திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

1. வாசகர்களே!
2. மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கினால்
3. பெருமையால் வந்த பேராபத்து
4. மனித சித்தமும், சுவிசேஷ அறிவிப்பும்
5. பாவம் நம்முடைய எதிரி என்ற உண்மை தரும் பாடம் – ரால்ப் வென்னிங்
6. பியூரிட்டன்களின் பார்வையில் மனந்திரும்புதல்
வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே! புது வருட வாழ்த்துக்களை இதழூழியத்தில் இணைந்து பணிபுரிகிறவர்கள் சார்பாகத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். புதிய வருடம் பிரச்சனையில்லாத வருடமாக இருக்க கர்த்தர் எல்லோருக்கும் துணைசெய்யட்டும். பலவிதமான கோவிட்-19 சிக்கல்களுக்கு மத்தியில் இதழைத் தொடர்ந்து வௌ¤யிட ஆண்டவர் துணை செய்து வருகிறார். புதிய வருடத்திலும் அதைத் தொடர அவருடைய கிருபையை நாடி நிற்கிறோம்.

இந்த இதழில் ‘மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கினால்’ என்ற ஆக்கத்தில் 1 தீமோத்தேயு 1:5 பற்றிய வேதஉட்பொருள் விளக்கவுரை அளித்திருக்கிறேன். இது ஒரு புதுவகை ஆக்கமாகத் தெரியலாம். இதை ஆங்கிலத்தில் Exegetical Essay என்று அழைப்பார்கள். தமிழில் இருக்கும் வேதமொழிபெயர்ப்புகளின் குறையை மட்டுமல்லாமல் கவனத்தோடு வசனங்களை ஆராய்ந்து போதிக்க வேண்டிய அவசியத்தையும் இதில் சுட்டியிருக்கிறேன். புதிதாக நாம் வெளியிட்டிருக்கும் ‘மனித சித்தம்’ எனும் நூலின் ஒரு அதிகாரத்தின் பகுதியை இதில் தந்திருக்கிறேன். அந்த நூலைப் பெற்று வாசித்து நண்பர்களுக்கும், சக கிறிஸ்தவர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்.

இதையடுத்து 2 இராஜாக்கள் 15ம் அதிகாரத்தில் இருந்து அசரியா எனப்படும் உசியாவைப்பற்றிய ஒரு விளக்கத்தையும் இந்த இதழில் காணலாம். அது நானளித்திருக்கும் ஒரு பிரசங்கத்தின் வடிவம். அத்தோடு நாம் வௌ¤யிட்டிருக்கும் ‘பியூரிட்டன்களின் பார்வையில் மனந்திரும்புதல்’ எனும் நூலைப் பல தடவைகள் வாசித்து, அனுபவித்துத் தன் அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளுகிறார் மத்தியகிழக்கு நாட்டில் வாழும் ஒரு வாசகி. அது உங்களையும் நூலைப் பெற்று வாசிக்கத் தூண்டட்டும்.

பாவத்தின் பாவம் என்ற ரால்ப் வென்னிங்கின் நூலின் இறுதிப் பகுதி இந்த இதழில் வந்திருக்கிறது. இனி இதை நூலாக வெளியிடும் நற்பணியை ஆரம்பிக்கவேண்டும். அதற்காக ஜெபியுங்கள். அத்தோடு நம்மினத்தில் நல்ல நூல்களைப்பெற்று வாசிக்கும் பயிற்சி வளர்ந்து, சபைகள் சத்தியத்தில் வளர்ந்துயரவும் ஜெபித்துக்கொள்ளுங்கள். சத்தியத்தை அடிப்படையாகக்கொண்ட ஆத்மீக வளர்ச்சியில்லாத சபைகளாலும், ஆத்துமாக்களாலும் யாருக்கு என்ன பயனிருக்கப்போகிறது? சத்தியதாகமில்லாதிருக்கும் நம்மினத்திற்காகத் தொடர்ந்து ஜெபியுங்கள். – ஆசிரியர்

மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கினால்

மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. இதில் வரும் ‘குதிர்’ என்ற வார்த்தை படிப்படியாக மாறிப் பின்னால் ‘குதிரை’ என்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையில் இந்தப் பழமொழி குதிரையைப் பற்றியதல்ல. குதிர் என்பது மணல்திட்டைக் குறிக்கிறது. அதாவது, ஆற்றில் சில இடங்களில் மண்திட்டுக்கள் தீவுகள்போலத் தெரியும். அது குவிந்திருக்கும் வெறும் மணல்தானே தவிர உறுதியான தரை அல்ல. தரைதானே என்று நினைத்து அதில் கால்வைத்துவிட்டால் புதைமணல் நம்மை உள்ளே இழுத்துவிடும் ஆபத்து இருக்கிறது. அதனால்தான் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்ற பழமொழி உருவானது.

இந்தப் பழமொழி என் நினைவுக்கு வந்த காரணம், நாம் பயன்படுத்திவரும் தமிழ் வேத மொழிபெயர்ப்புகளைப்பற்றி நான் சமீபத்தில் மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்ததுதான். என்னைப் பொறுத்தவரையில் அநேக தடவைகள் அவை எங்கு கைவைத்தாலும் மண்குதிரைப்போலக் காலைவாரிவிட்டுவிடுகின்றன. அவற்றை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தி வருகிற பிரசங்கிகளும், ஆத்துமாக்களும் என்னென்ன பிரச்சனைகளைச் சந்திக்கிறார்களோ என்று என்னால் ஆதங்கப்படாமல் இருக்க முடியவில்லை. வேதத்தைப் பகுத்துப் பிரித்து விளக்கிப் போதிக்கும் (Exegetical Expository Preaching) ஆவலுள்ள பிரசங்கிகள் நம்மினத்தில் இருந்தால் இவை நிச்சயம் தடங்கலாகத்தான் அமையும்.

பலரும் பொதுவாகப் பயன்படுத்தி வரும் தமிழ் வேத மொழிபெயர்ப்பாகிய OV – இந்திய வேதாகம சங்கம், 1871 ஹென்றி பவர் திருத்திய மொழிபெயர்ப்பு) துல்லியமாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை என்பதை ஏற்கனவே இந்த இதழில் சில ஆக்கங்களில் விளக்கியிருக்கிறேன். இந்த மொழியாக்கத்தைச் செய்திருந்த மிஷனரிகளுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். இருந்தாலும் மொழியாக்கம் என்பது இலகுவானதல்ல; அதேவேளை வேதத்தை மொழிபெயர்க்கும்போது சாதாரண மொழியாக்கங்களைவிட அதிக கவனத்தோடும், அக்கறையோடும், தரமாகவும், துல்லியமாகவும் மொழிபெயர்க்க வேண்டும். உண்மையில் தமிழ் வேதத்தைப்போலவே இந்திய மொழிகள் அனைத்திலும் வேதமொழிபெயர்ப்புகள் துல்லியமாக இல்லை என்று சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்திய வேதாகம சங்கம் வெளியிட்டுவரும் தமிழ் வேத பழைய திருப்புதல் மொழிபெயர்ப்பைவிடத் ‘திருவிவிலியம்’ போன்ற வேறு சில மொழிபெயர்ப்புகளும் வெளிவந்திருக்கின்றன. சமீபத்தில், WBTC வெளியிட்டிருக்கும் இலகு வாசிப்பு மொழிபெயர்ப்பைப் பற்றியும் கேள்விப்பட்டேன். இந்த மொழிபெயர்ப்பை நான் இன்னும் ஆய்வு செய்யவில்லை. இதற்கு முன்வந்திருக்கும் மொழியாக்கங்களை ஆய்வு செய்ததில் ஒன்றுகூடத் தமிழ் வேத பழைய திருப்புதலைவிட (OV) எந்தவிதத்திலும் உயர்வானதாக இல்லை; உண்மையில் எல்லாமே தரமற்ற மொழியாக்கங்களாகவே இருக்கின்றன. அதுவும் நல்ல தமிழில் வாசிக்கக்கூடியவிதத்தில் மொழியாக்கம் செய்வதை மட்டுமே நோக்கமாகக்கொண்டு இவை மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதால், மூலமொழிகளில் இருப்பதைப்போன்று சத்தியம் தவறாமல் துல்லியமாக மொழியாக்கம் செய்வதில் எந்த அக்கறையையும் காட்டவில்லை. இவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்தை நான் அநேகருக்கு சுட்டியிருக்கிறேன். அடிக்கடி தமிழ் வேதமொழிபெயர்ப்புகளில் எது சிறந்தது என்று என்னிடம் சிலர் கேட்டிருக்கிறார்கள்; தொடர்ந்தும் கேட்டு வருகிறார்கள். உண்மையில் அப்படி நாம் நம்பிப் பயன்படுத்தக்கூடியவிதத்தில் மூலமொழிகளுக்கேற்றவிதத்திலும், இலகு தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்ட தரமான மொழிபெயர்ப்பொன்று இதுவரை வரவில்லை என்றுதான் நான் அவர்களுக்குப் பதிலளித்திருக்கிறேன். இனியும் அப்படியொன்று நம் காலத்தில் வரும் என்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

இந்திய வேதாகம இலக்கியம் 2000ம் ஆண்டில் ஜேம்ஸ் அரசன் மொழிபெயர்ப்பான 1611 (King James Version) ஐப் பயன்படுத்தி, அதிலுள்ள புரிந்துகொள்ளக் கடினமான வார்த்தைகளுக்கு இலகு வார்தைகளைத் தந்து தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரு மொழியாக்கத்தை வெளியிட்டார்கள் (Parallel Bible). இது முழுமையாக ஆங்கில ஜேம்ஸ் அரசன் மொழியாக்கத்தைத் தழுவிய தமிழ் மொழியாக்கம். இப்போது நம்மத்தியில் பலரும் பயன்படுத்தி வரும் பழைய திருப்புதலைவிட இது நன்மையானது என்பது என் கருத்து. அத்தோடு ஸ்ரீலங்கா சர்வதேச வேதாகம சங்கம் 2002ல் இலகு தமிழில் ஒரு மொழிபெயர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இதுவரை அதை நான் பயன்படுத்தியதில்லை. இப்போது முக்கியமான சில பகுதிகளை வாசித்தபோது அந்தப் பகுதிகளின் மொழிபெயர்ப்பு சரியாகவே இருந்தது. தமிழும் நெருடலுள்ளதாக இல்லை. இருந்தாலும் கடவுளைத் ‘தேவன்’ என்று சொல்லியும், கேட்டும் பழகியவர்களுக்கு ‘இறைவன்’ என்பது ஒரு மாதிரியாகப்படலாம். இந்த மொழியாக்கத்தைப்பற்றிய விபரங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

வேதமொழிபெயர்ப்புகளின் நிலை இப்படியிருக்கும்போது போதகர்களும், இறையியல் மாணவர்களும் என்ன செய்யவேண்டும்? என்பது ஒரு முக்கியமான கேள்வி. அதற்கான பதிலை இந்த ஆக்கத்தின் முடிவில் தரப்போகிறேன்.

இப்போது தமிழ் வேத பழைய திருப்புதலில் ஒரு வசனத்தைப் பற்றிய விளக்கத்திற்கு வருவோம். அந்த வசனம் 1 தீமோத்தேயு 1:5. அது பின்வருமாறு காணப்படுகிறது,

‘கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.’

இந்த வசனத்தை விளக்கும்படி சகோதரர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். அதுவே இந்த ஆக்கத்திற்கு அடித்தளமாக அமைந்தது. இந்த வசனம் என்னைப் பொறுத்தவரையில் துல்லியமாக கிரேக்க மூலத்தில் இருப்பதுபோன்று மொழியாக்கம் செய்யப்படவில்லை. மொழியாக்கம் செய்தவர்கள் எழுத்துபூர்வமாக மொழியாக்கம் செய்யாமல்விட்டிருப்பதோடு, வசனம் காணப்படும் சந்தர்ப்பத்தையும் தவறாகப் புரிந்துகொண்டு வசனத்தை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். தமிழ் வேத பழைய திருப்புதல் (OV) துல்லியமாக மூலமொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்படவில்லை என்பதற்கு இந்த வசனம் இன்னுமொரு நல்ல எடுத்துக்காட்டு.

முதலாவதாக, இந்த வசனத்தின் ஆரம்பத்தில் கிரேக்க மூலமொழியில் இருந்த ‘de’ எனும் இணைவார்த்தை மொழிபெயர்க்கப்படவில்லை. அந்த வார்த்தை ‘ஆனால்’ அல்லது ‘இப்போது’ என்ற அர்த்தத்தைக் கொண்டிருந்து, இந்த வசனத்தை இதற்கு முன்னால் வந்திருக்கும் வசனங்களோடு இணைக்கிறது. இந்த வசனம் விளக்கும் உண்மைக்கான காரணத்தை இதற்கு முன் வந்திருக்கும் நான்கு வசனங்களுமே தருகின்றன. இந்த இணைவார்த்தையைத் தவிர்த்துவிடுவதால் அந்தக்காரணத்தைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பில்லாமல் போவதோடு, இந்த வசனத்தை இதற்கு முன் வந்திருக்கும் வசனங்களோடு தொடர்பில்லாததாகக் கருதிவிடும் ஆபத்திருக்கிறது. இந்த வசனத்தில் இந்த இணைவார்த்தை முக்கியமாக இன்னுமொரு காரியத்தையும் செய்கிறது. அதாவது, 1:5ன் கட்டளையின் முடிவு என்ன என்பதை அழுத்தந்திருத்தமாக விளக்குவதற்காகவும் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இணைவார்த்தை தமிழ் வேதத்தில் தவிர்க்கப்பட்டிருப்பது இந்த வசனத்தைப் புரிந்துகொள்வதில் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது.

இரண்டாவதாக, இந்த வசனத்தில் அடுத்த முக்கியமான கிரேக்க வார்த்தை ‘telos.’ இதற்குப் பொதுவாக முடிவு அல்லது பூரணமானது என்றுதான் அர்த்தம். இருந்தபோதும் சந்தர்ப்பத்திற்கேற்றபடி இது மொழிபெயர்க்கப்பட வேண்டும். அந்தவகையில் இந்த வசனத்தில் இது ‘நோக்கம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் end, goal, purpose என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது இந்த வசனத்தில் காணப்படும் அடுத்து வரும் வார்த்தையான கட்டளையோடு தொடர்புடையது. தன் கட்டளையின் நோக்கத்தைப் பற்றியே பவுல் இங்கு விளக்குகிறார். இதைத் தமிழ் (OV) மொழிபெயர்ப்பு ‘பொருள்’ என்று மொழிபெயர்த்திருக்கிறது. பொருள் என்றால் அர்த்தம் அல்லது விளக்கம் என்று கூறலாம். இந்த இடத்தில் அந்த அர்த்தத்தில் telos மூலமொழியான கிரேக்கத்தில் பயன்படுத்தப்படவில்லை. நோக்கம், இலக்கு, இறுதி முடிவு என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கு மொழிபெயர்ப்பு பொருள் மாறி வலிமை குன்றிக் காணப்படுகிறது.

மூன்றாவதாக, தமிழில் இந்த வசனத்தின் ஆரம்பத்தில் வரும் வார்த்தையான ‘கற்பனை’ என்பது சரியான மொழிபெயர்ப்பல்ல. இதற்கான கிரேக்க வார்த்தையை கற்பனை என்று மொழிபெயர்த்திருப்பது இந்த வசனம் காணப்படும் பகுதியின் அர்த்தத்தையே மாற்றிவிடுகிறது. இந்த வார்த்தை கிரேக்கத்தில் parangelia என்றிருக்கிறது. இந்தப் பதம் புதிய ஏற்பாட்டில் 34 தடவைகள் காணப்படுகின்றன. 1 தீமோத்தேயுவில் 6 தடவைகள் காணப்படுகின்றன (1:3; 1:5; 1:18; 4:11; 5:7; 6:13; 6:17). இந்த கிரேக்க வார்த்தைக்கு ‘அதிகாரத்துடனான கட்டளை’ என்பது அர்த்தம். ஒரு போர்வீரனுக்குக் கொடுக்கப்படும் அதிகாரமுள்ள கட்டளை என்ற அர்த்தத்தை இது கொண்டிருக்கிறது.

அப்போஸ்தலர் 5:28 ல் இந்த கிரேக்க வார்த்தையின் பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் இணைத்து லூக்கா பயன்படுத்தியிருக்கிறார் (parangelia parangeilamen). தமிழ் வேதம் (OV) அதை ‘உறுதியாய்க் கட்டளையிடவில்லையா?’ என்று மொழியாக்கம் செய்திருக்கிறது. வேதவிளக்கவியலாளர் லென்ஸ்கி இதை எழுத்துபூர்வமாக ஆங்கிலத்தில் ‘with an order we gave orders to you’ என்று மொழிபெயர்த்திருக்கிறார். ஏனென்றால் இங்கே ஒரே கிரேக்க வார்த்தை இரண்டு தடவை ஒரே அர்த்தத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு ஆங்கில மொழியாக்கம் இதை ‘commanding we commanded you’ என்று மொழியாக்கம் செய்திருக்கிறது. இதைத் தமிழில், ‘கட்டளையாய்க் கட்டளையிடவில்லையா?’ என்று எழுத்துபூர்வமாக விளக்கலாம். ஆனால், அது வாசிப்பதற்கு நெருடலாக இருக்கிறது. இந்த இடத்தில் முதலாவது வார்த்தையான கட்டளை வசனத்தின் இரண்டாவது வார்த்தையான கட்டளையை அழுத்தந்திருத்தமாக அது எத்தனை அதிகாரமுள்ளது என்பதை வலியுறுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் எழுத்துபூர்வமான நேரடி மொழியாக்கம் வாசிப்பதற்கு உதவாது. ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு இதை, By charge we commanded you (Berean Literal Bible) என்று மொழிபெயர்த்திருக்கிறது. அது சரியான மொழிபெயர்ப்பு. பொதுவாக எல்லா நல்ல ஆங்கில மொழிபெயர்ப்புகளும் அதை strictly commanded you அல்லது strictly ordered you என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். தற்காலத் தமிழில் இதை மொழியாக்கம் செய்தால், அது, ‘அதிகாரத்தோடு கட்டளையிடவில்லையா?’ அல்லது ‘ஆணித்தரமாய்க் கட்டளையிடவில்லையா?’ என்றிருக்க வேண்டும். இரண்டுமே பொருத்தமானதுதான். வேதமொழியாக்கத்தில் ஈடுபடுகிறவர்கள் மூலமொழியில் இருக்கும் வார்த்தையின் அர்த்தம் மாறாமலும், அதன் அழுத்தத்தைக் குறைத்துவிடாமலும் மொழியாக்கம் செய்யவேண்டும்.

இப்போது மறுபடியும் 1 தீமோத்தேயு 1:5 ஐக் கவனிப்போம். இந்த வசனத்தில், பிரச்சனை வார்த்தைக்கான பொருளைப்பற்றியதாக மட்டுமல்லாது பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை பொருத்தமானதா என்பதையும் பற்றியது. இதில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் கிரேக்கத்தில் parangelia (ஆங்கிலத்தில் Commandment) என்றிருக்கும் வார்த்தையை அது பத்துக்கட்டளைகளைக் குறிக்கிறது என்று ஊகம் செய்து அதைக் ‘கற்பனை’ என்று மொழிபெயர்த்திருக்கிறார். இதுவே தமிழ் வேதமொழிபெயர்ப்பில் இந்த வசனத்தின் அர்த்தத்தை அடியோடு மாற்றிவிடுகிறது. தமிழ் வேதமொழிபெயர்ப்பு (OV) ‘கற்பனை’ என்ற தமிழ்ப்பதத்தை பத்துக்கட்டளைகளையும், நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளையும் மட்டுமே குறிக்கப் பயன்படுத்துகிறது. உண்மையில் மூலமொழிகளான எபிரெயத்திலோ, கிரேக்கத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ பத்துக்கட்டளைகளை மட்டும் குறிப்பதற்குத் தனியாக ஒரு வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. பொதுவாகவே கர்த்தருடைய கட்டளைகளுக்கும், இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளுக்கும், மனிதர்களுடைய கட்டளைகளுக்கும் ஒரே அர்த்தம் கொண்ட வெவ்வேறு வார்த்தைகள் மூலமொழிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் எந்த வார்த்தையும் ‘தெய்வீக’ அந்தஸ்தைக் கொண்டிருக்கவில்லை. தமிழ் வேதத்தில் இப்படியாக ‘கற்பனை’ என்ற வார்த்தையை விசேஷமாக பத்துக்கட்டளைகளையோ அல்லது அவற்றில் ஒன்றை மட்டுமோ குறிக்கப் பயன்படுத்தியிருப்பது முழுத்தவறு. இதன் மூலம் மொழிபெயர்ப்பாளர் இரண்டு தவறுகளுக்கு இடம் கொடுத்திருக்கிறார்.

  1. முதலில், மூலமொழியில் இருந்த வார்த்தையை அதிலிருப்பதுபோல் மொழிபெயர்க்காமல் தன்னுடைய கருத்தின்படியான ஒரு வார்த்தையை அந்த இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.
  2. மொழிபெயர்ப்பாளர் தான் செய்யவேண்டிய பணியைச் செய்யாமல் விளக்கவுரையாளராக (commentator) மாறியிருக்கிறார். இதனால் வாசகர்கள் செய்யவேண்டிய பணியை மொழிபெயர்ப்பாளர் செய்திருக்கிறார்.

இந்தத் தவறுகள் வேதத்தை எழுத்துபூர்வமாக வாசகர்கள் முன் சமர்ப்பிக்காமல், மொழிபெயர்ப்பாளன் தன் சொந்தக் கருத்தை அதில் திணித்து வாசகர்களைத் திசைதிருப்பிவிடுகிற ஆபத்தை ஏற்படுத்திவிட்டிருக்கிறது.

1 தீமோத்தேயு 1:5ன் ஆரம்பத்தில் வந்திருக்க வேண்டிய ‘de’ எனும் கிரேக்க இணைவார்த்தையை தவிர்க்காமலும், வசனத்துக்கு முன்னாலும் பின்னாலும் இருக்கும் வசனங்களைத் தொடர்புபடுத்தியும் வாசித்திருந்தால் மொழிபெயர்ப்பாளரின் இந்தத் தவறுகளுக்கு இடம் இருந்திருக்காது. சந்தர்ப்பத்தைக் (Context) கவனிக்காமல் எதையும் விளக்கவோ, மொழிபெயர்க்கவோகூடாது. அதாவது, ஒரு வசனம் அமைந்திருக்கும் சந்தர்ப்பத்தைக் கவனிக்காமல் மொழிபெயர்ப்பாளன் மொழிபெயர்ப்பில் ஈடுபடக்கூடாது. 1 தீமோத்தேயு 1:5ல் காணப்படும் ‘கற்பனை’ என்ற வார்த்தை ‘கட்டளை’ அல்லது ‘உத்தரவு’ என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். இங்கு கிரேக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் parangelias என்ற வார்த்தைக்கு அதுவே பொருள். இந்திய வேதாகம இலக்கிய மொழிபெயர்ப்பும் (IBL 2000), ஸ்ரீலங்காவில் சர்வதேச வேதாகம சங்கத்தினரால் 2002ல் வெளியிடப்பட்ட இலகு தமிழ் மொழிபெயர்ப்பும் (IBS) இந்த வார்த்தையை சரியாகக் ‘கட்டளை’ என்று மொழிபெயர்த்திருக்கின்றன.

அத்தோடு, 1:7-9 ஆகிய வசனங்களில் பவுல் நியாயப்பிரமாணத்தைப் பற்றி விளக்கியிருக்கிறார். இந்த வசனங்களில் நியாயப்பிரமாணம் என்ற பதம் நிச்சயம் பத்துக்கட்டளைகளைத்தான் குறிக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை. அதனால்தான் தமிழ்வேத மொழிபெயர்ப்பாளர்கள் 1:5ல் காணப்படும் commandment என்ற வார்த்தை பத்துக்கட்டளையைத்தான் குறிக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், அது மிகவும் தவறான முடிவு. 1:1-10 வரையுள்ள வசனங்களைக் கவனமாக வாசித்தால் 1:5 பத்துக்கட்டளைகளைப்பற்றியதல்ல என்பதை உணரலாம்.

