திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2021 -ம் ஆண்டு இரண்டாம் இதழ்
1. வாசகர்களே!
2. பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்கான சாட்சியங்கள் – ரால்ப் வென்னிங் – 

3. சிந்தனை செய் மனமே, சிந்தனை செய்! 

4. மறக்க முடியாத 2020

5. வாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்

6. ஓர் இலக்கியவாதியின் மொழியாக்க அனுபவங்கள்

7. கருத்தாழமிக்க எச்சரிக்கைப் பதிவு

8. வாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்

 

 

 

வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே! இந்த இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதழ் தொடர்ந்து உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்து வருகிறது என்று நம்புகிறேன். கோவிட்-19 தொடர்ந்து தன் கைவரிசையை உலகெங்கும் காட்டிவரும் இந்நாட்களில் கர்த்தரின் கிருபையால் நம் பணிகளை நாம் தொடரமுடிகிறது. தொடர்ந்தும் கர்த்தர் நம்மைப் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

இந்த இதழில் முதல் ஆக்கமாக ரால்ப் வென்னிங்கின் பாவத்தைப் பற்றிய ஆக்கம் வந்திருக்கிறது. அதையடுத்து சிந்தனையின் அவசியத்தை உணர்த்தும் ஜோன் ஸ்டொட்டின் நூலுக்கான அறிமுகத்தைத் தந்திருக்கிறேன்.

நூல் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கிறது. ஆங்கிலமறிந்தவர்கள் வாசிக்கவேண்டிய நூல். சிந்தனைக்கு இடங்கொடாது கிறிஸ்தவம் என்ற பெயரில் போலி மதமொன்று நம்மினத்தில் கிறிஸ்துவின் பெயரில் இருந்து வருகிறது. அதை 1970களில் ஸ்டொட் இனங்கண்டு நம்மை எச்சரித்து இந்நூலை எழுதியிருக்கிறார். வேதத்தைப் பயன்படுத்தி சிந்தித்து வேதசிந்தனைகள் மட்டுமே நம்மில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உணர்ச்சிகள் நம்மை ஆளக்கூடாது; உணர்ச்சிகளை வேதம் கட்டுப்படுத்தவேண்டும்.

இவற்றை அடுத்து கோவிட் கால நிகழ்வுகள் பற்றிய ஓர் ஆக்கமும், வாசிப்பு பற்றிய ஓர் ஆக்கமும் இவ்விதழில் வந்திருக்கிறது. நாம் வெளியிடும் நூல்களை வாசித்து வாசகர்கள் எழுதியனுப்பியிருக்கும் கருத்துரைகளையும் இதில் தந்திருக்கிறேன்.

மொழியாக்கம் செய்கிறவர்களுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் பற்றி ஏற்கனவே ஓரிதழில் எழுதியிருக்கிறேன். இந்த இதழில் மொழியாக்கத்தில் ஈடுபட்டு வரும் ஒரு முன்னாள் பேராசிரியையின் மொழியாக்க அனுபவங்களையும், அவர் தரும் ஆலோசனைகளையும் விளக்கமாகத் தந்திருக்கிறேன். இது நிச்சயம் வாசிக்கவேண்டியதொரு ஆக்கம். மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் மனப்பான்மை நமக்கு எப்போதுமே இருக்கவேண்டும்.

இதுவரை வந்துள்ள இதழ்களைப்போலவே இதுவும் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்து கர்த்தரின் கிருபையிலும், ஞானத்திலும் நீங்கள் தொடர்ந்து வளரத்துணைபுரிய வேண்டும் என்பதே எங்கள் ஜெபம். – ஆர்

 

பாவத்தினால் ஏற்படும் தீங்கிற்கான சாட்சியங்கள் – ரால்ப் வென்னிங் –

  1. கடவுள் பாவத்திற்கு எதிரான சாட்சியாக இருக்கிறார்.

அ. கேடான எந்தவொரு செயலும் கடவுளுக்கு எதிரானது என்பதை அவர் வெளிப்படையாகச் சொல்லாமல் இல்லை. நம்முடைய நலன்களில் கடவுள் அக்கறையுள்ளவராக இருப்பதால், பாவகரமான செயல்களைச் செய்வதற்கு எதிரான தடையை அவர் நமக்கு விதித்திருக்கிறார். நன்மையானவையும், நீதியானவையும், உண்மையானவையும், பரிசுத்தமானவையும் யாவை என்பதில் அவரே நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார். பாவகரமான செயல்கள் கடவுளால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், நமக்கு நன்மை உண்டாக்கக் கூடியதாகவும் இருந்திருந்தால், கடவுள் அவற்றைத் தடைசெய்திருக்க மாட்டார்.

ஆ. தீமையான செயல்களின் மூலமாக, நமக்கோ, மற்றவர்களுக்கோ, கடவுளுடைய பணிகளுக்கோ ஏதாவதொரு விதத்தில் நன்மை ஏற்படுமென்பதற்காக, அந்தத் தீமையான செயல் எத்தனை சிறியதாக இருந்தாலும், கடவுள் ஒருபோதும் அதை அனுமதிப்பதில்லை.

  1. நமக்கு நன்மை ஏற்படுவதற்காக நாம் தீமைசெய்யக்கூடாது. பணக்காரர்களாக இருப்பதில் தவறில்லை; ஆனால் பாவகரமான செயல்களின் மூலம் பணக்காரர்களாவது தவறானது.
  2. நம்முடைய நண்பனுக்கு நல்லது நடக்கவேண்டுமென்பதற்காகப் பொய் சொல்லக்கூடாது. தன்னுடைய இனத்தவர்கள் இரட்சிக்கப்படுவார்களானால், அவர்களுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லிய பவுல், அவர்களுக்காகத் தான் ஒருபோதும் பொய்சொல்ல முடியாது என்று சொல்லியிருக்கிறார் (ரோமர் 9:1-2).
  3. நம்முடைய சில பாவகரமான செயல்கள், கடவுளுடைய செயல்களுக்குச் சாதகமாக அமையும் என்று நாம் நினைப்பது, கடவுள் பிசாசைச் சார்ந்திருப்பதாகச் சொல்லுவதாகிவிடும். அத்தகைய பாவம் கடவுளுக்கு இருமடங்கு எதிரான செயலாகும்.

இ. கடவுள், பாவத்திற்கு எதிரான தம்முடைய கோபத்தை, அவற்றிற்கு அவர் தரும் கடுமையான தண்டனையின் மூலம் தெரிவித்திருக்கிறார். கடவுள் ஆதாமிடம், “ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” (ஆதியாகமம் 2:17). கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் போவது அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமலிருந்திருந்தால், கடவுள் இப்படியான பயமுறுத்தலுடன் கூடிய எச்சரிப்பைத் தந்திருப்பாரா?

ஈ. “தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்” (சங்கீதம் 7:11). பாவம் தீமையானதாகவும் நன்மைக்கு எதிரானதாகவும் இல்லாமலிருந்திருந்தால், கடவுள் இந்தளவுக்குக் கோபங்கொண்டிருப்பாரா?

உ. நோவாவின் காலத்தில் உண்டான பெருவெள்ள நிகழ்வின்போது, மனிதர்களுடைய பொல்லாத செயல்களே, கர்த்தர் மனிதகுலத்தை உருவாக்கியதற்காக அவரை மனஸ்தாபப்பட வைத்தது (ஆதியாகமம் 6:5-6). படைப்பின்போது தம்முடைய படைப்புகளைக் கண்டு பூரித்துப்போன கடவுள், இப்போது இத்தகைய மனஸ்தாபத்தை வெளிப்படுத்தியிருப்பது, மனிதகுலத்தின் வீழ்ச்சியடைந்த தேவபக்தியற்ற கேடான செயல்களின் மீது அவருக்கு இருந்த கோபத்திற்கான வலிமையான அடையாளமாயிருக்கிறது. கடவுளுடைய கட்டளைகளுக்கு எதிரான தீமையான செயல்களை நாம் செய்கிறபோது, கடவுள் நமக்குச் செய்திருக்கிற நன்மையை எண்ணி அவர் மனஸ்தாபப்படுகிறார்.

ஊ. பாவகரமான மனிதர்கள்மீது கடவுள் கடுமையான பல தண்டனைகளை அனுப்பியிருக்கிறார் என்பதை வரலாறு தெரிவிக்கிறது. கேடான மனிதர்கள் மீது இத்தகைய தண்டனைகள் வருவதன் மூலமாக, பாவம் செய்வதென்பது சாதாரணமானதல்ல என்பதையே அவை நமக்குக் காட்டுகின்றன. ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமை என்ற பாவத்தின் காரணமாக ஏதேனிலிருந்து விரட்டப்பட்டார்கள்; ஆபேலைக் கொன்றதற்காக காயீன் தண்டிக்கப்பட்டான்; சபையார் முன் நின்று பொய் சொன்னதன் காரணமாக அனனியாவும், சப்பீராளும் தண்டிக்கப்பட்டார்கள் (ஆதியாகமம் 3, 4 மற்றும் அப்போஸ்தலர் 5:1-11). இருப்பினும், பாவகரமான எல்லாச் செயல்களுக்கும் கடவுள் தம்முடைய நியாயத்தீர்ப்பை உடனுக்குடன் தந்துவிடுவதில்லை.

  1. பாவகரமான செயல்களுக்குக் கடவுள் உடனுக்குடன் தண்டனை வழங்காததால், கடவுள் பாவங்களைக் கண்டுகொள்ளுவதில்லை என்ற எண்ணம் நமக்கு ஏற்படலாம். ஆனால், கடவுள் மனிதர்களுடைய பாவச்செயல்களுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்குவதாக இருந்தால், இந்த உலகத்தில் ஒருவர்கூட மிஞ்சமாட்டார்கள். ஆகவே கடவுள் பாவகரமான செயல்களுக்கு இப்போது தண்டனை வழங்காவிட்டாலும், நிச்சயமாக இறுதியில் அவற்றைத் தண்டிக்காமல் விடமாட்டார்.
  2. தேவனுடைய மக்களும், பாவம் செய்கிறபோது, தண்டிக்கப்படுகிறார்கள். உதாரணமாக, தாவீது விபச்சாரம் செய்து, கொலைசெய்வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டபோது, அது அவனுக்கு மிகுந்த துக்கத்தையும் வேதனையையும் உண்டாக்கியது (2 சாமுவேல் 11, 12). இயேசுவை மறுதலித்தபோது, பேதுரு மனங்கசந்து அழுதார் (லூக்கா 23:54-62). ஆனால், விசுவாசிகளைப் பொருத்தவரையில், அவர்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகிறதோடு, அவர்கள் செய்த பாவங்களிலிருந்து அவர்கள் மனந்திரும்பவும் செய்கிறார்கள்.
  3. கடவுள் தம்முடைய சொந்தக்குமாரனையும் தண்டனைக்குள்ளாக்கியிருக்கிறார். அவர் பாவமற்ற வாழ்க்கையை வாழ்ந்திருந்தபோதிலும், தன்னை விசுவாசிக்கிற தன்னுடைய மக்களுக்கான இடத்தை அவர் ஏற்றபோது, அவர்களுடைய பாவங்களுக்கான கடவுளுடைய தண்டனையை அவர் தன்மீது சுமந்தார்.
  4. பாவத்தைக் கண்டனம் செய்யவே கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார்.

அ. பாவிகளுக்காக கிறிஸ்து பாடுகளை அனுபவித்தார் என்பதை வேதம் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” (ரோமர் 5:8).

  1. கிறிஸ்துவினுடைய மரணத்தைப் பாவிகளுக்கான “மீட்கும் கிரயம்” என்பதாகவே வேதம் விவரிக்கிறது. கிறிஸ்தவர்கள் விலை (கிரயம்) கொடுத்து வாங்கப்பட்டவர்கள். “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.” (1 பேதுரு 1:19).
  2. பாவிகளுக்கான பலியாக கிறிஸ்து மரித்தார். “கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.” (கலாத்தியர் 3:13).

ஆ. கிறிஸ்து தன்னுடைய மக்களுக்காக மரித்தபோது, அவருடைய பாடுகளின் கோரம், பாவத்தின் பயங்கரத்தை நமக்குக் காட்டுகிறது. அவரைப்பற்றி வேதம் விளக்குகிறபோது, அவர் “துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்” (ஏசாயா 53:3) என்று சொல்லுகிறது. கிறிஸ்துவினுடைய பாடுகளின் கோரத்தை நாம் ஒருபோதும் முழுமையாக அறிய முடியாது. ஏனென்றால், நம்மீதுள்ள கடவுளுடைய கட்டுக்கடங்காத கோபத்தை, அவர் அனுபவித்தவிதமாக நாம் உணர்ந்ததில்லை.

  1. எல்லாவிதமான பாடுகளையும் கிறிஸ்து அனுபவித்தார். அவர் பிறந்தவுடனேயே துன்புறுத்தல்களும் அவர்கூடவே வந்தன. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புகளை அவர் எதிர்கொண்டார். அவருடைய மரணத்தில் கொடூரமாக துன்புறுத்தப்பட்டார். தன்னுடைய உடலின் ஒவ்வொரு அங்கங்களிலும் அவர் பாடுகளை அனுபவித்தார். பசியோடும், தாகங்கொண்டும், சோர்வடைந்தும் இருந்தார். சவுக்கால் அடிக்கப்பட்டார். இறுதியில் சிலுவையில் கொல்லப்பட்டார்.
  2. தன்னுடைய உணர்ச்சிகளிலும் அவர் பாடுபட்டார். அவருடைய எதிரிகள் கொஞ்சமும் பரிதாபங்காட்டவில்லை; அவரைக் கேலிசெய்தார்கள்.
  3. தன்னுடைய ஆத்துமாவிலும் அவர் பாடுபட்டார். அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” (மத்தேயு 27:46) என்று கதறினார்.
  4. பலதரப்பட்ட மனிதர்களால் அவர் துன்புறுத்தப்பட்டார். அவர் நன்மை செய்துவந்தார். ஆனால், யூதமதத் தலைவர்கள் அவரைக் கொல்லுவதற்குத் திட்டமிட்டனர். தன்னுடைய சொந்த ஜனங்களுக்கு அவர் போதனைகளை அளித்தார். அவர்களோ அவருக்குப் புறமுதுகு காட்டினார்கள். அவருடைய சொந்த குடும்பத்தினர்களும் அவரை விசுவாசிக்கவில்லை. அவருடைய சீஷர்களில் ஒருவர் அவரைக் காட்டிக்கொடுத்தார். மற்றொருவர் அவரை மறுதலித்தார். பிதாவின் சித்தத்தையே அவர் தொடர்ந்து செய்து வந்தார், ஆனால், பிசாசுக்கு ஊழியம் செய்கிறவர் என்று அவர் குற்றஞ்சாட்டப்பட்டார் (மத்தேயு 12:24).
  5. எல்லாவிதமான அவமானங்களுக்குமுள்ளாகி அவர் பாடுகளை அனுபவித்தார். அவர் கடவுளுக்குச் சமமானவர், இருப்பினும் அவர் தன்னைத்தானே வெறுமையாக்கி, ஒரு வேலைக்காரனாக வாழ்ந்து வந்தார் (பிலிப்பியர் 2:6-7). பெண்களைப் படைத்த அவர், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தார் (கலாத்தியர் 4:4). பாவமற்ற அவர் நமக்காகப் பாவமானார் (2 கொரிந்தியர் 5:21), நமக்காகச் சாபமானார் (கலாத்தியர் 3:13). இன்னும் பலவிதங்களில் அவர் உபத்திரவங்களுக்குள்ளானார், அடுத்தக் குறிப்புக்குப் போகவேண்டியிருப்பதால், இதை இத்தோடு முடித்துக்கொள்ளுகிறேன்.

இ. கிறிஸ்துவினுடைய சகல பாடுகளின் கோரம், பாவத்தின் பயங்கரத்தை நமக்குக் காட்டுகிறது. கடவுள், தன்னுடைய பரிசுத்த குமாரனுடைய மரணத்தின் மூலமாக அல்லாமல் வேறு எந்த வழியையும் பாவத்திற்கு எதிரான அவருடைய பரிசுத்த நீதியை நிலைநாட்ட ஏற்றுக்கொள்ளவில்லை. கடவுள் பாவத்தை எந்தளவுக்கு வெறுக்கிறார் என்பதை இது நமக்கு உறுதியாகக் காட்டுகிறது.

  1. தேவதூதர்கள் பாவத்திற்கு எதிரான சாட்சிகளாக இருக்கிறார்கள்

அ. நல்ல தேவதூதர்கள் – பரலோகத்தில், கடவுளுடைய பிரசன்னத்தில் நிற்கிற தேவதூதர்கள் பாவத்தை வெறுக்கிறார்கள் என்பதை வேதம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது (யூதா 9). கேடான மனிதர்கள், தண்ணீர் குடிப்பதுபோல் பாவத்தை மிகவும் சாதாரணமாகச் செய்துவருகிறார்கள். ஆனால் தேவதூதர்களுக்கு அது விஷத்தைப்போல் இருக்கிறது.

  1. தேவதூதர்கள் பரிசுத்த தேவனுக்கு ஊழியஞ் செய்வதனால், அவர்கள் பாவம் செய்யமாட்டார்கள். இருந்தும், அவர்கள் பாவத்தை எதிர்க்கும் செயலில் முனைப்புடன் ஈடுபடுகிறவர்களாக இருக்கிறார்கள்.
  2. இந்த தேவதூதர்கள்தான், நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்தார்கள் (கலாத்தியர் 3:19 – மோசே நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தபோதும் தேவதூதர்கள் அதற்குப் பின்னால் இருந்திருக்கிறார்கள் என்று பவுல் விளக்குகிறார்). அந்த நியாயப்பிரமாணத்திலுள்ள கட்டளைகள், அவற்றிக்குக் கீழ்ப்படிவதன் மூலமாகப் பாவத்தைத் தவிர்ப்பதற்காகவே கொடுக்கப்பட்டன.
  3. இந்தப் பரிசுத்தமான தேவதூதர்கள், பிசாசை எதிர்த்துப் போரிட வேண்டியவர்களாக இருந்தாலும் பாவம் செய்யமாட்டார்கள். யூதா 9வது வசனம் சொல்லுகிறதைக் கவனியுங்கள், பிரதான தூதனாகிய மிகாவேல், பிசாசோடு எதிர்த்துத் தர்க்கம் செய்தபோது, அவனைத் தூஷணமாய் பேசவில்லை. ஏனென்றால், தூஷணமாகப் பேசுவது பாவகரமான செயல் என்பதனால்தான் அப்படிச் செய்யவில்லை. தீமைக்குத் தீமை செய்வது எளிது. ஆனால் தேவதூதர்கள் அப்படிச் செய்வதற்கு ஒருபோதும் துணிகரங் கொள்ளுகிறதில்லை.
  4. அப்போஸ்தலனாகிய யோவான் ஒரு முறை தேவதூதனின் காலில் விழுந்து வணக்கஞ்செய்ய முற்பட்டார். உடனே அந்த தேவதூதன் என்ன சொன்னார், “இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள்” (வெளிப்படுத்தின விசேஷம் 19:10) என்று சொன்னார்.
  5. தேவனுடைய மக்கள் பாவகரமான செயலில் ஈடுபடுகிறபோது, தேவதூதர்கள் அவர்களைக் கண்டித்திருக்கிறார்கள். ஆபிரகாமுடைய மனைவியின் செயலைக் கண்டித்திருக்கிறார்கள் (ஆதியாகமம் 18:12-15). உனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று சகரியாவிடம் தேவதூதன் சொல்லியதை, அவன் நம்பாமற் போனதினால், அவன் ஊமையாக இருக்கவேண்டிவந்தது (லூக்கா 1:13-20).
  6. பாவியான ஒருவன் மனந்திரும்புகிறபோது, தேவதூதர்கள் அதைச் சந்தோஷத்துடன் பாடிக் கொண்டாடுகிறார்கள் (லூக்கா 15:7-10). கேடான மனிதன் பாவத்தில் திளைத்திருக்கிறபோது, அது தேவதூதர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த மனிதன் தன்னுடைய பாவ வழிகளைவிட்டு மனந்திரும்புகிறபோது, அது அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது.
  7. கேடான தூதர்களையும், கேடான மனிதர்களையும் தேவதூதர்கள் எதிர்க்கிறார்கள். தேவதூதர்கள் கிறிஸ்தவ விசுவாசிகளைக் காப்பாற்றுகிறார்கள் (சங்கீதம் 91:9-13), அவர்களுடைய தேவைகளில் அவர்களுக்கு உதவுகிறார்கள் (எபிரெயர் 1:14).

