திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2019 -ம் ஆண்டு நான்காம் இதழ்

1. வாசகர்களே!

2. இளமையான 25 வயது!

3. எங்கே போய்விட்டது வேதப்பிரசங்கம் 

4. ஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)

5. வேதத்தை விளங்கிக்கொள்ள இன்றியமையாத அம்சங்கள் – A.W. பின்க்

 

வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே! இந்த இதழின் சிறப்பு என்ன தெரியுமா? இந்த வருடத்தோடு திருமறைத்தீபம் இருபத்தைந்து வயதைப் பூர்த்தி செய்திருக்கிறது. இருபதைக் கடந்தது நேற்றுபோல் இருக்கிறது. இருபத்தைந்து வயதை ஒரு சபை வெளியிட்டு வரும் இதழ் கடந்திருப்பது என்பது சாதாரணமானதல்ல. அத்தனை வருடங்கள் சபைகள்கூட இந்தக்காலத்தில் நிலைத்திருப்பதில்லை; அதாவது சத்தியத்தில் நிலைத்திருப்பதில்லை. சத்தியத்தைவிட்டு விலகக்கூடாது என்பது இதழின் ஆரம்ப இலக்குகளில் ஒன்று. அதிலிருந்து விலகாமலிருக்க கர்த்தர் நிச்சயம் உதவியிருக்கிறார். பச்சோந்திப் பத்திரிகையாக திருமறைத்தீபம் இல்லாமலிருக்க கர்த்தரும் வாசகர்களும் நமக்கு ஊக்கமளித்து வருகிறார்கள்.

நம்மினத்தில் ஆவிக்குரிய, சத்தியவேதம் சார்ந்த பிரசங்கங்கள் இல்லாமலிருக்கும் குறை நமக்குத் தெரிந்ததுதான். ஊழியங்கள் ஈசல்கூட்டம்போல் பெருகிப் போயிருக்கின்றன; பிரசங்கங்கள் தண்ணீரையும், உணவையும் மாதக்கணக்கில் காணாத நகரத்துத் தெரு மாடுகளைப்போல மெலிந்துபோயிருக்கின்றன. கிறிஸ்தவர்களாகத் தங்களை இனங்காட்டிக்கொள்ளும் அநேகருக்கு பிரசங்கத்தைப்பற்றிய உணர்வே இல்லாமலிருப்பது எனக்கு எப்போதுமே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. பிரசங்கமே ஆராதனையில் முதன்மை பெறும் அம்சம். அந்தப் பிரசங்கம் வேதப்பிரசங்கமாக இருக்கவேண்டிய நிலையில் இல்லாமல் போனால் ஆத்துமாக்கள் கர்த்தரின் பிரசன்னத்தை அறிவதெப்படி? அதுபற்றிய ஆக்கமொன்றை இந்த இதழில் எழுதியிருக்கிறேன்.

ஜொசுவா ஹெரிஸின் வாழ்க்கையில் நிகழ்ந்திருப்பது மிகவும் கவலைக்குறிய விஷயம். அவர் யார் என்று கேட்கிறீர்களா? அவர் பற்றிய ஆக்கத்தை வாசித்துப் பாருங்கள். அத்தோடு பிசாசு ஆதியாகமத்தை எப்படியெல்லாம் தாக்கி அழிக்கப்பார்க்கிறான் என்பதையும் ஒரு ஆக்கத்தில் விளக்கியிருக்கிறேன். இவ்விதழின் இறுதி ஆக்கம் ஆர்த்தர் பிங்கின் நூலில் இருந்து வரும் ஒரு மொழிபெயர்ப்பு. வேதத்தை விளங்கிக்கொள்ள இன்றியமையாத அம்சங்கள் பற்றியது அது.

இருபத்தி ஐந்து வருடத்தை திருமறைத்தீபம் பூர்த்தி செய்ய நமக்கு உதவியிருக்கும் கர்த்தருக்கும், இதழால் தொடர்ந்து பயனடைந்து வரும் வாசகர்களுக்கும் இதழ்குழு சார்பாக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். – ஆர்

 

 

இளமையான 25 வயது!

எளிமையான முறையில் 1995ம் வருடம் எளிய முயற்சியாக திருமறைத்தீபம் உருவானது. நண்பர்கள் சிலரின் ஊக்குவிப்பினால் பெரும் பணச்செலவில்லாமல் ஆரம்பமான இதழ் பணி இன்றும் சுயநலநோக்கமெதுவுமின்றி வளர்ந்து, விரிந்து, பரந்து உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழ் கிறிஸ்தவர்கள் வாசித்துப் பயனடையும் ஆவிக்குரிய இதழாக இருந்துவருகிறது. இந்த இருபத்தி ஐந்து வருடங்களும் எத்தனை வேகமாக ஓடிவிட்டன. இதழ் பணியில் ஈடுபட்டு வருகின்ற எவருமே இத்தனை வருடங்களுக்கு இதழ் பணி செய்யப்போகிறோம் என்று நினைத்தும் பார்த்ததில்லை.

எதையும் மறந்துவிடுவது என்பது மனித சுபாவம். எதிர்காலத்தை நோக்கி அதிகளவு சிந்திக்கும் மனிதன் ஒருநாளும் கடந்தகாலத்தை எண்ணிப்பார்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை. அது மனிதனைப் பிடித்திருக்கும் வியாதிகளில் ஒன்று. ஆவிக்குரிய மனிதன் நிச்சயம் கடந்தகாலத்தை நினைத்துப் பார்க்கிறவன். வேதத்தில் தீர்க்கதரிசிகள் முதல் இயேசுவும், அவருடைய அப்போஸ்தலர்களும் வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்கவேண்டியதன் அவசியத்தை அடிக்கடி வற்புறுத்தியிருக்கிறார்கள். ஏன், அப்படித் திரும்பிப்பார்ப்பது அவசியம் என்று கேட்கிறீர்களா? திரும்பிப் பார்க்கிறபோதுதான் நாம் செய்திருக்கும், செய்து வரும் தவறுகளைத் திருத்திக்கொள்ள முடியும்; திரும்பிப் பார்க்கிறபோதுதான் நாம் அடைந்திருக்கும் இரட்சிப்பின் மகத்துவத்தை நாம் நினைத்துப் பார்க்க முடியும்; திரும்பிப்பார்க்கிறபோதுதான் பரிசுத்தவாழ்க்கையில் நாம் போகவேண்டிய பாதையின் தொலைவு நமக்குப் புரியும். திரும்பிப்பார்ப்பது அந்தளவுக்கு ஆவிக்குரிய மனிதனுக்கு அவசியம். திரும்பிப்பார்க்க மறுக்கின்ற மனிதன் திருந்துவதுமில்லை; உயர்வதுமில்லை.

வருடங்கள் உருண்டோடிப் போய்விட்டாலும், 25 வருட இதழ் பணி நிறைவுற்றுவிட்டாலும் பின்நோக்கிப் பார்க்கின்றபோது நாம் எடுத்துவைத்திருக்கும் பாதையின் ஆரம்ப இலக்கிலிருந்து இன்றுவரை தவறாது போய்க்கொண்டிருக்க கர்த்தர் நம்மை வழிகாட்டியிருப்பதற்காக அவருக்கு முதலில் நன்றிகூறவேண்டும். அந்த ஆரம்ப இலக்கு என்ன தெரியுமா? வேதபோதனைகளை அதில் எந்தவித சமரசப்போக்கிற்கும், முரண்பாட்டிற்கும் இடங்கொடுக்காமல் உள்ளது உள்ளபடியே எழுதி வாசகர்களை வழிநடத்த வேண்டும் என்பதுதான். எல்லாத் திருச்சபைப்பிரிவுகளுக்கும் ஏற்றவிதத்தில் அவர்களுடைய நம்பிக்கைகளுக்கும் போக்கிற்கும் எதிரானவிதத்தில் எதையும் எழுதிவிடாமல் அவர்களோடு ஒத்துப்போகும் விதத்தில் மட்டும் எழுதிவரும், வேதத்தை வைத்து விபச்சாரம் பண்ணும் வேலையை ஒருபோதும் செய்யக்கூடாது என்பதே அந்த இலக்கு. இதைப் பவுல் 2 கொரிந்தியர் 4:2ல் சொல்லியிருக்கிறார்.

வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.

இந்த வசனத்தின் உட்கருத்து தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிப்பட்ட போதும் அது உள்ளது உள்ளபடியே கிரேக்கத்தில் இருப்பதுபோல் மொழிபெயர்க்கப்படவில்லை. இந்த வசனத்தை ESV பின்வருமாறு மொழிபெயர்த்திருக்கிறது.

But we have renounced disgraceful, underhanded ways. We refuse to practice cunning or to tamper with God’s word, but by the open statement of the truth we would commend ourselves to everyone’s conscience in the sight of God.

வடிவம் மாற்றப்பட்ட திருமறைத்தீபத்தின் முதல் இதழ்
ஜனவரி 2002

இந்த வசனத்தில் இரண்டு வார்த்தைப்பிரயோகங்களைக் கவனிப்பது அவசியமாகிறது. முதலாவது to tamper with God’s word. இதையே வேதத்தை வைத்து விபச்சாரம் செய்வது என்று சொன்னேன். அந்தவிதத்திலேயே KJV, NKJV, NASB போன்ற ஆங்கில மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்த்திருக்கின்றன. அவை இதை adultrating the word of God என்று மொழிபெயர்த்திருக்கின்றன. இதன் கிரேக்க மூலம் அந்த அர்த்தத்தையே கொண்டிருக்கிறது. அதாவது, மெய்யான வசனத்தைத் திரித்துப் பொய்யானதாக மாற்றுவது என்று அதற்கு அர்த்தம். ஒரு விபச்சாரி தன்னுடைய செயற்கையான போலி அழகால் கறைபட்ட சரீரத்தோடு ஒருவனை மயக்குகிறபோது அவள் மாயமானைப் போல நடந்துகொள்கிறாள். ஒரு பிரசங்கி வேதவசனத்தை அதில் உள்ளதை மறைத்து, அதைத் திரித்து தன் வார்த்தை ஜாலத்தால் அதில் காணப்படாத பொய்யை உண்மையைப்போல் தெரியும்படி ஆத்துமாக்களுக்கு முன் பிரசங்கிக்கும்போது அவன் வேதத்தை வைத்து விபச்சாரம் செய்கிறான். இதைத் தானோ தன்னைச் சார்ந்து நிற்கும் அப்போஸ்தலர்களோ ஒருபோதும் செய்யவில்லை என்கிறார் பவுல்.

அத்தோடு இந்த வசனத்தின் இன்னுமொரு வார்த்தைப்பிரயோகத்தை நாம் கவனிக்கவேண்டும். தான் எதைச் செய்வதை இலக்காகக் கொண்டிருக்கவில்லை என்பதை மட்டும் பவுல் விளக்காமல் கர்த்தருக்கு விசுவாசமாக இருந்து ஒரு பிரசங்கியாகத் தான் எதைச் செய்துவருகிறேன் என்றும் பவுல் சொல்லுகிறார். இதை ESV, ‘by the open statement of the truth’ என்று மொழிபெயர்த்திருக்கிறது. அதாவது சத்தியத்தை உள்ளது உள்ளபடியே மனிதர்களுக்கு முன் வெளிப்படுத்துவதாகப் பவுல் கூறுகிறார். எந்தவிதத்திலும் வேத வசனங்களை வைத்து வியாபாரம் செய்வதை அடியோடு தவிர்த்து கர்த்தர் தன் வசனத்தில் சொல்லியிருப்பதை மட்டும், அதிலிருப்பதைப்போலவே மனிதர்களுக்கு பிரசங்கம் செய்துவருவதைப் பவுல் தன் ஆத்மீக இலக்காகக் கொண்டிருந்தார்.

திருமறைத்தீபத்தின் 10வது ஆண்டு நிறைவு விழா இதழ்
ஜூலை 2005

திருமறைத்தீபத்தின் மூலம் பவுல் சொல்லியிருப்பதை இதழை வெளியிட்டுவரும் நாங்கள் செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆரம்பத்திலிருந்தே இதழ் மூலம் நாம் விசுவாசிக்கும் சத்தியத்தை நாம் வெளிப்படுத்தாமலிருக்கவில்லை. சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றும் சபைப்பிரிவைச் சார்ந்தவர்கள் நாங்கள். அதை மறைத்து எங்களை வேறுவிதத்தில் காட்ட நாம் ஒருபோதும் துணியவில்லை. அந்த சத்தியங்களே வேதத்தில் நாம் காணும் வரலாற்றுபூர்வமான, அப்போஸ்தலர் காலத்திலிருந்து வருகின்ற வேதஉண்மைகள் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தி வருகிறோம். நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் அது அருகிக் காணப்படுகிறது என்பதற்காகப் பரவலாக உண்மையைப் போலத் தோற்றமளித்து வரும் பொய்க்கு நாம் ஒருபோதும் அடிபணிந்து வக்காலத்து வாங்கத் துணியவில்லை. இந்த இருபத்தி ஐந்து வருடகாலத்தில் எத்தனையோ புதுப்புதுப் போதனைகள் வந்துபோயிருக்கின்றன. அவற்றின் மாயத்தோற்றத்தில் மயங்கி விழுந்துபோன சபைகள் அநேகம். கிறிஸ்தவத்தில் சைக்கோலஜியை நுழைத்து அதன் அடிப்படையில் ஆத்மீகப் பிரச்சனைகளுக்கு ஆலோசனை கொடுக்கும் புதிய முறை இக்காலகட்டத்தில் உருவானது. அதற்கு அடிமையான சபைகள் அநேகம். பின்னால் இது மடிந்துபோனது.

அதற்குப் பிறகு வந்தது புதிய உடன்படிக்கை இறையியல். இது பழைய அன்டிநோமியனிச பாதைக்குப் புதுப்பெயர். இது பத்துக்கட்டளைகளின் பயன்பாட்டையும், ஓய்வு நாளை ஆண்டவருடைய நாளாக அனுசரிப்பதையும் எதிர்த்தது. அதற்குப் பிறகு இமேர்ஜன்ட் இயக்கம் என்று ஒன்று உருவாகி திருச்சபைகளைக் குழப்பின. அதுவும் செயலிழந்தது. அப்போஸ்தலர் 28 சபைகள் இதற்குப் பிறகு உருவாக ஆரம்பித்தன. அதற்குப் பிறகு வந்ததே புதிய கல்வினிசம். நாம் எப்போதுமே புதிதாக உருவாவதையெல்லாம் கர்த்தரின் கிரியையாகப் பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. எது புதிதாக உருவெடுத்தாலும் அதைக் கொஞ்சக்காலம் பொறுத்திருந்து ஆராய்ந்து பார்க்கும்போது அதன் மெய்தன்மை புலப்படும் என்ற நிதானத்தோடு செயல்பட்டு வந்திருக்கிறோம்.

மேலைநாடுகளில் இன்று ‘நியூ கல்வினிசம்’ என்ற பெயரில் சீர்திருத்த போதனைகளையும் கெரிஸ்மெட்டிக் போதனைகளையும் இணைத்து ‘சீர்திருத்த கெரிஸ்மெட்டிக்’ எனும் புதுப் பெயரைச் சூட்டி சீர்திருத்தவாதம் கெரிஸ்மெட்டிக் போதனைகளுக்கு எதிரானதல்ல என்று காட்டும் ஒரு புதுப்போக்கு புறப்பட்டபோதும் அந்த மாயமானுக்குப் பின்னால் போய் ஏமாந்த சீதையாக நாமிருந்துவிடவில்லை. கிறிஸ்தவ வரலாற்றில் காலத்துக்குக் காலம் மாயமான்கள் எழுந்து நடமாடியிருந்திருப்பது நமக்குத் தெரியாததல்ல. சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியவர்களும் ஆணித்தரமாக சத்தியத்தை மட்டும் போதிக்கவில்லை; அதேவிதத்தில் பொய்யை இனங்கண்டு எதிர்த்தும் வந்திருக்கிறார்கள். அதைத் திருமறைத்தீபம் தொடர்ந்து செய்துவர முயற்சிக்கும். சத்தியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சுயநலத்துக்காக ஊழியம் செய்து வருவதையும், இதழூழியத்தை சுயவிளம்பரத்துக்காகப் பயன்படுத்தாமல் சத்தியப்பரப்புதலுக்காக மட்டும் பயன்படுத்தவும் தொடர்ந்து துணைபுரிந்து வரும் சர்வவல்லவராகிய கர்த்தருக்கு நன்றி கூறுகிறோம்.

திருமறைத்தீபத்தின் 75வது இதழ்
அக்டோபர் 2014

இருபதாவது வருட முடிவில் ஒரு ஆக்கத்தில் இத்தனைக் காலமாக இதழ் மூலம் கர்த்தர் செய்திருக்கும், செய்து வரும் பணிகளைக் குறிப்பிட்டு விளக்கியிருந்தேன். அரைத்த மாவையே மீண்டும் அரைக்க விரும்பவில்லை. இருந்தாலும் கர்த்தர் தொடர்ந்து செய்துவருகின்ற அற்புதமான செயல்களை நினைத்துப் பார்த்து அவருக்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியவில்லை. நாம் வாழ்ந்து வரும் பின்நவீனத்துவ காலம் எதையும் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே வெற்றியாகக் கருதி வருகிறது. அந்தப் பார்வையே கிறிஸ்தவ உலகையும் ஆண்டுவருகிறது. ஆயிரக்கணக்கில் கூடிவரும் சத்தியப் புரட்டல்காரர்களான பெனிஹின்னின் கூட்டத்திலும், பால் தினகரனின் கூட்டத்திலும் கர்த்தர் இருந்துவிட்டால் கர்த்தருக்குத்தான் எத்தனை அவமானம், அவமரியாதை! கூட்டம் இருக்குமிடத்திலெல்லாம் கர்த்தர் இல்லை என்பதற்கு பாகால் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 400 போலித்தீர்க்கதரிசிகள் உதாரணம் இல்லையா? ஆனால், தனித்து நின்றிருந்த எலியாவோடும் எலிசாவோடும் கர்த்தர் இருந்தார். வேதம் போதிக்கும் மீட்பின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தாலும் அவருடைய மக்களை மீதமானவர்களாகவே (Remnant) அது விளக்குகிறது. பெருந்தொகையான இஸ்ரவேலர் மத்தியில் தேவனுடைய மக்கள் மீதமானவர்களாகவே இருந்திருக்கின்றனர். விசேஷம் என்னவென்றால் குறைந்த எண்ணிக்கையுள்ளவர்களைக் கொண்டே கர்த்தர் எப்போதும் பெருங்காரியங்களைச் சாதித்திருக்கிறார். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், இந்த இதழுக்குப் பின் ஆரவாரிக்கும் பெருங்கூட்டமில்லை; ஆனால் விசுவாசமுள்ள செயல்வீரர்கள் இருக்கிறார்கள். முகத்தாட்சண்யம் காட்டி சுயலாபத்துக்காக எங்களுக்கு சோப்புப்போடுகிறவர்கள் இல்லை; தீவிரமாக ஜெபித்து சுயத்தை இழந்து உழைக்கிறவர்கள் இருக்கிறார்கள். வெறும் வார்த்தைகளைக் கொட்டிப் போலிப்பாராட்டுதல்களை அள்ளித்தெறித்து ஏதும் கிடைக்காதா என்று பார்த்துக்கொண்டிருக்கும் கூட்டம் இல்லை; தங்களால் முடிந்ததையெல்லாம் கர்த்தருக்காக செய்யவேண்டும் என்ற தீவிர வாஞ்சையும், வைராக்கியமுமுள்ளவர்கள் இருக்கிறார்கள். இது உலகம் பாராட்டும் பெருங்கூட்டம் இல்லை; உண்மையும், அன்பும் குடிகொண்டிருக்கும் மீதமானவர்கள் மட்டுமே.

திருமறைத்தீபத்தின் 20வது ஆண்டு நிறைவு விழா இதழ்
ஜனவரி 2015

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து திருமறைத்தீபத்தை அச்சிடும் பணி இந்தியாவுக்கு மாற்றப்பட்டது. இந்திய வாசகர்களே அதிகமானவர்களாக இருப்பதால் அவர்களை இலகுவாக சென்றடையவும், இதழ்குழுவோடு அவர்கள் இலகுவாகத் தொடர்புகொள்ளவும் இந்த மாற்றத்தைச் செய்ய ஒப்புக்கொண்டோம். இந்தியாவில் நம்மோடு இணைந்துழைக்கும் அருமை நண்பர்களுக்கு எமது நன்றிகள்! ஸ்ரீ லங்காவில் இதழை அச்சிட்டு விநியோகித்து வருகிறவர்களுக்கும் எங்கள் நன்றிகள்! திருமறைத்தீபத்தை வந்துபோய்க்கொண்டிருக்கிற எல்லா இதழ்களையும்போல் பார்க்காமல் அதன் தனித்துவத்தை உணர்ந்து வாசித்துப் பயன்பெற்று வரும் வாசகர்களுக்கு இதழ்குழு தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறது. பெரியவர்களில் இருந்து 21ம் நூற்றாண்டு வாலிபர்கள்வரை வாசகர்களை எட்டியிருக்கிறது இதழ். இதழ் மீது அதீத காதல்கொண்டு வாசித்து வருகிறவர்களையும் நானறிவேன். உங்களுக்கெல்லாம் தொடர்ந்தும் சத்தியத்தை சத்தியமாக எழுதி வெளியிட்டு கர்த்தரின் பாதையைக் காட்டும் இந்தப்பணியில் தளர்வடையாமல் நாங்கள் தொடர எங்களுக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.

