திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2016 -ம் ஆண்டு மூன்றாம் இதழ்

1. வாசகர்களே!

2. தமிழில் வேதமொழிபெயர்ப்பு: அவசியமான ஓர் அலசல்

3. பக்தி வைராக்கியம் உங்களுக்கு இருக்கிறதா? 

4. நிழலும் நிஜமும் – பழையஏற்பாட்டு பலிகளும், கிறிஸ்துவின் பாவநிவாரணபலியும் –

5. உள்ளூர்சபை அங்கத்துவம் – தவிர்க்கமுடியாத நடைமுறைத் தேவை

 

வாசகர்களே!

மறுபடியும் இதழ் மூலம் உங்களைச் சந்திக்க கிருபையாய் கர்த்தர் வாய்ப்பளித்திருக்கிறார். இந்த வருடம் வேகமாகப் போய்க்கொண்டிருப்பதைக் காண்கிறேன். அதற்குள் மூன்றாவது இதழ் வந்துவிட்டது. தமிழில் நம் கரத்தில் இருக்கும் வேதத்தில் காணப்படும் தவிர்க்கவேண்டிய குறைபாடுகள் பற்றியும், புதிதாக வந்திருக்கும் ஒரு மொழிபெயர்ப்பு பற்றியும் ஆராய்ந்து விளக்கியிருக்கிறேன். கிறிஸ்தவ விசுவாசத்தில் வளரவும், கிறிஸ்தவம் சிறக்கவும் நல்ல வேத மொழிபெயர்ப்பு அவசியம். திருச்சபை சீர்திருத்தம் ஆரம்பமான 16ம் நூற்றாண்டிலேயே வேதமொழிபெயர்ப்புப் பணியும் ஆரம்பமானது. வேதமில்லாமல் எந்தச் சீர்திருத்தத்தை சீர்திருத்தவாதிகள் செய்திருக்க முடியும்? நம்மால் புரிந்துகொள்ள முடியாத மொழியில் வேதம் தொடர்ந்திருக்கக் கூடாது என்ற ஆதங்கத்தால் எழுதப்பட்டிருக்கும் ஆக்கம் இது.

அத்தோடு கிறிஸ்துவின் பாவநிவாரணபலியில் உள்ளடங்கியிருக்கும் சத்தியங்களை விளக்கும் ஓர் ஆக்கமும் இதில் வந்திருக்கின்றது. நல்ல நண்பரான போதகரொருவரின் ஆக்கமான ‘பக்தி வைராக்கியம்’ நிச்சயம் உங்களுக்குப் பலனுள்ளதாக இருக்கும். அறிவுபூர்வமான, உணர்வுபூர்வமான அத்தகைய வைராக்கியம் இன்று நமக்கு அவசியம் தேவை.

இவற்றோடு திருச்சபை அங்கத்துவத்தைப் பற்றிய ஓர் ஆக்கத்தையும் இதழில் நீங்கள் வாசிக்கலாம். இந்த விஷயத்தை விளக்கும், நான் சமீபத்தில் வாசித்த இரு நல்ல நூல்கள் இதை என்னை எழுதவைத்தன. ‘அங்கத்துவம் இல்லாத திருச்சபையா’ என்ற நூலை ஏற்கனவே நான் எழுதிவெளியிட்டிருக்கிறேன். திருச்சபை அங்கத்துவம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள அதைப் பெற்று வாசியுங்கள். தொடர்ந்தும் நம்மினத்துக் கிறிஸ்தவம் விடாப்பிடியாக வேதத்தைப் பின்பற்றாமல் இருந்து வருகிறதே என்ற ஆதங்கம் எனக்கு; அதிருக்கும் இதயங்களும் நம்மத்தியில் இல்லாமலில்லை. வேதத்தின் அதிகாரத்தை உணராது, அதைப்பின்பற்றுகிற இருதயமில்லாது சுயநலத்திற்காக மட்டும் வாழ்ந்து வருகிற ‘கிறிஸ்தவம்’ கிறிஸ்து உருவாக்கியிருக்கும் கிறிஸ்தவமல்ல. அத்தகைய வேஷதார கிறிஸ்தவத்தை நாம் தோலுரித்துக் காட்டுவது அவசியம். வேதத்தை வாசிப்போம்; வேதத்தை மட்டும் பின்பற்றுவோம்; வேதநாயகனான கிறிஸ்துவின் மனங்குளிரும்படி அவருடைய வருகையை எதிர்பார்த்து பக்தி வைராக்கியத்தோடு வாழுவோம். – ஆர்.

தமிழில் வேதமொழிபெயர்ப்பு: அவசியமான ஓர் அலசல்

‘தமிழ் வேதத்தில் காணப்படும் குறைபாடுகளை இன்றைய கிறிஸ்தவர்களிடம் சுட்டிக்காட்டினால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்’ என்று நண்பர் ஒருவர் சமீபத்தில் சொன்னார். பெரும்பாலும் இன்று எல்லோரும் பயன்படுத்திவரும், பழைய திருப்புதல் தமிழ் வேதாகமத்தில் காணப்படும் குறைபாடுகளைப்பற்றி இதழில் ஏற்கனவே சில தடவைகள் எழுதியிருக்கிறேன். இன்று நேற்றென்றிராமல் தமிழ் கிறிஸ்தவர்கள் வேதமொழிபெயர்ப்பு என்று ஆரம்பித்தபோதெல்லாம் எதிர்ப்புக்காட்டி வந்திருக்கிறார்கள் என்று நம்மிடம் இருக்கும் வரலாற்று ஆவணங்கள் சொல்லுகின்றன. பெப்ரீஷியஸ், இரேனியஸ், பேர்சிவெல், பவர், லார்சன், மொனஹன் என்று வேதமொழிபெயர்ப்பில் ஈடுபட்டவர்களெல்லாம் இந்த எதிர்ப்பை சந்தித்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருடைய மொழிபெயர்ப்பும் சிறந்ததென்று சொல்வதற்கில்லை. இருந்தபோதும் இவர்களுடைய முயற்சியையும், உழைப்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. இன்று பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ் வேதாகமத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறபோது அதை வேதநிந்தனையாகவோ அல்லது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு வேதத்தின் மீதிருக்கும் நம்பிக்கையைக் குறைவுபடுத்தும் முயற்சியாகவோ எடுத்துக்கொள்ளக்கூடாது. அந்த ஆபத்து இருக்கிறது என்பது நான் அறிந்ததுதான். இதற்காக நல்ல தமிழில், மூலமொழிகளான எபிரெய, கிரேக்க மொழிகளைச் சார்ந்து புதிய மொழிபெயர்ப்பு நம்மினத்துக்கு அவசியம் என்பதை சிந்திக்கின்ற தமிழ் கிறிஸ்தவர்கள் மறுக்கமாட்டார்கள். இருந்தபோதும் அடிப்படையிலேயே தமிழ் கிறிஸ்தவர்களிடம் ஒருதடவை மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தை மறுபடியும் திருத்தக்கூடாது என்ற எண்ணம் ஊறிப்போயிருப்பது தெரிகிறது. இந்தக் குறுகிய மனப்பான்மை தமிழில் சிறந்த வேதமொழிபெயர்ப்பு உருவாவதற்கு ஒரு தடையாக அமைந்திருக்கின்றது. இதற்குக் காரணம் வேதமொழிபெயர்ப்பு பற்றிய உண்மை அவர்களுக்குத் தெரியாததும், தெரிந்திருக்கிறவர்களுக்கும் அதை ஏற்றுக்கொள்ளுகிற மனப்பான்மை இல்லாததுமே.

