திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2019 -ம் ஆண்டு மூன்றாம் இதழ்

1. வாசகர்களே!

2. அக்டோபர் 31, 1517

3. மார்டின் லூத்தரின் 95 குறிப்புகள் 

4. இறையியல் பச்சோந்திகள்

5. தேவபயத்தின் பிறப்பிடம்

6. கிறிஸ்தவ வைராக்கியத்தை அழிக்கவோ அல்லது குறைக்கவோ கூடிய நான்கு அம்சங்கள்

 

வாசகர்களே!

கடந்த இதழில் இந்த வருடம் சீர்திருத்த வரலாறு ஆரம்பமான 500வது வருடம் என்பதை நினைவுபடுத்தியிருந்தேன். அதன் காரணமாக அது பற்றிய இரண்டு ஆக்கங்கள் இதில் வந்திருக்கின்றன. 1517ம் ஆண்டு உலகத்தைச் சார்ந்தவர்களுக்கு பொருளற்ற, எல்லா வருடங்களையும் போன்ற சாதாரண வருடமாகத் தெரியலாம். கிறிஸ்தவர்களுக்கு அது அப்படிப்பட்டதல்ல. திருச்சபைக்கு அது மிகச்சிறப்பான வருடம். கிறிஸ்தவத்தையும், கிறிஸ்தவ சத்தியங்களையும் மறுபடியும் பகிரங்கமாக நிலைநாட்டிய வருடம். சீர்திருத்த வரலாற்றை வாசிக்காதவர்களும், அதுபற்றிய சிறப்பை உணராதவர்களும் மட்டுமே இந்த வருடத்தை உதாசீனம் செய்வார்கள். நாம் வெளியிட்டிருக்கும் கிறிஸ்தவ வரலாறு, இரண்டாம் பாகத்தை வாங்கி வாசியுங்கள். சீர்திருத்த வரலாற்றுக்காலத்தைப் பற்றிய உண்மைகளை விளங்கிக்கொள்ள அது துணை செய்யும். நம் வரலாற்றைப்பற்றிய உண்மைகள் தெரியாமல் வாழ்வதைப் போன்ற ஆபத்து எதுவுமில்லை.

சீர்திருத்தவாத வரலாறு நமக்கு இன்னொன்றையும் நினைவுபடுத்துகிறது. அதாவது, சத்தியம் நமக்கு வெறும் ‘லேபலாக’ இருந்துவிடக்கூடாது என்பதுதான். சத்தியத்தை அறிந்துகொள்ளுகிற ஆர்வமிருக்கின்ற அளவுக்கு பலருக்கு அதில் ஆழ்ந்த அசைக்கமுடியாத நம்பிக்கை இல்லாதிருப்பதை நான் காண்கிறேன். பச்சோந்தி தன் நிறத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ளுவதுபோல் சத்தியத்தில் நாம் மாற்றங்களைக் கொண்டுவரக்கூடாது. சத்தியம் எப்போதும் ஒன்றே (எபே. 4). திருச்சபை சத்தியத்துக்கு தூணாக, ஆதரவாக, பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதனால் பிரசங்கிகளும், போதகர்களும் சத்தியத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கவேண்டும். அதை விளக்குகின்ற ‘இறையியல் பச்சோந்திகள்’ என்ற ஆக்கத்தை இதில் நீங்கள் வாசிக்கலாம்.

கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அவசியமான தேவபயத்தையும், பக்திவைராக்கியத்தையும் வலியுறுத்தி அதுபற்றிய தொடர் ஆக்கங்களை போதகர்கள் அல்பர்ட் என் மார்டினும், டேவிட் மெரேக்கும் இந்த இதழில் எழுதி வருகிறார்கள். இதுவரை வந்துள்ள இதழ்களைப்போல இதுவும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும், ஜெபமும். இந்த இதழை நல்ல முறையில் தயாரித்து உங்கள் கரத்தை வந்தடையத் துணை செய்த அனைவருக்கும் எங்கள் நன்றி கலந்த வணக்கங்கள். – ஆர்

அக்டோபர் 31, 1517

தலபான் (Talaban) தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் புத்தமத சமய, வரலாற்றுச் சின்னங்களை சின்னாப்பின்னமாக்கினார்கள். அதையே பின்பு ஐசில் தீவிரவாத குழுவும் சிரியாவில் தான் கைப்பற்றிய இடங்களில் செய்தது. இவர்களெல்லாம் வரலாற்றின் ஒருபகுதி தங்களுடைய சிந்தனாவாதத்திற்கு எதிராக இருப்பதாகக் கருதி அதை அடியோடு இல்லாமலாக்கினால் மக்கள் நினைவிலிருந்து அதை அகற்றிவிடலாம் என்பதற்காகவும், தங்களுடைய சிந்தனாவாதத்தை சமுதாயத்தில் ஆணித்தரமாகப் பதிக்கவும் அதைச் செய்தார்கள். இன்று அமெரிக்காவில் ஒபாமாவின் லிபரல் போக்கைப் பின்பற்றும் சமுதாயத்தில் ஒரு பகுதி கொன்பெடரேட் (Confederate) தலைவர்களின் நினைவுச்சின்னங்களை இல்லாமலாக்கவேண்டும் என்ற குறுகிய நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இதைச் செய்தால் தங்களுடைய குறுகிய கோரமான லிபரல் மனப்பான்மையை சமுதாயத்தில் ஆழப்பதித்து பாரம்பரிய, கன்ஷர்வெட்டிவ் (Conservative) சிந்தனை வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று இவர்கள் கனாக் காண்கிறார்கள். ரொபட் ஈ லீ, சாமுவேல் ஜாக்சன் போன்ற தலைசிறந்த கன்ஷர்வெட்டிவ் கிறிஸ்தவ தலைவர்கள் நினைவுச் சின்னங்களை அகற்றத் துணிந்திருக்கும் இந்தக் குறுகிய நோக்கம் கொண்ட விஷமிகளுக்கு வரலாற்றின் அருமையோ, அதுபோதிக்கும் பாடங்களைப்பற்றியோ எந்தக் கவலையும் இல்லை. குறுகிய நோக்கத்தோடு தற்காலத்துக்காகவும், சுயலாபத்துக்காகவும் மட்டுமே அராஜகத்தில் ஈடுபடும் இந்த விஷமிகள் வரலாறு தங்களுடைய நோக்கங்களுக்கும், இச்சைகளுக்கும் ஆபத்தாக இருப்பதாகக் கருதுகிறார்கள்.

வரலாறு அருமையானது; அது நல்லதையும் கெட்டதையும் சேர்த்தே விளக்குகிறது. வரலாற்றை வாசிக்கின்றபோது கெட்டதைப் பின்பற்றாமல் நல்லதைப் பாராட்ட வேண்டும். வரலாறு நமக்குப் போதிக்கும் பாடங்கள் எண்ணற்றவை. வரலாற்றை நாம் சமுதாயத்தீங்காகக் கருதக்கூடாது. அது சமுதாய நடப்பை வர்ணிக்கிறது. நமக்கு வரலாற்றின் எந்த அம்சமும் பிடிக்கவில்லை என்பதற்காக அதை அழிக்கமுனையக்கூடாது. அப்படிச்செய்வது குறுகிய மனப்பான்மையின் அடையாளம். இந்தியாவை பிரிட்டன் ஆண்டது வரலாறு. கீழைத்தேய நாடுகளின் பகுதிகளை போர்த்துக்கள், ஹாலாந்து, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் என்று பல தேசங்கள் ஆண்டிருக்கின்றன. இது வரலாறு; இது நமக்கு அவலட்சணத்தின் அடையாளமல்ல. அப்படிக் கருதுவது தவறு. வரலாறு, வீரம், கோழைத்தனம், தைரியம், அநீதி, நீதி, அராஜகம், சுதந்திர வேட்கை, ஆண்மை, போராட்டம், அமைதி, காதல் என்று எல்லாவற்றையும் விளக்கி நம்மை எதிர்காலத்தை நோக்கி வழிநடத்துகிறது. வரலாறு நமக்கு ஆசிரியன். அவனிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை அநேகம். வரலாற்றை துச்சமாக எண்ணாதீர்கள். வரலாற்றை நடந்து முடிந்த மானுட வாழ்க்கையின் தொகுப்பாகக் கணித்து பாடம் கற்றுக்கொள்ளப் பாருங்கள்.

வரலாற்றை துச்சமாக எண்ணும் சமுதாயம் தொலைநோக்குப் பார்வையற்றது. வரலாற்றைப் புறந்தள்ளும் சமுதாயம் வளர்ச்சியை நோக்கிப் போகமுடியாது. பிடிக்கிறதோ இல்லையோ வரலாறு நமக்கு வழிகாட்டி. கிறிஸ்தவன் வரலாற்றைப் புறக்கணிக்க முடியாது. நம் விசுவாசம் வரலாற்றோடு தொடர்புடையது. வேதமே இவ்வுலகில் கர்த்தரின் செய்கைகளின் வரலாறுதானே. முதல் நூற்றாண்டு திருச்சபை வரலாற்றை அப்போஸ்தல நடபடிகளில் வாசிக்காமல் நாம் திருச்சபை அமைக்கவோ, திருச்சபை வாழ்க்கையை இன்று வாழவோ முடியுமா? வரலாற்றில் ஆழமாகக் கால் பதித்திருக்கும் விசுவாசம் நம்முடையது. இந்தியாவின் தமிழகம், ஸ்ரீ லங்கா ஆகிய நாடுகளில் ஒரு சிறு தொகையினர் கிறிஸ்தவ வரலாற்றை வெள்ளையர்களின் காலனித்துவ ஆதிக்கமாகப் பார்க்கும் குறுகிய நோக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். குறுகிய சிந்தனைகொண்ட இவர்கள் வெகு சிலரே; அது நமக்கு சந்தோஷமே. இத்தகையவர்களின் வலைகளில் சிக்கிவிடாதீர்கள். 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதம், 17ம் நூற்றாண்டு பியூரிட்டன் பெரியவர்கள், 18ம் நூற்றாண்டு கிறிஸ்தவ தலைவர்களையெல்லாம் இவர்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களோ தெரியாது. இந்த வரலாற்றையெல்லாம் காலனித்துவ ஆதிக்கமாக இவர்கள் பார்ப்பார்களானால் இவர்களைவிட முழுமுட்டாள்கள் எவரும் இருக்கமுடியாது. கிறிஸ்தவனுக்கு குறுகிய மனப்பான்மை, இனத்துவேஷம், வட்டாரவீம்பு, பிரதேச ஆணவம் எதுவுமே இருக்கக் கூடாது. கிறிஸ்தவன் கிறிஸ்தவனாக மட்டுமே இருக்கவேண்டும்; கிறிஸ்தவ வேதப்பார்வையை மட்டுமே கொண்டிருக்கவேண்டும். கிறிஸ்துவின் சுவிசேஷம் சகல மதில் சுவர்களையும் தகர்த்து தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரையும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாக்கியிருக்கிறது; ஒரே சரீரத்தின் அங்கமாக்கியிருக்கிறது.

இங்குதான் என்னால் 16ம் நூற்றாண்டு திருச்சபை நிகழ்வுகளை எண்ணிப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதம் ஐரோப்பாவில் ஜெர்மனியில் ஆரம்பித்தபோதும் அது உலகம் தழுவிய திருச்சபை சீர்திருத்தம்; கிறிஸ்தவ சீர்திருத்தம். அக்டோபர் 31ல் 1517ம் ஆண்டு ஜெர்மனியில் நிகழ்ந்த நிகழ்ச்சிக்கும் கிறிஸ்தவர்களாகிய நமக்கும் பிரிக்க முடியாத பெருந்தொடர்பு உண்டு. அதற்குக் காரணம் அது இறையாண்மையுள்ள கர்த்தர் செய்த ஆத்மீக எழுப்புதல். எப்படி பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கும் நமக்கும் பிரிக்கமுடியாத தொடர்பிருக்கிறதோ, முதல் நூற்றாண்டு ஆதி சபையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கும் நமக்கும் இணைபிரியாத தொடர்பிருக்கின்றதோ அதேபோல் ஐரோப்பாவில் 16ம் நூற்றாண்டில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கும் நமக்கும் பிரிக்கமுடியாத தொடர்பிருக்கின்றது. வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த மார்டின் லூத்தர் (ஜெர்மனி), ஜோன் கல்வின் (பிரான்ஸ்), தியோடர் பீசா (பிரான்ஸ்), சுவிங்ளி (சுவிட்ஸர்லாந்து), ஜோன் நொக்ஸ் (ஸ்கொட்லாந்து) ஆகியோருக்கும் தமிழர்களாகிய நமக்கும் அத்தனை உறவு இருக்கின்றது. இவர்கள், ஆபிரகாம், மோசே போன்று நமக்கு முப்பாட்டர்கள். இவர்களுக்கும் நமக்கும் பிறப்பினால் உண்டாகும் இரத்த உறவுத்தொடர்பில்லாதிருந்தாலும், அதையெல்லாம்விட உறுதியான கிறிஸ்துவின் இரத்தவழித்தொடர்பு இவர்களோடு நமக்கிருக்கிறது. இவர்களுடைய இனம் வேறாயிருந்திருக்கலாம், நிறமும் மொழியும் வேறாயிருந்திருக்கலாம்; ஆனால், கிறிஸ்துவுக்குள் நாம் ஒன்றிணைந்திருக்கிறோம். ஆபிரகாமைப் பயன்படுத்திய அதே தேவன் இவர்களையும் தன்னுடைய ராஜ்ய விருத்திக்காக எழுப்பிப் பயன்படுத்தியிருக்கிறார். இவர்களையும் இவர்களுடைய வரலாற்றையும் உதறித்தள்ளுவது வேதத்தையே உதறித்தள்ளுவது போலாகிவிடும். இன்று நாம் சுதந்திரத்தோடு வேதத்தை வாசித்து விசுவாசிக்கக்கூடியதாக இருக்கின்ற விசுவாசத்தின் மூலம் மட்டுமே நீதிமானாக்குதல் போதனைக்கு உயிரூட்டி சுவிசேஷம் சுவிசேஷமாகத் தொடர்ந்து பிரசங்கிக்கப்பட இவர்கள் தங்கள் வாழ்வையே பணயம் வைத்து உழைத்திருக்கிறார்கள்.

1517ல்தான் சீர்திருத்தவாதி மார்டின் லூத்தர் மெய்யான சீர்திருத்த சத்தியப் போராட்டத்தை ஆரம்பித்து கத்தோலிக்க மதத்தின் போலித்தனத்தைத் தன்னுடைய 95 குறிப்புகளை வெளியிட்டுத் தோலுரித்துக்காட்டி சமுதாயத்தை சிந்திக்க வைத்தார். இதுபற்றி விருப்பமான எவரும் தன்னோடு விவாதத்தில் ஈடுபடலாம் என்று பகிரங்கமாக லூத்தர் அறிவித்திருந்தார். தன்னுடைய செயல் எந்தளவுக்கு அன்று ஐரோப்பாவை மட்டுமல்ல முழு உலகத்தையும் இன்றுவரை பாதித்து கிறிஸ்தவ எழுப்புதலை ஏற்படுத்தப்போகிறதென்பதெல்லாம் லூத்தர் அறியாதிருந்த உண்மைகள். போலிப்போதனையின் மூலம் மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்த கத்தோலிக்க மதத்தின் மெய்ரூபத்தைத் தோலுரித்துக்காட்டி சுவிசேஷத்தை மக்கள் அறிந்துகொள்ளுவதற்காகவே லூத்தர் அன்று இச்செயலில் ஈடுபட்டார். தன்னுடைய சொந்த மகனை கர்த்தரின் வார்த்தையைக் கேட்டு முழு விருப்பத்தோடு பலிகொடுக்க ஆபிரகாம் தயாராகி அதைச்செய்யத் துணிந்த அந்த வரலாற்றுச் செய்கையல்லவா இன்றைக்கும் இரட்சிக்கும் விசுவாசம் கிரியையோடு இணைந்து வரும் விசுவாசம் என்ற யாக்கோபுவின் போதனைக்கு உதாரணமாக இருந்து, கிறிஸ்தவர்களாகிய நாம் நற்கிரியைகளில் ஈடுபட வேண்டும் என்பதை இன்றும் வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. அதேபோல் சத்தியத்திற்கெதிரான எதையும் தோலுரித்துக்காட்டி சத்தியத்தை மேலோங்கச் செய்யவேண்டும் என்று ஆவியால் வழிநடத்தப்பட்டு லூத்தர் எடுத்த நடவடிக்கை ஆபிரகாமின் செயலைவிட எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல.

ஜெர்மனியில் அன்று நிகழ்ந்த சம்பவத்தின் காரணமாகவே இன்று நாம் வாசிக்கக்கூடியதாக வேதம் நம் கையில் இருக்கிறது. அதன் காரணமாகவே வேதம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது மட்டுமல்லாமல், வேதத்தை எப்படி விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்கான வரலாற்று, இலக்கண அடிப்படையிலான வேதவிளக்க விதிமுறை சீர்திருத்தவாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் பயனுள்ளதாக இருந்துவருகிறது. திருச்சபை என்ற பெயரில் சிலைவணக்கத்திலும், தனி மனித வணக்கத்திலும் கர்த்தரின் பெயரில் கத்தோலிக்க மதம் ஈடுபட்டு வந்திருந்ததை அடியோடு மாற்றி, திருச்சபை வேதபூர்வமாக அமைந்து ஆராதனையில் எப்படி ஈடுபட வேண்டும் என்ற புதிய ஏற்பாட்டுப் போதனையின் அடிப்படையிலான திருச்சபையை 1517ம் ஆண்டு நிகழ்வு நமக்கு மறுபடியும் அறிமுகப்படுத்தியது. 1517ன் சீர்திருத்தவாதம் மாபெரும் சுவிசேஷ எழுப்புதல். சீகன்பால்கு, வில்லியம் கேரி போன்ற மிஷனரிகள் நம் தேசங்களுக்கு சுவிசேஷத்தைக் கொண்டுவந்தார்கள். ஹென்றி மார்டின் இன்றைய பங்களாதேசத்திற்கும், அடோனிராம் ஜட்சன் இன்றைய மியன்மாருக்கும் சுவிசேஷத்தைக் கொண்டு சென்றார்கள். இவர்களெல்லாம் மிஷனரிப் பணியில் ஈடுபட அவர்களைத் தூண்டி வழிநடத்தியது 16ம் நூற்றாண்டு திருச்சபை சீர்திருத்தமே. அன்று ஜெனீவாவில் இருந்து திருச்சபை மூலமாக ஜோன் கல்வின் செய்த மாபெரும் மிஷனரிப் பணியே சீர்திருத்தவாதத்தின் மிஷனரிப்பணிக்கெல்லாம் முன்னோடியாக இருந்து வருகிறது.

முடிந்துபோன வரலாறல்ல சீர்திருத்தவாதம்

16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதம் மறந்துவிடவோ அல்லது வருடத்தில் ஒரு தடவை மட்டும் நினைத்துப் பார்க்கவோ வேண்டிய வெறும் வரலாற்று நிகழ்வு அல்ல. அது திருச்சபையில் தொடர வேண்டிய சீர்திருத்தத்தை நினைவுபடுத்தும் தெய்வீக நிகழ்வு. வேதம் இன்று நம் கையில் இருக்கிறது; சுதந்திரமாக நம்மால் திருச்சபையில் கர்த்தரை ஆராதிக்க முடிகிறது. கத்தோலிக்கப் போப்பின் காட்டாட்சி இன்று நம்மீது இல்லை. இதெல்லாம் நடந்திருப்பதால் மட்டும் சீர்திருத்தவாதத்தை முடிந்துபோனதொன்றாகக் கருதமுடியாது. வேதம் கையில் இருந்தபோதும் வேதபூர்வமான வேதப்பிரசங்கம் இன்று நம்மினத்தில் அருகிக் காணப்படுகிறதே! மத சுதந்திரம் நமக்கிருந்தபோதும் வேதபூர்வமாக அமைந்த திருச்சபைகள் இல்லாமல் போலிப் போதகர்களின் கையில் சிக்கி ஆத்துமாக்கள் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறார்களே! தரமான இறையியல் போதனைகளை வழங்கும் நூல்கள் ஆங்கிலத்தில் ஏராளமாக இருந்தபோதும் சத்திய இறையியல் பஞ்சம் நம்மினத்தில் திருச்சபைகளிலும், இறையியல் கல்லூரிகளிலும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறதே! லூத்தரைப்போலவும், கல்வினைப்போலவும், நொக்ஸைப் போலவும், ஸ்பர்ஜனைப்போலவும் சத்திய வாஞ்சையோடு பிரசங்கித்து போதகப் பணிசெய்கிறவர்களைக் காணமுடியாமலிருக்கிறதே! உயிரே போனாலும் சத்தியம் மட்டுமே பெரிதென்று சீர்திருத்தத்தில் ஈடுபட்ட 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளை நினைவுறுத்துகிற எவரையாவது எங்காவது இன்று காணமுடிகிறதா?

1517ஐ பின்னோக்கிப் பார்க்கவேண்டிய கடமை நமக்கிருந்தபோதும் அதோடு ஒரு ஆபத்தும் சேர்ந்து வருகிறது. அந்த ஆபத்து குருட்டார்வத்தில் மார்டின் லூத்தருக்கு பாராட்டு விழா வைத்துவிடுகின்ற ஆபத்துதான். நம்மினத்து அரசியல்வாதிகளுக்கு மாலைபோட்டு தோளில் பொன்னாடை போர்த்தி நாலு நல்ல வார்த்தைகள் சொல்லுவதுபோல் ஒரு விழா நடத்திவிடுகின்ற ஆபத்து இருக்கின்றது. அதைச் செய்யாமலிருக்கப் பார்த்துக்கொள்ளவேண்டும். அப்படிச் செய்வது இந்த ஆவிக்குரிய பெரிய மனிதர்களுக்கு நாம் செய்கிற துரோகம் மட்டுமல்ல, சீர்திருத்தவாதத்தையே அசிங்கப்படுத்துகிற செயலாகிவிடும்.

1517ஐ நாம் இன்று எந்தவிதத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும்? 16ம் நூற்றாண்டு இன்று நமக்கு தொடர வேண்டிய திருச்சபை சீர்திருத்தத்தை நினைவுறுத்துகிறது. அதாவது சீர்திருத்த வரலாற்றை முடிந்துபோனதொன்றாகக் கருதாமல் அது வெளிப்படுத்தியிருக்கும் சத்தியங்களின் அடிப்படையில் தனிப்பட்ட வாழ்க்கையில் கிறிஸ்தவன் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியவனாக இருக்கிறான்.

நீங்கள் கிறிஸ்தவராக இருப்பீர்களானால் பலரும் இரத்தம் சிந்தி உங்களுக்கு அளித்திருக்கின்ற வேதத்தில் நீங்கள் எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். வேத அறிவை வளர்த்துக்கொள்ள என்ன செய்துவருகிறீர்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாக அன்றாடம் கிறிஸ்துவுக்கு தாழ்மையோடு கீழ்ப்படிந்து நடக்கின்றதாக இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து பாருங்கள். இதிலெல்லாம் மாற்றங்கள் இல்லாதிருக்குமானால் தேவையான மாற்றங்களை உடனடியாகக்கொண்டுவர மனத்தாழ்மையோடும் விசுவாசத்தோடும் நடவடிக்கை எடுப்பீர்களானால் அதுவே நீங்கள் இப்போது உடனடியாக உங்கள் வாழ்க்கையில் செய்யவேண்டிய அவசியமான சீர்திருத்தம்.

