தால் அதன் மூலம் பலனடைய முடியாது. வேதம் புனிதமானதுதான்; அது கர்த்தரின் சத்திய வார்த்தைகளைக் கொண்டிருக்கும் புனித நூல். இருந்தாலும் அதை வானத்தில் இருந்து நம் கையில் வந்து விழுந்திருக்கும் நூலாகக் கருதிவிடக்கூடாது. வேதத்தின் அத்தனைப் போதனைகளும் கர்த்தரின் வார்த்தைகளாகவும், அவருடைய சித்தமுமாக இருப்பதால்தான் அதைப் புனிதமானது என்கிறோம். அதற்காக வேதத்தை வீட்டின் உட்புறத்தில் ஓரிடத்தில் வைத்து ‘சாமி’யாகக் கருதி அதை வணங்கக்கூடாது. சில சபைகளைச் சேர்ந்த பெண்கள் வேதத்தைத் தூய்மையான வெள்ளை நிறத் துணியில் சுற்றி வீட்டில் வைத்திருப்பார்கள்; அதைத் துணியில் சுற்றிக் கையில் கொண்டு போவதையும் கண்டிருக்கிறேன். அநேகர் வேதத்தில் எந்த அழுக்கும் படாமல், அதன் பக்கங்கள் வாங்கிய காலத்தில் இருந்ததைப்போலப் புத்தம் புதிதாக வைத்திருப்பார்கள். அதன் பக்கங்களில் கோடுகளிடுவதையும், குறிப்புகளை எழுதுவதையும் அவர்கள் பாவமாகக் கருதுவார்கள். இதெல்லாம் வேதத்தைப் பற்றிய ஞானமில்லாமல் பலர் செய்துவரும் பயனில்லாத காரியங்கள். வேதம் பயன்படுத்தப்படுவதற்காகக் கர்த்தரால் கொடுக்கப்பட்டிருக்கிறது; அதுவும் அன்றாடம் வாசித்துப் பக்கங்களில் கைகள்பட்ட அடையாளங்கள் நிறைந்து, கண்ணீர்த்துளிகளால் குளிப்பாட்டப்பட்டிருக்க வேண்டும். அதுவே அந்த வேதநூலால் ஒருவர் பயனடைந்து வருகிறார் என்பதற்கான அடையாளம்.

வேதம் எழுத்தில் தரப்பட்டிருக்கும் முறை அதிசயமானது; அற்புதமானது. மனிதர்களைப் பயன்படுத்திக் கர்த்தர், பரிசுத்த ஆவியின் மூலம் அதை ‘ஊதியருளியிருக்கிறார்‘(God-breathed out). இந்த வார்த்தைப் பிரயோகம், கர்த்தர் தன்னுடைய வார்த்தைகள் உள்ளது உள்ளவாறு, தவறுகளெதுவுமில்லாமல் எழுத்தில் எழுதப்படுவதற்காகச் செய்திருக்கும் அற்புதச் செயலை விளக்குகிறது. இந்தவிதத்தில் உலகத்தில் மனிதர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒரே நூல் கிறிஸ்தவ வேதம் மட்டுமே. இதைத்தான் ஆங்கிலத்தில் ‘Inspiration’ என்ற பதத்தின் மூலம் விளக்குகிறார்கள். அத்தகைய முறையை, எத்தனைப் பெரிய ஆவிக்குரிய நூல்களை எழுத்தில் தந்திருக்கும் பரிசுத்தவான்களின் நூல்கள் அனுபவித்ததில்லை. வேதம் மட்டுமே இத்தகைய முறையில் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.

இனி வேதத்தைப் பற்றிய மூன்று முக்கிய உண்மைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

1. சத்தியவேதம் நாம் வாசித்துப் புரிந்துகொள்வதற்காக மனிதமொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது.

கர்த்தர் சாதாரண மனிதமொழிகளான எபிரேயத்தையும், கிரேக்கத்தையும் பயன்படுத்தித் தன்னுடைய சித்தத்தை எழுத்தில் வார்த்து வேதமாக நமக்குத் தந்திருக்கிறார். இந்த மொழிகள் இரண்டும் அவை எழுதப்பட்ட காலத்தில் மனிதர்கள் பயன்படுத்தி வந்திருந்த மொழிகள். இஸ்ரவேலர் பேசி, எழுதிப் பயன்படுத்திய மொழி எபிரேயம். அதனால் அவர்களோடு பேசித் தனது வெளிப்படுத்தலைத் தந்த தேவன் எபிரேயமொழியில் பழைய ஏற்பாட்டை எழுத்தில் கொடுத்தார். சீனாய் மலையில் மோசேயுடன் பேசிய தேவன் அவனுக்குத் தெரிந்திருந்த எபிரேய மொழியிலேயே பேசினார். இல்லாவிட்டால் மோசேக்கு அது எப்படி விளங்கியிருக்கும்? சிலர் ஆண்டவர் தேவபாஷையில் பேசி மோசே அதைப் புரிந்துகொள்ளும்படிச் செய்தார் என்று மிகத் தவறாக எண்ணிவருகிறார்கள். தேவபாஷையென்று ஒன்றில்லை என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள். மொழி (பாஷை) என்பது மனிதனுக்குக் கொடுக்கப்பட்டது; அதைக் கர்த்தரே மனிதன் பேசிப் பயன்படுத்துபடியாகக் கொடுத்திருக்கிறார். உலகத்தைத் தவிர வேறு இடங்களில் மனிதர்கள் இல்லை; அதனால் மொழிக்கு அந்த இடங்களில் அவசியமில்லாமல் போயிருக்கிறது.

தேவதூதர் பாஷை என்றும் ஒன்றில்லை; அவர்களுக்கு மொழி அவசியமற்றது. ஆபிரகாமைச் சந்திக்க வந்த மூவரும் ஆபிரகாமுக்குத் தெரிந்திருந்த பாஷையில் பேசியிருக்கிறார்கள். மீகாவேல் தானியேலோடு பேசியபோது தானியேலுக்குத் தெரிந்திருந்த மொழியில் பேசியிருக்கிறார். ஆபிரகாமும், தானியேலும் அந்த மொழி தங்களுக்குப் புரிந்திருக்கவில்லை என்று வேதத்தில் நமக்கு அறிவிக்கவில்லை. யோசேப்போடும், மேரியோடும் பேசிய தேவதூதன் அவர்கள் அன்று பயன்படுத்திய அராமிக் (Aramaic) மொழியில் பேசியிருக்கிறார். மனிதர்களுடைய மொழியில் உரையாடும் வல்லமை தேவதூதர்களுக்கு இருந்தது.

1 கொரிந்தியர் 13:1ல் பவுல், “நான் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும்” என்று சொன்னபோது, தனக்கு அன்புகாட்டத் தெரியாவிட்டால் எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும் அதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்றே சொல்லியிருக்கிறார். பவுல் இந்த இடத்தில் “உயர்வு நவிற்சி அணியைப்” (Hyperbole) பயன்படுத்தியிருக்கிறார். அதாவது, மிகைப்படுத்தி எழுதியிருக்கிறார்; இல்லாத ஒன்றை இருப்பதுபோல் விளக்கியிருக்கிறார். இது தெரியாமல் பெந்தகொஸ்தே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் தூதர் பாஷையென்று ஒன்றிருந்ததாகவும், பவுலுக்கு அது தெரிந்திருந்தது என்றும் தவறாக விளக்கி வருகிறார்கள். இதெல்லாம் வேதத்தை எப்படிப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற பக்குவமில்லாததால் ஏற்படும் தவறுகள்.

புதிய ஏற்பாட்டுக் காலத்தில் பொதுவாக மக்களுக்குத் தெரிந்திருந்த மொழி கிரேக்கம். கிரேக்க மொழியும், கிரேக்கக் கலாச்சாரமும் மகா அலெக்சாண்டரினால் அன்றைய ஐரோப்பா, மத்தியகிழக்கு நாடுகள்வரை பரவியிருந்தது. இஸ்ரவேலரும் கிரேக்க மொழியை அறிந்திருந்தனர். அதனால் கர்த்தர் புதிய ஏற்பாட்டை கிரேக்க மொழியில் தந்திருக்கிறார். ஆகவே, அந்தந்தக் காலத்தில் மக்களுக்குப் பரிச்சயமாக இருந்த மொழிகளில் ஆண்டவர் வேதத்தைத் தந்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுகிறோம். இந்த இரண்டு மொழிகளிலும் தரப்பட்டிருக்கும் கர்த்தரின் வெளிப்படுத்தல் பின்னால் ஏனைய மனித மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அனைத்து மக்களும் சத்தியத்தை அறிந்து கர்த்தரை வணங்குவதற்கு அவரவர் மொழிகளில் வேதம் மொழிபெயர்க்கப்பட வேண்டியது அவசியம். அதனால் மொழியாக்கம் செய்யும் கல்வித் தகுதியும், ஆற்றலும், பக்குவமும் உள்ளவர்கள் கூடி உழைத்து வேதமொழிபெயர்ப்புகளை பல்வேறு மொழிகளில் தந்திருக்கிறார்கள். இதுவே கர்த்தரின் சித்தம்.

வில்லியம் டின்டேல் காலத்தில் இங்கிலாந்தில் கத்தோலிக்க மதம் வேதத்தை இலத்தீன் மொழியில் மட்டும் வைத்திருந்து மக்கள் வாசிக்கமுடியாதபடி செய்திருந்தது. அன்று முனைவர் பட்டம் பெற்றிருந்த ஒரு மதகுரு, டின்டேலைப் பார்த்து, “கல்வியறிவில்லாதவர்கள் பயன்படுத்தும் சாதாரண மொழி ஆங்கிலம். இலத்தீன், கிரேக்கம் போன்ற மொழிகளில் மட்டுமே கடவுளின் சத்தியத்தை முழுமையாக விளக்க முடியும்” என்று சொன்னார். அதற்குப் பெரும் கல்விமானாகிய டின்டேல், “ஆங்கிலத்தில் தரமாக வேதத்தை மொழிபெயர்க்க முடியும்; அதைச் செய்தேயாக வேண்டும். சத்தியம் மக்களின் கண்களைத் திறக்கமுடியாதபடி மறைக்கப்பட்டிருக்கிறது. சாதாரண மக்களுடைய மொழியான ஆங்கிலத்தில் வேதம் மொழிபெயர்க்கப்பட்டால் மட்டுமே அவர்களால் அதில் காணப்படும் தெளிவானதும், புரிந்துகொள்ளக்கூடியதுமான கர்த்தருடைய வார்த்தையை வாசித்துப் பயன்பட முடியும்” என்று ஆணித்தரமாகப் பதிலளித்தார். அவர் தன் உயிரையும் பணயம் வைத்து வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். டின்டேலின் மொழியாக்கத்தைத் தழுவியே 1611 ஜேம்ஸ் அரசன் மொழியாக்கம் வெளிவந்தது. இன்று காலத்துக்கேற்றவகையில் வேறு சில தரமான மொழிபெயர்ப்புகளும் வழக்கத்தில் இருக்கின்றன.

வேதம் மனித மொழிகளில் மக்கள் வாசித்து விளங்கிக்கொள்ளும்படியாகத் தெளிவாகவும், துல்லியமாகவும் தரப்பட்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வேதம் ஒரு மாஜிக் நூலல்ல; அதில் சத்தியம் சாதாரண வாசகர்கள் கண்ணுக்குப் புலனாகாதபடி ஒளிந்து காணப்படவில்லை. மக்கள் அன்றாடம் பேசிப்பயன்படுத்தும் மொழியில் அவர்கள் தெளிவாக விளங்கிக்கொள்ளும்படியாக வேதம் பெரும்பாலான உலக மொழிகளில் கர்த்தரின் ஆசீர்வாதத்தால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

2. வேதத்தை எந்தவிதக் குழப்பமுமில்லாமல் விளங்கிக்கொள்ள முடியும்.

அதற்காகவே வேதம் சாதாரண மனித மொழிகளில் தரப்பட்டிருக்கிறது. வேதத்தை மனிதர்கள் ஆவிக்குரிய கண்களோடு வாசித்துப் புரிந்துகொண்டு ஆண்டவரை விசுவாசிக்கக்கூடிய விதமாகவே கர்த்தர் அதைத் தந்திருக்கிறார். அதன் காரணமாகத்தான் சீர்திருத்தவாதிகள் அதன் தன்மையை விளக்குவதற்கு perspicuity (crystal clear) என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு “தெளிவுள்ளது” என்று அர்த்தம். அதாவது வேதம் அது காணப்படும் சாதாரண மனித மொழியில் விளங்கிக்கொள்ளக்கூடிய அளவுக்குத் தெளிவானது. அதில் குழப்பத்திற்கோ, இடறலுக்கோ இடமில்லை. கல்லாதவர்களும்கூட வேதத்தின் அடிப்படைப் போதனைகளான கடவுளைப் பற்றியும், கிறிஸ்துவைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும், கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றியும் எந்தவிதச் சிரமமுமில்லாமல் வேதத்தை வாசித்துத் தெரிந்துகொள்ள முடியும். அதனால்தான் வேதத்தை வாசித்தே ஒருவன் கிறிஸ்துவை விசுவாசிக்க முடியுமென்பதை நாம் விசுவாசிக்கிறோம்.

எந்தவொரு சாதாரண மனிதனும் வேதத்தின் இரகசியங்களைத் திறந்துகாட்டக்கூடிய “சாவி” தன்னிடம் மட்டுமே இருக்கிறதென்று சொல்ல முடியாது; அவ்வாறு சொல்லுகிறவர்கள் பொய்யுரைக்கிறார்கள்; அவர்கள் மனிதர்களை ஏமாற்றுகிறவர்கள். எந்தவொரு சபைப் போதகனுங்கூட வேதசத்தியங்களை மக்கள் தெரிந்துகொள்ளக்கூடிய வல்லமையைத் தனக்கு மட்டுமே ஆண்டவர் கொடுத்திருக்கிறார் என்று கூறமுடியாது. வேதத்தில் சத்தியங்கள் பெருமளவில் காணப்பட்ட போதும் அவை நாம் கண்டுபிடிக்க முடியாதபடி, வித்தை தெரிந்த சிலர் மட்டுமே நமக்குக் காட்டக்கூடிய விதத்தில் ஒளிந்து காணப்படவில்லை. அதாவது, சாதாரண கிறிஸ்தவ விசுவாசி தன் சொந்த மொழியில் வாசித்துக் கண்டுபிடிக்கமுடியாதபடி எந்த இரகசியமும் வேதத்தில் ஒளிந்திருக்கவில்லை.

இந்த உலகத்தைச் சேர்ந்த பாவியான (ஜென்மசுபாவமுள்ள) மனிதனுக்கு ஆவிக்குரிய கண்கள் இல்லாததால் அவனால் வேதத்தை விளங்கிக்கொள்ள முடியாது.

1 கொரிந்தியர் 2:14
ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.

ஆவிக்குரிய கண்களுள்ள சகல விசுவாசிகளும் வேதத்தைத் தங்களுடைய சொந்த மொழியில் வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். சில வேளைகளில் தமிழ் போன்ற சில உலக மொழிகளில் வேதம் தரமானதாக, துல்லியமாக, நுட்பமாக மொழியாக்கம் செய்யப்படாமலிருக்கலாம். இருந்தபோதும் அதன் அடிப்படைப் போதனைகளைப் புரிந்துகொள்ளுவதற்கு அதில் தடையிருக்காது. பெரும்பாலும் உலக மொழிகளில் காணப்படும் தரமான மொழிபெயர்ப்புகள் அனைத்தும் இறையியல் தவறுகள் இல்லாமலேயே கவனத்தோடு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அதனால் கடவுளையும், சுவிசேஷத்தையும், கிறிஸ்துவையும் அறிந்துகொள்ளுவதற்கு எவரும் வேதத்தை முழுமையாக நம்பி வாசிக்கலாம்.

வேதத்தை விளங்கிக்கொள்ள கிறிஸ்தவர்களுக்கு ஆவியானவரின் ஞானமும், தெளிவும் தேவை.

எபேசியர் 1:17
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

யோவான் 16:13-16
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன். நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.

விசுவாசிகள் ஜெபத்தோடு ஆவியானவரில் தங்கியிருந்து வேதத்தை வாசிக்கவேண்டும். தேவன் வேதத்தை விளங்கிக்கொள்ளக்கூடிய ஞானத்தையும், அதில் தெளிவையும் நமக்குத் தருகிறார். அதை எபேசியர்களுக்குக் கொடுக்கும்படி ஆண்டவரிடம் பவுல் ஜெபித்தார். எபேசியர் 1:20ல், எபேசியர்களுக்கு “பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்று” பவுல் ஜெபித்தார். இதை அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஆவியானவரிடம் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆசீர்வாதத்தை அடைந்திருக்கிறார்கள்.