உலகத்தில் இருக்கும் ஏனைய நூல்களை மொழிபெயர்ப்பதற்கும் வேதத்தை மொழிபெயர்ப்பதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஏனைய நூல் மொழிபெயர்ப்புகளையும் கவனத்தோடு செய்யவேண்டியிருந்தாலும் வேதமொழிபெயர்ப்பில் அதிக கவனம் காட்டவேண்டும். வேதம் கடவுளுடைய வார்த்தையாக இருப்பதனாலும், அது ஆவியால் அருளப்பட்டிருப்பதனாலும் ஏனோதானோவென்று அது மொழிபெயர்க்கப்படக்கூடாது. பல மொழிப்பாண்டித்தியம் பெற்ற சுவிசேஷ கிறிஸ்தவர்கள் சில வருடங்களை செலவிட்டு நிதானத்தோடும், கவனத்தோடும் ஈடுபாடுகாட்டி செய்யவேண்டிய மொழிபெயர்ப்புப் பணி அது. இருந்தபோதும் அது மொழிபெயர்ப்பு மட்டுமே. மொழிபெயர்ப்பு ஒருபோதும் பூரணமானதாக இருந்துவிடாது. தமிழ் வேதம் ஒரு மொழிபெயர்ப்பு மட்டுமே என்பதையும், அதற்கும் ஆவியால் அருளப்பட்ட மூல வெளிப்படுத்தலைக்கொண்டு காணப்படும் சுருள்களுக்கும் இருக்கும் வேறுபாடும், அவைபற்றிய அவசியமான உண்மைகளையும் அறிந்துவைத்திராததாலேயே தமிழ் கிறிஸ்தவர்கள் அநாவசியத்துக்கு பரலோகத்தில் இருந்து விழுந்த தெய்வீகநடை கொண்டதாக தமிழ் வேதாகமத்தைத் தொடர்ந்து எண்ணி வருகிறார்கள்.

ஆவியால் ஏவப்படுதலும் (Inspiration), மொழிபெயர்ப்பும் (Translation)

தன்னுடைய சித்தத்தைக் கடவுள் வெளிப்படுத்தியபோது அதை மனிதர்களைக்கொண்டு எழுத வைத்தார். அப்படி அவரால் தெரிந்துகொள்ளப்பட்டு அவருடைய சித்தத்தை எழுத்தில் வடித்தவர்களின் செயலினாலேயே இன்று வேதம் நம் கையில் புத்தகமாக இருக்கிறது. தொடக்கத்தில் கடவுள் தன் சித்தத்தை (வேதத்தை) எபிரெய மொழியிலும், கிரேக்க மொழியிலும் தந்தார். பழைய ஏற்பாடு எபிரெய மொழியிலும், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டது. கடவுளிடமிருந்து நேரடியாக அவருடைய சித்தத்தை வெளிப்படுத்தலாகப் பெற்றுக்கொண்டவர்கள் (Revelation) ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு அவற்றை எழுத்தில் வடித்தார்கள். ஆவியானவரின் இந்த வழிநடத்துதல் அற்புதமானது. அதாவது, ஆவியானவர் எழுதியவர்களுடைய ஆற்றலையும், மொழி வளத்தையும், ஏனைய சிறப்பம்சங்களையும் பயன்படுத்திக்கொண்டபோதும் எந்தவிதத்திலும் கடவுளின் சித்தம் குறைவுபடாதவகையில் வேதவார்த்தைகளை மட்டும் அவர்கள் எழுதும்படிப் பார்த்துக்கொண்டார். அதாவது அந்த மனிதர்களுடைய சுய கருத்துக்களும், குறைபாடுகளும் வேதத்தில் பதியப்படாதபடி ஆவியானவர் அவர்களை வழிநடத்தினார். அது மாபெரும் அற்புதம். இந்தவகையில் உலகில் எந்த நூலும் எழுதப்படவில்லை. இதை ஆங்கிலத்தில் Divine Inspiration என்று சொல்லுவார்கள். இதை ஆங்கில வேதம் God breathed என்கிறது (2 தீமோ 3:16). இந்திய வேதாகம இலக்கியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இதைச் சரியாக ‘தேவ சுவாசத்தால்’ என்று மொழிபெயர்த்திருக்கிறது. ஏனெனில் வேதம் கர்த்தரால் ஊதி அருளப்பட்டது என்பது இதற்கு அர்த்தம். இது தெய்வீக வழிநடத்துதல். இதனால்தான் வேதம் குறைபாடுகளும், தவறுகளும் அறவே இல்லாத தெய்வீக வார்த்தை என்பதை நாம் நம்புகிறோம். இதைப் பவுல் 2 தீமோ 3:16ல், “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்று விளக்குகிறார். இதையே பேதுருவும், 2 பேதுரு 1:20-21ல், “வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

பேதுரு 20ம் வசனத்தில் தீர்க்கதரிசனமென்று சொல்லுவது வேதத்தையே. வேதத்தைக் கடவுள் வெளிப்படுத்தலாக தந்தபோது அது எவருடைய தனிப்பட்ட புரிந்துகொள்ளுதலின்படியும், விளக்கத்தின்படியும் கொடுக்கப்படவில்லை என்பதையே ‘சுயதோற்றமான பொருளையுடையதாக இல்லை’ என்ற பதங்கள் குறிக்கின்றன. பழைய திருப்புதலில் இந்த மொழிபெயர்ப்பு தெளிவாக இல்லை. தமிழிலிருக்கும் ஒரு புதிய மொழிபெயர்ப்பு (இந்திய வேதாகம இலக்கியம் வெளியிட்டது) இதைச் சரியாக மொழிபெயர்த்திருக்கிறது. ‘வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் தீர்க்கதரிசியின் சொந்த விளக்கத்தினால் உண்டானதல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று அதிலிருக்கிறது. வேதம் ஆவியின் வழிநடத்துதலின் மூலம் நமக்குத் தரப்பட்டிருக்கிறது; மனித சிந்தனைகளுக்கும், தவறுகளுக்கும் அதில் இடமில்லை.