 

 

எங்கே போய்விட்டது வேதப்பிரசங்கம்

இன்று நம்மினத்தில் கிறிஸ்தவம் இருக்கும் நிலைபற்றி இவ்விதழில் பல தடவை எழுதியிருக்கிறேன். அது தாழ்ந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு எண்ணிலடங்காத அத்தாட்சிகள் இருக்கின்றன. கிறிஸ்துவைவைத்து வாழ்க்கை நடத்துகிறவர்களே பெரும்பாலான ஊழியக்காரர்கள். மித்தம் மீதமிருக்கிறவர்களுக்கு சரியான வழிநடத்தலும், போதனையும், அழைப்பும், பயிற்சியும் கிடைக்காததால் தங்களுக்குத் தெரிந்ததை, சரியெனப்பட்டதை தன்தன் வழியில்போய் செய்துவருகிறார்கள். அதனால், தலைநிமிர முடியாத நிலையில் கிறிஸ்தவ ஊழியங்கள் இருப்பதோடு, ஆத்துமாக்கள் சத்தியம் கிடைக்க வழியில்லாமல் தல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆத்தும ஆதாயத்துக்கும், ஆத்தும விருத்திக்கும் அடிப்படைத் தேவையாக இருப்பது வேதப்பிரசங்கமும், வேதபோதனையும். இதன் மூலம் மட்டுமே கர்த்தர் பாவிகளுக்கு இரட்சிப்பை அளித்து, விசுவாசிகள் ஆவிக்குரிய வளர்ச்சியடைய வழிசெய்து வருகிறார். அதனால் வேதப்பிரசங்கமும், வேதபோதனையும் வேதபூர்வமாக இருப்பது மிகவும் அவசியம். வேதப்பிரசங்கத்தையும் வேதபோதனையும் தவிர்த்து வேறுசில கிருபையின் நியமனங்களையும், அதாவது ஜெபம், ஆராதனை போன்றவற்றையும் கர்த்தர் ஆத்தும விருத்திக்காகப் பயன்படுத்தி வந்தபோதும் வேதப்பிரசங்கத்தையும், வேதபோதனையையும் இந்த விஷயத்தில் மிக உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறார். ஆத்தும ஆதாயத்துக்கும், ஆத்தும வளர்ச்சிக்கும் இதில் அக்கறை காட்டாமல் வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்தி வருகிறவர்களே இன்று ஏராளம். அநேகர் ஊழியங்களில் பயன்படுத்தி வரும் வேறு எந்தக் காரியத்தையும் கர்த்தர் ஆத்தும ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதில்லை. பாடல்களுக்கும், இசைக்கும் ஆராதனையில் ஓரளவுக்கு இடமிருந்தபோதும் அவை ஆத்தும ஆதாயத்துக்கு உதவாதவை. ஜெபத்திற்கும் ஆராதனையில் இடமிருந்தபோதும் ஆத்தும ஆதாயத்துக்கு கர்த்தர் அதை நேரடியாகப் பயன்படுத்துவதில்லை. அதாவது ஆத்தும ஆதாயத்துக்கு நேரடியாகக் கர்த்தர் பயன்படுத்தும் கருவியை ஒதுக்கிவைத்துவிட்டு ஜெபத்தை மட்டும் செய்துகொண்டிருப்பதால் எந்த ஆத்துமாவும் இரட்சிப்படையப் போவதில்லை; ஆத்துமாக்கள் ஆத்தும வளர்ச்சியடையப் போவதில்லை. கர்த்தர் ஆத்தும ஆதாயத்துக்குப் பயன்படுத்துகின்ற ஒரே கருவி வேதவார்த்தைகள் மட்டுமே. அதுவும் அது பிரசங்கத்தின் மூலமும் போதனை மூலமும் கொடுக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

அநேகர் ஊழியத்தைச் சுயநலத்துக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை இனங்கண்டு கொள்வது அப்படியொன்றும் கடினமான காரியமல்ல. எந்த ஊழியத்தில் காணிக்கைக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு அதைக்கேட்டுப் பெற்றுக்கொள்வதில் தீவிர நாட்டம் காட்டப்படுகிறதோ அது நிச்சயம் கர்த்தரின் ஊழியமல்ல; அது கள்ளப்போதகர்கள் திட்டமிட்டு நடத்திவரும் சுயநல ஆத்துமப் பணவசூல் மட்டுமே. இதை அவர்கள் எந்தவிதத்திலும் மறைக்காமல் வெளிப்படையாக செய்துவருவதற்குக் காரணம் நம்மினத்தவர்கள் மிக இலகுவாக ஏமாறிவிடுகின்ற தன்மையைக் கொண்டிருப்பதால்தான். நான்கு வருடங்களுக்கு ஒருதடவை அரசியல்வாதி எத்தனையோ வாக்குறுதிகளை அள்ளித் தெறிக்கின்றபோது, அவர்கள் கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை எந்தவிதத்திலும் நிறைவேற்றாமல் போயிருந்தபோதும் மறுபடியும் அவர்களுக்கு நாம் வாக்களித்துவிடுகிறோம் இல்லையா? அதைப்போலத்தான் போலிகளை இனங்கண்டுகொள்கின்ற பக்குவமும் நிதானமும் இல்லாமல், ஊழியக்காரர்கள் என்ற போர்வையில் திரிகிறவர்கள் கையில் நாம் விழுந்து ஏமாந்து போகிறோம்.

ஆத்தும ஆதாயத்திற்கும், ஆத்தும வளர்ச்சிக்கும் அவசியமான, வேதவசனங்களில் தேர்ந்த அறிவைப் பெற்றுக்கொள்ளுவதில் போலிப்போதகர்களும், சோம்பேறி ஊழியக்காரர்களும் அக்கறைகாட்ட மாட்டார்கள். சமீபத்தில் நான் செய்திகள் அளித்த ஒரு போதகர்களுக்கான கூட்டத்தில் ஒரு போதகர் சரியாக சாப்பாட்டு நேரத்திற்கு வந்து சேர்ந்தார். கூட்டம் நடப்பதுபற்றி அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தபோதும் அதிலெல்லாம் அவருக்கு அக்கறையில்லை. இருந்தும், கிடைக்கும் சாப்பாட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் அவருக்கு அதிக அக்கறை இருந்தது. நிச்சயம் அந்த மனிதர் ஆத்துமாக்களைக் கரிசனையோடு வழிநடத்துகிற கர்த்தருக்கு விசுவாசமான போதகராக இருக்கமாட்டார்.

மெய்யாகவே கர்த்தரின் ஊழியத்துக்கு அழைக்கப்பட்டிருப்பவர்கள் வேத வசனங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எப்படி ஒரு டாக்டர் வைத்தியம் செய்வதில் தேர்ச்சிபெற்றிருப்பது அவசியமோ அதுபோலத்தான் பிரசங்கத்தில் ஈடுபடுகிற ஒரு போதகனும் வேதஅறிவில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். போலி வைத்தியன் எந்தவிதத்தில் நோயாளிக்கு ஆபத்தானவனாக இருந்துவிடுவானோ அதுபோலத்தான் ஒரு போலிப் போதகனும் ஆத்துமாக்களுக்கு ஆபத்தானவன். வேதவசனங்களில் தேர்ச்சி அடைந்திராத ஒருவனால் வேதவசனங்கள் தெரிந்திருப்பதுபோல் நடிக்கமட்டுமே முடியும்; எதாவது உண்மைக்குமாறான விளக்கங்களைக் கொடுத்து ஆத்துமாக்களை ஏமாற்ற மட்டுமே முடியும். வேதவசனங்களில் நல்லறிவு பெற்றிராத அந்த நபர் ஆத்துமாக்களை திசைதிருப்பி வேறுகாரியங்களில் கவனம் செலுத்தச் செய்வான். இது இன்று அநேக இடங்களில் அநியாயத்துக்கு சர்வசாதாரணமாகவே நடந்து வருகிறது.

இன்றைக்கு சபை சபையாகப் போலிக்கூட்டமொன்று கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் அதீத உணர்ச்சிக்கு மட்டும் இடங்கொடுத்து ஆராதனைவேளையில் கைகளைத்தட்டிக் கூப்பாடு போட்டு, சரீரசுகத்திற்கும், வாழ்க்கை வசதிக்காகவும் மட்டும் கர்த்தரைத் தேடி அலைந்துகொண்டிருப்பதற்குக் காரணம் வேதவசனங்களைக் கேட்டு மனந்திரும்புதலையும் மறுபிறப்பையும் அவர்கள் அடைந்திராததே. அத்தகைய இடங்களில் வேதவசனப்படி ஆணித்தரமான பிரசங்கங்களும், போதனையும் இல்லாததால் மெய்யான மறுபிறப்புக்கு வழியே இல்லை. இதை வாசிக்கிறபோது சிலர் அப்படியானால் அவர்கள் எல்லோருமே கிறிஸ்தவர்கள் இல்லையா, என்று எகத்தாளத்தோடு கேட்பார்கள்? அவர்களுக்கு நானளிக்கும் பதில்: “வேதவசனங்களை சத்தியமாகப் பிரசங்கிக்காமல் வேறுவழிகளில் மறுபிறப்பு கிடைக்க வழியிருக்கிறதா என்று வேதத்தில் இருந்து காட்டுங்கள்” என்பதுதான். என் பதிலுக்குக் காரணம் என்ன தெரியுமா? வேதவசனங்கள் சத்தியமாகப் பிரசங்கிக்கப்படாமல், அதைப் பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தாமல் வேறுவழிகளில் இரட்சிப்புக்கு வழியிருப்பதாக வேதம் காட்டாததால்தான். கர்த்தர் எதை நினைத்தாலும் அவரால் செய்ய முடியும் என்பது உண்மைதான்; அவரால் முடியாதது ஒன்றுமே இல்லை என்பதும் உண்மைதான்; இருந்தபோதும் மறுபிறப்பை அடைந்து முழு இரட்சிப்பை பாவி அனுபவிக்க பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தும்படி, கர்த்தர் வேதப்பிரசங்கத்தை மட்டுமே கருவியாக ஏற்படுத்தியிருக்கிறார். அதை அலட்சியப்படுத்தி அல்லது வெறுமனே போக்குக்குப் பயன்படுத்தி சாட்சிகளையும், வேதஆதாரமற்ற கலப்பட செய்திகளையும் கொடுத்து வருகிறபோது பரிசுத்த ஆவியானவர் அந்த இடங்களுக்கு துப்புரவாக வருவதில்லை. வேதம் அதிகாரத்தோடும், தேவபயத்தோடும், பரிசுத்தத்தோடும், உண்மையோடும், பரிசுத்த ஆவியின் வல்லமையோடும் சத்தியமாகப் பிரசங்கிக்கப்படாத இடங்களில் பாவிகளின் மனந்திரும்புதலுக்கும் இரட்சிப்புக்கும் வழியே இல்லை. இந்தக் காரணத்தால்தான் இரட்சிப்படைந்திருக்கிறேன் என்று ஞானஸ்நானம் கேட்டுவருகிற எவரிடமும் மெய்ப்போதகர்களும், மெய்யான சபைகளும், இயேசுவைப் பற்றி உன்னால் என்ன சொல்லமுடியும் என்றும், இயேசு உன்னில் என்ன செய்திருக்கிறார் என்றும் தெளிவாக அதேவேளை சுருக்கமாக விளக்கும்படிக் கேட்பார்கள். அப்படிக் கேட்பதன் மூலம் மெய்ப்போதகர்கள் அந்த நபரில் மெய்யான மறுபிறப்பு நிகழ்ந்திருக்கிறதா என்பதை அவர்கள் விளக்கத்தின் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளுகிறார்கள். அந்த நபரால் வேத அடிப்படையில் விளக்கங்கொடுக்க முடியாவிட்டால் அவருடைய மனந்திரும்புதலை நம்புவது கடினம். எந்த நபரால் தனக்குள் நேர்திருக்கும் அசாதாரண மாற்றத்தை வேதபூர்வமாக விளக்கமுடியவில்லையோ அந்த நபருக்கு ஞானஸ்நானம் கொடுப்பது தவறு.

சத்திய வசனத்தால் மட்டும் வரும் இரட்சிப்பு

இதுவரை நான் விளக்கியதிலிருந்து எந்தளவுக்கு மெய்யான வேதப்பிரசங்கமும், போதனையும் சுவிசேஷத்தை அறிவிக்கவும், ஆத்துமாக்களுக்கு போதிக்கவும் அவசியம் என்பதை ஓரளவுக்கு உணர்ந்திருப்பீர்கள். கர்த்தர் மெய்யான வேதப்பிரசங்கத்தையே மனிதன் இரட்சிப்படையப் பயன்படுத்துகிறார் என்பதை விளக்கும் ஒரு சில வசனங்களைக் கவனிப்போம்.

கொலோசெயர் 1:3-8

  1. கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு, 4. பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம், 5. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். 6. அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது; 7. அதை எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராவினிடத்தில் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்; 8. ஆவிக்குள்ளான உங்கள் அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.

இந்த வசனங்களில் பவுல் கொலோசெயரின் கிறிஸ்தவ விசுவாசத்தை (வசனம் 3) விளக்குகிறார். அது எப்படிப்பட்ட விசுவாசம்? 6வது வசனத்தில் பவுல் அதற்குப் பதிலளிக்கிறார். அந்த விசுவாசத்தை அவர்கள் அடைவதற்கு சத்திய வசனமாகிய சுவிசேஷத்தைக் கேட்க வேண்டியிருந்தது. அந்த சத்தியத்தின் மூலம் அவர்கள் தேவகிருபையைப் பற்றி அறிந்துகொண்டார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த சத்தியம் அவர்களில் பலன்தருகிறதாயிருந்தது. ஆங்கில வேதத்தில் இந்த வார்த்தைகள் பின்வரும்வகையில் இருக்கின்றன – the word of truth of the gospel which has come to you . . . and is bringing forth fruit and growing as it is also among you since the day you heard and knew the truth.

பவுல் இந்த வசனங்களில் மிகத் தெளிவாக கொலோசெயரின் விசுவாசத்திற்கான காரணி கிறிஸ்துவின் சத்தியமாகிய சுவிசேஷம் என்பதை விளக்குகிறார். அந்த சுவிசேஷ சத்தியம் அவர்களில் கிரியை செய்து ஆவிக்குரிய பலனளிப்பதாக இருந்திருக்கிறது. அந்த சத்தியத்தைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு தேவகிருபையை அறிந்து பலனளிக்க உதவியதாகப் பவுல் கூறவில்லை. அதுமட்டுமல்லாமல் ஆத்துமவிருத்திக்காக அவர்கள் இரட்சிப்படைவதற்குக் கருவியாக இருந்த அந்த சத்தியத்தில் நிரம்பி வளரவேண்டும் என்றும் 9ம் வசனத்தில் பவுல் தான் கர்த்தரிடம் ஜெபிப்பதாகச் சொல்லுகிறார். இரட்சிப்புக்கும், ஆத்தும விருத்திக்கும் இங்கே அவசியமாகக் காட்டப்பட்டிருப்பது கர்த்தரின் சத்தியவசனங்கள் மட்டுமே.

இன்னுமொரு வசனத்தையும் கவனிப்போம். எபேசியர் 1:13:

நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.

ஏற்கனவே கொலோசெயருக்கு எழுதிய நிருபத்தில் விளக்கிய அதே உண்மையை பவுல் இங்கே சுருக்கமாகத் தந்திருக்கிறார். எபேசியர் விசுவாசிகளாக மாறுவதற்குக் காரணியாக இருந்தது சுவிசேஷமாகிய சத்திய வசனம் என்கிறார் பவுல். இந்த வசனத்திலும் இந்த வசனம் காணப்படும் பகுதியிலும் வேறெந்தக் காரணியும் அவர்கள் விசுவாசத்தை அடையப் பயன்பட்டதாக பவுல் விளக்கவில்லை என்பதைக் கவனியுங்கள்.

இந்தளவுக்கு வேதம், சத்திய வசனத்தைப் பாவியான மனிதன் இரட்சிப்பு அடையக் கர்த்தர் பயன்படுத்துவதாகக் கூறுவதால்தான் சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர் ஒருமுறை, ‘நான் செய்ததெல்லாம் வசனத்தை அவர்களுக்குப் பிரசங்கித்ததுதான், அதற்கு மேல் நான் ஒன்றையுமே செய்யவில்லை’ என்றார். அது எத்தனை உண்மை. லூத்தர் கர்த்தரின் வசனத்தில் அத்தனை நம்பிக்கை வைத்திருந்தார். வேதம் சொல்லுவதுபோல், அதுவே ‘மனிதனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு தேவபலனாக இருக்கிறது’ (ரோமர் 1:16). பவுல் இன்னொரு இடத்தில் தெசலோனிக்கேயர் கர்த்தரை விசுவாசித்தவிதத்தைப் பற்றி விளக்கும்போது, 1 தெசலோனிக்கேயர் 1:5-7,

  1. எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள் நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே. 6. நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, 7. இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.

இங்கே பவுல் சுவிசேஷம் வசனத்தின் மூலமாக வந்தபோதும், அது பரிசுத்த ஆவியின் வல்லமையோடும், முழு நிச்சயத்தோடும் வந்து தெசலோனிக்கேயர் வசனத்தை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு கர்த்தரைப் பின்பற்றத் துணைபுரிந்தது என்கிறார்.

இத்தனையும் இரட்சிப்புக்கான வார்த்தையின் இன்றியமையாத அவசியத்தைப் பற்றிய உண்மையாக இருப்பதால்தான் பவுல் ரோமர் 10ம் அதிகாரத்தில் சந்தேகமில்லாதவகையில் ஆணித்தரமாக பின்வருமாறு விளக்குகிறார்.

  1. இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே. 9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். 11. அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. 12. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். 13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

இந்தப் பகுதியில் விசுவாசத்திற்கு அடித்தளமாக இருந்ததாக பவுல் காட்டுவது கர்த்தரின் வார்த்தை என்பதை 8ம் வசனத்தில் கவனியுங்கள். வார்த்தையின் மூலமாகவே விசுவாசத்திற்கான வழியேற்பட்டது. வார்த்தையைத் (வேதவசனங்களை) தவிர வேறு எதையும் விசுவாசத்திற்கான வழியாகப் பவுல் காட்டவில்லை. இம்முறையில் வார்த்தையின் அவசியத்தை விளக்கிய பவுல் தொடர்ந்து அதை இன்னொருவிதத்தில் தனக்கேயுரிய எழுத்துநடையில் அழகாக விளக்குகிறார்.

  1. அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? 15. அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.

வேதமறிந்த கிறிஸ்தவர்கள் எல்லோருக்கும் இந்த வசனங்கள் பரீட்சயமானவை. எத்தனை அழகாகப் பழைய ஏற்பாட்டு வசனமொன்றை நினைவுறுத்தி வேதவார்த்தைப் பிரசங்கத்தின் அவசியத்தையும், அதன் இன்றியமையாத தன்மையையும் பவுல் இங்கே விளக்கியிருக்கிறார்.

இந்தளவுக்கு வேதம் மனிதன் இரட்சிப்படையவும், ஆத்துமவிருத்தியடையவும் சத்தியவசனமே வல்லமையான கருவியாக இருப்பதாக விளக்குகிறபோது அந்த வேதவசனத்தைப் பயன்படுத்தி சுவிசேஷத்தையும் போதனையையும் அளிக்கின்ற பிரசங்கத்தைச் செய்வதில் சொதப்பல் மன்னர்களாக நம்மினத்துப் பிரசங்கிகள் இருப்பது வெட்கப்பட வேண்டியது மட்டுமல்ல, அது எத்தனைப் பெரிய பாவமான காரியம்.

வேதவசனங்களை விளங்கிப் பயன்படுத்த வேண்டிய முறை

வேத வசனமே மனிதனின் இரட்சிப்பிற்காகக் கர்த்தர் பயன்படுத்துகின்ற கருவி என்பது இப்போது தெளிவாகப் புரிகிறதல்லவா? அப்படியானால் அதை எப்படிப் பிரசங்கத்திலும் போதனையளிப்பதிலும் பயன்படுத்தவேண்டும்? அதன் மூலம் எப்படி நாம் கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும் என்பதை இனிக் கவனிப்போம்.

வேதவசனங்களை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியது எல்லாக் கிறிஸ்தவர்களினுடைய கடமை. அதைப் புரிந்துகொள்ளாமல் கர்த்தரின் சித்தத்தை அறிந்துகொள்ள முடியாது. சரிவர வேதத்தை வாசித்துப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும் எவரும் குறைபாடுள்ள வாழ்க்கையையே வாழ்ந்து வருவார்கள். அவர்களால் கர்த்தருக்கு, அவருடைய வார்த்தை எதிர்பார்க்கும்விதத்தில் அனைத்துக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய முடியாது; அவர்களால் ஆவிக்குரியவிதத்தில் பரிசுத்தத்தில் வளர வழியில்லை; தங்களுடைய இரட்சிப்பை நிச்சயப்படுத்திக்கொள்ளும் பக்குவமும் அவர்களுக்கு இருக்காது. இன்று அநேக ஆத்துமாக்களுக்கு வேதம் தெரியாமல் இருப்பதற்குக் காரணம் வேதத்தைப் பகுத்துப் போதித்து விளக்கும் பிரசங்கிகளும், திருச்சபைகளும் நம்மினத்தில் அரிதாக இருப்பதே. ஆத்துமாக்கள் வேதத்தை முறையாகக் கையாளும் அளவுக்கு அவர்களுக்குப் போதித்து வழிநடத்துபவர்கள் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில் மட்டுமே இருக்கிறார்கள்.

அதேவேளை வேதத்தைக் கையாண்டு ஆத்துமாக்கள் முன் நின்று பிரசங்கித்தும், போதித்தும் அவர்களை வழிநடத்துகிறவர்கள் வேதம் தெரியாமல் இருந்துவிட முடியாது. வேதம் தெரியாமல் பிரசங்கம் செய்து ஒரு சிறுபிள்ளைக்குக்கூட இடறலாக இருக்கிறவன் தன் கழுத்தில் கல்லைக் கட்டிக்கொண்டு கடலின் ஆழத்தில் விழுந்துவிடுவது நலமாக இருக்கும் என்று இயேசு சொல்லியிருக்கிறார் (மத்தேயு 18:6). ஆகவே, பிரசங்கம் செய்கிறவர்களுக்கு வேதத்தில் நல்லறிவு இருக்கவேண்டும்; தவறின்றி அதைக்கற்றுத் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்; அதை ஆத்துமாக்களுக்கு அவசியமானவிதத்தில் நிதானத்தோடும், பக்குவத்தோடும் பகுத்துப்போதிக்கும் ஆற்றலுள்ளவனாக இருக்கவேண்டும். அதை அவன் ஆவியின் வல்லமையோடு செய்கிறவனாக இருக்கவேண்டும்.

ஒரு பிரசங்கி வேதத்தை சரியாக விளங்கிக்கொண்டு பிரசங்கிக்க என்ன செய்யவேண்டும்? இனி நாம் கவனிக்கப்போவது எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் அவசியம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். இருந்தபோதும் பிரசங்கிக்கிறவனுக்கு இது இன்றியமையாதது. இந்தவிஷயத்தோடு தொடர்புடைய எத்தனையோ அவசியமான அம்சங்கள் இருந்தபோதும் ஒரு வசனத்தையோ அல்லது சில வசனங்களையோ எடுத்து அதிலிருந்து பிரசங்கம் தயாரிக்க முற்படும்போது அடிப்படையில் பிரசங்கி செய்யவேண்டிய காரியங்களை மட்டும் இங்கே படிப்படியாக விளக்கவிரும்புகிறேன். இந்த விஷயத்திலேயே பெரும்பாலானோர் தவறுவிடுவது மட்டுமல்லாமல் அதைச் செய்வது எப்படி என்ற விபரமே தெரியாமல் இருக்கிறார்கள்.

(1) எடுத்துக்கொண்டிருக்கும் வசனத்தையோ அல்லது வசனங்களையோ மிகக் கவனத்தோடு ஆராய்ந்து அதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் என்ன சொல்லுகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது சொல்லுவதற்கு சுலபமாக இருந்தபோதும் இந்த ஆரம்ப விஷயமே மிகவும் நேரத்தை செலவிட்டு ஆராயவேண்டிய விஷயமாக இருக்கின்றது. அந்த வசனத்தையோ வசனங்களையோ ஆராயும்போது அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைப்பிரயோகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு யோவான் 3:3 வசனத்தைப் பயன்படுத்தி ஒரு பிரசங்கத்தைக் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறோம் என்றால் அந்த வசனத்தை முறையாக ஆராய்ந்து விளங்கிக்கொள்ளுவது அவசியம்.

இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இந்த வசனத்தின் இலக்கண அமைப்பு, வார்த்தைகளுக்கான அர்த்தம், அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் முறை, வசனத்தின் மூலம் தரப்பட்டிருக்கும் விளக்கம் அனைத்தையும் கவனத்தோடு ஆராய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு பிரசங்கி இந்த இடத்தில் ஒரு கல்லூரி மாணவனைப்போலத் தன்னைக் கருதிக் கவனத்தோடு வசனத்தைப் படிக்கவேண்டும். இந்த வசனத்தில் முக்கியமாக சொல்லப்பட்டிருப்பது, ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் அவன் தேவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைய முடியாது என்பதுதான். இதை இயேசு கிறிஸ்து ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். இருந்தபோதும் சொல்லப்பட்டிருக்கும் சத்தியத்தில் பொதிந்து உள்ளடக்கமாகக் காணப்படும் உண்மைகளைத் தெரிந்துகொள்ள வார்த்தைகளினதும், வசனத்தினதும் இலக்கண அமைப்பை ஆராய்வது அவசியம். மேலெழுந்தவாரியாக வசனத்தை வாசித்துவிட்டு இதைத்தான் அது விளக்குகிறது என்று உடனடியாக முடிவெடுத்துவிடக்கூடாது. மேலெழுந்தவாரியாக வசனத்தை வாசிக்கும்போது அது வெளிப்படுத்தும் உண்மை வெளிப்படையாகத் தெரிந்தபோதும், நாம் செய்யவேண்டிய, வசனத்தை ஆராயும் கடமையை நாம் ஒதுக்கிவைத்துவிடக்கூடாது. ஒரு விமானி எத்தனையோ தடவைகள் விமானத்தை இயக்கியிருந்தபோதும், ஒவ்வொருதடவையும் ஒரு செக் லிஸ்டைக் கையில் வைத்திருந்து அதிலிருக்கும் முறையில் செய்யவேண்டிய அனைத்தையும் சரிபார்த்து டிக் செய்த பிறகே விமானத்தை நகர்த்த ஆரம்பிப்பார். நேற்றும் இதைத்தானே செய்திருக்கிறேன் என்று லிஸ்டை சரிபார்க்காமல் ஒரு விமானியும் விமானத்தை நகர்த்துவதில்லை. அப்படியிருக்கும்போது ஆத்துமாக்களின் இருதயத்தைத் தொடவேண்டிய பிரசங்கத்தைத் தயாரிக்கும் பிரசங்கி, வசனத்தை ஆராயும் கடமையில் இருந்து எப்படித் தவறமுடியும்?

வேதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் வேதவசனங்களில் அழுத்தம் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கும். அதனால் நல்ல ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி (NKJV, NASB, ESV) வசனத்தின் இலக்கண அமைப்பை ஆராய வேண்டும். இந்த வசனத்தை (யோவான் 3:3) ஆராய்கிறபோது தேவனுடைய இராஜ்யம் என்பது கர்த்தருடைய ஆளுகைக்குள் வருவது என்பதை அறிந்துகொள்ளலாம். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால் பரலோக வாழ்க்கையை, நித்திய ஜீவனை அடைவது எனலாம். தேவனுடைய இராஜ்யம் என்ற பதம் வேதத்தின் ஏனைய இடங்களில் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஒத்தவாக்கிய அகராதியை வைத்து ஆராய்கிறபோது இதைத் தெரிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் அந்தப் பதம் அந்த அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இந்த வசனத்தில் காணப்படும் இன்னொரு வார்த்தைப்பிரயோகம் நமக்கு விளக்குகிறது. அந்த வார்த்தைப்பிரயோகம் ‘மறுபடியும் பிறவாவிட்டால்’ என்பதே. இதன் மூலம் ஒரு பதம் பல அர்த்தங்களில் வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதையும், அந்தப் பதம் ஒரு வசனத்தில் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அந்த வசனத்தில் காணப்படும் ஏனைய வார்த்தைப்பிரயோகங்களும் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயமும் தீர்மானிக்கின்றன என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

‘மறுபடியும் பிறவாவிட்டால்’ என்ற வார்த்தைப்பிரயோகம் இந்த வசனத்தில் மிக முக்கியமானது. ஒருவன் மீளவும் பிறப்பது என்பது இதற்கு மேலெழுந்தவாரியாகப் பார்க்கிறபோது அர்த்தமாக இருக்கிறது. இந்த வார்த்தைப்பிரயோகம் எத்தகைய பிறப்பைப் பற்றி விளக்குகிறது என்பதை இதை ஆராய்கிறபோது தெரிந்துகொள்ள முடிகிறது. கிரேக்க மூலத்தில் இந்த வார்த்தைப்பிரயோகம் ஒரே வார்த்தையாக இருக்கிறது. ஆங்கிலத்தில் இது ‘born again’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எழுத்துபூர்வமாகப் பார்த்தால் இதற்கு ‘born from above’ என்று அர்த்தம். இந்த வார்த்தைப்பிரயோகம் புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரால் இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை மேலும் ஒத்தவாக்கிய அகராதியை வைத்து ஆராய்கிறபோது தெரிந்துகொள்ளுகிறோம். அந்த வசனம் யாக்கோபு 1:18.

அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜநிப்பித்தார்.

இங்கே ‘ஜநிப்பித்தார்’ (brought us forth – NKJV, NASB, ESV) என்ற வார்த்தைப்பிரயோகமே யோவான் 3:3ல் ‘மறுபடியும் பிறக்காவிட்டால்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கிரேக்க மூலத்தில் காணப்படும் ஒரே வார்த்தையே இரண்டு இடங்களிலும் வெவ்வேறு விதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதும் இரண்டு பகுதிகளும் ஒரே விஷயத்தையே விளக்குகின்றன. நல்ல தமிழில் இதை ‘உயிர்ப்பித்தார்’ என்று விளக்கலாம். ஜநிப்பித்தார் என்பது வடமொழி. மேலும் இந்த வார்த்தைப்பிரயோகத்தின் பயன்பாட்டை யோவான் 3:3ல் காணப்படும் பகுதியின் அடிப்படையில் ஆராய்கிறபோது அது ஆண்டவர் ஒருவருக்கு ஆவிக்குரிய ஜீவனைக் கொடுப்பதைக் குறிக்கின்றது என்பதை அறிந்துகொள்ளுகிறோம். ஆங்கிலத்தில் இந்த வார்த்தைப்பிரயோகத்திற்கு Regeneration என்று பெயர். தமிழில் இதை மறுபிறப்பு என்று அழைக்கிறோம். இத்தோடு இந்த வசனம் பற்றிய விஷயம் முடிந்துவிடவில்லை.

‘மறுபடியும் பிறக்காவிட்டால்’ என்ற வார்த்தைப்பிரயோகத்தைத் தொடர்ந்து இலக்கண அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும்போது அது ஒருவர் தனக்குள் செய்துகொள்ளுகிற அனுபவமாக விளக்கப்படவில்லை. அதை வெளியில் இருந்து வேறொருவர் ஒருவரில் செய்கின்ற கிரியையாக அது விளக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மறுபிறப்பாகிய அனுபவத்தை நாமே நமக்குள் உண்டாக்கிக்கொள்ள முடியாதென்றும், அது நாம் அடைய வேண்டிய அனுபவமாக இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்கிறோம். அதனால் தான் இயேசு ‘ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால்’ என்று கூறியிருக்கிறார். அதாவது வெளியில் இருந்து அது ஒருவனுக்குள் நிகழவேண்டும் என்ற அர்த்தத்தில் அதைச் சொல்லியிருக்கிறார். இந்த வார்த்தைப்பிரயோகத்தின் இலக்கண அமைப்பு இன்னுமொரு உண்மையையும் வெளிப்படுத்துகிறது. அதாவது, இந்த மறுபிறப்பு ஒருவரில் ஒரேதடவை நிகழ்ந்து நிறைவேறுகிறதாக காணப்படுகின்றது. அது பங்கு பங்காக, கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரில் நிகழாமல் ஒரே நேரத்தில் நடந்து முடிகின்றதாக இருக்கின்றது.

மேலும் இந்த வார்த்தைப்பிரயோகத்தின் இலக்கண அமைப்பு இந்த மறுபிறப்பு ஒருவரில் நிச்சயமாக நிகழ வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துவதாக இருக்கிறது. இந்த வசனத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பில் காணப்படும் ‘unless’ என்ற பதம் இதைத் தெளிவாகச் சுட்டுகிறதாக இருக்கிறது. அதாவது இந்த மறுபிறப்பு நிகழ்ந்தாலொழிய எவரும் நிச்சயமாக தேவ இராஜ்யத்துக்குள் நுழைய முடியாதென்கிறது இந்த வசனம். இது தமிழ் மொழிபெயர்ப்பில் ‘பிறவாவிட்டால்’ என்ற வார்த்தையில் அடங்கியிருக்கிறது. இதையெல்லாம் தமிழ்மொழிபெயர்ப்பை மட்டும் வாசிப்பதால் மட்டும் ஒருவரால் தெளிவாக அறிந்துகொள்ள முடியாது. அதற்கான தகுந்த ஆய்வில் ஒருவர் ஈடுபட்டால் மட்டுமே அது முடியும். இந்த மறுபிறப்பு நிகழ்ந்தேயாக வேண்டும் என்பதை இயேசு மறுபடியும் 7ம் வசனத்தில் விளக்குகிறார்.

நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.

இந்த வசனத்தை இலக்கண அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் கிரேக்க மூலத்தில் Dei என்ற சிறுவார்த்தை இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இது ஆங்கிலத்தில் must என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையை இணைவார்த்தை என்பார்கள். அதாவது வார்த்தைகளை இணைத்து வசனத்தைப் பூர்த்திசெய்யும் வார்த்தை இது. ஆங்கிலத்தில் இத்தகைய வார்த்தைகளை conjunction என்பார்கள். இந்த வார்த்தைகளை நாம் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. இவை வசனத்தையே மாற்றிவிடும் தன்மை கொண்டவை. அதுமட்டுமல்லாமல் கொடுக்க வேண்டிய அழுத்தத்தைக் கொடுத்து வசனத்தில் அதன் உரிமையாளர் சொல்ல வந்த செய்தியை ஆணித்தரமாகத் தவறின்றிச் சொல்ல உதவுகின்றன. இந்த ஆங்கில வார்த்தையான must தமிழ் வேதத்தில் 3:7ல் ‘மறுபடியும் பிறக்கவேண்டும்’ என்ற வார்த்தைப்பிரயோகத்தின் இறுதியில் மறைந்து காணப்படுகிறது. கிரேக்கத்திலோ, ஆங்கிலத்திலோ இருப்பதுபோல் தனிவார்த்தையாக வசனத்தில் தனித்து நிற்கவில்லை. ஆகவே, தமிழில் வாசிக்கும்போது இது இருப்பதை ஒருவர் கவனிக்கத் தவறிவிடலாம். ஆனால், அந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் உண்மைக்கு இந்த சிறு வார்த்தை அடித்தளமாக இருக்கின்றது. அதாவது, இயேசு ஒருவன் மறுபடியும் பிறந்தே ஆகவேண்டும் அல்லது அவன் மறுபடியும் பிறந்தே ஆகவேண்டியது நிச்சயமாக அவசியமாக இருக்கிறது என்ற உண்மையை இந்த சிறுவார்த்தையின் மூலம் அப்பழுக்கின்றி அழுத்தமாகச் சொல்லுகிறார். 3:7ஐ கிரேக்க மூலத்தில் இருந்து ஆங்கிலத்தில் எழுத்துபூர்வமாக மொழிபெயர்க்கும்போது அது, It is necessary for you to be born from above என்றிருக்க வேண்டும்.

இதுவரை நாம் எடுத்துக்கொண்டிருக்கும் வசனமாகிய யோவான் 3:3ஐ அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து அதன் மெய்யான அர்த்தத்தை, பரிசுத்த ஆவியானவர் அதன் மூலம் வெளிப்படுத்துகின்ற அர்த்தத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறோம். வேத வார்த்தைகளை விளங்கிக்கொள்ளுவதற்கு இதுதான் நாம் முதலில் செய்ய வேண்டிய பணி. இந்தப் பணியை ஆங்கிலத்தில் exegesis (எக்ஸஜீசிஸ்) என்று அழைப்பார்கள். இது ஒரு விஞ்ஞான நடவடிக்கை. அதாவது, வேதவசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து அவை அந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டு எத்தகைய விளக்கத்தைத் தருகின்றன என்று அறிந்துகொள்ளும் விஞ்ஞானமே இது. இது போதிப்பதற்கும், பிரசங்கம் செய்வதற்கும் அவசியமான முதல் கட்ட நடவடிக்கை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே பிரசங்கம் தயாரித்ததாகிவிடாது. இதை அடுத்து தொடராகச் செய்யவேண்டிய அநேக காரியங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த ஆரம்ப நடவடிக்கையில் ஈடுபடாமல் நாம் மேலே போகக்கூடாது.

இதுவரை பார்த்தவற்றை அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கை, யோவான் 3:3 அமைந்து காணப்படும் சந்தர்ப்பமான 1-21 வரையிலான வசனங்களையும் இதுவரை பார்த்திருக்கும் விதத்தில் இலக்கணபூர்வமாகப் பகுதி பகுதியாக, அக்குவேறாக ஆராய்வது அவசியம். ஏனெனில் அந்த சந்தர்ப்பத்தின் (பகுதியின்) நடுவிலேயே இயேசு இந்த வசனத்தில் மறுபிறப்பின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார். அப்படி 1-21 வரையிலும் உள்ள வசனங்களை முறையாக ஆராய்கிறபோது இந்த வசனத்தின் பின்னணியில் இருக்கும் அநேக அம்சங்களைத் தெரிந்துகொள்ள முடியும். நிக்கோதேமு இயேசுவிடம் வந்த காரணத்தையும், அவனுடைய கேள்விக்கான காரணத்தையும், இயேசு அவனுக்குப் பதிலளித்தவிதத்திற்கான காரணத்தையும், இயேசுவின் விளக்கங்களின் பொருளையும் இந்தப் பகுதியை ஆராய்ந்து பார்க்கும்போது தெரிந்துகொள்ளலாம்.

அதற்கு அடுத்த நடவடிக்கையாக இந்த வசனம் போதிக்கும் இறையியல் போதனையை ஆராய்வது அவசியம். வேதப்பிரசங்கத்தில் இறையியல் இல்லாமல் இருக்கக்கூடாது; இறையியல் தவறுகளும் இருக்கக்கூடாது. இந்த வசனம் இரட்சிப்பின் படிமுறை அம்சங்களில் ஒன்றான மறுபிறப்பாகிய இறையியல் போதனையை விளக்குகிறது. அதுபற்றி பிரசங்கி நன்கு கற்றறிந்திருக்கவேண்டும். மறுபிறப்பே இரட்சிப்பாகிவிடாது; இரட்சிப்பின் ஒரு படிமுறை அம்சமே மறுபிறப்பென்பதை அறிந்துவைத்திருக்கும் பிரசங்கிகள் எத்தனைபேர்? இறையியல் போதனை இல்லாமல் வேதப்பிரசங்கம் செய்யமுயல்கிறவனும், இறையியல் போதனையை அரவே அலட்சியம் செய்கிறவனும் நம்பக்கூடிய, விசுவாசிக்கக்கூடிய பிரசங்கியல்ல. வசனம் போதிக்கும் இறையியல் போதனையைத் தெள்ளத் தெளிவாக அறிந்துகொண்டு பிரசங்கம் தயாரிப்பதன் அடுத்தகட்ட நடவடிக்கைக்குப் போகவேண்டும். அதையெல்லாம் விளக்குவதல்ல இந்த ஆக்கத்தின் நோக்கம். பிரசங்கம் தயாரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையின் அவசியத்தை உணர்த்துவதே இதன் முக்கிய நோக்கம். அதைச்செய்யாமல்தான் இன்றைக்கு பிரசங்கம் என்ற பெயரில் மேடை மேடையாக அநேகர் உளறாட்டம் நடத்திவருகிறார்கள்.

வேத வசனங்களை முறையாக ஆராயாமல் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்

(1) இந்தவிதமாக ஒரு வசனத்தை அல்லது வசனங்களை அதன் இலக்கண அடிப்படையில் பிரித்து ஆராய்ந்தால் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் அதன் மூலம் என்ன சொல்லுகிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடியும். பரிசுத்த ஆவியானவர் சொல்லியிருப்பதை அறிந்துகொள்ளுவதைத் தவிர வேதத்தை வாசிக்கிறவனுக்கோ அல்லது பிரசங்கிக்கிறவனுக்கோ வேறு என்ன வேலை இருக்கிறது? ஆவியானவர் சொல்லுவதைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் ஒரு வசனத்தை மேலெழுந்தவாரியாக வாசித்துவிட்டு அது இதைத்தான் சொல்லுகிறது என்று நாம் ஏதோவொன்றை ஊகிப்பது பெரிய ஆபத்து மட்டுமல்ல அது வேதத்தை தந்திருக்கும் பரிசுத்த ஆவியானவரையே நிந்திக்கும் செயலாகும். இதனால்தான் 16ம் நூற்றாண்டில் சீர்திருத்தவாதிகள் இலக்கணபூர்வமாகவும், வரலாற்று அடிப்படையிலும் வேதவசனங்களை ஆராய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டும் (Grammatical – historical interpretation) என்ற அடிப்படைத் தத்துவத்தை வலியுறுத்தினார்கள். முக்கியமாக மார்டின் லூத்தர் இதை அறிமுகப்படுத்தி இதுவே சீர்திருத்தவாதத்தின் கத்தோலிக்க மதத்திற்கெதிரான பெரும் போராட்டங்களில் ஒன்றாகவும் பங்கு வகித்தது. அதற்கு முன்பு இந்த வகையில் வேதத்தை ஆராயாமல் கண்மூடித்தனமாக அதற்கு விளக்கங்கொடுத்து வரும் தவறானமுறையிருந்து வந்தது.

(2) இன்று அநேகர் யோவான் 3:3ல் இருந்து சுவிசேஷ செய்தி அளித்திருக்கிறார்கள். அதாவது, ஒருவன் மனந்திரும்பி ஏன் இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்று சுவிசேஷ அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். உண்மையில் யோவான் 3:1-21 வசனங்களில் சுவிசேஷ செய்தியளிக்கக்கூடிய அநேக வசனங்களும், பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. 3:16 அதற்கு ஒரு நல்ல உதாரணம். இருந்தபோதும், 3:3ம் 3:7ம் சுவிசேஷ அழைப்பை நேரடியாகக் கொடுக்கும் வசனங்கள் அல்ல. இந்த வசனங்கள் மூலம் இயேசு நிக்கொதேமுவுக்கு இரட்சிப்பு பற்றிய மிகமுக்கியமானதொரு இறையியல் விளக்கத்தை அளிக்கிறார். அந்த விளக்கம் பழைய ஏற்பாட்டிலும் பல பகுதிகளிலும் காணப்பட்டபோதும், நிக்கொதேமு அதுபற்றிய விளக்கத்தை அறிந்திருக்கவில்லை; பழைய ஏற்பாட்டைப் போதிக்கிறவனாக இருந்திருந்தும் அதை உணரமுடியாதளவுக்கு அவன் இருந்திருக்கிறான். அந்த விளக்கம் நிக்கொதேமுவுக்கு அவசியமானதாக இருந்தது. ஆண்டவரின் கட்டளைகளை மட்டும் பின்பற்றி நல்வாழ்க்கை வாழ்ந்து இரட்சிப்பு அடைய முடியும் என்று நம்பிப் போதித்து வாழ்ந்துகொண்டிருந்த அவனுக்கு இயேசு அந்தவிதத்தில் இரட்சிப்பை அடைய முடியாது என்று சொல்லுகிறார். அதுமட்டுமல்லாமல் இரட்சிப்பை அடைவது என்பது மனிதனால் முடிகின்ற காரியமல்ல என்பதை அவனுக்கு உணர்த்துவதற்காகவே நீ மறுபடியும் பிறக்கவேண்டும் என்று இயேசு கூறினார். மறுபடியும் பிறப்பதென்பது ஆவியானவர் ஒருவனில் செய்கின்ற மறுபிறப்பாகிய ஆத்மீகக் கிரியை என்ற இறையியல் சத்தியத்தையே இந்த வசனம் விளக்குகிறது. இதைப் புரிந்துகொள்ளாமல் அநேகர் சுவிசேஷம் சொல்லுவதற்காக இந்த வசனத்தைப் பயன்படுத்தி, மனந்திரும்பவும், இயேசுவை விசுவாசிக்கவும் நீங்கள் தீர்மானம் எடுப்பீர்களானால் இரட்சிக்கப்படுவீர்கள் என்ற பொய்யைச் சொல்லிவருகிறார்கள். பாவியாகிய மனிதன் சுயத்தில் செய்யக்கூடியதொரு ஆத்மீகக் கிரியையை இந்த வசனம் விளக்காமல், ஆவியானவர் மட்டுமே செய்யக்கூடிய கிரியையை இது வலியுறுத்துகிறது. அப்படியிருக்கும்போது இந்த வசனத்தைப் பயன்படுத்தி சுவிசேஷ அழைப்புக் கொடுப்பது பெருந்தவறு.

(3) ஒரு வசனத்தையோ அல்லது சில வசனங்களையோ வைத்து பிரசங்கிக்கும்போது, அந்த வசனங்களை மேலெழுந்தவாரியாக மட்டும் வாசித்துவிட்டு, அந்த வசனங்களில் நேரடியாகவோ உள்ளார்ந்தவிதத்திலோ காணப்படாத ஒரு சத்தியத்தைக்கூடப் பிரசங்கிக்கின்றபோது, அது வேதத்தின் மூலம் கர்த்தர் சொல்லுவதை மட்டும் பிரசங்கிப்பதாகாது. சிலவேளைகளில் அந்த வசனங்களை வைத்து ஏதாவதொரு சத்தியத்தை மட்டும் ஒருவர் பிரசங்கித்து விடலாம். அப்படி அநேகர் செய்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் சத்தியத்தைத்தான் பிரசங்கித்தாலும், அவர்கள் விளக்கும் சத்தியம் வேதத்தின் வேறிடங்களில் விளக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் பிரசங்கிக்க எடுத்துக்கொண்டிருக்கும் பகுதியில் நேரடியாக அது காணப்படாததால் அவர்கள் பெருந்தவறு செய்கிறார்கள். அவர்கள் பொய் சொல்லவில்லைதான், இருந்தாலும் அவர்கள் ஆண்டவர் சொல்லியிருப்பதை ஆராய்ந்து அறிந்துகொள்ளாமல் சோம்பேறித்தனத்தினால் வார்த்தையில் சொல்லியிருப்பதைப் பிரசங்கிக்கவில்லை. இது தவறான பிரசங்க முறை. இது பிரசங்கியின் சோம்பேறித்தனத்தையோ அல்லது இயலாமையையோ அல்லது ஞானமற்ற நிலையையோதான் சுட்டுகிறது.

(4) வசனத்தை ஆராய்ந்து விளங்கிக்கொண்டு அதிலிருப்பதை மட்டும் பிரசங்கிக்காதவர்கள் சத்தியத்தைப் பிரசங்கிக்காமல் தங்கள் மனதில்பட்ட சொந்த எண்ணங்களையே பிரசங்கிக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்வதால் ஆத்துமாக்களைப் போய்ச்சேர வேண்டிய கர்த்தரின் வார்த்தை அவர்களைப் போயடையாமல் போய்விடுகிறது. பிரசங்கிகள் என்ற போர்வையில் சோம்பேறித்தனத்தோடு செயல்படுகிறவர்களும், அலட்சிய மனப்பான்மையோடு பிரசங்கத்தை செய்கிறவர்களும், பிரசங்கப் பணியில் நல்ல தேர்ச்சி பெறாமல் ஆர்வக்கோளாறோடு அதில் நுழைந்து பிரசங்கம் செய்யத்தெரியாமல் செய்கிறவர்களும் கர்த்தரின் வார்த்தை ஆத்துமாக்களைப் போயடைவதற்கு பெருந்தடையாக, இடையூராக இருந்து வருகிறார்கள். இதனால் பாதிக்கப்படுகிறவர்கள் பாவிகளும், ஆத்துமாக்களுமே. இத்தகைய நிலையில் திருச்சபை வேதபூர்வமாக செயல்படுவதற்கும், பிரசங்கம் வேதத்தை மட்டும் சார்ந்திருப்பதற்கும் வழியில்லை.

