திருமறைத்தீபம் 2018 -ம் ஆண்டு இரண்டாம் இதழ்
1. வாசகர்களே!
2. பில்லி கிரேகம் (1918-2018)
3. தேவபயத்தை நம்மில் தக்கவைப்பதும் அதிகரிப்பதும் எப்படி?
4. பாவகரமான வைராக்கியம்
வாசகர்களே!
அன்பு வணக்கங்கள்! இந்த இதழில் சமீபத்தில் மறைந்த முக்கிய கிறிஸ்தவ பிரமுகரான பில்லி கிரேகமைப் பற்றிய ஆக்கம் வந்திருக்கிறது. இது ஏற்கனவே நம்முடைய வலைதளத்தில் வந்துள்ளது. வலைதளத்தில் வாசிக்கும் வசதியில்லாதவர்களுக்காக இதழிலும் வெளியிட முடிவு செய்தேன். என்னுடைய வாலிப காலங்களில் பில்லி கிரேகம் மிகவும் பிரபலமான மனிதர். அன்று அவர் தன்னுடைய ஊழியத்தின் உச்சத்தை எட்டியிருந்தார். இருந்தபோதும் சீர்திருத்த கிறிஸ்தவ நம்பிக்கைகளை வாலிப காலங்களிலேயே என்னில் வளர்த்துக் கொண்டிருந்ததால் பில்லி கிரேகம் மாயையில் நான் விழுந்துவிடவில்லை. கையை உயர்த்திக் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுகிற வியாபார சுவிசேஷ ஊழியங்கள் பெருமளவில் மலிந்திருந்த அந்தக் காலத்தில் கல்வினிசப்போதனைகளில் ஆர்வத்தைக் காட்டி நான் வளர்ந்துகொண்டிருந்த காலம் அது. ‘கிறிஸ்துவுக்கு வாலிபர்கள்’ (Youth for Christ) போன்ற கிறிஸ்தவ நிறுவனங்கள் பில்லி கிரேகமின் பாதையில் சுவிசேஷ ஊழியம் செய்துகொண்டிருந்த காலம் அது. இதற்கெல்லாம் மத்தியில் சீர்திருத்தக் கோட்பாடுகளை விரும்பி நாடி அவற்றில் ஆர்வம் காட்டி வளர்ந்துகொண்டிருந்தேன். இன்று பில்லி கிரேகம் நம்மத்தியில் இல்லை. இருந்தாலும் அவருடைய ஊழியத்தை நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியாது. அந்த மனிதரைத் தனிப்பட்ட முறையில் எந்தவிதத்திலும் குறைவுபடுத்திப் பேசாமல் அவருடைய ஊழியமுறைகளில் இருந்த பெருங்குறைபாடுகளை மட்டுமே இந்த ஆக்கம் விளக்குகிறது. வாசித்து சிந்தியுங்கள். இன்று நம்மத்தியில் நிகழந்துவரும் சுவிசேஷ ஊழியங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஆராய்ந்து பார்த்து உங்களுடைய ஆத்துமாவைக் காத்துக்கொள்ளுங்கள். கீழைத்தேய நாடுகளில் இன்று நிகழ்ந்து வரும் பெரும்பாலான சுவிசேஷ ஊழியங்கள் வியாபார ஊழியங்களே. தனி மனிதனுடைய அல்லது ஒரு நிறுவனத்தினுடைய சுய இச்சைகளைப் பூர்த்தி செய்துகொள்ளுகிற ஊழியங்களே பரவலாகக் காணப்படுகின்றன. கர்த்தரை உயர்த்தும் அதிரடி மெய்க்கிறிஸ்தவ பிரசங்கமே இன்று நம்மத்தியில் தேவை; அதற்கு அப்பாற்பட்ட எந்த முயற்சியும் உலக இச்சையின் அறிகுறி மட்டுமே.
இந்த இதழில் தொடர்ந்து ‘தேவபயம்’ மற்றும் ‘பக்தி வைராக்கியம்’ பற்றிய ஆக்கங்களும் வந்திருக்கின்றன. எப்போதும்போல் இந்த இதழும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும், ஜெபமும். – ஆர்
பில்லி கிரேகம் (1918-2018)

சமீபத்தில் என் நண்பரைப் பார்க்கப் போயிருந்தபோது எங்களுடைய சம்பாஷனை சமீபத்தில் மறைந்த முக்கிய கிறிஸ்தவ தலைவரான பில்லி கிரேகமைப் பற்றியதாக மாறியது. அப்போது அவர், ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன் பில்லி கிரேகம் நியூசிலாந்து வரவிருந்தபோது ஆக்லாந்தில் இருந்த ஒரு கிறிஸ்தவ போதகர் அவரைப் பற்றிய ஒரு ஆக்கத்தை வெளியிட்டு நாட்டில் இருந்த பல கிறிஸ்தவ தலைவர்களுக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டது என்றும், அதனாலோ என்னவோ தெரியவில்லை பில்லி கிரேகம் நியூசிலாந்துக்கு வருவது நின்று போயிற்று என்றும் கூறினார். அப்படியா என்று கேட்டுவிட்டு அதில் நான் ஒன்றும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. உடனே அவர் புன்சிரிப்போடு அதை எழுதியவர் நீங்கள் தான் என்றார். என்ன! என்று ஆச்சரியமாகக் கேட்டு, அப்படியெல்லாம் நான் எதுவும் எழுதியதாக எனக்கு நினைவில்லையே என்று கூறி அதை மறுத்தேன். அதை என்னால் நிரூபிக்க முடியும் என்று சொன்ன அவர், பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு A4 தாளில் இரண்டு பக்கங்களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த ஆக்கத்தை (No More a Dilemma) என் கையில் தந்தார். உண்மையில் அப்படியொன்றை எழுதிய நினைவே எனக்கு துப்பரவாக இருக்கவில்லை. அது 1990ல் எழுதப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு அது எழுதப்பட்ட சூழ்நிலை பற்றியதாக எங்கள் பேச்சு திசைதிரும்பியது. அநேக கிறிஸ்தவ போதகர்களுக்கும் அது அனுப்பிவைக்கப்பட்டதாகவும், அதிலிருந்து சிலருக்கு உங்களைப் பிடிக்காமல் போனது என்றும் அவர் சிரிப்போடு கூறினார். அது ஒன்றும் புதியதில்லையே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
நண்பரோடு சந்திப்பு முடிந்தபிறகு வீட்டிற்கு வந்து கையில் கொண்டுவந்திருந்த அந்தத் துண்டுப் பிரசுரத்தை நான் மறுபடியும் வாசித்துப் பார்த்தேன். சில நாட்களுக்கு முன்புதான் பில்லி கிரேகம் தன்னுடைய 99ம் வயதில் மறைந்திருந்தார். அவரைப் பற்றிய நினைவுகள் என் மனதில் வட்டமிட ஆரம்பித்தன. அதேநேரம் இந்த வருடத்தில் மறைந்துவிட்டிருந்த பில்லி கிரேகமின் சககால கிறிஸ்தவ தலைவர்களாக இருந்த ஆர். சி. ஸ்பிரவுல், கடந்த வருடத்தில் மறைந்த எரல் ஹல்ஸ் ஆகியவர்களையும் என்னால் நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இறையியல் கோட்பாடுகளைப் பற்றிய விஷயத்தில் பில்லி கிரேகம் முழு ஆர்மீனியன். பிந்தைய இருவரும் சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றிய கிறிஸ்தவ தலைவர்கள். இவர்களில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த எரல் ஹல்ஸ் (Erroll Hulse) பில்லி கிரேகமைப் பற்றி 1969ல் Billy Graham: Pastor’s Dilemma என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். பில்லி கிரேகமின் கூட்டமொன்றில் சுவிசேஷத்தைக் கேட்டு, பின்பு அதே கிரேகம் குருசேட் கூட்டங்களில் பணிபுரிந்திருந்த எரல் ஹல்ஸ் பின்னால் அந்த சுவிசேஷக் கூட்டங்களில் இருந்த வேதத்துக்கு முரண்பட்ட அம்சங்களை இறையியல்பூர்வமாக ஆராய்ந்து வெளியிட்டிருந்த நூலது. 1980களின் ஆரம்பப் பகுதியில் அந்த நூலை வாசித்து நான் பயனடைந்திருந்தேன். இன்றும் அதன் பிரதியொன்று என் வீட்டுப் படிப்பறையில் இருக்கிறது.
1990ல் பில்லி கிரேகமைப் பற்றி நான் இந்தக் கைப்பிரதியை எழுதி வெளியிட்டதற்கான காரணங்களை எண்ணி என் மனம் அசைபோட ஆரம்பித்தது. அது நான் நியூசிலாந்தில் கால்பதித்து நானிருக்கும் சபையில் போதக ஊழியத்தை ஆரம்பித்திருந்த ஆரம்ப காலம். அக்காலத்தில் நான் கலந்துகொண்டிருந்த போதகர்களின் கூட்டமொன்றில் நாட்டில் நடக்கப்போகும் பில்லி கிரேகமின் சுவிசேஷ கூட்டத்திற்கு நாம் எப்படித் துணைபோய் பயனடையலாம் என்றவிதத்தில் விவாதம் நடந்தது. சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றும் போதகர்கள் இதில் ஆர்வம் காட்டுகிறார்களே என்று எனக்கு ஒருபுறம் ஆச்சரியமாக இருந்தது. இருந்தபோதும் நான் என்நிலையை அவர்களுக்கு விளக்கி எரல் ஹல்ஸின் புத்தகத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். நல்லவேளை கூட்டம் எந்த முடிவையும் எடுக்காமல் முடிந்துபோனது. அதுவே நான் அந்தத் துண்டுப்பிரசுரத்தை எழுதி வெளியிடுவதற்கு காரணமாக அமைந்தது. இருந்தபோதும் இந்த குருசேட் இவேன்ஜலிஸத்தைப் பற்றி பலரையும் சிந்திக்க வைப்பதற்காக நான் எடுத்த முயற்சி அது. அதனால் நான் சிலருடைய மனதில் நல்ல இடத்தைப் பிடிக்காமல் போயிருந்திருக்கலாம். செய்கின்ற காரியம் நியாயமானதாக இருக்கின்றபோது அது எல்லோருக்கும் பிடிக்குமா, பிடிக்காதா என்றெல்லாம் நான் சிந்தித்துக் கொண்டிருக்க முடியுமா என்ன? என்னைப் பொருத்தவரையில் அதை வெளியிடுவது அன்று கர்த்தர் தொடர்பான அவசியமான காரியமாகப்பட்டது. முக்கியமாக நான் பணிபுரிந்த சபை மக்களுக்கு அதுபற்றிய வேதசிந்தனைகளை உருவாக்குவது எனக்கு அவசியமாக இருந்தது. கடைசியில் ஏதோ சில காரணங்களால் பில்லி கிரேகமும் நியூசிலாந்துக்கு வரமுடியவில்லை.

மார்டின் லொயிட் ஜோன்ஸ்
பில்லி கிரேகமைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளுவதற்கு அவர் கிறிஸ்தவ ஊழியத்தை ஆரம்பித்த காலப்பகுதியைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் நமக்கு அவசியம். அந்தக் காலப்பகுதியிலேயே பில்லி கிரேகமுக்கு எதிர்மறையான இறையியல் கோட்பாடுகளைக் கொண்டிருந்த மார்டின் லாயிட் ஜோன்ஸும் (Martyn Lloyd-Jones) இங்கிலாந்தில் ஊழியத்தில் ஈடுபட்டிருந்தார். மெயின் லைன் சபைகளை லிபரலிசம் ஆண்டுகொண்டிருந்த காலம் அது. சுவிசேஷக் கிறிஸ்தவத்தில் பலரும் ஆர்வம் காட்டாதிருந்த காலம். வேத அதிகாரத்தையும், அதன் போதுமான தன்மையையும் சபைகள் உதறித்தள்ளியிருந்த காலம். இதை உணர்ந்த மார்டின் லாயிட் ஜோன்ஸ் தன் பிரசங்க ஊழியத்தை வேல்ஸில் ஆரம்பித்து அதிரடியாக வேதத்தைப் பிரசங்கித்தார். வேதப் பிரசங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுக்க ஆரம்பித்திருந்தார். அத்தகைய வேதப்பிரசங்கம் பாவிகள் இரட்சிப்படைய எத்தனை அவசியம் என்பதை அறைகூவலிட்டு பலரும் அறியும்படி செய்துகொண்டிருந்தார். ஒரு தீர்க்கதரிசியைப் போல அவர் சீர்திருத்த பிரசங்கங்களை அளித்து மறுபடியும் கிறிஸ்தவத்திற்கு உயிரூட்ட ஆரம்பித்திருந்தார். இந்தக் காலப்பகுதியில் பில்லி கிரேகம் லாயிட் ஜோன்ஸின் இறையியல் நம்பிக்கைகளுக்கு எதிர்மறையான ஆர்மீனியன் கோட்பாடுகளில் முழு நம்பிக்கை வைத்து வளர்ந்திருந்தார். அன்று அமெரிக்காவில் பொதுவாக பிரபல இறையியல் கல்லூரிகளும், இன்ஸ்டிடியூட்டுகளும் ஆர்மீனியன் கோட்பாடுகளையும், டிஸ்பென்சேஷனலிச பிரிமில்லேனியல் கோட்பாடுகளையும் பின்பற்றுபவையாகவே வளர்ந்திருந்தன. அமெரிக்க அடிப்படைவாத (Fundamentalism) கிறிஸ்தவப் பின்னணியில் வளர்ந்தவர் பில்லி கிரேகம். அடிப்படைவாத கிறிஸ்தவம் லிபரலிசத்தை மூர்க்கத்தோடு எதிர்த்தது. பில்லி கிரேகமின் இறையியல் சிந்தனைகளில் அன்றைய புளர் இறையியல் கல்லூரியின் (Fuller Theological Seminary, Dallas) தாக்கமும் அதிகமாக இருந்தது. இந்த இறையியல் பின்னணியில் விட்டன் கல்லூரியில் (Wheaton College) இறையியல் கற்று சுயாதீன இவேன்ஜலிஸ்டாக பில்லி கிரேகம் உருவெடுத்தார். 1943ல் விட்டன் கல்லூரியில் தான் சந்தித்த ரூத்தை அவர் திருமணம் செய்து கொண்டார். 1950ல் அவருடைய பில்லி கிரேகம் இவேன்ஜலிஸ்டிக் அசோஷியேஷன் (Billy Graham Evangelistic Association) உருவானது.
பில்லி கிரேகம் கிறிஸ்துவில் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார்; கிறிஸ்துவை நேசித்தார். வேதம் போதித்த சுவிசேஷம் அவருடைய ஊழியத்தின் உயிர்நாடி. சுவிசேஷத்தைப் பலரும் அறியப் பிரசங்கிக்க வேண்டும், அது எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பில்லி கிரேகமின் அடிப்படை நோக்கம். இறையியல் கோட்பாடுகளிலெல்லாம் பில்லி கிரேகம் அதிகம் கவனம் செலுத்தவில்லை. பாவிகள் இரட்சிப்படைய கிறிஸ்துவை அவர்களுக்கு பிரசங்கத்தின் மூலம் அளிக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர் நோக்கமாக இருந்தார். அவருடைய பிரசங்கம் மிகவும் எளிமையாக இருந்தது. பாவத்தில் இருந்து விடுதலை அடைந்து பரலோகம் போக கிறிஸ்து மட்டுமே வழி என்பதை அவர் மக்கள் புரிந்துகொள்ளும்படி அவர்களுடைய பாஷையில் பிரசங்கித்தார். இதெல்லாம் மிகவும் பாராட்டவேண்டிய அவசியமான நல்ல அம்சங்கள். இது எல்லாக் கிறிஸ்தவ பிரசங்கிகளுக்கும் இருக்க வேண்டிய அம்சங்கள்.

பிரசங்க மேடையில் பில்லி கிரேகம்
பில்லி கிரேகம் பயன்படுத்திய ‘வேதம் சொல்லுகிறது’ என்ற பிரபலமான வார்த்தைப் பிரயோகம் அன்று மக்களைக் கவர்ந்தது. வேதத்திற்கு அநேகர் மதிப்புக்கொடுக்காத காலத்தில் வேதத்தைக் கையில் வைத்து பிரசங்கித்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பில்லி கிரேகம் சுவிசேஷத்தை அறிவித்தார். இவேன்ஜலிஸ்ட் பில்லி சன்டேக்குப் பிறகு அத்தகைய பெருங்கூட்டங்களை பில்லி கிரேகமின் குருசேட் கூட்டங்களில் மட்டுமே பார்க்க முடிந்தது. அதுவரை வேறு எவரும் பிரசங்கத்தின் மூலமாகக் கண்டிராத பெருங்கூட்டங்களில் பில்லி கிரேகம் பிரசங்கித்தார். மிக முக்கியமான கிறிஸ்தவ தலைவராகவும் அமெரிக்காவில் நிலை பெற்றார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவின் பல அதிபர்களோடு அவர்களுக்கு நண்பராக இருந்து ஆலோசனை சொல்லும் நல்ல மனிதராகவும் பில்லி கிரேகம் இருந்தார். ஐசனோவரில் இருந்து ஜோர்ஜ் புஷ் வரை பில்லி கிரேகமின் நண்பர்களாக இருந்து அவருக்கு மதிப்புக் கொடுத்திருக்கிறார்கள்; ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறார்கள்; சேர்ந்து ஜெபித்திருக்கிறார்கள். கிறிஸ்தவர்களாக இல்லாதிருந்த வேறு மதங்களைச் சேர்ந்த பிரபலங்களும் பில்லி கிரேகமுக்கு நண்பர்களாக இருந்து அவரை மதித்திருக்கிறார்கள். அனைவருமே பில்லி கிரேகமின் நல்ல குணத்தையும், கனிவையும், தாழ்மையையும், நட்போடு பழகும் விதத்தையும் பாராட்டி வந்திருக்கிறார்கள். இவர்களெல்லோருக்கும் பில்லி கிரேகம் இயேசுவின் அன்பைப் பற்றிச் சொல்லாமல் இருக்கவில்லை. இத்தகைய உலகளாவிய மதிப்பை அநேகர் மத்தியில் பெற்றிருந்த எந்தப் பிரசங்கியும் இருந்ததில்லை. பில்லி கிரேகமை ஒரு முறை சந்தித்துப் பழகியவர்கள்கூட சொல்லியிருக்கும் வார்த்தைகள் என்ன தெரியுமா? அவர் பழகுவதற்கும் பேசுவதற்கும் இனிமையானவர் என்பதுதான்.
பில்லி கிரேகம் தன் ஊழிய வாழ்க்கையில் அநேகருக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறார். பெனி ஹின் போன்ற இன்றைய டி.வி. இவேன்ஜலிஸ்டுகளைப் போலல்லாமல் அவர் பணத்தைக் குறியாக வைத்தோ, போலி வாக்குத்தத்தங்களைத் தந்தோ சுவிசேஷத்தை அறிவிக்கவில்லை. பண விஷயத்தில் அவரைப் பற்றிய எந்தக் குறைபாட்டையும் எவரும் ஒருபோதும் முன் வைக்கவில்லை. தன்னுடைய அசோஷியேசனில் சம்பளத்தை மட்டுமே வாங்கிக் கொண்டு கடைசிவரை பணிபுரிந்தார் பில்லி கிரேகம். சுவிசேஷ ஊழியத்தில், பண விஷயத்தில் அவருடைய நேர்மையும், கட்டுப்பாடும் பாராட்ட வேண்டிய பண்பு. அத்தோடு, அவருடைய மனைவியோடு நன்றாக குடும்பத்தை நடத்தி வந்திருந்தார் பில்லி கிரேகம். ஒழுக்கத்தில் அவர் மீது எப்போதும் எந்தக் குறைபாடும் இருந்ததில்லை. அந்தளவுக்கு தன்னுடைய இருதயத்தையும் சரீரத்தையும் காத்து வாழ்ந்திருந்தார் பில்லி கிரேகம். ஊழியப்பணிகள் இல்லாத காலத்தில் அவர் குடும்பத்தோடு இருப்பதையே மிகவும் சந்தோஷமான காரியமாகக் கருதினார். குடும்பத்தைப் பற்றிய அக்கறையையும், அதுபற்றிய வேத உண்மைகளை விசுவாசிப்பதையும் புறந்தள்ளி ஹார்வே வைன்ஸ்டைனின் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய மேற்கத்திய சமுதாயத்தில் பில்லி கிரேகம் குடும்ப வாழ்க்கைக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்திருக்கிறார்.
