1. வாசகர்களே!
2. உங்களுக்கு இருக்கிறதா சுவிசேஷ வாஞ்சை?
3. நடிப்பா? நம்பக்கூடிய மனந்திரும்புதலா?
4. கிருபைக்கு விலை பேசிய கேயாசி
வாசகர்களே!
வணக்கம் வாசகர்களே!
இந்த உலகத்தில் போர்களும், போர்களைப் பற்றிய செய்திகளும் வந்துகொண்டேயிருக்கும் என்று இயேசு சொல்லியிருக்கிறார். அதனால் போர்கள் நிகழ்ந்தாலோ, அதுபற்றிய செய்திகள் வந்தாலோ கிறிஸ்தவர்கள் உலகத்தாரைப்போலக் கவலைப்படக்கூடாது. உலகம் முடிகிறவரை போர்கள் நிகழத்தான் செய்யும்; நம்மை அச்சுருத்தவும் செய்யும். போர்களுக்குக் காரணம் மானுடத்தை ஆட்டிவைக்கும் பாவமே. அதுவே எல்லா அழிவுகளுக்கும், ஆபத்துக்களுக்கும் காரணம். அதற்கு இறுதி முடிவு இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போதே நிகழும். அதுவரை கிறிஸ்தவர்கள் போர்களையும், அதுபற்றி வரும் செய்திகளையும் எவ்வாறு அணுகுவது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
(1) முதலாவது, உலகத்தாரோடு சேர்ந்து அவர்களைப்போல குருகிய மனப்பான்மையோடு சுயநல அரசியல், பொருளாதார நோக்கில் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரக்கூடாது. அவர்களுக்கு பரலோக சிந்தனையில்லை; நாம் மேலானவைகளின் சிந்தனையைக் கொண்டிருந்து மேலானவைகளை நாடவேண்டும் (கொலோசெயர் 3:1-2).
(2) கிறிஸ்தவர்கள் மத்தியில் காலவரையரைக் கோட்பாட்டில் மூழ்கிப்போய் உலக நிகழ்வுகளுக்கெல்லாம் இஸ்ரவேலை அடிப்படையாகக் கொண்ட ஆத்மீக விளக்கமளிக்கும் தவறான போக்கிற்கும் இடமளித்துவிடாதீர்கள். தேவ இராஜ்யம் இப்போது கிறிஸ்தவர்களின் இருதயத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது; அது உலகத்தில் இஸ்ரவேலைத் தலைநகரமாகக் கொண்டு இரண்டாம் வருகைக்குப் பின் நிகழும் என்ற கனவுக்கு வேத ஆதாரமில்லை.
(3) உலகத்தில் போர்களால் எல்லா மனிதர்களுக்கும், கிறிஸ்தவர்கள் உட்பட துன்பங்கள் நேரிடும். விலைவாசிகள் அதிகரிக்கும், வியாபாரங்கள் பாதிக்கப்படும், வேலை இல்லாமல் போகலாம்; பலர் உயரிழக்கக்கூடும். கோவிட் காலத்தில் இத்தகைய துன்பங்களை நாம் அனுபவித்திராமல் இல்லை. அதுபோல, நடந்துகொண்டிருக்கும் போரால் ஏற்படும் துன்பங்களுக்கு மத்தியில் கிறிஸ்தவ வாழ்க்கையை கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து வாழ்ந்துவர வேண்டும். இயேசு மறுபடியும் வரும்வரை உலகில் துன்பங்களுக்கு முடிவு வராது.
(4) போர்களுக்கு மத்தியில் சுவிசேஷத்திலும், திருச்சபைப் பணிகளிலும், சுயபரிசோதனையிலும், விசுவாச வாழ்க்கையிலும் கவனம் செலுத்துங்கள்; பரலோக வாழ்க்கைக்குத் தயாராகுங்கள். அது மட்டுமே நிரந்தரம். - ஆசிரியர்
உங்களுக்கு இருக்கிறதா சுவிசேஷ வாஞ்சை?
கொலோசெயர் 4:3-6
பவுல் அப்போஸ்தலன் இந்தக் கொலோசெயர் நிருபத்தில் அதன் முக்கிய போதனையான ‘கிறிஸ்துவுக்குள்’ என்பதை விபரமாக சபையாருக்கு முதலில் விளக்கிவிட்டுக் கடைசியாகப் பின்வருமாறு எழுதுகிறார்.
கொலோசெயர் 4:3-6
“கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேச வேண்டிய பிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு, திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.”
இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலிருந்தபோது சீடர்களுக்கு எவ்விதம் ஜெபிக்க வேண்டுமென்று சொல்லிக்கொடுத்திருக்கிறார். அந்த ஜெபத்தில் தேவனுடைய ராஜ்யம் வரும்படியாக ஜெபிக்கச் சொல்லியிருக்கிறார். பரமண்டலத்தில் இருப்பதுபோல அவருடைய சித்தம் இந்த உலகத்திலும் இருக்கும்படி ஜெபிக்கும்படியான கடமை நமக்கிருக்கிறது. கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ சபைகளும் அந்த ஜெபத்தை சிந்தித்து, அதில் என்னென்ன விஷயங்கள் அடங்கியிருக்கிறது என்று பார்த்து அந்த ராஜ்யத்திற்காக ஜெபிப்பதும், அந்த ராஜ்யத்திற்குரிய பணிகளில் ஈடுபடுவதும் கடமையாக இருக்கிறது. என்னுடைய ராஜ்யம் வருகிறதென்று ஆண்டவர் சொல்லுகிறபோது எதைக் குறித்துச் சொல்லுகிறார் என்பதை நாம் சிந்தித்து ஆராய வேண்டும்.
இந்த உலகத்திலிருக்கிற மக்களுடைய இருதயத்தில் அவருடைய ஆட்சி நடப்பதே அவருடைய ராஜ்யமாக இருக்கிறது. மாறாக அவர் இந்த உலகத்தில் பெரிய அரசாங்கத்தை வைத்து நடத்தப் போகிறார் என்று நாம் நினைக்கக்கூடாது. அவர் ராஜாவாக இங்கு சரீரத்தில் வரப்போவதுமில்லை, ஆட்சி செய்யப்போவதுமில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பாவிகளாக இருக்கிற மனிதர்களுக்கு இரட்சிப்பைக் கொடுத்து, அவர்களுடைய இருதயங்களில் குடியேறி, அவருடைய கட்டளைகளை அவர்கள் பரலோகத்தில் இருப்பது போல இந்த உலகத்தில் பின்பற்றி வாழுவதைத்தான் அந்த ஜெபம் குறிக்கிறது. அவருடைய ராஜ்யம் இந்த உலகத்தில் வரவேண்டுமென்றால் கிறிஸ்தவர்களாக இருக்கின்ற நாம் சபையோடு இணைந்து சுவிசேஷத்தை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். தேவனுடைய ராஜ்யம் இந்த உலகத்தில் சுவிசேஷத்தை மற்றவர்களுக்கு அறிவிக்காமல் வரப்போவதில்லை. வெறும் ஜெபத்தால் அந்த ராஜ்யம் இங்கு வந்துவிடாது. கத்தியாலும் ஆயுதத்தாலும் அந்த ராஜ்யத்தை இங்கு கொண்டுவர முடியாது. சுவிசேஷத்தை சொல்லுவதன் மூலமாகத்தான் அந்த ராஜ்யம் ஏற்படுவதற்கு இங்கு வழியிருக்கிறது. ஏனென்றால் அந்த சுவிசேஷம் இயேசுவைக் குறித்தது. அந்த சுவிசேஷம் மனிதனுடைய பாவம் போவதற்காக இயேசு என்ன செய்திருக்கிறார் என்று விளக்கமாகச் சொல்லுகிறது. மேலும் எந்தவிதமாக இயேசு தன்னைப் பலியாகக் கொடுத்து கிருபையின் மூலமாக இரட்சிப்புக்குரிய காரியங்களை நிறைவேற்றியிருக்கிறார் என்றும் அந்த சுவிசேஷம் சொல்லுகிறது. சுவிசேஷம் சொல்லப்பட்டு அதை மக்கள் கேட்கிறபோது ஆவியானவர் அந்த சுவிசேஷத்தின் மூலமாக மனிதர்களின் இருதயத்தை மாற்றி அவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கிறார். அவர் ஜீவனைக் கொடுக்கிறபோதுதான் அந்த மனிதனுடைய வாழ்க்கையிலே தேவ ராஜ்யம் நிகழ ஆரம்பிக்கிறது. பாவிகள் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளாக மாறி, அவருடைய வார்த்தைகளைத் தங்கள் வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் பின்பற்றுகிறபோது, தேவனுடைய ராஜ்யம் இந்த உலகில் சிறிது சிறிதாக வளருகிறது.
இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? சுவிசேஷ வைராக்கியமும், சுவிசேஷத்தைச் சொல்லுகிற பாரமும் இல்லாதவன் கிறிஸ்தவனாக இருக்க முடியாது. சுவிசேஷத்தைச் சொல்லுகிற வைராக்கியமும் பாரமும் இல்லாமல் ஒரு சபை சபையாக இருக்க முடியாது. என்னதான் வேறுபல பெரிய காரியங்களைச் செய்தாலும் நமக்கு சுவிசேஷ வைராக்கியம் இருக்க வேண்டும். ஆனால் இன்று நம்மினத்தில் சுவிசேஷ ஊழியம் குழப்பம் நிறைந்ததாகக் காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் ஆசீர்வாதம், ஆசீர்வாதம் என்கிற வார்த்தையைத்தான் கேட்கிறோமே தவிர சுவிசேஷத்தை சுவிசேஷமாக யாரும் பிரசங்கிப்பதில்லை. மனிதனுக்கு அவனுடைய பாவம் நீங்க வேண்டியதுதான் அவனுக்குத் தேவையான ஆசீர்வாதம். பாவம் போகாமல் வேறெந்த ஆசீர்வாதமும் யாருக்கும் கிடைக்காது.
ஆண்டவரை விசுவாசித்த மக்களும் பாவத்தைச் செய்துகொண்டிருந்தால் என்ன நடக்கும்? வந்த ஆசீர்வாதமமும் போய்விடும். பாவம் ஆசீர்வாதங்களுக்குத் தடையாக இருக்கிறது. பாவத்தைச் செய்து அதன் வழியில் தொடர்ந்திருந்து ஆண்டவருடைய ஐக்கியத்திற்கு விரோதமாக நாம் இருக்கிறபோது என்ன ஜெபம் பண்ணினாலும் வாழ்க்கையில் ஆசீர்வாதம் வரவே வராது. ஆகவே இன்று ஆசீர்வாதம் என்ற பெயரில் சொல்லப்படும் செய்திகள் போலியானவையாக இருக்கின்றன என்பதை உணருங்கள். மனிதனுடைய பாவம் போவதற்கு அவசியமான சுவிசேஷத்தையே நாம் சொல்ல வேண்டும். அவனுடைய பாவத்திற்கு மன்னிப்பு கிடைத்தபின்பே அவனால் கர்த்தரை அணுக முடியும், அவரைத் துதிக்க முடியும், ஆராதனை செய்ய முடியும், அவருடைய ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே நாம் சுவிசேஷ ஊழியத்தில்தான் கவனம் செலுத்த வேண்டும். அந்தச் சுவிசேஷத்தை நன்றாகப் படித்து அதில் என்ன இருக்கிறது என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெறுமனே போய் நீங்கள் இயேசுவிடம் வந்துவிடுங்கள் எல்லா ஆசீர்வாதமும் உங்களுக்கு வந்துவிடும் என்று அறிவிப்பது சுவிசேஷமல்ல.
சுவிசேஷ வழி
மனிதனுடைய பாவம் போவதற்காக ஆண்டவர் ஒரு மாபெரும் காரியத்தைச் செய்திருக்கிறார் என்பதே சுவிசேஷம். அந்தப் பெரிய காரியமென்ன? ஆண்டவர் பாவமே இல்லாத பரிசுத்தமான தன்னுடைய ஒரே குமாரனை மனிதனுடைய பாவம் போக்கப்படுவதற்காக சிலுவையில் ஒரேதரம் பலியாக கொடுத்திருக்கிறார் என்பதே அதில் அடங்கியிருக்கிறது. இயேசு பலியாகக் கொடுக்கப்பட்டு சிலுவையில் நிறைவேற்றப்பட்ட பலியினால்தான் மனிதன் இரட்சிப்பு அடைவதற்கான வழி கிடைக்கிறது. ஆகவே இரட்சிப்புக்கு வழி ஏற்படுத்தி வைத்திருக்கிற இயேசுவை நீங்கள் முழு உள்ளத்தோடும் விசுவாசிக்கிறபோது உங்களுடைய பாவம் போகிறது என்பதைத்தான் சுவிசேஷமாகச் சொல்ல வேண்டும். மனிதனுடைய பாவம் நீங்குவதுதான் அவனுக்குக் கிடைக்கும் பெரிய ஆசீர்வாதமாகும். மனிதனுக்கு அந்த ஆசீர்வாதம் கிடைப்பதற்காக நாம் செய்யவேண்டிய பெரிய காரியம் அந்த சுவிசேஷத்தை அறிவிப்பதுதான். ஆகவே நம் சபைகளில் இந்த சுவிசேஷ வைராக்கியம் அதிகமாகக் காணப்பட வேண்டும்.
நாம் ஒரு சிறு கூட்டமாகக் கூடி சந்தோஷமாக இருப்பதற்காக சபையை ஆண்டவர் ஏற்படுத்தவில்லை. அது மிகவும் தவறான எண்ணமாகும். ஆண்டவர் பெரும் கிருபை பாராட்டி ஒரு சபையை ஏற்படுத்தியிருக்கிறார் என்று சொன்னால் வரப்போகிற அவருடைய ராஜ்யத்திற்கு அது ஒரு கருவியாகப் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான் அதைச் செய்திருக்கிறார். அவருடைய ராஜ்யம் வருவதற்கு சபையாக நாமும் ஒரு கருவியாக இருக்கிறோம். ஆகவே நாம் ஆண்டவருடைய ஆயுதமாக இருந்து அவரால் பயன்படுத்தப்பட வேண்டும். அதற்கு நமக்கும், நம் சபைக்கும் சுவிசேஷ வைராக்கியமும் பாரமும் இருக்க வேண்டும். அதில் நாம் எப்போதும் தளர்ந்து போகாமல் இருக்கும்படி நம்மைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அது நெருப்பு எரிகிறமாதிரி நம்மில் எரிந்துகொண்டு இருக்கவேண்டும். நம் குடும்பத்தில் ஆண்டவரை அறியாதவர்கள் ஆண்டவரைத் தெரிந்துகொள்ளுவதற்காக நாம் சுவிசேஷ வைராக்கியத்தோடு ஜெபம் செய்து அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும், உழைக்க வேண்டும்.
இவ்வளவு தூரம் இதை நான் விளக்குவதற்குக் காரணமிருக்கிறது. பவுல் அப்போஸ்தலன் கொலோசெயர் நிருபத்தை எழுதி அதை முடிக்கின்றபோது அவருடைய எண்ணம் எதுவாக இருந்திருக்கிறது என்று கவனியுங்கள். இறுதியாக ஒரு காரியத்தைச் சொல்லும்போது எப்போதும் முக்கியமான ஒரு விஷயத்தையே சொல்லுவோம். அதுபோல இங்கு பவுலும் சொல்லுகிறார்: இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள் என்று கூறி, 3 வது வசனத்திலிருந்து 6 வது வசனம் வரைக்கும் அவர் எதில் கவனம் செலுத்துகிறார் என்று கவனியுங்கள். மேலே நான் விளக்கிய அந்தச் சுவிசேஷ ஊழியப் பணிகளில்தான் அவர் கவனத்தைச் செலுத்துகிறார். தேவனுடைய ராஜ்யம் வருவதற்கான வழியைத்தான் அறிவிக்கிறார்.
சுவிசேஷப் பணிக்காக ஜெபம்
சுவிசேஷப் பணியைக் குறித்து அவர் முதலாவதாக சொல்வதென்ன? எனக்காக ஜெபம் பண்ணுங்கள் என்று சொல்லுகிறார். கொலோசே மக்கள் அவருக்காக எதற்காக ஜெபம் பண்ண வேண்டும்? அவர் தன்னுடைய தனிப்பட்ட தேவைகள் தீர்க்கப்பட வேண்டுமென ஜெபித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. என் மூலமாக தேவனுடைய திருவசனம் சரியாக, முறையாக, தேவனுடைய சித்தப்படி தொடர்ந்து பிரசங்கிக்கப்பட வேண்டும் என்று ஜெபித்துக்கொள்ளுங்கள் என்றுதான் கேட்கிறார். அவர் தனக்கு உணவு வேண்டும், தன்னுடைய உலகப்பிரகாரமான சரீரத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஜெபிக்கச் சொல்லவில்லை. தன் மூலமாக தேவனுடைய வசனம் தொடர்ந்து பிரசங்கிக்கப்பட வேண்டும், அதற்கு எந்தவிதத் தடையும் ஏற்பட்டுவிடாதபடி அது பிரசங்கிக்கப்பட வேண்டுமென அந்த மக்களிடம் ஜெபிக்கும்படிக் கேட்டுக்கொள்ளுகிறார். இங்கு எந்தளவுக்கு தேவனுடைய சத்தியத்தைத் தொடர்ந்து இடைவிடாமல் சொல்ல வேண்டுமென்கிற பாரம் பவுலுக்கு இருந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
பவுல் இந்நிருபத்தை எழுதும்போது அவர் இருந்த இடம் சிறைச்சாலை. பவுலின் சில நிருபங்களை சிறைச்சாலை நிருபங்கள் என்று சொல்லுவார்கள். சிறையிலிருக்கிறபோது சபைகளின் தேவைகளுக்காக அவர் எழுதின கடிதங்களாக அவை இருக்கின்றன. அவ்வாறு எழுதப்பட்ட நிருபம்தான் இந்த கொலோசெயருக்கு எழுதப்பட்ட நிருபம். கொலோசெய சபையில் சில பிரச்சனைகள் இருந்தன, அதில் சிலர் போலித்தனமான செய்திகளைக் காதுகொடுத்து கேட்கவும், அதைப் பரப்பவும் ஆரம்பித்தார்கள். அதனால் சில விசுவாசிகள் பாதிக்கப்பட்டு தளர்ந்துபோன நிலை ஏற்பட்டதால், அந்தச் சபைப் போதகர்களிடமிருந்து அதை அறிந்துகொண்டு, அதனை எவ்வாறு தீர்க்கலாம் என்கிற ஆலோசனைகளைச் சொல்லிக் கடைசியாகத் தனக்காக ஜெபியுங்கள் என்று கேட்கிறார் பவுல்.
பவுலை ஏன் சிறையில் அடைத்தார்கள்? தேவனுடைய சுவிசேஷம் பிசங்கிக்கப்படுவதற்குத் தடை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தவர்கள்தான் அவரைச் சிறையில் அடைத்தார்கள். பவுலை சிறையில் அடைத்தால் சொல்லப்படுகிற சுவிசேஷத்திற்குத் தடை ஏற்படுத்திவிடலாம் என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்தது. அந்நாட்களில் சிறையில் இன்றிருப்பது போன்ற வசதிகளெல்லாம் இருக்கவில்லை. சிறைத் தண்டனை அக்காலத்தில் மிகவும் கடுமையானதாக இருந்தது. சில நேரங்களில் மிகவும் இருளான அறையில் ஒருவரை அடைத்து வைத்திருப்பார்கள், இரு கைகளையும் சங்கிலிகளால் சுவரோடு சேர்த்துக் கட்டியிருப்பார்கள், சில நேரங்களில் கால்களைப் பாரமான இரும்புக் குண்டுகளைப் போட்டு வைத்திருப்பார்கள், சில நேரங்களில் வீட்டுக் காவலில் வைத்திருப்பார்கள். இவ்வாறு தண்டனைகள் மாறி மாறி அவருக்குக் கொடுக்கப்பட்டது. சிறையிலிருக்கும்போது முழு சுதந்தரமும் அவருக்கு இருக்கவில்லை. மிகவும் கடினமான சூழலில்தான் பவுலிருந்தார்.
சபைகளைப் பற்றி எத்தனையோ செய்திகள் வந்தும் சபைகளைப் போய்ப் பார்த்து ஆலோசனை கொடுக்க முடியாத ஒரு நிலையில், எல்லோரோடும் சேர்ந்து ஐக்கியத்தில் வரமுடியாத ஒரு சூழ்நிலையில், சிறையில் குறிப்பிட்ட சில நபர்களை மட்டுமே பார்க்க முடிகிற ஒரு நிலையில், தேவனுடைய ராஜ்யம் வருவதற்கான சுவிசேஷத்தை நான் இன்னும் அதிகமாகப் பிரசங்கம் பண்ண ஜெபம் பண்ணுங்கள் என்று அவர் கேட்டுக்கொள்கிறார். சுவிசேஷம் அறிவிப்பவர்களைப் பிடித்து சிறையில் அடைத்தாலும் சுவிசேஷம் பரவுவதை எவராலும் தடுக்க முடியாது. பவுல் சிறையில் இருக்கும்போதுதான் ரோமப் பேரரசின் அரண்மனை முழுவதும் சுவிசேஷம் பரவ ஆரம்பித்தது. படைவீரர்களில் அநேகர் விசுவாசிகளாக மாறினார்கள்.
