திருமறைத்தீபம் 2021 -ம் ஆண்டு மூன்றாம் இதழ்
1. வாசகர்களே!
2. இறவா கிறிஸ்தவ இலக்கியம் – தமிழில் ‘மோட்சப் பயணம்’
3. எலிசா போனாலும் யெகோவா இருக்கிறார்
4. பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்கான சாட்சியங்கள்
வாசகர்களே!
வணக்கம் வாசகர்களே! மறுபடியும் இந்த இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். திருமறைத்தீபம் தொடர்ந்து உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்து வருகிறது என்று நம்புகிறேன். கோவிட்-19 தொடர்ந்து உலகத்தை பயமுறுத்தி வரும் இந்நாட்களில் கர்த்தரின் கிருபையால் நம் பணிகளை நாம் ஜெபத்தோடு தொடரமுடிகிறது. கர்த்தர் நம்மைப் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
இந்த இதழின் முதலிரு ஆக்கங்களும் பியூரிட்டன் பெரியவரான ஜோன் பனியனின் மோட்சப் பயணம் என்ற காலத்தால் வெல்ல முடியாத இலக்கியப் படைப்பின் தமிழ் மொழியாக்க வரலாறு பற்றியது. அத்தகைய வரலாற்றுக் குறிப்புகளை விளக்கும் படைப்புகள் எதுவும் நம்மத்தியில் இல்லாதது ஒரு பெருங்குறை. அந்தக் குறையை நிறைவுசெய்யும் முயற்சியாக இந்த இரு ஆக்கங்களையும் வரைந்துள்ளேன்; இது தொடர்ந்து நீளுகின்ற படைப்பாக இருக்கப்போகின்றது. சீர்திருத்த பியூரிட்டன் காலத்தையும், அக்காலத்தில் மலர்ந்த இறைபோதனைகளையும் பற்றிப் பேசுகின்றவர்கள்கூட மோட்சப் பயணத்தின் அருமை தெரியாமல் இருந்து வருகிறார்கள். தமிழினத்து திருச்சபைகள் இதை வாசித்து அனுபவித்து ஆனந்தப்பட வழியில்லாத நிலையில் இருந்துவருகின்றன. அந்தக் குறை நீங்க ஆண்டவர் மட்டுமே துணை செய்யமுடியும்.
இதை அடுத்து பழைய ஏற்பாட்டு 2 இராஜாக்கள் நூலில் இருந்து ஒரு பிரசங்கத்தை எழுத்தில் தந்திருக்கிறேன். இது தமிழில் பிரசங்கிக்கப்பட்டு திருமறைத்தீபம் யூடியூப் செனலில் பதிவாகியிருக்கின்றது. இதுவும் உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இவ்விதழில் இறுதி ஆக்கமாக ரால்ப் வென்னிங்கின் பாவத்தின் பாவம் என்ற நூலின் ஒரு பகுதி மொழியாக்கம் செய்யப்பட்டுப் பதிவாகியிருக்கின்றது. பாவத்தின் தன்மை பற்றிய அந்த அருமைப் பியூரிட்டனின் விளக்கங்களை இன்று நம்மினத்துப் பிரசங்கிகளிடமும், திருச்சபையிலும் எதிர்பார்க்க முடியாத நிலையில் இருக்கிறோம். பாவத்தை வெறும் பலவீனமாக மட்டும் அநேகர் கருதி வருகின்ற இந்த நவீன காலத்தில் ரால்ப் வென்னிங்கின் வேத விளக்கங்கள் நமக்குப் பெரும் ஆறுதலை அளித்து, பாவத்தைக் குறித்த எச்சரிக்கையையும் ஆணித்தரமாகத் தந்து வருகின்றது. இவ்விதழ் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்க கர்த்தர் உதவட்டும். – ஆர்
இறவா கிறிஸ்தவ இலக்கியம் – தமிழில் ‘மோட்சப் பயணம்’ –
17ம் நூற்றாண்டு பியூரிட்டன் பெரியவர்களின் பொற்காலத்தைப் பற்றித் திருமறைத்தீபத்தில் ஏற்கனவே எழுதியிருந்தேன். பியூரிட்டன் பெரியவர்களில் ஒருவரும், இங்கிலாந்தைச் சேர்ந்த பாப்திஸ்து போதகருமான ஜோன் பனியன் எக்காலமும் நிலைத்து நிற்கக்கூடிய அநேக ஆவிக்குரிய பியூரிட்டன் இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். பெரும்பாலானவை அவருடைய சிறைவாச காலத்தில் எழுதப்பட்டவை. பனியனைப்பற்றி நான் வெளியிட்டிருந்த இன்னொரு நூலில் (ஜோன் பனியன், சீர்திருத்த வெளியீடுகள், சென்னை) அந்த வரலாற்றை வாசிக்கலாம். அவருடைய நூல்களில் முக்கியமானது மோட்சப் பயணம் (Pilgrim’s Progress). அதுவே ஆங்கில நூலுக்கான, எல்லோருக்கும் பரிச்சயமான தமிழ் தலைப்பு. இதுவரை அந்நூல் ‘மோட்சப் பிரயாணம்’ ‘மோட்சப் பயணம்’ என்ற தலைப்புகளில் தமிழகத்தில் இரண்டு பதிப்பகத்தாரால் தமிழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இம்மொழியாக்கங்கள் பற்றிய விளக்கங்களையும், பனியனின் நூலின் இலக்கிய, இறையியல் மற்றும் நடைமுறைப் பயன்பாடுகளையும் இந்தத் தொடராக்கத்தில் தரப்போகிறேன்.
தன்னுடைய ஆங்கிலப் படைப்புக்கு பனியன் தந்த தலைப்பு ‘The Pilgrim’s Progress from This World, to that Which is to Come’. பனியனின் படைப்புக்களின் சிகரம் என்று இதை அழைக்கலாம். தன் காலத்துக்குப் பிறகு அதைக் கடவுள் எந்தவிதமாகவெல்லாம் பயன்படுத்தப் போகிறார் என்பது பனியனுக்குத் தெரிந்திருந்திருக்காது. பனியனின் எண்ணமெல்லாம் தன் காலத்து மக்களுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை இறையியல் குறைவைக்காமல் புனைவிலக்கியத்தின் மூலமாக விளக்க வேண்டுமென்பதுதான். நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்பு மோட்சப் பயணம் எத்தனைப் பெரிய இமாலயமாக உருவெடுத்து இன்று நம் கண்முன் நிற்கிறது!
உலகத்தில் அதிகமாக ஆங்கிலத்தில் விற்பனையாகின்ற நூல் பரிசுத்த வேதாகமம். அதற்கு அடுத்தபடியாக அதிகமாக விற்பனையாகி வரும் ஒரே நூல் பனியனின் மோட்சப் பயணம். மோட்சப் பயணம் உலகத்து மொழிகளில் 200க்கு மேலானவைகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு கிறிஸ்தவர்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. அது ஒரு காலத்திலும் அச்சிலில்லாமல் இருந்ததில்லை. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முதல் புனைவு நூல் என்றும் இது கருதப்படுகிறது. வேதத்தைத் தவிர இந்தவிதத்தில் வேறொரு நூல் இத்தனை மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்டுவரவில்லை. இதுபற்றிய புள்ளிவிபரங்கள் அதிசயிக்கவைக்கின்றன. இந்திய மொழிகள் பலவற்றிலும் மோட்சப் பயணம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று அதைத் தமிழில் மொழியாக்கம் செய்த சாமுவேல் பவுல் ஐயர் 1882 ல் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜோன் பனியன் மோட்சப் பயணத்தை 1678ல் எழுதினார். அவரது நீண்ட முதல் சிறைவாச காலத்திலா அல்லது இரண்டாவது ஆறுமாதகால சிறைவாசத்தின்போதா அதை எழுதினார் என்பதில் வரலாற்றாசிரியர்களிடம் கருத்துவேறுபாடுகள் இருந்து வருகின்றன. ஆங்கில மூலம் இரண்டு பாகங்களைக் கொண்டதாக எந்த அதிகாரப் பிரிவுகளும் இல்லாமல் தொடரும் புனைவாக இருக்கின்றது. அதன் இரண்டாவது பாகம் 1684ல் வெளியிடப்பட்டது. பனியனின் வாழ்நாளில் மோட்சப் பயணம் 1678ல் இருந்து 1688ல், பனியன் இறக்கும்வரை பதின்மூன்று பதிப்புகளாக வெளிவந்து 100,000 பிரதிகள் அச்சாகியிருந்தன. இரண்டு விற்பனையாளர்கள் 1690ல், 10,000 பிரதிகளுக்கு முன்பதிவு செய்திருந்தனர் (Pilgrim’s Progress, Barry E. Horner, 2003). வெகுவிரைவில் அது 17ம் நூற்றாண்டின் பிரபல்யமான உரைநடை புனைவு நூலாகப் பெயர்பெற்றது.
இறவா இலக்கியமான மோட்சப் பயணம் தமிழில் 18ம் நூற்றாண்டில் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பது தமிழ் கிறிஸ்தவத்திற்கு கிடைத்திருக்கும் ஆசீர்வாதம். தமிழினத்துக் கிறிஸ்தவத்தில் வாசிப்புப் பஞ்சம் நிலவி வருகின்றபோதும், மோட்சப் பயணத்தைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்துவைத்திருக்கிறவர்கள் இருக்கிறார்கள். அதை வாசித்திருக்கின்ற அநேகரை நான் சந்தித்திருக்கின்றேன். வேறு எந்தப் புத்தகத்தைப் பற்றித் தெரிந்திராமல் இருந்தாலும் இதைப்பற்றி அறிந்தோ அல்லது வாசித்தோ இருக்கிறவர்கள் நம்மத்தியில் நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் இருக்கிறார்கள். மோட்சப் பயணம் கிறிஸ்தவ புனைவிலக்கியமாக இருந்தபோதும், அது தமிழிலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும்படி அதன் மகுடத்தில் இருக்கும் இரத்தினக்கற்களில் ஒன்று. தமிழில் பெருமளவுக்குத் தரமான கிறிஸ்தவ இலக்கியங்கள் இன்று காணப்படாதபோதும், இருப்பவற்றில் தலையாயது மோட்சப் பயணம் என்பது என் கருத்து. உண்மையில் இதை அறிந்துணர்ந்து ஆனந்திப்பவர்கள் வெகுசிலரே.
தமிழினப் போதகர்களில் இதை வாசித்து அனுபவித்திருப்பவர்களின் தொகையை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் மோட்சப் பயணத்தை வாசித்தனுபவித்திராத ஒருவர் சீர்திருத்த சபைகளில் போதகராக இருப்பது விதிவிலக்கு. 18ம் நூற்றாண்டில் இருந்து மோட்சப் பயணம் தமிழில் இருந்துவருகிறபோதும், அதில் ஆர்வமும், அக்கறையும் காட்டிப் பெருமிதமடையும் பிரசங்கமேடைகளோ, பிரசங்கிகளோ, பதிப்பாளர்களோ, ஆத்துமாக்களோ நம்மினத்தில் இருள் கம்மிய வானில் இருந்திருந்து தலையைக் காட்டி மின்னும் நட்சத்திரத்தைப்போலத்தான் இருக்கிறார்கள். தங்கமுட்டைக்கு மேல் அமர்ந்திருந்து அது இருப்பதே தெரியாமல் வாழ்கிறது நம்மினத்துக் கிறிஸ்தவம். மோட்சப் பயணம் பற்றிய இந்த வரலாற்று, இலக்கியத் திறனாய்வு உங்கள் கண்களைத் திறக்கட்டும்.
தமிழில் ‘மோட்சப் பயணம்’
நேரடியாகத் தமிழில் உரைநடையாக மொழியாக்கம் செய்யப்பட்டு இன்று அச்சில் இருந்திருந்து தலையைக் காட்டுவது இரண்டு மொழியாக்கங்கள் மட்டுமே. இவையும் தொடர்ச்சியாக அச்சில் இருப்பதில்லை. இன்னொன்று, மோட்சப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு ஹென்றி அல்பிரட் கிருஷ்ணபிள்ளை என்பவரால் வரையப்பட்ட இரட்சணிய யாத்திரிகம் என்ற காப்பியம். அது தமிழுக்கு கம்பராமாயணத்தைப்போலப் பெருமை சேர்க்கும், அதற்கினையான காப்பியம். (இந்த நூல்பற்றி இன்னுமொரு ஆக்கத்தில் விளக்கவிருக்கிறேன்.) மோட்சப் பயணத்தின் தமிழாக்க வரலாற்றையும், அம்மொழியாக்கத்தைச் செய்தவர்கள் பற்றியும், மொழியாக்கத்தின் தன்மைகளையும் இனி விளக்கப்போகிறேன். அதற்கான ஆய்வு எனக்குச் சில இடரல்களையும், அதேநேரம் பல இனிய அனுபவங்களையும் தரப்போகிறது என்பது ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை.
பதினாறு வருடங்களுக்கு முன்பு, தமிழில் அச்சில் இருக்கும் மோட்சப் பயண மொழியாக்கத்தை தற்கால வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வாசிப்பனுபவத்தைத் தூண்டிவிட வேண்டும் என்ற ஆவலில் கிறிஸ்தவ புத்தகக்கடைகளில் தேடியபோது ஓரிடத்திலும் நூல் கிடைக்கவில்லை. இறுதியில், சென்னை, சுவிசேஷ ஊழிய நூல்நிலையத்தை (ELS, Chennai) சகோதரர் ஜேம்ஸ் மூலமாகத் தொடர்புகொண்டேன். அவர்களிடமும் நூல் இருக்கவில்லை. அவர்களை ஒருவிதமாக சம்மதிக்கவைத்து, ஒரு பதிப்பை வெளியிட்டால் அதில் நான் 400 பிரதிகள் வாங்கிவிடுகிறேன் என்று வாக்குறுதியளித்து, அதன்படி அச்சிட்டபிறகு 400 பிரதிகளை வாங்கி அநேகரை வாசிக்கும்படி ஊக்குவித்த கதை இப்போது நினைவுக்கு வருகிறது. இது நடந்தது 2005ல். அதற்குப் பிறகு 2018ல் இன்னொரு பதிப்பை அவர்கள் வெளியிட்டிருப்பதாக அறிந்தேன். உண்மையில் அப்போது எனக்கு இவர்கள் வெளியிட்ட மொழியாக்கத்திற்கு முன்னதாக முதல் முதல் வெளிவந்திருந்த (1882) மொழியாக்கத்தைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. இரண்டு மொழியாக்கங்களுக்கும் இடையில் இருக்கும் சிறப்பு அம்சங்களைப் பற்றியும், குறைபாடுகளைப் பற்றியும் நான் அறிந்திருக்கவில்லை. அதை இந்தத் தொடராக்கத்தில் விளக்கத் தீர்மானித்திருக்கிறேன்.
தீர்க்கதரிசன அடையாள நூலல்ல
கடந்த வருடம் சிரிப்பை உண்டாக்கும் ஒரு விஷயம் நிகழ்ந்தது. இணையதளத்தில் சில விபரங்களை நான் தேடிக்கொண்டிருந்தபோது மோட்சப் பயணத்துக்கு விளக்கமளிக்கும் ஒரு தளத்தைக் கண்டேன். அது யோபு அன்பழகன் என்பவருடையது. ஜோன் பனியனின் நூலை, அது மறைபொருள் நூல், தீர்க்கதரிசன நூல் என்றும், தனக்குப் பரிசுத்த ஆவியானவர் அந்நூலின் கருத்தைத் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தினார் என்றும் அவர் அதில் விளக்கியிருந்தார். அதுவும் தான் எழுதும்போது, இயேசு தன் கையைப்பிடித்து நூல் முடியும்வரையும் அழைத்துப்போன காட்சியும் தனக்குத் தரிசனமாகத் தரப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். அத்தோடு, அதை விளக்கவுரை எதுவும் இல்லாமல் புரிந்துகொள்ள முடியாது என்றும் கூறியிருக்கிறார். அவருக்கு அது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கிறிஸ்தவ சுவிசேஷ புனைவு இலக்கியமென்பதும், அடையாளமொழி என்பது எந்த மொழிக்கும் உரிய அணிவகைகளில் ஒன்று, கிறிஸ்தவ வேதத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதும் தெரிந்திராமல் இருந்திருப்பது ஆச்சரியமே. வேத தீர்க்கதரிசன நூல்களில் ஒன்றைப் போன்றதாகக் கணித்து மோட்சப் பயணத்துக்கு அவர் விளக்கமளித்திருக்கிறார். இதுபற்றி அவருக்கு நான் இமெயில் கடிதம் எழுதி என் கருத்தைத் தெரிவித்தேன். அதுபற்றி என்னோடு விவாதம் செய்யவிரும்பவில்லை என்று சொல்லி அதைத் தவிர்த்துவிட்டார். இப்படி பனியனின் நூலை தெய்வீக மறைபொருள் நூலாகத் தவறாகக் கருதி வருகிறவர்கள் நம்மினத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கிறார்கள் என்பதும் வருந்தத்தக்கது.
மோட்சப் பயணம் கிறிஸ்தவ வெளிப்படுத்தலல்ல.
மோட்சப் பயணம் பரலோகத்தில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட வெளிப்பாடல்ல. வேத வெளிப்படுத்தல் நேரடியாகப் பரிசுத்த ஆவியினால் மனிதர்கள் எழுதும்படிக் கொடுக்கப்பட்டது (2 தீமோத்தேயு 3:16). இந்த வசனத்தில் பவுல் கூறுவதுபோல் மோட்சப் பயணம் ‘ஆவியினால்’ அருளப்படவில்லை (not an inspired book). கிறிஸ்தவ வேதம் மட்டுமே ஆவியினால் அருளப்பட்டது. பனியன், பவுலைப்போல ஆவியினால் வழிநடத்தப்பட்டு அவரிடம் இருந்து இந்தப் புனைவைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, இது வேதநூலல்ல. வேதத்தில் காணப்படும் நூல்களைப்போல இதைக் கருதக்கூடாது. வேதத்தில் தவறுகளுக்கும், குறைபாடுகளுக்கும் இடமில்லை. வேதம் பூரணமானது; பனியனின் நூல் பூரணமானதல்ல. அதை பனியனே நூலுக்கான முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நூலில் அடையாளமொழியை பனியன் பயன்படுத்தியிருந்தபோதும் மோட்சப் பயணம் தீர்க்கதரிசனம் அல்ல. பனியனின் நூலை வேதத்தீர்க்கதரிசனத்தைப் போலக் கருதவோ, பயன்படுத்தவோகூடாது. மோட்சப் பயணம் தீர்க்கதரிசன நூல் என்ற புரளியை எவர் கட்டிவிட்டதோ தெரியாது. நம்மினத்துப் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் குழுவினர் மத்தியில் அந்த எண்ணம் இருந்து வருவதாக அறிகிறேன். யோபு அன்பழகன் என்பவர் இதைத் தீர்க்கதரிசன நூல் என்று குறிப்பிட்டிருப்பதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். உலக வரலாறோ, கிறிஸ்தவ வரலாறோ தெரியாதவர்களின் கட்டுக்கதையே இது தீர்க்கதரிசன நூல் என்பது.
மோட்சப் பயணம் கிறிஸ்தவ புனைவிலக்கிய நூல்.
கிறிஸ்தவ வேத சத்தியங்களைத் தொகுத்து அவற்றைப் புனைவிலக்கியமாக, உரைநடையில் பனியன் நமக்குத் தந்திருக்கிறார். இது ஒரு இறையியல் புனைவிலக்கியம் (Theological Novel). இந்தவகையிலான கிறிஸ்தவ புனைவிலக்கியங்கள் ஆங்கிலத்தில் காணப்படுகின்றன. மோட்சப் பயணம் இந்தவகையில் முதலாவது. சீர்திருத்த போதகரான ரிச்சட் பெல்ச்சர் என்பவர் வேதத்தின் இறையியல் போதனைகளை புனைவிலக்கியமாக 20 நூல்களில் புனைந்திருக்கிறார். இதில் முதலாவதாக வந்த ‘கிருபையின் பயணம்’ (A Journey in Grace) என்ற நூலில், வேத இறையியல் சிந்தனையில்லாதிருந்த ஒரு இளம் போதகன், கிருபையின் போதனைகளைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உத்வேகத்தோடு வேதத்தை ஆராய்ந்து எப்படித் தெரியவேண்டியவற்றையெல்லாம் தெரிந்துகொண்டான் என்பதைப் புனைவிலக்கியமாக உரைநடையில் பெல்ச்சர் வரைந்திருக்கிறார். பெல்ச்சரின் கதாபாத்திரங்களை அவரே உருவாக்கினார். பெல்ச்சரின் நூல்கள் ‘ஆவியினால் அருளப்படவில்லை.’ அவை அவருடைய சொந்தப் படைப்புக்கள். பெல்ச்சர் செய்ததையே ஜோன் பனியனும் தன் நூலில் செய்திருக்கிறார்.
மோட்சப் பயணம் நூலுக்கு, எல்லா மொழிகளிலுமே காணப்படும் அடையாளமொழி (Allegory) எனும் இலக்கிய வகையை (Jenre) பனியன் தெரிந்துகொண்டிருக்கிறார். அடையாள மொழி, அடையாளங்களைப் பயன்படுத்திக் கதை சொல்லும் ஒரு இலக்கியப் பாங்கு. அதாவது, தான் சொல்ல வருகின்ற கதையைத் தேர்ந்தெடுத்த பலவித அடையாளங்களைப் பயன்படுத்தி அதன் மூலம் கதையை எழுதுகிறவர் விளக்குவார். பனியன் தன் நூலில் அடையாளங்கள் மட்டுமல்லாமல், உருவகங்களையும், கவிதைகளையும், மேலும் பல்வேறு இலக்கிய அணிவகைகளையும் பயன்படுத்தியிருக்கிறார். ஒரு புனைவிலக்கியத்தில் இந்தளவுக்கு அணிவகைகளைப் பயன்படுத்தியவர்கள் எவரும் இல்லை எனலாம். இதன் மூலம், ஒரு மனிதன் சுவிசேஷத்தைக் கேட்டுப் பாவத்திலிருந்து தெய்வீக மறுபிறப்பின் மூலம் விடுதலை அடைந்து பரலோக வாசலை அடையும்வரையிலான, அவனுடைய இந்த உலகத்து ஆவிக்குரிய பயணத்தின் அனுபவங்களை வரிசைக் கிரமமாகத் தொகுத்து பனியன் நூலில் விளக்கியிருக்கிறார். நூலில் சுவிசேஷம் நிரம்பிவழிகிறது; அதேநேரம் விடாமுயற்சியோடு காணப்பட வேண்டிய கிறிஸ்தவ வாழ்க்கைபற்றிய போதனையும் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. நூலில் காணப்படும் அத்தனை சம்பவங்களையும் பனியன் சொப்பனத்தில் (கனவு) கண்டதாகக் கூறியிருக்கிறார். உண்மையில் அத்தகைய கனவை பனியன் ஒருபோதும் காணவில்லை. கனவில் கதை வந்ததாக பனியன் சொல்லுவது அவர் தன் நூலுக்குத் தெரிந்துகொண்டிருக்கும் ஒரு இலக்கியவகை; அது புனைவின் ஓர் அங்கமாக இருக்கிறது. இந்தவிதத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலக்கியத்திலும் எத்தனையோ நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இது ஒன்றும் புதிதல்ல.
