திருமறைத்தீபம் 2018 -ம் ஆண்டு நான்காம் இதழ்
1. வாசகர்களே!
2. அத்தநேசியஸும் ஏரியன் முரண்பாடும்
3. அதிகாரமும் அடங்காப்பிடாரிகளும்
4. கிறிஸ்தவ வைராக்கியமும், ஜெபமும்
5. ஆயிரம் வருட அரசாட்சி
வாசகர்களே!
அன்பு வணக்கங்கள்!
மறுபடியும் இந்த இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்விதழில் முக்கியமான ஆக்கங்கள் வந்திருக்கின்றன. அத்தநேசியஸ் என்ற ஆதிசபையின் முக்கிய தலைவரைப் பற்றி டேவிட் மெரெக் எழுதிய ஆக்கத்தின் முதலாவது பகுதியை இதில் தந்திருக்கிறேன். அத்தநேசியஸ் எந்தளவுக்கு சபை வரலாற்றில் முக்கியமானவர் என்பதை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அறிந்துவைத்திருக்கவில்லை. சத்தியத்தின் நிமித்தம் அவர் எடுத்த நடவடிக்கைகள் அவரைப் பலதடவைகள் சிறைவாசம் அனுபவிக்கவைத்திருக்கிறது. கர்த்தரின் கிருபையே உயிராபத்து ஏற்பட்ட ஒவ்வொரு தடவையும் அவரைப் பாதுகாத்திருக்கிறது. அந்தளவுக்கு சத்தியத்திற்காக உயிரைப் பணயம் வைக்கிறவர்கள் இன்று எங்கிருக்கிறார்கள். அத்தநேசியஸின் சத்திய வைராக்கியமே திரித்துவம் பற்றிய ஆணித்தரமான விளக்கத்தைத் தரும் வரலாற்று சிறப்புப் பெற்ற நைசீன் ஆவணத்தை நமக்குத் தந்திருக்கிறது. இவ்வாக்கத்தை வாசித்துப் பயனடையுங்கள்.
அடுத்ததாக அதிகாரத்தைப் பற்றியும் அதற்கு அடங்கி நடக்கவேண்டிய அவசியத்தைப்பற்றிய ஆக்கமொன்றை இதில் நான் எழுதியிருக்கிறேன். அதிகாரத்தை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் ‘லிபரலிசம்’ இன்று எங்கும் கொடிகட்டிப் பறக்கிறது. கிறிஸ்தவர்கள் அதிகாரத்துக்கு மதிப்புக்கொடுத்து நடக்கவேண்டும்; அதை எதிர்ப்பது கர்த்தரையே எதிர்ப்பதாகும். அத்தோடு கடைசிக்கால சத்தியங்களை விளக்கும் தொடராக்கமும் இதில் வந்திருக்கிறது.
டேவிட் மெரெக் எழுதிவந்திருக்கும் ஆவிக்குரிய வைராக்கியம் பற்றிய ஆக்கத்தையும் இதில் வாசித்துப் பயன்பெறலாம். வாசகர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. இனி திருமறைத்தீபத்தை இந்திய வாசகர்கள் நன்மை கருதி தமிழகத்திலேயே வெளியிடத் தீர்மானித்திருக்கிறோம். எந்தவிதத்திலும் இதழின் தரம் குறையாமல் அச்சிட்டு வெளியிடவும், அதனை உங்களுக்குத் தொடர்ந்து அனுப்பவும் வசதிகளை செய்து வருகிறோம். அதற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். அதுபற்றிய விபரங்கள் அடுத்த இதழில் வரும். இந்த இதழும் அதன் ஆக்கங்களும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும், ஜெபமும். – ஆர்
வாசகர்களே அத்தநேசியஸும் ஏரியன் முரண்பாடும்
– டேவிட் மெரெக் –
டாக்டர் சாமுவேல் வால்டிரன் எனும் சீர்திருத்த போதகர், வரலாற்று இறையியல் தொடர்பான தன்னுடைய விளக்கங்களில், புதிய ஏற்பாடு நிறைவுபெற்ற பின்பு, திருச்சபை வரலாற்றில் மூன்று மாபெரும் இறையியலறிஞர்கள் இருந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். அவர்களில் இருவர் பிரபலமானவர்கள் – ஜோன் கல்வின் மற்றும் ஆகஸ்டின். எனினும் மூன்றாவது நபர் அந்தளவுக்குப் பிரபலமானவர் அல்ல. அவர்தான் அத்தநேசியஸ்.

அத்தநேசியஸ்
அவர்கள் மூவரில், அத்தநேசியஸ் ஏன் அந்தளவுக்குப் பிரபலமானவராக இருக்கவில்லை என்பதற்கான ஒரு காரணம், திருச்சபை வரலாற்றின் ஆரம்ப காலப்பகுதியில் அவர் வாழ்ந்ததுதான். மூன்றாவது நூற்றாண்டின் இறுதியில் அவர் பிறந்தார் (கி.பி. 295 மற்றும் கி.பி. 298 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம்). கி.பி. 373ல் அவர் மரித்தார். ஆகவே, திருச்சபை வரலாற்றில், ஆதி திருச்சபையின் காலம் என்று குறிப்பிடப்படுகிற காலப்பகுதியில் அவர் வாழ்ந்திருந்தார். (வரைபடத்தைப் பாருங்கள்)
மேலும், கல்வினோ, ஆகஸ்தீனோ செய்ததுபோல், இன்றளவும் பயன்பாட்டில் இருக்கிற எந்தவிதமான புத்தகங்களையும் அத்தநேசியஸ் விட்டுச் செல்லவில்லை. மற்றொரு காரணம், முறைப்படுத்தப்பட்ட இறையியல் போதனைகளுக்கான பங்களிப்பில் ஏனைய இருவர் செய்தது போன்று, அத்தநேசியஸ் குறிப்பிடத்தகுந்தளவுக்குச் செய்யாததனால், அவர் அவர்களைப் போல அநேகரால் அறியப்பட்டிருக்கவில்லை. அத்தநேசியஸின் மிக முக்கிய பங்களிப்பு, இயேசு கிறிஸ்துவினுடைய முழுமையான தெய்வீகத் தன்மையைப் பற்றிய போதனைகளிலேயே பெருமளவுக்கு தங்கியிருந்தது.
திருச்சபையின் அடித்தளமாக, கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மை பற்றிய போதனை இருந்தது. இதுவே, திரித்துவம் மற்றும் கிறிஸ்துவின் தன்மையைப் பற்றிய அடிப்படையான வேத சத்தியங்களுக்கான மையப் போதனையாக இருந்தது. வேறுவிதமாக சொல்லுவதானால், “கடவுள் யார்?” “இயேசு கிறிஸ்து யார்?” என்ற அடிப்படையான கேள்விகளுக்கான பதில் காண்பதில் அத்தநேசியஸின் பணிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும், ஏரியன் முரண்பாடு (Arian controversy) என்று பொதுவாக அறியப்பட்டிருக்கின்ற விஷயத்தில், அவர் காட்டிய ஈடுபாடே அவருடைய பங்களிப்பை மிக முக்கியமானதாக முன்வைக்கிறது. இந்த முரண்பாடு, நான்காவது நூற்றாண்டில் (கி.பி. 318 முதல் 381 வரை) கிறிஸ்துவினுடைய திருச்சபையையே குலுக்கியது. சில காலங்களுக்கு, திருச்சபையில் பிரிவினையை ஏற்படுத்தி அச்சுறுத்துகிறதாகவும் இருந்தது. இந்த முரண்பாட்டில் முக்கிய விஷயமாக இருந்தது, இயேசு கிறிஸ்துவினுடைய முழுமையான தெய்வீகம் பற்றிய போதனை. கிறிஸ்துவினுடைய தெய்வீகம் பற்றிய போதனையில், முதல் நூற்றாண்டிலிருந்து திருச்சபை தொடர்ச்சியாக போதித்து வந்த போதனையில் அத்தநேசியஸ் உறுதியாக நின்றதன் காரணமாக, ‘Father of Orthodoxy’ என்று அவர் அழைக்கப்பட்டார். எனவே இந்த ஆக்கத்தில், அத்தநேசியஸின் வாழ்க்கை, அவருடைய பணிகள் மற்றும் ஏரியன் முரண்பாட்டில் அவருடைய பங்களிப்பு பற்றிய விஷயங்களில் நம்முடைய கவனத்தை செலுத்துவோம். ஆனால், இவைகளில் நம்முடைய கவனத்தைச் செலுத்துவதற்கு முன், நாம் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவைகளை முதலாவது நாம் பார்க்கலாம்.
அத்தநேசியஸின் வாழ்க்கையும் ஏரியன் முரண்பாட்டின்போது இருந்த அரசியல் சூழ்நிலையும்
அத்தநேசியஸ், மத்திய தரைக்கடலைச் சூழ்ந்ததும் அதனைக் கடந்த பகுதிகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு ஆண்டு வந்த வல்லரசான ரோம சாம்ராஜ்யத்தில் வாழ்ந்து வந்தார். (வரைபடத்தைப் பாருங்கள்)
அவர் வாழ்ந்த காலப்பகுதியில், ரோம சாம்ராஜ்யம், கிறிஸ்துவினுடைய திருச்சபையைக் கொடூரமாக எதிர்த்தது. முதல் நூற்றாண்டிலிருந்தே, கேடான ரோம ஆட்சியாளர்களால், அவ்வப்போது, கொடூரமான துன்புறுத்தல் நடந்து கொண்டுதான் இருந்தது. கி.பி. 303 முதல் கி.பி. 310 வரையிலான காலப்பகுதியில் மிகவும் வன்மையான துன்புறுத்தல்கள் நிகழ்ந்தது. அப்போது அத்தநேசியஸ் சிறுவனாக இருந்தார். அத்தோடு, அத்தநேசியஸ் வாழ்ந்த, ரோம ராஜ்யத்தின் கிழக்குப் பகுதியில், துன்புறுத்தல்கள் மிகவும் அதிகமாக இருந்தது.

கான்ஸ்டன்டைன்
எனினும், அந்நேரத்தில் அரசியல்ரீதியாக ஒரு திடீர் மாற்றமும் ஏற்பட்டது. அந்த மாற்றம், கேடான ரோம ஆட்சியாளர்களால் ஏற்பட்ட துன்புறுத்தலுக்கு முடிவு கட்டியது. கி.பி. 306ல், கான்ஸ்டன்டைன் என்பவர் தன்னுடைய தந்தையின் மறைவிற்குப் பிறகு, மேற்கு சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதிக்கு அதிபதியானார். பிறகு, கி.பி. 324ல், ஒட்டுமொத்த ரோம சாம்ராஜ்யத்தின் பேரரசனானார். இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், கி.பி. 312ல் ரோமுக்கு வெளியில் நடந்த ஒரு முக்கியமான போருக்குப் பிறகு, கான்ஸ்டன்டைன், தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று பகிரங்கமாக அறிவித்ததுதான். ஆனால், கி.பி. 337ல், அவருடைய மரணத்திற்கு கொஞ்சக் காலத்திற்கு முன்புதான் அவர் உண்மையில் மனந்திரும்பியிருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. எனினும், கான்ஸ்டன்டைன் தன்னைக் கிறிஸ்தவன் என்று அறிவித்ததனால், நல்லதும் கெட்டதுமான அநேக முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன.
ரோமப் பேரரசர்களில் முதலாவது கிறிஸ்தவனான, கான்ஸ்டன்டைன், தன் சாம்ராஜ்யத்தில் மத சுதந்திரத்தை அறிவித்தது மட்டுமல்லாமல், கிறிஸ்தவர்களுக்கான துன்புறுத்தலையும் முடிவுக்குக் கொண்டு வந்தார். அத்தோடு, திருச்சபையின் நன்மைக்கேதுவாக, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் செய்யத் துவங்கினார். கான்ஸ்டன்டைனின் மறைவுக்குப் பிறகு, சில காலம் கழித்துத்தான், கிறிஸ்தவம், நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக ஏற்படுத்தப்பட்டது. கான்ஸ்டன்டைன், நாடாளும் அரசனாக இருந்தபோதிலும், திருச்சபையின் நடவடிக்கைகளில், குறிப்பாக ஏரியன் முரண்பாட்டிலும், தானாக முன்வந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். கான்ஸ்டன்டைனை மிகவும் ஊக்கப்படுத்திய விஷயமென்னவென்றால், திருச்சபை தன்னுடைய சாம்ராஜ்யத்தை ஒன்றிணைக்க உதவும் என்று அவர் எதிர்பார்த்ததுதான். இந்த மாற்றம், அதாவது திருச்சபைக்கும் நாட்டிற்கும் இடையிலான இந்தத் தொடர்பு, பிறகு பாதகமான விளைவுகளைத் திருச்சபையில் ஏற்படுத்தியது. நாட்டரசாங்கம், வெகுவேகமாக திருச்சபையோடு ஒன்றிணைந்தது. பிறகு, திருச்சபையின் நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டது. கீழ்வரும் வரைபடத்தைப் பாருங்கள்.
கி.பி. 318ல் ஏரியன் முரண்பாடு உருவானபோது, திருச்சபைக்கும் நாட்டிற்கும் இடையிலான உறவின் நிலை இப்படியே இருந்தது. அடுத்து வந்த வருடங்களில் அது மேலும் படர்ந்து விரிந்தது. இனி வரும் தொடரில், இதன் முக்கியத்துவத்தை நாம் பார்ப்போம். இப்போது இரண்டாவது பின்னணியைக் கவனிப்போம்.
அத்தநேசியஸின் வாழ்க்கையும் ஏரியன் முரண்பாட்டின்போது இருந்த இறையியல் பின்னணியும்
இதில் நாம் மூன்று குறிப்புகளைப் பார்க்கலாம்.
- திருச்சபையில் ஒருபுறம் சத்தியக் கோளாறு வளர்ந்தது, மறுபுறம் சத்தியத்தின் மெய்த்தன்மையைப் பற்றிய புரிதலும் வளர்ந்தது.(இதுபற்றி விளங்கிக்கொள்ள வரைபடத்தைப் பாருங்கள்)

அப்போஸ்தலர்களைக் கொண்டும் அவர்களோடு நெருக்கமாக இருந்தவர்களைக் கொண்டும், ஆண்டவர் நமக்கு தெய்வீக வெளிப்படுத்தலான, தவறிழைக்கவியலாத புதிய ஏற்பாட்டு வேதநூல்களைத் தந்தார். எனினும், கடைசி அப்போஸ்தலனுடைய மறைவுக்குப் பிறகு, கடவுளிடமிருந்து நேரடி வெளிப்படுத்தல் முடிவுக்கு வந்தபோது, வேதத்தைப் பற்றிய திருச்சபையின் அறிவு முதிர்ச்சியடையாத நிலையில் இருந்தது என்பது கண்கூடாகவே தெரியக்கூடியதாக இருந்தது. ஆகவே, கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தைப் பற்றிய புரிதலில் சபை வளரத் துவங்கியது. அதேநேரம், திருச்சபையில் தவறான போதனைகளும் உருவாகின. பல்வேறு காலப்பகுதிகளில், சபையின் சத்தியத்தைப் பற்றிய வளர்ச்சிக்கும் தவறான போதனைகளின் பெருக்கத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் அதிகரித்து, திருச்சபையில் பிரிவினையை ஏற்படுத்துமளவுக்கு நிலைமை மாறியது. கிறிஸ்துவினுடைய மெய்யான திருச்சபையில், சத்தியம் ஒருபோதும் அசத்தியத்தோடு இணைந்து வாழ முடியாது. இதுவே ஏரியன் முரண்பாடு உண்டாவதற்கு, முதலாவது முக்கிய காரணமாக அமைந்தது.
- திருச்சபையில் வேதத்திற்கு முரணான அதிகாரப் படிமுறைகளின் வளர்ச்சி.
முதல் நூற்றாண்டு நிறைவு பெறுவதற்கு முன்பாகவே, உள்ளூர் திருச்சபையிலுள்ள போதகர்கள் மற்றும் உதவிக்காரர்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் சபைத் தலைவர்களைக் கொண்ட வேதத்திற்கு முரணான ஒரு நடைமுறை வளரத் துவங்கியது. ஆரம்பத்தில், ஒரே திருச்சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட போதகர்கள் இருக்கிறபோது, அவர்களில் ஒருவர் மற்றவர்களைவிட முக்கியத்துவம் கொண்டவர் என்ற வகையில் அது ஆரம்பமானது. அந்த முக்கியத்துவம் பெற்றவரே “பிஷப்” என்று அழைக்கப்பட்டார். ஏனையோருக்கு அப்பெயர் வழங்கப்படவில்லை. பிறகு, ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள பல உள்ளூர் திருச்சபைகள் மீது அந்த பிஷப் அதிகாரம் செலுத்துகிறவரானார். அதன் பிறகு, சில முக்கியமான திருச்சபைகளிலுள்ள குறிப்பிட்ட பிஷப்புகள், அதே பகுதியிலுள்ள ஏனைய பிஷப்புகள் மீது அதிகாரம் கொண்டவர்களானார்கள். இப்படி அதிகாரம் கொண்ட “சூப்பர்” பிஷப்புகளில் மிகவும் முக்கியமானவராக இருந்தவரை “சமயகுருமார்” (Patriarch) என்று கிழக்கத்திய பகுதியில் அழைத்தார்கள். அவரையே ரோமில் “போப்” என்று அழைத்தார்கள்.
அத்தநேசியஸ் வாழ்ந்த காலத்தில், இப்படியான அதிகாரம் கொண்ட “சூப்பர்” பிஷப்புகளைக் கொண்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த திருச்சபைகள், எருசலேமிலும், அந்தியோகியாவிலும், கான்ஸ்டான்டிநோபிளிலும், ரோமிலும், எகிப்திலுள்ள அலெக்சாந்திரியாவிலும் இருந்தன. எகிப்திலுள்ள அலெக்சாந்திரியாவில்தான் அத்தநேசியஸ் ஊழியம் செய்து வந்தார். இந்த அதிகாரம் கொண்ட “சூப்பர்” பிஷப்புகள் யாவரையும் பொதுவாக ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்த்தார்கள். நம்முடைய இந்த படிப்பிற்கு இதெல்லாம் மிகவும் முக்கியமானது, ஏனென்றால், அத்தநேசியஸும் இந்த “சூப்பர்” பிஷப்புகளில் ஒருவராகவே இருந்தார்.
- ஏரியன் முரண்பாட்டிற்கான மிக முக்கியமான இறையியல் பின்னணி
இயேசு வந்தபோது, யூதர்கள் ஒரு தெளிவான, சரியான சத்தியத்தில் உறுதியாக இருந்தார்கள். அதாவது ஒன்றான மெய்தேவன் ஒருவரே (உபாகமம் 6:4). பெந்தகொஸ்தே தினத்தில் கிறிஸ்துவினுடைய திருச்சபை ஏற்படுத்தப்பட்டபோதும், இந்த சத்தியத்தில் திருச்சபை உறுதியாக தொடர்ந்தது. எனினும் இயேசு கிறிஸ்து வந்தபோது, இது ஒரு சவாலை எழுப்பியது. இயேசு, தம்முடைய பரலோக பிதாவோடு சேர்ந்து, தானும் கடவுள் என்பதை உறுதியாக எடுத்துரைத்தார். இயேசுவும் கடவுளே என்ற சத்தியத்தைத் திருச்சபையானது சரியாகவே தழுவிக்கொண்டது. ஆகவே, ஆரம்பத்திலிருந்தே, திருச்சபையானது, இந்த இரண்டு சத்தியங்களையும் விசுவாசித்தது. அதாவது, ஒன்றான மெய்தேவன் ஒருவரே என்றும், பிதாவாகிய தேவனோடு சேர்த்து இயேசுவும் கடவுள் என்று அது விசுவாசித்தது. ஆனால் இது ஒரு சவாலை உருவாக்கியது. அதாவது, இந்த இரண்டு சத்தியங்களையும் தர்க்கரீதியாக எப்படி இணைத்துப் பார்ப்பது? இதற்குத் தீர்வு காண முயற்சித்தவர்கள், இதில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு, மற்றதை நிராகரிக்கும் அல்லது மறுக்கும் முடிவுக்கே பெரும்பாலும் வந்தார்கள். இப்படியான முடிவுக்கு வந்தவர்களுடைய சில உதாரணங்களைப் பார்ப்போம்.