தேவதூதர்கள், கேடான மனிதர்கள் மீது கடவுளுடைய நியாயத்தீர்பை நிறைவேற்றுகிறார்கள். தேவதூதர்கள்தான், சோதோம் கொமோராவை அழித்தார்கள் (ஆதியாகமம் 19:12-13). உலகத்தின் முடிவிலும், அவர்களே சல்லடையில் சலிப்பதுபோல், மெய்யான விசுவாசிகளிடமிருந்து கேடானவர்களைப் பிரித்தெடுப்பார்கள் (மத்தேயு 13:49-50).

  1. நல்ல தேவதூதர்கள் எப்படிப் பாவகரமான செயல்களுக்கு எதிரான சாட்சியங்களாக இருக்கிறார்கள் என்பதை விளக்குகிற இன்னும் பல உதாரணங்களை நான் உங்களுக்குத் தரக்கூடும். இருப்பினும், இவற்றோடு நான் நிறுத்திக்கொள்ளுகிறேன். ஆனால் ஒன்றை நினைவில் வைத்திருங்கள், ஆண்டவரை ஆராதிப்பதற்காக நாம் கூடுகிறபோது, தேவதூதர்களும் அங்கு இருக்கிறார்கள், அவர்கள் நம்முடைய நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் (1 கொரிந்தியர் 11:10). நம் செயல்களுக்கு அவர்களே சாட்சிகள். இறுதி நியாயத்தீர்ப்பில் நம்முடைய நடக்கையைப் பற்றி அவர்களே சாட்சிபகரக் கூடியவர்கள் (லூக்கா 12:8-9).

ஆ. கேடான தூதர்களும்கூட, அதாவது பிசாசும் அவனுடன் இருக்கிற ஆவிகளுங்கூட, பாவம் எவ்வளவு கேடானது என்பதைக் காட்டுகிறார்கள்.

  1. கேடான தூதர்களும், கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நம்பி, பயந்து நடுங்குகின்றன (யாக்கோபு 2:19). ஏனென்றால், கடவுள் அவைகளின் தீமையான செயல்களுக்காக அவைகளைத் தண்டிப்பார் என்று அவை அறிந்திருக்கின்றன. “பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்தார்” (2 பேதுரு 2:4).
  2. தங்கள் மீதுள்ள கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நீதியானது என்பது பிசாசுகளுக்குத் தெரியும் (மத்தேயு 8:29). பாவம் என்பது மெய்யாகவே பாவகரமானது என்பதையே இது காட்டுகிறது.
  3. பிசாசுகள் மனிதர்களைப் பாவம் செய்யத்தூண்டுகின்றன. ஆகவே பாவம் கேடான பிசாசினிடத்திலிருந்து வருவதால், பிசாசுக்கு ஊழியம் செய்கிறவர்களாக, பிசாசின் செயலைக் கொண்டிருக்கிறவர்களும் கேடானவர்களே.
  4. பிசாசு மனிதர்களை வஞ்சிக்க அவர்களுடைய நண்பனைப்போல் வேடமிட்டு வருகிறான். பாவகரமான காரியங்களைப் பலவர்ணக் கவர்ச்சியான விதங்களில் அவர்களுக்கு அவன் காட்டுகிறான். அவன் ஏவாளிடம், தான் கடவுளால் பரலோகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தூதர்களில் ஒருவன் என்று சொல்லியிருந்தால், ஏவாள் சோதனைக்குள்ளாகியிருந்திருக்க மாட்டாள் (ஆதியாகமம் 3:4-5). ஆனால் அவனோ, தன்னை தேவதூதன்போல் காட்டி, ஏவாளைக் கவர்ந்திழுக்கிற விதத்திலான இரையைத் தூண்டிலில் மாட்டியிருந்தான்.
  5. கடவுள் பாடுகளை நமக்கு அனுமதித்து, அதன் மூலமாக நாம் அவருடைய மக்களாக வாழுவதற்கான படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளும்படிச் செய்கிறார். ஆனால் பிசாசோ, நம்முடைய பாடுகளைப் பயன்படுத்தி நம்மை கடவுளுக்கு எதிராக செயல்படவைக்க முயற்சிக்கிறான். சாத்தான, யோபுவைப் பாடுகளுக்கு உட்படுத்தியது, அவனுக்கு நன்மை செய்வதற்காக அல்ல, அதைப் பயன்படுத்தி எப்படியாவது யோபுவை, கடவுளை சபிக்கச் செய்யவேண்டும் என்பதே அவனுடைய நோக்கமாயிருந்தது (யோபு 2:4-5).
  6. நாம் பாவம் செய்து, அதன்பிறகு, அதை உணருகிறபோது, பிசாசு, இனி நமக்கு வேறு வழியே இல்லை, இத்துடன் நம்முடைய கதை முடிந்தது என்று சொல்லி நம்முடைய துன்பத்தை அதிகரிக்க முற்படுவான். பாவம் செய்வதற்கு முன் பாவத்தை நமக்குக் கவர்ச்சிகரமாகக் காட்டுவான். ஆனால் பாவம் செய்தபிறகு, அதையே காரணமாகக்காட்டி நம்மில் அவநம்பிக்கையை ஏற்படுத்துவான். தேவனுடைய கிருபையும், கிறிஸ்துவின் நீதியும் நம்மை இரட்சிப்பதற்குப் போதுமானதல்ல என்று நம்மை நம்பவைக்க முயற்சிப்பான். உண்மையிலேயே பாவம் மிகவும் பயங்கரமானது.
  7. பிசாசு, விசுவாசிகளைக் குற்றப்படுத்துகிறவன் என்று வேதம் சொல்லுகிறது. “இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்” (வெளிப்படுத்தின விசேஷம் 12:10). கடவுள் யோபுவை ஆசீர்வதித்து வந்ததால்தான், யோபு கடவுளுக்கு விசுவாசமாக வாழ்ந்தார் என்று சாத்தான் குற்றஞ்சாட்டினான் (யோபு 1:9-11). விசுவாசிகளின் வீழ்ச்சியையும், முட்டாள்தனங்களையும் அவன் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வைத்திருக்கிறான். இதன் மூலமாகவும், பாவம் கடவுளுக்கு எதிரானது என்று அவனே தெரிவிக்கிறான்.
  8. பாவம் தீங்கானது என்பதற்கு விசுவாசிகளும் சான்றாக இருக்கிறார்கள்.

அ. கிறிஸ்தவர்கள் மற்றவர்களுடைய பாவங்களுக்கு எதிரான சாட்சிகளாக இருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் பாவத்தைத் தடுக்கிறார்கள். இதில் அவர்கள் தோல்வியுற்றாலும், தொடர்ந்து மனிதர்களுடைய பாவத்தன்மையை உணர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

  1. பாவத்தின் தாக்கத்தை மற்றவர்களிடம் காண்கிறபோது, விசுவாசிகள், பாவத்தின் பாதகங்களைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார்கள். தாவீது தன்னுடைய மகனாகிய சாலொமோனிடம், “நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன்; நீ திடன் கொண்டு புருஷனாயிரு” என்று சொல்லி, கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறவைகளின்படி நடக்க வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார். அதுபோலவே, பேதுருவும், விசுவாசிகளைப் பாவங்களைவிட்டு விலகியிருக்கும்படி வலியுறுத்தியிருக்கிறார் (1 பேதுரு 2:11).
  2. விசுவாசிகள், தாங்கள் சொல்லும் ஆலோசனைகளை மற்றவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதை அறிகிறபோது, அவர்களைக் கடிந்துகொள்ளுகிறார்கள். கடவுளுடைய நியாயப்பிரமாணத்தைப் பற்றி அக்கறைகாட்டாத யூதமதத் தலைவர்களை, பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் அவ்வப்போது கடிந்து பேசியிருக்கிறார்கள். ஏரோது ராஜாவின் முறையற்ற திருமணத்தை யோவான்ஸ்நானன் கண்டித்தார் (லூக்கா 3:19). விசுவாசிகளுடனான ஐக்கியத்தில் ஒழுங்காக நடக்காத அப்போஸ்தலனாகிய பேதுருவை அப்போஸ்தலனாகிய பவுல் கண்டித்தார் (கலாத்தியர் 2:11).
  3. ஞானமுள்ளவர்கள் மற்றவர்களுடைய பாவகரமான செயல்களைக் கண்டு வருத்தப்படுவதோடு, அவர்களிடத்திலிருந்து விலகியே இருப்பார்கள். இதன் மூலம், அவர்கள், பாவகரமான வாழ்க்கை கேடானது என்பதைக் காட்டுகிறார்கள். ஞானமுள்ள விசுவாசிகள், பாவம் செய்கிறவர்களுக்காக கடவுளிடத்தில் ஜெபிப்பார்கள். பாவகரமான செயல்களைச் செய்கிறவர்களுடைய பாவங்களை மன்னிக்கும்படி அவர்கள் கர்த்தரிடம் மன்றாடுவார்கள். சோதோம் கொமோராவின் மீது இரக்கம் காட்டும்படி ஆபிரகாம் கர்த்தரிடத்தில் மன்றாடினார் (ஆதியாகமம் 18:23-32). இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்தபோது, அவர்களுக்காக மோசே ஜெபித்தார் (யாத்திராகமம் 32:30-32). தன் மீது கல்லெறிந்தவர்களுக்காக ஸ்தேவான் ஜெபித்தார் (அப்போஸ்தலர் 7:60).

ஆ. கிறிஸ்தவர்கள் தங்களுடைய பாவத்திற்காக வருந்தி, அவற்றை எதிர்ப்பார்கள். கடவுளால் ஏற்றுக்கொள்ளத்தக்கவிதத்தில் வாழுவதற்காக, பாவத்தை முற்றாக நிராகரிக்கக் கூடுமானால், அதையும் விசுவாசிகள் செய்வார்கள். விசுவாசிகள், மற்றவர்கள் பாவகரமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று சொல்லுவதோடு நிற்காமல், அவர்களும் பாவத்திலிருந்து சீர்திருந்த விரும்புவார்கள்.

  1. விசுவாசிகள், பாவம் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தாலும், பாவம் செய்யமாட்டார்கள். பழைய ஏற்பாட்டில், யோசேப்பு, போத்திபாருடைய மனைவியின் மூலமாக சோதனைக்குள்ளானபோது, அவர் சொல்லியதைக் கவனியுங்கள், “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்” (ஆதியாகமம் 39:7-9). சரியாக சிந்திக்கிற மனிதன், பாவம் செய்வதைக் காட்டிலும், பாடுகளை அனுபவிப்பதே மேலானது என்று கருதுவான். தானியேலின் மூன்று நண்பர்களை நினைத்துப் பாருங்கள். மெய்யான தேவனை வழிபடக்கூடாது, அப்படிச் செய்தால், நெருப்பில் வீசப்படுவீர்கள் என்று இராஜாவே கட்டளையிட்டிருந்தபோதிலும், அதை எதிர்த்து நின்றார்கள்.
  2. மெய்க் கிறிஸ்தவர்கள், தங்களுடைய பாவகரமான செயல்களுக்கு, கிறிஸ்துவின் மூலமாக கடவுளுடைய கிருபையுள்ள மன்னிப்பு இருப்பதை அறிந்திருந்தபோதிலும், பாவம் செய்யமாட்டார்கள் (ரோமர் 6:1-2). அந்த மன்னிப்பு, பாவத்திற்கான எல்லா வழிகளையும் தவிர்க்க வேண்டிய கடமையையே வலியுறுத்துகிறது. நன்மை வரும்படி அவர்கள் தீமை செய்யமாட்டார்கள். மாறாக, பாவத்தைத் தவிர்ப்பதற்கான எல்லா வழிகளையும் அவர்கள் பயன்படுத்திக்கொள்ளுவார்கள். பாவத்தில் விழத்தள்ளும் சோதனைக்கு எதிராகப் போராடுவார்கள். தீமையிலிருந்து பாதுகாக்கும்படி ஒவ்வொருநாளும் ஜெபிப்பார்கள். இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படுகிறபோது, கிறிஸ்தவர்களான அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்துகொள்ளுவதற்கு, வேதபோதனைகளைக் கற்றுக்கொள்ளுவார்கள். பாவத்திற்கு அவர்களை வழிநடத்தக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் அவர்கள் தவிர்ப்பார்கள்.

இதுவரை நான் சுட்டிக்காட்டிய உதாரணங்கள், நல்ல மனிதர்கள் பாவத்திற்கு எதிரான தங்களுடைய செயல்களின் மூலமாக பாவம் கேடானது என்பதைத் தெரிவிக்கிற ஆதாரங்களாக இருக்கிறது. சிலர் சொல்லுவார்கள், தேவபக்தியுள்ள மனிதர்கள், பாவத்தைத் தவிர்ப்பதற்கான காரணம், அது அவர்களைத் துன்பப்படுத்துவதாலோ அல்லது அப்படிச்செய்வது அவர்களுக்கு சரியாகப்படவில்லை என்பதனால்தானே தவிர, கடவுளுடைய மகிமையைப் பற்றிய அக்கறையினால் அப்படிச் செய்வதில்லை என்று வாதிடுவார்கள். அப்படியான தவறான குற்றச்சாட்டுகளுக்கு, பின்வரும் விதங்களில் நான் பதிலளிப்பேன்.

முதலாவது,

  1. கிறிஸ்தவர்கள் பாவம் செய்வதைத் தவிர்ப்பதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், பாவம் கடவுளுடைய சித்தத்திற்கு எதிரானது என்பதை அவர்கள் அறிந்திருப்பதுதான். தாவீது, பத்சேபாளுடன் பாவம் செய்த பிறகு, தேவனிடத்தில் அவர் செய்த அறிக்கையைக் கவனியுங்கள், “தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்தேன்” (சங்கீதம் 51:4) என்றார். உண்மையில், தாவீது, பத்சேபாளுக்கு எதிராகப் பாவம் செய்தார், அவளுடைய கணவனாகிய உரியாவுக்கு எதிராகப் பாவம் செய்தார், தனக்கெதிராகவும் பாவம் செய்தார். ஆனால், தாவீதின் பெரிய கவலையே, அவர் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறார் என்பதுதான். இதன் காரணமாகவே கிறிஸ்தவர்கள், தங்களிலோ அல்லது மற்றவர்களிலோ பாவகரமான செயல்கள் காணப்படுகிறபோது, அவற்றைக் கண்டிக்கிறார்கள். பாவம் எப்போதும் கடவுளுக்கு எதிரானது.
  2. கிறிஸ்தவர்கள் எல்லா வகையான பாவங்களையும் வெறுக்கிறார்கள். எந்தவொரு பாவமும், அது பெரிதானாலும் சிறிதானாலும் என்மேல் பெலன்கொள்ளாதபடி செய்யும் என்பதுதான் ஒரு கிறிஸ்தவனுடைய ஜெபமாக இருக்கும். வெளிப்படையாகத் தெரிகிற பாவத்தை மட்டும் அவர்கள் வெறுப்பதில்லை, இரகசியமானதும், மறைந்திருக்கிறதுமான பாவங்களையும் வெறுக்கிறார்கள். மனித இருதயம் பலவிதமான உள்ளான இரகசிய எண்ணங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றின் மத்தியில் மறைந்திருக்கிற பாவத்தைக் கண்டறிவது என்பது இலேசானதல்ல (சங்கீதம் 19:12).
  3. கிறிஸ்தவர்கள், பாவகரமான சிந்தனைகளையும் தவிர்க்கவே விரும்புவார்கள். வெளிப்பிரகாரமாக பாவம் செய்யக்கூடாது என்பதுமட்டும் அவர்களுடைய ஜெபமாக இருக்காது, பாவகரமான சிந்தனைகளும் தங்களில் எழக்கூடாது என்றே ஜெபிப்பார்கள் (யாக்கோபு 1:14-15).
  4. இறுதியாக, கிறிஸ்தவர்கள் பாவம் செய்யாதபடி தவிர்ப்பதற்காக மட்டும் போராடாமல், நன்மை செய்வதையும் எப்போதும் நாடுவார்கள். தவறானதைத் தவிர்ப்பது நல்லது; அதைவிட மேலானது, நன்மை செய்வது. மெய் விசுவாசி, தீமை செய்வதைத் தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல், நன்மை செய்வதைத் தவிர்க்காமலும் இருக்கப்பார்ப்பான் (சங்கீதம் 19:13).

இரண்டாவது,

சிலர் கேட்பார்கள், “தேவபக்தியுள்ள மனிதர்கள் பாவத்தை இவ்வளவு தூரம் வெறுக்கிறவர்களாக இருந்தால், பிறகு அவர்களே ஏன் பாவத்தையும் செய்கிறார்கள்?” என்று. எல்லாரும் பாவிகள் என்பதும், எல்லாரும் பாவம் செய்கிறார்கள் என்பதும் உண்மைதான். இதை மறுத்தால், நாம் பாவமுள்ளவர்கள் என்று சொல்லும் கடவுளைப் பொய் சொல்லுகிறவராகக் குற்றப்படுத்துகிறோம் (1 யோவான் 1:8-10). இதற்கு நான் பதில் தரவேண்டும்.

  1. ஒரு விசுவாசி, திட்டமிட்டுப் பாவம் செய்துவிடலாம் என்பது உண்மைதான், இதையே உரியாவின் விஷயத்தில் தாவீது செய்தான். இதைத் தவிர அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டுவிடாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான் என்கிறது வேதம் (1 இராஜாக்கள் 15:5). ஆனால் பெரும்பாலும் தேவ பக்தியுள்ளவர்கள் திட்டமிட்டுப் பாவம் செய்வதை வாழ்க்கையில் வழமையாகக் கொண்டிருக்கமாட்டார்கள். திட்டமிட்டுப் பாவம் செய்வதற்கு எதிரான இருதயத்தை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். (ரோமர் 7:23). பொதுவாக தேவ பக்தியுள்ளவர்களும் பாவம் செய்துவிடலாம் என்பது உண்மையானாலும், அவர்கள் சோதனைகளினால் கவர்ந்திழுக்கப்பட்டு அவற்றைச் செய்துவிடுகிறார்களே தவிர திட்டமிட்டுச் செய்வதில்லை. தேவபக்தியுள்ள மனிதர்கள் பாவத்தை வெறுக்கிறவர்களாக இருப்பார்கள் என்றுதான் நான் சொல்லுவேன்.
  2. சிலவேளைகளில் கடவுள், விசுவாசிகளைப் பாவம் செய்யும்படி விட்டுவிடுகிறார். அதற்குக் காரணம், அதன் மூலம் அவர்கள் தங்களுடைய இருதயம் எந்தளவுக்கு நிலையற்றதும் கேடானதுமாக இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்துணர வேண்டும் என்பதற்காக விட்டுவிடுகிறார். சீஷனாகிய பேதுரு, இயேசுவை விட்டு ஓடிப்போவதையும், இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று மறுதலிப்பதையும் நம்பவே முடியவில்லை. ஆனால் அவரை அவர் போக்கிற்கு கடவுள் விட்டுவிட்டபோது, அவர் அப்படித்தான் நடந்துகொண்டார்.

தேவபக்தியுள்ளவர்கள் பாவம் செய்துவிடலாம் என்பது உண்மையானாலும், அவர்கள் பாவத்தை வெறுக்கிறவர்களாக இருப்பார்கள். கீழ்வரும் உண்மைகள் அதை விளக்குபவையாக இருக்கின்றன:

அ. தேவபக்தியுள்ள ஒரு மனிதன், தான் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்திருப்பதை உணருகிறபோது, அவனுடைய மனச்சாட்சி பெரியளவில் வேதனைக்குள்ளாகிறது (சங்கீதம் 73:21-22).

ஆ. ஒரு கிறிஸ்தவன், தன்னுடைய பாவம் மன்னிக்கப்பட்டு, தான் சுத்தமானதை மனத்தளவில் உணருகிறவரை, தன்னுடைய குற்றஉணர்வினால், அமைதியின்றி, ஒடுங்கிப் போகிறவனாக இருப்பான். ஒரு முறை தாவீது ஜெபித்திருப்பதைக் கவனியுங்கள், “தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.” (சங்கீதம் 51:1-2).