1:3ல் பவுல் ‘நீ சிலருக்குக் கட்டளையிடும் பொருட்டாக’ என்று சொல்லியிருக்கிறார். இங்கே கட்டளை என்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை 1:5ல் காணப்படும் அதே வார்த்தைதான். 1:3ல் அது வினைச்சொல். 1:5ல் அது பெயர்ச்சொல். அது மட்டுமே வேறுபாடு. ஆனால், 1:5ல் அது ‘கற்பனை’ என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1:5 லும் அது ‘கட்டளை’ என்றே மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். 1 தீமோத்தேயு 1:5, பவுல், போலிப்போதனைகளுக்கும், வெறும் கட்டுக்கதைகளுக்கும் இடங்கொடாமல் (வசனம் 3) கிறிஸ்துவின் போதனைகளை மட்டுமே பின்பற்றும்படி சபைக்குக் கொடுத்த கட்டளையையே குறிக்கிறது. இந்த வசனத்தை எழுத்துபூர்வமாக மொழிபெயர்த்தால் அது ‘ஆனால், எங்கள் கட்டளையின் நோக்கம், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே’ என்றிருக்கவேண்டும். இதன் பொருள் என்னவென்றால், ‘நாங்கள் கிறிஸ்துவின் போதனைகளை விளக்கி நீங்கள் பின்பற்றும்படியாகக் கொடுத்த கட்டளையின் நோக்கம் நல்ல மனச்சாட்சியிலும், உண்மையான விசுவாசத்திலும் இருந்து பிறக்கும் அன்பே’ என்பதுதான். அதாவது, எங்களுடைய கட்டளை அன்பின் அடிப்படையில் உங்கள் மத்தியில் வளரவேண்டிய அன்பை இலக்காகக்கொண்டு கொடுக்கப்பட்டது என்கிறார் பவுல்.

ESV ஆங்கில மொழிபெயர்ப்பு 1 தீமோத்தேயு 1:5ஐ சரியாக மொழிபெயர்த்திருக்கிறது. ‘The aim of our charge is love . . .’ என்று அது மொழிபெயர்த்திருக்கிறது. தமிழ் வேத மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கில KJV (1611) மொழியாக்கத்தைப் பின்பற்றி இதை மொழிபெயர்த்திருக்கலாம் என்று நான் சந்தேகிக்கிறேன். ஏனென்றால், KJV – ‘Now the end of the commandment is charity out of a pure heart, and of a good conscience, and of faith unfeigned’ என்றிருக்கிறது. KJV மொழியாக்கத்தை நேரடியாகத் தமிழாக்கம் செய்தால் அது பின்வருமாறு அமையும். ‘இப்போது கட்டளையின் முடிவென்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.’ தமிழ் வேதத்தின் மொழியாக்கம் தப்பான அர்த்தத்தைத் தந்துவிடுகிறது. இது வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘கட்டளை’ பத்துக்கட்டளைகளைப் பற்றியது என்ற எண்ணத்தை வாசகர்களுக்குத் தந்துவிடுகிறது. ஆங்கிலத்தில் Commandment எனும் பதம் பத்துக்கட்டளைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அதைக் குறிப்பதற்காக மட்டுமேயுள்ள விசேஷ அந்தஸ்தோடு அது அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படவில்லை. பொதுவாக கர்த்தருடைய கட்டளையை மட்டுமல்லாது மனிதர்களுடைய கட்டளைகளையும் குறிக்கவும் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வசனம் அமைந்திருக்கும் சந்தர்ப்பத்தை வைத்தே அது யாருடைய கட்டளை என்பதை அறிந்துகொள்கிறோம்.

இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக NKJV, NASB, ESV போன்ற தரமான ஆங்கில மொழிபெயர்ப்புகள் ‘எங்கள்’ என்ற வார்த்தையைக் ‘கட்டளை’ என்பதோடு இணைத்து ‘எங்கள் கட்டளையின் நோக்கம்’ என்று இந்த வசனத்தை மொழிபெயர்த்திருக்கிறார்கள். லென்ஸ்கி, பவுல் குறிப்பாக இந்தக் கட்டளையைக் கொடுத்திருக்கிறார் என்பதை உணர்த்த ‘இந்தக் கட்டளை’ (this charge) என்று இதை மொழிபெயர்க்கலாம் என்று கூறுகிறார். உண்மையில் கிரேக்க மூலமொழியில் tes Parangelias என்று ஒருமையிலேயே இந்த வார்த்தைப் பிரயோகம் காணப்படுகிறது. அதாவது, பெயர்ச்சொல்லான கட்டளையும் அதற்கு முன்னால் அதை விளக்கும் வகையில் வரும் கிரேக்க ஆர்ட்டிகலும் (tes) ஒருமையில் இருக்கின்றன. தமிழ் இலக்கணத்தில் வார்த்தைக்கு முன்னால் கிரேக்கத்தைப்போல ஒரு ஆர்ட்டிகளைப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை. இருந்தபோதும் ஆங்கிலத்திலோ, தமிழிலோ மொழிபெயர்க்கும்போது இந்த வார்த்தைப் பிரயோகத்தை சந்தர்ப்பத்திற்கேற்றபடி விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சில மொழிபெயர்ப்புகள் ஒருமையிலேயே ஆங்கிலத்தில் இதை மொழிபெயர்த்து (the charge) சந்தர்ப்பத்திற்கேற்றபடி அதைப் புரிந்துகொள்ளுகிற கடமையை வாசகர்களிடம் விட்டுவிட்டிருக்கின்றன. வேறுசில ஆங்கில மொழிபெயர்ப்புகள், இந்தக் கட்டளை யாருடையது என்பதை இனங்காட்டுவதற்காகப் பன்மையில் ‘எங்கள் (our)’ அல்லது ‘இந்த’ (this) என்ற பதத்தை இந்த இடத்தில் இணைத்திருக்கிறார்கள். அவ்வாறு செய்கிறபோது அவசியத்தின் காரணமாக அது இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்கப் பொதுவாக மொழிபெயர்ப்புகள் சாய்ந்த எழுத்தைப் (Italic) பயன்படுத்துவது வழக்கம். அத்தோடு இதற்கு முந்தைய வசனங்கள் மூலம் பவுல் தானும் தன்னைச் சார்ந்தவர்களுடைய கட்டளையைப் பற்றியே விளக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளலாம்.

சிலருக்கு இதுவரை நான் விளக்கியிருப்பவைகள் சாதாரணமானதாகத் தெரியலாம். சின்ன விஷயத்தை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்? என்று கேட்கலாம். அதற்குப் பதில், முதலில் வேதமொழிபெயர்ப்பைப் பொறுத்தவரையில் இது சின்ன விஷயமல்ல. இரண்டாவது, கர்த்தருடைய வார்த்தையின் கருத்தை மாற்றியமைத்து மொழிபெயர்ப்புகளிருந்தால் அதை வாசிக்கிறவர்களும், விளக்கிப் பிரசங்கிக்க வேண்டிய பிரசங்கிகளும் வார்த்தைக்கு மாறானதைப் புரிந்துகொள்ளும் பெரிய ஆபத்து இருக்கிறது.

வேதம் கர்த்தரின் அதிகாரமுள்ள வார்த்தை. மூலமொழிகளான எபிரெயம், கிரேக்கம் ஆகியவற்றின் மூலம் நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் வேதத்தை மொழியாக்கம் செய்கிறவர்கள் அது கர்த்தருடைய அழியாத வார்த்தை என்ற தேவபயத்தை இருதயத்தில் தாங்கி மொழியாக்கம் செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆங்கில வேதத்தை மொழியாக்கம் செய்த குழுவினர்களிடம் காணப்பட்ட இறையியல் தரம், மொழிப்பாண்டித்தியம் ஆகியவை நம்மினத்தில் காணப்படாததால் எதிர்காலத்தில் ஒரு நல்ல தமிழ் மொழிபெயர்ப்பு உருவாவதென்பது குப்பையில் குண்டுமணி தேடுவதுபோல்தான் இருக்கும் என்று எனக்குத் தெரிகிறது.

இந்த இடத்தில் நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. கேள்வி இதுதான் – இந்நிலையில் போதகர்களும், இறையியல் மாணவர்களும் என்ன செய்யவேண்டும்? என்பதே கேள்வி. வேதத்தைக் கையாண்டு பிரசங்கம் செய்து போதிக்கிறவர்கள் அதில் நல்லறிவு பெற்றிராவிட்டால் தங்களையும் ஏமாற்றி, ஆத்துமாக்களையும் ஏமாற்றி வருவார்கள். அதாவது, இல்லாதது பொல்லாததையெல்லாம் வேதம் சொல்வதாகப் பொய்யாகச் சொல்வதைத் தவிர வேறெதையும் அவர்களால் செய்யமுடியாது. அதையே இன்று பரவசக்குழுக்கள் மத்தியிலும், செழிப்புபதேசவாதிகள் மத்தியிலும் காண்கிறோம். இதேநிலைமைதான் முறையாக வேதத்தைக் கற்றறியாமல் ஊழியம் செய்துவருகிறவர்கள் எல்லோருடைய நிலைமையும்.

போதக ஊழியம் செய்கிறவர்களும், இறையியல் மாணவர்களும், முதலில், தமிழ் மொழிபெயர்ப்புகளின் அடிப்படைப் பிரச்சனைகளை உணர்ந்து அவற்றை மட்டுமே படிப்பதற்கும், போதிப்பதற்குப் பயன்படுத்துவதன் ஆபத்தை உணரவேண்டும். தமிழ் வேத பழைய திருப்புதல் (OV) அடிப்படை வேதசத்தியங்களைத் தவறில்லாமல் போதித்தாலும், துல்லியமாக தரமான மொழியாக்கமாக அமையவில்லை. அதை வாசித்து நிச்சயம் ஒருவர் சுவிசேஷத்தைப் புரிந்துகொள்ள முடியும்; இரட்சிப்புக்குரிய சத்தியங்களை அறிந்துகொள்ள முடியும். ஆனால், அது வசனப்பகுதிகளின் உட்பொருளை ஆராய்ந்து படித்து ஆழமான வேதசத்தியங்களைப் புரிந்துகொள்ளக்கூடியவிதத்தில் நல்ல மொழிபெயர்ப்பாக அமையவில்லை. அத்தோடு, நான் பலமுறை விளக்கியிருக்கிறபடி அதன் தமிழ் நடை தற்காலத்தில் அவிசுவாசிகளும், இளைஞர்களும் விளங்கிக்கொள்ள முடியாத ‘அந்நியத் தமிழாக’ இருக்கிறது.

தமிழ் வேதமொழிபெயர்ப்பின் இந்தக் குறையை உணர்ந்து வேதத்தைப் போதிக்கும் பொறுப்பில் இருப்பவர்களும், வேத இறையியலைக் கற்று தங்களைப் போதகப்பணிக்குத் தயார்செய்துகொண்டிருப்பவர்களும் நிச்சயமாக ஆங்கில மொழியைப் பயன்படுத்தக்கூடிய பக்குவத்தை அடைவதில் முழுமுயற்சியோடும் ஈடுபடவேண்டும். அதாவது, அம்மொழியில் பேசமுடியாவிட்டாலும், அதை வாசிக்கவும், எழுதவுமாவது கற்றுக்கொள்ளுவது அவர்களுக்கும், அவர்களுடைய போதனைக்குக் கீழிருப்பவர்களுக்கும் பேருதவியாக இருக்கும். இந்த இடத்தில் நான் பக்திவிருத்தியையும், போதக ஊழியத்தகுதிகள் அனைத்தையும் கொண்டிருப்பவர்களையே மனதில் வைத்து இதை எழுதுகிறேன். இவையில்லாமல் வேறெந்தப் பாண்டித்தியமும் இருந்து பயனில்லை.

ஆங்கில மொழியில் வாசிக்க முடிந்தால் ஒரு நல்ல ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தக்கூடிய வசதி ஏற்படும் (NKJV, NASB, ESV). தமிழ் வேதத்தை வாசிக்கும்போதெல்லாம் அந்த ஆங்கில வேதமொழிபெயர்ப்பை ஒப்பிட்டு வாசித்து வேதவசனங்களைத் தவறில்லாமல் புரிந்துகொள்ள முடியும். வேதத்தை சரிவரப்புரிந்துகொள்ள இதைத்தவிர வேறு வழியில்லை. தமிழ் வேதமொழிபெயர்ப்பில் மட்டும் தங்கியிருப்பது வேதத்தைக் கவனத்தோடும் கருத்தோடும் சத்தியம் மாறாமல் விளக்கிப் போதிக்க வேண்டிய போதகப் பணிக்கு ஒருபோதும் உதவாது. ஒரு போதகன் வேதத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து முத்தெடுத்து ஆத்துமாக்களுக்குப் படைக்கவேண்டியவனாக இருக்கிறான். அதனால்தான் அவன் ‘போதக சமர்த்தனாக’ (didaktikon) இருக்கவேண்டும் என்கிறது வேதம் (1 தீமோத்தேயு 3). (இதுகூட சரியான மொழிபெயர்ப்பில்லை. இது ‘போதகத் திறமை அல்லது போதிக்கும் திறமை’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். NASB – Skillful in teaching). வேதவசனங்களைப் பிரித்துத் திறமையாக ஆராய்ந்து, தெளிவாக, சத்தியமாகப் போதிக்கவேண்டிய பெரும் பொறுப்பு போதகனுக்கு இருக்கிறது. அதைச் செய்வதற்குத் தேவையான தகுதிகள் ஒருவருக்கு இருக்கவேண்டும். அந்தத் தகுதிகளோடு தொடர்புடையதுதான் ஆங்கிலமொழி அறிவும்.

ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ளுவது என்பது அத்தனை கடினமானதல்ல. முதலில், போதக ஊழியப்பணியைச் செய்வதற்கான தவிர்க்கமுடியாத அதன் அவசியத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டால், அம்மொழியைக் கற்றுக்கொள்ள எவரும் தீவிர நடவடிக்கை எடுக்காமல் இருக்கமாட்டார்கள். தமிழர்கள் மத்தியில் மட்டும் பணிசெய்தாலும், அதைக் கற்றுக்கொள்ளுவது தமிழ் வேதத்தில் நல்லறிவைப்பெற்று அதைப் பயன்படுத்துவதற்காகத்தான் என்ற உண்மையை மனதிலிருத்திக்கொள்வது அவசியம்.

கலப்பை பிடித்து உழுகின்ற கிராமத்து விவசாயிகூட அந்தக் கலப்பையை அடிக்கடி கவனத்தோடு சுத்தப்படுத்தி அது பயன்படுத்தக்கூடிய தரத்தோடு ஓட்டை உடசல் இல்லாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுவான். கலப்பை திறமானதாக இல்லாமலிருந்தால் அவனால் ஒழுங்காக நிலத்தை உழமுடியாது. கலப்பையைப் போன்றதுதான் வேதமும். தமிழில் அது தரமானதாக இல்லை என்பதை உணர்ந்து நல்ல கலப்பையைப் பயன்படுத்தி போதகப்பணியான உழுகின்ற செயலைச் செய்ய ஆங்கில அறிவு அவசியம். வாசிக்கவும், ஓரளவுக்கு எழுதவும்கூடிய ஆங்கிலமொழித் தகுதி இருந்துவிட்டால் வேதத்தைக் கற்றுக்கொள்ளவும், அதைப் பயன்படுத்துவதற்குமான ஒரு பெரிய உலகமே உங்கள் கண் முன் விரியும்.

தமிழ் மொழியில் மட்டும் வேதத்தைக் கையாளுகிறவர்கள் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கித் தவிக்காமல் இருப்பதற்கு இதைத்தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.

பெருமையால் வந்த பேராபத்து

(2 இராஜாக்கள் 15:1-7; 2 நாளாகமம் 26)

2 இராஜாக்கள் நூலை எழுதியவர் இதன் ஆரம்ப அதிகாரங்களில் எல்லாம் இஸ்ரவேலின் இராஜாக்களைப் பற்றியே அதிகமாக விளக்கிவந்திருக்கிறார். அதற்கு மத்தியில் அவர் யூதாவில் நடந்துகொண்டிருந்த காரியங்களையும் சுருக்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அவ்வப்போதைக்கு அவர் யூதாவின் அரசர்களைப் பற்றியும் குறிப்பிட்டு வந்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.

இந்த அதிகாரத்தில் மறுபடியும் நாம் யூதாவின் அரசர்களில் ஒருவரைப் பற்றி நூலை எழுதியவர் நமக்கு சுருக்கமாக விளக்குகிறார். அந்த அரசனே உசியா. இந்த அதிகாரத்தில் அவனுடைய பெயர் அசரியா என்றிருக்கிறது. 2 நாளாகமம் 26 அவனை உசியா என்றழைக்கிறது. 2 நாளாகமம் 26ம் அதிகாரம் முழுவதும் அவனைப் பற்றிய விளக்குகிறது.

இவனுடைய வாழ்க்கை நன்றாக ஆரம்பித்து முடிவு மோசமாக முடிந்தது. இதேபோலத்தான் இவனுடைய தாத்தாவான யோவாசின் வாழ்க்கையும், தகப்பனான அமத்சியாவின் வாழ்க்கையும் இருந்தது. இவர்கள் மூவருடைய ஆட்சியுமே நல்லபடியாக ஆரம்பித்தது; கொஞ்சக்காலத்துக்குப் பிறகு வெவ்வேறு காரணங்களினால் மூவரும் எடுத்த முடிவுகள் அவர்களுக்கும் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களுக்கும் தீமையில் போய் முடிந்தன. இதன் மூலம் கர்த்தர் தொடர்ந்து நம்மை எச்சரித்து வருகிறார். அதாவது, நாம் எப்படி வாழ்கிறோம், எந்தெந்தவிதமாக வாழ்க்கையில் தீர்மானங்களை எடுக்கிறோம் என்பதிலெல்லாம் கர்த்தர் அக்கறை காட்டுகிறார். வாழ்க்கையை நல்லவிதமாக ஆரம்பிப்பது மட்டும் முக்கியமல்ல, அது நல்ல முடிவில் போய்ச்சேர வேண்டியதும் அவசியம். நாம் நல்லபடியாக நம் வாழ்க்கைப் பயணத்தை முடிக்கவேண்டும் என்பதையே கர்த்தர் விரும்புகிறார்.

ஆகவே, இந்த நேரத்தில் நாம் உசியாவின் ஆட்சியையும், அவனுடைய சிறப்புக்குக் காரணமென்ன என்பதையும், அவனுடைய முடிவு மோசமாக அமைந்ததற்கு எது காரணம் என்பதையும் கவனிக்கப் போகிறோம். அதைச் செய்வதற்கு நாம் சில முக்கியமான கேள்விகளைக் கேட்பது அவசியம்.

  1. உசியா யார்?
  2. உசியா பெயர் பெற்றவனாக இருந்திருப்பதற்கு அவன் அப்படி என்ன செய்திருந்தான்? (1-15)
  3. நூலாசிரியர், உசியாவின் சிறப்பை எப்படி விளக்கியிருக்கிறார்?
  4. உசியா விழுந்ததற்குக் காரணமென்ன? அவனுக்கு நேர்ந்ததென்ன? (16-23)

இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தெரிந்துகொண்டபிறகு நாம் படிக்கவேண்டிய பாடங்களைக் கவனிக்கலாம்.

உசியாவின் பெயர் 2 இராஜாக்கள் 15ல் ‘அசரியா’ என்று இருக்கிறது. அதுவே அவனுக்கு பிறப்பில் கொடுக்கப்பட்ட பெயர். ஆனால். 2 நாளாகமம் 26 அவனை உசியா என்றழைக்கிறது. இந்தப் பெயர் அவன் இராஜாவானபோது அவனுக்குக் கொடுக்கப்பட்டது. உசியா என்றால் ‘கர்த்தர் வல்லவர்’ என்று அர்த்தம். அசரியா என்றால் ‘கர்த்தர் உதவுவார்’ என்று அர்த்தம். இரண்டுமே உசியாவுக்குப் பொருத்தமான பெயர்கள்தான். உசியா யூதாவின் பெரும் அரசர்களில் ஒருவனாகக் கருதப்பட்டான். ஆர். சி. ஸ்பிரவுல் எனும் சீர்திருத்த அறிஞர், ‘உசியா யூதாவின் ஐந்து சிறப்பான அரசர்களில் ஒருவன்’ என்று சொல்லியிருக்கிறார்.

உசியா யூதாவை 52 வருடங்கள் ஆண்டிருக்கிறான். யூதாவை ஆண்ட இன்னுமொரு மோசமான அரசனான, மனாசே 55 வருடங்கள் யூதாவை ஆண்டான். உசியாவுக்கு 16 வயதிருக்கும்போது அவனை யூதாவின் அரசானக்கினார்கள். அப்போது அவனுடைய தகப்பன் அமத்சியா சிறையிலிருந்தான். உசியா தன் தகப்பனோடு 25 வருடங்களும், தனியாகப் 17 வருடங்களும், தன் மகனான யோதோமோடு இணைந்து 10 வருடங்களுமாக மொத்தம் 52 வருடங்கள் யூதாவை ஆண்டான்.

2 இராஜாக்கள் உசியாவை ‘அசரியா’ என்ற பெயரில் குறிப்பிட்டு அவனைப் பற்றிச் சுருக்கமாக ஏழு வசனங்களில் விளக்கி முடித்துவிடுகிறது. 2 நாளாகமம் 26ம் அதிகாரம் அவனுக்கு 23 வசனங்களைக் கொடுத்திருக்கிறது. உசியாவின் ஆட்சிக் காலத்தில் அவன் செய்த பாராட்டக்கூடிய செயல்களையெல்லாம் 2 இராஜாக்கள் விளக்கவில்லை. உசியாவைக் கர்த்தர் தண்டித்து சாகும்வரை குஷ்டரோகம் பிடித்தவனாக்கியதை மட்டுமே அது குறிப்பிடுகிறது. ஆகவே, உசியாவைப் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்துகொள்ள நாம் 2 நாளாகமம் 26ம் அதிகாரத்திலேயே தங்கியிருக்கிறோம்.

2 நாளாகமம் 26ல் 2-15 வரையுள்ள வசனங்களில், நாளாகமத்தை எழுதியவர் உசியா நாட்டில் செய்திருந்த பெருமைக்குரிய செயல்களை விளக்குகிறார். அதில் முதலாவதை 2ம் வசனத்தில் வாசிக்கிறோம். அதில், உசியா ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவுக்கு சொந்தமாக்கிக்கொண்டான் என்றிருக்கிறது. ஏலோத் முக்கியமானதொரு கப்பல்துறையாக இருந்தது. அதன் மூலமாக கடல்வியாபாரம் நடந்து வந்தது. சாலமோனின் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருந்த ஏலோதை நூறு வருடங்களுக்கு முன் யெகோரத்தின் காலத்தில் யூதா இழந்திருந்தது. ஆகவே, உசியா ஏலோதை மறுபடியும் வெற்றிகொண்டது யூதாவின் பொருளாதாரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

6-8 வரையுள்ள வசனங்களில் உசியாவின் மேலும் பல வெளிநாட்டு வெற்றிகளைப்பற்றி வாசிக்கிறோம். உசியா அதுவரை நீண்டகால எதிரிகளாக இருந்த சில நாடுகளைக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்தி பெலிஸ்தியா, அரபியர், மெகுனியர் ஆகியநாடுகளைக் கைப்பற்றினான். இவற்றின் மூலம் அவன் அம்மோனியருக்குத் தன்மேல் பயமேற்பட்டு தனக்குக் கப்பம் கட்டும்படிச் செய்தான். உசியாவின் பலத்தால் அவனுடைய புகழ் இக்காலத்தில் எகிப்துவரை எட்டியது. அவன் மிகவும் பலமுடையவனாக இருந்தான்.

