திருமறைத்தீபம் 2019 -ம் ஆண்டு இரண்டாம் இதழ்
1. வாசகர்களே!
2. கிறிஸ்தவ வரலாற்றில் வினாவிடைப் போதனைகள்
3. வினாவிடைப் போதனை அவசியமா?
4. வேதத்தை விளக்க வேண்டியது அவசியமா? – A.W. பின்க்
5. அனல்வீசும் பக்திவைராக்கியம் – டேவிட் மெரெக்
வாசகர்களே!
மறுபடியும் இந்த இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் இந்த இதழைத் தயாரித்து நேரத்தோடு உங்களுக்கு அனுப்பிவைக்க கர்த்தர் கிருபை பாராட்டியிருக்கிறார். இதழின் நடுப்பகுதியில் நாம் வெளியிட்டிருக்கும் நூல்களின் பட்டியலை நீங்கள் காணலாம். அவற்றை சென்னை, சீர்திருத்த வெளியீடுகளோடு தொடர்புகொண்டு நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து எழுத்துப் பணிக்காகவும், நூல் வெளியீட்டிற்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள். தற்காலத்திற்கு அவசியமான நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிடுவதே எங்கள் நோக்கம். திருச்சபைப் பணிக்கு அவை துணைபோக வேண்டும் என்பதை எங்கள் ஜெபம்.
இந்த இதழில் ஆர்தர் பிங்க் எழுதிய ஆக்கத்தின் மொழிபெயர்ப்பை நீங்கள் வாசிக்கலாம். அது வேதவிளக்க விதிகள் தொடர்பானது. தொடர்ந்து இது குறித்த ஆக்கங்கள் இதழில் வரும். வேதவிளக்க விதிகள் இருப்பதே தெரியாது அநேகர் போதகர்களாக இருந்து வருகிறார்கள். அவர்களுக்கும் வாசகர்களுக்கும் உதவுமுகமாகவே இவற்றை இதழில் வெளியிடுகிறோம்.
போதகர் டேவிட் மெரேக்கின் பக்திவைராக்கியம் பற்றிய தொடர் ஆக்கங்களின் இறுதிப்பகுதி இந்த இதழில் வந்திருக்கிறது. இந்த ஆக்கங்களின் தொகுப்பு வெகுவிரைவில் நூலாக வெளிவரவிருக்கிறது.
வினாவிடைப் போதனை முறையைப் பயன்படுத்தி ஆத்துமாக்கள் ஆத்தும விருத்தியடையச் செய்யும் பணியைத் திருச்சபை ஆரம்பத்தில் இருந்தே செய்து வந்திருக்கிறது. சீர்திருத்தவாதிகளின் காலத்திலும், பியூரிட்டன் பெரியவர்களின் காலத்திலும் அது பரவலாகவே திருச்சபைகளில் இருந்திருக்கிறது. 19ம் நூற்றாண்டிலிருந்து அது மறைய ஆரம்பித்து உப்புச் சப்பற்ற ஊழியப்பணிகளையே திருச்சபை கண்டு வந்திருக்கிறது. மறுபடியும் சீர்திருத்தவாத போதனைகள் உயிர்பெற்று சபைகள் நிறுவப்பட்டபோது வினாவிடைப் போதனை முறையும் தலைதூக்கி மேலைத் தேசத்து திருச்சபைகளில் இருந்து வருகின்றன. அதன் அவசியத்தைப் பற்றிய இரு ஆக்கங்களை இந்த இதழில் எழுதியிருக்கிறேன். இவை மேலும் தொடரும்.
இந்த இதழும் அதன் ஆக்கங்களும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும், ஜெபமும். – ஆர்
கிறிஸ்தவ வரலாற்றில் வினாவிடைப் போதனைகள்
நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இறையியல் பஞ்சமிருப்பது எல்லோருக்குமே தெரிந்த உண்மைதான். பிரசங்கங்களிலும், போதனைகளிலும் தனிமனித அனுபவங்களும், வெறும் வரட்டுத்தனமான போலி வாக்குத்தத்தங்களும் நிரம்பி வழிகின்றனவே தவிர மெய்யான வேதவிளக்கங்களுக்கு இடமிருப்பதில்லை. பிரசங்கமேடை சத்தியமற்ற சாட்சிகளை மட்டும் கொண்டிருப்பதாலேயே பரவலாக ஆத்துமாக்களும் சத்தியம் தெரியாமல், வழிதெரியாமல் அலையும் ஆடுகளைப்போல அனுபவ சுகத்தை மட்டும் நாடிப் போலிப் பிரசங்கிகளின் கையில் அகப்பட்டுத் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரத்தில் தென் ஆபிரிக்காவில் ஒரு பிரசங்கி இறந்துபோன ஒருவனை உயிர்த்தெழச் செய்யும் ஒரு நாடகத்தை சபை மத்தியில் செய்துகாட்டி கைதட்டல் பெறப்பார்த்திருக்கிறார். அதில் எந்த உண்மையும் இல்லை என்று சில கிறிஸ்தவ தலைவர்கள் அந்த நாடகத்தை நடத்திய மனிதன் மீது கிரிமினல் வழக்குத் தொடரவேண்டும் என்று போலீசை நாடியிருக்கிறார்கள். இதை பிபிசி செய்தியில் நான் பார்த்தேன். இப்படி நூற்றுக்கணக்கான போலித்தனங்கள் நம்மைச்சுற்றி எங்கும் நிகழ்ந்து வருகின்றபோதும் அசையமாட்டேன் சாமி, என்று தொடர்ந்தும் இந்தப் போலிகள் பின்னால் திரிந்துவருகிறவர்களே அநேகம். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலில் காணப்பட்ட வார்த்தைப் பஞ்சமே இன்று நம்மினத்தையும் வாட்டிவருகிறது.
இந்த நிலைமைக்கு மத்தியில் சத்தியத்தை மட்டும் போதித்து சபை வளர்க்கும் ஆர்வம் சிலருக்கு இருக்கத்தான் செய்கிறது. இருந்தபோதும் அவர்களுக்கு இந்த நீண்ட ஊழியப்பயணத்தில் அதை எப்படிச்செய்வது என்ற பிரச்சனை இருந்துவருகிறது. இதற்கு உதவுமுகமாகத்தான் 1689 விசுவாச அறிக்கையையும், பாப்திஸ்து போதனையின் படியிலான சுருக்க வினாவிடை நூலையும் நாம் சீர்திருத்த வெளியீடுகளின் மூலமாக வெளியிட்டு உதவினோம். இவை இரண்டின் மூலமும் வரலாற்றுக் கிறிஸ்தவம் நமக்கு வேத இறையியலை முறைப்படுத்தி தொகுத்துத் தந்திருக்கிறது. இவற்றைக் கருத்தோடு படிக்கிறவர்கள் வேதத்தில் பரவலாகக் காணப்படும் இறையியல் போதனைகளை முறையாகக் கற்றுக்கொள்ள முடியும். இவற்றில் இரண்டாவதான சுருக்க வினாவிடை நூலின் வரலாற்றையும், அதன் விசேஷ தன்மைகளையும்பற்றி விளக்க விரும்புகிறேன்.
வேத இறையியல் தெரியாமல் பிரசங்க ஊழியத்தை ஒருவரும் செய்யமுடியாது. வேதம் கர்த்தரைப்பற்றியும் அவருடைய கிரியைகளைப் பற்றியும், மனிதன் பின்பற்ற வேண்டிய கர்த்தரின் கட்டளைகளைப்பற்றியும் விளக்கும் உண்மைகள் தெரியாமல் ஒருவர் எதைப் பிரசங்கிக்க முடியும்? இறையியல் என்பது இறைவனைப்பற்றிய சத்தியங்கள். அவற்றில் நல்லறிவில்லாமல் எவரும் சுவிசேஷத்தைக்கூட பிரசங்கிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இறையியல் சத்தியங்கள் தெரியாமல் ஒரு கிறிஸ்தவன் தன் வாழ்க்கையில் கிறிஸ்துவோடு நல்லுறவுகொண்டு விசுவாசமாக வாழ்வதும் கடினம். அந்தளவுக்கு வேத இறையியல் பிரசங்கத்திற்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் இன்றியமையாததாக இருந்து வருகிறது. வேத இறையியலில் அக்கறை காட்டாமல் அதை உதாசீனப்படுத்துகிற சபை “செத்த சபை” என்று ஆர். சி. ஸ்பிரவுல் எனும் சீர்திருத்த போதகர் குறிப்பிட்டிருக்கிறார்.
வேத இறையியலை 32 அதிகாரங்களில் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவும், அதேநேரம் சுருக்கமாகவும் தெளிவாகத் தொகுத்து வழங்குவதே விசுவாச அறிக்கை (Confession of Faith). அதே இறையியல் போதனைகளை வினாவிடைகளாக தெளிவாக, அதேநேரம் சுருக்கமாகத் தொகுத்துவழங்குவதே வினாவிடைப் போதனைகள் (Catechism). இத்தகைய வினாவிடையைப் பயன்படுத்தி போதனையளிக்கும் முறையை நாம் வேதத்தில் காண்கிறோம். பிரசங்கத்தின் மூலமும், விரிவுரைகளின் மூலமும் மட்டுமல்லாது கேள்வி-பதில் முறையிலும் ஆதியில் இருந்து கர்த்தரைப் பற்றிய போதனைகளைப் பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலும், புதிய ஏற்பாட்டு சபையும் தந்து வந்திருக்கின்றன. இதற்கு ஓர் உதாரணமாக லூக்கா 2:46-47 வசனங்களைக் குறிப்பிடலாம். இங்கே இயேசு பாலகனாக எருசலேம் ஆலயத்தில் நியாயப்பிரமாணத்தைப் போதிக்கின்றவர்கள் மத்தியில் அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்து மட்டுமல்லாமல் அவர்களைக் கேள்விகள் கேட்கவும் செய்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவருடைய போதனை முறை வினாவிடைப் போதனையாக இருந்தது. அவருடைய விளக்கங்களைக் கேட்ட அனைவரும் பிரமித்துப் போனார்கள். 47ம் வசனம், அங்கிருந்த அனைவரும் அவருடைய ஞானத்தையும் அவரளித்த மறுமொழிகளையும் கேட்டு பிரமித்தார்கள் என்கிறது. ஆகவே, வினாவிடைப் போதனை என்பது ஏதோ இன்று புதிதாக உருவானதொன்றாக எண்ணிவிடக்கூடாது. இந்த முறையில் போதனை அளிக்கும் வழக்கம் உலகத்தில் என்றும் இருந்து வந்திருக்கின்றது. இதைப் பழைய ஏற்பாட்டுப் போதகர்களும், புதிய ஏற்பாட்டுப் போதகர்களும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
இந்த வினாவிடை முறையில் அமைந்த போதனையில் பெரும் நன்மை இருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் இரண்டு முக்கிய நடைமுறை நன்மைகள் என்ன தெரியுமா?
- வேதசத்தியங்களை இது துல்லியமாகவும், சுருக்கமாகவும் மனதிலிருத்திக்கொள்ளும்வகையில் தொகுத்துத் தருகிறது.
- பாலகர்கள் முதல் பெரியவர்கள்வரை வேதசத்தியங்களை மனனம் செய்து மறக்காமல் இருதயத்தில் வைத்துக்கொள்ள உதவுகிறது.
திருச்சபை சீர்திருத்தமும் வினாவிடைப் போதனையும்
வேதவினாவிடைப் போதனை முறை ஆதியில் இருந்து பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதால்தான் 16ம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்கத்தின் பிடியில் இருந்து கிறிஸ்தவத்தை மீட்ட சீர்திருத்தவாதிகள் மறுபடியும் வினாவிடைப் போதனை முறையைப் பயன்படுத்தி வேதசத்தியங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதிக்க ஆரம்பித்தார்கள். இந்த முறையை ரோமன் கத்தோலிக்க மதத்திலும் காணலாம்; பிரச்சனை என்னவென்றால் அவர்களுடைய வினாவிடைப் போதனை வேதத்திற்கு முரணானது. அதில் சத்தியத்திற்கு இடமில்லை. இன்று வினாவிடைப் போதனை என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தினால் பலர் தவறாக அது ரோமன் கத்தோலிக்க முறை என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

மார்டின் லூத்தர்
16ம் நூற்றாண்டில் சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர் வினாவிடைப் போதனை முறையைப் பயன்படுத்திப் போதனையளிப்பதில் அதிக அக்கறை காட்டினார். இதன் மூலம் குடும்பங்களும், சிறுவர்களும், தனிநபர்களும் சத்தியத்தில் வளருவதோடு அதைப் பாதுகாத்துக்கொள்ளவும் முடியும் என்று அவர் நம்பினார். ஒருதடவை அவரைப் பார்த்து ஒருவர், ஐயா, நீங்கள் எழுதியிருக்கும் நூல்கள் அனைத்திலும் எது தொடர்ந்தும் அச்சில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, லூத்தர் கண்ணிமைக்கும் வேகத்தில், நான் சிறுவர்களுக்காக எழுதி வெளியிட்டிருக்கும் வினாவிடைப் போதனை என்று பதிலளித்தார். அந்தளவுக்கு வினாவிடைப் போதனை மூலம் சத்தியவிளக்கமளிக்கும் முறையில் லூத்தருக்கு நம்பிக்கையிருந்தது. வினாவிடைப் போதனை முறை மூலம் சத்தியவிளக்கம் பெற்று வளர்ந்து வந்திருக்காத இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்துக்கு இது ஆச்சரியமளிக்கலாம்; இதைப் புரிந்துகொள்ளுவதும் கஷ்டமாக இருக்கலாம்.
லூத்தர் ஒன்றுக்கு மேற்பட்ட வினாவிடைப் போதனைகளை எழுதிப் பயன்படுத்தியிருக்கிறார். 1529ல் அவர் இரண்டு வினாவிடைப் போதனைகளை வெளியிட்டார். ஒன்று சுருக்கவினாவிடைப் போதனை, இரண்டாவது விரிவான வினாவிடைப் போதனை. 1528ம் ஆண்டில் சாக்சனியில் இருந்த கிறிஸ்தவ சபைகளை, அவற்றின் தரத்தை அறிந்துகொள்ள போய்ப் பார்த்த லூத்தர் பின்வறுமாறு குறிப்பிட்டார்: “கருணை காட்டுங்கள் ஆண்டவரே! எத்தனை பெரிய துன்பத்தை நான் காண்கிறேன். கிராமங்களில் இருக்கும் சாதாரண விசுவாசிகள் எந்தவிதமான வேதஞானமும் இல்லாமலிருக்கிறார்கள். அநேக போதகர்கள் வேதத்தைப் போதிக்கும் ஆற்றலும், தகுதியும் அறவே இல்லாமலிருக்கிறார்கள். இருந்தபோதும், ஆண்டவருடைய ஜெபத்தையோ, விசுவாச அறிக்கையையோ அல்லது பத்துக்கட்டளைகளையோ மனனம் செய்து சொல்லமுடியாதிருக்கும் இவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளுவதோடு ஞானஸ்நானத்தையும் பெற்றுக்கொண்டு, திருநியமங்களைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். அவர்கள் பேசமுடியாதிருக்கும் மிருகங்களைப்போலவும், மூளையில்லாத பன்றிகளைப்போலவும் வாழ்ந்து வருகிறார்கள் . . . ஓ! போதகர்களே, உங்களுடைய ஊழியப்பணிகளை ஒரு நிமிடமாவது நிறைவேற்றாமல் வெட்கப்படவேண்டியவிதத்தில் ஆத்துமாக்களில் அக்கறையில்லாமல் இருந்துவந்திருக்கும் நீங்கள் கிறிஸ்துவைப் பார்த்து என்ன சொல்லப்போகிறீர்கள்?”
வினாவிடைப் போதனை முறையைப் பின்பற்றி திருச்சபை சீர்திருத்தத்தைத் தொடருவது லூத்தரின் சீர்திருத்தப்பணியில் முக்கிய இடம் வகித்து வந்திருக்கிறது. ஆத்துமாக்களும், போதகர்களும் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிய எந்த வேத அறிவும் இல்லாலிருப்பதை லூத்தர் கவனித்தார். இதை நிவர்த்தி செய்வதற்கு லூத்தருக்கு வினாவிடைப் போதனை முறையே சிறந்ததாகப்பட்டது. லூத்தர் ஒன்றும் எதையும் புதிதாக செய்துவிடவில்லை; ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் முறையைத்தான் அறிமுகப்படுத்தினார். வரலாற்றில் முதலாவதாக வெளியிடப்பட்ட வினாவிடைப் போதனை 8ம் நூற்றாண்டில் இருந்ததாக அறிகிறோம்.
