திருமறைத்தீபம் 2017 -ம் ஆண்டு முதல் இதழ்
1. வாசகர்களே!
2. கட்டுரை எழுதலாம் வாருங்கள்
3. வேதம் விளக்கும் தேவபயம் – அல்பர்ட் என். மார்டின்
4. எது பக்திவைராக்கியம்? – டேவிட் மெரெக் –
5. நூல் அறிமுகம்
வாசகர்களே!
புதிய வருடம் ஆரம்பமாகியிருக்கிறது. உங்களெல்லோருக்கும் பத்திரிகைகுழுவினரின் சார்பாக என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். புதிய ஆண்டு உங்களுக்கு ஆண்டவரின் ஆத்மீக ஆசீர்வாதங்களை அள்ளித்தரட்டும். ஒவ்வொரு வருடமும் பின்னோக்கிப்போக நாம் ஆத்மீக வாழ்க்கையில் முன்னோக்கிப் போகிறோமா என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். கர்த்தரின் கிருபையிலும், ஞானத்திலும் எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறோம், திருச்சபையில் நல்லாத்துமாக்களாக இருந்து அவருடைய கட்டளைகளை எந்தளவுக்கு விசுவாசத்துடன் பின்பற்றியிருக்கிறோம் என்பதே முக்கியம். இந்தப் புதிய வருடம் அதில் உங்களை உயர்த்துவதாக இருக்கட்டும்.
இந்த இதழில் நான்கு ஆக்கங்களைக் காணலாம். வாசிப்பது பற்றி எழுதிய பிறகு, எழுதுவது எப்படி என்பது பற்றி இந்த இதழில் அது தொடர்பான முதலாவது ஆக்கத்தைத் தந்திருக்கிறேன். இதுவரை இந்த விஷயத்தைப்பற்றி நான் எதுவும் எழுதியது இல்லை. அதுபற்றி ஒருவருக்கு அளித்த ஆலோசனைகளே இந்த ஆக்கத்தை எழுதவைத்தது. அது உங்களுக்குப் பயனுள்ளதாக அமையுமானால் கர்த்தருக்கு நன்றி. அல்பர்ட் என். மார்டின் அவர்களின் தேவபயம் என்ற ஆங்கில நூலில் இருந்து ஒரு அதிகாரத்தை மொழிபெயர்த்து தந்திருக்கிறோம். வேதம் தேவ பயத்தைப்பற்றி அதிகமாகவே விளக்குகிறது. ஆனால், அதை இன்று மறந்துபோயிருப்பவர்களும், நிராகரிப்பவர்களுமே நம்மத்தியில் அதிகம். தேவபயத்தைப்பற்றிய உணர்வை இந்த ஆக்கம் உங்களில் ஏற்படுத்தட்டும். டேவிட் மெரெக் அவர்களின் பக்தி வைராக்கியம் பற்றிய இரண்டாவது ஆக்கம் இந்த இதழில் வந்திருக்கிறது. எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்த ஆக்கம் இது. நிச்சயம் உங்களுக்கும் ஆசீர்வாதமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இறுதியாக நூல் அறிமுகம் ஒன்றும் இதில் வந்திருக்கிறது. திருச்சபை ஒழுங்குக் கட்டுப்பாடு பற்றி தமிழில் வந்திருக்கும் நூலை அதன் ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்கேற்ப திறனாய்வு செய்து தந்திருக்கிறேன். இந்த இதழையும் பல வேலைகளுக்கும், ஊழியப்பணிகளுக்கும் மத்தியில் நல்லபடியாக தயாரித்து அச்சிட்டு அனுப்பத் துணை செய்திருக்கும் தேவனுக்கும், அஞ்சலில் உங்களுக்கு அனுப்பிவைக்கத் துணைபுரிந்திருக்கும் என் சபையாருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். – ஆர்.
கட்டுரை எழுதலாம் வாருங்கள்
என்னிடம் அடிக்கடி, நீங்கள் எப்படி இந்தக் கட்டுரைகளை எழுதுகிறீர்கள் என்றும், எழுதுவது எப்படி என்றும், நீங்கள் எழுதக் கற்றுக்கொடுத்தால் என்ன என்றும் பலர் கேட்டிருக்கிறார்கள். இது பற்றி என் நண்பரும் போதகருமான போல் கடந்த வருடத்தில் முதல் தடவையாகக் கேட்டார். அந்த வேளையில் அதுபற்றிய எண்ணமே என் மனதில் இல்லாதிருந்ததால் அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டேன். அத்தோடு வாசிப்பதைப் பயிற்சியாகக் கொண்டிராத சமுதாயம் எப்படி எழுதப் போகிறது என்ற எண்ணமும் என்னை இந்த விஷயத்தில் கவனம் செலுத்துவதைத் தடுத்தது.
சமீபத்தில் மலேசியாவில் வாழும் ஒரு விசுவாசி இதுபற்றி மிகவும் வற்புறுத்திக் கேட்டதால் (விடமாட்டேன் என்று ஒரே பிடியாய் பிடித்துக்கொண்டதால்!) கட்டுரை எழுதுவது எப்படி என்று வாட்செப்பில் ஐந்து ஆடியோ செய்திகளை அனுப்பிவைத்தேன். பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் எனக்கு எழுதி அனுப்புவதற்கு நேரமிருக்கவில்லை. அது தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றுகூறி, இதை நீங்கள் எழுத்தில் நிச்சயம் எல்லோருக்கும் பயன்படும்படியாகத் தரவேண்டும் என்று வற்புறுத்தியதால், சரி, எழுதிவிடுவோம் என்று எழுத ஆரம்பித்தேன். உண்மையில் நான் ஆடியோ செய்தியாக சுருக்கமாக இதை அனுப்பியபோது என் மனதிலேயே இதை எழுத்தில் வடித்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றத்தான் செய்தது.
கட்டுரைகள், கதைகள், நாவல்கள் எழுதுவது பற்றியெல்லாம் தமிழில் நூல்கள் இல்லாமலில்லை. ஆனால் என்ன, ஆங்கிலத்தில் இருப்பதுபோன்ற தரமானதாக இல்லாததொன்றுதான் குறை. ஆங்கிலத்தில் அத்தகைய சிறப்பான நூல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் மேலைத்தேய ஆங்கிலக் கல்வியின் தரம் அப்படிப்பட்டதாக உயர்நிலையில் இருப்பதுதான். சிறுவயதிலேயே வாசிப்பதும் எழுதுவதும் பிள்ளைகளின் அடிப்படைத் தேவையாக அந்தச் சமூகம் கருதுவதால் கட்டுரை எழுதுவதற்கு பள்ளிக்காலத்திலேயே அவர்களுக்குக் கற்றுக்கொடுத்துவிடுகிறார்கள். தாய்மொழிப்பயிற்சிக்கு அவர்கள் அத்தனை முக்கியத்துவம் தருவதால் எழுதுவது பற்றிய அநேக சிறப்பான நூல்கள் அவர்கள் மொழியில் இருக்கின்றன. அத்தகைய தரமான கல்வி நம்மினத்தில் இல்லாதது பெருங்குறைதான். எழுதுவது ஒரு கலைதான்; அது ஒரு ஈவாகவும் இருக்கிறது. இருந்தபோதும் தங்களுடைய சொந்த மொழியில் முறையாக எழுதுவது எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய அவசியமான ஒரு பயிற்சி.
1970களில் வாலிபனாக நான் இருந்த காலத்தில் எழுத்தார்வம் என்னில் அதிகரித்தபோது அது பற்றி வாசித்து அறிந்துகொள்ளுவதற்காக நூல்களைத் தேடி அலைந்திருக்கிறேன். அந்தக் காலத்தில் பேராசியர் மு. வரதராஜன் முக்கிய எழுத்தாளராக இருந¢தார். பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரிந்து வந்த அவர் கட்டுரை எழுதுவது, கடிதங்கள் எழுதுவது பற்றி நூல்கள் எழுதியிருக்கிறார். அவற்றால் ஈர்க்கப்பட்டு அவற்றை வாங்கிப் பயன்படுத்தியிருக்கிறேன். நம்மினத்தில் கடிதங்கள் எழுதுவதெப்படி என்றுகூட ஒருவரும் சொல்லித் தருவதில்லை. மேலைநாடுகளில் அது ஒருகலையாகவே கருதப்படுகிறது. மு.வ.வின் கடிதத் தொகுப்பு நூல் அன்று எனக்கு உதவியிருக்கிறது. இன்று அந்தவகையில் தமிழில் என்ன இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. அடுத்த தடவை சென்னை நியூ லேண்ட் புத்தகக் கடைக்குப் போகிறபோது சீனிவாசகன் அவர்களைக் கேட்டுப் பார்க்க வேண்டும். சமீபத்தில் ஜெயமோகன் எழுதியிருந்த ‘கட்டுரை எழுதுவது எப்படி’ என்ற சிறு ஆக்கத்தை வாசித்தேன். அதை எப்படி எழுத வேண்டும் என்று 15 சிறுகுறிப்புகள் தந்திருந்தார்.
நான் இங்கே விளக்கப்போவது வெறும் கட்டுரை எழுதுவது எப்படி என்பதையல்ல; ஆவிக்குரிய கட்டுரைகளை எழுதுவது எப்படி என்பதைத்தான். பொதுவாக எந்தக் கட்டுரையை எழுதுவதற்கும் பயன்படுத்த வேண்டிய அம்சங்களை இதிலும் பயன்படுத்துவது அவசியம் என்றாலும் ஆவிக்குரிய கட்டுரைகளை எழுதுவதற்கான சில விசேஷ இலக்கணங்கள் இருக்கின்றன. அவை வேறுவிதமான கட்டுரைகளை எழுதுவதற்கு அவசியமானவையல்ல. இதை எழுதுகிறபோது ஒன்றை நான் சொல்லிவிடவேண்டும். என்னுடைய எழுதும் அனுபவத்தின் அடிப்படையிலும், நான் மற்றவர்களுடைய எழுத்துக்களைக் கவனித்திருக்கும் அனுபவத்தின் அடிப்படையிலுமே இதைப் பெரும்பாலும் எழுதியிருக்கிறேன். முக்கியமாக இதுவரை எழுதுகின்ற அனுபவம் இல்லாதவர்களை மனதில் வைத்து இதை எழுதியிருக்கிறேன். ஆங்கிலத்தில் சொல்லுவதானால் இந்த ஆக்கத்தை, Writing for Dummies என்று சொல்லலாம்.
என்னுடைய போதக ஊழிய அனுபவத்தில் கவனித்திருக்கின்ற ஒன்று, நம்மினத்திலுள்ள அநேக போதகர்களுக்கும், ஊழியப்பணி புரிகிறவர்களுக்கும் சரியாக எழுதத் தெரியவில்லை என்பதுதான். இது கவலையளிக்கும் அளவுக்கு பிரச்சனையாக இருக்கிறது. பெரும்பாலான போதகர்கள் வாழ்க்கையிலேயே எழுதிவைத்துப் பிரசங்கிக்க வேண்டும் என்பதைக் காதால் கேட்டிருக்கவில்லை. அப்படிப்பட்ட போதனைகளை அவர்கள் இறையியல் கல்லூரிகளில் பெற்றிருக்கவில்லை. பெரும்பாலானோர், அரைத் தாள் குறிப்பு மட்டுமே வைத்திருப்பார்கள், அநேகர் அதைக்கூட கையில் வைத்திருப்பதில்லை. இது எதைச் சுட்டுகிறது என்றால் அவர்களுக்கு கல்லூரிப்படிப்புக் காலத்திலிருந்தே (கல்லூரிக்குப் போயிருந்தால்) எழுதுவது பற்றிய அனுபவமே இல்லாதிருந்திருக்கிறது என்பதுதான். நான் போதகப் பயிற்சி அளிக்கும் பணியை 25 வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறேன். இதற்காக குறிப்பிட்டவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்பான போதனைகளை அளிக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. அப்படியாவது தமிழினத்தில் ஞானமும், பக்திவிருத்தியுமுள்ள நல்ல போதகர்கள் உருவாக வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. இந்த நோக்கத்திற்குப் பெருந்தடையாக முக்கியமானதொன்றிருந்தது.
அப்படி நான் தெரிவுசெய்து போதனை அளித்தவர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதைப் பற்றி விளக்கமாக ஒரு கட்டுரையை எழுதித்தர பெரிதும் தயங்கினார்கள். தங்களுடைய சொந்த மொழியில் அதைச் செய்வதற்கு அவர்களுக்கு மனதிருக்கவில்லை. ஒருவர் செய்யவே முடியாது என்று சொல்லிவிட்டார். அது எனக்கு அதிர்ச்சி தந்தது. இதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் மிகமுக்கியமான காரணம் அவர்களுக்கு எழுதும் பழக்கம் அறவே இருக்கவில்லை என்பதுதான். அதுவே எழுதவேண்டும் என்ற நிலை வந்தபோது அவர்களுக்கு அது அதிர்ச்சி தருவதாக இருந்திருக்கிறது. ஆகவே, எங்கே தொடர்ந்து வராமல் போய்விடுவார்களோ என்ற பயத்தில் அவர்களை எழுதவைக்கும் நோக்கத்தை மிகவும் கவலையோடு நான் விட்டுவிட நேர்ந்தது. நம்மினத்தில் எழுதுவதில் இந்தளவுக்குப் பிரச்சனை இருக்கும்போது அறிவும், ஞானமும் கொண்டு, சிந்தித்துக் காரணகாரியங்களை ஆராய்ந்து முடிவெடுக்கும், போதித்து விளக்கும் படித்த போதகர்களை உருவாக்குவது எப்படி?
வாசிக்கும், எழுதும் கலை அறியாத சமூகம் விருத்தியடைவதென்பது மிகவும் கடினமானது. அவை சமுதாயத்தில் குறைவாக இருப்பதை உணர்ந்திருக்கும் தற்கால எழுத்தாளரான ஜெயமோகன் இன்றைய இளைஞர்களைத் திரட்டி சந்திப்புகளை ஏற்படுத்தி வாசிக்கவும், சிந்திக்கவும், பேசவும், எழுதவும் அவர்களைத் தூண்டி வருகிறார். இது கர்த்தரை அறியாதவர்கள் மத்தியில் இன்று நடக்கிறது. ஆவிக்குரியவர்கள் மத்தியில் இது ஏற்பட்டால் எத்தனை சந்தோஷமாக இருக்கும். நம்மினத்து கிறிஸ்தவர்கள் சத்தான கிறிஸ்தவ சம்பாஷனையில் ஈடுபடும் அளவுக்கு விஷயம் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் தரமான வாசிப்புப் பழக்கமும், எழுதும் வழக்கமும் இல்லாததுதான்.
கட்டுரை எழுதுவது எப்படி? என்பதுதான் இந்த ஆக்கத்தின் கருப்பொருள். இதுவரை எதையும் எழுதியிராதவர்களை இனியாவது எழுத வைக்க இந்த ஆக்கம் பயன்படுமானால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். இதை எங்கே எதிலிருந்து ஆரம்பிப்பது என்று நினைக்கும்போது என் மனக்கண்களில் அநேக அம்சங்கள் படமாக விரிகின்றன. முதலில் கட்டுரை என்பது என்ன என்று விளக்கிவிடுகிறேனே.
கட்டுரை என்பது என்ன?
கட்டுரை உரைநடை வகையைச் சேர்ந்தது. அதாவது இது பாடலோ, கவிதையோ அல்ல; அவை இன்னொரு இலக்கியவகை. உரைநடைக் கட்டுரையில் பலவகைகள் உள்ளன. பொதுவான கட்டுரை, அழகியல் கட்டுரை, முன்னுரைக் கட்டுரை, ஆய்வுக்கட்டுரை, விளக்கவுரைக் கட்டுரை, பிரசங்கக் கட்டுரை என்று இதைப் பலவகையாகப் பிரிக்கலாம். பொதுவான கட்டுரை என்பது எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் எழுதப்படுவது. அதைக் கதைபோலக்கூட எழுதலாம். அத்தகைய கட்டுரைக்கு அதிக ஆராய்ச்சிகள் அவசியமில்லை. மேற்கோள்கள் தேவையில்லை. வாசிப்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அழகான மொழிநடையில் அந்தக் கட்டுரை எழுதப்படலாம். பொதுவான கட்டுரை சொல்லவருகின்ற விஷயத்தை மட்டும் விளக்குகிறதாக இருக்கும். கருப்பொருளை நளின நடையில் ஈர்க்கும் விதத்தில் சொல்லுவது மட்டுமே அதன் நோக்கம். என் வாழ்க்கையில் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்து வந்த காலத்தில் எனக்கு பேராசிரியர் மு. வவின் கட்டுரைகள் பிடித்திருந்தன. அவருடைய கட்டுரைகள் எளிமையானவை. நளினமான அழகியல் நடைக்கு அவர் அதிகம் இடம் கொடுக்காது விட்டாலும் விஷயத்தை எளிமையாகச் சொல்லி வந்திருக்கிறார்.
அதற்கு மேல் என்னை மிகவும் ஈர்த்த கட்டுரைகளை எழுதியவர் ஜெயகாந்தன். பொதுவான கட்டுரைகளை சுருக்கமாக அழகு தமிழில், நெஞ்சில் ஆணிவைத்து அடிப்பது போல் எழுதும் கலையில் தேர்ந்தவர் ஜெயகாந்தன், என்னைப் பொறுத்தவரையில் தன்னுடைய கதைகளுக்கு முன்னுரை சொல்லும் அவருடைய பாணி தனித்துவமானது. சிறிதளவு வார்த்தைகளைப் பயன்படுத்தி சிலம்பம் விளையாடுவதில் அவர் மன்னன். அவருடைய கட்டுரைகளில் கற்பனையும், அழுத்தமும், விஷய ஞானமும் இருக்கும். கச்சிதமாக எழுதுவார்; கணீரென்று இருக்கும் அவருடைய வசனங்களும் வார்த்தைகளும். அவருடைய கதைகளுக்குப் பிறகு கட்டுரைகள் எதையும் நான் விட்டுவைத்ததில்லை. அவருடைய கட்டுரைகளின் தலைப்பு, கதைகளின் தலைப்பைப் போன்றே அலாதியானவை. தலைப்பே வாசிக்கிறவனைத் தொடர்ந்து வாசிக்க வைத்துவிடும். சிலவேளைகளில் அவருடைய தலைப்பு ஒன்றும் விஷேசமானதாக இருக்காது. இருந்தாலும் எளிமையான அவருடைய தலைப்பே சம்மட்டியால் அடித்ததுபோல் இருக்கும். ஜெயகாந்தன் புகழ்பாடுவதற்காக நான் இத்தனையையும் எழுதவில்லை. அவருடைய ஒரு பக்கக் கட்டுரைகளை அச்சிடுவதற்காக அவருக்குப் பின்னால் அலைந்து திரிந்திருக்கும் பிரபலமான பத்திரிகைகள் இருந்திருக்கின்றன. அவருடைய எழுத்துக்களில் இருந்து கட்டுரை எழுதக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் மறுக்கமுடியாது.
ஆய்வுக்கட்டுரை அதற்கு மாறானது. ஆய்வுக்கட்டுரைகள் வசீகரிக்கும் வார்த்தைகளையும், வசனங்களையும் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை: அவையல்ல அதற்கு முதன்மையானவை. ஆய்வுக் கட்டுரைகள் ஏதாவதொரு விஷயம் சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஒரு கருப்பொருளை முன்வைத்து அதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை முன்வைக்கும். எதிர்மறையான கருத்துக்களையும் தெரிவிக்கும். ஆய்வுக்கட்டுரையில் விஷய ஞானமே முக்கியமானது. கருப்பொருள் உறுதியானதாகவும், ஆதாரங்கள் கணீரென்று வக்கீலின் வாதங்களைப் போலிருக்கவேண்டும். ஆய்வுக் கட்டுரைகளில் மேற்கோள்கள் பயன்படுத்தப்படலாம்; அளவோடு சோற்றில் உப்பு சேர்ப்பதைப்போல. எல்லாக் கட்டுரைகளுக்கும் மேற்கோள்கள் உப்பு போலத் தேவைப்பட்டாலும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு அவை மிக அவசியம். ஒரு கட்டுரையில் தன்மையைப் பொறுத்தளவில் மேற்கோள்கள் அதிகமாக இல்லாமலிருப்பின் மேற்கோள்களை அவற்றின் உடமையாளர்களின் பெயரோடு கட்டுரையிலேயே கொடுக்கலாம்; இல்லாவிட்டால் அடிக்குறிப்பாகக் கட்டுரையின் இறுதியில் தரலாம். இந்த முறையில் மேற்கோள்களை விளக்குவது ஆய்வுக்கட்டுரைக்கு அடிப்படையில் அவசியம்.