பிரசங்கிக்கும், போதிக்கும் பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகமாக அப்பணியைச் செய்வதற்கான ஆவியின் ஈவும், ஆக்கபூர்வமான இறையியல் பாண்டித்தியமும், சத்தியத்தில் தேர்ச்சியடைவதில் கடின உழைப்பும், சத்தியத்தை நுணுக்கமாகவும், தெளிவாகவும் விளக்குகின்ற ஆற்றலும் தேவைப்படுகிறது. இவர்கள் எபிரேய, கிரேக்க மூல மொழிகளில் பரிச்சயம் அடைவதற்கு அவசியமான ஆங்கிலப்புலமையையும், தங்களுடைய சொந்த மொழியில் தேர்ந்த புலமையையும், வாசிக்கும் அனுபவத்தையும், எழுதும் திறமையையும் பெற்றிருக்க வேண்டும். மற்றவர்களுக்குப் போதிக்கிறவனுக்கு இவையில்லாமல் சத்தியத்தை உண்மையோடும், கருத்தோடும் நிதானித்துப் போதிக்க முடியாது.

3. கர்த்தரின் வேதம் சகல மனித மொழிகளுக்கும் பொதுவான பல்வேறு வகை இலக்கியங்கள் மூலம் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.

சத்திய வேதத்தை நமக்கு எழுத்தில் தந்திருக்கும் கர்த்தர், அதைப் பல்வேறு இலக்கியவகைகளின் மூலமாகத் தந்திருக்கிறார். வரலாறு, தீர்க்கதரிசனம், பாடல்கள், அடையாள மொழி, உரைநடை, உவமையணி, உருவக அணி, உயர்வு நவிற்சி அணி (மிகைப்படுத்தல்), நேரெதிர் பொருள் தரும் சொற்றொடர் (irony) போன்ற பொதுவாகவே சகல மொழிகளுக்குமுரிய வரலாற்று, இலக்கண, இலக்கிய நடைகளில் தந்திருக்கிறார். கர்த்தரின் வார்த்தையான வேதத்தில் சத்தியம் இவற்றின் மூலமாகவே நம்மை வந்தடைந்திருக்கிறது. வேதத்தை வாசிப்பவர்கள் இவற்றைக் கவனிக்காமல் விட்டாலோ, அலட்சியப்படுத்தினாலோ வேதத்தை விளங்கிக்கொள்ள முடியாது. இவற்றை உதாசீனம் செய்தால் சத்தியத்தைத் தவறாகப் புரிந்துகொள்ளுகிற ஆபத்து ஏற்படும். ஆகவே, வேதத்தின் அனைத்து வசனங்களையும் சாதாரணமாகவே ஒரு மொழிக்குரிய அதன் வழமையான வரலாற்று, இலக்கண, இலக்கிய விதிகளின் அடிப்படையில் தெளிவாக ஆராய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டும். இதில் கவனத்தோடு ஈடுபடுகிறபோதே, அதிலிருந்து வெளிவரும் ஆவிக்குரிய செய்தியைத் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். வாழைப்பழத்திற்குள் இருக்கும் பழத்தை, அதன் தோலை உரிக்காமல் சாப்பிட முடியாது. இதைச் செய்வதற்கு எவருமே தயங்கமாட்டார்கள். அதுபோலத்தான், வேதவசனங்களின் சத்தியத்தை அதன் வரலாற்று, இலக்கண, இலக்கியத் தோலை உரித்து அறிந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கிருக்கிறது.

வேதத்தில் ஆவிக்குரிய செய்தி இருப்பதால் அதைப்புரிந்துகொள்ள வரலாற்று, இலக்கண, இலக்கிய ஆய்வுகளெல்லாம் அவசியமில்லை என்ற மிகத் தவறான, குருட்டுத்தனமான எண்ணம் அநேகருக்கிருக்கின்றது. அது அறியாமையின் விளைவாகத் தோன்றியிருக்கும் எண்ணம். உலக மொழிகளில் சாதாரணமான எந்த நூலை வாசித்தாலும் இந்த முறையை நாம் பின்பற்றுகிறோம் என்பதை அவர்கள் உணருவதில்லை. இதற்கு நல்ல உதாரணம் ஜோன் பனியனின் மோட்சப் பயணம். இது ஒரு கிறிஸ்தவ நாவல். கிறிஸ்தவ விசுவாசத்தையும், அதன் மூலம் நாமடையும் கிறிஸ்தவ வாழ்க்கையையும், அதன் அனுபவங்களையும் பல்வேறு கற்பனைப் பாத்திரங்களைப் பயன்படுத்திப் பேசவைத்து, பல்வேறு உவமான, உருவக அணிவகைகளைப் பயன்படுத்தி அடையாளமொழி மூலம் நமக்கு விளக்கியிருக்கிறார் ஜோன் பனியன். அதனால் அவருடைய பாத்திரங்களின் பொருளையும், அணிவகைகளின் பொருளையும் இலக்கண, இலக்கிய ரீதியில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டிய கட்டுப்பாடு இருக்கின்றது. அவற்றைக் கவனத்தோடு செய்தே அந்த நாவல் விளக்கும் சத்தியத்தை நாம் புரிந்துகொள்கிறோம். இது சகலவிதத்திலும் வேதத்திற்கும் பொருந்துகிற உண்மை. ஏனெனில், வேதம் மனிதமொழியில் வரலாற்று, இலக்கிய, இலக்கணப் போர்வையைத் தன்மேல் அணிந்தே நம்மை வந்தடைந்திருக்கின்றது.

இதுவரை மேலே நான் சொன்னவற்றிற்கு வேதத்தில் இருந்து ஒரு சில உதாரணங்களைக் கவனிப்போம். 1 கொரிந்தியர் 14:15ல் பவுல் சொல்லுகிறார்,

இப்படியிருக்க செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.

இந்த வசனத்தை இதற்கு முன் வந்திருக்கும் வசனங்களின் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும். பவுல் சொல்லுகிறார், சபை ஆராதனைக்கு வரும்போது அங்கு நான் செய்யும் செயல்கள் மற்றவர்களுக்கு பக்திவிருத்தி ஏற்படும் வகையில் அமைய வேண்டும் (14:12). அதாவது, நாம் ஜெபித்தாலோ, பேசினாலோ அவை மற்றவர்களுக்குப் புரியும் மொழியில் தெளிவாகக் காணப்பட வேண்டும். ஆகவே, அந்நிய பாஷை (அந்நியமொழி) பேசுகிறவன் தான் பேசியதற்கான அர்த்தத்தைச் சொல்ல முடியாதவனாக இருப்பானானால் அதை அவன் செய்யக்கூடாது; தன்னைக் கட்டுப்படுத்தி அதைப் பேசக்கூடாது. பக்கத்தில் இருப்பவர்களுக்கும் சபையாருக்கும் புரியாத எந்தப் பேச்சையும் பேசக்கூடாது என்கிறார் பவுல். இப்படிச் சொல்லிவிட்டு 15ம் வசனத்தில், உயர்வு நவிற்சி அணி நடையில் (hyperbole – மிகைப்படுத்திச் சொல்லுதல்), நான் எதைப் பேசினாலும் கருத்தோடு மற்றவர்களுக்குப் புரியும்படி மட்டுமே பேசுவேன் என்கிறார். அதுவே அந்த வசனத்துக்குரிய பொருள். அதைப் 16ம் வசனம் மேலும் தெளிவாக்குகிறது. 15ம் வசனத்தில் மொழி இலக்கணத்திற்குரிய உயர்வு நவிற்சி அணி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அலட்சியப்படுத்துகிறவர்கள் அந்த வசனத்தில் பவுல் சொல்லியிருப்பதை நடைமுறையில் செய்ய முயற்சி செய்வார்கள். அப்படிச் செய்வது மடமைத்தனம். ஆவியோடு பாடுவது, கருத்தோடு பாடுவது என்று எதுவுமே இல்லை. இந்த இடத்தில் தவிர வேறு எந்த இடத்திலும் பவுல் இவற்றைக் குறிப்பிடவில்லை. இவை மிகைப்படுத்திச் சொல்லப்பட்ட வார்த்தைகள். இவற்றைச் செய்ய முயற்சி செய்வது முழு முட்டாள்த்தனம்.

இன்னுமொரு உதாரணம் 1 கொரிந்தியர் 14:26.

நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.

இதற்கு முன் அந்நியபாஷைக்கு அர்த்தம் சொல்ல யாருமில்லாவிட்டால் அந்தியபாஷை பேசக்கூடாதென்றும், அதைவிட எல்லோருக்கும் புரியக்கூடிய மொழியில் இருப்பதால் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும் (14:5) என்று விளக்கியிருக்கும் பவுல், இந்த வசனத்தில் கொரிந்து சபையில் இருப்பவர்கள் ஆராதனை வேளையில் செய்துவரும் செயல்களை விபரிக்கிறார் (description). அவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருப்பவைகளைச் செய்கிறார்கள். அதனால் நீங்கள் செய்வது உங்களுக்கே நல்லதாகப்படுகிறதா? என்று கேட்கிறார் பவுல். அத்தோடு ஆராதனைக்கு வந்திருப்பவர்களுக்கு பக்திவிருத்தி ஏற்படும்படி அதற்கு அவசியமானவற்றை மட்டுமே செய்யவேண்டும் என்கிறார். அதனால் பவுல் இந்த வசனத்தில் நாம் இவற்றைச் செய்ய வேண்டும் (prescription) என்று சொல்லாமல், அன்று சபையில் பலர் செய்து வந்த செயல்களால் எவருக்கும் பக்திவிருத்தி ஏற்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். சபையில் செய்யப்படும் செயல்கள் ஒழுக்கத்தோடும், ஒழுங்கோடும் இருக்கவேண்டுமென்பதால் கொரிந்தியர்களின் தவறுகளை இதன் மூலம் பவுல் திருத்துகிறார் (14:40). ஆகவே, ஒரு வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இலக்கியவகையையும், மொழிநடையையும் ஆராய்ந்தறியாமல் அதற்கு விளக்கங்கொடுக்கக் கூடாது.

இந்த முறையில் மொழிக்குரிய இலக்கண, இலக்கியவகை தெரியாமல் இருந்தால் வேதத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு தவறான போதனைகளை உருவாக்குவதும், அவற்றை நம்பி வளருவதும், தவிர்க்கமுடியாத ஆபத்தாக அமைந்துவிடும். அத்தோடு, பவுல் விளக்கும் அந்நிய பாஷை, தீர்க்கதரிசனம் ஆகியவை முதல் நூற்றாண்டோடு முடிந்துபோன விஷயங்கள். அவை நிறைவுக்கு வந்து, அவற்றின் மூலம் தரப்பட்ட வெளிப்படுத்தல் இன்று எழுத்தில் வேதமாகத் தரப்பட்டிருக்கிறது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

அடியோடு படிப்பறிவில்லாதவர்களுக்கு இலக்கணமோ, இலக்கியவகைகளோ தெரியாதே? அவர்களெல்லாம் வேதத்தை எப்படித் தெளிவாகப் புரிந்துகொள்ளுவது? என்று யாராவது கேட்கலாம். ஏற்கனவே நான் விளக்கியிருப்பதுபோல் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் அடிப்படைச் சத்தியங்களைப் புரிந்துகொள்வதில் அவர்களுக்குப் பிரச்சனை இருக்காது. மேலதிக அறிவை அடைவதற்கு அவர்கள் கவனத்தோடு வேதத்தைப் படிப்பதைத் தவிர வேறுவழியில்லை. தமிழைச் சொந்த மொழியாகக்கொண்டிருந்தபோதும் அதை வாசிக்கும் அனுபவமில்லாமலும், இலக்கண, இலக்கிய ஞானமில்லாமலும் வளர்ந்து வரும் நம்மினத்தில் வேத சத்திய ஞானம் மங்கிக் காணப்படுவதில் எந்த ஆச்சரியமுமில்லை.

இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கும், ஏனையோருக்குமாகத்தான் கர்த்தர் திருச்சபையை உருவாக்கி அதில் போதகர்களை அமர்த்தியிருக்கிறார். அதுவும் 1 தீமோத்தேயு, தீத்து ஆகிய நூல்களில் விளக்கப்பட்டிருக்கும் இலக்கணங்களைக் கொண்டவர்களாக மட்டுமே போதகர்கள் இருக்கவேண்டும். அத்தகைய போதகர்கள் ஆவிக்குரியவர்களாகவும், கல்வித்தரத்தையும், வேதத்தை விளக்கும் பாண்டித்தியத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். அவர்களுடைய பணியே வேதத்தை அருமையாக மக்கள் புரிந்துகொள்ளும்படி வாராவாரம் பிரசங்கிப்பதும், போதிப்பதும். அத்தகைய நல்ல போதனைகளை அளிக்கும் சபைகளில் இருக்கிறபோது சபையார் எல்லோருமே வேதத்தில் நல்லறிவு பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதம் கிடைக்கிறது. எனவே, தெளிவானதும், ஆவிக்குரியதுமான வேத போதனைகள் தரப்படும் திருச்சபைகளிலேயே ஆத்துமாக்கள் இருந்து வளர வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது.

உண்மையாய் சிந்தி உண்மையைப் பேசு உண்மையாய் நட

தலைப்பைப் பார்த்தவுடன் காந்தித் தாத்தாவின் மூன்று குரங்கு பொம்மை நினைவுக்கு வருகிறதா? ஆண்டவரை அறியாத பெரியவர் காந்திகூட இந்த விஷயத்தில் நம்மோடு ஒத்துப் போகிறார்.

உண்மையை மட்டுமே கேள், அதை மட்டுமே பார், அதை மட்டுமே பேசு என்கிறது அந்தக் குரங்கு பொம்மை. அதுபற்றியதுதான் இந்த ஆக்கம்.

யாக்கோபு 5ம் அதிகாரத்தில் 12ம் வசனத்தில் பின்வரும் வசனத்தைக் காண்கிறோம்.

விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள்; நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.

இந்த வசனத்தில் விளக்கப்படுவதை யாக்கோபு தன் சகோதரராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ்ந்த காலத்தில் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறார். அதை இந்த இடத்தில் அவர் குறிப்பிட்டு தன் வாசகர்களுக்கு விளக்குகிறார். இந்த வசனத்தில் இருப்பதை மத்தேயு 5:34-37 வரையுள்ள வசனங்களில் இயேசுவின் மலைப்பிரசங்கத்தில் காண்கிறோம்.

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின் பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். பூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய பாதபடி; எருசலேமின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவின் நகரம். உன் சிரசின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.

இயேசு இந்தப் பகுதியில் மேலதிக விளக்கத்தைத் தந்திருக்கிறார். மத்தேயு நிருபம் யாக்கோபு எழுதப்பட்ட பின்பே எழுதப்பட்டிருப்பதால் யாக்கோபு இயேசு விளக்கியதைத் தன் நினைவில் இருந்தே குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வசனங்களில் விளக்கப்பட்டிருப்பது என்ன? அநேகர் இதன் மூலம் இயேசுவும், யாக்கோபுவும் ஒருபோதும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் சத்தியம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். வாசகர்களாகிய நீங்களும் அதையே நம்பிக்கொண்டிருந்தாலும் அதில் எனக்கு ஆச்சரியமில்லை. ஏனெனில், இந்த வசனங்களை மேலெழுந்தவாரியாக வாசிக்கும்போது அப்படித்தான் கண்களுக்குத் தெரிகிறது. அதனால், அநேகர் நியாயஸ்தலத்தில் வேதத்தின் மேல் கைவைத்து சத்தியம் செய்வதையும், எவருக்கும் எந்த வாக்குறுதியளிப்பதையும், இராணுவம், காவல்துறை போன்ற பணிகளில் இணைவதற்கு எடுக்கவேண்டிய வாக்குறுதிகளையும் இந்த வசனங்களின் அடிப்படையில் தங்களுடைய கிறிஸ்தவ விசுவாசத்தைக் காரணமாகக் காட்டி செய்ய மறுப்பார்கள். இவர்கள் செய்வது சரியா? இதைத்தான் இந்த வசனங்கள் விளக்குகின்றனவா?

1. உண்மையில் இந்த வசனங்கள் ஒருபோதும் சத்தியம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. மேலெழுந்தவாரியாக வாசிக்கும்போது அத்தகைய எண்ணத்தை இவை தந்துவிடுகின்றன என்பதை மறுக்கமுடியாது. ஆனால், கவனத்தோடு ஆராய்ந்து பார்த்தால் இவை விளக்கும் விஷயங்களே வேறு என்பதை அறிந்துகொள்ளலாம்.

