திருமறைத்தீபம் 2016 -ம் ஆண்டு இரண்டாம் இதழ்
1. வாசகர்களே!
2. சிந்தனைச் சித்திரம்
3. அவசியமான பாவநிவாரணபலி
4. கீழ்ப்படிவின் தேவகுமாரன்
5. புத்தக விமர்சனம்
6. புத்தகக்கடைக்குப் போயிருக்கிறீர்களா?
7. நம்மிடம் இல்லாதது: கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டம்
வாசகர்களே!
பத்திரிகையின் 20 வருட நிறைவு விழா கர்த்தரின் ஆசீர்வாதத்தோடு நல்லபடியாக பெங்களூரில் நடந்தது. அதை வெகுவிரைவில் தொலைக்காட்சியிலும் காட்டவிருக்கிறார்கள். என்னோடு ஓர் உரையாடலையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் பின்னால் தொலைக்காட்சியில் வரும். நல்ல பல காரியங்களைச் செய்து அருமையான வேதசத்தியங்களை, பலரும் அறியாமல் இருக்கும் சீர்திருத்தப் போதனைகளை நம்மினத்தவர்கள் மத்தியில் கொண்டுசேர்ப்பதற்காகத்தான் இத்தனையும் என்பதை மறந்துவிடாதீர்கள். சீர்திருத்த இலக்கியங்கள், அதுவும் உண்மையாக, தெளிவாக, எளிமையாக, நல்ல தமிழில் எழுதப்பட்ட இலக்கியங்கள் இன்றைக்குத் தேவை. நம் மக்கள் வாசிப்பின்மையால் வேதசிந்தனைகளை வளர்த்துக்கொள்ளாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை இருட்டில் வைத்திருந்து தங்களை வளர்த்துக்கொள்ளும் ஊழியர்கள் தொகை அரசியல்வாதிகளின் எண்ணிக்கையைவிட இன்று அதிகமாக இருக்கிறது. இயேசுவின் சுவிசேஷம் சுயநல நோக்கங் களுக்காகப் பயன்படுத்தப்பட்டு கிறிஸ்தவம் நம்மினத்தில் தொடர்ந்து கொச்சைப்படுத்தப்பட்டு வருகிறது. நம்மினத்து மக்கள் வாசிக்க ஆரம்பித்தாலே அவர்களுடைய கண்கள் திறந்துவிடும். ஜனவரியில் ஒரு புத்தக விற்பனையகத்தின் முகாமையாளர் என்னிடம் சொன்னார், ‘ஐயா சென்னையில் ஒரு இலட்சம் பேர் வாசிக்க ஆரம்பித்தாலே அரசு மாறிவிடும்’ என்று. எத்தனை உண்மையான பேச்சு.
நம்மினத்துக் கிறிஸ்தவம் வாசிப்பின்மையால் நலிந்து கிடப்பதற்கு சபைப்போதகர்கள் முக்கிய காரணம். அவர்கள் அக்கறையோடும், கருத்தோடும் வாசிப்பதில்லை; சிந்திக்கவும் தெரிவதில்லை. போதனைகளும், பிரசங்கங்களும் ஊட்டச்சத்தில்லாத உணவைப்போல உணர்ச்சிப் பசியை மட்டுந்தான் தீர்க்கிறது. அறிவுக்கும், ஆத்தும வளர்ச்சிக்கும் அவற்றில் கிஞ்சித்தும் இடமில்லை. வாசிப்பின்மையால் வதங்கிக்கொண்டிருப்பவர்கள் எப்படி ஆத்துமவளர்ச்சி அடைய முடியும்? அதுவும் சீர்திருத்தப் போதனைகளை விசுவாசிக்கிறோம் என்று பறைசாற்றிக் கொள்ளுகிறவர்கள் வாசிக்காமல் இருப்பது வரலாற்றிலேயே காணாததொன்று, நம்மினத்தில் தவிர. இந்த வருடத்திலாவது இந்நிலை மாற கர்த்தர் தன் ஆவியின் மூலம் பெரும் மனந்திரும்புதலை அநேகருக்கு இந்த விஷயத்தில் தரும்படி அனைவரும் ஜெபிப்போம். மெய்யாக வாசிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களை வாசிக்க வையுங்கள். நம்மினம் திருந்தட்டும்; சுவிசேஷப்பணி சிறக்கட்டும். – ஆசிரியர்.
சிந்தனைச் சித்திரம்
– திருமறைத்தீபம் 20ம் ஆண்டு நிறைவு விழா –
கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி பெங்களூரில் திருமறைத்தீபத்தின் 20ம் ஆண்டு நிறைவு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. கெம்பஸ் குருசேட் நிறுவனத்தின் மிகப்பெரிய கட்டடத்தில் கூட்டத்தை பெங்களூர் சபையினர் ஏற்பாடு செய்திருந்தனர். அங்குபோனபோதே இத்தனைப் பெரிய இடத்தை எப்படி நிரப்பப்போகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அதுவும் பெங்களூரில் அன்று போக்குவரத்து நெருக்கடி மற்ற நாட்களைவிட அதிகம். கூட்டம் நடந்த இடத்துக்குப் போய்ச்சேருவதற்கே ஒன்றரை மணிநேரம் எடுத்தது. கூட்டம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஆதங்கம் வேறு உள்ளுக்குள். வருகிறவர்களை வரவேற்று உபசரித்து இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்வது போன்ற பணிகளையும், புத்தகங்கள் விற்பனை செய்வது, உணவு பரிமாறுவது போன்றவற்றையும் செய்வதற்காக இருபது பேருக்கு மேற்பட்ட சகோதரர்கள், திருமறைத்தீப 20ம் ஆண்டு விழாவை சிறப்பிப்பதற்காக வெளியிடப்பட்டிருந்த, மஞ்சள் நிறத்தில் ஸ்பர்ஜன் அவர்களின் வார்த்தைகளைக்கொண்டிருந்த நீல நிற டீ-சேர்ட்டை அணிந்து சுறுசுறுப்போடு இயங்கிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் எல்லோரும் பெங்களூரையும், தமிழகத்தின் திருச்சபைகளையும் சேர்ந்த சகோதரர்கள் என்பதைக் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. பெங்களூர் சபையினர் பெரிய ஏற்பாடுகளைச் செய்திருப்பது மட்டுமல்ல ஒழுங்கோடு கூட்டத்தை நடத்தும் வகையிலும் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்பதும் பார்த்த உடனேயே தெரிந்தது.
இந்த 20ம் ஆண்டுவிழா நடத்தவேண்டும் என்ற எண்ணம் சில போதக சகோதரர்கள் மனதில் எழுந்தபோது, அது அவசியமா? என்ற எண்ணம் முதலில் எழுந்தது. யோசித்துப் பார்த்ததில், இத்தனை வருடம் இதழை நடத்த கர்த்தர் செய்திருக்கும் பெருங்காரியங்களை நினைவுகூரவும், அவருக்கு நன்றிகூறவும், கிறிஸ்தவ இலக்கியங்களின் அவசியத்தை வலியுறுத்தி அந்தப்பணியை முன்னெடுத்துச் செல்லவும் இது நல்ல சந்தர்ப்பமாக அமையும் என்று போதகர் முரளிக்கும் மற்றவர்களுக்கும் தோன்றியதால் அதற்கு சம்மதித்தேன். ஆண்டுவிழாவை நல்லவிதமாக நடத்துவதற்காக பெங்களூர் சபையினர் மூன்று மாதங்களாக உழைத்திருக்கிறார்கள் என்பது பின்னால்தான் தெரிந்தது. விழாவை நடத்தலாம் என்று தீர்மானித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தபின்பு அதைப் பயன்படுத்தி வாசிப்புபற்றிய புரிந்துணர்வை ஏன் ஆத்துமாக்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடாது என்று தோன்றியது. அதோடு புதிய நூல்களையும் அதில் வெளியிட்டுவைக்கலாம் என்றும் தீர்மானித்தோம். இதற்கான புதிய நூல்களையும், முக்கியமாக ஐந்து வால்யூம்கள் கொண்ட திருமறைத்தீப தொகுப்பையும் பல மாதங்களுக்கு தியாகத்தோடு உழைத்து சகோதரர் ஜேம்ஸ் தயாரித்திருந்தார். இது ஆண்டவருக்கான அன்புச் சேவை. இதெல்லாம் ஆண்டுவிழாவை மேலும் முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் ஆக்கியது.
சிறப்பு விருந்தினர்
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக யாரைப் பயன்படுத்தலாம் என்று சிந்தித்தபோது அதற்கு மிகவும் பொருத்தமானவராக ரொபட் வெட்டி தென்பட்டார். நெடுங்காலமாக உடல்நலன் காரணமாக அவர் நீண்ட பயணங்களை மேற்கொள்ளவில்லை. அது தெரிந்திருந்ததால் சாத்தியப்படாது என்று எண்ணி வேறுயாரை வைக்கலாம் என்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆண்டுவிழாபற்றிக் குறிப்பிட்டு ஒரு முறை நீங்கள் ஏன் இந்தியா வரக்கூடாது என்று ஒரு நாள் ரொபட்டிடம் கேட்டேன். அதுபற்றி சிந்திக்கிறேன் என்று ரொபட் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், இன்னும் நாள் இருக்கிறது, நவம்பரில் முடிவைச் சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டுவிட்டேன். இந்தியா வர நான் தயார், பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று ரொபட் நவம்பரில் சொன்னதும் உடனடியாக அந்தப் பணியில் ஈடுபட்டேன். அதற்குப் பிறகு ரொபட்டைச் சந்திக்கின்ற போதெல்லாம் இந்தியா போகவேண்டும் என்ற ஆர்வத்தையும், துடிப்பையும் அவரில் பார்த்தேன். அது சந்தோஷத்தை அளித்தது.
ரொபட் வெட்டி அவர்களைப்பற்றிச் சொல்லியாக வேண்டும். அவர் தீவிர கிறிஸ்தவ இலக்கிய ஆர்வலர். எழுபத்தாறு வயதுள்ள சீர்திருத்த கிறிஸ்தவரான அவர், தீர்க்கமான விசுவாச அறிக்கைகளின் அடிப்படையிலான போதனைகளை வைராக்கியத்தோடு பின்பற்றுவதோடு, இன்றும் அந்தப்போதனைகளை உள்ளடக்கி வெளிவரும் நூல்களைத் தேடிப்பிடித்து வாங்கி வாசித்து வருகிறார். ஒரு நாளைக்கு ஓரிரு நூல்களை வாசித்து முடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பணத்தை சம்பாதித்துத்தராத எந்தச் செயலிலும் ஈடுபடுவதை வீண்விரயமாகக் கருதும் இன்றைய சமுதாயத்தில் ஆத்மீக அறிவைக் கூர்தீட்டி மின்னும் பட்டயமாக வைத்திருப்பதற்காகவே வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சிலரில் அவரும் ஒருவராக இருக்கிறார். இந்த வாசிப்பு அவரை ஒரு சொந்த நூல்நிலையத்தையே வீட்டில் ஏற்படுத்தும் அளவுக்கு வழிநடத்தியிருக்கிறது. ஏழாயிரத்துக்கும் மேலான புத்தகங்களை அவர் தன் நூலகத்தில் வைத்திருக்கிறார். தான் மறைந்தபிறகு மற்றவர்கள் அதைப்பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு டிரஸ்டை நிறுவி அதைப் பொதுச்சொத்தாகும் வழிகளையும் செய்து வைத்திருக்கிறார். ரொபட்டின் வாசிப்பும், கிறிஸ்தவ இலக்கிய ஆர்வமும், நல்ல கிறிஸ்தவ நூல்களை முடிந்தவரை ஏனைய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடவும் வைத்திருக்கிறது. தன்னுடைய சொந்தப் பணத்தை செலவிட்டு, பெஷிபிக் கடல் பகுதியில் நியூசிலாந்துக்குப் பக்கத்து நாடுகளாக இருக்கும் ராரடொங்கா, சமோவா நாடுகளின் மொழிகளில் சீர்திருத்த சத்தியங்களை விளக்கும் நூல்களை அவர் வெளியிட்டிருக்கிறார். வெஸ்ட்மின்ஸ்டர் ஸ்டேன்டர்ட்ஸ் என்ற பதிப்பகத்தை ஆரம்பித்து ஏறக்குறைய 40 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலத்தில் சீர்திருத்த போதனைகளையளிக்கும் நூல்களையும், துண்டுப்பிரதிகளையும் வெளியிட்டு வந்திருக்கிறார்; அந்தப் பணி இன்றும் தொடர்கிறது.
இதையெல்லாம்விட விசேஷமானது திருமறைத்தீப இதழ் வெளியீட்டுப் பணியில் ரொபட் வெட்டியின் பங்கு. இதழை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பத்தில் என் மனதில் உதயமாகவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதற்கு ரொபட் வெட்டியும் அவருடைய நண்பருமே காரணம். நல்ல சபைகள் அமையவும், போதகர்கள் சத்தியத்தில் தெளிவடைந்து போதிக்கவும் சிறந்த கிறிஸ்தவ இலக்கியங்கள் அவசியம் என்பதை அடிக்கடி என்னிடம் சொல்லி, அன்புக்கட்டளையிட்டு, வற்புறுத்திய அவர்களுடைய தூண்டுதலால் ஆரம்பித்தது 1995ல் திருமறைத்தீப இதழ். சின்னதாக ஆரம்பித்த இந்த இதழ் பணி இன்று இருபது ஆண்டுகளைத் தாண்டி இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதழ் ஆரம்பமான காலத்தில் என்னை எப்படி உற்சாகப்படுத்தி தன்னால் முடிந்த உதவிகளை இதழ் பணிக்காகச் செய்தாரோ அந்த உதவிகளை இன்றும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார் ரொபட் வெட்டி. அவருடைய நண்பர் பல வருடங்களுக்கு முன் கர்த்தரை அடைந்துவிட்டார். திருமறைத்தீபத்தின் வெளியீட்டிலும், வளர்ச்சியிலும் தமிழே தெரியாத ஒருவர் இந்தளவுக்கு ஆர்வம்காட்டி, தனக்கும் இந்தப்பணியில் சந்பந்தமுண்டு என்று தானே தீர்மானித்து ஆவிக்குரிய சந்தோஷத்தோடு அதன் ஒவ்வொரு இதழ் வெளிவரும்போதும் அதன் ஆக்கங்களைப்பற்றிக்கேட்டுத், தன்னுடைய நூலகத்தில் வைப்பதற்காக இரண்டு பிரதிகளை இன்றும் வாங்கிக்கொள்ளும் ரொபட் வெட்டி இதழின் 20ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது இதழுக்குக் கிடைத்த ஆசீர்வாதம் என்றே சொல்லுவேன்.
விழா நிகழ்வுகள்
சிறப்பு விருந்தினரான ரொபட் வெட்டி அவர்களைத்தவிர ஸ்ரீ லங்காவின் வவுனியாவில் இருந்து புரொட்டஸ்தாந்து சீர்திருத்த சபையின் போதகரான பார்த்திபன் விழாவில் கலந்துகொண்டார். இவர்களோடு இன்னும் சில தமிழகப் போதகர்கள் விழா நிகழ்ச்சி நிரலின்படி தங்களுடைய இதழனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வந்திருந்தனர். விழா நிகழ்ச்சிகளை நடத்தும் பொறுப்பைப் போதகர் முரளி ஏற்றிருந்தார். அதற்கு அவரே தகுதியானவர் என்பதை ஆரம்பத்திலேயே தீர்மானித்திருந்தோம். அதுவும் விழாவுக்கான சகல ஏற்பாடுகளையும் அவரும் அவருடைய சபையினருமே செய்திருந்தனர். திரு. ரொபட் வெட்டி, தன்னுடைய உரையில் திருமறைத்தீப இதழுக்கும் தனக்கும் இடையில் உள்ள உறவை விளக்கினார். தமிழே தெரியாத அவர் இதழின் பணியில் காட்டிவரும் அக்கறைக்கான காரணத்தைக் கூறினார். சீர்திருத்த போதனைகளை வேதபூர்வமாகவும், தெளிவாகவும் தமிழுலகுக்கு அளித்து வருகிற பத்திரிகை என்பதே தன்னை அதில் ஈடுபாடுகாட்ட வைத்திருப்பதாகவும், இதழாசிரியர் மேல் தனக்கிருக்கும் நம்பிக்கையும் முக்கிய காரணம் என்றார். அடுத்து புத்தகங்களைத் தான் எப்படி வாசிக்க ஆரம்பித்தேன் என்பதை விளக்கினார். இளம் வயதில் கிறிஸ்தவனாக வந்தபிறகே எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டதாகக் கூறிய அவர், தான் முதலில் படித்த கிறிஸ்தவ புத்தகம் மோட்சபயணம் என்றார். நண்பரொருவருடைய துணையோடு அதை வாசித்து முடித்ததாகக் கூறிய அவர், அன்று முதல் வாசிப்பு தன்னுடைய வாழ்க்கையில் நிரந்தர இடத்தைப் பிடித்ததாக விளக்கினார். இப்போது 7000க்கும் குறையாத கிறிஸ்தவ ஆங்கில நூல்களைத் தன்னுடைய சொந்த நூலகத்தில் வைத்திருப்பதோடு பழம் கிறிஸ்தவ இலக்கியங்களை வேறு மொழிகளில் வெளியிடுவதையும் நோக்கமாகக் கொண்டு பணியாற்றி வருவதாகக் கூறினார். இறுதியில் வாசிப்பில்லாமல் கிறிஸ்தவனாக இருக்க வழியில்லை என்று விளக்கிய வெட்டி, வாசியுங்கள், வாசியுங்கள், வாசியுங்கள் என்றுகூறி தன்னுடைய உரையை முடித்தார்.
போதகர் பார்த்திபன் தன் சிற்றுரையில், திருமறைத்தீபத்தைப்பற்றித் தன்னைப் பேச அனுமதித்தால் பல மணிநேரங்கள் தன்னால் பேசமுடியும், ஆனால் அதை இந்த நேரத்தில் செய்யமுடியாத நிலையில் இருப்பதாகக் கூறி உரையை ஆரம்பித்தார். தான் ஸ்கொட்லாந்தில் இறையியல் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் ஆங்கிலத்தில் அருமையாக இருக்கும் செய்திகள் தமிழினத்தைச் சென்றடையாமல் இருக்கிறதே என்று தான் அதிக மனத்துன்பத்தோடு இருந்ததாகச் சொன்னார். அந்தவேளையில் தனக்கு புதிய ஏற்பாடு விரிவுரையாளராக இருந்த மொரிஸ் ரொபட்ஸ் திருமறைத்தீபத்தின் ஆசிரியரையும், இதழையும் தனக்கு அறிமுகப்படுத்தி ஆசிரியரோடு தொடர்புகொள்ளும்படி ஆலோசனை சொன்னதாகக் கூறினார். அதற்குமுன் இதழைப்பற்றியும், ஆசிரியரைப்பற்றியும் எதுவும் தெரியாமல் இருந்ததாகவும், அத்தகைய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டபோது அளவற்ற மகிழ்ச்சியடைந்ததாகவும், இப்போது ஒருவித தாகத்தோடும், வெறியோடும் இதழையும், ஏனைய நூல்களையும் வாசிப்பதும், விநியோகிப்பதும் ஆசிரியருக்குத் தெரிந்ததே என்றும் கூறினார். தொடர்ந்து அவர், சீர்திருத்தப் போதனைகள் தமிழினத்தைச் சென்றடைய இதழ் பெரும்பணி செய்து வருவதாகவும், இறையாண்மையுள்ள கடவுள் தன்னுடைய மக்களுக்கு இரட்சிப்பளிப்பதற்காகவே தன் குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார் என்ற வேத உண்மையை இந்த இதழில் மட்டுமே தான் தமிழில் வாசித்திருப்பதாகவும், அத்தோடு, தேவனுடைய அன்பைக் கொச்சைப்படுத்தி அநேக பிரசங்கிகள் பொதுவாகப் பிரசங்கித்து வரும் இந்தக் காலத்தில் அந்த சிறப்பான அன்பை அவர் தன்னுடைய மக்களிடமே காட்டுகிறார் என்பதைத் தான் ‘பிரசங்கிகளும், பிரசங்கமும்’ என்ற புத்தகத்தில் வாசித்ததாகவும் குறிப்பாகத் தெரிவித்தார். ஆழ்கடலில் இருந்து முத்தெடுப்பது என்பது இலகுவான செயலல்ல என்று குறிப்பிட்ட போதகர் பார்த்திபன், அத்தகைய விலைமதிப்பில்லாத முத்துக்களை வேதக் கடலில் இருந்து தேடித்தேடி தமிழினத்துக்குத் தந்து வருவதற்காக ஸ்ரீ லங்கா வாசகர்கள் சார்பாக ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தார். இறுதியில் திருமறைத்தீபம் எங்கள் கண்களைத் திறந்துவிட்டிருக்கிறதென்றும், அது எங்களுடைய இருதயங்கள் தேவனை நோக்கி அசைய வைக்கிறதாகவும், எங்கள் கால்களை சரியான பாதையில் போகவைக்கிறதாகவும் இருக்கிறதென்று கூறித் தனது சிற்றுரையை முடித்தார்.

அதற்குப் பிறகு உரையாற்றிய மதுரை போதகர் ஜெரால்ட், எல்லோருக்கும் வாழ்த்துத் தெரிவித்த பிறகு, ரொபட் வெட்டி அவர்களைத் தான் தீப்பெட்டியாகவும், ஆசிரியரைத் தீக்குச்சியாகவும் பார்ப்பதாகக் கூறினார். மறைந்து கிடந்த அருமையான சத்தியங்களைத் தமிழில் நாம் வாசித்துப் பயன்படும்படியாக தீக்குச்சியான ஆசிரியரை பற்றியெரியச் செய்திருக்கின்ற, நிர்பந்தித்திருக்கின்ற பலரில் முதன்மையானவராக ரொபட் வெட்டி இருந்திருப்பதை அறிந்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். இதழ் இத்தனைக்காலமாக வெளிவருவதற்குத் துணையாக இருந்துள்ள ஆசிரியரின் சபையாருக்கும் அவர் தன் நன்றியைத் தெரிவித்தார். அத்தோடு, திருமறைத்தீபத்தைத் தான் ஓர் இறையியல் இதழாகப் பார்ப்பதாகவும், வேதத்தின் ஐந்து தூண்கள் என்று சொல்லப்படுகின்ற வேதம், கடவுள், படைப்பு, வீழ்ச்சி, மீட்பு ஆகியவற்றை, இதழ் தன்னுடைய ஆரம்பகால நோக்கங்களில் இருந்து எந்தவிதத்திலும் விலகாமல் தொடர்ந்து விளக்கி வருவது சிறப்பானது என்று கூறினார். எந்தப் பத்திரிகையிலும் இல்லாத ஒரு சிறப்பு திருமறைத்தீபத்தின் தலைப்புகள் என்று குறிப்பிட்ட போதகர் ஜெரால்ட், பத்து மில்லி கிறிஸ்தவம், கரகாட்டக்காரனும் நடுநிலையாளனும், கடவுளும் புழுவும் போன்ற தலைப்புகளை உதாரணங்காட்டி, அவை வாசகர்களை வாசிக்கத் தூண்டுவது மட்டுமல்லாமல் ஆழமான சத்தியங்களை விளக்கும் அருமையான ஆக்கங்களாக இருப்பதாகவும் பாராட்டுத் தெரிவித்தார். திருமறைத்தீபத்தின் சிறப்புகளில் முக்கியமானது அதன் எளிமையான, இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய அழகான தமிழ்நடை என்று கூறிய ஜெரால்ட் அதற்குச் சான்றாக ஐந்தாம் வயதுவரை மட்டுமே கல்விகற்று திருமறைத்தீபத்தை இன்றுவரை வாசித்துப் பயனடையும் ஒரு முதிய சகோதரரைத் தனக்குத் தெரியும் என்று கூறினார். திருமறைத்தீபம் எனும் கலங்கரை விளக்கினால் கரைசேர்க்கப்பட்ட அநேகரில் தானும் ஒருவன் என்பதை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறித் தன்னுடைய உரையை முடித்தார்.