விளக்கவுரைக் கட்டுரைகள் என்று நான் கூறுவது வேத வியாக்கியானக் கட்டுரைகளையே. வேத வசனங்களுக்கான தெளிவான விளக்கங்களை அளிக்கும் உரைநடைக் கட்டுரைகள் அவை. கட்டுரைக்கான பல்வேறு அம்சங்களை அவையும் கொண்டிருந்தபோதும் வசீகரிக்கும் வார்த்தைகளும், வசனங்களும் இவற்றிற்கு அவசியமானவையல்ல. எடுத்துக்கொண்ட பொருளைத் தெளிவான ஆதாரங்களோடு விளக்கும் கட்டுரைகள் இவை. ஆய்வுக்கட்டுரைகளைப்போல இவையும் தெளிவானதாக இருக்க வேண்டும். என்னைப்பொறுத்தவரையில் இது எளிமையாக வாசிக்கிறவர்கள் புரிந்துகொள்ளும்படி இருக்கவேண்டியது அவசியம்.
கட்டுரை எழுத அவசியமான ஆரம்ப அம்சங்கள்
(1) மொழித் திறமை – கட்டுரை எழுத மொழித் திறமை அவசியம் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. சிந்தனைகளை அடுக்கடுக்காக எழுத்தில் வடிக்க மொழி அவசியம். தமிழர்களாக இருந்தும் தமிழில் தேவையான அளவு பரிச்சயமும் பாண்டித்தியமும் இல்லாதவர்களாக இன்று தமிழர்கள் இருந்துவருகிறார்கள். மலேசியா போன்ற நாடுகளில் பொதுவாக தமிழர்களுக்கு பேச்சுமொழி மட்டுமே வருகிறது. அவர்கள் மலே மொழியில் கல்வி கற்பதால் தமிழில் எழுத, வாசிக்க பெரும்பாலானோருக்கு இயலவில்லை. அது பெரிய பிரச்சனைதான். தமிழகத்திலும்கூட ஆரம்பக் கல்வியைத் தமிழில் அடைந்து பல்கலைக்கழகப் பாடங்களைத் திடீரென்று ஆங்கிலத்தில் கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதால் இரண்டு மொழியிலும் முன்னேற்றமில்லாமல் இருப்பவர்கள் தொகை எண்ணில் அடங்காது. ஆரம்பக் கல்வி பெறும்போது அவர்களுக்குத் தரமாக வாசிக்கவும், எழுதவும் பயிற்சியும் அளிப்பதில்லை. நம்மினத்தில் இன்றைக்கு நன்றாக வாசிக்கவும், எழுதவும் முடிந்தவர்கள் சொந்த உழைப்பாலேயே முன்னேறியிருக்கிறார்கள்.
எந்தக் கட்டுரை எழுதுவதற்கும் வார்த்தை வளமும், இலக்கண அறிவும், இலக்கியப் பரிச்சயமும், தனித்துவமான மொழிநடையும் அவசியம். இதெல்லாம் இல்லாமல் கட்டுரை எழுதுவதென்பது இயலாத காரியம். எழுதத் துடிப்பிருந்தும் தமிழில் வாசிக்கும், எழுதும் பழக்கமில்லாதவர்கள் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும். முடியாததென்று ஒன்றில்லை. தமிழர்களாக இருப்பதால் நமக்குத் தமிழ் தெரியும் என்று நினைத்துக் கனவுலகில் இருந்து வருகிறார்கள் நம்மில் அநேகர். வாசியுங்கள்! வாசிப்பு வார்த்தைகளைக் கற்றுக்கொடுக்கும். அத்தோடு எழுத்தாளர்கள் எவ்வாறு வார்த்தைகளைக் கையாண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனித்து வாசிக்கவேண்டும். நல்ல தமிழகராதியைப் பயன்படுத்தியும் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளலாம். தமிழில் வார்த்தைகள் அநேகம்; அதுவும் ஒரே விஷயத்தை விளக்கும் பல வார்த்தைகள் உண்டு. சந்தர்ப்பத்திற்கேற்றவாறு வார்த்தைகளைத் தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டும். வார்த்தைப் பரிச்சயம் இல்லாமல் நல்ல கட்டுரை எழுதமுடியாது.
இலக்கண அறிவு – எழுத்தில் எப்போதும் இலக்கணச் சுத்தம் இருக்கவேண்டும். ஒரு காலத்தில் கல்லூரிக்கு வெளியில் இலக்கணப் பண்டிதரொருவரிடமிருந்து டியூசன் மூலம் நான் இலக்கணத்தைக் கற்றிருக்கிறேன். நான்கு வரி எழுதினாலும் இலக்கணச் சுத்தத்தோடு எழுதவேண்டும். இன்று தமிழிலக்கணத்தைக் கற்றுக்கொள்ள இலகுவான தமிழில் எழுதப்பட்ட அநேக இலக்கண நூல்கள் இருக்கின்றன. இதை நான் சொல்லுவதற்குக் காரணம் போதகப் பணியில் இருக்கின்ற அநேகருக்கு இலக்கணச் சுத்தத்தோடு ஒரு பத்திகூட இன்று எழுதத் தெரியாமல் இருப்பதால்தான். இளைய தலைமுறையினர் இந்த அவலங்களையெல்லாம் சிந்தித்துப் பார்த்து தங்களுடைய எதிர்கால முன்னேற்றத்திற்காகத் தமிழைக் கற்றுப் பயன்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.
இலக்கணத்தின் அவசியத்தைப்பற்றிப் பேசுகிறபோது வசன அமைப்புக்கும், எழுத்துக்கும் அவசியமான நிறுத்தக்குறியீடுகள் பற்றி விளக்காமல் இருக்கமுடியாது. பெரும்பாலும் எல்லோரும் அறிந்திருக்கும் உண்மை வசனத்தின் முடிவில் முற்றுப்புள்ளியிட வேண்டுமென்பது. ஆனால், வசனத்தில் எந்த இடத்தில் காற்புள்ளியைப் பயன்படுத்த வேண்டும், அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, உணர்ச்சிக்குறி, அடைப்புக்குறி போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். நிறுத்தக்குறிகள் பல்வேறு வகைப்படும். காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, உணர்ச்சிக்குறி, அடைப்புக் குறி, மேற்கோள் குறி, வினாக்குறி, எச்சக்குறி, ஒற்றை மேற்கோள் குறி, இரட்டை மேற்கோள் குறி, பிறை அடைப்பு, பகர அடைப்பு, சாய்கோடு, அடிக்கோடு ஆகியவையே நிறுத்தக் குறிகளாகும். இவையெல்லாம் வசனங்களின் மூலம் நாம் வெளிப்படுத்த முயல்கின்ற அழுத்தங்களையும், உணர்ச்சிகளையும் தெளிவாக வெளிக்கொணரத் துணை செய்கின்றன. ஆதியில் தமிழில் இத்தகைய குறியீடுகள் பயன்படுத்தப்படவில்லை. பனை ஓலைகளிலும், கல்வெட்டுகளிலும் காணப்படும் தமிழில் இவை இருக்கவில்லை. மேலைத்தேசத்தைச் சேர்ந்தவர்களே நிறுத்தக்குறியீடுகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுத் தந்திருக்கிறார்கள். இவற்றைப் பயன்படுத்தும்போது தமிழிலக்கணம் தவறிவிடாமல் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. தென் தமிழகத்தில் கிறிஸ்தவ பணிபுரிந்த புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களான ஜி யூ போப், கால்டுவெல் ஆகியோருக்கு நிறுத்தக் குறிகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்கிருந்திருக்கிறது. நிறுத்தக்குறிகள் அவசியமாக இருந்தபோதும் அவற்றைத் தவறுதலாக இடம்மாறிப் பயன்படுத்துவோமானால் எழுத்தில் நாம் சொல்ல வந்த விஷயமே மாறிவிடும்; அல்லது ஆபத்தில் கொண்டுபோய்விட்டுவிடும். உதாரணத்திற்கு, கீழ்வரும் வசனத்தைப் பாருங்கள்.
“கர்த்தரே எல்லாம் என்று நினைத்திருப்போருக்கு ஆபத்து ஒருநாளுமில்லை ஆசீர்வாதம் இவ்வுலகில்”
இதையே நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்தி பின்வருமாறு எழுதினால் எளிதில் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
“கர்த்தரே எல்லாம் என்று நினைத்திருப்போருக்கு ஆபத்து ஒருநாளுமில்லை! ஆசீர்வாதம் இவ்வுலகில்!”
இதையே நிறுத்தக்குறிகளைத் தவறாகப் பயன்படுத்திக் கீழ்வருமாறு எழுதினால் சொல்ல வந்த விஷயமே தலைகீழாக மாறிவிடுகிறது.
கர்த்தரே எல்லாம் என்று நினைத்திருப்போருக்கு ஆபத்து! ஒருநாளுமில்லை ஆசீர்வாதம், இவ்வுலகில்!
நிறுத்தக் குறிகள் ஒவ்வொன்றையும் எங்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று விளக்கமாகத் தருவது இந்த ஆக்கத்தில் முடியாத காரியம். அவை பற்றிய சிறு விளக்கத்தை மட்டும் தருகிறேன். தமிழில் இருக்கும் நாம் பயன்படுத்திக்கொள்ள நூல்களைப் பெற்று வாசித்து இவற்றைப் பயன்படுத்தும் முறையை அறிந்துகொள்ளப் பாருங்கள். உதாரணத்திற்கு என்னிடமிருக்கும் இரண்டு நூல்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.
- நல்ல தமிழெழுத வேண்டுமா? – அ கி பரந்தாமனார்
- தவறின்றித் தமிழ் எழுத – மருதூர் அரங்கராசன்
காற்புள்ளி இடுதல்
- சொற்களைத் தனித்தனியாகவோ அடுக்கடுக்காகவோ பிரிக்கும்போது காற்புள்ளி இடவேண்டும்.
உதாரணம்:
தனித்தனியாகப் பிரித்தல்: கல்வி, மருத்துவவசதி, பாதுகாப்பு ஆகியவை சமுதாயத்துக்குத் தேவை.
அடுக்கு அடுக்காகப் பிரித்தல்: நட்புக்குத் தாவீதும் சாலமோனும், இயேசுவும் யோவானும், பவுலும் தீமோத்தேயுவும் நல்ல எடுத்துக்காட்டுகள்.
சொற்றொடரில், எழுவாய் ஒன்றாக நின்று, பல பயனிலைகளைப் பெற்றுவரும்போது, இறுதிப்பயனிலை தவிர ஏனையவற்றிற்கு காற்புள்ளி இடவேண்டும்.
உதாரணம்: கணவன் கொலை செய்யப்பட்டான் என்று கேட்ட கண்ணகி பொங்கி எழுந்தாள், விம்மினாள், அரற்றினாள், ஏங்கினாள், கலங்கினாள், மயங்கினாள், விழுந்தாள்.
பொருள்மயக்கம் நீக்கித் தெளிவுபடுத்த வேண்டிய இடத்தில் காற்புள்ளி இடவேண்டும்.
உதாரணம்: அண்ணன், தம்பி வீட்டுக்குச் சென்றதால் நான் பார்க்கவில்லை.
‘கல்வி, அறமும் பொருளும் இன்பமும் வீடும் நல்கும்’ -என்னும் சொற்றொடரில் எண்ணும்மைகளுக்குப் பின் காற்புள்ளி இடுதல் தவறு.
பெரிய சொற்றொடர்கள் இணைக்கப்படும்பொழுது எண்ணும்மை இருப்பினும் தெளிவுக்காகக் காற்புள்ளி இடவேண்டும்.
உதாரணம்: குறிஞ்சிக் காட்சிகளைக் கூறுவதில் வல்லவராகிய கபிலரும், வரலாற்றுக் குறிப்புகளை வழங்குவதில் சிறந்தவராகிய பரணரும், பத்துப்பாட்டில் இரண்டு பாடல்களை இயற்றியவராகிய நக்கீரரும் கடைக்கழகப் புலவர்கள்.
‘உம்’ இடைச்சொற்கள் நெருங்கி வரும் இடங்களில் காற்புள்ளி இடவேண்டியதில்லை. அவை ஒன்றுக்கொன்று தொலைவில் அமைந்திருக்குமாயின் காற்புள்ளி இடவேண்டும் என்பதை மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன.
அரைப்புள்ளி
ஒரே எழுவாயில் பல பயனிலைகள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும், எழுவாய்க்குரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிர்மறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் அரைப்புள்ளி பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணம்:
பலர் வயிற்றளவை மீறி உண்பர்; பசியாலும் உண்பர்; கிடைத்தபோதெல்லாம் உண்பர்; நாவிற்காக உண்பர்; வயிறு கெட்டும் உண்பர்.
கண்ணன் தேர்வு எழுதினான்; ஆனால் அதில் தேரவில்லை.
காரணம் காட்டும் ஏனென்றால் என்பதற்கு முன் அரைப்புள்ளி இடவேண்டும்.
உதாரணம்: நான் இன்று பேசமாட்டேன்; ஏனென்றால், என் தொண்டை நோயுற்றிருக்கிறது.
முக்காற்புள்ளி
உள் தலைப்பு அமைக்கும் போதும், ஒருவர் கூற்றை விளக்குமிடத்தும், சொற்றொடரில் கூறியதொன்றை விரித்துக் கூறும்போதும் முக்காற்புள்ளி இடப்படுகின்றது.
உதாரணம்:
வாழ்வு இருவிதமானது : ஒன்று உயிர் வாழ்வு; மற்றொன்று உடல் வாழ்வு.
பொருள் கூறுக: களிறு, பிணிமுகம்.
முற்றுப்புள்ளி
சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி இடவேண்டும்.
உதாரணம்: நீ உள்ளே வா.
சுருக்கச் சொற்களுக்கும் எழுத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி இட வேண்டும். எடுத்துக்காட்டு :(அ) திரு. மணி. திருநாவுக்கரசு. (ஆ) திரு. திரு.வி.க.
பட்டப் பெயர்களுக்குப்பின் முற்றுப்புள்ளி இடவேண்டும்.
உதாரணம்: திரு. இ. செழியன், க.மு.
வினாக்குறி
வினாச் சொற்றொடர்களின் இறுதியில் இடப்படுகின்றது.
உதாரணம்: பாடுபட்டால் பயன் இல்லாமல் போகுமா?
சொற்றொடருக்கு நடுவில் கேள்விக்குறி வரக்கூடாது. ‘நீங்கள் யார் என்று அவர் கேட்டார்’ என்னும் சொற்றொடரில் யார் என்ற சொல்லுக்குப் பின்னால் வினாக்குறி கண்டிப்பாக இருக்கக்கூடாது.
உணர்ச்சிக்குறி
வியத்தல், வரவேற்றல், வாழ்த்தல், வைதலின்போது இது பயன்படுத்தப்படுகின்றது. நம்ப முடியாது என்பதையும் இகழ்ச்சியுடையது என்பதையும் காட்டுமிடங்களிலும் உணர்ச்சிக்குறியிடுதல் வேண்டும்.
உதாரணம்: (அ) அந்தோ! பல பழந்தமிழ் நூல்கள் அழிந்தனவே. (ஆ) வாழி! வாழி! தமிழ்நாடு வாழியவே!
கண்டவாறு உணர்ச்சிக்குறியை !, !!, !!! இவ்வாறெல்லாம் இடுதல் விரும்பத்தக்கதல்ல.
ஒற்றை மேற்கோள் குறி
சிறப்புக் காரணம் கருதி ஏதேனும் ஒரு சொல்லை அல்லது தொடரைக் குறித்துக் காட்டுகின்ற இடங்களிலும், உரையாடலுக்குள் இடம்பெறும் மற்றோர் உரையாடலைக் குறிக்கவும் ஒற்றை மேற்கோள் இடப்படுகின்றது.
உதாரணம்: பரதன், “நான் என் செய்வேன்! அண்ணன், ‘நீபோ. நான் பதினான்கு ஆண்டுகள் கழித்தே வருவேன்’ என்று சொன்னார். அதனால் வந்துவிட்டேன்”
பிரித்துக் காட்டுதற்கும், பிறருடையது என்று அறிவித்தற்கும், பழமொழிகளைத் தெரிவித்தற்கும் ஒற்றை மேற்கோள் பயன்படுத்தப் படுகின்றது.
உதாரணம்: (அ) ‘வு’, ‘வூ’, ‘வொ’, ‘வோ’ என்னும் எழுத்துக்கள் சொல்லுக்கு முதலில் வரா. (ஆ) ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது பழமொழி.
இரட்டை மேற்கோள் குறி
தன் கூற்றை வலியுறுத்தத் தன்னிலும் சிறந்தோர் கூறியவற்றை எடுத்தாளுகின்ற இடங்களிலும், பிறர் உரையாடலை அப்படியே கூறுமிடங்களிலும் இரட்டை மேற்கோள் இடவேண்டும்.
உதாரணம்: (அ) “அறம்தலை நின்றார்க்கு இல்லை அழிவு” என்றார் கம்பர். (ஆ) நெடுஞ்செழியன், “இப்போரில் நான் வெல்லாமற் போனால் என் குடிகள் தூற்றும் கொடுங்கோலனாவேனாக!” என்று சூளுரைத்தான்.
விடுகுறி (அல்லது) எச்சக்குறி
சில எழுத்துக்களை அல்லது எண்களை விட்டுவிடும் போது ’ இக் குறியிடுக.
உதாரணம்: 26-11-’54 என்பதில் 1954இல் உள்ள 19 விடப்பட்டது காண்க.
மேற்படிக்குறி
மேற்குறித்ததே இஃது என்று காட்டுவது மேற்படிக்குறி.
உதாரணம்: ஆடுகொடி – வினைத்தொகை கடிநாய் – ” ”
சிறுகோடு
ஒன்றைச் சேர்ப்பதைக் குறித்ததற்கும் விரித்துக் கூறுபவற்றைத் தொகுத்துக் கூறுமிடத்தும் சிறுகோடு இடப்படும்.
உதாரணம்: நண்பர், சுற்றத்தார், ஊரார் -எல்லாரும் என்னைக் கைவிட்டார்.
தொடர் விடுநிலைக் குறி
வேண்டாததை விடும்போது . . . இக் குறியிடப்படுகிறது.
உதாரணம்: அருமை மாணாக்கர்களே, உங்கள் படிப்பைக் கவனியுங்கள்! உங்கள் வீட்டைக் கவனியுங்கள்! உங்கள் நாட்டை நோக்குங்கள்! . . . குற்றங்குறை இருப்பின் மன்னிப்பீர்களாக!
இடைப்பிறவரல் வைப்புக் குறி
இக் குறி ஒரு சிறு சொற்றொடரின் முன்னும் பின்னும் உள்ள சிறு கோடுகளைக் குறிக்கும். கூறுகின்ற சொற்றொடரின் நடுவில் இலக்கண முறையில் தொடர்பில்லாது, இடைப்பிறவரலாக வரும் தனிச் சொற்றொடரைப் பிரிக்க இக்குறி இடப்படும்.
உதாரணம்: இறுதியாக – சுருங்கக் கூறுமிடத்து – நாங்கள் வீட்டுக்கே திரும்பி வந்தோம்.
பிறை அடைப்பு
ஒன்றனை விளக்க மற்றொரு சொல்லைப் பிறை அடைப்புக்குள் குறிப்பது உண்டு.
உதாரணம்: பாரதியார் நுழைவுத்தேர்வில் (entrance examination) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
பிறை அடைப்பு சொற்றொடரின் இறுதியில் வந்தால் பிறை அடைப்புக்குப் பிறகு புள்ளி வைக்க வேண்டும்.
உதாரணம்: குற்றங்கள் மூன்றாவன : இணைவிழைச்சு (காமம்), வெகுளி (குரோதம்), மயக்கம் (மோகம்).
முழுச் சொற்றொடரும் பிறை அடைப்புக்குள் இருப்பின் முற்றுப் புள்ளியையும் பிறைஅடைப்புக்குள் இட வேண்டும்.
உதாரணம்: நான் முதன்முதலாகச் சென்ற வெளியூர் திருப்பெருந் துறையாகும். (அது இக்காலத்தில் ஆவுடையார் கோயில் என்று வழங்கப் படுகின்றது.)