இத்தகைய பாராட்டக்கூடிய நல்ல அம்சங்களையெல்லாம் பில்லி கிரேகம் தன்னில் கொண்டிருந்தபோதும், இன்றைய சமுதாயத்தில் எல்லோருக்கும் முன்மாதிரியாக நல்ல தலைவராக அவர் இருந்திருக்கும் போதும், பழமைவாத (conservative) கிறிஸ்தவ தலைவர்களும், சீர்திருத்த கிறிஸ்தவர்களும் அவரோடு இணைந்து ஒத்துழைக்க முடியாமல் போனதற்குக் காரணமென்ன? இந்த விஷயத்தைத்தான் நாம் ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்தில் வேதம் தொடர்பான ஒரு விஷயத்தை, அதை இறையியல் தொடர்பான விஷயமாக மட்டும் வேத அடிப்படையில் ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வருவது அநேகருக்கு முடியாத காரியமாக இருப்பதை நான் காண்கிறேன். ஒரு விஷயம் பற்றிய விவாதத்தில் ஈடுபடுகிறபோது அந்த விஷயத்தோடு மட்டும் நின்றுவிடாமல் விவாதம் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ச்சிகள் கொப்பளிக்க தனிப்பட்ட விதத்தில் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளுவதும், கிறிஸ்தவர்கள் என்ற எண்ணம்கூட இல்லாமல் வார்த்தைகளை அநியாயத்திற்கு அள்ளிக்கொட்டி நாவால் பாவம் செய்வதும், தங்களுடைய கருத்துக்களோடு எதிர்த்தரப்பு ஒத்துப்போக மறுக்கிறது என்பதற்காக சகல உறவுகளையும் அவர்களோடு முறித்துக்கொள்ளுவதும், இன்டர்நெட்டிலும், ஈமெயில், முகநூல் என்று சமூக வலைதளங்களில் எல்லாம் எழுதி ஒருவரைத் தரக்குறைவாகத் தாக்கிப் பேசுவதும் எல்லா சபைப்பிரிவினர் மத்தியிலும் பொதுவாகக் காணக்கூடியதாக இருக்கிறது. எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய சபைத்தலைவர்களே இந்த விஷயத்தில் மிகவும் அசிங்கமாக நடந்துகொள்ளுவதை இன்று நாம் காண்கிறோம். இதெல்லாம் மனித பலவீனத்திற்கும், ஆவிக்குரிய வளர்ச்சியின்மைக்கும் முதிர்ச்சியின்மைக்கும் அறிகுறியே தவிர ஆவியின் நிரப்புதலுக்கும், செல்வாக்கிற்கும் அடையாளமல்ல. இந்த இடத்தில் யாக்கோபுவின் வார்த்தைகளை நாம் நினைவுகொள்ள வேண்டும்.
“உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.” (யாக்கோபு 1:26)
யாக்கோபுவின் வார்த்தைகளை மனதில் இறுத்திக்கொண்டே பில்லி கிரேகமைப்பற்றி இதை நான் எழுதுகிறேன். அந்த நல்ல மனிதரின் மரியாதைக்கு பங்கம் வராமலேயே கிறிஸ்தவர்களாக நாம் அவரைப்பற்றிய மதிப்பீட்டை செய்ய வேண்டும். இந்த மதிப்பீடு அவருடைய இறையியல் கோட்பாடு மற்றும் அவருடைய குருசேட் சுவிசேஷ ஊழிய நடைமுறை என்பவை பற்றியவையே தவிர தனிப்பட்ட முறையில் அவரைப்பற்றியதல்ல. தனிமனிதரைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசாமலும், சக கிறிஸ்தவர்களில் நாம் வைக்க வேண்டிய பொதுவான கிறிஸ்தவ அன்பை மறந்துவிடாமலும் இறையியல் கருத்துவேறுபாடுகளை நாம் முன்வைக்க வேதம் அனுமதியளிக்கிறது. நம்முடைய சரீர பலவீனங்கள் இதில் குறுக்கிட்டு நாம் பாவத்தை செய்துவிடக்கூடாது. பில்லி கிரேகமின் சுவிசேஷ குருசேட் கூட்டங்களில் கலந்துகொள்ளவும், அவரோடு ஒத்துழைக்க முடியாமலும் போன பல சீர்திருத்த கிறிஸ்தவ தலைவர்கள் இந்த நிலைப்பாட்டையே எடுத்திருக்கின்றனர்.
பில்லி கிரேகம்: மதிப்பீடு
எத்தனையோ விஷயங்களில் சீர்திருத்த கிறிஸ்தவர்களுக்கு பில்லி கிரேகமின் போதனைகளோடும் சுவிசேஷ நடைமுறைகளோடும் முரண்பாடுகள் இருந்தபோதும் இரண்டு மிக முக்கியமான அம்சங்களை மட்டுமே இங்கே விளக்க விரும்புகிறேன். இவை இரண்டும் போனால் போகட்டும் என்று எடுத்துக்கொள்ளக்கூடிய விஷயங்கள் அல்ல. இவை சுவிசேஷ சீர்திருத்தக் கிறிஸ்தவத்தைப் பொருத்தவரையில் மிகவும் முக்கியமான அடிப்படை அம்சங்கள். இந்த விஷயங்களில் பில்லி கிரேகம் சீர்திருத்த கிறிஸ்தவத்திற்கு எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்திருப்பது வருந்தத்தக்கது. இந்த இரண்டைப் பொருத்தவரையிலும் சீர்திருத்த கிறிஸ்தவர்கள் ஒருவரோடு ஒத்துழைத்து ஊழியம் செய்வதென்பது வேதத்தையே ஒதுக்கி வைப்பதற்கு சமமாகிவிடும்.
- ஆர்மீனியனிசம்
பில்லி கிரேகம் ஆர்மீனியனிசக் கோட்பாட்டைப் பின்பற்றியவர். அத்தோடு டிஸ்பென்சேஷனலிசப் பிரிமில்லேனியலிசத்தையும் பின்பற்றியவர். அவருடைய இறையியல் பாதை அந்த வழியிலேயே போயிருந்தது. இதன் காரணமாக மனிதனுடைய இரட்சிப்பில் கர்த்தரோடு அவனுடைய பங்கும் இணைந்திருக்கிறது என்பதை உறுதியாக நம்பியவராக பில்லி கிரேகம் இருந்தார். சீர்திருத்தப் போதனை இரட்சிப்பு கர்த்தருடையது என்று போதித்தபோதும், கிறிஸ்துவைத் தன்னுடைய இரட்சிப்பிற்காக பாவி விசுவாசிக்க வேண்டும் என்றும் அது அவனுடைய கடமை என்றும் விளக்குகிறது. இது ஆர்மீனியனிசப் போதனையைவிட மாறுபட்டது. எப்படியெனில் உதாரணத்திற்கு, நாம் ஒருவருக்கு ஒரு பொறுப்பைக் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுவோம். அந்தப் பொறுப்பைக் கொடுத்தபிறகு, யாருக்கு அதைக் கொடுத்தோமோ அவர் அதை செய்யவேண்டிய கடமைப்பாடுடையவராக இருக்கிறார். அதைக் கடமையாகக் கருதி அவர் செய்ய வேண்டியிருந்தபோதும் அந்தப் பொறுப்பை நாம் அவருக்குக் கொடுக்காமல் இருந்திருந்தால் அதை செய்ய வேண்டிய கடமை அவருக்கு இருந்திருக்காது. இதே விதத்தில் ஒருவனுக்கு மறுபிறப்பை ஆவியானவர் அளித்தபிறகே அந்த மனிதனால் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க முடிகிறது. மறுபிறப்பு அடையாத எவராலும் மனந்திரும்ப முடியாது. இந்த விசுவாசத்தைக் கொண்டிருப்பதால், ஆவியானவர் சுவிசேஷத்தின் மூலம் பாவிகளின் இருதயத்தில் இடைப்பட்டு கிரியை செய்வார் என்ற நம்பிக்கையில் சீர்திருத்த பிரசங்கிகள் சுவிசேஷ செய்தியில், மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி பாவிகளுக்கு அழைப்பு விடுவதோடு, அப்படி மனந்திரும்பவேண்டியது அவர்களுடைய கடமை என்றும் சொல்லுகிறார்கள். அவர்கள் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்தால் அதற்கு முழுக்காரணமும் ஆவியானவர் தந்திருக்கும் மறுபிறப்புதான் என்பதை அவர்கள் நம்புகிறார்கள்.
பில்லி கிரேகமைப் பொருத்தவரையில் ஆர்மீனியனிசத்தை அவர் தழுவியிருந்ததால், ஒருவன் கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமே அவனுக்கு மறுபிறப்பு கிடைப்பதாக அவர் நம்பியிருந்தார். அதுதான் ஆர்மீனியனிசத்தின் போதனை. இதன் காரணமாக பில்லி கிரேகம், மனிதன் செய்யவேண்டிய, விசுவாசிக்க வேண்டிய கிரியையே அவனுக்கு இரட்சிப்பைக் கொடுப்பதாக உறுதியாக நம்பி தன்னுடைய கூட்டங்களில் சுவிசேஷத்தைக் கேட்க வருபவர்களைப் பார்த்து அன்றே அப்போதே இயேசுவிடம் சரணடையுங்கள்; அவர் உங்களுக்கு விடுதலை கொடுப்பார் என்று வலியுறுத்தினார். ஆர்மீனியனிசத்தின் முக்கிய போதனை மனிதனுடைய சித்தம் பாவத்தினால் முழுமையாகப் பாதிக்கப்படாமல் இரட்சிப்புக்குரிய ஆத்தும கிரியையை செய்யக்கூடிய சுதந்திரம் கொண்டதாக இருக்கிறது என்பதுதான். இதை பில்லி கிரேகம் நம்பியிருந்தார். இந்த நம்பிக்கை அவருடைய சுவிசேஷம் சொல்லும் முறையிலும் அதைச் சார்ந்த நடைமுறைகளிலும் இருந்திருப்பதைத் தெளிவாகக் காணலாம். மனிதனுடைய சித்தம் பாவத்தால் பாதிக்கப்பட்டு எந்தவித ஆத்மீகக் கிரியையையும் செய்ய முடியாத நிலையிலிருக்கிறது (Total Depravity) என்பதே ஆகஸ்தீன், கல்வின், மார்டின் லூத்தர், ஜொனத்தன் எட்வர்ட்ஸ், ஜோர்ஜ் விட்பீல்ட், ஸ்பர்ஜன், மார்டின் லொயிட் ஜோன்ஸ் போன்ற சீர்திருத்த பிரசங்கிகளின் நம்பிக்கையாக இருந்தது.

சார்ள்ஸ் பினி
பில்லி கிரேகமின் குருசேட் கூட்டங்களில் கிறிஸ்துவிடம் சரணடைய விருப்பமுள்ளவர்களை கூட்டத்தில் பிரசங்க மேடைக்கு முன்னால் வருகின்ற அழைப்பை உருவாக்கியிருந்தார் பில்லி கிரேகம். அப்படி முன்னால் வந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதாக தீர்மானம் செய்தவர்கள் கூட்டத்திலேயே கிறிஸ்தவர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு கிறிஸ்தவ சீஷத்துவத்தை குருசேட் அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் அப்போதே கொடுக்கும் வழக்கம் இருந்தது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுவதாக கூட்டத்தில் கையை உயர்த்தி விருப்பத்தைத் தெரிவிப்பது மறுபிறப்பை அவர்கள் அடைந்ததற்கு அடையாளமாகக் கருதப்பட்டது. அதை எவரும் கேள்விகள் கேட்பதில்லை; ஆராய்ந்து பார்ப்பதில்லை. பில்லி கிரேகமின் கூட்டங்களில் உலகின் பல்வேறு நாடுகளில் உணர்ச்சி வசப்பட்டு இப்படியாக கைகளை உயர்த்தி இயேசுவை ஏற்றுக்கொண்டதாக எண்ணிக்கொண்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் கிறிஸ்தவர்களாக அறிவிக்கப்பட்டனர். கிறிஸ்துவிடம் சரணடையும் இத்தகைய முறைக்கு முதன் முறையாக ஆரம்பத்தில் வித்திட்டவர் சார்ள்ஸ் பினி (Charles Finney, 1792-1875) எனும் அமெரிக்க இவேன்ஜலிஸ்ட். பினி ஆர்மீனியனிசத்தை விசுவாசித்தது மட்டுமல்லாமல், மூல பாவத்தைப் பற்றிய பாரதூரமான எண்ணங்களையும் கொண்டிருந்தார். சார்ள்ஸ் பினி சுவிசேஷத்தை கேட்ட உடனேயே கூட்டத்தில் வீடுபோகுமுன் கிறிஸ்துவுக்காக முடிவெடுக்கும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தார். இதையே பில்லி கிரேகம் தன் காலத்தில் பிரபலமாக்கினார். இத்தகைய முறை கிறிஸ்துவிடமோ, அப்போஸ்தலர்களின் ஊழியத்திலோ, கிறிஸ்தவ வரலாற்றிலோ 19ம் நூற்றாண்டுக்கு முன் ஒருபோதும் காணப்படவில்லை. இந்த முறையினால் கிறிஸ்துவை அடைந்திருக்கிறோம் என்று நம்பி வீணாய்ப்போனவர்களே அநேகம். Youth for Christ, Campus Crusade போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாமல் இன்று உலகில் காணப்படும் பெரும்பாலான சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த சபைகளும், நிறுவனங்களும் இந்த முறையையே பின்பற்றி வருகின்றன. இந்த முறையின் ஆபத்தை விளக்கும் நூல்களாக Pastor’s Dilemma (Errol Hulse), Invitation System (Ian Murray) போன்றவை இருந்து வருகின்றன. நான் எழுதி வெளியிட்டிருக்கும் ‘இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு’ என்ற நூலை வாங்கி வாசியுங்கள். அதில் கிறிஸ்து தரும் இரட்சிப்பின் ஒழுங்கு, சீர்திருத்தவாத கிறிஸ்தவ நம்பிக்கைகளின் அடிப்படையில் வேதப்பூர்வமாக முறையாக விளக்கப்பட்டிருக்கிறது.
- பில்லி கிரேகம் அசோஷியேஷனின் சமய சமரசப் போக்கு
1950களில் பில்லி கிரேகம் இன்னுமொரு காரியத்தை செய்தார். அதாவது, சுவிசேஷத்தை பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு சொல்ல வேண்டுமானால் தன் நிறுவனத்திற்கு அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளிலும் அனைத்துக் கிறிஸ்தவ சபைகள் மற்றும் நிறுவனங்களினதும் ஒத்துழைப்பு தேவை என்பது அவருக்குத் தெரிந்தது. அத்தகைய ஒத்துழைப்பில்லாமல் வரலாறு காணாத மாபெரும் கூட்டங்களை நடத்துவது என்பது கடினம் என்பதை அவர் உணர்ந்தார். அத்தோடு இயேசுவின் அன்பை விளக்கி சுவிசேஷத்தை சொல்லுவது மட்டுமே அவசியம் என்பதை அவர் தீர்மானித்திருந்தபடியால் இறையியல் போதனைகளில் கவனம் செலுத்துவது அத்தனை அவசியமில்லை என்பதில் உறுதியாக இருந்தார். அவருடைய சுவிசேஷ செய்திகளும் இறையியல் சாராம்சத்தை ஒதுக்கிவைத்து இயேசுவின் அன்பு, பரலோகத்தின் அவசியம், மனந்திரும்புவதனால் கிடைக்கும் நித்திய ஜீவன் ஆகியவற்றையே வலியுறுத்துவதாக இருந்தன. முக்கியமாக தேவகோபத்தைப் பற்றியும், கிறிஸ்துவின் பரிகாரப்பலிபற்றியும் பில்லி கிரேகம் தன் செய்திகளில் முக்கியத்துவமளிக்கவில்லை. எல்லா சபைகளுடையதும், நிறுவனங்களினதும் ஆதரவு தமக்குத் தேவை என்பதால் அந்த சபைப்பிரிவுகள், நிறுவனங்கள் நம்பும் எந்த விஷயங்களுக்கும் மாறாக பிரசங்கிப்பதை அவர் ஒதுக்கி வைத்தார்.
சுவிசேஷத்தை எல்லோருக்கும் அறிவிப்பதற்காக பில்லி கிரேகம் வகுத்துக்கொண்ட இத்தகைய கண்ணோட்டம் அவரை சமயசமரசப் பாதையின் (Ecumenism) வழியில் இட்டுச் சென்றது. ஒரு தவறு இன்னொரு தவறுக்குத்தான் வித்திடுமே தவிர சரியான பாதைக்கு ஒருபோதும் வழிகாட்டாது என்ற உண்மையை கிரேகம் மறந்துவிட்டார். சமயசமரசப் பாதை என்பது, வேதக் கிறிஸ்தவம் மற்றும் வரலாற்றுக் கிறிஸ்தவப் போதனைகளுக்கு முரணான வேதபோதனைகளைத் தயவு தாட்சண்யம் இல்லாமல் நிராகரிக்கும் ரோமன் கத்தோலிக்க மதத்தோடும், வேதத்திற்கு இடங்கொடுக்காத லிபரல் பாரம்பரிய திருச்சபைகளுடனும், கிறிஸ்தவ நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கிவரும் லிபரல் நிறுவனங்களோடும் கிறிஸ்தவ ஒற்றுமை என்ற பெயரில் இணைந்து கிறிஸ்தவ ஊழியங்களில் ஈடுபடுவதாகும். இத்தகைய மனப்போக்கும், நடவடிக்கைகளும் உலகத்து ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள உதவலாமே தவிர சத்தியத்தை நிலைநாட்ட ஒருபோதும் உதவாது என்பது பில்லி கிரேகமுக்கு தெரியாமல் போனது விந்தைதான். பில்லி கிரேகம் இந்த வழியில் போக ஆரம்பித்ததற்கான காரணங்களை இயன் மரே எனும் சீர்திருத்த வரலாற்று எழுத்தாளர், Evangelicalism Divided (Pgs 24-50) என்ற தன் நூலில் வரலாற்று ரீதியில் ஆதாரங்களோடு தெளிவாக எழுதி விளக்கியிருக்கிறார். இதை எழுதுகிறபோது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. 1990களின் இறுதிப்பகுதியில் இங்கிலாந்தில் ஒரு சபைக்கு நான் கோடை காலங்களில் சில மாதங்களுக்கு பிரசங்கத்தையும், போதக ஊழியத்தையும் செய்து வந்திருந்தேன். அந்த சபை ஆரம்பத்தில் சகோதரத்துவ சபையாக இருந்து பின்னால் சீர்திருத்த பாப்திஸ்து சபையாக மாறியிருந்தது. அது சகோதரத்துவ சபையாக இருந்த காலத்தில் அதில் நான்கு மூப்பர்கள் இருந்திருக்கிறார்கள். பில்லி கிரேகம் இங்கிலாந்துக்கு வந்து சுவிசேஷ குருசேட் நிகழ்த்தியபோது அந்த ஊரில் இருந்த இன்னொரு லிபரல் சபையும் அதில் இணைந்து பணிசெய்தது. அந்த லிபரல் சபையின் போதகப்பணியில் இருந்தது ஒரு பெண். நான் பணிபுரிந்திருந்த சபையின் முன்னாள் மூப்பர்கள் பில்லி கிரேகம் கூட்டங்களில் இணைந்து பயனடைய வேண்டும் என்று விரும்பினர். ஆனால் சபை அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஒரே நாளில் அந்த மூப்பர்கள் நால்வரும் சபையை விட்டு விலகினார்கள். சத்தியத்திற்கும், சத்தியத்தின் அடிப்படையிலான சபை நடைமுறைகள் என்பதற்கெல்லாம் முக்கியத்துவம் தராமல், பில்லி கிரேகம் யார் எவர் என்று பார்க்காமல் எல்லோருடனும் இணைந்து சுவிசேஷக் கூட்டங்கள் நடத்தியது இவ்வாறு அநேக சபைகள் மத்தியில் குழப்பத்தையும் அன்று இங்கிலாந்தில் உருவாக்கியிருந்தது. பில்லி கிரேகம் குருசேட்டிற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து, போதகர்களை அன்று சிந்திக்க வைக்க மார்டின் லொயிட் ஜோன்ஸ் மிகவும் பாடுபாட்டார்.
கத்தோலிக்கர்களோடும், லிபரல்களோடும் இணைந்து சுவிசேஷம் சொல்லும் சமயசமரசப் போக்கு தன் இலக்கில் வெற்றிபெற பில்லி கிரேகமுக்கு உதவியிருந்தபோதும் அநேகருக்கு மெய்யான ஆவிக்குரிய விடுதலையைக் கொடுக்க உதவவில்லை. அமெரிக்காவில் ஜொனத்தன் எட்வர்ட்ஸின் காலத்தில் நிகழ்ந்த மெய்யான எழுப்புதல்களின்போதுகூட வரம்புக்கு மீறிய உணர்ச்சிவசப்படுதல் பலரில் காணப்பட்டபோது எட்வர்ட்ஸ் அதை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளவில்லை. மெய்யான மனந்திரும்புதலுக்கும் போலித்தனமான உணர்ச்சி வசப்படுதலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்ட அவர் அப்போது Religious Affections என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தார். இந்தவிதமான ஆய்வெல்லாம் பில்லி கிரேகமின் கூட்டங்களில் காணப்படவில்லை. எந்தக் கேள்விமுறையும் இல்லாமல் கைதூக்கியவர்களெல்லாம் கிறிஸ்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டு லிபரல் சபைகளுக்கும்கூட அனுப்பிவைக்கப்பட்டனர்.
பில்லி கிரேகமின் இத்தகைய சுவிசேஷ ஊழியப்போக்கு அவரை சத்தியத்தில் இருந்து வெகுதூரத்துக்குக் கொண்டுபோயிருந்தது. அவருடைய வயதான காலத்தில் ஒருமுறை ரொபட் சுளர் என்ற லிபரல் பிரசங்கிக்கு அவர் அளித்த நேர்காணலில் இந்து, முஸ்லீம், புத்த மதத்தைச் சார்ந்தவர்களும் ஏதோவொருவிதத்தில் இறக்கும்போது பரலோகம் போய்விடுவார்கள் என்ற அதிர்ச்சி தரும் விஷயத்தை அறிவித்தார். அதை கிரேகம் முழுமையாக நம்பினார். ஆண்டவருடைய அன்பை வலியுறுத்திய பில்லி கிரேகமுக்கு அந்த அன்பு அனைவரையும் ஏதோவொரு விதத்தில் பரலோகத்துக்கு அனுப்பிவிடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது. வேதம் தேவ அன்பைப் பற்றி அந்தவிதத்தில் விளக்கவில்லை.
