திருமறைத்தீபம் 2018 -ம் ஆண்டு மூன்றாம் இதழ்
1. வாசகர்களே!
2. கிறிஸ்தவ தலைமைப் பஞ்சம்
3. ஆண்டவர் சிரிக்கிறார்!
4. வாசகர்களுக்கான இறுதி வார்த்தை
5. கிறிஸ்தவ வைராக்கியத்தின் சாதகமான உதாரணங்கள்
6. ஆயிரம் வருட அரசாட்சி
வாசகர்களே!
அன்பு வணக்கங்கள்!
இந்த இதழில் தொடர்ந்து ‘தேவபயம்’ மற்றும் ‘பக்தி வைராக்கியம்’ பற்றிய ஆக்கங்கள் வந்திருக்கின்றன. இவை ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக வாசகர்கள் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள். தேவபயம் பற்றிய அல்பர்ட் என் மார்டினின் ஆக்கங்கள் இந்த இதழோடு முடிவுக்கு வருகின்றன. கூடிய விரைவில் அது நூலாக வெளிவரவிருக்கிறது.
திருச்சபையின் கிறிஸ்தவ தலைமைபற்றி ஒரு ஆக்கத்தை இந்த இதழில் தந்திருக்கிறேன். கிறிஸ்தவ தலைமை இருக்கவேண்டிய நிலையில் இன்று இல்லை என்பதை எவர் மறுக்கமுடியும். சுயநல நோக்கங்களோடு அந்தப் பணியை செய்கிறவர்களே நம்மினத்தில் அதிகம். தீமோத்தேயு, தீத்து ஆகிய நூல்களும் வேதத்தின் எனைய பகுதிகளும் கிறிஸ்தவ தலைமை பற்றித் தரும் விளக்கங்களை ஒருவரும் சட்டை செய்வதில்லை. இந்த ஆக்கம் உங்களை சிந்திக்க வைக்கவேண்டும்.
பொதுவாக உலகில் நிகழும் விஷயங்களை நாம் அலட்சியப்படுத்திவிடக்கூடாது. இந்த உலகம் கர்த்தருடையது தானே! உலகத்தில் எது நடந்தாலும் அதற்குப் பின்னால் இருந்து உலகை இயக்கி வருகிறவர் கர்த்தரே. உலகம் தன் சுயநல நோக்கில் செய்துவருகிற காரியங்களைக் கர்த்தர் தன்னுடைய இறுதி நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுகிறார். அனைத்தையும் தன் மகிமைக்காக நடத்திச் செல்லுகிறார். இந்த வருடத்தில் நிகழ்ந்திருக்கும் இரு முக்கிய நிகழ்ச்சிகளை விபரித்து கிறிஸ்தவ பார்வையில் அதுபற்றி எழுதியிருக்கிறேன். அமெரிக்க தூதரகம் எருசலேமுக்கு மாற்றப்பட்டதும், மலேசியாவில் ஆளும் கட்சி ஆட்சியிழந்து எதிர்க்கட்சிகள் பதவிக்கு வந்ததுமே அந்த இரு நிகழ்வுகளும். இவையிரண்டும் வரலாறு காணாத நிகழ்வுகள்.
வெளிப்படுத்தல் விசேஷம் நூலின் 20ம் அதிகாரம் விளக்கும் ஆயிரம் வருட அரசாட்சிபற்றி கிறிஸ்தவ இறையியலுலகில் இருந்து வருகின்ற கோட்பாடுகளை விளக்கி இந்த இதழில் ஒரு ஆக்கம் வந்திருக்கிறது. இது தொடராக்கம்; அடுத்த இதழில் முடிவுக்குவரும்.
வாசகர்கள் பத்திரிகையைக் கையில் பெற்றும் வலைத்தளத்தில் வாசித்தும் தொடர்ந்து பயனடைவதோடு எங்களையும் இப்பணியில் ஊக்குவித்து வருவதற்காக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். இந்த இதழும் அதன் ஆக்கங்களும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும், ஜெபமும். – ஆர்
கிறிஸ்தவ தலைமைப் பஞ்சம்
என்னடா? இன்னுமொரு பிரச்சனை பற்றி எழுத ஆரம்பித்துவிட்டேனே என்று யோசிக்கிறீர்களா? சமீப காலமாக இதுபற்றி என்னால் சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை. சில வாரங்களுக்கு முன்பாக கிறிஸ்தவ சபைகள் இணைந்து வந்த கூட்டத்தில் பேசியபொழுது இதுபற்றி என்னால் குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை. தனிப்பட்ட சிலரிடமும் இதுபற்றிப் பேசியிருக்கிறேன்.
நல்ல கிறிஸ்தவ தலைமை சபைகளுக்குத் தேவையானால் அது இறையியல் கல்லூரிகளில் இருந்து ஆரம்பிக்கும் என்பது சமுதாயத்தில் இருந்துவரும் பொதுவான எண்ணம் என்பது எனக்குத் தெரியும். அதை அடியோடு மறுதலிக்கிறவன் நான். வேதம் இந்தவிதமாக கிறிஸ்தவ தலைமைக்கு இறையியல் கல்லூரிகளிலேயே வித்திடப்படுவதாக எந்தப் பகுதியிலும் விளக்கவில்லை. 19ம் நூற்றாண்டு காலப்பகுதியிலேயே இந்தவிதமான தவறான எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. அதற்கு முன்பாக இந்தவிதமான எண்ணம் இருக்கவில்லை. 19ம் நூற்றாண்டில் இறையியல் போதனைகளை எவரும் இறையியல் கல்லூரிகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை உருவாகி, அக்கல்லூரிகளின் போதனைகள் முக்கியமாக சுவிசேஷ ஊழியத்தை மையப்படுத்தி அமைந்திருந்ததால் அதில் இருந்து வெளிவந்தவர்கள் சுவிசேஷ ஊழியப்பணியில் ஈடுபட்டு திருச்சபை அமைக்க ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பு திருச்சபையே இந்தப்பணிகளில் ஈடுபட்டு வந்திருந்தன. திருச்சபை செய்ய வேண்டிய பணிகளை இறையியல் கல்லூரிகள் செய்ய ஆரம்பித்தது 19ம் நூற்றாண்டில் இருந்தே ஆரம்பித்தது. இந்தப் புதிய முறையினால் திருச்சபை வாழ்க்கையையும், அனுபவத்தையும் பெற்றிராதவர்களெல்லாம் சுவிசேஷ ஊழியப்பணியில் ஈடுபடவும் திருச்சபைகள் அமைக்கவும் ஆரம்பித்தனர். பெரும்பாலான இறையியல் கல்லூரிகள் ஆத்துமாக்களுக்கு அவசியமான போதக ஊழியத்திற்கும், வேதப்பிரசங்கத்திற்கும் அதிமுக்கிய இடத்தை அளிக்காமல் சுவிசேஷ ஊழியத்திற்கும், அதுதொடர்பான நடைமுறை விஷயங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளித்ததால் அதில் இருந்து வெளிவந்தவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் முதிர்ச்சியற்றவர்களாகவும், ஆத்தும வைத்தியத்திலும், திருச்சபை வாழ்க்கையிலும் அனுபவம் பெற்றிராதவர்களாகவும் இருந்தனர். இதுவே இன்று தமிழ் கிறிஸ்தவ சமுதாயத்தில் தொடர்ந்து வருகின்ற முறையாகவும் இருக்கிறது.
நல்ல கிறிஸ்தவ தலைமைக்கு கருவாக இருப்பது இறையியல் கல்லூரிகளல்ல. இறையியல் கல்லூரிகள் அவசியமா, இல்லையா என்ற வாதத்தில் இந்த ஆக்கத்தில் ஈடுபட நான் விரும்பவில்லை. அது பற்றிய என் கருத்துக்களை திருமறைத்தீப வாசகர்கள் இதழ்களில் வாசித்து அறிந்துகொள்ளலாம். அவை நல்ல கிறிஸ்தவ தலைமைக்கு பட்டறைகளா, என்பதே என் கேள்வி. அதற்கு இல்லை என்பதுதான் என் ஆணித்தரமான பதில். அப்படியானால் நல்ல கிறிஸ்தவ தலைமை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று கேட்பீர்கள். அதைத்தான் இந்த ஆக்கத்தில் விளக்க விரும்புகிறேன்.
வேதபூர்வமான குடும்ப வாழ்க்கையும் வளர்ப்பு முறையும்
கிறிஸ்தவ தலைமைக்கு அத்திவாரம் குடும்பத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்; இருந்தாலும் அதுவே உண்மை. குடும்பத்திலேயே இதற்கு வித்திடப்படுகிறது. கிறிஸ்தவ குடும்பத்தில் தகப்பனும் தாயும் பிள்ளைகளை கர்த்தருக்காக வளர்த்தெடுக்க வேண்டிய தவிர்க்கமுடியாத கடமையைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஒருபோதும் இரட்சிப்பை வழங்கமுடியாது; அது கிறிஸ்துவின் பணி. இருந்தபோதும் சுவிசேஷத்தை பிள்ளைகளுக்கு அறிவித்து கர்த்தரின் வழியில் நடத்தவேண்டியது அவர்களுடைய பிரதான பொறுப்பு. அத்தோடு தகப்பனும் தாயும் பேச்சிலும், நடத்தையிலும் விசுவாசத்தோடு கிறிஸ்துவின் கட்டளைகளைப் பின்பற்றி நடந்து பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். பிள்ளைகள் குடும்பத்தில் வளர்கிறபோதே அவர்களுடைய பிற்கால வாழ்க்கைக்கான அத்திவாரமிடப்படுகிறது. ஒழுக்கவிதிகளைப் பின்பற்றி நன்னடத்தையுள்ளவர்களாக பிள்ளைகள் இருக்க குடும்ப வளர்ப்பே வித்திடுகிறது. குடும்ப வாழ்க்கையை நாம் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. கணவன் மனைவி உறவு மற்றும் வாழ்க்கை பற்றியும் (எபேசியர், கொலோசெயர், 1 பேதுரு), பிள்ளை வளர்ப்பு பற்றியும் பழைய புதிய ஏற்பாடுகள் விளக்குகின்றபோது குடும்பத்தை மையமாகக் கொண்டே அவற்றிற்கவசியமான விளக்கங்களைக் கொடுக்கின்றன. கர்த்தர் தான் ஏற்படுத்தி வைத்திருக்கும் குடும்பத்தில் பத்துக்கட்டளைகளின் அடிப்படையிலான அவர் மேல் இருக்க வேண்டிய அன்பையும், அவருக்கே உரித்தான ஆராதனையையும், ஒழுக்கத்தையும் எதிர்பார்க்கிறார். குடும்பமே பிள்ளை வளர்ப்புக்கான பட்டறையாக இருக்கிறது; அது பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் நடக்கவேண்டியதல்ல.
தமிழ் கிறிஸ்தவ சமுதாயக் குடும்பங்களில் வேத வாசிப்பும், ஜெபமும் இருந்தபோதும் பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையும் பிள்ளை வளர்ப்பும் வேத அடிப்படையில் அமைந்திருப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம் குடும்பத் தலைவனும், தலைவியும் வேத அடிப்படையில் வளர்க்கப்படாததுதான். புறஜாதிப் பெற்றோர்களிடம் வளர்ந்த கிறிஸ்தவர்கள் மத்தியில் புறஜாதிப்பண்பாடுகளும் கருத்தோட்டமும் அதிகளவில் இருப்பதை நம் சமுதாயத்தில் காண்கிறோம். சிறு வயதில் இருந்தே ஊறிப்போயிருக்கின்ற புறஜாதிக் கண்ணோட்டத்தை அவர்களால் அடியோடு மாற்றிக்கொள்ள முடிவதில்லை. பெண்களை எந்த விதத்தில் அணுக வேண்டும், எந்தக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும் என்பதிலெல்லாம் பலரிடம் கிறிஸ்தவ கண்ணோட்டம் இருப்பதில்லை. ஆணாதிக்கப் புறஜாதி இந்துப் பண்பாடு பெண்களை அலட்சியப்படுத்தி திருமணம் செய்துகொள்ளவும், பிள்ளை பெறவும், அடுப்படியில் சமைத்துப்போடவும் அவசியமான கருவியாக மட்டுமே கருதுகிறது. கிறிஸ்தவ வாலிபன் ஒழுக்கமுள்ள, விசுவாசமுள்ள வாலிபப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொண்டிருக்கும் அதேநேரம், அத்தகைய பெண்ணுக்கு அன்பின் அடிப்படையிலான வாழ்க்கையைக் கொடுக்கும் அளவுக்குத் தேவையான தகுதிகளைத் தன்னில் தேவபயத்தோடு வளர்த்துக்கொண்டிருக்கிறேனா என்று ஒருபோதும் எண்ணிப்பார்ப்பதில்லை. அதற்குப் புறஜாதிப்பண்பாட்டில் சிறுவயதில் இருந்தே ஊறிப்போன வழக்கமே காரணம். இந்துப் புறஜாதிப்பண்பாடு அந்த வாலிபனை ஆணாதிக்கமுள்ளவனாகவே வளர்த்துவிட்டிருக்கிறது. இதைப் பொதுவாகவே கிறிஸ்தவ வாலிபர்களிடம் நாம் காண்கிறோம். இந்தப் புறஜாதிப்பாண்பாட்டைத் தூக்கியெறிந்துவிட்டு கிறிஸ்தவ வேத அடிப்படையில் சிந்தித்து செயல்படும் வாழ்க்கை முறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று உண்மையோடும் தைரியத்தோடும் போதித்து அவர்களை வளர்க்கின்ற போதகர்கள் நம்மினத்தில் அரிதாகவே இருக்கிறார்கள்.
விசுவாசம் மற்றும் தேவ பயத்தின் அடிப்படையிலான வளர்ப்பு முறை வீட்டில் கிடைக்காததால் அநேக வாலிபர்கள் வாழ்க்கை அனுபவமும் முதிர்ச்சியும் இல்லாதவர்களாக வளர்ந்துவிட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்கும் காரியங்களைவிட தெரியாதவையே அநேகம். தகப்பனோடும் தாயோடும் வெளிப்படையான அன்பின் அடிப்படையிலான உறவில்லாமல் வெறும் மரியாதை மட்டுமே இருந்து வளர்ந்திருப்பதால் எந்த விஷயத்திலும் எப்படி ஒரு கிறிஸ்தவனாக கர்த்தருடைய வார்த்தைக்குப் பங்கமேற்படாமல் தைரியத்தோடு தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. சரீரம் வளர்ந்திருக்கும் அளவுக்கு மனப்பக்குவமும், ஆத்மீக வளர்ச்சியும் பலரிடம் இல்லாமலிருக்கிறது. காமன்சென்ஸ் என்று நாம் சொல்லுகிற பொதுவான அறிவு கூட அநேகரிடம் இல்லாமலிருக்கின்றது.
இத்தகைய வாலிபர்களும், பெண்களும் திருமண வயது வந்து பெற்றோர்கள் வழிப்படியோ தாங்களோ ஒரு துணையைத் தேடிக் குடும்பத்தை அமைத்துக்கொள்ளுகிறபோதும் வேதத்தைப் பின்பற்றி எப்படிக்குடும்பத்தை நடத்துவது என்பது தெரியாமல் பலவிதமான பிரச்சனைக்குள்ளாகிறார்கள். கணவன் மனைவிக்குள் உறவு கர்த்தரின் அன்பின் அடிப்படையில் இல்லாமல் இருந்துவிடுகிறது. இந்த நிலைமையில் குழந்தைகளும் பிறந்துவிட வெளியில் சொல்லவழியில்லாமலும், இருதயத்தில் சமாதானமும் இல்லாமல் வெளிப்பார்வைக்கு மட்டும் விசுவாசமுள்ளவர்களாக இருந்து வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். இந்த நிலைமையில் அவர்களால் பிள்ளைகளை சரியாக வளர்க்கவும் முடியாமல் போய்விடுகிறது. இத்தோடு பொருளாதார பிரச்சனையும் சேர்ந்து கொண்டால் பலருடைய வாழ்க்கையில் அமைதிக்கே இடமில்லாமல் போய்விடுகிறது. கிறிஸ்துவை விசுவாசித்திருந்தும் ஏன் இப்படி நடந்துகொள்ளுகிறோம் என்ற குழப்பமும் பலருக்கு ஏற்பட்டு பலவீனத்தோடு தொடர்ந்து நிம்மதியின்றி வாழ்கிறார்கள் அல்லது விசுவாசத்தைவிட்டு விலகியோடுகிறார்கள். பெரும்பாலும் தமிழ் சமுதாய திருச்சபைகளில் இப்படி வாழ்ந்து வருகிறவர்களே அநேகம்.
இதையெல்லாம் எங்கிருந்து தெரிந்துகொண்டீர்கள் அல்லது கற்பனை செய்து எழுதுகிறீர்களா என்று நீங்கள் கேட்கலாம். கால் நூற்றாண்டு காலமாக அநேக வாலிபர்களை அறிந்திருந்து பக்கத்தில் இருந்து பார்த்து அனுபவபூர்வமாக அறிந்துணர்ந்திருப்பதாலேயே இதையெல்லாம் என்னால் சிந்திக்க முடிகிறது. உள்ளுக்குள் இருக்கும் நோயை அது இல்லை என்று மறைத்து வைக்கமுடியுமா? ஆத்மீக வளர்ச்சியும், முதிர்ச்சியும் இல்லாமல் சபை சபையாக குடும்பங்கள் இருந்து வருவது திருச்சபைக்கு நல்ல தலைமை இல்லாமலிருப்பதற்கு முக்கிய காரணம்.
திருச்சபை தலைமைக்கான இலக்கணங்களைப் பவுல் 1 தீமோத்தேயு 3லும், தீத்துவிலும் தந்திருக்கிறார். போதகர்கள், உதவிக்காரர்களுக்கான அந்த இலக்கணங்களில் முக்கியமானதொன்று சபையால் தலைமைக்காகத் தெரிந்தெடுக்கப்படுகிறவர்கள் குடும்பத்தை நல்ல நிலையில் வைத்திருந்து தங்களுடைய தலைமை ஸ்தானத்தை குடும்பத்தில் நிதர்சனமாக வெளிப்படுத்துகிறவர்களாக இருக்கவேண்டும் என்பது. இது ஒரு வரியில் சொல்லப்பட்டிருந்தாலும் அதில் அடங்கியிருக்கும் அர்த்தங்கள் அதிகமானவை. வீட்டில் மனைவி தன் ஆலோசனைகளை எந்தவித முறுமுறுப்பும், மறுப்பும் காட்டாமல் ஒத்துழைத்து நடைமுறையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது கணவனின் கடமை. இதைக் கணவன் அன்போடு கூடிய தலைமை மூலம் நிதர்சனமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதைச் செய்வதற்கு மனைவியோடு கிறிஸ்துவின் அன்பின் அடிப்படையிலான நல்லுறவு இருக்கவேண்டும். பிள்ளைகள் தன் வார்த்தையையும், தாயின் வார்த்தையையும் கேட்டு எதிர்ப்புக்காட்டாமல் அவற்றின்படி நடந்துகொள்கிறவர்களாக இருக்கவேண்டும். பிள்ளை வளர்ப்பில் அதிக சிரத்தை காட்டி குடும்பத்தை அமைதியும், அன்பும் இருக்கும் இடமாக வைத்திருக்க வேண்டியது கணவனின் பெரும் பொறுப்பு. மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் ஆத்மீக ஆலோசகனாக, வழிகாட்டியாக, பொறுப்புள்ள தலைவனாக கணவன் இருக்க வேண்டும். தலைமைக்கான அத்தனை தகுதிகளையும், ஞானத்தையும் வீட்டை நடத்துவதில் காட்டுகிறவனாக கணவன் இருக்கவேண்டும்.
நன்னடத்தையும், சமூக இங்கிதமும்
மேலே குறிப்பிட்ட இத்தகைய தகுதிகளை எத்தனை கிறிஸ்தவ குடும்பத்தலைவர்களிடம் காண முடிகிறது? உங்களுக்கே நிச்சயம் தெரியும், இந்த விஷயத்தில் நம் சமுதாயம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறதென்று. நிலைமை இப்படி இருக்கும்போது நல்ல தலைமை சபையில் உருவாகுவதென்பது நடக்காத காரியம். அதனால்தான் இருப்பதை வைத்து சமாளிப்போம் என்ற எண்ணத்தோடு வேத இலக்கணங்களையெல்லாம் பொறுப்படுத்தாமல் சபை சபையாக ஆவிக்குரிய வளர்ச்சியும், முதிர்ச்சியும், ஞானமும் இல்லாதவர்கள் சபைத்தலைவர்களாக இருந்து வருகிறார்கள். இதையெல்லாம்விட பெரிய கொடுமை இவர்களிடம் சராசரி நற்குணங்களும், ஆவிக்குரிய கனிகளும் பெருமளவுக்கு இல்லாமலிருப்பதுதான். உண்மைபேசி, கொடுத்த வார்த்தையின்படி நடப்பதென்பது பொதுவாகவே அநேகரிடம் இல்லை. ஒரு காரியத்தை செய்ய முடியாமல் போனதற்கு ஆயிரம் சாக்குப்போக்குகளைக் கொடுக்க முன்வருமளவுக்கு சொன்ன வார்த்தையின்படி நடக்காமல் போய்விட்டேனே என்று ஆதங்கத்தையும், மனவருத்தத்தையும் சிறிதளவாவது ஒருவரிடமும் பார்க்க முடியாமலிருக்கிறது. பொறுப்பற்ற விதத்தில் வீட்டில் வளர்ந்திருப்பதால் ‘தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை’ என்ற வார்த்தையின்படி அநேகருடைய வாழ்க்கையில் நன்னடத்தைக்கு இடமில்லாமலிருக்கிறது. இதெல்லாம் நன்னடத்தையோடு சம்பந்தப்பட்டது என்பதுகூட பெரும்பாலானோருக்குப் புரிவதில்லை.