வேத அடையாள மொழி நூல்களைப் (உதாரணம்: தீர்க்கதரிசன நூல்கள், வெளிப்படுத்தின விசேஷம் போன்றவை) புரிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவரின் துணை நமக்குத் தேவையாக இருப்பதுபோல், பனியனின் நூலைப் புரிந்துகொள்ள நேரடியாக ஆவியானவர் நமக்கு அவசியமில்லை. பனியனின் நூல் ‘ஆவியினால் அருளப்படவில்லை’ (It is not an inspired book); நூல் முழுவதையும் பனியனே சுயமாக எவருடைய உந்துதலோ, வழிநடத்தலோ இன்றி தன் சுயமுயற்சியில், தன்னுடைய அறிவையும், ஆற்றலையும், கற்பனா வளத்தையும் பயன்படுத்திச் சிந்தித்து எழுதியிருக்கிறார். அவர் கிறிஸ்தவராக இருந்தபடியால் நிச்சயம் ஆவியானவர் எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவாக உதவுவதுபோல் அவருக்கும் உதவியிருக்கிறார். மோட்சப் பயணத்தை வாசித்துப் புரிந்துகொள்ளுவதற்கு, வேதத்தைப் புரிந்துகொள்ள நாம் ஆவியில் தங்கியிருந்து ஜெபிப்பதுபோல் நாம் ஆவியானவரிடம் ஜெபிக்க வேண்டிய அவசியமுமில்லை.
வேத இறையியல் புதினம் (Theological Novel)
பனியனின் புனைவிலக்கியம் சாதாரண மனித எழுத்தாக இருந்தபோதும், அதற்குப் பரிசுத்த வேதமே முழு ஆதாரம். நூல் விளக்கும் புனைவையும், அதன் கதாபாத்திரங்களையும் பனியன் வேதத்தில் இருந்தே பெற்றுக்கொண்டிருக்கிறார். இது வேதம் சார்ந்த மனிதப் புனைவு நூல். இந்தக் கிறிஸ்தவப் புனைவிலக்கியத்தில் பனியன் வேதசத்தியங்களின் அடிப்படையில் அநேக கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார். இந்த நூலின் கதாபாத்திரங்களை வேதத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மனிதர்கள் மூலம் அடையாளம் கண்டுகொள்ளலாம். உதாரணத்துக்கு, கிறிஸ்தியான்; வேதம் விளக்குகின்ற மறுபிறப்படைந்த ஒரு மனிதன். கிறிஸ்தீனாள்; மறுபிறப்படைந்த பெண், கிறிஸ்தியானின் மனைவி. சுவிசேஷகன்; நற்செய்தியை அறிவிப்பவன். திடநம்பிக்கை; உறுதியான விசுவாசமுள்ள புதிய கிறிஸ்தவன். மாயாபுரி; உலக சுகங்களையும், இன்பங்களையும் கொண்டிருக்கும் இடம். மோட்சப் பயணத்தின் கதாபாத்திரங்களையும், இடங்களையும் வாசகர்கள் பிரச்சனையில்லாமல் வேதத்தில் இருந்தே அடையாளம் கண்டுகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், தன் புனைவை விளங்கிக்கொள்ளுவதற்கு அவசியமாக பனியன் நூல் முழுவதும் வேத வசனங்களைத் தேவையான இடங்களிலெல்லாம் கொடுத்து, தான் எதை விளக்குகிறேன் என்பதையும் நாம் அறிந்துகொள்ளும்படித் தெளிவாக விளக்கியிருக்கிறார். பனியனின் நூலில் எந்தப் புதிருக்கும் இடமில்லை. மோட்சப் பயணம் ஒரு புனைவிலக்கியமாக இருந்தாலும், அது வேத சத்தியங்களையும் இறையியல் போதனைகளையும் எந்தத் தவறுமில்லாமல் புனைவாக உருவகித்து எழுதப்பட்டிருக்கிறது. பனியனின் நூலைப் பற்றி விளக்கும்போது பெரும் பாப்திஸ்து பிரசங்கியான ஸ்பர்ஜன் சொல்லுகிறார், ‘பனியனின் நூல் முழுவதும் வேதத்தில் தோய்த்து எழுதப்பட்டிருக்கிறது. அவருடைய சரீரத்தில் எந்த இடத்தில் ஒரு ஊசியால் குத்தினாலும், வேதம் இரத்தமாக வெளிவரும்.’ வேதமறிந்தவர்களுக்கு பனியனின் நூலைப் படித்துப் புரிந்துகொள்ளத் தடையே இருக்காது.
வேதத்தின் வெளிப்படுத்தல் விசேஷத்தை விளங்கிக்கொள்ள ஆவியானவருடைய துணை தேவைப்படுவதுபோல் பனியனின் புனைவிலக்கியத்தை விளங்கிக்கொள்ளத் தனிப்பட்ட முறையில் பரிசுத்த ஆவியானவர் ஒருவருக்குத் தேவையில்லை. கிறிஸ்தவ கண்ணோட்டத்தோடு, வேதத்தோடு அதை ஒப்பிட்டுப் படித்தாலே போதும். வேத வசனங்களைப் புனைவில் வாரியிறைத்திருக்கிறார் பனியன். புனைவின் விளக்கத்தையும் நூலில் பனியன் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். தான் பயன்படுத்தியிருக்கும் அத்தனைப் பாத்திரங்களுக்குமான விளக்கத்தையும், இறையியல் விளக்கங்களையும் பனியன் அடிக்குறிப்பில் தந்திருக்கிறார். அவர், அடையாளமொழி நடையில் அதை உருவகித்து எழுதியிருந்தபோதும் அதை விளங்கிக்கொள்ளத் தேவையான அனைத்தும் நூலுக்குள்ளேயே பொதிந்து காணப்படுகின்றன. சாதாரண கிறிஸ்தவ வாசகனுக்கு அதைப் புரிந்துகொள்ளுவதில் எந்த இடறலும் இருக்காது. நான்கு நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் உலக முழுதும் மோட்சப் பயணத்தை வாசித்து இலகுவாக விளங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
பெரி ஹோனர் (Barry E. Horner) எனும் அமெரிக்க போதகர் மோட்சப் பயணத்தின் விசேஷ அம்சங்களையும், இலக்கியம், கவிதைகள், இறையியல் சிறப்பம்சங்கள், போதக நுணுக்கங்கள், அதில் கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், அதன் சுவிசேஷத்தின் தன்மை போன்றவற்றை விளக்கி ஒரு நல்ல நூலை வெளியிட்டிருக்கிறார். நூலைப் புரிந்துகொள்ள ஹோனரின் கையைப்பிடித்து இயேசு அழைத்துச் செல்லவில்லை. ஹோனருக்கு விசேஷ தரிசனங்கள் தேவையாயிருக்கவில்லை. நம்மினத்துக் கிறிஸ்தவர்களின் DNAயில் அமானுஷ்ய அனுபவங்களைத் தேடி அலையும் தன்மை அதிகமாகவே கலந்திருப்பதால் அவர்கள் எதையும் நேரடியாகப் பரலோகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளவே அலைகிறார்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்ட யோபு அன்பழகனில் நிலையும் அதுவே.
1882ல் வந்த தமிழ் மொழியாக்கத்தில் சாமுவேல் பவுல் ஐயர் பனியனின் எச்சரிக்கையைப் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்,
“வாசிக்கிறவனே, இப்பொழுது என் சொப்பனத்தை உனக்குச் சொல்லிப்போட்டேன். அதன் தாற்பரியத்தை எனக்காவது, உனக்காவது, உன் பிறனுக்காவது விவரிக்கக் கூடுமா என்று பார். ஆனால், தப்பாய் மாத்திரம் தாற்பரியம் (அர்த்தம்) பண்ணாதே. தப்புத் தாற்பரியம் உனக்கு நன்மையை உண்டாக்குகிறதற்குப் பதில் தீமையையே உண்டாக்கும். மேலும் என் சொப்பனத்தின் வெளித்தோற்றங்களில் உன் மனதை வெகுதூரம் செலுத்திவிடவேண்டாம். என் உவமானங்களும், ஒப்பனைகளும் உன்னைச் சிரிக்கப்பண்ணவும், உன் மனதைக் குழப்பிப்போடவும் வேண்டாம்; இந்தக் குணத்தைப் பையன்களுக்கும், பைத்தியக்காரருக்கும் விட்டுவிட்டு, நான் எழுதும் சங்கதிகளின் சாரத்தை மாத்திரம் பிடித்துக்கொள். திரையை நீக்கிவிட்டு திரைச்சீலைக்குள் பார். என் ஒப்பனைகளை உருட்டிப் புரட்டிப் பரிசோதனை செய்; அப்போது உத்தம இருதயத்தை ஏவும்படியான ஆதாரங்களைக் கண்டடைவாய். அதில் ஏதாவது மாசுகளைக் கண்டடைந்தால் அவைகளைத் தூர எறிந்துவிட அஞ்சவேண்டாம்; ஆனால் அதிலுள்ள பொன் பொடிகளைக் கூட எறிந்துபோடாதே. என் பொன் கல்லோடு கலந்திருந்தால்தான் என்ன? கொட்டையைத் தொட்டு பழத்தை எறிந்துவிடுவார் இல்லையே. ஆனால் எல்லாவற்றையும் நீ எறிந்துவிடுவது உண்டானால், நான் மறுபடியும் ஒரு தரம் சொப்பனங் காணவேண்டியதே அல்லாமல் வேறு வழி இன்னதென்று எனக்கே தெரியவில்லை என்பதே.”
பனியனின் வார்த்தைகளிலிருந்து, அவருடைய புதினத்தை எவரும் புரிந்துகொள்ள முடியும் என்றும், ஆனால், அதற்குத் தப்பாய் அர்த்தம் கொடுக்கக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை செய்திருப்பதைக் கவனியுங்கள். அத்தோடு இந்தப் புனைவு ஆவியால் அருளப்பட்டதாக, தீர்க்கதரிசனமாக இருந்திருந்தால் பனியன், என் எழுத்துக்களில் ‘ஏதாவது மாசுகளைக் (குறைகளைக்) கண்டடைந்தால் அவைகளைத் தூர எறிந்திட அஞ்சவேண்டாம்’ என்று நிச்சயம் எழுதியிருக்க மாட்டார். பனியனின் வார்த்தைகளில் இருந்தே இந்த நூல் அவருடைய சொந்தக் கற்பனையில் உருவான இறையியல் புதினம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
சாமுவேல் பவுல் ஐயரின் மொழியாக்கம் – மோட்சப் பிரயாணம்
18ம், 19ம் நூற்றாண்டுகளில் தமிழில் மோட்சப் பயண மொழியாக்கம்
18ம் நூற்றாண்டிலேயே, நாம் இன்று அறிந்திருக்கின்றவிதத்தில் உரைநடை எழுத்து தமிழுக்கு அறிமுகமானது. அதன் அறிமுகத்துக்கு கிறிஸ்தவ மிஷனரிகளுக்கும், கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த வீரமாமுனிவர் என்றழைக்கப்படும் கொன்ஸ்டன்டைன் பெஸ்கிக்கும் (1740) நாம் நன்றிகூற வேண்டும். அத்தோடு அதற்குமுன் காகிதம், அச்சுக்கூடம் ஆகியவை இருந்திராதபடியாலும், சுவடிகளிலேயே பெரும்பாலும் எதையும் எழுதி வந்ததாலும் உரைநடையில் எவருக்கும் நாட்டம் இருக்கவில்லை. அன்றைய தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே இருந்தன. அவற்றை சுவடிகளில் இலகுவாக எழுதிவிடலாம். எதையும் சுருக்கமாக குறுக்கி விளக்குவதே செய்யுளின் பணி. 17ம் நூற்றாண்டுக்கு முன் உரைநடை பரவலாகக் காணப்படவில்லை. (History of the Tamil Literature, 1928, a Desertation by V. S. Sankaranarayana Pillai, M. A).
செய்யுளில் எதையும் விளக்கும் முறை மாறி உரைநடையில் எழுத்து வளர, அன்று ஆரம்பிக்கப்பட்ட அச்சுக்கூடம் துணை போனது. திருநெல்வேலியில் 1847ல் திருச்சபை மிஷனரி சங்கம் (C. M. S.) ஒரு அச்சுக்கூடத்தை நிறுவியது. அதற்கு முன் சென்னையிலும் ஒரு அச்சுக்கூடம் நிறுவப்பட்டிருந்தது. அத்தோடு தமிழில் பாண்டித்தியம் பெற்றிருந்த கிறிஸ்தவ மிஷனரிகளான C.T.E. இரேனியஸ், ரொபட் கால்ட்டுவெல், ஜி. யூ. போப் ஆகியோரும் உரைநடை இலக்கியத்தை ஊக்குவித்திருக்கிறார்கள். இந்தத் தமிழிலக்கிய, இலக்கண வளர்ச்சிகள் ஆங்கிலத்தில் காணப்பட்ட அருமையான உரைநடை இலக்கியங்களை மொழியாக்கம் செய்து தமிழில் வெளியிட வழிகோளின. ஆங்கிலேய மிஷனரிகள் மட்டுமல்லாது, தமிழில் புலமை பெற்றிருந்த தமிழ் கிறிஸ்தவர்களும் மொழியாக்கப் பணியிலும், தாங்களே சுயமாக தரமான கிறிஸ்தவ இலக்கியங்களைப் படைப்பதிலும் இக்காலத்தில் வளர ஆரம்பித்திருந்தனர்.
தமிழில் மோட்சப் பயணத்தின் மொழியாக்கம் பற்றிய தெளிவான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளுவது சுலபமாக இருக்கவில்லை. சில படைப்புகளில் இருந்து கிடைத்த வருடங்கள் பற்றிய குறிப்புகளும் முரண்பாடுள்ளவையாக காணப்பட்டன. பொதுவாகவே, எல்லாக் குறிப்புகளிலும் 18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மோட்சப் பயணத்தின் உரைநடை மொழியாக்கங்கள் அச்சில் இருந்திருப்பதாகக் குறிப்பிடுகின்றன. மோட்சப் பயணத்தின் முதலாம் பாகம் உரைநடையில் 1793ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த வேப்பேரியில் ஆங்கிலத்திலும், தமிழிலும் அச்சிடப்பட்டிருந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. சாமுவேல் பவுல் ஐயர் இதை உறுதிப்படுத்தும் வகையில் தான் வெளியிட்ட நூலின் முன்னுரையில், சுவிசேஷப் பிரபல்லிய மிஷன் சங்கத்தார் (S. P. C. K.) இதை வெளியிட்டதாகக் கூறியிருக்கிறார். சென்னை துண்டுப்பிரதிகள் சங்கம் (Madras Tract Society) 1841ல் இதன் முதல் பாகத்தின் தமிழ் மொழியாக்கத்தை மட்டும் தனியாக வெளியிட்டிருந்தது. இதன் திருத்தப்பதிப்பு 1842லும், இதன் மூன்றாவது பதிப்பு 1848லும் வெளிவந்திருந்தது.
மோட்சப் பயணத்தின் இரண்டு பாகங்களையும் முதன் முதல் தமிழில் மொழியாக்கம் செய்தவர் லெவி ஸ்பால்டிங் (Levi Spaulding) என்பவர். 1818ல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவைத் தன்கீழ் கொண்டு வந்திருந்தது. அமெரிக்கரான லெவி ஸ்பால்டிங் 1818ல் மருத்துவ மிஷனரியான ஜோன் ஸ்கடர் (John Scudder) என்பவரோடு அமெரிக்க மிஷன் போர்டினால் (ABCFM) அனுப்பிவைக்கப்பட்டு பொஸ்டனில் கப்பலேறி 1820ல் ஸ்ரீ லங்காவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். ஆரம்பத்தில் மானிப்பாயிலும் பின்பு தெல்லிப்பளை என்ற இடத்திலும் பணியாற்றினார். தன்னுடைய ஊழியத்தின் பெரும்பகுதியை உடுவில் என்ற இடத்திலேயே கழித்தார். சபையையும், பாடசாலைகளையும் மேற்பார்வை செய்ததோடு சுவிசேஷப் பணியிலும் ஈடுபட்டுவந்தார். அவருடைய மனைவி மேரி ஸ்பால்டிங் உடுவில் பெண்கள் போர்டிங் கல்லூரியை நாற்பது வருடங்களுக்கு மேற்பார்வை செய்து வந்திருக்கிறார். ஸ்பால்டிங் 1834ல் அமெரிக்க மிஷன் போர்டுக்கு புதிதாக ஒரு மிஷன் ஸ்டேசனைத் தேடி தென்னிந்தியாவில் மதுரைப்பகுதிக்கு ஒரு மிஷனரி குழுவோடு போனார். அங்கேயே லெவி ஸ்பால்டிங்கின் வழிநடத்தலில் அமெரிக்க மதுரை மிஷன் ஆரம்பமாகியது.
லெவி ஸ்பால்டிங் ஏனைய மிஷனரிகளைவிட மக்களை நேரடியாக சந்தித்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்து அவர்களுடைய பேச்சுமொழியைக் கற்றுக்கொள்ளுவதில் அதிக ஆர்வம் காட்டியிருக்கிறார். மொழியாக்கப் பணிகளிலும் ஈடுபட்டு வந்திருந்த ஸ்பால்டிங் தமிழில் ஒரு அகராதியையும், ஆங்கில-தமிழ் அகராதியையும் தொகுத்தார். கீர்த்தனைப் பாடல்களையும், சுவிசேஷத் துண்டுப்பிரதிகளையும் வெளியிட்டிருந்த ஸ்பால்டிங் ஜோன் பனியனின் மோட்சப் பயணத்தையும், புதிய ஏற்பாட்டையும் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். ஸ்பால்டிங் மோட்சப் பயணத்தை யாழ்ப்பாணத் துண்டுப்பிரதிகள் சங்கத்திற்காக (Jaffna Tract Society) மொழியாக்கம் செய்து, அதை அந்தச் சங்கம் 1853ல் அச்சிட்டு வெளியிட்டது. சாமுவேல் பவுல் ஐயர் தன் நூலின் முகவுரையில், ஸ்பால்டிங்கின் பெயரைக் குறிப்பிடாமல், இது யாழ்ப்பாணம் மானிப்பாய் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியிருக்கிறார். லெவி ஸ்பால்டிங் தன்னுடைய 82ம் வயதில் நாற்பத்தி நான்கு வருட ஊழியப்பணிக்குப் பிறகு 1873ல் வட ஸ்ரீ லங்காவின் உடுவில் என்ற பகுதியில் உயிர் துறந்தார்.
லெவி பால்டிங்கின் மோட்சப் பிரயாண மொழியாக்கம் எத்தகையது, எந்தளவுக்குத் தரமானது என்பதை விளக்கும் எந்தக் குறிப்புகளும் கிடைப்பது அரிதாக இருக்கிறது. அதனால் அதுபற்றி எதையும் விளக்கமாகக் கூறமுடியவில்லை. வரலாற்றில் அதுவே முதன் முதலாக தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட மோட்சப் பயண நூல் என்றளவில் மட்டும் அது முக்கியத்துவம் பெறுகிறது.
சாமுவேல் பவுல் ஐயரின், ‘பரதேசியின் மோட்சப் பிரயாணம்’
சாமுவேல் பவுல் ஐயர் பிறப்பதற்கு முன்பே மோட்சப் பயணத்தின் முதலாம் பாகம் மூன்று பதிப்புகள்வரை வெளிவந்திருந்தன. ஐயர், 1844ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் நாள் திருநெல்வேலிப் பகுதியில் மெய்ஞானபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தை, தானியேல் பவுல் ஐயர் மிகுந்த தெய்வ பக்தியுள்ளவர்; வல்லமையான பிரசங்கியாகவும் இருந்திருக்கிறார். மெய்ஞானபுரத்தில் பணிபுரிந்த மிஷனரியான ஜோன் தோமஸ், பவுல் ஐயரின் தந்தையைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘இந்தியப் போதகர்களில் எழுப்புதலான மகோன்னதப் பிரசங்கி இவர்தாம்’ என்று கூறியிருக்கிறார். சாமுவேல் பவுல் ஐயர், மிஷனரியான ஜோன் தோமஸ் அவர்களிடமே உயர்கல்வி பயின்றார். அவர் கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிப்படைந்தபின் ஊக்கமாக சுவிசேஷத்தை அறிவிக்க ஆரம்பித்தார். அப்போது மிஷனரியாகவும், பின்னால் திருநெல்வேலி திருச்சபை உதவிப் பேராயராகவும் இருந்த அருள்திரு எட்வர்ட் சார்ஜன்ட் ஐயரிடம் சாமுவேல் பவுல் ஐயர் வேதத்தையும், வேத இறையியலையும் முறையாகக் கற்றறிந்திருந்தார்.
எட்வர்ட் சார்ஜன்ட்டும் (C. M. S.), ரொபர்ட் கால்ட்வேலும் (S. P. C. K.) இணைந்து பணிபுரிந்தவர்கள்; திருநெல்வேலி திருச்சபையில் உதவி பிஷப்புக்களாக இருந்துள்ளனர். சாமுவேல் பவுல் ஐயர் சந்தைகளிலும், சிறைகளிலும் போய் சுவிசேஷத்தை சொல்லுவதில் அதிக அக்கறை காட்டினார். ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்த ஐயர் பின்பு பல திருச்சபைகளில் பணிபுரிந்திருக்கிறார். சென்னையில் சத்தியநாதன் ஐயர் அவர்களின் கீழ் உபதேசியாராகப் பணியாற்றினார்; அங்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். 1868 பெப்ரவரி மாதம் அருள்திரு பரமானந்தம் சிமியோன் என்பவரின் மகளைத் திருமணம் செய்துகொண்டார். 1874ல், குருப்பயிற்சி பெற்றபின் திருச்சி எஸ். பி. ஜி ஆலயத்தில் ஜெல் நைட் எனும் பேராயரிடம் குருவாக அபிஷேகம் பெற்றார். ஐயர் உதகமண்டலத்தில் ஒன்பது ஆண்டுகள் குருவானவராக இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு திருநெல்வேலி மாநிலத்தில் சாயர்புரம் என்ற கிராமத்தில் பணிபுரியச் சென்றார். சாயர்புரத்தில் இரண்டு சாதிக்காரர்களிடம் பிரச்சனை உண்டாகி இனக்கலவரம் நிகழ்ந்தபோது அவர்களோடு பேசி அந்தப் பிரச்சனையைத் தீர்த்துவைத்ததன் காரணமாக இவருக்கு 1891ம் ஆண்டு ராவ் சாகிப் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்தப் பட்டம் ஐயருடைய இலக்கியப் பணிக்காகக் கொடுக்கப்பட்டதாக முனைவர் பென்னி தன் நூலில் தெரிவித்திருக்கிறார் (சாமுவேல் பவுல் ஐயரின் கிறிஸ்தவ இலக்கியப் படைப்புகள்; 2020). இரண்டுக்காகவும் கொடுக்கப்பட்டதாகவும் இருக்கலாம்.
