1. வாசகர்களே!
2. கனல் கக்கும் தர்க்கம்
3. வார்த்தைக்கு வார்த்தை தெய்வீக வெளிப்படுத்தல்
4. பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்
5. பரிசுத்த வேதாகமம் பகுதி 2
6. வாசகர் பார்வை
வாசகர்களே!
இதில் எல்லாமே வேதம் தொடர்பான ஆக்கங்களாக வந்திருக்கின்றன. முதலாம் ஆக்கம் பிரசங்கத்தில் காணப்படவேண்டிய தர்க்கரீதியான வாதத்தைப் பற்றியது. பிரசங்கிகளுக்கு அவசியமான ஆக்கம். அட்டைப்படத்தில் போதகர் அல்பர்ட் என். மார்டினின் படம் வந்திருப்பதற்கான காரணம் வேதபூர்வமான அதிரடிப்பிரசங்கம் செய்வதில் அவருக்கு ஆண்டவர் அற்புதக் கிருபையை அளித்திருப்பதாலேயே. இப்போது போதகர் மார்டின் தன் 87ம் வயதில் ஊழியத்தை நிறைவுசெய்து ஓய்வில் இருக்கிறார். போதக இறையியல் பற்றிய அவருடைய மூன்று தொகுதிகள் தற்கால இளம் போதகர்களுக்கும், அவ்வூழியத்தில் ஈடுபடும் எண்ணம் கொண்டிருப்பவர்களுக்கும் மிகவும் அவசியமானவை. என்னைப் பொறுத்தவரையில் முதலாவது தொகுதியை முழுமையாக வாசித்துக் கரைகாணாமல் எவரும் போதக ஊழியத்தை நினைத்தும் பார்க்கக்கூடாது. சமீபத்தில் என் நாட்டில் ஒரு போதகர் தன் சபையில் ஒருவர் போதகப்பணியில் ஈடுபட சிந்திக்கிறார் என்று என்னிடம் கூறியபோது இதைத்தான் நான் அவருக்கு கூறினேன்.
அத்தோடு இந்த இதழில் சீர்திருத்த பாப்திஸ்து போதகரான ஆர்தர் டபிள்யூ பிங்க் அவர்களின் வேதவிளக்க விதிமுறைகள் பற்றிய தொடர் ஆக்கத்தின் ஒருபகுதி மொழியாக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. மேலும் வேத வெளிப்படுத்தல் வார்த்தைக்கு வார்த்தை ஆவியின் தெய்வீக வழிநடத்துதலால் மனிதர்கள் எழுதித் தந்திருக்கும் வௌ¤ப்படுத்தல் என்பது பற்றியும் விளக்கியிருக்கிறேன். இந்த உண்மையை மறந்துவிடக்கூடாது. வேதம் மனிதர்களால் எழுதித்தரப்பட்டதாக இருந்தபோதும் ஆவியானவர் அவர்களை அற்புதமாக வழிநடத்திக் கர்த்தரின் வார்த்தைகளை மட்டுமே எழுதும்படிச் செய்திருக்கிறார். அதனால் ஒவ்வொரு வேதவார்த்தைக்கும் நாம் மதிப்புக்கொடுத்து ஆராய்ந்து பார்த்து விளங்கிக் கொள்ளவேண்டும்; விளக்கவும் வேண்டும். இதன் காரணமாகவே நாம் தரமான வேதமொழிபெயர்ப்புகளை நாடிப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதுவரை வந்திருக்கும் இதழ்களைப்போலவே இதுவும் உங்களுக்கு ஆசீர்வாதமாக அமைய கர்த்தர் உதவட்டும். – ஆசிரியர்
கனல் கக்கும் தர்க்கம்
பொதுவாகவே கிறிஸ்தவ பிரசங்கங்கள் தர்க்கரீதியிலான முறையில் நம்மினத்தில் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை. இந்த முறையில் பிரசங்கிப்பது என்பது என்றும் இருந்திராத ஒரு நவீன முறையோ, புதுக்கண்டுபிடிப்போ அல்ல. இதுவே வழமையாக பிரசங்கம் தயாரிக்கும் போதும், பிரசங்கிக்கும்போதும் காணப்படவேண்டிய முறை; வரலாற்றில் தொடர்ந்திருந்து வந்திருக்கும் முறை. இந்த முறையிலேயே சீர்திருத்தவாதிகளான ஜோன் கல்வின், மார்டின் லூத்தர், பியூரிட்டன் பெரியவர்கள், 18ம் நூற்றாண்டு பிரசங்கிகள், 19ம் நூற்றாண்டில், ஸ்பர்ஜன், ரைல், 20ம் நூற்றாண்டில் டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் ஆகிய அனைவரும் பிரசங்கம் செய்து வந்திருக்கிறார்கள். இந்த முறையில் பிரசங்கத்தைத் தயாரிப்பதற்கும், பிரசங்கம் செய்வதற்கும் தர்க்க அறிவு தேவைப்படுகிறது. அதாவது, தர்க்கமாகிய பாடத்தை அறிந்திருப்பது அவசியமாகிறது.
20ம் நூற்றாண்டுக்கு முன்பு பேச்சுக்கலையிலும் (Rhetoric), பிரசங்கப் பணியிலும் ஈடுபடுகிறவர்கள் தர்க்கத்தை ஒரு பாடமாகப் படித்து வந்திருக்கிறார்கள். பேச்சுக்கலையாகிய பாடத்தை எடுக்கிறவர்கள் தர்க்கத்தையும் இணைத்துப் படிக்கவேண்டிய கட்டாயம் அன்று இருந்திருக்கிறது. அதேநேரம் பிரசங்கக்கலையைக் கற்றுக்கொள்ள வரும் இறையியல் மாணவர்களும் அந்தப் பாடத்தை, இறையியல் கல்லூரிக்கு வருமுன்பே தங்களுடைய கல்லூரி வாழ்க்கையில் ஒரு பாடமாகக் கற்றிருந்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், இறையியல் கல்லூரிகளில் தர்க்கமாகிய பாடத்தைக் கற்றுத் தராமல், அதன் கோட்பாடுகளைப் பிரசங்கம் தயாரிப்பதிலும், பிரசங்கம் செய்வதிலும் மாணவர்கள் பயன்படுத்த வேண்டுமென்று எதிர்பார்த்தார்கள். இன்னொரு வகையில் சொல்லப்போனால், பிரசங்கத்திற்கு தர்க்கம் எந்தளவுக்கு அவசியமானதென்பதை இந்தச் செயல் உணர்த்துகிறது.
19 நூற்றாண்டு சீர்திருத்த இறையியல் அறிஞரான ஆர். எல். டெப்னி (Robert Lewis Dabney), இறையியல் மாணவர்களுக்கு பிரசங்கக் கலையைக் கற்றுத் தந்திருக்கிறார். அவரது பிரசங்கம் பற்றிய விரிவுரைகள் RL Dabney on Preaching, Lectures on Sacred Rhetoric என்ற தலைப்பில் வெளிவந்திருக்கின்றன. டெப்னி தன் நூலில் தர்க்கம்பற்றிக் குறிப்பிட்டிருப்பதை இப்போது உங்களுக்குத் தமிழில் தருகிறேன். அவர் தன் இறையியல் மாணவர்களுக்கு பிரசங்கம் பற்றி அளித்திருந்த ஒரு விரிவுரையில் பின்வருமாறு சொல்லியிருக்கிறார்,
“பிரசங்கத்தில் வாதத்தை அருமையாகத் தயாரிப்பதற்குத் தர்க்கம் பற்றிய முறையான அறிவு மிகவும் அவசியமானதென்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், அந்த விஞ்ஞானத்தை இந்த இடத்தில் உங்களுக்குக் கற்றுத்தருவது என் வேலையல்ல. அந்தப் பாடத்தை நீங்கள் உங்கள் கல்லூரி வாழ்க்கையில் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று நான் அனுமானம் செய்கிறேன். இந்த இடத்தில் அந்தத் தர்க்கத்தைப் பேச்சுக்கலையில் (பிரசங்கத்தில்) எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்குவதுதான் என் வேலை” என்று டெப்னி குறிப்பிட்டிருக்கிறார்.
ஆகவே, தர்க்கம் ஆகிய பாடம் பிரசங்கம் தயாரிப்பதற்கு அவசியமானதென்பதை அன்று போதகர்களும், இறையியல் கல்லூரிகளும் நம்பியிருந்தன. சாதாரணமாகவே கல்லூரிகளில் அன்று அது கற்றுக்கொடுக்கப்பட்டது. பிரசங்கம் அல்லது பேச்சுக்கலையை நாடிப் போகிறவர்கள் தர்க்கத்தையும், சட்டத்தையும் பாடங்களாகப் பயின்று வந்திருக்கிறார்கள். முக்கியமாக சட்டக்கலையைக் கற்றுக்கொள்ளுகிறவர் களுக்கும் இது ஒரு பாடமாக வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
ஒரு கருத்தைப் பிரசங்கத்தில் கேட்பவர்கள் முன் வைப்பதற்கு அவசியமான வாதத்தைத் தயார் செய்வதற்குத் தேவையான விதிகளை இந்தத் தர்க்கத்தில் இருந்தே டெப்னி பயன்படுத்தித் தன் மாணவர்களுக்கு கற்றுத் தந்திருக்கிறார். தன்னுடைய நூலில் 168-232 வரையுள்ள பக்கங்களில் டெப்னி தர்க்கரீதியில் விளக்கமளிப்பதற்கு அவசியமான விதிகளை விளக்கியிருக்கிறார். அவருடைய நூல் 19ம் நூற்றாண்டு ஆங்கிலத்தில் இருந்தபோதும், ஆங்கில அறிவுள்ளவர்கள் பொறுமையோடும், கவனத்தோடும் சிந்தித்து வாசித்தால் நிச்சயம் அதன்மூலம் பயனடைவார்கள்.
இந்தப் பக்கங்களில் டெப்னி தர்க்கமாகிய பாடத்தைப் பயன்படுத்தி அதன் அவசியத்தை உணர்த்தி பிரசங்கத்தில் அதைப் பயன்படுத்துவதற்கான விதிகளை முன்வைக்கிறார். “தர்க்கிக்காத பிரசங்கி பிரசங்கியே அல்ல” என்கிறார் டெப்னி. தொடர்ந்து அவர், “ஆத்துமாக்களைக் கவரக்கூடிய பிரசங்கி மெய்யாகத் தர்க்கம் செய்கிறவன்; ஏனெனில், அவன் நுட்பத்தோடு தர்க்கிக்கிறான், துல்லியமாகத் தெளிவாகத் தர்க்கிக்கிறான்” என்கிறார்.
முதலில், தர்க்கரீதியிலான பிரசங்கம் என்றால் என்ன?
பிரசங்கம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் அதை “கனல் கக்கும் தர்க்கம்” (Logic on Fire) என்று விளக்கினார். இதன் மூலம் லொயிட் ஜோன்ஸ் பிரசங்கத்தைத் தர்க்கம் என்று அழைத்திருப்பதைக் கவனிக்கவேண்டும். நெருப்பாய் எரியும் தர்க்கமே பிரசங்கம் என்று அவர் கூறியிருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது? சீர்திருத்தவாத பிரசங்கிகள் எல்லோருமே பிரசங்கத்தைத் தர்க்கமாகவே கணித்திருக்கிறார்கள்.
R L Dabney அதைப் புனிதமான பேச்சுவன்மை (Scared Rhetoric) என்று அழைத்திருக்கிறார். சொல்வன்மையுள்ள, தூண்டக்கூடிய புனிதமான பேச்சு வன்மை என்பது அதற்கு அர்த்தம்.
தர்க்கரீதியிலான பிரசங்கத்தைத் தெளிவாக விளக்குவதானால் பின்வருமாறு விளக்கலாம்.
பிரசங்கத்தின் கருப்பொருளை, அதற்கான தெளிவான ஆதாரங்களோடும், வாதத்திறமையோடும், இறையியல் தவறுகள் எதுவும் இல்லாமல் தர்க்கரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் தயாரித்துப் பயன்பாடுகளோடு பிரசங்கிப்பது.
இத்தகைய பிரசங்கங்களே வழமையானவை என்பதற்கும், அந்த விதத்திலேயே எப்போதும் பிரசங்கங்கள் அமையவேண்டும் என்பதற்குமான அநேக உதாரணங்களை வேதத்தில் காணலாம்.
எந்தப் பிரசங்கத்திலும் கருப்பொருள் இருக்கவேண்டும். இதையே பிரசங்கத்தில் முதலில் அறிமுகத்தில் விளக்குவார்கள். இதை ஆங்கிலத்தில் proposition என்பார்கள். தமிழில் இதை “கூற்று” என்று சொல்லலாம். அதாவது, இது ஒரு statement. இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், முழுப்பிரசங்கப் பொருளையும் சுருக்கமாக இந்தக் கூற்று முன்வைக்கும். இந்தக் கூற்றை நாம் சாட்சிகளைப் பயன்படுத்தி வாதத்திறமையோடு தர்க்கரீதியில் விளக்கிப் பிரசங்கிக்கப்போகிறோம். இந்த இடத்திலே தர்க்கம் வந்துவிடுகிறது. தர்க்கம் இல்லாமல் அந்தக் கூற்றை நாம் சரிவர வேதபூர்வமாக விளக்கமுடியாது. தர்க்கம் இல்லாமல் விளக்கப்போனால், ஒரு முறையான வரைபடத்தைக் கையில் வைத்திராமல் ஒரு இடத்தை நோக்கிப் பிரயாணம் செய்வதுபோலிருக்கும். எங்கு போகிறோம் என்று தெரியாமலேயே போய்க்கொண்டிருப்போம். என்ன சொல்லுகிறோம் என்று தெரியாமல் பிரசங்கமென்ற பெயரில் எதையோ உளறிக் கொண்டிருப்போம்.
இன்று பெரும்பாலான பிரசங்கங்கள் சலிப்பூட்டும்படியாக இருப்பதற்குக் காரணம் சத்தியம் தர்க்கரீதியில் பிரசங்கிக்கப்படாததால்தான். அதாவது, ஒரு வசனத்தைக் கேட்பவர்கள் முன்வைத்து, அதுதான் சத்தியம் என்று அநேகர் அடித்துச் சொல்லுகிறார்களே தவிர கேட்டுக்கொண்டிருப்பவர்கள் அதை ஏன் சத்தியமாக ஏற்று விசுவாசிக்கவேண்டும் என்பதற்கான தெளிவான ஆதாரங்களைத் தர்க்கரீதியில் அவர்கள் முன்வைத்து விளக்கி நிரூபிக்க அவர்களால் முடியாமல் இருக்கிறது. இதனால் கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு அது புரிவதில்லை; அவர்கள் வளரவும் வழியில்லாமலிருக்கிறது.
இதற்கு உதாரணமாக, கெரிஸ்மெட்டிக் பிரிவினர், “ஒவ்வொரு கிறிஸ்தவனும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருக்க வேண்டும்” என்ற கூற்றை முன்வைப்பார்கள். அதைப் பிரசங்கிக்கும் பிரசங்கி தர்க்கரீதியில் அதை நிரூபிப்பதில்லை. அங்கே, இங்கே என்று ஒரு சில வேதவரலாற்று சம்பவ உதாரணங்களை மட்டும் முன்வைத்து, அந்தப் பகுதிகளைச் சரியாக விளக்காமல், அங்கு நடந்திருப்பதால் இன்றைக்கு நமக்கும் அது நடக்க முடியும், நடக்க வேண்டும் என்று அவர்கள் ஆணித்தரமாகக் கூறுவார்கள். இதில் தர்க்கம் இடம் பெறவில்லை. அவசியமான பல கேள்விகளே தலைதூக்குகின்றன.
முதலில், இந்தக் கூற்றில் தவறான தர்க்கம் காணப்படுகிறது. சரியான முறையில் தர்க்கம் செய்தால் எப்போதுமே தவறான தர்க்கத்தை இனங்கண்டு கொள்ளலாம். இதற்கு சிலஜிசத்தைப் (Syllogism – முக்கூற்று முடிவு விதிமுறை) பயன்படுத்தினால் தவறான தர்க்கத்தை இனங்கண்டுகொள்ளலாம்.
பிரதான கூற்று – பரிசுத்த ஆவி அபிஷேகம் செய்கிறார்
சிறிய கூற்று – பவுல் அபிஷேகத்தைப் பெற்றிருந்தார்
முடிவு – எல்லாக் கிறிஸ்தவர்களும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அடைவார்கள்
இது தவறான தர்க்கம். இதில் முடிவு தவறான தர்க்கத்தின் மூலம் பெறப்பட்டிருக்கிறது. பவுல் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அடைந்திருந்தால் எல்லாக் கிறிஸ்தவர்களும் அதை அடைந்திருக்கவேண்டும் என்ற வாதம் தவறானது.
இதில் பிரசங்கி காட்டிய பகுதிகளில் நடந்த நிகழ்வுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்ற உண்மை தர்க்கரீதியில் விளக்கப்படவில்லை. அவர் சொல்லுவதை நாம் நம்ப வேண்டும் என்று பிரசங்கி வலியுறுத்துகிறார். ஆனால், தர்க்கரீதியில் தகுந்த வேதஆதாரங்களோடு அது நிரூபிக்கப்படாவிட்டால் நாம் நம்பத்தேவையில்லை. வேத உண்மைகளாக இருந்தாலும் பிரசங்கத்தில் அவை தர்க்கரீதியில் சாட்சிகளோடும், ஆணித்தரமாகவும், முறையோடு ஒன்றன் பின் இன்னொன்று வருவதாகவும் முன்வைக்கப்படாதவரையில் அவற்றை நாம் நம்ப வேண்டிய அவசியமில்லை.
இன்னும் இரண்டு உதாரணங்களைக் கவனிப்போம்.
உதாரணம் 2: வேறு சிலர், திரித்துவம் என்று ஒன்றில்லை, இயேசுவை மட்டுமே நம்ப வேண்டும் என்பார்கள். ஆனால், அவர்கள் நம்புகிற அந்த விஷயத்தை அவர்களால் தர்க்கரீதியில் வேத ஆதாரங்களோடு நிரூபிக்க முடிவதில்லை. திரித்துவம் என்ற வார்த்தை வேதத்தில் இல்லை என்ற ஒரு காரணத்தை மட்டுமே கிளிப்பிள்ளை போல் சொல்லிவருவார்கள். இத்தகைய தவறான தர்க்கத்தை நாம் நம்பவேண்டிய அவசியமில்லை.
உதாரணம் 3: இதேபோல்தான் சிலர் இயேசுவின் பெயரில் மட்டும் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்பார்கள். அவர்களும் தர்க்கரீதியில் ஆதாரங்களோடு அதை நிரூபிப்பதில்லை; இன்றுவரை நான் அதைத் தர்க்கரீதியில் விளக்கிய எவரையும் கண்டதுமில்லை. அப்படி அவர்கள் செய்யாதவரையில் அதைப்பற்றி நாம் சிந்திக்கவேண்டிய அவசியமில்லை.
இவற்றில் இருந்து எதை அறிந்துகொள்ளுகிறோம். எந்த வேத உண்மையும் பிரசங்கத்தில் தகுந்த, துல்லியமான வேதஆதாரங்களோடு நம்பக்கூடியவிதத்தில் தர்க்கரீதியில் அசைக்கமுடியாதபடி விளக்கப்பட வேண்டும். அப்படி விளக்கும்போதுதான் அந்த உண்மை வேத அதிகாரத்தை அடைகிறது. அப்படி விளக்காவிட்டால் அந்த உண்மையின் அதிகாரத்தை நாம் பலவீனமான வாதத்தின் மூலம் மட்டுப்படுத்திவிடுகிறோம். அதனால் பிரசங்கமும் பலவீனமடைந்துவிடுகிறது.
தர்க்கமும் மனிதனும்
தர்க்கத்திற்கான அவசியம் என்ன?
அநேக கிறிஸ்தவர்கள் தர்க்கத்தை மனித சிந்தனையாக, ஆவிக்குரியதாக இல்லாத சிந்தனையாகக் கருதுகிறார்கள். அந்த எண்ணம் தவறு. உண்மையில் தர்க்கத்திலும் தவறான தர்க்கம், சரியான தர்க்கம் என்றிருக்கிறது. சரியாகச் சிந்தித்துத் தர்க்கிக்கும்போதே தவறான தர்க்கத்தை நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம். அதனால்தான் தர்க்கம், அதாவது சரியாக தர்க்கம் செய்வது அவசியமாகிறது. முக்கியமாகப் பிரசங்கிகளுக்கு மிகவும் அவசியமானது.