இதெல்லாம் எவ்வாறு நடந்தது? பவுல் பிலிப்பு சிறையில் இருக்கும்போது கால்களைக் கட்டித் தொங்கவிட்டிருந்தாலும் அவர் பாடின பாடல்கள், பண்ணின ஜெபங்கள் எல்லாம் எப்படி அந்தச் சிறைச்சாலை அதிகாரியைப் பாதித்தது என்பது நமக்குத் தெரியும். அதுபோல இங்கும் அவர் பாடிய பாடல்கள், ஜெபங்கள், சொன்ன தேவ வசனங்கள் எல்லாவற்றையும் வீரர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். அவரைப் பாதுகாப்பதற்காக ஒரு நேரத்தில் பத்துப்பேர் அவரோடிருப்பார்கள், பிறகு அவர்களுடைய நேரம் முடிந்துவிட்டால் வேறு பத்துப்பேர் வருவார்கள். அவர்கள் பவுலைப் பாதுகாக்கும் நேரத்தில் அவரோடு இருப்பதனால் பவுல் அவர்களுக்கு அநேக வேதப் பகுதிகளையெல்லாம் வாசித்தும், ஜெபித்தும், விளக்கப்படுத்தியும் இருப்பார். அவரால் முடிந்தவரை சுவிசேஷத்தை அறிவித்திருந்திருப்பார். ஒரு உண்மையான விசுவாசியைப் பிடித்து சிறையில் அடைத்தாலும் அங்கும் சுவிசேஷம் பரவவே செய்யும். அவ்விதம் பவுலின் மூலம் சுவிசேஷத்தைக் கேட்ட வீரர்கள் அவர்களுடைய குடும்பத்திலும், மற்ற சேவகரிடத்திலும் அதைச் சொல்ல, அது பரவி ராஜாவின் மனைவி வரைக்கும் அது போய்ச் சேர்ந்தது. அதுதான் கர்த்தர் செய்கிற காரியம், மனிதனால் அதைத் தடுக்கவே முடியாது. மனிதருடைய சட்டங்களால், அரச கட்டளைகளால் சுவிசேஷம் பரவுவதைத் தடுக்க முடியாது. இது மனிதனுடய காரியமே இல்லை. கர்த்தர் ஒரு காரியத்தைச் செய்யவேண்டுமென்று நினைத்தால் இந்த உலகம் அதற்கெதிராக எதையுமே செய்யமுடியாது. ஆனால் அந்த சுவிசேஷம் பரவவேண்டுமென்றால் அவருடைய ராஜ்யம் விஸ்தரிக்கப்பட வேண்டுமென்றால் நாம் எதுவும் செய்யாமல் இருக்கும்போது அது நடக்காது.
அரண்மனை முழுவதும் சுவிசேஷம் பரவுகிறதென்றால் அதற்கு காரணமென்ன? முதலில் அதற்கு ஆண்டவர்தான் காரணம், இருந்தாலும் ஆண்டவர் பவுலின் மூலமாக அந்தக் காரியத்தைச் செய்தார். பவுலுக்கிருந்த அந்த சுவிசேஷ வைராக்கியத்தையும், பாரத்தையும் கர்த்தர் பயன்படுத்தினார். ஒரு உண்மையான விசுவாசி வேதபூர்வமாக செய்யவேண்டிய காரியத்தைச் செய்கிறபோதுதான் தேவனுடைய ராஜ்யம் விஸ்தரிக்கப்படுகிறது. ஒரு விசுவாசி பவுலைப் போலத்தான் செயல்படுவான். ஆனால் இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளுகிறவர்கள் என்ன செய்கிறார்கள்? இந்த உலகத்து மக்களைப் போல இருக்க வேண்டுமென்று நினைத்து உலகத்தில் ஆசை வைக்கிறார்கள். அதிகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று ஏழு நாட்களும் உழைக்கிறார்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்கிறார்கள். பணத்தையும் சொத்தையும் அதிகரித்துக்கொள்ள கடன்களை வாங்கித் தள்ளுகிறார்கள். இப்படியே போனால் தேவனுடைய ராஜ்யம் எப்படி வளரும்? அவர்கள் தங்களுடைய ராஜ்யத்தையே வளர்த்துக்கொள்கிறார்கள். ஆனால், பவுல் இதிலெல்லாம் கவனம் செலுத்தவில்லை. இந்த உலகத்தில் வாழுவதற்குத் தேவையானவை இருந்தால் போதுமென்று இருந்தார். நமது அடிப்படைத் தேவைகளைத் தாண்டி வேறு காரியங்களில் ஈடுபட்டு, அது சுவிசேஷ ஆர்வத்தையும், கிறிஸ்துவை அறிவிக்கக்கூடிய பாரத்தையும், கிறிஸ்துவின் சபை வளருவதில் இருக்க வேண்டிய ஆர்வத்தையும் அழித்துவிடுகிற அளவிற்கு கிறிஸ்தவன் போய்விடக்கூடாது.
கர்த்தர் இருதயக் கதவைத் திறக்கவேண்டும்
தேவனுடைய ராஜ்யம் வேறு எவ்வகையில் வளரும்? ஆண்டவர் யார் யாருக்கு பாவத்திலிருந்து விடுதலை கொடுத்து ஜீவனைக் கொடுக்கிறாரோ அவர்கள் மூலமாகத்தான் அது வளரும். ஆகவேதான் பவுல் அதில் அவ்வளவு தூரம் கவனம் செலுத்துகிறார். 3, 4 வது வசனங்களில் “கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேச வேண்டிய பிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு, திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.” (கொலோசெயர் 4:3-4) என்று சொல்லுகிறார்.
பவுல் இங்கு பல விஷயங்களை விளக்குகிறார். அவர் மற்றவர்கள் பொருளைத் திருடி சிறைக்கு வரவில்லை, கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் காரணமாக சிறையில் இருக்கிறேன் என்கிறார். மேலும் திருவசனம் பரவுவதற்கான வாசலை ஆண்டவர் திறந்து வைக்கும்படியாக ஜெபிக்கும்படிக் கேட்டுக் கொள்ளுகிறார். அதாவது பிரசங்கிகள் எவ்வளவுதான் சுவிசேஷத்தைச் சொன்னாலும் ஆண்டவர் மனித இருதயக் கதவுகளைத் திறக்கவில்லை என்றால் எதுவும் நடக்காது என்பதுதான் உண்மை. கிறிஸ்தவன் சுவிசேஷத்தைச் சொல்லக் கடமைப்பட்டவனாக இருந்தபோதும் அந்தச் சுவிசேஷத்தை ஆவிக்குரிய பயனுள்ளதாக மாற்றுகிறவர் பரிசுத்த ஆவியானவர். பரிசுத்த ஆவியானவரின் செயலில்லாமல் சுவிசேஷத்தை ஆவிக்குரிய பயனுள்ளதாகப் பிரசங்கிக்கப்படவே முடியாது. ஆனால் அந்த சுவிசேஷம் சுவிசேஷமாகப் பிரசங்கிக்கப்படுகிறபோது நிச்சயமாக பரிசுத்த ஆவியானவர் அதைப் பயனுள்ளதாகச் செய்கிறார். பவுலுக்கு அது நன்றாகத் தெரிந்திருந்தது.
பவுலுக்கு நான் என்கிற அகங்காரம் இருக்கவில்லை. அவரே சுவிசேஷத்தைச் சொன்னாலும் ஆண்டவர் அதற்கான வாசலைத் திறக்காதபோது அந்தச் சுவிசேஷம் இருதயத்தைத் தொட முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். அதனால்தான் தனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார். நாமும்கூட சுவிசேஷத்தைக் கேட்கிறபோதும், சொல்லுகிறபோதும் ஜெபம் பண்ண வேண்டும். ஆண்டவரே! பரிசுத்த ஆவியானவர் வாசலைத் திறக்கவும், வசனம் எங்களில் பதியவும் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று ஜெபிக்க வேண்டும். அவ்விதம் ஆவியானவர் உதவி செய்தால் மட்டுமே ஓரிடத்தில் சபையை நிறுவ முடியும், இல்லையென்றால் மனுஷனால் ஒருபோதும் ஓரிடத்தில் சபையை நிறுவ முடியாது. மனுஷன் தன் சுய வழிகளில் எதையாவது செய்து வேத விதிகளை மீறிச் சபை என்கிற பெயரில் ஒன்றை அமைத்துவிடுவான், ஆனால் ஆண்டவர் வருகிற நாளில் அவை காணாமல் போய்விடும். எப்போதும் உண்மையான ஒரு சபையை அமைக்கவேண்டுமென்றால் கர்த்தர் அந்த சுவிசேஷத்தின் வாசலைத் திறந்தால்தான் முடியும்.
சுவிசேஷத்தைத் தெளிவாக அனைவருக்கும் அறிவிக்க வேண்டும்
சுவிசேஷத்தின் வாசலைத் திறக்க ஏன் ஜெபம் பண்ண வேண்டும்? பவுல் சொல்லுகிறார், “கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேச வேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,” (கொலோசெயர் 4:3). இங்கு அநேக உண்மைகள் அவர் வார்த்தைகளில் அடங்கியிருப்பதை நாம் பார்க்கிறோம். கிறிஸ்துவின் இரகசியம் என்று பவுல் சொல்லுவது புறஜாதியார் யூதர் என்ற வேறுபாடில்லாமல் அனைத்து மக்களும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பாவம் மன்னிக்கப்பட்டு நுழைவதே கிறிஸ்துவின் இரகசியமாகும். அதை நான் பேச வேண்டிய விதமாய்ப் பேசி வெளிப்படுத்துவதற்கு எனக்காக ஜெபம் பண்ணுங்கள் என்கிறார் பவுல். அவர் பாரத்தோடு ஏனோதானோவென்று பேசிவிடாமல் அதைப் பேசவேண்டிய பிராகாரம் பேச எனக்காக ஜெபம் பண்ணுங்கள் என்கிறார். இந்த வசனத்தில் பேச வேண்டிய பிரகாரம் என்பதற்கான கிரேக்க வார்த்தையின்படி, ‘தெளிவாகக் குழப்பமில்லாமல் உள்ளது உள்ளபடி கேட்பவர்கள் சரியாக விளங்கிக்கொள்ளும் விதத்தில்’ என்பது அர்த்தம்.
பவுல் எவ்வளவு பெரிய ஒரு பிரசங்கி, எத்தனையோ சபைகளை ஏற்படுத்தியவர், இருந்தாலும் சொல்ல வேண்டிய சத்தியங்களை வேதத்தை மீறிக் கர்த்தருக்கு விருப்பமில்லாதவிதத்தில் சொல்லிவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவர் சிறையிலிருந்து தனக்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, வந்து போகிற ஒவ்வொரு படை வீரர்களிடமும் சரியான விதத்தில் நிதானத்தோடும், தேவபயத்தோடும் பேசும்படியாகவும், அவர்கள் கேள்விகள் கேட்டால் அதற்கும் தெளிவான வேதபூர்வமான பதிலைச் சொல்லும்படியாகவும் ஜெபம் பண்ணிக்கொள்ளுங்கள் என்கிறார். இது பவுலின் தேவபயத்தையும், தாழ்மையையும் வெளிப்படுத்துகிறது. அவர் எந்தவிதமான அகங்காரமும் இல்லாமல் சுவிசேஷத்தைச் சரியாகக் குழப்பமில்லாமல் சொல்லுவதில் உறுதியாக இருந்தார்.
இன்று தொலைக்காட்சியில் தோன்றுகிறவர்களால் சுவிசேஷம் சுவிசேஷமாகச் சொல்லப்படுவதில்லை. அவற்றைக் கேட்கும்போது பேசுகிறவர்களுக்கு படிப்பறிவு இருக்கிறதா, என்று கேட்கும் அளவுக்கு அவர்களுடைய பேச்சு அமைந்திருக்கிறது. அவற்றில் சத்தியம் இல்லை, தனிமனித சுயநலத்தையே காண்கிறோம். எப்போதும் தேவனுடைய வார்த்தையை விளக்குகிறபோது அதைச் சரியான விதத்தில் சொல்ல வேண்டும். அவர் கொடுத்திருக்கும் சுவிசேஷத்தை மாற்றிச் சொல்லிவிடாமல், கர்த்தர் விளக்கியிருக்கும் விதமாகத் தெளிவாகச் சொல்லவேண்டும். பவுல் அதைக்குறித்து படைவீரர்களிடம் பேச இரவு பகலாக சிந்தித்து எப்படிப் பேசவேண்டுமென்பதில் கவனமாக இருந்திருக்கிறார் என்பதைப் பார்க்கிறோம். இவ்விதம் நாம் கவனமாக இருக்கிறோமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பவுல் படித்து உழைத்து ஜெபத்தோடு பேசுகிறபோது அதைக் கேட்கிற மக்களுக்குப் புரியும்விதமாகத் தேவையான அளவுக்குச் சொல்லவேண்டும், அது போய்ச் சேரவேண்டிய விதத்தில் அவர்களைப் போய் சேரும்படியாக கடவுள் அந்தக் கதவை திறக்க வேண்டும் என்று கேட்கிறார்.
நாம் சபைகளாகக் கூடிவருகிற கூட்டங்களுக்கு மாதக்கணக்கில் ஜெபித்துதான் கூடிவருகிறோம். நாம் நம் பலத்தை நம்பிக் கூடிவந்தால் நாம் ஜெபமே செய்திருக்கமாட்டோம். ஒருவேளை அவ்விதம் நாம் கூடிவந்து என்னென்னவோ செய்தாலும் ஆண்டவர் அங்கு எதுவும் செய்யமாட்டார். நாம் கூடிவருகிற கூட்டங்களுக்கு ஜெபம் தேவையாக இருக்கிறது. அதுமட்டுமல்ல கவனத்தோடும் தேவபயத்தோடும் மக்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதும் நம் கடமையாக இருக்கிறது. பவுல் ஆண்டவருடைய ஊழியத்தைக் குறித்து எத்தனை பாரத்தோடு இருந்திருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்
கிறிஸ்தவர்களாகிய நம்முடைய கடமை என்ன? நாம் நம் சபைகளில் சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களும், ஓய்வுநாளில் செய்தி கொடுப்பவர்களும் அவர்கள் விளக்கும் சத்தியங்களைச் சரியானவிதத்தில் தேவையான அளவுக்குத் தெளிவாகச் சொல்லும்படி நாம் ஜெபம் பண்ணவேண்டும். பரிசுத்த ஆவியானவர் அவற்றைப் பயன்படுத்தும்படியாக ஜெபம் பண்ண வேண்டும். இன்றைக்கு அதிகமானோர் சுவிசேஷத்தை உள்ளது உள்ளபடிச் சரியாகவே சொல்லுவதில்லை. மனுஷனுடைய பாவத்திற்கு விடுதலை தரக்கூடிய கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் சரியாகச் சொல்லாமல் இருப்பது வேதனைக்குரியதாகும். நாம் இணைந்திருந்து பணிபுரியும் சபைகளில் அவ்விதம் இல்லாமல் ஆண்டவருடைய சத்தியங்களைச் சரியாக விளக்குகின்ற போதகர்களைக் கர்த்தர் கொடுத்திருப்பது எத்தனை பெரிய ஆசீர்வாதம் தெரியுமா? அது தொடரும்படியாக நாம் கருத்தோடும் பாரத்தோடும் ஜெபம் பண்ண வேண்டும். நாம் ஒவ்வொரு வாரமும் சத்தியத்தைச் சரியாகத் தெளிவாகப் போதிக்கிற சபைகளுக்காக ஜெபிக்க வேண்டும். ஏனென்றால் அநேகர் தேவனுடைய ராஜ்யத்தில் இணைவதற்காக அதைச் செய்யவேண்டும். அது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது. சபை அங்கத்தவர்களும் தங்கள் ஜெபங்களில் ஒரு பங்காக அதை வைத்திருக்க வேண்டும். பவுல் அவ்வளவு பெரிய ஒரு அப்போஸ்தலனாக இருந்தபோதும் மக்கள் தனக்காக ஜெபம் பண்ணவேண்டுமென்று ஆண்டவர் முன் விண்ணப்பம் வைத்தார்.
சுவிசேஷம் அறிவிக்க வாழ்வில் ஒழுங்கிருக்க வேண்டும்
அதோடு நின்றுவிடாமல் இன்னும் நாம் செய்யவேண்டிய கிறிஸ்தவ கடமைகளையும் அவர் எடுத்துரைக்கிறார். 5, 6 வது வசனங்களில் அவற்றை நாம் வாசிக்கிறோம். “புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.” (கொலோசெயர் 4:5-6).
புறம்பேயிருக்கிறவர்கள் என்ற வார்த்தை நம்முடைய சபைகளுக்கு வெளியேயும், நம்முடைய குடும்பங்களிலும் கர்த்தரை விசுவாசிக்காமல் இருப்பவர்களைக் குறிக்கிறது. சுவிசேஷத்தை நாம் எங்கே சொல்ல வேண்டும்? முதலாவது, சபைகளில் ஆராதனைப் பிரசங்கங்களில் நிச்சயமாக அதைப் பிரசங்கிக்க வேண்டும். ஞாயிறு ஆராதனை நேரங்களில் தேவனை அறியாத மக்களும், நம் குடும்பங்களில் இதுவரை இயேசுவை விசுவாசித்திராதவர்களும் சபைக்கு வருவார்கள், ஆகவே நம் பிரசங்கங்களில் சுவிசேஷத்தையும் சேர்த்தே சொல்லவேண்டும். காலாகாலம் நன்கு தயாரிக்கப்பட்ட சுவிசேஷப் பிரசங்கத்தைக் கொடுக்க வேண்டும். சபையாருக்கு சுவிசேஷம் அவசியமில்லை என்று நினைக்கின்ற ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். சபை ஆராதனைப் பிரசங்கம் சுவிசேஷம் சொல்லுவதை விட மாறுபட்டது என்ற தவறான எண்ணத்தைக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். சபையில் முதலில் சொல்லாமல் சுவிசேஷத்தை வெளியில் பிரசங்கித்து என்ன பயன். சுவிசேஷத்தை அறிவிப்பது என்பது சபைக்கு வெளியில் மட்டுமே என்ற கருத்து வேதத்தில் இல்லை. சுவிசேஷத்தை சபையிலும், சபைக்கு வெளியிலும் அறிவிக்க வேண்டும்.
அடுத்ததாக, அவிசுவாசிகள் சபைக்கு வெளியில்தான் இருக்கிறார்கள். சபையின் சுற்றுப்புறங்களில் இருக்கிற அவிசுவாச மக்கள் பலவிதமான சிந்தனைகளைக் கொண்டு, சத்தியத்திற்கு மாறான வாழ்க்கை முறைகளைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறியாதவர்களாகவும், தேவனுடைய ராஜ்யத்தில் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில்தான் நாம் வாழுகிறோம். நம் வீட்டைச் சுற்றியிருக்கும் மக்கள் எல்லோரும் கிறிஸ்தவர்களா? நம்மைச் சுற்றியிருப்பவர்கள் பெரும்பாலும் இந்துக்களாகவும், முஸ்லீம்களாகவும், வேறு மதங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய சிந்தனைகள் வித்தியாசமானவையாக இருக்கின்றன. அவர்கள் மத்தியில் ஆண்டவர் உங்களைக் கிறிஸ்தவர்களாக விதைத்திருக்கிறார். அவ்வாறு புறம்பே இருக்கிற அவர்களுக்கு முன்பாக நீங்கள் ஞானமாக நடந்துகொள்ளும்படி பவுல் அறிவுறுத்துகிறார். அவர்கள் மத்தியில் நீங்கள் இருப்பதற்குக் காரணம், அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்படுவதற்கு நீங்கள் பயன்படும்படியாகதான்.
எருசலேமில் பிரச்சனைகள் உருவாகி சபைகளுக்குப் பெரும் எதிர்ப்பு காணப்பட்டது. எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்கள் வேறு இடங்களுக்குப் போகும்படியான சூழ்நிலை உருவானது. அப்போது சில கிறிஸ்தவர்கள் அங்கிருந்து அந்தியோகியாவுக்குப் போனார்கள். அவ்வாறு அங்கு தங்கியிருக்கும்போது சுற்றியிருந்த மக்களெல்லாம் அவர்களிடம் வந்து, அவர்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள். அப்போது இவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். அவர்களைச் சுற்றியிருந்தவர்கள் இவர்களுடைய வாழ்க்கை முறையையும், செயல்களையும், பேச்சையும் கவனிக்க ஆரம்பித்தார்கள். இவர்களுடைய வாழ்க்கை சரியாக அமைந்திருந்து, அந்த மக்கள் முன் ஞானமாக நடந்து சுவிசேஷத்தைத் தெளிவாக விளக்கியபோது ஆவியின் கிரியையால் மக்கள் மனந்திரும்பினார்கள். இவர்கள் மூலம் அந்தியோகியாவில் சபை நிறுவப்பட்டது. அப்போஸ்தலர்கள் எருசலேமில் இருந்தார்கள், ஆனால் அந்தியோகியாவில் சபையானது சிதறடிக்கப்பட்ட கிறிஸ்தவர்களைக் கொண்டு நிறுவப்பட்டது. அந்தியோகியாவில் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தோடும், ஞானத்தோடும் வாழ்ந்ததால் அங்கு சபை நிறுவ ஆண்டவர் கிருபை பாராட்டினார். அதனால்தான் திருச்சபையைச் சேர்ந்த ஒவ்வொரு அங்கத்தவருக்கும் புறம்பே இருக்கும் மக்களுக்கு முன் ஞானத்தோடு நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்று சொல்லுகிறேன்.
உதாரணத்திற்கு, கிறிஸ்தவரல்லாத பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் கதவைத் தட்டுகிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். நீங்கள் கதவைத் திறந்து என்ன என்று அவரிடம் கேட்கிறீர்கள். அவர் என்ன, உங்கள் வீட்டில் ஒரே சத்தமாக இருக்கிறது அதான் என்னவென்று விசாரிக்க வந்தேன் என்று சொல்லுகிறார். என் மனைவி வீட்டில் தேவையில்லாமல் சத்தம் போட்டாள், அவளைத் திட்டி ஒரு அடியைக் கொடுத்தேன் அதான் சத்தம் என்று நீங்கள் பதிலளிக்கிறீர்கள். அவர் அப்படியா, என்று கேட்டுவிட்டுப் போய்விடுகிறார். அவர் போகும்போது என்ன நினைத்துக்கொண்டு போவார்? என்ன இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்லுகிறார்கள், ஆலயத்திற்குப் போகிறார்கள், இப்படியெல்லாம் மோசமாக நடந்துகொள்ளுகிறார்களே என்று சிந்தித்துக்கொண்டு போனால் அது எப்படிப்பட்ட சாட்சியாக இருக்குமென்று சிந்தித்துப்பாருங்கள். அந்த மனிதருடைய இருதயத்தில் கிறிஸ்துவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும், கிறிஸ்துவைப் பற்றி சிந்திக்க வேண்டுமென்கிற எண்ணமே இனி வராமலிருக்க அத்தோடு முடிவு கட்டிவிட்டீர்கள் அல்லவா? ஏனென்றால் உங்கள் குடும்ப வாழ்க்கை அந்த மனிதருக்கு ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போய்விட்டது. கிறிஸ்துவின் பெயரை வைத்துக்கொண்டு நாம் பாவ வாழ்க்கை வாழ்ந்தால் கிறிஸ்துவுக்குதான் பெரிய அவமானத்தைக் கொண்டுவரும்.