திருச்சபை வரலாற்றின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த, ஜஸ்டின் மார்டர் (Justin Martyr) என்ற தேவ மனிதன், இதற்கு ஒரு தீர்வைத் தந்தார். அதை லோகோஸ் ஸ்பெக்யூலேஷன் (Logos Speculation) என்று அழைப்பர். இப்போது நான் இதைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்லப்போவதில்லை. எனினும் சுருக்கமாக சொல்லுவதானால், திரித்துவத்திலுள்ள மூன்று நபர்களும் ஒரே கடவுள் என்பதை மறுதலிக்காமல், அந்த மூன்று நபர்களில் ஒவ்வொருவருக்கும் இருக்கிற தனித்துவமான தன்மையையும், அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கிற உறவின் அதிகாரத்தையும் விவரிக்கிற ஒரு முயற்சியாக இது இருந்தது. ரோமப் பேரரசின் கிழக்குப் பகுதியில் இந்தவிதமான பார்வை மிகவும் பிரபலமாக இருந்தது. இதிலிருக்கிற ஒரு பிரச்சனை என்னவென்றால், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவராகிய இந்த மூவரின் தனித்துவத்தையும் அவர்களுக்கு இடையே இருக்கிற உறவையும் வலியுறுத்துகிற அளவுக்கு, இவர்கள் மூவரும் ஒரே கடவுள் என்பதை வலியுறுத்தவில்லை. இதுவே பின்னால் ஏரியன் என்ற மனிதன், குமாரனாகிய இயேசுவின் முழுமையான தெய்வீகத் தன்மையை வெளிப்படையாக மறுதலிக்கும்படியாக வழிநடத்தியது. ஏரியனின் அந்தப் போதனை ஆத்துமாவை அழிக்கும் கள்ளப் போதனை.
இன்னொருபுறம், தெய்வீகத்தின் ஒருமையை ஆரம்பத்தில் அதிகமாக வலியுறுத்தி, இறுதியில் திரித்துவத்தின் மூன்று நபர்களுக்கும் இடையில் இருக்கிற தனித்துவத்தை மறுதலிக்கிற கள்ளப் போதனையில் போய் முடிந்தவர்களும் இருக்கிறார்கள். இந்தக் கள்ளப் போதனைக்குப் பெயர் மொனாக்கியனிசம் (Monarchianism – கிரேக்க மொழியில் இவ்வார்த்தையின் பொருள் “ஓர் அரசன்”). இப்பெயரே அவர்களுடைய போதனை என்ன என்பதை விவரிக்கிறதாக இருக்கிறது. அதாவது ஒரே அரசர் அல்லது ஆட்சியாளரே உண்டு, அவர்தான் கடவுள் என்பதே இந்தப்போதனை. இந்தக் கள்ளப் போதனையாளர்கள், இயேசு கிறிஸ்து மனிதனாக இப்பூமிக்கு வந்தபோதும், கடவுளின் ஒருமையைக் காக்கும் முயற்சியைச் செய்தார்கள். மொனாக்கியனிச போதனையாளர்களில் இரண்டு பிரிவினர் உண்டு.
- டைனாமிஸ்டிக் மொனாக்கியனிசம் (Dynamistic Monarchianism) அல்லது அடாப்ஷனிஸ்டிக் மொனாக்கியனிசம் (Adoptionistic Monarchianism): இந்தக் கள்ளப் போதனையாளர்கள், இயேசு அடிப்படையில் மனிதன் மட்டுமே என்றும், அவருடைய பிறப்பின்போதோ, ஞானஸ்நானத்தின்போதோ அல்லது உயிர்த்தெழுதலின்போதோ, தெய்வீக வல்லமை அவர்மேல் வந்திறங்கியது என்று விளக்கினார்கள். இவர்கள், கடவுள் இயேசுவைத் தத்தெடுத்தார் என்று ஒருவிதத்தில் சொல்லலாம் என்றார்கள். இயேசு உண்மையாகவும் முழுமையாகவும் கடவுள் இல்லை என்பதுதான் இப்பிரிவினரின் கள்ளப் போதனை. மொனாக்கியனிசத்தின் மற்றொரு பிரிவினர் இவர்களுடைய போதனையை எதிர்த்தனர்.
- மொடலிஸ்டிக் மொனாக்கியனிசம் (Modalistic Monarchianism) அல்லது பெட்ரிபசியனிசம் (Patripassianism – பிதாவாகிய தேவனே சிலுவையில் அறையப்பட்டார்) அல்லது செபெலியனிசம் (Sabellianism – Sabellius என்ற மனிதனால் உருவாக்கப்பட்ட போதனை): இந்தக் கள்ளப் போதனை, பிதாவாகிய தேவனே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குமாரனாகிய தேவனாக தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டார் என்று போதித்தது. மொடலிஸ்டிக் மொனாக்கியனிசம், கடவுளுடைய ஒருமை நிலை மற்றும் கிறிஸ்துவினுடைய தெய்வீகத் தன்மை ஆகிய இரண்டு சத்தியத்தையும் திருப்தி செய்ய எண்ணியது. இப்போதனை, மேற்குப் பகுதியில் சில காலத்திற்கு மிகவும் பிரபலமாக இருந்தது. ரோமன் கத்தோலிக்க போப்புகளும் இந்தப் பார்வையை சில காலத்திற்குக் கொண்டிருந்தனர். ஆனால் பிதாவாகிய தேவனும், குமாரனாகிய தேவனும் தனித்துவம் வாய்ந்த தனி நபர்கள் என்பதை இப்போதனை மறுத்தது. இது டைனாமிஸ்டிக் மொனாக்கியனிசம் மற்றும் லோகோஸ் ஸ்பெக்யூலேஷன் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையைக் கொண்டிருப்பதனால், இதுவே வேதம் போதிக்கும் முறை என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டது.
அத்தநேசியஸின் ஆரம்ப கால வாழ்க்கை
அத்தநேசியஸ், கி.பி. 295 மற்றும் கி.பி. 298 ஆகிய வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருப்பார் என்று சொல்லப்படுகிறது. கி.பி. 373 ல் அவர் மரித்தார். ஏரியன் முரண்பாடு அதிகம் பரவ ஆரம்பித்த காலப்பகுதியில், அத்தநேசியஸ் என்ற உண்மையுள்ள ஊழியன் பிறந்தது, கர்த்தருடைய பராமரிப்பின் செயலே. அத்தநேசியஸின் ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றி குறைந்தளவே நாம் அறிய முடிகிறது.
அத்தநேசியஸ், நாடு கடத்தப்பட்ட காலத்தைத் தவிர்த்து, அவருடைய வாழ்நாள் முழுவதும் எகிப்திலுள்ள அலெக்சாந்திரியாவிலேயே அவர் வாழ்ந்து வந்தார் என்றே தெரிகிறது.
அவருடைய பெற்றோர், உயர் வகுப்பைச் சார்ந்தவர்களும், செல்வமிக்கவர்களுமாக இருந்தார்கள் என்று பிறகு வந்த வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். அவர், கிரேக்கக் கலாச்சாரத்தின் முக்கியமான தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட, தாராளவாத கிரேக்க கல்வியையே ஆரம்பக் கல்வியாகக் கற்றார் என்பதை அவருடைய எழுத்துக்களிலிருந்து நாம் அறிய முடிகிறது.
அத்தநேசியஸ், பழைய ஏற்பாட்டு கிரேக்க மொழிபெயர்ப்பான செப்டுஜியன்ட் வேதத்திலும், கிரேக்க புதிய ஏற்பாட்டு வேதத்திலும் நன்கு தேர்ச்சிப்பெற்றவராக இருந்தார். கிறிஸ்தவ போதனைகளைத் தனக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் இரத்த சாட்சிகளாக மரித்திருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டதிலிருந்து, அத்தநேசியஸ் இளம் வயதிலேயே வேத சத்தியங்களில் வளர்ந்திருக்கிறார் என்பதை நாம் அறிய முடிகிறது. இது கி.பி. 313 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அதன் பிறகு கொடிய துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட்டிருந்தது. அத்தநேசியஸ், வேதத்தில் ஆச்சரியமான அறிவைக் கொண்டிருந்ததாக ஒரு வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அவர் அலெக்சாந்தியாவிலுள்ள புகழ்பெற்ற கேட்டகெட்டிகல் பள்ளியில் (Catechetical School) இறையியல் பயின்றார். அத்தநேசியஸ், சந்நியாசி வாழ்க்கை முறையைத் தழுவி வந்தார். இது வேதபூர்வமற்றது. அவருடைய வாழ்நாள் காலத்தில் எகிப்தில் வளர்ந்து வந்த துறவிமட வாழ்க்கையை அவர் அதிக ஆர்வத்துடன் ஆதரித்தார்.
கி.பி. 312 முதல் கி.பி. 328 வரை அலெக்சாந்திரியாவின் பிஷப்பாக இருந்த, அக்காலத்தின் ஜாம்பவான்களில் ஒருவரான அலெக்சாண்டர், ஒரு கடற்கரை ஓரத்தில், சிறுவனான அத்தநேசியஸ் மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து “திருச்சபை” விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டார். அந்த விளையாட்டில், அத்தநேசியஸ் தன்னை ஒரு பிஷப்பாக காட்டிக் கொண்டார். இதைக் கண்ட அலெக்சாண்டர், அத்தநேசியஸின் செயலால் கவரப்பட்டார். பிறகு இளைஞனாக வளர்ந்த அத்தநேசியஸிற்கு இது தொடர்பாக பயிற்சியையும் தந்து, அவரைத் தன்னுடைய செயலாளராக நியமித்தார். அதன்பிறகு, அலெக்சாண்டருக்குக் கீழாக, ஆர்ச்டீக்கனாக அத்தநேசியஸ் ஏற்படுத்தப்பட்டார். ஆர்ச்டீக்கன் என்ற பதவி, வேதம் போதிக்கின்ற டீக்கன் (உதவிக்காரர்) பதவியைப் போன்றதல்ல. இது ஒரு விசேஷ பதவி, ஆனால் வேதபூர்வமற்றது. இப்பதவியை ஏற்கிறவர்கள், அடுத்த பிஷப்பாக வருவதற்கான வகையில் பயிற்றுவிக்கப்படுவார்கள். அத்தநேசியஸ் தேவனுடைய மக்களுக்காக பணி செய்வதற்கு ஆரம்பத்திலிருந்தே இந்த வகையில் தயார் செய்யப்பட்டிருக்கிறார். பொதுவாக, இப்படியே கிறிஸ்து தன்னுடைய ஊழியர்களைத் தயார் செய்கிறார்.

இப்படியாக, தனக்கு முன்னிருந்த தேவப்பணிக்காக இளம் வயதிலேயே அத்தநேசியஸ் அனைத்து தகுதிகளையும் பெற்று வளர்ந்தார். கிறிஸ்தவ சத்தியத்தை ஆதரித்து, அவர் எழுதிய இரண்டு நூல்கள், இளம் பருவத்திலேயே அவர் கொண்டிருந்த திறமைக்கான சான்றாக இருந்தன. அவற்றில் ஒன்று உலக தத்துவங்களுக்கு எதிரானது. மற்றொன்றின் தலைப்பு, “On the Incarnation of the Divine Word”. இப்புத்தகம், கிறிஸ்தவ சத்தியத்தின் மையமாகிய “வார்த்தை மனிதரானார்” என்பதைப் பற்றி அத்தநேசியஸ் ஏற்கனவே சிந்தித்திருக்கிறார் என்பதை நமக்குக் காட்டுகிறது. இப்புத்தகத்தைப் பற்றி ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்,
“அத்தநேசியஸ் கிறிஸ்துவைப் பற்றிய இரகசியத்தை, ஒரு இறையியலாளரைப் போல் அல்லாமல், இரட்சகரின் தேவையை அறிந்த, அவர்மீது விசுவாசமுள்ள ஆத்துமாவின் அனுகுமுறையைப் போல் எழுதியுள்ளார். ஏரியன் முரண்பாட்டின் சிக்கல்களை எதிர்நோக்கியபோது, இந்த அடிப்படையான சத்தியத்தில் அவர் உறுதியாக இருந்ததுதான், இந்த விஷயத்தில் திசைமாறாமலும், இறையியலில் சமநிலையிலும் அவரை இருக்கச் செய்தது.”
நம்முடைய ஆத்துமாவிற்கான முக்கியமான ஒரு பாடமும் இங்கிருக்கிறது. தவறான போதனைகளிலிருந்து நம்மைக் காக்கவும், கடவுளுடைய சரியான சத்தியங்களில் நம்முடைய புரிதல் மேம்படவும் வேண்டுமானால், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதில் நம்முடைய அனுகுமுறையும் அத்தநேசியஸின் அனுகுமுறையைப் போல் எப்போதும் இருக்க வேண்டும். அதாவது, இரட்சகரின் தேவையை அறிந்த, அவர்மீது விசுவாசமுள்ள ஓர் ஆத்துமாவைப் போன்று அதை நாம் அனுக வேண்டும்.
அத்தநேசியஸின் இனி வரும் வாழ்க்கைக் குறிப்புகளை, ஏரியன் முரண்பாட்டோடு அவருக்கு இருந்த தொடர்போடு இணைத்துப் படிப்போம்.
கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆரம்ப வெற்றி (கி.பி. 318-325)
அலெக்சாந்தியாவில் துவங்கிய முரண்பாடு
- ஏரியஸின் தவறான போதனை

ஏரியஸ்
அத்தநேசியஸ், பிஷப் அலெச்சாண்டருக்குக் கீழாக ஊழியம் செய்துவந்தபோது, கி.பி. 318ல் அலெச்சாந்திரியா திருச்சபையில் ஒரு பிரச்சனை எழுந்தது. அது ஏரியஸ் என்ற ஒரு நபருடைய போதனையினால் உண்டான பிரச்சனை. எனவேதான், இந்த பிரச்சனைக்கு “ஏரியன் முரண்பாடு” என்ற பெயர் வழங்கப்பட்டது. இந்த ஏரியஸ், மிகவும் உயரமானவரும், அதேசமயம் மெலிந்த உடலைக் கொண்டிருந்து, கல்வியில் தேர்ந்தவரும், வெளிப்புறமாகத் தன்னுடைய பக்தியைத் தெரியப்படுத்தி வாழ்ந்தவரும், மிகவும் பிரபலமானவருமாக இருந்தவர் என்று இவரைப் பற்றிச் சொல்லப்படுகிறது. எகிப்திலுள்ள ஒரு திருச்சபையின் மூப்பராக இவர் இருந்தார். வேதத்தை வியாக்கியானம் செய்து போதிக்கும் பொறுப்பும் அவரிடம் ஒப்புவிக்கப்பட்டிருந்தது. ஏரியன் முரண்பாடு எழுந்தபோது, அவர் வயது முதிர்ந்தவராக இருந்தார். அத்தோடு, அவர் பெருமைமிக்கவரும், சாதூரிய திறமையுள்ளவரும், எதையும் விட்டுக்கொடுக்காது விவாதிக்கும் நபராகவும் இருந்தார் என்று சொல்லப்படுகிறது.
ஏரியஸ், திரித்துவ நபர்களுக்கு இடையிலான தனித்துவ தன்மைகளையும் அவர்களுக்கு இடையே இருந்த உறவினிமித்தமான அதிகாரப் பகிர்வையும் வலியுறுத்திய லோகோஸ் ஸ்பெக்யூலேஷனைத் தன்னுடைய கள்ளப் போதனைக்கான தளமாக ஏற்படுத்திக்கொண்டார். குமாரனாகிய தேவன், எல்லாப் படைப்புயிர்களுக்கும் முந்தி இருந்தவர் என்பதையும் எல்லா படைப்புயிர்களுக்கும் மேற்பட்டவர் என்பதையும் சரியாகவே அவர் போதித்தார் [யோவான் 1:1ல் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தை (Logos)]. குமாரனாகிய தேவனே உலகத்தைப் படைத்தவர், பிதாவினுடைய பரிபூரணமான சாயலைக் கொண்டவர் என்றும் போதித்தார். அதனடிப்படையில், குமாரனாகிய இயேசுவை ஒரு வகையில் கடவுள் என்று சொல்லலாம் என்று ஏரியஸ் விளக்கினார். ஆனால், குமாரனும் பிதாவாகிய தேவனால் உருவாக்கப்பட்டவரே என்றும் அவர் போதித்தார். ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த உலகம் உருவாக்கப்பட்டதுபோல் குமாரனும் காலங்கள் துவங்குவதற்கு முன்பே ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கப்பட்டார். ஆகவே, குமாரன் நித்தியமானவர் அல்ல, அவருக்குத் துவக்கம் இருந்தது என்று ஏரியஸ் போதித்தார். ஏரியஸின் இந்த முறையிலான விளக்கங்கள், கிறிஸ்துவினுடைய இத்தகைய தன்மையின்படி அவர் முழுமையான கடவுளாக இருக்க முடியாது, ஆனால் கடவுளுக்கு அடுத்த நிலையிலான ஒருவராகதான் இருக்க முடியும் என்பதாக இருந்தது. ஏரியஸின் இந்த வாதம் பற்றி வாக்கர் என்பவர் பின்வறுமாறு விளக்கியிருக்கிறார்,
“ஏரியஸின் இந்த வாதம் பல தெய்வ கொள்கையையே காட்டுகிறது. ஏரியஸின் விளக்கம் இரண்டு கடவுள்கள் இருப்பதாகக் காட்டுகிறது. அதாவது, ஒருவர் உயர்ந்தவர், பரிபூரணமானவர், யாரும் எட்ட முடியாத தூரத்திலிருக்கிறவர். மற்றவர், அவரைப் போன்றவர், ஆனால் உருவாக்கப்பட்டவர், வரையறைகள் கொண்டவர், முதலாமவருக்குக் கீழானவர்.”
அத்தோடு, இயேசு மனித சரீரத்தைக் கொண்டிருந்தாலும், அவர் மனிதனல்ல, அவரிடம் ஆத்துமாவும் இருக்கவில்லை என்றும் ஏரியஸ் போதித்தார். ஆகவே, இயேசு முழுமையான கடவுள் அல்ல என்று அவர் மறுத்ததோடு, அவர் முழுமையான மனிதனும் அல்ல என்றும் ஏரியஸ் மறுத்திருக்கிறார். எனினும், அந்நாட்களில், இயேசுவின் முழுமையான தெய்வீகத் தன்மையைப் பற்றிய விஷயமே இந்த முரண்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
பிதாவாகிய தேவனுக்கும் குமாரனுக்கும் இடையில் இருக்கிற தனித்துவமான தன்மைகளைத் தானே சரியாக வலியுறுத்திப் போதிக்கிறதாக ஏரியஸ் நம்பினார். தன்னோடு முரண்படுகிறவர்கள், தத்துவார்த்தரீதியாக, தெய்வீகத்தின் ஒருமையை அதிகமாக வலியுறுத்துகிற மொடலிஸ்டிக் மொனாக்கியனிசம் என்கிற கள்ளப் போதனையோடு உடன்படுகிறார்கள் என்று அவர் சொன்னார்.