சிவகாசியில் ஐயர் திருச்சபைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது நற்போதகம் என்ற புரொட்டஸ்தாந்து தமிழ் பத்திரிகையின் ஆசிரியராக மூன்று வருடங்கள் இருந்தார். இதற்கு முன் இப்பத்திரிகையின் ஆசிரியராக தமிழ்ப் புலமை வாய்ந்த இரேனியஸ் இருந்திருக்கிறார். தமிழ் இலக்கியத்திலும், எழுத்துப் பணியிலும் அதிக ஆர்வம் காட்டிய ஐயர் தன் வாழ்நாளில் 42 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். 1870 முதல் 1900வரை திருநெல்வேலி மாநிலத்தில் மெய்ஞானபுரத்துக்கு அருகிலுள்ள பாட்டக்கரையில் வாழ்ந்த காலத்தில், ஸ்பால்டிங் மொழியாக்கம் செய்திருந்த மோட்சப் பயணத்தை ஐயர் திருத்தி, சென்னை துண்டுப்பிரதிகள் சங்கம் அதை 1890ல் திருத்தப் பதிப்பாக வெளியிட்டதாக எனக்குக் கிடைத்த ஒரு குறிப்பு கூறுகிறது. அதற்கு முன்பாக, 1882ம் ஆண்டு கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் மூலம் பரதேசியின் மோட்சப் பிரயாணம் என்ற தலைப்பில் அதை வெளியிட்டதாக, ஐயர் தன்னுடைய மொழியாக்கத்திற்குத் தந்திருந்த முகவுரையில் வாசிக்கிறோம். இதுவே அவரது எழுத்துப் பணியில் முதன்மையானது. எந்தளவுக்கு சாமுவேல் ஐயர் தன் மொழியாக்கத்திற்கு ஸ்பால்டிங்குடைய மொழியாக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டார் என்ற விபரங்களை அறிந்துகொள்வது மிகக் கடினமாக இருந்தது. அத்தகைய குறிப்புகள் இல்லாமலிருப்பதே அதற்குக் காரணம்.
சாமுவேல் பவுல் ஐயர் எட்வர்ட் சார்ஜன்ட்டிடம் இறையியல் கற்று, ஆங்கிலம் கற்று, ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை வாய்ந்தவராக இருந்திருக்கிறார். தமிழைக் கற்ற அமெரிக்கரான ஸ்பால்டிங்கைவிட ஐயருடைய தமிழ்நடை நிச்சயம் மிகவும் சிறந்ததாகவே இருந்திருக்கும். ஸ்பால்டிங்கின் மொழியாக்கத்தை அவர் பயன்படுத்தியிருந்தாலும், ஐயர் பனியனின் ஆங்கில நூலைப்பயன்படுத்தி தன் சொந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார். ஐயருடைய மோட்சப் பயண மொழிபெயர்ப்பு பல மடங்கு சிறந்ததாக இருப்பதோடு அவருடைய மொழிநடையும் அக்காலத்துக்கேற்ற உரைநடையாக சிறப்பானதாக இருக்கிறதென்றே நான் கூறுவேன். சாமுவேல் பவுல் ஐயரைப்பற்றி தமிழில் வந்திருக்கும் ஓரிரு நூல்கள் ஐயருடைய மொழிபெயர்ப்பு அவருடைய சொந்த மொழிபெயர்ப்பு என்று கூறுகின்றன. இந்த விஷயத்தில் முறையான வரலாற்று ஆதாரங்களைப் பெற்றுக்கொள்ளுவது நம்மினத்தில் மிகவும் கடினமானதொன்று. இருந்தபோதும் சாமுவேல் பவுல் ஐயரின் மொழியாக்கத்தின் சிறப்பைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. தமிழ் உரைநடையின் ஆரம்பகாலமாக இருந்த 18ம் நூற்றாண்டில் ஐயரின் தமிழ்நடை மிகவும் பாராட்டக்கூடியதாக இருந்திருக்கிறது. 1900 ஆண்டில் சாமுவேல் பவுல் ஐயர் இறைபதம் அடைந்தார். (இந்தப் பகுதியில் நான் குறிப்பிட்டிருக்கும் சில விபரங்களைத் தேடித் தந்துதவிய சென்னையைச் சேர்ந்த டாக்டர் பென்னி மற்றும் தேவராஜ் ஆகியோருக்கு என் நன்றிகள். டாக்டர் பென்னி ‘சாமுவேல் பவுல் ஐயரின் கிறிஸ்தவ இலக்கியப் படைப்புகள்’ என்ற நூலை 2020ல் வெளியிட்டுள்ளார்).
என். சாமுவேலின் பதிப்பு
சாமுவேல் பவுல் ஐயரின் மொழியாக்கம் பற்றிய விபரங்களை நான் தேடிக்கொண்டிருந்தபோது உதகமண்டலத்தில், கோத்தகிரியில் வாழ்ந்து மறைந்த என். சாமுவேல் என்பவர் (ஆசிரியர்: தேவ எக்காளம்) பற்றிய விபரம் கிடைத்தது. இவர் சிறுவனாக இருந்தபோது, இவருடைய தந்தைக்கு 1947ம் ஆண்டு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட சாமுவேல் பவுல் ஐயரின் மொழியாக்கம் இவருடைய கைக்கு வந்தது. இவர் கையில் கிடைத்த பிரதி 1942ம் வருடப் பதிப்பு. அது 453 பக்கங்களைக்கொண்டதாக மூலநூலின் இருபாகங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. அதை யார் அச்சிட்டது என்ற விபரத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. அதில் நிறைய அச்சுப்பிழைகள் இருந்ததாக என். சாமுவேல் குறிப்பிட்டிருக்கிறார். அதில், சாமுவேல் பவுல் ஐயரின் பெயரோடு உள்ள முகவுரையில் அக்டோபர் 1882ம் வருடம் உதகமண்டலம் என்ற குறிப்பும் இருந்திருக்கிறது. அது வெளியிடப்பட்ட காலத்தில் ஐயர் உதகமண்டலத்தில் பணிபுரிந்திருந்தது அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
இந்தப் பதிப்பைப் பற்றிய மேலும் விபரங்களைத் தெரிந்துகொள்ள கோத்தகிரியில் உள்ள நண்பர் ஜெகதீஸுடன் தொடர்புகொண்டு, அவர்மூலம் என். சாமுவேலின் மகன் சுந்தர்சிங்கோடு தொலைபேசியில் பேசி சில விபரங்களைப் பெற்றுக்கொண்டேன். 2018ல் என். சாமுவேல், சாமுவேல் பவுல் ஐயரின் மொழியாக்கத்தின் பதிப்பில் இருந்த அச்சுப்பிழைகளை நீக்கி, நூலை மறுபடியும் டைப் செய்து 490 பக்கங்களோடு 2018ம் ஆண்டில் தடித்த பதிப்பாக வெளியிட்டிருக்கிறார். அவருடைய சொந்தச் செலவில் நூற்றுக்கணக்கான பிரதிகளை அச்சிட்டுத் தெரிந்தவர்களுக்கெல்லாம் கொடுத்திருக்கிறார். கடைசியாக இருந்த ஒரு பிரதியை அவருடைய மகன் சுந்தர்சிங் எனக்கு அனுப்பி உதவினார். இப்போது அவருடைய குடும்பத்தார் அது தொடர்ந்தும் அச்சில் இருக்கவேண்டும் என்பதற்காக மறுபடியும் அதை அச்சிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று அறிந்தேன்.
கிறிஸ்தவ இலக்கிய சங்கப் பதிப்பு
சாமுவேல் பவுல் ஐயரின் மொழியாக்கமான பரதேசியின் மோட்சப் பிரயாணம், ‘மோட்சப் பிரயாணம்’ என்ற பெயரில் கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தால் அதன் முதல் பாகம் மட்டும் அச்சிடப்பட்டது. அவர்கள் அச்சிட்ட, என் கையில் இருக்கும் முதல் பாகத்தின் பிரதி 2004ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் காணப்படும் குறிப்புப்படி அது 16வது பதிப்பு. அதற்கு முன் அது 15 பதிப்புக்களைச் சந்தித்திருக்கிறது. 2004ம் ஆண்டுப் பதிப்பு, முதலில் 1968ம் ஆண்டு பண்ணிரெண்டாவது பதிப்பாக வெளிவந்திருக்கிறது. அதற்கு முன் வந்திருக்கும் பதிப்புகள் பற்றிய விபரங்களை அந்நூலில் இருந்து தெரிந்துகொள்ள முடியவில்லை. என் கையில் இருக்கும் பதிப்பில் சாமுவேல் பவுல் ஐயரின் முகவுரை காணப்படுகிறது. அந்த முகவுரை முதல் பதிப்பில் வந்த முகவுரையாக இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். அந்த முகவுரை சில முக்கியமான விபரங்களைத் தருகிறது.
சாமுவேல் பவுல் ஐயரின் முகவுரை, மோட்சப் பயணத்தின் தமிழாக்கம் சுவிசேஷப் பிரபல்ய மிஷன் சங்கத்தாரால் (S. P. C. K), 1793ல், தமிழில் முதன் முறையாக அச்சிடப்பட்டதாகக் கூறுகிறது. இந்தக் குறிப்பை அவர் ஜோன் மேர்டொக் என்பவருடைய Catalogue of the Christian Vernacular Literature of India (1870) என்ற நூலில் இருந்து பெற்றுக்கொண்டிருக்கிறார். அந்த மொழியாக்கத்திலும், அதற்குப் பின் வந்த திருப்புதல்களிலும் முதலாவது பாகம் மட்டுமே காணப்பட்டதாக ஐயர் கூறுகிறார். நூல் முழுவதும் 1853ல் ஸ்ரீ லங்காவில் மானிப்பாய் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார். இந்த விபரத்தில் இருந்து ஐயர் குறிப்பிட்டிருக்கும் மொழியாக்கம் யாருடையது என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அது ஸ்பால்டிங்குடையதாக இருந்திருக்கவேண்டும் என்பது என் கருத்து.
தன்னுடைய சொந்த மொழியாக்கத்தில் தான் எதையும் கூட்டவோ குறைக்கவோ இல்லை என்றும் சாமுவேல் பவுல் ஐயர் இந்த முகவுரையில் கூறியிருக்கிறார். மூலநூலில் இருப்பதை சுவைபட மொழியாக்கம் செய்வதே தன் நோக்கம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தன் மொழியாக்க நூலைப் பிரதி பண்ணுவதில் ஸ்தேவான் உபதேசியார் தனக்கு மிகுந்த துணை செய்தார் என்றும் கூறியிருக்கிறார். என் கையில் இருக்கும் பதிப்பு ஆங்கில மோட்சப் பயணத்தின் முதல் பாகத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. சாமுவேல் பவுல் ஐயரின் முதல் பதிப்பு இரண்டு பாகங்களையும் கொண்டிருந்தபோதும், முதல் பாகத்தை மட்டும் கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தார் ஏன் பதிப்பித்தார்கள் என்பதும் தெரியவில்லை. முதல் பதிப்புக்கும், 1968ல் வெளிவந்த பன்னிரெண்டாம் பதிப்புக்கும் இடையில் என்ன நிகழ்ந்தது என்பதும் தெரியவில்லை. நம்மினத்தில் இத்தகைய அவசியமான குறிப்புகளை பதிவில் வைத்திருப்பது வழக்கத்தில் இல்லாமலிருப்பது வரலாற்று நிகழ்வுகளுக்கு சான்றுகள் இல்லாமல் செய்துவிடுகிறது. ‘தோமா இந்தியாவுக்கு வந்தார்’ என்பது போன்ற கர்ணபரம்பரைக் கதைகளின் மூலமே வரலாற்றை ஓட்டிக்கொண்டிருக்கும் நம்மினத்தில் வரலாற்று நிரூபணங்கள் பாதுகாத்து வைக்கப்படாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத குறைபாடு. நவீன விஞ்ஞான வரலாற்று ஆய்வுகள் ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பது போன்ற செவிவழி வந்த கதைகளை ஏற்றுக்கொள்ளுவதில்லை.
சீர்திருத்த கிறிஸ்தவமும், தமிழில் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்
இந்த இடத்தில் தமிழில் உரைநடை வளர்ச்சிபற்றி மேலும் விளக்கவேண்டியது அவசியம். 19ம் நூற்றாண்டுக்கு முன் பெரும்பாலும் படைப்புகள் செய்யுள் வடிவில் ஏட்டுச்சுவடிகளிலேயே எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தன என்று ஏற்கனவே விளக்கியிருந்தேன். இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள்வடிவில் அமைந்திருந்தன. செய்யுளுக்கே அன்று படித்தவர்கள் மத்தியில் வரவேற்பிருந்தது. உரைநடை அருகிக் காணப்பட்டது. இலக்கியங்களில் உரைநடை ஆங்காங்கே வந்துபோயிருந்தாலும் அவை செய்யுள்களுக்கு மத்தியில் காணப்பட்டது. அன்றிருந்த ஏட்டுச்சுவடிகளில் எழுதிவைப்பதற்கும் செய்யுள்கள் வசதியாக இருந்தன. இன்றிருப்பதுபோல் நீளமான உரைநடை ஆக்கங்களை எழுதிவைக்க ஒரு கூடை ஓட்டுச்சுவடிகள் தேவைப்பட்டிருக்கும். இதனால் உரைநடைக்கு அன்று வரவேற்பிருக்கவில்லை; அதில் எவரும் நாட்டம் காட்டவில்லை.
19ம் நூற்றாண்டே தமிழ் உரைநடை வளர்ச்சிக்காலம் என்று பலரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். மயிலை சீனி வேங்கடசாமியின் கருத்துப்படி (கிறிஸ்தவமும் தமிழும்), முதல் முதல் தமிழில் உரைநடை தோன்றுவதற்கு இத்தாலியைச் சேர்ந்த கத்தோலிக்க யெசுவிஸ்ட் பிரிவின் மிஷனரியான டீ நொபிளியே (1577-1656) காரணம். இவர் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு பணிபுரிந்தவர். இவருக்குப் பிறகு உரைநடையைப் பிரபலப்படுத்தியவர் இன்னொரு கத்தோலிக்க குருவான, வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்ட கொன்ஸ்டன்டைன் பெஸ்கி (1680-1746). இவரும் இத்தாலியைச் சேர்ந்தவர். இவருக்கு சமகாலத்தவராக தரங்கம்பாடியில் பணிபுரிந்தவர், ஜெர்மானியரான சீர்திருத்த கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த சீகன் பால்கு (1683-1719). தமிழறிவைப் பொறுத்தவரையில் டேனிஷ் மிஷனரியான சீகன் பால்கைவிட கத்தோலிக்கரான வீரமாமுனிவர் அதிகப் புலமை அடைந்தவராக இருந்திருக்கிறார். இருந்தும் தரங்கம்பாடியில் பணிபுரிந்த சீகன் பால்கே புதிய ஏற்பாட்டை முதலில் தமிழாக்கம் செய்தவர். அத்தோடு முதன் முதலில் 1713ல் அச்சகத்தை நிறுவி நூல்களை அச்சிட்டு வெளியிட்டதும் சீகன் பால்கே. சீகன் பால்கின் மொழியாக்கப் பணிகளும், நூல்வெளியீட்டுப் பணியும் கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பாமர மக்கள் விசுவாசிக்கத் துணைபுரிவனவாக இருந்தன. அவருடைய உரைநடை எளிமையானதாக தாம் பணிபுரிந்துவந்த மக்களுக்குப் புரியும்படியாக இருந்தது.
இவர்களுக்குப் பிறகு குறிப்பிடத்தக்கவிதத்தில் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு துணைபுரிந்தவர்கள் தமிழகத்தில் திருநெல்வேலிப் பிரதேசத்தில் பணிபுரிந்த மேலைத்தேய மினஷரிகளும், அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்ப்போதகர்களுமே. 19ம் நூற்றாண்டில், 1830-1900 வரை இப்பகுதியில் கிறிஸ்தவ எழுப்புதல் என்று அழைக்கக்கூடியவிதத்தில் கிறிஸ்தவ திருச்சபைப் பணி அற்புதமாக நிகழ்ந்திருக்கிறது. இந்தளவுக்கு இந்தியாவில் வேறு எங்கும் நிகழ்ந்திருக்கிறது என்று கூறமுடியாது. அதுவும் சாதிக்கட்டமைப்பு பலமாக இருந்த காலத்தில், பஞ்சம் இப்பிரதேசத்தை அதிகமாகப் பாதித்திருந்த காலத்தில் அருமையான கிறிஸ்தவ பணியாளர்கள் தொடர்ச்சியாக ஒருவர்மாறி இன்னொருவர் இக்காலப்பகுதியில் இந்தப் பிரதேசத்தில் திருச்சபைப்பணி புரிந்திருக்கிறார்கள். வெளிநாட்டு மிஷனரிகள் முறையாக தமிழைக்கற்று பாண்டித்தியம் அடைந்து இலக்கண நூல்கள் உட்பட அனேக இறையியல் நூல்களையும் படைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது அநேக திருச்சபைகளையும், பாடசாலைகளையும் இப்பகுதிகளில் நிறுவியிருக்கிறார்கள். நிலங்களை விலைக்கு வாங்கிப் பல கிறிஸ்தவ கிராமங்களை அமைத்திருக்கிறார்கள். சாயர்புரம், மெய்ஞானபுரம், நாசரேத்து, இடையான்குளம், ஆசீர்வாதபுரம், நல்லூர், டோனவூர் ஆகிய கிராமங்களை இரேனியஸ் 1825-1833க்கும் இடைப்பட்ட வருடங்களில் நிலங்களை விலைக்கு வாங்கி உருவாக்கியிருந்தார். இவை கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பளிப்பதற்காக நிறுவப்பட்டவை. இவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்ப் போதகர்களும் இவர்களைப்போலவே தமிழறிவுள்ளவர்களாக சத்திய வாஞ்சையோடு சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். முக்கியமாக இந்தக் கிறிஸ்தவப் பணியாளர்களில் பலர் இங்கிலாந்து சபைப்பிரிவைச் சேர்ந்தவர்களாக, CMS, SPCK மிஷன்கள் மூலமாக வந்தவர்களாக இருந்தபோதும் சீர்திருத்த போதனைகளைப் பின்புலமாகக் கொண்டிருந்தவர்கள். 17ம் நூற்றாண்டின் சீர்திருத்த பியூரிட்டன் போதனைகளின் தாக்கம் இவர்களில் பெரிதும் இருந்திருக்கிறது. மோட்சப் பிரயாணம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதுகூட ஒரு தற்செயல் நிகழ்ச்சியல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அது ஒரு சீர்திருத்த பியூரிட்டன் இறையியல் புதினம். சீர்திருத்த போதனைகள் இக்காலப்பகுதியில் இப்பகுதிகளில் பரவ ஆரம்பித்ததே இந்நூலின் மொழியாக்கத்திற்கும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்கமுடியாது.
இந்த 21ம் நூற்றாண்டில் திருநெல்வேலிப் பகுதியில் 19ம் நூற்றாண்டில் காணப்பட்ட சீர்திருத்த போதனைகளின் தாக்கத்தை எந்தச் சபைப்பிரிவிலும் அடியோடு காணமுடியாது. இன்று அப்பகுதியில் இங்கிலாந்து சபைப்பிரிவின் வழிவந்து சி. எஸ். ஐ என்ற பெயரில் இருக்கும் சபைப்பிரிவு அன்று வாழ்ந்த அந்த அருமைப்பணியாளர்கள் கட்டிய கோவில்களில் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்து சடங்காக வருடாந்தர கொண்டாட்டங்களைப் பெயருக்காக மட்டுமே நடத்தி வருகின்றது. அதில் சீர்திருத்த போதனைகளுக்கோ, அன்றிருந்த பணியாளர்களின் பக்திவிருத்தி கொண்ட பரிசுத்தப் பணிகளுக்கோ எந்த இடமும் இல்லாதிருக்கிறது. அது தாராளவாத இறையியலுக்கு அடிமையாகி வெறும் பாரம்பரியச் சபைப்பிரிவாக எந்தவித ஆத்மீக எழுச்சிக்கும் இடமில்லாத ஜீவனற்ற சபைப்பிரிவாக நடமாடி வருகிறது.
திருநெல்வேலி மிஷனரிகளான ஜோன் தோமஸ், இரேனியஸ், எட்வர்ட் சார்ஜன்ட், கால்டுவெல், ஜி. யூ. போப் போன்றவர்களைப் பற்றி இன்று எழுத்தில் காணப்படும் தமிழ் நூல்களில்கூட அவர்களுடைய தமிழ்ப்பணியைப் பாராட்டி எழுதப்பட்டிருக்கிறதே தவிர அவர்கள் விசுவாசித்திருந்த சீர்திருத்தப் போதனைகளைப் பற்றியோ, அவற்றின் தாக்கத்தால் எழுச்சியோடிருந்த ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைப் பணிபற்றியோ எந்த வாடையையும் காணமுடியாதிருக்கிறது. அதற்குக் காரணம் அந்த ஆவிக்குரிய எழுச்சிக்காலம் மறந்துபோனதொன்றாகவும், மறைந்துவிட்டதாகவும் இன்று மாறிவிட்டிருப்பதுதான். அதை நினைவுபடுத்தும்விதமாக தமிழில் அச்சில் எதுவும் பிரயோஜனமானவிதத்தில் எழுதப்படவில்லை.
