திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

1. வாசகர்களே!
2. கர்த்தரின் உடன்படிக்கையா? காலப்பாகுபாடா?
3. தசமபாகம் செலுத்துதல் – (A. W. பிங்க்)
4. சிக்கல் தீர்க்க வந்திருக்கும் ‘மனித சித்தம்’
5. ஜெயமோகனும் கிறிஸ்தவமும்

வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே! மீண்டும் ஒரு புதிய இதழை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இதழாசிரியரான என்னோடு, இதழ் பணியில் இணைந்து உழைக்கும் போதகர் ஜேம்ஸ், சரிபார்க்கும் பணியைச் செய்யும் பாலசுப்பிரமணியம், ரோஸ்லின் ஜேம்ஸ் ஆகியோருக்கும் என் நன்றிகள். கர்த்தரின் கிருபையால் இன்னும் ஓர் இதழைத் தரமாகத் தயாரித்து வழங்க முடிந்திருக்கிறது.

ஆரம்ப ஆக்கம் ‘கர்த்தரின் உடன்படிக்கை இறையியல்’ பற்றியது. மிகவும் சிக்கலான ஓர் இறையியலின் முக்கிய அம்சங்களைச் சிக்கலில்லாமல் விளக்க முனைந்திருக்கிறேன். இந்தப் போதனை அநேகருக்குப் புதிதாக இருந்தால் அதில் ஆச்சரியமில்லை. கவனத்தோடு வாசியுங்கள்; புரிந்துகொள்ள கர்த்தர் உதவுவார்.

ஆர்தர் பிங்க் அவர்களின் ‘தசம பாகம்’ பற்றியது அடுத்துவரும் ஆக்கம். இதைப்பற்றியெல்லாம் இறையியல்பூர்வமாக சிந்திக்கும் வழக்கம் நம்மினத்தில் இல்லை. பிங்க் அவர்களின் இந்த ஆக்கம் மிகவும் முக்கியமானது. பழைய ஏற்பாட்டு தசமபாகம் புதிய ஏற்பாட்டில் தொடருகிறது என்பதை வேத ஆதாரங்களோடு அருமையாக விளக்கியிருக்கிறார் பிங்க். ஒன்றை சபையில் பின்பற்றினால் அதற்கு வேத ஆதாரம் அவசியம். வேதஆதாரமில்லாமல் நாம் நினைத்தபடி செய்யக்கூடாது. இனி தசமபாகத்தைக் கொடுக்கிறவர்கள் இதை வாசித்து மனநிறைவோடு அதை ஆண்டவருக்குக் கொடுக்கலாம்.

சகோதரி ஷேபா மிக்கேள் நமது நூல்களைக் கரைத்துக்குடித்துக் கருத்துரை வழங்குவதைச் சிறப்பாகச் செய்துவருகிறார். இது இதழில் அவரெழுதியிருக்கும் இரண்டாவது கருத்துரை. அவருடைய எழுத்துப் பணி வளரவேண்டும்.

இறுதி ஆக்கம் தமிழகத்துப் படைப்பாளி ஜெயமோகனின் கிறிஸ்தவ கருத்துக்கள் பற்றியது. அக்கருத்துக்களை ‘சிலுவையின் பார்வையில்’ எனும் நூலில் அவர் வடித்திருப்பதால் அதைப்பற்றி எழுத வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. நமக்குப் புறத்தில் இருக்கிறவர்கள் கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் பற்றி எத்தகைய சிந்தனைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இதில் நீங்கள் அறிந்துகொள்ளலாம். அத்தவறான கருத்துக்களை மறுதலித்து எழுதியிருக்கிறேன். – ஆசிரியர்.

கர்த்தரின் உடன்படிக்கையா? காலப்பாகுபாடா?

வேதத்தை எவ்வாறு வாசித்துப் புரிந்துகொள்ளுவது? பொதுவாகவே கிறிஸ்தவர்கள் ஆதியாகமத்தில் இருந்து ஒவ்வொரு நூலாக வாசிப்பார்கள். மீண்டும் மீண்டும் அந்த நூல்களை வாசித்து அதன் பொதுவான போக்கைப் புரிந்துகொள்ளப் பார்ப்பார்கள். பெரும்பாலானோருக்கு புதிய ஏற்பாட்டைத் தெரிந்துகொண்டிருக்கும் அளவுக்குப் பழைய ஏற்பாட்டைப்பற்றிய புரிதல் இருக்காது. பொதுவாகச் சொல்லப்போனால் கிறிஸ்தவர்களுக்கு வேதத்தின் வரலாற்று நிகழ்வுகள் பற்றிய புரிதல் மிகக் குறைவு. ஒவ்வொரு நூலுக்கும் இடையில் காணப்படும் தொடர்பு, முழு வேதத்தின் ஒருங்கிணைந்த தொடர்ச்சியான வரலாற்றுப் பயணம், அதன் மூலம் படைத்தவர் செய்திருக்கும், செய்து வருகின்ற கிரியைகள், இவையனைத்திற்கும் புதிய உடன்படிக்கை கால மக்களான நமக்குமுள்ள தொடர்பு போன்ற விஷயங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதற்குக் காரணம் வேதத்தை எப்படி முறையாக, எந்த அடிப்படையில் வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான்.

19ம் நூற்றாண்டில் உருவான, (அதற்கு முன்னிருந்திராத) ஒரு வேதவிளக்க முறைக்குப் பெயர் காலசகாப்தக் கோட்பாடு (டிஸ்பென்சேஷனலிசம்). இதைக் காலப்பாகுபாட்டுக்கோட்பாடு என்றும் அழைப்பார்கள். டின்பென்சேஷன் என்பதற்கு ஒருகாலப்பகுதி என்று அர்த்தம். வேதவரலாற்றைப் பல பிரிவுகளாகப் பிரித்து அதற்கு விளக்கங்கொடுப்பதே காலசகாப்தக்கோட்பாடு. வரலாற்றை ஏழு பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் கர்த்தர் எந்தவிதமாக இஸ்ரவேலையும், சபையையும் சோதித்தார் என்று விளக்குகிறது இந்தப் போதனை. ஒரு காலப்பிரிவின் சோதனையில் இஸ்ரவேல் தோற்றபோது இன்னொரு காலப்பிரிவின் சோதனை அவசியமாயிற்று என்கிறார்கள் இவர்கள். பிரச்சனை என்னவென்றால், ஒவ்வொரு பிரிவுக்கும் அடுத்துவரும் பிரிவோடு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், ஒரு காலப்பிரிவில் கர்த்தர் செயல்பட்டவிதமாக அடுத்துவரும் பிரிவில் செயல்படவில்லையென்றும், அவரின் திட்டங்கள் ஒரேவிதமாக இல்லாமல் ஒவ்வொரு பிரிவிலும் மாறிக்கொண்டே போகின்றன என்று இந்தப் போதனை விளக்கி, வேதத்தின் ஒருங்கிணைந்த தன்மையை ஒரு கட்டடத்தை இடிப்பதுபோல் இடித்துத் தள்ளிவிடுகிறது. இதன் காரணமாக வேதவரலாற்று இறையியலையும், வேத சத்தியங்களையும் காலங்களுக்கேற்றவகையில் பிரித்து விளக்கி பெரும் சத்தியக்கோளாறை உருவாக்கிவிட்டிருக்கிறது காலசகாப்தக்கோட்பாடு. உதாரணத்துக்கு, இந்தப் போதனையின்படி பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் மனிதனடையும் இரட்சிப்பு வெவ்வேறுவிதமானவை; பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலுக்கும், புதிய ஏற்பாட்டு சபைக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. கர்த்தர் இரண்டுவிதமான மக்களையும் (இஸ்ரவேல், சபை), அவர்களுக்கான இரண்டுவிதமான திட்டங்களையும் வைத்திருந்தார் என்றும், இஸ்ரவேல் இந்த உலகத்தில் தொடரும் நாடாகவும், சபை ஆவிக்குரியதாக இருந்து பரலோகத்தை அடையும் என்றும் விநோதமான போதனைகளை இந்தக் கோட்பாடு அளிக்கிறது. பழைய ஏற்பாட்டைப் புதிய ஏற்பாட்டோடு தொடர்பில்லாததாக விளக்கி, வேதத்தின் அடிப்படை உண்மையான அதன் ஒற்றுமையை இந்தப்போதனை அடியோடு இல்லாமலாக்கிவிடுகிறது.

காலசகாப்தக்கோட்பாடு, நாம் எப்படி வேதத்தை வாசிக்கவேண்டும், அதாவது, அதைப் புரிந்துகொள்ளும்விதமாக அதன் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்துப் படிக்கவேண்டும் என்று நமக்கு விளக்குகிறது. நாம் பின்பற்றவேண்டும் என்று அது வலியுறுத்தும் வேதவாசிப்பு முறை சரியானதா? அத்தகைய முறையை வேதம் அங்கீகரித்து தனக்குள் அந்த முறை காணப்படுவதாக விளக்குகிறதா? என்ற கேள்வி எழும்போதே இந்தப்போதனை பிரச்சனைக்குள்ளாகிறது. 19ம் நூற்றாண்டில் இந்தப் போதனையை ஆரம்பித்து வைத்த ஜோன் நெல்சன் டார்பியும் அவருடைய தோழரான ஸ்கோபீல்டும், வேதத்தில் ஒன்றோடொன்று தொடர்பில்லாத ஏழு காலப்பிரிவுகள் காணப்படுவதாக விளக்கினர். அப்படியிருப்பதாக அவர்களே தீர்மானித்து வேதவசனங்களைப் பயன்படுத்தி தங்களுடைய கணிப்பை நிரூபிக்க முயற்சி செய்கின்றனர். இந்த முறையில்தான் பிரச்சனை இருக்கிறது. வேதவிளக்கவிதிகளின்படி (Interpretive principles) நாம் மனதில் தீர்மானிக்கின்ற எதையும் வேதத்தை வைத்து நிரூபிக்க முயலக்கூடாது. நம்முடைய நம்பிக்கைகளை வேதமே தெளிவாகக் காட்டினாலொழிய அவற்றை நாம் மெய்யானவையாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. டார்பி, ஸ்கோபீல்ட் சகோதரர்களின் பெருந்தவறு செயற்கையாக ஏழு காலப்பிரிவுகளை உருவாக்கி, அவை வேதத்தில் காணப்படுவதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பதுதான். ஒன்றுக்கொன்று தொடர்பற்ற ஏழு காலப்பிரிவுகளாக வேதத்தைப் பிரித்துப் பார்ப்பது தவறு என்றால், அவர்களுடைய அத்தனை போதனைகளும் தவறானவையாகிவிடுகின்றன. உண்மையில் அத்தகைய ஏழு காலப்பிரிவுகளாக வேதத்தைப் பிரித்துப் பார்ப்பது தவறு; அத்தகைய பாகுபாட்டுக்கு வேதம் இடமளிக்கவில்லை.

இதற்கு ஓர் உதாரணமாக, டார்பி, ஸ்கோபீல்டின் விளக்கங்களின்படி அப்போஸ் 2ம் அதிகாரத்தில் இருந்து இரகசிய வருகைவரை (உண்மையில் அப்படியொன்றில்லை) ‘திருச்சபைக்காலம்’ என்று விளக்குகிறார்கள். காலசகாப்தக்கோட்பாட்டின்படி பழைய ஏற்பாட்டில் திருச்சபையின் சாயலைக்கூட காணமுடியாது. திருச்சபை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் நிறுவப்பட்ட தற்காலிக ஆவிக்குரிய மக்கள் என்பது இவர்களுடைய வாதம். இவர்கள் தவறாகப் பயன்படுத்தும் ‘எழுத்துபூர்வமான’ வேதவிளக்கமுறை இந்தவிதமாக வேதத்தை விளக்கும்படி இவர்களை வழிநடத்துகிறது. திருச்சபை புதிய ஏற்பாட்டில் மட்டுந்தான் இருந்தது என்றால், பழைய ஏற்பாட்டில் விசுவாசிகள் இருக்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது? ஆதாமையும், ஆபிரகாமையும், மோசேயையும், தாவீதையும் நாம் எப்படிக் கணிப்பது? என்ற பிரச்சனை உருவாகிறது. அவர்கள் அதற்குப் பதிலாக, இவர்கள் ஒருவிதத்தில் விசுவாசிகள்தான், ஆனால், திருச்சபை புதிய ஏற்பாட்டில் உருவான பின்பே அவர்கள் அதில் சேர்க்கப்பட்டார்கள் என்று பதிலளிக்கிறார்கள். அத்தோடு இவர்களுடைய விசுவாசமும், புதிய ஏற்பாட்டு விசுவாசிகளின் விசுவாசமும் ஒன்றல்ல என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இக்கோட்பாட்டைப் பின்பற்றும் பெரும்பாலானோர், பழைய ஏற்பாட்டு தேவமனிதர்களில் பரிசுத்த ஆவியானவர் வாசம்செய்யவில்லை என்றும் நம்புகிறார்கள். (‘பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர்’ எனும் என் நூலை வாசியுங்கள்). செயற்கையாக வேதத்தில் காணப்படாத ஒன்றோடொன்று தொடர்பில்லாத ஏழு காலப்பிரிவுகளை இவர்கள் உண்டாக்கியது, இரட்சிப்புபற்றிய வேதசத்தியங்களுக்கு குளறுபடியான விளக்கங்களைக் கொடுப்பதில் இவர்களைக் கொண்டுபோய்விட்டிருக்கிறது.

செயற்கையான முறையில் ஏழுவகைக் காலப்பிரிவு வேதத்தில் காணப்படவில்லை என்கிறபோது அந்த முறையை வைத்து உண்டாக்கப்பட்டுள்ள அத்தனை வேதவிளக்கங்களும் தவறானவை என்பதிலேயே போய்முடியும். முதல் கோணலென்றால் முற்றும் கோணலென்பது அனைவருக்கும் தெரிந்ததே. வேதத்தின் ஒரு சத்தியத்தைத் தவறாக விளக்குவது ஏனைய சத்தியங்களனைத்தையும் தொட்டுப் பாதிக்காமல் விடாது. காலசகாப்தக் கோட்பாட்டை உருவாக்கியவர்கள் ஏழுகாலப்பிரிவின் அடிப்படையிலேயே வேதத்தின் அத்தனை அடிப்படை சத்தியங்களுக்கும் விளக்கமளிக்கிறார்கள். திருச்சபைபற்றி இவர்கள் அளிக்கும் தவறான விளக்கத்தை ஏற்கனவே தந்திருக்கிறேன். அதேபோல்தான், இரட்சிப்பு, பரிசுத்தமாக்குதல், கிறிஸ்தவ வாழ்க்கை, பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்துவின் மீட்பின் வரலாறு, கிறிஸ்துவின் ராஜ்யம், கிறிஸ்துவின் வருகை என்று அனைத்துப் போதனைகளுக்கும் இவர்கள் வேதமறியாத தவறான விளக்கங்களைத் தருகிறார்கள். இதன் காரணமாகவே இந்தக் கோட்பாட்டை இறையியல் அறிஞரொருவர், Wrongly dividing the Bible (தவறான முறையில் வேதத்தைப் பகுப்பது) என்று அழைத்திருக்கிறார். இன்னொரு அறிஞர் சொன்னார், ‘நாம் பின்பற்றுகிற வேதவிளக்க விதிமுறைகள் சரியானவையாக இருந்தால் வேதத்தில் எந்த இறையியலையும் சரியாகப் புரிந்துகொள்ளலாம்’ என்று. டார்பி, ஸ்கோபீல்ட் வேதவிளக்க விதிமுறை சரியானதல்ல. இருந்தும் தமிழினத்தின் பெரும்பாலான கிறிஸ்தவ பிரசங்கிகளும், கிறிஸ்தவர்களும் அதற்கு அடிமைகளாகியிருக்கிறார்கள்.

மீட்பின் வரலாற்றை விளக்கும் வேதம்

ஏழுவகைக் காலசகாப்தக் கோட்பாடு வேதத்தில் இல்லாதது, அது செயற்கையான போதனை என்றால் வேதவரலாற்றையும் அது போதிக்கும் சத்தியங்களையும் விளங்கிக்கொள்ள நாம் பயன்படுத்தவேண்டிய தகுந்த முறையொன்று இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. அத்தகையதொரு முறையை வேதமே நமக்கு இனங்காட்டுகிறது என்பதுதான் அதற்குப் பதில். இப்போது நான் விளக்கப்போகிற சத்தியத்தைப் பற்றி இதுவரை நான் விபரமாக இதழில் எழுதியதில்லை. அதன் அவசியத்தை உணர்ந்தே அதை இப்போது எழுதத் தீர்மானித்தேன். அவசர வாசிப்புக்காரர்களால் இதை உடனடியாகப் புரிந்துகொள்ள முடியாது. இறையியல் சத்தியங்களை எப்போதுமே அவசர வாசிப்பின் மூலம் கற்றுக்கொள்ள முடியாது. நுணுக்கமான வேத சத்தியங்களைப் பொறுமையாகக் கவனத்தோடு படித்தே புரிந்துகொள்ள முடியும். வேதம் விளக்கும் கர்த்தரின் முன்குறித்தல் பற்றிய போதனை அப்படிப்பட்ட சத்தியங்களில் ஒன்று.

சமீபத்தில் நான் வாசித்த இறையியலறிஞர் கார்ள் ட்ரூமனின் வார்த்தைகள் பொருளுள்ளவை. அவர் சொல்கிறார், ‘மூளையில் அறுவை சிகிச்சையை எப்படி ஒரு சுத்தியலையும், இயந்திர அரிவாளையும் பயன்படுத்திச் செய்துவிட முடியாதோ, அதேபோல்தான் சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கான கவனத்தோடுகூடிய இறையியல் விளக்கங்களை ஆக்கபூர்வமாக 280 வார்த்தைகளில் தந்துவிட முடியாது.’ அதாவது கருத்தோடுள்ள இறையியல் விளக்கங்களை ட்டுவிட்டரிலும், இன்ஸ்டகிரேமிலும், பத்துநிமிட யூடியூப் கிளிப்புகளிலும் பதிவுசெய்துவிட முடியாது என்கிறார் அவர். அப்படிச்செய்ய முயல்கிற அனேகர் சுற்றியிருக்கிறார்கள். இதெல்லாம் அவசரக்குடுக்கைகளுக்கு உதவும்; அறிவை வளர்த்துக்கொள்ளத் துடித்து ஆழமான இறையியல் சத்தியங்களைக் கற்றுக்கொள்ள முயல்கிறவர்களுக்கு ஒருநாளும் உதவாது. அதற்கு நேரமும், பொறுமையும், மீள்வாசிப்பும் அவசியம்.

நான் இப்போது விளக்கப்போகின்ற, வேதத்தை எந்தக்கோணத்தில் படித்துப் புரிந்துகொள்வது என்ற போதனை இன்று நேற்று உருவானதல்ல. இந்த முறையிலேயே ஆதியில் இருந்து வேதத்தை திருச்சபை படித்து வந்திருக்கிறது. இந்த முறையை 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதத்திற்குப் பிறகு, கடல் நீருக்கு மேல் டொல்பின் மீன் பாய்ந்து வெளிவருவதுபோல் கிறிஸ்தவர்கள் இனங்கண்டு பயன்படுத்த ஆரம்பித்தபோதும், ஆதிசபைக்காலத்திலும், சபைப்பிதாக்கள் காலத்திலும் இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பியூரிட்டன் பெரியவர்களும் இந்த முறையையே வேதத்தைப் படிக்கப் பின்பற்றியிருக்கின்றனர். அப்படியானால் இந்த முறை ஏன் நம்மினத்தில் (தமிழினத்துக் கிறிஸ்தவம்) வேதத்தைப் படிப்பதில் பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்ற கேள்வி எழும். அதற்கு மிகமுக்கியமான காரணம், விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ ஜோன் நெல்சன் டார்பியின் காலசகாப்தக் கோட்பாடு கிறிஸ்தவ இறையியல் கல்லூரிகளையும், கிறிஸ்தவ இனத்தையும் ஆக்கிரமித்து தன் கட்டுக்குள் வைத்திருப்பதுதான். இரண்டாவது காரணம், நம்மினத்தில் சீர்திருத்தப் போதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டது சமீப காலத்தில்தான். சீர்திருத்த கிறிஸ்தவம் மட்டுமே இப்போது நான் விளக்கப்போகிற வேதவிளக்கவிதியை வேதத்தைப் படிக்கப் பயன்படுத்தி வந்திருக்கிறது. இது சீர்திருத்த கிறிஸ்தவம் உருவாக்கிய போதனையாகத் தவறாக எண்ணிவிடக்கூடாது. இதைச் சீர்திருத்தக் கிறிஸ்தவம், ஏனைய இறையியல் விளக்கங்களை வேதத்தில் இருந்து அறிமுகப்படுத்தியதுபோல் கிறிஸ்தவ உலகுக்கு அறிமுகப்படுத்தியது. இனி இந்தப் போதனை என்னவென்று ஆராய்வோம்.

வேதம் கர்த்தரைப் பற்றியும், அவருடைய கிரியைகளையும்பற்றி நமக்கு விளக்கும் தெய்வீக நூல். அது கர்த்தரின் கிரியையான படைப்பில் ஆரம்பித்து வரலாறு எப்படி முடியப்போகிறது என்பதை வெளிப்படுத்தல் விசேஷத்தில் விளக்குவதோடு முடிவுக்கு வருகிறது. இந்த வரலாற்றை ‘மீட்பின் வரலாறு’ (Redemptive history) என்று இறையியலாளர் அழைக்கிறார்கள். அதற்குக் காரணம், கர்த்தரின் பிரதான கிரியை, தான் படைத்து, பாவத்தில் வீழ்ந்திருக்கும் மனிதகுலத்தை மீட்டெடுப்பதாக இருப்பதால், வரலாற்றில் அவர் அதை எந்தவிதமாக நிகழ்த்துகிறார் என்பதை மீட்பின் வரலாறாகிய வேதம் விளக்குகிறது. இந்த மீட்கும் கிரியையைக் கர்த்தர் எந்தவிதமாக வரலாற்றின் பல்வேறு காலப்பகுதிகளில் படிப்படியாக நிறைவேற்றி முடிவுக்குக் கொண்டுவருகிறார் என்பதை இரண்டு கட்டங்களாக வேதம் விளக்குகிறது. இதில் முதலாவதை நாம் பழைய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். இரண்டாவதைப் புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். இந்த இரண்டையும் இணைக்கிறவராக மீட்பராகிய இயேசு இருக்கிறார். பழைய ஏற்பாடு வந்து, வாழ்ந்து மரிக்கப்போகின்ற கிறிஸ்துவையும், புதிய ஏற்பாடு மண்ணில் பிறந்து வாழ்ந்து மரித்து உயிர்த்தெழுந்த கிறிஸ்து நிறைவேற்றிய மீட்பையும் விளக்குகின்றது.

மீட்பின் உடன்படிக்கை (Covenant of Redemption)

கர்த்தரின் மீட்பின் செயல் கிறிஸ்துவை மையமாகக் கொண்டது. உலகத்தோற்றத்துக்கு முன் பிதாவும், குமாரனும், பரிசுத்த ஆவியானவரும் இணைந்து தீர்மானித்த திட்டமே மீட்பு. பிதா தான் மனிதகுலத்தில் தெரிந்துகொண்ட மக்களைத் தன்னுடைய ஒரே மகனான இயேசு கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் மூலம் பாவத்தில் இருந்து விடுதலை செய்ய எடுத்த தீர்மானமே மீட்பு. அதைக் கிறிஸ்து தன் வாழ்க்கையின் மூலம் மீட்பை இந்த உலகில் நிறைவேற்றி, பரிசுத்த ஆவியானவர் மூலம் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் மீட்பின் பலன்களைத் தங்கள் வாழ்க்கையில் அடையும்படிச் செய்கிறார். படைப்பிற்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட இந்த நித்திய திட்டம் (Eternal plan) நடைமுறையில் எவ்வாறு உலகத்தில் செயல்படுத்தப்பட்டது என்பதை வேதவரலாறு விளக்குகிறது. இதை சங் 2; ஏசாயா 53:10-12; எபே 1:13-14; அத்தோடு யோவானின் சுவிசேஷ நூல் முழுவதும் வாசிக்கலாம். இத்தகைய மீட்பின் திட்டத்தின் வரலாற்று விளக்கமே வேதம். உலகத் தோற்றத்துக்கு முன் திரித்துவ தேவனால் ஏற்படுத்தப்பட்ட இந்த மீட்பின் திட்டத்தை இறையியல்பூர்வமாக மீட்பின் உடன்படிக்கை (Covenant of Redemption) என்றும் அழைப்பார்கள்.