நல்ல மனிதர் என்றவிதத்திலும், கிறிஸ்துவை நேசித்தவர் என்ற விதத்திலும், வாழ்க்கையில் நன்னடத்தையுள்ளவராயிருந்தார் என்பதிலும் பில்லி கிரேகமை எவரும் எந்தக் குறையும் சொல்லமுடியாது. அவர் யாரும் எட்டமுடியாத பெரும் அமெரிக்க அதிபர்கள், செல்வந்தர்கள், கிறிஸ்தவ தலைவர்கள் என்று அனைவர் மத்தியில் செல்வாக்கு கொண்டிருந்தார். ஆனால், வேத உண்மைகளுக்கு அவர் முக்கியத்துவம் தந்து கிறிஸ்தவ பணிகளை நடத்தாமல் போனது அவரை வேதத்தில் இருந்து வெகுதூரத்துக்கு கொண்டுபோயிருந்ததை மறுக்கமுடியாது. பில்லி கிரேகம் இறையியல் வல்லுனரல்ல; இறையியல் போதனைகளில் அலட்சியம் காட்டினால் அது எங்கு கொண்டுபோய்விடும் என்பதற்கு அவர் உதாரணமாயிருந்தார். ஆற்றலும், திறமையும் கொண்ட தனி மனிதர்கள் உலகத்தில் மிகுந்த பாதிப்புகளை தனியொருவராக ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதை கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்களிடமும் காணலாம். டார்வின் தன் பரிணாமக் கோட்பாட்டின் மூலம் உலகை வசீகரித்து வேதம் போதிக்கும் படைப்புக்கு எதிரான வழியில் வழிநடத்தியிருந்தார். சிக்மன்ட் பிராயிட் தன் உளவியல் கோட்பாட்டின் மூலம் உலகத்தைக் கவர்ந்து லிபரல் சிந்தனையில் வழிநடத்தியிருக்கிறார். இவர்கள் கிறிஸ்தவர்களல்ல. கிறிஸ்தவர்களான ஜே. என். டார்பியும், ஸ்கோபீல்டும் அமெரிக்க கிறிஸ்தவத்தை டிஸ்பென்சேஷனலிசப் பாதையில் வழிநடத்தினர். சார்ள்ஸ் பினியும், பில்லி கிரேகமும் சுவிசேஷத்தை அறிவிப்பதில் வரலாற்றில் என்றுமிருந்திராத, வேதத்தில் காணமுடியாத கைதூக்கி கிறிஸ்துவிடம் சரணடையும் முறையை உருவாக்கிப் பிரபலப்படுத்தினர். இதெல்லாம் நமக்கு எதைப் போதிக்கிறது? பிரபலங்களான தனிமனிதர்களைப் பின்பற்றுவதையோ, காதில் விழும் போதனைகளை ஆராய்ந்து பார்க்காமல் உணர்ச்சி வசப்பட்டு ஏற்றுக்கொள்ளுவதையோ விட்டு வேதத்தை எப்போதும் ஆராய்ந்து பார்த்து அது போதிக்கும் சத்தியங்களின்படி மட்டுமே நடந்துபோக வேண்டுமென்பதைத்தான். பேரெண்ணிக்கை கொண்ட ஒரு கூட்டமே தவறான பாதையில் போகிறது என்பதற்காக அது போகும் பாதைதான் சரி என்பதல்ல; வேதம் சொல்லும் உண்மைகளைத் தனித்திருந்தும் விசுவாசித்துப் பின்பற்றும் இருதயமும், தைரியமும் நமக்கு இன்று தேவை. பினியைப் போலவும், பில்லி கிரேகமைப் போலவும் இன்னும் அநேகர் வரலாற்றில் உருவாகாமல் இருக்கப்போவதில்லை. அந்தந்தக் காலப்பகுதியில் ஸ்கொட்லாந்தின் ஜோன் கென்னடியைப்போலவும், மார்டின் லொயிட் ஜோன்ஸைப்போலவும் சரியானதை நெஞ்சுயர்த்தி வெளிப்படையாகப் பேசி வாழும் தலைமுறை உருவாக வேண்டும்.
தேவபயத்தை நம்மில் தக்கவைப்பதும் அதிகரிப்பதும் எப்படி?
வேதம் போதிக்கும் தேவபயம் – 6
– அல்பர்ட் என். மார்டின் –
[அல்பர்ட் என். மார்டின் எழுதி, ஹெரிட்டேஜ் வெளியீடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் ‘மறந்துபோன தேவபயம்’ (The Forgotten Fear of God) என்ற நூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு அதிகாரம். மொழிபெயர்ப்பு: M. ஜேம்ஸ்]

இத்தொடர் ஆக்கத்தில், பரிசுத்த வேதாகமத்தின் மையப் போதனையாக தேவபயமே இருக்கிறது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இருப்பினும் துரதிஷ்டவசமாக, இந்நாட்களில், கிறிஸ்தவ சமுதாயத்தில் வேதத்தின் இந்த முக்கியமான போதனையே பெருமளவுக்கு நிராகரிக்கப்படுகிறது. ஜோன் மரே எழுதிய ஒரு வாக்கியத்தை, இப்பாடத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன் – “தேவபயமே தேவபக்தியின் மையமாக இருக்கிறது”. வேறுவிதமாக சொல்லுவதானால், தேவபயமென்பது நம் வாழ்வில் தொடர்ச்சியாக காணப்படாவிட்டால், தேவபக்தியுள்ள வாழ்க்கையை நம்மில் காண முடியாது. அத்தோடு, தேவபயமாகிய நிலத்தில்தான் தேவபக்தியுள்ள வாழ்க்கை வளரும் என்றும், தேவபயமில்லாத நிலத்தில் தேவபக்தியில்லாத வாழ்க்கையே வளரும் என்று வேதம் கூறும் உண்மையையும் படித்தோம். இந்தப் போதனை மிகவும் முக்கியமானதாகையால், நம்முடைய இருதயத்தில் தேவபயத்தை தக்கவைப்பதும் அதிகரிப்பதும் எப்படி என்பதைப் பற்றிய சில நடைமுறை காரியங்களை நாம் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் அவசியமானது.
இதுபற்றி நாம் விரிவாகப் படிக்க நமக்குத் துணை செய்யும் ஒரு அடிப்படையான வேதப்பகுதி, நீதிமொழிகள் 23:17. இந்த வசனத்தில், முதலாவது ஒரு எதிர்மறையான காரியம் குறிப்பிடப்பட்டுள்ளது, “உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே”. தேவபக்தியற்றவர்களிடமுள்ள எழில் நயம் வாய்ந்த விஷயங்களைப் பற்றி உன் இருதயத்தில் பொறாமை ஏற்படவிடாதே. வாழ்வின் இன்பங்கள் என்று அவர்கள் குறிப்பிடுகிறவைகளைப் பற்றிய எந்தவிதமான ஏக்கமும் உன்னுடைய ஆவியில் தாக்கத்தை ஏற்படுத்த விட்டுவிடாதே. மாறாக, “நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.” வேறுவிதமாக சொல்லுவதானால், பாவிகள் மற்றும் அவர்களுடைய பாவகரமான வாழ்க்கை முறையைப் பற்றி பொறாமை கொள்ளாத இருதயம்தான், தேவபயத்தைத் தன்னில் சரியாகக் கொண்டிருந்து, தொடர்ந்து அதை தன்னில் தக்கவைத்துக்கொள்ளும் இருதயமாகும்.
தேவபயத்தை நம்முடைய இருதயத்தில் எப்படி தக்கவைத்துக் கொள்ளுவது? தேவபயத்தை நம்முடைய இருதயத்தில் தக்கவைத்திருக்க வேண்டும் என்பது நம்மைப் பற்றிய தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்பதை நீதிமொழிகள் 23:17 எல்லாவிவாதங்களுக்கும் அப்பாற்பட்டு உறுதிப்படுத்துகிறது. “நாடோறும்” அதை நம்மில் கொண்டிருக்க வேண்டும் என்று வெளிப்படையாக கட்டளையிடப்பட்டுள்ளது. இதை நாம் எப்படி செய்வது என்பதற்கான பதிலில், முதலாவது, இதற்கான அடித்தளமாக இருக்கும் ஒரு பொதுவான தத்துவம் பற்றி நாம் கவனிப்போம். பிறகு, தேவபயத்தைக் கொண்டிருப்பதற்கும் அதில் வளர்ந்து பெருகுவதற்குமான எட்டு குறிப்பிட்ட வழிமுறைகளைப் பற்றி சிந்திப்போம்.
அடித்தளமான தத்துவம்
முதலாவது, தேவபயத்தை நம்முடைய இருதயத்தில் கொண்டிருக்கவும் அதில் வளர்ந்து பெருகவும் வேண்டுமானால், அதுபற்றிய ஒரு பொதுவான தத்துவத்தை நாம் விளங்கிக்கொள்ளவும் கற்றறியவும் வேண்டும். அந்தத் தத்துவம் என்னவென்றால்,
“கிறிஸ்தவ வாழ்க்கை வாழுவதென்பது, கடவுள் நம்மில் செயல்படுத்தியுள்ளதாக அவர்தாமே அறிவித்துள்ள அவருடைய சொந்தக் கிரியைகளின் அடிப்படையிலேயே, நம்முடைய உணர்வுப்பூர்வமான ஆவிக்குரிய முயற்சிகளின் ஆர்வமெல்லாம் இருக்கும்.”
இந்த முக்கியமான தத்துவத்தை நான் உங்களுக்கு உதாரணங்களுடன் விரிவாக விளக்குகிறேன். கலாத்தியர் 5:22-23 வசனங்களில், “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் ஒரு நபர் மெய்யான, சுயநலமற்ற, கிறிஸ்தவ அன்பை வெளிப்படுத்துகிறதை நீங்கள் காண்கிறீர்களோ, அந்த நபரில் அத்தகைய அன்பு வெளிப்படுவதற்கு பரிசுத்த ஆவியானவருடைய ஆழமான, வல்லமையுள்ள, உள்ளார்ந்த கிரியையே காரணம் என்பதை நீங்கள் அறிய வேண்டும். அதாவது, அத்தகைய அன்பு பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தையும் செயலையும் வெளிப்படுத்துகிறதாயிருக்கிறது. எங்கெல்லாம் மெய்யான சந்தோஷத்தையும், சமாதானத்தையும், வேறுபல கிறிஸ்தவ கிருபைகளையும் பார்க்கிறீர்களோ, அங்கு நீங்கள் பார்ப்பது பரிசுத்த ஆவியானவருடைய செயல்களையே. இது எல்லா தர்க்கங்களையும் கடந்த ஓர் உண்மை. வேதத்தையும், நம்முடைய சொந்த இருதயத்தையும் நன்கு அறிந்திருந்தால், இத்தகைய கிருபைகளெல்லாம், நம்மிடத்தில் செயல்படும் பரிசுத்த ஆவியானவருடைய செயல்களினாலேயே நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவரப்பட்டு, வெளிப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.
எனினும், இத்தகைய கிருபைகளெல்லாம், அவருடைய கிரியைகளின் கனிகளே என்று சொல்லுகிற அதே ஆண்டவர், அதே அப்போஸ்தலனைக் கொண்டு, கொலோசெயர் 3:12ல், “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லுகிறார். பிறகு, 14வது வசனத்தில் சொல்லுகிறார், “இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.” அன்பு பரிசுத்த ஆவியின் கனி என்றும், கடவுளுடைய கிரியைகளே அதை நம்மில் உண்டாக்குகிறது என்றும் சொல்லுகிறதோடு, அதை “நாம்” தரித்துக்கொள்ள வேண்டும் என்றும் வேதம் சொல்லுகிறது. “தரித்துக்கொள்ளுங்கள்” என்பது செயலைக் குறிப்பிடுகிற வினைச்சொல். இன்று காலை, உங்களுடைய ஆடைகள் வைத்திருக்கும் அலமாரியிலிருந்து, ஆடைகள் தானாக உங்கள் படுக்கையினிடமாக வந்து, மெல்ல மெல்ல நகர்ந்து உங்கள் உடலில் அணியும்படி உங்கள் படுக்கையிலேயே இருந்திருக்கமாட்டீர்கள். நீங்கள் படுக்கையிலிருந்து எழுந்திருந்து, ஆடைகள் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவைகளில் ஒன்றை எடுத்து அணிந்திருப்பீர்கள். “தரித்துக்கொள்ளுதல் (அணிதல்)” என்பது ஒரு நபருடைய தனிப்பட்ட உணர்வுப்பூர்வமான செயல்.
அன்பும் சாந்தமும் ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் இருப்பது கடவுளுடைய செயலினாலா அல்லது விசுவாசியினுடைய செயலினாலா? இதற்கான பதில் “இது அல்லது அது” என்பதல்ல, இரண்டுமே என்பதுதான் பதில். ஆவியின் கனியே அன்பு – அன்பை அணிந்துகொள்ளுங்கள். ஏனைய எல்லா கிருபைகளைப் பற்றியும் இதுவே உண்மை. ஆவியின் கனி சந்தோஷம், இருப்பினும், பிலிப்பியர் 4:4 சொல்லுகிறது, “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.”
நான் விளக்கி வருகிற இந்தத் தத்துவம், பிலிப்பியர் 2:12-13ல் மிகவும் அருமையாகவும் துல்லியமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது,
“ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.”
அதாவது, கடவுளுடைய இரட்சிக்கும் திட்டங்களை உங்களுடைய வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமாகவும் ஆர்வத்துடனும் உங்களில் நிறைவேற்றுங்கள். அவருடைய இரட்சிக்கும் கிருபைகளின் வளர்ச்சியை உங்களுடைய குற்றமற்ற வாழ்க்கையின் மூலம் காட்டுங்கள். “பிரயாசப்படுங்கள்” என்ற கட்டளை, நம்மில் செயல்படும் கடவுளுடைய செயலின் உறுதியை அடிப்படையாகக் கொண்டது. கடவுளுடைய செயல் நாம் செய்ய வேண்டியவைகளை நிராகரிக்கவில்லை. அதேபோல், நம்முடைய செயல் கடவுளுடைய செயலையும் அதன் உறுதியையும் இல்லாமலாக்கவில்லை. ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் இவை இரண்டும் சேர்ந்தே இருக்கும்.
தேவபயத்தை நம்மில் தக்கவைத்துக்கொள்ளவும், அதை வளர்க்கவும் வேண்டுமானால், இந்தத் தத்துவத்தை நாம் தெளிவாக விளங்கிக்கொண்டிருக்க வேண்டியது அவசியம். ஒருவனுடைய இருதயத்தில் தேவபயத்தை கொண்டிருப்பதென்பது, புதிய உடன்படிக்கையில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள ஆசீர்வாதமாக, கடவுளுடைய சர்வஏகாதிபத்திய செயலாக இருக்கிறது.
அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து, அவர்களுக்கு நன்மைசெய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன். (எரேமியா 32:40-41).
இது கடவுளுடைய இரட்சிக்கும் ஆசீர்வாதங்களில் ஒன்று. கடவுள், எல்லா காலங்களிலுமுள்ள தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களில், அவர்களுடைய மனமாற்றத்தோடு சேர்ந்த ஒன்றாக இதை அவர்களில் விதைக்கிறார். இதனடிப்படையில், சிலர், ஒருவனுடைய இருதயத்தில் தம்மைப்பற்றிய பயத்தை ஏற்படுத்துவது கடவுளுடைய செயலாக இருக்குமானால், தேவபயத்தை அதிகரிப்பதற்கான வழி, அவரிடத்தில் ஜெபிப்பதும், அவரை அதிகமாக நம்பியிருப்பதுமாகத்தானே இருக்கும் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இது அந்தவிதத்தில் செயல்படுகிறதில்லை. இதிலுள்ள தத்துவம் என்னவென்றால், “கடவுள், நம்மில் செயல்படுத்தும் அவருடைய செயலாக எதை அறிவித்திருக்கிறாரோ, அதைச் செய்வதற்கு உணர்வுப்பூர்வமாக உழைப்பதும் முயற்சிப்பதுமே நம்முடைய நோக்கமாக இருக்கும்”.
ஆண்டவருடைய வார்த்தையில் போதிக்கப்பட்டுள்ள இந்தப் போதனையைப் படிக்கும் முயற்சியில், நம்மை “வேத கட்டளைகளை மட்டுமே பெரிதுபடுத்தி வேதப்போதனைகளை நிராகரிக்கிற கூட்டத்தினராகவும்,” “ஒழுக்கத்தைப் பெரிதுபடுத்தி ஆண்டவருடைய கிருபையை அலட்சியப்படுத்துகிற கூட்டத்தினராகவும்” கருதி, நம்மை குற்றப்படுத்தும் ஆபத்தில் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது. நம்முடைய இருதயங்களில் தேவபயத்தை வளர்ப்பதற்குக் கர்த்தர் வேதத்தில் கொடுத்துள்ள வழிகாட்டு முறைகளைக் கண்டறியும் செயலிலிருந்து நம்மை வழிவிலக செய்யக் கூடிய இத்தகைய ஆபத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். இது என்னை வருத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், வியப்படையவும் செய்கிறது. ஆண்டவருடைய கட்டளைகளை அப்பட்டமாக நிராகரிக்கிற இக்காலங்களில், இப்படியான போதனைகளைப் போலத் தென்படுகிற எந்த ஒன்றையும் மக்கள் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள். ஆகவே இவை இரண்டும் நமக்கு மிகப்பெரிய நடைமுறை ஆபத்துக்கள். தூய்மைவாதிகளில் ஒருவரிடம், “ஏன் நீங்கள் இப்படி ஒரு துல்லியமான வாழ்க்கை முறையை வாழுகிறீர்கள், ஏன் உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் வேத கட்டளைகளையும் போதனைகளையுமே மிகவும் கருத்ததாக கவனித்து வாழுகிறீர்கள்” என்று ஒருவன் கேட்டான். அதற்கு அவர், “நான் ஏன் இப்படி துல்லியமான வாழ்க்கை வாழுகிறேன் என்று நீங்கள் கேட்கிறீர்கள். அதற்கு பதில் மிகவும் எளிமையானது. ஏனென்றால், துல்லியமான கடவுளுக்கே நான் ஊழியம் செய்கிறேன்” என்று பதிலளித்தார். தேவபயத்தைக் கொண்டிருப்பதற்கான விதிமுறைகளையும் வழிமுறைகளையும் கண்டறிவதில் நாம் ஏன் இவ்வளவு அக்கறைகாட்ட வேண்டும்? ஏனென்றால், நம்மைப் படைத்தவரும், நாம் வாழும்போது எப்போதும் நமக்கு முன்பாக இருக்கிறவருமான கடவுள்தாமே, தேவபயத்தை நம்முடைய இருதயத்தில் வளர்த்துக்கொள்வதற்கான சிறந்த வழிமுறைகளாக இவைகளைக் கொடுத்திருக்கிறார்.
தேவனுடைய பிள்ளை உணர்வுப்பூர்வமாகவும், உறுதியாகவும் இதற்காக எடுக்கும் முயற்சிகளை, தேவகிருபையை நிராகரிக்கும், வெறும் சுய முயற்சியாக ஒருபோதும் கருதக்கூடாது. ஏனென்றால், கடவுள் மட்டுமே ஒருவனுடைய இருதயத்தில் தம்மைப்பற்றிய பயத்தை வைக்கிறார். அதை நாம் விரும்பவும், அவருடைய நல்நோக்கங்களை நிறைவேற்றவும் அவர்தாமே நம்மில் செயல்படுகிறார். அதேவேளை, கிறிஸ்துவுக்குள்ளாக இருந்து, பரிசுத்த ஆவியானவருடைய செயலைச் சார்ந்திருந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தேவபயத்தை நம்மில் வளர்த்துகொள்ள நாம் பிரயாசப்பட வேண்டும்.
தேவபயத்தை நம்மில் தக்க வைத்துக்கொள்ளுவதற்கான வழிமுறைகள்
இதுவரை, இப்போதனை தொடர்பான பொதுவான தத்துவத்தை விரிவாகப் படித்தோம். இப்போது, நம்முடைய இருதயங்களில் தேவபயத்தைத் தக்க வைத்துக்கொள்ளவும் அதிகரிக்கவும் செய்வதற்கான குறிப்பிட்ட வழிமுறைகளைப் பற்றி படிப்போம்.
- புதிய உடன்படிக்கையில் ஆர்வம்
முதலாவது வழிமுறை என்னவென்றால், “புதிய உடன்படிக்கையில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.” இதில் “ஆர்வம்” என்று நான் பயன்படுத்தியுள்ள பதம், ஏதேனும் ஒன்றைத் தெரிந்துகொள்ளுகிற அல்லது ஏதேனும் ஒன்றின்மீது பொதுவான அக்கறைகாட்டுவதைப் பற்றி நான் குறிப்பிடவில்லை. மாறாக, ஒரு விஷயத்தில் நம்மை உறுதியாக ஈடுபடுத்திக்கொள்ளும் ஆர்வத்தைப் பற்றியே இங்கு குறிப்பிடுகிறேன். அதாவது, ஒருவன் தனக்குக் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு சில்லறை வியாபாரம் செய்வதில் ஆர்வம் இருக்கிறது என்று சொன்னால், அவன் எப்போதோ ஒரு முறை தன் கடைக்குச் செல்லுகிறதும் அங்கு போய் அக்கடையின் ஜன்னலிலிருந்து மட்டும் பார்த்துவிட்டு வருகிறவன் என்று அதற்குப் பொருளில்லை. அவன் தன் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் அந்த வியாபாரத்தில் முதலீடு செய்கிறவன் என்றே அதற்குப் பொருள்.