ஒரு முறை ஒரு இந்திய வாலிபப் பெண் பல் விளக்காமல் சபைக்கு வந்தது மட்டுமல்ல, அதை என்னிடமே சொல்லவும் செய்தாள். இது எதைக்காட்டுகிறது? வாழ்க்கையில் ஒரு ஒழுங்கை வளர்த்துக் கொள்ளாததற்கு அடையாளமாகவே இருக்கிறது. நேரத்துக்கு சபை ஆராதனைக்கு நம்மவர்கள் வருவதில்லை. அது எதைச்சுட்டுகிறது? நேரத்துக்கு மதிப்புக்கொடுத்து பொறுப்போடு வாழக்கற்றுக்கொள்ளாததன் அடையாளத்தையே காட்டுகிறது. எடுத்துக்கொண்ட பொறுப்பை சரிவர செய்யாமல் சாக்குப்போக்கு சொல்லுவதும், வாய் சுத்தமில்லாமல் அப்படி இருப்பதையும் பெரிதுபடுத்தாமல் இருப்பது எதைக்காட்டுகிறது? வாழ்க்கையில் அடிப்படை அம்சங்களில் ஒழுக்கத்தோடு வளராததன் அடையாளத்தையே காட்டுகிறது. உண்ணும் உணவில் கட்டுப்பாடில்லாமல் வயிற்றை வளர்த்து அதனால் ஏற்படும் வியாதியால் ஊழியப்பணியை சரிவர செய்யமுடியாமல் இருப்பது எதைக்காட்டுகிறது? இச்சையைக் கட்டுப்படுத்தி வாழக்கற்றுக்கொள்ளாமல் வளர்ந்திருக்கும் அவலத்தைத்தான் காட்டுகிறது. ஒரு முறை ஒரு ஊழியக்காரனுக்கு அவனுடைய வாய்க்குக் கீழ் வளர்ந்து கட்டுப்பாடில்லாமல் தொங்கிக்கொண்டிருக்கும் மீசையை அளவோடு வைத்துக்கொள்ளும்படி நான் புத்திகூறினேன். நிமிடத்துக்கு ஒருதரம் அதைத் தடவி சரிசெய்துகொண்டிருப்பதை அவன் வழக்கமாகக் கொண்டிருந்தது சமூக இங்கிதமில்லாத செயலாக இருந்தது. அதாவது மற்றவர்கள் என்னைப் பார்க்கிறார்களே, அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற நினைவே இல்லாமல் இருப்பதைத்தான் சொல்லுகிறேன். நாம் தனி மனிதர்களாக அல்ல, சமுதாயத்தின் அங்கமாகவே வாழ்ந்து வருகிறோம்.
இதெல்லாம் எப்படி ஒழுக்கத்தோடு தொடர்புடையதாக இருக்க முடியும் என்று சிலர் கேட்கலாம்; இதெல்லாம் பக்திவிருத்தியோடு தொடர்பில்லாதவை என்று சிலர் எண்ணலாம். இவர்கள் வேதத்தை முறையாகப் படிக்காமலும், மெய்க்கிறிஸ்தவத்தின் தன்மையை உணராமலும் வளர்ந்திருப்பதாலேயே இப்படி நினைக்கிறார்கள், கேள்வி கேட்கிறார்கள். உண்மையில் வேதம் இதையெல்லாம் பக்திவிருத்தியோடு தொடர்புள்ளதாக விளக்குகிறது. நன்னடத்தைக்கும், சமூக இங்கிதத்தைக் கொண்டிருப்பதற்கும் பக்திவிருத்திக்கும் பெருந்தொடர்பு இருக்கிறது.
இதற்கு சில உதாரணங்களைத் தரவிரும்புகிறேன்.
- மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
இந்த வசனம் காணப்படும் பகுதியின் ஆரம்பத்தில் பவுல், தனக்கிருக்கும் கிறிஸ்தவ சுதந்திரத்தைப் பற்றி விளக்கியபிறகு (4, 5, 6), கிறிஸ்தவ பணிபுரியும் தான் அந்தப் பணிக்கான ஊதியத்தை எதிர்பார்ப்பதில் தவறில்லை என்பதை உணர்த்துகிறார் (9, 10, 14). அதற்குப் பிறகு இதெல்லாம் வேதப்படி நியாயமானவையாக இருந்தபோதும் சுவிசேஷத்திற்காக நான் எதையும் இழந்து, நியாயமான சொந்த சுகத்தையும் இழந்து, கிறிஸ்தவ சுதந்திரத்தையும் பெரிதுபடுத்தாமல் வாழத்தயாராக இருப்பதாகக் கூறுகிறார் (15, 16). இறுதியில் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காகவும், மகிமைக்காகவும், கிறிஸ்தவனாக தான் எப்போதும் தன்னுடைய சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தி வாழ்வதைக் கடமையாகக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். ஓடுகிறவன் எப்படி அந்த ஓட்டத்தில் வெற்றிபெற தன் சரீரத்தை அடக்கி ஓட்டத்திற்கு ஏற்றவிதத்தில் தயார் செய்து பந்தயத்தில் கவனம் செலுத்துவானோ அதுபோல் தானும் செய்வதாகக் கூறுகிறார். சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துவது என்பது, தன்னுடைய இச்சைகளை அடக்கி ஒடுக்கி சரீரம் அசிங்கங்களை செய்துவிடாமல் ஆவிக்குரிய கிரியைகளை மட்டுமே செய்யும்படியாக வைத்திருப்பது என்று அர்த்தம். இதில் வாழ்க்கையில் ஒழுக்கத்தோடு வாழ்வதற்காக மனத்தையும், சரீரத்தின் எல்லா அவயவங்களையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நன்னடத்தையுள்ளதாக வைத்திருப்பதும் அடங்கியிருக்கிறது. இதில் நேரத்துக்கு உறங்குவதும், எழுந்திருப்பதில், பொறுப்போடு எல்லாக் காரியங்களையும் வரைமுறையோடு ஒவ்வொரு நாளும் செய்வதும், உண்ணும் உணவில் கட்டுப்பாட்டை வைத்திருப்பதும், சோம்பேறித்தனமில்லாமலிருப்பதும், நாவையும் இருதயத்தையும் கட்டுக்குள் வைத்திருந்து வார்த்தை தவறாமல் இருப்பதும், கடுமையாக கவனத்தோடு உழைப்பதும் அடங்கியிருப்பதென்பது சொல்லித்தெரிய வேண்டுமா?
இந்தச் சரீரக்கட்டுப்பாடுகளையும், ஒழுங்கையும் ஆவிக்குரியவர்களாக இல்லாதவர்களும் தங்களுடைய (சுயநல) இலட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காகப் பின்பற்றுகிறார்கள். ஆவிக்குரியவனாக இல்லாமலிருந்த போதும் இதிலெல்லாம் ஒழுங்கில்லாமலா அம்பானி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறார். பொதுவான கிருபையின் காரணமாக ஆவிக்குரியவர்களாக இல்லாதவர்களும் இந்த விஷயங்களில் ஒழுங்கைப் பின்பற்றி கவனத்தோடு வாழ்ந்து வருவதை சமுதாயத்தில் நாம் காண்கிறோம். பிரச்சனை என்னவென்றால் ஆவிக்குரியவர்களாக இருந்து கிறிஸ்துவுக்காக வாழவேண்டியவர்கள், ஆவிக்குரியவர்களாக இல்லாமலிருக்கிறவர்களுக்கு இருக்கின்ற புத்திகூட இல்லாமல் இந்த விஷயங்களிலெல்லாம் அவிசுவாசியைவிட மோசமாக ஒழுங்கில்லாமல் வாழ்ந்து வருகிற கொடுமையைத்தான் நம் இனத்தில் காண்கிறோம். ஆவிக்குரிய கிறிஸ்தவன் இதிலெல்லாம் ஒழுங்கில்லாமல் இருக்கும்போது அவன் ஒழுங்கற்ற வாழ்க்கை வாழ்ந்து கிறிஸ்துவை அவமானப்படுத்துகிறான் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? முக்கியமாக ஊழியப்பணியில் இருக்கிறவர்களுக்கு இதிலெல்லாம் ஒழுங்கும் கட்டுப்பாடும் வாழ்க்கையில் இல்லாதிருக்குமானால் அவர்கள் தங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றி வாழ்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.
வேத இறையியலறிவின்மை
நம்மினத்தில் பரவலாகக் காணப்படும் சுவிசேஷக் கிறிஸ்தவ உலகில் கிறிஸ்தவ சபைத்தலைவர்களாக இருந்தாலும் அல்லது கிறிஸ்தவ ஊழியப்பணி செய்து வருகிறவர்களிடம் அடிப்படை வேத இறையியலறிவு இல்லாமலிருந்து வருவது இன்னுமொரு காரணம். இதற்கு எத்தனையோ காரியங்கள் இருந்தபோதும் பெந்தகொஸ்தே கெரிஸ்மெட்டிக் இயக்கம் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய மிகத் தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கும் இந்த இயக்கம் தமிழினத்துக் கிறிஸ்தவத்தைத் தலைகீழாக மாற்றி மனித மூளைக்கும் சிந்தனைக்கும் எந்த இடத்தையும் கொடுக்காத வேதத்தோடு சம்மபந்தமில்லாத ஒரு மதத்தைக் கிறிஸ்தவம் என்ற பெயரில் உருவாக்கிவிட்டிருக்கிறது. பெந்தகொஸ்தே கெரிஸ்மெட்டிக் இயக்கத்திலும் அங்குமிங்குமாக வேதத்திற்கு மதிப்புக்கொடுத்து அதை வாசித்து தேவ பயத்தோடு வாழ்கிறவர்கள் இருந்தபோதும் அவர்கள் மிகச் சிறு தொகையே. அந்த இயக்கத்தில் பெருமளவில் இருப்பவர்கள் ஜொயல் ஒஷ்டின், பெனி ஹின், ஜொய்ஸ் மாயர் போன்றவர்களையும் அவர்களின் உதிரிகளாக இயங்கிவரும் கீழைத்தேய பொலிவூட் பாணி ஊழியம் செய்துவரும் பால் தினகரன், மோகன் சி லாசரஸ் போன்ற புரட்டர்களையும் பின்பற்றுகிறவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் வேதத்தைப் பயன்படுத்தும் முறை வேதம் போதிக்காத ஒரு முறை. வேதம் தெரிந்ததுபோல் காட்டிக்கொண்டு தங்களுடைய போலியான சொந்த அனுபவங்களுக்கு அத்தாட்சி வேதம் என்று வேதம் தெரியாதவர்கள் மத்தியில் ஆணித்தரமாக அறைகூவலிட்டு அவர்களை மோசம் செய்து வருகிறார்கள். இவர்களோடு வேதத்தின் எத்தனையோ போதனைகளில் நமக்குப் பிரச்சனைகள் இருந்தாலும், ஆரம்பப் போதனையான பாவத்தில் இருந்து விடுபட்டு மன்னிப்புப் பெற்று இரட்சிப்பை அடைவது எப்படி என்ற விஷயத்தில் இவர்களோடு நாம் அடியோடு முரண்படுகிறோம். மனிதனுடைய செயலாக வேதம் குறிப்பிடும் விசுவாசமே ஒருவனுக்கு இரட்சிப்பை அளிக்கிறது என்று இவர்கள் நம்பிவருகிறார்கள். இதன் அடிப்படையிலேயே இவர்கள் எல்லாக் கூட்டங்களிலும் கர்த்தருக்காகத் தீர்மானம் எடுக்கும்படி கூட்டத்திற்கு வருகிறவர்களை தங்களுடைய வார்த்தை ஜாலத்தால் வசப்படுத்தி தீர்மானம் எடுக்கவைத்து, அப்படித் தீர்மானம் எடுத்தவர்களை விசுவாசிகளாக பகிரங்கமாக அறிக்கை செய்கிறார்கள். இரட்சிப்பை அடையாத பெரும்பாலானோர் மோசம் போய் கிறிஸ்தவர்களாக வந்துவிட்டோம் என்ற தவறான நம்பிக்கைக்கு இவர்களால் தள்ளப்படுகிறார்கள்.
ஆவியானவர் சுவிசேஷ செய்தியைப் பயன்படுத்தி ஒருவனில் உண்டாக்கும் மறுபிறப்பே கிறிஸ்துவை அவன் விசுவாசிக்கும்படிச் செய்கிறது என்ற வேதபோதனையை இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். இந்த அடிப்படை வேதபோதனையில் தவறிழைக்கும், இவர்களுடைய வேதத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு இன்றைக்கு ‘செழிப்பு உபதேசம்’ வரை இவர்களைக் கொண்டுபோய் விட்டிருக்கிறது. வல்லமையான வேதத்தின் மூலம் மட்டுமே கர்த்தர் நம்மோடு பேசுகிறார் என்பதை நம்பாத இவர்கள் வேத இறையியலுக்கு எந்த மதிப்பும் அளிக்காமல் தங்களுடைய போலித்தனமான சொந்தப் போதனைகளையே கர்த்தரின் சித்தம் என்பதுபோல் மக்கள் முன்வைத்து ஏமாற்றி வருகிறார்கள். இத்தகையோரைப் பின்பற்றித் தங்களை வளர்த்துக் கொள்வதற்காகவே அநேகர் ஊழியப்பணிக்கு வருவதால் கிறிஸ்தவ தலைமை இன்று வேத இலக்கணங்களைக் கொண்டிராததொன்றாக இருந்து நம்மினத்து மக்களைப் பொய்யை நம்பும்படிச் செய்து வருகிறது. ஆத்துமாக்களுக்கு ஒளிவீசி ஆத்மீக இருட்டை அகற்ற வேண்டிய வேத வெளிச்சத்துக்கு இத்தகையோர் இடங்கொடுக்காது இருந்துவருவதால் நம்மினத்தார் தொடர்ந்தும் இருட்டில் இருந்து வருகிறார்கள்.
பெந்தகொஸ்தே கெரிஸ்மெட்டிக் இயக்கத்துக்கு வெளியில் வந்து பார்த்தால் சுவிசேஷ இயக்கத்தில் இன்று கிறிஸ்தவ தலைமை பெரிதும் ஆழ்ந்த இறையியல் நம்பிக்கை இல்லாமல் இருந்துவருகிறது. வேதபூர்வமான இறையியலை அறிந்துவைத்திருப்பதால் மட்டும் ஒருவர் அதை நம்பிவாழ்கிறார் என்று அர்த்தமல்ல. இஞ்சினியரிங் கற்றுக்கொண்டிருக்கிற ஒருவர் அதில் நல்லறிவு பெற்று அதைப்பயன்படுத்தி நன்றாக உழைத்துப் பெயர் பெற்று நல்ல நிலையில் இருக்கிறார் என்பதற்காக அதை ஆணித்தரமாக நம்பிவாழ்கிறார் என்று அர்த்தமல்ல. தொழிலுக்காகவும், பணத்திற்காகவும் அவர் அதைப் பயன்படுத்துகிறவராக மட்டுமே இருந்து வரலாம். அதேபோல் கிறிஸ்தவ இறையியலை ஓரளவுக்கு கற்றுக்கொண்டு பணிசெய்து வருகிறவர்கள் அதில் ஆழந்த நம்பிக்கையும், வைராக்கியமும் இல்லாதவர்களாக இருந்து வருகிறார்கள். இதன் காரணமாகவே பலர் தாங்கள் போதிப்பதன்படி வாழாமலும், அதை நடைமுறையில் தங்கள் வாழ்க்கையிலும் சபை அமைப்பிலும் பயன்படுத்தாமலும் இருந்து வருவதற்குக் காரணம். வேத இறையியல் அவர்களுக்கு தங்கள் தொழிலுக்கு பயன்படும் ஒரு சாதனமே தவிர இருதயத்தின் ஆழ்ந்த நம்பிக்கை அல்ல. அநேகர் தங்களுடைய வசதிக்கேற்ப இறையியல் நம்பிக்கைகளை மாற்றிக்கொண்டு ‘இறையியல் பச்சோந்திகளாக’ இருந்து வருகிறார்கள். இதெல்லாம் நேர்மையான நல்ல கிறிஸ்தவ தலைமை நம்மினத்து சபைகளில் அருகிக் காணப்படுவதற்கு காரணமாக இருந்துவருகின்றன.
ஆவிக்குரிய வளர்ச்சியும் ஆவியின் நடமாட்டமும்
எங்கு வேதத்திற்கு பெருமதிப்பிருந்து, அது உள்ளது உள்ளபடியாக விளக்கிப்போதிக்கப்பட்டு, அதன் வழிப்படி மட்டுமே வாழவேண்டும் என்ற வாஞ்சையும் வைராக்கியமும் ஆத்துமாக்களுக்கு இருக்கிறதோ அங்கே ஆவியானவரின் நடமாட்டத்தைப் பார்க்கலாம்; மனமாற்றமடைந்து கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களைப் பார்க்கலாம்; ஆவியின் கனிகளைப் பார்க்கலாம். ஆவிக்குரிய வளர்ச்சியும் ஆவியானவரின் நடமாட்டமும் இருப்பதற்கு கர்த்தருக்கும் அவருடைய வேதத்திற்கும் மட்டும் மதிப்பளித்து கீழ்ப்படிவோடும் அன்போடும் வாழ்வது அவசியமாக இருக்கிறது. இவை இல்லாமலிருக்கும்போது ஆவியின் நடமாட்டத்தை அதிகமாகக் காணமுடியாது. இவற்றைக் கொண்டிராமல் இருந்து வெறும் உலக ஞானத்தைப் பயன்படுத்தி ஆட்களைச் சேர்க்கும் செயல்களில் ஈடுபடுவதால் ஆவியின் கிரியையைப் பார்க்க முடியாது. இன்று உலக ஞானமே திருச்சபைகளை அதிகம் ஆண்டுவருகின்ற ஆண்டவராக இருந்துவருகிறது.
ஆவியானவரின் நடமாட்டம் இல்லாத இடங்களில் இருந்து ஆவிக்குரிய குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் தலைமை உருவாகுவதென்பது நடவாத செயல். அதிக மனத்தாழ்மையோடும், இருதய பரிசோதனையோடும், கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஜெபத்தோடு அவரில் தங்கியிருந்தால் மட்டுமே கர்த்தரின் பார்வை நம்மீது படும். வெறும் கூட்டத்தை வைத்து ஆவிக்குரிய நடமாட்டத்தை அளவிட்டுவிட முடியாது. உலக ஞானத்தைப் பயன்படுத்திப் பெருங்கூட்டத்தைச் சேர்த்துவிடலாம்; ஆவியிருப்பதுபோன்ற போலித்தோற்றத்தை உருவாக்கிவிடலாம். ஆனால் ஆவியானவர் அங்கிருக்கமாட்டார். ஆவியானவர் நம்மத்தியில் இருப்பதற்கான அடையாளத்தை எதன் மூலம் அறிந்துகொள்ளலாம் தெரியுமா? உலகத்தை வெறுத்து வாழும் பரிசுத்த வாழ்க்கையும், ஆவிக்குரிய கனிகளின் பயன்படுத்தலும், வேதத்தில் வைராக்கியமும், கீழ்ப்படிவும், கர்த்தரில் காணப்படும் அதிக நேசமுமே ஆவியானவரின் நடமாட்டத்தை நம்மத்தியில் உணரும்படியாகச் செய்யக்கூடியவை. ஏனெனில் இவையெல்லாவற்றையும் இருக்கும்படிச் செய்கிறவரே ஆவியானவர்தானே. ஆவிக்குரிய குணாதிசயங்கள் இல்லாத இடங்கள் நல்ல கிறிஸ்தவ தலைமை உருவாவதற்கு எப்படி உதவமுடியும்?
தமிழ் கிறிஸ்த சமுதாயத்தில் மெய்யான பொறுப்புள்ள தலைமைப் பஞ்சம் இருப்பதற்கு இதுவரை நான் விளக்கியிருக்கும் சில முக்கிய அம்சங்கள் பெரிய தடைக்கற்களாக இருந்து வருகின்றன. இவை அடிப்படை அம்சங்கள்; இவை மாறாமல் நல்ல தலைமை உருவாக வழியில்லை. இவையே ஒருவனை தேவமனிதனாகக் காட்டுகிற விஷயங்கள். போலித்தனமாக ஒரு மனிதன் யார் காதிலும் விழும்படி நல்ல ஜெபத்தை செய்துவிட முடியும்; வேத வார்த்தைக்கு விளக்கங் கொடுத்துவிட முடியும். ஆனால், நன்னடத்தையையும், ஆத்மீக முதிர்ச்சி, ஞானம் மற்றும் அன்பின் அடிப்படையில் வீட்டை நடத்தும் பக்குவத்தையும், அவை இருந்தால் மட்டுமே ஒருவனின் வாழ்க்கையில் பார்க்க முடியும்.