(5) இன்னுமொரு முக்கிய தவறை நம்மினத்துப் பிரசங்கிகளிடம் காண்கிறேன். சமீபத்தில் ஆடியோவில் நான் கேட்ட ஒரு செய்தி அதை ஊர்ஜீதப்படுத்தியது. அதில் செய்தி கொடுத்த தமிழகத்து செய்தியாளர் நான் இதுவரை விளக்கிவந்திருக்கும் இலக்கண அடிப்படையிலும் இறையியல் அடிப்படையிலும் வேதத்தை ஆராய்ந்து படித்துத் தெளிவாகப் பிரசங்கிப்பதை ‘இன்டலெக்சுவல்’ போக்கு என்று நிராகரித்தார். அவரைப் பொறுத்தவரையில் (அவரே அதை விளக்கினார்) இப்படிச் செய்வதையெல்லாம் நிறுத்திவிட்டு வேத வசனங்களின் மூலம் கர்த்தர் இன்று நமக்கு என்ன சொல்லுகிறார், இன்றைய தேவை என்ன என்று கேட்க வேண்டும் என்கிறார். இது மிகவும் ஆபத்தான, மிஸ்டிஸிசப் போக்கு. அதாவது, வேதம் கொடுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்ப சூழலை ஆராய்ந்து நிதானித்துப் படிக்காமல், அதன் மூலம் அமானுஷ்யப் போக்கில் அந்தந்தக் காலத்துக்கு கர்த்தர் தேவையான செய்தியைக் கொடுப்பதாக இந்த மனிதர் விளக்கினார். இதைத்தான் கெரிஸ்மெட்டிக் இயக்கம் செய்துவருகிறது. இந்தப் போக்கில் போனால் நாம் கற்பனையாக வேதத்தில் இல்லாத புதுப்புது விஷயங்களைத்தான் சொல்ல முற்படுவோம். நம்முடைய சூழ்நிலையில், நமது தேவைக்காக வேதம் என்ன சொல்லுகிறது என்பதை அதை இலக்கண வரலாற்றுபூர்வமாக ஆராய்ந்து படிக்காமல் எந்த ஒரு மனிதனும் அறிந்துகொள்ள முடியாது. பரிசுத்த ஆவியானவர் தான் அருளித்தந்திருக்கும் வேதத்தை, எக்காலத்துக்கும் பொருந்திப் போகின்ற அதன் போதனைகளை வரலாற்று இலக்கண சந்தர்ப்பத்தின் மத்தியிலேயே கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நான் விளக்கியிருப்பது ‘இன்டலெக்சுவல்’ போக்கல்ல; அதுவே வேதம் காட்டுகின்ற, அதைப் படிக்கவேண்டிய முறையான ஆத்மீகவழி.

இதுவரை நம்மினத்தில் இருக்கும் போலித்தனமானதும், தவறானதுமான பிரசங்க உழியம் மாறுவதற்கு பிரசங்கிகள் வேதவசனங்களைப் பொறுத்தவரையில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை விளக்கியிருக்கிறேன். இதெல்லாம் நிகழ ஆண்டவரால் அழைக்கப்பட்டு, முறையாகப் பயிற்சிபெற்று, சபைகளால் ஆராயப்பட்டு, சுயநல நோக்கமின்றி இருதயசுத்தத்தோடு செயல்படுகின்ற, சபைகளால் அங்கீகரிக்கப்பட்ட நல்ல பிரசங்கிகள் தேவை. வாலிப வயதில் இருப்பவர்கள் இதுவரை நான் விளக்கியிருப்பவற்றை சிந்தித்து ஆராய்ந்து பார்த்து உணர்ச்சிவசப்பட்டு ஊழியத்தில் நுழைந்துவிடாமல் கவனத்தோடு தங்களை வேதபூர்வமாக வளர்த்துக்கொள்ளுவதில் ஈடுபடவேண்டும். ஆவிக்குரிய நல்ல பிரசங்கம் இன்று அவசியம் தேவைப்படுகிறது என்பதில் எவருக்குமே சந்தேகமிருக்க முடியாது. எங்கே, எப்போது, எப்படி அது நம்மினத்தில் உதயமாகப்போகிறது என்றுதான் மந்தைகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.


ஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)

ஜொசுவா ஹெரிஸ்

ஜூலை மாத முடிவில் Fox Newsல் இருந்து எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வந்தது, ‘ஜொசுவா ஹெரிஸும் அவருடைய மனைவியும் நட்போடு பிரிந்துவாழத் தீர்மானித்துவிட்டார்கள் என்பது. இதை ஜொசுவா ஹெரிஸே தன்னுடைய இன்ஸ்டகிரேமில் பதிவு செய்திருந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு அதிரடியாக இன்னொரு செய்தியை அவர் வெளியிட்டார். ‘இனி நான் கிறிஸ்தவன் அல்ல, கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளை ஆராய்ந்து பார்த்தபோது அவற்றின் அடிப்படையில் என்னைக் கிறிஸ்தவனாகக் கணிக்க முடியவில்லை. அதனால் நான் கிறிஸ்தவ நம்பிக்கைகளைவிட்டு அடியோடு விலகிவிட்டேன்’ என்பதுதான் அந்த அறிக்கை. இது கிறிஸ்தவ சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, இப்போது நான் இந்த ஆக்கத்தை எழுதிக்கொண்டிருக்கும் வரையில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

யார் இந்த ஜொசுவா ஹெரிஸ்?

கிறிஸ்தவ பெற்றோர்களால் வீட்டுக்கல்வி முறைக்குக் கீழ் வளர்ந்து கிறிஸ்தவ போதனைகளை வீட்டிலும் திருச்சபையிலும் பெற்று, கிறிஸ்தவ ஞானஸ்நானத்தையும் பெற்று வாலிபனாக இருபது வயதில் சுற்றியிருப்பவர்கள் கவனிக்கும்படியான சில ஆற்றல்களையும் தன்னில் கொண்டிருந்து வளர்ந்து வந்துகொண்டிருந்தார் ஜொசுவா ஹெரிஸ். அவருடைய தந்தை அமெரிக்க வீட்டுக்கல்விமுறை இயக்கத்தின் மூன்று முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். திருச்சபைகள் நடத்தும் வாலிபர்கள் மகாநாடுகளிலும், ஏனைய கிறிஸ்தவ கூட்டங்களிலும் ஜொசுவா ஹெரிஸ் பங்குபற்றியது மட்டுமல்லாமல் இசைக்கருவிகள் வாசிக்கவும், பேசவும் ஆரம்பித்தார். அனைவருடைய கண்களும் அவர்மேல் பதிய ஆரம்பித்தன. இளம் வாலிபரான ஜொசுவா ஹெரிஸின் வளர்ச்சியையும் ஆற்றல்களையும் கவனிக்கத் தவறவில்லை சீ. ஜே. மகேனி என்ற கெத்தர்ஸ்பேர்க், மேரிலன்ட் மாநிலத்தைச் சேர்ந்த கவனன்ட் லைப் மெகா திருச்சபையின் பிரதான போதகர். ஜொசுவா ஹெரிஸை அவர் தன்கீழ் இணைத்து கிறிஸ்தவ ஊழியத்தில் வளர்க்க ஆரம்பித்தார். அவருடைய வீட்டிலேயே ஜொசுவா ஹெரிஸ் தன்னுடைய எதிர்கால மனைவியாகப்போகிற சேனன் ஹென்ரிக்சனைச் சந்தித்தார். இருவரும் ஒருவரையொருவர் விரும்பி 1998ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். ஜொசுவாவின் மனைவியும் வீட்டுக்கல்வி முறையின் கீழ் வளர்ந்து ஞானஸ்நானம் பெற்றவர். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். காலங்கள் வேகமாக ஓட ஜொசுவா ஹெரிஸ் பிரசங்கங்கள் செய்தது மட்டுமல்லாமல் திருச்சபையில் வெகுவேகமாக முன்னிலைக்கு வர ஆரம்பித்தார். ஜொசுவாவுக்கு முப்பது வயதாக இருக்கும்போது சீ. ஜே. மகேனி அவரைத் தன் திருச்சபையின் முதன்மைப் போதகராக 2004ல் நியமித்தார்.

1997ல் ஜொசுவா ஹெரிஸ் I Kissed Dating Good Bye என்ற நூலை எழுதி வெளியிட்டார். இது வாலிபர்கள் திருமணத்திற்கு முன் உடலுறவில் ஈடுபடாமல் பரிசுத்தமாகத் தங்களை வைத்திருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆண், பெண் நட்புறவை எப்படி ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற ஆலோசனைகளைத் தந்தது. அதிசயிக்கத்தக்கவிதத்தில் இந்நூல் 1.2 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி ஜொசுவா ஹெரிஸை பிரபலமான நூலாசிரியராக்கியது. இதற்குப் பிறகு Boy meets Girl (2000) என்ற நூலையும், Not Even a Hint: Guarding Your Heart Against Lust (2003), Sex Is Not the Problem (Lust Is) (2005), Stop Dating the Church!: Fall in Love with the Family of God (2004) ஆகிய வேறு சில நூல்களையும் ஜொசுவா ஹெரிஸ் எழுதி வெளியிட்டார். Dug Down Deep (2010) என்ற இன்னுமொரு நூலில் ஜொசுவா ஹெரிஸ் சத்தியத்திலும், மெய்யான வேத இறையியலிலும் தனக்கிருக்கும் ஆர்வத்தை விளக்கியிருந்தார். Attitude, Next எனும் பெயர்களில் வாலிபர்களுக்கான மகாநாடுகளையும் ஜொசுவா ஹெரிஸ் நடத்திவந்தார். வாலிபர்கள் மத்தியில் மட்டுமல்லாது, திருச்சபைகள் மத்தியிலும் ஹெரிஸ் பிரபலமாகி கிறிஸ்தவ மகாநாடுகளில் விரும்பிப் பேச அழைக்கப்படும் பேச்சாளர்களில் ஒருவராக முன்னிலையில் இருந்தார்.

அதிரடியான மாற்றங்கள்

இதுவரை அவருடைய வாழ்க்கையில் எல்லாமே நல்லபடியாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், திடீரென்று சில மாற்றங்கள் அவரில் ஏற்பட ஆரம்பித்தன. 2015ம் ஆண்டில் ஹெரிஸ் மேகா திருச்சபையான கவனன்ட் லைப்பில் தன்னுடைய பிரதான போதகர் பதவியில் இருந்து இராஜினாமா செய்தார். அதற்கு அவர் கூறிய காரணம் தான் பெரிதாக இறையியல் பயிற்சிகள் எதுவும் பெறாமல் இத்தனைப் பெரிய போதகர் பதவிக்கு வந்திருக்கக்கூடாது, அதனால் வென்கூவரில் இருக்கும் ரீஜன்ட் இறையியல் கல்லூரியில் இறையியல் பயிற்சிபெறப்போகிறேன் என்பதுதான். உடனடியாக ஹெரிஸ் தன்னுடைய குடும்பத்தோடு வென்கூவரில் குடியேறினார். இதுபற்றி ஒருசில கிறிஸ்தவ தலைவர்களைத்தவிர வேறு எவரும் ஜொசுவாவிடம் பேசிப்பார்க்கவில்லை. வென்கூவரில் ஹெரிஸ் இறையியல் பயிற்சிக்கு தன்னை ஒப்புக்கொடுத்ததோடு அல்லாமல் ஒரு செய்திப்பறிமாறல் கம்பெனியையும் ஆரம்பித்தார்.

2016ல் ஜொசுவா ஹெரிஸ் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப்போட்டார். அதாவது, தான் எழுதிவெளியிட்டு மில்லியன் காப்பிகளுக்குமேல் விற்ற I Kiss Dating Good Bye என்ற நூலில் தான் எழுதியிருக்கும் கருத்துக்கள் சரியானவையல்ல என்றும், அந்த விஷயங்கள் பற்றிய தன்னுடைய எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்றும் அவர் பகிரங்கமாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அந்தப் புத்தகத்தை வாசித்து அதனால் காயப்பட்டதாகக் கூறியிருப்பவர்களிடம் அந்த நூலை எழுதியதற்காக அவர் மன்னிப்பும் கேட்டார். 2018ல் அந்த நூலை அவர் முற்றாக நிராகரித்து அதன் வெளியீட்டைத் தடைசெய்தார். அவருடைய பதிப்பாளர்களும், இருப்பில் இருக்கும் ஸ்டொக் விற்பனையானபின் அந்த நூலையும் அதற்குப்பிறகு ஜொசுவா எழுதிய மேலும் இரு நூல்களையும் தொடர்ந்து வெளியிடப்போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டனர். இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் ஜொசுவா ஹெரிஸ் தன்னுடைய கருத்துக்களாலும் எழுத்துக்களாலும் பாதிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களிடம் (LBGTQ) பொது மன்னிப்புக்கேட்டார்.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக ஜூலை 2019ல் ஜொசுவா ஹெரிஸ், தானும் தன்னுடைய மனைவி சேனனும் நட்புறவோடு பிரிந்துவாழத் தீர்மானித்திருப்பதாகவும், தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மாற்றங்களைப் புரிந்துகொண்டு எவரும் அதில் தலையிடாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். சேனனும் அத்தகைய அறிவிப்பைக் கொடுத்தார். இது அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் பேரிடியாக ஜொசுவா ஹெரிஸ் இன்னுமொரு அறிவிப்பையும் வெளியிட்டார். அதாவது, தான் அடியோடு கிறிஸ்தவத்தைவிட்டு விலகிப்போய்விட்டேன் என்பதுதான் அந்த அறிவிப்பு. கிறிஸ்தவனைப்பற்றி வேதம் விளக்கும் உண்மைகளை சிந்தித்துப் பார்க்கிறபோது அத்தகைய குணாதிசயங்களோ அல்லது வாழ்க்கையோ தன்னில் காணப்படவில்லை என்று ஜொசுவா ஹெரிஸ் பகிரங்கமாக இன்ஸ்டகிரேமில் அறிவித்தார். இது அமெரிக்காவின் பெரும் நியூஸ் ஏஜன்சியான Fox Newsல் இருந்து எல்லா முக்கிய செய்தித்தாள்களிலும் மீடியாக்களிலும் உலகமெங்கும் அறிவிக்கப்பட்டது. கிறிஸ்தவ உலகையே திரும்பிப்பார்க்க வைத்த செய்தியாக இது இருந்தது. முக்கிய கிறிஸ்தவ தலைவர்கள் அனைவரும் இதுபற்றிய தங்களுடைய கருத்துக்களை வெளியிட ஆரம்பித்தனர். அல் மோகலர், கார்ள் ட்ரூமன் போன்ற சீர்திருத்த கிறிஸ்தவர்களும் இதுபற்றி தங்களுடைய எண்ணங்களை வெளியிட்டனர். ஜொசுவா ஹெரிஸை நன்கறிந்து அவருடைய இளம் வயதில் இருந்து அவரோடு தொடர்பு வைத்திருந்த ஒரு சிலரும் பகிரங்கமாக யூடியூபிலும், மீடியாக்கள் மூலமும் ஜொசுவாவை மனந்திரும்பும்படியும், அவருக்காகத் தாங்கள் தொடர்ந்து ஜெபிக்கப்போவதாகவும் நாத்தழுதழுக்க அறிவித்தார்கள். ஜொசுவா ஹெரிஸ் ஆரம்பத்தில் தொடர்பு வைத்திருந்து பின்னால் விலகிக்கொண்ட கொஸ்பல் கொலிஷன் (Gospel Colition) என்ற கிறிஸ்தவ நிறுவனத்தில் சில முக்கிய தலைவர்களும் இதுபற்றிய ஒரு ஆக்கத்தில் ஜொசுவா ஹெரிஸை எவரும் இந்த விஷயத்திற்காக உடனடியாக நியாயந்தீர்த்து கண்டனம் செய்துவிடாமல், நடந்ததைப் புரிந்துகொண்டு பொறுத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இதெல்லாம் எந்தளவுக்கு ஜொசுவா ஹெரிஸின் வாழ்க்கை மாற்றங்கள் மேற்கத்திய நாடுகளில் இருக்கும் கிறிஸ்தவர்களையும், திருச்சபைகளையும் பாதித்திருக்கிறது என்பதை விளக்குகின்றன. ஒன்றைக் குறிப்பிட மறந்துவிட்டேன். இந்த ஆகஸ்டு மாத இறுதியில் அமெரிக்காவில் ஒரு நகரத்தில் நடந்த ஓரினச்சேர்க்கையாளர்களின் Pride பாதயாத்திரையில் ஜொசுவா ஹெரிஸ் ஆனந்தத்தோடு கலந்துகொண்டிருக்கிறார்.

கிறிஸ்தவனாக தன்னை அறிவித்து வாழ்ந்து வரும் எந்தவொரு மனிதனில் இத்தகைய நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அதற்காக கிறிஸ்தவர்கள் வருத்தப்படாமல் இருக்கமுடியாது. நிச்சயம் அதிர்ச்சியை அளிக்கும் செய்தி இது; பலரை, முக்கியமாக ஜொசுவாவோடு நெருக்கமானவர்களை இது உலுக்கியிருக்கக்கூடும். ஜொசுவா ஹெரிஸின் ஊழியத்தின் மூலம் பயனடைந்த ஆயிரக்கணக்கான வாலிபர்களை இந்நேரம் நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியாது. அவர்கள் நிச்சயம் அதிர்ந்தே போயிருந்திருப்பார்கள். அவர்களுக்காகவெல்லாம் எவரும் மனமிரங்கி வருத்தப்படாமல் இருக்கமுடியாது.

படிக்க வேண்டிய பாடங்கள்

(1) கிறிஸ்தவர்களில் எவருமே கிறிஸ்துவில் இருக்கும் தன்னுடைய ஸ்தானத்தை அலட்சியப்படுத்தக்கூடாது. அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மறுபிறப்பு என்பதும் இரட்சிப்பும் அதி உன்னதமான இயற்கையை மீறிய ஆவிக்குரிய நிகழ்வுகள். அதை அடைந்திருப்பவர்கள் அன்றாடம் அதற்காக கர்த்தருக்கு நன்றிகூறி தங்களுடைய இரட்சிப்பை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்; உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். ஏனோதானோவென்று வாழ்வதற்காகக் கொடுக்கப்பட்டதல்ல கிறிஸ்தவ அனுபவம். அதை அன்றாடம் ருசித்து வாழ்கிறவனாக ஒவ்வொரு கிறிஸ்தவனும் இருக்கவேண்டும். அலட்சியமாக வாழ்கிறவர்கள் ஆபத்தை விலைகொடுத்து வாங்குகிறவர்களாக இருப்பார்கள். வேதம், அப்படி அலட்சியமாக வாழாமல் கிறிஸ்தவ அனுபவத்திலும் கிருபையிலும் நாம் அன்றாடம் வளரவேண்டும் என்று விளக்குகிறது. ஏனோக்கு கர்த்தரோடு அன்றாடம் சந்தோஷத்தோடு உறவாடி அவரிருக்குமிடத்திற்கே போய்ச்சேர்ந்தான். ஆண்டவரோடிருக்கும் உறவை உதாசீனப்படுத்துகிறவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையை பலவீனத்தோடு மட்டுமே வாழ்வார்கள். அது தொடருமானால் அவர்களுடைய கிறிஸ்தவ அனுபவத்தை சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஜொசுவா ஹெரிஸின் வாழ்க்கை நம்மைக் கிறிஸ்துவோடிருக்கும் உறவை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறது.

(2) மெய்க்கிறிஸ்தவனால் கிறிஸ்தவ அனுபவத்தை ஒருபோதும் உதறித்தள்ளிவிட முடியாது; அதைத்தூக்கி எறிந்துவிட்டு மறுபடியும் உலகத்தானாக மாறிவிட முடியாது. ஜொசுவா ஹெரிஸ் அப்படி அறிவித்திருப்பதே அவருடைய கிறிஸ்தவ அனுபவத்தை சந்தேகிக்க வைக்கிறது. இதற்கு ஹெரிஸ் பயன்படுத்தியிருக்கும் வார்த்தை Deconstruction. இது ஒரு பின்நவீனத்துவ வார்த்தை. இதற்குப் பொருள் ஏற்கனவே இருக்கும் ஒன்றை முற்றாக அடியோடு மாற்றி அமைப்பது அல்லது இல்லாமலாக்குவது என்பதாகும். வேத இறையியல் தெரிந்த ஒரு மனிதனால் எப்படி இதைச் சொல்ல முடிகிறது? கிறிஸ்தவ அனுபவத்தை இழந்துபோக முடியும் என்று நம்புவது ஆர்மீனியனிசப் போதனை. புதிய கல்வினிச இயக்கத்தைச் சார்ந்த ஜொசுவா ஹெரிஸ் அந்த நம்பிக்கையைக் கொண்டிருந்திருப்பதெப்படி? வாங்கிக்கொள்ளுவதற்கும், வேண்டாம் என்று நினைத்தநேரத்தில் வீசியெறிந்துவிடுவதற்கும் கிறிஸ்தவ அனுபவம் நாம் கடையில் வாங்கும் வடையா என்ன? ஜொசுவா ஹெரிஸின் வார்த்தைகளும் நடவடிக்கைகளும் அவர் ஆரம்பத்தில் இருந்து மறுபிறப்பை அடைந்து இரட்சிப்பு பெற்றிருந்தாரா? என்ற கேள்வியையே நம்மைக் கேட்கத் தூண்டுகிறது. எந்த அனுபவத்தையும் வேதத்தை வைத்தே ஆராய்ந்து தீர்மானிக்கவேண்டும் என்கிறது கர்த்தரின் வேதம்.

‘சீப்பான கிருபை’ (Cheap grace), ‘சுலபமான கிறிஸ்தவ நம்பிக்கை’ (Easy believism) என்ற வார்த்தைப்பிரயோகங்கள் இன்று அமெரிக்கா மட்டுமின்றி உலகளாவியவிதத்தில் கிறிஸ்துவுக்கு ஆள்சேர்த்துக்கொண்டிருக்கும் தவறான சுவிசேஷ முறைகளை இனங்காட்டப் பயன்படுத்தப்படுகின்றன. அப்படிச் செய்கிறவர்கள் எத்தனை சிம்பிளாக சுவிசேஷத்தை சொல்லமுடியுமோ அத்தனை சிம்பிளாகச் சொல்லி, எத்தனை விரைவாக ஒருவரை தேவ இராஜ்யத்திற்குள் கொண்டுவர முடியுமோ அத்தனைவிரைவில் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். இப்படிச் செய்வது எங்குபோய் முடியும் தெரியுமா? அவசரப்பட்டு வடை செய்யமுற்பட்டால் வேகாத வடையே கையில் கிடைக்கும். அதுபோலத்தான் அவசரப்பட்டு ஒருவரை கிறிஸ்தவனாக்க முயல்வதும். இந்தப் போலித்தனமான, வேதம் சாராத சுவிசேஷ அழைப்பு முறையும், சுவிசேஷ ஊழியமும் மறுபிறப்படையாத அநேகரைத் திருச்சபைக்குள் கொண்டுவந்திருக்கிறது. அத்தகையவர்கள் கிறிஸ்தவத்தை அடியோடு நிராகரித்து உலக வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுப்பதில் ஆச்சரியமில்லை. ஜொசுவா ஹெரிஸ் விஷயத்திலும் அதைத்தான் எண்ணவைக்கிறது. இதில் ஆச்சரியமென்னவென்றால், கிறிஸ்தவனாக வாழ்ந்திருப்பது மட்டுமன்றி, மெகா திருச்சபையொன்றின் தலைமைப்போதகராகவும், பிரபல செய்தியாளராகவும், பிரபல நூலாசிரியராகவும், வாலிபர்களைக் கவர்ந்திழுக்கும் கிறிஸ்தவ தலைவராகவும் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெயரெடுத்து, கிறிஸ்தவ ஊழியத்தில் எந்தளவுக்கு உயரத்திற்குப் போகமுடியுமோ அந்தளவுக்கு 40 வயதில் உயரத்திற்குப் போய் அதற்குப் பிறகு கிறிஸ்தவத்தை உதறித்தள்ளியிருக்கும் ஜொசுவா ஹெரிஸைப்பற்றி என்ன சொல்லுவது?