- அலெக்சாண்டரின் பதில்
இவைகள் நடந்துவந்த காலங்களில், திரித்துவத்தைப் பற்றிய போதனையில் பிஷப் அலெக்சாண்டர் முழுமையான தெளிவைக் கொண்டிருந்ததாக பார்க்க முடியவில்லை. எனினும், குமாரனாகிய தேவன், நித்தியமாக இருக்கிறவர் என்றும் முழுமையான கடவுள் என்றும் அவர் உறுதியாக நம்பினார். ஆரம்பத்தில் அலெக்சாண்டர் ஏரியஸோடு சமாதானமாக இருக்கவும், அவர் சொல்லுவதை பொறுமையோடு கேட்கவும் வேண்டும் என்று விரும்பினார். எனினும், அவர்கள் இருவருடைய நிலைப்பாட்டின் வேறுபாடுகள் தெரியவர, ஏரியஸ் தன்னுடைய நிலையிலிருந்து பின்வாங்க மறுத்தார். அத்தோடு, தன்னுடைய வாதத்தை ஏற்கிறவர்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்குத் தொடர்ந்து இதைப் போதித்து, சபையில் பிரிவினை உண்டாவதற்குக் காரணமானார்.
அலெக்சாண்டரும், அலெக்சாந்திரியாவிலிருந்த ஏனைய சபைத் தலைவர்களும் இணைந்து, ஏரியஸிற்கும் அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கும் இது தொடர்பாக ஒரு கடிதத்தை எழுதினார்கள். ஆனால் அதற்கு பலன் ஒன்றும் கிடைக்கவில்லை. இறுதியில், கி.பி. 320 அல்லது 321ல், எகிப்து மற்றும் லிபியாவிலிருந்த பிஷப்புகளின் ஆலோசனைக் குழுவைக் கூட்ட வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் அலெக்சாண்டர். குழுவின் முடிவாக, ஏரியஸையும் அவரைப் பின்பற்றியவர்களையும் சபைப் பதவியிலிருந்து விலக்கியதோடு, அவர்கள் சபையிலிருந்தும் நீக்கப்பட்டார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக, இந்தப் பிரச்சனை இத்துடன் முடிவடைந்துவிடவில்லை.
- சச்சரவும் முரண்பாடும் மேலும் பரவியது
ஏரியஸ் பிஷப்புகளின் ஆலோசனைக் குழு எடுத்த நடவடிக்கையை புறக்கணித்ததோடு, தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் தொடர்ந்து தன்னுடைய போதனைகளைப் போதித்து வந்தார். அத்தோடு, தன்னுடைய கருத்திற்கு ஆதரவளிக்கும்படி அனுதாபக் கடித்தை எழுதிப் பலருக்கும் அனுப்பினார். பாலஸ்தீனம் மற்றும் ஆசியா மைனர் பகுதிகளில் பிரயாணம் செய்து அங்கிருந்தவர்களிடம் தன்னுடைய கருத்திற்கு ஆதரவு கோரினார். அதன்விளைவாக, ஆசியா மைனரிலுள்ள நிக்கோமீடியாவின் பிஷப்பாக, அப்போது ஏற்படுத்தப்பட்டிருந்த யூஸிபியஸ் (Eusebius) என்பவர் ஏரியஸின் கருத்திற்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார்.
ஏரியஸுக்குப் பிறகு இந்த யூஸிபியஸே ஏரியஸின் ஆதரவாளர்களை வழிநடத்தினார். செசேரியாவின் பிஷப்பும், அந்நாட்களில் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியருமாக இருந்த இன்னொரு யூஸிபியஸும் ஏரியஸின் போதனைக்குத் தன் ஆதரவைத் தெரிவித்திருந்தார். ஏரியஸை ஆதரிக்கும்படியாக நிக்கோமீடியாவின் யூஸிபியஸ் ஒரு ஆலோசனைக் குழுவை ஏற்படுத்தினார். ஆனால் அவரால் அலெக்சாண்டரை ஒருபோதும் தன் பக்கம் இழுக்க முடியவில்லை.
அந்நேரத்தில், அலெக்சாண்டரும் அமைதலாக இருந்துவிடவில்லை. தன்னுடன் இருந்த பிஷப்புகளுக்குத் தொடர்ந்து கடிதங்கள் மூலம் ஏரியஸைப் பற்றி எச்சரித்து வந்தார். இவையெல்லாவற்றின் விளைவாக, அலெக்சாந்தியாவிலும், ரோமப் பேரரசின் கிழக்குப் பகுதி முழுவதிலும் இருந்த திருச்சபைகளில் சச்சரவும் இறையியல் முரண்பாடுகளும் அதிகமாக காணப்பட்டது. பிஷப்புகளுக்கு எதிராக பிஷப்புகளும், திருச்சபை அங்கத்தவர்களுக்கு எதிராக அங்கத்தவர்களும் சச்சரவுகளில் ஈடுபட்டு வந்தனர். இறுதியில் இந்த குழப்பமானது ரோமப் பேரரசனான கான்ஸ்டன்டைனை எட்டியது.
கான்ஸ்டன்டைன் மூலமாக கூட்டப்பட்ட கவுன்சில்
கி.பி. 324ல், கான்ஸ்டன்டைன் தன்னுடைய பேரரசின் புதிய தலைநகரான பைசான்டியம் (Byzantium – இதுவே பிறகு கான்ஸ்டான்டிநோபிள் என்று அழைக்கப்பட்டது) என்ற பட்டணத்திற்கு வந்தபோது, கிழக்குப் பகுதியின் திருச்சபைகளில் முரண்பாடுகளின் சூறாவளியும், பிரிவினைகளின் பயமுறுத்தல்களும் இருப்பதைக் கண்டு மிகவும் அதிருப்தியடைந்தார். தன்னுடைய இராஜ்யத்தை ஒன்றிணைக்க அவர் திருச்சபையையே பெரிதும் சார்ந்திருந்தார். ஆகவே பேரரசன் என்ற அடிப்படையில், திருச்சபை ஆலோசனைக் குழுவை நைஸ் என்ற இடத்தில் கூடும்படி செய்தார். ஆகவே இக்குழு நைசீயா கவுன்சில் என்று அழைக்கப்பட்டது. தலைநகரான பைசான்டியத்திற்கு அருகில் இருந்ததன் காரணமாகவே நைஸ் என்ற இடத்தை கான்ஸ்டன்டைன் தெரிவு செய்தார். தானும் நேரடியாக அக்குழுவின் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்தார்.
அக்காலத்திலிருந்த எல்லாக் கிறிஸ்தவ திருச்சபைகளுடைய பிஷப்புகளும் கலந்துகொண்ட முதலாவது பொதுவான ஆலோசனைக் குழுவாக இந்த நைசீயா கவுன்சில் இருந்தது. இதில் சுமார் 220 பிஷப்புகள் கலந்துகொண்டார்கள். இதில் பெரும்பாலானவர்கள் கிழக்குப்பகுதியைச் சேர்ந்தவர்கள். வெகுசிலரே மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களில், கான்ஸ்டன்டைனுடைய மிகவும் செல்வாக்குமிக்க ஸ்பெயின் நாட்டு ஆலோசகரான பிஷப் ஹோஸியஸும் (Hosius) இருந்தார். இந்த கவுன்சில், கி.பி. 325, மே மாதத்தின் இறுதியிலிருந்து ஆகஸ்டு மாதம் 25 ஆம் தேதி வரை கூடிவந்தது.
நைசீன் கவுன்சில் நடந்ததை விவரிக்கிற வரைபடம்
- ஏரியர்கள் (Arians): இந்த கவுன்சிலில் ஏரியஸும் கலந்து கொண்டார். எனினும், அவருடைய தரப்பினரை நிக்கோமீடியாவின் பிஷப்பாகிய யூஸிபியஸே தலைமையேற்று நடத்தினார். இவர்களுடைய தரப்பினரே இக்கவுன்சிலில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருந்தது, இவர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
- பழமைவாத பெரும்பான்மையினர் (The Conservative Majority): இக்கவுன்சிலில் இப்பிரிவைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருந்தனர். இக்குழுவைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள், ஏரியனிசத்திற்கும், கிறிஸ்துவின் தெய்வீகத்தைப் பற்றிய வேதபூர்வமான சத்தியத்திற்கும் இடைப்பட்ட நிலையைக் கொண்டவர்களாக இருந்தனர். எதன் காரணமாக இந்தக் கவுன்சில் கூட்டப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி இக்குழுவினர் சரியாக அறிந்திருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். லோகோஸ் ஸ்பெக்யூலேஷன் ஆதரவாளர்களான இவர்கள், தெய்வீகத்தின் மூன்று நபர்களுக்கு இடையிலான தனித்துவத்தையும், அவர்களுடைய அதிகாரத் தன்மையையும் பற்றிய நிலையில் உறுதியாக இருந்தனர். ஆகவே இவர்கள், தெய்வீகத்தின் மூன்று நபர்களுக்கு இடையிலான தனித்துவத்தை நிராகரிக்கிற மொடலிஸ்டிக் மொனாக்கியனிசம் போதனையை வன்மையாக எதிர்த்தனர். இக்கவுன்சிலில் இவர்கள் தரப்பின் முக்கிய பேச்சாளராக இருந்தவர், செசேரியாவின் யூஸிபியஸ்.
- திரித்துவ போதனையாளர்கள் (The Trinitarians): இந்த மூன்றாவது பிரிவினரும் இக்கவுன்சிலில் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். மேற்குப் பகுதியைச் சேர்ந்த சில பிஷப்புகளும், ஏரியஸை முற்றாக எதிர்த்தவர்களும் இப்பிரிவில் இருந்தனர். ஸ்பெயினின் பிஷப் ஹோசியஸும் அலெக்சாந்தியாவின் பிஷப் அலெக்சாண்டரும் இவர்களுடைய முக்கிய பிரதிநிதிகளாக இருந்தனர். ஆர்ச்டீக்கன் அத்தநேசியஸும் தன்னுடைய பிஷப்புடன் சேர்ந்து இக்கவுன்சிலில் கலந்துகொண்டார். அத்தநேசியஸுக்கு நேரடியாக இக்கவுன்சிலில் பேசும் அனுமதி இல்லாதிருந்தபோதிலும், அலெக்சாண்டருக்கு உதவியாக வாதப்பிரதாபங்களை தைரியமாக எடுத்துக்காட்டி முக்கிய பங்காற்றினார். அத்தநேசியஸின் இந்தப் பங்களிப்பின் காரணமாக, ஏரியனிச ஆதரவாளர்களால் அவர் குறிவைக்கப்பட்ட நபராக இருந்தார். ஆகவே, இக்கவுன்சில் தொடர்ந்து நடைபெறுகிறபோது, ஏரியனிச ஆதரவாளர்களின் முக்கிய இலக்காக அத்தநேசியஸே பெரும்பாலும் இருந்தார்.
இந்தக் கவுன்சிலின் முடிவு, திரித்துவத்தைப் பற்றிய வேதபூர்வமான நம்பிக்கை கொண்டவர்களை ஊக்கப்படுத்துகிறதாக இருந்தது. ஏரியனிச ஆதரவாளர்கள், அவர்கள் தரப்பின் வாதங்களைத் தைரியமாக எடுத்துரைத்தனர். ஆனால் அவர்களுடைய விசுவாச அறிக்கையை மிக சுலபமாகவும் அதேநேரம் உறுதியாகவும் எல்லாரும் நிராகரித்தனர். ஆகவே கவுன்சிலின் ஏனைய தரப்பினர் ஏரியனிச போதனையாளர்களை எதிர்மறையாக பார்க்க ஆரம்பித்தனர்.
பிறகு, செசேரியாவின் யூஸிபியஸ் தன்னுடைய சபையின் விசுவாச அறிக்கையைச் சமர்பித்தார். அதில் மொடலிஸ்டிக் மொனாக்கியனிசம் போதனைக்கு எதிராக சிலவற்றையும் சேர்த்திருந்தார். இந்த விசுவாச அறிக்கை வேதபூர்வமாக இருந்தபோதிலும், கவுன்சில் எதற்காக கூடியதோ அதற்கான தீர்வை நேரடியாக தரக்கூடியதாக இருக்கவில்லை.
ஆகவே, கான்ஸ்டன்டைன், ஏரியனிசத்திற்கு எதிரான குறிப்புகளையும் கொண்ட ஒரு விசவாச அறிக்கையைச் சமர்பிக்கும்படி சொன்னார். ஒருவேளை, பிஷப் ஹோசியஸ் கான்ஸ்டன்டைனை இந்த விஷயத்தில் ஊக்கப்படுத்தியிருக்கலாம். மறுபடியும் சமர்பிக்கப்பட்ட விசுவாச அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த, கிறிஸ்துவைப் பற்றிய ஒரு முக்கியமான வார்த்தை, இக்கவுன்சிலில் முக்கிய வாதப்பொருளாகியது. அந்த கிரேக்க வார்த்தை “homoousion”. இதற்கான பொருள் “ஒரே தன்மை”. இதன்மூலம், கிறிஸ்து, பிதாவாகிய தேவனுடைய அதே தன்மையைக் கொண்டவர் என்பது உணர்த்தப்பட்டது. ஏரியனிசத்திற்கு எதிரான இந்த வலிமையான வார்த்தை, திருச்சபையை ஒன்றிணைக்கும் என்று கான்ஸ்டன்டைன் நம்பினார். ஏனென்றால், மேற்குப் பகுதியின் அனைத்து திருச்சபைகளும், கிழக்குப் பகுதியின் பெரும்பாலான திருச்சபைகளும் இதை ஏற்றுக்கொண்டனர்.
கிறிஸ்துவின் தெய்வீகத்தைப் பற்றிய முக்கியமான குறிப்பாக, நைசீன் அறிக்கையின் முடிவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கீழ்வரும் வரிகளில் கவனியுங்கள். செசேரியாவின் அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்ட வார்த்தைகளை இங்கே அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே, தேவகுமாரனும், பிதாவினுடைய ஒரே பேறுமானவர்; வேறுவிதமாக சொல்லுவதானால், அவர் பிதாவினுடைய தன்மையைக் கொண்டவர். அதாவது, தேவனில் தேவனும், ஒளியில் ஒளியும், கடவுளின் அச்சடையாளங்களைக் கொண்டவரும், கடவுளின் பேறுமானவர். அவர் உண்டாக்கப்பட்டவரல்ல, பிதாவின் அதே சாரத்தைக் கொண்டவர் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம்.
ஏரியனிசத்தின் கள்ளப் போதனையை நிராகரிக்கின்ற குறிப்புகளும் அவ்வறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தன.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இக்கவுன்சிலில் கூடியிருந்த இரண்டு பிஷப்புகளைத் தவிர்த்து ஏனைய எல்லா பிஷப்புகளும், அதாவது ஏரியனிச ஆதரவாளர்களும் இவ்வறிக்கையில் கையெழுத்திட்டிருந்தனர். அதில் கையெழுத்திடாத இருவரும், கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையைப் பற்றிய விஷயங்களுக்காக அல்லாமல் வேறு காரணங்களுக்காக கையெழுத்திடவில்லை. ஏரியனிச ஆதரவாளர்கள் தங்களுடைய நிலைக்கு எதிராக இதில் கையெழுத்திட்டிருந்தது பெரிய ஆச்சரியமொன்றும் இல்லை. ஏரியனிச ஆதரவாளர்கள் ஒழுங்குமுறையான தேவபக்தியை தங்கள் வாழ்வில் கொண்டிருக்கவில்லை. ஏரியனிச ஆதரவாளர்கள் இவ்வறிக்கையில் கையெழுத்திட்டிருந்தபோதிலும், வெகுவிரைவிலேயே அதை நிராகரிக்கவும் செய்தனர். இவ்வறிக்கையில் கையெழுத்திடாத இருவரும், ஏரியஸும், அவருடைய ஆதரவாளர்களும் கான்ஸ்டன்டைனால் நாடுகடத்தப்பட்டார்கள். இக்கவுன்சிலின் முடிவு வேதபூர்வமான சத்தியத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே அப்போது கருதப்பட்டது. கான்ஸ்டன்டைன் பெரிதும் விரும்பியதுபோல் திருச்சபையும் ஒன்றுபட்டிருந்தது. மேலும், இதன்மூலம் திருச்சபைக்கான ஒரு உறுதியான, அற்புதமான விசுவாச அறிக்கையும் கிடைத்தது.
எனினும், இந்த முரண்பாட்டில் இது முதலாவது சுற்றுதான். ஏரியனிசத்தின் கள்ளப் போதனையானது வெளிப்படையாக தோலுரித்துக் காட்டப்பட்டிருந்தபோதிலும், நைசீயாவிலிருந்த பழமைவாத பெரும்பான்மையினரின் நடவடிக்கைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறவிதமாகவே இருந்தன. சத்தியத்தின் உறுதியான நம்பிக்கையில் நிலைத்திருப்பதைவிட, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் அதிக இடம் கொடுத்துவிட்டனர். அதன் காரணமாக, நாளடைவில் நைசீன் அறிக்கையிலுள்ள வார்த்தைகளுக்கு வெவ்வேறு விதமான பொருள் கொடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். அது கிறிஸ்துவின் திருச்சபையை இருண்ட காலத்திற்கு வழிநடத்தியது.
இதுவரை பார்த்தவற்றிலிருந்து ஒரு முக்கியமான பயன்பாட்டை அறிந்துகொள்ளலாம். கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள வார்த்தையின் இரகசியங்களை அறிவதற்கு, மனித தத்துவங்களுக்கு அதிகமான இடம் கொடுத்தால், கடவுளுடைய வார்த்தையை நாம் சரியாக விளங்கிக்கொள்ள முடியாமல் போகக்கூடிய ஆபத்தை ஏரியஸில் நாம் காண்கிறோம். திரித்துவத்தின் இரகசியத்தைப் பற்றி அத்தநேசியஸ் பின்வறுமாறு சொல்லியிருக்கிறார், “திரித்துவ தேவனுடைய ஆடையின் ஓர் ஓரத்தை மட்டுமே மனிதனால் அறிய முடியும்.” ஏரியஸ் திரித்துவ போதனையில் இடறியதற்குக் காரணம், திரித்துவ தேவனில் மூன்று தனித்துவமான நபர்கள் இருந்தபோதிலும், ஒரே கடவுள் மட்டுமே இருக்க முடியும் என்பதற்கு அவருடைய இருதயம் ஒத்துப்போகாதபோது, திரித்துவ தேவனைப் பற்றி கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள வார்த்தையில் சொல்லப்பட்டிருப்பதற்கு அடிபணிவதைவிட்டு, தன்னுடைய பலவீனமான எண்ணத்தின் அடிப்படையில் இறுதி முடிவுக்கு வந்துவிட்டார். “இரண்டுமே” உண்மை என்பதற்கு பதிலாக “ஏதேனும் ஒன்றுதான்” உண்மை என்று முடிவு செய்துவிட்டார். அதன் விளைவாக, கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஒரு பிரிவை உருவாக்க அவர் முற்பட்டார். வெளிப்படுத்தப்பட்டுள்ள கடவுளுடைய வார்த்தைக்குட்பட்டு வாழ மனமற்றிருந்தால், நாமும் இப்படியான மோசமான தவறுகளுக்கு உடன்பட்டுவிடுவோம். அவருடைய வார்த்தைக்கு முன்பாக நம்முடைய எண்ணங்களைத் தாழ்த்தும்படி தேவன்தாமே நமக்கு உதவுவாராக.