மேலே நான் விளக்கியிருக்கும், கடவுளின் வார்த்தை நமக்குத் தரப்பட்டிருக்கும் விதத்தின்படி, வேதம் அது எழுத்தில் வடிக்கப்பட்ட காலத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த மூலச் சுருள்களுக்கு மட்டுமே இந்த உண்மைகள் பொருந்தும். அந்த மூலச் சுருள்கள் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் யூதர்களால் மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வரவிருக்கும் சந்ததிகளைப் போய்ச்சேர்ந்தன. கடவுள் தன் வார்த்தையை இந்தவிதத்தில் அற்புதமாகப் பாதுகாத்துப் பராமரித்து நமக்களித்திருக்கிறார். அதேபோல புதிய ஏற்பாட்டு மூலச்சுருள்களும் பாதுகாக்கப்பட்டு பின்னால் பல மொழிகளில் வேதம் மொழிபெயர்க்கப்படுவதற்குப் பயன்பட்டன. இன்றும் அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த மூலச்சுருள்களுக்கு மட்டுமே பவுல் 2 தீமோ 3:16லும், பேதுரு 2 பேதுரு 1:20-21லும் சொன்ன வார்த்தைகள் பொருந்தும். அவையே ஆவியினால் மனிதகுறைபாடுகளும், தவறுகளும் இல்லாமல் பாதுகாக்கப்பட்டு நமக்குக் கொடுக்கப்பட்டன. இந்த உண்மை மொழிபெயர்ப்புக்கு ஒருபோதும் பொருந்தாது. ஆவியால் அருளப்பட்டு நம்மிடம் வந்திருந்த மூலச் சுருள்களைப் பயன்படுத்தியே வேதத்தை டின்டேலும் அவருக்குப் பின்வந்த அநேகரும் மொழிபெயர்த்தார்கள். மொழிபெயர்ப்புகள் மூலத்தை எழுத்துபூர்வமாக (literal, formal translation)  ஒத்திருக்கின்றவரை அவற்றை நாம் நம்பிப் பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் பல மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றபோதும் திருச்சபைகள் எல்லாவற்றையும் வேதமாக ஏற்றுக்கொள்ளுவதில்லை. அவற்றை ஆராய்ந்து பார்த்து சிறந்த மொழிபெயர்ப்புகளை மட்டுமே வேதமாக நம்பிப் பொதுஆராதனைக்குப் பயன்படுத்திக்கொள்ளுகின்றன. அவ்வாறு பயன்படுத்தியபோதும் எந்தத் திருச்சபையும் மொழிபெயர்ப்புகளை மூலச் சுருள்களைப்போலக் கருதிப் பயன்படுத்துவதில்லை. மொழிபெயர்ப்புகள் மனிதர்களால் கவனத்தோடு செய்யப்பட்டபோதும் அவற்றில் குறைபாடுகள் வந்துவிடலாம். வேதசத்தியங்களனைத்தும் தவறின்றி, மாற்றமின்றி மொழிபெயர்க்கப்படுகின்றவரை அவற்றை நம்பிப் பயன்படுத்திக்கொள்ளலாம். இருந்தபோதும் மிகச் சிறப்பான மொழிபெயர்ப்புகளுங்கூட பூரணமானவையாக இருந்துவிட முடியாது.

மொழிபெயர்ப்புப்பற்றிய இந்த உண்மை நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்குப் போதிக்கப்படவில்லை. இது பெருமளவுக்கு திருச்சபைகளினதும், போதகர்களினதும் தவறு. இந்த உண்மை அவர்களுக்கே தெரிந்திருக்கிறதோ என்னவோ? இதன்காரணமாகத்தான் நம்மினத்துக் கிறிஸ்தவர்களால் தமிழ் மொழிபெயர்ப்பான பழைய திருப்புதலிலும் குறைபாடுகள் இருக்கின்றன என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுகிற மனப்பக்குவமின்றி இருக்கின்றனர். அத்தோடு தமிழ் மொழிபெயர்ப்பு பரலோகத்தில் இருந்து நேரடியாகக் கொடுக்கப்பட்டதாக நினைத்து அதில் எந்த மாற்றமும் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ளும் மனதில்லாமல் இருந்துவருகிறார்கள். இது தமிழில் நல்ல வேதமொழிபெயர்ப்பு உருவாவதற்குப் பெருந்தடையாக இருந்துவருகிறது. ஒருபுறம் தவறான பொதுமொழிபெயர்ப்பான திருவிவிலியம் (1995) போன்றவைகள் சத்தியத்துக்கு மதிப்புக்கொடுக்காமல் மொழிபெயர்க்கப்படுகின்றவேளை, இன்னொருபுறம், விடமாட்டேன் போ, என்ற மனப்பாங்குடன் விடாப்பிடியாக பழைய திருப்புதலை உடும்புப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிறவர்களைத்தான் இங்கு பார்க்க முடிகின்றது.

இந்திய வேதாகம இலக்கிய மொழிபெயர்ப்பு (IBL)


வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் கிறிஸ்தவர்களுக்கு பழைய திருப்புதலின் (OV) தமிழ்நடை புரியாமலிருக்கிறது. அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; அந்தத் தமிழ் அப்படிப்பட்டது. இருந்தும் வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழில் வேதத்தை வாசிக்க விரும்புவது பாராட்ட வேண்டிய விஷயம். அதனால் கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் தமிழ் கிறிஸ்தவர்களுடைய வேண்டுகோளின்படி இந்திய வேதாகம இலக்கியம் (IBL) என்ற அமைப்பு புதிய மொழிபெயர்ப்பொன்றை வெளியிடத் தீர்மானித்தது. வில்லியம் ஸ்கொட் என்பவரைப் பொது முகாமையாளராகக் கொண்ட இந்த அமைப்பு 1611 கிங் ஜேம்ஸ் பழைய திருப்புதல் (KJV) ஆங்கில மொழிபெயர்ப்பை அடிப்படையாகக்கொண்டு பழைய திருப்புதலில் காணப்படும் வடமொழி வார்த்தைகளையும், இன்று புழக்கத்தில் இல்லாத கடினமான வார்த்தைகளையும் அகற்றி அவற்றிற்குத் தற்கால தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு புதிய மொழிபெயர்ப்பை வெளியிட்டது. இதை முற்றும் புதியதொரு மொழிபெயர்ப்பாகக் கணிக்க முடியாது. மூலமொழிகளான எபிரெய, கிரேக்க மொழிகளிலிருந்த சுருள்களை ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் வெளியிடப்பட்ட புத்தம் புதிய மொழிபெயர்ப்பல்ல இது. 1611 கிங் ஜேம்ஸ் ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டும் அடிப்படையாகக்கொண்டு பழைய திருப்புதலின் (OV) தமிழில் மாற்றங்களைச் செய்து வெளிவந்துள்ள பதிப்பு மட்டுமே. இந்த மொழிபெயர்ப்பு 2000ம் ஆண்டில் வெளிவந்தது. இதில் ஒரு சிறப்பு, ஒருபக்கத்தில் ஆங்கிலத்தில் 1611 கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பையும் கொண்டு வெளிவந்ததுதான். எவரும் ஆங்கிலத்தையும், தமிழையும் ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்ள இது துணை செய்கிறது.