மத்தேயு 5:34ல் ‘பரிச்சேதம்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது மிகவும் பழமையான கடுந்தமிழ் வார்த்தை. தமிழ் (OV) வேத நூலில் இத்தகைய வழக்கிலில்லாத வார்த்தைகள் நிரம்பி வழிகின்றன. இன்று மறந்தும் எவரும் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை; அநேகருக்கு இதன் அர்த்தம் தெரியாது. இதற்கு எழுத்துபூர்வமாக ‘சிறுபகுதி’ என்று அர்த்தம். கிரேக்க மூலத்தில் இந்த வசனத்தில் ‘me omosai holos’ என்று காணப்படுகிறது. அதைத் தமிழில் ‘அடியோடு சத்தியம் செய்யவேண்டாம்’ என்று மொழிபெயர்க்கலாம். Holos என்பதற்கு, ஒரு சிறிதும், எவ்விதத்திலும், முழுமையாக, எந்தக் காரணத்தைக் கொண்டும், அடியோடு என்ற அர்த்தங்களுண்டு. இந்த வார்த்தை ‘ஒட்டுமொத்தமாக சத்தியம் செய்யாதே’ என்கிறது. இதற்குப் பழங்காலத் தமிழில் 1900களில், இன்று வழக்கில் இல்லாத ‘பரிச்சேதம்’ என்ற கடுந்தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

18ம் நூற்றாண்டு பெப்ரீஸியஸ் மொழிபெயர்ப்பின் காலத்தில் இருந்து இந்த வார்த்தையைத் தொடர்ந்தும் இந்திய வேதாகம சங்கத்தின் OV தமிழ் மொழிபெயர்ப்பு விடாப்பிடியாகப் பயன்படுத்தி வருகிறது. அக்காலத்தில் சார்ள்ஸ் ரேனியஸ் புதிய தமிழ் மொழிபெயர்ப்பின் அவசியத்தை முன்வைத்தார். இருந்தும் அன்றைய மொழிபெயர்ப்புக் கமிட்டி அவரோடு முரண்பட்டு நின்றது. 1859ல் வெளிவந்த சார்ள்ஸ் ரேனியஸின் புதிய ஏற்பாட்டுத் தமிழ் மொழிபெயர்ப்பில் ரேனியஸ் இந்த வார்த்தையை ‘எவ்விதத்திலும்’ என்று நல்ல தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இதிலிருந்து ரேனியஸின் மொழிபெயர்ப்பு பெப்ரீஸியஸின் மொழிபெயர்ப்பைவிடச் சிறந்தது என்பது தெரிகிறது. இருந்தபோதும் தொடர்ந்தும் இந்திய வேதாகம சங்கம் பெப்ரீஸியஸின் காலத்து வார்த்தைகளையே 123 வருடங்களாகப் பழைய திருப்புதலில் பயன்படுத்தி வருகிறது. ரேனியஸின் மொழிபெயர்ப்பை அவர்கள் உதாசீனம் செய்கிறார்கள். மத்தேயு 5:34ல் ‘எவ்விதத்திலும் சத்தியம் செய்யவேண்டாம்’ என்பதே மிகவும் சரியான, சிறந்த எழுத்துபூர்வமான மொழிபெயர்ப்பு.

இயேசு இந்த வசனத்தில் இப்படிச் சொல்லியிருப்பதால், ஒருபோதும் சத்தியம் செய்யக்கூடாது என்ற எண்ணம் அநேகரிடம் காணப்படுகிறது. ஆனால், உண்மையில் இயேசு அந்த அர்த்தத்தில் அதைச் சொல்லவில்லை.; யாக்கோபுவும் அந்த முறையில் விளக்கவில்லை. இந்த வசனங்கள் காணப்படும் முழுப்பகுதியையும் ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே உண்மையைப் புரிந்துகொள்ள முடியும்.

இயேசு இந்தப் பகுதியில் 33ம் வசனத்தில் ‘பொய்யாணையிடாதே’ என்று கூறியிருக்கிறார். அதையே இயேசு இந்தப் பகுதியில் தடைசெய்கிறார். பொய்யாணையிடாமல் உன் ஆணைகளைச் செலுத்து என்பதுதான் இயேசுவின் போதனை. அதையே பூர்வத்தில் நியாயப்பிரமாணமும் விளக்கியிருக்கிறது என்கிறார் இயேசு. அதைத்தான் மேலும் தொடர்ந்து இயேசு 35-37 வரையுள்ள வசனங்களில் விளக்குகிறார். பூர்வத்தில் (பழைய ஏற்பாட்டில்) நியாயப்பிரமாணத்தை வைத்துப் பரிசேயர்கள் போதித்திருப்பதைச் சுட்டிக்காட்டிவிட்டு, இயேசு இப்போது அதற்கான மெய்யான விளக்கத்தைத் தருகிறார். இந்த இடத்தில் இயேசு இப்படிச் செய்வதற்குக் காரணமென்ன? என்று சிந்திக்கவேண்டும். அதற்குக் காரணம் அக்காலத்தில் யூதப் பரிசேயர்கள் நியாயப்பிரமாணத்தின் போதனைகளோடு தங்களுடைய சொந்தப் போதனைகளையும் இணைத்துக் கர்த்தரின் கட்டளைகளை மாசுபடுத்தியிருந்தார்கள். யூதர்களை அவர்கள் தவறான வழியில் வழிநடத்தி வந்திருந்தார்கள். அந்தத் தவறைக் கண்டித்து இயேசு, பொய் சத்தியம் செய்யக்கூடாது என்றும், கர்த்தர் முன் செய்யும் சத்தியங்களைச் சத்தியமாய்ச் செய்யவேண்டும் என்றுதான் இந்த வசனங்களில் விளக்குகிறார்.

பரிசேயர்கள், ஆண்டவரின் பெயரில் மட்டுமல்லாமல், மனிதர்கள் மேலும், எந்தப் பொருட்களைப் பயன்படுத்தியும் சத்தியம் செய்யலாம் என்ற போலித்தனமான முறைகளையும் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். இந்தப் பெயர்களில் சத்தியம் செய்வதற்குத்தான் பரிசேயர்கள் முக்கியத்துவம் தந்தார்களே தவிர செய்யும் சத்தியத்தை உண்மையாய்ச் செய்வதற்கல்ல. பிரபலமான மனிதர்களினதும், இடங்களினதும், பொருட்களினதும் பெயர்களைப் பயன்படுத்தி வாக்குறுதியளிப்பதன் மூலம், அவ்வாறு செய்பவர்கள் தங்களுடைய பொய்யாணைகளையும், வாக்குறுதிகளையும் உண்மையானவை என்று மற்றவர்களை நம்பவைக்கப் பார்க்கிறார்கள். ‘சாமி சத்தியமாக’ செய்வேன் என்று ஒருவன் வாக்குறுதியளிக்கும்போது அவன் தெரிந்திருந்தும் தன் பொய்வாக்குறுதிக்கு கடவுளைப் பயன்படுத்திக்கொள்ளுகிறான். ‘என் மகன் தலையில் வைத்துச் சொல்லுகிறேன், பணத்தைக் கொடுத்துவிடுவேன்’ என்கிறவனும் தான் செய்யமுடியாத ஒன்றைச் செய்வதாக மகனைப் பயன்படுத்தி ஆணையிடுகிறான். இதெல்லாம் பொய்ச் செயல்கள். இயேசு இந்தவிதமான போலித்தனத்தைத்தான் மத்தேயு 5ல் ஆணித்தரமாய்க் கண்டிக்கிறார். அதாவது, போலித்தனமாக, எந்தப் பொருளையோ பெயரையோ பயன்படுத்தியும், எக்காரணத்தைக் கொண்டும் போலிச்சத்தியங்களைச் செய்யாதே என்பதுதான் இயேசுவின் போதனை. அதனால் இயேசுவும், யாக்கோபுவும் ஒருபோதும் ஆணையிடக்கூடாது, சத்தியம் செய்யக்கூடாது என்று இந்த வசனங்களின் மூலம் விளக்கவில்லை.  இருவருமே எடுக்கும் ஆணைகளையும், கொடுக்கும் வாக்குறுதிகளையும் கர்த்தர் முன் உண்மையாய்ச் சிந்தித்துப் பேசிச் செய்யவேண்டும் என்றுதான் விளக்கியிருக்கிறார்கள்.

உண்மை பேசுவதைத் தவிர வேறு எதையும் கிறிஸ்தவன் கனவிலும் நினைத்துப் பார்க்கக்கூடாது என்பதுதான் வேதம் விளக்கும் உண்மை. இதுதான் பத்துக்கட்டளைகளின் மூன்றாவது கட்டளையின் பொருள். “உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்” (யாத்திராகமம் 20:7). கர்த்தரின் பெயரை வீணில் வழங்காதே என்பதற்குப் பெயர், அவருடைய பெயரை வைத்துக்கொண்டு, அவருடைய பிள்ளையாக உன்னை அடையாளங்காட்டிக்கொண்டு (கிறிஸ்தவன்) பொய் வாழ்க்கை வாழாதே என்கிறது மூன்றாம் கட்டளை. அன்றாடம் குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும், சபையாரிடமும், வேலைத்தளத்தில் இருப்பவர்களிடமும் எத்தனை பொய்களைச் சொல்லிப், பொய்யாய் நடந்து உண்மையாய் நடப்பதாய்க் தங்களைக் காட்டிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் தொடர்ந்திருந்து வருகிறார்கள். அனேகருக்கு இது பொய்யாய்த் தெரிவதில்லை; அதுவே அவர்களின் தமிழ்க் கலாச்சாரமாக மாறிவிட்டிருக்கிறது. பிரசங்க மேடையில் சத்திய வசனத்தை உள்ளது உள்ளபடி விளக்காமல், அதன் அர்த்தம் தெரியாமல் விளக்குகிறவனும் இந்தக் கட்டளையை மீறி ஆண்டவருடைய நாமத்தை வீணில் வழங்குகிறான். தான் சொல்லப்போவது சத்தியம் என்று அவன் ஜெபம் செய்து அதை ஆசீர்வதிக்கும்படி ஆண்டவரைக் கேட்கின்ற மகாப் பொய்யன் அந்தப் பிரசங்கி. ஓய்வுநாளில் இந்தவிதத்தில் நடந்துவரும் பிரசங்கியும், சபையும் பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலைப்போல இருதயம் கனத்து நியாயத்தீர்ப்பை எதிர்நோக்கித் திமிரோடு நடந்துவரும் கூட்டம் மட்டுமே. கர்த்தருக்கு இவர்கள் செய்வதைவிடப் பெரிய நம்பிக்கைத் துரோகம் வேறு என்ன இருக்கமுடியும்.

2. மத்தேயு 5:34-37 வரையுள்ள வசனப்பகுதியை முழுமையான ஒரே வசனப்பகுதியாகக் கருதவேண்டும். அதிலுள்ள ஒரு வசனத்தை மட்டும் வைத்து அந்தப் பகுதிக்குப் பொருள் தரக்கூடாது. பொய்யாணையிடுவதைத் தடை செய்யும் ஆண்டவர், எதைச் செய்யவேண்டும் என்பதைத் தெளிவாக 37ம் வசனத்தில் விளக்கியிருக்கிறார். இந்த வசனமே இந்தப் பகுதிக்கான முழுமையான விளக்கத்தைத் தாங்கி நிற்கிறது. இதில், ‘உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள். இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்’ என்கிறார் இயேசு. இதற்கு என்ன அர்த்தம்? இந்த வார்த்தைப் பிரயோகத்திற்கு அர்த்தம், உண்மையைப் பேசுங்கள், அதற்கு மாறானதனைத்தும் தீமையானது என்பதுதான். இந்த வசனத்தில் காணப்படும், ‘இல்லதை இல்லதென்று’ என்று நாம் தற்காலத்தில் எழுதுவதில்லை. இதற்கு ‘இல்லாததை இல்லாததென்று’ என்றுதான் எழுதுவோம். இதன்படி ஆண்டவர், எது உண்மையோ அதை மட்டும் உள்ளது உள்ளபடி சொல்லுங்கள், செய்யுங்கள் என்று விளக்குகிறார். இதற்கு முரணானதனைத்தும் பொய் என்பது இயேசுவின் விளக்கம்.

3. மத்தேயு 5:34-37 பகுதியையும், யாக்கோபு 5:12ஐயும் பயன்படுத்தி, ஆணையிடுவதும், சத்தியம் செய்வதும், வாக்குறுதிகள் அளிப்பதும் முழுத்தவறு என்ற போதனையை 16ம் நூற்றாண்டில் அனாபாப்திஸ்து என்ற இயக்கத்தாரும், அவர்கள் வழியில் வந்து இன்று அமெரிக்காவில் காணப்படும் மெனோனைட் இயக்கத்தாரும், சகோதரத்துவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் விளக்கிவருகிறார்கள். இதன் மூலம் இவர்கள் அரசுக்கு விசுவாசமாயிருப்பேன் என்று ஆணையிடுவதையும், அரச படைகள் மற்றும் காவல்துறைப் பணியில் இணையும்போது ஆணையிடுவதையும், வாக்குறுதியளிப்பதையும் மதரீதியில் விரோதமானது என்று கூறி தவிர்த்து வருகிறார்கள். இவை பற்றி வேதம் இவ்விரு பகுதிகளிலும் விளக்கியிருப்பதை இவர்கள் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதால் இந்தத் தவறைச் செய்கிறார்கள்.

கத்தோலிக்க மதம் இன்னொரு தவறைச் செய்கிறது. ஆணையிடுவதையும், வாக்குறுதியளிப்பதையும் அது போலித்தனமாகப் பயன்படுத்தி, தன்னைச் சார்ந்தவர்களைத் தவறாக வழிநடத்தி வருகிறது. குருமார்கள் திருமணத்தை நிராகரித்து, தனித்துவாழ்வதாகப் பதவிப் பிரமாணம் எடுத்தும், வறுமை வாழ்வை மேலானதாகக் கருதி அவ்வாறு வாழ வாக்குறுதி அளித்தும், கத்தோலிக்கர்கள் தொடர்ச்சியான கீழ்ப்படிவுடன் வாழ்வதாக வாக்குறுதி எடுத்தும், ஆணையிடுவதையும், வாக்குறுதி அளிப்பதையும் போலித்தனமானதாக்குகிறார்கள். இவர்களும் யூதப் பரிசேயர்கள் செய்ததையே செய்து வருகிறார்கள். இத்தனையும் இவர்கள் மானுடர்களாகப் பின்பற்ற அவசியமற்றவை. ஒரு மதகுரு திருமணம் செய்யக்கூடாது என்று வேதம் விளக்கவில்லை. வறுமை வாழ்க்கை கர்த்தருக்கு முன் ஆசீர்வாதமான மேலான வாழ்க்கை என்றும் வேதம் விளக்கவில்லை. தொடர்ச்சியான கீழ்ப்படிவு என்பது ஆவியின் துணையால் மட்டுமே செய்யமுடிந்த ஒரு கிருபை. அப்படி வாழ்வோம் என்று வாக்குறுதி அளிக்கும் ஆவியற்ற கத்தோலிக்கர்கள் தங்களால் முடியாத ஒன்றைச் செய்வோம் என்று பொய் வாக்குறுதி அளிக்கிறார்கள்.

4. மேலே குறிப்பிட்ட போலித்தனமான ஆணைகளையும், வாக்குறுதிகளையும் மதத்தின் பெயரால் செய்து வந்த அனாபாப்திஸ்து மற்றும் கத்தோலிக்க மதங்களுக்கு எதிராகத்தான் 1689 விசுவாச அறிக்கையில் 23ம் அதிகாரம் ‘நீதியான ஆணையிடுதலும், உறுதிமொழிகளும்’ எனும் அதிகாரத்தைத் தந்திருக்கிறது. இவ்வதிகாரத்தின் தலைப்பே நீதியான, உண்மையான ஆணையிடுதலும், வாக்குறுதியளிப்பதும் வேதம் போதிக்கும் உண்மையென்பதை விளக்குகிறது. அனாபாப்திஸ்துகளின் போக்குக் காரணமாக 17ம் நூற்றாண்டு பார்டிகுளர் பாப்திஸ்துகளைப் பலர் தவறாகக் கணித்ததனாலேயே, அவர்கள் அந்தக் குற்றச்சாட்டுக்கு மறுமொழியளிக்கும் விதத்தில் இந்த அதிகாரத்தை வரைந்திருக்கின்றனர். இந்த அதிகாரம் நீதியான முறையில் வழக்கு மன்றத்தில் நீதிபதிக்கு முன் வேதத்தில் கைவைத்து ஆணையிடுவதையும், முக்கியமான ஏனைய சந்தர்ப்பங்களில் வாக்குறுதிகள் அளிப்பதையும் வேதபூர்வமான செயல்களாக விளக்குகின்றன. அத்தோடு, இந்த அதிகாரம் முழுவதும் உண்மையைப் பேசி, உண்மையாய் நடந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும், கர்த்தருக்கு முன் அந்த முறையிலேயே ஆணையிடவும், வாக்குறுதிகள் அளிக்கவும் வேண்டும் என்பதையும் விளக்குகின்றது.

அமாநுஷ்ய விளக்கமளிக்கும் அர்த்தமற்ற செயல்

தற்காலத்தில் வேதப்பிரசங்கங்களில் பெரும்பாலானவை வேதவிளக்க விதிகளைப் பின்பற்றாமல் கொடுக்கப்பட்டு வரும் பிரசங்கங்களாகவே இருக்கின்றன. அதாவது திருச்சபை வரலாற்றில் சபைப் பிதாக்களின் காலத்தில் இருந்ததைப் போல

“ஆவிக்குரியதாக்குதல்” (spiritualising) என்ற முறையைப் பின்பற்றிக் காணப்படுகின்றன. வேதம் ஆவிக்குரிய சத்தியங்களால் நிறைந்திருந்தபோதும், “ஆவிக்குரியதாக்குதல்” எனும் முறை மிகவும் மோசமானது. இம்முறை வேத சத்தியங்களை நாசப்படுத்திவிடும் முறையாகும். இம்முறையை அமாநுஷ்ய விளக்கமளிக்கும் முறை என்றும் கூறலாம்.

