1. வாசகர்களே!
2. கர்த்தருடைய நாள்: கிறிஸ்தவ சபத்து நாள்
3. அழிவுக்கு முன் வந்த அமைதி
4. தந்தை வழி போகாத தனயன்
5. தவறைச் சரிசெய்தலும் (Restitution), அதற்கு ஈடு செய்தலும் (Reparation)
6. சலிப்பூட்டும் சம்பாஷனையும், பிதற்றல் பிரசங்கங்களும் – கருத்துரை – ஷேபா மிக்கேள் ஜோர்ஜ்
வாசகர்களே!
வணக்கம் வாசகர்களே! மறுபடியும் ஒரு புதிய இதழை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இதழாசிரியரான என்னோடு, இதழ் பணியில் இணைந்து உழைப்பவர்களுக்கு என் நன்றிகள். கர்த்தரின் கிருபையால் இந்த இதழையும் தரமான ஆக்கங்களுடன் தயாரித்து வழங்க முடிந்திருக்கிறது.
இதில் இரண்டு ஆக்கங்கள் 2 இராஜாக்கள் நூலின் 14ம், 15 அதிகாரத்தின் பகுதிகளுக்கான வியாக்கியானப் பிரசங்கங்களாக வந்திருக்கின்றன. வேதத்தின் ஒரு பகுதியான பழைய ஏற்பாட்டு நூலைப் பக்குவத்தோடு அணுக வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. புதிய ஏற்பாடுபோல் வௌ¤ப்படையாக சத்தியங்களை அது விளக்காதபோதும், புதிய ஏற்பாட்டைப் பயன்படுத்தி அதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.
கர்த்தருடைய நாள், கிறிஸ்தவ சபத்து நாளாகப் புதிய உடன்படிக்கைக் காலத்தில் தொடர்கிறது என்ற ஆதிசபை உட்பட சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் நம்பி விசுவாசித்த போதனைக்கு 19ம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆபத்து ஏற்பட்டு, இன்று அதை தைரியத்தோடு நிராகரிக்கும் நிலைக்கு சுவிசேஷ கிறிஸ்தவம் வந்திருக்கிறது. அது பற்றிய அவசியமான ஓர் ஆக்கத்தை இதில் தந்திருக்கிறேன். சத்தியத்தைப் பலர் மறுத்தாலும், மறைத்தாலும், வெறுத்தாலும், வேரோடு சாய்க்க முயன்றாலும் சத்தியம் தொடர்ந்து சத்தியமாகத்தான் இருக்கும்.
மனந்திரும்புதலின் ஒரு பகுதியான தவறை உணர்ந்து, மன்னிப்புக்கேட்டு, அதைச் சரிசெய்து அவசியமானபோது அதற்கு ஈடுசெய்யவேண்டிய அவசியத்தைப் பற்றிய ஓர் ஆக்கம் இதில் வந்திருக்கிறது. அது பற்றிய குழப்பமான சிந்தனைகளைச் சரிசெய்துகொள்ள இது துணைபுரியும். சுவிசேஷ கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த விஷயத்தில் கிரியைவாதம் தலைதூக்கியிருப்பதை நான் அவதானித்திருக்கிறேன்.
நம் சம்பாஷனை பற்றி நாம் அக்கறை காட்டுவதில்லை; அது பொருளுள்ளதாக, விஷயஞானமுள்ளதாக இருக்க நாம் முயற்சி செய்வதில்லை. அந்தத் தவறைச் சுட்டி, அதோடு பிரசங்கங்களில் காணப்படும் பிதற்றல்களையும் உணர்த்தி அவற்றைக் காரணகாரியங்களோடு அலசி, நிவர்த்திக்கான தீர்வுகளையும் சுட்டும் ஓர் ஆக்கமும் இதில் வந்திருக்கிறது.
இதுவரை வந்திருக்கும் இதழ்களைப்போல இந்த இதழும் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்க கர்த்தர் உதவட்டும். – ஆசிரியர்.
கர்த்தருடைய நாள்: கிறிஸ்தவ சபத்து நாள்
கர்த்தருடைய நாளைப் பற்றி விளக்கமளிக்கும் தமிழ் நூல்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. அப்படியே தவறி இருந்துவிட்டாலும், இதுபற்றித் தெளிவான மெய்யான விளக்கத்தை அவை தந்திருக்குமா என்பது சந்தேகமே. அதற்குக் காரணம் எனக்குத் தெரிந்தவரையில் நம்மினத்தில் 18ம் நூற்றாண்டுக் காலத்தில் திருநெல்வேலிப் பக்கம் பணிபுரிந்திருந்த சில மிஷனரிகளைத் தவிர வேறு எவரும் கர்த்தரின் நாளுக்கு மதிப்புக்கொடுத்து அதை அனுசரித்தும், அனுசரித்து வரும்படி சபை மக்களுக்குப் போதித்தும் வந்திருந்தவர்கள் மிகக் குறைவு. கர்த்தருடைய நாளென்று ஒன்று இருக்கிறதென்றறிந்து வாரத்தின் முதல் நாளில் சபைக்கூட்டங்களை நடத்திவருகிறவர்கள் இருந்தபோதும், அதற்கும் அந்த முழுநாளையும் ஆண்டவரின் நாளாக, கிறிஸ்தவ சபத்துநாளாக அனுசரிப்பதற்கும் வடதுருவத்திற்கும், தென்துருவத்திற்கும் இடையில் இருக்கும் தூரமளவுக்கு இடைவெளி இருக்கிறதென்பது அனேகருக்குத் தெரிந்திருக்கவில்லை. இதை வாசிக்கிறபோதே பலருடைய மனம் நான் சொல்வது பற்றிக் கேள்வியெழுப்ப ஆரம்பித்திருக்கும். இதுபற்றி விளக்கும் ரொபட் மார்டின்,
‘கிறிஸ்தவ வரலாற்றின் ஒவ்வொரு காலப்பகுதியிலும் திருச்சபை இறையியல் போராட்டத்தைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. இதில் 20ம் நூற்றாண்டு மிகவும் தீவிரமான இறையியல் விவாதத்தில் ஈடுபட்ட நூற்றாண்டாக இருந்திருக்கிறது. வேதத்தின் அதிகாரத்தைக் குறித்த பழைய போராட்டங்கள் மறுபடியும் தலைதூக்கித் தீவிரமாக கிறிஸ்தவ விசுவாசத்திற்கும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் புதிய யுகத்திற்கான அர்த்தத்தைத் தேட ஆரம்பித்தன. இந்நூற்றாண்டில் தலைதூக்கிய கெரிஸ்மெட்டிக் இயக்கத்தின் காரணமாகப் பரிசுத்த ஆவியானவர் பற்றிய இறையியல் போதனை பியூரிட்டன் காலத்துக்குப் பிறகு முதல் முறையாக பெருமளவுக்கு விவாதிக்கப்பட்டது. இது தவிர வேறு இறையியல் போதனைகளும் பலரது கவனத்தையும் ஈர்த்தன; விசுவாசத்தினால் நீதிமானாகுதல், கர்த்தரால் ஏற்றுக்கொள்ளத் தகுந்த ஆராதனை முறை, கிறிஸ்தவ வாழ்க்கையில் நியாயப்பிரமாணத்தின் இடம் என்பது போன்ற அதிமுக்கிய போதனைகள் பற்றிய விவாதங்கள் எழுந்தன. ஒவ்வொரு யுகத்தில் வாழும் கிறிஸ்தவர்களும் இத்தகைய இறையியல் கேள்விகளுக்குப் பதில் தேடியாக வேண்டியிருக்கிறது. நாம் வாழும் யுகமும் இதற்கு விதிவிலக்கானதல்ல’ என்றெழுதியிருக்கிறார்.
டாக்டர் மார்டின், இதைத் தன்னுடைய 418 பக்கங்களைக்கொண்ட ‘கிறிஸ்தவ சபத்து’ (Christian Sabbath) எனும் அருமையான நூலின் அறிமுகத்தில் எழுதியிருக்கிறார். இந்த நூல் கிறிஸ்தவ சபத்து (கர்த்தரின் நாள்) பற்றிய பியூரிட்டனான ஜோன் ஓவனின் போதனைகளுக்கு இணையானது என்று கூறலாம். நம் காலத்தில் கர்த்தருடைய நாள் பற்றி விளக்கும் நூல்களில் முன்னிலையில் இருக்கும் ஆய்வும், ஆழமும், வேத அதிகாரமும் கொண்ட ஆணித்தரமான நூல் இது என்பது என் கருத்து.
மேலைத்தேய நாடுகளில் ஓய்வுநாள்
மேலைத்தேய நாடுகளில் 19ம் நூற்றாண்டுவரை கர்த்தருடைய நாளான கிறிஸ்தவ சபத்து பற்றி எவரும் கேள்வியெழுப்பியது கிடையாது. அதுவரை அதை வேதபோதனையாக அனுசரித்துவரப் பழகியிருந்தார்கள். அத்தோடு அதுவரை உலகமும்கூட ஞாயிறு தினத்தை விடுமுறை தினமாக மட்டும் கருதாமல், கடைகளைத் திறந்து வியாபாரம் செய்வதையும் தடைசெய்து வைத்திருந்தார்கள். முழு நாளையும் கடவுளுடைய நாளாக அனுசரித்து வந்திருந்தனர். இதற்குக் காரணம் 18ம் நூற்றாண்டுவரை சுவிசேஷத்தின் மூலம் பொதுவான கிருபையின் செல்வாக்கு மேலைத்தேய நாடுகளில் இருந்து வந்திருக்கிறது. அதெல்லாம் 19ம் நூற்றாண்டில் அடியோடு மாற ஆரம்பித்து ஞாயிறு தினத்தில் அதுவரை செய்துவந்திராத செயல்களையெல்லாம் சமுதாயம் செய்ய ஆரம்பித்தது. 20ம் நூற்றாண்டில் இருந்து சுவிசேஷக் கிறிஸ்தவர்களும் ஞாயிறு தினத்தை விடுமுறை தினமாக மட்டுமே கணிக்க ஆரம்பித்தார்கள்; ஓய்வுநாளில் வேலைக்குப் போவதை அவர்கள் குற்றவுணர்வில்லாமல் வழக்கமாகக்கொள்ள ஆரம்பித்தார்கள். திருச்சபைகளும் மக்களைச் சபைக்கு வரவழைப்பதற்காக, சிறுபிள்ளைகளுக்கு இனிப்புக்கொடுப்பதுபோல் இசை நிகழ்ச்சிகளையும் வேறு நிகழச்சிகளையும் நடத்த ஆரம்பித்தார்கள். ஓய்வுநாள் அனுசரிப்பு என்பது பழைய ஏற்பாட்டு யூதமுறை என்றும், புதிய ஏற்பாட்டுக் காலத்துக்கு அது எந்தவிதத்திலும் உகந்தது அல்ல என்ற எண்ணமே கிறிஸ்தவர்கள் மத்தியில் பொதுவாக இருந்துவரும் கருத்தாக இருக்கிறது. சீர்திருத்த கிறிஸ்தவ திருச்சபைகள் மட்டுமே இதற்கு விதிவிலக்காக ஓய்வுநாளைக் கர்த்தருடைய கிறிஸ்தவ சபத்து நாளாக அனுசரித்து வந்தன. இந்த 21ம் நூற்றாண்டில் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டிருக்கிறது. திருச்சபைக்கு மதிப்புக்கொடுக்காமல் நிறுவன ஊழியங்களை நடத்திவருவது அதிகரித்து அதன் காரணமாக ஓய்வுநாளில் ஆராதனைக்குக் கூடிவருவதற்கு மதிப்பில்லாமல் போயிருக்கிறது. 2020ல் ஆரம்பித்த கோவிட்-19 இதை இன்னுமொரு கட்டத்துக்குக் கொண்டுபோய் சபைகூடிவருதலை Zoom கூடிவருதலாக மாற்றிவிட்டிருக்கிறது. ‘ஓய்வுநாளை இல்லாமாக்கினால் கிறிஸ்தவம் இல்லாமல் போய்விடும்’ என்று ஜே. சி. ரைல் என்றோ சொன்ன வார்த்தைகளை நினைவுபடுத்துவதுபோல் ஓய்வுநாளை மதிப்பதும் அருகிப்போய் கிறிஸ்தவ செல்வாக்கும் மேலைநாடுகளில் குறுகிப்போயிருக்கிறது.
பசுபிக் தீவுநாடுகளில் ஓய்வுநாள்
நான் வாழும் நியூசிலாந்து நாட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சில தீவுநாடுகளில் (Island nations) இன்றும் ஞாயிறு தினத்தில் கடைகளைத் திறந்துவைத்து எவரும் வியாபாரம் செய்வதில்லை. அதுமட்டுமல்லாமல் முழுத்தீவு மக்களும் அந்நாளில் சபைகளுக்குப்போய் ஆராதனை செய்வார்கள் (டொங்கா, சாமொவா, ராரடொங்கா, பீஜீ போன்றவை). இந்நாடுகளில் சுவிசேஷ கிறிஸ்தவத்தின் பாதிப்பு இன்று மிகவும் குறைந்து காணப்பட்டபோதும், ஞாயிறு தினத்தில் எல்லோரும் சபைக்குப்போய் வருவதும், அந்நாளில் முழுக்கடையடைப்பும், விமானதளங்களும் இயங்காத நிலை இன்றும் தொடர்கின்றது. நான் பல வருடங்களுக்கு முன் ராரடொங்கா (குக் தீவுகள்) நாட்டிற்கு விடுமுறைக்குப் போயிருந்தபோது ஞாயிறு தினத்தில் ஒரேயொரு கடை மட்டுமே அவசரத் தேவைக்காகத் திறந்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். விமானநிலையம் உட்பட அனைத்தும் அந்நாளில் மூடப்பட்டு, நாட்டு மந்திரிகளும்கூட ஆராதனைக்குச் சபைக்குப் போனார்கள். மக்கள் புதிய உடைகளை உடுத்தி மரியாதையோடு ஆராதனைக்குப் போனார்கள். அவர்களுடைய சபை ஆராதனையில் கலந்துகொண்டபோது அவர்கள் ராகத்தோடு அருமையாகப்பாடி ஆராதித்ததை அவதானித்தேன். இன்றும் இத்தீவுகள் ஞாயிறு தினத்தை கர்த்தருடைய நாளாக அனுசரிப்பது அங்கே வழக்கத்தில் இருந்து வருகிறது. சுவிசேஷத்தினால் அல்லாமல் இந்தக் கிருபை இந்நாடுகளுக்குக் கிடைக்கவில்லை. இன்று சுவிசேஷத்தை இந்நாடுகள் இழந்துகொண்டிருக்கின்றன. கர்த்தருடைய நாளை அனுசரிப்பது அத்தனை அவசியமானதும், கர்த்தரை மகிமைப்படுத்தும் செயலாகவும் இருந்தபோதும் சுவிசேஷ கிருபையை கிறிஸ்துவுக்குள் அனுபவித்திராமல் அதைச் செய்வதால் எந்தப் பயனுமில்லை.
நம்மினத்தில் ஓய்வுநாள்
நம்மினத்து நிலைமை இதையெல்லாம்விட மோசமானது. மேலைநாட்டுக் கிறிஸ்தவம் சத்தியத்தை அறிந்திருந்து, அதை அனுபவித்து, நல்ல திருச்சபைகளைக் கண்டிருந்தும் இன்று கர்த்தருடைய நாளைத் தூக்கியெறிந்துவிட்டு திசைமாறிப்போய்க் கொண்டிருக்கிறது. நம்மினத்தில், மேலைநாடுகளைப்போல சத்திய எழுப்புதல் ஏற்பட்டு, திருச்சபைகள் நல்லவிதமாக அமைக்கப்பட்டு கர்த்தருடைய நாள் அனுசரிப்பைக் கொண்டிருந்ததை நம்மவர்கள் கண்டதில்லை. 18ம் நூற்றாண்டில் ஸ்கொட்லாந்து போன்ற பகுதிகளில் இருந்து வந்த நல்ல மிஷனரிப்போதகர்களும், அதற்குப்பின் வில்லியம் கேரி போன்ற வெகுசிலரே கர்த்தருடைய நாள் அனுசரிப்பைக்குறித்துப் பிரசங்கித்தும், உதாரணபுருஷர்களாக இருந்தும் வந்திருக்கின்றனர். கர்த்தருடைய நாள் அனுசரிப்பு பற்றிய போதனைகளும் பெருமளவுக்கு நம்மினத்தில் கொடுக்கப்படவில்லை. வாரத்தில் ஒருநாளில் ஆராதனை நடத்தவேண்டும் என்றும், அதற்கு ஞாயிறு வசதியாக விடுமுறை தினமாக இருப்பதால் அந்நாளில் ஆராதனை நடத்தலாம் என்றவிதத்தில் மட்டுமே இன்று கர்த்தருடைய நாள் பற்றிய எண்ணங்களைத் 99% மானோர் கொண்டிருக்கிறார்கள். ஆராதனை முடிந்தபின், அந்நாளில் எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தோடு வேலை செய்வது முதல், பண்டிகைகள் கொண்டாடுவதும், கடைகளுக்குப் போய் பொருட்களை வாங்குவதும், உணவருந்துவதும் அனைத்து சமூகக் கொண்டாட்டங்களையும் நடத்திவருவதுமே இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் வழக்கமாக இருந்துவருகிறது. கர்த்தருடைய நாள் அனுசரிப்பைப்பற்றிப் போதகர்களும், பிரசங்கிகளும்கூட அதிகளவில் அறிந்துவைத்திருக்கவில்லை. கர்த்தருடைய நாள் அனுசரிப்பு நம் காலத்துக்கும், பண்பாட்டிற்கும் ஒத்துப்போகாதது என்ற எண்ணப்போக்கும், புறஜாதி இனத்தார் மத்தியில் வாழுகிறபோது கர்த்தருடைய நாள் அனுசரிப்பு நடக்காத ஒன்று என்ற சிந்தனையும் காணப்படுகிறது.
இத்தகைய கிறிஸ்தவ சமூக சூழலில் கர்த்தருடைய நாளின் அவசியத்தைப்பற்றி விளக்க முனைகிறபோது எதிர்ப்புக்குரல்கள் எழுவதில் ஆச்சரியமொன்றுமில்லை. எதிர்ப்புக்குரல் எழுகிறதென்பதற்காக சத்தியம் சத்தியமில்லாமல் போய்விடாது. சத்தியமுரண்பாட்டில் ஈடுபட்டு வாழ்ந்து பழகிவிட்டவர்களுக்கு அப்பட்டமாக சத்தியத்தின்படி நடப்பது கஷ்டமாக இருப்பதிலும் ஆச்சரியமில்லை. இருந்தபோதும் சத்தியத்தை சத்தியமாக விசுவாசித்து அதன்படி வாழவேண்டும் என்பதே தனிப்பட்ட கிறிஸ்தவனுக்கும், சபைக்கும் கிறிஸ்துவின் கட்டளையாக இருக்கிறது. நம்மினத்துச் சூழல் அதற்கு ஒத்துப்போகும்விதத்தில் இல்லை என்பதற்காகவும், கர்த்தருடைய நாளைப்பற்றியெல்லாம் வலியுறுத்திப் போதித்தால் ஊழியத்தை வளர்த்து ஊதியத்தை உயர்த்திக்கொள்ள முடியாது என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பவர்களுக்கும் கிறிஸ்தவமும் வேதமும் அவசியமில்லை. கிறிஸ்து போதித்து விளக்கி, தானே உதாரணமாக இருந்து வாழ்ந்து காட்டியிருக்கும் கிறிஸ்தவம் அவசியம் என்றால் யார் என்ன சொல்லுவார்கள் என்பதற்கெல்லாம் இடம்கொடாமல் கிறிஸ்தவ வேதம் போதிப்பதை உள்ளது உள்ளபடியாகப் பின்பற்றி விசுவாசத்தோடு வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை.
ஜோசப் பைப்பாவின் நூல்
ஜோசப் பைப்பா (Joseph Pipa) என்ற போதகரும், இறையியலறிஞரும் ஆங்கிலத்தில் ‘கர்த்தருடைய நாள்’ (The Lord’s Day) என்ற தலைப்பில் அருமையானதொரு நூலை எழுதியிருக்கிறார். இதை நான் பலருக்கும் பலதடவைகள் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். கர்த்தருடைய நாளைப் பற்றி எளிமையாகவும், ஆணித்தரமாகவும் எழுதப்பட்டிருக்கும் நவீன ஆங்கில நூல்களில் இதை நான் முதலிடத்தில் வைப்பேன். இது சீர்திருத்த இறையியலறிஞர்கள் ஒத்துக்கொள்ளுகிற உண்மை. ஜோசப் பைப்பா தன் நூலின் சாராம்சத்தை கையடக்க நூல் வடிவில் (Is the Lord’s Day for you) வெளியிட்டிருக்கிறார். அதில் பைப்பா பின்வருமாறு எழுதியிருக்கிறார்,
‘சீர்திருத்த பக்திவிருத்தி சீர்திருத்த சிந்தனையில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்தப் பக்திவிருத்தி, நம் வாழ்க்கையில் திருச்சபைக்கு அளிக்கும் முக்கியத்துவம், குடும்ப ஆராதனை நடத்துதல், கர்த்தரின் ஒழுக்கநியதிக் கட்டளைகளான பத்துக்கட்டளைகளை உண்மையோடு பின்பற்றுதல், கர்த்தரின் வார்த்தை வழியிலான ஆராதனையில் கலந்துகொள்ளுதல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. இந்த பக்திவிருத்திக்கு அடித்தளமாக இருப்பது, கர்த்தருடைய நாள் கிறிஸ்தவ சபத்தாக இருக்கிறது என்ற ஆழமான நம்பிக்கையைக் கொண்டிருந்து, பொது ஆராதனையில் கலந்துகொண்டும், மீதமான நேரங்களில் தனிப்பட்ட, குடும்ப ஆராதனைகளை நடத்தியும், கிறிஸ்தவ பணியில் ஈடுபட்டும் இந்நாளைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்பதாகும்.’
