திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2016 -ம் ஆண்டு முதல் இதழ்

1. வாசகர்களே!

2. மகிமையடையும் திருச்சபை

3. முழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . . (பாகம் 2)

4. தொமஸ் வொட்சனின் ‘மனந்திரும்புதல்’

5. தகிடுதத்த ‘இருதயத் திருட்டு’

 

வாசகர்களே!

வருடங்கள் மழைத்துளிபோல விழுந்து உருண்டோடி விடுகின்றன. புதிய வருடமொன்றைக் கர்த்தர் நமக்குத் தந்திருக்கிறார். அதோடு வரும் பொறுப்புக்களும் ஏராளம். இந்த வருடத்திலும் கர்த்தர் நமக்குதவட்டும். முன்னதாகப் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது தமிழகத்தில் பத்திரிகையின் 20ம் வருட நன்றிகூறும் நினைவுக்கூட்டம் நடந்து முடிந்திருக்கும். கர்த்தர் நல்லவர்; நம்மைத் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார். அவருக்கே சகல மகிமையும்.

இந்த இதழின் ஆரம்ப ஆக்கமாக முன்னாள் மூத்த போதகர் அல்பர்ட் என். மார்டினின் திருச்சபைபற்றிய அருமையான பிரசங்கம் வந்திருக்கிறது. இயேசு தன் மணவாட்டியான திருச்சபையை அதன் ஆரம்ப நிலையில் இருந்து எப்படியெல்லாம் காப்பாற்றி, விடுவித்து தன்னுடைய நியாயத்தீர்ப்பு நாளுக்காக அழகுபடுத்தி வருகிறார் என்பதை அருமை நண்பர் அற்புதமாக விளக்கியிருக்கிறார். இதை அவர் பிரசங்கிப்பதற்கு இரு வாரங்களுக்கு முன் மிச்சிகனில் அவருடைய வீட்டில் இரண்டு மணிநேரம் அவரைச் சந்தித்து அளவளாவியபோது, இதுவரை இந்தளவுக்கு எசேக்கியேல் 16ல் இந்த உண்மைகளை நான் பார்க்கவில்லை என்றும் இதைப் பிரசங்கிக்கும் நாளை ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். இருவாரங்களுக்குப் பின் அதை நேரிலும் கேட்கும் ஆசீர்வாதத்தை அடைந்தேன். அதை நீங்கள் அடைய இப்போது தமிழில் தந்திருக்கிறோம்.

‘ஐம்போதனைகளுக்குப் பின்னால்’ என்ற நூலுக்கான விளக்கத்தின் தொடர்ச்சி இதில் வந்திருக்கிறது. வரையறுக்கப்பட்ட தத்துவத்தைப்பற்றிய விளக்கங்கள் நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து படிக்கவேண்டியவை. தொமஸ் வொட்சனின் ‘மனந்திரும்புதல்’ நூலின் அறிமுக ஆக்கமும் இதில் வந்திருக்கிறது. தவறாது நூலை வாங்கி வாசித்து மனந்திரும்புதல் பற்றிய ஆழமான சத்தியங்களை அறிந்து அதன்படி வாழமுயற்சி செய்யுங்கள்.

கடைசி ஆக்கமாக எட்டாம் கட்டளை விளக்கும் ஆள்கடத்தல் திருட்டில் அடங்கியிருக்கும் தகிடுதத்த ‘இருதயத் திருடல்’ பற்றி விளக்கியிருக்கிறேன். இதுபற்றி எத்தனையோ உண்மைகளை எழுதியிருக்கலாம். ஆனால், இடம்போதாமல் போய்விட்டது. இருந்தாலும் அது நிச்சயம் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். தகிடுதத்த சூத்திரதாரிகளாக இல்லாமல் இருப்பதை இந்த வருடத்தின் இலட்சியமாகக்கொள்வோம். நன்றி! – ஆசிரியர்.

 

மகிமையடையும் திருச்சபை

இது அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள திரித்துவ பாப்திஸ்து திருச்சபையில் நடைபெற்ற போதகர்களுக்கான மகாநாட்டின் ஆரம்பநாள் இரவுக்கூட்டத்தில் அந்தச் சபையின் முன்னாள் போதகர் அல்பர்ட் என். மார்டின் அளித்த பிரசங்கத்தின் தமிழாக்கம்.


போதகர்களுக்கான இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுகிறவர்களுக்கு இதற்கான தலைப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை அறிந்திராத மற்றவர்களுக்காக இப்போது நான் அதை குறிப்பிட விரும்புகிறேன், “கிறிஸ்துவின் மணவாட்டியின் அழகை அதிகரித்தலும் பாதுகாத்தலும்” என்பதே அந்தத் தலைப்பு. இத்தலைப்பிற்கு ஆதாரமாகவும் அதை மேலும் விபரிக்கும் வகையிலும் இந்த மாலை வேளையில் நான் “கிறிஸ்துவினுடைய மணவாட்டியின் அழகு பூரணமாக அவளின் திருமண நாளில் வெளிப்படுத்தப்படவுள்ளது” என்கிற தலைப்பில் தேவசெய்தியைக் கொடுக்கப் போகிறேன்.

இந்தத் தலைப்பைப் படிப்பதற்கான ஆரம்பகட்டமாக, நாம் தெரிந்திருக்க வேண்டியதும் நினைவுகூர வேண்டியதுமான ஒன்று இருக்கிறது. என்னவென்றால், கடவுள் தம்முடைய மக்களோடு ஏற்படுத்திக் கொண்டுள்ள சிறப்பான உடன்படிக்கையின் உறவைக் காட்டுகிறதற்கு, “வருகிறவரான மணவாளன்” என்கிற உவமையின் மூலம் தம்முடைய கிருபைக்கு உரியவர்களை தம்முடன் சேர்த்துக்கொள்ளுகிறதாக வேதத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரவேலரோடு கடவுள் சிறப்பான உடன்படிக்கையை ஏற்படுத்திய போதும் இப்படியே செய்தார். இஸ்ரவேலருக்கான மணவாளனாக உறவை ஏற்படுத்திக்கொள்ளுவதை கடவுள் விரும்பியிருக்கிறார். இது பழைய ஏற்பாட்டின் அநேக வேதபகுதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம். ஏசாயா 54:5, “உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.” மேலும் எரேமியாவின் மூலமாக, “நீ போய், எருசலேமின் செவிகள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 2:2). அடுத்து, நான் இப்பிரசங்கத்தின் ஆரம்பத்தில் வாசித்த நீண்ட ஒரு பகுதியான, எசேக்கியேல் 16. இதில் கடவுள் மறுபடியுமாக இஸ்ரவேலரோடு திருமண உடன்படிக்கையில் நுழைவது குறிப்பிடப்பட்டுள்ளது. எசேக்கியேலின் மூலமாக கடவுள், தன்னுடைய விபசார மனைவியோடு பேசுகிறார், தானே அவளுடைய மணவாளன் என்கிற உண்மையை அவளுக்கு நினைவூட்டுகிறார். வசனம் 8ல் கடவுள் சொல்லுகிறார், “நான் உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன், நீ என்னுடையவளானாய்”. இதே கருப்பொருள், ஓசியாவின் புத்தகத்தில் மறுபடியும் மிகவும் உறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இஸ்ரவேலரின் மணவாளனான யேகோவாவுக்கு உண்மையில்லாத மனைவியாக இஸ்ரவேல் இருந்தாள்; அதாவது அவள் விபசாரியான மனைவியாக இருந்தாள் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆவிக்குரிய அனுபவம் அத்தீர்க்கதரிசியின் நிஜமான திருமண அனுபவமாகவும் இருந்தது. அவர் திருமணம் செய்திருந்த அவருடைய மனைவி வெட்கங்கெட்ட விபசாரப் பெண்ணாக மாறினாள். இப்படியான வார்த்தைப் பதங்களைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்று அதிகமாக யோசித்தேன். ஆனால் கடவுள் இப்படித்தான் அவளை வேதத்தில் சுட்டிக்காட்டுகிறார். அந்தத் தீர்க்கதரிசி அந்தப் பெண்ணோடு திருமண உடன்படிக்கையை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அவளோ வெட்கங்கெட்ட விபசாரப் பெண்ணாக மாறிப் போனாள். அவளுடைய கேடுகளின் மத்தியிலும் அவர் அவளை நேசித்து மறுபடியுமாக அவளுக்கு ஆணையிட்டுத் தருகிறார்.

புதிய ஏற்பாட்டில், மாற்கு 2:19-20 வசனங்களில், ஆண்டவராகிய இயேசு தம்முடைய மக்களின் மணவாளனாக இருக்கிறார் என்பதை இந்த இரண்டு வசனங்களில் மூன்று தடவைக்குக் குறையாமல் சொல்லியிருக்கிறார். யோவான் 3:29ல், அவர் யோவான்ஸ்நானனின் ஊழியத்தை “மணவாளனின் நண்பனாக” அடையாளங் காட்டுகிறார். இயேசுவுக்கு முன்னோடியான யோவான்ஸ்நானன் தன்னுடைய பாத்திரத்தை, “தம்முடைய மணவாட்டியைத் தம்முடன் கொண்டுபோக வரப்போகும் மணவாளனின் நண்பனாகக்” காண்கிறார். மேலும், மத்தேயு 22:1-10 வசனங்களில், ஆண்டவராகிய இயேசு பரலோகராஜ்யத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது, ஒரு ராஜா தன்னுடைய மகனுக்காக ஏற்படுத்திய திருமண விருந்தோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார். இவ்வாறாக புதிய ஏற்பாட்டில், இயேசு கிறிஸ்துவே தம்முடைய மக்களுக்கான மணவாளன் என்கிற உண்மையை சுட்டிக்காட்டும் மலைச்சிகரம் போன்ற அநேக வேதப்பகுதிகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் நான் வாசித்த வேதப்பகுதிகளான எபேசியர் 5:25–33, வெளிப்படுத்தின விசேஷம் 19 மற்றும் 21 அதிகாரங்களையும் இவற்றோடு இணைத்துக்கொள்ளலாம்.

வேதத்தை நாம் புரட்டிப்பார்க்கிறபோது, அதில் அநேக உவமைகளை நாம் காண்கிறோம். அவற்றின் மூலம் கடவுள் தம்முடைய புதிய உடன்படிக்கையின் சமூகமான திருச்சபையின் இயற்கை தன்மை, சிறப்புத் தன்மைகள், மற்றும் பொறுப்புக்களை விளக்குகிறார். உதாரணமாக, கடவுளுடைய மக்களை, கிறிஸ்துவைத் தலையாகக் கொண்டு அவரோடு இணைக்கப்பட்டுள்ள சரீரமாக அதில் விவரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவை ஜீவனாகக் கொண்ட திராட்சச்செடியின் கொடிகளாக கடவுளின் மக்கள் காட்டப்பட்டிருக்கிறார்கள். அத் திராட்சைச்செடி எல்லாக்கொடிகளின் ஜீவனாகவும், அவைகள் கனிகொடுக்கும்படிச் செய்வதாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், புதிய ஏற்பாட்டில் திருச்சபையை ஜீவனுள்ள ஆலயமாக உருவகப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியினால் ஜீவனுள்ள கல்லின் மேல் கட்டப்பட்ட ஆலயமாகவும், பரிசுத்த ஜனமாகவும், ராஜரீக ஆசாரியக்கூட்டமாகவும் இன்னும் பலவிதமான உவமைகளையும் நாம் பார்க்கலாம். இந்த உவமைகள் எல்லாம், திருச்சபையின் சிறப்புத்தன்மைகள் மற்றும் பொறுப்புகளைப்பற்றிய அற்புதமான உண்மைகளை எடுத்துரைத்தாலும், இயேசு தம்முடைய திருச்சபையாகிய மணவாட்டியின் மணவாளனாக இருக்கிறார் என்பதைப் போன்று சிறப்பானதாகவோ, மிக நெருக்கமானதாகவோ, உருக்கமானதாகவோ இல்லை எனலாம்.

கிறிஸ்து தம்முடைய திருச்சபையாகிய மணவாட்டியின் மணவாளனாக இருக்கிறார் என்கிற இந்த உவமை அவருடைய மணவாட்டியாகிய திருச்சபை தனது திருமணநாளின்போது கொண்டிருக்கப்போகும் அழகை சம அளவில் வலியுறுத்துகிறதாக இருக்கிறது. அந்தத் திருமண நாள் ஆண்டவராகிய இயேசு தம்முடைய மகிமையிலும் வல்லமையிலும் மறுபடியுமாக வரப்போகிற நாள். அப்போது அவர் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களை முதலாவது கருத்தில் கொள்ளுகிறார், “ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்” (1 தெசலோனிக்கேயர் 4.16). மக்கள் பெரும்பாலும் சொல்லுவார்கள், இயேசு மறுபடியும் வருகிறபோது நான் உயிரோடு இருக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை என்று. அப்படியானால் ஆண்டவர் அன்று உங்களைப் பார்த்துச் சொல்லப் போகிறார், “சற்றுப் பொறு, எனக்கு வேறு ஒரு வேலை இருக்கிறது” என்று. முதலாவது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்- முதலில் எழுந்திருப்பார்கள். அந்நாளில் ஆண்டவர் பூரணராக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகளை மீண்டும் அவர்களின் சரீரத்தோடு இணைப்பார். தம்மால் மீட்கப்பட்ட யாவருக்கும் முழுமையாக மீட்கப்பட்ட ஆவியையும்  புதிதாக்கப்பட்ட சரீரங்களையும் தந்து, தம்முடைய விலையுயர்ந்த மணவாட்டியாக்குவார். பிறகுதான் திருமண நாள், அந்தவேளையில் பரலோக மணவாளன் தம்முடைய மணவாட்டியை தம்முடன் என்றென்றும் இருக்கும்படி அழைத்துச் செல்லுவார். இத்தனையும் அந்த நாளில் நடக்கப்போகிறது.

ஆகவே இத்தலைப்பின் அடிப்படையில், நான் சில காரியங்களை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். இன்று திங்கட்கிழமை இரவாக இருந்தபோதும் நீங்கள் வேத வார்த்தைகளைக் கேட்பதற்கு கவனத்தோடு வந்திருக்கிறீர்கள் என்ற எதிர்பார்ப்பில் ஆண்டவரில் தங்கியிருந்து ஜெபத்தோடு போராடி உழைத்துத் தயாரித்த, வேதத்தின் அடிப்படையில் இவையாவும் உண்மை என்கிற என் நம்பிக்கையின் அடிப்படையில், இவற்றை விளக்குகிறேன். என் எதிர்பார்ப்பு அதன் உண்மை வடிவை அடையும் என்று நம்புகிறேன்.

  1. மணவாட்டியின் குறைகள் நீக்கப்பட வேண்டியதும், பரிதாபகரமானதுமான அவளுடைய இயற்கைத் தன்மை

முதலாவதாக நாம் பார்க்க வேண்டியது, மணவாட்டியின் குறைகள் நீக்கப்பட வேண்டியதும், பரிதாபகரமானதுமான அவளுடைய இயற்கைத் தன்மை. நாம் உச்சக்கட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். மணவாட்டியின் புதிய தோற்றத்தை அவளின் முழுமையான அழகை நாம் நிச்சயம் காணப்போகிறோம். ஆனால் அவள் எப்படியிருப்பாள் என்பதில் இருந்து இதை நாம் ஆரம்பிக்கக் கூடாது. மாறாக, ஆண்டவர் அவளை ஏற்றுக்கொண்டபோது அவள் எப்படியிருந்தாள் என்பதில்தான் நாம் ஆரம்பிக்க வேண்டும். கிறிஸ்துவின் மணவாட்டிகளான ஆண், பெண், சிறுவர், சிறுமிகள் எல்லாருமே ஆதாமின் குமாரர்களாக, குமாரத்திகளாகதான் இவ்வுலகில் பிறந்திருக்கிறார்கள். பிறப்பின்படி அவர்களில் யாருமே தேவகுமாரனுடைய கண்களைக் கவரும் வகையில் இருக்கவில்லை. அவர்கள் அவரைக் கவரக்கூடியவர்களாக இல்லாதது மட்டுமல்ல, அவருக்கு ஏற்ற மணவாட்டியாகவும் இருக்கவில்லை. அவர் அவர்களை முழுமையாக அறிந்திருக்கிறார். அவர்கள் எப்படியிருந்தாலும் அவர் தம்முடைய இருதயத்தை அவர்கள் மேல் வைத்து, அவர்களை தமக்கு ஏற்ற மணவாட்டியாக்கத் தீர்மானித்தார்.

குறைகள் நீக்கப்பட வேண்டியதும் பரிதாபகரமானதுமான தன்மை என்று நான் எதை குறிப்பிடுகிறேன் என்பதை இரண்டு வகையாக சொல்லலாம். இவை கிறிஸ்துவின் மணவாட்டியான அவருடைய மக்களின் இயற்கைத் தன்மையாக இருக்கிறது.

அ) கண்டனத்திற்குரிய நடத்தை

முதலாவது, மணவாட்டியின் நிலையைப் பற்றியது. இயற்கையாக அவள், கண்டனத்திற்குரிய நடத்தையும், பலவிதமான குறைபாடுகளினால் அழிந்துகொண்டுமிருப்பவள். இப்போது விசுவாசிகளாகவும் இயேசுவோடு இணைக்கப்பட்டவர்களுமாக இருக்கிற நீங்களும் நானும் பிறப்பில் இவளின் இந்தத் தன்மையையே கொண்டிருந்தோம். நேற்று மாலை போதகர் வில்லியம் ஹியூஸ், பரிசுத்த ஆவியின் உதவியினால் “பாவத்தில் நம்முடைய நிலை என்ன” என்பது பற்றிய வேதத்தின் பல்வேறு முக்கிய போதனைகளை விளக்கினார். ஆகவே அவைகளில் சில அம்சங்களை இன்னும் சில வேதப்பகுதிகளைப் பயன்படுத்தி விவரிக்க இருக்கிறேன்.

ரோமர் 5:12ல் நாம் வாசிக்கிறோம், “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” எல்லோரும் எப்போது பாவம் செய்தோம்? எல்லாருக்கும் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஒருவன் பாவம் செய்தபோது, எல்லாரும் பாவம் செய்தோம். பவுல் இப்படியும் சொல்லியிருக்கலாம், “ஆதாமுக்குள் நாம் யாவரும் மரிக்கிறோம்” என்று. என்றும் ஜீவனுள்ள மகிமையுள்ள கிறிஸ்து தமக்கான மணவாட்டியைக் கூட்டிச்சேர்த்தபோது நம் எல்லோருடைய நிலையும் இதுவே. ஆம், நாம் எல்லோரும் ஆடுகளைப்போல வழிதவறிச் சென்றிருந்தோம். நாம் யாவரும் அவரவருடைய வழிகளில் சென்று கொண்டிருந்தோம். ஆம், நாம் யாவரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானோம். கடவுளின் மகிமையையும், சிறப்புகளையும், உயர்வையும் வெளிப்படுத்தும்படியாக கடவுளின் சாயலில் நாம் உண்டாக்கப்பட்டோம். எந்த நோக்கத்திற்காக கடவுள் நம்மைப் படைத்தாரோ அந்த நோக்கத்திலிருந்து நாம் விழுந்தோம். இந்த பிரச்சனைகளெல்லாம் எப்போது ஆரம்பமானது? ஆதாம் நம்முடைய பிரதிநிதியாக நின்றபோது, நாம் ஆதாமின் அரையில் இருந்தபோது ஆரம்பமானது. ஆதாம் வீழ்ந்தபோது நாமும் சுயமாகவும், தன்னிச்சையாகவும் வீழ்ந்தோம்.

இவையெல்லாமே எப்போது ஆரம்பமானது என்பதற்கு தாவீது பதிலளித்திருக்கிறார். என் தாய் கர்ப்பந்தரித்தபோது நான் பாவத்திலும் அக்கிரமத்திலும் உருவானேன் என்கிறார் அவர். அந்த இரவு, என் தாயின் கருவறையிலுள்ள முட்டையில் விந்தணு நுழைந்ததின் விளைவாக இந்த உலகத்தில் பிறந்தது, வழி தவறிப்போன ஒரு ஆடு. அப்படிக் கருத்தரிக்கப்பட்டது, மாம்ச சிந்தை கொண்டதும் கடவுளுக்கு எதிரியுமான ஒன்று. அது கடவுளுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும் கீழ்ப்படியக் கூடாமலும் இருப்பது. அப்போஸ்தலனாகிய பவுல், உலகத்தின் பாவத்தன்மையை பழைய ஏற்பாட்டின் பகுதிகளைக் கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக்காட்டி, முடிவாகச் சொல்லுவதைக் கவனியுங்கள், “மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 3:19). இதுவே மணவாட்டியின் மூலமுதல் தன்மை. அவள் நீதியின்படி பாவத்திற்கும், கண்டனத்திற்கும், மரணத்திற்கும் உரியவள். அவள் கிறிஸ்துவின் மணவாட்டியாக வருமுன், நீதியின்படி அவளுடைய கண்டனத்திற்குரிய நடத்தையினால் பரலோகத்திலிருந்து விலக்கப்பட்டவளாக மட்டும் இருக்கவில்லை, பலவிதமான குறைபாடுகளுடன் அழிந்துகொண்டுமிருப்பவளாக இருந்தாள்.

ஆ) பலவிதமான குறைபாடுகளுடன் அழிந்துகொண்டுமிருப்பவள்

கடவுள் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் யூதா மற்றும் எருசலேமின் பாவ நிலையைக் குறித்து அறிவிக்கிறபோது, முதலாவது அதிகாரத்தில், “உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.” (ஏசாயா 1:6) என்கிறார். எசேக்கியேல் 16வது அதிகாரத்தில், கடவுள் தம்முடைய அழகான மணவாட்டியாக வந்தவளின் ஆரம்பகால நிலையை விவரிக்கிறார். அவர் அவளை கண்டெடுத்தபோது, அவள் புதிதாய்ப் பிறந்த குழந்தை, இன்னும் தொப்புல் கொடி அறுக்கப்படாதவளாகவும், சுத்தமாவதற்கு தண்ணீரில் குளிப்பாட்டப்படாதவளாகவும், உப்பால் சுத்திகரிக்கப்படாதவளாகவும், துணிகளில் சுற்றப்படாதவளாகவும் இருந்தாள் என்பதை நினைவூட்டுகிறார். தீர்க்கதரிசி சொல்லுகிறார், வெளியில் வீசப்பட்டவளாக இருந்தாள் என்று. அதாவது பிறந்தபோது தெருவில் கிடந்தாள். வசனம் 22, அவளுடைய ஆரம்ப கால நிலையை மேலும் விவரிக்கிறது, “நீ உன் எல்லா அருவருப்புகளிலும் வேசித்தனங்களிலும் நடக்கும்போது, நிர்வாணமும் அம்மணமுமாயிருந்ததும், உன் இரத்தத்திலே மிதிக்கப்பட ஏதுவாய்க் கிடந்ததுமான உன் சிறுவயதின் நாட்களை நினையாமற்போனாய்.” போதகர் மார்டின், இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இல்லையே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். ஏனென்றால், நீங்கள் நற்பண்பற்றவர்களாக இருப்பதினாலும், நானும் நற்பண்பற்றவனாக இருப்பதினாலுந்தான் இந்தவகையில் விபரிக்கப்பட்டிருக்கிறோம். ஆதாமின் குமாரரும் குமாரத்திகளுமான நம்முடைய உருக்குலைந்த நிலை கேவலமானதாக இருக்கிறது. மணவாட்டியைப்பற்றி சரியான வகையில் நீங்கள் நினைக்க வேண்டுமானால் அவளுடைய ஆரம்ப கால நிலையிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான், பரலோக மணவாளன் அவளின் நிலையை மாற்றி, அவளுடைய நடத்தையின் சட்டபூர்வமான காரியங்களைச் சரிசெய்து, அவளின் குறைபாடுகளை நிவிர்த்தியாக்கி, அவளை நீதியுள்ள நித்திய மணவாட்டியாக தமக்காக ஏற்படுத்தச் செய்திருக்கிற காரியங்களின் சிறப்புகளை அறிந்துகொள்ள முடியும்.