ஆண்டவர் சிரிக்கிறார்!
சாதாரணமாக மனிதர்களிடம் நாம் நகைச்சுவையை எதிர்பார்க்கலாம். ஆனால், கர்த்தருக்கும் நகைச்சுவை தெரியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சங்கீதம் 2ல், “பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்” என்கிறது. உலகத்தில் மனிதர்கள் மத்தியில் நடக்கும் அத்தனைக்கு பின்னும் கர்த்தரே இருக்கிறார். அவரை மீறி எதுவும் நடந்துவிட முடியாது என்பது வேத சத்தியம் மட்டும் அல்ல; சீர்திருத்த சத்தியத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. அத்தோடு மனிதர்களின் ஆர்ப்பாட்டமான, அகங்காரப்போக்குகளையெல்லாம் மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் கர்த்தர் நகைக்கவே செய்கிறார். ‘மனிதன் ஒன்றை நினைக்க தேவன் ஒன்றை நினைக்கிறார்’ என்ற வார்த்தைப் பிரயோகம் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் நிச்சயம் உண்மை.
கர்த்தர் நகைக்கிறார் என்று வேதம் சொல்லுவதால் கடவுளும் மனிதனைப்போலத்தான் அவருக்கும் மானுட உணர்வுகள் இருக்கின்றன என்று நினைத்துவிடக்கூடாது. ஆண்டவர் ஆவியாக இருக்கிறார் என்கிறது வேதம். அவருக்கு மனிதனைப்போல சரீரமோ, உணர்வுகளோ இல்லை; அதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருக்கிறார் ஆண்டவர். இருந்தபோதும் அவரால் மனிதனோடு அவனைப் புரிந்துகொண்டு உறவாட முடியும். மனிதன் ஆண்டவரைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மனித மொழியில் ஆண்டவருடைய எண்ணங்கள் வேதத்தில் இந்த முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பரலோகத்தில் இருக்கிறவர் மனிதனுடைய திட்டங்களையும், ஆட்டங்களையும், கூத்துக்களையும் பார்த்து நகைக்கிறார் என்கிறது வேதம். நகைத்தல் என்பது வடமொழி வார்த்தை; அத்தோடு நகைப்பு என்பது அமைதியான சிரிப்பு. வேதம் ஆண்டவர் சிரிக்கிறார் (laughing) என்கிறது. இது என்னை சிந்திக்க வைக்கிறது. உலகம் கர்த்தர் இருக்கிறார் என்பதையே மறந்து பாவத்தின் காரணமாக என்னென்னவோ திட்டங்களையெல்லாம் தீட்டி அவை நிச்சயம் நிறைவேறும் என்ற மமதையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கர்த்தருக்கு மதிப்புக்கொடுக்காத உலகம் கண்கள் இருண்டுபோய் போடும் மமதைத் திட்டங்கள் வெற்றி பெறும்போது அதற்குத் தாங்களே காரணம் என்று எண்ணி மார் தட்டிக்கொள்ளுகிறது. ஆனால், எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவான கர்த்தர் அமைதியாக அனைத்தையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்; தன்னுடைய திட்டங்கள் அனைத்தும் பூரணமாக நிறைவேற அவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளவும் செய்கிறார்.
சமீபத்தில் என் மாமனார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தங்கியிருந்தபோது அவரை விசாரிக்கப் போன நான் பக்கத்துப் படுக்கையில் இருந்த ஒரு வியாதியஸ்தரோடு அவருடைய டாக்டர் செய்த சம்பாஷனையைக் கேட்க நேர்ந்தது. அவர்களுக்கு நானிருப்பது தெரியவில்லை. அது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பேச்சு அந்த சம்பாஷனையைக் கூர்ந்து கேட்க வைத்தது. அந்த வியாதியஸ்தர் அந்த வைத்தியசாலையில் குணமடையாமல் மூன்று மாதங்கள் இருந்திருக்கிறார். அவருக்கு வயது எழபத்தைந்துக்கு மேலிருக்கும். இறந்துபோக வேண்டும் என்று தன்னுடைய ஆசையை அவர் டாக்டரிடம் பகிர்ந்துகொள்ள அதற்கு டாக்டர் அதைத் தன்னால் நிறைவேற்றி வைக்க முடியும் என்று நம்பிக்கையளித்து வருகிற வார விடுமுறைக்குள் மனைவி மற்றும் உறவினர்களுக்கு இறுதி வார்த்தைகளை சொல்லிவிடும்படிச் சொன்னார். அதற்குப் பிறகு, அவருடைய வாழ்க்கையை முடித்துவிடுகிறேன், அது மிகவும் இலகுவானதுதான், உங்களுக்கும் தொல்லையில்லை என்று மிகச் சாதாரணமாகச் சொன்னது என்னைத் திகைத்துப் போக வைத்தது. யூத்தனேசியா என்ற நவீன சமுதாயத்தின் மரியாதையான கொலையை அந்த டாக்டர் அன்று விளக்கிக் கொண்டிருந்ததை இதுதான் முதல் தடவை நான் காதால் கேட்டிருக்கிறேன். பரலோகத்தில் இருக்கும் தேவன் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறார், ‘சிரிக்கிறார்’ என்ற உணர்வே அந்த டாக்டருக்கு இருக்கவில்லை என்பது நிச்சயம்.
இந்த சம்பவம் அல்ல நான் இந்த ஆக்கத்தை எழுத ஆரம்பித்ததற்குக் காரணம். சமீபத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் உலகத்தில் நிகழ்ந்திருக்கின்றன. அவை பற்றி விளக்கவே இதை எழுத ஆரம்பித்தேன். ஒன்று, அமெரிக்கத் தூதரகம் இஸ்ரவேலின் எருசலேமில் அமைக்கப்பட்டது. இரண்டாவது, மலேசிய நாட்டில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களுந்தான் என்னை சங்கீதம் கர்த்தரைப்பற்றிச் சொன்ன வார்த்தைகளை நினைக்க வைத்தன.
அமெரிக்கா 22 வருடங்களுக்கு முன்பே தன் தூதரகத்தை எருசலேமுக்கு மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை காங்கிரஸில் எடுத்திருந்தபோதும் அதை நிறைவேற்றும் தைரியம் எந்த அமெரிக்கத் தலைவர்களுக்கும் இருந்ததில்லை. அது அரசியல் பிரச்சனைகளை உருவாக்கும் என்று எல்லோரும் அமைதியாக இருந்துவிட்டார்கள். பொதுவாக அமெரிக்கா எப்போதும் இஸ்ரவேலுக்கு நண்பனாக இருந்து வந்திருக்கிறது. இஸ்ரவேலுக்கு அதிக ஆயுத சப்ளை செய்வதும் அமெரிக்காவே. இஸ்ரவேலின் தலைநகராக எருசலேமை அமெரிக்கா ஏற்றுக்கொண்டிருந்தபோதும் பாலஸ்தீனியர்கள், இஸ்லாமிய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பினால் அமெரிக்கா இந்த விஷயத்தில் அமைதி காத்து வந்திருக்கிறது. இன்று அமெரிக்கா தன்னுடைய தூதரகத்தை டெல் அவீவிலிருந்து எருசலேமுக்கு மாற்றிக் கொண்டுள்ளது. அதற்கான முடிவை எடுத்தது மட்டுமல்லாமல் அதை உடனடியாகவே காலதாமதமில்லாமல் செய்து முடித்திருக்கிறது. ஐநா, பாலஸ்தீனியர்கள் மற்றும் பல உலக நாடுகள் இதைக் கண்டித்தபோதும் அமெரிக்கா அதைப்பற்றியெல்லாம் சட்டை செய்யாமல் இதைச் செய்திருக்கிறது. அமெரிக்காவின் டொனல்ட் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டை இதன் மூலம் பறைசாற்றியிருக்கிறது. அதாவது, எது நியாயமானது, சரியென்று படுகிறதோ அதை மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என்றெல்லாம் தயக்கம் காட்டி பயந்து நிற்காமல் உடனடியாக செய்து முடிப்பதே நல்ல தலைமைக்கு அழகு என்பதை அமெரிக்கா உலகுக்கு அறிவித்திருக்கிறது.
அமெரிக்காவின் இந்தச் செயல் அந்நாட்டின் சுவிசேஷ கிறிஸ்தவர்கள் எந்தளவுக்கு பொதுவாழ்வில் செல்வாக்குள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. உதவித் தலைவராக இருக்கும் மைக் பென்ஸ் ஒரு கிறிஸ்தவர். இஸ்ரவேலும், எருசலேமும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளில் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க தூதரகத்தைத் திறந்து வைத்து மைக் பென்ஸ் எருசலேமில் உரையாற்றியிருக்கிறார். பாலஸ்தீனியர்களும், ஹமாஸ், ஹிஸ்பொலா போன்ற தீவிரவாத இயக்கங்களும், பாலஸ்தீனிய அமைப்பும் தீவிரமாக எதிர்த்து வந்திருந்த, எதைச் செய்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று உலக அரசுகள் பயந்திருந்தனவோ அந்தச் செயலை அமெரிக்க தலைமை மிகச் சாதாரணமாக செய்து முடித்திருக்கிறது. அதுவும் இஸ்ரவேல் நாடாக மலர்ந்த 70 வருட நினைவு நாளில் அதைச் செய்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு சார்பான செயல், யூதர்களுக்கு ஆதரவளிக்கும் செயல் என்றெல்லாம் பயந்து நிற்காமல் அமெரிக்க தலைமை செய்திருக்கும் இந்தக் காரியம் வரலாற்றில் முக்கியமானதுதான். எது ஒருபோதும் நடக்காது என்று உலகம் நினைத்திருந்ததோ அது நடந்துவிட்டது. அத்தோடு அமெரிக்கா பகிரங்கமாக இஸ்ரவேலின் தலைநகரம் எருசலேம் என்பதை இதன் முலம் ஒத்துக்கொண்டிருக்கிறது. ஆண்டவர் நகைக்கிறார்!
சமீபத்தில் மலேசிய நாட்டில் நிகழ்ந்த தேர்தலில் வரலாறு காணாத நிகழ்ச்சியொன்று நடந்திருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து அதை ஒரேயொரு கட்சி (அம்னோ) 61 ஆண்டுகள் ஆண்டு வந்திருக்கின்றது. நாட்டின் பிரதமர்களெல்லாம் அக்கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர். அதுவும் அந்தக் கட்சி நாட்டில் அதிகத் தொகையினராக இருக்கும் மலே இனத்தவர்களுக்கு சார்பான கட்சியாக அவர்களுடைய நலத்திற்கே முக்கியத்துவம் தந்து வந்த கட்சியாக இருந்தது. ஏனைய இனத்தவர்களான சீனர்களும், இந்தியர்களும் அவர்களுக்கு அடுத்த இடத்திலேயே இத்தனை காலமும் இருந்து வந்திருக்கிறார்கள். அந்த நாட்டில் அதிக காலம் பிரதமராக இருந்து வந்திருந்தவர் மகாதீர் முகமட். இருபத்தி இரண்டு வருடங்கள் அவர் பிரதமராக இருந்து மலே இனத்தவர்களுக்கு அதிகம் செய்து வந்திருந்தார். அக்காலப்பகுதியில் இந்தியர்கள் வாழ்க்கையில் மிகவும் பின்னடைந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். அவருடைய கட்சிக்கு கால்வருடும் கட்சியாகவே மலேசியாவின் இந்தியர்களின் கட்சியும் இருந்து வந்தது. வயது போய்க்கொண்டிருக்கிறது என்பதால் மகாதீர் முகமட் தன்னுடைய உதவிப் பிரதமராக இருந்த படாவியை பிரதமராக நியமித்து ஓய்வு எடுத்துக்கொண்டார்.
மகாதீர் பிரதமராக இருந்தபோது படாவிக்கு முன் அவருக்கு உதவிப்பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்தவர் அன்வார் இப்ராகிம். இளமையும் திறமையும் கொண்டிருந்த அன்வாரின் செல்வாக்கு நாளடைவில் அதிகரித்ததைக் கண்ட மகாதீர் அதை விரும்பவில்லை. அத்தோடு அவருக்கும் நாட்டின் பொருளாதாரம் சம்பந்தமான விஷயத்தில் அன்வாருக்கும் கருத்துவேறுபாடு உருவாகியது. மகாதீர் அன்வாரைப் பதவியில் இருந்து நீக்கி இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி ஜெயிலில் தள்ளினார். சிலவருடங்களுக்குப் பின் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அன்வார் புதுக்கட்சியொன்றை (பக்கட்டான் ரெக்யெட் & மக்கள் நீதிக்கட்சி) ஆரம்பித்தார். மக்கள் சுதந்திரம் என்ற கோட்பாட்டை முன்வைத்து தேர்தலில் நின்ற அந்தக் கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றது. அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் அன்வாரின் கட்சி அதிக பலமடைந்து முதன் முறையாக பெருந்தொகையினர் எதிர்க்கட்சி பாராளுமன்ற அங்கத்தவர்களாகினர். ஆளும் கட்சியில் பெரும்பான்மை இல்லாமல் போனது. இருந்தும் அன்வாரின் கட்சியால் ஆட்சியைப் பிடிக்குமளவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை. படாவிக்குப் பின் பிரதமராக வந்த நஜீப் ரசாக் (அவருடைய தந்தை முன்னாள் பிரதமர்) அன்வாரின் செல்வாக்கு உயர்வதைப் பிடிக்காமல் மறுபடியும் போலிக்குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெயிலில் தள்ளினார். அன்வாரின் மனைவி வென் அசீசா கட்சியின் தலைவரானார். அவருடைய மகள் நூருளும் நாடாளுமன்ற அங்கத்தவராக இருந்தார். அவர்கள் அன்வாரின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடி வந்தனர்.
அன்வார் ஜெயில் தள்ளப்பட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு பிரதமர் நஜீப் ரசாக்கின் எல்லையற்ற பணமோகத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும், கோடிக்கணக்கான அரச நிதிச் சுரண்டலையும் கண்டு கோபமுற்ற முன்னாள் பிரதமரான மகாதீர் முகமட் ஓய்வில் இருந்து வெளிவந்து அன்வாரின் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அத்தோடு நஜீப்புக்கு எதிராக மக்கள் முன் கூட்டங்களில் பேச ஆரம்பித்தார். அன்வாரின் கட்சித் தலைவராக இருந்த அன்வாரின் மனைவியும் மனம் மாறி தன் கணவனுக்கு துரோகம் செய்திருந்த மகாதீரை மன்னித்தார். சமீபத்தில் நிகழ்ந்த தேர்தலில் அன்வாரின் கட்சி ஏனைய எதிர்க்கட்சிகளோடும் மகாதீரோடும் இணைந்து நஜீப்புக்கு எதிராக தேர்தலில் நின்றது. பிரதமர் நஜீப்பும், ஆளும் அம்னோ கட்சியும், அரச இயந்திரங்களும் எதிர்க்கட்சிகள் வெற்றிபெறாமல் இருக்க அவர்களுக்கு எதிராக என்னென்ன தடைகளை உண்டாக்க முடியுமோ அதையெல்லாம் செய்தனர். தேர்தலை எப்போதும் இல்லாதவாறு வாரநாளிலும் வைத்தனர். இருந்தும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களையும், வாக்கையும் பெற்று எதிர்க்கட்சி மலேசியா வரலாற்றில் முதன் முறையாக ஆட்சியைப் பிடித்தது. ஏற்கனவே எதிர்க்கட்சிகளால் தீர்மானிக்கப்பட்டிருந்தபடி மகாதீர் முகமட் அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் 93ம் வயதில் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். நிச்சயம் மலே மக்கள் மத்தியில் மகாதீருக்கு தொடர்ந்து இருந்த செல்வாக்கு எதிர்க்கட்சிகளுக்கு உதவிசெய்தது. உலகத்தில் இத்தனை வயதில் ஆட்சியில் இருக்கும் ஒரே தலைவர் மகாதீர்.
மகாதீர் ஒரிரு வருடங்களுக்கு மட்டுமே பிரதமராக இருப்பேன் என்றும் அதற்குப் பிறகு அன்வார் பிரதமராவார் என்றும் அறிவித்தார். பிரதமரானதும் அவர் செய்த முதல் காரியமே நாட்டு அரசரைச் சந்தித்து அன்வாரை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டதுதான். அதன்படி முழு மன்னிப்புப் பெற்று அன்வார் இப்போது விடுதலையாகியிருக்கிறார். மகாதீரின் உதவிப் பிரதமராக அன்வாரின் மனைவி வென் அசாசி பதவியில் இருக்கிறார். தேர்தல் முடிந்து முதல் முறையாக மலே, சீன மற்றும் இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி இப்போது நாட்டை ஆளுகிறது. தனக்கு என்ன நடந்தது என்பதை ஆட்சியில் இருந்த மலே கட்சியான அம்னோ இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது; அது இன்னும் ஆட்சியை இழந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. தன்னை அசைக்க முடியாது என்று எண்ணி வாழ்ந்த முன்னாள் பிரதமர் நஜீமும் அவருடைய மனைவியும் கணக்கற்ற அரச குற்றச்சாட்டுகளுக்கும், தொடரப்படப்போகும் நீதிமன்ற வழக்குகளுக்கும் முகங்கொடுத்து பயத்தோடு வாழ்ந்து வருகின்றனர். நஜீப்பின் மனைவி அரச நிதியைப்பயன்படுத்தி வாழ்ந்திருக்கும் சொகுசு வாழ்க்கை பற்றிய விபரங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பத்திரிகைகளில் வர ஆரம்பித்திருக்கின்றன. அது தமிழகத்து ஜெயலலிதாவை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.
மலேசியாவில் நடந்திருக்கும் ‘அரசியல் சுனாமி’ நாட்டு மக்களை முதல்தடவையாக சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்படிச் செய்திருக்கிறது. அரசு மக்களாட்சி நடத்தும் என்ற நம்பிக்கை வலுத்திருக்கிறது. அதையெல்லாம் விட மேலாக நாட்டில் மதசுதந்திரத்துக்கு மதிப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது. இதுவரை மலே மக்களின் இஸ்லாமிய மதநம்பிக்கைக்கு மட்டுமே முதலிடம் தரப்பட்டிருந்தது. கிடைத்திருக்கும் சுதந்திரமும், அரசியல் மாற்றங்களும் மலேசியாவில் முழு மத சுதந்திரத்துக்கு வழிவகுத்து கிறிஸ்தவ சுவிசேஷம் எந்தளவுக்குப் பரவி நாட்டு மக்களின் ஆத்மீக விடுதலைக்கு வழிவகுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். கிடைத்திருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி திருச்சபைகள் வேதபூர்வமான வழிமுறைகளை மட்டும் நாடி கிறிஸ்துவை மனந்திரும்புதலோடு மகிமைப்படுத்த வேண்டிய பொன்னான காலங்கள் இவை. பரலோகத்தில் அமைதியாக இருந்து ஆண்டவர் நகைக்கிறார்!
வாசகர்களுக்கான இறுதி வார்த்தை
வேதம் போதிக்கும் தேவபயம் – 7
– அல்பர்ட் என். மார்டின் –
முதலாவது அதிகாரத்தில், வேதம் தேவபயத்திற்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை விளக்கினேன். அதற்கு ஆதாரமாக வேதத்தின் பல முக்கியமான பகுதிகளைத் தெரிவு செய்து விளக்கியிருந்தேன். எனினும், இந்தப் புத்தகத்தின் இறுதியில் குறிப்பிட வேண்டும் என்பதற்காக, ஒரு பகுதியை நான் இதுவரை குறிப்பிடாமல் வைத்திருந்தேன். அந்தப்பகுதிதான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டதற்கான நோக்கத்தைத் தன்னில் கொண்டிருக்கிறது. அந்த வேதப்பகுதி எபிரெயர் 12:18-29. இந்தப்பகுதியில் குறிப்பாக 28-29 ஆகிய வசனங்களில்தான் நம்முடைய கவனத்தைச் செலுத்தப் போகிறோம். எனினும், வாசகர்களின் வசதிக்காக அந்த வேதப்பகுதி முழுவதையும் இங்கே தந்திருக்கிறேன்.
“18. அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும், 19. எக்காளமுழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள். 20. ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள். 21. மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது. 22. நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், 23. பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், 24. புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். 25. பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்? 26. அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ் செய்திருக்கிறார். 27. இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது. 28. ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். 29. நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.”