பிறை அடைப்புக்குள் மேலும் பிறைஅடைப்பு தேவைப்பட்டால், பகர அடைப்பு இடவேண்டாம்; பிறை அடைப்பையே பயன்படுத்தலாம்.
பகர அடைப்பு
பிறருடைய உரைகளை மேற்கோளுக்காக எடுத்தாளும் போது, எழுதுகிறவர் இடையிடையே தம் கருத்தைத்தெரிவிக்கத் தம் கருத்தைப் பகர அடைப்பிற்குள் எழுதவேண்டும்.
உதாரணம்: “நரசிம்ம வர்மனின் படைத்தலைவர் விக்கிரம கேசரி [பிற்காலத்தில் பரஞ்சோதி] இரண்டாம் புலிகேசியை வெற்றிகொண்டு திரும்பும்போது பிள்ளையார் சிலையைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தார்”.
சாய் கோடு
இரண்டில் ஒன்றை அல்லது பலவற்றில் ஒன்றைத்தேர்வு செய்யக்கூடிய இடங்களில் சாய் கோடு இடப்படுகிறது.
உதாரணம்: பால் : ஆண்/பெண்
தொகையைக் குறிக்கும் எண்ணை அடுத்து, இருசிறு படுக்கைக் கோடுகளுடன் இணைத்து இடப்படுகிறது.
உதாரணம்: ரூபாய் 5000/=
அடிக்கோடு
முதன்மையான ஒன்றைக் கவனத்தை ஈர்க்குமாறு தருவதற்கு அடிக்கோடு இடப்படுகின்றது.
உதாரணம்: ஒப்போலை அளிக்க வருவோர் கண்டிப்பாக அடையாள அட்டை எடுத்துவர வேண்டும்.
இவற்றைத் தவிர, நூலில் அடிக்குறிப்பைப் பார்க்குமாறு கூறும் சில குறியீடுகளும் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுள் சில குறியிடுகளாவன:
உடுக்குறி *
குத்துவாட் குறி +
பிரிவுக்குறி $
சதுரக்குறி #
இணை குறி ‖
[மேல்வரும் நிறுத்தக்குறிகளையும் அவற்றிற்கான விளக்கங்களையும் இணையத்தில் தமிழ்நம்பியால் தரப்பட்டிருக்கும் விளக்கங்களைப் பயன்படுத்தி ஒருசில மாற்றங்களுடன் தந்திருக்கிறேன்.]
இலக்கியப் பரிச்சயம்
இலக்கண அறிவோடு இலக்கியப் பரிச்சயமும் அவசியம். ஒரு மோட்டார் வண்டிக்கு இயந்திரம் போல் இலக்கணம் என்றால், அதன் வடிவமைப்பு போல் இலக்கியம் இருக்கிறது. மொழிக்கு அழகூட்டுவது அதன் இலக்கியம். இலக்கணமா, இலக்கியமா முதலில் வந்தது என்ற கேள்வி உண்டு. உண்மையில் இலக்கியத்திற்குப் பிறகுதான் இலக்கணம் வந்திருக்கிறது. இந்திய மொழிகள் பலவற்றில் ஆரம்பத்தில் இலக்கணமே இருக்கவில்லை தெரியுமா? வில்லியம் கேரியே முதன் முதல் சில இந்திய மொழிகளில் இலக்கண நூல்களை அமைத்துக்கொடுத்திருக்கிறார்.
இலக்கியப் பரிச்சயமிருக்கிறவர்களுடைய எழுத்தில் சுவையும், அழகும் இருக்கும். எழுதுகிற கட்டுரை உப்புச் சப்பில்லாமல் விஷயஞானத்தை மட்டும் கொண்டிருந்தால் அது வாசகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தாது. எழுத்தில் நளினத்துக்கு அவசியமில்லாமல் விஷய ஞானத்தை மட்டுமே கொண்டிருக்க வேண்டிய ஆய்வுக்கட்டுரைகள் நிச்சயம் இருக்கின்றன. உதாரணத்திற்கு, ஒரு விஞ்ஞான ஆய்வுக்கட்டுரைக்கு இலக்கிய அம்சங்கள் அவசியமில்லை. ஆனால், எல்லாக் கட்டுரைகளும் அந்தவிதத்தில் அமையவேண்டியதில்லை. எழுத்தில் விஷயமும், அதை விளக்கும் நடையில் அழகும், நளினமும், சுவையும், எளிமையும் இருப்பது அவசியம். வாசகர்களை எழுத்து வாசிக்கத் தூண்ட வேண்டும். எழுத்தில் பழமொழிகள், உவமைகள், உருவகங்கள், சிலேடை போன்றவற்றைப் பயன்படுத்த இலக்கியப் பரிச்சயம் ஓரளவுக்கு அவசியம். அதுவே அதிகமாக இருந்தால் நல்ல எழுத்தாளனாக மாறலாம். நல்ல இலக்கிய நூல்களை வாசித்து இலக்கிய வளத்தை அடையப்பாருங்கள். எழுத வேண்டும் என்று துடிக்கிறவர்கள் இதையெல்லாம் முயற்சியெடுத்து அடையப் பார்ப்பது அவசியம்.
மொழிநடை
ஓரளவுக்கு வாசிக்கவும், எழுதவும் தெரிந்தவர்கள் தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். வாசிப்பு என் வாழ்க்கையில் இல்லாதிருந்திருக்குமானால் இன்று நான் தமிழில் எழுதுவதிலும், பேசுவதிலும் செய்துவருகின்ற ஒன்றையும் நினைத்தும் பார்த்திருக்க முடியாது. வாசிப்பைப் பற்றி நான் இந்தளவுக்கு விளக்குவதை வாசகர்கள் அலட்சியப்படுத்த வேண்டாம். என் அனுபவத்தை வைத்து அப்பட்டமாக மறுபடியும் சொல்லுகிறேன் – தமிழ் வாசிப்பு என் வாழ்க்கையில் இல்லாதிருந்திருக்குமானால் என்னால் எழுத்திலும், பேச்சிலும் தேர்ச்சியடைந்திருக்க வழியேயில்லை. நான் எழுதி வெளியிட்டிருக்கும் ‘சட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு’ என்ற நூலில் வாசிப்பின் அவசியத்தைத் தெளிவாகவே விளக்கியிருக்கிறேன். அதை வாங்கி வாசியுங்கள். முக்கியமாக நம்மினத்து கிறிஸ்தவர்களுக்காகவே அது எழுதப்பட்டிருக்கிறது.
கட்டுரை எழுதுவதற்கு தெளிவான அருவிபோல் ஓடும் மொழிநடை அவசியம். வாசிப்பே அதற்குத் தேவையான வார்த்தை வளத்தை அள்ளித் தருகிறது. வார்த்தைகளை வேறு வழியில் கற்றுக்கொள்ள முடியாது. தமிழ் அழகான, அருமையான பழமையான மொழி. அதன் வார்த்தை வளம் பெரியது. சிறுதொகை வார்த்தைகளை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு கட்டுரை எழுத முடியாது; கடிதம் வேண்டுமானால் எழுதலாம். தரமான கடிதத்தை எழுதக்கூட வார்த்தைகள் தேவை. வாசிப்பே அதிகளவு வார்த்தைகளைத் தெரிந்துகொள்ள ஒரே வழி. தகுந்த வார்த்தைப் பிரயோகம் கட்டுரைக்கு அழகு சேர்க்கும், வலிமை தரும், அழுத்தத்தை ஏற்படுத்தும். தமிழில் ஒரே விஷயத்திற்கு பல வார்த்தைகள் உண்டு. அதெல்லாம் தெரிந்துவைத்திருந்து எங்கே எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் அதிக வாசிப்பு நமக்குக் கற்றுத் தரும். நிச்சயம் நீங்கள் நல்ல நவீன தமிழகராதியொன்றை வாங்கி அடிக்கடி பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வெறும் சாதாரண அகராதியை வாங்காதீர்கள்; தரமானதொன்றைத் தேடிப்பெற்றுக்கொள்ளுங்கள். இன்று அநேக கலைச்சொற்கள் தமிழில் உருவாகியுள்ளன. அவற்றிலும் பரிச்சயம் இருக்கவேண்டும்.
ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி, ஜானகிராமன், மு.வ, அழகிரிசாமி போன்றோரே எனக்கு 1960-1970களில் எனக்குத் தமிழையும், வார்த்தைகளையும் கற்றுக்கொடுத்தனர். ஆகவே, வாசியுங்கள். சோம்பேரித்தனத்திற்கு முடிவு கட்டிவைத்துவிட்டு நல்ல நூல்களை வாங்கி வாசியுங்கள்.
பேசுவதிலும் எழுதுவதிலும், இன்று கிறிஸ்தவர்களிடம் கிறிஸ்தவரல்லாதவர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒரு வழக்கம் இருக்கிறது. அதாவது, வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும், 50 வருடங்களுக்கு முன்னிருந்த வடமொழித்தாக்கமுள்ள மொழியை அவர்கள் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தி வருகிறார்கள். நம்மினத்துக் கிறிஸ்தவர்கள், அதிலும் தமிழகத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் இது பழகிப்போனதொன்று. இது கிறிஸ்துவை அறியாத சமுதாயத்தைத் தூரத்தில் தள்ளிவைத்துவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் ஐம்பது வருடங்களுக்கு முன்னிருந்த, வேதத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கும் வடமொழித் தாக்கங்கொண்ட மொழிநடையையும், வார்த்தைகளையும் வேறு எங்கும் காணமுடியாது. 1970களின் ஆரம்பகாலம்வரை கிறிஸ்தவரல்லாதவர்கள் மத்தியில் அத்தகைய நடை பேச்சிலும் எழுத்திலும் இருந்திருக்கிறது. இன்றைக்கு அத்தகைய நடையை எவரும் பயன்படுத்துவதில்லை. வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழிநடையை தேவமொழியாகக் கருதிப் பயன்படுத்தி வரும் கொடுமையை இனியாவது விட்டுவிடவேண்டும். கிறிஸ்தவ சமுதாயத்தை இது ஒதுக்கிவைத்துவிடுகிறது. இந்த மொழிநடை கொச்சையானது மட்டுமல்லாமல் தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கின்ற ஒரு மொழிநடையல்ல. எழுத்தில் இன்று நிச்சயம் இதைப் பயன்படுத்தக்கூடாது.
எழுதுகிற ஒவ்வொருவரும் ஒரு மொழிநடையைத் தங்களுக்கென்று உருவாக்கிக்கொள்ள வேண்டும். இது தனித்துவமானது. இதைக் கற்றுக்கொடுக்க முடியாது. அதிகமான வாசிப்பும், எழுத்தும் ஒருவர் இதை அடையும்படிச் செய்யும். இது எழுதுகிறவரை அடையாளப்படுத்துவதோடு, அவருடைய எழுத்தின் தனித்தன்மையை வாசகர்கள் முன்வைக்கிறது. ஜெயகாந்தனின் எழுத்து நடை தனித்துவமானது. வார்த்தைகளைத் தெரிந்தெடுத்து சுருக்க வசனங்ளை அமைத்து, ஆணித்தரமான கருத்துக்களை முன்வைக்கும் அவருடைய எழுத்து. அது அவருடைய அதிகளவு வாசிப்பும், அவருக்கேயுரிய விருப்பவெறுப்புக்களும் அவரில் ஏற்படுத்தியிருந்தன. இதே போல்தான் அழகிரிசாமி, ஜானகிராமன் ஆகியோரின் எழுத்துநடை. ஆரம்ப எழுத்தாளர்கள் இதை உடனடியாக அடைந்துவிட முடியாது. வாசிக்க வாசிக்க, எழுத எழுத எழுதுகிறவன் தனக்கென ஒரு தனித்துவமான எழுத்து நடையை அமைத்துக்கொள்ளுகிறான். அதிக உழைப்பும், அனுபவமும் இதை ஒருவன் அடைய உதவுகின்றன. நல்ல எழுத்தாளர்களின் எழுத்து நடையைக் கூர்ந்து கவனித்து வைப்பதும் பெரிதும் உதவும்.
வேதஞானம்
இந்த ஆக்கத்தில் நான் பொதுவான கட்டுரைகளை எழுதுவதைப் பற்றியல்லாமல் வேதக் கட்டுரைகளை எழுதுவதை, கிறிஸ்தவர்களை மனதில் வைத்து எழுதுகிறேன். ஆகவே, இந்த இடத்தில் வேத அறிவைப்பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. எந்தக் கட்டுரையை எழுதுவதானாலும் விஷய ஞானம் இருக்கவேண்டும். பொதுவான சுருக்கக் கட்டுரைகளை எழுதுவதற்குங்கூட எழுதப்போகிற விஷயத்தைப் பற்றிய தகுந்த அறிவு இருக்கவேண்டும். விஷய ஞானமில்லாமல் ஒரு கட்டுரையை வரைய முடியாது. அப்படி தகுந்த விஷய ஞானமில்லாமல் எழுதுவோமானால் வாசகர்கள் நம்முடைய அறியாமையைத்தான் கண்டுகொள்வார்கள். இந்த விஷய ஞானத்தை அடைய வாசிப்பு மிக மிக அவசியம். இதுவரை எத்தனை தடவை வாசிப்பின் அவசியத்தை இந்த ஆக்கத்தில் வலியுறுத்தியிருக்கிறேனோ தெரியாது; வாசிப்பில்லாமல் ஒன்றும் நடக்காது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் சரி. வாசிப்பு நமக்கு அநேக விஷயங்களைத் தெரிந்துகொள்ள பேருதவி புரியும்.
வேதக் கட்டுரைகளை எழுத வேதஞானம் தேவை. எழுதப்படுகிற பொருள்பற்றி எழுதுகிறவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். ஒருமுறை ஒருவிஷயத்தைப்பற்றி எழுதி அது அச்சில் வந்துவிட்டால் அதைத் திரும்பவும் மாற்றமுடியாது. ஆகவே, எழுதப்போகிற விஷயத்தைக் கவனமாகப் படித்து ஆராய்ந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். உதாரணத்திற்கு ‘மூல பாவம்’ என்ற வேதம் போதிக்கும் பாவத்தைப் பற்றிய சத்தியத்தை விளக்கி எழுதத் தீர்மானித்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதைப்பற்றி எழுதுவதற்கு முன் அதுபற்றிய முழுமையான அறிவு அவசியம். மூல பாவத்தைப் பற்றிய அத்தனை உண்மைகளையும் ஒன்று தவறாமல் வேதத்திலிருந்தும், அதுபற்றி விளக்கும் நல்ல நூல்களில் இருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்புகளையும் எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். இப்படி நான் சொல்லுவதை புதுமையாக எண்ணாதீர்கள். ஒவ்வொரு நல்ல எழுத்தாளனும் இதைத்தான் செய்வான். மேலைநாட்டு எழுத்தாளர்கள் ஒரு நூலை எழுதுவதற்கு ஒரு வருடத்தையோ அல்லது ஓரிரு வருடங்களையோ எடுத்துக்கொள்கிறார்கள் தெரியுமா? அதற்குக் காரணம் எழுதவேண்டிய பொருள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுத் தேவையான விபரங்களை சேகரித்துக்கொள்ளத்தான். இது கட்டுரைதானே, அதற்கு இந்தளவுக்கு உழைப்பு தேவையா? என்று சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். கட்டுரை எழுத நிச்சயம் ஓரிரு வருடங்கள் தேவையில்லைதான். இருந்தாலும் நான்கு பக்க கட்டுரை எழுதுவதானாலும் எழுதப்போகிற விஷயத்தைப்பற்றிய தகுந்த விஷயஞானம் மிகமிக அவசியம். அதுவும் கிறிஸ்தவர்கள் வேதக்கட்டுரை எழுதுகிறபோது கர்த்தருடைய வேதத்திற்குப் புறம்பான எந்தவிஷயத்தையும் எழுதாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.
கட்டுரையின் முக்கிய அம்சங்கள் (அறிமுகம், சரீரம், முடிவுரை)
இதுவரை கட்டுரை எழுதுவதற்கு அவசியமான பொதுவான ஆரம்ப அம்சங்களைப் பற்றி விளக்கிவந்திருக்கிறேன். கட்டுரை எழுத ஆரம்பிக்கு முன் அதற்கான முன்னேற்பாடாக எங்கு ஆரம்பித்து எங்கு போய் எப்படி முடிக்கப்போகிறோம் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான ஒரு வரைபடத்தை அமைத்துக்கொள்வது அவசியம். பிரயாணம் போகிறபோது அதற்கான வரைபடத்தைப் பார்த்துப் போகப்போகிற வழியை நாம் கணக்கிட்டுக் கொள்ளுகிறோம் அல்லவா? பிரயாணத்திற்கான நேரத்தையும் கணக்கிட்டுக் கொள்ளுகிறோம். இந்த முன்னேற்பாடு பிரயாணத்தைத் திட்டமிட்டு நல்ல முறையில் முடிக்க உதவுகிறது. அதுபோலத்தான் கட்டுரை எழுதும்போதும் அதை எழுதுவதற்கான ஒரு திட்டத்தை முன்னேற்பாடாகத் தயாரித்துக்கொள்வது அவசியம்.
இனிக் கட்டுரையின் முக்கிய அம்சங்களைக் கவனிப்போம். கட்டுரையின் முக்கிய அம்சங்களைப் பலவிதங்களில் விளக்கலாம். சரீரத்தைப் பற்றி விளக்குவதானால் அது தலை, மார்பும், வயிறும், கரங்கள், கால்கள் என்று பிரித்து விளக்குவோம். அது போல் ஒரு கட்டுரைக்கும் வசதியாக அதைப் பிரித்துப் பார்க்கும்படியான முக்கிய அம்சங்கள் உள்ளன. என்னைப் பொறுத்தவரையில் அதைச் சுருக்கமாக மூன்று பிரிவுகளுக்குள் அடக்கலாம்.
- அறிமுகம்,
- சரீரம்,
- முடிவுரை
இவை கட்டுரையின் சுருக்கமான பிரிவுகள். இப்பிரிவை மேலும் விளக்கமாகப் பின்னால் பிரித்துக்காட்டவிருக்கிறேன். இப்போதைக்கு இந்த மூன்று முக்கிய அம்சங்களையும் கவனிப்போம்.
(1) கட்டுரையின் அறிமுகம்
கட்டுரை எந்தப் பொருளை விவாதித்து விளக்குகிறது என்பதை சுருக்கமாக வாசகர்களுக்கு அறிவிக்கும் பகுதியே அதன் அறிமுகமாகும். அறிமுகத்தின் பணி கட்டுரையின் கருப்பொருளை அறிமுகம் செய்து வைப்பது. எழுத ஆரம்பித்தவுடன் எப்போதும் மனதில் வருகிற எதையும் எழுதிவிடக்கூடாது. கட்டுரையைப் பற்றி ஏற்கனவே சிந்தித்து ஆராய்ந்து அதற்கான அத்தனை அம்சங்களையும் குறிப்பெடுத்து வைத்து மனதில் ஒரு திட்டத்தோடு, போகிற வழி தெரிந்து எழுதவேண்டும். முக்கியமாக கட்டுரையின் அறிமுகத்தைக் கடைசியாகவே எழுத வேண்டும். இது சிலருக்கு ஆச்சரியமாகப்படும். இதற்குக் காரணம் இருக்கிறது. ஒரு கட்டுரையை முழுமையாக எழுதி முடித்தபிறகுதான் எழுத்தாளருக்கு அதுபற்றிய முழு விபரமும¢ தெளிவாகத் தெறியும். அதற்குப் பின் அந்தக் கட்டுரையை எப்படி வாசகர்களுக்கு அவர்களுடைய மனதைக் கவர்ந்து ஈர்க்கும் விதத்தில் அறிமுகப்படுத்துவது என்று சிந்தித்தே எழுத்தாளன் அறிமுகத்தை எழுதவேண்டும். அறிமுகம் சுருக்கமாக அதேவேளை சுவையாக இருக்கவேண்டும். அது இதயத்தைத் தொட்டு சுண்டி இழுக்கவேண்டும். கட்டுரையின் கருப்பொருளைக் கச்சிதமாக விளக்குவதாக இருக்கவேண்டும். அதை விளக்குகின்ற விதத்தில் அறிமுகம் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும். அறிமுகத்தை ஒரு உதாரணத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டும் எழுதலாம் அல்லது ஒரு தகுந்த ஆணி அடித்ததுபோல் இருக்கும் ஒரு மேற்கோளைப் பயன்படுத்தியும் எழுதலாம். எப்படி எழுதினாலும் அது அறிமுகத்துக்குரிய அடையாளங்களைக் கொண்டு கருப்பொருளை சுருக்கமாக விளக்குவதாக அமைய வேண்டும். அறிமுகத்தினால் ஈர்க்கப்படுகிறபோதே வாசகன் கட்டுரையைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பிப்பான். அறிமுகம் சலிப்பேற்படுத்தும் விதத்தில் இருக்குமானால் கட்டுரையை அவன் தொடர்ந்து வாசிக்கமாட்டான். ஆகவே, அறிமுகம் இறுதியாகத்தான் எழுதப்பட வேண்டும்.