சீர்திருத்த வரலாறு திருச்சபையில் சீர்திருத்தம் தொடர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. இரத்தம் சிந்தி சீர்திருத்தவாதிகளும் பியூரிட்டன் பெரியவர்களும் பெற்றுத்தந்திருக்கும் கிறிஸ்தவ சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும். அரசுக்கும், தனிமனிதனுக்கும், சுயத்துக்கும் அடிபணிந்து வாழ்வதாக திருச்சபை இருக்கக்கூடாது. 1900ங்களில் நடுப்பகுதியில் இந்திய பிரெஸ்பிடீரியன், மெத்தடிஸ்டு மற்றும் ஆங்கிலிக்கன் (சி. எஸ். ஐயும், சி. என். ஐயும்) திருச்சபைகள் இந்தியாவில் சத்தியத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு இணைந்து ஐக்கியத் திருச்சபைகள் ஸ்தாபனத்தை ஆரம்பித்தன. இது சத்திய விரோத லிபரலிசத்தை இத்திருச்சபை அமைப்புகளில் நிலைநிறுத்தின. இவற்றில் சீர்திருத்தத்தைக் கொண்டுவர முடியாதளவுக்கு பொய்யும் புரட்டும் ஆண்டுவருகின்றன. மறுபுறம் கெரிஸ்மெட்டிக் நிறுவனங்களும், திருச்சபைகளும் உணர்ச்சிக்கு அடிமையாகி வேதத்தை ஒதுக்கிவைத்திருக்கின்றன. இவைகளுக்கிடையில் சகோதரத்துவ சபைகள் சுவிசேஷ சபைகளாக இருந்தபோதும் காலக்கூறு கோட்பாட்டிற்கு கொடுக்கும் மரியாதையை வேதத்திற்கும், திருச்சபை பற்றிய வேதக்கோட்பாடுகளுக்கும் கொடுக்க மறுத்து நிற்கின்றன. சீர்திருத்தப் போதனைகளில் முக்கியமானவற்றிற்கு இவர்கள் எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள். இத்தகைய நம்மினத்துக் கிறிஸ்தவ சூழ்நிலையில் சீர்திருத்தத்தை எப்படித் தொடர்வது என்ற ஆதங்கமும், கேள்வியும் எழாமல் இருக்காது. இன்று சீர்திருத்தவாதம் தொடர வேண்டுமானால் வேத அடிப்படையிலான சபைகள் சீர்திருத்தவாத கோட்பாடுகளை நடைமுறையில் கொண்டு அமைவதைத் தவிர வேறு வழியில்லை.

தொடர்கின்ற திருச்சபை சீர்திருத்தத்தின் அடையாளமாக இருக்கும் 1517, இன்று நாம் வைராக்கியத்தோடு மனித பயமில்லாமல் பக்திவிருத்தியோடு உணர்வுபூர்வமாக ஜெபத்தோடு ஈடுபட வேண்டிய சீர்திருத்தத்தை நினைவுறுத்துகிறது. எவருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, எத்தனை பேர் பின்னால் வருகிறார்களோ இல்லையோ, வாழ்க்கை சுகங்களை இழந்து சத்தியத்தை மட்டும் அப்பட்டமாகப் பின்பற்றி வாழவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். 1517 சுட்டி வழிகாட்டி நாம் தொடரும்படியாக வற்புறுத்துகின்ற சத்தியங்களில் முக்கியமானவை என்ன தெரியுமா? கிருபையினால் விசுவாசத்தின் மூலம் மட்டும் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறவர்களுக்கான இரட்சிப்பு, வேத இறையியலின்படி மட்டுமே அமைந்த தேர்ந்த சிறந்த வியாக்கியானப் பிரசங்கம், வேதவழிகளை மட்டுமே பின்பற்றுகிற கர்த்தர் ஏற்றுக்கொள்ளுகிற ஆராதனை, வேதவழிப்படி மட்டும் முறையான சபை அமைப்போடு அமைந்து இயங்கும் திருச்சபை, வேதவழிப்படி மட்டுமே கொடுக்கப்படும் கிருபையின் நியமங்கள், வேத வழிகளை மட்டுமே பின்பற்றும் சுவிசேஷப் பணி, வேதசத்தியத்தில் தேர்ந்த பக்திவிருத்தியுள்ள போதகப் பணி, சமுதாய அசிங்கங்களுக்கும், பண்பாட்டுச் சீரழிவுகளுக்கும் இடங்கொடுத்து அமையாத குடும்ப வாழ்க்கையும் பிள்ளை வளர்ப்பும் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சமீபத்தில் நான் வேத ஆலோசனை கொடுத்த ஒரு குடும்பம். ‘ஐயா, இந்தப் போதனைகளையெல்லாம் நம்மினத்து மக்கள் கேட்டு வளர்ந்தால் எத்தனை நன்மையானதாக வாழ்க்கை இருக்கும், ஆனால் இப்படியெல்லாம் போதிக்கும் போதகர்களோ, சபைகளோ இல்லையே’ என்று பேராதங்கத்தோடு சொன்னார்கள். அதனால்தான் 1517 சீர்திருத்த வரலாறு நம்மினத்தில் இன்று அருகிக் காணப்படும் சீர்திருத்தத்தை, தொடரவேண்டிய சீர்திருத்தத்தை வற்புறுத்தி நினைவூட்டுகிறது. சீர்திருத்தவாத வரலாற்றை நினைத்துப்பார்ப்பதோடு நின்றுவிடாமல் அதற்காகத் தொடர்ந்து கர்த்தரின் துணையோடு உழைப்போம்.

 

 

மார்டின் லூத்தரின் 95 குறிப்புகள்

1517ல் சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர் கத்தோலிக்க மதத்திற்கெதிரான தன்னுடைய போதனைகளை 95 குறிப்புகளாக எழுதி ஜெர்மனியில் விட்டன்பேர்க் எனும் இடத்தில் இருந்த கோட்டைக் கதவில் பதித்தார். அக்காலத்தில் முக்கியமான மத, அரசியல் விவாதங்களில் ஈடுபடுகிறவர்கள் இவ்வாறு செய்வது வழக்கம். இதன் மூலம் இந்தக் குறிப்புகள் பற்றி தன்னோடு விவாதத்தில் ஈடுபட கல்விமான்களுக்கும், மதகுருமாருக்கும் லூத்தர் அழைப்புவிடுத்தார். இந்தத் 95 குறிப்புகளை எழுதி போப் 10ம் லியோவுக்கு எதிராக மார்டின் லூத்தர் போராட்டத்தை ஆரம்பித்ததற்கு முக்கியமான காரணமுண்டு. அன்று போப் லியோ ரோம் நகரத்தில் செயின்ட் பீட்டர்ஸ் பெசீலிக்காவை கட்டுவதற்கு மக்களிடம் பணம் திரட்டிக் கொண்டிருந்தார். லூத்தரை மனக்கசப்படையச் செய்தது பெசீலிக்கா கட்டியது அல்ல; அதைக் கட்டுவதற்கு போப் பணம் சேர்த்தவிதமே. போப் லியோ மக்களிடம் பணம் பெறுவதற்காக, பெசீலிக்கா கட்டுவதற்கு அவர்கள் கொடுக்கும் பணத்தொகைக்கேற்ப அவர்களுடைய பாவங்களை மன்னித்து பாவமன்னிப்புப் பத்திரத்தைத் தானே கையெழுத்திட்டு வழங்குவதாக உறுதிமொழி தந்திருந்தார். இதுவே லூத்தரைக் கொதிப்படையச் செய்தது.

மக்களுக்கு பாவமன்னிப்புக் கொடுக்க கத்தோலிக்க போப்பால் எப்படி முடியும் என்ற கேள்வி உங்களுக்கெழலாம். அதுவரை இருந்துள்ள பரிசுத்தர்கள் (Saints) அனைவரும் செய்துள்ள நற்கிரியைகளெல்லாம் பொக்கிஷமாக கத்தோலிக்க மதத்தின் கரத்தில் வைக்கப்பட்டிருப்பதாக கத்தோலிக்க மதம் போதித்து வந்தது. கிறிஸ்துவின் கிரியைகளின் பலன்களும் இந்தவிதமாக தங்கள் சபைக்கே கொடுக்கப்பட்டிருப்பதாக கத்தோலிக்க மதம் கூறிவந்தது. இதன் காரணமாக எவராவது பாவத்தில் சிக்கிக் கொண்டிருந்தால், அவர்களுடைய பாவம் போவதற்காக தங்களிடம் இருக்கும் நற்கிரியைகளின் பலன்களாகிய பொக்கிஷத்தில் இருந்து அவர்களுடைய பாவத்துக்கு கிரயமாக ஒரு குறிப்பிட்ட அளவை அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் பாவத்தை மன்னித்து, அந்த மன்னிப்புக்கு அத்தாட்சியாக போப் கையெழுத்திட்ட பாவமன்னிப்புப் பத்திரத்தைத் தங்களால் தரமுடியும் என்பது கத்தோலிக்க மதப்போதனையாக இருந்தது.

மார்டின் லூத்தர் ஏற்கனவே பல காலமாக தன்னுடைய பாவம் உணர்த்தப்பட்டு இரட்சிப்புப் பற்றியும், இரட்சிப்பின் நிச்சயம் பற்றியும் கேள்விகள் கேட்டு அவற்றிற்கான விளக்கங்களை நாடி சுவிசேஷ ஞானத்தை அடைந்திருந்தார். போப்பின் பாவமன்னிப்பு பத்திரமும், அதற்கு அவர் கொடுத்த விளக்கமும் லூத்தரை சமாதானத்தோடு இருக்கவிடவில்லை. வேதம் போதிக்கும் சுவிசேஷத்திற்கு முற்றிலும் எதிரான போலிப்போதனையாக இதைக் கருதி போப்புக்கு எதிராகக் கிளம்பினார் லூத்தர். ஆகவே, 16ம் நுற்றாண்டு சீர்திருத்தவாதம் ஏனைய முக்கிய போதனைகளான விசுவாசத்தின் மூலம் மட்டுமே நீதிமானாகுதல், வேதம் மட்டுமே அதிகாரம் கொண்டது போன்ற போதனைகளை மக்கள் முன்வைத்தபோதும் சீர்திருத்தவாதத்திற்கான பிரதான காரணம் போப் லியோ அறிமுகப்படுத்திய பாவமன்னிப்புப் பத்திரமும், அதற்குக் கொடுத்த விளக்கமுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். லூத்தரைப் பொறுத்தவரையில் போப்பின் செயல் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு முற்றிலும் எதிரானது. மக்கள் பெசீலிக்கா கட்டுவதற்கு கொடுக்கும் பணமாகிய நற்கிரியையின் மூலம் அவர்கள் செய்திருக்கும் பாவத்தைக் கத்தோலிக்க மதம் மன்னிக்கமுடியும் என்ற போப்பின் விளக்கம், ஒருவன் தன்னுடைய நற்கிரியைகளினால் தன் பாவத்திற்கு மன்னிப்புப் பெற்று இரட்சிப்பை அடையமுடியும் என்ற போலிப்போதனை என்று லூத்தர் அதை வைராக்கியத்தோடு எதிர்த்தார்.

95 குறிப்புகள்


லூத்தர் தன்னுடைய 95 குறிப்புகளை சாதாரண மனிதர்கள் வாசிப்பதற்காக மக்கள் மொழியில் எழுதவில்லை. படித்த, கல்விமான்களும், விரிவுரையாளர்களும், மதஅதிகாரிகளும் அதுபற்றித் தன்னோடு அறிவுபூர்வமாக விவாதம் செய்வதற்காக அதை இலத்தீன் மொழியில் எழுதியிருந்தார். பின்னால் அது ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு கோட்டைக் கதவில் பதிக்கப்பட்டது. இந்தக் குறிப்புகள் மூன்று முக்கிய விஷயங்களை முன்வைத்தது. (1) கெதீட்ரல் கட்டுவதற்கு பாவமன்னிப்புப் பத்திரம் விற்பது. (2) பாவமன்னிப்புக் கொடுக்கும் வல்லமை தனக்கிருப்பதாக போப் சொல்வது. (3) பாவஉணர்வடைந்திருக்கும் ஆத்துமாக்களுக்கு பாவமன்னிப்புப் பத்திரம் ஏற்படுத்தும் பெரும் ஆத்தும துன்பம் ஆகியவையே அவை. பாவமன்னிப்புப் பத்திரங்கள் ஆத்துமாக்களைத் தவறான வழியில் நடத்துவதாக லூத்தர் நம்பினார்.

லூத்தரின் 95 குறிப்புகள் நற்கிரியைகள் பற்றிய கத்தோலிக்கப் போதனையைத் தகர்த்தன. பாவமன்னிப்புப் பத்திரங்களுக்கும் நற்கிரியைகளுக்கும் இருக்கும் வேறுபாட்டை லூத்தர் உணர்த்த முயன்றார். ஒருவன் துன்பப்படுகிறவர்களுக்கு செய்வதால் கிடைக்கும் பயன் பாவமன்னிப்புப் பத்திரத்தைப் பெறுவதால் அடைய முடியாது என்றார் லூத்தர். பாவமன்னிப்புப் பத்திரங்களால் ஒருவனை நல்லவனாக்க முடியாது என்றன இக்குறிப்புகள். அதிகமாக பணம் வைத்திருக்கும் ஒருவன் அவற்றை எதிர்காலத்துக்காக சேமித்து வைப்பதை விட்டுவிட்டு பாவமன்னிப்புப் பத்திரங்களில் செலவிடுவது ஊதாரித்தனம் என்றார் லூத்தர். போப் பெசீலிக்கா கட்டுவதற்கு மக்களிடம் பணம் கேட்பதைவிட தான் சேர்த்துவைத்திருக்கும் சொத்தில் இருந்து செலவிட வேண்டும் என்றார் லூத்தர். இந்தக் குறிப்புகளின் இறுதி நான்கு குறிப்புகளும் கத்தோலிக்க மதம் அளிக்கும் பொய்யான சமாதானத்தை விடுத்து கிறிஸ்து மட்டுமே அளிக்கக்கூடிய மெய்யான சமாதானத்தை அனைவரும் நாட வேண்டும் என்பதை முன்வைத்தன.

95 குறிப்புகளின் இன்றைய பயன்பாடு

லூத்தரின் இந்தக் குறிப்புகள் புரொட்டஸ்தாந்து சீர்திருத்தவாதத்தின் முக்கிய போதனைகளை முன்வைக்காதபோதும் அந்தச் சீர்திருத்தவாதத்தை ஆரம்பித்து வைத்த கருவியாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் சீர்திருத்தவாதத்தின் அடிப்படைப் போதனையான கிறிஸ்தவ சுவிசேஷத்தின் மெய்த்தன்மையையே இந்தக் குறிப்புகள் சுட்டிக்காட்டி கத்தோலிக்க மதத்தின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டின. லூத்தர் தான் பணிபுரிந்த ஆத்துமாக்களுக்கு மெய்யான இரட்சிப்பும், இரட்சிப்பின் நிச்சயமும் கிடைக்கவேண்டும் என்ற ஆதங்கத்துடனேயே இந்தக் குறிப்புகளை வெளியிட்டு போப்பை எதிர்த்தார். இதுபற்றிய விவாதங்களில் மேலும் மேலும் ஈடுபட்டபோது லூத்தரின் வேதஞானமும் அதிகரித்து இரட்சிப்பு பற்றிய தெளிவான விளக்கங்களை லூத்தர் அளிக்க ஆரம்பித்தார். ஆகவே, 16ம் நூற்றாண்டின் மாபெரும் சீர்திருத்தவாதத்திற்கு அடிக்கல் நாட்டிய பெருங்கருவியாக இந்தத் 95 குறிப்புகள் அமைந்தன.

மேலும் லூத்தர் விசுவாசத்தினால் மட்டுமே ஒருவன் நீதிமானாக முடியும் என்ற போதனையை அறிவுபூர்வமாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்தார். கத்தோலிக்க மதம் போதித்த உத்தரிக்கும்ஸ்தலத்தை அவர் அடியோடு நிராகரித்தார். அப்படியொரு இடம் இல்லை என்பதை வேதஆதாரங்களோடு நிரூபித்தார். போப்பின் பாவமன்னிப்புப் பத்திரம் மட்டுமல்ல, வேறு எந்த உயர்தர மனிதனிடம் பெறுகிற மன்னிப்பும் எவருக்கும் பாவமன்னிப்பளிக்காது என்று உறுதியாக லூத்தர் போதித்தார். இதெல்லாம் லூத்தரை போப்பின் அதிகாரத்தின் ஆணிவேரையே அசைக்கும்படியான போராட்டத்தில் ஈடுபடுத்த, மூன்று வருடங்களுக்குப் பிறகு 1520ல் இதற்கெல்லாம் லூத்தர் பதிலளித்து தான் எழுதியவற்றைத் தவறு என்று மறுதலிக்கவேண்டும் என்று போப் கட்டளையிட்டார். 1521ல் லூத்தர் கத்தோலிக்க சபையில் இருந்து நீக்கப்பட்டார்.

இன்று உலகமறிந்த ஒரு ஆவணமாக லூத்தரின் இந்த 95 குறிப்புகள் இருக்கின்றன. அன்று நாடாளும் பேரரசர்களையே மண்டியிட வைத்துக்கொண்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரத்தை எவரும் உரசிப்பார்க்கத் துணிந்திருக்க மாட்டார்கள். அது தற்கொலை செய்துகொள்வதற்கு சமமானது என்பது மக்கள் அறிந்திருந்த உண்மை. கர்த்தர் மட்டுமே அளிக்கக்கூடிய நெஞ்சுரமும், தீவிரமான ஆவிக்குரிய விசுவாசமும் இல்லாமல் எந்த மனிதனும் வாழ்க்கையில் இத்தகைய காரியத்தை செய்யத் துணியான். சத்தியத்திற்கு விரோதமான செயல் பாவமன்னிப்புப் பத்திர விநியோகமும், பாவமன்னிப்புப் பற்றிய போப்பின் போதனையும் என்பதை லூத்தர் உணர்ந்தபோது அவர் உயிர் பயமில்லாமல் சத்தியத்தைப் பாதுகாக்கவும், ஆத்துமாக்களை வழிநடத்தவும் முன்வந்தார். இத்தகைய சத்திய வைராக்கியமும், அதை நிலைநாட்டத் துடிக்கும் நெஞ்சுரமும் அன்றுபோல் இன்றும் அவசியமாக இருக்கிறது. மேலும் லூத்தர்கள் எழவேண்டிய காலத்தில் நாமிருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாத வரலாற்றின் மூலம் இதை வாசகர்கள் உணர்ந்தாலே போதும். வாசகர்களே! நீங்கள் போய்க்கொண்டிருக்கிற சபைகளிலும், வாசிக்கும் நூல்களிலும் மெய்யான வேதசத்தியங்களுக்கு எதிரான போலித்தனமான போதனைகள் இருக்கின்றனவா? ஆத்துமாக்களை வஞ்சிக்கும் போதனைகளாக, ஆட்டுத்தோல் போர்த்தியவர்களால் அவை கொடுக்கப்பட்டபோதும் அவற்றை உங்களால் உணரமுடிகின்றதா? அப்படி உணர்வீர்களானால் விசுவாசிகளான நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? லூத்தர் 1517ல் செய்ததை செய்யமுடியாதபடி உங்களை உட்கார வைத்திருப்பது எது? லூத்தருக்கு இருந்த நெஞ்சுரம் உங்களுக்கு இல்லாமலிருப்பதற்கு எது காரணம்? இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் கர்த்தர் முன் பதிலளித்துத்தான் ஆகவேண்டும். லூத்தரின் 95 குறிப்புகள் உங்களை சிந்திக்கவைக்கட்டும்; ஆவியானவர் உங்களோடு பேசட்டும்.

 

இறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)

நாம் ஒருபோதும் எந்தப் பெயரையும் வெறும் ‘லேபலாக’ பயன்படுத்தக்கூடாது. அதாவது வசதிக்காகவோ, சுயலாபத்திற்காகவோ, காரணங்கள் எதுவுமின்றியோ, பாப்திஸ்து, பிரெஸ்பிடீரியன், கல்வினிஸ்ட்டு, சீர்திருத்தவாதம் என்பவற்றையெல்லாம் எந்தவித ஆழ்ந்த இறையியல் புரிந்துணர்வோ, நம்பிக்கைகளோ இல்லாமல் பயன்படுத்திவருவது நம்மினத்தில் மிகச் சாதாரணமாக இருந்துவருகிறது. தமிழகத்தில் எனக்குப் பரிச்சயமான ஒரு சபைப்பிரிவு மேலைத்தேய நாட்டில் இயங்கி வரும் ஒருசபைப்பிரிவின் பெயரை, அது எந்த நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறது, ஏன் அந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டிருக்கிறது, அது வேதபூர்வமானதா, இல்லையா என்பதெதுவுமே தெரியாமலும், அறிந்துவைத்திராமலும் அந்தப் பெயரைச் சூட்டித் தன்னை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த மேலைத்தேய சபைப்பிரிவைத் திருப்திப்படுத்தி அவர்களிடம் வசதி பெறுவதை மட்டுமே நோக்கமாகக்கொண்டு அது இதைச் செய்துவருகிறது. இந்தப் பிரிவைப் பொறுத்தவரையில் அந்தப் பெயர் வசதிக்காகப் பயன்படுத்திக்கொள்ளுகிற வெறும் ‘லேபல்’ மட்டுமே.

சத்தியம் நமக்கு ‘லேபலாகி’விடக்கூடாது. என்றைக்கு அது நமக்கு வெறும் லேபலோ அன்றே ஆவியானவர் நம்மிடம் இல்லையென்றாகிவிடும். நான் விசுவாசிக்கின்ற சத்தியம் என்னுடைய ஆவிக்குரிய ஆழ்ந்த நம்பிக்கை; அதற்கு நான் அடிமை. உதாரணத்திற்கு, தேவன் ஒருவரே என்பதும், அவரில் மூன்று ஆள்தத்துவங்கள் உண்டு என்பதும், அம்மூன்று ஆள்தத்துவங்களும் ஒருவரே என்பதும் எனக்கு வெறும் பொருளற்ற வார்த்தைகளல்ல; அவை இறையாண்மையுள்ள கர்த்தரைப் பற்றிய அசைக்கமுடியாத வேத நம்பிக்கை. இதை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியமோ கட்டாயமோ எனக்கில்லை. இதில் நம்பிக்கையில்லாதவர்களை நான் உதறித்தள்ளமாட்டேன்; அதேநேரம் அவர்களுடைய உறவுக்காக இதைத் தியாகம் செய்யவும் மாட்டேன். இத்தகைய ஆழ்ந்த உறுதியான சத்திய நம்பிக்கையின்மையே அநேக சபைப்பிரிவுகளையும், சபைத் தலைவர்களையும் லிபரல் கோட்பாடுகளைப் பின்பற்றவும், நியோ ஓர்த்தடொக்ஸி (Neo-Orthodoxy) நிலைப்பாட்டை ஏற்கவும் பின்தள்ளியிருக்கிறது.

ஆழ்ந்த சத்திய நம்பிக்கையின் அவசியம்

ஆங்கிலத்தில் Conviction என்றொரு வார்த்தை உண்டு. இதற்கு க்ரியா சொற்பொருள் அகராதி ‘தீர்க்கம்’ அல்லது ‘தீர்க்கமாக ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு’ என்று பொருள் தருகிறது. இதை ஆழமான தீவிர நம்பிக்கை என்றும் கூறலாம். இத்தகைய உறுதியான தீர்க்கமான நிலைப்பாடு சத்தியத்தைப் பொறுத்தவரையில் நம்மினத்தில் அநேகரிடம் இன்று இல்லை. இத்தகைய நிலைப்பாடு இல்லாதவர்களாக பிரசங்கிகளும் போதகர்களும் இருக்கமுடியாது. ஆனால், இந்த நிலைப்பாட்டைக் கொண்டிராதவர்களே பெரும்பாலும் சபைகளிலும், மேடைகளிலும் கர்த்தரின் பெயரில் செய்தியளித்து வருகிறார்கள். உறுதியான ஆழமான இறையியல் நம்பிக்கையைக் கொண்டிருப்பது ஊழியப்பிழைப்பு நடத்த உதவாது என்பது பொதுவாகவே அநேகமான ஊழியர்களுடைய எண்ணமாக இருக்கிறது. வெளிப்படையாக இப்படிச் சொல்லி வாழ்கிறவர்களே நம்மினத்தில் ஏராளமாக இருக்கிறார்கள்.