இ. கடவுள், ஒரு விசுவாசியினுடைய பாவச் செயல்களைக் கண்டித்து, சீர்படுத்துகிறபோது, அவர் நீதியும் உண்மையுமாய் செயல்படுகிறார் என்பதை ஒரு விசுவாசி ஒப்புக்கொள்ளுவான். தன்னுடைய பாவத்திற்காக கடவுள் தன்னைச் சிட்சிப்பது சரியானதே என்று எந்தவொரு விசுவாசியும் சொல்லுவான். அத்தோடு, தன்னுடைய பாவச் செயல்களைத் தானே கண்டிக்கவும் செய்வான்.

ஈ. பேதுரு, அவரை எனக்குத் தெரியாது என்று இயேசுவை மறுதலித்துவிட்டேன் என்பதை உணர்ந்தபோது மனங்கசந்து அழுதார். ஆனால் அதன் பிறகு, அவர் கிறிஸ்துவுக்காக மிகுந்த ஊக்கத்துடன் பலவிதங்களில் உழைத்தார். பேதுருவினுடைய அத்தகைய மனந்திரும்புதல், அவர் பாவத்தை எந்தளவுக்கு வெறுத்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

உ. ஒரு விசுவாசியினுடைய மிகப் பெரிய விருப்பம் என்னவென்றால், பாவத்தை முற்றாக ஒழித்துவிட வேண்டும் என்பதுதான். ஆனால், மரணத்திற்குப் பிறகு, கிறிஸ்துவோடு இருக்கப்போகிறபோதுதான் அது சாத்தியம் என்பதை அவன் அறிந்திருக்கிறான். மரணத்திற்குப் பிறகு, தான் பாவம் செய்யப்போவதில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவன் மரணத்தை வரவேற்பான். அப்போஸ்தலனாகிய பவுல் விரும்பியதைப் போல், எந்தவொரு விசுவாசியும், கிறிஸ்துவோடு வாழப்போகிற அத்தகைய பாவமற்ற வாழ்க்கையையே பெரிதும் விரும்புவான் (2 கொரிந்தியர் 5:4).

 

 

சிந்தனை செய் மனமே, சிந்தனை செய்!

நம்மினத்தில் சிந்தனைக்கு அநேகர் இடங்கொடுப்பதில்லை. அதாவது, ஆழ்ந்த அறிவுபூர்வமான சிந்தனைக்கு இடம்கொடுப்பதில்லை என்றே சொல்லவந்தேன். நம்மவர்கள் மனத்தில் ஆழ்ந்த அறிவுபூர்வமான சிந்தனையைவிட உணர்ச்சிகளுக்கே அதிக இடம் கொடுக்கிறார்கள். தமிழ் சமுதாயம் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியது. சிந்திக்க அவசியமில்லாமல் உணர்வுகளை மட்டும் சந்தோஷப்படுத்தும் ஒருவகைக் கிறிஸ்தவமே நம்மினத்தை இன்று ஆளுகிறது. 16ம் நூற்றாண்டுக்கு முன் ரோமன் கத்தோலிக்க மதம் வேதத்தை வாசித்து மனிதன் சிந்திக்க வழியில்லாமல் செய்திருந்தது. சிந்தனை இருக்கவேண்டிய இடத்தை சிலை வணக்கமும், சடங்குகளும் பிடித்துக்கொண்டன. 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் எழுந்தபோதே சிலைவணக்க சிறைவாசத்தில் இருந்து மக்கள் விடுதலை அடைய முடிந்தது. இன்று மறுபடியும் சிந்தனை இருக்கவேண்டிய இடத்தை வெறும் உணர்ச்சிகள் பிடித்துக்கொண்டிருக்கின்றன. இது 21ம் நூற்றாண்டு சிலைவணக்கமாக மாறியிருக்கிறது. அறிவுபூர்வமானதும், ஆக்கபூர்வமானதுமான சிந்தனைக்கு இடம்கொடாததாலேயே கிறிஸ்தவ சபைகளும், பிரசங்கங்களும், கிறிஸ்தவ தலைமையும் இன்று தாழ்ந்த நிலையில் காணப்படுகின்றன. உண்மையில் அத்தகைய நிலையில் இருக்கிறோம் என்பதையே உணராததாக நம்மினத்துக் கிறிஸ்தவம் இருந்து வருகிறது. அது நமக்குக் கிடைத்திருக்கும் சாபம் என்றே சொல்வேன்.

மனத்தைப் பயன்படுத்தி சிந்திக்க வேண்டியதன் அவசியத்தைப்பற்றி 1972ல் ஒரு நூலை இவெஞ்சலிக்கள் ஆங்கிலிக்கன் பிரிவைச் சேர்ந்த, மறைந்த ஜோன் ஸ்டொட் வெளியிட்டார். அந்நூலின் 1974ம் ஆண்டுப் பதிப்பு என்னிடம் இருக்கிறது. அதை நான் வாசித்துப் பலதடவைகள் பிரசங்கங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். அது இன்றும் அச்சில் இருக்கிறது. ஜோன் ஸ்டொட்டோடு சில விஷயங்களில் எனக்கு முரண்பாடுண்டு; அவை இறையியல் சம்பந்தமானவை. இருந்தபோதும் சிந்திப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்த நூலை நான் அவசியம் சிபாரிசு செய்கிறேன். உண்மையில் இன்று அவசியமாக எல்லோரும் வாசிக்கவேண்டிய சிறப்பான நூல் என்றே கூறுவேன். கிறிஸ்தவர்கள் அதுவும் நம்மினத்தவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல்.

ஜோன் ஸ்டொட் இதை எழுதிய காலத்தில், இங்கிலாந்தில் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரவலாக உருவாகியிருக்கும் அறிவுபூர்வமான சிந்தனைக்கெதிரான (Anti-Intellectualism) நிலைப்பாட்டை உணர்ந்து, அந்த ஆபத்திற்கெதிரான எச்சரிக்கையாக இந்நூலை எழுதினார். அறிவைவிட உணர்ச்சியே மேலானது என்ற நிலைப்பாட்டை எடுத்து உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கூட்டத்தார் அன்று வளர ஆரம்பித்திருந்தார்கள். ஸ்டொட் அந்த ஆபத்தை அடையாளங்கண்டுகொண்டார். அதைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்கள் அறிவுபூர்வமாக சிந்திக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்பதை ஸ்டொட் வலியுறுத்தி வேத ஆதாரங்களோடு இந்நூலை எழுதியிருக்கிறார். அறிவற்ற வைராக்கியத்தை மட்டும் கொண்டவர்களாக இளைஞர்கள் இருந்து வருவதை ஸ்டொட் உணர்ந்தார். அதனால் ஏற்படும் ஆபத்தை அவர் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். சிந்திக்காமலேயே உணர்ச்சிவசப்பட்டு எந்தக் கூக்குரலுக்காகவும் தன்னை ஒப்புக்கொடுத்துவிடுகிறதாக இளைஞர்கள் இருப்பது அவருக்கு வருத்தத்தை அளிக்கிறது. பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரியின் தலைவராக இருந்த டாக்டர் ஜோன் மெக்கேயின் வார்த்தைகளை ஸ்டொட் நினைவுகூருகிறார்,

இன்டர்வாசிடி வருடாந்தர கூட்டத்தில் ஜோன் ஸ்டொட் கொடுத்த விரிவுரையே இந்நூல். இது நான்கு அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது. இதன் இரண்டாவது அதிகாரத்தில் நம் மனத்தை நாம் ஏன் பயன்படுத்தவேண்டும் என்பதை ஸ்டொட் விளக்கியிருக்கிறார். இந்த அதிகாரம் நூலுக்கு அவசியமான அத்திவாரத்தை இட்டிருக்கிறது. இந்த அதிகாரத்தில் ஸ்டொட்டின் வேதவிளக்கங்கள் தகர்க்க முடியாததாக இருக்கின்றன. மனத்தைப் பயன்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வேதத்தில் இருந்து ஆதாரங்களை அள்ளிவைக்கிறார் ஸ்டொட். எனக்குப் பிடித்த அதிகாரம் இது.

‘சிந்தித்துப் பார்க்காமல் எதற்கும் நம்மை அர்ப்பணிப்பது மதவெறி; அர்ப்பணிப்பில்லாத சிந்தனையைக் கொண்டிருப்பது சகலவித நடவடிக்கைகளையும் முடக்கிவிடும்.’

சிந்திக்கும் ஆற்றலுள்ள மனத்தோடு மனிதனைக் கர்த்தர் படைத்திருக்கிறார் என்று கூறும் ஸ்டொட், ஆதியாகமத்தில் (2, 3) மனிதன் படைக்கப்பட்ட விதத்தை இங்கு ஆதாரமாகக் காட்டுகிறார். ஏனைய உயிரினங்களைவிட மனிதன் தேவசாயலோடு சிந்திக்கக்கூடிய இயல்புள்ளவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். மனிதனுக்கு மட்டுமே புரிந்துகொள்ளும் தன்மை இருக்கின்றது. படைப்பின் தேவன், புத்தியுள்ளவனாக மனிதன் உழைத்து நிலத்தைப் பண்படுத்தி தன் நன்மைக்காகப் பயன்படுத்தி தன்னோடு உறவாடும்படிக் கர்த்தர் அவனைப் படைத்திருக்கிறார். மனிதனின் சிந்திக்கக்கூடிய தன்மை அவனை ஏனைய படைப்புயிர்களில் இருந்து வேறுபடுத்துகின்றது. அதேநேரம், புத்தியற்றவனாக மிருகத்தைப் போல மனிதன் நடந்துகொள்ளும்போது வேதம் அவனை நிந்திக்கிறது (சங் 32:9; 73:22). மனிதனுக்குரிய இயல்புகளைக் கொண்டிராதபோதும், எறும்புகள் மனிதன் வெட்கப்படும்படியான உழைப்புத்திறனைக் கொண்டிருக்கின்றன. இருந்தபோதும் பொதுவாக மிருகங்கள் சிந்திக்காமல் உடனடியாக எதையும் செய்யும் இயல்பைக் கொண்டிருக்கின்றன; மனிதன் சிந்தித்துத் தீர்மானங்களை எடுக்கும் இயல்பைக் கொண்டிருக்கிறான்.

பாவத்தினால் ஆதியில் ஏற்பட்ட வீழ்ச்சி மனிதனின் அனைத்துப் பாகங்களையும் முழுமையாகப் பாதித்திருக்கிறது. அவனில் பாவம் பாதிக்காத எந்தப் பகுதியும் இல்லை; மனம், சித்தம் உட்பட. மனம் பாவத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதனால் அதைச் சாக்காக வைத்து உணர்ச்சிகளை நாடிப்போவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல; உணர்ச்சிகளும் பாவத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பாவம் மனிதனைப் பாதித்திருந்தபோதும் கர்த்தர் அவனைத் தொடர்ந்து சிந்தித்து ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்கும்படிக் கட்டளையிடுகிறார் (ஏசாயா 1:18). பொதுவான காரியங்களில் நீ பயன்படுத்தும் புத்தியை ஒழுக்கத்தைப் பற்றியும், ஆவிக்குரியதுமான காரியங்களிலும் ஏன் பயன்படுத்தக்கூடாது என்று கர்த்தர் கேட்கிறார் (மத்தேயு 16:1-4; லூக்கா 12:54-57). மனிதன் பகுத்தறிந்து தீர்மானங்களை எடுத்து அதன்படி நடக்கும் இயல்புள்ளவன். தன்னுடைய நடத்தைக்கான தகுந்த காரணங்களை அவன் கொண்டிருக்காமல் இருந்தால் அத்தகைய காரணங்களை அவன் நாடி அறிந்து தனக்குள்ளேயே சமாதானம் தேடிக்கொள்ள வேண்டிய இயல்போடு மனிதன் வாழ்கிறான்.

ஸ்டொட்டின் இந்த வேத ஆதாரங்களை மறுதலிக்க முடியாது. மனிதன் சிந்தித்து எதையும் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கவேண்டும் என்றும் அப்படிச் செய்து வாழாமல் இருப்பது அவனை மிருகங்களுக்கு ஒப்பானவனாகக் காட்டிவிடும் என்ற வேதபோதனை சாட்டையடிபோல் தாக்குகிறது. நம்மினம் சிந்திப்பதாக எண்ணிக்கொண்டு சிந்தனையற்று வாழ்வது எத்தனை ஆபத்தானதும், சிரிப்பை உண்டாக்குவதுமாயிருக்கிறது. முக்கியமாக ஆவிக்குரிய விஷயத்தில் நம்மினம் சிந்திப்பதேயில்லை என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆவிக்குரிய விஷயத்தில் உணர்ச்சிகளுக்கு அடியோடு வாழ்க்கையை அர்ப்பணித்து புத்தியில்லாது, சிந்தித்து ஆராய மறுத்து அன்றாடம் காய்ச்சிகளுக்கெல்லாம் அடிமையாகி, அவர்களை ஆவிக்குரிய தகப்பன்களாக அங்கீகரித்துப் பணக்காரர்களாக்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது நம்மினத்துக் கிறிஸ்தவம்.

ஜோன் ஸ்டொட் படைப்பில் ஆரம்பித்து பொதுவாக மனிதன் ஏன் சிந்திக்க வேண்டியவனாக இருக்கிறான் என்பதை வலியுறுத்திக்காட்டிவிட்டு, கிறிஸ்தவர்கள் கர்த்தரின் எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை வற்புறுத்துகிறார். அதை வலியுறுத்த அவர் நான்கு கிறிஸ்தவ போதனைகளை உதாரணங்காட்டுகிறார். முதலாவதாக, கர்த்தருடைய வெளிப்படுத்தல் பகுத்தறிந்து விளக்கும் வெளிப்படுத்தலாக இருக்கிறதென்கிறார் ஸ்டொட். அதாவது, கர்த்தர், படைப்பு தன்னைப் பற்றி வெளிப்படுத்துவதை மனிதன் அறிந்துகொள்ள வேண்டும் என்கிறார். இயற்கை கர்த்தரைப் பற்றி நமக்கு விளக்குவதாக இருக்கின்றது. அத்தோடு கர்த்தர் மனிதனோடு பேசுகிறவராக இருக்கிறார்; அவர் பேசித் தன்னைப்பற்றி வெளிப்படுத்தல் மூலம் மனிதனுக்கு விளக்கியிருக்கிறார். இதெல்லாம் மனிதன் சிந்தித்து பகுத்தறிந்து தன்னை அறிந்துகொள்ள வேண்டும் என்பது கர்த்தரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்பதை விளக்குகின்றன.

இரண்டாவதாக, கிறிஸ்தவம் வெளிப்படுத்தப்பட்ட வாழ்க்கை நியதியாக இருக்கிறது என்கிறார் ஸ்டொட். கர்த்தர் பேச்சின் மூலமும், வார்த்தையின் மூலமும் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வார்த்தைகளை நாம் சிந்தித்து ஆராய்ந்து பார்க்கவேண்டும். கர்த்தருடைய பகுத்தறியும்படியான வெளிப்படுத்தல் பகுத்தறியக்கூடிய மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் ஸ்டொட். கர்த்தர் தன் வார்த்தையை நாம் மனத்தைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும்படித் தந்திருக்கிறார். அந்த வெளிப்படுத்தலை நாம் பெற்று, வாசித்து, புரிந்துகொண்டு அதற்குக் கீழ்ப்படிவதே நம் கடமையாக இருக்கிறது.

மூன்றாவதாக, மீட்பை ஸ்டொட் உதாரணங்காட்டுகிறார். மீட்பைக் கிறிஸ்துவின் மூலம் கர்த்தர் நிறைவேற்றி சுவிசேஷத்தின் மூலம் அதை அறிவித்தார். கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியின் மறுபிறப்பை அடைந்து புதிய மனத்தை இப்போது கொண்டிருக்கிறார்கள். அந்த மனம் தொடர்ந்து புதுரூபமாகவேண்டும் என்று பவுல் ரோமர் 12:1-2ல் விளக்கியிருக்கிறார். சிந்தித்து ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பதன் மூலம் இதைக் கிறிஸ்தவர்கள் செய்யவேண்டியவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்துவின் மீட்பு நமக்குக் காட்சியாகக் கொடுக்கப்படவில்லை; புத்தியுள்ள வார்த்தைகளால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கண்கள் பார்க்கும்படியாக அது கொடுக்கப்படவில்லை; காதுகளினால் கேட்கவும், மனத்தைப்பயன்படுத்தி சிந்தித்துப் புரிந்துகொள்ளும் விதத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கிறிஸ்தவர்கள் தங்களுடைய மனத்தைப் பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் நான்காவது கிறிஸ்தவ போதனையாக கர்த்தரின் நியாயத்தீர்ப்பு காணப்படுகிறது என்கிறார் ஸ்டொட். நம்முடைய அறிவின் அடிப்படையிலும், அந்த அறிவைப்பயன்படுத்தி நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதன் அடிப்படையிலுமே நியாயத்தீர்ப்பு நிகழப்போகிறது என்கிறது வேதம். யோவான் 12:48ல் இயேசு சொல்கிறார்,

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

அறிவுபூர்வமான சிந்தனைக்கெதிரான இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தின் போக்கு நியாயத்தீர்ப்புக்கு அவர்களை வழிநடத்துகிறது. கர்த்தரின் வார்த்தையைக் காதுகொடுத்துக் கேட்டும், அதை வாசித்து சிந்தித்து சரியான போதனையை மட்டும் பின்பற்றி நடக்கவும் மறுத்து வாழும் கிறிஸ்தவ சமுதாயம் பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலைப்போலவே கர்த்தரின் தண்டனையை சந்திக்கப் போகிறது.

இதற்குப் பிறகு ஸ்டொட் எந்தெந்தவிதத்தில் நம் மனத்தை நாம் பயன்படுத்த வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்று விளக்க ஆரம்பிக்கிறார். இதை நூலின் 3ம் அதிகாரத்தில் விளக்குகிறார். ஆராதனையில் ஆரம்பித்து விசுவாசம், பரிசுத்தவாழ்க்கை, கிறிஸ்தவ சித்தத்தை அறிந்துகொள்ளுதல், சுவிசேஷத்தை அறிவித்தல், கிறிஸ்தவ ஊழியத்தில் கர்த்தர் தந்திருக்கும் ஈவுகளைப் பயன்படுத்துதல் என்று, இவை ஒவ்வொன்றிலும் நமது மனத்தைப் பயன்படுத்தவேண்டிய விதத்தை ஸ்டொட் விளக்குகிறார். இதென்னடா, இவற்றிற்கும் நம் மனத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கக்கூடியளவுக்கு இன்றைக்கு அறிவுபூர்வமான சிந்தனைப் பட்டினி நம்மினத்தில் இருந்துவருகிறது. கர்த்தர் மனத்தைப் பயன்படுத்தி செய்யப்படாத ஆராதனையையும், மனத்திற்குத் தொடர்பில்லாத விசுவாசத்தையும், மனம் சம்பந்தமற்ற சுவிசேஷ அறிவிப்பையும், மனத்திற்கு இடங்கொடாத கிறிஸ்தவ ஊழியத்தையும் வெறுத்து ஒதுக்குகிறார் என்பது நம்மவர்களுக்குத் தெரியவில்லை. ஸ்டொட்டின் நூலை வாங்கி வாசியுங்கள். மனத்தோடு தொடர்பில்லாத கிறிஸ்தவம் கிறிஸ்துவோடு தொடர்பில்லாத வெறும் மதவெறி என்று அறிந்துகொள்ளுவீர்கள். ஜோன் ஸ்டொட் தன் நூலின் கடைசி அதிகாரத்தில், அறிவைப்பயன்படுத்தி கிறிஸ்தவ வாழ்வை வாழ்வதன் அவசியத்தை விளக்குகிறார். கிறிஸ்தவர்கள் அவசியம் வாசிக்க வேண்டியது இந்நூல்; உணர்ச்சிக்கு மட்டும் தூபம்போட்டு கிறிஸ்துவின் பெயரில் நடந்து வரும் பாகால் ஊழியங்கள் மலிந்திருக்கும் இந்நாட்களில் இத்தகைய நூல்கள் நம்மைக் காப்பாற்றும்.