(2) கட்டுரையின் சரீரம்
கட்டுரையின் அடுத்த முக்கிய அம்சம் அதன் சரீரமாகும். மனித உடலுக்கு சரீரம் எத்தனை அவசியமோ அதுபோல்தான் கட்டுரைக்கும். கட்டுரையின் சரீரமே அதன் கருப்பொருளை விபரமாக விளக்கும் அம்சமாகும். கட்டுரையின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பது அதன் சரீரமே. இதுவே கட்டுரையில் நீளமான பகுதியாக அமையும். கட்டுரையின் கருப்பொருளை கட்டுரையின் தன்மைக்கேற்றவிதத்தில் விவாத நோக்கில் விளக்கி நிரூபிப்பது இந்தச் சரீரப் பகுதியே. இந்தப் பகுதி கவனத்தோடு சிந்தித்து ஆராய்ந்து எழுதப்பட வேண்டும். இதில் உதாரணங்களும், மேற்கோள்களும், வேதப் பகுதிகளும் பயன்படுத்தப்பட்டு கட்டுரையின் கருப்பொருளை எழுத்தாளன் வாசகன் முன் எடுத்துவைக்க வேண்டியவனாக இருக்கிறான். இந்தப் பகுதி பல பத்திகளைக் கொண்டு அமையும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
(3) கட்டுரையின் முடிவுரை
கட்டுரையின் கடைசி அம்சம் அதன் முடிவுரை. முடிவுரை பலவிதங்களாக எழுதப்படலாம். அதன் நோக்கமே கட்டுரையை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து வாசகன் அதன் முடிவை அறிந்துகொள்ளச் செய்வதுதான். இது மிகவும் நீளமாக அமைய வேண்டிய அவசியமில்லை. முடிவுரை ஒரு மேற்கோளோடோ அல்லது ஒரு பத்தியில் முடிவை விளக்குவதாகவோ இருக்கலாம். உதாரணம் எத்தனை சுவையாக ஈர்ப்பதாக இருக்கவேண்டுமோ அதேபோல் முடிவுரையும் ஆணியடித்ததுபோல் கச்சிதமாக அமைந்திருக்க வேண்டும். கட்டுரையில் விவாதித்து விளக்கியிருக்கும் அம்சங்கள் அனைத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து வாசகனுடைய மனதில் இறுதியில் அழுத்தமாகத் தங்கும் விதத்தில் முடிவுரை அமைய வேண்டும்.
(இன்னும் வரும்)
வேதம் விளக்கும் தேவபயம் – அல்பர்ட் என். மார்டின்
[அல்பர்ட். என். மார்டின் எழுதி, ஹெரிட்டேஜ் வெளியீடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் தேவபயம் (Fear of God) என்ற நூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு அதிகாரம்.]
வேதாகமத்தில் ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான கருப்பொருளாக இருக்கிறது தேவபயம். நம்முடைய ஆவிக்குரிய முற்பிதாக்களின் சிந்தனைகளிலும் பிரசங்கங்களிலும் இந்த விஷயமே அதிக முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது. ஒருவன் மெய்யான தேவபக்தியுள்ளவன் என்பதை விளக்குவதற்கு, நம்முடைய ஆவிக்குரிய முற்பிதாக்கள் “கடவுளுக்கு பயப்படும் மனிதன்” என்றே அவனைப் பெரும்பாலும் அழைத்தார்கள். இந்தப்பதம் எதைப் பிரதிபலிக்கிறதென்றால், தேவபயமுள்ள எந்தவொரு மனிதனும் தன் ஆத்துமாவின் தேவபக்தியை வெளிப்படுத்துவது தேவபயம் என்பதை உணர்ந்தவனாக இருப்பதைத்தான். சரீரத்திலிருந்து ஆவியை எடுத்துவிட்டால், கொஞ்ச நாட்களில் மிஞ்சுவது வெறும் நாற்றமெடுக்கும் பிணமே. தேவபக்தியிலிருந்து தேவபயத்தை எடுத்துவிட்டால், பரிசேயத்தனமும், வெறும் மதமும், மாய்மாலமுந்தான் நாற்றமெடுக்கும் பிணத்தைப் போல மிஞ்சும்.
வேதாகமப் போதனைகளில் தேவபயத்தின் ஆதிக்கத்தை இப்போது கவனிப்போம். வேதத்தில் தேவபயமே ஆதிக்கம் செலுத்தும் போதனை என்ற முடிவுக்கு வர நிச்சயமாக ஒருவருக்கு அதிக படிப்பு தேவையில்லை. உண்மையில், ஒரு நல்ல ஒத்தவாக்கிய அகராதியைப் பயன்படுத்தினாலே நான் இப்போது உங்கள் முன் வைக்கிற பாடத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் கண்டறியலாம். அந்த ஒத்தவாக்கிய அகராதியில் “பயம்” என்ற வார்த்தையைப் பார்த்தீர்களானால், தேவபயத்தைக் குறிப்பிடும் கிட்டத்தட்ட 150 முதல் 175 வரையுள்ள குறிப்புகளை நீங்கள் கவனிக்கலாம். இந்தக் குறிப்புகளோடு, தேவபயத்தை விளக்கும் ஏனைய வேதப்பகுதிகளையும் சேர்த்துப் பார்த்தால், நிச்சயமாக தேவபயத்தைக் குறிப்பிடும் மேலும் நூற்றுக்கணக்கான குறிப்புகளை நீங்கள் பார்ப்பீர்கள். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், பழைய புதிய ஏற்பாடுகளில் இந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் ஒரு போதனை இந்நாட்களில் பெரிதும் மறக்கடிக்கப்பட்டு அல்லது அசட்டை செய்யப்பட்டிருப்பதுதான். இந்தப் போதனையின் ஆதிக்கத்தை நீங்கள் அறிந்துகொண்ட பிறகு, தேவபயத்தைப் பற்றிய வெறும் அறிவோடு இருந்துவிடமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் கடவுளையும் வேத சத்தியங்களையும் நேசிக்கிறேன் என்று ஒருவன் உரிமை பாராட்டிக்கொண்டு, வேதம் முழுவதும் இந்தளவுக்கு முக்கியத்துவமளித்து விளக்கப்பட்டுள்ள ஒரு போதனையைப் பற்றி அக்கறையில்லாமல் இருக்க முடியாது.
பழைய ஏற்பாட்டில் தேவபயம்
முதலாவதாக, தேவபயத்தைப் பற்றி பழைய ஏற்பாடு என்னச் சொல்லுகிறது என்று பார்ப்போம்.
நியாயப்பிரமாணங்களில் தேவபயம்
வேதாகமத்தில் தேவபயத்தின் ஆதிக்கம் என்று சொல்லுகிறபோது, ஆதியாகமம் 31வது அதிகாரம் வேதத்திலுள்ள எல்லாப் பகுதிகளிலும் மிகவும் முக்கியமான பகுதியாக இருக்கிறது. இங்கே முற்பிதாவாகிய யாக்கோபு, “என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார்” என்றார் (வசனம் 42). முழு வேதத்திலும் கடவுளின் பெயர் அவருடைய குணாதிசயத்தை வெளிப்படுத்துவதாயிருக்கிறது. இங்கு அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பெயர் “ஈசாக்கின் பயபக்திக்குரியவர்” என்பதாகும். நாம் கடவுளை சரியாக தெரிந்துவைத்திருப்போமானால், அவர் தன்னை ஈசாக்கின் பயபக்திக்குரியவர் என்று தன்னை அழைத்து தன்னுடைய குணாதிசயத்தை வெளிப்படுத்தியிருப்பதினால் நாம் அவரைப் பற்றிய மெய்யான வேதப்பூர்வமான பயத்தோடு அவரை நாடுகிறவர்களாக இருப்போம்.கடவுளைப் பற்றிய அறிவும், அவருடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தைப் பற்றிய புரிந்துகொள்ளுதலும், அவரைப் பற்றி ஈசாக்கு கொண்டிருந்த பயத்திற்கு நேராக என்னை வழிநடத்தாவிட்டால், நான் சரியான வகையில் கடவுளை அறிந்திருக்கவில்லை என்றுதான் அர்த்தம்.
யாத்திராகமம் 18ல், மோசே தனி மனிதனாக இஸ்ரவேல் மக்களை நிர்வகித்து வந்ததைப் பற்றிய பிரச்சனை பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் அங்கு இஸ்ரவேலரின் அநேக வழக்குகளுக்கு முதிர்ச்சியான மனதோடு நியாயஞ் சொல்லிக்கொண்டு வந்தார். மோசே இதைத் தனி மனிதனாய் செய்ய முடியாதென்றும் அதற்குத் தகுதியான சிலரை தன்னோடு இந்த காரியங்களுக்காக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவருடைய மாமனாகிய எத்திரோ ஆலோசனை சொன்னார். இந்த நியாயஞ் சொல்லும் பொறுப்பை ஏற்பதற்கான தகுதியைக் குறித்துச் சொல்லுகிறபோது, வசனம் 21, “ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்” என்று அறிவிக்கிறது. வலிமைமிக்க இஸ்ரவேல் நாட்டில் நியாயஞ் செய்யும் நிர்வாகிகளுக்கான தகுதிகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டபோது அவர்கள் தேவபயமிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவற்றில் உச்சகட்ட முக்கியத்துவம் வாய்ந்த குணாதிசயமாகக் கருதப்பட்டது. அவர்களிடம் வேறு எந்தத் தகுதி இருந்தாலும், இல்லாவிட்டாலும், முதன்மையான குணாதிசயமாகிய தேவபயம் இல்லாவிட்டால், அவர்கள் இஸ்ரவேல் நாட்டில் நியாயம் விசாரித்து பிரச்சனைகளைத் தீர்க்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த அந்த பொறுப்பிற்கு தகுதியற்றவர்களாகிவிடுவார்கள்.
உபாகமம் 4ல், கடவுள் தம்முடைய கட்டளைகளையும் நியாயங்களையும் கொடுக்கும்படி ஏன் அவர்களைத் தெரிந்தெடுத்தார் என்பதை இஸ்ரவேல் மக்களுக்கு மோசே விளக்குகிறார். அவர்களுக்கான கடவுளுடைய வார்த்தையை மறக்க வேண்டாம் என்று மோசே அந்நாட்டினரைப் பின்வருமாறு அறிவுறுத்துகிறார், “அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில்” என்கிறது 12ம் வசனம். இந்தப் பகுதியில், கடவுள் தம்முடைய வார்த்தைகளை இஸ்ரவேலருக்கு தெரியப்படுத்தியதின் முக்கிய நோக்கம் என்னவென்றால், அவர்கள் தேவனுக்கு பயப்படுதல் என்றால் என்ன என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.
இஸ்ரவேல் நாடு பெற்றிருந்த சிறப்புரிமைகளைப் பவுல் புதிய ஏற்பாட்டில் பட்டியலிட்டுக் காட்டியபோது, “(1) இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? (2) அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே” (ரோமர் 3.1-2) என்று உறுதியாகச் சொல்லுகிறார். கடவுளுடைய வார்த்தைகள் அவர்களுக்கு செந்தமானவைகளாக இருப்பதே இஸ்ரவேலரின் விசேஷித்த ஆசீர்வாதமாக இருக்குமானால், தமக்கு பயப்படுவதை அவர்கள் கற்றுக்கொள்ளவே அவர்களுக்கு அவற்றைக் கொடுத்திருக்கிறேன் என்று கடவுள் தாமே சொல்லியிருப்பதினால், மோசேயின் வெளிப்படுத்தல்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பாகவும், உட்கருத்தாகவும் இருப்பது தேவபயமே.
யோபுவில் தேவபயம்
தமக்கு பயப்படும் பயத்தை கடவுள் இஸ்ரவேல் தேசத்திற்கும் கற்றுத்தரும் நடவடிக்கையிலிருந்து பழைய ஏற்பாட்டு விசுவாசியோடு அவருக்கிருந்த உறவைப்பற்றி யோபுவின் புத்தகத்தில் நாம் வாசித்தறிந்து கொள்ள முடிகிறது. பரிசேயர்கள் தங்களுடைய சொந்த நடவடிக்கைகளினால் கிருபையைப் பெற்றதாக பெருமையாக சொல்லிக்கொண்டதுபோல் அல்லாமல் வாழ்ந்த யோபுவைப்பற்றி கடவுளே பெருமைகொள்ளுகிறார். யோபுவின் புத்தகம் இப்படியாக துவங்குகிறது, “ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.” இதில் “உத்தமனும் சன்மார்க்கனும்” என்கிற வார்த்தைகள் யோபுவின் வாழ்க்கையில் வெளிப்புறமாக கவனிக்கக்கூடிய காரியங்களை விளக்குகின்றன. எனினும், கடவுள் இவ்விதமான யோபுவின் வாழ்க்கை முறைக்குக் காரணமான அவனுடைய உள்ளான மனதின் நிலையை விளக்குகிறார். யோபு “தேவனுக்கு பயந்தவன்” என்பதே அது. யோபுவின் வாழ்க்கையிலிருந்த இந்தவிதமான வெளிப்புறமான அம்சங்களும், உட்புறமான நிலையும் மறுபடியுமாக 8வது வசனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது, “கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபுவின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போலப் பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.” இந்த உட்புறமான, தன் ஆண்டவர் மீது யோபுவுக்கிருந்த பயமே அவனுடைய வெளிப்புறமான பக்திக்கான காரணம். 9வது வசனத்தில் வாசிக்கிறோம், “அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?” சாத்தான் சொல்லுகிறான், கடவுளே உம்முடைய நாமத்தின் மீதுள்ள பயமே யோபுவின் பக்திக்கான காரணம் என்று நினைக்கிறீர், ஆனால் யோபு உம்மை வழிபடுவதற்கு வேறு ஒரு முக்கியமான சுயநலம் கொண்ட காரணமிருக்கிறது என்கிறான். ஆனால் யோபுவின் முழுமையான சரித்திரம், கடவுள் யோபுவைப் பற்றி சொன்ன வார்த்தைகளின் உண்மையை நமக்கு உறுதிப்படுத்துகிறது. பாருங்கள், யோபுவின் பக்தியினுடைய சாராம்சமும், மெய் பக்தியைப் பற்றிய கடவுளுடைய மதிப்பீடும், தேவபயத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது.
சங்கீதங்களில் தேவபயம்
பழைய ஏற்பாட்டில் தேவபயமே மையப்போதனையாக இருப்பதை நாம் பார்த்து வருகிறோம். இப்போது சங்கீதப் புத்தகத்தைப் பார்க்கலாம். இதில் நாம் தேவபயத்தைப் பற்றிய அநேக குறிப்புகளைப் பார்க்கலாம். சங்கீதம் 2ல், கடவுள் தம்முடைய குமாரனை அவருடைய மேசியாவின் பணிக்கான அரியனையில் அமர்த்தி, அங்கிருந்து கிருபையையும் நியாயத்தீர்ப்பையும் அவர் செயல்படுத்துவதாகிய தம்முடைய நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். அந்த நோக்கத்தை அறிவித்துவிட்டு, கடவுள் கீழ்வரும் கட்டளையைத் தருகிறார்,
‘இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள். பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.’ (சங்கீதம் 2.10-11)
கடவுள் சொல்லுகிறார், “என் குமாரனைப் பற்றி நான் சொல்லிய கூற்றும் அவருக்கு நான் நிர்ணயித்திருக்கிற முக்கியமான இடமும் எதைக் காட்டுகிறதென்றால், அவருக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய ஒரே மறுமொழி, தேவபயத்துடன் அவரைத் தொழுதுக்கொள்ளுவது மட்டுந்தான்.” “பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள்”. அப்படியானால், கிறிஸ்துவைப் பற்றிய நம்முடைய பார்வையும் பிதாவினுடைய ஆணையின்படியான அவருடைய உயர்த்துதலும் தேவபயத்துடன் அவருக்கு ஆராதனை செய்யும்படி நம்மைத் தூண்டாவிட்டால், பிதாவினுடைய ஆணையின்படியான அவருடைய குமாரனின் உயர்த்துதலை நாம் சரியாக விளங்கிக்கொள்ளவும் இல்லை, அதற்கேற்ற பதில் நடவடிக்கையை செய்யவும் இல்லை என்றே அர்த்தமாகும்.
சங்கீதம் 67 கடவுளுடைய இரட்சிக்கும் இரக்கத்தை பூமியின் கடைசிபரியந்தமும் அறிவிக்கும் நோக்கத்தைக் காட்டும் சிறப்பான நற்செய்தி சங்கீதங்களில் ஒன்று. இந்த சங்கீதக்காரன், தனக்கும், கடவுளுடைய உடன்படிக்கையின் மக்களுக்கும் இரக்கத்தைக் காண்பிக்கும்படி கடவுளிடம் கெஞ்சுகிறார், “தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்” (சங்கீதம் 67.2). பூமியிலுள்ள தேசங்களுக்கு அறிவிக்கப்படும் கடவுளுடைய இரட்சிக்கும் செய்தியின் முடிவு என்ன? 7வது வசனத்தில் அதற்கான பதிலைப் பார்க்கலாம், “தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.” வேறுவிதமான சொல்லுவதானால், கடவுளுடைய உடன்படிக்கையின் மக்களின் மூலமாக அவர் சொல்லும் நற்செய்தியின் ஒட்டுமொத்த நோக்கமே தேசங்களுக்கு தேவபயத்தைப் போதிப்பதே. இது கடவுளுடைய இரட்சிப்பைப் பற்றிய நம்முடைய அனுபவத்திலும் புரிதலிலும் தேவபயம் எவ்வளவு முக்கியமான அம்சமாக இருக்கிறது என்பதை நமக்குக் காட்டுகிறதில்லையா? கடவுள் தம்முடைய மக்களை ஆசீர்வதிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார், அதன் மூலம் அவர்கள் மற்றவர்களுக்கு அவ்வாசீர்வாதத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக அவர் அப்படிச் செய்கிறார். அவர் தம்முடைய நோக்கத்தை இப்படிச் சொல்லியிருக்கிறார், “தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.” (வசனம் 7).
சங்கீதம் 103ல் தேவபயத்தைப் பற்றிய அநேக குறிப்புகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு பொதுவான அம்சமும் இருக்கிறது. அங்கு தேவபயம் கடவுளுடைய உண்மையான மனிதர்களுடைய தவிர்க்க முடியாத பண்பாக அடையாளங் காட்டப்பட்டிருக்கிறது. சங்கீதக்காரன், கடவுளுடைய உண்மையான மக்களைக் குறிப்பிடுவதற்கு இந்தவிதமான பின்வரும் வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார், “அவருக்கு பயப்படுகிறவர்கள்”. 11வது வசனத்தைக் கவனியுங்கள் – “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.” அவருடைய கிருபை எல்லோர் மேலும் இருக்கிறது என்று இவ்வசனம் சொல்லுகிறதா? இல்லை. கடவுளுடைய மீட்கும் அன்பு என்பது எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் எல்லா மனிதர்களையும் உள்ளடக்கும் ஒருவித பொதுவான மற்றும் மனிதாபிமானத்தின் அன்பு என்று சொல்லுவது பரிசுத்த வேதாகமத்தின் போதனை அல்ல. சங்கீதக்காரன், “அவருடைய கிருபை அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் இருக்கிறது” என்கிறார். அவருடைய சிறப்பான அன்பு அவருடைய மக்கள் மீது இருக்கிறது. அவருடைய மக்கள் யார்? அவருக்கு பயப்படுகிறவர்களே. அவர்மேல் பயமில்லாவிட்டால், அவருடைய தொடர்ச்சியான இரக்கம் அவர்களுக்குக் கிடையாது. 13வது வசனம் இதை வலியுறுத்துகிறது, “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.” கடவுளுடைய பிள்ளைகள் என்பதும் அவருக்குப் பயந்தவர்கள் என்பதும் ஒன்றையே சுட்டுகிறது. இதன்படி, என்னில் தேவபயம் இல்லாவிட்டால், நான் கடவுளுடைய மீட்கும் அன்பின் கீழ் இருக்கிறேன் என்று உரிமைபாராட்ட முடியாது (வசனம் 11), அவருடைய பிள்ளை என்றும் உரிமைபாராட்ட முடியாது (வசனம் 13, 17). தேவபயமாகிய இந்தப் பண்பை தங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் கொண்டிருக்கிறவர்களே தேவனுடைய பிள்ளைகள் என்று சங்கீதக்காரன் கருதுகிறார்.