எபேசியர் நிருபத்தைத் திருப்பிக்கொள்ளுங்கள். அதில் பரலோக மணவாளனின் அன்பையும் அதன் விளைவாக அவரின் செயல்களையும் நாம் பார்க்கிற அதேவேளையில், மணவாட்டியின் உருக்குலைந்த நிலையையும் விபரமாக அங்கு பார்க்க முடிகிறது. அதாவது, நான் எபேசியர் 2:1-3 வசனத்தைக் குறிப்பிடுகிறேன், “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.” இதுவே மணவாட்டியின் ஆரம்பகால நிலை. அவளுடைய நடத்தையின்படி அவள் மரணத்திற்கு உரியவள்; உண்மையில் நரகத்திற்கு உரியவள். அதுமட்டுமல்லாமல், அவள் பலவித குறைபாடுகளைக் கொண்டவளாக உருக்குலைந்த நிலையில் இருந்தாள். எனவேதான் நான் அவளுடைய நிலையைக் குறிப்பிட “குறைகள் நீக்கப்பட வேண்டியதும் பரிதாபகரமானதுமான நிலை” என்று சொன்னேன். அதாவது அவளுடைய கண்டனத்திற்குரிய நடத்தையையும் அவளுடைய குறைபாடுகளை விளக்குவதற்கும் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். ஏற்கனவே நான் சொன்னதுபோல் இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், பரலோக மணவாளன் தம்மோடு இருக்கும்படியான மணவாட்டியாக சேர்த்துக்கொள்ளும் எவரும் இந்தவிதமான எண்ணங்களைக் கொண்டவர்களாக இருக்கவேண்டுமென்று சொல்லுகிறார். அதாவது, அவர்கள் தங்களுடைய நடத்தையையும், பெருங்குறைபாடுகளையும் வாழ்க்கையில் கருத்தோடு எதிர்நோக்குகிறவர்களாக இருக்க வேண்டும்.

ஆண்டவராகிய இயேசு இந்த உலகில் ஊழியம் செய்தபோது, சொன்னார், “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” என்று. மகிமையுள்ள பரலோக மணவாளனான ஆண்டவராகிய இயேசுவே சொல்லியிருக்கிறார், என்னுடைய மணவாட்டியாக இருக்கும்படி நான் சேர்த்துக்கொள்ளும் நபர்கள், இயற்கையாக எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்கிறார். இன்று காலை ஞாயிறு வேதப்பாட வகுப்பை எடுத்த போதகர் ஜெரமி வோக்கர், பழம்பெரும் வேத வல்லுனரான ஆன்ட்ரூ ஃபுலரின் வாழ்க்கைச் சரீதம் மற்றும் ஊழியத்தைப்பற்றி விளக்கினார். அதில், பாவிகளுக்கான கடவுளின் அழைப்பை சுவிசேஷத்தின் மூலம் அறிவிப்பது மட்டுமே ஒருவனில் விசுவாசத்தை ஆரம்பிக்கும் அதிகாரங்கொண்டது என்ற வேதக்கண்ணோட்டத்தின்படி ஃபுலர் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தார் என்றார். பாவிகள் தங்களுடைய பாவத்தின் 10 கிலோ, அல்லது 15 கிலோ, அல்லது 2.5 அவுன்ஸ் என்ற அளவில் உணர்வதினால் விசுவாசம் ஒருபோதும் நிகழாது. சுவிசேஷ அழைப்பின் வாக்குறுதியாக விசுவாசம் இருக்கிறது. விசுவாசம், பாவி தனிப்பட்டவிதத்தில் தான் இருக்கும் நிலையின் உண்மையான தன்மையை அறிந்து உணருவதின் மூலம் வருவது. கடவுளிடம் வந்து நாம் இப்படிச் சொல்ல முடியாது, “கடவுளே, ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை ஏற்றுக்கொள்ளுகிறேன். நான் உம்மிடம் வர வேண்டும் என்று எனக்குத் தெரிகிறதுமட்டுமல்லாமல், என்னுடைய உள்ளுணர்வும் அப்படிச் சொல்லுகிறது” என்று. ஆண்டவரிடம் வருவது என்பது நம்முடைய உண்மையான பாவத் தன்மையை உணர்ந்தவர்களாக, அவருக்கு எதிரியாகவும் பரிசுத்தமற்றவராகவும் இருப்பதை அறிந்து உணர்ந்தவர்களாக வர வேண்டும். நம்முடைய இயற்கைப் பாவத் தன்மை இந்த உலகத்தின் ஆகாய அதிகாரப் பிரபுவாகிய பிசாசின் வழிகளில், அதாவது இப்போது கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் வீரியத்துடன் செயல்பட்டு வருகிற பாவ வழிகளின் மீது ஆர்வம் கொள்ளுகிறதாக இருக்கிறது.

இதில் நாம் படிக்க வேண்டிய ஒரு பயன்பாடும் இருக்கிறது. என்னவென்றால், இன்று இரவு இங்கு அமர்ந்திருக்கிற நீங்கள் எல்லாரும், “ஆதாமுக்குள் நாம் மரிக்கிறோம்”, “வழிதவறிப் போன ஆடுகளைப் போல் இருக்கிறோம்”, “அவரவர் தம் தம் வழிகளில் நடக்கிறவர்களாக இருக்கிறோம்”, “மாம்ச சிந்தை தேவனுக்கு எதிராக இருக்கிறது, அது நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படியாமலும் கீழ்ப்படியக் கூடாமலும் இருக்கிறது” என்கிற இந்த வசனங்களை அறிந்து, தனிப்பட்ட விதத்தில் அவற்றை உணர்ந்து சிந்திக்கிறவர்களாக இருக்க வேண்டும். பிரசங்கியார் சொல்லுவதற்கு மேலாக இன்னும் கேடானதாகவே என்னுடைய இருதயம் இருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டியதற்கு ஆண்டவரே நன்றி. என்னுடைய பாவக்கடன்களின் குற்றவுணர்வினால் நான் கட்டப்பட்டவனாக இருக்கிறேன். ஆதாமினால் வந்த குற்றவுணர்வு, கடவுளின் நியாயப்பிரமாணத்தை மீறிய என்னுடைய தனிப்பட்ட நடவடிக்கைகளினால் வந்த குற்றவுணர்வே என்பதையெல்லாம் உங்கள் இருதயங்களில் சுழல விடுங்கள். நேற்று இரவு போதகர் வில்லியம் ஹியூஸ், பத்துக்கட்டளைகளைப்பற்றித் தெளிவாகவும் எளிமையாகவும் விவரித்தார். கடவுள் எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று சொல்லுகிறாரோ அதையெல்லாம் நம்முடைய இயற்கைத் தன்மை செய்ய மறுக்கிறது. எதையெல்லாம் கடவுள் செய்யாதே என்று சொல்லுகிறாரோ அதையெல்லாம் செய்வதற்கு நம்முடைய மனம் அலைகிறது. இதுதான் மணவாட்டியின் இயற்கைத் தன்மை; -குறைகள் நீக்கப்பட வேண்டியதும், பரிதாபகரமானதுமான தன்மை.

  1. கிருபையினால் மணவாட்டி அழகுபடுத்தப்படுதல்

அடுத்து நாம், இரண்டாவது தலைப்பைப் பார்க்கலாம், “கிருபையினால் மணவாட்டி அழகுபடுத்தப்படுதல்” என்பதே அது. இயற்கையாக மணவாட்டியின் பரிதாபகரமானதும் குறைகள் நீக்கப்பட வேண்டியதுமான நிலையை பார்த்த நாம், இப்போது கிருபையினால் அவளுடைய அழகுபடுத்துதலைப் பார்க்கப் போகிறோம். இதைப் படிக்கிறபோது நம்முடைய இருதயங்கள் கடவுளுக்கு நன்றியை அறிவிக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். இதில் “கிருபை” என்ற வார்த்தையின் மூலம் நான் குறிப்பிடுவது என்னவென்றால், “தகுதியில்லாதவர்களுக்கான வெகுமதி”. அதாவது கண்டனத்திற்குரிய நடத்தையும் பலவிதமான குறைபாடுகளுடன் அழிந்துகொண்டுமிருக்கிற, நரகத்திற்கு உரியவர்களான ஆண்கள், பெண்கள் மீது காட்டப்படும் கடவுளின் இரக்கத்தையே நான் இங்கு குறிப்பிடுகிறேன். இது ஆதாமின் குமாரரும் குமாரத்திகளுமான நம்மைக் கிறிஸ்துவின் அழகான மணவாட்டியாக ஆக்குவதற்கான அழகுபடுத்தும் நடவடிக்கைகளில் இருக்கும் கடவுளின் கிருபையுள்ள மனநிலையையே காட்டுகிறது.

மணவாட்டியை அழகுபடுத்துவதிலுள்ள இரண்டு முக்கிய அம்சங்களைக் கவனியுங்கள்.

  1. மணவாட்டியை அழகுபடுத்துவதற்கான முன்நிபந்தனைகள்
  2. மணவாட்டியை அழகுபடுத்தும் செயல்முறைகள்
  3. மணவாட்டியை அழகுபடுத்துவதற்கான முன்நிபந்தனைகள்

முதலாவது, மணவாட்டியை அழகுபடுத்துவதற்கான முன்நிபந்தனைகளைப் பார்ப்போம். மணவாட்டியை அழகுபடுத்துவதற்கான முன் நடவடிக்கைகளாக செய்ய வேண்டியது என்ன? பரலோக மணவாளனான கிறிஸ்து தம்முடைய மணவாட்டியின் கண்டனத்திற்குரிய நடத்தைக்கான பிராயச்சித்தப் பலியாக தம்மையே கொடுத்ததைப் பார்க்கிறோம். நித்தியத்தில் உண்டான ஆலோசனையின்போது, கிறிஸ்து தம்முடைய மக்களின் மீதுள்ள அன்பை எவ்வாறு காட்டினார் என்பதல்ல முக்கியம். அது நிச்சயமாக இவ்வுலகத்தைவிடப் பெரிதாக இருந்தபோதும், கடவுள் தம்முடைய எந்தவொரு பண்பையும் நிராகரித்து செயல்படுவதில்லை என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். கடவுள் அன்பாக இருக்கிறார். கடவுள் தம்முடைய அன்பை கிறிஸ்துவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளை கடவுள் நீதியுள்ளவர், பரிசுத்தமுள்ளவர். கடவுள் தம்முடைய அன்பைக் காட்டுவதற்காக தம்முடைய மற்ற எந்தப் பண்புகளையும் சமரசம் செய்துக்கொள்வதில்லை; செய்யவும் மாட்டார். கிறிஸ்துவினுடைய அன்பின் எந்தவொரு அம்சமும் கடவுளுடைய நீதியை இல்லாமல் ஆக்குவதில்லை. இன்று இரவு நாம் பாடிய பாடலின் வரிகள் இரட்சிப்பின் சந்தோஷத்தை எப்படி விவரிக்கிறது கவனியுங்கள் – “கிருபையும் நீதியும் இணைந்து இரக்கத்தை நோக்கிச் செல்லுகிறது” என்கிறது. இதைத்தான் நான் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். ஆக, பரலோக மணவாளன், பாவத்தின் காரணமாக நரகத்திற்கு உரியவளும், அழுக்கும் குறைபாடுகளும் கொண்ட மணவாட்டியை தம்முடைய அழகான மணவாட்டியாக அழகுபடுத்துவதற்கு முன்பாக, அவளுடைய பாவத்தின் குற்றவுணர்வு, நித்திய தண்டனைக்கான அவளுடைய நடத்தை ஆகியவற்றை சரிசெய்ய வேண்டும். கிறிஸ்து பாவிகளைத் தமக்கேற்ற மணவாட்டியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை துவங்குவதற்கு முன்பாக, அவர்கள் பாவத்தினிமித்தமாக கடவுளின் நியாயத்தீர்ப்பிற்கும் தண்டனைக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் சந்திக்க வேண்டியுள்ளது.

எபேசியர் 5வது அதிகாரத்தில் பவுல், கணவர்களுக்கான போதனையை மையமாகச் சொன்னாலும், கிறிஸ்துவில் இருந்துதான் ஆரம்பிக்கிறார். கிறிஸ்துவினுடைய மரணத்தின் மகத்துவங்களை எடுத்துக்காட்டிப் போதிக்கிறார். எபேசியர் 5வது அதிகாரத்தை திருப்பிக்கொள்ளுங்கள், “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” (எபேசியர் 5:25-27). கிறிஸ்து தன் மனைவியாகிய சபைமீது தம்முடைய அன்பை எப்படிக் காட்டினார்? தம்மையே அவளுக்காக கொடுத்ததின் மூலமாக. தம்முடைய மணவாட்டியை “கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்ளும்” தம்முடைய அன்பின் நோக்கத்தை நிறைவேற்ற அவர் தம்மையே கொடுக்க வேண்டியிருந்தது. எப்படி? இதற்கு விடைகாண இந்த அதிகாரத்தின் முதல் இரண்டு வசனங்களுக்கு நாம் போக வேண்டும், “ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.” (எபேசியர் 5:1-2). பரிதாபகரமான பாவிகளை, பரலோக மணவாளன் தம்முடைய அன்பிற்கு உரியவர்களும் தம்முடன் என்றென்றும் இருப்பதற்குமான மணவாட்டியாக மாற்றுவதற்கு முன்பு கடவுளின் பார்வையில் சில காரியங்களைச் செய்தேயாக வேண்டும். அவர் என்னச் செய்தார்? தம்மை கடவுளுக்கான பலியாக ஒப்புக் கொடுத்தார்.

இன்னொருவிதமாகச் சொல்ல வேண்டுமானால், பரலோக மணவாளன் இந்த உறவில் தம்மை உட்படுத்திக்கொள்ள தம்முடைய உயிரையே கொடுத்தார். இதன் மூலம் கடவுளின் அரசாட்சியில் தம்முடைய மணவாட்டிக்காக குறிக்கப்பட்ட நியாயத்தீர்பை அவர் ஏற்றார். அந்த நியாயத்தீர்ப்பு அவரை முழுமையாகவும் தயவுதாட்சண்யமில்லாத தேவகோபத்திற்கும் உட்படுத்தியது. அந்த நியாயத்தீர்ப்பு அவரை முழுவதுமாக நொறுக்கி மரணத்திற்கு உட்படுத்தியது. அப்போது அவருடைய பெலவீனம், சோர்வு அனைத்தும் அவருடைய கதறுதலின் வார்த்தையாகிய “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்பதில் பார்க்க முடிகிறது. ஆனால் பரத்திலிருந்து அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. வேதத்திலிருந்து இதற்கான பதிலை நாம் தேடிப்பார்த்தால், அது இதுவாகத்தான் இருக்கும், “என் நேச குமாரனே, உம்முடைய மணவாட்டிக்காக உம்முடைய உயிரையே கொடுத்து கீழ்ப்படிவின் உச்சத்தைக் காட்டியிருக்கிற இந்த வேளையில், என்றுமில்லாத வகையில் உம்மை நான் நேசிக்கிறேன். உம்முடைய மணவாட்டியின் நடத்தையின் குற்றங்களும், நரகத்திற்குரியவளான நிலையும் நீக்கப்பட வேண்டுமானால், என் மகனே இவைகளை நீர் அனுபவித்தே ஆக வேண்டும். நித்தியத்தில் நீரும், ஆவியானவரும், நானுமாக சேர்ந்து இதற்கான ஆலோசனை செய்தபோது, இந்தவிதமாகவே திட்டமிட்டோம். இதற்காகவே நீர் உம்மை ஒப்புக்கொடுத்தீர். இதற்காகவே நீர் ஆத்துமாவும் சரீரமும் கொண்ட மனிதனாக மரியாளின் வயிற்றில் உருவானீர். காலம் நிறைவேறியபோது இதற்காகவே நீர் ஒரு பெண்ணின் வயிற்றில் உருவாகி, நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழானீர்.” ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார் (எபிரெயர் 2.14-15) என்று நாம் வாசிக்கவில்லையா? கிறிஸ்து தம்முடைய மணவாட்டியின் கண்டனத்திற்குரிய நடத்தைகளுக்காக தம்மையே பலிகொடுப்பது மணவாட்டியின் அழகுபடுத்துதலின் முன்நிபந்தனையாகும்.

இதைப்பற்றிய வேத சத்தியங்களை பாடலாசிரியர் ஒருவர் சரியாகவும் அழகாகவும் விவரித்திருக்கிறார், “தம் மணவாட்டியைத் தேடி பரலோகத்திலிருந்து வந்தார், அவள் தம்முடைய பரிசுத்த மணவாட்டியாக இருக்கும்படி தம்முடைய இரத்தத்தையே விலைக்கிரயமாகக் கொடுத்தார், அவளின் வாழ்வுக்காக அவர் தம் உயிரையே கொடுத்தார்”. தம்முடைய மணவாட்டியைப் பெறுதற்காக அவர் கொடுத்த விலைக்கிரயம் தேவகுமாரனான அவருடைய தூய இரத்தம். நான் உங்கள் முன் வைக்கிற இந்த வேத சத்தியங்கள், கிறிஸ்துவினுடைய மணவாட்டியின் அழகுபடுத்தல் தேவகுமாரனாகிய அவரின் பரிசுத்தமான பாவமற்ற வாழ்க்கையிலும், பிராயச்சித்தப் பலியிலும், பரிந்துரைக்கும் செயலிலும் இணைந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இயேசுவின் இந்த செயல்கள் அவரைப் பரலோக மணவாளனாகக் காட்டுகிறது. கிறிஸ்து தம்முடைய சொந்த இரத்தத்தின் மூலம் சம்பாதித்த இவையாவும் தன்னுடைய பாவத்தை உணர்ந்து வருந்தி அவரை விசுவாசிக்கிற ஒவ்வொரு விசுவாசிக்கும் உரியது. இப்படி இந்தத் தலைப்பைப்பற்றி இன்னுமதிகமாக சொல்லிக்கொண்டே போகலாம். இப்போது நாம் மணவாட்டியின் அழகுபடுத்துதலின் செயல்முறையைப் பார்ப்போம்.

  1. மணவாட்டியின் அழகுபடுத்துதலின் செயல்முறை

இது என்ன? எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், கிறிஸ்து தம்முடைய மணவாட்டியின் கறைகளையும் குறைபாடுகளையும் எப்படிக் கையாளுகிறார் என்பதைப் பற்றியதாகும். அதாவது கறைகளையும் குறைபாடுகளையும் சுத்தப்படுத்தி நீக்குதலாகும். இதில் மணவாளன் மணவாட்டியின் அசுத்தங்கள் மற்றும் குறைபாடுகளின் உண்மையான நிலையைக் காண்கிறார். எசேக்கியேல் 16லும், எபேசியர் 2:1-4லும், ரோமர் 3:10-18லும் மற்றும் இதுபோன்று பல பகுதிகளிலும் இதைக் காணலாம். மணவாளன் தம்முடைய மணவாட்டியை அழகுபடுத்த விரும்புகிறார். அவளுடைய நடத்தையின் காரணமாக அவள் அடையவேண்டிய நரகம் மற்றும் தண்டனையை நீக்குவதற்கான கோரிக்கைகளை கிறிஸ்து செய்தார். பிறகு அவளை அழகுபடுத்தும் செயல்களில் கவனம் காட்டுகிறார்.

மறுபடியும் நாம் எபேசியர் 5வது அதிகாரத்தைப் பார்க்கலாம், “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” இந்த வசனத்தை முழுமையாக நாம் பார்க்கிறபோது தம்மைத்தாமே அவர் ஒப்புக்கொடுத்ததற்கான மூன்று காரணங்களை நாம் காண்கிறோம். ஏன் அவர் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்? தேவனுக்கு சுகந்த வாசனையான காணிக்கையாக தம்மை ஏன் ஒப்புக்கொடுத்தார்? வசனம் என்ன சொல்லுகிறதென்று பாருங்கள். முதலாவது காரணம், அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்க வேண்டும். இரண்டாவது காரணம், கறைகளோ சுருக்கங்களோ இல்லாத மகிமையுள்ள சபையாக தமக்கு தாமே ஒப்புவிக்க வேண்டும். மூன்றாவது காரணம், பரிசுத்தமும் பிழையற்றதுமாக அதைத் தம்முன் நிறுத்த வேண்டும். ஆகவே, கிறிஸ்துவின் மணவாட்டியைக் குறித்து நாம் சிந்திக்கிறபோது, பரலோக மணவாளன் தன் மணவாட்டிக்காக என்ன செய்திருக்கிறார், செய்துகொண்டிருக்கிறார், செய்யப் போகிறார் என்பதை நாம் கவனிக்க மறக்கக் கூடாது.

(அ) திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து பரிசுத்தமாக்குகிறார்

முதலாவதாக, மணவாட்டியைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்துப் பரிசுத்தமாக்குகிறார். இந்த அழகுபடுத்தும் செயலுக்கு துவக்கமும், தொடர்ச்சியும், முடிவும் உண்டு. பரலோக மணவாளன் புதிய வானத்திலும் புதிய பூமியிலும் தம்மோடு என்றென்றும் இருப்பதற்கு ஏற்றவகையில் எப்படி இவைகளைச் செய்திருக்கிறார் என்பதை சுருக்கமாக நாம் பார்ப்போம். முதலாவது, அழகுபடுத்துதலின் துவக்கம். எப்படி அது துவங்குகிறது? மறுபிறப்பு மற்றும் மனமாற்றமாகிய சுத்திகரித்தல் மற்றும் பரிசுத்தமாக்குதலை நிகழ்த்துகிறதின் மூலம். இவ்வாறே அழகுபடுத்துதல் துவங்குகிறது. இந்த அழகுபடுத்துதலுக்காக தெய்வீக அழகு நிலையில் நுழைகிறபோது, இப்படியே கிறிஸ்து துவங்குகிறார். அவர் அவளைப் பரிசுத்தமாக்குகிறார். பரிசுத்தமாக்குதல் என்கிற வார்த்தை எப்போதும் தொடர்ச்சியாக நடக்கும் செயலைக் குறிக்கின்றதாகவே இருக்கிறது. அதாவது தொடர்ச்சியாக பாவத்தை விட்டு விலகுதல், பாவத்தை அழித்தல், தொடர்ந்து கிறிஸ்துவைப் போலாகுதலைக் குறிக்கிறது. ஆனால் இந்த பகுதியிலும் வேறு சில பகுதிகளிலும் இந்த வார்த்தை தொடர்ச்சியாக நிகழ்கின்ற ஒன்றைப்பற்றிக் குறிப்பிடவில்லை. மாறாக, அழகுபடுத்துதலின் ஆரம்ப  நிலையை இது சுட்டிக்காட்டுகிறது.