வேதமும், கர்த்தரின் உடன்படிக்கைகளும்

கர்த்தர் மீட்பை கிறிஸ்து மூலமாக வரலாற்றில் நிறைவேற்றுவதற்காக மக்களோடு தொடர்புகொண்டு, உறவாட ஏற்படுத்திய வழிமுறையே உடன்படிக்கை (Covenant). வரலாற்றின் வெவ்வேறு காலப்பகுதிகளில் கர்த்தர் மக்களோடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டார். நாம் கர்த்தரை ‘உடன்படிக்கையின் தேவன்’ என்று அழைப்பதற்கு அவர் ஏற்படுத்தியிருக்கும் இந்த உடன்படிக்கைகளே காரணம். உடன்படிக்கை என்ற பதம் பழைய ஏற்பாட்டில் Berith (பெரித்) என்றும், புதிய ஏற்பாட்டில் Diatheke (டியாதேக்கே) என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உடன்படிக்கை (Covenant) என்பது சாதாரணமாக இரண்டுபேர் ஒரு விஷயத்தைப் பற்றிய உடன்பாட்டுக்கு வருவதைக் (agreement) குறிக்கும். அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட அதில் சம்பந்தப்பட்டுள்ள இருவரும் தாங்கள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உடன்படவேண்டும். திருமணம் இந்தவிதத்தில் ஓர் உடன்படிக்கை. ஆனால், வேதம் அதற்கு ஒருபடி மேலே போய் இதை விளக்குகிறது. கர்த்தரின் உடன்படிக்கையைப் பொறுத்தவரையில் அதை நிறைவேற்றுவதில் கர்த்தரே இறையாண்மைகொண்டவராக இருக்கிறார். கர்த்தரின் உடன்படிக்கைகள் தெய்வீக உடன்படிக்கைகள். கர்த்தரே உடன்படிக்கைக்குரிய சகல விதிகளையும், நிபந்தனைகளையும் ஏற்படுத்துகிறவராகவும் இருக்கிறார். கர்த்தர் யாரோடு இந்த உடன்படிக்கையை ஏற்படுத்துகிறாரோ அவர்கள் இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து அதன் பலன்களை அனுபவிக்கவேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உடன்படிக்கையை மீறினால் அதற்குரிய தண்டனையை அனுபவிக்கவேண்டும். உடன்படிக்கையின் மக்கள் இந்த விஷயத்தில் கர்த்தரிடம் எந்த நிபந்தனையையும் விதிக்க முடியாது. உடன்படிக்கையின் நிபந்தனைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம்; ஆனால், அவைபற்றி கர்த்தரோடு தர்க்கம் செய்யமுடியாது. இந்தவிதத்தில் கர்த்தரின் உடன்படிக்கை சாதாரண மனித உடன்படிக்கைகளைவிட மாறுபட்டது. இதை உணர்த்துவதற்காகத்தான் பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பைச் (Septuagint) செய்தவர்கள் சாதாரணமான ஒரு உடன்படிக்கையை விளக்கப்பயன்படுத்துகிற syntheke என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், அதிகம் பயன்படுத்தப்படாத diatheke என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதற்குக் காரணம் உடன்படிக்கையில் இரு தரப்பினர் சம்பந்தப்பட்டிருந்தபோதும், அதன் நிபந்தனைகள், வாக்குறுதிகள் அனைத்தும் ஒரு தரப்பால் மட்டுமே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுவதற்காகத்தான். உடன்படிக்கை என்பதன் சுருக்க விளக்கம், ‘உறுதிமொழியால் கட்டப்பட்ட வாக்குறுதி’ (Oath bound promise) எனலாம். காலத்துக்குக் காலம் இந்த உடன்படிக்கையை ஏற்படுத்தியே கர்த்தர் தன்னை மனிதர்களுக்கு வெளிப்படுத்தி தன்னுடைய சித்தத்தின்படி மனிதர்கள் வாழ்வதற்கு வழியேற்படுத்தியிருக்கிறார்.

வரலாற்றின் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் தன் சித்தப்படி கர்த்தர் ஏற்படுத்திய இந்த உடன்படிக்கைகள் அவருடைய மீட்பின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக உண்டாக்கப்பட்டவை. அதாவது, கர்த்தரின் மீட்பின் திட்டமாகிய நித்திய உடன்படிக்கைக்கும் இந்த உடன்படிக்கைகளுக்கும் பிரிக்கமுடியாத தொடர்பு காணப்படுகின்றது. நித்திய உடன்படிக்கையான மீட்பின் உடன்படிக்கை திரித்துவ அங்கத்தவர்களால் மட்டுமே ஏற்படுத்தப்பட்டபோதும், அதன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே வரலாற்றில் கர்த்தரால் குறிப்பிட்ட மனிதர்களோடு உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த வரலாற்று உடன்படிக்கைகள் மக்களுக்கு கர்த்தரை வெளிப்படுத்தியதோடு, கர்த்தரின் வார்த்தையின்படியும், அவருடைய நிபந்தனைகளின்படியும் வாழ்ந்து, அவரளிக்கும் ஆசீர்வாதத்தை அடையத் துணைசெய்தன. எல்லா உடன்படிக்கைகளிலும் காணப்பட்ட பொதுவான கர்த்தரின் வாக்குறுதி, ‘நான் அவர்களுடைய தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள்’ என்பதுதான். (எரேமியா 31:33; 2 கொரிந்தியர் 6:16). கர்த்தரின் உடன்படிக்கைகளின் மூலமே கர்த்தரின் சித்தத்தின் வெளிப்படுத்தல் (Revelation of God’s will) படிப்படியாக வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற உண்மையையும் உணரவேண்டும்.

கர்த்தர் ஏற்படுத்திய வரலாற்று உடன்படிக்கைகள் அனைத்தும் ஒருங்கிணைந்தவையாகவும், ஒன்று இன்னொன்றை நோக்கிப்போவதாகவும், ஒன்றில் இருந்து அடுத்து வருவது புறப்படுவதாகவும், ஒவ்வொன்றும் ஒரு சில புதிய அம்சங்களைத் தன்னில் கொண்டவையாகவும் இருந்து, இறுதியில் புதிய ஏற்பாட்டு வரலாற்றில் மீட்பின் திட்டம் நிறைவேறுவதில் போய் முழுமையடைகின்றன. இந்தவிதத்தில் வேதத்தில் கர்த்தரின் மீட்பின் வரலாற்றை நாம் அவர் ஏற்படுத்தியிருக்கும் உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள முடிகிறது. இன்னொருவிதத்தில் சொல்லப்போனால் முழுவேதத்தையும் நாம் தூண்கள்போல நிற்கும் இந்த உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே வாசித்து விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். இவற்றின் அடிப்படையில் நாம் வேதத்தை வாசிக்காவிட்டால் நிச்சயமாக வேதத்தைத் தவறாக விளங்கிக்கொள்ளுவதைத் தவிர நமக்கு வேறுவழியில்லை. இதைப்பற்றிப் 19ம் நூற்றாண்டின் பெரும் பிரசங்கியான சார்ள்ஸ் ஸ்பர்ஜன் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள்,

‘வேதம் போதிக்கும் இறையியலின் ஆணிவேராக இருப்பது கர்த்தரின் உடன்படிக்கை இறையியல் . . . வேதத்தைப்பற்றிய போதனைகளில் பெருந்தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கும் அத்தனைபேரும், கர்த்தரின் உடன்படிக்கைகளான நியாயப்பிரமாணம், கிருபை ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுவதில் அடிப்படைத் தவறுகளைச் செய்ததாலேயே அந்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன்’ என்றார்.

ஆகவே, கர்த்தரின் உடன்படிக்கைகள் நமக்கு கிறிஸ்துவை அடித்தளமாகக்கொண்ட கர்த்தரின் மீட்பின் வரலாற்று நிறைவேற்றத்தைத் தெளிவாக விளக்குகின்றன. 19ம் நூற்றாண்டுக்கு முன் கிறிஸ்தவர்கள் வேதம் விளக்கும் கர்த்தரின் இந்த உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே மீட்பின் வரலாற்றை வேதத்தில் வாசித்து விளங்கிக்கொண்டிருக்கிறார்கள். 19ம் நூற்றாண்டுக்கு முன் வரலாற்றில் காலசகாப்தக் கோட்பாடுபற்றி எவருமே கேள்விப்பட்டிருக்கவில்லை. அதற்குக் காரணம் அந்நூற்றாண்டிலேயே அது ஜே. என். டார்பியின் மூலம் செயற்கையாக உருவானது.

வேதத்தில் உடன்படிக்கைகள்

கர்த்தர் மனிதனுக்குத் தன்னை வெளிப்படுத்தும்விதமாக ஒன்றுக்கு மேற்பட்ட உடன்படிக்கைகளை ஏற்படுத்தியதாக வேதம் விளக்குகிறது. இந்த ஆக்கத்தில் மட்டும் அவற்றைப்பற்றிய முழுமையான விளக்கத்தைத் தருவது மிகக்கடினம். உடன்படிக்கை இறையியலைப்பற்றிய ஒரு விளக்கமான நூலை எழுதத் தீர்மானித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இப்போதைக்கு சுருக்கமாக கர்த்தரின் வெவ்வேறு உடன்படிக்கைகளைப்பற்றி இந்த ஆக்கத்தில் விளக்கிவிடுகிறேன். கர்த்தரின் உடன்படிக்கை பற்றிய போதனையை 17ம் நூற்றாண்டில் உருவான சீர்திருத்த விசுவாச அறிக்கையான 1689ன் 7ம் அதிகாரத்தில் வாசிக்கலாம்.

ஏற்கனவே தன்னுடைய மக்களை கிறிஸ்து மூலம் பாவத்தில் இருந்து இரட்சிக்க ஒரு திட்டத்தை திரித்துவ அங்கத்தவர்கள் நித்தியத்தில் தீர்மானித்து ஒரு மீட்பின் உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று கவனித்திருக்கிறோம். அந்த உடன்படிக்கையை வரலாற்றில் நிறைவேற்றுவதற்காக கர்த்தர் இரண்டு முக்கிய உடன்படிக்கைகளை ஏற்படுத்தினார்.

  1. கிரியைகளின் உடன்படிக்கை.
  2. கிருபையின் உடன்படிக்கை.

மீட்பின் நிறைவேற்றத்திற்காக இந்த இரண்டு உடன்படிக்கைகளைத் தவிர வேறு சில உடன்படிக்கைகளும் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் வரலாற்றில் மனிதர்களோடு (நோவா, ஆபிரகாம், மோசே, தாவீது) ஏற்படுத்தப்பட்டன. மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு உடன்படிக்கைகளும் மிக முக்கியமானவையாகவும், ஏனைய உடன்படிக்கைகளோடு தொடர்புடையவையாயும் அமைந்திருக்கின்றன.

கிரியைகளின் உடன்படிக்கை (The Covenant of Works)

ஏற்கனவே உலகத்தோற்றத்துக்கு முன்பாக திரித்துவ அங்கத்தவர்கள் தமக்கிடையில் ஏற்படுத்திய மீட்பின் உடன்படிக்கையைப்பற்றி விளக்கியிருக்கிறேன். அந்த உடன்படிக்கையை உலகத்தில் கிறிஸ்து மூலமாக நிறைவேற்ற ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகளில் முதலாவது, கிரியைகளின் உடன்படிக்கை. இந்த உடன்படிக்கையைக் கர்த்தர் ஆதாமோடு ஏற்படுத்தினார். இதை ஆதியாகமம் 2:16-17ல் வாசிக்கலாம். சிலர் இந்தப் பகுதியில் உடன்படிக்கை என்ற பதம் பயன்படுத்தப்பட்டிராததால் இதை உடன்படிக்கையாகக் கருதமுடியாது என்கிறார்கள். அத்தகைய வாதம் தவறு. ஏனெனில், அந்தப் பதம் பயன்படுத்தப்பட்டிராதிருந்தாலும், அதற்கான கருத்துவடிவம் (concept) அந்தப் பகுதியில் காணப்படுகிறதா? என்றே கவனிக்கவேண்டும். எந்த உடன்படிக்கையையும் அடையாளப்படுத்தும் அதிமுக்கியமான அம்சங்களான, உடன்படிக்கையின் அங்கத்தவர்கள், உடன்படிக்கையின் சட்டரீதியான கட்டுப்படுத்துகின்ற நிபந்தனைகள், கீழ்ப்படிவிற்கான ஆசீர்வாதம், கீழ்ப்படியாமைக்கான தண்டனை ஆகிய அனைத்தும் இந்தப் பகுதியில் தெளிவாகக் காணப்படுவதாலேயே இறையியல் வல்லுனர்கள் இதை ஓர் ‘உடன்படிக்கை’ என்று அழைக்கிறார்கள். அத்தோடு ஓசியா 6:7ல், இஸ்ரவேலின் பாவங்களைக் குறித்து சுட்டும் தீர்க்கதரிசி, ‘அவர்களோ ஆதாமைப்போல உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய் துரோகம் பண்ணினார்கள்’ என்று கர்த்தர் சொன்னதாகச் சொல்கிறார். இதிலிருந்து ஏதேனில் ஆதாமோடு செய்யப்பட்டிருந்தது உடன்படிக்கை என்பதை இந்த வசனம் விளக்குகிறது. ஆதாம் ஆண்டவரோடு கொண்டிருந்த உறவு உடன்படிக்கையின் அடிப்படையிலானது. அத்தோடு, இந்த உடன்படிக்கை நிபந்தனையின் அடிப்படையிலான உடன்படிக்கையாக இருப்பதால் அதற்கு ‘கிரியைகளின் உடன்படிக்கை’ என்று பெயர் கொடுக்கப்பட்டது. ஆதாம், கர்த்தரின் நிபந்தனையை நிறைவேற்றியிருந்தால் மட்டுமே அவனுக்கு நித்திய வாழ்வு கிடைத்திருக்கும். அந்தவிதத்தில் ஆதாம் அந்தக் கிரியையை முழுமையாக நிறைவேற்ற வேண்டியிருந்தது.

ஆதாமிய, கிரியைகளின் உடன்படிக்கை நித்தியத்துக்குமான உடன்படிக்கை அல்ல; அது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமான சோதனையின் அடிப்படையிலான உடன்படிக்கை (probationary). அதாவது, ஆதாம் அந்தக் குறுகிய காலப்பகுதியில் கர்த்தரின் கட்டளையை முழுமையாகப் பின்பற்றினால் நித்திய வாழ்வைத் தருவதாக ஆண்டவர் வாக்குறுதியளித்திருந்தார். ஆதாம் அதற்குக் கீழ்ப்படியாமல் உடன்படிக்கையை மீறியதால் அந்த உடன்படிக்கை முறிந்தது; அவனுக்கு நித்திய வாழ்வும் கிடைக்காமல் போயிற்று. அந்தக் குறிப்பிட்ட காலப்பகுதி எந்தளவுள்ளது என்ற விபரத்தைக் கர்த்தர் நமக்குத் தரவில்லை. அது குறிப்பிட்ட காலம் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கர்த்தரின் இறையாண்மையின்படி ஆதாம் நித்தியத்துக்கும் ஜீவவாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியாது. அது கர்த்தரின் திட்டத்தில் இருக்கவில்லை. இந்தக் குறிப்பிட்ட காலப்பகுதியில் அவன் வெற்றிகரமாக கட்டளைகளைப் பின்பற்றி நிறைவேற்றியிருந்தால் மட்டுமே ஜீவவாழ்க்கை கிடைத்திருக்கும்; அதில் ஆதாம் தவறிவிட்டான்.

ஆதாமும், ஏவாளும் தடைசெய்யப்பட்டிருந்த மரத்தின் கனியை உண்டு கிரியைகளின் உடன்படிக்கையை மீறியதால் அவர்களுடைய கீழ்ப்படிவுக்கு வாக்குறுதியாகக் கொடுக்கப்பட்டிருந்த நித்திய வாழ்க்கையை அடையமுடியாமல் ஏதேனில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களுக்குத் தண்டனையும், சாபமும் கிடைத்தது. ஆதாமின் வீழ்ச்சியினால் கிரியைகளின் உடன்படிக்கை நிறைவேறாமல் போயிற்று. ஆதாமின் வீழ்ச்சியோடு முறிந்துபோன இந்த உடன்படிக்கை அத்தோடு அடியோடு இல்லாமல் போய்விடவில்லை. அவ்வாறு தவறாக எண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள். வீழ்ந்தது ஆதாமே தவிர, கிரியைகளின் உடன்படிக்கை அல்ல. ஆதாம் உடன்படிக்கையை மீறியதால் அந்த உடன்படிக்கை முறிந்தது. ஆதாமோடு வீழ்ச்சியுற்ற மனிதகுலமனைத்தும் இன்று இந்தக் கிரியைகளின் உடன்படிக்கையின் கீழ்தான் தொடருகின்றன. மனித குலம் கர்த்தரின் சித்தத்திற்கு ஆதாமைப்போலக் கீழ்ப்படிய முடியாவிட்டாலும், முறிந்த கிரியையின் உடன்படிக்கை அவர்களிடம் அத்தகைய கீழ்ப்படிவைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறது (ரோமர் 7:10; 10:5; கலாத்தியர் 3:12). இந்த உடன்படிக்கையின்படி வாழ்ந்து அதை நிறைவேற்ற அவர்களுக்குத் தடையாக இருப்பது ‘பாவம்.’ பாவத்தில் இருக்கும் மக்கள் கர்த்தரின் கட்டளைகளைப் பூரணமாக நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

கிரியைகளின் உடன்படிக்கை ஏதேனுக்கு வெளியில் கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. ஏனென்றால் கிரியையின் உடன்படிக்கையை அவர்களுக்காக நிறைவேற்றியிருக்கும் கிறிஸ்துவை அவர்கள் விசுவாசித்து இரட்சிப்படைந்திருக்கிறார்கள்; கிரியைகளின் உடன்படிக்கையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டிராத அனைவரும் அதன் கீழேயே தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆதாமால் நிறைவேற்ற முடியாத இந்தக் கிரியைகளின் உடன்படிக்கையைப் பூரணமாக வரலாற்றில் நிறைவேற்றியே கிறிஸ்து இரட்சிப்பைத் தன் மக்களுக்குப் பெற்றுத்தந்தார். கிரியைகளின் உடன்படிக்கை பாவிகளுக்குக் கர்த்தரின் பூரண கட்டளைகளின் குணாதிசயத்தை சுட்டிக்காட்டி கிறிஸ்துவை நோக்கி வழிநடத்துகிறது.

இந்த உடன்படிக்கை வேறு பெயர்களிலும் அவசியத்தின் காரணமாக அழைக்கப்படுகிறது. இது ‘ஜீவனுக்கான உடன்படிக்கை’ என்றும் அழைக்கப்படுகிறது (Covenant of Life). பேராசிரியர் ஜோன் மரே இதை ‘ஆதாமிய நிர்வாகம்’ (Adamic Administration) என்று அழைத்தார். பாமர் ரொபட்சன் இதைப் ‘படைப்பின் உடன்படிக்கை’ (Covenant of Creation) என்று அழைத்தார். இவர்கள் இருவரும் ‘கிரியைகளின் உடன்படிக்கை’ என்ற வார்த்தைப் பிரயோகத்தைவிட இவை பொருத்தமானவை என்று கருதினார்கள். அந்த உடன்படிக்கையின் கருத்துவடிவடிவத்தை (concept) இவர்கள் இருவரும் நிராகரிக்கவில்லை; வார்த்தைப் பிரயோகத்தை மட்டுமே மாற்றி அழைத்தார்கள். அப்படிச் செய்வதில் தவறில்லை. இறையியலைப் பொறுத்தவரையில் எப்போதுமே ஒரு கருத்து வடிவத்தை விளக்குவற்குத் தகுந்த பதத்தை உருவாக்கிப் பயன்படுத்துவது வழக்கம். அத்தகைய பதங்கள் வேதத்தில் காணப்படாதபோதும் வேத போதனைகளைப் புரிந்துகொள்ளவும், விளக்கவும் அப்பதங்கள் இன்றியமையாதவையாகின்றன. அந்த வகையில்தான் ஒரே கர்த்தரில் மூன்று ஆள்தத்துவங்கள் இருக்கிறார்கள் என்ற வேதசத்தியத்தை விளக்க ‘திரித்துவம்’ என்ற பதம் வரலாற்றில் உருவானது. அதைத் திருச்சபையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

கிருபையின் உடன்படிக்கை (The Covenant of Grace)

கர்த்தர் தன்னோடு ஏற்படுத்தியிருந்த கிரியைகளின் உடன்படிக்கையை ஆதாம் மீறியதால் ஆதாமோடு மனிதகுலமும் பாவத்தில் வீழ்ந்தது. தொடரும் கிரியைகளின் உடன்படிக்கைக்குக் கீழிருந்த மனுக்குலம் கர்த்தரின் கட்டளைகளைப் பூரணமாக நிறைவேற்றக்கூடிய ஆற்றல் இல்லாமலிருந்தது. அதனால், மீட்பின் உடன்படிக்கையின்படி, மீட்பு கிறிஸ்து மூலம் இந்த உலகத்தில் நிறைவேறவும், மனிதனுக்கும் கர்த்தருக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தவும், பாவிகளுக்கு இரட்சிப்பளிக்கவும் கர்த்தர் இன்னுமொரு உடன்படிக்கையை ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த உடன்படிக்கையின் பெயர் கிருபையின் உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை கர்த்தரின் இறையாண்மையின்படி கிறிஸ்து மூலம் உண்டானது.

இந்தக் கிருபையின் உடன்படிக்கையை எங்கே காண்கிறோம்? அதை முதல் தடவையாக நாம் ஆதியாகமம் 3:15ல் கொடுக்கப்பட்ட கர்த்தரின் வாக்குறுதியில் அடையாளம் கண்டுகொள்கிறோம். ஆதியாகமம் 3:15ஐ சுவிசேஷ வாக்குறுதி என்று அழைப்பார்கள் (proto-evangelium). அதாவது, இதுவே வரலாற்றில் கர்த்தரளித்த முதலாவது சுவிசேஷ வாக்குறுதி.

உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

இது கர்த்தர் சாத்தானோடு பேசி அவனுக்களித்த தண்டனையின்போது சொல்லப்பட்ட வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்குள் சுவிசேஷ செய்தி வெளிப்படையாகவே காணப்படுகிறது. கர்த்தர் இதில் ஸ்திரீ என்று குறிப்பிட்டது இயேசுவின் தாயை. வித்து என்று குறிப்பிட்டது இயேசு கிறிஸ்துவை. இதில் கர்த்தர், இயேசு சாத்தானின் தலையை நசுக்கப்போவதாகச் சொல்லுகிறார். அது இயேசு கிறிஸ்து தன்னுடைய வருகையின் மூலம் சாத்தானை முறியடித்து அழிக்கப்போவதைக் குறிக்கிறது.  இயேசுவின் சிலுவை மரணத்தையே, ‘நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்’ என்பதன் மூலம் கர்த்தர் வெளிப்படுத்துகிறார். இயேசு கிறிஸ்து இந்த உலகுக்கு வந்து பாவிகளுக்கான இரட்சிப்பை நிறைவேற்றி சுவிசேஷத்தின் மூலம் அதை இலவசமாக வழங்கப்போவதை இந்த வார்த்தைகள் உணர்த்துகின்றன. இதுவே வேதத்தில் காணப்படும் முதலாவது சுவிசேஷ வாக்குறுதி. மேலே கவனித்த சுவிசேஷ வாக்குறுதிக்குள் உள்ளடக்கமாகக் (implicit) காணப்படுவதே கிருபையின் உடன்படிக்கை. அந்த உடன்படிக்கை இந்தச் சுவிசேஷ செய்தியின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (Revealed).

இப்போது கிருபையின் உடன்படிக்கை என்றால் என்ன? என்பதை விளக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த உடன்படிக்கை, பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுடன் கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்டது. இது தனி மனிதனோடு ஏற்படுத்தப்பட்டதல்ல. கிறிஸ்துவால், பாவத்தில் இருந்து இரட்சிக்கப்படப்போகின்ற அவருடைய மக்களோடு ஏற்படுத்தப்பட்டது. இந்த உடன்படிக்கையில் கிறிஸ்து மீட்பராக இருக்கிறார் (எபிரெயர் 8:6; 9:15; 12:24). மீட்பராகிய கிறிஸ்து உடன்படிக்கையின் நிபந்தனைகளை (கிரியைகளின் உடன்படிக்கை) நிறைவேற்றி நம்மைக் கர்த்தரோடு ஒப்புரவாக்குகிறார். கிறிஸ்துவின்மூலம் பாவிகளுக்கு ஜீவனையும் இரட்சிப்பையும் விசுவாசத்தின் மூலம் இந்த உடன்படிக்கை வழங்குகிறது. இந்த உடன்படிக்கையில் ஒருவர் பங்குகொள்ள கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசம் கட்டாயமானதாக இருக்கிறது. இதனாலேயே இதனை கிருபையின் உடன்படிக்கை என்று அழைக்கிறார்கள். இந்த உடன்படிக்கையின் கிருபை தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே உரித்தானது. அதனால் பழைய ஏற்பாட்டில் விசுவாசிகள் மட்டுமே கிருபையின் உடன்படிக்கையின் ‘கிருபையை’ விசுவாசத்தின் மூலம் அடைந்தார்கள்.

விசுவாசமும், இரட்சிப்பும் கிருபையின் மூலம் மட்டுமே கிடைக்கும் கிருபைகள். வாக்குத்தத்தமாக வெளிப்படுத்தப்பட்ட இந்தக் கிருபையின் உடன்படிக்கைக்கு ஆதாரம் நித்தியத்தில் திரித்துவ தேவனால் ஏற்படுத்தப்பட்ட ‘மீட்பின் உடன்படிக்கை’ என்பதை மறந்துவிடக்கூடாது. உடன்படிக்கை ஒன்றாக இருப்பதால், இந்த இரண்டு உடன்படிக்கைகளுக்கும் இடையில் பிரிக்கமுடியாத பெருந்தொடர்பிருக்கிறது. மீட்பின் உடன்படிக்கையை உலக வரலாற்றில் நடைமுறையில் நிறைவேற்றுவதே இந்தக் கிருபையின் உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை மனித வரலாற்றில், பழைய ஏற்பாட்டில் சுவிசேஷத்தின் மூலம் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டு இஸ்ரவேலருக்கு அறிவிக்கப்பட்டது. இயேசுவின் வருகையின் காலத்தில் அவரால் இது முழுமையாக ஏற்படுத்தப்பட்டது.