யார் நம்மைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் கவனத்தோடு ஒழுங்காக வாழ்க்கை நடத்தவேண்டியது நம் கடமை. நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு முன் இன்னும் அதிக கவனத்தோடு ஒழுங்காக வாழவேண்டும். நாம் கிறிஸ்தவர்கள் என்ற பெயரைச் சுமந்திருப்பதால், நம் பேச்சும் நடத்தையும் அவர்கள் பார்வையில் நிச்சயம் விழும். நாம் எங்கிருந்தாலும் கிறிஸ்தவ பண்புகளை வெளிப்படுத்துவது நமது கடமையாக இருக்கிறது. அதனால்தான் பவுல் ஞானத்தோடு நடந்து கொள்ளும்படியாகச் சொல்லுகிறார். நம் குணநலன்கள் மற்றவர்களைச் சிந்திக்க வைக்கவேண்டும். ஏன் இவர்கள் நம்மைவிட வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று யோசிக்க வேண்டும். அவர்கள் அநேக பிரச்சனைகளோடு இருப்பார்கள். அந்தப் பிரச்சனைகளுக்கு வழியே தெரியாமல் இருப்பார்கள். மனக் குழப்பங்கள் ஏற்பட்டு தற்கொலைகள் கூடச் செய்து கொள்ளுவார்கள். வெளியே அவர்கள் சொல்லாவிட்டாலும் அவர்கள் விடுதலையைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். நாம் ஞானத்தோடு அவர்கள் முன்பாக நடக்கும்போது அவர்கள் நம்மிடம் உதவி கேட்கும்படியான நிலையை ஆண்டவர் ஏற்படுத்துவார். நம் வாழ்க்கை ஒழுங்கில்லாததாக இருக்குமானால் சுவிசேஷக் கதவு நமக்குத் திறக்காது!
காலத்தைப் பிரயோஜனப்படுத்துங்கள்
நாம் புறம்பே இருக்கும் மக்களுக்கு முன்பாக ஞானமாக நடப்பதுமட்டுமல்ல, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளும்படியாகப் பவுல் சொல்லுகிறார். “புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.” (கொலோசெயர் 4:5). அதாவது காலத்தை மீதப்படுத்தி, அதைப் பலனுள்ளதாக மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார். அப்படியென்றால் அதற்கு என்ன அர்த்தம்? நாம் இந்த உலகத்தில் அநேக நாட்கள் இருக்கப்போவதில்லை, இந்த உலகம் முடியும்வரை இங்கு இருக்கப்போவதில்லை. நாம் இருக்கப்போகிற கொஞ்ச நாட்களும் மிகவும் அவசியமானவை. நாம் ஒவ்வொருவரும் எப்போது இந்த உலகத்தைவிட்டுக் கடந்து செல்லப்போகிறோம் என்பதை ஆண்டவர் ஏற்கனவே தீர்மானித்திருக்கிறார். அது எவ்வளவு நாட்கள் என்பது நமக்குத் தெரியாது. அது அடுத்த நிமிடமாகவோ, அடுத்த நாளாகவோ, அடுத்த வாரமாகவோ கூட இருக்கலாம். அதனால்தான் நாம் இருக்கப்போகிற காலம் கொஞ்சக் காலமென்று சொல்லுகிறோம்.
நாம் வாழப்போகின்ற கொஞ்சக் காலத்தில் நாம் அநாவசியமான காரியங்களைத் திட்டம் போட்டுச் செயல்பட்டுக்கொண்டிருந்தால் ஆண்டவருடைய காரியங்களை நாம் செய்ய முடியுமா? அந்தக் கொஞ்சக் காலத்திலும் வேலைக்குப் போகவேண்டும், குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும். அதெல்லாம் அவசியந்தான். அதற்கு மேலாக நாம் திருச்சபை வாழ்க்கைக்கு நம்மை ஒப்புக்கொடுத்து சபைக்கு விசுவாசமாக இருக்கவேண்டும். நம் கிறிஸ்தவ வாழ்க்கையை முறையாக வாழவேண்டும், கிறிஸ்துவின் சுவிசேஷம் பரவுவதற்கு தனிப்பட்ட விதத்திலும், சபை மக்களோடு இணைந்தும் நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். நாம் பள்ளியில் படித்தாலும், கல்லூரியில் படித்தாலும், வேலை செய்யும் இடத்தில் இருந்தாலும், வீட்டில் இருந்தாலும் எங்கிருந்தாலும் சுவிசேஷம் சொல்லவேண்டுமென்ற எண்ணமும், சுவிசேஷத்தை வெளிப்படுத்துவதற்கான காரியத்தையும் ஏதோவொரு விதத்தில் நாம் செய்யாமல் இருக்கக்கூடாது.
கிறிஸ்தவனாக சுவிசேஷத்தை நாம் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டுமானால் அதற்குக் காலத்தை மீதப்படுத்த வேண்டும். அதையே பவுல் பிரயோஜனப்படுத்த வேண்டும் என்ற வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் கொலோசெயர் 4:5ல் விளக்குகிறார். உண்மையில் இதற்கான கிரேக்க வார்த்தை ‘மீதப்படுத்துதல்’ என்ற அர்த்தத்தையே கொண்டிருக்கிறது. எழுத்துபூர்வமாகப் பார்த்தால், ‘நேரத்தை வாங்கும்படி’ இந்த வசனம் சொல்லுகிறது. அதாவது, நேரத்தை அநாவசியமாக வீணாக்காமல் அதைச் சேர்த்துப் பிரயோஜனமான காரியங்களைச் செய்ய வேண்டும் என்கிறார் பவுல்.
நம்மில் அநேகர் காலத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறோம். கணினியும், கைபேசியும் அதோடு சேர்ந்த இணையமும் நம்மத்தியில் இருப்பதால் அவற்றில் அதிக நேரத்தை வீணடிக்கிறோம். சமூக வலைதளங்களை சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி நேரத்தை வீணாக்குகிறோம். அதனால் பக்கத்தில் இருப்பவர்களோடு பேசுவதற்குக்கூட எவருக்கும் நேரமில்லை. ஒருவரோடு நாம் பேச முடியவில்லை என்றால் சுவிசேஷத்தை நாம் சொல்ல முடியாது. மனிதனோடு மனிதனுக்கு இன்று உறவு இல்லாமல் போய்விட்டது. கணினியின் மீதோ, கை பேசியின் மீதோ, இணையத்தின் மீதோ தவறில்லை. தவறு நம்மீதே இருக்கிறது. மனுஷனுடைய இருதயம் மோசமாக இருப்பதனால் எந்தப் புதிய கருவிகள் வந்தாலும் அவை ஆபத்தற்றவையாக இருந்தாலும் அவற்றை மனிதன் தவறாகவே பயன்படுத்துகிறான். அதனால் நேரத்தை இன்று அதிகமாக வீணாக்குகிறோம். ஆகவேதான் ஆண்டவர் காலத்தை மீதப்படுத்து என்கிறார் (Buy time). நம் வீட்டிற்கு அருகில் இருக்கும் மக்களுக்கு சுவிசேஷத்தைச் சொல்லவேண்டுமானால் அவர்களுக்கு நேரத்தைக் கொடுக்க நாம் எங்காவது நேரத்தை மீதப்படுத்தினால்தானே அது முடியும்? நமக்கிருக்கின்ற நேரத்தில் நீதியானவற்றை நல்ல முறையில் உரிய நேரத்தில் செய்து நேரத்தை மீதப்படுத்தி, மீதப்படுத்திய நேரத்தைத் தேவனுடைய ராஜ்யத்திற்கு உரிய பணிகளைச் செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் சுவிசேஷம் பரவ ஆரம்பிக்கும்.
கிருபையும், ஆவிக்குரிய பயனுமுள்ள பேச்சு
மேலும் பவுல் சொல்லுகிறார் “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.”(கொலோசெயர் 4:6). நாம் ஞானமாய் நடந்து, நேரத்தை மீதப்படுத்தி யாருக்காவது போய்ச் சுவிசேஷத்தை சொன்னாலும், அதை நம் பேச்சால்தான் சொல்லுவோம். வாயைத் திறக்காமல் ஒருவருக்கும் சுவிசேஷம் சொல்ல முடியாது. ஆகவே நம் பேச்சு எப்போதுமே கிருபை பொருந்தினதாக இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளின் பேச்சு தேவனை நினைவுபடுத்துவதாக இருக்க வேண்டும். நம் பேச்சு எப்படி இருக்கிறது, யாரோடு எவ்வாறு பேசுகிறோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சபையில் இருந்தாலும் சிலநேரங்களில் சபை மக்கள் பேச்சு சரியாக இருப்பதில்லை. நம் பேச்சு கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாகவும் இருக்க வேண்டும். உணவில் உப்பு இல்லை என்றால் சாப்பிட முடியுமா? உணவிற்கு உப்பு அவசியமானதாக இருக்கிறது. உப்பு உணவின் ருசியை அதிகரிக்கிறது. பேச்சில் உப்பு இருக்கவேண்டுமென்று பவுல் சொல்லுவது, நாம் பேசுவது கேட்பவருக்கு நல்ல பலனைக் கொடுக்ககூடிய விதத்தில் அமைய வேண்டுமென்கிறார். தேவையற்ற, பொருளற்ற வீண் பேச்சுகளை நாம் பேசக்கூடாது. பவுல், ‘அவனவனுக்கு இன்னின்னபடி’ என்று சொல்லும் போது, ஒவ்வொருவருடைய தேவைகளுக்கு ஏற்றவிதத்தில், அவர்களுடைய பிரச்சினைகளுக்குப் பதில் சொல்லும்படியாக, தேவனுடைய வார்த்தைகளில் ஞானத்தைப் பெற்று சரியானபடி விளக்கி அவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது.
பவுல் எத்தனை உயரிய விஷயத்தை இங்கு விளக்குகிறார் என்பதைப் பாருங்கள்! முதலில் அவர் சிறையிலிருந்து தான் தெளிவாகப் பேசும்படித் தனக்காக ஜெபம் பண்ணும்படிக் கேட்கிறார். இரண்டாவதாக, வெளியிலிருக்கும் மக்களுக்கும் கடமைப் பொறுப்பு இருப்பதனால் அவர்களும் வாழ்க்கையைச் சரியாக வாழ்ந்து, ஞானமாய் நடந்து, பேச்சு கிருபை பொருந்தின பேச்சாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறார். பவுல் இங்கு விளக்கும் காரியங்களுக்காக நம் நேரத்தைக் கொடுத்து நம்மைத் தயார் செய்து, கிறிஸ்துவை மையமாகக்கொண்டு அனைத்துக் காரியங்களையும் செய்யவில்லை என்றால் ஒருநாளும் சபை ஆவிக்குரிய விதத்தில் வளர முடியாது. இங்கு பவுல் சொல்லுகிறபடி நாம் ஜெபத்தில் தங்கியிருந்து, சரியானபடி வாழ்ந்து, சத்தியத்தை சரியான விதத்தில் சொல்லுகிறபோது மனுஷனுடைய கண்களை ஆண்டவர் நிச்சயம் திறப்பார், அவர்களுடைய இருதயத்தில் ஒளியேற்றுவார், அவர்களுடைய பாவத்திலிருந்து விடுதலையைக் கொடுப்பார். அவ்வாறு விடுதலையைப் பெற்றவர்கள் தங்கள் கழுத்தை வெட்டினாலும் கிறிஸ்துவுக்காகத்தான் வாழுவேன் என்று சொல்லுவார்கள். அவர்கள் மனுஷர்களால் சேர்க்கப்பட்ட மக்கள் அல்ல, தேவனால் சேர்க்கப்பட்ட மக்களாக இருப்பார்கள். அத்தகையோரைக் கொண்டிருக்கும்போதுதான் சபை மெய்யாக வளருகின்றது என்பதற்கு அடையாளம். அதனால்தான் ரோமர்கள் என்ன பண்ணினாலும் பவுலை அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவர்களால் பவுலின் சுவிசேஷ வைராக்கியத்தையும் பாரத்தையும் பாதிக்க முடியவில்லை. நெருப்புப் போல பரவிக்கொண்டிருந்த சுவிசேஷ ஊழியங்களையும், சபை வளர்ச்சியையும் அவர்களால் தடுக்க முடியவில்லை. அதற்குக் காரணமென்ன? அது உண்மையான தேவனுடைய ஊழியமாக, தேவனுடைய மக்களைக்கொண்டு நடந்த ஊழியமாக இருந்தது.
நீங்கள் தேவனுடைய பிள்ளைகளா?
நாம் தேவனுடைய மக்களா? எத்தகைய கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இன்றைக்கு அநேகர் சபைக்கு வந்ததும் அங்கத்துவராக வர ஆசைப்படுகிறார்கள். அங்கத்துவராக வந்தபிறகு ஒரு ஆராதனைக்கு மட்டுமே வரமுடியும் என்கிறார்கள். தங்களை ஆண்டவருடைய பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள், ஆனால் ஆண்டவருக்கே புத்தி சொல்லுகிற மாதிரி நடந்து கொள்ளுகிறார்கள். அத்தகைய அரைகுறைக் கிறிஸ்தவமே நம் மத்தியில் காணப்படுகிறது. ஆரம்பத்தில் தங்கள் வாழ்க்கையே ஆண்டவருக்குத்தான் என்பார்கள், போகப் போக வாழ்க்கையில் ஐந்து வீதத்தைக்கூட ஆண்டவருக்குக் கொடுப்பதில்லை. காரணம் கேட்டால் சாக்குப் போக்குகளை அள்ளிவைப்பார்கள். வேலைக்குப் போக வேண்டும், படிக்க வேண்டும் இன்னும் எத்தனையோ சாக்குப்போக்குகளை முன்வைப்பார்கள். அவற்றையும் ஆண்டவர் இல்லாமல் செய்ய முடியாது என்பதை அவர்கள் உணருவதில்லை. கர்த்தருக்காக வாழுகிறோமென்றால் வாழ்க்கையில் அனைத்தையும் கர்த்தருடைய வார்த்தையின்படி செய்யப்பார்க்க வேண்டும், அதுதான் உண்மையான விசுவாச வாழ்க்கை. எப்போது கர்த்தரின் பணியையும், உலக விஷயங்களையும் வெவ்வேறாகக் கணித்து உலக விஷயங்களை சுயநல சுகத்திற்காகச் செய்து, கர்த்தரின் பணிக்கும் போனால் போகிறது என்று சிறிது நேரத்தைக் கொடுத்து இரட்டை வாழ்க்கை வாழப்பார்க்கிறோமோ அப்போது கர்த்தரின் ஆசீர்வாதம் நம்மோடு இருக்காது. நாம் உலகத்து மக்களைப் போல மாறிவிடுவோம். பவுல் உலகத்து மக்களைப்போல வாழ்ந்ததே இல்லை. இந்த உலகத்தில் இருந்தபோதும் அவர் கிறிஸ்துவுக்காக வாழ்ந்தார். அவர் நிறுவின சபை மக்களும் அப்படித்தான் இருந்தார்கள்.
நீங்கள் யாரென்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் உண்மையான கிறிஸ்தவரா? இயேசுவை உண்மையிலேயே விசுவாசிக்கிறீர்களா? இயேசுவால் உங்கள் இருதயம் மாற்றப்பட்டிருக்கிறதா? இயேசுவுக்காக அனைத்துக் காரியத்தையும் செய்து வருகிறீர்களா? இயேசுவுக்காக உங்கள் நேரத்தைப் பயன்படுத்தி அவரை மகிமைப்படுத்துகிறீர்களா? தேவனுடைய ராஜ்யம் வளருவதற்காக நீங்கள் என்ன பங்களிக்கிறீர்கள்? உங்களுடைய வாழ்க்கை, பேச்சு, நடத்தை ஆகியவை எந்தவிதமான பங்களிப்பை அதற்களிக்கிறது? தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கிறதா? அல்லது உலகத்து ராஜ்யம் முக்கியமானதாக இருக்கிறதா? நாம் இருக்கப்போவது கொஞ்சக்காலம். நாம் இருக்கிற அந்தக் காலத்தில் ஆண்டவர் நம்மிடம் அதிகம் எதிர்பார்க்கிறார். வாலிபர்களிடமும் ஆண்டவர் அவ்விதமாகவே எதிர்பார்க்கிறார்.
நீங்கள் இன்னும் கிறிஸ்துவை அறியாமல் இருந்தால் உடனடியாக இயேசுவிடம் வாருங்கள். இளமையிலேயே இயேசுவிடம் வருவது மிகவும் ஆசீர்வாதமானது. வாழ்க்கையை இயேசுவின் வார்த்தையின் அடிப்படையில் வாழ அதுவே வழி. சிறு வயதிலேயே ஆண்டவரிடம் வந்துவிட்டால் செய்கிற பாவங்கள் குறையும், கிறிஸ்தவ வாழ்க்கையில் அதிகமாக வளர முடியும். ஆகவே இயேசுவை அறியாதவர்களாக நீங்கள் இருந்தால் முதலில் அதற்கு வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுங்கள். ஆண்டவர் இல்லாமல் இருக்கிற வாழ்க்கை கிட்டத்தட்ட நரகம் மாதிரிதான். ஆண்டவர் இல்லாமல் சமாதானம் இருக்காது, ஆனால் உலகம் கொடுக்கிற போலித்தனமான சமாதானம் இருக்கும். உலக வாழ்க்கை முடிந்த பிறகு போகிற இடம் நரகமாகத்தான் இருக்கும். பொய் எப்போதும் பிசாசின் ஆயுதம். அவன் எப்போதும் பொய் சொல்லிக்கொண்டே இருப்பான், ஏதேனில் ஆதாம் ஏவாளை ஏமாற்றினான். இப்போது கூட இங்கு நீங்கள் வாசிப்பதை நம்பாதே என்றுதான் அவன் உங்களுக்கு சொல்லிக்கொண்டு இருப்பான். நீங்கள் அவனுடைய பேச்சைக் கேட்காதீர்கள், ஆண்டவர் பேச்சைக் கேளுங்கள். என்னிடம் நீங்கள் வந்தால் உங்கள் பாவங்களுக்கு நான் விடுதலையைக் கொடுக்கிறேன் என்று இயேசு சொல்லுகிறார். நீங்கள் பாவியென்று உணர்ந்து என்னிடம் வரும்போது உங்களுக்கு மறுபிறப்பைக் கொடுக்கிறேன் என்கிறார். உங்களைப் புதிய மனிதனாக மாற்றி எனக்காக வாழுகிற வாழ்க்கையைக் கொடுப்பேன் என்கிறார். அதை இயேசு மட்டுமே செய்ய முடியும். அவர் உங்களோடிருந்து உங்களை வழிநடத்துகிறபோது துன்பங்கள் கூட இன்பமாக இருக்கும். காலத்தை வீணாக்காமல் ஆண்டவரிடத்தில் வாருங்கள்.
நடிப்பா? நம்பக்கூடிய மனந்திரும்புதலா?
2 இராஜாக்கள் 5:15-19
இந்த ஆக்கத்தில், 2 இராஜாக்கள் 5:15-19 வரையுள்ள வசனங்களை நாம் ஆராயப் போகிறோம். முந்திய இதழில் ஆண்டவர் எப்படி சீரியனான நாகமானுக்கு அவனுடைய குஷ்டரோகத்திலிருந்து விடுதலையைக் கொடுத்தார் என்று கவனித்தோம். எலிசா தீர்க்கதரிசியின் மூலமாக ஆண்டவர் அவனுடைய நோயைக் குணமாக்கினார். அதுமட்டுமில்லாமல் அவனுடைய இருதயத்தின் நோயையும் குணமாக்கினார் என்பதை அறிந்துகொண்டோம். நாம் கவனிக்கப்போகின்ற இந்தப் பகுதி நாகமானைப் பற்றிய மேலதிகமான விவரங்களை நமக்குத் தருகிறது. இந்தப் பகுதி, நாகமான் எவ்வாறு ஆண்டவரை விசுவாசித்து அவரை ஆராதிக்கின்ற மனிதனாக மாறினான் என்பதை நமக்கு விளக்குகிறது.
அக்காலத்தில் இஸ்ரவேலில் தேவனை விசுவாசித்தவர்கள் மிகக் குறைவு. அதுமட்டுமல்லாமல் அங்கே புறஜாதி தெய்வ வழிபாடுகளும் அதிகரித்துக் காணப்பட்டன. தேவனுடைய ஆலயத்திற்குப் போகிறவர்களும் அருகிப் போயிருந்தார்கள். ஆலய வழிபாட்டில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. மேலும் சத்தியத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் அதைவிட்டு விலகிப் போனவர்களும் அதிகரித்திருந்தார்கள். இதற்கு மேலாக நாட்டில் பஞ்சமும் நிலவியது, அடிமைத்தனமும் அதிகரித்துப் போயிருந்தது. இம்மாதிரியான ஒரு நிலைமை நாட்டில் இருந்தபொழுதும் கர்த்தர் தன்னுடைய கிருபையின் மூலமாக தன்னுடைய மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். இங்கு நாகமானுடைய மனந்திரும்புதலை நாம் கவனிக்கிறோம். அந்த மனந்திரும்புதல் கர்த்தருடைய கிரியையாக இருந்தது. இஸ்ரவேலில் பெரும்பாலானவர்கள் ஆண்டவரைவிட்டு விலகியோடியிருந்த அந்த வேளையில், அந்த தேவன் புறஜாதி நாட்டிலிருந்த ஒரு மனிதனுக்குத் தன்னை வணங்கும்படியான ஒரு பெரிய ஆசீர்வாதத்தைக் கொடுத்தார். எருசலேமிலிருந்து இஸ்ரவேல் நாடு முழுவதும் ஆண்டவரை ஆராதிப்பதை உதவாத செயலாக அநேகர் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், சீரியாவில் உருவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஒரு புறஜாதிக்காரனாகிய நாகமானுக்கு தன்னை வணங்கக்கூடிய ஆசீர்வாதத்தை ஆண்டவர் கிருபையாய் அளித்தார் என்பதைக் கவனிக்கிறோம்.