திருச்சபை சீர்திருத்தம் மேலும் தொடர்ந்து முன்னேறியபோது, 1563ல் ஹைடில்பேர்க் வினாவிடைப் போதனை (Heidelburg Catechism) வெளியிடப்பட்டது. இதுவே இன்றும் அமெரிக்காவில் இருக்கும் நெதர்லாந்து, ஜெர்மானிய சீர்திருத்த திருச்சபைகளில் பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேதத்திற்கு அடுத்த இடத்தில்வைத்து இந்த வினாவிடைப் போதனைக்கு அவர்கள் மதிப்பளிக்கிறார்கள். அதற்குக் காரணம் சத்தியத்தை மட்டும் விசுவாசிப்பதில் உறுதியாக இருக்கவேண்டும் என்பதால்தான். இந்த வினாவிடைப் போதனைக்கு முன்பாகவே 1561ல் பெல்ஜிக் விசுவாச அறிக்கை (Belgic Confession of Faith) எழுதி வெளியிடப்பட்டிருந்தது.
இதற்குப் பிறகு 17ம் நூற்றாண்டு பியூரிட்டன் காலப்பகுதி திருச்சபைக்கு மேலும் அழகு சேர்த்தது. இது திருச்சபை சீர்திருத்தத்தில் மிகவும் சிறப்பான காலப்பகுதி. இந்தக் காலப்பகுதியிலேயே பியூரிட்டன் பெரியவர்கள் கூடி வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கையையும் (Westminster Confession of Faith), சுருக்க மற்றும் விரிவான வினாவிடைப் போதனைகளையும் (Larger and Shorter Catechism) தொகுத்து வெளியிட்டனர். 1648ல் இவை வெளியிடப்பட்டன. இவையே இன்றும் சீர்திருத்த பிரெஸ்பிடீரியன் திருச்சபைகளில் அவர்களுடைய விசுவாச அறிக்கைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை வெறும் போதனையளிக்கும் நூல்களாக மட்டும் கருதாது தாங்கள் விசுவாசிக்கும் சத்தியங்களின் தொகுப்பாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
பியூரிட்டன் பெரியவர்கள் பிரசங்க மேடையில் இருந்து கொடுக்கப்படும் போதனையின் மூலம் மட்டும் சபை வளர்ந்துவிடும் என்று நம்பவில்லை; அதற்கு மேலாக வினாவிடைப் போதனைகளைப் பயன்படுத்தி தனிப்பட்டவிதத்தில் ஆத்துமாக்களுக்கு போதனையளிப்பதன் அவசியத்தை அவர்கள் அறிந்திருந்தனர். கிறிஸ்தவ அடிப்படை சத்தியங்களை முழு சபை மக்களும் அறிந்து விசுவாசிக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்திருந்தனர். அநேக பியூரிட்டன் பெரியவர்கள் சிறுவர் சிறுமியர்களுக்கு வினாவிடைப் போதனைகளைக் கொடுத்து வளர்ப்பதில் தீவிரமாக இருந்திருக்கிறார்கள். பியூரிட்டன் காலப்பகுதி ஆத்மீகத்திலும், இறையியல் நம்பிக்கையிலும் மிக உயர்வான நிலையிலிருந்ததில் எந்த ஆச்சரியமுமில்லை.

ரிச்சட் பெக்ஸ்டர்
ரிச்சட் பெக்ஸ்டர் என்ற பியூரிட்டன் போதகர் இங்கிலாந்தில் கிடர்மின்ஸ்டர் என்ற ஊரில் போதகப் பணியேற்று ஊழியத்தை ஆரம்பித்தபோது அங்கு ஒவ்வொரு தெருவிலும் ஒரு குடும்பமாவது வினாவிடைப் போதனை முறையைப் பயன்படுத்தி கர்த்தரை ஆராதித்து வந்திருந்தது. அவ்வூரில் அவருடைய ஊழியம் நிறைவேறியபோது ஊரில் இருந்த அத்தனை குடும்பங்களும் வினாவிடைப் போதனையைப் பயன்படுத்தி கர்த்தரை ஆராதிப்பதில் ஈடுபட்டிருந்தது. அவருடைய ஊழியத்தின் காரணமாக 600 பேர் கர்த்தரிடமிருந்து இரட்சிப்பை அடைந்திருந்தார்கள். அவர்களில் ஒருவராவது கர்த்தரைவிட்டு விலகி உலகத்தை நாடி ஓடவில்லை என்று கூறியிருக்கிறார் பெக்ஸ்டர். இதற்கெல்லாம் ரிச்சட் பெக்ஸ்டருடைய பிரசங்கப்பணி மட்டுமல்லாது வினாவிடைப் போதனை முறையை அவர் அறிமுகப்படுத்தி ஊர்மக்கள் அனைவரையும் சத்தியத்தில் வளரச் செய்திருந்ததே காரணம்.
பாப்திஸ்துகளும் வினாவிடைப் போதனையும்
19ம் நூற்றாண்டு, கிறிஸ்தவத்திற்கு பல்வேறு தொல்லைகளைத் தந்த நூற்றாண்டு. இந்நூற்றாண்டுக்கு முன்புவரை கிறிஸ்தவ உலகம் வினாவிடைப் போதனை மூலம் கிறிஸ்தவ சத்தியங்களைக் கற்று நல்ல நிலையில் இருந்திருக்கிறது. 19ம் நூற்றாண்டில் இருந்து வினாவிடைப் போதனையின் பயன்பாடு குறைய ஆரம்பித்தது. அதுவும் பாப்திஸ்து கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவர்கள் மத்தியில் அதன் பயன்பாடு மறைய ஆரம்பித்தது. இன்று பெரும்பாலான பாப்திஸ்துகள் வினாவிடைப் போதனைக்கு முக்கிய இடமளிக்காமலிருப்பதற்கு 19ம் நூற்றாண்டு ஒரு முக்கிய காரணம். அடுத்ததாக டிஸ்பென்சேஷனலிசமும் அதற்கு ஒரு காரணம் என்று கூறவேண்டும். சீர்திருத்த வரலாற்று வினாவிடைப் போதனைகள் டிஸ்பென்சேஷனலிசப் போதனைகளுக்கு எதிரானவை. இருந்தபோதும் பாப்திஸ்துகள் வினாவிடைப் போதனைகளை 16ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே எழுதி வெளியிட்டுப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
பியூரிட்டன்களின் காலமான 17ம் நூற்றாண்டில் பாப்திஸ்துகள் விசுவாச அறிக்கையையும், வினாவிடைப் போதனைகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். சீர்திருத்தவாதக் கோட்பாட்டைப் பின்பற்றாதவர்களும் இதைச் செய்திருக்கிறார்கள். அன்றைய சீர்திருத்த பாப்திஸ்துகளை வரலாறு பர்டிகுளர் பாப்திஸ்து (Particular Baptist) என்று அழைக்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் குறிப்பிட்டவர்களுக்கான கிறிஸ்துவின் கல்வாரிப் பலியை (Particular atonement) விசுவாசித்ததுதான். இவர்களைச் சார்ந்த ஹெர்குளஸ் கொலின்ஸ் (Hercules Collins 1646-1702) எனும் கல்வினித்துவ போதகர் ஹைடில்பேர்க் வினாவிடைப் போதனையை மூலமாகக் கொண்டு தன்னுடைய ஓர்த்தடொக்ஸ் வினாவிடைப் போதனையை (Orthodox Catechism) 1680ல் எழுதிவெளியிட்டார். பாப்திஸ்துகள் எழுதி வெளியிட்ட வினாவிடைப் போதனைகளில் முக்கியமானதொன்று பெஞ்சமின் கீச் (Benjamin Keach 1640-1704) எழுதி வெளியிட்ட பாப்திஸ்து வினாவிடைப் போதனை (Baptist Catechism). இது ‘கீச்சின் வினாவிடைப் போதனை’ என்று பரவலாக அழைக்கப்பட்டது. பெஞ்சமின் கீச் தன்னுடைய வினாவிடைப் போதனையை எழுதுவதற்கு பியூரிட்டன்கள் எழுதி வெளியிட்ட ‘சுருக்கவினாவிடைப் போதனையை’ மூலமாகக் கொண்டிருந்தார். அதேபோலவே பின்னால் பெரும் பாப்திஸ்து பிரசங்கியான சார்ள்ஸ் ஸ்பர்ஜன் ஒரு வினாவிடைப் போதனையை எழுதி வெளியிட்டபோது வெஸ்ட்மின்ஸ்டர் வினாவிடைப் போதனையை மூலமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

சார்ள்ஸ் ஸ்பர்ஜன்
இங்கிலாந்தில் பாப்திஸ்து திருச்சபைப் பிரிவு வேத நம்பிக்கைகளைத் துறக்க ஆரம்பித்தபோது அதிலிருந்து தன்னுடைய சபையைப் பிரித்து சுயாதீன சபையாக இயங்க ஆரம்பித்தபோது, ஸ்பர்ஜன் தன்னுடைய சபை விசுவாசிக்கும் சத்தியங்களைப் பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிக்க 1689 விசுவாச அறிக்கையை மறுவெளியீடு செய்தார். அதுமட்டுமல்லாது அக்டோபர் 14ம் தேதி, 1855ல் அவர் ஒரு வினாவிடைப் போதனை நூலையும் எழுதி வெளியிட்டார். அப்போது ஸ்பர்ஜனுக்கு வயது 21. அவர் நியூபார்க் தெரு திருச்சபையில் ஒரு பிரசங்கத்தை (பிரசங்கம் எண்: 46) அளித்தார்; அது வெளிவந்தபோது அதில் ஸ்பர்ஜன் தான் வெளியிடவிருக்கும் வினாவிடைப் போதனைபற்றி குறிப்பிட்டிருந்தார்.
அந்த வினாவிடை நூலின் அறிமுகப்பகுதியில் ஸ்பர்ஜன் பின்வருமாறு எழுதியிருந்தார்:
“மெய்யான சத்தியங்களைப் பின்பற்றி வந்திருக்கும் சபைகள் முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்குள்ளாக அடிக்கடி மாறி சத்திய விரோத சபைகளாக மாறிவிடுகின்றன. அதற்குக் காரணம் இந்த சபைகள் ஒருபோதும் தங்களுடைய குழந்தைகளுக்கு வினாவிடைப் போதனைகளைப் பயன்படுத்தி சுவிசேஷத்தின் அடிப்படை சத்தியங்களில் வளர்க்காமல் இருந்திருப்பதுதான். நம்முடைய குடும்பங்களில் நல்லதொரு வினாவிடைப் போதனை நூலைப் பயன்படுத்தி வேதபோதனைகளில் வளர்ப்போமானால் இன்று நாம் முகங்கொள்ளும் அநேக போலிப்போதனைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் வெஸ்ட்மின்ஸ்டர் அசெம்பிளியின் வினாவிடைப் போதனையையும், பாப்திஸ்து வினாவிடைப் போதனையையும் பயன்படுத்தி, நம்முடைய சபை அங்கத்தவர்களுக்காகவும் ஏனையோருக்காகவும் இந்த வினாவிடைப் போதனையைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறேன். இதைக் குடும்பங்களிலும், வகுப்புகளிலும் போதிக்கிறவர்கள் வார்த்தைகளின் அர்த்தத்தை விளக்கவேண்டும்; ஆனால் அவற்றைக் கவனத்தோடு மனனம் செய்து இருதயத்தில் பதித்துக்கொள்ளும்போது காலம் செல்லச் செல்ல பிள்ளைகள் அவற்றை விளங்கிக்கொள்ளுவார்கள்.”
பெரும்பாலான வெஸ்ட்மின்ஸ்டர் அசெம்பிளியைச் சேர்ந்த பியூரிட்டன்கள் பிரெஸ்பிடீரியன்களாக இருந்ததால் பிரெஸ்பிடீரியன் கோட்பாடுகளில் சிலவற்றைக் கொண்டிருந்த வெஸ்ட்மின்ஸ்டர் சுருக்கவினாவிடையை பாப்திஸ்துகள், பெஞ்சமின் கீச் மற்றும் ஸ்பர்ஜன் உட்பட மாற்றவேண்டியிருந்தது. பியூரிட்டன் காலத்து பிரஸ்பிடீரியன்களும், பாப்திஸ்துகளும் சீர்திருத்தவாத போதனைகளைப் பொறுத்தவரையில், அதாவது கிருபையின் போதனைகள் என்றழைக்கப்படும் இரட்சிப்பைக் குறித்த ஐம்போதனைகள், கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின் நடைமுறைப் பயன்பாடு, கிறிஸ்துவின் சுவிசேஷம், திருச்சபைபற்றிய அடிப்படைப் போதனைகள் போன்றவற்றில் பிரிக்கமுடியாத ஒற்றுமையைக் கொண்டிருந்தனர். ஆனால், கர்த்தரின் உடன்படிக்கை, ஞானஸ்நானம், திருவிருந்து, திருச்சபையின் அமைப்பு, நிர்வாகம் ஆகிய விஷயங்களில் அவர்களுக்கிடையில் கோட்பாட்டு வேறுபாடுகள் இருந்தன. இதன் காரணமாக பாப்திஸ்துகள் தங்களுடைய விசுவாச அறிக்கை மற்றும் வினாவிடைப் போதனைகளில் இவை சம்பந்தமான பாப்திஸ்து கோட்பாடுகளை வலியுறுத்தி விளக்கவேண்டியிருந்தது. இதனால் வெஸ்ட்மின்ஸ்டர் அசெம்பிளி வெளியிட்ட சுருக்க மற்றும் விரிவான வினாவிடைப் போதனைகளை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. அவை சபைப்பிரிவுகளை மீறிய வரலாற்று வேத இலக்கியங்கள். அதனால்தான் கீச்சும், ஸ்பர்ஜனும் எந்தவிதமான மனச்சங்கடமும் இல்லாமல் தாங்கள் தொகுத்த வினாவிடைப் போதனை நூல்களுக்கு அவற்றை அடித்தளமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
வெஸ்ட்மின்ஸ்டர் சுருக்கவினாவிடை, பாப்திஸ்து பதிப்பு
1900களின் ஆரம்பகாலப்பகுதியில் சீர்திருத்தப் போதனைகளில் பேரார்வம் கொண்ட பாப்திஸ்துகள் சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைகளை வட அமெரிக்காவில் ஆரம்பித்தபோது 1689 விசுவாச அறிக்கையிலும், வினாவிடைப் போதனையிலும் அதிக அக்கறை காட்ட ஆரம்பித்தனர். சீர்திருத்த பாப்திஸ்து சபைகள் விசுவாச அறிக்கையை மட்டுமல்லாது வினாவிடைப் போதனையையும் சபைகளில் பயன்படுத்தினர். இதன் காரணமாக ஒரு நல்ல வினாவிடைப் போதனை நூல் தேவைப்பட்டது. அநேக பாப்திஸ்து வினாவிடைப் போதனைகள் இருந்தபோதும், அவற்றில் அநேகமானவை வெஸ்ட்மினஸ்டர் அசெம்பிளி வினாவிடை நூலை அடித்தளமாகக் கொண்டு தொகுக்கப்பட்டிருந்தபோதும், காலத்துக்கு ஏற்றபடியான வினாவிடை நூலொன்று அவசியம் தேவைப்பட்டது. இதை மனதில் கொண்டு அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தில் இருந்த சீர்திருத்த பாப்திஸ்து சபையொன்று அத்தகைய நூலைத் தொகுக்க ஆரம்பித்தது. முக்கியமாக தங்கள் சபைக்குடும்பங்களுக்கு நெடுங்காலத்துக்குப் பயன்படுத்த இதைத்தொகுத்தபோதும், அவர்கள் ஏனைய சீர்திருத்த பாப்திஸ்து சபைகளையும் மனதில் கொண்டு இதைச் செய்ய ஆரம்பித்தனர். இதைத் தயாரித்ததில் பல போதகர்களுக்கு பங்கிருந்தபோதும் முக்கியமாக நியூ ஜெர்சி, மொன்ட்வில் திரித்துவ பாப்திஸ்து சபையின் போதகர்களில் ஒருவராக அப்போதிருந்த கிரெக் நிக்கல்ஸுக்கு பெரும் பங்கிருந்தது. அவர் அச்சபை நிர்வகித்துவந்த திரித்துவ இறையியல் கல்லூரியில் முறைப்படுத்தப்பட்ட இறையியலைப் போதிக்கும் பேராசிரியராக இருந்தார். இந்த வினாவிடை நூலுக்கு அவர் தயாரித்த அருமையான அவுட்லைன் இதைப் பயன்படுத்துகிறவர்களுக்கு பேருதவியாக இருக்கும். சிம்ப்சன் வெளியீடுகள் 1991ல் இதை முதல்முதலாக வெளியிட்டு வைத்தனர். 115 வினாவிடைகளைக் கொண்டிருக்கும் இந்நூல் இன்று அநேக திருச்சபைகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதைத் தயாரிக்க ஆரம்பித்தபோது கிரேன்ட் ரெபிட்ஸ், மிச்சிகன் சபைப் போதகர்கள் வரலாற்றில் பரவலாக திருச்சபைகள் பயன்படுத்தி ஆசீர்வாதம் அடைந்திருந்த பியூரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அசெம்பிளி தயாரித்த சுருக்க வினாவிடை நூலை அதற்காகத் தெரிவுசெய்தனர். சீர்திருத்தவாத பியூரிட்டன் போதகர்கள் கவனத்தோடு தயாரித்திருந்த இந்த அருமையான நூலே இதற்குத் தகுந்தது என்று அவர்கள் தீர்மானித்தனர். அத்தோடு இது ஒரு தனி மனிதனால் தயாரிக்கப்படாமல், இறையியல் ஞானமுள்ள திறமைவாய்ந்த சீர்திருத்தவாத பியூரிட்டன் போதகர்கள் கூடிய அசெம்பிளியால் பல காலம் ஆராய்ந்து கவனத்தோடு தயாரிக்கப்பட்டிருந்தது. இதைத் தெரிவுசெய்ததற்கு இன்னொரு காரணம், இந்த வினாவிடை வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை போன்றே, அதோடு ஒத்துப்போய் இறையியல் போதனைகளை மிகுந்த கவனத்தோடு தகுந்த வார்த்தைகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டிருந்தது. அதனால் இந்த சுருக்க வினாவிடைப் போதனையின் அநேக பகுதிகளை அவர்கள் மாற்றம் செய்யவேண்டிய அவசியமிருக்கவில்லை. செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை அவர்களே அவர்கள் தயாரித்த வினாவிடை நூலின் அறிமுகத்தில் விளக்கியிருக்கிறார்கள்.