ஏறக்குறைய எழுபது வருடங்களுக்குள் அடங்கிய இந்தத் திருநெல்வேலி ஆத்மீக எழுப்புதல் காலப்பகுதிக்கும், தமிழில் உரைநடையில் கிறிஸ்தவ நூல்கள் எழ ஆரம்பித்ததற்கும், மோட்சப் பயண நூல் மொழியாக்கத்திற்கும் பெருந்தொடர்பு இருந்திருக்கிறது. இக்காலப்பகுதியில் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு துணைபுரிந்தவர்களில் ஒருவர் C. T. E. இரேனியஸ் (1790-1838). 1814ல் சென்னைக்கு வந்து பணிபுரிந்து அதன் பிறகு 1820 முதல் திருநெல்வேலியில் பாளயங்கோட்டையில் கிராமங்களையும், சபைகளையும் பாடசாலைகளையும் நிறுவி ஊழியம் செய்திருக்கிறார். ஜெர்மானியரான இரேனியஸே முதல் CMS மிஷனரியாக இந்தியா வந்தவர். ஆரம்பத்தில் சென்னைக்கு வந்து தமிழ் கற்று அதற்குப் பிறகு தரங்கம்பாடிக்கு வந்து அங்கிருந்து தமிழ் கற்று பின்னால் திருநெல்வேலியில் பாளயங்கோட்டைக்குப் பணிபுரியச் சென்றார் இரேனியஸ். இரேனியஸே அக்காலப்பகுதியில் பணிபுரிந்த அனைவரிலும் சிறந்தவராகக் கருதப்படுகிறார். அவரைப்பற்றிக் குறிப்பிடும் ஸ்டீபன் நீல், ‘இந்தியாவின் மாபெரும் மிஷனரிகளில் ஒருவர்’ என்று அவரைப்பற்றிக் கூறியிருக்கிறார். இரேனியஸுக்கு ‘திருநெல்வேலியின் அப்போஸ்தலர்’ என்ற பெயரும் உண்டு. இரேனியஸ் வேதத்தை தமிழில் மொழிபெயர்த்தார். அவருடைய உரைநடைத் தமிழ் அதற்கு முன் வேதத்தை மொழியாக்கம் செய்தவர்களுடையதைவிட எளிமையாக இருந்திருக்கிறது. இரேனியஸ் தமிழில் புலமை பெற்றவராக இருந்து அநேக உரைநடை நூல்களையும் எழுதியிருக்கிறார். இரேனியஸ் 48ம் வயதில் 1838ல் மரித்தார். அவரது சரீரம் பாளையங்கோட்டையில் அடைக்கலபுரம் எனுமிடத்தில் புதைக்கப்பட்டது. இன்றும் அவருடைய கல்லறை அங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தன்னுடைய பதினைந்து வருட திருநெல்வேலி ஊழியப் பணியில் 371 திருச்சபைகளை இரேனியஸ் நிறுவியிருந்தார். இவருக்குப் பின் குறிப்பிடத்தக்கவர்களாக தமிழில் புலமைபெற்று கிறிஸ்தவ பணியாற்றியவர்கள் ஜி. யு. போப்பும் (1820-1907), ரொபட் கால்டுவெல்லும் 1814-1891). போப்பும், கால்டுவெல்லும் தமிழ்மொழிக்கு ஆற்றியிருக்கும் பணிகள் மிகச்சிறப்புமிக்கவை.
கத்தோலிக்க மிஷனரியான டி நொபிளி காலத்தில் இருந்து பார்க்கும்போது, உரைநடை தமிழில் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்திருப்பதைக் கவனிக்க முடிகின்றது. சீகன் பால்கு மொழிபெயர்த்துள்ள புதிய ஏற்பாட்டுத் தமிழெழுத்துக்களை இன்று தமிழர்கள் அடையாளம் காணமாட்டார்கள். தமிழெழுத்துக்களில் படிப்படியாக மாற்றங்கள் உருவாயின. வீரமாமுனிவர் எழுத்துருவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார். நிறுத்தக் குறிகள் பயன்பாட்டை உரைநடையில் கொண்டுவந்தவர்கள் போப்பும், கால்டுவெல்லுமே. இரேனியஸ், போப், கால்டுவெல் ஆகியோரின் உரைநடை எழுத்துக்கள் கத்தோலிக்கரான வீரமாமுனிவருடையதைவிட சிறப்பாக, எளிமையாக இருந்தன.
சாமுவேல் பவுல் ஐயரின் இலக்கியப் புனைவெழுத்துநடை
இரேனியஸ், ஜி. யூ. போப், கால்டுவெல் ஆகியோரின் சமகாலத்தவரான சாமுவேல் ஐயர் தமிழில் மிகப் புலமை பெற்றிருந்தவர். அவரின் தமிழ் உரைநடை மிகவும் எளிமையாக, இலக்கியச் சுவையோடு சிறப்பாக இருக்கிறது. கோத்தகிரி என். சாமுவேல் அவர்களிடம் இருந்த 1882ம் வருட முதல் பதிப்பில் இருந்தவாறே, 1968லும் அதற்குப் பின் 2004 வரையுள்ள காலங்களில் வந்திருக்கும், சாமுவேல் பவுல் ஐயரின் மோட்சப் பிரயாணம் பதிப்புகளிலும் மொழிநடை எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. சாமுவேல் ஐயரின் மொழிநடையில் இன்று வழக்கில் இல்லாத சில வடமொழிப் பதங்கள் இருந்தபோதும், அவருடைய புனைவெழுத்து தமிழ் நடை வாசிப்பதற்குக் கடினமானதாக இல்லை; இலகுவானதாகவே இருக்கிறது. புனைவு இலக்கியத்திற்கு ஏற்ற நடையாகவும் இருக்கிறது.
சாமுவேல் பவுல் ஐயரின் தமிழ்நடை ‘விவிலியத்’ தமிழ் நடையைவிடச் சிறப்பாக, எளிய நடையில் இருக்கிறது என்றுதான் சொல்வேன். நான் இங்கு ‘விவிலியத் தமிழ்நடை’ என்று குறிப்பிடுவது வேதத்தின் பழைய திருப்புதலில் காணப்படும் தமிழ் நடையைத்தான். விவிலியம் என்ற வார்த்தையை கத்தோலிக்கர்கள் வேதத்தைக் குறிக்க அதிகம் பயன்படுத்துவார்கள். கிறிஸ்தவர்கள் அல்லாத தமிழறிஞர்கள், நூலாசிரியர்கள் கத்தோலிக்கத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் இடையிலிருக்கும் வேறுபாடுகள் தெரியாததாலும், கிறிஸ்தவ வேதம் பற்றிய உண்மைகளை அறிந்திராததாலும், இந்த ‘விவிலியத் தமிழ்’ நடையை கிறிஸ்தவத்திற்கே உரிய முக்கியத்துவம் பெற்ற நடையாகவும் எண்ணி வருகின்றனர். உண்மையில், அந்த நடையில் எப்போதோ மாற்றங்கள் ஏற்பட்டிருந்திருக்க வேண்டும். அதே பழைய திருப்புதலை வாசித்து வந்திருந்த சாமுவேல் ஐயர், அந்த நடையில் எழுதவில்லை, பேசவும் இல்லை என்பதை உணருவது அவசியம். மோட்சப் பிரயாண மொழிபெயர்ப்பிலும் அவர் தனக்கேயுரிய இலக்கியத் தமிழ் உரைநடையையே பயன்படுத்தியிருக்கிறார்.
இதிலிருந்து 1800களிலும், உரைநடையின் ஆரம்பகாலமாக அது இருந்திருக்கிறபோதும், தமிழ் உரைநடை வளர்ச்சியடைந்து இலகுவாக வாசிக்கக்கூடியதாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. அப்படியிருந்தும் தமிழ்வேதத்தின் பழைய திருப்புதலின் நடை ஏன், சாமுவேல் பவுல் ஐயருடைய மொழிநடையைப்போல இலகுவானதாகக் கட்டமைக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. தமிழ் வேதத்தில் அடிக்கடி வந்துபோகும் ‘நிற்கக்கடவது, சொல்லக்கடவது’ போன்ற வார்த்தைப் பிரயோகம் ஐயரின் எழுத்தில் ஓரிடத்திலாவது வரவில்லை. ஐயரின் உரைநடைக்கு ஒரு உதாரணத்தை மோட்சப் பிரயாணம் நூல், 40ம் பக்கத்தில் இருந்து தருகிறேன். இது நூலின் ஒரு கதாபாத்திரமான வியாக்கியானி சொன்னது,
“இன்றிரவு நான் அயர்ந்து நித்திரை செய்கையில், அதிர்ந்து கலங்கும்படியான ஒரு சொப்பனங் கண்டேன்; இதோ வானங்கள் கார்மேகங்களால் மூடப்பட்டன, இடிகள் முழங்கின, மின்னல்கள் பிரகாசித்தன, அதைக்கண்டு நான் கலங்கி வியாகூலப்பட்டேன்; பின்னும் நான் என் சொப்பனத்தில் மேகங்கள் வேகமாய் விலகி ஓடினதையும், அவைகளின் மேல் எக்காளச் சத்தம் தொனிப்பதையும் கண்டேன். அந்த மேகத்தின் மேல் ஒருவர் உட்கார்ந்திருக்கவும், அவரைச் சுற்றிலும் ஆயிரம் பதினாயிரமான வானசேனைகள் சூழ்ந்து நிற்கிறதையும் கண்டேன். அவர்கள் எல்லோரும் அக்கினிச் சுடரைப்போல் இருந்தார்கள். வானங்களோ எரிகிற அக்கினி மயமாய்ப் பிரகாசிக்கக் கண்டேன்.”
மேலே நாம் பார்த்திருக்கும் பகுதி வாசிக்க இலகுவாக இருப்பதோடு, அதன் இலக்கிய நடையையும், அதன் சுவையையும் கவனிக்கத் தவறக்கூடாது. வார்த்தைகளை ஐயர் சரளமாக அருவியோடுவதுபோல் பயன்படுத்தியிருக்கிறார். அது அவருடைய எழுத்தின் இலக்கியத் தரத்தைக் காட்டுகிறது. 1882ம் பதிப்பிலிருந்து தொடர்ந்து அனைத்துப் பதிப்புகளிலும் வந்திருக்கும் இந்தப் புனைவிலக்கிய நடை வாசிப்பதற்கு நெருடலுள்ளதாக இல்லை என்பதைக் கவனியுங்கள். ஆங்காங்கு வந்துபோகும் சில வார்த்தைகள் இன்று பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும் அவை புரிந்துகொள்ளக் கஷ்டமானவையல்ல. ‘விவிலியத் தமிழைக்’ கொண்டிருக்கும் தமிழ் வேதத்தை வாசித்து வருகிறவர்களுக்கு இந்த மொழியாக்கமே பிடித்திருக்கிறது என்று ஒரு போதகர் என்னிடம் சொன்னார். தன் மொழியாக்கத்தில் சாமுவேல் பவுல் ஐயர் நிறுத்தற்குறிகளைத் தகுந்தவிதத்தில் பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய எழுத்துச் சிறப்பை இதில் காணமுடிகிறது.
தமிழில் சில எழுத்துருக்கள் (லை, றா, னா போன்றவை) 1978ல் மாற்றப்பட்டன. கணினித் தட்டச்சுக்கு வசதியாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த மாற்றங்களை என் கையில் இருக்கும் 2004ம் ஆண்டுப் பதிப்பில் காணமுடியவில்லை. அதற்குக் காரணம் 1968ல் டைப் செய்யப்பட்ட அதே பிரதியை தொடர்ந்தும் 2004ம் ஆண்டுப்பதிப்புவரை, எழுத்துருவில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் கிறிஸ்தவ இலக்கிய சங்கம் அச்சிட்டிருக்கிறது. இது அநாவசியமான, ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தவறு. கணினித் தொழில் நுணுக்கங்கள் ராக்கெட் வேகத்தில் வளர்ந்திருக்கும் இந்தக் காலத்தில் வெறும் 200 பக்கங்களை, மீண்டும் எழுத்துக்களைத் திருத்தித் டைப் செய்வதற்கு முடியாமலிருந்திருப்பது ஆச்சரியமே! அதற்கு சோம்பல் காரணமா? அல்லது அக்கறையின்மை காரணமா? என்று தெரியவில்லை. இது கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் கவனக்குறைவு.
இந்த மோட்சப் பயணப் பதிப்பில் சாமுவேல் பவுல் ஐயர், ஜோன் பனியனின் நூலில் இருந்ததைப்போலவே, ஒவ்வொரு பக்கத்திலும் பனியன் பயன்படுத்தியிருந்த வேதசனங்கள் அனைத்தையும் அடிக்குறிப்பாகத் தந்திருக்கிறார். இது வாசகர்கள் வாசிக்கும் பகுதியை அதற்குரிய வேதவசனங்களோடு தொடர்புபடுத்தி வாசிக்கத் துணைசெய்கிறது. அத்தோடு அரும்பதங்களுக்கு பனியன் அளித்திருந்த விளக்கங்களையும் தமிழில் ஐயர் அடிக்குறிப்பாகத் தந்திருக்கிறார். முக்கியமான புனைவின் கதாபத்திரங்கள் யார் என்றும், அவர்கள் யாரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அடிக்குறிப்பில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. இது பாராட்ட வேண்டிய விஷயம். 17ம் நூற்றாண்டு ஆங்கிலத்தில் இருந்த ஜோன் பனியனின் நூலைக் கருத்தோடு கற்று, அதோடு தன்னைப் பரிச்சயப்படுத்திக்கொண்டதோடு மூலநூலை அதிலிருந்தவாறே தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் சாமுவேல் பவுல் ஐயர். எந்தளவுக்கு அர்ப்பணிப்போடும், ஈடுபாட்டோடும் அதை ஐயர் செய்திருக்கிறார் என்பதை அவருடைய மொழியாக்கம் சுட்டுகிறது.
சாமுவேல் ஐயரின் கவித்துவம்
நூல் முழுதும் வந்துபோகும் அத்தனைப் பாடல்களையும், பாடல் வரிகளையும் கவனத்தோடு இசைக்கு இணைந்து வரும்விதத்தில் கவித்துவ நடையில் ஐயர் மொழியாக்கம் செய்திருக்கிறார். மொழியாக்கம் செய்கிற எவரும் நூலோடும் நூலாசிரியரோடும் அணுக்கமாகாவிட்டால், நூலை உள்வாங்கி மொழியாக்கம் செய்யமுடியாது என்று ஒரு ஆக்கத்தில் எழுதியிருந்தேன். அதை நினைவுபடுத்துகிறது ஐயரின் மொழியாக்கம். பனியனின் ஆக்கத்தை உள்வாங்கி மொழியாக்கம் செய்திருக்கிறார் ஐயர். மொழியாக்கம் செய்கிறவர், அதைக் கருத்தோடு செய்கிறபோது தானும் மூல ஆசிரியரோடு இணையாசிரியராகிவிடுகிறார். மொழியாக்கம் செய்கிறவரின் தனித்துவமும், எழுத்துநடைச் சிறப்பும் மொழியாக்கத்தில் தெளிவாகப் புலப்படும். அதை ஐயரின் மொழியாக்கத்தில் காண்கிறோம். சாமுவேல் பவுல் ஐயர் தமிழ்ப் பண்டிதரும், புலவருமல்லவா!
ஐயரின் கவித்துவத்தை இந்தப் பாடல்களில் கவனியுங்கள். 44ம் பக்கத்தில் கிறிஸ்தியான் ஆனந்தப் பரவசம் கொண்டு பாடிக்கொண்டே போகிறான்,
பாவப்பாரஞ் சுமந்தேன்
இதுவரையும் வந்தேன்,
இங்கே வருமட்டுமே
பாரம் நீங்கவில்லையே.
இங்கே வந்த நிமிஷம்
என் பாவபாரம் நாசம்,
இது என்ன இடமோ!
பாரம் நீங்கிப் போயிற்றே.
இங்கென் கட்டு விடவும்
என் வாழ்வு துவக்கிற்றே
இது என்ன இடமோ!
சிலுவையே நீ வாழ்க!
சமாதியே நீ வாழ்க!
சிலுவையில் மாண்ட
ஏசுவே வாழ்க வாழ்க
இது பிரயாணி கஷ்டகிரி மேல் ஏறியபோது பாடியது (49ம் பக்கம்),
இம்மலை மா உயரம்; ஏறுவேன் ஏறுவேன்,
இச்சிகரம் கஷ்டம்; ஆனால் ஏறுவேன், ஏறுவேன்.
இப்பரும்பே ஜீவவழி; ஏறுவேன், ஏறுவேன்.
மனமே மயங்காதே; ஏறுவேன், ஏறுவேன்.
கஷ்டம் ஆனால் நல்வழியே; ஏறுவேன், ஏறுவேன்.
ஏற்றம் ஆனால் நேர்வழியே; ஏறுவேன், ஏறுவேன்.
லேசுவழி நாசம்; இதில் ஏறுவேன், ஏறுவேன்.
மனமே நீ மூச்சடக்கு; ஏறுவேன், ஏறுவேன்.
இன்னொரு கவிதையையும் கவனியுங்கள்,
(ஆனந்தக் களிப்பு)
பக்தரைப் பலதொல்லை சுற்றும் – அவையெல்லாம்
மாமிச சம்பந்த மார்க்கமே யாக்கும்
அலைமேலே அலைபோலே என்றும் – ஓயாமல்
தொடருமே, பிடிக்குமே, தள்ளுமே முற்றும் – பக்தரை
மோட்சப் பிரயாணிகளே நின்று – அவைகள்
மோசமோ, நாசமோ, சேமமோ என்று
விழிப்போடு கவனித்துக்கொண்டு – புருஷராய்
நடவுங்கள், நடவுங்கள் கிரீடமே உண்டு – பக்தரை
இந்தக் கவிதைகளைப்பற்றித் தன் முகவுரையில் ஐயர் குறிப்பிட்டிருப்பதைக் கவனியுங்கள், ‘இப்புத்தகத்தின் ஊடே வருகிற கவிப்போங்குகள் பெரும்பாலும் தமிழ் இராகங்களில் இயற்றப்பட்டிருக்கின்றன. அக்கவிகள் இலக்கண விதிப்படி இருப்பதைப் பற்றி அவ்வளவாய்க் கவனியாமல், மூலத்தில் இருக்கும் கருத்துக்களுக்கு எவ்வளவேனும் பேதப்படலாகாதென்றே கருதிக்கொண்டேன். ஆங்காங்கே வரும் பாடல்களை அதினதின் இராகப்படியே பாடிக்கொண்டு வாசிக்கப் பிரயாசைப்படுவோர், வெறும் வாசிப்பாய் ஏடுகளைத் திருப்பிக்கொண்டு போகிறவர்களைவிட அதிக உற்சாகம் அடைவார்கள் என்பதற்கு நம்பிக்கை உண்டு.’
கிறிஸ்தவ இறையியல் போதனைகள்
மோட்சப் பயணம், கிறிஸ்தவ புதின இலக்கியம் மட்டுமல்லாது வேத சீர்திருத்த இறையியல் போதனைகளின் அடிப்படையிலான புதினம் என்பதைக் குறிப்பாக நினைவுகூற வேண்டும். அனைத்துக் கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும் வாசித்து மகிழ வேண்டிய நூலாக இது இருந்தபோதும், சீர்திருத்தவாத பியூரிட்டன் பாப்திஸ்து பெரியவர் புனைந்த நூலிது என்பதை மறக்கக்கூடாது. ஜோன் பனியன், மெய்யான சுவிசேஷத்தையும், கிருபையின் அடிப்படையிலான இறையியல் சத்தியங்களான, முன்குறித்தல், தெரிந்துகொள்ளுதல், அழைப்பு, மறுபிறப்பு, கிறிஸ்துவின் பாவநிவாரணபலி, நீதிமானாக்குதல், பரிசுத்தமாக்குதல், மகிமையடைதல், பாவம், போலி மனந்திரும்புதல், பின்வாங்குதல், கிறிஸ்துவில் நிச்சயம் போன்றவற்றை இந்தப் புனைஇலக்கியத்தில் அருமையாக விளக்கியிருக்கிறார். பனியனின் நூலை வெறும் நாவலாகக் கருதக்கூடாது. அதில் கதாபாத்திரங்கள் மூலம் விளக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவ நம்பிக்கை, கிறிஸ்தவ வாழ்க்கை, கர்த்தரின் கட்டளைகள், கீழ்ப்படிவு போன்ற ஆத்மீக விளக்கங்களை மேலோட்டமாக மட்டும் படித்துவிட்டுப் போய்விடக்கூடாது. அதில் வெளிப்படையாகவே விளக்கப்பட்டிருக்கும் ஆழமான இறையியல் போதனைகளை அனுபவித்துக் கற்று ஆனந்திக்க வேண்டும். பனியனின் மோட்சப் பயணம் ஒரு சீர்திருத்த இறையியல் புனைவு என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு சீர்திருத்த பியூரிட்டன் பெரியவரிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
பனியனின் நூலை மொழியாக்கம் செய்கிறவர் சீர்திருத்த கிறிஸ்தவ போதனைகளுக்கு அந்நியராக இருந்திருந்தால் அந்த மொழியாக்கத்தில் ஒருபோதும் சத்திய சுத்தம் இருந்திருக்காது. எத்தனையோ புதிய வேதமொழிபெயர்ப்புகளில் கூட சத்தியத்தை மாற்றி மொழியாக்கம் செய்து வருகிறவர்கள் இருக்கிறபோது, இதில் அதைச் செய்யாமலா விட்டுவிடப்போகிறார்கள்? ஆனால், சாமுவேல் ஐயர் எட்வர்ட் சார்ஜன்ட்டிடம் இறையியல் கற்றவர். சீர்திருத்த இறையியலில் அவருக்கு நன்கு பரிச்சயம் இருந்திருக்கிறது; அதுவே அவருடைய விசுவாசமாகவும் இருந்திருக்கிறது. பனியனின் நூலில் இறையியல் விளக்கங்கள் காணப்படுகிற பகுதிகளையெல்லாம் மூலத்தில் இருந்தவாறே அனுபவித்து தமிழில் ஐயர் மொழியாக்கம் செய்திருக்கிறார். நூலில் எந்த இறையியல் தவறும் வராமல் கவனத்தோடு மொழியாக்கம் செய்திருக்கிறார். அது சாமுவேல் ஐயரின் மொழியாக்கத்தின் சிறப்பு.
தொடர்ந்து அச்சில் இருக்கவேண்டிய நூல்
சாமுவேல் பவுல் ஐயரின் 1882ம் மொழியாக்கம் என்னைப் பொறுத்தவரையில் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு என்றும் அச்சிலிருக்க வேண்டிய கிறிஸ்தவ புனைவு இலக்கியம். ஆங்காங்கு ஒருசில இடங்களில் அதில் காலத்துக்கேற்ற அவசியமான சிறு மாற்றங்களைச் செய்வதில் தவறில்லை; தேர்ச்சிபெற்றவர்களால் அது செய்யப்பட வேண்டும். ஏறக்குறைய 140 வருடங்களுக்கு முன் வெளிவந்திருக்கும் மொழியாக்கமாக இருந்தபோதும் ஐயரின் மொழியாக்கத்தின் நடை அற்புதமானதாகவும், இருதயத்தைப் பாதிப்பதாகவும், உணர்ச்சிபூர்வமானதாகவும், ஜீவனுள்ளதாகவும் இருக்கிறது. ஒரு படைப்பாளியான நான் எந்த நூலிலும் அதன் உயிரோட்டத்தை எதிர்பார்க்கிறவன். அவற்றில் நூலாசிரியரின் இதயத்தைக் கண்டுகொள்ள நான் எப்போதும் முயற்சி செய்வேன். முக்கியமாகத் தமிழ் நூல்களிலும், தமிழ் மொழியாக்கங்களிலும் வெறும் தமிழை மட்டும் நான் எதிர்பார்ப்பதில்லை; எழுத்திலும், மொழியாக்கத்திலும் ஜீவன் இருக்கிறதா என்பதை என் இதயம் தேடும். அத்தகைய ஜீவனை எழுத்தில் கொண்டுவர எழுதுகிறவர் தமிழ்ப்புலமையையும், இலக்கியப் புலமையையும், எழுத்தாற்றலையும், செய்யும் பணியில் ஈடுபாட்டையும் கொண்டிருப்பது அவசியம். அவை ஐயரின் மொழியாக்கத்தில் இருக்கின்றன என்று நான் ஆணித்தரமாக அடித்துக் கூறுவேன்.