ஜோசப் பைப்பாவின் இந்த வார்த்தைகள் வாசகர்களின் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். சீர்திருத்தப் போதனைகளின் கீழ் மெய்யாகத் திருச்சபை நடத்தி வராதவர்களின் கீழ் வளர்ந்திருக்கிறவர்களுக்கு இது உண்மையா? என்ற சிந்தனையைக் கிளப்பும். கர்த்தருடைய நாளுக்கும் பக்திவிருத்திக்கும் என்ன தொடர்பு என்று கேட்டு மனம் அலைமோதும். ஜோசப் பைப்பாவின் வார்த்தைகள் உண்மையானவை. வாரத்தின் ஒரு நாளைத் தனியாகப் பிரித்து அதைப் பரிசுத்தப்படுத்தி அந்த நாளை நாம் பரிசுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருப்பது கர்த்தரே (ஆதியாகமம் 1; யாத்திராகமம் 20). கர்த்தருடைய நாளான கிறிஸ்தவ சபத்து நாளில் ஆவிக்குரிய காரியங்களை இருதயத் தூய்மையுடன் விசுவாசத்தோடு செய்வதன் மூலமே அந்த நாளைப் பரிசுத்தமாக வைத்திருக்க முடியும். அந்த நம்பிக்கையே சீர்திருத்தவாதிகளிடமும், பியூரிட்டன் பெரியவர்களிடமும் இருந்தது. அதுவே இன்றைய சீர்திருத்த பாப்திஸ்துகளிடமும் இருந்து வருகிறது.
1689 விசுவாச அறிக்கையில் கர்த்தருடைய நாள்
கர்த்தருடைய நாள் கிறிஸ்தவ சபத்து நாளாக இருக்கிறதென்ற வேத சத்தியத்தை 1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கை மற்றும் வினாவிடைப் போதனையும், வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை மற்றும் வினாவிடைப் போதனையும், ஹைடில்பேர்க் வினாவிடைப்போதனையும் தெளிவாக விளக்கி அந்நாளை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று விளக்குபவையாக இருக்கின்றன. ஆதிசபையில் ஆரம்பித்து, சீர்திருத்தவாத காலத்தில் புதுப்பிக்கப்பட்டு, பியூரிட்டன்களின் காலத்தில் எழுச்சியோடிருந்து, 19ம் நூற்றாண்டில் சார்ள்ஸ் ஸ்பர்ஜனும், அவருடைய சமகாலத்தவர்களாக பிரிட்டனில் இருந்த பெட்ரிக் பெயார்பேன், தோமஸ் சார்மஸ், வில்லியம் கன்னிங்கம் ஆகிய கிறிஸ்தவ தலைவர்களும், அதேகாலப்பகுதியில் அமெரிக்காவில் கிறிஸ்தவ தலைவர்களாகவும் இறையியலறிஞர்களாகவும் இருந்த ரொபட் டெப்னி, அலெக்சாண்டர் ஹொட்ஜ், சார்ள்ஸ் ஹொட்ஜ், சாமுவேல் மில்லர், பென்ஜமின் வோர்பீல்ட் ஆகியோரும், அவர்கள் சார்ந்திருந்த திருச்சபைகளும் விசுவாசத்தோடு ஆணித்தரமாகப் பின்பற்றி வந்திருந்த கர்த்தருடைய நாள் அனுசரிப்பு 20ம் நூற்றாண்டில் இருந்து திசைமாறிப் போக ஆரம்பித்தது. நவீன கிறிஸ்தவ சமூகம் இன்று கர்த்தருடைய நாளைத் தூக்கியெறிகிறதென்பதற்காக சத்தியம் இல்லாமல் போய்விட்டது என்று அர்த்தமல்ல. நம் காலத்தில் கர்த்தரின் வார்த்தைக்கெதிராக வாழ்வதற்கான யுத்திகளைத் தேடி அலையும் தாராளவாத, யெரொபெயாம் சமுதாயத்தின் போக்கிற்கு எதிர்த்து நின்று படைப்பில் உருவாக்கப்பட்ட ஓய்வுநாளை நாம் நம் காலத்தில் கர்த்தரின் கிறிஸ்தவ சபத்து நாளாகப் பரிசுத்தப்படுத்தி கிறிஸ்துவுக்கு விசுவாசமாக வாழவேண்டும்.
கர்த்தருடைய நாளை ஏன் சபத்து நாளாக, முழு நாளையும் அனுசரிக்க வேண்டும் என்பதற்கான விபரமான விளக்கத்தைத் தருவதற்காக இந்த ஆக்கத்தை நான் எழுதவில்லை. இருந்தாலும் இதுபற்றி 1689 விசுவாச அறிக்கை தந்திருக்கும் விளக்கத்தை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். இதையே அத்தனை வரலாற்றுச் சீர்திருத்தத் திருச்சபைகளும் விசுவாசித்துப் பின்பற்றுகின்றன. இதை 1689 விசுவாச அறிக்கையின் 22ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். அதன் 7ம் பத்தி, புதிய உடன்படிக்கை காலத்தில் ஓய்வு நாள் (Sabbath) வாரத்தின் முதல் நாளாக, கர்த்தருடைய நாளாக மாற்றப்பட்டிருப்பதையும், அந்த நாளை நாம் கிறிஸ்தவ ஓய்வு நாளாகப் (Christian Sabbath) பின்பற்ற வேண்டும் என்பதையும் விளக்கிவிட்டு, அந்த நாளை எந்தவகையில் பின்பற்ற வேண்டும் என்பதை 8ம் பத்தி பின்வருமாறு விளக்குகிறது,
தமது இருதயத்தை ஆராதனைக்காக முறையாகத் தயார் செய்து உலகத்துக்குரிய காரியங்களையும், வீட்டுக் காரியங்களையும் ஏற்கனவே நிறைவேற்றி முடிந்தபின் தமது சொந்த வேலைகள் சம்பந்தமானதும், வேலைத்தளம் சம்பந்தமானதும், உலக இன்பப்பொழுதுபோக்கு பற்றியதுமான சிந்தனைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து, முழுநாளிலும் பரிசுத்தமாக இளைப்பாறிப் பொதுவானதும், தனிப்பட்டதுமான கடவுள் வழிபாட்டுக் காரியங்களுக்கும், இன்றியமையாததும், கருணைக்கிடமானதுமான கடமைகளுக்கும் தம்மை ஒப்புக்கொடுத்து மனிதர்கள் ஓய்வு நாளைக் (Sabbath day) கடவுளுக்கென்று பரிசுத்தமாக வைத்திருத்தல் அவசியம். (நெகேமியா 13:15-22; ஏசாயா 58:13; மத்தேயு 12:1-13).
மேற்குறிப்பிட்ட 7ம், 8ம் பத்திகளில் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் வாரத்தின் கடைசி நாளாக இருந்த ஓய்வு நாள் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் வாரத்தின் முதல் நாளாக மாற்றப்பட்டிருப்பதையும், அந்த நாள் கர்த்தருடைய நாளாக, கிறிஸ்தவ சபத்து நாளாகக் கணிக்கப்பட்டு முழு நாளும் பரிசுத்தமாக அனுசரிக்கப்பட வேண்டும் என்றும் விளக்குகின்றது. இதுவே சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் புதிய உடன்படிக்கை ஓய்வுநாள் பற்றிக் கொண்டிருந்த வேதநம்பிக்கை. 8ம் பத்தியில் ஓய்வு நாள் ‘பரிசுத்தமாக’ வைக்கப்பட வேண்டும் என்றிருப்பதைக் கவனிக்கவேண்டும். வெறும் சபை ஆராதனை நடத்துவதை மட்டும் இந்தப் பகுதி விளக்கவில்லை. அந்த நாளில் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களையும் பரிசுத்தத்தோடு கர்த்தருக்கென்று செய்யவேண்டும் என்று இந்தப் பகுதி விளக்குகிறது. அந்த நாளில் பரிசுத்தமில்லாதவை எவை என்பதையும் அது விளக்குகிறது. ஓய்வு நாள் கர்த்தருடையதாகவும், அவருடைய மகிமைக்காகவும் அனுசரிக்கப்பட வேண்டுமென்பதால் அந்த நாளில் கர்த்தர் எதைப் பரிசுத்தமாகக் கருதுகிறாரோ அவற்றைச் செய்வதையே வேதம் எதிர்பார்க்கிறது. ஏனைய ஆறு நாட்களிலும் நியாயமாக செய்யக்கூடிய செயல்களைத் தவிர்த்து இந்நாளில் ஆண்டவரை ஆராதித்து, அவர் தொடர்பான விஷயங்களைத் தியானித்து, கிறிஸ்தவ ஐக்கியத்தை அனுபவித்து முழு நாளிலும் முற்றுமுழுதுமாக உலக விஷயங்களைத் தவிர்ப்பதையே வேதம் எதிர்பார்க்கிறது.
கர்த்தருடைய நாளை எதிர்க்கும் சுவிசேஷ கிறிஸ்தவ முக்கியஸ்தர்கள்
கிறிஸ்தவ வரலாற்றின் ஒவ்வொரு காலப்பகுதியிலும் வேதமும், கிறிஸ்தவமும் புதிய புதிய ஆபத்துக்களைச் சந்திப்பது வழமைதான். நாம் வாழும் காலப்பகுதியில் அது தீவிரமடைந்திருப்பதில் ஆச்சரியமில்லை. முக்கியமாக கர்த்தருடைய நாள் அனுசரிப்பு பற்றிய இறையியல் போதனையில் கவலைக்குரிய அம்சம், ஆங்கிலம் பேசப்படுகின்ற மேலைநாடுகளில் முக்கிய இவெஞ்சலிக்கள் இறையியல் வல்லுனர்களாகவும், போதகர்களாகவும் இருப்பவர்கள் இதற்கெதிரான வாதங்களை முன்வைத்து கிறிஸ்தவர்கள் இன்று கர்த்தருடைய நாளை ஓய்வுநாளாக அனுசரிக்கத் தேவையில்லை என்ற கருத்தை வலியுறுத்தி வருவதுதான். இவர்களில் ஜே அடம்ஸும் ஒருவர் (Jay Edward Adams). தன்னுடைய Keeping the Sabbath எனும் நூலில் கிருபையின் காலத்தில் ஓய்வுநாள் அனுசரிப்பிற்கு எதிரான வாதத்தை அவர் முன்வைத்திருக்கிறார். ‘கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளை அனுசரிக்கவேண்டும் என்பதற்கான முழுமையான வேத ஆதாரங்கள் . . . ஸீரோ (Zero)’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதில் அவர் பக்கம் எந்த வேத ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை என்கிறார் ரொபர்ட் மார்டின்.
20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முக்கிய இவெஞ்சலிக்கள் இறையியலறிஞரான டொன் கார்சன் (D. A. Carson) ஓய்வுநாள் அனுசரிப்புக்கெதிரான வாதங்களைத் தன்னுடைய From Sabbath to the Lord’s Day எனும் நூலில் முன்வைத்தார். 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிவந்த நூல்களில் இது முக்கியமானதாகும். இந்த 21ம் நூற்றாண்டிலும் இது மேலைநாட்டு இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவர்களைப் பாதித்து வருகிறது. சில நூல்கள் மக்களை அதிகம் பாதித்து பின்னால் வரும் சந்ததிக்கும் ஆபத்தை உண்டாக்கக்கூடியவை. இதை எழுதுகிறபோது சார்ள்ஸ் பினி, வில்லியம் பார்க்ளே போன்ற தாராளவாத அறிஞர்களின் நூல்களைப் பற்றிய நினைவு வருகிறது. இவெஞ்சலிக்கள் சமூகத்தை இவை இன்றும் பாதித்து வருவனவாக இருக்கின்றன. ஆத்துமாக்களின் மனச்சாட்சியை வேதத்திற்கெதிராகத் திருப்பிவிடும் ஆற்றலுள்ளவையாக இத்தகைய எழுத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. இத்தகைய ஒரு நூலை வில்லியம் பெளே (William Paley) என்பவர் ஓய்வுநாள் அனுசரிப்புக்கெதிராக எழுதி, அதற்கு வேதஆதாரம் எதுவும் கிடையாது, அப்போஸ்தலர்கள் அதை உண்டாக்கி சபைகளுக்குள் திணித்ததாக விளக்கியிருக்கிறார் என்று ஜோன் ஸ்டோன் என்பவர் 1844ல் எழுதியிருப்பதாக ரொபர்ட் மார்டின் தன்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். பெளேயின் இந்நூல் கிறிஸ்தவ சமூகத்தை அன்று பெருமளவுக்குப் பாதித்திருந்தது.
ஆங்கிலம் பேசப்படும் மேலைத்தேய நாடுகளில் டொன் கார்சனின் From Sabbath to the Lord’s Day என்ற நூல் இத்தகைய செல்வாக்கை இன்றும் கொண்டிருக்கிறது என்று டாக்டர் மார்டின் குறிப்பிடுகிறார். ரொபர்ட் மார்டின் தன் நூலில், டொன் கார்சனின் வேத விளக்கங்களுக்குத் தகுந்த துல்லியமான விளக்கங்களைப் பதிலடியாக, ஆணித்தரமாகத் தந்து நம் காலத்து கிறிஸ்தவர்களுக்குப் பெரும் நன்மை செய்திருக்கிறார். டொன் கார்சன் போன்றவர்கள் செல்வாக்குள்ளவர்களாக இருப்பதால் டாக்டர் ரொபர்ட் மார்டின் போன்ற இறையிலறிஞர்கள் அவர்களுக்கு பதிலளிப்பது 21ம் நூற்றாண்டு கிறிஸ்தவ சமுதாயத்துக்குக் கிடைத்திருக்கும் நன்மை. நூல்கள் வாசிப்பது அவசியந்தான். இருந்தபோதும் நூலாசிரியர்களின் இறையியல் அணுகுமுறை, அவர்களுடைய ஆத்மீக, திருச்சபைப் பின்புல ஆய்வில் ஈடுபட்டு அவர்களைப்பற்றி அறிந்துகொள்ளாமல் நூல்களை வாசிப்பதால், அவர்களுடைய எழுத்தாற்றலினாலும், செல்வாக்கினாலும் தவறானவற்றையும் உண்மையென்று நம்பிவிடக்கூடிய ஆபத்திருக்கிறது.
ஆதிசபைக்காலத்தில் இருந்து 19ம் நூற்றாண்டுவரை எவரும் கேள்வியெழுப்பாமல் பின்பற்றி வந்திருக்கும் கர்த்தருடைய நாள் அனுசரிப்பை, அதுவும் திருச்சபையும், வரலாற்று விசுவாச அறிக்கைகளும் ஆணித்தரமாக ஆதாரத்துடன் விளக்கியிருக்கும் சத்தியத்தை நம் காலத்து புதிய சிந்தானாவாதிகளின் செல்வாக்குள்ள எழுத்துக்களுக்கு வசப்பட்டு பலிகொடுப்பது எந்தவிதத்தில் தகும்? எரேமியா 16:16ல் சொல்லப்பட்டிருப்பதுபோல், ‘வழிகளில் நின்று, பூர்வபாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து’ அதில் நடக்கவேண்டிய நிலையில் கிறிஸ்தவ சமூகம் இன்றிருக்கிறது. அந்தப் பூர்வபாதைகளுக்கு முரணான வேதவிளக்கங்களுக்கு இருதயத்தில் இடமளித்துப் பின்பற்றுவது கர்த்தருடைய வேதத்துக்கு முரணாகப் போகின்ற செயலாக மட்டுமே இருக்கும். ஆதியிலேயே படைப்பில் கர்த்தர் ஏற்படுத்தி நம் நன்மைக்காகத் தந்திருக்கும் கர்த்தருடைய நாளான ஓய்வுநாளை நாம் உதாசீனப்படுத்துவது கர்த்தரை நிந்திக்கும் செயலைத்தவிர வேறில்லை. வேதத்தின் ஓய்வுநாள் பற்றிய போதனைகள் ஏற்றுக்கொள்ளலாம், ஏற்றுக்கொள்ளாமலும் விடலாம் என்ற விதத்தில் தரப்படவில்லை. அது நம்முடைய கிறிஸ்தவ விசுவாசத்தோடும், பக்திவிருத்தியோடும் தொடர்புடைய போதனைகள்.
அழிவுக்கு முன் வந்த அமைதி
2 இராஜாக்கள் 14:23-29
பழைய ஏற்பாட்டு நூலான 2 இராஜாக்களில் நாம் கவனித்து வருகின்ற விஷயங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதென்று நம்புகிறேன். வேதத்தின் முதல் பாகமான பழைய ஏற்பாட்டில் கர்த்தரின் வெளிப்படுத்தல் முழுமையாக நமக்குக் கொடுக்கப்பட்டிராவிட்டாலும், கர்த்தரின் மீட்பின் வரலாற்றை முன்னோக்கிப் பார்த்து, அந்த வரலாற்றின் முழுமையை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்ற பழைய ஏற்பாடு மிகவும் முக்கியமானது. பழைய ஏற்பாடில்லாமல் புதிய ஏற்பாடில்லை; புதிய ஏற்பாடில்லாமல் பழைய ஏற்பாடில்லை. இந்த இரண்டும் கர்த்தரின் வெளிப்படுத்தலை ஆதியாகமத்தில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக விளக்கி புதிய ஏற்பாட்டில் அதன் பூரணத்துவத்தை அடைகின்றன.
இந்த ஆக்கத்தில் இப்போது நாம் 2 இராஜாக்கள் 14வது அதிகாரத்தில் இறுதிப்பகுதியான 23-29 வரையுள்ள வசனங்களை ஆராயப்போகிறோம்.
முதலாம் யெரொபெயாம்: அறிமுகம்
மேலெழுந்தவாரியாக இந்தப் பகுதியை வாசிக்கும்போது இதில் பிரசங்கம் செய்கிற அளவுக்கு என்ன இருக்கிறது, என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இதுவரை நாம் இந்த நூலில் பார்த்து வந்திருப்பதைப்போல இந்தச் சிறு பகுதியிலும் மீட்பின் வரலாற்று உண்மைகளும், இறையியல் விளக்கங்களும், கர்த்தரின் குணாதிசயம், வாக்குத்தத்தங்கள் பற்றிய விளக்கங்களும் புதைந்து காணப்படுகின்றன.
இப்போது நாம் யூதாவைவிட்டு மறுபடியும் இஸ்ரவேலுக்கு வருகிறோம். 22-23 வசனங்கள், யூதாவின் அரசனான அமத்சியாவின் மரண அறிவித்தலையும், அவனுக்குப் பின் அவனுடைய மகனான அசரியா யூதாவில் ஆட்சிக்கு வந்ததையும் நமக்கு விளக்கிய பிறகு, வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்து அமத்சியா யூதாவில் ஆட்சி செய்த 15வது வருடத்தில் இஸ்ரவேலில் இரண்டாம் யெரொபெயாம் ஆட்சிக்கு வந்ததையும், அவன் 41 வருடங்களுக்கு ஆட்சி செய்ததையும் நமக்கு அறிவிக்கிறது. இந்த இரண்டாம் யெரொபெயாம் யோவாசின் குமாரன். இவனும் இவனுக்கு முன்பிருந்தவர்களைப் போலவே கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான் என்று 24ம் வசனம் நமக்குச் சொல்லுகிறது. அதையும்விட மோசமான ஒரு தகவலையும் அந்த வசனம் நமக்குத் தருகிறது.
2 இராஜாக்கள் 14:24
கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்கள் ஒன்றையும் அவன் விட்டு விலகவில்லை.
இதைவிட மோசமான ஒரு அறிமுகம் ஒருவனுக்குத் தேவையில்லை. இரண்டாம் யெரொபெயாம் பொல்லாப்பைச் செய்தது மட்டுமல்ல, இஸ்ரவேலைப் பாவம் செய்வதற்கு கைப்பிடித்து அழைத்துச் சென்ற முதலாம் யெரொபெயாம் செய்த பாவங்களில் ஒன்றையும் இவன் விட்டுவைக்கவில்லை என்கிறது வேதம். தன்னுடைய பெயருக்கேற்றபடி இவன், பாவம் செய்வதில் முதலாம் யெரொபெயாமுக்கு எந்தவிதத்திலும் பின்நிற்கவில்லை.
பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும்போது அதைக் கவனத்தோடு செய்யவேண்டும். கடந்த வருடம் நான் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியொன்றைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் ஒரு விளையாட்டு வீரனின் பெயர் Sinner என்றிருந்தது. அதாவது ‘பாவி’ என்றிருந்தது. ஆங்கில ஆக்ஸ்போர்ட் அகராதியில்கூட அதற்கான அர்த்தங்கள் நல்லதாக இருக்கவில்லை. உண்மையில் நாமெல்லோருமே பிறப்பில் இருந்து பாவிகள்தான். எந்த நோக்கத்தோடு அந்தப் பெயர் கொடுக்கப்பட்டதோ எனக்குத் தெரியாது, பிறப்பிலிருந்து நாம் பாவிகள் என்பதை அந்தப் பெயர் தொடர்ந்து அந்த விளையாட்டு வீரனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தால் நல்லதுதான்.
பாவ உலகத்தைச் சேர்ந்த பாவஉணர்த்துதல் இல்லாதவர்களுக்கு அதைப்பற்றிய கவலைகளெல்லாம் இருக்காது. இரண்டாம் யெரொபெயாமுக்கு நிச்சயம் அந்தக் கவலை ஒருபோதும் வாழ்க்கையில் இருந்திருக்கவில்லை. இவனுக்கு ஏன் இந்தப் பெயர் கொடுக்கப்பட்டதென்று நாம் ஆச்சரியப்படலாம். ஏனென்றால், எந்தப் பிள்ளைக்கும் நாம் யூதாஸ் ஸ்காரியத்து என்று பெயர் வைக்க கனவிலும் நினைக்க மாட்டோம். இஸ்ரவேலின் யூதாஸ் ஸ்காரியத்து என்று சொல்லுமளவுக்கு கர்த்தருக்குத் துரோகியான முதலாம் யெரொபெயாம் பெயரை ஏன் இவனுக்கு வைத்தார்கள்? இந்த உலகத்து இச்சைகளின்படி, பாவநிலையில் இருந்து சிந்தித்தால் முதலாம் யெரொபெயாம் இஸ்ரவேலின் ‘ஒபாமா.’ அதில் எந்த சந்தேகமும் இல்லை.