கிறிஸ்தவனுக்கு இருக்கவேண்டிய ஆழமான தீவிர வேத நம்பிக்கையைப் (Conviction) பற்றி ஒரு எழுத்தாளர் பின்வருமாறு விளக்குகிறார், “ஒரு காரியம் உண்மையானது என்று அதைப்பற்றிய உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருப்பதே இந்தத் தீர்க்கமான நிலைப்பாடு; இதற்குப் பொருள் வலுவான நம்பிக்கையைக் கொண்டிருத்தல். இன்னொரு வகையில் சொல்லப்போனால் இந்த வலுவான நம்பிக்கை நம்பிக்கையின்மைக்கும், சந்தேக மனநிலைக்கும் முற்றிலும் எதிர்மறையானது. ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதனாக (Man of Conviction) ஒருவரை நாம் கருதும்போது, அவர் உறுதியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவராகவும், தான் போகிற பாதையைத் தெளிவாக உணர்ந்திருக்கிறவராகவும் கருதுகிறோம். அந்த மனிதனின் தீர்க்கமான நம்பிக்கைகள் அவன் வாழும் விதத்தையும், சிந்தனையையும், பேச்சையும், போகிற பாதையையும் அடியோடு மாற்றி அமைத்திருப்பதைக் காண்கிறோம். உறுதியான வேதநம்பிக்கைகள் கொண்ட மனிதனாக ஒருவனை நாம் கருதுகிறபோது அவனுடைய நம்பிக்கைகள் வேதத்தில் இருந்து மட்டும் வெளிப்படுகிறதையும், அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அவை பெருமாற்றங்களைக் கொண்டுவந்திருப்பதையும் குறிக்கிறோம்.” இத்தகைய தீர்க்கமான நம்பிக்கைகளைக் கொண்டிருக்க ஒருவன் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவனாகவும், தன்னுடைய வேதநம்பிக்கைகளைச் சரியாக வரையறுத்துக் கொண்டவனாகவும், அவற்றின்படி நடந்துசெல்லுவதற்கான தைரியத்தைக் கொண்டவனாகவும் இருக்கவேண்டும். (ரோமர் 4:18-22).

தீர்க்கமான உறுதியான வேத இறையியல் நம்பிக்கைகளைக் கொண்டிராத மனிதன் நல்ல பிரசங்கியாகவும், போதகனாகவும் இருக்கவழியில்லை. அத்தகைய மனிதன் சத்தியத்தில் தெளிவில்லாதவனாகவும், ஏராளமான முரண்பாடுகளைத் தன்னில் கொண்டவனாகவும் இருப்பான். அவன் நிலைதடுமாகிறவனாகவும், இரட்டை மனம் கொண்டவனாகவும் காணப்படுவான். இதைத்தானே நாடுபூறாவும் மேடை மேடையாகக் காண்கிறோம் என்பீர்கள், உண்மைதான். அதுவே நம்மினத்தைப் பிடித்திருக்கும் ஆவிக்குரிய பேராபத்து. திருச்சபை ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிற மனிதன் ஒருபோதும் தெளிவானதும் உறுதியானதுமான இறையியல் அடித்தளத்தை வாழ்க்கையில் கொண்டிராதவனாக இருக்கக்கூடாது; அவன் படிப்பறிவில்லாத கிராமத்து மக்களுக்குப் போதகனாக இருந்தாலும்கூட.

ஒரு போதகன் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் காலத்தில் தான் எதை விசுவாசிக்கிறோம் என்ற நம்பிக்கையில்லாதவனாக, எதை விசுவாசிக்க வேண்டும் என்பதைத் தேடியலைந்து கொண்டிருக்கும் இறையியல் நாடோடியாக (Theological nomad) இருக்கக்கூடாது. போதகனாக வருவதற்கு முன்பே இதிலெல்லாம் அவன் தெளிவான, உறுதியான நம்பிக்கைகளை அடைந்திருக்கவேண்டும். அதனால்தான் மேலைநாட்டில் குறைந்தளவு பல்கலைக்கழக பட்டம் இல்லாதவர்களை இறையியல் கல்விப் பயிற்சிக்கு அனுமதிக்கமாட்டார்கள். இதில் விதிவிலக்குகள் இருந்துவிடலாம். இருந்தாலும் இந்தப் பொதுவான விதிக்குக் காரணம் கல்வியறிவு பெற்றிருப்பவனுக்கே எழுத வாசிக்கத் தெரிந்திருந்து நூற்றுக்கணக்கான ஆழமான இறையியல் நூல்களை நுண்ணுணர்வோடு வாசிக்கவும், ஆராயவும் முடியும் என்பதுதான். (நம்மூர் பட்டங்களெல்லாம் பல் துலக்கவும் உதவாது.) எப்போதும் ஆரம்ப இறையியல் பயிற்சி ஒருவன் எதை விசுவாசிக்கவேண்டும் என்பதை அவனில் ஆழமாகப் பதியச்செய்வதாக இருக்கவேண்டும். அதுவே அவனுடைய ஊழியத்தில் அவனுக்கு எதிர்கால வழிகாட்டி. இதை ஆத்துமாக்களுக்கு வழங்கக்கூடியதாக திருச்சபைகள் இருக்கவேண்டும்.

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைத் தெளிவாகப் பிரசங்கிப்பதற்கு, பிரசங்கி அதில் தேர்ந்த ஞானத்தையும், ஆழமான நம்பிக்கையையும் கொண்டவனாக இருக்கவேண்டும். உதாரணத்திற்கு, வேதத்திற்கு முரணான ஆர்மீனியனிசப் போதனைகளை நம்புகிற ஒருவன் அத்தகைய நிலைப்பாடுள்ளதாகவே சுவிசேஷ செய்தியை அளிக்க முடியும். காலக்கூறு கோட்பாட்டை நம்புகிற ஒருவன் தான் இன்று திருச்சபை காலத்தில் (Church age) வாழவில்லை என்ற நிலைப்பாட்டோடு சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட்டு வருவான். கெரிஸ்மெட்டிக் நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிற ஒரு மனிதன் அந்நிய பாஷையில் பேசாதவர்களெல்லாம் ஆவியானவரைத் தங்களில் கொண்டிருக்கவில்லை என்றும் அவர்கள் விசுவாசிகளாக இருக்கமுடியாது என்ற நிலைப்பாட்டோடு இருந்து வருவார்கள். தவறான இறையியல் நம்பிக்கைகள் தவறானவிதத்தில் வேதத்தை விளக்கவும், பிரசங்கிக்கவும் வைத்துவிடும், ஆத்துமாக்களை வஞ்சிக்கவும் வைத்துவிடும். காரை ஓட்ட ஆரம்பிப்பதற்கு முன்பே எங்குபோகப் போகிறோம் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் இல்லையா? அதை ஓட்டிக்கொண்டிருக்கும்போது போகவேண்டிய இடத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டோ, அதற்கான வழியைத் தேடிக்கொண்டோ இருப்பதில் இருக்கும் பெரும் சங்கடம் நமக்குத் தெரியாமலிருக்க முடியாது. இதுபோலத்தான் தீர்க்கமான உறுதியான வேத இறையியல் நம்பிக்கைகளைக் கொண்டிராமல் இருப்பதும், வாழ்வதும், ஊழியம் செய்வதும்.

இறையியல் கல்லூரிகள் என்ற பெயரில் நம்மினத்தில் இருப்பதெல்லாம் அங்கு போகிறவர்களை தவறான இறையியல் போக்கில் வழிநடத்துவனவாகவே இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஆணித்தரமாக சத்தியத்தை விளக்குகிற நிலைப்பாட்டைக் கொண்டிராமல் எந்தத் திருச்சபைப் பிரிவுக்கும் எதிரானதாக இல்லாத, எல்லோரையும் திருப்திப்படுத்துகிற இறையியல் போதனைகளை வழங்குகிற நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் இவற்றில் தீர்க்கமான உறுதியான நம்பத்தகுந்த இறையியல் போதனைகளை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. இத்தகைய கல்லூரிகளில் டிகிரி வாங்கியிருப்பவர்களே பெரும்பாலும் நம்மினத்து ஊழியங்களில் ஈடுபட்டிருப்பதால் ஆழமான நம்பத்தகுந்த போதனைகள் இவர்களிடம் இல்லாமலிருக்கின்றன. இவர்கள் வழிநடத்தும் ஆத்துமாக்கள் பருந்தின் கையில் அகப்பட்ட புறாவின் நிலையிலேயே இருந்து வருவார்கள்.

வேதம் மட்டுமே சத்தியமானது; அதன் போதனைகள் தவறற்றவை, அது மட்டுமே பூரணமான அதிகாரம் கொண்டது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சபைப்பிரிவுகளை சந்தோஷப்படுத்தும் நோக்கில் இல்லாமல் வேதபோதனைகளைக் கொடுக்கும் இறையியல் கல்லூரிகள் நம்மினத்தில் இல்லை. சமீபத்தில் ஒரு இந்திய இறையியல் கல்லூரி பேராசிரியரை சந்தித்தேன். இளைஞரான அவர் தான் எழுதப்போகும் இரண்டாவது பி. எச். டீ பட்டத்துக்கான பொருளை எனக்கு விளக்க விரும்பினார். எகிப்து நாட்டுக்கும் திராவிடத் தமிழகத்துக்கும் எத்தகைய தொடர்பு இருந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்வதே அவருடைய நோக்கமாக இருந்தது. இது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டுக்கு வேண்டுமானால் பயன்படும்; ஆவிக்குரிய திருச்சபைக்கு எந்தப்பயனையும் அளிக்கப்போவதில்லை என்று கூறி அவரை வேதசத்தியங்களை கருப்பொருளாகக் கொண்டு ஆய்வில் ஈடுபடும்படி அறிவுரை கொடுத்தேன். லிபரலிசம் எந்தளவுக்கு நம்மினத்து இறையியல் கல்லூரிகளைப் பாதித்து அங்கு போகிறவர்களை ஆத்மீக அழிவை நோக்கி வழிநடத்துகின்றன என்ற உணர்வுகூட நம்மினத்து கிறிஸ்தவத்தில் இல்லாமலிருக்கின்ற போக்கு வருத்தந்தருவதாக இருக்கிறது.

வேதமும் திருச்சபை வலாறும் சுட்டும் உதாரணங்கள்

தீர்க்கமான உறுதியான வேதநம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்கு எண்ணிக்கையற்ற உதாரணங்களை வேதத்திலும், சபை வரலாற்றிலும் காணலாம். ஆண்டவர் இயேசு தான் வாழ்ந்த சமுதாயத்துக்கும், யூத மதத்துக்கும் தலை சாய்த்து நடக்காமல் தன் பிதா தனக்கு அளித்த பணியை நிறைவேற்றுவதில் மட்டுமே உறுதியாக இருந்தார். அவருடைய மலைப்பிரசங்கம் தீர்க்கமான ஆணித்தரமான வேத நம்பிக்கைகளை தெளிவாக ஆத்துமாக்கள் முன்வைக்கிறது. அதில் சமய சமரசத்தையோ, அடக்கி வாசிக்கின்ற அசிங்கப் பாணியையோ நாம் காண வழியில்லை. யூதமதமும், பரிசேயர்களும், சதுசேயர்களும், ஆலய நிர்வாகிகளும், ரோமர்களும் என்ன நினைப்பார்கள் என்ற கவலையெல்லாம் இல்லாமல் சத்தியத்தை சத்தியமாக தலைநிமிர்ந்து பிரசங்கித்த தேவகுமாரனை நாம் கிறிஸ்துவில் காண்கிறோம். சமயசமரசம் செய்ய எண்ணியிருந்தாலோ, சத்தியத்தை தோசையைத் திருப்பிப்போடுவதைப்போல திருப்பிப்போட்டுப் பிரசங்கிக்க நினைத்திருந்தாலோ, எந்த பயமும் இல்லாமல் யூதர்கள் மத்தியில் அவர் ‘பிதாவும் நானும் ஒருவரே’ என்றும், ஆபிரகாமுக்கு முன்பே நானிருந்தேன்’ என்றும் வைராக்கியத்தோடு பேசியிருப்பாரா? அப்படிச் சொன்னதால்தானே அவர்கள் அவரைக் கல்லெறிந்து கொல்லத் துடித்தார்கள். சிறுவயது முதலே இயேசு தன் மானுடத்தில் வேதநம்பிக்கைகளைத் தீர்க்கமாக, ஆழமாகக் கொண்டிருந்ததைப் பார்க்கிறோம்.

இதேபோலத்தான் ஸ்தேவானையும், அப்போஸ்தலன் பவுலையும், பேதுருவையும், தீமோத்தேயுவையும், தீத்துவையும் காண்கிறோம். இவர்களெல்லோரும் இயேசுவைப்போலத் தீர்க்கமாக வேதநம்பிக்கைகளைத் தங்களுக்குள் வளர்த்துக்கொண்டு மனச்சாட்சியைச் சுத்தமாக வைத்திருந்து சத்தியத்தைப் பிரசங்கித்தும் போதித்தும் வந்திருக்கிறார்கள். இவர்களிடம் எந்தவிதமான சத்தியத் திருகுதாளமும் இருந்ததாக நாம் வேதத்தில் வாசிப்பதில்லையே. அப்போ 24:16ல் பவுல் சொல்லுகிறார், ‘இதனால் நான் தேவனுக்கும் மனுஷனுக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.’ இதற்குக் காரணம் தனக்கு சத்தியத்தில் இருந்த தீர்க்கமான நம்பிக்கை என்பதை இதற்கு முன்வரும் வசனங்களில் பவுல் விளக்கியிருக்கிறார். சத்தியத்தில் தெளிவில்லாமல் வேதம் தெரிந்ததுபோல் போலியாக நடித்துப் பிரசங்கிக்கிறவர்களும், வயிற்றுப்பிழைப்புக்காக சத்தியத்தைத் தள்ளிவைத்துவிட்டு பொய்யைப் போதித்து வருகிறவர்களும் கறைபடிந்த மனச்சாட்சியோடும், தங்களைக் குற்றப்படுத்தும் மனச்சாட்சியோடும் கர்த்தருக்கு முன்பும், ஆத்துமாக்களுக்கு முன்பும் ஊழிய நாடகமாடி வருகிறார்கள்.

வேதம் மட்டுமல்லாமல் சபை வரலாறும் நமக்கு எண்ணற்ற தீர்க்கமான வேதநம்பிக்கைகளைக் கொண்ட ஆவிக்குரிய மனிதர்களை இனங்காட்டுகிறது. சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர் இதற்கு பேருதாரணமாக இருந்தார். அதற்குக் காரணம் அவருடைய தீர்க்கமான வேத நம்பிக்கைகளை அவர் மிகவும் கடுமையான உயிர்ப்போராட்டத்தின் மத்தியில் வெளிப்படுத்த நேர்ந்ததுதான். கத்தோலிக்க போப்பும் அவரைச் சார்ந்தவர்களும், நாட்டரசனும் கத்தோலிக்க மதத்திற்கெதிரான 95 காரணங்களை அவர் எழுதியதற்கான காரணத்தை விளக்கும்படி ஒரு கூட்டத்திற்கு அவரை வரவழைத்து, அந்தக் கூட்டத்தில் அவருடைய காரணங்களை ஏற்றுக்கொள்ளாமல் தான் எழுதியதனைத்தையும் மறுதலித்து கத்தோலிக்க மதத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்று சொல்லச் சொன்னபோது, ‘என் மனச்சாட்சி வேதத்திற்குக் கட்டுப்பட்டது, என் மனச்சாட்சிக்கு எதிராக என்னால் நடக்க முடியாது’ என்று ஆணித்தரமாக உயிர்ப்பயமில்லாமல் அனைத்து எதிரிகள் முன்பும் மார்டின் லூத்தர் சொன்னதை எண்ணிப்பாருங்கள். இதை ஆழமான உறுதியான வேதநம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் ஒரு மனிதனால் மட்டுமே செய்யமுடியும். இத்தகைய அசைக்கமுடியாத மெய்யான வேதநம்பிக்கை கொண்டிருக்கும் தீர்க்கமான மனிதர்களை நம்மினத்தில் எங்கு காணமுடிகிறது. விட்டால் இயேசுவையே விற்றுவிடத் தயாராக இருக்கின்ற போலிகள் நிரம்பியிருக்கும் நாடாக அல்லவா நம்நாடிருக்கிறது. 16ம் நூற்றாண்டு சீர்திருத்தத்தை நினைவுகூருகிற விசேஷ கூட்டங்கள் நடத்துகிற நம்மினத்து திருச்சபைகள் அதைச் செய்வதற்கு தங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது என்பதை ஒருதடவை நினைத்துப் பார்ப்பது நல்லது. வயிற்றுப்பிழைப்புக்கு சத்தியத்தை விற்று வாழ்க்கை நடத்துகிறவர்கள் எங்கே, மார்டின் லூத்தர் எங்கே?

திருச்சபை வரலாற்றில் சீர்திருத்த பாப்திஸ்து பிரசங்கியும் போதகருமான ஸ்பர்ஜனை எண்ணிப்பார்க்காமல் இருக்கமுடியாது. தன் காலத்தில் பாப்திஸ்து யூனியன் வேத நம்பிக்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவர எத்தனித்து, விஞ்ஞானத்தின் அடிப்படையில் வேதவசனங்களை ஆய்வு செய்து நிரூபிக்கும் எத்தனிப்பில் ஈடுபாடு காட்டியபோது வரப்போகின்ற ஆபத்தைத் துல்லியமாக புரிந்துகொண்டிருந்த ஸ்பர்ஜன் அதை பாப்திஸ்து யூனியனுக்கு விளக்க அவர்கள் அதைப் புறந்தள்ளி எள்ளிநகைத்தபோது, தனியொருவராக தன்னுடைய திருச்சபையை பாப்திஸ்து யூனியனில் இருந்து விலக்கி தானும் தன் சபையும் எதை விசுவாசிக்கிறோம் என்பதை சந்தேகமற அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக 1689 விசுவாச அறிக்கையை மறுபடியும் பதிப்பித்து வேதத்திற்கும், அதற்கும் மட்டுமே அடிபணிவோம் என்று பகிரங்கமாக பறைசாற்றித் தான் தீர்க்கமான ஆணித்தரமான வேதநம்பிக்கைகள் கொண்டவன் (Man of biblical conviction) என்பதை ஸ்பர்ஜன் அனைவரும் அறிந்துகொள்ளச் செய்தார். சுயலாபத்தில் மட்டும் அக்கறைகொண்டவராக இருந்திருந்தாலோ அல்லது பாப்திஸ்து யூனியனோடு ஒத்துப்போய் சத்தியம் பெரிதில்லை என்று எண்ணியிருந்தாலோ ஸ்பர்ஜன் இப்படி நடந்திருந்திருப்பாரா? ஆழமான, ஆணித்தரமான வேதநம்பிக்கையல்லவா அவரை இப்படி நடந்துகொள்ள வைத்தது.

ஆழமான சத்திய நம்பிக்கைக்கு என்ன நடந்தது?

நமக்கு சத்தியம் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்; அது பற்றிய தீர்க்கமான அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும். உங்களுடைய நம்பிக்கைகள் சத்தியத்தின் அடிப்படையில் அமைந்திராவிட்டால் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. ஞானஸ்நானம் எடுப்பதன் மூலமோ அல்லது உணர்ச்சிவசப்பட்டு ஒரு கூட்டத்தில் கிறிஸ்துவுக்காக தீர்மானம் எடுத்ததன் மூலமோ கிறிஸ்துவை விசுவாசித்திருக்கிறேன் என்று ஒருவர் நம்பிக்கொண்டிருந்தால் விசுவாசத்தைப் பற்றிய அவருடைய இறையியல் நம்பிக்கை அடிப்படையிலேயே தவறுதலானது என்று அர்த்தம். தவறான அந்த நம்பிக்கை அவரில் உறுதியாக இருந்தாலும் அதில் எந்தப் பயனும் இல்லை; ஏனெனில் அவரிடம் கிறிஸ்தவ விசுவாசம் உண்மையிலேயே இல்லை. இதிலிருந்து இறையியல் தவறு எத்தனை ஆபத்தானது என்பதை புரிந்துகொள்ளுவது நல்லது. சத்தியம் தொடர்பான எதிலும் நாம் தவறான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கக்கூடாது; அவை பற்றிய அரைகுறை அறிவும் அடியோடு உதவாது. பெரியவர் ஸ்பர்ஜன் ஒரு தடவை சொன்ன வார்த்தைகளை இங்கே நினைவுகூருவது பொருத்தமாயிருக்கும். அவர் சொன்னார், ‘சரியானதற்கும், முற்றிலும் தவறானதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை விளக்கமட்டுமல்ல நுணுக்கமான புரிந்துகொள்ளுதல் (Discernment); சரியானதற்கும், சரியானதைப் போலத் தோற்றமளிப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை விளக்குவதே நுணுக்கமான புரிந்துகொள்ளுதல்.’ சரியானதைப் போலத் தோற்றமளிக்கும் போலிப்போதனைகள் இன்று இறையியல் போதனைகளைப் பொறுத்தவரையில் பரவலாகவே உலாவி வருகின்றன.

சத்தியம் பற்றிய சத்தியமான உண்மைகள் ஆரம்பக் கிறிஸ்தவனுக்கு மட்டுமல்ல, முதிர்ந்த கிறிஸ்தவனுக்கும் மிக அவசியமானது. அதனால்தான் சீர்திருத்தவாதிகள் சத்தியத்தை வினாவிடைப்போதனைகளாக சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமாக எழுதி வெளியிட்டார்கள். சிறுவர்களில் இருந்து பெரியவர்கள்வரை சத்தியத்தை சத்தியமாக ஆரம்பத்தில் இருந்தே அறிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை அவர்கள் ஆணித்தரமாக உணர்ந்திருந்தார்கள். வினாவிடைப் போதனைகள் சத்தியத்தை அப்பட்டமாக துல்லியமாக நேரடியாக விளக்குபவை. அவற்றில் குளறுபடிகளுக்கோ, மலுப்பல்களுக்கோ இடமில்லை. அவற்றை வாசித்து மனதிலிருத்திக் கொள்ளும்போது சத்தியத்தால் நம் மனம் நிரம்புகிறது. இதை உணர்ந்ததால்தான் இங்கிலாந்தில் ரிச்சட் பெக்ஸ்டர் தான் பணிபுரிந்த கிடர்மின்ஸ்டர் ஊரில் வாழ்ந்த அத்தனை வீட்டாருக்கும் வினாவிடைப்போதனையில் பயிற்சியளித்திருந்தார். 16ம் நூற்றாண்டில் ஒல்லாந்து சீர்திருத்த சபைகள் ஆர்மீனியனிச போதனைகளுக்கு எதிராக சினொட் ஓவ் டோர்ட் என்ற தெளிவான அறிக்கையை வேத அடிப்படையில் தொகுத்து வெளியிட்டு திருச்சபைகளுக்கு சத்திய பாதுகாப்பளித்தன. பதினேழாம் நூற்றாண்டில் பியூரிட்டன் பெரியவர்கள் விசுவாச அறிக்கைகளை எழுதி வெளியிட்டனர். இவை நாம் விசுவாசிக்க வேண்டிய வேத சத்தியங்களை முறைப்படுத்தி தொகுத்து வெளிவந்தன. சத்தியம் பாதுகாக்கப்படவும், போலிப்போதனைகளைத் தவிர்த்துக்கொள்ளவுமே இவை வெளியிடப்பட்டன. இவற்றை ஆழமாக விசுவாசித்து, போதித்து திருச்சபைகளை வளர்க்கும்போது அங்கே இறையியல் பச்சோந்தித்தனத்திற்கு இடமிருக்காது. நம்மினத்தில் இன்று திரித்துவம் பற்றிய அடிப்படை சத்தியத்தை அறியாமல் பெரும்பாலான போதகர்களும், விசுவாசிகளும் இருந்து வருகிறார்கள். இவர்கள் திரித்துவ சத்தியத்தை அறியாமல் திரித்துவ தேவனை எப்படி வழிபட்டு வாழ்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இன்று ஓரளவுக்கு சத்தியத்தை அறிந்துவைத்திருக்கின்ற பலர் சத்தியத்தில் தெளிவான ஆழமான நம்பிக்கையில்லாதவர்களாக (lacking deep conviction) இருக்கிறார்கள். இதுவும் ஆபத்து. இவர்களே சத்தியம் தெரிந்திருந்தும் அதன்படி வாழாது உலகப்பிரகாரமாக வாழ்கிறவர்கள். இதன் ஆபத்தை இவர்கள் உணர்வதில்லை. இவர்களுக்கு சத்தியம் மனதளவில் மட்டுமே நிற்கிறது. அவர்களுடைய மனச்சாட்சியையும், வாழ்க்கையையும் அது பாதிக்கவில்லை. சத்தியம் தெரிந்திருந்தும் அதுபற்றிய தீர்க்கமான நம்பிக்கை இல்லாமல் வாழ்கின்றவன் தனக்கும் பிறருக்கும் ஆபத்தானவன். அவனால் அறிந்துவைத்திருக்கின்ற எந்த சத்தியத்தையும் தீர்க்கமான நம்பிக்கையோடு ஆணித்தரமாக அறிக்கையிடவோ, விளக்கவோ, போதிக்கவோ முடியாது. இதைவிட சத்தியத்தை அறிந்திராமல் இருப்பது மேல். இத்தகையவர்களே சத்திய முரண்பாட்டுக்கு இடங்கொடுத்து மலுப்பல் ஆசாமிகளாக, இறையியல் பச்சோந்திகளாக (Theological Chameleons) இருந்துவருவார்கள். முரண்பாட்டுடன் வாழ்வதும், அதன் அடிப்படையில் எதையும் செய்வதும் இவர்களுக்கு கைவந்த கலையாகிவிடுகிறது. இத்தகையவர்களை யாக்கோபு இரட்டை மனம் கொண்டவர்களாகக் கணிக்கிறார். இவர்கள் சத்திய உறுதியற்றவர்கள்; இவர்கள் சத்தியத்துக்கு தூணாக இருக்க வழியில்லை.