படைப்பில் கர்த்தர் மனிதனைக் காரணகாரியங்களோடு சிந்திக்கக் கூடியவனாகவே படைத்திருக்கிறார். படைப்பிலேயே மனிதன் இந்த ஆற்றலைப் பெற்றுக்கொண்டான். கர்த்தர் தன் சிருஷ்டிகள் அனைத்திற்கும் பெயர் வைக்கும்படி முதல் மனிதனாகிய ஆதாமைக் கேட்டுக்கொண்டார். ஆதாம் தன் அறிவைப்பயன்படுத்தி சிந்தித்து ஆராய்ந்து தகுந்த காரணங்களோடு ஒவ்வொரு சிருஷ்டிக்கும் பெயர்வைக்க வேண்டியிருந்தது. ஆதாமுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பொறுப்பை நாம் சாதாரணமானதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவன் செய்தவற்றை ஆண்டவர் ஏற்றுக்கொண்டார். ஆதாம் கண்மூடித்தனமாக எதற்கும் பெயர்வைக்கவில்லை. ஆதாமால், சரியானவிதத்தில் சிந்திக்க முடிந்தது. தன் சிந்தனையைக் காரண காரியங்களோடு மற்றவர்கள் நம்பக்கூடியவிதத்தில் தர்க்கரீதியில் விளக்க முடிந்தது. அத்தகைய தன்மையோடு அவனை ஆண்டவர் படைத்திருந்தார். இந்தவிதத்திலேயே அவன் தன் மனைவிக்கும் பெயர்வைத்தான் (ஆதியாகமம் 2:23).
ஆதியாகமம் 2:23
அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
மானிடத்தின் மகிமையே சிந்திக்கும் ஆற்றலில்தான் தங்கியிருக்கிறது (ரோமர் 12:1-2). ஏனைய சிருஷ்டிகளில் இருந்து நம்மை வேறுபடுத்துவதும் இந்த சிந்திக்கும் ஆற்றலே.
ரோமர் 12:1-2
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
மனிதன் தர்க்கரீதியில் சிந்திக்கக்கூடிய ஆற்றலோடு படைக்கப்பட்டிருந்த போதும், பாவம் அவனை பலவீனமானவனாக்கியது. அவனில் அனைத்தையும் பாதித்த பாவம் அவனுடைய சிந்திக்கக்கூடிய ஆற்றலையும் பாதித்தது, ஆனால் அதை அவனிலிருந்து அகற்றிவிடவில்லை (Thinking ability). பாவம் அதை பலவீனப்படுத்திவிட்டது. அதனால் பாவியாகிய மனிதன் சிந்திக்கக்கூடியவனாக இருந்தபோதும் இன்று சரியானவிதத்தில் சிந்திக்கமுடியாதவனாக இருக்கிறான் (ரோமர் 1). அவனால் சத்தியத்தைப் பொய்யாக்க முடியுமே தவிர அதனை நேசிக்கவும், அதன் வழியில் நடக்கவும் முடியாமலிருக்கிறது. தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவனால் முடியாது (ரோமர் 1:28).
ரோமர் 1:28
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
இந்நிலைமை மாறி அவன் சரிவர சிந்திக்க மறுபிறப்பு தேவை. மறுபிறப்பை அடைந்தவனே சிந்திக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி ஆவிக்குரியவிதத்தில் சிந்திக்க ஆரம்பிக்கிறான்.
மறுபிறப்பை அடைந்தவர்களும் சிந்திக்க வேண்டியவர்களாகவும், சரியாகச் சிந்திக்க வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள். அதாவது சத்தியத்தைக் கற்றுக்கொள்ளுவதிலும், அதைப் பகிர்ந்துகொள்ளுவதிலும் அவர்கள் சரிவர சிந்திக்கவும், சத்தியத்தைப் புரிந்து பின்பற்றவும் வேண்டும். இது அவர்களுடைய கடமை. இந்த இடத்திலேயே தர்க்கம் வந்துவிடுகிறது.
தர்க்கமும் கிறிஸ்தவனும்
இப்போது தர்க்கத்தை விவரமாகக் கவனிக்கலாம். தர்க்கத்தை விளக்கும் பிரபல சீர்திருத்த கிறிஸ்தவ பாடலாசிரியரான ஐசெக் வொட்ஸ் பின்வருமாறு சொல்லுகிறார், “சத்தியத்தைத் தெளிவாக அறிந்துகொள்ளவும், அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் நம்முடைய சிந்திக்கும் ஆற்றலை நல்லமுறையில் பயன்படுத்துவதே தர்க்கம்.” நம்முடைய புத்திரீதியிலான ஆற்றல்களை நல்லமுறையில் நம்மிலும் மற்றவர்களிலும் வளர்த்துப் பயன்படுத்த உதவுவதே தர்க்கம்.
சிந்திக்கும் ஆற்றலை நாம் வளர்த்துக்கொள்ளும்போதே நாம் நன்மையானவற்றை தீமையிலிருந்து பிரித்துப் பார்க்கவும், சத்தியத்தை அசத்தியத்தில் இருந்து வேறுபடுத்தியும் பார்க்க முடியும். இந்த இரண்டும் இக்கால வாழ்க்கைக்கும், வரப்போகும் உலக வாழ்க்கைக்கும் அவசியமானவை.
சத்தியத்தை அறிந்துகொள்ளும்படியாக நம்முடைய புத்திரீதியிலான ஆற்றலை நல்லமுறையில் பயன்படுத்தும்போதே நம்முடைய ஞானம், விவேகம், பரிசுத்தம் மற்றும் நம்முடைய நடவடிக்கைகள் அனைத்தும் அவற்றின் செல்வாக்கிற்குள் வருகின்றன.
ஐசெக் வொட்ஸ், நம்முடைய சிந்தனை சரியானவிதத்தில் அமைவதற்குத் தேவையான மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.
1. நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் பலவீனமாக இருப்பதாலும், சத்தியங்கள் கிணற்றில் தண்ணீர் ஆழமாக இருப்பதுபோல் காணப்படுவதாலும் நம்மால் உடனடியாக கிணற்றில் ஆழத்திற்குப் போய் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. சத்தியம் கிணற்றின் ஆழத்தில் இருப்பதால் அந்த ஆழத்துக்கு இறங்கிப்போய் அவற்றைப் புரிந்துகொள்ள தர்க்கம் நமக்கு உதவிசெய்கிறது. ஒருங்கிணைந்து காணப்படும் அநேக கேள்விகளை எழுப்பித் தீவிரமாகச் சிந்தித்து தர்க்கிக்கப்பதால் ஆழத்தில் காணப்படும் சத்தியங்களை நாம் வெளிக்கொணர முடியும்.
2. இந்தப் பாவ உலகில் அநேக விஷயங்கள் மறைவாகவும், தெளிவற்றவிதத்திலும் காணப்படுகின்றன. பூரணமற்ற இந்த உலகில் நாம் வெளிப்புறமாகக் காண்கிறவை உண்மையானவையல்ல. அவற்றின் வெளித்தோலை அகற்றி, அவற்றை நிதானித்து அவற்றின் உண்மைத் தன்மைகளைப் புரிந்துகொள்ளுவதற்கு தர்க்கம் உதவுகிறது. உதாரணம்: கால நிலை மாற்றம் (Climate change), சூழல் பாதுகாப்பு (Environment protection), தனியுரிமை (Individualism) போன்றவை. இந்த விஷயங்களில் நம்மில் பெரும்பாலானோருடைய சிந்தனை தாராளவாதப் போக்கைப் பின்பற்றுவதாகக் காணப்படுகிறது. கிறிஸ்தவ வேத சிந்தனையை அநேகர் இந்த விஷயங்களை ஆராயப் பயன்படுத்துவதில்லை. படைப்பிற்கும் இந்த விஷயங்களுக்கும் தொடர்பிருக்கிறதென்பதை கிறிஸ்தவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. கிறிஸ்தவ வேதத்தின்படி தர்க்கரீதியில் சிந்தித்து இந்த விஷயங்களைப் பற்றிய கருத்துக்களை கிறிஸ்தவன் கொண்டிருக்கவேண்டும்; அவை உலகத்துக்குப் பிடிக்காமலிருந்தாலும் வேதமே நமக்கு இந்த விஷயங்களில் உண்மையை விளக்குவதாக இருக்கிறது. சமுதாயம் இதைப்பற்றிக் கொண்டிருக்கின்ற கருத்துக்கள், அதற்காக சமுதாயம் எத்தனை ஆவேசமாகக் குரல் கொடுத்தாலும் உண்மையானவையோ, வேதபூர்வமானவையோ அல்ல. வேதமே அந்தக் கருத்துக்களின் வெளித்தோலை உரித்து உள்ளிருப்பதை இனங்காட்டுகிறது.
3. பாவத்தின் காரணமாக இந்த உலகத்தில் நம்முடைய புத்திரீதியிலான ஆற்றல்கள் பலவீனமாகக் காணப்படுவதால் நமக்கு உதவி தேவைப்படுகிறது. எதையும் எத்தகையது என்று தீர்மானித்து நாமெடுக்கும் முடிவுகள் நம்முடைய சூழ்நிலைக்கு ஏற்பவும், கல்வி மற்றும் பண்பாட்டுக்கு ஏற்பவும் அமைந்திருப்பதால் அவை தவறானவைகளாக அமைந்து விடுகின்றன. முதிர்ச்சியற்ற முடிவுகளை எடுத்துவிடாமல் இருக்கவும், நம்முடைய பலவீனமான ஆற்றல்களின் செல்வாக்கில் இருந்து தப்பிக்கொள்ளவும் தர்க்கம் நமக்குப் பெருந்துணை செய்கிறது.
தர்க்கக் கல்வி முறை
தர்க்கக் கல்வி முறை இன்று நம்மினத்தில் இல்லாமல் இருக்கிறது. தர்க்கத்தைப் பற்றிய தவறான கருத்துக்கள் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
கல்விச் சீர்திருத்தவாதிகள் மேலை நாடுகளில் 20ம் நூற்றாண்டில் தர்க்கம் வகுப்புகளில் ஒரு பாடமாக இருப்பதை நீக்கிவிட்டார்கள். காரணம் அதனால் சமூக நன்மை இல்லை என்பதுதான். சிந்தித்து ஆராயும் பக்குவம் அதனால் பாதிக்கப்பட்டது, அதிகாரத்துவ பண்பாடு வளரத்தொடங்கியது.
17ம் நூற்றாண்டு பியூரிட்டன்கள் தர்க்கத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர். அமெரிக்க நாட்டை உருவாக்கிய பியூரிட்டன்களும், அமெரிக்கத் தலைவர்களும் இதில் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர்.
நம்மினத்துக் கல்வி முறையில் தர்க்கத்திற்கு இடமே இல்லை. அதனால் தர்க்கக்கல்வி இல்லாமலேயே வளர்ந்து நாம் தர்க்கரீதியில் எதையும் ஆராய்ந்து புரிந்துகொள்ளவும், பதிலளிக்கவும், பேசவும் இயலாதவர்களாக இருக்கிறோம்.
இது பிரசங்க ஊழியத்தையும், சபைத்தலைமையையும் பெருமளவில் பாதித்திருக்கிறது. உணர்ச்சிகளும் (emotion), நடைமுறைவாதமும் (pragmatism), மட்டுமே நம்மினத்துக் கிறிஸ்தவத்தையும், சபைகளையும் இன்று ஆண்டு வருகின்றன.
வாழ்க்கைக்கு அவசியமானது தர்க்கம்
சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவைப்படுகிறது தர்க்கம். சகல மனிதர்களும் அன்றாட வாழ்க்கையில் அவசியமாகப் பயன்படுத்த வேண்டியது தர்க்கம். தர்க்கம் இல்லாவிட்டால் எத்தனையோ காரியங்களில் பெருந்தவறான முடிவுகளை எடுத்து அதனால் நஷ்டப்பட்டே வாழ்ந்து வருவோம். அநேகர் வாழ்க்கையில் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு இது இல்லாததே காரணமாக இருக்கலாம்.
உதாரணமாக, ஒரு விவசாயி பயிரிடுவதற்கு மழையை நம்பியிருப்பான். தண்ணீரில்லாமல் பயிரிட்டுப் பிரயோஜனமில்லை என்பது பகுத்தறிவு மட்டுமல்ல, அதில் தர்க்கம் இருக்கிறது. முதலில் பயிரிட மழை வேண்டும், அடுத்து நிலம் பண்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு பயிரிட வேண்டும். இதில் தர்க்கம் இருக்கிறது. இதில் எதுவும் மாறி அமையக் கூடாது. அப்படி மாறி அமைவது தர்க்கத்திற்கு எதிரானது; விவசாயத்திற்கும் ஆபத்து. இந்தத் தர்க்கம் விவசாயியில் ஊறிப்போய்க் காணப்படும். அதை அவன் வாழ்க்கையில் அனுபவத்தில் கற்றுக்கொண்டிருக்கிறான். அது அவனுக்கு பரம்பரையாகப் போதிக்கப்பட்டிருக்கலாம். இருந்தாலும் இதுவே அடிப்படைத் தர்க்கக் கல்வி. இதை எந்த விவசாயியும் மறுப்பதில்லை. இந்தத் தர்க்கத்தைத்தான் நாம் சமுதாயத்தின் அத்தனை விஷயங்களிலும் பயன்படுத்துகிறோம்.
அதனால் தர்க்கத்தை நாம் ஏதோ விசேஷமானவர்கள் மட்டும் கற்கவேண்டியதொன்றாக எண்ணக்கூடாது. அத்தகைய தர்க்க சிந்தனை இல்லாத சமுதாயம் நல்ல சமுதாயமாக இருக்கமுடியாது.
பிரசங்கத்தில் தர்க்கம்
மறுபடியும் சீர்திருத்த இறையியலறிஞரான ரொபட் லூயிஸ் டெப்னி சொல்லுவதைக் கவனியுங்கள்,
“தர்க்கம் செய்யாதவன் உண்மையான பிரசங்கியல்ல. தர்க்கரீதியில் விளக்காமல் அவனால் எவர் மனதிலும் ஆழ்ந்த நம்பிக்கையை உண்டாக்க முடியாது. தர்க்கித்துப் பிரசங்கிக்காதவனையே சலிப்புப் பிரசங்கி என்று அழைக்க வேண்டும். தர்க்கித்துப் பிரசங்கிக்கிறவன் நுட்பத்தோடும், துல்லியமாகவும் பிரசங்கிக்கிறான். அவனுடைய பிரசங்கம் கேட்பதற்கு ஆர்வமூட்டுவதாக இருக்கும்; அதற்குக் காரணம் தர்க்கரீதியில் எதையும் அவன் புரியவைப்பதால் மட்டும் அல்ல, அவன் சரியானதை நமக்குத் தருகிறான். இதற்கு எதிர்மறையானவனே நம்மில் எந்தவிதமான அழுத்தத்தையும் ஏற்படுத்துவதில்லை; அத்தோடு சலிப்பூட்டுகிறவனாக இருக்கிறான்.”
தர்க்கத்திற்கான விதிகள் என்ற அதிகாரத்தில் டெப்னி இதைக் குறிப்பிட்டிருக்கிறார். வாதம் (Arguments) என்ற பகுதியில் 179-232 பக்கங்களில் Dabney on Preaching என்ற நூலில் டெப்னி விளக்கியிருப்பது மிகவும் அவசியமாக வாசிக்கவேண்டிய விஷயங்கள்.
தர்க்கத்தின் அவசியத்தை விளக்க இன்னுமொரு உதாரணத்தைத் தர விரும்புகிறேன்.
1689 விசுவாச அறிக்கை பரிசுத்த வேதாகமம் என்ற முதலாவது அதிகாரத்தில், வேதத்தைப் பற்றிய விளக்கத்தைத் தருகிறபோது நமக்குத் தேவையான அத்தனை சத்தியங்களும் வேதத்தில் இரண்டு வகையில் தரப்பட்டிருக்கின்றன என்று விளக்குகிறது.
- வெளிப்படையாகத் திட்டவட்டமாக,
- உள்ளடக்கமாக, இன்றியமையாத நிலையில்
இவற்றில் முதலாவதிற்குத் தர்க்கம் தேவையில்லை. அத்தகைய சத்தியங்கள் நேரடியாகத் தெளிவாகப் புரிந்துகொள்ளும்படி எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன. இரண்டாவதிற்கு தர்க்கம் அவசியமாகிறது. ஏனெனில், அவை நிலத்தின் கீழ் தங்கம் காணப்படுவதுபோல் நேரடியாகப் பார்வைக்குத் தெரியாமல் வசனப் பகுதிகளுக்குள் புதைந்து காணப்படுகின்றன. அவற்றை வெளியில் கொண்டுவர வேதவாசகனுக்கும், பிரசங்கிக்கும் தர்க்கம் அவசியமாகிறது. தர்க்கத்தைப் பயன்படுத்தாமல் ஒருவராலும் அவற்றைக் கண்டுகொள்ள முடியாது. நம்முடைய அறிவையும், சிந்தனை ஆற்றலையும், உழைப்பையும் பயன்படுத்திப் பல்வேறு கேள்விகளை எழுப்பி வேதத்தில் பல பகுதிகளிலும் இருந்து அந்த உண்மையை வெளிக்கொணர வேண்டும். இதற்கே தர்க்கம் அவசியமாகிறது. (பிரசங்க ஊழியத்தில் இருப்பவர்கள் வாசிக்க வேண்டிய ஒரு நூல் By Good and Necessary Consequence by Ryan M. Mcgraw. இந்நூலில் மெக்ரோ இன்றியமையா நிலையில் காணப்படும் சத்தியங்களை அறிந்துகொள்ளும் முறை பற்றி அருமையாக விளக்கியிருக்கிறார்).
முறைப்படுத்தப்பட்ட இறையியலின் அவசியத்தை இந்த இடத்தில் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. வேதத்தில் காணப்படும் சத்தியங்களின் தர்க்கரீதியிலான தொகுப்பே அது. அநேக சத்தியங்களைத் தர்க்கத்தைப் பயன்படுத்தி வேதத்தில் இருந்து (Deduced and collected or inferred from many passages) தர்க்கரீதியில் அனுமானித்து உணரவேண்டும்.
உதாரணமாக, சபை அங்கத்துவத்தை எடுத்துக்கொள்ளுவோம். அந்த வார்த்தையே வேதத்தில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், சபைக்கு அவசியமான அந்த முறை பற்றிய சத்தியம் வேதத்தில் உள்ளடக்கமாக, இன்றியமையாத நிலையில் தரப்பட்டிருக்கிறது. முறையான கேள்விகளை எழுப்பி முறையான தர்க்கத்தைப் பயன்படுத்தி அதை வேதத்தின் பல பகுதிகளிலும் இருந்து நிரூபிக்கவேண்டும். தர்க்கத்தின் பலனை இங்கு காண்கிறோம். நம்முடைய சிந்தனைத்திறனையும், தர்க்கத்தையும் பயன்படுத்தாமல் இந்தப் போதனையை வெளிக்கொணர முடியாது. அந்த விதத்திலேயே கர்த்தர் இந்தப் போதனையைத் தந்திருக்கிறார். அதனால் கர்த்தரின் வேதமும்கூட சிந்தித்து ஆராய்ந்து, தர்க்கத்தைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ள வேண்டிய நிலையில்தான் தரப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் சிந்தித்து ஆராய்ந்து எதையும் புரிந்துகொள்ளும்படியாக நம்மைக் கர்த்தர் படைத்திருப்பதுதான்.
இன்னுமொரு உதாரணத்தைக் கவனிப்போம்.
ஆதியாகமம் 1:1
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
இது ஒரு கூற்று (proposition, statement).
இந்தக் கூற்றை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், ஆரம்பத்தில் கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்பதைத் தெளிவாகக் கண்டுகொள்கிறோம். ஆனால், இதில் அதற்கு மேல் அநேக சத்தியங்கள் உள்ளடக்கமாகப் பொதிந்து காணப்படுகின்றன. 1689 விசுவாச அறிக்கை சொல்லுவதுபோல் Necessarily contained – By good and necessary consequence. தர்க்கரீதியில் சத்தியத்தை அனுமானித்து உணரவேண்டும். தர்க்கத்தைப் பயன்படுத்தாமல் அந்த உண்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது.
அந்த உண்மைகள்:
- கர்த்தரும், இயற்கையும் ஒன்றல்ல; கர்த்தர் வேறு, இயற்கை வேறு (God and nature are distinct).
- கர்த்தர் நித்தியமானவர்; சிருஷ்டி படைக்கப்பட்டது.
- எந்தவித துணைப்பொருளின் உதவியும் இல்லாமல் கர்த்தர் இல்லாததிலிருந்து இருப்பவைகளை உருவாக்கினார்.
இந்த உண்மைகளைப் பெறப்பயன்படுத்தப்பட்ட கூற்றுக்களும் உண்மையானவையாக இருக்கவேண்டும். அப்படி அவை உண்மையாக இருந்தால் மட்டுமே இந்தத் தர்க்கரீதியிலான அனுமானங்கள் உண்மையாக முடியும்.
- அந்த வசனத்தில் கர்த்தரே படைத்தவர் என்பது உறுதி.
- கர்த்தர் படைத்தவற்றில் இயற்கை அடங்கியிருக்கிறது (வானமும், பூமியும்).
- ஆகவே, இன்றியமையாத முடிவு – கர்த்தரும் இயற்கையும் வெவ்வேறானவை.
தர்க்கத்தைப் பயன்படுத்தாமல் ஆதியாகமம் 1:1ல் இந்த முடிவுகளுக்கு நாம் வரமுடியாது.
தர்க்கரீதியில் பிரசங்கங்கள் அமைய அவற்றில் மூன்று விஷயங்கள் காணப்படவேண்டும்.