இந்த வசனங்களிலிருந்து நான்கு காரியங்களை ஆராய்வோம்:
- நாகமானின் மனந்திரும்புதல்
- நாகமான் சொன்ன வார்த்தைகள்
- நாகமானின் பிரச்சினை
- எலிசாவின் பதில்
- நாகமானின் மனந்திரும்புதல்
நாகமானின் மனந்திரும்புதல் மனிதனுடைய சித்தத்தின் காரணமாக நிகழாமல் கர்த்தருடைய கிருபையின் மூலமாக பரிசுத்த ஆவியினுடைய கிரியையினால் நிகழ்ந்ததென்பதை நாம் கவனிக்க வேண்டும். எந்தவிதத்திலும் மனிதனுடைய செயலாலோ அவனுடைய முயற்சியாலோ அல்லது அவனுடைய சிந்தனையின் வல்லமையாலோ அது நிகழவில்லை. அது 100 வீதம் கர்த்தருடைய கிருபையினால் பரிசுத்த ஆவியின் மூலமாக நிகழ்ந்த காரியம். நாகமான் இஸ்ரவேலின் தேவனை விசுவாசித்த செயலை உலக சிந்தனையின்படிப் பார்க்கிற பொழுது அப்படிச் செய்வது அவசியமில்லை என்பதற்கான எத்தனையோ காரணங்களை நாம் அடுக்கடுக்காக முன்வைக்கலாம். அதாவது, மனித சிந்தனையின்படிப் பார்க்கிறபோது அவன் ஏன் இஸ்ரவேலின் தேவனை விசுவாசிக்க வேண்டும்? அதற்கு அவசியமே இல்லை என்று சொல்லக்கூடிய காரணங்கள்தான் அதிகமாக இருந்தன. அவை என்னவென்று சிந்திப்போம்.
நாகமான் ரிம்மோனில் இருந்த ஆலயத்தில் புறஜாதி தெய்வங்களான பாகாலையும், வேறு தெய்வங்களையும் வழிபட்டு வந்தவன். அவன் இஸ்ரவேலினுடைய தேவனிடத்தில் வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அடுத்ததாக, இஸ்ரவேல் ஒரு அடிமை நாடாக சீரியாவின் கையில் இருந்தது. அது ஒரு மகிமையான மகத்துவமான நாடாக இருக்கவில்லை. ஒரு அடிமை நாட்டுத் தெய்வத்தை நாடி அவன் ஏன் வரவேண்டும்? அதுமட்டுமில்லாமல் இஸ்ரவேல் யூதா என்ற அந்த இரண்டு ராஜ்ஜியங்களிலும் இருந்த அரசர்கள் மிகவும் பலவீனம் உள்ளவர்களாக, வல்லமை இழந்தவர்களாக, புறஜாதிக்காரர்களால் தூற்றப்படுகிறவர்களாக இருந்தார்கள். அப்படியான அரசர்கள் இருந்த நாட்டுக்கு இவன் ஏன் வரவேண்டும்? அதுவுமில்லாமல் சீரிய அரசனாக இருந்த பெனாதாத் இஸ்ரவேலை தாக்கி, இஸ்ரவேலிலிருந்த வலிமையானவர்களை எல்லாம் சிறைப்பிடித்து தன் நாட்டில் கொண்டு போய் வைத்திருந்தான். அதுவும் நாகமானுக்கு நன்றாகத் தெரியும்.
அநேக இஸ்ரவேலர்கள் புறஜாதி தேசங்களான சீரியாவிலும் பாபிலோனிலும் சிறைவாசம் வைக்கப்பட்டிருந்தார்கள். இதுவும் போதாதென்று ஏற்கனவே சொன்னது போல இஸ்ரவேலில் பஞ்சமும் நிலவியது. சாப்பாட்டுக்கு வழியில்லை. தீர்க்கதரிசியுடைய புத்திரர்களுக்குக் கூட உணவுக்கு வழியில்லை. நாட்டில் வார்த்தைப் பஞ்சம் நிலவியது. சத்தியத்தை கேட்பதற்கு ஒருவரும் இல்லை. அந்தக் காலத்தில் சத்தியம் அருகிக் காணப்பட்டதைக் காண்கிறோம். அதுமட்டுமில்லாமல் மக்களிடம் பக்திவிருத்தி இல்லை. எங்கு உருவ வழிபாடுகள் இருக்கிறதோ அங்கு உண்மையான பக்தி விருத்தியைப் பார்க்க முடியாது. உருவ வழிபாட்டோடு சேர்ந்த சீரழிந்த வாழ்க்கையைத்தான் மக்கள் வாழ்வார்கள். அதுவும் நாட்டில் அதிகரித்துக் காணப்பட்டது. எருசலேம் ஆலய ஆராதனையை மக்கள் கைவிட்டு அநேக காலமாயிருந்தது. இதெல்லாம் நாகமானுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அந்த நிலையில் இஸ்ரவேலுடைய தேவனை அவன் ஏன் வணங்க வேண்டும், ஏன் விசுவாசிக்க வேண்டும்? உண்மையிலேயே நாகமான் தன்னுடைய மனித ஞானத்தின் மூலமாக இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்திருந்தால் அவன் இஸ்ரவேலின் பக்கம் தலைவைத்தே படுத்திருக்கமாட்டான். அவன் இஸ்ரவேல் தேவனை விட்டு எவ்வளவோ தூரம் ஓடிப் போயிருக்க வேண்டும். ஆனால் இது மனித ஞானத்தினால் நடந்த காரியம் இல்லை. அதையெல்லாம் மீறி கர்த்தர் தன்னுடைய கிருபையை இந்த நாகமானுக்குக் காட்டியதால்தான் அவன் அந்த தேவனை விசுவாசித்தான். நாகமானுடைய வாழ்க்கை அன்றே முழுமையாக மாறிவிட்டது. அதைப் பரிசுத்த ஆவியானவர் மாற்றினார். நாகமானுக்கு மறுபிறப்பாகிய ஆசீர்வாதத்தை அவர் கொடுத்தார். இதெல்லாம் கர்த்தருடைய மகிமைக்காக நடந்த நிகழ்வுகள்.
இஸ்ரவேலில் எந்த விதத்திலும் சுவிசேஷ பிரசங்கத்திற்கோ, சுவிசேஷ ஊழியத்திற்கோ இடமே இல்லாமலிருந்த அந்த நிலையில், நாகமானுக்கு ஒரு சிறுமியின் மூலமாக ஆண்டவருடைய செய்தி சீரியாவுக்கே போய் அவனை இஸ்ரவேலுக்கு வரவழைத்து கிருபையின் மூலமாக ஆண்டவர் அவனுடைய இருதயத்தை மாற்றினார். இதுதான் நாகமானுடைய மனந்திரும்புதல். ஒவ்வொரு மனந்திரும்புதலும் எந்த மனுஷனுக்கு நேர்ந்தாலும் சரி அது அற்புதமானதுதான். மனந்திரும்புதல் மனிதனால் நிகழ்கிற காரியமல்ல, இது கர்த்தரால் நிகழ்கிற காரியம். அதனால்தான் ஒவ்வொரு மனந்திரும்புதலும் அற்புதமானது என்று நான் சொல்லுகிறேன். ஆண்டவர் மட்டுமே அத்தகைய காரியத்தைச் செய்ய முடியும். அதை அவர் நாகமானுக்குச் செய்தார்.
- நாகமான் சொன்ன வார்த்தைகள்
இரண்டாவதாக, நாம் நாகமானுடைய மனந்திரும்புதல் மட்டுமல்ல அவன் சொன்ன வார்த்தைகளையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவனுடைய மனந்திரும்புதலுக்கு அறிகுறியாக அவன் சாட்சி சொல்லுகிறான். அதை 15வது வசனத்தில் பார்க்கிறோம். “அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிரப் பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.” (2 இராஜாக்கள் 5:15).
இந்த வார்த்தைகளை எலிசா முன்பாக சொன்னான் என்று வாசிக்கிறோம். இது எந்த அளவுக்கு ஒரு உண்மையான மனந்திரும்புலும் விசுவாசமும் நாகமானில் ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அவன் ஒன்றும் அதிகமாகப் பேசவில்லை; வார்த்தைகள் சுருக்கமாகத்தான் இருந்தன. இருந்தபோதிலும் அதில் ஆழமான விஷயங்களை நாம் கவனிக்கிறோம். “இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிரப் பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்”.
ஒருநாளும் ஒரு மனித ஞானத்தோட மனிதனுடைய நிலையிலிருந்து நாகமான் இதைச் சொல்லியிருக்கமாட்டான். ஏனென்று யோசித்துப் பாருங்கள். அதாவது, சாதாரணமாக அந்தக் காலத்தில் சீரியாவில் இருக்கிற ஒருவன் நாகமானிருந்தளவுக்கு மட்டுமே உயர முடியும். அதற்கு மேல் அரசனுடைய பதவி மட்டுமே இருந்தது. அதை ஒருபோதும் அடைய முடியாது. ஆகவே இவன் அரசனுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக, அவனுடைய வலது கையாக இருந்து, நாட்டில் இரண்டாவது பெரிய பதவியில் இருக்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறான். அப்படிப்பட்ட நிலையை அவன் தானே கெடுத்துக்கொள்ளுவானா? கெடுத்துக்கொள்ளமாட்டான். ஏனென்றால் அவன் இவ்வளவு காலமாக ராஜாவாகிய பெனாதாத்துடன் சேர்ந்து ரிம்மோன் ஆலயத்துக்கு போய் பாகாலையும் வேறு தெய்வங்களையும் வழிபட்டு வந்திருந்தான். இப்படியெல்லாம் இருந்த ஒருவன் இன்றைக்குத் தன்னுடைய வாழ்க்கை மாறி, இஸ்ரவேலைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் இருக்கின்ற தேவர்கள் தேவர்களே இல்லை என்று சொல்லுகிறான். இது சீரிய அரசனுடைய காதுக்குப் போனால் எப்படி இருக்குமென்று யோசித்துப் பாருங்கள். ஆனால் அவனால் அவ்வாறு சொல்லக்கூடிய இருதயத்தையும் தைரியத்தையும் கொடுத்தவர் இஸ்ரவேலின் தேவன். இஸ்ரவேலில் இருக்கிற தேவனை தவிர பூமி எங்கும் வேறு தேவன் இல்லை என்று சொல்லுவது, உலகத்தில் வேறு எந்த இடத்திலும் தேவர்கள் இல்லை, இருக்கிறேன் என்று சொல்லியிருக்கின்ற அந்த தேவன் இஸ்ரவேலில்தான் இருக்கிறார் என்று உறுதியாக நாகமான் சொல்லுகிறான். இந்தளவுக்கு உறுதியாக இந்த உலகத்துக்கெல்லாம் தேவனாக இஸ்ரவேலின் தேவன் மட்டும்தான் இருக்கிறார், அவர் சர்வ வல்லவராக இருக்கிறார், அதாவது இறையாண்மையுள்ள தேவனாக இருக்கிறார், அவரைத் தவிர உலகத்தில் வேறு எந்த இடத்திலும், பூமி எங்கும் வேறு தேவன் இல்லை என்று கர்த்தரைப் பற்றிய இறையியலை அருமையாகவும் சுருக்கமான வசனங்களில் அவன் சொல்லுவதைப் பார்க்கிறோம். இது ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையில் இடைபடாமல், அவர் நம்முடைய இருதயத்தையும் சிந்தனைகளையும் மாற்றாமல் ஒருவராலுமே சொல்ல முடியாது. இது மனுஷனிடமிருந்து வருவதில்லை.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சீடர்களைப் பார்த்து மக்கள் என்னைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்டபோது, சிலர், நீர் தீர்க்கதரிசி என்று சொல்லுகிறார்கள், சிலர் நீர் பெரிய போதகர் என்று சொல்லுகிறார்கள் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள். அப்போது நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று ஆண்டவர் கேட்டபொழுது, பேதுரு: நீர் ஜீவனுள்ள தேவனின் ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்று சொன்னான். பேதுரு கிறிஸ்துவைப் பற்றிய இறையியலை விளக்குகிறான். அப்போது இயேசு என்ன சொன்னார்? “இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.” (மத்தேயு 16:17).
சீமோனே இது உனக்கு மனுஷனிடத்திலிருந்து வரவில்லை, இது பரலோகத்திலிருந்து உனக்குக் கொடுக்கப்பட்டது. பரலோகத்திலிருந்து வந்தால் மட்டும்தான் ஒரு மனுஷனால் இம்மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த முடியும் என்று இயேசு சொன்னார்.
இன்று நாம் சிலரைப் பார்த்து, ஆண்டவரை விசுவாசிக்கிறேன் என்று சொல்லுகிறீர்களே, அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்று கேட்டால் அவர்கள் வார்த்தைகளை ஒழுங்குபடுத்தி, கோர்வைப்படுத்தி சொல்லுவதற்குள் நாம் படுக்கைக்குத் தூங்கவே போய்விடலாம். அவர்களுக்குத் தெளிவாக ஆண்டவர் யாரென்று சொல்லத் தெரியவில்லை, தெளிவாக அந்த ஆண்டவர் எனக்கு என்ன செய்திருக்கிறார் என்று சொல்ல முடியவில்லை. இதையெல்லாம் கவனிக்காமல் இன்று போதகர்கள் அவர்களிடம் விசுவாசம் இருக்கிறது என்று நம்பி ஞானஸ்நானமும் கொடுத்துவிடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? சீமோனுடைய வார்த்தைகள் சத்தியமான வார்த்தைகள்: நீர் ஜீவிக்கிற தேவனுடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்து.
இங்கே நாகமான் இஸ்ரவேலில் இருக்கின்ற தேவனைத் தவிர பூமி எங்கும் வேறு தேவன் இல்லை என்பதை அறிந்தேன். இது உங்கள் நம்பிக்கையாக இருக்கிறதா? எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, வேறெந்த தேவனுக்கும் வேறெந்த உருவங்களுக்கும் மனதிலும் இருதயத்திலும் வாழ்க்கையிலும் இடம் கொடுக்காமல், அவர் மட்டுமே ஜீவனுள்ள தேவன், அவர் மட்டுமே சர்வ வல்லவராக இருக்கிறார், அவர் மட்டுமே முழுப் பரிசுத்தராக இருக்கிறார், அவர் மட்டுமே நீதி உள்ளவராக இருக்கிறார், அந்த தேவனை விசுவாசித்து அவருடைய கட்டளைகளைப் பின்பற்றி அவருக்காக மட்டுமே வாழ்க்கை நடத்துகிறவர்களாக இருக்கிறீர்களா? அதுதான் விசுவாசம். இதைத்தான் நாகமான் இந்த ஒரு வாக்கியத்தில் தெளிவாக எலிசாவுக்கு முன்பாக அன்றைக்கு சொன்னான் என்று பார்க்கிறோம். இவ்விதமாக சொல்லுவதற்கு அவனுக்கு எந்தவிதமான கூச்சமோ, தயக்கமோ இருக்கவில்லை. இதை அவன் எலிசாவைத் தனியாகக் கூப்பிட்டுச் சொல்லவில்லை. அவன் தன் கூட்டத்தோடு எல்லாம் தேவ மனுஷனிடத்தில் திரும்பி வந்தபோது இதை அறிவித்தான் என்று வாசிக்கிறோம்.
இதெல்லாம் நிகழ்வதற்கு முன் அவன் பல்லக்கிலிருந்து இறங்க மறுத்தான். எலிசா தன்னைப் பார்ப்பதற்கு ஆள் அனுப்பி இருக்கிறானே, அவன் இந்தளவுக்கு என்னை அவமதித்திருக்கிறான், எலிசாவே இறங்கி வந்து எனக்கு கொடுக்க வேண்டிய சகல மரியாதையும் கொடுத்துப் பேசி இருக்க வேண்டும், அப்படிச் செய்யவில்லை என்பதற்காக மகா கோபம் கொண்டு திரும்பிப் போக நினைத்தவன் இப்போது என்ன செய்கிறான்? அவன் யோர்தான் நதியில் போய் ஏழுமுறை முழுகி எழுந்தது மட்டுமல்ல, தன்னோடு வந்த எல்லோரையும் கூட்டிக்கொண்டு எலிசா இருந்த அந்த மேட்டில் ஏறிப்போய், அவருடைய சின்ன வீட்டுக்குள் தலை குனிந்து உள்ளே போய், அவருக்கு முன்பாகப் பணிந்து, இந்த வார்த்தைகளை அவன் சொல்லுகிறான். இது உண்மையான மனந்திரும்புதலுக்கும் விசுவாசத்திற்கும், தாழ்மைக்கும் அடையாளமாக இருக்கிறது. இதுவே மெய்யான விசுவாச அறிக்கை.
சுவிசேஷ நூலில் ஒரு இடத்தில் ஆண்டவர் ஒரு பிறவிக் குருடனின் கண்ணைத் திறந்துவிட்டார். யூதர்களுக்கு அது பிடிக்கவில்லை. உடனே அவனுடைய பெற்றோர்களை அவர்கள் மிரட்டிப் பார்த்தார்கள். அவனுடைய பெற்றோர்கள் அவர்களிடம், அவன் வயதுள்ளவனாக இருக்கிறான் அவனிடமே கேளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். பின்பு யூதர்கள் அவனுக்குத் தொல்லை கொடுத்தார்கள். என்னென்னவோ கேள்விகளையெல்லாம் கேட்டு சட்டத்தரணிகளைப் போல அவனுடைய வாயை மடக்கப் பார்த்தார்கள். அவன் மகா தைரியத்தோடு நீங்கள் என்ன பேசி என்னைக் குழப்பப் பார்க்கிறீர்கள்? எனக்கு நடந்த காரியத்தை என்னால் சொல்லாமல் இருக்க முடியுமா? அந்த இயேசு கிறிஸ்து என் கண்களைத் திறந்துவிட்டார் என்று சொன்னான். அவன் சொன்ன வார்த்தைகளில் எத்தனை உண்மைகள் இருக்கின்றன தெரியுமா! அதனால்தான் அவனையும் அவன் பெற்றோரையும் ஜெப ஆலயத்திலிருந்து யூதர்கள் வெளியே தூக்கிப் போட்டு விட்டார்கள். அவன் எதற்கும் பயப்படவில்லை. ஒருவன் தன் வாழ்வில் நடந்த காரியத்தை எவ்வாறு இல்லை என்று சொல்ல முடியும்? இஸ்ரவேலில் இப்படி ஒரு காரியம் நடந்திருக்கிறதா? என்று அவன் தைரியத்தோடு கேட்டான். பேதுருவைப் பார்த்தோம், குருடனைப் பார்த்தோம், இங்கே நாகமானைப் பார்க்கிறோம்.
உண்மையாகவே ஆண்டவருடைய கிருபையினால் பரிசுத்த ஆவியின் மூலமாக விசுவாசத்தை அடைந்தவர்கள் இதுபோலப் பேசுவார்கள். நம் ஊரில் ஒருவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்த பின் அவன் நான்கு மாதம் சபையில் தங்கியிருந்தாலே பெரிய காரியம். பல இடங்களில் அது தான் நிகழ்கிறது. ஏனென்றால் அவனுக்குப் படியரிசி கொடுத்து, கையில் கொண்டு போவதற்கு ஒரு கைப்பையைக் கொடுத்து, எதையெதையோ செய்து அவனைக் கூட்டத்திற்குக் கூட்டிக்கொண்டு வர வேண்டியிருக்கிறது. அவ்வாறு வந்தவனை ஆண்டவருக்காக ஒரு தீர்மானம் எடுக்க வைப்பதற்கு எத்தனை டிராமா பண்ணுகிறார்கள். சில நேரங்களில் அவன் கேட்பதற்கு முந்தியே ஞானஸ்நானம் கொடுத்துவிடுகிறார்கள். இதற்குப் பெயர் ஊழியமென்று சொல்லுகிறார்கள். ஆனால் தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது, தேவன் கிரியை செய்கிறபோது அதை யாரும் நிராகரிக்க முடியாது. அது கர்த்தர் செய்கின்ற ஒரு காரியம். அதைக் கிருபையின் அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அற்புதத்தின் வெளிப்பாட்டைத்தான் நாகமானுடைய வார்த்தைகளில் கவனிக்கிறோம்.
- நாகமானின் பிரச்சினை
இனி அடுத்ததாக, இந்த வேதப்பகுதியில் ஒரு பிரச்சினை காணப்படுவதைப் பார்க்கிறோம். “அப்பொழுது நாகமான்: ஆனாலும் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை. ஒரு காரியத்தையே கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக; என் ஆண்டவன் பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும்போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணியவேண்டியதாகும்; இப்படி ரிம்மோன் கோவிலில் நான் பணியவேண்டிய இந்தக் காரியத்தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக என்றான்.” (2 இராஜாக்கள் 5:17-18)
இதை வாசிக்கிறபோது இவ்வளவு நேரம் அவனுடைய சாட்சியைப்பற்றி சொன்னவற்றையெல்லாம் கவிழ்த்து விடுகிற மாதிரி அவன் பேசுகிறானே என்று உங்களுக்குத் தோன்றும். இங்கு இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. முதலாவது, நாகமான் இஸ்ரவேலிருந்து மண்ணை சீரியாவுக்கு கொண்டு போக அனுமதி கேட்டது. இரண்டாவது, ரிம்மோன் கோயிலுக்கு அரசனோடு போகிறபோது அங்கு பணிந்து கொள்ளுவதற்கு அவன் அனுமதி கேட்டது. இந்த இரண்டையும் நாம் எப்படி விளங்கிக்கொள்ளுவது? இதை வாசிக்கிற சிலர்: ஆண்டவரை விசுவாசித்தாலும் வாழ்க்கையில் நாம் எல்லா காரியங்களையும் விட்டு விடவேண்டிய அவசியமில்லை என்று சொல்லுவார்கள். நாகமான் இவ்வாறு கேட்டதற்கு எலிசா எதுவும் மறுப்புச் சொல்லவில்லையே, ஆகவே, ஆங்காங்கு தேவையான இடத்தில் சமரசம் செய்யவேண்டியது அவசியந்தான் என்பார்கள். முழுமையாக கர்த்தருக்காக இந்தப் பாவமுள்ள உலகத்தில் வாழ்ந்துவிட முடியாது, யார் இந்த வாழ்க்கையில் பூரணமாக வாழ்ந்துவிட முடியும்? அங்கங்கு குறைகள் இருக்கத்தான் செய்யும். ஆகவே சில காரியங்களைப் பொறுத்தவரையில் நாம் சமரசம் செய்து வாழுவதை வேதம் அனுமதிக்கிறதென்று சொல்லி இந்த வசனத்தை நமக்குச் சுட்டிக் காண்பிப்பார்கள். ஏனென்றால் இங்கு எலிசா நாகமான் கேட்டவற்றைச் செய்ய அனுமதி கொடுத்திருக்கிறார் என்று சொல்லுவார்கள். உண்மையிலேயே வேதம் அதைத்தான் இங்கு சொல்லுகிறதா? அவ்வாறு சமரசம் செய்து ஆண்டவருடைய பெயரைச் சொல்லி வாழுகிறவர்கள் சரியானதைத்தான் செய்கிறார்களா? இந்தக் கேள்விக்கு நாம் பதில் கண்டுபிடிக்க வேண்டும்.