- வெஸ்ட்மின்ஸ்டர் பிரெஸ்பிடீரியன் போதனைகள் கொண்டிருந்த பகுதிகளை பாப்திஸ்து போதனைகளைத் தரும்படியாக மாற்றங்கள் செய்திருக்கிறோம்.
- வெஸ்ட்மின்ஸ்டர் விரிவான வினாவிடைப் போதனையை வழிகாட்டியாகக் கொண்டு அதிமுக்கியமான போதனைகளுக்கு தேவையான மேலதிக விளக்கங்களைத் தந்திருக்கிறோம்.
- தற்காலத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் முக்கிய போதனைகளுக்கு அவசியமான விளக்கங்களைத் தந்திருக்கிறோம். இந்த விளக்கங்கள் வெஸ்ட்மின்ஸ்டர் சுருக்கவினாவிடையில் மேலெழுந்தவாரியாக மட்டுமே தரப்பட்டிருந்தன அல்லது அத்தகைய விளக்கங்கள் இல்லாமல் இருந்தன.
நாம் செய்திருக்கும் முக்கிய மாற்றங்கள் பின்வருவன:
- தற்கால இளைஞர்கள், பிழைகளற்றும் தவறிழைக்காததாகவும் வேதம் இருக்கின்றது என்ற வேதத்தின் தன்மை பற்றிய நம்பிக்கை இல்லாமல் இருக்கமுடியாது. இந்த உண்மையை வலியுறுத்தி விளக்குவதற்காக வினாவிடை 4ஐ இணைத்திருக்கிறோம்.
- படைப்பில் மனிதன் வகிக்கும்படியாக கர்த்தர் தந்திருக்கும் இடத்தை தெளிவாக விளக்குவதற்காக வினாவிடை 18ன் மொழிநடையைப் பின்பற்றி வினாவிடை 13ஐ இணைத்திருக்கிறோம்.
- விரிவான வினாவிடை 45ன் (Larger Catechism) மொழிநடையைப் பின்பற்றி கிறிஸ்துவின் மீட்புப்பணி நிறைவேறுதலுக்காக அவர் எடுத்திருக்கும் அரசபணியை மேலும் தெளிவாக விளக்க வினாவிடை 27ஐ இணைத்திருக்கிறோம்.
- விரிவான வினாவிடை 67ஐத் தழுவி வினாவிடைகள் 30-32ஐ இணைத்திருக்கிறோம். இவை மீட்பின் பலன்களை விசுவாசிகள் அடையச் செய்வதில் பிதாவின் பங்கு என்ன என்பதை விளக்குகின்றன.
- பென்ஜமின் கீச்சின் வினாவிடைப் போதனையில் இருந்து 39-41 வரையிலான வினாவிடைகள், இதில் வினாவிடை 42-43ஆகத் தரப்பட்டிருக்கின்றன. இவை அவிசுவாசிகள் மரணத்தின்போதும் நியாயத்தீர்ப்பின்போதும் அனுபவிக்கப்போகும் பயங்கரங்களை விளக்குகின்றன.
- வினாவிடைகள் 88-89 மாற்றியமைக்கப்பட்டு 92-93 ஆகிய வினாவிடைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. பாவிகளின் மனந்திரும்புதலோடு தொடர்புடைய கீழ்ப்படிவையும், விசுவாசிகள் தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய கீழ்ப்படிவையும் பிரித்துக்காட்டவேண்டியதற்காகவே இவை திருத்தப்பட்டு புதிய வினாவிடைகள் இணைக்கப்பட்டுள்ளன. 92-93 ஆகிய வினாவிடைகளின் மொழிநடை வெஸ்மின்ஸ்டர் விரிவான வினாவிடையைத் தழுவியவை (61, 79, 80).
- வினாவிடைகள் 101-103 பென்ஜமின் கீச்சின் வினாவிடைப் போதனையில் இருந்து எடுக்கப்பட்டு இதில் 98-100 ஆகத் தரப்பட்டிருக்கின்றன. இவை விசுவாசிகள் மட்டுமே ஞானஸ்நானம் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்றும், குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் அளிக்கக்கூடாது என்றும், தெளிப்பு ஞானஸ்நானத்தைவிட முழுக்கு ஞானஸ்நானம் மட்டுமே வேதபூர்வமானது என்றும் விளக்குகின்றன.
- ஜெபத்தைப் பற்றிய 106வது வினாவிடை வெஸ்ட்மின்ஸ்டர் விரிவான விளக்கவுரையின் (178) மொழிநடையைத் தழுவி விளக்கப்பட்டுள்ளது.
இவை தவிர வெஸ்மின்ஸ்டர் சுருக்கவினாவிடையில் இருந்த ஆதார வசனங்களில் சிலவற்றைத் தவிர ஏனைய அத்தனை வசனங்களும் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பொருளை வெளிப்படையாக விளக்கத் தவறியிருக்கும் வசனங்களுக்கு மட்டும் தெளிவானதாகக் காணப்படும் ஆதார வசனங்கள் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த சுருக்கவினாவிடை, பாப்திஸ்து பதிப்பு நிச்சயம் பாப்திஸ்து திருச்சபைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற காரணத்தால்தான் சில வருடங்களுக்கு முன்பு இதைத் தமிழில் மொழிபெயர்த்து சீர்திருத்த வெளியீடுகள் மூலமாக வெளியிட்டிருந்தோம். அதை நம்மினத்தின் சில சீர்திருத்த பாப்திஸ்து சபைகள் பயன்படுத்தி வருவதோடு தனிப்பட்டவர்களும் வாசித்து இறையியல் கற்றுக்கொள்கிறார்கள். தெளிவான வேத இறையியல் போதனைகளைப் பெற்றுக்கொள்ள நம்மினத்துப் போதகர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இது பேருதவியாக இருக்கும். இறையியல் அறிஞரும் போதகருமான சாம் வோல்டிரன் சொல்லுகிறார்,
“நம் காலத்தில் பாப்திஸ்து திருச்சபைகள் மத்தியில் வேதவினாவிடைப் போதனைகளைப் பயன்படுத்துவதும், வினாவிடைப் போதனை அளிக்கும் முறையும் பெருமளவுக்கு இல்லாமல் போயிருக்கிறது. இதன் காரணமாக ஒரு நல்ல வினாவிடைப் போதனையைப் பயன்படுத்தி பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு எங்கு ஆரம்பிப்பது, எதைப்பயன்படுத்துவது என்ற பிரச்சனை இருக்கிறது.”
இந்தப் பிரச்சனையை நிச்சயம் இந்த வினாவிடைப் போதனை நூல் தீர்த்து வைக்கும்.
வினாவிடைப் போதனை அவசியமா?
வேதம் மட்டுமே! என்ற பல்லவியைப் பாடுகிறவர்களை நீங்கள் நிச்சயம் சந்தித்திருப்பீர்கள். மேலெழுந்தவாரியாகப் பார்க்கிறபோது இந்தப் பல்லவி ஆபத்தில்லாததாக, நேர்மையானதாகத் தெரியும். ஆனால், இந்தப் பல்லவியைப் பாடுகிறவர்களுடைய உள்நோக்கமே வேறு. வேதத்தை மட்டுமே பயன்படுத்துவோம் என்று மார் தட்டுகிற இவர்கள் மனித எழுத்துக்களை ஒதுக்கித் தள்ளுகிறார்கள்; அவற்றைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அவற்றால் பயனில்லை என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த அறிவீனத்தால் வேதத்திலும் தேவையான ஞானமில்லாமல் தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலும் ஊழியப்பணிகளிலும் வளர முடியாமல் தேங்கி நிற்கும் தண்ணீர்போல எவருக்கும் பயனற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
வேதம் மட்டுமே! என்ற வாசகம் 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாத காலத்தில் சீர்திருத்தவாதிகளால் பயன்படுத்தப்பட்டது. அதற்குக் காரணம் கத்தோலிக்க மதத்திற்கு எதிராகப் போர்க்கொடி தொடுத்த சீர்திருத்தவாதிகள் வேதத்தின் அடிப்படையில் திருச்சபை நிறுவி வேதத்தின் அடிப்படையில் கிறிஸ்தவத்திற்கு மறுபடியும் சமுதாயத்தில் புத்துயிர் கொடுக்கப் பாடுபட்டதுதான். கத்தோலிக்க மதம் வேதத்தை உதறித்தள்ளி மனித சிந்தனைகளின் அடிப்படையில் மட்டும் தன் மதத்தை அன்று பரப்பி வந்தது. கர்த்தரின் வேதம் முழுமையாக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த காலம் அது. சீர்திருத்தவாதிகள் கர்த்தரின் துணையோடு வேதத்தை மனிதர்கள் வாசித்துப் பயன்பெறும் விதத்தில் உலக மொழிகளில் மொழிபெயர்த்து ஆத்துமாக்களின் உயிர்மீட்புக்கு வழிஏற்படுத்தினார்கள்.
சீர்திருத்தவாதிகள், வேதம் மட்டுமே! என்று அதிரடியாகப் போதித்துப் பிரசங்கித்தபோது, மனித எழுத்துக்களுக்கு மதிப்புக்கொடுக்கக்கூடாது என்ற அர்த்தத்தில் அதைப் பயன்படுத்தவில்லை. மனித எழுத்துக்களால் அநேக பயன்கள் இருந்தபோதும், அவை வாழ்க்கைக்கு அவசியமாக இருந்தபோதும் வேதத்தின் அடிப்படையில், வேதத்தைப் பின்பற்றி விசுவாசத்தோடு எழுதப்பட்டவைகள் மட்டுமே ஆத்துமாக்களுக்குப் பயன்தருபவை என்று நம்பினார்கள். வேதம் எப்போதும் மனித எழுத்துக்களுக்கெல்லாம் மேலான இடத்தில் இருக்கவேண்டும் என்று அவர்கள் விசுவாசித்தார்கள். வேதத்தை அந்தளவுக்கு நம்பி உயர்வான இடத்தில் வைத்திருந்த சீர்திருத்தவாதிகள் வேதத்தை விளக்கி ஆத்துமாக்களுக்குத் துணைசெய்வதற்காக அநேக நூல்களை எழுதினார்கள். அவை இன்றும் அச்சிலிருந்து நமக்குப் பேருதவி புரிந்து வருகின்றன.
இன்றைக்கு நம்மத்தியில் மனித எழுத்துக்களுக்கு மதிப்புக்கொடுக்காமலும் அவற்றைப் பயன்படுத்தாமலும் இருக்கிறவர்களே கிறிஸ்தவ விசுவாசத்திற்கு பேராபத்தாக முளைத்திருக்கிறார்கள். இவர்கள் அறைகுறை ஞானத்தோடு, வேதத்தைப் போதிக்கவும் விளக்கவும் திறமை இல்லாமல் ஆத்துமாக்களுக்கு உப்புச்சப்பற்ற கதைகளையும், சொந்த அனுபவங்களையும் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள். இத்தகையவர்கள் உருவாகி வளர்ந்ததாலேயே 19ம் நூற்றாண்டிலிருந்து விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் திருச்சபைகளில் பயன்படுத்தும் வழக்கம் குறைவடைந்து போலித்தனமான ஊழியங்கள் எங்கும் பெருக ஆரம்பித்தன. சத்தியத்தில் உறுதியாக இருந்து எதிர்கால சந்ததி அதில் நிலைத்திருக்க உதவுகின்ற வினாவிடைப் போதனைகளை இன்று அநேக திருச்சபைகள் நம்மத்தியில் பயன்படுத்தாமல் இருந்துவருவதற்கு இதுவே காரணம்.
இந்த ஆக்கத்தில் நான், வினாவிடைப் போதனைகளைத் திருச்சபைகளிலும், சொந்த வாழ்க்கையிலும் பயன்படுத்துவது பாரம்பரியத்துக்கு தூபம் போடும் செயல் மட்டுமே, அது வேதபூர்வமான வழிமுறை அல்ல என்று கூறுகிறவர்களுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். வினாவிடைப் போதனைகளைப் பயன்படுத்துவதை எதிர்க்கும் இவர்கள், பாப்திஸ்துகள் ஏன் வினாவிடைப் போதனையைப் பயன்படுத்தவேண்டும், அது ரோமன் கத்தோலிக்க முறையல்லவா, லூத்தரன் பிரிவைச் சார்ந்தவர்களும், சீர்திருத்த கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்களுந்தான் அவற்றைப் பயன்படுத்துவார்கள்; பாப்திஸ்துகள் வேதவிரும்பிகள், வேதத்தை மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று கூக்குரலிட்டு வினாவிடைப் போதனைகளின் பயன்பாட்டிற்கு எதிர்ப்புக் காட்டுகிறார்கள். இவர்களுக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம்.
- வினாவிடைப் போதனைகளை வேதம் நிராகரிக்கவில்லை.
உண்மையில் அத்தகைய போதனையளிக்கும் முறையை பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் நாம் காண்கிறோம். அத்தகைய போதனையளிக்கும் முறையின் அவசியத்தை நாம் வேதத்தின் அடிப்படையிலேயே வலியுறுத்துகிறோம். தேவாலயத்தில் போதகர்களோடு (மாற்கு 2) பாலகனான இயேசு கேள்விகள் கேட்டும், கேள்விகளுக்கு பதிலளித்தும் போதித்திருப்பதை வேதத்தில் நாம் காண்கிறோம். பழைய ஏற்பாட்டில் இத்தகைய முறை பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பரவலாகக் காண்கிறோம். வினாவிடைப் போதனை சத்தியத்தைத் தெளிவாகவும், சுருக்கமாகவும் விளக்குகின்ற போதனை முறை. அது மனதிலிருத்திக் கொள்ளுவதற்கு இலகுவானதும் பயனுள்ளதுமான முறை. கர்த்தருடைய பத்துக்கட்டளைகள் அந்தவிதமாகவே சுருக்கமாகவும் தெளிவாகவும் (யாத்திராகமம் 20) தரப்பட்டுள்ளன. இந்த முறையில் எளிதாக மனதிலிருத்திக் கொள்ளும் வகையில் இயேசு, மாதிரி ஜெபத்தைப் புதிய ஏற்பாட்டில் நமக்குத் தந்திருக்கிறார். பவுல் அப்போஸ்தலனும் தன்னுடைய நிருபங்களில் வேத சத்தியங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் பல இடங்களில் தந்திருக்கிறார். வினாவிடைப் போதனையளிக்கும் முறையில் பல்வேறு உதாரணங்களை வேதத்தில் நாம் காண்கிறோம். வெளிப்படையாகவும், உள்ளடக்கமாகவும் இம்முறைக்கான ஆதாரத்தை வேதம் நமக்குத் தருகிறது. வேதம் இதைப் போதித்திருப்பதனாலேயே சீர்திருத்தவாதிகள் இந்த முறையில் ஆர்வம்காட்டி 16ம் நூற்றாண்டில் வினாவிடைப் போதனைகளை எழுதிப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் போதனை முறையை வேதத்தில் காணமுடியாது என்கிற வாதம் மிகவும் முட்டாள்தனமானது.