சத்தியவேதம், மெய்யாக மறுப்பிறப்படையாதவர்கள் விசுவாசிகளைப்போல வாழ்க்கையில் நடந்துகொண்டும், ஆவிக்குரிய கிரியைகளாகத் தோன்றுகின்ற பல அருமையான காரியங்களைச் செய்தும் கொஞ்சக்காலத்துக்கு வாழ்ந்துவிட முடியும் என்பதைப் பல உதாரணங்கள் மூலம் விளக்குகிறது. முதலில், யூதாசை எடுத்துக்கொள்ளுங்கள். ஆண்டவரின் சீடர்களில் ஒருவனாக இருந்து சுவிசேஷத்தை நேசிப்பதாகக் காட்டிக்கொண்டு, ஆண்டவரிடமே பணத்தைக்காக்கும் பொறுப்புள்ள பதவியை ஏற்று, சுவிசேஷப் பிரசங்கியாக எழுபதுபேர்களில் ஒருவனாக ஆண்டவரால் அனுப்பப்பட்டு, அற்புதங்களையும்கூடச் செய்து வாழ்ந்திருந்தபோதும் அவன் மெய்யான மனந்திரும்புதலையும், மறுபிறப்பையும் அடைந்திருக்கவில்லை என்பதை வேதம் விளக்குகிறது. இதேபோல்தான் பவுலோடு இணைந்து, வாழ்ந்து, ஜெபித்து, வேதம்வாசித்து, மிஷனரி ஊழியத்தில் ஈடுபட்டிருந்த தேமா ஒருநாள் உலக இச்சைக்கு அடிமையாகி விசுவாசத்தைத் தூக்கியெறிந்துவிட்டுப் போய்விடவில்லையா? பரிசுத்த ஆவியின் வரங்களுக்காக ஆசைப்பட்டு பேதுருவிடமே பணத்தைக் கொடுத்து ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொள்ள முயன்ற மெஜீசியனான சீமோன் -ஏற்கனவே ஞானஸ்நானம் பெற்ற சீடனாக இருந்திருக்கிறானே. இன்னும் எத்தனையோ உதாரணங்களை நாம் அடுக்கடுக்காகச் சொல்லிக்கொண்டே போகலாம். இதெல்லாம் எதைக்காட்டுகின்றது? மெய்யாகவே மறுபிறப்பையும் மனந்திரும்புதலையும் அடைந்திராமல் ஒருவன் கிறிஸ்தவனாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு கிருபையின் செயல்களாக வெளிப்பார்வைக்குத் தோன்றுகின்ற அற்புதமான கிரியைகளைக்கூட வாழ்க்கையில் செய்து வாழ்ந்துவிட முடியும் என்பதைத்தான். அப்படி வெளிப்பார்வைக்கு மட்டும் கிறிஸ்தவர்களாக வாழ்கிறவர்கள் ஆத்துமாக்களுக்கு முன் விசுவாசிகளைப்போலத் தெரிந்தாலும் எல்லாம் அறிந்த ஆண்டவரின் பிள்ளைகளாக ஒருபோதும் ஆவிக்குரிய வாழ்க்கையை ஆரம்பித்திருக்கவில்லை. அத்தகைய ஆபத்து நேர்ந்துவிடாமல் அதைத் தவிர்த்துக்கொள்ளத்தான் வேதம் நாம் எப்போதும் சுயபரிசோதனையில் ஈடுபட்டு நம்முடைய உள் மனச்சாட்சி நம்மைக் குற்றப்படுத்தாமலும், ஆத்துமாக்களுக்கு முன் நாம் குற்றப்படுத்தப்படாமலும் வாழவேண்டும் என்று எச்சரிக்கிறது.

வெளிப்பார்வைக்கு மட்டும் கிறிஸ்தவர்களாக பலரால் இருந்துவிட முடியும் என்பதை வேதம் பல உதாரணங்கள் மட்டுமன்றி போதனைகளையும் தந்து விளக்குகின்றது. உதாரணத்திற்கு இயேசு மத்தேயு 13ல் தந்திருக்கும் விதைக்கிறவனின் உவமையைக் கவனியுங்கள். சத்திய வார்த்தையாகிய விதை நல்ல நிலத்தில் மட்டுமல்லாமல் மூன்றுவிதமான வேறு நிலங்களிலும் விதைக்கப்பட்டு கொஞ்சக்காலத்துக்கு இருந்துவிடமுடியும் என்பதை விளக்குகின்றது. இந்த மூன்று நிலங்களிலும் அந்த சத்திய வார்த்தை பதியக் காரணமாக இருக்கிறவர் பரிசுத்த ஆவியானவர். இந்தப் பகுதி போதிக்கும் உண்மையென்னவென்றால், பரிசுத்த ஆவியானவர் பொதுவான கிருபையின்படி நித்தியத்தில் ஆண்டவரால் முன்குறித்துத் தெரிந்துகொள்ளப்படாத மனிதர்களிலும் சத்தியவார்த்தைகள் கொஞ்சக்காலத்துக்கு பதிந்து இருந்துவிடும்படிச் செய்கிறார் என்பதுதான். இருந்தபோதும் அந்த சத்தியவார்த்தைகள் இவர்களில் நிரந்தரமான மறுபிறப்பையும், மனந்திரும்புதலையும் உண்டாக்குவதில்லை. இவர்களே கொஞ்சக்காலத்துக்கு இந்த உலகில் சத்தியத்தில் ஆர்வம் காட்டி குறுகிய காலம் மட்டும் வெளிப்பார்வைக்கு கிறிஸ்தவர்களாக அல்லது கிறிஸ்தவ அனுதாபிகளாக இருந்துவிடுகிறார்கள்.

இன்னுமொரு உதாரணமாக எபிரெயர் 6:4-8 இருக்கிறது. எபிரெயர் 6 பகுதியைப் பலர் தவறாக விளங்கிக்கொள்ளுகிறார்கள்.

  1. ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 5. தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 6. மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். 7. எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். 8. முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.

அந்த நிருபத்தை எழுதியவர், அந்தப் பகுதியில் காணப்படும் நான்கு அம்சங்களை ஒருவன் தன் வாழ்க்கையில் அனுபவித்தபோதும் அவற்றை அவன் தூக்கியெறிந்துவிடுவானெனில் அவன் மனந்திரும்புவதற்காக மறுபடியும் ஆண்டவர் செய்வதற்கு ஒன்றுமேயில்லை என்கிறார். அந்தப் பகுதி போதிக்கும் நான்கு அம்சங்களையும் ஒருவன் கிறிஸ்தவனாக இல்லாமேலேயே பரிசுத்த ஆவியின் பொதுவான கிரியைகளின் கீழ் வந்து அனுபவிக்க முடியும். அவிசுவாசிகளை அந்தளவுக்கு இருதயத்தில் குற்ற உணர்வு ஏற்படும்படியும், வசனத்தை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளும்படியும், வரப்போகிற நியாயத்தீர்ப்பை எண்ணிப் பயப்படும்படியும், பரலோக வாழ்க்கை மேலானது என்பதை அறிந்துகொள்ளும்படியும் சுவிசேஷப் பிரசங்கத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் உணரவைக்கிறார். ஆனால், பொதுவான கிருபை மூலம் ஒருவன் அடையும் இந்த சுவிசேஷ நன்மைகள் சிலகாலம் மட்டுமே அவனில் நிலைக்கும். அந்தவகையில் குறுகிய காலத்துக்கு மட்டும் சுவிசேஷத்தால் பயனடைந்தவர்கள் கிறிஸ்தவர்களாகும்படி மறுபிறப்பை ஆவியானவர் மூலம் அடைவதில்லை. இத்தகையவர்கள் தாங்கள் பொதுவான கிருபையின் மூலம் அனுபவித்த காரியங்களை தூக்கியெறிந்துவிட்டு சுவிசேஷத்தை விசுவாசிக்காமல் போனால் அவர்களுக்கு கிறிஸ்து மேலும் செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை என்றுதான் எபிரெயருக்கு எழுதியவர் அந்தப் பகுதியில் விளக்கியிருக்கிறார்.

எபிரெயருக்கு எழுதியவர் இந்த உண்மையை கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கையாக சொல்லியிருக்கிறார். கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் இருந்து விழுந்துபோய்விடலாம் என்பதற்காக அவர் எழுதவில்லை; அவர்கள் தங்களுடைய விசுவாசத்தை சாதாரணமாகக் கணித்து நிதானத்தோடு நடந்துகொள்ளத் தவறிவிடாமலிருப்பதற்காக எழுதியிருக்கிறார். மறுபிறப்பினால் கிடைக்கும் விசுவாசம் உறுதியானதாக இருந்தபோதும் அது பாலூட்டி வளர்க்கப்பட வேண்டியது. கிருபையிலும் ஞானத்திலும் நாம் தொடர்ந்து வளரவேண்டும் என்று வேதம் போதிக்கிறது. கர்த்தருடைய கட்டளைகளுக்கு அன்றாடம் அடிபணிந்து நடந்து பரிசுத்தத்தில் உயரவேண்டும் என்கிறது வேதம். விசுவாசம் மெய்யானதாக இருந்தால் இதில்தான் அது முழுக்கவனத்தையும் செலுத்தும். ஆனால் அப்படிக் கவனம் செலுத்துவதில் இருந்து நம்மைத் திசைதிருப்புவதற்காக பிசாசு நம்மை சோதிக்க முயல்வான். சுற்றி இருக்கும் பாவ உலகம் நம்மை உலக இச்சைக்குள்ளாக போகத் தூண்டும். நம்மில் தொடர்ந்திருக்கும் பாவத்தோடு (ரோமர் 7) நாம் போராடி அதன் கொட்டத்தை நாம் அன்றாடம் அடக்கவேண்டிய கடமை இருக்கிறது. இதிலெல்லாம் நாம் அக்கறைகாட்டாமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் எபிரெயருக்கு எழுதியவர் நம்மை எச்சரிக்கிறார். தொடர்ந்து பரிசுத்தத்தில் வளர்ந்து இரட்சிப்பின் நிச்சயத்துவத்தை ருசித்து வாழும்போதுதான் நாம் கர்த்தருக்கு அருகாமையில் இருக்கிறோம். அதில் நாம் கவனம் செலுத்தவேண்டுமென்பதற்காகத்தான் வேதம் இந்தவிதமான பல எச்சரிக்கைகளைப் புதிய ஏற்பாடு முழுதும் தருகிறது.

யார் மறுதலித்துப் போகிறவர்கள்? சுவிசேஷத்தில் நாட்டம் காட்டுவதுபோல் வெளிப்பார்வைக்கு நடந்துகொண்டு உள்ளே ஆவியின் கிரியைக்குள் வராதவர்களே விழுந்துபோவார்கள். அத்தகைய விழுந்துபோகுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சமீபிக்கும்போது பெருமளவில் நிகழும் என்று பவுல் சொல்லவில்லையா?

“ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.” (1 தீமோத்தேயு 4:1)

“சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.” (எபிரெயர் 3:12)

“அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்.” (1 யோவான் 2:19)

(3) ஜொசுவா ஹெரிஸ் விஷயத்தில் சிலர் நாம் மேலே விபரித்திருக்கும் விதத்தில் அதை விளக்கியிருந்தபோதும், வேறு சிலர் அந்தளவுக்குப் போகவிரும்பாமல் பொறுமைகாத்து வருகிறார்கள். பலர் இதைப்பற்றி எதுவுமே சொல்லவிரும்பவில்லை. இது எவர் வாழ்க்கையில் நிகழ்ந்திருந்தாலும் அது வருத்தமளிக்கும் விஷயமே. இருந்தாலும் இதன் மூலம் கிறிஸ்தவர்கள் வேதத்தை ஆராய்ந்து பார்த்து தங்களைக் காத்துக்கொள்ளுவதோடு சுற்றியிருப்பவர்களையும் எச்சரிக்கை செய்யாமல் இருக்கக்கூடாது. ஜொசுவா ஹெரிஸ் விஷயம் முக்கியமானதொரு அம்சத்தைப் பற்றிச் சிந்திக்க அழைக்கிறது. அதுதான் கடந்த பத்துவருடங்களுக்குள் கிறிஸ்தவத்தில் முளைத்திருக்கும் புதுப்போக்கான நியூ கல்வினிசம். இதுபற்றி எதுவும் அறிந்திராதவர்களுக்கு சுருக்கமாக இதை விளக்கிவிடுகிறேன். அதாவது, பெந்தகொஸ்தே மற்றும் கெரிஸ்மெட்டிக், இமேர்ஜன்ட் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் தாங்கள் ஏற்கனவே விசுவாசித்துவரும் விஷயங்களில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் அவற்றோடு சீர்திருத்தவாத கிருபையின் போதனைகளையும் இணைத்துக்கொண்டு (இரட்சிப்பு பற்றிய கல்வினிசப் போதனைகள்) தங்களை நியூ கல்வினிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். கிறிஸ்தவத்தில் உருவாகியிருக்கும் இந்தப் புதுப் போதனை சீர்திருத்த போதனைகளை அப்படியே முழுவதுமாக ஏற்றுக்கொள்ளாமல் அவற்றில் தங்களுக்குப் பிடித்தமானவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு 21ம் நூற்றாண்டுக் கலாச்சாரத்துக்குத் தகுந்தவிதத்தில் கல்வினிசத்திற்கு புது உருவம் கொடுத்து வருகிறது. ஜொசுவா ஹெரிஸின் கார்டியனாக இருந்து வந்திருந்த சீ. ஜே. மகேனி ஒரு கெரிஸ்மெட்டிக் போதகர்; அவர் இன்று ஒரு நியூ கல்வினிஸ்ட். இந்த நியூ கல்வினிசத்தின் காட் பாதராக இருப்பவர் ஜோன் பைப்பர். மெட் சான்டிலரும் இதைச் சேர்ந்தவர்தான். இவர்களோடு இருந்து, பலராலும் சகித்துக்கொள்ள முடியாத தன்னுடைய போக்கினால் பெரும் முரண்பாடுகளை உண்டாக்கி இவர்களால் விலக்கப்பட்டவர்தான் மார்க் டிரிஸ்கள். இந்த நியூ கல்வினிஸ்டுகள் இயக்கம் பெற்றெடுத்திருக்கும் சினிமா ஸ்டார் போலப் பிரபலமான அழகுப்பிள்ளைகளில் ஒருவரே ஜொசுவா ஹெரிஸ். சில வருடங்களுக்கு முன் நியூ கல்வினிசம் பலரது கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்தபோது அதுபற்றி விளக்கியொரு நூலை வெளியிட்ட ஜெரமி வோக்கர், ‘நியூ கல்வினிஸ்டுகள் இப்போதுதான் ஆரம்பமாகி வளர்ந்து வருவதால் இன்னும் பல வருடங்களாகும்வரை அதுபற்றித் தெளிவாகவும் தீர்க்கமாகவும் எந்தக் கருத்தையும் சொல்லுவது கடினம்’ என்று எழுதினார். ‘அதற்குக் காரணம் இதில் இருக்கும் எல்லோருமே ஒரே கொள்கையைக் கடைப்பிடிக்கிறவர்களாக இல்லாததுதான்’ என்றும் எழுதியிருந்தார். இன்று நியூ கல்வினிஸ்டான சீ. ஜே. மகேனி தொடர்ந்தும் கென்டாக்கி மாநிலத்தில் ஒரு திருச்சபைத் தலைமைப் போதகராக இருந்துவந்தாலும், அவர் ஆரம்பித்த சவரின் கிரேஸ் மினிஸ்டிரீஸ் நடத்திய கல்லூரியைச் சேர்ந்தவர்கள் மைனரான பிள்ளைகளிடம் பாலியல் குற்றங்களைச் செய்திருந்த காரணத்தால் கோர்ட்டுவரை விஷயம் போய் சவரின் கிரேஸ் மினிஸ்டிரீஸில் இருந்து அவர் விலக நேர்ந்தது. கொஸ்பல் கொலிசனிலும் இருந்து அவர் விலகினார். ஜொசுவா ஹெரிஸ் கவனன்ட் லைப் மெகா சபையில் இருந்து 2015ல் விலகியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.

நியூ கல்வினிசத்தைப் பின்பற்றும் எல்லோருமே இவ்விதமாக விழுந்துபோகாவிட்டாலும் அதன் தலைமையில் இருக்கும் சிலர் (ஜேம்ஸ் மெக்டோனல், மார்க் டிரிஸ்கள், டூலியன் டிவிஜியன்) வெவ்வேறு காரணங்களுக்காக இப்படிப் பாதைவிட்டு விலகி விழுந்திருப்பது அந்த இயக்கத்தை சந்தேகக் கண்ணோடு பார்க்க வைக்கிறது. ஜொசுவா ஹெரிஸ் தான் கிறிஸ்தவன் அல்ல என்று உணர்ந்து அறிவித்து அப்படி இருந்ததற்காக வருத்தம் தெரிவிக்கும்வரையிலும், அவருடைய வாழ்க்கையில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வந்திருப்பதையும் (அவருடைய மனைவியிலும்கூட) அவரிருந்த சபையும், அவரோடுறவாடி அவரை அறிந்திருந்து இணைந்து பணிபுரிந்தவர்களும் எப்படிக் கவனிக்காமல் இருந்தார்கள் என்றெல்லாம் கேட்கும்படிச் செய்கிறது. நியூ கல்வினிசவாதிகளின் போதனையும், போக்கும், நடவடிக்கைகளும் எந்தவிதத்தில் ஜொசுவா ஹெரிஸில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு காரணமாக இருந்திருக்கின்றன என்றெல்லாம் கேட்காமல் இருக்கமுடியவில்லை.

(4) ஜொசுவா ஹெரிஸின் வாழ்க்கையில் நிகழ்ந்திருப்பது நமக்கு இன்னொரு முக்கிய விஷயத்தையும் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. அது திருச்சபை அமைப்புக்கு பற்றியது. மேலை நாடுகளில் 19ம் நூற்றாண்டுக்குப் பிறகு திருச்சபை அமைப்பு மதிப்புக்கொடுக்கும் வழக்கம் அருகிப்போக ஆரம்பித்தது. இன்றும் சீர்திருத்த பாப்திஸ்து, பிரெஸ்பிடீரியன் சபைகள் சபை அமைப்புக்கும், சபை ஒழுங்குநடவடிக்கைகளுக்கும் மதிப்புக்கொடுத்து நடந்து வருகிறபோதிலும் பொதுவாக சுவிசேஷ இயக்க திருச்சபைகளில் திருச்சபைபற்றிய போதனையும், வேதபூர்வமான ஒழுங்கு நடவடிக்கைகளும் அலட்சியப்படுத்தப்பட்டே வருகின்றன. கிறிஸ்தவ நிறுவனங்கள் பெருகிப்போய் சுவிசேஷ இயக்கம் திருச்சபைக்கு மதிப்புக்கொடுத்து நடக்காத நிலையையே அங்கு காண்கிறோம்.

சீர்திருத்தவாத திருச்சபைகள் ஒரு வாலிபன் கிறிஸ்தவ ஊழியத்தில் நாட்டம் காட்டுகிறான் என்றால், அவனுக்கு எத்தனை ஆற்றல்கள் இருந்தபோதும் உடனடியாக ஊழியத்திற்குள் நுழைத்துவிட மாட்டார்கள். அவனுடைய விசுவாசத்தையும் வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்த்து அவை வேதபூர்வமானவையாக இருக்குமானால் அனுபவமுள்ள போதகர்களுக்குக் கீழ் சில பணிகளைச் செய்யவைப்பார்கள். அத்தோடு அவனை உடனடியாக பிரசங்கிக்க வைக்காமல் வேதஇறையியலைக் கற்றுக்கொடுப்பார்கள். தவறின்றி வேதத்தை அவன் அறிந்துகொள்ளவும் அதில் தேர்ச்சியடைவதற்குமான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். இதற்கு முன் அவன் பிரசங்கம் செய்வதும், நூல்கள் எழுதுவதும் பெரிய ஆபத்து. தகுந்த வேதஅறிவைப் பெறாமல் தவறானதைப் பிரசங்கிப்பதும், எழுதுவதும் பேராபத்து. அந்த வாலிபன் வேதக்கல்வியை நல்ல முறையில் பெற்று இன்னும் ஒருபடி மேலே போவதற்கான அறிகுறிகளைக் கொண்டிருந்தானெனில் திருச்சபைப் போதகர்கள் அவனை மேலும் ஆராய்ந்து பார்த்து அதற்குப் பின்பே தங்களுக்கு முன் பிரசங்கம் செய்ய வைப்பார்கள். அந்த ஆய்வில் அவன் தேர்ச்சிபெற்ற பிறகே சபைக்கு முன் பிரசங்கம் செய்ய அனுமதி கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் அவன் போதக ஊழியத்துக்கு வருமுன் போதகர்களால் மட்டுமன்றி சபையாலும் ஆராயப்பட்டு ஒருபோதகரின் கீழ் ஆரம்பத்தில் நல்லனுபவம் அடையும்படியாக பணிபுரிய வைக்கப்படுவான். இதெல்லாம் ஜொசுவா ஹெரிஸுக்கு நடந்திருக்கவில்லை. வாலிபத்துடிப்பையும், உணர்ச்சிவேகத்தையும் மட்டுமே முதலீடாக வைத்து பிரசங்க ஊழியத்துக்குள் நுழைக்கப்பட்டிருந்தார் ஜொசுவா ஹெரிஸ். அவரை ஆராய்ந்து பார்த்து சரியாக வழிநடத்தியிருந்திருந்தால் இன்றைக்கு கிறிஸ்துவுக்கும், அவரது சபைக்கும் உலகத்துக்கு முன் ஏற்பட்டிருக்கும் இழுக்கைத் தவிர்த்திருந்திருக்கலாம். திருச்சபைக்கும், திருச்சபை அமைப்புக்கும், ஒழுங்குமுறைக்கும் மதிப்புக்கொடுத்து நடக்காதவர்களால் கிறிஸ்துவுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. இதற்கு ஜொசுவா ஹெரிஸ் நல்ல உதாரணம்.

(5) பரிசுத்த ஆவியால் மறுபிறப்படைந்த ஒருவன் தன்னை Deconstruct பண்ணிக்கொள்ள முடியாது அல்லது தன்னுடைய ஆவிக்குரிய நிலையில் இருந்து விழுந்துபோக முடியாது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். காரணம் என்ன தெரியுமா? மறுபிறப்படைந்திருக்கும் கிறிஸ்தவனைக் கர்த்தர் தன் கரத்தில் வைத்துத் தன் பராமரிப்பினால் பாதுகாக்கின்றார். உன்னதத்தில் அவன் முன்குறிக்கப்பட்டிருந்து, தெரிந்துகொள்ளப்பட்டிருந்து, திட்ப உறுதியாக அழைக்கப்பட்டு, நீதிமானாக அறிவிக்கப்பட்டு, கர்த்தரோடு ஒப்புரவாக்கப்பட்டு, பரிசுத்தப்படுத்தப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்டிருக்கிறான் (ரோமர் 8:29-30). அத்தோடு பவுல் எபேசியர் 1:13ல் அவன் பரிசுத்தஆவியினால் முத்திரை போடப்பட்டிருக்கிறான் என்று விளக்கியிருக்கிறார். வேதம் சொல்லுகிறது, மெய்யாக மறுபிறப்படைந்திருப்பவர்கள் விசுவாசத்தினால் கிறிஸ்துவோடு பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று (ரோமர் 6). மேலும், கிறிஸ்து அவர்களில் நிரந்தமாக இருந்து விசுவாசத்திற்குரிய அத்தனையையும் அவர்கள் தங்களில் செய்யக்கூடியவகையில் கிருபையில் வளரத்தேவையான ஆவிக்குரிய அனைத்தையும் பரிசுத்தஆவியினால் அவர்களில் செய்து நித்திய இரட்சிப்பை அவர்கள் அடையும்படி அவர்களைத் தொடர்ந்து பாதுகாக்கிறார். பிதாவினால் என் கரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒருவரையாவது நான் இழக்கமாட்டேன் என்று இயேசு சொல்லியிருக்கிறார் (யோவான்). எனவே மெய்யான கிறிஸ்தவன் ஒருபோதும் தன் இரட்சிப்பை இழந்துபோக மாட்டான்; அப்படி அதை அவன் இழப்பதென்பது முற்றிலும் இயலாத காரியம். கர்த்தரின் கரத்தில் இருந்து பிசாசால் அவனைப் பிரிக்கவே முடியாது.