இதைப்போன்ற வெற்றிகளை சாலமோனுடைய காலத்து வரலாற்றில் தான் நாம் வாசிக்கிறோம். அவன் காலத்து சந்ததியினரே இத்தகைய வெற்றிகளைப்பற்றி அறிந்திருந்தார்கள்.

9-10 வசனங்களில், நாளாகமம் உசியாவின் உள்நாட்டு வெற்றிகளைப் பற்றி புகழுகின்றது. உசியா எருசலேமிலும் அதைச் சுற்றியிருந்த வாசல்களிலும் கோபுரங்களைக் கட்டினான் என்கிறது. வனாந்தரத்திலும் அவன் பாதுகாப்புக் கோபுரங்களைக் கட்டினான். உசியா விவசாயத்தில் அதிக ஆவல் உள்ளவனாக இருந்ததால் அதற்காக அநேகத் துரவுகளையும் கட்டினான். அவன் கட்டிய கோபுரங்கள் எல்லாம் எருசலேமைச் சுற்றியும், யூதாவைச் சுற்றியும் பலத்த பாதுகாப்பு அரண்களை உண்டாக்கி விவசாயத்தினால் பெறப்பட்ட பொருள்களைச் சேமித்து வைக்கும் இடங்களையும் பாதுகாத்தன. அவன் அநேக விவசாயிகளை வேலைக்கமர்த்தி திராட்சை மற்றும் பயிர்களை வளர்த்தான். அவனுக்கு விவசாயத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. ‘அவன் வேளாண்மைப் பிரியனாக இருந்தான்’ என்கிறது 10ம் வசனம்.

கடைசியாக 11-15 வரையுள்ள வசனங்களில் நாளாகமத்தை எழுதியவர் உசியாவின் இராணுவ பலத்தை விளக்குகிறார். அவனுடைய இராணுவம் திறமையான தலைவர்களையும், நல்ல பயிற்சிபெற்ற போர்வீரர்களையும் கொண்டிருந்தது. மூன்று இலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறு பேரைக் (307,500) கொண்ட பலத்த இராணுவம் உசியாவுக்கிருந்தது. அவனுக்குத் திறமையான 2600 இராணுவத் தலைவர்கள் இருந்தனர். தாவீதின் காலத்தில் அவனுக்கு 500 இராணுவத்தலைவர்கள் மட்டுமே இருந்தனர். அதைவிட ஐந்து மடங்கு மேலான இராணுவத் தலைவர்கள் உசியாவுக்கிருந்தனர். அந்தக் காலத்தில் இராணுவ வீரர்கள் தாங்களே தங்களுக்குச் சொந்தமான ஆயுதங்களைத் தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், உசியாவின் இராணுவம் அப்படிப்பட்டதாக இருக்கவில்லை. உசியா தன் போர்வீரர்களுக்கு கேடயங்களையும், ஈட்டிகளையும், தலைக் கவசங்களையும், மார்புக் கவசங்களையும், வில்லுகளையும், பெருங்கற்களை வீசியெறிகிற இயந்திரங்களையும் தயாரித்துக் கொடுத்திருந்தான். உசியாவின் இந்த நவீன இராணுவம் எதிரிகளின் இதயத்தில் மிகுந்த பயத்தை ஏற்படுத்தியது. அவனோடு எவரும் அவசரப்பட்டு யுத்தத்திற்கு வருவதற்குத் தயங்கினார்கள். உசியாவின் புகழும் பெருமையும் வெகுதூரம் பரவியதாக 15ம் வசனத்தில் வாசிக்கிறோம். அதோடு அவன் மிகுந்த பலம்வாய்ந்த அரசனாவதற்கு அவனுக்குக் கர்த்தர் உதவினார். அதை இந்த வசனம் ‘அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று’ என்று விளக்குகிறது. இது அவனுடைய திறமையாலோ வேறு எதனாலோ ஏற்பட்டதல்ல. இதற்குப் பின்னால் இருந்தவர் கர்த்தரே.

ஒரு வேதவிளக்கவியலாளர், ‘உசியா யூதாவின் ஐந்து பெரும் அரசர்களில் ஒருவனாக இருந்தான்’ என்று சொன்னதன் காரணத்தை இப்போது புரிந்துகொள்ளலாம்.

இனி, இத்தகைய பெருமைக்கெல்லாம் எது காரணம் என்ற கேள்வியைக் கேட்பது அவசியம். ஏற்கனவே 15ம் வசனத்தின் இறுதியில் மறைமுகமாக அதற்கான காரணம் விளக்கப்பட்டிருக்கிறது ‘‘அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று’ என்றிருப்பதைக் கண்டோம். அதற்கு மேல் ஒரு காரணத்தை நூலாசிரியர் 4ம் வசனத்தில் தெரிவிக்கிறார். உசியா, ‘கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்’ என்று அதில் இருப்பதைக் கவனியுங்கள். தன் தகப்பன் அமத்சியாவைப் போலவே அவனும் ஆரம்பத்தில் கர்த்தரின் பார்வையில் நன்மையானதாகப்படுகின்றவற்றைச் செய்திருந்தான். இஸ்ரவேல், யூதா அரசர்களைப் பற்றி வேதம் விளக்கும் இரண்டு பொதுவான விஷயங்களில் இது ஒன்றாக இருந்தது. இரண்டாவது, ‘அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பைச் செய்தார்கள்’ என்பது.

சாலமோனுக்குப் பிறகு தேவ இராஜ்யம் இரண்டாகப் பிரிந்த பிறகு வட இராஜ்யமான இஸ்ரவேலில் 20 இராஜாக்களும், யூதாவில் 20 இராஜாக்களும் இருந்தார்கள். இதில் துக்கமான விஷயம் என்னவென்றால் இஸ்ரவேலின் ஒரு இராஜாவைப் பற்றியாவது, ‘அவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்’ என்று எழுதப்படவில்லை. யூதாவின் 20 இராஜாக்களில் எட்டுப் பேரைப்பற்றி மட்டும் சாதகமாக விளக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இஸ்ரவேலின் இராஜாக்களும், யூதாவின் இராஜாக்களும் எத்தனை மோசமானவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்தவிதமான நிலைமைக்கு மத்தியில் உசியாவை வேதம் சாதகமான நிலையில்தான் காட்டுகிறது.

உசியா கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான் என்றால் அது அவனால் எப்படி முடிந்தது?

5ம்வசனம், தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.

இந்த வசனத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் காணப்படுகின்றன. (1) உசியா பிரபலமாயிருந்த அந்தக் காலங்களில் அவன் ‘கர்த்தரைத் தேட மனதிணங்கியிருந்தான். நம்முடைய வினாவிடைப் போதனைகளின் முதல் கேள்வி என்ன? – மனிதனின் வாழ்க்கையின் குறிக்கோளென்ன? பதில் – கர்த்தரை மகிமைப்படுத்தி அவரை எக்காலமும் அனுபவிப்பது. உசியா தன்னுடைய வெளிநாட்டு யுத்தகாலத்திலும், உள்ளூர் யுத்தகாலங்களிலும், இராணுவ வெற்றிகளை அடைந்த காலங்களிலும் கர்த்தரைத் தேடமனதுள்ளவனாயிருந்தான். அதாவது, கர்த்தரைத் தேடுவதும், அவருடைய வார்த்தைகளில் இன்பங்காணுவதுமே அவனுடைய இலட்சியமாக இருந்தது.

(2) இந்த விஷயத்தில் உசியாவுக்கு துணை கிடைத்திருந்தது. அதே 5ம் வசனத்தில் நாம் சகரியாவைப்பற்றி வாசிக்கிறோம். சகரியா ஒரு தீர்க்கதரிசி. அவருடைய தீர்க்கதரிசன நூல் வேதத்தில் இருக்கிறது. இந்தக்காலங்களில் சகரியா, உசியா கர்த்தரை நாடி வருவதற்கு மிகவும் துணையாக இருந்திருக்கிறார். சகரியாவின் உதவியோடு கர்த்தரைப் பற்றி உசியா அதிகம் கற்றுக்கொள்ள முடிந்தது. உசியாவின் தாத்தாவான யோவாஸுக்கு ஆசாரியனான யோகிடா துணையாக இருந்ததுபோல் உசியாவுக்கு சகரியா துணையாக இருந்திருக்கிறார். அத்தோடு, சகரியா கர்த்தருக்கு உசியா கணக்குக்கொடுக்கும்படியாக வாழ்வதற்கும் நிச்சயம் உதவியிருக்கிறார்.

பயன்பாடு: இதிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? இந்த உலகத்தில் நாம் தனியாக பரிசுத்த வாழ்க்கையை வாழ்ந்து உயர்ந்துவிட முடியாது. அப்படி நினைக்கின்ற அநேகரை நாம் பார்க்கிறோம். கர்த்தர் இரட்சிப்பைத் தந்தார், அவருக்கு நான் நேரே கணக்குக் கொடுத்துக்கொள்கிறேன் என்று யாரோடும் தொடர்பில்லாமல் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு சபைத்தொடர்பிருப்பதில்லை, போதகக் கண்காணிப்பும் வழிநடத்தலும் இருப்பதில்லை, நல்ல ஆவிக்குரிய நண்பர்களையும் கணக்குக்கொடுத்து வாழத் துணையாக வைத்திருப்பதில்லை. பொதுவாக இவர்களே வாழ்க்கையில் தவறுகளைச் செய்து ஆபத்தில் சிக்கி குய்யோ முய்யோ என்று அழுது, ஆபத்து வருகிறபோது ஆவிக்குரிய ஆலோசனை கேட்டு வருவார்கள். இளைஞர்கள் மத்தியில் இது அதிகமாகவே இருக்கிறது. நான் அடிக்கடி ஆலோசனையாக சொல்லியிருக்கிறேன். சோஷல்மீடியா, இன்டர்நெட் பிரசங்கிகள், இணைய தளங்களை நாம் ஆவிக்குரிய துணையாக வைத்திருப்பது பெரிய ஆபத்து என்று. ஆண்டவர், ஆவிக்குரிய வழிகாட்டியாக இருப்பதற்கு அவற்றை ஏற்படுத்தவில்லை. ஆவிக்குரிய நல்ல சபைகளையும், நல்ல போதகர்களையும், நல்ல ஆவிக்குரிய நண்பர்களையுமே அதற்கு ஏற்படுத்தியிருக்கிறார். தீமோத்தேயுவுக்கும், தீத்துவுக்கும் போதகனான பவுல் வழிகாட்டியாக அதைச் செய்திருக்கிறார். இந்தவிதமாக ஒரு ஆவிக்குரிய வழிகாட்டி இருக்கவேண்டிய அவசியத்தைப் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் நமக்குக் காட்டுகிறது.

நீங்கள் ஆவிக்குரிய வழிகாட்டிகளாக யாரையாவது வைத்துக் கொள்ளாமல் இருக்கிறீர்களா? அதற்கு அறியாமை அல்ல, உங்களுடைய தற்பெருமைதான் காரணம். எதற்குப் பயப்படுகிறீர்கள்? ஆண்டவருக்கு விசுவாசமாக வாழ்வதுதான் உங்கள் இலட்சியமாக இருந்தால் அவரே கேட்டுக்கொண்டிருக்கிறவிதமாக ஒருவருக்குக் கணக்குக்கொடுத்து வாழ்வதற்கு எதற்குத் தயங்குகிறீர்கள்? பெருமைபிடித்தவன் வாழ்க்கையில் ஒருநாளும் உயர்ந்ததில்லை தெரியுமா? வீணாக ஆபத்தைத் தேடிக் கொள்ளாமல் மனந்திரும்பி சபை வாழ்க்கைக்கு விசுவாசமாக இருந்து, ஆவிக்குரிய எவருக்காவது கணக்குக்கொடுத்து வாழப் பழகிக்கொள்ளுங்கள். இந்த வயதில் எனக்கே அப்படி நெருங்கிய போதக நண்பர்கள் இருக்கிறார்கள் தெரியுமா? ஒருவருக்குமேல் அத்தகைய நண்பர்களை நான் என் ஆவிக்குரிய துணைகளாக வைத்திருக்கிறேன். ஆபத்தைத் தேடிக்கொள்ளாமல் உசியாபோல் ஒரு சகரியா உங்களுக்கு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உசியா புத்திசாலியாக சகரியா தீர்க்கதரிசியை தனக்கு வழிகாட்டியாக (Mantor) கொண்டிருந்தான்.

எபிரெயர் 3:12-13 என்ன சொல்லுகிறது என்பதைக் கவனியுங்கள், ‘சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.’

சகரியாவை ஆவிக்குரிய ஆலோசகனாகக் கொண்டிருந்த வரையிலும் உசியா கர்த்தரைத் தேடுகிறவனாக இருந்திருக்கிறான் என்பது நமக்குத் தெரிகிறது.

இனி உசியாவின் வாழ்க்கையைத் தொடர்ந்து கவனிப்போம். 7ம் வசனம் உசியா தன் யுத்தங்களில் வெற்றியடைய கர்த்தர் உதவினார் என்பதையும், 15ம் வசனம், கர்த்தர் அவனுடைய பெருமை எங்கும் பரவவும், அவன் மிகவும் பலமுள்ளவனாக இருக்கவும் ஆண்டவர் அவனுக்கு அற்புதமாக அநுகூலமாக இருந்தார் என்றும் அறிந்துகொள்கிறோம்.

ஆனால், திடீரென்று உசியாவின் வாழ்க்கை மாறியது. தேவையில்லாததொன்று அவன் வாழ்க்கையில் நுழைந்தது. நன்றாக வாழ்ந்துகொண்டிருந்த உசியாவின் வாழ்க்கை தொடர்ந்து கர்த்தரை நாடி அவன் நன்மைகளை அடைவதாக அல்லவா இருந்திருக்கவேண்டும்? என்னதான் நடந்தது என்று நாம் கேட்காமல் இருக்கமுடியாது? அதற்கு பதிலை 16-21 வரையுள்ள வசனங்கள் தருகின்றன.

2 நாளாகமம் 26:16, ‘அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.’

இதிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? உசியாவின் வாழ்க்கை திடீரென்று மாறியது. வேதத்தை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், உசியாவின் வாழ்க்கையில் தீர்க்கதரிசியான சகரியாவின் செல்வாக்கு குறைந்துபோனதை அல்லது இல்லாமல் போனதை அறிந்துகொள்ள முடிகிறது. அதுவரை அவனுடைய நம்பிக்கையான வழிகாட்டியாக இருந்த சகரியாவின் இடத்தில் வேறுயாரோ வந்துவிட்டதை இது காட்டுகிறது. 16ம் வசனம் தெளிவாகச் சொல்லுகிறது – ‘தனக்குக் கேடுண்டாகும் வகையில் அவனுடைய மனம் மேட்டிமையாகியது (lifted up).’ இதற்கு அர்த்தம், அவனுடைய இருதயத்தில் பெருமை நுழைந்தது என்பதுதான். அவனுடைய வாழ்க்கையில் இருந்த சகரியாவின் இடத்தை அவனுடைய தற்பெருமை பிடித்துக் கொண்டது. யுத்தத்தில் அந்நிய படைகள் எதிர்பாராமல் சூழ்ந்துகொள்ளுவது போல் தற்பெருமை அவனுடைய இருதயத்தைச் சூழ்ந்துகொண்டது. அன்றிலிருந்து அவன் கர்த்தருக்குப் பயப்படுவதை நிறுத்திக் கொண்டான்.

கர்த்தர் சொல்லுகிறார், ஓசியா 13:6ல் – ‘தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் என்னை மறந்தார்கள்.’

உசியா பலமான அரசனாக, பல வெற்றிகளைக் கண்டு புகழடைய ஆரம்பித்தான். அவனுடைய வளர்ச்சி பெரியது. எதிரிகள் அவனைக்கண்டு பயந்தார்கள். ஆனால், உசியா இதெல்லாம் கர்த்தரால் வந்தது என்பதை மறக்க ஆரம்பித்தான். பெருமை இருதயத்தின் ஓரத்தில் குடிபுகுந்து முழு இருதயத்தையும் நிரப்பியது. அதோடு உசியா விழுந்தான்.

உதா: ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிற போதகர்களுக்கு ஒரு எச்சரிக்கை. ஆரம்பத்தில் சின்ன ஊழியமாக இருந்து, கர்த்தர் வளர்ச்சியைக் கொடுக்கும்போது இருதயத்தைக் கவனமாகக் கண்காணித்து வாருங்கள். ஆண்டவர்தான் இதையெல்லாம் செய்கிறார் என்பதை மறந்து உங்களுடைய முதுகில் தட்டி உங்களைப் பாராட்டிக் கொள்ளும்படி சாத்தான் சொல்லுவான். நம்மோடு இருக்கிறவர்கள் மூலமாகக்கூட சாத்தான் பேசுவான். என்னால்தானே இதெல்லாம் என்று என்றைக்கு நினைக்க ஆரம்பிக்கிறீர்களோ, நிலைதடுமாறி விடுகிறீர்களோ அன்றைக்கே வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது என்றுதான் அர்த்தம். உசியாவுக்கு நடந்தது அதுதான். உபா 8வது அதிகாரத்தில் 10-20வரை வாசித்துப் பாருங்கள். இதைத்தான் இஸ்ரவேலுக்கு மோசே நினைவு படுத்தினார்.

உபாகமம் 8:10-11 – ஆகையால், நீ புசித்துத் திருப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய். உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

உபாகமம் 8:12-14 – நீ புசித்துத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும், உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும்,

உபாகமம் 8:16-17 – உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்து வந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும், என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,

மோசே எத்தகைய ஆபத்தை ஏற்கனவே எதிர்பார்த்து புத்திசொல்லியிருக்கிறார் என்று உங்களுக்குப் புரிகிறதா? தற்பெருமையால் வருகிற ஆபத்து முதலில், ஆண்டவருக்கு நன்றிசொல்லுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவடையச் செய்யும். அதற்குப் பிறகு நடக்கிற காரியங்கள் நம்மால் வந்தது என்று நாமே நம் முதுகில் தட்டிப் பாராட்டிக்கொள்ள வைக்கும். பெருமை நம்முடைய செயல்களில் நாம் இன்பம் காணவைத்து விடும். உசியாவுக்கு நடந்தது இதுதான்.

நீதிமொழிகள் 16:18 – அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.

இந்த வசனத்தில் அகந்தைதான் pride. இரண்டாவது வார்த்தை மனமேட்டிமை haughty spirit. எழுத்துபூர்வமாகப் பார்த்தால் ‘உயருகிற இருதயம்’ என்று அர்த்தம். அதாவது, வயிறு பெருப்பதுபோல் பெருமையால் இருதயம் வீங்கிப்போகிறதை இது காட்டுகிறது.

ஒரு வேதவிளக்க அறிஞர் பெருமையின் DNA யைப்பற்றி விளக்கும்போது சொல்லுகிறார், ‘நம்முடைய இருதயத்தில் கர்த்தர் மீது வைக்கிற நம்பிக்கையை வீசியெறிந்துவிட்டு நம்மேலேயே நம்பிக்கை வைக்கிறபோதே பெருமைக்கான விதைபோடப்படுகிறது’ என்று. இந்தப் பெருமையின் அடிப்படை அறிகுறிகள் என்ன தெரியுமா? – மற்றவர்களை ஏளனம் செய்வது, எதையும் சந்தேகிப்பது, பிடிவாதமாய் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நினைப்பது, இருதயத்தைக் கடினப்படுத்திக்கொள்வது போன்றவை.’ அவர் தொடர்ந்து சொல்கிறார், ‘இதன் காரணமாக, ஒருவன் கர்த்தரைத் தேடாமல் சண்டைக்காரனாக மாறி, அவனுடைய வாழ்க்கை தனிமையிலும், மற்றவர்களிடம் இருந்து அவன் தள்ளிநிற்பதிலும் கொண்டுவிடும்’ என்கிறார். இது எத்தனை பெரிய உண்மை.

ஆகவே, இதுவரை சொன்னவற்றை சுருக்கமாகச் சொல்லப்போனால், கர்த்தருடைய கிருபை நமக்குப் போடும் பிச்சைபோன்ற அவருடைய நன்மைகளையும், பாதுகாப்பையும் நினைத்து அடிக்கடி அவருக்கு நாம் நன்றிசொல்லாமல் வாழ்ந்தால் இருதயத்தில் பெருமை குடிபுகுந்து விசுவாசமில்லாத வாழ்க்கை வாழ்ந்து அழிவைத்தேடிக் கொள்ளுவதிலேயே நம் வாழ்க்கை போய்முடியும்.

உசியாவின் ஆணவம் எப்படியெல்லாம் பாம்புபோல் தலையுயர்த்தி செயல்பட்டது என்பதை 16-21 வரையுள்ள வசனங்களில் நூலாசிரியர் விளக்குகிறார். தான் அரசனாக இருப்பதில் மட்டும் உசியா திருப்தி அடையவில்லை. அவன் ஆசாரியனாக இருக்கவும் தீர்மானித்தான். அதோடு ஆலயத்துக்குள் நுழைந்து தூபபீடத்தில் தூபங்காட்டவும் தீர்மானித்தான். யாத்த்திராகமம் 30; எண்ணாகமம் 16, 18 ஆகிய அதிகாரங்களை வாசித்துப் பார்த்தால் அந்தப் பணிகளெல்லாம் ஒரு ஆசாரியனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட பணிகளாக இருந்திருக்கின்றன. அவற்றை வேறுயாராவது செய்வது கர்த்தருக்கு எதிரானது மட்டுமல்ல, அவற்றை ஏற்படுத்தியிருக்கும் கர்த்தரை நிந்திக்கும் செயல்களாகும்.

உசியாவின் இந்தப் பாவத்தில் ஓரளவுக்கு முட்டாள்தனமும் கலந்திருந்தது. இதைச் செய்வது கர்த்தருடைய நியாயப்பிரமாணத்துக்கு எதிரானது என்பதும், அதனால் பாதிப்புகள் உண்டாகும் என்பதும் உசியாவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. இருந்தும் அவன் அவற்றைச் செய்யத்தீர்மானித்தான். ஆசாரியனான அசரியாவும் 80 பராக்கிரமசாலிகளும் அரசனான உசியாவை இந்த விஷயத்தில் எதிர்த்து நின்று அவனை எச்சரித்ததே உசியா செய்த பாவம் எத்தனை பெரியது என்பதைக் காட்டுகிறது (17-18).

யார் கர்த்தருக்கு தூபவர்க்கம் இடுவது என்று விவாதித்து மோசேயை எதிர்த்து 250 பேர்களோடு எழுந்த கோராகுவை உங்களுக்கு நினைவிருக்கிறதா? எண்ணாகம் 16ம் அதிகாரம் அதை விளக்குகிறது. அவனும் அவனைச் சார்ந்திருந்தவர்களுமுடைய ஆணவத்தினால் அவர்களைக் கர்த்தரின் அக்கினி பட்சித்துப் போட்டதோடு, அநேகரை நிலம் பிளந்து விழுங்கியது. ஆணவக்காரர்களுக்கு கோராவின் உதாரணம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இனி உசியா என்ன செய்தான் என்று கவனிப்போம். தான் செய்த பாவத்திலிருந்து மனந்திரும்புவதை விட்டுவிட்டு அவன் ஆசாரியர்கள் மேல் கோபம் கொண்டான் என்கிறது 19ம் வசனம். மரணதண்டனைக்கு ஒப்பான பாவத்தை உசியா செய்திருந்தபோதும் கர்த்தர் உடனடியாக அவன் உயிரை எடுக்கவில்லை. ஆனால், அவன் செய்த பாவத்துக்கு வாழ்நாள் முழுதும் அனுபவிக்கவேண்டிய தண்டனை கிடைத்தது.