தன் பதவிக்காலத்தில் அமெரிக்காவைத் துரிதமாக ‘லிபரல்’ வழிகளில் போவதற்கான சட்டங்களை இயற்றி சமூக இயந்திரத்தைப் பயன்படுத்தி கல்விக்கூடங்களில் இருந்து சமுதாயத்தைக் கர்த்தரின் வழிகளுக்கு எதிர்மாறான வழிகளில் போவதற்கான வழிமுறைகளை உருவாக்கி அதற்கெல்லாம் துணை நின்றதில் ஒபாமாவுக்குப் பெரும்பங்குண்டு. அந்தவிதத்தில் ஒபாமா ‘லிபரலிசத்தின்’ சாம்பியன். இதுபோலத்தான் இஸ்ரவேலுக்கு முதலாம் யெரொபெயாம். கர்த்தருக்கு முரணான ஆராதனையை ஏற்படுத்தி சமுதாயத்தைத் திசைதிருப்பியவன் இவனே. அந்தவிதத்தில்தான் அவிசுவாசிகளான இஸ்ரவேலர் யெரெபெயாமைப் பின்பற்றியிருந்திருப்பார்கள். கர்த்தர் இல்லை என்று அறைகூவலிட்டுக் கொண்டிருந்த ரிச்சர்ட் டோர்கின்ஸை ஆண்டவரை நிராகரிக்கும் அவிசுவாசிகள் சாம்பியனாகக் கொண்டாடவில்லையா? அதுபோலத்தான் இஸ்ரவேலுக்கு முதலாம் யெரொபெயாம். அதனால் தங்களுடைய சாம்பியனின் பெயரை வைப்போம் என்று இந்த அரசனுக்கு இரண்டாம் யெரொபெயாம் என்று அரசகுடும்பத்தார் பெயர் வைத்திருக்கலாம்.
இஸ்ரவேலில் இந்தமுறையில் இரண்டாம் யெரொபெயாம் காலத்திலும் பாவம் கட்டவிழ்த்துவிடப்பட்டு தொடர்ந்தது. முதலாம் யெரொபெயாம் செய்த பாவங்களைவிட இன்னும் அதிகமாக என்ன செய்யலாம் என்றவிதத்தில் இரண்டாம் யெரொபெயாம் போட்டிபோட்டுப் பாவம் செய்வதில் மூழ்கிப் போயிருந்தான். சிலைவழிபாடும், கானான் தேசத்துக் குட்டித்தேவர்கள், தேவதைகள் வழிபாடும், கர்த்தர் வெறுத்தொதுக்கியிருந்த மலைப்பிரதேசங்களில் செய்யப்பட்டு வந்த பலிகளும் எல்லையில்லாமல் நாட்டில் மக்கள் மத்தியில் ஊறிப்போயிருந்தன. புறஜாதி மக்களோடு போட்டிபோட்டு சிலை வழிபாட்டில் ஈடுபட்டு வந்திருந்தார்கள் இஸ்ரவேல் மக்கள்.
உடன்படிக்கையின் கர்த்தர் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாரா? என்ற கேள்வி எழும். நிச்சயம் அவர் கண்களுக்கு இதெல்லாம் தப்பவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர் இஸ்ரவேலரை அநேக தடவைகள் தீர்க்கதரிசிகள் மூலமாக எச்சரிக்கை செய்திருந்தார். அதற்கும் மேலாக அவர் என்ன செய்தார்? ஆமோஸ் 4:6-12 இதற்கு நமக்கு பதில் தருகிறது.
ஆமோஸ் 4:6-12
ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதுவுமல்லாமல், அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்து போயிற்று. இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ணீர் குடிக்க பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந்தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். கருக்காயினாலும் விஷப்பனியினாலும் உங்களைத் தண்டித்தேன்; உங்கள் சோலைகளிலும் திராட்சத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். எகிப்தில் உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏற்றப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் அக்கினியினின்று பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால் இஸ்ரவேலே, இந்தப்பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச்செய்யப்போகிறபடியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.
இதெல்லாம் நம் காலத்தில் நமக்கும் பொருந்தும். ஆனால், எந்த எச்சரிப்பைக் கொடுத்தபோதும், தற்காலிக தண்டனைகளைக் கர்த்தர் கொண்டுவந்தபோதும் இஸ்வேலர்கள் மனந்திரும்பவில்லை. அத்தனை எச்சரிக்கைகளையும் எந்த அக்கறையும் காட்டாமல் அவர்கள் உதாசீனப்படுத்தினார்கள். இப்போது அவர்களுக்கு காத்திருந்ததெல்லாம் இறுதித் தண்டனை மட்டுமே.
அழிவும், அமைதியும்
இந்த ஆத்மீகப் பின்னணியில்தான் நாம் இரண்டாம் யெரொபெயாமின் நீண்டகால ஆட்சியை அலசிப்பார்க்க வேண்டும். அவனுடைய தகப்பன் யோவாஸ். யோவாஸ் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட அரசர்கள் இஸ்ரவேலிலும், யூதாவிலும் இருந்திருக்கிறார்கள். இந்த இரண்டாம் யெரொபெயாமைப் பற்றி 24ம் வசனத்தில் நூலாசிரியர் சொல்லுவதைக் கவனியுங்கள்,
2 இராஜாக்கள் 14:24
கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்கள் ஒன்றையும் அவன் விட்டு விலகவில்லை.
யெகூவின் நான்கு தலைமுறையின் கடைசி அரசனான இரண்டாம் யெரொபெயாம் 41 வருடங்கள் ஆட்சி செய்தான். இவன் காலத்தோடு யெகூவுக்கு கர்த்தர் அளித்த வாக்குத்தத்தம் முடிவுக்கு வரப்போகிறது. ஏனைய இஸ்ரவேல் அரசர்களைவிட, 13ம் அரசனான இவன் மட்டுமே அதிகமான வருடங்கள் ஆட்சி செய்திருக்கிறான். அந்தளவுக்கு இந்த மோசமான அரசன் ஆட்சி செய்ய ஏன் கர்த்தர் அனுமதித்தார்? இவன் எந்த நன்மையும் செய்யவில்லை; இவன் சிலைவழிபாட்டில் ஊறிப்போயிருந்தவன். கர்த்தரின் உடன்படிக்கையை நிராகரித்து அவருடைய கட்டளைகளை அலட்சியப்படுத்தி வாழ்ந்துவந்திருந்தான். அப்படியானால் இவனை இத்தனை வருடங்கள் ஆள ஏன் கர்த்தர் அனுமதித்தார்? இதற்தான பதிலுக்கு வருமுன் நாம் இன்னும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
இரண்டாம் யெரொபெயாம் 41 வருடங்கள் ஆண்டதுமட்டுமல்ல, ஏனைய அரசர்கள் செய்யமுடியாத விஷயங்களை இவன் இஸ்ரவேலில் செய்திருந்தான். இஸ்ரவேல் இழந்துபோயிருந்த பகுதிகளையெல்லாம் இரண்டாம் யெரொபெயாம் மறுபடியும் இஸ்ரவேலோடு இணைத்திருந்தான்.
2 இராஜாக்கள் 14:25
அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான்.
தன் தகப்பன் யோவாஸுக்குப் பிறகு பிரச்சனைகள் எதுவுமில்லாமல் இவன் அரசனானதோடு, இவன் காலத்தில் இஸ்ரவேலில் சமாதானம் நிலவியது. எதிரி நாடுகளான அசிரியாவும், எகிப்தும் இவன் காலத்தில் பலவீனமான நாடுகளாக இருந்தன. அதனால் இவனை எதிர்த்து நிற்க எவரும் இருக்கவில்லை. இலகுவாக இவன் இஸ்ரவேலை விஸ்தரித்து அமைதியோடு வாழமுடிந்தது என்று இந்த உலகத்து வரலாற்றாசிரியர்கள் விளக்கங்கொடுப்பார்கள். ஆனால், அவர்கள் பார்வையில் தவறில்லாமல் இருந்தபோதும், அதுவே இரண்டாம் யெரொபெயாம் அநேக காலத்துக்கு நாட்டில் பொருளாதார வளர்ச்சியையும், அமைதியையும் கண்டு வாழ்ந்ததற்குக் காரணம் என்று வேதத்தை நம்புகிறவர்கள் சொல்ல மாட்டார்கள்.
அப்படியானால் இந்தளவுக்கு குழப்பங்களில்லாத, அமைதியான நீண்ட ஆட்சிக்காலத்துக்குக் காரணமென்ன? இதை எப்படிக் கர்த்தர் இந்த மோசமான அரசன் காலத்தில் அனுமதித்தார் என்ற கேள்விகளெல்லாம் நம் மனதில் குதித்தெழாமலிருக்காது.
எப்போதுமே இதற்கெல்லாம் கர்த்தர் மட்டுமே காரணமாக இருக்கமுடியும். உலகத்தில் எந்த நிகழ்ச்சிக்கும் அவர் மட்டுமே அடிப்படைக் காரணம். அவரில்லாமல் ஒன்றும் இயங்காது. இறையாண்மையுள்ள கர்த்தர் அனுமதிக்காமல் எதுவும் நிகழமுடியாது. பல நிகழ்ச்சிகளுக்கான காரணங்கள் நம் கண்களுக்கு நேரடியாகப் புலப்படாமல் இருக்கலாம். ஆனால், கர்த்தர் அறியாததும், அவரில்லாமல் நிகழ்கின்றதும் உலகத்தில் ஒன்றுமேயில்லை.
இரண்டாம் யெரொபெயாமின் அமைதியான நீண்ட ஆட்சிகாலத்துக்குக்கான காரணத்தை வேதம் நமக்குத் தெரிவிக்கிறது. 2 இராஜாக்கள் 10:30 வசனத்தைக் கவனியுங்கள்.
2 இராஜாக்கள் 10:30
கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார்.
இது இஸ்ரவேலின் அரசனாக இருந்த யெகூவுக்கு கர்த்தர் சொன்ன வார்த்தைகள். அவன் செம்மையாகச் செய்த காரியங்களுக்காகக் கர்த்தர் அவனுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் இது. அவனுடைய குமாரர் நான்கு தலைமுறைக்கு இஸ்ரவேலை ஆள்வார்கள் என்று கர்த்தர் சொல்லியிருந்தார். யெகூ முழு இருதயத்தோடும் நடந்திராமல் இருந்தாலும் அவன் ஆகாபின் குடும்ப விஷயத்தில் கர்த்தர் சொன்ன வார்த்தைகளை நிறைவேற்றியதால் கர்த்தர் இந்த வாக்குறுதியை அவனுக்குக் கொடுத்தார். யெகூவைப்போலவே அவனுடைய குமாரர்களும் கர்த்தரை அறியாமல் அவருக்கு விசுவாசமாக வாழாமல் போயிருந்தபோதும் கர்த்தர் தன்னுடைய வாக்குறுதியை மீறப்போவதில்லை. இந்த வாக்குறுதியின்படி யெகூவின் கடைசி நான்காம் தலைமுறையாக யெகூவின் குடும்பத்தில் வந்தவன்தான் இந்த இரண்டாம் யெரொபெயாம்.
யெரொபெயாம் மோசமானவனாக இருந்தபோதும், சிலைவழி பாட்டுக்காரனாக இருந்தபோதும், அவனுடைய நீண்ட ஆட்சிக்காலத்துக்குக் காரணம் இறையாண்மையுள்ள கர்த்தரே. இவன் காலத்தோடு கர்த்தர் யெகூவுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதி நிறைவுக்கு வருகிறது. வரலாற்று நிகழ்ச்சிகளுக்குக் கர்த்தர் காரணமில்லை என்றும், அதெல்லாம் தற்செயல் நிகழ்ச்சிகள் என்றும் கர்த்தரை அறியாதவர்கள் சொல்லிவருவார்கள். வரலாற்றின் தேவன் நம் கர்த்தர் என்பதை நாம் உணரவேண்டும். கிறிஸ்துவுக்கு முன் எட்டாம் நூற்றாண்டில் இஸ்ரவேலில் அமைதியான நீண்ட ஆட்சி நிகழ்ந்து வந்திருக்கிறதென்றால் அதற்கு அத்தகைய ஆட்சியை ஏற்படுத்தப்போவதாக கர்த்தர் வாக்குறுதி கொடுத்திருந்ததுதான் ஒரே காரணம்.
அத்தோடு, 2 இராஜாக்கள் 14:25 இன்னுமொரு விஷயத்தையும் நமக்கு விளக்குகிறது. யெகூவின் வார்த்தையின்படி கர்த்தர் இரண்டாம் யெரொபெயாம்வரை நாலுதலைமுறைக்கான ஆட்சியைக் கொடுத்ததை இதுவரை கவனித்திருக்கிறோம். இவன் இஸ்ரவேல் பறிகொடுத்த பகுதிகளையெல்லாம் மீண்டும் கைப்பற்றி எந்த அரசனும் செய்திராதளவுக்குப் பரந்த இஸ்ரவேல் தேசத்தை ஆண்டதற்கும் கர்த்தரே காரணம் என்பதையும் இந்த வசனம் விளக்குகிறது.
2 இராஜாக்கள் 14:25
காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான்.
இந்த வசனத்தில் கடைசிப்பகுதியை மட்டுமே ஆரம்பத்தில் கவனித்தோம். இப்போது முழு வசனத்தையும் கவனியுங்கள். இரண்டாம் யெரொபெயாம் இஸ்ரவேலின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டதற்குக் காரணம் அவனுடைய பராக்கிரமம் அல்ல. அவனுடைய பெரும்படைப் பலத்துக்கும், தேச விஸ்தரிப்புக்கும் கர்த்தரின் வாக்குறுதியே காரணம். இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் தீர்க்கதரிசி அமித்தாயின் குமாரனான யோனா. இந்த யோனாதான், யோனா நூலில் நாம் காண்கிற திமிங்கலம் விழுங்கிய யோனா. இரண்டாம் யெரொபெயாமின் தேச விஸ்தரிப்பைப்பற்றியும், படைகளின் வெற்றியையும் ஏற்கனவே யோனா மூலம் கர்த்தர் வெளிப்படுத்தியிருந்தார். இதெல்லாம் நிகழும்படியாக கர்த்தர் அனைத்தையும் தன் வாக்குறுதியின்படி திட்டமிட்டிருந்தார். அவருடைய வாக்குறுதியின்படி இஸ்ரவேல் அமைதியான ஆட்சியையும், பரந்த தேசத்தையும், பொருளாதார விருத்தியையும் இந்தக் காலத்தில் கொண்டிருந்தது. இதில் இரண்டாம் யெரொபெயாம் வெறும் கருவி மட்டுமே. அவனையும் மீறிக் கர்த்தரின் திட்டங்கள் அவன் மூலமாக அவனுடைய காலத்தில் நிறைவேறின.
இருந்தபோதும் நாம் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்குப் பதில்காண வேண்டும். மோசமான யெரொபெயாம் ஆட்சியில் இத்தனை நன்மைகளைக் கர்த்தர் ஏன் அனுமதித்தார்? கேடான ஒரு மனிதனைக் கர்த்தர் ஏன் பயன்படுத்தினார்?
இதற்கு 2 இராஜாக்கள் 14:26-27 நமக்குப் பதிலளிக்கிறது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. அந்தக் காரணங்களை இந்த வசனங்கள் நம்முன் வைக்கின்றன.
2 இராஜாக்கள் 14:26-27
இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் கர்த்தர் பார்த்தார். இஸ்ரவேலின் பேரை வானத்தின் கீழிருந்து குலைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல், யோவாசின் குமாரனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை ரட்சித்தார்.
- முதலாவதாக, இஸ்ரவேல் அந்நிய தேசத்தாரால் அனுபவித்துவந்த துன்பங்களைக் கர்த்தர் கசப்பானதாகக் கண்டார்.
2 இராஜாக்கள் 14:26
“இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது”
26ம் வசனத்தில் ‘கொடிது’ என்ற வார்த்தைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள எபிரேய வார்த்தை ‘மாரா’ என்பது. இந்த வார்த்தையைப் பயன்படுத்தியே ரூத்தின் மாமியாரான நகோமி தன்னுடைய துன்பத்தை விளக்கினாள். அதாவது தான் அனுபவித்து வரும் துன்பங்கள் ‘கசப்பானது’ என்றாள்.
ரூத் 1:20
அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.
மாரா என்ற இந்த வார்த்தைக்கு அதுவே அர்த்தம். ஆங்கிலத்தில் இது bitter (affliction) (கசப்பான துன்பம்) என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கர்த்தரின் பார்வையில் அன்று இஸ்ரவேலின் துன்பம் affliction அத்தனை கசப்பானதாகத் தெரிந்தது. அது கர்த்தரின் பார்வைக்கு வந்தது.
இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் கட்டளையைப் புறக்கணித்து வாழ்ந்தாலும், அவர்களைக் கர்த்தர் ஒட்டுமொத்தமாக அழிக்கப்போவதும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், இந்தக் காலத்தில் உடன்படிக்கையின் மக்களான அவர்கள் படும் அவஸ்தை கர்த்தரின் பார்வைக்கு வந்தது. அவர்கள் இந்தளவுக்கு துன்பப்படுவது கர்த்தருக்குப் பிடிக்கவில்லை.
- இஸ்ரவேலின் பாவங்களுக்காக நாட்டைப் பூரணமாக உடனடியாக அழித்துவிடுவது கர்த்தரின் திட்டமாக இருக்கவில்லை.
இஸ்ரவேல் படும் துன்பங்களில் இருந்து விடுதலை தர இஸ்ரவேலுக்கு எந்தத் துணையும் இல்லை என்பதையும் கர்த்தர் கண்டார். 26 – “அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் கர்த்தர் பார்த்தார்.” அதனால், இஸ்ரவேலை அடியோடு அழித்து இல்லாமலாக்கிவிடுவது கர்த்தரின் உடனடித் திட்டமாக இல்லாதிருந்ததால், யோவாசின் குமாரனாகிய இரண்டாம் யெரொபெயாம் காலத்தில் இஸ்ரவேலுக்கு அவர் விடுதலை தரத் தீர்மானித்தார்.
2 இராஜாக்கள் 14:27
இஸ்ரவேலின் பேரை வானத்தின் கீழிருந்து குலைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல், யோவாசின் குமாரனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை ரட்சித்தார்.
அதாவது, மூச்சுவிட மிகவும் சிரமப்படுகிறவனுக்கு வென்டிலேட்டரையோ அல்லது நெபியூலைசரையோ பயன்படுத்தி இலகுவாக மூச்செடுக்க டாக்டர்கள் உதவிசெய்வதுபோல் கர்த்தர் இஸ்ரவேல் மக்கள் இப்போதைக்கு மூச்சுவிட உதவிசெய்யத் தீர்மானித்தார். அப்படி அவர்கள் அனுபவித்துக்கொண்டிருந்த அவஸ்தையிலிருந்து விடுபட்டு இலகுவாக மூச்சுவிடுவதற்கு அவர் கொடுத்திருந்த வென்டிலேட்டர்தான் இரண்டாம் யெரொபெயாம்.
இந்தப் பகுதியிலிருந்து மூன்று பாடங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது:
- இறையாண்மையுள்ள கர்த்தர் மிகவும் இலகுவான இருதயம் கொண்டவர், கருணையுள்ளவர். (Soft hearted)
இஸ்ரவேலின் கோரமான பாவங்களை அவர் உதாசீனப்படுத்தவில்லை; அவற்றை அவரால் ஒதுக்கிவிட முடியாது. அதேபோல் நம் பாவங்களையும் கர்த்தர் கவனிக்காமல் இருந்துவிட மாட்டார். இருந்தபோதும் அவருடைய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றாமல் போகமாட்டார். இஸ்ரவேலின் பாவங்களுக்கு இறுதி முடிவு வரத்தான் போகிறது. ஆனால், அவர்களுடைய தற்காலிக துன்பக்குரலுக்கு அவர் செவிகொடுக்காமல் போகவில்லை. இஸ்ரவேல் மீதான அவருடைய கரிசனை, அவருடைய வாக்குறுதிகளுக்கோ, திட்டங்களுக்கோ முரணானதல்ல. கர்த்தர் இலகுவான இருதயம் கொண்டவராக இருப்பதால்தான் கோவிட்-19 நம்மை இன்றைக்கு அடியோடு இல்லாமலாக்கிவிடவில்லை. உலகத்தின், சமுதாயத்தின் பாவங்களை மட்டும் கணக்கெடுத்துப் பார்த்தால், கோவிட்-19ல் இப்போதைக்கு உலகத்தின் அரைவாசிக்குமேல் காலியாகிவிட்டிருக்கவேண்டும். ஆனால், கர்த்தர் இலகுவான இருதயம் கொண்டவர், கருணையுள்ளவர், இறுதி நியாயத்தீர்ப்பின்போது கொட்டப்போகும் அவருடைய கோபாக்கினைக்கு முன் கோவிட்-19 வெறும் எறும்புக்கடி மட்டுமே. கர்த்தரின் இலகுவான இருதயம், கரிசனையோடு கோவிட்-19 மூலம் மனிதர்களை மனந்திரும்பும்படி அழைக்கிறது. அவருடைய பொறுமையையும், கரிசனையையும் நம்மீது அவருக்கு இருக்கும் சந்தோஷமாக எண்ணிவிடக்கூடாது. அவர் இரண்டாம் யெரொபெயாம் காலத்தில் அவனுக்குக் காட்டிய சலுகைகள், அவன்மீது அவர் கொண்டிருந்த அன்பால் அல்ல. அவை பொதுவாக எல்லாப் பாவிகள் மீதும் அவர் காட்டுகிற பொதுவான கருணையே. அதன் மூலம் கர்த்தர் பாவிகளுக்கு மனந்திரும்ப அவகாசம் கொடுக்கிறார்.
ரோமர் 2:3-4
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயா? அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?
- வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் வசதிகள் அனைத்தும் கர்த்தரின் கருணைக்கு அடையாளமாக இருக்கலாம், ஆனால் அது நாம் வாழும் வாழ்க்கைக்கான பாராட்டுதல் என்று நினைத்துவிடக்கூடாது.
இரண்டாம் யெரொபெயாம் அனுபவித்த சலுகைகள், வாழ்க்கை வசதிகள் கர்த்தரின் கருணையால் வந்தவை. அவை, அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கோ, இஸ்ரவேல் மக்களின் பாவங்களுக்கோ வந்த பாராட்டுதல்கள் அல்ல. யெகூவுக்குக் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலின் இறுதிக்கட்டமே இவனுடைய காலம். வரப்போகும் சுனாமிக்கு முன் கடற்கரை அமைதியாக இருப்பதுபோல் இவன் காலத்தில் அமைதி நிலவியது. அந்த அமைதி சுட்டும் சுனாமி பற்றி அன்று எவருமே எண்ணிப்பார்க்கவில்லை. அந்த அமைதிக்காலத்தைப் பயன்படுத்தி எவரும் கர்த்தரை நாடவில்லை. கர்த்தர் தங்களோடிருப்பதாக அவர்கள் மார்தட்டிக்கொண்டிருந்திருக்கலாம். இரண்டாம் யெரொபெயாமின் 41 வருட ஆட்சிக்குப் பின் வரப்போகும் அழிவை அவர்கள் உணரவில்லை. அதிலிருந்து தப்பிக்கொள்ளவும் வழிதேடவில்லை.