முதலாவதாக, நாகமான் இரண்டு கோவேறு கழுதைகள் தூக்குற அளவுக்கு சீரியாவுக்கு மண்ணைக் கொண்டு போகக் கேட்டது சரியா? அவ்வாறு கொண்டுபோகக் கேட்டதற்கு காரணம், தான் ஏற்கனவே கொண்டிருந்த வழிபாடுகளைத் தொடர்ந்து செய்வதற்கு இது அறிகுறியாக இருந்ததா எனும் கேள்வி எழுகிறது. அதற்கு ஆம் என்று பதில் சொன்னால் அதுக்கு ஆதரவாக முழு வேதத்திலும் எங்கேயும் ஆதாரத்தைப் பார்க்க முடியாது. வேதம் அவ்வாறு சமரசம் செய்துகொள்ளும்படிச் சொல்லவில்லை. இந்தப் பகுதியை நாம் கவனமாக வாசித்து பார்க்கிற பொழுது 15 வது வசனத்தில் நாகமான் சொன்ன வார்த்தைகள் உண்மையான வார்த்தைகள் என்று காண்கிறோம். “இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிரப் பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்;”
அறிந்தேன் என்று சொன்னால் உணர்ந்தேன் என்று அர்த்தம். அது ஒரு விசுவாச அறிக்கை. அதில் எந்தவிதமான குழப்பமோ மாற்றமோ இல்லாமல் அவனுடைய உண்மையான மனந்திரும்புதலைக் காட்டுகிறது. அவ்வாறு சொன்னதன் மூலம் அவன் அன்றைக்கே புற தெய்வங்களுக்கு அதாவது உருவ வழிபாடு நடத்துவதற்குத் தன்னுடைய இருதயத்திலும் வாழ்க்கையிலும் இடமளிக்க மாட்டேன் என்று முடிவு கட்டிவிட்டான். இதற்கு மேல் அவன் எந்தவொரு தேவர்களுக்கும் பலி கொடுக்கப் போவதில்லை, அவைகளை வணங்கவும் போவதில்லை. அவனுடைய மனந்திரும்புதலை பற்றிய வார்த்தைகள் அதைத் தெளிவாகச் சொல்லுகின்றன. ஆகவே நாகமான் ஆண்டவரை விசுவாசித்த பிறகு தன்னுடைய பழைய வாழ்க்கைக்குத் திரும்பிப்போகிறான் என்று இந்த வசனங்களை வாசித்துத் தவறாக விளங்கிக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் இந்த வசனங்களை வேதத்திலிருக்கிற ஏனைய பகுதிகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்துதான் ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஆகவே இவன் அனுமதி கேட்டது எதற்கு என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இவன் நிச்சயமாக தன்னுடைய பழைய வாழ்க்கைக்குத் திரும்பி போவதற்கான முடிவுகளை இங்கு எடுக்கவில்லை.
நாகமான் அவ்வாறு கேட்டதற்கு முதலாவது காரணம், இஸ்ரவேலுடைய தேவனை அவன் அறிந்து அவருடைய கிருபையினால் விசுவாசிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்கிறான். யாருடைய வாழ்க்கையில் ஆண்டவர் இந்தவிதமாகக் கிரியை செய்கிறாரோ அவர்களுக்கு ஒரு பெரிய ஆனந்தம் ஏற்படும். அந்த ஆனந்தத்தோடு ஒரு துடிப்பும் வைராக்கியமும் ஏற்படும். அதுதான் ஆண்டவருடைய உண்மையான கிருபையின் செயல்களுடைய விளைவுகள். ஆகவே நாகமான் அவ்விதமான ஒரு வைராக்கியத்தோடும் துடிப்போடும் புதிதாகக் கண்டுகொண்டிருக்கிற தேவனை என் நாட்டுக்குப் போய் எந்தவிதமாக ஆராதித்து வாழவேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறான். ஏன்? இஸ்ரவேலினுடைய தேவன் வேறு எல்லாவற்றையும் விட அவனுடைய வாழ்க்கையில் முக்கியமானவராக இப்போது வந்துவிட்டார். ஆகவே இவனுடைய செயல்களை வைத்து நாம் அவனைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.
அடுத்ததாக, நாகமான் இஸ்ரவேலுக்கு பலமுறை வந்து போயிருந்திருப்பான். இஸ்ரவேலை சீரியாவுக்கு அடிமையாகக் கொண்டு வருவதற்கான படையை நடத்தி வந்தவனே நாகமான்தான். ஆகவே நாகமானுக்கு இஸ்ரவேலர்கள் வணங்கிய கடவுள் யார், இஸ்ரவேலர்கள் அந்த கடவுளுக்கு என்னவிதமான ஆராதனை நடத்தியிருக்கிறார்கள் என்பதை எல்லாம் அவன் அறிந்து வைத்திருந்தான். அவன் எதுவும் தெரியாதவனாக இருக்கவில்லை. ஆகவே இனிமேலும் தன்னுடைய வாழ்க்கையிலே தான் இதுவரையும் வணங்கி வந்த உருவ வழிபாட்டை அவன் திரும்பவும் நடத்தப் போவதில்லை. ஆகவே அவன் இங்கு என்ன செய்கிறான்? இஸ்ரவேலர்கள் இஸ்ரவேலின் தேவனுக்கு எந்தவிதமாக தகன பலிகளையெல்லாம் கொடுத்து ஆராதித்தார்களோ அதையெல்லாம் இந்த யெகோவா தேவனுக்குத் தானும் செய்யவேண்டும் என்று துடிப்போடு இருந்தான். அவன் சீரியாவுக்குத் திரும்பிப்போன பிறகு, அந்நாட்டில் இருந்தபோதும் இஸ்ரவேலின் தேவனைத் தவிர பூமி எங்கும் வேறு தேவன் இல்லை என்று சொல்லும்படியாகத் தன்னுடைய வாழ்க்கை இருக்க வேண்டும், தான் அங்கிருந்து அந்த தேவனை ஆராதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்போது இந்த முயற்சிகளையெல்லாம் எடுக்கிறான். அவன் அங்குத் திரும்பிப் போன பிறகு தன் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு பலிபீடத்தைக் கட்டி இருப்பான். பலிபீடத்தைக் கட்ட ஆண்டவர் பழைய ஏற்பாட்டில் அனுமதி கொடுத்திருந்தார். சிலை வைத்து வணங்குவதே தவறு. முதலாவது கட்டளை அதை அடியோடு வெறுக்கிறது. ஆனால் ஆண்டவருக்கு பலிபீடத்தைக்கட்டி ஆராதனை செய்வதற்கும் பலி கொடுப்பதற்கும் ஆண்டவர் அனுமதி கொடுத்திருந்தார். ஆகவே இவன் அங்கு போய் ஆராதனைக்காக ஒரு பலிபீடத்தைக் கட்டி பலி செலுத்தி ஆராதனை செய்திருப்பான். அதுமட்டுமல்ல சீரியாவுக்குப் போய் இஸ்ரவேலின் தேவனுக்கு தான் கொடுக்க வேண்டிய காணிக்கைகளைக் கொடுத்து, தான் கொடுக்க வேண்டிய லேவியராகமத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற அத்தனை பலிகளையும் செய்ய வேண்டும் என்பதில் அவன் துடிப்பாக இருந்தான். அவன் ஆனந்தத்தோடு தான் என்னென்ன காரியங்களைச் செய்யவேண்டும் என்று ஆராதனை விஷயங்களில் தன்னை வழிநடத்தும்படி எலிசாவைக் கேட்டுக்கொண்டான். ஆகவே இவன் எந்தவிதத்திலும் இறையியல் சமரசம் செய்வதற்காக எலிசாவிடம் அனுமதி கேட்கவில்லை.
உதாரணத்திற்கு, புதிதாக உண்மையாகவே விசுவாசியாக வந்த ஒருவனைக் கவனியுங்கள். அவன் எப்படி இருப்பான்? ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளுவதற்குத் துடிப்பாக இருப்பான். நம் சீர்திருத்த பாப்திஸ்து சபைகளில் ஒருவர் வந்து அவ்வாறு சொன்னால், அவருடைய கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றி அறிந்து கொள்ளுவதற்காக கலந்துரையாட வேண்டுமென்று சொல்லுவோம். பிறகு அதற்கான வகுப்புகளை எடுப்போம். ஏனென்றால் அவரை ஞானஸ்நானத்திற்குத் தயார்செய்ய வேண்டும். ஞானஸ்நானம் என்று கேட்டவுடனே வெறுமனே தண்ணீரில் தாழ்த்தி எடுத்துவிடக்கூடாது. அதற்கான வகுப்புகளில் எல்லாம் அவர் கலந்து கொள்ளுவதற்கு ஆர்வமாக இருப்பார். திருச்சபையில் இணைவது பற்றியும், தன் கடமைகளை எவ்வாறு செய்வது என்பது பற்றியும் தெரிந்துகொள்ள முயல்வான். ஓய்வுநாள் பற்றிய சத்தியங்களை நாம் சொல்லிக் கொடுத்தால் அதைத் தெரிந்துகொண்ட பிறகு தேவபயத்தோடு ஓய்வுநாளைக் கடைபிடிப்பான். ஒரு கிறிஸ்தவனாகத் தான் வேலை செய்யுமிடத்தில் எப்படி வாழ வேண்டும்? மற்றவர்களோடு எப்படிப் பேச வேண்டும்? தன் பணிகளை எவ்வாறு செய்யவேண்டும் என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ளப் பார்ப்பான். இதைத்தான் நாகமானின் வாழ்க்கையில் நாம் பார்க்கிறோம். அவன் இஸ்ரவேல் நாட்டு மண்ணைக் கேட்டது, அதைக்கொண்டு போய் ஆண்டவருக்காக ஒரு பலிபீடத்தைக் கட்டி அந்த இஸ்ரவேலின் தேவனை அந்த மக்களும் அறிந்துகொள்ளும்படியாகத்தான் ஆராதிக்க வேண்டும் என்பதற்காகதான்; சிலை வழிபாட்டில் ஈடுபடுவதற்காக அல்ல. அவனுடைய வேண்டுகோள் எந்தவிதத்திலும் விசுவாசத்திற்கு முரண்பாடாக நடந்து கொள்வதற்காக அல்ல. நாகமான் உண்மையிலேயே மனந்திரும்பிய ஒரு மனுஷன்.
இரண்டாவதாக, அவன் ரிம்மோன் ஆலயத்திற்குப்போய் அங்கு தன்னுடைய அரசனோடு பணிந்து கொள்ளுவதற்கு அனுமதி கேட்பதைப்பற்றி என்ன சொல்லுவது? 18 வது வசனத்தில் “ஒரு காரியத்தையே கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக; என் ஆண்டவன் பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும்போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணியவேண்டியதாகும்; இப்படி ரிம்மோன் கோவிலில் நான் பணியவேண்டிய இந்தக் காரியத்தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக என்றான்.”
ஒரு சிலர் இங்கு விளக்கப்பட்டிருப்பதைக் கடந்த காலத்தில் வாசிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். அதாவது அவன் ஏற்கனவே செய்து முடித்த ஒரு காரியத்தை மன்னிக்க வேண்டும் என்று கேட்டதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் இங்கு சொல்லப்பட்ட வார்த்தைகள் கடந்த காலத்தைச் சேர்ந்தவையல்ல. அதாவது அது நடந்து முடிந்ததைக் குறிக்கும் இலக்கண அமைப்பில் அந்த வார்த்தைகள் அமைந்திருக்கவில்லை. அவன் எதிர்காலத்தில் தான் செய்யவிருக்கும் செயலுக்குத்தான் அனுமதி கேட்கிறான். 18 வது வசனத்தில் அவன் சொல்லியிருக்கும் காரியத்தை நாம் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். சில விரிவுரையாளர்கள் சொல்லுவதுபோல இது கடந்த காலத்தில் சொல்லப்படவில்லை. அது தவறு. நம் மேலெழுந்தவாரியாக இவ்வசனத்தை வாசிக்கின்றபோது அப்படித் தெரிந்தாலும் அது 15 வது வசனத்தை அடியோடு தூக்கி எறிந்துவிடும். நாகமானுடைய வாழ்க்கையில் நடந்திருக்கும் கிருபையின் காரியத்தையே அசிங்கப்படுத்துவதாகிவிடும். ஆகவே ஏற்கனவே சொல்லப்பட்டிருப்பதற்கு முரணாக இந்த வசனங்களுக்கு நாம் விளக்கங் கொடுக்கக் கூடாது.
அப்படியானால் இங்கு என்னதான் நடக்கிறது? அரசனுக்கு ஒரு பணியாளாக, அவனுக்கு அடுத்தபடியாக உயர் அதிகாரத்தில் இருந்து நாட்டில் செய்யவேண்டிய கடமைகளை இனி கிறிஸ்தவனாக இருந்து, அதாவது யெகோவா தேவனை விசுவாசித்தவனாக இருந்து எப்படிச் செய்வது என்பதைத்தான் நாகமான் எலிசாவிடம் கேட்கிறான். இவன் சீரியப் படைகளுக்குத் தலைவன்; இராணுவ ஜெனரலாக இருக்கிறான். சீரிய அரசனுக்கு இவன் வலது கையாக இருக்கிறான். வலது கையாக இருக்கிறதென்றால் எந்த விஷயத்திற்குமே சீரிய ராஜா நாகமானைப் பார்த்து அவனிடந்தான் ஆலோசனை கேட்பான். ஆகவே அரசன் எங்கே போனாலும் நாகமானும் போவான். அரசன் ரிம்மோன் ஆலயத்துக்குப் போய் வழிபடுகிறபோது நாகமான் நிச்சயமாக அவனோடு அங்கு போகவேண்டும்; போகாமல் இருக்க முடியாது. அப்படிப் போகிறபொழுது ரிம்மோன் ஆலயத்தில் இருக்கின்ற தெய்வத்தை அரசன் பணிந்து வணங்குகிறபொழுது அவன் பக்கத்திலிருக்கிற நாகமான் தோளில் கையை வைத்து முழங்காலிட்டு வணங்குவான். இந்த நேரத்தில் நாகமான் நான் இஸ்ரவேலின் தேவனைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்று சொல்லி, நெஞ்சை நிமிர்த்தி குனியாமல் இருந்தால் அரசன் எவ்வாறு முழங்கால் போடுவது? அரசன் முழங்கால் போட்டு வணங்குகிற நேரம் தனக்கு ஆதரவிற்காக நாகமான் தோளில் கையை வைப்பான். அப்போது நாகமானும் குனிய வேண்டியிருக்கும். அது அவனுடைய கடமைப் பொறுப்பாகும் (Civil duty). அப்படிக் குனிவதால் அவன் தன் அரச கடமையைத்தான் செய்கிறானே தவிர சிலை வணக்கத்தில் ஈடுபடவில்லை. இதைச் செய்யமாட்டேன் என்று நாகமான் மறுத்தால் தன் கடமையை அவன் மறுப்பது போலாகிவிடும். இதற்கும் உருவ வழிபாட்டிற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இது அந்த அரசனுக்குக் கைலாகு கொடுக்கிற ஒரு காரியமே தவிர அவனோடு அந்த வழிபாட்டில் சம்பந்தப்படுகிற காரியமில்லை.
நிச்சயமாக நாகமான் சீரியாவுக்குப் போன பின்பு தனக்கு மனமாற்றம் கிடைத்ததை சீரிய அரசனுக்குதான் முதலில் சொல்லப்போகிறான். சீரிய அரசன்தான் அதிகமான பரிசுப் பொருட்களையெல்லாம் கொடுத்து, இஸ்ரவேல் அரசனுக்கு அதிகாரபூர்வக் கடிதத்தையும் தந்து இவனை அனுப்பி வைத்தான்? அந்தச் சீரிய அரசன் இவனுக்குக் குணமாகிவிட்டதா இல்லையா என்று அறியக் காத்திருப்பான் அல்லவா? நாகமானும் அதை எவ்வளவு ஆனந்தத்தோடும் தைரியத்தோடும் பெருமையோடும் திரும்பிப் போய்ச் சொல்லியிருப்பான் தெரியுமா? ஏனெனில் அவனுக்கு இனிமேல் பயமில்லை. இனி அவன் இஸ்ரவேலின் தேவன் ஒருவருக்குத்தான் பயப்படுவான். ஆகவே இப்போது எலிசாவிடம் என்ன கேட்கிறான்? அரசனுக்கு என்னுடைய நாட்டுப் பொறுப்பைச் செய்யவேண்டுமே, அரனோடு போய் அந்த ஆலயத்தில் பணிந்து கொள்ளலாமா? கூடாதா? அது இஸ்ரவேலின் தேவனை நான் விசுவாசிப்பதற்கு இடையூறாக இருக்குமா? அதைத்தான் அவன் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான். எலிசா நாகமானிடம் அதை நீ செய்யக்கூடாது என்று சொல்லியிருந்தால் நிச்சயமாக அவன் செய்திருக்கமாட்டான். அன்றே தன் பதவியைக்கூட இஸ்ரவேலின் தேவனுக்காக அவன் உதறியிருப்பான். ஆனால் எலிசா அதற்கு மறுப்புச் சொல்லவில்லை. அதற்குக் காரணமென்ன? அவன் செய்யப்போவது அரசனுக்குச் செய்யப்போகிற ஒரு கடமையே தவிர, அதற்கும் உருவ வழிபாட்டுக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை. ஆகவே இங்கு நாகமான் ஒரு கிறிஸ்தவனாக யெகோவா தேவனை எந்தவிதத்திலெல்லாம் நான் வழிபட வேண்டும், தன் வாழ்க்கையில் ஆலய ஆராதனையிலும், சமுதாய வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் மற்ற எல்லாவிதமான காரியங்களிலும் கிறிஸ்தவ கட்டளைகளைப் பின்பற்றி எவ்வாறு நடந்து கொள்வது என்பதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டான். அதைப் பற்றித்தான் அவன் எலிசாவோடு இங்கு பேசிக்கொண்டிருக்கிறான்.
இன்றைக்கு இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களை நீங்கள் எங்காவது பார்க்கிறீர்களா? எந்த விஷயத்திலும், அது ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அதிலும் கூட தேவனுடைய கட்டளைகளின்படி நடக்க வேண்டுமே, அதை எப்படிச் செய்வது என்று கேட்கிறவர்களை சபையில் பார்த்திருக்கிறீர்களா? ஆண்டவரைப் பிரியப்படுத்தி வாழ்வதற்காக எவ்வளவு துடிப்பாக நாகமான் இருக்கிறான் என்பதைப் பாருங்கள். இதுவல்லவா உருவ வழிபாட்டுக்கு முடிவு கட்டின ஒரு மனுஷனுடைய வாழ்க்கை! உங்கள் வாழ்க்கை அப்படி இருக்கிறதா? ஆகவே நாகமான் இங்கு சிலை வணக்கத்திற்கு அனுமதி கொடுங்களென்று கேட்கவில்லை. அதற்கு எப்போதோ அவன் முடிவு கட்டிவிட்டான். ஆனால் நம்முடைய ஆண்டவரை சீரிய நாட்டிலிருந்து என் வேலை செய்கிற இடத்தில் கூட, அவருக்கு எந்தவிதமான கலங்கமும் வந்துவிடாமல் அதை சரியாகச் செய்ய வேண்டும், வீட்டில் இருக்கிற பொழுதும் வேறெங்கு இருந்தாலும் யெகோவா தேவனுக்கு விசுவாசமாக எப்படி வாழுவது? அதற்கு நீங்கள் ஆலோசனை சொல்லுங்கள், அதையெல்லாம் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றுதான் நாகமான் கேட்கிறான்.
- எலிசாவின் பதில்
இப்போது எலிசாவினுடைய பதிலைப் பார்ப்போம். 19வது வசனத்தில் “அதற்கு அவன்: சமாதானத்தோடே போ என்றான்;” (2 இராஜாக்கள் 5:19). இது மிகவும் சுருக்கமான பதிலாகும். அதற்கு என்ன அர்த்தம்? நாகமான் என்ன கேட்கிறான் என்பது எலிசாவுக்கு நன்றாகப் புரிந்திருந்தது. அவன் பழைய உருவ வழிபாட்டுக்கு திரும்பி போவதற்கோ, வேறு ஏதாகிலும் சமரசம் செய்து கொள்ளவோ அனுமதி கேட்கவில்லை என்பதும், நாகமானின் உள்ளத்திலிருந்த எண்ணங்கள் என்ன என்பதெல்லாம் எலிசாவுக்கு நன்றாகப் புரிந்திருந்தது. நாட்டில் அரசனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நான் ஒரு விசுவாசியாக எப்படிச் செய்வது? என்றுதான் கேட்டான். ஆகவே எலிசா நீ சமாதானத்தோடு போ என்றார். சிலர், எலிசா ஒரு தீர்க்கதரிசியாக இங்கு உலகத்தோடு சமரசம் செய்துகொள்வதற்கு அனுமதி கொடுக்கிறார் என்று சொல்லுவார்கள். அவ்வாறு சொல்வது தவறு. தேவ மனிதனாகிய எலிசா ஒருநாளும் அவ்வாறு செய்யமாட்டார். இந்த 2 இராஜாக்கள் நூல் முழுவதையும் வாசித்துப் பார்த்தாலும் எலிசா அந்தவிதமாக எங்கும் செயல்பட்டிருக்கவில்லை என்பதை அறியலாம். அவர் பத்துக் கட்டளைகளை உடைக்க மாட்டார். அவர் தேவனுடைய தீர்க்கதரிசி. அதுமட்டுமில்லாமல் இஸ்ரவேலில் ஒரு போலித் தீர்க்கதரிசி கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. எலிசா ஆண்டவருடைய மெய்யான தீர்க்கதரிசி. இவ்வாறுதான் எலிசாவினுடைய நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே எலிசாவுக்கு நாகமானுடைய சிந்தனை, அவனுடைய பேச்சு எல்லாம் நன்றாகத் தெரிந்தது. நாகமானுக்கு இருந்த ஆர்வத்தையும் துடிப்பையும் வைராக்கியத்தையும் எலிசா நன்றாகப் புரிந்து கொண்டார். ஆகவேதான் எலிசா நீ அமைதியாக சமாதானத்தோடு போ என்று சொல்லுகிறார்.