சில கிறிஸ்தவ பிரிவினர், இந்தக் கிருபையின் உடன்படிக்கை ஆதி. 3:15ல் ‘ஏற்படுத்தப்பட்டது’ (established) என்று விளக்குகிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம். ஆதியாகமம் 3:15ல் தரப்பட்ட சுவிசேஷ வாக்குறுதியில் இது உள்ளடக்கமாக ‘வெளிப்படுத்தப்பட்டது’ (revealed) என்று கூறுவதே சரியானது. ‘ஏற்படுத்தப்பட்டது’ என்பதற்கும் ‘வெளிப்படுத்தப்பட்டது’ என்பதற்கும் இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறது. ‘ஏற்படுத்தப்பட்டது’ என்றால் ஒன்று முழுமையாக அமைக்கப்பட்டது என்று அர்த்தம். கட்டடம் கட்டப்பட்டது என்றால் அந்தக் கட்டடம் பூரணமாகக் கட்டி முடிக்கப்பட்டது என்று அர்த்தம். அந்தமுறையில் கிருபையின் உடன்படிக்கை ஆதி. 3:15ல் ‘அமைக்கப்படவில்லை.’ அதைக் கர்த்தர் வெளிப்படுத்த மட்டுமே செய்தார். இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால், ஆதியாகமம் 3:15ல் காணப்படும் சுவிசேஷ வாக்குறுதியில் அடங்கிக் காணப்படும் கிருபையின் உடன்படிக்கையின் ‘கிருபை’ சுவிசேஷத்தின் மூலமாகப் பழைய ஏற்பாட்டுக் காலத்து மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அது ஆதியாகமம் 3:15ல் ‘அமைக்கப்படவில்லை’ என்று சொல்லுவதற்குக் காரணம், கிருபையின் உடன்படிக்கை ‘அமைக்கப்படுவதற்கு’ இயேசுவின் முதலாம் வருகை வரலாற்றில் அவசியமாக இருந்தது. இயேசு கிறிஸ்துவிலேயே கிருபையின் உடன்படிக்கை முழுமையாக புதிய உடன்படிக்கையில் ‘அமைக்கப்பட்டது.’ அது புதிய உடன்படிக்கையில் ‘அமைக்கப்படும்வரை’ பழைய உடன்படிக்கையில் சுவிசேஷத்தின் மூலம் பகுதி பகுதியாக ‘வெளிப்படுத்தப்பட்டது.’

சுவிசேஷம் எப்படி ஆதியாகமம் 3:15 அறிவிக்கப்பட்டு படிப்படியாக பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வெளிப்படுத்தப்பட்டு புதிய உடன்படிக்கையில் முழுமை பெறுகிறதோ, அதேபோல் கிருபையின் உடன்படிக்கை படிப்படியாக சுவிசேஷத்தில் வெளிப்படுத்தப்பட்டு இறுதியில் புதிய உடன்படிக்கையில் முழுமையாக நிறைவேற்றத்தை அடைகிறது. இதில் குழப்பத்திற்கு இடமில்லை. ஏனென்றால் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் கர்த்தரின் வெளிப்படுத்தல் பகுதி பகுதியாகவே வெளிப்படுத்தப்பட்டு புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து மூலம் முழுமை பெற்றது (எபிரெ 3:1-3). பழைய ஏற்பாட்டு மக்களுக்கு சுவிசேஷம் சடங்குகள், தீர்க்கதரிசனங்கள், பலிகள் மற்றும் அடையாளங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தபோதும், அது புதிய ஏற்பாட்டிலேயே கிறிஸ்துவின் சிலுவைப்பலியின் மூலம் முழுமையாக நிறைவேறியதோடு தெள்ளத்தெளிவாகவும் வெளிப்படுத்தப்பட்டது. அதுபோலவே கிருபையின் உடன்படிக்கையும் சுவிசேஷத்தின் மூலம் பழைய ஏற்பாட்டில் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டு கிறிஸ்துவின் வருகையோடு புதிய உடன்படிக்கையில் முழுமையாக ‘ஏற்படுத்தப்பட்டது’ (established). இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், கிறிஸ்து ஏற்படுத்திய புதிய உடன்படிக்கையே கிருபையின் உடன்படிக்கை (எரேமியா 31:31-34). இறையியல்பூர்வமாக இந்த உடன்படிக்கை பற்றிய விளக்கத்தை அளிக்கும்போது அதன் கருத்துருவை விளக்குவதற்கு எப்போதும் முறையான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவது அவசியம். 1689 விசுவாச அறிக்கையின் 7ம் அதிகாரத்தின் 3ம் பத்தி கிருபையின் உடன்படிக்கை படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டதை விளக்குகிறது.

இதுவரை நாம் கவனித்துள்ள, கர்த்தரின் மீட்பின் உடன்படிக்கையை வரலாற்றில் நிறைவேற்றும் இரு பெரும் வரலாற்று உடன்படிக்கைகளான கிரியைகளின் உடன்படிக்கை, கிருபையின் உடன்படிக்கை ஆகியவை பற்றிய இறையியல் விளக்கங்களே நாம் வேதத்தை மீட்பின் வரலாற்றின் அடிப்படையில் சரியாகப் புரிந்துகொள்ளத் துணைசெய்கின்றன. இந்த உடன்படிக்கைகளை நிராகரிப்பதோ அல்லது தவறாக விளக்குவதோ மீட்பின் வரலாற்றையே மாற்றி அமைப்பதில் முடிந்து, பெரும் இறையியல் குழப்பங்களை உருவாக்கும். காலசகாப்தக் கோட்பாட்டுக்கு மாற்று மருந்தாக இவை அமைந்திருக்கின்றன. இந்தப் போதனைகளே வேத இறையியலில் இரட்சிப்பியல், திருச்சபையியல் மற்றும் இறுதிக்காலவியல் ஆகியவற்றை நாம் வேதபூர்வமாக சரிவரப் புரிந்துகொள்ள உதவுகின்றன. ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட ஓர் அறிஞரின் வார்த்தைகளை மறுபடியும் நினைவுபடுத்திக்கொள்ளுவோம், ‘நாம் பின்பற்றுகிற வேதவிளக்க விதிமுறைகள் சரியானவையாக இருந்தால் வேதத்தில் எந்த இறையியலையும் சரியாகப் புரிந்துகொள்ளலாம்.’ அத்தகைய சரியான வேதவிளக்க விதிமுறை, கர்த்தரின் உடன்படிக்கைகளின் அடிப்படையில் வேதத்தை ஆராய்ந்து படிப்பது.

 

தசமபாகம் செலுத்துதல் – (A. W. பிங்க்)

  1. வேதத்தில் தசமபாகம் செலுத்துதல் பற்றிய போதனை

நியாயப்பிரமாணம் சீனாய் மலையில் மோசோக்கு கொடுக்குமுன்பாகக் கர்த்தர் தன்னுடைய வெளிப்படுத்தலை மக்களுக்குக் கொடுத்திருந்தார். மூன்று விஷயங்களில் அத்தகைய வெளிப்படுத்தல் தெளிவாக இருந்திருப்பதை ஆதியாகமத்தில் வாசிக்கலாம். அந்த மூன்று விஷயங்களும் பின்வருமாறு:

    1. கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்துவது
    2. ஓய்வுநாளைப் பின்பற்றுவது
    3. தசமபாகத்தைக் கொடுப்பது

இந்த விஷயங்களில் கர்த்தரின் கட்டளை ‘வெளிப்படையாக’ அல்லாமல் ‘உள்ளடக்கமாகவே’ தரப்பட்டிருக்கின்றன.

  1. கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்துவது(ஆதியாகமம் 26:4). இந்த வசனத்தில் ஆபிரகாம் கர்த்தரின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய விதிகளையும், கற்பனைகளையும், நியமங்களையும், பிரமாணங்களையும் விசுவாசத்தோடு பின்பற்றியிருக்கிறார் என்று வசனம் சொல்லுகிறது. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளுவது, ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அத்தனை கட்டளைகளும் வெளிப்படையாக ஆதியாகமத்தில் எழுதப்பட்டிராதபோதும், அவற்றை ஆபிரகாம் தெளிவாக அறிந்திருந்து பின்பற்றியிருக்கிறார். ஆபிரகாம் கட்டளைகளை அறியாமல் வாழவில்லை. ஆதியில் ஆபேலும், ஆபிரகாமும், நோவாவும் ஆண்டவரின் ஆராதனைபற்றிய கட்டளைகளை அவரிடம் இருந்து பெற்று முறையாகப் பின்பற்றியிருந்திருக்கிறார்கள்.
  2. ஓய்வுநாள்– படைப்பில் இது உருவாக்கப்பட்டிருந்தது. ஆதாமும், ஏவாளும் ஏதேனில் அதைப் பின்பற்றியிருந்தார்கள். ஆதாம் தன்பிள்ளைகளுக்கு அதைப் போதித்திருந்தான். அதன்படி காயினும், ஆபேலும் ஓய்வுநாளில் கர்த்தருக்கு ஆராதனை செலுத்தியிருந்தார்கள். நியாயப்பிரமாணம் வருமுன்பே மக்களுக்கு ஓய்வுநாள் பற்றிய போதனை தெரிந்திருந்து அதன்படி வாழ்ந்திருந்தார்கள். யாத் 20ல் கர்த்தர் நியாயப்பிரமாணத்தை மோசேக்கு கொடுக்குமுன்பே, ஓய்வுநாளைப் பற்றி மக்கள் அறிந்திருந்திருப்பதை யாத் 16ம் அதி 23-27 வரையுள்ள வசனங்களில் வாசிக்கலாம். ஓய்வுநாள் பற்றிய கட்டளையைத் தெளிவாக அறிந்திருந்தும், மக்கள் அதை மறந்து நடந்துகொண்டதை இந்த அதிகாரம் விளக்குகிறது.
  3. தசமபாகம்– இதேபோல்தான் தசமபாகம் பற்றிய போதனையையும் அறிந்துகொள்ளுகிறோம். ஆதியாகமம் 14:20ல் ஆபிரகாம் மெல்கிசேதேக்குக்கு ‘எல்லாவற்றிலும் தசமபாகம் செலுத்தினான்’ என்றிருப்பதை வாசிக்கிறோம். ஆபிரகாமுக்கு இது தெரியாமல் இருந்திருக்கவில்லை. இதை ஆபிரகாம் செய்திருந்த செய்தியே அதுபற்றிய அறிவு அன்றைய மக்களுக்கு இருந்திருக்கிறது என்பதைத் தெளிவாக வலியுறுத்துகிறது.

ஆதியாகமம் 28:19-22 ல் தசமபாகம்

இதில் தசமபாகம் பற்றி யாக்கோபுக்குத் தெரிந்திருந்தது மட்டுமல்லாமல் அதைச் செலுத்துவேன் என்று கர்த்தருக்கு அவன் வாக்குறுதியும் தந்திருக்கிறான் (22). இதையெல்லாம் யாக்கோபு எப்படி அறிந்திருந்தான் என்ற விளக்கத்தை நாம் இப்பகுதியில் வாசிக்காவிட்டாலும், யாக்கோபு அதை அறிந்திருந்து விசுவாசமாக தசமபாகம் செலுத்துவதில் உறுதியாக இருந்திருப்பது, கர்த்தர் அதை அவனுக்கும் அவனோடிருந்தவர்களுக்கும் வெளிப்படுத்தியிருந்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. கர்த்தர் ஆதியிலேயே தன் சிருஷ்டிகளுக்கு அவர்களுடைய அனைத்து வருமானத்திலும் இருந்து தனக்கு தசமபாகம் செலுத்துவதை உணர்த்தியிருந்திருக்கிறார்.

மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தசமபாகம்

நியாயப்பிரமாணத்தில் தசமபாகம் கொடுப்பதைக் கர்த்தர் வலியுறுத்தியிருப்பதை லேவி 27:30-32 வரையுள்ள வசனங்கள் விளக்குகின்றன. அது கர்த்தருக்கு உரியது (30); கர்த்தருக்குப் பரிசுத்தமானது (30) என்ற வார்த்தைகள் இரண்டு தடவை அழுத்தமாகக் காணப்படுகின்றன. இதன் மூலம் கர்த்தர் தசமபாகம் செலுத்துவது பற்றிய விஷயத்தில் தன்னுடைய அதிகாரத்தை வலியுறுத்துகிறார். நம் வருமானத்தில் பத்தில் ஒன்று நமக்குச் சொந்தமானதல்ல; அது கர்த்தருக்குச் சொந்தமானது. எப்படி வாரத்தில் ஏழு நாட்களில் ஒன்று அவருக்குச் சொந்தமானதோ அதேபோல்தான் இதுவும். இரண்டுமே பரிசுத்தமானவைகள்.

பழைய ஏற்பாட்டு ஆசாரியர்களுக்கு உதவித்தொகை

இதை ஆண்டவர் மக்கள் கையில் விட்டுவிடாமல் தானே இதுபற்றிய வெளிப்படுத்தலை மக்களுக்கு அளித்திருக்கிறார். இதன் மூலம் ஆராதனைபற்றிய விஷயங்களில் மனிதன் தானே எந்த விதியையும் ஏற்படுத்திக்கொள்ளுவதைக் கர்த்தர் விரும்பவில்லை என்பதை அறிந்துகொள்ளுகிறோம். அதனால்தான் எண்ணா 18:25-26 லேவியர்களுக்கு தசமபாகத்தொகையில் பத்தில் ஒன்றை அளிக்கவேண்டும் என்பதை விளக்குகிறது. இதைக் கர்த்தரே தீர்மானித்து மனிதனுக்கு வெளிப்படுத்தி யிருக்கிறார். இதில் மனிதன் தன்னுள்ளத்தில் ஒருதொகையைத் தீர்மானித்துக் கொடுப்பதற்கு கர்த்தர் அனுமதியளிக்கவில்லை. அதை அவரே தீர்மானித்திருக்கிறார்.

இதையெல்லாம் இஸ்ரவேல் மறந்து, கர்த்தருக்கு எதிராக நடந்து வழிதவறிப்போயிருந்தபோதிலும், பழைய ஏற்பாட்டுக்காலததில் ஆத்மீக எழுப்புதல் நிகழ்ந்த காலங்களிலெல்லாம் கர்த்தரின் ஆராதனையின் ஒருபகுதியாக சீரமைக்கப்பட்ட ஒன்றாக தசமபாகம் அளிக்கும் முறை இருந்திருக்கிறது. அதற்கு உதாரணம் 2 நாளாகமம் 30. இது எசேக்கியா நாட்டில் செய்த பொதுவான ஆத்மீக சீர்திருத்தத்தை விளக்குகிறது. 31:4-6 வரையுள்ள வசனங்கள் இந்தச் சீர்திருத்தத்தின் ஒருபகுதியாக விசுவாசத்தோடு லேவியருக்கு தசமபாகம் அளிக்கவேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இதற்குப் பிறகு நெகேமியா 10ம் அதிகாரத்தில் இதுபற்றி வாசிக்கிறோம். நெகேமியா தன் காலத்தில் மறுபடியும் அழிவடைந்திருந்த ஆலய மதில்களைக் கட்டிமுடித்து ஆராதனை சீர்திருத்தங்களை ஏற்படுத்தியபோது அதில் லேவியருக்கு தசமபாகம் அளிப்பதும் ஒரு பகுதியாக இருந்தது. அதுபற்றி நெகே 10:34-37 வரையுள்ள வசனங்களில் வாசிக்கலாம்.

பழைய ஏற்பாட்டில் கடைசிப் புத்தகமான மல்கியாவும் தசமபாகம் பற்றி வலியுறுத்துகிறது. நெகேமியாவோடு திரும்பிவந்து ஆலயப்பணி செய்த மக்கள் ஆர்வம்குன்றி ஆத்மீக வலிமையிழந்து கர்த்தரின் வார்த்தைகளை மறந்து மீறிநடந்தபோது கர்த்தரின் வார்த்தை அவர்களுக்கு வந்தது. அவற்றில் ஒன்றாக தசமபாகத்தை விசுவாசத்தோடு கர்த்தருக்கு அளிப்பதைக் கர்த்தர் மறுபடியும் நினைவுபடுத்தாமல் போகவில்லை. மல்கியா 3:7-8 ஐ வாசித்துப் பாருங்கள். இந்த இடத்தில் கர்த்தர், ‘உன்முற்பிதாக்களின் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்த என்னுடைய நியமங்களை விட்டு நீ விலகிப்போனாய்’ என்று கர்த்தர் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். அவற்றில் ஒன்று கர்த்தருக்கு தசமபாகத்தை அளிப்பது. தசமபாகத்தைக் கர்த்தருக்கு விசுவாசத்தோடு கொடுக்காமலிருப்பதை அவர் திருட்டுக்கு ஒப்பிட்டு பத்துக்கட்டளைகளில் ஒன்றை மீறுவதாகக் காட்டியிருக்கிறார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். கர்த்தரிடமே திருடுவதைப் போன்ற கொடுமை ஒன்றில்லை.

புதிய ஏற்பாட்டில் தசமபாகம்

கர்த்தர் மட்டுமே நாம் அவருக்கு எந்தத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று கட்டளையிட முடியும். பழைய ஏற்பாட்டில் அவர் திரும்பத் திரும்ப அதைக் கட்டளையிட்டிருப்பதால், புதிய ஏற்பாட்டில் அதில் எந்த மாற்றமும் கொண்டுவரவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே அதன் அவசியத்தை மத் 23:23ல் மறைமுகமாக வலியுறுத்தியிருக்கிறார். வேதபாரகரும், பரிசேயர்களும் செய்த செயல்களில் குறைகண்ட ஆண்டவர் அவர்களுடைய போலித்தனத்தை இந்த வசனத்தில் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் தசமபாகம் செலுத்தவேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்திருக்கிறார்கள். ஆனால், நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும் கொண்டிருக்கவில்லை. இயேசு இதற்காக அவர்கள் தசமபாகம் செலுத்தவேண்டாம் என்றோ, அதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்றோ சொல்லவில்லை. ‘இவைகளையும் செய்யவேண்டும்’ என்று அவர் நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும் ஆணித்தரமாக வலியுறுத்தி, அத்தோடு ‘அவைகளையும் விடாதிருக்கவேண்டும்’ என்று தசமபாகம் செலுத்தவேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறார். இந்த இடத்தில் தசமபாகம் செலுத்துவதில் இயேசு தன் அதிகாரத்தை அழுத்தமாகப் பதிய வைப்பதைக் கவனிக்கவேண்டும்.

அடுத்ததாக 1 கொரிந்தியர் 9:13-14ஐக் கவனியுங்கள். 14ம் வசனத்தில் காணப்படும் ‘அந்தப்படியே’ என்ற வார்த்தை இந்த இடத்தில் முக்கியமானது. இந்த இருவசனங்களிலும் தசமபாகம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. இருந்தபோதும், அது உள்ளடக்கமாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. 13ம் வசனம் மிகத்தெளிவாக ஆலயத்தில் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்களும், பலிபீடத்தில் பணிபுரிகிறவர்களும் அங்கிருப்பவைகளை அனுபவிப்பதில் பங்கிருக்கிறது என்பதைப் பவுல் நினைவுறுத்துகிறார். இன்னொருவிதத்தில் சொல்லப் போனால் பழைய ஏற்பாட்டு மோசேயின் நிர்வாகத்தின்படி ஆலயத்தில் பணிபுரியும் ஆசாரியர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ள வழிசெய்யப்பட்டிருந்தது. அந்த வழி தசமபாகமே என்பதைப் பவுல் அந்த வார்த்தையைப் பயன்படுத்தாமல் இங்கு சுட்டிக்காட்டுகிறார். அந்தப்படி, அதாவது அதேபோல் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்கள் அந்தப் பணிமூலம் பிழைக்கவேண்டும் என்கிறார் பவுல். பழைய ஏற்பாட்டு முறையைப் பின்பற்றி புதிய ஏற்பாட்டில் ஊழியத்தில் இருப்பவர்களின் தேவை கவனிக்கப்பட வேண்டும் என்பதைப் பவுலின் போதனை. பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட அந்த முறையான தசமபாகம் புதிய ஏற்பாட்டிலும் இந்தத் தேவையை நிறைவேற்றப் பயன்படுத்தப்படவேண்டும் என்பதை ‘அந்தப்படி’ என்ற வார்த்தை வலியுறுத்திக்காட்டுகிறது.

அடுத்ததாக 1 கொரிந்தியர் 16:1-2 ஐக் கவனியுங்கள். இங்கும் தசமபாகம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. ஆனால், அதுவே இந்தப் பகுதியில் தெளிவாக உள்ளடக்கமாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள். நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.

2ம் வசனத்தில் ‘சேர்த்து’ என்பது எதைக்குறிக்கிறது? இந்த வார்த்தை திடீரென அந்நாளில் செய்யவேண்டியதைக் குறிக்காமல் ஏற்கனவே திட்டமிட்டுச் செய்யவேண்டிய ஒரு கடமையைக் குறிக்கிறது. 2ம் வசனத்தில் ‘தன்னிடத்தில் சேர்த்துவைக்கக்கடவன்’ என்றிருப்பதற்குக் காரணம் என்ன? இந்த வார்த்தைப் பிரயோகம் தெளிவாக மல்கியா 3:10ல் சொல்லப்பட்டதை நினைவூட்டுகிறது. அந்த வசனத்தில் ‘பண்டகசாலை’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மல்கியாவில், ‘தசமபாகங்களையெல்லாம் பண்டகசாலைக்குக் கொண்டுவாருங்கள்’ என்றிருக்கிறது. 1 கொரிந்தியர் 16:2ல் பவுல் என்ன சொல்லுகிறார்? வாரத்தின் முதல் நாளில், அவனவன் சேர்த்துவைக்கக் கடவன்’ என்கிறார். இது தெளிவாக மல்கியா 3ல் குறிப்பிடப்பட்டிருக்கும் அதே உண்மைதான்.

(1 கொரிந்தியர் 16:2ல் ஆங்கிலத்தில் treasuring up or storing என்றிருக்கிறது. அதை store என்றும் சொல்லலாம். இதற்குள் சேர்த்துவைக்கும் இடம் என்ற கருத்தும் இருக்கிறது. அதுவே மல்கியாவில் தெளிவாக ‘பண்டகசாலை’ என்றிருக்கிறது. இந்தப் பழைய ஏற்பாட்டுப் பதத்திற்கும் 1 கொரிந்தியர் 16:2ல் காணப்படும் ‘சேர்த்துவைத்தல்’ என்ற பதத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. மல்கியாவில் சொல்லப்பட்டதே இங்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அத்தோடு இந்த இடத்தில் இந்த வசனத்தை தசமபாகம் அளிப்பதற்கு ஆதாரமாகப் பிங்க் காட்டுவதற்குக் காரணம், வாரத்தின் முதல் நாளிலேயே சபையில் காணிக்கை எடுக்கப்பட்டது. விசுவாசிகள் வாரத்தின் முதல் நாளிலேயே தசமபாகம் மற்றும் ஏனைய காணிக்கைகளையும் சபையில் கொடுத்தனர். ஆகவே, இந்தப் பகுதி உள்ளடக்கமாக தசமபாகமளிப்பதை வலியுறுத்துகிறது. – ஆர். பாலா)

அதுமட்டுமல்ல, இதைத் திடீரென்று உள்ளத்தில் ஏற்படுகின்ற ஒரு உந்துதலின் அடிப்படையில் செய்யாமல், முன்கூட்டியே திட்டமிட்டு வாரத்தின் முதல்நாளில் செய்யவேண்டும் என்கிறது வசனம். அத்தோடு, 2ம் வசனம் ‘ஒவ்வொருவருடைய வருமானத்திற்கு ஏற்றபடி’ அதைத் தீர்மானித்து ஒதுக்கிவைக்கவேண்டும் என்கிறது. ஒவ்வொருவரும் தன் மனம்போனபடி அதைச் செய்யவேண்டும் என்றோ தன் இருதயம் வழிநடத்தியபடி அதைச் செய்யவேண்டும் என்றோ வசனம் சொல்லவில்லை. ‘ஒவ்வொருவரும்’ . . . ‘தன் வருமான வளர்ச்சிக்குத் தக்கபடி’ அதைச் செய்யவேண்டும் என்கிறார் பவுல். இதிலிருந்துதான் proportionate giving (தன் தன் வரவுக்குத் தக்கதாக) என்ற முறையை இன்று திருச்சபை பின்பற்றுகிறது. அதாவது, வருமான வளர்ச்சிக்கு பொருந்திவருகிற தொகையை ஆராய்ந்து தீர்மானித்துக் கொடுத்தல் என்பது இதற்கான விளக்கம். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், என்னுடைய வருமானம் கடந்த வருடத்தைவிட இருமடங்கு அதிகரித்திருந்தால், அந்த அதிகரித்திருக்கும் வருமானத்திற்குத் தக்கதாக, வருமான வளர்ச்சியின் அடிப்படையிலான தொகையைத் தீர்மானித்துக் கொடுக்கவேண்டும். என்னுடைய தசமபாகம் அந்த வருடத்தில் என் வருமானத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவகையில் இருக்கவேண்டும்.