 

ஜோன் ஸ்டொட் மனத்தைப் பயன்படுத்தி சிந்திப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இருக்கும் முதல் பிரசங்கி அல்ல. இதையே சீர்திருத்த கிறிஸ்தவம் 16ம் நூற்றாண்டில் வலியுறுத்தியது. 17ம் நூற்றாண்டு பியூரிட்டன் பெரியோரும் இதன் அவசியத்தைப்பற்றி தங்கள் ஊழியக்காலம் முழுதும் பிரசங்கித்தும், எழுதியும் வந்திருக்கிறார்கள். 20ம் நூற்றாண்டில் முதலில் பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரியிலும், பின்னால் வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் கல்லூரியிலும் போதித்த கிரேஷம் மேச்சன் இதை வலியுறுத்தி எழுதியிருக்கிறார். மேச்சன் எழுதிய முக்கியமான நூல் ‘கிறிஸ்தவ அறிவின் முக்கியத்துவம்’ (The Important of Christian Scholarship). மேச்சனும் அறிவுபூர்வமான சிந்தனைக்கெதிரான நிலை உருவாகி வருவதைக் கவனித்திருக்கிறார். 1932ல் வெளியிடப்பட்ட இந்நூல் இன்றைய சூழ்நிலையைப் படம்பிடித்துக்காட்டுவது போல் இருக்கிறது. மேச்சனின் நூல் அவசியம் வாசிக்கவேண்டிய நூல். சிம்பிள் விசுவாசமே இன்று தேவை என்றும், தேவையில்லாமல் அதிகம் போதித்து மூளையைக் குழப்பக்கூடாது என்றும் நினைப்பவர்களை மேச்சன் சாடுகிறார். ‘சிம்பிள் விசுவாசம் விசுவாசமே அல்ல; அது கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசமல்ல’ என்கிறார் மேச்சன். ‘விசுவாசம் எப்பொழுதுமே அறிவை அடிப்படையானதாகத் தன்னில் கொண்டிருக்கும்’ என்கிறார் அவர். சிந்தித்து ஆராய்வதன் அவசியத்தை மேச்சன் தன் நூலில் வலியுறுத்தியிருக்கிறார்.

அதேபோல் சீர்திருத்த இறையியலறிஞரான பெஞ்சமின் வோர்பீல்டும், மார்டின் லொயிட் ஜோன்சும் தங்கள் ஊழியப்பணிகளில் சிந்திப்பதன் அவசியத்தையும், அறிவைப்பெற்றுக்கொள்ள கிறிஸ்தவர்களும், போதகர்களும் உழைக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கிறார்கள். வோர்பீல்ட், “வாசிக்காத போதகன் அந்த ஊழியத்தில் இருக்கக்கூடாது” என்று எழுதியிருக்கிறார். “ஊழியத்துக்கு வருமுன்பே அதிகம் வாசிக்கிறவனாக ஊழிய அழைப்புள்ளவர்கள் இருக்கவேண்டும்” என்று வோர்பீல்ட் எழுதியிருக்கிறார்.

சிந்திக்காத கிறிஸ்தவ சமுதாயத்தைப்போல ஆபத்தானது இருக்கமுடியாது. சிலைவணக்கப் பண்பாட்டில்தான் அத்தகைய நிலையைக் காணலாம். அது கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் முரணானது. கிறிஸ்தவன் அடிப்படையில் சிந்தனாவாதி; கிறிஸ்து அவனை சிந்திக்கும் மனிதனாக மறுபிறப்பின் மூலம் மாற்றியிருக்கிறார். வெறுமனே சபைக்குப் போய்வருவதும், ஜெபிப்பதும், அன்றாட அப்பம், அனுதின மன்னா அல்லது வட்செப் குறுந்தியானச் செய்தி போன்றவற்றில் மட்டும், சிந்திக்காமல் சுகம் காணும் கிறிஸ்தவம், கிறிஸ்துவோடு தொடர்புடைய கிறிஸ்தவமல்ல. அது போலியானது. சிந்திக்க ஆரம்பியுங்கள் வாசகர்களே. அறிவுபூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும் கிறிஸ்துவைப்போலவும், பவுலைப்போலவும் சிந்திக்க ஆரம்பியுங்கள். கத்தியைப் பட்டைதீட்டி வைப்பது போலவும், துப்பாக்கியைப் போர்வீரன் சுத்தப்படுத்தி வைப்பதுபோலவும் நம்முடைய மனத்தை சிந்தனையால் புடம்போட்டு வைக்கவேண்டியது கிறிஸ்தவ கடமை. வேதம், சிந்தித்து, ஆராய்ந்து, ஆழமாகப்படித்து இருதயபூர்வமாக அனுபவித்து கர்த்தரை வழிபடுவதற்காகவே தரப்பட்டிருக்கிறது. வேதசிந்தனைகளால் மனத்தை நிரப்பிக்கொள்ளுங்கள். கூட இருப்பவர்களையும் சிந்திக்கத் தூண்டுங்கள். சிந்திப்பது உங்களைக் கிறிஸ்துவில் உயர்த்தும்; கிறிஸ்துவுக்கு மகிமை சேர்க்கும்.

 

மறக்க முடியாத 2020

பெரிய எதிர்பார்ப்புகளோடு அதிர்வெடி போல் ஆரம்பமானது 2020. வழமைபோல பலருக்கும் புதுவருட வாழ்த்துக்கள் தெரிவித்தேன். புதிய வருடம் ஆரம்பித்தாலே என்னுடைய வெளிநாட்டுப் பிரயாணங்களும் 10ம் தேதிக்குப் பின் ஆரம்பித்துவிடும். இந்த வருடம் பிரயாணங்கள் அதிகமாக இருக்கப்போகிறது என்று தெரிந்தது. சிங்கப்பூர், இந்தியா என்று ஜனவரியில் போய்வந்துவிட்டு அதற்கடுத்த மாதம் ஆஸ்திரேலியாவும் போய்வந்தேன். யாருக்குத் தெரிந்திருந்தது, நிலைமை இந்தளவுக்கு 2020ல் மாறப்போகிறதென்று. ஜனவரி மாதம் முடிவதற்குள்ளேயே சீனாவில் கோவிட்-19 பற்றிய செய்திகள் அடிபட ஆரம்பமாயின. மார்ச் மாதத்தில் உலக நாடுகள் தங்களுடைய எல்லைகளை மூட ஆரம்பித்தன. இப்போது 9 மாதங்கள் போனபோக்கே தெரியவில்லை. புதிய வருடத்தில் காலடி எடுத்துவைக்க இன்னும் ஓரிரு நாட்களே இருக்கின்றன. என்னவெல்லாம் செய்திருக்கிறது இந்த 2020. (இந்த ஆக்கம் டிசம்பர் 2020 எழுதப்பட்டது).

80 மில்லியன் மக்களைப் பாதித்து, ஏறக்குறைய 2 மில்லியன் தொகையினரின் உயிரையும் மாய்த்து, நாடுகளை அல்லோலகல்லோலப் படுத்திக்கொண்டிருக்கிறது கோவிட்-19. அது போதாதென்று வைரஸ் இப்போது புதிய ரூபமெடுத்து மறுபடியும் பல நாடுகளின் எல்லைகளை அடைத்து, மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. புதிய வைரஸ் அநேக நாடுகளில் நுழைந்துவிட்டது. அமெரிக்காவை கொரோனா வைரஸ் தொடர்ந்தும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் அதைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல், அதோடு சேர்ந்து வாழப்பழகிக் கொள்ளுங்கள் என்று அரசு கூறியிருக்கிறது. ஏனைய நாடுகளிலும் இதேமுறையைப் பின்பற்றுகிறார்கள். இன்னும் எத்தனை காலத்துக்கு இது தொடரப்போகிறது? புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசி மருந்து வைரஸ் தொற்றாமல் இருக்கப் பாதுகாப்பானதாக இருக்குமா? என்ற கேள்விகள் எல்லாம் தொடர்ந்து எழுந்தபடி இருக்கின்றன. இந்த வைரஸ் போனாலும் இன்னும் ஒன்று வரத்தான் போகிறது என்று ‘ஹூ’ (WHO) நிறுவனம் எச்சரித்திருக்கிறது. எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பது எவருக்கும் தெரிந்திராத புதிராகப் பெருரூபமெடுத்து நிற்கிறது. சில மாதங்களுக்கு முன் 2021ல் நிலைமை மாறும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். இப்போது அதிலும் மண் விழுந்திருக்கிறதுபோல்தான் தெரிகிறது.

கோவிட்-19 பாதிப்புகள்

கோவிட்-19 உலகைப் பெரிதும் மாற்றிவிட்டிருக்கிறது. நாம் அனுபவித்து வரும் புதிய வழமை நம் காலத்து மக்கள் அறிந்திராத, அனுபவித்திராத ஒன்று. முகக்கவசமும், சுத்திகரிப்பு சாதனங்களும், கைபேசியில் தடமறியும் அப்பும், தொலைவில் தள்ளிநிற்பதும், வீட்டில் இருந்து வேலை செய்வதும், தனிமைப்படுத்தலும் நமது அன்றாட வாழ்க்கையின் அங்கங்களாக மாறிவிட்டன. நாட்டுப் பொருளாதாரமும், வணிகமுறைகளும்கூட கோவிட் காலத்துக்கேற்ற விதத்தில் பெருமாற்றத்துக்குள்ளாகி வருகின்றன. பணப்புழக்கத்தையும் பெருமளவுக்கு கைப்புழக்கத்தில் இல்லாத நிலைக்கு கோவிட்-19 தள்ளியிருக்கிறது. எந்த நாட்டில் எப்படியெல்லாம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரங்களைப் பெற்றுக்கொள்ளுவது சுலபமாக இல்லை. வேலையிழப்பு என்பது எல்லா நாடுகளிலும் தொடரத்தான் செய்கிறது. பொருளாதாரத்தைக் காப்பதற்காக முடிந்தவரை லொக்டவுனைத் தவிர்க்கவே நாடுகள் எத்தனிக்கின்றன. உலகளாவிய விதத்தில் பரவியிருக்கும் கோவிட் இன்னும் அதிகமாகப் பெருகுமானால், கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளால் அதைத் தவிர்க்க முடியாமல் போனால் ஸ்பெனிஷ் புளூ அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுவதை நிறுத்தமுடியாது. இப்போதைக்கு மக்கள் எப்படியோ கோவிட் நிலைமையை சமாளித்து வருகிறார்கள். மாடியில் இருந்து விழுகிறவனுக்கு பலத்த காயம் உண்டாகும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் மாடி உயரத்தில் இருப்பவர்கள் எப்படியோ நிலைமையை சமாளித்து வருகிறார்கள். மண்ணிலேயே புரண்டு வாழ்ந்து வந்திருக்கிறவர்களுக்கு ‘காயம்’ என்னவென்று தெரியுமா? கோவிட் இல்லாதிருந்த காலத்திலும், இப்போதும் அவர்களுக்கு வாழ்க்கை காயமாகத்தான் இருந்துவருகிறது.

இந்த உலகத்தில் கோவிட்-19 இத்தனை மாற்றங்களையும் செய்துவருகின்ற நிலையில் கர்த்தரின் திருச்சபையை அது பாதிக்காமல் இருக்குமா? தொடர்ந்தும் திருச்சபைகள் பல நாடுகளில் முழுமையாகக் கூடி ஆராதனை செய்யமுடியாத நிலையிலும், சுவிசேஷ, மிஷனரிப்பணிகளைத் தொடரமுடியாத நிலையிலும் இருக்கின்றன. புதிய வழமையாக இணைய தளத்தில் ஆராதனையையும், கூட்டங்களையும் நடத்துவது தொடருகிறது. புதிய வழமைக்கேற்ப நாமும் நம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவசியமான எத்தனையோ பணிகளைச் செய்யமுடியாத நிலையிலிருந்தபோதும், தொடர்ந்து செய்துவரக்கூடிய பணிகளுக்காக நிச்சயம் நாம் கர்த்தருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். திருச்சபை எதிர்காலத்தில் எப்படியிருக்கப்போகிறது என்பது யாருக்குத் தெரியும்?

இந்தக் கோவிட்-19 காலம் பலருக்கும் பலவிதமான துன்பங்களை உண்டாக்கியிருக்கிறது என்பதை நாம் மறுக்கமுடியாது. கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ சபைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. உண்மையில் கோவிட்-19 முடிந்து நிலைமை எப்போதாவது வழமைக்குத் திரும்புகிறபோதுதான் எந்தளவுக்கு திருச்சபை பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை நிலவரம் தெரியவரும். சபை மக்கள் கோவிட்-19 காலத்தில் எந்தளவுக்கு விசுவாசமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் அப்போதுதான் வெளிப்படையாகத் தெரியவரும். இதை எழுதுகிறபோது எனக்கு 1 பேதுரு நூல் நினைவுக்கு வருகிறது. கடுந்துன்ப காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த கிறிஸ்தவர்களுக்குப் பேதுரு, அவற்றிற்கு மத்தியில் எப்படிக் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழவேண்டும் என்பதைத்தான் அந்நிருபத்தில் எழுதியிருக்கிறார். அப்போதிருந்தளவுக்கு சரீரத்துன்பத்தை நாம் இன்று அனுபவிக்காவிட்டாலும், பலவிதமான துன்பங்களுக்குள்ளாக வாழ்ந்து வருகிறோம் என்பதை நாம் மறுக்கமுடியாது. கிறிஸ்தவ வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வந்துபோகும் காட்சிகள். கிறிஸ்தவ வரலாற்றில் சில காலப்பகுதிகளில் துன்பம் அதிகமாகலாம். அதற்கு கிறிஸ்தவ வரலாறும், வேதமும் தொடர்ந்து சாட்சி பகருகின்றன. இந்தத் துன்பங்கள் சிலருக்குத் தடையாகலாம்; அவர்களைத் தடுமாறச் செய்யலாம். அதைத் தவிர்க்கவே பேதுரு முதலாம் நிருபத்தை 1ம் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். நிச்சயம் நாம் வாழ்ந்து வரும் காலகட்டத்தில் அது அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நிருபம்.

துன்பங்களில் பலவிதங்கள் உண்டு. ஒருசில சரீரத்தைப் பாதிக்கும்; வேறுசில மனத்தைப் பாதிக்கும். கோவிட்-19 அநேக கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையை முடித்திருக்கிறது. அவர்களுடைய குடும்பங்களுக்கும், சபைகளுக்கும் மனஉளைச்சலை உண்டாக்கியிருக்கிறது. இன்னும் பல வருடங்கள் வாழ்ந்திருக்க வேண்டியவர்கள் கோவிட்டினால் இறந்திருக்கிறார்கள்; பரலோகத்தை அடைந்திருக்கிறார்கள். இந்தக் காலம் பரலோகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய காலம் என்பதை எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறார்கள் என்பது தெரியவில்லை. அதாவது, நாம் எங்கே போகப்போகிறோம் என்பதைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டிய காலம் இது.

மெய்க் கிறிஸ்தவர்களுக்கு மரணம் முடிவல்ல; அது இன்னொரு வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு கதவு மட்டுமே. மரணத்தின் கூரை ஆண்டவர் கிறிஸ்தவர்களுக்கு இல்லாமலாக்கியிருக்கிறார் (1 கொரிந்தியர் 15). பாவத்தில் இருந்து மனந்திரும்பாமல் இருக்கிறவர்களுக்கு மரணம் மிகுந்த ஆபத்தானதொன்று. அவர்கள் இறக்கின்றபோது அவர்களை வாட்டிவதைப்பதோடு, இறந்தபின் நித்திய நரகத்திற்கு அது அவர்களைக் கொண்டு சேர்க்கிறது. இரட்சிப்பை அடைந்திருந்து, இரட்சிப்புக்குரிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறவர்கள் மரணத்தை எதிர்கொள்ளும் முறையே வேறு. மரணம் சமீபிக்கிறபோது அவர்கள் அதை வரவேற்கிறார்கள். கிறிஸ்துவோடு நித்தமும், அவருடைய பிரசன்னத்தை அனுபவித்து வாழப்போகிறோம் என்ற ஆனந்தத்துடன் அதை அவர்கள் வரவேற்கிறார்கள்.

கோவிட் காலத்தில் மறைந்த நண்பர்கள்

இந்தக் கோவிட்-19 காலத்தில் எனக்குப் பரிச்சயமான சிலர் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள். அவர்களில் நல்ல நண்பர்களும் அடங்குவார்கள். எனக்குத் தெரிந்து முதலாவதாக கோவிட்-19 ஸ்கொட்லாந்து சீர்திருத்த பிரஸ்பிடீரியன் போதகரான ஜோன் ஜே. மரேயைப் பரலோகமடையச் செய்தது. அவருடைய வயதும் வைரஸின் பாதிப்புகளைத் தாங்குமளவுக்கு ஒத்துழைக்கவில்லை. அதற்குப் பிறகு வயதான பிரபலமான இன்னுமொரு போதகரும் பிரசங்கியுமான அயர்லாந்தைச் சேர்ந்த அலன் கேர்ன்ஸ் கோவிட்டுக்குப் பலியானார். அமெரிக்காவில் பலகாலம் பணிபுரிந்திருந்த அவருடைய பிரசங்கங்களால் அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனைபேர் என் கவனத்துக்கு வராமல் கோவிட்டினால் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

கடந்த செப்டெம்பரில் பரலோகமடைந்தார் என் அருமை நண்பர், முன்னால் போதகர் பிரேங்க் பார்க்கர். அவருக்கு சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. அவருக்கும் எனக்கும் 25 வருட நட்பிருந்தது. அமெரிக்கப் பயணங்களின் போதெல்லாம் என்வீட்டைப்போல அவருடைய வீட்டைப் பயன்படுத்தியிருக்கிறேன். அவரும் அவருடைய துணைவியார் மேரியும் அருமையாக எப்போதும் விருந்துபசாரம் செய்திருக்கிறார்கள். என் பணிகளில் ஆழ்ந்த அக்கறைகாட்டி உறுதுணையாக இருபது வருடங்களுக்கு ஆலோசகராக இருந்து வந்தவர் பார்க்கர். கடந்த வருடம் அவரைக் கடைசித் தடவையாக சந்தித்துப் பேசினேன். அதிக காலம் அவர் இருக்கப்போவதில்லை என்பது தெரிந்தது. அவருடைய நினைவு ஆராதனையில் என் நினைவுகளைக் காணொளி மூலம் பகிர்ந்துகொள்ள முடிந்தது.

கோவிட்டோடு எந்தத் தொடர்பும் இல்லாமல், எனக்கு நன்கு அறிமுகமான, பரிச்சயமுள்ள, நண்பரான ஒரு போதகர் கென்சர் வியாதியால் வெகுவிரைவில் மரணத்தைத் தழுவினார். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்து பணியாற்றியிருக்க வேண்டியவர் கெரி ஹென்ரிக்ஸ். ஐம்பது வருடங்களாக ஒரே சபையில் இருந்து அருமையாகப் பணியாற்றிய போதகர் ஹென்ரிக்ஸ். அருமையான பிரசங்கி அவர். அவர் போதகப் பணியில் இருந்து ஓய்வெடுத்து இரண்டு மாதங்களுக்குள்ளாக கான்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, இரண்டே வாரங்களில் மரித்தது குடும்பத்தையும், சபையையும், நண்பர்களையும் நிலைகுலைய வைத்தது என்று சொன்னால் அவை வெறும் சாதாரணமான வார்த்தைகள் மட்டுமே. இப்போதும் அது உண்மையில் நிகழ்ந்ததா? என்றுதான் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நல்ல நண்பர்கள், நெருங்கியவர்கள் நம்மைவிட்டுப் போகும்போது கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. போனவருடக் கடைசியில் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன்; இன்று அவர் நம்மோடில்லை. கெரி ஹென்ரிக்ஸை நான் பலகாலம் அறிந்திருந்தபோதும், 2005ம் ஆண்டில் ஒரு சபை கான்பரன்ஸில் சந்தித்தபோது, அவருடைய சபைக்கு அடுத்தவருடம் நான் நிச்சயம் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதிலிருந்து ஆரம்பமானது எங்கள் நட்பு. அன்றிலிருந்து இன்றுவரை ஒரு வருடம் மட்டுமே அந்தச் சபைக்குப் போகத் தவறியிருக்கிறேன். ஹென்ரிக்ஸுடனான அந்த நட்பு அவருடைய சபையில் பலருடைய நட்பையும் சம்பாதித்துத் தந்ததோடு, அந்தச் சபையின் அன்புக்குப் பாத்திரமானவனாகவே என்னை மாற்றியது. இன்று ஹென்ரிக்ஸ் நம்மோடில்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அந்தச் சபை மக்களை அது மிகவும் துன்பப்படுத்தியிருக்கும். இருந்தாலும் நண்பர் ஹென்ரிக்ஸ் இப்போது கிறிஸ்துவோடிருக்கிறார்.