19-20ம் வசனம் – கர்த்தர் உசியாவுக்கு குஷ்டரோகம் வரும்படிச் செய்தார். ஆலயத்தில் அவன் தூபகலசத்தைத் தொட்டுப் பேசியபோதே அவனுடைய நெற்றியில் குஷ்டரோகம் தோன்றியது. அந்தக் காலத்தில் அது மிகவும் பயங்கரமான நோயாக இருந்தது மட்டுமல்லாமல் மக்கள் குஷ்டரோகியைத் தள்ளிவைத்து விடுவார்கள். இதே இரண்டு ராஜாக்கள் நூலில் 7ம் அதிகாரத்தில் நகரத்து வாசலுக்கு வெளியில் வாழ்ந்த நான்கு குஷ்டரோகிகளைப் பற்றி வாசிக்கிறோம். சீரியனான நாகமானுக்கும் குஷ்டரோகம் பிடித்திருந்தது. இப்போது பிரதான ஆசாரியரும் அவனைச் சேர்ந்தவர்களும் குஷ்டரோகம் பிடித்த உசியாவை ராஜாங்கப் பொறுப்புகள் எல்லாவற்றிலும் இருந்து உடனடியாக நீக்கினார்கள். வேறுவழியில்லாமல் கர்த்தர் தன்னைத் தண்டிக்கிறார் என்று உணர்ந்த உசியாவும் அதற்கு ஒத்துப்போனான். அவன் வாழ்நாள் முழுதும் ஒதுக்குப்புறமாகத் தனியாக ஒரு வீட்டில் வாழநேர்ந்தது. அவனுடைய மகனான யோதோம் அதற்குப் பிறகு அரச காரியங்களைக் கவனித்துக்கொண்டான்.

உசியா 42 வருடங்கள் அரசனாக இருந்த பிறகு இந்த நிகழ்ச்சி நடந்தது. அவனுக்கு அப்போது 58 வயது. வாலிப காலத்தில் உசியா ஆணவத்தால் செய்த பாவம் அல்ல இது. முதிர்ந்த வயதில் உசியா இந்தப் பாவத்தைச் செய்திருந்தான். இது நம்மை சிந்திக்கவைக்க வேண்டும். வாலிபமுறுக்கினால் முதிர்ச்சியடையாதிருக்கும் வாலிபர்களுக்கு மட்டும் ஆணவம் ஏற்படுவதில்லை. அனுபவசாலிகளையும், முதிர்ந்தவர்களையும்கூட அது விட்டுவைக்காது. ஆணவம் வயது வேறுபாடு பார்த்து வருகிற ஒன்றல்ல. யார், யார் தங்களுடைய இருதயத்தைப் பாதுகாத்து தாழ்மையின்றி இருக்கிறார்களோ அவர்கள் எல்லோரையும் ஆணவம் விட்டுவைக்காது; அது பாவத்திலும் கொண்டுபோய்விடும். விசுவாசிகளையும் அது விட்டுவைக்காது தெரியுமா? தாவீது பாவம் செய்ததற்கு அவன் இருதயத்தில் இருந்த ஆணவமும் ஒருகாரணம். பேதுரு மூன்று தடவை இயேசுவை மறுதலித்ததற்கு அவனுடைய ஆணவமும் ஒருகாரணம். மோசே கர்த்தர் சொன்னதைச் செய்யாமல் கல்லில் அடித்ததற்கு அவனுடைய ஆணவமும் ஒரு காரணம். இத்தோடு உசியாவின் பாவத்திற்கான பலன் நின்றுவிடவில்லை.

2 நாளாகமம் 26:23ம் வசனம் சொல்லுகிறது – ‘உசியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, ஜனங்கள் அவனைக் குஷ்டரோகியென்று சொல்லி, அவனை அவன் பிதாக்களண்டையில், ராஜாக்களை அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.’

உசியா இறந்தபிறகு அவன் உடலை வழமையாக இராஜாக்களான பிதாக்களை அடக்கம் பண்ணுகிற நிலத்திலிருந்த அடக்கக் குகையில் அவனை அடக்கம்பண்ணவில்லை; உசியா குஷ்டரோகி என்று சொல்லி ஜனங்கள் அரசநிலத்தில் அடக்கக்குகைக்கு அருகில் இருந்த ஒரு நிலத்தில் அவனை அடக்கம் பண்ணினார்கள். உசியாவின் பாவத்தின் அவமானம் அவனைக் கல்லறைவரை தொடர்ந்தது. கல்லறையிலும் அது அவனைவிட்டுவைக்கவில்லை. அது அவனுக்கு ஏற்பட்ட கடைசி அவமானம். ஒரு வேதவிளக்க அறிஞர் சொல்லுகிறார் – உசியா தன்னுடைய விசுவாசத்திற்கெதிராகச் செய்த செயலால் ஏற்பட்ட குஷ்டரோகம் கல்லறையிலும் அவனைவிட்டுவைக்கவில்லை’ என்கிறார்.

பயன்பாடுகள்

  1. போதகர்கள், உதவிக்காரர்களுக்காக நாம் ஜெபிக்கவேண்டும். உசியாவின் ஆணவம் அவர்களுக்கு இருக்கக்கூடாது என்று ஜெபிக்கவேண்டும். சபைத் தலைவர்கள் விழுந்தால் சபைக்கு எத்தனை அவமானம், ஆபத்து தெரியுமா? நமக்கு மிகவும் ஈசியாக இயற்கையாக வருவது சபைத்தலைவர்களைக் குறைகூறுவது தான். ஏன் அதைவிட்டுவிட்டு அவர்களுக்காக ஜெபிக்கக்கூடாது? அவர்கள் பூரணமானவர்கள் அல்ல; குறைபாடுகள் கொண்டவர்கள் தான். உங்களில் யாருக்கு குறைபாடு இல்லை. சபைத்தலைவர்களுக்காக, அவர்களுடைய இருதயத் தாழ்மைக்காக நீங்கள் உண்மையோடு ஜெபிக்கவேண்டும். உண்மையில் நாட்டை ஆளுகிறவர்களுக்காகவும் ஜெபிக்கவேண்டும். 2 தீமோத்தேயு 2ம் அதிகாரம் அதைச்செய்யும்படிச் சொல்லுகிறது. அவர்கள் விசுவாசிகள் இல்லைதான். இருந்தாலும் ஆணவத்தால் அவர்கள் தங்களையும் நாட்டையும் அழித்துவிடாமல் இருக்க ஜெபிக்கவேண்டும்.
  2. ஆணவத்தினால் ஏற்படும் ஆபத்துக்களைப்பற்றி நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். அதை வேதம் அடிக்கடி எச்சரித்து விளக்கியிருக்கிறது. ஆணவத்தை நாம் பின்பற்ற வேண்டியதில்லை; தாழ்மையைப் பின்பற்ற வேண்டும். ஆணவம் நம் இருதயத்தில் இருக்கிற ஒன்று. அது அகற்றப்படவேண்டியது. தாழ்மை நாம் பின்பற்ற வேண்டியது.

மாற்கு 7:21-23ல் இயேசு சொன்னது,

‘எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

வாழ்நாள் முழுதும் நாம் இருதயத்தில் இருக்கும் பாவத்தைத் தூண்டும் சோதனைகளை எதிர்த்துப் போராடி ஆணவத்திற்கு இடங்கொடாமல் தாழ்மையைப் பின்பற்ற வேண்டும். அதோடு, நமக்கு வழிகாட்டியாக சகரியா போன்ற ஆவிக்குரிய ஒருவரை வைத்துக்கொண்டு நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி மறவாமல் கர்த்தரின் கிருபைகளுக்காக அவருக்கு ஜெபத்தில் நன்றி சொல்லவேண்டும்.

  1. உசியா ஆணவத்தால் பாவத்தைச் செய்தபோது அவனுக்கு 58 வயது. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆணவம் எந்த வயதிலும் வந்துவிடும்; அழித்துவிடும். அதனால் நாம் சாகும்வரை சுவிசேஷ கிருபைகளைப் பயன்படுத்த வேண்டும். தொடர்ச்சியான வைராக்கியமான மனந்திரும்புதல் நமக்கிருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். ஆணவக்காரனே மனந்திரும்ப மறுக்கிறவன். உங்களையே ஆராய்ந்து பாருங்கள், சின்னச் சின்ன பாவத்துக்காகக்கூட சாக்குப்போக்குச் சொல்லி வருகிறீர்களா? காரணம் என்ன தெரியுமா? ஆணவந்தான். அது இருப்பதால்தான் சின்னப் பாவத்தை நம்மால் அழிவை உண்டாக்கும் ஒன்றாக எண்ணிப்பார்க்கத் தவறிவிடுகிறோம். அதற்காகக் கண்ணீர்விடத் தவறிவிடுகிறோம். ஒன்று தவறாமல் எல்லாப் பாவங்களுக்காகவும் மனந்திரும்ப வேண்டும். நாம் சமீபத்தில் வெளியிட்ட மனந்திரும்புதல் நூலை வாங்கிக் கருத்தோடு வாசியுங்கள். இந்த விஷயத்தில் ஆண்டவர் உங்கள் கண்களைத் திறக்கட்டும். சின்னச் சின்னப் பாவங்கள்தான் நம்மையும் அழித்து சபைக்கும் ஆபத்தைக் கொண்டுவருகிறது. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனேகப் பிரச்சனைகளுக்குக்கூட தற்பெருமைதான் காரணமாக இருக்கும். அது முத்திப்போய் உடனடியாக மனந்திரும்பாமல் நீங்கள் செய்துவருகிற பாவத்தை உங்கள் கௌரவப் பிரச்சனையால் மறைத்து வாழ்ந்து வருகிறீர்களா? உடனடியாக ஆண்டவர் முன் அறிக்கையிட்டு கண்ணீரோடு மனந்திரும்புங்கள்; மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள். மனந்திரும்பாமல் மன்னிப்பு கிடைக்காது தெரியுமா?
  2. உங்களில் யாராவது, இவ்வளவு நாளாகத் தவறு செய்து வாழ்ந்துவிட்டேன். இனி எப்படித் திருந்துவது என்று நினைக்கிறீர்களா? உங்களுடைய மானப்பிரச்சனையாக இது இருக்கிறதா? மனந்திரும்ப ஆண்டவர் நேரங்காலம் குறிக்கவில்லை. எந்த நேரத்திலும் மனந்திரும்பலாம்; மன்னிப்பை அடையலாம். தாவீது தன் பாவத்திற்காக மனந்திரும்பினான். வேதம் அவன் பாவங்களைக் குறிப்பிட்டபோதும் அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்காட்டவில்லை. அவனைப் பற்றி வேதம் குறிப்பிடும்போது ‘கர்த்தரின் இருதயத்துக்கு ஏற்ற மனுஷன்’ என்றுதான் சொல்லுகிறது (1 சாமுவேல் 13:14).

பேதுரு முன்றுதடவை இயேசுவை மறுதலித்தான். இயேசு அவனை மீட்டெடுத்ததை யோவான் 21 விளக்குகிறது. அதேபோல் சிலுவையில் மரித்த திருடன் கடைசி நேரத்தில் மனந்திரும்பினான். தன் வாழ்க்கையை நல்லபடியாக முடித்தான். இன்னும் எத்தனையோ உதாரணங்களை வேதத்தில் காணலாம். அன்றாடம் மனந்திரும்புங்கள்; உங்கள் வாழ்க்கை நல்லபடியாக முடிவைச் சந்திக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

கடைசியாக, உசியா நல்லவனா? கெட்டவனா?

அவன் மனந்திரும்பிய வாழ்க்கை வாழ்ந்த மனிதனாக எனக்குத் தெரியவில்லை. அவன் எத்தனையோ நல்ல காரியங்களைத் தகப்பனைப்போலச் செய்திருந்தாலும் அவை அவன் வாழ்க்கையில் தொடரவில்லை. அவன் கடைசிக் காலத்தில் மனாசே மனந்திருந்தியதுபோல் மனந்திரும்பியதாக வேதம் சொல்லவில்லை. இதன் காரணமாகத்தான் 2 இராஜாக்கள் 15ம் அதிகாரத்தில் அதை எழுதியவர் வெறுமனே அவன் குஷ்டரோகம் வந்து வாழ்ந்ததை மட்டும் குறிப்பிட்டு நிறுத்திக் கொண்டிருக்கிறார். உசியாவின் வாழ்க்கை நமக்கு உதாரணமாக இருக்கட்டும். வாழ்க்கையில் வெளிப்புறமாக சில நன்மைகளை மட்டும் செய்துவிட்டு அவை தொடரும்படியான மனந்திரும்புதலுக்குரிய வாழ்க்கை வாழாவிட்டால் அதனால் நமக்கோ எவருக்குமோ எந்தப் பலனுமில்லை. உசியா ஆரம்பத்தில் வாழ்க்கையில் செய்திருந்த செயல்கள் மெய்யான பக்திக்குரியவையாக இருந்திருந்தால் ஆண்டவர் செய்ய அனுமதித்திராத ஆலயத்துக்குரிய செயல்களை அவன் செய்யத்துணிந்திருக்க மாட்டான்; கர்த்தரும் அவனைத் தண்டித்திருந்திருக்க மாட்டார். உசியா மெய்யான மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் கொண்டிருக்கவில்லை. சகரியாவிடம் இருந்து சத்தியத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தாலும் அதை விசுவாசித்து அதன் வழியில் போகும் நடவடிக்கைகளை உசியா எடுக்கவில்லை. சத்தியம் பக்கத்திலேயே இருந்தபோதும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை உசியா. கர்த்தரை விசுவாசித்து வாழ்கின்ற வாழ்க்கையை அவன் இருதயபூர்வமாக நாடவில்லை. நீங்களும் அப்படியிருக்கிறீர்களா? உசியாவைப்போல இருதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள். கிருபையாய் சுவிசேஷத்தின் மூலம் நம்மை நாடிவரும் இயேசு கிறிஸ்துவை அலட்சியப்படுத்தாதீர்கள். அவரில்லாத வாழ்க்கை ஆபத்தான வாழ்க்கை என்பதை உசியாவின் வாழ்க்கை நமக்குச் சுட்டுகிறது.

மனித சித்தமும், சுவிசேஷ அறிவிப்பும்

சமீபத்தில் என் சபையில் நான் ஒரு பிரசங்கத்தை அளித்தபோது, அதில் கிறிஸ்துவை விசுவாசிக்காமல் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘உங்களைக் கிறிஸ்துவை விசுவாசிக்கும்படியாக கர்த்தர் அழைக்கிறார். இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசிக்காமல் இருப்பது உங்களுடைய பொறுப்பில்லாத தன்மையையே காட்டுகிறது. எத்தனையோ காரியங்களில் வாழ்க்கையில் பொறுப்போடு நடந்துகொள்ளுகிற நீங்கள் இந்த விஷயத்தில் அக்கறைகாட்டாமல் இருப்பது நியாயமானதல்ல. நீங்கள் பரலோகத்துக்குப் போகாமல் இருக்கப்போவது உண்மையானால் அதற்கு நீங்கள் எவரையும் குற்றஞ்சாட்டமுடியாது. உங்களுடைய அவிசுவாசத்தினால், கிறிஸ்துவை விசுவாசிக்க மறுக்கும் உங்களுடைய பொறுப்பற்ற தன்மையே நீங்கள் பரலோகத்தை அடையமுடியாமல் செய்துவிடும். இயேசு என்னிடம் வா, நான் இளைப்பாறுதல் தருகிறேன் என்று வாக்குறுதி தந்திருக்கும்போது அதை நிராகரித்து வாழ்வது தண்டனைக்குரிய குற்றம். இயேசு நீ கதறக்கதற, உனக்குக் கைவிலங்கு மாட்டி பரலோகத்துக்கு அழைத்துச் செல்லப்போவதில்லை. எனவே, ஏசாயாவின் வார்த்தைகளை விசுவாசித்து இயேசு தரும் ஜீவத்தண்ணீரை அருந்த ஓடிவாருங்கள், அதற்குப் பணம் கொடுக்கத்தேவையில்லை, இலவசமாக இயேசு தரும் இரட்சிப்பை இரண்டு கையாலும் விசுவாசத்தோடு வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று அவிசுவாசிகளைப் பார்த்துப் பிரசங்கித்தேன்.

இது அன்று ஆராதனையில் கலந்துகொண்ட ஒருவருக்கு மனதில் இடறலை ஏற்படுத்திவிட்டது. அவர் என்னிடம் ‘பாஸ்டர், இதில் ஆர்மீனியன்கள் கொடுக்கிற செய்தியின் வாடை அடிக்கிறதே. அவர்கள்தான் இப்படி அவிசுவாசிகளை இயேசுவிடம் வரும்படி அழைப்பார்கள். மனிதன் பாவத்தில் அவரிடம் வரமுடியாதபடி அல்லவா இருக்கிறான். அதுவும் முன்குறிக்கப்பட்டவர்கள் மட்டுந்தானே இரட்சிப்பை அடையமுடியும். அவிசுவாசிகளை இந்தமுறையில் இயேசுவிடம் வரும்படி பிரசங்கிப்பது தவறல்லவா’ என்று கேட்டார். இந்த சகோதரன் கேட்டது போலவே சீர்திருத்தச் சத்தியங்களை அறிந்துகொள்ள ஆரம்பித்திருப்பவர்கள் முன்குறித்தலாகிய தத்துவத்தைப்பற்றியும், சுவிசேஷ அறிவிப்பைப்பற்றியும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அந்தவிதத்தில் சிந்தித்திருக்கிற அநேகரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் எல்லோருக்குமே மனிதனுடைய பொறுப்பைப்பற்றியும், கர்த்தருடைய இறையாண்மைக்குரிய செயல்களைப்பற்றியும் புரிந்துகொள்ளுவதில் குழப்பங்கள் இருந்திருக்கின்றன.

இதேபோல் அநேக வருடங்களுக்கு முன் ஒரு இந்தியப் பிரசங்கி எனக்கு நன்கு அறிமுகமான ஒரு சீர்திருத்தப் போதகரை அவர் ஹைப்பர் கல்வினிஸ்டா? அவர் சுவிசேஷப்பணியில் ஈடுபடுவதுபோல் தெரியவில்லையே என்று என்னிடம் கேட்டார். அந்தச் சீர்திருத்தப் போதகர் இந்த இந்தியப் பிரசங்கி செய்கின்ற சுவிசேஷப் பணிகளைத் தன் ஊழியத்தில் செய்யாததால் இந்தியப் பிரசங்கி அவரை ஹைப்பர் கல்வினிஸ்டு என்று தீர்மானித்துவிட்டார். (ஹைப்பர் கல்வினிஸ்டுகள் தெரிந்துகொள்ளுதலாகிய சத்தியத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு சுவிசேஷம் அறிவிப்பதைத் தவிர்த்துவிடுகிறார்கள்) இத்தகைய தவறான நம்பிக்கைகளைக் கொண்ட சிலர் நம்மத்தியில் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் சீர்திருத்தப் போதனைகள் பற்றிய தெளிவான புரிதல் இல்லாததும், சுவிசேஷ அறிவிப்பை சீர்திருத்தப் போதனைகளின்படி வேதபூர்வமாக எப்படிக் கொடுப்பது என்பது பற்றியும் அநேகருக்குச் சரியான புரிதல் இல்லாததுதான். அத்தோடு சீர்திருத்தப் போதனைகளின்படி சுவிசேஷப்பணியை எப்படிச் செய்யவேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமலிருக்கிறது. சீர்திருத்தப் போதனைகளைப் புதிதாகக் கற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு இத்தகைய குழப்பங்களும், சந்தேகங்களும் இருப்பதில் ஆச்சரியமில்லை.

சுவிசேஷசத்தை நாம் பாவிகளுக்கு அறிவிப்பதற்குக் காரணம் வேதம் அதைச் செய்யும்படியாக நமக்குக் கட்டளையிடுவதால்தான். கர்த்தருடைய சித்தத்தைப் பொறுத்தவரையில் இறையியல் அதை இருபிரிவுகளாகப் பிரித்து விளக்குகிறது. முதலாவது, நித்தியத்தில் இருந்து அவரில் காணப்படும் அவருடைய மாறாத சித்தம் (Will of Purpose). இரண்டாவது, அவர் தீவிரமாகவும், உண்மையோடும் மனிதர்கள் பின்பற்றும்படியாக வலியுறுத்தித் தந்திருக்கும் கட்டளைகள் (Will of Precept). இந்த இடத்தில் கர்த்தரின் சித்தம் பற்றிய இந்த உண்மையைப் புரிந்துகொள்ள பியூரிட்டன் பெரியவரொருவரின் ஆலோசனையை நாம் பின்பற்ற வேண்டும். அவர் சொன்னார், ‘தர்க்கரீதியான சிந்தனைகள் உதவாத இடத்தில் விசுவாசம் நீச்சலடிக்கவேண்டும்’ என்று. கர்த்தருடைய சித்தம்பற்றிய இந்த உண்மையை நாம் விசுவாசத்தால் ஏற்று நம்பவேண்டும். சுவிசேஷ அறிவிப்பை கர்த்தர் நமக்குக் கட்டளையாகத் தந்திருக்கிறார்.

சுவிசேஷத்தை நாம் அறிவிப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம், கர்த்தர் அதை இலவசமாக அறிவிப்பதால்தான் (Free offer). கர்த்தர் கருணையோடு தன் இரு கரத்தையும் நீட்டி பாவிகளைத் தன்னிடத்தில் வா, வா என்று அழைக்கிறார். கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் கர்த்தர் பொதுவாக மனிதர்கள் மீது அன்புகாட்டவில்லை என்று வாதிடுகிறார்கள். யோவான் 3:16 நிச்சயமாக மனித குலத்தின் மீது கர்த்தருக்கு இருக்கும் பொதுவான அன்பை விளக்குகிறது. இந்த வசனத்தைப் பற்றி ஜோன் கல்வின் விளக்கும்போது, ‘கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி உலகத்தில் எந்த நன்மையும் இல்லாதிருந்போதும், தான் கருணையுள்ளவர் என்பதை உலகத்துக்குக் காட்டி உலகத்தின் அனைத்து மனிதர்களையும் எந்தவிதப் பாரபட்சமுமின்றி கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி கர்த்தர் அழைக்கிறார்’ என்கிறார் (கல்வினின் விளக்கவுரை). சுவிசேஷத்தின் மூலம் கர்த்தர் தன்னிடம் மனிதர்கள் மனந்திரும்பி வரவேண்டும் என்று இலவசமாக அழைப்பதை வேதத்தின் அநேக பகுதிகள் விளக்குகின்றன. உதாரணத்திற்கு ஏசாயா 45:22, 55:1-3; எசேக்கியேல் 18:23, 33:11; உபாகமம் 5:29; லூக்கா 13:34; லூக்கா 19:41; வெளிப்படுத்தின விசேஷம் 22:17).

சீர்திருத்த விசுவாசத்தை விளக்குகின்ற அத்தனை வரலாற்று விசுவாச அறிக்கைகளிலும் இந்த சுவிசேஷ இலவச அறிவிப்பு (Free Offer of the Gospel) தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. ஆர்மீனியனிசத்திற்கு எதிராக டோர்ட் இறையியல் குழு வெளியிட்ட அறிக்கையில் இது காணப்படுகிறது. 1689 விசுவாச அறிக்கையிலும் (7ம், 20ம் அதிகாரங்கள்), வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கையிலும், சவோய் விசுவாச அறிக்கையிலும் இதை விளக்கும் அதிகாரங்கள் காணப்படுகின்றன. பியூரிட்டனான ஜோன் ஓவன், ‘சகல மனிதர்களையும் நாம் நேசிக்கவேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். சுவிசேஷத்தை இலவசமாக எல்லா மனிதர்களுக்கும் பாரபட்சமின்றி அறிவிப்பது நம்முடைய கடமையாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து அதைத் திருச்சபைக்குக் கட்டளையாகவே மத்தேயு 28:18-20 வரையுள்ள வசனங்களில் தந்திருக்கிறார். சீர்திருத்த பாப்திஸ்து போதகரான ஜெப்ரி ஸ்மித், ‘மனிதர்கள் மனந்திரும்பும்படியாக நாம் பிரசங்கிக்கிறோமா?’ என்று தான் எழுதிய ஒரு நூலின் அதிகாரத்தின் தலைப்பில் கேட்கிறார். ‘மனந்திரும்புதலுக்கான பிரசங்கம்’ (Preaching Conversions) என்ற தலைப்பில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் அவருடைய நூல் சுவிசேஷ அறிவிப்பை விளக்கி அதை வலியுறுத்தும் அருமையான நூல்.