பழைய ஏற்பாட்டில் எஸ்றா நியாயப்பிரமாணத்தை மக்களுக்கு முன்பாக வாசித்ததாக நெகேமியா 8:3ல் வாசிக்கிறோம்.
நெகேமியா 8:3
தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
வாசித்ததோடு நின்றுவிடாமல் எஸ்றாவோடு இருந்தவர்களும், லேவியரும் நியாயப்பிரமாணத்திற்கு விளக்கங்கொடுத்ததாகவும் 8:7-8ல் வாசிக்கிறோம்.
நெகேமியா 8:7-8
7 யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா, என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள். ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள். 8 அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.
இவர்கள் நியாயப்பிரமாணத்தை வாசித்தது மட்டுமல்லாமல் அதற்கு அர்த்தஞ்சொல்லி விளக்கமளித்தார்கள் என்று வாசிக்கிறோம். வேதத்தை வாசித்ததோடு அதற்கு தங்களுடைய சொந்தநடையில் அவர்கள் விளக்கமளித்திருப்பது எதைக் காட்டுகிறது? வேதத்திற்கு சரியான முறையில் வேதபோதகர்கள் சிந்தித்து தெளிவாக விளக்கமளிப்பதைக் கர்த்தர் எதிர்பார்த்திருப்பதை இந்தப் பகுதி சுட்டுகிறது. இதனால்தான் இன்று பிரசங்கிகள் வேதத்தை சபையில் வாசிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அதை ஆராய்ந்து சிந்தித்து அதற்கு தங்கள் சொந்தநடையில் விளக்கமளித்துப் பிரசங்கமளிக்கிறார்கள். இதைத்தான் வினாவிடைப் போதனை நூல்கள் மூலமும் செய்கிறோம். சத்தியத்தைத் தெளிவாகவும், சுருக்கமாகவும் தொகுத்து விளக்குவதே வினாவிடைப் போதனை.
மேலும் சில உதாரணங்களைக் கவனிப்போம். எபேசியர் 4:4-6ஐக் கவனியுங்கள்.
4 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; 5 ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், 6 எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.
இந்தப் பகுதியில் பவுல் கர்த்தரைப்பற்றிய சுருக்கமானதும் தெளிவானதுமான விசுவாச அறிக்கையைத் தருவதைக் காண்கிறோம். இதேபோன்ற சுருக்கமான சத்திய விளக்கங்கள் புதிய ஏற்பாட்டில் இன்னும் அநேக பகுதிகளில் காணப்படுகின்றன. இதைத்தான் வினாவிடைப் போதனையும் செய்கிறது. சத்தியத்தை அது தொகுத்து சுருக்கமாக விளக்குகிறது. கிறிஸ்தவ விசுவாசத்தைப்பற்றிய இத்தகைய தெளிவான விளக்கங்கள் அவசியமானவை. அவை நமக்கு சத்தியத்தில் உறுதியாக இருக்கவும், ஆறுதல் அளிக்கவும், அசத்தியத்தின் ஆபத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் உதவுகின்றன.
1 தீமோத்தேயு 1:15-17ல் இன்னுமொரு உதாரணத்தைக் காண்கிறோம்.
15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். 16 அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன். 17 நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
இந்தப் பகுதியும் முக்கியமான இறையியல் விளக்கத்தை சுருக்கமாகத் தருகிறது. இத்தகைய சத்திய விளக்கங்களைத்தான் விசுவாச அறிக்கைகளும் வினாவிடைப் போதனை நூல்களும் அளிக்கின்றன.
மேலும் சில பகுதிகளையும் உதாரணங்காட்டலாம்.
1 தீமோத்தேயு 3:15-16
15 தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும்ஆதாரமுமாயிருக்கிறது. 16 அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
2 தீமோத்தேயு 1:9-10
9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சியாமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். 10 நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.
2 தீமோத்தேயு 2:11-13
11 இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; 12 அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; 13 நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.
தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய நிருபங்களில் நாம் காணும் ‘இந்த வார்த்தை உண்மையுள்ளது’ என்ற வார்த்தைப் பிரயோகம் விசுவாச அறிக்கை, வினாவிடைப் போதனை போன்ற உறுதியான விளக்கங்களை அளிக்கும்போது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதைப் பவுலின் எழுத்துக்களில் அதிகம் காண்கிறோம். சத்தியத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் வேளையிலும், அதை உறுதியாகவும் தெளிவாகவும் விளக்கவேண்டிய சந்தர்ப்பங்களிலும் பவுல் இந்த வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தி சத்தியத்தை விளக்கியிருப்பதைக் காண்கிறோம். அதேபோல் வினாவிடைப் போதனை நூல் அசத்தியத்திற்கெதிரான சத்திய பாதுகாப்பாலனாக நமக்கு உதவுகின்றது. வரலாற்று சீர்திருத்தவாத கிறிஸ்தவம் அதன் காரணமாகவே வினாவிடைப் போதனை நூல்களை எப்போதும் பயன்படுத்தி வந்திருக்கின்றது. இன்று கிறிஸ்தவ உலகில் பரவலாக நாம் காண்கின்ற, தங்களுடைய விசுவாசத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கின்ற இறையியல் பச்சோந்திகளின் பிடியில் இருந்து திருச்சபை காப்பாற்றப்பட வினாவிடைப் போதனை நூல் பெரும்பயனளிக்கும். அதை விசுவாசத்தோடு நடைமுறைக்கேற்றவகையில் பயன்படுத்தும் சபை இலகுவாக அசத்தியத்தை நாடாது.
- வினாவிடைப் போதனை முறையைப் பயன்படுத்துவது வேதத்தோடு எதையும் சேர்க்கின்ற முயற்சியல்ல.
அதையே ரோமன் கத்தோலிக்க மதம் செய்தது; தொடர்ந்தும் செய்துவருகிறது. மாறாக, சீர்திருத்தவாத கிறிஸ்தவர்கள் வேதத்தில் உள்ளதை மட்டுமே தெளிவாக விளக்குவதற்காகவும், மனதிலிருத்திக் கொள்ளுவதற்காகவும் இம்முறையைப் பயன்படுத்தினார்கள். கர்த்தர் மனிதனுக்கு சிந்திப்பதற்காகவும், ஆராய்வதற்காகவும் மூளையைத் தந்திருக்கிறார். நாம் நம்முடைய மூளையைப் பயன்படுத்தி சிந்தித்து ஆராய்ந்து உண்மைகளை முறையாக விளங்கிக்கொள்ள வேண்டும். கர்த்தரின் குணாதிசயங்களை நாம் விசுவாசத்தை அடைந்திருப்பதன் மூலம் பிரதிபலிப்பதால் அவரைப்போல சிந்தித்து முடிவெடுக்கிறவர்களாக நாம் இருக்கவேண்டும். நம்முடைய அறிவைப் பயன்படுத்தி சத்தியங்களைப் படித்து ஆராய்ந்து முறையாக விளங்கி விளக்கவேண்டியவர்களாக இருக்கவேண்டும். அந்தவிதத்தில் சத்தியங்கள் வேதத்தில் ஒரே இடத்தில் முறையாக தொகுத்து நமக்குக் கொடுக்கப்படவில்லை. அவற்றை ஆராய்ந்து முறைப்படுத்தி தொகுக்கவேண்டியது நம்முடைய பணி. கர்த்தரின் வேதம் போதிக்கும் இறையியல் அந்தவிதத்தில் தொகுக்கப்பட வேண்டியது இறையியலுக்கு மிக மிக அவசியம். அதன் காரணமாகவே முறைப்படுத்தப்பட்ட இறையியலை நாம் பயன்படுத்துகிறோம். விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனை நூல்களும் இறையியலை முறைப்படுத்தி நமக்குத் தருகின்றன. இவற்றை நிராகரித்து வாழ்கிறவர்கள் சத்தியம் அறியாதவர்களாக, வேதவசனங்களை சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பயன்படுத்துகிறவர்களாகவே எப்போதும் இருப்பார்கள். அத்தகைய நிலைமையையே நம் இனத்தில் இப்போது பரவலாகக் காண்கிறோம். இவர்களே அநேகமான வேதத்தொடர்பில்லாத சத்தியமற்ற போதனைகள் உருவாவதற்குக் காரணமாக இருக்கிறார்கள்.
வேதத்தை விளக்க வேண்டியது அவசியமா? – A.W. பின்க்

A.W. பின்க்
படைப்புயிர்களில் மனிதனே கேடான காரியங்களுக்குப் பேர்போனவன். இந்த உண்மை வேறு எந்தவிஷயத்தையும்விட, இந்நூலில் நாம் கையாளும் விஷயத்தைப்பற்றி பலரும் கொண்டிருக்கும் எண்ணப்பாட்டிலிருந்து மிகத்தெளிவாக அறியலாம். பரிசுத்த வேதாகமம், யாரும் விளக்க வேண்டிய அவசியமில்லாதளவுக்கு, எளிமையான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்று ஆதாரங்களுடன் சிலர் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக, பெரும் கூட்டத்தினர் எழும்பி, தங்களுடைய கருத்துக்கு அவர்களை இணங்கவைக்க முற்பட்டனர். அவர்களுடைய கருத்து என்னவென்றால், பரிசுத்த வேதாகமத்தின் உள்ளடக்கம் சாதாரண மனிதர்களுடைய அறிவினால் புரிந்துகொள்ள முடியாதளவுக்கு உயர்ந்திருப்பதாகவும், அதன் போதனைகள் ஆழமானதாகவும், மிகவும் உயர்ந்ததாகவும், அதன் மொழிநடை எளிதில் புலப்படாதாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் கொண்டதாகவும் இருக்கிறது என்பதாகும். சாதாரண மனிதர்கள் தங்களுடைய சுய முயற்சியினால் அதை விளங்கிக்கொள்ள முடியாது என்றும், பரிசுத்த வேதத்தின் போதனைகளைக் குறித்த விஷயங்களில் “பரிசுத்த தாய் சபையின்” முடிவுக்கு அடிப்பணிவதே ஞானமான செய்கையாகும் என்றார்கள். ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரையில் இத்திருச்சபையே, கடவுளுடைய வார்த்தையை விளக்குவதற்கு தெய்வீக அதிகாரம் கொண்டதும், தகுதியானதுமாக இருக்கிறது. ஆகவே ரோமன் கத்தோலிக்க போப்புகள், தேவனுடைய வார்த்தை பாமர மக்களிடம் செல்லாதபடி தடுத்து நிறுத்திவைத்து, தங்களுடைய சொந்த தத்துவங்களையும், மூடநம்பிக்கைகளையும் அதன் மீது திணித்திருந்தனர். இதைப் பெரும்பாலுமான பாமர மக்களும் ஏற்றுக்கொண்டிருந்தனர். ஏனென்றால், வேதத்தை ஆராயவேண்டிய கடமையிலிருந்து, இது அவர்களை விடுவிப்பதினால் அதில் அவர்கள் சமாதானம் கொண்டிருந்தனர். ரோமன் கத்தோலிக்கர்களின் இப்போதனைக்கு எதிராக எழும்பியவர்களுக்கும் பெருமளவிலான வரவேற்பு இருக்கவில்லை, ஏனென்றால், சுயமாக வேதத்தைப் படித்து ஆராய்வதற்கு மிகவும் சோம்பலுள்ளவர்களாகவே பொதுவாக மக்கள் இருந்தனர். கத்தோலிக்கர்கள் சொல்லியதைக் கேட்டு, நம்பினால் போதும் என்று இருந்துவிட்டனர்.
பரிசுத்த வேதாகமம், தன்னில் மறைபொருள் போதனைகளைக் கொண்டிருப்பதனால், இதைப் பாமர மக்கள் கையாள முடியாத ஓர் ஆபத்தான புத்தகம் என்ற தன்னுடைய தீய கருத்தை நிலைநாட்டுவதற்கு, ரோமன் கத்தோலிக்கம் முதன்மையாக பயன்படுத்தும் வேதப்பகுதி 2 பேதுரு 3:15-16. அதில் பரிசுத்த ஆவியானவரே பேதுருவைக் கொண்டு சொல்லியிருக்கிறார், தனக்குக் கொடுக்கப்பட்ட ஞானத்தினால் அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய நிருபங்களில் சொல்லியிருக்கின்ற “சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்” என்று. ஆனால் இது குறித்து விளக்கும் ஜோன் கல்வின் விளக்கியிருக்கிறார்,
“அப்போஸ்தலனாகிய பவுலின் நிருபங்களில் சில, நாம் விளங்கிக்கொள்ளுவதற்கு கடினமாக இருக்கிறது என்பதற்காக அவைகளை நாம் வாசிக்காமல் தவிர்த்துவிட வேண்டும் என்பதல்ல. மாறாக, அமைதலோடு கற்றுக்கொள்ளக் கூடிய மனப்பாங்கை, நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதையே இது எடுத்துரைக்கிறது”.
அத்தோடு, இவ்வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளையும் கவனியுங்கள். “சில காரியங்கள்” என்று சொல்லியிருக்கிறாரே தவிர “அநேக காரியங்கள்” என்று இல்லை. “அரிதாயிருக்கிறது” என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர “புரிந்துகொள்ள முடியாதிருக்கிறது” என்று இல்லை. மேலும், தெளிவற்ற தன்மை அவைகளில் இல்லை, நம்மில்தான் இருக்கிறது. நம்முடைய சீர்குலைந்த தன்மையின் காரணமாக, இவைகளை அறிந்துகொள்ளுவதற்கு தேவையான கடவுள் குறிப்பிட்டுள்ள பரிசுத்தமான தேவைகளை நாம் நிராகரிக்கிறோம். நம்முடைய இருதயத்திலுள்ள பெருமையின் காரணமாக, கடவுளிடமிருந்து வரும் பரிசுத்த ஒளியூட்டலை நாடாமல் நாம் வெறுத்தொதுக்குகிறோம். “கல்லாதவர்கள்” என்று இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது “கல்வி கல்லாதவர்களை” அல்ல, கடவுளைக் கற்றறியாதவர்களை; “உறுதியில்லாதவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளது நம்பிக்கையில் உறுதியில்லாதவர்களை. அதாவது, காற்றுத் திசைகாட்டும் கருவிபோல், தன்மீது வீசும் எந்தவிதமான போதனையின் பக்கமாகவும் திரும்புகிறவர்களையே இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.