எனக்கு மிகவும் நெருக்கமான இன்னொரு நல்ல நண்பரான அல்பர்ட் மார்டின் அவர்களின் மனைவி, கோவிட்டினால் அல்லாமல் டிசம்பர் மாத ஆரம்பத்தில் மரணத்தைத் தழுவினார். ஒருவர் மரணத்தைச் சந்திக்கின்றபோது, அவர் வெளிதேசத்தில் இருந்தாலும் சாதாரணமான காலத்தில் செய்கின்ற பலகாரியங்களை இந்தக் கோவிட் காலம் நாம் செய்யமுடியாதபடி செய்திருக்கிறது. இந்தச் சகோதரியின் மரணச் சடங்கும் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. போதகர் மார்டின் அவர்களின் இழப்பின் பாரத்தை என்னால் உணரமுடிகின்றது. நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் துன்பத்தை அனுபவிக்கும்போது அது எப்படி நம்மைத் தொடாமல் போகும்? நண்பர் மார்டினை ஆண்டவர் தொடர்ந்து பெலப்படுத்துவார் என்பது எனக்குத் தெரியும். இது அசாதாரண காலம் என்பது மட்டும் எனக்குப் புரிகிறது.

இதெல்லாம் நடந்து முடிந்து மன ஆறுதல் அடைவதற்கு முன்பாகவே கடந்த 20ம் தேதி (டிசம்பர்) ஞாயிறு காலை அமைதியாக மரணத்தைத் தழுவியிருக்கிறார் பொப் பிரென்ட்டிஸ் எனும் போதகர். இவர் போதகர் கெரி ஹென்ரிக்ஸோடு இணைந்து அதே சபையில் வட கரலைனாவில் பணியாற்றியவர். என்னைவிட நான்கு வயது இளையவரான பொப் பிரென்டிஸ் கோவிட் நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார். இரண்டு மாத கால இடைவெளிக்குள் இரண்டு போதகர்களை இழந்து தவிக்கிறது இந்தச் சபை. பொப், அவருடைய மனைவி மற்றும் இரண்டு நண்பர்களோடு கடந்த அக்டோபரில் இரவுணவில் கலந்துகொண்டிருந்தேன். என்னுடைய பணிகளில் எப்போதும் விசேஷ அக்கறை காட்டியவர் இந்த அருமை நண்பர். இன்று அவர் நம்மோடில்லை. அவருடைய மனைவி, இரண்டு மகன்கள், பேரப்பிள்ளைகள் அவரை இழந்து நிற்கிறார்கள். இது எதிர்பார்த்திராத ஒரு நிகழ்வு. பொப் இப்போது கிறிஸ்துவோடு ஐக்கியமாகிவிட்டார்.

அமெரிக்காவில் பல சபைகளில் ஆத்துமாக்கள் கோவிட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சக போதகரான நண்பர் ஒருவர் தொலைபேசியில் பேசியபோது சொன்னார். இன்னொரு நல்ல நண்பனான போதகர் டேவிட்டுக்கு அது இரண்டாம் தடவை வந்திருக்கிறது; இருந்தாலும் பெரிய பாதிப்பில்லை. நாட்கள் போகப்போக என்னென்ன நிகழ்வுகளைப் பற்றிக் கேள்விப்படப் போகிறோமோ என்ற தவிப்பு உள்ளுக்குள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் மரணம் நமக்கு ஆபத்தானதல்லவே. இந்த உலகத்தில் நாம் எத்தனை காலம் வாழவேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறவர் ஆண்டவர் மட்டுமே. எத்தனை காலம் வாழப்போகிறோம் என்பதைவிட, வாழ்ந்திருந்து எதைச் செய்திருக்கிறோம் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தால் நல்லது என்று தோன்றுகிறது.

கோவிட்-19 உங்களை சிந்திக்க வைத்திருக்கிறதா?

கோவிட்-19 நம்மைச் சிந்திக்கவைக்க வேண்டும். முக்கியமாக ஆண்டவரோடு நமக்கிருக்கும் உறவைப்பற்றிச் சிந்திக்கவைக்க வேண்டும். மரணம் இன்று நம்மைச் சந்திக்குமானால் அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா? ஆண்டவரோடு நம் உறவு எப்படியிருக்கிறது? அவர் மகிமையடையும்படி நம் வாழ்க்கை இருந்து வந்திருக்கிறதா? சத்தியத்தில் வளர்ந்து, கிருபையில் உயர்ந்து குடும்பத்தோடு சுயநலமில்லாமல் அவருக்குப் பணிசெய்து வந்திருக்கிறோமா? பரிசுத்தத்தில் எந்தளவுக்கு நாம் உயர்ந்திருக்கிறோம்? மாம்சத்து இச்சைகளை அன்றாடம் அடக்கி, மனதையும், வாயையும், கைகளையும், கால்களையும் சரியான பாதையில் போகவைப்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறோமா? இன்றே மரணம் சம்பவிக்குமானால் பரலோகக் கதவு உங்களுக்குத் திறக்கும் என்ற அசையா நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? கிறிஸ்து மட்டுமே வாழ்க்கை என்ற தீவிரத்தோடு அவரை அறியாதவர்களுக்கு அவரைப்பற்றி சொல்லி வருகிறீர்களா? இதெல்லாம் இல்லாத கிறிஸ்தவம் வெறும் பரிசேயத்தனம் என்பது உங்களுக்குப் புரிகிறதா?

புதிய வருடம் வருகிறபோது எல்லோருக்கும் சுலபமாக வாழ்த்துத் தெரிவித்து விடுகிறோம். என்னால் இப்போது அதைச் செய்யமுடியவில்லை. என்ன சொல்லி வாழ்த்துவது என்று சிந்திக்கிறேன். பெயருக்காக என்னால் வாழ்த்து சொல்ல முடியவில்லை. நாளை என்ன நடக்கும் என்பது தெரியாதிருக்கிற நிலையில் யாருக்கு எதைச்சொல்லி வாழ்த்துவது? இந்தக் கோவிட் காலம் உங்களைச் சிந்திக்க வைத்திருக்கிறதா? கிறிஸ்துவை அறியாதவர்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். என் சபையில் ஒரு பெண் சில வருடங்களாகவே மிகுந்த ஈடுபாட்டோடு கிறிஸ்துவை விசுவாசிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறாள் என்பது தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு முன், புதிய வருடத்தில் என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டேன். கிறிஸ்துவை விசுவாசித்து வாழ்வதே முதல் இலக்கு என்றாள். இப்படிப்பட்டவர்களை எத்தனையோ போலிப்பிரசங்கிகள் உடனடியாக விசுவாசிக்க வைத்து ஞானஸ்நானத்தையும் கொடுத்திருப்பார்கள். அந்தக் கூட்டத்துக்குத்தான் நம்மினத்தில் குறைவே இல்லையே. அவளுடைய விசுவாசத்திற்கு என்னால் ஜெபிக்க மட்டுமே முடிகிறது. விசுவாசத்தைக் கொடுக்கிறவர் கிறிஸ்து மட்டுமே; நாமல்ல. கிறிஸ்துவை சிறுவயதில் இருந்து அதிகம் தெரிந்திருந்து, கிறிஸ்தவ ஆசீர்வாதங்களை அள்ளியள்ளி அருந்திவிட்டு, அவர்மேல் இப்போது எந்த அக்கறையுமில்லாமல் இந்த உலகத்து வாழ்க்கையை நேசித்து வாழ்கிற வாலிபனொருவனை நினைத்துப் பார்க்கிறேன். கிறிஸ்தவ ஆசீர்வாதங்களை அதிகம் பெற்றிருந்து அவரில் அக்கறை காட்டாமல் இருந்து வருகிறவர்களுக்கு வரப்போகிற தண்டனை மற்றவர்களைவிட மிக அதிகமாக இருக்கும் என்கிற பியூரிட்டன் ரால்ப் வென்னிங்ஸின் வார்த்தைகள் எனக்கு மிகுந்த கவலையை உண்டாக்குகின்றன. அடுத்த தடவை பிரசங்கிக்கிறபோது ‘இப்போதே மனந்திரும்பு’ என்று, ரிச்சட் பெக்ஸ்டர் சொன்னதுபோல, இறக்கப்போகிறவனுக்கு இறக்கும் நிலையில் இருந்து பிரசங்கிப்பதுபோல் பிரசங்கிக்க வேண்டும் என்ற துடிப்பு இப்போதே ஏற்படுகிறது. கோவிட்-19 உங்களைத் தீவிரமாக சிந்திக்க வைத்திருக்கிறதா?

 

வாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்

வாசிப்பனுபவம்

‘வாசிக்கிறவன் இறப்பதற்கு முன் ஆயிரம் வாழ்க்கை வாழ்கிறான்’ என்கிறார் அமெரிக்க நாவலாசிரியர் ஜோர்ஜ் ஆர். ஆர். மார்டின். ‘எனக்குப் போதுமான அளவுக்கு ஒரு பெரிய கோப்பைத் தேனீரையாவது, ஒரு பெரிய புத்தகத்தையாவது உங்களால் எனக்குத் தர முடியாது’ என்றார் வாசிப்பதிலும், எழுதுவதிலும் திளைத்துப்போயிருந்த சி. எஸ். லூயிஸ். ‘என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கும்போது நான் புத்தகங்களை வாங்குவேன்; மீதமிருந்தால் உணவும் உடுதுணியும் வாங்குவேன்’ என்றார் இராஸ்மஸ். ‘சராசரி மனிதனாக இருக்க விரும்பாத எவருக்கும் அவசியமானது வாசிப்பு’ என்றார் பெரும் தொழில் முனைவோரும், ஊக்கமூட்டுப் பேச்சாளருமான ஜிம் ரோன்.

வாசிப்பின் அவசியத்தை எத்தனை வார்த்தைகளாலும் சொல்லி முடித்துவிட முடியாது. வாசிப்பு ஒரு கலை; ஒரு அனுபவம். அறிவைப் பெருக்குவது மட்டுமல்லாமல் அது ரசனையை வளர்க்கும். வாசிப்பில்லாத வாழ்க்கை உப்புச்சப்பற்றது, குஜராத்தின் பருப்பு சாம்பாரைப்போல. வாசிப்பு வாழ்க்கையில் சுவையூட்டுகிறது.  நாமெல்லாம் பெரிதும் மதிக்கின்ற ஸ்பர்ஜன் ஒரு வாரத்தில் ஆறு நூல்களை வாசித்திருக்கிறார். தன் வாழ்நாள் முடிவதற்குள் ஏழாயிரம் நூல்களை வாசித்து முடித்திருக்கிறார். ‘வாசிக்காதவனை எவரும் வாசிக்கமுடியாது’ என்றார் ஸ்பர்ஜன்.  ‘மற்றவர்களுடைய மூளையில் இருந்து வெளிப்படும் எண்ணங்களைப் பயன்படுத்திக்கொள்ளாதவன் தனக்குச் சொந்தமான மூளை இல்லை என்பதையே நிரூபிக்கிறான்’ என்றார் அவர். பவுல் முப்பது வருடங்கள் பிரசங்கம் செய்திருந்தபோதும் தொடர்ந்து புத்தகங்களுக்காக அலைந்தார்.

2 தீமோத்தேயு 4:13

துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.

சமூகத்தில் படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் வாசிப்பை நண்பனாகக் கொண்டிராத பெரிய மனிதர்கள் இருந்ததில்லை. காமராஜர், அண்ணாவிலிருந்து வாசித்து வளர்ந்தவர்கள் நம்மினத் தலைவர்கள்.

ஒருபோதும் நூல்களை ஒப்புக்கு வாசிக்கக்கூடாது; சுவைத்து அனுபவித்து வாசிக்கவேண்டும். தரமான வாசிப்பு கற்ற விஷயங்களை ஒருநாளும் மறக்கச் செய்யாது. வாசிப்பில் அடைந்த அனுபவங்களைப் பிறரோடு பகிர வேண்டும். மனித வாழ்க்கை இன்று சிக்கலானதாக மாறிப் பெரும்பாலானோரை வாழ்க்கையில் வாசிப்பில்லாதபடிச் செய்திருக்கிறது. குறைந்தளவு நேரத்தைப் பயன்படுத்தி, குறைந்தளவு முயற்சி எடுத்து, மிகக்குறைவான செய்திகளைப் பகிர்ந்து வரும் காலமிது. முகநூல், வட்ஸ்அப், இன்ஸ்டகிரேமைத்தான் சொல்லுகிறேன். வாசிப்புக்கும், வாசிப்புப் பகிரலாகிய அனுபவத்திற்கும் அவை உதவாது.

வாசிப்புக்கு நேரம் ஒதுக்க வேண்டும். வேக வாசிப்பு நாளிதழுக்கு சரி. நல்ல நூல்களைக் கவனத்தோடு வாசிக்க வேண்டும். எல்லா நூல்களும் இலகுவானதாக இருந்துவிடாது. என் நண்பன் அலன் டன்னோடு சமீபத்தில் உரையாடிக்கொண்டிருந்தபோது, ‘நான் வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு நூல் கொஞ்சம் கஷ்டமானது; அதை முடிக்க சில நாட்கள் எடுக்கும்’ என்றான். அப்படித்தான் இருக்கும் சில நூல்கள். கார்ல் ட்ரூமன் எழுதிய, இக்காலத் தாராளவாதக் கருத்தியல் போக்குகள் பற்றிய ஒரு நூலை மின்நூலாக பதிவிறக்கம் செய்து கின்டிலில் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அது சிந்தித்து வாசிக்க வேண்டிய நூல். வேகவாசிப்பு அதற்கு உதவாது என்று தெரிகிறது. கின்டில் நூலானபடியால் ஐபேடில் தேவையான இடங்களில் ஹைலைட் செய்துகொள்ளும் வசதியிருப்பது மறுபடியும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய பகுதிகளுக்குப் போக உதவுகிறது. நூல் பெரிதோ, சிறிதோ, வாசிக்க இலகுவானதோ, கொஞ்சம் கஷ்டமானதோ, எப்படிப்பட்டதாக இருந்தாலும் வாசிக்கத் தெரிந்தவனால் வாசிக்காமல் இருக்கமுடியாது.

வாசிக்காதவர்கள் வாழத்தெரியாதவர்கள். வாழ்க்கையில் சராசரி மனிதனாக இருக்க நாம் ஒருபோதும் இடங்கொடுக்கக் கூடாது. அது நாம் ஆராதிக்கும் கர்த்தரை அவமானப்படுத்துகிற செயல். வாசிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றாலே, சராசரித்தனத்துக்கு முடிவுகட்ட ஆரம்பித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். நம்மினத்துக் கிறிஸ்தவம் சராசரிகளினால் உயரமுடியாது. வாசிப்பில் பருந்துபோல் உயரப் பறக்கவேண்டும்; குருவி உயரத்தில் இருக்கக்கூடாது. 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதம் சராசரிகளினால் உருவாகவில்லை. சீர்திருத்தவாதிகள் வாசிப்பில் மூழ்கியிருந்தார்கள். சமீபத்தில் கின்டிலுக்காக சபை வரலாற்றின் இரண்டாம் பாகத்தைத் திருத்தி முடித்திருந்தேன். அதில் சீர்திருத்தவாதிகளின் வாசிப்பனுபவத்தைப் பற்றி மறுபடியும் வாசிக்க நேர்ந்தது. வாழ்நாள் முழுவதும் எழுதிக்குவித்திருந்த ஜோன் கல்வின் உறங்கும் நேரத்தைத் தவிர ஏனைய நேரங்களை வாசிப்பதில் செலவிட்டிருக்கிறார். அதையே ஒவ்வொரு சீர்திருத்தவாதியும் செய்திருக்கிறார்கள். ‘வாசிப்பில்லாத சீர்திருத்த கிறிஸ்தவன்’ என்ற வார்த்தைப் பிரயோகம் தப்பானது; நடைமுறைக்கு முரணானது. எவரையும் திருப்திப்படுத்த நாம் வாசிக்கக்கூடாது; பெருமைக்காகவும் வாசிக்கக்கூடாது. அதன் அவசியத்தை உணர்ந்து உயிர்த்துடிப்போடு வாசிக்கவேண்டும். எத்தனை நூல்களை வாசிக்கிறோம் என்பது முக்கியமல்ல. வாசிக்க வேண்டும்; தொடர்ந்து வாசிக்கவேண்டும். அதுவே அவசியமானது.

தேடுங்கள் நூல்களை
தேர்ச்சிபெற வைக்கும்
அறிவில் . . .
கண்டெடுங்கள் நூல்களை
கண்டடைவீர்கள்
கல்விச் செல்வங்கள் . . .
வாசியுங்கள் நூல்களை
வளர்த்தெடுக்கும் அவை
உங்களை . . .
படியுங்கள் நூல்களை
பரிசுத்தமாக்கும்
உங்கள் எண்ணங்களை . . .
பகிருங்கள் நூல்களை
பலப்படுத்தும்
நட்பை பன்மடங்கு . . .
வாங்குங்கள் நூல்களை
விலைகொடுத்து
வீணாகாதவை ஒருநாளும் . . .

உரையாடல்

இன்றைக்குப் பேசிப்பழகுவதற்கு நாம் நேரம் கொடுப்பதில்லை. புத்தக வாசிப்பு பேசிப்பழகுவது போன்ற ஒரு அனுபவம். ஒரே அறையில் அமர்ந்திருந்து நான்குபேர் ஒருவரோடொருவர் அலைபேசியில் வாயே திறக்காமல் குறுந்தகவல் மூலம் பேசிக்கொண்டிருந்ததை நான் ஒரு முறை கவனித்திருக்கிறேன். என்னவாய் மாறியிருக்கிறது காலம்!

வாழ்க்கை சிக்கலானதாக இல்லாமலிருந்த காலத்தில் ஊர் மக்கள் மாலை வேளையில் கிராமத்து ஆலமரத்தடியில் அமர்ந்து செய்திகளையும், வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். அங்கே கருத்துப் பறிமாறல் நடந்தது. சிறுவனாக இருந்தபோது என் தாத்தாவின் ஊரில் அதை நான் கண்களால் கண்டிருக்கிறேன். வயதாகியிருந்த அந்த ஆலமரம் ஊருக்கு அடையாளம் போலிருந்து அவர்களுடைய கூடுகைக்கு மத்தியஸ்தம் வகித்தது. மரத்தைச் சுற்றி மேடுபோல் மண்ணால் இடுப்பளவுக்கு உயர்த்திக்கட்டப்பட்டு அதில் ஊர் மக்கள் சாவகாசமாக மர நிழலில் அமர வசதியாக இருந்தது. நாளிதழும், ரேடியோவும் மட்டுமே அன்று அவர்களுக்கு எந்தச் செய்திகளையும் பெறத் துணைபுரிந்தன. ஊரில் மின்சாரம் வர ஆரம்பித்திருந்த காலம் அது; எல்லோரும் அதிகமாய்ப் பேசிப்பழகிய காலம். ஊர் வாசகசாலையில் நாளிதழை நெடுநேரம் பலர் வாசித்தார்கள்; பேசினார்கள். வாசிப்பும், உரையாடலும் அப்போது அதிகமாக இருந்தது.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும், இரவுணவு முடிந்தபின் அப்பாவும் சில நண்பர்களும் எங்கள் வீட்டில் கூடுவது வழக்கம். வியாபாரத்தை முடித்துவிட்டு, நிர்வாகக் காரியங்களை நிறைவு செய்தபிறகு அவர்கள் கூடுவார்கள். ஒவ்வொரு முறையும் மொத்தமே நான்கு அல்லது ஐந்து பேர் இருப்பார்கள். நான் பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருப்பேன். அரைத்தூக்கந்தான்; காதுகள் அவர்களுடைய சம்பாஷனையில் பதிந்திருக்கும். ஊர் விஷயங்கள் அனைத்தையும் அவர்கள் தங்களுடைய இரசனைக்குத் தகுந்தபடி அந்தக் கூடுதலில் பகிர்ந்துகொள்ளுவார்கள். கூட்டம் கலகலப்போடு நடக்கும்; சிலவேளைகளில் சூடுபிடிக்கும். கூட்டத்திற்கு ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்காது. யார் ஒரு விஷயத்தை முதலில் ஆரம்பித்து வைக்கிறாரோ அதிலிருந்து சம்பாஷனை தொடரும். முதல் விஷயம் எப்போது முடிகிறதோ அதற்குப் பிறகு அடுத்த விஷயத்தை ஒருவர் ஆரம்பித்து வைப்பார். எது சம்பாஷனைக்கு விஷயமாக இருக்க வேண்டும் என்பதை எவரும் தீர்மானிப்பதில்லை. சம்பாஷனைக்குப் பொருந்திப் போகாத ஒன்று தானாகவே சில நிமிடங்களில் நின்றுவிடும்.