இந்த அதிகாரத்தில் கர்த்தரின் இறையாண்மை, முன்குறித்தல், தெரிந்துகொள்ளுதல், மனித சித்தம் ஆகியன பற்றிய வேதபோதனைகளுக்கு முரண்படாதவகையில் வேதபூர்வமாக சீர்திருத்தச் சுவிசேஷப்பணியில் ஈடுபடவேண்டிய அவசியத்தை விளக்கப்போகிறேன்.

சுவிசேஷப்பணி என்பது எது?

‘பரிசுத்த ஆவியின் வல்லமையால், இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்று அவர்மீது முழு நம்பிக்கை வைத்து விசுவாசிக்கும்படி இயேசு கிறிஸ்துவைச் சுவிசேஷச் செய்தியில் மனிதர்கள் முன் வைப்பதே சுவிசேஷப்பணி.’

மேற்குறிப்பிட்ட வாசகத்தை ஆர்மீனியன்களும், சீர்திருத்த விசுவாசிகளும் பிரச்சனையில்லாமல் ஒத்துக்கொள்ளுவார்கள். இதுதான் வேதம் விளக்குகின்ற சுவிசேஷ அறிவிப்பு பற்றிய உண்மை. இருந்தபோதும், இந்த உண்மையை ஒத்துக்கொள்ளுகிறவர்கள் நடைமுறையில் இந்தச் சத்தியத்துக்கு முரணில்லாமல் சுவிசேஷத்தை அறிவிக்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறபோதே பிரச்சனையைச் சந்திக்கிறோம். இந்த வாசகம் குழப்பமற்ற முறையில் இருந்தபோதும், மனிதனைப்பற்றிய ஆர்மீனியனிச நம்பிக்கை, ஒரு ஆர்மீனியன் சுவிசேஷத்தை அறிவிக்கும்போது மேற்குறிப்பிட்ட வாசகத்தில் காணப்படும் உண்மைக்கு ஒருபடி மேலே போய், பாவியாகிய மனிதன் இரட்சிப்பை அடைவதற்கு உலகப்பிரகாரமான, சடுதியானதொரு உடனடி வழிமுறையைப் பின்பற்ற வசதி ஏற்படுத்திக் கொடுக்கிறான். இயேசுவை விசுவாசித்தேன் என்று கூட்டங்களில் கையை உயர்த்திக் காட்டுவது, இயேசுவுக்காகத் தீர்மானம் எடுப்பது, விசுவாசிக்கிறேன் என்று வாயால் மட்டும் சொல்லி கண்ணிமைக்கும் நேரத்தில் உடனடியாக ஞானஸ்நானம் எடுப்பது போன்ற வேதஆதாரமற்ற செயல்களை மனிதன் செய்யும்படிச் செய்து, அப்படிச் செய்கிறவர்கள் இரட்சிப்பை உடனடியாக அந்த நிமிடமே அடைகிறார்கள் என்று ஆர்மீனியன் தீர்மானிக்கிறான். மேலே நாம் கவனித்திருக்கும் சுவிசேஷப்பணி பற்றிய உண்மை அதைச் செய்யும்படி நிச்சயமாகச் சொல்லவில்லை. இயேசுவைப்பற்றிய சுவிசேஷத்தை அறிவிப்பதை மட்டும் சுவிசேஷப்பணியாக அது விளக்குகிறது; அறிவிப்பதற்கு மேலாக ஒரு மனிதனின் இரட்சிப்புக்கு அவன் அந்த நிமிடமே எதையாவது செய்யவைக்கும்படி அது நிர்ப்பந்திக்கவில்லை. டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் தன்னுடைய ‘பிரசங்கமும் பிரசங்கிகளும்’ என்ற நூலில் இதற்காக ஒரு அதிகாரத்தையே ஒதுக்கி (தீர்மானம் எடுப்பதற்கான அழைப்பு) இந்த முறை எத்தனை தவறானது என்பதை அருமையாக விளக்கியிருக்கிறார். இந்த இடத்திலேயே ஆர்மீனியனிசத்திற்கும், சீர்திருத்த விசுவாசத்திற்கும் இடையில் காணப்படும் சுவிசேஷப்பணியின் வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இரட்சிப்பை ஒருவன் உடனடியாக, சடுதியாக அடைய ஆர்மீனியன் சுவிசேஷப் பணியை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறான். இரட்சிப்பை அடைவதற்கு கிறிஸ்துவை ஒருவன் ஏற்று விசுவாசிக்கவேண்டும், அது அவனுடைய தவிர்க்கமுடியாத கடமை என்று ஆணித்தரமாக வலியுறுத்தி அறிவிப்பதோடு சீர்திருத்தச் சுவிசேஷகன் தன் சுவிசேஷப் பணியை நிறுத்திக்கொள்ளுகிறான்.

ஆர்மீனியனிசத்தைப் பின்பற்றுவோர் மனிதனின் சித்தத்தைப்பற்றிக் கொண்டிருக்கும் தவறான நம்பிக்கைகளே அவர்கள் சுவிசேஷப்பணியில் செய்துவரும் அநாவசியமான கிரியைகளுக்குக் காரணமாக இருக்கின்றன. மனிதன் இரட்சிப்பை அடைவதற்குக் கர்த்தருடைய கிரியைக்குத் துணைபோய் தன்பங்கைச் செலுத்தக்கூடியவிதமாக தன்னுடைய சித்தத்தில் ‘ஆவிக்குரிய வல்லமை’ உள்ளவனாக இருக்கிறான் என்கிறது ஆர்மீனியனிசம். அந்நம்பிக்கையின் காரணமாக சுவிசேஷத்தை சொல்லுவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் மனிதனை எதையாவது உடனடியாகச் செய்யவைத்து அவனை விசுவாசியாக்க அது முயல்கிறது. மனித சித்தம் பற்றிய இந்த விஷயத்தில் சீர்திருத்த விசுவாசம், மனிதனுடைய சித்தம் ஆவிக்குரிய வல்லமையை இழந்து காணப்படுகிறது என்று விளக்குகிறது. அதாவது, பாவநிலையில் இருக்கும் மனித சித்தம் இயற்கை ஆற்றலைக் கொண்டிருந்து சுதந்திரமாகச் செயல்பட்டபோதும், ஆவிக்குரிய ஆற்றலில்லாத நிலையில் கர்த்தருக்குரிய எந்தக் காரியங்களையும் செய்யமுடியாதபடி இருக்கிறது. அதைத்தான் முந்தைய அதிகாரங்களில் விளக்கமாகக் கவனித்து வந்திருக்கிறோம். அதனால் சுவிசேஷத்தை அறிவிப்பதோடு மட்டும் நின்று, அதன் பலனைக் கர்த்தரின் கையில் விட்டுவிடுகிறான் சீர்திருத்தச் சுவிசேஷகன்.

நான் ஏற்கனவே விளக்கிய சுவிசேஷப் பணி பற்றி வேதம் விளக்கும் உண்மையை மறுபடியும் கவனிப்போம். இதை விபரமாக விளங்கிக்கொள்ளுவது நல்லது.

‘பரிசுத்த ஆவியின் வல்லமையால், இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்று அவர்மீது முழு நம்பிக்கை வைத்து விசுவாசிக்கும்படி இயேசு கிறிஸ்துவைச் சுவிசேஷச் செய்தியில் மனிதர்கள் முன் வைப்பதே சுவிசேஷப்பணி’

இந்தக் கூற்றில் காணப்படும் உண்மைகளைக் கவனிப்போம். இதில் இரண்டு முக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன.

  1. இயேசுகிறிஸ்துவை மனிதர்கள் முன் வைக்கவேண்டும்.
  2. மனிதன் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்று விசுவாசிக்கும்படி அறிவிக்கவேண்டும்.

இதில் முதலாவதை விபரமாக இனி விளக்கப்போகிறேன்.

  1. இயேசுகிறிஸ்துவை சுவிசேஷச் செய்தியில் மனிதர்கள் முன் வைக்கவேண்டும்.

இயேசு கிறிஸ்துவை சுவிசேஷச் செய்தியில் மனிதர்கள் முன் வைப்பது என்பது இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை விளக்குவதல்ல. அவரை மனிதர் முன் வைப்பதற்கும், அவருடைய வரலாற்றை விளக்குவதற்கும் இடையில் வேறுபாடுண்டு. வரலாற்றுக் கிறிஸ்துவினுடைய போதனைகளையும், அவரைப்பற்றிய உதாரணங்களையும் பிரசங்கத்தில் தருவது மட்டும் சுவிசேஷப் பணி அல்ல. அவர் வாழ்ந்து மரித்து எதைச் செய்துமுடித்து உயிர்த்தெழுந்தார் என்ற விபரங்களை மட்டும் விளக்குவதும் சுவிசேஷப் பணி அல்ல. எந்த உயிர்த்துடிப்பும், ஈடுபாடும் இல்லாமல் வெறும் செய்தியாக மட்டும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விபரங்களைத் தாராளமாகக் கொடுத்துவிட்டு அதை சுவிசேஷப்பணியாகக் கருதிவிடக்கூடாது. சுவிசேஷப் பணி அதற்கும் மேலானது: அது இயேசு கிறிஸ்துவையே மனிதர் முன் வைப்பது.

இயேசு கிறிஸ்துவை எப்படி மனிதர் முன்வைப்பது? பிதா தீர்மானித்தபடி ஆசாரியராகவும், இராஜாவாகவும், தீர்க்கதரிசியாகவும் இவ்வுலகுக்கு வந்து தனக்களிக்கப்பட்ட மீட்பின் பணிகளை நிறைவேற்றிய, கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்துவாக அவரைச் சுவிசேஷச் செய்தியில் மனிதர் முன்வைக்கவேண்டும். ஜீவிக்கின்ற இரட்சகராக, ஆளுகின்ற இரட்சகராக அவரை முன்வைக்கவேண்டும். பவுல் 1 தீமோத்தேயு 2:5-6ல் சொல்லியிருப்பது போல, ‘மனுஷனாகிய இயேசு கிறிஸ்துவை’ ‘தேவனுக்கும் மனுஷருக்கும் இடையில் மத்தியஸ்தராக’ இருக்கும் இயேசு கிறிஸ்துவை, பேதுரு, 1 பேதுரு 3:18ல் விளக்கியிருப்பதுபோல ‘பாவங்களுக்காகத் துன்பங்களை அனுபவித்த’ இயேசு கிறிஸ்துவை, ‘நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி’ வந்த இயேசு கிறிஸ்துவை சுவிசேஷத்தின் மூலம் மனிதர்கள் முன்வைக்கவேண்டும். நானே வழி, நானே சத்தியம், நானே ஜீவன் என்று சொன்ன கிறிஸ்துவை, என் மூலமாக அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரமுடியாது என்று சொன்ன கிறிஸ்துவை அவர்கள் முன்வைக்கவேண்டும். அவர் மூலமாக, அவரால் மட்டுமன்றி எவரும் அவரை விசுவாசிக்க முடியாது என்று அறிவித்த இயேசு கிறிஸ்துவை மனிதர்கள் முன்வைக்கவேண்டும்.

இயேசு கிறிஸ்துவை நாம் இரட்சகராக, பாவிகளை இரட்சிப்பதற்காக இந்த உலகத்துக்கு வந்தவராக, நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து விடுவித்து நமக்காகத் தானே சாபமானவராக (கலாத்தியர் 3:13), வரப்போகும் தேவகோபத்திலிருந்து நம்மை விடுவிப்பவராக (1 தெசலோனிக்கேயர் 1:10) அவரை மனிதர்கள் முன்வைக்கவேண்டும். மரித்தோர் மேலும், ஜீவனுள்ளோர் மேலும் ஆண்டவராக இருப்பதற்காக மரித்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை (ரோமர் 14:9) சுவிசேஷகன் அவர்கள் முன்வைக்கவேண்டும். பாவியின் இரட்சிப்புக்குத் தேவையான அனைத்தையும் பிதாவின் கட்டளையைத் தலைமேல் சுமந்து பூரணமாகக் கல்வாரி சிலுவையில் நிறைவேற்றியவராக அவரைப் பிரசங்கிக்க வேண்டும். பாவத்தைப் போக்குவதற்குத் தன்னை ஒரே பலியாகச் செலுத்தி, சாபத்தையும், தேவகோபத்தையும் தன் மேல் சுமந்து சகல பாவங்களுக்குமான கடன்களைப் பூரணமாகத் தன் பரிசுத்த இரத்தத்தினால் அடைத்து, நம்மை நீதிமான்களாக்குவதற்கு நீதியைச் சம்பாதித்த கிறிஸ்துவை ஆத்துமாக்கள் முன்வைக்கவேண்டும். இந்தவிதத்தில் இந்த உண்மைகளை வெளிப்படையாகப் பிரசங்கித்து ஆத்துமாக்களுக்கு முன் கிறிஸ்துவை வைக்காத சுவிசேஷப் பணி மெய்யான சுவிசேஷப் பணியல்ல.

இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அவரைப் பற்றிய வெறும் வரலாறு அல்ல. மனிதர்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது அவருடைய செய்தி. மனிதர்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பது அவரைப்பற்றிய செய்தி. அவருடைய செய்தி, கர்த்தரைப் பிதாவாகக்கொள்ளாமல் நியாயாதிபதியாகிய அவரின் கோபத்தைத் தன்மேல் சுமந்து பாவத்தில் இருக்கும் மனிதர்களுடைய தேவையைத் தீர்த்துவைப்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் செய்தி. தொலைக்காட்சியில் கண்டும் கேட்டும், பத்திரிகையில் வாசிக்கும் ஜீவனற்ற வெறும் செய்தி அல்ல சுவிசேஷச் செய்தி. இயேசு கிறிஸ்துவை, அவருடைய தன்மை மற்றும் கிரியைகளை வேதபூர்வமாகவும், அவரை இறையாண்மையுள்ள இரட்சகராகவும், ஆண்டவராகவும் பாவிகளான மனிதர்கள் முன் சுவிசேஷச் செய்தியாக வைப்பதே சுவிசேஷப்பணி.

2 கொரிந்தியர் 5:18-21 வரையுள்ள வசனங்களில் பவுல் நாம் பிரசங்கிக்கவேண்டிய கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தைப் பின்வருமாறு விளக்குகிறார்.

இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசு கிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார். ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

  1. மனிதன் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்று விசுவாசிக்கும்படி அறிவிக்கவேண்டும்.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷச் செய்தியில் உறுதியான ஒரு நோக்கமுண்டு. மனிதன் அவரை இரட்சகராக ஏற்று விசுவாசிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பிரசங்கிப்பது சுவிசேஷப்பணியின் அதிமுக்கிய நோக்கம். அவரில்லாமல் மனிதர்களுக்கு வாழ்க்கையில்லை என்பதை மனிதர்களுக்கு உணரவைப்பது சுவிசேஷப்பணி. அதனால், மனிதர்கள் இயேசு கிறிஸ்துவை நாடி அவரைப்பற்றிய செய்தியைக் காதால்கேட்டு, சிந்தித்து, அவரை ஏற்று விசுவாசிக்கவேண்டும் என்று அவர்களை உறுதியோடு அழைப்பதாக சுவிசேஷச் செய்தி இருக்கவேண்டும். இதையே இந்தக் கூற்று விளக்குகிறது. இந்தப் பயன்பாட்டை வலியுறுத்தாத செய்தி சுவிசேஷச் செய்தியல்ல.

இந்தக் கூற்று ஒரு முக்கிய உண்மையைப் புலப்படுத்துகிறது. சுவிசேஷப்பணி பரிசுத்த ஆவியின் வல்லமையால் செய்யப்படுவது என்பதே அது. இந்தக் கூற்றில், ‘பரிசுத்த ஆவியின் வல்லமையால், இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்று அவர்மீது முழு நம்பிக்கை வைத்து விசுவாசிக்கும்படி இயேசு கிறிஸ்துவைச் சுவிசேஷச் செய்தியில் மனிதர்கள் முன் வைப்பதே சுவிசேஷப்பணி’ என்றிருப்பதைக் கவனியுங்கள். இதை, ‘சுவிசேஷப் பணி என்பது, பரிசுத்த ஆவியால் மனிதர்கள் இரட்சிக்கப்படும்படி இயேசு கிறிஸ்துவை அவர்கள் முன் சுவிசேஷப்பணி மூலம் வைப்பதே’ என்றும் விளக்கமுடியும். ஆனால், உண்மையில் இந்தக் கூற்று அதையல்ல நம்முன் வைக்கிறது. ‘மனிதர்கள் கிறிஸ்துவிடம் வரும்படியாகப் பரிசுத்த ஆவியின் வல்லமையால் சுவிசேஷப் பணிமூலம் அவரை மனிதர்கள் முன்வைக்கவேண்டும்’ என்பதே இந்தக் கூற்றுக்கான விளக்கம். இந்த இரண்டிற்கும் இடையில் பெரிய வித்தியாசம் உண்டு. முதலாவது, பரிசுத்த ஆவியின் வல்லமையால் மனிதர்கள் இரட்சிக்கப்படுவதைப் பற்றியது. இரண்டாவது, பரிசுத்த ஆவியின் வல்லமையால் சுவிசேஷப் பணியில் ஈடுபடுவது பற்றியது. இதில் இரண்டாவதையே இந்தக் கூற்று வலியுறுத்துகிறது. இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், சுவிசேஷப்பணியின் நோக்கமே சுவிசேஷம் சொல்லுவதன் மூலம் அதைக் கேட்பவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான். ஆகவே, சுவிசேஷப்பணியின் அடிப்படை நோக்கமே பாவிகளை கர்த்தரிடம் கொண்டுவருவதுதான். ஜெப்ரி ஸ்மித் தன் நூலில் (மனந்திரும்புதலுக்காகப் பிரசங்கித்தல்) இதையே வலியுறுத்தி எழுதியிருக்கிறார். அதாவது, ஆத்துமாக்கள் மனந்திரும்புவதை அடிப்படை நோக்கமாகக்கொண்டு பிரசங்கிக்கப்படாத பிரசங்கம் சுவிசேஷப் பிரசங்கமல்ல என்பது அவருடைய கருத்து. ஜெப்ரி ஸ்மித்தின் கருத்து மிகவும் சரியானது.

சுவிசேஷப்பணியின் நோக்கம் ஆத்துமாக்களைக் கர்த்தரிடம் சேர்ப்பது என்பது எப்படிச் சரியாகும்? விசுவாசத்தை அளிப்பது கர்த்தரின் செயல் என்றுதான் வேதம் விளக்குகிறது. இருந்தபோதும், ஒவ்வொரு சுவிசேஷகனின் நோக்கமும் ஆத்துமாக்கள் மனமாற்றம் அடையவேண்டும் என்பதாகவே இருக்கவேண்டும் என்று கூறுவதில் ஒரு தவறுமில்லை. அந்த நோக்கமில்லாமல் அவன் சுவிசேஷம் சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை. சுவிசேஷப்பணி, சுவிசேஷகனின் கிரியையாக இருந்தாலும் அவனுடைய ஊழியத்தின் நோக்கம் அதன் மூலம் பாவிகள் மனமாற்றம் அடையவேண்டும் என்பதாகவே இருக்கவேண்டும். இருந்தாலும், சுவிசேஷகனின் பணி மூலம் எத்தனை ஆத்துமாக்கள் மனமாற்றம் அடைகிறார்கள் என்பதை வைத்து அவன் மெய்யாகவே சுவிசேஷப்பணி செய்கிறான் என்றும் தீர்மானித்துவிட முடியாது. ஏனென்றால், நெடுங்காலம் இஸ்லாமியர்கள் மத்தியில் சுவிசேஷப்பணி செய்து எவரும் மனமாற்றம் அடையாததை அனுபவத்தில் கண்ட மிஷனரிகள் இருந்திருக்கிறார்கள். அதை வைத்து அவர்கள் சுவிசேஷப்பணி செய்யவில்லை என்று தீர்மானிக்க முடியுமா? அதேவேளை, நேரடி சுவிசேஷச் செய்தியாக இல்லாத பிரசங்கங்களைச் செய்த பிரசங்கிகள் மூலம் ஆத்துமாக்கள் மனந்திரும்புதலை அடைந்திருக்கிறார்கள். அதைவைத்து இந்தப் பிரசங்கிகள் சுவிசேஷப்பணி செய்திருக்கிறார்கள் என்று கூறமுடியுமா? இரண்டு கேள்விகளுக்கும் ‘இல்லை’ என்பதே பதில். இதிலிருந்து எதைத் தெரிந்துகொள்ளுகிறோம்? பிரசங்கத்தின் மூலம் ஏற்படும் பலன்கள் பிரசங்கிகளின் கையில் தங்கியிருக்கவில்லை என்பதைத்தான். பிரசங்கிகளின் நோக்கமோ, அல்லது விருப்பமோ பிரசங்கத்தின் மூலம் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திவிட முடியாது. அதைக் கர்த்தர் மட்டுமே தன் சித்தத்தின் மூலம் செய்யக்கூடியவராக இருக்கிறார். இப்படிச் சொல்வதால் நாம் நம்முடைய சுவிசேஷப்பணி மூலம் எந்தப் பலனையும் எதிர்பார்க்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. நம் பணிகள் மூலம் ஒன்றும் நிகழாமல் இருந்தால், கர்த்தரை நாம் ஜெபத்தில் நாடி அதற்கான காரணத்தை அறிய முயற்சி செய்யவேண்டும். ஆகவே, நாம் அடைந்திருக்கும் பலன்களை வைத்து நம்முடைய சுவிசேஷப்பணியை எடைபோடக்கூடாது என்றும் சொல்லமுடியாது.

அப்படியானால் சுவிசேஷப்பணியை எப்படி விளக்குவது? இதற்குப் பதில் தரும் ஜே. ஐ. பெக்கர் பின்வருமாறு அருமையாக விளக்குகிறார்.

‘இதற்கான புதிய ஏற்பாட்டு பதில் மிகவும் எளிமையானது. சுவிசேஷப்பணி என்பது சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதுதான். இந்தச் செய்திப் பரிமாற்றக் கிரியை மூலம் கிறிஸ்தவர்கள் கர்த்தரின் நாவாகச் செயல்பட்டு அவருடைய செய்தியைப் பாவிகளுக்கு அறிவிக்கிறார்கள். எந்தவிதமான சந்தர்ப்பமாக இருந்தாலும், ஒரு பெரிய கூட்டத்திலோ, சிறிய கூட்டத்திலோ, பிரசங்க மேடையிலிருந்தோ, எவருடனோ நிகழும் தனிப்பட்ட உரையாடலின் மூலமோ அவர்கள் சுவிசேஷப்பணி செய்கிறார்கள். தன்னை எதிர்த்து நிற்கும் உலகைப் பார்த்து கிறிஸ்துவை விசுவாசிக்கும்படிப் படைத்தவர் அழைப்பது தெய்வீகச் செய்தியின் உச்சகட்டமாக இருப்பதால், அந்தச் செய்தியை அறிவிப்பது அதைக்கேட்பவர்கள் மனமாற்றம் அடையவேண்டும் என்பதை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்தவிதமாக ஆத்துமாக்கள் மனமாற்றமடையும் பணியில் ஈடுபட்டிராவிட்டால் நீங்கள் சுவிசேஷப்பணி செய்யவில்லை என்றுதான் அர்த்தம்! நீங்கள் சுவிசேஷப்பணியில் ஈடுபட்டிருக்கிறீர்களா என்பதை அறிந்துகொள்ள உங்களுடைய சாட்சியின் மூலம் யாரும் மனமாற்றத்தை அடைந்திருக்கிறார்களா என்ற கேள்வியைக் கேட்கக்கூடாது. நீங்கள் விசுவாசத்தோடு சுவிசேஷத்தை அறிவிக்கிறீர்களா என்றுதான் கேட்கவேண்டும்.’