இஸ்ரவேல் பாவத்தில் தொடர்ந்திருந்து, வாழ்க்கை வசதிகளால் கண்கள் மறைக்கப்பட்டு வாழ்ந்தபோது இன்னுமொரு தீர்க்கதரிசியான ஆமோஸ் அவர்களை எச்சரித்திருக்கிறார்.
ஆமோஸ் 5:10-11
“ஒலிமுகவாசலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாய்ப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள். நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமை சுமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக்கட்டினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.”
வாழ்க்கை வசதிகள் நம் கண்களை மறைத்துவிடலாம். பாவத்தில் தொடர்கிறவர்களுக்கு வாழ்க்கை வசதிகள் ஆபத்தாக முடிந்துவிடுகின்றன. மனந்திரும்ப அவை தடையாக மாறிவிடலாம். அதுவே இஸ்ரவேலுக்கு நடந்தது. இரண்டாம் யெரொபெயாம் கர்த்தரின் பொதுவான கிருபையை அலட்சியப்படுத்தினான். அவர் தந்த சலுகைகளை இறுமாப்போடு தன்னுடைய தகுதிக்கான ஆசீர்வாதமாக எடுத்துக்கொண்டான். அது அவனுக்கு ஆபத்தாக அமைந்தது. வாழ்க்கையில் கர்த்தரின் பொதுவான கிருபையை அனுபவிப்பவர்கள் சிந்திக்க வேண்டும். உங்களுக்குச் சுவிசேஷம் கேட்கும் வசதி கிடைத்திருக்கிறது; நல்ல சபையில் இருந்து ஆராதிக்கும் வசதி கிடைத்திருக்கிறது; நல்ல வழிநடத்தல் கிடைத்திருக்கிறது. இருந்தும் இவற்றை உதாசீனம் செய்து பாவத்தில் தொடர்கிறீர்களா? இந்தக் கிருபைகளை உங்களுடைய வாழ்க்கை ஆசீர்வாதங்களாக நினைத்து பாவத்தில் தொடர்கிறீர்களா? மனந்திரும்புதலுக்கு வாழ்க்கையில் இடங்கொடுக்காமலிருக்கிறீர்களா?
மெய்யான மனந்திரும்புதலைத் தவிர வேறெதுவும் கர்த்தரை சமாதானப்படுத்தாது. அதைத்தவிர வேறெதையும் கர்த்தர் சகிக்கவும் மாட்டார். இஸ்ரவேலுக்குக் கிடைத்த தற்காலிக அமைதியும், வாழ்க்கை வசதியும் நிரந்தரமானதல்ல. அவர்கள் மனந்திரும்பி கர்த்தரை விசுவாசித்திருந்தால் அவர்கள் வருங்காலத்தில் வரவிருக்கும் பெருந்தண்டனையில் இருந்து தப்பியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதை நாடவில்லை. எத்தனை பெரிய எச்சரிக்கை இது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் இருதயம் மனந்திரும்புதலுக்கு இடங்கொடுக்காதிருந்தால் இஸ்ரவேலின் கதியே உங்களுக்கும். உடனடியாகத் தீவிரமாகச் சிந்தித்து மனந்திரும்பினால், இயேசுவை நாடி வந்தால் உங்களுக்கு விடிவு உண்டு.
வெளிப்படுத்தின விசேஷம் 22:12-15
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
- வரலாற்றைக் கர்த்தர் ஒழுங்குபடுத்தி நடத்திச் செல்லும் முறை நமக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.
மிக மோசமான ஒரு அரசன் 41 வருடங்கள் ஆளவும், தன் வாழ்நாளில் மிகவும் வசதியாகவும், பலமான தேசத்தையும், பரந்த எல்லைகளையும் கொண்டு வாழமுடிந்திருக்கிறது. இரண்டாம் யெரொபெயாம் இதற்காக எப்படியெல்லாம் சந்தோஷப்பட்டு இறுமாப்போடு இருந்திருப்பான் என்று எண்ணிப்பாருங்கள்.
அவனுக்குத் தெரிந்திராதது என்ன? அவன் மூலம் கர்த்தரின் வார்த்தை நிறைவேறியிருக்கிறது. அவனை அந்தளவுக்கு வாழ அனுமதித்த கர்த்தர் தன் திட்டங்களை அவன் மூலம் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார் என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கவில்லை. அவனுக்குப் பிறகு இஸ்ரவேல் இல்லாமல் போகப்போகிறது என்பதை அவன் உணர்ந்திருக்கவில்லை. யெரொபெயாமின் ஆட்சிக்காலத்தை வெறும் மனித வல்லமையினால் நிகழ்ந்ததாக மட்டும் பார்க்கிறவர்களுக்கு உண்மை தெரிந்திருக்கவில்லை. இதற்குப் பின்னால் இருந்து கர்த்தர் வரலாற்றை நடத்திச் செல்லுகிறார். இதுபோல்தான் உலகத்தில் கொடியவர்கள் வல்லமையோடு ஆட்சிசெய்து வரும்போது, அதெல்லாம் தங்களுடைய பெலத்தாலும், ஞானத்தாலும் நிகழ்வதாக எண்ணிக்கொள்வார்கள். ஹிட்லர் அப்படித்தான் நினைத்திருந்திருப்பான். இன்று தலிபான் ஆப்கானிஸ்தானில் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். கர்த்தரின் அனுமதியில்லாமல் அவர்கள் நாட்டைப் பிடித்திருக்க முடியாது. அவர்கள் இப்போது கொக்கரித்துக்கொண்டிருக்கலாம், ஆனால், பரலோகத்தில் இருக்கும் கர்த்தர் அதைப்பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறார். தலிபானின் எழுச்சி கர்த்தர் தன் திட்டத்தை நிறைவேற்ற அவசியமாக இருந்திருக்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது. அமைதியான காலத்தை நாம் பயன்படுத்திக் கர்த்தரை நாடாமல் இருந்தால், அவருடைய திட்டப்படி கடுமையான காலங்களை நாம் அனுபவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள முடியாது.
தந்தை வழி போகாத தனயன்
(2 இராஜாக்கள் 15; 2 நாளாகமம் 27)
2 இராஜாக்கள் நூல் வடதேச இஸ்ரவேலுக்கே, நூலின் ஆரம்ப அதிகாரங்களில் முக்கியத்துவம் தந்திருந்தபோதும், இருந்திருந்து யூதாவின் பக்கமும் தன் கவனத்தைச் செலுத்துவதைக் கவனிக்க முடிகிறது.
முக்கியமாக நூலின் கடைசிப்பகுதி யூதாவிலேயே அதிக கவனத்தைச் செலுத்துகிறது. இந்த நூலின் 15ம் அதிகாரத்தில் நாம் யூதாவின் அரசனாகிய உசியாவைச் சந்தித்தோம். இப்போது அவனுடைய மகனாகிய யோதாமைப்பற்றி இதே அதிகாரத்தில் சுருக்கமாக விளக்கப்பட்டிருக்கிறதைக் காணலாம்.
அறிமுகம்
2 இராஜாக்கள் 15ம் அதிகாரத்தில் நூலாசிரியர் யோதாமைப்பற்றி விளக்குகிறபோது அதை ஏழு வசனங்களுக்குள் சுருக்கமாக முடித்துவிடுகிறார். ஆனால், 2 நாளாகமத்தை எழுதியவர் 27ம் அதிகாரத்தில் முழு அதிகாரத்திலும், 9 வசனங்களில் அவனைப்பற்றி விளக்குகிறார். 2 இராஜாக்கள் நூலை வாசிக்கும்போது அதை 2 நாளாகமத்தோடு தொடர்புபடுத்தி வாசிக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் ஒரு நூலில் தரப்படாத விளக்கங்களை அடுத்த நூல் நமக்குத் தருகிறது. அதன் மூலம் யாரைப்பற்றி அல்லது எந்த சம்பவத்தைப் பற்றி வாசிக்கிறோமோ அதைப்பற்றிய முழுவிபரங்களையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
2 இராஜாக்கள் 15ம் அதிகாரத்தில் 8-31 வரையுள்ள வசனங்களில் இஸ்ரவேலின் சடுதியான வீழ்ச்சியையும், அது தன் இறுதி முடிவை நோக்கி வெகுவேகமாக நகர்வதையும்பற்றி வாசித்தபின், அவ்வதிகாரத்தின் 32ம் வசனத்தில் யூதாவின் அரசனாக வந்த யோதாமைப் பற்றி வாசிக்கிறோம். ஏற்கனவே இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் யோதாமைப்பற்றி 5ம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அதிகாரத்தில் பொதுவாக இஸ்ரவேலின் வீழ்ச்சிபற்றியே அதிகக் கவனம் செலுத்தப்பட்டிருந்தபோதும், அது இஸ்ரவேலின் எல்லையைத் தாண்டிப் பக்கத்து நாடான யூதாவை நோக்கியும் தன் கவனத்தைத் திருப்பாமலில்லை.
இதே காலப்பகுதியில் யூதாவில் நிலமை வித்தியாசமாக இருந்தது. அரசனான உசியா இறந்தபின் இப்போது யோதாம் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறான். இதுவரை இருபது வருட குறுகிய காலப்பகுதியில் அடுத்தடுத்து இராஜாக்கள் இஸ்ரவேலில் ஆட்சி செய்து அது அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது, யூதாவில் ஒரு நல்ல அரசன் ஆட்சிக்கு வந்திருக்கிறான். உண்மையில் இஸ்ரவேலில் நடந்து வரும் சம்பவங்கள் யூதாவுக்கு ஒரு உதாரணமாக, எச்சரிக்கையாக இருப்பதை மறுக்கமுடியாது. யூதாவில் அதை எத்தனை பேர் சிந்தித்துப் பார்த்தார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் யூதாவுக்கு இப்போது ஒரு நல்ல அரசனை ஆண்டவர் தந்திருக்கிறார்.
யோதாம் தன்னுடைய 25ம் வயதில் அரசனானான். அவன் பதினாறு வருடங்கள் எருசலேமில் ஆண்டான் என்று 2 நாளாகமம் 27:8 சொல்கிறது. இருந்தும், தகப்பனான உசியா குஷ்டரோகியாக இருந்தபோது அரசவேலைகள் அனைத்தையும் அவனே கவனித்துக் கொண்டிருந்தான் என்று 2 நாளாகமம் 26ம் அதி. 21ம் வசனம் சொல்லுகிறது. உசியாவின் மரணத்திற்குப் பின்பே யோதாம் அதிகாரபூர்வமாக அரசனானான்.
யோதாமின் தகப்பனான உசியா ‘அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்திருந்தபோதும்’, முடிவுவரையும் கர்த்தருக்கு உண்மையானவனாக இருக்கவில்லை. அவன் கர்த்தருடைய வார்த்தைக்கு எதிராக ஆலயத்தில் ஆசாரியனாக வருவதற்கு ஆசைப்பட்டு கர்த்தரின் தண்டனைக்குள்ளானான். கர்த்தர் அவனுக்கு குஸ்டரோகத்தைக் கொடுத்தார். மரணத்தில் கூட அவனுக்கு எந்த மகிமையும் கிடைக்கவில்லை.
ஆனால், அவனுடைய குமாரனான யோதாம் வித்தியாசமானவன்.
2 நாளாகமம் 27:1-2
யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் எருசாள். அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; ஜனங்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
இந்த வசனங்களில் இருந்து நாம் யோதாமைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ளுகிறோம்.
யோதாமின் தாழ்மை
யோதாமைப்பற்றி விளக்குவதற்கு ஒரேயொரு வார்த்தையைத் தேடுவீர்களானால் அதற்குப் பொருத்தமான ஒரே வார்த்தை தாழ்மைதான். யோதாமில் அதைத்தான் நாம் காண்கிறோம். தாழ்மையை நாம் உலகத்தில் காணமுடியாது. தாழ்மை கிறிஸ்தவனுடைய ஒரு குணாதிசயமாக இருக்கிறது. அதாவது, கிறிஸ்தவனே கிறிஸ்துவுக்குள் மெய்யான தாழ்மையைக் கொண்டிருக்க முடியும். கிறிஸ்தவனாக இருப்பதால் ஒருவனுக்கு தாழ்மை இயல்பாக இருந்துவிடாது; அதை அவன் தன்னில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்துக் கிறிஸ்தவர்களும் அதைக் கொண்டிராமல் இருப்பது வருந்தவேண்டிய விஷயம். முக்கியமாக போதிக்கிறவர்களில் தாழ்மை இல்லாமல் இருப்பதே அவர்கள் ஆசீர்வாதமற்றவர்களாக இருப்பதற்கும், அழிவைத் தேடிக்கொள்ளுவதற்கும் முக்கிய காரணம்.
யோதாம் தாழ்மையுள்ளவனாக இருந்தான். யோதாம் அரசனானபோது சூழ்நிலை கஷ்டமானதாக இருந்தது. அவனுடைய தகப்பனான உசியா பலம் வாய்ந்தவனாக இருந்தான். அவனுக்குப் பெரும் வெற்றிகள் கிடைத்து நாடும் ஆசீர்வாதங்களை அடைந்திருந்தது. ஆனால், இந்த ஆசீர்வாதங்கள் உசியாவின் தலைக்கு ஏறி, அவன் ஆணவக்காரனாக மாறியிருந்தான்.
2 நாளாகமம் 26:16
அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.
உசியா பலம் வாய்ந்தவனாக இருந்தான். அவன் மேலும் பலப்பட்டபோதெல்லாம் அவனுக்கு ஆணவம் உண்டாகி அழிவுக்கு வழிதேடிக்கொண்டான். அவன் ஆலயத்து ஆசாரியர்களுடைய பணியைத் தானே செய்யமுடிவு கட்டினான். அதை வேதம் அனுமதிக்கவில்லை. அந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த லேவியரைத் தவிர வேறு எவரும் அதைச் செய்யக்கூடாது. நியாயாதிபதிகள் நூலில் நாம் வாசிக்கின்ற மீகா இதைச்செய்து எத்தனைப் பெரிய கொடுந்தண்டனையை அடைந்தான் என்பதை நினைத்துப் பாருங்கள். ஆண்டவர் தன்னுடைய ஆராதனை விஷயங்களில் எவரும் கைவைப்பதை அடியோடு விரும்பவில்லை. உசியா அதைத் தொட்டது அவனுக்கு ஆபத்தானது. நான் பலம் வாய்ந்த அரசன், இப்போது என்னைவிட பலம் வாய்ந்த எவரும் இல்லை என்று எண்ணி, தான் நினைத்ததையெல்லாம் செய்யலாம் என்று முடிவுகட்டி ஆராதனை விஷயத்தில் அவன் கைவத்தது கர்த்தரின் கோபத்தை அவன் அனுபவிக்கும்படிச் செய்தது. இந்த நூற்றாண்டில் ஆண்டவருடைய ஆராதனையை வெறும் கூத்தாக சபைகளில் மாற்றி வைத்திருப்பவர்கள், தங்களுடைய சென்டிமென்டுக்கு ஏற்றபடி ஆடல் பாடல்களோடு ஆராதனையை நடத்திச் செல்லுகிறவர்கள் இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளவேண்டும். பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் ஏற்படுத்திவைத்திருக்கும் ஆராதனைத் தத்துவங்கள் புதிய ஏற்பாட்டிலும் தொடர்கின்றன என்பதை மறக்கக்கூடாது. உசியாவின் ஆணவமே, அவன் விசுவாசமுள்ள அரசனாக இருக்கமுடியாதபடி செய்தது.
உசியாவுக்கும், அவனுடைய மகனான யோதாமுக்கும் இடையில் சில விஷயங்களில் ஒற்றுமையும், ஒரேயொரு முக்கியமான வேறுபாடும் இருந்திருக்கிறது.
2 நாளாகமம் 27:3-5 வாசியுங்கள். இந்த வசனங்கள் யோதாமின் வளர்ச்சியை விளக்குவதாக இருக்கின்றன.
2 நாளாகமம் 27:3-5
அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான். யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான். அவன் அம்மோன் புத்திரருடைய ராஜாவோடு யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோன் புத்திரர் அவனுக்கு அந்த வருஷத்திலே நூறுதாலந்து வெள்ளியையும், பதினாயிரங்கலக் கோதுமையையும், பதினாயிரங்கல வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருஷத்திலும் அம்மோன் புத்திரர் அப்படியே அவனுக்குச் செலுத்தினார்கள்.
3ம், 4ம் வசனங்கள் யோதாம் ஆலயத்தின் உயர்ந்த வாசலையும், ஓபேல் நகர் மதிலின்மேல் அநேக கட்டிடங்களையும் சுற்றிவரக் கட்டினான். தலைநகரான யெருசலேமைச் சுற்றிப் பாதுகாப்பு வளையங்களை அதிகப்படுத்தி நகர்ப்பாதுகாப்பைப் பலப்படுத்தினான். 5ம் வசனம், உசியாவைப்போலவே அவனும் அம்மோன் புத்திரை வெற்றிகொண்டான் என்கிறது. 5ம் வசனத்தின் கடைசிப்பகுதி அவனுடைய செல்வத்தின் வளர்ச்சியை விளக்குகிறது. அம்மோன் புத்திரர் அவனுக்கு அந்த வருடம் 100 தாலந்து வெள்ளியையும், 10,000 கலக் கோதுமையையும், 10,000 கல வாற்கோதுமையையும் கொடுத்தார்கள். இரண்டாம் மூன்றாம் வருடத்திலும் அம்மோன் புத்திரர் அந்தளவுக்குக் கப்பம் செலுத்தினார்கள். இதனால் யோதாம் மிகவும் பலம் வாய்ந்தவனாகவும், செல்வத்தில் நிறைந்தவனாகவும் இருந்தான். தன் தகப்பனைப்போல பலம் வாய்ந்தவனாக உயர்ந்தான். இங்கேதான் ஒரு வித்தியாசத்தைக் காண்கிறோம். அவன் உசியாவைப்போல பலசாலியாக வந்திருந்தாலும், தன் தகப்பனுடைய பாவத்தைப் பின்பற்றவில்லை. அதுவே முக்கியமான வேறுபாடு. அது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது, கர்த்தர் யோதாமின் வாழ்க்கையில் கிரியை செய்து வந்திருக்கிறார். அவன் தன் தகப்பனின் பாவத்தைத் தன்காலத்தில் செய்யவில்லை.
அப்படி உசியா செய்த பாவம் என்ன?
யோதாம் அப்படி எதைச்செய்யாமல் விட்டான்?
இந்த விஷயத்தை நாம் 2 இராஜாக்கள் 15ல் வாசிப்பதில்லை. அத்தனை முக்கியமான விஷயத்தை அவர் விட்டுவிட்டதற்குக் காரணம் இல்லாமல் இருக்காது. இருந்தபோதும் அதில் இந்த விஷயம் விளக்கப்படவில்லை. 2 நாளாகமம் 27 இந்த விஷயத்தை நமக்கு விளக்கி யோதாமைப்பற்றி நாம் நன்றாகத் தெரிந்துகொள்ள உதவுகிறது.
யோதாம் அப்படி செய்யாமல்விட்டது எது?
2 நாளாகமம் 27:2
அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; ஜனங்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
யோதாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானவற்றை மட்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்வது அவசியம். அவன் அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. எதைச்செய்யக்கூடாது என்பதை அறிந்துணர்ந்து அவற்றைத் தவிர்த்துக்கொள்ளுவதையும் யோதாம் கடமையாகக் கொண்டிருந்தான். உசியா ஆணவக்காரனாக இருந்து கர்த்தரின் ஆலயப்பணியைத் தன்கையில் எடுத்துக்கொண்டான். அது அவன் செய்த பெரிய பாவம். யோதாம் அதைச் செய்யவில்லை. அதற்குக் காரணம் அவன் ஆணவக்காரனாக இருக்கவில்லை. அவனில் கர்த்தரிடம் இருக்கவேண்டிய பயமும், தாழ்மையும் காணப்பட்டன.
யோதாம் கர்த்தருக்குப் பயந்தவன்
யோதாம் உசியாவுக்கு நடந்ததையெல்லாம் கண்ணால் பார்த்து வளர்ந்திருந்தான். தகப்பனைக் கர்த்தர் தண்டித்ததையும் அதனால் அவனுக்கு நேர்ந்தவற்றையும் அவன் பார்த்திருந்தது மட்டுமல்லாமல் மறக்கவில்லை. அப்படிப் பார்த்து வளருகிற எல்லோருமே அவற்றில் இருந்து பாடம் படிப்பதில்லை. யோதாம் அப்படிப்பட்டவனல்ல. அவன் அவற்றை மறக்காமல் இருந்து அவற்றைச் செய்யாமலிருந்தான்.
2 நாளாகமம் 27:2
ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்.
இந்த வசனம் பொருளுள்ளதாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். உண்மையில் இந்த வசனம் யோதாம் செய்யாததை மட்டும் நமக்கு விளக்காமல் அவன் எப்படிப்பட்டவன் என்பதையும் விளக்குகிறது. தாழ்மையைக் கொண்டிருந்த யோதாம், கர்த்தருக்குப் பயந்தவனாக இருந்தான். ‘தேவபயம்’ என்ற அல்பர்ட் என். மார்டினின் அருமையான புத்தகத்தை நாம் வெளியிட்டிருந்தோம். எத்தனை பேர் வாங்கி வாசித்துப் பயன்பட்டீர்களோ தெரியவில்லை. அப்படி ஒரு நூல், அல்லது அதன் அருகிலும் வரக்கூடிய ஒரு நூல் தமிழில் இல்லை என்பது எனக்குத் தெரியும். இருந்தும் நம்முடைய இனத்தவர்கள் அப்படிப்பட்ட நூல்களின் மகிமை தெரியாமல் இருக்கிறார்கள். அந்நூலை ஆங்கிலத்தில் வாசித்து என் சபையாரை வாசிக்கும்படி நான் வலியுறுத்தியிருக்கிறேன். என் பிரசங்கங்களிலும் நான் சில பகுதிகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இது போதகர்கள் தங்கள் பிரசங்க ஊழியத்தில் செய்ய வேண்டிய முக்கியமான காரியம். நல்ல சத்துள்ள உணவை சபையாருக்குப் படைத்து பிரசங்கம் செய்யாதவர்கள் கர்த்தரால் அழைக்கப்பட்டிருக்க முடியாது. நீங்களும் அந்த நூலை வாங்கி வாசித்து, திருமணம், மற்றும் பிறந்தநாள் காலங்களில் நண்பர்களுக்குப் பரிசாகக் கொடுக்கவேண்டும்.