அடுத்துப் பேசிய சென்னைத் திருச்சபையைச் சேர்ந்த போதகரும், சீர்திருத்த வெளியீடுகள் பதிப்பகத்தின் நிர்வாகியுமான ஜேம்ஸ், திருமறைத்தீபம் முக்கியமாக திருச்சபைக்கு அளித்துவரும் விசேட இடத்தைப் புள்ளிவிபரங்களோடு விளக்கினார். தீபத்தின் முதல் இதழே திருச்சபை வரலாற்றின் அவசியத்தை விளக்குவதோடு ஆரம்பித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ‘கூடில்லாக் குருவிகள்’ என்ற ஆக்கத்தின் மூலமாகத் தீபம் திருச்சபைக்கு நிறுவனங்கள் எந்தவிதத்தில் ஆபத்தாக இருந்துவிடுகின்றன என்பதை விளக்கியிருப்பதையும் சுட்டிக்காட்டினார். இதுவரை வந்துள்ள இதழ்களின் பக்கங்கள் 3138 என்றும், அவற்றில் 7016 தடவைகள் திருச்சபை என்ற வார்த்தை வந்திருப்பதாகவும், ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு தடவைகள் அந்தப் பதம் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், இதுவரை வந்துள்ள 84 இதழ்களில் ஒவ்வொரு இதழிலும் 80 தடவைகளுக்கு மேல் திருச்சபை என்ற வார்த்தை இருப்பதாகவும், இதெல்லாம் அனைத்து சத்தியங்களையும் விளக்கிவரும் திருமறைத்தீபம் கர்த்தர் நேசிக்கும் திருச்சபைக்கு முக்கியமான இடத்தை அளிக்கத் தவறவில்லை என்பதை அழகாக விளக்கித் தன் உரையை முடித்துக்கொண்டார்.
அதுவரை பேசிய எல்லோருமே விழாவுக்குத் தகுந்த முறையில் சுவையோடும், அதேநேரம் கனமான விஷயங்களைத் தங்களுடைய சிற்றுரைகளில் பகிர்ந்துகொண்டனர். கடைசியாக நான் என்னுடைய உரையை சுருக்கமாகத் தந்தேன். 2 தீமோத்தேயு 4:13ல் இருந்து, வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினேன். இந்த வசனத்தின்படி பவுலுக்கு வேதமும் தேவைப்பட்டது; புத்தகங்களும் தேவைப்பட்டது. அதுவும் புத்தகங்களைப் பவுல் மிகவும் துன்பங்களை அனுபவித்துவந்த சிறையில் இருந்து கேட்டார். இதிலிருந்து எந்தளவுக்கு தம்முடைய வாசிப்புக்கு எதுவும் தடையாக வந்துவிடக்கூடாது என்பதில் பவுல் கவனத்தோடு இருந்திருக்கிறார் என்பதைக் கவனிக்கிறோம். இதேபோல்தான் ஜோன் பனியனும் சிறைவாசத்தைப் பயன்படுத்தி வாசிப்பிலும், எழுதுவதிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார். இவர்களைப்போல வாசிக்காதவர்கள் வாழ்க்கையில் உயரமுடியாது. வாசிக்காதவனால் சிந்திக்க முடியாது. வாசிக்கிறவனிடம் இருந்தே நாம் அதிகம் தெரிந்துகொள்ள முடியும்; அவனையும் நாம் தெரிந்துகொள்ள முடியும். நம்முடைய மக்கள் மத்தியில் நாம் காண்கிற வருத்தம் தருகிற காரியம் என்ன தெரியுமா? அவர்கள் வாசிப்பை வாழ்க்கையில் பழக்கமாகக் கொண்டிராமல் இருப்பதுதான். வாசிப்பு அவசியம் என்பதால்தான் ஆண்டவர் 66 நூல்களை நமக்கு அன்றாடம் வாசிக்கும்படித் தந்திருக்கிறார்; வாசித்து அவரைப்பற்றித் தெரிந்துகொள்வதற்காகத் தந்திருக்கிறார். புத்தக வாசிப்பில்லாமல் கிறிஸ்தவன் பயனுள்ளவனாக இருந்துவிட முடியாது. ‘வாசிக்காத கிறிஸ்தவன்’ என்பது முரண்பாடான வார்த்தைகள். போதகர்களும்கூட வாசித்து சிந்திக்காதவர்களாக நம்மினத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் காட்சிக்காக அலைகிறவர்களாக இருக்கிறார்கள். வாசிப்பில்லாமல் கிறிஸ்தவம் நம்மினத்தில் தலைநிமிர்ந்து நடக்கமுடியாமல் இருக்கிறது. வாசிக்கிறவன் தனக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் நன்மை செய்கிறவனாக இருப்பான். வாசிப்பு உயரும்போது சுவிசேஷப் பணிகளும், கிறிஸ்தவமும் நம்மினத்தில் உயரும். வாசிப்பில்லாமல் இருப்பது வைரஸ்போல் நம்மினத்தில் எங்கும் பரவியிருக்கிறது. ரொபட் வெட்டி அருமையாக சொன்ன வார்த்தைகளை மறுபடியும் சிந்தித்துப் பாருங்கள்: வாசியுங்கள், வாசியுங்கள், வாசியுங்கள். இதுவே என் சிற்றுரையின் சாரமாக இருந்தது.
நேரமும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. -கூட்டத்தைக் காலத்தோடு முடிக்க வேண்டுமென்பதால் உரையாற்ற வேண்டியிருந்த வேறு சிலர் அன்று உரைநிகழ்த்த முடியாமல் போனது. எல்லோருடைய உரைகளுக்குப் பின் திருமறைத்தீபத்தின் வரலாற்றை விளக்கும் 27 நிமிட ஒளி, ஒலி நாடா காட்டப்பட்டது. அதை அருமையாக வடிவமைத்துத் தந்திருந்தார் போதகர் ஜேம்ஸ். உண்மையிலேயே அந்தக் காட்சிப் படம் திருமறைத்தீபத்துக்குப்பின் அணிதிரண்டு பணிபுரிந்து வருகிறவர்களை ஒருதடவை நினைத்துப் பார்க்க வைத்தது. மேலாக எல்லாம் வல்ல ஆண்டவர் தீபத்தின் மூலம் செய்துவரும் அதிசயங்களைப் பார்த்து மலைக்க வைத்தது என்றும் கூறலாம்.
விழாவில் திருமறைத்தீபத்தின் 20 வருட இதழ் தொகுப்புகள் ஐந்து வால்யூம்களாக வெளியிடப்பட்டன. அவற்றை அத்தனை அருமையாகத் தயாரித்த பெருமை சீர்திருத்த வெளியீடுகளின் நிர்வாகியான சகோதரர் ஜேம்ஸைச் சாரும். அந்தப் பிரதிகளை ரொபட் வெட்டி அவர்கள் வெளியிட்டு வைத்தார். அவரே இன்னொரு புதிய நூலான ‘இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு’ நூலையும் பெற்று வெளியிட்டார். அந்த நூலின் சிறப்பைச் சுருக்கமாக விளக்கிய அவர், தமிழில் அத்தகைய நூல் வெளிவந்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். ஸ்ரீ லங்காவில் இருந்து வந்திருந்த போதகர் பார்த்திபன் ‘சட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு’ என்ற நூலை வெளியிட்டு வைத்தார். வரவேற்புரை நிகழ்த்தி கூட்டத்தை ஆரம்பித்து நடத்திய போதகர் முரளி ஜெபத்துடன் கூட்டத்தை நிறைவு செய்தார். வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையை சேர்ந்த சகோதரர் பிரேம் உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
கிறிஸ்தவ இலக்கியத்தை முதன்மைப்படுத்தி ஆத்மீக வளர்ச்சிக்கு அவசியமான வாசிப்பை வலியுறுத்திய, அன்றைய இரண்டரை மணிநேர நிகழ்ச்சியில் ஐந்நூறு பேர்வரை கலந்துகொண்டு சிறப்பித்தது தமிழினத்தில் வியப்பான செயல்தான். ஆர்ப்பாட்டங்கள் எதுவுமில்லாமல் அமைதியாக நிகழ்ந்த கூட்டத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாமல் அநேகர் கலந்துகொண்டது ஆச்சரியத்தைத் தந்தது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அன்று அதிகமாக புத்தகங்களையும் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர். இந்நிகழ்வு தொலைக்காட்சியில் விரைவில் ஒலிபரப்பாகவிருக்கிறது. விழா சிறப்பாக அமைய உழைத்த அனைவருக்கும், முக்கியமாக பெங்களூர் சபையாருக்கும், சகோதரர் ஜேம்ஸுக்கும், பல திருச்சபைகளைச் சேர்ந்த சகோதரர்களுக்கும் இதழ்குழுவின் சார்பாக என்னுடைய நன்றிகள். இந்த உழைப்பெல்லாம் கிறிஸ்தவர்களை கிறிஸ்தவ இலக்கிய வாசிப்பில் இன்னும் ஒருபடி உயரச்செய்யவேண்டும் என்பதே என்னுடைய வாஞ்சையும், ஜெபமும். திருமறைத்தீபத்தின் 20ம் ஆண்டு நிறைவு விழா நிச்சயம் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாளாக இருந்தது.
அவசியமான பாவநிவாரணபலி
[பேராசிரியர் ஜோன் மரே ‘மீட்பின் நிறைவேற்றம்’ என்ற ஆங்கில ஆக்கத்தில் விளக்கியிருக்கும் கிறிஸ்துவின் பாவநிவாரணபலி பற்றிய ஆழமான சத்தியங்களை எளிமையாக தொடர்ச்சியாக விளக்கப்போகிறேன். அதன் முதல் பகுதியாக இந்த ஆக்கம் அமைகிறது. பேராசிரியர் ஜோன் மரேயைப் பற்றி நம்மினத்தவர்களுக்கு அதிகம் தெரியாவிட்டாலும், அவர் சீர்திருத்த இறையியலறிஞர்கள் மிகவும் மதிக்கின்ற ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர். வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் கல்லூரியில் பேராசிரியராக இருந்த அவர், இப்போது நம் மத்தியில் இல்லை. வேதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எந்த சத்தியத்தையும் ஆணித்தரமாக விளக்கும் ஆற்றல் அவருக்கிருந்தது. பேராசிரியர் மரேயின் எழுத்துக்கள் என்றும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டியவை. அந்தவகையில் அவர் எழுதியிருக்கும் பாவநிவாரணபலிபற்றிய விளக்கங்கள் திருச்சபைக்குப் பொக்கிஷமாக அமைகின்றன. இத்தகைய இறையியல் விளக்கங்கள் இன்று தமிழில் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய இதை உங்கள் முன் படைக்கிறேன். – ஆர்].
கிறிஸ்துவின் பாவநிவாரணபலிபற்றி வேதம் நமக்குத் தெளிவான, தேவையான போதனையைத் தருகிறது. இன்று பாவநிவாரணபலிபற்றிய வேத அறிவு அநேகருக்கு இல்லை. உண்மையில் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு அடிப்படையே இந்தப் பாவநிவாரணபலி என்றுதான் கூறவேண்டும். வேதத்தின் ஒரு வசனம் சொல்லுகிறது, ‘இரத்தம் சிந்தாமல் பாவத்திற்கு மன்னிப்பில்லை’ என்று. அந்தளவுக்கு கிறிஸ்துவின் பாவநிவாரணபலி சுவிசேஷத்தின் அடித்தளமாக அமைந்திருக்கிறது. பாவிகளின் ம¦ட்பின் நிறைவேற்றத்துக்கு இத்தனை அவசியமாக இருக்கும் கிறிஸ்துவின் பாவநிவாரணபலி பற்றிய வேதபூர்வமான தெளிவான புரிந்துகொள்ளுதல் நமக்கு அவசியம். பாவநிவாரணபலிபற்றிய உண்மைகள் தெரியாமல், அதுபற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டிருப்போமானால் அது நாம் பிரசங்கிக்கும் சுவிசேஷத்தை மாற்றிவிடவோ அல்லது சிதைத்துவிடவோ கூடிய ஆபத்தை விளைவிக்கும்.
பாவநிவாரணபலியைப் பற்றிய எந்த விளக்கமும் அதற்கான காரணகர்த்தாவாக ஆண்டவருடைய உச்சகட்ட அன்பைச் சுட்டுவதாக இல்லாமலிருந்தால் அது முறையான விளக்கமாக அமையமுடியாது. அதை நிரூபிப்பதற்கான அருமையான வேதவசனமாக யோவான் 3:16 இருக்கிறது.
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
தெய்வீக வெளிப்படுத்தலாக இருக்கும் இந்த வசனமே பாவநிவாரணபலிபற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு அவசியமான இறுதி வார்த்தையாக இருக்கவேண்டும். இதைத் தாண்டி நம்மால் போகமுடியாது; போகவும்கூடாது.
பாவநிவாரணபலிக்கு அத்திவாரமாகவும், அதேநேரம் அதை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும் தேவனுடைய அன்பு விசேஷ தன்மை கொண்டது என்று வேதம் விளக்குகிறது. தேவனின் இந்த அன்பைப்பற்றி பவுலைவிடப் பெரிதாகப் பேசியவர்கள் எவரும் இல்லை.
31இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? 32தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோமர் 8:31-32)
இதே பவுல், இத்தகைய தேவ அன்புக்குக் காரணமாயிருக்கின்ற கடவுளின் நித்திய ஆலோசனையை நமக்கு விளக்கி மேலேகுறிப்பிட்ட வேதவசனங்களுக்கு அந்த ஆலோசனையே அர்த்தத்தை அளிப்பதாகக் கூறுகிறார்.
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். (ரோமர் 8:29)
எபேசியர் 1:4-6 ஆகிய வசனங்களில் இதையே இன்னும் வெளிப்படையாக பவுல் விளக்குகிறார்.
4தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, 5பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, 6தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.
கிறிஸ்துவின் பாவநிவாரணபலியின் ஊற்றாக இருக்கும் தேவனுடைய அன்பை சாதாரணமான அன்பாக நாம் கருதக்கூடாது; அந்த அன்பே தேவனுடைய மக்களைத் தெரிந்துகொள்ளுகிறதாகவும், முன்குறிக்கிறதாகவும் இருக்கிறது. கடவுள் தன்னுடைய ஆற்றலுள்ளதும், நித்தியமானதுமான அன்பை எண்ணிக்கையற்ற தம்முடைய மனிதர்கள்மீது காட்டியிருப்பதுமட்டுமல்லாமல், அந்த அன்பின் உறுதியான நோக்கத்தையே கிறிஸ்துவின் பாவநிவாரணபலியின் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.
கடவுளுடைய இந்த இறையாண்மைகொண்ட அன்பை நாம் ஆழமாக சிந்தித்துப் பார்த்து விளங்கிக்கொள்ளுவது அவசியம். உண்மையில் கடவுள் அன்புரூபமானவர். கடவுளுடைய அன்பு நிலைதடுமாறுவதில்லை; தாம் நினைத்தபோது கடவுள் அன்புள்ளவராகவும், ஏனைய வேளைகளில் அன்பற்றவராகவும் நடந்துகொள்வதில்லை. அவர் தன் தன்மையில் நிரந்தரமாக எக்காலத்துக்கும், காலங்களுக்கு அப்பாலும் அன்புரூபமானவராக இருக்கிறார். கடவுள் நித்தியத்திற்கும் ஆவியானவராகவும், ஒளியாகவும் இருப்பதுபோல் எப்போதும் அன்புரூபமானவராகவும் இருக்கிறார். ஓர் உண்மையை மறந்துவிடாதீர்கள் & ஆக்கினைத்தீர்ப்பைத் தலைமேல்தாங்கி நித்திய நரகத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறவர்களை மீட்டு, அவர்களைத் தன்னுடைய பிள்ளைகளாகத் தத்தெடுத்து ஆசீர்வதிக்கவேண்டிய கட்டாயம் கடவுளுடைய தெரிந்துகொள்ளுகிற அன்பிற்கில்லை என்பதை நாம் உணரவேண்டியது அவசியம். தம்முடைய சுயாதீனமான, இறையாண்மைகொண்ட நன்மையான சித்தத்தின் காரணமாகவே அவர் குறிப்பிட்ட மக்களைத் தெரிந்துகொண்டு அவர்களைக் கிறிஸ்துவுடன் உடன்பங்காளிகளாக்கியிருக்கிறார். இது அவருடைய தன்மையாகிய நல்லெண்ணத்தின் ஆழத்தில் இருந்து புறப்பட்டதாகும். அன்பின் காரணமாகக் குறிப்பிட்ட மக்களைத் தெரிந்துகொண்டு அவர்களை மீட்பதற்கான முழுக்காரணமும் அவரில் மட்டுமே தங்கியிருக்கிறது. அவர் என்றும் இருப்பவராக இருந்து அதைச் செய்கிறார். ஜோன் மரே சொல்லுகிறார், ‘பாவநிவாரணபலியாகிய கிறிஸ்துவின் கிரியை கடவுளுடைய அன்பை சம்பாதிக்கவில்லை; அது கடவுளுடைய அன்பை நிர்ப்பந்திக்கவில்லை’ என்று. அதாவது, பாவநிவாரணபலியின் காரணமாக கடவுளின் அன்பு மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை. மாறாக, கடவுளுடைய அன்பே பாவநிவாரணபலி நிகழ வேண்டிய அவசியத்தை உண்டாக்கி, அன்பின் உறுதியான நோக்கத்தை நிறைவேற்றும் கருவியாகக் கடவுளால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கடவுளின் அன்பு மட்டுமே பாவநிவாரணபலிக்குக் காரணமாக இருந்திருக்கிறது. இந்த முறையில் கடவுளின் அன்பை சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? மீட்புக்கு ஆதாரம் கடவுளின் நித்திய அன்பு. நம்முடைய ஆத்மீக விடுதலைக்கு மூலகாரணம் கடவுளின் நித்திய அன்பு.
மேலே நாம் பார்த்திருக்கும் உண்மைகளின் அடிப்படையில் பாவநிவாரணபலிக்கு அத்திவாரமாகவும், அதனை அவசியமாக்குவதாகவும் கடவுளின் அன்பே என்பதை நாம் உறுதியாக நம்பவேண்டும். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால் பாவநிவாரணபலிக்குக் காரணம் மனிதனின் நிர்ப்பந்தமான, பரிதாபகரமான நிலையோ, மனிதனின் தேவைகளோ அல்ல. இன்றைய சுவிசேஷப் பிரசங்கங்களில் மனிதனின் தேவையே அதிகமாக வலியுறுத்தப்படுகிறது; மனிதனை முதன்மைப்படுத்தி சுவிசேஷம் விளக்கப்படுகிறது. வேதபோதனைகள் அதற்கு மாறாக அமைந்திருக்கின்றன. கடவுளின் நித்திய அன்பு வைராக்கியத்துடன், கிறிஸ்துவின் பாவநிவாரணபலியை அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் மீட்புக்கு அவசியமானதாகக் கண்டு அதை சிலுவையில் நிறைவேற்றியிருக்கிறது. சுவிசேஷம் மனிதனுக்கு இன்று அவசியமாயிருப்பதற்குக் காரணம் மனிதனின் பாழான ஆத்மீக நிலையோ, அவனுடைய பல்வேறுபட்ட தேவைகளோ அல்ல; கடவுளின் நித்திய, நிரந்தர அன்பே அதற்கு மூலகாரணம்.
இதுவரை நாம் பார்த்திருக்கும் சத்தியங்கள் உண்மையாக இருந்தபோதும் அவை முக்கியமானதொரு கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்வி, ‘தேவனுடைய அன்பு பாவநிவாரணபலியைக் கட்டாயமானதாக்கி அதை நிறைவேற்றியிருப்பதற்கு காரணம் என்ன?’ என்பதுதான். அதாவது, கிறிஸ்து இரத்தம் சிந்தவேண்டியதன் அவசியமென்ன? மகிமையின் தேவனாகிய தேவகுமாரன், அந்நிலைக்குத் தன்னைத் தாழ்த்தி பாவநிவாரணபலியாகத் தன்னை ஒப்புக்கொடுத்ததற்கு என்ன காரணம்? ஆண்டவர் மனிதனாகப் பிறந்ததற்குக் காரணம் என்ன? இங்கிலாந்தின் கென்டபெரியைச் சேர்ந்த அன்சலோம், ‘வல்லமையுள்ள தேவன் ஆவியின் மூலமும் வார்த்தையின் மூலமும் தன் அன்பைக்காட்டித் தன்நோக்கத்தை நிறைவேற்றியிருக்கலாமே?’ என்று கேட்கிறார். இந்தக் கேள்விகள் இடக்குத்தனமான கேள்விகள் அல்ல; கிறிஸ்துவின் மீட்புக்கான உண்மையான காரணத்தைத் தெரிந்துகொள்ளுவதற்காகக் கேட்கப்படுகின்ற அவசியமான கேள்விகள். இந்தக் கேள்விகளை உதாசீனப்படுத்துவோமானால் மீட்புக்கான உண்மையான காரணத்தை நம்மால் தெரிந்துகொள்ள முடியாமல் போகலாம். தேவன் ஏன் மனிதனாகப் பிறந்தார்? சிலுவையில் மரித்த தேவன் ஏன் அத்தனைக் கொடூரமான மரணத்தைச் சந்தித்தார்?
இந்தக் கேள்விகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பதில்கள் அனைத்திலும் இருவகை பதில்கள் முக்கியமானவை என்பதை ஜோன் மரே சுட்டிக்காட்டுகிறார்.
- அனுமானத்தின் காரணமான தேவை (Hypothetical necessity).
- கட்டாயத்தின் காரணமான தேவை (Absolute necessity).
அதாவது, பாவநிவாரணபலி அவசியமானது என்பதை அடிப்படையாகக்கொண்டு அதற்கான காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்த இரண்டுவகை பதில்களும் அளிக்கப்படுகின்றன. ஆகஸ்தீன், தொமஸ் அக்குயினாஸ் ஆகியோர் முதலாவது கருத்தைக் கொண்டிருந்தவர்களில் முக்கியமானவர்கள். புரொட்டஸ்தாந்து, சீர்திருத்த திருச்சபைப் பிரிவினர் இரண்டாவது கருத்தைக் கொண்டிருந்தனர்.
சில அனுமானங்களின் காரணமாக பாவநிவாரணம் அவசியம் என்ற கருத்தைக் கொண்டிருப்பவர்கள் கொடுக்கும் விளக்கத்தைக் கவனிப்போம். அவர்கள், பாவநிவாரணபலி இல்லாமலேயே கடவுள் பாவத்தை மன்னித்து மனிதர்களை இரட்சித்திருக்க முடியும் என்றும், அனைத்துக் காரியங்களையும் செய்யமுடிந்த ஆற்றலுள்ள கடவுளுக்கு அதை நிறைவேற்ற எத்தனையோ வழிகளுண்டு என்றும் கருதுகிறார்கள். இருந்தபோதும், இறையாண்மையும் ஞானமும்கொண்ட கடவுள் பாவநிவாரணபலியைத் தேர்ந்தெடுத்து அதன்மூலம் பாவிகளின் இரட்சிப்பிற்கான வழியை ஏற்படுத்தினார் என்கிறார்கள். அது ஏன் என்பதற்கு அவர்கள் தரும் விளக்கம் என்ன தெரியுமா? பாவநிவாரணபலி மூலம் மட்டுமே மேலதிகமான பலாபலன்கள் உண்டு என்றும், அதன் மூலம் மட்டுமே கிருபை மகோன்னதமான முறையில் வெளிப்படுத்தப்படுகிறது என்றும், இந்தக் காரணங்களுக்காக பாவநிவாரணபலி அவசியமானது என்று கடவுள் தீர்மானித்தார் என்கிறார்கள் இந்தப் பிரிவினர். பாவநிவாரணபலி இல்லாமலேயே கடவுளால் மனிதர்களை இரட்சித்திருக்க முடியும் என்றாலும், தன்னுடைய இறையாண்மையுள்ள ஆணையின் மூலம் அவர் வேறுவழிகளைத் தெரிந்துகொள்ளவில்லை என்பது இவர்களுடைய கருத்தாக இருந்தது. இரத்தம் சிந்தாமல் பாவத்திற்கு நிவாரணமும், இரட்சிப்பும் கிடையாது என்கிறது வேதம்; இருந்தாலும், கடவுளின் தன்மையிலோ அல்லது பாவநிவாரணத்தின் தன்மையிலோ இரத்தம் சிந்துவதைக் கட்டாயமாக்கும் வகையில் எதுவுமே காணப்படவில்லை என்று அவர்கள் விளக்கம் கொடுத்தார்கள். இதுவே அனுமானத்தின் காரணமாக பாவநிவாரணம் தேவை எனும் எண்ணப்பாட்டைக் கொண்டிருக்கிறவர்களின் விளக்கமாக இருக்கிறது.