ஒரு பிரசங்கி தன் சபையில் இருக்கும் ஆத்துமாக்கள் மனமாற்றமடைய உழைக்க வேண்டும். இந்த இடத்தில் மனமாற்றம் (Conversion) என்பதை வேதம் பயன்படுத்தும் முறையில் தான் நானும் பயன்படுத்துகிறேன். இரட்சிப்பது கர்த்தரின் பணி; மனமாற்றம் மனிதனின் பணி என்கிறது வேதம். அதாவது கர்த்தரின் கிருபையின் இரட்சிக்கும் செயலால் மனிதன் மனமாற்றம் அடையவேண்டும்; கர்த்தரை நோக்கி அவன் ‘திரும்பவேண்டும்.’ அத்தகைய கர்த்தரை நோக்கித் திரும்புதலே மனமாற்றம். அதையே கெட்டகுமாரன் செய்தான் (லூக்கா 15).

தனக்குப் புத்திதெளிந்தபோது அவன் எழுந்து தன் தகப்பனை நோக்கிப்போனான். அது அவன் செய்யவேண்டிய செயலாக இருந்தது. அதுவே மனமாற்றம்.

யாக்கோபு 5:19-20ல், ‘உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகிப்போனால், மற்றவன் அவனைத் திருப்பினால் . . . பாவியைத் திருப்புகிறவன் . . . திரளான பாவங்களை மூடுகிறான்’ என்கிறார்.

இதில் ‘திருப்புதல்’ என்ற வார்த்தை இரண்டு தடவை வந்திருக்கிறது. இதை ஆங்கிலத்தில் turn என்பார்கள். ஒருவன் போய்க்கொண்டிருக்கும் வழியில் இருந்து அவனைத் திருப்புவதையே இது குறிக்கிறது. அதைத்தான் யாக்கோபு செய்யும்படியாகச் சொல்கிறார். அப்போஸ்தலர் 26:18ல் பவுல் அகிரிப்பாவிடம் தன் சாட்சியைக் கொடுத்தபோது, ‘சுயஜனத்தாரிடத்தினின்றும், அந்நிய ஜனத்தாரினிடத்தினின்றும் . . . சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்குத் ‘திரும்பும்படி’ . . . உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்று இயேசு சொன்னதாக அறிவித்தார். இதில் காணப்படும் ‘திரும்புகிற’ செயலையே நோக்கமாகக் கொண்டு சுவிசேஷத்தின் மூலம் பிரசங்கி பிரசங்கிக்கவேண்டியவனாக இருக்கிறான்.

கிறிஸ்தவர்கள் ஆத்துமாக்கள் மனமாற்றம் அடைவதற்காக சுவிசேஷத்தைச் சொல்லும்படி அழைக்கப்பட்டிருக்கிறார்கள். தன்னுடைய அவிசுவாசியான கணவன் மனமாற்றம் அடைய விசுவாசியான மனைவி உழைக்கவேண்டும். அதனால் சுவிசேஷப்பணி அல்லது சுவிசேஷ அறிவிப்பு என்பது வெறுமனே போதிப்பதோ, சத்தியத்தை விளக்குவதோ ஒருவர் மனதில் பதியுமாறு ஒரு செய்தியைக் கொடுப்பதோ மட்டும் அல்ல. அதற்கும் மேலானதொன்று சுவிசேஷப்பணியில் காணப்படுகிறது. இதுபற்றி விளக்கும் ஜோன் கல்வின்,

‘சத்தியத்தை வளர்ப்பதை மட்டும் போதகர்கள் செய்யக்கூடாது. அதை ஆத்துமாக்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளும்படியாகவும் உழைக்கவேண்டும். அதை ஏதோ ஒரு தடவை மட்டும் செய்கிறவர்களாக இல்லாமல் தொடர்ச்சியாகச் செய்யவேண்டும். அவர்கள் கர்த்தரின் செய்தியாளர்களாக இருக்கிறார்கள், அதனால், அவர்களுடைய முதல் கடமை கர்த்தரின் கிருபையை ஆத்துமாக்களுக்கு இலவசமாக அளிப்பது. அவர்களுடைய இரண்டாவது கடமை, தங்களுடைய சகல ஆற்றலையும் பயன்படுத்தி அது வீண்போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்கிறார் (2 கொரிந்தியர் 6:1 விளக்கவுரை).

சுவிசேஷத்தைக் கேட்கிற ஆத்துமா அதற்கு செவிசாய்த்து உடன்படுவதற்காக உழைப்பதை சுவிசேஷப்பணி தன்னில் கொண்டிருக்கிறது. சுவிசேஷப்பணி என்பது ஒருவரை மனமாற்றத்திற்கு வழிநடத்தும் நோக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது. அதாவது, சுவிசேஷப்பணி என்பது ஒருவரை ஆதாயப்படுத்துவது, வெற்றிகொள்வது, சக மனிதர்களை இயேசு கிறிஸ்துவுக்காகக் கைப்பற்றிப் பிடிப்பதாகும். மீனைப்பிடிக்கிறவன் தன் கையிலிருக்கும் தூண்டிலைத் தண்ணீரில் சரியான இடத்தில் எறிந்து கருத்தோடு மீனைப்பிடிப்பதற்காக எப்படி உழைப்பானோ அதே உழைப்பைத்தான் சுவிசேஷப்பணியில் சுவிசேஷகன் கொண்டிருக்கவேண்டும். மீன் பிடிக்கிறவன் தூண்டிலைத் தண்ணீரில் எறிவதற்காக மட்டும் ஒருநாளும் ஆற்றங்கரைக்குப்போக மாட்டான். அவனுடைய குறிக்கோள் மீன்களோடு வீட்டுக்குத் திரும்புவதாகவே இருக்கும். அவனுக்கிருக்கும் அந்தக் குறிக்கோளில்லாமல் சுவிசேஷப்பணியில் ஈடுபடுகிறவன் சுவிசேஷம் சொல்லுகிறவனல்ல.

இந்த ஆக்கத்தின் மிகுதிப் பகுதியை ‘மனித சித்தம்’ என்ற தலைப்பில் நாம் வெளியிட்டிருக்கும் புதிய நூலின் 11ம் அதிகாரத்தில் படிக்கலாம்.

பாவம் நம்முடைய எதிரி என்ற உண்மை தரும் பாடம் – ரால்ப் வென்னிங் –

பாவகரமான வாழ்வியல் முறை நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது என்று நாம் நினைத்தால், நாம் பெரியளவில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். சிலர் தீமையை நன்மை என்று சொல்லுவார்கள் (ஏசாயா 5:20), நாம் செய்யக் கூடாதவைகள் நமக்கு இன்பம் தருவதைப் போல் தென்படலாம், ஆனால் அதை விழுங்கியபிறகுதான் தெரியும், அது மிகவும் கசப்பானது என்று. சாத்தான், ஆதாமுக்கும் ஏவாளுக்கும், நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனால், நீங்களும் கடவுளைப் போல் இருப்பீர்கள் என்று வாக்குறுதி தந்தான் (ஆதியாகமம் 3:5). ஆனால் அவர்களுடைய கீழ்ப்படியாமையின் முடிவு வேறுவிதமாக அமைந்தது. பாவத்தின் தன்மையைப் போலவே, அது ஏற்படுத்தும் விளைவுகளும், முழுமையாக தீமையானதே.

அ. பாவம் ஒருபோதும் நமக்கு நன்மையைத் தரக் கூடியதல்ல. பாவகரமான வாழ்வியல் முறை, நமக்கு நன்மை தரக்கூடியதை அபகரித்துக்கொள்ளுமே தவிர, அது நமக்கு எந்தவிதமான நன்மையையும் தருகிறதில்லை. காயீன் தன் சகோதரனாகிய ஆபேலைக் கொலை செய்ததன் மூலம் என்னத்தை அடைந்தான்? (ஆதியாகமம் 4:13) இயேசுவைக் காட்டிக்கொடுத்ததனால் யூதாஸ் பெற்றது என்ன? (அப்போஸ்தலர் 1:18) இதெல்லாம் பெரிய பாவம் என்று ஒருவேளை நீங்கள் வாதிடலாம், அப்படியானால், சிறிய பாவமாக நாம் நினைக்கிற பொருளாசையும் இச்சையும் நமக்கு என்னத்தைத் தருகிறது? மனிதர்கள், பொதுவாக, அதிகமான பொருள் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அது பயனற்றது இல்லையா? நிச்சயமாக அது பயனற்றதுதான். கீழ்வரும் குறிப்புகளைக் கவனியுங்கள்,

  1. ஒரு ஞானி சொல்லியிருக்கிறார்,

சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம். அந்த ஐசுவரியம் விக்கினத்தால் அழிந்துபோகிறது. (பிரசங்கி 5:13-14)

பணத்தைக் குவித்து வைப்பதனால் லாபம் என்ன?

  1. நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பதல்ல விஷயம், அவற்றை எப்படியெல்லாம் செவழிக்கிறோம் என்பதுமல்ல விஷயம், அது ஒருபோதும் நமக்கு முழுமையான திருப்தியைத் தராது என்பதுதான் உண்மை. பணத்தைவிட, பணத்தின் மீதான ஆசை வேகமாக வளரக் கூடியது (பிரசங்கி 5:10-11). உலகப் பொருட்கள், நம்முடைய வாழ்வியல் உணர்ச்சிகளுக்கே திருப்தி தராதபட்சத்தில், நம்முடைய ஆத்துமாவுக்கு எப்படி நன்மையைத் தரமுடியும். அவைகளைப் பெறுவதற்கான நம்முடைய உழைப்பு, அவைகளைக் காப்பதற்கான நம்முடைய கவனம், அவைகளை இழந்துவிடுவோமோ என்ற நம்முடைய பயம், இதெல்லாம், அவைகளைப் பெறுவதனால் வருகிற சுகங்களையும் அழித்துவிடும்.
  2. நாம் சாகிறபோது, நம்முடைய உடைமைகளை நம்முடன் கொண்டு போக முடியாதபோது, அவைகள் நமக்கு நன்மையானது என்று எப்படிச் சொல்ல முடியும்? இதற்கு முன்பு நான் சொன்ன விஷயங்களைக்கூட ஒருவேளை நீங்கள் மறுக்கலாம், ஆனால் இதை நிச்சயமாக உங்களால் மறுக்கவே முடியாது. பொருளாசையினால் நிறைந்தவர்களாய், பொருள் சம்பாதிப்பதே உங்களுடைய வாழ்க்கையாக இருந்தால், நீங்கள் சாகிறபோது, அந்தப் பாவகரமான வாழ்வியல் முறை உங்களுக்கு எந்தவிதமான நன்மையையும் கொண்டு வராது.

ஆகவே பாவம் செய்வதனால் எந்தவொரு நன்மையும் நமக்கு வருகிறதில்லை. மிகவும் லாபம் தரக்கூடிய பாவம் என்று சொல்லப்படுகிற பொருளாசையாகிய பாவமாக இருந்தாலும், அது நமக்கு நன்மையைக் கொண்டு வருகிறதில்லை. இப்படிச் செல்லுகிறபோது, பொதுவாக ஒரு கேள்வி எழலாம், ‘அப்படியானால், தேவபக்தியாய் வாழுவதில் என்ன லாபமுண்டு?’ இக்கேள்விக்கான பதில், ‘தேவபக்தியானது இப்பொழுதும், எப்பொழுதும், எக்காலத்திலும், அதாவது இம்மையிலும் மறுமையிலும் லாபமானது.’

ஆ. பாவகரமான வாழ்வியல் முறை ஒருபோதும் மதிப்பானதல்ல. அது நம்முடைய ஆத்துமாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தக் கூடியதாகையால், அது நம்முடைய சரீரத்திற்கு ஒருபோதும் நன்மையைத் தரமுடியாது. அது கடவுளுக்கு அவமதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகையால், அது மனிதர்களுக்கு ஒருபோதும் நன்மையைத் தரமுடியாது. பாவகரமான சில காரியங்களை, உலகமே வியந்து பாராட்டினாலும், கடவுள் அதை இழிவானது என்றே தீர்க்கிறார். எது மதிப்புமிக்கது என்று சரியாக வகையறுக்கக்கூடியவர் கடவுளே.

இ. பாவத்தினால் வருகிற இன்பம் நீடிக்கிறதில்லை. அது தற்காலிகமானது மட்டுமே. இச்சைகளிலே நெடுநாட்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்களைக்கூட, உடல் நலிவடைந்த முதிர்வயது அதை இல்லாமலாக்கிவிடுகிறது. மனிதன் தான் செய்கிற அல்லது பெற்றிருக்கிறவைகளைப் பற்றிக் கொண்டிருக்கிற மனநிறைவினால் வருவதுதான் மகிழ்ச்சி. பாவகரமான வழிகளில் வாழுகிறவர்கள், தங்களுடைய கேடான செயல்களினால் இத்தகைய மகிழ்ச்சியை ஒருபோதும் பெறவே முடியாது. அதற்கான காரணங்கள் இதோ,

  1. கேடாக வாழுகிறவர்களுக்கு சமாதானமில்லை (ஏசாயா 57:21). பாவகரமான வாழ்வியல் முறையைக் கொண்டிருக்கிறவர்கள், நகைப்பும், மகிழ்ச்சியுமாக இருப்பதாகத் தென்படலாம், ஆனால் அவர்களுடைய இருதயத்தில் சமாதானம் இல்லை என்று கடவுள் அறிவார்.
  2. மனித குலம் பூரணமானவர்களாக, கடவுளின் சாயலில் உண்டாக்கப்பட்டபடியினால், பாவம் செய்வது அவர்களுடைய வாழ்வியல் முறையல்ல. தேவபக்தியாய் வாழுவதே நம்முடைய பொதுவான வாழ்வியல் முறையாக இருக்க வேண்டும். ஆகவே அவபக்தியாய் வாழுகிறவர்கள், உயிரோடு இருந்தாலும் செத்தவர்களுக்குச் சமம் (1 தீமோத்தேயு 5:6).
  3. மனிதர்களுடைய விருப்பங்களைப் பாவகரமான வாழ்வியல் முறை ஒருபோதும் முழுமையாக திருப்தி செய்ய முடியாது. கேடான விதத்தில் வாழ்ந்து திருப்தியும் மனநிறைவும் பெற முயற்சிக்கிறவர்களின் செயல், உப்புத் தண்ணீரைக் குடித்து தாகத்தைத் தீர்க்க முயற்சிப்பதாகும். அதனால் தாகம் அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர, ஒருபோதும் அது தீராது. சுத்தமான நல்ல குடிநீர்தான் தாகத்தைத் தீர்க்கும்.

இந்தக் காரணங்கள் எல்லாம் இருந்தாலும், பாவகரமான செயல்கள் நமக்கு இன்பம் தருகிறதில்லை என்பதை நம்ப மனமற்றவர்களாகவே மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள். கடவுளுக்குக் கீடிப்படியாமல் போவது நமக்குத் துன்பத்தையே வருவிக்கும் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் மோசே, கடவுளுக்காக வாழுவதைவிட மேலானது எதுவும் இல்லை என்று அறிந்திருந்தார் (எபிரெயர் 11:25-26).

ஏதேனும் ஒருவிதத்தில், மனிதனுக்கு இன்பம் கிடைக்குமானால், அது சரீரத்திற்கோ அல்லது உள்ளுணர்விற்கோ மட்டுமே ஏற்பட முடியும். சரீரம், என்றும் அழியாத ஆத்துமாவைத் தன்னில் கொண்டிருக்கிற ஒரு கூடுதான். மனிதனுடைய ஆத்துமாவே, மனிதனைச் சிறப்பான விதத்தில் விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. சரீர இன்பங்களினால் ஆத்துமா பாதிக்கப்படலாம், ஆனால் அவைகளினால் ஆத்துமா வாழ முடியாது. ஆத்துமா ஆவியாக இருக்கிறது. ஆகவே அது வாழுவதற்கு அதற்கேற்ற ஆவிக்குரிய உணவு அளிக்கப்பட வேண்டும். முடிவாக, பாவகரமான செயலினால், உருப்படியான எந்தவொரு லாபமும், மதிப்பும், இன்பமும் உண்டாகிறதில்லை. பாவகரமான செயல்கள் ஏமாற்றத்தையும் துன்பத்தையுமே கொண்டு வரும்.

பாவம் நம்முடைய எதிரி என்ற உண்மை நமக்குத் தரும் பாடங்களில் இன்னும் சிலவற்றைச் சுருக்கமாக உங்களுக்குத் தருகிறேன்.

ஈ. நாம் வீணடித்த நேரத்தைக் காட்டிலும் பாவம் செய்வதற்குப் பயன்படுத்திய நேரம் மிகவும் மோசமானது. பாவகரமான செயல்களில் ஈடுபடுவதற்குப் பயன்படுத்திய நேரங்களுக்காக கணக்கொப்புவிக்க வேண்டும். பாவச் செயல்களை யாரால் நியாயப்படுத்த முடியும்? நம்முடைய வாழ்நாளில் எதை விதைக்கிறோமோ, அதையே நம்முடைய வாழ்க்கைக்குப் பிறகு அறுவடை செய்வோம் (கலாத்தியர் 6:8). கடவுளுக்காக வாழுவதற்குப் பயன்படுத்தப்படாத நேரங்கள், வீணடிக்கப்பட்ட நேரங்கள் மட்டுமல்ல, அந்த நேரங்களை நாம் தொலைத்திருக்கிறோம்.

‘ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.’ (எபேசியர் 5:15-17)

உ. பாவகரமான செயல்களை விளையாட்டாக எண்ணுவது முட்டாள்தனம். பிரச்சனைகள் வருகிறபோது வருந்துகிற பலரும், தங்களுடைய பாவச் செயல்களை விளையாட்டாக எண்ணிச் சிரிக்கிறார்கள். கடவுளுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிற ஒன்றை எண்ணிச் சிரிப்பது அறிவார்ந்த செயலா? நரகம் என்று சொன்னாலே, அநேகர் அதைக் கேட்டுச் சிரிக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கையையே அழிக்கக் கூடிய ஒன்றைக் குறித்து கேட்டபிறகும், அதைக் குறித்து சிரிப்பதென்பதைவிட முட்டாள்தனமான செயல் வேறெதுவும் இருக்க முடியுமா?

ஊ. பாவகரமான வாழ்க்கையினால் வருகிற கேடுகள், நாம் தாமதமின்றி தேவபக்தியை நாடவேண்டும் என்பதை நமக்குப் போதிக்கிறது. கடவுளையும் அவருடைய வழிகளையும் நம்முடைய வாழ்வின் ஆரம்பகட்டத்திலேயே நாடுவது, அவபக்தியான வாழ்க்கையினால் வரும் கேட்டிலிருந்து நம்மைக் காக்கும். நமக்குச் சந்தோஷத்தைத் தரக்கூடியவைகளிலிருந்து நம்மைத் திருப்பக்கூடிய எல்லாவற்றிலிருந்தும் நம்மை மிகவும் கவனத்துடன் காத்துக்கொள்ள வேண்டும். நாம் கடவுளைத் தேடினால், அவரை நாம் கண்டடையலாம் என்று அவர் வாக்களித்திருக்கிறார் (நீதிமொழிகள் 8:17-21). கடவுள் தம்மைக் கனப்படுத்திய அநேக வாலிபர்களை, அவரும் உயர்த்தியிருக்கிறார் என்பதற்கான அநேக உதாரணங்களை வேதத்தில் காண்கிறோம் – யோசேப்பு, சாமுவேல், யோசியா, தானியேல், அப்போஸ்தலனாகிய யோவான், தீமோத்தேயு.

எ. பாவம் மிகவும் தீமையானதும் கேடானதுமாக இருப்பதனால், இரட்சிப்பின் செய்தி எந்தளவுக்கு நமக்கு அவசியமானது என்பதை எண்ணிப் பாருங்கள். நாம் சுகவீனமாக இருக்கிறபோது, மருத்துவரும் அவருடைய சிகிச்சையும் நமக்கு மிகவும் முக்கியமானது. சிலவேளைகளில், அறுவை சிகிச்சை நிபுணரையும் அழைப்போம். அந்த சிகிச்சை முறை நமக்கு வலியை ஏற்படுத்தினாலும் அவர்களை நாம் அழைப்போம். சிலவேளைகளில் அந்தச் சிகிச்சையளிக்கிறவர்களுக்கு வெகுமதியும் தருவோம். ஏனென்றால், நம்முடைய உடல்நலம் நமக்கு மிகவும் முக்கியமானது. அப்படியானால், இயேசு கிறிஸ்துவின் செய்தியை நாம் எவ்வளவாக வரவேற்க வேண்டும். அவர் வந்தது, நம்முடைய உடலளவிலான நன்மையைத் தருவதற்காக அல்ல, என்றும் அழியாத நம்முடைய ஆத்துமாவுக்கு இரட்சிப்பை வழங்க வந்தார். அந்த இரட்சிப்பைச் சம்பாதிக்க அவர் தன்னையே விலையாகக் கொடுத்தார். ஆனால், அவரை விசுவாசித்து, அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு அவர் அதை இலவசமாகத் தருகிறார்.

கிறிஸ்தவர்களல்லாதவர்களுக்கான அறிவுரை

அப்போஸ்தலர்கள் பிரசங்கித்தபோது, விசுவாசிகளாக இல்லாதவர்கள் அந்தச் செய்தியைக் கேட்டு பெருமளவில் பாதிக்கப்பட்டு, சிலவேளைகளில் ‘இரட்சிக்கப்பட நாங்கள் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டிருக்கிறார்கள். இதுவரை இந்தப் புத்தகத்தில் நீங்கள் வாசித்தவைகள், கடவுளுடனான உங்களுடைய உறவைப் பற்றி உங்களைச் சிந்திக்க வைத்திருக்குமானால், உங்களுக்கான சில ஆலோசனைகளை இதோ நான் வழங்குகிறேன்.

  1. இயேசுவே சொல்லியிருக்கிறார், ‘மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்’ என்று (மாற்கு 1:15)

அ. மனந்திரும்புவதென்பது, உங்களுடைய பாவத்தையும், அதைச் செய்த உங்களையும் வெறுப்பதாகும். உங்களுடைய பாவகரமான வாழ்க்கையினால், கடவுள் வெறுப்பு கொண்டிருக்கிறார் என்பது உங்களை மிகவும் வருத்தத்திற்குள்ளாக்கட்டும். இனி நான் பாவம் செய்யமாட்டேன் என்பதே உங்களுடைய வாழ்வின் நோக்கமாக இருக்கட்டும். பாவம் செய்கிற விஷயத்தில் நீங்கள் மென்மையான போக்கை கடைபிடித்தால் உங்களுக்கு நீங்களே கொடுமை செய்கிறீர்கள். ஆகவே அவபக்தியான வாழ்க்கை முறையை உங்களில் விட்டுவைக்காதீர்கள். அவற்றை முற்றாக வெறுத்துத் தள்ளுங்கள். நீங்கள் புதிய மனிதன் என்பதை உங்களுடைய மாற்றப்பட்ட வாழ்க்கை முறை காட்டட்டும்.