எப்படி மொழி தெரியாத ஒரு இனம் அழிந்துவிடுமோ, அதேபோல்தான் நல்ல நூல்களை வாசித்து வளராத சபையும் ஒருநாள் செத்துவிடும்.
யோதாமுக்கு தேவபயமிருந்தது. கர்த்தருக்குப் பயப்படுகிற மனிதன் மட்டுமே அவரை எதிர்த்து நிற்கமாட்டான். தேவபயம் விசுவாச வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. தேவபயமில்லாமல் நம் மத்தியில் சிலர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களைப் பாவத்தைத் துணிகரமாகச் செய்கிறவர்கள். மெய்யான கிறிஸ்தவ விசுவாசத்தைக் கொண்டிராத ஒருவனையோ, அல்லது ஒருத்தியையோ யாராவது திருமணம் செய்யத் துணிகிறார் என்றால் அவனுக்கோ அவளுக்கோ தேவபயமில்லை என்றுதான் அர்த்தம். தேவபயமில்லாத இடத்தில் கர்த்தரின் வார்த்தையின்படி வாழ்கிற விசுவாசம் இருக்கவே முடியாது. அதனால்தான் தேவபயம் என்ற அந்தப் புத்தகத்தை வாசிப்பது அவசியம் என்கிறேன். நம்மில் அநேகர் குற்றுயிரும், குலையுயிருமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கு இதுதான் காரணம். தேவனுக்குப் பயப்படுகிறீர்களா? அல்லது அவருடைய வார்த்தைக்கு எதிரானதைச் செய்யும் துணிகரமான இருதயத்தைக் கொண்டிருக்கிறீர்களா? யோதாம் அப்படிப்பட்டவனல்ல. அவன் கர்த்தருக்குப் பயப்படுகிற இருதயத்தைக் கொண்டிருந்ததால்தான் தகப்பன் செய்த பாவத்தைச் செய்யத் துணியவில்லை. தேவபயம் பாவத்தைப் பாவமாகப் பார்த்து அதற்கு ஒதுங்கி நிற்க உதவுகிறது.
கிறிஸ்துவை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் ஒரேவிதத்தில் அவரை அறிந்துகொள்வதில்லை. சந்தர்ப்பங்கள் வேறுபடும். வேதத்தில் நாம் வாசிக்கின்ற ஒவ்வொரு மனிதருடைய மனமாற்றமும் வெவ்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் நிகழ்ந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. கர்த்தர் கிரியை செய்யும் விதமே அற்புதமானது. யோதாம், ஒரு நல்ல விசுவாசமுள்ள குடும்பத்தில் வளர்ந்து நல்ல உதாரணங்களைக் கண்டிராதபோதும், அவன் கர்த்தரின் கிருபையால் விசுவாசத்தை அடைந்து தேவபயத்தோடு பாவத்தைச் செய்யத்துணியாத இருதயத்தைக் கொண்டிருந்தான். கர்த்தரின் கிருபையே அவன் தேவபயத்தைக் கொண்டிருந்ததற்குக் காரணம். அவன் தன் தகப்பன் செய்த பாவத்தைத் செய்யத் துணியவில்லை. அந்த வார்த்தைகள் பொருள் பொதிந்தவை. பாவத்தைச் செய்யத் துணியாத தேவபயத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா?
யோதாம் தாழ்மையைக் கொண்டிருந்தான். அதோடு தேவபயத்தையும் கொண்டிருந்தான். அவனுடைய தேவபயமும், தாழ்மையும் அவன் கர்த்தரை எதிர்த்து நின்று பாவத்தைச் செய்துவிடாமல் அவனைக் காப்பாற்றின.
யோதாம் அடைந்த ஆசீர்வாதம்
இந்தப் பகுதியின் 6வது வசனம் மிகவும் முக்கியமானது.
2 நாளாகமம் 27:6
யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான்.
தமிழ் வேதத்தில் இந்த வசனம் சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அது அதிசயந்தான். ஆங்கிலத்தில் யோதாம் ‘தன் வழிகளைத் தயாரித்தான்’ அல்லது ‘சரிப்படுத்திக்கொண்டான்’ என்றிருக்கிறது. நேராக்கினான் என்பதற்கான எபிரேய மொழி வார்த்தைக்கு, ‘உறுதியோடு சரியானவிதத்தில் அமைத்துக்கொண்டான்’ என்று பொருள். அதையே யோதாம் செய்தான். யோதாம் கர்த்தரைத் தாழ்மையோடும், தேவபயத்தோடும் விசுவாசித்ததால் அவன் தன் வாழ்க்கையை சரியானவிதத்தில் உறுதியோடும், தீர்மானத்தோடும் கர்த்தருடைய வார்த்தைக்கேற்றபடி அமைத்துக்கொண்டான் என்கிறது இந்த வசனம்.
நேராக்கிக்கொண்டான் என்பதற்கு என்ன அர்த்தம்?
இதற்கான மூலமொழியின் அர்த்தத்தைக் கவனித்தோம். ஆனால், யோதாம் இதை எப்படிச் செய்தான்? அதாவது, யோதாம் இதைச் செய்வதற்கு சில அவசியமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. ஒருவன் தூங்கி எழுந்தவுடன் காப்பி சாப்பிடுவதுபோல் இதை இலகுவாக செய்து விடமுடியாது. இதைச் செய்கிற ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் சென்டிமென்டலாக நடந்துகொள்ளமாட்டான். அதாவது, அவன் வாழ்க்கையில் எல்லா சந்தர்ப்பங்களிலும் தன்னுடைய உணர்ச்சிகளுக்கேற்ற முறையில் வளைந்துகொடுத்து தீர்மானங்களை எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கமாட்டான். இதுவே கர்த்தருக்குப் பயந்து வாழ்வதற்குப் பெரிய எதிரி.
நம்மில் பாவம் தொடர்ந்திருக்கும்வரை நம்முடைய உணர்ச்சிகள் பாவக்கறையோடேயே இருக்கும். அவற்றைக் கட்டுப்படுத்திக் கர்த்தரின் வார்த்தையின்படியாக உணர்ச்சிகள் அமைந்திருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. நம் உணர்ச்சிகளை மட்டும் நாம் நம்பினால் நிச்சயம் வழிதவறிப் போய்விடுவோம். யோதாமைப்போன்ற நல்ல விசுவாசி, தன் உணர்ச்சிகள் அதிகரித்து பரிசுத்தமாக இல்லாத காரியங்களில் ஆர்வம்காட்ட முயல்கிறபோது, கர்த்தருடைய வார்த்தைக்கு முரணான விஷயங்களில் போக முயற்சிக்கிறபோது, தாழ்மையோடு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கர்த்தரின் வார்த்தையின் வழியில் போவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுப்பான். தன் உணர்ச்சிகள் தன்னைத் தவறான வழியில் அழைத்துப்போவதற்கு அவன் ஒருபோதும் இடங்கொடுக்கமாட்டான். தாவீது தன் உணர்ச்சிகளுக்கு இடங்கொடுத்து கர்த்தரில் தங்கியிருக்கத் தவறியதால் அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட பேரிடறலை நினைத்துப் பாருங்கள். அப்படிச் செய்வதைத் தாவீது தன் வாழ்க்கையில் தொடர்ச்சியாகக் கொண்டிருக்கவில்லை. அப்படியொரு தடவை அவன் தவறு செய்துவிட்டான். அப்படிப் போய்விடாமல் இருப்பதற்கு யோதாம் தன் வழிகளை உறுதியோடு நேராக்கிக் கொண்டான். உணர்ச்சிகள் தன்னை ஆள அவன் வழிவிடவில்லை.
யோதாம் தன் வழிகளை நேராக்கிக்கொள்வதற்கு அவன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது. அவன் பலசாலியாக இருந்ததோடு, அவனுடைய செல்வமும் அதிகரித்தது. அவனை ஏனைய நாடுகள் மதிக்க ஆரம்பித்தன. அவனுக்கு நாடுகள் கப்பம் செலுத்தின. இந்தவிதத்தில் பெருமைகள் குவிகிறபோது விசுவாசியின் இருதயமும் பெருமைப்பட ஆரம்பிக்கும். வெளியில் இருந்தும், உள்ளேயிருந்தும் உண்டாகிற சோதனைகளுக்கு அவன் முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது. தனக்குள் இருக்கும் தொடர்கிற பாவத்தை அவன் அடக்கியாள வேண்டியிருக்கிறது. அவனுடைய இருதயம் அவனைப்பார்த்து, ‘யோதாம் நீ இப்போது பெரிய அரசன். உன்னை எல்லோரும் பாராட்டுகிறார்கள். நீ உயர்ந்துவிட்டாய். உன்னால் முடியாதது எதுவும் இல்லை. நீ பெரியவன்’ என்றெல்லாம் அவனைப் பார்த்துச் சொல்லும். யோதாமுக்கு இது தெரியாமல் இருந்திருக்காது. ஆனால், யோதாம் இதற்கு மசிந்துகொடுக்காமல் ஆணவம் இருதயத்தில் குடிபுகுவற்கு இடங்கொடுக்காமல், தேவபயத்தோடு தாழ்மையை வளர்த்துக்கொள்ள வேண்டிய வேலையைச் செய்யவேண்டியிருந்தது. அவன் எச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டியிருந்தது. தகப்பனின் பாவத்தை நினைத்துப் பார்க்க வேண்டியிருந்தது. உணர்ச்சிகளைக் கட்டி ஆளவேண்டியிருந்தது.
இப்படி விசுவாசி தன் வழிகளை நேராக்கிக்கொள்ளும் கடமையில் தவறக்கூடாது. ஜொனத்தன் எட்வர்ட்ஸ் எனும் 18ம் நூற்றாண்டுப் பிரசங்கி தன் வாழ்க்கையைச் சீராகவும், நேராகவும் வைத்திருப்பதற்காக 75 கடமைகளை ஒரு சிறு நோட்புக்கில் எழுதித் தன் பையில் வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் காலையிலும், படுக்கைக்குப் போகுமுன்பும் அதை ஜெபத்தோடு ஆராய்ந்து பார்த்து தான் சரியாக நடந்து கொண்டிருக்கிறேனா என்று கர்த்தர் முன் வந்து நன்றியோடு ஜெபித்தாராம். தான் செய்ய மறந்தவைக்கு மன்னிப்பும் கேட்டாராம். இந்த 21ம் நூற்றாண்டில் கவனக்குறைவோடு ஏனோதானோவென்று அலட்சிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறவர்களுக்கு அது அதிகப்பிரசங்கித்தனமாகப் படலாம். ஆனால், தேவபயமும், தாழ்மையும் உள்ள மனிதன் தான் வாழ்கிற காலத்துக்கேற்றவகையில் தன் உணர்ச்சிகளுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமாட்டான். அவன் உறுதியாக தன் வாழ்க்கையை கர்த்தருக்கேற்றபடிக் கடினமாக உழைத்து நேர்செய்துகொள்வான்.
இதற்கும் தன்வழிகளை நேர் செய்துகொள்வதற்கும் என்ன தொடர்பு?
நிறைய தொடர்பிருக்கிறது. உறுதியில்லாமல் தீர்மானமில்லாத இலக்கில்லாத வாழ்க்கை வாழ்கிறவன் விசுவாசியாக இருக்கமுடியாது. அத்தகைய இலக்கில்லாத வாழ்க்கையில் பரிசுத்தம் இருக்க வழியில்லை. பரிசுத்தம் என்பது தானாக வராது. அது இருப்பதற்கு அநேக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். ஜெபம் பரிசுத்தத்தைக் கொண்டுவராது. ஒன்றை மறந்துவிடாதீர்கள். கர்த்தரை நோக்கி நீங்கள் உறுதியோடு போகாதிருந்தால், பரிசுத்தத்தை நோக்கி நீங்கள் போகமாட்டீர்கள். கடலில் பாய்மரத்துணி இழுத்தபோக்கில் போய்க்கொண்டிருக்கும் படகைப்போல உங்கள் இருதயம் இருந்தால் நீங்கள் கர்த்தரின் வழியில் ஒருநாளும் விசுவாசத்தோடு நடக்கமாட்டீர்கள். கர்த்தருக்குப் பயந்து வாழ்கிற வாழ்க்கை அந்தவிதத்தில் இருக்காது. யோதாம் குதிரையோட்டுகிறவன் லகானைத் தன் கரத்தில் உறுதியாகப் பிடித்து குதிரை தான் போகவிரும்பும் வழியில் போகவைப்பதில் உறுதியாக இருப்பதைப்போல, தன் உணர்ச்சிகளை அடக்கித் தன் வழிகளை நேராக்கிக்கொண்டு கர்த்தருக்குப் பயந்து வாழ்ந்தான்.
சங்கீதம் 1:2
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
யோசுவா 1:8
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.
சங்கீதம் 25:5
உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
சங்கீதம் 63:6
என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
இந்த மனிதர்களைப்போல உங்களுடைய வாழ்க்கையை அன்றாடம் நேராக்கிக்கொள்கிறீர்களா? இலக்கில்லாத போக்கில் ஒவ்வொரு நாளும் தொடராமல் நாளுக்குரிய அனைத்தையும் திட்டமிட்டுத் தீர்மானித்துக் கர்த்தருடைய வார்த்தைக்கேற்றபடி வாழ்ந்து வருவதைக் கடமையாகக் கொண்டிருக்கிறீர்களா? இருதயம் தானாக இயங்கும்படி விட்டுவிடக்கூடாது. அந்தத் தவறைத் தாவீது ஒரு தடவை செய்து தன்னைச் சுட்டுக்கொண்டான். யோதாம் தன் இருதயம் அதுபோனபோக்கில் விடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அவனுடைய தாழ்மையும், தேவபயமும் அவனைப் பொறுப்புள்ளவனாக இருதயத்தை ஆளுகிறவனாக மாற்றியது. உசியாவைப் போல தன் இருதயம் அலைய அவன் அனுமதிக்கவில்லை.
இறுதியாக, யோதாமுக்குக் கிடைத்த ஆசீர்வாதத்தைக் கவனிப்போம்.
2 நாளாகமம் 27:9
யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீதின் நகரத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய, ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
இது எதைக்காட்டுகிறது தெரியுமா?
யோதாம் சகல மரியாதைகளுடனும் தாவீதின் நகரத்தில் நல்ல அரசர்களுக்குக் கொடுக்கப்படுகிற மரியாதைகளோடு அடக்கம் செய்யப்பட்டான். உசியாவுக்கு அது கிடைக்கவில்லை. பிதாக்கள் அடக்கம் செய்யப்படுகிற பகுதியில் தொலைவில் ஓரிடத்தில் அவனை அடக்கம் செய்திருந்தார்கள். உசியாவுக்கு இறப்பிலும் மரியாதை இல்லாமல் இருந்திருக்கிறது.
2 இராஜாக்கள் 15:38 ல் இதைவிட அதிகமாக சொல்லப்பட்டிருக்கிறது.
யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
இந்த வசனத்தில் யோதாமின் தகப்பனாக தாவீது வர்ணிக்கப்பட்டிருக்கிறார். 2 நாளாகமம் 27:9 தாவீதின் நகரத்தில் என்று மட்டுமே விளக்கியிருக்கிறது. இங்கே யோதாமின் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் என்று வாசிக்கிறோம். இதிலிருந்து தாவீதோடு நெருக்கமுள்ளவனாக யோதாம் காட்டப்பட்டிருக்கிறான்.
யோதாமுக்கு ஆசீர்வாதங்கள் ‘ஆசீர்வாத வசனங்கள்’ மூலமாக வந்துவிடவில்லை. அத்தகைய வசனங்களைக் கொடுத்தே இன்று பிரசங்கிகள் ஆத்துமாக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆத்துமாக்களும் அத்தகைய வசனங்களுக்காக அலைந்து தங்களை ஏமாற்றிக்கொள்கிறார்கள். கர்த்தரின் ஆசீர்வாதங்கள், அவருக்குப் பயந்து, தாழ்மையோடு வாழ்ந்து, அவருடைய வார்த்தையின்படி நடக்கிறவர்களுக்கே கிடைக்கும். அதுவே யோதாமின் வாழ்க்கையாக இருந்தது.
யோதாமைப்போல தாழ்மையையும், தேவபயத்தையும் கொண்டு அவருடைய வார்த்தையைப் பின்பற்றி வாழ்கிறீர்களா? தேவபயமில்லாத இருதயத்தில் தேவ அன்பு இருக்கமுடியாது. தேவ அன்பில்லாத இருதயத்தில் தேவன் இருக்கமாட்டார். நீங்கள் எப்படி?
தவறைச் சரிசெய்தலும் (Restitution), அதற்கு ஈடு செய்தலும் (Reparation)
‘நம்முடைய இறையியல் தவறாக இருந்தால் நாம் விசுவாசிக்கும் அத்தனையும் தவறானவையாகிவிடும்’ என்று ஓர் இறையியலறிஞர் சொன்னதாக வாசித்திருக்கிறேன். அது உண்மைதான்.
கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றுகிற எந்த விசுவாசத்திற்குரிய விஷயத்திற்கும் வேதத்தில் இருந்து பதிலளிக்க முடியும். வேதம் அத்தகைய பதிலை அளிக்காவிட்டால் அவர்கள் செய்துவரும் செயல் தப்பானது என்று நிச்சயம் முடிவெடுக்கலாம். அதனால் வேத இறையியல் நமக்குத் துல்லியமாகத் தெரிந்திருப்பது அவசியம். அதில் தவறிருந்தால் நம் விசுவாசமும், நம் செயல்களும் தவறானவையாகிவிடும். வேதம் மட்டுமே தவறில்லாதது; அது மட்டுமே நம் விசுவாசத்திற்கான அடித்தளமாயிருக்கிறது.
தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு விஷயங்களையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவை இரண்டும் பொதுவாக மனந்திரும்புதல் (Repentance) எனும் ஆழமானதும், அவசியமானதுமான இறையியல் போதனைக்குள் அடங்கியிருப்பவை. எந்த சீர்திருத்த முறைப்படுத்தப்பட்ட இறையியல் (Systematic Theology) நூலிலும் இந்த இரண்டும் மனந்திரும்புதலாகிய சத்தியத்தின் கீழேயே விளக்கப்பட்டிருக்கும். அதுவும், மனந்திரும்புதலுக்குள் அடங்கிக் காணப்படும் தவிர்க்கமுடியாத ஆறு அம்சங்களில் இரண்டான ‘பக்திக்குரிய துக்கம்’ மற்றும் ‘பாவ அறிக்கை‘ ஆகிய அம்சங்களின் கீழ், அவைபற்றித் தரப்படும் விளக்கங்களில் இவை சுருக்கமாக விளக்கப்பட்டிருக்கும். புதிய ஏற்பாடு இவை பற்றிப் பெரிதான விளக்கங்களைத் தராததால் எல்லா முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூல்களிலும் இவை விளக்கப்பட்டிருக்கும் என்று சொல்லமுடியாது. இவை பற்றிய இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளுவது மிகவும் அவசியமானது. எந்த சீர்திருத்த இறையியலறிஞரும் இவை இரண்டையும் தனியாகப் பிரித்துப் பெரியளவுக்கு விளக்கமளிப்பதில்லை; இதுவரை அதைச் செய்ததுமில்லை. அதற்குக் காரணமிருக்கிறது.
- இவற்றைத் தனியாகப் பிரித்து ஏனைய சத்தியங்களோடு தொடர்பில்லாத வகையில் விளக்கமளித்தால் இவை அடங்கிக் காணப்படும் இறையியல் போதனைக்கு பாதிப்பு உண்டாகும். அதனால்தான், ஆரம்பத்திலேயே இந்த இரண்டும் மனந்திரும்புதலுக்குள் அடங்கியிருக்கின்றன என்று தலைப்பில் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.
- வேத இறையியலில் எந்த சத்தியமும் ஏனைய சத்தியங்களோடு பிரிக்கமுடியாத தொடர்புடையது. அதனால், ஏனைய சத்தியங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமலும், அவற்றோடு பொருந்திப்போகும் விதத்திலுமே நாம் எந்தவொரு சத்தியத்திற்கும் விளக்கங்கொடுக்க வேண்டும்.
- ஒரு சத்தியத்தை, வேதம் அதை வெளிப்படுத்தியிருக்கும் அளவைப் பொறுத்தே அளவோடு விளக்கமளிக்கவேண்டும் (proportionate to the truth). மனந்திரும்புதலில் உள்ளார்ந்து காணப்படும் ஆறு முக்கிய அம்சங்களின் பகுதியான இவை இரண்டையும், இவை மட்டுமே மனந்திரும்புதல் என்றவிதமாகவோ, அல்லது இவை இல்லாவிட்டால் மனந்திரும்புதல் இருக்கமுடியாது என்றவிதமாகவோ விளக்கினால், அது இந்த உண்மைகளை வேதம் இவற்றை வெளிப்படுத்தியிருக்கும் அளவை மீறி விளக்கியதாகிவிடும். ஒவ்வொரு சத்தியத்திற்கும் அது வேதத்தில் விளக்கப்பட்டிருக்கும் அளவைக் கடந்துபோய் விளக்கமளிக்கக்கூடாது.
- புதிய ஏற்பாட்டில் இவற்றைப் பற்றிப் பெரிதாக வெளிப்படையான விளக்கங்கள் (Explicit) தரப்படவில்லை. உள்ளடக்கமாகக் (Implicit) காணப்படுபவைகளை வைத்தே இதுபற்றி விளக்கங்கொடுக்க முடிகிறது.
‘தவறைச் சரி செய்தலும், அதற்கு ஈடுசெய்தலும்’ என்ற விஷயம் பற்றி நான் சிந்திக்க நேர்ந்தது, “பியூரிட்டன்களின் பார்வையில் மனந்திரும்புதல்” என்ற நூலைக் கடந்த வருடம் (2021) எழுதியபோதுதான். அதில் தொமஸ் வொட்சன், தொமஸ் பொஸ்டன், ஜோன் கல்ஹூன் ஆகிய பியூரிட்டன் பெரியவர்கள் மனந்திரும்புதல் பற்றித் தந்திருக்கும் விளக்கங்களை ஆய்ந்து எழுதியிருக்கிறேன். ஜோன் கல்ஹூன் தன் நூலில் இவை இரண்டைப் பற்றியும் விளக்கவில்லை.