இரண்டாவது விளக்கம், கட்டாயத்தின் அடிப்படையிலான தேவை. இந்த வார்த்தைப் பிரயோகத்தில் ‘கட்டாயம்’ என்ற வார்த்தை, தன்னுடைய இலவசமானதும் இறையாண்மையுடையதுமான கிருபையின் அடிப்படையிலேயே கடவுள் தன் தயவுள்ள சித்தத்தின் மூலமும், ஆணையின் மூலமும் எவரையும் இரட்சிக்கிறார் என்பதைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாவநிவாரணம் ஏன் அவசியம் என்பதற்கு இவர்கள் அளிக்கும் விளக்கத்தைக் கவனிப்போம். அதாவது பாவத்தில் இருக்கும் மனிதரை இரட்சிப்பது கடவுளைப் பொறுத்தவரையில் அதிமுக்கியமானதோ, கட்டாயமானதோ இல்லை. அவருக்கு அதைச் செய்யவேண்டிய அவசியமும் கிடையாது. பாவத்திற்குக் காரணகர்த்தா அவர் அல்ல; மனிதன் அவரை நிராகரித்ததே பாவம் சம்பவித்ததற்குக் காரணம். அப்படியிருக்கும்போது பாவநிவாரணபலி ஏன் கட்டாயமானதாகிறது? இறையாண்மையுள்ள கடவுள் தன்னுடைய சித்தத்தினால் தம்முடைய மகிமையின் புகழ்ச்சிக்காக கிறிஸ்துவின் பாவநிவாரணபலியைத் திட்டமிட்டு நிறைவேற்றி அதன் மூலம் இரட்சிக்கிறார் என்கிறார்கள் இந்தப் பிரிவினர். கடவுளுடைய இறையாண்மையும், ஞானமும், அன்பும் அதைக் கட்டாயமானதாக்குகிறது என்பது இந்த விளக்கத்தைத் தருகிறவர்களின் வாதம். ‘கட்டாயத்தின் அடிப்படையிலான தேவை’ என்ற வார்த்தைப் பிரயோகம் இதைத்தான் விளக்குகிறது. நன்மையே உருவான கடவுள் தன்னுடைய மகிமையின் புகழ்ச்சிக்காகத் தம்முடைய நித்திய அன்பின் அடிப்படையில் மனிதகுலத்தில் குறிப்பிட்ட தொகையினரை நித்திய வாழ்வுக்காகத் தெரிவுசெய்திருப்பதால், தன்னுடைய ஒரே குமாரனைப் பலிகொடுப்பதன் மூலம் அந்த நோக்கத்தை நிறைவுசெய்யவேண்டிய கட்டாயத்துக்குள்ளாகிறார். இந்த அவசியமான கட்டாயம் அவருடைய பூரணமான குணாதிசயங்களில் இருந்தே புறப்படுகின்றது. சுருக்கமாகச் சொல்லப்போனால், எவரையும் இரட்சிக்க வேண்டிய அவசியம் கடவுளுக்கு இல்லாவிட்டாலும், இரட்சிப்பது என்று முடிவுசெய்துவிட்டதால், இந்த இரட்சிப்பைப் பூரணமாக நிறைவேற்ற, இரத்தம் சிந்தி மீட்பைப் பெற்றுத்தரக்கூடிய கிறிஸ்துவின் பாவநிவாரணபலியின் மூலம் அதை நிறைவேற்றுவது கட்டாயமாகிறது. இது அனுமானத்தின் அடிப்படையிலான தேவை என்ற விளக்கத்திற்கு முற்றிலும் மாறானது.
இதுவரை நாம் பார்த்திருப்பவற்றை வாசிக்கும்போது, இது என்ன, கடவுளுக்கு எது அவசியம், அவசியமில்லை என்றெல்லாம் இப்படி ஆராய்வது தேவையில்லாமல் வேதத்தில் இல்லாத விஷயத்தை தேடுவதுபோல் இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். அதுவும் இரத்தம் சிந்தாமல் பாவநிவாரணம் இல்லை என்று வேதவசனம் தெளிவாகச் சொல்லும்போது கடவுளுக்கு எது முடியும், முடியாது என்று கேட்பதெல்லாம் சரியா? என்றுகூட நினைக்கத்தோன்றலாம். ஆனால், கடவுளால் எது முடியும், எதைச் செய்வது அவருக்கு அவசியம் என்றெல்லாம் சிந்திப்பது அவரையோ, வேதத்தையோ குறித்து சந்தேகமெழுப்பும் கேள்விகள் என்று நினைத்துவிடக்கூடாது. கடவுளால் பொய் சொல்ல முடியாது, அவரால் தன்னை மறுதலிக்க முடியாது என்று உறுதியாக நாம் சொல்வது நம்முடைய விசுவாசத்தின் காரணமாகத்தான். அத்தகைய தெய்வீக ‘முடியாதவைகள்’ அவருடைய மகிமையாக இருக்கின்றன. ஆகவே அவரால் முடியாத அத்தகைய விஷயங்களைப்பற்றி நாம் சிந்திக்காமல் இருப்போமானால் அவருடைய பூரணத்துவத்தையும் மகிமையையும் நாம் மறுதலிக்கிறவர்களாகிவிடுவோம்.
இதற்குமேல் கேட்கவேண்டிய முக்கியமானதொரு கேள்விக்கு வருவோம். இதுவரை நாம் பார்த்திருப்பவற்றை ஆணித்தரமாகப் போதிக்கும் வசனங்கள் வேதத்தில் இருக்கின்றனவா? என்பதுதான் அந்தக் கேள்வி. மறுபடியும் கூறுவதானால், பாவிகளுக்காக அவர்களுடைய இடத்தில் இருந்து கிறிஸ்து தன்னையே பலிகொடுக்கும் திட்டத்தை நிறைவேற்றாமல் கடவுளால் பாவிகளை இரட்சிப்பதற்கு வேறு எந்தவிதத்திலும் முடியாது என்பது மட்டுமல்லாமல், அதைச் செய்வது அவருடைய பூரணத்துவம் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் கட்டாயமானதாக இருப்பதால், சுயாதீனமாகவும் இறையாண்மையுடனும் திட்டமிடப்பட்ட இரட்சிப்பு மகிமையின் ஆண்டவர் தன்னையே பலியாகக்கொடுத்து இரத்தம் சிந்தியே நிறைவேற்றப்பட வேண்டும். இனி நான் விளக்கவிருக்கும் வேதவசனங்கள் இதை ஆணித்தரமாகப் போதிக்கின்றனவாக இருக்கின்றன. இந்த வசனங்களனைத்தையும் இணைத்து ஒப்பிட்டுப் பார்த்தும், தனித்தனியாக அவற்றின் உள்ளர்த்தங்களை அவை தரப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களுக்கேற்ப ஆராயும்போது இதுவரை நான் விளக்கியிருக்கும் உண்மைகள் தெளிவாகப் புலப்படும்.
- முதலாவது பட்டியலில் தரப்போகிற வசனங்கள் மிகவும் வலிமையாக என் வாதத்தை முன்னெடுத்து வைக்கின்றவையாக இருக்கின்றன.
10ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.
17அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது. (எபிரெயர் 2:10, 17)
இந்த வசனங்களைக் கவனமாக வாசியுங்கள். அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்ப்பதற்கு அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது அவருக்கு ஏற்றதாயிருந்தது என்கிறது வசனம். அதாவது, அப்படிச் செய்வது அவருக்குப் பொருத்தமானதாக இருந்தது என்பது இதற்கு அர்த்தம். ஏன்? அதைத்தான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அவருடைய ஞானத்திற்கும் அன்பிற்கும் ஏற்றபடி அப்படி நிகழ்வதே தகுந்தது என்று சொல்லி முடித்துவிட முடியாது. அதையே யூகத்தின் அடிப்படையிலான அவசியமாகக் கருதுகிறவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்த வசனங்கள் அதைவிட மேலான உண்மைகளை வலியுறுத்துகின்றன. ஜனத்தின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்கேதுவான ‘தேவகாரியங்கள்’ நிறைவேற வேண்டும் என்று 17ம் வசனம் கூறுகிறது. இறையாண்மையின் அடிப்படையிலான கிருபையின் தேவகாரியங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அந்த தேவகாரியங்கள் நிறைவேற இரட்சிப்பின் அதிபதி தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியிருந்தது. சுருக்கமாகச் சொன்னால் இயேசு கிறிஸ்து இந்தவிதமாக உபத்திரவங்களைச் சந்தித்து, பாவநிவாரணபலியாகத் தம்மை ஒப்புக்கொடுத்து இரத்தம் சிந்துவதே தேவகாரியங்களை நிறைவேற்றி பாவிகளுக்கு விடுதலைதரப் பூரணமான ஒரே வழி என்பதை இந்த வசனங்கள் வலியுறுத்துகின்றன. இரண்டு வசனங்களிலும் ‘ஏற்றதாயிருந்தது’, ‘வேண்டியிருந்தது’ என்று முடியும் வார்த்தைகளைக் கவனியுங்கள். இவ்வாறு நடப்பதே கடவுள் செய்கின்ற தேவகாரியங்களுக்கேற்ற பொருத்தமான செயல் என்பதை அந்த வார்த்தைகள் உணர்த்துகின்றன.
- யோவான் 3:14-16 போன்ற வசனப்பகுதிகள் கிறிஸ்து தன்னைப் பாவிகளுக்காக சிலுவையில் ஒப்புக்கொடுத்தது அவர்களை நித்திய நரகத்தில் இருந்து விடுவிப்பதற்கு என்ற மாற்றுக் காரணத்தை முன்வைக்கின்றன என்பது உண்மைதான். நித்திய நரகத்தை அனுபவிப்பதில் இருந்து பாவிகளை விடுவிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரே வழி தேவகுமாரனைக் கடவுள் அவர்களுக்காக அனுப்பிவைத்ததுதான். இருந்தபோதும், இதைத்தவிர அவர் வேறு எதையும் செய்திருக்க முடியாது என்ற மேலதிக உண்மையை இந்தப் பகுதி விளக்குவதை ஒருவராலும் மறுதலிக்க முடியாது.
- வேறு சில வேதப்பகுதிகளான எபிரெயர் 1:1-3; 2:9-18; 9:9-14; 22-28 ஆகியவை, கிறிஸ்துவின் பூரணத்துவமான தனித்துவம் கொண்ட குணாதிசயங்களிலேயே அவருடைய சிலுவைபலியின் நிறைவேற்றமும், வெற்றியும் தங்கியிருப்பதாக விளக்குகின்றன. நாம் உறுதிப்படுத்தப்படும்படியாக விளக்கிக்கொண்டிருக்கும் உண்மையை நிரூபிக்க இந்தக் காரணம் மட்டுமே போதாது. இருந்தபோதும் இந்தப் பகுதிகளை ஆழ்ந்து, ஆராய்ந்து கவனிக்கும்போது அவை மேலும் தெளிவான உண்மைகளை வெளிப்படுத்துவதைக் கவனிக்கலாம். இந்தப் பகுதிகள் அனைத்தும் கிறிஸ்துவின் பாவநிவாரணபலியின் பூரணத்துவத்தையும், முடிவையும், நிலையான தொடரும் பயன்பாட்டையும் வலியுறுத்துவனவாக இருக்கின்றன. பாவநிவாரணபலியின் அத்தகைய குணாதிசயங்கள் பாவம் எந்தளவுக்கு கோரமானது என்பதையும், இரட்சிப்பின் நிறைவேற்றத்திற்கு பாவம் அடியோடு அகற்றப்படவேண்டியது எந்தளவுக்கு முக்கியமானது என்பதையும் விளக்குகின்றன. இந்தக் காரணிகளே எபிரெயர் 9:23க்கு அதிக பலமளிக்கின்றன.
ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே.
பரலோகத்திலுள்ளவைகளுக்கு சாயலானவைகள் மிருகங்களைப் பலிகொடுப்பதன் மூலம் சுத்திகரிக்கப்படவேண்டியதாக இந்த உலகத்தில் இருந்தபோதும், பரலோகத்திலுள்ளவைகளுக்கு இவற்றைவிட விசேஷமான குமாரனின் இரத்தப்பலி மூலம் மட்டுமே சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது என்று இந்த வசனம் கூறுகிறது. இயேசுவின் இரத்தப்பலி மூலம் மட்டுமே இது நடக்கக்கூடியதாக இருக்கிறது என்பதை இந்த வசனம் ஆணித்தரமாக விளக்குகிறது. அந்தவகையில் இயேசுவின் இரத்தம் மட்டுமே இந்தப்பலிக்கு ஏற்றதாக இருப்பதற்குக் காரணம், இயேசு பிதாவின் குமாரனாக இருப்பதும், பிதாவின் மகிமையைக் கொண்டிருப்பதும், பிதாவின் குணாதிசயத்தை அப்பட்டமாகத் தன்னில் கொண்டிருப்பவராக இருப்பதும்தான். அவருடைய ஒரேதடவையான பூரணமான சிலுவைபலி மட்டுமே பரிசுத்தமாக்கப்படுகின்ற அனைவரையும் பூரணர்களாக்கும் வல்லமையைக் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த வசனங்கள் விளக்கும் தகுதிகளைக் கொண்டிருக்கும் ஒருவர், அத்தகைய பூரணமான பலியைச் செலுத்துவதன் மூலம் மட்டுமே பாவத்தை அழித்து, பரிசுத்தமான தெய்வீக சந்நதியில் நிற்கும்படியாக அநேக பிள்ளைகளைக் கொண்டு நிறுத்தும் பாவநிவாரணத்தை நிறைவேற்ற முடியும் என்று கூறுவது சரியானதே. என்ன நோக்கங்களுக்காகவும், முடிவுக்காகவும் இயேசு இரத்தஞ்சிந்த வேண்டியிருந்ததோ அந்த நோக்கங்கள் நிறைவேற பாவநிவாரணபலி அவசியமாக இருந்தது.
இவை தவிர எபிரெயர் 9:9-14; 22-28 ஆகிய வசனங்களும் இந்த உண்மைகளை விளக்கப் பயன்படுகின்றன. இந்தப் பகுதிகள் முக்கியமாக லேவியராகமத்தில் விளக்கப்பட்டிருக்கும் பலிகளைச் சுட்டிக்காட்டும் கிறிஸ்துவின் பாவநிவாரணபலியின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. நாம் எப்போதுமே லேவியராகமப் பலிகள் அனைத்தும் கிறிஸ்துவின் பலிகளைச் சுட்டிக்காட்டுபவையாக இருப்பதாகக் கவனித்திருக்கிறோம். லேவியராகமப் பலிகள் கிறிஸ்துவின் பலியின் விசேஷ தன்மைகளை சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்களான பாவத்தைக் கழுவுதல், கோபநிவாரணம், ஒப்புரவாக்குதல் ஆகியவற்றை விளக்குவனவாக இருக்கின்றன. ஆனால், இந்தவிதத்திலான விளக்கத்தைத் தருவதாக எபிரெயர் 9 காணப்படவில்லை. எபிரெயர் 9, பரலோகத்தில் உள்ளவைகளுக்கு சாயலானவைகளை விளக்குபவையாக லேவியராகமப்பலிகள் இருப்பதாகக் காட்டுகின்றன. இதை 9:23ல் காண்கிறோம். லேவியராகமப்பலிகள் இரத்தபலியைக் கொண்டதாக ஏற்படுத்தப்பட்டதற்குக் காரணம், அதற்கு சாயலாக இருக்கும் பரலோகச் சுத்திகரிப்பும் அதேமுறையில் இரத்தப்பலியைக் கொண்டதாக இருக்கும் என்பதற்காகத்தான். பரலோகச் சுத்திகரிப்பு இரத்தப்பலியின் மூலமாக இருப்பது அவசியமாகக் காணப்படுவதால்தான் லேவியராமகப்பலிகள் அதேவிதமான இரத்தப்பலியை அவசியமாகக் கொண்டவையாக அமைந்திருக்கின்றன. இந்த இடத்தில் நம் மனதில் எழ வேண்டிய முக்கியமான கேள்வி எது தெரியுமா? பரலோக சுத்திகரிப்புக்கு அத்தகைய இரத்தப்பலியின் அவசியம் என்ன? என்பதுதான். அது யூகத்தின் காரணமாக உருவானதா அல்லது கட்டாயத்தின் காரணமானதா? கீழ்வரும் விளக்கங்கள் அதற்குப் பதிலளிப்பவையாக இருக்கின்றன.
(அ) எபிரெயர் 9ஐ, அந்தப் பகுதியின் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் ஆராயும்போது, அது பாவமும், அதன் விளைவுகளுமே நிலைத்திருந்து தொடரும் பலாபலன்களை அளிக்கும் கிறிஸ்துவின் பலியின் அவசியத்திற்கான காரணிகளை நிர்ப்பந்திக்கின்றன என்பதை விளக்குவதாக இருக்கின்றது. அந்தக் காரணிகள் வெறும் யூகமல்ல; அவை உறுதியானவையும் கட்டாயமானவையுமாகும். பாவத்தின் விளைவுகளும் அதை அகற்றுவதற்கான அவசியமும் உண்டாக்கும் தத்துவார்த்தமான வாதம், யூகத்தின் அடிப்படையிலான அவசியம் என்ற வாதத்தோடு பொருந்திப்போகவில்லை. பாவத்தின் கோரத்தன்மை, கடவுள் அதை அழித்துக் கழுவுவதை தவிர்க்கமுடியாததாக்குகிறது; அதாவது அவசியமான கட்டாயமாக்குகிறது.
(ஆ) இந்தப் பகுதி வெளிப்படுத்தும் இன்னொரு உண்மை, கிறிஸ்துவின் பாவநிவாரணபலி சிலுவையில் நிகழ்ந்த விதமும், அதன் பலாபலன்களும் கிறிஸ்துவின் பூரணத்துவத்தில் முழுமையாகத் தங்கியிருக்கின்றன என்பதாகும். பாவத்தை அழிப்பதற்கான அத்தகைய பாவநிவாரணபலி அவசியமாக இருந்தால் அவரைத் தவிர வேறு எவருமே அதை நிறைவேற்றியிருக்க முடியாது.
(இ) இந்தப் பகுதியில் கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தோடு தொடர்புடையதாக காணப்படும் பரலோகத்துக்குரிய அம்சங்கள் உண்மையானவை என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த ஒப்பீட்டை ஆராய்ந்து பார்க்கும்போது பரலோகத்துக்குரியவை இந்த உலகத்துக்குரியவைகளோடு ஒப்பிடப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது நித்தியமானவைகள் அழிந்துபோகப்போகிறவைகளோடு ஒப்பிடப்பட்டிருக்கின்றன; பூரணமானவைகள் பூரணமற்றவைகளோடு ஒப்பிடப்பட்டிருக்கின்றன. என்றும் நிலைத்திருப்பவைகள் நிலைத்திருக்காதவைகளோடு ஒப்பிடப்பட்டுள்ளன. கிறிஸ்துவின் பாவநிவாரணபலியை நித்தியமானதாகவும், முடிவானதாகவும், பரலோகத்துக்குரியதாகவும் அதனுடைய குணாதிசயங்களின்படி புரிந்துகொள்ளுகிறபோது, கடவுளின் அநேக பிள்ளைகளை மகிமைக்குக் கொண்டுவருவதற்கான அவருடைய திட்டத்தின் நிறைவேற்றுதலை அனுமானத்தின் அடிப்படையில் மட்டும் அவசியமானதாகக் காண்கிற நிலை உருவாவதில் ஆச்சரியமில்லை. கிறிஸ்துவின் பாவநிவாரணபலியை அனுமானத்தின் அடிப்படையில் மட்டும் அவசியமானதாகக் கண்டால் அதோடு தொடர்புடைய அத்தனைப் பரலோகத்துக்குரியவைகளையும் அந்த அடிப்படையிலேயே கருதவேண்டி வரும். அத்தகைய வாதம் முறையானதும், சரியானதும் அல்ல.
எபிரெயர் 9:23ன்படி, பாவத்தை அழிப்பதற்காக கிறிஸ்து இரத்தம் சிந்துதல் (14, 22, 26) அவசியமான கட்டாயமாக விளக்குகிறது; அது அனுமானத்தின் அடிப்படையிலானதல்ல. அதில் சந்தேகப்படுவதற்கோ, அல்லது அதை நிரூபிப்பதற்கோ எந்த அவசியமும் இல்லை.
- கிருபையை ஆதாரமாகக் கொண்டு, அவசியமான கிறிஸ்துவின் பாவநிவாரணபலியைத் தன்னுள் உள்ளடக்கியுள்ள இரட்சிப்பு, ஒருவருக்குப் பாவத்திலிருந்து விடுதலை அளித்து, அவரைப் பரிசுத்தமாக்கி கடவுளோடு ஐக்கியத்தை உண்டாக்கும் இரட்சிப்பாகும். பரிசுத்தமாக்குதலோடும், கடவுளுடைய நீதியோடும் சம்பந்தமுடையதாக இந்த இரட்சிப்பை நாம் பார்ப்போமெனில், அது பாவமன்னிப்பை மட்டும் அளிக்கின்றதாக இல்லாமல் நீதியையும் சம்பாதித்துத் தருவதாக இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய நீதிமானாக்குதல் இரட்சிப்படைவதற்கு முன் நாம் கண்டனத்துக்குரியவர்களாகவும், குற்றவாளிகளாகவும் இருப்பதாக நம்மை எதிர்கொள்ளுகிறது என்பதையும் நாம் கவனத்தில் வைப்பது அவசியம். அத்தகைய நிலைமையில் இருந்து நம்மை விடுவிப்பதற்காக அந்த நீதிமானாக்குதல் நீதியை நமக்காக சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. கிருபை ஆளுகின்றபோதும், நீதியைச் சம்பாதிக்காத கிருபை மெய்யானதல்ல; அத்தகைய கிருபை இருக்கமுடியாது. அத்தகைய நீதி பாவிகளை நீதிமானாக்க முடியுமா? என்ற கேள்விக்குப் பதிலளிப்பது அவசியம். நம்முடைய நிலைமையில் இருந்து நம்மை விடுவிக்கக்கூடியதும், நீதிமானாக்குதலுக்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றக்கூடியதுமான நீதி கிறிஸ்துவின் நீதியாக மட்டுமே இருக்க முடியும். அத்தகைய நீதி கிறிஸ்துவின் கீழ்ப்படிதலையும், அவர் மனிதனாகப் பிறந்து மரித்து உயிர்த்தெழுவதையும் அவசியமாக்குகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால், நீதிமானாக்குதலுக்கு பாவநிவாரணபலி மிகவும் அவசியமாக இருப்பது மட்டுமல்லாமல், அதில்லாமல் நீதிமானாக்குதல் நிகழவழியில்லாதபடி அதை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. நீதிமானாக்குதல் இல்லாமல் பாவிகளுக்கு இரட்சிப்பிருக்க வழியில்லை; அதேவேளை மீட்பர் சம்பாதித்துத் தரும் கடவுளின் நீதியில்லாமல் பாவிகள் நீதிமான்களாவதற்கும் வழியில்லை. பவுல் கலாத்தியர் 3:21ல் சொல்லுவதைக் கவனியுங்கள்,
அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.