எபிரெயர் புத்தகம் முழுவதும், தெளிவற்று இருந்த எபிரெய கிறிஸ்தவர்கள் விசுவாசத்திலும் கீழ்ப்படிவிலும் விடாமுயற்சியுடன் தொடருவதற்கு அவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் ஒரு போதகனின் பார்வையில் எழுதப்பட்டது. இந்நிருபத்தை எழுதியவர், இதை முடிவுக்குக் கொண்டு வருகிறபோது, மோசேயின் கீழாக கொடுக்கப்பட்ட பழைய உடன்படிக்கையின் சூழலையும் அதன் சாராம்சத்தையும் இயேசுவின் மூலமாக கொடுக்கப்பட்ட புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுடைய சூழலையும் சாராம்சத்தையும் சுட்டிக்காட்டி அவைகளுக்கிடையே இருக்கும் வேறுபாட்டை மிகவும் தெளிவாக விளக்குகிறார். 19வது வசனத்தை 24வது வசனத்தோடு ஒப்பிட்டு, இந்த வேறுபாட்டைத் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறார். 19வது வசனத்தில் “நீங்கள் வந்து சேரவில்லை” என்று சொல்லப்பட்டிருக்கிறது, ஆனால், 24வது வசனத்தில் “வந்து சேர்ந்தீர்கள்” என்று இருக்கிறது.
இதில், புதிய உடன்படிக்கையில் காட்டப்பட்டுள்ள இயேசுவையும் அவருடைய செயலையும் நிராகரிப்பதிலுள்ள ஆபத்துக்களை ஆசிரியர் இறுதி எச்சரிக்கையாக கொடுக்கிறார். 25-27 வசனங்களில் அந்த எச்சரிப்பு விவரிக்கப்பட்டுள்ளது. பிறகு, 28-29 வசனங்களில், மிக முக்கியமானதொரு ஒரு புத்திமதியைத் தருகிறார், “ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே”.
பழைய உடன்படிக்கை கொடுக்கப்பட்ட சூழல் மிகவும் பயங்கரமாக இருந்தது. மோசேயே, “நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன்” (வசனம் 21) என்று சொன்னார். இது பயங்கரத்தினாலும், திகிலினாலும் உண்டான பயம். புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள் இந்த பயத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. எனினும், புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள், தேவபக்திக்கு ஆதாரமாகிய தேவபயத்தை இல்லாமலாக்கிவிடவில்லை. புதிய உடன்படிக்கையின் மூலமாக இந்த தேவபயமானது நம்முடைய இருதயங்களில் நாட்டப்படும் ஒரு ஆசீர்வாதமாகவே அடையாளங் காட்டப்பட்டுள்ளது. 28-29 வசனங்களின் அடிப்படையில், புதிய உடன்படிக்கையின் மூலமாக நமக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து ஆசீர்வாதங்களுக்கான நன்றியுணர்வானது, “நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே” என்ற விதத்திலேயே நம்மை வழிநடத்தும். இயேசு கிறிஸ்துவுக்குள் பாவிகளுக்கு வழங்கப்படும் இரட்சிப்பை நான் பெற்றிருக்கிறேன் என்று நீங்கள் சொல்லுவது, கடவுளைப் பயத்தோடும் பக்தியோடும் ஆராதிப்பதற்கான மனநிலையை உங்களில் ஏற்படுத்தாவிட்டால், உங்களுடைய எண்ணத்திலும், கடவுளுடைய கிருபையுள்ள இரட்சிப்பின் அனுபவத்திலும் ஏதோ கோளாறு உண்டு என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்நாட்களில், விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்ளுகிற அநேகர், ஆராதனை என்ற பெயரில் செய்கிறவைகளைப் பார்க்கிறபோது, கடவுள் இப்போது “பட்சிக்கிற அக்கினியாய் இருப்பதில்லை” என்ற தவறான முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஆராதனையை நடத்துகிற அநேகர், கடவுளை மென்மையான, கொழுத்த, கட்டித் தழுவக்கூடிய, மெல்லிய பஞ்சினாலான ஒரு கரடி பொம்மையைப் போலத்தான் தோற்றமளிக்கிறார் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. எபிரெயர் நிருபத்தை எழுதியவர், கடவுளை புகையும், கொழுந்துவிட்டு எரியும் நெருப்பும், இடிமின்னல்களும் காணப்பட்ட சீனாய் மலையின் பட்சிக்கிற அக்கினி என்பதாக சொல்லவில்லை. மாறாக, புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை எடுத்துரைத்தபிறகு, கடவுள் “பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார்” என்று சொல்லியிருக்கிறார். இந்த உண்மையே, நாம் அவரை ஆராதிப்பதற்கும், அவருக்கு ஊழியம் செய்வதற்குமான எல்லையை வகுக்கிறதாக இருக்கிறது.
29வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “இருக்கிறாரே” என்ற வார்த்தைப் பிரயோகம், 28 மற்றும் 29வது வசனங்களை ஒன்றிணைத்து, நம்முடைய ஆராதனையும் ஊழியமும் எப்படி அமைய வேண்டும் என்பது, நாம் ஆராதிக்கிற, ஊழியஞ்செய்கிற கடவுளுடைய தன்மையை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும், புதிய உடன்படிக்கைக்குரியவர்களின் ஆராதனையானது, “பக்தியும் தேவபயமும்” கொண்ட சூழலில் இருக்க வேண்டும். அநேகர் “பயத்தோடும் பக்தியோடும்” என்பதை ஆரோக்கியமற்ற, வறண்ட, மந்தமான நிலைக்கான மாற்று வார்த்தை என்பதாக தவறாக விளங்கிக்கொள்ளுகிறார்கள்.
சங்கீதம் 47:1-2, ஆராதனைக்கு நம்மை தயார்படுத்தும் பரிசுத்த ஆவியானவருடைய நேரடி வார்த்தைகளைக் கவனியுங்கள், “சகல ஜனங்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள். உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்”. சங்கீதக்காரனுடைய இந்த வார்த்தைகளின்படி, தேவபயத்துடனான ஆராதனையானது, மகா ராஜாவை மிகுந்த ஆர்வத்துடன், ஆராதிக்கிறவர்களின் இருதயம், கை, மற்றும் குரல் ஆகிய அனைத்தோடும் ஈடுபடுவதாகும். 17வது நூற்றாண்டின் பாடலாசிரியரான மார்டின் ரின்கர்ட் (Martin Rinkart), சங்கீதம் 47:1-2 ஆகிய வசனங்களை அடிப்படையாக வைத்துதான், தன்னுடைய ஒரு பாடலின் முதல் வரியாக இப்படி எழுதியிருக்கிறார், “நாமனைவரும், நம்முடைய இருதயத்தோடும், கைகளோடும், குரலோடும், நம்முடைய தேவனுக்கு இப்போது நன்றி தெரிவிப்போம்”.
“பயத்தோடும் பக்தியோடும்” என்ற வார்த்தைப் பிரயோகம், ஒருபோதும் சாதாரணமான, விளையாட்டுத்தனமான, வேடிக்கையான என்ற வார்த்தைகளோடும் மற்றும் போலியான பகட்டோடும் எந்தவிதத் தொடர்பும் கொண்டதல்ல. மேலும், “பயத்தோடும் பக்தியோடும்” என்ற வார்த்தைகள், கடவுளைப் பற்றிய எந்தவிதமான எண்ணமும் அற்றதாக வெறும் உதட்டளவு வார்த்தைகளாக மட்டுமே இருக்கிற ஜெபத்தோடும் தொடர்புடையதல்ல. அதாவது நாம் ஜெபத்தை ஏறெடுக்கிற கடவுள், “பரலோகத்தில் இருக்கிற நம்முடைய பிதா” (மத்தேயு 6:9). ஏசாயா தீர்க்கதரிசி விவரித்திருப்பதுபோல் “நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர்.” ஏசாயா 6வது அதிகாரத்தில் சேராபீன்கள் தங்கள் முகங்களையும் கால்களையும் மூடிக்கொண்டு “சேனைகளின் கர்த்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” (ஏசாயா 6:3) என்று ஒருவரையொருவர் பார்த்து சொல்லிய அந்தக் காட்சி, எந்த தேவனிடத்தில் ஜெபிக்கிறோம் என்ற எண்ணமற்றவர்களாக ஜெபிக்கிறவர்களோடு தொடர்புள்ளதல்ல. “பயத்தோடும் பக்தியோடும்” ஆராதிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஜோன் ஓவன் சொல்லிய வார்த்தைகளை நாம் கவனிப்போம்.
இவ்வார்த்தைகள் எதைத் தடைசெய்கிறது என்று அறிந்துகொள்ளும் போதுதான் இவ்வார்த்தைகளை நாம் சரியாக அறிந்து உணர்ந்திருக்கிறோம் என்பதற்கு அறிகுறி. அதாவது,
கடவுளுடைய மகிமையையும் மகத்துவத்தையும் பற்றி உணர்வற்றிருப்பது.
நம்முடைய இழிவான நிலையைப் பற்றி உணர்வற்றிருப்பது.
ஆத்மீக கடமைகளை மாம்சீக தைரியத்தோடு செய்வது; இதை கடவுள் வெறுக்கிறார். ஆராதனையில் பயபக்தி என்பது, கடவுளுடைய மகத்துவத்தையும், நம்முடைய இழிவான நிலையையும் உணர்ந்தவர்களாக, நம்முடைய ஆத்துமாவைத் தாழ்த்துவதாகும். தேவபயம் என்பது கடவுளுக்கான ஆராதனையில் பாவகரமான காரியங்களை செய்துவிடுவதனால் உண்டாகும் பயங்கரத்தை அறிந்தவர்களாக, பரிசுத்த கடமைகளை ஆத்மீக பயத்துடன் செய்வதாகும்.
வேதத்திலுள்ள சாட்சியங்களின் அடிப்படையில், அப்போஸ்தலர்களுடைய காலத்திற்கே உரிய தனித்துவமான ஆவிக்குரிய வரங்கள் பலவற்றை கொரிந்துவிலிருந்த சபை பெற்றிருந்தது. இப்படியான வரங்களைப் பெற்றிருந்து, அப்போஸ்தலர்களுடைய வழிகாட்டுதலின்படி நடந்துவந்த சபையில், ஆராதனை மற்றும் ஊழியங்களில் ஒரு குறிப்பிட்ட ஆராதனை வழிகாட்டு முறைகளைப் பின்பற்றுவதென்பது கடினமான ஒன்றுதான். எனினும், பரிசுத்த ஆவியானவருடைய அசாதாரண வெளிப்படுத்தலின் சூழலிலும், பவுல் சொல்லுகிறார், இத்தகைய வரங்களின் மூலமாக கடவுள் எப்படிப்பட்டவர் என்பது வெளிப்படுத்தப்பட்டு, அங்கு வருகிற அவிசுவாசியான ஒருவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்கள் அதன் மூலம் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டு, “அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.” (1 கொரிந்தியர் 14:24-25). வேறுவிதமாக சொல்லுவதானால், அந்த நபருடைய மனமானது, இத்தகைய அசாதாரண வரங்களினால் ஒளியூட்டப்பட்டு, புதிய உடன்படிக்கையின்படி கூடிவருகிறவர்களாகிய இவர்கள் மத்தியில் இருக்கிற தேவனானவர், “பயத்தோடும் பக்தியோடும்” வழிபட வேண்டியவர் என்ற உண்மையை அவன் அறிந்துகொள்ளுகிறான். அந்த அவிசுவாசியானவன், முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொண்டான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காலத்தில் அநேக நவீன சுவிசேஷ இயக்கங்களும், சீர்திருத்தத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற சிலரும் காட்டுவதுபோல், கடவுள் கட்டிப்பிடித்து விளையாடும் ஒரு கரடி பொம்மையைப் போன்றவர் என்ற எண்ணத்தை அந்த சூழல் அந்த அவிசுவாசியான நபரில் ஏற்படுத்தவில்லை. மாறாக, இந்த தேவனை “பயத்தோடும் பக்தியோடும்” சேர வேண்டும் என்று உணர செய்தது.
வேதம் போதிக்கும் கிறிஸ்தவ அனுபவத்தின் மையமாக இருக்கிற தேவபயத்தைப் பற்றி ஒரு கிறிஸ்தவன் தீவிரமாக சிந்திக்கிறபோதுதான், அவர்கள் கூடிவந்து ஆராதிக்கிற, அந்த ஆராதனையானது, “தேவபக்தியும் தேவபயமும்” கொண்டதாக இருக்கும். அநேக மெய்யான கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் தேவபயமானது அதிகரிக்கவும், அது தொடரவும், தேவன்தாமே இந்தப் புத்தகங்களின் பக்கங்களைப் பயன்படுத்துவாராக.
இந்தப் புத்தகத்தை வாசித்த சிலர், சுவிசேஷத்தின் மூலமாக இலவசமாக வழங்கப்படுகிற இரட்சிப்பின் ஆசீர்வாதங்களைப் பற்றிய எந்தவிதமான அனுபவத்தையும் நீங்கள் அடையவில்லை என்பது உங்களில் முற்றிலும் தேவபயம் இல்லை என்பதற்கான மறுக்க முடியாத சான்றாக இருக்கிறது என்ற முடிவுக்கு நீங்கள் வந்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஜெபமாக இருக்கிறது. உங்களுக்கான என்னுடைய அன்பான ஆலோசனையும் புத்திமதியும் மிகவும் எளிமையானது. இந்தப் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவிடம் நேராக செல்லுங்கள். அவர், தமது மூலமாக தேவனிடத்தில் வருகிற யாவரையும் ஏற்றுக்கொண்டு, அந்த உடன்படிக்கையில் வாக்களிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் தன்னுடைய தேவையை உணர்ந்து வருகிற பாவிகளுக்குக் கொடுக்கிறார். ஏசாயா தீர்க்கதரிசியினுடைய வாக்கியங்களின்படி, நான் உங்களை வற்புறுத்திக் கேட்டுக்கொள்ளுவது என்னவென்றால்,
“கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்” (ஏசாயா 55:6-7).
கிறிஸ்தவ வைராக்கியத்தின் சாதகமான உதாரணங்கள்
பக்தி வைராக்கியம் – 9 – டேவிட் மெரெக்
[பக்தி வைராக்கியம் என்ற தலைப்பில் வந்துகொண்டிருக்கும் இந்தத் தொடர், போதகர்களுக்காக நடத்தப்பட்ட இறையியல் போதனை வகுப்புகளில் போதகர் டேவிட் மெரெக்கினால் கொடுக்கப்பட்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் M. ஜேம்ஸ்.]
இதுவரை நாம் படித்தவைகளை சற்றுத் திருப்பிப் பார்ப்போம். முதலில், இந்தத் தலைப்பு சம்மந்தமாக இரண்டு முக்கிய வேதப்பகுதிகளை நாம் கவனித்தோம், தீத்து 2:13-14 மற்றும் ரோமர் 12:11. தீத்து 2ல், நாம், பக்தி வைராக்கியம் கடவுளிடமிருந்தே வருகிறது என்பதைப் படித்தோம். ஆனால் ரோமர் 12:11ல், பக்தி வைராக்கியம் என்பது நம்முடைய தனிப்பட்ட சொந்தப் பொறுப்புகளையும் உள்ளடக்கியது என்ற உண்மையையும் கண்டோம். பிறகு ரோமர் 12:11வது வசனத்தைச் சுற்றியிருக்கும் வசனங்களுக்கான விளக்கத்தைப் பார்த்தோம். நடைமுறை விஷயங்களை விளக்கும் அந்த பெரிய வசனப்பகுதியானது, கிறிஸ்துவுக்காக வைராக்கியத்தோடு ஊழியம் செய்யும் அனலுள்ள இருதயத்தைப் பற்றி பவுல் 11 வது வசனத்தில் சொல்லியிருப்பதோடு பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கும் கிறிஸ்தவ வாழ்க்கையின் பல அம்சங்களை உள்ளடக்குகிறது. பிறகு, ரோமர் 12:11ல் இருக்கும் மூன்று சொற்றொடருக்கான விளக்கங்களைப் படித்தோம். முழு இருதயத்தோடு கர்த்தருக்கு ஊழியம் செய்வதற்கு எதிராக இருக்கும் பாவகரமான வைராக்கியத்தின் பல வடிவங்களைக் குறித்து முந்தைய அதிகாரத்தில் படித்தோம்.
இப்போது, பக்தி வைராக்கியம் பற்றிய நம்முடைய இந்த ஆய்வு படிப்பில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையைத் தொடங்கப் போகிறேன். இந்தப் புதிய அணுகுமுறை கிட்டத்தட்ட நம்முடைய இந்த ஆய்வின் முடிவு வரை தொடரப்போகிறது. ஒரு வரைபடம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்று சொல்லுவார்கள். வேதத்தில், பக்தி வைராக்கியத்தை விளக்கும் அதிரடி உதாரணங்கள் பல உள்ளன. அப்படிப்பட்ட உதாரணங்களிலேயே நம்முடைய கவனத்தை செலுத்தப் போகிறோம். அப்படிச் செய்வதன் மூலமாக, இந்த முக்கியமான தலைப்பைப் பற்றிய அதிகமான விஷயங்களை நாம் கற்றறியலாம். இதில், சுவிசேஷ ஊழியத்தில் பக்தி வைராக்கியத்தோடு செயல்பட்ட, புதிய ஏற்பாட்டிலுள்ள அநேக ஊழியர்களில் நம்முடைய கவனத்தை செலுத்தப் போகிறோம்.
- யோவான் ஸ்நானன்
யோவான் 5:33-35 – 33. நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்குச் சாட்சிகொடுத்தான். 34. நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். 35. அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.
குறிப்பாக 35வது வசனத்தை கவனியுங்கள். அதில் இயேசு யோவான் ஸ்நானைப் பற்றி சொல்லிய வார்த்தைகளைப் பார்க்கலாம், “அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்”. இங்கு “எரிந்து” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை புதிய ஏற்பாட்டில் வைராக்கியத்திற்கு மிகவும் நெருக்கமான வார்த்தையாகும். வைராக்கியத்தை விளக்குகிற வார்த்தைகளில் எரிகிற அல்லது சூடாகுதல் என்பதன் பொருள் இருப்பதை நினைவுகூருங்கள். ஆகவே யோவான் ஸ்நானனை வைராக்கியமுள்ள விளக்கு என்று சொன்னால் அது மிகையாகாது. அவன் வைராக்கியத்தோடு எரிகிற வெளிச்சமாக, இருளிலிருந்த யூத தேசத்தில் பிரகாசித்தான். அவன் பிரகாசிக்கிற வெளிச்சமாக இருந்தான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அப்படியென்றால் என்ன? பிரகாசித்தல் என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில், மனிதர்களால் பார்க்கக்கூடியதாக என்ற விதத்தில் ஏனைய இடங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆகவே பிரகாசிக்கிற விளக்கு என்பது பளிச்சென்று ஒளிருகிறதாக சுற்றியிருக்கிற எல்லாருக்கும் தெரிகிறதாக இருக்கும் என்பதாகும். ஒட்டுமொத்த இடத்தையும் ஒளிரவைக்கக் கூடிய பிரகாசமுள்ள விளக்கைப் போன்றது.
எந்தவிதத்தில் யோவான் ஸ்நானன் இத்தகைய விளக்காக இருந்தான்? வசனம் 33 சொல்லுகிறது, அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுக்கும் விளக்காயிருந்தான் என்று. கடவுள் அவன் மூலமாக பேசுகிறார் என்பது எல்லாருக்கும் தெரிகிறவிதமாக, அவன் வைராக்கியத்தோடும் தெளிவாகவும் கடவுளுடைய வார்த்தைக்கான உண்மையுள்ள தீர்க்கதரிசியாக வெளிப்படையாக பேசினான்.
யோவான் ஸ்நானனுடைய வாழ்க்கை மற்றும் ஊழியத்தைப் பற்றி படிக்கிறபோது, கடவுளுடைய வார்த்தைக்கான யோவனுடைய சாட்சியத்தில், சுவிசேஷ சத்தியத்தின் இரண்டு முக்கியமான அம்சங்கள் அடங்கியிருந்ததை நாம் பார்க்கலாம்.
முதலாவது, யோவான், யூத மக்களுடைய பாவங்களின் மீது கடவுளுடைய வார்த்தையின் விளக்காக பிரகாசித்தான். அவன் அவர்களை மனந்திரும்புபடி அழைத்தான். அதுவே மத்தேயு, மாற்கு, மற்றும் லூக்கா சுவிசேஷங்களில் அவனைப் பற்றிய முக்கிய பதிவாக இருக்கிறது. வானந்திரத்தில் யோவான் பிரசங்கித்தபோது, அவனுடைய ஆரம்ப செய்தி என்ன? “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்” (மத்தேயு 3:2). அவனை நாடி வந்தவர்கள் “தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்” (மத்தேயு 3:6). மாய்மால யூதத் தலைவர்கள் அவனிடம் வந்தபோது, அவர்கள் மெய்யான மனந்திரும்புதலோடு, மனந்திரும்புதலின் கனிகளைத் தரும்படி அவர்களிடம் எடுத்துச் சொன்னான் (மத்தேயு 3:7-10).
லூக்கா 3:10-14 – 10. அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். 11. அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான். 12. ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். 13. அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான். 14. போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண் செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.
அவன் தனக்கு முன் நின்றிருந்தவர்களில் ஒவ்வொரு கூட்டத்தினரையும் பார்த்து, அவர்களின் பாவங்களை குறிப்பாக அடையாளங்காட்டி எடுத்துச் சொன்னான். மனந்திரும்புதலின் கனி எப்படியிருக்கும் என்பதையும் அவன் குறிப்பாக விளக்கினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:4ல் பவுல், யோவான் மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானம் தந்ததாக அறிவித்தான். பிறகு, ஏரோது ராஜா தன் சகோதரனுடைய மனைவியை திருமணம் செய்து விபச்சாரத்தில் ஈடுபட்டபோது, அவன் அப்படிச் செய்தது நியாயமானதல்ல பாவகரமானது என்று நேரடியாகக் கண்டனம் பண்ணினான்.