1) கடவுள் உங்கள் பாவங்களை நீக்கும்படி, உங்கள் பாவங்களைவிட்டு அவரிடத்தில் மனந்திரும்புங்கள் (அப்போஸ்தலர் 3:20) என்பதுதான் அப்போஸ்தலர்களின் செய்தி. பாவமன்னிப்பு மனந்திரும்புதலைத் தொடர்ந்து வருகிறது. இதுவே கிறிஸ்தவ விசுவாசத்தின் நற்செய்தி. 2) மெய்யாய் மனந்திரும்புகிற எந்தவொரு மனிதனும், தன்னில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக இப்படித்தான் சொல்லுவான், ‘நான் மறுபடியும் புதிதாக என்னுடைய வாழ்க்கையைத் துவங்குவதற்கான வாய்ப்புக் கிடைத்தால், இப்போது நான் எண்ணுகிறபடியே, கடவுளுடைய வார்த்தைக்கு அனுதினமும் கீழ்ப்படிந்து வாழுகிற வாழ்க்கையே வாழுவேன்’. 3) நீங்கள் மனந்திரும்புவது, உங்களுடைய பாவத்தினால் யாரையெல்லாம் வருத்தப்படுத்தினீர்களோ, அதாவது கடவுள், தேவதூதர்கள் மற்றும் சக விசுவாசிகள், அவர்களெல்லாருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் அற்புதமான செயல். 4) ஆனால் நீங்கள் மனந்திரும்பாதபட்சத்தில், நீங்கள் மட்டுமே கடவுளுடைய நியாயத்தீர்ப்பைச் சந்திக்க நேரிடும். அந்த நாளில் மனந்திரும்புவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்காது. இப்போதுதான் நாம் மனந்திரும்புவதற்குக் கடவுள் கொடுத்திருக்கிற நேரம். இந்த நேரத்தைவிட்டால் வேறு வாய்ப்பு இல்லை (ஏசாயா 55:6)

ஆ. மனந்திரும்புவது மட்டுமல்ல, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதும் அவசியம். கடவுளின் பார்வையில் நம்மைப் பூரணமானவர்களாக நிறுத்த மனந்திரும்புதல் மட்டும் போதாது. இயேசு கிறிஸ்துவிலுள்ள நீதி நமக்குத் தரப்படவேண்டும். கடவுள் நம்மை ஏற்கும்படியான நம்பிக்கையைப் பெற, இயேசுவின்மீது விசுவாசத்துடன் நாம் முழுமையாக அவரையே சார்ந்திருக்க வேண்டும். நம்முடைய இரட்சிப்பிற்காக கடவுளிடத்தில் பணம் கொடுத்து பேரம் பேச முடியாது. ‘அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை’ (அப்போஸ்தலர் 4:12) என்று அப்போஸ்தலனாகிய பேதுரு இயேசுவைப் பற்றிச் சொல்லியதுபோல் நாம் அவரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும். நீங்கள் மனந்திரும்பி, நல்ல ஒழுங்கான வாழ்க்கையை வாழ்ந்தாலும், இயேசுவை விசுவாசியாமல், கடவுளுக்கு முன்பாக நீங்கள் நல்லவர்களாகக் காணப்பட முடியாது.

இ. உங்களுடைய பாவகரமான வாழ்க்கையிலிருந்து மனந்திரும்பிய பிறகு, மறுபடியும் அதே பாவ வாழ்க்கைக்குத் திரும்பாதீர்கள். ‘நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது’ போல் செய்யாதீர்கள் (2 பேதுரு 2:22). பாவத்திலிருந்து மனந்திரும்பியவர்கள், மறுபடியுமாக அதே பாவ வாழ்க்கைக்குத் திரும்பினால், நீங்கள் மறுபடியும் மனந்திரும்புவது மிகவும் கடினமானது (எபிரெயர் 6:6).

ஈ. ஒரு குறிப்பிட்ட பாவத்தை உங்களில் வைத்திருந்து, அதைத் தொடருகிற வாழ்க்கை முறையைக் கொண்டிராதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். நம்முடைய பாவங்களுக்காக இயேசு கிறிஸ்துவின் இரத்தம் விலையாக கொடுக்கப்பட்டது என்று உணர்ந்த ஒருவன், அந்த பாவங்களில் ஏதேனும் ஒன்றை, எண்ணத்திலோ, பேச்சிலோ செயலிலோ, எப்படித் தொடர முடியும்?

  1. பாவகரமான எண்ணங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

நம்முடைய நண்பர்களிடத்தில் நம்முடைய இருதயத்தின் எண்ணவோட்டங்கள் மறைக்கலாம். ஆனால் கடவுள் நம்முடைய இருதயங்களை அறிந்திருக்கிறபடியினால், அவரிடத்தில் அவற்றை மறைக்க முடியாது. நம்முடைய இருதயத்தில் சதியோசனைகளைக் கொண்டிருந்தும், வெளியில் பரிசுத்தமாக காட்டிக்கொள்ள முடியும். வெளிப்புறமாக பாவம் செய்யாமலிருந்தும், மனதில் பாவகரமான எண்ணங்களைக் கொண்டிருக்க முடியும் (மத்தேயு 5:21-22, 27-28). நம்முடைய பழைய பாவச் செயல்களை நினைவுபடுத்தி, அவற்றில் மகிழ்வதும் நம்முடைய பாவத்தை அதிகரிக்கும். பாவகரமான எண்ணங்கள், அவை செயல்வடிவில் வராமலிருந்தாலும், அவைகளும் நம்மை அசுத்தப்படுத்தும். கடவுள் பாவ எண்ணங்களையும் வெறுக்கிறார். ஏனென்றால், பாவ எண்ணங்களே பாவச் செயல்களுக்கான வேராயிருக்கின்றன (மத்தேயு 15:19). ஆகவே, நாம் பாவகரமான செயல்களில் வெளிப்படையாக ஈடுபடாமல் இருந்தாலும், நம்முடைய தீமையான எண்ணங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டும். அவற்றிற்காக கடவுளிடம் கெஞ்சி மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷ செய்தியின் மிகப்பெரிய வல்லமையான செயல் என்வென்றால், அதுமட்டுமே நம்முடைய பாவகரமான எண்ணங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக் கூடியது. பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வல்லமையினால் நம்முடைய மனதைச் சுத்திகரிக்கிறார். அவருடைய தாக்கம் நம்முடைய வாழ்க்கையிலும் எண்ணத்திலும் இருப்பது, இந்த உலகத்தின் தத்துவங்களுக்கெல்லாம் மேற்பட்ட வல்லமை கொண்டது. ஆகவே அப்போஸ்தலனாகிய பவுலைப் போல் ஒரு விசுவாசியும் இப்படிச் சொல்ல முடியும்,

‘எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.’ (2 கொரிந்தியர் 10:4-5)

ஒரு மனிதனுடைய மனமாற்றத்தின் முதற்படி அவனுடைய எண்ணத்திலிருந்தே துவங்குகிறது. மனமாற்றத்தைப் பற்றி நம்முடைய மனம் புதிதாகிறது என்றும் சிலவேளைகளில் விவரிக்கப்பட்டுள்ளது. மனமாற்றம் நம்முடைய எண்ணங்களில் துவங்குவதுமட்டுமல்லாமல், அது நம்முடைய எண்ணங்களில் தொடரவும் செய்கிறது. தேவபக்தியுள்ள ஒருவனுடைய ஜெபம், அவனுடைய எண்ணங்கள் புதிதாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிடுவதாக ஏறெடுக்கப்படும் (சங்கீதம் 51:10). நம்முடைய செயல்களுக்கு மட்டுமல்ல, நம்முடைய எண்ணங்களுக்கும் நாம் கணக்கொப்புவிக்க வேண்டும் என்று கடவுள் சொல்லியிருப்பதை மறந்துவிடாதீர்கள் (சங்கீதம் 139:1-4)

பாவத்திலிருந்து நம்முடைய எண்ணங்களைப் பாதுகாப்பதற்கு நாம் செய்யவேண்டிய சில நடைமுறை விஷயங்கள் இருக்கிறது.

1) உங்களுடைய பழைய பாவ எண்ணங்கள் மன்னிக்கப்படும்படியும், எதிர்காலத்தில் அது தொடராதபடியும் கடவுளிடம் ஜெபியுங்கள். 2) வேதத்திலுள்ள கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள் (சங்கீதம் 119:11). 3) கடவுளைப் பற்றியும் நல்ல விஷயங்களைப் பற்றியதுமான எண்ணங்களுடன் ஒவ்வொரு நாளையும் துவங்குங்கள். 4) தவறான எண்ணங்களைத் தடைசெய்வதில் வேகமாகச் செயல்படுங்கள். 5) உங்களுடைய கண்களினால் எதைப் பார்க்கிறீர்கள் என்பதில் கடுமையான கட்டுப்பாட்டைக் கடைபிடியுங்கள். 6) நல்ல விஷயங்களைச் செய்வதில் மும்முறமாக ஈடுபடுங்கள். 7) உங்களுடைய மனதின் விருப்பங்களைக் கடவுளுக்கேற்ற விஷயங்களிலும், கடவுளுக்கேற்ற நடவடிக்கையிலும் வைத்திருங்கள்.

இவைகளின் மூலமாக, பாவகரமான செயல்களினால் வருகிற தீங்கை உங்களுக்குக் காட்டி, அவற்றிலிருந்து உங்களைத் தற்காப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன்.

  1. பாவகரமான வார்த்தைகள் பேசுவதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

அநேகர், தாங்கள் பேசுகிற வார்த்தைகளைப்பற்றிப் பெரிதாக சிந்திக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் வேதமோ, நம்முடைய நாக்கைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது என்று தெளிவாகக் காட்டுகிறது (யாக்கோபு 3:7-8). பொறுப்பற்ற வார்த்தைகளினால் அநேகருடைய வாழ்க்கை சிதைந்திருக்கிறது. தன் நாக்கைக் கட்டுப்படுத்துகிறவன் ஞானவான் (நீதிமொழிகள் 10:19, 21:23). கீழ்வரும் குறிப்புகளைக் கவனியுங்கள்.

1) நாம் எப்படிப் பேசவேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார் (எபேசியர் 4:29, 5:4). 2) மத விஷயங்களை அதிகமாக பேசுவது மட்டும் நம்மை கிறிஸ்தவர்களாக்கிவிடாது (யாக்கோபு 1:26). 3) பாவகரமான வார்த்தைகள், பாவகரமான இருதயம் கொண்டிருப்பதற்கான ஆதாரம் (சங்கீதம் 12:1-2). 4) தீமையான வார்த்தைகள் மற்றவர்களையும் கெடுக்கும் (யாக்கோபு 3:5-6). 5) நம்முடைய வார்த்தை, நமக்கு மரியாதையை அல்லது அவமானத்தைக் கொண்டு வரும் (நீதிமொழிகள் 10:20). 6) வீணான வார்த்தைகளுக்கு நாம் கணக்கொப்புவிக்க வேண்டும் (மத்தேயு 12:36-37)

ஆகவே நீங்கள் பேசுகிற வார்த்தைகளைக் குறித்து கவனமாயிருங்கள். ‘உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக’ என்கிறார் கடவுள் (பிரசங்கி 5:2). பெரும்பாலும் மௌனம் ஞானத்தை வெளிப்படுத்தும். கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்குப் பொறுமையாகவும் இருக்க வேண்டும் (யாக்கோபு 1:19). நாம் பேசுகிறபோது, ஆரோக்கியமானதும், உண்மையானதுமான பேச்சையே பேசவேண்டும். நீங்கள் பேசுவதற்கு முன்பாக உங்களுக்குள்ளாகவே கட்டுபாட்டுடன் இருங்கள். அவைகளைக் கடவுள் அங்கீகரிக்கும்படி, பேசுவதற்கு முன்பதாக அவற்றைக் கடவுளிடம் அமைதலான ஜெபத்தில் தெரியப்படுத்துங்கள்.

  1. உங்களுடைய பாவகரமான செயல்களைக் குறித்து எச்சரிக்கையாருங்கள்.

பாவகரமான செயல்களைப் பற்றி விவரமாக நான் பேசுவதற்கு முன்பாக, நாம் செய்யவேண்டியதை செய்யாமல் விடுகிற பாவத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்று விரும்புகிறேன். கடவுள் கட்டளையிட்டிருக்கிறவைகளைச் செய்யாமல் இருப்பதும் கேடான செயலே.

1) அநேக நல்ல மனிதர்கள், தாங்கள் செய்யவேண்டிய கடமைகளைப் பொதுவிடத்தில் செய்தாலும், தனிமையில் அதைச் செய்யாமல் இருந்துவிடுவார்கள். 2) நெருக்கடியான சூழ்நிலைகளின் காரணமாக, நாம் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாமற்போனால், அதுவும் நமக்கு துன்பத்தையே கொண்டு வரும். 3) கடவுள் கட்டளையிட்டிருக்கிற கடமைகளை மனதார நிராகரிப்பது பாவம். அநேகர் தங்களுடைய கடமைகளிலிருந்து தவறுவதை விரும்புகிறார்கள். உதாரணமாக, பள்ளி மாணவர்கள், படிக்காமல் இருப்பதற்கான சூழலை விரும்புவார்கள். நம்முடைய கடமைகளில் ஒன்றைத் தவிர்ப்பது, பெரும்பாலும், அடுத்தடுத்து வேறுசிலதையும் தவிர்க்கிறதாகவே போய் முடியும். 4) நாம் செய்யவேண்டிய கடமைகளைப் பற்றி எந்தளவுக்கு அதிகமாக அறிந்திருக்கிறோமோ, அதுவே தெரிவிக்கிறது, நாம் அதைச் செய்யாதிருப்பது எந்தளவுக்கு மோசமானது என்று. 5) நாம் செய்யவேண்டிய கடமைகளை மற்றவர்களுக்கு முன்பாக, வெளிப்படையாக செய்யாதிருப்பது, மிகவும் மோசமானது. செய்யவேண்டிய நன்மையான காரியங்களைச் செய்யாதிருப்பதன் மூலமாகவும், ஒருவர் மிகவும் கேடு விளைவிக்கக் கூடிய காரியத்தைச் செய்துவிடலாம். ஒருவர் தான் செய்யவேண்டியதை அறிந்திருந்தும், அதைச் செய்யாமற்போனபோது, கடவுள் மிகவும் கடுமையாக அவர்களைத் தண்டிக்கிறார் என்பதற்கான அநேக வேத ஆதாரங்கள் உண்டு. உதாரணமாக ஏலி (1 சாமுவேல் 3:13), கேடான வேலையாட்கள் (மத்தேயு 25:26-30).

நாம் செய்யாமல் விடுகிற செயல்களுக்காகவும் நாம் செய்கிற செயல்களுக்காகவும் நாம் நியாயந்தீர்க்கப்படுவோம் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

அ. கடவுள் தடைசெய்திருந்தும், அதை மீறுகிறவிதத்தில் நாம் செய்கிற செயல்களைக் கவனித்துப் பாருங்கள். சில குறிப்பிட்ட பாவங்கள், தனிப்பட்டவிதத்தில் நம்மைக் கவர்ந்திழுக்கிறதாக இருந்து, நாம் எளிதில் அதற்கு இணங்கிவிடக் கூடியதாக இருக்கிறது. நாம் வாழும் காலத்திலுள்ள பிரபலமான பாவங்கள் – வாலிபத்தின் பாவங்கள், வயதின் காரணமாக எழும் பாவங்கள், கண்களின் பாவங்கள், கணவனுக்கும் மனைவிக்குமான உறவுகள், பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்குமான உறவுகளின் பாவங்கள், முகஸ்துதியின் பாவங்கள், அநாகரீக விமர்சன பாவங்கள், பொய், ஏமாற்றுதல், ஊழல், வாக்கு மீறுதல், உண்மையற்ற வியாபாரம் போன்ற அன்றாட வாழ்வியல்ரீதியான பாவங்கள். மற்றவர்களின் பாவங்களைத் தடுப்பதற்கான வாய்ப்பிருந்தும், அதைத் தடுக்காமலிருந்து, அவர்களின் பாவங்களுக்கு நாமும் உடன்படலாம். பாதி உண்மை சொல்லுவது பொய்க்குச் சமம். இந்தவிதத்திலும், இன்னும் பல விதங்களிலும், கடவுள் தடைசெய்திருக்கிற அநேக காரியங்களை நாம் எளிதில் செய்துவிடலாம்.

நம்முடைய செயல்களிலோ அல்லது மற்றவர்களுடைய செயல்களிலோ நாம் பாவத்தைக் காண்கிறபோது, அதற்காக வருத்தப்பட வேண்டும். பாவத்திற்கு எதிராக நாம் செயல்படவேண்டும், இல்லாவிட்டால், அதற்காக நாம் கடவுளின் தண்டனைக்குள்ளாவோம். கேடான சூழலிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும், இல்லாவிட்டால் நாம் அதற்கு உடன்படுகிறோம் என்பதாகும். இந்த நடைமுறை விஷயங்களையெல்லாம் நான் குறிப்பிட்டதன் காரணம், இவற்றைப் பற்றியெல்லாம் தற்காலத்தில் பேசுவது அரிதாக இருப்பதனால்தான்.

இந்தப் புத்தகத்தின் முடிவுக்கு வந்திருக்கிறவேளையில், பாவம் எந்தளவுக்கு அருவருப்பானதும், அழிவுக்குரியதுமானது என்பதை இதுவரை நான் சொல்லியவற்றிலிருந்து நீங்கள் கவனித்து உணர்ந்துகொள்ளும்படி உங்களை அன்பாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன். வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும், நரகத்திலிருந்தும் அதற்கான ஆதாரங்களை உங்களுக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். பாவத்தினுடைய வலிமையான கட்டுப்பாட்டிலிருந்து நம்மை விடுவிக்க, இயேசு கிறிஸ்து தன்னுடைய உயிரையே கொடுக்க வேண்டியிருந்தது என்பதையும் உங்களுக்கு விவரித்துக்காட்டினேன். ஆகவே, பயபக்தியுடன் வாழுங்கள், பாவம் செய்யாதிருங்கள்.

பியூரிட்டன்களின் பார்வையில் மனந்திரும்புதல்

முத்துக்களால் கோர்க்கப்பட்ட மணிமாலை

சத்தியம், சத்தியம் என்று சலசலக்கும் போலிச் சிலம்புகள் நடுவே மாறுபட்டு ஒலியெழுப்பி சத்தியத்தின் முன் மண்டியிடச் செய்யும் மாணிக்கச் சிலம்புகள்: போதகர் பாலா அவர்களின் ‘பியூரிட்டன்களின் பார்வையில் மனந்திரும்புதல்’ எனும் நூல்.

இந்நூலில் நூலாசிரியர், மறுபிறப்படைந்த ஒவ்வொரு விசுவாசியும் தனது மரணம்வரையிலும் தொடரவேண்டிய ‘மெய்யான மனந்திரும்புதல்’ என்பது என்ன? என்பதை தாமஸ் வாட்சனின் மனந்திரும்புதல் நூலிலிருந்து ஆராய்ந்து விளக்குகிறார். அதன் ஆரம்பமாக, வேதம் எதிர்பார்க்கும் மெய்யான மனந்திரும்புதல் இன்று எங்கே போய்விட்டது? என்ற கேள்வியோடு ஆரம்பித்து, எது உண்மையான மனந்திரும்புதல் இல்லை! யார் யார் மனந்திரும்ப வேண்டும்? மனந்திரும்புதல் மாம்சத்தின் கிரியையா? அல்லது ஆவியின் கனியா? என்பது போன்ற பல அடிப்படைக் கேள்விகளுக்கு, பியூரிட்டன் பெரியவர்களான தோமஸ் பொஸ்டன், ஜோன் கல்ஹுன் ஆகியோர் அளித்துள்ள பதிலை மேலதிக விளக்கங்களுடன் விபரித்துள்ளார். கடைசியாக வேதம் எதிர்பார்க்கும் அந்த ‘மெய்யான மனந்திரும்புதல்’ கொண்டிருக்க வேண்டிய அத்தியாவசியமான ஆறு மூலப் பொருட்களைத் தாமஸ் வாட்சனின் ‘மனந்திரும்புதல்’ நூலில் இருந்து விளக்கியுள்ளார்.

நூலின் அறிமுகமாக; தாமஸ் வாட்சன் குறித்தும், பியூரிட்டன்களின் பார்வையோடு ஒத்து இந்த நூலை வாசிப்பதற்கு அவசியமான காரியங்களைக் குறித்தும் மிகவும் அவசியமான அறிமுகத்தை ஆசிரியர் தந்துள்ளார். ஏனென்றால், நாம் வாழும் காலத்திற்கும் பியூரிட்டன்களின் காலத்திற்கும், நாம் கொண்டிருக்கும் வேத அறிவுக்கும் அவர்கள் கொண்டிருந்த இறையியல் அறிவுக்கும் இடையே இருக்கும் பெரிய இடைவெளி இந்த நூல் அறிமுகத்தின் அவசியத்தை உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி தாமஸ் வாட்சன் விளக்கும் அந்த வேதபூர்வமான மனந்திரும்புதலில் காணப்படும் அத்தனை ஆவிக்குரிய சாரம்சங்களும் ஒவ்வொரு விசுவாசியிலும் காணப்படவேண்டியது அவசியமாக இருந்தாலும், அது எல்லாருக்கும் ஒரேவிதமாக அனுபவத்தில் வெளிப்படுவது இல்லை. எனவே, நூல் விளக்கும் அனுபவம் எல்லாருக்கும் ஒரே அளவில் நிகழவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. பாவ உணர்த்துதல் அவரவர் செய்த பாவத்துக்குத் தக்கதாக மிகஆழமானதாகவோ அல்லது ஆழம் குறைந்ததாகவோ இருந்துவிடலாம். எனவே போதகர்களாக இருப்பவர்கள் இதை நிதானித்துப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் ஆசிரியர்.

நூல் அறிமுகத்தின் தொடர்ச்சியாக, இந்த வேதபூர்வமான மனந்திரும்புதலை, பியூரிட்டன் பெரியவர்களான தாமஸ் பொஸ்டன், ஜோன் கல்ஹுன் ஆகியோரின் பார்வையில் பல கோணங்களில் எடுத்துக்காட்டி தெளிவுபடுத்துகிறார். மெய்சிலிர்க்க வைக்கும் அந்த மெய்யான மனந்திரும்புதலை, இன்று நம்மினத்தில் காணப்படும் ‘ஜெல்லி மீன் கிறிஸ்தவ’ ஆத்துமாக்களிடம் தேடியும் காணமுடியாத நூலாசிரியர், இத்தகைய தரம் குறைந்த நிலையில் நம்மினத்து கிறிஸ்தவம் காணப்படுவதற்கு காரணமான ‘போலி சுவிசேஷத்தையும், போலி பிரசங்கிகளையும்’ வன்மையாகச் சாடுவதோடு, தாமஸ் வாட்சன் விளக்கும், கிரியையின் அடிப்படையில் அமையாத, சிந்தனை மாற்றத்தை மட்டும் எதிர்பார்க்காத, கிருபையினால் மட்டுமே உண்டாகும், அதாவது, வார்த்தையின் மூலமாக இருதயத்தில் கிரியை செய்யும் ஆவியானவரின் எச்சரிப்பிற்குக் கீழ்ப்படிந்து, ஆழமான பாவ உணர்வோடும், மன வருந்துதலோடும், மெய்யான பாவ அறிக்கையோடும் தொடர்ச்சியாகப் பாவத்தைக் கொன்று, வைராக்கியமாக பரிசுத்த வாழ்க்கை வாழத் தூண்டும், அந்த மெய்யான மனந்திரும்புதல் எங்கே போய்விட்டது? என்ற ஆத்துமபாரத்தோடு கூடிய ஓர் ஆணித்தரமான கேள்வியில் அனைத்து வாசகர்களின் சிந்தனைகளையும் ஒரு சக்கர வியூகத்திற்குள் கொண்டு வந்து, நூலின் அடுத்த பகுதிக்கு அழைத்துச் செல்கிறார்.

அடுத்து வரும் இரு அத்தியாயங்களில், மாய்மாலமான போலி மனந்திரும்புதல் குறித்து ஆசிரியர் எச்சரிக்கிறார். சரியானதை மட்டும் தெரிந்துவைத்திருந்தால் போதுமே போலியானதைக் குறித்த விளக்கம் அவசியமா? என்ற குழப்பம் எழும்போதே, ‘பகுத்தறிவு என்பது, சரியானதற்கும், தவறுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை வெறுமனே கூறுவது அல்ல; மாறாக அது சரியானதற்கும், கிட்டத்தட்ட சரியானதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைச் சொல்கிறது’ என்ற ஸ்பர்ஜனின் மேற்கோளை நினைவுபடுத்தி, எதிர்மறையில் ஆரம்பித்து நேர்மறையான விளக்கங்களைத் தரும் பியூரிட்டன் பெரியவர்களின் நூல்களில் எத்தனை நன்மையிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வைக்கிறார்.