கிறிஸ்தவ இலக்கிய சங்கம் (CLS) இதைத் தொடர்ந்து அச்சிடாமலிருந்திருப்பதற்குக் காரணம் புரியவில்லை. இப்போது நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு அதன் முக்கியத்துவமும், மகிமையும் தெரியாமல் போய்விட்டதா? வாங்குகிறவர்கள் குறைவாக இருப்பார்கள் என்ற காரணத்தைத்தான் பொதுவாக எல்லாப் பதிப்பாளர்களும் நம்முன் வைப்பார்கள் என்று நம்புகிறேன். புத்தகம் விற்காவிட்டால் அவர்களுக்குப் பணமுடக்கம் ஏற்படுமே? கோத்தகிரியில் வாழ்ந்த என். சாமுவேல் தனிநபராக இதைச் செய்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், இந்நூல் ஒரு கிறிஸ்தவ பதிப்பக நிறுவனத்தால் பல்லாயிரக்கணக்கானவர்களை அடையும்வகையில் அச்சிட்டு விநியோகிக்கப்பட வேண்டியது. இதை நாம் கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தார் முன்வைக்கவேண்டியது அவசியம்.
ஆங்கிலத்தில் ஜோன் பனியன் எழுதிய 17ம் நூற்றாண்டு இலக்கியத்தை திருச்சபைகள் மேலை நாட்டில் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. பதிப்பகங்கள் அதைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. அங்கே மோட்ச பயணம் இல்லாத கிறிஸ்தவ புத்தகக் கடைகள் இல்லாமலிருக்காது. விதவிதமான வடிவங்களில் வாங்குவோரின் விருப்பத்திற்கேற்ற விதத்தில் பெரியதும், சிறியதுமான சைஸ்களில் பனியனின் நூல் கடைகளை அலங்காரம் செய்துவருகின்றன. சீர்திருத்த திருச்சபைகளிலும் ஏனைய சபைகளிலும் நூலகங்களில் அது வைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் அதை வைத்திருந்து வாசிப்பதோடு குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்பார்கள். நான் வெளிநாடுகளுக்குப் பிரயாணம் செய்கின்ற காலங்களில் விமானதள புத்தகக்கடைகளில்கூட மோட்சப் பயண ஆங்கில நூல் இருக்கக் கண்டிருக்கிறேன். மேலைத் தேய கிறிஸ்தவர்களும், சபைகளும் அதற்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.
அருமையான கிறிஸ்தவ இலக்கியங்கள் அருகிக் காணப்படும் நம்மொழியில், கடவுள் கருணையோடு அருளித் தந்திருக்கும் சாமுவேல் பவுல் ஐயரின் இந்த இறவா கிறிஸ்தவ இலக்கியத்தைத் தொடர்ந்து அச்சிட்டு வெளியிடாமலும், கிறிஸ்தவர்கள் மத்தியில் அதற்கான புரிதலையும், உணர்வையும் ஏற்படுத்தாமலும் நம்மினத்துக் கிறிஸ்தவம் தொடர்ந்திருந்து வருகிறது. இந்நூலின் வரலாற்றுச் சிறப்பிற்காக மட்டுமல்ல, இலக்கியத் தரத்திற்காகவும், புதின எழுத்துநடைக்காகவும், மொழியாக்கத் திறனுக்காகவும், முக்கியமாகத் தேர்ந்த கிறிஸ்தவ இறையியல் போதனைகளுக்காகவும் இது பாதுகாக்கப்படவும், பயன்படுத்தப்படவும் வேண்டிய நூல்.
கிறிஸ்தவ இறையியல் தரம் மிகவும் அருகிக் காணப்படும் நம்மினத்துச் சபைகளில் மோட்சப் பயணம் நூல் பயன்படுத்தப்படாமல் இருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை. சபைகளுக்கும், போதகர்களுக்கும் அதன் அருமை, பெருமை தெரியாமலிருக்கின்றது. எத்தனைப் பெரிய இறையியல் பொக்கிஷங்கள் நூலுக்குள் இருக்கிறதென்பது அனேகருக்கு இன்று தெரியாமலிருக்கிறது. அதுவே நூலின் பயன்பாடு நம்மத்தியில் இல்லாமலிருப்பதற்கு முக்கிய காரணம். இரண்டாவது காரணம், வாசிப்பு மிகவும் கீழ் நிலையில் இருப்பதுதான். ஜோன் பனியனின் நூல் புதினமாக இருந்தபோதும், அதை வாசித்துப் புரிந்துகொள்ளுவதற்கு நிதானத்தோடு கூடிய பொறுமையான வாசிப்பு அவசியம். மேலெழுந்தவாரியான வாசிப்பு உதவாது; கருத்தோடு சிந்தித்து வாசிக்க வேண்டிய நூலிது. அத்தகைய வாசிப்புப் பண்பாடு இன்று பெரும்பாலானோரிடத்தில் இல்லாமலிருக்கிறது. நம்மினத்துப் போதகர்கள் மத்தியில்கூட இந்நூலை வாசித்துத் தேர்ந்தவர்கள் குறைவு. என் பிரசங்கங்களில் நான் பல தடவைகள் பனியனின் நூலில் இருந்து உதாரணங்களைக் கொடுத்திருக்கிறேன். அந்தளவுக்கு பிரசங்கத்திற்குத் துணைபோகும் அம்சங்களை மோட்சப் பயணம் கொண்டிருக்கிறது.
கோஹினூர் வைரத்தின் அருமை தெரியாத ஒருவனுக்கு அது வெறும் கல்லாகத்தான் தெரியும். தரமானதொரு கிறிஸ்தவ இலக்கியம் கைக்கெட்டிய தூரத்தில், சாமுவேல் பவுல் ஐயரின் மொழியாக்கத்தில் நம் மொழியில் இருந்தும், அதன் அருமை தெரியாமலும், பயன்படுத்திக்கொள்ளாமலும் தமிழ் கிறிஸ்தவம் இருந்து வருகிறதென்றால் அதற்குக் காரணம், நம் கற்பனை உலகில் வலம்வருகிறவிதத்தில் கிறிஸ்தவம் நம்மினத்தில் எழுச்சியோடு இல்லாமலிருப்பதுதான். வெட்டித்தனமாக பாட்டுப்பாடியும், ஜெபம் என்ற பெயரில் உணர்ச்சி புரண்டோடக் கூச்சலிட்டும், வாந்தியெடுக்க வைக்கும் தனிநபர் துதிபாடல் சாட்சியங்களைக் கொடுத்தும், தீர்க்கதரிசனம் என்ற பெயரில் உளரிக்கொட்டியும் வரும் நம்மினத்து பிரசங்க மேடைகளில் என்று மோட்சப் பயணம் அடிக்கடி பிரசங்கங்களில் எடுத்துச்சொல்லப்பட்டு, பிரசங்கிகளின் இருதயத்திலும், நாவிலும் அன்றாடம் வலம் வந்து, சபையாரின் குடும்ப ஆராதனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறதோ, அன்று வாருங்கள் என்னிடம் பேச, நம்மினத்து கிறிஸ்தவ எழுப்புதலைப் பற்றி!
எலிசா போனாலும் யெகோவா இருக்கிறார்
2 இராஜாக்கள் 13:20-25
நீங்கள் இப்போது வாழ்ந்து வரும் காலப்பகுதி உங்களுக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தும் காலப்பகுதி. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கொரோனாவும் நாட்டின் நிலமையும் மோசமாக இருக்கிறது. உங்களில் சிலர்கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்காக ஜெபித்து வருகிறோம். ஆண்டவர் ஜெபங்களைக் கேட்டு, இருக்கும் சூழ்நிலையை மாற்றி வந்திருக்கும் ஆபத்தில் இருந்து விடுதலை தர ஜெபித்து வருகிறோம்.
இந்த சமயத்தில் 2 இராஜாக்களைத் தொடருவதா, அல்லது வேறு செய்தி அளிக்கலாமா என்றுகூட எனக்கு சிந்தனை ஏற்பட்டது. இருந்தபோதும் 2 ராஜாக்களிலேயே சமயத்துக்குத் தகுந்த செய்தி இருப்பதை 13ம் அதிகாரத்தின் கடைசிப் பகுதியில் கவனித்தேன். இந்தப் பகுதிமூலம் கர்த்தர் நம்மோடு பேசட்டும்; நம்மைத் தைரியப்படுத்தட்டும்.
2 இராஜாக்கள் 13:20, இதுவரை இஸ்ரவேலுக்கு அரணாக, பாதுகாப்பு வளையமாக இருந்துவந்திருந்த தீர்க்கதரிசி எலிசா மரணமடைந்ததை அறிவிக்கிறது. எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல், பீடிகை எதுவும் இல்லாமல் அந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது. ’எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம் பண்ணினார்கள்’ என்றிருக்கிறது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதலமைச்சரானவுடன், கொரானாவுக்கு மத்தியில் ஆடம்பரமில்லாமல் பதவிப்பிரமாணம் நடக்கும் என்று அறிவித்திருந்தபோதும் ஒருவித ஆர்ப்பாட்டத்தோடுதான் அது நடந்தது. பத்திரிகைகள் அதைப் பிரமாதப்படுத்தின. கொரோனாவால் சரிந்த சில சினிமா தொடர்பானவர்களின் மரணத்தைக்கூட பத்திரிகைகள் விசேஷ செய்திபோலத்தான் வெளியிட்டன. ஆனால், வேதநாயகனான பரிசுத்த ஆவியானவர் எலிசாவின் மரணத்தை அறிவிக்கும்போது விசேஷமாக எதையும் எழுதவில்லை. ‘எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம் பண்ணினார்கள்’ என்று சுருக்கமாக எழுதப்பட்டிருக்கிறது.
அத்தனை பெரிய தீர்க்கதரிசியின் மரணத்தை ஒரே வரியில் இப்படி முடித்துவிடலாமா? என்றுகூட யாராவது கேட்கலாம். நாம் வாழும் சமுதாயம் அப்படித்தான் கேட்கும்.
ஒரே வரியில் எலிசாவின் மரணத்தைப்பற்றி நாம் வாசிப்பதற்குக் காரணமென்ன?
ஒருவனுடைய வாழ்க்கையில், அவன் இருக்கிறபோது என்ன செய்கிறான் என்பதுதான் முக்கியம். மரணம் வராமல் இருக்காது. எத்தனைப் பெரிய மனிதனுக்கும் மரணம் சம்பவிக்கும்; எலிசா இதற்கு விதிவிலக்கல்ல. எலிசா எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம். அதற்குத்தான் வேதம் முக்கியத்துவம் அளிக்கிறது. எலிசா கர்த்தரின் தீர்க்கதரிசி. இஸ்ரவேலுக்குக் கிடைத்திருந்த சக்திவாய்ந்த பாதுகாப்பு அரண். அதை இஸ்ரவேல் முழுதும் உணர்ந்து பயன்படுத்திக் கொண்டிராவிட்டாலும் அதுவே உண்மை.
எலிசா விசுவாசமுள்ள ஊழியத்தைச் செய்தவர். தன்னுடைய அதிரடியான அற்புதங்களையும், அருமையான தீர்க்கதரிசன ஊழியத்தையும் பார்த்தும் கேட்டும் ஆயிரக்கணக்கில் நாட்டில் மக்கள் பாராட்டிப் பயனடையத் தவறியபோதும், எந்தவிதத்திலும் தளர்ந்து போகாமலும், தன் ஊழியத்தில் சந்தேகம் கொள்ளாமலும், கர்த்தரைப் பார்த்துக் குறைகூறாமலும் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை விசுவாசமுள்ள ஊழியத்தைச் செய்த பழைய ஏற்பாட்டுப் பிரசங்கி எலிசா. கூட்டத்தைத்தேடியும், நாடியும் ஊழியம் செய்யாமல் கர்த்தருக்காக மட்டும் ஊழியம் செய்த வீட்டு மனைவி அவர். இது சமீபத்தில் நான் வாசித்த போல் வொஷரின் ஒரு ஆக்கத்தில் இருந்து கடன் வாங்கிக்கொண்ட உதாரணம். வீட்டு மனைவி, விசுவாசத்தோடு எல்லாவிதக் கஷ்டங்களுக்கு மத்தியிலும் குடும்பத்துக்கு விசுவாசத்தோடு சமைத்துப்போட்டு பணி செய்வார். அவருக்கு இருந்திருந்து மட்டுமே ஏதாவது நல்ல வார்த்தை கிடைக்கும். இருந்தபோதும் தளராமல் கடைசிவரை சமைத்துப் போட்டும், வீட்டுப் பணிகளையும் செய்து வருகிறவர் வீட்டு மனைவி. வீட்டு மனைவியிடம் ஆடம்பரம் இருக்காது; அலங்காரம் இருக்காது. சமையலறையில் சாதாரண சேலையைக்கட்டிக் கொண்டு விசுவாசத்தோடு பணிசெய்து வருவார். அதுபோலத்தான் எலிசாவும். அவர் செய்த பணி கர்த்தருக்கு. அதிலிருந்து அணுவளவும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளாமல் கடைசிவரை பணிசெய்து வீட்டு மனைவிபோல் மரணமடைந்தார் எலிசா. இறப்பதற்கு முன்புகூட இஸ்ரவேலுக்கு செய்யவேண்டியிருந்த பணியைச் செய்துமுடித்துவிட்டு இறந்தார் எலிசா. அதையே 19 வரையுள்ள வசனங்களில் வாசித்திருக்கிறோம்.
மரணம் பொதுவானது
இங்கே எலிசாவைப்பற்றிய இன்னுமொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். எலிசாவும் மரிக்கவேண்டியிருந்தது. அதுவும் எல்லோரையும்போல சாதாரண மனிதனைப்போல மரிக்க வேண்டியிருந்தது. அதையும் 2ம் வசனம் நமக்கு உணர்த்துகிறது. எலிசா இந்தவேளையில் நோய்வாய்ப்பட்டு மிகவும் தளர்ந்த நிலையில் இருந்தார். தனக்கு மிக அருகில் மரணம் வந்துவிட்டது அவருக்குத் தெரிந்திருந்தது. அதை 14ம் வசனம் விளக்குகிறது. எலிசா மரணத்தை எதிர்பார்த்து அதற்குத் தயாராக நின்றார். கிறிஸ்தவ விசுவாசிகள் மரணத்தைச் சந்திக்கும் விதத்தில் வித்தியாசம் இருக்கிறது. கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு மரணம் மிகவும் ஆபத்தானது. அது அவர்களுக்கு நித்திய அழிவைக் கொண்டுவருகிறது. கிறிஸ்தவ விசுவாசிகள் மரணத்தை வரவேற்கிறார்கள். ஏன் தெரியுமா? அது அவர்களுக்கு அழிவில்லாத பரலோக வாழ்க்கையைக் கொண்டுவருகிறது. எலிசா ஆண்டவரோடு நிரந்தரமாக இருக்கப்போகிற பரலோக வாழ்க்கைக்குத் தன்னை தயார்செய்து கொண்டிருக்கிறார்.
ஒருவருக்கு மரணம் எப்படி வருகிறது என்பது முக்கியமேயல்ல. ஆண்டவர் எதையும் பயன்படுத்தி கிறிஸ்தவனுக்கு மரணத்தைக் கொண்டுவருவார். அது அவருடைய இறையாண்மையைப் பொறுத்தது. இப்படிதான் நான் சாகவேண்டும்; என் மரணம் விசேஷமாக இருக்கவேண்டும், அப்போதுதான் எனக்கு மதிப்பு என்று கிறிஸ்தவன் கேட்கமாட்டான். எப்படி மரணம் சம்பவிக்கப்போகிறது என்பது முக்கியமேயல்ல; நாம் ஆத்துமாவில் எந்த நிலையில் இருந்து அதை சந்திக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம். எலிசா விசுவாசி, தீர்க்கதரிசி. அவருக்கு பரலோகத்தில் இருந்து இந்த வேளையில் மரணத்தின் மூலம் அழைப்பு வந்திருந்தது. எனக்கு நன்கு அறிமுகமான இரண்டு போதகர்கள் 2020ல் பரலோகத்தை அடைந்தார்கள். ஒருவர் கென்சர் வியாதியாலும், மற்றவர் கொரோனா பாதிப்பாலும் மரித்தார்கள். இருவரும் விசுவாசமுள்ள ஊழியப் பணியைச் செய்திருந்தார்கள்; அவர்களுக்கு பரலோக அழைப்பு வந்திருந்தது. அதுதான் முக்கியம். அவர்கள் இப்போது கிறிஸ்துவோடு நிரந்தர ஐக்கியத்தை ருசிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மோவாபியரின் ஊடுருவல்
எலிசா இறந்து அடக்கம் பண்ணப்பட்டதை ஒரே வசனத்தில் (20) மிகச்சுருக்கமாகச் சொல்லிவிட்டு இஸ்ரவேலின் வரலாற்றில் நிகழ்ந்த இன்னொரு சம்பவத்திற்குத் தாவிவிடுகிறார் நூலை எழுதியவர். அந்த சம்பவம் பற்றிக்கூட எந்த விபரத்தையும் தராமல் நம்முன் வைத்திருக்கிறார் நூலாசிரியர். 20ம் வசனத்தில், ‘மறுவருஷத்தில் மோவாபியரின் தண்டுகள் தேசத்தில் வந்தது’ என்றிருக்கிறது. அந்த வசனங்களை, 20-21 ஐ வாசிப்போம்.
எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது. அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.
இந்த இடத்தில் இந்த வசனங்கள் நமக்கு என்ன சொல்லுகின்றன. இந்த இடத்துக்கே சம்பந்தமில்லாத வகையில் எழுதப்பட்ட விஷயத்தைப்போல இது நம் கண்களுக்குத் தோற்றமளிக்கிறது. உண்மையில் 20ம் வசனத்திற்குப் பிறகு 21ஐ விட்டுவிட்டு 22ல் இருந்து தொடர்ந்து வாசித்தால் எந்தப் பிரச்சனையும் இல்லாததுபோல் உணர்வோம். 21ம் வசனமே பிரச்சனையுள்ளதாகத் தென்படும். அதனால்தான் தாராளவாத இறையியல் விளக்கமளிப்பவர்கள் இதை திணிக்கப்பட்ட ஒரு கட்டுக்கதையாக இதற்கு விளக்கமளித்திருக்கிறார்கள். அவர்கள் எப்படி ஆண்டவர் உலகத்தைப் படைத்திருக்கும் விதத்திற்கும், செங்கடல் பிரிந்த சம்பவத்திற்கும், யோனாவைப் பெரிய மீன் விழுங்கிய சம்பவத்திற்கும் விளக்கங்கொடுத்திருக்கிறார்களோ அதேவகையில்தான், இதையும் யாராலோ இந்த இடத்தில் தேவையில்லாமல் திணிக்கப்பட்ட விஷயமாகவும், கட்டுக்கதையாகவும் லிபரல் விளக்கமளிப்பவர்கள் ஒதுக்கிவிடுகிறார்கள். ‘எலிசாவின் சரீரத்தின் மேல் பிணம் விழுகிறதாம். விழுந்த பிணம் உயிரோடு எழுந்து நிற்கிறதாம், இதெல்லாம் வெறுங்கட்டுக்கதை, 21ம் நூற்றாண்டுக்குப் பொருந்தாது‘ என்று ஆணவக்குரல் எழுப்புகிறார்கள் வேதத்தின் அருமை தெரியாதவர்கள்.
20ம் வசனத்திற்கு முன் நாம் என்ன வாசித்தோம் என்பதை இந்த இடத்தில் நாம் மறந்துவிடக்கூடாது. வெறும் அம்புகளைப் பயன்படுத்தி இஸ்ரவேலுக்கு வரப்போகும் வெற்றிகளை எலிசா விவரித்து சொல்லவில்லையா? பாலைவனம் போல் இருந்த இடத்தில் எங்கிருந்தோ தண்ணீர் வரவழைத்து மூன்று நாட்டுப்படைகளுக்கும், மிருகங்களுக்கும் தண்ணீர் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அதைப் பயன்படுத்தி இஸ்ரவேலின் எதிரிகளின் படையையும் எலிசா அழித்துக்காட்டவில்லையா? அதையெல்லாம் இதே நூலில் நாம் வாசித்திருக்கும்போது இந்த விஷயத்தை மட்டும் நாம் எப்படிக் கட்டுக்கதை என்று தள்ளிவிட முடியும்?
உண்மையில் எலிசா மரணமடைந்ததை அறிவிக்கும் வசனத்துக்கும் இந்தச் சம்பவத்துக்கும் முக்கிய தொடர்பு இருக்கிறது. நூலாசிரியர் இந்த இரு சம்பவங்களையும் இணைத்து இங்கே நமக்குத் தந்திருக்கிறார். இதைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் இந்த அதிகாரம் முழுவதையும் கவனத்தோடு வாசித்துப் பார்த்தாலே போதும்; இந்த அதிகாரமே இந்த வசனத்துக்கு விளக்கத்தை அளிக்கிறதாக இருக்கிறது.
2 இராஜாக்கள் 13:20
எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.
உண்மையில் எபிரெய மொழிப்படி இந்த வசனம் பின்வருமாறு இருக்கவேண்டும். ’இப்போது, எலிசா மரணமடைந்தார், அவனை அடக்கம் செய்தார்கள். அந்த வருஷத்தின் இளவேனில் (வசந்த) காலத்தில் அடிக்கடி ஊடுருவும் மோவாபிய படைகள் நாட்டை ஊடுருவின.’
தமிழ் வேதத்தில் இந்தப் பகுதியில் மறுவருஷத்தில் என்றிருப்பது சரியல்ல. மூலமொழியின்படி ‘அந்த வருஷத்தில்’ என்றே இருக்கவேண்டும். இந்த வசனத்தின் பொருள் என்ன தெரியுமா? எலிசாவை அடக்கம் செய்த நாட்களுக்கும், மோவாபிய ஊடுருவிகள் நாட்டை ஊடுருவிய நாட்களுக்கும் அதிக இடைவெளி இருக்கவில்லை என்பதுதான். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், வழமையாக மோவாபியர்கள் இஸ்ரவேலை ஊடுருவுகின்ற இளவேனில் காலப்பகுதியில்தான் எலிசாவும் மரித்து அடக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இஸ்ரவேலைப் பிடிக்காத மோவாபியர்கள் அந்த நேரத்தில் வல்லமையடைந்து வந்திருந்தார்கள். அவர்கள் அடிக்கடி சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் இஸ்ரவேலை ஊடுருவி தொல்லை தந்தும் வந்திருந்தார்கள். அப்படியானதொரு ஊடுவல் காலப்பகுதியிலேயே எலிசா அடக்கம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து வசனங்களை வாசிப்போம்.
2 இராஜாக்கள் 13:21
அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.