மறுபுறம், இவற்றிற்கு எதிரான மற்றொரு உச்சத்திற்கு, ஆத்தமாக்களை தவறாக வழிநடத்துகிறவர்களும் இருக்கிறார்கள். அவர்கள், வேதம் எளிய ஆத்துமாக்களுக்காக எழுதப்பட்டிருப்பதனால், வேதத்தை விளக்கவேண்டிய அவசியமே இல்லை என்பார்கள். வேதத்தை வாசிக்கும்போது அவரவர் என்ன பொருளை உணருகிறார்களோ அதுவே அதன் பொருள் என்கிறார்கள். வேதம் விசுவாசிக்கப்பட வேண்டியதே தவிர, விளக்கப்பட வேண்டியதில்லை என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால் விசுவாசிப்பதையும், விளக்குவதையும் ஒன்றுக்கொண்று எதிராகக் காட்டுவது தவறானது. இவை இரண்டுமே அவசியமானவை. கடவுள் குருட்டுத்தனமான நம்பிக்கையை நம்மிடம் கேட்கவில்லை. மாறாக, அறிவார்ந்த விசுவாசத்தையே கேட்கிறார். இதற்கு தவிர்க்கமுடியாத மூன்று காரியங்கள் அவசியம்:
- கடவுளுடைய வார்த்தையை வாசிக்க வேண்டும் (கேட்க வேண்டும்)
- கடவுளுடைய வார்த்தையை விளங்கிக்கொள்ள வேண்டும்
- கடவுளுடைய வார்த்தைக்கேற்ப நடக்க வேண்டும்
கிறிஸ்துவே அதற்கான புரிதலைத் தருகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. இருந்தபோதிலும் அவரே சொல்லியிருக்கிறார் “வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்” (மத்தேயு 24:15) என்று, நாம் வாசிக்கிறவைகளைப் பற்றி நம்முடைய மனதில் சிந்திக்க வேண்டும். நாம் வாசிப்பதை அல்லது கேட்பதைப்பற்றிய ஒரு குறிப்பிட்ட அளவிலான புரிதல் அவசியம் என்பதை நம்முடைய கர்த்தர் போதித்த விதைக்கிறவன் உவமையிலிருந்து நாம் அறியலாம்.
மத்தேயு 13:19, 23
19 ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.
23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்”.
நாம் வாசிக்கிறவைகளை விளங்கிக்கொள்ளுவதற்கு, நாம் கடினமான முயற்சிகளையும் செய்ய வேண்டும், ஏனென்றால், விளங்காத ஒன்றை வாசிப்பதனால் நமக்கு என்ன பயன் இருக்கிறது?
இன்னும் சிலர், நாம் வாசிக்கிறவைகளின் பொருளை அறிய, நமக்கான ஒரே விளக்கம் கூறுபவர், அதைச் சரியாக செய்துமுடிக்கத் தகுதியானவர், பரிசுத்த ஆவியானவர் மட்டுமே என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இக்கருத்துக்கு ஆதாரமாக, 1 யோவான் 2:20, 27 வசனங்களைக் குறிப்பிடுகிறார்கள்.
1 யோவான் 2:20, 27
20 நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.
27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக”.
இவ்வசனங்களைப் பயன்படுத்தி அவர்கள் சொல்லுகிறார்கள், வேதத்தை எனக்குப் போதிக்க வேறு யாரும் தேவையில்லை, பரிசுத்த ஆவியானவர் மட்டுமே போதும். அதுவே அவருக்கு மகிமையாகவும் இருக்கும் என்று. இது சரியா? மனிதர்கள் எந்தவொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்த்து ஏற்கவேண்டும் என்பதுதான் பொதுவான நியதி. ஆவிக்குரிய விஷயங்கள் என்பதற்காக கேள்விப்படும் எதையும் அப்படியே நாம் எடுத்துக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில், அதாவது வேறு யாரும் எனக்குத் தேவையில்லை, பரிசுத்த ஆவியானவரே எனக்குப் போதிப்பார் என்று சொல்லுவது, சரியா என்பதற்கான நம்முடைய பதில், “இல்லை” என்பதுதான். இல்லாவிட்டால், கிறிஸ்து, “பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும் . . . மேய்ப்பர்களையும் போதகர்களையும்” (எபேசியர் 4:12, 13) தந்தது மிதமிஞ்சிய செயலாகப் போய்விடும். கர்த்தரை நம்புவதிலிருந்து விலகி அவரைப் பரீட்சைப் பார்ப்பதற்கும், அவரை விசுவாசிப்பதிலிருந்து விலகி ஊகத்திற்கு இடமளிக்கும் நிலைக்கும் சென்றுவிடுவதற்கான வாய்ப்பு தொலைவில் இல்லை என்பதை எப்போதும் நாம் மனதில் வைத்திருக்க வேண்டும் (மத்தேயு 4:6, 7). கடவுள் தம்முடைய படைப்புயிர்களின் தேவைகளை வழங்குவதில், அவர் கையாளுகிற பொதுவான முறைகளை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர் எதையும் நேரடியாகக் கொடுப்பதில்லை, மனித பிரதிநிதிகளையே அதற்காக அவர் பயன்படுத்துகிறார். பொதுவான விஷயங்களைப் போலவே ஆவிக்குரிய விஷயத்திலும் இம்முறையையே கையாளுகிறார். வரம்பெற்ற போதகர்களைத் தம்முடைய மக்களுக்கு வழங்குவதில் கர்த்தர் பிரியப்படுகிறார். ஆகவே ஆணவத்துடன் அவர்களை நிராகரிப்பதைவிட்டு, அவர்களுடைய போதனையைச் சோதித்தறிந்து (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11), அவர்கள் எந்தவகையில் நமக்கு உதவ முடியும் என்பதை அறிந்து அவர்களை நன்றியறிதலோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஓர் இளம் விசுவாசி, தான் கடவுளையே சார்ந்திருக்கவும், பரத்திலிருந்து வருகிற ஞானத்தைப் பெறுவதற்கும், குறிப்பாக அவருடைய பரிசுத்த வார்த்தைகளைப் படிக்கிறபோதும் தியானிக்கிறபோதும், தொடர்ந்து கர்த்தரை நாடி ஓடவேண்டிய அவசியத்தை உணர்வதிலிருந்து ஊக்கமிழக்கச் செய்யும் எந்த எழுத்துக்களையும் கிட்டவும் வர அனுமதிக்கக்கூடாது. எனினும், கடவுள் நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறதில் எப்போதும் குறிப்பிட்ட முறையைக் கையாளுவதில்லை என்பதை விசுவாசிகள் மனதில் வைத்திருக்க வேண்டும். நம்முடைய மனதை நேரடியாகவும், உடனடியாகவும் ஒளிரச் செய்வது அவருக்குப் பிரியமானதே, ஆனால் பெரும்பாலும் அவர் அப்படிச் செய்வதில்லை. மற்ற மனிதர்களைக் கருவிகளாக பயன்படுத்தியே இதைச் செய்கிறார். அதன்மூலம் அவர் நம்மில் பெருமை எழாமல் இருக்கச் செய்கிறதோடு, தம்முடைய சொந்த நிறுவனமான சபை மதிப்புறவும் செய்கிறார். “தம்முடைய மந்தையை மேய்ப்பதற்கும்” (1 பேதுரு 5:2), அதை “நடத்துவதற்கும்” (எபிரெயர் 13:7) அவர்தாமே அதற்கான நபர்களை நியமித்து அவர்களை தகுதியுள்ளவர்களாக்கியிருக்கிறார். பேதைகளும் தவறிழைக்க முடியாதபடிதான் (ஏசாயா 35:8) கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை எழுதியிருக்கிறார் என்பது ஒருவிதத்தில் உண்மைதான்; இருப்பினும், அவற்றில் ஆராய்ந்து அறியவேண்டிய ஆழமான காரியங்களும் இருக்கத்தான் செய்கின்றன (1 கொரிந்தியர் 2:10); குழந்தைகளைப் போன்றவர்களுக்கு அதில் பாலும் இருக்கிறது, முதிர்ச்சியானவர்களுக்கான திடமான உணவும் அதில் இருக்கிறது (எபிரெயர் 5:13,14).
வேதத்தை விளக்கவேண்டியதன் அவசியத்தைக் குறித்து இதுவரை பொதுவான விஷயங்களைத் தெரிவித்தேன், இப்போது நேரடியான சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன். முதலாவது, முரண்பாடுகள் போன்று தெரியக்கூடிய பகுதிகள் அதில் இருப்பதனால், வேதம் விளக்கப்பட வேண்டும். ஆதியாகமம் 22:1, 2, “தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: . . . உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை . . . தகனபலியாகப் பலியிடு என்றார்.” இப்போது, யாக்கோபு 1:13ஐ வாசித்துப் பாருங்கள், “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” இவ்விரு வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவதைப்போல் தெரிகின்றன. ஆனால் அப்படி ஒருபோதும் இருக்க முடியாது என்று ஒரு விசுவாசி நன்கு அறிவான். ஒருவேளை அவனால் அதை நிரூபிக்க முடியாமல் போகலாம். ஆகவேதான் இவ்வசனங்களின் பொருளை ஆராய்ந்தறிய வேண்டியது அவசியம். இது மிகவும் கடினமானதும் அல்ல. இவ்விரு வசனங்களிலும் “சோதனை” என்ற வார்த்தை ஒரேவிதத்தில் பயன்படுத்தப்படவில்லை. “சோதனை” என்ற வார்த்தை முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை ஆகிய இரு அர்த்தங்களைத் தன்னில் கொண்டுள்ளது. முதல் நிலையில், ஒன்றின் உண்மைத்தன்மையை நிரூபிப்பதையும் பரிசோதிப்பதையும் குறிக்கிறது. இரண்டாம் நிலையில், தீமை செய்வதற்காக ஒன்றை வசீகரித்து, கவர்ந்திழுப்பதைக் குறிக்கிறது. எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லாமல், ஆதியாகமம் 22:1ல் “சோதனை” என்ற வார்த்தை முதல் நிலையில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. ஆபிரகாம் தன் மகனைப் பலியிடுவதற்கு போனபோது, கர்த்தர் இடைமறித்து அதைத்தடுக்காமல் இருந்திருந்தாலும், ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிட்டிருந்தாலும், ஆபிரகாம் பாவம் செய்ததாகாது. ஏனென்றால், கர்த்தரே அதைச் செய்யும்படி ஆபிரகாமுக்குக் கட்டளையிட்டிருந்தார்.
கர்த்தர் ஆபிரகாமைச் சோதித்தபோது, பிசாசு செய்கிறதைப்போல் அவரை பாவத்தில் விழத்தள்ளுவதற்காக அதைச் செய்யவில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். மாறாக, கர்த்தர்மீது முற்பிதாக்களுக்கு இருந்த பயத்தையும், விசுவாசத்தையும், அன்பையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவே இந்தச் சோதனையைக் கர்த்தர் செய்தார். சாத்தான் சோதிக்கிறபோது, நம்மைக் கீழேவிழத்தள்ளுவதையே நோக்கமாகக் கொண்டு, நம்மை வசீகரிக்கக் கூடியவைகளை நம்முன் வைப்பான். ஆனால் கடவுள் சோதிக்கிறபோது, நம்முடைய நலனை மனதில் கொண்டே அதைச்செய்வார். எந்தவொரு பரீட்சையும் சோதனையே, அது நம்முடைய இருதயத்தின் நிலையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. கிறிஸ்து “எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிறார்” (எபிரெயர் 4:15) என்கிறது வேதம். அவருக்கு உண்டான சோதனை மெய்யானது, இருப்பினும் நம்மில் நடப்பதைப்போல் அவரில் நன்மைக்கும் தீமைக்கும் இடையே போராட்டம் இருக்கவில்லை. அவருடைய உள்ளார்ந்த பரிசுத்தத்தன்மை சாத்தானுடைய கேடான ஆலோசனைகளைத் தண்ணீர் ஊற்றப்பட்ட நெருப்பைப்போல் இல்லாமலாக்கியது. நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படுகிறபோது, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். ஏனென்றால், அவைகள் நம்முடைய இச்சைகளை அழிக்கவும், நம்முடைய கீழ்ப்படிவுக்கான பரீட்சையாகவும், கடவுளுடைய கிருபை நம்மில் இருப்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் பாவத்திற்கு ஏதுவாக அவை நம்மைத் தூண்டும்போது நாம் சந்தோஷப்படும்படி ஆண்டவர் சொல்லவில்லை.
மற்றொரு உதாரணம், “துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்” (நீதிமொழிகள் 15:29) என்பது. எனினும், அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:27ல் “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே” என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவிசுவாச மக்களைப் பார்த்தே பவுல் இவ்வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார். பார்ப்பதற்கு இவ்விரு சொற்றொடர்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவதுபோல் தெரிகின்றன. இவற்றைச் சரியாக விளக்காதவரை, இவை இப்படித்தான் தென்படும். கடவுள் எவ்விதத்தில் துன்மார்க்கருக்கு தூரமாகவும், எவ்விதத்தில் தூரமில்லாமலும் இருக்கிறார் என்று நாம் ஆராய்ந்தறிய வேண்டும். இப்படிச் செய்வதே வேதத்தை விளக்குவதாகும். கடவுளுடைய வல்லமையான அல்லது பராமரிப்பின் பிரசன்னத்திற்கும், அவருடைய மனவிருப்ப பிரசன்னத்திற்கு இடையே இருக்கிற வேறுபாட்டை நாம் கண்டறிய வேண்டும். கடவுளுடைய ஆவிக்குரிய பிரச்சன்னத்தின்படி அல்லது எங்கும் நிறைந்திருக்கும் தன்மையின்படி, அவர் எல்லாப் படைப்புயிர்களுக்கும் மிகவும் அருகில்தான் இருக்கிறார் (“நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர்” எரேமியா 23:24), அவர்களுடைய உயிரைக் காத்து, தம்முடைய பராமரிப்பின் இரக்கங்களை அளித்து வருகிறார். ஆனால் துன்மார்க்கர், கர்த்தரைவிட்டுத் தூரமாய் இருக்கிறார்கள் (சங்கீதம் 73:27). அவர்கள் கர்த்தரை நோக்கி “எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்” (யோபு 21:14) என்று தங்களுடைய இருதயத்தில் சொல்லுகிறார்கள். ஆகவே அவருடைய கிருபையுள்ள பிரசன்னம் அவர்களைவிட்டுத் தூரமாக இருக்கிறது, அவர் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறதில்லை, அவர்களோடு எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளுகிறதில்லை, அவர்களுடைய ஜெபங்களைக் கேட்கிறதில்லை (“மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்” சங்கீதம் 138:6), அவர்களுடைய தேவையில் அவர்களுக்கு உதவுகிறதில்லை, “சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டுப் . . . போங்கள்” (மத்தேயு 25:41) என்கிறார். நீதிமான்களுடன் தம்முடைய கிருபையினால் நெருங்கியிருக்கிறார் (சங்கீதம் 34:18; 145:18).
மற்றொரு உதாரணம், “என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது” (யோவான் 5:31). “என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது” (யோவான் 8:14) என்ற வசனங்கள். மேலெழுந்தவாரியாக இவற்றைப் பார்த்தால், இவை இரண்டும் முரண்படுவதுபோல் தெரியும். சரியாக விளக்கமளித்தால், இவற்றிற்கிடையிலும் எந்தவிதமான முரண்பாடும் இல்லை என்பதை உணரலாம். யோவான் 5:17-31 வசனங்களில், இயேசு பிதாவோடு தனக்கிருக்கும் ஏழு சமத்துவங்களைக் குறிப்பிடுகிறார். அதாவது, பிதாவின் கிரியைகள் தொடங்கி, அவருடைய சித்தம்வரையுள்ளவைகளைக் குறிப்பிடுகிறார். 19வது வசனத்தில், பிதாவும் குமாரனும் ஒன்றாயிருப்பதனால், பிதாவுக்கு முரணாக இயேசு எதையும் செய்வதில்லை (30வது வசனத்திலும் இதைக் காணலாம்) என்றிருக்கிறது. அதேபோல், இயேசு பிதாவைவிட்டு தன்னிச்சையாக தம்மைப்பற்றி சாட்சியிடுகிறதுமில்லை, அப்படிச் செய்வது பிதாவின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படியாமல் போவதாகும். எனவே, அவருடைய சாட்சி பிதாவோடும் (வசனம் 37), வேதத்தோடும் (வசனம் 39) இசைந்திருந்து, அவருடைய முழுமையான தெய்வீகத்தைக் குறித்து சாட்சியிடுகிறது. ஆனால் யோவான் 8:13-14ல், இயேசு, தம்முடைய சாட்சியைத் தவறானது என்று சொன்ன பரிசேயர்களுக்கு நேரடியாக பதிலளிக்கிறார். பரிசேயர்கள் சொல்லியதை, இயேசு உறுதியாக மறுதலித்து, பிதாவின் சாட்சியத்தை மறுபடியும் எடுத்துரைக்கிறார் (வசனம் 18). மறுபடியும் அவர் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள், “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30), “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” (யோவான் 14:28). ஆகவே யோவான் 5ல், இயேசு தம்முடைய மெய்யான தன்மையைக் குறித்து சொன்னார். யோவான் 8ல், இயேசு தாம் ஏற்றிருக்கிற மத்தியஸ்த பொறுப்பை முன்னிலைப்படுத்தி அப்படிச் சொன்னார்.