மத்தேயு 14:3-4 – 3. ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். 4. ஏனெனில்: நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.
மனந்திரும்புங்கள் என்று சொல்லுகிறதோடு அவன் நிறுத்திக்கொள்ளவில்லை. வருகிற மேசியாவாகிய கர்த்தராகிய இயேசுவையும் மனிதர்களுக்கு சுட்டிக்காட்டினான். மத்தேயு 3வது அதிகாரத்தில் நாம் வாசிப்பது போல், வருகிற மேசியாவாகிய கர்த்தராகிய இயேசுவுக்கு வழியை ஆயத்தம்பண்ணுவதுதான் யோவானின் ஊழியமாக இருந்தது. தனக்கு பின் வருகிறவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் தருவார் என்று அவன் அறிவித்தான்.
மத்தேயு 14:11-12 – 11. மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 12. தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
அவர் துன்மார்க்கரை அக்கினியால் நியாயந்தீர்ப்பார் என்றான். மனந்திரும்புகிற தம்முடைய மக்கள்மீது தம்முடைய ஆவியை அவர் ஊற்றி அவர்களைத் தமக்காக அவர் சேர்ப்பார் என்றான். லூக்கா 1:16ன்படி, யோவான் மனிதர்களின் இருதயங்களை அவர்களுடைய மேசியாவிடம் திருப்புகிறதன் மூலம் கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணினான். யோவான் இயேசுவைப் பார்த்தபோது, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அறிவித்தான்
யோவான் 1:26, 36
- யோவான் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்.
- இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:4ல் பவுல் மறுபடியும் யோவானின் ஊழியத்தைக் குறித்துச் சொல்லுகிறபோது, “அவன் மனிதர்களிடம் தனக்குப் பின் வருகிறவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்று சொன்னதாக” குறிப்பிட்டிருக்கிறார். இது யோவானுடைய ஊழியத்தின் இரண்டாவது அம்சம். அதாவது அவன் கர்த்தராகிய இயேசுவுக்கு சாட்சியாக இருப்பது. யோவான் 5:35ல், இயேசு யோவானை எரிந்து பிரகாசிக்கிற விளக்கு என்று விவரித்தபோது, இதை மனதில் வைத்தே சொன்னார். யோவான் 5:35-36 வசனங்களை மறுபடியும் வாசியுங்கள் (கவனியுங்கள் அவனுடைய சாட்சி குறிப்பாக இயேசுவைப் பற்றியதாகவே இருந்தது).
இவையெல்லாவற்றிலும், சுவிசேஷ ஊழியர்களுக்கு பக்தி வைராக்கியத்திற்கான உதாரணமாகவே யோவான் இருக்கிறார். நம்மில் பக்தி வைராக்கியம் இருந்தால், நாமும் யோவான் இருந்தது போல் நம்மைச் சுற்றியுள்ள இருளான உலகத்தில் எரிகிற பிரகாசமுள்ள விளக்காகவே இருப்போம். பாவிகளுக்கு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ வெளிச்சத்தை ஆர்வத்தோடு பிரகாசிக்கச் செய்வதை நாடுகிறவர்களாக இருப்போம் (பிரகாசிக்கிற விளக்காக). யோவானில் நாம் பார்க்கிற சுவிசேஷத்தின் இந்த இரண்டு அம்சங்களையும் கவனத்தோடு பிரகாசிக்க செய்வோம். ஒன்று, மனிதர்களின் பாவங்களை உண்மையுடனும், தெளிவாகவும் வெளிப்படுத்திக்காட்டி மெய்யான மனந்திரும்புதலின் கனிகளைத் தரும்படி அழைப்போம். இரண்டாவது, கர்த்தராகிய இயேசுவை சுட்டிக்காட்டி, அவரில் விசுவாசம் வைக்கும்படி அவர்களை அறிவுறுத்துவோம்.
யோவான் ஸ்நானனின் வாழ்க்கையிலிருந்தும் ஊழியத்திலிருந்தும் இன்னும் அநேக காரியங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். சுவிசேஷ விளக்காக மற்றவர்களுக்கு முன் பிரகாசிப்பதற்கான அநேக வழிகளை அவர் நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.
சுய வெறுப்பின் மூலம் சுவிசேஷ விளக்காக நாம் பிரகாசிக்க வேண்டும். யோவான் தன்னந்தனியாக வனாந்தரத்தில் நல்ல உணவோ, உடையோ, தங்குவதற்கான இடமோ இல்லாமல் வாழ்ந்தார் என்பதை நினைவுகூருங்கள். யோவானுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அப்படியே நாம் பின்பற்றும்படி வேதம் போதிக்கவில்லை. யோவானின் மூலமாகவும் குறிப்பாக நம்முடைய இரட்சகரின் மூலமாகவும், நம்மை நாம் வெறுத்து அனுதினமும் சிலுவையை எடுத்துக்கொண்டு கிறிஸ்துவை பின்பற்றும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம் (லூக்கா 9:23). நம்முடைய சுவிசேஷ வேலைகளும், நம்முடைய ஊழியத்தின் அனைத்து அம்சங்களும் இத்தகைய சுய வெறுப்பை வெளிப்படுத்துகிறதா?
தைரியமாகவும் துணிவுடனும் நாம் சுவிசேஷ விளக்காக பிரகாசிக்க வேண்டும். மதத் தலைவர்களாகவும் அரசாங்க ஊழியர்களாகவும் இருந்தபோதும் அவர்களுடைய பாவங்களை உண்மையுடன் அவர் எடுத்துச் சொன்னார். உண்மையுடன் அவர் வாழ்ந்தது அவருடைய உயிரையே பறித்தது. அவர்கள் யாராக இருந்தாலும் மனிதர்களுடைய இருதயத்தின் ஆவிக்குரிய நிலையை உள்ளபடி எடுத்துச் சொல்ல அவர் தயங்கியதில்லை. நாமும் தயங்கக் கூடாது.
கர்த்தராகிய இயேசுவின் தாழ்மையுள்ள ஊழியனாக சுவிசேஷ விளக்காக பிரகாசிக்க வேண்டும். வாசியுங்கள் யோவான் 1:19-20. தன்னை மேசியாவாக அடையாளம் காணுவதை யோவான் வெளிப்படையாக நிராகரித்தார்.
யோவான் 1:26-27 – 26. யோவான் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். 27. அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான்.
இங்கும் ஏனைய பகுதிகளிலும், யோவான் தன் தலைவனுடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் தான் தகுதியில்லாதவன் என்பதை பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
யோவான் 3:26-30 – 26. அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங் கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். 27. யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். 28. நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். 29. மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று. 30. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
யோவான் தன்னுடைய ஊழியம் குறையவும் இயேசுவின் ஊழியம் வளரவும் ஆரம்பித்தபோது அவர் பொறாமைபடவில்லை. மாறாக, கடவுளிடமிருந்து தனக்கு தரப்பட்டாலொழிய பெரியளவிற்காக ஊழியங்களைத் தான் செய்ய முடியாது என்பதை தாழ்மையுடனும் கீழ்ப்படிதலோடும் ஏற்றுக்கொண்டார் (வசனம் 27). அத்தகைய சந்தர்ப்பங்களைத் தருகிறவரும் கடவுள்தான், அதை முடித்து வைக்கிறவரும் அவரே. பொறாமை கொள்ளுவதற்கு பதிலாக, தன்னுடைய இடத்தைப் பிடிக்கும் ஒருவரின் ஊழியம் சிறப்பான வகையில் வருவதை ஆனந்தத்தோடு அவர் வரவேற்றார் (வசனம் 29). தான் சிறுகவும் இயேசு பெருகவும் வேண்டிய உண்மையை அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார் (வசனம் 30). நம்முடைய செல்வாக்கும் வெற்றியும் குறைவுபடுகிறபோது, மற்ற போதகர்களின் ஊழியங்களும் சபையும் வளருகிறபோது இந்தவிதமாக நாம் நடக்கிறோமா? அல்லது நம்முடைய இருதயத்தில் பொறாமை நிறைந்திருக்கிறதா? பொறாமை நிறைந்திருப்பது நிச்சயமாக சுவிசேஷ பிரசங்கியின் மனோபாவம் அல்ல.
வைராக்கியமுள்ள சுவிசேஷ ஊழியனாகிய யோவான்ஸ்நானனின் மாதிரியைபோல் நம்மால் ஒருபோதும் இருக்க முடியாது என்கிற அவநம்பிக்கை நம்மில் ஏற்படலாம். இப்படியான சோதனை நம்மில் எழுமானால், யோவான்ஸ்நானனைப் பற்றி வேறு பல விஷயங்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். யோவான் கர்த்தராகிய இயேசுவுக்கு ஊழியம் செய்தபோது தன்னில்தான் பெலவீனமுள்ள விளக்காகவும் இருந்திருக்கிறார்.
மத்தேயு 11:2-6 – 2. அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து: 3. வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். 4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்; 5. குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. 6. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
தன்னுடைய உண்மையினிமித்தமாக அவர் சிறையில் இருந்தபோது, தன்னுடைய விசுவாசத்தோடு அவர் போராட வேண்டியிருந்தது. அவர் தன்னுடைய சீடர்களை அனுப்பி வருகிறவரான மேசியா நீர்தானா என்று கேட்கும்படி இயேசுவிடம் அனுப்பினார். முன்பு இந்த யோவான்தான், இயேசுவை உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி என்று மிகுந்த நம்பிக்கையோடு அடையாளங்காட்டினார். யோவான் அசாதாரண மனிதன் அல்ல. நாமும் கூட.
நாமும் போதகர்களாக இயேசுவுக்கு ஊழியம் செய்ய முற்படுகிறபோது, நம்மில் நாமும் பெலவீனமான விளக்குகளாகவே இருப்போம். இயல்பாக நாம் மிகவும் பலவீனமுள்ளவர்கள். ஆகவே எளிதில் சோர்வுற்றுப் போவோம். எவ்வளவு விரைவாக நம்முடைய பக்தி வைராக்கியம் ஒரு தீப்பொறி கூட இல்லாதளவுக்கு வீழ்ச்சியடைகிறது. இந்த யோவான் ஸ்நானனும்கூட நமக்கான ஒரு ஊக்கமாகவே இருக்கிறார். நமக்கு ஏற்படுவதுபோன்ற போராட்டங்களை அவரும் அனுபவித்திருக்கிறார். இருந்தும், பிறகு இயேசு அவரை எரிகிற பிரகாசமுள்ள விளக்காக விவரிக்கிறார். எவ்வளவு கிருபையுள்ள இரட்சகர் அவர். இந்த கிருபையுள்ள இரட்சகர் யோவான் ஸ்நானனின் இரட்சகர் மட்டுமல்ல. நீங்கள் மனந்திரும்பி விசுவாசித்திருந்தால் அவர் உங்களுடைய இரட்சகரும் கூட. இதுவரை நீங்கள் மனந்திரும்பி அவரை விசுவாசியாதிருந்தால், இப்போது நீங்கள் மனந்திரும்பி அவரை விசுவாசித்தால் அவர் உங்கள் இரட்சகராவார்.
யோவான் ஸ்நானனுடைய சுவிசேஷ வைராக்கியமாகிய பாடத்தை முடிக்கிற வேளையில், நம்முடைய சுவிசேஷ அறிவிப்பில், யோவானுக்கு இருந்ததைப் போன்று நமக்கிருக்கும் சவால்களைக் கேளுங்கள்.
எரிகிற வீட்டை நீங்கள் கடந்து போகிறவர்களாக இருந்தால், அந்த வீட்டிலுள்ளவர்கள் தப்பிப்பதற்கான வழியை ஏற்படுத்தும்படி ஜன்னல் வழியாக உங்களை நோக்கி முறையிட்டால், எவ்வளவு ஆர்வத்துடன் அவர்களை விடுவிப்பதற்காகப் போராடுவீர்கள்! உங்களோடு இருப்பவர்களின் ஆத்துமாவை நித்திய அக்கினியிலிருந்து விடுவிப்பதற்கு குறைவான ஆர்வத்தோடா செயல்படுவீர்கள்? மற்றவர்கள் விசுவாசிக்கும்படி அறிவிக்கிற நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நியாயத்தீர்ப்பு, பரலோகமும், நரகமும் உண்டு என்று நீங்கள் நம்புகிறீர்களா? பரிதாபகரமான பாவிகள் எந்தவொரு நொடியிலும் முடிவற்ற நரகத்தில் விழ நேரிடலாம் என்று நம்புகிறீர்களா? பிறகு ஏன் நீங்கள் அவர்களுடைய இரட்சிப்பைப் பற்றி மிகவும் அக்கறையற்றவர்களாகவும் ஆர்வமற்றவர்களாகவும் இருக்கிறீர்கள்?
நம்மைச் சுற்றியுள்ள, அழிந்துகொண்டிருக்கும் ஆத்துமாவை புதுப்பிக்கவும் உயிர்ப்பிக்கவும், அவர்களை இயேசுவிடம் கொண்டுவரும்படியான வைராக்கியத்தை கடவுள் தாமே நம்மில் ஏற்படுத்துவாராக.
இப்போது நாம், பக்தி வைராக்கியத்திற்கு ஒரே பூரணமான மனித உதாரணமும், யோவான் குறிப்பிட்டுக் காட்டியவருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் படிக்கலாம்.
- கர்த்தராகிய இயேசு
பக்தி வைராக்கியத்திற்கான உதாரணமாக இயேசுவைப் பார்ப்பதற்கு அநேக விஷயங்கள் இருக்கிறது. உண்மையில் அவருடைய முழு வாழ்க்கையும் ஊழியமும் பக்தி வைராக்கியத்திற்கான உதாரணமாகவே இருக்கிறது. இந்த நேரத்தில் இயேசுவில் பக்தி வைராக்கியம் இருந்ததை குறிப்பாக விளக்குகிற ஒரேயொரு பகுதியை மட்டும் பார்க்கப் போகிறோம்.
யோவான் 2:13-18 (குறிப்பாக வசனம் 17) – 13. பின்பு யூதருடைய பஸ்கா பண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய், 14. தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, 15. கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, 16. புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். 17. அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள். 18. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.
இது இயேசுவினுடைய ஊழியத்தின் ஆரம்ப காலம். இயேசு வியாபாரிகளைத் தேவாலயத்தைவிட்டு முதல்முறையாக விரட்டியதை விவரிக்கும் பகுதி. இந்த வியாபாரிகள் தம்முடைய பிதாவின் வீட்டை வியாபார வீடாக மாற்றியிருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார். விற்பதற்கும் வாங்குவதற்குமான இடமாக அதை அவர்கள் மாற்றியிருந்தார்கள்.
இயேசுவின் இந்த நடவடிக்கைக்கான காரணங்களை, இரண்டாவது முறையாக அவர் இப்படி செய்ததை விவரிக்கும் பகுதியில் அதிகம் தெரிந்துகொள்ளலாம். அவர் சிலுவை மரணத்தை அடைவதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பாக எருசலேமுக்கு கடைசி முறையாக அவர் சென்றபோது தம்முடைய பிதாவின் வீட்டை சுத்திகரிக்கும் இந்த செயலைச் செய்தார்.
மாற்கு 11:15-18 – 15. அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து, 16. ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்: 17. என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். 18. அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள்.
இங்கு இயேசு, தேவாலயத்தை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அது ஜெப வீடு. பலி செலுத்துவதற்கான மிருகங்களைக் கொண்டு வந்து விற்கிறவர்கள், வியாபாரிகள் போன்றவர்களின் நடவடிக்கையிலுள்ள பிரச்சனைகளையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் தங்களிடம் வியாபாரம் செய்ய வரும் மனிதர்களை ஏமாற்றுகிற திருடர்களாக இருந்தார்கள். ஆகவே ஜெப வீடாக இருப்பதற்கு பதிலாக, கடவுளை வழிபட வருகிறவர்களை ஏமாற்றித் திருடும் தந்திரமுள்ள வியாபார சந்தையாக தேவாலயம் இருந்தது. யூத மத தலைவர்களும் இந்த நடவடிக்கைகளில் இணைந்திருந்தார்கள் என்பதை நம்புவதற்கான சில சான்றுகளும் இருக்கிறது. இயேசு தேவாலயத்தை சுத்தம்செய்த இரண்டு முறையும் அவர்கள் எதிர்த்தனர். முதல் முறை, இதைச் செய்வதற்கான அதிகாரம் அவரிடம் இருப்பதை நிரூபிக்கும்படி சவால் விட்டனர். இரண்டாவது முறை அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.
இந்த கட்டத்தில் நாம் மறுபடியும் யோவான் 2:17க்கு திரும்பிச் செல்லலாம். இயேசு அந்த திருடர்களை அவர்களுடைய மிருகங்களோடு சேர்த்து விரட்டியபோது அவருடைய நோக்கம் என்னவாக இருந்தது என்பது தெளிவாக இங்கு சொல்லப்பட்டுள்ளது. இப்படிச் செய்ய, தேவனுடைய வீட்டைப் பற்றிய வைராக்கியமே அவரை உந்தித்தள்ளியது. தேவனுடைய வீடு தூய்மையானதாக இருப்பதற்கான வைராக்கியங் கொண்டார். தேவாலயம், கடவுளை மகிமைப்படுத்தும் வழிபாட்டு ஸ்தலமாக, பாதுகாக்கப்பட வேண்டும் என்று வைராக்கியங் கொண்டார். இங்கு நம்முடைய கர்த்தருடைய வைராக்கியம் மிகவும் கடுமையாக இருந்தது. அது அவரை பட்சித்தது என்று சொல்லப்பட்டுள்ளது.
நாம் கவனிக்க வேண்டிய இன்னும் அநேக விஷயங்கள் இதில் இருக்கிறது.
“உம்முடைய வீட்டைக் குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது” (யோவான் 2:17) என்ற சொற்றொடர் பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அது சங்கீதம் 69:9லிருந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்கீதம் 69:9 – உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்தி வைராக்கியம் என்னைப் பட்சித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.
இது தாவீதின் சங்கீதம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த சங்கீதத்தில் தாவீது தன்னுடைய அறிவீனத்தையும் பாவத்தையும் பற்றிச் சொல்லியிருக்கிறார்.
சங்கீதம் 69:5 – தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.
ஆனால் இந்த சங்கீதத்தின் பிற்பகுதியில் வேறொருவரைப் பற்றி சொல்லப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம்.
சங்கீதம் 69:19-21 (குறிப்பாக 21வது வசனம்) – 19. தேவரிர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர், என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள். 20. நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன். 21. என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.
இங்கு, தாவீதின் குமாரனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவுமாகிய அவரைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. வசனம் 21, இயேசுவின் சிலுவை அனுபவத்தைப் பற்றி முன்னுரைக்கிறது (மத்தேயு 27:34 வது வசனத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள் “கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்”). இச்சங்கீதத்தில், யோவான் 2ல் இயேசுவைப் பற்றி மேற்கோள் காட்டப்பட்ட சொற்றொடர் இருக்கிறது.
சங்கீதம் 69:7-9 – 7. உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று. 8. என் சகோதரருக்கு வேற்று மனுஷனும், என் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன். 9. உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.
இந்த வசனங்கள் இயேசுவுக்கு தம்முடைய பிதாவின் வீட்டைக் குறித்து அவருக்கிருந்த வைராக்கியதைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. அத்தோடு, அதன் விளைவாக அவர் அவமானத்தையும், நிராகரிப்பையும், கண்டனத்தையுமே அனுபவிப்பார் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுவிசேஷப்பகுதிகள் இயேசு சந்தித்த எதிர்ப்புகளை அதிகமாக விவரித்துச் சொல்லுகிறது. அந்த எதிர்ப்புகள் இயேசுவின் உள்ளத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை இப்போது நாம் பார்க்கலாம். தம்முடைய பிதாவினிமித்தமாக அவர் அவமானத்தையும் கேலியையும் அனுபவித்தார். தம்முடைய குடும்பத்திடமிருந்தும் அவர் தனித்துவிடப்பட்டார். அவருடைய சொந்த சகோதரர்களும் ஆரம்பத்தில் அவரை விசுவாசிக்கவில்லை.
யோவான் 7:3-5 – 3. அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம். 4. பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். 5. அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.
சங்கீதம் 69:20ல் நாம் பார்ப்பதுபோல், இந்த விஷயங்கள் அவருடைய இருதயத்தை நொறுக்கியது. அவர் மிகுந்த பாரத்தோடு இருந்தார். அவர்மீது அனுதாபம் காட்டவும் ஆறுதல் சொல்லவும் ஒருவரும் இல்லை. சிலுவையில் அவர் கொடிய வேதனைகளை அனுபவித்தபோதும், அவருக்குக் கிடைத்ததெல்லாம் கசப்பான காடிதான். இவையாவும் இயேசுவை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.