ஒரிகன் என்ற சபைப்பிதா ஒரு வேத வசனத்திற்கு நான்கு அர்த்தங்கள் இருப்பதாக விளக்கி அந்த நான்கு அர்த்தங்களையும் தந்திருக்கிறார். இது மிகவும் தவறான முறை. ஏனெனில் சீர்திருத்தவாதிகள் விளக்கியிருப்பதுபோல் வேத வசனத்திற்கு ஒரு அர்த்தம் மட்டுமே உண்டு. அதில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைக் காண முயல்வது சத்தியத்திற்கு முரணான செயல். ஆவிக்குரியதாக்குதல் முறை, வேத வசனத்தில் அதில் வெளிப்படையாக சொல்லப்பட்டிராத, இரகசியமாகப் புதைந்து காணப்படும் ஒரு கற்பனைப் பொருளை நாடிச் செல்கிறது. உண்மையில் ஆவிக்குரியதாக்குதல் முறையின்படி ஒரு வசனத்தில் காணப்படும் அர்த்தம் ஒருபோதுமே அதில் வெளிப்படையாகக் காணப்படாததாகவே இருக்கும்.

அமாநுஷ்ய ஆவிக்குரியதாக்குதலினால் வரும் ஆபத்து

ஆவிக்குரியதாக்குதல் முறையின்படி அதைச் செய்கிறவர்கள் வரலாற்று நிகழ்வுகளுக்கு அமாநுஷ்ய ஆத்மீக விளக்கம் கொடுப்பார்கள். அதேபோல், உவமைகள், உருவகங்கள், அடையாள மொழிநடைகள், உரைநடை போன்ற அனைத்திற்குமே அவர்கள் அமாநுஷ்ய ஆத்மீக விளக்கம் கொடுப்பார்கள். இப்படி விளக்கம் கொடுப்பவர்கள் எல்லோரும் ஒரே முறையைப் பின்பற்றுவதில்லை. ஒரே வசனத்திற்கு வெவ்வேறு வகை ஆத்மீக விளக்கத்தை ஒவ்வொருவரும் கொடுத்து வருவார்கள்.

அமாநுஷ்ய ஆவிக்குரியதாக்குதல் முறை பல ஆபத்துக்களை விளைவிக்கிறது:

1. எழுத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கர்த்தரின் வார்த்தைகளின் மெய்ப்பொருளை அறியமுடியாமல் செய்கிறது.

2. வேதம் தரப்பட்டிருக்கும் இலக்கிய வகைகள் அனைத்தையும் உருவகப்படுத்தி ஆத்மீக விளக்கம் கொடுத்தல்.

3. வேத வசனம் காணப்படும் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் அதை விளக்கி ஆத்துமாவுக்கு விளக்காமல் ஆத்துமாவைத் திசை திருப்பும் ஆபத்து.

4. வேதத்தின் ஆணித்தரமான போதனைகளைத் துவம்சம் செய்துவிடும் ஆபத்து. ஆவிக்குரியதாக்குதலால் எது சரி, எது தவறு என்பதை அறிந்துகொள்ள முடியாது. எது நல்லது, எது கேடானது என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது.

5. வேதத்தை ஒரு அமாநுஷ்ய (mystical) நூலாகப் பயன்படுத்தி ஒருவரின் உணர்ச்சிகளுக்கும், உணர்வுகளுக்கும் ஏற்றபடி விளக்கும் பேராபத்து இது. இதன் மூலம் வேதம் எவ்விதப் பொருளும் இல்லாததாக மாற்றப்படுகிறது. சத்தியத்தை அசத்தியமாக்கும் சாத்தானின் முறை இது.

உண்மையில் ஆவிக்குரியதாக்குதல் என்ற ஒரு முறை வேதத்தில் காணப்படவில்லை. ஆதித் தீர்க்கதரிசிகளோ, இயேசு கிறிஸ்துவோ, அப்போஸ்தலனான பவுலோ, ஏனைய நிருபங்களை எழுதியவர்களோ அத்தகைய முறையைப் பின்பற்றியதில்லை. வேதம் சுட்டிக்காட்டாத இந்த முறை இந்த உலகத்தைச் சேர்ந்த தத்துவஞானிகள் பின்பற்றி வந்த முறை. அதற்கும் சத்திய வேதத்திற்கும் தொடர்பே இல்லை. இதைத்தான் இன்று பிரசங்கிகளில் அநேகர் பின்பற்றிக் கற்றவர்களையும், கல்லாதவர்களையும் இருட்டில் வைத்திருக்கிறார்கள். இத்தகைய முறையைத்தான் கொரிந்தில் இருந்த தத்துவஞானிகள் (தர்க்கசாஸ்திரிகள்) பின்பற்றி வந்தனர். அவர்களைப் பவுல் சந்தித்தபோது, அவர்கள் பவுலிடம் புதிய போதனைகளை எதிர்பார்த்தார்கள். அதாவது, எவருமே இதுவரை கண்டும், கேட்டுமிராத விஷயங்களை எதிர்பார்த்தார்கள். பவுல் விளக்கிய சுவிசேஷம் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அதை மூடத்தனமாக அவர்கள் கருதினார்கள்.

1 கொரிந்தியர் 1:18-21
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேனென்று எழுதியிருக்கிறது. ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.

இதேபோலத்தான் அத்தேனே பட்டணத்தில் இருந்த எப்பிக்கூரரும், ஸ்தோயிக்கரும் புதிய விஷயங்களைப் (நவமான) பவுல் பேசவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.

அப்போஸ்தலர் 17:19-21
அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா? நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம் என்றார்கள். அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.

சாதாரணமாக நாம் வாசிக்கும்போது வேதத்தில் கண்டுகொள்ள முடிந்ததை ஒதுக்கிவிட்டு கண்ணுக்குப் புலப்படாத ஆத்மீக விளக்கமளிப்பவர்கள் தற்காலத்தில் அதைத் தெரிந்தே செய்கிறார்கள்.  அவர்கள் வேதஞானத்தில் வளரவோ, அதில் தேர்ச்சி அடையவோ இல்லை. வேதம் எதிர்பார்க்கும் மெய்யான ஊழிய அழைப்பும், “போதக ஆற்றலும்” (1 தீமோத்தேயு 3) அவர்களிடம் காணப்படாததால் ஆத்துமாக்களின் கண்களுக்குப் புலப்படாத ஒன்றைச் சொல்லி அவர்களை நம்ப வைக்கிறார்கள். இதை இதயமில்லாமலும், தேவ பயமில்லாமலும் தொடர்ந்து செய்து தங்களையும் ஏமாற்றிக்கொள்கிறார்கள். இவர்கள் இதைச் செய்வதற்கு இன்னுமொரு காரணம் போதகப் பணியைத் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதுதான். பணம் சம்பாதிப்பதற்கு நியாயமான வேறு வழிகளில் போவதற்கு இவர்களுக்கு மனதில்லை. இலகுவாக பணம் சம்பாதிக்க ஊழியம் அவர்களுக்குத் துணைபோகிறது.

சமீபத்தில் எங்கள் சபைக்குப் புதிதாக வர ஆரம்பித்திருக்கும் ஒரு பெண்மணி பிரசங்கத்தை அனுபவித்துக் கேட்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தடவையும் அது முடிந்தபின் எனக்கு நன்றி கூறி, அது தன் இருதயத்தைத் தொடுவதாகக் கூறிவருகிறார். அத்தோடு, தான் இதுவரைப் போய் வந்திருந்த சபையில் போதிப்பவர் தான் பேச எடுத்துக்கொண்டிருக்கும் வசனத்தைத் தெளிவாக ஒருபோதுமே விளக்காமல் தவளை தாவுவதுபோல் பல இடங்களுக்குத் தாவிவிடுவார் என்றும், அதனால் எதையுமே தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறினார். இந்தப் பெண்மணிக்கு அத்தகைய தவறான பிரசங்கியிடம் இருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. ஆனால், கோடிக்கணக்கான ஆத்துமாக்கள் அமாநுஷ்ய ஆவிக்குரியதாக்குதலாகிய வேதவிளக்க முறைக்குப் பலியாகித் தொடர்ந்து அழிந்துவருகிறார்கள்.

அமாநுஷ்ய விளக்கமளித்தலும், ஆவிக்குரிய பயன்பாடுகளும்

ஆவிக்குரிய அமாநுஷ்ய விளக்கமளித்தலுக்கும், பிரசங்கத்தில் இருந்து ஆவிக்குரிய பயன்பாடுகளை விளக்குவதற்கும் பெரும் வேறுபாடிருக்கிறது.  ஆவிக்குரிய பயன்பாடுகள் எப்பொழுதுமே எழுத்துபூர்வமானதாகக் காணப்படும். அதாவது, ஆவிக்குரிய பயன்பாடுகள் கற்பனைமயமானதல்ல; கண்களுக்குப் புலப்படாத, கண்டுகொள்ள முடியாத, உணரமுடியாத, உருவமற்ற அமாநுஷ்யமானவையல்ல.

ஆவிக்குரிய பயன்பாடு எவ்வாறு எழுத்துபூர்வமானதாக அமைய முடியும்?

வேதவசனங்களிலிருந்து பெறப்படும் ஆவிக்குரிய பயன்பாடுகள், அந்த வேதப்பகுதியில் காணப்படும் வார்த்தைகள், அப்பகுதியின் இலக்கியவகை, அப்பகுதியில் வரும் நபர்கள் மற்றும் அப்பகுதியில் கர்த்தர் நல்லதெது, கேடானதெது என்று விளக்கும் உண்மைகள் ஆகியவற்றால் கட்டப்பட்டுக் காணப்படும். அதாவது, அவற்றை மீறி அமைந்தவையாக இருக்காது. சுருக்கமாகச் சொன்னால், ஆவிக்குரிய பயன்பாடுகள் கர்த்தரின் எழுத்துபூர்வமான வார்த்தைகள் காணப்படும் சந்தர்ப்பத்தை ஒருபோதும் மீறி அமையாது; அமாநுஷ்ய ஆவிக்குரியதாக்குதலே அதை மீறும். வேதத்தை எழுத்துபூர்வமாகப் பயன்படுத்த மறுப்பவர்களே அதை அமாநுஷ்ய ஆவிக்குரியதாக்கும் செயலில் ஈடுபடுவார்கள். இம்முறை 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளின் காலத்தில் பரவலாக இருந்தது. அதன் காரணமாகத்தான் சீர்திருத்தவாதிகள் வேதத்தை எழுத்துபூர்வமாக மட்டுமே விளக்கவேண்டும் என்றும், அதற்கு ஒரு அர்த்தம் மட்டுமே உண்டு என்றும் ஆணித்தரமாக விளக்கிவந்தார்கள்.

ஒரு வசனத்தை எழுத்துபூர்வமாக அது காணப்படும் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் மொழிக்குரிய இலக்கிய, இலக்கண விதிகளைப் பயன்படுத்தி அதன் மெய்யான அர்த்தத்தைத் தெளிவாகக் கண்டுகொண்ட பின்பே அதிலிருந்து அது தரும் எழுத்துபூர்வமான பயன்பாட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவே சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியவர்களும் போதித்திருக்கும் வேதவிளக்க முறை.

எழுத்துபூர்வமான பயன்பாடுகள் வேதத்தை எழுத்துபூர்வமானதாகக் கணிப்பதனால் பெறப்படுபவை; அமாநுஷ்ய ஆவிக்குரியதாக்குதல் வேதத்தை எழுத்துபூர்வமானதாகக் கணிக்க மறுக்கும் வெறும் கற்பனை மட்டுமே.

வேதத்தை எழுத்துபூர்வமாகக் கணித்து விளங்கிக்கொள்வதற்கு திருமறைத்தீப இதழ்களில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் சீர்திருத்த பாப்திஸ்து பெரியவரான மறைந்த ஆர்த்தர் பிங்கின் வேதத்தை விளக்கும் முறை பற்றிய ஆக்கங்கள் உங்களுக்கு உதவும். கர்த்தரின் வேதத்தை எப்படி விளங்கிக்கொள்ள வேண்டும், அதிலிருந்து விளக்கமளிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாமல் ஒருவன் ஆவிக்குரியவனாக, கர்த்தருக்கு விசுவாசமுள்ளவனாக ஊழியப்பணியில் தொடர முடியாது. அதேவேளை, அதில் கவனம் செலுத்தாத ஆத்துமாவும் கிறிஸ்தவ வாழ்க்கையில் முடமானவனாகவே வாழ்ந்து வருவான்.

ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்பு

தொகுதி 1 – நூல் மதிப்பீடு

நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸைப் பற்றிய ஆக்கத்தை நான் எழுதிக்கொண்டிருந்தபோது அவரது நாட்குறிப்பை ஆங்கிலத்தில் அவருடைய மகன் தொகுத்திருந்தது பற்றி அறிந்தேன்.

அதைக் கணனியில் இருந்து பதிவிறக்கம் செய்து வாசித்த பின் என் ஆக்கத்தைத் திருமறைத்தீபத்தில் வெளியிட்டிருந்தேன். அது வெளிவருவதற்கு முன், ரேனியஸின் நாட்குறிப்பு தமிழில் வெளியிடப்பட்டிருப்பதாக நண்பர் தேவராஜ் சொன்னதால், அவருடைய துணையோடு அதைப் பெற்றுக்கொண்டேன். அது மூன்று பாகமாக வெளிவந்திருக்கிறது. முதலாவது தொகுதி 2016ல் வெளியிடப்பட்டிருக்கிறது. உன்னத சிறகுகள் என்ற பதிப்பகம் அதை வெளியிட்டது. இதைத் தொகுத்தவர் ஜெபக்குமார் என்ற இளைஞர் என்றும், அவர் ஐக்கிய அரபு குடியரசில், அபுதாபியில் வாழ்கிறார் என்றும் அறிந்துகொண்டேன். இதை மொழிபெயர்த்தவர் வினோலியா. வேறு சிலரும் அவருக்கு மொழிபெயர்ப்பில் துணையாக இருந்திருக்கிறார்கள்.

இதுவரை நாட்குறிப்பின் முதலாம் தொகுதியை மட்டும் வாசித்து முடித்திருக்கிறேன். அது 464 பக்கங்களைக் கொண்டது. நம்மவர்களில் பலருக்கு அத்தனை பக்கங்களா? என்று கேட்டு மூச்சு வாங்கும். முதலில், இதைத் தொகுத்தளித்திருக்கும் ஜெபக்குமாருக்கு என் பாராட்டுக்கள். கிறிஸ்தவர்கள் மத்தியில் எவரும் இதைச் செய்யத் தயங்கியிருப்பார்கள். வரலாற்று, இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே அதில் ஈடுபடுவார்கள்; அவர்கள் மட்டுமே இதைப் பொறுமையோடு வாசிப்பார்கள். இந்நாட்குறிப்பை ஆங்கிலத்தில் தொகுத்தளித்த ரேனியஸின் மகன் இன்று உயிரோடிருந்திருந்தால் ஆனந்தப்பட்டிருப்பார். ரேனியஸின் பெயரைக்கூடப் பயன்படுத்தத் தயங்கி, அவரது வரலாற்றை மறைக்கடிக்க முனைகிற தென்னிந்திய திருச்சபை உட்பட்ட ஆங்கிலேய திருச்சபையின் குட்டை இந்த நாட்குறிப்பு பகிரங்கப்படுத்துகிறது. இதன் மூலம் மட்டுமே ரேனியஸின் அருட்பணிகள் பற்றிய அவரது சொந்தக் கருத்துக்களையும், அவரைச் சுற்றி உருவாகியிருந்த திருச்சபைப் பிரச்சனைகளுக்கான காரணங்களையும், அவரது மகத்துவமான சுவிசேஷம் மற்றும் திருச்சபைப் பணிகள் பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இதை நான் ஏற்கனவே திருமறைத்தீபம் இதழில் வந்த என் ஆக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.

இம்முதல் தொகுதி, ரேனியஸ் அருட்பணி செய்வதற்கு முடிவெடுத்து பெர்லினில் இறையியல் கல்லூரியில் இணைந்ததில் ஆரம்பித்து அவர் இந்தியாவில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வந்திறங்கி, திருச்சபை அருட்பணி சங்கத்தின் (CMS) அருட்பணியாளராகச் சென்னையில் இருந்து அதன் சுற்றுப்புறங்களில், இன்றைய ஆந்திரா, தெலுங்கானா எல்லைகள்வரைப் பிரயாணம் செய்து ஐந்து வருட காலத்துக்குள் (1814-1819) செய்திருந்த பணிகளை விளக்குகிறது. இதெல்லாம் அவர் திருநெல்வேலிக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக நிகழ்ந்த அருட்பணிகள். இக்காலத்தில் அவரோடு இணைந்து பணியாற்றிய உற்ற நண்பரான பெர்னாட் ஸ்மித், இந்திய கிறிஸ்தவர்களான அப்பாவு, சாந்தப்பன் போன்ற அருமையான மனிதர்களைப் பற்றியும் இத்தொகுதியிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

இவ்வாக்கம் இந்தத் தொகுதிக்கான மதிப்பீடாக இருந்தபோதும், இம் முதல் தொகுதியில் காணப்படும் ரேனியஸ் பற்றிய சில முக்கிய அம்சங்களைக் குறிப்பிடாமல் இருந்துவிட முடியாது. ரேனியஸின் அருட்பணியின் ஆரம்ப காலத்திலேயே கர்த்தர் அவரை அற்புதமாகப் பயன்படுத்தியிருப்பதை நாட்குறிப்பு விளக்குகிறது. தரங்கம்பாடியில் இரண்டு வருடங்களுக்குக் குறைந்த காலத்தில் தமிழைக் கற்று, சென்னை திரும்பிய இந்த ஆரம்ப காலத்தில் தன் பேச்சுத் தமிழ் மிக மோசமாக இருந்தது என்று கூறும் ரேனியஸ், காலம் போகப்போக தமிழில் சரளமாகப் பேசிப் பிரசங்கித்திருக்கிறார். அவருக்குத் தெலுங்கு மொழியிலும் பரிச்சயம் இருந்தது.