(தொடரும்)
அதிகாரமும் அடங்காப்பிடாரிகளும்
சமீபகாலங்களில் உலக நாடுகளிலும், சமுதாயங்களிலும், திருச்சபைகளிலும் நிகழ்ந்து வரும் நிகழ்வுகளும், சிந்தனைப்போக்கும் அதிகாரத்தைப் பற்றி என்னை அதிகமாக சிந்திக்கவைத்தது. அரசுகளுக்கும், அதிகாரங்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவது மட்டுமல்லாமல், பொதுஉடமைகளுக்கு தீவைப்பதும், வாகனங்களைத் தாக்கி உடைப்பதும், எதிராளிகளைத் தாக்கிக் காயமேற்படுத்துவதும் சமுதாயத்தில் இன்று சர்வசாதாரணமாக நிகழ்ந்து வரும் நிகழ்வுகளாக இருக்கின்றன. அல்ஜிசீரா போன்ற சில மீடியாக்கள் இத்தகைய தாக்குதல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் துன்பத்தை அனுபவித்து வருவது உண்மைதான். அதை நிர்வகிக்கும் ஹமாஸ் ஒரு சமாதானப் புறா அல்ல; ஆரம்பத்திலிருந்தே இஸ்ரவேலுக்கு எதிராக வன்முறை நடத்திவரும் வன்முறைக்கூட்டம் அது. பாலஸ்தீனியர்களைத் தூண்டிவிட்டு வன்முறையை சர்வசாதாரணமாக அது நடத்திவருவதை அல்ஜிசீரா தொடர்ந்து மிகுந்த அனுதாபத்தோடு செய்தி வெளியிட்டு வருகிறது. இதேபோல்தான் சீரியாவிலும் ஐசிஸ் அமைப்பு உருவாகி வன்முறையை வளர்த்தது. இவர்களெல்லோரும் அரசுகள் தவறான போக்கில் போவதாகவும் அதனால் அவற்றைத் தூக்கியெறிய இதுவே வழி என்றும் சொல்லுகின்றனர். இதே நியாயத்தைத்தான் ஸ்ரீ லங்காவில் புலிகளை ஆதரித்தவர்களும் சொன்னார்கள். அதிகாரங்கள் தவறான போக்கில் போனால் வன்முறை செய்து அவற்றை நீக்க வேண்டும் என்ற தத்துவமே உலகமெங்கும் காணப்படும் அரசியல் வன்முறை அமைப்புகளின் சித்தாந்தமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசைப் பிடிக்காவிட்டால் குடிமக்கள் அரசுக்குக் கீழ்ப்படியாமல் எதிர்ப்புக்காட்டும் Civil disobedience சமுதாயத்தில் சாதாரணமாகிவிட்டது.
அரசியலில் மட்டுமல்லாமல் சமுதாயத்தின் எல்லாத் தட்டுகளிலும் அதிகாரத் தளங்களுக்கு (Authority structure) எதிரானதொரு புதிய ஒழுக்கமுறை இன்றைய சமுதாயத்தில் இருந்துவருகிறது. இதற்கு முன்பெல்லாம் எது சரி, எது தவறு என்பதில் சமுதாயத்தில் தெளிவான கருத்து இருந்தது. இப்போது அது அடியோடுமாறி ஒருவருக்கு எது சரியாகப்படுகிறதோ அது மற்றவர்களுக்குத் தவறாகத் தெரிந்தாலும் அதை எல்லோரும் சரியானதாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுத்து (Postmodernism) சமுதாயக் கோட்பாடாகியிருக்கிறது. இதனால்தான் ஆண், பெண் என்ற இனவேறுபாட்டை இன்று சமுதாயம் விலக்கிவைத்து ஒரு ‘புதிய ஒழுக்கப் போக்கை’ (New morality) உருவாக்கியிருக்கிறது. அத்தோடு சமுதாயத்தில் எல்லோரும் ஒருவருக்கொருவர் சமம் (Egalitarianism) என்ற தத்துவமும் மேலோங்கி பரவிவருகிறது. அதாவது ஆணும், பெண்ணும் சமம், உயர்வு தாழ்வு என்ற நிலை சமுதாயத்தில் எதிலும் இருக்கக்கூடாது என்ற போக்கும் அதிகாரத்தை எதிர்த்து நிற்கிறது. தனக்குப் பிடிக்கவில்லை, தன்னுடைய வசதி பாதிக்கப்படுகிறதென்றால் சுய உரிமையை முன்வைத்து மேலிடத்திலிருப்பவர்களுக்கெதிராகப் போர்க்கொடி எழுப்புவது வழமையாகிவிட்டது. சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றம் தன்னினச் சேர்க்கை செயல்கள் தண்டனைக்குரியவை என்றிருந்த சட்டத்தை இனிச் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளித்து அத்தகைய செயல்களை நியாயப்படுத்தியிருக்கிறது. ஆண், பெண் இனவேறுபாட்டை வெறித்தனமாக எதிர்க்கும் இன்றைய சமுதாயம், மூன்றாம் பாலின் உரிமைகளுக்கு மூர்க்கத்தனமாகப் போராடுகிறது. இதெல்லாம் கர்த்தரின் அதிகாரத்துக்கும் சமுதாய பாதுகாப்புக்காக அவர் ஏற்படுத்தியிருக்கும் சமுக அதிகாரங்களுக்கும் எதிரான போராட்டம்.
சமீபத்தில் அமெரிக்க சுப்ரீம் கோர்டிற்கு புதிய நீதிபதியொருவரை சிபாரிசு செய்து அதிபர் டொனல்ட் டிரம்ப், பிரெட் கவனாவை சிபாரிசு செய்தபோது, அவர் பழமைவாதக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர் என்பதற்காக அவர் நியமனமாவதை தடுத்து நிறுத்துவதற்கு எதைச் செய்தாலும் பரவாயில்லை என்று அரசுக்கெதிரான Civil disobedienceஐ எதிர்க்கட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிடவேண்டும் என்று கூக்கிரலிட்டார்கள். இதுவே இன்றைய அதிகார மறுப்பு வர்க்கத்தின் புதிய ஒழுக்கமுறை. எதெல்லாம் அதிகாரமாக சமுதாயத்தில் இதுவரை இருந்து வந்திருக்கிறதோ அதையெல்லாம் இடித்தெரிந்து அதிகாரத்தையே இல்லாமலாக்கும் ஆக்ரோஷமான போரை சமுதாயத்தின் ஒரு பகுதி நடத்திவருகிறது. இது தாராளவாதப் போக்கின் (Liberalism) அதிகாரத்திற்கு எதிரான உச்சகட்டப் போர். தனிமனிதனின் இச்சையை முதன்மைப்படுத்தி அவனுடைய சுயநலப்போக்கிற்கு உரிமைகோரி பொதுவான அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் சமுதாயத்தின் ஒரு பகுதியே கைதிகளுக்கான உரிமை, ஓரினச்சேர்க்கையாளருக்கான உரிமை, இனமாற்றக்காரருக்கான உரிமை, பாலியல் தொழிலாளருக்கான உரிமை, போதைப் பொருள் பயன்படுத்துபவர்களுக்கான உரிமை, சட்டரீதியற்ற முறையில் நாட்டில் நுழைந்திருப்பவர்களுக்கான உரிமை என்று அத்தகையோருக்கான உரிமைப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதெல்லாம் அதிகாரத்திற்கெதிராக அதை அழித்துவிடக் கங்கனம்கட்டி நடந்துவரும் போராட்டம். இதையெல்லாம் கிறிஸ்தவத்தை எதிர்க்கும் புரோகிறசிவ் சோஷலிசத்தை நோக்கி நடைபோடும் சமுதாயத்தில் காணலாம். ஆனால், இத்தகைய கடவுளுக்கெதிரான சமுதாயங்களின் மூர்க்கத்தனமான போராட்டத்தின் மத்தியில் கிறிஸ்தவர்கள் சமுதாயத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறை என்ன என்பதையே இந்த ஆக்கம் ஆராய்கிறது.
அதிகாரம் என்பது எது?
அதிகாரத்தைப் பற்றிய முறையான புரிந்துகொள்ளுதல் நமக்கிருக்கவேண்டும். அதிகாரமில்லாத ஒரு சமுதாயத்தை வேதம் நமக்கு அடையாளம் காட்டவில்லை. மனித சமுதாயத்தை மனிதன் உருவாக்கவில்லை. அதேபோல் அதிகாரத்தையும் மனிதன் உண்டாக்கவில்லை. மனித சமுதாயத்தை உருவாக்கிய தேவன் ஆதியிலேயே படைக்கப்பட்ட மனித குலம் தன்னை அனைத்துக்கும் மேலான அதிகாரியாக ஏற்றுத் தன் அதிகாரத்தின் கீழ் இருக்கவேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருந்தார் (ஆதியாகமம் 1-3). அவரே பத்துக்கட்டளைகளைத் தந்து முழு மனித குலமும் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தியிருக்கிறார். அந்தக் கட்டளைகள் முழு மனிதகுலத்துக்குமான அவருடைய அதிகாரக் கட்டளைகளாக, வாழ்க்கை நியதியாக இருக்கின்றன. மெய்க்கிறிஸ்தவர்கள் மட்டுமே அவற்றை வாழ்க்கையில் பின்பற்றும் ஆவிக்குரிய தன்மையைக் கொண்டிருந்தாலும், அவையே மனிதகுலத்தில் பொதுவான நீதிக்கட்டளைகளாக இருந்துவருகின்றன. எது சரி, எது தவறு என்பதை இந்தக் கட்டளைகள் நமக்கெல்லாம் மேலதிகாரியான சர்வவல்லவரான கர்த்தரின் பார்வையிலிருந்து நமக்கு விளக்குகின்றன. அவற்றின் அடிப்படையிலேயே இதுவரை நாட்டுச் சட்டங்களும் இயற்றப்பட்டு எங்குமிருந்து வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் கடவுளே ஆண், பெண் என்ற வேறுபாட்டை உண்டாக்கி ஆணைத் தலைமை ஸ்தானத்தில் நிறுத்தி, பெண் ஆணோடு இணைந்து பணியாற்றும் நிலையை வரலாற்றில் உருவான முதல் குடும்பத்தில் ஏற்படுத்தியிருந்தார். இது படைப்பில் ஏற்படுத்தப்பட்டிருந்த சமுதாயத்தின் ஆணிவேரான அதிகார அமைப்பு. ஆதியாகமத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது இந்த ஆரம்ப அதிகார அமைப்பின் கீழ் சமுதாயத்தின் ஏனைய அதிகார அமைப்புகளைக் கர்த்தர் படிப்படியாக மனிதகுலத்தில் ஏற்படுத்தியிருப்பதைக் காணலாம். அவரே தெரிந்தெடுத்து தன் மகிமைக்காகப் பயன்படுத்திய நாடான இஸ்ரவேலிலும் அவர் ஏற்படுத்தியிருந்த அதிகார அமைப்புகளைக் காண்கிறோம். கடவுளுடைய நீதியையும் அதிகாரத்தையும் தொடர்ந்து நினைவுறுத்தி, அவருடைய அதிகாரத்தின் கீழும் அவர் ஏற்படுத்தியிருக்கின்ற அதிகார அமைப்புகளின் கீழும் நாம் பணிவோடு வாழவேண்டும் என்பதை அவர் தந்திருக்கும் பத்துக்கட்டளைகளும் அவர் ஏற்படுத்திய உடன்படிக்கைகளும் நமக்கு அறிவுறுத்தி நம்மை வழிநடத்துகின்றன. மனிதன் அதிகாரத்தைப் பற்றிய விளக்கத்தை கடவுளிடம் இருந்தே பெற்றுக்கொள்கிறான். பாவத்தில் தொடருகின்ற மனிதகுலம் தொடர்ந்தும் அதிகாரத்தின் அவசியத்தை அறிந்துவைத்திருப்பதனாலேயே அதிகாரத்தளங்களைப் பொதுவாக எல்லா நாடுகளிலும், சமுதாயங்களிலும் காண்கிறோம். இதுவரை நாம் பார்த்திருக்கும் விளக்கங்களில் இருந்து அதிகாரத்தையும், அதிகாரத்தளங்களையும் எதிர்ப்பதும், இல்லாமலாக்க முயல்வதும் கடவுளுக்கு எதிரான செயல்மட்டுமல்ல, மனிதகுலத்தின் நலத்திற்கே தீங்கு விளைவிக்கும் நாசச்செயல்களாக அமையும். அதையே இன்றைய சமுதாயத்தின் பாவச் செயல்களில் இருந்தும் அதன் வெறித்தனமான அதிகாரங்களுக்கெதிரான போராட்டதில் இருந்தும் கவனிக்கிறோம்.
அதிகாரத்தைப் பற்றியும் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு நாம் நடக்கவேண்டிய அவசியத்தைப் பற்றியும் தெளிவாக விளக்கும் புதிய ஏற்பாட்டு வசனங்களைக் கவனியுங்கள்.
பவுல் அப்போஸ்தலன் ரோமர் 13:1-3ல் அதிகாரங்களைப் பற்றி மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. 2 ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்துநிற்கிறான்; அப்படி எதிர்த்துநிற்கிறவர்கள் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். 3 மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். (ரோமர் 13:1-3)
பவுல் அப்போஸ்தலன் இந்த வசனங்களில் சமூக அதிகாரத் தளங்களைப் பற்றிய உண்மைகளை விளக்குகிறார். அதிகாரம் எப்படி உருவாக்கப்பட்டது, நடைமுறைக்கு வந்தது என்பது பற்றியெல்லாம் பட்டியலிட்டுக் கொடுக்காமல் அதிகாரம் கர்த்தரால் ஆதியில் ஏற்படுத்தப்பட்டது என்ற உண்மையின் அடிப்படையில் அவர் இந்தப் புதிய ஏற்பாட்டு விளக்கங்களைக் கொடுக்கிறார். கிறிஸ்தவன் தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒருபகுதியாக சமூக அதிகாரங்களை மதித்து அவைகளுக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்பதையே பவுல் இங்கு விளக்குகிறார். இந்த வசனங்கள் மிகத்தெளிவாக அதிகாரத்தளங்களை உருவாக்கியிருப்பவர் கர்த்தர் என்றும், அவராலே அல்லாமல் எந்த அதிகாரமும் உருவாகவில்லை என்றும், உலக சமுதாயங்களில் காணப்படுகின்ற அனைத்து அதிகாரங்களும் அவராலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் விளக்குகின்றன. அதேநேரம், அதிகாரங்கள் அநியாயத்திற்கே எதிரானவையென்றும், நீதி, நியாயம் நிலைநிற்க சமுதாயம் அதிகாரங்களை மதித்து நடக்கவேண்டும் என்றும் விளக்குகின்றன. வேதம் பிடிக்காதவர்களும், கடவுளை மதிக்காதவர்களும் இவற்றை மறுதலிக்கலாம். அதற்காக கடவுள் இல்லை, வேதம் இல்லை என்று ஆகிவிடாது. பூனை கண்ணை முடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது என்று அர்த்தமல்ல.
இந்த அடிப்படையிலேயே ஏனைய புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் அதிகாரத்தைப் பற்றியும் சமுதாயத்தில் காணப்படும் அதிகாரப்பிரிவுகளைப் பற்றியும் விளக்கியிருக்கிறார்கள். பேதுரு, 1 பேதுரு 2:13-14, 18 வசனங்களில் இதைப்பற்றி விளக்குவதைக் கவனியுங்கள்.
13 நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள். 14 மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள். (1 பேதுரு 2:13-14)
வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். (1 பேதுரு 2:18)
மேலே காணப்படும் வசனங்களில் பேதுரு பவுல் தந்திருக்கும் அதே போதனைகளை தனக்குரிய முறையில் கிறிஸ்தவர்களுக்கு எழுதியிருக்கிறார். இரண்டு வேதப் பகுதிகளும் ஒரே உண்மையையே வலியுறுத்துகின்றன.
கொலோசெயர் 3:18-20, 22 வசனங்களில் பவுல், இந்த அதிகாரத்தளங்களை வேறெங்கெல்லாம் சமுதாயத்தில் காண்கிறோம் என்றும் அவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விளக்குவதைக் கவனியுங்கள்.
18 மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். 19 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள். 20 பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது. (கொலோசெயர் 3:18-20)
வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள். (கொலோசெயர் 3:22)
தொடர்ந்து பேதுரு, 1 பேதுரு 3:1-2ல் பின்வருமாறு பவுல் விளக்கியதையே நினைவுறுத்துகிறார்.
1 அந்தப்படி மனைவிகளே உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, 2 போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். (1 பேதுரு 3:1-2)
பவுல் மேலும் தீத்துவுக்கு எழுதிய நிருபத்தில் தீத்து 2:4-5லும், 2:9-10லும், 3:1-2லும் பின்வருமாறு சொல்லுகிறார்.
4 பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், 5 தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, (தீத்து 2:4-5)
9 வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக, 10 தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்து கொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு. (தீத்து 2:9-10)
1 துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், 2 ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்னாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. (தீத்து 3:1-1)
அரசு, மேலாளர்கள் மற்றும் குடும்பம் இவற்றோடு சமுதாயத்தில் வேறெந்தெந்த அதிகாரங்களுக்கெல்லாம் நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை விளக்கும் பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள்.
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். (1 பேதுரு 5:5)
உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே. (எபிரெயர் 13:17)
இதுவரை நாம் பார்த்து வந்திருக்கின்ற வசனப்பகுதிகள் அனைத்தும் சமுதாயத்தில் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து அதிகாரத்தளங்களையும் பொதுவாக விபரித்து அவற்றிற்குக் கீழிருப்பவர்கள் அமைதலோடு அந்த அதிகாரங்களுக்குப் பணிந்து நடக்கவேண்டும் என்று விளக்குகின்றன. சமுதாயத்தில் நம்மை ஆளும் அரசு, வேலைத்தளங்களில் நமக்கு மேலிருக்கும் அதிகாரிகள், வீட்டில் சொந்தக் கணவன், பெற்றோர், திருச்சபை ஆகிய சமூக அதிகாரங்களை இந்தப் பகுதிகளில் நாம் வாசிக்கிறோம். ஆகவே, எங்கு நமக்கு மேலாக ஒரு அதிகாரத்தளம் இருக்கிறதோ அந்த அதிகாரத்தளத்துக்கு மதிப்புக்கொடுத்து நாம் நடக்க வேண்டும் என்பதே கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் எக்காலத்துக்கும் பொருந்தும் நியமம். இந்த விஷயத்தில் பழைய ஏற்பாடும், ஆண்டவராகிய இயேசுவும் போதித்திருப்பதையே பவுலும், பேதுருவும், எபிரெயருக்கான நிருபத்தை எழுதியவரும் சுட்டிக்காட்டி விளக்கியிருப்பதைக் கவனிப்பது அவசியம். அதிகாரங்களை மதித்து நடக்கவேண்டும் என்பதில் புதிய ஏற்பாட்டை எழுதியிருப்பவர்கள் எல்லோரும் ஒருமித்த கருத்தையே கொண்டிருந்திருக்கிறார்கள்.