‘வரவுக்குத் தக்கதாக’ எந்த அடிப்படையில் இந்தத் தொகையை ஒவ்வொருவரும் தீர்மானிப்பது? 2 கொரிந்தியர் 8:13, 15 வசனங்களில் பவுல், ‘சமநிலையிலிருக்கும்படி’ என்றும் ‘சமநிலைப் பிரமாணத்தின்படியே’ என்றும் சொல்லியிருக்கிறார். இந்தப் பகுதி முழுவதும் கர்த்தருக்குக் காணிக்கை கொடுக்கும் வழக்கத்தைப் பற்றியே விளக்குகிறது என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். இந்தப் பகுதியில் பவுல் விளக்குகிற ‘சமநிலைப் பிரமாணம்’ தசமபாகமான ‘பத்தில் ஒருபகுதியைத்’ தவிர வேறில்லை. பத்தில் ஒரு பகுதியையே வருமானத்திற்கு ஏற்றபடி கர்த்தருக்குக் கொடுக்கும்படி பழைய ஏற்பாடு சொல்லுகிறது. அந்த சமநிலைப் பிரமாணத்தையே பவுல் இங்கு கொரிந்தியருக்கு நினைவூட்டுகிறார். அன்று கிறிஸ்தவர்களுக்கு இது பற்றித் தெரிந்திருந்ததால் பவுல் நீண்ட விளக்கத்தை அளிக்கவில்லை. பத்தில் ஒருபகுதியைக் கொடுப்பதையே ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் நியதியாக ஏற்படுத்தித்தந்திருக்கிறார். அது ஒவ்வொருவருடைய வருமானத்திற்கும் ஏற்றவகையில் அமைந்திருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் இன்னுமொரு பகுதியையும் கவனிக்காமல் போகக்கூடாது. எபிரெயர் 7:5ம் 6ம். இந்த 7ம் அதிகாரத்தில் அப்போஸ்தலர் பவுல் மூலமாக பரிசுத்த ஆவியானவர் லேவியரின் ஆசாரியத்துவத்தைவிட கிறிஸ்துவின் ஆசாரியத்துவம் மகிமையானது என்று விளக்குகிறார். அதை உறுதிப்படுத்தும் ஒரு காரணியாக மெல்கிசேதேக்கின் வழியில் வந்த கிறிஸ்துவின் ஆசாரியத்துவம், மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவத்தைவிட சிறப்பானது என்று காட்டுகிறார். அதை விளக்கும்போது, தெரிந்துகொள்ளப்பட்ட மக்களின் தகப்பனான ஆபிரகாம் மெல்கிசேதேக்கின் சிறப்பை உணர்ந்து அவனுக்கு தசமபாகம் செலுத்தினான் என்கிறார் எபிரெயருக்கு எழுதியவர்.

இந்த ஏழாம் அதிகாரத்தின் உதாரணமே ஆதியாகமம் 14ல் விளக்கப்படுகிறது. அங்கே, கிறிஸ்துவின் ஒப்பாளியாகிய மெல்கிசேதேக்குவைப் பற்றி மூன்று விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

    1. மெல்கிசேதேக்கு ராஜாவாகவும், ஆசாரியனாகவும் இருக்கிறான்.
    2. கிறிஸ்துவுக்கு ஒப்பாளியான அவன், தன்னுடைய பெயரில் நீதியையும், சமாதானத்தையும் கொண்டிருக்கிறான். மெல்கிசேதேக்கு என்றால் நீதியின் அரசன் என்றும், சாலேம் என்றால் சமாதானம் என்றும் அர்த்தம்.
    3. கிறிஸ்துவுக்கு ஒப்பாளியாகிய மெல்கிசேதேக்கு ஆபிரகாமை ஆசீர்வதித்து அவனுக்கு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுபடுத்தும் அடையாளங்களாக அப்பத்தையும், திராட்சை ரசத்தையும் கொண்டுவந்தான்.

மெல்கிசேதேக்கு கிறிஸ்துவுக்கு ஒப்பாளியாக இருந்தது மட்டுமல்லாமல், ஆபிரகாமும் விசுவாசிகளின் தகப்பனாக அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குணாதிசயத்தைக் கொண்டவனாகக் காட்டப்படுகிறார். ஆபிரகாம் மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவத்தை உணர்ந்து மதித்து, கர்த்தரின் துணையோடு தான் போரில் அரசர்களை வென்று கைப்பற்றிய பொருள்கள் அனைத்திலும் இருந்து தசமபாகத்தை மெல்கிசேதேக்குவுக்கு அளித்தான். அந்தச் செயல் எபிரெயருக்கு எழுதியவரால் நமக்குச் சுட்டிக்காட்டப்பட்டு கிறிஸ்துவின் ஆசாரியத்துவத்தின் கீழ் வந்திருக்கும் நாம் ஆபிரகாமின் உதாரணத்தைப் பின்பற்றி கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து விசுவாசத்தோடு அவருக்குரிய தசமபாகத்தை செலுத்தவேண்டும் என்று உணர்த்துகிறார். இந்த விஷயத்தில் நம் தகப்பனாகிய ஆபிரகாம் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார் என்கிறார் எபிரெயருக்கு எழுதியவர். வேதத்தில் கடைசித் தடவையாக தசமபாகம் குறிப்பிடப்பட்டிருக்கும் எபிரெயருக்கு எழுதியவரின் நிருபம் (7ம் அதி) அதைக் கிறிஸ்துவோடு நேரடியாக இணைத்துக் காட்டுகிறார். பழைய ஏற்பாட்டில் தசமபாகம் ஆசாரியர்களிடம் கொண்டுவரப்பட்டு பண்டகசாலையில் வைக்கப்பட்டது. ஆனால், கடைசித் தடவையாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தசமபாகம் நேரடியாக கிறிஸ்துவோடு இணைத்துக்காட்டப்பட்டு, கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்து தசமபாகம் செலுத்தவேண்டிய நம்முடைய பொறுப்பு திருச்சபைக்குத் தலைவரான அவருக்குக் கீழாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

நம்முடைய வருமானமனைத்திலும் பத்தில் ஒன்றை, ஒழுக்கத்தோடும் சிரத்தையோடும். விசுவாசத்தோடும் ஒதுக்கிவைத்து கர்த்தருடைய பணிக்குக் கொடுப்பதையே கர்த்தர் தன் ஊழியங்களுக்குரிய பணத்தேவையைச் சந்திக்கும் முறையாக ஏற்படுத்தியிருக்கிறார். விசுவாசிகள் இதை பக்தி சிரத்தையோடு செய்யும்போது கர்த்தரின் பணிகளுக்குக் குறைவேற்படாததோடு, அவை கடனில் போகவேண்டிய அவசியமும் ஏற்படாது. தசமபாகம் கொடுப்பதில் குறைவேற்படுகின்றபோதுதான் கர்த்தரின் பணிக்குக் குறைவேற்பட்டு அவிசுவாசிகளின் உதவியை அதற்காக நாடுவதும், உலகத்து வழிகளைப் பின்பற்றிப் பணம்சேர்க்கும் அநாவசியச் செயல்களும் உருவாகின்றன.

  1. புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கான தசமபாகம்

கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருடைய இருதயத்தின் ஆழத்திலும் தசமபாகம் செலுத்தவேண்டும் என்ற நம்பிக்கை நிச்சயமாகக் காணப்படும். அதேநேரம் இந்தக் கடமையைச் செய்யாமலிருக்கிறோமே என்ற தவிப்பும் அல்லது இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளாமலிருக்கிறோமே என்ற எண்ணமும் காணப்படும். இரண்டுமே உண்மை. சிலர், மற்றவர்கள் தசமபாகம் செலுத்தாமலிருக்கிறார்களே என்ற குற்றச்சாட்டை எழுப்பலாம். வேறுசிலர், இந்தக் காலத்தில் இது அத்தனை கட்டாயமானதாக இருந்தால் பிரசங்கிகள் ஏன் இதுபற்றிப் பிரசங்கிக்காமல் இருக்கிறார்கள் என்று கேட்கலாம். நண்பர்களே! பிரசங்கிகள் அநேக விஷயங்களைப்பற்றிப் பிரசங்கிக்காமல் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். அதனால் உங்களுடைய குற்றச்சாட்டில் எந்தப் பொருளும் இல்லை.

இதுவரை நாம் மூன்று விஷயங்களைக் கவனித்திருக்கிறோம்.

  1. சீனாய் மலையில் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே தசமபாகம் அளிக்கும் முறை இருந்து வந்திருக்கிறது. அதை நாம் ஆபிரகாம் ஆசாரியனான மெல்கிசேதேக்குவுக்கு தசமபாகமளித்ததிலிருந்து அறிந்துகொள்கிறோம். அத்தோடு யாக்கோபு Padan-aramக்கு போகும் வழியில் கர்த்தரிடம் இருந்து வெளிப்படுத்தலைப் பெற்றுக்கொண்டபோது அவருக்குப் பத்தில் ஒன்றைக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்தான்.
  2. நியாயப்பிரமாணத்தைக் கர்த்தர் அளித்தபோது (சீனாய்) அதற்குள் தசமபாகமளித்தலும் இணைக்கப்பட்டது. ஆனால், நியாயப்பிரமாணத்தில் இருந்த அத்தனையையும் இஸ்ரவேல் அலட்சியப்படுத்தியபோது தசமபாகமளித்தலையும் மல்கியாவின் காலம்வரை அலட்சியம் செய்திருந்தது. அதனால்தான் மல்கியாவின் காலத்தில் கர்த்தர் தெளிவாக மல்கியா மூலம் தன்னுடைய மக்கள் தன்னிடம் திருடியதாகக் கர்த்தர் குற்றஞ்சாட்டினார்.
  3. புதிய ஏற்பாட்டில் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் புதிய ஏற்பாட்டு மக்கள் தசமபாகமளிக்கவேண்டும் என்பதை, தசமபாகம் சடங்காச்சாரிய முறைகளில் ஒன்றல்ல அது ஒழுக்கநியதிக் கோட்பாட்டின் ஒரு பகுதி என்பதன் மூலம் ஆண்டவர் விளக்கியிருக்கிறார். அது ஒரு காலப்பகுதிக்கு மட்டும் ஏற்படுத்தப்பட்டதாக அல்லாமல் எல்லாக் காலப்பகுதிகளிலும் அளிக்கப்பட வேண்டியதொன்றாக வேதம் விளக்குகிறது.

இனி ஒருபடிமேலே போய் இதைக் கவனிப்போம். தசமபாகமளிப்பது பழைய ஏற்பாட்டுக் காலத்து மக்களைவிட அதிகமாகப் புதிய ஏற்பாட்டு மக்களுக்குக் கட்டாயமானதாகக் காணப்படுகின்றது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு: முதலாவது, லூக்கா 12:48ல் தரப்பட்டுள்ள விதியான, எவருக்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்களிடம் அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்றது என்பதன்படி புதிய ஏற்பாட்டு மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. பழைய ஏற்பாட்டு மக்களைவிட அதிகமாக வசதிகளையும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் நாம் அடைந்திருப்பதால் நம்முடைய கடமைப்பாடு அதிகமானதாக இருக்கிறது. நியாயப்பிரமாணத்தைவிட கிருபை மேலானதாக இருப்பதாலும், பயத்தைவிட அன்பு பெரிதாக இருப்பதாலும், மாம்சத்தைவிட பரிசுத்தஆவியானவர் வல்லமையானவராக இருப்பதாலும், ஆண்டவருக்கு விசுவாசமாயிருக்க நம்மை ஊக்கப்படுத்தும் ஆழமான காரணிகள் தசமபாகமளிக்க வேண்டிய நம்முடைய கடமையைப் பெரிதாக்குகிறது. ஏனைய எல்லாக்கட்டளைகளையும் பின்பற்றும் நாம் அதை எந்தக் காரணத்தால் செய்கிறோமோ, நாட்டுச்சட்டங்களைப் பின்பற்றும் நாம் அதை எதற்காகச் செய்கிறோமோ அதே காரணத்துக்காக தசமபாகமளிப்பதையும் செய்யவேண்டும்; செய்யவேண்டும் என்பதற்காக அல்ல அதைச் செய்யவிரும்புவதால் செய்யவேண்டும்.

கிறிஸ்துவின் ஆசாரியப்பணி மெல்கிசேதேக்கின் ஆசாரியப்பணியையும் விடவும், ஆரோனின் ஆசாரியப்பணியையும்விடவும், லேவியரின் ஆசாரியப்பணியைவிடவும் மேலானதாக இருப்பதால் கிறிஸ்துவுக்கு நாம் தசமபாகமளிக்கவேண்டியது மாபெரும் கடமையாக இருக்கிறது. இயேசுவைவிடத் தரத்தில் கீழானவர்களாக இருந்தவர்களுக்கு, நம்மைவிடக் குறைவான ஆசீர்வாதங்களையும், வசதிகளையும் கொண்டிருந்த பழைய ஏற்பாட்டு மக்கள் தசமபாகமளித்திருப்பதால், அவர்களையும்விட அதிக வசதிகளையும் ஆசீர்வாதங்களையும் அடைந்திருக்கும் நாம் தசமபாகமளிக்கவேண்டியது நம்முடைய பெருங்கடமையாக இருக்கின்றது.

கர்த்தர் ஏன் தசமபாகமளிப்பதை ஏற்படுத்தியிருக்கிறார்?

  1. முதலாவதாக, படைத்தவரின் உரிமைகளை நாம் தொடர்ந்து அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக. நம்மைப் படைத்தவர் நாம் அவரை மகிமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார். அவர் நம்முடைய நாட்களில் ஏழில் ஒன்றையும், நம்முடைய வருமானத்தில் பத்தில் ஒன்றையும் அவருக்குத் தந்து அவரை மகிமைப்படுத்தவேண்டும் என்கிறார். பத்தில் ஒன்றை அவருக்குக் கொடுப்பது, நம்முடைய உலக ஆசீர்வாதங்கள் அனைத்தும் அவரிடம் இருந்தே வருகின்றன என்பதை அங்கீகரிக்கும் செயலாகும்.
  2. அடுத்ததாக, இயற்கையிலேயே நாம் பொருளாசையுள்ளவர்களாக இருப்பதால் அதற்கு நிவாரணமாக ஆண்டவர் இதை நியமித்திருக்கிறார். பத்துக்கட்டளைகளில் ஒன்று நாம் பொருளாசையுள்ளவர்களாக இருக்கக்கூடாது என்பது (யாத் 20:7). அதனால்தான் இயேசுவும் தன் சீடர்களைப் பார்த்து, ‘பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்’ (லூக்கா 12:15) என்றார். பொருளாசையிலிருந்து நம்மைப் பாதுகாக்கவே, சுயநல இச்சையில் இருந்து விடுவிக்கவே கர்த்தர் தசமபாகத்தை அவருக்குக் கொடுப்பதை நியமித்திருக்கிறார். இது நாம் ஆசீர்வாதத்தை அடையவே நியமிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய நன்மைக்காகவே நியமிக்கப்பட்டிருக்கிறது.
  3. தன்னுடைய பணிகளில் ஏற்படும் சகலவிதமான பொருளாதாரப் பிரச்சனைக்கும் தீர்வாக இதைக் கர்த்தர் நியமித்திருக்கிறார். இஸ்ரவேலர் தசமபாகத்தை விசுவாசத்தோடு கொடுத்துவந்த காலங்களிலெல்லாம் கர்த்தர் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்த ஆராதனைக்குரியவைகளை அவர்கள் செய்வதற்குப் பிரச்சனையில்லாமலிருந்தது. நம் காலத்தில் கர்த்தருடைய மக்கள் தசமபாகம் அளிப்பதை முறையாக செய்து வருவார்களெனில் கிறிஸ்தவபணிகளுக்கு ஏற்படும் எல்லாவிதமான தொல்லைகளுக்கும் முடிவு ஏற்படும். தசமபாகத்தை முறையாகக் கொடுக்கும் எந்த சபையும் வெட்கப்படுகிற நிலை ஏற்படாது என்பதை நாம் உறுதியாக நம்புகிறேன். இதுவே கிராம சபை ஊழியங்களுக்கும், அருட்பணி ஊழியங்களுக்கும் பொருந்தும். உங்கள் சபையில் பத்து ஆண் கிறிஸ்தவர்கள் இருந்து அவர்கள் தங்கள் வருமானத்தில் பத்தில் ஒன்றை ஆண்டவருக்காக முறையாகக் கொடுத்தால் நிச்சயம் உங்களால் ஓர் ஊழியக்காரரை நிரந்தரமாகப் பணியில் அமர்த்தி அவருடைய தேவையைத் தீர்க்க முடியும். எந்தவொரு சபை ஊழியக்காரரும், தன் தேவையைத் தீர்த்து வைக்க உதவும் அந்த சபை மக்களுக்குக் கிடைக்கும் சராசரி வருமானத்தைவிட அதிகமாக வாங்குவதற்கு ஆசைப்படக்கூடாது.

அதனால், உங்கள் சபையில் பத்து ஆண் அங்கத்தவர்கள் இருந்து அவர்கள் தங்கள் வருமானத்தில் பத்தில் ஒன்றை சபைக்களிப்பார்களானால் – அது எதுவாக இருந்தாலும் – உங்கள் மத்தியில் ஓர் ஊழியக்காரரை நியமித்து அவருடைய தேவைகளை அதால் நிறைவேற்ற முடியும். அதுவே அருட்பணி ஊழியப்பிரச்சனைகளைத் தீர்க்க கர்த்தர் நியமித்திருக்கும் வழி. உங்கள் சபையில் உழைக்கும் பத்து ஆண் சீனர்கள் இருந்தால் எந்த வெளிநாட்டுத் துணையிலும் தங்கியிருக்காமல் நீங்களே உங்கள் சபைத்தேவைகளைக் கவனித்துக்கொள்ள முடியும். இந்தியாவிலும், சீனாவிலும் ஐம்பது வருடங்களுக்கு மேலாக சபையாக அமைக்கப்பட்டிருந்தபோதும், தங்களுடைய பணத்தேவைக்காக அங்கிருக்கும் சபைகள் ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் இருக்கும் சபைகளில் தொடர்ந்து தங்கியிருப்பது பெரும் ஊழலும், வெட்கப்பட வேண்டிய செயலுமாகும். அதற்குக் காரணமென்ன? கர்த்தரின் வேதத்தை அவர்கள் பின்பற்றாததுதான். கிறிஸ்தவ பணத்தேவைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றிய அடிப்படைப் போதனைகள் அவர்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கவில்லை. அதற்காகவே கர்த்தர் தசமபாகமளிப்பதை நியமித்திருக்கிறார். அவருடைய பணிகளின் பணத்தேவைகளை அதுவே தீர்த்துவைக்கிறது. தசமபாகமளிக்கும் எவரும் கடன்தொல்லைகளில் அகப்பட்டுக்கொள்ள மாட்டார்கள்.

  1. அடுத்ததாக, நம்முடைய விசுவாசத்தை சோதிப்பதற்காகவும் கர்த்தர் இதை நியமித்திருக்கிறார்; முக்கியமாக, இளம் வயதான கிறிஸ்தவர்களுடைய விசுவாசத்தை சோதிப்பதற்காக. ஓர் இளம் வாலிபன் கர்த்தரை விசுவாசிக்க ஆரம்பித்திருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுவோம். அவன் தன் எதிர்காலத்திற்காக கர்த்தரை நம்பியிருப்பதாகவும், தன்னுடைய இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கர்த்தரின் கையையே நம்பியிருப்பதாகவும் சொல்கிறான். இருந்தாலும் அவன் கர்த்தருக்கு அந்த வருடத்திற்கு பத்தில் ஒன்றைக் கொடுப்பதற்கு அவரை உறுதியாக நம்பியிருக்கிறானா? நண்பர்களே! தசமபாகம் செலுத்துவது இளைஞர்களில் அவர்களுடைய இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையானவற்றிற்காக ஆண்டவரை நம்பியிருக்கும் ஆவியை வளர்த்துவிடுகிறது.

இரண்டு எதிர்ப்புக் கோஷங்களைக் கவனிப்போம்

தசமபாகம் செலுத்துவது பற்றி ஆத்துமாக்களுக்கு விளக்கும்போது, அவர்களில் சிலர் சொல்லுவார்கள், தன்னுடைய வீட்டாருக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவது ஒரு மனிதனின் கடமை என்று. உண்மைதான், நானும் அதைச் செய்கிறேன். வேதம் அதைச் செய்யும்படிச் சொல்லுகிறது. அப்படிச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. நான் ஒருபடி மேலே போவேன். ஓர் இளைஞன் தன் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தன் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளுவது எல்லாவிதத்திலும் சரியானதே. ஆனால், அவன் தசமபாகம் செலுத்தாதவனாக இருந்தால் அவனுக்கு இப்போது கிடைக்கும் சம்பளமும் நிச்சயம் தொடரும், விருத்தியாகும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தசமபாகம் செலுத்துகிறவனுக்கு அந்த உத்தரவாதம் கர்த்தரிடம் இருந்து கிடைக்கிறது.

வேறு சிலர் சொல்லுவார்கள், நான் முதலீடு செய்திருந்த பணத்தை இழந்திருக்கிறேன், அதனால் தசமபாகம் செலுத்த முடியவில்லை. ஆம்! தொடர்ந்து ஆண்டவரிடம் திருடினால் இதுபோல் இன்னும் மோசமானவைகள் நிகழத்தான் செய்யும். முதலீடு செய்வதில் நமக்கு ஞானம் மிகவும் தேவைப்படுகிறதுதான், ஆனால், சபைப் பணவிஷயத்தில் நாம் கர்த்தருடைய வார்த்தையை மீறி நடந்துகொண்டிருந்தால் அத்தகைய ஞானத்தை அவர் நமக்கு அளிக்கமாட்டார். நடுத்தர வயதிலோ அல்லது வயோதிப வயதிலோ பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கர்த்தரின் வார்த்தையின் கண்டனத்துக்குள்ளாகி, அதன் முன் குற்றவாளியாக நின்று அவரால் கண்டிக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும் பணக்கஷ்டத்தோடு வாழ்வதற்குக் காரணம் அவர்கள் அநேக வருடங்களாக கர்த்தரிடம் திருடி வாழ்ந்திருப்பதுதான் என்பதை நான் மிக உறுதியாக நம்புகிறேன். மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்! அவர் கொடுத்த பணத்தை அவரை மகிமைப்படுத்தும்விதத்தில் அவருடைய வார்த்தையைப் பின்பற்றி அவருக்குக் கொடுத்திராவிட்டால், அவர்களுக்குக் கொடுப்பதை அவர் நிறுத்திக்கொள்வதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியம் அடையத்தேவையில்லை. (எரேமியா 5:25). நடக்கின்ற ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஒரு காரணம் இருக்கிறது. எல்லா விஷயங்களுக்கும் வேதம் விளக்கமளிக்கிறது.

கர்த்தரை சோதிப்பது

இனி வசனத்திற்கு நேரடியாக வருவோம். இதில் மூன்று விஷயங்களை நான் கவனிக்க விரும்புகிறேன்.

மல்கியா 3:10, ‘என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.’

  1. சோதித்துப் பாருங்கள்– கோர்டில் கூண்டில் நிற்பதைப்போலக் கர்த்தர் தன்னைச் சோதித்துப் பார்க்கும்படி அறைகூவலிடுகிறார். அதுவும் தசமபாகம் செலுத்துவதில் தன்னைச் சோதிக்கும்படிக் கூறுகிறார். பத்தில் ஒன்றை அவருக்குக் கொடுத்து அவருடைய வாக்குறுதியைச் சோதிக்கும்படிச் சொல்லுகிறார். விசுவாசத்தோடும், வழமையாகவும், முறையாகவும் ஆண்டவருக்கு தசமபாகத்தைத் செலுத்தி அவர் சொன்னபடி நம்மை ஆசீர்வதிக்கிறாரா இல்லையா என்று தம்மைச் சோதிக்கும்படிக் கர்த்தர் கேட்கிறார். தசமபாகம் கொடுப்பதன் மூலம் நாம் கர்த்தர் இருக்கிறார் என்பதையும், நம்முடைய உலகத்தேவைகள் அனைத்தின் மேலும் அதிகாரமுள்ளவராகவும் இருக்கிறார் என்பதையும் நாம் சோதித்து அறிந்துகொள்ளலாம். வழமையாகவும், விசுவாசத்தோடும், முறையாகவும் உங்களுடைய மொத்த வருமானத்தில் இருந்து பத்தில் ஒன்றை ஆண்டவருக்காக அளிப்பீர்களானால் அவர் உங்களைக் கைவிடுகிறவரா? இல்லையா என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளலாம். என்னை ‘சோதித்துப் பார், சோதித்துப் பார்’ என்று அவர் கேட்கிறார்.

விசுவாசியே! உன்னுடைய நாள் வருமானம் நூறு ரூபாயாக மட்டும் இருந்தாலும் பரவாயில்லை. அதை வைத்து நீ கஷ்டத்தோடு உன்தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நீ பாடுபட்டாலும் பரவாயில்லை. அந்த நூறு ரூபாயில் பத்தில் ஒன்றை ஒதுக்கிவைத்து ஆண்டவருக்குக் கொடுத்துப் பார், அவர் உனக்குக் கடனாளியாக இருக்கப்போகிறாரா? என்பதை நீ அறிந்துகொள்வாய். ‘என்னைச் சோதித்துப் பார்’ என்று அவர் உன்னைக் கேட்கிறார். நான் உன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவனா என்பதை என்னைச் சோதித்து அறிந்துகொள் என்கிறார் கர்த்தர். உன் விசுவாசம் வீண்போகாதபடி செய்கிறேனா என்பதை என்னைச் சோதித்துப் பார்த்து அறிந்துகொள் என்கிறார் அவர்.

  1. வானத்தின் பலகணிகள் திறக்கப்படும்– இதற்கு அர்த்தம் ‘எல்லையில்லா ஆசீர்வாதம்’. அது ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைக் குறிப்பிடவில்லை. ஏனென்றால், தசமபாகம் செலுத்தி ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை அடைய முடியாது. அப்படியானால் அது உலக ஆசீர்வாதமா? ஒருவிதத்தில் அதைத்தான் குறிப்பிடுகிறார். பெற்றோரை மகிமைப்படுத்துகிறவர்களின் வாழ்நாளை அதிகரிப்பேன் என்று ஆண்டவர் சொன்னதுபோல் இதைச் செய்வதாக வாக்குறுதி தருகிறார். அதாவது, நம்முடைய வருமானத்தைக் கூட்டுவதாக அவர் வாக்குறுதி தருகிறார். இது கர்த்தருடைய பணத்தைத் திருடாது தசமபாகத்தை முறையாகக் கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்டிகருக்கும் வாக்குறுதி.