ஒருவனுடைய இருதயத்தில் தேவபயம் இருப்பதென்பது, புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களில் ஒன்றை நிறைவேற்றும் கடவுளுடைய செயலினால் உண்டாகிறது என்று வேதம் சொல்லுகிறது. இதைக் குறித்து ஏற்கனவே, எரேமியா 32:40ல், கடவுள், “எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து” என்று சொல்லியிருப்பதை நாம் படித்திருக்கிறோம். புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுக்கு நீங்கள் அந்நியராயிருக்கிறவரை, பவுல் ரோமர் 3:18ல் குறிப்பிட்டுள்ள, அவபக்தியுள்ளவனின் அனுபவமே உங்களில் தொடரும், “அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை”. மனந்திரும்புதலோடும், விசுவாசத்தோடும் கிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் நீங்கள் வராவிட்டால், பாவிகளுக்காக சிந்தப்பட்ட நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு, கடவுளை நாடி வராவிட்டால், நீங்கள் மரிக்கிறவரையிலும்கூட உங்களில் தேவபயம் இல்லாதவராகத்தான் இருப்பீர்கள். கடவுளுடைய கிருபையுள்ள வாக்குத்தத்தங்களை அவர்மீதுள்ள பயபக்தியினால் நேசிப்பதும் நம்புவதும் என்பது இயற்கையாக எந்தவொரு மனிதனிலும் இல்லை.
கடவுளைவிட்டு தூர ஓடச் செய்யும் கடவுள்மீதான பயங்கரமும் திகிலும் ஒருவனில் இருக்கலாம். ஆனால், உங்களுடைய இருதயத்திலிருந்து கடவுளை நேசிப்பதும், நம்புவதும், ஆராதிப்பதும், அவரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்துடன், கடவுளுடைய குணாதிசயங்களை அறிந்து அவரை நாடி வரும், வேதம் போதிக்கும் பயத்தை உங்களில் கொண்டிருக்க முடியாது. கடவுளைப் பற்றிய திகில் உங்களில் இருக்கலாம். கடவுளைப் பற்றி உங்களில் எழும் எண்ணங்களை, விரட்டியடிக்க நீங்கள் முயற்சிக்கலாம். கடவுள் இல்லை என்ற விதத்தில் உங்களுடைய அன்றாட வாழ்க்கையை வாழலாம். திருச்சபை என்று சொல்லுகிற கட்டடத்திற்கு, வாரத்தில் ஒரு முறை நீங்கள் செல்லலாம். அங்கு நடைபெறும் ஆராதனைகளில் வெளிப்புற உணர்வுகளோடு நீங்களும் கலந்துகொள்ளலாம். ஆனால் தேவபயத்துடன் நீங்கள் வாழ முடியாது. உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று கடவுள் தம்முடைய வார்த்தையில் சொல்லியிருக்கிறபடி வாழுவதற்கான மெய்யான தாக்கத்தை உங்களுடைய எண்ணங்களிலும், நோக்கங்களிலும், வார்த்தைகளிலும் செயல்களிலும் பார்க்க முடியாது. உங்களுடைய கண்களுக்கு முன்பாக தெய்வ பயம் இல்லை. கடவுள் யார், அவர் உங்களிடம் கோருவதென்ன என்ற உண்மைகள் உங்களுடைய வாழ்க்கையை நடத்தும் பிரதான கொள்கையாக இருக்காது.
இதுவே இயற்கையாக நம் ஒவ்வொருவரையும் பற்றிய உண்மையாக இருக்கிறது. நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால், தேவபயமில்லாத அந்தவிதமான வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்ததை எண்ணி வெட்கப்படுவீர்கள். பழைய ஏற்பாட்டின் காலத்தில், கேடான ஒருவன், கோழிக் குஞ்சின் தலையை முறித்து அதன் இரத்தத்தைப் பலிப்பீடத்தில் சிந்தவிட்டது போல், ஏதோ ஒரு சபையில், ஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு நம்முடைய தலையை ஆட்டுகிறவர்களாக இருந்திருக்கலாம். தேவன் தம்முடைய கிருபையினால் நம்மை சிறைபிடித்து, நம்முடைய இருதயங்களில் அவரைப் பற்றும் பயத்தை வைக்காதவரை, கொஞ்ச நேரத்தையும் கொஞ்சப் பணத்தையும் கொடுத்துவிட்டு, முற்றிலுமாக தேவபயமற்றவர்களாக வாழ்ந்திருக்கலாம்.
ஆகவே, தேவபயத்தில் நாம் வளர வேண்டுமானால், புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்தவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் முதலாவது உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எல்லா விசுவாசிகளையும்பற்றி, எபிரெயர் 12:24 சொல்லுகிறது, “புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும் . . . வந்து சேர்ந்தீர்கள்.” “என்னுடைய கரங்களில் நான் எதுவும் கொண்டு வரவில்லை, உம்முடைய சிலுவையையே நான் பற்றிக்கொள்ளுகிறேன்” என்று ஒரு பாடலாசிரியர் சொல்லியதுபோன்ற மனநிலையில் நாம் அவரிடம் வருகிறபோதுதான், அவருடைய சொந்த விலைமதிப்பில்லாத இரத்தத்தினால் முத்திரையிடப்பட்டிருக்கிற உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை நமக்கு அருளிச் செய்கிறார்.
தேவபிள்ளையே, தேவபயத்தில் வளர வேண்டும் என்று நீ ஆவல் கொண்டிருக்கிறாயா? உன்னில் அவரைப் பற்றும் பயம் அதிகரிக்க வேண்டும் என்று நீ அவரை நோக்கிக் கெஞ்சுவதற்கான அடித்தளமாக இருப்பது, புதிய உடன்படிக்கையின்மீதுள்ள உன்னுடைய ஆர்வமே. “ஓ, தேவனே என்னில் உம்மைப் பற்றும் பயத்தை அதிகரிக்கச் செய்யும்” என்று நீங்கள் அவரை நோக்கி ஜெபிக்கிறபோது, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இயேசு கிறிஸ்து மரித்திருக்கிறார் என்றும் அந்த உடன்படிக்கையில் வாக்களிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களில் ஒன்றுதான், தேவன் தம்மைப் பற்றும் பயத்தை உங்களில் வைக்கிறார் என்பதையும் வலியுறுத்தியே நீங்கள் தேவனிடம் கேட்க வேண்டும். எனவே இப்படித்தான் உங்களுடைய ஜெபம் இருக்க முடியும், “கர்த்தராகிய இயேசுவே, உம்மைப் பற்றும் பயம் என்னில் அதிகரிக்க வேண்டுமென்று நீர் சிந்திய இரத்தத்தினடிப்படையில் நான் கெஞ்சுகிறேன். உம்முடைய உடன்படிக்கையின் இரத்தம் உறுதிப்படுத்தியுள்ளதனடிப்படையில் என்னில் தேவபயத்தை அதிகரிக்கச் செய்யும்”.
- வேத வாக்கியங்கள்
இரண்டாவது, உங்களுடைய தேவபயத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் அதிகரிக்கவும் வேண்டுமானால், உங்களுடைய சிந்தைக்கு வேத வாக்கியங்களை ஊட்ட வேண்டும். சங்கீதம் 19, தெய்வீக வெளிப்படுத்தலின் இரண்டு முக்கியமான அம்சங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது. 1 முதல் 6 வசனங்களில், படைப்புகளின் மூலம் கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார், “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” (வசனம் 1). 7 முதல் 11 வசனங்கள் வரை, கடவுள் தம்முடைய வார்த்தையாகிய வெளிப்படுத்தலைக் குறித்து அறிவிக்கிறார், “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும்” (வசனம் 7). இந்த வசனங்களின்படி, கடவுள் தம்மைப் பற்றிய வெளிப்படுத்தலை இரண்டு புத்தகங்களின் மூலம் தந்திருக்கிறார்: படைப்பின் புத்தகம், வேத வாக்கியங்களாகிய புத்தகம். இவைகளை, பொதுவான வெளிப்படுத்தல் மற்றும் சிறப்பான வெளிப்படுத்தல் என்று சொல்லுவார்கள்.
7வது வசனத்திலிருந்து, தாவீது, கடவுளுடைய சிறப்பான வெளிப்படுத்தலுக்காக என்ன சொல்லி துதிக்கிறார் என்று கவனியுங்கள். அவர் சொல்லுகிறார், “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது”. பிறகு மற்றொரு பதத்தைப் பயன்படுத்துகிறார், “கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது”. 8வது வசனத்தில் இன்னொரு பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது, “கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது”. பிறகு “கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது”. இறுதியாக, 9வது வசனத்தின் இறுதியில் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார், “கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது”. கர்த்தருடைய வார்த்தையாகிய சிறப்பான வெளிப்படுத்தலின் மேன்மைகளை விவரிக்கிற இவற்றின் மத்தியில், தாவீது, 9வது வசனத்தின் முதற்பகுதியில் என்ன சொல்லுகிறார் என்று கவனியுங்கள், “கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது”. தாவீது என்ன சொல்ல வருகிறார்? வேத வாக்கியங்களில் கடவுள் கொடுத்துள்ள சிறப்பான வெளிப்படுத்தலுக்கும் தேவபயத்திற்கும் இடையே பிரிக்க முடியாத தொடர்பு இருப்பதை தாவீது இங்கு உறுதிப்படுத்துகிறார். இந்தத் தொடர்பு எப்படியானதென்றால், “கர்த்தருடைய வார்த்தை” என்ற பதத்திற்கு இணை வார்த்தையாக “தேவபயம்” என்ற பதத்தை அதன் ஒட்டுமொத்த நோக்கங்களின் அடிப்படையில் பயன்படுத்தலாம். எனவேதான் தாவீது, “கர்த்தருடைய வார்த்தையைக்” குறிக்கிற பல பதங்களைப் பயன்படுத்தியதற்கு இடையே “தேவபயம்” என்ற வார்த்தையைத் தாராளமாக பயன்படுத்தியிருக்கிறார். இது நமக்கு எதைச் சொல்லுகிறது? ஒருவன் தேவபயத்தில் வளர வேண்டுமானால், அவன் தன்னுடைய சிந்தைக்கு வேத வாக்கியங்களை ஊட்ட வேண்டும். தேவபயத்தை நம்மில் உருவாக்குவதில், கர்த்தருடைய வார்த்தையின் பங்கு மிகவும் அதிகமானது என்பதனால்தான் இந்த இரண்டு வார்த்தைப் பிரயோகங்களும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவேதான், வேத வாக்கியங்களோடுள்ள உங்களுடைய தற்போதைய உறுதியும் தொடர்பும் குறையத் தொடங்கினால், உங்களிலுள்ள தேவபயத்தின் வேரும் சுருங்கத் தொடங்கும். எழுதப்பட்ட கர்த்தருடைய வார்த்தையில் உங்களுடைய புரிதல் வளராவிட்டால், தேவபயத்தில் நீங்கள் வளருவது கூடாத காரியம். அனுதினமும், தனிப்பட்ட வகையிலும் குடும்பமாகவும் வேத வாக்கியங்களில் உங்களால் எந்தளவு ஈடுபடுத்திக்கொள்ள முடியுமோ அந்தளவு ஈடுபடுத்திக்கொள்ளுவது மிகவும் அவசியமானது. வேத வாக்கியங்கள் வாசிக்கப்படுகிற, பாடப்படுகிற, பிரசங்கிக்கப்படுகிற, போதிக்கப்படுகிறபோதெல்லாம், நீங்கள் உண்மையுடனும் தொடர்ச்சியாகவும் அதில் ஈடுபடுதல் அவசியமானது (கொலோசெயர் 3:16). வேதத்திலுள்ள அநேக பகுதிகள், தேவபயத்தைத் தக்கவைக்கவும் அதிகரிக்கவும் செய்வதற்கு நேரடியான உந்துதலைத் தராவிட்டாலும், வேத வாக்கியங்களின் ஒவ்வொரு சத்தியத்தின் ஒட்டுமொத்த தாக்கமும், தேவபயத்தை நமக்கு ஊட்டுகிறதாக இருக்கிறது. ஏதோ ஒருவிதத்தில், எந்தவொரு தனி நபர், வேத வாக்கியங்களில் அதிகமாக கிரகித்துக்கொள்ளுகிறாரோ, அதை தன்னுடைய இருதயத்திலும், வாழ்க்கையிலும் ஆவிக்குரிய விதத்தில் நிலைநிறுத்திக்கொள்ளுகிறாரோ, அவர் தேவபயத்தைப் பற்றி அதிகமாக அறிந்தவராக இருப்பார்.
உங்களுடைய சிந்தைக்கு வேத வாக்கியங்களைத் தருகிற ஒழுங்குமுறையை நீங்கள் குறைத்துக்கொள்ளும் சோதனைக்குட்படுகிறபோது, தேவபயத்தினால் உண்டாகிற பரிசுத்தமாக்குதலிலிருந்து உங்களை விழச் செய்வதற்கு பிசாசானன் தந்திரமான யுக்தியைக் கையாளுகிறான் என்பதை மறந்துவிடாதீர்கள். தேவபயத்திலிருந்து நீங்கள் சற்று விலகுவதற்கு முன் தேவபக்தியிலிருந்து விலகியிருப்பீர்கள் என்பதைப் பற்றி நாம் ஏற்கனவே படித்தோம். உங்களையும் என்னையும் தேவபயத்திலிருந்து வழிவிலகச் செய்ய வேண்டுமானால், அதற்கு முன்னதாக ஏதோ ஓரளவில் தேவபக்தியை நாம் கைவிட்டிருக்க வேண்டும்.
இந்த சோதனைக்கு நாம் இணங்கிவிட்டால், பாவத்தின் வசீகரிப்பாகிய கடும் சோதனையினால் நாம் இழுக்கப்படுவதையும், கடவுளுடைய புன்னகையா அல்லது கடவுளுடைய வெறுப்பா? எது வேண்டும் என்ற அழுத்தம் நம்மில் இருப்பதையும் கண்டு நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஒருவருட காலம் கடவுளுடைய மெய்யான பிள்ளையாக வாழ்ந்திருக்கிற எவரும், அந்தக் காலப்பகுதியில் அவ்வப்போது, கடவுள், கிறிஸ்து, பரலோகம், நரகம், நியாயத்தீர்ப்பு, தேவபக்தி என்பதெல்லாம் தனக்கு வெகு தொலைவில் இருப்பதாகவும், ஒரு வகையில் அவையாவும் வெறும் வார்த்தைகளும் தத்துவங்களுமே என்று எண்ணியிராத ஒரு கிறிஸ்தவனும் இருந்ததில்லை. நான் சொல்லுவது உண்மை இல்லையா? சிலவேளையில் உங்களை நீங்களே கேட்டிருப்பீர்கள், “நான் யார்? இந்த உலகத்தில் நான் எதை நம்புவது? இவையாவும் என்னைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறபோது, இவைகள் எனக்குரியதாக எப்படி இருக்க முடியும்?” இதற்கான பதில் மிகவும் எளிமையானது. இப்படியான சூழலில், எப்போதும் இதுதான் பதில் என்று சொல்ல முடியாவிட்டாலும், பெரும்பாலானவேளையில் பதில் என்னவென்றால், “கடவுளுடைய வார்த்தையில் முறையாக, தொடர்ச்சியாக உங்களை உட்படுத்திக்கொள்ளாததன் விளைவுதான் அது”.
இப்படிச் சொல்லுவது, ஒரு குறிப்பிட்ட நாளில், “சரி இனிமேல், வேதத்திற்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை” என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்று அர்த்தமல்ல. அதாவது, நீங்கள் கடவுளோடு செலவிடுகிறதற்கு வைத்திருந்த நேரத்தைக் குறைக்கும் வகையில், இன்னும் கொஞ்சம் கூடுதல் அழுத்தம் அன்றாட வாழ்வில் ஏற்பட்டிருக்கும். ஒரு நாள் கூடுதலான பொறுப்புகள் வந்திருக்கும், அடுத்த நாள் இன்னும் கொஞ்சம் கவனச்சிதறலுக்கான விஷயங்கள் கூடியிருக்கும், இப்படியே ஓரிரு வாரங்களுக்குத் தொடர்ந்து, பிறகு நீங்கள் வேதத்தை நிராகரிக்கிறீர்கள் என்பதை உணராதளவுக்குக் கொண்டு சென்று விடும். இந்தத் தேய்மானத்தின் வலியைப் பற்றி நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள். பிறகு உங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலும் அனுபவத்திலும், ஒரு பெரும் பின்னடைவு உண்டாயிருக்கும். ஒருநாள் நீங்களே உங்களைக் கேட்பீர்கள், “இதெல்லாம் எப்போது நடந்தது” என்று. இதற்கான பதில், நீங்கள் எப்போது கர்த்தருடைய வார்த்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அந்நியராக மாறினீர்களோ அப்போதுதான் அதெல்லாம் நடந்தது. தேவபயத்தை நம்மில் தக்கவைத்துக்கொள்ள குறுக்கு வழி எதுவும் இல்லை. ஆகவே தேவபயத்தை நம்மில் தக்கவைத்துக்கொள்ளுவதற்கும் அதிகரிப்பதற்குமான இரண்டாவது வழிமுறை, உங்களுடைய சிந்தையிலும் இருதயத்திலும் வேத வாக்கியங்களைத் தொடர்ச்சியாக, முறையாக, ஜெபத்துடன் ஊட்டுங்கள். இதை வேதம் உறுதியாக எடுத்துரைக்கிறது,
“மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல; கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (உபாகமம் 8:3).
- கடவுளுடைய மன்னிப்பு
மூன்றாவது வழிமுறை, கடவுளுடைய மன்னிப்பின் மெய்த்தன்மையை உங்களுடைய ஆத்துமாவுக்கு ஊட்டுங்கள். சங்கீதம் 130:3ல், சங்கீதக்காரன் ஒரு கேள்வி எழுப்புகிறார், “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே?” செய்யப்பட்ட ஒவ்வொரு பாவத்தையும், கடவுள் பதிவிட்டு வைத்திருந்து, பிறகு பாவிகளை தம்முடைய பிரசன்னத்தில் அழைத்து, ஒவ்வொரு பாவத்திற்காக பதிலளிக்க சொன்னால், யார் ஒருவனும் அவருக்கு முன்பாக நிற்க முடியாது. பரிசுத்தமும் எல்லாம் அறிந்தவருமான கடவுள், தம்முடைய படைப்புகளை, அவர்களுடைய ஒவ்வொரு பாவத்திற்குமாக பதிலளிக்கும்படி எதிர்பார்க்கிறபோது, அது “மலைகளே, குன்றுகளே, எங்கள் மீது விழுங்கள்” (வெளிப்படுத்தின விசேஷம் 6:15-17) என்ற கூக்குரலைத்தான் ஒருவனில் ஏற்படுத்தும். நியாயத்தீர்ப்பு நாளில் அநேகருடைய கதறல் இப்படியாகத்தான் இருக்கப் போகிறது. கடவுள் பாவத்தைக் குறித்து வைத்து, அவைகளுக்கு பதிலளிக்க சொல்லுகிறபோதுதான், யார் ஒருவனுக்கும் கடவுளைப் பற்றிய திகில் உண்டாகும். ஆனால், சங்கீதக்காரன், தன்னுடைய கேள்விக்குத் தானே பதிலும் அளித்திருக்கிறார்,
“உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு” (சங்கீதம் 130:4).
இந்த மாபெரும் கடவுள், பரிசுத்தமும், நீதியும், எல்லாம் அறிந்தவருமாக இருந்தபோதிலும், அவர் பாவங்களை மன்னிக்கிறவராக இருக்கிறார் என்பதைக் கண்டறிகிறபோது, தம்முடைய எல்லா குணாதிசயங்களோடும்கூட எனக்கு மன்னிப்பை அருளி, என்னை ஏற்றுக்கொண்ட அவருக்கு, ஆழமான பயத்தோடும், நம்பிக்கையுடன் கூடிய நடுக்கத்தோடும், கண்ணீரோடும் அவரை வழிபடுவதைத் தவிர வேறு எதை நான் தர முடியும். எனவேதான் சங்கீதக்காரன், தன்னுடைய எண்ணம் முழுவதும் இந்த மன்னிப்பைப் பற்றிய ஆச்சரியத்தில் நிறைந்தபோது, தன்னுடைய இருதயம் முழுவதும் கடவுளைப் பற்றிய பயத்தினால் நிறைந்தது என்று சொல்லுகிறார்.
இதே வழிமுறைதான் உங்களுக்கும். உங்களுடைய ஆத்துமா மன்னிக்கும் கிருபையைப் பற்றிய உண்மையிலும் ஆச்சரியத்திலும் எந்தளவு முழுகியிருக்கிறதோ, அந்தளவுக்குத்தான் உங்களில் தேவபயமும் இருக்கும். உங்களுடைய ஆத்துமாவுக்கு கடவுளுடைய மன்னிப்பைப்பற்றிய உண்மையை அவ்வப்போது ஊட்டிக்கொண்டே இருங்கள். பரிசுத்தமுள்ள கடவுள், நீதியுள்ள கடவுள், எல்லாவற்றையும்விட உயர்ந்த கடவுள், உண்மையில் பாவியாகிய என்னை மன்னிக்கிறவராக இருக்கிறார். மன்னிப்பைப் பற்றிய இந்தப் பெரிதும் ஆசீர்வாதமுமான சத்தியம் உங்களுடைய சிந்தையில் எப்போதும் உயர்ந்திருப்பதாக. ஏன் தெய்வீகத்தின் இரண்டாம் நபர் மாம்சமாகிய நம் மத்தியில் வந்து வாசம்பண்ணினார்? ஏன் தெய்வீகம் கொண்டவர், ஒரு கன்னியின் வயிற்றில் வந்திருந்தார்? மிருகங்கள் தங்கியிருந்த இடத்தில் அவர் ஏன் பிறக்க வேண்டியிருந்தது? ஏன் சிலுவையில் கோரமும், பயங்கரமுமான மரணத்தை அவர் அடைய வேண்டியிருந்தது? இந்த ஒவ்வொரு கேள்விக்குமான பதில் இதுதான், கடவுளுடைய பரிசுத்தம், நீதி மற்றும் அவருடைய வளைந்துகொடுக்காத நியாயப்பிரமாணத்தின் கோரிக்கைகளுக்குகேற்ப மனிதர்கள் மன்னிப்பைப் பெற வேண்டும் என்பதுதான்.