சாலொமோனின் எழுத்துக்களில் தேவபயம்
தேவபயத்தைப் பற்றிய வேதப்பகுதிகளில் நீதிமொழிகள் 1 இன்னுமொரு முக்கியமான வேதப்பகுதி, குறிப்பாக 7வது வசனம். முதல் 6 வசனங்களில், சாலொமோன், நீதிமொழிகள் புத்தகத்தை, பலதரப்பட நோக்கங்கள் கொண்ட ஞானமுள்ள ஆலோசனைகள் நிரம்பிய புத்தகமாக அறிமுகப்படுத்துகிறார். பிறகு, அந்த அறிவையும் ஞானத்தையும் அடைவதற்கான வழிமுறைகளை வகுத்துக்காட்டத் தொடங்குகிறபோது, தனது உரையின் ஆரம்பமாக இந்த வாக்கியத்தை முன்வைக்கிறார், “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்” (வசனம் 7). வேறுவிதமாக சொல்லுவதானால், தேவபயத்தைக் கற்பதென்பது, “அ, ஆ, இ, ஈ”யிலிருந்து ஆரம்பித்துப் பிறகு ஏனைய எழுத்துக்களையும் கற்பது போன்றது மட்டும் அல்ல. தேவபயத்தைக் கற்பதென்பது ஆரம்பத்தில் “அம்மா” என்ற வார்த்தையை எழுத்துக்கூட்டி உச்சரித்து, அதற்குப்பிறகு நீண்ட வார்த்தைகளை உச்சரிக்கும் திறனை வளர்ப்பது போன்றதுமல்ல; மாறாக, தேவபயமென்பது மையப்பகுதியாக இருக்கிறது. எப்படி தமிழில் உயிர் எழுத்துக்கள் ஆரம்பக் கல்வியோடு நின்றுவிடாமல், தொடர்ச்சியாக நாம் கற்கும் அனைத்தின் மையப்பகுதியாக இருக்கின்றனவோ அதுபோலவே தேவபயமும் நம் வாழ்க்கையின் மையப்பகுதியாக இருக்கிறது. அதாவது, ஒரு மனிதன் இயற்பியல் (Physics) சம்மந்தமான மிகச் சிக்கலான ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, ஆரம்பக் கல்வியாகத் தான் படித்த எண்களையும் எழுத்துக்களையுமே சார்ந்திருக்கிறான். போகப்போக இயற்பியல் புத்தகத்தில் அந்த எண்களும் எழுத்துக்களும் சிக்கலான முறையில் வகைப்படுத்தப்பட்டிருக்கும். அவன் இயற்பியல் வல்லுனரான பின்னரும், 4 அல்லது 5 வயதில் தான் படித்த அதே எண்களோடும் எழுத்துக்களோடுந்தான் அவன் பணிபுரிந்துகொண்டிருக்கிறான். அதேவிதமாகவே, தேவபயமும் ஞானத்தின் மையப்பகுதியாக இருக்கிறது. அது ஞானத்தின் ஆரம்பமாக மட்டுமல்லாமல், பரலோக ஞானத்தின் பாதையின் அனைத்து நிலையிலும் ஊடுருவிச் செல்லுவதாக இருக்கிறது. அந்த பயமில்லாமல், மெய்யான ஞானமென்பதில்லை என்று ஆண்டவர் சொல்லுகிறார். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.
இப்போது நாம் பிரசங்கியின் புத்தகத்தைத் திருப்புவோம். மனித வாழ்க்கையின் அர்த்தத்தையும் நிறைவையும் கண்டுபிடிப்பதற்கான எல்லாவித சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த ஒரு மனிதனின் (சாலொமோன்) வார்த்தைகளை இதில் நாம் பார்க்கலாம். இவர் குறிப்பிட்டுள்ள சில காரியங்களை நீங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், அவைகள் உங்களை ஈர்க்கிறவையாக, அதிகமாக ஊக்கப்படுத்துகிறவையாக இருக்கும். ஆரம்பத்தில் அவருக்கும் அப்படித்தான் இருந்தது என்பதையும் நாம் அதில் பார்க்கலாம். ஆனால் அவர் வாழ்க்கையைத் தொடர்ந்தபோது, ஒவ்வொரு வழிமுறையின் இறுதியிலும், அவர் கண்டது ஒன்றுமில்லை, மாயையும் வருத்தமுமாகத்தான் இருந்தது. கடைசி அதிகாரத்தின் கடைசி வசனத்தில் அவர் ஒரு முடிவுக்கு வருகிறவரை இது தொடர்ந்தது, “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்” (பிரசங்கி 12.13-14).
இந்த இறுதி வாக்கியம், உலகளவில் இயற்கையாக தேவபயமில்லாத பாவிகளுக்கான கடவுளுடைய கிருபையின் செயலைப்பற்றி சொல்லாவிட்டாலும் (ரோமர் 3.18), தேவ சாயலில் உருவாக்கப்பட்ட மனிதர்களுடைய மையக் கடமையாக தேவபயம் இருக்கிறது என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
தீர்க்கதரிசிகளில் தேவபயம்
ஏசாயா 11:1-2ல், ஈசாயின் அடிமரத்திலிருந்து மேசியா வருவார் என்கிற அற்புதமான தீர்க்கதரிசனம் காணப்படுகிறது.
- ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
- ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.”
இந்த வசனங்கள், ஆவியானவர் மேசியாவின் மேல் வருவார் என்று வெளிப்படையாக அறிவிக்கின்றன. யோர்தான் கரையில் அவர் ஞானஸ்நானம் பெற்றபோது ஆவியானவர் வெளிப்படையாக அவர்மேல் வந்தும் இருக்கிறார். ஏசாயா சொல்லுகிறார், ஆவியானவர் அவர்மீது, “மரித்தோரை எழுப்பும், செவிடர்களைக் குணமாக்கும், ஊமையர்களைப் பேச வைக்கும் வல்லமைமிக்க ஆவியானவராக மட்டுமல்ல”, “கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை அருளும் ஆவியாகவும்” அவர்மேல் தங்கியிருப்பார். இதுதான் ஆவியானவருடைய ஊழியத்தின் ஒரு அம்சம். 3வது வசனத்தில் இது விரிவாக சொல்லப்பட்டுள்ளது, “கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்”. மேசியாவின் தனிச்சிறப்பான குணாதிசயமே கர்த்தருக்குப் பயப்படும் பயத்தில் அவர் வாழ்ந்து, நகர்ந்து, திளைத்திருப்பார் என்று தீர்க்கதரிசி இங்கே முன்னுரைத்திருக்கிறார்.
தேவபயம் என்பது கடவுளுடைய தயவோடு சம்பந்தப்பட்டதல்ல என்ற எண்ணத்தை நம்முடைய எண்ணத்திலிருந்து முற்றிலுமாக எடுத்துவிடவேண்டும். நம்முடைய கர்த்தரை ஆவியினால் (தேவபயத்தின் ஆவி) பெலப்படுத்தியபோதுதான், பிதாவாகிய தேவன், இயேசு தம்முடைய நேச குமாரனாக இருக்கிறார் என்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சத்தம் கேட்டது.
எரேமியா 32ல், புதிய உடன்படிக்கையைப் பற்றி எரேமியா விளக்குகிறார். அதாவது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் மரணத்தின் விளைவுகளினால் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கை என்று வேதத்தின் ஏனைய பகுதிகள் இதைப்பற்றிச் சொல்லுகின்றன. இந்த உடன்படிக்கை, எபிரெயர் 8 மற்றும் 10வது அதிகாரங்களில் விளக்கப்படுத்தப்பட்டுள்ளபடி கிறிஸ்துவின் இரத்தத்தினால் முத்திரையிடப்பட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய உடன்படிக்கை என்னவிதமான ஆசீர்வாதங்களை மனிதர்களுக்குக் கொண்டுவரப் போகிறது என்று ஆண்டவர் சொல்லுவதைக் கவனியுங்கள், “அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு, அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து” என்று இந்த வசனங்கள் விளக்குவதைக் காண்கிறோம். (எரேமியா 32:38-40).
கர்த்தர் சொல்லுகிறார், “இந்தப் புதிய உடன்படிக்கையில் இவ்வளவு வல்லமையாக நான் செயல்படுவதின் முக்கிய நோக்கம் என்னவென்றால், அவர்கள் என்னைவிட்டு விலகிப் போகாதபடிக்கு நான் அவர்கள் இருதயத்தில் எனக்கு பயப்படும் பயத்தை வைப்பேன்” என்பதுதான். இந்தப் பகுதியின்படி, இந்த புதிய உடன்படிக்கையினுடைய பயனாளிகளின் இருதயத்தில் கர்த்தருக்குப் பயப்படும் பயம் வைக்கப்படப் போகிறது. அது அவர்கள் விசுவாசத்தில் விடாமுயற்சியுடன் தொடரவும், அவர்களுடைய இரட்சிப்பின் தேவனிடத்தில் அன்போடும் கீழ்ப்படிதலோடும் இணைந்திருக்கும்படியாக செய்வதற்கான மையக் காரணமாக இருக்கப் போகிறது.
நீங்கள் புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதை விசுவாசிக்கிறீர்களா? அந்த உடன்படிக்கையின் இரத்தத்தை வெளிப்புற அடையாளமாகக் காட்டும் கர்த்தருடைய பந்தியில் தொடர்ச்சியாக கலந்துகொள்ளுகிறீர்களா? ஆண்டவர் சொல்லுகிறார், “அந்த உடன்படிக்கையின் பலாபலன்களில் உள்ளான மனரீதியாக பங்குள்ளவர்களாக நீங்கள் இருந்தால் மெய்யான தேவபயத்தில் நீங்கள் வாழுவீர்கள். அந்த பயத்திற்கு நீங்கள் அந்நியர்களாக இருந்தால், அந்த புதிய உடன்படிக்கையின் பலாபலன்களுக்கும் நீங்கள் அந்நியர்களாகத்தான் இருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்து உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். தொடர்ந்து நீங்கள் இறையாண்மையுள்ள தேவனுடைய கோபத்தின் கீழ்தான் இருப்பீர்கள். ஆவியானவரின் வல்லமையினால் புதிய உடனபடிக்கையின் பலன்கள் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு அளிக்கப்படுகிறபோதும், கர்த்தர் சொல்லுகிறார், அவர் தமக்கு பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்தில் ஏற்படுத்துகிறார் என்று. தேவபயமே புதிய உடன்படிக்கையின் மையமாக, அதன் கருப்பொருளாக இருக்கிறது.
கடவுளுடைய முந்தைய உடன்படிக்கைகளின் கீழ், தெரிந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பாவியும் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறப்பிக்கப்பட்டும், அவர் வந்து தங்கியிருந்தும், நீதிமானாக்கும் நீதியைப் பெற்றும், அவனுடைய இருதயத்தில் கர்த்தருக்குப் பயப்படுதல் நடப்பட்டும் இருக்கிற ஆசீர்வாதத்தை அனுபவித்திருக்கிறான் என்பது உண்மைதான். இது பழைய ஏற்பாட்டு விசுவாசிகளின் தேவபக்தியுள்ள வாழ்க்கை முறையை விளக்குகிறதாக இருக்கிறது. மேலும், குற்றவுணர்வோடு சீர்குலைந்த நிலையில் இருக்கிற பாவிகளுக்கு, மீட்பின் வரலாற்றின் எந்தவொரு காலத்திலும், பாவிகளுக்கான ஒரே மத்தியஸ்தராகிய கிறிஸ்துவினுடைய செயலின் மூலமாகத்தான் இரட்சிக்கும் சகல பலன்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று வேதத்தின் ஒட்டுமொத்த போதனையிலிருந்து அறிந்துகொள்ளுகிறோம். ஆயினும், புதிய உடன்படிக்கையில்தான், இந்த ஆசீர்வாதங்கள் வெளிப்படையாக உத்தரவாதத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படியெனில், நிறைவேற்றப்பட்டுள்ள இரட்சிப்பிற்குள்ளாக யாரெல்லாம் மனந்திரும்புதலோடும், விசுவாசத்தோடும் கொண்டுவரப்படுகிறார்களோ அவர்கள் இந்த ஆசீர்வாதங்களை நிச்சயம் பெறுவார்கள் என்ற உறுதியை இது தருகிறது (எரேமியா 32:40).
இதுவரை நாம் பார்த்துள்ள குறிப்புகளின் அடிப்படையிலும், பழைய ஏற்பாட்டின் ஏனைய பகுதிகளின் அடிப்படையிலும், தேவபயமே பழைய ஏற்பாட்டின் போதனைகளில் ஆதிக்கம் செலுத்தும் மையப் போதனையாக இருக்கிறது என்ற முடிவுக்கு நாம் வருகிறோம். இது ஒருவருடைய விருப்பத்தின் அடிப்படையிலான நல்லொழுக்கம் சம்மந்தமானதல்ல, கடவுளுடைய இரட்சிக்கும் செயலின் அடிப்படை அம்சமாகவும் மையமாகவும் இருக்கிறது.
புதிய ஏற்பாட்டில் தேவபயம்
சிலர் இதற்கு எதிராகப் பின்வருமாறு வாதம் செய்வார்கள், “உண்மைதான், நீங்கள் குறிப்பிட்ட பகுதிகளெல்லாம், இருட்டும் நிழலாட்டமுமான பழைய ஏற்பாட்டின் பகுதிகளாக இருக்கின்றன. இப்போது, நமக்கு புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுடைய அன்பும் இரக்கமும் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. முன்னடையாளங்களாக கொடுக்கப்பட்ட காளை, வெள்ளாட்டு கடாவின் இரத்தத்தினால் உண்டான சடங்குகள் கிறிஸ்துவுக்குள் எப்படி முழுமை பெற்றுவிட்டதோ அப்படியே முன்னறிவிக்கப்பட்ட இருண்ட தேவபயமென்ற தத்துவமும் கர்த்தருக்குள்ளான சந்தோஷத்தின் பிரகாசத்தினால் இல்லாமலாகிவிட்டது” என்று இவர்கள் வாதம் செய்வார்கள். இவர்கள் சொல்லுவது உண்மையா? புதிய ஏற்பாடு இத்தகைய எண்ணத்திற்கு துணைபோகிறதா என்று இனி ஆராய்வோம்.
சுவிசேஷ நூல்களில் தேவபயம்
புதிய ஏற்பாட்டைப் புரட்டுகிறபோது நாம் எதைப் பார்க்கிறோம்? கர்த்தராகிய இயேசு மரியாளின் வயிற்றில் கருத்தரிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, மரியாள் தன் உறவுக்காரப் பெண்ணாகிய எலிசபெத்தைப் பார்க்கப் போகிறாள். மரியாள் அவள் வீட்டுக்குச் சென்றவுடன், ஆவியினால் நிறைந்து, தீர்க்கதரிசன வாழ்த்துரையைச் சொல்லுகிறாள். ஆவியினால் அறிவிக்கப்பட்ட அந்த வாழ்த்துரையில், பல நூற்றாண்டுகளாக, தேவன் தம்முடைய மக்களோடு அணுகும் விதத்தின் தத்துவத்தைத் தான் கண்டதாக எடுத்துரைக்கிறாள். அந்த தேவனைத்தான் இப்போது தன் கருவறையில் சுமந்து கொண்டிருப்பதாக சொல்லுகிறாள். தேவன் எப்போதும் தம் மக்களோடு எதைச் செய்து வந்திருந்தாரோ அதையேதான் இப்போதும் செய்கிறதாக மரியாள் கண்டாள். அதைத்தான் தம்முடைய குமாரனுடைய வருகையின் மூலமாகவும் அவர் தொடரப்போகிறார். மரியாள் சொல்லிய வாக்கியத்தை கவனியுங்கள், “வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது” (லூக்கா 1:49-50). கடவுள் தமக்கு பயப்படுகிறவர்களுக்கு இரக்கங் காட்டுவதே அவருடைய தொடர்ச்சியான வழிமுறையாக இருக்கிறது.
இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் கடவுள் தன்மீது இரக்கங் காட்டுவதை மரியாள் கண்டாள். இந்தத் தத்துவத்தையே, மேசியா வந்து தம்முடைய ஊழியத்தைச் செய்கிறபோதும் தொடருவார். அதன்படி, சுவிசேஷப் புத்தகத்தின் முதலாவது அதிகாரத்திலேயே கடவுள் இதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறார். அதாவது, தம்முடைய மக்கள் எப்போதும் தமக்கு பயப்படுகிறவர்களாக, தமக்கு பயப்படும் பயத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள் என்கிறார்.
நம்முடைய கர்த்தரும் எதைப் போதித்தார்? உண்மையில், நம் ஆண்டவர், கர்த்தரைப் பற்றிய பயம் நமக்குத் தேவையில்லை வெறுமனே மகிழ்ச்சியாயிருப்பதும், கர்த்தரை நேசிப்பதுமே மனிதர்களுக்கு அவசியம் என்று சொல்லியிருந்தால், பயத்தின் எந்தவித அம்சத்தையும், குறிப்பாக, வரப்போகிற பயங்கரத்தைக் குறித்த பயத்தை அவர் தடை செய்திருப்பார். தேவபயமென்றால் என்ன என்பதைப் பற்றி பிறகு விரிவாகப் பார்க்கவிருப்பதால், இப்போது, தேவபயத்தில் இருக்கிற இரண்டு அடிப்படையான அம்சங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம். மனிதர்கள் கொண்டிருக்கிற எல்லாவித பயத்திலும் இவை இரண்டையும் பார்க்க முடியும். முதலாவது, பயங்கரத்தினிமித்தமாக உண்டாகிற பயம், இரண்டாவது, மதிப்பு மரியாதையினிமித்தமாக உண்டாகிற பயம். பயத்தின் இந்த இரண்டு அம்சங்களும் ஆரோக்கியமான தேவபயத்தில் இருக்கிறவைகள் என்று நம்முடைய ஆண்டவர் தம்முடைய போதனைகளில் மிகத்தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். தம்முடைய 12 சீடர்களையும் ஊழியத்திற்கு அனுப்பியபோது, மனிதர்கள் தங்களுக்கு என்ன செய்வார்களோ என்று பயப்பட வேண்டாம் என்று உறுதியாக எச்சரித்திருந்தார். “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” என்றார் (மத்தேயு 10:28). இயேசு தேவபயத்திலிருந்து நம்மை வெளியில் கொண்டு வரும் ஊழியத்தைச் செய்யவில்லை. மாறாக, தம்முடைய சீடர்கள் எப்போதும் தேவபயத்தைப் பற்றிய பயங்கரத்தைக் கொண்டிருக்கும்படி கட்டளையிட்டார். பாவம் செய்கிறபோது, தேவன் என்ன செய்வார் என்பதைப் பற்றிய பயத்தை நினைவில் வைத்திருக்கும்படிக் கட்டளையிட்டார். இதே உண்மையை, எபிரெயர் நிருபத்தை எழுதியவரும் நமக்கு நினைவூட்டுகிறார், “ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே” (எபிரெயர் 10:31). தேவபயத்தை இல்லாமலாக்குவதற்காக இயேசு வரவில்லை, அதை வலியுறுத்தி எடுத்துச் சொல்லவே வந்தார். பழைய உடன்படிக்கையில் நிழலாட்டமான வெளிப்பாட்டிலேயே தேவபயம் அடிப்படையாகச் சொல்லப்பட்டிருந்தால், புதிய உடன்படிக்கையின் முழுமையான வெளிப்பாட்டில் தேவபயம் இன்னும் அதிகமாக வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது.