- முரண்பாடிருக்கக்கூடாது (Consistent) – பிரசங்கம் முரண்பாடில்லாமல் சீராக அமைந்திருக்கவேண்டும். தர்க்கரீதியிலான உண்மைகள் முரண்பாடற்ற விதத்தில் தொடரவேண்டும். ஒரு வக்கீல், எதிர்தரப்பு வக்கீல் அடித்து நொறுக்கிவிடக்கூடிய வாதங்களை முன்வைப்பதில்லை. முரண்பாடெதுவும் இல்லாததாக நாம் வெளிப்படுத்தும் உண்மைகள் அமைந்திருக்கவேண்டும்.
- வேதபூர்வமாக, சத்தியமானவையாக இருக்கவேண்டும் (Sound) – அதாவது, அவற்றில் இருந்து தவறான ஒரு கருத்து உருவாக வழியிருக்கக்கூடாது.
- முழுமையானதாக இருக்கவேண்டும் (Complete) – பிரசங்கத்தின் கருப்பொருளை நிரூபிக்கும் முழுமையான தேர்ந்தெடுக்கப்பட்ட வேத ஆதாரங்கள் காணப்பட வேண்டும். ஏனோதானோவென்று வசனங்களைத் தெரிவுசெய்து எதையும் நிரூபிக்க முயலக்கூடாது. வேதத்தில் காணப்படும் வசனங்களில் தெளிவானதும், அழுத்தமானதுமானவற்றைப் பயன்படுத்தித் தர்க்கிக்க வேண்டும். பிரசங்கம் அரைகுறையாக அல்லாமல் முழுமையானதாகக் காணப்பட வேண்டும்.
நல்லதும், மோசமானதுமான தர்க்கம்
1. சிந்திக்காமல் தர்க்கம் செய்வது
உதாரணம்: சில கிறிஸ்தவ சபைகளில் மக்கள் ஏன் ஆடிப்பாடுகிறார்கள்? தாவீது ஆடிப்பாடியதால் அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்.
இன்னொன்று, தோமா இந்தியா வந்ததால் இந்து மதத்தில் இயேசுவைப் பற்றிப் பேசப்படுகிறது.
அனுமானம் தோமா இந்தியா வந்தார்
தமிழர் சமயங்கள் சிலைவணக்கத்தை எதிர்த்தன
தமிழர் சமயங்களில் இயேசுவைக் கண்டுகொள்ளலாம்
இதில் தமிழர் சமயங்களில் சிலைவணக்கம் இல்லாமலிருந்ததற்கும், தோமா வருகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோமாவின் இந்திய வருகை கட்டுக்கதை. எந்தவிதமான வரலாற்று ஆய்விலும் ஈடுபட்டு அதை நிரூபிக்காமல் ஊகித்துச் சொல்லும் புரளி அது. அத்தோடு தமிழர் சமயங்கள் சிலை வணக்கத்தை ஆதரிக்கவில்லை என்பதற்கும் அதன் மூலம் இயேசுவை அறிந்துகொள்ளலாம் என்பதும் உண்மைக்கு மாறான புரளி மட்டுமே.
அனுமானம் – பிரஜாபதி என்ற பதம் கர்த்தரைக் குறிக்கிறது
கூற்று – இந்திய வேதத்தில் கர்த்தரைக் கண்டுகொள்ளலாம்.
இதில் பிரஜாபதி என்ற பதம் கர்த்தரைக் குறிக்கிறது என்பதற்கான இந்து மத ஆதாரங்களோ, கிறிஸ்தவ ஆதாரங்களோ அடியோடு இல்லை. எந்தவித ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்களும் இல்லாத மிக மோசமான, அறிவுக்குப் புறம்பான தர்க்கம் இது. இந்த ஒரு வார்த்தையைக் கொண்டு இந்து மதத்தில் இயேசுவைக் கண்டுகொள்ளலாம் என்பது அடிப்படையில் மோசமான தர்க்கம்.
2. தவறான காரணம் தருதல்
அப்போஸ்தலர் 2:4 – அங்கிருந்தவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு அந்நியபாஷைகளில் பேசினார்கள். இதைவைத்து, பரிசுத்த ஆவியால் நிரப்பப்படும்போதெல்லாம் ஒருவர் அந்நியபாஷை பேச வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள்.
கூற்று – அ. அவர்கள் ஆவியால் நிரப்பப்பட்டார்கள்
கூற்று – ஆ. அவர்கள் அந்நிய பாஷை பேசினார்கள்
முடிவு: இ. ஆவியால் நிரப்பப்படும்போதெல்லாம் ஒருவர் அந்நிய பாஷை பேசுவார்.
இது தவறான தர்க்கவாதம் (Illogical). இதன் மூலம் ‘அ’, ‘ஆ’ விற்கு காரணமாக இருந்தது என்பது ஊகம். முதலாவது நிகழும்போதெல்லாம் இரண்டாவதும் நிகழவேண்டும் என்ற வாதமும் தவறானது. வேதத்தை ஆராய்ந்து பார்க்கும்போது பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டபோதெல்லாம் மக்கள் அந்நிய பாஷை பேசியிருக்கவில்லை என்பதை அறிந்துகொள்ளலாம்.
இதைவிட ‘ஆ’ விற்கும், ‘இ’ க்கும் காரணம் ‘அ’ வாக இருந்திருக்கலாம்.
அ. விசுவாசிகளானார்கள்.
ஆ. பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள்
இ. அந்நிய பாஷை பேசினார்கள்.
இன்னொரு உதாரணம்: ‘சபைக்கு மக்கள் குறைவாக வருவதற்கு போதகரின் மனஉளைச்சலே காரணம்.’
அ. போதகரின் மனஉளைச்சல்
ஆ. மக்கள் வருகை குறைவு
முடிவு: மக்கள் வருகைக்குறைவுக்கு போதகரே காரணம்.
இது தவறான தர்க்கம். போதகரின் மனஉளைச்சலுக்கும், மக்கள் வருகை குறைவிற்கும் சபையில் வேறு விஷயங்கள் காரணமாக இருந்திருக்கலாம்.
3. மோசமான வாதம்
‘அவர் நல்ல பிரசங்கியாக இருக்க முடியாது ஏனெனில், அவர் கல்வினிசத்தை நம்புகிறார்.’
கூற்று – அவர் பிரசங்கி
கூற்று – அவர் கல்வினிஸ்ட்
முடிவு – அவர் நல்ல பிரசங்கி அல்ல.
மேலே காணப்படும் முக்கூற்றில் ஒன்று இன்னொன்றுக்குக் காரணமல்ல, இது மோசமான வாதம். இதில் ஒன்று இன்னொன்றைத் தீர்மானிக்கவில்லை.
4. நல்ல வாதம்
ஒருவரின் தனிப்பட்ட குறைபாடுகள் நாம் வாதம் செய்யும் பொருளோடு தொடர்புடையதாக இருக்கும்போது அவரை எதிர்த்துக் கருத்துச் சொல்லுவதில் தவறில்லை. இயேசு பரிசேயர்களைத் தாக்கியதற்குக் காரணம் அவர்களுடைய நடவடிக்கைகளோடு முரண்பாடுடையதாக அவர்களுடைய போதனை இருந்தது.
உதாரணம்: நீதியற்ற வாழ்க்கை வாழ்ந்த பரிசேயர்கள், மற்றவர்களுடைய செயல்களை நீதியற்றதாகக் குறைகண்டார்கள். அவர்களுடைய போதனை முரண்பாடான கருத்துக்களின் அடிப்படையிலானது.
5. இலக்கணத்தையும், வார்த்தையையும் ஆராயாமல் முடிவுக்கு வருவது
ஆதியாகமம் 4:3
சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.
காயின் கர்த்தருக்குக் ‘காணிக்கை’ கொண்டுவந்தான். பொதுவாகவே இதைச் சபைக்குக் கொடுக்கவேண்டிய காணிக்கையாக தமிழ்ப் பிரசங்கிகள் விளக்குவார்கள். அந்த வார்த்தையையும், அது காணப்படும் வசனப்பகுதியின் சந்தர்ப்பத்தையும் ஆராயாததால் இப்படி அநேகர் விளக்குகின்றனர். இது தவறான தர்க்கம். வார்த்தைகளைப் பற்றித் தவறான முடிவுக்கு வந்து விளக்கம்கொடுப்பது தவறான தர்க்கம்.
6. முகந்தெரியாதவர்களை ஆதாரமாகக் காட்டுவது
‘இவ்வுலகப் பெண்களைத் திருமணம் செய்தவர்கள் தேவதூதர்கள் என்று எல்லா இறையியல் வல்லுனர்களும் சொல்லுகிறார்கள்.’
இதில் யார் அந்த இறையியல் வல்லுனர்கள்? பிரசங்கி அதை விளக்குவதில்லை. இது தவறான முறை.
7. ஒரு விஷயத்தை நிரூபிக்காமல் அதைப் பின்பற்றுவதால் ஏற்படும் மோசமான பாதிப்பைச் சுட்டிக்காட்டுதல்.
‘திருநங்கைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சமுதாயத்தில் கிறிஸ்தவ சபையாகச் செயல்பட முடியாது.’ இதில் கிறிஸ்தவ சபைக்கு ஆபத்து வரும் என்பது ஒரு நம்பிக்கையினால் ஏற்படும் விளைவாக சொல்லப்படுகிறது. அந்த விளைவைத் தர்க்கிப்பவர் அதற்குக் காரணமாக அமைவதாகக் காட்டும் திருநங்கைகள் பற்றிய உண்மையை வேதத்தில் இருந்து முன்வைப்பதில்லை.
இன்னொன்று, ‘படைப்பை நீ நம்பக்கூடாது ஏனென்றால், அதை நம்பினால் நீ கட்டுக்கதைகளையே நம்புகிறாய், உண்மையை அல்ல.’
இதில் ஒன்று இன்னொன்றுக்குக் காரணமல்ல. படைப்பை நம்புவதற்கும் கட்டுக்கதைகளை நம்புவதற்கும் தொடர்பில்லை.
8. பயமுறுத்தலால் தர்க்கிப்பது
‘முக அலங்காரம் செய்துகொண்டால் நிச்சயம் நரகத்திற்குப் போவாய்’
கூற்று – முக அலங்காரம் செய்வது தவறு
கூற்று – அதனால் நரகத்திற்குப் போவாய்
இதில், பயமுறுத்தலுக்கும் முக அலங்காரத்துக்கும் தொடர்பில்லை.
இன்னொன்று, ‘டிரம்புக்கு வாக்களிக்காவிட்டால் கிறிஸ்தவர்கள் வெகுவிரைவில் அவர்களுடைய விசுவாசத்திற்கெதிரான துன்புறுத்தல்களைச் சந்திக்கும் நிலைவரும்’
கூற்று – டிரம்ப் கிறிஸ்தவத்தை ஆதரிக்கிறார்
கூற்று – டிரம்பை ஆதரித்தால் கிறிஸ்தவம் பாதுகாக்கப்படும்
முடிவு – டிரம்ப்புக்கு வாக்களிக்காவிட்டால் கிறிஸ்தவர்களுக்கு துன்பம் ஏற்படும்
இந்த பயமுறுத்தலுக்கும் டிரம்புக்கு வாக்களிக்காமல் போவதற்கும் தொடர்பில்லை.
9. பரிதாபத்தைப் பயன்படுத்திப் போதகரோடு ஒத்துப்போகும்படி தர்க்கிப்பது.
‘நான் மாதக் கணக்கில் கட்டடத் திட்டத்திற்காக உழைத்திருக்கிறேன்; இந்தத் திட்டம் உங்களுக்கு நல்லதாகப்படும் என்று நம்புகிறேன்.’ திட்டம் நல்லதா இல்லையா, என்பதை முடிவு செய்யாமல் அதற்கு உழைத்த காலத்தை நினைவுபடுத்தி (பரிதாபத்தை முன்வைத்து) திட்டத்தை ஒத்துக்கொள்ளும்படி வலியுறுத்துவது. ‘நான் பத்து வருடமாக சபைக்கு உழைத்திருக்கிறேன்; நான் சொல்வது எப்படித் தப்பாகிவிடும்’ போதகரின் உழைப்புக்கும், அவர் சொல்லும் விஷயத்திற்கும் தொடர்பில்லை.
10. வெகுஜன வரவேற்பை வைத்து தர்க்கிப்பது
‘கிறிஸ்தவர்கள் அனைவருமே திரித்துவத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்’ உண்மைதான், ஆனால் அதுவல்ல திரித்துவம் உண்மை என்பதற்கான ஆதாரம்.
இன்னொன்று ‘பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் இந்தியர்கள் கேவலமாக நடத்தப்பட்டார்கள் என்பது எல்லோருக்குமே தெரிந்த உண்மை.’ யார் இந்த எல்லோரும்? இதற்கு ஆதாரம் எது? இந்த இரண்டிலும் வெகுஜனக் கணிப்பு ஒரு விஷயத்திற்கு ஆதாரமாகிவிடாது.
11. ஒரு விஷயத்தை நிரூபிக்க உணர்ச்சிகள் மற்றும் கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு தர்க்கிப்பது.
‘சிந்திக்கும் மக்கள் நிச்சயம் கருக்கலைப்பை ஆதரிப்பார்கள்’
இதில், ஆதரிக்காதவர்கள் சிந்திப்பவர்கள் அல்ல என்ற எண்ணம் உண்டாக்கப்படுகிறது.
12. பொதுவானதில் இருந்து குறிப்பிட்ட ஒன்றை வலியுறுத்துவது (Deduction, Syllogism) சிலஜிசம்.
இரண்டு கூற்றுகளில் இருந்து இறுதி முடிவுக்கு வருவதே சிலஜிசம்.
உதாரணம்:
பிரதான கூற்று – எல்லாப் பாலூட்டிகளும் (mammal) மிருகங்கள்
குறிப்பிட்ட கூற்று – எல்லா யானைகளும் பாலூட்டிகள்
முடிவு – எல்லா யானைகளும் மிருகங்கள்
அரிஸ்டோட்டில் பயன்படுத்திய சிலஜிசம்
பிரதான கூற்று – மனிதர்கள் நிலையற்றவர்கள்
குறிப்பிட்ட கூற்று – சாக்கிரடீஸ் ஒரு மனிதர்
முடிவு – சாக்கிரடீஸ் நிலையற்றவர்
தர்க்கம் குறிப்பிட்ட அடிப்படை விதிகளைக் கொண்டிருக்கிறது. எதையும் நாம் அறிந்துணர்வதற்கு இந்த அடிப்படை விதிகள் அவசியம். இவையே அறிவுக்கான அடித்தளம். இந்த அடிப்படை விதிகளைப் பின்பற்றாவிட்டால் செய்திப் பரிமாறலுக்கு வழியில்லை. உண்மையில் தர்க்கத்திற்கான இந்த அடிப்படை விதிகளைப் பயன்படுத்தாவிட்டால் நான் விளக்கிக் கொண்டிருக்கும் எதையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. இந்த அடிப்படை உண்மைகளை ஓரளவுக்காவது ஏதோவொருவிதத்தில் பின்பற்றுவதால்தான் நீங்கள் நான் விளக்குவதைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
இந்த அடிப்படை விதிகள் உருவாக்கப்பட்டவையல்ல; கண்டுபிடிக்கப் பட்டவைகள். இவையே இந்த உலகத்தை அடிப்படை விதிகளாக ஆண்டு வருகின்றன. இவற்றில் நான்கு முக்கியமானவைகள்.
- முரண்பாடின்மை (The law of non-contradiction)
- அடையாளம் காணுதல் (The law of identity)
- நடுவில் இருப்பதாகத் தோற்றமளிப்பதை அகற்றுதல் (The Law of excluded middle)
- பகுத்தறிவுள்ள முடிவு (The law of rational inference)
தர்க்கத்தின் இந்த விதிகளைப் பின்பற்றாமல் சரியானவிதத்தில் சிந்திக்க முடியாது. தர்க்கம் என்பது, உங்களுடைய எண்ணங்களை ஒழுங்கோடு சீரமைப்பது. ஒழுங்கில்லாவிட்டால் அர்த்தம் இல்லாமல் போய்விடும், செய்திப்பரிமாறலுக்கும் இடம் இருக்காது. இனி இவை ஒவ்வொன்றையும் விளக்கமாகக் கவனிப்போம்.
1. முரண்பாடின்மை (The law of non-contradiction)
ஒரே நேரத்தில் ஒன்று இன்னொன்றாகவும் இருக்கமுடியாது. B, B யாகவும் B யாக இல்லாமலும் ஒரே நேரத்தில் ஒரே உறவில் இருக்கமுடியாது. ஒரே நேரத்திலும், உறவைப் பொறுத்தவரையிலும் கைக்கடிகாரம், கைக்கடிகாரமாகவும் மொபைல் போனாகவும் இருக்கமுடியாது. ஒரே சமயத்தில் அது ஒரு பொருளாகத்தான் இருக்கமுடியும். அப்படியில்லாவிட்டால் அது முரண்பாடானது. ஒரு நாய் ஒரு சமயத்தில் நாயாக மட்டுமே இருக்க முடியும். அதனால் நாயாகவும், பூனையாகவும் இருக்கமுடியாது. இது இந்த விதிக்கு முரணானது; இயற்கைக்கு மாறானது. ஒருவர் இதை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பாமலிருந்தால் அது குழப்பத்தில் போய் முடியும். ஒருவர், “எல்லா மதங்களும் ஒன்றுதான்” என்றும் “எல்லா மதங்களும் ஒன்றல்ல” என்றும் ஒரே சமயத்தில் சொல்லமுடியாது. அப்படிச் சொல்லுவது பொருளற்றது. ஒரு சமயத்தில் ஒன்று அதுவாக மட்டுமே இருக்கமுடியும். அது ஒன்றாகவும், இன்னொன்றாகவும் இருக்கமுடியாது. இந்த விதி தர்க்கத்தில் மிக முக்கியமானது.
இந்த விதியை வேதத்திற்குப் பயன்படுத்தினால், சத்தியம் ஒன்றாகத்தான் இருக்கமுடியும். அது சத்தியமாகவும், அதேநேரம் சத்தியத்துக்குப் புறம்பானதாகவும் இருக்க முடியாது. கர்த்தர் கர்த்தர் மட்டுமே, அவர் கர்த்தராகவும் இன்னொன்றாகவும் இருக்கமுடியாது. கர்த்தர் எங்குமிருக்கிறார் என்கிறது வேதம். ஒரே சமயத்தில் அவரால் எல்லா இடங்களிலும் இருக்க முடியும். அது அவருடைய குணாதிசயங்களில் ஒன்று. ஆனால், இந்து மதம் சொல்லுவதுபோல் அவர் தூணிலும், துரும்பிலும் இருக்கமுடியாது. அது அவருடைய குணாதிசயத்துக்கு மாறானது. தன்னுடைய குணாதிசயத்துக்கு மாறானதை அவர் செய்யமுடியாது; செய்யமாட்டார். அப்படிச் செய்வது அவருடைய குணாதிசயத்தை மாசுபடுத்திவிடும். அவருடைய பிரசன்னம் எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் இருக்கமுடிவதற்கும், அவர் படைக்கப்பட்ட பொருட்களில் இருப்பதும் ஒன்றல்ல. இரண்டாவது கர்த்தரின் குணாதிசயத்துக்கு முரணானது. கர்த்தர் பரிசுத்தமானவராகவும், பரிசுத்தமற்றவராகவும் இருக்கவழியில்லை. அவர் எப்போதும் முழுப்பரிசுத்தத்தோடிருக்கிறார்.
தர்க்கத்தின் இந்த அவசியமான விதியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தர்க்கம் செய்வதில் பொருளில்லை. இதை ஏற்றுக்கொள்ளாதவர்களோடு சம்பாஷனையில் ஈடுபட முடியாது. இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கர்த்தர் இயற்கையில் ஏற்படுத்தியிருக்கும் விதியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இந்த விதியை வேதத்திலும் காண்கிறோம். அதைக் கர்த்தரே ஏற்படுத்தியிருக்கிறார்.
ஒரு மனிதன் உயிரோடும், அதே நேரம் மரித்தும் இருக்கமுடியாது. அது இந்த விதிக்கு முரணானது. அதேபோல் மனிதன் தன் குணாதிசயத்துக்கு முரணாக ஒரே நேரத்தில் இரண்டுவிதமாக இருக்க முடியாது. அவனால் ஒரு சமயத்தில் ஒரு இடத்தில் மட்டுமே இருக்கமுடியும். இந்த விதியை நாம் மாற்றமுடியாது. எங்கேயாவது உருண்டையாக இருக்கிற சதுரத்தைக் கண்டிருக்கிறீர்களா? முடியாது! ஒரே சமயத்தில் அந்த இரண்டும் ஒன்றில் இருக்கமுடியாது; அது முரண்பாடானது.
வேதம் படிக்கிறபோதும், அதை விளக்குகிறபோதும், இந்த விதிக்கு எதிராக நாம் பேசவோ, விளக்கவோ கூடாது. எத்தனையோ பிரசங்கிகள் இந்த விதியை மறந்து விளக்கமளிப்பார்கள்.