இதற்கான விளக்கத்தை அறிந்துகொள்ள பீட்டர் ஓ’பிரையன் (Peter O’Brien) என்பவர் எபேசியர் நிருபத்திற்கு எழுதிய விளக்கவுரை எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. எபேசியர் நிருபத்தின் ஏதாவது ஒரு பகுதியையோ அல்லது எபேசியர் நிருபத்தை முழுவதுமாகவோ போதிக்கிறவர்களாக இருந்தால், உங்களுடைய உழைப்பைப் பயனுள்ளதாக்கவும் உங்களுடைய சபை மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கவும் பீட்டர் ஓ’பிரையனின் விளக்கவுரை உங்களுக்கு உதவும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். கிறிஸ்து தம்முடைய மணவாட்டியை பரிசுத்தமாக்குகிறார் என்கிற வாக்கியத்திற்கான விளக்கத்திற்கு அவருடைய முடிவை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். பரிசுத்தமாக்குதல் என்பது பொதுவான பயன்பாட்டிலிருந்து ஒன்றைப் பிரித்தெடுத்தல் என்பதாகும். அதாவது கடவுளின் விசேஷ நோக்கங்களுக்காகப் பிரித்தெடுத்தல். பழைய உடன்படிக்கையின்படி ஒரு சாதாரண பேனாவாக இருந்தாலும், அது கடவுளின் பணிகளுக்காக பிரித்தெடுக்கப்பட்டிருக்குமானால், அது பரிசுத்தமாக்கப்பட்டதாகும். இந்த வகையிலேயே பவுல் இவ்வார்த்தையை இங்கு பயன்படுத்தியிருக்கிறார். கிறிஸ்து சபையை நேசித்து அதற்காக தம்மையே ஒப்புக்கொடுத்து, அதைத் தமக்காகப் பிரித்தெடுத்தார். அதை எவ்வாறு செய்தார்? அவளைச் சுத்தப்படுத்துகிறதின் மூலம். பாவத்தின் ஆளுகையிலிருந்தும் வல்லமையிலிருந்தும் நம்மை நீங்கலாக்கி, இனி நமக்காக வாழாமல் நமக்காக மரித்து உயிர்த்த கிறிஸ்துவுக்காக வாழும்படிச் செய்கிறார். இப்படியே அவர் நம்மைப் பிரித்தெடுக்கிறார். இவ்வசனத்தின்படி, கிறிஸ்து திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் இதைச் செய்து முடித்திருக்கிறார்.

இதை ஞானஸ்நானத்தோடுகூட சிலர் ஒப்பிடுவார்கள். ஆனால் நான் பீட்டர் ஓ’பிரையன் கொடுக்கும் விளக்கத்தையே நம்புகிறேன். அதாவது இந்த வார்த்தைப் பிரயோகத்தை இதன் பின்னணியோடு பார்க்கிறபோது இது தீத்து 3 மற்றும் யோவான் 15:3ல் சொல்லப்பட்டுள்ள போதனைகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. கடவுள் அருளும் மறுபிறப்பை அடைகிறபோது நாம் பாவத்தின் சாபத்திலிருந்து சுத்திகரிக்கப்படுகிறோம். தீத்து 3:5-7ல் பவுல் சொல்லுகிறார், “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, அவர் தமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.” இத்தோடு யோவானில்  சொல்லப்பட்டுள்ள “நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்” (யோவான் 15:3) என்கிற வசனத்தையும் சேர்த்துப் பார்க்கிறபோது, “நடைபெறுகிற” செயல்தான் இங்கு வலியுறுத்தப்படுகிறது. இதையே முனைவர் மரே (Professor Murray), “நிச்சயமான பரிசுத்தமாக்குதல்” (Definitive Sanctification) என்கிறார்.

உதாரணமாக, பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தைத் துவங்குகிறபோது சொல்லியவைகளைக் கவனிப்போம். கொரிந்தியருக்கு எழுதிய இரண்டு நிருபங்களிலிருந்து கொரிந்து சபை மக்கள் ஆவிக்குரியவிதத்தில் முதிர்ச்சியானவர்கள் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். முதல் அதிகாரம் முதல் வசனத்தில், “தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும், கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது” என்று இருக்கிறது. அவர்கள் மாய்மாலக்காரர்களோ, கடவுளுக்கு எதிராக, வேண்டுமென்றே நடக்கிறவர்களோ அல்ல. சிறந்த சபைகளிலும்கூட மறுப்பிறப்படையாதவர்கள் இருந்துவிடக்கூடும் என்பது நமக்குத் தெரியும். அதற்குக் காரணம் அச்சபைகள் அங்கத்தவர்களை தெரிவு செய்யும் முறைகளில் கவனமில்லாமல் இருந்திருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. பவுல் கொரிந்தியர்களைப் பார்த்துச் சொன்னவைகளைக் கவனியுங்கள், “தேவ வசனம் உங்களிடத்தில் வந்தபோது மனுஷஞானத்திற்குரியதாய் வராமல் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் வந்தது. அநேகர் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமுள்ளவர்களுமானீர்கள்” என்கிறார். பவுல் அவர்களை “பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்” என்கிறார். அதாவது கடவுளுக்கும் அவருடைய பணிகளுக்குமாகப் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். இதன் அடிப்படையிலேயே பவுல் கொரிந்து சபையாருக்கு அநேக ஒழுக்கம் மற்றும் நடைமுறைக்கான போதனைகளைத் தருகிறார். அதன்பிறகுதான்  அவர்களுடைய பாவங்களைச் சுட்டிக்காட்டுகிறார். இப்படியே நீங்கள் தொடருவீர்களானால் நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்கிறார். முன்பு நீங்கள் அப்படியிருந்தீர்கள், ஆனால் இப்போது நீங்கள் கழுவப்பட்டிருக்கிறீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறீர்கள், நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்று அவர் சொல்லவில்லை, நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றே சொல்லுகிறார்.

இந்தப் பரிசுத்தமாக்கப்படுதல் அதாவது பிரித்தெடுக்கப்படுதல் மனமாற்றத்தின்போது நிகழ்வதாகும். மறுபிறப்பு, பாவத்தின் வல்லமையிலிருந்து இயேசு கிறிஸ்து மூலமாக ஜீவனுள்ள தேவனிடத்தில் திரும்பி மனந்திரும்புதலுக்கும் விசுவாசத்திற்கும் நேராக நம்மை நடத்துமானால், நம்மில் இந்த அழகுபடுத்துதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது எனலாம். இதன் மூலம் கடவுள் நம்மில் புதிய இருதயத்தை ஏற்படுத்தி, நம்முடைய உள்ளான மனது கடவுளின் வெளிப்படுத்தப்பட்டுள்ள கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்படி அவைகளை அதில் எழுதுகிறார். இது நம்முடைய இருதயம் சொல்லுவதைக் கேட்டு நடப்பதல்ல, கடவுளுடைய கட்டளைகளின்படி நடப்பதாகும். அந்தக் கட்டளைகளின்படி நடப்பதை விரும்புகிற இருதயம், அந்தக் கட்டளைகளின்படி நடக்காதபோது வருந்துகிற இருதயமாகவும் இருக்கிறது. இதுவே பரிசுத்தமாக்கப்பட்ட இருதயம். பாவத்தின் ஆளுகையிலிருந்தும் கட்டுப்பாட்டிலிருந்தும் கடவுளுக்கும் அவருடைய பணிகளுக்குமாக பிரித்தெடுக்கப்பட்ட இருதயம். இதை விளக்க இன்னும் அநேக வேதப்பகுதிகளைக் குறிப்பிட முடியும், 1 பேதுரு 1:22-23, எசேக்கியேல் 36:25-27 மற்றும் பல. ஆனால் அவைகளையெல்லாம் விளக்குவதற்கு இப்போது நேரம் போதாது. எனவே அழகுபடுத்துதலில் அடுத்த பரிமாணத்திற்குப் போகலாம்.

அழகுபடுத்துதல் ஆரம்பமாகிவிட்டது. எப்படி? மறுபிறப்பு மற்றும் மனமாற்றத்தின் மூலம். இந்த அழகுபடுத்துதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக அது தொடருகிறதாகவும் இருக்கும். மணவாட்டியை அழகுபடுத்துதலில் ஆரம்பப்படியோடு கிறிஸ்து நின்றுவிடவில்லை. அதைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு போகவும் பூரணப்படுத்தவும் உறுதிப்பூண்டார். எபேசியர் 5வது அதிகாரத்தின் மத்தியிலுள்ள இந்த சில வசனங்களை விளக்கப்படுத்துவதிலுள்ள பிரச்சனை என்னவென்றால், இங்கு பவுல், அழகுபடுத்துதலின் ஆரம்பமாக திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்தலைச் சொன்னவுடனேயே அதன் முழுநிறைவைப்பற்றியும் சொல்லுகிறார். மறுபடியுமாக வசனத்தை கவனியுங்கள், எபேசியர் 5:26-27, “தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” இது அழகுபடுத்துதலின் முழுநிறைவைக் குறிப்பதாகும். இங்கே அழகுபடுத்துதலின் தொடர்ச்சியை அவர் குறிப்பிடவில்லை. அடுத்த சில வசனங்களுக்குப் பிறகு நாம் பார்த்தால், வசனம் 29ல், “தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்” என்று இருக்கிறது. நாம் அவருடைய சரீரத்தின் அங்கங்களாக இருப்பதினால் கிறிஸ்து சுத்திகரிக்கப்பட்டதும் பரிசுத்தமாக்கப்பட்டதுமான தம்முடைய மணவாட்டியை அவர் தொடர்ந்து போஷித்துக் காப்பாற்றுகிறவராகவும் இருக்கிறார். தம்முடைய மணவாட்டி முதிர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போஷித்து நடத்துகிறார். இதை அவருடைய அன்பின்படியும், பொறுமையின்படியும், மனதுருக்கத்தின்படியும் செய்கிறார். வேதத்தின் இதர பகுதிகளிலும் இந்த நிருபத்தின் ஏனைய பகுதிகளிலும் கிறிஸ்துவின் இந்த எதிர்பார்ப்பை அடிக்கடி பார்க்கலாம் – “தரித்துக்கொள்”, “களைந்துபோடு”, “ஆவியில் நட”, “அன்பில் நட” என்ற இவ்வார்த்தைகள் யாவும் அழகுபடுத்துதலின் தொடர்ச்சியை நமக்குக் காட்டுகின்றன. வேறுவிதத்தில் சொல்வதானால், நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் மெய்யான விசுவாசியாக இருந்தால் இன்று நீங்கள் ஒரு அழகு நிலையத்திற்கு (Beauty parlour) வருகை தந்திருக்கிறீர்கள். ஏனென்றால், கிறிஸ்து உங்களை நேசித்து, உங்களுக்காக தம்மையே ஒப்புக்கொடுத்து, திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்துப் பரிசுத்தமாக்கினார். தொடர்ந்து அவர் உங்களைப் போஷிக்கிறார், காப்பாற்றுகிறார். நீங்கள் மென்மேலும் அழகாக இருக்கும்படி பிதாவினிடத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியின் மூலமாக அவரே நேரடியாக உங்களை நடத்துகிறதுமல்லாமல், தொடர்ச்சியான தம்முடைய பரிந்துரைக்கும் ஜெபத்தையும் உங்களுக்காக செய்து வருகிறார்.

இந்த அழகுபடுத்துதலில் இரண்டு அடிப்படையான காரியங்கள் இருக்கின்றன. அவைகளை தூய்மைவாதிகளும் (Puritans) 1689 விசுவாச அறிக்கையும் அதிகமாக நமக்குத் தெரிவிக்கிறது. அவை, பாவத்தை அழிப்பதில் அதிக ஆர்வமும், கிறிஸ்துவைப் போலாவதில் முன்னேற்றமுமாகும். இப்படியே அழகுபடுத்துதல் நம்மில் தொடருகிறது. அது நம்மில் தொடராதிருந்தால், அது நம்மில் ஆரம்பமாகவேயில்லை என்றே அர்த்தம். ஏனென்றால் வேதம் சொல்லுகிறது, “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவார்” என்கிற பவுலின் இந்த வார்த்தைகளை நான் உறுதியாக நம்புகிறேன். இன்றிரவு இங்கு அமர்ந்திருக்கிற நீங்கள், கிறிஸ்துவின் மணவாட்டி என்று உங்களைப்பற்றிய வேதப்பூர்வமான உறுதியைக் கொண்டிருப்பீர்களானால் ஒரு நாள் நிச்சயமாக நாம் கிறிஸ்துவின் மகிமையுள்ள மணவாட்டியாக எல்லாவகையிலும் இருப்போம் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

இதைக் குறித்து கர்னால் (Gurnall), “எவனொருவனும் தான் கிறிஸ்துவினுடையவன் என்பதை அவனுடைய பரிசுத்த வாழ்க்கையின் மூலம் காட்டாவிட்டால் தான் ஆவியினால் மறுப்பிறப்படைந்திருக்கிறேன் என்று சொல்லாதிருப்பானாக” என்கிறார். நாம் கிறிஸ்துவினுடையவர்களானால் நிச்சயமாக இதை நாம் வெளிப்படுத்துவோம். ரோமர் 8:13 சொல்லுகிறது, “மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.” “பாவத்தை அழித்தல்”, “வலது கையைத் தரித்துப் போடுதல்”, “வலது கண்ணை பிடுங்கிப் போடுதல்” என்று நம்மில் தொடர்ந்திருக்கும் பாவத்திற்கு (Remaining sin) எதிராக எல்லாவகையிலும் போராடுகிறவர்களாக நாம் இருக்க வேண்டும். நம்மைப் பாவம் ஆளாதிருந்தாலும், நம்மில் பாவம் தொடர்ந்திருக்கிறது. ஆகவே நாம் அதிகமாக ஆவியில் நடந்துகொள்ள வேண்டும். ஆனால் ஆவியானவர் நமக்காக நம்முடைய மாம்சத்தின் செய்கைகளை அழிப்பதில்லை. ஆவியினால் மாம்சத்தின் செய்கைகளை நாம் அழித்தால் மட்டுமே பிழைப்போம்.

அடுத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை, அதாவது கிறிஸ்துவை போலாகுதலில் முன்னேறுதல். இதற்கான வேதப்பகுதி, 2 கொரிந்தியர் 3:18, இங்கு பவுல் பழைய, புதிய உடன்படிக்கைகளை ஒப்பிட்டுக் காட்டுகிறார். இங்கு புதிய உடன்படிக்கையின் சிறப்பான ஆசீர்வாதத்தை நாம் காணலாம், “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.” இது கட்டளை வாக்கியமல்ல. இது ஒரு நிகழ்வைக் குறிக்கிற வாக்கியம். ஒரு சாயலிலிருந்து இன்னொன்றுக்கு மாறுகிறதாகும். இது ஆவியாயிருக்கிற கர்த்தரால் நிகழ்வது. ஆகவே இது தவறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. பூரணமான மணவாட்டியைப் பெறுவதற்காக கிறிஸ்து மரித்திருப்பதால், அதனோடு தொடர்புடைய அனைத்தையும் அவர் செய்கிறார். அதாவது மறுபிறப்பு மற்றும் மனமாற்றத்தின் மூலம் தொடங்கிய அவர், பாவத்தை அழித்தல் மற்றும் கிறிஸ்துவைப் போலாகுதலிலும் தொடரும்படிச் செய்கிறார். ஆகவே இவைகள் நம்மில் தொடராமல் நாம் கிறிஸ்துவின் மணவாட்டி என்று சொல்லிக்கொள்ளுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது நம் அனைவரையும் உள்ளடக்கியது. பவுல் சொல்லுவதை கவனியுங்கள், “நாமெல்லாரும்”, அப்போஸ்தலரும் தேவனுடைய ஊழியர்களும் மட்டும் என்று குறிப்பிடவில்லை.

அதுமட்டுமல்லாமல், கிறிஸ்துவைப் போலாகுதல் என்பது நம்முடைய தனித்தன்மையோடு தொடர்புடையதல்ல. மாறாக 1 கொரிந்தியர் 13ல் சொல்லப்பட்டுள்ளபடி அதிகமதிகமாக மாறுவதாகும். “அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.” இவைகளில் அதிகமதிகமாக வளர்ந்து இதன் உண்மைத் தன்மையைக் கொண்டிருப்பதாகும். இவைகள் இயேசு கிறிஸ்துவின் தன்மையை வெளிப்படுத்துவதாகும். அதேபோல் கலாத்தியர் 5:22-23 வசனங்களிலுள்ளவைகளையும் கொண்டதாகும், “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.” மறுபடியும் கவனியுங்கள், அன்பில்லாமல் வேதத்தில் எதுவும் இல்லை. கிறிஸ்து நம்மில் தம்முடைய அழகுபடுத்தும் செயலைச் செய்வாரானால், நம்மில் இந்தவிதமான கனிகள் அதிகமதிகமாக வெளிப்படும். கடவுளின் கிருபையால் நாம் தொடர்ந்து கிறிஸ்துவைப் போன்ற சாயலில் வளருகிறவர்களாக இருப்போம்.

(ஆ) அழகுபடுத்துதலின் முழுநிறைவும் மணவாட்டியின் திருமணநாளில் அது வெளிப்படுத்தப்படுதலும்

இப்போது நாம் கிறிஸ்துவின் அழகுபடுத்துதலின் முழுநிறைவைக் குறித்துப் பார்க்க இருக்கிறோம். மணவாட்டியினுடைய அழகின் முழுநிறைவு அவளின் மகிமைப்படுத்துதலில் இருக்கிறது. ரோமர் 8:30ல் வாசிக்கிறோம், “எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” என்று.

முழுநிறைவடையும் அழகில் இரண்டு கூறுகள் இருக்கின்றன. அவைகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்? நாம் நீதிமானாக்கப்பட்டிருந்தால், நம்முடைய கண்டனத்திற்குரிய நடத்தையின் கடன்களெல்லாம் கிறிஸ்துவுக்குள் தீர்க்கப்பட்டிருக்கிறது. ஆகவே கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிற யாதொருவன் மீதும் எந்தவித கண்டமும் இல்லை. கிறிஸ்துவின் மணவாட்டியாயிருக்கிற ஒவ்வொருவரும் முற்றிலுமாக மகிமையான ஆவியாயிருக்கிறார்கள். நம்மில் மகிமைப்படுதலுக்கான வேலை தொடங்கப்பட்டுள்ளது. அது தொடருகிறதாகவும் இருக்கிறது. நம்முடைய கடைசி மூச்சு உள்ளவரை, பாவத்தின் கடைசித் துளிவரை முழுமையாக நீங்கும்படி மகிமைப்படுதலுக்கான காரியங்கள் தொடர்ந்து நம்மில் நிகழ்கிறது. பிறகு நாம் பூரணராக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகளோடு இருப்போம்.

மணவாட்டியினுடைய அழகின் முழுநிறைவேற்றம் நம்மில் பெரும்பாலானோரில் இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதலாவதாக, பாவத்தின் எச்சங்கள் முழுமையாக நீங்கும்படி நம்முடைய ஆவிகள் முற்றிலும் தொடர்ந்து சுத்திகரிக்கப்படுதல். இரண்டாவது, நாம் கடவுளின் பிரசன்னத்தை அடைந்ததும் நம்முடைய ஆவிகள் பரிசுத்த ஆவியின் முழுமையான செயலின்படி கிறிஸ்துவைப் போலாவதற்கான கிருபைகளின் அனைத்தையும் பெற்று பாவமற்ற பூரண நிலையை அடைதல். நம்முடைய காத்திருப்பு, நீடிய பொறுமை, சாந்தம் மற்றும் பரிசுத்தமாவதற்காக நாம் செய்த பல செயல்களின் மூலம் இதை நாம் அடைவதில்லை. பூரணராக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகளோடு இணைக்கப்படுகிறபோதே இதை நாம் அடைகிறோம்.

(1) முற்றிலும் மகிமைப்படுத்தப்பட்ட ஆவி

முழுநிறைவான அழகிலுள்ள இரண்டு கூறுகளில், முதலாவது, முற்றிலும் மகிமைப்படுத்தப்பட்ட ஆவி. நம்மில் பெரும்பாலானோர் இதை மரணத்தின் மூலம் அடைவோம். மணவாளன் வருகிறவரை உயிரோடிருக்கிற மணவாட்டிகள் யாவரும் இதை இரண்டாம் கூறாகிய முற்றிலும் மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தோடு இணைந்துகொள்ளுகிற போது அடைவார்கள். கிறிஸ்துவின் மணவாட்டியாகிய ஒவ்வொருவரும் இதை அடைவார்கள். பிலிப்பியர் 3:20-21 வசனங்களில், பவுல் சொல்லுகிறார், “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.” உயர்த்தப்பட்ட நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்து மறுபடியுமாக வருகிறபோது அவர் இந்த அற்புதமான காரியங்களைச் செய்வார். இதை விவரமாக 1 கொரிந்தியர் 15லும் வாசிக்கலாம்.

(2) முற்றிலும் மகிமைப்படுத்தப்பட்ட சரீரம்

நம்முடைய முழுநிறைவடைகிற அழகிலுள்ள இரண்டாம் கூறு,- முற்றிலும் மகிமைப்படுத்தப்பட்ட சரீரமாகும். நம்முடைய கர்த்தர் உயிர்த்தெழுந்தபோது இருந்த சரீரத்தைப்போல நம்முடைய மகிமைப்படுத்தப்பட்ட சரீரமும் இருக்கும் என்று சொல்லி நமக்குத் தரப்பட இருக்கிற மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தின் மேன்மைகளைக் கட்டுப்படுத்துவது சரியல்ல என்று நான் எண்ணுகிறேன். ஏனென்றால், அவர் பரலோகத்திற்குப்போனபோது அவருடைய உயிர்த்தெழுந்த சரீரத்தில் மேலும் என்னவெல்லாம் சேர்க்கப்பட்டதோ என்று நாம் அறியோம். அவர் உயிர்த்தெழுந்தபோது இருந்த சரீரமே சிறப்பானதாக இருந்தது. அதாவது, பூட்டப்பட்டிருந்த கதவைத் திறக்காமலேயே அவரால் உள்ளே நுழைய முடிந்தது. ஒரு இடத்தில் அவர் தம் சீடர்களோடு உணவருந்திக் கொண்டிருந்தவர், அடுத்த கனம் அவர் எருசலேமில் இருந்தார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இந்த வசனப்பகுதி, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார் என்கிறது. உலகத்தோற்றத்திற்கு முன்பு பிதாவோடு அவருக்கு இருந்த மகிமைக்கு ஒப்பாக என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அது முற்றிலும் அழகுபடுத்தப்பட்டதும் மகிமைப்படுத்தப்பட்டதுமான ஆவியாக, பூரணப் பரிசுத்தத்தோடும், பூரணக் கீழ்ப்படிவோடும், கடவுளைப் பற்றிய எண்ணங்களை அதிகமாக கொண்டிருந்து, நூற்றுக்கு நூறு சதவீதம் அவருக்குக் கீழ்ப்படிகிற ஆவியையுடைய சரீரம். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறபோது, அன்பான சகோதரரே, நம்முடைய கதறலெல்லாம், ஆண்டவராகிய இயேசுவே சீக்கிரமாக வாரும் என்பதாகவே இருக்கும்.