நாகமான் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிப் போனபிறகு அவன் நிச்சயமாக தேவனுக்கு விசுவாசமுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவான் என்ற ஒரு நம்பிக்கை எலிசாவுக்கு நிச்சயமாக இருந்தது. ஆகவே இந்த வசனங்களை வைத்து நாம் தவறான எண்ணங்களுக்கு இடங்கொடுத்துவிடக்கூடாது. ஏனென்றால் நம் தேவன் உருவ வழிபாட்டை அடியோடு வெறுக்கிற தேவனாக இருக்கிறார். நாம் பார்க்கிற இந்த நாகமான் ஒரு புதிய மனிதன், தேவனை அறிந்து கொண்ட மனிதன், அவரை விசுவாசிக்கிற மனிதன். அவன் வைராக்கியத்தோடு தன் நாட்டுக்கு சென்று தன்னுடைய ஆண்டவரை எப்படி வழிபட வேண்டும் என்று கேட்டுக் தெரிந்துகொள்வதில் அவன் அக்கறை காட்டினான்.
பயன்பாடுகள்
முதலாவதாக, சிலை வணக்கம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அது முதலாவது கட்டளைக்கு எதிரானது. நம் நாட்டிலுள்ள சபைப் போதகர்கள் பத்துக் கட்டளைகளைச் சொல்லித் தருகிறதில்லை. அது என்னவென்று அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான் வேதனையான காரியம். பத்துக் கட்டளைகளைச் சுருக்கமாக தமிழில் சீர்திருத்த வெளியீடுகள் மூலம் வெளியிட்டிருந்தோம். அதன் பிரதிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அதனைச் சற்று விரிவாக்கம் செய்து வெளியிடலாமென்று யோசித்திருக்கிறேன். அதற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் தொமஸ் வொட்சன் என்ற பியூரிட்டன் பெரியவர் மிக அருமையாக பத்துக் கட்டளைகளைப் பற்றி ஒரு பெரிய நூலை வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதை வாங்கி வாசித்துப் பயனடையுங்கள். ஒவ்வொரு கட்டளைகளிலும் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன தெரியுமா? அந்த ஒவ்வொரு கட்டளைகளும் சுருக்கமான கட்டளைகளாக இருந்தாலும் அந்தக் கட்டளைகளில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எத்தனையோ காரியங்கள் அடங்கியிருக்கின்றன. இவற்றையெல்லாம் ஆராய்ந்து படித்து சபைப் போதகர்கள் மக்களுக்குத் தெளிவாகப் போதிக்க வேண்டும். எங்கள் நாட்டில் உருவ வழிபாடு இல்லை. உருவ வழிபாடாக இருக்கும் வேறு காரியங்கள் இருக்கின்றன. மக்கள் பணத்தை நேசிப்பார்கள், பொருளை நேசிப்பார்கள், தன் வேலையை நேசிப்பார்கள். அவைகள் உருவ வழிபாடாக மாறிவிடலாம்.
இந்தியாவில் நடந்ததொரு சம்பவத்தைச் செய்தியில் பார்த்தேன். அதில் 15 வயசு பிள்ளைக்கு குடும்பமே சேர்ந்து திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பிறகு அந்தக் குடும்பத்தை காவல்துறை கைது செய்துவிட்டார்கள். இதெல்லாம் எங்கிருந்து வருகிறது? இதெல்லாம் சாதியினால் உருவானவை. பிள்ளைகள் பிறந்தவுடனேயே திருமணம் நிச்சயம் செய்துவிடுகிறார்கள். பிறகு திருமண வயது வருவதற்குள்ளேயே திருமணத்தையும் செய்கிறார்கள். இதெல்லாம் மிகவும் மோசமான ஒழுக்கக்கேடான செயல்கள் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆண்டவருடைய கட்டளைகள் இதையெல்லாம் அடியோடு வெறுக்கிறது, ஒழுக்கக்கேடாகக் கணிக்கிறது. பத்துக் கட்டளைகள் இல்லாமல் உருவ வழிபாடுகள் நிறைந்த சிலைவழிபாட்டுச் சமூகத்தையும், அதனால் சிதலடைந்து போய் காணப்படும் காரியங்களையெல்லாம் எப்படி அகற்ற முடியும்? அதிலேயே வளர்ந்து ஊறிப்போயிருக்கும் உற்றார் உறவினர்கள், நீங்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் தங்களோடு இந்த விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள உங்களை வற்புறுத்துவார்கள். ஆகவே சபை போதகர்கள் கட்டளைகளையெல்லாம் படித்து ஜனங்களுக்குப் போதித்து வழிநடத்த வேண்டும். புதிதாக விசுவாசிகளாக வருகிறவர்களையும் இதன்படி நடக்கிறவர்களாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். அது போதகர்களுடைய ஒரு கடமையாக இருக்கிறது. பத்துக் கட்டளைகள் உருவ வழிபாட்டை அடியோடு வெறுக்கிறது. அதனால்தான் ஆரம்பத்திலேயே நான் மட்டுமே ஜீவனுள்ள தேவன், என்னைத் தவிர நீ எவரையும் உன்னுடைய வாழ்க்கையில் எதையும் தேவனாக பார்க்க கூடாது என்று சொன்னார். அதுமட்டுமல்ல வானத்துக்கு மேலேயும் பூமிக்குக் கீழேயும் கடலுக்குக் கீழேயும் எந்த ரூபத்திலும் எதையும் வைத்து நீ என்னை வணங்க கூடாது என்றார். உன் இருதயத்திலும், உன்னுடைய சிந்தனையிலும், உன்னுடைய வாழ்க்கையிலும், உன்னுடைய செயல்களிலும் நான் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என்றார்.
நம்மினத்தில் கிறிஸ்தவம் மிகவும் வைராக்கியத்தோடு, ஒரு வலிமை உள்ளதாக ஆவியானவருடைய கிரியைகளை எல்லாம் பார்க்கக் கூடியதாக இல்லாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? அது கிறிஸ்தவம் என்கிற பெயரில் இருந்தாலும் மிகவும் சிதலடைந்து காணப்படுகிறது. அதில் உண்மை இல்லாமல் இருக்கிறது. ஆலயத்திற்கு போவதும், பாட்டுப் பாடுவதும், ஜெபம் பண்ணுவதுமாக ஆத்துமாக்கள் இருக்கிறார்களே தவிர, அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் வேதத்திற்கு முரணாக இருக்கிறபோது பரிசுத்த ஆவியானவர் அருகில் வருவார் என்று நினைக்கிறீர்களா? அவர் வரமாட்டார். உண்மையான கிறிஸ்தவத்தை நாம் ஜோடனை செய்து உருவாக்க முடியாது. அந்த ஆண்டவர் நம் மத்தியிலும், சபை மத்தியிலும் இருக்க வேண்டுமானால், இஸ்ரவேல் ஆண்டவருடைய வார்த்தையை விட்டு விலகிப் போனது போலப் போகாமல், அந்த வார்த்தைக்கு உண்மையாக இருந்து விசுவாச வாழ்க்கை வாழ வேண்டும். அப்போதுதான் பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் இருப்பார். எது உங்களுக்கு முக்கியம்? இயேசுவுக்காக வாழுகிறோமென்று பொய்யாக சொல்லிக்கொண்டிருப்பதா? அல்லது பரிசுத்த ஆவி நம் மத்தியில் இருக்கிறார், நம்முடைய வாழ்க்கையில் இருக்கிறார் என்பது எல்லாருக்கும் தெரிவதுபோல் வாழ்வதா? அவ்விதம் வாழ்வதற்கு பத்துக் கட்டளைகளை நீங்கள் வாசிக்க வேண்டும், அதைக் குறித்து சிந்திக்க வேண்டும், அதன்படி வாழ்க்கையை வாழ வேண்டும். சிலை வணக்கம் எந்த ரூபத்தில் இருந்தாலும் முதலாவது கட்டளைக்கு எதிரானது.
இரண்டாவதாக, விசுவாசத்தை எந்த விதத்திலும் ஒரு சமரசப் போக்குக்கு ஒப்புக்கொடுத்து அசிங்கப்படுத்த கூடாது. நாம் விசுவாசியாக வந்த பிறகு நம் விசுவாசத்தைக் கெடுக்கும் விதமாக புறஜாதிப் பண்பாட்டுக் காரியங்களையெல்லாம் நம் இனத்தவர்கள் நம்மைச் செய்ய வைக்கப் பார்ப்பார்கள். பெற்றோர்களில் ஆரம்பித்து உறவினர்கள் வரை ஒருநாள் விட்டு ஒருநாள் பிரச்சினைகள் வரும். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நாகமான் என்ன செய்தானோ அந்த விதமாக நீங்கள் இருக்கப் போகிறீர்களா? வேதத்தை சரியாகப் படித்துத் தெரிந்துகொண்டு இதிலிருந்தெல்லாம் எப்படி விலகி நிற்பது, இதற்கெல்லாம் வாழ்க்கையில் இடம் கொடுக்காமல் என்னுடைய மனைவி, என்னுடைய பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றி கொள்வது என்பதையெல்லாம் அறிந்துகொள்ளுங்கள். சில நேரங்களில் ஞாயிற்றுக்கிழமை நாளில்தான் அவர்கள் ஒரு திருமணத்தை வைப்பார்கள். இல்லையென்றால் ஏதாவது திதி வைப்பார்கள். இல்லாவிட்டால் வேறு ஏதாவது விசேஷம் நடத்துவார்கள். உங்களையும் கூப்பிடுவார்கள். என்ன செய்வீர்கள்? சரி பாதி நேரத்தை ஆண்டவருக்குக் கொடுத்துவிட்டு, பாதி நேரத்தில் அவர்களோடு சமாதானமாக இருந்துவிடலாமென்று இருக்கப் போகிறீர்களா? அதுதான் ஓய்வுநாளை அனுசரிக்கும் விதமா? அப்படியென்றால் ஆண்டவர் ஓய்வுநாளை பாதிநாளாக அனுசரி என்று சொல்லியிருப்பாரே!
முழுநாளையும் அவர் அனுசரிக்கும்படிக் கேட்கிறார், அவருக்கு அரைநாளை மட்டும் கொடுப்பதற்கு நம் மனசு இடம் கொடுக்கலாமா? நன்றாக யோசித்துப் பாருங்கள். அவ்வாறு நாம் சென்றால் நாம் விசுவாசி என்று பெயர் வைத்துக்கொண்டு சமரச போக்கிற்கு இடங்கொடுத்து விடுகிறோம். ஏனென்றால் உலகமும் நமக்குத் தேவை என்று நினைக்கிறோம். ஆனால் இந்த உலகத்திற்கே நம் ஆண்டவர்தான் தேவன் என்பதை நாம் மறந்து போய்விடுகிறோம். அவரில் வைக்க வேண்டிய நம்பிக்கையை முழுமையாக வைக்காமல் இருக்கிறீர்கள். ஆண்டவர் மேல் உங்கள் நம்பிக்கை எப்படி இருக்கிறது? உலகத்தோடு எந்த விதத்திலும் ஒரு சமரச போக்கிற்கு உங்களை ஒப்புக்கொடுக்கக் கூடாது. அப்படி ஆரம்பித்தால் நீங்கள் தவறான வழியில்தான் போகிறீர்கள். உங்களுடைய மனைவி, பிள்ளைகள் எல்லாரையும் நீங்கள் தவறான வழியில்தான் வழிநடத்துவீர்கள். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நாகமானைப் போல இஸ்ரவேலின் தேவனுக்கு மட்டுமே வாழ்க்கையை நடத்த போகிறீர்களா? அல்லது உலகத்தோடு ஒரு சமாதானம் பண்ணிக்கொண்டு வாழப் போகிறீர்களா? நீங்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
மூன்றாவதாக, உங்களில் யாராவது இன்னும் ஆண்டவரை அறியாமல் இருந்தால் நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் ஆண்டவரின் கிருபை உங்களை இரட்சிக்கும், உங்களுக்கு ஜீவனைக் கொடுக்கும். கிருபை உங்கள் வாழ்க்கையை மாற்றும். இந்த நாகமான் இஸ்ரவேலுக்கு விரோதியாக இருந்தான். அவனுக்கு இஸ்ரவேல் மக்களைப் பிடிக்காது. இருந்தபொழுதும் இஸ்ரவேலின் தேவன் அவனை விரோதியாக பார்க்காமல் அவனுடைய வாழ்க்கையில் இருந்த குறைபாட்டையெல்லாம் பார்த்து அவனுக்கு அன்போடு கிருபையான இரட்சிப்பைக் கொடுத்தார். அவர் அந்த இரட்சிப்பை ஏன் உங்களுக்குக் கொடுக்க மாட்டார்? அவர் கொடுக்கத் தயாராக இருக்கிறார். அவர் அதை இலவசமாகக் கொடுக்கிறார். இன்றைக்கு உங்களை இந்தக ஆக்கத்தை வாசிக்க வைத்து உங்களோடு பேசுகிறவரே அவர்தானே. நீங்கள் அவரைக் குறை சொல்லக்கூடாது. உங்களுடைய இருதயந்தான் கடினப்பட்டுப் போயிருக்கிறது. நீங்கள்தான் அசையமாட்டேன் என்றிருக்கிறீர்கள். நீங்கள்தான் அந்த ஆண்டவரை விசுவாசிக்க மறுக்கிறீர்கள். குற்றமும் குறையும் உங்கள் மேல்தான் இருக்கிறதே தவிர அந்த ஆண்டவர் மேல் இல்லை. நம் ஆண்டவரை எப்போது கூப்பிட்டாலும் அவர் வந்துவிடுவார். நேரம் காலமெல்லாம் பார்க்கத் தேவையில்லை. நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், எங்கிருந்தாலும் அவரைக் கூப்பிடலாம், அவரோடு பேசலாம். அந்த தேவன் அதைக் கேட்பார். உங்கள் தேவைகளை நிறைவேற்றி வைப்பார். ஆகவே தொடர்ந்து உங்கள் இருதயத்தைக் கடினமாக்கி அவரை விட்டுத் தள்ளி நிற்காமல், அந்த நாகமானுக்கு விடுதலை கொடுத்த அந்த அருமையான ஜீவனுள்ள தேவனை, அந்த இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசியுங்கள். அது எவ்வளவு பெரிய கிருபையின் காரியம் தெரியுமா? அதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கிருபைக்கு விலை பேசிய கேயாசி
2 இராஜாக்கள் 5:20-27
இந்த ஆக்கத்தில் 2 இராஜாக்கள் 5 ஆம் அதிகாரத்தின் கடைசிப் பகுதியை ஆராயப் போகிறோம். இந்த அதிகாரத்தின் முதல் வசனம் ஒரு குஷ்டரோகியோடு ஆரம்பிக்கிறது, இந்த அதிகாரத்தின் கடைசி வசனம் இன்னொரு குஷடரோகியோடு முடிவடைகிறது. இதற்கு இடைப்பட்ட வசனங்களில் எத்தனையோ வினோதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றிருப்பதை நாம் வாசிக்கிறோம். முதலாவது வசனம் சொல்லுகிறது, “சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்.” (2 இராஜாக்கள் 5:1). கடைசி வசனம் சொல்லுகிறது, “ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தை விட்டுப் புறப்பட்டுப்போனான்.” (2 இராஜாக்கள் 5:27).
முதலாவது வசனம் சீரியாவின் படைத்தலைவனாகிய நாகமானைக் குறிப்பிடுகிறது. கடைசி வசனம் இஸ்ரவேலைச் சேர்ந்த கேயாசியைக் குறிப்பிடுகிறது. கர்த்தருடைய கிருபை மிகவும் மகத்தானது என்பதை வேதத்தில் காண்கிறோம். அது செய்கின்ற செயல்களும் மிகவும் மகத்தானவை. கிருபைக்கு வெளியில் கிருபையைப் பற்றி எதுவுமே தெரியாமல் வாழ்ந்த நாகமானுக்கு அந்தக் கிருபை கிடைத்தது. அதே கிருபைக்கு மிகவும் அருகிலிருந்து கிருபையின் வினோதங்களைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்த கேயாசிக்கு அந்தக் கிருபை கிடைக்காமல் போயிற்று. மனித வாழ்க்கை எவ்வளவு புதிரானதும் வினோதமானதுமாக இருக்கிறதோ அந்தளவுக்குப் புதிதானதும் விநோதமானதுமாகக் கர்த்தருடைய கிருபை இருக்கிறது. இந்நேரத்தில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? கிருபையை அடைந்து அந்தக் கிருபையில் திளைத்து இன்பம் கண்டுகொண்டிருக்கிறீர்களா? அல்லது கிருபையை அடைந்தவர்களையும், கிருபையை அடைகிறவர்களையும் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தும் அதை அடையாமல் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்களா? நாகமானைப் போல கிருபையை அடைய ஆசைப்படுகிறீர்களா? அல்லது கேயாசியைப் போல கிருபையை இழந்து நிற்கப் போகிறீர்களா?
முதலாவதாக இந்தப் பகுதியில் யார் கேயாசி என்பதைப் பார்ப்போம். இந்தக் கேயாசி எலிசா தீர்க்கதரிசியின் வேலையாளாக இருந்தான். இவனுடைய பெயருக்கு அர்த்தம் இருக்கிறது. கேயாசி என்றால் மறுதலிக்கிறவன் அல்லது நலிவடைந்தவன் என்று அர்த்தம். அவனுடைய பெயரை 2 இராஜாக்கள் 4 ஆம் அதிகாரம் முதல் 8 ஆம் அதிகாரம்வரை பார்க்க முடிகிறது. ஆனால் அதற்குப் பிறகு அவனுடைய பெயரை வேதத்தில் வேறெங்குமே காண முடியாது. இந்தக் கேயாசியைப் பற்றி மூன்று காரியங்களைக் கவனிப்போம். பின்பு அதிலிருந்து கற்றுக்கொள்ளக் கூடிய பாடங்களையும் நாம் கவனிக்கலாம்.
- கேயாசி அனுபவித்த ஆசீர்வாதங்கள்
- கேயாசியின் உண்மையான குணம்
- கேயாசியின் தவறினால் ஏற்பட்ட விளைவுகள்
- கேயாசி அனுபவித்த ஆசீர்வாதங்கள்
முதலாவதாக, கேயாசி அனுபவித்த ஆசீர்வாதங்களைக் கவனிப்போம். இந்தக் கேயாசி யார் என்பதற்குப் பலரும் பலவிதமாகப் பதிலளித்திருக்கிறார்கள். ஒருசிலர், இவன் தீர்க்கதரிசிகளின் புத்திரர்களின் ஒருவனாக இருந்தான் என்கிறார்கள். அந்நாட்களில் எலிசா தீர்க்கதரிசி அநேக தீர்க்கதரிசிகளின் புத்திரர்களைத் தயார் செய்திருந்தார். அவர்கள் ஆண்டவருடைய சத்தியத்தை இஸ்ரவேலில் எடுத்துச் சொல்லுகிறவர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவனாக இவன் இருந்திருக்கலாம் என்கிறார்கள். ஆனால், அதை நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. கேயாசி ஒரு இஸ்ரவேலன் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இந்தக் கேயாசி எலிசா சொன்ன காரியங்களையெல்லாம் உடனே செய்து முடிக்கிறவனாக இருந்தான். இவன் அதில் மிகவும் ஆர்வத்தோடும் துடிப்போடும் ஈடுபட்டான். எப்படி இந்தத் தீர்க்கதரிசிக்கு வேலையாளாக வந்தான் என்பதை வேதம் நமக்குச் சொல்லவில்லை. ஆனால் எலிசா இவனை வேலையாளாகத் தேர்ந்தெடுத்தபோது சாதாரணமாக அவனைத் தெரிந்தெடுத்திருக்கமாட்டார். உண்மையிலேயே அவனைப் பற்றிக் கேள்விப்பட்டு அவனுடைய வாழ்க்கையிலிருந்த சில காரியங்களைக் கவனித்த பின்புதான் தெரிந்தெடுத்திருப்பார். ஆகவே இந்தக் கேயாசி ஆரம்பத்தில் மிகவும் நம்பக்கூடியவனாகவும் உண்மையுள்ளவனாகவும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் எலிசாவோடு பழகுகிற சந்தர்ப்பமும், எலிசாவின் வேலைக்காரனாகவும் இருக்கிற ஒரு சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது.
இந்தக் கேயாசியின் பணி என்ன? எலிசாவின் அத்தனை நடைமுறைத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பது அவனுடைய பணியாக இருந்தது. மேலும் எலிசா எங்கெங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் இவன் பயணம் செய்து அங்கும் அவருடைய தேவைகளை நிறைவேற்றி வைப்பது அவனுடைய வேலையாக இருந்தது. அவ்வாறு பயணம் செய்கிறபோது அதற்குத் தேவையான காரியங்களையெல்லாம் கவனித்து அவரோடு சென்ற மனுஷனாக கேயாசி இருந்தான். அதுமட்டுமல்லாமல் எலிசா தீர்க்கதரிசி யாருக்காவது ஏதாவது ஒரு செய்தியை அனுப்பவேண்டுமென்றால் இந்தக் கேயாசியைத்தான் அப்படியான செய்தியாளனாக அனுப்பியிருக்கிறார். ஆகவே கேயாசி அவனுடைய வாழ்க்கையில் இத்தகைய எத்தனையோ ஆசீர்வாதங்களை ஆரம்பத்திலிருந்தே அனுபவித்திருக்கிறான்.
தேவ மனுஷனாகிய எலிசாவின் அருகிலிருந்து வேதத்தை கேட்கக்கூடியவனாகவும், அந்த வேதத்தின் மூலமாக அநேகரின் வாழ்க்கையில் கிருபை கிடைத்த சந்தர்ப்பத்தைப் பார்க்கக்கூடியவனாகவும் கேயாசி இருந்தான். இப்படியான ஆசீர்வாதங்களை இந்தக் கேயாசி அடைந்திருந்தபோதும், அது அவனுக்கு இன்னும் அதிக பொறுப்புகளையே கொண்டு வந்தது. அநேகருக்கு ஆசீர்வாதங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அதோடு இணைந்து வருகிற பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள். நம் இனத்திலும், குறிப்பாக வாலிபர்களுக்கு எப்படியாவது பெயரெடுக்க வேண்டும், சாதிக்க வேண்டும், மற்றவர்கள் கண்களுக்குத் தெரிவதுபோல் பாராட்டுகளை அடைந்துவிட வேண்டுமென்கிற ஆசையெல்லாம் இருக்கிறது. அதில் தவறொன்றுமில்லை. ஆனால் பொறுப்போடு நடந்துகொள்வதை அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை. ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் அதில் கவனத்தோடு இருக்கவேண்டுமென்பதில் அக்கறை காட்டாமல் இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. ஆசீர்வாதங்கள் பொறுப்பைக் கொண்டுவருகிறது. கேயாசி இப்படியான ஆசீர்வாதங்களைப் பெற்றிருந்ததால் அவன் மிகவும் உண்மையான மனிதனாக, நம்பிக்கைக்கு உரியவனாக இருக்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருந்தது. ஏனென்றால் பெரிய இடத்தில் வேலையும் பதவியும் கிடைக்கும்போது பெரிய அளவில் பொறுப்புக்கள் வந்து சேரும். அந்த வேலைக்கும் பதவிக்கும் ஏற்றவிதத்தில் நாம் நடந்துகொள்ள வேண்டும். அதே போன்ற பொறுப்புகள் கேயாசிக்கும் இருந்தன. இந்தக் கேயாசியைப் பற்றி இந்த அதிகாரத்தில் வாசிக்கிறபோது “தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன்” என்றுதான் வேதம் சொல்லுகிறது. வேதம் இவ்விதம் சொல்லுமானால் அவனுக்கு எந்தளவுக்கு மதிப்பிருந்திருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். வேறு யாருமே இந்தவிதத்தில் வேதத்தில் அழைக்கப்படவில்லை.