இந்தக் கூடுதல்களில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு பார்வையாளனாக இருந்து எத்தனையோ விஷயங்களைக் கற்றிருக்கிறேன்; உள்ளுக்குள் சிரித்திருக்கிறேன், சில விஷயங்களில் அவர்களுடைய அறியாமையை நினைத்து. குறைந்தது நாலு அல்லது ஐந்து மணி நேரம்வரை அந்தக் கூடுதல் நிகழும். இடையிடையே காப்பி, டீ, பலகாரம் வந்து போகும். அம்மா என்னையும் எழுப்பி எனக்குக் கொடுக்க மறப்பதில்லை. அப்படி என்னைத் தொற்றியதே ஒரு நாளைக்குப் பலதடவைகள் தேநீர் அருந்தும் வியாதி! தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்பார்கள். இதை எழுதும்போது ஜெயகாந்தனின் ‘சபை’ நினைவுக்கு வருகிறது. இதேபோல் ஜே. கே நண்பர்களோடு ஒரு கூடுதலை நடத்தி வந்திருக்கிறார். அதை ‘சபை கூடுதலாக’ அவர் வர்ணித்திருக்கிறார்.

நம்காலத்தில் உரையாடல் அருகிப்போய்விட்டது. அதற்குப் பொதுவான சாக்குப்போக்கு நேரமில்லை என்பதுதான். நேரத்தைப் பயன்படுத்தி என்ன செய்கிறோம்? மனித சகவாசம் குறைவடைந்து போகும்விதத்தில் பிரயோஜனமானவைகளைச் செய்து வருகிறோமா? நியாயமாக பதில் சொல்லப்போனால் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். மனித சகவாசம் குறையக் காரணம் என்ன தெரியுமா? அதை ஏனைய விஷயங்கள் திருடியிருப்பதுதான். கிறிஸ்தவ வேதம் ஒருவருக்கொருவர் ஐக்கியத்தில் வருவதைப் பற்றி அடிக்கடி சொல்லுகிறது. அந்த ஐக்கியத்தை ஆவிக்குரியவர்களோடு சகவாசம் இல்லாமல் செய்வதெப்படி? கலந்துரையாடலும், பிறரோடு சகவாசமும், வாசிப்பும் இல்லாமல் போகுமளவுக்கு வேறு விஷயங்கள் நம் நேரத்தைத் திருடிக்கொண்டிருக்கின்றன. மானுட குணாதிசயங்களை ஒருவரோடொருவர் நேரில் பகிர்ந்துகொள்ள உதவும் அத்தனையையும் நவீன மின்னணு சாதனங்கள் தம்வசமாக்கியுள்ளன. மனித உறவுகள் அற்றுப்போக நாமே காரணமாகியிருக்கிறோம்.

உரையாடல் வாழ்க்கைக்கு அவசியமானது. அது மூளைக்கு வேலை தருகிறது. வாசிப்பே உரையாடல் சுவையானதாக அமைய உதவுகிறது. பேச விஷயமில்லாவிட்டால் உரையாடலுக்கு வழியில்லை. அறுபது, எழுபதுகளில் சாதாரணமாக குடும்பங்களில் ஜனரஞ்சகமான இலக்கிய இதழ்கள் சிலவாவது இருக்கும். அக்கால இதழ்கள் தரமானவையாக வெளிவந்து கொண்டிருந்தன. இன்றைக்கு எத்தனை வீடுகளில் இதழ் வாசிப்பு இருக்கின்றது? அதுவும் லௌகீக வாசிப்பு கூடாது என்று முட்டாள்தனமாக முடிவுகட்டியிருக்கும் கிறிஸ்தவ குடும்பங்களில் உப்புச்சப்பற்ற தியானச் செய்தித் துண்டுப் பிரசுரங்களைத் தவிர அறிவை வளர்க்கும் வேறு ஒன்றும் இருக்காது. உரையாடலுக்கு இவர்களிடம் எங்கே இடமிருக்கப்போகிறது? வாசித்து விஷயங்களை அறிந்து வைத்திருப்பவர்கள் வேதசத்தியம் மட்டுமில்லாமல் அநேக பொது விஷயங்களையும் பற்றி உரையாடக்கூடியவர்களாக இருப்பார்கள்.

பிரசங்கிகள்

இன்றைக்கு எந்தளவுக்கு உரையாடலோ அல்லது பேச்சோ சிறப்பான நிலையில் இல்லை என்பதற்கு தற்கால தமிழ் பிரசங்கிகளின் பிரசங்கங்களைக் கேட்டாலே போதும். முதலில், பெரும்பாலானவற்றில்  சத்தியம் விளக்கிப் போதிக்கப்படுவதில்லை. இறையியல் என்பதையே அதில் காணும் வாய்ப்பில்லை. அதுதவிர, விஷயஞானமிருந்து கோர்வையாக, தத்துவரீதியில் படிப்படியாக விஷயங்களைக் கேட்பவர்கள் முன்னிறுத்துகிற திறமையும் பெரும்பாலானோருக்கு இல்லை என்பதை அப்பட்டமாகப் பிரசங்கங்கள் சுட்டுகின்றன. அந்தளவுக்கு பிரசங்கிகளிடம் வாசிப்பும், பேச்சுத் திறனும் இல்லாமல் இருந்து வருகிறது. பேச்சிலும் பேசும் தமிழ் சுவையற்றிருக்கிறது. மேடைப் பேச்சு என்பது எவரும் செய்துவிடக்கூடிய இலகுவான காரியமல்ல. அவிசுவாசிகளுக்குக்கூட அது தெரிந்திருக்கிறது. மேடைப் பேச்சு ஒரு ஈவு; அதற்கு உடல் வாகு, குரல் வளம், பயிற்சியும் தேவை. பிரசங்கிகளுக்கான அறிவுரைகள் என்ற நூலில் அதுபற்றி ஸ்பர்ஜன் விளக்கியிருக்கிறார். அந்நூலில் முதற் பதிப்பில் படங்களோடு அதை விளக்கியிருக்கிறார். மேடையில் எவற்றைச் செய்யக்கூடாது என்பதையும் கேலிச்சித்திரமாக வரைந்திருக்கிறார். ஸ்பர்ஜனின் நகைச்சுவையுணர்வை அதில் காணலாம்.

வாழ்க்கையில் வாசிப்பைக் கொண்டிராதவன் எப்படித் திறமையான பிரசங்கியாக முடியும்? வாசிப்பில்லாமல் ஒருவனால் வெறும் வாய்ச்சமர்த்தை மட்டுமே கொண்டிருக்க முடியும்; அதில் அறிவுசெறிந்த விஷயங்களைவிட மூடத்தனமான சிந்தனையே அதிகம் இருக்கும். தமிழினத்தில் பிரசங்கம் என்ற பெயரில் இன்று மூடத்தனம் அநியாயத்துக்கு ஆட்சி செய்துவருகிறது. அதை உணரும் ஆவிக்குரிய பக்குவமில்லாதவர்களாக பெரும்பாலான ஆத்துமாக்கள் இருந்து வருகிறார்கள். இதெல்லாம் கிறிஸ்தவ சமுதாயத்தின் பின்தங்கிய நிலைக்கு அடையாளம்.

நம்மினத்தில் போதகர்கள் ஐக்கியம் என்று ஒரு கூடுகை பல இடங்களில் நடக்கிறது. அதில் அதிக நேரம் பாடல்களுக்கும், ஜெபத்திற்குமே இடமிருக்கும். அது நல்லதுதானே என்பீர்கள். நல்லதுதான்; இருந்தாலும் தெளிவான சத்தியவிளக்கமும், பகிரலும் இல்லாமல் எதற்காக ஜெபிப்பது? ஜெபங்கள் வார்த்தையின் அடிப்படையில் அமைந்து, பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்க, அது பொருளுள்ளதாக இருக்கவேண்டும். வாசிப்பும், வாசிப்புப் பகிரலும் வாழ்க்கையில் இல்லாதவர்களின் ஜெபம் எப்படி ஆசீர்வாதமாக அமைய முடியும்? திரும்பத் திரும்ப ஸ்தோத்திரம் சொல்லுவதும், வெறும் அல்லேலூயாக்களும், அதைக்கொடு, இதைக்கொடு என்று ஆண்டவரிடம் சத்தமாகக் கேட்பதுந்தானா ஜெபம்? பரிசேயர்களைப்போல வீண் வார்த்தைகளைக் கொட்டிப் புலம்பாதேயுங்கள் என்று ஆண்டவர் சொல்லவில்லையா? போதகர்கள் ஐக்கியம் அர்த்தமுள்ள கூடுகைகளாக இருக்கவேண்டும். அதில் தரமான, தேர்ந்த ஆவிக்குரிய, நுணுக்கமான உரையாடல் இருக்கவேண்டும். சிந்தனைக்குத் தீனி போடும் ஆத்மீகக் கூட்டங்களாக இருக்கவேண்டும். நல்ல நூல் வாசிப்பைப் பகிரும் வாய்ப்பு அங்கே இருக்கவேண்டும். அதெல்லாம் இல்லாத கூடுகையில் அங்கம் வகிப்பதைவிட ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது மேல்; அங்கே சரீரத்தையாவது வளர்க்கலாமே.

கிறிஸ்தவனை வேறுபடுத்திக் காட்டுவது அவனுடைய உரையாடல் என்கிறார் ஸ்பர்ஜன். ‘கிணற்றில் இருக்கும் நீரின் தரத்தை அதைக் கொண்டுவரும் பக்கெட்டில் இருந்து அறிந்துகொள்ளுவதுபோல் கிறிஸ்தவனின் தரத்தை அவனுடைய உரையாடலில் இருந்து அறிந்துகொள்ளுகிறோம் என்கிறார் அவர். 1858ல் ஒரு பிரசங்கத்தில் ஸ்பர்ஜன் சொல்லுகிறார், ‘இன்றைக்கு பிரசங்கத்தையும், ஜெபத்தையும்விட கிறிஸ்தவ உரையாடலே அதிகம் மோசமான நிலையில் இருக்கிறது’ என்று. மற்றவர்களுக்குப் பிடிக்காது என்று எண்ணி நாம் சத்தியத்தைப் பேசாமல் இருந்துவிடக்கூடாது என்கிறார் ஸ்பர்ஜன். சத்தியத்தில் முரண்பாடாகத் தோன்றும் விஷயங்களையும் பிறரோடு தைரியத்தோடு உரையாட வேண்டும் என்கிறார் அவர். பேசாமல் இருப்பதைவிட இது மேலானது என்கிறார் ஸ்பர்ஜன். கிறிஸ்துவின் வாழ்க்கையையும், பணியையும், தியாகங்களையும் எவர்தான் வெறுக்கமுடியும்; யாருக்கு அது பொருந்தி வராது என்று கேட்கும் ஸ்பர்ஜன், கிறிஸ்துவை நம் உரையாடல் மேன்மைப்படுத்த வேண்டும் என்கிறார். இந்த வாரம் ஒரு சபை அங்கத்தவரோடும், போதகரோடும் தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த உரையாடல் என் மனதுக்கு இதமளிப்பதாக, கர்த்தரை மகிமைப்படுத்துவதாக இருந்தது.

தரமான வாசிப்பும், உரையாடலும் நமக்கு நல்ல நண்பர்களைப்போல; அவை சாகும்வரையில் நம்மோடு இருக்கவேண்டியவை. அவை இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து என்னால் ஆதங்கப்படத்தான் முடிகிறது. வேறு என்ன செய்யமுடியும்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

 

ஓர் இலக்கியவாதியின் மொழியாக்க அனுபவங்கள்

இந்த ஆக்கத்தில் நான் குறிப்பிட்டிருக்கும் இலக்கிய ஆளுமை கிறிஸ்தவ விசுவாசி அல்ல. வாழ்க்கையில் எல்லாவற்றையும் நாம் கிறிஸ்தவர்களிடம் இருந்து மட்டும் கற்றுக்கொள்ள முடியாது. கிறிஸ்தவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் புலமை இருக்காது. நம் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் படிப்பிப்பவர்கள் கிறிஸ்தவர்களா என்ன? மொழியாக்கத் திறனுள்ள இந்த ஆளுமையிடம் இருந்து நாம் விசுவாசத்துக்குரியவற்றைக் கற்றுக்கொள்ளப் போவதில்லை; மொழியாக்கத்திற்கு அவசியமானவற்றைப் பற்றி மட்டுமே கற்றுக்கொள்ளப் போகிறோம். அதில் எந்தத் தவறும் இல்லை. மொழியாக்கத்திற்கான புலமையும், திறனுமுள்ள கிறிஸ்தவர்கள் நம்மினத்தில் அரிதாகக் காணப்படும் இக்காலத்தில் இந்த இலக்கிய ஆளுமையின் பகிர்வும், கருத்துக்களும் நமக்கு மிகவும் உதவுகின்றன. – ஆர்

மொழியாக்கக் கூறுகளைப் பற்றி சமீபத்தில் ஓர் ஆக்கத்தை வரைந்திருந்தேன். பயனுள்ளதாக இருந்ததாக சிலர் தொலைபேசியில் அழைத்துத் தெரிவித்திருந்தார்கள். தமிழிதலான ‘புத்தகம் பேசுது’ அக்டோபர் (2020) இதழில், மொழியாக்கத்தில் ஈடுபட்டு வரும் ஓர் இலக்கிய ஆளுமையின் நேர்காணலை கடந்த வாரம் வாசிக்க நேர்ந்தது. அடடா! மொழியாக்கம் பற்றிய என்னுடைய சிந்தனைகளை எழுதுகிற நேரத்தில் இது கண்ணில் படாமல் போய்விட்டதே என்று ஆதங்கமாக இருந்தது. இருந்தாலும், அந்த நேர்காணலை வாசித்த அனுபவத்தையும், அதில் நான் அவதானித்த அம்சங்களையும் பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கிறேன். இதுவே முதல் முறை இந்த ஆளுமையைப் பற்றி நான் கேள்விப்பட்டதும், வாசித்ததும். அவர் யார், எப்படிப்பட்டவர் என்பதைவிட அவருடைய படைப்புகள் எப்படிப்பட்டது என்பதே முக்கியமானது. உண்மையில் அந்த நேர்காணலை வாசித்த அனுபவம் சுகமானதாக இருந்தது.

அந்த இலக்கிய ஆளுமை எம். கே. சுசிலா. மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்திருக்கிறார். மூன்று தலைமுறை மாணவர்களைத் தன்னுடைய ஆசிரியப்பணிக்காலத்தில் கண்டிருக்கிறார். இளம் வயதிலேயே படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டு சிறுகதைகளை எழுதிப் பரிசுகளும் வாங்கியிருக்கிறார். செட்டிநாட்டுப் பகுதியில் வளர்ந்த அவருக்கு இலக்கியப் பரிச்சயம் வாழ்வின் ஆரம்ப கட்டத்திலேயே ஏற்பட்டிருக்கிறது. இப்போது கல்லூரிப் பணியில் இருந்து ரிட்டையராகி எழுத்துப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஒருமுறை மதுரையில் ஒரு பதிப்பகத்தார் அவரை இரஷ்ய நாவலாசிரியரின் நாவலொன்றைத் தமிழில் மொழியாக்கம் செய்யும்படிக் கேட்டுக்கொண்டதால் அந்த முயற்சியில் ஈடுபட்டார். அந்த நாவல் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அவருடைய மொழிபெயர்ப்பு பல இலக்கிய வட்டங்களின் கவனிப்பை அதன்மேல் செலுத்தவைத்து பலரின் பாராட்டுதல்களையும், விருதுகளையும் அவருக்குக் கொண்டுவந்திருக்கிறது. தொடர்ந்தும் அவர் இரஷ்ய மற்றும் வேறுமொழிப் படைப்புக்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார்.

எம். கே. சுசிலா அவர்களோடு ப்ரதீபா ஜெயச்சந்திரன் நடத்திய நேர்காணலில் என்னைக் கவர்ந்த அம்சங்களைத்தான் இப்போது பகிரப்போகிறேன். எம். கே. சுசிலாவின் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் நான் ஏற்கனவே முந்தைய ஆக்கத்தில் எழுதியிருந்தவற்றை உறுதிப்படுத்துகிறதோடு ஓரிரு புதிய அம்சங்களையும் சுட்டுவதாக இருந்தது.

வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் வாசிப்புப் பயிற்சியில் ஈடுபடுவது எத்தனை அவசியம் என்பதற்கு எம். கே. சுசிலா உதாரணபுருஷராக இருக்கிறார். குழந்தைப் பருவத்தில் இருந்தே அவரைப் புத்தக வியாதி பற்றிக்கொண்டிருக்கிறது. புத்தகமில்லாமல் அவர் போகிற இடம் இல்லை. ஆரம்பத்தில் கல்கி, அகிலனில் ஆரம்பித்து வாசிப்பு அவரை கையில் கிடைப்பதையெல்லாம் வாசிக்க வைத்திருக்கிறது. வாசிப்பில் உருவான இலக்கிய ஆர்வம் அவரைத் தமிழ்ப் பேச்சாளர்களின் பேச்சுக்களை எங்கு கிடைத்தாலும் கேட்கவும் வைத்திருக்கிறது. சொற்பொழிவுகள் எதையும் அவர் தவறவிட்டிருப்பதாகத் தெரியவில்லை. அத்தோடு எழுதுகிற பழக்கமும் சிறுவயதிலேயே ஆரம்பித்து எதையாவது தாளில் கிறுக்கிக்கொண்டிருக்கும் அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவரது கல்வி அவரைத் தமிழ் கற்க வைத்திருக்கிறது. தமிழிலக்கியத்தை முழுமையாகக் கற்கவேண்டும் என்ற உந்துதலை அவரில் உண்டாக்கி அதில் முன்னேற வைத்திருக்கிறது. ஆரம்பத்தில் வேதியியல் படிப்பை அவர் தெரிவுசெய்ய நேர்ந்திருந்தபோதும், இலக்கிய ஆர்வம் அவரை ஆங்கில இலக்கியத்தையும், தமிழிலக்கியத்தையும் அதிகம் கற்கத் தூண்டியிருக்கிறது. பட்டப்படிப்புவரை ஆங்கில மொழிவழியாகக் கல்வி கற்று, ஆங்கில இலக்கியத்தில் ஆர்வம் இருந்துவந்திருந்தபோதும் தமிழிலக்கியத்தைத் தொடர அது தடையாக இருந்திருக்கவில்லை. இதெல்லாம் அவரை பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியைப் பணியில் அமர்த்தியிருந்திருக்கிறது.

வாசிப்பு அனுபவம்

இளமையில் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுவதின் அவசியத்தை சுசிலா வலியுறுத்துகிறார். இளமையில் வாசிப்பை ஆரம்பித்து அதைத் தொடர்ந்திருக்காவிட்டால் இன்றிருக்கும் அளவுக்கு இலக்கியப்படைப்பிலும், மொழியாக்கத்திலும் ஈடுபட்டிருக்க முடியாதென்பது அவரது அசையா நம்பிக்கை. விடாமல் புத்தகங்களைத் தேடித்தேடி வாசிக்கின்ற சுகமான அனுபவம் அவருக்கிருந்திருக்கிறது. அதில் அவருக்கு சோர்விருந்ததாகவே தெரியவில்லை. சோர்வுக்கு மாற்றாகத்தான் தனக்கு வாசிப்பு இருந்திருப்பதாகச் சொல்லுகிறார் சுசிலா. இளமையில் இருந்து மதுரை பாத்திமா கல்லூரி வரும்வரையும் அவருடைய வாசிப்பு பல்வேறு பகுதிகளில் பல நூலகங்களுக்கும் அவரை அழைத்துப் போயிருக்கிறது. பாத்திமா கல்லூரி நூலகத்தில் வாசிப்பதும், அது விரிவடைய உழைப்பதும் அவருடைய ஆசிரியப்பணிக்கு அடுத்த பணியாக இருந்திருக்கிறது.