  1. முழுநிறைவான அழகின் சுருக்கக் குறிப்பு

இதன் இரண்டு கூறுகளை நாம் பார்த்தோம். மறுபடியுமாக எபேசியர் 5 ஆம் அதிகாரத்திற்கு வருவோம். முழுநிறைவான அழகின் சுருக்கக் குறிப்பை பாருங்கள், “கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.”  நன்றாக கவனியுங்கள், “மகிமையுள்ள சபையாக அதை தமக்குத் தாமே தருகிறார்.” ஒரு விளக்கவுரையாளர் சொல்லுகிறார், அவர் தம்முடைய மணவாட்டியைப் பரிசுத்தத்தில் மிகச்சிறப்பாக இருக்கச் செய்வார் என்பதே இப்படிச் சொல்லப்பட்டுள்ளது என்று. இதைக் குறித்து நான் அதிகமாக தியானித்தபோது, நான் கர்த்தரிடம், “ஆண்டவரே, இந்த வாக்கியத்தோடு என்னால் போராட முடியவில்லை, உம்முடைய சபையை நீரே உமக்கு எப்படி மகிமையுள்ளதாக தருவீர்” என்றேன். நம்முடைய திருமணங்களில், அப்பாவோ, மாமாவோ, அல்லது நண்பரோ மணவாட்டியை மணவாளனுக்குத் தருவார்கள். ஆனால் இங்கு மணவாளனே தனக்கு மணவாட்டியைத் தருகிறார். அதை மகிமையுள்ளதாகவும் கடவுளின் மகிமையைக் கொண்ட முழுமையான பிரகாசமுள்ளதாகவும் தருகிறார். இந்த மகிமை இப்போது மணவாளனில் மட்டுமே காணப்படுகிறது. ஆனால் அப்போது, அவர் தம்முடைய மணவாட்டியைப் பார்க்கிறபோது, அவளில் ஆதாமின் வழித்தோன்றலிடத்தில் காணப்படுகிற எந்தவிதமான சோர்வும் முகவாடலும் இருக்காது. அப்போது அவர் நம்மைக் குறித்து, “இதோ என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமும்” என்றும் “இவளைப் பாருங்கள், இவள் முழுவதுமாக என்னுடைய தன்மைகளைப் பிரதிபலிக்கிறாள். இவள் பூரணமாக என்னுடைய மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தைப் பிரதிபலிக்கிறாள்” என்றும் சொல்லுவார். நம்மை அவர் தமக்குத் தாமே தருவதினால் நம்மை கட்டி அணைத்துக்கொள்ளுவார். இதை அவர் எப்படிச் செய்யப் போகிறார் என்று அறிய இரவில் என் படுக்கையில் படுத்துக்கொண்டு என் மூளையை கசக்கியும் அதை அறிய முடியவில்லை. ஒன்று மட்டும் தெரியும், அவர் நிச்சயமாக அப்படிச் செய்யப்போகிறார் என்று. ஏனென்றால், இது நடைபெறுவதற்காகவே அவர் தம்மைத்தாமே மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். அவர் சிலுவையில் தொங்கியதின் மூலம் தம்முடைய மணவாட்டிக்கான விலைக்கிரயத்தைச் செலுத்தி, அவள்மீதிருந்த சட்டபூர்வமான கண்டனத்திற்குரிய நடத்தையின் கடன்பாடுகளை நீக்கி, அவளுக்குத் தேவையான அனைத்து ஆசீர்வாதங்களையும் தந்தார். முழுநிறைவான அழகின் சுருக்கக் குறிப்பின்படி “அவள் மகிமையில் மணவாளனுக்குக் கொடுக்கப்படுவாள்.”

இதைக்குறித்து விளக்கும் பவுல், சுருக்கக் குறிப்பைத் தருவதோடு திருப்தியடையவில்லை. அவர் தரும் முழுநிறைவான அழகின் விரிவான குறிப்பையும் தருகிறார். அதைக் கவனியுங்கள், “கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல்”. இவைகள் எதிர்மறையானவைகள். கறைகள், சுருக்கங்கள், மற்றும் ஏதேனும் இருந்தால் அவற்றையும் இங்கு சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறார் பவுல். அவளுடைய ஆவியில் எந்தக் கறையும் இல்லாமல், அவளுடைய சரீரத்தில் எந்தக் கறையும் இல்லாமல், முற்றுமுடிய எல்லாப் பிழைகளும் நீக்கப்பட்டவளாக இருக்கும்படிச் செய்கிறார். அவளுடைய வயதையோ, பெலவீனத்தையோ காட்டும் எந்தச் சுருக்கங்களாக (திரை) இருந்தாலும் அவையாவும் என்றென்றைக்குமாக நீக்கப்பட்டு, கறைகளோ, சுருக்கங்களோ இல்லாமல் நித்தியத்திற்குமாக இருப்பாள். அதுமட்டுமல்லாமல், அவள் பரிசுத்தமும் பிழையற்றவளுமாக இருப்பாள். இதே வார்த்தைப் பிரயோகம், எபேசியர் 1:4லும் இருப்பதைக் கவனியுங்கள், “தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே”. இதற்காகவே திரித்துவ தேவன் நம்முடைய இரட்சிப்பிற்கான திட்டத்தை நித்தியத்தில் ஏற்படுத்தினார்கள். மணவாளன் தம்முடைய மணவாட்டியை பரிசுத்தமும் பிழையற்றதுமாகக் கொடுக்கிறபோது அந்தத் திட்டத்தின் மெய் வடிவத்தைக் காண முடிகிறது.

இதைக் குறித்து ஆழமாக நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் ஒரு கற்பனை உருவானது. ஒருவேளை இப்போது நாம் கிறிஸ்துவால் கிறிஸ்துவுக்கு கொடுக்கப்படப்போகிற நேரமாக வைத்துக் கொள்ளுவோம். நம் ஆண்டவர் பிதாவைப் பார்த்து இப்படிச் சொல்லுவார், “பிதாவே, கடைசியாக ஒரு முறை என் மணவாட்டியை நான் சோதனையிட்டுப் பார்க்க வேண்டும்” என்று சொல்லி, “காபிரியேல் இங்கே வா” என்று அழைப்பார்; அதாவது தேவதூதனான காபிரியேல். பிறகு “காபிரியேல் ஒரு சக்திவாய்ந்த பூதக்கண்ணாடியைக் கொண்டு வா” என்பார். அதன்பிறகு என்னுடைய தோல் மருத்துவ நிபுணர் ஒவ்வொரு வருடமும் செய்வதுபோல செய்யச் சொல்வார். அவர் ஒரு பெரிய பூதக்கண்ணாடியை எடுத்து, என்னுடைய சரீரம் முழுவதையும் சோதித்துப் பார்ப்பார். தோலில் ஏதாவது மாற்றங்கள் காணப்படுகிறதா, அல்லது சந்தேகத்திற்கிடமாக ஏதேனும் வித்தியாசமாக இருக்கிறதா என்று பார்ப்பார். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை சோதனையிடுவார். அப்படி ஏதேனும் காணப்பட்டால் அதைச் சரி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவார். நான் குறிப்பிட விரும்புவது, மாசு, கறை ஏதேனும் இருக்கிறதா என்று அவர் சோதித்துப் பார்ப்பார் என்பதைத்தான். காபிரியேல் மணவாட்டியின் உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால்வரை சோதனை செய்தபிறகு, ஆண்டவரிடம் வந்து, “சர்வவல்லவரான ஆண்டவரே உம்முடைய மணவாட்டியில் எந்தவொரு கறையோ சுருக்கங்களோ அல்லது வித்தியாசமான எதுவும் இல்லை. முற்றுமுடிய முழுமையாக பூரணமானவளாக இருக்கிறாள்” என்பார். பிறகு ஆண்டவர் தம்முடைய மணவாட்டியைத் தம்மோடு என்றென்றும் இருக்கும்படி தமக்கென்று கட்டி அணைத்துக்கொள்ளுவார். அன்பானவர்களே, நாம் தியானிப்பதற்கு எவ்வளவு அருமையான போதனை இது. மணவாட்டியின் அழகு முழுநிறைவை அடைந்திருக்கிறது, 1 யோவான் 3ன்படி, திருமண நாளில் இது மனிதர்களாகிய அனைவருக்கும் வெளிப்படுத்திக் காட்டப்படவிருக்கிறது. “பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.”

தேவதூதர்கள் மத்தியில் இது எத்தனை ஆச்சரியத்தை ஏற்படுத்தப் போகிறது தெரியுமா? திரித்துவ தேவனுடைய திட்டத்தின்படி எல்லாம் நடந்து, மீட்பின் நோக்கம் நிறைவேறுவதைக் காணும்போது, கேரூபீன்களுக்கும் சேராபீன்களுக்கும் இது எவ்வளவு வியப்பைத் தரப்போகிறது தெரியுமா? வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் யோவான் அன்று நடக்கப்போகிற சிலவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார். அங்கு பாடப்படப்போகிற அற்புதமான ஸ்தோத்திரப் பாடல்களைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

பயன்பாடு

இந்தப் பிரசங்கத்தை முடிக்கும் வண்ணமாக நான் எதைச் சொல்லப் போகிறேன். இப்போது இதை நிறுத்தப் போகிறேன் என்று சொல்லுவது சரியாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை. மாறாக, சில பயன்பாடுகளை நான் சொல்லத்தான் வேண்டும். அன்பான பிரசங்கிக்கும் நண்பர்களே, பிரசங்கத்திற்கான ஏற்பாடுகளைச் செய்கிறபோது இவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக எப்போதும் வைத்திருங்கள். நீங்கள் ஊழியம் செய்யும் மக்கள், கரையற்ற நிலை, சுருக்கமற்ற நிலை என்பதற்கு வெகுதூரத்திலுள்ளவர்களாக இப்போது இருக்கலாம். அநேக கறைகளும், அநேக சுருக்கங்களும், அநேக தழும்புகளும், இன்னும் அநேகமாக என்னென்னவோ அவர்களில் இருக்கலாம். கிறிஸ்துவின் ஆயுதமாக இருக்க நீங்கள் உங்களை ஒப்புவித்திருக்கிறீர்கள். இவர்களைப் பெறும்படிதான் கிறிஸ்து மரித்தார். ஒரு நாள் இவர்களில்தான் தம்முடைய மகிமையை வெளிப்படுத்த போகிறார். விடாமல் முன்னேறுங்கள், தொடர்ந்து ஜெபியுங்கள், தொடர்ந்து பிரசங்கியுங்கள், தொடர்ந்து ஆண்டவர்மீது விசுவாசமாயிருங்கள். புதிய சுருக்கங்களைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். ஆசீர்வாதத்திற்காக வேறு புதிய வழிகளைத் தேடாதீர்கள். கிறிஸ்து தம்முடைய மணவாட்டியை பூரணமானவளாகச் செய்வதற்கு தம்முடைய பிரத்தியேக வழியையே கையாளுகிறார். அவருடைய வழிமுறைகளையே பின்தொடருங்கள், அவருடைய கிருபையிலேயே உங்கள் நம்பிக்கை இருக்கட்டும். நீங்கள் ஊக்கமிழந்து ஆண்டவரே, இவைகளை நம்புவதற்கு எனக்கு கடினமாக இருக்கிறது, என்னிலேயே இதைப் பார்க்க முடியாதிருக்கிறதே என்று சொல்லலாம். அதாவது, நீங்கள் உங்களுடைய சொந்த பாவங்களில் போராடிக்கொண்டிருந்து, அதில் கொஞ்சம் முன்னேற்றம் கண்டு, சில மாதங்களுக்கு அதில் தொடர்ந்திருந்து, “ஓ, நான் இதில் முன்னேறியிருக்கிறேன்” என்று நீங்கள் சொல்லிய கொஞ்சக் காலத்திற்குள்ளாக உங்களுடைய பெலவீனத்தினால் மறுபடியுமாக நீங்கள் விழுந்துவிட்டால், ஆண்டவரே எப்படி இது நடந்தது, என்மீது நானே இப்படிச் சேற்றை வாரியிறைத்துக் கொண்டேனே, இது என்னில் தொடர்ந்து இருக்கிறதே என்று நீங்கள் புலம்புவீர்களானால், நான் சொல்லுவதை சற்று கவனியுங்கள், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”

உங்களுடைய உழைப்பு உங்களுடைய வேலை ஒருபோதும் வீணாகப் போகாது என்ற ஊக்கத்தை உங்களுக்குக் கொடுக்கிற நாளாக இந்நாளை வைத்துக்கொள்ளுங்கள். நமக்காக வைத்திருக்கிற அந்த மகிமையுள்ள உயிர்த்தெழுதலின் சரீரத்தைப்பற்றிய போதனையை நினைவில் வைத்திருங்கள். உறுதியாக முன்னேறுங்கள், கிறிஸ்துவின் செயலின் மீதுள்ள நம்பிக்கையில் பெருகுங்கள். கிறிஸ்துவுக்குள்ளான உங்களுடைய உழைப்பு ஒருநாளும் வீண்போகாது. நீங்கள் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறபோது, அவரிலேயே உங்கள் நம்பிக்கையை வையுங்கள். அவருடைய மகிமையையே தேடுங்கள். பாவக் கடன்களைச் சுமந்துதிரிகிற பெரும் கூட்டத்தினரை கிறிஸ்துவிடம் அழைப்பதற்கான அவருடைய வாயாக நீங்கள் இருக்கிறீர்கள். அவர்களுடைய குறைபாடுகள் மூடப்படும்படி அவர்களை கிறிஸ்துவிடம் அழைக்கும் அவருடைய வாயாக நீங்கள் இருக்கிறீர்கள். “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும்” என்கிற இயேசுவின் வார்த்தையை எப்படிச் செய்யப் போகிறீர்கள்? பிரசங்கிகளாகிய உங்களுடைய வாயைப் பயன்படுத்தி உண்மையோடு வேதபூர்வமான சுவிசேஷத்தை பிரசங்கிப்பதின் மூலமாகத்தான் அதைச் செய்யப்போகிறீர்கள். அவர் அவர்களை அழைத்து, திருவசனமாகிய தண்ணீர் முழுக்கினால் பரிசுத்தமாக்குவாரானால், அவர்கள் தொடர்ந்து அழகுபடுத்தப்படும்படியான காரியங்களையும் அவர் செய்கிறவராக இருக்கிறார். நீங்கள் வேத வசனங்களைப் பிரசங்கித்தபிறகு, கடவுளுடைய ஆசீர்வாதத்திற்காக ஜெபியுங்கள். அப்போது அதன் பலனை சபை மக்களின் வாழ்க்கையில் பார்க்க முடியும். கிறிஸ்து தம்முடைய அழகு நிலையத்தில் தம்முடைய வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார். அவ்வேலை முடிகிறபோது அதன் முழுநிறைவைக் காண்பீர்கள். அதாவது “கர்த்தரோடு என்றென்றும் இருப்பது”, “கர்த்தரைப் போல் இருப்பது” ஆகிய இவை இரண்டையும் நாம் அடைவோம். மீட்கப்பட்ட ஒருவனுக்கு இதைவிட வேறென்ன விருப்பமாக இருக்க முடியும். ஆண்டவராகிய இயேசுவே சீக்கிரமாக வாரும்!

முழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . . (பாகம் 2)

இது கடந்த இதழின் தொடர்ச்சி. ரொப் வென்சூராவை பொது ஆசிரியராகக் கொண்டு வெளிவந்திருக்கும் ‘ஐம்போதனைகளுக்கு அப்பால்’ எனும் ஆங்கில நூலின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அதன் உள்ளடக்கங்களை விளக்கியும் விமர்சித்தும் எழுதப்பட்டிருக்கும் ஆக்கம். வரப்போகும் இதழ்களில் இதன் தொடர்ச்சியை வாசிக்கலாம். – ஆசிரியர்.

  1. வரையறுக்கப்பட்ட தத்துவம் அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவம் (Regulative Principle) – சாம் வோல்டிரன்

வரையறுக்கப்பட்ட தத்துவத்தை சாம் வோல்டிரன் ஆறு தலைப்புகளில் இந்நூலில் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

  1. வரலாற்று அர்த்தம்
  2. திருச்சபையின் அடிப்படையிலான விளக்கம்
  3. வேத ஆதாரம்
  4. அதன் பல்வேறுபட்ட செயல்பாடுகள்
  5. அதன் அவசியமான கட்டுப்பாடு
  6. தற்கால எதிர்ப்புகள்

முதலாவது தலைப்பின் மூலம் வோல்டிரன் வரையறுக்கப்பட்ட தத்துவம் என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கான விளக்கத்தைத் தந்து அதை நியாயப்படுத்துகிறார். இறையியல் வரலாற்றில் உருவான இறையியல் வார்த்தைகள் அவசியமானவை என்றும், அந்த வார்த்தைகளை மட்டும் பயன்படுத்திக்கொண்டு அவற்றின் வரலாற்று அர்த்தம்  தெரியாமல் இருந்துவருவது தப்பானதும், மற்றவர்களைத் தவறாக வழிநடத்துவதுமாகும் என்று வோல்டிரன் விளக்குகிறார். திரித்துவம் என்ற பதத்தைப் பயன்படுத்திக் கொண்டு திரித்துவப் போதனைக்கு முரணான நம்பிக்கைகளைக் கொண்டிருப்பது அர்த்தமற்ற செயல். வரையறுக்கப்பட்ட தத்துவம் என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆராதனையின்போது அதற்கு எதிரான ஆராதனை முறைகளைக் கையாண்டு வருவது மிகத் தவறானது என்கிறார் வோல்டிரன்.

வரையறுக்கப்பட்ட தத்துவம் என்ற வார்த்தைப் பிரயோகம் உருவான விதத்தை முதலில் கவனிப்போம். ஏற்கனவே விளக்கியதுபோல் இது வரலாற்றோடு சம்பந்தப்பட்ட இறையியல் வார்த்தைப் பிரயோகம். இது உருவானதற்குக் காரணம் 16ம் நூற்றாண்டு சீர்த்திருத்தமே. ரோமன் கத்தோலிக்க மதத்திற்கும் புரொட்டஸ்தாந்து சீர்திருத்தவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாதப்பிரதாபங்களுக்குக் காரணம் ‘வேதம் மட்டுமே’ என்ற இறையியல் நம்பிக்கையே. ரோமன் கத்தோலிக்க மதம், வேதம் தவிர்ந்த மனித சிந்தனைகளையும் வேதமாகக் கருதிப் பயன்படுத்தி அதன் வழிநடந்து வேதத்தின் அதிகாரத்தை இல்லாமலாக்கிக் கொண்டிருந்தபோது புரொட்டஸ்தாந்தியர்கள் வேதம் மட்டுமே சகல அதிகாரமும் கொண்ட கர்த்தரின் வார்த்தை என்றும், அதன்படி மட்டுமே கிறிஸ்தவர்களும், திருச்சபையும் எதையும் பின்பற்ற வேண்டும் என்றும் சொன்னார்கள். அதனால் ‘பாரம்பரியத்துக்கு’ கர்த்தரின் ஆராதனையிலும், சபையிலும் இடமில்லை என்று வாதிட்டார்கள். அவர்களே ‘வரையறுக்கப்பட்ட தத்துவம்’ என்ற பதம் பின்னால் உருவாவதற்குக் காரணமாக இருந்தார்கள். ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் ஆராதனையிலும், திருச்சபைக் காரியங்களிலும் பாரம்பரியத்தைப் பின்பற்றலாம் என்று வாதிட்டதால் வரையறுக்கப்பட்ட தத்துவத்திற்கு மாறான இவர்களுடைய போதனை பின்னால் ‘வழமையான தத்துவம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் லூதரன்களுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும் இடையில் இது சம்பந்தமான வாதப்பிரதாபங்கள் பெரிதாக நிகழ்ந்தன. சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின் கர்த்தரின் ஆராதனையில் நிகழும் காரியங்களுக்கு வேத ஆதாரங்கள் அவசியமானவை என்று வலியுறுத்தினார்.

பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்து சபையில் இந்த விஷயம் பற்றிய பெரும் போராட்டம் நிகழ்ந்தது. அந்தப் போராட்டமே இந்நூற்றாண்டில் வரையறுக்கப்பட்ட தத்துவத்தைப் பிரபலமாக்கி கர்த்தரின் ஆராதனையில் அதன் அவசியத்தை மேலானதாகக் காட்டியது. இந்தப் போராட்டத்தின் காரணமாக இங்கிலாந்து சபையில், சபை, மற்றும் ஆராதனையில் இந்தத் தத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர்களே சபை நீக்கம் செய்யப்பட்ட பியூரிட்டன்கள் (தூய்மைவாதிகள்). இந்தத் தத்துவத்தை அவர்களே விசுவாச அறிக்கைகளில் தெளிவாக விளக்கி எழுதினார்கள். பியூரிட்டன்களின் வரையறுக்கப்பட்ட தத்துவத்தை விளக்கும் ஜி. ஐ. வில்லியம்சன் என்ற தற்கால இறையியலறிஞர், ‘கர்த்தரால் கட்டளையிடப்பட்டதெல்லாம் சரியானவை, அவரால் கட்டளையிடப்படாதவையெல்லாம் தவறானவை’ என்று சுருக்கமாக, எளிமையாக எழுதியிருக்கிறார். இதுபற்றி சீர்திருத்த சபையைச் சேர்ந்த இறையியலறிஞரான பேர்னமென் விளக்குகின்றபோது, இங்கிலாந்து சபையோ, “கர்த்தரால் தடைசெய்யப்படாத அனைத்தையும் ஆராதனையிலும், திருச்சபைக் காரியங்களிலும் சேர்த்துக்கொள்ளும்படி சபை ஆணையிடலாம்” என்ற தத்துவத்தைக் கொண்டு இயங்குகிறது. ஆனால், நம்சபை முறைப்படி, “ஆராதனையிலும், சபைக்காரியங்களிலும் வேதத்தில் தெளிவாகவும், உள்ளடக்கமாகவும் விளக்கியிராத எதையும் சபை ஆணையிட்டுப் பின்பற்றும்படி வற்புறுத்த முடியாது என்ற கொள்கையைக் கொண்டிருக்கிறது” என்று விளக்குகிறார்.

ஆராதனை தொடர்பான பியூரிட்டன் வரையறுக்கப்பட்ட தத்துவத்தையும், இங்கிலாந்து ஆங்கிலிக்கன் சபையின் வழமையான தத்துவத்தையும் ஜி. ஐ. வில்லியம்சன் அருமையாக விளக்குகிறார்.