கேயாசிக்குக்கு கிடைத்திருந்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முதலாவதாக, தேவனுடைய வார்த்தையைக் கேட்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அவனுக்கு அதிகமாகவே கிடைத்திருந்தது. கேயாசி ஒரு இஸ்ரவேலனாக இருந்தபோதும் அவன் ஒரு விசுவாசியே அல்ல. எலிசாவோடு வேலை செய்ய அவனுக்கு இருந்த திறமைகளைக் கொண்டு அவன் தெரிவுசெய்யப்பட்டிருந்தான், ஆனால் அவ்வாறு தெரிவு செய்யப்படுவதற்கு அவன் கிறிஸ்தவனாக இருக்கவேண்டிய அவசியமில்லை. எலிசா சொன்ன வேலைகளை செய்து கொடுக்க வேண்டும், உண்மையானவனாக நடந்துகொள்ள வேண்டும், பொறுப்புள்ளவனாக இருக்க வேண்டும். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் கூட அந்தளவுக்கு இருப்பதில்லை. ஆனால் கிறிஸ்தவர்களே அவமானப்படுகின்ற விதத்தில் எத்தனையோ அவிசுவாசிகள் அநேக காரியங்களைப் பொறுப்போடு செய்கிறவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்தவர்களாக இருக்கின்ற நாம் அதைப் பார்த்து மாறவேண்டும், கிறிஸ்தவர்கள் என்கிற பெயரை வைத்துக் கொண்டு சுற்றியிருக்கும் மனிதர்களை ஏமாற்றக் கூடாது. நம் வாழ்க்கையில் செய்கிற காரியங்களில் உறுதியிருக்க வேண்டும், ஒழுங்குமுறைகள் இருக்க வேண்டும், அதை நம்பக்கூடிய விதத்தில் செய்து முடிக்க வேண்டும், அவிசுவாசிகளைவிடத் திறமையாக செய்து முடிக்கிறவர்களாக விசுவாசிகள் இருக்கவேண்டும்.
கேயாசிக்கு கிடைத்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் முக்கியமானதொன்று தேவனுடைய வார்த்தையை அதிகமாக கேட்கக்கூடிய வாய்ப்பு. எலிசாவுக்கு அருகிலிருந்து, அவர் தேவனுடைய வார்த்தையை எடுத்துச் சொல்லுகிறபோது இவன் கேட்டிருக்கிறான், அதுமட்டுமல்லாமல் தேவனுடைய வார்த்தை எலிசாவிற்கு வருகிறபோது இவன் கூடவிருந்து அதைக் கேட்டுமிருக்கிறான். எலிசா எத்தனையோ அற்புதங்களைச் செய்தபோது இவன் பக்கத்தில் இருந்திருக்கிறான். ஒரு சில அற்புதங்களை அவர் செய்தபோது இவனையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார். ஆகவே இவன் தேவனுடைய அற்புதங்களை அதிகமாகக் கண்டிருக்கிறான், தேவனுடைய வார்த்தைகளை அதிகமாகக் கேட்டிருக்கிறான். அதுமட்டுமல்ல எலிசா வீட்டிலிருக்கிறபோது எத்தனையோ விஷயங்களை இவனோடு பேசியிருப்பார். இந்தக் கேயாசி தேவனுடைய பிள்ளை இல்லை என்பது எலிசாவிற்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால் சுவிசேஷத்தை அதிகமாக இவனுக்குச் சொல்லியிருப்பார். இவ்விதமான சிறப்புச் சலுகைகள் யாருக்குக் கிடைக்கும்? சிந்தித்துப் பாருங்கள். இஸ்ரவேலில் எலியாவைப் போல தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்தவர், நாடு முழுவதும் அதைக் கொண்டு சென்றவர், மிகப் பெரிய தீர்க்கதரிசி, தேவ மனிதன், அவரோடு கூட இருந்து தேவனுடைய வார்த்தையைக் கேட்பதும், படிப்பதும் எத்தனை பெரிய ஆசீர்வாதம்! அது எத்தனை பெரியதொரு அனுபவம்!
இன்று நமக்கு பியூரிட்டன் பெரியவர்களான ஜோன் ஓவன், ஜோன் பனியன், ஜோன் கல்வின் போன்றோரின் அருகிலிருந்து ஒரு வருடம் அவர்களோடு இருக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்து அவர்கள் போதிக்கக்கூடிய சத்தியங்களையெல்லாம் கேட்கக்கூடிய வாய்ப்பு நமக்கிருந்தால் எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அம்மாதிரியான ஒரு பெரிய வாய்ப்பு இந்தக் கேயாசிக்கு கிடைத்திருந்தது. இப்போதுகூட இந்த ஆக்கத்தை வாசிக்கின்ற உங்களுக்கும் தேவனுடைய வார்த்தையைக் கேட்கிற ஆசீர்வாதத்தைக் கர்த்தர் கொடுத்திருக்கிறார். ஆனால் நம்மில் அநேகர் அதைப் பயன்படுத்திக் கொள்ளுவதில்லை. தேவனுடைய வார்த்தை நம் காதுகளில் விழும்படியாக நம்மைத் தேடி வருகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இன்று உலகில் எத்தனையோ இடங்களுக்கு சுவிசேஷம் இன்னும் போய்ச்சேரவில்லை. எவ்வளவோ மக்கள் மத்தியில் வேதப் புத்தகம்கூட வாசிப்பதற்கு இல்லை. அநேக மக்களுக்கு நல்ல சபைகள் இல்லை; இருப்பவற்றிலும் போதிக்கிறவர்கள் வேதத்தை ஆராய்ந்து பகுத்துப் போதிக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். நல்ல போதகர்களை நமக்கு ஆண்டவர் கொடுத்திருக்கிறபோது நாம் எந்தளவுக்கு அந்த ஆசீர்வாதத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். இந்தக் கேயாசிக்கு சத்தியத்தைக் கேட்கும்படியாக ஆண்டவர் அதிக அளவு கிருபை பாராட்டியிருந்தார். வேதம் கேட்பதிலும், வேத சம்பாஷணைகளில் கலந்துரையாடுவதிலும் ஆண்டவர் இவனுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அருமையான, அதிரடியான பிரசங்கங்களைக் கேட்கும்படி ஆண்டவர் இவனுக்கு உதவி செய்தார். இவன் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, கேயாசியின் வாழ்க்கையில் கிடைக்கப்பெற்ற இன்னுமொரு ஆவிக்குரிய ஆசீர்வாதம், பிதாவாகிய தேவனுடைய தொடர்ச்சியான ஒழுங்குக் கட்டுப்பாடாகும். ஆண்டவருடைய கண்காணிப்பு அவனுக்குக் கிடைத்தது. எலிசா மிகப்பெரிய தீர்க்கதரிசி என்பது நமக்குத் தெரியும். கேயாசி எலிசாவோடிருந்தாலும் குறைபாடுகளுள்ள மனிதனாகவே இருந்தான். அந்தக் குறைகள் பெரிதாக அவனைக் கவிழ்த்துப் போடாதபடிக்கு எலிசா தீர்க்கதரிசி அவனுக்குப் பலவிதங்களில் உதவி செய்திருப்பார்; அடிக்கடி திருத்தியிருந்திருப்பார். கேயாசி ஒரு காரியத்தைச் செய்கிறபோது அவன் கவனமாக இருக்கவேண்டிய காரியங்களில் எலிசா எச்சரித்திருந்திருப்பார். இந்த மாதிரியான ஒழுங்குக் கட்டுப்பாடு நமக்கெல்லாம் கிடைக்குமா? யோசித்துப் பாருங்கள். ஒரு நல்ல பெற்றோர்களை ஆண்டவர் கொடுத்திருந்து, அவர்கள் உங்களைச் சரியான வழிகளில் வழிநடத்தினால் அதற்காக நீங்கள் நன்றி சொல்லவேண்டும். நல்ல நண்பர்கள் உங்களுக்குக் கிடைத்திருந்தால் நீங்கள் கர்த்தருக்கு நன்றி சொல்லவேண்டும். நல்ல போதகர்கள் உங்களுக்கு கிடைத்து அவர்களுடைய கண்காணிப்பு உங்களுக்குக் கிடைத்திருந்தால் நீங்கள் கர்த்தருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் சமுதாயத்தில் அநேகர் நம்மைக் கெடுக்கப் பார்ப்பார்கள். நாம் ஒழுக்கத்தோடிருப்பது சமுதாயத்திற்குப் பிடிக்காது. ஆனால் ஆண்டவர் நமக்கு மேல் நம்மைத் பார்த்துக்கொள்ளும்படியாகவும், அடிக்கடி நமக்குப் புத்தி சொல்லும்படியாகவும், அடிக்கடி நம்மைத் திருத்தும்படியாகவும் நல்ல மனிதர்களைக் கொடுத்திருப்பது நமக்குக் கிடைத்திருக்கும் பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது. இஸ்ரவேலனாகிய இந்தக் கேயாசிக்கு அப்படியான ஒரு வசதியை ஆண்டவர் கொடுத்திருந்தார். எலிசா இவனுக்கு அக்கறையோடு புத்தி சொல்லுவதற்கும், அக்கறையோடு திருத்துவதற்குமான ஒழுங்குக் கட்டுப்பாட்டை ஆண்டவர் ஆசீர்வாதமாகக் கொடுத்திருந்தார்.
மூன்றாவதாக, கேயாசிக்குக் கிடைத்திருந்த ஆவிக்குரிய ஆசீர்வாதம், அதிரடியான அற்புதங்களைச் செய்து அருமையான போதனைகளைக் கொடுத்த ஒரு தேவ மனிதனோடு நெருங்கிப் பழகி அவருடைய வாழ்க்கையைக் கவனிக்கும் ஆசீர்வாதம். நான் மிகவும் மதிக்கின்ற ஒரு போதகர் இருக்கிறார். அவருக்கு என்னைவிட மிகவும் வயதாகிவிட்டது. அந்தப் போதகருடைய பிரசங்கங்களை நாற்பது வருடங்களுக்கு மேலாகக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை அவரை எங்கள் சபை மாநாட்டில் பேசும்படியாக அழைத்திருந்தேன். அவர் எங்கள் நாட்டிற்கு வந்து அந்த மாநாட்டில் பேசினார். ஒருவாரம் அவர் தங்கியிருந்போது இருவரும் அடிக்கடி பேசிப் பழகினோம். அவர் ஒரு நல்ல இறையியல் கல்லூரி நடத்திக்கொண்டிருந்தார். அதுபற்றி ஆரம்பத்தில் எனக்குத் தெரியவில்லை. நான் படித்த இறையியல் கல்லூரி வேறுநாட்டில் இருந்தது. அவர் தொலைதூர நாட்டில் இருக்கிறார், நான் வேறு நாட்டில் இருக்கிறேன். அவரோடு அருகிலிருந்து பழக முடியாவிட்டாலும் வாழ்க்கையின் பிற்பகுதியில் அவரோடு நன்றாகப் பழகக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இங்கு கேயாசிக்குக் கிடைத்திருந்த வாய்ப்பு மிகவும் வித்தியாசமானது. அவன் எலிசாவின் அருகிலேயே இருந்து, அவர் வீட்டின் கூரைக்குக் கீழேயே வாழ்ந்து, அவர் செய்கிற காரியங்களை அருகிலிருந்து பார்த்து, அதில் பங்கும் பெற்று வரும் பெரும் ஆசீர்வாதத்தை அவன் பெற்றிருந்தான்.
உண்மையிலேயே இதையெல்லாம் பார்க்கிறபோது கேயாசியின் மீது பரிதாபந்தான் வருகிறது. அவன் மீது மட்டுமல்ல, ஆண்டவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றும் நீங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளாதபோது உங்கள் மீதும் எனக்குப் பரிதாபமே வருகிறது. ஏனென்றால் கர்த்தர் ஒருநாள் கணக்கு கேட்பார். யாருக்கு அதிகமாக கொடுக்கப்பட்டதோ அவர்களிடம் அதிகமாக ஆண்டவர் எதிர்பார்க்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே அதையெல்லாம் நீங்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளுகிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். எலிசா தீர்க்கதரிசியின் நிழல்போல எல்லா இடத்திற்கும் கேயாசி போயிருக்கிறான். எலிசாவைப் பற்றி பேசிய மக்கள் நிச்சயம் கேயாசியைப் பற்றியும் பேசியிருப்பார்கள். கில்காலில் மக்கள் எலிசா ஊருக்கு வரப்போகிறார் என்பது தெரிந்து ஆர்வத்தோடு இருந்தபோது, நிச்சயம் கேயாசியும் அவரோடு வருவார் என்றுதான் எதிர்ப்பார்த்திருந்திருப்பார்கள். இஸ்ரவேலின் பெரிய தீர்க்கதரிசியாக இருந்த எலிசாவின் பெயரோடு சேர்த்து அவன் பெயரையும் சொல்லக்கூடிய பாக்கியம் கேயாசிக்குக் கிடைத்திருந்தது அல்லவா?
இவ்விதமான வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அந்தளவுக்கு கேயாசிக்கு ஆண்டவர் ஆசீர்வாதங்களை அள்ளிக்கொடுத்திருந்தார். இந்த மாதிரியான ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைத்திருந்தால் நாம் பயப்பட வேண்டும். ஏனென்றால் இத்தனை ஆசீர்வாதங்களும் நமக்குப் பெரும் பொறுப்பைக் கொண்டுவருகிறது. மக்கள் நன்றாக மதிக்கிற ஒரு மனிதரோடு நமக்குப் பழகக்கூடிய வாய்ப்பு கிடைத்திருந்தால் அதோடு பொறுப்பும் நமக்குக் கூடுகிறது. அந்த மனிதரோடு நமக்கு பழக்கமிருக்கிறது என்பது மக்களுக்குத் தெரிந்தால் அவருடைய மரியாதையும் நமக்குக் கிடைக்கிறது. அப்படியிருக்கும்போது அவருடைய மரியாதையைக் காக்கக்கூடிய பொறுப்பு நமக்கிருக்கிறது. அவரை எனக்குத் தெரியுமென்று எல்லோரிடமும் பிரபலப்படுத்திக் கொள்ளுவது பெரிதல்ல. அவருடைய மரியாதையைக் காப்பதே பெரிய விஷயம். இல்லாவிட்டால் ஒரு காலத்தில் நாம் சரியாக நடந்துகொள்ளாமல் போனால் மக்கள் என்ன சொல்லுவார்கள்? அவரோடிருந்த இவன் வீணாகப் போய்விட்டான் என்று சொல்லுவார்கள். அவருடைய பெயரைக் கெடுக்கிற விதத்தில் நாம் நடந்துகொள்ளக்கூடாது. நம் வாழ்க்கையில் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் எல்லாமே நமக்குப் பெரிய பொறுப்பைக் கொண்டுவருகிறது.
- கேயாசியின் உண்மையான குணம்
இரண்டாவதாக, கேயாசியின் உண்மையான குணத்தையும் அவன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவற்றையும் நாம் ஆராயலாம். இதனை 20-24 வரையுள்ள வசனங்களில் நாம் காண்கிறோம்.
2 இராஜாக்கள் 5:20-24
“தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டுவந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு, நாகமானைப் பின்தொடர்ந்தான்; அவன் தன் பிறகே ஓடிவருகிறதை நாகமான் கண்டபோது, அவனுக்கு எதிர்கொண்டுபோக இரதத்திலிருந்து குதித்து: சுகசெய்தியா என்று கேட்டான். அதற்கு அவன்: சுகசெய்திதான்; தீர்க்கதரிசிகளின் புத்திரரில் இரண்டு வாலிபர் இப்பொழுதுதான் எப்பிராயீம் மலைத்தேசத்திலிருந்து என்னிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்கு ஒரு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்றுவஸ்திரங்களையும் தரவேண்டும் என்று கேட்க, என் எஜமான் என்னை அனுப்பினார் என்றான். அதற்கு நாகமான்: தயவுசெய்து, இரண்டு தாலந்தை வாங்கிக்கொள் என்று சொல்லி, அவனை வருந்தி, இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு பைகளில் இரண்டு மாற்று வஸ்திரங்களோடே கட்டி, அவனுக்கு முன்பாகச் சுமந்துபோக, தன் வேலைக்காரரான இரண்டு பேர்மேல் வைத்தான். அவன் மேட்டண்டைக்கு வந்தபோது, அவன் அதை அவர்கள் கையிலிருந்து வாங்கி, வீட்டிலே வைத்து, அந்த மனுஷரை அனுப்பிவிட்டான்; அவர்கள் போய்விட்டார்கள்.”
இங்கு சீரிய இராணுவத்தின் படைத்தலைவனாக இருந்த நாகமான் தன் குஷ்டரோகம் போகும்படியாக இஸ்ரவேலின் விசுவாசமுள்ள சிறுமி சொன்னதைக் கேட்டு எலிசாவிடம் வந்தான். எலிசாவின் மூலமாக ஆண்டவருடைய கிருபையினால் அவனுடைய குஷ்டரோகம் நீங்கிவிட்டது. அந்தக் குஷ்டரோகம் நீங்கியதுமட்டுமல்ல, அவனுக்கு இரட்சிப்பும் கிடைத்தது. கர்த்தர் அவனுக்கு மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் கொடுத்தார் என்று பார்க்கிறோம். ஐந்தாம் அதிகாரத்தின் ஆரம்பப் பகுதியில் அதை நாம் வாசிக்கிறோம். எலிசா இவ்வளவு பெரிய அற்புதங்களைச் செய்து தன் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்வதற்குக் காரணமாக இருந்திருக்கிறார் என்பதாலேயே நாகமான் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று துடித்தான். ஆனால் எலிசா எதுவுமே வேண்டாமென்று மறுத்துவிட்டார். அப்போது அவன் தன்னோடு வந்தவர்களோடு தன் நாட்டுக்குத் திரும்பி போகிறான்.
நாகமான் கொண்டு வந்ததை எலிசா வாங்காமல் விட்டுவிட்டார் என்று அவற்றைத் தான் அடைவதற்காகக் கேயாசி, ஆண்டவரையும் தன் செயலுக்கு சாட்சியாக வைத்துக்கொண்டு நாகமான் பின்னால் ஓடுகிறான். அவ்வாறு போனபோது நாகமானுக்கு அது சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால் இவன் எலிசா தீர்க்கதரிசியின் வேலையாள் என்பதால் சந்தோஷப்பட்டு ஏதாவது நல்ல செய்தியா என்று கேட்கிறான். அவனும் நல்ல செய்திதான் என்று சொல்லி
“தீர்க்கதரிசிகளின் புத்திரரில் இரண்டு வாலிபர் இப்பொழுதுதான் எப்பிராயீம் மலைத்தேசத்திலிருந்து என்னிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்கு ஒரு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்றுவஸ்திரங்களையும் தரவேண்டும் என்று கேட்க, என் எஜமான் என்னை அனுப்பினார் என்றான்.”
நாகமான் அவன் கேட்டதைவிட இரண்டு மடங்காகக் கொடுத்து, உதவிக்குத் தன் வேலைக்காரரையும் அனுப்பிவிடுகிறான்.
கேயாசியின் இந்த நடத்தை மோசமானதாக இருந்தது. அது ஏன் மோசமானது என்று நீங்கள் கேட்கலாம். அவனுடைய நடத்தை ஏமாற்றுத்தனமாக இருந்தது. முதலில் அவன் நாகமானிடம் பொய் சொன்னான் என்று நாம் பார்க்கிறோம். “தீர்க்கதரிசிகளின் புத்திரரில் இரண்டு வாலிபர் இப்பொழுதுதான் எப்பிராயீம் மலைத்தேசத்திலிருந்து என்னிடத்தில் வந்தார்கள்;” என்று சொன்னது பொய்யல்ல. ஆனால் அதற்கு பிறகு அவன் சொன்னதெல்லாம் பொய்தான். அவன் ஒன்பதாவது, பத்தாவது கட்டளைகளை மீறினான். பொய் சொல்லுவது மிகவும் தவறு. இவன் சொன்ன பொய்யில் ஆண்டவருடைய வார்த்தையைத் திரித்து நாகமானிடம் சொன்னான். பொய்யில் எந்தவிதமான உண்மையையும் நாம் பார்க்க முடியாது. அதுவும் கர்த்தருடைய பெயரில் அதைச் சொல்லுவது மிகவும் தவறு. 20 வது வசனத்தில் “நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு” என்று சொல்லுகிறான். கர்த்தருடைய பெயரை வீணிலே வழங்காதிருப்பாயாக என்று வேதம் சொல்லுகிறது. நாம் ஜெபிக்கும்போது கூட ஆண்டவருடைய பெயரைக் கவனக்குறைவாகப் பயன்படுத்தக்கூடாது. எந்தளவுக்கு கிறிஸ்தவர்கள் கவனத்தோடு இருக்க வேண்டுமென்று வேதம் அடிக்கடி நமக்கு எச்சரிக்கை தருகிறது.