வேதம் விளக்கப்பட வேண்டும் என்பதற்கான இரண்டாவது காரணம், வேதத்திலுள்ள சில வார்த்தைகளை நாம் தவறாக விளங்கிக்கொள்ளுவதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேதம் சரியாக விளக்கப்பட வேண்டியது அவசியம். அந்தந்த வசனங்கள் எழுதப்பட்டுள்ள மொழிநடையை உணராமல், எத்தனைபேர் பல்வேறு வசனங்களைப்பற்றிய தவறான எண்ணங்கொண்டிருக்கிறார்கள். சில வார்த்தைப்பிரயோகங்களுக்கு அது வெளிப்படையாகத் தெரிவிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், வேறுபட்ட தவறான அர்த்தங்களை அநேகர் கொடுத்துவருகிறார்கள். கிறிஸ்துவின் வார்த்தையை விளக்குவதாக சொல்லிக்கொண்டு, தொடர்ந்து கேடான வைராக்கியத்துடனும் பிடிவாதத்துடனுன் இப்படிச் செய்துவருகிறவர்களுக்கு எதிரான அநேக எச்சரிப்புகளை வேதத்தில் காணலாம். உதாரணமாக, இயேசு “இது (புளிப்பில்லா அப்பம்) உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது” என்றார். இங்கு இயேசு, “இந்த அப்பம் என்னுடைய சரீரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது” என்றுதான் சொன்னார் என்பதை அநேகர் ஏற்கமறுக்கிறார்கள். அதேபோல் வெளிப்படுத்தின விசேஷம் 1:20ல், “நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்” என்பதில் ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளுக்கான அடையாளம் என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் கவனமில்லாததனால்தான் “பிரபஞ்சவாதம்” (Universalism) என்ற தவறான இறையியல் போதனை உருவானது. இதன்காரணமாக தவறான போதனைகள் எழுவதனால், இது நம்மை மேலும் எச்சரிக்கிறது. “எண்ணிக்கைக்குட்படாத” என்ற வார்த்தைப்பிரயோகங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த தவறான போதனை உருவானது. ஆர்மீனியனிசமும் இதிலேயே தவறிழைக்கிறது. எபிரெயர் 2:9, “தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு . . . இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம்” என்ற வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “ஒவ்வொருவருக்காகவும்” என்பது காயீனையோ, பார்வோனையோ, யூதாஸையோ உள்ளடக்கமாகக் கொண்டதல்ல. இவ்வசனத்தில் வருகிற “ஒவ்வொருவருக்காகவும்” என்பதை லூக்கா 16:16, ரோமர் 12:3 மற்றும் 1 கொரிந்தியர் 4:5 ஆகிய வசனங்களின் அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள வேண்டும்.
லூக்கா 16:16 “. . . தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.”
ரோமர் 12:3 “. . . உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல் . . .”
1 கொரிந்தியர் 4:5 “. . . இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.”
அதேபோல், 1 தீமோத்தேயு 2:4ல் குறிப்பிடப்பட்டுள்ள “எல்லா மனுஷரும்” என்பதை ஒருமனிதனையும் விட்டுவிடாமல் எல்லா மனிதனையும் உள்ளடக்கியது என்பதாக நாம் ஒருபோதும் பொருள்கொள்ளக் கூடாது. லூக்கா 3:15, யோவான் 3:26 மற்றும் அப்போஸ்தலர் 22:15 ஆகிய வசனங்களின் அடிப்படையிலேயே அதற்கு விளக்கமளிக்க வேண்டும்.
லூக்கா 3:15, “யோவானைக்குறித்து: இவன்தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு . . .”
யோவான் 3:26, “. . . இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.”
அப்போஸ்தலர் 22:15, “நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்.”
ஆதியாகமம் 6:9 “நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்” என்கிறது. யோபு 1:1ல், யோபுவைக்குறித்து “உத்தமனும் சன்மார்க்கனுமாக” இருந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இவ்விரு வசனங்களிலும் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ள “உத்தமன்” என்ற வார்த்தைக்கு ஆங்கில வேதத்தில் “பூரணமானவன் – perfect” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் அந்தப் பொருளில்தான் இப்பத்தியில் இவர்களைப்பற்றி விளக்குகிறார்). இவர்களைக் குறித்து சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளை எத்தனைபேர் தவறாக விளங்கிகொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக அவர்களில் ஏற்பட்ட தவறான எண்ணங்கள்தான் எத்தனை! “இரண்டாம் ஆசீர்வாதம்” அல்லது “பூரணமான பரிசுத்தமாக்கப்படுதல்” ஆகிய பதங்களைப் பயன்படுத்துகிறவர்கள், மனிதன் இவ்வுலகில் வாழுகிறபோதே பாவமற்ற பூரணமான நிலையை அடைய முடியும் என்று உறுதியாக சொல்லுகிறார்கள். இக்கூற்று ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஏனென்றால், நோவா, யோபு ஆகிய இவர்களுடைய வாழ்க்கையை விளக்குகிற தொடர்ந்து வரும் வசனங்களை வாசித்துப் பார்க்கிறபோது, இவர்கள் இருவரும் குறைபாடுகளற்ற வாழ்க்கையை வாழவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. நோவா, மது அருந்தி வெறித்திருந்திருக்கிறார்; யோபு, தான் பிறந்த நாளையே சபித்திருக்கிறார். “உத்தமன் அல்லது பூரணமானவன்” என்ற வார்த்தை, “உண்மையானவன், நேர்மையானவன்” என்ற பொருளில், அதாவது “மாய்மாலமற்றவன்” என்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. “தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்” (1 கொரிந்தியர் 2:6). (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இங்கும் ஆங்கில வேதத்தில் “தேறினவர்கள்” என்பதற்கு perfect என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது). பிலிப்பியர் 3:15ல் “தேறினவர்கள்” என்ற வார்த்தை இதையே குறிப்பிடுகிறது. எபிரெயர் 5:14ல், இதையே, குழந்தைப் பருவத்தைக் கடந்து, முதிர்ச்சியடைந்தவர்கள் என்ற அர்த்தத்தில் “பூரண வயதுள்ளவர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எரேமியா 51:57, “அதின் பிரபுக்களையும் அதின் ஞானிகளையும் அதின் தலைவரையும் அதின் அதிகாரிகளையும் அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த்தூங்கி விழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்” என்கிறது. பொருள்முதல்வாத கொள்கையாளர்கள் (gross materialists) இவ்வசனத்தைக் குறிப்பிட்டு, கேடானவர்களின் ஆத்துமா அழிந்து, இல்லாமல் போய்விடும் என்று நம்புகிறார்கள். அவர்களுடைய தவறைச் சுட்டிக்காட்ட அதிக நேரம் நமக்குத் தேவையில்லை, இவ்வசனம் அடையாள மொழிநடையில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. பாபிலோனுடைய பெருமையினிமித்தம், கடவுள் அவர்கள்மீது தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றயிருந்தார். அதன் நிறைவேற்றத்தை வரலாற்று பதிவுகள் நமக்குக் காட்டுகின்றன. பாபிலோனின் இராஜாவும் அவனுடைய அரசவையில் இருந்தவர்களும் மது குடித்து மயங்கியிருந்தபோது, அவர்களுடைய நாடு பிடிக்கப்பட்டு, அவர்கள் மயக்கத்தில் இருந்தபோதே கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் மறுபடியும் இப்பூமியில் கண்விழிக்கவில்லை. “விழிக்காத தூக்கமாய்த்தூங்கி” என்பதை எழுத்துப்பூர்வமாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால், தானியேல் 12:2, யோவான் 6:29 ஆகிய வசனங்கள், துன்மார்க்கரும் ஒருநாளில் (கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் நாளில்) உயிரோடு எழுந்திருப்பார்கள் என்று வெளிப்படையாகவே அறிவிக்கிறது.
எண்ணாகமம் 23:21, “அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை” என்றிருக்கிறது. இவ்வசனத்தின் சந்தர்ப்பசூழலைப் பொருட்படுத்தாமல், எத்தனைபேர் இவ்வசனத்திற்கு அவர்களுக்குத் தோன்றுகிறபடியெல்லாம் விளக்கம் தந்துவிடுகிறார்கள். இது, பிலேயாம் பாலாக்கினிடத்தில், இஸ்ரவேலை மீதியானியர் அழிக்கும்படி அவர்களை ஏன் தான் சபிக்க முடியாது என்பதற்கான விளக்கங்களைத் தருகிறபோது, சொல்லப்பட்ட ஒரு வாக்கியம். இஸ்ரவேலர் பாவமற்ற பரிசுத்த நிலையில் இருக்கிறார்கள் என்று இவ்வசனம் பொருள்தரவில்லை. அத்தோடு, இவ்வசனம் சொல்லப்பட்ட காலம்வரையில், இஸ்ரவேலர் நேரடியாக யேகோவாவாகிய தேவனுக்கு எதிராக எந்தவிதமான பாவகரமான காரியங்களையும் செய்யவில்லை. விக்கிரக ஆராதனை போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பாவங்களை அவர்கள் செய்திருக்கவில்லை. சாபத்தைப் பெறுமளவுக்கு அவர்ளுடைய நடத்தை அப்போது இருக்கவில்லை. பிறகு, இஸ்ரவேலர் கர்த்தருடைய சொற்கேளாமல் போனதினால், பாபிலோனை அதற்காக அவர் ஏற்படுத்தி, தம்முடைய நியாயத்தீர்ப்பை அவர்கள்மீது நிறைவேற்றினார் (ஏசாயா 10). ஆகவே இந்த வசனத்தை, திருச்சபையோடு தொடர்புடுத்தி விளக்குவது ஏற்புடையதல்ல. கர்த்தர் தம்முடைய மக்களிடத்தில் காணப்படும் அக்கிரமங்களைக் கவனிக்கிறார், அதை தம்முடைய சிட்சையின் பிரம்பினால் வெளிப்படுத்துகிறார். இருப்பினும் அவர்கள்மீது நித்திய தண்டனையை சுமத்துவதில்லை.
வேதம் விளக்கப்பட வேண்டும் என்பதற்கான மூன்றாவது காரணம், சில பகுதிகளில், விரிவாக விவரித்துக் காட்டவேண்டிய சொற்கள் இருப்பதனால், வேதம் சரியாக விளக்கப்படுத்தப்பட வேண்டியது அவசியம். ஆபகூக் 1:13ல், “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே” என்றிருக்கிறது. “நோக்கிக்கொண்டிருக்கமாட்டீர்” என்பது பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டீர் என்று பொருள்படும். இப்படியான வார்த்தைகள் சரியாக விவரித்து விளக்கப்பட வேண்டும், இல்லாவிட்டால் வேதத்தின் ஏனைய பகுதியோடு இவ்வசனம் முரண்படுகிறதாக சொல்லிவிடுவோம். உதாரணத்திற்கு, நீதிமொழிகள் 15:3ல், “கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது” என்றிருக்கிறது. கர்த்தர் ஒருபோதும் தீமையைக் கண்டு அகமகிழ்கிறதில்லை. மாறாக அவைகளுக்கு எப்போதும் பதிலீடு செய்கிறார். மற்றொரு உதாரணம், ரோமர் 9:19, “அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்?” என்கிறது. இங்கு “சித்தம்” என்பது கடவுளுடைய மறைவான ஆணை. லூக்கா 12:47ல், “அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன்” என்றிருப்பதைக் காண்கிறோம். இங்கு “சித்தம்” என்பது கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள வார்த்தை. இப்படி இந்த இரு வசனங்களிலும் “சித்தம்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இவ்விரு வசனங்களின் சந்தர்ப்பசூழலின் அடிப்படையில், அவைகளுக்கான வேறுபாட்டை அறியாவிட்டால், வேதத்தில் முரண்பாடுகள் உள்ளதாகவே சொல்ல நேரிடும். இறுதியாக இன்னொரு உதாரணம், சங்கீதம் 119:2, “அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்கிறது. இதில் “கைக்கொண்டு” என்பது மெய்யான ஆர்வத்துடனும், முழு ஈடுபாட்டுடனும் செய்வதையே குறிக்கிறது. ஏனென்றால், கர்த்தருடைய நியாயப்பிரமாணம் முழுவதையும், எவரும் அடியோடு பூரணமாக நிறைவேற்றுவதென்பது முடியாத காரியம்.
வேதம் விளக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதற்கான இறுதியான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். இதற்காக நீங்கள் யாவரும் நன்கு அறிந்த எளிமையான ஒரு வசனத்தை எடுத்துக்கொள்ளுவோம். எபிரெயர் 13:8 சொல்லுகிறது, “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று. இவ்வசனம் சொல்லுவது சரிதானா? “ஆம், முற்றிலும் சரியானதே” என்று நீங்கள் சொல்லுவீர்கள். இதை எழுதுகிற நானும் முழுமனதுடன் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் இவ்வசனம் என்ன சொல்லுகிறது என்பதை சரியாக விளங்கிக்கொண்டிருக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து மனிதனாக வந்த நாளிலிருந்து எந்தவிதமான மாற்றமும் அவரில் நிகழவில்லையா? அவர் மனிதனாக வந்தபோது இருந்த அதேவிதமாகத்தான் இன்றும் இருக்கிறாரா? இப்போதும் அவருக்கு பசியும், தாகமும், சோர்வும் ஏற்படுகிறதா? அவர் இன்னும் “ஓர் ஊழியக்காரனாக”, தன்னுடைய தாழ்மையின் நிலையில், “துக்கங்களின் மனிதனாக” இருக்கிறாரா? நிச்சயமாக இவ்வசனம் விளக்கப்பட வேண்டியது அவசியம். ஒருவகையில் அவர் இன்றும் “மாறாதவராகவே” இருக்கிறார். அவருடைய ஆள்தத்துவ இலக்கணங்களிலும், மத்தியஸ்த பணியிலும், தம்முடைய சபையை நித்திய அன்பினால் நேசிக்கிற தன்மையிலும், அவர்களுடனான உறவிலும், அவர் மாறாதவராகவே இருக்கிறார். ஆனால் அவருடைய மானுடத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, இப்போது அவர் மகிமையடைந்த சரீரத்தைக் கொண்டிருக்கிறார். அவர் தற்போது இருக்கிற நிலையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
மத்தேயு 28:18, “. . . வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.”
அப்போஸ்தலர் 2:36, “ஆகையால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று”.
ஆகவே நாம் நன்கு அறிந்திருக்கும், மற்றும் மிகவும் எளிமையான வேதப்பகுதிகளுக்கும், அவைகளின் சரியான விளக்கத்தை நாம் அடைவதற்கு, கவனத்துடனான ஆராய்ச்சியும், ஜெபத்துடனான தியானமும் அவசியமாக இருக்கிறது.
அனல்வீசும் பக்திவைராக்கியம் – டேவிட் மெரெக்
பக்திவைராக்கியம் பற்றிய இத்தொடர் ஆக்கத்தின் இறுதிப்பகுதிக்கு இப்போது வந்திருக்கிறோம். இப்பாடத்தொடர் நம் அனைவரிலும் கிறிஸ்தவ வைராக்கியத்தை தக்கவைக்கவும் அதிகரிக்கவும் உதவியாயும் ஊக்கப்படுத்துகிறதாயும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பும் ஜெபமுமாகும். பக்திவைராக்கியம் பற்றிய இந்த முக்கியமான விளக்கங்களை எப்படி சிறந்த முறையில் முடிவுக்குக் கொண்டு வருவது என்பதற்காக நான் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது. இரண்டு இறுதியான விஷயங்களோடு இதை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று தீர்மானித்தேன்.
- கிறிஸ்தவ வைராக்கியத்தின் தெய்வீகத் தன்மை
வைராக்கியத்தை விளக்கும் பழைய ஏற்பாட்டு வார்த்தைகள், மனிதர்களாகிய நம்முடைய வைராக்கியத்தைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. ஜீவனுள்ள தேவனும் வைராக்கியம் கொண்டவர் என்பதைக் காட்டுகிறது. பழைய ஏற்பாட்டு வார்த்தைகள், கடவுளைக் குறித்து பேசுகிறபோது பெரும்பாலும் குறிப்பாக கடவுளுடைய பொறாமையையே சுட்டிக்காட்டுகின்றன. ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் மூன்று இடங்களில் கடவுளின் வைராக்கியம் பற்றி பொதுவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவற்றில் இரண்டு முக்கியமான பகுதியில் மட்டுமே நம்முடைய கவனத்தைச் செலுத்தப் போகிறோம். இந்தப் பகுதிகள் நாம் கொண்டிருக்க வேண்டிய பக்திவைராக்கியத்தின் தன்மையையும் நமக்கு விளங்கச் செய்கிறதாக இருக்கிறது. கடவுளைப் பிரதிபலிக்கிறவர்களாக உருவாக்கப்பட்ட நமக்கு, வைராக்கியத்திற்கான சிறந்த உதாரணமாகவும் கடவுளே இருக்கிறார்.