பியூரிட்டன் வரையறுக்கப்பட்ட தத்துவம்:

  • மெய்யான ஆராதனை — கட்டளையிடப்பட்டவை மட்டுமே
  • தவறான ஆராதனை – கட்டளையிடப்படாத அனைத்தும்

இங்கிலாந்து சபையின் (ஆங்கிலிக்கன்) வழமையான தத்துவம்:

  • மெய்யான ஆராதனை – கட்டளையிடப்பட்டவையும், குறிப்பிட்டு நிராகரிக்கப்பட்டிராத அனைத்தும்
  • தவறான ஆராதனை – கண்டிப்பாக நிராகரிக்கப்பட்டவை மட்டும்

‘வேதம் மட்டுமே’ என்ற சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் வைராக்கியக் கோட்பாட்டின்படி அதன் போதனைகளின் அடிப்படையில் மட்டுமே திருச்சபைக் காரியங்களும், கர்த்தரின் ஆராதனையும் அமைய வேண்டும் என்ற ‘வரையறுக்கப்பட்ட தத்துவத்தை’ சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் போதித்து விசுவாச அறிக்கைகளும் வலியுறுத்துமானால், அதற்கான வேத ஆதாரங்கள் யாவை என்று பார்ப்பது அவசியம். இந்தத் தத்துவத்தை சீர்திருத்த பியூரிட்டன்கள் வலியறுத்தியதற்குக் காரணமே இது வேதத்தில் பரவலாகப் போதிக்கப்பட்டிருப்பதுதான். அதையே சாம் வோல்டிரன் அடுத்தபடியாக இந்நூலில் விளக்குகிறார். அதற்கு அடிப்படை வசனமாக அவர் மத்தேயு 18:20ஐ முன்வைக்கிறார். இயேசு சொன்னார், ‘ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்.’ எழுத்துபூர்வமாக மொழிபெயர்த்தால் இந்த வசனத்தில் – ‘நான்’ இருக்கிறேன் – என்ற வார்த்தை வந்திருக்க வேண்டும். இந்த வசனத்தை 15-20 வரையுள்ள வசனங்களின் அடிப்படையில் விளங்கிக்கொள்ளுவது அவசியம். சபையில் காணப்படவேண்டிய ஒழுங்கு நடவடிக்கை முறைகளை இந்தப் பகுதியில் இயேசு விளக்குகிறார். இந்தப் பகுதி திருச்சபையைப் பற்றித்தான் விளக்குகிறது என்பதற்கு இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘சபை’ என்ற வார்த்தை ஆதாரமாக இருக்கிறது. அதே வார்த்தையை இந்தப்பகுதியோடு தொடர்புடைய மத்தேயு 16ம் அதிகாரமும் பயன்படுத்துகிறது. இந்தப் பகுதியின் மூலம் வோல்டிரன் பின்வரும் உண்மைகளை முன்வைக்கிறார்.

  1. இந்த வசனத்தின் ‘இரண்டு பேராவது மூன்று பேராவது’ என்ற பதங்கள் தனி நபர்களை அல்லாமல் திருச்சபையைக் குறிக்கும் வார்த்தைகள்.
  2. ‘கூடியிருக்கிறார்களோ’ (கூடிவருகிறார்களோ) என்பது திருச்சபை அதிகாரபூர்வமாக கூடிவருவதைக் குறிக்கும் வார்த்தை. இது 1 கொரிந்தியர் 14லும் பல தடவைகள் சபையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  3. ‘என்னுடைய நாமத்தில்’ என்பது இயேசுவின் அங்கீகாரத்தோடு அவருடைய பிரசன்னத்தைத் தன் மத்தியில் கொண்டிருந்து அதிகாரபூர்வமாகக் கூடிவருவதைக் குறிக்கும். இது சபைக்கு மட்டுமே உரிய ஆசீர்வாதம். இதுவும் திருச்சபையைக் குறித்தே இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
  4. இந்த வசனப்பகுதி 1 கொரிந்தியர் 5:1-13ன் தொடர்புடையதாக இருக்கின்றது. இருபகுதிகளும் (1 கொரிந்தியர் 4-5) தேவ பிரசன்னத்தைக் கொண்டிருந்து திருச்சபை அதிகாரத்தோடு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை விளக்குகின்றன.

இந்த விளக்கங்களின் அடிப்படையில் சாம் வோல்டிரன் முக்கியமான போதனையை அளிக்கிறார். அதாவது பழைய ஏற்பாட்டில் ஆலயமாக இருந்தது தேவனுடைய பிரசன்னம் இருந்த இடமே. தேவனுடைய பிரசன்னமே ஆலயத்தை அவருடையதாக்கியது. அந்தவகையில், அவருடைய பிரசன்னம் அகன்றபோது எருசலேம் ஆலயம் தன் மகிமையை இழந்தது. அவரில்லாத ஆலயம் அவருடையதல்ல. இந்த உண்மையின்படி புதிய ஏற்பாட்டில் தேவனுடைய பிரசன்னத்தைக் கொண்டிருக்கும் ஒரே ஆலயம் திருச்சபை மட்டுமே. ‘கூடிவருகின்ற சபையே’ தேவனுடைய பரிசுத்த ஆலயமாக இருக்கின்றது (1 கொரிந்தியர் 3:16) என்கிறார் பவுல். அவருடைய மக்கள் அவருடைய சிறப்பான பிரசன்னத்தைக் கொண்டிருந்து அவருடைய அங்கீகாரத்தோடு கூடிவருவதே திருச்சபை.

வோல்டிரன் இந்தப் போதனையின்படி சில விளக்கங்களைத் தருகிறார்:

  1. தேவனுடைய பிரசன்னத்தைக்கொண்டு அவருடைய மக்கள் கூடிவரும்போது அவர் ஆராதனை செய்யப்படவேண்டும்.
  2. அவருடைய நாமம் சிறப்பாக நினைவுகொள்ளப்படுகிற இடமே அவருக்குரிய ஆராதனை நிகழும் ஆலயமாக இருக்கிறது.
  3. புதிய உடன்படிக்கையின்படி இயேசுவின் பிரசன்னத்தைக் கொண்டிருக்கும் ஆலயம் திருச்சபையாகும்.

அடுத்தபடியாக வோல்டிரன் இதுவரை தந்துள்ள விளக்கத்தின்படி தேவனுடைய ஆலயமாகிய திருச்சபையில் அவருடைய காரியங்கள் மிகவும் கவனத்தோடு, பயபக்தியோடு அவருடைய வார்த்தையின்படி நிகழ வேண்டும் என்பதை 1 தீமோ. 3:15ஐ ஆதாரமாக வைத்து விளக்குகிறார். ‘தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்கு தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.’ இந்த வசனத்தில் திருச்சபை தேவனுடைய வீடாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. அது ஜீவனுள்ள தேவனுடைய பிரசன்னத்தைக் கொண்டிருக்கும் அவருடைய ஆலயம்.

மேலே பார்த்தவிதத்தில் இன்றைக்கு திருச்சபையைப் பார்க்கும் நிலையில் கிறிஸ்தவர்கள் இல்லை. புதிய உடன்படிக்கையின்படி பழைய ஏற்பாட்டு ஆலயத்தை நினைவுபடுத்துகின்ற, ஆண்டவருடைய பிரசன்னத்தைக் கொண்டிருக்கும், அவருடைய மக்கள் அவரைக் கூடி ஆராதிக்கும் ஆலயம் திருச்சபையே. அதன் காரணமாகவே அவருடைய ஆலயத்தில் அவருடைய மக்கள் உலகப்போக்கின்படியும், தங்களுடைய சிந்தனைகளின்படியும் அவரை ஆராதனை செய்யக்கூடாது. தேவனுடைய வார்த்தையின்படி அவர் அங்கீகரித்துக் கேட்கின்ற ஆராதனையே அவருடைய ஆலயமாகிய சபையில் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். இதுவே ஆராதனை பற்றிய ‘வரையறுக்கப்பட்ட தத்துவம்.’ இதன் மூலம் ஆண்டவர் தன்னுடைய ஆராதனையை வரையறுத்து வார்த்தையினால் கட்டுப்படுத்தியிருக்கிறார் என்று அறிந்துகொள்ளுகிறோம். இதை வோல்டிரன் பல வேத ஆதாரங்களின் மூலம் விளக்கியிருக்கிறார்.

(1.) பாவிகள் தன்னை எப்படி, எந்தவிதத்தில் ஆராதனை செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானிக்கும் உரிமை கர்த்தருக்கு மட்டுமே உண்டு. இதை நிரூபிக்கும் எத்தனையோ வேதவசனங்கள் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. காயினும் ஆபேலும் கர்த்தரை ஆராதிக்க வந்தபோது அந்த ஆராதனையை அவர்கள் தாங்கள் நினைத்தவிதத்தில் கொடுக்க முடியவில்லை. கர்த்தருக்குரியதை அவர் வெளிப்படுத்தியிருப்பதால் அந்த முறையில் கொடுக்கப்பட்ட ஆபேலின் ஆராதனையை மட்டுமே அவர் ஏற்றுக்கொண்டார். அதேபோல் அந்நிய அக்கினியை அவருக்கு முன் கொண்டுவந்த ஆரோனின் புத்திரர்களான நாதாபையும் அபியூவையும் அவர் எரித்தார். இந்தவிதமாக கர்த்தர் தனக்கு முன் தான் கட்டளையிட்டுத் தந்துள்ள விதத்தில் ஆராதனை செய்யாதவர்களைத் தொடர்ந்து நியாயந்தீர்த்திருப்பதை பழைய ஏற்பாடு நமக்கு நினைவூட்டுகிறது. இந்த வரைமுறை புதிய உடன்படிக்கையிலும் தொடர்கிறது.

(2.) வேதம் போதிக்காத, அதில் காணப்படாத ஆராதனை முறைகள் இறுதியில் அவர் ஏற்படுத்தித் தந்திருக்கும் ஆராதனையை நிராகரிக்கின்றவையாக இருக்கின்றன. மத்தேயு 13ல் ஆண்டவர், தேவனுடைய கட்டளையை நீ ஏன் உன்னுடைய பாரம்பரியத்தின் மூலம் மீறுகிறாய் என்று கேட்கிறார். பாரம்பரியமும், மனித சிந்தனைகளும் அவருடைய கட்டளையோடு இணைந்து வாழ வழியில்லை. யெரொபெயாம் தாணிலும், பெத்தேலிலும் ஏற்படுத்திய ஆலய வழிபாடுகள் கர்த்தருடைய ஆலய வழிபாட்டை நிராகரிக்கின்றவையாக இருந்தன. அந்தப் பாவத்தை ஆண்டவர் பொறுத்துக்கொள்ளவில்லை.

(3.) ஆராதனையில் கர்த்தருடைய வார்த்தைகளை மீறிய அம்சங்களைத் திணிப்பது வேதத்தின் போதுமான தன்மையையும், கிறிஸ்துவின் ஞானத்தையும் கேலிக்குரியதாக்குகின்றன.

(4.) கர்த்தரால் கட்டளையிட்டுத் தரப்படாத அத்தனை ஆராதனை முறைகளையும் வேதம் அடியோடு வெறுத்துக் கண்டிக்கிறது (லேவி 10:1-3; உபா. 17:3; 4:2; 12:29-32; யோசுவா 1:7; 23:6-8; மத். 15:13; கொலோ 2:20-23).

வரையறுக்கப்பட்ட தத்துவத்தின் பல்வகைப் பயன்களை அடுத்து விளக்கும் வோல்டிரன், மெய்யான திருச்சபை சீர்திருத்தம் நிகழ இத்தத்துவத்திற்குக் கட்டுப்பட்டு நடக்காமல் இருக்கமுடியாது என்பதில் தனக்கு உறுதியான நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிடுகிறார். திருச்சபை ஆராதனையோடு மட்டும் சம்பந்தப்பட்டதாக இல்லாமல் இத்தத்துவம் திருச்சபையின் அத்தனை அம்சங்களோடும், அமைப்போடும், மக்களோடும் தொடர்புடையதாக இருப்பதாகக் கூறுகிறார். வோல்டிரனின் விளக்கம் எனக்கு மிகவும் சரியாகவே தெரிகிறது. நம்முடைய வாழ்க்கையின் சகல பகுதிகளும் வேதத்துக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டியது அவசியமானபோதும், திருச்சபையைப் பொறுத்தவரையில் வேதத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டதாக, அதைத் தவிர வேறு எதற்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்படாததாக திருச்சபையும் அதன் சகல பகுதிகளும் அமைந்திருக்க வேண்டுமென்பதே வரையறுக்கப்பட்ட தத்துவம். இந்த வேதபோதனை திருச்சபையைப் பொறுத்தவரையில் எந்தவிதத்தில் பாதிக்கிறது என்பதை வோல்டிரன் விளக்குகிறார்.

(1.) திருச்சபைபற்றிய போதனைகள் – திருச்சபைபற்றிய போதனைகள் வரையறுக்கப்பட்ட தத்துவத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும். நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் திருச்சபைக் கோட்பாடு என்பதை அறியாமலும், அதை உதாசீனப்படுத்தியும் சபைகள் நடந்துவருகின்றன. பெரும்பாலானோர் வேதம் தெரியாமல் திருச்சபைக் கோட்பாடு விஷயத்தில் வேதம் தெளிவான போதனையைத் தரவில்லை என்று கூறித் தான்தோன்றித்தனமாக நடந்துவருகிறார்கள். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல விஷயங்களில் வேதத்திற்கு முரண்படாதவிதத்தில் நாம் தீர்மானங்களை எடுத்து வாழமுடியும். ஆனால், திருச்சபையைப் பொறுத்தவரையில் கர்த்தர் வேதத்தில் அதன் அமைப்புக்கும், நிர்வாகத்துக்கும், பொறுப்புக்கும் தேவையான அத்தனைப் போதனைகளையும் வரையறுத்து விளக்கமாகத் தந்திருக்கிறார். இதை 1689, 1:6 பத்தி தெளிவாக விளக்குகிறது. அவற்றை மீறி சபை நடத்துவது கர்த்தருக்கு எதிரான செயல். அறியாமையைக் காரணம்காட்டி செய்யவேண்டியதை செய்யாமலிருப்பதைக் கர்த்தர் பொறுத்துக்கொள்ளுவதில்லை. வேதத்தை உதாசீனப்படுத்தியும், நிராகரித்தும் சபை நடத்தப் பார்ப்பது கத்தோலிக்க காட்டாட்சிக் காலத்துக்கு மறுபடியும் போய்ச்சேருவதில்தான் முடியும்.

(2.) திருச்சபை அமைப்பும் நிர்வாகமும் – பியூரிட்டன்கள் வேதம் திருச்சபை அமைப்பைப்பற்றித் தெளிவாகப் போதிக்கிறது என்பதில் உறுதியாக இருந்தனர். ஆங்கிலிக்கன் பிரிவினரும் (ஹூக்கரின் போதனை), ஏனையோரும் இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில் கர்த்தர் பொதுவான போதனைகளை மட்டுமே தந்து நாம் சுதந்திரமாக இதுபற்றித் தீர்மானங்களை எடுத்து சபை நடத்தலாம் என்று நம்புகிறார்கள். அதுவே ‘வழமையான தத்துவம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 1689, 1 வது அதிகாரத்தின் 6ம் பத்தி, வரையறுக்கப்பட்ட தத்துவம் திருச்சபையையும், அதன் ஆராதனையையும் கட்டுப்படுத்துகிறது என்பதை விளக்குகிறது. இதன் மூலம் வேதத்தின் போதுமான தன்மையையும் இந்தப் பகுதி நிலைநாட்டுகிறது. இந்தப் பகுதி தேவனுடைய ஆலயமாகிய திருச்சபையில் மனித சிந்தனைகளுக்கோ, பாரம்பரியத்துக்கோ இடமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. திருச்சபையின் அமைப்பும், அதன் தலைவர்களும் யாராயிருக்க வேண்டும், அவர்கள் எத்தகைய தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையெல்லாம் வேதம் தெளிவாக விளக்குகிறது. இத்தகைய வேதபோதனைகளையெல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு சபை நடத்தப்பார்ப்பது கத்தோலிக்க, ஆங்கிலிக்கன் முறைகளைப் பின்பற்றுவது மட்டுமல்ல கர்த்தரின் வேதத்தையே சிதைக்கும் செயலாகும். நம்மினத்தில் இந்த உணர்வற்ற நிலையில் கிறிஸ்தவம் இருந்து வருகிறது. திருச்சபை என்றாலே என்னவென்று தெரியாமல் நடந்துவருவது மட்டுமல்ல, நிறுவனங்களும், சொந்த ஊழியங்களும் சிலந்திவலைபோல் பரவி வேத அதிகாரத்தில் துப்புரவாக நம்பிக்கையற்ற ஒருவகைக் கிறிஸ்தவத்தை நம்மினம் உருவாக்கி வைத்திருக்கிறது. கர்த்தருடைய திருச்சபையை தேவனுடைய ஆலயமாகக் கணித்து நடக்கும் தேவபயமுள்ள கிறிஸ்தவமல்ல இது; காயினின் இறுமாப்பை இருதயத்தில் சுமந்து நடந்துவரும் போலிக் கிறிஸ்தவம் மட்டுமே.

(3.) திருச்சபையின் கடமைகள் – வரையறுக்கப்பட்ட தத்துவத்தை ஜி. ஐ. வில்லியம்சன் விளக்கியிருக்கும் விதத்தில் திருச்சபை மட்டுமே பின்பற்றும்படியாகக் கர்த்தர் எதிர்பார்க்கிறார். குடும்பத்திற்கோ, உலக நிறுவனங்களுக்கோ அத்தகைய வரையறுக்கப்பட்ட தத்துவம் கொடுக்கப்படவில்லை. ‘எது கட்டளையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அது மட்டுமே சரியானது, கட்டளையாகக் கொடுக்கப்படாததெல்லாம் தவறானது’ என்ற வரையறுக்கப்பட்ட தத்துவத்தைப் பின்பற்ற வேண்டிய கர்த்தரின் ஆலயமான திருச்சபை இருப்பதலால் அதன் கடமைகள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அரசுக்கும், குடும்பத்துக்கும், திருச்சபைக்கும் கர்த்தர் தனிப்பட்ட சிறப்பான கடமைகளைக் கொடுத்திருக்கிறார் என்பதை சீர்திருத்த கிறிஸ்தவம் வலியுறுத்துகிறது என்பதை வோல்டிரன் சுட்டிக்காட்டுகிறார். அந்தவிதத்தில் திருச்சபை தன்னுடைய கடமைகளை வரையறுக்கப்பட்ட தத்துவத்தின் அடிப்படையில் பொறுப்போடு நடைமுறைப்படுத்த வேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.

  1. திருச்சபை தன் கடமைகளை கவனத்தோடு நடைமுறைப்படுத்த வேண்டும்.
  2. திருச்சபை அரசுக்கும், குடும்பத்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் கடமைகளில் தலையிடுவதையும், அவற்றின் கடமைகளை செய்யப்பார்ப்பதையும் கவனத்தோடு தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
  3. திருச்சபை தனக்குக் கர்த்தரால் கொடுக்கப்பட்டுள்ள கடமைகளை வேறு அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் தாரைவார்த்துக் கொடுப்பதை கவனத்தோடு தவிர்த்துக் கொள்ளுவதோடு, தன் கடமைகளை வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் செய்வதற்கும் எந்தவிதத்திலும் அனுமதிக்கக் கூடாது. – இந்த மூன்றாவது அம்சத்தை இக்காலத்தில் கருத்தோடு சிந்தித்துப் பார்ப்பது அவசியம். நிறுவனங்களும், சபையற்ற தனி மனிதர்களும் திருச்சபையின் கடமைகளைக் கேட்பாரின்றி செய்து வருவதும், செய்யப்பார்ப்பதும் நம்மினத்தில் இபோலா வைரஸ்போல் பரவலாக இருக்கிறது. திருச்சபையின் கடமைகளைத் திருச்சபை மட்டுமே செய்ய வேண்டியது மட்டுமல்லாமல் திருச்சபையின் தெய்வீக நாயகன் அவற்றை நிறைவேற்றும் சகல வசதிகளையும், வல்லமையையும் திருச்சபைக்கே அளித்திருக்கிறார். சுவிசேஷப்பணியும், சபை நிறுவும் பணியும், சபை ஊழியர்களை உருவாக்கி, அங்கீகரித்துப் பயன்படுத்தும் தெய்வீகக் கட்டளையின் அடிப்படையிலான கடமையும், உரிமையும் திருச்சபைக்கே இருக்கிறது. அதைச் செய்வதற்கு வேறு எதையும், எவரையும் அனுமதிப்பது திருச்சபைக்குத் தகாது. சபை மட்டுமே ஒருவனை சீடனாக்கி, ஞானஸ்நானம் அளித்து கிறிஸ்துவின் கட்டளைகள் அனைத்தையும் பின்பற்ற வைக்க முடியும். சபை மட்டுமே தனக்குத் தேவையான ஊழியர்களை வளர்த்துத் தயார் செய்துகொள்ள முடியும். வரையறுக்கப்பட்ட வேததத்துவத்தின் அடிப்படையிலான திருச்சபையின் கடமைகள் பற்றிய இந்த உண்மைகளை நீங்கள் உணர வேண்டியது அவசியம். இதை உணரும்போதே கிறிஸ்துவின் திருச்சபை எப்படி இருக்க வேண்டும் என்ற தரிசனம் உங்களுக்குள் ஏற்படும். அப்போதே நீங்கள் பவுல் எபேசியர் 3:21ல் சொன்ன, ‘சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக’ என்ற வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுவீர்கள்.

(4.) திருச்சபை ஆராதனை – வரலாற்றில் வரையறுக்கப்பட்ட தத்துவம் ‘வரையறுக்கப்பட்ட ஆராதனைத் தத்துவம்’ என்ற பெயரில் அறியப்பட்டிருக்கிறது. வரையறுக்கப்பட்ட தத்துவத்தின் பயன்பாடு ஆராதனையோடு மட்டுமே தொடர்புள்ளதாக இல்லாதிருந்தபோதும், இதுவே முக்கியமானதாகும். இங்கே திருச்சபை பற்றிய ஒரு முக்கிய உண்மையை வோல்டிரன் விளக்குகிறார். அதாவது, திருச்சபையை இரண்டுவிதமாக வேதத்தில் நாம் காண்கிறோம். முதலாவதாக, அது ஒரு நிறுவனமாக அல்லது அமைப்பாக விளக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு அப். 20:17ல் பவுல் சபையில் மூப்பர்களை அழைக்கும்படிக் கூறுகிறார். இங்கே சபையின் நிர்வாக அமைப்பை நாம் காண்கிறோம். இரண்டாவதாக, சபை ‘கூடிவருகின்றதாக’ அதைச் சேர்ந்தவர்கள் கூடிவரும் கூட்டத்தைப்பற்றி வேதம் விளக்குகிறது. உதாரணமாக, மத்தேயு 18:17ல் இயேசு ‘சபைக்குத் தெரியப்படுத்து’ என்று சொல்லுகிறார். அதேபோல் 1 கொரிந்தியர் 14:34-35ல் பவுல், பெண்கள் சபையில் அமைதியாய் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார். இந்த இரு இடங்களிலும் கூடிவரும் சபைக்கூட்டம்பற்றியே வேதம் விளக்குகிறது. இந்த உதாரணங்களின்படி சபையைக் குறித்த வரையறுக்கப்பட்ட தத்துவம் சபைபற்றிய இந்த இரண்டு அம்சங்களையும் ஆளுகிறதாக இருக்கின்றது. ஆகவே, நிறுவனமான சபையையும், அதன் கடமைகளையும், அரசமைப்பையும், அதன் போதனைகளையும் வரையறுத்து ஆளுகின்ற வரையறுக்கப்பட்ட தத்துவம், சபையின் அதிகாரபூர்வமான கூட்டங்களையும், அதன் ஆராதனைக்கூட்டங்களையும் ஆளுகின்றதாக இருக்கின்றது. அதற்குக் காரணம் அது சபையின் வரையறுக்கப்பட்ட வேத தத்துவமாக இருப்பதால்தான்.