அப்போஸ்தலருடைய நடபடிகளில் தேவபயம்
அப்போஸ்தலருடைய நடபடிகளின் ஆரம்ப அதிகாரங்களில், ஆதி சபையின் முதிர்ச்சியையும் அதன் மீதிருந்த கடவுளுடைய ஆசீர்வாதத்தையும் லூக்கா விவரிக்கிறார். இவை இரண்டும் எப்படி அழகாக ஒன்றாக இணைந்திருக்கிறது என்பதை கவனியுங்கள். நாம் அதை பிரித்துப் பார்த்தாலும் கடவுள் அவைகளை இணைத்திருக்கிறார். சபையைத் துன்புறுத்திக் கொண்டிருந்த சவுலின் மனமாற்றத்தைத் தொடர்ந்து, அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:31ல் வாசிக்கிறோம், “அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.” ஆவியின் ஆறுதல் எங்கிருக்கிறதோ அங்கு தேவபயமில்லை என்றும், எங்கு கர்த்தரைப் பற்றிய பயமிருக்கிறதோ அங்கே ஆவியின் ஆறுதல் இல்லை என்றும் நாம் நினைக்கிறோம். ஆனால் அதுவல்ல உண்மை. கிறிஸ்துவின் மீதிருந்த ஆவியானவர், அவர் அளவில்லாமல் பெற்ற அந்த ஆவியானவர், தற்போது அவருடைய சபையின் மீது ஊற்றப்படுகிற ஆவியானவர் “கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தை அருளும் ஆவியானவர்” (ஏசாயா 11.2) என்றே வேதம் சொல்லுகிறது. இயேசு தாமே எப்படி கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தைக் கொண்டவராக இருந்தாரோ, கிறிஸ்துவினுடைய ஆவியினால் எந்தளவு அதிகமாக அவருடைய சபை நிரப்பப்படுகிறதோ, அந்தளவு அதிகமாக அச்சபை கர்த்தருக்குப் பயப்படும் பயத்தைத் தன் வாழ்க்கையிலும், ஆராதனையிலும், சாட்சியிலும் கொண்டிருக்க வேண்டும்.
பேராசிரியர் ஜோன் மரே சொல்லுவதைக் கவனியுங்கள், “பரிசுத்தமுள்ளவரும், குறைவில்லாதவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவருமாகிய அவர், கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை அணிந்திருப்பாரானால், தேவபயத்தைப் பற்றிய எந்தவித எண்ணமும் உணர்வும் இல்லாமல், நம்முடைய இரட்சிப்பின் அதிபதியும் நாம் வாழும்படியான முன்னுதாரணத்தை வாழ்ந்து காட்டியவருமான அவருடன் நமக்கு உறவு இருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்? ஏன் திருச்சபை கர்த்தருக்குப் பயப்படும் பயத்தில் நடக்கிறதென்றால், கிறிஸ்துவின் ஆவியானவர் திருச்சபை மீது தங்கியும், நிறைந்தும், வழிநடத்தியும் வருகிறார். அந்த ஆவியானவர் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை அருளும் ஆவியானவர்.”
நிருபங்களில் தேவபயம்
இப்போது நாம் புதிய ஏற்பாட்டின் நிருபங்களைப் புரட்டிப் பார்ப்போம். 2 கொரிந்தியர் 7:1ல் பவுல், “இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்” என்று சொல்லுகிறார். நாம் மாம்சத்தில் எதிர்த்துப்போராட வேண்டிய தொடர்ந்திருக்கும் பாவம் (Remaining, indwelling sin) விசுவாசியின் வாழ்க்கையில் தொடர்ந்திருக்கிறதா? ஒரு விசுவாசி, ஒரு புறம் மாம்சத்தின் செய்கைகளை அழிப்பதும், மறுபுறம் அதிகமதிகமாக இயேசுவுக்கு ஏற்றவிதத்தில் மாறுவதற்கு ஒவ்வொரு கிருபையிலும் வளர வேண்டுமென்று வேதம் எதிர்பார்க்கிறதா? சரியான முறையில் வழிநடத்தப்பட்ட எந்தவொரு கிறிஸ்தவனும் இந்தக் கேள்விகளுக்கு “இது உண்மை, ஆனால் அதை எப்படிச் செய்வது?” என்றே கேட்பான். நாம் மேலும் மேலும் பரிசுத்தமாக இருக்க வேண்டுமென்பதும், கர்த்தருக்கு முன்பாக நிற்பதற்கு நாம் அதிக கிருபையைப் பெறவேண்டுமென்பதுந்தான் நம்முடைய முதன்மையான எண்ணமாக இருக்க வேண்டுமா? அல்லது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களாக, அதிக மகிழ்ச்சியும், சந்தோஷமும், சமாதானமும், துடிப்பும் பெற்றிருக்க வேண்டுமா? இந்த இரண்டு வினாக்களிலும் உண்மையிருக்கத்தான் செய்கிறது. ஆனால், இவை இரண்டுமே நம்முடைய முதன்மையான நோக்கத்திற்கானதல்ல என்றே நான் சொல்லுவேன். 2 கொரிந்தியர் 7:1ல் பவுல் சொல்லியிருக்கிறபடி, நாம் உயர்ந்த அளவிலான நடைமுறைப் பரிசுத்தத்தையும் தேவபக்தியையும் அடையவேண்டும். ஆனால், அதை தேவபயத்தின் சூழலில் இருந்து நாம் அடையவேண்டும் என்றே பவுல் விளக்குகிறார்.
தேவபயத்தின் சூழலில்தான் நடைமுறை தேவபக்தியில் நாம் முன்னேற வேண்டுமானால், நடைமுறை தேவபக்தியை அடைவதற்கு நாம் முக்கியமாக செய்ய வேண்டியது எது? நம்முடைய நெருக்கமான உறவுகளிடம் நாம் எப்படி நடந்துகொள்ளுகிறோம் என்பதைப்பொறுத்தே அது அமையும். மலைப்பிரசங்கம் மற்றும் நிருபங்களிலுள்ள பெரும்பாலுமான ஒழுக்கரீதியான போதனைகள், நம்முடைய நெருக்கமான உறவுகளைப் பற்றியதாகவே இருக்கிறது. நீங்கள் வேலை செய்யும் முதலாளியோடு மோசமாக நடந்துகொள்வதும், மனைவியை காட்டுமிராண்டித்தனமாக நடத்துவதும், கணவனை ஆளப்பார்ப்பதும், தாய் தகப்பனை நச்சரிப்பதுமாக நடப்பது தேவபக்தியே அல்ல. வேதத்திலுள்ள தேவபக்தியும் பரிசுத்தமும் அதிகமாக நடைமுறையோடு சம்மந்தமானது. குடும்பத்தில், வேலைஸ்தலத்தில், சபையில், பள்ளியில், நம்முடைய நெருக்கமான உறவுகளோடு நாம் தொடர்புகொள்ளும் விதத்தில் வெளிப்படக்கூடியதே தேவபக்தி. நம்முடைய பரிசுத்தமும், பரிசுத்தமாகுதலில் நம்முடைய முன்னேற்றமும் இந்த உறவுகளிடம் வெளிப்பட வேண்டும். இந்த உறவுகளிடத்தில் அதிகளவான பரிசுத்தத்தில் முன்னேறுவதற்கு, நம்மை அதிகமாக ஊக்கப்படுத்தக் கூடியது எது?
எபேசியர் 5:21 மற்றும் அதைத் தொடர்ந்து வரும¢ வசனங்களில் பவுல், குடும்பத்திலுள்ள பலதரப்பட்ட உறவுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்: கணவன்-மனைவி உறவு, பெற்றோர்-பிள்ளை உறவு, எஜமான்-வேலைக்காரன் உறவு. வீட்டைப் பற்றிய இந்தக் காரியங்களைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு முன்னுரையாக பவுல் என்னச் சொல்லுகிறார் என்று கவனியுங்கள், வசனம் 21, “தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.” நெருக்கமான உறவுகள் சம்மந்தப்பட்ட நடைமுறை தேவபக்தியைக் குறித்து சொல்லப்பட்டுள்ள எல்லாக் கட்டளைகளும் தேவபயத்தின் கட்டமைப்பிற்குள் இருக்கிறது. ஆகவே, இந்த உறவுகளினிடத்தில் பரிசுத்தத்தில் முன்னேறுவதற்கு ஏதாவது நாம் செய்கிறபோது, அதில் தேவபயத்தைப் பற்றிய எண்ணம் நிராகரிக்கப்படுமானால், அந்தவிதமான தேவபக்தி ஆண்டவருடைய வார்த்தையிலிருந்து வந்ததாகாது.
பிலிப்பியர் 2:12-13ல், பவுல் விசுவாசிகளைத் தங்களுடைய இரட்சிப்பிற்காக கடினமாக உழைக்கும்படி கட்டளையிடுகிறார், “ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.” இங்கே இரட்சிப்பிற்காக பிரயாசப்படுவதின் சூழல் எதுவாகயிருக்கிறது? அது பயமும் நடுக்கமுமே. இவ்வார்த்தைகளின் அடிப்படையில், அவர்களுடைய சோர்வுற்ற ஆவிக்குரிய நிலையிலிருந்து முன்னேறுவதற்கு வேதத்தின் எந்தப் போதனை அவர்களுக்கு அவசியமாக இருக்கிறது? அதிக கவனத்துடன், சுய வெறுப்பைக் காட்டும் சீடர்களாக தங்களை அறிவித்துக்கொள்ளும் கிறிஸ்தவர்கள் வெறும் சடங்கை பின்பற்றுகிறவர்களாக இல்லாமலிருப்பதை வேதத்தின் எந்த சத்தியம் நமக்குக் காட்டுகிறது? இதற்கெல்லாம் பதிலாக, தேவபயத்தோடும் நடுக்கத்தோடும் நம்முடைய இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுவதுதான் என்று பவுல் சொல்லுகிறார். இத்தகைய மனநிலையைக் கொண்டிராமல், ஒருவன் இரட்சிப்பிற்காக பிரயாசப்படுவானானால், அவன் தேவனுடைய வார்த்தையால் அங்கீகரிக்கப்படாத வழியில் செல்கிறான். “பயமும் நடுக்கமும்” என்றால் என்ன என்பதைப் பற்றி பின்பு (தேவபயம் பற்றிய அல்பர்ட் என். மார்டினின் நூலின் ஏனைய அதிகாரங்களில் ஒன்றில்) பார்க்கலாம். ஆனால் இந்த நிலையில், தன் இரட்சிப்பிற்காக பிரயாசப்படுகிற எந்தவொரு மெய்யான கிறிஸ்தவனுடைய வாழ்க்கையிலும் “பயமும் நடுக்கமும்” பிரதான இடத்தைக் கொண்டிருக்கும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.
ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் இறுதி மட்டும் இது தொடர வேண்டுமா? தேவபயத்தின் பல்வேறு அம்சங்கள் நம்முடைய வாழ்க்கையில் தேவையில்லாத நிலை என்பது வருமா? அப்போஸ்தலனாகிய பேதுரு இக்கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். இயேசுவின் வார்த்தைகளையும், பவுலினுடைய வார்த்தைகளையும் நாம் பார்த்திருக்கிறோம். பேதுருவும் அதே வார்த்தையையே பயன்படுத்துகிறார். சுவாரஸ்யமான சூழ்நிலையில் அவர் இதைப் பற்றிச் சொல்லுகிறார். 1 பேதுரு 1:17-19 வசனங்களில் அவர் சொல்லுகிறார், “அன்றியும் பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள். உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.” இங்கே ஒரு கேள்வி எழலாம், கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டிருக்கிறேன் என்ற வேதப்பூர்வமான உறுதியை ஒருவன் கொண்டிருந்தால், அது தேவபயத்தை நீக்கிவிடாதா? இல்லவே இல்லை. ஏனென்றால், முந்தைய வசனத்தில் பேதுரு, “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அனுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்” என்று சொல்லியிருக்கிறார். நீங்கள் மீட்கப்படுவதற்காக செலுத்தப்பட்டுள்ள விலைக்கிரயத்தைப் பற்றிய அறிவு, தேவபயத்தை உங்களில் இன்னும் அதிகமாக தீவிரமாக்க வேண்டுமே ஒழிய அதை நிராகரிக்கக் கூடாது. “கிறிஸ்துவின் விலையேறப்பட்ட இரத்தத்தினால் மீட்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறீர்கள்” என்ற உண்மையை அடிப்படையாக வைத்து, தேவபயத்தில் நாம் நடக்க வேண்டியதை வலியுறுத்துகிறார். நம்முடைய வாழ்நாள் முழுவதும் பயத்தோடு இருக்க வேண்டுமென்கிறார். என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாக வந்த அந்த நேரத்திலிருந்து, என்னுடைய கடைசி மூச்சு மட்டுமாக, நான் பரதேசியாய் சஞ்சரிக்கும் காலம் முழுவதும், தேவபயத்தை நான் கொண்டிருக்க வேண்டும்.
வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவபயம்
தேவபக்திக்கு தேவபயம் அடித்தளம் போன்றது. அது நித்தியத்திற்கும் தொடர வேண்டியது. விசுவாசிகளிலிருந்து தொடர்ந்திருக்கும் பாவத்தின் எச்சங்கள் நீக்கப்பட்டபிறகும்கூட, நாம் தொடர்ந்து தேவனுக்கு பயந்திருக்க வேண்டும். நம்முடைய கடைசி இரண்டு குறிப்புகள் வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து வருகிறது. முதலாவது குறிப்பு வெளிப்படுத்தின விசேஷம் 15 வது அதிகாரத்திலிருக்கிறது. இங்கு, அடையாள மொழிநடையில், கடவுளால் மீட்கப்பட்டவர்களைப் பற்றி விளக்கப்படுத்தப்படுகிறது. வசனங்கள் 2-4, “அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.”
அவருடைய அற்புதமான செயல்கள் மற்றும் நீதியின் வழிகளின் அடிப்படையில், அவருடைய பிரசன்னத்திலிருக்கிற அவரால் மீட்கப்பட்டவர்களுடைய பதில் நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும்? 4ம் வசனம் இதற்குப் பதிலளிக்கிறது, “கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்?” மீட்கப்பட்டவர்கள் மகிமைப்படுத்தப்பட்டவர்களாக, நேரடியாக கடவுளுடைய பிரசன்னத்தில் ஆராதிப்பதாக இருந்தாலும் அவர்களிடம் தேவபயம் அங்கிருக்கிறது.
அதேவிதமான போற்றுதல் வார்த்தைகளை வெளிப்படுத்தின விசேஷம் 19:4-5 வசனங்களிலும் காண்கிறோம், “இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள். மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.”
மீட்கப்பட்டவர்கள் பரலோகத்தில் முழுமையான மீட்பை அனுபவிக்கும் நிலையில் எப்படியிருப்பதாக ஆவியானவர் இப்பகுதியில் விவரிக்கிறார்? அவருக்கு பயப்படுகிறவர்களாக இருப்பதாகச் சொல்லுகிறார். தேவ ஊழியர்கள் என்பதற்கான தனித்துவமான அடையாளமாக அவர்களின் தேவபயம் இங்கே உணர்த்தப்படுகிறது.
வேத ஆதாரங்களிலிருந்து வரும் முடிவுகள்
பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் காணப்படும் இத்தகைய முக்கியமான வசனங்களின் அடிப்படையில் நாம் எத்தகைய முடிவுக்கு வருகிறோம்?
முதலாவது, தேவபயத்தை இல்லாமலாக்குவது, வேதப்பூர்வமான இரட்சிக்கும் மதத்தையே இல்லாமலாக்குவதாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது வேதத்திலிருந்து எத்தனை வசனங்களை நாம் குறிப்பிடுகிறோம் அல்லது இதற்காக எத்தனை வாக்குத்தத்தங்களை நாம் நம்புகிறோம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டது. இதுவரை நாம் சுருக்கமாகப் பார்த்து வந்திருக்கிற வேத வசனங்களின் அடிப்படையில், உங்களுடைய இருதயத்திலும் வாழ்க்கையிலும் தேவபயமென்றால் என்ன என்பதை நீங்கள் அறியாதிருந்தால், மெய்யான வேதப்பூர்வமான இரட்சிக்கும் மதத்தின் முதன்மையான காரியத்தைப் பற்றி அனுபவபூர்வமாக நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றே தெரிகிறது. இது ஒரு முக்கியமான முடிவு, இதுவரை நாம் பார்த்த வேதப்பகுதிகள் இதை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. இயேசு கிறிஸ்துவே வேதப்பூர்வமான மதத்தின் ஒட்டுமொத்த ஆதாரமாக இருப்பதினால், அவருக்குக் கொடுக்கப்பட்ட ஆவியானவரும், அவரிலிருந்து அனுப்பப்பட்ட ஆவியானவரும், கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை அருளும் ஆவியானவராக இருப்பதினால், தேவபயமில்லாமல் எவரும் இருப்பது, அவர்கள் கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது. ரோமர் 8:9 சொல்லுகிறது, கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதவன் கிறிஸ்துவினுடையவனல்ல என்று. இந்தப் போதனை உங்களுக்கு முற்றிலும் வேற்றுமையானதாக இருந்தால், இது உங்களுக்குக் குழப்பமானதாக இருந்தால், நீங்கள் சில துரிதமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். நீங்கள் வேதத்தை ஆராய்ந்து, ஆண்டவரை நோக்கிக் கெஞ்சுங்கள். அவருக்கு பயப்படுவதென்றால் என்ன என்று உங்களுக்கு விளக்கும்படிக் கேளுங்கள். அவரைப் பற்றிய பயம் உங்களில் இல்லாமலிருந்தால், மெய்யான இரட்சிக்கும் விசுவாசத்தில் நீங்கள் இல்லை என்பதையே அது காட்டுகிறது.
இரண்டாவது முடிவு, மெய்யான ஆவிக்குரிய வளர்ச்சியின் துல்லியமான அளவீடு, ஒருவன் தேவபயத்தில் அதிகரிப்பதில்தான் இருக்கிறது. நெகேமியா 7:2ல் ஆனானி என்ற நபரைப் பற்றி வேதம் சொல்லுகிறது, “அநேகரைப் பார்க்கிலும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்தவன்” என்று. அவனுடைய ஆவிக்குரிய முதிர்ச்சியும், ஞானமும், தேவபக்தியும் அதிகமாக இருந்ததற்கான ஒரே காரணம், “அவன் அநேகரைப் பார்க்கிலும் தேவபயமுள்ளவனாக இருந்தான்” என்பதுதான்.
மூன்றாவது முடிவு, தேவபயத்தைப் பற்றி அறியாமலிருப்பது, வெளிப்படுத்தப்பட்டுள்ள மதத்தின் அடிப்படையானதும் அத்தியாவசியமானதுமான போதனையைப் பற்றி அறியாமலிருப்பதாகும். சந்தேகங்களுக்கு இடமில்லாமல், இந்நாட்களில், அநேகர் மெய்யான கிறிஸ்தவர்களாக இருந்தும், துரதிஷ்டவசமாக தேவபயத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுடைய அனுபவத்தில் அவர்கள் தேவபயத்திற்கு அந்நியர்கள் அல்ல. ஆனால் அவர்களுடைய புரிதலில் அவர்கள் தேவபயத்தைப் பற்றிய தெளிவில்லாமல் இருக்கிறார்கள். நீங்கள் அப்படியான கிறிஸ்தவரா? இந்த ஆக்கத்தில் இதுவரை நீங்கள் வாசித்தது உங்களுக்கு அறிமுகமில்லாததா? கிருபையில் வளருவது என்பது எப்போதும் அறிவில் வளருவதோடு இணைந்திருப்பதால் (2 பேதுரு 3:18), தேவபயத்தைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெறும்படி ஊக்கத்தோடு ஜெபிக்கிறவர்களாக, அதைக் குறித்து படிக்கிறவர்களாக உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளுவது மிகவும் அவசியமானது. இது நீங்கள் கிறிஸ்தவத்தில் மேலும் வளரவும் மேம்படவும் உங்களை வழி நடத்தும்.