ஒரு அருட்பணியாளனுக்கு (மிஷனரி) தான் பணி செய்யும் இன மக்களுடைய மதம், சமூக வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றில் நல்லறிவு இருப்பது அவசியம். ரேனியஸ் அவற்றையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கற்றுத் தேர்ந்திருந்தார். இத்தொகுதியில் இந்து மதத்தைப் பற்றிய அவருடைய விளக்கத்தைக் காணலாம் (பக். 106). காஞ்சிபுரம் பகுதியில் அதிகமாக வசித்து வந்த ஜெயின் மதத்தைச் சார்ந்தவர்களிடம் அவர் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தார். அந்த மதத்தையும், அதன் நம்பிக்கைகளையும் ரேனியஸ் நாட்குறிப்பில் விளக்குகிறார். ஜெயின் மதத்தவர்களோடு அவர் நடத்தியிருக்கும் சுவிசேஷ உரையாடல்களை இந்தத் தொகுதி பல இடங்களில் விளக்குகிறது.

இத்தொகுதி மூலம் அவருடைய சுவிசேஷப் பணியின் சிறப்பை நாம் அறிந்து கொள்கிறோம். பவுலைப் போல நகரங்கள், கிராமங்களென்று அன்றைய பிரிட்டிஷ் சென்னைப் பட்டிணப் பகுதிகளெல்லாம் பிரயாணம் செய்து ரேனியஸ் சுவிசேஷத்தை அறிவிப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தது மட்டுமல்லாமல், அதில் ஆவியின் அளவற்ற ஆசீர்வாதத்தையும் பெற்றிருந்தார். கிராம, நகர்ப்புறங்களில் சந்தித்தவர்களுக்கெல்லாம் இயேசு கிறிஸ்து இலவசமாகத் தரும் இரட்சிப்பை அவர் விளக்கியிருக்கிறார். பிராமணர்களும், ஜெயின் மதத்தவர்களும், அரச குடும்பத்தாரும், தாழ்த்தப்பட்ட மக்களும் அவரிடம் எந்தவித தயக்கமும் இல்லாமல் சரளமாகப் பேசி சுவிசேஷ உண்மைகளைக் கேட்டுப் பயனடைந்திருக்கிறார்கள். ரேனியஸ் அதிகம் வினாவிடை முறையைப் பயன்படுத்தி சந்திக்கிறவர்களிடம் கேள்விகளைக் கேட்டு வழிநடத்திப் பாவத்தைப் பற்றியும், கிறிஸ்துவைப்பற்றியும் உணரவைத்திருக்கிறார். சிலரோடு நிகழ்ந்த அத்தகைய வினாவிடை உரையாடல்களை இத்தொகுதியில் காணலாம். இந்து, மற்றும் ஜெயின் மதத்தவர்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களுக்கும் அவர் சுவிசேஷத்தை அறிவித்திருக்கிறார். ரேனியஸின் சுவிசேஷப் பணியில் எந்தவிதமான போலித்தனமும் காணப்படவில்லை. மக்களுடைய கஷ்ட நிலையைப் பயன்படுத்திப் பிணிதீர்க்கும் சித்துவேலைசெய்யவோ, சுவிசேஷம் என்ற பெயரில் அசட்டுத்தனமான உப்புச்சப்பற்ற செய்திகளை அளிக்கவோ, பணத்தையோ, சுயநலநோக்கத்தையோ குறியாகக் கொண்டு அவர்களை மதம் மாற்றவோ அவர் முயலவில்லை. கர்த்தரை நம்பி வேதவிளக்கங்களைத் தெளிவாக அளித்து தங்களுடைய பாவத்தன்மையைக் கேட்பவர்கள் உணரும்படியாக அவர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறார்; இரட்சிப்பிற்காக கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கும்படி வலியுறுத்தியிருக்கிறார். இதெல்லாம் இன்று தமிழினத்தில் அருகிக் காணப்படும் சீர்திருத்தவாதப் பாணி சுவிசேஷப் பணியையும், சத்தியப் பிரசங்கத்தையும் இனங்காட்டுகிறது.

ரேனியஸ் எப்போதும் தன் கையில் தான் வெளியிட்டிருக்கும் துண்டுப்பிரதிகள் மற்றும் முக்கியமான சிறு நூல்களைக் கொண்டு சென்று தான் சுவிசேஷம் சொன்னவர்களின் தேவைக்கேற்றபடி கொடுத்து அவர்களை வாசிக்கச் செய்திருக்கிறார். அவரைச் சந்தித்தவர்கள் வாசிப்பதற்கு அவற்றைத் தருமாறு கேட்டு அவற்றைப் பெற்றுக்கொண்டிருந்திருக்கிறார்கள். அவற்றை வாசித்துவிட்டு விளக்கம் கேட்டு அவரோடு சம்பாஷனையில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். இவ்விலக்கியங்களில் ரேனியஸ் எழுதி வெளியிட்ட “ஞானோபதேசம்” நூல் முக்கியமானது. அது கிறிஸ்தவ இறையியலை விளக்கும் சிறுநூல். ரேனியஸின் சுவிசேஷப்பணியில் இறையியல் நூல்களும், வேதவிளக்க நூல்களும், துண்டுப்பிரதிகளும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. இவற்றை அவர் தமிழிலும், தெலுங்கிலும் அச்சிட்டிருந்தார்.

இந்தக் குறுகிய ஐந்து வருடகாலத்தில் ரேனியஸ் தமிழை அருமையாகக் கற்று, அம்மொழியில் பேசிப் பிரசங்கித்து, நூல்களையும், துண்டுப் பிரதிகளையும் வெளியிட்டிருக்கிறார் என்பது மிகுந்த ஆச்சரியத்தையும், அதேநேரம் அவருடைய விடாமுயற்சியோடு கூடிய கடுமையான, வைராக்கியமான உழைப்பையும், கல்வித் தகுதிகளையும், அறிவுத் திறனையும் வெளிப்படுத்துகிறது. இருந்தபோதும் ரேனியஸின் தமிழைத் திறம்படக் கற்றுப் பயன்படுத்தும் விடாமுயற்சி அவருடைய வாழ்நாள் முழுதும் தொடர்ந்திருக்கிறது என்றே எண்ணுகிறேன். அவ்வாறில்லாமல் ஜெர்மானியரான அவரால் அதில் மொழிப்பாண்டித்தியத்தை அடைந்திருக்க முடியாது; கிறிஸ்தவ இலக்கியங்களையும், இலக்கண நூலையும் படைத்திருக்க முடியாது. ரேனியஸ் திருநெல்வேலி சென்றபின்பு திருப்பாற்கடல் நாதன் என்பவரிடம் தொடர்ந்தும் தமிழைக் கற்றுக்கொண்டிருந்ததாக ஒரு செய்தியை வாசித்தேன். இது எந்தளவுக்கு உண்மையானது என்பது தெரியவில்லை. அவர் நிச்சயம் தமிழை அருமையாகக் கற்றுக்கொள்ளுவதில் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். அவர் அக்காலத்து தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களையும் நிச்சயம் கற்றிருந்திருப்பார்.

ரேனியஸின் சுவிசேஷப்பணி எப்போதுமே திருச்சபை சார்ந்ததாக இருந்திருக்கிறது. கிறிஸ்துவை விசுவாசித்தவர்களுக்கு கிறிஸ்தவ இறையியலைப் போதித்து ஞானஸ்நானமளித்து திருச்சபை அங்கத்தவர்களாக்கியிருக்கிறார் ரேனியஸ். அதைச் செய்வதில் அவர் மிகக் கவனத்தோடு செயல்பட்டிருக்கிறார். ஆத்துமாக்களை மேய்க்கும் பணியில் மனவருத்தத்தை அளிக்கும் நிகழ்வுகளையும் அவர் சந்தித்திருக்கிறார். புறமத சமூகம் தொடர்பான விஷயங்களில் அவர் மிகுந்த ஞானத்தோடு செயல்பட வேண்டியிருந்தது. தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும் மத்தியில் இயேசுவின் அன்பை மனதிலிருத்தி அவர் தன் பணியைத் தொடர்ந்திருக்கிறார்.

இந்நாட்குறிப்புத் தொகுதியில் நான் கவனித்த இன்னுமொரு அம்சம், 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே கிறிஸ்தவ வேதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மக்கள் பயன்படுத்தக்கூடிய விதத்தில் இருந்திருக்கிறது. இது இரண்டாவது மொழிபெயர்ப்பான பெப்ரீஸியனின் மொழிபெயர்ப்பு. இருந்தபோதும் ரேனியஸ் சந்தித்த மக்கள் அது தங்களுக்குப் புரியவில்லை, வாசிக்க எளிமையான மொழியில் இல்லை என்று அடிக்கடி குறைகூறியிருப்பதை நாட்குறிப்பின் பல இடங்களில் காணமுடிகிறது. இதைப் பற்றி எழுதும் ரேனியஸ் சொல்கிறார்,

“தமிழ் புதிய ஏற்பாடு எளிதில் விளங்கமுடியாததாக இருக்கிறது என்பதைப் பலரும் அடிக்கடி கூறுவதைக் கேட்பதின் வழியே அதைத் திருத்தி எழுதுவதின் தேவையை அதிகம் உணருகிறேன்.”

கொல்கத்தாவில் இருந்த ஆங்கிலிக்கன் பிரிவைச் சேர்ந்தவரும், CMS அருட்பணியாளருமான, டாக்டர். குளோடியஸ் பியூக்கனனின் தமிழ் வேதாகமத்தைப் பற்றிய கருத்தை ரேனியஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. பியூக்கனன் தன் நூலில்,

“பல மறுதிருத்தப்பதிப்புகளுக்குப் பிறகு, இந்தத் தமிழ் வேதாமகம் மிகச் சிறந்த செம்மொழித் தன்மையைப் பெற்றிருக்கிறது எனப் பிராமணர்களே சிலாகிக்கிறார்கள்.”

என்று குறிப்பிட்டிருந்ததை ரேனியஸ்,

“டாக்டர் பியூக்கனன் எப்படி இந்த முடிவுக்கு வந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் தவறான தகவலைப் பெற்றிருக்கிறார் என்று மட்டும் சொல்லமுடியும். ஏனென்றால், அந்த மொழிபெயர்ப்பு மிகவும் சாதாரணமான நிலையிலேயே இருந்தது . . .” என்று தன் நாட்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார் (பக் 296-297).

பிரபலமானவரான பியூக்கனனின் இந்தக் கருத்து பிறர் மத்தியில் அவருடைய மதிப்பைக் குறைத்துவிடுகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் ரேனியஸ்.

டாக்டர் பியூக்கனன் சிறந்த அறிவாளி; ஜோன் நியூட்டனின் சுவிசேஷ செய்தியைக் கேட்டுக் கிறிஸ்துவை விசுவாசித்தவர். சீர்திருத்த பாப்திஸ்தான வில்லியம் கேரியைத் தன்னுடைய வேதமொழிபெயர்ப்புக் குழுவிற்குப் பொறுப்பாளராகவும் கொண்டிருந்தவர். ஆனால், ஆரம்பத்தில், பிறர் பேச்சைக் கேட்டுக் கேரியை மிகக்குறைவாகத் தரம் தாழ்த்தி மதிப்பிட்டு அவரைப்பற்றி பியூரிட்டனான ஜோன் நியூட்டனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதை வாசித்து மிகவும் மனவருத்தமடைந்த ஜோன் நியூட்டன்,

“நான் அற்புதங்களை எதிர்பார்ப்பதில்லை. ஆனால், கர்த்தர் நம் காலத்தில் ஒரு அற்புதத்தைச் செய்வாரானால், அது வில்லியம் கேரியைச் சார்ந்திருக்குமானால் அதைக்குறித்து நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று கேரியைப் பற்றி மிக உயர்வாக எழுதி பியூக்கனனின் தவறைத் திருத்தினார் (https://www.wholesomewords.org/missions/bcarey17c.html).

இதற்குப் பிறகு பியூக்கனன் கேரியை மிகவும் மதித்து அவருக்குத் தன்னால் முடிந்த சேவைகளைச் செய்திருக்கிறார். எனவே, தமிழ் வேத மொழிபெயர்ப்பு பற்றிய கருத்திலும் பியூக்கனன் யார் சொல்லையோ கேட்டு அவசர முடிவெடுத்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. சீகன் பால்குவின் 1715ம் ஆண்டு தமிழ் வேதாகம முதலாவது மொழிபெயர்ப்பில் இருந்து நாம் கடந்து வந்திருக்கும் காலத்தில் வெளிவந்திருக்கும் தமிழ் வேதமொழிபெயர்ப்புகளின் தரத்தை ஆராயும்போது என்னால் இந்த விஷயத்தில் ரேனியஸின் கருத்தோடேயே ஒத்துப்போக முடிகிறது. இன்று நம்மத்தியில் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய திருப்புதல் தமிழ் வேதாகமம் நல்ல தமிழில் துல்லியமாகத் திருத்தி வெளியிடப்பட வேண்டும் என்பதை எவரால் மறுக்கமுடியும்? அந்தந்தக் காலப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் மொழி வளர்ச்சி மற்றும் பயன்பாட்டிற்கேற்றவகையில் வேதாகமும் திருத்தி வெளியிடப்பட வேண்டிய அவசியத்தைப் பல நல்ல ஆங்கில வேதாகமத் திருத்தப் பதிப்புகள் நம்மை உணரவைக்கவில்லையா?

ரேனியஸ் தமிழில் ஏற்கனவே இருந்த வேதமொழிபெயர்ப்பைத் திருத்தி வெளியிடும் பணியையும் தன் ஊழியக் காலத்தின் ஆரம்பப் பகுதிலேயே சென்னையில் தொடங்கி அதில் நல்ல முன்னேற்றம் கண்டு, சில பகுதிகளை அச்சிடவும் ஆரம்பித்திருக்கிறார் என்பதை நாட்குறிப்பு விளக்குகிறது. தமிழகத்தில் வந்திறங்கிய சில வருடங்களுக்குள்ளாகவே அவர் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து நூல்களின் திருத்திய மொழிபெயர்ப்பை அச்சுக்குத் தயாராக்கியிருந்தார். இருந்தபோதும் வேதத்தைத் திருத்திப் பதிப்பிக்கும் பணியில் அவர் பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவருடைய பழைய ஏற்பாட்டுத் திருத்தங்களைத் தரங்கம்பாடியில் இருந்த மிஷனரிகள் கடுமையாக எதிர்த்திருந்தனர் (பக் 116). பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரேனியஸ் வேதத்திருத்தப் பணிகளைத் தொடர வேண்டியிருந்தது. அத்தோடு புதிய ஏற்பாட்டையும் திருத்தும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். ஒரு சாதாரண மனிதனால் ஐந்து வருடங்களுக்குள் இத்தனையையும் எப்படிச் செய்ய முடிந்தது? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. அதற்குப் பதில் கர்த்தரின் ஆவி அவரோடிருந்திருக்கிறது என்பதுதான். மொழிபெயர்ப்பு என்பது கடினமான பணி; அதிலும் வேதமொழிபெயர்ப்பு என்பது அசாதாரண பணி. அதைச் செய்யும் வைராக்கியமும், அதற்கு அவசியமான ஆற்றல்களும், மொழிப்பாண்டித்தியமும் ரேனியஸில் நிறைந்திருந்தன. வேதமொழிபெயர்ப்பில் மற்றவர்களோடு ரேனியஸுக்கு ஏற்பட்டிருந்த பெரும் கருத்து வேறுபாடுகளை இன்னொரு ஆக்கத்தில் விளக்கத் தீர்மானித்திருக்கிறேன்.

ரேனியஸ் பிரயாணம் செய்தபோது எப்போதும் ஒரு பல்லக்கைப் பயன்படுத்தியிருக்கிறார். அதைச் சிலர் சுமந்து சென்றிருக்கிறார்கள். அவருடன் பணிசெய்தவர்களே அவரோடு பயணித்திருக்கிறார்கள். போகும் கிராமங்கள், நகர்ப் பகுதிகளில் அவர் ஒருபோதும் எவருடைய வீட்டிலும் தங்கவில்லை. மக்கள் அழைத்தபோதும் அவர் அதைச் செய்யவிரும்பவில்லை. அதற்குக் காரணம் அவர்களுடைய வீடு அந்நிய நாட்டு மனிதனின் வருகையால் தீட்டுப்பட்டு விடும் என்ற நம்பிக்கை அன்றிருந்ததால் ரேனியஸ் எவருக்கும் பிரச்சனையை உண்டாக்க விரும்பவில்லை. ஊர் மக்கள் மழைக் காலத்தில் அவருடைய பல்லக்கைத் துணிகளால் சுற்றி அவர் மீது மழைநீர் படாமலிருக்க உதவியிருக்கிறார்கள்; உணவும் அளித்திருக்கிறார்கள். மழையில்லாத வேளைகளில் மரத்தடிகளிலும், சேதமடைந்திருந்த கட்டடங்களின் சுவர்களிலும் சாய்ந்திருந்து இரவைக் கழித்திருக்கிறார் ரேனியஸ். இத்தகைய சுயநலமற்ற, தியாகமும், அர்ப்பணிப்புமுள்ள ஊழியத்தை இன்று எங்கு பார்க்க முடிகிறது?