நம்மினத்தில் வரையறுக்கப்பட்ட தத்துவத்தைப்பற்றி அறிவுபூர்வமாக உணர்ந்திருப்பவர்கள் மிகவும் அரிது. அதை ஓரளவுக்கு அறிந்திருந்தபோதும் உணர்வுபூர்வமாகப் பின்பற்றுபவர்கள் அறவேயில்லை என்றுதான் கூறவேண்டும். அதனால்தான் திருச்சபை ஊழியங்கள் எல்லாம் தலைகீழாக மனித சிந்தனைப் பிரகாரம் நம்மினத்தில் நடந்துவருகின்றன. வேதத்தைத் தந்து அதன் மூலம் மட்டும் பேசிக்கொண்டிருக்கும் கர்த்தர், தான் தீவிரமாக நேசிக்கும் தன்னுடைய சபையைத் தன் சிந்தனைப்படி மட்டுமே நடக்கவேண்டுமென்ற உறுதியோடு கட்டளைகளைத் தந்திருக்கிறார் என்பது பெரும்பாலோரினுடைய சிந்தனையில் இல்லை. திருச்சபை பற்றிய வரையறுக்கப்பட்ட போதனைகளின்படி நடந்துவராத ஊழியங்கள் இந்த உலகத்தில் அவற்றின் சுயநல நோக்கங்களை அனுபவித்தபோதும், கர்த்தரின் வேத நோக்கங்களை நிறைவேற்றவோ, அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவோ ஒருபோதும் முடியாது.

கீழ்வரும் வசனங்களை வாசித்து திருச்சபை ஆராதனை கர்த்தரின் வார்த்தையின்படி நடந்துவர ஜெபத்தோடு முயற்சி செய்யுங்கள்.

  1. தொடர்ச்சியான வேத வாசிப்பும், வேதப்பிரசங்கங்களும் ஆராதனையில் முக்கிய இடத்தைப் பெறுமாறு பார்த்துக்கொள்ளுங்கள் – 1 தீமோ 4:13; அப் 2:42; 20:7-9; 1 கொரி
  2. கூடிவரும் முழு சபையும் நன்றியுணர்வோடு கர்த்தரைப்போற்றிப் பாடி ஆராதனை செய்யும்படி கவனமாக இருங்கள் – மத்தேயு 26:30; 1 கொரி 14:15; 26; எபே 5:19; கொலோ 3:16.
  3. சபை ஆராதனையின்போது ஜெபம் முக்கிய இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ளுங்கள் – அப் 2:42; 1 கொரி 14:13-17; 1 தீமோ 2:1-8. 4.
  4. கடைசியாக மாபெரும் திருநியமங்களை (ஞானஸ்நானமும், திருவிருந்தும்) சபை முறையாகக் கைக்கொள்ளும்படியாக கவனத்தோடு நடந்துகொள்ளுங்கள் – மத் 28:19-20; 1 கொரி 11:23-26.

இதுபற்றி மேலும் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுமானால் 1689 விசுவாச அறிக்கையின் 22ம் அதிகாரத்தை ஜெபத்தோடு கவனமாக சிந்தித்து வாசியுங்கள். அந்த அதிகாரம் கர்த்தரின் ஆராதனைத் தத்துவங்களை அருமையாக விளக்குகிறது. இவை தவிர காணிக்கைஎடுத்தலும் ஆராதனையின்போது இடம் பெறலாம்.

ஓய்வு நாள்

சாம் வோல்டிரன் ஆராதனையில் பயன்படுத்தப்பட வேண்டிய வரையறுக்கப்பட்ட தத்துவத்தை விளக்கும்போது ஓய்வு நாளின் பின்னணியிலேயே அதை விளக்குகிறார். அதாவது கிறிஸ்தவர்கள் ஓய்வு நாளை விசுவாசத்தோடு கர்த்தரின் நாளாகக் கணித்து அந்த நாளில் உலகக் காரியங்களை வாழ்க்கையில் தவிர்த்து, முழு நாளையும் கர்த்தருக்குரியதாக அனுமானித்து, அந்நாளின் முக்கிய கடமையாக சபையின் பொது ஆராதனைகளில் பயபக்தியோடு கலந்துகொள்கிறார்கள் என்ற அனுமானத்துடனேயே வரையறுக்கப்பட்ட தத்துவத்தை விளக்குகிறார். ஆண்டவருடைய மக்களுக்காக வரையறுக்கப்பட்டுத் தரப்பட்டுள்ள ஆராதனை நாள் ‘ஆண்டவரின் நாளான’ ஓய்வு நாள் (வாரத்தின் முதல் நாள்). இந்த நாளை ஆண்டவரின் நாளாகக் கருதாமலும், அதற்குத் தங்களை ஒப்புக்கொடுத்தும் வாழாதவர்களுக்கு வரையறுக்கப்பட்ட தத்துவம் அவசியமாகப்படாது. இறையாண்மையுள்ள கர்த்தருக்குக் கீழ்ப்படியாத இருதயம் ஓய்வு நாளை கர்த்தருக்குரியதாகப் பார்க்காது. இன்றைக்கு நம்மினத்தில் ஓய்வு நாளைப் பற்றிய தெளிவான போதனைகளைத் தரும் சபைகள் மிகக் குறைவு. ஓய்வு நாளைப் பரிசுத்தத்தோடு பயன்படுத்தி வராதவர்கள் வரையறுக்கப்பட்ட தத்துவத்தை எங்கே, எப்படிப் பயன்படுத்த முடியும்?

ஆராதனையில் ‘துதித்தல்’

நம்மினத்தில் பெரும்பாலான சபைகளில் ஆராதனைவேளையில் ‘துதித்தல்’ என்ற பெயரில், வெறுமனே ஆண்டவரைப்பற்றி நினைவில் வந்த காரியங்களை எல்லோரும் சேர்ந்து சொல்லுகிற ஒரு முறை கர்த்தரால் ஒருபோதும் ஏற்படுத்தப்படாதது. ஆங்கிலத்தில் praise, worship என்ற இரு வார்த்தைகளுக்கும் தமிழில் ‘துதி, ஆராதனை’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். ஆனால், துதித்தலும் ஆராதனை செய்தலும் ஒன்றுதான்; அவற்றிற்கு அர்த்தம் ஒன்றுதான். இவற்றிற்கான கிரேக்க மொழி அர்த்தத்தையும், எந்த ஒத்தவாக்கிய அகராதியையும் ஆராய்ந்து பார்த்தாலே போதும், இந்த உண்மை புலப்படும். தமிழ் வேதத்தில் ஆராதனைக்கு ‘துதி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக துதியும், ஆராதனையும் ஒன்று என்பதை உணராமலும் ஆராதனையின்போது தனியாக ‘துதித்தல்’ என்ற ஒரு செயல்முறையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் தமிழ் கிறிஸ்தவர்களில் ஒரு பகுதியினர். இதில் விசேஷம் என்னவென்றால் மேலை நாட்டிலோ, இந்தியாவின் வேறு மாநிலங்களிலோ இதைப் பார்க்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் ஆராதனையும் துதியும் ஒன்றுதான். தமிழ் மொழிபெயர்ப்பிற்கு மட்டும் அடிமைப்பட்டு நல்ல வேத மொழிபெயர்ப்புக்களைப் பயன்படுத்தி ஆராயாமல் இருந்து வருவதன் ஆபத்தை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

இந்தத் “துதிக்கும் முறை” கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே ஆராதனை முறைகளில் இருந்து வந்ததே தவிர புதிய ஏற்பாட்டில் ஓரிடத்திலாவது சபை ஆராதனை வேளையில் இப்படிச் செய்யும்படிக் கர்த்தர் கூறவில்லை. இந்த முறையில் ஆதிசபை ஆராதனை நடந்ததாக வேதத்தில் எந்த இடத்திலும் வாசிக்க முடியாது. நல்ல ‘பீலிங்கைத்’ தருகிறது, நாங்களும் சுயமாக எதையாவது ஆராதனை வேளையில் சொல்லுவதற்கு உதவுகிறது என்ற நினைப்பில் பலர் இதைச் செய்து வந்தாலும், கர்த்தர் கட்டளையிட்டு இப்படிச் செய்யும்படிச் சொல்லவில்லை என்பதை நினைத்துப் பாருங்கள். அவர் கேட்காததை உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக ஆராதனையில் திணிப்பது எந்தவிதத்தில் தேவபயத்தின் அறிகுறியாக இருக்கிறது என்று எண்ணிப்பாருங்கள்.

ஆராதனையில் ‘கைதட்டுதல்’

நம்மினத்தில் ஆராதனையின்போது கைதட்டுவது ஒரு பெரிய பிரச்சனையாகவே உருவெடுத்திருக்கிறது. சந்தோஷமாக ஆராதனை செய்ய உதவுகிறது என்பதைத் தவிர வேறு எந்தக் காரணத்தையும் எவரும் முன்னெடுத்து வைக்க முடியாது. வேதம் இதைப் போதிக்கவில்லை. கர்த்தர் இதைச் செய்யும்படிக் கேட்கவில்லை. கைதட்டுவதும், உடலை அசைத்து ஆட்டி உணர்ச்சிவசப்பட்டும், மற்றவர்களை உணர்ச்சிவசப்படும்படிச் செய்வதெல்லாம் மனித சிந்தனையே தவிர கர்த்தர் இவற்றைக் கேட்கவில்லை. உலக சந்தோஷம் வேறு, ஆராதனையின்போது இருக்க வேண்டிய தேவபயத்தோடு கூடிய சந்தோஷம் வேறு. இந்த இரண்டிற்கும் வேறுபாடு தெரியாமல் கிறிஸ்தவர்கள் என்று உங்களை அழைத்துக்கொள்ளுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இன்றைக்கு நம்மினத்து ஆராதனையில் இல்லாததொன்று தேவபயமே. கைதட்டாமலும், உடலை அசைக்காமலும், உணர்ச்சியை அள்ளிக்கொட்டாமலும் கர்த்தரில் சந்தோஷத்தை அனுபவிக்கலாம். இதற்காக உணர்ச்சியில்லாமல் ஆராதனை செய்யும்படி நான் சொல்லவரவில்லை. கர்த்தருக்குரிய ஆராதனையை, ஆவிக்கேற்றவிதத்தில் அமைதியோடு அவர் கட்டளையிட்டுத் தந்திருக்கும் காரியங்களைப் பயன்படுத்தி அவருக்குக் கொடுக்கும்படியே அறிவுறுத்துகிறேன்.

சபையிலும், ஆராதனைவேளையிலும் பெண்கள்

பெண்கள் ஆராதனையில் எதைச் செய்யலாம், செய்யக்கூடாது என்பதை இங்கு சொல்லாமலிருக்க முடியாது, சாம் வோல்டிரன் அதையும் விளக்கியிருக்கிறார். கர்த்தரின் வரையறுக்கப்பட்ட சபைப் போதனைகளே அவர்கள் திருச்சபையில் எதைச்செய்யலாம், செய்யக்கூடாது என்பதைத் தீர்மானிக்கிறது. உலக ஞானத்தைப் பின்பற்றி நடந்து அந்தக் காரியங்களைத் தீர்மானிக்க முடியாது. சபையாரோடு அவர்கள் சமமாக இணைந்து கர்த்தரை ஆராதிக்கலாம். சபை மூப்பர்களையும், உதவிக்காரர்களையும் மதித்து நடந்து அவர்களுக்குக் கீழ், சொந்தக் கணவர்களை மீறாமல் பின்புறத்தில் இருந்து பெண்களுக்கேற்ற பல நல்ல பணிகளைச் செய்யலாம். ஆனால் பாடல்பாடி ஆராதனையை வழிநடத்துவது, வேத வாசிப்பைச் செய்வது, பிரசங்கிப்பது, சத்தமிட்டு எல்லோருக்கும் முன் நின்று ஜெபிப்பது போன்ற சபை மூப்பர்கள் செய்ய வேண்டிய எதையும் செய்யும்படி கர்த்தர் அவர்களுக்குக் கட்டளையிடவில்லை. அவர்கள் சபையில் நிதானத்தோடு ஆண்களுக்கும், தங்களுடைய சொந்தக் கணவர்களுக்கும் மதிப்பும், மரியாதையும் அளித்து, தங்களுடைய ஸ்தானத்தை மீறாமல் பக்தியோடு நடந்துகொள்ள வேண்டும். இவற்றை மீறி நடப்பது அவலட்சணம் என்று பவுல் மூலம் கர்த்தர் புதிய ஏற்பாட்டில் விளக்கியிருக்கிறார் (1 கொரி 14; 1 தீமோ 2). இப்படி எழுதுவதால் பெண்களுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும் என்ற மனித பயத்தோடு இதை நான் எழுதாமல் இருந்துவிட முடியாது. கர்த்தருக்கே நாமெல்லோரும் பயப்பட வேண்டும். சபை சபையாக பெண்கள் இன்றைக்கு வேதத்தை மீறி நடந்துகொள்கிறார்கள் என்பதற்காகவும், அதை சபைத்தலைவர்கள் சகித்துக்கொள்ளுகிறார்கள் என்பதற்காகவும் வேதத்தை மீறுகிற செயல் ஒருபோதும் சரியானதாக இருக்க முடியாது. பெண்கள் இன்றைக்கு சமூகத்தில் செய்யாத காரியங்கள் இல்லை, அதனால் சபையிலும் எல்லாவற்றையும் செய்யலாம் என்ற அசட்டுத்தனமான, பின்நவீனத்துவ உலகப் பண்பாட்டைக் கர்த்தரின் சபையில் திணிப்பதும் வேதத்திற்கு விரோதமான கீழ்ப்படியாமை மட்டுமே. பாவத்தின் காரணமாக பண்பாடு மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் கர்த்தரின் வார்த்தையும், சித்தமும் ஒருபோதும் மாறாது. திருச்சபை பற்றியும், ஆராதனை பற்றியும் அவர் தந்திருக்கும் தெளிவான விளக்கங்கள் இந்த உலகில் சபையிருக்கும் வரையில் மாறாமல் தொடர்ந்து பின்பற்ற வேண்டியவை.

ஆராதனைப் பாடல்கள்

பாடல்கள் பாடும்போது எதைப்பாடுவது என்ற கேள்வி எழும். நம்மினத்தில் காணப்படும் பாடல் புத்தகங்களில் உள்ள பாடல்களில் பிரச்சனைகள் உள்ளன. முதலில் பெரும்பாலானவை யார் எழுதியது என்பதே தெரியாது. எழுதியவர்கள் எத்தகைய இறையியல் நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள் என்பதையும் அறிந்துகொள்ள வழியில்லை. பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் நம்பிக்கைகளைக் கொண்டிருப்பவர்களின் பாடல்களை சீர்திருத்த சபைகளில் பாடுவது தகுந்ததல்ல. அந்தப் பாடல்களில் இறையியல் தவறுகளும், குளறுபடிகளும் இருக்கும். உதாரணத்திற்கு கத்தோலிக்க விசுவாசத்தையும், பாரம்பரியத்தையும் இன்னும் துறக்காமலிருக்கும் தந்தை பேர்க்மென்சின் பாடல்கள் போன்றவை. சபை ஆராதனையில் பயன்படுத்தும் பாடல்களை நாம் கவனத்தோடு தெரிவுசெய்ய வேண்டும். சபைத்தலைவர்களுக்கு இதில் பெரிய பொறுப்பு இருக்கிறது. இறையியல் போதனைகளைத் தெளிவாகக் கொண்டிருப்பனவாகவும், வெறும் இசைக்காக எழுதப்பட்டதாக இல்லாமலும், குத்துப் பாட்டை நினைவுறுத்தும் வகையில் இல்லாமலும், தேவ பயத்தோடு பாடக்கூடியனவாகவும் அவை அமைய வேண்டும். முக்கியமாக யார் பாடல்களை எழுதியது என்பதில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும்.

சிலர் வேதத்தில் காணப்படும் சங்கீதப் பாடல்களை மட்டுமே பாட வேண்டும் என்பார்கள். இதுபற்றி என் நிலையைத் தெரிவிக்க வேண்டும். இதுவே வோல்டிரனின் நிலையாகவும் இருக்கிறது. உண்மையில் இதுபற்றிய புதிய ஏற்பாட்டுப் போதனைகளை ஆராய்ந்து பார்க்கும்போது சங்கீதங்களை மட்டுந்தான் பாடவேண்டும் என்று அவை சொல்லுவதாக எனக்குப்படவில்லை. இருந்தபோதும் எந்த சபையிலும் பாடப்படும் பாடல்களில் சங்கீதங்கள் அதிகமாக இடம்பெற வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலைநாட்டு சீர்திருத்த சபைகளில் கீர்த்தனைப் பாடல்களோடு சங்கீதப் பாடல்கள் கொண்ட புத்தகங்களையும் பயன்படுத்தி வருகிறார்கள். தமிழினத்தைப் பொறுத்தவரையில் இறையியல்பூர்வமானதாகவும், விசுவாசமிக்க வேதபோதனைகளிலும் கிறிஸ்தவ வாழ்க்கையிலும் சிறந்தவர்களால் எழுதப்பட்டதாகவும் இருக்கும் பாடல்கள் மிகக்குறைவாக இருப்பதனால் சங்கீதப்பாடல்களை அதிகம் பயன்படுத்திக்கொள்ளுவது ஆராதனையை வேதபூர்வமாக கர்த்தருக்கு அளிப்பதில் நாம் கவனத்தோடு நடந்துகொள்ள உதவும். எதைப் பாடவேண்டும், எப்படிப் பாடவேண்டும் என்பதை நம் கையில் முழுதாக விட்டுவிடாமல் அவை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதைக் கர்த்தரே தீர்மானித்து அவற்றைப் பின்பற்றும்படி நம்மை எதிர்பார்க்கிறார்.

ஆராதனையின் சந்தர்ப்பசூழ்நிலை

அடுத்ததாக வரையறுக்கப்பட்ட ஆராதனைத் தத்துவத்தில் ஆராதனையின் சந்தர்ப்பசூழ்நிலை பற்றிய அவசியமானதொரு உண்மையைக் கவனிப்பது அவசியம். வரையறுக்கப்பட்ட ஆராதனைத் தத்துவம் கர்த்தருடைய ஆராதனையின் பகுதிகளைத்தான் கட்டுப்படுத்தி அவை எவையாக இருக்கவேண்டும் என்று விபரிக்கிறதே தவிர ஆராதனை சம்பந்தமான சூழ்நிலைகளைப் பொறுத்தவரையில் இயற்கையையும், கிறிஸ்தவ ஞானத்தையும் பயன்படுத்தி முடிவுகள் எடுக்கும்படிச் சொல்லுகிறது. அதை 1689 விசுவாச அறிக்கையின் அதிகாரம் 1:6ல் காண்கிறோம். இதை அதிகாரம் 22ம் விளக்குகிறது. உதாரணமாக சபை ஆராதனைக்காக எந்த நேரத்தில் கூடி வரவேண்டும், எத்தனை ஆராதனைகள் நிகழ வேண்டும், எத்தகைய இருக்கைகளில் அமர வேண்டும் அல்லது நிலத்தில்தான் அமர வேண்டுமா, ஆராதனைக்குரிய இசைக்கருவி எதுவாக இருக்க வேண்டும் (நிச்சயம் கர்த்தருடைய ஆராதனைக்குப் பொருத்தமானதாக இருக்கவேண்டும்) என்றெல்லாம் வேதம் நமக்கு வரையறுத்து விளக்கமளிக்கவில்லை. சிலர் இசைக்கருவிகளே தேவையில்லை என்பார்கள். நன்றாக சபையார் பாடக்கூடுமானால் இசைக் கருவிகள் அவசியமில்லைதான். அதை நான் குஜராத் சபையில் கண்டிருக்கிறேன். எல்லாராலும் இசையின் துணையில்லாமல் பாடமுடியாத காலப்பகுதியில் நாம் இருந்துவருவதால் பாடுவதற்கு துணை செய்யக்கூடிய பொருத்தமான கருவியைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. இசையரங்கமாக சபை ஆராதனையை மாற்றிவிடாமல் இருந்தால் சரி. ஆராதனையின் சந்தர்ப்பங்களைப் பொருத்தவரையில் சபைத்தலைவர்கள் நிதானத்தோடு நடந்து வேதத்தில் அதுசம்பந்தமான வேதத்தின் பொதுவான போதனைகளைப் பின்பற்றி, ஞானத்தோடு நடந்து ஆராதனையைக் கர்த்தருக்குரியதாக நடத்திவரவேண்டும்.

இதையெல்லாம் விளக்கியபிறகு சாம் வோல்டிரன் வரையறுக்கப்பட்ட ஆராதனையை நிராகரிக்கும் மூவருடைய 10க்கருத்துக்களை சுருக்கமாக விளக்கி வேத ஆதாரங்களோடு அத்தகைய கருத்துக்களை நிர்மூலம் செய்கிறார். ஜோன் பிரேம், மார்க் டிரிஸ்கல், ஸ்டீபன் கோர் ஆகியவர்களே அந்த மூவரும். அவற்றை இங்கு விளக்குவது இந்த ஆக்கத்தை மிகவும் நீண்டதாக்கிவிடும். இன்றைக்கு வரையறுக்கப்பட்ட தத்துவத்தையும் அது சம்பந்தமான ஆராதனைத் தத்துவங்களையும் சரிவர சபை வரலாற்றுப்பூர்வமாகவும், இறையியல்பூர்வமாகவும், வேதபூர்வமாகவும் அறிந்திராதவர்கள் அவற்றைப் பாரம்பரியமாகக் கருதி உதறித்தள்ளுவது பொதுவாகவே மேலைநாட்டில் நிகழ்ந்து வருகிறது. உண்மையில் சாம் வோல்டிரன் விளக்குவதுபோல் அவற்றைப்பின்பற்றி நடக்கும்போதுதான் கர்த்தரின் சபையும், ஆராதனையும் வேதபூர்வமாக இந்த உலகில் பரிசுத்தத்தோடு நடந்து கர்த்தருடைய மகிமைக்காக இயங்கி வரமுடியும். இதில் எந்த சந்தேகமுமில்லை. சிலர் உரத்துச் சத்தமிடுகிறார்கள் என்பதற்காக வேதம் பொய்த்துப் போவதில்லை; கர்த்தரின் வழிமுறைகளில் மாற்றமேற்படுத்த வேண்டிய அவசியமுமில்லை. உலகத்தின் போக்கில் ஆராதனை செய்யப்போய்த்தான் இஸ்ரவேல் அடிவாங்கியது; இறுதியில் இல்லாமலும் போனது. பழைய ஏற்பாட்டு வரலாற்றை ஒருதடவை திரும்பிப் பார்த்தாலே போதும், இந்த உண்மை தெளிவாகவே புலப்படும்.  (தொடரும்)

 

தொமஸ் வொட்சனின் ‘மனந்திரும்புதல்’


தொமஸ் வொட்சன் (1620-1686) இங்கிலாந்தில் பிறந்தவர். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் இருந்த இம்மானுவேல் கல்லூரியில் ஆழமாகக் கல்வி பயின்று பட்டம் பெற்றவர். படிப்பை முடித்தபின் அவர் பியூரிட்டன் குடும்பமொன்றில் கொஞ்சக்காலம் வாழ்ந்து வந்தார். 1647ல் பியூரிட்டன் போதனைகளில் நம்பிக்கை வைத்திருந்த போதகர் ஒருவரின் மகளான அபிகேல் பீடில் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அடுத்து வந்த பதின்மூன்று வருடங்களில் அவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன; அவற்றில் நான்கை அவர்கள் வளரும்போதே பறிகொடுக்க நேர்ந்தது.