பிரசங்கத்தைப் பற்றி விளக்குகின்ற டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ், ‘தத்துவரீதியில் நெருப்பாகப் பிரசங்கிப்பதே பிரசங்கம். நெருப்பாக இருக்கும் ஒரு மனிதன் மூலம் இறையியல் விளக்கங்கள் பாய்ந்து வருவதே பிரசங்கம். இதைச் செய்வதற்கு அவனுக்கு சத்தியம் தெளிவாகத் தெரிந்திருப்பதோடு அதை அவன் அனுபவித்தவனாகவும் இருக்கவேண்டும். நான் மறுபடியும் சொல்லுகிறேன், சத்தியத்தை அனுபவிக்காமல் அதோடு எந்தத் தொடர்பும் இல்லாதவிதத்தில் விளக்குகிற மனிதன் பிரசங்க மேடைப்பக்கம் வருவதற்குத் தகுதியில்லாதவன்; அவனைப் பிரசங்க மேடையில் ஏறவிடக்கூடாது’ என்கிறார்.

இன்று நம்மினத்தில் சீர்திருத்த சத்தியத்தை அறிந்துகொள்ள ஆர்வம் பலருக்கிருக்கிறது. அதிகரித்து வருகிறார்கள். இருந்தாலும் இவர்களில் பலர் அரைகுறை அறிவோடு அதன் முழுத் தாற்பரியமும் தெரியாமல் இருந்துவருகிறார்கள். அநேகர் இதை சுயலாபத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள். சீர்திருத்தவாதத்தின் அரிச்சுவடி தெரியாதவர்களெல்லாம் அதன் 500வது ஆண்டுநிறைவைக் கொண்டாடுவது சிரிப்பூட்டுகிற காரியமல்லவா? கடந்தவாரம் என் நண்பரொருவருக்கு அத்தகையதொரு கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு வந்தது. அந்தக் கூட்டம் பற்றி அவர் மேலும் கேள்விகள் கேட்டபோது அது ஒரு பிரஸ்பிடீரியன் சபை நடத்தும் கூட்டம் என்றும் அதில் பேசப்போகிறவர் ஒரு ரோமன் கத்தோலிக்க குரு என்றும் அறிந்து அவர் அதிர்ந்து போனார்.

தேவை இன்று ஆழ்ந்த சத்திய நம்பிக்கை

சீர்திருத்தவாதம் வெறும் ‘லேபலாகப்’ பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகமல்ல. அதன் வரலாற்றையும், வரலாற்று இறையியலில் அது வகிக்கும் பங்கையும், வேத இறையியலோடு அதற்கிருக்கும் பிரிக்கமுடியாத தொடர்பையும், திருச்சபைக் கோட்பாட்டில் அது வகிக்கும் அசைக்க முடியாத இடத்தையும், போதக இறையியலில் அது ஏற்படுத்துகின்ற அனுபவபூர்வமான மாற்றங்களையும் சபைவாழ்க்கையில் அறிந்து, உணர்ந்து அனுபவித்து இருதயத்திலும், வாழ்க்கையிலும் மாற்றத்தை அடையாதவர்களுக்கு அது வெறும் லேபலாக மட்டுமே இருக்கமுடியும்.

சீர்திருத்த இறையியல் இருதயத்தோடு சம்பந்தப்பட்ட, அதில் ஆவிக்குரிய மாற்றத்தை உண்டாக்குகின்ற தீர்க்கமான சத்தியம். அந்த சத்தியத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ள ஆவிக்குரிய மனிதனை அன்றாடம் மாற்றி பரலோகத்தை நோக்கி நம்பிக்கையோடு நடக்கவைக்கின்ற அனுபவ இறையியல் அது. சீர்திருத்த இறையியல் அனுபவபூர்வமாக ஒருவனில் ஏற்படுத்துகின்ற தாக்கம் அவனை அன்றாடம் கர்த்தர் முன் மண்டியிடச் செய்யும். தாழ்மையோடும், தேவபயத்தோடும் கிறிஸ்துவுக்கு ஒப்பானவனாக மாறும்படியாக அவனை மாற்றுகின்ற இறையியல் சத்தியம் அது. தாழ்மை அவனுக்கு நாடகக்காரன் பூசும் அரிதாரம் அல்ல; கர்த்தரின் சர்வ வல்லமைக்கு முன் அவன் தன்நிலை உணரும் குணாதிசயம். சீர்திருத்த இறையியல் நம்பிக்கைகளைக் கொண்டிருந்து அனுபவத்தில் அதை ருசிபார்த்து வருகின்ற மனிதன் வேறெவரையும்விட தன்னுடைய இருதயத்தின் பலவீனத்தையும், பாவத்தையும் அதிகமாக உணர்ந்திருப்பான். அத்தகைய பாவஉணர்வினால் அவன் ஆவியால் வழிநடத்தப்பட்டு அன்றாடம் தன் மாம்சத்தின் பாவத்தையும் பலவீனத்தையும் அடித்து அழித்து வாழ்கிறவனாக இருப்பான். அத்தோடு அவன் இறையாண்மையுள்ள கர்த்தரின் மகிமைக்காக மட்டுமே எதையும் செய்பவனாக, அவருடைய வார்த்தைகளை மட்டுமே பின்பற்றி வாழ்பவனாக இருப்பான். இதன் காரணமாக சீர்திருத்த விசுவாசம் வாழ்க்கை அனுபவத்தோடு ஆழ்ந்த தொடர்புடைய இறையியலாக இருக்கின்றது. இந்த உலகத்தில் பரலோக அனுபவத்தை அடையும்படியாக முழுமையாக வாழ்வில் அனுபவபூர்வமாக பின்பற்ற வேண்டிய வேதசத்தியம் அது. இத்தகைய அனுபவமாற்றத்தைக் கொண்டுவரும் இறையியலை வாழ்க்கையில் கொண்டிராத எவனும் வெறும் ‘காகித சீர்திருத்தவாதி’ (Paper reformers) மட்டுமே. அவன் எசேக்கியேல் 37 விளக்கும் ‘உலர்ந்த எலும்பு.’ அப்படிப்பட்டவன் சீர்திருத்த இறையியலை ஒருபோதும் அறிந்துணர்ந்து புரிந்துகொண்டிராதது மட்டுமல்ல சுயலாபத்துக்காக அதைப் பயன்படுத்துகிற மாயக்காரன் (மாற்கு 7:7). அவன் ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய். அத்தகையவன் மெய்யான தேவஊழியனாக இருக்க வழியில்லை.

சீர்திருத்த சத்தியத்தை அறிந்து அதில் வளர ஆசைப்படுகிறீர்களா? முதலில் நீங்கள் மெய்யான மனந்திரும்புதலையும், கிறிஸ்துவில் வைக்கவேண்டிய விசுவாசத்தையும் கொண்டிருக்கவேண்டும். மெய்யான விசுவாசமில்லாத இருதயத்தில் எந்த சத்தியத்திற்கும் இடமிருக்க முடியாது. இதை வாசித்து நீங்கள் ஆச்சரியப்படத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும், நம்மினத்தில் போலிக்கிறிஸ்தவம் வைரஸ்போல பரவியிருப்பதால் அநேகர் மெய்யான விசுவாசமில்லாமல் விசுவாசிகள் என்று தங்களைத் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித பரிசுத்த அடையாளங்களும், நடவடிக்கைகளும் இல்லாதிருப்பதே இவர்களுடைய வாழ்க்கையில் விசுவாசமில்லை என்பதற்கு முக்கிய அடையாளம். மெய்யான விசுவாசமே ஒருவனை பரிசுத்தப்படுத்தி பரிசுத்தமாக்குதலில் ஈடுபாட்டோடு ஈடுபடவைக்கிறது.

அடுத்ததாக, சீர்திருத்த விசுவாசத்தைப் பொறுமையோடு ஆராய்ந்து முழுமையாக கற்றுக்கொள்ள நீங்கள் உழைக்கவேண்டும். அதுபற்றி நீங்கள் அதிகம் வாசிக்க வேண்டும்; வாசித்தவற்றை சிந்தித்துப் பார்க்கவேண்டும். வாசிப்பு என்கிறபோது எந்தளவுக்கு அவசியமானவற்றை வாசிக்கலாமோ அதேபோல் தவிர்க்க வேண்டியவற்றையும் தயவு தாட்சண்யமில்லாமல் தவிர்க்க வேண்டும். சீர்திருத்த சத்தியங்கள் உங்கள் இருதயத்தில் ஆழமாகப் பதிந்து மனச்சாட்சியின் குரலாக மாறிவிடவேண்டும். அவற்றில் என்றும் அகன்றுவிடாத ஆழந்த நம்பிக்கை இருக்கவேண்டும். சீர்திருத்த இறையியல் போதனைகள் அறிவோடு மட்டும் சம்பந்தப்பட்டதாக இல்லாமல் அனுபவ இறையியலாக இருப்பதால் உங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளும் அதனால் பாதிக்கப்பட்டு தேவ பயத்தையும் பக்தி வைராக்கியத்தையும் அது உங்களில் உண்டாக்க வேண்டும்.

சீர்திருத்த விசுவாசம் திருச்சபைக்கு கொடுக்கும் மதிப்பையும், மரியாதையையும் வேறெதிலும் பார்க்க முடியாது. சபை வாழ்க்கை இன்று நம்மினத்தில் பெட்டிக்கடை வியாபாரமாக இருக்கிறது. ஆராதனை உணர்ச்சிகளுக்கு தூபமூட்டும் வெறும் சுய ஆராதனை மட்டுமே. பிரசங்கத்தைப்பற்றிச் சொல்லத்தேவையில்லை. இந்நிலையில் சீர்திருத்த விசுவாசத்தில் ஆர்வம் காட்டுகிறவர்கள் தனி ஊழியம் செய்யாமலும், போலி சபைகளுக்கு அடிமையாகாமலும், நல்ல சபைகளை நாடி சபை வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும். அத்தகைய நல்ல சபைகள் நம்மினத்தில் வெகுசில என்பதும் எனக்குத் தெரியாமலில்லை. அத்தோடு நம்மினத்து பண்பாட்டு அசிங்கங்களை மனதிலும் வாழ்க்கையிலும் இருந்து அகற்றி குடும்பத்தை வேதபூர்வமாக கர்த்தரின் பாதையில் நடத்தவேண்டும். வேதவாசிப்பிலும், ஜெபத்திலும் உறுதியாகத் தரித்திருந்து சபையைக் கட்டுவேன் என்று சொன்ன சபை நாயகனாகிய நம்ஆண்டவர் நல்ல சபைகளை நம்மினத்தில் நிறுவ நாம் ஜெபிக்கவேண்டும். இதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் நிதர்சனமாக நிகழ்கிறபோதே நீங்களும் வருங்காலத்தில் பத்தோடு பதினொன்றாக, இறையியல் பச்சோந்தியாக மாறிவிடாமலிருக்க முடியும்.

 

தேவபயத்தின் பிறப்பிடம்

வேதம் போதிக்கும் தேவபயம் – 4

அல்பர்ட் என். மார்டின் –

[அல்பர்ட் என். மார்டின் எழுதி, ஹெரிட்டேஜ் வெளியீடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் ‘மறந்துபோன தேவபயம்’ (The Forgotten Fear of God) என்ற நூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு அதிகாரம். மொழிபெயர்ப்பு: M. ஜேம்ஸ்]

“தேவபயமென்பது கடவுளுடைய ஆராதனையைப்பற்றி மட்டுமே குறிக்கிறதாக இல்லாமல், தேவபக்தியின் எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது. அத்தோடு அது மெய்யான கிறிஸ்தவத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்டது என்பது எல்லாரும் அறிந்த ஒன்றுதான்” என்று சென்ற தலைமுறையில், வேதத்தை மிகுந்த கவனத்துடன் கற்ற மாணவர்களில் ஒருவர் எழுதியிருக்கிறார். இதை அவர் இப்படியும் சொல்லியிருந்திருக்கலாம், அதாவது, தன்னுடைய வேதத்தை நன்கு அறிந்திருக்கிற எந்தவொரு நபரும் பொதுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று என்னவென்றால், “மெய்யான கிறிஸ்தவம்” என்பதற்கான இணை வார்த்தையாக “தேவபயத்தை” நாம் பயன்படுத்தலாம் என்பதுதான். வேதத்தை முறையாகப் படிப்பது இந்த முடிவுக்குத்தான் நம்மை வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த உண்மை பயத்தையும் பயங்கரத்தையும் உள்ளடக்கியது. தேவபயமென்பது மெய்யான கிறிஸ்தவத்தைக் குறிப்பிடுவதற்கான இணை வார்த்தையாக இருக்குமானால், தேவபயம் இல்லாமல் இருப்பதென்பது மெய்யான கிறிஸ்தவம் இல்லை என்பதற்கான அறிகுறியாகவே இருக்கும்.

தேவபயமாகிய இந்த முக்கிய பாடத்தைப் பற்றிய பல கேள்விகளை நாம் கேட்டோம், வேதமும் அவற்றிற்கான பதிலை நமக்குத் தந்திருக்கிறது. தேவபயம் சம்பந்தமாக நாம் கேட்க வேண்டிய இன்னொரு முக்கியமான கேள்வி என்னவென்றால், “தேவபயம் எங்கிருந்து வருகிறது?” என்பதுதான். வேதத்தின்படி, தேவபயத்தின் பிறப்பிடம் எது? ஒருவேளை, ஒரு சுவையான சாக்லேட் கேக்கை உங்களுடைய பிள்ளை ஒருபோதும் பார்த்ததில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் கொஞ்ச நேரத்திற்கு முன் அப்படியான ஒரு சுவையான கேக்கை நீங்கள் செய்து, அதை அவன் முன் வைக்கிறீர்கள். அவன் உங்களைப் பார்த்து, என்ன இது? என்று கேட்கிறான். நீங்களும் அவனைப் பார்த்து, இது கேக், சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் என்று பதிலளிக்கிறீர்கள். அவன் தொடர்ந்து, இது எப்படி செய்யப்பட்டது என்று கேட்க, நீங்களும், அதைச் செய்வதற்கு பயன்படுத்திய எல்லா பொருட்களையும்பற்றி விவரிக்கிறீர்கள் – மாவு, கோக்கோ பவுடர், சோடா மாவு மற்றும் இதர பொருட்கள். அது என்ன என்று மட்டும் நீங்கள் சொல்லாமல், அது கேக்காக வருவதற்கு என்னவெல்லாம் பயன்பட்டன என்பதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அடுத்து, இது செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களெல்லாம் எங்கிருந்து வந்தன என்று அவன் கேட்கிறான். மாவு, நிலத்தில் விளைந்த தானியத்திலிருந்து வந்தது, மாவு கேக்கின் பதத்திற்கு வர பயன்படுத்தப்படும் பொருட்கள் சில குறிப்பிட்ட மிருகத்தின் கொழுப்பிலிருந்து வந்தன என்று ஒவ்வொன்றாக விளக்குகிறீர்கள். இதன் மூலம் கேக் செய்வதற்கான பொருட்களின் பிறப்பிடத்தைப் பற்றி நீங்கள் உங்கள் பிள்ளைக்கு விவரித்துக் காட்டுகிறீர்கள்.

இதுவரை நாம் பார்த்ததில், கேக் என்றால் என்ன என்பதைப் பற்றி விளக்கியிருக்கிறேன். இதன்மூலம், தேவபயம் என்றால் என்ன என்பதைப்பற்றி விளக்கியிருக்கிறேன். இது கடவுளைப் பற்றியது. அதாவது, அவருடைய மகத்துவத்தையும் மகிமையையும், அவருடைய இரட்சிக்கும் செயலில் கிருபையின் வெளிப்பாட்டையும் அறிந்து, அவருடைய புன்னகைதான் வாழ்வில் மிகப்பெரிய ஆசீர்வாதம் என்றும் அவருடைய வெறுப்புதான் வாழ்வில் மிகப்பெரிய சாபம் என்றும் உறுதியாக நம்புகிற நம்பிக்கையை நம்மில் ஏற்படுத்துவதே தேவபயமாகும். பிறகு தேவபயத்தின் மூன்று முக்கியமான அம்சங்களை அடையாளங் கண்டோம். தேவபயத்தின் இந்த அம்சங்கள் எங்கிருந்து வந்தன என்பதை நாம் ஆராய்கிறபோது, நம்முடைய நினைவில் வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இதை வெறும் அறிவுக்காக படிக்கின்ற பாடமாக நாம் பார்க்கக்கூடாது என்பதுதான். எல்லாவிதமான ஆவிக்குரிய அனுபவங்களிலுள்ள ஒரு முக்கியமான தவறு என்னவென்றால், எது நல்லொழுக்கத்தின் பிறப்பிடம் என்பதைப் பற்றிய அறியாமையில் இருந்துவிடுவதுதான். பவுல் தன்னுடன் இருந்த யூதர்களுக்கு என்ன சொன்னார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இரட்சிக்கப்படுவதற்கு நீதி மிகவும் அவசியமானது என்பது யூதர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் பவுல் அவர்களைப் பற்றிச் சொல்லுகிறார், “அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்” (ரோமர் 10:3). நீதியைப் பெற வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் கடவுளால் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரே நீதியின் பிறப்பிடத்தைக் கண்டறிவதில் அவர்கள் அக்கறையற்றவர்களாக இருந்தார்கள்.

நாம் தேவபயத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், அதைப் பற்றிய ஏனைய சில விஷயங்களையும் அறிந்திருப்பது மட்டும் போதாது. அதை எங்கிருந்து பெறுவது என்பதையும் நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். தேவபயத்தை எங்கிருந்து பெறுவது என்பதை நீங்கள் அறியாதிருந்தால் அது உங்களுக்குக் கேட்டைத்தான் கொண்டுவரும். இது மிகப் பெரிய ஆவிக்குரிய விஷயத்தைப் பற்றியது. தேவபயத்தின் பிறப்பிடம் எது? இதில் நாம் முதலாவதாக பார்க்கப் போவது, ஒருவனுடைய இருதயத்தில் தேவபயம் நாட்டப்படுவதென்பது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதம் என்பதாகும். இரண்டாவதாக, கடவுளுடைய கிருபையினால் தேவபயம் எப்படி ஒருவனுடைய இருதயத்தில் நாட்டப்படுகிறது என்பதை வேதத்திலிருந்து நாம் பார்க்கப் போகிறோம்.

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதம்

முதலாவது, ஒருவனுடைய இருதயத்தில் தேவபயம் விதைக்கப்படுவதென்பது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதம் என்பதை வேதத்தில் நாம் காண்கிறோம். கடவுள் மனிதர்களுடனான தன்னுடைய எல்லா செயல்பாடுகளையும், அவர்களோடு தான் கொண்டுள்ள உடன்படிக்கையின் உறவின் அடிப்படையில்தான் நடத்துகிறார். கடவுள் தாமே தீர்மானித்திருக்கிற சில குறிப்பிட்ட காரியங்களை, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தருவதாக வாக்களித்திருக்கிறார். வேதம் குறிப்பிடுகிற “நித்திய உடன்படிக்கையிலுள்ள” (எபிரெயர் 13:20) அம்சங்களின்படியாகவே, பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவதும் அதனோடு தொடர்புடையதுமாகிய ஏனைய ஆசீர்வாதங்களும் நமக்கு வருகின்றன. மோசேயின் உடன்படிக்கையிலிருந்து பிரித்துப் பார்க்கிறபோது, சில வேளைகளில் இது “புதிய உடன்படிக்கை” என்றும் அழைக்கப்படுகிறது. எபிரெயர் 8:6-13 வரையுள்ள வசனங்களில், புதிய உடன்படிக்கையின் கீழாக அறிவிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் பழைய உடன்படிக்கையின் கீழ் அறிவிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைவிட பலமடங்கு உயர்ந்தவை என்பதை கடவுள் மிகவும் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த உண்மை, 13வது வசனத்தில் தொகுப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது, “‘புது உடன்படிக்கை’ என்று அவர் சொல்வதனாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது, உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது” என்று அறிகிறோம். கர்த்தருடைய பந்தியை ஏற்படுத்தியபோது, இயேசு சொன்னார், “இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது” (1 கொரிந்தியர் 1:25). வேறுவிதமாக சொல்லுவதானால், அவர் தம்முடைய இரத்தம் சிந்துதலின் மூலம் அவர் நிறைவேற்றயிருக்கிறவைகள் யாவும் புதிய உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள்ளான ஆசீர்வாதங்களையே குறிக்கிறதாக இருக்கிறது. இயேசு சிந்திய இரத்தத்திற்கப்பால், எந்தவொரு மனிதனும் உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைப் பெறுவதில்லை. அதேபோல், இயேசுவின் இரத்தத்தினால் எந்தப் பலனைப் பெறுகிற எவனும், புதிய உடன்படிக்கையில் வாக்களிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களின் அம்சங்களையே பெறுகிறான்.

அந்த உடன்படிக்கையில் என்ன ஆசீர்வாதங்கள் வாக்களிக்கப்பட்டிருந்தன? எசேக்கியேல் 36 மற்றும் எரேமியா 31, 32 அதிகாரங்களில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பல ஆசீர்வாதங்கள் தீர்க்கதரிசனமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் யாவும் புதிய உடன்படிக்கையின்கீழ் அனுபவிக்கப்படும் ஆசீர்வாதங்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். குறிப்பாக, எபிரெயர் 8 மற்றும் 10 வது அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசீர்வாதங்களையே குறிப்பிடுகிறேன். இப்போது நம்முடைய கவனத்தை எரேமியா 32வது அதிகாரத்தில் செலுத்துவோம். ஏனென்றால், அதுதான் தேவபயத்தைப் பற்றியும், புதிய உடன்படிக்கையில் அதற்கான இடத்தைப் பற்றியும் நேரடியாகக் குறிப்பிடுகிறது.

“அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு, அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து, அவர்களுக்கு நன்மைசெய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்.” (எரேமியா 32:38-41)

இப்பகுதியில் கடவுள் தம்முடைய மக்களுக்கான இரக்கத்தை வாக்களிக்கிறார். தமக்கு பயப்படும் பயத்தை அவர்களுடைய இருதயத்தில் வைப்பதாக அவர் சொல்லுகிறார். அதன் மூலம் அவர்கள் தம்முடைய வழிகளில் நிலைத்திருப்பார்கள். கடவுளுக்கும் அவர்களுக்கும் இருக்கிற தொடர்பைக் கவனியுங்கள் “அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைப்பேன்”. பழைய உடன்படிக்கையில், தம்முடைய மக்களுக்கு முன்பாக தம்முடைய மகத்துவத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்திக்காட்டி, அவர்கள் நடுக்கங்கொள்ளவும் தாம் பேசுகிற மலையைத் தொடவும் கூடாது என்று சொல்லி பயத்தை ஏற்படுத்தி, தம்முடைய கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்த போதிலும், அவர்கள் தொடர்ந்து அவ்வப்போது ஆவிக்குரிய விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். முடிவாக, கடவுள் அந்த தலைமுறையினர் அனைவரையும், அதாவது நேரடியாக பழைய உடன்படிக்கையைப் பெற்றவர்கள் யாவரையும், நியாயந்தீர்த்தார். அவர்களில் இருபது வயள்ளவர்களையும் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் யாவரையும் வனாந்தரத்திலேயே சாகும்படி செய்தார். இறுதியில், அவர்களுடைய ஆவிக்குரிய விபச்சாரத்தினிமித்தமாக அந்த நாடு முழுவதையும் சிறைபட்டுப்போகச் செய்தார். ஆனால் தற்போது, இந்த புதிய உடன்படிக்கையின் அடிப்படையில், இந்த உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுக்குட்பட்ட யாவரும் அவருக்கு எதிரான விபச்சாரக்காரர்களாக மாட்டார்கள் என்று அவர் சொல்லுகிறார். அவர்கள் அவரைவிட்டு அகன்றுபோக மாட்டார்கள், ஏனென்றால், “எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைப்பேன்” (வசனம் 40) என்கிறார். அதாவது “அவர்களுடைய இருதயத்தில் எனக்குப் பயப்படும் பயத்தை நான் ஏற்படுத்துவேன். அவர்களுடைய உள்ளான மனதில் இதை வைப்பேன். ஆகவே அவர்கள் தம்மையும் தம்முடைய வழிகளையும் பற்றிக்கொண்டிருப்பார்கள். தம்மைவிட்டு அகன்று போகமாட்டார்கள்” என்கிறார்.

எரேமியா தீர்க்கதரிசியினுடைய இந்த வாக்கியத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ளுவதென்ன? தேவபயமென்பது புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதமாக இருக்கிறது என்பதை முதலாவது நாம் கற்றுக்கொள்ளுகிறோம். அந்தக் காலத்திலும், அதைத் தொடர்ந்து ஆண்டவராகிய இயேசு இவ்வுலகில் வந்து இரட்சிப்பை நிறைவேற்றிய பிறகும், புதிய உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் ஒருவன் தேவபயத்தைக் கொண்டிராமல், யாரொருவரும் மெய்யாகவும், சரியாகவும் தேவனுக்குப் பயந்திருக்க முடியாது. இரண்டாவது, இது கடவுளுடைய தனித்துவமான சர்வஏகாதிபத்தியத்தின் செயல் – “நான் அவர்கள் இருதயத்தில் எனக்குப் பயப்படும் பயத்தை வைப்பேன்.” தானே இதைச் செய்கிறேன் என்று கடவுள் இதைவிட வேறு எப்படித் தெளிவாகச் சொல்ல முடியும். நானே அதை இருதயத்தில் வைப்பேன் என்று அவர் சொல்லுகிறார். அவர் இங்கு செய்வேன் என்று சொல்லியிருப்பது, மோசேயின் காலத்தில் இருந்ததைப்போல் ஏதோ ஒரு குறிப்பிட்ட கொஞ்சக் காலத்திற்குரியதல்ல. பழைய உடன்படிக்கையின் கீழ் ஒட்டுமொத்த நாடுமே ஆவிக்குரிய விபச்சாரத்திலும், தொடர்ந்து கடவுளைவிட்டு பின்வாங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். எரேமியா தீர்க்கதரிசி அறிவிக்கிறார், “புறஜாதியார் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; ஆனாலும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவர்கள்” (எரேமியா 9:26). எருசலேமில், யூதர்களுக்கான தன்னுடைய கடைசிப் பிரசங்கத்தில், ஸ்தேவான், ஒட்டுமொத்த இஸ்ரவேல் தேசத்தினுடைய தொன்றுதொட்ட வரலாற்றின் ஆவிக்குரிய நிலையைச் சுருக்கமாக இப்படி விவரிக்கிறார், “வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்தஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்” (அப்போஸ்தலர் 7:51). இருப்பினும், கடவுள் தம்முடைய “கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கை மீதியாக” (ரோமர் 11:5) வைத்திருந்தார். அவர்கள் மறுபிறப்படைந்தவர்களாகவும், பரிசுத்த ஆவியானவரைத் தங்களில் கொண்டவர்ளாகவும், தேவபயம் இருதயத்தில் நாட்டப்பட்டவர்களாகவும் இருந்தவர்கள். ஆனால் கடவுள் சொல்லுகிறார், இந்த புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுக்குக்கீழ் வருகிறவர்கள், தங்களுடைய இருதயத்தில் தமக்கு பயப்படும் பயத்தைப் பெற்றிருப்பார்கள். அவர்கள் தொடர்ந்து ஆண்டவரைப் பற்றிக் கொண்டிருப்பார்கள் என்பதற்கான உறுதியை இது தருகிறது. மேலும், இது கிருபையினுடைய ஆசீர்வாதங்களின் சூழலில் செய்யப்படும் என்றும் இப்பகுதி சொல்லுகிறது. அவர், “நான் அவர்கள் தேவனாயிருப்பேன்” (எரேமியா 32:38), “அவர்களுக்கு நன்மைசெய்வதிலிருந்து, நான் அவர்களைவிட்டு பின்வாங்குவதில்லை” (வசனம் 40), “அவர்கள் மேல் சந்தோஷமாயிருப்பேன்” (வசனம் 41) என்று சொல்லுகிறார். கிருபையினுடைய ஆசீர்வாதங்களின் அடிப்படையில் அவரைப்பற்றும் பயத்தை அவர் அவர்களில் நாட்டுவார்.

எரேமியாவின் தீர்க்கதரிசனத்திலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்? இரண்டு முடிவுகளுக்கு நாம் வரலாம். முதலாவது, தம்முடைய இரத்தத்தினால் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்திய கிறிஸ்துவினுடைய செயலினால் அல்லாமல், எந்தவொரு நபரும் தேவபயத்தைக் கொண்டிருக்க முடியாது. புதிய உடன்படிக்கையினுடைய வாக்குத்தத்தத்தின் ஆசீர்வாதமாக இது நம்முடைய இருதயத்தில் வைக்கப்பட வேண்டும். ஆதாமினுடைய வழித்தோன்றல்களில் தானாக இந்த தேவபயம் காணப்படுவதோ வளருவதோ கிடையாது. தேவபயம் என்பது நம்முடைய இருதயங்களில் இயற்கையாக வளரக்கூடிய மனப்பாங்கு அல்ல. இயற்கையான மனிதனைப் பற்றி ரோமர் 3:18 சொல்லுகிறது, “அவர்கள் கண்களுக்கு முன்பாக தெய்வபயம் இல்லை”. இயற்கையான மனிதன், கடவுள் மீது பயபக்தியும் மரியாதையும் கொண்டு, அவரை நேசித்து, நம்பி, அவருக்குக் கீழ்ப்படிகிற பயத்தை ஒருபோதும் கொண்டிருக்க மாட்டான். புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுக்குக்கீழ் வருகிறவன் மட்டுமே இத்தகைய பயத்தை அறிந்திருப்பான். இத்தகைய பயம் கல்வியறிவின் மூலமாகவோ, ஆவிக்குரிய அறிவின் வளர்ச்சியின் மூலமாகவோ, வம்சாவழியின் மூலமாகவோ வருகிறதில்லை. கடவுளுடைய கிருபையின் சர்வஏகாதிபத்திய செயலின்படியாக, ஒருவன் புதிய உடன்படிக்கையினுடைய ஆசீர்வாதங்களை அடைவதன் மூலமாக மட்டுமே இதைப் பெறுகிறான்.

இந்தப்பகுதியிலிருந்து நாம் பெறுகிற இரண்டாவது முடிவு என்னவென்றால், புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களில் பங்குகொண்டுள்ள யாவரும் தங்களுடைய இருதயத்தில் தேவபயம் நாட்டப்பட்டுள்ளதைத் தங்களுடைய வாழ்க்கையில் வெளிப்படுத்துவார்கள். உடன்படிக்கையின் இரத்தத்தினால் மன்னிப்பைப் பெற்ற பாவியான ஒருவன் கடவுளுக்கு பயப்படாமல் இருப்பதென்பது முடியாத காரியம். ஒருவன் புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவிடம் வந்து, அவரால் மன்னிக்கப்பட்ட பிறகும், கடவுளோடு தனக்கிருக்கிற தொடர்பைப்பற்றியும், தேவபயத்துடன் வாழுவதைப் பற்றியும் அக்கறையில்லாதவனாக இருக்க முடியாது.

இருதயத்தில் தேவனுடைய கிருபையின் செயல்

எவ்வாறு புதிய உடன்படிக்கையின்கீழ் தேவபயமானது மனிதர்களுடைய இருதயங்களில் கொடுக்கப்படுகிறது என்பதை இப்போது கவனிப்போம். மிகுந்த பயபக்தியுடன் நான் ஒரு கேள்வியை உங்கள்முன் வைக்கிறேன்: “மனிதர்கள் தங்களுடைய பணத்தைப் பாதுகாப்பு பெட்டியில் பத்திரப்படுத்தி வைப்பதுபோல் கடவுள் வெறுமனே தேவபயம் என்ற மனநிலையை ஏற்படுத்தி அதை மனிதர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் நட்டுவைத்துவிடுகிறாரா?” என்பதுதான் அந்தக் கேள்வி. இந்த விதத்திலும் கடவுளால் இதை செய்திருக்க முடியும் என்று நாம் சொல்லலாம். கடவுள் சிறு குழந்தைகளையும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களையும் மறுபிறப்படையச் செய்கிறபோது, இரட்சிக்கும் கிருபையின் பொதுவான வழிமுறைகளைத் தாண்டி வேறுவிதங்களிலும் செயல்படுகிறார். ஆனால் கடவுளுடைய கிருபையின் செயல்பாடுகள் மனிதனுடைய தன்மையை மீறிச் செயல்படுகிறதில்லை என்கிறது வேதம். கடவுள் மனிதர்களுடைய இருதயங்களில் தேவபயத்தை நிலைநிறுத்துவதற்கு, பாவிகளுடைய மனம், உணர்ச்சிகள், சித்தம் ஆகியவற்றைத் தாண்டிச் செயல்படுவதில்லை. ஆனால் அவற்றின் பின்னிருந்தும், அவற்றின் மூலமாகவும், அவற்றின் கீழிருந்தும் அதை செய்கிறார். ஆகவேதான் இந்த விஷயத்தில் நம்முடைய செயல்பாடுகளை அவருடைய செயல்பாடுகளிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாக இருக்கிறது. இக்காரணத்தினால்தான், நம்முடைய ஆண்டவர் நிக்கொதேமுவிடம், மறுபிறப்பில் பரிசுத்த ஆவியானவருடைய செயல்பாடுகள் காற்றின் செயல்பாடுகளைப் போல் இருக்கும் என்றார். அதாவது, காற்று எங்கிருந்து வருகிறது, எங்கு போகிறது என்பதிலிருக்கும் புதிரைப் போல் அது இருக்கும் என்பது அதன் அர்த்தம்.

பிலிப்பியர் 2:13ல் பவுல் சொல்லுகிறார், “ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்”. இந்தப்பகுதி சொல்லுகிறது, கடவுள் “உங்களில் செயல்படுகிறார்”. கடவுள் நம்மில் செயல்படுகிறபோது, நாம் பொம்மலாட்டக் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் பொம்மையைப் போலாகிறதில்லை. கடவுள் செயல்படுகிறதினால், நாம் மனந்திரும்பவும், விசுவாசிக்கவும், ஜெபிக்கவும், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் நம்மை உந்தித்தள்ளும் சக்தி ஏற்படுகிறவரை நாம் பொறுத்திருக்க வேண்டும் என்று சொல்லுகிறதா? இல்லை. கடவுள் “நாம் விருப்பங்கொள்ளும்படி நம்மில் செயல்படுகிறார்” என்று பவுல் சொல்லுகிறார். நம்முடைய உள்ளான உணர்வுகளில் செயல்படுகிறார். அவருடைய பார்வையில் பிரியமானதை, நாம் உணர்வுபூர்வமாக தெரிவுசெய்கிறபோது அவர் நம்மில் செயல்படுகிறார் என்பதை நாம் கண்டறியலாம். நான் திருச்சபைக்குப் போகிறபோது, திருச்சபைக்கு போக நான் தீர்மானித்திருக்கிறேன் என்பதை என்னுடைய உணர்வுபூர்வமாக அறிந்திருக்கிறேன். அதாவது அங்கு போய், கடவுளை நாடுகிற சபையாரோடு சேர்ந்து ஜெபிக்க நான் முடிவுசெய்திருக்கிறேன். என்னுடைய வாயைத் திறந்து அவரை ஆராதிக்கவும், பாடல்களைப் பாடிப் போற்றவும் தீர்மானித்திருக்கிறேன். ஆனால், இதையெல்லாம் நான் செய்கிறபோது, கடவுள்தாமே தம்முடைய நல்ல செய்கைகளில் நான் விருப்பங்கொள்ளும்படி என்னில் செயல்படுகிறார். இதை நான் உணர்வுபூர்வமாக நினைத்திராவிட்டாலும் இதுவே உண்மை.

ஏன் நான் திருச்சபைக்குப் போய் ஜெபிக்கவும் ஆராதிக்கவும் தீர்மானித்தேன் என்று என்னையே நான் கேட்டுப்பார்க்கிறபோது, கடவுள், நான் அவருடைய கட்டளைகளின் வழிகளைவிட்டு விலகாமலும், என்னைப்பற்றிய அவருடைய சித்தமாக அவரே வெளிப்படுத்தியுள்ளவைகளைத் தெரிவுசெய்யவும், தம்மைப் பற்றும் பயத்தை என்னுடைய இருதயத்தில் வைத்திருப்பதினாலும் இப்படி செய்கிறேன் என்று நான் பதில் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.

புதிய உடன்படிக்கையினுடைய தனித்துவமான முதலாவது ஆசீர்வாதம் என்ன? கடவுள் தம்முடைய மக்கள் மனப்பூர்வமாக கீழ்ப்படிவின் வாழ்க்கைக்குள் வரும்படி தம்முடைய வல்லமையினால் அவர்களில் செயல்படுவதுதான் அவர் செய்கிற முதலாவது காரியம் என்று கடவுளே சொல்லுகிறார். அவர் அவர்களிடம் எதிர்பார்ப்பது அவர்களுக்கு ஏதோ தூரமாக இருக்கிற ஒன்றல்ல. மாறாக, அவர், என் கட்டளைகளை நான் அவர்கள் இருதயத்தில் எழுதுவேன் என்கிறார். இது பரிசுத்த கட்டளைகளைப் பற்றிய இருதயப்பூர்வமான நாட்டம். ஆகவேதான், அவர்களில் அவைகளைக் கைக்கொள்ளுவதும் கீழ்ப்படிவதும் தொடர்ந்து முன்னேறுகிறதாக இருக்கும். “பழைய உடன்படிக்கையில் இருப்பதுபோல், என்னுடைய எதிர்பார்ப்புகளை நான் அவர்கள் முன் வைக்கிறதோடு மட்டும் இருந்துவிடாமல், அவர்களுடைய உள்ளான மனதிலும் கீழ்ப்படிவின் வாழ்வை நாடும்படிச் செய்வேன்” என்று கடவுள் சொல்லுகிறார். இது கடவுளுக்கான நம்முடைய கடமைப்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வைக் காட்டுகிறது. இதுதான் தேவபயத்தின் இரண்டாவது அம்சம். நியாயப்பிரமாணம் எனக்கு வெளியிலிருந்து, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குப் போதிக்கிறதோடு, அது எனக்குள்ளாகவும் இருந்து, அதன் பரிசுத்த கோரிக்கைகளை நான் நிறைவேற்றும்படி என்னை உந்தித்தள்ளுகிறதாகவும் இருக்கிறது.

கடவுள் தம் மக்களை சொந்தமாகக் கொண்டுள்ளார், அவர்கள் அவரைத் தம்மில் கொண்டுள்ளார்கள்

வேறு என்னவெல்லாம் தாம் செய்கிறதாக கடவுள் சொல்லுகிறார்? எரேமியா 32:38ல் சொல்லுகிறார், “அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்”. “நான் என்னையே அவர்களுக்கு வெளிப்படுத்தியிருப்பதினால், நான் அவர்களுடையவராயிருப்பேன்”. புதிய உடன்படிக்கையில் தம்முடைய குமாரனிலும், அவருடைய செயல்பாடுகளிலும் இதை அவர் வெளிப்படுத்தியிருப்பதை நாம் அறிவோம். கடவுள் அவர்களுடைய தேவனாக இருப்பதாக மட்டும் அவர் சொல்லாமல், அவர்கள் அவருடைய ஜனங்களாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அவர் தம்மை வெளிப்படுத்தியிருப்பதனால் அவர் அவர்களைக் கொண்டிருப்பது மட்டுமல்ல, அவர்களும் அவரைக் கொண்டிருப்பார்கள். கடவுள் தம்முடைய மக்களோடு நெருக்கமான ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். அதாவது, அவர் அவர்களோடும், அவர்கள் அவரைக் கொண்டிருப்பதுமாகிய உறவின் மூலமாக அவர் எப்போதும் அவர்களைச் சுற்றி எங்கும் நிறைந்திருப்பதைக் காட்டுகிறார். தேவபயத்தின் இரண்டாவது அம்சத்தை இது சுட்டவில்லையா? தன் பாவத்திற்காக வருந்துகிற, கடவுளை விசுவாசிக்கிற பாவியான ஒருவன், பெரியவரும், எல்லாம் வல்லவரும், உயர்ந்தவரும், பரிசுத்தமானவருமான கடவுள், ஏதோ எங்கோ இருக்கிறவரல்ல, அவர் என்னுடைய கடவுளாக இருக்கிறார், நான் அவருடைய பிள்ளையாக இருக்கிறேன் என்பதை உணர்ந்தவனாக இருப்பான். இந்த உடன்படிக்கையின் உறவில், நான் அவருடையவன், அவர் என்னுடையவர். இதைத்தான் கடவுள் புதிய உடன்படிக்கையில் வாக்களித்திருக்கிறார்.

கடவுளைப் பற்றிய மெய்யான அறிவு

வேறு என்ன அவர் வாக்களித்துள்ளார்? எரேமியா 31:34ல் அவர் சொல்லுகிறார், “இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: ‘கர்த்தரை அறிந்துகொள்’ என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்”. இந்தப் புதிய உடன்படிக்கையில், தம்முடைய மக்களுக்குத் தம்மைப் பற்றிய மெய்யானதும் உள்ளார்ந்ததுமான அறிவைத் தருவதாக கடவுள் சொல்லுகிறார். பழைய உடன்படிக்கையில், சிலர் மட்டுமே கடவுளை மெய்யாக அறிந்திருந்தார்கள. ஆபிரகாமின் சரீரப்பிரகாரமான வாரிசுகளில், பெரும் கூட்டத்தினர் கடவுளை அறியாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவருடைய மகா வல்லமையின் செயல்பாடுகளை கண்ணாரக் கண்டிருக்கிறார்கள். ஆனால் அவருடைய இருதயத்தைப் பற்றிய அறியாமையிலேயே இருந்திருக்கிறார்கள். கடவுள் அவர்களிடத்தில், “எகிப்திலே உங்களுடைய புலம்பலை நான் கேட்டேன். உங்கள்மீது நான் பரிதாபமும் மனதுருக்கமும் கொண்டு, உங்களை அங்கிருந்து வெளியே கொண்டு வருவதற்காக மோசேயை அனுப்பினேன்” என்று சொன்னார். அவர்கள் எகிப்தை விட்டு வெகுதொலைவில்கூட வரவில்லை, செங்கடலின் கரையோரத்தில் அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் மோசேயிடம் வந்து, “கடவுள் எங்களை வெளியே கொண்டு வந்தது, எங்களைக் கொல்லுவதற்காக” என்றார்கள். அவர்கள் யேகோவாவை அறிந்திருக்கவில்லை. உண்மை என்னவென்றால், அவர்கள் அந்நாளில் செங்கடலின் கரையோரத்தில் நின்றுகொண்டிருந்தது, அவர்களுடைய புலம்பலைக் கர்த்தர் கேட்டு, அவர்கள்மீது மனதுருக்கம் கொண்டு, அவர்களை விடுவித்ததனால்தான். ஆனால் அவர்களோ கடவுளுக்கு எதிராகத் திரும்பி, “கடவுள் எங்களைக் கொல்லும்படியாக வெளியே கொண்டு வந்தார்” என்றார்கள். ஒரு தகப்பனாக உங்களுடைய பிள்ளையிடம், “உனக்காக நான் ஒரு அற்புதமான நாளை ஏற்பாடு செய்திருக்கிறேன். உனக்குப் பிடித்தமானவைகளைச் செய்வதற்கு உனக்குப் பிடித்தமான இடங்களில் ஒன்றுக்கு போகப் போகிறோம்” என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். அப்போது, நீங்கள் யாவரும் உங்களுடைய காரில் ஏறி அமர்ந்திருக்கிறபோது, உங்கள் மகன், “இந்த காரை செங்குத்தான மலைமீது ஏற்றி அங்கிருந்து எங்களைக் கீழே தள்ளி கொல்லப் போகிறீர்களா” என்று கேட்கிறான். அப்போது ஒரு தகப்பனாக உங்களுடைய மனம் என்ன நினைக்கும்? ஒருவேளை நீங்கள் அவனுக்கு “மகனே, உனக்கு என்னைப் பற்றித் தெரியவில்லை. என்னுடைய திட்டம் என்ன என்பதைப் பற்றி ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன்” என்று சொல்லலாம். யூதர்கள் கடவுளை அறிந்திருக்கவில்லை. மீதமிருந்தவர்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள், ஆனால் பெருங் கூட்டத்தினர் அவரை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.

கடவுள் சொல்லுகிறார், புதிய உடன்படிக்கையில், அவர்கள் ஒருவருக்கொருவர் “கடவுளை அறிந்துகொள்” என்று பாடம் நடத்தத் தேவையில்லை. ஏனென்றால், புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களில் ஒன்றாக, அவர்களில் கடவுளைப் பற்றிய மெய்யானதும், இரட்சிக்கிறதும், உள்ளார்ந்ததுமான அறிவை அனுபவரீதியாக யாவரும் தங்களில் பெற்றிருப்பார்கள். அதாவது கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றிய சரியான பார்வை கொண்டிருந்து, உள்ளார்ந்த மனதிலும் ஆவிக்குரிய வகையிலும் அதை அறிந்து, அவைகளை நேசிப்பார்கள். தேவபயத்தில் காணப்படும் மூன்று அம்சங்களையும் இங்கு காணமுடிகிறதில்லையா? “இவைகளை அவர்களுடைய இருதயத்தில் நான் வைப்பேன்” என்று கடவுள் சொல்லுகிறார். இந்த மூன்று அம்சங்களும் ஒருவனுடைய இருதயத்தில் இருந்தால், அவனில் தேவபயத்தைப் பார்க்க முடியும்.