இதையே நாம் ஆதியாகமம் 7:11-12லும் வாசிக்கிறோம். இதே வார்த்தைப் பிரயோகத்தை அங்கு காணலாம். (மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.) ஆதியாகமம் 7ல் பயன்படுத்தப்பட்ட அதே உண்மையையே மல்கியா 3ல் வாசிக்கிறோம். வானத்தில் பலகணிகளைத் திறப்பது என்பது அளவில்லாத ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது. அது ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைக் குறிப்பிடவில்லை. ஏனெனில், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாம் எதையும் கொடுத்து வாங்கிவிட முடியாது. அப்படியானால் இது உலக ஆசீர்வாதத்தைக் குறிக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம். ஒருவிதத்தில் அப்படித்தான். ஏனெனில் தன்னை மகிமைப்படுத்துகிறவர்களை அவர் மகிமைப்படுத்துவேன் என்று சொல்லியிருக்கிறார். அதிகமாகத் தனக்குக் கொடுக்கிறவர்களுக்கு அதிகமாகவே அளிப்பேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். தங்களுடைய பெற்றோர்களைக் கனப்படுத்துபவர்களுக்கு அதிக வாழ்நாட்களை அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லியிருப்பது போல்தான் இதுவும்.

கர்த்தர் வானத்தில் பலகணிகளைத் திறப்பேன் என்று சொல்கிறபோது உங்கள் வருமானத்தை அதிகரிக்கச் செய்வேன் என்கிறார் அவர். எத்தனையோ ஆத்துமாக்கள் வறுமையில் இருப்பதற்குக் காரணம் அவர்கள் கர்த்தர் அளித்துள்ள தங்களுடைய வருமானத்தில் விசுவாசமுள்ளவர்களாக இருந்திராததினால்தான். அவர்கள் கர்த்தரிடம் திருடியிருக்கிறார்கள்! அவர்கள் வாழ்க்கையில் கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அனுபவித்ததில் ஆச்சரியமில்லை. நம்மில் சிலர் மறுபடியும் வேதத்தைத் திறந்து பார்த்து இந்த உலக ஆசீர்வாதங்களைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளையும், போதனைகளையும் மறுபடியும் வாசித்துப் பார்க்க வேண்டும். சிலர் பழைய ஏற்பாட்டு ஆண்டவரே புதிய ஏற்பாட்டு ஆண்டவராகவும், மாறாதவராகவும் இருக்கிறார் என்பதை உணரவேண்டியவர்களாக இருக்கிறார்கள். கர்த்தர் மாறுவதில்லை.

  1. இடங்கொள்ளாமல் போகுமட்டும்– இந்த இடத்தில் ஆங்கில வேத மொழிபெயர்ப்பாளர்கள் இதை எப்படி மொழிபெயர்ப்பது என்பது புரியாமல் இருந்திருக்கிறார்கள். ஆங்கில வேதமொழிபெயர்ப்பில் (மல்கியா 3:10) சில வார்த்தைகள் சாய்ந்த எழுத்துக்களில் இருக்கின்றன. அதற்குக் காரணம் அவை மூல வசனத்தில் இல்லை. வசனத்தைப் புரிந்துகொள்ள வசதியாக மொழிபெயர்ப்பாளர் அந்தச் சாய்ந்த எழுத்தில் இருக்கும் வார்த்தைகளை இணைத்திருக்கிறார். (இதைத் தமிழ் மொழிபெயர்ப்பில் காணமுடியாது). இதை எழுத்துபூர்வமாக வாசித்தால், ‘தேவையானவை மட்டுமல்ல தேவைக்கு மேலானதையும்’ கொடுப்பேன் என்கிறார் கர்த்தர். 2 நாளாகமம் 31:10ஐக் கவனியுங்கள், ‘சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தோம்; இன்னும் மிச்சமும் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்.’

இதற்கு முன்புள்ள வசனங்களை வாசித்தீர்களானால் எசேக்கியாவின் காலத்தில் அவன் தசமபாகங்களைச் செலுத்துவதை மறுபடியும் ஆரம்பித்து வைத்ததால் மக்கள் ஆண்டவருடைய ஆலயத்துக்கு தசமபாகங்களைச் செலுத்த ஆரம்பித்து ஆசாரியரின் தேவைகள் நிறைவேறியது மட்டுமல்ல; தேவைக்கு மேலாக காணிக்கை குவிந்திருந்தது. நம்முடைய தேவையை மட்டும் போக்குவது அல்ல தேவைக்கு மேலாகவும் கர்த்தர் வருமானத்தைக் கொடுப்பார் என்பது இதற்கு அர்த்தம்.

ஜோன் பனியன் சொல்கிறார், ‘அங்கே ஒரு மனிதன் இருக்கிறான். சிலர் அவனைப் பயித்தியம் என்றார்கள்; அதிகதிகமாக அவன் கொடுத்தபோது, அதிகமானவற்றை அவன் அடைந்தான்.’

நடைமுறை ஆலோசனை

    1. உங்களுடைய வருமானத்தில் இருந்து, அது எந்த வருமானமாக இருந்தாலும் (சம்பளம், ஏனைய வருமானம், கிடைக்கும் ஈவுகள்) அவற்றில் இருந்து செலவழிக்கு முன் பத்தில் ஒன்றை ஒதுக்கி வைத்து ஆண்டவருக்குக் கொடுங்கள். அது கர்த்தருக்குச் சொந்தமானது. உலகத்தில் உங்கள் வேலைத்தளத்தில், வியாபாரத்தில் எத்தனைக் கவனமாக இருக்கிறீர்களோ அதேபோல் இந்த விஷயத்தில் நீங்கள் மிகக் கவனத்தோடும், முறையோடும் செயல்பட வேண்டும். 1 கொரிந்தியர் 16:2ல் பவுல் இதைத்தான் சொல்லுகிறார்.
    2. ஒரு நோட்புக்கை வைத்துக்கொண்டு அதன் ஒரு பக்கத்தில் வாரத்தில் வருகிற வருமானம் அனைத்தையும் எழுதி வையுங்கள். மறுபக்கம், அவற்றில் பத்தில் ஒன்று (தசமபாகம்) எவ்வளவு என்று எழுதுங்கள். அவை கர்த்தரைப் போய்ச் சேரவேண்டியது.

இதழாசிரியரின் பிற்குறிப்பு:

இந்த ஆக்கத்தை வரைந்தளித்துள்ள A.W. பிங்க் தன்னுடைய ஊழிய காலத்தின் நடுப்பகுதியில், 1919ல் சீர்திருத்த விசுவாசத்தை ஏற்றுக்கொண்டு தன்னுடைய பழைய காலசகாப்தக் கோட்பாடு நம்பிக்கைகளுக்கு அடியோடு முழுக்குப்போட்டார். அவருடைய வாழ்வின் இறுதிக்கால நம்பிக்கைகளும், எழுத்துக்களும் சீர்திருத்தப் போதனைகளைத் தழுவியிருந்தன. காலசகாப்தக் கோட்பாட்டு இறையியல் கல்லூரியில் இறையியல் பயின்று சபைப்பணி புரிய ஆரம்பித்த அவருடைய ஊழியப்பணியின் ஆரம்பகாலத்தில் பிங்க் எழுதியிருந்த நூல்கள் சீர்திருத்த விசுவாசத்திற்கு முரணான கொள்கைகளையே பின்பற்றியிருந்தன. பிங்கின் சீர்திருத்த விசுவாச நம்பிக்கைகள் படிப்படியாகவே வளர்ந்திருந்தன.

அவருடைய நூல்களை இன்று பல பதிப்பகத்தாரும், பிங்கின் இறையியல் நம்பிக்கைகளில் படிப்படியாக ஏற்பட்டிருந்த மாற்றத்தை வெளிப்படுத்தாமல், எந்த மாறுதலும் செய்யாது (without editing) வெளியிட்டு வருகிறார்கள். அதனால், ஆரம்ப காலத்தில் பிங்க் எழுதிய நூல்கள் சீர்திருத்தப் போதனைகளின் அடிப்படையில் அமைந்தவையல்ல என்பதை வாசகர்கள் உணராமல் போய்விடுகின்ற ஆபத்து இருக்கின்றது. பிங்கின், ‘கர்த்தரின் இறையாண்மை’ (Sovereignty of God) எனும் நூல் 1919ல் வெளியிடப்பட்டது. அவருடைய சீர்திருத்த நம்பிக்கைகளை வெளிப்படுத்திய முதலாவது நூல் இதுவே. இருந்தும், இந்நூலை The Banner of Truth வெளியிட்டபோது அதில் பல அவசியமான மாற்றங்களைச் செய்தே வெளியிட்டது. அதேநேரம் Backer Publishing Co வெளியிட்ட பதிப்பில் அத்தகைய மாற்றங்களைக் காணமுடியாது. இதேபோல்தான் பிங்கின் ஏனைய நூல்களையும் வாசகர்கள் கவனத்தோடு எந்தப் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார், எந்த ஆண்டில் வெளிவந்தது என்பதைக் கவனித்துப் பார்த்து வாங்குவது அவசியம். பிங்கின் தமிழ் மொழிபெயர்ப்புகளையும் ஆராய்ந்துபார்க்காமல் வாசிக்கக்கூடாது.

1919ல் பிங்க் அமெரிக்காவில் தான் பணிபுரிந்திருந்த சபையை விட்டுவிலகி பியூரிட்டன் எழுத்துக்களை மிகவும் ஆழமாகப் படிக்க ஆரம்பித்தார். அதற்குப் பின்பே படிப்படியாக அவருடைய இறையியல் நம்பிக்கைகள் சீர்திருத்த விசுவாசத்தின் அடிப்படையில் அமைய ஆரம்பித்தன. (இயன் மரே எழுதிய Life of Arthur W Pink (Revised and Enlarged Edition), 2004 ஆர்த்தர் பிங்கின் வாழ்க்கையையும், ஊழியத்தையும், இறையியல் நம்பிக்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் விளக்கும் நூல். வாசிக்க வேண்டிய ஒரு நூல்கூட).

இதை நான் குறிப்பிடுவதற்குக் காரணம், இந்தத் தசமபாகம் என்ற இந்த ஆக்கத்தை எழுதிய ஆர்த்தர் பிங்க், இதை எழுதிய காலப்பகுதியில் திருச்சபை பற்றிய முழுமையான சீர்திருத்த நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை. அவர் தசமபாகத்தைத் தற்காலத்திலும் கர்த்தருக்குக் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி எழுதியிருப்பதை நான் மனமாற வரவேற்கிறேன். தசமபாகம் பற்றி வேத ஆதாரங்களோடு தெளிவாக எழுதப்பட்டிருக்கும் ஆக்கங்களில் இது மிகவும் முக்கியமானது. இதை நல்ல முறையில் வேத ஆய்வு செய்து பிங்க் அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார். அத்தோடு, தசமபாகம் கொடுப்பதால் வரும் ஆசீர்வாதங்களையும் ஆணித்தரமாக இருதயத்தை அசைக்கும் வகையில் அவர் எழுதியிருப்பது பாராட்டத் தகுந்தது. இந்த விஷயத்தில் அவர் காலசகாப்தக் கோட்பாட்டைப் பின்பற்றவில்லை என்பது தெளிவு. காலசகாப்தக் கோட்பாடு பழைய ஏற்பாட்டு தசமபாகம் இஸ்ரவேலுக்கு மட்டுமே உரியது என்று தவறாகப் போதிக்கிறது. அதை பிங்க் பின்பற்றவில்லை. அத்தோடு, இந்த ஆக்கத்தில் பிங்க், விசுவாசிகள் புதிய உடன்படிக்கை காலத்தில் கொடுக்கவேண்டிய தசமபாகம் தவிர்த்த ஏனைய காணிக்கை முறைகளைப்பற்றி அதிக விளக்கமளிக்கவில்லை. அதற்குக் காரணம், அவர் தசமபாகத்தை விளக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தார்.

இருந்தபோதும், தசமபாகத்தை எங்கே, யாருக்குக் கொடுப்பது என்பதில் ஆர்த்தர் பிங்கோடு நான் அதிகம் முரண்படுகிறேன். பிங்க் 1 கொரிந்தியர் 16:1-2 ஆகிய வசனங்களைப் பயன்படுத்தி புதிய ஏற்பாட்டுக் காலத்தில் தசமபாகம் கொடுப்பதை வலியுறுத்தியபோதும் அதை எங்கு கொடுப்பது என்பதை வேதபூர்வமாக விளக்கவில்லை. தசமபாகத்தை விசுவாசிகள் தீர்மானித்து ஊழியங்களுக்குக் கொடுக்கலாம் என்று கூறி நிறுத்திவிட்டார். இது மிகவும் தவறான விளக்கம். இதற்குக் காரணம் பிங்க் இதை எழுதிய காலத்தில் சீர்திருத்த திருச்சபைப் போதனைகளை அவர் முழுமையாகத் தழுவியிருக்கவில்லை.

1 கொரிந்தியர் 16:1-2 வசனங்களில் தெளிவாகவே பவுல், தர்மபணத்தை (எருசலேமுக்கு அனுப்பவேண்டியிருந்த நிவாரணப் பணம்) எப்படிச் சேர்ப்பது என்பது பற்றி கலாத்தியாவில் இருந்த சபைகளுக்கு விளக்கியிருந்தார். அதையே கொரிந்து சபையையும் பின்பற்றும்படி இந்த வசனங்களில் சொல்கிறார். காணிக்கைகளை வாரத்தின் முதல் நாளில் சபைக்குக் கொடுப்பது அன்று விசுவாசிகளின் வழக்கமாக இல்லாமலிருந்திருந்தால் பவுல் சபைகளுக்கு அதுபற்றி எழுதவேண்டிய அவசியமென்ன? காணிக்கை கொடுப்பது விசுவாசியின் தனிப்பட்ட விருப்பச் செயலாக இருந்திருந்தால் பவுல் அதுபற்றி சபைகளுக்கு எழுதியிருந்திருக்க மாட்டார். தசமபாகம் உட்பட அனைத்துக் காணிக்கைகளையும் நிதானித்து சபை அங்கத்தவர்கள் தாங்கள் அங்கத்தவராக இருக்கும் சபைக்கே கொடுக்க வேண்டும் என்பது புதிய ஏற்பாட்டின் தெளிவான போதனை. காணிக்கை பற்றி பவுல் 1 கொரிந்தியர், 2 கொரிந்தியர் ஆகிய நிருபங்களில் கொரிந்து சபைக்கே எழுதி விளக்கியிருக்கிறார்; தனிப்பட்ட நபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ அல்ல. அத்தோடு அந்த நிருபங்கள் ஏனைய சபைகளுக்கும் அவர்கள் பின்பற்றும்படியாக அனுப்பப்பட்டிருந்தன. சபைக்குக் கொடுக்காது, காணிக்கைகளை விசுவாசிகள் தாங்கள் நினைத்தபடி நிறுவனங்களுக்கும், தனிஊழியர்களுக்கும் அனுப்புவது அடிப்படையில் வேதத்திற்கு முரணான செயல். ஒவ்வொரு விசுவாசியும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஏதாவதொரு உள்ளூர் சபையில் அங்கத்தவராக இருப்பதையே வேதம் எதிர்பார்க்கிறது; வலியுறுத்தி விளக்குகிறது. (அங்கத்துவமில்லாத சபை அமைப்பா? என்ற தலைப்பில் நான் வெளியிட்டிருக்கும் நூலை வாசித்துப் பாருங்கள்). உள்ளூர் சபை உதவிக்காரர்களே காணிக்கைகளை மூப்பர்களினதும், அங்கத்தவர்களினதும் வழிநடத்தலின்படி சபைத்தேவைகளுக்கும் மற்றும் சுவிசேஷ, அருட்பணி ஊழியங்களுக்கும் பகிர்ந்து செலவிடவேண்டும். வேதமும், சீர்திருத்த விசுவாச திருச்சபை இறையியலும் இதையே போதிக்கின்றன. இந்த முறையையே சீர்திருத்த சபைகள் பொதுவாக எங்கும் பின்பற்றி வருகின்றன.

சிக்கல் தீர்க்க வந்திருக்கும் ‘மனித சித்தம்’

கருத்துரை: ஷேபா மிக்கேள் ஜார்ஜ் (மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து)

“சிக்கல் எது என்று அறிந்தாலே, பாதி சிக்கல் தீர்ந்துவிடும்” என்பது பழமொழி. அது போல, ஆர்மீனிய, பெலேஜியனிச, செமி- பெலேஜியனிச போதனைகளின் பிடியில் சிக்கி மெய்யான கிறிஸ்தவ வாழ்வு வாழமுடியாமல் தவிக்கும் தற்கால கிறிஸ்தவர்களுக்கும், சரியான முறையில் சித்தத்தைக் குறிவைத்து சுவிசேஷ பிரசங்கம் செய்யத் தடுமாறும் போதகர்களுக்கும் ‘சிக்கல் எது’ என்பதை விளக்கும் இறையியல் போதனைகளை உள்ளடக்கியது, போதகர் பாலா அவர்களின் ‘மனித சித்தம்’ எனும் நூல்.

சமீபத்தில் ஒரு பிரபலமான கிறிஸ்தவ புத்தகக் கடையில் புத்தகம் வாங்கச் சென்றிருந்தேன். அங்கு காணப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களில், செழிப்பு உபதேச நூல்களும், தனிநபர் சாட்சிக் கட்டுரைகளும், பல பிரபலமான தமிழ் பிரசங்கிகளின் அட்டைப்படங்களோடு தனிப்பட்ட அனுபவங்களைப் பிரதானமாகக் கொண்டு அமைந்த பிரசங்க நூல்களும், பல நீண்ட வரிசைகளில் விதவிதமாக அடுக்கப்பட்ட பாடல் புத்தகங்கள் மற்றும் இசைக் கருவிகள் வாசிக்கும் முறைகள் (musical notes) குறித்த புத்தகங்களே நிறைந்து காணப்பட்டன. தேடிப்பிடித்து எடுத்த சில ‘சீர்திருத்த சத்திய’ மொழிபெயர்ப்பு நூல்களும், தரமான மொழிபெயர்ப்பாக இருக்கவில்லை. இது இன்றைய தமிழ் கிறிஸ்தவர்களிடையே இறையியல் போதனைகள் எந்த அளவிற்கு அலட்சியப்படுத்தப்படுகின்றன என்பதை அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது. ‘கிறிஸ்தவத்தின் ஆணிவேரே வேத சத்தியங்கள்தான். வேத சத்தியங்களுக்கு மதிப்புக் கொடுக்காமலிருந்த காலங்கள் எல்லாம் சபை வரலாற்றில் ஆத்மீக விருத்தியற்ற காலங்களாகவே வர்ணிக்கப்பட்டிருக்கின்றன’ என்ற நூலாசிரியரின் கருத்து, தற்கால கிறிஸ்தவத்தின் நிலையை அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தவகையில் போதகர் பாலா அவர்களின் தமிழ் கிறிஸ்தவ இலக்கியப் பணி ‘ஞாலத்தின் மாணப் பெரிது.’

இந்த நூலில் ஆசிரியர், மனித சித்தம் என்ற இறையியல் போதனையின் நான்கு நிலைகளை, வேதபூர்வமாக 1689 விசுவாச அறிக்கையின் அடிப்படையில் ஆராய்ந்து விளக்குகிறார். அத்தோடு, சபை வரலாற்றில் இந்த இறையியல் போதனை சந்தித்த எதிர்ப்புகள் குறித்தும், சத்தியத்தை நிலைநிறுத்த அந்தந்தக் காலங்களில் கர்த்தர் எழுப்பியிருந்த இறையியல் வல்லுனர்களைக் குறித்தும் அறிந்துகொள்ள முடிந்தது. முக்கியமாக நூலிலிருந்து, ‘மனித சித்தம்’ என்ற இறையியல் போதனைக்கும் வேதத்தின் ஏனைய போதனைகளான கர்த்தரின் இறையாண்மை, தெரிந்து கொள்ளுதல், மறுபிறப்பு மற்றும் சுவிசேஷ அழைப்பு ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்புகள் குறித்த தெளிவான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடிகிறது.

இந்த நூல் கையில் கிடைத்ததும், முதலில் என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயம், அதன் பொருளடக்கம் மற்றும் பக்கங்களின் எண்ணிக்கை! ஏனெனில், ‘மனித சித்தம்’ நூல், சித்தத்தின் நான்கு நிலைகளையும் ஒரு நாற்பது பக்கங்களில் விளக்கும் ஒரு சிறு நூலாக இருக்கும் என்பதே எனது கணிப்பாக இருந்தது. எனவே அதிகமான அதன் பக்கங்களின் எண்ணிக்கையைப் பார்த்ததும் ‘இதில் நிச்சயம் ஏதோ விஷயம் இருக்கிறது’ என்று புருவங்கள் முடிச்சிட, நூலை வாசிக்கும் ஆர்வம் மேலும் அதிகமாகியது. நூல் அறிமுகப் பகுதியிலேயே அருமையாக ஒரு கோடு கிழித்ததுபோல, இன்று உலகில் இருக்கும் சுவிசேஷ ஊழியங்களை மனித சித்தத்தின் இயல்பு குறித்த அதன் நம்பிக்கைகளின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, இவற்றில் எது வேதபூர்வமானது என்றும், ஆதிச்சபை விசுவாசித்த சத்தியம் எது என்றும் ஆசிரியர் விளக்கியிருக்கிறார்.

முதல் வரும் இரு அத்தியாயங்களில், மனிதனின் சுயாதீன சித்தம் என்றால் என்ன? அவனுடைய நான்கு ஆவிக்குரிய நிலைகளில் அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது? என்று ஒரு சுருக்கமான அறிமுகத்தைத் தருகிறார். அதில், அதற்கு ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கும் 1689 சீர்திருத்த விசுவாச அறிக்கையின் மெய்த்தன்மையை அதன் கிறிஸ்தவ வரலாறு மற்றும் இறையியல் பின்னணியுடன் தெளிவாக உறுதிப்படுத்துகிறார். இப்பகுதியிலிருந்து 1689 விசுவாச அறிக்கையின் பல சிறப்பம்சங்களை அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, மனித சித்தத்திற்கும் இரட்சிப்பு பற்றிய போதனைகளுக்கும் இடையிலான பிரிக்கமுடியாத தொடர்பு குறித்த இறையியல் உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.

வரலாற்றில் 5-ம் நூற்றாண்டு துவங்கி இன்றுவரை ‘மனித சித்தம்’ என்ற இறையியல் போதனைக்கு எதிராக எழுந்துள்ள சில தர்க்கங்களை ஆசிரியர் இந்த அதிகாரங்களில் குறிப்பிட்டுள்ளார். அவற்றை எதிர்த்து கர்த்தருடைய மனிதர்கள் முழுமூச்சுடன் போராடியதற்கான முக்கிய காரணம்: அது கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கும், இரட்சிப்பு பற்றிய வேதத்தின் போதனைகளுக்கும் எதிராக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகவே, என்பதை உறுதியாக அவர் வலியுறுத்துகிறார். இது, கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்களது சித்தத்தின் நிலைப்பாடு குறித்த இறையியல் போதனையை அறிந்திருக்க வேண்டியது எத்தனை அவசியமானது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

மூன்றாவது அதிகாரம், மனித சித்தத்தின் சுதந்திரம் எத்தகையது? சிருஷ்டிக்கப்பட்ட நிலையில் அது எப்படி இருந்தது? இதைக் குறித்து சீர்திருத்த விசுவாசம் என்ன சொல்லுகிறது? என்பதை விசுவாச அறிக்கையின் அடிப்படையில் வேதத்தின் பல வசனங்களை மேற்கோள் காட்டி நூலாசிரியர் விளக்குகிறார். இதிலிருந்து, கர்த்தர் ஆதாமை ஒரு ‘ரோபோ’ போன்று படைக்கவில்லை. அவரது சாயலில், அவரது சித்தத்தை அறிந்துகொள்ளக்கூடியவனாகப் படைத்தார். அதுமட்டுமின்றி அவனது சித்தத்தின் முழுச் சுதந்திரத்தோடு தேவ சித்தத்தை நிறைவேற்றும் பொறுப்பும், செயல்திறனும் கொண்டவனாகவே படைத்தார். எனவே மனிதன் தான் செய்கின்ற எந்தச் செயலுக்கும் வேறு எதையும், யாரையும் காரணம் காட்டித் தப்பிக்க முடியாது. நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் வேறு எவற்றின் வற்புறுத்தலுமின்றி பூரண சுதந்திரத்தோடும், முழு விருப்பத்தோடும் செய்கிறோம் என்று வேதம் கூறும் உண்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அத்தோடு மனித சித்தத்தின் சுதந்திரத்திற்கும், மனித சித்தத்தின் செயல்திறனுக்கும் உள்ள வேறுபாட்டையும் புரிந்துகொள்ள முடிகிறது.