எலிசா அடக்கம் செய்யப்பட்டு அதிக காலமாகியிருக்கவில்லை. அத்தோடு அந்தக் காலப்பகுதியில் இஸ்ரவேலில் ஒருவரை அடக்கம் செய்யும்போது ஏதாவது ஒரு குகையில் அடக்கம் செய்வதே வழக்கம். பிணத்தின் சரீரத்தைத் துணிகளால் சுற்றி அந்தக் குகைக்குள் வைத்துவிடுவார்கள். குகையின் நுழைவாசலை கற்களால் மூடிவிடுவதும் வழக்கம். அப்படியாக, இறந்த அந்த மனிதனையும் அவனைச் சார்ந்தவர்கள் எலிசாவின் சரீரம் அடக்கம் செய்யப்பட்ட அந்தக் குகையில் வைக்க அன்று அவர்கள் வந்திருந்தார்கள். அந்தச் சமயத்தில் மோவாபிய ஊடுருவிகள் ஊரில் நுழைந்திருந்ததை அவர்கள் கவனித்து அவசர அவசரமாகக் கொண்டுவந்திருந்த பிணத்தைக் குகைக்குள் போட்டுவிட்டு வெகுவேகமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்கள். அப்படி அவர்கள் பிணத்தைக் குகைக்குள் போட்ட அவசரத்தில் அந்தப் பிணம் எலிசாவின் சரீரத்தின் எலும்புகளைத் தொட்டபோது, அது உயிர்பெற்று உடனடியாக எழுந்து நின்றது. இதுதான் அன்று நடந்த அற்புதம்.
இந்த அற்புதத்தின் மூலம் ஆவியானவர் நமக்கு எதை விளக்குகிறார்?
கைல், டிலிச் என்ற பழைய ஏற்பாட்டு வேதவிளக்க ஆசிரியர்கள் இதைப் பற்றி அளித்திருக்கும் விளக்கம் எனக்கு சரியாகப்படுகிறது.
“இந்த அற்புதம், எலிசா இறந்துவிட்டபோதும் கல்லறையில் இருந்து அற்புதம் செய்து எலியாவையும் மிஞ்சிவிட்டார் என்பதைக் காட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டதல்ல. இறக்கும் நிலையில் இருந்தபோது எலிசா, சீரியர்களை யோவாஸ் மூன்றுமுறைத் தாக்கி வெற்றியடைவான் என்று சொன்ன தீர்க்கதரிசனம் நிச்சயம் நிறைவேறும் என்பதை உறுதிப்படுத்தும் தெய்வீக அற்புதமாக இது இருக்கிறது” என்று விளக்கியிருக்கிறார்கள். அத்தோடு அவர்கள், “இதன்மூலம் கர்த்தர், தான் மரித்தவர்களின் தெய்வமல்ல, ஜீவிக்கிறவர்களின் தேவன் என்பதையும் எலிசாவின் பிணத்தின் மூலம் நிகழ்த்திய அற்புதத்தால் காட்டுகிறார்” என்று விளக்கியிருக்கிறார்கள்.
எலிசா இறந்துவிட்டார், ஆனால் அவருடைய தீர்க்கதரிசன வார்த்தைகள் நிலைத்திருக்கின்றன. எலிசா போய்விட்டிருக்கலாம்; ஆனால் எலிசாவின் தேவன் தொடர்ந்தும் ஜீவிக்கிறவராயிருக்கிறார். இதைத்தான் இந்த அற்புதம் இந்த இடத்தில் வலியுறுத்துகிறது. எலிசா மறைந்துவிட்டதை நினைத்து ஏங்கிக்கொண்டிருந்த அந்தக் காலத்து விசுவாசிகளுக்கு இந்தக் கல்லறை அற்புதம் எப்படியெல்லாம் ஊக்கமளித்திருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். எல்லாம் முடிந்துவிட்டது; எலிசாவும் போய்விட்டார். இனி இஸ்ரவேலுக்கு முடிவு வந்துவிட்டது. யார் நமக்கு உதவ இருக்கிறார்கள்? என்று ஏங்கிக்கொண்டிருந்த விசுவாச இருதயங்களில் இந்த அற்புதம் பால் வார்த்திருக்கும் இல்லையா? ஆண்டவருக்குத் தெரியும், எந்தெந்த நேரத்தில் தம்முடைய மக்களை எந்தவிதத்திலெல்லாம் தைரியப்படுத்த வேண்டுமென்று. இந்தக் கல்லறை அற்புதம் கட்டுக்கதையல்ல; விசுவாசிகளுக்கும், இஸ்ரவேலுக்கும் கர்த்தர் அனுப்பிவைத்த ஆணித்தரமான உறுதிமொழி. உன் பாதுகாப்பு அரண் எலிசா அல்ல; எலிசாவின் தேவனான நானே என்று இந்த அற்புதத்தின் மூலம் கர்த்தர் இங்கே சொல்லுகிறார்.
இஸ்ரவேலில் அன்று கல்லறையில் நிகழ்ந்த இந்த அற்புதம் நமக்கு புதிய ஏற்பாட்டில் இன்னுமொரு சம்பவத்தை நினைவூட்டுகிறது. மத்தேயு 27:51-53
அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
இயேசு சிலுவையில் மரித்தபின் இந்த நிகழ்ச்சி நிகழ்ந்ததாக மத்தேயு விளக்குகிறார். கவனியுங்கள் – இயேசு இறந்தபோது கல்லறைகள் திறந்தன மரித்திருந்த அநேக கிறிஸ்தவர்களின் சரீரங்கள் உயிர்பெற்று எழுந்து நின்றன. இது இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ந்தபின் நடந்தது என்று 53ம் வசனத்தில் வாசிக்கிறோம். இயேசு இறந்தபோது கல்லறைகள் திறந்தன. இந்த உயிர்த்தெழுதல் இயேசு உயிர்த்தெழுந்தபின் நிகழ்ந்தது.
இதைக்கூட வாசிக்கின்ற வேதஞானமற்ற மனிதர்கள் கட்டுக்கதை என்றே சொல்லுவார்கள். இந்த நிகழ்ச்சியைவைத்து என்ன சொல்லுவது என்று திகைப்பார்கள்.
ஆனால், மத்தேயு, இயேசு மரணத்தை வெற்றிகொண்டு பாவத்தில் மரித்திருப்பவர்களுக்கு ஜீவனளிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உணரவேண்டும் என்பதை இது உணர்த்துவதாக இருக்கிறது என்று நாம் அறியும்படியாக இதை எழுதியிருக்கிறார். இயேசு மரித்தார்; கல்லறைகள் திறந்தன. 2 இராஜாக்கள் 13ல் எலிசாவின் எலும்புகள் இன்னொரு பிணத்தை உயிர்த்தெழச் செய்தன. மத்தேயு 27ல் இயேசுவின் மரணம் அநேகருக்கு ஜீவனளிக்கின்ற மரணமாயிருக்கிறது என்று அறிகிறோம்.
2 இராஜாக்கள் 13ம் அதிகாரத்தில் காணப்படும் கல்லறை அற்புதம் எத்தனை பெரிய சுவிசேஷ செய்தியை நமக்கு அளிக்கிறது. மரித்த எலிசா பரலோகத்தில் உயிரோடிருக்கிறார். எலிசாவின் தேவன் தொடர்ந்து தன்னை விசுவாசிக்கிறவர்களுக்கு இந்த உலகத்தில் தேவனாக இருக்கிறார். மரித்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து இன்று நம்மோடிருந்து நம்மைப் பாதுகாத்து வருகிறார். மரணம் நமக்கு முடிவானதல்ல. அது நாம் பரலோகம் போவதற்கான கதவு மட்டுமே. இயேசுவை விசுவாசிக்காதவர்களுக்குத்தான் மரண பயம் இருக்கவேண்டும். விசுவாசிகள் மரணத்தை இன்னொரு வாழ்விற்கான ஆரம்பமாகப் பார்ப்பார்கள். அதைத்தான் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் பவுல் விளக்குகிறார். இந்தக் கொரோனா காலங்கள் அனேகருக்கு மரண பயத்தை உண்டாக்கியிருக்கிறது. எதிர்காலத்தைப்பற்றிய சந்தேகத்தையும், கவலையையும் உண்டாக்கியிருக்கிறது. அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இருந்தாலும் இது ஆண்டவராகிய இயேசுவை அதிகம் நெருங்கிவாழ வேண்டிய நேரம். அவரில் தஞ்சமடைந்திருப்பவர்களுக்கு மரண பயம் இருக்கவேண்டிய அவசியமில்லை. இயேசுவின் உயிர்த்தெழுதல் அவர்களுடைய உயிர்த்தெழுதலுக்கு உத்தரவாதம் தந்திருக்கிறது. இந்த உலகத்தின் ஆபத்துக்கள் நம் உயிர்த்தெழுதலை இல்லாமலாக்கிவிட முடியாது. கொரோனா நம் உயிரை மட்டுமே எடுக்கமுடியும்; நித்திய ஜீவனையும், வரப்போகும் உயிர்த்தெழுதலையும் அதால் ஒன்றும் செய்யமுடியாது.
உங்களில் எல்லோருமே கிறிஸ்தவர்களா என்று எனக்குத் தெரியாது. நீங்கள் கிறிஸ்தவராக இல்லாமலிருந்தால் உங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது? நீங்கள் எதை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு ஆதரவு யார்? ஆண்டவரை ஒதுக்கிவைத்து வாழும் நீங்கள் எப்படி எதில் நம்பிக்கை வைத்து வாழுகிறீர்கள்? இன்று உங்கள் வாழ்கைக்கு முடிவு ஏற்பட்டால் நீங்கள் எங்கே போகப்போகிறீர்கள்? எந்த நம்பிக்கையோடு இயேசு கிறிஸ்துவை ஒதுக்கிவைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்? மரித்து உயிர்தெழுந்து பாவிகளுக்கு நித்திய வாழ்வளிப்பதற்காக வந்த இயேசுவை உங்களால் பாவமன்னிப்புக்காக எப்படி விசுவாசிக்காமல் இருக்கமுடிகிறது?
பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்கான சாட்சியங்கள்
பகுதி 2 – ரால்ப் வென்னிங்
- அநேக அவிசுவாசிகளும் பாவச் செயல்களுக்காக வெட்கப்படுகிறார்கள்.
மனிதர்களுடைய பாவகரமான வாழ்க்கை முறை, அவர்களுடைய மனிதத் தன்மையைத் தரமிழக்கச் செய்கிறது என்று பழங்கால கிரேக்க தத்துவ ஞானி ஒருவர் சொல்லியிருக்கிறார். இத்தகைய வாழ்க்கைமுறை வெட்ககரமானது என்பதையும் அவரே ஒப்புக்கொள்ளுகிறார். கேடான முறையில் வாழுகிற எந்தவொரு மனிதனும் இழிவானவன் என்று அவிசுவாசியான மனிதர்களில் ஒருவரே சொல்லியிருக்கிறார்.
பாவியான மனிதன், பாவகரமான செயல்களில் ஈடுபடுவதற்கு முன்பேகூட, தன்னுடைய பாவச் செயல்களைப் பற்றி வெட்கப்படுகிறான். இது எப்படித் தெரியவருகிறதென்றால்,
- பாவகரமான செயல்களைச் செய்துவிட்டபின், அவர்களுடைய மனச்சாட்சி அவர்களைக் குற்றப்படுத்துகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இருப்பினும், பாவச்செயல்களை நிறுத்துவதற்கான உறுதிகொண்டிராமல், அதைச் செய்வதற்கே துடிக்கிறார்கள். பாவத்தின் தொடர் விளைவுகளைக் கருத்துடன் ஆராய்ந்து, அதை நிறுத்துவதற்கான நடவடிக்கையாக அவர்கள் செய்யவேண்டியதைச் செய்வதில்லை.
- பாவகரமான செயல்களில் ஈடுபடுவது மேன்மையாகவும் மதிப்புள்ளதாகவும் இருந்தால், அதனுடைய நற்பயனையும், அதனால் அவர்களுக்கு உண்டாகும் நன்மைகளையும் ஏன் சத்தமாகச் சொல்லக்கூடாது? அவர்கள் அப்படிச் செய்வதில்லை. ஏனென்றால், அது அவர்களுக்கு வெட்கத்தையே ஏற்படுத்தும். தங்களுடைய பாவகரமான செயல்களுக்கு நல்லதாகத் தோன்றும் வேறு பெயர்களைத் தருவதும் வீணானதே. உதாரணமாக, மது அருந்துவதை, நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கும் நேரம் என்றோ, ஒழுங்கற்றதாக இருந்தாலும் அது மனிதர்களுடைய இயல்புதான் என்றோ சொல்லுவது வீணானது.
- தங்களுடைய பாவச் செயலினால் உண்டான வெட்கத்தை மறைப்பதற்கு, அவற்றை இருட்டில் செய்கிறார்கள் (யோவான் 3:19-20). மறைவில் செய்யப்படுகிற அவர்களுடைய பாவங்கள் யாருக்கும் தெரியாது என்று நினைப்பது அவர்களுடைய முட்டாள்தனமே (எபேசியர் 5:11-12). ஏனென்றால், கடவுளுக்கு இருள் ஒருபோதும் தடையல்ல. அவர்கள் தங்களுடைய பாவச் செயல்களை மறைப்பதற்கு எடுக்கின்ற முயற்சிகளிலிருந்தே அது எந்தளவுக்கு வெட்கரமானது என்பதை அவர்களே வெளிப்படுத்துகிறார்கள்.
- பாவச் செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு அதனால் உண்டாகிற இன்பம் நிலைப்பதில்லை. அவர்கள் பாவச் செயல்களில் ஈடுபடுகிறபோதோ அல்லது அதன்பிறகோ, அதனால் உண்டாகிற அவமானமும் குற்றவுணர்வும் அவர்களுடைய பாவ ஆசைகளினால் உண்டாகிற இன்பங்களைக் காட்டிலும் அதிகமாயிருக்கும். “நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்” (நீதிமொழிகள் 14:13). பாவகரமான ஆசைகள் பெரியளவில் இருந்தால், அதனால் ஏற்படும் இன்பம் குறைவானதே. (2 சாமுவேல் 13:10-17).
- பாவச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள், தங்களுடைய பாவச் செயல்களைக் குறித்து வெட்கப்படுகிறார்கள் என்பதை, அவர்கள் தங்களுடைய பாவச் செயல்களை தேவபக்தியின் வேஷத்திற்குள் மறைக்கப் பார்ப்பதன் மூலம் தெரிவிக்கிறார்கள். ஏரோது இராஜா, இயேசு பிறந்தபோது, அவரை வழிபட விரும்புவதாகத் தெரிவித்தான். ஆனால் உண்மையில் அவன் அவரைக் கொல்லவே திட்டமிட்டிருந்தான் (மத்தேயு 2:8, 16).
பாவியான மனிதன், பாவகரமான செயல்களில் ஈடுபட்ட பிறகு, தன்னுடைய பாவச் செயல்களை நினைத்து வெட்கப்படுகிறான். இது எப்படித் தெரியவருகிறதென்றால்,
- அவர்கள் பாவச் செயல்களைச் செய்தபோது அதைக் குறித்து வெட்கப்படுகிறதோடு, அது, தான் செய்த பாவச் செயல் என்பதை ஒப்புகொள்ள மறுக்கிறார்கள். மாறாக, அவர்கள் செய்த செயலுக்கு சாக்குபோக்குச் சொல்லத் தீவிரம் காட்டுகிறார்கள். அவர்கள் நன்மையான காரியங்களைச் செய்கிறபோது, சாக்குப்போக்குச் சொல்ல வேண்டிய அவசியமேற்படுவதில்லை. ஆனால் தீமையான காரியங்களைச் செய்கிறபோது, அவர்கள் செய்ததைப் பற்றி அவர்களே அதிருப்தி கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் சொல்லுகிற சாக்குபோக்கே காட்டுகிறது. அவர்களுடைய பாவங்களினால் உண்டாகிற அவமானத்தை மூடுவதற்கும் மறைப்பதற்குமான மற்றொரு வழியாக மேலும் பாவச் செயல்களைச் செய்கிறார்கள்.
- தாங்கள் செய்த அதே கேடான செயல்களை மற்றவர்கள் செய்வதைக் காண்கிறபோது, அதைக் கடுமையாக விமர்சிப்பதன் மூலமாக தாங்கள் செய்ததை மறைக்கப் பார்க்கிறார்கள். பழைய ஏற்பாட்டில், யூதா முறையற்ற பாலியல் உறவில் ஈடுபட்டிருந்தும், அவருடைய மருமகளின் ஒழுங்கற்ற செயலைக் கண்டித்திருக்கிறார் (ஆதியாகமம் 38). மற்றவர்களிலுள்ள பாவங்களைப் பார்ப்பது மிகவும் எளிது, ஆனால் நாமும் பாவிகள்தான் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
- மனிதர்கள் பாவம் செய்து அதை உணருகிறபோது, அதனால் உண்டாகிற குற்றவுணர்வின் அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சியாக மதச் சடங்குகளை மேற்கொள்ளுகிறார்கள். அதாவது, இயேசு அறையப்பட்டதாக சித்தரிக்கப்பட்ட சிலுவை குறியை முத்தமிடுவது, ஜெபமாலை கொண்டு ஜெபிப்பது, பாவமன்னிப்பு அறிக்கை செய்வது, வழிபாட்டு சடங்குகளில் ஈடுபடுவது போன்றவற்றைச் செய்கிறார்கள். இதையெல்லாம் செய்வதன் மூலமாக, அவர்களுடைய செயல் எந்தளவுக்கு வெட்ககரமானது என்பதை அவர்களே ஒப்புக்கொள்ளுகிறார்கள்.
- கேடான மனிதர்களும்கூட மரணத்திற்குப் பிறகு பரலோகத்திற்குப் போகவே விரும்புகிறார்கள். அவர்கள் நரகத்திற்குப் போக ஆசைப்படுவதில்லை. கேடான வாழ்க்கைக்கான தவிர்க்க முடியாத கூலியாக, அதாவது கடவுளிடமிருந்தும் அவருடைய பரலோகத்திலிருந்தும் நித்தியமாகப் பிரிக்கப்பட்ட நிலைக்குப் போக, அவர்கள் அந்தளவுக்கு மனமற்றவர்களாக இருந்திருந்தால், அவர்களுடைய செயல்கள் நல்லவைகளாக இருந்திருக்காதா? “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23).
தங்களுடைய பாவச் செயலினாலும், அதனால் வருகிற தொடர்விளைவுகளினாலும், அநேகருடைய மனச்சாட்சி கலக்கமடைகிறது என்பது உண்மைதான். ஆனால் தங்களுடைய பாவச் செயல்களைப் பற்றிச் சந்தோஷமாக பெருமைபாராட்டுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் அவமானத்தையும், பயத்தையும், குற்றவுணர்வையும் தள்ளிவிடுகிறார்கள். தங்களுடைய கேடான செயலைப் போற்றுகிறார்கள். இப்படியானவர்களைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?
தங்களுடைய கேடான செயலைக் குறித்து வெட்கப்படாதவர்களைப் பற்றி ரோமர் முதலாவது அதிகாரத்தில் மூன்று முறை “தேவன் அவர்களை அதற்கென்று ஒப்புக்கொடுத்திருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது (ரோமர் 1:24, 26, 28). இன்னொருவிதமாக சொல்லுவதென்றால், அவர்கள் தங்களுடைய கேடான செயல்களின் ஆழத்தில் மேலும் முழுகி, பிசாசைப் போல் அவர்கள் அவைகளினால் முழுவதுமாக ஆட்கொள்ளப்படும்படியாக தேவன் அவர்களை விட்டுவிட்டார். பிசாசினுடைய ஆளுகையின்கீழ் முழுவதுமாக இருக்கிற ஒருவன், பிசாசுக்கு விதிக்கப்பட்டிருக்கிற தண்டனையின்கீழும் இருக்கிறான். அவர்கள் தங்களுடைய பாவங்களைப் பற்றிப் பெருமைபாராட்டுவது தொடராது.
கண்பார்வையற்ற மனிதர்களைப் பார்த்து நிறங்களைக் கண்டறிந்து சொல்லுங்கள் என்று எப்போதாவது சொல்லுவோமா? உயிரோடு இருக்கிறவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்க செத்துபோன பிணத்திடம் கேட்போமா? உறைந்த பனித்துளியைக் கருமை நிறம் கொண்டது என்றும், தேனைக் கசப்பானது என்றும் சொல்லுகிற அளவுக்கு உணர்வற்றவர்களாக இருக்கிற மனிதர்களை நாம் நம்புவோமா? அப்படியானால், கேடான அவர்களுடைய அபிப்பிரயாங்களை நாம் கவனிக்க வேண்டிய அவசியமென்ன?
சில நேரங்களில், கடின இருதயம் கொண்ட பாவிகளும், தங்களுடைய செயலினால் வருகிற அவமானங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக,
மரணத்தை நெருங்குகிறபோது அல்லது குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்படுகிறபோது, அவர்களுடைய எண்ணங்கள் மாறலாம். நேபுகாத்நேச்சார் தன்னுடைய பலத்தின் உச்சத்தில் இருந்தபோது, தேவனுக்கே எதிர்த்து நின்றான். ஆனால், அவனைத் தாழ்த்துகிறவிதமான சூழல் ஏற்பட்டபோது, தன்னுடைய கேட்டை உணர்ந்து, தேவனை வழிபட்டான் (தானியேல் 4:33-37).
கர்த்தருடைய இறுதி நியாயத்தீர்ப்பின் நாள் துவங்குகிறபோது, எல்லாரும் அவருக்கு முன்பாக வந்து நின்று, அவருடைய அதிகாரத்தை ஏற்பார்கள். அப்போது, கேடானவர்கள் தங்களுடைய செயலை நியாயப்படுத்த முடியாது. வேறு எவரும் அவர்களுக்கு உதவவும் முடியாது. அவர்கள் மௌனமாக நிற்கத்தான் முடியும்.
அவர்கள் கடவுளிடமிருந்தும் எல்லா நன்மையிலிருந்தும் பிரிக்கப்பட்டு, நரகத்தில் அவர்களுடைய நித்திய நிலையை அனுபவிக்கத் துவங்குகிறபோது, தங்களுடைய பாவச் செயல்களைப் பற்றிப் பெருமைபாராட்டியவர்கள், பாவத்தின் கோர நிலையிலிருந்து பெருங்குரலெடுத்து அழுவார்கள்.
ஆகவே, கேடான மனிதர்களும் பாவத்தின் கோரத் தன்மையை வெளிப்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த உண்மையை விவரிக்கிற மற்றொரு சாட்சியை உங்களுக்குக் காட்டுகிறேன்.
- எல்லாப் படைப்புகளும் பாவத்தின் தீங்கை விவரிக்கிற சாட்சியங்களாக இருக்கின்றன.