பாவமன்னிப்பும் தேவபயமும்

புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுக்கெல்லாம் அடித்தளமானதும், ஏனைய ஆசீர்வாதங்களெல்லாம் அதனடிப்படையிலும், அதிலிருந்தும் வெளிப்படுகிறதுமான ஒன்றைப் பற்றித்தான் இப்பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். அதை நாம், எரேமியா 31:34ல் பார்க்கலாம், “நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்”. இதையே வேறுவிதமாக சொல்லுவதானால், இதுவரை நாம் பார்த்த எல்லா ஆசீர்வாதங்களிலும், முழுமையானதும் இறுதியானதுமாகிய பாவமன்னிப்பாகிய ஆசீர்வாதத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கின்றன. இந்த வார்த்தைகளின் மூலமாக கடவுள் வாக்களிப்பதென்னவென்றால், “நான் அனைத்தையும் செய்வேன். அதாவது, என் சித்தத்தை நிறைவேற்றுவதற்கான விருப்பத்தை உங்களில் ஏற்படுத்துவது, என்னைப் பற்றிய அனுபவரீதியான அறிவைத் தருவது, உங்களை என்னுடைய ஜனங்களாகக் கொண்டிருப்பது, அதன் மூலம் நீங்கள் என்னை உங்களுடையவராகக் கொண்டிருப்பது, ஆகிய இவையாவும், உங்களுடைய பாவங்களுக்கான மன்னிப்போடு பிரிக்கமுடியாதபடி இணைந்திருக்கின்றன.” இந்த பாவமன்னிப்பைப் பெற்றவன் மட்டுமே, இருதயத்தில் நாட்டப்படும் புதிய உடன்படிக்கையின் ஏனைய ஆசீர்வாதங்களை அறிந்திருப்பான். எரேமியா இதைக் காண்கிறார். கடவுள் இதை அவருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். தேவபயத்தைக் கொண்டிருப்பதும், புதிய உடன்படிக்கையின் இரத்தத்தினாலாகிய பாவமன்னிப்பைப் பெற்றிருப்பதும் பிரிக்க முடியாதபடி இணைந்திருப்பவை.

இவை இரண்டையும் ஒன்றிணைத்திருக்கிற ஆழமானதும் அற்புதமானதுமான ஒரு வேதப்பகுதி இருக்கிறது அது சங்கீதம் 130. அதில், சங்கீதக்காரன் மனச்சோர்வு கொண்டவராக இருக்கிறார். அவர் தன்னுடைய ஆவிக்குரிய நிலையை விவரிக்கிறபோது “ஆழங்களில்” இருப்பதாகச் சொல்லுகிறார். இந்த சங்கீதம் இப்படியாக ஆரம்பிக்கிறது, “கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்” (வசனம் 1). அந்த “ஆழங்கள்” என்பது என்ன என்பதைப் பற்றிய சில குறிப்புகள் இச்சங்கீதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே” (வசனம் 3). “ஆழங்கள்” என்று அவர் குறிப்பிடுவது, தன்னுடைய பாவத்தைப் பற்றிய ஆழமான குற்றவுணர்வையும், கடவுள் தன்னுடைய பாவத்தை மிகவும் கண்டிப்பான முறையில் கையாளுவாரானால் நிச்சயமாக தான் இல்லாமல் போய்விடுவேன் என்பதை உணர்ந்ததையுந்தான் இப்படிச் சொல்லுகிறார். இவ்வளவு பரிசுத்தமான கடவுள், தான் செய்த ஒவ்வொரு பாவத்தையும் கணக்கில் வைத்திருப்பாரானால், கடவுளுடைய பிரசன்னத்தில் நிற்பதோ, நியாயத்தீர்ப்பில் நிற்பதோ நிச்சயமாக தன்னால் முடியவே முடியாது என்பதை சங்கீதக்காரன் உணர்ந்தவராக இருக்கிறார். கடவுளுக்கு முன்பாக நாம் மகிழ்ச்சியோடு நிற்கமுடியாவிட்டால், அவரைப் பற்றிய பயத்துடன் நாம் நடக்க முடியாது. கடவுளுக்கு முன்பாக நிற்கிறபோதெல்லாம் பயமும் திகிலும் மட்டுமே ஏற்படுமானால், எப்படி அவரிடத்தில் மகிழ்ச்சியோடு உறவுகொள்ள முடியும்? இந்தவிதத்தில் யார்தான் அவர் முன்பாக நிற்க முடியும்? இதுதான் இந்த சங்கீதக்காரனை துளைத்தெடுக்கிற கேள்வி.

அவருடைய குழப்பதிற்கான பதிலை 4வது வசனம் தருகிறது, “உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.” சங்கீதக்காரன் சொல்லுகிறார், கர்த்தர் நம்முடைய அக்கிரமங்களைக் குறித்து வைத்து, அதற்கேற்ற நீதியை நிறைவேற்றுவாரானால், ஒருவனும் அவருக்கு முன்பாக நிற்க முடியாது. இந்த சங்கீதக்காரனும் கடவுளுக்கு முன்பாக நிற்க முடியாமலிருந்தால், கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு உந்தித்தள்ளும் இருதயத்தைப் பற்றி அவர் ஒன்றும் அறியவில்லை என்றும், கடவுளை தன்னுடைய தேவனாக கொண்டிருக்கவும், தான் கடவுளுக்கான பிள்ளையாக இருக்கவும் அவரால் முடியவில்லை என்றும், இந்த சங்கீதக்காரன் உள்ளான மனதில் அனுபவரீதியாக கடவுளை அறிந்திருக்கவில்லை என்றுதான் சொல்ல முடியும். ஆகவேதான் கடவுள் அவரிலும் அவர் கடவுளிலும் மகிழ்ச்சியடைய முடியவில்லை. கடவுளைப் பற்றிய திகிலையும் பயத்தையும் ஒருவன் கொண்டிருக்கலாம், ஆனால் அவருக்கு முன்பாக பயபக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் சமாதானத்துடனும் நிற்க முடியாது.

இந்த குழப்பங்களுக்கான பதில் கடவுளிலுள்ள மன்னிப்பை கண்டறிவதில்தான் இருக்கிறது. ஒருவன் பரிசுத்த ஆவியானவருடைய செயல்பாட்டினாலும், விசுவாசத்தினாலும் பாவமன்னிப்பிற்கான கடவுளுடைய வழியைக் கண்டறிகிறபோது, அது அவனுடைய இருதயத்தில் தேவபயத்தை ஏற்படுத்தும். அது எப்படி உண்டாகும்? ஒருவேளை நாம் வாசித்த வசனம், “உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் ‘நீதி’ உண்டு” என்று இருந்திருந்தால், அதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் நாம் பயப்படும்படிக்கு அவரிடத்தில் மன்னிப்பு உண்டு என்று இருக்கிறது. கடவுள் அருளும் பாவமன்னிப்பைக் கண்டறிவது எப்படி தேவபயத்தை நம்மில் ஏற்படுத்தும்? பாவ மன்னிப்பின் அனுபவம் நம்மில் தேவபயத்தை ஏற்படுத்துவதற்கு இரண்டு வழிகளை நான் கூறுவேன். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சரீரப்பிரகாரமாக வருவதற்கு முன்பு, மறுபிறப்படைந்த ஆண்டவருடைய மனிதன் ஒருவன், சுவிசேஷத்தின் இந்த உண்மையை, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சரீரப்பிரகாரமாக வந்து பரிசுத்த ஆவியானவரையும் அனுப்பிய பிறகு, நாம் அறிந்திருப்பதைவிடக் குறைந்தளவே அறிந்திருந்திருப்பார். அவர்கள் அதை கண்டார்கள், புரிந்துகொண்டிருந்தார்கள், களிகூரவும் செய்தார்கள். ஆனால் அவைகளை அனுபவப்பூர்வமாக அறிந்திருக்கவில்லை.

கடவுளுடைய குணாதிசயங்களின் வெளிப்பாடு

முதலாவது, தம்முடைய மக்களின் பாவமன்னிப்பிற்காக கிறிஸ்து நிறைவேற்றிய பணிகளில், கடவுள் தம்முடைய ஆச்சரியமான குணாதிசயங்கள் யாவையும், மகிமையான வகையில் ஒருமுனைப்படுத்தி, முழுமையாக அதை வெளிப்படுத்தியிருக்கிறார். கடவுளுடைய குணாதிசயங்களை அதாவது அவருடைய மகத்துவத்தையும், அவருடைய மகிமையையும் பற்றிய சரியான பார்வையில் தேவபயம் துவங்கினால், நிச்சயமாக பாவமன்னிப்பிற்கான கடவுளுடைய வழியைக் கண்டறிவதென்பது அவருடைய மகிமையான குணாதிசயங்களின் பிரகாசத்தைக் கண்டறிவதாகும். ஆகவே, கடவுளிடத்தில் பாவமன்னிப்பு இருப்பதினால், அவருக்கு பயப்படுகிறோம்.

அந்த பாவமன்னிப்பு தேவபயத்தோடு எப்படி தொடர்புடையதாகிறது? இக்கேள்விக்கான பதிலைக் கொடுக்கும் முயற்சிக்கு என்னை அனுமதியுங்கள். கடவுள் இந்த உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கிய விதத்தின் ஞானத்தைப் பற்றி சிந்திக்கிறபோது நாம் வியப்படைகிறோம். உயிரினங்களில் பல்வேறு வகைகள், வானமண்டலங்களின் படர்ந்து விரிந்த தன்மை, விண்ணுலகிலுள்ள நட்சத்திரக் கூட்டங்கள் என்பதெல்லாம் நமக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன. இவைகளின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள கடவுளுடைய ஞானத்தைப் பற்றிச் சிந்திப்பதென்பது பாலகர்களின் ஞானத்தைப் போன்றது என்று எண்ணி நம்மை வாயடைத்துப் போகச் செய்வதுதான் கன்னியின் வயிற்றில் கடவுள் மனிதனாக உருவானது. கடவுளுடைய இந்த ஞானமே பாவியான மனிதனுடைய மன்னிப்பிற்கான திட்டத்தைத் தீட்டியது. அதாவது கடவுள்தாமே மனிதனாக வந்து, பாவியான மனிதனுடைய குற்றத்தை கடவுள்தாமே தன்மீது ஏற்றுக்கொண்டு, அவைகளிலிருந்து மனிதனை விடுவிப்பது என்ற திட்டம். அவரே நீதியுள்ளவராகவும், இயேசுவில் விசுவாசிக்கிறவர்களுக்கு நீதியை வழங்குகிறவராகவும் இருக்கிறார். ஆகவே கிறிஸ்து கடவுளுடைய ஞானம் என்று அழைக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை (1 கொரிந்தியர் 1:24). என்ன அருமையான ஞானத்தின் வெளிப்பாடு!

அப்படியானால், கடவுளுடைய பரிசுத்தத்தைப் பற்றி என்ன சொல்லுவது? ஆபிரகாமோடு நீங்களும் உடனிருந்து, சோதோம் கொமாரா மற்றும் அதை சுற்றியிருந்த நகரங்கள் தீக்கிரையாகி, நெருப்புச் சூளையிலிருந்து வெளியேறும் புகையைப் போன்று அங்கிருந்த நெருப்புத்தழலில் புகை உண்டானதை பார்த்திருந்தால் (ஆதியாகமம் 19:28), கடவுளுடைய பரிசுத்தத்தையும் பாவத்தின்மீது அவருக்கிருந்த வெறுப்பின் பயங்கரத்தையும் கண்டிருப்பீர்கள். கடவுளுடைய பரிசுத்தத்தின் அந்த வெளிப்பாடு நம்மை வெளிரிப்போகச் செய்யக்கூடியதாக இருக்கிறது, அதை கெத்சமனே மற்றும் கொல்கதாவோடு ஒப்பிடுகிறபோது. கெத்சமனேயின் குளிர்ந்த இரவில், அந்த தெய்வீக மனிதனுக்கு, இன்னும் சில மணி நேரங்களில் தனக்கு நடக்கவிருப்பதைப் பற்றி மேலதிக புரிதல் பிதாவினால் கொடுக்கப்படுகிறது. அந்தப் புரிதல் அவரை இருதயத்தில் திகிலடையச் செய்து, தளர்ச்சியுற்றவராக கீழே விழச் செய்தது. நமக்காக பாவமானார் என்பதின் ஆழமான அர்த்தத்தை இது விளக்குகிறது. அதாவது, மனித வர்க்கத்தினுடைய பாவத்தின் மீதான கடவுளுடைய கோபத்தின் பாத்திரத்திலுள்ள கடைசிச் சொட்டு மட்டும் அவர்மீது அன்று வடிக்கப்பட்டது. மிகுந்த வியாகுலத்துடனான ஜெபத்தைத் தொடர்ந்து, அவருடைய இரத்த நாளம் வெடித்து, இரத்தம் வியர்வையுடன் கலந்து வெளிப்பட்டது.

நாம் சிலுவையைப் பார்க்கிறோம், அதேநேரம் வானங்கள் காரிருளினால் அடைபட்டிருக்கிறதையும் பார்க்கிறோம். தேவகுமாரனுக்கு மூச்சிரைக்கிறதைக் காணமுடிகிறது. அத்தோடு, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” (மத்தேயு 27:46) என்று வானத்தைக் குத்திக் கிழிக்கிற கதறலைக் கேட்கிறோம். இவையாவும் ஏன் அவசியம்? இக்கேள்விக்கான சரியான பதில் என்னவென்றால், கடவுள் மகா பரிசுத்தமானவர், மனிதர்களுடைய பாவங்கள் தம்முடைய சொந்த நேசகுமாரன் மீது வைக்கப்பட்டபோது, நித்தியத்திலும் விளக்க முடியாதளவுக்கு அவர் கதறுகிறவரை தாம் மிகவும் நேசிக்கிற குமாரனாக இருந்தபோதிலும் தம்முடைய கோபத்தின் உக்கிரத்தை எந்தவகையிலும் தளர்த்தாமலும் குறைக்காமலும் அவர் மீது கொட்டித் தீர்த்தார். தாம் மிகவும் நேசிக்கிற தம்முடைய குமாரனாக இருந்தபோதிலும், ஒருபோதும் பாவம் செய்யாதவராக இருந்தபோதிலும், கடவுள் மகா பரிசுத்தராக இருப்பதினால் இப்படிச் செய்தார். இந்த உண்மையை அப்போஸ்தலனாகிய பவுல் இப்படி விவரிக்கிறார், “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” (ரோமர் 8:32).

கெத்செமனேயிலும் கொல்கதாவிலுமாக இயேசு அடைந்த பயங்கரமான வேதனையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பாவமன்னிப்பிற்கான வழியை கண்டறிகிறபோது, அதில் கடவுளுடைய ஞானம் மற்றும் பரிசுத்தமாகிய குணாதிசயத்தின் வெளிப்பாட்டைக் காணமுடிகிறது. மேலும், கொலோசெயர் 2:15ல், கிறிஸ்து அந்தகாரத்தின் வல்லமையையெல்லாம் வெளியரங்கமான கோலமாக்கி, தம்முடைய மரணம் மற்றும் மகிமையான உயிர்த்தெழுதலினால் அவைகளின்மேல் வெற்றி சிறந்தார் என்று வாசிக்கிறோம். நரகத்தில் எல்லா வல்லமையும் மரண நிலையிலேயே அவரை வைத்திருக்க முயற்சித்திருப்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஆனால் பேதுரு சொல்லுகிறார், “அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது” என்று (அப்போஸ்தலர் 2:24).

அத்தோடு, தேவனுடைய அன்பும் இதில் வெளிப்படுகிறது. தேவனுடைய அன்பின் ஆழத்தை யாரால் அளவிட முடியும்? “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8). தேவகுமாரன் எவ்வளவு தூரம் தம்முடைய மகத்துவமான அன்பை வெளிப்படுத்திக் கீழிறங்கி வந்திருக்கிறார் என்பதை சிலுவையில் பார்க்கலாம். இதன் காரணமாகவே அப்போஸ்தலனாகிய பவுல் இப்படிச் சொல்லுகிறார், “அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலிப்பியர் 2:8). பாவமன்னிப்பிற்கான வழியைப் பற்றிய ஆவிக்குரிய புரிதல் எப்படி நம்மில் தேவபயத்தை உண்டாக்குகிறது என்பதை உங்களால் பார்க்க முடிகிறதா? இத்தகைய கடவுளுக்கு முன்பாக வியப்பேதும் இல்லாமல் எப்படி இப்படியான காரியங்களை நம்மால் கண்டறிய முடியும்? இந்த உண்மைகளையெல்லாம் ஒருவன் ஆழ்ந்து சிந்தித்தபிறகு, எப்படி ஆச்சரியமும், பயபக்தியும், குற்றவுணர்வும் கொள்ளாமல் இருக்க முடியும். அதாவது இந்த கடவுள் நம்முடைய இரட்சிப்பைப்பற்றி இடைவிடாமல் அக்கறைகாட்டுகிறவராக, இவைகளையெல்லாம் செய்திருக்கிறவராகையால், நம்முடைய விருப்பங்களையெல்லாம் அவருடைய சித்தத்திற்கு அடிபணிய வைத்து, நம்முடைய இருதயத்தின் எல்லா நேசத்தையும், கீழ்ப்படிவையும் காட்டுவதற்கு அவரே பாத்திரராக இருக்கிறார்.

கடவுளோடு சமாதானமும், தகப்பனிடத்தில் பிள்ளையின் பயமும்

பாவமன்னிப்பும், தேவபயமும் ஏன் சேர்ந்திருக்கிறது என்பதற்கான இரண்டாவது காரணம் என்னவென்றால், கடவுள் தம்முடைய குமாரன் மூலமாக வழங்குகிற பாவமன்னிப்பை விசுவாசத்துடன் ஏற்பதும், பாவத்தினிமித்தமாக உண்டாகிற குற்றவுணர்வோடு பெரும்பாலும் சேர்ந்திருக்கிற பயத்திலிருந்தும் திகிலிலிருந்தும் நம்மை விடுவிப்பதுமே. பாவியான ஒருவன் கடவுளால் மன்னிக்கப்படுகிறபோது, அவன் அதுவரை கடவுளைப் பற்றி கொண்டிருந்த பயமும் வெறுப்பும், அவர்மீது மதிப்பும், அன்புகலந்த பயமும், தத்துப்பிள்ளையினிடத்தில் காணப்படும் கீழ்ப்படிவுமாக மாறிவிடுகிறது. எல்லா விசுவாசிகளையும் பற்றி பவுல் இப்படியாகச் சொல்லுகிறார், “அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” (ரோமர் 8:15). இத்தகைய அன்பைக் கண்டறிகிற யாதொருவனும், “இதோ, ஆண்டவரே, நான் என்னையே தந்துவிடுகிறேன், இதைத்தான் என்னால் செய்ய முடியும்” என்பதைத் தவிர்த்து வேறு என்ன சொல்ல முடியும்? கடவுள், தகுதியற்றவர்களான பாவிகளுக்கு தம்முடைய இரக்கத்தின் மூலமாக பாவமன்னிப்பை வழங்கியதினால், அவர்மீதான பயம், மரியாதையாகவும், ஒரு பிள்ளை தன் தகப்பனிடத்தில் காட்டும் பயமாகவும் மாறிவிடுகிறது. யோவான் “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல” (1 யோவான் 4:18) என்று சொல்லுகிறபோது, இந்த உண்மையைத்தான் குறிப்பிடுகிறார். தேவபக்தியின் மையமாக வேதம் நமக்குக் காட்டுகிற தேவபயத்தை இல்லாமலாக்குவதற்காக வேதத்தில் இந்த வசனம் கொடுக்கப்படவில்லை. மாறாக, இப்போது நாம் படித்துவருகிற சத்தியத்தைத்தான் இது நிலைநிறுத்துகிறது.

நியாயப்பிரமாணம், ஒருபோதும் போட்டியிட முடியாததான தேவபயத்தை, இரக்கமும் கிருபையும் சேர்ந்து வெளிக்கொண்டு வருகிறது. இந்த தேவபயம் கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் பயங்கரத்தைக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அவருடைய இரக்கங்கள் மற்றும் பலன்களையே அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கும். பேரச்சத்தினால் உண்டாகிற பயம் நியாயத்தீர்ப்பையே அதிகமாக நினைக்கத் தூண்டும், நடுக்கத்துடன் கடவுளைவிட்டு தூர ஓடச் செய்யும். பரிசுத்த ஆவியினால் நாட்டப்படுகிற பயம், நமக்குக் கொடுக்கப்படுகிற இரக்கத்தைப் பற்றி நினைக்கத் தூண்டும், அது பயபக்தியுடன் அவரை ஆராதிக்கவும், அன்புடன் அவருடன் உறவுகொள்ளவும் செய்யும். இரக்கத்தைப் பெற்றதின் விளைவாக காணப்படும் தேவபயமானது, கடவுளுடைய கைப்பிடியளவுள்ள நியாயப்பிரமாணத்தைக் காட்டிலும் திறந்த கைகளுடனான அவருடைய ஆசீர்வாதங்களிலேயே பெரிதும் அக்கறைகாட்டும். இந்த உண்மைதான், சங்கீதக்காரனை, “தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கிவிடுவிக்கவும்; பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது” (சங்கீதம் 33:18-19) என்று சொல்லும்படி வைத்தது.

தவறாக பயன்படுத்தப்படும் பாவமன்னிப்பு

இந்தப் போதனைகள் தொடர்பாக அநேக நடைமுறை பயன்பாடுகள் இருக்கின்றன. முதலாவதாக, இங்கு மனிதர்களால் உருவாக்கப்பட்ட எல்லா மதங்களின் மடமையைப் பார்க்கிறோம். மனிதர்களால் உருவாக்கப்பட்ட எல்லா மதங்களும், பாவமன்னிப்பைத் தவிர்த்த வேறு வழிகளில்தான் தேவபயத்தைப் பற்றிப் போதிக்கின்றன, அல்லது தேவபயத்தை உண்டாக்காத பாவமன்னிப்பைப் பற்றித்தான் வாக்களிக்கின்றன. சுவிசேஷத்தின்படியாக அல்லாமல், மனித ஞானத்தின்படியாக தேவநீதியை அடைவதற்கான எந்தவொரு திட்டமும் இந்த இரண்டு வழிகளில் ஏதோவொன்றில் சென்று தோல்வியில்தான் போய் முடிவடையும். இன்னொருவரின் செயல்பாட்டினாலும் மரணத்தினாலும் நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பாவமன்னிப்பைப் பெறுவோம் என்று மனிதர்களிடத்தில் சொல்லுவது, அவர்கள் அதை நம்பி ஒழுக்கக்கேடான வாழ்க்கையை வாழுவதற்கு காரணமாக அமைந்துவிடும் என்று சிலர் சொல்லுவார்கள். இதுதான் ரோமன் கத்தோலிக்க சபையின் வாதம். இலவசமானதும் முழுமையானதுமான பாவமன்னிப்பைப் பற்றி அவர்கள் போதிப்பதில்லை. ஏனென்றால், அவ்வாறு விளக்கினால், அவர்கள் பாவத்தின் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதால் பாவத்தைத் தொடர்ந்து செய்யலாம் என்று எண்ணங்கொள்ளுவார்கள் என்று அதற்கான காரணமாக சொல்லுகிறார்கள். கீழ்ப்படிவை ஏற்படுத்தக்கூடிய தேவபயத்தை ஒருவனில் உண்டாக்க வேண்டுமானால், அவனுடைய மனச்சாட்சியில் பயத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும், கடவுள் தன்னை ஏற்றுக்கொண்டிருக்கிறாரா, இல்லையா என்பதைப்பற்றிய சந்தேகத்தையும் கிளப்பிவிடுவதுதான் வழி என்று அவர்கள் நம்புகிறார்கள். அப்போதுதான் ஒரு நபர் கடவுளுக்கு கீழ்ப்படிவதற்கு பயத்துடன் முயற்சி செய்து, தொடர்ந்து இப்படியே நான் செய்துவந்தால் கடவுளுடைய அனுகூலத்தைப் பெற முடியும் என்ற எதிர்பார்ப்புடன் செயல்படுவான் என்கிறார்கள். கடவுள் தம்மைப் பற்றுகிற பயத்தை ஒரு மனிதனுடைய இருதயத்தில் ஏற்படுத்துவதற்கு கையாளுகிற வழிமுறையாக நாம் இதுவரை பார்த்து வந்தது, ரோமன் கத்தோலிக்கம் எப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. அதாவது, ரோமன் கத்தோலிக்கம் ஒரு போலி மதம். பவுல் “வேறு சுவிசேஷம்” என்று சொல்லுவது இதைத்தான். உண்மையில் இது சுவிசேஷமே அல்ல. ரோமன் கத்தோலிக்கத்தின் இந்த போலிப் போதனைக்கு நேர்எதிர்மாறாக, கடவுள் நம்முடைய மனச்சாட்சியில், நம்முடைய நிலைமைக்குத் தகுந்த முழுமையான பயத்தை ஏற்படுத்தி, கிறிஸ்துவின் செயலின் மூலமாக வருகிற பாவமன்னிப்பிற்கான வழிமுறையை எடுத்துக்காட்டி, அவர்மீது மரியாதையுடனான பயத்தை, அன்புடனும் நம்பிக்கையுடனும் கொண்டிருக்கும்படியான விசுவாசத்தைத் தருகிறார்.