இன்று கிருபையினால் பரிசுத்தமாகுதலை விடாமுயற்சியுடன் தொடரும் ஒவ்வொரு விசுவாசியும் ‘பிரசவ வேதனைப்பட்டு’ நிறைவேற்றத் துடிக்கும் அந்த தேவ சித்தத்தை, ஆதாம் எவ்வளவு இயல்பாகச் செய்யும் விருப்பமும், வல்லமையும் கொண்டிருந்தான் என்பதை, இந்த அதிகாரத்தின் நான்காவது பாரா பட்டியலிட்டு விளக்குகிறது. இது, நாம் இழந்துபோன அந்த மேன்மையான நிலை எது? எவ்வளவு ஆழமான பாதாளத்திற்குள் வீழ்ந்தோம்? எத்தனை அற்புதமாக மீட்கப்பட்டிருக்கிறோம்? என்பதைக் குறித்த ஆழமான பார்வையைத் தருகிறது. இந்த அற்புதமான புரிதல் நம்மை மீட்ட இரட்சகர் மீதான அன்பின் ஆழத்தை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்கிறது. நான்கு முதல் எட்டு வரையிலான அத்தியாயங்களில், நூலின் முக்கியக் கருப்பொருளான மனித சித்தம், அவனுடைய நான்கு ஆவிக்குரிய நிலைகளில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைத் திட்டமும் தெளிவுமாக ஆசிரியர் விளக்குகிறார். இந்த நான்கு அதிகாரங்களும் நூலை வாசிக்கும் நபர்களின் சித்தத்தோடு நேரடியாக இடைபட்டு, நாமிருக்கும் ஆவிக்குரிய நிலையை, ஒரு 5D திரைப்படம் போல மிக அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

படைப்பில், சுயாதீன சித்தத்தோடு நன்மையை மட்டுமே நாடிச் செய்ய பூரண வல்லமை கொண்டிருந்த நம் ஆதிப் பெற்றோரின் பாவமற்ற நிலையை நூலில் அருமையாக எடுத்துக் காட்டுகிறார் ஆசிரியர். முக்கியமாக இத்தனை மேன்மையான நிலையிலிருந்து நம் ஆதிப் பெற்றோர் விழுந்துவிட ஏதுவாக இருந்த அந்த ‘மாறும் இயல்பு’ என்பது என்ன? என்ற இரகசியத்தைத் தெரிவிக்கிறார். இதன் மூலமாக, கர்த்தரைப் பற்றிய அறிவில் நாளுக்கு நாள் பொறுப்போடு நாம் வளரவேண்டியது எத்தனை அவசியம் என்பதைத் திட்டமும் தெளிவுமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ‘எது நடந்திருக்கக் கூடாதோ அது அன்று ஏதேன் தோட்டத்தில் நடந்தது … அது ஏன் ஏற்பட வேண்டும்? அருமையான நிலையில் இருந்த மனித வாழ்க்கையை அது கெடுத்துவிட்டதே!’ என்ற வரிகளில் மனுக்குலம் ‘பூரண சுயாதீனத்தோடு’ பாவத்தில் வீழ்ந்ததன் அவலத்தை, மீட்டுக்கொள்ள இயலாத அதன் இழப்பை, ‘முழுமையான சீரழிவின்’ மெய்த்தன்மையை, நிதர்சனமாகப் புரிந்துக் கொண்ட இதயம் நிராசையோடு புலம்புவதை உணரமுடிகிறது. அதைத் தொடர்ந்து, மூலபாவம் குறித்த பெலேஜியஸின் பார்வை ஏன் தவறானது? மனித சித்தம் குறித்த வேத போதனையிலிருந்து எந்தவிதத்தில் அது முரண்படுகிறது என்பதை ஆசிரியர் விளக்குகிறார்.

ஒன்றைச் செய்யும்படிக் கட்டளையிட்டுவிட்டு அதைச்செய்ய இயலாத நிலையில் மனிதன் இருப்பானானால் அவன் அதைச் செய்யும்படிக் கடவுள் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? என்ற பெலேஜியசின் கேள்வி வரலாற்றில் எப்போதுமே கேட்கப்பட்டு வருவதால், இதற்கான பதிலை நாமும் தெளிவாக அறிந்து வைத்திருப்பது அவசியம். அதற்குப் பதிலாக, படைப்பில் மனிதனுக்கு இருந்த ‘மாறும் இயல்பு’, பூரணமான அந்த நிலையிலும் தொடர்ந்து நன்மை செய்வதற்கு உதவிய கர்த்தரின் கிருபை மற்றும் பாவத்தின் விளைவு ஆகியவற்றைக் குறித்த இறையியல் போதனைகளின் மூலம் பெலேஜியஸை வாயடைக்கச் செய்து சத்தியத்தை நிலை நிறுத்தினார் ஆகஸ்தீன். பாவத்தினால் மனிதனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த பிலிப் ஷ்சாப்பின் கருத்து இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.

அடுத்தபடியாக நீயும் நானுமா? என்ற அட்டகாசமான தலைப்பின் கீழ், முழுமையாக ஆத்தும சீரழிவில் வீழ்ந்த மனித குலம் இரட்சிப்பில் செயல்படும் ‘கிரியை’ மொனர்ஜிசமா அல்லது சினர்ஜிசமா? எந்த வகையை சார்ந்தது என்று விளக்குகிறார் ஆசிரியர். இந்தப் பகுதியில், பெலேஜியஸ் முதற்கொண்டு சார்ள்ஸ் பினி வரையில் சத்தியத்திற்கு விரோதமாக (வீழ்ச்சி, மூல பாவம், சித்தத்தின் அடிமைத்தனம் மற்றும் இரட்சிப்புக் குறித்து) வரலாற்றில் எழும்பிய பல சினர்ஜிசப் போலிப் போதனைகளை இனங்கண்டு விளக்குகிறார். அத்தோடு இத்தகைய போலிப் போதனைகளை சரியான நேரத்தில் இனங்கண்டு அதன் முகத்திரையைக் கிழித்து, நெற்றிப் பொட்டிலடிப்பதுபோல, ‘இரட்சிப்பைக் குறித்த வேதத்தின் பார்வை’ மொனர்ஜிசம் மட்டுமே! என்று நிரூபித்த பல சீர்திருத்த இறையியல் அறிஞர்களின் ஆழமான இறையியல் அறிவு மற்றும் அவர்களின் பக்தி வைராக்கியம் குறித்து நூலைப்படித்து அறிந்துகொள்ள முடிகிறது. இது மனித சித்தம் குறித்த தவறான பார்வையைக் கொண்டிருப்பது எத்தனை போலிப் போதனைகளுக்கு வித்திடுகிறது என்று உறுதியாக எச்சரிக்கிறது.

கிருபையில்: கிருபையின் நிலையில் மனிதன் தன் பாவத்தினால் இழந்துபோன நிலையை மறுபடியும் மறுபிறப்பின் மூலமாகச் சந்திக்கிறான். எனவே சுயாதீனமாக தனது புதிய இருதயத்தின் தன்மைக்கு ஏற்ப நன்மையை நாடிச் செய்யும் வல்லமையைப் பெற்றுக்கொள்கிறான். ஆனாலும் அவன் இவ்வுலக வாழ்வில் பூரணமற்ற நிலையில் இருப்பதால் தீமையைச் செய்து விடும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார் ஆசிரியர். இதற்குக் காரணமாக இரண்டு முக்கிய விஷயங்களைக் குறிப்பிடுகிறார் செக்கராயஸ் அர்சினஸ்: 1. ஒரு விசுவாசி இவ்வுலகத்தில் வாழும் காலம் வரைக்கும் அவன் இருதயமும், சித்தமும் முழுப்பூரணத்தை அடையாமல் இருக்கிறது. எனவே முதிர்ச்சியடைந்த விசுவாசிகளின் நற்செயல்களிலும் கூட பாவம் கலந்திருந்து அதைப் பூரணமற்றதாக்கிவிடுகிறது. 2. மறுபிறப்படைந்த விசுவாசியில் பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து இடைவிடாமல் செயல்படுவதில்லை. தாழ்மையைக் கற்றுத் தருவதற்காகவோ அல்லது பரிசோதித்துப் பார்ப்பதற்காகவோ சில வேளைகளில் அவர் அவர்களைப் புறக்கணித்து விடுகிறார். எனவே கிருபையின் நிலையில் இருக்கும் விசுவாசியின் சித்தம் முழு சுயாதீனத்தோடு நன்மையை நாடிச் செய்யும் திறன் கொண்டிருந்தபோதும், இவ்வுலக வாழ்க்கையில் ஒருபோதும் பூரணத்துவத்தை அடையமுடியாது! என்பதைத் திட்டவட்டமாக விளக்குகிறார்.

மகிமையில்: இந்நிலையில் மனிதனுடைய சித்தம், நித்தியத்திற்கும் பரிசுத்தத்தோடு நன்மையை மட்டுமே நாடிச்செய்ய பூரண விடுதலையும், வல்லமையும் கொண்டதாக இருக்கும். இங்கு ஏதேனில் காணப்பட்ட ‘மாறும் இயல்பு’ இல்லை! கிருபையின் நிலையில் காணப்படும் பாவத்தின் தொல்லை இல்லை! பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை இழக்கும் வாய்ப்பு இல்லவே இல்லை! முழுமையான விடுதலை!! பூரண பரிசுத்தம்!! நித்திய சந்தோஷம்!! என்று சொல்லிக்கொண்டே போகலாம். திரும்பத் திரும்ப வாசித்து மகிழத் தூண்டும் அற்புதமான அத்தியாயம் இது. மோட்சப் பிரயாணம் நூலில், மகிழ்ச்சி மலையின் மலைச் சிகரத்தில் தொலைநோக்கி மூலம் பிரயாணிகள் பார்த்து மகிழ்ந்த பரலோக வாசலின் சாயல் இதுவாகத்தான் இருக்கும் என்று என்னை எண்ணவைத்தது.

இதைத் தொடர்ந்து வரும் அதிகாரத்தில், மனித சித்தம் குறித்த வேதத்தின் போதனையை விகற்பமில்லாமல் புரிந்துகொள்வதற்கு அவசியமான இரு முக்கியமான இறையியல் போதனைகளை விளக்குகிறார் ஆசிரியர். முதலாவது, அறிவியலாலும், விஞ்ஞானத்தாலும் ஆராய்ந்து நிதானிக்க முடியாத சர்வ வல்லமையுள்ள தேவனின் இறையாண்மை குறித்தது. இரண்டாவது, படைத்தவரின் சித்தத்தை நிறைவேற்றுவதில் மனிதனுக்கு இருக்க வேண்டிய பொறுப்பு குறித்தது. பார்வைக்கு முரண்படுவது போலத் தோன்றும் இவ்விரண்டு சத்தியங்களும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளாத தனித்தன்மை கொண்ட இணைக்கோடுகள் போன்றவை. எனவே இவற்றை இணைத்துப் பார்க்க நினைப்பது அவற்றின் மெய்த்தன்மைக்கு ஊறுவிளைவித்து, தவறான இறையியல் போதனைக்கு வழி ஏற்படுத்திவிடும் என்ற உறுதியான எச்சரிப்பைத் தருவது மட்டுமல்லாமல், முன்னறிவு மற்றும் முன்னோக்கிப் பார்த்தல், ஆத்மீக ஆற்றல் மற்றும் இயற்கை ஆற்றல், இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு குறித்தும் விவரமாக அறிந்துகொள்ள முடிகிறது. ஆக நமது பார்வைக்கு முரண்பாடாகத் தோன்றும் சத்தியங்களைக் குறித்து தர்க்கம் செய்வதை விட்டுவிட்டு வேதத்தின் சத்தியங்களுக்கு கீழ்ப்படிய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை, இதில் எந்தவித சாக்குப் போக்கும் சொல்லாமல், கட்டாயமாகக் கர்த்தருக்குக் கணக்கொப்புவிக்க வேண்டும் என்பது தெளிவாகப் புரிகிறது. தொடர்ந்து மனித சித்தம் குறித்த வேதத்தின் போதனைக்கும், இரட்சிப்பில் கர்த்தரின் தெரிந்துகொள்ளுதல், மறுபிறப்பு ஆகிய சத்தியங்களுக்கிடையே உள்ள பிரிக்க முடியாத தொடர்பு குறித்தும் வேதத்திலிருந்து விளக்குகிறார் ஆசிரியர். முக்கியமாக, சித்தத்தின் சுயாதீனத்திற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் மனித சித்தத்தைச் சந்தித்து, அற்புதமாக மறுபிறப்பை அளிக்கும் கர்த்தரின் சித்தம் குறித்த ஞானம் என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

நூலின் கடைசிப் பகுதியில், சுவிசேஷ பணி என்பது எது? அதன் நோக்கம் என்ன? மனித சித்தத்தின் இயற்கை ஆற்றலைக் குறிவைத்து சுவிசேஷ பிரசங்கம் அளிப்பது எப்படி? ஒரு சீர்திருத்த பிரசங்கியின் ஆத்தும பாரம் எப்படி இருக்கவேண்டும்? இயேசு கிறிஸ்துவை எப்படி மனிதர் முன்பு வைப்பது? என்பது போன்ற பிரங்கிகளுக்கான ஆலோசனைகளை வேதத்திலிருந்தும், ஸ்பர்ஜன், ஜோன் மரே, அல்பர்ட் என். மார்டின் போன்ற சீர்திருத்த இறையியல் அறிஞர்களின் நூல்களிலிருந்தும் மிக அருமையாக எடுத்துக் காட்டுகிறார் நூலாசிரியர். ‘மிகவும் ஆணித்தரமாக இருதயத்தைத் தொடக்கூடிய பிரசங்கங்களைக் கர்த்தரோடு நல்லுறவில்லாத ஒருவனால் அளித்துவிடமுடியும்; ஆனால் அதன் பலன் மிகக்குறைவாகவே இருக்கும். இயேசுவோடு நெருங்கியிருக்கும் ஒருவனின் குரலின் தொனி விசேஷமானது; அது பூரணமாக அமைந்த ஒரு பிரசங்கத்தைவிட ஆத்துமாவின் இருதயத்தை வல்லமையோடு தொடுவதாயிருக்கும்’ என்ற வார்த்தைகள் ஒரு பிரசங்கி கர்த்தரோடு கொண்டிருக்க வேண்டிய இடையறாத ஐக்கியத்தின் தேவையை வலியுறுத்துகிறது.

இதனைத் தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்தச் சத்தியம் குறித்து ஆத்துமாக்கள் கொண்டிருக்கும் குழப்பமான எண்ணங்களுக்கான காரணத்தையும் அதற்கான தீர்வையும் தெரிவிக்கிறார் ஆசிரியர். அத்தோடு இந்தச் சத்தியம் தொடர்பாக பரவலாகக் கேட்கப்படும் சில கேள்விகளையும் அவற்றிற்கான வேத பூர்வமான பதில்களையும் அளித்துள்ளார்.

எளிய நடையில், இலக்கியச் சுவையோடு, தெளிவான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு, வேத சத்தியங்கள் முறையாக ஒன்றன் பின் ஒன்றாக வரும்படி மிகக் கவனமாகத் தொகுக்கப்பட்ட அருமையான நூலிது. இந்நூல் விளக்கும் சத்தியம், நேரடியாக நமது சித்தத்திற்கு சவாலிடுவதாலும், ஆய்வு ரீதியில் பல விவாதங்களையும், கருதுகோள்களையும், ஆழமான இறையியல் சத்தியங்களையும் கொண்டிருப்பதாலும், வேக வாசிப்பாக வாசித்துப் புரிந்துகொள்வது கடினம். எனவே கருத்தோடு நிதானமாக இரண்டு அல்லது மூன்று முறை வாசிக்கும்போது அதன் சாரத்தை முழுமையாக அனுபவித்துப் பயன்படுத்த முடியும். நான் நூலை இரண்டு தடவைகள் முழுமையாகவும், இதை எழுதும்போது ஒரு தடவையும் வாசித்து முடித்தேன்.

இந்நூலை வாசித்ததன் மூலம் தனிப்பட்ட விதத்தில் நான் அநேக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. குறிப்பாக, நானிருக்கும் ஆவிக்குரிய நிலையை நிதானித்து, ஒரு வெற்றியுள்ள விசுவாச வாழ்க்கை வாழ்வதற்கான பல யுக்திகளைக் கற்றுத் தந்தது நூல். அதுமட்டுமின்றி சக மனிதர்களையும் ஆவிக்குரியவிதத்தில் நிதானித்து அவர்களோடு சுமூகமான நட்புறவு கொள்வதற்கும், சரியான விதத்தில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் நூல் என்னில் ஆழமான அஸ்திவாரமிட்டது.

ஆலமர விழுதுகள்போல, நமது கிறிஸ்தவ விசுவாசத்தைத் தாங்கி நிலைத்து நிற்கச் செய்யும் அநேக இறையியல் போதனைகளை உள்ளடக்கிய அருமையான நூலிது. ஒவ்வொரு விசுவாசியும் தன் சித்தத்தின் நிலையைக் குறித்த வேதபூர்வமான பார்வையைக் கொண்டிருப்பது மிக மிக அவசியம். எனவே கால தாமதம் செய்யாமல் இன்றே நூலை வாங்குங்கள்! கவனத்தோடு வாசியுங்கள்! விசுவாசத்தில் வளருங்கள்! வளர்ந்து வரும் இளம் விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் நல்ல கனிகளைக் கொடுக்கும் விதத்தில், சத்திய நீரோடையாய்ப் பாய்ந்து ஆத்துமாவின் தாகம் தீர்க்கும் போதகர் பாலா அவர்களின் இலக்கியப் பணி மேலும் வளர்ந்து விரிவடையத் தொடர்ந்து ஜெபிக்கிறேன்.

ஜெயமோகனும் கிறிஸ்தவமும்

தலைப்பை வாசிக்கும்போதே என்னடா, ஜெயமோகனைப் பற்றி கிறிஸ்தவ இதழான நம்மிதழில் ஏன் எழுதவேண்டும், நமக்கும் அவருக்கு என்ன தொடர்பு என்ற சிந்தனையெல்லாம் உங்களுக்கு எழலாம். அவரைப்பற்றி எழுதுவதற்குக் காரணமிருக்கிறது. தமிழகத்தின் படைப்பாளியான ஜெயமோகனைப் பற்றி கடந்த பத்து வருடங்களுக்குள்தான் அறிந்துகொண்டேன். அதற்குப் பிறகு இரு தடவைகள் மட்டும் அவரோடு போனில் பேசியிருக்கிறேன். காலம் இதுவரை அவரைச் சந்தித்துப் பேசமுடியாமல் செய்திருக்கிறது. கிறிஸ்தவரல்லாத அவரைப்பற்றி, கிறிஸ்தவ இதழில் எழுத வேண்டிய அவசியம் என்ன, என்ற கேள்வி எழலாம்.

ஜெயமோகன் ஒரு இலக்கியவாதி, படைப்பாளி. தமிழகத்திலும் அதற்கு வெளியிலும் பேசப்படுகிற, முக்கிய எழுத்தாளர். அவர் பல துறைகளில் கால்பதித்து சாதனைகள் புரிந்திருக்கிறார். வெளிப்படையாகப் பேசி நடந்துகொள்ளுகிறவர். வாசகர்களுடன் பெருமை பாராட்டாமல் தொடர்புவைத்து சகஜமாகப் பழகும் மனிதநேயம் கொண்டவர். எழுதுவதோடு மட்டும் இருந்துவிடாமல் இளைஞர்களை ஊக்குவித்து வாசிக்கவும், எழுதவும், கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும் தூண்டி வருகிறவர். அதற்காக வாசகர் சந்திப்புகளை அடிக்கடி நடத்தியும் வருகிறார். எனக்குத் தெரிந்து இதைச் செய்யும் முதல் எழுத்தாளர் ஜெயமோகன் என்றுதான் சொல்லுவேன். வாசிக்கிறவன் இல்லாவிட்டால் எழுதுவதில் பயனில்லையே. ஜெயகாந்தன் இதை தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் வேறுபாணியில் நடத்திவந்திருக்கிறார்; அவருடைய நோக்கம் வேறு ஜெயமோகனின் நோக்கம் வேறு. இதெல்லாம் ஜெயமோகனில் நான் காணும், எனக்குப் பிடித்திருக்கும் விஷயங்கள். ஜெயமோகன் ஒரு சிந்தனையாளர், அறிவுஜீவி. தமிழ், இலக்கியம், கலை, பண்பாடு, நூல்கள் மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றிய அவருடைய கருத்துக்களை அவருடைய தளத்தில் வாசித்து உள்ளுக்குள் பாராட்டியிருக்கிறேன்.

அவரைப்பற்றி நான் எழுதக் காரணம், கிறிஸ்தவத்தைப் பற்றிய அவருடைய புரிதல்தான். கிறிஸ்தவத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவித்து எழுதியிருக்கிற, எழுதுகிற படைப்பாளிகளில் இவரை மட்டுமே நான் அறிந்திருக்கிறேன். சாதாரணமாக கிறிஸ்தவத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் கிறிஸ்தவரல்லாதவர்களைப் பற்றி நான் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. பொதுவாக அவர்களுடைய கண்ணோட்டம் அறிவும், ஆய்வும் சார்ந்ததாக இல்லாமல் மத எதிர்ப்புத் தொனியில் மட்டுமே இருக்கும். அதற்கெல்லாம் கிறிஸ்தவர்கள் பதிலளித்துக்கொண்டிருப்பது வீண்வேலை. சுவிசேஷப் பணியில் செலவிட வேண்டிய நேரத்தை அதில் செலவிட்டு காலத்தை வீணாக்குவதில் பலனில்லை. ஜெயமோகன் இவர்களிலிருந்து வேறுபட்டவர். இதுவரை நான் வாசித்திருக்கும் அவருடைய கருத்துக்களிலிருந்து ஜெயமோகனுக்குள் கிறிஸ்துவைப்பற்றியதொரு ஆத்மீகத் தேடல் இருப்பதை நான் உணர்கிறேன். அதை அவரே தன் எழுத்துக்களில் பலதடவைகள் விளக்கியிருக்கிறார். அந்தத் தேடல் சுயஅறிவின், உணர்வின் அடிப்படையிலான ஒரு தேடல். அது அவர் தேடும் ஆன்மீகக் கிறிஸ்துவை அவர் இன்னும் அடையமுடியாமல் வைத்திருக்கிறது. இந்த ஆன்மீகக் கிறிஸ்து அவரே உருவாக்கிக்கொண்ட ஒரு கிறிஸ்து.

ஜெயமோகன் தான் பத்து வயதில் இருந்து கிறிஸ்தவ சூழலில் வளர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார். ரோமன் கத்தோலிக்க, தாராளவாத புரொட்டஸ்தாந்து போதகர்களின் தொடர்பும் அவருக்கு அதிகம் இருந்து வருகிறது. அவர்களோடு ஜெபத்திலும் ஈடுபட்டு வருவதாக அவர் சொல்லியிருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம், நாகர்கோவில் பகுதிக்காரரான அவருக்கு தமிழகத்து ‘பைபிள் பெல்ட்’ என்று அழைக்கப்படுகின்ற அப்பிரதேசம் கிறிஸ்தவத்தோடு தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தோடு ஒரு காலத்தில் ஆத்மீகத் தேடுதலில் ஈடுபட்டவராக அவர் இருந்திருப்பதும் கிறிஸ்துவை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை அவரில் ஏற்படுத்தியிருக்கலாம். அவருக்கு கிறிஸ்தவத்தைப் பற்றிய நன்மதிப்பு இருக்கிறது. கிறிஸ்தவத்தை அவர் வெறுக்கவில்லை; பொதுவாக இந்துக்கள் கிறிஸ்தவத்தைக் காணும் கண்ணோடத்தைவிட அவருடையது வித்தியாசமானது. இருந்தபோதும் அவர் கிறிஸ்தவத்தோடு தான் முரண்படுகிற விஷயங்களை வெளிப்படையாக எழுதத் தவறுவதும் இல்லை.

அநேக வருடங்களுக்கு முன் (2000) நான் சாது செல்லப்பா, தெய்வநாயகம் போன்றோரின் போலிப்போதனையான தோமஸ் கிறிஸ்தவத்தைப் பற்றி ‘இந்திய வேதங்களில் இயேசுவா’ என்ற நூலுக்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தபோதே முதன் முதல் ஜெயமோகனைப் பற்றி அறிய நேர்ந்தது. தன்னுடைய தளத்தில் அதுபற்றித் தன் வாசகர்களுடன் அவர் உரையாடலை நிகழ்த்தியிருந்தார்; அது பற்றிய என்னுடைய கருத்தையும் தன் தளத்தில் குறிப்பிட்டு சுட்டியிருந்தார். அதற்குப் பின், ராஜீவ் மல்கோத்திரா, அரவிந்தன் நீலகண்டன் கோஷ்டியின் ‘உடையும் இந்தியா’ நூலில் நான் அவதானித்த அவர்களுடைய சதித்திட்டத்திற்கெதிரான கிறிஸ்தவ கண்ணோட்ட விளக்கத்தைத் கொடுப்பதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தபோதும் (2013) அதுபற்றிய ஜெயமோகனின் கருத்துக்களை ஆராய நேர்ந்தது. அவற்றில் இருந்து ஜெயமோகன் கிறிஸ்தவத்தை அணுகும் முறைபற்றி அதிகம் அறிந்துகொண்டேன். பொதுவாக கிறிஸ்தவம் பற்றிய விமர்சனம் செய்பவர்களைவிட அவருடைய கருத்துக்கள் கொஞ்சம் வித்தியாசமாகவே தெரிந்தன.

பல தடவைகள் படைப்பாளி ஜெயமோகனின் கிறிஸ்தவம் பற்றிய கருத்துக்களை விளக்கி எழுத எண்ணியிருந்தேன்; இருந்தும் அதைத் தவிர்த்து வந்திருந்தேன். அவருக்கே நேரடியாக அதுபற்றி எழுதலாமா? என்றுகூட சிந்தித்திருக்கிறேன். கடந்த வருடம் அவர் தமிழக தொலைக்காட்சியில் இரண்டு மேடைப் பேச்சாளர்கள் நடத்தும் ‘பேசலாம் வாங்க’ நிகழ்ச்சியில் அளித்திருந்த ஒரு பேட்டியைக் கேட்க நேர்ந்தது. அந்தப் பேட்டியே இந்த ஆக்கத்தை எழுதவைத்தது.