- படைப்புகள் அனைத்தும், கடவுளுடைய கரத்திலிருந்து தோன்றியபோது இருந்ததைப்போல் இப்போது இருக்கவில்லை. படைப்பில் கடவுள் படைத்த ஒவ்வொன்றும் பரிபூரணமானதாக இருந்தன. கடவுள் தாம் படைத்தவைகளை “மிகவும் நல்லது” என்று சொன்னார். ஆனால் முதல் மனிதனுடைய கீழ்ப்படியாமையின் காரணமாக, உலகத்தில் பிரவேசித்த பாவத்தின் வல்லமையினால், சிருஷ்டிகள் தற்போது எந்தளவுக்கு மாறியிருக்கின்றன என்பதை நாம் காண்கிறோம். பூமி சாபத்திற்குள்ளாகியிருக்கிறது (ஆதியாகமம் 3:17-19); கடவுளுடைய பார்வையில் வானங்களும் சுத்தமானவைகள் அல்ல (யோபு 15:15); மனிதத் தன்மையில் சிறப்பானவை என்று சொல்லக்கூடியவைகளும் மாயையே (சங்கீதம் 39:5); படைப்புகள் அனைத்தும் புலம்பிக் கொண்டிருக்கின்றன (ரோமர் 8:21-22).
- கடவுளுக்கு நேராக நாம் செய்ய வேண்டிய கடமைகளை, கடவுளால் படைக்கப்பட்ட மிருகங்கள் நமக்குப் போதிக்கின்றன. அவை அனைத்தும் கடவுளுடைய கட்டுப்பாட்டுக்கு அமைந்து நடக்கின்றன. எதற்காக அவைகள் படைக்கப்பட்டனவோ அவற்றை அவைகள் தொடர்ந்து செய்துவருகின்றன. விழுந்துபோன தூதர்களும், பாவமுள்ள மனிதர்களுந்தான், அவர்கள் செய்யும்படியாக கடவுள் குறித்திருக்கிறவைகளைச் செய்யமறுக்கிறார்கள். இதன் மூலமாக, மிருகங்கள் நமக்கு கீழ்வரும் காரியங்களைப் போதிக்கின்றன.
(அ) மிருகங்கள் கடவுளையே சார்ந்திருப்பதுபோல், நாமும் அவரையே சார்ந்திருக்க வேண்டும் என்பதைப் போதிக்கின்றன. இயேசு சொன்னார்,
“என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகக் கவலைப்படாதிருங்கள். . . . ஆகாயத்து பறவைகளைக் கவனித்துப் பாருங்கள். உங்கள் பரமபிதா அவைகளையும் பிழைப்பூட்டுகிறார். . . . காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். . . . இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.” (மத்தேயு 6:25-34).
(ஆ) கடவுளை நம்பி, அவரை நோக்கி ஜெபிக்க வேண்டியதை அவை நமக்கு உணர்த்துகின்றன. உலகத்திலுள்ள இயற்கை வளத்தின் மூலமாக, கடவுள் அவற்றைப் பராமரித்து வருகிறார் (சங்கீதம் 101:27; சங்கீதம் 147:9; யோபு 38:41).
(இ) பலன் தரக்கூடிய விதத்திலும், கடவுள் ஏற்படுத்திய கடமைகளை நிறைவேற்றவும் வேண்டும் என்று அவை நமக்குப் போதிக்கின்றன. பூமி மழை நீரைக் குடித்து, பயிர்களை விளையச் செய்கிறது (ஏசாயா 55:10), கழுதை தன் முதலாளியை அறிந்திருக்கிறது (ஏசாயா 1:3), மந்தை மேய்ப்பனுக்கான தேவையை நிறைவேற்றுகிறது (1 கொரிந்தியர் 9:7). நம்முடைய வாழ்க்கை பலனற்றதாக இருந்தால், நம்முடைய தோட்டங்களும், வயல்நிலங்களுமே நம்மைக் கண்டிக்கும். கடவுளுடைய சித்தத்திற்கு நாம் கீழ்ப்படியாமல் போனால், நாம் வளர்க்கிற மிருகங்களே நம்மைக் கடிந்துரைக்கும்.
- நம்முடைய பாவங்களையும், நாம் செய்ய வேண்டிய கடமைகளையும் நம்மைச் சுற்றியுள்ள உலகப் படைப்புயிர்களே நமக்குப் போதிக்கின்றன. அநேக படைப்புயிர்களை நாம் தவறானவிதத்தில் பயன்படுத்துவதே நம்முடைய பாவத்தன்மைக்கான நிரூபணமாக இருக்கிறது. ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திலிருந்த படைப்புயிர்களை தகாதவிதத்தில் பயன்படுத்தவில்லை. ஆதாமும் ஏவாளும் அணிந்திருந்த சிறப்பான ஆடையைப் பாவம் நம்மிடத்திலிருந்து திருடிவிட்டது என்பதைத்தான் நாம் தற்போது அணிந்திருக்கிற ஆடை தெரிவிக்கிறது (ஆதியாகமம் 2:25). பாவம் எந்தளவுக்கு நம்மைச் சேதப்படுத்தியிருக்கிறது என்பதைப் பூமியிலுள்ள மண்ணும், நம்முடைய சரீரங்கள் மண்ணுக்குத் திரும்புவதன் மூலமும் நமக்கு நினைவூட்டுகின்றன (ஆதியாகமம் 3:19).
(அ) கடவுள் மறுப்புக் கோட்பாட்டின் முட்டாள்தனத்தை படைப்புகளே அம்பலப்படுத்துகின்றன. படைப்புகள் இருந்தால் அவற்றைப் படைத்தவர் ஒருவர் இருக்க வேண்டும். அந்தப் படைத்தவர் கடவுளைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்ப மறுப்பதற்கு எந்தவிதமான சாக்குபோக்குக் காரணங்களையும் சொல்ல முடியாதளவுக்கு படைப்புகள் இருந்து வருகின்றன. (யோபு 12:7-11; ரோமர் 1:19-20).
(ஆ) படைப்புகள் நம்முடைய நன்றிகெட்ட பாவத்தன்மைக்கான சாட்சியங்களாக இருக்கின்றன. நதிகள் தொடர்ந்து ஓடி, கடலில் சேருகின்றன. இதன்மூலம் அவை நம்முடைய பாவத்தைச் சுட்டிக்காட்டி நம்மைக் குற்றப்படுத்துகின்றன. அதாவது, நாம் கடவுளை நோக்கி நன்றிசெலுத்தாமலும் அவர் நமக்குத் தந்திருக்கிற இயற்கை கொடையை கேடானவிதத்தில் பயன்படுத்துகிற பாவத்திற்கான குற்றத்தை அவை நம்மீது சுமத்துகின்றன.
(இ) படைப்புகள், நாம் சும்மா இருக்கக்கூடாது என்பதை நமக்குப் போதிக்கின்றன. தங்களுடைய வாழ்நாள் முழுவதும் அவை தொடர்ந்து வேலை செய்து வருகின்றன. ஏதேன் தோட்டத்திலும், ஆதாமும் ஏவாளும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்யவேண்டியிருந்தது. சும்மா இருப்பதற்காக மனிதர்கள் படைக்கப்படவில்லை. அப்போஸ்தலனாகிய பவுல், சும்மாயிருந்தவர்களைப் பார்த்து, அவர்கள் வேலைசெய்து, தங்களுடைய சாப்பாட்டிற்குத் தேவையானதைச் சம்பாதிக்க வேண்டும் என்றார். உழைக்காமல் இருப்பவர்கள் சாப்பிடவும் கூடாது என்றார் (2 தெசலோனிக்கேயர் 3:10-12).
(ஈ) அநேக மிருகங்களுடைய வாழ்க்கை முறை, வருடம் முழுவதும் சுழன்று வரும் நேரத்தையும் காலத்தையும் ஒட்டியிருக்கின்றது. அவை கடவுள் வடிவமைத்த காலச்சூழல்களைக் கருத்தாய்க் கவனித்து அதனடிப்படையில் தங்களுடைய வாழ்க்கை முறையை அமைத்துகொள்ளுகின்றன. இதன் மூலம், கடவுள் நம்மைப் பற்றித் தெரிவித்திருக்கிற நோக்கத்தைக் குறித்து நாம் எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணங்களாக அவை இருக்கின்றன. (எரேமியா 8:7)
(உ) தங்களுடைய நலனுக்காக உலகப் படைப்புகள் தருகிற எல்லா வாய்ப்புகளையும் அவை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுகின்றன. அத்தோடு, தங்களுடைய நன்மைகாக வழங்கப்படுகிற எதையும் அவை மறுக்கிறதில்லை. எத்தனை மனிதர்கள் கடவுள், இயேசு கிறிஸ்துவின் மூலமாக வழங்குகிற இரட்சிப்பு அவருடைய கிருபையின் வெகுமதி என்பதை அறிந்தும், அது அவர்களுடைய நித்திய நன்மைக்காகத் தரப்படுகிறது என்பதை அறிந்தும், நிராகரிக்கிறார்கள்!
- சிலவேளைகளில் கடவுள், அவர் நம்முடைய நன்மைக்காக படைத்தவைகளையே நம்முடைய பாவங்களின் காரணமாக நம்மைத் தண்டிக்கவும் பயன்படுத்துகிறார். தண்ணீர் நம்முடைய அத்தியாவசிய தேவை, ஆனால் கடவுள் அதையே பெருவெள்ளமாக ஏற்படுத்தி, மனித குலத்தைத் தண்டிக்கவும் பயன்படுத்துகிறார். நம்முடைய நன்மைக்காக கொடுக்கப்பட்ட நெருப்பைக் கொண்டுதான் கடவுள் சோதோம் கொமோராவை அழித்தார். பாவத்தின் காரணமாக பூமி பிளந்து, கோராகையும் அவனுடைய குடும்பத்தாரையும் விழுங்கியது. நாம் சுவாசிக்கும் காற்றுகூட சில கொள்ளைநோய்களைத் தாங்கி வருகிறது. (ஆதியாகமம் 7:17, 19-24; எண்ணாகமம் 16:31-32)
(அ) பூமி தன் பலனைத் தரும்படி மழை உதவுகிறது. ஆனால் சிலவேளைகளில், மனிதர்களுடைய பாவங்களுக்கான தண்டனையாக, மழை பெய்யாமல், பஞ்சமும் ஏற்படுகிறது. இயற்கை நிகழ்வுகள் தடைபடுவதன் மூலம் கடவுள் பாவங்களுக்கான தண்டனையை வழங்குகிறார்.
(ஆ) சிலவேளைகளில் கடவுள், இயற்கையின் பொதுவான தன்மைக்கு மாறாக, அற்புதமானவிதத்தில் அதைப் பயன்படுத்தி, கேடான மனிதர்களுடைய அநீதியான செயல்களையும், தம்முடைய மக்களுக்கு எதிராகச் செய்யப்படும் பாவச் செயல்களையும் விளங்கப்பண்ணுகிறார். சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை இரண்டாகப் பிளந்து, உலர்ந்த தரை வழியாக, கடவுள் தன்னுடைய மக்களைக் கடக்கப் பண்ணினார். ஆனால் அதே தண்ணீரில் பார்வோனின் இராணுவத்தை அமிழ்ந்துபோகச் செய்தார். நேபுகாத்நோச்சாருடைய நெருப்பு சூளையில், தானியேலுடைய மூன்று நண்பர்கள் தூக்கிவீசப்பட்டபோது, நெருப்பு அவர்களை எரித்துப் பொசுக்கவில்லை. கடவுள், நெருப்பினுடைய இயற்கை தன்மையை அற்புதமானவிதத்தில் மாற்றி, தம்முடைய மனிதர்களுக்கு நேபுகாத்நோச்சார் விதித்த தீர்ப்பு அநீதியானது என்பதை விளங்கப்பண்ணினார்.
இதுவரை நான் விளக்கியவைகளின் அடிப்படையில், எல்லாப் படைப்புகளும் பாவத்தின் கேட்டையே அறிவிக்கின்றன என்று அறிகிறோம்.
- பாவம் தீங்கானது என்று கடவுளுடைய பரிசுத்த நியாயப்பிரமாணம் கண்டிக்கிறது.
- கடவுளுடைய நியாயப்பிரமாணம் பரிசுத்தமும் நன்மையுமாக இருப்பதனால், நியாயப்பிரமாணத்திலுள்ள எந்தவொரு கட்டளையையும் மீறுவது அசுத்தமும், கேடான செயலுமாகும். கடவுளுடைய நியாயப்பிரமாணம், அவர் நம்மைப் படைத்தவராக நம்மீது அதிகாரமுள்ளவர் என்பதையும், நாம் ஒழுங்கான முறையில் வாழுவதற்கான நல்ல வழிகாட்டுதலை நம்முடைய நன்மைக்காக தந்திருப்பதையும் காட்டுகிறது. கடவுளுடைய நியாயப்பிரமாணத்திற்கு எதிரான எந்தவொரு செயலும், அவருடைய அதிகாரத்தையும் அவர் நல்லவர் என்பதையும் தாக்குகின்ற நடவடிக்கையாகும். ஆகவே கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறுவது, தீங்கும், தவறானதும், பாவகரமான செயலுமாகும்.
(அ) கடவுளுடைய நியாயப்பிரமாணம் பாவகரமான எந்தவொரு செயலையும் தடைசெய்வதன் மூலமாக, நாம் பாவகரமான செயலில் ஈடுபடுவதற்கு முன்பாக அதைக் குறித்து நம்மை கண்டிக்கிறது. எது நமக்கு நன்மையானது என்றும், எது நம்முடைய கடமை என்றும், எது நமக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்றும் அது விவரித்துக் காட்டுகிறது. கடவுளுடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி செய்யாத எந்தவொரு மனிதனும் சபிக்கப்பட்டவன் என்பதைச் சுட்டிக்காட்டி, பாவச் செயல்களில் ஈடுபடுவதற்கு முன்பதாகவே அது நம்மை எச்சரிக்கிறது (கலாத்தியர் 3:10). பாவத்தினால் வரும் தீங்கு நமக்கு ஏற்படுவதற்கு முன்பாகவே அது குறித்து நாம் எச்சரிக்கப்படுகிறோம்.
(ஆ) கடவுளுடைய நியாயப்பிரமாணம், நாம் பாவம் செய்தபிறகு, நம்முடைய பாவச் செயலைக் குறித்து நம்மைக் கண்டிக்கிறது. பாவம் செய்த பாவிகள் என்ற அடிப்படையில், நாம் கடவுளுடைய பரிசுத்த நீதிக்கு முன்பாக கண்டனத்திற்குள்ளானவர்களாக நிற்கிறோம் என்பதை அது நமக்குத் தெரிவிக்கிறது. நீதியாக வாழுகிறவன் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தைப் பற்றிப் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறுகிறவர்கள், அவர்கள் மீறுகிற ஒவ்வொரு கட்டளையின்படியாகவும் குற்றவாளிகள். கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறுகிற பாவச் செயல்களில் ஈடுபடுகிறபோது, நாம் எத்தகைய தீங்கை நமக்கு நாமே வருவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதையே நியாயப்பிரமாணம் நமக்குத் தெரிவிக்கிறது.
- பாவத்தினுடைய வல்லமையின் தீயகுணாதிசயம் என்னவென்றால், அதைத் தடைசெய்கிறபோதுதான், அது இன்னும் தீவிரத்துடன் எதிர்த்து செயல்படக் கூடியதாக இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் இதை விளக்குகிறபோது, “பாவம், நியாயப்பிரமாணத்தினால் நமக்குக் கொடுக்கிற வாய்ப்புகளை நிறுத்தி, எல்லா வகையான இச்சைகளும் நம்மில் உண்டாகும்படி செய்கிறது” என்கிறார் (ரோமர் 7:8). கடவுளுடைய நியாயப்பிரமாணம், பாவத்திற்கு எதிரானதை அறிவிக்கிறபோது, அது நம்மில் பாவத்தைத் தூண்டுகிறவிதத்தில் தீவிரமாகச் செயல்படுகிறது. நாம் எதைச் செய்யக்கூடாது என்று தடைசெய்யப்பட்டிருக்கிறதோ, அதையே நாம் அதிகமாக விரும்பிச் செய்கிறோம்.
(அ) பிசாசு, கடவுளுடைய கட்டளையைப் பயன்படுத்தியே ஏவாளை வஞ்சித்தான். ஏதேன் தோட்டத்திலிருந்த மரத்தைப் பற்றி கடவுள் என்ன சென்னார் என்பதில் சந்தேகக் கேள்வியை ஏற்படுத்தினான் (ஆதியாகமம் 3:1). நியாயப்பிரமாணத்தைப் பிசாசு பயன்படுத்தியதன் மூலமே தான் வஞ்சிக்கப்பட்டதாக பவுல் சொல்லுகிறார் (ரோமர் 7:11). கடவுள் என்ன சொல்லியிருக்கிறார் என்று நாம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நமக்கு அறிவுரை கூறுகிறவிதமாகவும் பிசாசு நம்மை வஞ்சிப்பான்.
(ஆ) பிசாசு, நாம் பாவம் செய்தால், நாம் சாவதில்லையென்றும், மாறாக, நம்முடைய வாழ்க்கை மேம்படத்தான் செய்யும் என்று சொல்லி நம்மை நம்பவைக்கப் பார்ப்பான். அவன் ஏவாளிடத்தில், அவள் கீழ்ப்படியாமல் போவதனால் சாவதில்லை என்றும், மாறாகக் கடவுளைப் போலாவாள் என்றும், இனி எதற்கும் கீழ்ப்படியவேண்டிய கட்டுப்பாடுகள் அவளுக்கு இருக்காது என்றும் சொன்னான். ஆனால் பிசாசின் உண்மையான நோக்கம், மனிதர்களைக் கெடுத்து, அவர்களைப் பற்றி கடவுள் கொண்டிருக்கிற திட்டத்தில் கடவுளை வீழ்த்தவேண்டும் என்பதுதான். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்கு முன்புவரை இறவாத் தன்மையுள்ளவர்களாக இருந்தார்கள், ஆனால் பாவம் செய்தபிறகோ அவர்கள் சாகவேண்டியவர்களானார்கள். பாவத்தின் சம்பளம் மரணம்.
- கடவுளுடைய நியாயப்பிரமாணம் பாவத்தைக் கண்டிக்கிறதாக மட்டுமில்லாமல், பாவிகளுக்கு எதிரான கண்டனத்தையும் அறிவிக்கிறது. நியாயப்பிரமாணம் இதைப் பல்வேறுவிதங்களில் செய்கிறது.
(அ) கடவுளுடைய நியாயப்பிரமாணம், சிறிதான ஒரு பாவச்செயலையும்கூட மன்னிப்பதில்லை. நியாயப்பிரமாணத்திலுள்ள ஒரு கட்டளையை மீறி நடந்தால், அந்த ஒரு கீழ்ப்படியாமையினால், நியாயப்பிரமாணத்தின் எல்லாக் கட்டளைகளையும் மீறியவர்களான குற்றத்திற்குள்ளாவோம். குண்டுமணிகள் கோர்க்கப்பட்டுள்ள ஒரு சங்கிலியிலுள்ள கயிற்றின் ஒரு பகுதியை அறுத்துவிட்டால், எப்படி எல்லாக் குண்டுமணிகளும் உதிர்ந்துவிடுமோ அப்படியே இதுவுமாகும். (யாக்கோபு 2:10).
(ஆ) நியாயப்பிரமாணம் எந்தவொரு மனிதனையும் “குற்றமற்றவன்” என்று அறிவிக்காது. ஏனென்றால் எல்லாரும் பாவம் செய்திருக்கிறார்கள். நம்மில் பாவம் இருப்பதனால், நியாயப்பிரமாணம், நம்மை வலிமையாகக் கண்டனத்திற்குள்ளாக்க முடியுமே தவிர, நம்மை நீதிமானாக்கும் திறனற்றது. நியாயப்பிரமாணம் நமக்கு உயிர்கொடுக்க முடியாது, ஏனென்றால், உலகம் முழுவதும் பாவத்திற்குள் சிறைப்பட்டிருக்கிறது (கலாத்தியர் 3:21-22).
(இ) நியாயப்பிரமாணத்தின் நோக்கம், பாவியினுடைய மனச்சாட்சியில், பாவம் உண்மையில் எத்தகையது என்ற அறிவை ஏற்படுத்துவதுதான். பத்துக்கட்டளைகளிலுள்ள பத்தாவது கட்டளை தன்னைக் குற்றப்படுத்தாதவரை, தான் இச்சையுள்ள மனிதன் என்பதை உண்மையில் தான் அறிந்திருக்கவில்லை என்று பவுல் சொல்லுகிறார் (ரோமர் 7:7). நியாயப்பிரமாணம், பாவம் எவ்வளவு கேவலமானது, தீமையானது என்று எடுத்துக்காட்டி, அதற்கு எதிரான கண்டனத்தைப் பலமாக அறிவிக்கிறது. இதன் காரணமாகவே, சிலவேளைகளில் நியாயப்பிரமாணம் “ஆசானாகவும்” “வழிகாட்டியாகவும்” அழைக்கப்படுகிறது. ஏனென்றால், கிறிஸ்து நம்மை விடுவிக்கிறவரை, அது நம்மை நியாயத்தீர்ப்பின் கீழ் இருக்கச் செய்கிறது. (கலாத்தியர் 4:1-5).
(ஈ) சிலபேர், தங்களுடைய நல்ல செயல்களைப் பற்றி அதிகமாகப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு முன்பாக வருகிறபோது, தங்களுக்குச் சாதகமாகப் பேசுவதற்கு அவர்களிடத்தில் எதுவும் இருக்காது. ஏனென்றால், எல்லாரும் பாவம் செய்திருக்கிறார்கள். இவைதான் பாவத்தினுடைய தொடர் விளைவுகள். கடவுளுடைய பிரசன்னத்தில் வாயை மூடிக்கொண்டு அமைதலாக நிற்பது மட்டுமே ஒரு பாவியினுடைய செயலாக இருக்க முடியும். (ரோமர் 3:19)
(உ) கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறினால், அதனிடம் இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது. நியாயப்பிரமாணத்தை மீறுகிறவர்களை, அது கண்டனத்திற்குள்ளாக்குவதை மட்டுமே செய்யும். அது ஒரு பாவிக்கு நியாயத்தீர்ப்பை மட்டுமே வழங்கும்; வேறு எந்தவொரு நம்பிக்கையையும் அது தராது. கடவுளுடைய நியாயப்பிரமாணம் பாவத்திற்கு எதிரானது என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் அறிகிறோம்.
உங்களில் சிலர் நினைக்கலாம், இதெல்லாம் இருந்தாலும், கடவுளுடைய நியாயப்பிரமாணத்தின் உக்கிரத்தை, கடவுளுடைய கிருபையின் சுவிசேஷ செய்தி மேற்கொள்ளுகிறது என்று. ஆகவே, பாவத்தின் தீங்கையும், நியாயப்பிரமாணத்தின் உக்கிரத்தையும், சுவிசேஷ செய்தியும்கூட உறுதிப்படுத்துகிறது என்பதை நான் உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியமாகிறது.
- சுவிசேஷ செய்தியும்கூட பாவத்திற்கு எதிரான சாட்சியங்களைக் கொண்டிருக்கிறது.