நீதியற்ற அதிகார அமைப்புகள்
அதிகாரத்திற்கும், அதிகார அமைப்புகளுக்கெதிராகவும் போராடி வருகிறவர்கள் அவை நீதியற்ற முறையில் நடந்துகொள்ளுகின்றன என்றும், நம் பார்வைக்கு நீதியானவையாகத் தெரியவில்லை என்ற விளக்கத்தை முன்வைக்கிறார்கள். நீதியற்ற முறையில் நடக்கும் எந்த அதிகாரங்களுக்கும் நாம் கட்டுப்பட வேண்டியதில்லை என்பது பொதுவாக நம்மினத்தில் நிலவி வரும் கருத்து. அதாவது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு அதிகாரம் நீதியற்ற முறையில் நடந்தால் அதற்கு அடிபணிய வேண்டியதில்லை, அதை எதிர்க்கலாம், அதைத் தூக்கியெறியலாம் என்பது அநேகருடைய பொதுவான சிந்தனையாக இருந்து வருகிறது. அத்தோடு நம் பார்வைக்கும் இச்சைக்கும் எதிரான முறையில் நமக்கு அநீதியாகத் தெரிகிறவற்றையும் எதிர்த்து இல்லாமலாக்க வேண்டும் என்ற எண்ணப்போக்கும் ஒரு பகுதியினரை சமூக அதிகாரங்களை எதிர்க்கவைக்கின்றது. அதனால்தான் அதிகார அமைப்பாக கடவுள் ஆதியில் இருந்து ஏற்படுத்தியிருக்கும் ஆண், பெண் வேறுபாட்டையும் நீதியற்றதாக சமுதாயத்தின் ஒரு பகுதி எதிர்க்கிறது. இந்தச் சிந்தனை வேதத்திற்கு முரணானது; வேதம் எதிர்க்கிறது என்பதை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. இந்த சிந்தனை இந்த உலகத்துப் பார்வையில் இருந்து எழுகிறதே தவிர கர்த்தரின் வேதத்தில் இருந்தல்ல. இந்த எண்ணப்போக்கிற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
- மனித சுயநலம்: தன் சுயநினைப்பே சரியானது, நீதியானது என்ற சுயநலப்போக்கு. இதற்கு அடிப்படைக் காரணம் பாவமே.
- தன் கருத்துக்கு ஒத்துப்போகாததை எதிர்த்து தன்னுடைய சிந்தனைப் போக்கின்படி வாழவேண்டும்; அதுவே சுதந்திரத்தின் அடித்தளம் என்ற மனப்போக்கு.
இந்த எண்ணத்தின் காரணமாகத்தான் அநேகர் அரசு விதிக்கும் வரிகளில் சில நியாயமானவை அல்ல என்று தீர்மானித்து அதைக்கட்ட மறுக்கிறார்கள் அல்லது தவிர்த்துவிட வேண்டிய வழிகளை நாடுகிறார்கள். இந்த எண்ணப்போக்கே பலரை ஜனநாயக ரீதியில் அமைக்கப்பட்டுள்ள அரசுகளுக்கு எதிராகப் போராடத் தூண்டுகிறது அல்லது அரசைக் கவிழ்க்கும் நடவடிக்கைகளை எடுக்க வைக்கிறது. இந்த எண்ணத்தின் விளைவாகவே அநேகர் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை; வேலைத்தளத்தில் மேலிருப்பவர்களை மதித்து நியாயமாக நடந்துகொள்வதில்லை. இந்த எண்ணப்போக்கே ஓரினச்சேர்க்கையாளர் உரிமைகளுக்காக சிலரைப் போராட வைக்கிறது. இதை லிபரல் எண்ணப்போக்கு என்று அழைப்பார்கள்; அதாவது வேதத்திற்கு முரணான பாவகரமான உலகத்து இச்சைகளின் அடிப்படையிலான எண்ணப்போக்கு இது.
முதலில், சமுதாயத்தில் எங்கும் நிகழும் அநியாயத்துக்கும், நீதியற்ற நடவடிக்கைகளுக்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வேதத்தைப் பொறுத்தவரையில் மனிதனைப் பிடித்திருக்கும் பாவமே அதற்கு முழுக் காரணம். பாவத்தைப் பற்றிய உணர்வற்ற பாவ மனிதன் தவறானவற்றை இச்சிப்பதிலும், அநியாயங்களைச் செய்வதிலும் ஆச்சரியமில்லை. பாவமுள்ள இந்த உலகில் பாவம் பெருகி உலகை நிரப்பி அழித்துவிடாமல் இருக்கவே கர்த்தர் அதிகார அமைப்புகளை உருவாக்கி பாவத்தைக் கட்டுப்படுத்துகிறார். அத்தகைய கட்டுப்பாடுகளை அவர் விதிக்காமலிருந்திருந்தால் உலக அழிவு உடனடியாக நிகழ்ந்துவிடும். கர்த்தரின் திட்டங்கள் அனைத்தும் இந்த உலகத்தில் பூரணமாக நிறைவேற பாவம் கட்டுப்படுத்தப்பட்டு கர்த்தரின் திட்டங்களின் பூரணத்துவத்தை நோக்கி உலகம் போய்க்கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்த உலகத்தில் ‘அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல; துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்’ என்று பவுல் ரோமர் 13:3ல் சொல்லுகிறார். இந்தப் பாவ உலகில் அதிகாரத்தளத்தில் அமர்ந்திருக்கும் அரசுகளும், அதிகாரிகளும் சரியானது எது, தவறானது எது என்ற பொதுப்பார்வையைக் கொண்டிருந்து சட்டம், போலீஸ், இராணுவம், வக்கீல்கள், நீதிபதிகள், நீதிமன்றம் என்ற அமைப்புகளின் மூலம் பொது நீதி நிலவுமாறு கடமையாற்றுகிறார்கள். இதற்குப் பின்னால் இருந்து, இந்த எண்ணப்போக்குக்கிற்கும், அமைப்புகளுக்கும் காரணகர்த்தாவாக இருந்து இயக்கி வருகிறவர் உலகாளும் கர்த்தரே. இவற்றை எதிர்ப்பதும், தூக்கியெறிய முயல்வதும் கர்த்தரை எதிர்த்து நிற்பதிலேயே போய் முடியும்.
உலகத்தின் அரசுகளும், அதிகார அமைப்புகளும் பூரணமானவையல்ல; அத்தனையும் பாவ மனிதர்களால் இயங்கி வருபவையே. இருந்தபோதும் அவை கர்த்தருடைய பொதுநீதியைப் பாதுகாத்துவரச் செயல்படுகின்றன. அவை பல வேலைகளில் தவறாக நடந்துகொண்டபோதும், நீதியற்ற செயல்களைச் செய்தபோதும் அதற்காக கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் அமைப்பைத் தூக்கியெறிய முயல்வது கர்த்தரையே தூக்கியெறிய முயலும் செயலாகும். உதாரணத்திற்கு இயேசுவின் எதிரிகள் அவரை மடக்குவதற்காக அரசுக்கு வரிகொடுப்பது முறையானதா? என்று கேட்டபோது ‘சீசருக்கு உரியதை சீசருக்குக் கொடு’ என்று இயேசு பதிலளித்தார். இதன் மூலம் அரசு விதிக்கும் வரியை செலுத்த வேண்டும் என்று இயேசு சொல்கிறார். ரோமப் பேரரசும் அதற்குக் கீழிருந்து வரிவசூலித்தவர்களும் (சகேயு) சுயநலவாதிகளாக இருந்தபோதும் இயேசு அதற்காக அவ்வரசுக்குக் கீழ்ப்படியக்கூடாது; வரிசெலுத்தக்கூடாது என்று சொல்லவில்லை. இன்னொரு தடவை, ரோமப்பேரரசை எதிர்த்து யூதர்களுக்கு தலைமை தாங்கிப் போராடவேண்டும் என்று யூதர்கள் எதிர்பார்த்தபோது இயேசு அதற்கு இடங்கொடுக்காது அவர்களுடைய எண்ணத்தில் மண்ணைப் போட்டார். அதற்காகவே யூதர்கள் அவரைக் கொல்ல முயன்றார்கள். இயேசு எந்த விதத்திலும் இஸ்ரவேலில் இருந்த அரசுக்கோ அல்லது ரோமப்பேரரசுக்கோ எதிரான விதத்தில் நடந்துகொள்ளவில்லை; எந்த அதிகாரத்தையும் தூக்கியெறிய முயலவில்லை. அதிகார அமைப்புகளை உருவாக்கி நியமித்த திரித்துவத்தின் இரண்டாம் ஆள்தத்துவமான தேவகுமாரன் தன் அதிகாரத்துக்கு எதிராகச் செயல்படுவாரா? இயேசுவில் காணப்பட்ட இதே போக்கைப் பவுல் அப்போஸ்தலனிலும் காண்கிறோம். பல முறை சிறைவாசத்தை அனுபவித்த பவுல் அதிகாரங்களுக்குக் கட்டுப்பட்டே நடந்துகொண்டார். தன்னுடைய ரோம குடியுரிமையை அவர் சுவிசேஷ நோக்கத்திற்காகப் பயன்படுத்திக்கொண்ட போதும் எந்தவகையிலும் தன்னுடைய உரிமைகளுக்காக வாதாடிப் போராடி அரசையும், சமூக அதிகாரங்களையும் எதிர்க்கவில்லை.
எஜமானர்களும், அடிமைகளும்
முக்கியமாக இந்தப் புதிய ஏற்பாட்டு கட்டளைகளும் அவற்றிற்கான விளக்கங்களும் முதல் நூற்றண்டில் நீதியற்ற முறையில் சமுதாயத்தை ஆண்டுகொண்டிருந்த ரோமப் பேரரசின் காலத்தில் கொடுக்கப்பட்டவை. அந்தக் காலப்பகுதியில் சமுதாயத்தில் அடிமைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. ‘வேலைக்காரர்கள்’ என்று நாம் கொலோசெயர் 3:22லும், 1 பேதுரு 2:9லும் காண்கின்ற வார்த்தை முறையாக ‘அடிமைகள்’ அல்லது ‘அடிமை’ என்றே மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் மூலமொழியான கிரேக்கத்தில் அதுவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் அன்றிருந்த அடிமைவாழ்க்கை முறைதான். எஜமானர்களும், அடிமைகளுமே அன்றிருந்திருக்கிறார்கள்; இன்று சமுதாயத்தில் காண்பதுபோன்ற சம்பளத்துக்காக ஒருவருக்குக் கீழ் வேலை செய்கிறவர்கள் அன்றிருக்கவில்லை. இன்று வேலைக்காரர்களாக இருக்கும் எவருக்கும் சமுதாயத்தில் உரிமைகளும் வசதிகளும் இருந்து வருகின்றன. அரசின் பாதுகாப்பும் சட்டங்களும், நீதிமன்றமும் அவர்களுக்கு உதவுகின்றன. முதல் நூற்றாண்டு ரோம அரசின் கீழிருந்த நாடுகளில் இதற்கெல்லாம் இடமிருக்கவில்லை. அடிமைகள் விலைக்கு வாங்கப்பட்டார்கள்; எஜமானர்களுக்குக் கீழ் அவர்கள் எந்த வேலையையும் செய்ய வேண்டியவர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு உரிமைகளோ உடமைகளோ இருக்கவில்லை. அவர்களுக்காக வாதாட எந்த யூனியனும் இருக்கவில்லை. அவர்கள் எஜமானர்களுடைய உடமைகளாக மட்டுமே கணிக்கப்பட்டார்கள். அடிமைகளுக்கு அன்பு காட்டிய நல்ல எஜமானர்கள் அன்றிருந்திருந்தபோதும் அடிமைகளை அநேகர் கொடுமைப்படுத்தியும் வந்தார்கள். முக்கியமாக பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அடிமைகளாகவே இருந்திருக்கிறார்கள். முதலாம் பேதுருவில், பேதுரு இத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்தவர்களுக்கே அறிவுறை செய்கிறார். இத்தகைய சமூக சூழலின் கீழ் வாழ்ந்தவர்களுக்கே பவுலும் தன் நிருபங்களை எழுதியிருக்கிறார்.
பவுலின் பிலேமோன் நிருபம் பிலேமோன் என்ற கிறிஸ்தவ எஜமானுக்கு எழுதப்பட்டது. அவனுடைய வீட்டில் அன்று சபை கூடிவந்துகொண்டிருந்தது. பிலேமோனின் அடிமையாக வேலை செய்து வந்தவன் ஒநேசிமு. ஒரு நாள் ஒநேசிமு வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டான். அது தற்கொலை செய்துகொள்வதற்கு சமமான ஒரு செயல். ஏனென்றால் அன்று அடிமைகள் சந்தையில் விலைகொடுத்து வாங்கப்பட்டார்கள்; அவர்கள் எஜமானுக்கு சொந்தமானவர்கள். வீட்டைவிட்டு ஓடிப்போன ஒரு அடிமையை எவரும் வாங்கமாட்டார்கள்; வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது; விற்கவும் முடியாது. ரோம சட்டம் அதற்கெல்லாம் எதிரானது. அடிமை அமைப்புமுறைக்கு அது பாதுகாப்பளித்தது. ரோமுக்கு போன ஒநேசிமு பவுலை சிறையில் சந்தித்து அந்த அறிமுகத்தால் சுவிசேஷத்தைக் கேட்டு கர்த்தரையும் விசுவாசித்தான். பவுல் அவனை மீண்டும் பிலேமோனிடம் சிபாரிசுக் கடிதத்தோடு அனுப்பிவைத்ததாக அந்த நிருபத்தில் நாம் வாசிக்கிறோம். ஒநேசிமு பிலேமோனிடம் திரும்பியபோது தொடர்ந்தும் அடிமையாகவே (இப்போது கிறிஸ்தவ அடிமை) வாழவேண்டியிருந்தது. அடிமை வழக்கத்தை முதலில் அன்றோடு ஒழித்துவிட்டு ஒநேசிமுவை கவனித்துக்கொள்ளும்படி பவுல் பிலேமோனுக்கு எழுதவில்லை. அவனை மீண்டும் அடிமையாக ஏற்றுக்கொண்டு அன்றுமுதல் கிறிஸ்தவ அன்பைக்காட்டி நடத்தும்படியே பவுல் பிலேமோனுக்கு அறிவுறுத்தினார். அத்தோடு ஒநேசிமுவால் ஏதும் நஷ்டங்கள் ஏற்பட்டிருந்தால் அதைத் தானே ஈடுகட்டிவிடுவதாகவும் பவுல் எழுதியிருந்தார்.
இதெல்லாம் எதைக் காட்டுகிறது? நிச்சயமாக பவுலின் இந்த ஆலோசனையின் அடிப்படையில் அடிமைத்தனத்துக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை; இன்று அது இல்லாமல் போயிருப்பது நல்லதுதான். இருந்தாலும் இந்த வரலாற்று சமூகப் பின்புலத்தின் அடிப்படையில்தான் நாம் அதிகாரத்தையும், அதிகாரத்துக்கு மதிப்பளித்து சமுதாயத்தில் நம் கடமைகளைச் செய்யவேண்டிய அவசியத்தையும் இந்த வேதப்பகுதிகளில் இருந்து விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது, நீதியற்ற சமுதாய அமைப்புகளின் கீழ் வாழ்ந்தாலும் கிறிஸ்தவர்கள் அந்த சமுதாய அமைப்பின் அதிகாரங்களுக்கு எதிராகப் போராடி சமூக சீர்திருத்தத்தை நாடாமல் அதிகாரங்களை மதித்து அவர்களுக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்ற வேண்டும் என்பதையே இந்த வேதப்பகுதிகள் விளக்குகின்றன. சமுதாயத் தீங்குகளுக்கு எதிராக வேதம் எத்தனையோ பகுதிகளில் விளக்கங்கொடுக்கிறது; அவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கிறது. இருந்தபோதும் அந்த சமுதாயத்தீங்குகளுக்கு விடிவாக அது அதிரடி சமூக சீர்திருத்தத்தையோ அல்லது அராஜகத்தையோ சிபாரிசு செய்யவில்லை; அதிகாரத்துக்கெதிரான போராட்டத்தை முன்வைக்கவில்லை. சமுதாயத்தீங்குகளுக்கு விடிவாக அது சுவிசேஷத்தையும், சுவிசேஷ வாழ்க்கை முறையையுமே நம் முன்வைக்கிறது. கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மூலம் கிறிஸ்துவை விசுவாசித்து மனிதர்களின் வாழ்க்கை மாற்றமடைகிறபோதே சமுதாயத் தீங்குகளுக்கு விடிவு ஏற்படுவதாக அது விளக்குகிறது. பாவத்தில் இருந்து விடுபட்டு கிறிஸ்தவ நன்னடத்தையை வாழ்க்கையில் கொண்டிருக்கின்றபோதே சமூக மாற்றங்களை கிறிஸ்தவன் ஏற்படுத்துகிறான் என்கிறது வேதம்.
நீதியற்ற அரசின் கீழும், நீதியற்ற சமுதாய அமைப்பு முறையின் கீழும் வாழ்ந்து வருவதை அதிகாரத் தளங்களை உதறித்தள்ளுவதற்கு ஒருபோதும் சாக்காக இருக்கக்கூடாது என்பதை மேலே நாம் கவனித்த வசனங்கள் வெளிப்படுத்துவதைக் கவனியுங்கள். நீதியான சமுதாயத்தில் மட்டுமே அதிகாரங்களுக்கு நாம் கட்டுப்பட வேண்டும் என்பதல்ல கர்த்தரின் போதனை. சமுதாயத்தில் நீதியற்ற காலங்களிலும் தொடர்ந்து கடவுளே உலகத்தை ஆளுகிறவராகவும், சகல அதிகாரங்களும் அவருக்குக்கீழாகவே இருந்து வருகின்றன. நீதியற்ற நீரோ, டொமீசியன் போன்ற ரோமப் பேரரசர்களும் கர்த்தரால் ஆள அனுமதிக்கப்பட்ட ராஜாக்களாக இருந்திருக்கிறார்கள். நேரடியாக கர்த்தருடைய வார்த்தைகளுக்கு எதிரானவற்றைச் செய்ய எவரும் நம்மை வற்புறுத்தும்போதே நாம் அவர்களுக்குக் கீழ்ப்படியாமல் தானியேலைப்போல கர்த்தருக்கு மட்டும் கீழ்ப்படியவேண்டும். ஏனைய சந்தர்ப்பங்களில் நீதியற்றவர்களுக்குக் கீழிருந்து அதிகாரத்துக்கு மதிப்புக்கொடுத்து கிறிஸ்தவ நன்னடத்தையைப் பின்பற்றிப் பணிசெய்யவேண்டும் என்பதே வேதம் நமக்களிக்கும் தெளிவான போதனை. அநீதிகளுக்கு மத்தியில் கிறிஸ்தவ நன்னடத்தையோடு அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு ஒருவர் வாழ்கிறபோதே சுவிசேஷ செய்தியின் வல்லமை நிலைநாட்டப்படுவதாக வேதம் விளக்குகிறது. சுவிசேஷ வாழ்க்கையே அநீதியையும், பாவத்தையும் கட்டுப்படுத்துவதற்காக கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் ஆவிக்குரிய வாழ்க்கை முறை. அதற்கு ஈடானதொன்றில்லை. சமூக சீர்திருத்தமும், சமூக நீதியும் குறுகிய காலத்துக்கான வெளிப்புற மாற்றத்தை மட்டுமே கொண்டுவர முடியும். அவற்றால் மனிதர்களை மாற்றமுடியாது; பாவத்தைத் கட்டுப்படுத்த முடியாது; நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரமுடியாது. சமூகத்தில் நிரந்தர மாற்றங்கள் ஏற்பட ஆவிக்குரிய சுவிசேஷ வாழ்க்கை முறை மக்கள் மத்தியில் உருவாக வேண்டும். வேதம் சுவிசேஷத்திற்கும், சுவிசேஷத்தின் அடிப்படையிலான ஆவிக்குரிய இருதய மாற்றத்துக்குமே முன்னிடம் கொடுக்கிறது.