நிச்சயம் தற்காலத் தமிழ் கிறிஸ்தவர்களும், முக்கியமாக இளைஞர்களும், கிறிஸ்தவரல்லாதவர்களும் இலகுவாக வாசித்துப் புரிந்துகொள்ள இந்த மொழிபெயர்ப்பு பயனுள்ளதாக இருக்கும். அத்தோடு 1611 கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு மொழியில் மட்டும் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால் இந்த மொழிபெயர்ப்பின் நம்பகத்தன்மைபற்றி சந்தேகங்கொள்ள வேண்டியதில்லை. பொதுஆராதனையிலும் இது பயன்படுத்தத் தகுந்தது. தமிழ் மட்டுந்தெரிந்திருந்து போதக, பிரசங்கப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது பேருதவி புரியும்.

இதில் சில வேதவசனங்கள் நல்ல முறையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. கீழ்வரும் உதாரணங்களைப் பார்த்தே அதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

யூதா 1:3 (ப.தி.) – பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.

இதில் ‘பிரியமானவர்களே’ என்ற வார்த்தைப்பிரயோகம் புதிய திருப்புதலில் மாற்றப்பட்டிருப்பது எனக்கு சந்தோஷத்தை அளித்தது. ஏனெனில், இந்த வார்த்தையைப் பயன்படுத்தி கேட்கிறவர்களை சலித்துப் போக வைத்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டுப் பிரசங்கிகள். புதிய மொழிபெயர்ப்பு இதை ‘அன்பானவர்களே’ என்று சரியாக தற்காலத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது.

பழைய திருப்புதலில் ‘கருத்துள்ள’ என்ற வார்த்தை சரியாக ‘ஆர்வமுள்ள’ என்று மொழிபெயர்க்கப்பட்டு வாசிப்பவர்களுக்கு யூதா சொல்லவருவதைத் தெளிவாக்குகிறது. ‘கருத்துள்ள’ என்பதற்கான deligent என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒன்றுக்குமேற்பட்ட பொருள்கள் உண்டு. கருத்துள்ள, கவனத்தோடு என்ற பொருளும் உண்டு. இந்த இடத்தில் யூதா அதைக் குறிக்கவில்லை; ஆர்வமுள்ள என்ற இன்னொரு அர்த்தத்தோடுதான் அதை எழுதியிருக்கிறார். பழைய திருப்புதல் அதை சரிவர மொழிபெயர்க்கவில்லை. அதேநேரம் எத்தனைபேருக்கு பழைய திருப்புதலின் ‘ஒருவிசை’ என்ற வார்த்தைக்குப் பொருள் தெரிந்திருக்கிறது? இலக்கியம் படித்து மணிப்பிரவாள நடையில் பரிச்சயம் இருப்பதால் ஒரேதடவை என்பதை ‘ஒருவிசை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் இந்தளவுக்கு ஒரு பிராமணனைத் தேடி இதற்குப் பொருளறிந்துகொள்ளுகிற நிலை சாதாரணத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடாது. இந்தப் புதிய மொழிபெயர்ப்பு அதைச் சரியாக ‘முடிவாக ஒப்புக்கொடுக்கப்பட்ட’ என்று மொழிபெயர்த்திருக்கிறது. இங்கே யூதா சொல்ல வருவது என்ன தெரியுமா? ஆண்டவர், ஒட்டுமொத்தமாக ஒரே தடவை, முடிவாக சத்தியத்தை நமக்களித்திருக்கிறார் என்பதுதான். அதைப் பழைய திருப்புதலின் ‘ஒரேவிசை’ அக்கிரகாரத்திலிருப்பவர்களுக்குப் புரியும்படியாக விளக்கியிருந்தாலும் அதற்கு வெளியில் வாழும் நமக்குப் புரியும்படி விளக்கவில்லையே.

இப்போது புதிய மொழிபெயர்ப்பை வாசியுங்கள், யூதா 1:3 – “அன்பானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் ஆர்வமுள்ளவனாயிருக்கும் அதேவேளையில், பரிசுத்தவான்களுக்கு முடிவாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நாங்கள் துணிவோடு போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது அவசியமென்று நான் உணர்கிறேன்.”

அதேவேளை எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான வேதவசனங்களை இந்த மொழிபெயர்ப்பு கவனத்தோடு திருத்தியிருக்கிறது. உதாரணத்திற்கு, யோவான் 3:16, “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”

இங்கே ‘ஒரேபேறான’ என்ற பதம் தொடர்ந்தும் புதிய மொழிபெயர்ப்பில் காணப்படுகிறது. ‘கெட்டுப்போகாமல்’ என்பது ‘அழிந்துபோகாமல்’ என்று தற்காலத்திற்கு ஏற்றமுறையில் பழைய பேச்சுத்தமிழைத் திருத்தியிருக்கிறது. ‘நித்தியஜீவன்’ என்பது ‘நித்தியவாழ்வு’ என்று மாற்றப்பட்டிருக்கிறது. நித்தியஜீவன் என்பதைத் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தாலும் பரவாயில்லை. அது எல்லோருக்கும் தெரிந்த வார்த்தைதான். சில வடமொழி வார்த்தைகள் தமிழோடு கலந்துபோய்விட்டவை; அவை தமிழையும் அழகுபடுத்துகின்றன. அவற்றை நாம் நீக்கிவிட முயலக்கூடாது.

இப்போது புதிய மொழிபெயர்ப்பைக் கவனியுங்கள். யோவான் 3:16 – ‘தேவன் நம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அழிந்துபோகாமல் நித்தியவாழ்வை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.’

இன்னுமொரு உதாரணத்தைத் தருகிறேன். யாக்கோபு 2:20, “வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறிய வேண்டுமோ?”

புதிய மொழிபெயர்ப்பு (IBL) – அறிவற்ற மனிதனே, செயல்களில்லாத விசுவாசம் செத்துப்போனதென்பதற்கு உனக்கு நிரூபணம் வேண்டுமோ?

இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளையும் கவனியுங்கள். பழைய திருப்புதலில் ‘வீணான மனுஷன்’ என்றிருக்கிறது. சிந்திக்காமல் நடந்துகொள்ளுகிற ஒருவனைக் குறிக்க ‘வீணான’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் ‘வீணான மனிதன்’ என்ற வார்த்தை கெட்டவன், அழிந்தவன் என்றெல்லாம் பொருளுடையதாக இருக்கிறது. இந்த இடத்தில் இது சரியான மொழிபெயர்ப்பு அல்ல. புதிய மொழிபெயர்ப்பு அதை ‘அறிவற்ற மனிதன்’ என்று சரியாகவும் நல்ல தமிழிலும் மொழிபெயர்த்திருக்கிறது. ‘மனுஷன்’, மனிதன் என்று திருத்தப்பட்டிருப்பதும் அவசியமானது. இன்று மனுஷன், மனுஷாள் என்றெல்லாம் பிராமணர்கள் மட்டுமே பேசுவார்கள். இதே வசனத்தில், ‘செயல்களில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ’ என்ற பழைய திருப்புதலின் வாக்கியம் தெளிவாக இல்லை; காரணம் இது அந்தக் காலத்து மொழிநடை. வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக்கதை வசனத்தில் இந்த மொழிநடையைக் காணலாம். ‘அறியவேண்டுமோ’ என்ற வார்த்தைக்கு மூலமொழியில் பயன்படுத்தப்பட்டிருந்த பதத்தை ஆங்கில வேதம் do you want to know என்று சரியாக மொழிபெயர்த்திருக்கிறது. இந்த வார்த்தைகளுக்கு சாதாரணமாக ‘உனக்குத் தெரியவேண்டுமா?’ என்பதே பொருள். மொழிபெயர்ப்பாளன் மூலமொழியில் இந்த வார்த்தை இந்த சந்தர்ப்பத்தில் எந்தவிதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இந்த வார்த்தைகள் இலக்கண அமைப்புப்படி ‘உனக்குத் தெரியவேண்டுமா?’ அல்லது ‘உனக்கு நான் உறுதிப்படுத்த வேண்டுமா?’ என்ற அர்த்தமும், அழுத்தமும் உள்ளதாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பழைய திருப்புதல் (OV) அந்த அழுத்தத்தைக் கொண்டுவரும்விதத்தில் இதை மொழிபெயர்க்கவில்லை. இன்றைய கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர் அல்லாதவர்களும் இதன் பொருளறிய தடுமாறுவார்கள். புதிய மொழிபெயர்ப்பு ‘உனக்கு நிரூபணம் வேண்டுமோ?’ என்று இருக்கவேண்டிய அழுத்தத்தை வெளிப்படுத்தி மொழிபெயர்த்திருக்கிறது. நிரூபணம் என்ற வடமொழி இங்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அது வழக்கில் உள்ள வார்த்தைதான்.

1 தீமோ. 1:16 (ப.தி.) – “அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.”

இந்த வசனத்தில் காணப்படும் ‘திருஷ்டாந்தம்’ என்ற வார்த்தை புதிய மொழிபெயர்ப்பில் ‘எடுத்துக்காட்டு’ என்று மாற்றப்பட்டிருப்பது அவசியமான மாற்றம்.

புதிய மொழிபெயர்ப்பு (IBL): ‘அப்படியிருந்தும், நித்திய வாழ்வை அடையும்படி இனிமேல் இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்படிக்கு, மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம் பெற்றேன்.’

1 கொரி. 16:13; 1 தீமோ. 2:8; 1 கொரி 14:35, எபேசி. 5:22; 1 பேதுரு 3:1 ஆகிய வேதப்பகுதிகளில் பழைய திருப்புதலில் ‘புருஷர்கள்’ என்ற வடமொழி வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். முதல் இரண்டு பகுதிகளிலும் இதை ‘மனிதர்கள்’ என்ற அர்த்தத்தில் விளங்கிக்கொள்ள வேண்டும். ஏனைய பகுதிகளில் இதைக் ‘கணவர்கள்’ என்ற அர்த்தத்தில் விளங்கிக்கொள்ள வேண்டும். பழைய திருப்புதலில் எல்லாப் பகுதிகளிலும் புருஷர்கள், புருஷர் என்றிருப்பது வாசிக்கிறவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அத்தோடு புருஷன் என்ற வார்த்தை கணவனைக் குறிப்பதற்காக கிராமப்புறங்களில் பரவலாக இன்றும் பயன்படுத்தப்பட்டாலும் நகர்ப்புறங்களில் குறைவு. இந்த வார்த்தையை ‘மனிதன்’ என்ற வார்த்தைக்கு மாற்று வார்த்தையாக எவரும் இன்று பயன்படுத்துவதில்லை. புதிய மொழிபெயர்ப்பு இந்த வசனங்கள் அமைந்திருக்கும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றமுறையில் முதலிரண்டு பகுதிகளிலும் ‘மனிதர்கள்’ என்ற தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறது. ஏனைய பகுதிகளில் ‘கணவர்கள்’, ‘கணவன்’ என்று சரியாக மொழிபெயர்த்திருக்கிறது. 1 கொரி. 11:1-16 வரையுள்ள வசனங்களில் ‘புருஷன்’ என்று பழைய திருப்புதலில் இருந்தவற்றை ‘மனிதன்’ என்று சரியாகவே புதிய மொழிபெயர்ப்பு மாற்றியிருக்கிறது.

இத்தனை நன்மைகள் இருந்தபோதும் இதன் குறைபாடுகளையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.

(1) அகற்றப்பட வேண்டிய வடமொழி வார்த்தைகள், வார்த்தைப்பிரயோகங்கள் இந்த மொழிபெயர்ப்பில் அடியோடு அகற்றப்படவில்லை. பெரும்பாலானவை மாற்றப்பட்டிருந்தபோதிலும் தொடர்ந்தும் ஆங்காங்கு அவை தலைகாட்டுகின்றன. வடமொழிப்பதங்களே இல்லாத தமிழாக இருக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை; அப்படி எதிர்பார்ப்பது தமிழுக்கே நல்லதல்ல. ஏற்கனவே சொன்னதுபோல், சில வடமொழி வார்த்தைகள் தமிழோடு கலந்துவிட்டவை; அவை தமிழுக்கு மூக்குத்தி போட்டதுபோல தமிழை மேன்மைப்படுத்துபவை. இருந்தாலும் பொதுவாக நம்மினத்தவர் பயன்படுத்தாத வார்த்தைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதில் எந்த நன்மையுமில்லை. சில வடமொழி வார்த்தைப்பிரயோகங்களை எழுத்தாளர்கள் நாவல்களிலும், சிறுகதைகளிலும் கட்டுரைகளிலும் சுவைக்காகப் பயன்படுத்துவது வழக்கம். இலக்கிய வாசகர்களை முன்வைத்தே எழுத்தாளர்கள் அவற்றைப் பயன்படுத்துவார்கள். சமுதாயத்தின் எல்லாத் தரப்பினரும் வாசித்து அன்றாடம் பயன்படுத்த வேண்டிய வேதத்திற்கு அவை தேவையில்லை. தினமணி, தினமலர், தினகரன், தினத்தந்தி பத்திரிகைகள் ஒருநாள் மட்டும் இன்று இந்த மொழிநடையில் வந்தால் தமிழ்நாட்டில் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள்? புரிகிறதல்லவா! உதாரணத்திற்கு, சங்கீதம் 94:1ல் ‘சங்கீர்த்தனம்’ என்ற பதம் மாற்றப்படவில்லை. இந்து இலக்கியங்களில் ஆண்டவருடைய பெயரைத் துதித்துப் பாடுவதைக் குறிக்க இந்தப்பதம் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப் பாடித்துதிப்பதை அவாள் ‘நாமசங்கீர்த்தனம்’ என்பார்கள். இதற்கு அர்த்தந்தெரிந்திருக்கிற தற்காலத் தமிழர்கள் எத்தனை பேர்? 1 கொரி 1:28ல், ‘அவமாக்குதல்’ என்ற வார்த்தை, பழைய திருப்புதலில் (OV) இருந்தது தொடர்ந்தும் இந்த மொழிபெயர்ப்பில் இருக்கிறது. அந்த வார்த்தைக்கு ‘பயனில்லாமல் செய்தல்’ என்பது பொருள். எத்தனை பேருக்கு அவமாக்குதல் என்பதற்கு அர்த்தம் தெரியும்? தெரியாத வார்த்தைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு வேதம் படித்தால் அதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?