மன்னிப்பைப் பற்றிய உண்மையை நம்மில் ஊட்டுவதுமட்டுமல்லாமல், அந்த மன்னிப்பிற்கான வழிமுறைகளின் மூலமாக நம்மில் தேவபயம் ஆழமாகவும் அதிகமாகவும் பெருகும். தாமஸ் மென்டன் (Thomas Manton) என்பவர் சொல்லிய அருமையான ஒரு வாக்கியத்தை இங்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன், “கண்டனம் பண்ணுகிற கடவுளைப் பற்றி நம்முடைய இருதயம் வெட்கப்பட்டபோதும், அவர் மன்னிக்கிற கடவுளாக இருப்பதனால், அவரை நெருங்கிப் பின்தொடரவும் செய்கிறது. இந்த தேவபயமானது, இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக தேவனுடைய நன்மையையே அறிந்துணரச் செய்கிறது”. சங்கீதம் 34:8, நாம் யாரும் அறிந்த, பெரும்பாலும் சுவிசேஷ அழைப்பாக பயன்படுத்தப்படுகிற ஒரு வசனம். அதில் தாவீது சொல்லுகிறார், “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்”. பிறகு, 9வது வசனத்தில், “கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்” என்று சொல்லுகிறார். கடவுளுடைய அளவற்ற நன்மை மற்றும் கிறிஸ்துவுக்குள்ளான அவருடைய தாராளமான கிருபையின் சூழலில் அல்லாமல், கடவுளுக்குப் பயப்பட வேண்டியவிதத்தில் நம்மால் பயப்பட முடியாது. ஆகவே, உங்களுடைய இருதயத்தில் தேவபயம் நிலைத்திருக்க வேண்டுமானால், உங்களுடைய ஆத்துமாவுக்கு கடவுளுடைய மன்னிப்பை ஊட்டுங்கள். அவரைவிட்டு உங்களைத் தூரப்படுத்தக்கூடிய, நியாயப்பிரமாணத்தின் பயங்கரத்திற்குள்ளாக உங்களை உட்படுத்திக்கொள்ளாதீர்கள். அவருடைய மன்னிப்பின் ஆச்சரியத்தில் குளிர்காயுங்கள். அவருடைய கிருபையின் வெளிப்பாட்டை எண்ணி ஆச்சரியப்படுங்கள். இந்தக் கிருபையே, உங்களுடைய இச்சையாகிய சேற்றில் புரளுவதிலிருந்து உங்களை தடுத்து நிறுத்துவதுமட்டுமல்லாமல், உங்கள் மனம் சுற்றித்திரிகிறபோதும், இடறுகிறபோதும் உங்களைப் பொறுமையாக இருக்கவும் செய்கிறது. இத்தகைய மன்னிப்பிற்கு முன்பாக ஆச்சரியப்பட்டு நில்லுங்கள், அப்போதுதான் உங்களில் தேவபயம் தழைத்தோங்கும்.
- பெரியவரான கடவுள்
நான்காவது வழிமுறை, கடவுளுடைய மகத்தான பெருமையை உங்களுடைய ஆத்துமாவுக்கு ஊட்டக் கற்றுக்கொள்ளுங்கள். இதன் மூலம் நான், கடவுளுடைய சர்வஏகாதிபத்தியம், பரிசுத்தம், பெலன், சர்வவல்லமை மற்றும் அவருடைய உயர்ந்த தன்மையைத்தான் குறிப்பிடுகிறேன். இதை வெளிப்படுத்தின விசேஷம் 15:3-4 வசனங்களில் காணலாம். இந்தத் தரிசனத்தில், யோவான், ஒரு கண்ணாடிக் கடலையும், மிருகத்துடனான சண்டையில் ஜெயங்கொண்டவர்களையும் காண்கிறார். பிறகு, அவர்கள் மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவரின் பாடலையும் பாடிக்கொண்டிருப்பதைப் பற்றி விவரிக்கிறார். அந்த பாடல்,
“சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின.”
இந்தப் பாடலில் கடவுளுடைய எந்தெந்த குணாதிசயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது? அவருடைய உயர்ந்த தன்மையும், பரிசுத்தமும், வல்லமையும், நீதியும், சர்வஏகாதிபத்தியமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடவுளுடைய இந்த குணாதிசயங்களெல்லாம் அவருடைய மேன்மையின் மகத்துவத்தை நமக்குக் காட்டி எதை வலியுறுத்துகிறது? பரலோக பாடற்குழுவினர், கடவுளுடைய இந்த மகத்துவத்தைப் பற்றிச் சிந்திக்கிறபோது, எந்தவொரு படைப்புயிரும் அவருக்கு முன்பாகப் பயப்படாமல் இருக்கவே முடியாது என்று அவர்கள் சொல்லுகிறார்கள்,
“கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்”.
கடவுள் தம்மை வெளிப்படுத்தியிருக்கிற விதமாக அவரை அறிகிற எந்தவொரு படைப்புயிரும், அவரிடம் பயப்படாமல் இருக்கவே முடியாது. கடவுளுடைய பிள்ளைகளான நமக்கு இதிலிருந்து வரும் போதனை என்னவென்றால், நீங்கள் தேவபயத்தில் வளர வேண்டுமானால், உங்களுடைய ஆத்துமாவுக்கு கடவுளுடைய மேன்மையின் மகத்துவங்களை ஊட்ட வேண்டும்.
குறிப்பாக, இத்தகைய வேதப்பகுதிகளில் பரிச்சயமாக இருப்பது, கடவுளைப் பற்றிய இந்த உண்மைகளை உங்களுக்குத் தெளிவாகக் காட்டும். ஏசாயா 40 வது அதிகாரம் போன்ற வேதப்பகுதிகளைத் தொடர்ச்சியாக அவ்வப்போது படிப்பது மிகவும் நல்லது. இந்தப்பகுதியில்தான் ஏசாயா, கடவுளுடைய மேன்மையின் மகத்துவங்களை மிகவும் உயர்த்தி விவரித்திருக்கிறார். இதுபோன்ற விஷயங்கள் இந்நாட்களில் எழுதப்படுகிற அநேக புத்தகங்களில் காண்பது அரிதாக இருக்கிறது. வானங்களின் ஒட்டுமொத்தத்தையும் பற்றிப் பேசுகிறார், ஆனால் அவையாவும் கடவுளுடைய ஒரு ஜாண் அளவுதான். பூமியிலுள்ள எல்லா நாடுகளும் அவருக்கு முன் தண்ணீரின் ஒரு துளி போல் இருக்கின்றன என்கிறார். பூமியின் பல நாடுகளிலுமுள்ள மனிதர்கள் யாவரும் திரளான வெட்டுக்கிளிகள் கூட்டம் போல் காணப்படுகிறார்கள். ஏசாயா, கடவுளை பெரிய மேய்ப்பராகவும், நட்சத்திரக் கூட்டங்களை ஆடுகளாகவும் குறிப்பிடுகிறார். நட்சத்திரங்களின் திரள் கூட்டத்திலுள்ள ஒவ்வொன்றையும் அவர் பேர் சொல்லி அழைக்கிறார். எவ்வளவு அருமையான ஒரு உருவகத் தொகுப்பு. இதையெல்லாம் எதற்காக ஏசாயா குறிப்பிடுகிறார்? நம்முடைய தேவனுடைய மேன்மையை நம்மில் ஆழப் பதிய செய்வதற்காகவே. இந்த அதிகாரம், யூதாவில் ஆண்டவருடைய செய்தியை அறிவிக்கிறவர்களுக்கான கட்டளையோடு துவங்குகிறது. அவர்களை உயர்ந்த மலைமீது ஏறி, அங்கிருந்து யூதாவுக்கான செய்தியை அறிவிக்கச் சொல்லுகிறார், “இதோ உங்கள் தேவன் சொல்லுகிறார்”. அவரை நோக்கிப் பாருங்கள். உங்களுடைய கூர்ந்த பார்வையைக் கொண்டு, அவர் தன்னை வெளிப்படுத்திய வண்ணமாகவே அவரை உற்று நோக்குங்கள். ஆகவே, ஏசாயா 40 மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் 1 போன்ற அதிகாரங்களில் நாம் பரிட்சயமாக இருக்க வேண்டும்.
கடவுளுடைய உயர்ந்த தன்மைகளை நம்மில் நிலைநிறுத்திக்கொள்ளுவதற்கு நமக்கு உதவக்கூடிய சபையிலும் அதன் ஊழியங்களிலும் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். எதிர்மறையாகச் சொல்லுவதென்றால், கடவுளோடுள்ள உறவில் அலட்சியமாகவும், பெரியளவு அக்கறையில்லாமல் வெறும் உணர்ச்சியை மட்டுமே மையப்படுத்துகிற ஊழியங்களைவிட்டு உங்களைத் தூரப்படுத்திக்கொள்ளுங்கள். இத்தகைய செயல்கள் கடவுளுக்கு பெரும் வெறுப்பை உண்டாக்குவதாகும். இந்நாட்களில், கடவுளுக்கான ஆராதனை என்ற பெயரில் இத்தகைய வரம்புமீறிய தேவதூஷணங்கள்தான் நடந்து வருகிறது. அவையாவும் கடவுளைப்பற்றிய வேதப்பூர்வமான பார்வையில்லாமல், கடவுளுக்கேற்காத வகையில் செய்யப்படுகிறது. நீங்கள் கடவுளுடைய மகத்துவத்தின் மேன்மைகளைச் சிந்திக்க உங்களுக்கு உதவக் கூடிய ஊழியங்களில் உங்களை உட்படுத்திக்கொள்ளுங்கள். இதுபற்றி ஒரு பாடலாசிரியர் அருமையாக சுட்டிக்காட்டியுள்ளார், “நம்முடைய இரட்சகரின் நெற்றியில் மகத்துவத்தின் இனிமையானது சிம்மாசனமிட்டிருக்கிறது”. வெறும் இனிமையானது கொள்கைகளற்ற உணர்ச்சிகளுக்கு அடிமைப்படும் சீர்கேடுக்குத்தான் உங்களை அழைத்துச் செல்ல முடியும். வெறும் மகத்துவமென்பது, அவரை நெருங்கிச் சேருவதற்கு நம்மை அச்சுறுத்துவதாக இருந்துவிடலாம். ஆனால், மகத்துவத்தையும் இனிமையையும் நாம் சேர்த்துப் பார்க்கிறபோது, கிறிஸ்துவுக்குள்ளாக தம்மை வெளிப்படுத்தியுள்ள வேதம் போதிக்கும் கடவுளை நீங்கள் காணலாம். ஆகவே, உங்களுடைய ஆத்துமாவுக்கு அவருடைய இனிமையையும் அதேவேளை அவருடைய மேன்மையின் மகத்துவத்தையும் ஊட்டக்கூடிய ஊழியங்களில் உங்களை உட்படுத்திக்கொள்ளுங்கள்.
அத்தோடு, கடவுளுடைய மேன்மைகளைப் பற்றிச் சிந்திப்பதற்கு உங்களுக்கு உதவக்கூடிய நல்ல புத்தகங்களையும் வாசியுங்கள். இந்நாட்களில் அநேகப் பிரபலமான கிறிஸ்தவ புத்தகங்கள், எதையும் “எப்படிச் செய்வது” என்று விளக்குவதாகவே இருக்கிறது. அல்லது, நூலாசிரியர் தன்னுடைய சொந்தக் கதையை விளக்குகிற புத்தகங்களாக இருக்கின்றன. நீங்கள் அநேகக் கிறிஸ்தவப் புத்தகக் கடைக்குச் சென்று, அவர்களுடைய புத்தக அலமாரியைக் கழுவி சுத்தம் செய்து பார்த்தாலும், கடவுளுடைய மகத்துவத்தையும், மேன்மையையும், சிறப்புக்களையும் விவரிக்கிற புத்தகங்களைப் பார்ப்பது அரிதாகவே இருக்கும். மறுபுறம், கடவுளுக்கு நாம் மிகுந்த நன்றியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும், ஏனென்றால், கடவுளையும் அவருடைய வழிகளையும்பற்றி அதிகமாக வலியுறுத்தக் கூடிய வேதப்பூர்வமான புத்தகங்களைத் தங்களுடைய அலமாரிகளில் அடுக்கி வைத்திருக்கிற புத்தகக் கடைகளும் அநேகம் இருக்கின்றன. கடவுளைப் பற்றி அதிகமாக சிந்தித்து, அவைகளைத் தங்களுடைய எழுத்துக்களாகக் கொண்டு வருகிற அநேக நல்ல எழுத்தாளர்களைக் கடந்த சில வருடங்களில் எழுப்பியதற்காக நாம் கடவுளுக்கு மிகுந்த நன்றிக்கடன்பட்டவர்களாக இருக்க வேண்டும். இவ்வேளையில் சில எழுத்தாளர்களின் புத்தகங்களை நான் எண்ணிப் பார்க்கிறோன், J.I.. பெக்கர் எழுதிய “Knowing God”, A.W. பிங்க் எழுதிய “The Sovereignity of God”, R.C. ஸ்பிரவுல் எழுதிய “The Holiness of God”, ஜோன் மரே எழுதிய “Redemption Accomplished and Applied”, J.C. ரைல் எழுதிய “Holiness”, ஜெரி பிரிட்ஜஸ் எழுதிய “Trusting God”, A.W. டோசர் எழுதிய “The Pursuit of God”, பெயர் குறிப்பிடுவதற்காக சிலரை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
வரலாற்று சீர்திருத்த இறையியல் தொடர்பாக அண்மைக் காலத்தில் ஏற்பட்ட ஆர்வத்திற்கு முன்புவரை, கடவுளுடைய மேன்மையையும் மகத்துவத்தையும் பற்றிய புத்தகங்களை நீங்கள் வாசிக்க வேண்டுமானால், முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் புத்தகங்களைத்தான் நீங்கள் நாடி ஓட வேண்டியிருந்தது. கிறிஸ்தவர்கள் பழங்கால புத்தகங்களை வாசிக்கிறபோது, அவர்கள் பழங்காலப் பொருட்களில் ஆர்வமுள்ளவர்கள் என்று அர்த்தமல்ல. மாறாக, பழங்கால எழுத்தாளர்களுடைய எண்ணங்களில் எந்தளவு கடவுளுடைய மகத்துவத்தின் மேன்மைகள் ஊடுருவியிருந்தது என்பதை அந்தப் புத்தகங்கள் காட்டுகின்றன. அந்தப் புத்தகங்களை நாம் வாசிக்கிறபோது, அவைகளில், கடவுளைப் பற்றிய மெய்யான, வேதப்பூர்வமான எண்ணங்கள் நிறைந்திருக்கிற காற்றை நாம் சுவாசிக்கிறோம்.
நல்லவேளையாக, தூய்மைவாதிகளின் அநேக நல்ல தரமான ஆக்கங்கள், இன்றும் நாம் பயன்படுத்தும்படி கிடைக்கிறது. ஓவன், ப்ளேவல், மென்டன், குட்வின், சார்நொக், சிப்ஸ், ப்ரூக்ஸ், பனியன், மற்றும் பல எழுத்தாளர்கள் எழுதிய அநேக புத்தகங்கள், இக்காலங்களில், சுருக்கப் பதிப்புகளாகவும், தற்கால ஆங்கில நடைக்கு ஏற்றபடியாகவும், மிகக் குறைந்த விலையில் டிஜிட்டல் முறையில் கிடைக்கின்றன.
மேலும், கடவுளுடைய மகத்துவத்தைப் பிரதிபலிக்கும், கிறிஸ்தவ பாடல்களிலும் நீங்கள் பரீட்சயமாக இருங்கள். அநேக வருடங்களாக, நானும் என் குடும்பத்தினரும் சபைக்கு வருவதற்கான வாகன பயணத்தின்போது, ஆராதனைப் பாடல் தொகுப்பு புத்தகத்திலுள்ள பாடல்களை மனனம் செய்வது வழக்கம். நம்முடைய கடவுளைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதற்கு நமக்கு உதவக்கூடிய பெட்ரிக் பேபர் எழுதிய ஒரு பாடலை நான் இங்குக் குறிப்பிடுகிறேன்.
என் தேவனே, நீர் எவ்வளவு அற்புதமானவர்,
உம்முடைய மகத்துவம் எவ்வளவு பிரகாசமானது!
எரிகிற ஒளியின் ஆழங்களின் மத்தியிலும்
உம்முடைய இரக்கத்தின் சிங்காசனம் எவ்வளவு அழகானது!
உமது அநாதி வருடங்கள் எவ்வளவு பயங்கரமானது,
ஓ நித்திய தேவனே,
பரிசுத்த தேவதூதர்களால் இரவும் பகலும்
இடைவிடாமல் வழிபடப்படுகிறவரே.
ஓ ஜீவனுள்ள தேவனே, எப்படி நான் உமக்கு பயப்படுவேன்,
ஆழமும் மிகுந்த கவனத்துடனான பயத்துடன் அல்லவா?நடுக்கத்துடனான நம்பிக்கையுடனும், ஆழ்ந்த வருத்தத்துடனான கண்ணீரோடும்
உம்மை வழிபடுவேன்.
எனினும், ஓ தேவனே, நாம் உம்மை நேசிக்கிறேன்.
நீர் சர்வவல்லவராகவும் இருக்கிறீர்.
என்னுடைய எளிய இருதயத்தின் நேசத்தை
நான் உம்மீது காட்டும்படி என்னிடம் நீர் கேட்கிறீர்.
உலகின் எந்தவொரு தகப்பனும் உம்மைப்போல் நேசித்ததில்லை
எந்தவொரு தாயும் உம்முடைய மென்மையில் பாதியும் பெற்றிருக்கவில்லை
உம்முடைய பாவமுள்ள பிள்ளையாகிய என்னோடு
அதிகமதிகமான பொறுமையைக் காத்திருக்கிறீர்.
உம்முடைய எல்லையற்ற ஞானம், வரம்புகளற்ற வல்லமை
மற்றும் அற்புதமான பரிசுத்தம்,
இந்த வகையில் உம்மை நோக்கிப் பார்க்கிறபோது,
நீர் எவ்வளவு அற்புதமானவர், அழகானவர்.
இயேசுவின் பிதாவே, நீர் வழிபாட்டை விரும்புகிறவர்
உம்மை உற்றுநோக்கி, உம்முடைய சிங்காசனத்திற்கு முன்பாக
சாஷ்டாங்கமாய் விழுந்து உம்மை வணங்குவதென்பது
எவ்வளவு பேரானந்தமானது!
- கடவுளுடைய பிரசன்னத்தைப் பற்றிய விழிப்புணர்வு
தேவபயத்தை நம்மில் அதிகரித்துக்கொள்ளுவதற்கான ஐந்தாவது நடைமுறை வழிகாட்டி என்னவென்றால், கடவுளுடைய பிரசன்னத்தைப் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வதை நாடுங்கள். “நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு” (நீதிமொழிகள் 23:17). ஒருநாள் என்பது நம்முடைய வீட்டிலும், வாகனத்திலும், பள்ளியிலும், விளையாட்டு மைதானத்திலும், அலுவலகத்திலும் மற்றும் பல இடங்களில் நாம் செலவிடும் நேரங்களின் கூட்டு என்பதனால், இந்த இடங்களில் கடவுளுடைய பிரசன்னத்தைப் பற்றிய விழிப்புணர்வை நம்மில் வளர்த்துக்கொள்ள வேண்டும். சங்கீதம் 16:8ல் சொல்லப்பட்டுள்ளபடி நாம் செய்ய வேண்டும், “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்”. தாவீது சொல்லுகிறார், தான் இருக்கிற எந்தவொரு இடத்திலும், கடவுளைத் தனக்கு முன்பாக வைக்கிறார். அதன் மூலம், அவர் தான் இருக்கிற எந்தவொரு சூழலிலும் கடவுளுடைய பிரசன்னத்தில்தான் இருக்கிறேன் என்பதை அவர் உணருகிறார்.