இந்தப் பகுதி கர்த்தரிடத்தில் இருந்து மட்டுமே வருகிற மெய்யான மனந்திரும்புதலின் அடையாளங்களைக் கொண்டிராத வேறு எந்தவிதமான மனித செயல்களும், உணர்ச்சிகளும் போலியானவை என்பதை அப்பட்டமாக விளக்கி, இருதயப்பரிசோதனையின் அவசியத்தை வலியுறுத்துகிறது. கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று சொல்வதற்கு மேலாக எந்தவிதமான ஆவிக்குரிய அடையாளங்களையும் கொண்டிராத இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்திற்கு, பியூரிட்டன் போதகரான மெத்தியூ மீட்டின் போலிமனந்திரும்புதல் குறித்த 20 அம்சங்களைக் கொண்ட போதனை குறித்த செய்தி கண்டிப்பாக அதிர்ச்சியளிக்கும். அத்தோடு எத்தனை வஞ்சகமாக நம் இருதயம் நம்மை ஏமாற்றிவிடக்கூடும் என்ற ஆழமான எச்சரிப்பையும் தருகிறது.

அடிப்படை இருதயமாற்றம் இல்லாமல் வெறும் உலகப் போக்கான ஒழுக்கக் கட்டுப்பாடாக பாவங்களை செய்யாமலிருப்பது மெய்யான மனந்திரும்புதலின் அடையாளம் அல்ல, என்று கூறும் ஆசிரியர் போலி மனந்திரும்புதலின் அடையாளமாக வாட்சனின் நூலில் இருந்து மூன்றுவகையான உதாணங்களைத் தருகிறார்: 1) நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கும், தண்டனைக்கும், நரகத்திற்கும் பயப்படுவதால் ஏற்படும் உணர்ச்சிகளை மட்டும் கொண்டிருப்பது மெய்யான மனந்திரும்புதலின் அடையாளம் அல்ல. 2) துன்பங்களின் மத்தியிலும், வியாதிப் படுக்கையிலும் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் தீர்மானங்கள் மனந்திரும்புதலின் அடையாளம் அல்ல. 3) ஒரு சில பாவங்களை மட்டும் செய்யாமல் நிறுத்திவிடுவது மெய்யான மனந்திரும்புதலின் அடையாளம் அல்ல.

இதுமட்டுமின்றி இதற்கு சுதி சேர்க்கும்விதத்தில் மேலதிகமாக ஆறு அடையாளங்களை ஜோன் கல்ஹூனின் நூலிலிருந்து அருமையாக விளக்கியுள்ளார் ஆசிரியர். இதிலிருந்து ஆகாபிலும், யூதாசிலும், ஏரோதிலும், அகிரிப்பாவிலும் காணப்பட்ட மனந்திரும்புதலின் அடையாளம் ஏன் போலியானது? என்பதைப் புரிந்துகொள்ள முடிவதோடு, நாமும் இந்தப் போலி அடையாளங்களோடு வாழ்ந்து நித்திய நரகத்தை அடைந்துவிடலாம் என்ற பயங்கரமான எச்சரிக்கையும் இது தருகிறது.

அடுத்த அத்தியாயத்தில் ஆசிரியர், மனந்திரும்புதல் மாம்சத்தின் கிரியையா அல்லது கிருபையின் கனியா? என்ற மனந்திரும்புதலைக் குறித்த மிகவும் முக்கியமான இறையியல் போதனையை ஆராய்ந்து விளக்குகிறார். இப்பகுதியில் கிறிஸ்தவத்தின் இரண்டு முக்கிய எதிரிகளான, லீகலிசம் மற்றும் அன்டிநோமியனிசம் ஆகியவற்றை அவற்றின் கொள்கைகளின் அடிப்படையில் விபரித்து, வேதபூர்வமான மனந்திரும்புதல் எந்தவகையில் இவற்றிலிருந்து வேறுபடுகிறது என்பதை விளக்கும் முகமாக, இரட்சிப்பை அடைவதற்கு மனந்திரும்புதல் ஒரு நிபந்தனையா அல்லது கிருபையின் விளைவாக மனிதன் செய்யவேண்டிய கடமையா? என்ற ஒரு ஆக்கப்பூர்வமான கேள்வியை எழுப்பி, விவாத அடிப்படையில் செமி-பெலேஜியனிச, ஆர்மீனியனிச போதனை மற்றும் சீர்திருத்தவாத இரட்சிப்பின் படிமுறை ஆகியவற்றிற்கு இடையிலான இமாலய வேறுபாட்டை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து விளக்கி ‘மனந்திரும்புதல் சுத்தமாக சுவிசேஷ கிருபை’ என்பதை ஐயந்திரிபற எடுத்துரைக்கிறார் ஆசிரியர். இப்பகுதி தரும் முக்கியமான படிப்பினைகளில் ஒன்று, நாம் வேதபூர்வமான சத்தியங்களைத் தெளிவாகக் கேட்டு, சிந்தித்து நடைமுறை வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்தி வாழாமல், அரைகுறையாக சத்தியத்தைக் கேட்டு, ஏனோ தானோவென்ற ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வோமானால், இலகுவாக இத்தகைய போலிப் போதனைகளுக்கு இரையாகி இறுதிவரை ஒரு லீகலிஸ்டாகவோ அல்லது ஆர்மீனியனாகவோ வாழ்ந்து பரிதாபமாக மடிந்து போகும் ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

அடுத்து வரும் இரண்டு அத்தியாயங்கள், யார் யார் மனந்திரும்ப வேண்டும்? என்ற தலைப்பில், மனந்திரும்ப வேண்டிய அனைத்து மனிதர்களையும் ஆறு பிரிவுகளாகப் பிரித்து மனந்திரும்புதலின் அவசியத்தை வலியுறுத்துகிறது. தாமஸ் வாட்சன் குறிப்பிடும் ஆறு பிரிவு மனிதர்களையும் நமது நூலாசிரியர், வாசகர்களின் புரிதலுக்கு ஏற்றபடி, அவிசுவாசி மற்றும் விசுவாசி என்ற இரண்டே பிரிவுக்குள் கொண்டு வந்து எளியமுறையில் குழப்பங்கள் இன்றி புரிந்துகொள்ளக்கூடியவகையில் விவரித்துள்ளார். அனைத்து அவிசுவாசிகளின் இரட்சிப்பிற்கும் மனந்திரும்புதல் அவசியம்; அத்தோடு மறுபிறப்படைந்த விசுவாசிகளுக்கும், அவர்களில் தொடர்ந்திருந்து தொல்லை கொடுக்கும் ஜென்ம பாவத்தின் காரணமாக தொடர்ச்சியான மனந்திரும்புதல் அவசியம் என்பதைத் தீர்க்கமாக எடுத்துரைக்கிறார். தொடர்ந்து பாவத்தை அழிப்பது ஒவ்வொரு விசுவாசியின் தலையாய கடமையாகக் குறிப்பிடும் ஆசிரியர், அந்தக் கடமையை ஒவ்வொரு விசுவாசியும் கருத்தோடும், கிருபையின் பலத்தோடும், ஆவியில் தங்கியிருந்து, தேவபயத்தோடு நிறைவேற்றவேண்டும்; இதற்குச் சவாலாக இன்றைய கேடான உலகில் காணப்படும் பலவகையான ஆபத்துக்களை எடுத்துக்காட்டி, இவற்றின் மத்தியில் விசுவாசியின் எண்ணமும், சொல்லும், செயலும் எத்தனை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதின் கட்டாயத்தை வலியுறுத்தி, தொடர்ச்சியான மனந்திரும்புதலின் அவசியத்தைக் கற்றுக் கொடுக்கிறார்.

இந்த பகுதியில் பியூரிட்டன் பெரியவர்களின் ஆரம்பகால வாழ்க்கையும், அவர்கள் நூல்கள், பிரசங்கங்கள் மற்றும் வைராக்கியமான பரிசுத்த வாழ்க்கை முறைகளையும் ரத்தினச் சுருக்கமாக ஆசிரியர் விளக்கியுள்ளார். மெய்யாகவே திருச்சபை வரலாற்றில் பியூரிட்டன்களின் காலம், ஒரு அற்புதமான பொற்காலம்! ஆழமான வேத அறிவு, அனல் வீசும் பிரசங்கங்கள், கர்த்தருடைய வார்த்தையைப் பிரதானமாகக் கொண்ட ஆராதனை முறைமைகள், வேதபிரசங்கங்களைத் தேடி அலைந்த ஆத்துமாக்கள், ஆச்சரியப்பட வைக்கும் சுயபரிசோதனை மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் பரிசுத்த வாழ்க்கை ஆகியவற்றை வாசிக்கும்போது, நாம் வாழும் தற்கால கிறிஸ்தவ சமுதாயத்தில், விசுவாசிகளின் பரிசுத்த வாழ்க்கை முறை இத்தகைய தரம் உயர்ந்த நிலையில் இல்லையே! என்ற ஏக்கத்தை உண்டாக்குவதோடு, அத்தகையதொரு வல்லமையான எழுப்புதலை வாஞ்சித்து, அதற்கு தேவையான கர்த்தரின் கிருபைக்காக ஜெபிக்கவும், உழைக்கவும் நம்மை ஊக்கப்படுத்துகிறது.

இதைத் தொடர்ந்து வரும் அதிகாரத்தில், மெய்யான மனந்திரும்புதல் கொண்டிருக்கும் இரண்டு முக்கிய சாரம்சங்களாகிய, மனத்தாழ்மையையும், சீர்திருந்துதலையும் வேத வசனத்தின் அடிப்படையில் மிகவும் ஆணித்தரமாக விளக்கியுள்ளார் ஆசிரியர். அதாவது, ‘மனந்திரும்புதல் கர்த்தருடைய ஆவியின் கிருபையாக இருப்பதால், அதன் மூலமாக ஒரு பாவி உள்ளார்ந்த விதத்தில் தாழ்மைப்படுத்தப்பட்டு புறத்தில் சீர்திருந்தலுக்குள்ளாகிறான்’. இதனை பிலி 2:3-8 வசனங்கள் மூலம் கிறிஸ்துவில் மனத்தாழ்மை எந்தவிதத்தில் காணப்பட்டது? எப்படி வெளிப்பட்டது? கிறிஸ்துவில் இருந்த அதே சிந்தையை நாம் கொண்டிருப்பது என்பது முடிகின்ற விஷயமா? என்ற பல கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு வேதபூர்வமாகவும், மூல மொழியினடிப்படையிலும் மிகவும் தெளிவான பதில்களைத் தந்து விளக்கியுள்ளார்.

இந்தப் பகுதி தரும் பயங்கரமான எச்சரிப்புகளில்: 1) நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியோ, கனிகளோயின்றி, காண்பவர்கள் இவர்கள் அவிசுவாசியா அல்லது விசுவாசியா என்று சந்தேகப்படும்விதத்தில் காணப்படுமானால் அதற்கு ஒரே காரணம், மனத்தாழ்மையோடு கூடிய தொடர்ச்சியான மனந்திரும்புதல் இல்லாமையே! 2) யூதாஸ் மனங்கசந்து அழுதும், கதறியும் மனந்திரும்பாமல் தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணம், கிருபையின் கனியாகிய அந்த மெய்யான தாழ்மை அவனில் இல்லாமல் போனதே! என்ற உண்மைகளை உரக்கச் சொல்லி நம்மை எச்சரித்து நமது ஆவிக்குரிய வாழ்க்கையைப் பரிசோதனை செய்து பார்த்து மனந்திரும்பத் தூண்டுகிறது.

தொடரும் அத்தியாயத்தில்: தொமஸ் வாட்சனின் நூலிலிருந்து, பாவத்தின் விளைவால் மரணத்திற்கு ஏதுவாக நோயுற்றிருக்கும் மனித ஆத்துமாவுக்கு, கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் ஆவிக்குரிய மருந்தாகிய மனந்திரும்புதலில் காணப்படவேண்டிய ஆறு அத்தியாவசியமான மூலப்பொருட்களை, ஒன்றன் பின் ஒன்றாக, வேதத்திலிருந்தும், 1689 விசுவாச அறிக்கையை மேற்கோள் காட்டியும் தெளிவாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.

1) பாவத்தைப் பாவமாகப் பார்த்தல்: பாவத்தைப் பாவமாகப் பார்க்கக் கூடிய கண்களால் மட்டுமே அதைக் குறித்த துக்கமடைந்து கண்ணீரோடு மனந்திரும்ப முடியும் என்று கூறும் ஆசிரியர், தாவீதிலும், இளையகுமாரனிலும் காணப்பட்ட ‘பாவத்தைப் பாவமாகப் பார்க்கும் தன்மையை’ வேதத்திலிருந்து எடுத்துக் காட்டி அவர்களைப் போன்ற பாவ உணர்தல் இல்லாத மனந்திரும்புதல் மெய்யான மனந்திரும்புதல் அல்ல என்கிறார். இந்த பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும், டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்சின் ‘பாவத்தைப் பற்றிய அறிவோ உணர்வோ இல்லாத ஒருவனுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷம் தள்ளியே காணப்படும்’ என்ற கருத்து நம்மை அதிகமாகச் சிந்திக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி இன்றைய ஆத்துமாக்களுக்கு பாவத்தைப் பாவமாகப் பார்க்கும் உணர்வு இல்லாமல் இருப்பதற்கு காரணம், சுவிசேஷப் பிரசங்கங்களிலும், சபைப் பிரசங்கங்களிலும் மனந்திரும்புதல் பிரசங்கிக்கப்படாதிருப்பதே என்று கூறி, இன்றைய பிரசங்கங்களில் காணப்படும் இறையியல் குறைபாட்டையும் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்துகிறார்.

2) பாவத்தைக் குறித்த துக்கம்: கர்த்தர் விரும்பும் பாவத்தைக் குறித்த பரிசுத்தமான துக்கம் என்றால் என்ன? என்பதை வேதத்திலிருந்து பல வசனங்களை அடுக்கடுக்காக மேற்கோள் காட்டி விளக்கும் ஆசிரியர், சுயநலமான உலகத்துக்கு ஏற்ற துக்கத்திலிருந்து இந்த பரிசுத்தமான துக்கம் எப்படி மாறுபடுகிறது? என்பதை ஆறு தலைப்புகளில், பல கேள்விகளை எழுப்பிப் பதிலளிக்கிறார். அத்தோடு ‘அறிவுபூர்வமான’ துக்கத்தைக் குறித்த எச்சரிக்கையும், மனந்திரும்புதலை அசாதாரணமாகப் புதுப்பித்துக் கொள்ளவேண்டிய இரண்டு முக்கியமான சந்தர்ப்பங்களைக் குறித்த செய்தியையும் தருகிறார்.

3) பாவத்தை அறிக்கையிடுதல்: இந்த பகுதியில் ‘கடவுளுக்கு முன் நம் பாவத்தை ஆராய்ந்து பார்த்து, அதற்காகக் காயப்பட்டு நம்மைப் பற்றி நாமே கடவுளிடம் செய்யும் அறிக்கைக்கு பெயர்தான் பாவ அறிக்கை’ என்று விளக்கம் கொடுக்கும் வாட்சன், அதைத் தொடர்ந்து மெய்யான பாவ அறிக்கை கொண்டிருக்க வேண்டிய எட்டுத் தகுதிகளைக் குறித்து விவரிக்கிறார். அதன் பின்னர் பாவ அறிக்கை செய்யவேண்டியதன் அவசியம் மற்றும் அதனால் விளையும் பயன்பாடுகள் ஆகியவற்றையும் பட்டியலிட்டுக் கூறுகிறார். இதை வாசிக்கும்போது எத்தனை முறை ஆகஸ்தீனைப் போல, நம் வாய் பாவத்தை அறிக்கையிட்ட போதும் இருதயம் ‘இன்னும் இல்லை’ ஆண்டவரே! என்று சொல்லியிருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. கடைசியாகக் கர்த்தருக்கு முன்பாக மட்டுமல்லாமல் மனிதர்கள் முன்பும் அறிக்கை செய்யப்பட வேண்டிய மூன்று காரியங்களை வாட்சன் கோடிட்டுக் காட்டுகிறார்.

4) பாவத்துக்காக வெட்கப்படுதல்: கிறிஸ்தவன் பாவத்தை பாவமாக பார்த்து, ஆவியின் மூலம் உணர்ந்து, இருதயத்தில் குத்தப்படும் போது அதைக் குறித்து வெட்கப்படுவதே பாவத்துக்காக வெட்கப்படுதல்; அந்த பரிசுத்தமான வெட்கம் எஸ்றாவில் காணப்பட்டது, ஆலயத்திற்குப் போய் மார்பில் அடித்து ஜெபித்த ஆயக்காரனிடம் காணப்பட்டது என்று கூறும் வாட்சன், தொடர்ந்து பாவத்தைக் குறித்த வெட்கத்தை உண்டாக்கும் ஒன்பது விஷயங்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துக் கூறுகிறார். இந்தப் பகுதியில் நம்மை அதிர்ச்சியில் தூக்கி வாரிப்போடச் செய்யும் ஒரு சத்தியம் என்னவென்றால்; நம் பாவங்கள் பிசாசின் பாவங்களை விட மகா மோசமானவை என்பது. அந்த பகுதியின் விளக்கத்தைத் தொடர்ந்து வாசித்து முடிக்க முடியாதபடி, வரிக்கு வரி கண்களில் நீர் தாரை தாரையாக பெருகி ஓடுவதைத் தடுக்க முடியாது. நாளைய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு அன்று வெட்கமற்று தலை நிமிர்ந்து நிற்பதற்கு, இன்றைய பரிசுத்தமான வெட்கம் அசைக்க முடியாத அஸ்திவாரமிடுகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக எடுத்துக் காட்டுகிறார் வாட்சன்.

5) பாவத்தை வெறுத்தல்: உண்மையான ஆரோக்கியமான மனந்திரும்புதல் கடவுளை நேசிப்பதில் ஆரம்பித்து பாவத்தை வெறுப்பதில் போய் முடியும் என்று கூறும் நூலாசிரியர், ஆரோக்கியமான பாவ வெறுப்பு எப்படி வெளிப்படுகிறது என்பதை வாட்சனின் ஐந்து காரணிகள் மூலம் விளக்குகிறார். அதுமட்டுமல்லாமல் பாவத்தின் கோரத்தை, அதன் தன்மை, பிறப்பிடம், சுபாவம், பயங்கரம் மற்றும் வெறுக்கப்படத்தக்க அதன் விளைவுகளைக் குறித்துத் தெளிவான விவரங்களையும் ஆழமான எச்சரிக்கையும் தருகிறார்.

6) பாவத்தை விட்டு விலகுதல்: பாவத்திற்கு புறமுதுகு காட்டி அதை விட்டு விலகுவதில் போய் முடியாத மனந்திரும்புதல் மெய்யான மனந்திரும்புதலாக இருக்க முடியாது என்பதை, பல வேத வசனங்களின் மூலம் விபரித்து, அதைத் தொடர்ந்து காணப்பட வேண்டிய சீர்பொருந்திய வெளிப்புற மாற்றத்தை, பிலிப்பி சிறை அதிகாரி மற்றும் நினிவே மக்களின் செயல்கள் மூலம் உறுதிப்படுத்துகிறார். தொடர்ச்சியான மனந்திரும்புதலோடு மெய்யாக பாவத்துக்கு விலகி ஓடுகிறவனில் காணப்பட வேண்டிய ஐந்து அம்சங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் விவரிக்கிறார்.

இதைத் தொடர்ந்து வரும் அதிகாரத்தில், மனந்திரும்புதலுக்கு வழிநடத்தும் அற்புதக் கருவியாக, வீழ்ச்சிக்கு பின்பும் இன்னும் மனிதனில் தொடரும் தெய்வீக சாயலின் ஒரு அம்சமான ‘சிந்திக்கும் திறனை’ சுட்டிக்காட்டி, தீவிரமாகச் சிந்திப்பதின் அவசியத்தை, வாட்சனின் நூலிலிருந்து மட்டுமல்லாமல், ஜோன் ஸ்டொட்டின் (Your Mind Matters) நூலிலிருந்தும் பல மேற்கோள்களைக் கொடுத்து, சிந்தித்துச் செயல்படுவதை நமது அடிப்படைக் கடமையாகவும், மனந்திரும்பாத பட்சத்தில் நாம் சந்திக்கப் போகிற பாரதூரமான விளைவுகளையும் கூறி எச்சரிக்கும் ஆசிரியர், இந்த அதிகாரத்தை மிகவும் லாவகமான முறையில், மனந்திரும்புதல் என்ற இலக்கை நோக்கி நம்மை உந்தித் தள்ளும் விசையைப் போலப் பயன்படுத்தி ‘இன்றே மனந்திரும்பு!’ என்ற ஒரு ஆணித்தரமான அறைகூவலோடு இந்நூலை முடிக்கிறார்.

பின் இணைப்பில் இரட்சிப்பின் படிமுறையில் மறுபிறப்பு, மனந்திரும்புதல், பாவமன்னிப்பு மற்றும் நீதிமானாகுதல் இவற்றிற்கு இடையே உள்ள நெருக்கமான தொடர்பை விளக்கப்படங்களுடன் சுருக்கமாகவும் தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலை வாசித்து முடித்தபோது, பலகாலமாக தீராத வேதனையை உண்டாக்கிய ஒரு பெயர் தெரியா நோயை, அதன் காரணகாரணிகள், பாதிப்புகள் மற்றும் பின்விளைவுகளோடு அறிந்துகொண்டு, அதற்கான மருந்தை உட்கொண்டு நிவாரணம் பெற்றுக்கொண்ட நிம்மதியைத் தந்தது. மெத்தியூ மீட்டின் நூலுக்கு மெக்காத்தர் அளித்த விளக்கம் போல ‘உணர்ச்சிகளுக்கு தூபம் போடும் நூல் அல்ல, இது ஆத்துமாவுக்கான உணவு!’. பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால், வேத அறிவில் மூழ்கித் திளைத்த, பல பியூரிட்டன் பெரியவர்கள், சீர்திருத்த இறையியல் அறிஞர்கள் ஆகியோரின் சிந்தனைக் கருவூலத்திலிருந்து சிதறிய விலையுயர்ந்த முத்துக்களால் கோர்க்கப்பட்ட அற்புதமான மணிமாலை! நூல் விளக்கும் மனந்திரும்புதலை அனுதின அணிகலனாக அணிந்து வாழும் விசுவாசிக்கு, ஆவிக்குரிய அழகு சேர்த்து எல்லையில்லாத இன்பம் அளிக்கும் நூல் இது.

இத்தகைய ஒரு அருமையான நூல் நமக்கு தமிழில் கிடைத்திருப்பது, நினிவே மக்களுக்கு கர்த்தர் யோனா தீர்க்கதரிசி மூலம் காட்டிய கிருபைக்கு ஒப்பானது, எனவே நூலைக் கருத்தோடு வாசித்து இன்றே மனந்திரும்புவோம்! யாருக்கு தெரியும் நமக்கு அளிக்கப்பட்ட கிருபையின் நாட்கள் இன்றோடு முடிந்து போகலாம்! நாளை என்பதும் நமது கரத்தில் இல்லை! இந்த நூலை முறையாக வாசித்து சிந்திக்கும் ஒவ்வொரு இருதயத்திலும் ஆவியானவர் கிரியை செய்யவும், அதனாலுண்டாகும் வெளிப்புறமான சீர்திருத்தத்தின் ரேகைகளை காணும் நாளை வாஞ்சித்தும் ஊக்கத்தோடு ஜெபிக்கிறேன்.

சுவிசேஷ ஊழியத்தில், கர்த்தர் வல்லமையாக பயன்படுத்தி வரும் போதகர் பாலா அவர்களுக்கும், சீர்திருத்த வெளியீடுகளுக்கும் உளமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஷேபா மைக்கேல் ஜார்ஜ்

© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.