இங்கிலாந்தில் உள்நாட்டுப் போரின்போது வொட்சன் பிரெஸ்பிடீரியன் கோட்பாடுகளில் ஆர்வம்காட்ட ஆரம்பித்தார். நாட்டின் அரசனை அவர் சார்ந்து நின்றார். முதலாம் சார்ள்ஸ் கொலை செய்யப்படலாம் என்ற நிலை எழுந்தபோது அதை நிறுத்தும்படி ஒலிவர் குரோம்வெலைச் சந்தித்துப் பேசச் சென்ற பிரெஸ்பிடீரியன் போதகர்களில் ஒருவராக வொட்சன் இருந்தார். அரசனை மறுபடியும் நிலைநிறுத்த முயன்றவர்களில் ஒருவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கிறிஸ்டோபர் லவ், வில்லியம் ஜெங்கின்ஸ் போன்றோரோடு வொட்சன் 1651ல் சிறையில் தள்ளப்பட்டார். அவர் 1652ல் விடுவிக்கப்பட்டு வோல்புரூக்கில் இருந்த ஆங்கிலேய திருச்சபையின் புனித ஸ்டீவன்ஸ் சபையில் போதகராக நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் தேர்ந்த பிரசங்கத்தின் காரணமாக வொட்சனின் பெயர் நாடெங்கும் பிரசித்தி பெற்றது.

1662ல் அரசு ஒத்துழைப்புக் கட்டளைச் சட்டத்தைக் கொண்டுவந்தபோது, ஒத்துழையாமைப் பிரிவைச் சார்ந்து நின்ற காரணத்தால் வொட்சன் போதகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சபை நீக்கம் செய்யப்பட்ட ஒத்துழையாமைவாதிகள் நாட்டில் அதிக துன்பங்களை அனுபவித்தபோதும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் வொட்சன் வீடுகளிலும், விவசாயக் கூடங்களிலும், காடுகளிலும் தொடர்ந்து பிரசங்கம் செய்தார். 1666ல் இலண்டனின் பெருந்தீ விபத்துக்குப் பிறகு, ஒரு பெரிய அறையை மக்கள் கூடிவந்து பிரசங்கம் கேட்பதற்காக வொட்சன் ஏற்பாடு செய்தார். அவர் கர்த்தரின் பணியில் சபைக்கு வெளியில் இருந்து ஆர்வத்தோடு ஈடுபட்டு வந்தார். 1672ல் மறுபடியும் பிரசங்கிப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற்று பிஷப்கேட், குரொஸ்பி ஹாலில் ஸ்டீபன் சார்நொக் அவரோடு இணைந்து பணிபுரியும்வரையும் மூன்று வருடங்களுக்குப் பிரசங்க ஊழியத்தில் ஈடுபட்டிருந்தார். ஸ்டீபன் சார்நொக் 1680ல் மரிக்கும்வரையும் இருவரும் இணைந்து ஊழியத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்பு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஓய்வு பெற்று எசெக்ஸில் வாழ்ந்து வந்தார். 1688ல் தனிஜெபம் செய்துகொண்டிருந்த வேளையில் வொட்சன் இறைபாதம் அடைந்தார். பார்ன்ஸ்டன் சபையைச் சார்ந்த கல்லறையில் அங்கு போதகராகப் பணிபுரிந்திருந்த அவருடைய மாமனார் புதைக்கப்பட்டிருந்த பகுதியிலேயே புதைக்கப்பட்டார்.

தொமஸ் வொட்சன் பிரசங்கத்தில் வல்லமை பெற்ற நற்போதகராக இருந்தது மட்டுமல்லாமல் அநேக நூல்களை எழுதி எழுத்துப்பணியிலும் ஈடுபட்டு வந்தார். நிறைவான இறையியல் ஞானமுள்ளவராக, ஆழமான ஆவிக்குரிய அன்போடுகூடிய ஆத்துமாவைக் கொண்டவராக, தெளிவாகவும், தகுந்த உதாரணங்களைப் பயன்படுத்தியும், பயன்பாடுகளை அள்ளித்தந்தும் பிரசங்கிக்கக்கூடிய வல்லமை பெற்றவராக வொட்சன் இருந்தார். அவர் அருமையான பியூரிட்டன் பெரியவர்களில் ஒருவரும் பிரசித்தி பெற்றவருமாக இருந்தார். அவருடைய நூல்களில் சிறந்தவையாக Body of Divinity, Ten Commandments, The Beatitudes, The Lord’s Prayer, The Doctrine of Repentance போன்றவை கருதப்படுகின்றன. கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய பியூரிட்டன்களின் போதனையை அவருடைய Harmless Doves: A Puritan view of the Christian Life என்ற நூல் விளக்குகிறது. வொட்சன் சிறந்த எழுத்தாளர். ஏனைய பியூரிட்டன்களைப்போலவே அவருடைய எழுத்துக்களில் வேதம் எங்கும் வியாபித்துப் பரவிக்காணப்பட்டது. வேதத்தை அள்ளி, அள்ளித்தந்து தெளிவான விளக்கங்களோடு பயன்பாடுகளைப் பரவி விரிந்தோடும் வெள்ளப்பெருக்குபோல் தன் எழுத்துக்களில் ஓடவிட்டிருந்தார் வொட்சன்.

மனந்திரும்புதல்


இந்த ஆக்கத்தை நான் எழுதுவதற்குக் காரணம் தமிழில் வெளிவந்திருக்கும் வொட்சனின் நூலொன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காகத்தான். கடந்த வருடம் (2014) வெளியிடப்பட்ட இந்த நூல்பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டு நண்பரொருவர் மூலம் அதைப் பெற்று வாசித்தேன். அது வொட்சனின் ‘மனந்திரும்புதல்’ என்ற நூலின் தமிழாக்கம். ஆங்கிலத்தில் 119 பக்கங்களுடைய இந்நூல் தமிழில் 70 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. ஆங்கில நூலின் 11 அதிகாரங்கள் இதில் 9ஆக சுருக்கப்பட்டிருக்கின்றன. அதற்குக் காரணம் ஆங்கில நூலில்  முதல் அதிகாரம் இதில் முன்னுரையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கில நூலின் 3வது, 4வது அதிகாரங்கள் இதில் ஒரே அதிகாரமாக வந்திருக்கின்றன. ஆங்கில மூல நூலின் உள்ளடக்கம் முழுமையாகவே மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது.

நூலைப்பற்றி விளக்குமுன் அதனை வெளியிட்டிருப்பவர்களையும், நூலின் நடையையும் பற்றிய கருத்துத் தெரிவிக்காமல் இருக்க முடியாது. இதை வெளியிட்டிருப்பவர்கள் லேமென் இவெஞ்சலிக்கள் ஐக்கியம் எனும் பதிப்பகத்தார். லேமென் இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவ அமைப்பின் பதிப்பகத்தார் இவர்கள். ஆச்சரியமென்னவென்றால் இரட்சிப்பைப் பற்றிய போதனைகளில் ஆர்மீனியனிசப் போதனைகளைக் கொண்டிருந்து, கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய போதனைகளில் கெஸ்சிக் போதனைகளை ஒத்த கருத்துக்களைக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு அதற்கெல்லாம் எதிரான வேதபோதனைகளைக் கொண்டிருக்கும் சீர்திருத்தவாத பியூரிட்டன் எழுத்தாளரின் நூலொன்றை வெளியிட்டிருப்பதுதான். இவர்கள் வெளியிட்டிருக்கும் அத்தகைய நூல் இது ஒன்றுதான். நூலை ஏன் வெளியிட்டார்கள் என்பது பற்றிய எந்த விபரமும் நூலில் தரப்படவில்லை; தொமஸ் வொட்சனைப் பற்றிய விபரங்களும் இல்லை. நூலின் பிற்பக்கங்களில் அவர்கள் அறிமுகம் செய்திருக்கும் வேறு நூல்களும் சீர்திருத்தவாத பியூரிட்டன் இறையியல் போதனைகளோடு அடிப்படையிலேயே முரண்படுபவை. இருந்தபோதும் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இவர்கள் மூலம் தொமஸ் வொட்சனின் நூல் கிடைத்திருப்பது நல்லதுதான். பியூரிட்டன் கருத்துக்களோடு முரண்படுபவர்கள் இதை வெளியிட்டிருப்பதால் ஆங்காங்கு மாற்றங்களை தங்கள் இஷ்டத்திற்கு நூலில் செய்திருப்பார்களோ என்ற அச்சத்தால் நூலைப் பல இடங்களில் சோதித்துப் பார்க்க வேண்டியிருந்தது. நல்லவேளையாக இதில் வொட்சனின் கருத்துக்கள் சிதைக்கப்படாமல் உள்ளவாறே தரப்பட்டிருக்கின்றன.


நூலின் நடை தற்காலத் தமிழில் இல்லை. வடமொழித்தாக்கம் அதிகம் தெரிகிறது. கிறிஸ்தவ மொழி நடை பயன்படுத்தப்பட்டிருப்பது ஒரு முக்கிய குறைபாடு. எழுத்துக்கள் எப்போதுமே தடையின்றி வாசிப்பதற்கு சுவையாக அருவிபோல் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்; வாசகனை வாசிக்கும்படித் தூண்டவேண்டும். அந்தவிதத்தில் தமிழ்நடை அமையவில்லை. சில முக்கிய வார்த்தைகள் இன்று பயன்பாட்டில் இல்லை. பத்திகளில் வசனங்கள் மேலும் கவனத்தோடு அமைக்கப்பட்டிருந்திருக்கலாம். இது பொதுவாகவே தமிழில் காணப்படும் கிறிஸ்தவ நூல்களில் இருக்கும் முக்கிய குறைபாடு. இது நல்ல எண்ணத்தில் நான் கவனித்த குறை; அடுத்த வெளியீட்டில் இவை தீர்க்கப்பட்டால் பலருக்கும் பெரும் நன்மையாக அமையும். பிரதி எடுத்து எனக்கு அனுப்பப்பட்டிருந்த நூலை நான் கணினியில் வாசித்தேன். அதிலும் அச்சிடப்பட்டிருக்கும் விதத்தை ஓரளவுக்கு அறிந்துகொள்ள முடிந்தது. அச்சுக்கோர்ப்பதில் இன்னும் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். மலிவுப் பதிப்புப்போன்ற தாளில் நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இன்னும் நல்ல முறையில் கவனத்தோடு அதை வெளியிட்டிருந்திருக்கலாம்.

இனி நூலின் கருப்பொருளைப் பார்ப்போமே. தொமஸ் வொட்சன் சீர்திருத்தவாத பியூரிட்டன்களுக்கே உரிய பாங்கில் மனந்திரும்பலாகிய கிருபை பற்றி நூலில் விளக்கியிருக்கிறார். மனந்திரும்புதல் பற்றி இந்த அளவுக்கு ஆழமாக ஒரு நூலை எழுதுமளவுக்கு பியூரிட்டன்கள் வேதத்தைக் கரைத்துக் குடித்திருந்தனர். பியூரிட்டன் பெரியவர்களின் சிறப்பான அம்சமே அவர்களுடைய வேதப்பாண்டித்தியந்தான். அதற்கு வொட்சனின் நூல் உதாரணமாக இருக்கிறது. தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்றைக்கு மனந்திரும்புதல் பற்றிய தெளிவான விளக்கம் இல்லாமலிருக்கிறது. பெரும்பாலான பிரசங்கிகளுக்கே அதுபற்றிய வேதஞானம் இல்லாமலிருக்கிறது. மனந்திரும்பு, விசுவாசி என்று மீண்டும் மீண்டும் சொல்லுவதைத்தவிர வேறு எதையும் அவர்களால் சொல்லத்தெரியவில்லை. சடுதியாக, சுயமாக இருதயத்தில் இயேசுவைப் பின்பற்றுவதற்காக எடுக்கும் தீர்மானமாக மட்டும் மனந்திரும்புதலை அநேகர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்தக் குறைபாட்டை ஆவிக்குரியவிதத்தில் உணர்ந்து மனந்திரும்புதலைப்பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலுள்ளவர்களுக்கு இந்த நூல் பயன்தரும்.

தொமஸ் வொட்சன் நூலுக்கான முன்னுரையில் மனந்திரும்புதலின் அவசியத்தைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். மனந்திரும்புதல் என்பது கிறிஸ்தவனில் ஒருதடவை மட்டும் நடந்து முடிந்துவிட்ட காரியமல்ல. அப்படித்தான் அநேகர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அது மிகத் தவறு. வொட்சன் விளக்குவது இரட்சிப்பு அடையும்போது நம்மில் அடிப்படையில் நிகழ்ந்து, தொடர்ச்சியாக நடைமுறையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மனந்திரும்புதலைப் பற்றியது. மனந்திரும்புதலைத் தொடர்ச்சியாகக் கொண்டிருக்காத இருதயம் இயேசுவை அறியாத இருதயம் என்பது உங்களுக்குப் புரிகிறதா?

மனந்திரும்புதலைப் பற்றிய முக்கியமான இறையியல் உண்மைகளை வொட்சன் ஆரம்பத்திலேயே முன்னுரையில் தந்திருக்கிறார்:

  1. மனந்திரும்புதல் பக்திக்கு ஊக்கமளிக்கிறது.ஆவியின் அசைவாட்டத்தை மனந்திரும்புதலிலேயே நாம் காண்கிறோம். பாவத்தின் துக்கத்தை கிறிஸ்தவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று கூறும் வொட்சன் அதற்காக நாம் சந்தோஷமற்றவர்களாக இருக்க வேண்டும் என்றுகூற வரவில்லை. அவரைப் பொறுத்தவரையில் மனந்திரும்புதலின் துக்கமே நமக்கு துயரத்தை அகற்றுவதாயிருக்கிறது; ஆவியின் சந்தோஷத்தைக் கொடுப்பதாக இருக்கிறது.
  2. மனந்திரும்புதல் அடிப்படைக் கிருபை; அது சுவிசேஷத்தின் கிருபை; மனிதனின் கிரியை அல்ல.அத்தோடு மனந்திரும்புதல் எப்போதும் விசுவாசத்தோடு இணைந்து காணப்படுகிறது. எது முதலில் நிகழ்கிறது என்பது முக்கியமல்ல; ஒன்றில்லாமல் இன்னொன்று இருக்க வழியில்லை. மனந்திரும்புதல் இல்லாமல் எவரும் இரட்சிப்படைவதில்லை. உண்மையான மனந்திரும்புதல் நிகழ்ந்திருக்கும் இருதயத்தில் அதற்குத் தூபம் போட்டிருப்பதே விசுவாசத்தின் விதைதான். கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற ஒருவனில் வெளிப்படையாக முதலில் தெரிவது மனந்திரும்புதலே என்கிறார் வொட்சன்.
  3. மனந்திரும்புதல் எவ்வாறு நிகழ்கிறது என்பதை விளக்கும் வொட்சன் அது வார்த்தையினாலும், பரிசுத்த ஆவியினாலும் நிகழ்கின்றது என்று விளக்குகிறார்.பிரசங்கிகள் கர்த்தரின் வெறும் ஊதுகுழல்களே. மனந்திரும்புதல் எல்லோரிலும் ஒரேவிதத்தில் நிகழ்வதில்லை எனும் வொட்சன், ஆவியானவர் தன் சித்தப்படி அதை ஆத்துமாக்களில் வெவ்வேறு விதங்களில் நிகழ்த்துகிறார் என்கிறார். மனந்திரும்புதலின் அனுபவத்திலும், அதை அடையும் விதத்திலுந்தான் ஒருவருக்கொருவர் மாற்றமிருக்குமே தவிர அதன் தன்மையில் அல்ல.

முன்னுரையாக மனந்திரும்புதல் பற்றிய அடிப்படை உண்மைகளை விளக்கியபின் முதலாவது அதிகாரத்தில் வொட்சன், போலி மனந்திரும்புதலைப்பற்றி விளக்குகிறார். இது அவசியந்தான். உண்மையில் நிகழ்காலத்தில் நிகழ்ந்துவரும் சுவிசேஷ ஊழியங்களில் போலித்தனமான மனந்திரும்புதல்களையே அதிகமாகக் காண்கிறோம். போலி மனந்திரும்புதல்களை அடையாளங்காண்பதற்கு உதவுமுகமாக அதுபற்றிய அறிகுறிகளை இந்த அதிகாரத்தில் வொட்சன் விளக்கியிருக்கிறார். (1) பாவத்தைப் பற்றிய தற்காலிகமான வெறும் பயமும், நடுக்கமும் மனந்திரும்புதலுக்கு அறிகுறியல்ல. (2) கசப்பான அனுபவங்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக பாவம் செய்யப்போவதில்லை என்று எடுக்கும் தீர்மானங்கள் மட்டும் மனந்திரும்புதலுக்கு அடையாளமில்லை. (3) சில பாவங்களை மட்டும் செய்யப் போவதில்லை என்று உறுதியோடு அவற்றை விட்டுவிடுவது மனந்திரும்புதலுக்கு அறிகுறியல்ல. ‘மனந்திரும்புதல் இல்லாமலும் பாவங்கள் செய்வதை விட்டுவிட முடியும்’ என்று எச்சரிக்கிறார் வொட்சன் (Sin may be parted with, yet without repentance). இவற்றின் மூலம் போலி மனந்திரும்புதலுக்கும் மெய்யான மனந்திரும்புதலுக்கும் இடையில் உள்ள பெரும் வேறுபாட்டை விளக்க எத்தனிக்கிறார் வொட்சன். அடிப்படை இருதயமாற்றமெதுவுமின்றி வெறும் உலகப்போக்கான ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மட்டும் கொண்டிருந்து பாவங்களைச் செய்யாமலிருப்பது மனந்திரும்புதலுக்கு அடையாளமாகாது என்கிறார் அவர். ‘நம்மில் நிகழ்ந்திருக்கும் கிருபையின் அடிப்படையில் பாவத்துக்கு நாம் விலகி நிற்கும்போதே மெய்யாக நாம் பாவம் செய்யாமல் இருக்கிறோம்’ என்கிறார் வொட்சன். ‘விசுவாசிக்கிறேன் என்ற வார்த்தை உன் நாக்கின் நுனியில் இருந்து குதித்தால் போதும் சாமி, ஞானஸ்நானம் எடுத்துக்கொள்’, என்று ஆத்துமாக்களைத் தேடி அலைந்துகொண்டிருக்கும் சுவிசேஷப் பிரசங்கிகள் எண்ணிக்கையற்றிருக்கும் இந்தக் காலத்தில் போலி மனந்திரும்புதலைப்பற்றிய வொட்சனின் எச்சரிக்கைகள் மிகவும் அவசியம்.

மெய்யான மனந்திரும்புதலின் மெய்த்தன்மையை அதற்கு அடுத்த அதிகாரத்தில் விளக்குகிறார் வொட்சன். ஆறு அம்சங்களை அத்தகைய மனந்திரும்புதல் கொண்டிருக்கும் என்கிறார் அவர். அவற்றில் ஒன்று குறைந்தாலும் ஒருவனில் மனந்திரும்புதல் இல்லை என்றுதான் அர்த்தம் என்கிறார் வொட்சன். இது மனந்திரும்புதல் மிகவும் கஷ்டமானது என்ற எண்ணத்தை ஒருவரில் உண்டாக்கலாம். ஆனால், அப்படி எண்ண வேண்டிய அவசியமில்லை. மனந்திரும்புதல் உங்களுடைய சொந்தக் கிரியையாக இருந்தால் நீங்கள் அப்படி எண்ணுவதில் நியாயமுண்டு. ஆனால், அது கிருபையின் செயலாக இருக்கிறது. அது ஆவியால் நம்மில் நிகழ்கிற காரியம்; நாம் நம்மில் உண்டாக்குகிற கிரியை அல்ல அது. அதனால், வொட்சன் விளக்கும் ஆறு அடையாளங்களும் நம்மில் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்ப்பதில் தவறில்லை. அவை இருக்குமானால் கர்த்தரிடம் இருந்து நாம் மனந்திரும்புதலைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்று ஆனந்தமடையலாம். ஒன்றை விளக்குவது இங்கு அவசியமாகிறது. வொட்சனின் ஆறு அம்ச விளக்கங்களை வாசித்துவிட்டு பவுலைப் போலவோ அல்லது கெட்ட குமாரனைப்போலவோ, அல்லது சமாரியப் பெண்ணைப்போலவோ நமக்கு மனந்திரும்புதல் ஆழமாக நிகழவில்லையே என்று ஆதங்கப்பட்டு, மனந்திரும்புதல் உங்களில் இல்லை என்ற தவறான முடிவுக்கு வந்துவிடாதீர்கள். அப்படி நினைத்துவிடக்கூடிய ஆபத்திருக்கிறது. வொட்சன் கூறும் மனந்திரும்புதலின் அம்சங்கள்தான் நம்மில் இருக்க வேண்டுமே தவிர அவை இன்னொருவரில் நிகழ்ந்திருப்பதைப்போல ஆழமாகவோ, அசாதாரண ரீதியிலோ அதேவிதமாக நம்மில் நிகழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிலர் இரட்டுடுத்திக் கதறி அழுது பாவத்துக்காக அதிக காலம் வருத்தப்பட்டிருப்பார்கள். அது அவர்களைப் பொறுத்தவரையில் கர்த்தர் தந்திருக்கும் அனுபவம். அதே பாவ வருத்தம் நம்மில் அத்தனை ஆழமாக நெடுங்காலத்துக்கு இருந்திராவிட்டாலும், நெஞ்சை நெகிழ வைக்குமளவுக்காவது நிகழ்ந்திருந்தாலே மனந்திரும்புதல் நிகழ்ந்திருக்கிறது என்றுதான் அர்த்தம்; அத்தகைய மனந்திரும்புதல் தொடர்ந்தும் நம்மில் காணப்பட வேண்டும். ஜோன் நியூட்டன் தான் செய்த பாவங்களுக்காக கண்ணீர்விட்டுக் கதறியிருக்கிறார்; கிறிஸ்துவிடம் வந்த பின்னும் அது அவரில் தொடர்ந்திருக்கிறது. எந்தளவுக்கு பாவத்தில் ஒருவர் விழுந்திருக்கிறாரோ அந்தளவுக்கு அவர்களுடைய மனந்திரும்புதலின் வெளிப்பாடும் இருக்கும். அதைத்தான் வொட்சன் விளக்கியிருக்கிறார்.

வொட்சன் விளக்கும், பாவத்தைக் குறித்த ஆறு அம்சங்களும் பின்வருமாறு:

  1. பாவத்தைப் பாவமாகப் பார்த்தல்.
  2. பாவத்தைக் குறித்த துக்கம்.
  3. பாவத்தை அறிக்கையிடுதல்.
  4. பாவத்தைக் குறித்த வெட்கம்.
  5. பாவ வெறுப்பு.
  6. பாவத்தைவிட்டு விலகியோடுதல்.

பாவத்தைப் பற்றி இத்தனை ஆழமாக விளக்கிப் பிரசங்கித்தும் எழுதியும் இருப்பவர்கள் சீர்திருத்த, பியூரிட்டன் பிரசங்கிகளே.

இக்காலத் தமிழ் சுவிசேஷப் பிரசங்கங்களில் மனந்திரும்புதலில் இருக்கவேண்டிய இத்தனை அம்சங்களையும் பற்றிய அறிவிருந்து விளக்கிப் பிரசங்கிப்பவர்கள் அரிது. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? முதலில், 19ம் நூற்றாண்டு சார்ள்ஸ் பினியின் கிறிஸ்துவுக்காக தீர்மானம் எடுக்கும் போலி சுவிசேஷ முறைகள் தமிழ் கிறிஸ்தவத்தைக் கோரமாக ஆக்கிரமித்திருப்பது. இரண்டாவது, மனந்திரும்புதலையும், பாவத்தையும் பற்றிய வேதஇறையியல் உண்மைகளை அநேகர் அறிந்திராமலிருப்பது. வெறுமனே இயேசுவுக்காக கையுயர்த்தும் சுவிசேஷத்திற்கு இத்தகைய இறையியல் உண்மைகள் அவசியமில்லைதான். ஆனால், இவற்றைப் புறந்தள்ளி கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஒருபோதும் பிரசங்கிக்க முடியாது.