எது பக்திவைராக்கியம்? – டேவிட் மெரெக் –
முந்தைய இதழில் வந்திருந்த பக்தி வைராக்கியம் பற்றிய முதலாவது ஆக்கத்தில் இந்த பாடத்திற்கான முக்கிய வசனமாகிய தீத்து 2:13-14ஐ ஆராய்ந்திருந்தோம். இந்த வசனங்களிலும், வேதத்தின் ஏனைய வசனங்களிலிருந்தும் நாம், பக்தி வைராக்கியம் கடவுளிடமிருந்து வருகிறது என்பதைப் பார்த்தோம். இது சிலுவையில் கிறிஸ்து செய்த செயலின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. இது பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் செய்யும் செயலின் மூலம் நிகழ்கிறது. ஆகவே, நாம் பக்தி வைராக்கியத்தில் அதிகரிக்கவும் மேலும் உறுதிப்படவும் வேண்டுமானால் கடவுள் தம்முடைய ஆவியின் நிறைவை நம்மில் அதிகமாகத் தரவேண்டுமென்று நாம் கடவுளிடம் கேட்க வேண்டும். கடவுள் பக்தி வைராக்கியத்தை நமக்கு அதிகமாகத் தரவும் அதில் நீடித்திருக்கவும் கிருபை காட்டும்படி நாம் கடவுளிடம் மேலும் வலியுறுத்திக் கேட்க வேண்டும். இந்த ஆக்கத்தில் பக்தி வைராக்கியத்தைப் பற்றிய இரண்டாவது முக்கிய வசனத்தைப் படிக்கப்போகிறோம். அந்த வசனம் ரோமர் 12:11. இந்த வசனம் நமக்குக் கிறிஸ்தவ வைராக்கியம் என்ற இந்த முக்கியமான விஷயத்தித்தைப் பற்றிய முழுமையானதும் சமநிலையான பார்வையையும் தருகிறது. இந்த வசனத்தை இது அமைந்திருக்கும் வசனப் பகுதியின் அடிப்படையில் வாசித்து விளங்கிக்கொள்வோம்.
வசனம் 11ல் நம்முடைய கவனத்தை செலுத்துவதற்கு முன், வைராக்கியத்தைப் பற்றிய இந்த முக்கியமான வசனம் ஒரு பரந்த சூழலின் அடிப்படையில் இருக்கிறது என்பதை நீங்கள் நினைவுகூர வேண்டுமென்பதை வலியுறுத்துகிறேன். பக்திக்குரிய கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதைப் பற்றிய ஒரு பரந்த பார்வையிலான நடைமுறைக் காரியங்களை விளக்குகிறதாக இந்த வசனம் இருக்கிறது. இந்தப் பகுதி 12:1ல் ஆரம்பித்து 15:13வரை தொடர்கிறது. 12வது அதிகாரம் பக்திக்குரிய கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய பல அம்சங்களை சுட்டிக்காட்டுகிறது. இதில் வரும் அநேக காரியங்கள் மறுபடியும் மறுபடியும் சொல்லப்படுகிறதாகவும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறதாகவும் இருக்கிறது. வேறுவிதமாக சொல்லவேண்டுமானால், வசனம் 11ல் பவுல் பக்தி வைராக்கியத்தைப் பற்றிக் கையாளும் முறை பக்திக்குரிய வாழ்க்கையின் முதன்மையான அங்கமாக இருப்பதைக் காட்டுகிறது. ஆகவே, மெய்யான பக்திவைராக்கியத்தை அடைவது என்பது ரோமர் நிருபத்தின் இந்தப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் பக்திக்குரிய வாழ்க்கையின் அம்சங்களோடு தொடர்புடையதாக இருக்கிறது. நமக்கு பக்தி வைராக்கியம் வேண்டுமானால், பக்திக்குரிய வாழ்க்கை பற்றிய இந்த அம்சங்களின் முக்கியமான தன்மைகளை நாம் கண்டறிய முயற்சிக்க வேண்டும்.
இந்த ஆக்கத்தில் நம்முடைய கவனம் முழுவதையும் 11வது வசனத்தில் செலுத்தப்போகிறோம். கிறிஸ்தவ வைராக்கியத்தைப்பற்றி குறைந்தது 5 விஷயங்களை இந்த வசனம் நமக்கு விளக்குகின்றது.
- பக்தி வைராக்கியம் எத்தகையது?
தீத்து 2:14வது வசனத்தை நாம் ஆராய்ந்தபோது, பக்திவைராக்கியம் என்பது ‘எரிகின்றதாக’ அல்லது ‘கொதிக்கின்றதாக’ விளக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். அதுமட்டுமல்லாமல், அது ஒன்றை அல்லது ஒருவரை ஆர்வங்கொண்டு அல்லது தீவிர விருப்பத்துடன் சார்ந்திருந்து பின்பற்றுவது என்ற கருத்தும் அதில் இருப்பதைக் கவனித்தோம். இங்கே ரோமர் 12:11ல், “அனலாயிருங்கள்” என்று கிரேக்கத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை தீத்து 2:14ல் சொல்லப்பட்டுள்ள “வைராக்கியமான” என்ற அதே வார்த்தைக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆகவே பவுல் இங்கே ரோமர் 12:11ல் “அனலாயிருங்கள்” என்று சொல்லுகிறபோது, எரிகிற அல்லது கொதிக்கிற என்ற அந்த அர்த்தத்தையே இங்கும் இந்தப் பதத்தில் காண்கிறோம்.
- இந்த பக்தி வைராக்கியம் எங்கு நிலைகொண்டிருக்கிறது?
பவுல் சொல்லுகிறார், இந்த வைராக்கியம் நம்முடைய ஆவியில் இருக்கிறது என்று. “ஆவியில் அனலாயிருங்கள்” என்கிறார் பவுல். இங்கே ஆவியானது நம்முடைய சரீரத்திலிருந்து பிரித்துக்காட்டப்பட்டிருக்கிறது. வேறுவிதமாகச் சொல்லுவதானால், ஒரு மனிதனில் இருக்கின்ற இரண்டு முக்கிய பகுதியில் ஒன்று, ஆவியாகும். இந்த வசனத்தின்படி, பக்தி வைராக்கியம் என்பது ஆவியில் குடிகொண்டிருக்கிறது. இதே உண்மையை, அப்போஸ்தலர் 18:25ல், லூக்கா அப்பொல்லோவை “ஆவியில் அனலுள்ளவன்” என்று இதே வார்த்தையைப் பயன்படுத்தி விளக்குவதிலும் காண்கிறோம்.
“ஆவியில் அனலாயிருத்தல்” என்ற இந்த மொழிநடை வேதத்தில் வேறொரு முக்கிய பகுதியிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உபாகமம் 6:4-5 வசனங்களைக் கவனியுங்கள். இது யூதர்கள் அடிக்கடி நினைவுறுத்துகிற ஒரு மிகமுக்கியமான பழைய ஏற்பாட்டுப் பகுதி. இதன் முக்கியத்துவத்தை இயேசுவும் பின்னால் சுட்டியிருக்கிறார். அவர் இந்த வேதப்பகுதியின் 5வது வசனத்தைத்தான் முதலாவதும் எல்லா கட்டளைகளிலும் பிரதானமானது என்று அடையாளம் காட்டியிருக்கிறார். ஆனால் இப்பொழுது அறிமுகமாக இந்த பகுதியிலுள்ள 3 முக்கிய காரியங்களை நாம் பார்க்கலாம்.
முதலாவது, 5வது வசனத்தில் வைராக்கியத்தோடிருக்க வேண்டும் என்பது தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடவுளிடம் நாம் முழுமையாக அன்புகாட்ட வேண்டும் என்கிறது இந்த வசனம். மூன்றுவித அம்சங்கள் இதில் வலியுறுத்தப்படுகிறது. பின்பு மறுபடியும் ஒவ்வொரு அம்சமும் மீண்டும் மீண்டும், தனித் தனியாக, ஆர்வத்தோடு முழுமையாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. கடவுள், நம்முடைய முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும் தன்மீது அன்புகாட்டுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக, மூலமொழியில் எழுத்துப்பூர்வமாக இந்தவசனம் எப்படியிருக்கிறதென்றால், முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் அன்புகாட்டும்படி கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். அதாவது ஒவ்வொரு முறையும் “முழு” என்ற வார்த்தை மறுபடியும் பயன்படுத்தப்பட்டு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகுந்த ஆர்வத்தோடு, தீவிரமாக கடவுள் மீது நாம் அன்புகாட்ட வேண்டும் என்பது தெளிவாக உணர்த்தப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக, 5வது வசனத்தில் வைராக்கியம் என்பது உள்ளான மனதோடு தொடர்புடையதாகக் காட்டப்பட்டுள்ளது. இது இருதயம் மற்றும் ஆத்துமாவாகிய மனிதனின் உள்ளான இரண்டு அம்சங்களைக் குறிக்கிறது. எனினும், இந்த இரண்டு வார்த்தைகளும் வேதாகமத்தில் வெவ்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இங்கு “இருதயம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை, பழைய ஏற்பாட்டில் சில சந்தர்ப்பங்களில் மட்டும் மனிதனுடைய சரீரப்பிரகாரமான இருதயத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், பொதுவாக இந்த வார்த்தை மனிதனுடைய உள்ளான மனதைக் குறிக்கிறதாக அதாவது, நம்முடைய உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் விருப்பங்களைக் குறிக்கிறதாகவே இருக்கிறது.
இங்கு “ஆத்துமா” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை, விரிவான அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில், இந்த வார்த்தை பெரும்பாலும் ஒரு முழுமையான மனிதனை (மற்றும் மனிதனைத் தவிர்த்த உயிரினங்களின் முழுமையையும்) குறிக்கிறதாக இருக்கிறது. இது மனிதர்கள் மற்றும் மிருகங்களின் சரீரப்பிரகாரமான வாழ்க்கையைக் குறிக்கிறதாகவும் இருக்கிறது. (சில சந்தர்ப்பங்களில் இந்த வார்த்தை இறந்த மனிதர்கள் அல்லது மிருகங்களையும் குறிக்கிறது. உதா: லேவியராகமம் 22:4). அதேவேளை, மனிதனுடைய உள்ளான மனதோடு தொடர்புடைய உணர்வுகள், ஆசை விருப்பங்களைக் குறிப்பதாகவும் இது பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடவுள், அவரது சொந்த ஆத்துமாவை குறிப்பிடவும் இந்த வார்த்தையை சிலவேளைகளில் பயன்படுத்தியிருக்கிறார் (லேவியராகமம் 26:11).
சுருக்கமாகச் சொல்லுவதானால், “இருதயம்” மற்றும் “ஆத்துமா” என்ற இரு வார்த்தைகளும் பெரும்பாலும் நம்முடைய உள்மனதைக் குறிப்பிடவே வேதத்தில் பயன்படுத்தப்படுகின்றன. முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கடவுளிடம் அன்புகாட்டுங்கள் என்று ஆண்டவர் கட்டளையிடுவது, மனிதனின் உள்மனதைக் குறிக்கிற அர்த்தத்தில்தான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இரண்டிற்கும் வெவ்வேறுவிதமான அர்த்தங்கள் இருந்தாலும், இருதயமும் ஆத்துமாவும், மனிதனின் ஆவியைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிற இரண்டு வார்த்தைகள். இருதயம், ஆத்துமா, ஆவி ஆகிய மூன்று வார்த்தைகளும் ஒரே அர்த்தங்கொண்ட மூன்று வார்த்தைகள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆகவே உபாகமம் 6:5, நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் அன்புகாட்டுங்கள் என்று சொல்லுகிறபோது, நம்முடைய உள்ளான மனதோடுகூடிய ஆர்வத்தையே சுட்டிக்காட்டுகிறது என்பது தெளிவாகிறது. எனினும், நம்முடைய மனிதத் தன்மையின் மற்றொரு அம்சமும் இந்த கட்டளையில் இருப்பதை நாம் பார்க்கலாம். அது இந்த மாபெரும் கட்டளை விளக்கும் மூன்றாவது அம்சத்திற்கு நம்மை வழிநடத்துகிறது.
மூன்றாவதாக, 5வது வசனத்தில் வைராக்கியம் என்பது பெலத்தோடு தொடர்புபடுத்திச் சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் நாம் முழு பெலத்தோடு அன்புகூர வேண்டுமென்றும் கட்டளையிடப்பட்டிருக்கிறது. இதில் சுவாரஸ்யமான விஷயமென்னவென்றால், இந்தப் பகுதி வெறுமனே வைராக்கியத்தை பெலத்தோடு சேர்த்துச் சொல்லவில்லை. உபாகமம் 6:5, பக்தி வைராக்கியத்திற்கும் பெலத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தையும் சுட்டிக்காட்டுகிறது. நாம் பெலமுள்ளவர்களாக இருந்தும் அந்த பெலத்தை ஆர்வத்தோடு கடவுள் மீது அன்புகாட்டுவதில் செலுத்துவதில்லை என்பதையும் இந்த வசனம் மறைமுகமாகக் குறிப்பிட்டுக்காட்டுகிறது.
இந்த உண்மையின் அடிப்படையில், பெலத்திற்கும் வைராக்கியத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன? ஒரு புறம், பெலம் என்பது ஒன்றைச் செய்யக்கூடிய வலிமையைக் குறிக்கிறது. மறுபுறம், வைராக்கியம் என்பது உத்வேகத்தைக் குறிக்கிறது, அதாவது நம்முடைய வேலையைச் செய்வதற்கு, அதற்கான திறனைச் செலுத்துவதற்கு நம்மை உந்தித்தள்ளும் செயலைக் குறிக்கிறது. வேறுவிதத்தில் சொல்லுவதானால், ஒரு வேலையைச் செய்ய செலுத்தப்படும் திறனே வைராக்கியமாகும். பெட்ரோல் எஞ்சினை நினைத்துப் பாருங்கள். பெட்ரோலில் அதற்கான வலிமை அல்லது சக்தி ஏற்கனவே இருக்கிறது, அது பெட்ரோல் டேங்கிலிருந்து குழாயின் வழியாக எஞ்சினை வந்தடைகிறது. பெட்ரோல் தொடர்ச்சியாக எரிவதன் மூலம் எஞ்சினிலுள்ள சிலிண்டர்களை உந்தித்தள்ளி மேலும் கீழுமாக செயல்பட வைத்து எஞ்சினை இயக்குகிறது. எஞ்சினில் செயல்படும் உந்துசக்தியைப் போல்தான் வைராக்கியமும். அதிலுண்டாகும் வெப்பம் அதை இயக்குகிறது. அந்த வைராக்கியமும் ஆர்வமுமே நம்முடைய வலிமையைப் பயன்படுத்திச் செயல்பட வைக்கிறது.
பெலனுக்கும் வைராக்கியத்திற்கும் இடையேயுள்ள உறவில் நாம் கவனிக்க வேண்டியதொன்றிருக்கிறது. அது வைராக்கியத்தினுடைய இடத்தைப் பற்றியது. ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம், வைராக்கியம் என்பது நம்முடைய உள்மனதோடு தொடர்புடையது என்று (வெளிப்புற செயல்பாடும் அதில் இருக்கிறது என்பதும் உண்மைதான்). எனினும் வேதம் சொல்லுகிறது, பெலன் என்பது நம்முடைய ஆவி (சங்கீதம் 73.26) மற்றும் சரீரம் (சங்கீதம் 71:9, ஏசாயா 40.30-31) ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது என்று.
இதுவரை நாம் பக்தி வைராக்கியம் எப்படிப்பட்டது, அது எங்கிருக்கிறது என்பதைப் பார்த்திருக்கிறோம். இப்போது மூன்றாவது கேள்வியைப் பார்ப்போம்.
- பக்தி வைராக்கியம் நம்மில் எப்படி வெளிப்படுகிறது?
எனக்கு பக்தி வைராக்கியம் இருக்கிறது என்பதை நான் எவ்வாறு அறிந்துகொள்ளுவது? இந்த ஆக்கத்தின் முக்கிய வசனத்தின் முதற்பகுதியில் இதற்கான பதிலைக் காண்கிறோம். ரோமர் 12:11, “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்”. இந்த சிறிய வாக்கியத்திலுள்ள வார்த்தைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
முதலாவதாக, இந்த வாக்கியத்தின் மைய வார்த்தை “ஜாக்கிரதையாயிருங்கள்” என்பதாகும். இந்த வார்த்தையில் கவனமாக இருத்தல் என்பதும் அடங்கியுள்ளது. இது, கடவுள் நாம் செய்யும்படி சொல்லியிருக்கிற காரியங்களில் நாம் ஆர்வத்தோடு ஈடுபட வேண்டும் என்ற அர்த்தத்தையும் உள்ளடக்கியுள்ளது.
இரண்டாவதாக, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற பொறுப்புகளில் நாம் “அசதியாயிருக்கக் கூடாது” என்பதும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வேறுவிதத்தில் சொல்லுவதானால், கடவுள் நாம் செய்யும்படி சொல்லியிருக்கிற காரியங்களில் ஜாக்கிரதையாக இல்லாமல், மெதுவாகவோ, தயங்கிய நிலையிலோ, தாமதப்படுத்தும்படியாகவோ, சோம்பலாகவோ நாம் இருக்கக்கூடாது. பக்தி வைராக்கியம் எப்படி நம்மில் வெளிப்படுகிறது என்பதற்கு பதில் இதுவே. இப்போது நாம் ரோமர் 12:11லிருந்து வரும் நான்காவது கேள்விக்குப் போகலாம்.
- பக்தி வைராக்கியம் முக்கியமாகத் தன்னில் எவற்றைக் கொண்டுள்ளன?
ரோமர் 12:11 வசனத்தின் கடைசிப்பகுதி, இந்த கேள்விக்கு வேதமளிக்கும் பதிலை நமக்குத் தருகிறது. பவுல் எழுதுகிறார் “கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்”. இந்த வார்த்தைப் பிரயோகங்கள் நாம் கொண்டிருக்கும் வைராக்கியம் கடவுளுக்குரியதா இல்லையா என்பதற்கான பதிலை அறிவதில் நமக்கு உதவுகிற முக்கியமான ஒன்றை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. அதுவே நம்முடைய வைராக்கியத்தின் இறுதி நோக்கம். எதை அல்லது யாரை நம்முடைய வைராக்கியம் மையப்படுத்துகிறது? பக்தி வைராக்கியம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையே மையமாக, இறுதி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நோக்கம், இயேசு யார் என்பதிலும் அவரோடு நமக்குள்ள உறவைப் பற்றிய புரிதலிலும் பிரதிபலிக்கிறது.
நமக்கு பக்தி வைராக்கியம் இருந்தால், கர்த்தராகிய இயேசுவை நாம் யாராகப் பார்ப்போம்? நாம் அவரை நம்முடைய கடவுளாக, எஜமானாக, படைத்தவராக, இரட்சகராகப் பார்ப்போம். அவர் நமக்கான கட்டளைகளைத் தருகிறவராக இருக்கிறார். நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு விளக்கக்கூடியவராக இருக்கிறார் என்பதை நம்முடைய வார்த்தையின் மூலமும் வாழ்க்கையின் மூலமும் ஒப்புக்கொள்ளுகிறவர்களாக இருப்போம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணிநேரமும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் உரிமையுடையவர் இயேசுவே. அவர் ஆராதனைக்கும் நம்முடைய சேவைக்கும் உரியவர். இந்த உண்மையின் அடிப்படையில், இயேசுவோடு கொண்டுள்ள உறவின்படி நம்மை யாராக நாம் பார்க்க வேண்டும்? நாம் அவரது வேலைக்காரர்கள்; அவரது அடிமைகள். நமக்கு பக்தி வைராக்கியம் இருக்குமானால், நம்முடைய நேச இரட்சகருக்கு சேவை செய்யும் வேலைக்காரராக, அவரை பிரியப்படுத்துகிறவராக, அவருக்குக் கீழ்ப்படிகிறவராக, அவரை வழிபடுகிறவராக இருப்போம்.
பக்தி வைராக்கியத்தில் இருக்கும் முக்கியமான அம்சங்களை, ரோமர் 12:11ல் விளக்கிய பவுல் இன்னும் இரண்டு பகுதிகளிலும் இதுபற்றி எழுதியிருப்பது என் நினைவுக்கு வருகிறது.
பவுல் சாட்சியிடுகிறார், பிலிப்பியர் 1:21, “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.”
பவுல் அறிவுறுத்துகிறார், 2 கொரிந்தியர் 5:14-15, ‘கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.’
பக்தி வைராக்கியம் கர்த்தராகிய இயேசுவுக்கு சேவை செய்வதில் தங்கியிருக்கிறது. அது நமக்காக மரித்து உயிர்த்தெழுந்த அவருக்காக வாழ்வதில் தங்கியிருக்கிறது. அவருக்கு நன்றியுள்ள, ஆர்வமுள்ள ஊழியனாக என்ன செய்யவேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ அதைச் செய்வது பக்திவிருத்தியாகும். அது அவரை மட்டுமே வணங்குவதாகும்.