இதன் மூலம் பவுல், கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் மூலம் அல்லாமல் நியாயப்பிரமாணத்தின் மூலம் நீதிமானாக்குதல் நிகழ்ந்திருக்குமானால் அப்படியே ஆகியிருக்கும் என்கிறார். அதை அவர் சொல்லுவதற்குக் காரணம் நீதிமானாக்குதல் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது என்பதை வலியுறுத்துவதற்காகத்தான்.
- கிறிஸ்துவின் சிலுவையே கடவுளின் அன்பை வெளிப்படுத்தும் உச்சகட்ட நிகழ்வாக இருக்கிறது (ரோமர் 5:8; 1 யோவான் 4:10). கிறிஸ்து தன்மேல் சுமந்து நிறைவேற்றியிருக்கும் அதிக பாரமுள்ள சிலுவைபலி அதன் மூலம் அவர் காட்டியிருக்கும் அன்பின் மேன்மையை வெளிப்படுத்துகிறது. இதையே பவுல் ரோமர் 8:32ல் விளக்குகிறார்,
தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?
கிறிஸ்துவின் சிலுவைத்தியாகம் அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தி எல்லையற்ற ஈவுகளையெல்லாம் அவர் நமக்கு அள்ளித்தரக்கூடியவராக இருக்கிறார் என்பதை இந்த வசனம் உணர்த்துகிறது.
இருந்தபோதும் அத்தகைய விலைமதிப்பற்ற பாவநிவாரணபலி அவசியமில்லாதிருந்திருக்குமானால் சிலுவைபலி கடவுளின் உன்னதமான அன்பை வெளிப்படுத்தியிருக்குமா? என்று கேட்பது அவசியம். தெய்வீகப் பேரன்பின் உச்சகட்ட அடையாளமாக கிறிஸ்துவின் சிலுவைபலி நிறைவேற்றப்பட்டிருப்பதற்கான ஒரே காரணம், அதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களுக்கு கிறிஸ்துவின் பலியைத் தவிர வேறு எதுவும் அவசியமானதாக இருந்திருக்க முடியாது என்பதுதான் என்ற முடிவுக்கே நம்மால் வரமுடிகிறது. இந்த அடிப்படையிலேயே யோவான், 1 யோவான் 4:10 தந்திருக்கும் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.
நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் (கோபநிவாரணபலி) தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
கிறிஸ்துவின் சிலுவைபலி இல்லாதிருந்தால் கல்வாரிச் சிலுவையினதும், அதனுடைய உச்சகட்ட அன்பினதும் உட்கருத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுவதற்குத் தேவையான அம்சங்கள் இல்லாமல் போயிருக்கும்.
- இறுதியாக, சிலுவைபலியின் அவசியத்தை கடவுளின் நீதி நிறைவேற்றப்பட்ட முறையில் இருந்தும் அறிந்துகொள்ளலாம். பாவம் கடவுளுக்கு எதிரானதாக இருப்பதால் அவர் அதற்கெதிராகத் தன்னுடைய பரிசுத்தக் கோபத்தைக் காட்டுவது அவசியம். அதாவது தெய்வீக நீதியின் மூலம் பாவம் அழிக்கப்படவேண்டும். (நாகூம் 1:2; ஆபகூக் 1:13; ரோமர் 1:17; 3:21-26; கலாத்தியர் 3:10, 13). இத்தகைய மீறமுடியாத கடவுளின் நியாயப்பிரமாணத்தின் பரிசுத்தமும், பரிசுத்தத்தின் எதிர்பார்ப்புகளின் மாறாத்தன்மையும், சற்றும் மாற்றமடையமுடியாத நீதியின் கட்டளைகளும், பாவத்தில் இருந்து இரட்சிப்படைவதற்கு அதிலிருந்து கழுவப்படுவதையும், கோபநிவாரணபலியையும் (கிருபாதாரபலி) தவிர்க்கமுடியாதபடி செய்துவிடுகிறது. இந்த உண்மையே, மகிமையின் தேவனின் பலியையும், கெத்சமனேயில் அவர்பட்ட துன்பத்தையும், கல்வாரிச் சிலுவையில் அவர் நிராகரித்துக் கைவிடப்பட்டதற்கான காரணத்தையும் விளக்குகிறது. இந்த உண்மையே, கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு கடவுள் நீதியானவராகவும், நீதியை சம்பாதித்துத் தருகிறவராகவும் இருக்கிறார் என்பதன் உள்ளர்த்தங்களைப் புரிந்துகொள்ளச் செய்கிறது. கிறிஸ்துவின் கீழ்ப்படிவே பரிசுத்தத்தையும், நீதியின் கட்டளைகளையும் முழுமையாக நிறைவேற்றுவதாக இருக்கிறது. கடவுள் தன்னுடைய நீதியை வெளிப்படுத்துவதற்காக கிறிஸ்துவை கோபநிவாரண பலியாக்கினார்.
முடிவாக . . .
மேலே நாம் ஆராய்ந்து விளக்கியிருக்கும் காரணங்களுக்காக கிறிஸ்துவின் பாவநிவாரணபலி மிகவும் அவசியமான, கட்டாயமான சிலுவைத் தியாகமாக கடவுளின் திட்டத்தில் அமைந்திருக்கிறது. இது எந்த அனுமானத்தின் அடிப்படையிலானதுமல்ல. கடவுள் எதையும் செய்யக்கூடியவராகவும், அவற்றை எந்தவிதத்திலும் செய்யக்கூடியவராகவும் இருந்தபோதிலும், அவருடைய பரிபூரணமான, பரிசுத்த அன்பின் அடிப்படையிலான திட்டத்தின்படி, அந்தத் திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றக்கூடிய பூரணமான நியமமாக கிறிஸ்துவின் கோபநிவாரணபலி மட்டுமே அமைந்துகாணப்படுகின்றது. வேறு எந்தவிதத்திலும் கடவுள் தன்னுடைய அன்பின் திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றியிருக்க வழியில்லை. அவருடைய பூரணப்பரிசுத்தம், ஆற்றல், ஞானம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரே தன் சித்தத்தின்படி உருவாக்கி நிறைவேற்றியிருப்பதே கிறிஸ்துவின் கோபநிவாரணபலியான மீட்புக்குரிய சிலுவைத் திட்டம். அதைத்தவிர வேறெதுவும் கடவுளின் மக்களுக்கு மீட்பைப் பெற்றுத்தந்திருக்க முடியாது. இந்தக் காரணங்களனைத்தும் அனுமானத்தின் அடிப்படையிலான தேவை என்ற கருதுகோளை வல்லமையற்ற, பொருத்தமற்ற வாதமாக்குகிறது. ஒருபுறம் பாவத்தின் கோரத்தன்மையும், மறுபுறம் அதை அழிப்பதற்கான ஒரே வழியான சிலுவைபலியும், அந்தப் பலியை நிறைவேற்றப் பூரணத்தகுதி பெற்றவராக கிறிஸ்து மட்டுமே இருப்பதும், தெய்வீக அன்பின் பூரணவெளிப்பாடாக இந்தச் சிலுவைபலி செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தோடு தொடர்புடைய இத்தனை அம்சங்களையும் கணக்கில் எடுக்க அனுமானத்தின் அடிப்படையிலான அவசியமாகிய வாதம் தவறிவிடுகிறது. தேவ அன்பின் மகத்துவத்தை கிறிஸ்துவின் கோபநிவாரணபலியில் மட்டுமே நாம் பார்க்கிறோம்.
கீழ்ப்படிவின் தேவகுமாரன்
கிறிஸ்துவின் பாவநிவாரணபலி மகத்தானது. மீட்பின் நிறைவேற்றத்துக்கு எந்தளவுக்கு அது கட்டாயமானதாக, அவசியமானதாக இருக்கிறது என்று வேதம் சுட்டுவதை ஏற்கனவே கவனித்திருக்கிறோம். இனி அந்தப் பாவநிவாரணபலிபற்றி வேதம் கொடுக்கும் விளக்கங்களை ஆராய்வோம். அந்த விளக்கங்களை வேதம் ஒரே பகுதியில் தராமல் பல்வேறு பகுதிகளில் பரவலாகத் தந்திருப்பதால் அவற்றையெல்லாம் முறையாகத் தொகுத்து ஆராய்வது அவசியமாகிறது. பாவநிவாரணபலியைப்பற்றி வேதம் விளக்கும்போது சில முக்கியமான பதங்களைப் பயன்படுத்தி அதுபற்றிய ஆழமான சத்தியங்களை விளக்குவதைப் பார்க்கிறோம். அத்தகைய பதங்களாக பலி, கோபநிவாரணபலி, ஒப்புரவாக்குதல், மீட்பு ஆகியவை இருப்பதைக் கவனிக்கிறோம். கோபநிவாரணபலி என்ற வார்த்தையை நாம் தமிழ் வேதத்தில் காணமுடியாது. அது நான் உருவாக்கியிருக்கும் பதம். Propitiation என்று ஆங்கிலப் பதத்தை தமிழ் வேதம் (பழைய திருப்புதல்) கிருபாதாரபலி என்று மொழிபெயர்த்திருக்கிறது. இந்த வார்த்தை Propitiation என்ற பதத்திற்கான சரியான மொழிபெயர்ப்பு இல்லை. கிரேக்க வார்த்தையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்த ஆங்கில வார்த்தையின் சரியான மொழிபெயர்ப்பு கோபநிவாரணபலி என்பதே. அதுவே Propitiation என்ற பதம் விளக்கும் அடிப்படை உண்மைகளை வெளிக்கொணருவதாக இருக்கிறது. இது தவிர ஒப்புரவாக்குதல், மீட்பு ஆகிய பதங்களும் கிறிஸ்து நிறைவேற்றிய பாவநிவாரணபலியில் அடங்கிக் காணப்படும் ஆழமான உண்மைகளை வெவ்வேறு கோணத்தில் விளக்குகின்றன. இவையெல்லாவற்றையும் உள்ளடக்கி விளக்கக்கூடிய ஒரு பதத்தை நாம் வேதத்தில் தேடிப்பார்த்தால் நமக்குக் கிடைக்கும் வார்த்தையாக ‘கீழ்ப்படிவு’ அமைகின்றது.
தேவகுமாரனாகிய கிறிஸ்து பிதாவுக்குக் கீழ்ப்படிந்து நிறைவேற்றிய அத்தனைப் பணிகளையும் விளக்குகின்றதாக அவருடைய கீழ்ப்படிவு காணப்படுகின்றது. வேதத்தின் பல்வேறு பகுதிகளில் பரவிக்காணப்படும் இந்தப் போதனை, கிறிஸ்துவின் பணிகளனைத்தையும் ஒருசேர விளக்கும் அம்சமாக இருக்கின்றது என்று நாம் உறுதியாகக் கூறமுடியும். இது எந்தளவுக்கு உண்மையானது என்பதைப் பழைய ஏற்பாட்டின் ஒரு வேதப்பகுதியான ஏசாயா 53 தெளிவாகச் சுட்டுகிறது. அந்தப் பகுதி கிறிஸ்துவின் மானுட வாழ்க்கையின் துன்பங்களை விபரித்து அவரை துன்புறுத்தலுக்கான ஊழியராக நம்முன் கொண்டு நிறுத்துகிறது. கிறிஸ்து ஊழியராகவே நம்முன் நிறுத்தப்படுகிறார் என்பதை ஏசாயா 52:11ல் காண்கிறோம், “இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.”
இங்கே ஆங்கில வேதத்தில் servant என்று காணப்படும் பதம் தமிழில் ‘தாசன்’ என்றிருக்கிறது. அது வடமொழி கலந்த பழந்தமிழ். இதை இன்றைய தமிழில் வேலையாள், ஊழியன் என்று கூறலாம். அதாவது, ஒருவருக்குக் கீழிருந்து அவருக்குக் கீழ்ப்படிந்து பணிசெய்கிறவர் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இங்கே இயேசு ஊழியராக வர்ணிக்கப்படுகிறார். அவர் ஊழியராக இருந்தே அநேகரை நீதிமான்களாக்குகிறார் என்கிறது ஏசாயா 53:11, “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்.”
இதுபற்றி நமக்கு எந்தவித சந்தேகமும் உண்டாகாதபடி இயேசு கிறிஸ்து தன்னுடைய வார்த்தைகளினாலேயே தான் மானுடப் பிறப்பெடுத்ததற்கான நோக்கத்தை யோவான் 6:38ல் விளக்குகிறார், “என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.”
தன்னுடைய பணிகள் அனைத்திலும் மீட்பின் நிறைவேற்றத்திற்கான உச்சகட்ட இறுதிப்பணிபற்றி இயேசு விளக்கும்போது, யோவான் 10:17-18ல் கூறுகிறார், “நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.”
கிறிஸ்து மட்டுமல்ல, அவருடைய கீழ்ப்படிவைப் பவுல் அப்போஸ்தலன் தன்னுடைய வார்த்தைகளில் ரோமர் 5:19ல் விளக்குகிறார், “அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.”
மேலும் பவுல் பிலி 2:7-8ல் இதைப்பற்றி எழுதியிருப்பதைக் கவனியுங்கள்,
7தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். 8அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
கலாத்தியர் 4:4-5ல் இதுபற்றி விளக்கும் பவுல், “நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரியினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்” என்கிறார்.
இதுவரை நாம் கவனித்துள்ள கிறிஸ்துவின் கீழ்ப்படிவுபற்றி எபிரெயருக்கு எழுதியவரும் தனக்கே உரிய முறையில் 5:8-10 வரையுள்ள வசனங்களில் விளக்குகிறார், “அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.”
மேலும் எபிரெயர் 2:10ல் பின்வரும் விளக்கத்தைக் காண்கிறோம்.
ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.
அநாதி காலத்தில் அன்பின் அடிப்படையில் திரித்துவ தேவன் திட்டமிட்ட மீட்பின் நிறைவேற்றத்திற்காக இயேசு கிறிஸ்து பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அனைத்தையும் நிறைவேற்றவேண்டியிருந்தது. அத்தகைய கீழ்ப்படிவை அவர் தன்னுடைய மானுடத்தின்மூலம் நிறைவேற்றவேண்டியிருந்தது. இது நினைத்துப் பார்ப்பதற்கே பேராச்சரியத்தைத் தரும் தெய்வீக உண்மை. முதலில், தேவனாக எப்போதும் இருந்த அவர் கீழ்ப்படிய வேண்டியிருந்ததை நினைத்துப் பாருங்கள். பாவத்தைத் தன்னில் கொண்டிராத அவர் மானுடத்தில் கீழ்ப்படிய வேண்டியிருந்தது மட்டுமல்ல, அவருடைய கீழ்ப்படிவு பூரணமானதாக இருக்கவேண்டிய அவசியமும் இருந்தது. பாவிகளாகிய நாம் கீழ்ப்படிவைக் கற்றுக்கொள்ளுகிறபோது, தவறுகளைச் செய்து திருந்திக் கீழ்ப்படிவைக் கற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆனால், கிறிஸ்துவைப் பொறுத்தளவில் அவர் தவறுகள் செய்வதற்கு எந்த வழியும் இல்லை. பூரணமான தெய்வீகத்தோடும், மானுடத்தோடும் இருந்த தேவகுமாரன் அந்நிலையில் தன்னுடைய மானுடத்தில் கீழ்ப்படிவைக் கற்றுக்கொண்டார் என்கிறார் எபிரெயருக்கு எழுதியவர். இது நமக்கு மலைப்பை ஏற்படுத்தும் தேவஇரகசியம். பிறந்து, பிள்ளைப்பருவத்தை அடைந்த இயேசு சிறிது சிறிதாக கீழ்ப்படிவைத் தன் வாழ்க்கையில் கற்றுக் கீழ்ப்படிந்திருக்கிறார். அவருடைய தெய்வீகம் எந்தவிதத்திலும் அவருடைய மானுடத்தின் கீழ்ப்படிவினால் குறைவடையவோ, அல்லது பூரணக் கீழ்ப்படிவை இலகுவாக்கவோ, அல்லது அதற்குத் தடையாகவோ இருந்ததில்லை. அவர் தன் மானுடத்தில் மன, உளரீதியிலும், ஆத்துமாவிலும், சரீரரீதியிலும் கீழ்ப்படிவைக் கற்றுக்கொண்டு பிதாவின் கட்டளைகளனைத்தையும் நிறைவேற்றியிருக்கிறார். இப்படியாக இயேசு வாழ்ந்தது எத்தனை பெரிய ஆசீர்வாதத்தை நமக்குக் கொண்டுவந்திருக்கிறது தெரியுமா? அவர் பூரணமாகக் கீழ்ப்படியக் கற்றுக்கொண்டு, அதில் வளர்ந்து கீழ்ப்படிந்தது, இரட்சிப்படைந்த நாம் அதேவிதத்தில் கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழும் வல்லமையைத் தந்திருக்கிறது. கிறிஸ்தவனால் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடிவதற்குக் காரணம் கிறிஸ்து அப்படி வாழ்ந்து மானுடத்தில் வெற்றிகண்டிருப்பதால்தான்.
கிறிஸ்துவின் கீழ்ப்படிதலைப் பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் பார்ப்பது வழக்கம். முதலாவது, நேரடிக் கீழ்ப்படிதல் (Active Obedience). இரண்டாவது, சுமக்கும் கீழ்ப்படிதல் (Passive Obedience). இங்கே ஆங்கில வார்த்தைகளுக்கு எழுத்துரீதியிலான மொழிபெயர்ப்பைக் கொடுக்காமல் அவை விளக்கும் உள்ளர்த்தங்களின்படி வார்த்தைகளைத் தந்திருக்கிறேன். ஆண்டவருடைய கீழ்ப்படிதலில் இருவகைகள் உள்ளன. முதலாவது, பிதாவின் கட்டளைகளனைத்தையும், தீர்க்கதரிசனங்களையும் அவர் தன் வாழ்வில் ஆர்வத்தோடும், ஊக்கத்தோடும் கீழ்ப்படிந்து நிறைவேற்ற வேண்டும். மீட்பை நிறைவேற்ற இது மிகவும் அவசியம். அப்படியான இந்தக் கீழ்ப்படிவையே நான் நேரடிக் கீழ்ப்படிதல் என்று விளக்கியிருக்கிறேன். இரண்டாவதாக, மீட்பின் நிறைவேறுதலுக்காக கிறிஸ்து வாழ்வில் பல்வேறு துன்பங்களையும், இறுதியில் சிலுவைத் துன்பத்தையும், மரணத்தையும் அவற்றிற்குத் தம்மை முழு மனத்தோடு ஒப்புக்கொடுத்து சுமக்க வேண்டும். இதை சுமக்கும் கீழ்ப்படிதல் என்று விளக்கியிருக்கிறேன். இந்த இருவகைக் கீழ்ப்படிதலும் மீட்பு நிறைவேற அவசியமானவை.
மேலே பார்த்துள்ள கிறிஸ்துவின் கீழ்ப்படிவைப்பற்றிய தவறான எண்ணங்களை நம்மனதில் இருந்து அகற்றிக்கொள்ளுவது அவசியம். (1) சுமக்கும் கீழ்ப்படிவை நாம் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் Passive என்ற வார்த்தை தவறாகப் புரிந்துகொள்வதற்கு இடங்கொடுத்துவிடுகிறது. வார்த்தைகளுக்கு எப்போதுமே பல அர்த்தங்கள் இருப்பதும் நாம் அறிந்ததே. அதுவும் வார்த்தைகளை எப்படி எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தும் அவற்றின் பொருள் மாறும். Passive Obedience என்ற பதம் ஒன்றும் செய்யாமல் இருந்துவிடுகிற கீழ்ப்படிவு என்று தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. அதாவது இந்தத் துன்பங்கள், அவருடைய விருப்பமில்லாமல், அவருடைய செய்கைகள் எதுவும் இல்லாமல் அவர் மேல் சுமத்தப்பட்டதாகவும், அதற்கு அவருடைய பங்கு எதுவுமில்லை என்றும், அவர் வேட்டையாடப்பட்ட இரைபோல என்று எண்ணிவிடக்கூடாது. இப்படி எண்ணுவது கீழ்ப்படிவின் கருத்தையே மாற்றிவிடும். விருப்பமில்லாமல், ஈடுபாடில்லாமல் செய்கின்ற எதுவும் கீழ்ப்படிவாக இருக்கமுடியாது. அதனால்தான் ‘சுமக்கின்ற கீழ்ப்படிவு’ என்று Passive Obedience க்கு விளக்கம் தந்தேன். அவர் துன்பங்களையும், பாரங்களையும், ஏன், மரணத்தையும் தன்னில் சுமந்து கீழ்ப்படிந்தார். அப்படி அவற்றை சுமந்தபோது அவையெல்லாவற்றையும் பூரண விருப்பத்தோடும், பூரண ஈடுபாட்டோடும் சுமந்தார். தன்னுடைய சரீரத்தைப் பற்றிச் சொல்லும்போது ‘தானே தன் சரீரத்தை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பேன், அதை எவரும் என்னிடம் இருந்து எடுத்துவிட முடியாது’ என்று இயேசுவே கூறியிருக்கிறார். அவருடைய கீழ்ப்படிவு மரணத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதுவரை போயிருக்கிறது என்று பவுல் விளக்கியிருக்கிறார். இதையும் நாம் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. அதாவது, அவருடைய கீழ்ப்படிவு மரணம்வரையும் போகவில்லை, மாறாக அவர் தன்னுடைய ஆவியைத் தானே விடுகிறவரை அவர் மரணத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார். அவருடைய சுமக்கும் கீழ்ப்படிவு முழுமையானது; முழு ஈடுபாட்டோடு அவரால் நிறைவேற்றப்பட்டது. கிறிஸ்து மீட்பை நிறைவேற்ற பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தபோது தன்னுடைய மனம், சித்தம், சிந்தனை, சரீரம் அனைத்திலும் அவற்றை உணர்ந்து, தன்னுடைய பொறுப்புக்களை முழுமையாக அறிந்திருந்து, விருப்பச் சித்தத்தோடும், வைராக்கியத்தோடும், ஆர்வத்தோடும் கீழ்ப்படிந்தார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே அவருடைய சுமக்கும் கீழ்ப்படிவைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்ற Passive என்ற பதத்தை நாம் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. அவர் அனைத்துத் துன்பங்களையும் தன்னில் சுமந்து அனுபவித்து மரணத்திற்கு முழுவிருப்பத்தோடும், ஈடுபாட்டோடும் தன்னை ஒப்புக்கொடுத்த சுமக்கும் கீழ்ப்படிவு அவருடைய கீழ்ப்படிவுகளின் ஒருபகுதி; முக்கிய பகுதி. மீட்பின் நிறைவேற்றத்திற்கு அது அவசியமானது.
(2) அடுத்ததாக கிறிஸ்துவின் வாழ்க்கையில் அவருடைய கீழ்ப்படிவை ஆராயும்போது, அதில் ஏதாவதொரு பகுதியை எடுத்து இது நேரடிக் கீழ்ப்படிவு, இது சுமக்கும் கீழ்ப்படிவு என்று அந்தச் செய்கைகளைப் பகுதி பகுதியாகப் பிரித்து விளக்க முடியாது; கூடாது. அதற்காகவல்ல இந்தப் பதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது. அவருடைய நேரடிக் கீழ்ப்படிவுக்கும், சுமக்கும் கீழ்ப்படிவுக்கும் இடையிலுள்ள வேறுபாடு அவை நிகழ்ந்த குறிப்பிட்ட காலம் சம்பந்தப்பட்டதல்ல. அவருடைய பூரணக்கீழ்ப்படிவின் அத்தனைப் பகுதிகளுமே நேரடிக்கீழ்ப்படிவு, சுமக்கும் கீழ்ப்படிவு என்ற முறையில் விளக்கப்படுகின்றன. ஆகவே, கிறிஸ்துவின் நேரடிக்கீழ்ப்படிவு அவருடைய கீழ்ப்படிவுள்ள வாழ்க்கையைக் குறிப்பதாகவும், அவருடைய சுமக்கும் கீழ்ப்படிவு அவர் பட்ட சிலுவைத் துன்பங்களையும், மரணத்தையும் குறிப்பதாகவும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது.