இயேசு ஏன் இப்படிச் செய்தார்? ஏன் அவர் முன்வந்து தேவாலயத்தை சுத்தம் பண்ணினார்? அவர் முதல் முறை அப்படிச் செய்தபோதே யூத மதத் தலைவர்கள் அவரை எதிர்த்தார்கள், பிறகு ஏன் அவர் இரண்டாம் முறையும் செய்தார்? ஏனென்றால், தம்முடைய பிதாவின் வீட்டைப்பற்றிய பக்தி வைராக்கியம் அவரை பட்சித்தது. இந்த சங்கீதம் மேலதிக விளக்கங்களை நமக்குத் தருகிறது.
சங்கீதம் 69:16 – அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
அவர் தம்முடைய பரலோக பிதாவில் நம்பிக்கை வைத்திருந்தபடியினால் அவர் என்ன செய்ய வேண்டுமோ அதையே செய்தார். பிதாவாகிய தேவன், தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களிடத்தில் அன்பையும் இரக்கத்தையும் காண்பிக்கிறவர் என்பதை அவர் விசுவாசித்தார்.
சங்கீதம் 69:34-36 – 34. வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிறயாவும் அவரைத் துதிக்கக்கடவது. 35. தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். 36. அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள்.
கடவுளுடைய நாமத்தின்மீது அன்புள்ளவர்களுக்கும் அவருக்காக வைராக்கியங்கொள்ளுகிறவர்களுக்கும் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பதை நம்பியதால்தான் அவர் தொடர்ந்தும் வைராக்கியத்தோடு அப்படிச் செய்தார்.
இயேசுவின் வைராக்கியத்தைப் பற்றிப் பார்த்த நாம், நம்முடைய வாழ்க்கையில் அதை எப்படி பயன்படுத்துவது? குறிப்பாக, போதகர்களாக இவைகளை நம்முடைய வாழ்க்கையில் எப்படி செயல்படுத்துவது?
நம்மில் பக்தி வைராக்கியம் இருந்தால், நாம் கடவுளுடைய வீடாகிய திருச்சபையின் தூய்மைக்காக வைராக்கியம் கொள்ள வேண்டும். கடவுளை அவருடைய சபையில் எப்படி ஆராதிக்க வேண்டும் என்று அவர் கட்டளையிட்டிருக்கிறாரோ அதைக் கடைபிடிப்பதில் நாம் மிகுந்த அக்கறைக்காட்டுகிறவர்களாக இருக்க வேண்டும். திருச்சபையிலுள்ள பாவத்தை விலக்குவதிலும் உண்மையுடனும் அக்கறையுடனும் நாம் இருக்க வேண்டும். திருச்சபையிலுள்ள சகோதர சகோதரிகள் மனந்திரும்ப வேண்டிய காரியங்களை அன்போடு சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் அவர்கள் தொடர்ந்து மனந்திரும்ப மறுத்தால், பிறகு நாம் உண்மையுடன், வருத்தத்தோடு, அவர்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தோடு மிகவும் வலியை ஏற்படுத்தும் நடவடிக்கையாகிய சபை ஒழுங்கு நடவடிக்கையைச் செய்ய வேண்டும்.
நாம் பக்தி வைராக்கியமுள்ளவர்களாக இருந்தால், உண்மையுள்ளவர்களாக இருப்பதற்கு எத்தகைய கடினமான விலையையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். பெரும்பாலும் அது நம்முடைய உணர்ச்சிகளின் விலையாக இருக்கலாம். இது மிகவும் வலிமையானது. திருச்சபையைப் பற்றியும், இன்னும் மனந்திரும்பாத அவிசுவாசமுள்ளவர்களைப் பற்றியுமான நம்முடைய கவலைகள் நம்முடைய தூக்கத்தைக் கெடுத்து நம்மையே விழுங்கக் கூடியது. ஆத்துமாக்களைப் பற்றிய பாரத்தோடு ஆண்டவரிடம் முறையிட வேண்டும். இத்தகைய வைராக்கியம் எப்போதும் எதிர்ப்பு, வீழ்ச்சி, கேலி, நிராகரிப்பையுமே கொண்டு வரும். சிலநேரங்களில் நமக்கு நெருக்கமானவர்களும், நாம் நேசிக்கிறவர்களுமே நமக்கு எதிரிகளாக இருப்பார்கள். நம்மில் பக்தி வைராக்கியம் இருக்க வேண்டுமானால், இத்தகைய விலை கொடுக்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இதை நாம் முதலில் யோவான் ஸ்நானனில் பார்த்தோம், இப்போது நம்முடைய ஆண்டவரிடத்திலும் பார்க்கிறோம்.
நாம் விசுவாசத்தோடு, கடவுளுடைய அன்பையும் இரக்கத்தையும் பற்றிக்கொண்டிருந்தால், நாமும் கடவுளுக்காகவும், அவருடைய சபைக்காகவும், அவருடைய ஆராதனைக்காகவும் இத்தகைய சிறப்பான பக்திவைராக்கியத்தை கொண்டிருக்க முடியும். நம்பிக்கையோடு நாம் அவரிடத்தில் தொடர்ந்து முறையிட்டால், அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நிச்சயமாக உங்களுக்கு உதவுவார்.
கர்த்தராகிய இயேசுவுக்கு ஆர்வத்தோடு ஊழியம் செய்யும் அனலுள்ள இருதயமே பக்தி வைராக்கியமாகிய கிருபையாகும். இது கடவுளிடமிருந்தே வருகிறதாக இருக்கிறது. ஆனாலும் அதைத் தூண்டிவிடுவதும் அத்தகைய வைராக்கியத்தை நம்முடைய வாழ்க்கையில் தக்கவைப்பதும் நம்முடைய பொறுப்பாகும். இதைச் செய்வதற்கு உதவியாகவும் பக்தி வைராக்கியம் என்றால் எப்படியிருக்கும் என்பதை பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு உதவியாகவும் இதுவரை இரண்டு உதாரணங்களைப் படித்தோம். யோவான் ஸ்நானனும் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவுமே அந்த உதாரணங்கள். இப்போது, சுவிசேஷ ஊழியர்களில் பக்தி வைராக்கியமுள்ள மேலும் இரண்டு உதாரணங்களைப் படிக்கப் போகிறோம்.
- அப்போஸ்தலனாகிய பவுல்.
2 கொரிந்தியர் 11:1-4 (குறிப்பாக 2வது வசனம்) – 1. என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே. 2. நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன். 3. ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். 4. எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.
2வது வசனத்தில் ஆங்கில வேதத்தில் “jealous” (தமிழில் வேதத்தில் வைராக்கியம்) மற்றும் “jealousy” (தமிழில் வேதத்தில் தேவவைராக்கியம் godly jealousy) என்று பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு வார்த்தைகளும் பொதுவாக “வைராக்கியமாக இருத்தல்” என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் இந்த இடத்தில் குறிப்பாக பொறாமை என்பதன் அர்த்தம் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த பொறாமை பக்திக்குரிய பொறாமை (தேவவைராக்கியம்) என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. முன்பு நாம் குறிப்பிட்டவைகளையே, இவைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பக்திவைராக்கியம் என்பது முறையாக பொறாமையின் உணர்வை வலிமையாக வெளிப்படுத்துவதாகும்.
தேவவைராக்கியத்தில் எவையெல்லாம் உள்ளடக்கமாக இருக்கிறது என்பதை இப்பகுதி குறிப்பிடுகிறது. ஒரு ஆணுக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள ஒரு பெண்ணைப் பற்றி இங்குக் காண்கிறோம். திருமணம் நிச்சயம் செய்தல் என்பது அதாவது அவர்கள் இன்னும் கூடி வாழ ஆரம்பிக்காவிட்டாலும் யூதர்களுடைய கலாச்சாரத்தில் இது ஒரு முக்கியமான திருமண உறுதிப்பாடாகும். நம்முடைய சமுதாயத்தில் செய்யப்படும் நிச்சயதார்த்தத்தைவிட மிகவும் வலிமையானதாகும். ஒரு பெண் ஒரு ஆணுக்கு நியமிக்கப்பட்ட பிறகு, ஏதோவொரு வகையில் அவன் அவளுடைய கணவனாகவே பார்க்கப்படுவான் (வசனம் 2). மேலும் அத்தகைய நியமிக்கப்படுதலை முறித்துக்கொள்ள விவாகரத்துக்கு இணையான ஒரு நடவடிக்கை தேவை (மத்தேயு 1:18-19 – யோசேப்பு மரியாளுடைய திருமண நிச்சயத்தை ஒப்பிட்டுப் பாருங்கள், “18. இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.”)
இப்பகுதியில், கிறிஸ்து கணவனாக இருக்கிறார். கடவுளுடைய மக்களாகிய திருச்சபையே மணப்பெண். திருச்சபை கிறிஸ்துவுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. கரைதிரை ஒன்றுமில்லாமல் பரிசுத்த கன்னிகையாக கிறிஸ்துவுக்கு ஒருநாள் ஒப்படைக்கப்படுவாள். ஆனால் தற்போது அவள் பரலோகத்தில் இருக்கிற தன்னுடைய கர்த்தரோடு இருக்கவில்லை. ஆட்டுக்குட்டியானவரின் திருமண விருந்துடன் இன்னும் அந்தத் திருமணம் முழுமை பெறவில்லை.
அத்தகைய நியமிக்கப்பட்ட சூழ்நிலையில், பொதுவாக கணவனோ அல்லது அவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணோ வைராக்கியத்துடன் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். வைராக்கியங்கொண்ட கணவனே தன்னுடைய மனைவியோடுள்ள உறவைக் கவனத்துடன் பாதுகாக்கிறவனாக இருப்பான். அத்தகைய வைராக்கியமுள்ள கணவனே யாரேனும் அந்த உறவை உடைத்து, தன்னுடைய இடத்தைப் பிடிப்பதற்கு முயற்சிக்கிறதான சூழ்நிலையில், தீவிரமாக தன் ஆத்திரத்தை வெளிப்படுத்துவான். ஆனால் இங்கு வைராக்கியங் கொண்டது, கணவனோ அல்லது அவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணோ அல்ல என்பதை நாம் கவனிக்க வேண்டும். சுவிசேஷ ஊழியனாகிய பவுல் இங்கு அனலுள்ள வைராக்கியங் கொண்டிருக்கிறார். சுவிசேஷ பிரசங்கத்தின் மூலமாக கொரிந்து விசுவாசிகளை கிறிஸ்துவுடன் திருமணம் நிகழ்த்தி வைக்க வேண்டிய பொறுப்பே பவுலினுடையது. சாத்தான் ஏமாற்று வேளையின் மூலமாக அவர்கள் இருவரின் உறவில் நுழைந்துவிடுவான் என்று அவர் பயப்படுகிறார். மெய்யான கிறிஸ்துவுக்கும் சுவிசேஷத்திற்கும் பதிலாக வேறொரு கிறிஸ்துவையும் சுவிசேஷத்தையும் பிரசங்கித்து சாத்தான் வெற்றியும் கண்டுவிடுவானோ என்கிற பயம் அவருக்கு இருந்தது. ஆகவே அதைத் தடுப்பதற்காக பவுல், 2 கொரிந்தியரில் தன்னாலான அனைத்தையும் செய்கிறார்.
கொரிந்து திருச்சபைக்கு பவுல் எழுதிய இரண்டாவது நிருபத்தில், தவறான போதனையாளர்கள் எழும்பி, தன்னுடைய ஊழியத்தை நிராகரிக்கவும், தன்னுடைய ஆவிக்குரிய பிள்ளைகளை தன்னைவிட்டு தூரமாக்கவும், முயற்சித்ததனால் பவுல் தன்னுடைய ஊழியத்தைப் பாதுகாக்கும்படி தள்ளப்பட்டார். ஆனால் இந்தப் பகுதியில், பவுலின் முதன்மையான கவலை தனிப்பட்ட முறையில் தன்னோடு அவர்களுக்கு இருந்த உறவைப் பற்றியதோ தன்னுடைய ஊழியத்திற்கு அவர்கள் சரியான மரியாதை தரவில்லை என்பதைப் பற்றியதோ அல்ல. அவருடைய கவலையெல்லாம் இந்தத் தவறான போதனையாளர்கள் கிறிஸ்துவுடனான அவர்களுடைய உறவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதுதான். இந்தக் காரணத்தினால்தான் பவுல் வைராக்கியத்தோடு தன்னுடைய ஊழியத்தைப் பாதுகாக்க வேண்டி வந்தது.
பவுலின் வைராக்கியம் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத்தரவில்லையா? நாம் உண்மையுள்ள சுவிசேஷ ஊழியர்களாக, போதகர்களாக இருந்தால், நிச்சயமாக நமக்கு எதிர்ப்புகள் இருக்கும். நாம் தாக்கப்படுவோம். தவறான போதனையாளர்கள் எழும்புவார்கள். பிரிவினைவாத மனிதர்கள் நம்முடைய மதிப்பையும் நம்முடைய செய்திகளின் மதிப்பையும் குறைப்பதற்காக அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்பத் துவங்குவார்கள். தேவனுடைய மக்களிலும் சிலர் இதனால் பாதிக்கப்பட்டு நம்மைவிட்டு பிரிந்துபோயிருப்பார்கள். அப்படிப் பிரிந்துபோன சகோதர சகோதரிகளுக்காக நம்முடைய நேரத்தையும், இருதயத்தையும், பெலத்தையும் நாம் அதிகமாக பயன்படுத்தியிருக்கலாம். இப்படியான சூழ்நிலைகளில் நம்முடைய பதில் நடவடிக்கை எப்படியிருக்கிறது என்பதுதான் நம்மில் பக்தி வைராக்கியம் இருக்கிறதா இல்லையா என்பதற்கான பரீட்சையாக இருக்கிறது. நம்முடைய பதில் நடவடிக்கை, நாம் எப்படி கனவீனப்படுத்தப்பட்டோம், காயப்படுத்தப்பட்டோம் என்பதிலேயே நம்முடைய கவனமெல்லாம் இருக்கிறதா? நம்முடைய ஊழியத்தைப் பற்றி கேள்வி எழுப்புமளவுக்கு தைரியங்கொண்டார்கள் என்பதற்காக பாவகரமான கோபத்தை பதில் நடவடிக்கையாக செய்கிறோமா? நம்முடைய சொந்த மரியாதையையும் ஊழியத்தையும் நோக்கமாக கொண்ட பதில் நடவடிக்கையாக இருக்கிறதா? அல்லது பவுலுக்கு இருந்த அதே கவலை நம்முடைய முக்கிய கவலையாக இருக்கிறதா? நம்முடைய கண்காணிப்பையும் அவர்களுடைய பரலோக மணவாளனின் உரிமைகளையும் நம்பியிருக்கிற ஆடுகளின் ஆவிக்குரிய நல்ல நிலையே நம்முடைய முக்கிய கவலையாயிருக்கிறதா?
நம்மை நோக்கி வரும் இத்தகைய தாக்குதல்கள் வலியை ஏற்படுத்துகிறதாயிருக்கும். அவை நம்மை காயப்படுத்தும். ஆனால் நம்முடைய ஊழியங்கள் நம்மைப் பற்றியதல்ல என்பதையே பவுலின் உதாரணம் நமக்கு நினைவூட்டுகிறது. இது நம்மைப் பற்றியதாகவோ நம்மை மற்றவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பற்றியதாகவோ இருக்கக் கூடாது. போதகர்களிலுள்ள பக்தி வைராக்கியம் நம்மைப் பற்றியதல்ல. பக்தி வைராக்கியம் என்பது கிறிஸ்துவையும் அவருடைய ஆடுகளையும் பற்றியது. பக்தி வைராக்கியம் என்பது கிறிஸ்துவின் மணவாட்டி அவளுடைய மணவாளனிடமிருந்து தவறாக வழிநடத்தப்படக் கூடாது என்ற வைராக்கியத்தின் கவலையினால் ஊக்கப்படுத்தப்படுவதாகும். பக்தி வைராக்கியம் என்பது தம்முடைய மணவாட்டியை கற்புள்ள கன்னிகையாக ஏற்கும் கிறிஸ்துவில் நோக்கமாகக் கொண்டிருக்கும் வைராக்கியமாகும். பக்தி வைராக்கியம் என்பது கிறிஸ்துவின் மணவாட்டி பாதுகாப்பாக பரலோகம் செல்லுவதை நோக்கமாகக் கொண்டதாகும். நம்மை ஊக்கப்படுத்துவது எது? அதுவே பக்தியுள்ள போதக வைராக்கியத்திற்கான மெய்யான பரீட்சை. அந்த பரீட்சையில் வெற்றிபெற ஆண்டவர்தாமே நமக்கு உதவுவாராக.
- அப்பொல்லோ
அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:24-28 (குறிப்பாக 25வது வசனம்) – 24. அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசுபட்டணத்துக்கு வந்தான். 25. அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான். 26. அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள். 27. பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள். 28. அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேத வாக்கியங்களைக் கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்.
இங்கே புதிய ஏற்பாட்டில் அப்பொல்லோ முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறார். வசனம் 25 தெளிவாக சொல்லுகிறது, இந்த அப்பொல்லோ ஆவியில் அனலுள்ளவனாக இருந்தான் என்று (இதே பதத்தை நாம் ரோமர் 12:11லும் பார்த்தோம்). மறுபடியும், “அனலுள்ள” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை சூடாகுதல் அல்லது எரிகிற என்ற உட்கருத்தைக் கொண்ட புதிய ஏற்பாட்டிலுள்ள வைராக்கியம் என்ற வார்த்தை குடும்பத்தைச் சேர்ந்ததாகும். ஆகவே அப்பொல்லோ அனலுள்ள இருதயம் கொண்ட மனிதன். இந்த நேரத்தில், அப்பொல்லோவின் உதாரணத்தின் மூலம் பக்தி வைராக்கியத்தைப் பற்றிய அநேக விஷயங்களை நாம் கற்றறியலாம். இந்த ஒவ்வொரு விஷயத்திலும் அப்பொல்லோ, போதகர்களாகிய நமக்கான உதாரணமாக இருக்கிறார்.
அ. பக்தி வைராக்கியம் என்பது கர்த்தருக்கு ஊழியம் செய்வதற்கு கடவுளால் கொடுக்கப்பட்ட வரங்கள், அறிவு, மற்றும் வாய்ப்புகளை நன்மைக்கு ஏதுவாக ஆர்வத்துடன் செயல்படுத்துவதாகும். அப்பொல்லோ சொல் வல்லமைமிக்க மனிதனாக இருந்தார். அவர் இந்த வரத்தை கிறிஸ்துவின் மகிமைக்காகவும் சுவிசேஷத்தின் வளர்ச்சிக்காகவும் ஆர்வத்துடன் பயன்படுத்தினார். ஆரம்பத்தில் அவருடைய அறிவு குறைந்தளவே இருந்தது. அவர் தானறிந்த சுவிசேஷத்தைப் பேசினார். அவர் தான் அறிந்த சத்தியத்தை பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டார். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற வரங்கள், அறிவு, மற்றும் வாய்ப்புகளை இப்படியே செயல்படுத்த வேண்டும். வரங்கள் மற்றும் திறமைகளைப் பொறுத்தளவில் நாம் ஒன்றோ அல்லது இரண்டோ வரங்களைக் கொண்டவர்களாக இருக்கலாம். கடவுளுடைய வார்த்தைகளை அதிகமாகவும் முழுமையாகவும் படித்தறிவதற்கான வாய்ப்புகள் நமக்கு குறைந்தளவு இருக்கலாம். போதகராக ஒரு சிறு கூட்டத்திற்கு, பெரிய அளவிலான முக்கியத்துவமற்ற இடத்திலுள்ள ஆண்டவருடைய மக்களுக்கு ஊழியம் செய்யும்படி ஆண்டவர் உங்களை வைத்திருக்கலாம். இந்த சூழ்நிலையில், நாம் என்ன செய்ய வேண்டும்?
2 கொரிந்தியர் 8:9-12 – 9. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே. 10. இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மாத்திரமல்ல, செய்யவேண்டுமென்று உற்சாகப்படுகிறதற்கும் ஒரு வருஷமாய் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாயிருக்கும். 11. ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக. 12. ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.
கிறிஸ்து நமக்குக் கொடுத்திருப்பதைவிட அதிகமாக எதையும் எதிர்பார்க்கிறதில்லை. அவர் ஒரு கடுமையான, நியாயமற்ற தலைவனல்ல. நம்மைப் போல மனிதனாக வந்தவர். அவர் கிருபையும் இரக்கமுமுள்ளவர். எனவே அவரால் நம்முடைய வரையறைகளையும் பலவீனங்களையும் புரிந்து கொள்ள முடியும். மேலும், அவர் முன் வானத்தின் ஐசுவரியங்களை அனுபவித்தவராக இருந்தார். ஆனால் நமதுநிமித்தமாக, நம்மை ஐசுவரியவான்களாக்க, அவர் ஏழையானார். அவருடைய இந்த தியாக அன்பு நம்மிடமுள்ள எல்லாவற்றையும் அவருக்காக ஆர்வத்துடன் கொடுக்கும்படி நம்மை அழைக்கிறதில்லையா? இது அவருடைய ஊழியத்திற்காக நம்முடைய வரங்கள் மற்றும் அறிவை மனமுவந்து ஆர்வத்துடன் கொடுக்க நம்மை அழைக்கிறதில்லையா? இது நமக்கு அவர் கொடுத்திருக்கிற வாய்ப்புகளை, அது பார்வைக்கு சிறியதாகவும் பெரியளவில் இல்லாததாக இருந்தாலும், அதை பயன்படுத்திக்கொள்ளும்படி அழைக்கிறதில்லையா? இதுவே பக்தி வைராக்கியமுள்ளவனின் பதில் நடவடிக்கையாக இருக்கும். இதில் இன்னும் அநேக விஷயங்கள் இருக்கிறது.