இதன் பொருள் என்ன? எப்படி கடவுளை நம்முன் வைத்திருப்பது என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சூழலைக் குறிப்பிட்டு என்னுடைய பதிலைத் தருகிறேன். ஒரு கிறிஸ்தவ மாணவன் தன்னுடைய வகுப்பறைக்குச் செல்லும் முன்பாக தனக்குத்தானே இப்படிச் சொல்லிக்கொள்ளுகிறான், “நான் இந்த வகுப்பறைக்குள் நுழைகிறபோது, என்னுடைய இரட்சகருடைய முகத்திற்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னத்திலும்தான் நான் தற்போது இருக்கிறேன் என்று நான் உளப்பூர்வமான ஏற்கிறேன். என்னுடன் இந்த வகுப்பறையில் இருக்கிற சக மாணவர்கள், கடவுளைப் பற்றியோ, நான் வாழும் முறையைப் பற்றியோ நிராகரித்தாலும், கடவுள் இந்த வகுப்பறையில் இருக்கிறார். என்ன நடந்தாலும் சரி, நான் அவரை நேசிக்கவும், கனப்படுத்தவும், அறிக்கையிடவும், கீழ்ப்படியவுமே அவர் இங்கு இருக்கிறார். நான் கர்த்தரை எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.” இதன் காரணமாகவே நான், தேர்வுகளில் ஏமாற்ற மாட்டேன். ஆனால் துன்மார்க்கர் அப்படி செய்கிறதில்லை. அவர்கள் தங்களுக்கு முன்பாக தேவனை வைத்திருக்கிறதில்லை என்று தாவீது சொல்லுகிறார் (சங்கீதம் 54:3). அவர்கள் தங்களுடைய சுய இச்சையையே தங்களுக்கு முன் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த இலட்சியங்களையே தங்களுக்கு முன் வைத்திருக்கிறார்கள். எப்பக்கதிலும் வளைந்து கொடுக்கும் வாழ்வியல் நெறிமுறைகளையே அவர்கள் தங்களுக்கு முன் வைத்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் தேவனைத் தங்களுக்கு முன் வைத்திருக்கவில்லை. தேவபயத்தில் நடப்பதற்கு, அவருடைய பிரசன்னத்தைப் பற்றிய இந்த விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். தூரம் இருக்கிற அல்லது முற்றிலும் மறந்துபோன கடவுளுக்கு நீங்கள் பயப்பட முடியாது. கடவுளுக்குப் பயப்பட வேண்டுமானால், அவர் எப்போதும் நம்மை நெருங்கியிருக்கிறவரும், நம்முடைய நினைவிலிருக்கிறவருமாக இருக்க வேண்டும்.
நடைமுறைக்கேற்றபடி சொல்லுவதென்றால், சங்கீதம் 139ஐயும் அதிலுள்ள சத்தியங்களையும் எப்போதும் தியானிக்கிறவர்களாக இருக்க வேண்டும். கடவுளுடைய பிரசன்னத்தைப் பற்றிய விழிப்புணர்வை உங்களில் வளர்த்துக்கொள்ள வேண்டுமா? சங்கீதம் 139ஐ அவ்வப்போது வாசியுங்கள், அதிலுள்ளதை முன்னிறுத்தி ஜெபியுங்கள். “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்” (சங்கீதம் 139:7-8). கடவுளுடைய பிரசன்னம் எங்கும் பரவியிருக்கிறது என்பதை உணர்ந்த தாவீதின் மனதை இவ்வசனங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. எந்தவொரு சூழ்நிலையிலும் கடவுள் அங்கு இருக்கிறார் என்பதை உங்களில் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதை தொடர்ச்சியாக செய்வதற்கு நீங்கள் பழக வேண்டும். “தேவனே, எனக்காக இதை செய்யும்” என்று அவரிடம் ஜெபிப்பது போதாது. சங்கீதக்காரன் சொல்லுகிறார், “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்”. தாவீது தன்னுடைய வாழ்க்கையில் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கிற ஒரு ஆவிக்குரிய ஒழுங்குமுறையை இங்கு விவரிக்கிறார். உங்களைப் பொருத்தவரையிலும் இதுவே உண்மை. கடவுள் இங்கு இருக்கிறார். தாவீது தான் அவரை தனக்கு முன் வைப்பதாகச் சொல்லுவதனால், தாவீது அவரை அங்கு கொண்டுவந்து வைக்கவில்லை, அவர் அங்கேதான் இருக்கிறார். அவர் அங்கேயே தான் இருக்கிறார் என்பதை அங்கீகரிப்பதுதான் நம்முடைய வாழ்க்கையையே மாற்றுகிறதாக இருக்கிறது. அவருடைய பிரசன்னத்தைப் பற்றிய விழிப்புணர்வு நம்மில் வளர அவர்தாமே நமக்கு உதவுவாராக.
- கடவுளுக்கான கடமைப்பாடுகளைப் பற்றிய உணர்வு
ஆறாவது வழிமுறை, கடவுளுக்கான உங்களுடைய கடமைப்பாடுகளைப் பற்றிய உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். ஒரு கிறிஸ்தவனுக்கு, கடவுளோடு தனக்குள்ள உறவுதான் தான் பெற்றிருக்கிற மற்றெல்லா உறவுகளைக் காட்டிலும் மிகவும் முக்கியமானது என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவன் உணருவதுதான் தேவபயத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக இருப்பதை நாம் படித்தோம். கிறிஸ்தவனான ஒரு கல்லூரி மாணவன், தேர்வை எதிர்கொள்ளுகிறபோது, ஏதேனும் ஏமாற்று வேலைகளைச் செய்தால்தான் அத்தேர்வில் தான் வெற்றி பெற முடியும் என்ற சூழல் ஏற்படலாம். ஆனால் அவன் தனக்குத்தானே என்ன சொல்லிக்கொள்ளுவானென்றால், இந்தத் தேர்வில் வெற்றிபெறுவதில் தனக்குள்ள உறவைக் காட்டிலும், தன்னுடைய கல்லூரி படிப்பிற்காக பணம் செலுத்துகிற தன் பெற்றோரோடுள்ள உறவைக் காட்டிலும், மிக முக்கியமான ஒரு உறவு தனக்கு இருப்பதை அவன் எண்ணிப் பார்ப்பான். அந்த உறவுதான், “களவு செய்யாதே” என்று சொல்லியிருக்கிற கடவுளோடு தனக்குள்ள உறவு. அதாவது, தேர்வில் தான் மற்றவர்களுடைய உழைப்பை திருடக் கூடாது என்று அவன் உணர்ந்திருக்கிறான். நீங்கள் தேவபயத்தில் நடக்கிறவர்களாக இருந்தால், காலையில் பள்ளிக்குச் செல்லுவதற்கு முன், “ஆண்டவரே, இந்த நாளில் உம்மைப் பற்றிய பயத்தோடு நடக்க உதவி செய்யும்” என்று சொல்லுவீர்கள். பிறகு, ஏமாற்றுவதற்கான சோதனை உங்களுக்கு ஏற்படுகிறபோது, ஏமாற்றுச் செயலின் மூலமாக நீங்கள் பெறுகிற சிறப்பான மதிப்பெண் சான்றிதழை உங்கள் தாய் தகப்பனிடம் காட்டும் உங்களுடைய கடமை பொறுப்பைக் காட்டிலும், கடவுளுக்கான உங்களுடைய கடமை பொறுப்பு மிகவும் முக்கியமானது என்று எண்ணுவீர்கள்.
அதாவது, உங்களுடைய இச்சையும், பேரார்வமும், கடவுளுடைய வார்த்தைக்கு எதிராக நடக்கும்படி உங்களைத் தூண்டினால், கடவுளுடைய முகத்திற்கு முன்பாக நீங்கள் வெட்கப்படாமல் நிற்பதற்கு ஏதுவாக, உங்களுடைய குதிகாலை உங்களுடைய இச்சையின் முகத்தில் வைக்க வேண்டியிருந்தாலும், அதைச் செய்யுங்கள். அப்போது, யோசேப்பின் வார்த்தைகள் உங்களுடைய வார்த்தைகளாக இருக்கும், “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி” (ஆதியாகமம் 39:9).
உங்கள் பெற்றோர் அல்லது உங்களுக்கு நெருக்கமான உறவினர்களின் விருப்பங்கள், உங்களைப் பற்றிய கடவுளுடைய சித்தத்திற்கு எதிராக இருக்கும் சூழல் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படலாம். உலகத்திலுள்ள உங்களுடைய நெருக்கமான பந்தத்தை துண்டிக்க வேண்டியிருந்தாலும், அதை செய்யுங்கள் என்று ஆண்டவர் சொல்லுகிறார், “பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே” (மத்தேயு 10:34-36).
இதன் மூலம் நம்முடைய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், “மனிதர்களுடைய இருதயங்களில் புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை நாட்டுவதற்காகவே நான் வந்தேன், அதன் மூலமாக அவர்கள் எனக்கு எவ்வளவாக பயப்படுவார்களென்றால், உலகத்திலுள்ள அவர்களுடைய நெருக்கமாக பந்தங்களைத் துண்டிக்க வேண்டியிருந்தாலும், என்னிமித்தமாக அதை அவர்கள் செய்ய முற்படுவார்கள்.” அதை செய்யவே தான் வந்ததாக அவர் சொல்லுகிறார். தேவனுடைய பிள்ளைகள், கடவுளுக்கான தங்களுடைய கடமை பொறுப்புகளைப் பற்றிய உணர்வை தங்களில் வளர்த்துக்கொள்ளுகிறபோது, இதுவே அவர்களில் நிகழும்.
- தேவபயம் கொண்டவர்களுடனான உறவு
தேவபயத்தில் நீங்கள் நிலைத்திருக்கவும் வளரவும் வேண்டுமானால், அதற்கான ஏழாவது வழிமுறை என்னவென்றால், தேவபயத்தில் நடக்கிறவர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதாகும். நாம் இந்த உலகத்தில் வாழுகிறபோது, தேவபயமில்லாதவர்களுடனும் நாம் தொடர்புகொள்ள வேண்டியுள்ளது. 1 கொரிந்தியர் 5:9-10 வசனங்களில், பவுல் இதைப் பற்றி தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார், “விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன். ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப் போகவேண்டியதாயிருக்குமே”. ஒரு பொதுவான வாழ்க்கை முறையில், தேவபயமில்லாதவர்களுடனான தொடர்பை முற்றிலுமாக நாம் தவிர்க்க முடியாது. நாம் இந்த உலகத்தில் பொறுப்புடன் வாழவும், சுவிசேஷத்தின் சாட்சியை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக நல்ல நட்புறவை ஏற்படுத்திக்கொள்ளவும், தேவபயமில்லாதவர்களுடன் மிகுந்த கவனத்துடன், ஒரு பொதுவான உறவைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் பவுல் இங்கு சொல்லுவது என்னவென்றால், நெருக்கமான நண்பர்களைத் தெரிவு செய்யும் வாய்ப்பும் சூழலும் உங்களுக்கு நேரிட்டால், தேவபயமுள்ளவர்களைத்தான் நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். இதுபற்றி விவரிக்கிற ஒரு முக்கிய வசனம், சங்கீதம் 119:63, “உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்”. மெய்யானதும் வெளிப்படையானதுமான தேவபயம் கொண்டவர்களையே தனக்கு நெருக்கமானவர்களாக தெரிவு செய்திருப்பதை சங்கீதக்காரன் பகிரங்கமாக இங்கு அறிவிக்கிறார்.
ஏன் அவர் இதை செய்தார்? ஒரு தனிநபரின் உறவுகளைப் பற்றிய உளவியலை சங்கீதக்காரன் நன்றாக அறிந்திருந்தார். தனிநபர்களிடையிலான உறவு, ஒருவரையொருவர் பிரதிபலிப்பதும், பின்பற்றுவதும், ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு பரவும் வலிமையும் கொண்டது. ஆகவே, உங்களோடு நெருக்கமான உறவு கொண்டவர்களைப் போல் நீங்களும் இருப்பீர்கள். இதுதான் இயற்கையின் தத்துவமும் கூட. ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, “கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. அப்படிச் செய்தால் நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்” (நீதிமொழிகள் 22:24-25). ஆகவேதான் கடவுள், தீய மனிதர்களைப் போல் நாம் ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களுடன் நெருக்கமான உறவு கொண்டிருப்பதைக் குறித்து நம்மை எச்சரிக்கிறார். இந்த உண்மையையே, பவுல், கொரிந்தியருக்குச் சொல்லிய எச்சரிக்கையிலும் இருப்பதைப் பார்க்கலாம், “மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” (1 கொரிந்தியர் 15:33). கடவுள் நம்மை இந்த விதத்தில்தான் உருவாக்கியிருக்கிறார். நம்முடைய தனித்துவத்தை மட்டுமே கொண்டிருக்கிறவிதத்தில் நாம் ஏற்படுத்தப்படவில்லை. கடவுள் நம்மை ஒரு சமுகத்தில் வாழும்படியாக ஏற்படுத்தியிருக்கிறார். இந்த முறையின் தவிர்க்க முடியாத அம்சம் என்னவென்றால், அடுத்தவர்களிடமிருந்து பிரதிபலிப்பதும், பின்பற்றுவதும், பரவுவதுமாகிய வலிமை இதற்குண்டு.
இதனடிப்படையில்தான் சங்கீதக்காரன் சொல்லுகிறார், “உமக்குப் பயப்படுகிற அனைவருக்கும் நான் தோழன்”. அதாவது, “தேவனே நான் உமக்கு பயப்படுகிறேன். என்னிலுள்ள தேவபயம் அதிகரிக்க, தேவபயமுள்ளவர்களோடு நான் நெருக்கமான உறவுகொண்டிருப்பதுதான் சிறந்த வழி என்பதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன்” என்கிறார்.
மல்கியா 3வது அதிகாரத்தில் இந்த உண்மையைப் பற்றிய ஒரு அற்புதமான உதாரணம் பதிவிடப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில், கடவுள், தம்மைவிட்டுத் தூரம் சென்றவர்களும், தமக்குரிய காணிக்கையையும் பலியையும் செலுத்தாமல் இருக்கிறவர்களான இஸ்ரவேலின் பெருங் கூட்டத்தினர்மீது குற்றஞ்சாட்டுகிறார். அவர்கள் தரம் தாழ்ந்த நிலைக்குச் சென்று, கடவுள் அவர்கள்மீது நியாயத்தீர்ப்பை அறிவிக்கும் காலமாக இருந்தது. அந்த நாட்டில் இப்படியான கேடான நிலை இருந்தபோதிலும், 16வது வசனத்தில் தீர்க்கதரிசி சொல்லுகிறார், “அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது”.
இங்கு, மீந்திருக்கிற தேவபக்தியுள்ள, மெய்யான இஸ்ரவேலரைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ள குறிப்பைக் கவனியுங்கள், “கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களும்”. அவர்கள் சிறு தொகையினராக இருப்பதனால், தங்களிலுள்ள தேவபயத்தை நிலைநிறுத்திக்கொள்ளுவதற்கு, தேவபயமுள்ளவர்களோடு கூட்டு வேண்டுமென்பதற்காக அவர்களைத் தேடுகிறார்கள். ஆவிக்குரிய கீழான நிலை தங்களுடைய நாட்டில் காணப்பட்டாலும், தேவபயமுள்ளவர்கள் கூடியிருப்பது மிகவும் அவசியமானது. கடவுளுடைய நியாயத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருந்தது, எப்பக்கதிலும் ஆவிக்குரிய கீழ்நிலை இருந்தது, அவற்றின் மத்தியிலும் தேவபயமுள்ளவர்கள் ஒன்றிணைந்து, தேவபயத்தில் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
நீங்கள் தேவபயத்தில் வளர வேண்டுமானால், தேவபயத்தில் நடக்கிறவர்களோடு நீங்கள் நெருக்கமான உறவை வைத்திருக்க வேண்டும். ஆவியின் கிருபைகளில் எந்தவொரு கிறிஸ்தவனும் தனியாக வளரவும் பெருகவும் முடியாது. தனிப்பட்ட கிறிஸ்தவம் என்றோ தனிப்பட்ட பரிசுத்தமாகுதல் என்றோ ஒன்றில்லை. உங்களுடைய கிறிஸ்தவ சகோதரன் உங்களுக்கு எவ்வளவு தூரம் அவசியம் என்று நீங்கள் அறியாமல், உணராமல் இருந்தால், நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல், நிச்சயமாக நீங்கள், பெருமை மற்றும் சுயநம்பிக்கை என்னும் மாயையில் சிக்கியிருக்கிறீர்கள். மல்கியாவின் நாட்களில் வாழ்ந்த தேவபக்தியுள்ள மனிதர்கள், தாங்கள் வாழும் சமுதாயத்தின் எப்பக்கத்திலும் சீர்கேடுகள் பரவியிருப்பதையே பார்க்கிறார்கள், அவர்களுடைய இருதயத்தில் தேவபயம் இருப்பதை அவர்கள் அறிந்ததனால், அவர்கள் தங்களுக்குள்ளாக சொல்லிக்கொண்டது இதுதான், “நானாக முயற்சித்தால் இன்னும் கீழ்நிலைக்குத்தான் நான் போவேன். ஆகவே நான் தேவபயமுள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களோடு இதுபற்றி தொடர்ந்து நான் பேசுவேன்” என்று சொல்லிக்கொண்டார்கள்.
நான் மட்டும் தனியாகவே இப்படி வாழ்ந்துவிடுவேன் என்று நினைக்கிற மாயையானது, மிகவும் சாபத்திற்குரியது. கிறிஸ்துவினுடைய சரீரமானது என்னுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கான ஒரு கூடுதல் வசதியாக மட்டும் பார்க்கிற எண்ணத்திலிருந்து, கடவுள்தாமே உங்களை விழத்தள்ளி உங்களைத் தாழ்த்துவராக. சபை என்பது வெறும் ஆடம்பரப் பொருளல்ல. நீங்கள் கிருபையில் வளருவதற்கு, சபை ஒரு விருப்பத் தேர்வல்ல. சபை என்பது நீங்கள் வளருவதற்கும் முன்னேறுவதற்கும் கடவுளுடைய அத்தியாவசியமான இடம். ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப்படுகிற ஆவியின் வெளிப்படுத்தல் எல்லாருடைய நன்மைக்காகவுமே கொடுக்கப்பட்டது என்பதையே 1 கொரிந்தியர் 12 அடிப்படையில் வலியுறுத்துகிறது. எபேசியர் 4:1-16 வரையுள்ள வசனப்பகுதியின் போதனை என்னவென்றால், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினுடைய ஆவிக்குரிய வளர்ச்சியும், கிறிஸ்துவினுடைய மக்களின் கூட்டு வாழ்க்கையைப் பொருத்தே அமைகிறது என்பது உணர்த்தப்படுகிறது. ஒவ்வொரு அங்கமும் சரீரத்திற்கு ஏதோ ஒன்றைத் தருகிறது, அதன் மூலம் சரீரம் அதிகமாக வளருகிறது, எந்தளவுக்கென்றால் “கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்கதாக” வளருகிறது (எபேசியர் 4:11).
இந்நாட்களில், கிறிஸ்தவர்கள் என்று தங்களை அறிவித்துக்கொள்ளுகிற அநேகர், கடவுளுடைய பிள்ளைகளுக்கும் திருச்சபைக்கும் இடையே இருக்கிற உறவை, உலக மக்கள் ஒருவரோடொருவர் உறவை ஏற்படுத்திக்கொள்ளுகிற பொதுவான திருமண பந்தத்தோடு தொடர்புபடுத்துகிறார்கள். ஆனால் திருமண பந்தமில்லாமலும், “கூட்டாளிகள்” என்ற வகையில் இருவர் சேர்ந்து வாழுவதும் இந்நாட்களில் திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. முந்தைய தலைமுறையில், இப்படி வாழுவது, ஒழுக்கக்கேடும் அவலட்சணமுமான நடைமுறையாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது, இதெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது மட்டுமல்லாமல், திருமணமாகிய முறை தேவையற்றதாகவும் காலம் கடந்துவிட்ட ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. திருமண பந்தமென்பது தங்களைக் கட்டிவைப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். திருமணமில்லாமல் சேர்ந்து வாழும் முறையை விரும்புகிறவர்கள், அவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களோ இல்லையோ, திருமணத்தின் மூலமாக வருகிற சிறப்புரிமைகள் யாவும் அவர்களுக்கு வேண்டும், ஆனால் அத்தோடு இணைந்திருக்கிற பொறுப்புகளையும், தவிர்க்க முடியாத அர்பணிப்புகளையும், சரீரத்தை வருத்தி செய்ய வேண்டிய கடமைபாடுகளையும் நிராகரிக்கிறார்கள். ஒரு மனிதன் தன்னுடைய படுக்கையைப் பகிர்ந்துகொள்ளவும், காலை உணவை ஒரு பெண்ணுடன் சேர்ந்து சாப்பிடவும் விரும்புகிறான், ஆனால் தன்னையே அவளோடு பகிர்ந்துகொள்ளுவதனால் ஏற்படுகிற வளர்ச்சியை அவன் விரும்புகிறதில்லை. அதாவது விவாகரத்து கேட்கப்படுகிற நேரத்தில், தனக்கு அது தொல்லை கொடுக்கிறதாகவும் அதிக செலவீனமானதாகவும் இருப்பதை அவன் விரும்புகிறதில்லை.
அதேபோல், உடன்படிக்கையினாலான சபை அங்கத்துவத்தின்படி, அநேக கிறிஸ்தவர்களும் அப்படித்தான் இருக்கிறார். அவர்கள், சபை அங்கத்துவத்தின் சிறப்புரிமைகளையும், கடவுளுடைய பிள்ளைகளுடனான ஐக்கியத்தையும் விரும்புகிறார்கள். அதாவது, வேதத்தின்படியான ஊழியம், கடவுளை உயர்த்தும் சூழல், மற்றும் அவர்களை அன்போடு நேசிப்பதும் ஏற்பதுமாகிய நிலையையும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுடைய தனிப்பட்ட சௌகரியத்தில் தலையிடுமளவுக்கான இணைப்பை விரும்புகிறதில்லை. நீங்கள் அப்படியான கிறிஸ்தவரா? கிறிஸ்துவை மட்டுமல்ல, அவருடைய மக்களையும்கூட நீங்கள் திருமணம் செய்திருக்கிறீர்கள், இல்லையா? நீங்கள் தேவனுடைய மக்களை திருமணம் செய்திருந்தால், அவர்களுடன் நீங்கள் உடன்படிக்கையின் பந்தத்தில் நுழைந்திருக்கிறீர்கள். ஆகவே, உங்களுக்குள்ளாக ஏதேனும் பிரச்சனை எழும்பினால், உங்களுடைய தனிப்பட்ட வழியைப் பார்த்துக்கொண்டு நீங்கள் போய்விட மாட்டீர்கள்.