அதிகாரத்தை மதித்து நடக்கவேண்டும்
இதுவரை நாம் பார்த்திருக்கும் வேதவிளக்கங்கள் சமுதாயத்தின் அனைத்து அதிகாரங்களுக்கும் நாம் மதிப்புக்கொடுத்து பணிந்து நடக்கவேண்டும் என்பதை விளக்குகின்றன. அதுவே கிறிஸ்தவ நன்னடத்தை. அந்த நடவடிக்கையின் மூலமாகவே கிறிஸ்துவை நாம் மகிமைப்படுத்தி சுவிசேஷ வாழ்க்கையை சமுதாய மக்கள் அறிந்துகொள்ளும்படியாக வாழ்ந்து வரவேண்டும். தாராளவாத (லிபரல்) சிந்தனை கிறிஸ்தவர்களுக்கு இருக்கக்கூடாது. அதிகாரங்களுக்கு அடிபணிந்து (கீழ்ப்படிந்து) வாழவேண்டும் என்று போதிக்கும் வேதத்தில் ‘கீழ்ப்படிந்து’ என்ற வார்த்தையில் ஆழமான அர்த்தமிருக்கிறது. அதாவது ஒருவன் தன்னைத் தாழ்த்தி தனக்கு மேலிருக்கும் அதிகாரத்தை மதித்து கர்த்தருக்காக அந்த அதிகாரத்திற்கு பணிந்து அனைத்துப் பணிகளையும் செய்யவேண்டும் என்பதே அதன் அர்த்தம். இன்று கிறிஸ்தவர்களும் உலகத்து சிந்தனைகளைப் பின்பற்றி தங்களுடைய உரிமைகளுக்காக தொட்டதற்கெல்லாம் குரல்கொடுக்கவும் போராடவும் ஆரம்பித்திருக்கிறார்கள்; அநியாயத்தைத் தட்டிக்கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இயேசுவும், அப்போஸ்தலர்களும், வேத மனிதர்களும் இதற்கெதிரான முறையிலேயே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இயேசு தன் உரிமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து தன்னைத் தாழ்த்தி சகல அதிகாரங்களுக்கும் அடங்கி வாழ்ந்து காட்டியிருப்பதை சிந்தித்துப் பாருங்கள்.
1 பேதுரு 2:18-23
18 வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். 19 ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால், அதுவே பிரீதியாயிருக்கும். 20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். 21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். 22 அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. 23 அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
இத்தகைய வாழ்க்கைமுறை உலகத்தைப் பொறுத்தவரையில் முதுகெலும்பில்லாத பலவீனமாகத் தெரியலாம்; வேதத்தைப் பொறுத்தவரையில் இதுவே கிறிஸ்துவின் வல்லமையும் நிதர்சனமான கிறிஸ்தவ சுவிசேஷ வாழ்க்கையுமாகும்.
கிறிஸ்தவ வைராக்கியமும், ஜெபமும்
பக்தி வைராக்கியம் – 10
– டேவிட் மெரெக் –
[பக்தி வைராக்கியம் என்ற தலைப்பில் வந்துகொண்டிருக்கும் இந்தத் தொடர், போதகர்களுக்காக நடத்தப்பட்ட இறையியல் போதனை வகுப்புகளில் போதகர் டேவிட் மெரெக்கினால் கொடுக்கப்பட்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் M. ஜேம்ஸ்.]
இந்த ஆக்கத்தில், கிறிஸ்தவ வைராக்கியத்தை நமக்குக் காட்டக் கூடிய மேலும் சில உதாரணங்களைப் பார்க்கப்போகிறோம். இந்த உதாரணங்களில் கிறிஸ்தவ வைராக்கியத்தின் ஒரு முக்கியமான சிறப்பான அம்சத்தில், கவனம் செலுத்தப்போகிறோம் – “கிறிஸ்தவ வைராக்கியமும் ஜெபமும்.”
என்னுடைய ஆய்வின்படி, புதிய ஏற்பாட்டில் ஜெபத்தைப் பற்றிய போதனைக்கும் நாம் படித்துவருகிற கிறிஸ்தவ வைராக்கியத்தின் மைய நோக்கமாகிய “கொதிக்கிற சூடான” என்ற வார்த்தைக் குடும்பத்திற்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை. ஆயினும், கிறிஸ்தவ வைராக்கியத்திற்கும் ஜெபத்திற்கும் வேதபூர்வமான எந்தத் தொடர்பும் இல்லை என்று இதற்கு பொருளல்ல. முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கடவுளைத் தேட வேண்டுமென்று அவர் நமக்குக் கட்டளையிட்டிருப்பதாக ஏற்கனவே நாம் படித்திருக்கிறோம். இந்தவிதமாக அவரைத் தேடுகிற யாவரும் அவரைக் கண்டடைவார்கள் என்று அவர் வாக்களித்திருக்கிறார்.
உபாகமம் 4:29
அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்.
எரேமியா 29:13
உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.
நிச்சயமாக அத்தகைய முழு இருதயத்துடனான ஜெபம் வைராக்கியமான ஜெபமே. ஜெபம், பக்தி வைராக்கியத்தின் உட்கருத்தோடு நெருங்கிய தொடர்புடையதாக வேதத்தின் பல பகுதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பக்தி வைராக்கியத்தையும் ஜெபத்தையும் பற்றிய பாடத்திற்கு ஆரம்பமாக இரண்டு பொதுவான வேதப்பகுதிகளைப் பார்த்துவிட்டு பிறகு இவை இரண்டிற்கும் இடையே இருக்கிற தொடர்பை விளக்கும் மூன்று வேதப்பகுதிகளைக் கவனிக்கலாம்.
ரோமர் 12:11-12
11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். 12 நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
எப்போதாவது ஒரு முறை மட்டும் ஜெபம் செய்யும்படி பவுல் இவ்வசனத்தில் நம்மை வற்புறுத்தவில்லை. ஜெபத்தில் தொடர்ந்து உறுதியாய்த் தரித்திருக்கும்படி பவுல் இங்கு குறிப்பிடுகிறார். உறுதியாய் தரித்திருங்கள் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை கிரெக்க மொழியில் ஒரே வார்த்தையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தை, ஒட்டிக்கொண்டிருந்தல், ஈடுபாடோடிருத்தல், நிலைதடுமாறாமல் கவனத்தோடிருத்தல், சோர்வின்றி விடாமுயற்சியோடு இருத்தல் என்பதையெல்லாம் உள்ளடக்கமாகக் கொண்டது. ஆகவே நாம் தொடர்ச்சியாக ஜெபிப்பதுமட்டுமல்லாமல் விடாமுயற்சியுடனும் ஜெபிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். நாம் நிரந்தரமாக நிலைத்தடுமாறாமல் ஜெபத்தில் ஈடுபடுகிறவர்களாக இருக்க வேண்டும். எனினும் நம்முடைய இருதயத்தைப் பற்றி நமக்குத் தெரியும். நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், ஜெபத்தில் இந்தவிதமாக உறுதியாய் இருப்பதிலிருந்து நம்முடைய இருதயம் எவ்வளவு இலகுவாக நழுவிச் சென்றுவிடுகிறது என்பதை நாம் அறிவோம். வசனம் 11ல் சொல்லியிருப்பதுபோல் நம்முடைய இருதயங்களில் பக்தி வைராக்கியம் இல்லாவிட்டால் நம்முடைய சரீரத்திற்கு எதிராகச் செல்லக்கூடிய இத்தகைய ஆவிக்குரிய ஒழுங்கில் விடாமுயற்சியோடு நம்மை ஈடுபடுத்திக்கொள்ளுவது முற்றிலும் இயலாத காரியம். இத்தகைய பக்தி வைராக்கியம் மட்டுமே எது நடந்தாலும் நம்மை கட்டுப்படுத்தி முழு இருதயத்தோடு அவருடைய இராஜ்ய வளர்ச்சிக்காகவும், அவருடைய மக்களின் நலனுக்காகவும், நம்முடைய தனிப்பட்ட நலனுக்காகவும் கடவுளிடம் முறையிட வைக்கும். உண்மையில், ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருப்பதும், ஜெபத்தில் பக்தி வைராக்கியமாய் இருப்பதும் பிரிக்க முடியாதவைகள்.
கொலோசெயர் 4:2
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.
இடைவிடாமல் ஜெபம்பண்ணுபடி கொலோசெய விசுவாசிகளை பவுல் வற்புறுத்துகிறார். இடைவிடாமல் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை, ரோமர் 12:12ல் இருக்கும் அதே கிரேக்க வார்த்தையே இங்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதோடு சேர்த்து, ஜெபத்தில் நன்றியோடு ஜாக்கிரதையாகவும் அல்லது விழிப்புடனும் அல்லது எச்சரிக்கையாவும் இருக்கும்படி பவுல் இங்கு குறிப்பிடுகிறார். ஜெபம் செய்வதற்கு நாம் மிகுந்த கவனம் காட்ட வேண்டும், அதற்கு தடையாக எதையும் அனுமதிக்கக் கூடாது. அத்தகைய ஊக்கமான ஜெபம், அது வெறுமனே தானாக நடந்துவிடாது. இது நம்முடைய ஆவிக்குரிய பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது. விசுவாசிகள் என்ற பெயரில், ஜெபமில்லாமல், தூங்கிவழிகிறவிதமான ஒரு சறுக்கலான வாழ்க்கை வாழக்கூடாது. ஜெபம் பண்ணுவதைப் பற்றி நாம் விழிப்புடனும் ஆர்வத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். ஆகவே, நாம் ஜெபிக்க வேண்டியபடி ஜெபிப்பதற்கு வைராக்கியம் அவசியமாயிருப்பதை இவ்வசனத்தின் மொழிநடை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. இதுகுறித்த சில உதாரணங்களை இப்போது நாம் பார்ப்போம்.
முதலாவதாக, கொலோசெயர் 4:12ல் (ரோமர் 12.12) பவுல் வலியுறுத்துகிறவிதமாக, புதிய ஏற்பாட்டு சுவிசேஷ ஊழியர்களில் ஒருவர் வாழ்ந்திருப்பதை நாம் பார்க்கலாம்.
- எப்பாப்பிரா
கொலோசெயர் 4:12-13
12 எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். 13 இவன் உங்களுக்காகவும், லாவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்.
யார் இந்த எப்பாப்பிரா? கொலோசெய நிருபம் எழுதப்பட்ட அதே காலப்பகுதியில், சிறைவாசத்தின் போது எழுதப்பட்ட வேறொரு நிருபத்தை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால், அப்போஸ்தலனாகிய பவுலோடு கிறிஸ்துவுக்காக சிறையில் இருந்தவர் என்பதை நாம் அறியலாம்.
பிலேமோன் 23
கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்
வேறுவிதமாக சொல்லுவதானால், எப்பாப்பிரா உண்மையுள்ள சுவிசேஷ ஊழியம் செய்ததன் காரணமாக தற்போது சிறையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். கொலோசெய நிருபத்தில் இதற்கு முன்பு ஒரு முறை எப்பாப்பிரா பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கொலோசெயர் 1:5-8
5 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். 6 அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது; 7 அதை எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராவினிடத்தில் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்; 8 ஆவிக்குள்ளான உங்கள் அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.
கொலோசெய விசுவாசிகளுக்காக உண்மையுடன் ஊழியம் செய்த அன்பார்ந்த சக ஊழியன் என்று பவுல் எப்பாப்பிராவைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறார். கடவுளுடைய கிருபையுள்ள சுவிசேஷத்தை அவர்களுக்கு கொண்டு சென்றதன் மூலம் அவர் உண்மையுள்ள ஊழியராக இருந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், எப்பாப்பிரா அந்த ஊரைவிட்டுச் சென்றதோடு அவருடைய உண்மையுள்ள ஊழியம் முடிந்துவிடவில்லை. நாம் பார்த்து வரும் வசனப்பகுதியின்படி, கொலோசெயர் 4:12-13, அவர்களுக்காக ஜெபிக்கிற ஊழியத்தின் மூலமாக தொடர்ந்தும் அவர்களுக்கு உண்மையுள்ள ஊழியத்தைச் செய்து வருகிறார். அவருடைய ஜெப ஊழியத்திலுள்ள பல சிறப்பம்சங்களை கவனியுங்கள்.
- எப்பாப்பிரா தன்னுடைய ஜெப ஊழியத்தில் தெளிவான வைராக்கியங் கொண்டிருந்தார். இங்கு, கொலோசெயர் 4:2ல் குறிப்பிடப்பட்டுள்ள “இடைவிடாமல்” என்ற வார்த்தை கொடுக்கப்படவில்லை. ஆனால் அதன் உட்கருத்தே இங்கும் இருக்கிறது. இங்கு பவுல், அவர்களுக்காக எப்பொழுதும் ஜெபத்தில் போராடுகிறவனாக இருக்கிறான் என்கிறார். “எப்பொதும் போராடுகிறான்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை கிரேக்க வினைச்சொல்லில் ஒரே வார்த்தையாக இருக்கிறது. இந்த வார்த்தை, ஒன்றை அடைவதற்காக விடாமுயற்சியுடனான வைராக்கியத்துடன் போராடுவதன் உட்கருத்தைக் கொண்டது. வேறுவிதத்தில் சொல்லுவதானால், எப்பாப்பிராவின் ஜெப ஊழியம் விடாமுயற்சியுடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் கடின உழைப்போடு இருந்தது. இது பக்தி வைராக்கியத்தை உள்ளடக்கியது.
- எப்பாப்பிரா தன்னுடைய வைராக்கியமான ஜெப ஊழியத்தில் விடாமுயற்சியுடன் இருந்தார். ஜெபத்தில் அவருடைய ஊக்கமான உழைப்பு ஆரம்பத்தில் மட்டும் இருந்துவிடவில்லை. அல்லது, ஆரம்பித்து இடையில் நிறுத்திவிட்டு, பிறகு மறுபடியும் துவங்குகிறதாக இருக்கவில்லை. அவர் எப்போதும் ஜெபத்தில் ஊக்கமாக போராடுகிறவராக இருந்தார். இது ஜெபத்தில் விடாமுயற்சியுடனான வைராக்கியமாக இருந்தது.
- எப்பாப்பிராவின் ஜெப ஊழியம் சுயநலமில்லாத, கடவுளுடைய ராஜ்யத்தைச் சார்ந்ததாக இருந்தது. அவர் அப்போஸ்தலனாகிய பவுலோடு சிறையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இருந்தும், அவருடைய சொந்த தனிப்பட்ட உபத்திரவங்களைப் பற்றிய எண்ணத்தோடு மட்டும் இருந்துவிடவில்லை. சுய பரிதாபம் என்கிற கடலில் அவர் மூழ்கிவிடவில்லை. மாறாக, ஜெபத்தில் கொலோசெய விசுவாசிகளுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார். மேலும், அவருடைய ஜெபத்தில் அவர்களுடைய தற்காலிக நலனைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருக்கவில்லை. அவர்களுடைய ஆவிக்குரிய நலனே அவருடைய முதன்மையான கவலையாக இருந்தது. அவர்கள் கடவுளுடைய சித்தத்தில் பூரணமாகவும் முழுமையாக நிலைத்திருக்கும்படியும் ஜெபித்துக் கொண்டிருந்தார். அத்தோடு, ஒரு உள்ளூர் சபை விசுவாசிகளை மட்டும் உள்ளடக்கியதாக அவருடைய ஜெப ஊழியம் இருந்துவிடவில்லை. லவோதிக்கேயாவிலும் எராப்போலியிலும் இருக்கிற விசுவாசிகளுடைய நலன்களிலும் ஆழ்ந்த அக்கறைக்கொண்டு ஜெபித்து வந்தார். விசுவாசிகள்மீதும் தன்னுடைய இரட்சகர்மீதும் அவருக்கிருந்த இருதயப்பூர்வமான அன்பின் வெளிப்பாடாகவே அவருடைய வைராக்கியமுள்ள ஜெப ஊழியம் இருந்தது.
- எப்பாப்பிரா, தன்னைக் கிறிஸ்துவினுடைய ஊழியனாக எண்ணி, வைராக்கியமுள்ள ஜெப ஊழியத்தைச் செய்து வந்தார். வசனம் 12ல் பவுல் அவரை கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று குறிப்பிடுகிறார். ரோமர் 12:11ல் நாம் பார்த்ததுபோல், இங்கே ஜெபத்தில் அவருடைய வைராக்கியத்தை உந்தித்தள்ளியது எது என்பதைப் பார்க்கலாம். அது, தன்னுடைய தலைவனும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவுக்காக மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் அப்படி செய்து வந்தார். யாருக்காக அவர் தன்னையே கொடுத்திருந்தாரோ, யார் அவருக்கு எல்லாமாக இருந்தாரோ அவருக்கே அவர் ஊழியம் செய்தார். ஆகவேதான் அவரது வைராக்கியமுள்ள ஜெப ஊழியம் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தது.
- எப்பாப்பிரா ஒரு சாதாரண கிறிஸ்தவனாக இருந்தே தன்னுடைய வைராக்கியமான ஜெப ஊழியத்தைச் செய்து வந்தார். அவர் மற்ற கிறிஸ்தவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அசாதாரண பரிசுத்தவானல்ல. வசனம் 12ல் பவுல், அவரை தங்களோடு ஒருவர் என்கிறார். வேறுவிதமாக சொல்லுவதானால், அவரும் கொலோசெ பட்டணத்திலிருந்து வந்தவர். ஏனையோரைப் போல அவரும் மற்றொரு விசுவாசியாகவே இருந்தார்.