ஆ. குறிப்பாக சுவிசேஷ ஊழியர்களில், பக்தி வைராக்கியம் தேவனுடைய வார்த்தைகளைத் துல்லியமாக, தைரியமாக, உறுதியுடன் பேசும் கனிகளை பிறப்பிக்கும். பாவிகள் நம்மை எதிர்க்கிறவர்களாக, தங்களுடைய பாவங்களில் தொடர்ந்திருக்கிறபோது அவர்களிடமும் இந்தவிதத்திலேயே தேவனுடைய வார்த்தைகளை எடுத்துரைக்கும். குறிப்பாக, கடவுள் தம்முடைய வார்த்தையைக் கொண்டு ஊழியம் செய்யும்படி நம்மை அழைத்திருந்தால், இங்கு அப்பொல்லோவில் வெளிப்பட்டது போல்தான் நம்முடைய வாழ்க்கையிலும் பக்தி வைராக்கியமானது வெளிப்படும். அது கடவுளுடைய வார்த்தையாக இருப்பதனால் அதை சரியான முறையில் கையாளுவதற்குத் தேவையான விதத்தில் உழைப்போம். மனிதர்களின் முகத்திற்குப் பயப்படாமல் அந்த வார்த்தையை அன்போடு அதேவேளை தைரியமாகவும் ஊக்கத்தோடும் பேசுகிறவர்களாக இருப்போம். இதை நாம் பாவிகளின் இரட்சிப்பிற்காகவும் பரிசுத்தவான்களுக்கு உதவும்படியாகவும் செய்வோம். இதனோடு நெருக்கமாக தொடர்புடைய இன்னொன்றையும் நாம் பார்க்கலாம்.
இ. பக்தி வைராக்கியம், நம்மில் கடவுளுடைய சத்தியத்தை தைரியமாக பேசும் கனியைக் கொண்டிருப்பதோடு, சுவிசேஷத்தினிமித்தமான தேவனுடைய வார்த்தையும் நம்முடைய இருதயத்தில் கொழுந்துவிட்டு எரிகிறதாக இருக்கச் செய்யும் வல்லமை கொண்டது. அப்பொல்லோவில் இதை நாம் தெளிவாக காணலாம். அவன் வேதாகமங்களில் வல்லவனும், கர்த்தருடைய உபதேசத்தில் போதிக்கப்பட்டவனும் என்று சொல்லியபிறகு அவன் ஆவியில் அனலுள்ளவன் என்று சொல்லப்பட்டது தற்செயலாக எழுதப்பட்டதல்ல. கடவுளுடைய வார்த்தையே அவரில் இத்தகைய வைராக்கிய நெருப்பை ஏற்றி வைத்தது. இந்த உண்மை கடவுளுடைய வார்த்தையின் ஏனைய பகுதிகளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லூக்கா 24:25-32 – 25. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, 26. கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, 27. மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். 28. அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார். 29. அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரைவருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார். 30. அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். 31. அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். 32. அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,
நாம் பக்தி வைராக்கியத்தைக் கொண்டிருக்க வேண்டுமானால், அதை நம்மில் தூண்டிவிடுவதற்கு தேவனுடைய வார்த்தையிலுள்ள கிறிஸ்துவைப் பற்றிய சத்தியம் நமக்குத் தேவையாக இருக்கிறது. ஆனால், மனஅழுத்தத்துடன் இருந்த அந்த இரண்டு சீடர்களின் இருதயங்களில் கிறிஸ்துவைப் பற்றிய தேவனுடைய வார்த்தை மட்டும் எரிந்துகொண்டிருக்கவில்லை. கிறிஸ்துவின் மூலமாக கிறிஸ்துவைப் பற்றிய சத்தியங்கள் அவர்களுடைய இருதயங்களில் கொண்டுவரப்பட்டது, அவைகள் அவர்களுடைய இருதயங்களில் எரிந்துகொண்டிருந்தது. “அவர் நம்முடனே பேசினபோது” மற்றும் “அவர் வேதவசனங்களை விளங்கக்காட்டினபொழுது” அவர்களுடைய இருதயம் எரிந்தது (வசனம் 32). இது நம்மிடத்திலும் இப்படியே செயல்படுகிறது. அந்த எம்மாவு பயணத்தின்போது, நாமும் அங்கிருந்து, கிறிஸ்து தம்மைப் பற்றி பழைய ஏற்பாட்டிலிருந்து நேரடியாக நம்மோடு பேசுவதை நாம் கேட்டிருந்தால் அருமையாக இருந்திருக்கும் என்று நாம் எதிர்பார்ப்போம். ஆனால் உண்மை என்னவென்றால், நம்முடைய இருதயங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக இன்றும் தம்முடைய வார்த்தைகளைக் கொண்டு கிறிஸ்து நம்மோடு நேரடியாக பேசிக்கொண்டுதான் இருக்கிறார். கிறிஸ்துவைப் பற்றிய அந்த வார்த்தைகளே கிறிஸ்துவினால் பரிசுத்த ஆவியின் மூலமாக நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவுக்கான பக்தி வைராக்கியத்தை ஏற்படுத்துகிறது.
எரேமியா 20:7-10 – 7. கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள். 8. நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் பாழ்க்கடிப்பென்றும் சத்தமிட்டுக்கூறுகிறேன்; நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று. 9. ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று. 10. அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயஞ்சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து: ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு, அவனில் குரோதந்தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள்.
இங்கே முதலில், எரேமியா தீர்க்கதரிசி தனக்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கர்த்தருடைய வார்த்தையை பேச மறுத்தார். எனினும், கடவுள் விரும்பியதை எரேமியாக செய்ய மறுத்தபோதும், கடவுளுடைய வார்த்தை எரிகிற நெருப்பாக அவருடைய எலும்புகளில் அடைபட்டிருந்தது. அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் பேச வேண்டி வந்தது. அவர் கடவுளுடைய தீர்க்கதரிசியாக கடவுளிடமிருந்து நேரடியாக கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டார். (இன்று மனிதர்களுக்கு அந்தவிதமாக கடவுளுடைய தவறிழைக்காத வார்த்தை நேரடியாக கொடுக்கப்படுவதாக நாம் நம்புவதில்லை). மேலும் எரேமியா கடவுளுடைய தீர்க்கதரிசியாக கடவுள் அவருக்கு வெளிப்படுத்தும் வார்த்தைகளை எடுத்துரைக்க வேண்டிய சிறப்பான பொறுப்பு அவருக்கு இருந்தது. ஆனால் இங்கே வார்த்தை என்பது அவருடைய உள் மனதில் எரிகிற நெருப்பாக கடவுள் விரும்பியதை செய்யும்படி அவரை வற்புறுத்தியது என்று விவரிக்கப்பட்டுள்ளது. தேவனுடைய ஆவியின் மூலமாக கடவுளுடைய வார்த்தை எப்படி நம்முடைய இருதயங்களில் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறிவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது. அதுவே நம்முடைய இருதயத்தில் வைராக்கியத்தின் நெருப்பை ஒளிர வைத்து நாம் செய்யும்படி கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறவைகளை செய்யும்படி நம்மை வற்புறுத்துகிறது. போதகர்களாகிய நாம், கடவுள் நாம் செய்ய வேண்டிய பொறுப்புக்களாக நமக்குக் கொடுத்திருப்பதை, அதற்கேற்ற சூழல் இருக்கிறபோது மட்டுமல்ல, அதற்கு எதிரான சூழலிலும் நாம் செய்ய வேண்டும்.
ஈ. பக்தி வைராக்கியம் என்பது நம்முடைய இருதயத்தில் ஆவியினால் பயன்படுத்தப்படும் கடவுளுடைய வார்த்தையின் கனி மட்டுமல்ல. இத்தகைய வைராக்கியம் ஏற்கனவே கடவுளுடைய வார்த்தையின் ஊழியத்தில் ஆர்வமாகவும் வெற்றிகரமாகவும் செயல்பட்டு வரும் ஒருவனை, மேலும் ஆர்வத்தோடும் தாழ்மையோடும் கடவுளுடைய வார்த்தையில் வளரவும், அதனிமித்தம் கடவுளுடைய வார்த்தையை இன்னும் அதிக துல்லியமாகப் பிரசங்கிக்கத் தகுதி பெறச் செய்கிறது. அவன் தனக்குக் கற்றுத் தருகிறவர் யாராக இருந்தாலும், அவரிடம் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளுகிறவனாக இருப்பான். இங்கே அப்பொல்லோ, போதகர்களாக இல்லாத சில விசுவாசிகளின் மூலமாக கடவுளுடைய வார்த்தை தனக்குப் போதிக்கப்பட்ட போது, அதைத் தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார். அவர்கள் மதத் தலைவர்களும் அல்ல. அவர்களில் ஒருவர் பெண். பிரிசில்லாவிடமிருந்து கடவுளுடைய வார்த்தையைக் கற்பதா என்று சொல்லி அதை மறுக்கிறவனாக, பெருமை கொண்டவனாக அப்பொல்லோ ஒருபோதும் இருக்கவில்லை. கர்த்தருக்கு ஆர்வத்தோடு ஊழியம் செய்ய அவன் வைராக்கியம் கொண்டிருந்தார். ஆகவே மேலும் நன்றாகச் செய்வதற்கு எதெல்லாம் உதவுமோ அதையெல்லாம் செய்வதற்கு அவர் தயாராக இருந்தார்.
அதேவேளை, அப்பொல்லோ எப்போதும் தன்னுடைய தனித்துவத்தின்படி வாழ்கிறவனாக இருந்தான். கண்மூடித்தனமாக யாரையும் பின்பற்றுகிறவனாக அவன் இருக்கவில்லை – அது அப்போஸ்தலர்களாக இருந்தாலும்கூட.
1 கொரிந்தியர் 16:12 – சகோதரனாகிய அப்பொல்லோவைக் குறித்தோவெனில், சகோதரரோடேகூட உங்களிடத்தில் வரும்படிக்கு அவனை மிகவும் வேண்டிக்கொண்டேன்; ஆகிலும் இப்பொழுது வர அவனுக்கு மனதில்லை; அவனுக்கு நற்சமயம் உண்டாயிருக்கும்போது வருவான்.
இங்கே ஒரு அற்புதமான சமநிலை உள்ளது. பவுல் ஒரு அப்போஸ்தலனாக இருந்தபோதும், கடவுளால் ஏற்படுத்தப்படாத ஒன்றை மற்றவர்கள் மீது அவர் திணிக்கவில்லை. கடவுளுடைய பணியில் சக ஊழியனாகிய அப்பொல்லோவை அவர் மதித்தார்.
1 கொரிந்தியர் 3:4-6 – 4. ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களல்லவா? 5. பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே. 6. நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
பவுல் இங்கே அப்பொல்லோவை ஒரு மெய்யான சமநிலையில் நடத்தினார். பவுல், அனுபவம் குறைந்தவர்களையும் இன்னும் வளர வேண்டியிருக்கிற சகோதரர்களையும் பயமுறுத்தாமல் தன்னோடு இணைந்து வளருகிறவர்களாக பார்க்கும் நபராக அவர் இருந்தார். இந்தவிதத்தில் பவுல் நடப்பதற்கு, நிச்சயமாக அப்பொல்லோவும் அதற்கு ஏற்றபடி நடந்திருப்பார் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், அப்பொல்லோ மனிதர்களுடைய விருப்பப்படியல்லாமல், கடவுளுடைய வார்த்தையின்படி தன்னைக் கட்டுப்படுத்தி தாழ்த்தினார். கடவுளுடைய வார்த்தையையே தனக்கான இறுதி அதிகாரமாக கருதினார். எங்கிருந்து வருகிறதாக இருந்தாலும் ஆர்வத்தோடு அதைக் கற்றுக்கொள்ளுகிறவராக இருந்தார். அவ்வாறே நாமும் செய்ய வேண்டும்.
உ. மற்றவர்களிடமுள்ள பக்தி வைராக்கியமும் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டும். இதை நாம் எபேசுவிலுள்ள சகோதரர்கள் அகாயாவிலுள்ள சகோதரர்களுக்கு அப்பொல்லோவைப் பாராட்டி எழுதியதிலிருந்து காணலாம். மீட்பருடைய கரத்திலுள்ள இந்த அற்புதமான கருவியை சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளும்படி அவர்களை வலியுறுத்தினார்கள். அகாயாவிலுள்ள சகோதரர்கள் வெளிப்படையாக அந்த புத்திமதிகளை தங்கள் இருதயத்தில் ஏற்று நடந்தனர். எபேசு கிறிஸ்தவர்களின் இந்த நடவடிக்கை நாமும் அப்படிச் செய்யும்படி நம்மை அழைக்கிறது. நம்மைவிட அதிக வைராக்கியமுள்ளவர்களால் நாம் பயமுறுத்தப்படக் கூடாது. அத்தகைய வைராக்கியமுள்ள சகோதர சகோதரிகளை குறைகாணும் முயற்சியாக நம்முடைய தோல்விகள் பெலவீனங்கள் மத்தியில் அவர்கள் தங்களைப் பெருமையுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ளுகிறார்கள் என்று சொல்லக் கூடாது. அப்படியானவர்களை நாம் பாராட்ட வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும், வாழ்த்த வேண்டும். அத்தகைய ஆர்வமுள்ள தனிநபர்களின் நல்ல உதாரணங்கள், அன்பிற்கும் நற்கிரியைக்கும் நம்மை தூண்ட வேண்டும். எபிரெயர் 10:24 – “மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து”.
ஊ. பக்தி வைராக்கியம், கிருபையினால் விசுவாசிகளானவர்களுக்கு ஆவிக்குரிய நன்மைகளைச் செய்கிறதாக இருக்கும். வசனம் 27 சொல்லுகிறது, அப்பொல்லோ அகாயாவில் வந்தபோது, அவிசுவாசிகளான யூதர்களின் தவறுகளை வெளிப்படையாக சுட்டிக்காட்டுகிறதன் மூலம் விசுவாசிகளுக்கு பெரிய நன்மைகளைச் செய்தார். யூதர்களின் பழைய ஏற்பாட்டில் வாக்களிக்கப்பட்டுள்ள மேசியா இயேசுவே என்று வேதத்திலிருந்து அவர்களுக்கு எடுத்துக்காட்டுகிறதன் மூலம் உதவினார். கர்த்தருக்கு ஊழியஞ் செய்கிற அனலுள்ள இருதயத்தின் இயற்கையான செயல்பாடு தேவையிலுள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு நன்மையைச் செய்கிறதாக இருந்தது. இந்தவிதமாக நாம் செய்ய, கடவுள் தாமே நமக்கு உதவுவாராக. அப்பொல்லோவைப் போன்று வைராக்கியங்கொள்ள கடவுள் தாமே நமக்கு உதவுவாராக.
ஆயிரம் வருட அரசாட்சி
வெளிப்படுத்தல் விசேஷத்தின் 20ம் அதிகாரத்தில் காணப்படும் ஆயிரம் வருட அரசாட்சியை வைத்து பல கோட்பாடுகள் உருவாகியுள்ளன. இந்த ஆயிரம் வருடத்தை எழுத்துபூர்வமாகக் கருதி விளக்கமளிப்பதா? அல்லது அடையாள மொழியாகக் கருதி விளக்கமளிப்பதா? என்பதன் அடிப்படையிலேயே இக்கோட்பாடுகளின் விளக்கங்கள் அமைந்திருக்கின்றன. அத்தோடு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இந்த ஆயிரம் வருட காலப்பகுதிக்கு முன்பா? அல்லது அதற்குப்பிறகா? என்பதிலும் இந்தக் கோட்பாடுகள் முரண்படுகின்றன. மிலேனியம் என்ற ஆங்கில வார்த்தைக்கு ஆயிரம் வருடங்கள் என்று பொருள். வெளிப்படுத்தல் விசேஷத்தின் 20ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆயிரம் வருடங்களை அடிப்படையாக வைத்து இக்கோட்பாடுகள் எழுந்திருப்பதால் இவற்றை மிலேனியலிசக் கோட்பாடுகள் என்று அழைப்பார்கள்.
போஸ்ட்-மிலேனியலிசம் (Post-Millennialism)
போஸ்ட்-மிலேனியலிசம், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக ஆயிரம் வருட அரசாட்சி ஏற்படுத்தப்படும் என்று கூறுகிறது. சீர்திருத்தக் கோட்பாடுகளைப் பின்பற்றும் பலர் இக்கோட்பாட்டினைப் பின்பற்றியுள்ளனர். ஆர்சிபால்ட் அலெக்சான்டர், ஜே. ஏ. அலெக்சான்டர், பென்ஜமின் வார்பீல்ட் போன்ற பிரின்ஸ்டன் பரம்பரையில் வந்தவர்கள் இக்கோட்பாட்டைப் பின்பற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். ரொபட் டெப்னி, டபிள்யூ. வி. டி. செட், ஹென்றி தோர்ன்வெல் போன்றோரும் இக்கோட்பாட்டைப் பின்பற்றியுள்ளனர். இருபதாம் நூற்றாண்டில் இயன் மரே இதனை விளக்கிவருபவர்களில் ஒருவர். வட அமெரிக்காவில் ரீகொன்ஸ்ட்ரக்சனிசம் அல்லது தியோனமி என்ற கோட்பாட்டைப் பின்பற்றிவரும் பிரஸ்பிடீரியன் சபை அமைப்பைச் சேர்ந்த ரஷ்டூனி, கெரி நோர்த் ஆகியோரும் இக் கோட்பாட்டை பின்பற்றுபவர்கள். ஆகவே, சீர்திருத்தக் கோட்பாட்டாளர் மத்தியில் இக்கோட்பாட்டிற்கு ஆதரவு இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இக்கோட்பாடு, இவ்வுலக முடிவின்போது கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக இவ்வுலகில் நற்செய்தி உலகம் முழுவதும் வெற்றிகரமாக பிரசங்கிக்கப்பட்டு நாடுகள் கிறிஸ்தவ மயமாக்கப்பட்டு, உலக மக்கள் மத்தியில் நற்செய்தியின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று விளக்குகிறது. இக்கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் கிறிஸ்து மத்தேயு 28ல் தந்துள்ள நற்செய்திக் கட்டளையின்படி இறுதிக் காலத்திற்கு முன்பாக இவ்வுலக நாடுகளை கிறிஸ்தவ மயமாக்குவார் என்று நம்புகிறார்கள்.
நற்செய்தி பெருவெற்றியுடன் பரவி, நாடுகள் கிறிஸ்தவ மயமாக்கப்பட்டு, கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக இவ்வுலகில் ஒரு பொற்காலம் (Golden Age) தோன்றும் என்பது இக்கோட்பாட்டின் போதனை. இந்தப் பொற்காலமே, இக்கோட்பாடின்படி இவ்வுலகில் ஏற்படும் ஆயிரவருட அரசாட்சி. இவ்வாயிரம் வருட, பொற்காலத்தின்போது உலக நாடுகள் பலவற்றின் மத்தியில் வேதம் அதிகாரம் செலுத்தி, கிறிஸ்தவத்தின் பாதிப்பு அதிகளவில் இருக்கும் என்கிறது போஸ்ட்-மிலேனியலிசம். இக்காலத்தில் உலகத்தில் பாவம் தொடர்ந்திருந்தபோதும், ஒழுக்கத்தோடு கூடிய நீதியும், சமாதானமும், பொருளாதார மேம்பாடும் உலகளாவியதாக மானிடர் மத்தியில் காணப்படும் என்கிறது இக்கோட்பாடு. நாடுகளில் கிறிஸ்துவின் ஆட்சி நிலவி, அவருடைய இராஜ்யம் உலகில் இவ்வகையில் ஏற்படுத்தப்படும் என்பது இதன் போதனை.
போஸ்ட் மிலேனியலிசத்தைப் பின்பற்றுபவர்கள், கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சியான பொற்காலத்தின்போதோ அல்லது அதற்கு முன்போ பெருமளவில் யூதர்கள் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிப்பார்கள் என்று நம்புகிறார்கள். இதற்காக இஸ்ரவேலில் இருக்கும் ஒவ்வொரு யூதனும் விசுவாசியாக மாறிவிடுவான் என்று இதனைப் புரிந்து கொள்ளக் கூடாது. எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்குமளவுக்கு யூதர்கள் மத்தியில் நற்செய்தி போதனையின் மூலம் நாடளவிய மனந்திரும்புதலும், விசுவாசமும் ஏற்படும் என்கிறது இப்போதனை.