அ. ஏசாயா 9:6-7
6நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். 7தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
இந்த வார்த்தைகள் 2,700 வருடங்களுக்கு முன்பு ஏசாயாவினால் தெய்வீக உந்துதலினால் எழுதப்பட்டவைகள். இவ்வசனங்களில் கணிக்கப்பட்டு விவரிக்கப்பட்டிருக்கிற காரியங்களுக்காகவே கர்த்தருடைய வைராக்கியம் இன்றும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 700 ஆண்டுகளாக கடவுள் இந்த பிள்ளை வர வேண்டிய யூத சந்ததியைப் பாதுகாத்து, தம்முடைய குமாரனுடைய வருகைக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார். கடவுள், சிதறடிக்கப்பட்டிருந்த யூதர்களில் மீந்திருந்தவர்களை, இந்தப் பிள்ளை பிறக்க வேண்டிய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் மீண்டும் குடியேறும்படிச் செய்தார். பிறகு சுமார் 2,000 வருடகளுக்கு முன்பு வல்லமையுள்ள தேவனாகிய இந்தப் பிள்ளை மனித குழந்தையாக தாழ்வான நிலையில் விலங்குகளின் கொட்டகையில் பிறந்தார். அவர் மனிதனாக வளர்ந்தார். அவர் பரிபூரண வாழ்க்கையை வாழ்ந்தார். ரோமர்களின் சிலுவையில் ஒரு அப்பாவி மனிதனாக கொல்லப்பட்டார். மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தார். அவர் பரலோகத்திற்கு எழுந்தருளி, பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்தார். அன்றிலிருந்து தாவீதின் சந்ததியில் வந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ராஜாவாக ஆளுகை செய்து வருகிறார். தம்முடைய ராஜ்யத்தின் எல்லையை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் இருதயங்களில் விரிவுபடுத்திக் கொண்டு வருகிறார். எனினும், இந்த வசனம் சொல்லுகிற சில காரியங்கள் இன்னும் நிறைவேற வேண்டியுள்ளன. இராஜாதி இராஜாவாக அவர் மறுபடியும் வருகிறபோது அவருடைய ராஜ்யம் எவ்வளவாக இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிற அளவுக்கு அவருடைய ராஜ்யம் இன்னும் அதிகரிக்கப்படவில்லை. பூமியில் முடிவில்லா சமாதானமும், நியாயத்தீர்ப்பும், நீதியும் காணப்படவில்லை. பொல்லாத மனிதர்கள் தொடர்ந்து கேடாக வாழ்ந்து, கிறிஸ்துவினுடைய ராஜ்யத்தின் நீதியுள்ள குடிமக்களை ஒடுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இவையாவும் கடவுளுடைய வைராக்கியத்தைப் பற்றி என்ன சொல்லுகின்றன? கடவுளுடைய வைராக்கியத்தின் நீளும் தன்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. ஏசாயாவில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட காரியங்கள் பல ஆயிரம் வருடங்களாக கடவுளுடைய வைராக்கியத்தினால் நிறைவேற்றிக்கொண்டு வருகிறது. அவருடைய வைராக்கியம் இவைகளை இன்றும் நிறைவேற்றிக்கொண்டு வருகிறது. அவருடைய வைராக்கியம் தேவகுமாரனுடைய நித்திய ராஜ்யத்தில் நித்தியத்திற்கும் இவைகளை நிறைவேற்றிக்கொண்டு வரும். கடவுளுடைய வைராக்கியம் நீண்டகாலமாக நம்முடைய இரட்சிப்பிற்காக செயல்பட்டுக்கொண்டு வருகிறது. அவருடைய வைராக்கியத்தின் இந்த நீண்டகால தன்மை நாம் பின்பற்றுவதற்கான உதாரணமாக இருக்கிறது.
வேதம் கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு நீண்டதூரப் பந்தயமாக காட்டுகிறது. அதுபோல, இந்தப் பந்தயத்தில் ஓடுவதற்கான கிறிஸ்தவ வைராக்கியமும் நீண்டகாலத் தேவைகளையும் அக்கறையையும் கொண்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் காட்டப்பட்டுள்ள எரிகிற அல்லது கொதிக்கிற என்பது வைராக்கியத்தைப் பொறுத்தளவில், ஒரு குறுகிய காலம் மட்டுமே ஏற்படுகிற ஒன்று என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம். பக்திவைராக்கியம் என்பது ஒரு சிறு வெடிப்புப் போன்றது என்றும் நினைக்க செய்யலாம். இது ஒரு தீவிரமான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தைப் போன்றது என்றும் எண்ணத் தோன்றலாம். உண்மையில், நம்மை நாம் வெறுப்பதற்கும் சிலுவையை எடுத்துக்கொண்டு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கும் தேவையான தீவிரமான குறுகிய கால வைராக்கியமும் ஆற்றலும் அவ்வப்போது அசாதாரண காலங்களில் ஏற்படலாம். ஆனால் இறுதியில், பக்திவைராக்கியம் என்பது நீண்ட காலம், விடாமுயற்சியுடன் தொடருவதாகும். இதுவரை நாம் பார்த்து வந்திருக்கிற பாடங்களில் இந்த உண்மை பலவிதங்களில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஏசாயா 9வது அதிகாரத்தில், கடவுளுடைய வைராக்கியத்தைக் குறித்து பார்க்கிற இந்த இடத்தில் இந்த உண்மை மிகவும் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாம் பக்திவைராக்கியத்தைக் கொண்டிருக்க வேண்டுமா? பூமியில் நாம் வாழும் மீதமுள்ள நாட்களிலும், நித்தியத்திலும் அத்தகைய வைராக்கியத்தை “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயும், ஆவியிலே அனலுள்ளவர்களாயும், கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்களாயும்” இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்தவ வைராக்கியம் என்பது கொஞ்சக்காலம் நிற்பதும் பிறகு மீண்டும் துவங்குவதுமான விஷயமல்ல. அது நீண்ட தூரம் தொடருகிற ஒன்று. ஆகவேதான், கடவுளின் உதவியோடு நம்முடைய வைராக்கியத்தைத் தொடர்ந்து தக்கவைப்பதும், தேவைக்கேற்ப தூண்டிவிடுவதும், அதிகரிப்பதுமாக இருக்க வேண்டும்.
மறுபுறம், முந்தைய ஆக்கத்தில், எலியாவில் பார்த்ததுபோல் மனச்சோர்வுக்கு எதிராக கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற தெளிவான கட்டளைகளைச் சரியாக பயன்படுத்துவதன் மூலம் நம்மை நாம் பாதுக்காத்துக்கொள்ளவும் வேண்டும். கிறிஸ்டோபர் ஆஷ் (Christopher Ash) எழுதிய “Zeal Without Burnout” என்ற புத்தகத்தில், அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேளுங்கள்:
கடந்த பத்து வருடங்களில் கிறிஸ்தவ ஊழியத்திற்காக வாலிப ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பயிற்சியளிப்பதில், சிறந்த ஊழியங்கள் பெரும்பாலும் நீண்டகால பணிகளைக் கொண்டது என்பதைப் புரியவைப்பதிலேயே நான் அதிக கவனம் காட்டியிருக்கிறேன். குறுகிய கால ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக அல்ல, நெடுந்தூர மாரத்தான் ஓட்டத்திற்கே அவர்களைத் தயார் செய்ய முயற்சித்தேன். வேறுவிதத்தில் சொல்லுவதானால், விரைவில் சோர்வுற்று மங்கிப்போகும் ஆற்றலைக் கொண்ட ஊழியத்தை அவர்கள் செய்வதைவிட வாழ்நாள் முழுவதும் தொடருகிற நிலைத்திருக்கும் தியாக ஊழியத்தைக் கொண்டிருக்கவே நான் உதவுகிறேன்.
கிறிஸ்தவ வைராக்கியம், நீண்டகால வைராக்கியம் என்பதை கடவுளின் உதாரணம் நமக்குக் காட்டுகிறது. எனினும், மற்றொரு ஏசாயாவின் பகுதி, வைராக்கியத்தின் தன்மையைக் குறித்த சமநிலைப்படுத்தும் உண்மையை நம் முன் எடுத்துரைக்கிறது.
ஆ. ஏசாயா 42:13-17
13கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார். 14நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன். 15நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணி, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகப்பண்ணுவேன். 16குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன். 17சித்திரவேலையான விக்கிரகங்களைநம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னிடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.
இந்த அதிகாரத்தின் முதல் பாகத்தில், வசனங்கள் 1 முதல் 9 வரை, புறஜாதிகளுக்கும் இரட்சிப்பைக் கொண்டு வருகிற மேசியாவின் வருகையைப் பற்றி கர்த்தர் முன்னறிவிக்கிறார். இப்போது 13 முதல் 17 வரையுள்ள வசனங்களில், அந்த இரட்சிப்பை ஆவிக்குரிய குருடர்களாக இருக்கிறவர்களுக்கு எப்படித் தருகிறார் என்பதையும் அதேநேரம் அவிசுவாச விக்கிரக ஆராதனைக்காரரை எப்படி நியாயந்தீர்க்கிறார் என்பதையும் விவரிக்கிறார். 14வது வசனத்தில் தன்னை அடக்கிக் கொண்டிருக்கிறவராகவும் வெகு காலம் மவுனமாயிருக்கிறவராகவும் விவரித்துக் காட்டுகிறார். ஏசாயா 9:7ல் நாம் பார்த்த அதையே, அவருடைய இருதயம் நெடு நாட்களாக வைராக்கியம் கொண்டிருந்ததையே இங்கு இப்படி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் இப்போது இங்கே கடவுளுடைய வைராக்கியத்தின் இன்னுமொரு பரிமாணத்தைக் கூடுதலாக பார்க்கலாம். வசனம் 13ல் தன்னுடைய எதிரிகளைப் போரில் சந்திக்க செல்லும் ஒரு போர்வீரனைப் போல் வைராக்கியங் கொண்டு தாம் எழுவதாக அவர் தம்மைப் பற்றிச் சொல்லுகிறார். புறஜாதியாரையும் இரட்சிக்கும் தம்முடைய இலக்கை நிறைவேற்றுவதற்காக கடவுள் தயாரானபோது, சிறப்பான வகையில் தம்முடைய வைராக்கியத்தை அவர் தூண்டிவிட்டு அதிகரிக்கச் செய்கிறார். அல்லது புதிய ஏற்பாட்டு மொழிநடையின்படி வைராக்கியத்தின் தீச்சுடரில் ஊதி இன்னும் அதிக சூடாக்குகிறார். இது கடவுளைப் பற்றிய விளக்கமாதலால், அவர் கொண்டிருந்த குறைந்தளவான வைராக்கியத்தைத் தூண்டிவிட்டு பெருமளவில் ஏற்படச் செய்வதென்பது ஒரு குறையோ பாவகரமானதோ அல்ல. மாறாக, ஒரு போர்வீரன் போருக்கு முன்பாக தன்னுடைய வைராக்கியத்தைத் தூண்டிவிட வேண்டியதாக இருக்கிறதுபோல, சில முக்கியமான சந்தர்ப்பங்களில், எதிர்கொள்ள வேண்டிய சவாலுக்கு ஏற்ப, நம்முடைய வைராக்கியத்தைத் தூண்டிவிட வேண்டியதையே இது சுட்டிக்காட்டுகிறது.
கடவுள் நம் முன் காட்டுகிற, சிறப்பான சவால்களை எதிர்கொள்வதற்கு நம்முடைய வைராக்கியத்தைத் தூண்டிவிடுதல் என்பது நமக்கு எந்தப் படிப்பினையையும் தரவில்லையா? ஒரு காரிலுள்ள பெட்ரோல் என்ஜினை சற்று நினைவுபடுத்திப் பார்ப்போம். இரண்டு வழி நெடுஞ்சாலையில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். அப்போது, உங்களுக்கு முன் செல்லுகிற கார் மெதுவாக சென்று கொண்டிருக்கிறது, அதை முந்திக்கொண்டு நீங்கள் செல்ல வேண்டும், அதேநேரம், தூரத்தில் எதிர்புறத்தில் ஒரு பெரிய லாரி வருகிறது. உங்களுக்கு முன்னுள்ள காரையும் முந்தவேண்டும், எதிரில் வருகிற லாரியையும் மோதாமல் செல்ல வேண்டும். என்ன செய்வீர்கள்? உங்களுடைய காரின் என்ஜின் வேகமாக செயல்படுவதற்காக, அதை அதிகமாக சூடாக்க, காரிலுள்ள ஆக்சிலேட்டரை நீங்கள் ஏற்கனவே செய்து வந்ததைவிட மேலும் அதிகமாக அழுத்த வேண்டும். அதுபோலவே நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலும் ஊழியத்திலும் செய்ய வேண்டும். சவாலான ஆலோசனையோ பிரசங்கமோ பண்ணும் சந்தர்ப்பத்தை எதிர்கொள்ளும்போதும், குடும்ப நெருக்கடியின்போதும், கிறிஸ்துவுக்கு உண்மையாக இருந்ததனால் உண்டாகும் துன்புறுத்தலை எதிர்கொள்ளும்போதும் ஜெபத்தின் மூலமாகவும் கடவுளுடைய வார்த்தையைத் தியானிக்கிறதன் மூலமாகவும் நம்மிலுள்ள வைராக்கியத்தின் ஆழத்தை தீவிரமாக தூண்டிவிட வேண்டியிருக்கிறது.
நாம் மண்ணில் உருவாக்கப்பட்ட, அழியும் சிருஷ்டிப்பாக இருப்பதனால், இத்தகைய தூண்டிவிடுதலில் தியாகங்களும் உள்ளடக்கமாக இருக்கும். அத்தகைய தியாகம் விலைமதிப்பில்லாதது. அது, “நம்முடைய வாழ்க்கையைச் சேதப்படுத்துகிறதாகவும் அல்லது அழிக்கிறதாகவும்” இருக்கலாம். நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், சில நேரங்களில் மனச்சோர்வடைவதும் மரணமேகூட ஏற்படுவதும் தவிர்க்க முடியாது. இறுதியில், “நல்லது உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரன்” என்று உங்களைக் குறித்து கேள்விப்பட வேண்டுமானால் தொடர்ந்து உண்மையாக இருங்கள்.
சுருக்கமாக, கடவுளுடைய உதாரணத்திலிருந்து, பக்திவைராக்கியத்தின் தன்மையில், நீண்ட காலம் விடாமுயற்சியுடன் இருப்பதும், நமக்கு முன்னிருக்கிற விசேஷ சவால்களை எதிர்கொள்ள வைராக்கியத்தின் அசாதாரண தூண்டுதலின் பல பரிமாணங்களும் உள்ளடக்கியிருக்கிறது என்பதை நாம் கற்றுக்கொள்ளுகிறோம். பக்திவைராக்கியத்தில் இவை இரண்டும் இருக்கின்றன.
- இழப்பிற்கான சாத்தியமும் கிறிஸ்தவ வைராக்கியத்தின் தீயை தொடர்ந்து தக்கவைத்தலும்
நாம் மனந்தளராமல் இருக்கும்படி புதிய ஏற்பாட்டின் அநேக வேதப்பகுதிகள் நம்மை வற்புறுத்துகிறது. நாம் வைராக்கியத்தை விட்டுவிடக் கூடாது என்பதைதான் இப்படிச் சொல்லுகிறார்கள். நாம் தொடர்ந்து வைராக்கியத்தோடு இருக்க வேண்டியதற்கான ஏராளமான காரணங்களை இந்தப் பகுதிகள் இதன் சந்தர்ப்பதின் அடிப்படையில் நமக்குத் தருகின்றன. நம்முடைய தொடர்ச்சியான வைராக்கியம் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் அவைகள் நமக்குப் போதிக்கின்றன. பக்திவைராக்கியத்தையும் ஜெபத்தையும் பற்றிப் படிக்கிறபோது இதுபோன்ற ஒரு பகுதியை நாம் படித்தோம்.