இந்த விதியை எவரும் மீறக்கூடாது. வேதத்தில் அநேக முரண்பாடுபோல் தோன்றும் உண்மைகள் காணப்படுகின்றன. ஆனால், வேதத்தில் முரண்பாட்டிற்கு இடமில்லை. உதாரணம்: கர்த்தரின் இறையாண்மையும், சுவிசேஷம் சொல்லுவதும் முரண்பாடுபோல் தோன்றும் இரு உண்மைகளே தவிர, முரண்பாடானவையல்ல. திரித்துவம் முரண்பாடானதில்லை. தன்மையைப் பொறுத்தவரையில் கர்த்தர் ஒருவரே, அதேநேரம் அவர் மூன்று ஆள்தத்துவங்களாக இருக்கிறார். அவர் ஒரே சமயத்தில் ஒருவராகவும், மூன்று ஆள்தத்துவங்களாகவும் இருக்கிறார் என்று வேதம் சொல்லவில்லை. கர்த்தர் தன் தன்மையைப் (Essence) பொறுத்தவரையில் ஒருவர், ஆனால் ஆள்த்துவத்தைப் பொறுத்தவரையில் (person) மூவர். கர்த்தர் தன் தன்மையில் ஒருவர் என்றும் ஆள்தத்துவத்திலும் ஒருவர் என்றும் நாம் சொல்வோமானால் அது கர்த்தரைப் பற்றிய முரண்பாடான போதனையில் போய் முடியும். அது போலிப் போதனை.
ஆகவே, இந்த முரண்பாடின்மையாகிய விதியை நாம் எப்போதும் பின்பற்றவேண்டும். இது தர்க்கத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று.
இந்த இடத்தில் நம்முடைய விசுவாசம் தர்க்கத்திற்கு எதிரானதல்ல என்பதை உணரவேண்டும். இரண்டும் இணைந்தே பயணம் செய்கின்றன. விசுவாசத்தைத் தர்க்கத்திற்கு எதிரானதாகக் காட்ட முயல்வதே இந்த அடிப்படை விதிக்கு முரணான செயல். விசுவாசமில்லாவிட்டால் தர்க்கம் பயனற்றதாகிவிடுகிறது. தர்க்கத்திற்கு விசுவாசம் இடங்கொடாவிட்டால் அது கண்ணில்லாமல் காட்டில் திரிவதுபோலாகிவிடும்; முரண்பாடுகளை அது உருவாக்கும். பலர் முரண்பாடான வேதவிளக்கங்களை அவை எல்லாமே உண்மையானவை என்று ஏற்றுக்கொள்ளுவதில் இதை நாம் காணலாம்.
2. அடையாளம் காணுதல் (The law of identity)
எவராது ஒரு பொருளைக் காட்டி இது கைக்கடிகாரம் என்று கூறினால், அது கைக்கடிகாரம் மட்டுமே. அது வேறு எதுவாகவும் இருக்கமுடியாது. அது ஒருகோப்பையாகவோ, டென்னிஸ் மட்டையாகவோ, கிரிக்கெட் பெட்டாகவோ இருக்கமுடியாது. அது வேறெதுவுமாக இருக்குமானால், நாம் உடனடியாகவே பகுத்தறிவற்ற irrational நிலையை அடைந்து விடுகிறோம். ஆகவே, நாம் எதைச் சொல்லுகிறோம் அதையே நம்புகிறோம். அதனால்தான் எந்தத் தர்க்கத்திலும் நாம் வார்த்தைகளைச் சரியாக விளக்குவது அவசியமாகிறது. ஆகவே, நாம் சொல்ல வருகின்றதைத் தெளிவாகத்துல்லியமாக, எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லாமல் பகுத்தறிவுக்கேற்ற வகையில் விளக்கவேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் உங்கள் நண்பரிடம் நான் மெரீனா பீச்சுக்குப் போகிறேன் என்று சொன்னால், அவர் நீங்கள் சினிமா பார்க்கப் போகிறீர்கள் என்று நினைத்துக்கொள்வதில் போய்முடியும். அடையாளம் காணுதலாகிய இந்த விதி நாம் பகுத்தறிவற்ற முறையில் தர்க்கம் செய்வதை, விளக்குவதைத் தவிர்க்க உதவுகிறது. இன்று அநேகர் வார்த்தைகளைப், பதங்களை, ஒரு ஐடியாவை விளக்குவதற்கு பெருங்கஷ்டப்படுகிறார்கள்.
3. நடுவில் இருப்பதாகத் தோற்றமளிப்பதை அகற்றுதல் (The Law of excluded middle)
இந்த விதி ஒரு பொருள் இதுதான் அல்லது இன்னொன்று என்பதைச் சுட்டிக்காட்டும். அதாவது, எதுவுமே ஏதாவதொன்றாக இருக்கவேண்டும். அது இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கமுடியாது. இரண்டில் ஒன்றாக இல்லாமல் நடுவிலோ, இரண்டுங் கலந்ததாகவோ இருக்கமுடியாது. தத்துவவாதியான ஹெகல் இந்தவிதியை ஆணித்தரமாக எதிர்த்திருக்கிறார்.
4. பகுத்தறிவுள்ள முடிவு (The law of rational inference)
இதை ஒரு சிலஜிசத்தில் (முக்கூற்று முடிவு விதிமுறை) இருந்து விளங்கிக்கொள்ளலாம்.
அ. எல்லா மனிதர்களும் நிலையானவர்களல்ல
ஆ. சாக்கிரடீஸ் ஒரு மனிதர்
இ. சாக்கிரடீஸ் நிலையானவரல்ல
நாம் எல்லாவற்றையும் தெளிவாகப் பூரணமாக அறிந்துவைத்திருக்கவில்லை. நமது அறிவும் பூரணமானதல்ல. இருந்தபோதும் நாம் நன்றாக ஆராய்ந்து படித்து நாம் சொல்ல வருகின்றவற்றைத் தெளிவாக விளக்கவேண்டிய கடமை நம்முன் இருக்கிறது. வார்த்தைகளையும், உண்மைகளையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளக்கவேண்டிய பொறுப்பு இருக்கிறது.
அதனால், ஒரு தர்க்கரீதியிலான சிலஜிசத்தின் மூலம் நாம் முடிவுகளைத் தீர்மானிக்கவேண்டியிருக்கிறது. அதற்கு அந்த சிலஜிசத்தின் எல்லாப் பாகங்களும் ஒன்றோடொன்று ஒத்துப்போய் உண்மையானவையாக இருக்கவேண்டும். அவை அனைத்தும் இணைந்து செயல்படுகின்றன. பகுத்தறிவுள்ள முடிவு என்ன சொல்கிறதென்றால், ‘அ’ வும் ‘ஆ’ வும் சரியானவையாக இருந்தால் ‘இ’, மார்டின் லூத்தர் சொன்னதுபோல ‘நிராகரிக்கமுடியாத தர்க்கம்.’ இந்த சிலஜிசம் சரியாக இணைந்துபோகாவிட்டால் அது தவறான தர்க்கமாகிவிடும். இந்த முறையைப் பயன்படுத்தாவிட்டால் பேச்சும், செய்திப் பறிமாறலும் மிகவும் கடினமானதாகிவிடும். இது கர்த்தரிடமிருந்தே வருவதால், இதற்கு நாம் கட்டுப்பட வேண்டியதுபோல அவரும் கட்டுப்படுகிறார். இந்த விதிகள் நம்மை வழிநடத்த ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வகையில் தர்க்கரீதியில் முடிவுகள் எடுப்பது நம்மை முரண்பாடுள்ள பேச்சைப் பேசுவதிலும், முரண்பாடுள்ளவர்களாக நடந்துகொள்வதிலும் இருந்து நம்மைப் பாதுகாக்கும். அநேகர் முரண்பாட்டின் மொத்தஉருவாக இருந்து வாழ்கிறார்கள். அது கர்த்தர் நம்மைப் படைத்திருக்கும் விதத்திற்கே முரணான வாழ்க்கையாகும்.
அநேகர் ஆர்மீனியனிசமும், கல்வினிசமும் இணைந்து வாழமுடியும் என்று சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த இரண்டு தத்துவங்களும் ஒன்றுக்கொன்று அடிப்படையில் முரணானவை. இவற்றில் ஒன்று மட்டுமே சரியானது என்பதை ஒரு சிலஜிசத்தைப் பயன்படுத்தியே புரிந்துகொள்ளலாம். ஆனால், இரண்டையும் இணைத்துப் பார்க்கவும், அல்லது இரண்டையும் கலந்து பயன்படுத்தவும் முனைகிறவர்கள் முரண்பாடுள்ளவர்களாக இருக்கிறார்கள். கர்த்தர் முரண்பாட்டின் தேவனல்ல. அவருடைய வார்த்தையில் முரண்பாட்டிற்கு இடமில்லை. சத்தியம் ஒன்றே, அதற்குப் பலமுகங்கள் இல்லை என்று நான் பல தடவைகள் விளக்கியிருக்கிறேன். தர்க்கம் நம்மைச் சரியான வழியில் சிந்திக்க உதவுகிறது. முரண்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ள துணை செய்கிறது.
பிரசங்கம் அல்லது வேதபோதனை அளிக்கிறவர்கள் இனியாவது உங்களுடைய கூற்றுக்களும், வாதங்களும் தர்க்கரீதியில் நம்பக்கூடியவையாக, வேதபூர்வமானவையாக அமைந்திருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து விளக்குங்கள். நம் பிரசங்கங்களும், போதனைகளும், ஆத்துமாக்களைக் கண்ணைக்கட்டிக் காட்டில்விட்டதுபோல் இருந்துவிடக்கூடாது. தர்க்கம் அப்படிச் செய்துவிடாமலிருக்க நமக்கு உதவுகிறது.
வேதத்தில் தர்க்கம்
இந்த உலகத்தில் இயேசுவைப்போல சிறந்த தர்க்க ஞானியை எவரும் பார்த்திருக்க முடியாது. (தர்க்கவாதி – Logician). மேலெழுந்தவாரியாக வேதத்தை வாசிக்கும்போது அது நம் கண்களுக்குப் புலப்படாமல் போகலாம். ஆழ்ந்து சிந்தித்துக் கவனத்தோடு வாசித்துப் பார்த்தால் அவருடைய அருமையான தர்க்கரீதியிலான சம்பாஷனைகளையும் போதனைகளையும் உணரமுடியும்.
இந்த இடத்தில் இயேசுவிடமிருந்து பிரசங்கத்தில் மட்டுமல்லாமல், சாதாரண சம்பாஷனையிலும், வாதங்களின்போதும் அறிவுபூர்வமான சிலஜிசத்தை (அதாவது, இரண்டு அசைக்கமுடியாத உண்மைகளின் அடிப்படையில் ஒரு நிராகரிக்க முடியாத முடிவுக்கு வருவது) என்பதை எப்படிப் பயன்படுத்துவது, தர்க்கரீதியில் எப்படி வாதம் செய்வது என்பதைக் கற்றுக்கொள்ள முடியும். இதையே நாம் அப்போஸ்தலன் பவுலிடமும் காண்கிறோம்.
இதுவரை நாம் கவனித்திருப்பவற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய உண்மை – ஒருபோதும் சிந்திக்காமலும், ஆராயாமலும் பேசவோ, போதிக்கவோ, பிரசங்கம் செய்யவோ கூடாது. பேச்சு பொருள்ளதாக இருக்கவேண்டும். சம்பாஷனைக்குரிய இலக்கணங்களைக் கொண்டிருக்க வேண்டும். தர்க்கரீதியில் அமைந்திருக்க வேண்டும். முட்டாள்தனமான சிந்தனையும், பேச்சும், வாதமும் பிரசங்கிக்கிறவர்களிடமும், போதகர்களிடமும் இருக்கக்கூடாது. அதைத்தான் வேதத்தில் இருந்து கவனிக்கப்போகிறோம்.
அப்போஸ்தலர் 19:8ஐக் கவனியுங்கள். இதில் அப்போஸ்தலனாகிய பவுல் எந்தவிதமாய்ப் பிரசங்கம் செய்தார் என்று விளக்கப்பட்டிருக்கிறது.
பின்பு பவுல் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக் குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டுவந்தான்.
And he went into the synagogue and spoke boldly for three months, reasoning and persuading concerning the things of the kingdom of God.
தமிழ் வேதத்தில் இந்த வசனத்தில் முக்கியமான இரண்டு வார்த்தைகள் சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை. முதலாவது வார்த்தையான ‘சம்பாஷனைபண்ணி’ என்றிருப்பது தர்க்கித்து என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கவேண்டும். அது ஆங்கிலத்தில் reasoning என்றிருக்கிறது. சம்பாஷனை செய்வதும், தர்க்கம் செய்வதும் ஒன்றல்ல. இரண்டாவது வார்த்தை ‘புத்திசொல்லிக்கொண்டு’ என்பது. இதுவும் தவறான மொழிபெயர்ப்பு. இந்த வார்த்தை, ஒருவர் நம்பும்படியாக அவரை நிர்ப்பந்தித்து வாதாடுவது என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. வெறுமனே புத்திசொல்லுவதை இது குறிக்கவில்லை.
இந்த வசனத்தை விளக்க நான் சாதாரணமாகவே பயன்படுத்தவேண்டிய எளிமையான தர்க்கத்தைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளப் போகிறேன். அதைத்தான் நீங்களும் வேதத்தை ஆராயும்போது செய்யவேண்டும். இந்த எளிமையான தர்க்கத்தைக்கூட அநேகர் பயன்படுத்துவதில்லை. சிந்தித்து தர்க்கத்தைப் பயன்படுத்துகிறபோது நான் இந்த வசனத்தில் எதைக் காண்கிறேன் என்பதை விளக்கப்போகிறேன்.
- இந்த வசனம் முதலில் பவுல் என்ன செய்தார் என்பதைச் சொல்லுகிறது. பவுல் பிரசங்கித்ததாகப் பொதுவாகச் சொல்லுகிறது.
- அந்தப் பிரசங்கத்தை அவர் எப்படிச் செய்தார் என்று சொல்லுகிறது – தைரியமாய்ச் செய்தார்.
- பவுல் பிரசங்கிக்கப் பயன்படுத்திய முறைகளைச் சொல்லுகிறது:
(அ) தர்க்கம் செய்தும் (Reasoning)
(ஆ) நம்பி ஏற்றுக்கொள்ளும்படியாக வலியுறுத்தி வாதிட்டும் (Persuading)
இதிலிருந்து பவுல் ஆவியில் தைரியமாகப் பிரசங்கித்தபோதும் இரண்டுவித பிரசங்க முறைகளைப் பயன்படுத்தி சத்தியத்தை அவர்கள் முன்வைத்திருப்பதைக் கவனிக்கிறோம். சத்தியத்தைத் தர்க்கத்தின் மூலம் அவர்கள் முன்வைத்தும், சத்தியத்தை அவர்கள் நம்பும்படியாக வலியுறுத்தி ஆணித்தரமாக வாதம் செய்தும் பிரசங்கித்திருக்கிறார். இதைத்தான் பிரசங்கிகள் பின்பற்றவேண்டியவர்களாக இருக்கிறார்கள். பவுல் உப்புச்சப்பில்லாமல் பிரசங்கம் செய்யும்படியாகக் கல்வி அறிவற்றவராக, சிந்திக்கத் தெரியாதவராக, தர்க்கத்தை அறிந்திராதவராக இருக்கவில்லை. அவர் கமாலியேலிடம் நியாயப்பிரமாணத்தையும், கல்வியையும் கற்றவர். பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தவர். இயேசு கிறிஸ்துவுக்கு அடுத்தபடியாக தர்க்கித்துப் பிரசங்கிப்பதில் மிகச் சிறந்தவராக இருந்திருக்கிறார். அதை அவருடைய புதிய ஏற்பாட்டு எழுத்துக்களில் வெளிப்படையாகவே காணலாம்.
இன்னுமொரு உதாரணமாக மாற்கு 2:5-12 வரையுள்ள வசனங்களைக் கவனியுங்கள்.
இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்: இவன் இப்படி தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்குமுன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
இந்தப் பகுதியில் திமிர்வாதக்காரனைப்பார்த்து இயேசு சொன்ன வார்த்தைகளைக் கேட்ட வேதபாரகர் அவர் தேவதூஷணம் சொல்லுவதாக தங்களுக்குள் எண்ணிக்கொண்டார்கள். அது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. இந்த இடத்தில் அவர்களோடு இயேசு தர்க்கவாதம் செய்கிறார். அவர்களைப் பார்த்து அவர், ‘எது எளிது?’ என்று கேட்கிறார். அது அவர் பயன்படுத்தப்போகும் தர்க்க சிலஜிசத்துக்கு ஆரம்பமாக இருக்கிறது. அவர் என்ன கேட்கிறார் என்பதை வேதபாரகர் நிச்சயம் புரிந்துகொண்டிருந்தார்கள். பூமியில் பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரமுண்டு என்பதுதான் அவருடைய வாதம். அதை நிரூபிக்க அவர் சிலஜிசத்தைப் பயன்படுத்துகிறார்.
- இயேசுவால் அற்புதங்கள் செய்யமுடியுமானால், பாவத்தை மன்னிக்கக்கூடிய தேவகுமாரன் அவர் என்பது உண்மை.
- மனிதகுமாரனாகிய இயேசுவால் அற்புதங்கள் செய்யமுடியும்.
- ஆகவே, மனிதர்களின் பாவங்களை மன்னிக்கக்கூடிய தேவகுமாரன் இயேசு கிறிஸ்து.
ஆகவே, தவறாகச் சிந்தித்து இயேசு தேவகுமாரன் இல்லை என்று கருதிக்கொண்டிருந்த வேதபாரகரை அவர் சரியாகச் சிந்திக்கும்படி வற்புறுத்துகிறார். எந்த மனிதனும் இன்னொருவரைப் பார்த்து ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது’ என்று சொல்லிவிடுவது எளிது. அப்படிச் செய்வதால் ஒருவரின் பாவம் போய்விடுவதில்லை. ஒருவரின் பாவம் அவரால் மன்னிக்கப்பட்டது என்பதற்கு அதற்கு மேல் ஆதாரம் தேவை. அந்த ஆதாரம் இயேசுவிடம் இருந்தது. அவர் தேவகுமாரனாகவும், மனிதகுமாரனாகவும் இருந்ததும், அற்புதங்களைச் செய்யக்கூடியவராக இருந்ததும் அவர் பாவத்தை மன்னிக்கக்கூடிய அதிகாரம் உள்ளவர் என்பதை நிரூபிக்கின்றன. அதனால்தான் அவர் பூமியில் பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை வேதபாரகர் உணர வேண்டும் என்று சொன்னார் (10).
உன் பாவம் மன்னிக்கப்பட்டது என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடாமல் இயேசு திமிர்வாதக்காரனின் திமிர்வாதத்தை அற்புதமாகக் குணப்படுத்தி வேதபாரகரின் தவறான தர்க்கத்தைத் தன் தர்க்கத்தால் தவிடுபொடியாக்கினார்.
இந்தப் பகுதியைப் பொறுத்தவரையில் பாடம் – இயேசு பயன்படுத்திய தர்க்கத்தை அப்படியே நாம் பயன்படுத்த வேண்டும் என்பதல்ல. அதுவல்ல நாம் படிக்கும் பாடம். அதைக் காப்பி அடிப்பதற்காக இந்தப் பகுதி கொடுக்கப்படவில்லை. இது தரும் போதனை – சம்பாஷனையிலும், போதனையிலும் சரியான சிந்தனையையும், தர்க்கத்தையும் கவனத்தோடு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான். இயேசு தர்க்கவாதம் செய்தார். அதை வேதபாரகர்கள் புரிந்துகொண்டார்கள். இயேசு அந்த இடத்தில் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களுக்குத் தான் யார் என்று தெரியவைத்தார். அதற்கு அவர் சரியான தர்க்கத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்பதை நாம் உணர வேண்டும்.
இன்னுமொரு உதாரணத்தை மத்தேயு 22:23-33ல் காணலாம்.
உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையத்தினம் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான். அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில், அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்களெல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்; மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார். ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
இந்தப் பகுதியில் சதுசேயர் ஒரு சிக்கலான சிலஜிசத்தை அவர்களுடைய கற்பனைக் கதைமூலம் இயேசுவின் முன் வைத்தார்கள். 24-28 வரையுள்ள வசனங்களில் அவர்கள் அவர் முன் வைத்த சிலஜிசத்தை புத்தியற்ற வாதமாக நாம் நினைத்துவிடக்கூடாது. சதுசேயருக்கு தர்க்கம் நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால், அதை இந்த இடத்தில் அவர்கள் தவறாகப் பயன்படுத்தினார்கள். அவர்களுடைய சிலஜிசத் தர்க்கம் என்ன?
- மரணத்திற்கும் பின் வாழ்விருந்தால், மறுவாழ்வில் திருமணம் தொடரும்.
- மறுவாழ்வில் திருமணம் இல்லையென்றால் எவரும் உயிரோடிருக்க முடியாது.
- அதனால், இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு வேறுலக வாழ்க்கை இல்லை.