அந்த நிகழ்ச்சியைக் கேட்ட பிறகு முன் அவர் எழுதி வெளியிட்டிருந்த ‘சிலுவையின் பெயரால்’ என்ற நூலைக் கின்டிலில் இறக்கி வாசித்தேன். அந்நூலில் அவருடைய கிறிஸ்தவம் பற்றிய விளக்கங்களும், அதுபற்றிய பலரின் கடிதங்களும், அதற்கான ஜெயமோகனின் பதில்களும் ஏற்கனவே அவருடைய வலைத்தளத்தில் பதியப்பட்டிருந்தவை. அவற்றின் தொகுப்பே இந்த நூல். கிறிஸ்தவம் பற்றிய அவருடைய சிந்தனைகளை அந்த நூலில் அவர் வெளியிட்டிருக்கிறார். அதிலிருக்கும் ஓர் ஆக்கமான, ‘விவிலியம், புதிய மொழியாக்கம்’ கத்தோலிக்க மதத்தின் பேராதரவுடன் 1995ல் வெளியிடப்பட்ட பொதுமொழிபெயர்ப்பைப் பற்றியது. ஜெயமோகன் அந்த மொழிபெயர்ப்பைப் பெரிதும் பாராட்டி. ‘சென்ற இருபது வருட காலத்தில் தமிழில் நிகழ்ந்த பிரமாண்டமான தமிழ்ச்சாதனைகளில் ஒன்று என்று இந்த மொழியாக்கத்தை ஐயமில்லாமல் சொல்லலாம்’ என்று எழுதியிருந்தார். அதிலுள்ள வெறும் தமிழ் நடையை வைத்து மட்டுமே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அதை ஒரு மெய்க் கிறிஸ்தவர் எழுதியிருந்தால் நான் மிகுந்த வேதனை அடைந்திருப்பேன். ஆனால் கிறிஸ்தவரல்லாத ஜெயமோகனுக்கு வேதமொழிபெயர்ப்பு எப்படியிருக்கவேண்டும் என்ற ஆவிக்குரிய அணுகுமுறையும், வேத மொழிகள் பற்றிய நுணுக்கங்களும் தெரியாதிருந்திருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை. அந்தப் பொதுமொழிபெயர்ப்பை விமர்சனம் செய்து திருமறைத்தீபத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

‘சிலுவையின் பெயரால்’ ஜெயமோகனுக்கு இயேசு கிறிஸ்துவின் மீதிருக்கும் அபிமானத்தையும் அவரைப்பற்றிய அவரது தேடலையும் விளக்குகிறது. நூலில் முழுக்க முழுக்க கத்தோலிக்க மதவாடை அடிக்கிறது. அதிலிருந்து ஜெயமோகனுக்கு அந்த மதத்தாரோடிருக்கும் தொடர்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. அடிப்படையிலேயே கிறிஸ்தவ வேதத்திற்குப் புறம்பான போதனைகளைக் கொண்டிருந்து தாராளவாதக் கண்ணோட்டத்தோடு மெய்க் கிறிஸ்தவத்தின் எந்த அடையாளமுமே இல்லாமல் நடமாடி வரும் கத்தோலிக்க மதத்தைப் பற்றிய முறையான புரிதல் ஜெயமோகனுக்கு அடியோடு இல்லாமல் இருந்திருப்பதிலும் ஆச்சரியமில்லை. நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்கே அதுபற்றிய பொதுவான அறிவு இல்லாமலிருக்கும்போது, கிறிஸ்தவரல்லாத ஒருவர் கிறிஸ்தவத்தைப் பற்றிய வேதபூர்வமற்ற கருத்துக்களைக் கொண்டிருப்பதில் ஆச்சரியமெதுவுமில்லை.

தொலைக்காட்சியில் ‘பேசலாம் வாங்க’ நிகழ்ச்சிக்கு ஜெயமோகன் அளித்திருந்த பேட்டியில் கிறிஸ்தவத்தைப் பற்றி அவர் கொடுத்திருந்த விளக்கம் எனக்கு வருத்தத்தை அளித்தது. வேத இறையியல் மொழியில் சொல்லுவதானால், ஜெயமோகன் ‘மறுபிறப்படைந்த’ கிறிஸ்தவரல்ல. ஆனால், கத்தோலிக்கம் மற்றும் சி. எஸ். ஐ கிறிஸ்தவ சூழலில் வளர்ந்து கிறிஸ்தவத்தின் மீது மதிப்பு வைத்திருப்பவர் மட்டுமே. கிறிஸ்தவர்களுடனும், கிறிஸ்தவ போதகர்களுடனும் அவருக்கு நட்பிருந்து வருகிறது. அதை அவரே பேட்டியில் விளக்கியிருக்கிறார். இதெல்லாம் நல்ல விஷயங்கள். இருந்தும் கிறிஸ்தவத்தைப் பற்றிய அவருடைய புரிதல் சரியானதல்ல. அதை அவர் வாசித்த நூல்களில் இருந்தும் அவருடைய நண்பர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டிருந்திருக்கலாம். இந்தளவுக்கு கிறிஸ்தவத்தின் மீது மதிப்பு வைத்திருந்து இயேசுவைத் தேடிக்கொண்டிருப்பதாகக் கூறும் ஒருவர் கிறிஸ்தவத்தையும், கிறிஸ்துவையும் சரிவரப் புரிந்துகொள்ளாமலிருப்பதும், தன்னுடைய சுயபுரிதலின் அடிப்படையில் மட்டும் கிறிஸ்தவத்தைப் பற்றிய உண்மைக்கு மாறான கருத்துக்களைப் பகிர்ந்து வருவதும் எனக்கு முறையானதாகப்படவில்லை. அதுவும் ஒரு முக்கிய எழுத்தாளர், ஆளுமை அதைச் செய்யும்போது அவருடைய வாசகர்கள் அதனால் கிறிஸ்தவத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள நேரிடுகிறது. கிறிஸ்தவரல்லாத ஒருவருக்கு கிறிஸ்தவத்தைப் புரிந்துகொள்ளுவது கொஞ்சம் கஷ்டமானதுதான். இருந்தாலும், கிறிஸ்தவம் பற்றிய பொதுவான, முறையான புறநிலை அறிவைப் பெற்றுக்கொள்ளுவது அத்தனை கடினமானதுமல்ல.

ஜெயமோகன் ஏனைய எழுத்தாளர்களைப் போலல்லாது கிறிஸ்தவத்தைப் பற்றி அதிகம் எழுதியிருக்கிறார். அத்தோடு கிறிஸ்தவராக இல்லாதிருந்தபோதும் அறிவார்ந்த ரீதியில் அதை அணுகியிருப்பதைக் கவனித்திருக்கிறேன். இதெல்லாம் நான் கிறிஸ்தவம் பற்றிய அவருடைய கருத்துக்களை ஆராய்ந்தெழுதத்தூண்டியதற்கு ஒரு காரணம். தன் பேட்டியில் ஜெயமோகன், கிறிஸ்துவை மூன்றுவிதமாகக் கணிப்பதாகச் சொன்னார். அப்படித்தான் மேலைநாடுகளில் இருப்பதாகச் சொன்னார். ஒன்று, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்து; இரண்டாவது, புரொட்டஸ்தாந்து கிறிஸ்து; மூன்றாவது, தல்ஸ்தாயிடம் அவர் கற்றுக்கொண்ட ஆத்மீகக் கிறிஸ்து. இந்தவிதமாகப் கிறிஸ்தவத்தைக் கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ பிரித்து விளக்கி நான் ஒருபோதும் கேட்டதுமில்லை, வாசித்ததுமில்லை.

இந்த மூன்றுவிதக் கிறிஸ்துகளையும் பற்றி அவர் தன் நூலான, ‘சிலுவையின் பெயரில்’ என்பதில் இன்னொருவிதமாக விளக்கியிருப்பதைக் கவனியுங்கள், ‘இன்று நாமறியும் கிறிஸ்து ஒருவரல்ல. குறைந்தபட்சம் மூன்று கிறிஸ்துக்கள் இருக்கின்றனர். வரலாற்றுக் கிறிஸ்து யூதர்களின் வரலாற்று நூல்களில் இருந்து நமக்குத் தெரியவருபவர். ஆத்மீகக் கிறிஸ்து கிறிஸ்துவின் சொற்கள் வழியாக கடந்த இருபது நூற்றாண்டுகளில் மாபெரும் மதங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் திரட்டிக்கொண்ட ஓர் ஆளுமை. மதக் கிறிஸ்து கிறிஸ்தவ சபையாலும் மதவாதிகளாலும் முன்வைக்கப்படுபவர்’ என்கிறார் ஜெயமோகன்.

அவர் தொடர்ந்து, ‘இந்த மூன்று கிறிஸ்துக்களையும் பிரித்தறியும் ஒருவரே சமநிலை கொண்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும். கிறிஸ்துவை உணரவும் முடியும். நான் கண்டுவரும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை ஓர் இறைவடிவமாக மட்டுமே பார்ப்பவர்கள். லௌகீகமான தேவைகளைக் கோரினால் அளிக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத ஓர் இருப்பு மட்டும்தான் கிறிஸ்து அவர்களுக்கு’ என்கிறார். தன்னுடைய கிறிஸ்து ‘இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு மாபெரும் ஆன்மீக ஞானி’ எனும் ஜெயமோகன், ‘அந்தக் கிறிஸ்துவை தல்ஸ்தாய், தஸ்தயேவ்ஸ்கி (இரஷ்ய எழுத்தாளர்கள்) வழியாகவே என் ஆத்மாவில் கண்டு கொண்டேன்’ என்கிறார்.

தன் கண்களுக்கும் புலன்களுக்கும் நூல்கள் மூலமும், மதங்கள் மற்றும் திருச்சபைகள் மூலமும் தெரியும் அத்தனை அம்சங்களையும் ஆராய்ந்து சுயமாகத் தனக்குள்ளேயே, தன் பார்வைக்கும் சிந்தனைக்கும் சரியாகப்படுகின்ற ஒருவகைக் ‘கிறிஸ்துவை’ ஜெயமோகன் தனக்குள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவரால் கிறிஸ்துவை ஒரு மாபெரும் ஞானியாக மட்டுந்தான் பார்க்க முடிகிறது. உண்மையில் இவருடைய கிறிஸ்து பற்றிய எண்ணங்கள் புதிதானவையல்ல. ஆதி சித்தர்கள் இந்த முறையில்தான் கடவுளைக் குறித்த எண்ணங்களைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிலை வணக்கத்தை வெறுத்தார்கள். அதனால் சுயஞானத்தின் அடிப்படையில் கடவுளை வேறுவிதங்களில் உணரவும் விளக்கவும் முயன்றார்கள். ஜெயமோகனுக்கு இயேசு கிறிஸ்து மீது நன்மதிப்பு இருக்கிறது. அவருடைய ‘மாபெரும் ஞானியான’ அந்தக் கிறிஸ்துவை அவரால் இன்றைய கத்தோலிக்கம் உட்பட்ட திருச்சபை அமைப்புக்களோடும், பெந்தகொஸ்தே குழுக்களோடும் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாமல் இருக்கிறது. தமிழகத்திலும் அதற்குப் புறத்திலும் இவ்வமைப்புகளில் அவர் காணும் வேதத்துக்கு முரணான செயல்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முக்கியமாக பெந்தகொஸ்தே குழுக்களினதும், கிறிஸ்தவ அமைப்புகளினதும் வேத ஆதாரமற்ற சுவிசேஷ அறிவிப்பு முறைகளை அவர் நிராகரிக்கிறார். கிறிஸ்தவ அமைப்புகளின் நியாயமற்ற செயல்கள்தான் அவரை, ‘கிறிஸ்துவின் சொற்களில் இருந்து உருவான சபைகளுக்கு அவர் பொறுப்பானவரல்ல’ என்று எழுதவைத்திருக்கிறது. ஜெயமோகன் கிறிஸ்தவ அமைப்புகளைக் குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்கவில்லை; அவற்றில் நிச்சயம் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இதை நான் ‘உடையும் இந்தியா’ நூலுக்கு எதிராக எழுதிய மறுப்புக் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தேன் (‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ திருமறைத்தீபம், இதழ் 4, 2013).

ஜெயமோகன் பிறந்ததும் வளர்ந்ததும் இந்துவாகத்தான்; இருந்தும் பொதுவுடமைக் கொள்கைகளில் அவருக்குப் பற்றிருக்கிறது. இதெல்லாம் அவரை மதங்களைக் கடந்ததொரு ஆன்மீகக் குருவைத் தேடவைக்கிறது. அந்தளவில் இருந்து மட்டுமே அவர் இயேசுவை ‘ஆத்மீக இயேசுவாகக்’ கணிக்கிறார்.

ஜெயமோகனின் கிறிஸ்தவம் பற்றிய தவறான புரிதல்கள் பற்றிய நான்கு அம்சங்களை விளக்க விரும்புகிறேன்:

  1. ஜெயமோகன் வேதக் கிறிஸ்துவைச் சரியாகப் புரிந்துகொள்ளாத நிலையிலிருக்கிறார்.அதில் ஆச்சரியமில்லை. வேத இறையியலின்படி ஆவியானவரால் கண்கள் திறக்கப்படாதிருக்கும் நிலையிலுள்ள எவருக்கும் வேதம் விளக்குகின்ற வரலாற்றுக் கிறிஸ்துவைத் தெரிந்துகொள்ள முடியாமலிருப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. சுயத்தில் கிறிஸ்துவைத் தேடுகிறவர்களால் ஒருபோதும் வேதகிறிஸ்துவை அறிந்துகொள்ளவோ, உணரவோ முடியாது. கிறிஸ்தவ வேதத்தைப் பொறுத்தவரையில் மனிதன் சுயத்தில் ஆத்மீக உணர்வடையும் நிலையை இழந்து நிற்கிறான். அதற்கு வேதம் விளக்கும் மூலபாவமே காரணம். பாவத்தினால் பாதிக்கப்பட்டு கடவுளோடு இருக்கக்கூடிய தொடர்பை ஆதாமில் இருந்து இழந்து நிற்கும் எவராலும் சுயத்தில், சுயத் தேடுதலின் மூலமாகவும், எந்தக் கிரியைகளின் மூலமாகவும் கிறிஸ்துவை அனுபவபூர்வமாக ஒருபோதும் உணர முடியாது. அதற்கு சுயம் இடம் கொடுப்பதில்லை. அத்தோடு சுயம் ஆத்மீக ஆற்றலைப் பாவத்தால் முற்றாக இழந்து நிற்கிறது. அறிவுஜீவியான ஜெயமோகன் இயேசுவை அறிந்துகொள்ள தன்னுடைய அறிவிலும், சிந்தனையிலுமே தங்கியிருக்கிறார். பவுல் அப்போஸ்தலன் அத்தேனேயில் அப்படிப்பட்டவர்களைச் சந்தித்தபோது அவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருக்கிறார்.

ஜெயமோகனின் சுயத்தேடலும், புரிதலும் கிறிஸ்துவை ஒரு ஞானி என்ற அளவில் பார்க்க மட்டுமே இடங்கொடுத்திருக்கிறது. இதுவே மகாத்மா காந்திக்கும் நேர்ந்த கதி. உண்மையில் ஜெயமோகன் குறிப்பிடும் ரஷ்ய எழுத்தாளர்களான தல்ஸ்தாய்க்கும், தஸ்தயேவ்ஸ்கிக்கும் இதுவே நிகழ்ந்திருக்கிறது. இதற்கு மேல் போய் அவர்களால் கிறிஸ்துவை அறியவோ, விசுவாசிக்கவோ முடியாமலிருந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

கிறிஸ்துவை உலகத்தில் நம் பார்வையில் படும் பாவங்களோடு தொடர்புபடுத்திப் பார்க்காமல் பரிசுத்தராக, புனிதராக ஜெயமோகன் பார்ப்பது பாராட்ட வேண்டியதொன்று. ஆனால், வேதம் விளக்கும் கடவுளான, திரித்துவ தேவர்களில் ஒருவரான, தேவகுமாரனும் மனுஷகுமாரனுமான இயேசு கிறிஸ்து வெறும் புனிதரோ, பரிசுத்தரோ மட்டும் அல்ல; அதற்கெல்லாம் மேலான இறையாண்மை கொண்ட படைத்தவரான கடவுளாக இருக்கின்றார். கிறிஸ்துவைத் தேடும் எவரும் வேதம் குறிப்பிடும் நாகமானையும், சமாரியப் பெண்ணையும், நிக்கொதேமுவையும்போல் மனத்தாழ்மையோடும், சுயத்தில் அவரை அறிந்துணரமுடியாது என்ற நிலைப்பாட்டோடும், கிறிஸ்துவே! நான் உம்மைத் தெரிந்துணரத் துடிக்கிறேன். நீர் எனக்கு வேண்டும். கிருபையால் உம்மை எனக்கு அறியச் செய்யும் என்று, தங்களுடைய பாவநிலையை உணர்ந்து கிறிஸ்துவின் பாதத்தில் அவரை முழுமையாக நம்பி விசுவாசித்து முழுச் சரணாகதி அடைந்தால் மட்டுமே அவரை ஆத்மீகரீதியில் அறிந்துணர முடியும். அத்தகைய ஆவிக்குரிய அறிதலை கிறிஸ்துவே விசுவாசத்தின் மூலம் அளிக்கிறவராயிருக்கிறார். இதெல்லாம் ஜெயமோகனுக்குத் தெரிந்திராமல் இருப்பதற்கு அவர் கிறிஸ்துவை அறிவதில் தன் சுயத்தில் மட்டும் தங்கியிருப்பதே காரணம். அத்தோடு இதை அவர், அவருக்குத் தெரிந்திருக்கும் எந்தப் புரொட்டஸ்தாந்து போதகரிடமும் இருந்து கேள்விப்படாமலிருந்திருப்பது பெரும் ஆச்சரியம். ஜெயமோகன் தன் தேடலைத் தொடர்ந்து தமிழில் இருக்கும் பரிசுத்த வேதத்தை மட்டும் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையோடு வாசித்து வந்தாரானால் கிறிஸ்துவின் கிருபையால் அவர் கிறிஸ்துவில் ஆத்மீக விடுதலையை அடைய முடியும். போதகர்கள் கைவிட்டாலும் வேதம் ஒருபோதும் ஒருவரைக் கைவிடாது. சத்தியம் விடுதலை தரும் என்கிறது கிறிஸ்தவ வேதம்.

  1. திருச்சபைகள் பற்றிய ஜெயமோகனின் புரிதல் சரியானதல்ல.ரோமன் கத்தோலிக்க மதத்தை ஜெயமோகன் கிறிஸ்தவத்தின் ஒருபகுதியாகக் கணித்திருப்பதில் ஆச்சரியமில்லை. இதை இந்திய தேசத்தில் பொதுவாகவே கிறிஸ்தவர்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடமும் காணப்படும் ஒன்று. அதற்குக் காரணம் இந்தியாவில் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு இருக்கும் செல்வாக்கும், அந்த மதத்தின் பாதிப்பு அதிகமாக அநேக கிறிஸ்தவ பிரிவுகளிலும் காணப்படுவதுந்தான். கிறிஸ்தவரல்லாத இந்துக்கள்கூட, விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ, மூலைக்கு மூலை அன்னை மேரியின் சிலையும், கத்தோலிக்க ஆலயங்களும் அவர்கள் கண்படுமிடங்களிலெல்லாம் காணப்படுகின்றன. இதெல்லாம் பொதுவாகவே எல்லோரையும் கிறிஸ்தவத்தைக் கத்தோலிக்கப் பார்வையோடு அணுகவைக்கிறது. இந்தியாவில் கிறிஸ்தவ நூல்களில் பெரும்பாலானவை கத்தோலிக்க அணுகுமுறையிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. பத்திரிகைகளும், மீடியாக்களும் கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவமாகவே கருதி செய்திவெளியிடுகின்றன.

ஆதியில் முதல் நூற்றாண்டில் ஆரம்பித்த கிறிஸ்தவ திருச்சபை பின்பு 3ம் நூற்றாண்டில் பலவிதமான போலிப்போதனைகளுக்கு முகங்கொடுத்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டிருந்தபோதும், அது சத்தியத்தைத் துறந்து படிப்படியாகப் போலிகளுக்கு தன்மத்தியில் இடங்கொடுத்து, அதன் காரணமாக தன்னுடைய ஆத்மீக வல்லமையை முற்றுமாக இழந்து திருச்சபை என்ற பெயரில், போலித்தனமான ஓர் உலகம் சார்ந்த நிறுவனமாக மாறியது. இந்த உலகில் அந்நிலையில் இருந்த போலி சபையே ரோமன் கத்தோலிக்கமாக உருமாறியிருக்கிறது. 7ம் நூற்றாண்டளவில் ரோமன் கத்தோலிக்கப் போதனைகள் முழுமையடைந்து நாட்டரசையே ஆட்டிப்படைக்கும் ஒரு நிறுவனமாக அதற்குப் பிறகு பலநூற்றாண்டுகளுக்கு மெய்க்கிறிஸ்தவத்தின் முதன்மை எதிரியாக உலகில் வலம் வந்தது.

16ம் நூற்றாண்டிலேயே அதன் ஆதிக்கம் ஆட்டம் காண ஆரம்பித்து இன்று அத்தகைய உலக வல்லமையைக் கொண்டிராத ஒரு மதமாக ரோமன் கத்தோலிக்கம் இருந்து வருகிறது. கிறிஸ்தவ சபைக்குள் புகுந்த போலித்தனம் பின்பு ரோமன் கத்தோலிக்கம் உருவாகக் காரணமாக இருந்ததென்பதை வைத்து, அந்த மதத்தை மெய்க்கிறிஸ்தவமாகக் கணித்து வருவது மிகவும் தவறான செயல். ரோமன் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவத்தோடு தொடர்பற்ற மதமாக நான் கணிப்பததற்கு முதன்மைக் காரணம், அந்த மதம் கிறிஸ்தவ வேதத்தின் அதிகாரத்தை அடியோடு ஏற்றுக்கொண்டு அதன் வழியில் போகாமல் இருப்பதுதான். மெய்க்கிறிஸ்தவத்தை வேறு பிரிவுகளில் இருந்து வேறுபடுத்துவதும் இந்த முதன்மைக் காரணிதான். இதைத்தவிர ரோமன் கத்தோலிக்கம் கிறிஸ்தவ வேதத்திற்கு விரோதமான அநேக வழிமுறைகளைத் தன்னில் கொண்டு தனிமதமாக இயங்கிவருகிறது. இத்தனைக் காரணங்களையும் பாரபட்சமில்லாமல் எழுதப்பட்டிருக்கும் ஒரு நல்ல ஆங்கில கிறிஸ்தவ வரலாற்று நூலில் இருந்து அறிந்துகொள்ள முடியும். Schaff எழுதிய The History of the Christian Church என்ற ஆறு வால்யூம்களே இதை அருமையாக விளக்கிவிடும். அத்தோடு நான் எழுதி வெளியிட்டுள்ள ‘கிறிஸ்தவ திருச்சபை வரலாறு’ முதலாம் பாகத்திலும் ரோமன் கத்தோலிக்க மதத்தின் முழு வரலாற்றையும், போதனைகளையும் வரலாற்று ரீதியில் விளக்கியிருக்கிறேன். இதற்கு மேல் கிறிஸ்தவ வேதத்தின் போதனைகளை ரோமன் கத்தோலிக்க மதப்போதனைகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தாலே போதும்; உண்மை தானாக வெளிப்படும்.

இறையியல் ரீதியில் கத்தோலிக்க மதம் குறிப்பிடும் இயேசு கிறிஸ்து கிறிஸ்தவ வேதத்தில் நாம் காணும் இயேசு கிறிஸ்துவல்ல. கத்தோலிக்க மதம், கிறிஸ்துவை இறையாண்மை கொண்ட தேவனின் ஒரே குமாரனாக, பாவிகளுக்கு இரட்சிப்பைப் பூரணமாக வழங்கக்கூடியவராகக் கணிப்பதில்லை. அந்த இரட்சிப்பை மனிதர்களுக்கு அளிப்பதில் தனக்கும் அது ஒரு பெரிய பங்கை எடுத்துக்கொள்கிறது. கர்த்தர் திருச்சபையை இரட்சிப்பின் செய்தியை அறிவிக்க நிறுவினாரே தவிர, இரட்சிப்பை அளிப்பதற்கு நிறுவவில்லை. அத்தோடு கத்தோலிக்க மதம், இயேசுவின் தாயாகிய மேரியைப் புனிதர்களில் ஒருவராகக் கணித்து அவரை வணங்குவதையும், கர்த்தரால் அற்புதமாக அளிக்கப்பட்ட வெளிப்படுத்தலான கிறிஸ்தவ வேதத்திற்கு அடியோடு புறம்பான மனித எழுத்துக்களான தள்ளுபடியாகமங்களையும் வேதத்திற்கு இணையானதாக, அதிகாரமுள்ளவையாகக் கருதுகிறது.

சாதாரண மனிதர்களைப் புனிதர்களாக்கி அவர்களைத் தெய்வீகம் கொண்டவர்களாகக் கணித்து உயரத்தில் வைத்து வணங்குகிறது கத்தோலிக்க மதம். போப்பைப் பேதுருவின் வழிவந்த தெய்வீக அப்போஸ்தலப் பதவியை வகிப்பவர் என்ற கிறிஸ்துவை நிந்திக்கும் போதனையையும் தனக்குள் அது தொடர்கிறது. அப்போஸ்தலனான பேதுரு திருச்சபையின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தபோதும் அவரில் எந்தத் தெய்வீகமும் காணப்படவில்லை. பேதுரு ஒரு சாதாரண மனிதன் மட்டுமே என்பதைக் கிறிஸ்தவ வேதம் தெளிவாக விளக்குகிறது. கத்தோலிக்க மதத்தை ஒரு மதமாக, கிறிஸ்தவ வேதத்தோடு தொடர்பில்லாத ஒரு சமயநிறுவனமாக நிச்சயம் நான் அங்கீகரிக்கிறேன். ஆனால், அதற்கு கிறிஸ்தவத்தோடு எந்தத் தொடர்பும் அடிப்படையில் இல்லை என்பதையும், அந்த மதத்தின் மூலம் ஒருவரும் கிறிஸ்துவில் ஆத்மீக இரட்சிப்பை அடைவதற்கு வழியில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல; கிறிஸ்தவ வேதமும், கிறிஸ்தவ வரலாறும் தெளிவாக விளக்குகின்ற அசைக்க முடியாத சத்தியம். அதனால் கத்தோலிக்க மதத்தை வேதபூர்வமான கிறிஸ்தவப் பிரிவாகவும், கத்தோலிக்கர்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைப்பதும் முரண்பாடான செயல்கள். இதனால்தான் 1800களில் திருநெல்வேலிப் பகுதியில் ஊழியப் பணி செய்திருந்த மிஷனரிகளான ரேனியஸ், சார்ஜன்ட், தோமஸ், கால்ட்வெல், ஜி. யூ. போப் போன்றவர்கள் கத்தோலிக்க மதத்தோடு எந்தவிதத் தொடர்பையும் மதரீதியில் வைத்திருக்கவில்லை. அத்தோடு கத்தோலிக்கர்களுக்கு சுவிசேஷத்தைச் சொல்லி மனந்திரும்பிக் கிறிஸ்துவை மட்டும் விசுவாசித்தவர்களைச் சபையில் இணைத்திருக்கிறார்கள். இதையே இவர்களுக்கு முந்தைய காலப்பகுதியில் இந்தியாவில் பணிபுரிந்திருந்த சீகன் பால்குவும், வில்லியம் கேரியும் செய்திருக்கிறார்கள்.