கர்த்தர் மெய் கிறிஸ்தவனைத் தன் பராமரிப்பால் பாதுகாத்தபோதும், அவன் தன் ஆவிக்குரிய வாழ்க்கையில் சோதனைகளைச் சந்தித்து, அடிக்கடி பாவங்களைச் செய்துவிடவும், ஏன் மோசமான பாவத்தில் விழுந்துவிடக்கூடியவனாகவும் இருக்கிறான். அவனுள் தொடர்ந்திருக்கும் பாவத்தோடு அவன் இறுதிவரை போராடுகிறபோது அவன் இந்த உலகத்தில் முழுப்பூரணத்துவத்தோடு இருக்க முடியாது. அப்படி அவன் சில தடவைகள் தன் ஆவிக்குரிய வாழ்க்கையில் இடர்களைச் சந்தித்து பாவத்தைச் செய்து, சிலகாலம் இரட்சிப்பின் நிச்சயத்தை உணராமல், சபையைக்கூடவிட்டு தற்காலிகமாக விலகிப்போய் வாழ்ந்தாலும் அவனைத் திட்ப உறுதியாக அழைத்திருக்கும் கர்த்தர் அவனைத் தன்கரத்தில் வைத்துத் தொடர்ந்து பாதுகாப்பதால் அவன் மனந்திரும்பி நிச்சயம் மீண்டும் கிறிஸ்துவின் சந்தோஷத்தைத் தன் வாழ்க்கையில் அனுபவித்து ஆண்டவரோடிருக்கும் உறவைப்புதுப்பித்துக்கொள்வான். மெய் கிறிஸ்தவன் இந்த உலகத்தில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் வாழ்வான். இதைத்தான் ‘பரிசுத்தவான்களின் விடாமுயற்சி’ எனும் 1689 விசுவாச அறிக்கையின் அதிகாரம் விளக்குகிறது. மெய் கிறிஸ்தவனுக்காக கிறிஸ்து பரலோகத்தில் இருந்து பரிந்துரைத்துத் தொடர்ந்து ஜெபிக்கிறார். அவன் நிச்சயமாக பரலோகத்தை அடையும்வகையில் கர்த்தர் அவனைப் பாதுகாக்க, அவனும் கர்த்தரின் வழியில் இறுதிவரை நிலைத்திருந்து அவரின் பாதத்தை அடைவான்.

ஜொசுவா ஹெரிஸின் வாழ்க்கை அனுபவம் இதைப்பற்றியெல்லாம் நம்மைச் சிந்திக்க வைத்திருக்கிறது. ஜொசுவா ஹெரிஸின் வாழ்க்கை நமக்கு எச்சரிக்கையாக இருந்து அடைந்திருக்கும் இரட்சிப்பை அலட்சியம் செய்யாமல், தொடர்ச்சியாக இருக்கவேண்டிய மனந்திரும்புதலை நாம் கொண்டிருந்து தாழ்மையோடு கர்த்தரின் வழிகளைப் பின்பற்றி விசுவாசத்தோடு வாழ நம்மை அழைக்கின்றது.

 

ஆதியாகமத்துக்கு வந்திருக்கிறது ஆபத்து!

ஆங்கிலேயரான சார்ள்ஸ் டார்வின் தன்னுடைய பரிணாமத் தத்துவத்தை 1859ல் தன் நூலொன்றில் வெளியிட்டார். அது எந்தளவுக்கு உலக சமுதாயத்தைப் பாதிக்கப்போகிறது என்பது டார்வினுக்கே தெரிந்திருக்க வழியில்லை. இத்தனை காலத்துக்குப் பிறகும் டார்வினின் கோட்பாடு உலக சமுதாயத்தைத் தொடர்ந்து பாதித்து வருகிறது. சமுதாயத்தை அது தொடாத பகுதியில்லை என்றே கூறவேண்டும். கிறிஸ்தவர்கள்கூட டார்வினின் கோட்பாட்டின் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அந்தளவுக்கு மனித சமுதாயத்தை டார்வினின் கோட்பாடுகள் பாதித்தன; பாதித்தும் வருகின்றன. டார்வினின் கோட்பாடு பிசாசினால் பயன்படுத்தப்பட்டு வரும் வல்லமையான கருவி என்பதை எந்தக் கிறிஸ்தவனும் மறுக்கமுடியாது. டார்வினின் கோட்பாட்டில் எந்த மாற்றத்தைச் செய்தும் கிறிஸ்தவர்கள் பயன்படுத்த வழியில்லை. அந்தளவுக்கு அது கிறிஸ்தவத்தின் பேரெதிரியாக இருக்கிறது. டார்வினின் கோட்பாடுகள் அதிரடியாகப் பரவ ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் அதை எதிரியாகப் பார்க்க அநேக கிறிஸ்தவர்கள் தவறினார்கள். பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அநேக இறையியல் அறிஞர்களையும், இறையியல் கல்லூரிகளையும் டார்வினின் கோட்பாடுகள் பாதித்தன.

ஸ்கொட்லாந்தில் பிரபலமான இறையியலறிஞராக இருந்த தொமஸ் சார்மர்ஸ் டார்வின் வழியில் சிந்தித்து உலகத் தோற்றத்தின் காலம்பற்றி விளக்கங்கொடுக்கும் இடைவெளிக் கோட்பாட்டுக்குப் (Gap theory) பலியாகியிருந்தார். இந்தக் கோட்பாடு வேதத்தையும், விஞ்ஞானத்தையும் இணைத்து விளக்கங்கொடுக்க முயல்கிறது. அதாவது, ஆதியாகமம் 1:1ல் நாம் வாசிக்கிறபடி கடவுள் உலகத்தைப் பூரணமாகப் படைத்தார் என்றும், 1:2ல் இருந்து 2:3வரையுள்ள பகுதி உலகத்தைக் கர்த்தர் சீராக்கியதைப்பற்றி விளக்குகிறது என்றும் இடைவெளிக் கோட்பாடு விளக்குகிறது. முதலாவது பூரணப்படைப்பு கர்த்தருடைய நியாயத்தீர்ப்பினால் சின்னாப்பின்னமாகி மோசமான நிலையை அடைந்து எவரும் அதில் வாழமுடியாத நிலை ஏற்பட்டதென்றும், 1:2ன் மூலம் கடவுள் மறுபடியும் தன் படைப்பை சீராக்கினார் என்றும் இது விளக்குகிறது. கடவுளின் நியாயத்தீர்ப்புக்குக் காரணம் உலகம் பாவத்தில் விழுந்ததே என்றும், அதற்கு பிசாசு காரணம் என்றும் இது விளக்குகிறது. உலகம் மோசமான நிலையை அடைந்ததாலேயே உலகம் முழுவதும் தண்ணீரால் மூடப்பட்டிருந்ததென்று இரண்டாம் வசனத்தில் வாசிக்கிறோம் என்றும் இந்தக் கோட்பாடு விளக்குகிறது.

அத்தோடு முதலாவது வசனத்திற்கும் இரண்டாம் வசனத்திற்கும் இடையில் மில்லியன் ஆண்டுகளுக்கு மேலான இடைவெளி இருந்ததென்றும், இரண்டாம் தடவை கடவுள் தன் படைப்பை சீராக்கி சரிப்படுத்தியபோது அதைக் குறைந்தகால அளவில், அதாவது ஆறு நாட்களில், சில ஆயிரம் ஆண்டுகளுக்குள் செய்துமுடித்தார் என்றும் இக் கோட்பாடு விளக்குகிறது. ஆரம்பகாலப் பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரியின் பிரபல அறிஞர்களாக இருந்தவர்கள்கூட இந்த இடைவெளிக்கோட்பாட்டிற்குப் பலியாகியிருந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இன்றும்கூட கர்த்தர் 24 மணி நேரங்கொண்ட ஆறுநாட்களில் உலகத்தைப் படைத்தார் என்ற போதனையை ஆணித்தரமாக ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் இருக்கும் இறையியல் அறிஞர்களும் போதகர்களும் இருந்துவருகிறார்கள். அந்தளவுக்கு டார்வினுடையதும் அவன் வழியில் புறப்பட்ட கோட்பாடுகளின் செல்வாக்கும் பலரூபங்களில் தொடர்ந்திருந்து வருகிறது.

இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால், வேதத்தின் முதல் நூலான ஆதியாகமத்தின் முக்கியத்துவத்தை உங்களுக்கு உணர்த்தத்தான். வேதத்தை இல்லாமலாக்குவதற்கு பிசாசு எப்போதுமே முயற்சி எடுத்துவந்திருக்கிறான். 19ம் நூற்றாண்டில் உருவான டார்வினின் பரிணாமத்தத்துவம் இந்த விஷயத்தில் பிசாசினால் பயன்படுத்தப்பட்டு வரும் வல்லமையான ஆயுதம். என்றுமில்லாதவகையில் இந்த 21ம் நூற்றாண்டில் ஆதியாகமத்தையும், முழு வேதத்தையும் படிப்படியாக அழிப்பதற்கு பிசாசு பெருமுயற்சி எடுத்து வருகிறான். அதில் அவன் வேதத்தின் முதல் நூலான ஆதியாகமத்தை அதிகம் தாக்கி வருகிறான். ஆதியாகமத்தை செல்லாக்காசாக்கிவிட்டால் முழு வேதத்தையும் அழித்துவிடலாம், அதாவது அதன் மீது கிறிஸ்தவர்களுக்கும் ஏனையோருக்கும் இருக்கும் நம்பிக்கையை அழித்துவிடலாம் என்று பிசாசு நடவடிக்கைகள் எடுத்துவருகிறான்.

முக்கியமாக ஆதியாகமத்தை செல்லாக்காசாக்குவதில் பிசாசுக்கு என்ன நன்மை இருக்கிறது? வேதத்தின் மூல போதனைகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது ஆதியாகமமே. ஆதியாகமத்தில் தான் பெரும்பாலான அடிப்படைப் போதனைகளுக்கான அத்திவாரம் போடப்பட்டிருக்கிறது. ஆதியாகமத்தில் இருக்கும் அந்த அடிப்படைப்போதனைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்:

  1. உலகத்தோற்றம் பற்றிய விளக்கம்
  2. ஆணும், பெண்ணுமாக மனிதனின் படைப்பும் அவர்களுடைய தன்மை, பொறுப்பு பற்றிய விளக்கம்
  3. படைப்பில் எக்காலத்துக்குமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் நியமங்கள் – உழைப்பு, ஓய்வுநாள், திருமணம்
  4. சாத்தானைப்பற்றிய விளக்கம்
  5. பாவத்தைப்பற்றிய விளக்கம்
  6. மனிதனின் வீழ்ச்சிபற்றிய விளக்கம்
  7. சுவிசேஷம் – ஆதியாகமம் 3:15

மேலே நாம் கவனித்திருக்கும் அனைத்தும் வேதத்தின் அடிப்படைப் போதனைகள். முழு வேதத்திலும் இந்தப் போதனைகள் பற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களுக்கு ஆதியாகமமே ஆதாரமாக இருக்கின்றது. இயேசு கிறிஸ்துவும், பவுலும், பேதுருவும் இந்த விஷயங்கள் பற்றிய தங்களுடைய போதனைகளுக்கு ஆதியாகமத்தையே ஆதாரமாகக் காட்டியுள்ளனர். மத்தேயு 5-7வரையுள்ள அதிகாரங்களில் காணப்படும் இயேசுவின் மலைப்பிரசங்கத்தை வாசித்துப் பாருங்கள். நான் கொடுத்திருக்கும் பட்டியலில் இருக்கும் விஷயங்களில் சிலவற்றிற்கு இயேசு புதிய ஏற்பாட்டில் விளக்கங்கொடுப்பதைக் காண்கிறோம். இதேபோல் பவுலும், 1 தீமோத்தேயு 2:8-15வரையுள்ள வசனங்களில் ஆதியாகமம் முதலிரண்டு அதிகாரங்களின் அடிப்படையிலேயே புதிய உடன்படிக்கை காலத்திற்கான விளக்கத்தைத் தந்திருக்கிறார். 1 பேதுரு 3ல் ஆண், பெண் உறவுபற்றி விளக்கும் பேதுருவும் அந்தப்போதனைகளுக்கு அத்திவாரமாக ஆதியாகமத்தை நினைவுறுத்தி ‘பூர்வத்தில்’ (ஆதியில்) இப்படி நடந்திருக்கிறது என்று உதாரணங்காட்டி விளக்கமளிக்கிறார். புதிய உடன்படிக்கை காலத்தில் பெண்கள் சபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு விளக்கங்கொடுக்கும் பவுல் 1 கொரிந்தியர் 14:34ல் ஆதியாகமத்தை நினைவூட்டி ‘வேதமும் அப்படியே சொல்லுகிறது’ என்றார். ஏனெனில் பெண்களின் சமுதாய நடத்தைக்கான அத்திவாரம் ஆதியாகமத்திலேயே போடப்பட்டுவிட்டது. புதிய ஏற்பாட்டு கலாச்சாரத்திற்கு ஏற்றவிதத்தில் அதை மாற்றியமைக்க முடியாது. இதற்கெல்லாம் காரணம் புதிய ஏற்பாட்டில் இயேசுவோ, பவுலோ, பேதுருவோ முற்றும் புதிதான போதனைகளைக் கொடுக்காமல் ஏற்கனவே அத்திவாரமிட்டுத் தரப்பட்டிருக்கும் ஆதியாகமத்தின் விளக்கங்களின் அடிப்படையிலேயே புதிய ஏற்பாட்டு வாழ்க்கைக்கான விளக்கங்களைத் தந்திருக்கின்றனர். இதைப் புதிய ஏற்பாட்டில் அநேக பகுதிகளில் காணலாம்.

ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களுக்கு எவராவது தவறான விளக்கங்களைக் கொடுத்தால் முழு வேதத்திற்கும் தவறான விளக்கங்கொடுப்பதில் போய் முடியும். ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களும் அந்தவிதத்தில் வேதபோதனைகளனைத்திற்கும் அத்திவாரமாக அமைந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், அதன் முதல் மூன்று அதிகாரங்களும் அதிமுக்கியமானவை. அந்த மூன்று அதிகாரங்களில்தான் உலகத்தோற்றத்தைப் பற்றியும், மனிதன் படைக்கப்பட்டவிதத்தைப்பற்றியும், பாவம் உண்டானவிதத்தைப் பற்றியும், அதன்காரணமாக ஏற்பட்ட மானுட வீழ்ச்சி பற்றியும், சுவிசேஷத்தைப் பற்றியும் அறிந்துகொள்ளுகிறோம். இவையனைத்திற்கும் அந்த மூன்று அதிகாரங்களே அடித்தளம். அதனால்தான் பிசாசு ஆதியாகமத்தைத் தொடர்ந்து தாக்கிக்கொண்டு வருகிறான். எந்தவிதத்தில் பிசாசு ஆதியாகமத்தைத் இக்காலத்தில் தாக்குகிறான் என்று கேட்கிறீர்களா? பின்வரும் வேதத்திற்கு முரணான நவீன பிரச்சனைகளைக் கவனியுங்கள்.

  1. பரிணாமத் தத்துவம் (Evolution)
  2. இயற்கையைத் தெய்வமாக வணங்கும் லிபரலிச சுற்றுப்புற சீர்திருத்தக் கோட்பாடு (Environmentalism)
  3. ஆண், பெண் வேறுபாட்டை அகற்றி, எவரும் தங்களுடைய இனத்தை சுயவிருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம் என்ற லிபரலிசக் கோட்பாடு.
  4. திருமணத்தை இல்லாமலாக்கி திருமணம் இல்லாமல் இணைந்து வாழலாம் என்ற லிபரல் போக்கு.
  5. ஓரினச் சேர்க்கையும், ஓரினத் திருமண பந்தமும்.
  6. ஆணுக்குக் கடவுள் கொடுத்திருக்கும் தலைமை ஸ்தானத்தை மறுதலித்து ஆணும், பெண்ணும் சமம் என்று வாதிக்கும் Egalitarian போக்கு.
  7. உழைப்புக்கு மதிப்புக்கொடுக்காமலும் எல்லோரும் உழைப்பதற்கு வழியேற்படுத்தாமலும் Socialism பேசும் போக்கு. சோஷியலிஸம் என்பது இருப்பவர்களிடம் (உழைப்பவர்களிடம்) இருப்பதைப் பிடுங்கி இல்லாதவர்களுக்கு (உழைக்காதவர்களுக்கு) கொடுப்பது.
  8. ஓய்வுநாளையும், ஆராதனையையும் எதிர்க்கும் போக்கு.

மேலே நான் குறிப்பிட்டிருக்கும் அத்தனையும் இந்த 21ம் நூற்றாண்டில் நமக்கு சோதோம், கொமோரா காலத்தை நினைவுபடுத்துகிறது இல்லையா? ஏன்? அந்தளவுக்கு பாவம் பெருகி அக்காலத்தை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது உலக சமுதாயம். இயற்கையை மனிதன் கடவுளாக ஆராதித்து சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாப்பதில் இன்று ஆக்ரோஷத்தோடு கவனம் செலுத்துகிறான். பசியால் வாடி வதங்கி இறந்துகொண்டிருப்பவைகளுக்குக்கூட அவன் அத்தனை அக்கறை காட்டுவதில்லை; கொலைகளும், கற்பழிப்பும், காட்டுமிராண்டித்தனமும் பெருகியோடுவதைக்கூட அவன் அந்தளவுக்கு பெரிதுபடுத்தவில்லை. ஓரினச்சேர்கைக்காகவும், அவர்களுக்கு திருமண உரிமை கோருவதற்கும், மூன்றாம் பால் என்று அவன் பெயர் வைத்திருக்கும் அரவாணிகளின் உரிமைக்காகப் பாடுவதிலும் அவன் காட்டுகின்ற அதீக அக்கறை அவனைத் தன்பாவ நிலையை உணரமுடியாதபடி வைத்திருக்கிறது. உழைப்பை ஆனந்தத்தோடு நாடாமல், நீதியானதைச் செய்து சம்பாதிப்பதில் கவனம் செலுத்தாமல் உழைப்பவர்களிடம் இருப்பதைப் பிடுங்கி அதில் சுகம் காண முயல்கிறான். அருமையாகக் கடவுளால் படைக்கப்பட்டிருக்கும் மனிதன், பாவத்தால் இன்று மானுடத்தை மிருகங்களைவிடக் கேவலமாகப் பார்க்கிறான். மனிதனுக்கு தான் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டு, அந்தச் சாயலைத் தொடர்ந்து தன்னில் கொண்டிருக்கிறேன் என்ற உணர்வே இல்லாமல் தான் அனுபவிப்பதற்காகப் படைக்கப்பட்டிருக்கும் மிருகங்களின் உரிமைக்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறான். இத்தகைய அசிங்கப்போக்கில் போய்க்கொண்டிருக்கும் மனிதன் கடவுளை ஆராதிக்க மறுத்து ஓய்வுநாளைத் துப்புரவாக மதிக்காமல் நடந்துகொண்டிருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

கர்த்தருடைய வார்த்தையை நிந்தித்து, அவர் இல்லை என்று நிரூபிக்கப் பார்க்கும் வகையில் பாவகரமான சிந்தனைப்போக்கோடு போய்க்கொண்டிருக்கும் மனித சமுதாயம் வேதத்தையும், கிறிஸ்தவத்தையும் எள்ளிநகையாடிக் கொண்டிருக்கிறது. அது வரப்போகின்ற நியாயத்தீர்ப்பைப் பற்றிய உணர்வில்லாமல் நடந்துகொள்ளுகிறது. இந்த சமுதாயத்தில் சுவிசேஷத்தைச் சொல்லி கிறிஸ்தவ வாழ்க்கையைக் கர்த்தரின் மகிமைக்காக வாழவேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டிருக்கும் நாம் ஆதியாகமத்தையும், பழைய ஏற்பாட்டையும் துச்சமாக எண்ணக்கூடாது. இன்று அப்படி நடந்து ஆதியாகமமும், பழைய ஏற்பாடும் புதிய உடன்படிக்கைக்கால கிறிஸ்தவர்களுக்கு பயனில்லாதது என்று போதித்து வருகிற பிரசங்கிகளும், இறையியலறிஞர்களும் தங்களைப் புத்திசாலிகள் என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் அவர்கள் பிசாசின் வலையில் விழுந்திருக்கிறார்கள்; பிசாசின் வேலையைச் செய்துவருகிறார்கள்.

கிறிஸ்தவர்கள் ஆதியாகமத்தை ஆழமாகப் படித்து சிந்திக்கவேண்டும். புதிய ஏற்பாட்டுப் போதனைகளோடு தொடர்புபடுத்திப்படித்து உலகத்தைப்பற்றிய தங்களுடைய எண்ணங்கள் வேதபூர்வமாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். கர்த்தரின் வார்த்தையை அதிகாரமாகக் காணாத உலக சிந்தனைகளுக்கு நம்முடைய இருதயங்களில் இடங்கொடுக்காது எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். வேதபூர்வமான எண்ணங்களை இருதயத்தில் வளர்த்து அவற்றின்படி நடந்துகொள்ள வேண்டும். நம்முடைய இருதயங்களைப் பாதுகாத்துக்கொள்ளுவதோடு இருந்துவிடக்கூடாது. நம்முடைய மனைவி, பிள்ளைகளும் அத்தகைய வேத எண்ணங்களை மட்டும் இருதயத்தில் கொண்டிருக்க அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும்.

சிந்திக்காமலும், எதையும் ஆராய்ந்து பார்க்காமலும் கிறிஸ்தவர்கள் இருக்கக்கூடாது. டெலிவிஷனில் கேட்பதையெல்லாம் நம்பிவிடக் கூடாது. அதை நடத்துகிறவர்கள் உலக சிந்தனை கொண்டவர்கள். அவர்களால் நமக்குப் பயனில்லை. அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை நம்பி எந்த நிகழ்ச்சியையும் நடத்துவதில்லை. கிறிஸ்தவர்கள் எது காதில் விழுந்தாலும் அவற்றை உடனடியாக ஏற்றுக்கொள்ளாமல் வேதத்தை வைத்து ஆராய்ந்து பார்க்கவேண்டும். உங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கும், கல்லூரிக்கும் போய்வருகிறபோது எதைக் கேட்கிறார்கள், படிக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். வேதத்திற்கு எதிரான போதனைகளை இந்த உலகம் நம்மில் புகுத்துவதற்கு அரும்பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. அதன் வலையில் நாம் சிக்கிவிடக்கூடாது. தானியேலையும், அவனுடைய நண்பர்களையும் தங்கள் சமுதாயப்போக்கில் இழுப்பதற்கு பாபிலோனியர்கள் எத்தனை பாடுபட்டும் தானியேல் அதற்கு இடங்கொடுக்கவில்லையே. அவன் கிறிஸ்தவனைப்போல சிந்தித்தான்; கிறிஸ்தவனாக எல்லா இடங்களிலும் நடந்துகொண்டான். அதுபோலத்தான் நாமும் இருக்கவேண்டும்.

கிறிஸ்தவ வாலிபர்கள் இன்றைக்கு சமூகதளங்ளே வாழ்க்கை என்று இருந்து வருகிறார்கள். முகநூல், இன்ஸ்டகிராம், டுவிட்டர் என்று தங்கள் நேரமனைத்தையும் அதிலேயே செலவிடுகிறார்கள். சமூகதளங்களை உருவாக்கி அவற்றைப் பயன்படுத்துகிற மார்க் சக்கிள்பேர்க் போன்றோர் முழுமுற்றாக இந்த உலக சிந்தனைப்போக்கைக் கொண்டவர்கள். அவர்கள் கிறிஸ்தவ போதனைகளைத் தவிர வேறு அனைத்தையும் சமூகதளங்களில் அலைய விடுகிறவர்கள். பிசாசு அவர்களை அருமையாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறான். கிறிஸ்தவ வாலிபர்கள் இதையெல்லாம் எண்ணிப்பார்க்காமல் சமூகதளங்களே கதியென்று இருந்துவருவது அவர்களுடைய வாழ்க்கைக்கு வந்திருக்கும் ஆபத்தாக இருக்கிறது. உலக சிந்தனை எங்கிருந்து, எந்த ரூபத்தில், எதன் மூலம், எந்த நேரத்தில் வந்தாலும் நீங்கள் விழிப்போடிருக்கவேண்டும். கிறிஸ்துவிலும், கிறிஸ்துவின் வேதத்திலும் உங்களுக்கிருக்கும் நம்பிக்கையைக் கெடுப்பதைத் தவிர பிசாசுக்கு வேறு என்ன வேலையிருக்கிறது? வாலிபர்களே ஜாக்கிரதையாயிருங்கள்! வஞ்சிக்கிறவன் உங்களுக்காக வலைவீசிக்கொண்டிருக்கிறான்; விழிப்போடிருங்கள். வேதத்தை ஆராய்ந்து பாருங்கள்; வேதபோதனைகளை மட்டும் நம்புங்கள். அவை மட்டுமே உங்களைக் கிறிஸ்துவில் உயர்த்தும். ஆதியாகமத்துக்கு வந்திருக்கிறது ஆபத்து! அதைத் தொலைக்கக் கங்கனம் கட்டிச் செயல்படும் பிசாசு உங்களைக் கர்த்தரிடம் இருந்து பிரிக்கப் பார்க்கிறான். அவன் வெற்றிபெற வழியில்லாதபடி உங்கள் இருதயத்தையும், வாழ்க்கையையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.