சுவிசேஷ செய்தி பாவகரமான நடவடிக்கைளுக்குச் சாதகமான எதையும் தன்னில் கொண்டிருக்கவில்லை. மாறாக, எந்தவொரு சிறு பாவத்தையும் அது கண்டும் காணாமல் இருந்துவிடுவதில்லை. பாவத்திலிருந்து மனிதர்களை விடுவிக்கவேண்டும் என்ற முக்கியமான காரணத்திற்காகவே இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். பாவிகள் மனந்திரும்பி, தம்மை விசுவாசிக்க வேண்டும் என்பதே கிறிஸ்துவினுடைய போதனையாக இருந்தது. மனந்திரும்புதலும் விசுவாசமும் பாவத்திற்கு எதிரான சாட்சியங்களைத் தருகின்றன. பாவிகள் மனந்திரும்ப வேண்டியதும், பாவகரமான வாழ்க்கையிலிருந்து மாற வேண்டியதுமாக இருந்தால், நிச்சயமாக பாவம் பெரும் தீங்கானதாகத்தான் இருக்க வேண்டும். விசுவாசமும் பாவத்தைக் கண்டனத்திற்குள்ளாக்குகிறது. ஏனென்றால், விசுவாசத்தின் மூலமாக நாம் கடவுளை நம்பி அவருக்குக் கீழ்ப்படிகிறோம். இது பாவத்திற்கு எதிரான நடவடிக்கை.
பாவத்தினுடைய தீங்கைப் பற்றி சுவிசேஷத்தின் சகல பகுதிகளும் எடுத்துரைக்கின்றன. சுவிசேஷத்தின் இந்தச் செய்தியை விசுவாசிக்கிறவர்கள், “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ள” வேண்டியவர்களாக இருக்கிறார்கள் (எபேசியர் 4:22-24). கிறிஸ்தவன் ஒருபோதும் பாவகரமான வாழ்க்கை முறையை நியாயப்படுத்த முடியாது என்பதையே பழைய மனிதனிலிருந்து புதிய மனிதனாக முற்றாக மாறுகிற மாற்றம் தெரிவிக்கிறது. இருப்பினும், சிலர், சுவிசேஷச் செய்தியைப் பாவகாரமான செயலை நியாயப்படுத்துவதற்கும் பயன்படுத்த முயற்சிப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
(அ) பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று (ரோமர் 5:20). இதை வைத்து சிலர், நீங்கள் பாவம் செய்தால், கிருபையை அதிகமாகப் பெருகவைக்கிறீர்கள் என்று வாதிடுகிறார்கள். இந்தவிதமான எண்ணத்திற்குப் பதிலளிக்கும்படியாகவே பவுல், “பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?” (ரோமர் 6:2) என்று கேட்கிறார். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு, தங்களுடைய பாவகரமான செயலுக்கு நியாயம் கற்பிக்க முயற்சிக்கிறவர்களைப் பார்த்து, யூதா சொல்லுகிறார், தேவனுடைய கிருபையைக் கேடான செயல்களைச் செய்வதற்கான அனுமதியாக மாற்றுகிறவர்கள், உண்மையில் கிறிஸ்தவர்களே அல்ல, அவர்கள் கண்டனத்திற்காக நியமிக்கப்பட்டவர்கள் (யூதா 4).
(ஆ) கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்பதுதான் மகிமையான சுவிசேஷ சத்தியம். கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்திருப்பதனால், அது நம்மைப் பாவம் செய்ய அனுமதிக்கிறது என்று சிலர் வாதிட்டிருக்கிறார்கள். சுவிசேஷ செய்தியைத் தவறாக விளங்கிக்கொண்டதனால்தான் இப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள். கிறிஸ்து “நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி” மரித்தார். (தீத்து 2:14).
(இ) கடவுள் விசுவாசிகளுக்கு பூமியில் தரப்படும் எல்லாவிதமான கௌரவப் பெயர்களுக்கும் மேலான, உயர்வான கௌரவ பெயர்களைத் தந்து மதிப்பளித்திருக்கிறார். அவர்களைத் தேவனுடைய பிள்ளைகள் (1 யோவான் 3:1), தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம், இராஜரீக ஆசாரியர்கள், பரிசுத்த ஜாதி என்று அழைக்கிறார் (1 பேதுரு 2:9). கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பார்வையில் இந்தளவுக்கு மதிப்புமிக்கவர்களாக இருந்தால், கீழ்ப்படியாத பாவிகளாக அவருக்கு முன்பாக வாழ்வதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
(ஈ) எல்லாரும் அவரவர் வாழ்ந்த விதத்திற்கான கணக்கொப்புவிக்க வேண்டிய நியாயத்தீர்ப்பு நாள் இனித்தான் வரவிருக்கிறது. ஆகவே பவுல் சொல்லுவது போல், மனிதர்கள் பாவத்தைத் தவிர்த்து, நீதியும் பரிசுத்தமுமாக வாழ வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வருகிறோம் (2 கொரிந்தியர் 5:11). இதன் மூலம், சுவிசேஷச் செய்தியின் போதனை, பாவகரமான நடவடிக்கைகள் தேவபக்தியற்றதும் தவறானதுமாக இருக்கிறது என்பதற்கான சாட்சியங்களாக இருக்கிறது என்பது தெரிகிறது.
(உ) சுவிசேஷச் செய்தியிலுள்ள அனைத்துப் போதனைகளும், கட்டளைகளும் பாவத்தின் கேட்டை உறுதிப்படுத்துகின்றன. நீதியோடும் பரிசுத்தத்தோடும் நாம் கடவுளுக்கு ஊழியம் செய்யவேண்டும் என்று சுவிசேஷம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. பாவகரமான நடவடிக்கைகள் கடவுளுக்குக் கோபமூட்டுவதும், நமக்குத் தீங்கை ஏற்படுத்துவதுமான செயல்கள் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. ஆகவே பாவகரமான செயல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.
(ஊ) சுவிசேஷ செய்தியில் விசுவாசிகளுக்கு அநேக பொன்னான வாக்குறுதிகள் தரப்பட்டிருக்கின்றன. இந்த வாக்குறுதிகள், பாவகரமான வழிகளிலிருந்து நாம் விலகியிருக்கவும், பாவத்தினால் வருகிற கண்டனங்களிலிருந்து நாம் தப்பிக்கவும் செய்கின்றன. கடவுளுடைய நல்ல வாக்குறுதிகள், பாவத்தினால் வருகிற தீங்கிற்கு எதிராக இருக்கின்றன.
(எ) சுவிசேஷ செய்தி சில எச்சரிப்புகளையும் தன்னில் கொண்டுள்ளது. கடவுள், நாம் பாவம் செய்வதற்கு முன்பாகவே, நாம் பாவம் செய்துவிடக்கூடாது என்பதற்காக, பாவத்தினால் வருகிற தண்டனையைக் குறித்து நமக்கு எடுத்துரைத்து நம்மை எச்சரிக்கிறார். நாம் பாவம் செய்துவிட்ட பிறகும், நாம் மனந்திரும்ப வேண்டும் என்பதற்காக, பாவம் செய்ததினால் வருகிற தண்டனையைக்குறித்து நம்மை எச்சரிக்கிறார். அவருடைய எச்சரிப்புகள், நாம் பாவத்திலிருந்து விலகியிருக்கவும், மனந்திரும்பவும் வேண்டும் என்பதற்காகத் தரப்பட்டவை என்பது தெளிவாகத் தெரிகிறது. (வெளிப்படுத்தின விசேஷம் 2:5, 16, 22; 3:3, 19)
(ஏ) கடவுளுடைய நல்ல செயல்களையும், நம்முடைய இருதயத்தின் கேடான தன்மையையும் நாம் அனுபவபூர்வமாக அறிந்துணருவது, பாவம் எந்தளவுக்குத் தீமையானது என்பதையே நமக்குக் காட்டுகிறது. கடவுள் நமக்கு நன்மை செய்திருக்க, அதற்கான பதில் நடவடிக்கையாக அவருக்கு வெறுப்பையூட்டும் செயலைச் செய்வது சரியா? நம்முடைய இருதயம் நம்மைத் தவறாக வழிநடத்துகிறது என்பதைக் கற்றறிந்த பிறகும், நம்முடைய இருதயத்தைத் தொடர்ந்தும் நம்புவது சரியா? ஆவிக்குரிய வாழ்க்கையை வாழுகிற அனுபவங்கள், ஒரு கிறிஸ்தவனுக்கு, பாவம் செய்வது எவ்வளவு முட்டாள்தனமும் ஆபத்தானதுமாகும் என்பதையே உறுதிப்படுத்துகின்றன.
- பாவமே தன்னுடைய தீங்கையும் கேட்டையும் அறிவிக்கிறது
இதுவே பாவத்தினுடைய தீங்கிற்கும் கேட்டிற்குமான சாட்சியங்களில் இறுதியாக நான் சுட்டிக்காட்டுவது. இதற்கான சில நிரூபண ஆதாரங்களைத் தருகிறேன்.
- பாவத்தை விவரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள பெயர்கள் பாவத்தின் மெய்யான தன்மையை நமக்குக் காட்டுகின்றன. உதாரணமாக, பாவத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒரு பெயர் “சாத்தானின் கிரியை.” இதன் காரணமாக, பாவம் செய்வதன் மூலமாக, பாவிகளிலெல்லாம் பெரும் பாவியுடன் நாம் இணைந்துவிடுகிறோம். ஏனென்றால், சாத்தானே முதலில் கடவுளை எதிர்த்தவன், உலகம் முடியும்வரை அவன் அந்த எதிர்ப்பைத் தொடருகிறான். மனிதர்கள் பல வழிகளில் சாத்தானின் கிரியைகளைச் செய்து வருகிறார்கள்.
(அ) சோதனைக்கு நாம் இடம் தருகிறபோது, அந்த விஷயத்தில் நாம் சாத்தானின் வேலையாட்களாகிவிடுகிறோம். வேத சத்தியங்களைப் பற்றிய விஷயத்தில் வஞ்சிக்கப்படுவதற்கு இடம் தருவதும், கடவுளுடைய கட்டளைகளுக்கு எதிராக மற்றவர்கள் நடப்பதற்கானவிதத்தில் சோதனைக்குள்ளாக்க முயற்சிப்பதும், கொலை செய்வதும், பொய்யைப் பரப்புவதும், மற்றவர்களைக் கெடுப்பதும், ஏமாற்றுவதும், மற்றவர்களைப் பொய்யாய்க் குற்றஞ்சாட்டுவதும், சுவிசேஷ செய்தியை மற்றவர்கள் கேட்பதற்கும் விசுவாசிப்பதற்கும் இடையூறாக இருப்பதும், கிறிஸ்தவ விசுவாசிகளைத் துன்புறுத்துவதும் ஆகிய இவைகளே சாத்தானின் கிரியைகள். இவற்றில் ஏதொன்றையும் செய்கிறவன் சாத்தானின் அடிமையாயிருக்கிறான். சாத்தானுக்கு வரவிருக்கிற கண்டனத்தை அவனும் பெறுவான்.
(ஆ) கடவுளின் நோக்கத்தைத் தோற்கடித்துவிட முடியாது என்பதைச் சாத்தான் அறிந்திருக்கிறான். ஆகவே அவன் மனிதர்களுக்குத் தீங்கிழைப்பதன் மூலம் கடவுளுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையைச் செய்துவருகிறான். கடவுள் மீதுள்ள தன்னுடைய விரோதத்தை அவருடைய படைப்புகளுக்குத் தீமைசெய்வதன் மூலம் தீர்த்துக்கொள்ளப் போராடுகிறான். இப்படிச் செய்வதன் மூலமாக, பாவம் தீங்கானது என்பதை அவனே காட்டுகிறான். ஒருவிதத்தில், சாத்தானுடைய பாவத்தைக் காட்டிலும் மனிதர்களுடைய பாவம் மோசமானது என்று சொல்லலாம். ஏனென்றால், சாத்தானுக்குப் பாவ விமோசனத்திற்கான எந்த வாய்ப்பும் இல்லை. மனிதர்களைப்போல் இரக்கத்திற்கு எதிராகவோ கிருபைக்கு எதிராகவோ சாத்தான் பாவம் செய்வதில்லை.
- பாவத்திற்கான மற்றொரு பெயர் “அருவருப்பு”. பாவகரமான வாழ்க்கை ஒரு மனிதனுடைய சரீரத்தையும் ஆத்துமாவையும் சீரழிக்கிறது. அருவருக்கப்பட்ட, அழுகிய, கெட்டுப்போன, வியாதி, கொள்ளைநோய், சேறு, சகதி என்று நம்முடைய வாழ்க்கையில் பெரும் முயற்சி செய்து நாம் தவிர்க்க நினைக்கிற இப்படியான பல காரியங்களை வேதம் பாவத்தைக் குறிப்பிடப் பயன்படுத்துகிறது. வியாதி நம்முடைய உடலைத் தாக்குகிறபோது, அது பெரியளவில் நம்மைக் கஷ்டப்படுத்துகிறது. ஆனால் நம்முடைய மனதையும் எண்ணத்தையும் பாவத்தினால் பாதிக்கப்பட விட்டுவிட்டு, சாத்தானுக்குச் சந்தோஷமாக நாம் ஊழியம் செய்வது, அதையும்விட மிகவும் பயங்கரமானது. ஏனென்றால், உடலில் ஏற்படும் வியாதி நமக்கு சரீர மரணத்தையே கொண்டு வரும். ஆனால் ஆவிக்குரிய வியாதி நம்மை நித்திய அழிவுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்.
(அ) இந்த உலகத்தில் பாவம் எங்கும் இருக்கிறது. மனிதர்களுடைய தன்மையில் பாவம் எல்லாப் பகுதியையும் பாதித்திருக்கிறது. (ரோமர் 5:12; 2 கொரிந்தியர் 7:11).
(ஆ) நம்மை எச்சரிக்கிறவிதத்தில், பாவத்தின் தொடர் வளர்ச்சி இருக்கிறது. ஏதேன் தோட்டத்தில், கீழ்ப்படியாமை என்கிற முதல் பாவத்தில் தொடங்கியது, இப்போது, உலகம் முழுவதையும் தன்வயப்படுத்தியுள்ளது. அத்தோடு, மனிதத் தன்மையின் அனைத்துப் பகுதிகளையும் பாதித்திருக்கிறது. மனித வாழ்வியல் முறையின் வளர்ச்சிக்கேற்ப அதுவும் வளர்கிறது. இச்சையான பார்வை, ஒழுக்ககேடான விபச்சாரத்திற்கு நேராகக் கொண்டு போகிறது. அதன் தொடர்ச்சியாக கொலையையும் செய்யவைக்கிறது. பாவகரமான நடவடிக்கைகள் மிகத்தீவிரமாக தொற்றக்கூடியவை. ஒரு மனிதனுடைய பாவகரமான செயல் எளிதில் அநேகரால் பின்பற்றப்படுகிறது. (யாக்கோபு 3:5-6).
(இ) பாவத்தினுடைய பாதிப்பு எளிதில் சரிசெய்யப்பட முடியாதது (எரேமியா 17:9). கடவுள் பாவச் செயல்களைப் பலவிதமான வழிகளில் தண்டித்திருக்கிறார். ஆனால் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து, பரிபூரணமான வாழ்க்கையை வாழ்ந்து, தன் மக்களுடைய பாவங்களுக்கான பரிகாரப் பலியாக சிலுவையில் மரணமடைகிறவரையில், எந்தவொரு வழிமுறையும் முழுமையான தீர்வாக இருக்கவில்லை.
(ஈ) நாம் மரணமடைந்த பிறகும், பாவத்தின் பாதிப்பு தொடர்ந்திருக்கிறது. மரணத்திற்குப் பிறகு, நம்முடைய சரீரம் தொடர்ந்து அழுகிக் கெட்டுப்போய், முதன் முதலில் எதிலிருந்து நாம் உண்டாக்கப்பட்டோமோ அதற்கே திரும்புகிறோம். ஆனால் கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுவின் சரீரம் கெட்டுப்போகவில்லை. ஏனென்றால், இயேசுவில் பாவமே இல்லை.
இதுவரை, பாவத்திற்கு வழங்கப்பட்டிருக்கிற பெயர்கள், பாவத்தினுடைய தீங்கை எந்தவிதத்தில் நமக்குக் காட்டுகின்றன என்பவற்றில் சிலதை நாம் கவனித்தோம்.
- பாவம் நம்மை வஞ்சிப்பதற்காகத் தன்னுடைய உண்மையான தன்மையை மறைக்கிற வழிமுறைகள், பாவத்தினுடைய கேடான தன்மைக்கான மற்றொரு ஆதாரம். வெளிப்படையாக இருப்பதற்காக சத்தியம் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை. ஆனால் பாவமோ, தன்னுடைய உண்மையான தன்மையை மறைப்பதற்கு ஏமாற்று வேலைகளையும், பொய்களையும் பயன்படுத்துகிறது. பாவம் நமக்குத் தீங்கை ஏற்படுத்தாமல் இருந்தால், பிறகு ஏன் அது நம்மை வஞ்சிக்கிறது? அதனுடைய வஞ்சகமான தன்மைகளே அதனுடைய கேட்டை நமக்கு அறிவிக்கின்றன. உதாரணமாக,
(அ) சிலவேளைகளில் சாத்தான், சில விஷயங்கள் உண்மையிலேயே பாவகரமானதல்ல என்று சொல்லி நம்மை வஞ்சிக்கப் பார்க்கிறான். ஏவாள் விலக்கப்பட்ட கனியைப் பார்த்து, அதைச் சாப்பிட விரும்பினாள். அதைச் சாப்பிடுவதன் மூலம் ஆதாமும் அவளும் கடவுளைப்போல் இருப்பார்கள் என்று சாத்தான் அவளுக்கு உறுதியாய்ச் சொன்னான். அதன்காரணமாகவே கடவுள் அதை அவர்களிடமிருந்து விலக்கி வைத்திருக்கிறார் என்று கேடான ஓர் ஆலோசனையை வழங்கினான். (ஆதியாகமம் 3:5).
(ஆ) சிலர் திருடுவதை நியாயப்படுத்துவார்கள். ஏனென்றால், அவர்கள் திருடும் பொருளை வாங்கக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை என்பார்கள். அவர்களுடைய நிலையை எண்ணி ஒருவேளை நாம் அவர்களை மன்னிக்கலாம். ஆனால் அவர்கள் திருடியது பாவமே.
(இ) சிலர், ஒரே ஒருமுறை பாவம் செய்வது பரவாயில்லை என்று சொல்லுவார்கள். ஆனால் அந்த ஒரு பாவம், மற்றொரு பாவத்திற்கு வழிவகுக்கும். அதன்பிறகு, மற்றொன்று, மற்றொன்று என்று அது தொடர்ந்துகொண்டே இருக்கும்.
(ஈ) அநேகர், தாங்கள் செய்தது ஒரு சிறு பாவந்தான் என்று சொல்லி, அதைப் பெரிதாகக் கண்டுகொள்ள வேண்டியதில்லை என்பார்கள். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதாக இருந்தால், அதில் சிறியது என்று எதையாகிலும் சொல்ல முடியுமா?
(உ) பொதுவிடத்தில் செய்யப்படும் பாவத்தைக் காட்டிலும், மறைவிடத்தில் செய்யப்படும் பாவம் அந்தளவுக்கு மோசமானதல்ல என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், கடவுள் எல்லாவற்றையும் காண்பவராயிற்றே, அவருக்கு முன் எந்தவொரு பாவமும் இரகசியமாக இருக்க முடியுமா? (சங்கீதம் 139:11-12).
(ஊ) சிலவேளையில், கேடான செயலைச் செய்தால்தான் நமக்கு சில நன்மைகள் வரும் என்பதாக நினைக்கலாம். ஆனால் பாவத்தால் வருகிற நன்மை, பேரிழப்பே. ஏனென்றால், பாவகரமான வழியில் உலகத்தையே சொந்தமாக்கிக்கொண்டாலும், அதன் மூலம் தன் ஆத்துமாவை இழந்துவிடுகிறான் என்று இயேசு சொல்லியிருக்கிறார்.
(எ) “எத்தனையோ பேர் செய்கிறார்கள், நான் செய்தால் என்ன?” என்று நாம் நினைக்கலாம். அப்படிச் சொல்லுகிறவர்களே, நீங்கள் எனக்குச் சொல்லுங்கள், நரகத்தில் அந்த நபர் உங்களுக்குக் கூட்டாளியாக இருப்பது எந்தவிதமான ஆறுதலை உங்களுக்குத் தரப்போகிறது?
(ஏ) பாவத்தைச் செய்து மனந்திரும்புகிறபோது, கடவுள் உங்களை மன்னிக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் பாவத்திலிருந்து மனந்திரும்புகிறவனுக்குத்தான், அவர் அத்தகைய மன்னிப்பை வாக்களித்திருக்கிறாரே தவிர, பாவம் செய்கிறவனுக்கு அல்ல.
(ஐ) என்னதான் பாவம் செய்தாலும், எனக்கு எதுவும் நடந்துவிடவில்லை என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? பாவத்திற்கான தண்டனையை உடனே பெறாமல் இருப்பதே மிகப் பெரிய தண்டனையாக இருந்துவிடலாம். ஏனென்றால், பாவத்திற்கான தண்டனையை உடனே பெற்றிருந்தால், ஒருவேளை அந்த பாவத்திலிருந்து மனந்திரும்புவதற்கான வாய்ப்பாக அது அமைந்திருக்கும். (ஏசாயா 1:15).
(ஒ) பிறப்பிலேயே பாவியாக இருக்கிற நாம், பாவம் செய்யாதிருப்பது எப்படி? நம்மிலுள்ள பாவத் தன்மையின் காரணமாகவே, நாம் கேடான காரியங்களைச் செய்கிறோம். பாவத்தைத் தவிர்த்து வேறு என்ன செய்துவிட முடியும்?
இந்தவிதமான வழிகளில்தான் பாவம், தனக்குத்தானே சாதகமாகப் பேசி, நம்மை வஞ்சிக்கும். இந்தவிதமான வழிகளே, பாவம் எந்தளவுக்குக் கேடானது என்பதற்காக நிரூபணங்களாக இருக்கின்றன. பாவம் காணப்படுகின்ற, அதனுடைய தன்மைக்கு மேலாக அதை மோசமாக விளக்கிவிட முடியாது. அல்லது, அது எந்தளவுக்கு மோசமானதோ அந்தளவுக்குங்கூட அதைப் பற்றி விளக்கிவிட முடியாது.. ஏனென்றால், பாவம் எல்லாத் தீமைகளின் உச்சமாக இருக்கிறது. அது ஏதோவொருவிதத்தில் அவலட்சணமானதல்ல; அது தன்னில்தானே முழுவதும் அவலட்சணமானது. அது அருவருப்பானது மட்டுமல்ல; அருவருப்பின் சாராம்சமே அதுதான். அது ஒழுக்கக் கேடானது மட்டுமல்ல; எல்லா ஒழுக்கக் கேட்டின் ஊற்றாக இருக்கிறது.