கேயாசி தீர்க்கதரிசிகளின் புத்திரரில் இரண்டு வாலிபர் இப்பொழுதுதான் என்னிடத்தில் வந்தார்கள் என்று சொன்னது உண்மை. ஆனால் அவர்களுக்குத் தேவை இருக்கிறது என்று சொன்னது பொய். பாதி உண்மையைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுகிறான். அவன் நாகமானிடம் பொய் சொன்னதுமட்டுமல்ல அதிகமான உலக ஆசை கொண்டவனாகவும் இருந்தான். அவனுக்குப் பணமும், உலகத்தின் சுகமும் அவன் இருதயத்தை மூடிவிட்டது. பணத்தை நேசிக்கிறவன் ஆண்டவரோடு சிநேகமாக இருக்க முடியாதென்று வேதம் சொல்லுகிறது. பண ஆசை உங்களை ஆண்டவரிடமிருந்து தூரக் கொண்டுபோய்விடும். அநேகர் இந்தத் தவறை செய்திருக்கிறார்கள். வாழ்க்கையில் வேலை செய்து, வியாபாரம் செய்து சம்பாதிக்க வேண்டுமென்பது தவறில்லை. அது உங்கள் இருதயத்தைக் கெடுக்க அனுமதித்தால் அது தவறு. அதன்மேல் நாம் ஆசை வைக்கக்கூடாது. அநேக கிறிஸ்தவர்கள்கூட அதால் பாதிக்கப்பட்டு வீணாகப் போயிருக்கிறார்கள். உலகத்தானான கேயாசி அதில் வீழ்ந்திருந்தான். அவனுக்குப் பொருளாசை இருந்தது. நாகமான் சொன்னதை அவன் கேட்டான். அவன் கொண்டுவந்த பொருட்களையெல்லாம் கண்ணால் கண்டிருக்கிறான். எலிசா நாகமான் கொடுக்க விரும்பிய எதையுமே வாங்காமல் போனதைப் பார்த்து அவன் வேதனை அடைந்தான். எலிசாவோடிருந்து எவ்வளவோ ஆசீர்வாதங்களை அனுபவித்திருந்த கேயாசி தன் இருதயத்தை உலக சுகத்திற்காவும் பணத்திற்காகவும் விற்றுவிட்டான். அத்தனை ஆசீர்வாதங்களாலும் அவனுடைய சுபாவம் மாறவில்லை. இந்த உலகத்தில் எத்தனை பேர் அவ்விதம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் அவ்விதம் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? இந்த உலக சுகத்திற்காக உங்கள் இருதயம் ஏங்கிக் கொண்டிருக்கிறதா? நம் இருதயம் பணத்தின் மீதோ பொருளின் மீதோ வைத்தாலும் அது நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. நிரந்தரமாக இல்லாத ஒன்றின் மீது ஆசை வைப்பதில் எந்தவிதமான நன்மையும் இல்லை. ஆகவேதான் பணத்தை நேசிக்கிறவன் எனக்கு நண்பனாக இருக்க முடியாது என்று ஆண்டவர் சொல்லுகிறார். அவர் எரிச்சலின் தேவனாக இருக்கிறார். இன்னொன்றோடு தன் மகிமையை அவர் பகிர்ந்து கொள்ளுவதில்லை என்கிறார். உங்கள் இருதயத்தில் ஆண்டவர் இருக்கவேண்டிய இடத்தில் பணமோ, உலக சுகமோ இருந்தால் நீங்கள் ஆண்டவரை மட்டுமே ஆராதிக்கிறவர்களாக இருக்கவில்லை. ஏனென்றால் உங்கள் இருதயத்தில் இன்னொன்றுக்கு இடத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். எரிச்சலுள்ள தேவன் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டார்.
- கேயாசின் தவறினால் ஏற்பட்ட விளைவுகள்
மூன்றாவதாக கேயாசி செய்த மோசமான தவறினால் ஏற்பட்ட விளைவுகளை ஆராய்வோம். இதனை 25-27 வரையுள்ள வசனங்களின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
2 இராஜாக்கள் 5:25-27
“பின்பு அவன் உள்ளே போய்த் தன் எஜமானுக்கு முன்பாக நின்றான்; கேயாசியே, எங்கேயிருந்து வந்தாய் என்று எலிசா அவனைக் கேட்டதற்கு, அவன்: உமது அடியான் எங்கும் போகவில்லை என்றான். அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர்கொண்டுவரத் தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா? ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தை விட்டுப் புறப்பட்டுப் போனான்.”
கேயாசி, நாகமானிடம் பொய் சொல்லி அவனை நம்ப வைத்து அவனிடமிருந்து பொருள்களையெல்லாம் வாங்கித் தன் வீட்டில் வைத்துவிட்டு, உதவிக்கு வந்த வேலையாட்களைத் திரும்ப அனுப்பிவிட்டுவிட்டான். அத்தோடு, இதெல்லாம் எலிசாவிற்குத் தெரியாது என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தான். அவன் திரும்பி வந்தபோது எலிசா அவனைப் பார்த்து, எங்கேயிருந்து வருகிறாய் என்று கேட்டவுடன் அவன் உடனே எங்கும் போகவில்லை என்று பொய் சொன்னான். அவன் ஆரம்பித்த பொய் தொடர ஆரம்பித்தது. எலிசாவைப் பற்றி கேயாசிக்கு நிச்சயம் அதிகம் தெரிந்திருந்திருக்க வேண்டும். ஒரு மனுஷனோடு அருகிலிருந்து பழகி வாழ்ந்திருந்தால் அந்த மனுஷனைப் பற்றித் தெரியாத காரியங்கள் இருக்க முடியாது.
சீரிய அரசன் இஸ்ரவேல் அரசனைப் பிடிப்பதற்கு எத்தனையோ முயற்சிகள் செய்துகொண்டிருந்தான். ஆனால் அவனால் அது முடியவில்லை. அவன் என்னென்ன முயற்சிகள் எடுத்தபோதும் அதிலிருந்து இஸ்ரவேல் அரசன் தப்பிக் கொண்டான். சீரிய அரசனுக்கு எதுவுமே புரியவில்லை. நம் பக்கத்திலிருந்து யாரோ ஒருவர் வேவுபார்த்து இஸ்ரவேல் அரசனுக்குத் தகவல் சொல்லுகிறார்கள் என்று நினைத்து அதைப் பற்றித் தன் தளபதிகளிடம் கேட்டபோது அதிலொருவன், இஸ்ரவேல் அரசனுக்கு வேவுகாரர் யாரும் தேவையில்லை, அங்கிருக்கும் எலிசா நீங்கள் படுக்கை அறையில் என்ன நினைக்கிறீர்களோ அதெல்லாம் அவருக்குத் தெரியுமென்று சொன்னான். இந்தக் காரியம் கேயாசிக்குத் தெரியாமலா போயிருக்கும்? நன்றாகத் தெரிந்திருக்கும். அதுமட்டுமல்ல இன்னும் கேயாசி எத்தனையோ காரியங்களைப் பார்த்தும், அறிந்தும் இருப்பான். இந்தளவுக்கு எலிசாவைப் பற்றித் தெரிந்திருந்தவன் எப்படி இப்படியொரு தவற்றைச் செய்தான்? நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். இத்தகைய பாவத்தைச் செய்யுமளவுக்குப் பணமும் உலக சுகமும் அவன் கண்களை மறைத்துவிட்டது.
நம்மத்தியிலும் அநேகர் எத்தனையோ தடவைகள் சுவிசேஷத்தைக் கேட்டும், எவ்வளவோ பேரோடு பழகியிருந்தும், இருதயம் இன்னும் மனந்திரும்பி ஆண்டவரை விசுவாசிக்க மறுக்கிறதென்றால் அவர்களை மனந்திரும்ப விடாதபடிக்கு அவர்களுக்குள் உலகம் ஆண்டு கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். உலகமும் பணமும் உங்கள் இருதயத்தை ஆளுவதற்கு இடம் கொடுத்திருக்கிறீர்களா? அது உங்களை அழிவை நோக்கி மட்டுமே கொண்டு செல்லும். அது நம்முடைய தவறு, அதற்கு வேறு யாரையும் நாம் குறை சொல்லமுடியாது. நம் ஆசை நம் கண்களை மறைத்து வைத்திருக்கிறது. அந்த நிலையில் நீங்கள் இன்றிருந்தால் உடனடியாக மனந்திரும்புங்கள்.
கேயாசி எலிசாவிடம் பொய் சொன்னதால் எலிசா சொல்லுகிறார்: “பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?”
எலிசாவின் வார்த்தைகளை யோசித்துப் பாருங்கள். ஆண்டவர் எத்தனை பெரிய கிருபையினால் நம் நாட்டையே சிறை பிடித்து வைத்திருக்கிற நாகமானைத் திருத்தியிருக்கிறார்! எந்தளவுக்கு அவருக்கு நன்றிகளைச் செலுத்தி, அந்தக் கிருபையின் மகத்துவத்தை எண்ணி வியந்து கொண்டிருக்கிற இந்த வேளையிலே நீ செய்திருக்கும் காரியத்தைப் பார் என்கிறார். அழிந்து இல்லாமல் போகப்போகிற இந்த உலகப் பொருளுக்காகவா நீ அலைந்து திரிந்து கொண்டிருக்கிறாய்? நான் ஏன் அவன் கொடுத்த பொருளை வாங்காமல் இருந்தேன்? ஆண்டவருடைய கிருபை இலவசமாகத் தான் வரும், அதற்கு நாம் பணம் வாங்கக்கூடாது என்று சொன்னார்.
இன்றைக்கு எங்கு பார்த்தாலும் பணமே மையமாக இருக்கிறது. பணத்தை மையமாக வைத்தே அநேகமான ஊழியங்களும், மிஷனரிப் பணிகளும் இன்று நம்மினத்தில் நடந்துவருகின்றன. எனக்கு மிஷன் பத்திரிகைகள் வரும். அவற்றைத் திறந்து பார்த்தால் இந்த நாட்டில் இவ்வளவு பேர் கஷ்டப்படுகிறார்கள், ஏழ்மையாக இருக்கிறார்கள் பண உதவி செய்யுங்கள் என்று கேட்டிருப்பார்கள். இன்றைக்கு கஷ்டப்படாத ஒரு நாடு எங்கிருக்கிறது? இத்தகைய வித்தைகளைச் செய்து பணம் கேட்டும் ஊழியங்கள் ஆண்டவருக்காக செய்யப்படுகின்ற சுவிசேஷ ஊழியங்களில்லை. சுவிசேஷத்தைப் பற்றி எழுதாமல், சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்பியவர்களுடைய மெய்யான சாட்சிகளைப் பற்றி எழுதாமல் மற்றவர்களுடைய கஷ்டத்தைப் பற்றியே எழுதி வருகிறார்கள். இதனால்தான் நம் நாட்டில் சுவிசேஷ ஊழியத்தை யாரும் மதிப்பதில்லை. ஏனென்றால் எங்கு பார்த்தாலும் பணத்தையே குறியாக வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறவர்களைப் பார்த்து எவரும் நம்புவதில்லை. இதனால் போய்ச் சேரவேண்டிய சுவிசேஷம் போகவேண்டியவர்களுக்குப் போகாமல் இருக்கிறது. போதகர்களாக இருக்கிறவர்கள் இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பணத்தை மையமாகக் கொண்டு செய்கிற ஊழியங்களுக்கெல்லாம் ஆண்டவரின் வருகையின் நாளிலே அவர் பதிலளிப்பார்.
கேயாசிக்கு இனி என்ன நடந்தது? 27 வது வசனம் சொல்லுகிறது: “ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தை விட்டுப் புறப்பட்டுப்போனான்.” என்னவொரு சோகமான நிகழ்வாக இது இருக்கிறது!
இதிலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடங்கள்
முதலாவதாக, தேவனுடைய கிருபையையும் அவரால் நமக்கு கிடைக்கின்ற ஆசீர்வாதங்களையும் நாம் ஒருநாளும் உதாசீனப்படுத்தக்கூடாது. ஆண்டவரை அறியாத மக்களாக நீங்கள் இருந்தாலும் அவர் உங்களை அதிகமாக ஆசீர்வதித்திருக்கலாம். சிறுபிள்ளைகள் வாலிபர்களுக்கும் கூட ஆண்டவர் அதிகமான கிருபையைக் கொடுத்திருக்கலாம். நல்லது கேட்டது எது என்பதைப் பிரித்து நல்வழியில் நடத்துகிற பெற்றோரை ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்திருக்கலாம். இன்றைக்கு எவ்வளவோ குடும்பங்களில் ஒழுங்குக் கட்டுப்பாடே இல்லை. மரம் செடி கொடி மாதிரி பிள்ளைகள் தானாக வளர்ந்து போகட்டுமென்று அநேகர் விட்டுவிடுகிறார்களே தவிர ஒரு கட்டுப்பாட்டோடு பிள்ளைகளை வளர்ப்பதில்லை. நன்றாக வளர்க்கின்ற பெற்றோர்கள் கிடைத்திருந்தால் அது ஒரு பெரிய ஆசீர்வாதமாகும். அந்தப் பெற்றோர்கள் விசுவாசிகளாக இருந்து வீட்டில் குடும்ப ஆராதனை நடத்தி, உங்களை சபைக்கு கூட்டிக்கொண்டு போகிறார்களென்றால் அது பெரிய ஆசீர்வாதமாகும். இவ்வளவு ஆசீர்வாதங்களைக் கொடுக்கின்ற தேவன் உங்களிடத்தில் பொறுப்பை எதிர்ப்பார்க்கிறார். மத்தேயு 13:12 இல் ஆண்டவர் சொல்லுகிறார், “உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.”.
உங்களுக்குக் கிடைத்திருக்கின்ற ஆசீர்வாதங்களை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? ஆண்டவரே எனக்கு விசுவாசத்தைத் தாரும், மனந்திரும்புதலைத் தாரும் என்று கேட்க வேண்டும். தேடுகிறவர்கள் கண்டடைவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. உபாகமம் 4:29 இல் “அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்.” என்று வேதம் சொல்லுகிறது. ஆண்டவருடைய வசனத்தைக் கேட்கிற நீங்கள் தேடுகிறீர்களா? உங்கள் இருதயம் அவரைத் தேடுகிறதா? அல்லது உங்கள் இருதயத்தில் உலக காரியங்களுக்கு இடங்கொடுத்து ஆண்டவரிடத்தில் வராமல் செய்து கொண்டிருக்கிறதா? இரட்சிப்பு கிருபையின் மூலம் இலவசமாக வந்தாலும் நம் இருதயத்தைக் காத்துக்கொள்ளுவது நம்முடைய பொறுப்பாக இருக்கிறது. நம் இருதயத்தில் ஆண்டவருடைய வசனங்களைக் கேட்பதற்கு தடையாகத் தேவையில்லாத காரியங்களெல்லாம் நிரம்பியிருந்தால் அங்கு சத்தியம் எப்படி வேலை செய்யும்? இன்றைக்கு அநேகர் கையில் கைபேசிகளை வைத்துக்கொண்டு சமுக வலைதளங்களில் மூழ்கிப்போய் கர்த்தருடைய வேதத்தை வாசிப்பதற்கும் ஜெபிப்பதற்கும் நேரமில்லை என்கிறார்கள். நம் வாலிபருக்கும் சிறுபிள்ளைகளுக்கும் இதைப்பற்றி எச்சரிக்க வேண்டியுள்ளது. எவ்வளவோ காரியங்களைப் பயன்படுத்தி நம் இருதயத்தையும் மனத்தையும் கெடுத்து ஆண்டவரிடத்திலிருந்து வழிவிலகிப் போக வைப்பதற்கு சாத்தான் கிரியை செய்து கொண்டிருக்கிறான். எவ்வளவோ ஆசீர்வாதமான காரியங்களை ஆண்டவர் கொடுத்திருக்கிறார். இந்நேரத்தில் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறீர்களா? இவ்வளவு ஆசீர்வாதங்களும் கிடைப்பதற்கு நான் எந்தவிதத்தில் தகுதியானவன் என்று சிந்தியுங்கள். நீங்கள் இன்னும் மனந்திரும்பாமல் ஏன் வாழ வேண்டும்?
வேதம் சொல்லுகிறது:
சங்கீதம் 34:10, “சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.”
நீதிமொழிகள் 8:17, “என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.”
யோவான் 6:37, “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.”
இவ்வாறெல்லாம் வேதம் சொல்லுவதை நீங்கள் கவனிக்கவில்லையா?
இயேசு சமாரியப் பெண்ணிற்கு சுவிசேஷம் சொல்லுவதற்கு நடையாய் நடந்து சமாரியாவிற்கே போனார். தன்னிடத்தில் நடு இரவில் வந்த நிக்கொதேமுவிற்கு நேரத்தைக் கொடுத்து சுவிசேஷத்தை சொல்லியிருக்கிறார். எவ்வளவோ மக்களின் வாழ்க்கையில் கிருபையின் மூலம் அற்புதம் செய்த தேவனுக்கு உங்கள் வாழ்க்கையில் அற்புதம் செய்வதற்கு எவ்வளவு நேரமாகும்? ஆனால் நீங்கள் தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களையும் சந்தர்ப்பங்களையும் இந்தக் கேயாசி போல உதாசீனப்படுத்தி வாழ்ந்து வந்தால் உங்களுக்கு நடக்கப்போவது என்னவென்று நினைத்துப் பாருங்கள். ஆண்டவர் உங்களோடு பேசுகிற இன்றைக்கே நீங்கள் மனந்திரும்புங்கள். இயேசுவை நம்புவதை நாளைக்குத் தள்ளிப்போடக்கூடாது. வசனத்தைக் கேட்கிற நேரம், ஆண்டவர் நம்மோடு பேசுகிற நேரம், அது கிருபையின் நேரம், கிருபையின் நாள். நீங்கள் இந்நேரமே இயேசுவை விசுவாசித்து அவரைக் கடவுளாக ஏற்று அவருக்காகவே வாழப்போகிறேன் என்று முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது. யார் உங்களுக்கு நண்பன்? ஆண்டவரா? அல்லது இந்த உலகமா? நீங்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
யூதாஸ், கேயாசி போல இயேசுவுக்கு பக்கத்திலேயே இருந்து எவ்வளவோ ஆசீர்வாதங்களை அனுபவித்தான். கடைசியில் இயேசுவையே காட்டிக் கொடுத்துவிட்டான். அது எவ்வளவு மோசமான வாழ்க்கை! தாவீதின் மகனான அப்சலோமிற்கும் அதுதான் நடந்தது. இஸ்ரவேலின் முதல் ராஜாவாக இருந்த சவுலின் நிலைமையும் அப்படியே இருந்தது. கர்த்தர் முன்னிலையில் உங்கள் நிலைமை எவ்விதம் இருக்கிறது? ஆண்டவரின் இரண்டாம் வருகையில் நியாயத்தீர்ப்பு வரப்போகிறதே அங்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? இது மனந்திரும்ப வேண்டிய நேரம், இயேசுவை விசுவாசிக்க வேண்டிய நேரம்.
இரண்டாவதாக, கேயாசிக்கு கிடைத்த தண்டனை நமக்கு வரப்போகிற நியாயத்தீர்ப்பை உறுதிப்படுத்துகிறது. இயேசு நான் சீக்கிரமாக வரப்போகிறேன் என்று இயேசு சொல்லிவிட்டு போயிருக்கிறார். அவர் வருகிறபோது இந்த முழு உலகமே நியாயத்தீர்ப்பை சந்திக்கும். ஆண்டவருடைய பிள்ளைகள் வெகுமதிகளைப் பெற்று அவரோடு இருப்பார்கள். அவரை விசுவாசிக்காத எல்லோருக்கும் அழிவு காத்திருக்கிறது. நியாயத்தீர்ப்பு வருகிற அந்த நாளில் நாம் மனந்திரும்ப முடியாது. அந்தநாள் எதற்காக வருகிறது? இந்தக் கேயாசிக்கு வந்ததுபோல் மனந்திரும்பாதவர்கள் தண்டனையை அனுபவிக்கும்படியாக அந்நாள் வரப்போகிறது. இந்தக் கேயாசிக்கு “நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும்” என்று எலிசா சொன்னார். இதுபோன்ற தண்டனை நமக்குத் தேவையா? வரப்போகிற நித்திய கோபத்தை சந்திக்க வேண்டுமா? அந்த நித்திய கோபத்தினால் நித்தியத்திற்கும் மரணத்தை அனுபவிக்க வேண்டியது அவசியமா? கிருபையின் தேவனாகிய இயேசு மனிதன் கெட்டுப்போவது எனக்கு விருப்பமில்லை என்று சொல்லுகிறார். அதனால்தான் அவர் மிகுந்த இரக்கத்தோடு தனது இரண்டாம் வருகை வரையிலும் சுவிசேஷம் எல்லோரையும் போய் சேரும்படியாக பெரிய கிருபையைக் காட்டியிருக்கிறார். இது கிருபையின் காலம், இந்தக் காலத்தில் நாம் மனந்திரும்பி இயேசுவை விசுவாசிக்க வேண்டும். அவருக்கே உரிய பரிசுத்த வாழ்க்கையை நாம் தொடர்ந்து வாழவேண்டும். அதைத்தான் தேவன் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார்.
தேவையில்லாத உலக எண்ணங்களையும் சிந்தனைகளையும் வளர்த்துக் கொண்டு அது உங்கள் கண்ணையும் இருதயத்தையும் மறைத்து கெடுத்துப்போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இன்றைக்கு நீங்கள் மனந்திரும்பவில்லையென்றால் நீங்கள் என்றைக்கும் மனந்திரும்பாமல் கூட போகலாம். இது ஆண்டவர் உங்களோடு கிருபையாக பேசிக்கொண்டிருக்கும் நேரமாக இருக்கிறது. இது பணத்தையும் பொருளையும் பற்றி சிந்திக்கிற நேரமில்லை. ஆண்டவர் என்ன பேசுகிறார் என்பதைக் கவனியுங்கள். அவருடைய நியாயத்தீர்ப்பு நிச்சயமாக வந்தே தீரும். அப்போது என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? கேயாசியின் வாழ்க்கையின் மூலமாக ஆண்டவர் இன்றைக்கு நம்மோடு பேசியிருக்கிறார். உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? இதுதான் பெரிய கேள்வி. சிறுபிள்ளைகளும், வாலிபர்களும், பெரியவர்களும் நீங்கள் எல்லோரும் உங்களைக் கேட்டுப் பாருங்கள். ஆண்டவர் மூலமாக இரட்சிப்பை அடைந்து அவர் உங்கள் இருதயத்திலிருந்து உங்களோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாரா? அதன் மூலம் ஆனந்தமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறீர்களா? அப்படியிருந்தால் மிகவும் சந்தோஷம்தான். அப்படி இல்லையென்றால் நீங்கள் மனந்திரும்புங்கள். அந்தக் கர்த்தரை நாடி ஓடுங்கள். அவர் நாகமானுக்கு அளித்த இலவசமான கிருபையை உங்களுக்கும் அளிப்பார். கிருபை இலவசமானது, அது உங்களுக்கும் கிடைக்க ஆண்டவர் கிருபை பாராட்டட்டும்.