வேதத்தை விளங்கிக்கொள்ள இன்றியமையாத அம்சங்கள் – A.W. பின்க்

 அதிகாரம் 2

இதற்கு முந்திய அதிகாரத்தில், வேதத்தை விளக்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்துப் பார்த்தோம். பரிசுத்த வேதத்திலுள்ள ஒவ்வொரு வாக்கியத்தின் அர்த்தத்தையும் ஆராய்ந்தறிய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதையும் கவனித்தோம். கடவுள் தன் வார்த்தையில் சொல்லியிருப்பவை மிக முக்கியத்துவமும், பெரும் மதிப்பும் கொண்டவை. இருந்தாலும், அதிலுள்ள போதனைகளை நாம் தெளிவாக அறியாமற்போனால், அதிலிருந்து நாம் எத்தகைய நன்மையை அடைய முடியும்? வேதத்திலுள்ள சில சொற்களுக்கு வேதத்திலேயே அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் இதை நமக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறார். புதிய ஏற்பாட்டின் முதல் அதிகாரத்திலேயே, இயேசு கிறிஸ்துவைக் குறித்து இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது, “அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.” (மத்தேயு 1:23). மேலும், யோவான் 1:41ல், “மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்” என்றிருக்கிறது. மாற்கு 15:22, “கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய்” என்கிறது. எபிரெயர் 7:2, “இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம்” என்கிறது. வேதத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையின் பொருளையும், நாம் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதன் அவசியத்தை இந்த வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. கர்த்தருடைய வேதம், வார்த்தைகள் மூலம் நம்மை வந்தடைந்திருக்கிறது. அவ்வார்த்தைகளுக்கான பொருளை நாம் அறியாதிருந்தால், அவற்றின் அர்த்தத்தை நாம் அறிந்துகொள்ள முடியாது. ஆகவே வேதத்தில் நாம் வாசிப்பவைகளின் பொருளை ஆராய்ந்தறிவதே நம்முடைய முதன்மையான பொறுப்பு.

வேதத்தை விளக்குவதற்கான சில விதிமுறைகளையும் கொள்கைகளையும் விளக்குவதற்கு முன், வேதத்தை விளங்கிக்கொள்ள முற்படுகிற ஒருவனில் காணப்பட வேண்டிய சில முக்கியமான அம்சங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். நல்ல வேலையாளுக்கு வேலைக்கான நல்ல கருவிகள் கட்டாயம் தேவை, ஆனால் அவற்றைப் பயன்படுத்த தகுதியற்றவர்களிடம், அவற்றில் சிறப்பானதொன்று கிடைத்தாலும் அதன் பயன் குறைந்தளவே இருக்கும். வேதத்தை விளக்குவதற்கான வழிமுறைகள் அவசியமானவைதான், ஆனால் அவற்றை எவ்விதமான மனநிலையில் இருந்து கையாளுகிறோம் என்பதுதான் எல்லாவற்றையும்விட முக்கியமானது. ஆவிக்குரிய புத்தகத்தை ஆவிக்குரிய மனநிலையிலுள்ள வாசகனால் மட்டுமே விளங்கிக்கொள்ள முடியும் என்பதில் சந்தேகமேயில்லை. “ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்” (1 கொரிந்தியர் 2:14). கர்த்தருடைய வார்த்தை உன்னதமான காரியங்களையும், நித்தியத்தைப் பற்றியும் விளக்குகின்றன. ஆகவே வேதத்தைக் கையாளுகிறபோது, உள்ளார்ந்தவிதத்தில் அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவசியம். இதற்கு அறிவார்ந்த பயிற்சியைவிட மேலானது தேவை. மூளையோடு இருதயமும் சரியாக இருக்க வேண்டும். நேர்மையும் ஆவிக்குரிய இருதயமும் இருக்கிற ஒருவனிடத்தில்தான், சத்தியத்தை அறியும் தெளிவான பார்வையைக் காண முடியும். அப்போதுதான், வேதத்தில் நாம் வாசிக்கிறவைகளின் முழுமையான அர்த்தத்தை விளங்கிக்கொள்ளுகிறவிதத்தில் நம்முடைய மனம் அதற்குத் தயாராகும். அப்போது, வார்த்தைகளுக்கான வெறும் பொருளை மட்டும் அறிகிறதாக இல்லாமல், அதுதரும் போதனையையும் உள்ளார்ந்தவிதத்தில் அறிந்து, அதற்கேற்றவிதமாக வாழுகிறவர்களாக இருப்போம்.

“Studies in the Scriptures” என்ற புத்தகத்தில் இருபது வருடங்களுக்கு முன் நான் எழுதிவைகளை, இங்கே குறிப்பிட விரும்புகிறேன், “கடந்த சில வருடங்களாக, வேதம் வாசிப்பதும், வேத ஆராய்ச்சி செய்வதுமாகிய காரியங்களில் ஈடுபடுகிறவர்களிடத்தில் பெரிதாக எந்த ஆவிக்குரிய நன்மையையும் காண முடியவில்லை. பல வேளைகளில், அது ஆசீர்வாதமாக இருப்பதைக் காட்டிலும் சாபமாகவே இருக்கிறது. என் வார்த்தைகள் கடுமையானதாக இருந்தாலும், தற்போது இருக்கிற நிலையை எந்தவிதத்திலும் நான் பெரிதுபடுத்திக் காட்டவில்லை என்பதை நாமெல்லோருமே அறிவோம். [எத்தனையோ காலங்களுக்கு முன் ஆர்தர் பிங்க் எழுதியிருக்கும் இந்த விஷயம் நம்மினத்தின் இன்றைய நிலைக்கு முழுமையாகப் பொருந்திக் காணப்படுகிறது – மொழிபெயர்ப்பாளர்]. இன்று தேவனுடைய வரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன; தேவனுடைய இரக்கத்தை அநேகர் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். தற்போதைய சூழலில் இது எத்தனை உண்மை என்பது பலருடைய வாழ்க்கையின் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது. அவிசுவாசியான ஒரு மனிதனும் இவ்வுலக அறிவியல் பாடங்களைப் படிப்பதுபோல் ஆர்வத்துடன் வேதத்தையும் படிக்க முடியும். அப்படிப் படிப்பது அவனுடைய அறிவைப் பெருக்கும்; அத்தோடு அவனில் ஆணவமும் அதிகரிக்கும். மருந்து தயாரிக்குமொருவர் சுவாரஸ்யமான பரிசோதனையில் ஈடுபட்டு புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்து அதில் சந்தோஷமடைவதுபோல், வேத வார்த்தைகளை புத்திரீதியாக மட்டும் ஆராய்கிறவனும் புதிய விஷயங்களைப் படித்து அதில் ஆனந்தமடையலாம். இருந்தபோதும் மருந்து தயாரிக்கிறவனின் ஆனந்தத்திற்கும் இந்த மனிதனின் ஆனந்தத்திற்கும் எந்த ஆவிக்குரிய வேறுபாடும் இல்லை. மருந்து தயாரிக்கிறவன் எப்படித் தன் கண்டுபிடிப்பில் ஆனந்தத்தையும், ஆணவத்தையும் கொண்டு, தன்னை உயர்வாகவும் மற்றவர்களைத் தன்னிலும் தாழ்ந்தவர்களாகப் பார்ப்பதுபோல், வேதத்தைப் ஆராய்கிறவனும் எண்ணியல், அடையாளமொழி, தீர்க்கதரிசனம் ஆகியவற்றைப் படித்து அறிந்துகொண்டதில் ஆனந்தத்தையும் ஆணவத்தையும் கொண்டிருந்து மற்றவர்களை அறிவில் குறைந்தவர்களாகவும் தன்னிலும் தாழ்ந்தவர்களாகவும் பார்க்கிறான்.”

மனிதனுடைய எண்ணங்கள், அவனுடைய ஏனைய ஒழுக்க நடவடிக்கைகளைப் போலவே, பாவத்தால் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டும் பாழடைந்தும் இருக்கின்றன. இப்படியான எண்ணங்களின் மூலம் வெளிப்படும் எந்தவொரு செயலும், அது தேவனுடைய வார்த்தையைப் படிப்பதில் ஈடுபடுவதாக இருந்தாலும், தவறுகளாலும் குறைபாடுகளாலும் நிறைந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. நம்மிலுள்ள பாவத்தின் காரணமாகவே தேவனுடைய வார்த்தையை நாம் சரியாக விளங்கிக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம். பரிசுத்த ஆவியானவருடைய கிருபையின் செயலினாலேயே, ஒரு விசுவாசி சத்தியத்தில் வழிநடத்தப்படுகிறான்; சத்தியத்தை விளங்கிகொள்ளும் திறனையும் அடைகிறான். இது பரிசுத்த ஆவியானவர், தேவனுடைய பிள்ளைகளின் எண்ணத்தில் ஏற்படுத்தும் தனித்துவமான, சிறப்பான ஆவிக்குரிய செயலாகும். இதன் மூலம் அவர், வேத வார்த்தைகளிலுள்ள தேவனுடைய சித்தத்தைச் சரியாக அறிந்துகொள்ளுவதற்குத் தேவையான ஆவிக்குரிய ஞானத்தையும், தெளிவையும் அவர்களுக்குத் தருகிறார். அத்தோடு, அந்த உன்னத சத்தியத்தில் அவர்கள் நிலைத்திருக்கவும் செய்கிறார். பரிசுத்த ஆவியானவரின் “தனித்துவமான செயல்” என்று நான் இங்கு குறிப்பிடுவது, அவிசுவாசியான ஒருவனை ஆவிக்குரியவிதத்தில் உயிர்ப்பிப்பதற்காக அவர் செய்கிற அந்த ஆரம்பச் செயலைத் தவிர மேலும் கூடுதலானதொன்றாகும். மறுபிறப்பில், “நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்” (1 யோவான் 5:20). இதுவே பெரிய ஆசீர்வாதம். எனினும், “தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறிவதற்கு” (1 கொரிந்தியர் 2:12) இதிலும் மேலதிகமானதொன்று தேவைப்படுகிறது. இயேசுவின் சீடர்களான அப்போஸ்தலர்களுடைய நிலை, இதை நமக்கு மேலும் தெளிவாக்குகிறது. அதாவது, மூன்று வருடங்களுக்கு மேலாக இயேசுவோடுகூட இருந்து, அவருடன் நெருக்கமான ஐக்கியத்தில் இருந்திருந்தபோதிலும், பிறகுதான், “வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்தார்” (லூக்கா 24:45) என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

இதுவரை நான் குறிப்பிட்டவைகளிலிருந்து, ஒரு கிறிஸ்தவன் வேதத்தை வாசிக்கிறபோது, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உங்களால் உணர முடிகிறதா? அப்படிக் கவனமாக இல்லாதபட்சத்தில், அவன் தனக்குக் கேடுண்டாகும்படி, தான் வாசிக்கிறவைகளைத் தாறுமாறாக்கிவிடுகிறான். இது, வேதத்தின் ஆக்கியோனாகிய தேவனுக்கு முன்பாக அவன் மிகுந்த தாழ்மையுடன் இருக்க வேண்டியதையும், வேதத்தை விளங்கிக்கொள்ளுவதற்கு அவன் அவரை முற்றிலும் சார்ந்திருக்க வேண்டியுள்ளதையும் நமக்குக் காட்டுகிறது. ஒரு விசுவாசி தெய்வீக காரியங்களை அறிந்துணர, மறுபிறப்பு மட்டுமே போதுமானதாக இருந்திருந்தால், அப்போஸ்தலனாகிய பவுல், கொலோசெ பட்டண விசுவாசிகள் “எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்” (கொலோசெயர் 1:9) வேண்டுமென்று ஒருபோதும் தேவனிடத்தில் கேட்டிருக்க மாட்டார். அத்தோடு, தன்னுடைய ஆவிக்குரிய மகனைப் பார்த்து, “கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்” (2 தீமோத்தேயு 2:7) என்று சொல்லியிருக்க மாட்டார். மனித அறிவின் வரம்பிற்குள்ளாகவே சுவிசேஷத்தின் பரிசுத்த இரகசியங்கள் அமைந்திருக்கிறது என்றும், சத்திய ஆவியானவருடைய விசேஷ ஆவிக்குரிய செயல்பாடுகள் இல்லாமலேயே வேதத்தின் நன்மைகளை ஒரு மனிதன் பெற முடியும் என்று எண்ணுவதைவிட மிகவும் முட்டாள்தனமான, கேடான எண்ணம் இருக்கவே முடியாது. அவர் நம்முடைய அறிவு மற்றும் புரிதலைத் தவிர்த்த வேறு ஏதேனும் வழிகளில் நமக்குப் போதிப்பதில்லை. அப்படிச் செய்வதாக இருந்தால், நாம் மிருகத்தின் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்போம். ஆவிக்குரிய காரியங்களை நாம் அறிந்துகொள்ள, அவர் நம்முடைய மனதிற்கு ஒளியூட்டி, நம்முடைய எண்ணங்களை உன்னதத்தைநோக்கி நடத்தி, நம்முடைய விருப்பத்தைத் தூண்டிவிட்டு, நம்முடைய சித்தத்தை அசைத்து, நம்முடைய புரிந்துகொள்ளும் திறனை அதன்மூலம் செயல்படச் செய்கிறார்.

பரிசுத்த ஆவியானவர், ஒரு கிறிஸ்தவனுக்கு அவன் வாசிக்கும் வேத வாக்கியங்களை, அவன் நேரடியாகப் புரிந்துகொள்ளும்படிச் செய்கிறார் என்று நான் சொல்லுவது, எந்த வகையிலும் அந்த மனிதன் தான் சார்ந்திருக்கும் சபையின் பிரசங்க ஊழியத்தை விடாமுயற்சியுடனும் ஆர்வத்துடனும் பயன்படுத்திக்கொள்ளுவதிலிருந்து விலக்களிக்கவில்லை. ஏனென்றால் தம்முடைய மக்களின் ஆவிக்குரிய மேம்பாட்டிற்கான முக்கியமான வழிமுறையாக, பிரசங்க ஊழியத்தையே அவர் ஏற்படுத்தியுள்ளார். எத்தியோப்பிய மந்திரியிடம் பிலிப்பு, “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா” (அப்போஸ்தலர் 8:30) என்று கேட்டபோது, “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்” (அப்போஸ்தலர் 8:31) என்று மந்திரி பதிலளித்தார். சிலர், 1 யோவான் 2:27ல் “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை” என்ற வாக்கியத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால்” என்று பதிலளித்த எத்தியோப்பிய மந்திரியும், “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை” என்பதை தவறாக விளங்கிக்கொள்ளுபவனும், அவரவருடைய மனோபாவத்தையே காட்டுகிறார்கள். ஒருவர் மனித கருவியின்மீது அதிகமாக சார்ந்திருக்கிறார், மற்றவர், தம்முடைய மந்தையைப் போஷிப்பதற்கு, கிறிஸ்து அழைத்துத் தகுதியுள்ளவர்களாக்கியிருப்பவர்களை ஆணவத்துடன் நிராகரிக்கிறார். ஜோன் ஓவன் கூறியிருப்பதைக் கவனியுங்கள், “இருப்பினும், பிரசங்கியினுடைய சத்தியப் புரிதலிலும், சத்தியத்தில் அவருக்கு இருக்கிற பயத்திலும், விசுவாசத்திலும் நாம் தங்கியிருப்பதுமில்லை; பிரசங்கியினுடைய அதிகாரத்தின் அடிப்படையில் சத்தியத்தை உறுதிப்படுத்துவதுமில்லை. ஏனென்றால், அவர்கள் ‘நம்முடைய விசுவாசத்திற்கு அதிகாரிகளாயிராமல்’, ‘நம்முடைய சந்தோஷத்திற்கு சகாயராகவே’ (2 கொரிந்தியர் 1:24) தேவனால் ஏற்படுத்தப்பட்டவர்கள். ‘எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள்’ என்று தேவன் கொடுத்த மாபெரும் வாக்குறுதியையே நாம் முழுவதுமாக சார்ந்திருக்கிறோம். கர்த்தரால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற அவருடைய வார்த்தையை அவரிடத்திலிருந்து நாம் கற்றறியாமல் போனால், நாம் தேவனாலே போதிக்கப்பட்டவர்களாக இருக்க முடியாது.”

“உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்” (ஏசாயா 54:13, யோவான் 6:45) – இது, மறுபிறப்படைந்திருப்பவனின் தனித்துவமான அடையாளம். இந்நாட்களில், கிறிஸ்தவர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் பல்லாயிரக்கணக்கானோர் மறுபிறப்படையாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வேதத்தைக் கற்றிருப்பார்கள்; கிறிஸ்தவ வரலாற்றிலும் போதனையிலும் பரீட்சயத்தைக் கொண்டிருப்பார்கள், ஆனால் அவர்களுடைய அறிவெல்லாம், மனிதர்களிடத்தில் இருந்து பெற்றுக்கொண்டதாக மட்டுமே இருக்கும். அதாவது, பெற்றோர்கள், ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் தங்களுடைய தனிப்பட்ட வாசிப்பின் மூலமாக அவர்கள் அதைப் பெற்றிருப்பார்கள். ஆவிக்குரிய காரியங்களில் வெறும் அறிவையும், பரீட்சயத்தையும் கொண்டிருந்தும் தேவகிருபையைப் பெற்றிராத ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ புத்திஜீவிகள் இருக்கிறார்கள். அவர்கள், புத்தியோடு மட்டும் தொடர்புடைய வெறும் மத அறிவைக் கொண்டிருந்து தேவஅறிவில்லாமலும், அந்தத் தேவஅறிவினால் வெளிப்படும் கனிகளைத் தங்களில் கொண்டிராமலும் இருக்கிறார்கள். அதேபோல், நவீனத்துவத்தின் தவறுகளை வெறுத்தொதுக்கி, விசுவாசத்திற்காக ஆர்வத்துடன் போராடுகிற அநேக பிரசங்கிகளும் இருக்கிறார்கள். அவர்கள் வேதாகம கல்லூரிகளில் படித்தவர்கள்; இறையியல் பாடங்களிலும் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். இருப்பினும், அவர்கள் ஓர் ஆத்துமாவில் செயல்படும் இரட்சிக்கும் கிருபைக்கு முற்றிலும் அந்நியர்களாக இருப்பார்களோ என்ற பயத்தையே பெருமளவுக்கு ஏற்படுத்துகிறது. சத்தியத்தில் அவர்களுக்கு இருக்கும் அறிவு, ஜீவனில்லாத வெறும் கோட்பாடு மட்டுமே தவிர, உன்னதத்தின் உந்துதலினாலும், இரட்சிக்கும் வல்லமையினாலும், மறுரூபப்படுத்துதலினாலும் உண்டானதல்ல. ஆர்வத்தோடு உழைத்துப் படிக்கிற ஒருவன் வேதத்தில் இருந்து பல காரியங்களை அறிந்துவைத்திருக்க முடியும். அதை மற்றவர்களுக்குப் போதிக்குமளவுக்குத் திறமையையும் அவன் பெற்றுவிடலாம். ஆனால் தன்னுடைய இருதயத்தை அசைத்து, அதைச் சுத்திகரிக்கும்விதத்தில் அமையும் வேதஅறிவை அவனால் அடைய முடியாது. என்னுடைய இருதயத்தில் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை எழுதவும், என்னுடைய ஆத்துமாவில் அவருடைய சாயலை முத்திரையிடவும், சத்தியத்தினால் என்னைப் பரிசுத்தமாக்கவும், பரிசுத்த ஆவியானவரைத் தவிர வேறு எவராலும் முடியாது.

வேதத்தை விளங்கிக்கொள்ளவும், விளக்கப்படுத்தவும், தேவையான முதலாவது முக்கியமான தகுதி என்னவென்றால், ஒருவனுடைய மனம் பரிசுத்த ஆவியினால் ஒளியூட்டப்பட்டிருக்க வேண்டும். இது அத்தியாவசியமானது; இதிலிருந்து யாருக்கும் விலக்கில்லை. யூதர்களைப் பற்றி பவுல், “மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே” (2 கொரிந்தியர் 3:15) என்று சொல்லுகிறார். யூதர்களுக்கு பழைய ஏற்பாட்டின் மீது மிகுந்த மரியாதையிருந்தும், ஆர்வத்துடன் அதைப் படித்திருந்தும், அதன் ஆவிக்குரிய போதனைகளை அவர்கள் அறியாமலேயே இருந்தார்கள். யூதரல்லாத புறஜாதிகளிடத்திலும் இதே நிலைதான். பாவத்தில் வீழ்ந்த மனிதனுடைய இருதயத்தின்மீது, கேடான எண்ணம் என்ற முக்காடு இருக்கிறது, “மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை” (ரோமர் 8:7). அத்தோடு, நம்முடைய மனதின்மீது அறியாமை என்ற முக்காடு இருக்கிறது. ஒரு குழந்தை, தனக்கு அர்த்தம் தெரியாத வார்த்தைகளையும்கூட எழுத்துக்கூட்டி வாசித்து, அதை உச்சரிப்பதுபோல், வேதத்தை நாம் எழுத்துபூர்வமாகவும் இலக்கணத்தின் அடிப்படையிலும் ஆராய்ந்து அறிந்திருந்தாலும், அதனுடைய ஆவிக்குரிய அறிவைப் பெற்றிராமல் இருந்துவிட முடியும். மத்தேயு 13:14ல் சொல்லப்பட்டுள்ள தலைமுறையினரைப் போல் இருந்துவிடலாம், “காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்” என்று அவர்களைப்பற்றி வாசிக்கிறோம். மேலும், நம்முடைய விருப்பங்களும் கேடான எண்ணங்களினால் இருளடைந்திருக்கிறது. இதைப் பற்றி தொமஸ் மேன்டன் என்பவர் சொல்லுகிறார், “நம்முடைய இருதயம் இந்த உலகத்தின்மீதான தீவிரபற்றினால் இருளடைந்திருக்கிறது”. இதுவே சுயவெறுப்புக்கு எதிரான வார்த்தைகளை நாம் கேட்கிறபோது, அதைக் கேட்கவிடாமல் நம்மைத் தவிர்க்கச் செய்கிறது.