இரண்டாவது விதமான போலி மதம், இதற்கு நேரெதிர்மாறானதாக இருக்கிறது. அது என்னவென்றால், ஒருவன் சிலுவையின் இரத்தத்தினால் முழுமையான பாவமன்னிப்பைப் பெறுகிறான் என்கிறது இந்தப் போதனை. ஆனால் அந்தப் பாவமன்னிப்பை ஏற்பதாக அவன் ஒரு முறை அறிக்கை செய்வதால், அதாவது, “பாவிகளுடைய ஜெபத்தைச் செய்வது” அல்லது “கிறிஸ்துவுக்காக தீர்மானம் எடுப்பது” போன்றவற்றில் ஏதாவதொன்றைச் செய்துவிட்டபிறகு, எதுவுமே கடவுளுடைய அனுகூலத்திலிருந்து அந்த நபரைப் பிரிக்க முடியாது என்று அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்படியான அறிவிப்பு செய்தியைப் பெற்ற பெரும்பாலானவர்கள் தேவபயமற்றவர்களாகவே இருந்து வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய மனச்சாட்சியின் உள்ளுணர்வின் காரணமாக சில காரியங்களில் கடவுளைப்பற்றிய அக்கறையைக் காட்டுகிறார்கள். ஆனால் இருதயத்திலிருந்து கடவுளுடைய பரிசுத்த கட்டளைகளைப் பற்றிக்கொண்டிருப்பதற்கான வல்லமையை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். உத்தரிக்கும் ஸ்தலத்தில் நாளை கண்விழிக்க வேண்டி வந்துவிடுமோ என்று ரோமன் கத்தோலிக்கர்களைப் போல் அவர்கள் பயப்படுவதில்லை. சிலுவையின் இரத்தத்தினால் பாவமன்னிப்பைப் பெற்றிருப்பதினால், நிச்சயமாக தாங்கள் பரலோகத்தில்தான் கண்விழிப்போம் என்று உறுதியாக அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும் அவர்களுடைய வாழ்க்கையில் தேவபயமென்பது குறைவாகவே காணப்படுகிறது. கடவுளுடைய பரிசுத்த நாளான ஓய்வுநாளில், அவருக்காக ஒரு மணிநேரமோ அல்லது இரண்டு மணிநேரமோ கொடுத்துவிட்டு, கடவுளுடைய ஓய்வுநாள் கட்டளையைப் பற்றிய எந்தவிதமான அக்கறையுமில்லாமல், ஏனைய நேரமனைத்தையும் தங்களுக்கு விருப்பமான காரியங்களில் அவர்கள் செலவிடுவதன் மூலம் ஓய்வுநாளை அசுத்தமாக்குகிறார்கள். கடவுளுடைய கட்டளையைப் பற்றிய எந்தவிதமான எண்ணமும் இல்லாமல், ஓய்வுநாளில் தங்களுடைய வீட்டை ஒழுங்குபடுத்தும் வேலைகளிலும், தொலைகாட்சியிலும் கைப்பேசியிலுமாக தங்களுடைய நேரங்களை செலவிடுகிறார்கள். ஏன்? அவர்கள் தங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதென்ற ஒரு பொய்யை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவேதான் தேவபயத்திற்கு அவர்கள் அந்நியராயிருந்து, அதன் வேரையோ கனியையோ தங்களில் கொண்டிராமல் இருக்கிறார்கள்.

இந்த இரண்டு தவறுகளும் அடிப்படையிலேயே குறைபாடுள்ளவைகள். நீங்கள் முழுமையான பாவமன்னிப்பின் ஆசீர்வாதங்களுக்குள்ளாக வராதவரை நிச்சயமாக உங்களில் தேவபயத்தைக் கொண்டிருக்க முடியாது. ஆனால் அந்த ஆசீர்வாதத்திற்குள்ளாக நீங்கள் வந்துவிட்டால், நிச்சயமாக அவருக்குப் பயப்படுகிறவர்களாக இருப்பீர்கள். அப்படியில்லாவிட்டால், கடவுளுடைய இரட்சிக்கும் இரக்கத்தின் அனுபவத்தை மெய்யாக ஒருநாளும் நீங்கள் பெறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

நடைமுறை பயன்பாடுகள்

சூடுண்ட மனச்சாட்சியைக் கொண்டிருக்கிறீர்களா? கடவுள் மற்றும் அவருடைய கட்டளைகளின் பயங்கரங்கள் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை உங்களுக்குக் காட்டியிருக்கின்றனவா? பயங்கரத்தைப் பற்றிய பயத்தைக் கொண்டிருந்தும், பாவமன்னிப்பின் அடிப்படையிலான பயத்தை அறியாதிருக்கிறீர்களா? அடிமைத்தனத்தின் ஆவியைக் கொண்டிருந்து, “அப்பா, பிதாவே” என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பற்றி அறியாதிருக்கிறீர்களா? இதுதான் உங்களுடைய நிலைமையாக இருக்குமானால், நீங்கள் இருக்கிறவண்ணமாக இயேசுவிடம் நீங்கள் வராதவரை, நீங்கள் ஆறுதல் பெறவோ தேவபயத்தைக் கொண்டிருக்கவோ போவதில்லை என்பதை நிச்சயமாக நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அவரே புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தர், அவர் இரக்கத்தின் அரியணையில் அமர்ந்திருக்கிறார், அந்த அரியணையினிடத்தில்தான் அவருக்குப் பயப்படும்படியான பாவமன்னிப்பிற்கான வழியிருக்கிறது. அவரை உங்களுடைய ஆண்டவராக இரட்சகராக விசுவாசியாதவரை அவருக்கு நீங்கள் பயப்படப் போகிறதில்லை. நீங்கள் இருக்கிறவண்ணமாக அவரிடத்தில் வாருங்கள். அதைத்தான் அவர் வரவேற்கிறார். அப்போது அவர் உங்களை ஏற்றுக்கொள்ளுகிறார். ஆண்டவராகிய இயேசுவின் எதிரிகள் அவரை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு “இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்” (லூக்கா 15:2). உண்மையில், அவர்களுக்கே தெரியாமல் இந்த மகிமையான சத்தியத்தை அவர்கள் அறிவிக்கிறார்கள்.

கலக்கமுற்றிருக்கிற ஆத்துமாக்களுக்கான ஆறுதல் வார்த்தையும் இங்கிருக்கிறது. தங்களை மிகவும் பாவியாக உணருகிற, கடவுளுடைய மெய்யான பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்கள் சில வேளைகளில், இவ்வளவு காலமாக கடவுள் தங்களை எப்படித்தான் பொறுத்துக்கொண்டிருக்கிறாரோ என்று ஆச்சரியப்படுவார்கள். இது உங்களுடைய நிலைமையாக இருந்தால், உங்களுடைய பாவத்தைப் பற்றியெல்லாம் மறந்துவிட்டு, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள் என்று போதிக்கிறவர்களின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள். உங்களுடைய பாவங்களை மறக்காதீர்கள். மாறாக, பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய எல்லாப் பாவங்களையும் உங்களுக்குக் காண்பிக்கட்டும். அவருக்குத் தெரியும் நீங்கள் அவைகளைத் தாங்குவீர்கள் என்று. ஏனென்றால், உங்களுடைய பாவங்களில் ஆயிரத்தில் ஒரு பங்கைதான் அவர் உங்களுக்கு காண்பித்திருக்கிறார். கடவுளுடைய ஆவியானவர், உங்களையும் சங்கீதக்காரனோடு சேர்ந்து இப்படிச் சொல்ல வைப்பார், “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே”. பிறகு, உங்களுடைய பாவங்களைப் பற்றி அதிகமாக சிந்திக்கிறபோது, பாவமன்னிப்பை வழங்குகிற கடவுளுடைய மகிமையின் சிறப்பை எண்ணி வியப்படைவீர்கள். பாவமன்னிப்பை வழங்குகிற அவருடைய மகிமையின் சிறப்பை எவ்வளவாக நீங்கள் பார்க்கிறீர்களோ, அவ்வளவாக அவருக்குப் பயப்படுவீர்கள் – “உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு”. ஆக்டோவியஸ் வின்ஸ்லோ என்பவர் சொல்லுகிறார், “உங்களுடைய அன்றாட நடவடிக்கைகளைக் கிறிஸ்துவினுடைய இரத்தத்தில் அமிழ்த்தி ஊறவையுங்கள்”. இதைத்தான் நாம் யாவரும் செய்ய வேண்டும். உங்களுடைய நடவடிக்கைகளை அதில் ஊறவைத்து, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவிடம் மறுபடியும் மறுபடியும் வருகிறபோது, உங்களுடைய இருதயத்தில் தேவபயமானது ஆழ ஊன்றியிருப்பதைக் காண்பீர்கள். அது உங்களுடைய அன்றாட வாழ்க்கையை அதிகமதிகமாக ஒழுங்குமுறைப்படுத்தும்.

தங்களுடைய ஆவிக்குரிய நிலையைப் பற்றிய விஷயத்தில் வஞ்சிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நம்பிக்கையின் உறுதியைக் காட்டும் சத்தியமும் இங்கிருக்கிறது. பயங்கரத்தைப் பற்றிய உணர்வும், நரகத்தைப் பற்றிய பயமும் இல்லாதபோது, நீங்கள் பாவமன்னிப்பைப் பெற்றிருப்பதாக நீங்கள் எண்ணலாம். ஏனென்றால், உங்களுக்குள்ளாக எல்லாம் நன்றாகவே இருப்பதாக சிலர் உங்களை நம்ப வைப்பார்கள். அப்போது நீங்கள் சொல்லுவீர்கள், “புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதத்தை நான் பெற்றிருக்கிறேன்” என்று. ஆனால் கேள்வி என்னவென்றால், “தேவபயம் எங்கே?” அவர் உங்களை தம்முடைய உடன்படிக்கையில் உட்படுத்தியிருந்தால், உங்களுடைய இருதயத்தில் தம்மைப் பற்றும் பயத்தை வைப்பதாக கடவுளுடைய சொந்த வார்த்தைகளே சொல்லுகின்றன. அவருக்கான உங்களுடைய கடமைப்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா? எங்கும் படர்ந்திருக்கிற அவருடைய பிரசன்னத்தைப் பற்றிய உணர்வை உங்களுடைய வாழ்க்கையில் காணமுடிகிறதா? பாவமன்னிப்பைப் பற்றிய உங்களுடைய புரிதல் தேவபயத்துடன் கட்டப்பட்டிருக்கிறதா? இன்னும் கொஞ்சம் நேரடியாக சிலவற்றைச் சொல்லுகிறேன். யாரெனும் ஒருவர் உங்களுடைய பிள்ளைகளிடத்தில், “உங்களுடைய தாய் தகப்பனிடத்தில் காணப்படும் குணாதிசயங்களில் எல்லாவற்றையும்விட முதன்மையானதாக நீங்கள் பார்க்கக் கூடியது எது?” என்று கேட்டால், “அது தேவபயம்” என்று உங்கள் பிள்ளைகளால் சொல்ல முடியுமா? “என்னுடைய வீட்டில் நடக்கிற எந்தவொரு விஷயத்திலும், என்னுடைய அப்பா, கடவுளுடைய வார்த்தை அந்த விஷயத்தைப் பற்றி என்ன சொல்லுகிறது என்பதிலேயே எப்போதும் முதலாவது அக்கறைக்காட்டுவார்” என்று உங்களுடைய பிள்ளை சொல்லுமா? என்னுடைய அப்பா, அம்மாவிடம் தேவபயம் என்பதுதான் முதன்மையான குணாதிசயமாக இருக்கிறது என்று உங்களுடைய பிள்ளையால் சொல்ல முடியுமா? நீங்கள் தேவபயத்துடன் வாழுகிறீர்கள் என்ற சாட்சியத்தை உங்களுடைய பிள்ளைகளிடத்தில் கட்டாயப்படுத்தி வாங்க முடியாது. அதை நீங்கள் பெற வேண்டும். மெய்யாகவே நீங்கள் தேவபயத்துடன் வாழுகிறதின் மூலமாக மட்டுமே அதை பெறமுடியும்.

உங்களுடைய பிள்ளைகளோ அல்லது உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களோ, அப்படியான சாட்சியத்தை உங்களைப் பற்றி சொல்லாமலிருந்தால் அதை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டாமா? ஒருவேளை அப்படியிருந்தால், இன்றே நீங்கள் கடவுளை நோக்கி, “கடவுளே, மெய்யாக உமக்கு பயப்படும் பக்குவம் என்னில் ஆரம்பிக்க, பாவமன்னிப்பின் கிருபையைக் காணக்கூடிய பார்வையை எனக்குத் தாரும்” என்று கெஞ்சுங்கள். பாவமன்னிப்புடனான புதிய உடன்படிக்கையின் அனைத்து கிருபையுள்ள பலன்களின் துவக்கத்தையே, தேவபயமானது மெய்யான விசுவாசியினுடைய அடையாளமாக காட்டுகிறது.

கிறிஸ்தவ வைராக்கியத்தை அழிக்கவோ அல்லது குறைக்கவோ கூடிய நான்கு அம்சங்கள்

பக்தி வைராக்கியம் – 5 – டேவிட் மெரெக்

ரோமர் 12:17 – 15:7 – ஒரு கண்ணோட்டம்

இது சம்பந்தமாக, ஜோன் ஏஞ்சல் ஜேம்ஸ் என்பவர் சொல்லிய ஒரு மேற்கோள் வாக்கியத்தை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.

“பாவத்திலிருந்தும் சாத்தானிடமிருந்தும் விடுபட்டு கிறிஸ்துவிடம் பரிசுத்தமடையும்படியாக மாறுவதற்கு தீவிர ஆர்வமும் சுய அர்ப்பணிப்பும் அவசியம் என்ற போதனை அப்போஸ்தலர்களின் காலத்திலிருந்தே இங்குமங்குமாக சில இடங்களைத் தவிர்த்து பெரிதாக எங்கும் காணப்பட்டதில்லை என்ற எண்ணமுடையவர்கள், இதைப்பற்றிய போதுமான அறிவைப் பெற்றிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது.”

இங்கே ஜோன் ஏஞ்சல் ஜேம்ஸ், திருச்சபையாக அதிலும் குறிப்பாக நற்செய்தி ஊழியர்களாக இருப்பவர்களுடைய உழைப்பின் முதன்மை நோக்கம் எதன்மீதிருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறார். அது “பாவத்திலிருந்தும் சாத்தானிடமிருந்தும் விடுபட்டு கிறிஸ்துவிடம் பரிசுத்தத்திற்காக மாறுவதாகும்”. உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் சுவிசேஷத்தைக் கேட்பதன் மூலமாக மட்டுமே மனமாற்றமடைய முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அதிலேயே அவர்களுக்குத் தீவிர வைராக்கியம் இருக்க வேண்டும். அது கர்த்தருடைய பெரிய கட்டளை என்று அழைக்கப்படுகிறதன் மீதுள்ள வைராக்கியமாகும். எனினும், இன்னுமொரு உண்மையும் இங்கிருக்கிறது. இந்த மையக் கட்டளையிலிருந்து நாம் வழிதவறிச் செல்லக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. கிறிஸ்தவ வைராக்கியத்தை அழிக்கக்கூடிய பல விஷயங்களும் இருக்கின்றன.

இந்த ஆக்கத்தில், நம்மில் காணப்படும் கிறிஸ்தவ வைராக்கியத்தை அழிக்கக்கூடியது அல்லது பெரிதும் குறைக்கக்கூடியதுமான நான்கு விஷயங்களில் நம்முடைய கவனத்தை செலுத்தப் போகிறோம். சென்ற ஆக்கத்தில், பக்தி வைராக்கியத்தை விளக்கும் மைய வசனத்தைச் சுற்றியுள்ள வசனங்களிலுள்ள நடைமுறை போதனைகளை விளக்கமாக படித்தோம். அந்த மைய வசனம் ரோமர் 12:11 “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள், ஆவியிலே அனலாயிருங்கள், கர்த்தருக்கு ஊழியஞ் செய்யுங்கள்”. இந்த வசனத்தின் சந்தர்ப்ப சூழலைப் பற்றித்தான் கவனித்து வருகிறோம். அது ஆரோக்கியமான பக்தியுள்ள கிறிஸ்தவனின் வரைபடத்தை நமக்குக் காண்பிக்கிறது. அது அவனிலுள்ள பல ஆவிக்குரிய அம்சங்களின் இணைப்பை நமக்குக் காட்டுகிறது, அதில் பக்தி வைராக்கியமும் ஒன்றாக இருக்கிறது. இவைகள் இல்லாமல் உங்களில் பக்தி வைராக்கியம் இருப்பதற்கு வழியில்லை. இவைகள் எங்கிருக்கிறதோ அங்கு பக்தி வைராக்கியமும் இருக்கும்.

இதுவரை நாம் ரோமர் 12:11ஐ சுற்றியுள்ள உடனடி சந்தர்ப்பதைப் பற்றி, அதாவது ரோமர் 12:1-16 வரையுள்ள வசனங்களில் கவனத்தைச் செலுத்தினோம். ஆனால் ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம், இந்த நடைமுறை விஷயங்கள் ரோமர் 15:7 வரைக்கும் தொடருகிறது என்பதை. ஆரம்பத்தில் நான் இந்தப் பாடத்தை 12:16 வரையுள்ள வசனங்களோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இருந்தேன். ஆனால் இதைத் தொடர்ந்துள்ள வசனங்களை நான் தியானித்தபோது, அவைகள் இந்த சந்தர்ப்பதை அடுத்துள்ளதாக இருந்தபோதும் அவைகளும் இந்தப் பாடத்திற்கு மிகவும் நெருக்கமானவை என்பதை உணர்ந்தேன். அதுவும் குறிப்பாக சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறவர்களுக்கு மிகவும் பொருத்தமானவை என்பதை நான் உணர்ந்தேன். ரோமர் 12:17 முதல் 15:7 வரையுள்ள வசனங்கள் நம்முடைய கிறிஸ்தவ வைராக்கியத்தை அழிக்கக்கூடிய அல்லது பெரிதும் குறைக்கக்கூடியதுமான நான்கு விஷயங்களை அடையாளம் காட்டுகிறது. இந்தப் பெரிய பகுதியை சுருக்கமாக இந்த ஆக்கத்தில் நாம் படிக்கப் போகிறோம்.

கிறிஸ்தவ வைராக்கியத்தை அழிக்கக்கூடிய முதலாவது அம்சம். என்னவென்றால், நமக்கு எதிராக பாவம் செய்பவர்களுக்கு அன்பற்ற, மன்னிப்பற்ற, கசப்பான, பழிவாங்குதலை பதில் நடவடிக்கையைச் செய்வதாகும். வாசியுங்கள் ரோமர் 12:17-21. இந்த வசனத்தில் பவுல், நம்மை தவறாக அல்லது கேடாக நடத்துபவர்களுக்கு பக்தியுள்ள பதில் நடவடிக்கையை செய்யும்படி அழைக்கிறார். நாம் ஏற்கனவே பார்த்த 14வது வசனத்திலேயே இதை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதாவது, “உங்களை துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்க வேண்டியதேயன்றி சபியாதிருங்கள்” என்றார். நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதினால் துன்பப்படுத்தப்படுவதைக் குறித்து இங்குச் சொல்லுகிறார். ஆனால் இப்போது, 17வது வசனத்தில் பவுல் மறுபடியுமாக அதே கருப்பொருளைக் குறிப்பிடுகிறார். தீமைக்கு தீமை செய்யாதிருங்கள் என்று வலியுறுத்துகிறார். 20வது வசனத்தில் நம்முடைய விரோதிக்கு இரக்கம் காட்டும்படி சொல்லுகிறார். பிறகு 21வது வசனத்தில், தீமையினால் வெல்லப்படாமல் இருங்கள் என்று சொல்லி இதை முடிக்கிறார்.

பவுல் இந்த இடங்களிலெல்லாம், மக்கள் பெரும்பாலும் நமக்கு தீமை செய்வார் என்ற உண்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறார். மேலும், போதகர்களாக இருப்பவர்களும் நிச்சயமாக இந்த தீமைகளுக்கு விலக்கப்பட்டவர்களல்ல. அவிசுவாசிகளிடமிருந்து சில வேளைகளில் இவை வரலாம். விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்களிடமிருந்தும் சில வேளைகளில் வரலாம். உங்களுடைய மதிப்பை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உங்களுக்கு எதிரான வதந்திகளை பரப்பலாம். அந்த நபரின் வாழ்க்கையில் அக்கறைக்காட்டி அதிகமான நேரத்தை நீங்கள் அவருக்காக செலவிட்டிருக்கலாம். அவர்கள் உங்கள் நண்பர்கள் என்று எண்ணியிருந்திருக்கலாம். ஆனால் இப்போது அவர்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பி உங்களையே தாக்கலாம். உங்களை ஏமாற்றலாம் அல்லது உங்களிடமிருந்து திருடலாம். உங்களிடம் பொய் பேசலாம் அல்லது உங்களை சரீரப்பிரகாரமாக தாக்கவும் செய்யலாம். வளர்ந்த பெரியவர்களானவர்களுக்கும் இப்படி நடக்கிறது. நம்மில் சிலர் சிறு வயதிலேயே இப்படியான இழிவான வகையில் நடத்தப்பட்டிருக்கலாம். கடுமையானதும் கொடூரமானதுமான வார்த்தைகளைக் கொண்டு நம்மை இழிவுபடுத்தியிருக்கலாம். நம்முடைய பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமே நம்மிடம் அன்புகாட்டாமல் இருக்கலாம். ஒருவேளை நாம் புறக்கணிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட நிலையில் இருக்கலாம். வயதானவர்கள் அல்லது பெரியவர்கள் நம்மை பாவகரமான வகையில் நடத்தியிருக்கலாம். ஒருவேளை சரீரப்பிரகாரமாக அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம்.