எனவே, ஜெபத்தில் கிறிஸ்தவ வைராக்கியம் கொண்டிருப்பதற்கான ஒரு அற்புதமான உதாரணமாக எப்பாப்பிரா இருக்கிறார். குறிப்பாக போதகர்களாகிய நமக்கு அவர் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார். கடவுளுடைய மக்களுக்காக போதக ஜெபம் செய்யும்படியான பக்தி வைராக்கியம் கொள்ளும்படி அவர் நம்மை அழைக்கிறார். அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:4ல் அப்போஸ்தலர்களால் அடையாளங்காட்டப்பட்ட சுவிசேஷ ஊழியத்தின் இரண்டு மைய பணிகளை உண்மையுடன் நிறைவேற்றி, நமக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர் எப்பாப்பிரா.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:4
நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
இதில், “இடைவிடாமல் தரித்திருப்போம்” என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். ரோமர் 12:12லுள்ள “உறுதியாய் தரித்திருங்கள்” மற்றும் கொலோசெயர் 4:2லுள்ள “இடைவிடாமல்” என்ற வார்த்தைகளுக்கான கிரேக்க வார்த்தையே இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. போதகர்களாகிய நாம் பொதுவாக கடவுளுடைய ராஜ்யத்திற்காகவும், குறிப்பாக நம்முடைய ஊழியத்தின் கீழுள்ள கடவுளுடைய மக்களுக்காகவும் தொடர்ந்து ஜெபத்தில் ஈடுபடும்படியே அழைக்கப்பட்டிருக்கிறோம். இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. இத்தகைய தொடர்ச்சியான வைராக்கியமுள்ள ஜெபம் நம்முடைய ஊழியத்தின் மையப் பகுதியாக இருக்கிறதா? எப்பாப்பிராவைப் போல நாமும் இதில் உண்மையாக ஈடுபட்டு, அதனிமித்தம் விடாமுயற்சியுடன் அதில் உழைக்கிறோமா? அல்லது இத்தகைய ஜெபம் நம்மில் எப்போதாவது இடையிடையில் மட்டும் இருந்துவிடுகிறதா? இந்த ஊழியத்தில் வைராக்கியத்தை தக்கவைத்துக்கொள்ளுவதென்பது இலகுவானதல்ல என்பதை நம்முடைய அனுபவங்களே நமக்குச் சொல்லுகின்றன. இது தொடர்ச்சியான கவனத்தையும் கடின உழைப்பையும் உள்ளடக்கியது. இதிலிருந்து நம்முடைய கவனத்தை சிதற வைக்கக்கூடிய பல விஷயங்கள் இருக்கின்றன. இணையதளம் பயன்படுத்தும் வசதியிருந்தால், ஈமெயில் வாசிப்பது, சமூக வலைதளங்களைப் பார்ப்பதென்பது ஜெபத்திற்கு இடையூறாக வந்துவிடும். பிறகு நம்முடைய ஜெப நேரம் சுருங்கிவிடும் அல்லது ஜெபிக்காமலேயே இருந்துவிடுவோம். ஜெபிப்பதைவிட இலகுவான அநேக விஷயங்கள் இருக்கின்றன. சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதோடு ஜெபத்தில் ஈடுபடுவதற்காகவும் சுவிசேஷ ஊழியர்களாக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவின் ஊழியனாக அவரோடு நமக்குள்ள உறவே நம்மை கட்டுப்படுத்தி அதைச் செய்யும்படி நம்மை அழைக்கிறது. நாம் மனந்திரும்பவும், இந்த விஷயத்தில் நம்முடைய ஊழியத்திலுள்ள குறைகள் நீங்க கடவுள் தாமே நமக்கு உதவுவாராக.
கிறிஸ்தவ வைராக்கியத்தையும் ஜெபத்தையும் பற்றிய மேலும் சில பகுதிகளைச் சுருக்கமாக நாம் பார்க்கலாம்.
- எருசலேமில் கூடிவந்த முதலாவது உள்ளூர் திருச்சபை
இங்கே நான் சுருக்கமாக மூன்று வசனப்பகுதிகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அ. ஈடுபாட்டோடு கூடிவந்து ஜெபித்ததன் விளைவாக முதலாவது உள்ளூர் திருச்சபை உருவானது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:14
அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
இயேசு பரலோகத்திற்கு திரும்பிச் சென்ற பிறகு, 120 சீஷர்கள் (வசனம் 15) எருசலேமில் ஒரு மேலறையில் கூடியிருந்தனர். எழுத்துபூர்வமாக, “தொடர்ந்து ஈடுபாட்டோடு ஜெபித்து வந்தார்கள்” என்று அவர்களைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. ரோமர் 12:12லும் மற்றும் பிற வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள அதே வார்த்தைதான் இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜெபத்தில் ஈடுபடும்படி மிகுந்த அர்ப்பணிப்போடு மட்டும் கூடிவந்த கூட்டமாக இந்தக் கூட்டம் இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் அதில் பங்குக்கொண்டார்கள். இந்நாட்களில் சில கிறிஸ்தவ குழுக்கள் செய்வதுபோல் அவரவருடைய தனிப்பட்ட சொந்த விஷயங்களை சத்தம்போட்டு சொல்லும், பாபேலில் ஏற்பட்டது போன்ற குழப்பமான காரியங்களுக்காக அவர்கள் ஜெபிக்கவில்லை என்பதைக் கவனியுங்கள். மாறாக, அவர்கள் யாவரும் ஒருமனப்பட்டு ஜெபிக்கும்படியாக தொடர்ந்து கூடிவந்தார்கள். இது நிச்சயமாக அவர்களுடைய ஜெபக்குறிப்புகளும் ஒன்றாக இருந்திருக்கும் என்பதைக் காட்டுகிறது. ஆகவே ஒருவர் ஜெபத்தை நடத்த, மற்றவர்கள் அமைதலோடு தங்கள் இருதயத்தில் இணைந்திருந்தனர். இந்த விஷயத்தில், அவர்களுடைய இணைந்த ஜெபத்திற்கு ஆண்டவர் பதிலளித்தார். பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியாகிய வரம் இந்த புதிய திருச்சபையில் ஊற்றப்பட்டு, அன்று ஒரேநாளில் 3000 பேர் இரட்சிக்கப்பட்டு, திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். உண்மையில் இந்த உள்ளூர் திருச்சபை, ஈடுபாட்டோடு அவர்கள் செய்த கூட்டு ஜெபத்தினால் உருவானது.
ஆ. முதலாவது உள்ளூர் திருச்சபையில் தொடர்ச்சியான கூட்டு ஜெபம் இருந்தது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:41-42
41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். 42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலர்களின் தலைமையின் கீழ், கிறிஸ்துவால் இவ்வுலகில் ஏற்படுத்தப்பட்ட முதலாவது உள்ளூர் திருச்சபையின் முக்கிய நடவடிக்கைகள் இங்கு பட்டியலிடப்பட்டு தரப்பட்டுள்ளன. இந்த விசுவாசிகள் அப்போஸ்தலருடைய போதனையிலும், ஐக்கியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபத்திலும் உறுதியாய் தரித்திருந்தார்கள் (ரோமர் 12:12லும் அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:14லும் பயன்படுத்தப்பட்டுள்ள அதே வார்த்தை). இந்த முதலாவது திருச்சபையின் மற்ற நடவடிக்கைகளைப் போலவே கூட்டு ஜெபத்திலும் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்கள். உண்மையில், திருச்சபையின் தொடர்ச்சியான நடவடிக்கையின், மையமாக இருப்பது கூட்டு ஜெபமே.
இ. முதலாவது உள்ளூர் திருச்சபை குறிப்பாக நெருக்கடியான காலங்களிலெல்லாம் ஜெபத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1-5
1 அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத்தொடங்கி; 2 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். 3 அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது. 4 அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான். 5 அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.
இங்கே முதலாவது உள்ளூர் திருச்சபையானது ஒரு உண்மையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அப்போஸ்தலர்களில் ஒருவரான யாக்கோபுவை பொல்லாத ஏரோது ஏற்கனவே கொலை செய்துவிட்டான். பேதுருவும் சிறையில் இருந்தார். வசனம் 5, பேதுருவுக்காக அவர்கள் ஊக்கத்தோடு ஜெபித்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே நாம் பார்த்த “கொதிக்கிற சூடான” என்ற வார்த்தையைவிட வித்தியாசமான வார்த்தை கொடுக்கப்பட்டுள்ளது. இது 1 பேதுரு நிருபத்தில் ஊக்கமாக அன்புகூருங்கள் என்ற கட்டளையில் கொடுக்கப்பட்டுள்ள “நீட்டுதல்” என்ற வார்த்தை குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வார்த்தை குடும்பத்தில் “இழுத்து நீட்டுதல்” என்பது உள்ளடக்கமாக இருக்கிறது. இதனடிப்படையில், இந்த வார்த்தை குடும்பத்தில் ஊக்கமான, ஆர்வமான, தீவிரமான, பெரும் அக்கறையான, விடாமுயற்சியுடன் என்ற உட்கருத்து இருக்கிறது. அந்தத் திருச்சபையின் வைராக்கியமான ஜெபத்தின் விளைவாக, பேதுருவைக் கொலை செய்யும்படி ஏரோது திட்டமிட்டிருந்த அந்த இரவில் கடவுள் அற்புதமாக அவரை வெளியில் கொண்டுவந்தார். அவர்களுடைய ஜெபத்தின் விளைவாக பேதுரு வெளியில் கொண்டுவரப்பட்டது ஆச்சரியமானதாக இருந்ததால், ஜெபித்த அந்த விசுவாசிகளால் முதலில் அதை நம்ப முடியவில்லை. உண்மையில், பெரிய நெருக்கடியான அந்நேரத்தில், கடவுள் தம்முடைய திருச்சபையின் வைராக்கியமான கூட்டு ஜெபத்தை ஆசீர்வதித்தார். ஆர்வத்துடன் ஜெபித்தவர்களின் நம்பிக்கைக்கு மேலாக கடவுள் தம்முடைய கிருபையைக் காட்டினார்.
இந்த முதலாவது உள்ளூர் திருச்சபையில் நாம் பார்த்தவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதென்ன? உள்ளூர் திருச்சபையின் தொடர்ச்சியான நடவடிக்கையிலும் நெருக்கடியான சூழ்நிலையிலும் ஒட்டுமொத்த திருச்சபையும் வைராக்கியத்துடனும், ஈடுபாட்டுடனும், தொடர்ந்தும் கூட்டு ஜெபம் செய்வதென்பது மைய நடவடிக்கையாக இல்லாவிட்டால், அத்திருச்சபையில் ஏதோ மோசமான தவறு இருக்கிறது என்றே அர்த்தம். தேவராஜ்யத்தின் பணிகளாகிய சுவிசேஷ பணிகளிலும் சபை நாட்டும் பணிகளிலும் ஈடுபடும்போது திருச்சபை ஊக்கமான ஜெபத்தில் ஈடுபடாவிட்டால் அங்கு ஏதோ சரியில்லை என்றே அர்த்தம். உள்ளூர் திருச்சபைகளில் ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்ளுபவர்களின் எண்ணிக்கை சரிந்துவருகிறபோதும் அல்லது ஜெபக்கூட்டம் முற்றாக நிறுத்தப்படுகிறபோதும் அத்திருச்சபையின் ஆவிக்குரிய பின்னடைவை காட்டும் அடையாளம் என்பதே என்னுடைய அனுபவத்தில் நான் கண்டதாகும். நம்முடைய உள்ளூர் திருச்சபைகளில் கூட்டு ஜெபம் எப்படியிருக்கிறது? அது சரிந்துகொண்டிருந்தால், நாம் மனந்திரும்பி ஆவியின் புதுப்பிக்குதலுக்காக கடவுளை நோக்கிக் கெஞ்சுகிறவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
- பழைய ஏற்பாட்டு பிரசங்கியாகிய எலியா
யாக்கோபு 5:16-18
16 நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. 17 எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. 18 மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.
வசனம் 16, நாம் ஒருவருக்கொருவர் ஜெபிக்கும்படி நம்மை அழைக்கிறது என்பதை முதலாவது கவனியுங்கள். அந்த வசனத்தின் இறுதியில் அத்தகைய ஜெபத்திற்கு நம்மை ஊக்கப்படுத்துகிற ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மூலமொழி வாக்கியத்தில் உள்ளதுபோல் “ஊக்கம்” அல்லது “வைராக்கியத்தைக் காட்டுவதாக” சில மொழிபெயர்ப்புகளில் இல்லை. மாறாக, நீதிமான்கள் கடவுளிடம் ஏறெடுக்கும் ஜெபத்திற்கான வலிமையே இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. நன்மையான, பெரிய நல்ல காரியங்களைச் செய்வதற்காகவே அத்தகைய ஜெபம் கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளது.
யாக்கோபு சற்று முன், தான் சொல்லியதற்கான ஆதாரமாக ஜெபிக்கும் எலியாவின் உதாரணத்தைச் சுட்டிக்காட்டுகிறார். எலியாவின் உதாரணத்திலும், அவருடைய ஜெபத்தில் ஊக்கமாக இருந்தார் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. வசனம் 17ல், பழைய ஏற்பாட்டில் சொல்லப்படாத விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. எலியா ஒரு தீர்க்கதரிசியாக இருந்து, ஒரு நீண்ட காலத்திற்கு மழை பெய்யாது என்று அறிவித்தார்.
1 இராஜாக்கள் 17:1
கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
எலியா அறிவித்தது போல், மூன்றரை வருடங்கள் மழை பெய்யாதிருந்தது, எலியாவின் ஊக்கமான வேண்டுதலுக்கான பதிலாகவும் இருந்தது. “ஊக்கமாக ஜெபித்தான்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் மூலமொழியில் “ஜெபித்த ஜெபம்” (prayed prayer) என்பதாகவே இருக்கிறது. எபிரெய மொழியில் பொதுவாகக் காணப்படும், மீண்டும் சொல்லும் முறையை யாக்கோபு இங்கு பயன்படுத்தியிருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதைப் பற்றி மாத்யூ ஹென்றி பின்வருமாறு சொல்லுகிறார்,
“இங்கு நாம் எலியாவைப் பின்பற்றி அவரைப்போல் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும் அல்லது மூலமொழியிலுள்ளதுபோல் ஜெபத்தில் ஜெபிக்க வேண்டும். வெறுமனே நாம் ஜெபத்தைச் சொல்லுகிறவர்களாக இல்லாமல், ஜெபத்தில் நாம் ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும். நமது சிந்தனைகள் ஓரிடத்திலிருக்க வேண்டும். நம்முடைய விருப்பங்கள் உறுதியாகவும் தீவிரமாகவும் இருக்க வேண்டும். நாம் ஜெபத்தில் ஜெபிக்கிறபோது, நாம் தீவிரமாக ஜெபிக்க வேண்டும்.”
மழையை நிறுத்துவது மட்டும் எலியாவின் ஊக்கமான ஜெபத்திற்கான பதிலாக இருக்கவில்லை. வசனம் 18ல், மறுபடியுமாக மழை பெய்வதும் அவருடைய ஜெபத்திற்கான பதிலாக இருந்தது. வசனம் 18ல், எலியா இரண்டாவதாக ஜெபித்ததில் ஊக்கமான என்பது வலியுறுத்தப்படவில்லை. ஆனால் இதைப் பற்றிய பழைய ஏற்பாட்டு குறிப்பில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 இராஜாக்கள் 18:41-45
41 பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான். 42 ஆகாப் போஜனபானம் பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்கால்பட குனிந்து, 43 தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான். 44 ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான். 45 அதற்குள்ளாக வானம் மேகங்களிலாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.
எலியா அங்கு செய்தவையாவும், அதாவது அவன் தன் முகம் தன் காலில்படும்படி குனிந்து வணங்கியது, தன் வேலைக்காரனை ஏழு முறை வெளியில் சென்று மழை மேகம் வந்திருக்கிறதா என்று விடாமுயற்சியுடன் பார்க்கச் சொன்னது யாவும் எலியா ஊக்கமாக வேண்டினான் என்பதையே காட்டுகிறது.
எலியா முதலில் பொல்லாத இஸ்ரவேலர்களின் மீதான கடவுளின் கண்டிப்பு அல்லது நியாயத்தீர்ப்பிற்காக ஊக்கமாக ஜெபித்தார். கர்மேல் மலையில் அவர்கள் அவரை கடவுள் என்று அறிக்கையிட்டதனால் அவர்களின் விடுவிப்பிற்காக கடவுளின் இரக்கத்திற்காக மறுபடியும் ஊக்கமாக ஜெபித்தார். எலியாவின் ஜெபங்கள் ஆச்சரியவிதமான பலன் தருகிறதாக இருந்தது. மேலும், எலியா அசாதாரண பரிசுத்தவானாக இருந்து இத்தகைய ஆச்சரியமான பலன் தரும் ஜெபத்தைச் செய்யவில்லை என்பதையும் யாக்கோபு அடிகோடிட்டுக் காட்டுகிறார். யாக்கோபு 5:17ல், எலியா நம்மைப்போல சாதாரண மனிதன் என்பதை வலியுறுத்துகிறார். ஆகவே அவர் ஜெபத்தில் ஊக்கமாக இருந்தது நம்முடைய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். அவரைப்போல நாமும், ஒருவர் நலனுக்காக ஒருவரும், கடவுளின் கண்டிப்பிற்காகவும், நியாயத்தீர்ப்பிற்காகவும் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும். இத்தகைய ஜெபங்கள் பலனுள்ளதாக இருந்ததும் நம்மை ஊக்கப்படுத்துகிறது.
எனினும், எவ்வளவாக அவிசுவாசத்திற்கு எதிராக தொடர்ந்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் அறிவோம். இவ்வாக்கத்தை முடிக்கிற வேளையில், நம்முடைய கர்த்தராகிய இயேசு வைராக்கியத்தோடு ஊக்கமாக ஜெபிப்பதற்கு நம்மை ஊக்கப்படுத்தும்படி சொல்லியிருப்பதைக் கவனிப்போம்.
லூக்கா 18:7-8
7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? 8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை ஒடுக்கும் பொல்லாதவர்களுக்கு எதிரான கடவுளுடைய நீதிக்காக ஜெபிப்பதைப் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. மனந்திரும்பாத மனிதர்கள் மீது தம்முடைய நீதியை சீக்கிரமாக நிறைவேற்றுவார் என்ற உறுதியை இயேசு தருகிறார். இந்த வாக்குத்தத்தமும் இதுபோன்று இன்னும் பலவும் (யாக்கோபு 5:16) மனந்தளராமல் தொடர்ந்து ஜெபிக்கும்படி நம்மை நிச்சயமாக ஊக்கப்படுத்த வேண்டும். கடவுள் நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறதில்லை என்று சில நேரங்களில் தோன்றலாம். உண்மையில், நல்ல காரியங்களை நமக்குத் தருவதற்காகவே பெரும்பாலும் ஆண்டவர் நம்முடைய ஜெபங்களுக்கான பதிலைத் தாமதப்படுத்தலாம். ஆனால் அவருடைய வாக்குத்தத்தங்கள் எப்போதும் நிலைநிற்கும். ஆகவேதான் நாம் விசுவாசமுள்ளவர்களாக இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். அவருடைய வாக்குத்தத்தங்களை நம்பும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். மனந்தளராமல் அவருடைய வாக்குத்தத்தங்களைச் சொல்லி ஜெபித்துக் கொண்டிருப்பதே நம்முடைய விசுவாசத்திற்கான அடையாளமாக இருக்கிறது. கடவுள் தாமே நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்தவும் விசுவாசத்தில் ஊக்கமாக தொடர்ந்து ஜெபிக்கவும் நம்மை நடத்துவாராக.