லூக்கா 18:1
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
இதுபோன்று இன்னும் சில வசனங்களையும் புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கலாம்.
எபேசியர் 3:13
ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே.
2 தெசலோனிக்கேயர் 3:13
சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.
எனினும், நாம் மனந்தளரக் கூடாது என்ற கருப்பொருளை விளக்கும் புதிய ஏற்பாட்டின் வேறு இரண்டு பகுதிகளோடு இந்தப் பாடத்தை நான் முடிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு பகுதியிலும் மூன்று கேள்விகளுக்கான பதிலைப் பார்க்கவிருக்கிறோம். மனந்தளராமல் இருப்பதைக் குறித்த பகுதிகளோடு பக்திவைராக்கியத்தின் அக்கினி நம்முடைய இருதயங்களில் கொழுந்துவிட்டு எரிவதற்கு உதவும் என்று நான் நம்புகிற அற்புதமான வாக்குத்தத்தங்களை இணைத்துப் பார்க்கப் போகிறோம். மனந்தளராதிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் முதலாவது வசனப்பகுதியைப் பார்க்கலாம்.
அ. கலாத்தியர் 6:9-10
9நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். 10ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.
கேள்வி 1: நாம் ஏன் மனந்தளரக் கூடும்?
ஏனென்றால் நன்மைசெய்வதில் நாம் தளர்ந்து போய்விடுவோம். சரீரத்திலும் ஆவியிலுமாக இரண்டிலும் மற்றவர்களுக்கு அன்போடு ஊழியம் செய்வது மிகவும் கடினமானது. மேலும், நன்மைசெய்ய நாடுகிறபோது பெரும்பாலும் ஏமாற்றங்களே உண்டாகிறது. நம்முடைய இருதயத்தை ஊற்றி கடவுளுடைய வார்த்தையில் ஊழியம் செய்கிறபோது பெரும்பாலும் தொடர்ந்து கடினமான இருதயத்தையும் எந்த பதிலும் தராத இருதயத்தையுமே பார்க்க நேரிடுகிறது. நம்முடைய உழைப்பின் மூலமாக சிறிதளவோ அல்லது கனியற்ற நிலையையே பார்க்க நேரிடுகிறது. கடவுளுடைய மக்களே, அதாவது யாருக்கு நாம் ஊழியம் செய்கிறோமோ, அவர்களே, நம்முடைய உழைப்பைப் பாராட்டாதபோதும், நன்றியற்றவர்களும் குறைகாணுகிறவர்களுமாக இருக்கிறபோதும் நம்முடைய மனம் தளர்ந்து போகிறது. சில நேரங்களில் பவுலைப் போல் நாமும் உணருவோம். நாம் அவர்களை அதிகமாக நேசித்தும் அவர்களால் குறைவாக நேசிக்கப்பட்டிருப்போம்.
2 கொரிந்தியர் 12:15
ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.
கேள்வி 2: இத்தகைய களைப்பையும் ஊக்கமின்மையையும் எதிர்கொள்ளும்போது, ஏன் நம்முடைய மனம் தளரக் கூடாது?
இதற்கான பல காரணங்களைப் பார்க்க முடியும்.
கலாத்தியர் 6:9ல் பவுல் ஒரு காரணத்தைத் தெளிவாக காட்டுகிறார்.
கலாத்தியர் 6:9
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
மனந்தளராமல், தொடர்ந்து உண்மையுடன் விதைத்தால், அறுப்பின் நாள் நிச்சயம் வரும். நம்முடைய உழைப்புகளிலிருந்து மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் கிறிஸ்தவர்களாக நம்முடைய சொந்த வளர்ச்சியிலும் கனிகளைப் காண்போம். கிறிஸ்துவின் ராஜ்யம் முன்னேறுகிறபோது அவர் உயர்த்தப்படுகையில் கனிகளை நாம் பார்ப்போம். எனினும், கர்த்தருடைய அந்த இறுதிநாள் வரை அதிகமான கனிகளை நாம் பார்க்க முடியாமல் இருக்கலாம். இந்த ஊக்கப்படுத்தும் உண்மை அடிக்கோடிட்டுக் காட்டும் மற்றொரு அற்புதமான வாக்குத்தத்தத்தைக் கவனியுங்கள்.
1 கொரிந்தியர் 15:58
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
இங்கு கிறிஸ்தவ வைராக்கியம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. கர்த்தருடைய வேலையில் எப்போதும் நாம் அதிகமாக ஈடுபட வேண்டுமென்று வற்புறுத்தப்படுகிறோம். கிறிஸ்துவுக்கு நாம் உண்மையுள்ளவர்களாக இருந்து நிலைத்திருக்கிறபோது இப்படிச் செய்ய வேண்டியது ஏன்? ஏனென்றால் கர்த்தருக்குள்ளான நம்முடைய உழைப்பு வீண் போகாது. நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறோம், ஒரு முட்டாளின் வேலையை அல்ல. ஆகவே நாம் மனந்தளரக் கூடாது.
ஏன் கர்த்தருடைய சேனையிலுள்ள சோர்வுற்ற வீரர்கள் மனந்தரளக் கூடாது என்பதற்கான மேலும் இரண்டு காரணங்களைப் பார்ப்போம்.
வேதத்தின் ஏனைய பகுதியில், சோர்வுற்றிருக்கிற உண்மையுள்ள சுவிசேஷ ஊழியர்களுக்கு இளைப்பாறுதல் வந்துகொண்டிருக்கிறது என்று ஊக்கப்படுத்தப்படுகிறோம்.
வெளிப்படுத்தின விசேஷம் 14:13
பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம் பற்றுகிறார் என்று சொல்லிற்று.
மரணத்தோடு இந்த சோர்வுறச் செய்யும் வேலைகளுக்கு முடிவு வருகிறது. விசுவாசிகளுக்கு மரணம் என்பது அவர்களுடைய வேலைகளிலிருந்து ஓய்வு பெறுவதாகும். மேலும், கிறிஸ்துவின் வருகை, உண்மையான சுவிசேஷ ஊழியர்களுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தி துன்பப்படுத்துகிற கேடான விரோதிகளிடமிருந்து நிரந்தர ஓய்வைப் பெற்றுத் தருகிறது.
2 தெசலோனிக்கேயர் 1:6-8
6உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே. 7தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, 8கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
அன்பார்ந்த சோர்வுற்றிருக்கிற சகோதர சகோதரிகளே, மனந்தளர வேண்டாம். ஓய்வு சீக்கிரமாக வருகிறது.
உண்மையுள்ள சுவிசேஷ வேலையாட்களுக்கு நித்திய வெகுமதி இருக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 14:13ல் சற்று முன் நாம் என்ன வாசித்தோம் என்பதை நினைவுகூருங்கள். உண்மையுள்ள பரிசுத்தவான்களின் வேலைகள் அவர்களுடைய மரணத்திலும் பின்தொடரும். கடவுள் அவருக்கும் அவருடைய பரிசுத்தவான்களுக்கும் நீங்கள் செய்த பணிகளை நினைவுகூருவார்.
எபிரெயர் 6:10
ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியுஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.
அத்தோடு, அங்கு வெகுமதியும் இருக்கிறது.
1 பேதுரு 5:4
அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.
1 கொரிந்தியர் 9:25
பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
2 தீமோத்தேயு 4:7-8
7நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். 8இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்துவுக்கும் அவருடைய இராஜ்யத்திற்குமாக நாம் செய்கிற யாவும், நாம் செய்ய வேண்டிய நம்முடைய கடமையே என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும். மேலும், நாம் செய்கிற எதைவும் கிறிஸ்துவின் உதவியினால்தான் செய்கிறோம். இருப்பினும், கடவுளுடைய அற்புதமான கிருபையின் காரணமாக, சகோதரரே நம்முடைய உண்மையுள்ள ஊழியத்திற்கான வெகுமதிகளைப் பெறுகிறோம். எனவே மனந்தளர வேண்டாம்.
கேள்வி 3: இத்தகைய ஊக்கப்படுத்தலுக்கு நம்முடைய பதில் நடவடிக்கை என்ன?
கலாத்தியர் 6:10
ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.
இவ்வசனம் இதற்கான பதிலை நமக்குத் தரவில்லையா? நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம் எல்லாருக்கும் விசேஷமாக கடவுளின் பிள்ளைகளுக்கு நன்மைகளைச் செய்வதைத் தொடர வேண்டும். நம்முடைய உழைப்பிற்கான பலனைப் பார்க்க முடியாவிட்டாலும் முழு இருதயத்தோடு உழைக்கிறவர்களாக இருக்க வேண்டும். நாம் சோர்வுற்றிருக்கிறபோதும், நம்முடைய முயற்சிகளை ஒருவரும் பாராட்டாதபோதும், அறுவடை நாள் வந்துகொண்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்திருங்கள். அதாவது, ஓய்வு வந்துகொண்டிருக்கிறது; வெகுமதிகள் வந்துகொண்டிருக்கிறது; கிறிஸ்து வந்துகொண்டிருக்கிறார்!
ஆனால் இந்த இடத்தில் “மனந்தளரக் கூடாது” என்பதை மிக உறுதியாக நமக்குக் காட்டும் இறுதியான இரண்டு வசனப்பகுதிகளை அவைகளின் சந்தர்ப்ப சூழலின் அடிப்படையில் பார்க்கலாம்.
ஆ. 2 கொரிந்தியர் 4:1,16
1இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம்பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.
16ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
கேள்வி 1: நாம் ஏன் மனந்தரளக் கூடும்?
சுவிசேஷ ஊழியர்கள் ஏன் மனந்தளரக் கூடும் என்பதை இந்த வசனங்களின் சந்தர்ப்ப சூழலின் அடிப்படையில் மூன்று காரணங்களை இங்கு நாம் பார்க்கலாம்.
நாம் ஊழியம் செய்கிறவர்களின் குருட்டுத்தனமும், இருதய கடினமுமே நாம் மனந்தரள காரணம்.
2 கொரிந்தியர் 4:3-4
3எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். 4தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
2 கொரிந்தியர் 3:14-15
14அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. 15மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.
கடுமையான சோதனைகளையும் உபத்திரவங்களையும் நாம் அனுபவித்துக் கொண்டிருப்பதே நாம் மனந்தரள காரணம். ஊழியத்தில் உண்மையாயிருப்பதனால் வருகிற உபத்திரவங்களும் இந்த சோதனைகளில் அடங்கும்.
2 கொரிந்தியர் 4:8-12
8நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; 9துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை. 10கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். 11எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். 12இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன்செய்கிறது.
2 கொரிந்தியர் 4:17
மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகள் நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
2 கொரிந்தியர் 1:3-11
3நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். 4தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர். 5எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. 6ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது. 7நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல, எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம். 8ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று. 9நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம். 10அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம். 11அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.
வயது முதிர்ந்து, மரணத்தை நெருங்குகிற மனித உடலின் சரீரத் தோற்றத்தின் சரிவும் காரணம்.
2 கொரிந்தியர் 4:7, 16
7இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
16ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
2 கொரிந்தியர் 5:1, 4, 8
1பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
4இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்.
8நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.
கேள்வி 2: பவுல் ஏன் மனந்தளரவில்லை?
இந்த சந்தர்ப்பதின் அடிப்படையில் பவுல் இதற்கு குறைந்தது ஐந்து காரணங்களைத் தருகிறார்.
(1) ஏனென்றால் அவரும் அவருடைய ஊழியத்திற்கு விசுவாசத்தோடு கீழ்ப்படிந்தவர்களும் கடவுளிடமிருந்து வந்த இரக்கத்தைப் பெற்றார்கள்.
2 கொரிந்தியர் 4:6, 12
6 இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
12 இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன்செய்கிறது.
2 கொரிந்தியர் 3:16 – 4:1
16 அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம். 17 கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. 18 நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
1 இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம்பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.
கடவுளுடைய இரட்சிப்பின் ஆசீர்வாதங்களைத் தனிப்பட்ட விதத்தில் அனுபவித்தது மட்டுமல்லாமல், மற்றவர்களிலும் அதைப் பார்த்தார். மற்றவர்களுக்கு இத்தகைய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் ஊழியம் தனக்குக் கொடுக்கப்பட்டதை, தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதினார்.
எபேசியர் 3:6-8
6 இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை. 7 தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்திற்கு ஊழியக்காரனானேன். 8 பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
(2) ஏனென்றால் கடவுள் புறம்பான மனிதனை அழித்தும் உள்ளான மனிதனை நாளுக்கு நாள் புதுப்பிக்கிறார்.
2 கொரிந்தியர் 4:16
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
(3) ஏனென்றால் இப்போதிருக்கிற உபத்திரவங்கள் அவருக்கு நித்திய கனமகிமையைக் கொண்டு வருகின்றன. மீண்டும் வெகுமதியைப்பற்றிய வாக்குத்தத்தத்தைக் கவனியுங்கள்.
2 கொரிந்தியர் 4:17
மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகள் நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
(4) ஏனென்றால் மரணமானது அவருடைய அற்புதமான இரட்சகரோடு இருப்பதாகும்.
2 கொரிந்தியர் 5:6-8
6 நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். 7 இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம். 8 நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.
(5) ஏனென்றால் மரிக்கும் அவருடைய சரீரம் புது வாழ்விற்கென்று உயிர்ப்பிக்கப்படும்.
2 கொரிந்தியர் 4:13-14
13 விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம். 14 கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.
2 கொரிந்தியர் 5:1-4
1 பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். 2 ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்; 3 தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம். 4 இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்.
கேள்வி 3: இதற்கான பதில் நடவடிக்கையாக பவுல் என்ன செய்தார்?
விசுவாசத்தோடு கடவுளுடைய வார்த்தையை வெளிப்படையாகவும் உண்மையாகவும் தொடர்ந்து பிரசங்கித்தார்.
2 கொரிந்தியர் 4:2, 5, 13
2 வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.
5 நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.
13 விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.
2 கொரிந்தியர் 1:12-13
12 மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும் விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது. 13 ஏனென்றால், நீங்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களையேயன்றி, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுபரியந்தமும் அப்படியே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கிறேன்.
2 கொரிந்தியர் 2:17
அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.
அவர் ஏன் இதை செய்தார்?
2 கொரிந்தியர் 4:18
ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
ஏனென்றால் நம்முடைய சரீரப்பிரகாரமான கண்களால் எதைப் பார்க்கிறோமோ அது உண்மையானதல்ல. காணப்படாத உண்மைகளே நித்தியமானவைகள். நடைமுறையில் இது நமக்கு எதை விளக்குகிறது?
2 கொரிந்தியர் 5:7
இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம்.
சகோதரர்களே, விசுவாசத்தின் மூலமாக நாம் உழைக்க வேண்டுமே தவிர, பார்ப்பதின்படியல்ல. விசுவாசத்தின் மூலமாக மிகுந்த வைராக்கியத்தோடு நடக்கவும் உழைக்கவும் கடவுள் நமக்கு உதவுவாராக.
முடிவாக, நான் வயது முதிர்ந்து வருகிறதனால் எனக்கு மிகவும் பிடித்தமான, அற்புதமான பகுதியாக தெரிகிற ஒரு இறுதி வசனப்பகுதியோடு இப்பாடத்தொடரை நான் முடிக்க விரும்புகிறேன்.
சங்கீதம் 73:23-26
23 ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். 24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். 25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. 26 என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.
நாம் ஏன் முழுமையான வைராக்கியம் கொண்டிருக்க வேண்டும்? ஏனென்றால் எல்லாவற்றையும்விட மிகுந்த விலைமதிப்பற்ற பொக்கிஷம் நம்மிடம் இருக்கிறது. நம்முடைய உண்மையுள்ள, கிருபையுள்ள, அன்புள்ள கடவுளை நாம் கொண்டிருக்கிறோம். அவரிடமிருந்தே நம்முடைய இருதயங்களில் எல்லா வல்லமையும் வைராக்கியமும் உருவாகின்றன, என்றென்றும் தொடருகிறவையாகவும் இருக்கிறது. சகோதரர்களே இவையனைத்தும் நம்மைப் பற்றியதல்ல. இது நம்முடைய வைராக்கியமுள்ள கடவுளைப் பற்றியது. அவருக்கே எல்லா புகழும் மகிமையும் உண்டாவதாக. ஆமென்.