மரணத்திற்குப் பின் திருமணம் தொடரலாம் என்ற சதுசேயரின் வாதத்திற்குக் காரணம் அவர்களுடைய அனுமானமான மரணத்திற்கு பின் வரும் உலகில் நிச்சயம் திருமணம் தொடரும் என்பதே. உண்மையில் அவர்கள் மரணத்திற்கும் பின் வாழ்விருக்கிறது என்பதை நம்பவில்லை. உயிர்த்தெழுதல் இருக்கிறது என்பதை ஆணித்தரமாக இயேசுவின் வாயால் சொல்லவைக்க இந்த சிலஜிசத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் இயேசுவுக்கு சிக்கலேற்படுத்துவதாக அவர்கள் நம்பினார்கள். உயிர்த்தெழுதல் இல்லை என்று அவர் சொன்னால், பரிசேயர்களுக்கு அவர் மேல் கோபம் அதிகரிக்கும். உயிர்த்தெழுதல் இருக்கிறது என்று அவர் சொன்னால் சதுசேயர் அவர் மேல் ஆத்திரம் கொண்டு மக்களை அவருக்கெதிராகத் திருப்பப் பார்ப்பார்கள். இந்த தர்மசங்கடமான நிலைமையில் இயேசு உண்மையைத் தான் சொல்லவேண்டும். ஆனால், அதை அவர் சரியான சிலஜிசத்தைப் பயன்படுத்தி வேதபாரகரின் வாதத்தை முறியடிக்கிறார்.
29ம் வசனத்தில் அவர், வேதபாரகர்களுக்கு வேதவாக்கியங்கள் தெரியவில்லை என்பதை உணர்த்துகிறார். வேதத்தைக் கையில் வைத்திருந்தும் அதன் சத்தியங்களின் பொருள் தெரியாமல் அவர்கள் தவறான போதனைகளை உருவாக்கியிருந்தார்கள். இதை அதிரடியாக இயேசு அவர்களுக்கு உணர்த்துகிறார். அத்தோடு, நீங்கள் நினைக்கிறபடி அல்லாமல் பரலோகத்தில் எல்லோரும் தேவதூதர்களைப்போல இருப்பதால் இந்த உலகத்து உறவுகளுக்கு அங்கு இடமில்லை என்று விளக்கினார். அதற்குப் பின் அவர் 32ம் வசனத்தில் பழைய ஏற்பாட்டில் இருந்து ஒரு வசனத்தைப் பயன்படுத்தி உயிர்த்தெழுதல் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறார். ‘தேவன் ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார்’ (யாத்திராகமம் 3:6) என்பதே இயேசுவின் பதில். வெளிப்படையாக உயிர்த்தெழுதலை விளக்கும் எத்தனையோ வசனங்களை இயேசு பயன்படுத்தி உயிர்த்தெழுதலை நிரூபிக்காமல் வேதத்தில் அந்த உண்மை உள்ளடக்கமாகக் (இன்றியமையா நிலையில்) காணப்படும் வசனத்தைப் பயன்படுத்தி சதுசேயரின் வாயை அடைக்கிறார். ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுவுக்கும் தான் தேவனாக இருப்பதால் அவர்கள் இறந்தும் பரலோகத்தில் உயிர்வாழ்கிறார்கள் என்று இயேசு வெளிப்படுத்துகிறார். உயிர்த்தெழுதல் இல்லை என்றால் அவர்கள் ஜீவனோடிருக்கமுடியாது; இயேசுவும் அவர்களுக்குத் தேவனாக இருக்கமுடியாது. இயேசு தேவனாக இருப்பதோடு, அவர்களுக்கு அவர் தொடர்ந்து தேவனாக இருப்பதால் அவர்களும் உயிர்வாழ்கிறார்கள் என்பதே இயேசுவின் தர்க்கவாதம்.
மேலும் ஒரு உதாரணத்தைக் கவனிப்போம்.
மாற்கு 11:27-33.
அவர்கள் மறுபடியும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கையில், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு உத்தரவு சொல்லுங்கள், அப்பொழுது நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ, மனுஷரால் உண்டாயிற்றோ, எனக்கு உத்தரவு சொல்லுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார்; மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படவேண்டியதாயிருக்கும், எல்லாரும் யோவானை மெய்யாகத் தீர்க்கத்தரிசி என்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி, இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.
எந்த அதிகாரத்தில் நீர் செய்யும் செயல்களைச் செய்கிறீர்? என்று தன்னிடம் கேட்ட மதத்தலைவர்களிடம் இயேசு 29ம் வசனத்தில் ஒரு சிக்கலான சிலஜிசத்தை முன்வைக்கிறார்.
- யோவானின் ஞானஸ்நானம் பரலோகத்தைச் சேர்ந்ததானால், இயேசுவைப்பற்றிய யோவானின் போதனையை அவர்கள் நம்பவேண்டும். (யோவானின் போதனை மனித போதனையாக இருந்தால் அவர்கள் மக்களின் கோபத்தைச் சந்திக்க நேரும்).
- யோவானின் ஞானஸ்நானம் ஒன்றில் பரலோகத்தைச் சேர்ந்தது அல்லது மனிதர்களைச் சார்ந்தது.
- மதத்தலைவர்கள் ஒன்று, இயேசுவின் போதனையை நம்பவேண்டும், இல்லாவிட்டால் மனிதர்களின் கோபத்திற்கு ஆளாகவேண்டும்.
இயேசுவின் சிலஜிசத்தை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். இந்த இடத்தில் அந்த யூதத் தலைவர்களுக்கு இயேசுவின் பேச்சு புதிராகப் படவில்லை. அவர்களுக்கு அவருடைய தர்க்கரீதியான வாதம் தெளிவாகப் புரிந்திருக்கிறது. அதனால்தான் என்ன செய்வதென்று தெரியாமல் யோவான் எங்கிருந்து வந்தார் என்று எங்களுக்குத் தெரியவில்லை என்று பதிலளித்தார்கள். ஒன்று மட்டும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. யோவான் பரலோகத்தில் இருந்து வந்தார் என்று சொன்னால் இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது அவர்களுக்குப் பிடித்தமில்லாதது. யோவான் மனிதன் மட்டுமே என்று சொன்னால் மக்களுடைய கோபத்தைச் சந்திக்க நேரும். அதனால், தெரியாது என்று சொல்லித் தப்பிக்கப் பார்த்தார்கள்.
இவற்றில் இருந்து தன் பிரசங்கங்களிலும் போதனைகளிலும் இயேசு எத்தனை அருமையாகத் தர்க்கத்தைப் பயன்படுத்தி சத்தியத்தை ஆணித்தரமாக விளக்கியிருக்கிறார் என்பதை நாம் கவனிக்கவேண்டும். இயேசுவும் அப்போஸ்தலர்களும் இந்த விஷயத்தில் நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். காரணமில்லாமலா டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் ‘கனல் கக்கும் தர்க்கம்’ என்று பிரசங்கத்தை விளக்கியிருக்கிறார். அது நூற்றுக்கு நூறு உண்மை.
வார்த்தைக்கு வார்த்தை தெய்வீக வெளிப்படுத்தல்
வேதம் மட்டுமே கர்த்தரின் சித்தம், அது நம்பிக்கைக்குரியது என்று சொல்லும்போது அதற்குள் அடங்கிக்காணப்படும் அம்சங்களை நாம் அறியாமலும், உணராமலும் இருக்கமுடியாது. முக்கியமாக இந்த 21ம் நூற்றாண்டில் வேதம் பற்றிய சத்தியங்களில் நமக்கு ஆழமான அறிவும், நம்பிக்கையும் இருக்கவேண்டியது அவசியம். என்றுமில்லாதவகையில் வேதத்திற்கு இந்தக் காலங்களில் ஆபத்து உண்டாகியிருக்கிறது. அந்த ஆபத்து சபைக்குள்ளும், சபைக்கு வெளியிலும் காணப்படுகிறது. எதிரிகள் வேதத்தை சூழந்து நின்று அதை அழிப்பதற்கு முயற்சி செய்துவருகிறார்கள். இதை நம் காலத்து சமுதாயம் போகிற பாதையில் இருந்து தெரிந்துகொள்ளுகிறோம்.
இன்றைய மேலை நாட்டு சமுதாயம் சோதோம் காலத்தை நோக்கி வீறுநடை போட்டுப் போய்க்கொண்டிருப்பதை உணராத ஒருவன் கிறிஸ்தவன் என்று தன்னை அழைத்துக்கொள்ளுவதில் எந்தப் பயனுமில்லை. அந்தளவுக்கு சமுதாய இயந்திரத்தைப் பயன்படுத்தி கர்த்தரின் படைப்பை மாற்றி அமைக்கும் முயற்சியில் தாராளவாத சமுதாயம் முழுமூச்சோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. சகல அதிகாரங்களையும் எதிர்த்து, தன்னிச்சையாகத் தான் சுதந்திரமாக சிந்திக்கவும் நடந்துகொள்ளவும் மனிதன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறான். ஆண், பெண் பேதங்களை அடியோடு நீக்கவும், ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மனம்போன போக்கில் மாறவும், நன்மை, தீமை என்ற வேறுபாட்டை இல்லாமலாக்கவும், ஒழுக்கம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை மாற்றவும், தனியொருவனுக்குத் தன்னுரிமை, சமுதாய சீர்திருத்தம் என்ற பெயரில் வேதத்தில் கைவைக்கவும் மனிதன் துணிந்து இயங்கி வருகிறான். இதன் தாக்கங்கள் கீழைத்தேய நாடுகளில் இன்று தீவிரமாக இல்லாதிருந்தபோதும், அத்தாக்கங்கள் இந்நாடுகளில் தலைதூக்கப்போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பது தெரிகிறது. நம்மினத்துக் கிறிஸ்தவம் இதையெல்லாம் உணர்ந்து செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை. தீக்கோழி மண்ணில் தன் தலையைப் புதைத்துக்கொண்டு, எனக்கு ஆபத்து இல்லை என்று எண்ணி சந்தோஷப்பட்டுக்கொள்வதைப் போல திருச்சபை இன்று அமைதி காத்து வருகிறது. வேதத்தின் அதிகாரத்தில் நம்மினத்துக் கிறிஸ்தவம் தீவிர நம்பிக்கைவைத்து இயங்கி வருவதாக எனக்குத் தெரியவில்லை. வேத நம்பிக்கையைவிட வேத அறியாமையே தமிழினத்துக் கிறிஸ்தவத்தை ஆழமாக ஆண்டுவருவதாக நான் உணருகிறேன்.
வேதமொழிபெயர்ப்புகள்
வேதம் மட்டுமே நம்மை ஆளும் கர்த்தரின் அதிகாரமாக இருக்கிறது என்பது மார்டின் லூத்தர், ஜோன் கல்வின், ஜோன் நொக்ஸ் போன்ற சீர்திருத்தவாதிகளினதும், அதற்குப் பின்வந்த 17ம் நூற்றாண்டு பியூரிட்டன்களினதும் நம்பிக்கை. அதன் காரணமாக வேதம் மொழிபெயர்க்கப்பட்ட ஆரம்பக்காலத்தில் இருந்தே அதைத் துல்லியமாக மொழிபெயர்க்கும் முயற்சியில் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். எபிரெய, கிரேக்க மூல மொழிகளில் இருந்து கவனத்தோடு வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கிறிஸ்தவர்கள் நம்பிக்கையோடு பயன்படுத்தக்கூடிய மொழிபெயர்ப்புகளை வெளியிட்டு வந்திருக்கின்றனர். அதனால் ஆங்கிலத்தில் நாம் நம்பிப் பயன்படுத்தக்கூடிய நல்ல ஆங்கில மொழிபெயர்ப்புகள் காணப்படுகின்றன. அதே நிலை வேறு மொழிகளில் காணப்படுகிறதா? என்று கேட்கிறபோதே பிரச்சனை உருவாகிவிடுகிறது. அநேக உலக மொழிகளில் இன்று வேதம் மொழிபெயர்க்கப்பட்டிருந்தபோதும், நம்பக்கூடிய துல்லியமான மொழிபெயர்ப்புகளாக அவை இல்லை என்பதை நான் வேற்று மொழி பேசும் கிறிஸ்தவர்களிடம் இருந்து அறிந்துகொண்டிருக்கிறேன். இதேநிலைதான் நம் தமிழ் வேதாகமத்தைப் பொறுத்தளவிலும் என்பதை நான் பலமுறை இந்த இதழில் குறிப்பிட்டு வந்திருக்கிறேன்.
வேதமொழிபெயர்ப்புகளில் மேலைத்தேய மொழிபெயர்ப்பாளர்கள் தீவிர கவனத்தோடு ஈடுபட்டு வந்திருப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் வேதத்தின் அதிகாரத்தில் நம்பிக்கை வைத்திருந்தது மட்டுமல்ல, அந்த வேதம் கர்த்தரால் அளிக்கப்பட்டிருந்த தெய்வீகத்தன்மை பற்றிய உண்மைகளிலும் நம்பிக்கை வைத்திருந்ததுதான். அதாவது, வேதத்தின் உயர்தன்மைக்கும், அதிகாரத்திற்கும் காரணம் கர்த்தர், அதனை நேரடியாக ஊதி வெளிப்படுத்தி (God-breathed), அதை எழுதியவர்கள் மூலம் அதில் எந்தக் குறைபாடும் ஏற்பட்டுவிடாதபடி பூரணமான வெளிப்படுத்தலாக அது இருக்கும்படி பரிசுத்த ஆவியானவரால் அவர்களை வழிநடத்தி எழுத்தில் வார்த்துத் தந்ததுதான். இதுவே வேதத்தைத் தெய்வீகமானதாகவும், கர்த்தரின் அதிகாரமுள்ள சித்தத்தின் வெளிப்படுத்தலாகவும் சீர்திருத்த கிறிஸ்தவர்கள் கருதுவதற்குக் காரணம். இதை மனதில் வைத்தே மேலைத்தேய மொழிபெயர்ப்பாளர்கள் கவனத்தோடு வேதத்தை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அத்தோடு ஆரம்பத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மொழிபெயர்ப்பை மட்டும் நம்பியிருந்துவிடாமல், காலத்துக்குக் காலம், தங்களுடைய அறிவும், ஞானமும், ஆற்றலும் அதிகரிப்பதற்கு ஏற்ப புதிய நல்ல மொழிபெயர்ப்புகளையும் உருவாக்கியுள்ளனர். அத்தகையவையாக ஆங்கிலத்தில் நான் கருதும் மொழிபெயர்ப்புகள் King James Version 1611, New King James Version, New American Standard Bible, English Standard Version ஆகியவையாகும். இவை அனைத்துமே எழுத்துபூர்வமான மொழிபெயர்ப்புகள் (Literal translations). அதாவது, மூலமொழிகளைத் தழுவி வார்த்தைக்கு வார்த்தை எழுத்துபூர்வமானதாக இருக்கும்படி இவை மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஏனைய மொழிபெயர்ப்புகள் அத்தகைய துல்லியமான எழுத்துபூர்வமான மொழிபெயர்ப்புகளாகக் காணப்படவில்லை.
எழுத்துபூர்வமாக துல்லியமாக மூலத்தைத் தழுவியவையாக இல்லாத மொழிபெயர்ப்புகள், மூலமொழிகளில் காணப்படுபவை இலகுவாக மக்கள் வாசிக்கும்படியாக இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்தால், மொழிபெயர்ப்பில் மூலத்தின் வார்த்தைகளுக்கு இணையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் அவற்றின் அர்த்தத்தை மட்டும் இலகு மொழியில் விளக்கும் செயலைச் செய்கின்றன. இதனால் எழுத்துபூர்வமாக மொழிபெயர்ப்பு அமையாமல் வேதத்தை விளக்கும் மொழிபெயர்ப்புகளாக (paraphrase) அவை அமைந்துவிடுகின்றன. இது தற்செயலாக நிகழ்ந்ததாக அல்லாமல் காரணத்தோடேயே செய்யப்பட்ட காரியம். வாசிக்கிறவர்களுக்கு வேதம் விளங்க வேண்டும் என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட செயல்.
இத்தகைய விளக்க மொழிபெயர்ப்புகளால் ஏற்படும் ஆபத்து என்ன? முதலில், அவை மூலமொழிகளில் இருந்து வேதத்தைவிட்டு விலகிவிடுகின்றன. இரண்டாவது, வேதத்தை நாம் நேரடியாக வாசித்து ஆராய்ந்து அதன் மெய்ப்பொருளை அறிந்துகொள்ள முடியாதபடி செய்துவிடுகின்றன. மூன்றாவதாக, அவை வேதத்திற்கு விளக்கம் கொடுக்கும் வியாக்கியான விளக்க நூல்களாக (Exposition) அமைந்துவிடுகின்றன.
வேதத்திற்கு விளக்கம் கொடுப்பது மொழிபெயர்ப்பாளனது பணியல்ல. அதை வாசிக்கின்ற ஆத்துமாவின் பணி அது. போதகர்களும், பிரசங்கிகளும், இறையியலறிஞர்களும் செய்யவேண்டிய பணி அது. மொழிபெயர்ப்பாளன் மூலத்தில் இருப்பதை அதில் இருப்பதுபோலவே சற்றும் அதைவிட்டு விலகாமல் மொழிபெயர்க்கவேண்டும். அவ்வாறு செய்யாமல் போனால் அது வார்த்தைக்கு வார்த்தை துல்லியமான வேதமொழிபெயர்ப்பு என்ற பெயரை அடைய முடியாது; வெறும் விளக்கமொழிபெயர்ப்பு மட்டுமே.
வார்த்தைக்கு வார்த்தை தெய்வீக வெளிப்படுத்தல்
இந்த இடத்தில்தான் நான் வார்த்தைக்கு வார்த்தை தெய்வீக வெளிப்படுத்தல் என்ற வேதம் பற்றிய உண்மையை விளக்குவது அவசியமாகிறது. அதாவது வேதம் கர்த்தரின் பூரண சித்தத்தின் மொத்த உருவாக, நாம் அறிந்துகொள்ளும்படியாக அவர் வெளிப்படுத்திய சித்தமாக இருப்பதால் அதன் வரலாற்று அம்சங்களும், அனைத்துவிதமான போதனைகளும் மட்டுமல்லாமல் அதன் ஒவ்வொரு வார்த்தையும் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டு எழுதியவர்கள் தெரிந்தெடுத்து எழுதியவையாக, இருக்கின்றன. வேதத்தைப் பாதுகாத்து கர்த்தர் நமக்கு அளித்துள்ள எபிரெயம், மற்றும் கிரேக்க மூலமொழிகளில் காணப்படும் பிரதிகளில் வேதம் வார்த்தைக்கு வார்த்தை தெய்வீக வெளிப்படுத்தலாக காணப்படுகின்றன. இந்தத் தெய்வீக வழிநடத்தலை ஆங்கிலத்தில் Verbal Plenary Inspiration என்று அழைப்பார்கள். தமிழில் இதை “வார்த்தைக்கு வார்த்தை தெய்வீகமாக ஊதி அருளப்பட்டவை” என்று அழைக்கலாம். இதன் மூலம் வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அநாவசியத்துக்கு, அர்த்தமில்லாமல் பயன்படுத்தப்படாமல் கருத்தோடும், கவனத்தோடும் காரணத்துக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும். வேதம் கர்த்தருடைய தெய்வீக அதிகாரத்தின் வெளிப்படுத்தல் என்று நம்புகிறவர்கள் இந்த உண்மையை நம்பாமல் இருப்பதில் பொருளில்லை.
ஆதியாகமத்தில் கர்த்தர் இந்த உலகத்தை ஆறு நாட்களில் படைத்ததாக விளக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ வரலாற்றில் நவீன விஞ்ஞானத்தோடு பொருந்திப்போவதாக வேதம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் புத்திஜீவிகளில் சிலர் ஒரு நாள் மில்லியன் ஆண்டுகளாக இருந்திருக்கிறது என்று விளக்கம் கொடுக்கின்றனர். அது விஞ்ஞானத்துக்கும், சமுதாயத்துக்கும் ஒத்துப்போகும் முறையில் வேதத்திற்கு விளக்கம் கொடுக்கும் முயற்சி. இந்த முயற்சியில் தாராளவாத இறையியலறிஞர்கள் மட்டுமல்லாது விபரம் தெரிந்த இறையியலறிஞர்களும் ஈடுபட்டிருக்கின்றனர். ஆதியாகமத்தின் முதல் அதிகாரத்தில் காணப்படும் “நாள்” என்ற வார்த்தை இருபத்திநான்கு மணித்தியாளங்களைக் கொண்ட ஒரு நாள் அல்ல என்று விளக்கங்கொடுக்கும் இறையியல் கல்லூரிகளே நம்மினத்தில் அதிகம். அந்தளவுக்கு வேத நம்பிக்கை அற்றவையாக அவை இருக்கின்றன.