திருச்சபை அருட்பணிச் சங்கத்தைச் (CMS) சேர்ந்த ரேனியஸின் எதிரிகள் அவருடைய ஊழியத்தின் பிற்காலத்தில் அவர் மேல் வைத்த குற்றச்சாட்டுக்களில் ஒன்று, அவர் சாதிப்பிரிவை ஆதரிக்கிறார் என்பது. அது எத்தனை பொய் என்பதை ரேனியஸின் இந்நாட்குறிப்புத் தொகுதி விளக்குகிறது. அன்றிருந்த சாதிகள் மற்றும் மதங்களைப் பற்றிய விபரங்களைத் தந்திருக்கும் ரேனியஸ், சாதிப்பிரிவு கிறிஸ்தவ சபைகளில் இல்லாதிருப்பதற்கு எடுத்திருந்த நடவடிக்கைகளையும் விளக்குகிறது நாட்குறிப்பு. சாதிப் பிரச்சனைக்கு இடங்கொடுக்கக்கூடாதென்பதற்காகத் திருநெல்வேலியில் தான் நடத்தி வந்திருந்த செமினரியையே அவர் தற்காலிகமாக மூடி, அந்தத் தீர்மானத்தை அருட்பணிச் சங்கத்துக்கு எழுத்தில் அறிவித்திருக்கிறார். அப்போதிருந்த ஏனைய அருட்பணிச் சங்கங்கள் சாதிப்பிரிவைத் திருச்சபையில் அனுமதித்திருந்தன. ஆனால், ரேனியஸ் அதற்கு இடங்கொடுக்க மறுத்துத் தன் கொள்கையில் உறுதியாக இருந்திருக்கிறார். ரேனியஸ் ஆணித்தரமாக எழுதுகிறார்,

“வெறும் கிறிஸ்தவ பெயர்களில் என்ன பயன்? இதைவிட ஆவியானவர் தனது பலங்கொண்டு நாம் மகிழத்தக்கதான பிள்ளைகளை உருவாக்கும்வரை நாம் தரிசாகவே கிடப்போம். ஏனெனில் அப்படிப்பட்ட பிள்ளைகளே இந்த மக்களிடையே நாம் உழைத்த உழைப்பின் அறுவடை” (பக் 451-452).

சாதிப்பிரிவால் சிதழடைந்து காணப்படும் இன்றைய தென்னிந்திய திருச்சபை இதற்கு என்ன பதில்கூறப் போகிறது?

இனி இந்தத் தொகுதியில் காணப்படும் சில குறைபாடுகளை என்னால் முன்வைக்காமல் இருக்க முடியாது. இனி வரும் பதிப்புகளில் இந்தக் குறைகள் நீக்கப்படுமானால் இந்தத் தொகுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எழுத்துரு (font) தகுதியற்றது. கையெழுத்து போன்ற, வாசகர்களைத் தூண்டி வாசிப்பதற்குத் தடையேற்படும் ஒரு எழுத்துருவை பதிப்பகத்தார் பயன்படுத்தியிருப்பது குழந்தைத்தனமானது என்றே கருதுகிறேன். 400 பக்கங்களுக்கு மேலான ஒரு நூலில் இத்தகைய எழுத்துரு ஒருபோதுமே பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடாது. ஆரம்பத்தில் இதை வாசிக்க எழுத்துரு எனக்கே தடையாக இருந்தது. இருந்தபோதும் வாசிக்க வேண்டும் என்ற உந்துதலால் அதையும் மீறி வாசித்து முடித்தேன். ஆனால், வாசிப்பனுவத்தில் ஊறிப்போயிராத கிறிஸ்தவ தமிழ் வாசகர்கள் அவ்வாறிருந்துவிட மாட்டார்கள். இந்த எழுத்துருவில் சில எழுத்துக்கள் முழுமையற்றவையாக, அவை யாவை என்று இலகுவாகப் புரிந்துகொள்ள முடியாதவையாக இருந்தன. ஒரு சிறு கடிதத்தையோ அல்லது கவிதையையோ அச்சிட்டால் இந்த எழுத்துரு அவற்றிற்குப் பொருத்தமானதாக இருந்திருக்கும். பொறுமையோடு வாசகர்கள் வாசிக்க வேண்டிய ஒரு நீண்ட நூலுக்கு இது நிச்சயம் பயனுள்ளதல்ல. நூல்வெளியீட்டில் அனுபவமுள்ளவர்களோடு கலந்துரையாடி இந்தத் தவறைத் தவிர்த்திருக்கலாம். நாட்குறிப்பின் 2ம், 3ம் தொகுதிகளிலும் இதே எழுத்துருவைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது நிச்சயம் நம்மினத்து வாசகர்களுக்கு உதவாது. இது நாட்குறிப்பின் பயனைக் குறைத்துவிடுகிறது. அத்தோடு, ஒவ்வொரு வரியையும் லெட்டர் பேட்டில் இருப்பதுபோல் கோடிட்டிருக்கிறார்கள். இதெல்லாம் என்னைப் பொறுத்தளவில் குழந்தைத்தனமான செய்கை.

2. நூல் முழுவதும், பக்கம் பக்கமாக சந்திப்பிழைகள் (ஒற்றுப்பிழைகள்) காணப்படுகின்றன. தற்காலத்தில் தமிழர்கள் பெரும்பாலும் வாசிப்பதையும், எழுதுவதையும் வழக்கத்தில் கொண்டிராமல் இருப்பதால் சந்திப்பிழைகளை அவர்களால் தவிர்த்துக்கொள்ள முடியாமலிருக்கிறது. தமிழில் சந்திப்பிழைகள் இல்லாமல் எழுத இலக்கணம் தெரிந்திருத்தல் அவசியம். உண்மையில் அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற போக்கே பத்திரிக்கை மற்றும் நூல்களைப் படைப்பவர்கள் மத்தியிலும் காணப்படுகிறது. ஆங்கிலத்தில் இத்தகைய பிழைகளோடு ஒருபோதும் நூல்களை வெளியிட மாட்டார்கள். அவற்றைத் திருத்தி வெளியிட ஆற்றலும், தகுதியும் உள்ளவர்களை அமர்த்தி நூலில் எந்தப் பெரிய பிழைகளும் இல்லாமல் வெளியிடுவதில் கவனத்தோடு உழைத்திருப்பார்கள். இனிவரும் பதிப்புகளிலாவது தகுந்தவர்களைப் பயன்படுத்தி சந்திப்பிழைகள் இல்லாமல் அச்சிடுவது தமிழைக் காக்கும்; நூலின் தரத்தையும் உயர்த்தும். அத்தோடு, பல இடங்களில் இலக்கணத் தவறுகளும் காணப்படுகின்றன. வசனங்களில் ஒருமை, பன்மை பிரச்சனை அதிகம். பன்மையில் முடியவேண்டிய வசனங்கள் ஒருமையில் முடிந்திருக்கின்றன. எழுத்துப்பணியில் ஈடுபட்டிருக்கும் நானும் முடிந்தவரை இத்தகைய பிழைகள் இல்லாமல் நூல்களை அச்சிடவே முயற்சித்து வருகிறேன். இத்தொகுதியின் புதிய பதிப்புகளில் இத்தவறுகளை நீக்கவேண்டியது அவசியம்.

3. தொகுதியின் சில பகுதிகளை ஆங்கில மூலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். உண்மையில் மொழிபெயர்ப்பு தரமாக இருந்தது; ஒரு சில இடங்களில் தவிர. இந்தத் தவறுகளைச் சரிசெய்வது அவசியம். உதாரணத்திற்கு, 315ம் பக்கத்தில், ரேனியஸ் தன் பிரயாணத்தின்போது செங்கல்பட்டு வந்து சேர்ந்து தங்குவதற்கு ஓரிடத்தைத் தேடினார். வசதியாகக் கிடைத்த ஒரே இடம் ரோமன் கத்தோலிக்க சிற்றாலயம் மட்டுமே. அதைப் பற்றி இவ்வாறு தொகுதி விளக்குகிறது,

“ரோமன் கத்தோலிக்கர்களுடன் இருப்பதைக் காட்டிலும் புறமதத்தவர்களுடன் என்னால் இருந்துவிட முடியும் என்று நான் நினைத்தேன். ஆனால் எனக்கு வேறு வழியில்லை. ஆகவே, நான் இதற்குச் சம்மதித்தேன். என்றாலும், ‘இயேசுவைவிட நல்ல தங்கும் இடம் எனக்குக் கிடைத்தது . . .’ ”

இந்தக் கடைசி வரி முழுத் தவறானது; இறையியல்பூர்வமாக மோசமானது. இன்னொரு உதாரணம், ஜெயின் மதத்தைக் கிறிஸ்தவத்தோடு ஒப்பிட்டு விளக்கும்போது 334ம் பக்கத்தில் ஒரு வசனம் குழப்பத்தை உண்டாக்குகிறது. “இரண்டிலும் சிலைவழிபாடு மற்றும் மூட நம்பிக்கைகள் கலந்திருக்கிறது” என்று எழுதியிருப்பது தவறான இறையியல் கருத்தைத் தந்துவிடுகிறது. இது ரோமன் கத்தோலிக்க மதத்திற்குப் பொருந்தும். ஆனால், கிறிஸ்தவம் அப்படிப்பட்டதல்ல.

தொகுதியின் மொழிநடை எளிமையாக இருந்தது; நாட்குறிப்பிற்குத் தகுதியான நடைதான். வாசகர்கள் வாசிப்பதற்குத் தடையில்லாமல் இருக்கின்றது. ஒரு சில வார்த்தைகள் வாசகர்களைச் சிந்திக்க வைக்கலாம் (விசித்திரம், விளம்பல், நற்செய்தி பரப்பாளர்). இருந்தபோதும் முழு வசனத்தையும் வாசிக்கும்போது அவற்றின் பொருளைப் புரிந்துகொள்வது கடினமல்ல.

4. இத்தொகுதியின் பின் அட்டையில் ரேனியஸ், திரள்கூட்ட சுவிசேஷ இயக்கத்தை (Mass Movement Evangelism) இந்தியாவில் ஆரம்பித்து வைத்தவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது மிக மிகத் தவறான ஊகம்; அது ரேனியஸின் இறையியல் நம்பிக்கைகளை அறியாமல் எழுதப்பட்டிருக்கிறது. அந்த முறையில் ரேனியஸ் தன் சுவிசேஷப் பணியை என்றுமே நினைத்ததில்லை; அறிவிக்கவும் இல்லை. அவரிடம் சுவிசேஷம் கேட்க வந்த கூட்டம் காடுகொள்ளாப் பெருங்கூட்டமுமல்ல. அவர் போன இடங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அவர் சுவிசேஷத்தை அறிவித்திருக்கிறார்; அவர் செய்தது அது மட்டுமே. சீர்திருத்தவாதப் போதனைகளை நம்பி விசுவாசித்திருந்த ரேனியஸுக்கு சுவிசேஷப் பணியைப் பற்றிய உலகத்தனமான எண்ணமெல்லாம் ஒருபோதும் இருக்கவில்லை.

சீர்திருத்த போதனைகளைப் பின்பற்றிய 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜோர்ஜ் விட்பீல்ட், ஜொனத்தன் எட்வர்ட்ஸ் அதற்கு அடுத்த நூற்றாண்டில் ஸ்பர்ஜன் காலத்திலெல்லாம் பெருங்கூட்டத்தில் அவர்கள் சுவிசேஷம் அறிவிக்க கர்த்தர் ஒரு எழுப்புதலை ஏற்படுத்தியிருந்தபோதும் இவர்களில் எவருமே அத்தகைய கூட்டத்தை உருவாக்கவோ, அதைப் பற்றி நினைக்கவோ இல்லை. இத்தகைய வார்த்தைப் பிரயோகமும் அவர்களைக் குறித்துப் பயன்படுத்தப்படவில்லை. ரேனியஸின் அருட்பணிக் காலம் நெல்லையில் குறுங்கால எழுப்புதல் காலம் என்பதை மறுக்கமுடியாவிட்டாலும் அந்த எழுப்புதல் பிரிட்டனில் ஜோர்ஜ் விட்பீல்ட், அமெரிக்காவில் ஜொனத்தனை எட்வர்ட்ஸ் போன்றோர் ஊழியத்தில் காணப்பட்டதுபோல் பெருந்திரளான கூட்டத்தை சந்திக்கவில்லை. இப்படிச் சொல்வதால் நான் எந்தவிதத்திலும் ரேனியஸின் பணியைக் குறைத்து மதிப்பிடவில்லை; அநாவசியத்துக்குத் தேவையற்ற, வரலாற்றுக்குப் புறம்பான, சீர்திருத்த இறையியலுக்கு மாறான செய்திகளை உருவாக்குவதைத்தான் நிராகரிக்கிறேன். ஆர்மீனியனிசப் போதனைகளைப் பின்பற்றிய சார்ள்ஸ் பினி மற்றும் பில்லிகிரெகாம் போன்றவர்கள் மெய்யான தெய்வீக எழுப்புதலின் அடையாளங்கள் எதுவுமே இல்லாமல் கூட்டிய திரள்கூட்ட வித்தைகளையெல்லாம் சீர்திருத்த அருட்பணியாளரான ரேனியஸ் அடியோடு நிராகரித்திருப்பார். இந்த நாட்குறிப்பை உள்ளது உள்ளபடி மொழிபெயர்த்து வெளியிடுவதோடு நின்றிருக்கலாம். இத்தகைய தவறான கருத்துகளைத் தவிர்த்திருக்கலாம்.

இதுவரை நான் விளக்கியிருக்கும் பிழைகள் நீக்கப்பட்டு புதிய தொகுப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறேன். ரேனியஸின் நாட்குறிப்பின் இந்த முதல் தொகுதியை நிச்சயம் கிறிஸ்தவர்கள், அதுவும் போதகப் பணியில் இருப்பவர்கள் வாங்கி வாசிப்பது அவசியம். கிறிஸ்தவ ஊழியம் மக்கள் மத்தியில் மதிப்பற்ற செல்லாக்காசாக இருக்கும் தற்காலத்தில் சுயத்தை இழந்து ஊழியம் செய்வது எப்படி என்பதை ரேனியஸ் நமக்குக் கற்றுத் தருகிறார். திருத்தி வெளியிடப்படுமானால் இந்தத் தொகுதி இறையியல் கல்லூரி நூலகங்களில் வைக்கப்பட வேண்டும். இறையியல் மாணவர்கள் வாசிக்க வேண்டிய பாடப்புத்தகங்களில் ஒன்றாகவும் இருக்கவேண்டும். ரேனியஸ் போன்ற அருமையான அருட்பணியாளர்களையும், அவர்களுடைய நல்லூழியங்களையும் பற்றி எதுவும் தெரியாமல் கிறிஸ்தவம் என்ற பெயரில் கண்போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆத்துமாக்களின் இருதயத்தில் இத்தகைய நூல்களே ஒளியேற்றி வைக்கமுடியும். ஆனால், இதை வாங்கி, வாசித்துப் பயனடையக்கூடிய ஆவிக்குரிய இருதயங்கள் எத்தனை நம்மத்தியில் இருக்கின்றன?

இறுதியாக, ரேனியஸின் வாழ்க்கை, அருட்பணிகள் ஆகியவற்றைப் பற்றி வாசிப்பது, அவருடைய பணிகளுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துவதோடு, கிறிஸ்தவர்களாகிய நாம் நம் காலத்தில் செய்யும் தவறுகளைக் களைந்து அவரைப்போலத் தியாகத்தோடு கர்த்தருக்காகப் பணிசெய்வதில் மட்டுமே நம்மை வழிநடத்தவேண்டும். உண்மையிலேயே ரேனியஸின் வாழ்க்கையும், பணிகளும் நம்மைப் பாதித்திருந்தால் அவர் நம்பிப் பின்பற்றிய சீர்திருத்தப் போதனைகளில் நாமும் ஆர்வம் காட்டி அவற்றை ஆர்வத்தோடு கற்று, வைராக்கியத்தோடு பின்பற்றிப் பக்திவைராக்கியத்தோடு வாழ்வதை மட்டுமே நாம் செய்யத் துடிப்போம். அதைவிட்டுவிட்டு, அவருக்காக வருடத்துக்கொருமுறை திருவிழாக்கொண்டாடுவதிலும், அவருக்குச் சிலைகள் எழுப்புவதிலும், அவர் கட்டிய ஆலயக் கட்டிடங்களை அலங்கரித்து விளக்கேற்றி விழாக்கொண்டாடுவதிலும், அவருக்குக் கட்அவுட் வைத்து ஒரு ஹீரோவாக மற்றவர்கள் பார்வையில் அவரைக் காட்ட முயல்வதிலும் ஈடுபடுவோமானால் ரேனியஸை அவமானப்படுத்த அவற்றைவிடக் கேவலமான செயல்கள் ஒன்றுமிருக்க முடியாது. ரேனியஸ் உயிரோடிருந்தால் இவற்றில் எதையுமே அனுமதிக்க மாட்டார். தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்தவர்கள் இந்தத் தவறுகளைச் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

வசனத்தின் மெய்யான அர்த்தத்தைக் கண்டறிதல்

“பொருள் விளக்கம்” (Interpretation) என்ற வார்த்தை தீர்க்கமானதும், விரிவானதுமான அர்த்தத்தைத் தன்னில் கொண்டுள்ளது. தீர்க்கமானது என்கிறபோது அது ஒரு பத்தியின் இலக்கண ரீதியிலான அர்த்தத்தை அழுத்தமாக விளக்குகிறது.