தோமஸ் வொட்சன்
தோமஸ் வொட்சன் மனந்திரும்புதல் எனும் தன் நூலில், முதலாவதாக, மனந்திரும்புதலின் ஓர் அம்சமான பக்திக்குரிய துக்கம் எனும் தலைப்பில் அது பற்றி விளக்கும்போது தந்திருக்கும் ஆறு அம்சங்களில் ஒன்றில் செய்த தவறுக்கு ஈடுசெய்தலைப்பற்றி (Reparation) நேரடியாகவே குறிப்பிட்டிருக்கிறார். வொட்சன், “தேவனுக்கேற்ற துக்கம் சில சமயங்களில் யாருக்காவது நாம் ஏற்படுத்தியிருக்கும் இழப்பை சரிசெய்வதில் போய் முடியும்” என்கிறார். இதில் வொட்சன் “சில சமயங்களில்” என்று குறிப்பிட்டிருப்பதைக் கவனிக்கவேண்டும். அதாவது, இதை மனந்திரும்பும் எல்லோரும் செய்யவேண்டிய சூழ்நிலை இருக்காது என்பதையும், மோசமான பாவத்தைச் செய்திருந்து அதற்குத் தக்க பக்திக்கேற்ற துக்கத்தைக் கொண்டிருப்பவர்களும் சில சமயங்களில் மட்டுமே இன்னொருவருக்கு செய்திருக்கும் தீமைக்கான இழப்பைச் சரிசெய்யும் சூழ்நிலை அமைந்திருக்கும் என்கிறார் வொட்சன். இயேசுவுக்குப் பக்கத்தில் சிலுவையில் இருந்த மனந்திரும்பிய கள்வன் தான் மற்றவர்களுக்குச் செய்த பாவத்திற்கான இழப்பை ஈடு செய்யக்கூடிய சூழ்நிலையில் இருக்கவில்லை. இருந்தும் அவனுடைய மனந்திரும்புதல் முழுமையானதாக இருந்தது; அவன் பரலோகத்தை அடைந்தான். ஆனால், மனந்திரும்பிய சகேயுவால் அதைச் செய்யக்கூடிய சூழ்நிலை இருந்தது. (பியூரிட்டன்களின் பார்வையில் மனந்திரும்புதல், ஆர். பாலா, பக்கம் 165-166).
அடுத்ததாக தோமஸ் வொட்சன், மனந்திரும்புதலில் அடங்கியிருக்கும் ஆறு அம்சங்களில் ஒன்றான ‘பாவத்திற்கு மன்னிப்புக் கேட்பது’ என்ற சத்தியத்தை விளக்கும்போது, செய்த தவறைச் சரிசெய்வதைப்பற்றி (Restitution) சுருக்கமாக விளக்கியிருக்கிறார். அதுவும் ஆரம்பத்தில் ஓர் எச்சரிக்கையைச் தந்துவிட்டே இதை விளக்கியிருக்கிறார். அந்த எச்சரிக்கை: மனிதர்கள் முன்பு பாவ அறிக்கை செய்வது சரியா? என்பதே. அதாவது, பாவமன்னிப்பைப் ‘பொதுவாக’ ரோமன் கத்தோலிக்க மதம் செய்வதுபோல், ஒரு குருவானவரின் காதில் செய்யக்கூடாது என்ற எச்சரிக்கையைத் தந்து வொட்சன் இதை விளக்கியிருக்கிறார். கத்தோலிக்க மதம் இந்த முறையைப் பயன்படுத்துவதற்கு யாக் 5:16ஐப் பயன்படுத்துகிறது என்று விளக்கும் வொட்சன், நகைச்சுவையாக, ‘இந்த வசனம் ஆத்துமாக்கள் மட்டுமல்ல, குருவானவரும் ஆத்துமாக்களிடம் பாவ அறிக்கை செய்யவேண்டும்’ என்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். வொட்சனின் வார்த்தைகளில் சொல்லப்போனால், ‘போப்பின் தங்க ஆபரணங்களான கோட்பாடுகளில் இதுவும் ஒன்று.’ போப்பு சொல்லுவதைப்போன்ற பாவ அறிக்கை செய்வது பற்றி நான் குறிப்பிடவில்லை எனும் வொட்சன், மனிதர்கள் முன் பாவ அறிக்கை செய்யவேண்டிய மூன்றே மூன்று சந்தர்ப்பங்கள் மட்டுமே காணப்படுகின்றன என்று சுட்டுகிறார்.
- ஒருவன் பாரதூரமான பாவத்தைச் செய்து (scandalous) அதன் மூலம் (சபையில்) மற்றவர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்பது அவசியமாகிறது. இது மற்றவர்களைப் பாதித்திருப்பதால், பொதுவில் செய்யப்படும் பாவத்திற்கு பொது மன்னிப்பு அவசியமாகிறது. (2 கொரிந்தியர் 5-7).
- ஒருவன் கடவுளிடம் பாவ அறிக்கை செய்தபின், தொடர்ந்தும் அவனுடைய மனச்சாட்சி அவனை உறுத்திக்கொண்டிருந்தால், ஞானமும் பக்திவிருத்தியும் உள்ள நண்பரொருவரிடம் அல்லது போதகரிடம் அது பற்றி ஆலோசனை பெறலாம்.
- யாராவது இன்னொருவரைப் பற்றித் தவறாகத் தீங்கிழைக்கும் விதத்தில் எவரோடாவது பேசி அவருடைய நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கியிருந்தால் அதைச் சரிசெய்யும் விதத்தில் அவரிடத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டும். (மத்தேயு 5:23-24). (பியூரிட்டன்கள் பார்வையில் மனந்திரும்புதல், ஆர். பாலா, பக்கம் 183-185; Repentance, Thomas Watson, pg 36-37)
இந்த மூன்று சந்தர்ப்பங்களையும் புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் விளக்கியிருக்கும் தோமஸ் வொட்சன் இதற்கு மேல் எந்த விளக்கத்தையும் தரவில்லை. வொட்சன் விளக்கியிருக்கும் மூன்று சந்தர்ப்பங்களிலும் ஒருவருடைய பாவம் அவரோடும், கடவுளோடும் மட்டும் நின்றுவிடாமல் புறத்தில் இன்னொருவரையோ, சிலரையோ பாதித்திருக்கிறது என்பதை உணரவேண்டும். இதில் 2வதில், ஒருவனுடைய இருதயம் அவனைத் தொடர்ந்து காயப்படுத்திக்கொண்டிருந்திருப்பதற்குக் காரணம், அவன் இன்னொருவரோடு உறவைச் சரிசெய்யவேண்டியிருந்ததுதான்.
தோமஸ் பொஸ்டன்
தோமஸ் பொஸ்டன் பாவ அறிக்கையில் காணப்படும் இந்த இரண்டு அம்சங்களையும் (தவறைச் சரிசெய்வதும், அதற்கு ஈடு செய்வதும்) பற்றி வொட்சனைப்போலவே, மனந்திரும்புதலின் ஓர் அம்சமான பாவ அறிக்கையைப் பற்றி விளக்கும்போது கடைசியாக விளக்கியிருக்கிறார். பொஸ்டன், தவறைச் சரிசெய்வதும், அதற்கு ஈடு செய்வதும் என்ற தலைப்புகளின் கீழ் இதை விளக்கியிருக்கிறார் (Repentance, pg 85). ஒருவனுடைய மனந்திரும்புதல் ‘அரைகுறையாக இருந்துவிடக்கூடாது’ என்று கூறும் பொஸ்டன் ஒருவனுடைய மனச்சாட்சி அவனுடைய பாவத்தைச் சுட்டிக்காட்டி (ஆவியானவரால்) அவனைக் குத்திக் கிழித்துக்கொண்டிருந்தால் அவன் அதற்கான விடுதலையை அடைவதற்கு செய்யவேண்டிய அனைத்தையும் செய்யவேண்டும் என்று விளக்கியிருக்கிறார். இந்த இடத்திலேயே, தவறைச் சரிசெய்வதும் (Restitution), அதற்கு ஈடு செய்வதும் (Reparation) என்ற வார்த்தைப் பிரயோகங்களை அவர் பயன்படுத்தி அவற்றை விளக்கியிருக்கிறார். இந்தப் பதங்களை தோமஸ் வொட்சன் தன் நூலில் பயன்படுத்தவில்லை. தவறைச் சரிசெய்வது என்பது, பாவகரமாகவும், நீதியற்ற முறையிலும் ஒருவரிடம் இருந்து அடைந்த பொருளைத் திருப்பிக் கொடுப்பது என்று பொஸ்டன் விளக்குகிறார். அதை உணர்ந்திருந்தும், அதை நிவர்த்தி செய்யக்கூடிய நிலையில் இருந்தும் அதை நிவர்த்தி செய்யாவிட்டால் அவனுடைய மனந்திரும்புதலில் குறைபாடிருக்கிறது என்கிறார் பொஸ்டன். இதற்கு அவர் சகேயுவை (லூக்கா 19:8) உதாரணமாகக் காட்டுகிறார். ஒருவன் மனந்திரும்புதலை அடையும்போது, அவன் நீதியற்ற முறையில் பிறரிடம் இருந்து எதையும் அடைந்திருந்து, அதற்கு ஈடு செய்யக்கூடிய சூழ்நிலை காணப்படுமானால் எடுத்ததை அவன் சுயமாக மீளக்கொடுக்க வேண்டும் என்கிறார் பொஸ்டன்.
இதேபோல், செய்த தவறுக்கு ஈடுசெய்யவேண்டும் (Reparation) என்ற தலைப்பில் விளக்கும் பொஸ்டன், ஒருவர் தான் செய்த பாவத்தை, தவறைச் சரிசெய்ய முடியாத நிலையில் இருக்கும் சந்தர்ப்பங்களையே மனதில் கொண்டு விளக்கியிருக்கிறார். அதாவது, ஒருவருடைய பெயரை நாம் நீதியற்ற முறையில், பாவகரமாகக் கெடுத்திருந்தால் அதை முழுமையாகச் சரிசெய்ய முடியாமல் போகலாம். அத்தகைய நிலையில் அந்தப் பாவம் உணர்த்தப்படுகிறபோது அதற்காக நாம் சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்காமல் இருக்கக்கூடாது.
யாக்கோபு 5:16
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
அப்படி மன்னிப்புக்கேட்காமல் இருக்கும்வரை கர்த்தரை நாம் மகிமைப்படுத்தாமலேயே வாழ்கிறோம் என்கிறார் பொஸ்டன். அதற்கு ஈடு செய்யும் நிலையில் இருந்தும், ஒருவன் அதைச் செய்யாமல் இருந்தால் அவன் மனந்திரும்பியும் குறைபாடுள்ளவனாகவே வாழ்கிறான் என்கிறார் பொஸ்டன்.
17ம் நூற்றாண்டைச் சேர்ந்த தோமஸ் வொட்சனும், தோமஸ் பொஸ்டனும் தவறைச் சரிசெய்தலும், அதற்கு ஈடுசெய்தலுமாகிய உண்மைகளை விளக்கும்போது நான்கு காரியங்களை நிச்சயமாகச் செய்யவில்லை.
- அவர்கள் இருவரும் புதிய ஏற்பாட்டைத் தவிர, பழைய ஏற்பாட்டுப் பகுதிகளைப் பயன்படுத்தி விளக்கம் கொடுக்கவில்லை. இதற்கான காரணத்தை நான் பின்பு விளக்கப்போகிறேன்.
- இந்தவிதமாக பாவ அறிக்கை செய்வதையும், தவறிற்காக ஈடு செய்வதையும் இரட்சிப்பை ஒருவர் அடைவதற்கான நிபந்தனைகளாக அவர்கள் விளக்கவில்லை.
- தவறைச் சரிசெய்வதையும், அதற்கு ஈடு செய்வதையும் மனந்திரும்பும் ஒவ்வொரு விசுவாசியும் தவறாமல் செய்யவேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அத்தகைய பாவத்தை செய்தவர்கள் மட்டுமே அது உணர்த்தப்பட்டு சுயமாகச் செய்யவேண்டும் என்று விளக்கியிருக்கிறார்கள்.
- செய்த தவற்றிற்கு, ஈடு செய்ய விரும்பியும் ஈடு செய்ய முடியாத நிலையிலிருப்பவர்கள் தங்களுடைய இரட்சிப்பை இழந்துபோவார்கள் என்றும் இவர்கள் விளக்கவில்லை.
19ம் நூற்றாண்டைச் சேர்ந்த லூயிஸ் டெப்னி எனும் சீர்திருத்த இறையியல் அறிஞர், “செய்த தவறுக்கு ஈடு செய்வது நடைமுறைக்கு சாத்தியமான சூழ்நிலை இருந்தால் மட்டுமே செய்யவேண்டும்” என்று விளக்கியிருக்கிறார். “அத்தகைய பாவம் உணர்த்தப்படுகிறவர் அதை நிவர்த்தி செய்வதற்கான வல்லமையிருக்கிறபோதே அதைச் செய்வார்” என்றும் விளக்கியிருக்கிறார். இதன் மூலம் டெப்னி மிகக்கவனமாக, மனந்திரும்புகிற எல்லோரிலும் அது நிபந்தனையாக இருக்கவேண்டும் என்ற கருத்தை நிராகரிக்கிறார். ஆகவே, டெப்னி, வொட்சனோடும், பொஸ்டனோடும் ஒத்துப்போகிறபோதும், அவர்களைப்போலவே செய்த தவறுக்கு ஈடு செய்வதைக் கிரியைவாதமாக (Legalism) மாற்றிவிடவில்லை. மூவருமே இதைக் கத்தோலிக்க மதம் போதிக்கும் கிரியைவாத சடங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டியிருக்கின்றனர்.
20ம் நூற்றாண்டு இறையியலறிஞரான லூயிஸ் பேர்கொவ் சொல்லுகிறார், “வேதத்தைப் பொறுத்தவரையில் மனந்திரும்புதல் ஒருவரில் உள்ளார்ந்து ஆழமாக நிகழும் செயல்; அச்செயலின் காரணமாக ஒருவருடைய வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களோடு அதைத் தொடர்புபடுத்திக் குழப்பமடையக்கூடாது. பாவ அறிக்கையும், பாவத்திற்கு ஈடு செய்தலும் மனந்திரும்புதலின் கனிகள். மனந்திரும்புதல் எதிர்மறையானது மட்டுமே, அது இரட்சிப்பை அளிக்கும் நேர்மறையான கிருபையல்ல.” பேர்க்கோவ்வும், ஏனைய சீர்திருத்த அறிஞர்களைப்போலவே மனந்திரும்புதலை இரட்சிப்புக்கான நிபந்தனையாக மாற்றிவிடாமல் இருப்பதில் அக்கறை காட்டுகிறார். இருந்தபோதும், பேர்கோவ்வைப் பொறுத்தவரையில், மெய்யான விசுவாசம் இருக்கும் இடத்தில் மனந்திரும்புதலும் காணப்படும். இரண்டையும் பிரிக்கமுடியாது. கத்தோலிக்க மதத்தைப் பொறுத்தவரையில் அது மனந்திரும்புதலை ஒரு மனிதனில் அவனுக்கு முற்றிலும் புறத்திலிருக்கும் செயலாக்கிவிடுகிறது.
பழைய ஏற்பாட்டில் தவறைச் சரிசெய்தலும், அதற்கு ஈடு செய்தலும்
தவறைச் சரிசெய்வதையும், அதற்கு ஈடு செய்வதையும் பழைய ஏற்பாடு வலியுறுத்தி விளக்குகிறது. யாத்திராகமம் 22:2-3; யாத்திராகமம் 22:5-6; லேவியராகமம் 6:1-6; எண்ணாகமம் 5:6-7. இந்தப் போதனைகளும், விளக்கங்களும் கர்த்தர் மோசேயோடு சீனாய் மலையில் ஏற்படுத்திய உடன்படிக்கையின்போது அவனுக்குக் கொடுத்த நியாயப்பிரமாணத்தில் அடங்கியிருக்கின்றன. எகிப்தில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட மக்களைக் கர்த்தர் இஸ்ரவேல் என்ற நாடாக ஒன்றுகூட்டித் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் அவர்களை ஆளுவதற்காக இந்த நியாயப்பிரமாணத்தை அவர்களுக்குக் கொடுத்தார். இந்தக் கட்டளைகளில் பத்துக்கட்டளைகளைத் தவிர (Moral law), ஏனைய கட்டளைகளை நீதிச் சட்டங்கள் (Judicial law), சடங்குச் சட்டங்கள் (Ceremonial law) என்று பிரிக்கலாம். இவற்றில் பத்துக்கட்டளைகள் மட்டுமே எக்காலத்துக்கும் உரிய கட்டளைகள். அவை ஒழுக்கவிதிக் கட்டளைகளாக இருப்பதால் அவை புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் தொடர்கின்றன. இந்த ஒழுக்கவிதிக் கட்டளைகளை ஆதாமும், ஏவாளும் ஏதேனில் அறிந்திருந்து அவற்றின்படி வாழ்ந்தனர். மனிதன் பாவத்தில் வீழ்ந்தபிறகும் அந்தக் கட்டளைகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவனாயிருந்தான்.
நீதிச் சட்டங்களும், சடங்குச் சட்டங்களும் ஒழுக்கவிதிக் கட்டளைகளைப் போல புதிய ஏற்பாட்டில் தொடரவேண்டியவை அல்ல. அவை கிறிஸ்துவில் நிறைவேறிப் புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களுக்கு அவசியமற்றவையாகிவிட்டன. இதைத்தான் பவுலும் (ரோமர், கலாத்தியர், கொலோசெயர்), எபிரேயருக்கு எழுதியவரும் விளக்குகின்றனர். அவை, இஸ்ரவேலைக் கர்த்தருடைய நாடாக, அவருடைய மக்களாகப் பிரித்துக் காட்டுவதற்காக அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவை. அந்தச் சட்டங்கள் கர்த்தரின் நீதியையும், பரிசுத்தத்தையும் வெளிப்படுத்துவனவாக இருந்தன. அவற்றை இஸ்ரவேலர் முழுமையாகவும், தவறில்லாமலும் பின்பற்றவேண்டிய கட்டாயம் இருந்தது. அவற்றைப் பின்பற்றாதவர்கள் கர்த்தரின் சாபத்திற்கும், தண்டனைக்குமுள்ளானார்கள். அந்தச் சட்டங்கள் கிறிஸ்துவுக்குள் இனி வரப்போகும் மீட்பின் ஆசீர்வாதங்களுக்கு அடையாளமாக இருந்தனவேயன்றி பழைய ஏற்பாட்டுக் காலத்திற்குப் பிறகு தொடர்வதற்காகக் கொடுக்கப்படவில்லை. இஸ்ரவேல் கர்த்தருடைய நாடாகத் தொடர முடியாமல் அவரால் அழிக்கப்பட்ட பின்னர் அந்தச் சட்டங்களுக்குப் பயனில்லாமல் போய்விட்டது. அதனால் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேலுக்கு கொடுக்கப்பட்டிருந்த சட்டங்களைக் கிறிஸ்தவர்கள் தொடரவேண்டுமென்று எதிர்பார்ப்பது கிரியைவாதத்தைத் தவிர வேறில்லை.
பழைய ஏற்பாட்டுச் சடங்குகளில் இருந்து கிடைத்திருக்கும் புதிய உடன்படிக்கையின் விடுதலையையே எபிரேயர் 8ம் அதிகாரம் விளக்குகிறது. அதனால் இன்றைக்கு பழைய ஏற்பாட்டுச் சடங்குகளையும், இஸ்ரவேலுக்கு மட்டுமே உரியதாக இருந்த நாட்டு நீதிச் சட்டங்களையும் புதிய ஏற்பாட்டு சபையோ, ஒரு நாடோ (Theonomy) பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. தவறைச் சரிசெய்வதையும், அதற்கு ஈடு செய்வதையும் வலியுறுத்தும் பழைய ஏற்பாட்டு சட்டவிதிகளை அதேமுறையில் இன்று நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயமோ அவசியமோ இல்லை. அத்தகைய கடுமையான விதிகளைக் கிறிஸ்து நமக்குத் தரவில்லை.
1 யோவான் 5:3
நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
மாறாக அந்த விதிகளிலெல்லாம் பொதுவாகக் காணப்படும் தத்துவம் மட்டுமே புதிய ஏற்பாட்டில் தொடருகின்றது. அது என்ன தத்துவம்? புதிய உடன்படிக்கைக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்குள் நீதியோடும், பரிசுத்தத்தோடும் நடந்துகொள்ள வேண்டுமென்பதுதான். அத்தகைய நீதியோடும், பரிசுத்தத்தோடும் வாழக்கூடிய வாழ்க்கையைத்தான் பரிசுத்த ஆவியின் மறுபிறப்பு கிறிஸ்தவர்களுக்குத் தந்திருக்கிறது. அதனால் இருதய மாற்றத்தைக் கிறிஸ்துவுக்குள் அடைந்திருக்கிற மனந்திரும்புதலைப் பெற்றவர்கள், சக கிறிஸ்தவர்கள் மத்தியில் அவர்களுடைய பாவங்களை மன்னித்தும், தங்களுடைய தவறுகளைத் திருத்திக்கொண்டும், தாங்கள் தவறிழைத்திருப்பவர்களிடம் மன்னிப்புக்கேட்டும், இயலுமானால், முடிந்தபோது இழைத்த தீங்கிற்கு ஈடு செய்தும் வாழவேண்டியவர்களாக இருக்கிறார்கள் (யாக்கோபு 5:16; எபேசியர் 4:32; கொலோசெயர் 3:13; லூக்கா 17:3-4).