பக்தி வைராக்கியத்தை சரியான வகையில் அடையாளங் காணும்போது பக்தியற்ற வைராக்கியத்தை நாம் அடையாளம் கண்டுகொள்ளலாம், இல்லையா? பக்தி வைராக்கியம் என்பது கிறிஸ்துவுக்காக வாழுவதென்றால், பக்தியற்ற வைராக்கியம் என்பது வேறு கடவுள்களுக்காகவோ அல்லது விக்கிரகங்களுக்காகவோ வாழுவதாகும். நமக்காக மட்டும் வாழுவதாகவும் இருக்கலாம். பணத்திற்காக வாழுவதாகவும் இருக்கலாம். முடிவில் அது நம்மை ஊழலுக்கு வழி நடத்தும் (சபையிலும் கூட). பக்தியற்ற வைராக்கியம் என்பது உலகப் பொருளுக்காக வாழுவதாகும். உலகரீதியான சந்தோஷம், கஷ்டப்படாமல் வாழுதல், பாலியல் இச்சை கொண்டிருத்தல், உணவாசை, சுய பாதுகாப்பு, அதிகார வெறி என்று எத்தனையோ உலகத்தைச் சார்ந்த விஷயங்களை அடுக்கடுக்காகச் சொல்லலாம்.
- பக்தி வைராக்கியம் பற்றிய இந்த விஷயத்தை நாம் எப்படி பார்ப்பது?
முந்தைய ஆக்கத்தில் தீத்து 2:14 வசனத்தை ஆராய்ந்தபோது நாம் செய்தது போல, ரோமர் 12:11 வசனத்தின் முழுப் போதனையைக் குறித்தும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன், தீத்து 2:14ன் போதனை, பக்தி வைராக்கியம் என்பது கடவுளிடமிருந்தே வருகிறது என்பதாகும். ரோமர் 12:11ன் போதனை என்ன தெரியுமா? வைராக்கியம் என்பது நம்முடைய சொந்த, தனிப்பட்ட. நம்மைச்சார்ந்த பொறுப்பாக இருக்கிறது என்பதுதான்.
வைராக்கியம் என்பது நம்முடைய சொந்த, தனிப்பட்ட பொறுப்பாக இருக்கிறது என்ற உண்மையை ஏற்பது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். ஏனெனில், ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம், கடவுளுக்காக வைராக்கியம் கொள்ளுவது என்பது கடவுளிடமிருந்து வருகிறது என்று. நம்முடைய இருதயத்தில் வைராக்கியத் தீ இருப்பதென்பது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்றே அறிந்துகொண்டிருக்கிறோம். இது உண்மையானால், கிறிஸ்துவுக்காக சேவை செய்வதில் மந்தநிலையில், வலிமையற்ற வைராக்கியத்தைக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்லுவது? கர்த்தருடைய வார்த்தை என்ன சொல்லுகிறது தெரியுமா? சரியான பக்தி வைராக்கியம் கொண்டிருப்பது நம்முடைய தனிப்பட்ட பொறுப்பாக இருப்பதால் அதில் மந்த நிலையில் இருப்பதற்கும் நாமே காரணமென்று.
அப்படியானால், இந்த விஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும்? எப்படி நான் இந்த பக்தி வைராக்கியத்தையும் பேரார்வத்தையும் என்னுடைய இருதயத்தில் தூண்டிவிடுவது? ஒருவேளை நான் கர்த்தருக்காக ஆர்வமற்றிருந்தால் அந்த நிலைமை மாறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? முந்தைய ஆக்கத்தில் இதற்கான பதிலை நாம் பார்த்திருக்கிறோம்.
நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான வைராக்கியத்தைக் கொடுக்கக்கூடிய கடவுளிடம் இதற்காகத் தீவிரமாக ஜெபத்தில் நாம் கேட்கிறவர்களாக இருக்க வேண்டும். பக்தி வைராக்கியத்தைப் பெற்றுக்கொள்ளுவதற்காக நம்முடைய கடமையை, பொறுப்பை இதன் மூலம் நாம் நிறைவேற்றுகிறோம். அதேவேளை, பக்தி வைராக்கியத்திற்குக் கடவுளே ஊற்றும் காரணமுமாக இருக்கிறார் என்பதையும் அறிகிறோம். வைராக்கியத்தைத் தருவது கடவுள்; வைராக்கியத்திற்காக கடவுளிடம் கேட்பது நம்முடைய பொறுப்பு.
இந்த நேரத்தில், பக்தி வைராக்கியத்தை நம்முடைய இருதயத்தில் தூண்டிவிடுவதற்கான வேறு இரண்டு வழிகளையும் காண்கிறோம். அவை என்ன தெரியுமா? நம்முடைய இருதயத்தில் பக்தி வைராக்கியத்தைத் தூண்டிவிடுவதற்கு, கிறிஸ்து யார் என்பதையும் அவரோடு நமக்குள்ள உறவைப் பற்றியும் சரியான கண்ணோட்டத்தை நாம் கொண்டிருப்பதோடு, ஜெபத்தில் அதைப் புதுப்பிக்கவும் வேண்டும். சுயத்துக்காக வாழுவதும் இந்த உலகக் கடவுள்களுக்காக வாழுவதும் பக்தி வைராக்கியத்தை சிதைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். கடவுளின் உதவியோடு அவருடைய வார்த்தையின் மூலமாக நம்முடைய கண்ணோட்டத்தை சரிசெய்தால் என்ன நடக்கும் தெரியுமா? நம்முடைய அருமையான மகிமையுள்ள ஆண்டவராகிய இரட்சகரைப் பற்றிய சரியான பார்வையோடு வளர்ந்தால் என்னவாகும் தெரியுமா? நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய அவருக்கு நன்றியுடன் தாழ்மையுள்ள சேவகனாக நம்மைப் பார்க்கும் பார்வை மாறினால் எப்படியிருக்கும்? இந்தவிதமான சரியான கண்ணோட்டம் நம்மில் பக்தி வைராக்கியத்தை தூண்டிவிடாதா என்ன. கர்த்தராகிய இயேசுவைத் தவிர வேறு யாருக்கோ அல்லது எதற்கோ நான் சேவை செய்கிறவனாக இருப்பேனானால், நான் நிச்சயமாக மனந்திரும்ப வேண்டியவனாக இருக்கிறேன். கர்த்தருக்குப் பணிபுரியும் வாழ்க்கைக்கு நான் திரும்ப வேண்டும்.
இறுதியாக, நம்முடைய இருதயத்தில் பக்தி வைராக்கியத்தை தூண்டிவிடுவதற்கு, நாம் என்ன செய்ய வேண்டும் என்றும், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்றும் நம்முடைய கர்த்தர் சொல்லியிருப்பதை நாம் ஜெபத்தோடு தேடி அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முற்பட வேண்டும். ஒருவேளை, என்னுடைய வாழ்க்கையின் சில அம்சங்களில் கடவுள் நான் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறார் என்பதைப் பற்றி தெளிவற்றவனாக இருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம். அல்லது, கடவுள் இதைத்தான் நான் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார் என்று அறிந்திருந்த போதும் அதை எப்படிச் செய்வது என்பதைப் பற்றி நான் அறியாதிருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம். உண்மையில் இப்படியான நிச்சயமற்ற நிலை என்பது பக்தி வைராக்கியத்திற்கேற்பட்டிருக்கும் பக்கவாதம் போன்றதாகும். இப்படியான வேளையில் நான் என்ன செய்ய வேண்டும்? தாழ்மையோடு கடவுளுக்குக் கீழ்ப்படிகிற எண்ணத்தோடு இதைச் சரிசெய்யும்படி கடவுளிடம் நான் கேட்க வேண்டும். அவர் குறித்திருக்கிற நேரத்தில் நான் எதைச் செய்ய வேண்டும் என்றும் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்றும் அவரிடம் ஜெபத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை அவர் செய்வதாக வாக்களித்திருக்கிறார். (என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலும் அதை உணர்ந்திருக்கிறேன்). அதுமட்டுமல்லாமல், நாம் அவருடைய சித்தத்தின்படி நடக்கிற சேவகர்களாக நமக்குத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ள, நாம் செய்து கொண்டிருக்கும் பணிகளை நாம் பொறுமையோடும் ஆர்வத்தோடும் பொறுப்போடும் தொடர்ந்து செய்து வரவேண்டும். அவர் தெளிவாகச் செய்யச் சொல்லியிருக்கிற சில விஷயங்கள் உள்ளன. அவற்றை நாம் தொடர்ந்து பொறுப்போடு செய்து வரவேண்டும். நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், பேதுரு தன் வேலையில் உண்மையுள்ளவனாக மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதுதான் அவனை ஆண்டவர் மனிதர்களைப் பிடிக்கும்படி அழைத்தார். மனிதர்களைப் பிடிக்கும்படி ஆண்டவர் அவனை அழைக்கும்வரை அவர் ஒன்றும் செய்யாமலிருக்கவில்லை. தான் செய்ய வேண்டியவற்றை அவன் கடமைப்பாட்டோடு செய்து கொண்டிருக்கும்போதே ஆண்டவரின் அழைப்பு அவனுக்கு வந்தது.
நூல் அறிமுகம்
சபை ஒழுங்கு; திருத்தும் ஆத்தும கவனிப்பு – உன் சகோதரன் எங்கே? – ஜோய் செல்வதாசன், கிருபை சுவிசேஷ சபை வெளியீடு, ஜேர்மனி
திருச்சபையில் ஒழுங்குக் கட்டுப்பாடு (Church Discipline) இருக்கவேண்டும் என்பதை எவரும் மறுக்கமுடியாதபடி புதிய ஏற்பாடு அதுபற்றி பல இடங்களில் விளக்குகிறது. ஆனால், உலக சுகத்திற்கு ஆசைப்பட்டும், சுயநலத்தாலும் போதகர்கள் இன்று அதுபற்றி கவலைப்படாமல் இருக்கிறவர்கள் இருக்கட்டும், போகிறவர்கள் போகட்டும் என்ற மனப்பாங்கோடு ஊழியம் செய்து வருகிறார்கள். சபை ஒழுங்குக் கட்டுப்பாடு பற்றி விளக்கும் நூல்களைத் தமிழில் காண்பதென்பது அரிது. திருமறைத்தீபத்தில் அதுபற்றி அதிகம் நான் எழுதிவந்திருக்கிறேன். ஜேர்மனியில் இருந்து பணிபுரிந்து வரும் ஜோய் செல்வதாசன் திருச்சபை ஒழுங்குக் கட்டுப்பாடு பற்றித் தான் எழுதியுள்ள நூலை எனக்கு அனுப்பிவைத்து அதுபற்றிய என்னுடைய கருத்துக்களை எழுதும்படிக் கேட்டிருந்தார். அவருடைய முயற்சியை நான் பாராட்டுகிறேன். ஒழுங்குக் கட்டுப்பாட்டிற்கான அவசியத்தை சுட்டி, அதை அநேகர் செய்யாமலிருப்பதற்கான காரணங்களை விளக்கி, எது ஒழுங்குக் கட்டுப்பாடு, எது ஒழுங்குக் கட்டுபாடு இல்லை என்பவற்றை முன்வைத்து, ஒழுங்குக் கட்டுப்பாட்டைத் திருச்சபை தவிர்க்க முடியாது என்று உணர்த்துவது ஆசிரியரின் நோக்கமாக இருக்கிறது என்பதை நூல் உணர்த்துகிறது.
இது பற்றிய ஒரு முக்கிய அம்சத்தை ஆசிரியர் தொட்டிருந்திருக்கலாம். நம்முடைய இனத்தில் திருச்சபை ஒழுங்குக் கட்டுப்பாடு இல்லாமலிருப்பதற்கு முக்கிய காரணம், என்னுடைய அனுபவத்தைப் பொறுத்தவரையில், திருச்சபை வேத இலக்கணங்களோடு அமைக்கப்படாமல் இருப்பதுதான். இதுபற்றி சமீபத்தில்கூட நம்முடைய வலைதளத்திலும், திருமறைத்தீபத்திலும் எழுதியிருக்கிறேன். திருச்சபையில் ஒழுங்குக்கட்டுப்பாட்டை நடைமுறையில் வைத்திருக்கவேண்டிய பணி போதகர்களுடையது (மூப்பர்கள்). முழுச்சபைக்கும் அதில் பங்கிருந்தாலும் சபை நடத்தும் போதகர்களே அதற்கான நடவடிக்கைகளை வேதபூர்வமாக எடுக்கவேண்டும். போதகர்கள் அதை முறையாகச் செய்வதற்கு உள்ளூர் திருச்சபை மறுபிறப்படைந்தவர்களை மட்டும் கொண்ட அங்கத்துவ அமைப்பையும், சபை சட்ட அமைப்பையும், விசுவாச அறிக்கையையும் கொண்டு அமைய வேண்டும். திருச்சபை ஒழுங்குக் கட்டுப்பாடு சபையாருக்கு மட்டுமே உரியது என்று நூலாசிரியர் ஓரிடத்தில் விளக்கியிருக்கிறார். அது மிகவும் சரியானது. ஆனால், உள்ளூர் சபையின் கோட்பாடுகளை அறிந்து உணர்ந்து அதற்குத் தங்களை முழுமையாக அர்ப்பணித்து அங்கத்தவர்களாக இருக்கக்கூடியவர்களையும், அவர்களைப் போஷித்து வளர்க்கக்கூடிய வேததகுதிகளைக் கொண்டிருந்து, ஒழுங்குக் கட்டுப்பாட்டின் அவசியத்தை உணர்ந்திருக்கும் ஆத்துமதாகமுள்ள போதகர்களையும் உள்ளூர்சபை கொண்டிராதபோது ஒழுங்குக் கட்டுப்பாடு நடைமுறையில் எப்படி இருக்க முடியும்? சபை என்ற பெயரில் ஏனோதானோவென்று ஊழியங்கள் அமைந்திருப்பதாலேயே ஆத்துமாக்களுக்கு ஒழுங்குக் கட்டுப்பாட்டைப் பற்றிய உணர்வே இல்லை. திருச்சபை வேதபூர்வமாக அதற்குரிய இலக்கணங்களைக் கொண்டு அமைந்து இயங்காதபோது ஒழுங்குக் கட்டுப்பாட்டை முறையாகக் கையாளுவதற்கு ஒரு வழியும் இல்லை. பிரசங்கம், திருநியமங்கள், ஒழுங்குக் கட்டுப்பாடு ஆகிய மூன்றை மட்டுமே திருச்சபையின் தவிர்க்க முடியாத அடிப்படை அடையாளங்களாக வலியுறுத்தி எழுதியிருக்கிறார் சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின். கல்வின் அளவுக்கு திருச்சபைபற்றி விளக்கி எழுதியிருப்பவர்கள் இல்லை எனலாம். சீர்திருத்தவாத கிறிஸ்தவ பெரியோர்கள் மற்றும் பியூரிட்டன் தலைவர்கள் அனைவரும் திருச்சபை ஒழுங்குக் கட்டுப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தி எழுதியிருக்கிறார்கள். அது இல்லாமல், திருச்சபை திருச்சபையாக இருக்கமுடியாது.
ஆசிரியர் நூலில் ஒழுங்குக் கட்டுப்பாடு பற்றிய நல்ல பல விஷயங்களை விளக்கியிருக்கிறார். நூலில் எனக்குக் குறைபாடாகத் தெரியும் சில அம்சங்களை அடுத்த பதிப்பில் திருத்திவெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. இவற்றை நூலின் பயன்பாடு கருதியே தந்திருக்கிறேன்.
ஆசிரியரின் எழுத்து நடை ஸ்ரீ லங்கா தமிழில் இருக்கிறது. அதில் தவறில்லைதான். இருந்தாலும் கடினமான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்து வாசகர்கள் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான தமிழில் எழுதினால் அது பலருக்கும் பயனுள்ளதாக அமையும். சில இடங்களில் தலைப்புகள் தெளிவானதாக, விளங்கிக்கொள்ளும்படியாக இல்லை. நல்ல விஷயமொன்றை விளக்கும் நூல் இந்தக் குறைபாட்டால் வாசகர்களுக்கு ஆர்வக்குறைவை ஏற்படுத்தும்படியாக இருந்துவிடக்கூடாது இல்லையா?
அடிக்குறிப்புகளும், மேற்கோள்களும் ஆய்வுநூல்களுக்கு மிகவும் அவசியமானவைதான். அதிகம் வாசிப்பதை வாழ்க்கையில் வழக்கத்தில் கொண்டிராத நம்மினத்துக்கேற்றவகையில் அடிக்குறிப்புகளைத் தவிர்த்து பொப்யூலர் பாணியில் எழுதி நூலை வெளியிட்டால் நன்மை பயக்கும்.
ஒழுங்குக் கட்டுப்பாட்டில் இறுதி நடவடிக்கையே ஒருவரை சபை நீக்கம் செய்வது. அதுபற்றி ஆசிரியர் அதிகமாக விளக்கியிருக்கிறார். இருந்தபோதும், ஒருவரை சபை நீக்கம் செய்வதற்கு முன்னால் பெரும் ஆத்தும பாரத்தோடு பின்பற்றியிருக்கவேண்டிய, மத்தேயு 18ல் விளக்கப்பட்டிருக்கும் ஒழுங்குக்கட்டுப்பாட்டிற்கான ஆரம்ப நடவடிக்கைகளைப் படிமுறையாக உதாரணங்களோடு ஏனைய வேதப்பகுதிகளைப் பயன்படுத்தி விளக்கியிருந்தால் இந்நூல் பலனுள்ளதாக இருந்திருக்கும்.
இந்நூல் விளக்குகின்ற விஷயம் இன்று மிகவும் அவசியமான, நம்மை சிந்திக்க வைக்கவேண்டிய திருச்சபை பற்றிய வேதசத்தியம். சமீபத்தில் நம்மினத்து சபையொன்றில் அதில் தொடர்ச்சியாகப் பிரசங்கித்து வழிநடத்திக்கொண்டிருந்த ஒருவரை, அவர் தன் மனதில்பட்ட உண்மையொன்றை வெளிப்படையாகப் பேசினார் என்பதற்காகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர்மீது சுமத்தி ஒழுங்குக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்திருக்கிறார்கள் என்று ஒருவர் சொல்லக் கேள்விப்பட்டேன். இது எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கவில்லை. திருச்சபை ஊழியம் நம்மினத்தில் பிரேக் இல்லாத டிரெயின் ஒடுவதுபோல் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய மிகத்தவறான, பாரதூரமான நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கத்தான் செய்யும். ஒரு சிலரின் சுயநல நோக்கங்களுக்காகவே பெரும்பாலும் எல்லா ஊழியங்களும் நடந்துவரும் நிலையில் நியாயமான வேத நடவடிக்கைகளை இங்கு எப்படி எதிர்பார்க்க முடியும்?
திருச்சபை ஒழுங்குக் கட்டுப்பாடு ஆத்துமாக்களுக்குரிய ஆவிக்குரிய பாதுகாப்பு. அந்த நோக்கத்திலேயே கிறிஸ்து தன் சபைக்கு அதைத் தந்திருக்கிறார். அந்தப் பாதுகாப்பை ஆத்துமாக்களுக்குத் தராமல் திருச்சபை என்ற பெயரில் எதைச்செய்து என்ன பயன்? வீட்டில் வளரும் பிள்ளைகளுக்குக்கூட பெற்றோர் பாதுகாப்பு வளையம் போடுகிறார்கள். தேசத்து அரசுகளும் மக்களின் பாதுகாப்புக்கு சட்டங்களை வகுத்து இயங்குகின்றன. மிருகங்களும், பறவைகளுங்கூட தங்களின் பாதுகாப்பிற்காக சில வரையறைகளை வகுத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றன. இதெல்லாவற்றையும்விட உயர்ந்த ஆத்துமாக்களின் ஆத்துமப் பாதுகாப்புக்கு கர்த்தரே தன் வேதத்தில் வகுத்துத் தந்திருக்கும் திருச்சபை பற்றிய போதனைகளையும், திருச்சபை ஒழுங்குக் கட்டுப்பாட்டையும் உதாசீனம் செய்து வருகிறவர்களை எந்தப் பெயரில் அழைப்பது? இந்நூல் ஒரு நல்ல ஆரம்ப முயற்சி. இதில் அவசியமான மாற்றங்களைச்செய்து எளிமையான தமிழில் வெளியிட்டால் பலருக்கும் உதவும்.