தேவனுடைய வார்த்தையாகிய கண்ணாடியில் நம்மை நாமே காண முடியாதபடி, நம்மைத் தடுக்கிற மற்றொரு முக்காடு இருக்கிறது. அதுதான் அகங்காரம். மறுபிறப்படைந்தபிறகும், இந்த முக்காடு நம்மைவிட்டு முழுமையாக விலகிவிடவில்லை. எனவேதான் வேதத்தை நாம் கண்ணோக்குகிற விதமும் பூரணமற்றதாக இருக்கிறது; சத்தியத்தின் மூலமாக நாம் பெறுகிற நன்மையும் சொற்பமாக இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல், கொரிந்து சபைக்கு எழுதின முதலாவது நிருபத்தில் சொல்லுகிறார், “ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை” (1 கொரிந்தியர் 8:2). இந்த உண்மையை ஒரு கிறிஸ்தவன் அறிந்துணருவது அவனுக்குக் கிடைத்த மாபெரும் கிருபையே. அவன் இந்தப் பாவ உலகத்தில் இருக்கிறவரை, அவனுடைய மாம்சத்தின் கறைபடிந்த தன்மையின் செயல் அவனில் தொடரும். ஆகவே பரிசுத்த ஆவியினால் அவன் வழிநடத்தப்பட்டு போதிக்கப்பட வேண்டும். இதை தாவீதின் வாழ்க்கையில் கண்கூடாகக் காணலாம். அவர், “எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்” (சங்கீதம் 119:99) என்று சொல்லிய போதும், “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்” (சங்கீதம் 119:18) என்றும் “கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன். எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும், அதைக் கைக்கொள்ளுவேன்” (சங்கீதம் 119:33-34) என்று ஆண்டவரை நோக்கி ஜெபித்திருக்கிறார். தேவனுடைய நியாயப்பிரமாணத்தில் தனக்குத் தெளிவில்லாத காரியங்களைக் குறித்து அவர் கர்த்தரிடம் புகார் தெரிவிக்கவில்லை, மாறாக, அதற்கான காரணம், தன்னிலுள்ள குறையே என்பதை உணர்ந்திருந்தார். அதுமட்டுமல்லாமல், புதிதான வெளிப்படுத்தலுக்காகவும் அவர் மன்றாடவில்லை, ஏற்கனவே கர்த்தரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளவைகளில் மேலதிக தெளிவு வேண்டும் என்று கேட்டார். வேதபோதனைகளைக் கற்றுக்கொள்ள மிகவும் வாஞ்சையாக இருக்கிற யாவரும், கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்திருந்து, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள எப்போதும் தயாராக இருப்பார்கள் (லூக்கா 10:39).

சங்கீதம் 119:18ல் குறிப்பிடப்பட்டுள்ள வினைச்சொல்லைக் கவனியுங்கள், என் கண்களைத் “திறந்தருளும்” என்று வாசிக்கிறோம். கர்த்தரே அதைச் செய்யவேண்டும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. கர்த்தருடைய வார்த்தையே ஆவிக்குரிய ஒளியாக இருக்கிறது என்பது உண்மை. ஆனால் அதை சரியாக விளங்கிக்கொள்ள வேண்டுமானால், நம்முடைய உள்ளத்தில் அதற்கான ஒளியேற்றப்பட வேண்டும். அந்த வெளிச்சத்தின் மூலமாகவே, அதாவது கர்த்தருடைய வெளிச்சத்தின் மூலமாகவே நாம் வெளிச்சத்தைப் பெறுகிறோம் (சங்கீதம் 36:9). வேதம் தெய்வீக அதிகாரத்தையும், கர்த்தருடைய சித்தத்தையும் தன்னில் முழுமையாகக் கொண்டிருப்பதால், வேதத்தைக் கர்த்தருடைய நியாயப்பிரமாணம் என்று அழைக்கிறோம். வேதம், நம்முடைய விருப்பப்படி ஏற்றுக்கொள்ளவோ அலலது தூக்கியெறிந்துவிடவோ கூடியவிதத்தில் கொடுக்கப்பட்ட நல்ல ஆலோசனைகளின் புத்தகமல்ல. வேதம் அதிகாரம் கொண்ட புத்தகம். நம்மிலிருக்கும் கேட்டின் காரணமாகத்தான் நாம் அதை நிராகரிக்கிறோம். வேதத்தில் “வார்த்தைகள்” அற்புதமாகக் கையாளப்பட்டிருக்கின்றன. மனித எண்ணத்தின்படியான காரணகாரியங்களின் அடிப்படையில் அவைகளை விளங்கிகொள்ள முடியாது. அவைகள் தெய்வீக ஞானத்தினால் தரப்பட்டவை. மனித அறிவினால் உண்டான திசைகாட்டும் கருவியைவிட பண்மடங்கு மேலானவை. அந்த அற்புதமான வார்த்தைகளைச் சரியாக அறிவதற்கு, மிகவும் ஆவல் கொண்டு, பெரும் முயற்சி செய்யலாம். ஆனால் தெய்வீக உதவியினால் அல்லாமல், மனிதனால் அதை ஒருபோதும் அடைய முடியாது. ஆகவே, அவன் வேதத்தை நல்ல முறையில், அதாவது, விசுவாசத்திற்கும் கீழ்ப்படிதலுக்குமாக அதைத் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டுமென்று தேவனிடத்தில் ஜெபிப்பான். இப்படிச் செய்வதைத் தன்னுடைய கடமையாகக் கொண்டு, வேதத்தை அனுபவபூர்வமாக விளங்கிக்கொள்ள முற்படுவான்.

“இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப்போல் போதிக்கிறவர் யார்?” (யோபு 36:22). ஒருவரும் இல்லை என்கிறது வேதம். அவர் போதிக்கிறபோது, அதை மிகவும் திறம்படச் செய்கிறார். “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே” (ஏசாயா 48:17) என்று வேதத்தில் வாசிக்கிறோம். அவர் போதிப்பது, தேவபக்திக்குரிய வாழ்க்கை முறையை நம்மில் உண்டாக்குகிறது. இது நம்முடைய அறிவோடு மேலும் கொஞ்சத்தைக் கூட்டிக்கொள்ளுவதற்காகக் கொடுக்கப்படும் ஒன்றல்ல. மாறாக, நம்முடைய ஆத்துமாவைப் பரிசுத்தமான காரியங்களில் ஊக்கப்படுத்தும் தேவ செயல். அந்த வெளிச்சம் நம்முடைய இருதயத்தை அனல்மூட்டி, நம்முடைய விருப்பங்களில் ஒளியேற்றுகிறது. இந்த உலகத்தின் அறிவு நம்மில் செய்வதுபோல், நாம் அகங்காரமுள்ளவர்களாக இருக்கச் செய்யாது. மாறாக, நம்மைத் தாழ்த்துகிறது. இது நம்முடைய அறியாமையையும், முட்டாள்தனத்தையும் நாம் அறிந்துகொள்ளச் செய்கிறது; நம்முடைய பாவத்தன்மையையும், தகுதியற்றநிலையையும் சுட்டுகிறது; அதன்மூலம் நாம் தாழ்ந்தவர்கள் என்பதை நாம் அறியச்செய்கிறது. மறுபிறப்படையாத ஒருவனால் மிகவும் உயர்வானதாக பார்க்கக்கூடிய காரியங்களில் இருக்கும் மாயையை, நாம் தெளிவாகக் கண்டுகொள்ளும்படி பரிசுத்த ஆவியானவரின் போதனை நம்மை வழிநடத்துகிறது. அத்தோடு, பூமிக்குரிய மதிப்பு, ஐசுவரியம், புகழ் ஆகியவை கொஞ்சக்காலமே இருக்கக்கூடியவை என்பதை அது நமக்குக் காட்டுகிறது. அதன்மூலம், தற்காலிகமான இவற்றை நாம் பெரிதாகக் கருதாமல் இருக்கச் செய்கிறது. கர்த்தர் நமக்குக் கொடுக்கும் அறிவு, நம்மை மாற்றக்கூடியது. அதாவது, நமக்குப் பாரமான தடைகளாக இருக்கக்கூடிய தேவபக்தியற்ற செய்கைகளையும், இவ்வுலக இச்சைகளையும் வெறுத்துத் தள்ளி, தெளிந்த புத்தியும், நீதியும், தேவபக்தியுமுள்ளவர்களாக நாம் வாழும்படி நம்மில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2 கொரிந்தியர் 3:18).

கர்த்தரே வேதத்தை நமக்குப் போதிக்கிறார் என்பது ஒரு காரியத்தை நமக்குத் தெளிவாக்குகிறது. என்னவென்றால், அவரால் போதிக்கப்பட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என்பதுதான். இயற்கையாக நாம், தேவ காரியங்களை வெறுக்கிறவர்களாக இருப்பதனால், இந்நிலை மாற கர்த்தரால் நாம் போதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. இயற்கையாக நாம், பாவத்தை நேசிக்கிறவர்களும், பரிசுத்தத்தை வெறுக்கிறவர்களுமாக இருக்கிறோம் (யோவான் 3:19). களங்கமில்லாத பாலாகிய தேவனுடைய வார்த்தையை நாம் நேசிக்கிறவர்களாக இருக்கவேண்டுமானால், பிறப்பிலேயே நாம் அதை வெறுக்கிறவர்களாக இருக்கிற தன்மையானது பரிசுத்த ஆவியினால் அகற்றப்பட வேண்டும். நாம் சாந்தத்துடன் கர்த்தருடைய வார்த்தையை ஏற்கவேண்டுமானால், எதையெல்லாம் நம்மிலிருந்து நாம் ஒழிக்கவேண்டுமென்று வேதம் விளக்குவதை, யாக்கோபு 1:21; 1 பேதுரு 2:1 ஆகிய வசனங்களில் வாசித்துப் பாருங்கள். இதைச் செய்ய வேண்டியது நம்முடைய கடமையாக இருந்தபோதிலும், இதைச் செய்வதற்கான பெலனை அவரே தருகிறார். இயற்கையாக நாம், பெருமையும், யாரையும் சார்ந்திராமல் சுயபெலத்தின்மீது அதிக நம்பிக்கையும் கொண்டவர்களாக இருக்கிறோம். இந்தத் தீங்கானது, ஒரு கிறிஸ்தவனில், அவனுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்வதாக இருக்கும். ஒரு சிறுபிள்ளையைப்போல் அவன் வேதத்தை அணுகுவதற்குத் தேவையான தாழ்மையையும் சாந்தத்தையும், பரிசுத்த ஆவியானவர் மட்டுமே அவனில் ஏற்படுத்துகிறார். மற்றவர்கள் நம்மைப் போற்றவும், புகழவும் வேண்டுமென்று விரும்புவது, நம்முடைய ஆத்துமாவின் கறைபடிந்த தன்மையின் மற்றொரு அம்சம். இது, சத்தியத்திடம் நாம் நெருங்க முடியாதபடி, நம்மைத் தடுத்து நிறுத்தக் கூடியது (யோவான் 5:44; 12:43). இதை நம்மிலிருந்து முற்றாக நாம் களைந்தெரிய வேண்டும். சத்தியத்தை நாம் அறிவதிலிருந்து நம்மைத் தடுப்பதற்கு, நம்மைவிட வலிமைமிக்க பிசாசு கடுமையாக, தொடர்ச்சியாகக் காட்டி வரும் எதிர்ப்புகளை, நம்முடைய சுய வலிமையினால் எதிர்ப்பதென்பது முடியாது (மத்தேயு 13:19; 2 கொரிந்தியர் 4:4). பிசாசினுடைய கேடான ஆலோசனைகளிலிருந்து நம்மை விடுவிப்பதும், அவனுடைய பொய்யான ஏமாற்று வாதங்களை நமக்கு வெளிப்படுத்திக் காட்டுவதும் கர்த்தரால் மட்டுமே செய்யக்கூடியதாகும்.

இரண்டாவது, பரிசுத்த வேதாகமத்தின் மெய்யான போதனையை நீங்கள் சரியானபடி கற்றறிய வேண்டுமானால், நடுநிலையான மனநிலையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். ஒன்றைப் பற்றி தீர ஆராய்வதற்கு முன்பு அதைப் பற்றிய முடிவுக்கு வருவது, உண்மையை இருட்டடிப்புச் செய்வது போலாகும். “தங்கள் கோட்பாடுகளை” நிரூபிக்கும் வேதப்பகுதிகளைக் கண்டறியலாம் என்ற நோக்கத்துடன் வேதத்தை அணுகுகிறவர்கள் இப்படியே செய்கிறார்கள். வேதத்தைச் சரியாகப் படித்து விளங்கிக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறவனிடத்தில் கர்த்தர் எதிர்பார்க்கிற முதற்தகுதி, அவன் உண்மையான இருதயத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே (லூக்கா 81:5). இப்படியான இருதயமுள்ளவன், தன்னுடைய தவறான எண்ணங்களை வேதத்தின்படி ஆர்வத்துடன் மட்டுமல்லாமல், விருப்பத்துடனும் திருத்திக்கொள்ளுகிறவனாக இருப்பான். நம்முடைய எண்ணங்களையும் ஆசைகளையும் தேவனுடைய வார்த்தைக்கு அடிபணிய வைக்காதவரை, சத்தியத்தை அறிகிற நம்முடைய ஆவிக்குரிய புரிதல் எந்தவிதமான முன்னேற்றத்தையும் அடையாது. வேதத்தில் தெளிவாகக் கொடுக்கப்படாத ஒன்றை, நாம் எவ்வளவு காலம் அதை நம்பிவந்திருந்தாலும், அதைக் கைவிட மனதில்லாமல், நம்முடைய எண்ணத்தில் உருவான போதனைகளையும், நம்முடைய சபைப்பிரிவின் தத்துவங்களையுமே விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருந்தால், நாம் எவ்வளவுதான் ஜெபித்தாலும், வேதம் வாசித்தாலும், நம்முடைய ஆத்துமாவுக்கு எந்தவிதமான நன்மையும் உண்டாகாது. கர்த்தர் பொய்யை முற்றாக வெறுக்கிறார். அதாவது, வேத சத்தியங்கள் பற்றிய தவறான நம்பிக்கைகளை அப்படியே வைத்துக்கொண்டு, கர்த்தாவே போதியும் என்று அவரை நோக்கிக் கேட்கிறபோது, அதை அவர் வெறுக்கிறார். நாம் ஆவிக்குரிய அறிவைப் பெற்றிருக்க வேண்டுமானால், நம்முடைய எண்ணங்களையும், நடைமுறை வாழ்க்கையையும், வேதத்தின்படி மாற்றியமைக்க வேண்டும் என்ற உறுதியுடன், சத்தியத்தின்மீது தாகமாயிருக்க வேண்டும்.

மூன்றாவது, மனத்தாழ்மை. “இது கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட நித்திய நியதி. கர்த்தருடைய வேதத்தின்படி அவருடைய சித்தத்தைக் கற்றறிய விரும்புகிற எந்தவொரு மனிதனும், தன்னிலுள்ள எல்லா நம்பிக்கையையும் விட்டு, மனத்தாழ்மையுடன் அவரை நாடி வர வேண்டும். பெருமையுள்ள ஒருவனுடைய அறிவு, அவனுடைய எண்ணத்தை சாத்தான் ஆளுகிறான் என்பதையே காட்டுகிறது. பெருமையினாலும், சுயநம்பிக்கையினாலும் ஆளப்படுகிற ஒருவன், கர்த்தருடைய சித்தத்தை உள்ளபடி அறிந்திருப்பான் என்று சொல்லுவது, வேதத்தையே நிராகரிப்பது போலாகும்” என்கிறார் ஜோன் ஓவன். பரலோகத்தின் இரகசியங்கள் ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவரே சொல்லியிருக்கிறார் (மத்தேயு 11:25). வேதத்தை அறிவதற்குத் தனக்குத் திறமையும் ஞானமும் இருக்கிறது என்று தன்னுடைய சுயத்தின்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறவன், ஆவிக்குரிய அறியாமையிலேயே தொடர்ந்து இருப்பான். மனிதன் தன் சுய திறமையினால் பெறுகிற எந்தவொரு அறிவும், கர்த்தருடைய மகிமைக்கும், ஓர் ஆத்துமாவின் நன்மைக்கும் எந்தவிதத்திலும் பயனளிப்பதில்லை. கர்வம் கொண்டவனுக்குப் பரிசுத்த ஆவியானவர் போதிக்கிறதில்லை. “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்” என்கிறது யாக்கோபு 4:6. “பெருமையுள்ளவனுக்கு எதிராக, கர்த்தர் அவனை நெருங்கி வருகிறார். அவனுடைய செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு முழுபெலத்தோடு அவர் தயாராகிறார். இது மிகவும் வலிமையான ஒரு கூற்று! கர்த்தர் நம்மை நம்முடைய இயற்கையான தன்மையின்படி விட்டிருந்தால், நாம் அனைவரும் அறியாமையிலும் இருட்டிலும்தான் இருப்போம். அப்படியானால், கர்த்தர் வல்லமையோடு நமக்கெதிராக வருவதாக இருந்தால், அது எவ்வளவு பயங்கரமாக இருக்கும்” என்கிறார் ஜோன் நியூட்டன். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, அவர் “தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கிறார்”.

நான்காவது, ஜெபம். ஏனைய புத்தகங்களைவிட வேதம் வேறுபட்டதாக இருப்பதனால், அப்புத்தகங்கள் தன்னை வாசிக்கிறவர்களிடம் எதிர்பார்க்காத ஒன்றை, வேதம் தன்னை வாசிக்கிறவர்களிடம் எதிர்பார்க்கிறது. ஒருவர் எழுதிய புத்தகத்தை, மற்றொருவர் வாசித்து, அதிலுள்ள விஷயங்களில் நிபுணராகலாம். ஆனால் வேதம் அப்படிப்பட்டதல்ல. அதைக் கொடுத்தவர் மட்டுமே, அதை நமக்கு விளக்குவதற்கான எல்லா தகுதியும் திறனும் கொண்டவராக இருக்கிறார். இதைப் புரிந்துகொள்ளாததனாலேயே அநேகர் தவறிழைக்கிறார்கள். ஏனைய புத்தகங்களை அணுகுவது போலவே வேதத்தையும் அணுகுகிறார்கள். அதாவது, வேதத்தின் போதனைகளை விளங்கிக்கொள்ளுவதற்கு தங்களுடைய கவனமான வாசிப்பையும், ஆர்வத்தையும் மட்டுமே சார்ந்திருக்கிறார்கள். வேதத்தை விளங்கிக்கொள்ள, முதலாவது, நாம் முழங்காலில் இருந்து, கர்த்தரை நோக்கிக் கெஞ்சவேண்டும். “என் இருதயம் உமது சாட்சிகளைச் சாரும்படிச் செய்யும்.” “. . . உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.” “உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி . . .” என்று வேதம் கூறுவதுபோல் ஜெபிக்கவேண்டும் (சங்கீதம் 119:36, 73, 133). தேவனால் ஒளியூட்டப்பட்ட கண் தொடர்ச்சியாக நமக்குத் தேவை என்பதை உறுதியாக நாம் உணர்ந்திராதவரை, வேத போதனைகளை அறிவதில் நாம் சரியான முன்னேற்றத்தைக் காணமுடியாது. “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” என்கிறார் யாக்கோபு (யாக்கோபு 1:5). இந்த வாக்குறுதியின் காரணமாக, அநேக எளிய மனிதர்களும், குடும்பத் தலைவிகளும் பரிசுத்த ஆவியினால் போதிக்கப்படுகிறார்கள். ஆனால் ஜெபத்தை மறந்த பண்டிதர்களால் கர்த்தருடைய இரகசியத்தை அறிய முடியவில்லை. “நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும்” (யோபு 34:32) என்று ஜெபிக்க வேண்டியது மட்டுமல்லாமல், தேவன் தம்முடைய வார்த்தைகளை நம்முடைய இருதயங்களில் எழுதவும் வேண்டுமென்று ஜெபிக்க வேண்டும்.

ஐந்தாவது, பரிசுத்த வாழ்க்கை. இந்த விஷயத்தில் அநேகர் வஞ்சிக்கப்படுகிறார்கள். அதாவது, சத்தியத்தின்மீதிருக்கிற ஆர்வத்தின் காரணமாக மட்டுமே, வேத அறிவைப் பெறுவதற்கு அநேகர் தீவிரம் காட்டுகிறார்கள். அநேகர் வேதத்தை வாசிக்கிறபோது, அதில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும் என்ற ஆவலினாலேயே வாசிக்கிறார்கள். சிலர், மற்றர்வர்களால் அறிய முடிந்ததைத் தன்னால் ஏன் அறிய முடியவில்லை என்ற காரணத்திற்காக ஆர்வங்கொண்டு வாசிக்கிறார்கள். வேறு சிலர், வேத போதனைகளில் தர்க்கம் ஏற்படுகிறபோது, தன்னுடைய வாதத்தை முன்வைக்க, வேதத்தில் தனக்கு நல்லறிவு இருக்க வேண்டும் என்பதற்காக வாசிக்கிறார்கள். வேதத்தை வாசிக்கிறபோது, அதிலுள்ள போதனைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக மட்டுமே ஆர்வங்காட்டுகிறதாக இருந்தால், உங்களுடைய ஆத்துமா என்கிற சோலை, இன்னும் தரிசு நிலமாக இருப்பதையே அது காட்டுகிறது. வேத வார்த்தைகள் கொடுக்கப்பட்டதன் நோக்கத்தை நாம் சரியாக ஆராய்ந்து அறிய வேண்டும். நான் வேதத்தை ஆராய்கிறபோது, வேதத்தைக் கொடுத்த கர்த்தரையும், என்னைப் பற்றிய அவருடைய எண்ணத்தையும் அறிவதில் நான் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆராய்கிறேனா? என்று சிந்திக்க வேண்டும். கர்த்தருடைய கிருபையிலும், அவரைப் பற்றிய அறிவிலும் வளரவேண்டும் என்பதே என்னுடைய முதன்மையான நோக்கமாக இருந்து, இந்த விஷயத்தில் என் வேதப்படிப்பு என்னைத் தூண்டுகிறதா என்று ஆராயவேண்டும். கர்த்தரைப் பிரியப்படுத்துகிறதாகவும், மகிமைப்படுத்துகிறதாகவும் இருக்கிறவிதத்தில், என்னுடைய வாழ்க்கையை எப்படிச் சீர்படுத்த வேண்டும் என்பதை மேலும் தெளிவாகவும் முழுமையாகவும் அறியவேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறேனா, என்று கேட்டுப் பார்க்கவேண்டும். கர்த்தரோடு நெருங்கி வாழவும், அவருடன் பிரிக்கமுடியாத ஐக்கியம் கொண்ட நிலைக்கு நான் வரவேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறேனா, என்று சிந்திக்க வேண்டும். வேதத்தின் பரிசுத்தமான போதனைகளுக்கேற்ப வாழவும், அவைகளால் மாற்றத்தை அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் வேதத்தை ஆராய்வதே நன்மையானது.

இந்த அதிகாரத்தில், வேதத்தை விளக்குவதைப் பற்றிய ஆரம்பக்கட்டத்தையே ஆராய்ந்திருக்கிறோம். எனினும், அடிப்படையான இன்னும் சில முக்கியமான விஷயங்களை வரப்போகிற அதிகாரங்களில் பார்க்கப் போகிறோம். தூய்மைவாதிகளின் காலத்திலும்கூட, ஜோன் ஓவன் அப்போதைய நிலையைப் பற்றிச் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள், “வேதத்திலிருந்து வரும் கர்த்தருடைய சத்தமாகிய சத்தியத்தைக் கற்றறிவதற்கு ஆர்வத்துடனும், தாழ்மையுடனும், உணர்வுபூர்வமாகவும் முயற்சிக்கிறவர்கள் வெகு சிலரே. அதேபோல், ஞானத்தை அடைவதற்கான ஒரே வழியாக வேதம் காட்டுகிற, சுவிசேஷ இரகசியத்திலுள்ள ஞானத்தில் வளருவதற்கு ஆர்வத்துடனும், தாழ்மையுடனும், உணர்வுபூர்வமாகவும் முயற்சிக்கிறவர்களும் வெகு சிலரே. வேதத்தைப் படிக்கிறோம் என்ற பெயரில், பெரும்பாலானவர்கள், தங்களுடைய அல்லது மற்றவர்களுடைய வீணான கற்பனையின் பின்னால் அலைந்து திரிகிறார்கள் என்று நான் சொன்னால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துமா?” இந்த ஆக்கத்தை வாசிக்கிறவர்கள் அப்படி இல்லாமல் இருப்பார்களாக.

 

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.