காங்கிரஸின் பக்தவச்சலம் தமிழகத்து முதன்மந்திரியாக இருந்த காலம்வரை வடமொழி ஆதிக்கம் தமிழர்கள் மத்தியில் பரவிக்காணப்பட்டது. பிராமணத்தமிழ் கலந்து எழுதுவதும், அதன் தாக்கமும் இலக்கியத்தில் தொடர்ந்திருந்தது. உண்மையில் அத்தகைய தமிழுக்கே அன்று சமுதாயத்தில் மதிப்பிருந்தது. ஒருவன் கல்வியில் சிறந்தவன் என்பதற்கு இந்த பாஷையே அடையாளமாக இருந்தது. கோயில் தொடக்கம் கல்லூரி, ஆபிஸ்வரை வடமொழித்தமிழ் ஆட்சிதான். குருகுல கல்விமுறை வேண்டும் என்று ராஜாஜி அன்று ஒற்றைக்காலில் நின்றிருக்கிறார். அதுமட்டும் வந்திருந்தால் இந்தத் தமிழில்தான் குழந்தைகள் அவஸ்தைப்பட்டிருக்கும். சாதாரணத் தமிழில் பேசுவதை அன்று கொச்சையானதாகவும், படிப்பறிவில்லாதவனின் பேச்சாகவும் பார்க்கும் நிலையே இருந்தது. அதனால்தான் தமிழ் வேதமும் அன்று மதிக்கப்பட்ட, புழக்கத்தில் இருந்த அந்தத் தமிழில் தொடர்ந்திருந்தது. இன்று நாவல்களுக்கோ, சிறுகதைக்கோ அவசியமாயிருந்தாலொழிய எழுத்தாளர்கள் வடமொழித் தமிழைப் பயன்படுத்துவதில்லை. சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’ நாவலில் இத்தகைய பிராமணத் தமிழைக் காணலாம். இத்தகைய நடையைப் பயன்படுத்துவதில் தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்றோர் திறமையான எழுத்தாளர்களாக இருந்திருக்கின்றனர்; தங்களுடைய கதை மாந்தர்களுக்கேற்ப அந்தப் பாஷையைப் பயன்படுத்திக்கொண்டனர். இலக்கிய ஆர்வம் உள்ள தமிழர்களுக்கு இந்த நடைபுரியும்; அவர்கள் அதிகம் வாசிப்பதால். தமிழினத்தில் இலக்கியம் என்றாலே பெரும்பாலானோர் இன்று கிலோ என்ன விலை? என்று கேட்பார்கள். இலக்கிய ஆர்வம் கொண்டிருந்து வாசிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் தொகை நம்மினத்தில் மிகமிகக் குறைவு; இது தமிழ் எழுத்தாளர்களுக்கே தெரிந்ததுதான். இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் வடமொழிப் பதங்களைத் தமிழில் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

மேலும் “பண்ணக்கடவது”, “செய்யக்கடவது”, “கடவோம்”, “செய்யும்படிக்கு”, “அறியும்படிக்கு” போன்ற வார்த்தைப்பிரயோகங்களையும் இன்று பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துவது இல்லை. பழைய திருப்புதலில் காணப்படுகிற இவையும் இந்தப் புதியமொழிபெயர்ப்பில் தொடர்ந்திருக்கின்றன. ‘சமாதானத்தோடே போங்கள்’ என்று ஏன் எழுத வேண்டும்? ‘சமாதானத்தோடு போங்கள்’ என்று எழுதலாமே (யாக். 2:16). ‘பசியாறுங்கள்’ என்பது புரிகிறது; இது பேச்சுத் தமிழ். இப்படி எழுத்தில் இன்று எழுதுவதில்லை. ஆங்கிலத்தில் filled என்றிருப்பதை ‘உணவருந்துங்கள்’ என்று மாற்றியிருக்கலாம் (யாக். 2:16). இவை தவிர “பிரபஞ்சம்”, “வசனிப்பு (பேச்சு)” போன்ற வார்த்தைகளும் இதில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றையும் கவனித்துத் தற்காலத் தமிழ் நடைக்கேற்ப மாற்றியிருந்தால் இந்த மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் இன்னும் அதிகரித்திருக்கும்.

பழைய திருப்புதலில் (OV) காணப்படும் ஒருசில வடமொழி வார்த்தைப்பிரயோகங்களைத் தொடர்ந்து பயன்படுத்தியிருக்கலாம். உதாரணத்திற்கு யூதா 1:1ல், ‘தூய்மையாக்கப்பட்டவர்களுக்கு’ என்ற பதம். இது பழைய திருப்புதலில் ‘பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கு’ என்றிருக்கிறது. தமிழ் கிறிஸ்தவர்களில் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் இருந்தால் அது வியப்பானதே. இந்தப் பதம் இன்றும் வழக்கில் இருக்கிறது; பேச்சிலும், எழுத்திலும் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது; எல்லோராலும் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைப்பிரயோகமுங்கூட. இதைப்போய்த், ‘தூய்மையாக்கப்பட்டவர்களுக்கு’ என்று மாற்றியிருப்பது அவசியமில்லை. அதேநேரம் 3ம் வசனத்தில் அதே வார்த்தை (saints) ‘பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கு’ என்று இருக்கிறது. பழைய திருப்புதலின் தமிழில் பூரணத்தூய்மையை நான் எதிர்பார்க்கவில்லை; அது தமிழாக இருக்கவேண்டும் என்றுதான் சொல்லுகிறேன். இங்கே கொஞ்சம் மொழிபெயர்ப்பாளர்கள் யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். தூய்மை போன்ற வார்த்தைகளை நாம் அன்றாடப்பேச்சில் அதிகம் பயன்படுத்துவதில்லை. மேடைப்பேச்சில் பயன்படுத்துவோம்; எழுத்தில் பயன்படுத்துவோம். அவை இலக்கியச் சுவைக்காகப் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தைகள். வேதத்தை நாம் இலக்கியத்தரத்திற்கு தூய தமிழில் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. அப்படிச் செய்வது சாதாரண மக்களை அது சென்றடைவதைத் தடுத்துவிடும். இலக்கிய வார்த்தைகளுக்கும், சாதாரணப் பேச்சுவழக்கிற்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கும்வகையில் அது மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