  1. புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தைப் பற்றி ஜெயமோகனுக்கு முழுமையான தெளிவில்லை.புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தைச் சீர்திருத்த கிறிஸ்தவம் என்று ஜெயமோகன் அறிந்துவைத்திருக்கிறார். புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவம் பற்றிய அவருடைய சில கருத்துக்கள் உண்மையில் பாராட்டக்கூடியவை. கிறிஸ்தவரல்லாத ஒருவர் இந்தளவுக்கு கிறிஸ்தவம் பற்றிய புரிதலைக் கொண்டிருப்பதே ஆச்சரியந்தான். இருந்தபோதும் ஜெயமோகனின் புரெட்டஸ்தாந்து கிறிஸ்தவம் பற்றிய பல விஷயங்கள் குறைபாடுள்ளவை.

மார்டின் லூத்தருடைய யூத எதிர்ப்புக் கருத்துக்கள் பற்றி அவருடைய வாசகரொருவர் எழுதியிருந்த கடிதத்திற்கு ஜெயமோகன் அளித்திருந்த பதிலில் அவருடைய புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவம் பற்றிய சில கருத்துக்களை அறிந்துகொண்டேன். கத்தோலிக்க மதத்தில் வெறும் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதற்காக எழுந்ததல்ல புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவம் என்றும், கத்தோலிக்கத்தின் ஆன்மீகப் பார்வைக்கும், மார்டின் லூத்தரின் ஆன்மீகப் பார்வைக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடுண்டென்றும், கிறிஸ்தவ செய்தி என்பது தனி நபரின் ஆன்மாவை நோக்கி அந்தரங்கமாகச் செல்லவேண்டிய ஒன்று என்று லூத்தர் வற்புறுத்தினார் என்றும், கத்தோலிக்க மதத்தில் தனி மனித ஆன்மீகத்திற்கு இடமில்லை என்றும் அவர் விளக்கியிருந்தது மிகவும் சரியானதே.

லூத்தருடைய யூதவெறுப்புக் கருத்துக்களை ‘இந்த நூற்றாண்டின் அறிவியலை நிபந்தனையாகக் கொண்டு நாம் மதிப்பிடக்கூடாது’ என்று அவர் எழுதியிருந்தார். லூத்தரின் யூத வெறுப்புப் பார்வை குறைபாடானது என்பதை ஜெயமோகன் ஒப்புக்கொள்கிறபோதும் அதைவைத்து லூத்தரை எடைபோடுவதை அவர் அனுமதிக்கவில்லை. லூத்தரின் ‘முதன்மையான பணி வேதத்தை அனைவரும் வாசிக்கும்படியாக எளியமொழியில் கொண்டுவந்ததே’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுவரை அவர் லூத்தரைப் பற்றி எழுதியிருந்ததெல்லாம் சரியானவையே. மார்டின் லூத்தர் ஜெர்மன் மொழியில் வேதத்தை மொழிபெயர்த்திருந்தார். தன் நாட்டு மக்கள் மத்தியில் அவர் வேதத்தைக் கொண்டு சேர்த்தார். வேதத்தை ஏனையோர் வேறு மொழிகளில் மொழிபெயர்த்தனர். லூத்தரின் முதன்மைப் பணி, அனைத்திற்கும் மேலாக வேதத்தின் அதிகாரத்தை வலியுறுத்தி, கிரியைகளின் மூலமாக ஒருவர் கடவுளுக்கு முன் நீதிமானாக முடியாதென்றும், மனித சித்தம் பாவத்தினால் கறைபடிந்திருப்பதால் சுயத்தில் ஒருவர் ஆத்மீக விடுதலையை எந்தக் கிரியையையும் செய்து அடையமுடியாதென்றும் வலியுறுத்தி கத்தோலிக்க மதத்தின் கிரியைகளின் அடிப்படையிலான இரட்சிப்பை நாடும் கோட்பாட்டிற்கு எதிரான ஆத்மீகப் போராட்டத்தைச் செய்ததுதான். வேதத்தை மொழிபெயர்த்ததே லூத்தரின் முதன்மைப் பணி என்றளவில் ஜெயமோகனின் பார்வை நின்றுவிடுகிறது.

மார்டின் லூத்தர் யூதர்களுக்கெதிரான வெறுப்பைத் தன் காலத்தில் கொண்டிருந்து அதை ஆக்ரோஷமாக எழுத்தில் வடித்திருந்ததற்குக் காரணம் யூதர்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளுவதில் காட்டிய தீவிர எதிர்ப்புதான். அது அவருக்கு பெரும் வருத்தத்தைத் தந்தது. ஜெர்மனியின் ஹிட்லரின் யூத விரோதக் கொள்கைக்கும், லூத்தரின் யூத விரோதக் கருத்துக்களுக்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது. லூத்தர் யூதர்களை அடியோடு வெறுக்கவில்லை; அவர்கள் கிறிஸ்துவை அடையவேண்டும் என்ற தீவிர ஆதங்கம் அவருக்கு இருந்தது என்று இறையியலறிஞரான ரொபட் கோட்பிரி குறிப்பிட்டிருக்கிறார். ‘அன்டி-செமிட்டிசத்திற்கும், யூத எதிர்ப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. அன்டி-செமிட்டிசம் யூதர்களின் இரத்தப் பிறப்புக் காரணமாக அவர்களை அடியோடு வெறுக்கிறது. லூத்தர் யூதர்களை அவர்களுடைய இரத்தப் பிறப்பு கருதி எதிர்க்கவில்லை. அவர்களுடைய மதமே அவருக்குப் பிடிக்காததாக இருந்தது’ என்று கோட்பிரி எழுதியிருக்கிறார் (YouTubeல் ‘லூத்தர் அன்டி-செமிட்டிசக் கோட்பாடுள்ளவரா?’ என்ற செய்தியில் ரொபட் கோட்பிரி விளக்கியது. இதன் சுருக்கத்தை Ligonier Ministries வலைத்தளத்தில் வாசிக்கலாம்). லூத்தரின் யூதர்கள் பற்றிய எதிர்ப்புப் பார்வை இறையியல் நோக்கம் கொண்டது; அதில் இனத்துவேஷம் இருக்கவில்லை. நாம் நிச்சயம் யூதர்களுக்கு எதிராக லூத்தர் பயன்படுத்தியிருந்த வார்த்தைகளை ஆதரிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது. இருந்தாலும் அதை மட்டும் வைத்து லூத்தரையும் அவருடைய பணிகளையும் இன்றைய கால கண்ணோட்டத்தில் தவறாகக் கணிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அன்டி-செமிட்டிசம் கடந்த நூற்றாண்டுப் பிரச்சனை, லூத்தர் காலத்துப் பிரச்சனையல்ல. ரோமன் கத்தோலிக்கப் போப்பையும், அனாபாப்திஸ்துகளையும்கூட இந்தவிதமாக லூத்தர் தாக்கியெழுதியிருக்கிறார். அதையெல்லாம் லூத்தருடைய நெருப்புக் கக்கும் தனித்தன்மையையும், அவர் காலத்துப் பிரச்சனைகளையும் வைத்தே விளங்கிக்கொள்ள வேண்டும்.

வரலாற்றுச் சீர்திருத்த கிறிஸ்தவத்தை, ஜெயமோகன், கத்தோலிக்க மதத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக அதிலிருந்தவர்கள் மத்தியில் எழுந்த வெறும் புரட்சிகரப் போராட்டமாக மட்டுமே கணிக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் அவருக்குத் தெரிந்த புரொட்டஸ்தாந்து சபை தென்னிந்திய சி. எஸ். ஐ சபை போன்றவை. அந்தச் சபைப்பிரிவுகளையும், அவற்றின் மத்தியில் நிகழ்ந்து வரும் விஷயங்களுமே சீர்திருத்த சபைகள் பற்றிய எண்ணங்களை அவர் வளர்த்துக்கொள்ள உதவியிருந்திருக்கின்றன. புரொட்டஸ்தாந்து கிறிஸ்துவுக்கும், கத்தோலிக்க மதக் கிறிஸ்துவுக்கும் இடையில் அவர் பெரிய வேறுபாட்டைக் காணவில்லை என்றே நினைக்கிறேன். உண்மையில் புரொட்டஸ்தாந்து சீர்திருத்தக் கிறிஸ்தவம் பற்றிய நல்லறிவு அவரிடம் இல்லாமல் இருக்கிறது. நான் எழுதி வெளியிட்டிருக்கும் ‘கிறிஸ்தவ திருச்சபை வரலாறு’ நூலின் இரண்டாம் பாகம் சீர்திருத்த கிறிஸ்தவ வரலாற்றையும், அதன் போதனைகளையும் விளக்குகின்ற நூல்.

  1. ஜெயமோகன் விளக்கும் விந்தையான ‘டால்ஸ்டாய் கிறிஸ்து’ மெய்யான கிறிஸ்து அல்ல.இந்தப் பேட்டியில் அவர் லியோ டால்ஸ்டாய் போன்ற எழுத்தாளர்கள் வேத வசனங்களைப் பயன்படுத்தி எழுதியிருப்பதையும், கற்பனையாக அவர் உருவகித்துக் காட்டியிருந்த கிறிஸ்துவையும் தனக்கு அதிகம் பிடித்திருப்பதாகச் சொன்னார். டால்ஸ்டாய் ஒரு ரஷ்ய எழுத்தாளர். நோபேள் பரிசுக்காக பல தடவைகள் நியமிக்கப்பட்டவர். அவருடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகள் கருத்தளவிலான ஒரு மாற்றத்தை உண்டாக்கியிருந்தது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய நாவல்களை அவர் எழுதியிருந்தார். டால்ஸ்டாய் மெய்யான கிறிஸ்தவ ஆத்மீக அனுபவத்தை (மறுபிறப்பை) அடைந்திருக்கவில்லை; ஒருவகைச் சித்தாந்தப் பாதிப்பை மட்டுமே அடைந்திருந்தவர். டால்ஸ்டாயின் எழுத்துக்களால் கவரப்பட்டு மகாத்மா காந்தியும் கிறிஸ்தவத்தின் சில போதனைகளை (மலைப்பிரசங்கம்) தன் புற வாழ்க்கையில் பயன்படுத்தியும், சத்தியசோதனையில் அதுபற்றிக் குறிப்பிட்டுமிருக்கிறார். இந்தவிதமாக கிறிஸ்தவம் மனிதர்களின் வாழ்க்கையில் புறத்தளவில் ஒரு பாதிப்பைக் கொண்டுவந்திருப்பதை நாம் மறுக்கமுடியாது. இதைக் கிறிஸ்தவம், கர்த்தரின் பொதுவான கிருபையால் மனிதரில் ஏற்படும் மாற்றமாக விளக்குகிறது. அந்தப் பாதிப்பு அதற்குமேலாகப் போகவில்லை; அவர்கள் மனந்திரும்பி மறுபிறப்பை அடைய அது துணைபோகவில்லை. அத்தகைய புறப்பாதிப்பை அடைந்திருந்த பலரை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். ஜெயமோகனுடைய டால்ஸ்டாயின் கிறிஸ்து இந்தளவிலேயே இருந்து வருகிறார். இதற்கெல்லாம் ஒருபடி மேலாகப் போய் வேதபூர்வமான கிறிஸ்தவ அனுபவத்தை மனந்திரும்புதல் மூலம் ஜெயமோகன் அடையக்கூடுமானால் அது எத்தனை நன்மையானதாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். கிறிஸ்துவுக்கு அருகில் வந்து, கிறிஸ்துவைப் பற்றிய சொந்தக் கற்பனைகளைத் தங்களில் வளர்த்துக்கொண்டு, முழுமையாக அவரை அறியாமல் வாழ்ந்து வருகிறவர்களில் ஜெயமோகனும் ஒருவர்.

கிறிஸ்தவர்கள் மத்தியில் சமய சமரசம் (Religious Syncretism)

சமய சமரசம் அடிப்படையில் ஆபத்தானதும், மோசமானதுமாகும். கிறிஸ்துவை அறியாதவர்கள் மத்தியிலும், அநியாயத்திற்கு இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளுகிறவர்கள் மத்தியிலும் சமய சமரசம் சர்வசாதாரணமாக ஆண்டு வருகிறது. வேதத்தின் போதனைகளை எடுத்து அவற்றிற்கு மறுவாசிப்பளிப்பதோ, அவற்றைப் பயன்படுத்தி புதிய மாற்றங்களை உருவாக்குவதோ, கற்பனையாக அவற்றை உருவகிப்பதோ அல்லது தெய்வநாயகம், தேவகலா போன்றோரைப்போல இந்து மதத்திற்குள் அவற்றைத் திணித்து மக்களை நம்பவைப்பதோ சமய சமரசச் செயல்களாகும். இதற்கு கிறிஸ்தவ வேதம் இடங்கொடுக்கவில்லை. சமய சமரசம் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற உதவலாம்; ஆனால் கிறிஸ்துவை நிந்திக்கும் பாதகத்தை அது செய்கிறது. மறுபிறப்படைந்து கிறிஸ்தவ வேதபோதனைகளை மட்டும், உள்ளது உள்ளபடியே நம்பிக் கிறிஸ்துவைப் பின்பற்றி வாழும் வாழ்க்கை உலகத்தில் துன்பத்தையும், கேலிப்பேச்சையும் நாம் அனுபவிக்கச் செய்யலாம்; சிறுபான்மையினராக இருந்துவிடச் செய்யலாம். ஆனால், அத்தகைய சாட்சியுள்ள, கிறிஸ்துவுக்கு மட்டும் மகிமையளிக்கும் வாழ்க்கையையே கிறிஸ்து கிறிஸ்தவர்களிடம் எதிர்பார்க்கிறார்.

ஜெயமோகன் தன்னுடைய ‘சிலுவையின் பெயரால்’ நூலில் ‘தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தாமஸ்’ எனும் ஆக்கத்தை வரைந்திருக்கிறார். அந்த ஆக்கத்திற்கு கிறிஸ்தவர்களிடம் இருந்து ஏச்சுப்பேச்சோடு அநேக மறுப்புரைகள் வந்ததாகத் தெரிவித்திருக்கிறார். கிறிஸ்தவர்கள் அல்லாத பிரமுகர்களும் எதிர்ப்புத் தெரிவித்தார்களாம். அத்தகைய மறுப்புக் கடிதங்களில் சிலவற்றை ஜெயமோகன் நூலில் தந்திருக்கிறார்.

தன் ஆக்கத்தில் ஜெயமோகன் தெய்வநாயகம், தேவகலா, ஜான் சாமுவேல் கூட்டணியின் போதனையான, தாமஸ் தமிழகத்துக்கு வந்து தமிழ் ஆதிக்கிறிஸ்தவமாகிய தமிழர்களுக்கே உரித்தான, ஆரியத் தொடர்பில்லாத திராவிட சமயத்தை உருவாக்கினார் என்ற விளக்கத்தை விபரமாகத் தந்திருக்கிறார். இந்தக் கோட்பாடு எப்படி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கே Early Christianity in Tamil Nadu என்ற ஒரு மகாநாடே இதற்காக நடத்தப்பட்டு தமிழகத்திலிருந்து தெய்வநாயகம், தேவகலா, தயானந்தன் பிரான்சிஸ், எஸ்றா சற்குணம், ஹெப்சிபா ஜேசுதாசன் போன்றோரின் கிறிஸ்தவ ஆய்வுக்கட்டுரைகள் அதில் கொடுக்கப்பட்டு இந்தக் கோட்பாட்டைப் பலரும் நம்பவைக்கும் பிரயத்தனம் செய்யப்பட்டிருக்கிறது. மு. கருணாநிதி, அப்துல் கலாம் போன்றோரின் ஆசியும் இதற்குக் கிடைத்திருக்கிறது. முக்கியஸ்தர்களான தமிழகக் கத்தோலிக்க மதத் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்களும் இதற்கு ஆதரவையும் ஆசியையும் அளித்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக 2008ல் தமிழகத்தில் ‘தமிழர் சமய உலக முதல் மகாநாடும்’ நடத்தப்பட்டதாக ஜெயமோகன் விளக்கியிருக்கிறார். இந்துத்துவாவின் பிடியில் இருந்து தமிழர் சமயமான திராவிட சமயத்தை மீட்கவேண்டும் என்ற கோஷத்தை இந்தத் தமிழகத்து மகாநாடு முன்வைத்திருக்கிறது என்று விளக்கும் ஜெயமோகன், இதை தெய்வநாயகம், ஜான் சாமுவேல் கூட்டணியே முன்வைத்துப் பெரும் பணச்செலவில் உழைத்து வருகிறது என்று விளக்கியிருக்கிறார்.

2013ல் ஜெயமோகன் ஸ்ரீனிவாசன் என்பவருக்கு எழுதிய பதில் கடிதத்தில் பிரஜாபதி என்று கீதையில் வரும் பாத்திரம் இயேசு கிறிஸ்துவே என்று பிரச்சாரம் செய்து வந்த சாது செல்லப்பாவின் போலிப் போதனை பற்றி விளக்கி, அது தவறான மதப்பிரச்சார அணுகுமுறை என்று காட்டுவதற்கு திருமறைத்தீப வலைத்தளத்தில் நான் அதுபற்றி விளக்கியிருந்த ஆக்கத்தின் (இந்திய வேதங்களில் இயேசுவா) ஒரு பகுதியை சுட்டியிருந்தார். தெய்வநாயகம் கோஷ்டி தாமஸ் திராவிட சமயத்தை தமிழர் மத்தியில் உருவாக்கினார் என்ற பிரச்சாரத்தைச் செய்ய, சாது செல்லப்பா இயேசுவை இந்திய வேதங்களில் திணித்து இயேசுவே பிரஜாபதி என்று மக்களை ஏமாற்ற முயல்கிறார். இதெல்லாம் ஆபத்தான சமயசமரசப் போக்குகள்.

கிறிஸ்தவரல்லாதவரான ஜெயமோகன், தெய்வநாயகம் கூட்டணியின் திட்டத்தை இந்த ஆக்கத்தில் அம்பலப்படுத்தியிருப்பது மட்டுமன்றி, தாமஸின் இந்திய வருகை பற்றிய ஆய்வுக்குரிய பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அது வெறும் வாய்க்கு வாய் பரப்பப்பட்ட ஒரு கற்பனைக் கதை என்றும் நம்பக்கூடிய வரலாற்று ஆதாரம் எதுவுமே இன்றுவரை அதை நிரூபிக்கக் கிடைக்கவில்லை என்றும் சுட்டியிருக்கிறார். கிறிஸ்தவ விசுவாசத்தைக் கொண்டிராத ஜெயமோகனுடைய அறிவுரீதியான சிந்தனை தமிழகக் கிறிஸ்தவப் பிரிவுகளிடமோ அல்லது கிறிஸ்தவ தலைவர்களிடமோ இல்லாமலிருப்பது வெட்கக்கேடான செயல்தான். போலியான தாமஸ் கட்டுக்கதையையும், தாமஸ் திராவிட மதத்தை உருவாக்கினார் என்பதையும் கிறிஸ்தவ வேதஇறையியல் அடியோடு நிராகரிக்கிறது. இதுபற்றி 2000ம் ஆண்டில் நான் வெளியிட்ட ‘இந்து மதத்தில் இயேசுவா?’ என்ற நூலில், இயேசுவின் அப்போஸ்தலர்களில் யாரும் செய்யாத சமய சமரச முயற்சியில் அப்போஸ்தலர்களின் ஒருவரான தாமஸ் ஈடுபட்டார் என்ற கருத்தை வேத ஆதாரங்களை முன்வைத்து நான் நிராகரித்து எழுதியிருந்தேன். வெறும் அரசியல், பொருளாதார, சமூக காரணங்களுக்காக இத்தகைய வேதம் நிராகரிக்கும் ஒரு கோட்பாட்டை முன்வைத்து கர்ணபரம்பரைக் கதைகளுக்கு காதுகொடுத்துப் பழகிப்போன தமிழக மக்களை ஏமாற்றும் பணியில் தெய்வநாயகம், தேவகலா, ஜோன் சாமுவேல் கூட்டணி ஈடுபட்டிருப்பதை ஜெயமோகன் அம்பலமாக்கி அடியோடு அதை மறுத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. இப்படி அதை நிராகரிப்பதில் ஜெயமோகனுக்கு எந்த ஆதாயமும் இல்லை. தன் நண்பர்களான கத்தோலிக்கர்களும் இந்தப் போலித்தனத்துக்கு இடம் கொடுத்து ஆதரவளித்திருந்தபோதும் எதையும் பொருட்படுத்தாமல் தைரியத்தோடு இந்தக் கோட்பாட்டை அவர் நிராகரித்திருக்கிறார்.

ஜெயமோகன் தன் ஆக்கத்தில் இறுதியில் சொல்கிறார், ‘மதமாற்றம் ஒரு இந்தியனின் பிறப்புரிமை . . . வரலாற்றுத் திரிபுகள், வெறுப்புப்பிரச்சாரத்தின் மூலம் அதை செய்ய நினைப்பது மிக ஆபத்தான போக்கு. கிறிஸ்து மனிதனாக வந்த இறைகுமாரன் என்ற உறுதியான நம்பிக்கை இவர்களுக்கு இருக்கும்பட்சத்தில் அந்த ஒரே வரியை சொல்லியே இவர்கள் தங்கள் மதத்தைப் பரப்பலாமே? அதற்கும் அப்பால் சென்று கிறிஸ்துவின் சொற்களில் வெளிப்படும் மானுடநீதிக்கும் எளியவர் மீதான கருணைக்குமான குரலை இவர்கள் கேட்டிருந்தார்கள் என்றால் கிறிஸ்துவை முன்வைப்பதற்கு இத்தனைப் பொய்களைச் சொல்லக் கூசமாட்டார்களா? தியாகத்தின் சிலுவையுடன் கிறிஸ்து வரட்டும், கள்ளநோட்டு எந்திரத்துடன் வரவேண்டாம்’ என்ற ஜெயமோகனின் வார்த்தைகளைத் தெய்வநாயகம் கோஷ்டியின் பிடியில் சிக்கியிருக்கும் கிறிஸ்தவர்கள் ஆராய்ந்து சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைக் கொண்டிருக்கும் சுவிசேஷம் நம் கையில் இருக்கும்போது, ஆத்மீக ஆதாயம் செய்ய ‘தாமஸ் கிறிஸ்தவம்’ போன்ற போலித்தனங்களில் நமக்கு நம்பிக்கை ஏன்? வேதம் தெளிவாக விளக்கும் சுவிசேஷத்தின் வல்லமையில் நம்பிக்கை வைக்காவிட்டால் நமக்கு கிறிஸ்துவில் நம்பிக்கை தளர்ந்துவிட்டது என்றுதான் அர்த்தம். இந்துக்களோ, இஸ்லாமியர்களோ, புத்தமதத்தவரோ கலப்படமற்ற சுவிசேஷத்தை மட்டும் கேட்டுச் சிந்தித்து மனந்திரும்புவதற்கு பரிசுத்த ஆவியில் நாம் தங்கியிராவிட்டால் கிறிஸ்தவர்கள் என்று நம்மை அழைத்துக்கொள்ளுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஆத்தும ஆதாயத்துக்கு சுவிசேஷத்தில் மட்டும் நம்பிக்கை வைத்துப் பிரசங்கிக்காத பிரசங்கிக்கு ஐயோ! திருச்சபைக்கும் ஐயோ! என்றுதான் இறைமகனான இயேசுகூட சொல்லுவார்.

என்னைப் பொறுத்தவரையில் ஜெயமோகனின் ‘சிலுவையின் பெயரால்’ நூல் அவர் மேல் நான் கொண்டிருக்கும் மதிப்பைக் குறைத்துவிடவில்லை. இருந்தபோதும் இலக்கியத்தைத் துல்லியமாக ஆராய்ந்து விளக்கம் கொடுக்கும் இந்த ஆளுமை, இந்த நூலில் விளக்கும் கிறிஸ்தவத்தைப் பற்றிய விஷயங்களில் அந்த ஆக்கபூர்வமான ஆய்வைப் பயன்படுத்தவில்லை என்பது என் கருத்து. இனிமேலும் கிறிஸ்தவத்தைப் பற்றிய கருத்துக்களை வெளியிடும்போது தகுதியானவர்களிடம் அதை விசாரித்து, ஆய்வு செய்து வெளியிடுவது அவருடைய மதிப்பைக் காப்பாற்றும். ஜெயமோகனின் பெயரைச் சுமக்கும் அநேக நூல்களில் இது ஒரு கருப்புப்புள்ளி!

 

© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.