இது தனிப்பட்ட வகையிலும் பொதுவாகவும், திருமண பந்தத்தினுடைய ஆசீர்வாதங்களில் ஒன்று. மெய்யான திருமண நெருக்கத்தை நோக்கிப் போகிறபோது, அநேக விரிசல்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டிருப்பீர்கள் என்பதை நீங்கள் யாவரும் ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நான் நம்புகிறேன். திருமணத்தில், ஆழ்ந்த ஒரு நெருக்கமான இணைப்பை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால், வெறுமனே எழுதப்படாத ஒரு உடன்படிக்கையாக மட்டுமே உங்கள் திருமணம் இருந்தால், நீங்கள் ஒரே வீட்டையும் படுக்கையையும் பகிர்ந்துகொள்ளுவீர்கள், ஆனால் ஏதேனும் இக்கட்டான சூழல் ஏற்பட்டால், அந்த உறவை முறித்துக்கொண்டு ஓடத்தான் பார்ப்பீர்கள். திருமணம் என்பது உடன்படிக்கை என்னும் அர்ப்பணிப்பினால் நெருக்கமாக இணைக்கப்படுவதாகும், கடவுளுடைய முகத்திற்கு முன்பாக எடுக்கும் உறுதிமொழியின் அடைப்படையினாலானது. ஆகவேதான் இந்த உறவு உறுதியாக நீடித்திருக்கிறது. தேவபயத்தில் நீங்கள் வளர விரும்புகிறீர்களா? அப்படியானால், உடன்படிக்கையின்படியான சபை அங்கத்தவர்களாக தேவபயத்தில் நடக்கிறவர்களுடன், சாதாரணமாக அல்ல, நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
- ஊக்கமான ஜெபம்
தேவபயத்தில் நாம் எப்படி வளருவது என்பதற்கான எட்டாவது மற்றும் இறுதியான வழிமுறை என்னவென்றால், நீங்கள் தேவபயத்தில் வளர வேண்டுமென்று ஊக்கமாக ஜெபியுங்கள். தேவனுடைய இராஜ்யத்தின் மாற்ற முடியாத கட்டளைகளில் ஒன்று, “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” (மத்தேயு 7:7). அல்லது, இதையே எதிர்மறையாக, யாக்கோபு சொல்லுவது போல், “நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை” (யாக்கோபு 4:2) என்றும் சொல்லலாம்.
ஜெபத்தின் தன்மை, வலிமை மற்றும் நம்முடைய வாழ்க்கையில் அதற்கான இடத்தைப் பற்றி வேதம் போதிப்பதை நாம் கவனத்துடன் சிந்திக்கத் துவங்குகிறபோது, ஆழமான சில சிக்கல்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒருபுறம், ஜெபமென்பது, கடவுளைக் கட்டிவைத்து, அவர் நமக்குத் தர மறுக்கிறவைகளை எப்படியாவது கட்டாயப்படுத்தி அவரிடமிருந்து பெறுவதற்கான ஒரு ஆவிக்குரிய ஒழுங்காக ஒருபோதும் நாம் பார்க்கக் கூடாது என்று வேதம் தெளிவாக போதிக்கிறதை நாம் அறிவோம். மறுபுறம், யாக்கோபு 4:2ல் சொல்லப்பட்டுள்ள சத்தியத்தையும் நாம் மறுக்க முடியாது. அதாவது நம்மிடம் இல்லாதிருந்தும், அதுபற்றி கடவுளிடம் கேட்காததனால், அதை நாம் பெறாமல் இருக்கிறோம்.
இப்படியான கேள்விகளுக்கான பதிலின் ஒரு பகுதியை, 1 யோவான் 5:14-15 வசனங்களில் காணலாம். இதில் யோவான் சொல்லுகிறார், “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்”.
தேவபயமானது, இரட்சிப்பின் செயலோடும், மெய்யான தேவபக்தியோடும், ஏற்றுக்கொள்ளத்தக்க ஆராதனையோடும் மற்றும் இதனோடு தொடர்புடைய ஏனைய பல விஷயங்களோடும் இணைந்திருக்கிறது என்று யோவான் இப்புத்தகத்தில் அதிக கவனத்துடன் சுட்டிக்காட்டியிருப்பதனால், தேவபயமாகிய கிருபையில் நாம் வளர வேண்டுமென்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்பதைப் பற்றி நம்மில் எந்தக் கேள்வியும் எழ வேண்டியதில்லை. ஆகவே அப்போஸ்தலனாகிய யோவானுடைய இந்த வார்த்தைகளின் அடிப்படையில், தேவபயம் நம்மில் அதிகரிக்க வேண்டும் என்று நாம் ஜெபிக்கிறபோது, தேவனுடைய சித்தத்தின்படியான ஒன்றைத்தான் நாம் கேட்கிறோம் என்பதனால், எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் நாம் ஜெபிக்க வேண்டும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில், தேவன் நிச்சயமாக நம்முடைய ஜெபத்தைக் கேட்டு, அதற்கேற்ற பதிலைத் தருவார் என்ற உறுதியான எதிர்பார்ப்புடன், நம்மில் தேவபயம் அதிகரிக்க நாம் ஜெபிக்கலாம். மேலும், சங்கீதம் 86:11ல், தேவனே இதற்கான ஒரு மாதிரி ஜெபத்தையும் கொடுத்திருக்கிறார். அதில் தாவீது இப்படி ஜெபிக்கிறார், “நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்”.
பாவகரமான வைராக்கியம்
பக்தி வைராக்கியம் – 8
– டேவிட் மெரெக் –
[பக்தி வைராக்கியம் என்ற தலைப்பில் வந்துகொண்டிருக்கும் இந்தத் தொடர், போதகர்களுக்காக நடத்தப்பட்ட இறையியல் போதனை வகுப்புகளில் போதகர் டேவிட் மெரெக்கினால் கொடுக்கப்பட்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் M. ஜேம்ஸ்.]
மறுபடியுமாக ரோமர் 12:11 வசனத்திற்கு திரும்புவோம் – “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள், ஆவியிலே அனலாயிருங்கள், கர்த்தருக்கு ஊழியஞ் செய்யுங்கள்”.
இதுவரை, இந்த வசனத்திலுள்ள இரண்டு சொற்றொடரிலிருந்து பக்தி வைராக்கியத்தோடு தொடர்புடைய இரண்டு கருப்பொருட்களைப் பார்த்திருக்கிறோம். இப்போது இந்த வசனத்தின் மூன்றாவது சொற்றொடரான “கர்த்தருக்கு ஊழியஞ் செய்யுங்கள்” என்ற கருப்பொருளை இப்போது படிக்கப் போகிறோம்.
முதல் ஆக்கத்தில் நாம் பார்த்ததுபோல், பக்தி வைராக்கியத்தின் முக்கிய நோக்கத்தை இந்த சொற்றொடர் சிறப்பான வழியில் உயர்த்திக் காட்டுகிறது. கர்த்தரும் இரட்சகருமாகிய அவருக்கு ஊழியம் செய்வதே பக்தி வைராக்கியத்தின் இறுதி நோக்கம். எனினும், இந்தச் சொற்றொடர் பாவகரமான வைராக்கியத்தை அடையாளம் காணவும் நமக்கு உதவுகிறது. பக்தி வைராக்கியம் என்பது கிறிஸ்துவுக்காக வாழுகிறதாக இருந்தால், பாவகரமான வைராக்கியம் என்பது கிறிஸ்துவுக்கு பதிலாக வேறு தெய்வங்களுக்காகவோ விக்கிரகங்களுக்காகவோ ஆர்வத்தோடு வாழுகிறதாக பார்க்கப்படும். மேலும், கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்தல் நற்கனிகளுக்கு நேராக நம்மை வழிநடத்தும் என்று நாம் பார்த்திருக்கிறோம், அப்படியே அந்நிய தெய்வங்களுக்காக ஊழியம் செய்தல் கெட்ட கனிகளை உண்டாக்கும்.
இந்த நேரத்தில், நாம் ஏற்கனவே பார்த்த காரிலுள்ள பெட்ரோல் என்ஜினுக்கு திரும்பி வருவோம். என்ஜினின் உருளையில் பெட்ரோலும் காற்றும் கலந்து தொடர்ச்சியான வெடிப்பை ஏற்படுத்துகிறதன் மூலம், நல்ல பயன்தரக் கூடிய சக்தியை உண்டாக்குகிறதுபோலவே பக்தி வைராக்கியமும் இருக்கிறது என்று நாம் பார்த்தோம். அதன் மூலம் கார் ஓடுகிறது. ஒருவேளை காரை பின்னுக்கு பலமாக இடித்து தாக்கினால் என்னவாகும்? பெட்ரோல் டேங்க் உடைந்து, பெட்ரோல் சிந்தி, இறுதியில் கார் தீப்பிடித்து எரியும். என்ஜினில் தொடர்ந்து நெருப்பும் சக்தியும் இருந்துகொண்டுதான் இருக்கும். அது தொடர்ந்து சக்தியை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கும். ஆனால் அதன் விளைவு என்ன? அது கேடானதும் அழிவை ஏற்படுத்தக்கூடியதுமான சக்தி. அதுபோல்தான் பாவகரமான வைராக்கியமும் இருக்கிறது. அதில் வைராக்கியம் இருந்தாலும் அது தீமையை ஏற்படுத்தக் கூடியது.
இப்போது, பாவகரமான வைராக்கியத்தைப் பற்றி விவரமாக படிக்கப் போகிறோம். பக்தி வைராக்கியத்தைப் பற்றி சாதகமான காரியங்களின் மூலம் படிப்பது நல்லது, ஆனால் அதேநேரம் அதன் பாதகங்களையும் பார்ப்பது அவசியம். பாவகரமான வைராக்கியத்தைப் பற்றி வேதம் இரண்டு வேறுபட்ட முக்கிய பிரிவுகளை நமக்கு அடையாளங் காட்டுகிறது (சில விஷயங்களில் இவை இரண்டும் ஒன்றுசேர்ந்தும் இருக்கும்). முதலாவது பிரிவு,
- சுயத்தை நாடுகிற வைராக்கியம்
இந்தவிதமான பாவகரமான வைராக்கியம் பல்வேறு வழிகளில் தன்னை வெளிப்படுத்துகிறது. சில நேரங்களில் அது மிகவும் நுட்பமாக செயல்பட்டு, பக்தியின் அறிகுறியாகத் தன்னைக் காட்டுகிறது. சில நேரங்களில் அது மறைந்திராமல் வெளிப்படையாகவே தன்னுடைய பாவகரமான செயலின் மூலம் காட்டும். சுய ஊழிய வைராக்கியத்தில் நாம் முதலாவது பார்ப்பது,
அ. பொறாமை (Envious) அல்லது எரிச்சலின் (Jealous) வைராக்கியம்
புதிய ஏற்பாட்டில் வைராக்கியத்தை விளக்குவதற்கு பொறாமையின் வார்த்தை குடும்பத்தை சேர்ந்த வார்த்தையைத்தான் மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற உண்மையை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன். வேறுவிதத்தில் சொல்ல வேண்டுமானால், வேதத்தில் வைராக்கியத்தின் உட்கருத்தை விளக்க, பொறாமையின் உட்கருத்தைக் கொண்டுதான் விளக்கப்பட்டிருக்கிறது. பாவகரமான வைராக்கியத்தின் இந்த அம்சத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமானால், இந்த இரண்டு வார்த்தைகளுக்கான விளக்கத்தை கவனமாக நாம் அறிவது மிகவும் அவசியம். ஆங்கில அகராதிகளின்படி, இன்னொருவரின் உடமைகள், திறமைகள், அல்லது விரும்பத்தக்க சூழல்களினால் நம்முடைய இருதயத்தில் எழும் திருப்தியற்ற தன்மை அல்லது ஆத்திரத்தோடு அவைகளை விரும்புவதே பொறாமையாகும். பொறாமை என்பது நாம் விரும்பும் ஒன்றை மற்றொருவர் வைத்திருப்பதைப் பார்த்து உண்டாகும் வலி. பிறகு எரிச்சல் என்றால் என்ன? இதற்கு பொறாமை என்ற வார்த்தையின் அர்த்தமும் உண்டு. இக்காரணத்தினால், வேதத்தின் பல இடங்களில் இவ்விரண்டு வார்த்தைகளும் மாறி மாறி பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், எரிச்சல் என்ற வார்த்தைக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. அது பொறாமை என்ற வார்த்தையின் அர்த்தத்திலிருந்து மாறுபட்ட தனித்துவ விளக்கங் கொண்டது. எரிச்சல் என்பது ஒருவருடைய உடைமைகளையோ அல்லது அவருக்கு உரியதையோ மூர்க்கத்தோடு விரும்புவதாகும். வேறு விதத்தில் சொல்லுவதானால், எரிச்சல் என்பது தன்னிடம் உள்ளதை (அல்லது தன்னிடம் இருப்பதாக எண்ணியிருப்பதை) இழப்பதற்கு பயப்படுவதாகும். ஒரு பொதுவான உதாரணம் என்னவென்றால், ஒரு கணவனோ மனைவியோ தன்னுடைய திருமண உறவு முறியும் என்கிற பயத்தின்போது வருவதே எரிச்சல். இந்த எரிச்சல் அடிப்படையில் தவறானது என்று சொல்ல முடியாது. நம்முடைய பரிசுத்தமுள்ள ஆண்டவர் எரிச்சலுள்ளவர்.
வைராக்கியத்தோடு தொடர்புடைய பதம் பயன்படுத்தப்பட்டுள்ள பாவகரமான எரிச்சலின் ஒரு உதாரணத்தை கவனியுங்கள். இந்த உதாரணத்தில், எரிச்சல் பக்தி உருவில் வந்தது. வாசியுங்கள் அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:42-45.
அவர்கள் யூதருடைய ஜெபஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள். ஜெபஆலயத்தில் கூடின சபைகலைந்துபோனபின்பு, யூதரிலும் யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களுடனே இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலைகொண்டிருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள். அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள். யூதர்கள் ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள்.
பவுலின் பிரசங்கத்தினால் அந்தியோகியாவிலும் பிசீதியாவிலும் எழுப்புதல் உண்டானது. அவர் அங்கு சென்றிருந்த இரண்டாவது ஓய்வுநாளில் ஜெபாலய ஆராதனைக்கு கிட்டத்தட்ட அந்த பட்டணத்திலிருந்த எல்லாருமே வந்திருந்தனர். அங்கிருந்த யூதர்களால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பவுல் அங்கு வந்து ஊழியம் செய்த இரண்டு வாரத்திற்குள்ளாக அடைந்த வெற்றியை அவர்களுடைய வாழ்நாளிலும் அடைந்ததில்லை என்ற காரணத்தினால் அவர்கள் பவுலின் மேல் எரிச்சல் கொண்டார்கள். பவுல் அதிகமாக பயன்படுத்தப்படுவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே பவுல் சொல்லியதை அவர்கள் தூஷிக்கவும் எதிர்க்கவும் தொடங்கினார்கள்.
போதகர்களாகிய நாமும் சக போதகர்கள் நம்மைவிட அதிக வெற்றிபெற்று பெரிய சபைகளை நாட்டுகிறபோது எரிச்சலின் வைராக்கியம் என்ற இந்தக் குற்றத்திற்கு நாமும் உள்ளாகலாம். அல்லது மற்ற போதகர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் நம்மைவிட அதிகளவு பணம் வைத்திருக்கிறபோது அப்படி நடக்கலாம். பாவகரமான இந்த எரிச்சலின் வைராக்கியம் என்பது மிகவும் மோசமானது என்பதை நாம் உணர வேண்டும். இத்தகைய பாவகரமான எரிச்சலின் வைராக்கியம் மெய்யான அன்பிற்கு எதிரானது என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளது (1 கொரிந்தியர் 13:4). அதன் சுபாவத்தைக் கொண்டிருந்து மனந்திரும்ப மறுக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் இடம் பெற மாட்டார்கள் (கலாத்தியர் 5:20-21). இதனோடு நெருக்கமாக இருக்கிற இன்னொன்று,
ஆ. சுய உயர்த்துதலின் வைராக்கியம்
நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ? அவர்கள் உங்களை நாடி வைராக்கியம் பாராட்டுகிறார்கள்; ஆகிலும் நல்மனதோடே அப்படிச் செய்யாமல், நீங்கள் அவர்களை நாடி வைராக்கியம் பாராட்டும்பொருட்டு உங்களைப் புறம்பாக்க விரும்புகிறார்கள். நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்; அதை நான் உங்களிடத்தில் இருக்கும்பொழுதுமாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்டவேண்டும். (கலாத்தியர் 4:16-18)
இங்கே மீண்டும் போலிப் பக்தியின் வைராக்கியத்தை பாருங்கள். இரட்சிக்கப்படுவதற்கு புதிய கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டுமென்றும் பழைய உடன்படிக்கையின் சடங்கு சட்டங்கள் எல்லாவற்றையும் கடைபிடிக்க வேண்டுமென்றும் போதித்த தவறான போதனையாளர்களைப் பற்றி பவுல் இங்கு பேசுகிறார். உண்மையில் அவர்கள் வித்தியாசமான சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார்கள். அவர்களுடைய ஒரு தன்மையைப் பற்றி பவுல் இங்கு சுட்டிக்காட்டுகிறார். புதிய விசுவாசிகள் அவர்களை தலைவர்களாக ஏற்க வேண்டும் என்பதற்காக வைராக்கியம் பாராட்டுகிறார்கள். அதற்காக அவர்கள் பவுலைப் போன்ற உண்மையுள்ள சுவிசேஷ பிரசங்கிகளிடமிருந்து அவர்களைத் தள்ளிவைக்கப் பார்த்தார்கள். இந்த தவறான போதனையாளர்கள் தங்களை பவுலுக்குப் போட்டியாகக் கருதி, யார் பின் அநேகர் செல்லுகிறார்கள் என்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். அப்போஸ்தலனிடமிருந்து வரும் ஆவிக்குரிய பாதுகாப்பிலிருந்து ஆடுகளை விலக்கிவைக்க வைராக்கியங் கொண்டிருந்தார்கள். இவையெல்லாவற்றிலும், அவர்கள் நல்லவற்றிற்காக வைராக்கியங்கொள்ளவில்லை. கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பது அவர்கள் நோக்கமாக இருக்கவில்லை. அவர்கள் தங்களுக்கே ஊழியம் செய்து பவுலை நிந்தித்தார்கள். அவர்கள் இந்த விசுவாசிகளை உண்மையாக கிறிஸ்துவை பின்பற்றுபடி ஊக்கப்படுத்தாமல் தங்களைப் பின்பற்றும்படி செய்தார்கள். இத்தகைய சுய உயர்த்துதல் மற்றும் பிரிவினையின் வைராக்கியம் பாவகரமான வைராக்கியம் என்று தெளிவாகிறது. எங்கெல்லாம் இத்தகைய அசிங்கம் தலைதூக்குகிறதோ அதெல்லாம் பாவகரமானதே. கிறிஸ்து உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக உழைக்காமல் தங்களுடைய பெயரையும் தங்களைப் பின்பற்றுகிறவர்களையுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிற சுவிசேஷ ஊழியர்களையும் இது உள்ளடக்கும் (கொலோசெயர் 1:18).
சுய ஊழியம் மற்றும் அத்தோடு சேர்ந்த இகழ்ச்சியான வைராக்கியத்தில் இதுவரை நாம் பார்த்த முதல் இரண்டோடு சேர்ந்த இன்னுமொன்று உண்டு. அது எப்போதும் மற்றவர்களின் மீது அன்பற்றதாக இருக்கும்.
இ. எரிகிற நாக்குகள்.
ஏற்கனவே நாம் பார்த்தது போல், வைராக்கியம் என்பதற்கு புதிய ஏற்பாட்டு வார்த்தைகளின் அடிப்படை அர்த்தம், சூடாக இருக்கிற அல்லது எரிகிற என்பதாகும். ஆகவே, வைராக்கியமாகிய கருப்பொருளுக்கு எரிகிற அல்லது நெருப்பிற்கான மற்ற பதங்கள் சுட்டிக்காட்டப்படுகிறது. இத்தகைய பதத்திற்கு தொடர்புடைய ஒரு குறிப்பை நீதிமொழிகள் 16:27ல் நாம் பார்க்கலாம்.
பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.