செய்த தவறுக்காக ஈடுசெய்யக்கூடிய இருதயம் இருந்தும், அதைச் செய்ய முடியாத நிலையில் கிறிஸ்தவன் இருப்பானானால், அவன் தன் இரட்சிப்பை ஒருபோதும் இழந்துபோக மாட்டான். “மனந்திரும்புதலுக்கு பிறகு எப்பொழுது முடிகிறதோ அப்பொழுது தவறைச் சரிசெய்தல் ஒருவரில் நிகழ்கிறது” என்கிறார் ஆர். சீ. ஸ்பிரவுல் (Repentance in Action, Ligonier.org). ஸ்பிரவுல் குறிப்பிடும் “எப்போது முடிகிறதோ” என்பது இந்த விஷயத்தில் மிகமுக்கியமானது. ஏனெனில், தவறுக்கான ஈடு செய்வது மெய்யான மனந்திரும்புதலில் அடங்கியிருந்தபோதும், அதை ஒருபோதும் கிறிஸ்தவ வாழ்க்கையில் நிபந்தனையாக்கிவிடக்கூடாது. மேலும் ஸ்பிரவுல், “சகேயுவின் தவறைச் சரிசெய்ததும், அதற்கான ஈடு செய்தலாகிய கிரியையும் அவனுக்கு இரட்சிப்பை அளிக்கவில்லை. அவனுடைய விசுவாசமே அவனை ஆபிரகாமின் புத்திரனாக்கியது; அவனுடைய கிரியை அல்ல” என்கிறார். ஆகவே, ஒருவர் எந்தளவுக்கு தவறுக்கான ஈடு செய்திருக்கிறார் என்பதை வைத்து அவருடைய மனந்திரும்புதலினதும், இரட்சிப்பினதும் தரத்தை எடைபோடக்கூடாது. இதுவரை நாம் கவனித்து வந்திருக்கும் அத்தனை இறையியலறிஞர்களும் அவ்வாறு செய்வதைக் கிரியைவாதமாகவே விளக்கியிருக்கின்றனர். மெய்யான மனந்திரும்புதல் தானாகவே கனிகொடுக்க ஆரம்பிக்குமே தவிர, அதைத் தார்க்குச்சியைப் பயன்படுத்திக் குதிரையை ஓடவைப்பதுபோல் கனிகொடுக்க வைக்க முயற்சிக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அது கிரியைவாதமாகிவிடும்.
தவறைச் சரிசெய்வதும், அதற்கு ஈடு செய்வதும் அவசியமென்பதை மெய்யான மனந்திரும்புதல் சுட்டுகிறதுதான். இருந்தாலும் ஆர்தர் பிங்கின் எச்சரிக்கையையும் கவனிப்பது நல்லது. “நீங்கள் மனந்திரும்புதலுக்கு அடையாளமான கிரியைகளைச் செய்தும், மனந்திரும்பாமலிருக்கலாம். ஒரு பாவி தன் கேட்டை உணர்ந்து, தான் செய்த தவறைத் திருத்திக்கொள்ள அவசியமானவற்றைச் செய்தும் அழிந்துபோகலாம். இதற்கான தெளிவான உதாரணமாக யூதாஸ் இருக்கிறான்.
மத்தேயு 27:3-5
அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
தன் பாவங்களை அவன் ஆசாரியர்கள் முன் அறிக்கை செய்து, தான் வாங்கிய பணத்தையும் திரும்பக்கொடுத்துவிட்டு அந்தக் கேடான மனிதர்களைவிட்டு விலகிப்போனான். அவன் இரட்சிப்படைந்திருந்தானா? அவன் தூக்குப் போட்டுக்கொண்டான். அவனுடைய செயல் எப்படியெல்லாம் நம் இருதயத்தை ஆராயத் தூண்டுகிறது!” மெய்யான மனந்திரும்புதலைக் கொண்டிராமல் வெறுமனே தவறைத் திருத்திக்கொள்வதும், அதற்கு ஈடு செய்வதும் மட்டும் போதாது என்பதை பிங்கின் வார்த்தைகள் தெளிவாக விளக்குகின்றன.
தவறைச் சரிசெய்வதும், அதற்கு ஈடுசெய்வதையும் பற்றிய தற்கால கிரியைவாத (Legalism) விளக்கங்கள்
கத்தோலிக்க மதம் செய்த பாவத்துக்கு ஈடு செய்வதை இரட்சிப்பின் அதிமுக்கிய அம்சமாக விளக்குகிறது. “ஓர் ஆத்துமாவின் இரட்சிப்பு அதன் பாவமன்னிப்பில் தங்கியிருக்கின்றது; பாவத்திற்கான ஈடு செய்யாமல் ஒருபோதும் அது நிகழவழியில்லை” என்கிறார் யோகான் சுவிசேஷகர். (Restitution Theology, Johann Evangelist 1883, Wikipedia). இது கிரியைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட மத போதனை. கத்தோலிக்க மதம் பாவத்திற்கான ஈடு செய்வதை இரட்சிப்பிற்கான நிபந்தனையாகக் கருதுகிறது. இந்த மதபோதனையில் கிருபைக்கு எந்த இடமுமில்லை.
பெந்தகொஸ்தே சபைகளின் மத்தியில் சிலர் தவறுக்கு ஈடு செய்வதை (Reparation) இரட்சிப்புக்கான நிபந்தனையாகக் கருதுகிறார்கள் என்று இணையத்தில் ஓர் ஆக்கத்தில் வாசித்தேன். அத்தகைய கருத்தே மனந்திரும்புதலைக் கிரியைவாதமாக்குகிறது (Legalism). தெரிந்தோ, தெரியாமலோ அநேக சுவிசேஷக் கிறிஸ்தவப் பிரிவுகளின் மத்தியில் தவறுக்கு ஈடு செய்யும் கிரியை, கிரியைவாதமாக்கப்பட்டிருக்கிறது. இது கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும், இரட்சிப்பையும் முறையாக விளங்கிக்கொள்ளாததால் நிகழ்ந்துவருவதாக இருக்கலாம்.
மெத்தடிஸ்ட் பிரிவினர் தவறைச் சரிசெய்வதையும், அதற்கு ஈடு செய்வதையும் தவிர்க்கக்கூடாத கடமையாக விளக்கியிருக்கிறார்கள். இதை அவர்களுடைய வினாவிடைப் போதனையில் காணலாம். அதுவும் அத்தகைய “தவறைச் சரிசெய்தலாகிய கிரியை மனந்திரும்புதலுக்குப் பிறகு நிகழுவதாகவும், அதுவே இரட்சிக்கும் கிரியையை அடைவதற்கு ஒருவருக்குத் தகுந்த தயாரிப்பு நிலையாகவும் இருக்கிறதாக” மெத்தடிஸ்ட் பிரிவு விளக்குகிறது. (Evangelical Methodist Church Catechism, Wikipedia). மனந்திரும்புதலுக்குப் பிறகே இரட்சிப்பு கிடைப்பதாக விளக்குவது ஆர்மீனியனிசக் கோட்பாடு. கல்வினிசம், மறுபிறப்பின் விளைவுகளில் ஒன்றாக மனந்திரும்புதலைக் கணிக்கிறது. அதை இரட்சிப்புக்கு அவசியமான தவிர்க்கமுடியாத கிருபையாக விளக்குகிறது. மெத்தடிஸ்டு பிரிவு தவறான ஆர்மீனியனிசப் போதனையைப் பின்பற்றுகிறது. இதிலும் கிரியைவாதத்தைக் கவனிக்கலாம். ஒருவன் தன் தவறைச் சரிசெய்து, அதற்குத் தகுந்த ஈடு செய்து இரட்சிப்புக்குத் தன்னைத் தயாராக்குவது என்று கூறுவது கிரியையின் அடிப்படையிலான இரட்சிப்பாகிய கிரியைவாத போதனை.
சமீபத்தில் ஓர் இந்தியக் கிறிஸ்தவ அமைப்பின் இணைய தளத்தில் அவர்களுடைய விசுவாச அறிக்கையைக் கவனித்தேன். நாம் இப்போது ஆராய்ந்து கொண்டிருக்கும் பொருளைப் பற்றி அதில் குறிப்பிடப்பட்டிருந்ததே அதை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம். அந்த அறிக்கை மிகக் குறைவான, சுருக்கமான எட்டு விளக்கங்களை மட்டுமே கொண்டதாகத், தெளிவற்றதாக இருந்தது. விசுவாச அறிக்கைகள் ஒருபோதும் தெளிவற்றவையாக இருக்கக்கூடாது. அவை துல்லியமாக அமைந்திருக்கவேண்டும். அந்த அறிக்கையில் நான் கவனித்த மிக முக்கியமான ஒரு விளக்கம் அதில் நான்காவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
“The Holy Spirit is the divine agent in convicting man of sin and of cleansing and sanctification. Repentance and restitution for wrongs which need to be righted will follow. This does not detract from the cardinal truth that salvation is by faith and faith alone.”
இதைத் தமிழாக்கினால் பின்வருமாறு அமையும்.
“பரிசுத்த ஆவியானவரே மனிதனுடைய பாவத்தை உணர்த்தும், சுத்தமாக்கும், பரிசுத்தப்படுத்தும் தெய்வீகப் பிரதிநிதி. மனந்திரும்புதலும், சீர்படுத்தவேண்டிய தவறுகளுக்கான சரிசெய்தலும் இதைத் தொடரும். இது மிகமுக்கியமான உண்மையான, இரட்சிப்பு விசுவாசத்தினால் உண்டாகும், விசுவாசத்தினால் மட்டுமே என்பதைக் குறைவுபடுத்துவதில்லை.”
மேல்குறிப்பிட்ட வசனங்களில் ஓரளவுக்கு உண்மைகள் காணப்பட்டபோதும், இறையியலடிப்படையில் இது கோவையாகத், துல்லியமாகத் தெளிவாக எழுதப்படவில்லை. இதில் எத்தனையோ குழப்பமான அம்சங்கள் இருந்தபோதும், என் கண்களைத் தொட்டது, “மனந்திரும்புதலும், சீர்செய்யவேண்டிய தவறுகளுக்கான சரிசெய்தலும்” என்ற வார்த்தைப் பிரயோகங்களே. நான் குறிப்பிட்ட அந்த எட்டு விசுவாச அறிக்கைக் குறிப்புகளிலும், தவிர்க்கப்படக்கூடாத அடிப்படை இறையியல் சத்தியங்களான வீழ்ச்சியைப் பற்றியோ, பாவத்தைப் பற்றியோ, மறுபிறப்பைப் பற்றியோ, நீதிமானாக்குதலைப் பற்றியோ துளிகூட விளக்கமளிக்கப்படவில்லை. கிருபையினால் மட்டுமே அடையக்கூடிய கிறிஸ்தவ இரட்சிப்பைக் குறித்த எந்தத் தெளிவான விளக்கத்தையும் கொண்டிராத இந்த அறிக்கை, மனந்திரும்புதலோடு இணைத்து சீர்படுத்தவேண்டிய தவறுகளுக்கான சரிசெய்தலுக்கு அடிப்படை சத்தியத்துக்கான இடத்தைக் கொடுத்திருக்கிறது. மெய்யான மனந்திரும்புதலை அடைந்த ஒரு கிறிஸ்தவனில் அதைத் தெளிவாக உணர்த்தும், அவனால் இயலுமானபோது மட்டுமே அவன் செய்யக்கூடிய, வெளிப்புறக் கிரியையான தவறுகளைச் சரிசெய்து, அவற்றிற்கு ஈடளிப்பதை இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்கியிருப்பது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. அது என்ன தெரியுமா? இந்த விளக்கத்திற்கும் பின்னால், இதைப் பின்பற்றுகிறவர்கள் மத்தியில் கோவிட் வைரஸ் போன்ற கிரியைவாதம் பரவிக் காணப்படுகிறதா? என்பதே அந்த சந்தேகம்.
அமெரிக்காவில் இந்த 21ம் நூற்றாண்டில் இன்று “சமூக நீதி” (Social Justice) என்ற புதிய பிரச்சனை கிறிஸ்தவ சபைகளைப் பாதித்துக்கொண்டிருக்கிறது. இதற்கும் நான் விவாதித்துக் கொண்டிருக்கும் விஷயத்திற்கும் பெருந்தொடர்பிருக்கிறது. அங்கே இருக்கும் கருப்பு இன மக்களை வரலாற்றில் அடிமைகளாக வெள்ளை அமெரிக்கர்கள் பயன்படுத்தி அவர்களைச் சுரண்டியிருக்கிறார்கள் என்ற எண்ணப்போக்கின் அடிப்படையில், தற்காலத்தில் வாழுகின்ற அத்தனை வெள்ளையர்களும், தங்களுடைய மூதாதையர் செய்திருக்கும் தவறுக்காக மனம்வருந்தி, மன்னிப்புக்கேட்டு, தவறைச் சரிசெய்வதோடு, அதற்கு ஈடுசெய்யும் விதத்தில் அவர்கள் கருப்பினத்தவர்களிடம் இருந்து சுரண்டிய அத்தனை பணத்தையும் திருப்பிச் செலுத்தவேண்டும் என்பதே இந்தப் புதிய “சமூக நீதி” யின் வற்புறுத்தலாக இருக்கிறது. இது அநேக சுவிசேஷ மற்றும் சீர்திருத்த சபைகளையும், சீர்திருத்தப் போதகர்களையும் பாதித்து இவ்வுலக நீதியை சபைக்குள் திணிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
அமெரிக்காவில் உருவான இந்த “சமூக நீதி” இயக்கத்தின் கருத்தில் அடியோடு உண்மையில்லை என்று வாதாட முடியாது. அடிமை வியாபாரமும், அடிமை முறையும் அதன் இழிவான முகத்தையும் அமெரிக்க சமுதாயத்தில் காட்டாமல் இருக்கவில்லை. இருந்தபோதும் கிறிஸ்தவர்கள் தங்களுடைய மூதாதையர்களின் செயல்களுக்காகப் பொதுமன்னிப்புக் கேட்கவேண்டும் என்பதும், அதற்கு ஈடாக என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவற்றைச் செய்யவேண்டும் என்பதும் நம் கையிலிருக்கும் வேதத்தில் காணப்படாத கிரியைவாத வற்புறுத்தல். அதற்கு வேதம் அடியோடு இடங்கொடுக்கவில்லை. கிறிஸ்தவ சமுதாயத்தில் வெள்ளையர், கருப்பர் போன்ற இனவேறுபாட்டுக்கோ, சாதி வேறுபாட்டுக்கோ அடியோடு இடமில்லை. சமூக நீதி இயக்கம் பேசும் “பாவ ஈடு செய்தலுக்கும்” வேதம் போதிக்கும் மனந்திரும்புதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இக்காலத்தில் வாழுகிறவர்கள் தங்கள் “மூதாதையரின் பாவங்களுக்காக” மன்னிப்புக் கேட்க வேண்டுமென்பது மிகவும் முட்டாள்தனமான வாதம். கிறிஸ்துவின் அகராதியில் காணப்படாத கருத்து இது. இதெல்லாம் கிரியைவாதம் எத்தனை ரூபங்களில் கிறிஸ்தவத்தில் நுழைந்துவிடும் ஆபத்து இருக்கிறது என்பதைக் கிறிஸ்தவர்களும், போதகர்களும் உணர்வது அவசியம். இயேசு இரத்தம் சிந்தி, விலைகொடுத்து நிறைவேற்றி இலவசமாக நமக்களித்திருக்கும் கிருபையின் விளைவான இரட்சிப்பைக் கிரியைவாதமாக்குகிறபோதே கிறிஸ்துவின் போதனைகளைவிட்டு நாம் விலக ஆரம்பித்திருக்கிறோம் என்பதை நிதர்சனமாக விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த ஆபத்தைத் தவிர்த்துக்கொள்ள நாம் நிதானத்தோடு வேதசத்தியங்களை மட்டும் ஆராய்ந்து, பின்பற்றி வாழ்வது அவசியம்.
சலிப்பூட்டும் சம்பாஷனையும், பிதற்றல் பிரசங்கங்களும் – கருத்துரை – ஷேபா மிக்கேள் ஜோர்ஜ்
தர்க்கத்தைப் பற்றியும், தர்க்கரீதியான சம்பாஷனையைப் பற்றியும், தர்க்கரீதியில் பிரசங்கம் செய்வதைப்பற்றியும் இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நம்மவர்களின் சம்பாஷனைகளிலும்,
பிரசங்கத்திலும் இன்று இவற்றைக் காணமுடியவில்லை. அதாவது, சிந்தனைபூர்வமான, அறிவார்ந்த சம்பாஷனைகளில் நம்மவர்கள் ஈடுபடுவதில்லை; அத்தகையோர் மிகக்குறைவு. உண்மையில் அப்படிப்பட்ட ஒரு சிலரையே நான் சந்தித்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். சலிப்பூட்டும் சம்பாஷனைகளுக்கும், பிதற்றல் பிரசங்கங்களுக்கும் மத்தியில் நம்மவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலைத்தேய நண்பர்களில் இத்தகைய தர்க்கரீதியிலான சம்பாஷனைச் சுவை இருப்பதை நான் அதிகம் கவனித்திருக்கிறேன். அவர்களுடைய கல்வியும், வளர்ப்புமுறையும், சூழலும் அவர்கள் அப்படி வளர உதவியிருக்கிறது. பொதுவாகவே அவர்கள் பொருளற்ற சம்பாஷனைகளில் ஈடுபடுவதில்லை; அதைத் தவிர்த்துக்கொள்வார்கள். அவர்கள் நம்மவர்களைப்போல அளவுக்குமீறிய சம்பாஷனைகளில் ஈடுபட்டு நேரத்தை வீணடிப்பதுமில்லை. நேரம் அவர்களுக்குப் பொன்னானது. அதை மீதப்படுத்திப் பயன்படுத்த அவர்கள் தங்களைப் பழக்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
எந்தவொரு விஷயத்தை என் நண்பர்களோடு பேசினாலும், அவர்களுடைய அணுகுமுறை தர்க்கரீதியானதாக இருக்கும். அரைத்த மாவை அவர்கள் தொடர்ந்து அரைப்பதில்லை. ஒரேவிஷயத்தைப் பல கோணங்களில் விவாதிப்பதோடு, அதற்கு முடிவைக் காண ஒன்றில் இருந்து இன்னொன்றுக்குக் கடந்துபோகும் வகையிலும் அவர்களுடைய சம்பாஷனை சிந்தனைபூர்வமாகவும், அறிவார்ந்ததாகவும் அமைந்திருக்கும். அது முடிவடைகிறபோது பொருளுள்ள சம்பாஷனையில் ஈடுபட்டிருந்திருக்கிறோம் என்ற மனச்சமாதானத்தை அடைந்திருக்கிறோம்.
நம்மவர்களுக்கு அத்தகைய வளர்ப்போ, பயிற்சியோ இருந்ததில்லை. இது பெற்றோர்களிடம் இருந்து வராதது முதல்குறை. இரண்டாவது, நம்முடைய கல்விமுறை பரீட்சைக்குத் தயார் செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்து வருகிறது; அறிவை வளர்த்துக்கொள்ள அது உதவுவதில்லை. அதனால் நம்மவர்களின் மனம் சிறுவயதில் இருந்தே சிந்திப்பதற்கான எந்தப் பயிற்சியும் இல்லாமல் வளர்ந்து அறிவுப் பசி என்பதையே அறியாததாக இருந்து வருகிறது. இதுதான் பரவலாக நம்மத்தியிலிருக்கும் ‘வைரஸான’ வாசிப்பின்மைக்கும் காரணம்.
உண்மையில் இப்படியிருக்கும்படிக் கர்த்தர் மனிதனைப் படைக்கவில்லை. பாவத்தில் வீழ்ந்த மானுடம் ஆவிக்குரியநிலையில் இல்லாதபடி கறைபடிந்திருந்தாலும், அது சிந்திக்கவும், அறிவைவிருத்தி செய்துகொள்ளும் ஆற்றலையும் இழந்துபோகவில்லை. சிந்தித்து செயல்படும் சமுதாய மக்களே இதற்கு உதாரணம். கிறிஸ்துவில் மீட்பை அடைந்த மனிதன் சிந்திக்கும் ஆற்றலில்லாமலும், அறிவுப்பசியில்லாமலும் இருந்தால் அதற்கு சோம்பேறித்தனமே முழுக்காரணம். இதை அநேகர் சிந்தித்துப் பார்ப்பதில்லை. சிந்திக்க விஷயம் இல்லாமலும், சிந்திக்கும் உழைப்பில்லாமலும் இருந்து வந்திருக்கின்ற மனம் ஒரு சிறு நூலையும் வாசிப்பதற்குத் தடுமாறுவதற்கு இதுவே காரணம். வேறு விஷயங்களில் அவர்களிடம் சுறுசுறுப்பு காணப்படலாம். மூளைக்குத் தீனிபோட்டு அதைச் சிந்திக்க வைக்கும் விஷயத்தில் அவர்கள் பெரும் சோம்பேறிகளாக இருந்துவரலாம். அப்படி இருப்பது படைத்தவரை இழிவுபடுத்தும் செயல்; அதை அவர் விரும்புவதில்லை.
என் மேலைத்தேய நண்பரொருவரோடு நான் வாரம் இருதடவையாவது சம்பாஷனை செய்வதுண்டு. நண்பன் போதகனாக இல்லாவிட்டாலும் விஷயஞானமுள்ளவர். தனக்கென நூலகத்தையும் கொண்டிருக்கும், வாசிப்புப்பழக்கமுள்ளவர். ஒவ்வொரு முறையும் எங்கள் சம்பாஷனை இருவருக்குமே பெருமளவில் உதவியிருக்கிறது. சிந்தனைக்குத் தீனிபோட்டிருக்கிறது. ஒரு விஷயத்தை மேலும் ஆழமாக ஆராயவும்; அணுகவும் உதவியிருக்கிறது. புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி அவற்றை ஆராய உதவியிருக்கிறது.
நம்மவர்களிடம் அது முடியாது. அவர்களுடைய ஆவிக்குரிய விஷயஞானக் கிணற்றில் தண்ணீரிருக்காது; கோடைக்காலக் காவிரி போல் வற்றி அடித்தரை தெரியும். அதனால் ஒருவர் சொல்லுவதை அவர்களால் திருப்பித் திருப்பிச் சொல்ல முடியுமே தவிர, சம்பாஷனையை வளர்க்கவும் அதில் அடுத்தகட்டத்தை அடையவும் அவர்களால் துணைசெய்ய முடியாது. வாசிப்பின்மையாலும், சிந்தனைப் பயிற்சியின்மையாலும் சம்பாஷனையில் பொருளிருக்காது. நாமே, இதில் பிரயோஜனமில்லை என்று ஆசுவாசத்தோடு இன்னொரு சம்பாஷனைக்குத் தாவிவிடுவோம்; இல்லாவிட்டால் சம்பாஷனையை முடித்துக்கொள்ளுவோம். நான் விளக்குவது உங்களுக்குப் புரிகிறதா? இதை நான் குற்றமாக உங்கள் முன்வைக்கவில்லை. எது நிதர்சனமோ அதைத்தான் விளக்கிக்கொண்டிருக்கிறேன்.