மேலே குறிப்பிடப்பட்ட ஆறு அம்சங்களையும் வொட்சன் தனித்தனியாக விளக்கிக்காட்டியிருக்கிறார். 1வது பாவத்தைப் பாவமாகப் பார்க்கும் அவசியத்தை வலியுறுத்துகிறது. இதைவிளக்குவதில் பியூரிட்டன்களைப்போலக் கைதேர்ந்தவர்களில்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே ரால்ப் வென்னிங்கின் (Ralph Venning) The Plague of Plagues என்ற அருமையான நூல் நினைவுக்கு வருகிறது. 1669ல் முதலில் வெளியிடப்பட்ட இந்நூல் பாவத்தின் தன்மையைத் துல்லியமாக ஆராய்ந்து விளக்குகின்ற நூல். இந்தளவுக்கு பாவத்தை விளக்கும் நூல்கள் தற்காலத்தில் ஆங்கிலத்தில் அரிது. ரால்ப் வென்னிங்கும் ஒரு பியூரிட்டனே. இவரும் வொட்சனைப் போல ஒத்துழையாமைவாதியாக இருந்தவர்.

2வது அம்சமான பாவத்தைக் குறித்த துக்கத்திற்கு வொட்சன் நீண்ட விளக்கத்தை ஆழமாக சிந்தித்து அளித்திருக்கிறார். வெறும் உலகப்பிரகாரமான யூதாஸின் துக்கத்தில் இருந்து ‘தேவனுக்கேற்ற அல்லது பக்திக்குரிய துக்கத்தை’ வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார். அதேபோல் பாவத்தைவிட்டு விலகியோடுவதன் அவசியத்தைப் பற்றியும் விளக்கியிருக்கிறார். இந்தளவுக்கு பாவத்தின் தன்மைகளை விளக்கி, மெய்யான மனந்திரும்புதலுக்கு பாவத்தைப் பற்றிய அறிவும், உணர்தலும் அவசியமென்பதை சுட்டிக்காட்டி அதிலிருந்து விலகியோடுவதற்கு எத்தகைய இருதயம் தேவை என்பதைப் போதிக்கும் நூல்கள் தமிழில் அரிது என்றேகூற வேண்டும். இத்தகைய அருமையான பியூரிட்டன் வேத விளக்கத்தை தமிழ் கிறிஸ்தவர்கள் வாசிக்கின்ற வசதி ஏற்பட்டிருப்பது கர்த்தரின் கிருபையே.

கிறிஸ்தவர்களில் பொதுவாகவே இன்று தொடர்ச்சியான மனந்திரும்புதலைக் காணமுடியாதிருக்கிறது. தவறு செய்துவிட்டேன் என்ற உணர்வோடு கர்த்தரிடம் மட்டுமல்லாமல் மனிதர்களிடமும் மன்னிப்புக் கேட்கும் இருதயத்தைக் காணமுடியாதிருக்கிறது. விசுவாசத்தைப் பற்றியும், ஜெபத்தைப் பற்றியும் பேசுகிற அளவுக்கு பாவ உணர்வைப்பற்றியும், பாவத்துக்காக வருந்துவதையும், அறிக்கையிடுவதையும் கேட்கவும், காணவும் முடியாதிருக்கிறது. கர்த்தர் மன்னிக்கிறவர், மன்னித்துவிட்டார் என்ற போர்வையின் கீழ் ஒளிந்துகொண்டு இருதயத்தை வருத்தப்படுத்தாத தேவ செய்திகளை நாடிப் போலி வாழ்க்கை வாழ்வது அதிகரித்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் வொட்சனின் நூல் தமிழ் கிறிஸ்தவர்கள் வாசிக்கக்கூடியதாக வந்திருப்பது நல்லதே.

3ம் அதிகாரத்தில் வொட்சன் மனந்திரும்புதலை வற்புறுத்தும் மூன்று காரணங்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அதற்கு அடுத்த அதிகாரம் மனந்திரும்புதலை வற்புறுத்தும் அறிவுரையாக அமைந்திருக்கிறது. 5ம் அதிகாரம் மனந்திரும்புவதை மேலும் வற்புறுத்தும் 16 பலமான காரணங்களை ஆணித்தரமாக முன்வைக்கின்றன. 6ம் அதிகாரம் துரிதமாக மனந்திரும்பும்படித் தூண்டுகிற விளக்கமாக, நான்கு காரணங்களை வாசகர்கள் முன்வைக்கின்றது. 8வது அதிகாரம் மனந்திரும்புவதில் ஏற்படும் பத்து முட்டுக்கட்டைகளை எவ்வாறு நீக்குவது என்பதை விளக்குகின்றது. இந்நூலின் கடைசி அதிகாரமான 9வது அதிகாரம் மனந்திரும்புதலுக்கான வழிமுறைகளை அலசி ஆராய்ந்து விளக்குகிறது. அதற்கான ஆறு வழிமுறைகளை விளக்கமாக இந்த அதிகாரத்தில் தந்திருக்கிறார் வொட்சன்.

இன்று நாம் பிரசங்கங்களில் கேட்கின்ற மனந்திரும்புதல் பற்றிய செய்திகளுக்கும் தொமஸ் வொட்சனின் போதனைகளுக்கும் பரலோகத்திற்கும் இந்த உலகத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளி இருக்கிறது. பாவத்தைப் பற்றியும் அதை இருதயத்தில் உணர்ந்து, வருந்தி, கண்ணீர்விட்டு, வெறுத்து, அறிக்கையிட்டு, அதைவிட்டு விலகியோடி, தொடர்ந்து அத்தகைய மனந்திரும்புதலை நடைமுறையில் கொண்டிருக்கும் கிறிஸ்தவத்தைப் பற்றி வொட்சன் விளக்குகிறார். ஆனால், மெஷின் வேகத்தில் விசுவாசத்தைப் பெற்று கண்ணிமைக்கும் நேரத்தில் ஞானஸ்நானத்தைக் கொடுக்கும் உலகரீதியிலானதொரு கிறிஸ்தவத்தையே நாம் சுற்றிவரப் பார்க்கிறோம். வேதம் ஒன்றைப் போதிக்க நடைமுறையில் அதற்கெதிராக செயல்பட்டு வரும் சபைகளையும், பிரசங்கிகளையும் எங்கும் காண்கிறோம்.

மனந்திரும்புதலைப் பற்றிய வொட்சனின் போதனைகளையே ஜோன் கல்ஹூனும் (1748–1827) தன்னுடைய நூலான மனந்திரும்புதலில் தந்திருக்கிறார். இதையே நாம் ஜோன் ஓவனிலும், ஜோன் பனியனிலும் ஏனைய சீர்திருத்தவாத பியூரிட்டன் பெரியவர்களின் நூல்களிலும், பிரசங்கங்களிலும் காணலாம். தற்கால தமிழ் கிறிஸ்தவம் மெய்யான வேத கிறிஸ்தவத்தை விட்டுவிலகியோடியிருக்கிறது. கிறிஸ்தவர்கள் வேதம் அறியாமலும், சத்தியங்களை உணரக்கூடிய ஆத்துமப் பக்குவமில்லாமலும் இருந்து வருகிறார்கள். தொமஸ் வொட்சனின் நூல் சபைகளில் போதிக்கப்பட வேண்டியது; பிரசங்கங்களில் வர வேண்டியது; இறையியல் மாணவர்கள் ஆராய்ந்து இருதயத்தை சோதித்துப் படிக்கவேண்டியது. இதன் பொருத்தமான பகுதிகளைத் திருவிருந்து காலங்களில் பகுதி பகுதியாக சபையில் வாசிப்பதுகூட ஆத்துமாக்களுக்குப் பலன் தரும். ஓய்வுநாளில் இதை வாசிக்கும்போது உலகக்காரியங்களையும் தள்ளிவைக்கலாம் இல்லையா?

தொமஸ் வொட்சன் போன்ற பியூரிட்டன் பெரியவர்கள் மனந்திரும்புதல் பற்றிய இத்தகைய ஆழமான, விரிவான விளக்கங்களைத் தருவதற்குக் காரணமென்ன? இதற்கு நான் ஒரு வரியில் பதில் தந்துவிட முடியாது. வொட்சன் இந்நூலில் மனந்திரும்புதலும் விசுவாசமும் இணைந்தே காணப்படும் என்று விளக்கியிருக்கிறார். இருந்தபோதும் அவர் மனந்திரும்புதலாகிய கிருபையை மட்டுமே தனியாக இந்நூலில் விளக்கியிருக்கிறார். விசுவாசமில்லாமல் இத்தகைய மனந்திரும்புதல் நிகழவழியில்லை என்பதையும் விளக்கியிருக்கிறார். இருந்தபோதும் இந்த மனந்திரும்புதல் இல்லாமல் எவரும் இரட்சிப்படைய முடியாது என்கிறார் வொட்சன். ஆகவே, இரட்சிப்போடு தொடர்புடையதாக அதில் காணப்படும் பல கிருபைகளில் ஒன்று மனந்திரும்புதல் என்பதை அறிந்துகொள்ளுகிறோம். இரட்சிப்பின் பல கிருபைகளாக அழைப்பு, நீதிமானாக்குதல், மகவேட்பு, மறுபிறப்பு, மனந்திரும்புதல், விசுவாசம், பரிசுத்தமாகுதல், கிறிஸ்துவோடான இணைப்பு, மகிமையடைதல் ஆகியன உள்ளன. இறையாண்மையுள்ள கர்த்தரால் இரட்சிக்கப்படும்போது இந்தக் கிருபைகளை நாம் அனுபவிக்கிறோம். கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற மனிதன் இவற்றைக் கிருபையால் அடைகிறான். அவனடையும் இரட்சிப்பு எத்தனை பெரியது, சிறப்பானது என்பதை உணரவும், அந்த இரட்சிப்புக்கேற்ற கிறிஸ்தவ வாழ்க்கையை விசுவாசத்தோடும், கீழ்ப்படிவோடும் வாழவும் இந்தக் கிருபைகளைப்பற்றி ஆவிக்குரியவிதத்தில் விசுவாசி அறிவுபூர்வமாகவும், அனுபவபூர்வமாகவும் அறிந்திருக்க வேண்டும். ஆவிக்குரிய ஆத்மீக வாழ்க்கையை ஆண்டவரையும், அவருடைய செயல்களையும் பற்றிய ஆவிக்குரிய அறிவில்லாமல் வாழந்துவிட முடியாது. அதற்கு உதவுமுகமாகவே வொட்சன் இந்நூலை எழுதியிருக்கிறார்.

மனந்திரும்புதலில் இத்தனை விஷயங்கள் இருக்கின்றதா? என்று நூலை வாசிக்கிறவர்கள் ஆதங்கப்படலாம். மனந்திரும்புதல் பற்றி அதிகமான வேதவிளக்கமில்லாமல் இருந்து வந்திருக்கிறவர்களுக்கு இது ஆச்சரியத்தையும், ஆசுவாசத்தையும் கொடுப்பதில் ஆச்சரியமில்லை. இருந்தபோதும், மெய்யான மனந்திரும்புதல் இல்லாமல் இரட்சிப்பை அடைய முடியாது; இரட்சிப்புக்கேற்ற வாழ்க்கையை வாழவும் முடியாது. மெய்யான இரட்சிப்புக்குத் தேவையான வேதபூர்வமான மனந்திரும்புதலை அறிந்துகொள்ள தொமஸ் வொட்சனின் நூல் நிச்சயம் அநேகருக்குப் பயன்படும். நூலைப்பெற்று நேரத்தை ஒதுக்கி, அமைதியாக, சிந்தித்து, ஆராய்ந்து, ஆவியின் துணையோடு வாசியுங்கள். மெய்யான மனந்திரும்புதல் உங்களில் நிகழ்ந்திருக்கிறதா? தொடர்ந்தும் வெளிப்படுகிறதா என்பதை ஆராய்ந்து பாருங்கள். பரலோகத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதில் நமக்கு நிச்சயமும், உறுதிப்பாடும் அவசியம் இல்லையா; அது பெயரளவில் மட்டும் இருந்துவிட்டால் பேராபத்தாகிவிடுமே.

இந்நூலை தமிழ்நாட்டில் சுவிசேஷ இலக்கிய சேவை (ELS) நூல் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

 

 

 

தகிடுதத்த ‘இருதயத் திருட்டு’

இது என்ன வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று கேட்கிறீர்களா? உங்கள் கேள்வி ஆச்சரியம் தரவில்லை. முதன் முதலாக சமீபத்தில் இதை உணர்ந்து நானே ஆச்சரியப்பட்டேன். பத்துக்கட்டளைகளை 2013ல் இருந்து பிரசங்கித்து வரும் நான், சமீபத்தில் எட்டாம் கட்டளையை ஆரம்பித்தேன். அந்தக் கட்டளையில், செய்யக்கூடாத காரியங்களை ஆண்டவர், ‘திருடாதே’ (களவு செய்யாதிருப்பாயாக) என்ற வார்த்தை மூலம் பொதுவாக சுருக்கமாக விளக்கியிருக்கிறார். உண்மையில், செய்யக்கூடாதவற்றை மட்டும் அந்த வார்த்தைகள் விளக்காமல், செய்யவேண்டியவற்றையும் விளக்குகின்றன. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அந்தக் கட்டளைகளில் உள்ள அனைத்தும் நம் பார்வைக்கும் அறிவுக்கும் புலப்படுவதில்லை. ஆழமாக நிதானத்தோடு வேதத்தை வேதத்தோடு ஆராய்ந்து படிக்கும்போது அநேக உண்மைகளை ஆவியானவர் அறியவைக்கிறார்.

இதில் திருடாதே என்று சொல்லப்படுவதில் முதலில், ஆட்களைத் திருடும் பாவத்தைச் செய்யக்கூடாது என்று ஆண்டவர் சொல்லுகிறார். சாதாரணமாகப் பேச்சில் ஒருவருடைய இருதயத்தைத் திருடினேன் என்கிறபோது அதற்குப் பொருள் வேறு. அதை நல்ல விஷயமாகத்தான் நினைப்போம். காதலன் காதலியை நேசிப்பதையும் அல்லது ஒருவரோடிருக்கும் நட்பைக் குறிப்பதாகவும் அதை எண்ணுவோம். ஆனால், இந்தக் கட்டளை பாவகரமான விஷயத்தைச் சொல்லுகிறது. அதாவது ஆள்கடத்தலையும் (Kidnapping), எவரையும் அடிமையாக வைத்திருத்தலையும் (Slavary) இந்தக்கட்டளை பாவமாகக் கருதுகிறது. இதெல்லாம் இன்றைக்கு நடக்காமல் இல்லை. வயதுவராத சிறுவர்களை கட்டாய வேலைக்குட்படுத்துவதும், பிச்சையெடுக்க வைப்பதும் ஆள்கடத்தலுக்குள்ளும், அடிமைத்தனத்திற்குள்ளும் வந்துவிடுகிறது. எத்தனைபேர் இதை நினைத்துப் பார்த்திருக்கிறோம்? பழம் வேதவியாக்கியான இறையியலறிஞர்கள் வரலாற்று வினாவிடைப் போதனைகளில் இந்தக் கட்டளையை விளக்கும்போது இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இந்த ஆள்கடத்தலுக்குள் அடங்கியிருக்கும் இன்னொன்றைத்தான் அவர்கள் ‘இருதயத் திருட்டு’ என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு உதாரணமாக ஆதி. 31:20ஐ சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த வேதப்பகுதியில் லாபானிடம் சொல்லாமலும், அவனுக்குத் தெரியாமலும் யாக்கோபு தன் மனைவி பிள்ளைகளையும், தனக்குச் சொந்தமான அனைத்தோடும் கானானில் இருக்கும் தன் தகப்பனிடம் ஓடிப்போனான். 20ம் வசனம் அதைத் ‘திருட்டளவாய்ப்’ போய்விட்டான் என்கிறது. (NKJV – stole away, NASB – deceived, ESV – tricked). இதற்கு எழுத்துபூர்வமாக திருடனைப்போல ஓடுதல், ஏமாற்றுதல், திசைதிருப்புதல் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். அந்தவகையிலேயே இந்த வார்த்தைக்கான ஆங்கில மொழிபெயர்ப்புகள் அமைந்திருக்கின்றன. லாபானுக்குத் தெரியாமல் யாக்கோபு செய்தகாரியம் ‘லாபானின் இருதயத்தைத் திருடுதலாக’ இங்கே காட்டப்பட்டிருக்கிறது. அதாவது, லாபானை நம்பவைத்து ஏமாற்றுதலே யாக்கோபு செய்த காரியம். ஆதி. 31:26ல், லாபான் யாக்கோபுவைக் கண்டுபிடித்து இதே வார்த்தையையும் (திருட்டளவாய் – stolen away), ஆள்கடத்தலைக் குறிக்கும் இன்னொரு வார்த்தையையும் (சிறைகளைப்போலக் கொண்டு வந்தது – like captives taken) பயன்படுத்தி அவனுடைய தவறைச் சுட்டிக்காட்டுகிறான். அப்சலோம், தாவீதை அரசபதவியிலிருந்து இறக்குவதற்காக இஸ்ரவேலருக்கு அநேக காரியங்களைத் தருவதாகப் பொய்யாக வாக்களித்தபோது இதேவிதமாக ஏமாற்றி அவர்களுடைய ‘இருதயத்தைத் திருடினான்’ (stole the hearts).

ஒருவரை நம்பவைத்து ஏமாற்றி நடந்துகொள்ளுவதை வேதம், ‘இருதயத் திருட்டாக’ வர்ணிக்கிறது; எட்டாம் கட்டளைக்கு எதிரான பாவமாகக் கருதுகிறது. எந்த விஷயத்திலாவது எவரையும், ஏன், உங்கள் பெற்றோர், போதகர், உற்ற நண்பர்கள், சபையார், மனைவி, பிள்ளைகளைக்கூட, அவர்களுடைய இருதயம் அறிந்திராதவகையில் நடந்து அவர்களை ஏமாற்றி வருகிறீர்களா? அப்படிச் செய்வது அவர்களுடைய இருதயத்தை வேறுதிசையில் திருப்புவதாகும்; அதைத் திருடுவதாகும். அதாவது, உங்களுடைய உண்மை நோக்கத்தை அவர்களுடைய இருதயத்துக்குத் தெரியாமல் மறைத்து உங்களை நம்பும்படிச் செய்வதே ‘இருதயத் திருட்டு.’ இத்தகைய இருதயத் திருட்டுக்காக இருதயங்களை வசப்படுத்தும் manipulation என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் ‘தகிடுதத்தம்’ என்ற வார்த்தையைக் க்ரியா அகராதி பயன்படுத்துகிறது. ஒரு காரியத்தை நிறைவேற்றிக்கொள்ளுவதற்காகச் செய்யும் சுயநலச் செயலே தகிடுதத்தம். இது முறையில்லாத குறுக்குவழி. இப்படி நடந்துகொள்கிறவர்களை க்ரியா அகராதி ‘சூத்திரதாரிகள்’ (manipulators) என்று அழைக்கிறது.

இதை விளக்கும்போது என்னால் போதகப் பணியில் இருப்பவர்களைப்பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. பிரசங்கத்தை உண்மையோடு ஆராய்ந்து விளக்காமல், சுயலாபத்துக்காக, பிரசங்க மேடையில் நின்று ஆத்துமபாரமுள்ளவனைப்போலப் பிரசங்கிப்பது ஆத்துமாக்களை ஏமாற்றித் தகிடுதத்தம் செய்து அவர்களுடைய ‘இருதயத்தைத் திருடும்’ சூத்திரதாரம்தான். சுயலாபத்துக்காக ஆத்துமாக்களுடைய இச்சைகளின்படி சபை நடத்தி (people-pleaser) நல்லவன்போல் ஊழியம் செய்வதும் ‘இருதயத் திருடல்தான்.’ இதைத்தான் தாவீதின் மகன் அப்சலோம் செய்தான். நல்ல போதகன்போல் நாடகமிட்டு பணஆசையால் சபையார் கேட்பதையெல்லாம் செய்து சத்தியத்துக்கு எந்த மதிப்பும் கொடுக்காமல் நடந்து வருவது இந்த ‘இருதயத் திருட்டுக்குள்ளேயே’ அடங்குகிறது. இது இருதயங்களை ஆசைகாட்டி வசப்படுத்தி ஏமாற்றிவரும் ஆள்கடத்தல் திருட்டு. எத்தனை போதகர்களும், பிரசங்கிகளும் இன்று இதைச் செய்துவருகிறார்கள். கர்த்தருக்கும், வேதத்திற்கும் மட்டும் அடிமைப்பட்டு நடந்துகொண்டால் பல வருடங்களுக்கு பணவசதியோடு சபை நடத்தமுடியாது என்பது நன்றாகத் தெரிந்திருந்து, சத்தியத்தை ஒதுக்கிவைத்து, ஆத்துமாக்களை இழக்க மனமின்றி அவர்களுடைய பேச்சுக்களுக்கு இசைந்துபோய் தன்காரியத்தை சாதித்துக்கொள்ளுகிற ஊழியர்கள் எட்டாம் கட்டளைக்கெதிராக நடந்து ‘இருதயத் திருட்டு’ ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்; கர்த்தரையும் இதன் மூலம் வஞ்சிக்கிறோம் என்ற பயம்கூட அவர்களுக்கில்லை. சபைக்குள் தனக்கென ஒருகட்சியை உருவாக்கி தன் பதவியைப் பாதுகாத்துக்கொள்ளுவதும், சுயலாபத்துக்காக கட்சிப் பிரிவினையை உருவாக்கி சபையைப் பிரிப்பதும் இந்த இருதயத் திருட்டுக்குள்தான் அடங்குகிறது. இதெல்லாம் எத்தனைப் பெரிய பாவம் தெரியுமா? நியாயத்தீர்ப்பு நாள் வருகிறது என்ற பயம் நமக்கிருக்கட்டும்.

இந்த இருதயத் திருட்டில் இதுவரை சொன்னளவுக்கு சீரியஸானதாக இல்லாவிட்டாலும் நிச்சயம் அடங்கியிருக்கும் இன்னொன்று தொலைக்காட்சி விளம்பரங்கள். ஒரு பொருளை விற்க அவர்கள் அதுபற்றி எத்தனை ஆசைவார்த்தைகளைக்காட்டி அந்தப் பொருளை உயர்வானதாக நம்முன் வைக்கிறார்கள். அது அந்த விளம்பரங்களைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் இருதயத்தைத் திருடுவதாகும்; அந்தப் பொருளை வாங்க வைக்கச் செய்யும் உத்தி அது. இதுவரை நான் விளக்கியிருப்பதெல்லாம் ஆள்கடத்தலாகிய பாவத்தில் அடங்கியிருப்பதை உணர்கிறீர்களா? அடுத்த தடவை எட்டாம் கட்டளையை வாசிக்கும்போது இதையெல்லாம் கொஞ்சம் மனதில் வைத்து வாசிப்பீர்களா?

 

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.