ஆயிரம் வருட அரசாட்சி
பரலோக இராஜ்யமும், தேவனின் இராஜ்யமும்
அநேக டிஸ்பென்சேஷனலிஸ்ட்டுகள் மத்தேயு தன் சுவிசேஷத்தில் அதிகமாக பயன்படுத்தும் ‘பரலோக ராஜ்யம்’ என்ற பதங்களை ‘தேவ இராஜ்யம்’ என்ற பதங்களிலிருந்து வேறுபடுத்தி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏனெனில், பரலோக இராஜ்யம் உலகத்தில் இஸ்ரவேலுக்கு கர்த்தர் ஏற்படுத்தியுள்ள திட்டம் என்றும் அதற்கும் திருச்சபைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இதன்படி மத்தேயுவில் இயேசு அளிக்கும் போதனைகள், மலைப்பிரசங்கம் உட்பட யூதர்களுக்கு மட்டுமே சொந்தமானதாகவும் அவற்றிற்கும் விசுவாசிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் இவர்களுடைய முடிவு. ஆனால், இந்தப் போதனைக்கு வேதத்தில் இடமில்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். வேதம், பரலோக இராஜ்யம், தேவ இராஜ்யம் என்ற வார்த்தைகளை ஒரே பொருளைக் குறிக்கும் வார்த்தைகளாகத்தான் பயன்படுத்துகிறதே தவிர டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் விளக்குவதுபோல் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. மத்தேயு தன்னுடைய சுவிசேஷத்தை யூதர்களைக் கிறிஸ்துவுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தை முக்கியமாகக் கொண்டு எழுதியதால் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பரலோக இராஜ்யம் என்ற வார்த்தைகளைத் தன்னுடைய சுவிசேஷத்தில் அதிகம் பயன்படுத்தியுள்ளார். இதற்கும் தேவ இராஜ்யத்திற்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் மத்தேயு காணவில்லை.
கர்த்தரின் பரலோக மக்களும், இஸ்ரவேலும்
டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் கர்த்தருடைய பரலோகத்து மக்களுக்கும், இந்த உலகத்தில் இருக்கும் இஸ்ரவேலர்களுக்கும் மத்தியில் வேறுபாட்டைக் காண்கின்றனர். கர்த்தரின் பரலோகத்து மக்கள், இவ்வுலகத்து இஸ்ரவேலர் என்று பிரித்துப் போதிக்கின்றார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலரைக்குறித்துக் கொடுக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள், வாக்குத்தத்தங்கள் எல்லாம் திருச்சபையில் நிறைவேறாமல் இனிவரப்போவதாக அவர்கள் கருதும் இஸ்ரவேலை மையமாகக்கொண்ட ஆயிரம் வருட அரசாட்சியின்போதே நிறைவேறப்போகின்றன. இந்த வாக்குத்தத்தங்கள் இந்த உலகத்தில் இஸ்ரவேல் அனுபவிக்கப்போகும் உலகளாவிய இராஜ்யம், பொருளாதார மேம்பாடு, உலகளாவிய சமாதானம் ஆகியவற்றையே குறிப்பிடுகின்றன என்று இவர்கள் விளக்கமளிக்கிறார்கள். இவையனைத்தையும் எழுத்துபூர்வமாகவே (Literal) நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், இவ்வாசீர்வாதங்கள் திருச்சபையின் காலத்தில் நிறைவேற முடியாதென்றும், அவை கிறிஸ்து வந்து இவ்வுலகில் ஏற்படுத்தும் ஆயிரம் வருட ஆட்சியில் நிறைவேறும் என்றும் கூறுகிறார்கள். இது டிஸ்பென்சேஷனலிஸ்டுகளின் ஒரு முக்கிய போதனை. அவர்கள் இஸ்ரவேல் என்ற வார்த்தையை ஒருபோதும் சபையைக் குறித்து பயன்படுத்தக் கூடாதென்றும் அது எப்போதும் இஸ்ரவேலை மட்டுமே குறிக்கும் என்றும் சொல்லுகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்கள் அனைத்தும் எழுத்துபூர்வமாக சொல்லுக்குச் சொல் இஸ்ரவேலை அடிப்படையாகக் கொண்டு இந்த உலகத்தில் நிறைவேற வேண்டும். டிஸ்பென்சேஷனலிஸ்டுகளின் வேத விளக்க முறை விநோதமானதாகவும் மெய்யான வேத விளக்க முறைகளுக்கு எதிர்மறையானதாகவும் காணப்படுகின்றன. உண்மையில் வேதத்தில் இஸ்ரவேல் என்ற பதம் நான்கு அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதை எழுத்துபூர்வமாக இஸ்ரவேல் நாட்டை மட்டுமே குறிப்பதாகக் கருதுவது வேதவிதிமுறைகளுக்கு எதிரானது.
உபத்திரவகாலத்துக்கு முன் திருச்சபை உயரெடுத்துக்கொள்ளப்படல்
இவர்களைப் பொறுத்தவரையில் கர்த்தரின் திட்டங்களில் திருச்சபை ஒரு தற்காலிக இடைச்செருகலாகக் காணப்படுவதால், இஸ்ரவேலுக்கான அவருடைய திட்டம் எப்படி நிறைவேறப்போகின்றது என்பதை இவர்கள் எப்படி விளக்குகிறார்கள் என்று பார்ப்போம்.
இவர்கள், திருச்சபையின் காலம் கிறிஸ்து தன்னுடைய பரிசுத்தவான்களுக்காக வரும் வகையின்போது முடிவுக்கு வரும் என்று கூறுகிறார்கள். கிறிஸ்துவின் வருகையையும், அவர் முதலில் தன்னுடைய பரிசுத்தவான்களுக்காக வருவார் (for the saints) என்றும், அதன்பிறகு ஏழுவருடங்கள் கழிந்து அவர் தன்னுடைய பரிசுத்தவான்களோடு (with the saints) வருவார் என்றும் பிரித்து விளக்குகிறார்கள். அத்தோடு, 1 தெசலோனிக்கேயர் 4:17ல் நாம் பார்க்கும் கிறிஸ்துவின் வருகை பெரும் மகா உபத்திரவகாலத்துக்கு முன்பு நிகழும் என்பது இவர்களுடைய விளக்கம். இதையே Pre-tribulational rapturism என்று அழைக்கிறார்கள். கிறிஸ்துவின் இவ்வருகையின்போது எல்லா விசுவாசிகளும், உயிர்த்தெழுந்தவர்களும், மறுரூபமாக்கப்பட்டவர்களும், கிறிஸ்துவை வானத்தில் மேகத்தின் மத்தியில் சந்திப்பார்கள் என்று இவர்கள் விளக்குகிறார்கள். அதன்பின் அந்தசபை கிறிஸ்துவோடு பரலோகத்துக்குப்போய் தேவ ஆட்டுக்குட்டியின் கலியாணவிருந்தைக் கொண்டாடுவார்கள் என்றும், அதேநேரம் தானியேலில் 9ம் அதிகாரத்தில் காணப்படும் 70வது வாரம் இந்த உலகத்தில் ஆரம்பிக்கும் என்றும் போதிக்கிறார்கள். இதுவே உபத்திரவகாலம் என்றும் இக்காலத்தில் அந்திக்கிறிஸ்துவின் ஆளுகை இவ்வுலகில் நடைபெறும் என்றும் கூறுகிறார்கள். இக்காலப்பகுதியின் பிற்பாதியில் யூதர்கள் மனந்திருந்துவதோடு, சாத்தானுக்கெதிரான அமர்கெதோன் போரில் கிறிஸ்து பெரு வெற்றி அடைவார் என்றும் கூறுகிறார்கள்.
இவர்கள் 1 தெசலோனிக்கேயர் 4:17ல் நாம் வாசிக்கும் கிறிஸ்துவின் வருகையை ‘இரகசிய வருகை’ (Secret rapture) என்று விளக்கம் கொடுக்கின்றனர். அவருடைய இரகசிய வருகையின்போது பரிசுத்தவான்களும் கண்ணுக்குத் தெரியாத முறையில் மறுரூபமாக்கப்பட்டு வானத்தில் கிறிஸ்துவை சந்திப்பார்கள் என்று விளக்குகிறார்கள்.
ஆயிரம் வருட அரசாட்சி
ஏழு வருட காலப்பகுதியில் இஸ்ரவேலுக்கான கர்த்தரின் திட்டங்கள் தனது நிறைவேற்றுதலை அடையத் தொடங்கி ஆயிரம் வருட அரசாட்சி ஆரம்பிக்கும் என்பது இவர்கள் போதனை. உபத்திரவ காலமான ஏழு வருட காலத்திற்குப்பின்பு கிறிஸ்து மறுபடியும் வரும்போது யூதர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த நாடான பாலஸ்தீனத்தில் கூடி இரட்சிப்பை அடைவார்கள் என்கிறது (ரோமர் 11:26) டிஸ்பென்சேஷனலிசம். இவ்வேளையில் ஆயிரம் வருடங்களுக்கு சாத்தான் முழுமையாக கட்டப்பட்டு இருட்டில் தள்ளப்படுவான் என்றும் இது போதிக்கிறது.
ஆயிரம் வருட அரசாட்சி இரண்டாவது உயிர்த்தெழுதலின்போது (முதலாவது, ஏழு வருட உபத்திரவ காலப்பகுதியில் மடிந்த பரிசுத்தவான்களின் உயிர்த்தெழுதல். இரண்டாவது, மிகுதியாக இருக்கும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்) ஆரம்பிக்கிறது என்று டிஸ்பென்சேஷனலிசம் கூறுகிறது. இவ்வாறு உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்கள், மேலெடுத்துக் கொள்ளப்பட்ட சபையோடு பரலோகத்தில் வாழ்ந்து ஆள்வார்கள் என்றும், அதேவேளை யூத பரிசுத்தவான்கள் இந்த உலகத்தில் எருசலேமில் இருந்து கிறிஸ்துவோடு ஆயிரம் வருடங்கள் அரசாளுவார்கள் என்றும் போதிக்கின்றது. இந்தக் காலப்பகுதியில் இரண்டு நியாயத்தீர்ப்புகள் நடைபெறும் என்றும், ஒன்று ஏழுவருட காலப்பகுதியில் பரிசுத்தவான்களைத் துன்புறுத்திய புறஜாதியாருக்கும் (மத்தேயு 25:1-46), இரண்டாவது இஸ்ரவேலுக்கும் (எசேக்கியேல் 20:33-38) நிகழும் என்கிறது இப்போதனை. இந்த ஆயிரம் வருடகாலத்தில் பொருளாதார விருத்தியும், மேம்பாடும் ஏற்பட்டு, உலகளாவிய சமாதானத்தை அனுபவித்து இஸ்ரவேல் உலகத்தில் பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களினதும், ஆசீர்வாதங்களினதும் நிறைவேற்றுதலை அனுபவிக்கும் என்கிறது டிஸ்பென்சேஷனலிசம். இந்த ஆயிரம் வருட காலப்பகுதியின் முடிவில் சாத்தானின் சிறிய காலப்பகுதியில் பெயரளவில் விசுவாசிகளாக இருப்போர் அவனுடன் சேர்ந்து கிறிஸ்துவை எதிர்ப்பார்கள். ஆனால், முடிவில் கிறிஸ்து அவர்களை அழிப்பார். இந்த ஆயிரம் வருட ஆட்சி முடிவில் இந்தக் காலப்பகுதியில் உயிரிழந்த பரிசுத்தவான்கள் உயிர்த்தெழுவார்கள். அத்தோடு அவிசுவாசிகளின் இரண்டாவது உயிர்த்தெழுதலும் நிகழும். அவிசுவாசிகள் மகா வெள்ளை சிம்மாசனத்தின் நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டு சாத்தானுடன் நரகத்தில் தள்ளப்படுவார்கள். எல்லா விசுவாசிகளும் (சபையும், இஸ்ரவேலும்) பரலோக எருசலேம் உலகில் ஏற்பட நித்திய நிலையை அடைவார்கள். இதுவே டிஸ்பென்சேஷனலிசத்தின் போதனை.
இதன் குறைபாடுகள்:
- எழுத்துபூர்வமான வேதவிளக்கமுறையை அதன் பொருள் புரியாமல் தவறாகப் பயன்படுத்தி வேதத்திற்கு விளக்கமளிக்கிறது டிஸ்பென்சேஷனலிசம். இந்தத்தவறான வேத விளக்க முறையே டிஸ்பென்சேஷனலிசத்தை அதன் ஏனைய எல்லாத் தவறான போதனைகளுக்கும் வழி நடத்திச் செல்கிறது.
- கர்த்தருடைய மக்களை பழைய ஏற்பாட்டு மக்கள், புதிய ஏற்பாட்டு மக்கள் என்று இரண்டு பிரிவுகளாக வேதத்திற்கு விரோதமாகப் பிரித்துக் காட்டுகிறது. இரட்சிப்பு பலவிதங்களில் பாவிகளுக்கு வரும் என்று போதித்து வேதம் போதிக்கும் எல்லாருக்கும் ஒரே விதத்தில் அமைந்த கிருபையால் விசுவாசத்தின் மூலம் மட்டுமே இரட்சிப்பு என்ற வேதபோதனையை நிராகரிக்கிறது.
- பழைய ஏற்பாட்டிற்கும் திருச்சபைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இது விளக்குகிறது. ஆனால், உண்மையென்னவென்றால் பழைய ஏற்பாட்டில் புதிய ஏற்பாடு போல திருச்சபை ஒரு நிறுவனமாக அமைக்கப்பட்டு காணப்படாவிட்டாலும், பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் திருச்சபையின் அங்கத்தவர்களாக இருக்கின்றனர். ஆகவே, பழைய ஏற்பாட்டில் நாம் நிச்சயம் திருச்சபையைப் பார்க்கிறோம் (விசுவாசிகளைக் கொண்டதே சபை).
- பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களும், வாக்குத்தத்தங்களும் இஸ்ரவேலுக்கு மட்டுமே பொருந்தும் என்று போதிக்கிறது. இது வேதத்தை இரண்டாகப் பிரித்து பழைய புதிய ஏற்பாடுகளுக்கிடையில் உள்ள பிரிக்கமுடியாத ஒற்றுமையைக் குழைக்கிறது. உண்மையில் பழைய ஏற்பாட்டுப் போதனைகள் கிறிஸ்துவில் நிறைவேறி புதிய ஏற்பாட்டு மக்களுக்கு ஆசீர்வாதங்களாக அமைந்திருக்கின்றன.
- கர்த்தருடைய திட்டங்களில் திருச்சபை ஒரு தற்காலிகமான இடைச்செருகல் மட்டுமே என்ற தவறான போதனையைத் தருகிறது. இவர்கள் கிறிஸ்துவின் திருச்சபைக்கு மதிப்பளிப்பதில்லை. ஆனால், திருச்சபையே கர்த்தரின் திட்டங்கள் எல்லாவற்றிலும் மேலான இடத்தை வகிக்கின்றது (எபேசியர் 1:20-22).
- பரலோக இராஜ்யம், தேவனுடைய இராஜ்யம் என்று இரண்டிருப்பதாக இது போதிக்கிறது. ஆனால், இவை இரண்டும் ஒன்றையே குறிக்கும் பதங்கள்.
- கிறிஸ்துவின் வருகை இரண்டாக இருக்குமென்றும், இரண்டு உயிர்த்தெழுதல்கள் இருக்குமென்றும் வேதத்தில் இல்லாததை இது போதிக்கிறது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை ஒரு முறை மட்டுமே நிகழும். அத்தோடு ஒரே முறை மட்டுமே உயிர்த்தெழுதலும் நிகழும்.
- கிறிஸ்துவின் வருகை எவர் கண்ணுக்கும் தெரியாத இரகசிய வருகையாக இருக்குமென்றும், அப்போது பரிசுத்தவான்கள் கண்ணுக்குத் தெரியாத முறையில் மறுரூபமாக்கப்படுவார்கள் என்றும் தவறாகப் போதிக்கிறது. 1 தெசலோனிக்கேயர் 4:17ல் கிறிஸ்துவின் வருகை எல்லோரும் கண்களால் பார்க்கக்கூடியதாகவும், எக்காளச்சத்தம் எல்லோர் காதுகளிலும் விழக்கூடியதாகவும் இருக்கும் என்று பவுல் விளக்குகிறார்.
- இந்த உலகில் யூதர்களுக்கான ஆயிரம் வருட அரசாட்சி இஸ்ரவேலைக் கொண்டு நடக்கும் என்றும் இது தவறாகப் போதிக்கிறது.
ஆ-மிலேனியலிசம் (A-Millenialism)
இது வெளிப்படுத்தல் நூலின் ஆயிரம் வருடங்களை கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட நீண்ட காலத்தைக் குறிக்கும் ஒரு அடையாள மொழியாகக் கருதுகிறது. ஆகவே, ஆயிரம் வருடத்தை எழுத்துபூர்வமாக இது எடுத்துக் கொள்வதில்லை. வெளிப்படுத்தல் விசேஷம் அடையாள மொழிகள் நிறைந்த புத்தகமாதலால் ஆயிரம் வருடங்களை எழுத்துபூர்வமாக விளக்கக்கூடாது என்கிறது இந்த வேதவிளக்க முறை. ஆயிரம் வருடங்களை இது நிராகரிக்கவில்லை. ஆனால், அதை எழுத்துபூர்வமாக விளக்கக்கூடாது என்றுதான் இது கூறுகிறது.
இவ்விளக்கத்தின்படி கிறிஸ்துவின் வருகையோடு ஆயிரம் வருடங்கள் ஆரம்பித்து விட்டது. இந்த ஆயிரம் வருட காலப்பகுதியில் கிறிஸ்துவும் அவருடைய மக்களும் பரலோகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் இந்த உலகத்தில் நற்செய்தி தங்கு தடையின்றி எங்கும் பிரசங்கிக்கப்படுகின்றது. இந்த உலகத்தில் திருச்சபை அமைக்கப்பட்டு அது வளர்ந்து கொண்டே போகும். நற்செய்திப்பணியால் பெரு வெற்றிகளையும், அதேநேரம் மந்தமான நிலையையும் உலகம் சந்திக்கும். விசுவாசிகள் இக்காலமுழுவதும் நன்மை, தீமை இரண்டையுமே சந்திப்பார்கள். அவிசுவாசிகளின் துன்பத்திற்கும் ஆளாவார்கள். இந்த நீண்ட காலப்பகுதியில் சாத்தான் கொட்டம் அடக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டிருக்கிறான். ஆயிரம் வருடங்கள் நிறைவடையும்போது அவன் கொஞ்சக்காலத்துக்கு விடுதலை செய்யப்பட்டு நாடுகளை தன்வசமாக்கி திருச்சபையை அநேக துன்பங்களுக்குள் இட்டுச் செல்வான். இது கொஞ்சக்காலமாகத்தான் இருக்கும். இக்காலமுடிவில் இயேசு இரண்டாம் தடவையாக இவ்வுலகுக்கு வந்து தன்னுடைய திருச்சபையை உயரெடுத்துக்கொள்வார். அப்போதே எல்லோரும் நியாயத்தீர்ப்பைச் சந்தித்து விசுவாசிகள் வெகுமதியையும், அவிசுவாசிகள் நித்திய தண்டனையையும் இராஜாவாகிய இயேசுவிடம் இருந்து பெற்றுக்கொள்வார்கள். அதன் பின் புதிய உலகமும், புதிய வானமும் சிருஷ்டிக்கப்படும்.
இந்த விளக்கம் வேதபோதனைகளுடன் பொருந்திப்போவதாகவும், வேதபோதனைகளுக்கு ஏற்ற முறையிலும் இருக்கின்றது. சீர்திருத்த கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் விசுவாசிக்கும் விளக்க முறையாக இது மட்டுமே இருக்கின்றது. வில்லியம் ஹென்றிக்சன், ரொபட் ரேமன்ட், லூயிஸ் பேர்கொப், வேர்ன் பொய்த்தரஸ், கொர்னேலியஸ் வெனீமா, ஹேர்மன் ஹொக்சீமா, மார்டின் லொயிட் ஜோன்ஸ், ஜே அடம்ஸ் போன்றோர் இந்த விளக்க முறையையே ஆதரிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.