சம்பாஷனை ஒரு கலை (conversation is an art). அது சிந்தித்து செய்யவேண்டிய உரையாடல். அதைக் கருத்தோடு செய்யும்விதமாக வளர்க்கவேண்டும். ஆவிக்குரியவிதத்தில் நாம் ஒருவருக்கொருவர் துணைபோக அது பெரிதளவுக்கு உதவும். அந்தக் கலையில் தேர்ச்சிபெறாவிட்டால் சம்பாஷனை பொருளற்றதாகிவிடும். ஆவிக்குரியவிதத்தில் ஒருவருக்கொருவர் துணைபோக வேண்டும் என்பதற்காகத்தான் ‘ஒருவருக்கொருவர்’ (one anothering passages) வசனங்கள் புதிய ஏற்பாட்டில் தரப்பட்டிருக்கின்றன. அதில் ஆவிக்குரிய சம்பாஷனையை வலியுறுத்தும் பல வசனங்கள் இருக்கின்றன (எபேசியர் 4:15, 25; 5:19; கொலோசெயர் 3:13, 16-17; 1 தெசலோனிக்கேயர் 5:11; எபிரெயர் 3:13, 10:24; யாக்கோபு 5:16). இந்த வசனங்களில் சொல்லப்பட்டிருக்கும், நாம் ‘ஒருவருக்கொருவர்’ செய்யவேண்டியவைகளைப் பொருளுள்ள, ஆவிக்குரிய சம்பாஷனையில்லாமல் ஒரு நாளும் செய்யமுடியாது. இந்த வசனங்களை ஆராய்ந்து பார்ப்பீர்களானால் எந்தளவுக்கு கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் ஆவிக்குரிய சம்பாஷனை மூலம் சபையில் செய்யவேண்டியவற்றைச் செய்யாமலிருந்து வருகிறோம் என்பதை உணர்ந்து மலைத்துப் போய்விடுவீர்கள்.
ஒருவரைச் சந்திக்கும்போது சடங்குபோல் வெறும் ‘ஸ்தோத்திரம்’ சொல்லுவதும், சுகமாயிருக்கிறீர்களா, சாப்பாடு ஆயிற்றா, வீட்டில் எல்லோரும் நலமா, வேலை எப்படிப்போகிறது, பிள்ளைகளுக்கு என்ன வயது? மகளுக்குத் திருமணம் எப்போது? என்று கேட்டும், பேசியும் நம்மவர்களுக்குப் பழகிப் புளித்துப்போய்விட்டது. உணவையும், சுகத்தையும், குடும்பத்தையும், வீட்டுப்பொருளாதாரத்தையும், திருமணத்தையும் சுற்றிச் சுற்றியே சம்பாஷனைகள் நாள்தோறும் தொடரும். இந்த விஷயத்தில் எத்தனைக் கேவலமான நிலையில் இருக்கிறோம் என்றுகூட நம்மவர்கள் உணர்வதில்லை.
பொருளுள்ள ஆவிக்குரிய சம்பாஷனைக்கு வேதம் அநேக உதாரணங்களைத் தருகிறது. எம்மாவுக்குப் போகும் வழியில் சீடர்களோடு இணைந்துகொண்ட இயேசு அவர்களோடு செய்த சம்பாஷனையை வாசித்துப் பாருங்கள். (லூக்கா 24:13-35). சூழ்நிலையைப் புரிந்துகொண்டு இயேசு நேரத்தை வீணாக்காமல் சீடர்களோடு விஷயத்துக்கு வந்தார். அவருடைய கேள்வி அதை உணர்த்துகிறது. சீடர்களின் உடனடிப் பதில் அன்று எத்தனை பெரிய நீண்ட ஆவிக்குரிய சம்பாஷனையை இயேசு மூலம் நமக்குத் தந்திருக்கிறது தெரியுமா? அந்த இரவு என்றும் இல்லாதவகையில் நீண்ட இரவாகவும் இருந்திருப்பதை அவர்கள் உணர்ந்திருந்திருப்பார்கள். நல்ல சம்பாஷனைக்கு அதில் ஈடுபட்டிருக்கும் இருதரப்பாரும் துணைபோகவேண்டும். அருமையான அந்த சம்பாஷனைக்கு எந்தச் சீடனும் இடையூறாக இருக்கவில்லை. வயிறு பசிக்கிறதே, என்று ஒருவன் சொல்லியிருந்தாலும் அந்தச் சம்பாஷனை வீணைத் தந்திபோல் அறுந்திருக்கும். இதுதான் சலிப்பற்ற சம்பாஷனைக்கு உதாரணம். அத்தகைய பொருளுள்ள சம்பாஷனை கால நேரத்தைப் பொருட்படுத்தாது; இதயத்துக்கு இதமளிக்கும், சத்தியத்தில் வளர்க்கும், ஆவியில் நம்மை உயர்த்தும். அதுவே சீடர்களின் அன்றைய அனுபவம்.
தர்க்கவாதப் பிரசங்கம் (Logical preaching)
இதென்ன என்று கேட்கிறீர்களா? தர்க்கம் (Logic) என்பது ஒருபொருளைப் பற்றி விவாதிப்பது என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது, தர்க்கரீதியில் அலசிப் படிமுறையாக ஒரு விஷயத்தை விவாதிப்பதையே இதன் மூலம் வலியுறுத்துகிறேன். சம்பாஷனையைப் போலவே பிரசங்கமும் பொருளுள்ளதாக, தர்க்கரீதியில் வேத வசனங்களை விளக்கித் தகுந்த ஆதாரங்களோடு நிரூபித்துப் பயன்பாடுகளை முன்னிறுத்துவதாக இருக்கவேண்டும். நம்மினத்தின் இன்றைய பெரும்பான்மையான பிரசங்கங்கள் பிதற்றல்களாக இருக்கின்றன என்று கூறுவது மிகையாகாது. யூடியூபில் வந்துகொண்டிருக்கும் தமிழ்ப்பிரசங்கங்களே இதற்கு நல்ல உதாரணம். பிரசங்கம் கேட்பவர்களின் ஆவிக்குரிய தரம் குறைவானதாகவும், அடிப்படை வேத ஞானம் அடியோடு இல்லாததாலுமே பிரசங்கிகள் பிதற்றல் பிரசங்கங்களை அளித்து வருவது அதிகமாக இருக்கின்றது. வேதப்பிரசங்கப் பணிக்கே பேரிழுக்கைத் தேடித்தந்துகொண்டிருக்கின்றன பிரசங்கம் என்ற பெயரில் இருந்துவரும் இப்பிதற்றல்கள்.
வேதப் பிரசங்கம் எப்படி இருக்கவேண்டும்? அது வேத வசனங்களை உள்ளது உள்ளபடி வரலாற்று, இலக்கணபூர்வமாக விளக்கும் வியாக்கியானமாகவும், முறையாகத் தயாரிக்கப்பட்ட வேதசத்தியங்களைத் தர்க்கரீதியில் படிமுறையாகத் தெளிவாக முன்னிறுத்துபவையாகவும் இருக்கவேண்டும். இருதயத்தைத் தாக்கும் பயன்பாடுகள் அதிலிருந்து புறப்பட்டு எய்யப்படும் எரிநெய் ஈட்டிகளாக இருக்கவேண்டும். இதற்கு ஒரு நல்ல வழக்கறிஞரை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். தன் கட்சிக்காரர் பக்கம் தவறில்லை என்பதை உண்மையோடு, நம்பத்தகுந்த ஆணித்தரமான ஆதாரங்களோடு, அவற்றைத் தர்க்கரீதியில் ஒன்றன் பின் ஒன்று வருவனவாக அசைக்கமுடியாதபடி நியாயாதிபதி முன் வழக்கறிஞர் முன்வைக்கவேண்டும். அவருடைய வாதங்கள் அறிவுபூர்வமானவையாகவும், ஆக்கபூர்வமானவையாகவும், தர்க்கரீதியில் அமைந்திருக்கவேண்டும். எந்தவிதக் குழப்பமும், சந்தேகமும் இல்லாமல் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இலகுவாக நிராகரித்துவிடக்கூடியதாக இல்லாமலும் இருக்கவேண்டும்.
இத்தகைய ஆதாரங்களைத் தர்க்கரீதியில் நியாயாதிபதி முன்வைக்க வழக்கறிஞர் அதிகம் உழைத்திருப்பார். ஆதாரங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை உறுதியாக நிருபிக்கும் விதத்தில் நியாயாதிபதி முன் வைப்பதற்கான தர்க்கங்களை இரவு, பகலாக உழைத்துத் தயாரித்திருப்பார். தன் மூளையையும், அறிவையும் அதிகளவு அதற்காகச் செலவழித்திருப்பதோடு, தர்க்கரீதியிலான பேச்சுத்திறனையும் ஆற்றலோடு அவர் பயன்படுத்தவேண்டியிருக்கும். இதெல்லாம் இல்லாமல் வழக்கறிஞர் வழக்கில் வெற்றியைக் காணமுடியாது.
நியாயஸ்தலத்தில் ஒரு வழக்கறிஞருக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் இத்தகுதிகள் ஒரு பிரசங்கிக்கும் அவசியமாகத் தேவைப்படுகின்றன. ஆவிக்குரியது பிரசங்கம் என்பதால் இதெல்லாம் அதற்குத் தேவையில்லை என்று எண்ணுவது அறிவற்ற செயல். அதனால்தான், 16ம், 17ம் நூற்றாண்டுகளில் பிரசங்க ஊழியத்துக்கு அழைக்கப்பட்டவர்கள் சட்டத்தையும் (Law), தர்க்கத்தையும் (Logic) பாடமாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அது பொதுவாகவே பிரசங்கிகளிடம் எதிர்பார்க்கப்பட்டது. அநேக பியூரிட்டன்கள் இவற்றைக் கற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். சபை ஆராதனையில் பயன்படுத்த கிறிஸ்தவப் பாடல்களை எழுதிப் புகழடைந்த ஐசெக் வொட்ஸ் (Isaac Watts) தர்க்கத்தைப்பற்றி Logic or the Right use of Reason என்ற ஆங்கில நூலை எழுதியிருக்கிறார். இதை எழுதியதற்கான காரணத்தை விளக்கும் வொட்ஸ், ‘நம்முடைய சிந்திக்கும் ஆற்றலை அடிமைத்தனத்திலிருந்தும், இருட்டிலிருந்தும் விடுதலை செய்ய தர்க்கமாகிய விஞ்ஞானம் உதவுகிறது. தெய்வீக வெளிப்படுத்தலுக்குப் பேருதவி செய்கிறது’ என்று எழுதியிருக்கிறார். ‘சத்தியத்தை நிலை நிறுத்தவும், பாதுகாக்கவும் தர்க்கம் மிகவும் அவசியமானது’ என்கிறார் ஐசெக் வொட்ஸ். அவர் தொடர்ந்து, ‘சத்தியத்தை ஆராயவும், அதை மற்றவர்களுக்கு விளக்கவும் நம்முடைய சிந்தனையை ஆற்றலோடு பயன்படுத்துவதே தர்க்கம்‘ என்கிறார். இந்த இடத்தில் ‘சிந்தனை’ என்ற வார்த்தையின் மூலம் வொட்ஸ் சிந்திப்பதை மட்டும் கருதாமல், அதோடுகூடிய மனிதனின் அறிவோடு தொடர்புடைய அத்தனை அம்சங்களையும் கருத்தில் கொண்டிருக்கிறார். நம்முடைய சிந்தனையை, நம்மில் அதோடு இணைந்து காணப்படும் அத்தனை அறிவுசார்ந்த அம்சங்களையும் சரியானவிதத்தில் பயன்படுத்துவதற்குத் துணைபோவதே ‘தர்க்கம்’ என்கிறார் ஐசெக் வொட்ஸ்.
மனிதர்களுக்கெல்லாம் படைத்தவர் அபாரமாகத் தந்திருக்கும் ஆற்றல் சிந்தனை. அதுவே மனிதரை மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. எல்லோருமே ஆற்றலுள்ளவர்களாகச் சிந்தனையைச் சமமானவிதத்தில் பயன்படுத்துவதில்லை. இருந்தபோதும் அதை விருத்திசெய்து பயன்படுத்துகிறவர்கள் தனித்து நிற்கிறார்கள். அத்தகையவர்களே வெறும் ‘சராசரிகளாக’ இல்லாமல் சமுதாயத்தில் உயர்ந்து நிற்கிறார்கள். கிறிஸ்தவன் அதை மேலானவிதத்தில் பயன்படுத்துவதற்கு ஆவியானவர் துணை செய்கிறபோதும், வெறும் சோம்பேறிக் கிறிஸ்தவனுக்குப் பக்கத்தில் அவர் ஒருபோதும் நிற்பதில்லை. மெய்க்கிறிஸ்தவன் ஆவிக்குரிய கடின உழைப்பினால் தன் சிந்தனையைப் புடம்போட்டு வைத்திருப்பான். அத்தகையவர்களே பவுலும், பேதுருவும், தீமோத்தேயுவும், ஜோன் பனியனும், ஜோன் ஓவனும்.
இன்றும் மேலைத்தேய நாடுகளில் சீர்திருத்த பிரசங்கப் போதக ஊழியத்துக்கு அவசியமான தகுதிகளைக் கொண்டிராதவர்களைச் சபைகள் போதக ஊழியத்துக்கு அனுமதிப்பதில்லை. சட்டக் கல்வியை வலியுறுத்தாவிட்டாலும், ஏனைய அவசியமான போதனைகளை அடைந்திருந்து, விவாதத் திறமையுள்ளவர்களாக பிரசங்கம் செய்யக்கூடியவர்களையே பிரசங்கம் செய்ய அனுமதிக்கிறார்கள். “ஊழிய அழைப்பு” என்பது நம்மினத்தில் அநியாயத்திற்கு வெறும் அமாநுஷ்ய அனுபவமாகவே கருதப்பட்டு வருகிறது. அதற்கும் ஆவிக்குரிய ஊழிய அழைப்புக்கும் தொடர்பில்லை என்பதை அறியாதவர்களாக அவர்கள் இருந்து வருகிறார்கள். ஆவிக்குரிய ஆற்றலையும், வேத அறிவையும், மெய்யான ஊழியத்தகுதிகளையும் கொண்டிராதவர்கள் பிரசங்க மேடைகளை அலங்கரித்து வருகிறார்கள். இந்தக் குப்பை மேட்டில் தர்க்கரீதியிலான, அறிவுபூர்வமான ஆவிக்குரிய பிரசங்கத்திற்கு எங்கே வழியிருக்கிறது?
பிரசங்கத்தைப் பற்றி விளக்கியிருக்கும் டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் (Martyn Lloyd-Jones) அதை, “நெருப்பாய் எரியும் தர்க்கம்” (Logic on fire) என்று விளக்கியிருக்கிறார் (Preaching and Preachers, pg 52-90). அதைப்பற்றி லொயிட் ஜோன் பின்வருமாறு விளக்கியிருக்கிறார்,
“தர்க்கரீதியில் சிந்திப்பது அருமையான செயல். அதற்கெதிராக நான் எதுவுமே சொல்லமாட்டேன். உண்மையில், தர்க்கரீதியில் உங்களுக்கு விளக்கமளிக்கவே நான் இப்போது பெருமுயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அதை நான் எப்போதுமே செய்யமுயற்சி செய்கிறேன். நான் பிரசங்கம் செய்கிறபோது, நான் என்னைப் பற்றியோ மற்றவர்களைப்பற்றியோ கதைகளைச் சொல்லுவதில்லை – பாடல்களைப் பாடி அவர்களை உற்சாகப்படுத்தும் செயல்களை நான் செய்வதில்லை – நான் தர்க்கரீதியில் அவர்களைச் சிந்திக்கச் செய்கிறேன். தர்க்கரீதியில் சிந்திப்பதற்கு எதிராக நான் எதையும் சொல்லாமலிருக்க கர்த்தர் எனக்கு உதவட்டும். கர்த்தர் மனிதனுக்கு அளித்திருக்கும் ஈவே அது என்பதை நான் நம்புகிறேன். அதுவே மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்துகிறது.”
அது ஜோன் கல்வினிடம் (John Calvin) அதிகம் இருந்தது. சட்டக்கல்வி கற்றிருந்த கல்வின், வேதபோதனைகளை முறையாக, படிப்படியாக, ஒன்றை அடுத்து இன்னொன்று தர்க்கரீதியில் வரும்படியாகப் பிரசங்கித்துப் போதிப்பதில் கைதேர்ந்தவராக இருந்திருக்கிறார். அமெரிக்க சிந்தனையாளர்களில் முக்கியமானவராக இருந்த ஜொனத்தன் எட்வர்ட்ஸும் (Jonathan Edwards) அத்தகைய சிந்தனையாளராகவும், தர்க்கரீதியிலான பிரசங்கமளிப்பவராகவும் இருந்திருக்கிறார். வேதபோதனைகளை முறையாக அறியாமல் தர்க்கத்தில் மட்டும் தேர்ச்சியடைந்திருப்பதில் பயனில்லை; அதேநேரம் தெரிந்துவைத்திருக்கும் வேதபோதனைகளைத் தர்க்கரீதியில் விளக்கத் தெரியாமல் இருப்பதிலும் எந்தப் பிரயோஜனமுமில்லை. அத்தோடு, வெறும் தர்க்கமாக மட்டும் இல்லாமல் சுவிசேஷ சத்தியம் ஆவியினால் நெருப்புப்போல் ஆத்துமாவின் இருதயத்தைத் தாக்கி அதில் பதியும்படி இருக்கவேண்டும். அதுவே “நெருப்பாய் எரியும் பிரசங்கம்.”
தர்க்கரீதியான பிரசங்கத்திற்கும், எழுத்திற்கும் அப்போஸ்தலன் பவுல் நல்ல உதாரணம்; அதற்குப் பேதுருவையும், யோவானையுங்கூட உதாரணங்களாகக் காட்டலாம். இவர்களுக்கெல்லாம் மேலாக இயேசு இருந்திருக்கிறார். ரோமர், கலாத்தியர், கொலோசெயர், 1 கொரிந்தியர் 15 போன்ற பவுலின் நிருபங்களை வாசித்துப் பாருங்கள். யூதர்களுக்கு சுவிசேஷத்தையும், நீதிமானாக்குதலையும் விளக்கப் பவுல் ரோமரில் தன் வாதங்களைத் தர்க்கரீதியில் முன்வைத்திருக்கிறார். அதைக் கலாத்தியரிலும், கொலோசெயரிலும் காணலாம். இந்நிருபங்களின் அதிகாரப்பிரிவுகளை மறந்துவிட்டு வாசித்தால் பவுலின் தர்க்கரீதியான வாதங்களைக் கவனிக்கலாம். யாரோடு அவர் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற பின்னணி விபரத்தையும் நாம் அறிந்திருப்பது அவசியம். உயிர்த்தெழுதல் இல்லை என்று வாதிட்ட சிலருக்கெதிராக, உயிர்த்தெழுதல் எல்லோருக்கும் உண்டு என்பதைப் பவுல், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் அடிப்படையில் 1 கொரிந்தியர் 15ல் தர்க்கரீதியில் விளக்கியிருக்கும் முறை அருமை. கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்து மட்டும் போதும், அவரில் அனைத்தையும் நாம் அடைந்திருக்கிறோம் என்பதைக் கொலோசெயர் 1ம் அதிகாரத்தில் பவுல் ஆணித்தரமாக, தர்க்கரீதியில் கிறிஸ்தவர்கள் முன் வைத்திருக்கிறார். இவர்களுக்கெல்லாம் நான் சளைத்தவன் இல்லை என்பதுபோல் இயேசுவின் தம்பியான யாக்கோபு தன் நிருபத்தில் அத்தகைய அறிவுபூர்வமானதும், தர்க்கரீதியிலானதுமான ஆவிக்குரிய வாதங்களைத் தன் வாசகர்கள் முன் வைத்திருக்கிறார். அத்தகைய பிரசங்கத்தையே இயேசு மலைப்பிரசங்கத்தில் தந்திருப்பதைக் கவனிக்கலாம்.
வேதம் சுட்டிக்காட்டும், கிறிஸ்தவ வரலாறு சந்தித்திருக்கும் இத்தகைய வேதபூர்வமான ஆவிக்குரிய, ஆக்கபூர்வமான, அறிவார்ந்த, தர்க்கரீதியிலான பிரசங்கங்கள் நம்மினத்தில் இன்று ஏன் இல்லை? சமீபத்தில் சக கிறிஸ்தவர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தபோது நம்மினத்துக் கிறிஸ்தவத்தை என்னால் சென்னையின் ‘கூவம்’ ஆற்றோடு தொடர்புபடுத்திப் பேசாமல் இருக்கமுடியவில்லை. அந்த ஆற்றைப்போலக் கழிவுகள் நிறைந்துபோயிருக்கிறது நம்மினத்துக் கிறிஸ்தவம். அந்த ஆற்றில் நல்ல நீருக்கு எங்கே இடமிருக்கிறது? அதுபோல்தான் நம்மினத்தில் நல்ல பிரசங்கிகளையும், தரமான பிரசங்கங்களையும் தேடி அலையவேண்டியிருக்கின்றது. குப்பையில் குண்டுமணி தேடுவதுபோல்தான் நம்மினத்தில் அறிவார்ந்த, தர்க்கரீதியிலான பிரசங்கங்களும்.
‘ஆவிக்குரிய பிரசங்கம்’ என்ற பெயரில் ஆத்துமாக்களின் உணர்ச்சிகளுக்குத் தூபம்போடும் அதிகப்பிரசங்கிகளின் வார்த்தை ஜாலத்தையே கேட்டு ஏமாந்துகொண்டிருக்கின்றன ஆத்துமாக்கள். இந்நிலைமை மாற மெய்யான ஆவிக்குரிய ஆத்மீக எழுப்புதல் நம்மினத்தில் ஏற்பட நாம் ஜெபிக்க வேண்டும். சுயநலமற்ற, தாழ்மையுள்ளம் கொண்ட சத்திய வாஞ்சையுள்ளவர்களை ஆண்டவர் நம்மினத்தில் விதைக்க நாம் ஜெபிக்கவேண்டும். ஆத்மீக அறிவுத்தாகத்தையும், ஆக்கபூர்வமான சிந்தனையையும், வாசிப்பை வழக்கமாகவும் கொண்டிருக்கும் ஆவிக்குரிய ஆத்துமாக்கள் நம் சபைகளில் உருவாக நாம் ஜெபிக்கவேண்டும். அத்தகையவர்களாக இருப்பதற்கு நாமும் ஜெபத்தோடும் கருத்தோடும் உழைக்கவேண்டும்.