ஆதியாகமத்தில் கர்த்தர் உலகத்தை ஆறு நாட்களில் படைத்தார் என்பதற்கு அந்த அதிகாரம் மட்டுமல்லாமல் வேதத்தின் ஏனைய பகுதிகளும் சான்று பகிர்கின்றன. இயேசு கிறிஸ்துவும், அப்போஸ்தலர்களும் அதற்குச் சான்று பகிர்கிறார்கள். அப்படியிருக்கும்போது ஒரு நாள் மில்லியன் ஆண்டுகள் என்று விளக்கமளிப்பது இந்த உலகத்தின் போக்கில் போய்க் கொடுக்கும் விளக்கமே தவிர கர்த்தரை விசுவாசித்து நம்ப வேண்டிய உண்மையல்ல. இதை வெயின் குரூடம் (Wyane Grudem), டிம் கெல்லர் (Tim Keller) போன்ற பிரபலமான இன்றைய இறையியல் அறிஞர்களும் முன்வைத்து வருகிறார்கள். வெயின் குரூடம் இத்தகைய கருத்தைக் கொண்டிருப்பதை அவருடைய முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலும், இது பற்றி அவரெழுதிய இன்னுமொரு நூலும் விளக்குகின்றன. இதுவே டிம் கெல்லரின் போதனை என்பதை அவருடைய எழுத்துக்களும் பிரசங்கங்களும் விளக்குகின்றன. இது வார்த்தைக்கு வார்த்தை வேதம் தெய்வீக வெளிப்படுத்தலாக இருக்கின்றது என்ற நம்பிக்கைக்கு முரணான போக்கு. வேதத்தின் அதிகாரத்தைப்பற்றி அதிகமாக தன்னுடைய முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலில் விளக்கும் வெயின் குரூடம், உலகம் உருவாக மில்லியன் வருடங்கள் ஆயின என்றும், நோவாவின் காலத்தில் கர்த்தர் உலகத்தைத் தண்ணீரால் அழித்தபோது அது முழு உலகத்தையும் அழித்ததாக அல்லாமல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நிகழ்ந்தது என்றும், கர்த்தர் வெளிப்படுத்தலைத் தொடர்ந்து இன்று தனி மனிதர்களின் மூலம் அளித்துக்கொண்டிருக்கிறார் ஆகிய போதனைகளின் மூலம் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறார். அவர் வேதத்தைப் பற்றி அநேக அருமையான உண்மைகளை விளக்கியிருந்தபோதும், அவற்றைக் கறைப்படுத்தும் இத்தகைய முரண்பாடான நம்பிக்கைகளையும் கொண்டிருக்கிறார் என்பதைக் காண்கிறோம். நிச்சயம் வெயின் குரூடம் இந்த விஷயங்களில் சீர்திருத்த இறையியல் விசுவாச நம்பிக்கைகளைக் கொண்டிருக்கவில்லை.
சீர்திருத்தவாதிகளான மார்டின் லூத்தரும், ஜோன் கல்வினும் கர்த்தர் உலகத்தை ஆறுநாட்களில் உருவாக்கினார் என்பதை நம்பி விளக்கினர். ஒரு நாளை அவர்கள் இருபத்தி நான்கு மணித்தியாளங்கள் கொண்ட நாட்களாகவே விளக்கினர். இருவருமே வார்த்தைக்கு வார்த்தை வேதம் தெய்வீக வழிநடத்தலின் மூலம் எழுத்தில் தரப்பட்டிருக்கிறது என்பதை ஆணித்தரமாக நம்பியிருந்தனர். வில்லியம் டின்டேலும், மார்டின் லூத்தரும், ஜோன் கல்வினும் வேத வசனங்கள் பல அர்த்தங்களைக் கொண்டிராது ஒரே அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன என்பதையும் நம்பியிருந்தார்கள்.
பதினேழாம் நூற்றாண்டில் உருவான விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப்போதனைகளும் கர்த்தர் உலகத்தை ஆறு நாட்களில் படைத்தார் என்றே விளக்குகின்றன. இதுவே பாரம்பரியமாக கிறிஸ்தவ வரலாற்றில் இருந்து வந்திருக்கின்ற நம்பிக்கை. 1689 விசுவாச அறிக்கையும் படைப்பைப் பற்றிய அதிகாரத்தில் இதையே விளக்குகின்றது. அப்படியிருக்க நவீன கால சுவிசேஷ இயக்க இறையியலறிஞர்களும், சில சீர்திருத்த கிறிஸ்தவர்களும் ஒரு நாளை இருபத்தி நான்கு மணித்தியாளங்களுக்கு மேலானதாகவும், உலகம் 6000 வருடங்களுக்கு உட்பட்ட காலங்களில் அல்லாது பில்லியன் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்றும் வாதிடுவது திருச்சபை கொண்டிருந்த பாரம்பரிய வரலாற்று இறையியல் நம்பிக்கைகளுக்கு முற்றிலும் முரணானது. இத்தகைய போக்கு வேதவார்த்தைகள் ஒவ்வொன்றும் கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டு ஆவியின் தெய்வீக வழிநடத்தலால் அதை எழுதியவர்களால் எழுதப்பட்டது என்ற அவசியமான போதனைக்குக் களங்கம் உண்டாக்குகின்றது. இது மேலும் பாரதூரமான தவறான போதனைகளை உருவாக்கும் முயற்சிக்கே இட்டுச் செல்லும்.
எழுத்துபூர்வமாக நாட்களை ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் கணிக்காமல் இருப்பது அப்பகுதியை உருவகப்படுத்தி விளக்கும் முயற்சிக்கே (Allegorical) வழிவகுக்கிறது. அதைத்தான் இன்று அநேகர் செய்து வருகிறார்கள். இது வேதத்தில் எவருக்கும் இருக்கவேண்டிய நம்பிக்கையைத் தகர்த்துவிடுகின்ற முயற்சி. ஆதியாகமம் வரலாற்று நூல். அது எழுத்துபூர்வமாக கணிக்கப்படவேண்டிய நூல். அதை வேறுவிதத்தில் கணித்து விளக்கங்கொடுப்பது வேதவிளக்க விதிமுறைகளுக்கு முரணானது. படைப்பின் நாட்களுக்கு மறுவிளக்கமளிக்க முற்படுவது அதோடு நின்றுவிடாது. அந்த விளக்கமுறை ஆதாமை வரலாற்று மனிதன் என்ற நம்பிக்கைக்கு எதிராக விளக்கங்கொடுப்பதில் போய் முடியும். அத்தோடு நோவாவின் காலத்து வெள்ளம், மனிதனின் பாவம் போன்ற வரலாற்று நிகழ்வுகளுக்கும் மறுவிளக்கங்கொடுக்கும் பிசாசுத்தனத்திற்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாது, இறுதியில் கர்த்தரின் மீட்பின் வரலாற்றையும் அத்தகைய விளக்கமுறை பாதித்து இரட்சிப்புப் பற்றிய போதனைகளையும் களங்கப்படுத்திவிடும்.
வார்த்தைக்கு வார்த்தை வேதம் தெய்வீக வழிநடத்தலினால் அருளித் தரப்பட்டிருக்கிறது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் போவதின் ஆபத்து கோரமானது என்பதை நீங்கள் உணரவேண்டும். வேதம் கர்த்தருடையது என்ற நம்பிக்கை மட்டும் போதாது. அதை அநேகர் கிளிப்பிள்ளை போல சொல்லிவருகிறார்கள். வேதம் வார்த்தைக்கு வார்த்தை கர்த்தரின் தெய்வீக வெளிப்படுத்தல் என்பதை நம்பி அதை எழுத்துபூர்வமாக வாசித்து ஆராய்ந்து விளக்கவேண்டியது அவசியம். இதைச் செய்யாதவர்களுடைய வேத நம்பிக்கை மிகவும் பலவீனமானதாக, போலிப்போதனைகளுக்கு வழிநடத்திச் செல்லுவதாக மட்டுமே இருக்கமுடியும். உங்கள் விசுவாசமும், திருச்சபையும் பாதுகாக்கப்பட வேதத்தைப் பயபக்தியோடு வாசித்து, ஏனையோருக்கும் விளக்குவதை உங்கள் கடமையாக வைத்திருங்கள்.
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்
ஒரு பிரசங்கி, தேவனுடைய வார்த்தை அடங்கியிருக்கிற புத்தகமாகிய வேதத்தில் தேறினவனாகவும், அதிலிருந்து புதியவைகளும் பழையவைகளுமாகிய பொக்கிஷத்தை எடுத்துரைக்கும் தகுதியுள்ளவனாகவும் இருக்க வேண்டும். வேதமே அவனுடைய பாடநூலாக இருக்க வேண்டும். அதிலிருந்து புறப்படும் ஜீவனுள்ள தண்ணீரை அவன் அனுதினமும் பருக வேண்டும். இதற்காக நாம் நல்ல மொழிபெயர்ப்புள்ள வேதநூலையும், ஒரு ஒத்தவாக்கிய அகராதியையும் பயன்படுத்த வேண்டும். அத்தோடு, மூலமொழியிலுள்ள வார்த்தைகளை அறிந்துகொள்ளுவதற்கான இன்டர்லீனியர் வேதநூலையும் அவ்வப்போது பயன்படுத்தலாம். எந்தவொரு வேதப்பகுதியையும் முதலாவதாக நாம் வாசித்து, விரிவான ஆய்வு செய்தபிறகுதான், விளக்கவுரைகளை நாட வேண்டும். வேதப்பகுதியை நீங்கள் கவனத்துடன் முழுமையாக ஆராய்வதற்கு முன்பாக அல்லது நீங்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்கு முன்பாக விளக்கவுரையை நாடும் ஆபத்திலிருந்து பிரசங்கிகளாகிய உங்களைப் பாதுகாத்துக்கொள்ளும்படி உறுதியாக வலியுறுத்துகிறேன். வேதம் மிகவும் எளிமையாக எழுதப்பட்டிருக்கிறது. அதனால், யாருடைய உதவியுமின்றி வேதத்தைப் படித்து விளங்கிக்கொள்ள முடியும் என்று நினைப்பதும், அல்லது வேதம் மிகவும் கடினமானது, சாமானிய மனிதன் அதை ஆராய முற்படுவது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று நினைப்பதும் எப்படி தவறானதோ, அதேபோல, தேவனுடைய ஊழியர்களான மற்றவர்களுடைய உழைப்பைச் சார்ந்திருந்து, அவர்களுடைய கருத்துக்களை வெறுமனே எதிரொலிப்பதும் மிகவும் ஒழுங்கற்ற செயல்.
ஒரு பிரசங்கி தேவனுடைய பாதத்தில் அமர்ந்து, அவருடைய வார்த்தைக்கான விளக்கங்களை அவரிடமிருந்து கற்று, அவருடைய செய்தியை அவரிடம் காத்திருந்து பெறவேண்டும். கர்த்தருக்குப் பிரியமானது எவை என்றும் பிரியமல்லாதது எவை என்றும் வேதத்தைத் தவிர்த்து வேறு எங்கிருந்தும் நாம் தெரிந்துகொள்ள முடியாது. உலகத் தத்துவ மேதைகளும் அறிவியலறிஞர்களும் அறிந்திராத, தெய்வீக ஞானத்தின் இரகசியங்களை வேதமே நமக்குத் தெரிவிக்கின்றது. “வேதத்திலிருந்து வெளிப்படாத எதுவும், வேதத்தின் மீது கட்டப்படாத எதுவும், வேதத்தோடு பொருந்திப் போகாத எதுவும், உலகத்தின் பார்வையில் மிக உயர்ந்த ஞானம் என்று பறைசாற்றப்பட்டாலும், பழமையான பாரம்பரியத்தைச் சார்ந்து, கல்விமான்கள்கூட ஏற்றுக்கொள்ளுவதாக இருந்தாலும், அவையாவும் வீணானதும் பயனற்றதுமாகும். சுருங்கச் சொல்லுவதானால், அவையாவும் பொய். நியாயப்பிரமாணத்தின்படியும் சாட்சியாகமத்தின்படியும் விளக்கப்படாத எந்தவொரு வார்த்தையிலும் உண்மை இருப்பதில்லை. எந்தவொரு இறையியலாளனும் இந்தத் தெய்வீகக் கட்டளைகளிலேயே மகிழ்ச்சிகொள்ளுவானாக. இரவும் பகலும் அதிலேயே உழைத்து, அதையே தியானம் செய்து, அதிலிருந்தே தனக்கான ஞானத்தைப் பெறவேண்டும். தன்னுடைய எண்ணத்தையெல்லாம் அதைநோக்கியே திருப்பி, ஆத்மீக விஷயங்களில் அதில் காணப்படாத எதையும் விட்டுவிலகுவானாக” என்று ஒல்லாந்துத் தூய்மைவாதிகளில் ஒருவரான ஹெர்மன் விட்சியஸ் (Herman Witsius) என்பவர் சொல்லியிருக்கிறார்.
வேதத்தை விளங்கிக்கொள்ளுவதற்கான விதிமுறைகளை இப்போது நாம் படிப்போம். முதலாவதாக, முக்கியமானதொன்று, பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும், ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் நமக்குச் சரியான புரிதல் இல்லாமல், நாம் தவறிழைத்தால், வேதத்தின் பல முக்கியமான பகுதிகளைத் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும். டிஸ்பென்சேஷனலிசம் என்ற நவீன, தவறான போதனையிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே இப்பகுதியை நாம் அணுகாமல், ஆக்கப்பூர்வமான விதத்தில் இதை நாம் கையாளவேண்டும். டிஸ்பென்சேஷனலிச போதனையாளர்களின் எழுத்துக்களையும், கல்வினின் “கிறிஸ்தவத்தின் விளக்கவுரை” (Institutes of the Christian Religion) என்ற புத்தகத்தின் போதனைகளையும் கவனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, டிஸ்பென்சேஷனலிசப் போதனையாளர்கள், பரிசுத்த ஆவியானவர் தங்களுக்கு வேதத்திலிருந்து புதிய விளக்கங்களைத் தந்திருக்கிறார் என்று சொல்லியிருப்பதனால், கல்வினுக்கே பரிசுத்த ஆவியானவர் வேதத்திலிருந்து ஆழமான, முறையான புரிதலைத் தந்திருக்கிறார் என்ற முடிவுக்கே வரமுடிகிறது. ஆகவே கல்வினின் “கிறிஸ்தவத்தின் விளக்கவுரை” (Institutes of the Christian Religion) என்ற புத்தகத்தை வைத்திருக்கிறவர்கள், அதிலுள்ள இரண்டு அத்தியாயங்களான “பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையேயுள்ள ஒற்றுமைகள்” மற்றும் “இரண்டு ஏற்பாடுகளுக்கிடையேயுள்ள வேறுபாடுகள்” என்ற அத்தியாயங்களைக் கவனத்துடன் வாசிக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.
இரண்டு ஏற்பாடுகளுக்கிடையேயும் இருக்கிற வேறுபாடுகளைக் காட்டிலும், இவை இரண்டிற்கும் இடையே இருக்கிற ஒற்றுமைகளே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன. ஒரே திரித்துவ தேவன்தான் இவை இரண்டையும் கொடுத்திருக்கிறார், இரட்சிப்பிற்கான வழியும் ஒரே விதமாகவே இரண்டிலும் விளக்கப்பட்டிருக்கிறது, பரிசுத்தத்திற்கான அளவுகோலும் ஒரேவிதமாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது, நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்குமான இறுதி முடிவைப் பற்றி ஒரேவிதமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்திற்குமான ஆணிவேர், பழைய ஏற்பாட்டில்தான் இருக்கிறது. ஆகவே ஒன்றில்லாமல் மற்றதை சரியாக விளங்கிக்கொள்ள முடியாது. சுவிசேஷப் புத்தகங்களிலும் நிருபங்களிலும் இருக்கிற பல முக்கியமான போதனைகளை அறிவதற்கு, பழைய ஏற்பாட்டிலுள்ள முற்பிதாக்களின் வரலாறும், யூதமத சடங்குமுறைகளைப் பற்றியும் நாம் அறிந்திருப்பது அவசியமானது மட்டுமல்ல, அவற்றிற்கிடையில் பயன்படுத்தப்பட்டுள்ள பதங்களும் அவைகளின் நோக்கங்களும்கூட ஒன்றே என்பதை நாம் அறியலாம். மத்தேயு 5:17ல் இயேசு விளக்கியிருக்கிற எச்சரிப்பான வார்த்தைகளைக் கவனியுங்கள், “நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்” என்றார் இயேசு. இதில் இயேசு, நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் என்று பழைய ஏற்பாடு முழுவதையும் பற்றிச் சொல்லுகிறார், அவற்றை நிலைநிறுத்தி உறுதிப்படுத்தவும், மனிதர்கள் அவற்றைத் தவறாக விளக்கிப் புரட்டுவதிலிருந்து தடுக்கவும், அவற்றிலுள்ள யாவும் மனிதனுக்கு நன்மையானவை என்றும் சொல்லியிருக்கிற அவர், அவற்றை முற்றாகப் புறக்கணித்து புதிதாக அல்லது அதோடு தொடர்பில்லாத முற்றிலும் வித்தியாசமான ஒன்றைப் போதித்திருப்பார் என்று நினைப்பதற்குக்கூட வழியில்லை. மத்தேயு 7:12ல் இயேசு தம்முடைய பிரதான கட்டளையைப்பற்றி விளக்குகிறபோது, “இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்” என்று சொல்லியிருப்பதிலிருந்து, கிறிஸ்துவின் போதனைக்கும், அவருக்கு முன்பு கர்த்தருடைய வார்த்தையை அறிவித்தவர்களுடைய போதனைக்கும் இடையே முரண்பாடுகள் இருக்க முடியவே முடியாது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
அப்போஸ்தலர்களுடைய போதனைக்கும் இயேசுவினுடைய போதனைக்கும் இடையே எந்தவிதமான முரண்பாடும் இல்லை. ஏனென்றால், தம்முடைய அப்போஸ்தலர்களுக்கான இயேசுவின் பிரதான கட்டளையில் இயேசு, “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்” (மத்தேயு 28:20) என்று சொல்லியிருக்கிறார். பவுலின் போதனைகள் எந்தவிதத்திலும் பழைய ஏற்பாட்டுப் போதனைகளிலிருந்து முரண்பட்டிருக்கவில்லை. வேதத்திலுள்ள முதல் நிருபத்தில் பவுல், தான் எந்த சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாக கர்த்தரால் பிரித்தெடுக்கப்பட்டவன் என்பதைக் குறிப்பிடுகிறபோது, “தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே வாக்குத்தத்தம் பண்ணினது” (ரோமர் 1:4) என்று சொல்லியிருக்கிறார். இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவநீதியைக் குறித்து சொல்லுகிறபோதும், அவர் மிகவும் கவனத்துடன், “அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது” என்று சொல்லியிருக்கிறார். நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் இல்லாமல், விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறோம் என்ற சத்தியத்தை நிலைநிறுத்துகிறபோதும், ஆபிரகாமைப் பற்றிய குறிப்பையும் தாவீதின் சாட்சியத்தையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார். கொரிந்து சபை விசுவாசிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஆவிக்குரிய வரங்களின் காரணமாக, அவர்கள் ஆவிக்குரிய விதத்தில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணித் தவறாக நடந்து வந்தார்கள். அவர்களைக் கண்டிக்கிறபோது, பவுல், கர்த்தருடைய தயவை அதிகமாகப் பெற்றிருந்த இஸ்ரவேலர்களுக்கு நடந்தவைகளை நினைவூட்டுகிறார். அவர்கள் கர்த்தருடைய தயவைப் பெற்றிருந்தபோதும், அதாவது, “எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள். எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள்” (1 கொரிந்தியர் 10.1-5) என்ற நிலையிருந்தபோதும், அவர்கள் பாவம் செய்தபோது அது அவருடைய கோபத்திலிருந்து அவர்களைக் காக்கவில்லை என்பதையே சுட்டிக்காட்டியிருக்கிறார். முக்கியமான நடைமுறைச் சத்தியங்களை விளக்குகிறபோது பவுல், ஆபிரகாமின் இரண்டு மகன்களுடைய வரலாற்றைச் சுட்டிக்காட்டியே விளக்கியிருக்கிறார் (கலாத்தியர் 4:22-31).
புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாட்டின் தொடர்ச்சியாகவும், நிறைவேற்றமாகவும் இருக்கிறது. எபிரெயர் நிருபத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற, பழைய மற்றும் புதிய உடன்படிக்கைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் ஒப்பீட்டின் அடிப்படையில் தரப்பட்டவையே தவிர, முற்றாகப் பழைய உடன்படிக்கையோடு தொடர்பில்லாதவை அல்ல. அவை இரண்டிற்குமான வித்தியாசம், உண்மையில் அவைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் அல்ல, அவைகளுக்கு இடையில் காணப்படும் தரவரிசையே. அதாவது, கீழிருந்து மேல் நோக்கிச் செல்லுகிற விதத்திலான வித்தியாசம். பழையது புதியதற்கு தயார்செய்கிறது. இந்த இடத்தில், சிலர் யூதமத வாடை அதிகமாக வீசும் கிறிஸ்தவ விளக்கம் தருகிறார்கள். அது தவறானது. வேறு சிலர், இதிலிருக்கும் ஆவிக்குரிய நுணுக்கத்தைக் கவனிக்காமல், யூத மதத்தின் முறையில், மாம்சப் பிரகாரமாகவே இப்பகுதிகளை அணுகுகிறார்கள். ஆனால், தேவன் கிறிஸ்துவுக்குள் தெரிந்தெடுத்தவர்களுக்காக ஏற்படுத்திய நித்திய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை, ஆபேல் முதல் அனைவருக்கும் தந்து வருகிறார். இப்போதும் அதைத் தொடருகிறார். ஜோன் கல்வின் தான் வாழ்ந்த காலத்தில் இருந்த, நவீன டிஸ்பென்சேஷனலிசக் கோட்பாட்டாளர்களின் மூதாதையர்களின் மடத்தனத்தைக் கடிந்துரைத்திருக்கிறார், “ஆபிரகாமை விசுவாசிகள் எல்லாருடைய தகப்பன் என்று சொல்லிக்கொண்டு, விசுவாசிகள் பெறும் ஆத்மீக நன்மையை அவர் பெற்று அனுபவிக்கவில்லை என்று சொல்லுவது எவ்வளவு ஆபத்தானது?” என்கிறார் கல்வின்.