இந்த வசனம் புரளி பேசுவதில் தீவிர ஆர்வங்கொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறார். பாவகரமான புரளி பேசுவதென்பது, மற்றொருவரைக் கெட்டவனாக பார்க்க வைக்கக்கூடிய சுவாரசியமான ஒரு தகவலை நாம் பேசுவது (அத்தோடு, தன்னை மற்றவனைவிடச் சிறந்தவனாக காட்டிக்கொள்ளுவதாகும்) நெருப்பைப் போன்றதாகும். யாக்கோபு 3:5-6 வசனங்களில் நாக்கை நெருப்பாகவும், நெருப்பின் தன்மைகளைக் கொண்டதாகவும், நரக அக்கினியாகவும் சொல்லப்பட்டுள்ளது. மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக சபிக்கும் நாவு என்று குறிப்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எரிச்சலின் வைராக்கியங் கொண்ட அந்தியோகியாவிலிருந்த யூதர்கள் பவுலின் சுவிசேஷப் பிரசங்கத்திற்கு முரணாகவும் தூஷிக்கிறவர்களாகவும் எப்படிப் போனார்கள் என்பதை ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:45). இவைகளும் மற்ற வேதப்பகுதிகளும் நாக்கைப் பயன்படுத்தி நாம் செய்யும் புரளி, சபித்தல், தூஷிக்கும் வைராக்கியத்திற்கு எதிராக நம்மை எச்சரிக்கிறது. இத்தகைய பாவகரமான எரிகிற தன்மைக்கு எதிராக நம்முடைய நாக்கைப் பாதுகாக்க நாம் கடவுளை நோக்கி மனந்திரும்பி அவரிடம் வந்து, அவருடைய உதவிக்காக கெஞ்சி நிற்க வேண்டும். எந்தவொரு மனிதனும் தன்னுடைய சுய பெலத்தினால் தன் நாக்கை கட்டுப்படுத்த முடியாது என்று யாக்கோபு சொல்லுகிறார் (யாக்கோபு 3:8). துரதிஷ்டவசமாக, போதகர்கள் மாநாடுகளில் போதகர்கள் தங்களை நல்லவிதமாக காட்டிக்கொள்ளுவதற்காகவோ அல்லது புகழ் பெறுவதற்காகவோ இத்தகைய பாவகரமான வதந்திகளைப் பரப்புவதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளுவதில்லை.
சுய ஊழியத்தின் இன்னொரு வடிவத்தைப் பாருங்கள். அதுவும் எரிகிற நெருப்பு என்கிற மொழி நடையிலேயே அடையாளம் காட்டப்படுகிறது.
இ. பாலியலில் எரிதல்
ஓசியா 7:4-7
அவர்கள் எல்லாரும் விபசாரக்கள்ளர்; அப்பஞ்சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்ததுமுதல் அது உப்பிப் போகுமட்டும், அனலை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான். நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சரசத் துருத்திகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; சரசக்காரரோடேகூட அவன் தன் கையை நீட்டுகிறான். அவர்கள் பதிவிருக்கும்போது, தங்கள் இருதயத்தை அடுப்பைப்போல் ஆயத்தப்படுத்துகிறார்கள்; அவர்களில் அடுப்புமூட்டுகிறவன் இராமுழுதும் தூங்கினாலும், காலமேயோவென்றால் அது ஜுவாலிக்கிற அக்கினியாய் எரியும். அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல அனலாகி, தங்கள் நியாயாதிபதிகளைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை.
இவ்வசனங்கள், விபச்சாரம் மற்றும் குடிவெறியிலுள்ளவர்கள் சூடான ஒரு அடுப்பிலுள்ள நெருப்பைப் போன்றவர்கள் என்று விவரிக்கிறது. ரோமர் 1:27, ஆண்கள் விரகதாபத்தினால் பொங்கி ஓரினச் சேர்க்கையாகிய இச்சையில் ஈடுபடுகிறார் என்று சொல்லுகிறது. பாவகரமான பாலியல் எரிதலுக்கு பல வடிவங்கள் உண்டு. ஆனால் அது எந்த வடிவத்தோடிருந்தாலும், பாவகரமான பாலியல் இச்சைகளை நிறைவேற்றுவதில் சுய திருப்தி காணும் எரிகிற வைராக்கியத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம். இது சுய ஊழியத்தின் இன்னொரு வடிவம்.
சுருக்கமாக, பாவகரமான வைராக்கியத்தின் ஒரு முக்கிய வகை என்னவென்றால், அது ஆண்டவருக்கு ஊழியம் செய்வதற்கு பதிலாக ஏதாவது ஒரு வழியில் தனக்கே ஊழியம் செய்து கொள்ளும் மற்றும் அதன் தொடர்ச்சியாக, மற்றவர்களிடம் அன்புகாட்டுவதற்கு பதிலாக அவர்களை இகழ்ந்துரைக்கும்.
இப்போது, பாவகரமான வைராக்கியத்தின் இரண்டாவது முக்கிய வடிவத்தைப் பார்க்கலாம்.
- பாவகரமான மத வைராக்கியம்
இந்த வகை வைராக்கியமானது பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது.
அ. சட்டப்பூர்வ அவிசுவாச மத வைராக்கியம்
ரோமர் 10:1-4
சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது. தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல. எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
இங்கே பவுல் இன்னும் இரட்சிக்கப்படாத சக யூதர்கள் இரட்சிக்கப்பட தனக்கிருக்கும் ஏக்கத்தைப் பற்றி பேசுகிறார். நிச்சயமாக அவர்கள் உண்மையான வைராக்கியங் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் சொல்லுகிறார். மேலும், அது மதரீதியான வைராக்கியமாகவும் இருந்தது. அது அவர்களுடைய புரிந்துகொள்ளுதலின்படி, வேதத்திலுள்ள மெய்யான கடவுளுக்கான வைராக்கியம் என்று எண்ணியிருந்தனர். பாவகரமான வைராக்கியத்தின் இந்த வடிவமே குறிப்பாக யூதர்களைக் குருடர்களாக வைத்திருந்தது. அவர்களுடைய பிரச்சனைதான் என்ன?
இங்கு விவரிக்கப்பட்டுள்ள பாவகரமான மத வைராக்கியத்தில் இரண்டு அடிப்படை பிரச்சனைகள் இருந்தன. முதலாவது, இது சட்டங்களின்படியானது. இவர்கள் தங்களுடைய சுய நற்செயல்களின் மூலமாக பரிசுத்த கடவுளுக்கு முன்பாக தங்களுடைய சுய நீதி மற்றும் அங்கீகரிப்பைத் தேடினார்கள். தங்களை இரட்சித்துக்கொள்ள மனிதர்கள் எடுக்கும் இத்தகைய எல்லா முயற்சிகளும் பாவகரமான மத வைராக்கியத்தின் ஒரு வடிவமே. இந்த பாவகரமான மத வைராக்கியம் அவிசுவாசத்தோடு நெருக்கமான தொடர்புடையது. இவர்கள் கிறிஸ்துவின் மூலமாக இலவசமாக வழங்கப்படும் கடவுளுடைய கிருபையின் சுவிசேஷத்தில் நம்பிக்கை வைக்காதவர்கள். தங்களால் ஒருபோதும் சம்பாதிக்க முடியாததும், முற்றிலும் தகுதியற்றவர்களுக்கு கடவுளிடமிருந்து வரும் ஈவாகிய இரட்சிப்பை அவர்களால் சந்தோஷமாக ஏற்க முடியவில்லை. இங்கு இந்த யூதர்கள் சுவிசேஷத்தை அறியாதிருந்தார்கள். அவர்களுடைய வைராக்கியம் அறிவுப்பூர்வமானதல்ல. அதேவேளை, சுவிசேஷத்தை வெளிப்புறமாக அறிந்திருந்தும் அதை நிராகரிக்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இத்தகைய சட்டப்பூர்வமான, அவிசுவாச கூட்டத்தினர், சபை என்று சொல்லிக் கொண்டு கூடிவருகிற இடத்திலோ அல்லது மெய்யான சபைகளிலோ வைராக்கியமுள்ள அங்கத்தவர்களாகவும் இருக்கலாம். ஏனையோர் உலகத்தின் மற்ற மதங்களில் வைராக்கியம் கொண்டவர்களாக, தங்கள் நித்திய சந்தோஷத்தை தங்களுடைய சுய செயல்களின் மூலம் தேடுகிறவர்களாக இருப்பார்கள். எது எப்படியிருந்தாலும், இவர்கள் யாவரும், தங்களுடைய வைராக்கியத்தினால் தங்களுடைய இரட்சிப்பிற்கான ஒரே வழியை தவறவிடுகிறார்கள். இரட்சிப்பு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் மூலமாக மட்டுமே, கடவுளுடைய கிருபையின் மூலமாக மட்டுமே வருகிறது. இத்தகையோருக்கு சுவிசேஷத்தின் நல்ல செய்தியை நாம் கொண்டு செல்ல வேண்டியதும் குருடாகவுள்ள இவர்களுடைய கண்களை திறக்கும்படி கடவுளிடம் மன்றாடுவதும் எவ்வளவு அவசியம்.
பாவகரமான மத வைராக்கியத்தோடு நெருக்கமான மற்றொரு வடிவத்தை பார்க்கலாம்.
ஆ. வெளிப்படையாக துன்புறுத்தும் மத வைராக்கியம்
இந்த மத வைராக்கியம் என்பது மெய்யான கடவுள்பக்தியுள்ளவர்களை நேரடியாகத் தாக்குவதாகும். இதற்கு ஒரு நல்ல உதாரணம் மனந்திரும்பாத தர்சு பட்டணத்தானாகிய சவுல். மனந்திரும்பிய பிறகு அவரே தன்னைப் பற்றி சொல்லியதைக் கவனியுங்கள், “பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன்” என்கிறார் (பிலிப்பியர் 3.6). அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3-4 மற்றும் கலாத்தியர் 1:13-14 வசனப்பகுதிகள், பவுலின் துன்பப்படுத்தின நடவடிக்கை கடவுளுக்காகவும் அவரது பிதாக்களுடைய பாரம்பரியங்களுக்காகவும் கொண்டிருந்த வைராக்கியத்திலிருந்து வந்ததாக சொல்லுகிறது. ஒரு பரிசேயனாக, கடவுளுடைய நியாயப்பிரமாணத்திற்கான ஒரு போராளியாகத் தன்னைப் பார்த்தார். எனினும், யூத மூப்பர்களின் வேதப்பூர்வமற்ற அநேக பாரம்பரியங்களுக்காகவும் கிறிஸ்துவால் முற்றிலுமாக அழிக்கப்பட்ட பழைய உடன்படிக்கையின் சடங்குமுறை சட்டங்களுக்காகவுமே அவர் போராடினார். துரதிஷ்டவசமாக, இது போன்ற வெளிப்படையான துன்பப்படுத்தும் மத வைராக்கியம் பவுலுக்கு மனமாற்றத்தைக் கொண்டு வரவில்லை. திருச்சபை வரலாறு முழுவதும் இது தொடர்ந்திருந்தது. மேலும், இத்தகைய துன்புறுத்தும் வைராக்கியம் திருச்சபைக்கு வெளியிலிருந்து மட்டுமல்ல, விசுவாசத் துரோகத் திருச்சபைகளிலிருந்தும் வந்தது. கிறிஸ்துவின் மெய்யான திருச்சபைக்குள்ளிருந்தும் இது வந்திருக்கிறது. (ஆகவேதான் நான் இதை ஒரு தனி வகையான மத வைராக்கியம் என்று குறிப்பிடுகிறேன்.) இத்தகைய துன்பப்படுத்தும் வைராக்கியம் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. சில நேரங்களில், அது பவுல் செய்தது போல் விசுவாசிகளை சிறையிலடைப்பது மற்றும் மரணத்திற்குள்ளாக்குவதில் ஈடுபட்டிருக்கும். ஆனால் மற்ற நேரங்களில் அது மிகவும் நுட்பமாக ஆனால் சேதம் குறைவானதல்ல, அதாவது பொல்லாத வாய்மொழித் தாக்குதல்களின் வடிவில் (எரிகிற நாக்கைப் பற்றி ஏற்கனவே நாம் பார்த்ததுபோல்) வரும். எனினும், பாவகரமான மத வைராக்கியம் மெய்யான பக்தியோடு தொடர்புடைய சில வேறுபட்ட வடிவிலும் தன்னைக் காட்டிக்கொள்ளும்.
இ. முழு இருதயத்துடன் கடவுளிடத்தில் இணைந்திருக்காத மத வைராக்கியம்
பக்தியற்ற யெகூவின் உதாரணத்தை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
2 இராஜாக்கள் 10:15-16
அவன் அவ்விடம்விட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி, நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான்; அப்படியே இவனை அவன் இரதத்தின்மேல் ஏற்றினார்கள்.
2 இராஜாக்கள் 10:28-31
இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டான். ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரோபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை. கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார். ஆனாலும் யெகூ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாமின் பாவங்களை விட்டு அவன் விலகவும் இல்லை.
கடவுள் யெகூவுக்குச் சொல்லியிருந்தார், இஸ்ரவேலின் வடபகுதிக்கு அவன் ராஜாவாயிருப்பான் என்று. அவபக்தியான ராஜாவாகிய ஆகாபின் குடும்பத்தையும் அவனைச் சேர்ந்தவர்கள் யாவரையும் அழிக்கும்படியும் அவர் அவனுக்குக் கட்டளையிட்டிருந்தார். யெகூவும் கடவுள் சொன்னதையெல்லாம் ஆர்வத்தோடு செய்தான். இஸ்ரவேலில் இருந்த பாகால் விக்கிரக வழிபாட்டையும் அவன் அழித்தான். வசனம் 16ல் கடவுளுக்காக அவன் கொண்டிருந்த வைராக்கியத்தைப் பற்றிய உண்மையையே சொல்லியிருந்தான். அதற்காக கடவுளே அவனைப் பாராட்டி, அவனுடைய ராஜ்யத்தையும் ஆசீர்வதித்தார். ஆயினும் அதில் ஒரு சிறிய பிரச்சனை இருந்தது. எதெல்லாம் அவனுடைய விருப்பத்திற்கு ஏற்றதாக இருந்ததோ அதிலெல்லாம் வைராக்கியங் கொண்டு அவன் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தான். ஆனால் பொன் கன்றுக்குட்டிகளைப் பற்றிய காரியத்தில் அது வேறுவிதமாக இருந்தது. அதைப் பற்றிய விஷயத்தில் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிவது அவனுக்கு ஏற்றதாக இருக்கவில்லை. என்ன பிரச்சனை? அது இருதயம் சம்பந்தமான பிரச்சனை. வசனம் 31 சொல்லுகிறது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை” என்று.
பக்திவைராக்கியம் என்பது இந்த விஷயத்திலெல்லாம் நான் கடவுளுக்குக் கீழ்ப்படிவேன், இந்த விஷயத்திலெல்லாம் நான் கீழ்ப்படிய முடியாது என்று தெரிவு செய்யாது. பக்தி வைராக்கியம் என்பது முழு இருதயத்தோடு செயல்படுவது. நம்மில் பக்தி வைராக்கியம் இருந்தால், பிதாவும் கிறிஸ்துவும் கட்டளையிட்டிருக்கிற அனைத்திற்கும் கீழ்ப்படிய கவனமாக இருப்போம். நம்முடைய தனிப்பட்ட சொந்த வாழ்க்கையிலும், நம்முடைய குடும்பங்களிலும், நம்முடைய தொழில்களிலும், கிறிஸ்துவின் சபையிலும் அதன்படி கவனமாக செய்கிறவர்களாக இருப்போம். பக்தி வைராக்கியம் என்பது முழு இருதயத்தோடு தொடர்புடையது, அதைப் பிரித்துப் பார்க்க முடியாது.
பாவகரமான மத வைராக்கியத்தின் கடைசி வடிவம், கடவுளுடன் முழுமையாக இணைந்திருக்காத வைராக்கியத்தோடு நெருக்கமான தொடர்புடையது.
ஈ. மந்தமான மத வைராக்கியம்
வைராக்கியத்திற்கான புதிய ஏற்பாட்டு வார்த்தை சூடான அல்லது எரிகிற என்பதன் தன்மையை கொண்டது என்று ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளேன். ஆகவே பக்தி வைராக்கியத்திற்கு எதிரானது என்ன என்று யாரெனும் கேட்டால், நமக்கு எது நினைவிற்கு வரும்? அதற்கு எதிரான ஆத்துமாவில் குளிர்ந்த நிலையில் இருப்பது. ஆயினும் சூடாக இருப்பதோடு தொடர்புடைய பதத்தை நாம் படித்தபோது அப்படிப் பார்க்கவில்லை.
வெளிப்படுத்தின விசேஷம் 3:14-22
லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதைஅறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லுகிறபடியால்; நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.
லவோதிக்கேயா திருச்சபைக்கு இயேசு சொன்ன வார்த்தைகளில் பக்தி வைராக்கியத்திற்கு எதிரானது இருக்கிறது? அது கிறிஸ்துவிலும் அவரைச் சார்ந்த காரியங்களிலும் மந்தமாக, கவனக்குறைவாக, அலட்சியமாக இருப்பதாகும். இந்த மந்த நிலை நம்முடைய இரட்சகருக்கு குமட்டலை உண்டாக்குகிறது. அது அவர்களை அவருடைய வாயிலிருந்து துப்பச் செய்கிறது. இந்த மந்த நிலையைப் பற்றி அதிகமாக இங்கு சொல்லப்பட்டுள்ளது. அது தனக்கு கடவுள் தேவையில்லை என்று சொல்லும் பெருமை, சுயசார்பு, தன்னிறைவுடைய இருதயத்தைக் கொண்டிருக்கும். நீங்கள் ஆவிக்குரிய வகையில் இழிவான, பரிதாபகரமான, குருடாக, நிர்வாணமாக இருக்கும்போது அது நீங்கள் எல்லாவற்றையும் கொண்டிருப்பதாகவும் உங்களுக்குத் தேவை என்பதே இல்லை என்று நினைக்கச் செய்யும். கிறிஸ்து தம்முடைய ஆவிக்குரிய பிள்ளைகளைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் இத்தகைய இருதயமே காரணம் என்று இங்கு நாம் பார்க்கிறோம்.
இயேசுவின் இந்த வார்த்தைகள் நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்கிறது. நம்முடைய இரட்சகர் நமக்காக இந்த உலகத்தில் வந்து மரித்தபோது நிச்சயமாக எரிகிற சூடான வைராக்கியத்தைக் கொண்டிருந்தார். அவர் இருந்தவிதமாக நாமும் இருக்கிறோமா?
இந்தப் பாடத்தை முடிக்கிறவேளையில், இந்தப் பாடத்தின்போது நாம் சிந்தித்து வருகிற அந்தக் கேள்விக்கு நாம் திரும்புவோம். இதுவரை நாம் பார்த்த, பாவகரமான வைராக்கியத்தின் வடிவங்களின் அடிப்படையில், எப்படி நம்மில் பக்தி வைராக்கியத்தை தூண்டிவிடுவது?
வெளிப்படுத்தின விசேஷம் 3:19ல் நாம் படித்த வார்த்தைகளை நினைவுகூருங்கள், “. . . ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பு.” இதைச் செய்வதற்கான இரண்டு வழிகளை கவனியுங்கள்.
- முதலாவது, நமக்கு உணர்த்தப்படுகிற எல்லாவிதமான பாவகரமான வைராக்கியத்திலிருந்தும் மனந்திரும்புவதற்கு ஜாக்கிரதையாயிருப்பதன் மூலமாக நாம் வைராக்கியத்தை தூண்டிவிட வேண்டும். பொறாமை மற்றும் சுய உயர்வின் வைராக்கியங்களிலிருந்தும், பாவகரமான எரிகிற நாக்கு மற்றும் கேடான பாலியல் எரிதலிலிருந்தும், நம்முடைய உண்மையுள்ள சகோதரர்களை தாக்குவது போன்ற எல்லா வகையான பாவகரமான மத வைராக்கியங்களிலிருந்தும் மனந்திரும்ப வேண்டும். பாவகரமான வைராக்கியத்திற்கு நாம் பார்த்த அநேக உதாரணங்கள் மத நம்பிக்கையுள்ளவர்களைப் பற்றிய உண்மையானது என்பதை கவனியுங்கள். ஆகவே கிறிஸ்துவின் பெயரை அறிக்கை செய்கிற நம்மை வஞ்சிக்கக் கூடியதும் குற்றத்திற்குள்ளாக்கக் கூடியதுமான இத்தகைய பாவகரமான வைராக்கியத்தின் எல்லா வடிவங்களைப் பற்றியும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். சங்கீதம் 139:23-24 வசனங்களில் சங்கீதக்காரன் சொல்லியது போல்தான் நம்முடைய தொடர்ச்சியான ஜெபம் இந்த விஷயத்தில் இருக்க வேண்டும், “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.”
- இரண்டாவது, முதலாவதோடு நெருக்கமான தொடர்புடையது, நம்மிலுள்ள பக்தி வைராக்கியத்தின் குறைவுகளிலிருந்து ஜாக்கிரதையாக மனந்திரும்புவதின் மூலம் நம்மில் வைராக்கியத்தைத் தூண்ட வேண்டும். போதகர்கள் மற்றும் ஊழியர்களாகிய நாம், கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் முழு இருயத்தோடு ஊழியம் செய்யாதிருந்தவைகளை அறிக்கையிடுவதிலும் அவைகளை விட்டுவிடுவதிலும் கொதிக்கிற சூட்டோடு செயல்பட வேண்டும். பணமும் உடைமைகளும் நம்முடைய வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் பெறுவதாக இருக்கிற பாவகரமான செய்கைகளிலிருந்து நாம் மனந்திரும்ப வேண்டும் (2 தீமோத்தேயு 2:4). குளிர்ந்த, மந்த, மற்றும் சோம்பலான நிலையிலிருந்து நாம் மனந்திரும்ப வேண்டும். தன்னிறைவு மற்றும் சுய சார்பு என்கிற பெருமைகளிலிருந்து நாம் மனந்திரும்ப வேண்டும்.
கீழ்வரும் கேள்விகளுக்கு நாம் கவனமாக பதிலளிக்க வேண்டும்.
- கடவுளிடம் ஒப்புரவாவதற்கு கண்ணீரோடு இரவும் பகலும் வேண்டிக்கொள்ளுகிறது மட்டும் போதுமானதா?
- மனப்பூர்வமாகவும், பயனுள்ள முடிவை அடைய வேண்டும் என்கிற தீவிரத்தோடும் செய்யாமல் வெறுமனே அன்றாட கடமைக்காக ஒரு வேலையை செய்வதில் மட்டும் நாம் பெரும்பாலும் திருப்தியடைகிறோமா?