எதற்காக நேரடிக் கீழ்ப்படிவு, சுமக்கும் கீழ்ப்படிவு ஆகிய பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன? என்ற கேள்வி இங்கு அவசியமாகிறது. இந்தப் பதங்கள், கிறிஸ்து பாவிகளுக்காகத் தன்னைப் பலியாகக் கொடுத்த கீழ்ப்படிவின் வெவ்வேறுபட்ட அம்சங்களை விளக்கவே பயன்படுத்தப்படுகின்றன. இதைப் புரிந்துகொள்ளுவதற்கு நாம் கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைப்பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். நியாயப்பிரமாணம், இருவிதமான அம்சங்களைத் தன்னில் கொண்டிருக்கிறது. அதாவது, குற்றங்களுக்கான தண்டனைகளையும், நேர்மறையான கட்டளைகளையும் அவை உள்ளடக்கியுள்ளன. நியாயப்பிரமாணம், நேர்மறையான கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதோடு, சகலவிதமான குற்றங்களுக்கும், பாவங்களுக்குமான தண்டனைகளை சுமப்பதையும் வற்புறுத்துகிறது. நேரடிக் கீழ்ப்படிவு, சுமக்கும் கீழ்ப்படிவு என்று பிரித்து கிறிஸ்துவின் கீழ்ப்படிவை ஆராய்கிறபோது நியாயப்பிரமாணத்தின் மேற்குறிப்பிட்ட இரண்டு அம்சங்களையுமே அவற்றின் மூலம் விளக்குகிறோம். கிறிஸ்து, தம்முடைய மக்களுக்கான ஆசாரியராக வந்து அவர்களுடைய பாவங்களுக்கான சாபமாகவும், குற்றவாளியாகவும் இருந்ததோடு, நியாயப்பிரமாணத்தின் நேர்மறையான கட்டளைகளையும் நிறைவேற்றினார். இதை இன்னொருவிதமாக விளக்கினால், அவர் பாவத்திலிருந்து விடுதலை அடைவதற்கான வழிமுறைகளை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், நீதிக்கட்டளைகளையும் நிறைவேற்றினார். அவர் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்றது மட்டுமல்லாமல், நியாயப்பிரமாணத்தின் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்தார். சுமக்கும் கீழ்ப்படிவு முதலாவதையும், நேரடிக்கீழ்ப்படிவு இரண்டாவதையும் விளக்குகின்றன. கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் நீதிக்கட்டளைகளை பாவிகளுக்கான நிவாரணபலியாக இருந்தே நிறைவேற்றினார். அதேபோல் பாவத்தின் மீதிருந்த கர்த்தரின் தண்டனைகளை அவர் தன்மேல் பூரணமாகத் தாங்கியபோது அதைப் பாவிகளுக்கான நிவாரணபலியாக இருந்தே நிறைவேற்றினார். கிறிஸ்துவின் கீழ்ப்படிதலே பாவ மன்னிப்புக்கும், நீதிமானாக்குதலுக்கும் அடித்தளமாக அமைந்திருக்கிறது.
இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதலை நாம் உயிரற்ற வெறும் விளக்கமாகப் பார்க்கக்கூடாது. அதுவும், ஒப்புக்கு அவர் பிதாவுடைய கட்டளைகளை நிறைவேற்றினார் என்றும் நினைக்கக்கூடாது. அவருடைய கீழ்ப்படிதலில் என்ன அடங்கியிருக்கிறது என்பதை வேறு எவரையும்விட எபிரெயருக்கு எழுதியவர் 2:8-10 வரையுள்ள வசனங்களில் மிக அழகாக விளக்கியிருக்கிறார், “8அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, 9தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, 10மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.”
இந்த வசனங்களில் இயேசு தான் அனுபவித்த துன்பங்களின் மூலம் கீழ்ப்படிவைக் கற்றுக்கொண்டார் என்று விளக்குகின்றன. அத்துன்பங்களின் மூலம் அவர் பூரணமானார் என்றும் விளக்குகின்றன. அதுமட்டுமன்றி தனக்குக் கீழ்ப்படிகின்ற அனைவருக்கும் நித்திய இரட்சிப்பை அடைவதற்கு அவர் காரணராகி பிரதான ஆசிரியர் என்று தேவனால் நாமம் தரிக்கப்பட்டார் என்கிறார் எபிரெயருக்கு எழுதியவர்.
மேலே பார்த்த வசனங்களை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது பின்வரும் உண்மைகள் தெளிவாகின்றன. 1) மானுடத்தைத் தாங்கி இந்த உலகத்தில் பிறந்ததன் மூலம் மட்டும் இயேசு கிறிஸ்து இரட்சிப்புக்கானவைகளை நிறைவேற்றி நம்முடைய மீட்பை சம்பாதித்துவிடவில்லை. 2) அவருடைய மரணத்தினால் மட்டும் நம்முடைய இரட்சிப்பு சம்பாதிக்கப்படவில்லை. 3) சிலுவையில் அவர் மரித்ததனால் மட்டும் இரட்சிப்பு நிறைவேற்றப்படவில்லை. 4) மீட்புக்காகச் செலுத்தப்பட்ட உச்சகட்ட விலையான சிலுவை மரணம் கிறிஸ்துவின் கீழ்ப்படிவின் அதியுயர்ந்த அடையாளமாக இருக்கிறது. அத்தகையக் கீழ்ப்படிவின் சிறப்பு, அவர் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் சிலுவைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததில் அல்லாமல் முழு விருப்பச்சித்தத்தோடும், பூரணக்கீழ்ப்படிவோடும் அவர் சிலுவையில் மரித்ததிலேயே தங்கியிருக்கிறது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிவைப்பற்றி நாம் ஆராயும்போது வெறுமனே அவருடைய மீட்புக்குரிய செயல்களை மட்டும் ஆராயவில்லை; அவற்றை நிறைவேற்றுவதற்கு அவசியமாக, அந்தச் செயல்களின் பின்புலமாகக் காணப்பட்ட அவருடைய சித்தம், வைராக்கியம், உள்ளுணர்வு ஆகியவற்றையும் நாம் எண்ணிப்பார்க்கிறோம். மீட்புக்காகச் செலுத்தப்பட்ட உச்சகட்ட விலையான, அவருடைய கீழ்ப்படிதலின் அதியுயர்ந்த அடையாளமாக இருந்த அவருடைய சிலுவை மரணத்தை ஆராய்கிறபோது நாம் வெறுமனே அவருடைய மரணத்தை மட்டும் நினைத்துப் பார்க்காமல், அந்தச் சிலுவை மரணத்திற்குப் பின்னால் இருந்த கிறிஸ்துவின் வைராக்கியம், விருப்பச்சித்தம், கடமைப்பொறுப்பு, உள்ளுணர்வுகள் அத்தனையையும் கணக்கில் எடுக்கிறோம். அதுமட்டுமல்லாமல், இங்கே நாம் ஒரு முக்கியமான கேள்வியையும் கேட்க வேண்டிய அவசியம் எழுகிறது. அந்தக் கேள்வி இதுதான், அதியுயர்ந்த உச்சகட்டத் தாழ்மையோடு கூடிய தியாகத்தினதும், கீழ்ப்படிவினதும் அடையாளமாகத் தன்னுடைய உயிரைக் கொடுப்பதற்கான பரிசுத்த வைராக்கியத்தையும், விருப்பச்சித்தத்தையும் எப்போது நம்முடைய ஆண்டவர் அடைந்தார்? என்பதுதான் அந்தக் கேள்வி. இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. இயேசு கிறிஸ்து தம்முடைய மானுடத் தன்மையிலேயே கீழ்ப்படிந்து மரணத்திற்கு தம்மை ஒப்புக்கொடுத்தார் என்பதுதான் அந்தக் காரணம். நாம் இதுவரை எபிரெயருக்கு எழுதப்பட்ட நூலில் கவனித்து வந்திருக்கும் வசனங்களே இந்தக் கேள்வியைக் கேட்க வைக்கின்றன. இந்த வசனங்கள், மிகவும் தெளிவாக இயேசு கிறிஸ்து கீழ்ப்படிவைக் கற்றுக்கொண்டார் என்றும், அந்தக் கீழ்ப்படிவைத் தாம் அனுபவித்த துன்பங்களில் இருந்து கற்றுக்கொண்டார் என்றும் தெரிவிக்கின்றன. அந்தத் துன்பங்களின் மூலம் அவர் பூரணப்படுவதும், அதன் மூலம் அவர் இரட்சிப்பின் நாயனாக இருப்பதும் அவசியமாகிறது. பரிசுத்தமாக்குதலின் மூலம் பாவத்திலிருந்து விடுதலை அடையும் பூரணத்துவத்தை அல்ல நாம் இங்கே குறிக்கிறோம். ஏனெனில், இயேசு கிறிஸ்து எப்போதும் பூரணப்பரிசுத்தமானவர், யாருக்கும் தீங்கிழைக்க முடியாதவர், பாவமற்றவர், பாவிகளிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகிறவர். அப்படியானால் இரட்சிப்பின் நாயகனாக அவர் இருப்பதற்கு துன்பங்களில் இருந்து கீழ்ப்படிவைக் கற்றுக்கொண்டு எத்தகைய பூரணத்துவத்தை அவர் அடைய வேண்டியிருந்தது? தன்னுடைய மானுடத் தன்மையில் கீழ்ப்படிவதன் மூலம் அவர் தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டியிருந்தது. அப்படி வளருவதன் மூலமே அவர் கீழ்ப்படிவைக் கற்றுக்கொண்டார். அவருடைய இருதயமும், சித்தமும், சிந்தையும் அவர் மானுடத்தில் அனுபவித்த எரியும் கொப்பறையான சோதனைகள் மூலமும், துன்பங்களின் மூலமும் வளர்ச்சியடைந்து பூரணப்பட்டன. அத்தகைய சோதனைகள், துன்பங்களின் மூலம் அவர் அனுபவபூர்வமாக கற்றுக்கொண்டவைகளே, கடவுளின் ஞானமும், அன்பும் நியமித்திருந்த உச்சகட்டமான சிலுவைத் துன்பத்திற்கும், மரணத்திற்கும் முகங்கொடுக்கும் வல்லமையை அவருக்கு அளித்தன. கீழ்ப்படிவை இந்தமுறையில் அவர் கற்றுக்கொண்டு வளர்ந்தே, தவறுகளற்ற, பாவமற்ற பிதாவின் சித்தத்தின் பாதையில் போகும்படிக்கு அவருடைய இருதயமும், சிந்தையும் ஒருங்கிணைந்து வளர்ந்து, சுயாதீனமாகவும், தானே விரும்பி முன்வந்தும் அவரால் தன்னுடைய சரீரத்தை மரணத்துக்கு சிலுவையில் ஒப்புக்கொடுத்து ஆவியையும் துறக்க முடிந்தது.
இந்தவிதமாகத் தன் மானுடத்தில் அவர் கீழ்ப்படிவைக் கற்றுக்கொண்டும் கீழ்ப்படிந்தும் வந்தே இரட்சகராக பூரணத்துவத்தை அடைந்தார். அதாவது, இந்தவிதத்திலேயே அவர் பூரணமான இரட்சகராக வருவதற்கான அனைத்தும் அவருடைய மானுடத்தில் நிகழ்ந்தன. எந்த நோக்கத்துக்காக அவர் அனுப்பப்பட்டாரோ அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கான அனைத்தும் அவரில் நிகழும்படி சோதனைகள், துன்பங்கள், பாடுகள் மூலமாக அவர் தயார்செய்யப்பட்டார். அவருடைய இத்தகைய கீழ்ப்படிவே இறுதியில் அவரை சிலுவைக்குக் கொண்டுவந்து, நிறைவான பூரண இரட்சகராக இருக்கும்படி அவரை வழிநடத்தியது. இரட்சிப்பின் நாயகனாக, அதை நிறைவேற்றியவராக அவர் இருப்பதற்கு அவருடைய மானுடத்தில் வளர்ந்த இந்தக் கீழ்ப்படிவே காரணமாக இருந்தது. இந்தக் கீழ்ப்படிவின் மூலமே அவர் நமக்கு இரட்சிப்பைப் பெற்றுத்தந்தார்.
ஆகவே, கீழ்ப்படிவை உயிரற்ற, ஜடமாக நம்மோடு சம்பந்தமில்லாததாக நாம் எண்ணக்கூடாது. அவருடைய பூரணமான மானுடத்துக்குக் காரணம் இந்தக் கீழ்ப்படிவே. அது அவரில் காணப்பட்டு, அவர் அதற்கு உதாரணபுருஷராக இருந்தார். அவரிலேயே கீழ்ப்படிவு நிரந்தரமாக முழுமையடைந்தது. விசுவாசத்தின் மூலம் அவரோடு இணைக்கப்படுகின்ற நாம் அந்தக் கீழ்ப்படிவை நம்வாழ்க்கையில் அனுபவிக்கிறோம். அதற்கு உரித்தானவர்களாகிறோம். இது எத்தனை பெரிய ஆச்சரியந்தரும் உண்மை தெரியுமா? இந்தக் கீழ்ப்படிவு இரட்சிப்புப்பற்றிய போதனைகளின் மையமாகக் காணப்படும் கிறிஸ்துவுடனான இணைப்பினதும், ஐக்கியத்தினதும் முக்கியத்துவத்தைப் பறைசாற்ற உதவுகிறது.
கிறிஸ்து தன்மேல் சுமந்து நிறைவேற்ற வந்த பாவநிவாரணபலிக்கு அவருடைய கீழ்ப்படிவு எத்தனை அவசியமாக இருந்திருக்கிறது என்பதை இதுவரை கவனித்தோம். இந்த இடத்தில் கிறிஸ்து மூலம் விசுவாசத்தை அடைந்திருக்கிறவர்கள் முக்கியமானதொரு பயன்பாட்டை சிந்தித்துப் பார்க்காமல் இருக்க முடியாது. கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்றைக்கு கீழ்ப்படிவைக் காணமுடியாதிருக்கிறது அல்லது அது அவர்களில் பலவீனமாயிருக்கிறது என்பது நாம் அறிந்திராத உண்மையல்ல. அதற்கு எத்தனையோ காரணங்களை நாம் முன்னெடுத்து வைக்கலாம். எல்லாவற்றையும்விட இந்த இடத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டிய பேருண்மை என்ன தெரியுமா? ஒருவன் தன் விசுவாசத்தைப்பற்றி என்னதான் பறைசாற்றிக்கொண்டாலும், அந்த விசுவாசம் அடித்தளமாகக் கொண்டிருக்கும் குணாதிசயமான கீழ்ப்படிவு அவனில் இல்லாவிட்டால் அந்த இருதயம் மெய்யாகவே மறுபிறப்பை அடைந்திருக்கிறதா என்று கேட்காமல் இருக்க முடியாது. கீழ்ப்படிவு உச்சகட்டத்தில் இருக்க வேண்டும் என்று இங்கு நான் சொல்லவில்லை; எத்தனை பலவீனமாக ஒரு விசுவாசி இருந்தாலும் அவனுடைய இருதயம் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறதாக, தாழ்மையுள்ளதாக இருக்கவேண்டும். ஏனெனில், அதுவே மெய்க்கிறிஸ்தவனின் அடையாளம். கிறிஸ்துவின் பூரணக்கீழ்ப்படிவு நாம் அவருக்குக் கீழ்ப்படியக்கூடிய இரட்சிப்பை நமக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. அவரோடு இணைக்கப்பட்டிருக்கிற நாம் கீழ்ப்படிவின் பிள்ளைகளாக இருக்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்து வருகிறீர்களா? இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள்.
புத்தக விமர்சனம்
“பரிசுத்த வேதாகமம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வரலாறு”
– வால்டர் ஜெயபாலன்
சமீபத்தில் தமிழகம் போயிருந்தபோது வால்டர் ஜெயபாலன் எழுதி இம்மானுவேல் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருந்த ‘பரிசுத்த வேதாகமம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வரலாறு’ எனும் நூலை வாங்கினேன். வேத மொழிபெயர்ப்பு பற்றி தமிழில் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த சில நூல்களை வாசித்திருக்கிறேன். சபாபதி குலேந்திரனுடைய நூல் இந்நூல்களுக்கெல்லாம் தமிழில் ஆரம்ப நூலாக இருந்திருக்கிறது. வேத மொழிபெயர்ப்புபற்றி இக்காலத்தில் நான் அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்பதால் இந்நூலில் என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆவலில் வாசித்தேன். பெங்களூர் ஈ. எல். எஸ். விற்பனையகத்தில் நூல் கிடைத்தது.
நூலாசிரியர் தமிழில் வேத மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட அறிவர் ராஜரீகம் என்பவரின் மகன். தந்தையும் மகனும் கிறிஸ்தவ ஊழியப்பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். ஆரம்பம் முதல் புத்தகத்தில் நூலாசிரியர் வேதமொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்தவரின் மகன் என்பதை அளவுக்கதிகமாக மிகைப்படுத்தி அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இது அடிக்கடி புத்தகத்தில் வருகிறது. ‘வேத மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்த ஒருவரின் மகன் வேதமொழிபெயர்ப்பில் தந்தைக்கு துணைசெய்ததும், வேதமொழிபெயர்ப்புபற்றி நூலெழுதியதும் உலகத்தில் எந்தப்பகுதியிலும் நடந்ததில்லை; இதுவே முதல் தடவை. அதுவும் இது தமிழகத்தில் மட்டும் நடந்திருக்கிறது’ என்று இந்த நூலின் ‘மகத்துவத்தை’ அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நூலில் மட்டுமல்லாது, நூலை அறிமுகப்படுத்தி வாழ்த்துரை தந்திருக்கும் பலரும் இதையே பெரிதாக எழுதியிருக்கிறார்கள். மேலும், ‘சபாபதி குலேந்திரனுடைய நூலுக்குப்பிறகு மொழிபெயர்ப்புபற்றி வெளிவந்திருக்கும் நூல், அதுவும் தமிழகத்துப் போதகரால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் நூல் இதுமட்டுமே’ என்றும் பதிப்பாசிரியர் எழுதியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் இதெல்லாம் மிகவும் கொச்சையானதும், சிறுபிள்ளைத்தனமானதுமாகும். நூலாய்வுகள் தமிழினத்தில் எந்தத் தரத்தில் இருக்கின்றன என்பதை இது சுட்டுகிறது. நிச்சயம் இந்தச் சின்ன விஷயத்துக்காகவெல்லாம் எவரும் எந்த நூல்களையும் வாங்கக்கூடாது. ஒரு நூலின் தரத்திற்கு இதெல்லாம் ஒருபோதும் அடையாளமல்ல.
உண்மையில் வேதமொழிபெயர்ப்புபற்றிய உண்மையான தகவல்களைத் தருகின்ற, நன்கு ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல்கள் தமிழில் இல்லை. மேலைத்தேய நாடுகளில் எழுதுகிறவர்களின் தரத்திற்கொப்பான ஆய்வுகள் நம்மினத்தில் நடப்பதில்லை. சபாபதி குலேந்திரன் எழுதியிருப்பதை ஆதாரமாக வைத்தே அதற்குப் பின்பு வந்த நூல்கள் எல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன. சபாபதி குலேந்திரனுடைய நூலிலும் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய அநேக விஷயங்களுக்கு விளக்கங்கள் இல்லை. இந்தக் குறைபாடுகள் இந்த நூலில் போக்கப்பட்டிருக்குமா என்ற எண்ணத்தோடு வாசிக்க ஆரம்பித்தவனுக்கு ஆரம்பத்திலேயே மேலே நான் குறிப்பிட்ட தனிநபர் துதிபாடல் கொதிக்கும் தோசைக்கல்லில் தண்ணீர் தெளித்ததுபோல் ஆகிவிட்டது. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூவே சர்க்கரை என்ற வகையிலேயே இந்நூலும் இருந்தது. இருந்தபோதும் ஒருசில விஷயங்களை இதில் அறிந்துகொண்டேன். முக்கியமாக நூலாசிரியரின் தந்தையான ராஜரீகம் அவர்களுடைய பணிகளைப்பற்றியும் அவருடைய மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளையும் அறிந்துகொள்ள முடிந்தது. 1995ல் வெளியிடப்பட்ட கத்தோலிக்க ‘திருவிவிலியம்’ என்ற மிக மோசமான வேத மொழிபெயர்ப்புபற்றி நான் ஏற்கனவே விபரமாக தீபஇதழில் எழுதியிருக்கிறேன். அந்த மொழிபெயர்ப்புக்கும் ராஜரீகம் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதுபற்றிய விஷயங்களை இந்நூலில் அறிந்துகொள்ள முடிந்தது.
நூலின் 7ம் பக்கத்தில் லத்தீன் மொழியில் மட்டும் இருந்த வேதத்தை ஜெர்மன் மொழியில் மார்டின் லூத்தர் மொழிபெயர்த்ததற்கான காரணத்தை விளக்கும் ஆசிரியர், ‘லூத்தருக்கு ரோமன் கத்தோலிக்க சபையின் சில கட்டுப்பாடுகளும் சடங்குகளும் பிடிக்கவில்லை, அதனால் 99 நியாயங்களை விட்டன்பேர்க் ஆலயக்கதவில் ஒட்டினார். (கத்தோலிக்க மதத்திற்கெதிரான லூத்தரின் நியாயங்கள் 95. நூலாசிரியருக்கு அது தெரிந்திருக்கவில்லையா அல்லது அச்சுப் பிழையா என்பது தெரியவில்லை.) சீர்திருத்த சபை பிறந்தது’ என்று உப்புச்சப்பற்ற முறையில் எழுதியிருக்கிறார். 16ம் நூற்றாண்டின் மகத்தான சீர்திருத்தம்பற்றிய தெளிவான ஞானமில்லாமலும், அதன் தாற்பரியத்தை உணராமலும் லூத்தரின் பெயரைச்சூட்டிக்கொண்டிருக்கும் தமிழகத்து இவாஞ்சலிக்கள் லூத்தரன் திருச்சபை இருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. நூலாசிரியரும் அவருடைய தந்தையும் இந்த சபைப்பிரிவைச் சேர்ந்தவர்கள். வேதம் வேற்றுமொழிகளில் மொழிபெயர்க்கப்படும் பணி ஆரம்பமானதற்கே கர்த்தர் எழுப்பிய இந்தச் திருச்சபை சீர்திருத்தம்தான் அடிப்படைக்காரணம். இலத்தீன் மொழியில்தவிர வேறு மொழிகளில் வேதம் இருக்கக்கூடாது என்று கத்தோலிக்க மதம் கட்டளையிட்டிருந்ததாகக் கூறும் நூலாசிரியர், அது ஏன்? என்பதை சிறிதும் விளக்கவில்லை. லூத்தர் ஏன் ஜெர்மன் மொழியில் வேதமொழிபெயர்ப்பில் ஈடுபட்டார் என்பதையும் விளக்கவில்லை. ‘லூத்தர் தவிர்க்கமுடியாத காரணத்தால் அதில் ஈடுபட்டதாக’ மட்டும் எழுதி நூலாசிரியர் உண்மைக்காரணத்தைப் பூசிமெழுகி விட்டிருக்கிறார். இது அப்பட்டமான கிறிஸ்தவ வரலாற்றுப் புறக்கணிப்பு.