இயேசுவோ, அல்லது அவருடைய அப்போஸ்தலர்களோ, எந்தவொரு சத்தியத்தை விளக்குவதாக இருந்தாலும், அதற்கான ஆதாரத்தைப் பழைய ஏற்பாட்டிலிருந்து எடுத்துக்காட்டியே வாதிட்டிருக்கிறார்கள் என்பதைப் புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு பக்கங்களிலும் காணலாம். பழைய ஏற்பாட்டின் போதனைகளும், அதன் வார்த்தைப்பிரயோகங்களும் புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. சுமார் 600 தடவைக்கு மேல் நேரடியான குறிப்புகளும் இருக்கின்றன. லூக்கா 1:46-55 வசனங்களில் தேவனுடைய மகிமையை அறிவிக்கிற ஒவ்வொரு குறிப்பும் பழைய ஏற்பாட்டின் சாயலைக் கொண்டிருக்கிறது. மத்தேயு 6:9-13 வசனங்களிலுள்ள கர்த்தருடைய ஜெபத்திலும் அதைக் காணலாம். ஆகவே வேதத்தைப் படிக்கிறவர்கள், பழைய புதிய ஏற்பாடுகளாகத் தரப்பட்டிருக்கிற வேதமிரண்டிற்கும் சமஅளவிலான முக்கியத்துவத்தைத் தரவேண்டும். புதிய ஏற்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தி, அதை மட்டுமே படிக்கிறவர்களாக நாம் இருக்கக்கூடாது. புதிய ஏற்பாட்டைச் சரியாக விளங்கிக்கொள்ள, பழைய ஏற்பாட்டை ஆழமாகப் படிக்க முயற்சிக்க வேண்டும். அப்படிச் செய்யாதபட்சத்தில், சுவிசேஷப் புத்தகங்களையும் நிருபங்களையும் சரியாக விளங்கிக்கொள்வதென்பது ஒருபோதும் இயலாது. இது, முன்னடையாளங்களைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு மட்டுமல்ல. அதாவது, 1 கொரிந்தியர் 5:7ல் “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே” என்று பவுல் எதைப் பற்றி சொல்லுகிறார் என்பதை யாத்திராகமம் 12ஐக் கொண்டே அறியமுடியும் என்பதும், எபிரெயர் 9, 10 அதிகாரங்களுக்கான விளக்கங்களை லேவியராகமம் 16 ஆவது அதிகாரம் இல்லாமல் சரியாக விளங்கிக்கொள்ள முடியாது என்பதும் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பல முக்கியமான வார்த்தைகளுக்கு, உதாரணமாக, “முதற்பேறு, மீட்பு, கோபநிவிர்த்தி” போன்ற வார்த்தைகளுக்கான சரியான விளக்கத்தை அறிந்துகொள்ள, பழைய ஏற்பாட்டில் அவை எந்தவிதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று பின்நோக்கிப் போய்ப் பார்த்தே நாம் தெரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது.
யூதமதத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் இடையில் அடிப்படையான ஒற்றுமை காணப்படுகின்றது. ஒரே தேவன் இவை இரண்டையும் ஏற்படுத்தினார். அவர் தம்முடைய குணாதிசயங்கள் அனைத்திலும் மாறாத பரிபூரணமானவர், தம்முடைய திட்டங்களிலும் செயல்களிலும் மாறாத தன்மையுள்ளவர். யூத மதம் வெளிப்புறச் சடங்குகளையே அதிகமாகக் கொண்டிருக்கிறது. அவர்களின் வழிபாட்டு முறைகள் கூடார அமைப்புகளையும், உலக நிலப்பரப்பின் சுதந்தரத்தையும் கொண்டிருந்தன. அவை யாவும், “பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலாகவும் நிழலாகவும்” இருக்கின்றன (எபிரெயர் 8:5, 10:1). சத்தியத்தை விளக்கிக்காட்டுவதில் பழைய ஏற்பாட்டைவிடப் புதிய ஏற்பாட்டின் எல்லை படர்ந்து விரிந்திருக்கிறது. அது இரண்டு உடன்படிக்கைகளுக்கிடையிலான ஒற்றுமையையும் விளக்குகிறது, வேறுபாட்டையும் விளக்குகிறது. அவற்றின் ஒற்றுமைகள், இரண்டு உடன்படிக்கைகளின் ஆழத்தையும் அவைகளின் அடிப்படை அம்சங்களையும் விவரிக்கின்றன. வேறுபாடுகள், இரண்டு உடன்படிக்கைகளின் சந்தர்ப்ப சூழலையும், அதன் மெய்ப்பொருளையும் விவரிக்கிறதாக இருக்கிறது. ஒன்று, வாக்குத்தத்தங்களையும் முன்னறிவிப்புகளையும் கொண்டிருக்கிறது. மற்றொன்று, அவற்றின் செயல்வடிவத்தையும் நிறைவேற்றத்தையும் தெரிவிக்கிறது. முதலாவது, முன்னடையாளங்களையும் நிழல்களையும் கொண்டிருக்கிறது. இரண்டாவது, நிஜத்தையும் அதன் சாராம்சத்தையும் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவ விசுவாசம், மோசேயின் வார்த்தைகளிலுள்ள தேவனுடைய பரிபூரணத்தை முழுமையாகவும் தெளிவாகவும் (1 யோவான் 2:8), பரிசுத்த ஆவியானவரின் நிறைவோடு அதிகமதிகமாகவும் (யோவான் 7:39; அப்போஸ்தலர் 2:3), தங்குதடையில்லாத பரந்தளவிலும் (ரோமர் 8:15, கலாத்தியர் 4:2-7) விளக்குகிறது.
வேதத்தை விளக்குகிறவர்கள், பழைய ஏற்பாட்டு வேதப்பகுதிகளைக் குறிப்பிடுகிறபோது மிகவும் கவனத்துடன் ஆராய்ந்தறிந்து குறிப்பிட வேண்டும். புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிற பழைய ஏற்பாட்டின் பகுதிகளை விளக்குகிறபோது, அவைகள் தரப்பட்டிருக்கிற விதம் மற்றும் அதன் நோக்கத்தை விளக்குவதற்கு வேத விளக்க விதிகளைப் பொறுப்புடன் கையாள வேண்டும். நம்முடைய ஆண்டவரும் அவருடைய அப்போஸ்தலர்களும் பழைய ஏற்பாட்டின் பகுதிகளை எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்பது, நாம் பழைய ஏற்பாட்டின் பகுதிகளை எப்படிக் கையாளவேண்டும் என்பதற்கான போதிய வழிகாட்டுதல்களைத் தருகிறது. புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிற பழைய ஏற்பாட்டின் பகுதிகளைக் கவனத்துடன் ஆராய்வதும், அவற்றின் சாராம்சத்தை அறிவதும், சோம்பேறித்தனமான தாராளவாதப் போக்கிலிருந்து நம்மைக் காப்பதோடு, தேவனுடைய வார்த்தையின் முழுமையான பொருளையும், அது நமக்குத் தரும் பயன்பாட்டையும் அதிகத் தெளிவோடு அறிந்துகொள்ளத் துணைசெய்கிறது. இதைக் குறித்து விரிவான ஆய்வு செய்வதற்கான சூழல் இருந்தாலும், அதற்குப் பதிலாக, இதை விளக்குகிற சில நேரடி உதாரணங்களைத் தருகிறேன்.
மத்தேயு 8:16ல், கிறிஸ்து “நோய்வாய்பட்ட அநேகரைக் குணமாக்கினார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது ஏசாயா தீர்க்கதரிசியின் (ஏசாயா 53:4) மூலமாக சொல்லப்பட்டவைகளின் நிறைவேற்றம் என்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது, “ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது” (மத்தேயு 18:17). மேசியாவைப் பற்றிய இந்தவிதமான முன்னறிவிப்புகள், நம்முடைய ஆவிக்குரிய மனநிலையை ஒளியூட்டுவதாகவும், அவர் தம்முடைய மக்களுக்கான மீட்பை ஏற்படுத்துகிறார் என்பதைவிட மேலதிகமான விளக்கங்களைத் தருகின்றன. என்னவென்றால், கிறிஸ்துவினுடைய ஊழியம், துன்பப்படுகிறவர்களுக்கான இரக்கம் காட்டும் ஊழியமாக இருந்திருக்கிறது. யாருக்கு ஊழியம் செய்யும்படியாக வந்தாரோ அவர்களின் துன்பங்களையும் வலிகளையும் அவர் தன்மீது சுமந்தார். அவர் செய்த அற்புதங்கள் இயேசுவின் மனதுருக்கத்தைக் காட்டுகிறது. கிறிஸ்துவின் பரிந்துரைக்கும் செயல், நம்முடைய பாவங்களின் காரணமாக வரக்கூடிய துன்பங்களை நீக்கி, நம்முடைய சரீரத்தைக் காக்கிறது. அவர் சிலுவையில் நிறைவேற்றிய மாபெரும் செயலினால் நம்மை மூடுகிறார். கிறிஸ்துவின் இந்த இரண்டு செயல்களுக்கும் இடையிலான தொடர்பை, இயேசு திமிர்வாதக்காரனிடம் “உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்றும் “நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ” என்றும் சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் அறியலாம் (மத்தேயு 9:2,6).
அடுத்ததாக, கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக வாழ்ந்தபோது, ஆவிக்குரிய விஷயங்களைக் காட்டிலும் உலக வாழ்க்கையே மேலானது என்று எண்ணியவர்களுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு, பழைய ஏற்பாட்டை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் என்று பார்ப்போம். சதுசேயர்கள், ஆவியும் சரீரமும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்திருக்கிறது, இவற்றில் ஒன்று அழிகிறபோது மற்றது இல்லாமலாகிவிடுகிறது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள் (அப்போஸ்தலர் 23:8). சரீரம் மரணமடைந்தால், ஆத்துமாவும் அத்தோடு இல்லாமலாகிவிடுகிறது என்று அவர்கள் கருதினார்கள். சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பதுபோல் மனிதனாக வந்த தேவகுமாரன், அவர்களுடைய கேள்வியைக் கொண்டே, காரண காரியங்களை விளக்கி அவர்களுக்கு ஞானமாக பதிலளித்திருக்கிறார். இதை அவர் யாத்திராகமம் 3 ஆவது அதிகாரத்தில், கர்த்தர் மோசேயிடம் “நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன்” என்று சொல்லிய குறிப்பைக் கொண்டு விளக்கியிருக்கிறார். எதற்காக இந்த வார்த்தைகளை இயேசு பயன்படுத்தினார்? சதுசேயர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிற விதத்தில் இதில் என்ன இருக்கிறது? அது வெளிப்படையாக விளக்கப்படவில்லை, ஆனால் உள்ளடக்கமாக காணப்படுகின்றது. இதன் மூலம் கிறிஸ்து ஒரு முடிவைச் சொல்லுகிறார், “தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார்” (மத்தேயு 22:32). கர்த்தர் அவர்களுடைய தேவனாக இருந்தார் என்று சொல்லாமல், “கர்த்தர் அவர்களுடைய தேவனாக இருக்கிறார்” என்று சொல்லியிருக்கிறார். ஆகையால் அவர்கள் இப்போதும் உயிருடன்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆத்துமாக்கள் இன்னும் உயிருடன் இருந்தால், அவர்களுடைய உடல்கள் அதற்காக குறிக்கப்பட்ட நேரத்தில் உயிரோடு எழ வேண்டும். ஏனென்றால் அவர்களுடைய “தேவன்” அவர்களோடு இருந்து, அவர்களுடைய எந்தவொரு பாகமும் அழியாமல் பாதுகாக்கப்படும் என்ற உத்திரவாதத்தைத் தந்திருக்கிறார் என்று விளக்கியிருக்கிறார். இதன்மூலம், ஒரு வேதப்பகுதியிலிருந்து எந்தவொரு விளக்கத்தையும் பெறுகிறபோது, அது வேதத்தின் ஏனைய பகுதிகளோடு முரண்படக்கூடாது என்ற முக்கியமானதொரு வேதவிளக்க விதிமுறையை ஏற்படுத்தியிருக்கிறார்.
ரோமர் 4:11-18 வசனங்களில், அப்போஸ்தலர்களின் வேதவிளக்க முறையில் ஒரு குறிப்பிடத்தகுந்த உதாரணத்தை ஆதியாகமத்தின் இரண்டு சிறு பகுதிகளை வைத்து விளக்கியதிலிருந்து நாம் அறியலாம். தேவன் ஆபிரகாமுக்கு, “திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக இருப்பாய்” (ஆதியாகமம் 17:5) என்றும், “உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்றும் வாக்குறுதி அளித்தார். ஆபிரகாம் விசுவாசியாக இருந்தபோது இந்த வாக்குறுதி அவருக்கு அளிக்கப்பட்டது. தெய்வீக நியமமாக, விருத்தச்சேதனம் ஏற்படுத்தப்படுவதற்கு முன்பாகவே இது தரப்பட்டது. இதன் மூலம் பவுல் ஒரு தர்க்கரீதியிலான முடிவுக்கு வருகிறார். அந்த வாக்குறுதிகள், யூதர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் உரியது. ஆபிரகாம் விசுவாசித்ததுபோல் விசுவாசிக்கிறவர்களுக்கு, கிறிஸ்துவின் நீதி அவர்களுடைய நீதியாக எண்ணப்படுகிறது. ஆபிரகாமுடைய விசுவாசத்தின் பாதையில் நடக்கிற அனைவருக்கும் அந்த வாக்குறுதியின் நன்மைகள் உரியது. ஆகவே “வாக்குத்தத்தத்தின் சந்ததி” என்று அந்த வாக்குறுதிகளில் குறிப்பிடப்பட்டிருப்பது, ஆவிக்குரிய தன்மை கொண்டது என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது (கலாத்தியர் 3:7-9, 14:29), உலகத்தின் எந்தப்பகுதியில் வாழ்ந்தாலும், விசுவாசத்தின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் இதில் அடங்கியிருக்கிறார்கள். “ஆபிரகாம் சரீரப்பிரகாரமாகவோ ஆவிக்குரியவிதத்திலோ தகப்பன் என்று சொல்லப்படவில்லை. விசுவாச குடும்பத்தின் தலைவன் என்ற விதத்திலேயே தகப்பன் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்” என்று ஸ்டிப்ளர் (Stifler) என்ற இறையியலாளர் இதுகுறித்து அருமையானதொரு விளக்கத்தைத் தந்திருக்கிறார். ரோமர் 9:6-13 வசனங்களில், பவுல், வெறுமனே ஆபிரகாமின் பிறப்பு வழி சந்ததியினராக இருப்பவர்கள் இந்த வாக்குறுதிகளின் ஆசீர்வாதங்களிலிருந்து விலக்கப்பட்டவர்கள் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.
ரோமர் 10:5-9 வசனங்களில், பவுல், இந்த வேதவிளக்க விதிமுறையை உபாகமம் 30:11-14 வசனங்களைக் கொண்டு அதிரடியான உதாரணத்தைத் தந்து விளக்கியிருக்கிறார். நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதன் மூலமாகவே ஒரு மனிதன் நீதிமானாக்கப்படுகிறான் என்ற தவறான எண்ணத்திலிருந்து யூதர்களை விடுவிப்பதே பவுலின் நோக்கமாக இருந்திருக்கிறது (ரோமர் 10:2,3). இதை விளக்குவதற்கு மோசேயின் எழுத்துக்களிலிருந்து தன் வாதத்தை முன்வைக்கிறார். பவுல், நியாயப்பிரமாணத்தின் நீதிக்கும் விசுவாசத்தின் நீதிக்கும் இடையே இருக்கிற வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறார். யூதர்கள், அவர்களுடைய மாம்சப்பிரகாரமான எதிர்பார்ப்பின்படியாக கிறிஸ்து வராததனால், அவரை நிராகரித்தார்கள். ஆகவே அவர் மூலமாக வழங்கப்பட்ட கிருபையையும் அவர்கள் நிராகரித்தார்கள். மேசியா அவர்களுக்கு அருகில் இருந்தபோதும், அவர் இன்னும் அவர்களுக்குத் தூரமாக இருப்பதாகவே அவர்கள் எண்ணினார்கள். கிறிஸ்து இறங்கி வரும்படி அவர்கள் பரலோகத்திற்கு ஏறிப்போக வேண்டிய அவசியமே இல்லை. அவர் மரித்தோரிலிருந்து எழுவதற்காக அவர்கள் பாதாளத்திற்கு இறங்கிப்போக வேண்டியதும் இல்லை. உபாகமம் 30ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது மட்டும் பவுலின் நோக்கமல்ல. அதனுடைய சுவிசேஷப் பார்வையையும் விளக்கிக் காட்டுவதுதான் அவருடைய நோக்கமாக இருந்திருக்கிறது. “அந்த அதிகாரம் முழுவதும், சுவிசேஷ மனந்திரும்புதலை விளக்குகிற பிரசங்கம்” என்று தொமஸ் மேன்டன் சொல்லியிருக்கிறார். கிறிஸ்து பரலோகம் சென்ற பிறகு, இஸ்ரவேலர் உலகின் பலபகுதிகளுக்குச் சிதறிப் போகிற காலத்தைப் பற்றியும் இது விவரிக்கிறது. ஆகவே மோசேயின் வார்த்தைகள் சுவிசேஷம் பரவுகிற இந்தக் காலத்திற்கும் பொருத்தமானது. 11-14 வரையுள்ள வசனங்கள், கர்த்தருடைய சித்தத்தை அறிவதென்பது யாருக்கும் மறைபொருளல்ல என்பதை விவரிக்கிறது. அதை விளங்கிக்கொள்ளுவதற்கு யாருடைய உதவியும் தேவை இல்லை என்பதையும் தெரிவிக்கிறது.
ரோமர் 10:18ல் தேவனுடைய வார்த்தையின் ஆழங்களையும் அதன் படர்ந்து விரிந்த பயன்பாட்டையும் தெரிவிக்கிற ஒரு குறிப்பு இருக்கிறது, “அவர்கள் [சுவிசேஷத்தைக்] கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள் [அதற்குக் கீழ்ப்படியவில்லை (வசனம் 16)]; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே” என்கிறார் பவுல். அவர் இதை சங்கீதம் 19:4ல் இருந்து குறிப்பிட்டிருக்கிறார். சுவிசேஷப் பரவுதலுக்குக் கட்டுப்பாடு இல்லை (கொலோசெயர் 1:5-6). வானத்தைப் போல் எல்லாருக்கும் பொதுவான தெய்வீக வெளிப்பாடாக அது இருக்கிறது (சங்கீதம் 19:1). “இயற்கையின் மூலம் தேவன் தம்மை உலகளாவியவிதத்தில் வெளிப்படுத்தியது, உலகளாவிய சுவிசேஷ பகிர்வுக்கான அவருடைய பராமரிப்பின் முன்னறிவிப்பாக இருக்கிறது. முந்தையது தேவையற்றதாக இல்லாமலிருந்தால், பின்பு வந்ததும் தேவையற்றதாகிவிடும். ஆனால், தேவன் தம்முடைய படைப்புயிர்கள் அனைத்திற்குமாக, இயற்கையின் மூலமாக தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம், தேவனுடைய சிறப்பான வெளிப்படுத்தலிலும் அவர்கள் பங்கடைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” (Hengstenberg). சுவிசேஷம் உலகம் முழுவதும் அறிவிக்கப்பட வேண்டும் என்று பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனம் மட்டும் அறிவிக்கவில்லை, வானங்களும் அவற்றை அறிவிக்கின்றன. வானங்கள் ஒரு நாட்டுக்காக மட்டும் பேசவில்லை. முழு உலகத்தோடும் பேசுகின்றன. மனிதர்கள் விசுவாசிக்கவில்லையென்பதால், அவர்கள் சுவிசேஷத்தைக் கேள்விப்படவில்லை என்று அர்த்தமல்ல. 1 கொரிந்தியர் 9:9-10 வசனங்களில் மற்றொரு வினோதமான உதாரணத்தைக் காணலாம்.