ஏற்கனவே சுட்டியிருப்பதுபோல் பழைய திருப்புதலில் காணப்படும் சில வடமொழிப் பதங்களைத் தமிழாக்க முனையக்கூடாது. இத்தகைய பதங்கள் தனித்துவமான கிறிஸ்தவ சத்தியங்களை விளக்கும் தனித்தன்மை வாய்ந்த பதங்கள்; இதுவரை தமிழிலும் இல்லாதிருந்த வார்த்தைகள். கலைச்சொற்களைப்போல இத்தகைய வார்த்தைகள் குறிப்பிட்ட வேதசத்தியத்தை விளக்குவதால் வேதத்தை மொழிபெயர்த்தவர்கள் முதன்முறையாக வார்த்தைகளை உருவாக்க வேண்டியிருந்திருக்கிறது. உதாரணத்திற்கு கடவுள் ‘கர்த்தர்’ என்று பழைய திருப்புதலில் அழைக்கப்படுகிறார். ஆண்டாண்டு காலமாக கிறிஸ்தவர்கள் இதைப்பயன்படுத்தி வருகிறார்கள். இது காரணத்தோடு உருவாக்கப்பட்டிருக்கும் வார்த்தை. ஏற்கனவே தமிழில் காணப்படும் வார்த்தைகள் இந்த வார்த்தை வெளிப்படுத்தும் வேதசத்தியத்தை வெளிக்கொணராததாலேயே, மொழிபெயர்ப்பாளர்கள் இதை உருவாக்க நேர்ந்தது. இதைத் தமிழ்ப்படுத்தி நமக்கு ஆகப்போவதொன்றுமில்லை. இத்தகைய வார்த்தைகள் தமிழோடு கலந்துபோய் விடுகின்றன; தமிழுக்கு அழகூட்டுகின்றன. ‘கிறிஸ்தவ தமிழ்’ என்பதைக் குறைகூறுகிறபோது இத்தகைய வார்த்தைகளைக் குறித்து நான் அதைச் சொல்லவில்லை. கலைச்சொற்களாக இல்லாதிருக்கும் வார்த்தைகளுக்கு நல்ல தமிழில் இருக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் அநாவசியத்துக்கு தொடர்ந்தும் கச்சைகட்டிக்கொண்டு வடமொழி வார்த்தைகளைப் பயன்படுத்துவதையே அநேகர் விரும்பவில்லை. பொதுமொழிபெயர்ப்பாகிய திருவிவிலியம் (1995) வேதத்தை முழுமையான தமிழில் கொண்டுவருகிறோம் என்று சத்தியக்குளறுபடி செய்து இத்தகைய கலைச்சொற்களாக இருக்கும் வார்த்தைகளையும் இல்லாமலாக்கிவிட்டிருக்கிறது. அது பெருந்தவறு; கிறிஸ்தவர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலது.

மேலே குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு உதாரணமாக “விசுவாசம்”, “விசுவாசி”, “அவிசுவாசம்”, “அவிசுவாசி”, “இரட்சிப்பு”, “பரலோகம்” போன்ற வார்த்தைகளைக் குறிப்பிடலாம். இதெல்லாம் வடமொழித்தாக்கம் கொண்ட கலைச்சொற்கள். இவற்றைத் தமிழாக்கம் செய்வது அதிகப்பிரசங்கித்தனம் என்பது என் கருத்து. விசுவாசத்தை நம்பிக்கை என்று மாற்றுவது சரியானதல்ல. புதிய மொழிபெயர்ப்பு ‘பரலோகம்’ என்ற வார்த்தையை அது வடமொழிப்பதம் என்பதற்காக தமிழில் ‘விண்ணுலகம்’ என்று மாற்றியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இது அநாவசியமான முயற்சி மட்டுமல்ல சரியானதும் அல்ல. பரலோகம் என்ற பதத்தை உருவாக்கியபோது அதைச் செய்தவர்கள் ஆண்டவர் இருக்கும் இடத்தை மனதில் வைத்து அதை உருவாக்கினார்கள். ஆண்டவர் இருக்கும் இடம் ‘பரம்.’ அதனால் அதற்கு பரலோகம் என்று பெயர் வைத்தார்கள். பரம் என்பதற்கும் பல அர்த்தங்கள் இருந்தாலும் அதில் மேலுலகம் என்பது முக்கியமான கருத்தாக இருக்கிறது. மோட்சம் என்ற வார்த்தையும் பரலோகத்தைக் குறிக்க கிறிஸ்தவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் வடமொழி வார்த்தைதான். விண்ணுலகம் என்பது இதைக் குறிக்கவில்லை. ‘விண்’ என்ற வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் இருந்தாலும் வானம் என்ற அர்த்தம் அதில் மேலோங்கி நிற்கிறது. விண் என்றாலே சாதாரணமாக நாம் வானுலகையே நினைப்போம்.

(2) மூல மொழிகளை அடிப்படையாகக்கொண்டு இந்த மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இது ஆங்கில கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பை அப்படியே தமிழாக்கியிருந்தபோதும் அதை முழுமையாக செய்திருப்பதாகத் தெரியவில்லை. சில இடங்களில் ஆங்கிலத்தில் காணப்படும் சில வார்த்தைகள் தமிழாக்கம் செய்யப்படவில்லை. சங். 94:1ல் to whom vengence belongeth என்றிருக்கிறது. இதைத் தமிழில் ‘நீதியைச் சரிக்கட்டுகிற’ என்று பழைய திருப்புதலில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இதையே இந்தப் புதிய திருப்புதலிலும் காண்கிறோம். இது திருத்தப்பட்டிருக்க வேண்டும். பழைய திருப்புதலில் இந்த வசனத்தை உள்ளபடி மொழிபெயர்க்காமல், மொழிபெயர்த்தவர் தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார். கடவுளிடம் பழிவாங்கும் குணம் இருக்கமுடியாது என்று மொழிபெயர்ப்பாளர் தீர்மானித்து, அதைத் தவிர்த்து மொழிபெயர்த்திருக்கிறார். உண்மையில் ‘பழிவாங்குதல்’ என்றுதான் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். கடவுள் மட்டுமே அதைச் செய்யக்கூடியவராக இருக்கிறார் என்பதுதான் சங்கீதக்காரனின் விளக்கம். இதைத் தவிர்ப்பதால் முழு சங்கீதத்தின் பொருளும், தாக்கமும் மாறிவிடுகிறது.