லூத்தர், வில்லியம் டின்டேல், கவர்டேல் ஆகியோரின் மொழிபெயர்ப்புகளுக்கும், ஜெனீவா வேதாகமம் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டதற்கும் பின்புலமாக இருந்து ஐரோப்பாவையே உலுக்கியெடுத்த திருச்சபை சீர்திருத்த வரலாறும் அதன் முக்கியத்துவமும் நான்கு வரிகளில்கூட இந்த நூலில் சொல்லப்படவில்லை. ஆசிரியருக்கு அதுபற்றிய உணர்வில்லையா அல்லது வேண்டுமென்றே அந்த வரலாறு நூலில் மறைக்கப்பட்டிருக்கிறதா? என்பது தெரியவில்லை. ஒவ்வொரு காலப்பகுதியிலும் வேத மொழிபெயர்ப்பு யாரால், எங்கு நடந்தது என்ற விபரத்தை மட்டும் வரலாற்றில் நிகழ்ந்த அதிமுக்கிய இறையியல் மாற்றங்களுக்கு எந்த மதிப்போ இடமோ தராமல் உணர்ச்சியற்ற முறையில் நூல் எழுதப்பட்டிருக்கிறது. கத்தோலிக்கர்கள் கொலை செய்துவிடுவார்கள் என்று அஞ்சியதாலேயே அன்று மார்டின் லூத்தரை ஒருவருடம் ஜெர்மானிய இளவரசர்கள் கோட்டையொன்றில் இரகசியமாக வாழவைத்தார்கள். அந்தக் காலப்பகுதியிலேயே லூத்தர் வேதத்தை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார். கத்தோலிக்க மதத்திற்கு எதிராக சத்தியத்தை உலகுக்கு வெளிப்படுத்துவதற்காக ஆண்டவரால் ஏவப்பட்டு லூத்தர் இந்தப்பணியில் ஈடுபட்டார் என்பதை இந்நூல் விளக்கவில்லை. இந்திய வரலாற்றை எழுதுகிற ஒருவர் இந்தியாவுக்கு 1947ல் சுதந்திரம் கிடைத்தது என்பதை மறைத்து அதை எழுதமுடியுமா? அப்படித்தான் இருக்கிறது இந்த நூலில் தரப்பட்டுள்ள விபரங்களும்.
இதைவிட ஆபத்தானது நூலில் கிறிஸ்தவ வேத மொழிபெயர்ப்பாளர்களோடு ரோமன் கத்தோலிக்க மொழிபெயர்ப்புகளுக்கும் சரிசமமான இடத்தைக் கொடுத்துக் குறிப்பிட்டிருப்பது. இதிலிருந்து இறையியல் விளக்கம் எதுவும் தரப்படாமல் வேதமொழிபெயர்ப்புப் பணிகள் நூலில் எழுதப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுவது அவசியம். ரோமன் கத்தோலிக்க மதம் வேதத்தை முற்றாகத் துறந்து திருச்சபையை நாசப்படுத்தி மக்கள் வேதத்தை வாசிக்க முடியாமல் செய்து வைத்திருந்தது என்பதும், அதற்கெதிராகக் கர்த்தரால் எழுப்பப்பட்டவர்களே வேதமொழிபெயர்ப்பில் ஈடுபட்டு கிறிஸ்தவ விசுவாசத்திற்கும், பரிசுத்த வாழ்க்கைக்கும் ஆதாரமான வேதத்தை மக்களுடைய மொழிகளில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார்கள் என்பதும் இந்நூலில் துப்புரவாக மறைக்கடிக்கப்பட்டிருக்கிறது. மார்டின் லூத்தர் வேத நூல்களைத் தவிர தள்ளுபடி ஆகமங்களையும் மொழிபெயர்த்தார் என்று ஆசிரியர் எழுதியிருக்கிறார். ஆனால், நடந்த உண்மையை அவர் விளக்கவில்லை. உண்மையில் லூத்தர், அதை மொழிபெயர்த்து தான் வெளியிட்ட வேதநூல்களோடு வெளியிட்டிருந்தாலும், தள்ளுபடி ஆகமங்கள் வேதநூல்களைப்போல ஆவியால் அருளப்படவில்லை என்றும், அவை பொதுவான விஷயங்களை அறிந்துகொள்ள மட்டுமே உதவும் என்று தெளிவாக விளக்கியிருந்தார். அதை இந்நூலாசிரியர் குறிப்பிடவில்லை. இது மார்டின் லூத்தரைத் தவறானவிதத்தில் சித்தரிப்பதாக அமைகிறது. கத்தோலிக்க மதமே தள்ளுபடி ஆகமங்களை வேதத்தோடு அதற்கு சமமானதாக இணைத்து வெளியிடுகிறது. கிறிஸ்தவ சீர்திருத்தவாதிகள் அவற்றை வேதமாக ஒருபோதும் மதித்ததில்லை.
சீர்திருத்த கிறிஸ்தவரான சீகன்பால்கின் மொழிபெயர்ப்புப் பணியும், வாழ்க்கையும் நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் தமிழகத்து லூத்தரன் திருச்சபையை ஆரம்பித்தவர் என்று சொந்தம் கொண்டாடுவதைத் தவிர, நூலாசிரியர் அவரது அதிமுக்கியமான விசுவாசத்திற்கும், கோட்பாடுகளுக்கும் நூலில் எந்த விளக்கமும் தராதது வருத்தத்திற்குரியது. வீரமாமுனிவர் என்ற கத்தோலிக்கத் துறவியின் தமிழ்த்தொண்டை ஆசிரியர் பாராட்டி அவரை சீகன்பால்குக்கு இணையான தமிழ்த்தொண்டு புரிந்தவராகக் காட்டியிருக்கிறார். வீரமாமுனிவர் சீகன்பால்கை வெறுத்து அவரது தமிழை இகழ்ந்து பேசியிருப்பதை நூலாசிரியர் அறிந்திருக்கவில்லை. வீரமாமுனிவர் அப்பட்டமான கத்தோலிக்கத் துறவி, கிறிஸ்தவ விரோதி என்பதும், ஜெர்மானியரான சீகன்பால்கு ஆண்டவரை விசுவாசித்த, சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட டென்மார்க்கினால் அனுப்பப்பட்டு தரங்கம்பாடி வந்த முதல் சீர்திருத்த கிறிஸ்தவர் என்ற மாபெரும் உண்மை இங்கே புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அவர் வருவற்கு முன்பே லூத்தரன் மிஷன் பணிகள் அந்தப் பகுதியில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆகவே, சீகன்பால்கு அதை ஆரம்பித்துவைத்தவராகக் கொண்டாடுவது தவறு. அது வரலாற்று உண்மையல்ல. சீகன்பால்கைப்பற்றிய மறுக்கமுடியாத உண்மை எது தெரியுமா? தமிழில் வேத மொழிபெயர்ப்பை ஆரம்பித்த முதல் ஊழியர் ஜெர்மானியரான சீகன்பால்கு; அதுவும் அவர் சீர்திருத்தக்கோட்பாடுகளை விசுவாசித்த அருட்பணியாளர் (Reformed Christian Missionary) என்பது சிறப்பானது.
கத்தோலிக்க மதத்தைப்பற்றிய வரலாற்றறிவு நம்மினத்தில் அநேகருக்கு இல்லை என்பது நாமறிந்ததே. இவெஞ்சலிக்கள் லூத்தரன் திருச்சபையைச் சார்ந்த ஊழியரான நூலாசிரியருக்கும் அம்மதம்பற்றித் தெரியாமல் இருந்திருப்பது ஆச்சரியமே. நூல் முழுவதும் கத்தோலிக்கர் செய்திருக்கும் மொழிபெயர்ப்புப் பணி, சரிசமமாக கிறிஸ்தவ திருச்சபையைச் சேர்ந்தவர்களுடைய பணிகளுடன் இணைத்து விளக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், கத்தோலிக்க மதத்தை கிறிஸ்தவத்தின் இன்னொரு பிரிவாக ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது அவரது அறியாமையை மட்டுமல்ல, கோட்பாடுகளைப்பற்றியும் கேள்வியெழுப்புகிறது. கத்தோலிக்க மதம் கிறிஸ்தவத்தோடு எந்தவிதத்திலும் தொடர்பற்ற உலகப்பிரகாரமான, கிரியைகளின் அடிப்படையில் ஆத்துமாக்களுக்கு ஆத்தும விடுதலை தேடித்தர முயலும் சத்தியவிரோதமான, பரிசேயத்தனமான ஒரு மதம் மட்டுமே என்பதை இவெஞ்சலிக்கள் லூத்தரன் சபையினர் அறிந்திருக்கிறார்களா? என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. இந்திய வேதாகம சங்கம் 1900களில் சகலரும் வாசிக்கக்கூடிய இலகு தமிழில் வேதமொழிபெயர்ப்பைக் கொண்டுவரும் பணியைத் தமிழகக் கத்தோலிக்க மதத்தினரிடம் கொடுத்ததாகவும், அதன் விளைவே ‘திருவிவிலியம்’ மொழிபெயர்ப்பு என்றும் ஆசிரியர் கூறுகிறார். இது இந்திய வேதாகம சங்கம் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் புலப்படுத்துகிறது.
‘தேவன்’ என்ற பதம் கடவுளைக் குறித்துப் பயன்படுத்தும் வகையில் இன்று தமிழ் வேதத்தில் இருப்பதற்குக் காரணம், பேர்சிவல் என்பவர் மொழிபெயர்ப்புப் பணியில் ஸ்ரீ லங்காவைச் சேர்ந்த ஆறுமுகநாவலரைப் பயன்படுத்தியதுதான் என்று நூலாசிரியர் விளக்குகிறார். தேவன் என்ற பதம் இந்துக்கள் பயன்படுத்தும் பதம் என்றும், அது ஆணையும் பெண்ணையும் குறிக்கும் விதத்தில் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதால் வேதத்தைக் கொச்சைப்படுத்துவதற்காக வேண்டுமென்றே ஆறுமுகநாவலர் அதைப் பயன்படுத்தியதாகவும், பேர்சிவல் அதை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாதென்றும் அவர் விளக்குகிறார். இந்துவான நாவலர் கிறிஸ்தவத்தை அடியோடு வெறுத்தவர் என்றும், அதற்கான சான்றுகளாக அவருடைய எழுத்துக்களை உதாரணம் காட்டும் ஆசிரியர், ஆறுமுகநாவலரைக் கிறிஸ்தவ வேதத்தை மொழிபெயர்ப்பதில் பயன்படுத்திய பேர்சிவலின் ஞானத்தைக் குறைகூறுகிறார். தேவன் என்ற பதத்திற்குப் பதிலாக ‘பராபரன்’ என்ற பதமே உகந்தது என்று வாதிடுகிறார்.
ஆசிரியரின் தந்தையரான ராஜரீகத்தின் மொழிபெயர்ப்புக் கொள்கையாக, தற்காலத் தமிழில் மட்டுமல்லாது, தற்கால மொழிநடையின் அடிப்படையிலும் வேதம் இருக்கவேண்டும் என்பது இருந்திருக்கிறது. அதாவது, வார்த்தைக்கு வார்த்தைபடியிலான மொழிபெயர்ப்பாக அமைந்துவிடாமல், வேதவசனங்களின் அடிப்படைக் கருத்தை நடைமுறைத் தமிழில் கொண்டுவருவதே அவருடைய நோக்கமாக இருந்திருக்கிறது. அதுவும் வேதத்தில் தமிழக மக்களுக்குப் புரியாமல் இருக்கும் ‘பனி’ (snow) போன்ற வார்த்தைகளுக்கு, அதை விளக்குகின்ற முறையில் காணப்படும் மாற்று வார்த்தைகளையும் பயன்படுத்தவேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்திருக்கிறது. என்னைப் பொறுத்தளவில் இது ஆபத்தானது. நல்ல தமிழில் வேதமொழிபெயர்ப்பு இன்று அவசியம் என்பதை நான் நிச்சயம் ஆதரிக்கிறேன்; சுவிசேஷ ஊழியங்கள் பெருக அது அதிமுக்கியமானதாக இன்று இருக்கிறதென்பதையும் வலியுறுத்திக்கூற விரும்புகிறேன். ஆனால், நல்ல தமிழுக்காக அடிப்படை வேதவார்த்தைகளையும், சத்தியத்தையும் தாரைவார்த்துக் கொடுக்க நான் தயாராக இல்லை. வேதம் வேறெந்த மனித எழுத்துக்களையும்விட உயர்வானது, சிறப்பானது; அது கடவுளுடைய பரிசுத்தமான வார்த்தை. அந்த வார்த்தைகளை உள்ளது உள்ளபடியே காட்டுவதாக மொழிபெயர்ப்பு எப்போதும் இருக்கவேண்டும். அதுவே வேத மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக இருக்கவேண்டும். அதேநேரம் தமிழ் நடைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பினும், சத்தியத்தைத் தொலைத்துவிட்டு அழகான தமிழை மட்டும் வைத்திருப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இந்தத் தவறைத்தான் இந்திய வேதாகம சங்கத்தின் அனுமதியுடன் தயாரிக்கப்பட்ட கத்தோலிக்கர்களின் ‘திருவிவிலியமும்’ செய்திருக்கிறது. ராஜரீகம் அவர்களின் மொழிபெயர்ப்பை இந்திய வேதாமக சங்கம் அச்சிடத் தவறிவிட்டது என்பதையும் நூலில் இருந்து அறிந்துகொள்ளுகிறோம். அந்த மொழிபெயர்ப்பு கிடைக்குமானால் அதன் சிறப்பையும், தவறுகளையும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
இந்த நூலை வாசித்த பிறகு என்னுடைய மனதில் ஒரு வலியேற்பட்டதைத் தவிர நன்மைகள் எதையும் நான் அடையவில்லை. 1800களின் ஆரம்பத்தில் ஆரம்பமான தமிழ்மொழிபெயர்ப்பு அடுத்த நூறுவருடங்களுக்குப் பல பிரச்சனைகளுக்கு மத்தியில், காலம் போகப்போக திருத்தப்பட்டு இன்று நம்கையில் இருக்கிறது. அது சிறப்பான மொழிபெயர்ப்பாக அமையாமல் போனதற்கான காரணங்களே என் மனதில் வலியை உண்டாக்குகின்றன. ஒற்றுமையின்மையும், அசட்டுத்தனமான வாதங்களும், மெய்யான ஆவிக்குரிய வேதவைராக்கியமின்மையும், வேதமொழிபெயர்ப்பிற்கான தகுதியின்மையும், அளவுக்கு மீறிய தீவிர தமிழ்ப்பற்றும், சத்திய வேதம் நல்ல தமிழில், நம்பக்கூடிய மொழிபெயர்ப்புடன் இன்று நம் கையில் வரமுடியாதபடி செய்திருக்கின்றன; மனித குறைபாடுகள் அதற்குத் தடையாக இருந்திருக்கின்றன. இன்றும் தமிழில் ஒரு நல்ல வேதமொழிபெயர்ப்பில்லாமல், அதைச் செய்யத் தகுதியுள்ளவர்களும் இல்லாமல் தமிழினத்துக் கிறிஸ்தவம் தொடர்ந்தும் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையை எண்ணி வருத்தப்படாமல் இருக்கமுடியுமா? தமிழ் வேதம் வானத்தில் இருந்து விழுந்ததாக பலர் நம்மினத்தில் எண்ணிக்கொண்டிருப்பதாக ஆசிரியர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். அது உண்மைதான். வேதத்தின் தன்மையே தெரியாத சமுதாயமாக நம்மினம் இருந்துவருகிறது. அதேவேளை, வேதத்தை ஏனைய நூல்களைப்போலப் பாவித்து தமிழுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து அஜாக்கிரதையாக மொழிபெயர்ப்பதும் ஆண்டவருக்குத் துரோகம் செய்யும் பாதகமான செயல் என்பதையும் உணர்வது அவசியம். மொத்தத்தில் சில முக்கியமான விஷயங்களை இந்நூலில் இருந்து நான் அறிந்துகொண்டபோதும், நூலின் எண்ணற்ற குறைபாடுகள் அதன் பலவீனத்தை வெளிப்படுத்தி நூலைப் பயனற்றதாகச் செய்துவிடுகின்றன. இந்நூலை வாசிக்கிறவர்கள் அதிலுள்ள விபரங்களையெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் சரி.
[கத்தோலிக்க மதவரலாறு, வேதமொழிபெயர்ப்பு, திருச்சபை சீர்திருத்த வரலாறு ஆகியவைபற்றிய மெய்யான வரலாற்று உண்மைகளைத் தெரிந்துகொள்ள நாம் வெளியிட்டிருக்கும் ‘கிறிஸ்தவ திருச்சபை வரலாறு’ பாகம் 1ஐயும், 2ஐயும் வாங்கி வாசியுங்கள்.]
புத்தகக்கடைக்குப் போயிருக்கிறீர்களா?
என்ன பூக்கடைக்குப் போயிருக்கிறீர்களா, என்று கேட்பதுபோல் கேள்வி இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? பூக்கடைக்குப் போய்வருவது நமக்கு சகஜந்தானே; புத்தகக்கடைக்குப் போவதுதான் நமக்கு வழக்கத்திலேயே இல்லாததொன்று. புத்தகக்கடைக்குப் போவது எனக்குப் பூக்கடைக்குப் போய்வருவதுபோன்ற அனுபவத்தை அளிக்கிறது. விதவிதமான பூக்களைப் பார்த்தும், அவற்றின் மணத்தை நுகர்ந்தும் மகிழ்வதுபோல்தான் நான் புத்தகங்களை அனுபவிக்கிறேன். பூக்களைப் புத்தகங்களோடு ஒப்பிடுவதும் ஒருவிதத்தில் நல்லதுதான். எத்தனை நறுமணத்தைப் பூக்கள் தந்தாலும் புத்தகங்களைப்போல எண்ணங்களைப் பூக்களால் பகிர்ந்துகொள்ள முடியுமா? பூக்கள் கண்களுக்கும், நாசிக்கும் விருந்தளிக்கின்றன; புத்தகங்கள் இருதயத்துக்கும், அறிவுக்கும், ஆவிக்கும் விருந்தளிக்கின்றன. பூக்கடை எனக்குப் பிடிக்கும்; புத்தகக்கடை அதைவிட எனக்குப் பிடிக்கும். இதென்னடா, இந்த ஒப்பீட்டுக்கு ஓர் ஆக்கமா என்று நினைத்து தொடர்ந்து வாசிக்காமல் இருந்துவிடாதீர்கள். சில புத்தகக்கடைகளுக்கு சமீபத்தில் போய்வந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளத்தான் இந்தப்பீடிகை!
இந்திய வேதாகம சங்கம்
எந்த நாட்டுக்கும், நகரங்களுக்கும், ஊர்களுக்கும் போனாலும், புத்தகக்கடைகளுக்கும், நூலகங்களுக்கும் முடிந்தவரை போவதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறேன். விமானநிலையங்களில்கூட புத்தகக்கடைகளை நான் விட்டுவைப்பதில்லை. ஒவ்வொரு பிரயாணத்தின்போதும் எப்படியாவது சில புத்தகங்களைக் கையோடு கொண்டுவந்துவிடுவேன். விமான, இரயில் பயணங்களில் புத்தகங்களும், வார, மாத இதழ்களும் கையில் இல்லாமல் பயணம் செய்வதில்லை. நேரத்தைத் போக்குவதற்காக மட்டுமல்லாமல் சிந்தனைக்கும், அறிவுக்கும் தீனியளிக்க புத்தகங்களும், இதழ்களும் உதவுமே. சரி புத்தகக்கடைகளுக்கு வருவோம். ஜனவரி மாதம் பெங்களூரில் இரண்டு புத்தகக்கடைகளுக்குப் போயிருந்தேன். முதலில் போனது இந்திய வேதாகம சங்கம், காரணம், ஏதாவது புதிய தமிழ் வேதப் பிரதிகள் அச்சிடப்பட்டு வந்திருக்கிறதா என்று பார்ப்பதற்காகத்தான்; முடிந்தால் வாங்கிவிடவுந்தான். பலவிதமான வேதப்புத்தகங்கள் வித்தியாசமான அளவுகளில் பெரிதும், சிறிதுமாக பல மொழிகளில் அங்கிருந்தன. கடையில் பலர் வேலைக்கிருந்தார்கள். வரவேற்று வேதப்புத்தகங்களை எடுத்துக்காட்டினார்கள். வரவேற்பு நன்றாகத்தான் இருந்தது. எல்லாக் கடைகளிலும் இப்படி இருக்குமென்று சொல்லமுடியாது.
ஆங்கிலத்திலும், தமிழிலும் அடுத்தடுத்து இருக்கும்வகையில் வெளியிடப்பட்டிருந்த புதிய ஈ. எஸ். வி. மொழிபெயர்ப்பொன்றை வாங்கினேன். பெரிய எழுத்தில் வெளியிடப்பட்டிருந்த தமிழ் வேதமொன்றையும் வாங்கினேன். அங்கே வைக்கப்பட்டிருந்த தமிழில் வெளிவந்திருந்த வேதப்புத்தகங்களையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்தபோது முதல்தடவையாக ஒரு விஷயம் மண்டையில் தட்டியது. இதற்குமுன் இதை நான் கவனித்ததேயில்லை. எல்லாத் தமிழ் வேதங்களிலும் அச்சு ஒரேவிதத்தில் ஐம்பது வருடங்களுக்கு மேலாக இருந்துவந்திருக்கிறது என்பதுதான் அது. என்ன சொல்லுகிறேன் என்று புரிகிறதா? உங்கள் கையில் இருக்கும் வேதத்தை எடுத்து அச்சைக் கவனியுங்கள். அது நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்னிருந்ததைப்போன்ற அதே எழுத்துரு பயன்படுத்தப்பட்டு இன்றும் அச்சிடப்பட்டு வருகிறது. இதில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இந்த 21ம் நூற்றாண்டில் கணினியில் பயன்படுத்தக்கூடிய எத்தனையோவிதமான நவீன எழுத்துரு வடிவங்கள் பரவலாக, இலவசமாகக்கூடப் பெற்றுப்பயன்படுத்தக்கூடிய வசதி இருக்கும்போது இந்திய வேதாகம சங்கம் தொடர்ந்தும் ஏன் பிரிட்டிஷ்காலத்து எழுத்துருவைப்பயன்படுத்தி அச்சிட்டுக்கொண்டிருக்கிறது என்பதுதான் கேள்வி. அதுவும் எந்த அளவு வடிவில் இருக்கும் வேதத்தை எடுத்தாலும் அதே அச்சுப்பதிவுதான். எப்போதோ வடிவமைக்கப்பட்ட வேதத்தை அதில் எந்தவித மாற்றங்களும் செய்யாமல், அதைத்தேவைக்கேற்ற அளவுக்கு பெரிதாகவோ சிறிதாகவோ ஸ்கேன் செய்து பயன்படுத்தி வருகிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் சில வேதப்புத்தகங்களில் எழுத்துப் பதிவு மங்களாக, தெளிவாக இல்லாமல் இருப்பதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். வானத்தில் இருந்து தமிழ் வேதம் விழுந்ததாக நம்மினத்தில் அநேகர் நினைத்துக்கொண்டிருப்பதால் இந்திய வேதாகம சங்கமும் தெய்வீகமான தமிழ் வேதத்தின் அச்சில்கூட எந்தமாற்றத்தையும் செய்யக்கூடாதென்று நினைக்கிறதோ என்னவோ. நான் வெளியிட்டுவருகின்ற நூல்களில்கூட எந்தளவுக்கு எழுத்துரு வடிவங்களை சிறப்பாக அமைக்கலாம் என்று கவனத்தோடு வெளியிட்டு வருகிற இந்தக்காலத்தில் இந்திய வேதாகம சங்கம் வேதத்தை வெளியிடுவதில் எந்த அக்கறையும் இல்லாமல் தொடர்ந்து பழங்காலத்து அச்சு வடிவத்தைப் பயன்படுத்தி வருவதை நாம் அக்கறையில்லாத் தன்மையாக மட்டும் காணவில்லை; நம்மினத்து கிறிஸ்தவத்தின் பலவீனமான, தாழ்ந்த நிலைக்கு இன்னோரு உதாரணமாகத்தான் காண்கிறேன்.