சிறுவயதில் இருந்து வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளாதவர்களுக்கே வாசிப்பில் சோர்வு ஏற்படுவதாக சுசிலா சொல்லுகிறார். அத்தோடு ஒவ்வொருவருடைய ரசனைக்கேற்ற நூல்களைத்தெரிவு செய்துகொள்ளாமல் போவதும் அதற்கு ஒரு காரணம் என்கிறார் அவர். வாசிப்பை எப்போதும் சிறிய சிறிய நூல்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்கிறார். அதிலிருந்து பெரிய நூல்களுக்கு முன்னேறலாம் என்று கூறும் அவர் வாசிப்புப் பொறி மனதில் பற்றிக்கொண்டால் போதும், எத்தனை பக்கங்களானாலும், நூல்களானாலும் சோர்வு நமக்கிருக்காது என்கிறார் சுசிலா.

தொலைக்காட்சியும், சமூக ஊடகங்களும் இன்று வாசிப்புக்குத் தடையாக இருந்து, அதைத் தேவையற்றதாக்கி வாசிப்பு எனும் மூளைப்பயிற்சியை மழுங்கடித்து வருவதை ஒத்துக்கொள்ளும் சுசிலா, இளைய தலைமுறையில் வாசிக்கிறவர்கள் தொகை குறைவாக இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். ரிட்டையரானபோதும் வாசிப்பை நிறுத்திவிடாமல் தொடர்ந்துகொண்டிருக்கும் அவர், ஆர்வம் மட்டும் அடித்தளமாக இருந்துவிட்டால் சோர்வுக்கு எந்தத் துறையிலும் இடமிருக்காது என்கிறார்.

மொழிக்கல்வி

தமிழ் பேராசிரியையாக இருந்திருக்கும் இலக்கியப் படைப்பாளி சுசிலாவின் மொழிக்கல்வி பற்றிய கருத்துக்கள் அவசியமானவை. நம்மினத்தில் தமிழ்க்கல்வியே அடிமட்டமானதாகக் கருதப்படுகிறது. பணத்தைக்கொண்டுவரும் துறைகளை நாடியே எல்லோரும் போய்க்கொண்டிருக்கிறார்கள். மொழிக்கல்வி ஏனைய கல்வித்துறைகளில் இருந்து மாறுபட்டது எனும் சுசிலா, மொழியைக் கற்பவர்கள் ‘பிசிறில்லாத வடிவில் இலக்கணப்பிழைகள் இல்லாமல் தேர்ந்த சொற்களோடும், சரளத்தோடும் நல்ல நடையில் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்’ என்கிறார். ‘மொழிமீது ஆளுமை செலுத்தும் அளவுக்கு, மொழியைத் தன் வசமாக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெறுவது மொழிக்கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும்’ என்கிறார் சுசிலா. உச்சரிப்பு, எழுத்துப்பிழை, சந்திப்பிழைகளைச் செம்மைப்படுத்திக்கொள்ளுவதோடு இலக்கணத்திற்கும் முக்கியத்துவமளித்து இலக்கணப்பிழையில்லாமல் எழுதக் கற்பதும் அவசியம் என்கிறார் அவர். இதெல்லாம் அவருக்கு ஆசிரியப்பணியில் சவாலாகவே இருந்து வந்திருக்கின்றன.

இன்று கிறிஸ்தவர்களும், திருச்சபைப் போதகர்களும் உரையாடலுக்குத் துணைபோகுமளவில் மட்டுமே தமிழைப் பயன்படுத்தி, அந்தப் பேச்சுத் தமிழும் நல்ல தமிழாக இல்லாமல், வாசிப்பிலும், எழுத்திலும் பின்தங்கியவர்களாக இருந்துவரும் நிலை நம்மைப் பெரிதும் சிந்திக்க வைக்கவேண்டும். மொழி அழிவது ஓர் இனமே அழிவதில் போய் முடியும். இதை நான் நிதர்சனமாக மலேசிய நாட்டில் கவனித்திருக்கிறேன். தமிழ் எழுத்தாளர்களும், தமிழார்வமுள்ளவர்களும் அங்கிருக்கும் தமிழ் சமுதாயத்தில் குறைவாகவே இருக்கிறார்கள். அச்சமுதாயத்தில் பெரும்பான்மையானோர் நாட்டின் மலே பாஷையில் கல்வி பெற வலியுறுத்தப்படுவதால் தமிழ்க் கல்வியில் பின்தங்கிப்போனவர்களாக, நல்ல தமிழில் வாசிக்கவும், பேசவும், எழுதவும் முடியாதவர்களாக தொடர்ந்திருந்து வருகிறார்கள். தனியார் கல்வி மூலம் தமிழ்க்கல்வி கற்கும் அளவுக்கு வசதிபடைத்தவர்களாக பெரும்பான்மையோர் இல்லை. அந்தச் சமுதாயத்தில் தமிழ் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது; அந்த இனமும் குறுகிப்போவதில் அது கொண்டுவிடும்.

தமிழை உரையாடலுக்கு மட்டும் அவசியமானதாக இருத்திக்கொள்ளுவது நல்லதல்ல. தமிழில் வாசிக்கவும், எழுதவும் வேண்டும். தமிழில் இலக்கணப்பிழையில்லாமல், சுவையாக ஆர்வமூட்டும் விதத்தில் எழுதும் கிறிஸ்தவர்கள் மிதமாக இருப்பது தமிழ் கிறிஸ்தவத்தின் பின்தங்கிய நிலையைக் காட்டுகிறது. தொடர்ந்தும் தமிழ் வேதமொழிபெயர்ப்பு புரியாத மொழியில் இருந்துவருவதும் இந்தப் பின்தங்கிய நிலைக்கான ஓர் அடையாளமே. சுசிலா அவர்களின் நேர்காணலை வாசிக்கும்போது நம்மினத்துக் கிறிஸ்தவத்தின் குறைபாடுகளை எண்ணிப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. கிறிஸ்தவம் நம்மினத்தில் ஆவிக்குரிய அனுபவத்தில் உயர்வதற்கு எத்தனையோ விஷயங்கள் தடையாக இருந்துவருகிறபோதும், அதில் முன்னிற்கும் தடையாக இருப்பது மொழியில் நாம் பின்தங்கிப்போயிருப்பது என்பதை உணராதவரை கிறிஸ்தவம் நம்மத்தியில் முன்னேற முடியாது.

மொழியில் பின்தங்கியிருந்து, உரைநடையும், பேச்சு நடையும், எழுத்தும் தேங்கிப்போன குட்டையாக இருந்திருந்தால் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் சீர்திருத்தவாத, பியூரிட்டன் இலக்கியங்கள் இன்று உலகமே போற்றும் அளவுக்கு உயர்வானவிதத்தில் படைக்கப்பட்டிருந்திருக்குமா? என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். சமீபத்தில் பியூரிட்டன் தோமஸ் வொட்சனின் ‘மனந்திரும்புதல்’ என்ற சிறிய நூலை பலருக்கும் விளக்கிப்போதிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் அதிக சந்தோஷத்தை அனுபவித்தவன் நானே. ஏனெனில், அந்த ஆங்கில ஆக்கத்தின் கருப்பொருளை மட்டுமல்லாமல், அதை எழுதியவர் மொழியைப் பயன்படுத்தியிருக்கும் முறையையும், நூலின் இலக்கியச் சுவையையும் அனுபவித்து வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பத்திக்குப் பத்தி வொட்சன் கவித்துவம் மிக்க இலக்கிய நடையில் மனந்திரும்புதல் பற்றிய சத்தியத்தை இன்னொரு கட்டத்திற்குக் கொண்டு போயிருந்தது வாசிப்பதற்கு இனிமையாயிருந்தது. தன் சொந்த மொழியில் அதிக பரிச்சயத்தையும், இலக்கிய வளத்தையும் கொண்டிருந்ததாலேயே வொட்சனால் இலக்கியத் தரத்தோடு அந்த நூலைப் படைக்கமுடிந்திருக்கிறது.

மொழியாக்கம்

சுசிலா அவர்கள் மொழியாக்க முயற்சியில் ஈடுபட்டது ஒரு தற்செயல். மதுரை பாரதி புக் ஹவுஸ் பதிப்பாளர் கேட்டுக்கொண்டதற்காக அதில் ஈடுபடச் சம்மதித்திருக்கிறார். இருபெரும் இரஷ்ய நாவல்களான, குற்றமும் தண்டனையும், அசடன் ஆகிய இருநாவல்களும் ஆரம்பத்தில் அவரால் மொழியாக்கம் செய்யப்பட்டவை. மொழியாக்கத்தின் சிக்கல்களை நன்கு உணர்ந்திருந்ததாகக் கூறும் சுசிலா, ஒருவகை அச்சத்தோடுதான் அதில் நுழைந்ததாகக் கூறுகிறார். நல்ல தமிழ் எழுத்தாற்றலும், ஆங்கிலத்தில் பரிச்சயமும் இருந்திருந்தபோதும் அவருக்கு அந்தத் தயக்கம் இருந்திருப்பது தன்னடக்கத்தைச் சுட்டுகிறது. அவருடைய மொழியாக்க அனுபவத்திலிருந்து நான் கண்டறிந்த உண்மைகளைக் கவனியுங்கள்.

  1. மொழியாக்கத்தில் ஈடுபடுமுன் இரஷ்ய நாவலை (ஆங்கிலத்தில்) அவர் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். பக்கம் பக்கமாக வாசிக்க ஆரம்பித்தபோது மூல ஆசிரியரோடு ஒன்றிப்போக ஆரம்பித்தார். மூல ஆசிரியர் வெளிப்படுத்தியிருந்த ஆசாபாசங்கள், சபலங்கள், அன்பு, மனித நேயம் அனைத்தையும் உள்வாங்கி அந்த நூலோடு ஒன்றிப்போயிருக்கிறார். வெறும் மொழிபெயர்ப்பாளராக மட்டும் தன்னைக் கருதி புறத்தில் இருந்து நூலைப்பார்க்காமல், அகவயமாக நூலோடு ஒன்றிப்போய் அதனை அனுபவித்து மனக்கண்ணில் கிளர்ச்சியும், பரவசமும் அடைந்து சிலிர்த்திருக்கிறார். மொழியாக்கத்தில் ஈடுபடுகிறவன் இதைச்செய்யாது போனால் மொழியாக்க நூல் வாசகனுக்கு அந்நியமாகத்தான் தென்படும்.
  2. மொழியாக்கத்தில் ஈடுபட்டபோது, இந்த ஆரம்பப் பயிற்சியான வாசிப்பு அவருக்குத் துணைபோயிருக்கிறது. நூலை மொழியாக்கம் செய்யத் தானும் தன் எழுத்தும் மட்டுமே கருவிகள் என்ற உள்ளுணர்வோடு மொழியாக்கத்தில் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நூலின் ஆரம்ப வாசிப்பு மொழியாக்கம் செய்கிறபோது இன்னுமொரு எல்லைக்கு அவரைக் கொண்டுபோயிருந்தது. நூலோடு ஒன்றிப்போய் அதனை இரசித்து, சிலிர்த்து, கண்களில் நீர் வரவேண்டிய நேரங்களில் கண்ணீர் விட்டிருக்கிறார். இத்தகைய நூலுடனான அணுக்கமான ஆழ்ந்த பயணத்தை அவர் மொழியாக்கம் செய்தபோது அனுபவித்திருக்கிறார்.
  3. தன் மொழியாக்கத்திற்குத் துணை செய்தவை எவை என விளக்கும் சுசிலா ‘இலக்கு மொழியின் ஆளுமை (இந்த இடத்தில் அது தமிழ்) நம் வசப்பட்டுவிட்டால் வேறு வழிகாட்டுதல்கள் தேவைப்படுவதில்லை’ என்கிறார். தொடர்ந்து, ‘தொடர்ந்த இலக்கிய வாசிப்பும், தொடர்ந்து ஏதேனும் ஒன்றை எழுதிப் பார்த்தபடி ஏதோ ஒருவகையில் நம்மொழியைக் கூர்தீட்டிக்கொண்டு அது துருப்பிடித்துப் போகாதவகையில் பாதுகாத்துக்கொள்ளும் முயற்சிகளும் மட்டுமே நம் மொழி ஆளுமையை உயிர்ப்போடு வைப்பவை. படைப்பாக்கங்களுக்கு மட்டுமல்லாமல் மொழிபெயர்ப்புக்கும் துணை வருபவை அவை என்பதே என் மொழியாக்கப்பணிகள் எனக்களித்த தெளிவு’ என்கிறார் சுசிலா. எத்தனை உண்மையான அனுபவபூர்வமான வார்த்தைகள்.

மொழிவளத்தை வாழ்க்கையில் அறியாமல் இருந்தால் படைப்பிலக்கியம் மட்டுமல்ல, மொழியாக்கங்களிலும் ஒருவரால் ஈடுபட முடியாதென்கிற அவருடைய அனுபவபூர்வமான வார்த்தைகளை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நம்மினத்தவர் மத்தியில் சோம்பல் அதிகமாக இருப்பது நாமறிந்த உண்மை. எதையும் அரைகுறை அறிவோடு, தீடீர் இட்டிலி போல் இரண்டு நிமிடத்தில் செய்துமுடித்து பாராட்டையும் பணத்தையும் அடைவதில் கருத்தோடிருக்கும் ஒரு சோம்பல்தனம் அது. அத்தகைய சோம்பேறித்தன முயற்சிகள் ஆக்கபூர்வமான எதையும் உருவாக்கப்போவதில்லை. நம் குறைபாடுகளைத்தான் அப்பட்டமாகப் பலரறிய வெளிச்சம் போட்டுக்காட்டும் அது.

பல்கலைக்கழகப் படிப்புக்கு நான் தயாராகுமுன் தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுத்திருந்தேன். அக்காலத்தில் என்னுடைய இலக்கண அறிவு பெரிதாக இருக்கவில்லை. நண்பர்கள் இருவரோடு சேர்ந்து எப்படியோ ஒரு தமிழிலக்கணப் பண்டிதரைக் கண்டுபிடித்து ஒவ்வொரு வாரமும் அவரிடம் இலக்கணம் கற்றோம். தமிழிலக்கணம் இலகுவானதல்ல. இருந்தாலும் கஷ்டப்பட்டு இலக்கண விதிகளையும் மனனம் செய்து கற்று அந்தப் பாடத்தில் முதலிடத்தைப் பெற்றேன். அந்தக்கடின முயற்சி இன்றைக்கு கைகொடுக்காமல் போகவில்லை. தமிழ் வளமில்லாமல் நம்மத்தியில் இருப்பவர்கள் ஏன் தரமான ஓர் ஆசிரியரிடம் இருந்து தமிழ் கற்கக்கூடாது? கற்பதற்கு வயதும், வாழ்க்கையும் ஒருபோதும் தடையில்லையே. மொழிப்பயிற்சியும், எழுத்துவளமும் இல்லாமல் எதை உருவாக்கி என்ன பயன்.

  1. மொழியாக்கத்திற்காக மட்டுமல்லாமல், மொழி வளத்தை அடைய ‘சமகாலப் புனைவுகளைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பதே இன்றைய மொழியின் நீரோட்டத்திற்கு நம்மை இட்டுச்செல்லக்கூடியது’ என்று ஜெயமோகனைப்போலவே சுசிலாவும் அறிவுறுத்துகிறார். ‘பொருள் புரியாத பண்டித நடையாக ஆகிவிடாமல் நம் மொழிநடையை இலகுவாக்குவதும், வழக்கிழந்ததாக ஆகிவிடாமல் இன்றைய போக்கை ஒட்டியதாக நம்மொழியைப் புதுப்பித்தபடி செழுமை சேர்க்கக்கூடியதும் அதுவே’ என்கிறார் சுசிலா. இன்றைய சமகால இளம் வாசகர்களோடு சுசிலாவால் இணைய முடிவதற்குக் காரணம், அவருடைய வார்த்தைகளில் சொல்லுவதானால், ‘சமகால இலக்கிய வாசிப்போடும் புனைவோடும் நான் தொடர்ந்து கொண்டிருக்கும் ஊடாட்டமே.’
  2. மொழியாக்கப் படைப்பின் மீது மொழிபெயர்த்தவனுக்கு எல்லை கடந்த நேசமும் பற்றும் இருக்கவேண்டும் என்கிறார் சுசிலா. ‘அதுவும் நாமும் வேறில்லை என்று ஒன்றிக்கலக்கும் ஒரு அபேத நிலை, ஒரு நல்ல மொழிபெயர்ப்பில் கைகூடியாகவேண்டும்’ என்று ஆணித்தரமாக அவர் நம்புகிறார். ஒரு படைப்பால் நாம் கட்டப்பட்டு அது நம்மை பிரமிக்கவைத்து, நாம் நேசிக்கும்படிச் செய்யவைக்கும்போதே ‘அந்த எழுத்துக்குள் அணுக்கமாகப் போய், மூல நூலாசிரியர் வெளிப்படுத்த விரும்பிய செய்திகளை அவருடைய அலைவரிசைக்குள்ளாகப் போய் இனம் காணமுடியும்’ என்கிறார் சுசிலா.
  3. தன் மொழியாக்கத்தை விளக்கும் சுசிலா, ‘சொல்லுக்குச் சொல் வார்த்தைக்கு வார்த்தை என்று வரட்டுத்தனமாக இயந்திர கதியில் மொழிபெயர்த்துக்கொண்டு போகாமல் அவை இடம்பெறும் சூழலை உள்வாங்கிக்கொண்டு எழுத மிகுந்த சிரத்தையையும் உழைப்பையும் செலவிடுகிறேன்’ என்கிறார். அவர் தொடர்ந்து ‘நூலின் பண்பாட்டுக்கூறுகளைப் புரிந்துகொண்டு மொழிமாற்றம் செய்யும்போதே அது விசுவாசமான மொழிமாற்றமாக இயல்பாகவே அமைந்து விடுகிறது’ என்கிறார். ‘மொழியாக்கம் செய்யும் படைப்போடு ஒன்றிப்போய் அதன் ஜீவனை நம்மால் பிடித்துவிட முடிகிறபோது பண்பாட்டுக் காரணமான எந்த சிக்கலையும் இதுவரை என் எந்த மொழியாக்கமும் எதிர்கொண்டதில்லை’ என்கிறார் சுசிலா. அவர் இரஷ்ய நாவல்களை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தபோதும் அதற்கு கிட்டத்தட்ட மூன்று நான்கு ஆங்கில மொழியாக்கங்களை ஒப்புக்குநோக்கி தெளிவு பெற்றபின்பே அவற்றுக்கு இறுதி வடிவம் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இலக்கியப் பணிக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் ஆளுமை சுசிலாவின் மொழியாக்கம் பற்றிய விபரங்கள் மொழியாக்கப்பணி பற்றி நம்மைச் சிந்திக்கவைக்க வேண்டும். உண்மையில் மொழியின் அவசியத்தையும், வாசிப்பின் அவசியத்தையும் இவர் தன் வாழ்வனுபவங்கள் மூலமாக விளக்கியிருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. மொழியை விருத்திசெய்து கொள்ளாமல் அந்த மொழியில் எவரும் சிறக்கவோ, சாதிக்கவோ முடியாதென்பதற்கு சுசிலா உதாரணமாக இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு இலட்சம் மாணவர்களை அவர் தன் ஆசிரியப்பணி நாட்களில் சந்தித்திருப்பது மட்டுமல்ல, அவரிடம் கற்ற பலர் இன்று எழுத்தாளர்களாகவும், பேராசிரியர்களாகவும், திறனாய்வாளர்களாகவும், கவிஞர்களாகவும் வளர்ந்திருக்கிறார்கள், முன்னுக்கு வந்திருக்கிறார்கள். இந்த இலக்கியப் படைப்பாளியின் இலக்கியப்பணி கிறிஸ்தவர்களாகிய நம்மை அதிகம் சிந்திக்கத் தூண்டுகிறது. கிறிஸ்தவர்கள் என்ற ஒரே ஒரு தகுதியை வைத்துக்கொண்டு அதுபோதும் எதையும் செய்ய என்ற இறுமாப்பு நமக்கு இருக்கக்கூடாது. இலக்கியப் பணியில் நாம் எதையும் சாதிக்க கிறிஸ்தவ அனுபவத்தைக் கொண்டிருப்பதும், கிறிஸ்தவ வேதத்தை அறிந்திருப்பதும் மட்டும் போதாது. இந்த ஆளுமைக்கிருக்கும் மொழித்தகுதியையும், இலக்கிய ஆர்வத்தையும், வாசிப்பு மற்றும் எழுத்துப் பயிற்சியையும் தொடர்ந்து கொண்டிருக்காமல் இருந்தால் சராசரி மனிதர்களாக சராசரி படைப்புகளை மட்டுமே நாம் கொடுக்கமுடியும். அப்படி சராசரிக் கிறிஸ்தவனாக இருப்பது கிறிஸ்துவுக்கு மகிமை தராது.