விரிவானது என்கிறபோது அது அப்பத்தியின் ஆத்மீக அர்த்தத்தை விளக்குகிறது. வேதத்தை விளக்குகிற ஒருவர், வேதஉட்பொருள் விளக்க விதிகளைப் பயன்படுத்துவதில் எந்தவிதத்திலும் வளைந்துகொடுக்காதவராக இருந்தால், அவருடைய அறிவுத்திறன் மூலமாக ஒரு விதத்தில் நன்மையைப் பெற்றாலும், கர்த்தருடைய மக்களுக்கு நடைமுறையின் அடிப்படையில் அவர் பெருமளவுக்குத் துணைபோகிறவராக இருக்க மாட்டார். உணவில் காணப்படும் இரசாயன அம்சங்களின் பண்புகளைப் பட்டியலிட்டு விளக்குவது, பசியிலிருக்கிற ஒருவனுடைய பசியைப் போக்காது. அதேபோல், எபிரெய, கிரேக்க மொழிகளிலுள்ள வார்த்தைகளின் மிக ஆழமான பொருளை விளக்குவது (சில இடங்களில் அவசியமாக இருந்தபோதும்), கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒருவர், தன்னுடைய விசுவாசத்திற்கான நல்ல போராட்டத்தில் ஈடுபடுவதில் அவருக்குப் பெரியளவில் உதவாது. இப்படிக் கூறுவதால் நாம் அறிஞர்களை அவமதிக்கவில்லை, அத்தோடு கர்த்தருடைய வார்த்தையைக் கையாளுகிற வேளையில் தங்களுடைய கற்பனைக் குதிரையை ஓடவிடுகிறவர்களை ஆதரிக்கவும் இல்லை. மாறாக, வேதத்தை விளக்குகிறவர்கள், சத்தியத்தை எடுத்துரைப்பதோடு, அதைக் கேட்கிறவர்களின் இருதயத்தை ஊக்கமடையச் செய்து, பத்திவிருத்தியடையவும், அவர்களில் நன்மையான மாற்றங்கள் ஏற்படுவதையும் மைய நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம்.

இப்புத்தகத்தின் முந்தைய ஆக்கங்களில், வேதத்தை விளக்குகிறவர்களின் செயல்பாடுகள், எப்போதும் நெகேமியா 8:8ல் சொல்லப்பட்டிருப்பதற்கு ஏற்றவிதமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறேன், “அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்” (நெகேமியா 8:8). இதைச் செய்வதற்கு ஒரு பிரசங்கி ஒவ்வொரு வாரமும் பல மணிநேரத்தை வேதத்தைப் படித்து ஆராய்வதில் செலவிட வேண்டும் என்று சொல்லியிருந்தேன். அவர் பிரசங்கிக்கும் வேதப்பகுதியிலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும், வேதத்தில் அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் பொதுவான விதத்தில் துல்லியமாகவும் திட்டவட்டமாகவும் அர்த்தம் தர வேண்டும். இல்லாவிட்டால், கடவுளுடைய வார்த்தையை அதனுடைய தன்மைக்கேற்ற விதத்தில் விளக்காமல், தன்னுடைய சொந்தக் கற்பனைகளின்படியும், அது குறித்துத் தான் கொண்டிருக்கிற எண்ணங்களின்படியும், தன்னிச்சையாகத் தன் மனம்போன போக்கில் அவர் விளக்கிவிடுவார். ஒவ்வொரு மொழியிலும் காணப்படுகின்ற பொதுவான விதியை ஒருபோதும் மீறவும் கூடாது; எந்தவொரு வார்த்தைக்கான அர்த்தத்தையும் நம் வசதிக்கு ஏற்ற முறையில் மாற்றவும் கூடாது. எந்தவொரு வார்த்தையின் உள் அர்த்தத்தின் வலிமையை நாம் குறைக்கவும் கூடாது, மாற்றியமைக்கவும் கூடாது. அவற்றை ஆரோக்கியமான விதத்தில் விளக்க வேண்டுமே தவிர, இல்லாத ஒன்றை நாமாக உருவாக்கக் கூடாது.

வேதத்தை விளக்குபவரின் பணி, வேதஉட்பொருள் விளக்க விதிகளைப் பொறுப்பாகக் கையாண்டு, வேதத்தில் பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தியிருக்கிற வார்த்தைகளுக்கான சரியான அர்த்தத்தை உறுதிசெய்து, தன்னால் முடிந்தவரை கடவுளுடைய எண்ணங்களைத் தன்னுடைய சொந்த மொழியில் எடுத்துரைப்பதுதான். கர்த்தருடைய வேதத்திலுள்ள வார்த்தைகளுக்கான சரியான அர்த்தத்தை முதலில் ஆராய்ந்தறிய வேண்டும். அதில், தன்னுடைய அபிப்பிராயத்தை நுழைத்துவிடாதபடி மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தன்னுடைய கருத்துக்கள் எதையும் அதில் திணிக்கக் கூடாது. தான் விளக்குகிற பகுதியின் சாராம்சத்தை உள்ளபடி எடுத்துரைக்கவே முழு முயற்சி செய்யவேண்டும். அதில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிற எதையும் நிராகரிக்கவோ, மறைக்கவோ அல்லது விளக்காமல் விட்டுவிடவும் கூடாது. தன்னுடைய எண்ணவோட்டத்திற்கு ஏற்றபடி அதில் எதையும் சேர்க்கவோ அல்லது திணிக்கவோ கூடாது. வேதம் தன்னைத்தானே விளக்குகிறதாக இருக்க வேண்டும். இதை, வேதத்தை விளக்குகிறவர் உணர்ந்து பொறுப்புடன் செயல்படுகிறபோதுதான் உணர முடியும். வேதத்திலுள்ள வார்த்தைகளுக்குச் சரியான விளக்கந் தருவது மட்டுமல்ல, அதிலுள்ள போதனைகளின் தன்மையையும் சரியாக விளக்க வேண்டும். இல்லாவிட்டால், வார்த்தைகளில் கவனத்தைச் செலுத்தி, போதனைகளில் கோட்டைவிட்டதாகிவிடும். ஒரு வேதப்பகுதியிலுள்ள வார்த்தைகளுக்கான அர்த்தத்தைத் துல்லியமாக ஆராய்ந்தறிந்தும், அப்பகுதியைப் பற்றிய தன்னுடைய தவறான எண்ணங்களினால், அப்பகுதியிலுள்ள போதனைகளைத் தவறாக விளக்கிவிடக் கூடிய பெரிய ஆபத்தும் உண்டு.

கர்த்தருடைய வார்த்தையாகிய வேதத்தை விளக்குகிறவர்கள் தங்களுடைய மனம்போன போக்கில் ஈடுபடும் எந்தவிதமான கவனக்குறைவான செயலையும் ஒருபோதும் ஏற்க முடியாது. ஒரு ஓவியன், இயற்கையோடு தொடர்புடைய காரியங்களை வரைகிறபோது, அதை உள்ளபடி காட்ட வேண்டும் என்பதற்காக, அதற்கான வர்ணங்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் காட்டுவான். ஆனால் மத விஷயங்களோடு தொடர்புடைய காரியங்களை வரைகிறபோது பெரும்பாலும் அசட்டையாகவே இருந்துவிடுவான். உதாரணமாக, நோவாவின் பேழையைப் பல ஜன்னல்கள் கொண்டதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அந்தப் பேழையின் மேற்புறத்தில் ஒரேயொரு ஜன்னல் மட்டுமே இருந்தது. அதேபோல், வெள்ளம் தணிந்தபின் நோவா வெளியே விட்ட புறா, தன் வாயில் ஒலிவ இலைகளின் கொத்தைக் கொண்டு வந்ததாகக் காட்டுகிறார்கள். ஆனால் அது கொண்டு வந்ததோ ஒரேயொரு “இலை” (ஆதியாகமம் 8:11). நாணல் பெட்டியில் இருந்த குழந்தையான மோசே அழுகிற விதத்தில் இல்லாமல் மனதைக் கவரும் புன்னகையுடன் இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது (யாத்திராகமம் 2:6)! பரிசுத்த வேதாகமத்தை விளக்குகிறவர்கள், இந்தவிதமான அலட்சியப்போக்குக் கொண்டிருக்கக்கூடாது. மாறாக, மிகுந்த கவனத்துடன் ஒரு சிறு குறிப்பையும், ஒரு துணுக்கையும்கூட விட்டுவிடாமல் ஆராய்ந்தறிந்து, அவற்றைத் துல்லியமாக விளக்குவதற்கான சகல முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். “வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்” என்று யோவான் 5:39ல் குறிப்பிடப்பட்டிருக்கிற வசனம், ஒரு வேட்டைக்காரன் விலங்குகளுடைய நடமாட்டத்தை மோப்பம் பிடித்துப் பின்தொடருவது போல் மிகுந்த கவனத்துடன் ஆராய்வதை வலியுறுத்துகிறது. வேதத்தை விளக்குகிறவர்கள், வேத வார்த்தைகளின் சாராம்சத்தை, அதன் தன்மையை எடுத்துரைக்கிறவர்களாக இருக்க வேண்டுமே தவிர, வெறுமனே அந்த வார்த்தைகளை மட்டும் விரிவாக்கி விளக்குகிறவர்களாக இருக்கக் கூடாது.

வேதத்தை விளக்குகிறவர்கள் கவனத்தில் கொண்டிருக்க வேண்டிய வேத விளக்க விதிகளைப் பற்றி ஏற்கனவே நாம் கவனித்திருக்கிறோம்.

முதலாவது, பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுக்கிடையேயுள்ள தொடர்பையும், அவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதையும் அறிந்துணர்ந்திருப்பது அவசியம்.

இரண்டாவது, புதிய ஏற்பாட்டில் பழைய ஏற்பாட்டிலுள்ள பகுதிகளின் மேற்கோள்கள் எந்தவிதத்தில் தரப்பட்டிருக்கின்றன என்பதையும் அதற்கான நோக்கத்தையும் கவனிப்பது அவசியம்.

மூன்றாவது, ஒரு வேதப்பகுதியை விளக்குகிறபோது, அது வேதத்தின் ஏனைய பகுதிகளோடு சகலவிதத்திலும் பொருந்திப் போகிறதாக இருக்க வேண்டியதை உறுதிசெய்வது மிகவும் அவசியம். வேதத்திலுள்ள ஒவ்வொரு வசனத்தையும் கடவுள் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிற ஒட்டுமொத்த சத்தியத்தோடு இசைந்திருக்கிற விதத்தில் விளக்க வேண்டும். எந்தவொரு விளக்கமும் வேதத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள போதனைகளோடு முரண்பட்டால் அது தவறான விளக்கம்.

நான்காவது, வேதத்திலுள்ள எந்தவொரு பகுதியையும் அது அமைந்திருக்கும் முழு சந்தர்ப்பத்தின் அடிப்படையில் ஆராய வேண்டும்.

ஐந்தாவது, ஒவ்வொரு வேதப்பகுதியின் நோக்கத்தையும், அதில் காணப்படும் சத்தியத்தையும் கண்டறிவதிலேயே நாம் கவனம் காட்ட வேண்டும்.

இந்த விதிகளின் அவசியத்தை மலைப் பிரசங்கத்தில் அதிகமாகக் காணலாம். மலைப் பிரசங்கத்தின் பல பகுதிகளை, அவற்றின் நோக்கத்தையும் அமைப்பையும் அறியாததனால் பலர் மிகவும் மோசமான விதத்தில் அவற்றைத் தவறாக விளங்கிக்கொள்கிறார்கள். மத்தேயு 5:27-28 வசனங்களில், நம்முடைய கர்த்தர், “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று” என்று சொல்லியிருப்பது, சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட கட்டளைகளையும்விட மிக உயர்ந்த நிலையிலான ஒழுக்கநெறியைக் குறித்து இயேசு இங்கே சொல்லுகிறார் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் இத்தகைய கருத்து, நம்முடைய ஆண்டவர் அதைச் சொல்லியிருக்கிற விதத்திற்கு நேர் எதிரானது. எப்படியென்றால், இதற்கு முன்புதான் 17 ஆவது வசனத்தில், நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் அழிப்பதல்ல தன்னுடைய ஊழியம், அதை நிறைவேற்றுவதே, அதாவது, அதன் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் உடன்பட்டு அவற்றைச் செயல்முறைபடுத்துவதற்காகவே தான் வந்திருக்கிறேன் என்று ஆணித்தரமாகச் சொல்லிவிட்டு, உடனடியாகத் தனக்குத்தானே குழிவெட்டிக்கொள்ளுகிற விதத்தில், அதன் போதனைகளுக்கு எதிராக நிச்சயமாக இயேசு இந்தவிதத்தில் சொல்லியிருக்க மாட்டார். 21 ஆவது வசனத்திலிருந்து, தம்முடைய இராஜ்ஜியத்தின் மக்களிடத்தில் தான் வலியுறுத்துகிற நீதி எத்தகையது என்பதையே இயேசு விளக்கி வருகிறார்.  அது “வேதபாரகர், பரிசேயர் என்பவர்களுடைய” நீதியைவிட மேலானது. அவர்கள், கடவுளால் கொடுக்கப்பட்ட கட்டளைகளைப் புறந்தள்ளி, தங்களுடைய பாரம்பரியச் செயலின்படி அவர்களுடைய ரபிகளின் கோட்பாடுகளைப் பரப்பி வந்தார்கள்.

மத்தேயு 15:6
உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.

“சினாய் மலையில் கடவுள் என்ன சொன்னார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” என்று கிறிஸ்து சொல்லவில்லை. மாறாக, “பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்” என்றே சொன்னார். இதன் மூலம், யூதமத மூப்பர்கள், கடவுளுடைய பத்துக்கட்டளைகளில் ஏழாவது கட்டளையை, திருமணமான ஒரு பெண்ணுடன் வேறொருவன் தவறான உடலுறவு கொள்ளுவதைப் பற்றி மட்டுமே விளக்குகிறது என்று அந்தக் கட்டளையின் நோக்கத்தைக் குறைத்திருப்பதற்கு எதிராகத் தன்னுடைய விளக்கத்தைத் தருகிறேன் என்றே குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கட்டளை, மனிதனுடைய உள்ளான உணர்வுகளோடு தொடர்புடையது என்பதையும், இருதயத்தின் எல்லாவிதமான அசுத்தமான எண்ணங்களையும் விருப்பங்களையும் உள்ளடக்கமாகக் கொண்டது என்பதையும் இயேசு வலியுறுத்துகிறார். நம்முடைய ஆண்டவரின் நோக்கத்தையும், அவர் அதை விளக்கியிருக்கிற விதத்தையும் நாம் அறிந்துகொள்ளாவிட்டால், மத்தேயு 5 முதல் 7 வரையுள்ள அதிகாரங்களில் இருக்கிற அநேக விஷயங்களை நாம் சரியாக விளங்கிக்கொள்ள முடியாமல் போய்விடும். இயேசுவின் நோக்கத்தையும், அவர் அதை விளக்கியிருக்கும் விதத்தையும் நாம் அறியாதவரை, அதிலுள்ள தெளிவான குறிப்புகள்கூட நம் கண்களுக்குப் புலப்படாமல் இருந்துவிடும்; அதிலுள்ள அருமையான உதாரணங்கள்கூட பொருத்தமற்றதாகவே தென்படும். ஆகவே, நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகளின் மெய்யான போதனைகளுக்கு எதிராக இயேசு போதிக்கவில்லை. மாறாக, யூதமதத் தலைவர்களின் தவறான போதனைகளையும், அவற்றைப் பற்றி அவர்கள் கொண்டிருந்த தவறான எண்ணங்களையும், அவை அக்காலத்தில் எந்தளவுக்கு மக்கள் மத்தியில் பகிரங்கமாகப் போதிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதையுமே சுட்டிக்காட்டி, அவற்றை இயேசு எதிர்த்துப் போதித்திருக்கிறார். ஆவியானவருடைய பட்டயத்தின் கூர்மையான முனையை, யூதமத ரபிகள் தங்களுடைய போதனைகளால் மழுங்கடித்து, பாவிகளான மனிதர்கள் கர்த்தரிடம் திரும்புவதற்கு அன்று பெரும் தடையை ஏற்படுத்தியிருந்தார்கள்.

ஒரு வசனப்பகுதியை விளக்குவதற்கு முன், அந்தப் பகுதியின் நோக்கத்தை அறிய வேண்டியது அவசியம் என்பதற்கான இன்னுமொரு உதாரணத்தை மத்தேயு 5:38-39ல் காணலாம்,

“கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.”