உலகில் கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக ஏற்படும் பொற்காலத்தின்போது ஏற்படும் நற்செய்தியின் வெற்றியும், ஆயிர வருட அரசாட்சியும், உலகில் கிறிஸ்து ஏற்படுத்தும் ஆட்சியின் அடையாளங்கள் என்று இக்கோட்பாடு சொல்கிறது. இக்காலத்தில் பிதாவின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கும் கிறிஸ்து வானத்தையும் பூமியையும் ஒரு சேர ஆள்வார் என்பது இதன் கருத்து. அத்தோடு, ஆயிரம் வருட அரசாட்சி ஏற்படுமுன் உலகத்தில் பாவத்தின் செயல்கள் நிகழ்ந்தபோதும் அது படிப்படியாக நன்மையை நாடிப்போய் சமாதானத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் காணும் என்று இது விளக்குகிறது.
போஸ்ட் மிலேனியலிசம் மத்தேயு 24ல் காணப்படும் அநேக கடைசிக் கால நிகழ்வுகள் ஆயிரம் வருட அரசாட்சி ஏற்படுவதற்கு முன்பே நடந்து முடிந்துவிடும் என்கிறது. முக்கியமாக மத்தேயு 24ல் விளக்கப்படுகின்ற இறுதிக்காலத்தை சுட்டிக் காட்டும் அநேக அடையாளங்கள் 70ல் எருசலேம் நிர்மூலமாக்கப்படுவதற்கு முன்பே நடந்து முடிந்துவிட்டன என்கிறது இப்போதனை. இத்தகைய விளக்கத்தையே பிரித்தரிஸ்ட் முறையைப்பின்பற்றிய விளக்கம் என்று கூறுவர்.
அத்தோடு வெளிப்படுத்தல் விசேஷத்தில் 19ம் அதிகாரமும் 20ம் அதிகாரமும் அடுத்தடுத்து நடந்துவந்த காரியங்களை விபரிப்பதாகக் கூறுகிறது. 19ம் அதிகாரம் வரலாற்றில் எவ்வாறு பகுதி பகுதியாக தனது எதிரிகளை வெற்றி கொள்கிறார் என்பதையும், 20ம் அதிகாரம் கிறிஸ்து முழு வெற்றியும் அடைந்த பிறகு சாத்தானை எப்படி ஆயிரம் வருட காலத்திற்கு கட்டிவைக்கிறார் என்று விளக்குவதாகவும் கூறுகிறது. இப்போதனையைப்பின்பற்றும் எல்லோருமே ஆயிரம் வருடங்களை எழுத்துபூர்வமானதாக விளக்குவதில்லை. ஆனால், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குப்பின்பு சாத்தான் இக்காலத்தில் கட்டிவைக்கப்பட்டு, அவனுடைய ஆட்சி பூரணமாக இல்லாமலாக்கப்படும் என்று இவர்கள் நம்புகிறார்கள்.
இதன் குறைபாடுகள்:
இக்கோட்பாடு பலவிதங்களில் நாம் இனிப் பார்க்கப்போகின்ற ஆ-மிலேனியல் (A-Millennial) கோட்பாட்டை ஒத்திருந்தபோதும் பல குறைபாடுகளைக் கொண்டதாக இருக்கின்றது.
- ஆயிரம் வருட அரசாட்சி இந்த உலகத்தில் நடக்கப்போகிறது என்ற இதன் போதனைக்கு வேத சான்றுகள் இல்லை. இவ்வாயிரம் வருடங்களை இது எழுத்துபூர்வமானதாக (Literal) கருதாவிட்டாலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பு இக்காலப்பகுதியில் உலகம் கிறிஸ்தவ மயமாக்கப்பட்டு, சாமாதானமும், நீதியும், தேவ இராஜ்யமும் நிகழும் பொற்காலமாக இருக்கும் என்பதற்கு வேத சான்றுகள் இல்லை. இதற்கு எதிர்மறையான போதனைகளையே வேதத்தில் பார்க்கிறோம்.
- நிகழ்காலமான சுவிசேஷ காலத்தில் உலகம் படிப்படியாக நன்மையை நாடிப்போய் விருத்தி அடைந்து பொற்காலத்தில் முடியும் என்பதற்கு எந்த சான்றும் இல்லை, மாறாக, தொடர்ந்து இந்த உலகத்தில் பாவச் செயல்கள் அதிகரிக்கத்தான் செய்யும் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
- மத்தேயு 24ன் அநேக கடைசிக்கால அடையாளங்களை இது நடந்து முடிந்துவிட்ட நிகழ்ச்சிகளாக பிரித்தரிஸ்ட் கொள்கை அடிப்படையில் விளக்குவது வேதத்தின் ஏனைய பகுதிகள் தரும் விளக்கங்களோடு ஒத்துப் போகவில்லை. உபத்திரவகாலம், போர்கள், போர்களைப்பற்றிய வதந்தி, பெருமளவில் சத்தியத்தைவிட்டு விலகிப்போகும் கூட்டம் போன்றவற்றின் அடையாளங்கள் எல்லாம் ஆயிரம் வருடகால ஆட்சிக்கு முன்பாகவே (கி.பி. 70க்கு முன்பாகவே) நடந்து முடிந்துவிட்டன என்ற இக்கோட்பாட்டின் போதனைக்கு வேத சான்றுகள் இல்லை.
பிரி-மிலேனியலிசம் (Pre-Millennialism)
பிரி-மிலேனியலிசம் கிறிஸ்து தனது இரண்டாம் வருகைக்குப் பின்பு இவ்வுலகத்தில் ஆயிரம் வருட அரசாட்சியை நிறுவுவார் என்று போதிக்கிறது. இக்கோட்பாடு இருபிரிவுகளைக் கொண்டுள்ளது. முதலாவது ஹிஸ்டோரிக் பிரி-மிலேனியலிசம். அடுத்ததாக சமீப காலங்களில் உருவான டிஸ்பென்சேஷனல் பிரி-மிலேனியலிசம்.
ஹிஸ்டோரிக் பிரி-மிலேனியலிசம் (Historic Pre-Millennialism)
இக்கோட்பாட்டைப் பின்பற்றியவர்கள் சபைப்பிதாக்களின் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். ஜஸ்டின் மார்டர் இக்கோட்பாட்டைப் பின்பற்றியதாக நம்பப்படுகிறது. ஆகஸ்தீனுடைய போதனைகளின் தாக்கத்தால் மத்திய காலப்பகுதிகளில் இது பெருமளவுக்கு இல்லாமல் போனது. சீர்திருத்த காலப்பகுதிகளில் ஆகஸ்தீனின் போதனைகளைப் பின்பற்றிய சீர்திருத்தவாதிகள் இப்போதனையை நிராகரித்தனர்.
இப்போதனையின் முக்கிய அம்சம், கிறிஸ்து இரண்டாவது வருகையின்போது இவ்வுலகில் ஆயிரம் வருட காலத்திற்கு தனது ஆட்சியை ஏற்படுத்தி ஆள்வார் என்பதாகும். இந்த ஆயிரம் வருடத்தை இவர்கள் எழுத்துபூர்வமான ஆயிரம் வருடங்களாக கணிக்கிறார்கள். கிறிஸ்து தனது சரீரத்துடன் இவ்வுலகிற்கு வந்து எருசலேமை மையமாகக்கொண்டு ஆயிரம் வருடகாலத்திற்கு நாடுகளை ஆள்வார் என்கிறது இப்போதனை. இந்த ஆயிரம் வருட கால ஆட்சியில் இவ்வுலகத்தில் இதுவரை காணாத சமாதானமும், நீதியும், பொருளாதார வளர்ச்சியும் நாடுகள் மத்தியில் காணப்படும் என்று இக்கோட்பாடு விளக்குகிறது. பாவமும் அதன் பாதிப்பும் இவ்வுலகில் தொடர்ந்திருந்தபோதும் இப்பொற்காலத்தில் மக்கள் இதுவரையிலும் காணாத ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள் என்கிறது இப்போதனை.
இவ்வாயிர வருட காலப்பகுதியில் கிறிஸ்து அந்திக் கிறிஸ்துவையும் தன்னுடைய எதிரிகள் அனைவரையும் அழித்து தனது இறை ஆண்மையை எங்கும் வெளிப்படுத்துவார் என்றும் விசுவாசிகள் இக்காலப்பகுதியில் கிறிஸ்துவுடன் ஆள்கின்ற ஆசீர்வாதத்தை அடைவார்கள் என்பதும் இக்கோட்பாட்டின் போதனை.
அத்தோடு, இப்போதனை கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சடுதியானதாகவும், எதிர்பாராததாகவும் இருக்குமென்றும் இவ்வருகைக்கு முன்பு விசுவாசிகள் தாங்கமுடியாத எதிர்ப்பையும் இவ்வுலகத்தில் அனுபவிப்பார்கள் என்றும் கூறுகிறது. அதாவது, கடைசிக்காலங்களை சுட்டிக்காட்டும் அடையாளங்களான உபத்திரவ காலம், விசுவாசத்தை விட்டு விலகி ஓடும் கூட்டம், அந்திக் கிறிஸ்துவின் வருகை போன்ற அடையாளங்களெல்லாம் கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக உடனடியாக ஏற்படும் என்றும், கிறிஸ்து இவ்வுலகிற்கு வருகை தந்து எல்லா எதிர்ப்புகளையும் முறியடித்து தனது இராஜ்யத்தை இவ்வுலகில் ஸ்தாபிப்பார் என்றும் இக்கோட்பாடு விளக்குகிறது. இந்தப் போதனையின் காரணமாக இக்கோட்பாடு போஸ்ட்-டிரிபியுலேஷனிசம் (Post-Tribulationism) அதாவது, இரண்டாவது வருகைக்கு முன்பான உபத்திரவ காலம் என்று அழைக்கப்படுகிறது. மாறாக, பிரி-டிரிபியுலேஷனிசம் (Pre-Tribulationism). இரண்டாவது வருகைக்குப் பிறகு உபத்திரவ காலம் என்ற போதனை டிபென்சேஷனல் பிரி-மிலேனியலிசத்தின் Dispensational Pre-Millennialism முக்கிய அம்சமாக இருக்கின்றது.
ஹிஸ்டோரிக் பிரி-மிலேனியலிசம் கர்த்தர் இவ்வுலகில் யூதர்களையும் புறஜாதியரையும் கொண்ட ஒரே மக்களைக் கொண்டிருக்கிறார் என்று போதித்தபோதும், யூத நாட்டுக்கும், மக்களுக்கும் தேவனுடைய திட்டத்திலும், இராஜ்யத்திலும் விசேஷமானதொரு இடமளிக்கப்பட்டிருப்பதாகவும் நம்புகிறது. அநேக பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டாலும் ரோமர் 9:11 வரையிலான அதிகாரங்களில் போதிக்கப்படும் உண்மைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்கிறது இக்கோட்பாடு. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது இஸ்ரவேலில் உள்ள யூதர்கள் மத்தியில் நாடளவில் பெரும் மனமாற்றம் ஏற்பட்டு பெருந்தொகையானோர் விசுவாசத்தை அடைந்து கிறிஸ்து ஸ்தாபிக்கும் ஆயிரம் வருட கால இராஜ்யத்தில் முக்கிய இடத்தை வகிப்பார்கள் என்பது இதன் போதனை. அத்தோடு பழைய ஏற்பாட்டு சடங்காச்சாரியங்களும் ஏதோ ஒரு வகையில் மறுபடியும் யூதர்கள் மத்தியில் புதுப்பிக்கப்படும் என்றும் இக்கோட்பாடு கருதுகிறது.
ஹிஸ்டோரிக் பிரி-மிலேனியலிசம் இரண்டுவகை உயிர்த்தெழுதல் நிகழும் என்றும், ஒன்று ஆயிரம் வருட அரசாட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவும், இரண்டாவது அவ்வாயிரம் வருட அரசாட்சி முடிவுக்கு வரும்போது நிகழும் என்றும் விளக்குகிறது. இதற்கு இக்கோட்பாடு வெளிப்படுத்தல் விசேஷம் 20ம் அதிகாரத்தை பயன்படுத்துகிறது. இதன்படி விசுவாசிகள் ஆயிரம் வருட அரசாட்சி ஆரம்பிக்கு முன் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவுடன் இவ்வுலகில் ஆயிரம் வருடங்கள் ஆள்வார்கள் என்றும், அக்காலப்பகுதி முடிந்தவுடன் அவிசுவாசிகள் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பையும், தண்டனையும் சந்திப்பார்கள் என்றும் விளக்குகிறது.
டிஸ்பென்சேஷனல் பிரி-மிலேனியலிசம் (Dispensational Pre-Millennialism)
இக்கோட்பாடு ஏனையவை போலல்லாது சமீப காலத்தில் தோன்றியதாகும். 1825 ஜோன் நெல்சன் டார்பி (John Nelson Darby) என்பவர் இங்கிலாந்தில் ஆரம்பத்தில் ஆங்கிலிக்கன் சபையின் குருவாக இருந்து பின்பு பிலிமத் பிரதரன் என்ற இயக்கத்தை தோற்றுவித்தார். டார்பியின் போதனைகளைப் பலர் பின்பற்றியபோதும், அவற்றை சீ. ஐ. ஸ்கோபீல்டைப்போல (C. I. Scofield) பரப்பியவர்கள் யாருமில்லை. அமேரிக்காவில் ஒரு கொங்கிரிகேசனல் சபையில் போதகராக இருந்த ஸ்கோபீல்ட் டார்பியின் போதனைகளால் கவரப்பட்டு அவற்றை ஏற்றுக் கொண்டதோடு ஸ்கோபீல்ட் பைபிள் என்ற பெயரில் டார்பியின் போதனைகளை விளக்கும் வேதப்புத்தகத்தையும் வெளியிட்டார். 1909ல் இது முதலில் வெளிவந்தது. ஸ்கோபீல்டின் டிஸ்பென்சேஷனல் கருத்துக்களைக் கொண்ட ஸ்கோபீல்ட் வேதப்புத்தகம் அதனை வாங்கிப்பயன்படுத்துகிற அனைவரையும் இன்றும் வேதவிளக்கங்கள் என்ற பெயரில் டிஸ்பென்சேஷனலிசப் போதனையால் கவர்ந்து கொண்டிருக்கிறது.
இதுதவிர டிஸ்பென்சேஷனல் பிரி-மிலேனியலிசத்தை வட அமெரிக்காவில் பெரிதும் பரப்புவதற்கு அக்கோட்பாட்டைப் பின்பற்றிப் போதித்துவரும் பல இறையியல் கல்லூரிகளும், இறையியல் வல்லுனர்களும் காரணமாக இருக்கின்றார்கள். மூடி பைபிள் இன்ஸ்டிடியூட், டல்லஸ் இறையியல் கல்லூரி, மாஸ்டர்ஸ் இறையியல் கல்லூரி, கிரேஸ் இறையியல் கல்லூரி போன்றவை இவற்றில் சில, அத்தோடு இக்கோட்பாட்டைப் பின்பற்றும் இறையியல் வல்லுனர்களாக ஜோன் வெல்வூர்ட், டுவைட் பென்டிகோஸ்ட், சார்ள்ஸ் ரைரி, ஜோன் மெக்கார்தர் சுவின்டல் போன்றோரைக் குறிப்பிடலாம்.
இதன் முக்கிய அம்சங்களை இனிப் பார்ப்போம். மீட்பின் வரலாற்றில் கடவுள் பல்வேறு விதங்களில் மனிதனோடு தொடர்பு கொண்டு செயல்படுகின்றார் என்கிறது டிஸ்பென்சேஷனலிசம். “ஒரு குறிப்பிட்ட காலத்தில் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தின் ஒரு அம்சத்தைக்குறித்து மனிதன் எவ்வாறு சோதிக்கப்படுகிறான்” என்பதையே டிஸ்பென்சேஷன் என்ற வார்த்தை விளக்குகிறது என்கிறது பழைய ஸ்கோபீல்ட் பைபிள் குறிப்பு. சமீபத்தில் வந்துள்ள ஒரு வெளியீடு, “மனிதர்கள் தம்மோடு எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை ஒரு குறிப்பிட்ட வழிமுறையின் மூலம் கடவுள் செயல்பட்டு வெளிப்படுத்துவதே டிஸ்பென்சேஷன்” என்று விளக்குகிறது. ஆகவே, இக்கோட்பாடு, மனிதனுடைய வீழ்ச்சிக்கு முன்பாக படைப்பிலிருந்து ஆயிரம் வருட அரசாட்சியுடன் வரலாறு முடிவடையும்வரை கடவுள் தன்னுடைய படைப்புயிர்களான மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கு பல்வேறு விதமான நிர்வாக முறைகளைப் பயன்படுத்துகிறார் என்கிறது.
ஏழு நிர்வாக முறைகள் (Seven Dispensations)
டிஸ்பென்சேஷனலிஸிட்டுகள் இந்த நிர்வாக முறைகள் எத்தனை என்பதில் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தபோதும் பொதுவாக அத்தகைய ஏழு நிர்வாக முறைகள் இருக்கின்றன என்று ஒத்துப் போகின்றனர். இவற்றை அறியாமையின் நிர்வாக முறை (படைப்பு முதல் ஏதேன் தோட்டத்தில் இருந்து ஆதாம் விரட்டப்படும் வரை), மனித மனசாட்சியின் நிர்வாகமுறை (நோவாவின் காலத்தில் மக்கள் தண்ணீர் வெள்ளத்தால் அழிக்கப்படும்வரை), மனித அரசின் நிர்வாகமுறை (வெள்ளத்தால் உலகம் அழிக்கப்பட்டதிலிருந்து ஆபிரகாம் அழைக்கப்பட்டவரை), வாக்குத்தத்த நிர்வாகமுறை (ஆபிரகாம் அழைக்கப்பட்டதிலிருந்து சீனாயின் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதுவரை), நியாயப்பிரமாண நிர்வாகமுறை (சீனாயில் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது முதல் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதுவரையும்), திருச்சபை நிர்வாகமுறை (கிறிஸ்து சிலுவையில் மரித்ததுமுதல் பரிசுத்தவான்கள் வருகைவரையும்), தேவ இராஜ்யத்தின் நிர்வாக முறை அல்லது ஆயிரம் வருட அரசாட்சி (கிறிஸ்து இஸ்ரவேலை மீட்டு, எருசலேமை தலைமையகமாகக்கொண்டு ஆயிரம் வருடம் ஆட்சி செய்தல்) என்று இவர்கள் பிரிக்கிறார்கள். இந்த நிர்வாகப்பிரிவுகளில் கடைசி மூன்றுமே முக்கியமானவை என்றும் இவர்கள் கூறுவார்கள்.
டிஸ்பென்சேஷனல் போதனைகள் உருவான ஆரம்பகாலத்தில் இந்த ஏழுவிதமான நிர்வாக முறைக்காலங்களில் மனிதர்கள் உலகத்தில் ஓரேவிதத்தில் இரட்சிக்கப்படுவதில்லை என்று நம்பப்பட்டது. அதாவது, ஒவ்வொரு டிஸ்பென்சேஷனிலும் (நிர்வாகமுறை) வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தி கர்த்தர் பாவிகளை இரட்சித்தார் என்று போதிக்கப்பட்டது. இப்போது இதில் டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் மத்தியில் வேறுபட்ட கொள்கைகள் நிலவுகின்றன. சிலர் இரட்சிப்பு எக்காலத்திலும் கிருபையினால் விசுவாசத்தின் மூலமே கிட்டும் என்ற தெளிவான வேத போதனையை ஏற்றுக்கொள்கிறார்கள்.
திருச்சபையும், இஸ்ரவேலும்
டிஸ்பென்சேஷனலிசம் இஸ்ரவேலுக்கும், திருச்சபைக்கும் இடையில் பெரும் வேறுபாட்டைக் காண்கிறது. சார்ள்ஸ் ரைரி (Charles C. Ryrie) என்ற டிஸ்பென்சேஷனலிச போதனையாளர், “கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள், இந்த உலகத்தோடு உள்ள தொடர்பு ஆகியவற்றில் ஆரம்பத்தில் இருந்தே இஸ்ரவேலுக்கும், திருச்சபைக்கும் இடையில் பெரு வேறுபாடு இருந்துள்ளது” என்கிறார். இதுபற்றி ஆரம்பத்தில் போதித்தவர்கள், கிறிஸ்து தேவ இராஜ்யத்தைப்பற்றிப் போதித்து தனது ஊழியத்தை ஆரம்பித்து, எருசலேமில் தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்து இஸ்ரவேலை மறுபடியும் ஆளப்போவதாகப் பிரசங்கித்தார் என்றும், ஆனால், அவர் காலத்து யூதர்கள் அவரை ஏற்றுக்கொள்ளாததால் அந்த இராஜ்யத்தை ஸ்தாபிப்பதை அவர் தள்ளிவைத்து திருச்சபையின் காலத்தை இடைச்செருகலாக ஆரம்பிக்க வேண்டி வந்தது என்றும் போதிக்கின்றனர். தேவ இராஜ்யத்தின் நிர்வாகமுறையான மேசியாவின் இராஜ்யம் உலகத்தில் இஸ்ரவேலை மையமாகக் கொண்டு அமைய வேண்டி இருப்பதால் அது நிறைவேறும் காலம் பின்தள்ளிப்போடப்பட்டுவிட்டது என்றும் இப்போது திருச்சபைக்கான கர்த்தரின் திட்டங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்றும் விளக்கினார்கள்.
(இத்தொடராக்கத்தின் மிகுதி அடுத்த இதழில் நிறைவு பெறும்)