 

கருத்தாழமிக்க எச்சரிக்கைப் பதிவு

“வேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி” – தன் மந்தையை சூழ்ந்திருக்கும் ஆபத்தை உணர்ந்த ஒரு மேய்ப்பனின் கருத்தாழமிக்க எச்சரிக்கைப் பதிவு.

இளம் விசுவாசிகளாகிய எங்களுக்கு அத்தியாவசியமாக இருக்கவேண்டிய கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்தை, சமுதாயத்தில் இன்று காணப்படும் கொள்கைகளோடு ஒப்பிட்டு விளக்கப்படுத்தியுள்ளீர்கள். கர்த்தருடைய பராமரிப்பின் மேன்மையை எண்ணி அதிகமாக அவரைத் துதிக்கிறோம். இந்த ஆக்கம் எனக்கு மோட்சப் பயண நூலின் 2ம் பாகத்தில் வரும் உறக்க பூமியும், அதனைக் கடப்பதற்கு முன்பு பயணிகளுக்குக் கிடைத்த மேய்ப்பர்களின் எச்சரிக்கையையும், சிக்கலான சமயத்திலெல்லாம் சரியான பாதையை வேதம் என்ற வரைபடத்தின் மூலமாகக் கண்டறிந்ததையும் ஞாபகப்படுத்தியது.

மேலெழுந்தவாரியாக ஒருசில கொள்கைகளைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும்; அதன் பாதிப்பை உணராததால், அதனைவிட்டு விலகியிருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டிருந்தேனே தவிர, வேதப்பார்வைகொண்டு அதைப் பகுத்தறிந்து தேவசித்தத்தை நிறைவேற்றி வாழவேண்டும் என்ற புரிதல் கொண்டிருக்கவில்லை. எனவே தங்களுடைய எழுத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்வதற்காக இது தொடர்பான சில லௌகீக கட்டுரைகளை வாசித்தபோது தலை சுற்றியது. 19ம், 20ம் நூற்றாண்டுகளில் ஆர்ப்பாட்டமில்லாமல் தோன்றிய சில கொள்கைகள் இந்த 21ம் நூற்றாண்டின் அனைத்துத் துறைகளிலும் தன் அழுத்தமான காலடிகளை அகலப்பரப்பியிருப்பதை உணர்ந்தபோது ஒரு பயம்வந்து மேலெழுந்து இதயத்தை அழுத்தியது உண்மையெனினும், தேவனின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் விசுவாசித்து தைரியம் கொள்கிறேன்.

பெண்ணுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்; அதற்காகச் சட்டம் இயற்றி திருமணத்திற்குப் புறம்பான பாலியல் சுதந்திரம் அளிப்பதும், ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பதும் தவறானது. இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அவசியம், அதன் பெயரில் இறந்த யானைக்கும் ஆத்துமா இருப்பதாகக் கருதி அஞ்சலி செலுத்துவது அறிவீனம். மொழிப்பற்று இன்றியமையாததுதான், ஆனால் அதற்குள் அரசியலைத் திணிப்பது மொழிக்குச் செய்யும் துரோகம். மிருகவதை கூடாது, ஆனால் அதன் பொருட்டு மாமிசம் உண்பதைத் தடை செய்து போராடுவது முட்டாள்தனம் என்பது புரிந்தது.

பட்டப்படிப்பு கல்லூரி முதற்கொண்டு பாலர் பள்ளி கார்டூன்வரை பின்நவீனத்துவ விதை விதைக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது; சமூகக் கட்டமைப்பை உடைத்து, வரலாற்றை மிதித்து, பகுத்தறிவைத் தொலைத்து, மாற்றத்தை மந்திரமாக்கி முன்னேறும் பின்நவீனத்துவம் சாத்தானின் ஆயுதமே என்பதையும், சூழல்வாதம் என்ற பெயரில் இறைவனுக்கு எதிராக இயற்கையை வணங்குவதிலிருந்து தாராளவாதம் என்ற பெயரில் இயற்கை நியதிக்கெதிராக மனித பாலினத்தை மாற்றுவது வரையிலும் மனிதனின் சித்தாந்தங்கள் அனைத்தும் இறைவனின் சித்தத்திற்கெதிராகவே இருப்பதையும் தெளிவாக அறிந்து கொண்டேன்.

“உலகத்தின் தீய சிந்தனைகளைப் புறக்கணித்து வாழவேண்டுமே தவிர உலகம் தெரியாமல் வாழக்கூடாது” – “சமூகம் சத்தமாகக் குரல் கொடுக்கிறது என்பதற்காக சமூகக் குரல்கள் எல்லாமே சரியானதாகிவிடாது” – ஆகிய வாசகங்களை சிந்தையில் வைத்திருப்பதை அத்தியாவசியமாக்கிக் கொள்கிறேன்.

இந்த உலகம் பாவத்தினால் கறைபடிந்திருந்தாலும்; வேதத்தின் கட்டமைப்புக்குட்பட்டு, பாவத்தை எதிர்த்து, தேவனை மகிமைப்படுத்தி வாழும் தகவமைப்பை மறுபிறப்பினூடே பெற்றிருக்கிறோம். மேலும் ‘‘பிசாசின் தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே” என்று வேதம் சொல்லுகிறது. எனவே உலகத்தைவிட்டு விலகியோ அல்லது உலகத்தோடு உறவாடியோ வாழாமல்; வேதம் என்ற ‘மூக்குக் கண்ணாடியின்’ மூலமாக உலகத்தின் காரியங்களை நுணுக்கமாக ஆராய்ந்து, தீமையை களைந்து நன்மையை அனுபவித்து கர்த்தரை மகிமைப்படுத்தி வாழவேண்டியது நமது கடமை என்பதை தீர்க்கமாக அறிந்துகொண்டேன்.

இந்தப் பதிவை ஏற்ற சமயத்தில் சொல்லப்பட்ட வார்த்தையாகவும், காலத்தினாற் செய்த உதவியாகவும் உணருகிறேன். மிகவும் நன்றி.

– ஷேபா மிக்கேல் ஜார்ஜ்

 

வாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்

வாசிக்கிறவர்கள் தங்களுடைய வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுவதை நான் வரவேற்கிறேன். ஒருவருடைய அனுபவத்தைப் பேச்சின் மூலம் மட்டுமல்லாமல், எழுத்தின் மூலமாகவும் அறிந்துகொள்ளுகிறோம். எழுதுகிறபோது சிந்தனைக்கு வேலை கிடைக்கிறது. நம் உள்ளத்தின் எண்ணக் குமுறல்களுக்கு வார்த்தையால் வடிவம் கொடுக்கமுடிகிறது. ‘உன்னுடைய காகிதங்களை உன் இருதயத்து மூச்சுக்களால் நிரப்பு’ என்று சொன்னார் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வேர்த். மூச்சை எந்த மனிதனாவது நிறுத்த முயற்சிப்பானா? இயல்பாக மூச்சுவிடுவதுபோல் இயல்பாக எண்ணங்களை எழுத்தில் வார்க்கவேண்டும். நம் வாசிப்பின் அனுபவத்தை எழுத்தில் பகிரும்போது வாசிப்பவர்கள் நம்மை அறிந்துகொள்ளுகிறார்கள்; நம் அனுபவங்களை அனுபவிக்க ஆரம்பிக்கிறார்கள். வாழ்க்கையில் நாம் ஒருபோதும் நேரில் சந்திக்க முடியாதவர்களோடுகூட எழுத்தில் இணைந்து நடக்கமுடிகிறது. அது நல்லதுதானே! கீழ்வரும் வாசக நண்பர்களின் வாசிப்பு அனுபவத்தை சுவைக்கலாம் வாருங்கள். – ஆர். பாலா

குடும்ப ஆராதனை – ஆர். பாலா

 

வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டிராத நான், நண்பர் ஒருவர் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் அவர் தன்னுடைய புத்தக அலமாரியைக் காண்பித்து “பிரதர் புத்தகம் வாசியுங்கள், எடுத்துத் தரவா?” என்று எப்போதும் சொல்லுவார். நானும் அப்புறம் வாசிக்கிறேன் பிரதர் என்று கூறிவிடுவேன். இவ்வாறு அவர் ஒருமுறை மறுபடியும் அவர் வீட்டிற்குச் சென்றபோது “சிறிய புத்தகம் படியுங்கள்” எனக் கூறி 24 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை எடுத்துத் தந்தார். நானும் மறுத்துப்பேச முடியாமல், சரி வாசித்துத்தான் பார்ப்போமே என்று நினைத்து புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தேன். அதில் “குடும்ப ஆராதனை” என்று எழுதப்பட்டிருந்தது.

பாரம்பரியக் கிறிஸ்தவனாக (பெயர் கிறிஸ்தவன்) இருந்த எனக்கு அந்த சமயத்தில் ஒன்றும் புரியவில்லை. குடும்ப ஜெபம் என்பது தெரியும், ஆனால் இது என்ன குடும்ப ஆராதனை என்று எண்ணிச் சிரித்துக்கொண்டே படிக்க ஆரம்பித்தேன். நூல் அறிமுகத்தில் ஆசிரியர் குடும்பத்தலைவனின் தலைமையில் குடும்ப ஆராதனை நடத்தப்பட வேண்டும் என்று ஆரம்பித்திருந்தது என்னை அதிரவைத்தது மட்டுமன்றி அந்நூலை அச்சமயத்திலேயே முழுமையாகப் படிக்க உந்தித்தள்ளியது.

“திருமறையில் குடும்ப ஆராதனை” மற்றும் “கிறிஸ்தவ வரலாற்றில் குடும்ப ஆராதனை” ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் வேதத்திலிருந்து விளக்கியிருப்பவற்றில் இருந்து, நான் கடவுளை குடும்பமாக ஆராதனை வேண்டியது மட்டுமல்லாமல், பிள்ளைகளுக்கும் கற்பித்துக் கொடுக்கவேண்டிய பொறுப்பை கடவுள் ஒவ்வொரு குடும்பத்தலைவருக்கும் தந்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டேன். இதையே வரலாற்றில் கிறிஸ்தவ பெரியோரும் கருத்தாய்க் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டேன்.

குடும்ப ஆராதனை ஏன் அவசியம், தேவன் தந்திருக்கும் குடும்பத்தின் உலகப்பிரகாரமான தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமன்றி, ஆத்மீகத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்புடையவனாக இருக்கிறேன் என்றும், சுவிசேஷம் அறிவிப்பது ஒவ்வொருவருடைய குடும்பத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டியது என்பதையும், தனி ஆராதனையே சபை ஆராதனைக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிறது என்பதையும் ஆழமாக நூல் உணரச்செய்தது. இதுவே சபை வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்ற வேதசத்தியத்தையும் உணர முடிந்தது.

“குடும்ப ஆராதனையில் இருக்கவேண்டிய அம்சங்கள்” மற்றும் “குடும்ப ஆராதனையை நடத்தும் முறை” ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் வேதப்பூர்வமான குடும்ப ஆராதனை எப்படி இருக்கவேண்டும் என்றும், எந்த நேரத்தில் அதை எவ்வளவு நேரம் செய்யவேண்டும் எனவும் தெளிவாக விளக்கியிருக்கிறார். இறுதியாக “குடும்பத்தலைவர்களுக்கான குடும்ப ஆராதனை நடத்தும் வழிமுறைகள்” என்ற தலைப்பில் ஆசிரியர் தந்துள்ள விளக்கம் என்னை அதிகமாகப் பாதித்தது. அவை அனைத்தும் வேதபூர்வமான உண்மைகள் எனவும் புரிந்துகொண்டேன். அன்றிலிருந்து இன்றுவரை எனது தனிப்பட்ட, குடும்ப மற்றும் சபை ஆராதனையை கர்த்தர் விசேஷவிதமாக ஆசீர்வதித்து அவரை மகிமைப்படுத்தி வாழும்படியாகக் கிருபை பாராட்டி வருகிறார்.

உண்மையில் சிறிதளவுகூட வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டிராதிருந்த எனக்கு, வாசிப்பதின் அவசியத்தை உணர்த்தி, இந்தப் புத்தகத்தை முழுமையாக வாசிக்கச் செய்ததே அச்சமயத்தில் என்னை ஆட்கொண்ட பயமும், கேள்வியுந்தான்; வேதசத்தியங்களை முறையாகப் படித்துப் புரிந்து கைக்கொண்டு நடந்தாலும், என் குடும்பத்தைக் கர்த்தரின் சித்தப்படி நடத்தத் தவறினால் நான் வேதம் எதிர்பார்க்கிறபடி கிறிஸ்தவனில்லையா? கிறிஸ்துவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லையா? என்ற பயமும் கேள்வியுமே என்னை அச்சமயத்தில் வாசிக்கத் தூண்டியது.

‘வாசிப்பு சிந்திக்க வைக்கும்’ எனக் கேள்விப்பட்டிருந்தாலும் அதை அனுபவப்பூர்வமாக புரிந்துகொள்ள வைத்ததுமன்றி என்னுடைய ஆவிக்குரிய வாழ்வில் குடும்பத்தலைவனாகப் பல தீர்மானங்களை எடுக்கவும் உதவியது. எனவே வேதத்தையும் வேதசத்தியங்களையும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். இதனால் நானும் என் குடும்பமும் கிறிஸ்துவுக்குள் அடைந்து வரும் பயன்கள் அநேகம்.

– மிக்கேல் ஜார்ஜ்

மத்தியகிழக்கு நாடொன்றிலிருந்து

கர்த்தரின் வேதம் – ஆர். பாலா, ஜோன் ரூத்தர்

சீர்திருத்த புத்தகங்கள் என் கையில் கிடைக்க கர்த்தர் நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அவற்றில் முதலாவதாக நான் வாசித்தது, ‘கர்த்தரின் வேதம்’ என்ற நூல். பத்து வருடங்களுக்கு முன்பாக நான் வாசித்த இந்த புத்தகத்தின் மூலம் நான் பெற்றுக்கொண்ட நன்மைகளை உங்களோடு பகிர விரும்புகிறேன்.

ஆரம்ப காலங்களில் நான் ஒரு பாரம்பரிய கிறிஸ்தவ சபையில் இருந்தேன். அங்கிருந்தபோது பரிசுத்த வேதாகமம் பற்றியும், ஆண்டவரைப் பற்றியும் அறியாமல் இருந்தேன். என்னுடைய 25ம் வயது வரையில் வேதத்தின் மகத்துவத்தை நான் அறிந்திருக்கவில்லை.

கர்த்தரின் வேதம் என்ற தலைப்பில் இருக்கும் இந்தப் புத்தகத்தை நான் வாசித்த பிறகுதான், இறையாண்மையுள்ள கர்த்தர் ஒருவர் இருக்கிறார், அவரால் எழுதிக்கொடுக்கப்பட்ட வேதம் ஒன்று இருக்கிறது என்பதை நான் அறிந்துகொண்டேன்.

வேதத்தின் வாசனையே இல்லாமல் இருந்த என்னை வேதத்தின் பக்கம் திரும்பவைத்தது இந்தப் புத்தகம். பாவத்தில் சீரழிந்திருந்த நான் உலக காரியங்களுக்கும் விக்கிர ஆராதனைக்கும் அடிமைப்பட்டிருந்தேன். இந்தப் புத்தகத்தை வாசித்த பிறகுதான் நான் எப்பேர்பட்ட பாவி என்பதை உணர்ந்தேன்.

எத்தனை பெரிய ஆண்டவர் எனக்காக பூமிக்கு இறங்கி வந்து என்னுடைய பாவங்களுக்காக, எனக்குக் கிடைக்கவேண்டிய தண்டனையை அவர் தம்மேல் சுமந்து பாடுபட்டு, மரித்து உயிர்த்தெழுந்தார் என்பதை உணர்ந்தேன். என் பாவங்களையெல்லாம் அவர் தன் கிருபையாலும், இரக்கத்தாலும் மன்னித்தார். அதன் மூலமாக எனக்கு மறுபிறப்பைக் கொடுத்து, மனந்திரும்புதலையும் இரட்சிப்பையும் கொடுத்தார்.

பரிசுத்த தேவனுக்கு முன்பாக நான் ஒரு புழு. நான் அருவருக்கத்தக்கவன். அப்படிப்பட்ட எனக்காக அவர் பாவமனிதர்களின் கையில் அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, அவமானப்பட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து உயிர்த்தார் என்பதை நான் உணர்ந்தேன்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு பிசாசு பிடித்த மனிதனைப்போல இருந்த என்னை முழுவதுமாக விடுதலையாக்கி சுகம் கொடுத்து தேவனுடைய பிள்ளையாக்கியது வேதமே. மேலும் கர்த்தருடைய சபையில் இணைந்து, சபை ஆராதனையில் வேதத்தை வாசிக்கின்ற ஒரு பணியையும் ஆண்டவர் எனக்கு கிருபையாக அருளியிருக்கிறார்.

ஆத்துமாவுக்கு உதவாத புத்தகங்களை அதிகமாகப் படித்துக்கொண்டிருந்த என்னை சீர்திருத்த புத்தகங்களை வாசிக்கவும், வாசித்தவற்றைப் பிறருக்கு எடுத்துச் சொல்லவும் கர்த்தரின் வேதம், என்ற இந்தப் புத்தகம் ஒரு தூண்டுகோலாக இருந்தது என்று கூறுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தப் புத்தகத்தில் இரண்டாவது பகுதியாக இருக்கின்ற 1689 விசுவாச அறிக்கையின் முதல் அதிகாரமாக இருக்கின்ற ‘பரிசுத்த வேதாகமம்’ என்ற பகுதிக்கு ஆசிரியர் கொடுத்திருக்கும் விளக்கம் தனிப்பட்டவிதத்தில் வேதத்தைப் புரிந்துகொள்ளுவதற்கும், சபை வாழ்க்கை வளர்ச்சிக்கும் பேருதவியாக இருந்து வருகிறது.

குறிப்பாக, இந்தப் பகுதி மூலம், கர்த்தரின் தெய்வீகத் தன்மையையும், வார்த்தையின் வல்லமையையும், வேதத்தைப் புரிந்துகொள்ள அவசியமான விதிகளையும், வேதத்தின் மூலம் மட்டுமே ஆவியானவர் பேசுகிறார் என்பதையும், மனிதனின் இரட்சிப்பிற்கும் விசுவாசத்திற்கும் வேதம் மட்டுமே போதுமானது என்பதையும், வேதம் தவறிழைக்காதது, அதிகாரமுள்ளது, வேதத்தோடு எதையும் சேர்க்கக்கூடாது என்பதையும், வேதம் தன்னைத்தானே விளக்குகிறது போன்ற அநேக சத்தியங்களை அறிந்துகொண்டேன்.

இப்படியாக வேதத்தின் மெய்த்தன்மை பற்றிய நுணுக்கங்களைத் தெளிவாக எழுதித் தந்திருக்கும் ஆசிரியர்கள் பாலா மற்றும் ஜோன் ரூத்தருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு என் நன்றி.

– பிரான்ஸிஸ்

பெங்களூர்

 

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.