இந்த வசனப்பகுதியின் நோக்கத்தை அறியாததனால், இந்தப் பகுதியின் முக்கியமான அழுத்தத்தைப் பலரும் கவனிக்காமல் போய்விடுகிறார்கள். இதைப் படிக்கிறபோது, மோசேயின் நியாயப்பிரமாணத்தில் விளக்கப்பட்டிருப்பதை விடவும் இரக்கமான வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு புதிய விதியைக் குறித்து இயேசு பேசுகிறார் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் உபாகமம் 19:17-21 வரையுள்ள வசனப்பகுதியை நீங்கள் வாசித்துப் பார்த்தால், அது இஸ்ரவேலர்களின் நியாயாதிபதிகளுக்குத் தரப்பட்டது என்பதை அறியலாம். உணர்ச்சிகளின் அடிப்படையில் எதையும் அணுகாமல், தீமை செய்தவர்களுக்கு நீதியை வழங்குவதில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும் – “கண்ணுக்குக் கண்” என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்றே இந்தப் பகுதி விளக்குகிறது. நியாயாதிபதிகளுக்குரிய இந்தக் கட்டளையைப் பரிசேயர்கள், சகல மனிதர்களும் தங்கள் வாழ்க்கையில் செய்யவேண்டியதொன்றாக மாற்றி விளக்கினார்கள். மனிதர்கள் தனிப்பட்ட விதத்தில் பழிவாங்குதலில் ஈடுபடக் கூடாது என்பதை நம்மாண்டவர், தெளிவான போதனைகளுடன் விளக்கியிருக்கிறார். இதையே பழைய ஏற்பாடும் போதிக்கிறது. யாத்திராகமம் 23:4, 5; லேவியராகமம் 19:18; நீதிமொழிகள் 24:29; 25:21, 22. தனிப்பட்ட துவேஷம் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையைப் பழைய ஏற்பாடு வெளிப்படையாகத் தடை செய்கிறது.

இன்னொரு உதாரணம், மத்தேயு 7:24, 25
“ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.”

மேலே காணப்படும் வசனப்பகுதிக்கான சரியான விளக்கத்தை அறியாததால், எத்தனை பேர் இந்தப் பகுதியைப் பயன்படுத்தி இதில் சொல்லப்படாத விஷயங்களைப் பிரசங்கித்திருக்கிறார்கள். கடவுளுடைய கிருபையுள்ள சுவிசேஷத்தை அறிவிக்கும் விதமாகப் பாவிகள் கர்த்தரிடம் வருவது மட்டுமே ஒரே வழி என்பதை சுட்டிக் காட்டும் விதத்தில் நம்முடைய ஆண்டவர் இதைச் சொல்லவில்லை. அவர் தன்னுடைய பிரசங்கத்தின் இறுதியில் அதன் நடைமுறைப் பயன்பாட்டையே இங்கு விளக்குகிறார். இப்பகுதியின் ஆரம்பத்தில் காணப்படும், “ஆகையால்” என்ற வார்த்தையின் மூலம், இதுவரை அவர் விளக்கிவந்திருக்கும் அனைத்தின் மூலமாக அவர் எதிர்பார்ப்பது இதுதான் என்பதைத் தெரிவித்திருக்கிறார். இதற்கு முந்தைய வசனங்களில் கிறிஸ்து, தங்களுடைய இரட்சிப்பிற்காக நற்கிரியைகளிலும், மதச் சடங்குகளிலும் தங்கியிருந்தவர்களுக்கு எதிரான போதனையை அளிக்கவில்லை. அதற்கு மாறாக, தன்னுடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்த அனைவரையும் இடுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசிக்கும்படியும் (வசனங்கள் 13, 14), போலித் தீர்க்கதரிசிகளுக்கு எதிரான எச்சரிப்பையும் (வசனங்கள் 15-20) இப்பகுதியில் விளக்கியிருக்கிறார். இதுவரை, பாவிகள் தன்னை நாடிவரும்படியான மீட்பராகத் தன்னைக் காட்டியிருக்கும் கிறிஸ்து, இப்போது, மாய்மாலக்காரர்களிடம் “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்” (வசனம் 23) என்று தன்னை நியாயாதிபதியாகக் காட்டுகிறார்.

இவற்றின் அடிப்படையில், இந்தப் பகுதியில் கிறிஸ்து சுவிசேஷத்தை அறிவித்து, இரட்சிப்பின் நிறைவேற்றத்திற்காகத் தான் செய்திருக்கும் செயலே பாவிகளின் இரட்சிப்பிற்கான ஒரே அடித்தளம் என்று விளக்குகிறார் என்று கூறுவது மிகவும் விநோதமானது. அப்படிக் கூறுவதால், “ஆகையால்” என்ற அறிமுக வார்த்தைக்கும் இனி வரப்போகும் விஷயங்களுக்கும் தொடர்பில்லாமல் போய்விடுகிறது. பாவநிவாரணத்திற்காகத் தன்னுடைய இரட்சிக்கும் இரத்தத்தில் விசுவாசம் வைக்கவேண்டும் என்று கூறாமல், இயேசு இந்தப் பகுதியில், அவருடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டியது எத்தனை அவசியமானது என்பதையே விளக்குகிறார்.  “இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே” (ரோமர் 3:26) அல்லாமல் வேறு எந்தவிதத்திலும் எந்தவொரு ஆத்துமாவுக்கும் மீட்பு இல்லை என்பது உண்மை. ஆனால் அதைப்பற்றி இயேசு இந்தப் பகுதியில் விளக்கவில்லை. தன்னை நோக்கி “கர்த்தாவே, கர்த்தாவே” என்று சொல்லுகிற எல்லாரும் தம்முடைய இராஜ்யத்தில் நுழைந்துவிட முடியாது என்றும், “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே” (வசனம் 21) அதில் நுழைவான் என்றும் சொல்லியிருக்கிறார். தன்னை அறிந்திருக்கிறேன் என்று சொல்லுவதன் மெய்த்தன்மையை நிரூபித்துக் காட்டுங்கள் என்றே அவர் வலியுறுத்துகிறார். மெய்யான விசுவாசம், அதற்கேற்ற நற்காரியங்களைக் கொண்டிருக்கும். ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் இரட்சிப்பு உண்டு என்று விசுவாசித்திருக்கிறேன் என்று அறிவித்தும், அவருடைய கட்டளைகளை அலட்சியப்படுத்துகிறவர்களாக இருந்தால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளுகிறீர்கள் என்கிறார் இயேசு. கிறிஸ்து தம்முடைய வார்த்தைகளைக் கேட்டு, அதை விசுவாசிக்கிறவர்களை கற்பாறையின் மீது வீடு கட்டிய ஞானமுள்ளவனுக்கு ஒப்பாக இந்தப் பகுதியில் விளக்கவில்லை. யார், தன் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்கிறானோ அவனையே இயேசு ஞானமுள்ளவனாகக் காட்டுகிறார். தம்முடைய வார்த்தைகளைக் கேட்டும் அதன்படி நடக்காதவனை மணலின்மீது தன் வீட்டைக் கட்டியவனோடு ஒப்பிடுகிறார்.

ரோமர் 3:28
“ஆதலால் மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.”

யாக்கோபு 2:24
“ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.”

இந்த இரண்டு பகுதிகளையும் எழுதியவர்களின் நோக்கத்தை நாம் தெளிவாக அறிந்திராவிட்டால், இவை இரண்டும் நேரடியாக ஒன்றுகொன்று முரண்படுபவையாகவே நமக்குப் புலப்படும். ரோமர் 3:28, அந்த வசனத்திற்கு மேலிருக்கின்ற (21-27) வசனங்களின் முடிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, இரட்சிப்பிற்கான கடவுளுடைய வழிமுறை மனிதர்களுடைய எந்தவிதமான பெருமைக்கும் வழியில்லாதபடிச் செய்திருக்கிறது. விசுவாசத்தினால் ஒருவன் கடவுளுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுகிறானென்றால் அது மனிதனுடைய எந்தவொரு நற்செயலினாலும் இல்லாமல், விசுவாசத்தினால் மட்டுமே அமைய முடியும்.

யாக்கோபு 2:24, இந்தப் பகுதியிலிருக்கிற 17, 18 மற்றும் 26 வசனங்களின் அடிப்படையில் ஒரு மனிதன் கடவுளால் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுகிறான் என்பதை விளக்காமல், கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவன் அதற்கான நிரூபனங்களைத் தன்னில் கொண்டிருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறார். பவுல் ரோமரில், மனிதர்களுடைய இரட்சிப்பிற்காகச் சுய நீதியை நாடுகிறவர்களின் போக்கை மறுக்கிறார். ஆனால் யாக்கோபோ, சுவிசேஷத்தைக் குழப்பி, நற்செயல்கள் எந்தவிதத்திலும் அவசியமற்றது என்று போதிக்கிற கர்த்தருடைய கட்டளைகளுக்கு எதிரானவர்களோடு போராடுகிறார். கிருபையினாலேயே இரட்சிப்பு என்பதை நிராகரிக்கிறவர்களுடைய தவறான எண்ணத்தைப் பவுல் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் யாக்கோபோ, ஒரு மனிதனில் கிருபை செயல்படுகிறபோது, அது அவனுடைய நீதியிலும், அவனில் ஏற்படும் மாற்றங்களிலும் வெளிப்படும் என்று விளக்கி, செத்த விசுவாசத்தின் பயனற்ற தன்மையை வெளிப்படுத்திக் காட்டுகிறார். கர்த்தருடைய உண்மையுள்ள ஊழியன், தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்களை, சுயநீதிக்கு எதிராகவும், தாராளவாதத்திற்கு எதிராகவும் எச்சரிக்கிறவனாக இருப்பான்.

ஆறாவது, வேதத்தை வேதத்தோடு ஒப்பிட்டு விளக்க வேண்டியது அவசியம். இது குறித்த பொதுவானதொரு விளக்கத்தை 1 கொரிந்தியர் 2:13ல் காணலாம்,  “ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.” இந்த வசனத்தின் முற்பகுதி, அப்போஸ்தலனாகிய பவுல், கர்த்தருடைய நேரடிப் பிரதிநிதியாக இருந்து தெய்வீக வெளிப்படுத்தலின் மூலமாகத் தான் போதித்து வருவதாகச் சொல்லுகிறார் என்பதைக் காட்டுகிறது. இருந்தும், 12 மற்றும் 14 ஆவது வசனங்களில், ஆவிக்குரிய காரியங்களை அறிந்துகொள்ளுவதைப் பற்றிப் பவுல் குறிப்பிடுகிறார். ஆகவே 13 ஆவது வசனத்தின் பிற்பகுதி கூடுதலான அழுத்தம் கொண்டதாக இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இதிலுள்ள “சம்பந்தப்படுத்தி” என்ற வார்த்தைக்கான கிரேக்க வார்த்தை, பழைய ஏற்பாட்டின் செப்டுவஜின்ட் (Septuagint) மொழிபெயர்ப்பில் பல முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கனவுகள் மற்றும் புதிரான காரியங்களைக் குறிப்பிடுவதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்” என்பதை சார்ள்ஸ் ஹாட்ஜ், “ஆவியானவரைப் பற்றிய காரியங்களை ஆவியானவரின் வார்த்தைகளில் விளக்குதல்” என்று விளக்கியிருக்கிறார். ஆகவே “ஆவிக்குரிய” என்ற வார்த்தை தன்னில்தானே பொருள் கொண்டதல்ல. இது முந்தைய வாக்கியத்திலுள்ள “வார்த்தை” என்பதோடு இணைந்து காணப்படுகிறது; அதோடு ஒத்துக் காணப்படுகிறது. இந்தக் காரணங்களினால்தான், 1 கொரிந்தியர் 2:13, கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வதற்கும் விளக்குவதற்குமான மிக முக்கியமான விதியை விளக்குகிறது என்று கருதுகிறோம். அதாவது, கர்த்தருடைய வார்த்தையின் ஒரு பகுதியை அதனுடைய மற்றொரு பகுதியைக் கொண்டு விளக்க வேண்டும். ஆவிக்குரிய காரியங்கள், ஒன்றுக்கொன்று பக்கத்தில் அமைந்திருக்கிறபோது, ஒரு பகுதியை மற்றொன்று விளக்குகிறதாகவும், அதற்கு ஒளியூட்டுவதாகவும் இருக்கிறது. இது கர்த்தருடைய வார்த்தை தன்னில்தானே இணக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கிற அடையாளமாக இருக்கிறது. வேதத்தில் குழப்பமான அல்லது தெளிவற்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுகிறபோது, சத்தியத்தின் ஒரு பகுதி மற்ற பகுதிகளுடன் முழுமையாக ஒத்துப்போகிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப வேதத்தை விளங்கிக்கொள்ள வேண்டும்.

பரிசுத்த வேதாகமம், ஏனைய புத்தகங்களைப் போல் இல்லாமல், தன்னைத்தானே விளக்குகிறதாக இருக்கிறது. அது, தான் கொண்டிருக்கும் வாக்குறுதிகள் மற்றும் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைக் கொண்டிருப்பதனால் மட்டுமல்லாமல், தன்னிலுள்ள முன்னடையாளங்களின் வெளிப்பாட்டையும் கொண்டிருப்பதால், தன்னில் காணப்படும் அனைத்து சத்தியங்களுக்கும் எந்தவிதமான வெளிப்புற உதவிகளின் அவசியமில்லாமல் தன்னில்தானே விளக்கங்களைக் கொண்டமைந்திருக்கிறது. வேதத்திலுள்ள ஒரு பகுதிக்கான விளக்கத்தை அறிவது கடினமாக இருந்தால், அதோடு தொடர்புடைய வேதத்தின் இன்னொரு பகுதியோடு சேர்த்து ஆராய்ந்து அதன் பொருளை அறிந்துகொள்ள வேண்டும். அது ஒரேவிதமான வார்த்தைப் பதங்கள் கொண்டிருக்கிற பகுதியாகவோ, அல்லது, ஒரேவிதமான போதனையை விரிவாகவும், விவரமாகவும் கொண்டிருக்கிற பகுதியாகவோ இருக்கலாம். உதாரணமாக, வேதத்திலுள்ள முக்கியமான ஒரு வார்த்தைப்பிரயோகமாகிய “தேவநீதி” ரோமர் 1:17ல் இடம்பெற்றிருக்கிறது. இந்த வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை முடிவுசெய்வதற்கு முன்பாக, பவுலின் ஏனைய நிருபங்களில் இதே வார்த்தைப்பிரயோகம் எந்தவிதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கவனமாக ஆராய்ந்தறிய வேண்டும். இப்படிச் செய்வதனால், உலக எழுத்தாளர்களுடைய கருத்துக்களை நாம் நாடி ஓட வேண்டிய அவசியமில்லாமல் போகிறது. வேதத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் மட்டுமல்லாது, ஒரு வார்த்தையிலுள்ள ஒரு பகுதிக்கும், அதனுடைய வழியின்படி வருகிற துணைக் குறிப்புகளுக்கும் இதேவிதத்தில், நுட்பமாக ஆராய்ந்து விளக்கத்தைப் பெறவேண்டும். இத்தகைய சிறு குறிப்புகளின் மூலமாகவும் அவ்வப்போது நாம் வேத விளக்கத்தின் வெளிச்சத்தைப் பெறுகிறோம். கர்த்தருடைய வார்த்தையை இந்தவிதத்தில் நாம் படிக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார் என்பதை இதிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம்.

வேதத்திலுள்ள முக்கியமான போதனைகள், வேதத்தின் பல பகுதிகளிலும் இங்கும் அங்குமாகப் பரவி, சில நேரடியாகவும், சில மறைமுகமாகவும், பல்வேறு விதங்களில் காணப்படுகிறது. தம்முடைய வார்த்தையை நாம் ஆராய்ந்தறிய வேண்டும் என்பதற்காக கர்த்தர் தாமே தம்முடைய ஞானத்தினால் இந்த விதத்தில் வேதத்தைத் தந்திருக்கிறார். எந்தவொரு காரியத்தைப் பற்றியும் கடவுளுடைய சித்தத்தை நாம் அறிய வேண்டுமானால், அது குறித்து தரப்பட்டிருக்கும் அனைத்து வேதப்பகுதிகளையும் ஒன்று திரட்டி, அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்தவிதத்தில், கவனத்துடனும் விடாமுயற்சியுடனும் நாம் ஆராய்கிறபோது, கர்த்தருடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தில் அவை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கிற காரியங்களைப் பற்றிய தெளிவான அறிவை நாம் பெற்றுக்கொள்ளலாம். பரிசுத்த வேதாகமம் ஒரு விதத்தில் மொசைக் கற்களைப் போன்றது. அதனுடைய பகுதிகள் இங்கும் அங்குமாக சிதறிக் காணப்படும். அவற்றைச் சேகரித்து, மிகுந்த கவனத்துடன் ஒன்றிணைத்துப் பார்க்கிறபோதுதான், அதிலுள்ள எந்தவொரு போதனையின் முழுமையான படத்தை நாம் காண முடியும். வேதத்திலுள்ள பல பகுதிகளை, வேதத்தின் ஏனைய பகுதிகளில் தரப்பட்டிருக்கிற விளக்கங்களின் மூலமாகவே புரிந்துகொள்ள முடியும்.

© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.