இத்தகைய கேடான காரியங்கள் மற்றவர்களிடமிருந்து நமக்கு வரும்போது நம்முடைய இருதயத்தில் தொடர்ந்திருக்கும் பாவத்தின் இயற்கையான பதில் என்ன? தீய செயல்களின் மூலம் அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். இது பெரும்பாலும் அந்த நபரை சபிக்கும். இது பெரும்பாலும் நமக்கான சுய பாதுகாப்பை ஏற்படுத்தும்படி அவர்களிடமிருந்து தள்ளி நிற்கும்படி நம்மைச் சுற்றி ஒரு மதில் சுவரை எழுப்பிக்கொள்ளும். இந்தக் கேடுகளுக்கு நான் எப்படி உள்ளாக்கப்பட்டேன் என்று என்னுடைய இருதயம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். இதன் தொடர்ச்சியாக என்னுடைய இருதயத்தில் கோபம் அதிகரிக்கும். என்னுடைய ஆத்துமாவில் கசப்பு அதிகமாகும். எனக்கு நடந்த கேட்டிற்கு சமன் செய்யப் பார்ப்பேன். என்னால் முடியுமானால், எனக்கு அதற்கான தைரியம் இருக்குமானால், ஏதாவதொரு வழியில் அதற்கு பதில் செய்ய முயற்சிப்பேன். முடிவாக, எனக்கு கேடு செய்தபடியினால், அவர்கள் செய்ததற்குத் தக்க பலனை அடைய வேண்டும் என்று விரும்புவேன்.

உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இந்த வகையில் உங்களுடைய பதில் நடவடிக்கை இருந்தால், மற்றவர்களை நேசிப்பதும் அவர்களுக்கு நன்மை செய்கிறதுமான பக்தி வைராக்கியத்தை உங்களில் எப்படிப் பார்ப்பது? இது பக்தி வைராக்கியத்தை அழித்துவிடும். மேலும், போதகராக இருக்கிறவர்கள் ஊழியத்தில் எந்த முயற்சி எடுத்தாலும், அது பலன்தராதது மட்டுமல்ல மற்றவர்களுக்கு கேடாகவுமே அமையும். நம்முடைய கசப்பான ஆத்துமா மற்றவர்களையும் நம்மையும்கூட விஷமாக்கிவிடும் (எபிரெயர் 12:15). நம்முடைய பாவகரமான பதில் நடவடிக்கையினால் தேவனுடைய ஆவியை நாம் துக்கப்படுத்துகிறவர்களாகவும் இருப்போம் (எபேசியர் 4:30-32).

எனவே மற்றவர்கள் நமக்கு தீங்குசெய்யும்போது நாம் செய்ய வேண்டியதென்ன? முதலாவதாக, நீதியை எதிர்பார்ப்பது தவறானதல்ல என்பதை பவுல் இங்கு தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார். ஏனென்றால், நாம் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறோம் மற்றும் தேவன் நீதியின் தேவனாக இருக்கிறார். இருப்பினும், தவறுக்கான நீதியை நிறைவேற்றுவதை நம்முடைய கையில் எடுப்பது தவறானது என்பதையும் அவர் தெளிவாக விளக்கியிருக்கிறார். நான் ஒரு பெற்றோராகவோ அல்லது அரசாங்கமாகவோ இல்லாதபட்சத்தில் தவறுக்கான நீதியை நிறைவேற்றுவது என்னுடைய வேலையல்ல. பெற்றோருக்கும் அரசாங்கத்திற்கும் ஆண்டவர் ஒரு வரம்பிற்குட்பட்ட, நீதி வழங்குவதைக் கொடுத்திருக்கிறார். எனவே, எனக்கு எதிராக ஒருவன் தீங்கு செய்கிறபோது அதற்கான பதில் நடவடிக்கையாக நானும் தீங்கு செய்யப்பார்ப்பது தவறானது. அப்படியானால், நீதி என்னவாவது? 19வது வசனம் இதற்கான பதிலைத் தருகிறது. கடவுள் நீதியை நிறைவேற்றும்படி நாம் விட்டுவிட வேண்டும். பழிவாங்குவது கடவுளுக்குரியது. நாம் செய்வதைவிட அவர் சிறப்பான வகையில் நீதியை நிறைவேற்றுவார்.

கடவுளுடைய கையில் பழிவாங்கும் வேலையை நாம் விட்டுவிட்டால், நம்முடைய ஆத்துமா அவற்றிலிருந்து விடுவிக்கப்படுகிறது. கடவுளின் கிருபையினால், நாம் ஒப்புரவாக்கப்படும்படி விடுவிக்கப்படுகிறோம். நம்மால் இயன்றமட்டும் மன்னிக்கவும், சமாதானத்துடன் வாழவும் விடுவிக்கப்படுகிறோம் (வசனம் 18). அவர்களுக்கு இரக்கங்காட்ட விடுவிக்கப்படுகிறோம் (வசனம் 17, 20-21). தீமையை நன்மையினால் மேற்கொள்ள விடுவிக்கப்படுகிறோம். பக்தி வைராக்கியத்தை வெளிப்படுத்தி நாம் மற்றவர்களுக்கு ஊழியஞ்செய்ய விடுவிக்கப்படுகிறோம்.

எனக்கு எதிராக தீமை செய்தவன், தன் பாவங்களை உணர்ந்து மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்துவிட்டால், எனக்கு எதிரான அவன் செய்த தீமைக்கான நீதியை அனுபவிக்காமலேயே போய்விடுவானே, இதற்கு என்ன செய்வது? நீதி என்னவாவது? ஓ, நாம் மறந்துவிட்டோமா? சிலுவையிடம் போங்கள். அவனுடைய பாவத்திற்கான தேவகோபத்தின் தண்டனையை தேவ ஆட்டுக்குட்டியானவர் சிலுவையில் அடைந்ததைப் பாருங்கள். அந்த நீதி போதுமானதில்லையா? இல்லையென்றால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய பாவங்களுக்கு கிறிஸ்துவின் பலி தேவையாக இருக்குமானால் மற்றவர்களுக்கும் அப்படித்தானே. கிறிஸ்துவின் இரத்தம் உங்களுக்கு பாவ மன்னிப்பை வழங்கும், ஆனால் மற்றவர்களை நிராகரிக்கும் என்று நீங்கள் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்லுவது பயங்கரமான மாய்மாலமாகும்.

2வது அம்சம். அரசியல் நடவடிக்கைகளில் தவறான முறையில் ஈடுபடுதல். வாசியுங்கள் ரோமர் 13:1-7. இந்த வசனங்களில் பவுல், நாட்டு அரசாங்கத்திற்கு நம்முடைய பக்தியுள்ள பதில் நடவடிக்கையை கோடிட்டுக் காட்டுகிறார். ரோமர் 12:10ல், ஒரு ஆரோக்கியமான, பக்தியுள்ள கிறிஸ்தவன் மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மதிக்கிற தாழ்மையின் அன்பைக் கொண்டிருப்பான் என்பதை நாம் பார்த்தோம். இப்போது அந்த மதிப்பையும் முன்னுரிமையையும் நாட்டை ஆளுகிறவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று பவுல் சுட்டிக்காட்டுகிறார். உண்மையில் அவர்கள் கடவுளால் நியமிக்கப்பட்டவர்கள். ஆகவே நாட்டை ஆளுகிறவர்களை தாழ்மையுடனும் மரியாதையுடனும் தேவ பயத்துடனும் நடத்த வேண்டும். கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போக வற்புறுத்தினாலொழிய நாம் அவர்களை எதிர்க்கவோ கீழ்ப்படியாமல் போகவோ கூடாது (அப்போஸ்தலர் 4:18-19; 5:27-29). கடவுளுக்கு முன்பாக நல்ல மனச்சாட்சியைக் கொண்டிருக்கவும் தண்டனையைத் தவிர்க்கவும் நாம் அவர்களுக்கு அடங்கிப் போக வேண்டும். நாம் அவர்களுக்கு வரி செலுத்துகிறோம். நம்முடைய அரசாங்கத்தை சட்டவிரோதமான படைகளின் மூலமாக தூக்கியெறியப் பார்ப்பது அல்லது வேறு எந்த முயற்சியின் மூலமாக அரசாங்கத்தை மாற்றப் பார்ப்பது பாவகரமானது. சில கிறிஸ்தவர்கள் இது வாதத்திற்குரியது என்று எண்ணினாலும், நான் இதை உறுதியாக நம்புகிறேன்.

நாட்டு ஆட்சியாளர்களைப் பற்றிய இந்த வேத விதிமுறைகள் போதகர்களுக்கும் பொருந்தும். அவர்கள் எந்த அரசாங்கமாக இருந்தாலும் இது பொருந்தும். அரசாங்கத் தலைவர்களுக்குக் கீழ்ப்படியாமல் போவதும் (கடவுளுக்குக் கீழ்ப்படிவது முதன்மைபெறுகிற காரியங்களைத் தவிர்த்த ஏனையவற்றிற்கு) அவமதிப்பதும் கிறிஸ்தவர்களிடம் கட்டாயம் இருக்கக்கூடாது, போதகர்களிடமும் கூட. இப்படிக் கீழ்ப்படியாமல் போகும்படி நம்மை உந்தித்தள்ளும் எதுவாக இருந்தாலும் அது நிச்சயமாக பக்தி வைராக்கியமாக இருக்க முடியாது. மாறாக, இத்தகைய பாவகரமான செய்கை பக்தி வைராக்கியத்தை குறைக்கும் அல்லது அழித்துவிடும்.

அரசியல் நடவடிக்கையில், அவை சட்டப்பூர்வமானதும் பாவமற்றதாகவும் இருந்தபோதும், போதகர்கள் ஈடுபடுவது பக்தி வைராக்கியத்தோடு தொடர்புடைய ஒரு நுட்பமான ஆபத்திற்குள்ளாவார்கள். அந்த ஆபத்து என்னவென்றால், கடவுள் அவர்களுக்குக் கொடுத்துள்ள பணிகளிலிருந்து கவனம் சிதறி சமரசத்தில் போய் முடியும். அதனால் பக்தி வைராக்கியத்தின் ஒரு பகுதி நிச்சயம் குறையும். பவுல் தன்னுடைய உடன் ஊழியனான தீமோத்தேயுவுக்கு சொல்லிய வாக்கியங்களை நினைவுகூருங்கள், 2 தீமோத்தேயு 2:3-4: “நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச் சேவகனாய்த் தீங்கநுபவி. தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.”

மேலும் நம்முடைய இறுதி எதிர்பார்ப்பு அற்புதமான ஒரு கிறிஸ்தவ அரசங்கம் ஏற்படுவதல்ல. மேகங்கள் மீது கிறிஸ்து வர வேண்டும் என்பதே நம்முடைய இறுதி எதிர்பார்ப்பு.

3வது அம்சம். மக்கள்மீது அன்புகாட்டுவதற்கு மாறாக பாவ இச்சைகளிலும் ஏனைய பாவங்களிலும் சிக்கிக்கொள்ளுதல். வாசியுங்கள் ரோமர் 13:8-14ஐ. இப்போது பவுல், ரோமர் 12:1-16 வரையுள்ள வசனங்களில் ஏற்கனவே நாம் பார்த்த ஆரோக்கியமான, பக்தியுள்ள ஒரு கிறிஸ்தவனில் காணப்படும் மிக முக்கியமான அம்சங்களை மீண்டும் எடுத்து மேலும் விரிவுபடுத்தி விளக்குகிறார். அந்தக் கருப்பொருள் நம்மை சுற்றியுள்ள மற்றவர்களிடம் காட்டும் அன்பு. இத்தகைய அன்பு பக்தி வைராக்கியத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதை ஏற்கனவே பவுல் சொல்லியிருந்தபோதிலும், அது இந்த இடத்திலும் இணைக்கப்பட்டுள்ளதென்று பவுல் எழுதுகிறார். இந்த அன்பை நாம் மற்றவர்களுக்கு செலுத்த வேண்டிய கடனாக பவுல் இங்கு படம்பிடித்துக் காட்டுகிறார். இது நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது. ஆண்டவராகிய இயேசு இதையே இரண்டாவது பிரதான கட்டளையாக அடையாளம் காட்டுகிறார். அதாவது “உன்னிடத்தில் நீ அன்பு கூருகிறது போல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக”.

எனினும், பவுல் மற்றவர்களிடத்தில் அன்புகூருவதைப் பற்றி பொதுப்படையாக இங்கு பேசவில்லை. அவர் குறிப்பிட்டுக் காட்டுகிறார். இரண்டாவது பிரதான கட்டளை என்பது பத்துக்கட்டளைகளின் இரண்டாம் பகுதியின் சுருக்கமாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறார். பத்துக்கட்டளைகளின் இரண்டாம் பகுதியை நாம் மீறுகிறபோது மற்றவர்களிடம் நாம் அன்புகாட்ட வேண்டும் என்கிற பொறுப்பை நாம் மீறுகிறோம் என்று பவுல் சொல்லுகிறார். வெறுப்பு, கொலை, விபச்சாரம் உட்பட எல்லாவகையான ஒழுக்கக்கேடு, மற்றவர்களைத் திருடுதல், மற்றவர்களிடத்தில் பொய் சொல்லுதல், மற்றவர்களுடையதை இச்சித்தல் ஆகியவற்றை கவனத்தோடு இருந்து தவிர்ப்பதையே அன்பு என்று வேதம் சொல்லுகிறது. இப்படியான நடவடிக்கைகள் நம்முடைய அயலானுக்கு கேடு உண்டாக்கும். ஆகவே அவர்கள் அன்பாக இருக்க முடியாது. அவர்கள் மெய்யான பக்தி வைராக்கியமுள்ளவர்களாகவும் இருக்க முடியாது.

நாம் விசுவாசித்த காலத்தைவிட இப்போது இயேசுவின் வருகை நெருங்கியிருப்பதினால் பவுல் தொடர்ந்து நம்மை எழுப்பிவிடுகிறார். அந்தகாரத்தின் கிரியைகளைக் களைந்துவிட்டு ஒளியின் ஆயுதங்களை தரித்துக்கொள்ளும்படி பவுல் நம்மை அழைக்கிறார். அவர் மறுபடியும் குறிப்பிட்டுக் காட்டுகிறார். களியாட்டையும் வெறியையும் விட வேண்டும் என்கிறார். எல்லாவித ஒழுக்கக்கேடுகளையும் இச்சைகளையும் விட வேண்டும் என்கிறார். மற்றவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் பொறாமையையும் விட வேண்டும் என்கிறார். இவையாவும் மற்றவர்களுக்கு எதிராக நாம் பாவம் செய்வதற்கு வழிவகுக்கும். இவை அன்புக்கும், பக்தி வைராக்கியத்திற்கும் எதிரானவை. இவற்றிற்கு பதிலாக, விசுவாசத்தினாலே நம்முடைய இரட்சகரை தரித்துக்கொண்டு, நம்முடைய சரீரம் அதன் இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள வழி ஏற்படுத்தாமல் இருப்போமாக. உண்மையில் இயேசு, நம்முடைய இருதயத்திலுள்ள இச்சைகள் வெளியில் வருவதற்கு முன்பாக அவைகளிலிருந்து நாம் மனந்திரும்பி அவைகளை அழிக்க வேண்டும் என்கிறார். ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பதே இருதயத்தில் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று என்று சொல்லுகிறார் (மத்தேயு 8.27-30). உண்மையில் இத்தகைய பாவகரமான இச்சைகள் நம்முடைய இருதயத்தில் இருப்பது மற்றவர்களிடம் தேவபக்தியுள்ள அன்பைக் காட்டுவதற்கு எதிரானது. மேலும், இவ்விதமான இழிவான இச்சைகளை அதாவது பெண்ணிடம் சரீரப்பிரகாரமாக விபச்சாரத்தில் ஈடுபடாமலிருந்தாலும் அத்தகைய இருதயத்தில் பக்தி வைராக்கியம் நெடுநாள் நீடித்திருக்க முடியாது. இருதயம் மற்றும் கண்களின் இச்சைகள், சரீரப்பிரகாரமான ஒழுக்கக்கேடு, வெறி, களியாட்டு, பெருந்தீனி, சண்டை, மற்றவர்களுடையதை இச்சித்தல் மற்றும் எடுத்துக்கொள்ளுதல், நாம் விரும்பியதை மற்றவர்களிடமிருந்து பெற பொய் சொல்லுதல் ஆகிய இவைகள் நம்மிலுள்ள கிறிஸ்தவ பக்தி வைராக்கியத்தை அழித்துவிடும்.

நான் உங்களிடம் கேட்கிறேன், சகோதரரே, சரீரத்தின் இச்சைகளை நீங்கள் எப்படிக் களைந்து போடுகிறீர்கள்? இணையம் மற்றும் ஆபாச பாலியல் படங்களை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள்? உங்களுடைய மனைவியை தவிர்த்த ஏனைய பெண்களை, சிறுமிகளை பார்க்கிற, நினைக்கிறவிதத்தில் எப்படி உங்களைக் காத்துக்கொள்ளுகிறீர்கள்? பணமோ, உணவோ, உலக இன்பமோ உங்களுடைய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தி நீங்கள் அவைகளை வணங்கும் கடவுளாக இருக்கிறதா? உங்களுடைய ஆத்துமாவினிமித்தம் நீங்கள் உண்மையாக இதற்கு பதில் காணுங்கள். மற்றவர்களினிமித்தமாகவும் இவைகளுக்கு உண்மையாக பதில் காணுங்கள். மற்றவர்கள் மீதான அன்பு இங்கு பணயமாகிறது என்பதினால் மட்டுமல்ல, ஆண்டவருக்கு ஊழியம் செய்வதற்கான பக்தி வைராக்கியமும் பணயமாகிறது.

4வது அம்சம். கடவுளுடைய வார்த்தையில் தெளிவாக சொல்லப்படாததும் அவரவர் விருப்பத்திற்கேற்ப விடப்பட்ட காரியங்களில் பாவகரமான நோக்கத்துடன் பதில் நடவடிக்கை செய்தல். ரோமர் 14:1 முதல் 15:7 வரையுள்ள நீண்ட பகுதியில் பவுல் விளக்கியிருக்கிற, கடவுளுடைய வார்த்தையில் வெளிப்படையாக கட்டளையிடப்படாத சந்தேகத்திற்குரிய விஷயங்கள் மற்றும் அபிப்பிராயங்கள் குறித்த காரியங்களைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம். இந்த முழுப்பகுதியையும் நாம் இப்போது விளக்கமாக பார்க்கப் போகிறதில்லை. சில பகுதிகளை மட்டுமே பார்க்கலாம். பின்வரும் வசனங்களை வாசியுங்கள் & ரோமர் 14:1-4, 14-17; 15:5-7.

அன்பு மற்றும் தாழ்மையாகிய கருப்பொருளே மறுபடியும் இங்கே முன்னிறுத்தப்படுகிறது, அதாவது முன்பு பவுல் அடிக்கோடிட்டுக் காட்டிய ஆரோக்கியமான பக்தியுள்ள கிறிஸ்தவனின் அம்சங்கள். அவரவரின் விருப்பத்தையொத்த குறிப்பிட்ட காரியங்களுக்கு, பவுல் ரோமர் 12:1-16 வரையுள்ள வசனங்களில் ஏற்கனவே அவர் சொல்லியவைகளையே இங்கும் குறிப்பிட்டு விரிவுபடுத்தி விளக்குகிறார். மற்றவர்களை மதித்து அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் சகோதர சிநேகத்தைக் குறித்துப் பேசியிருக்கிறார் (12:10). தன்னுடைய கருத்தே சிறந்தது என்றும் ஞானமானது என்றும் இல்லாமல் மனத்தாழ்மையோடு மற்றவர்களோடு ஒரே சிந்தையாயிருக்க வேண்டும் என்பதைக் குறித்து பேசியிருக்கிறார் (12:16). கடவுளால் நேரடியாக கட்டளையிடப்படாத எந்த விஷயங்களிலெல்லாம் கிறிஸ்தவர்கள் வேறுபட்டிருப்பார்கள் என்பதை குறிப்பாக இப்போது விளக்குகிறார்.

யூதர்கள் மற்றும் புறஜாதியாரிலிருந்து மனமாற்றமடைந்து கூடிவரும் சபையை இங்கு குறிப்பிடுகிறார். இன்னமும் யூதர்கள் சுத்தமாயிருத்தல், சுத்தமான உணவு மற்றும் அதைச் சார்ந்த காரியங்களில் பழைய உடன்படிக்கையின் கட்டளைகளிலேயே அவ்வப்போது தங்கியிருக்கிறார்கள். இங்கே அவர்களே பலவீனமான சகோதரர்கள். மறுபுறம், புறஜாதியார் இயேசு எல்லா உணவும் புதிய உடன்படிக்கையின் கீழ் சுத்தமானதுதான் என்று அறிவித்திருப்பதினால் அவர்கள் இத்தகைய காரியங்களை அனுபவிப்பதில் சுதந்திரம் கொண்டு மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறார்கள் (வசனம் 14). இவர்களே இங்கு பலமான சகோதரர்கள். இது போன்ற சூழ்நிலைகளில், ஒரு சவாலான காரியம் என்னவென்றால், பலவீனமான சகோதரர்கள் இது போன்ற விஷயங்கள் இன்னமும் பக்தியோடு தொடர்புடையதென்று நம்புகிறார்கள், அப்படி அவை இல்லாதிருந்தபோதும்.

இங்கே பலமான சகோதரர்கள் இன்னும் தெளிவடையாத பலவீனமான சகோதரர்களை அசட்டை செய்கிறதும் தாழ்வாகப் பார்க்கிறதுமாக இருந்து கொண்டிருந்தார்கள். அத்தோடு பலவீனமான சகோதரர்கள் பலமான சகோதரர்களை உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல என்று அவர்களை நியாயந்தீர்த்து கண்டனம் பண்ணினார்கள். இரண்டும் தவறானது என்று பவுல் சுட்டிக்காட்டினார். பலவீனமான சகோதரர்கள், கடவுள் மட்டுமே செய்யக்கூடிய நியாயத்தீர்ப்பை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டது அவர்கள் செய்த தவறு. பலமான சகோதரர்கள், பலவீனமான சகோதரர்கள் மனச்சாட்சிக்கு எதிராக பாவம் செய்யும்படி அவர்களைத் தூண்டக் கூடிய காரியங்களில் ஈடுபட்டது அவர்கள் செய்த தவறு. ஆனால் தேவனுடைய ராஜ்யம் உணவு சம்மந்தப்பட்டதல்ல, பரிசுத்த ஆவிக்குள் நீதியையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும் உள்ளடக்கியது. இருதரப்பினரும் தேவனை மகிமைப்படுத்துவதிலும் ஒருவரையொருவர் ஏற்பதிலும் இணைந்து ஒரே சிந்தையாயிருக்க வேண்டும்.

வேதத்தில் நேரடியாக போதிக்கப்படாத காரியங்களில் இன்றும் கிறிஸ்தவர்கள் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். சிலர், மது கலப்பிருக்கிற எந்தவொரு குளிர்பானத்தையும் குடிக்கக்கூடாது என்று சொல்லுவார்கள், ஆனால் வேதமோ மதுபான வெறியனாயிருக்கக்கூடாது என்றுதான் சொல்லுகிறது. இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. மற்றவர்களை அசட்டை செய்வதும், மற்றவர்களின் வழியில் தடைகற்களைப் போடுவதும், அல்லது கிறிஸ்தவ சுதந்திரத்தை அனுபவிக்கிறவர்களை நியாயத்தீர்ப்பு செய்வதும் கண்டனம் பண்ணுவதும் அன்பிற்கும் மனத்தாழ்மைக்கும் எதிரானதாகும். இப்படியான காரியங்களில் கவனத்தை செலுத்துவது பக்தி வைராக்கியத்தை பெருமளவில் குறைப்பதிலோ அழிப்பதிலோதான் போய் முடியும். ஏனென்றால், ஆரோக்கியமான ஒரு கிறிஸ்தவனில் இருக்கும் அன்பும் தாழ்மையும் நெருக்கமாக இணைந்திருப்தே பக்தி வைராக்கியமாகும். இவைகளை அங்கீகரிக்கவும், கிறிஸ்தவ வைராக்கியத்தை பாதிக்கக் கூடிய இத்தகைய காரிங்களைத் தவிர்த்து கடவுளுக்கு மகிமையாகவும் மற்றவர்களுக்கு நன்மையாகவும் இருக்க ஆண்டவர்தாமே நமக்கு உதவுவாராக.

 

 

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.