ஈ. எல். எஸ். புத்தகக்கடை
நண்பரும் நானும் அடுத்ததாக ஈ. எல். எஸ். புத்தகக்கடைக்குப் போனோம். போகும் வழியில் டிராபிக் ஹெவியாக இருந்தது. ஓரிடத்தில் மட்டும் கொளுத்தும் மத்தியான வெயிலில் அரை மணிநேரம் கார் அசையாமல் நின்றது. இறங்கி நடந்துபோய்விடலாமா என்றிருந்தது. ஒருவழியாய் கார் நகர கடையைத் தேடிப்பிடித்துப் போய்ச்சேர்ந்தோம். உள்ளே எயார்கண்டிஷன் இருந்ததால் மூச்சுவிட முடிந்தது. உண்மையில் ஜனவரிமாத பெங்களூர் காலநிலை நியூசிலாந்து ஸ்பிரிங் போல குளு குளு என்றிருக்கும். ஆனால் மத்தியான வெயில் கொஞ்சம் தலையைச் சுடும்.
ஈ. எல். எஸ். புத்தகக்கடை பெரிதாக இருந்தது. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும், கன்னட மொழியிலும் அடுக்கடுக்காக எங்கும் வியாபித்து இருந்தன. நம்முடைய நூல்களை சென்னை ஈ. எல். எஸ். விற்பனை செய்வதால் இங்கும் இருக்குமோ என்ற ஆர்வத்தில் தமிழ் நூல்கள் இருந்த பகுதியை முதலில் பார்க்க ஆரம்பித்தேன். உண்மையில் ஆங்கில நூல்களோடு ஒப்பிடும்போது கடையில் தமிழ் நூல்கள் அத்தனை அதிகமாக இருக்கவில்லை. நம்முடைய நூல்கள் அங்கிருக்கவில்லை. என்னை கடையில் இருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டு மேலாளரை அவருடைய அறையில் சந்தித்தேன். வாலிப வயதில் இருந்த மேலாளரோடு பேச்சுக்கொடுத்தபோது அவருக்கு நூல்கள் பற்றியோ, அதை எழுதியவர்களைப்பற்றியோ அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. தன் மனைவி நியூசிலாந்துக்குப் போக இருப்பதாக அவர் சொன்னார். மேலும் பேசிப்பயனில்லை என்பதால் புத்தகங்களை மறுபடியும் ஆராய ஆரம்பித்தேன்.
கடையில் தமிழில் இருக்கும் நூல்களைப்பற்றி என்ன சொல்லுவது? நூற்றுக்குத் தொண்ணூற்றைந்துவரை கெரிஸ்மெட்டிக் நம்பிக்கையைக் கொண்டவர்களால் எழுதப்பட்ட நூல்களே மலிந்து காணப்பட்டன. வால்டர் ஜெயபாலன் எழுதிய ‘பரிசுத்த வேதாகமம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வரலாறு’ நூலை மட்டுந்தான் அங்கே வாங்க முடிந்தது. நண்பர் ஆங்கில நூல்களில் அதிக சிரத்தை காட்டினார். உண்மையில் ஆயிரக்கணக்கான ஆங்கில நூல்களின் மத்தியில் பத்துக்குமேற்பட்ட நல்ல நூல்களை வாங்க முடிந்தது. வால்டர் ஏ. எல்வெல்லின், இவாஞ்சலிக்கள் டிக்ஷனரியை அங்கே பெற முடிந்தது. வேறு சில நல்ல ஆங்கில நூல்களும் இருந்தன. ஆர். சி. ஸ்பிரவுல் எழுதிய ஒரே ஒரு நூல் மட்டும் இருந்தது. நண்பரும் நானும் பத்துக்குமேற்பட்ட நல்ல ஆங்கில நூல்களை வாங்கிக்கொண்டோம்.
ஆர்வமுள்ள பணியாளர் ஒருவர் சில நூல்களை அறிமுகம் செய்ய முயற்சி செய்தார். என்னடா சுற்றிச்சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே, எதை வாங்குவது என்று தெரியாமல் முழிக்கிறார்களோ என்னவோ, என்று நினைத்தாரோ தெரியாது. அவர் காட்டிய நூல்கள் எல்லாம் கெரிஸ்மெட்டிக் நம்பிக்கை கொண்டவர்களால் எழுதப்பட்டது. வேண்டாம், வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருப்பதைவிட உண்மையைச் சொல்லிவிடுவது நல்லது என்று, அவரிடம் ஒருபடியாய் எத்தகைய நூல்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என்றும், அங்கிருக்கும் நூல்களில் என்ன பிரச்சனை என்பதையும் விளக்கினேன். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டார். நான் சொன்னது அவருக்குப் புரிந்ததோ இல்லையோ, முகத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இதுதான் நம்மினத்துக் கிறிஸ்தவ விற்பனையகங்களின் உண்மை நிலை. பெங்களூரில் ஆங்கிலத்தில் வாசிக்கிறவர்கள் தொகை அதிகம் என்பதால்தான் அத்தனை ஆங்கில நூல்களும், அதில் பத்தாவது நல்ல நூல்களும் இருந்ததற்குக் காரணம். அதைச் சென்னையில் பார்க்க முடியாது.
சென்னையில் குருக்குள்
பெங்களூரில் இருந்து சென்னை சென்றபோது இவாஞ்சலிக்கள் லூத்தரன் இறையியல் கல்லூரியான குருக்குள்ளின் புத்தகக்கடையைப் பார்ப்பதற்காக நண்பருடன் போனேன். புத்தகக்கடையில் சீகன்பால்குபற்றிய நூல்களும் வேறு நூல்களும் கிடைக்குமா என்று பார்ப்பதே என் நோக்கமாக இருந்தது. வசதியான அந்த வளாகத்திலுள்ள முதல் கட்டடத்தில் ஒரு அறையில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. நாளாந்தம் அங்கு விற்பனை நடப்பதாகத் தெரியவில்லை; அதைக் கவனித்துக்கொள்ள யாரும் அன்று இருக்கவில்லை. வாட்ச்மேனிடம் அதுப்பற்றிக் கேட்க, அவர் யாரையோ தேடிப்பிடித்து அழைத்துவந்தார். வந்தவர் அறையைத் திறந்து காட்டியபோதும் அவருக்கு விலையொன்றும் தெரிந்திருக்கவில்லை. எப்படியோ நூல்களையெல்லாம் அலசிப்பார்த்து இரண்டை மட்டும் வாங்கிக்கொண்டோம்.
ஒருவர் வாசிக்கின்ற நூலும், அவருடைய நூலகமும் அவருடைய விசுவாசத்தைத் தெரிந்துகொள்ள உதவும் என்பார்கள். குருக்குள் புத்தகக்கடை நூல்கள் எல்லாமே அதன் பெயருக்கேற்றதாக இருக்கவில்லை. ‘இவாஞ்சலிக்கள்’ என்று பெயர்வைத்துக்கொண்டிருக்கும் அந்த இறையியல் கல்லூரி புத்தகக்கடையில் இருந்த அனைத்துப் புத்தகங்களும் ‘லிபரல்’ எண்ணங்களையும், பார்வையையும் கொண்டவை. சமுதாய சீர்திருத்தம் பற்றியும், தலித் பிரச்சனை பற்றியும், சாதி பற்றியும் இருந்த புத்தகங்களுக்கு மத்தியில் மார்டின் லூத்தர் ஆரம்பித்துவைத்த சீர்திருத்தக் கருத்துக்களோ, போதனைகளோ கொண்ட ஒரு நூலையாவது நான் காணவில்லை. புத்தகக்கடையே இப்படி என்றால் அந்த இறையியல் கல்லூரியின் போதனைகளும், இவாஞ்சலிக்கள் லூத்தரன் திருச்சபைகளின் நிலையும் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். ‘இவாஞ்சலிக்கள்’ என்ற பதத்திற்கு நம்மினத்தில் அர்த்தமே வேறு.
நியூ புக் லேண்ட்ஸ்
கடைசியாக நான் போய்ப் பார்த்த புத்தகக்கடை தியாகராஜ நகரில் இருக்கும் நியூ புக் லேண்ட்ஸ். இதுவரை நான் போயிருந்த இடங்களைப்போல இந்த விற்பனையகத்தில் கிறிஸ்தவ நூல்கள் மட்டும் விற்பனையில் இருக்கவில்லை. இது சகல நூல்களையும் விற்கும் சென்னையில் உள்ள ஒரு முன்னணி புத்தக நிலையம். இதைப்பற்றி நான் ஏன் எழுத வேண்டும்? என்று கேட்பீர்கள். அதற்கு முக்கியமான காரணமுண்டு. இதற்கு முன் பல கடைகளுக்கு நான் போயிருக்கிறேன். இருந்தாலும் இந்தக் கடைக்குப் போனது ஒரு புது அனுபவமாக இருந்தது.
மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனைப்பற்றிய ஒரு புதிய தொகுப்பு ‘மனா’ லட்சுமணன் எழுதி வெளிவந்திருப்பதை அறிந்து அதை எங்கே பெற்றுக்கொள்ளலாம் என்று எழுத்தாளர் ஜெயமோகனை எழுதிக் கேட்டேன். அவர் நியூ புக் லேண்ட்ஸ் புத்தகக் கடையில் கிடைக்கும் என்றார். ஒரு மாதிரியாக கடையைத் தேடிப்பிடித்தேன். தி நகரில் வட உஸ்மான் தெருவின் மேம்பாலம் முடியுமிடத்தில் கடை இருந்தது. பழைய எண், புதிய எண் குழப்பத்தால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தனை தூரம் வந்துவிட்டோம், எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்தோடு சிலரிடம் விசாரித்து அங்கு போய்ச்சேர்ந்தேன். நண்பர் வெட்டியும் என்னோடிருந்தார். திரும்பிவர கொஞ்ச நேரமாகும் என்று கார் டிரைவரிடம் கூறினேன். அது முழு உண்மையல்ல. புத்தகக் கடைக்குள் நுழைந்துவிட்டால் நான் அத்தனை சீக்கிரம் வெளியில் வந்துவிடுவதில்லை என்பது டிரைவருக்கு எங்கே தெரியும். தெருவில் இருந்து பார்க்கிறபோது கடை பெரிதாகத் தெரியாவிட்டாலும் உள்ளே நுழைந்துவிட்டால் இடம் பெரிதுதான் என்பது புரியும். உள்ளே நுழைந்தவுடனேயே எனக்குள் ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது. கடையைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதால் மட்டுமல்ல, உள்ளே ஆயிரக்கணக்கில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்ததாலும் ஏற்பட்ட புல்லரிப்பு அது.
கடையின் மேலாளர் சீனிவாசன். கடை இலக்கிய வாஞ்சையுள்ள நர்மதா பதிப்பகத்தால் ஆரம்பிக்கப்பட்டது. திரு சீனிவாசன் ஆரம்பகாலத்தில் இருந்து கடையை மேற்பார்வை செய்துவருகிறார். அவரோடு பேச்சுக்கொடுத்து விபரங்கள் அறிந்துகொள்ள முயன்றேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வந்திருக்கும் காரணத்தைச் சொன்னேன். உடனடியாக வரிசைக்கிரமாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஜெயகாந்தன் நூல்களின் அருகில் அழைத்துச் சென்றார். அடுத்த ஒருமணி நேரம் கடையை அலசிப் பார்க்கும் செயலில் ஈடுபட்டேன். எழுத்தாளர்களின் பெயர் வரிசைப்படி அவர்களுடைய நூல்களெல்லாம் வரிசைக்கிரமாக வைக்கப்பட்டிருந்தன. பிரபலமான பழைய புதிய எழுத்தாளர்களின் நூல்களனைத்தும் அங்கே இருந்தன. அழகிரிசாமி, சி. சு. செல்லப்பா, மு. வரதராசனிலிருந்து இக்காலத்து ஜெயமோகன், ராமகிருஷ்ணன்வரை எல்லோருடைய நூல்களும் இருந்தன. நான் தேடிக்கொண்டிருந்த ஜெயமோகனின் காடு நூல் அங்கு கிடைத்தது. இதுவரை இந்தளவுக்கு இலக்கிய நூல்களை ஒரே கடையில் நான் பார்த்ததில்லை. சிற்றிதழ்கள் இன்று எத்தனை புத்தகக் கடையை அலங்கரிக்கின்றன? நுழைந்த உடனேயே கடையில் அவை கண்ணில் படும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் மட்டும் 70,000 நூல்கள் இருப்பதாக சீனிவாசன் சொன்னார். அதுதவிர ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான நூல்களும் இருக்கின்றனவாம். சென்னைவாசிகள் அதிர்ஷ்டக்காரர்கள் என்று நினைக்கத் தோன்றும். அது நினைப்பாக மட்டுந்தான் இருக்க முடியும் என்பதை திரு சீனிவாசனோடு தொடர்ந்து பேச்சுக்கொடுத்தபோது தெரிந்தது. இத்தனை பெரிய புத்தகக் கடையில் ஆயிரக்கணக்கான இலக்கிய நூல்களை வைத்திருக்கிறீர்களே, எத்தனை பேர் வாசிக்கிறார்கள், கடை நடத்தும் அளவுக்கு லாபமிருக்கிறதா? என்று கேட்டேன். இல்லை சார் என்று அவர் உடனடியாக சொன்னார். 9 மில்லியன் மக்கள் வாழும் சென்னை மாநகரத்தில் ஆயிரம் பேர் மட்டுமே தீவிர வாசகர்களாக அங்கே புத்தகங்களை வாங்கி வாசிக்கிறார்களாம். அதிர்ச்சி தரும் செய்தி இது. வாசிப்பு நம்மினத்தில் கீழ் நிலையில் இருக்கிறது என்பது எனக்குத் தெரிந்திருந்தபோதும் இது கொஞ்சம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தந்தது. ஆயிரம் கஸ்டமர்களை வைத்து எப்படிக் கடை நடத்துகிறீர்கள்? என்பது என்னுடைய அடுத்த கேள்வியாக இருந்தது. இல்லை சார், இங்கே ஆயிரம் பேர்தான் புத்தகங்களை வாங்கி வாசித்தாலும் வெளிநாடுகளில் இருந்து பத்தாயிரம் பேர்வரை நூல்களை ஆர்டர் செய்து வாங்கி வாசிக்கிறார்கள், அவர்களாலேயே கடை நடத்த முடிகிறது என்று பதில் வந்தது. வெளிநாட்டுத் தமிழர்களாவது தமிழகத்தின் மானத்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்களே என்று சந்தோஷப்படத்தான் முடிந்தது. சீனிவாசன் ஆழம் சிற்றிதழுக்கு ‘வாசிக்கும் பழக்கம் குறைத்திருக்கிறதா’ என்ற தலைப்பில் பேட்டி கொடுத்திருக்கிறார்.
நியூ புக் லேண்ட்ஸ் கடையில் வாசிக்கிறவர்களைத்தான் வேலைக்கு வைக்கிறோம் என்று சீனிவாசன் சொன்னார். அதுவும் ஆச்சரியமாக இருந்தது. எத்தனையோ கடைகளுக்குப் போயிருந்தபோதும் இங்குதான் கடைக்காரரோடு புத்தகங்களைப்பற்றியும், நூலாசிரியர்களைப் பற்றியும் பேச முடிந்தது. சீனிவாசன் சொன்னார், ‘சார், சென்னையில் ஒரு இலட்சம் பேர் வாசிக்க ஆரம்பித்தாலே போதும் அரசு மாறிவிடும்’ என்று. அவை உண்மையான வார்த்தைகள். வாசிக்கிறவர்களே சிந்திக்கிறவர்கள். மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் கோமாளித்தன அரசுகளுக்கு நாட்டில் வாய்ப்பிருக்காது. ஒரு காலத்தில் இலக்கிய வாசிப்பில் இளைஞர்களுக்கு இருந்த நாட்டம் இன்று இல்லை. இருபது இருபத்தியோரு வயது இளைஞர்கள் எல்லாம் வட்செப்பிலும், இன்ஸ்டகிராமிலும், முகநூலிலும் குறுஞ்செய்தி அனுப்பி குதூகலித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர வாசிப்பையே அறியாதிருக்கிறார்கள். வருங்காலத் தலைமுறை எப்படி இருக்கப்போகிறது? பெங்களூரில் இருந்தபோது தொலைபேசியில் சிறிது நேரம் எழுத்தாளர் ஜெயமோகனோடு பேசினேன். ஓரிருதடவை கடிதம் எழுதியிருந்தபோதும் அவரை நேரில் பார்த்ததில்லை. அதற்கு இந்தத் தடவை வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இருந்தாலும் ஐந்துநிமிடங்களுக்கு மேல் அவரோடு பேசியபோது அவருடைய இளம் வாசகர்கள் வாசிக்கிறவர்களாகவும், சிந்திக்கிறவர்களாகவும், நல்ல தமிழில் எழுதக்கூடியவர்களாகவும் இருப்பதை சுட்டிக்காட்டினேன். தன்னுடைய நூல்களைக்கூட அதிகம் பேர் வாசிப்பதில்லை என்றும், தமிழ் நாட்டில் வாசிப்பு அருகியே இருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். நம்மினத்தில் வாசிப்பின்மை பற்றிய நம்முடைய ஆதங்கம் பெரிதாகி அநேகரை வாசிக்க வைக்க என்ன செய்யலாம் என்று தீவிர நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது. ஜனவரி மாதத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகள் மிகவும் நல்ல முயற்சி; அதற்குப் போகமுடியாதபடி போனது ஒரு புறம் வருத்தமே.
திரு சீனிவாசனோடு என் நண்பர் ரொபட்டும் நானும் பேசிய சந்தர்ப்பம் மகிழ்ச்சியளித்தது. புத்தகக்கடைக்குப் போய் நூல்கள் வாங்காமல் இருக்க முடியுமா? வேதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்களில் ஒருவரான பெப்ரீசியஸின் அகராதி மீள்வெளியீடு செய்யப்பட்டு கடையில் இருந்தது. அதுவரை அது அச்சில் இருப்பதை நான் அறிந்திருக்கவில்லை. அதை வாங்கிக்கொண்டேன். தமிழ் வேத மொழிபெயர்ப்பில் பெப்ரீசியஸின் மொழிபெயர்ப்பே அது வெளிவந்த காலத்தில் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருந்திருக்கிறது என்று வாசித்திருக்கிறேன். அத்தோடு 6000 ரூபாய்க்கு என் வாசிப்புக்கும், எழுத்துப் பணிக்கும் அவசியமான நூல்களை வாங்கி நீயூசிலாந்துக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தேன். இரண்டரை மணிநேர அந்த சந்திப்பும், புத்தகக் கடை அனுபவமும் மனதுக்கு இதமாக இருந்தது. என் நண்பரைப் பார்த்து சொன்னேன், ‘இங்கேயே ஒரு பாயைப் போட்டுப் படுக்க இடம்கொடுத்தார்களானால் இரவிரவாக இந்த நூல்களையெல்லாம் அலசிப்பார்க்க வசதியாக இருக்கும்’ என்று. உண்மையில் கடையைவிட்டு வெளியில் வர கஷ்டமாகத்தான் இருந்தது. சென்னைவாசிகளே, நீங்கள் ஏன் நியூ புக் லேண்ட்ஸ் புத்தகக் கடைக்கு ஒருமுறை போய்வரக்கூடாது? சீனிவாசன் அவர்களையும் சந்தித்துப் பேச மறக்காதீர்கள். தரமான ஒரு புத்தகக் கடைக்குப் போன இதமான அனுபவத்தோடு வேறுவேலைகளைக் கவனிக்க நண்பரோடு கடையை விட்டு வெளியில் வந்தேன். ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். கடை மேலாளர் சீனிவாசன் நம்முடைய வெளியீடுகளை விற்பனை செய்வதில் அதிக ஆர்வம் காட்டினார். இனி நமது வெளியீடுகள் நியூ புக் லேண்ட்ஸிலும் கிடைக்கும்.
நம்மிடம் இல்லாதது: கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டம்
பல ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீ லங்காவிலிருந்து மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரிந்துவிட்டு நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து வாழவந்த ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. ஓரளவுக்குப் பழக்கமேற்பட்ட பிறகு சில விருந்துகளில் அவரைச் சந்தித்தவேளை பலவிஷயங்கள்பற்றிப் பேசும் வாய்ப்புக்கிடைத்தது. அவர் தன்னை கிறிஸ்தவராகத்தான் அறிமுகப்படுத்திக்கொண்டார். பேச்சு எங்கள் நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள்பற்றித் திரும்பியது. என்னுடைய பிள்ளைகள் அரசு கல்லூரிகளுக்குப் போகவில்லை என்றும், கிறிஸ்தவ கல்லூரியொன்றுக்குப் போவதாகவும் சொன்னேன். அதற்கு அவர் காரணம் கேட்டபோது நாட்டில் அரசு பள்ளிக்கூடங்கள் நடந்துவரும் முறைபற்றியும், அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகங்கள்பற்றியும் சாதாரணமாகத்தான் விளக்கினேன். அந்த நண்பருக்கு முகம் மாறிவிட்டது. அரசுபள்ளிக்கூடங்களைப்பற்றி உயர்வாகப்பேச ஆரம்பித்தார். பேச்சு சரியான திசையில் போகவில்லை என்பதை உணர்ந்து அத்தோடு நிறுத்திக்கொண்டேன். அவரும் அதற்குப் பிறகு என்னை மார்ஸ் கிரகத்தில் இருந்து வந்திருப்பவனைப்போல உற்றுப்பார்ப்பதாக எனக்குத் தோன்றியது. இதை நான் எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்கு உலகக் கண்ணோட்டம் கிறிஸ்தவத்தின் அடிப்படையில் இல்லாத பெரிய குறையை உணர்ந்து வருந்துகிறேன். இதைக் கொஞ்சம் நான் விளக்கித்தான் ஆகவேண்டும்.
முதலில் கிறிஸ்தவம் என்றால் என்ன என்று பார்ப்போம். கிறிஸ்தவம் என்பது வெறும் மதம் அல்ல; அது வாழ்க்கை நெறி. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் அடியோடு மாற்றப்பட்டு, அவரை விசுவாசித்து அவருக்காக, அவருடைய வார்த்தையின்படி மட்டும் இந்த உலகத்தில் கடைசிவரை வாழுகின்ற ஒரு வாழ்க்கை முறை அது. யாரோ ஒரு தலைவரையோ, அல்லது வெறும் போதனைகளையோ பின்பற்றுவதல்ல கிறிஸ்தவம். இருதயம் அடியோடு மாற்றப்பட்டு, சிந்தனை, எண்ணங்கள், நோக்கங்கள், விருப்புவெறுப்புகள், நடத்தை அனைத்தும் இயேசுவால் மாற்றப்பட்டு அவருடைய வார்த்தை மட்டும் எல்லாமாகமாறி அதன்படி ஒவ்வொருநாளும் அவருடைய துணையோடு வாழமுயற்சி செய்யும் வைராக்கிய வாழ்க்கை அது. சரியானது எது, என்பதை வாழ்க்கையில் முதல்முறை அறிந்துகொண்டு அதைச் செய்வதற்கவசியமான பத்துக்கட்டளைகளின்படி வாழ ஆரம்பிக்கும் வாழ்க்கை இது. இது நிகழுவதற்காகவே ஒவ்வொரு மெய்க்கிறிஸ்தவனும் பரிசுத்த ஆவியினால் இருதய மாற்றத்தை அடைந்து அவரையும் தன்னில் பெற்றிருக்கிறான். இதன் காரணமாக கிறிஸ்தவன் இந்த உலகத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் இதற்கு முன்னில்லாத வகையில் வித்தியாசமாகப் பார்த்து அணுகி, இயேசு தன் வார்த்தையில் போதித்திருக்கும் வழிப்படியான எண்ணங்களை அந்த விஷயங்களைப்பொறுத்து விசுவாசித்துப் பின்பற்றுவான். இந்த உலகத்தில் எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அந்த விஷயத்தைப்பற்றிய கிறிஸ்தவனின் பார்வை வித்தியாசமானதாகத்தான் இருக்கும்; அதாவது அது இயேசுவின் பார்வையாக, வேதக்கண்ணோட்டமாக, இயேசு அணுகும்விதத்தில் அமைந்திருக்கும். இதுதான் வேதக்கிறிஸ்தவம்; சுவிசேஷக் கிறிஸ்தவம்; சீர்திருத்தக் கிறிஸ்தவம்.
கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் உலகத்தில் எதுவும் ‘கடவுளுக்குரியது (Sacred), உலகத்துக்குரியது (Secular)’ என்ற பிரிவினைக்கு இடமில்லை. கடவுள் எல்லாவற்றையும் உருவாக்கியவர்; எல்லாவற்றிற்கும் உரித்துள்ளவர். கடவுளில்லாமல் எதுவுமில்லை; கடவுள் சம்பந்தப்படாததொன்றும் இந்த உலகில் இல்லை. அவரை ஒதுக்கிவைத்துவிட்டு எதையும் ஆராயவோ, எதைப் பற்றியும் சிந்திக்கவோ முடியாது. பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு இது புரிவதில்லை. மிகவும் சாதாரணமான உணவு விஷயத்தில்கூட அவருக்குப் பங்கிருக்கிறது. நாம் சாப்பிடுகிற எதுவும் நம் நலத்துக்குக் கேடானதாகவும், உயிருக்கு ஆபத்தானதாகவும் இருந்துவிடக்கூடாதென்கிறது வேதம். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை வேதம் பாவமாகக் கருதுகிறது. தேவையானளவுக்கு சாப்பிடாமல் இருப்பதையும் பாவமாகக் கருதுகிறது வேதம்; அப்படிச் செய்வது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால். இதேவகையில்தான் உலகத்தில் எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் கிறிஸ்தவனைப் பொறுத்தவரையில் அங்கு கடவுள் வந்துவிடுகிறார். உதாரணத்திற்கு, திருமணம் செய்யவேண்டும் என்று வந்தவுடன், கிறிஸ்தவன் திருமணத்தை எதிர்நோக்கும்விதமே வித்தியாசமாக இருக்கும். அவன் அதை இயேசுவின் கண்ணோட்டத்தோடு பார்ப்பான். தான் வாழுகின்ற இந்து சமுதாயமும், இந்துப்பண்பாட்டைத் தொடர்ந்து பின்பற்றிவரும் போலிக்கிறிஸ்தவ சமுதாயமும் அதைப் பார்க்கும்விதத்தில் அவன் பார்க்கமாட்டான். திருமணம் அவனுக்கு வெறும் சடங்காகவோ அல்லது உடலுறவில் ஈடுபடுவதற்கும், பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கும், உற்றார் உறவினர்களைத் திருப்திப்படுத்துவதற்கும், சந்ததியைப் பெருக்கிக்கொள்ளுவதற்குமான ஒரு மீடியமாக மட்டும் இருக்காது; அவனுக்கு அது ஆண்டவர் வாழ்க்கையில் கொடுத்திருக்கும் இன்னுமொரு பெரிய பொறுப்பாகத் தென்படும். அதனால் அந்தத் திருமணவாழ்வை அமைத்துக்கொள்ளுவதில் ஆரம்பம் முதல் இறுதிவரை அவன் ஆண்டவருடைய ஆலோசனையின்படி நடந்துகொள்ளப் பார்ப்பான். இதைத்தான் கிறிஸ்தவ உலகக்கண்ணோட்டம் என்கிறேன்.
கிறிஸ்தவம் நம்மினத்தில் கிறிஸ்தவ வேதத்தின்படி, ஆவிக்குரியவிதத்தில் இன்றைக்கு பரவலாகக் காணப்படாததால், இயேசுவை விசுவாசிக்கிறேன் என்று அறிவித்து ஞானஸ்நானம் எடுத்து சபைக்குப் போய்வருவதோடு பெரும்பாலானோருடைய கிறிஸ்தவம் நின்றுவிடுகிறது. அவர்கள், அத்தனை உலக சம்பந்தமான விஷயங்களிலும் கிறிஸ்தவக் கண்ணோட்டத்தைக் கொண்டிராது உலகத்தார் கொண்டிருக்கின்ற பார்வையையும், சிந்தனையையும் கொண்டிருந்து உலகத்தாரைப்போலவே வாழ்ந்துவருகிறார்கள். இதற்கு விதிவிலக்குகளை அங்குமிங்குமாகப் பார்க்கமுடிந்தாலும் பொதுவாக எல்லோரும் கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டமில்லாதவர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். சபைக்குப் போவதும், ஜெபிப்பதும், வேதத்தைக் கொஞ்சம் வாசிப்பதோடும் பெரும்பாலானோருடைய கிறிஸ்தவம் நின்றுவிடுகிறது. கிறிஸ்தவ வாழ்க்கையை இந்த உலகத்தில் வாழும்போது சமுதாயத்தில் முகங்கொடுக்கின்ற அநேகவிஷயங்களை வேதபோதனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து முடிவெடுத்து அதைப்பின்பற்றுகிற இருதயத்தையும் வழக்கத்தையும் பெரும்பாலானோரில் காணமுடியாது இருக்கின்றது. உதாரணத்திற்கு இலங்கையில் புலிகள் மேலோங்கி இருந்த காலப்பகுதியில் எத்தனையோ கிறிஸ்தவர்கள் அவர்களை ஹீரோக்கள் போல நினைத்து அவர்களுக்கு ஆதரவாளர்களாக இருந்திருக்கிறார்கள். புலிகள் இல்லாமல் போனபிறகும் இன்றும் இது தொடர்கிறது. இது சரியா? வன்முறையை வழிமுறையாகக் கொண்டிருக்கும் எந்தக் குழுவையும் கிறிஸ்தவன் ஆதரிக்கக் கூடாது என்றெல்லாம் சிந்தித்துப்பார்க்கும் நிதானத்தை அவர்களில் காணமுடியவில்லை. தமிழீழத் தமிழனாகத் தங்களைப் பார்க்கிறார்களே தவிரக் கிறிஸ்தவனாக சிந்திக்க முடியவில்லை அவர்களால். அநேக கிறிஸ்தவர்களுக்கு போர் என்றாலே அலர்ஜி. அதாவது போரே இருக்கக்கூடாது, நியாயமான விஷயத்துக்கும் நாடுகள் போரில் இறங்கக்கூடாது என்று அனாபாப்திஸ்துகளைப்போல எண்ணிவருகிறார்கள். கருவில் உயிரோடு இருக்கும் குழந்தையை அழிப்பது உயிர்க்கொலை (abortion) என்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது? கல்வி அவசியம் என்பதற்காக அரசு எந்தமுறைக் கல்வியை அளித்தாலும் அதை நம்பிள்ளைகள் மேல் திணிக்கலாமா? என்று எத்தனைபேர் கேட்கிறார்கள். அரசு எதைப்போதித்தாலும் கல்வி அவசியம் என்பதற்காக எந்தப் பள்ளிக்கூடத்திற்கும் குழந்தைகளை அனுப்பத்தயாராக இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அவர்களால் கிறிஸ்தவனாக சிந்திக்க முடியாமலிருக்கிறது. அரசியலில் ஈடுபடலாமா, கூடாதா, நாட்டில் தேர்தல் வருகிறபோது எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும், கட்சிப்பணியில் ஈடுபடலாமா கூடாதா, என்பதையெல்லாம் வேதபோதனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து முடிவெடுக்கும் நிதானம், ஞானம்கூட பெரும்பாலானோருக்கு இல்லாமலிருக்கிறது. இதையும்விட மோசமானது மனிதநலவாத இயக்கங்களிலும், மனித உரிமைகள் இயக்கங்களிலும் இணைந்து பணிபுரிவது. இதேபோல்தான் சினிமா நடிகர்களை ஹீரோக்களாக எண்ணி ஆதரிப்பதும் அவர்களுடைய படங்களைத் தங்களுடைய முகநூலில் கொண்டிருப்பதும். இதையெல்லாம் ஒரு கிறிஸ்தவனால் எப்படிச் செய்ய முடிகிறது? பெயருக்கு மட்டும் கிறிஸ்தவனாக இருப்பதால் நடப்பதா இது அல்லது கிறிஸ்தவ வேதப்பார்வை அறவே இல்லாததனால் வந்ததா இது, என்று கேட்டுப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. இது பொதுவாகவே நம்மினத்துக் கிறிஸ்தவர்களில் சாதாரணமாகக் காணப்படும் விஷயம்.
இதற்கெல்லாம் காரணமென்ன என்பதை சிந்திக்காமல் இருக்கமுடியாது. முதல் காரணம், சுவிசேஷக் கிறிஸ்தவம் நம்மினத்தில் சார்ள்ஸ் பினி, பில்லிகிரேகம் போன்றவர்களின் அடிப்படை நம்பிக்கையான, மனிதன் கடவுளை சுயமுயற்சியால் கண்டுகொண்டு வாழமுடியும் என்பதைப் பின்பற்றி இயேசுவுக்காகக் கையுயர்த்தும் ஒருவகைப் போலிக்கிறிஸ்தவத்தை உருவாக்கியிருப்பதுதான். இந்தப் போலிக்கிறிஸ்தவம் ஆவிக்குரிய வல்லமையில்லாததால் இதைச்சார்ந்தவர்களுக்கு பக்திவிருத்திக்குரிய முறையில் சிந்திக்க முடியாமலிருக்கிறது; வாழமுடியாதிருக்கிறது. இவர்கள் கிறிஸ்துவை விசுவாசித்திருக்கிறோம் என்று நம்பினாலும், கிறிஸ்துவையும், ஆவியையும் தங்களில் கொண்டிராதவர்களாக தங்களைத் தாங்களே ஏமாற்றி வாழ்கிறார்கள். இவர்களுக்கு மெய்யான மனந்திரும்புதலைத் தரக்கூடிய இயேசுவின் வல்லமையான சுவிசேஷம் இன்று தேவை; ஆவியானவரின் உயிர்மீட்பு எழுப்புதல் இவர்களுடைய இருதயத்தில் நிகழவேண்டும்.
இரண்டாவதாக, கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்றைக்கு வேதப்பிரசங்கம் தெளிவான முறையில் ஆவிக்குரிய பயன்பாடுகளோடு பிரசங்கிக்கப்படுவதில்லை. வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டும் என்று சுவிசேஷப்பணிக்கு வந்திருப்பவர்கள், வேதஅறிவில்லாமல், போதக ஊழியத்துக்குத் தேவையான ஞானமும் தகுதியுமில்லாமல் பிரசங்க மேடையை சாட்சிசொல்லுவதற்கும், வாக்குத்தத்தங்களை அள்ளித்தெளிப்பதற்கும் பயன்படுத்திவருவதால், அவர்களோடு இணைந்து ஆத்துமாக்களும் ஆவிக்குரிய வேதஞானமில்லாமல் நம்மினத்தில் இருந்துவருகிறார்கள். ஆதியாகமத்தில் இருந்து வெளிப்படுத்தல்வரையுள்ள நூல்களில் தேர்ச்சியுள்ளவர்களாக கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்தை ஆத்துமாக்கள் கொண்டிருக்கும்விதத்தில் விளக்கிப் போதித்துப் பிரசங்கிக்கும் வல்லமையுள்ளவர்களை நம்மினத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம். போதாக்குறைக்கு பெரும்பாலான பிரசங்கிகளும் சாதி, சடங்கு, பண்பாடு என்ற பாசிபிடித்த குட்டைக்குள் வீழ்ந்துகிடப்பதால் அவர்களுக்கு உலகக் கண்ணோட்டம் எங்கிருந்துவரும்? நம்மினத்தில் வாழ்க்கை சம்பந்தமாகவும், உலகம் சம்பந்தமான விஷயங்களிலும் ஆவிக்குரியவிதத்தில் வேதத்தைப் பயன்படுத்தி முடிவெடுக்க முடியாமல் திசைதடுமாறிய நிலையில் இருந்துவரும் எத்தனையோபேரை நான் சந்தித்திருக்கிறேன்; அவர்களுக்காக வருத்தப்பட்டிருக்கிறேன்; ஆலோசனை தந்திருக்கிறேன். இந்த விஷயங்களில் முடிவெடுக்க முடியாத பலவீனத்தோடு இவர்கள் வாழ்ந்து வருவதற்குக் காரணம் ஆவிக்குரிய வேதபோதனையும், ஆத்துமவிருத்தியளிக்கும் அன்போடுகூடிய போதகக் கண்காணிப்பும் இவர்களுக்குக் கிடைக்காமல் இருப்பதுதான். மூலமொழியில் இருந்து பிசகாமலும், இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடியதுமான தமிழில் வேதம் இல்லாதகுறைமட்டுமல்லாது, சத்தான போதனையையும் தகுந்த ஆத்துமவிசாரிப்பையும் கொடுக்கத் தகுதியும், வல்லமையும் இல்லாத ஊழியர்களால் நம்மினம் ஆடிக்காற்றில் அல்லாடிக் கொண்டிருக்கும் ஆல்இலைபோல் இருந்துவருகிறது. அதற்கு கிறிஸ்தவ வாழ்க்கையை ஆவிக்குரியவிதத்தில் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும்படி இந்த உலகத்தில் வாழத்தெரியவில்லை.
இவற்றோடு இன்னொரு முக்கியமான காரணம் நம்மினத்தில் வாசிப்பு துப்புரவாக இல்லாமலிருப்பது. வாசிப்பில்லாமல் கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்தை ஒருவன் வளர்த்துக்கொள்ளுவதென்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படும் கதைதான். வாசிப்பைப்பற்றி எவ்வளவோ எழுதியிருப்பதால் மறுபடியும் அதை இங்கு விளக்கத்தேவையில்லை. ‘சட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு’ என்ற நூலை வாங்கி வாசியுங்கள். உங்களுக்கே புரியும் நான் என்ன சொல்லவருகிறேன் என்பது.
கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்தைக் கொண்டிராமல் இருப்பது மிகவும் ஆபத்தானது என்பது அநேகருக்குப் புரிவதில்லை. அத்தகைய கண்ணோட்டம் இல்லாமலிருந்தால் நாம் ‘லிபரல்களாகத்தான்’ இருந்துவருவோம். ஆங்கிலத்தில் ஆவிக்குரிய விஷயங்கள் சம்பந்தமாக ‘லிபரல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது வேதத்தை நிராகரித்து உலகப்பிரகாரமான கொள்கைகளைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறோம். அது ஆபத்தானதுதானே. கீழைத்தேய நாடுகளில் கிறிஸ்தவத்தின் செல்வாக்கு நாடுதழுவியதாக இருந்ததில்லை. அநேக நாடுகள் மதநம்பிக்கைகளைத் தொடர்ந்துகொண்டிருந்தாலும், கிறிஸ்தவ செல்வாக்கு அதிகமில்லாததாகவே தொடர்ந்திருக்கின்றன. இத்தகைய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்துவரும் கிறிஸ்தவர்கள் பெரும்போராட்டத்துடனேயே வாழநேர்கிறது. உலகப்பிரகாரமான சிந்தனைகளையும், உருவவழிபாட்டையும், அதோடு தொடர்புடைய சம்பிரதாயங்களையும் எண்ணப்பாட்டையும் கொண்டிருக்கும் சமுதாயத்தில் அவர்கள் அன்றாடம் மனத்தளவிலும், செயலளவிலும் கிறிஸ்தவ போதனைகளுக்கு எதிரான அம்சங்களுக்கு முகங்கொடுத்து வாழ்கிறார்கள். இது அங்கு சகஜம். மெய்க்கிறிஸ்தவனாக இருந்து கிறிஸ்தவ உலகப்பார்வையில்லாதிருந்தால் இத்தகைய சமுதாயத்தில் அவர்களால் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும்விதத்தில் வாழ்வது பெருங்கஷ்டம். இந்நாடுகளில் அரைவேட்காட்டு கிறிஸ்தவர்களாக இருப்பவர்களே, சிந்திக்க மறுத்து சமுதாயத்தில் சாதிகளுக்கு வக்காலத்து வாங்கி, தாய், தந்தைவழி வரும் நெருங்கிய உறவில் திருமண பந்தத்தில் ஈடுபட்டு, பணம் வேண்டுமென்பதற்காக சிந்தனையை அடகுவைத்து வேதத்திற்கு விரோதமான தொழில்களில் ஈடுபட்டுப் பலவீனமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
கீழைத்தேய நாடுகள் கிறிஸ்தவ அரசுகளால் ஆளப்படவில்லை. பொருளாதாரம், கல்வி, சமுதாய ஒழுங்கு, மதவிஷயங்களெல்லாம் ஆளும் பெரும்பான்மையினரால் தீர்மானிக்கப்படுகின்றன. கிறிஸ்தவனின் சுற்றுச்சூழல் இந்நாடுகளில் அவிசுவாச நம்பிக்கைகளைக்கொண்டு, உலகப்பிரகாரமானதாக இருந்துவருகின்றது. இந்தச் சுற்றுச்சூழலுக்கு இடங்கொடுத்து விசுவாசத்தைக் கெடுத்துக்கொள்ளாமலும், அதேவேளை வேதபோதனைகளை அனைத்து விஷயங்களிலும் கைக்கொள்ளுவதும் விசுவாசியின் கடமையாகிறது. தன்னுடைய சுற்றுச்சூழல் கஷ்டமானது என்பதால் வேதத்தைப் பலவிஷயங்களில் ஒதுக்கிவைத்துவிட்டு சூழலுடன் ஒத்துப்போய் வாழ்கிறவன் கிறிஸ்தவ உலகக்கண்ணோட்டம் இல்லாதவனாகத்தான் இருப்பான். இன்று அத்தகைய சுற்றுச்சூழலும் தொடர்ந்து பலவீனமடைந்து வருகின்றது. இந்தியாவில் மூன்றாம் பாலென்று ஒன்றை சட்டம் மூலம் அங்கீகரித்திருக்கிறார்கள். தன்னினச் சேர்க்கை இந்நாடுகளில் வலுப்பெற்று வருகிறது. கிறிஸ்தவ உலகக்கண்ணோட்டம் இல்லாதவர்களால் இதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது; இவற்றை எதிர்த்து எப்படி வாழ்வது என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் போகும்.
சுற்றுச்சூழல் எப்படி இருந்தபோதும், கிறிஸ்தவன் கிறிஸ்தவ உலகக்கண்ணோட்டத்துடன் அனைத்தையும் எதிர்த்து வாழ்ந்து கிறிஸ்துவை மகிமைப்படுத்த வேண்டும் என்பது கிறிஸ்தவ விசுவாசத்தைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியாததொன்று. முரண்பாட்டுக்கு கிறிஸ்தவத்தில் இடமில்லை. ஒன்று, ஒருவன் பாவத்தை அன்றாடம் எதிர்த்து, தொடர்கின்ற மனந்திரும்புதலோடு கிறிஸ்தவனாக வாழவேண்டும் இல்லையெனில் முரண்பாடுகள் கொண்ட அரைவேட்காட்டு மனிதனாக போலிக்கிறிஸ்தவ வாழ்க்கை வாழவேண்டும். போலிக்கிறிஸ்தவர்கள் மெய்க்கிறிஸ்தவர்கள் அல்லர். சுற்றுச்சூழல் தங்களுடைய விசுவாச வாழ்க்கைக்கு பொருந்திப்போகாத நிலை இருந்தபோது மோசேயும், யோசுவாவும், ஆபிரகாமும், யோசேப்பும், தானியேலும் அவனுடைய நண்பர்களும் சிந்திக்க மறுத்து முரண்பாடுகளைக்கொண்ட வாழ்க்கை வாழவில்லை; அவர்கள் விசுவாசத்தின் அடிப்படையிலான உலகக்கண்ணோட்டத்துடன் சுற்றுச்சூழலை எதிர்த்து வாழ்ந்து கிறிஸ்துவை மகிமைப்படுத்தினார்கள். இயேசுவும் தன் வாழ்நாளில் இந்த உலகத்தில் இதைத்தான் செய்தார். பவுலும் இதேவிதமாகத்தான் வாழ்ந்தார். இவர்கள் எல்லோரும் உலகத்துக்கு அடிமையாகி கிறிஸ்தவ உலகக்கண்ணோட்டமில்லாது வாழவில்லை. கிறிஸ்தவனாக இருந்தும் கிறிஸ்தவ உலகக்கண்ணோட்டமில்லாமல் வாழ்ந்து தன் வாழ்க்கையை அசிங்கப்படுத்திக் கொண்டதற்கு உதாரணமாகத்தான் லோத்துவை வேதத்தில் காண்கிறோம்.
சீர்திருத்த கிறிஸ்தவ விசுவாசிகள் கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டம் கொண்டிராதிருப்பது அந்த விசுவாசத்திற்கே அவமானம் தேடித்தரும் செயல். சீர்திருத்த கிறிஸ்தவம் வேதபூர்வமான உலகக் கண்ணோட்டத்துடன் நாம் வாழ உதவுகிறது. மார்டின் லூத்தரோ, ஜோன் கல்வினோ, ஜோன் பனியனோ அல்லது ஜோன் ஓவனோ கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டமில்லாது இருந்துவிடவில்லை. கிறிஸ்தவ உலகக்கண்ணோட்டம் கொண்ட சீரிய சிந்தனையாளராக ஜொனத்தன் எட்வர்ட்ஸ் இருந்தார். இந்த வரிசையில் நவீன காலத்தில் ஜே. சி. ரைல், சார்ள்ஸ் ஸ்பர்ஜன், ஆபிரகாம் கைப்பர் இவர்களுக்குப் பிறகு மார்டின் லொயிட் ஜோன்ஸ் போன்றோரையெல்லாம் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். இந்த சீர்திருத்த விசுவாசிகள் சிந்தனையாளர்களாக கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டமுடையவர்களாக நமக்கு உதாரணபுருஷர்களாக இருந்திருக்கிறார்கள். தற்காலத்து சீர்திருத்த விசுவாசியும் இறையியல் வல்லுனருமான அல்பர்ட் மொஹ்லர் இத்தகைய கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும்விதத்தில் நடைமுறை சுற்றுச்சூழல், அரசியல், பொருளாதாரம், சமூகவியல் சம்பந்தமான விஷயங்களை ஆராய்ந்து வேதரீதியில் தன்னுடைய Briefing எனும், கணினி சார்ந்த அன்றாடச் செய்திகளை ஆங்கிலத்தில் 22 நிமிடங்களுக்கு அளித்து வருகிறார். கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்துக்கு அல்பர்ட் மொஹ்லரின் செய்திகள் அருமையான உதாரணமாக இருந்துவருகின்றன. யாரையும் பொருட்படுத்தாமலும், யாருக்கும் தலைவணங்காமலும், இந்த இறையியல் வல்லுனர் வேதவிளக்கங்களைத் தொடர்ந்து அளித்து வருகிறார்.
கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்தை எப்படிக்கொண்டிருப்பது, என்று சுருக்கமாக விளக்கப்போனால் எனக்கு இரண்டு வசனங்கள் நினைவுக்கு வருகின்றன. பவுலே அந்த இரண்டு வசனங்களிலும் இதைப் பொதுவானவிதத்தில் விளக்கியிருக்கிறார்.
1அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. 2நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். (ரோமர் 12:1-2)
8கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். 9நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார். (பிலிப்பியர் 4:8-9)
இந்த வசனங்களின் மூலம் பவுல் வேதத்தைப் பயன்படுத்தி அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து வேதக்கண்ணோட்டத்தை வளர்த்துக்கொண்டு ஆண்டவருக்குரிய வாழ்க்கை வாழும்படியாகச் சொல்லுகிறார். கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள், சமுதாய இழிவுகளுக்கு வாழ்க்கையில் இடங்கொடுத்து கிறிஸ்துவை ஏமாற்றி வாழாதீர்கள். இந்த உலகத்தை சமாதானப்படுத்தி வாழ்வீர்களானால் பரலோகத்தில் உங்களை ஆண்டவர் வரவேற்கமாட்டார். தேமா உலகத்தோடு சமாதானத்தை ஏற்படுத்திக்கொண்டதால் பரலோகத்தை இழந்துபோனான். யூதாசுக்கும் அதேகதிதான். உங்கள் இருதயங்களை ஆராய்ந்து பாருங்கள்; கிறிஸ்துவுக்காக உலகத்தை எதிர்த்து வாழப்போகிறீர்களா? உலகத்தோடு ஒத்துப்போய் இருதயத்தைப் பாழாக்கிக்கொள்ளப்போகிறீர்களா?