கலாத்தியர் 4:24ல், ஆபிரகாமுடைய குடும்பத்தினரைப் பற்றிய குறிப்புகள் “உருவக அர்த்தம் கொண்டவை”. ஆகாரும் சாராளும் இரண்டு உடன்படிக்கைளைக் குறிக்கிறார்கள். அவர்களுடைய மகன்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அந்த உடன்படிக்கையை அவர்கள் அணுகுகிற விதத்திலிருந்து அறிந்துகொள்கிறோம். ஆனால் பவுலின் மூலமாக வந்த இந்த தெய்வீக வெளிப்பாடு இல்லாமல், தேவன் ஒரு தீர்க்கதரிசன மறைபொருளை இந்த வரலாற்று நிகழ்வின் மூலம் தந்திருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியாது; எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு முக்கியமான நிகழ்வுக்கான நிழலாட்டம் இது என்பதையும் நாம் அறிந்திருக்க முடியாது, ஆவிக்குரிய அடிமைக்கும் ஆவிக்குரிய சுயாதீனனுக்கும் இடையில் இருக்கிற வித்தியாசங்களை விவரிக்கிற, ஒரு மாபெரும் சத்தியம் இதில் உதாரணமாகக் காட்டப்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்திருக்க முடியாது. இருப்பினும், அந்த நிகழ்வுகளின் மறைபொருள் விளக்கத்தைப் பவுல் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆபிரகாமுடைய குடும்பத்தின் நிகழ்வுகளைக் கர்த்தர், சத்தியத்தை நமக்கு விளக்கப்படுத்தும் விதத்தில் வடிவமைத்திருக்கிறார். ஆபிரகாமின் இரண்டு மகன்களும், மாம்ச பிரகாரமாகப் பிறந்தவர்களுக்கும், ஆவியின்படி பிறந்தவர்களுக்குமான நிழலாட்டமாக இருக்கிறார்கள். மாம்சத்தின்படி பிறந்த ஆபிரகாமின் சந்ததியினர், உள்ளான மனதின்படி இஸ்மவேலர்களாகவும், வாக்குத்தத்தத்திற்கு அந்நியர்களாகவும் இருந்திருக்கிறார்கள். பவுலின் இந்த விளக்கம், வேதத்தை விளக்குகிறவர்கள் தங்களுடைய மனதில் எழுகிற எண்ணங்களுக்குக் கடிவாளம் போடாமல், பழைய ஏற்பாட்டின் பகுதிகளுக்கு தங்களுடைய மனம்போன போக்கில் விளக்கம் தருவதற்கான முன்னுதாரணம் இல்லை. நம்முடைய முற்பிதாக்களுடைய வாழ்க்கையின் மூலம் நாம் பாடம் கற்றுக்கொள்ளும் விதத்தில் கர்த்தர் அவர்களை வழிநடத்தியிருக்கிறார் என்பதையே இவைகள் நமக்குத் தெரிவிக்கின்றன.
வேதத்தை நுனிப்புல் மேய்கிறவர்களாக இல்லாமல், கவனத்துடன் படித்தறிய முற்படுகிற எவரும், இதுவரை விளக்கியிருக்கும் பகுதிகளிலிருந்து, வேதத்தை எப்படி விளங்கிக்கொள்ளுவது என்பதற்கான சில பயனுள்ள தெய்வீகக் குறிப்புகளையும், உதவிகளையும், வேதத்தை விளக்குவதற்கான விதிமுறைகளையும் கற்றுக்கொண்டிருப்பார்கள். அந்தப் பகுதிகளை மறுபடியும் வாசியுங்கள், ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்.
3. வேதப்பகுதிகளை விளக்குகிறபோது, நம்முடைய விளக்கங்கள் அனைத்தும் வேதத்திலுள்ள சத்தியங்களோடு பொருந்திப் போகிறதாக இருக்க வேண்டும். ரோமர் 12:6ல் சொல்லப்பட்டிருக்கிற பிரகாரம், “நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.” “தீர்க்கதரிசி என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் விளக்கம் கூறுபவர் என்பதாகும். அதாவது தேவனுடைய சித்தத்தை அறிவிக்கிறவர்கள், தேவனுடைய மனதை மற்றவர்களுக்கு விளக்குகிறவர்கள்” என்று சார்ள்ஸ் ஹொட்ஜ் சொல்லியிருக்கிறார். அத்தோடு, “பிரமாணம்” என்ற வார்த்தை “விகிதம்” “அளவு” “விதி” “தரநிலை” என்ற அர்த்தங்களைக் கொண்டது. உள்ளார்ந்த மற்றும் இரட்சிக்கும் விசுவாசத்தோடு தொடர்பில்லாத பிலேயாம் மற்றும் காய்பா போன்றவர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்திருக்கிறார்கள். இந்த வசனத்தில் “விசுவாசம்” என்பது ஓர் இலக்கை அல்லது நோக்கத்தைக் குறிப்பிடுகிற விதத்தில் தரப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், தேவனுடைய சித்தத்தை விளக்குகிறவர்கள், அவர் அதை வெளிப்படுத்தியிருக்கிற விதத்திலேயே எப்போதும் விளக்க வேண்டும் என்பதில் உறுதியாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்பதை இந்த வார்த்தையானது முக்கியமாக வலியுறுத்துகிறது. கலாத்தியர் 1:23, 1 தீமோத்தேயு 4:1 வசனங்களிலும் “விசுவாசம்” என்பது இதேவிதமாக தரப்பட்டிருக்கிறது, எபேசியர் 4:5ல் “ஒரே விசுவாசம்” என்றும், யூதா 3ல் “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசம்” என்றும், கர்த்தருடைய வார்த்தையாகிய வேதத்தைக் குறிக்கிற விதத்திலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
வேதத்திலுள்ள எந்தவொரு வசனத்திற்கு விளக்கமளிக்கிறபோது, கர்த்தர் தன்னுடைய மனிதர்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிற, வேதத்திலுள்ள ஏனைய சத்தியங்களோடு அது பொருந்திப் போகிறதாக இருக்க வேண்டும். ஆகவே, வேதத்தை விளக்குகிறவர்கள், வேதத்திலுள்ள உள்ளடக்கத்தைப் பற்றிய ஒரு பரந்தளவிலான அறிவைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். புதிய விசுவாசிகள், மற்றவர்களுக்கு வேதத்தை விளக்கும் பொறுப்பில் ஈடுபடக்கூடாது. வேதத்திலுள்ள உள்ளடக்கத்தில் ஒரு பரந்தளவிலான அறிவைப் பெறுவதற்கு, முறையான, தொடர்ச்சியான வேத வாசிப்பு அவசியம். அப்போதுதான், மற்றவர்கள் எழுதுகிற புத்தகங்களையும் மதிப்பிட்டு வாசிப்பதற்கு ஏற்ற நபராக நீங்கள் இருக்க முடியும். வேதம் முழுவதும் தேவ ஆவியினால் தரப்பட்டிருப்பதனால், அதில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஆகவே, வேதத்தை விளக்குகிறபோது, வேதத்தின் மற்றப் பகுதியில் நேரடியாக தரப்பட்டிருக்கிற வசனங்களோடு முரண்படுகிறதாக இருந்தால், அந்த விளக்கம் தவறானது. எந்தவொரு வேத விளக்கமும் அங்கீகரிக்கக்கூடியதாக இருக்கவேண்டுமானால், வேத சத்தியங்களின் ஒட்டுமொத்தப் போதனையோடு சரியாகப் பொருந்திப் போகிறதாக இருக்க வேண்டும். எந்தவொரு வேத சத்தியமும், வேதத்திலுள்ள மற்ற சத்தியங்களோடு, பரஸ்பர இணைப்பு கொண்டதாகவும், மற்றதைச் சார்ந்திருக்கிறதாகவும் இருக்கிறது. ஆகவே ஒன்று மற்றொன்றோடு முழுமையாக இணைந்திருக்கிறது. வேதத்திலுள்ள புத்தகங்களைப் பற்றி பெங்கல் (Bengel) என்பவர், “அவைகள் ஒரே அழகான, இசைவான, மகிமையுள்ள சத்தியத் தொகுப்பாக இணைந்திருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார்.
பரிசுத்த வேதாகமம்
1. வேதம் கர்த்தரின் சித்தத்தின் மொத்த வடிவம்; அதற்கு மேல் மனிதன் அறிந்துகொள்ள அவசியமான அவருடைய சித்தம் எதுவும் இல்லை. கர்த்தர் வேதத்தின் மூலமாக மட்டுமே தன் சித்தத்தை வெளிப்படுத்துகிறார்; அவர் நேரடியாக இன்று பேசுவதில்லை. இன்னொருவகையில் சொல்லப்போனால் கர்த்தரின் வெளிப்படுத்தல் நிறைவடைந்துவிட்டது.
2. வேதத்தின் மூலம் மட்டுமே மனிதன் நேரடியாகக் கடவுளைப் பற்றிய அறிவை அடைந்து, கிறிஸ்துவில் இரட்சிப்பை அடைய முடியும்.
3. வேதம், விசேஷமான முறையில் கர்த்தர் பரிசுத்த ஆவியினால் ஊதி அருளப்பட்ட தெய்வீகத் தன்மைகொண்ட வெளிப்படுத்தல். அதுபோன்று வேறெந்த எழுத்தோ, இலக்கியமோ உலகத்தில் இல்லை.
4. எபிரெய, கிரேக்க மொழியில் எழுத்தில் கர்த்தர் தந்து பாதுகாக்கப்பட்டிருக்கும் வேதம் தன்னில் எந்தத் தவறுகளையும் கொண்டிருக்கவில்லை; ஆனால், வேத மொழிபெயர்ப்புகள் குறைபாடுள்ளவையாக இருந்துவிடலாம்.
5. கர்த்தரின் வேதத்தோடு எதையும் சேர்க்கக்கூடாது; அதிலிருந்து எதையும் நீக்கவும் கூடாது. வேதத்தில் காணப்படுபவை மட்டுமே வேதம்; கர்த்தரின் வார்த்தை.
6. தெய்வீக வெளிப்படுத்தலாகிய வேதம் கர்த்தருக்குரிய சர்வஅதிகாரம் கொண்டது. வேதம் தன் அதிகாரத்தைத் தனக்குள்ளேயே கொண்டிருக்கிறது; அது தன் அதிகாரத்தை நிரூபிக்க படைக்கப்பட்ட எதிலும் தங்கியிருக்கவில்லை.
7. வேதம் அழியாது. அதாவது அதில் கொடுக்கப்பட்டிருப்பவைகள் நிச்சயம் நிறைவேறும்; அது ஒருபோதும் வீண்போகாது.
8. கர்த்தரின் சித்தத்தின் மொத்த வடிவமாகிய வேதம், அவருடைய சித்தத்தை இரண்டு விதங்களில் நமக்கு வெளிப்படுத்துகின்றது:
அ. நேரடியாக வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய விதத்தில் வெளிப்படையாகக் காணப்படுகின்றது.
ஆ. தன்னில் உள்ளடக்கமாகக் கொண்டிருந்து அவற்றை வெளிப்படுத்துகின்றது.
இரகசியமானவற்றைக் கர்த்தர் நமக்கு வெளிப்படுத்தவில்லை. அவர் மட்டுமே அதை அறிந்தவராக இருக்கிறார்.
9. வேதம் எப்போதும் ஒரு அர்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கும் (One sense); அதற்குப் பல அர்த்தங்கள் கிடையாது. ஒரு வேதபோதனையில் பல பயன்பாடுகள் இருக்கலாம், ஆனால், வேதத்தின் அர்த்தம் எப்போதும் ஒன்று மட்டுமே.
10. கிறிஸ்தவ வாழ்க்கை, திருச்சபை மற்றும் அனைத்து விஷயங்களிலும் வேதத்தின் தீர்ப்பு மட்டுமே இறுதியானது.
வாசகர் பார்வை
வாசிக்கும் இதயங்களை அவற்றைக் குறித்து அசைபோடவைத்து, வெறுமனே நன்றி சொல்லுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து பேச வைக்கும் அருமையான கட்டுரை இது.
கட்டுரையின் தலைப்பை வாசித்தபோது இதயம் சிறிது துணுக்குற்றாலும், அதில் காணப்படும் நிஜம் உள்ளத்தை சுட்டது உண்மை. திருமறைத்தீபம் இதழ் தொகுப்பு (volumes) நூல்களைத் தொடர்ந்து வாசித்துப் பார்த்தால் வாசிப்பு, உரையாடல், சிந்தனை தொடர்பாக இரு-பதுக்கும் அதிகமான கட்டுரைகள் வெளிவந்துள்ளன. எனவே இந்த வாசிப்பின்மை “வைரஸ்” குறித்து கர்த்தர் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தும், இன்னமும் இந்த விஷயத்தில் சரியான முயற்சிகள் செய்யாதவர்களாகவும், சோம்பேறிகளாகவுமே இருக்கிறோம் என்பதை மேடை போட்டுக் காட்டுகிறது இந்தக் கட்டுரை.
ஆவிக்குரிய அறிவுப் பசியோடு கூடிய “தர்க்க ரீதியான சம்பாக்ஷனை” என்ற ரீதியில் வீட்டில் சில வேத சத்தியங்கள் குறித்து உரையாடியதுண்டு; அத்தி பூத்தது போல சில நண்பர்களுடன் பேசிய அனுபவமும் இருக்கிறது. இருந்தாலும் பல வேளைகளில் இத்தகைய உரையாடல்களில் தெளிவான முடிவு காணமுடியாமல், பொறுமை இழந்து போய் அதுவே பெரிய தர்க்கத்திற்கு வழி உண்டாக்கி விடுகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் நமது “ஆவிக்குரிய விஷய ஞானக் கிணறு” வறண்டு காணப்படுவதே என்று இந்தக் கட்டுரை மூலம் புரிந்து கொள்ளமுடிந்தது. “மூளைக்குத் தீனிபோட்டு அதைத் சிந்திக்க வைக்கும் விஷயத்தில் பெரும் சோம்பேறிகளாக இருப்பது படைத்தவரை இழிவுபடுத்தும் செயல்; அதை அவர் விரும்புவதில்லை” என்று கடுமையாக எச்சரிக்கிறது இந்தக் கட்டுரை. எனவே வளர்ப்பு முறையையும் சூழ்நிலைகளையும் குறைகூறுவதை நிறுத்திவிட்டு வைராக்கியத்தோடும் ஜெபத்தோடும் இதில் வளர முயற்சி செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், அப்போஸ்தலர் நடபடிகளைத் தொடர்ச்சியாக படித்து வரும் எனக்கு, புதிய உடன்படிக்கையின் அனைத்து ஆசீர்வாதங்களையும் நிறைவாக அனுபவிக்கும் நம்மிடையே “சகோதர அன்பு” அன்று போலில்லாமல் ஏன் மிகவும் தரம் தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது? என்பது குறித்த ஆராய்ச்சிக்கு ருசி சேர்க்கும் விதமாக இந்த ஆக்கம் இருந்தது. அடுத்தபடியாக “தர்க்கவாதப் பிரசங்கத்தின்” அடிப்படை அம்சங்கள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து அறிந்துகொள்ள முடிந்தது. இதை வாசித்துக் கொண்டிருக்கும்போது முதலாவது நினைவில் ஓடி வந்தது உங்களுடைய “சிக்கலான வேதப் பகுதி” போதனைகள். குறிப்பாக “வந்தது சாமுவேலே” என்ற வேத பாடத்தில், வந்தது சாமுவேல் அல்ல என்று நான் உறுதியாக நம்பின ஐந்து குறிப்புகளை “ஒரே பந்தில் கிளீன் போல்ட்” ஆக்குவதுபோல உங்கள் வாதம் அமைந்திருந்தது; அதாவது அங்கு வந்த நபரை பரிசுத்த ஆவியானவர் திரும்பத் திரும்ப சாமுவேல் என்றே வேதத்தில் குறிப்பிட்டுள்ளபடியால் வந்தது சாமுவேல்தான்! என்ற உங்களுடைய ஒரு வாதத்தில் எனது ஐந்து குறிப்புகளும் அடிபட்டு போனதை இன்றும் மறக்க முடியவில்லை. இதே போன்ற தர்க்கவாத பிரசங்கங்களைப் போதகர் ஜேயின் பிரசங்கத்திலும் கவனித்திருக்கிறேன். குறிப்பாக அதன் மூலம் கர்த்தர் தரும் பயன்பாடுகள் “எரிநெய் ஈட்டிகளாக” இதயத்தை தாக்கி அடுத்த முறை அத்தகைய பாவ சூழ்நிலை வரும்போதே, மோட்சப் பிரயாண கிறிஸ்டியான் போலக் காதைப் பொத்திக்கொண்டு “நித்திய ஜீவன்! நித்திய ஜீவன்!” என்று கதறி விலகி ஓட வைத்திருக்கிறது. நம்மினத்துக் கிறிஸ்தவ போதனைகள் குப்பையைப்போல மாசுபடிந்து காணப்பட்டாலும் “குப்பைகளுக்குள் கிடைத்த மாணிக்கமாக” கர்த்தர் தந்திருக்கும் இத்தகைய சில சீர்திருத்தப் போதகர்களை எண்ணி மனதார நன்றி சொல்ல வைத்தது.
தர்க்க ரீதியில் சிந்தித்து செயல்படும் ஆத்துமாக்களும், தர்க்கவாதப் பிரசங்கம் செய்யும் போதகர்களும் குறைவாக இருக்கும்வரையில் “பியூரிட்டன்கள் காலம் போன்ற ஒரு பொற்காலம்” என்ற நமது கனவு ஒரு “கானல் நீராகவே” இருக்கும் என்று புரிந்தது. வைராக்கியத்தோடு இந்தக் காரியத்தைச் செய்ய முயற்சி செய்கிறோம், அதற்காக ஜெபிக்கிறோம். நீங்களும் எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
—ஷேபா மிக்கேள் ஜோர்ஜ்
நெல்லை அப்போஸ்தலன்
தென் தமிழகம் வந்திறங்கி
தரங்கம்பாடியில் தங்கியிருந்து
நற்றமிழை நலமுறக் கற்று
நெல்லையெங்கும் நடைநடந்து
திகட்டாத சுவிசேஷத்தைத்
தீந்தமிழில் பிரசங்கித்துப்,
பிராமணன், நாடார், பள்ளர் என்ற
பண்பாட்டுச் சாதிப் பேதத்தை
வீர்கொண்டு விரட்டியடித்து,
இயேசுவே தேவன் என்று
சிரம் தாழ்த்தி மனந்திரும்பி,
முகங்குப்புற வணங்கிவாழ்ந்த
சிலைகளைச் சிதைத்தெறிந்து
மன்னன் இயேசுவை விசுவாசித்த
மாந்தருக்கு ஞானஸ்நானமளித்து,
நெல்லையெங்கும் நிறுவினார்
சபைகள் நூற்றுக்கணக்கில்
போதக இறையறிஞர் ரேனியஸ்.
எதிரிகளாம் எத்தர்கள்
கோபத்தோ டெள்ளி நகையாட
எரிநெருப்பில் வீடிழந்து
வீதியே கதியென்றிருந்த
நல்விசுவாசிகளுக்கு நலமோடு
கிறிஸ்தவ கிராமங்களை
நெல்லை மாவட்டமெங்கும்
நேசத்தோடமைத்து,
படிப்பதற்குப் பல நூறு
பள்ளிகளையும், கற்றுத்தரத்
தரமான நல்லாசிரியரையும்
அக்கறையோ டமர்த்திப் பணியில்,
இத்தனைக்கும் மேலாக இனி
என்ன இருக்கிறது செய்வதற்கென்ற
எண்ணத்திற் கிடங்கொடாமல்,
தமிழுக்குப் பலநூறு பக்கங்களில்
தீந்தமிழில் இலக்கண மிசைத்து,
வாசிக்கத் தடையற்ற நடையில்
எளிதாக, இனிதாக வேதத்தைத்
தரமாக மொழியாக்கம் செய்து,
இறையியல் போதனையின்றி
இருக்கமுடியாது திருச்சபையென்ற
ஆழ்ந்த நம்பிக்கை உந்தித்தள்ள
அறுநூறு பக்கங்களுக்கு மேலாக
அருமையாய் இறையியலை
ஆழமாய்த், தெளிவாய்,
அருவியோடும் நளினத்தோடும்
தமிழுலகே புகழும் தரத்தோடும்
வார்த்து வையம் வியக்க
கிறிஸ்தவ நற்பணியாற்றி,
நெல்லை அப்போஸ்தலன்
நிகரானவன் யார் இவருக்கு?
என்று பாரே சொல்லவைத்தார்
சீர்திருத்த அருட்பணி அறிஞர்
சார்ள்ஸ் தியோபீலஸ் ரேனியஸ்.
– சுபி
புத்தகம் பேசுகிறது
நான் பிறக்கவில்லை.
நீ அடிக்கடி தொட்டும் தடவியும்,
பார்த்தும் இரசிக்கவும்,
நான் உருவாகவில்லை.
என்னை உண்டாக்கியவன்
உழைத்த உழைப்பிற்கு
ஈடு இணை இல்லை.
இரவு பகலாய் வியர்வை சிந்தி
சீராய்ச் சிந்தித்து
வார்த்தைகளைக் கோர்த்து
அழகுபடப் படைத்து
நல்லாடை போர்த்து என்மேல்
நீ பெற்றுப் படித்துப் பயன்பெற
என் ஆசான் என்னை வார்த்தார்.
வாங்கிய நாள் முதல் என்னை நீ
தொட்டுத் தடவிப் பார்த்ததைத்
தவிர என்ன செய்தாய்?
முகநூலில் என் படத்தைப்போட்டு
உன் நண்பர்களிடம் வாசகன் நீ,
நேசிக்கிறாய் என்னை, என்று
காட்டி மகிழவா
பிறந்தேன் நான்?
– சுபி