1 கொரி 1:10ல் ஆங்கில கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு. ‘that ye all speak the same thing’  என்ற வார்த்தைப்பிரயோகத்தைக் கொண்டிருக்கிறது. புதிய தமிழ்மொழிபெயர்ப்பு இதை அப்படியே எழுத்துபூர்வமாக மொழிபெயர்க்காமல் இதன் சாராம்சத்தை மட்டும் ‘ஒத்துப்போய்’ என்று தந்திருக்கிறது. உண்மையில் ஒருவருக்கொருவர் ஒத்துப்போவதைத்தான் இந்த வசனம் அறிவுறுத்தினாலும் மொழிபெயர்ப்பாளனின் பணி வியாக்கியானம் செய்வதல்ல; உள்ளதை உள்ளபடி எழுத்துபூர்வமாக மொழிபெயர்ப்பதே. மொழிபெயர்க்காமல் விடப்பட்ட இந்த வார்த்தைப்பிரயோகம் இந்த வசனத்தைப் பொறுத்தவரையில் மிகமுக்கியானது. இது அழுத்தம் காரணமாக இந்த வசனத்தில் ஆவியானவரால் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வசனப்பகுதிகளைத் தவிர்த்துவிடுவது நூலாசிரியர் சொல்லவந்த விஷயத்தின் ஆழத்தையும், அழுத்தத்தையும் இல்லாமலாக்கிவிடுகிறது. இது என்னைப் பொறுத்தவரையில் பெருங்கவனக்குறைவு. கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பை ஏனைய மொழிகளில் கொண்டுவரும் திரித்துவ வேதாகம சங்கம் வார்த்தைக்கு வார்த்தை எழுத்துபூர்வ மொழிபெயர்ப்பைச் செய்வதையே இலட்சியமாகக் கொண்டிருக்கிறது. அதை இந்தப் புதிய மொழிபெயர்ப்பு முழுமையாகப் பின்பற்றியிருக்க வேண்டும்.

1 கொரி. 11:17ம் வசனம் ‘உங்களைப் பாராட்டாமல் இதைக்குறித்து உங்களுக்குக் கட்டளை கொடுக்கிறேன்’ என்றிருக்கிறது. ‘கட்டளை’ என்ற வார்த்தை அதிகாரபூர்வமாகக் கொடுக்கப்படுவதை உணர்த்துகிறது. ஆனால், இங்கே பவுல் ‘போதனை’ அளிப்பதையே குறிப்பிடுகிறார்; கட்டளையாகச் சொல்லவில்லை. பழைய திருப்புதலில் இருந்தது இங்கே திருத்தப்படவில்லை. இந்த வசனப்பகுதி, ‘இந்தப் போதனையை உங்களுக்குக் கொடுக்கும்போது உங்களை நான் பாராட்டவில்லை’ என்றிருந்திருக்கவேண்டும். இதேபகுதியில் 19ம் வசனத்தில் ‘மார்க்கபேதங்கள்’ என்ற வடமொழி ‘போலிப்போதனைகள்’ என்று திருத்தப்பட்டிருக்கலாம். 21ம் வசனத்தில் பழைய திருப்புதலில் ‘இராப்போஜனம் பண்ணுதலல்லவே?’ என்றிருந்தது இந்தத் திருத்தப்பதிப்பில் ‘திருவிருந்து ஆசரிப்பல்லவே?’ என்றிருக்கிறது. இராப்போஜனம் ‘திருவிருந்து’ என்று திருத்தப்பட்டது அவசியம். ‘ஆசரிப்பல்லவே’ என்ற பதம் பெரும்பாலானோருக்குப் புரியாது. அதைப் பயன்படுத்தியிருக்கவேண்டிய அவசியமில்லை. ‘நீங்கள் கூடிவருவது திருவிருந்து எடுப்பதற்காக அல்ல’ என்றுதான் பவுல் இந்தப் பகுதியில் சொல்லுகிறார். 29ம் வசனத்தில் ‘என்னத்தினாலெனில்’ என்பது ‘எதனாலெனில்’ என்று தற்கால நடையில் திருத்தப்பட்டிருக்கலாம்.

குறைபாடுகள் இருந்தபோதும் இந்த மொழிபெயர்ப்பு ஒரு நல்ல முயற்சி. தற்காலத் தமிழ்நடை என்பதைப் பொறுத்தளவில் பழைய திருப்புதலுக்கு மாற்று மொழிபெயர்ப்பாக இந்த மொழிபெயர்ப்பை நிச்சயம் தமிழ் கிறிஸ்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். நிச்சயம் போதகப் பணியில் உள்ளவர்களுக்கு இது பேருதவி புரியும். இதில் காணப்படும் குறைபாடுகள் மாபெரும் குறைபாடுகள் அல்ல; புதிய பதிப்புகளில் அவற்றை மேலும் திருத்தி வெளியிடலாம். இந்தப் புதிய மொழிபெயர்ப்பிலுள்ள நன்மை, வாசிக்கிறவர்கள் பிரச்சனையில்லாமல் தடையில்லாமல் நல்ல தமிழில் வேதத்தை வாசிக்க முடியும். அதைப் பழைய திருப்புதலை வாசிக்கும்போது பெரும்பாலானவர்களால் அடைய முடியவில்லை. ஒரே தெருவில் இருக்கும் எண்ணற்ற ஸ்பீட் பிரேக்கர்கள்போல, வடமொழி வார்த்தைகளில் அடிக்கடி தடுக்கி விழாமல் வாசிக்கமுடிவதால் வேத வாசகர்களுக்கு இன்னும் வாசிக்கவேண்டும் என்ற தூண்டுதல் தானாகவே ஏற்படும். வேத வாசிப்பும் அதிகரிக்கும்.

இந்த இடத்தில் இந்தப் புதிய மொழிபெயர்ப்பு பற்றிய முக்கியமானதொரு விஷயத்தைச் சொல்லாமலிருக்க முடியாது. ஆங்கிலத்தில் இருக்கும் KJV மொழிபெயர்ப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்த மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறோம் என்று உள் அட்டையில் இந்திய வேதாகம இலக்கியம் அறிவித்திருந்தாலும், பல்வேறு இடங்களில் முழுமுற்றாக அதைப் பின்பற்றாமல் மொழிபெயர்ப்பில் மாற்றங்களைச் செய்திருக்கிறது. அதற்குக் காரணமில்லாமலில்லை. KJV ஆங்கில மொழிபெயர்ப்பு Textus receptus என்ற கிரேக்க மூலச்சுருளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டது. அதற்குப் பின்வந்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் வேறு கிரேக்க மூலச் சுருள்களையும் பயன்படுத்திப் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்திருக்கிறார்கள். இந்திய வேதாகம இலக்கியம் பல இடங்களில் NASB, NKJV, ESV போன்ற ஆங்கில மூலங்களைத் தழுவி அவசியமான மாற்றங்களைச் செய்திருக்கிறது. என்னைப் பொறுத்தளவில் இந்த மாற்றங்கள் நல்லவை மட்டுமல்லாமல் அவசியமானவை. இது இந்த மொழிபெயர்ப்பை இன்னும் பயனுள்ளதாக்குகிறது. இருந்தபோதும் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த விபரங்களை மறைக்காமல் பதிப்புரையில் விளக்கியிருக்கவேண்டும். விற்பனைக்குப் பாதிப்பு ஏற்படுமோ என்ற பயத்தில் அதைச் சொல்லாமல் விட்டிருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. இன்னுமொரு நன்மை இந்த மொழிபெயர்ப்பு கிங் ஜேம்ஸ் (1611) ஆங்கில மூலத்தை அவசியமான திருத்தங்களோடு தமிழில் கொண்டுவந்திருப்பதால் இந்திய வேதாகம சங்கம் 1995ல் வெளியிட்ட பொதுமொழிபெயர்ப்பான திருவிவிலியத்தில் இருந்த பெருந்தவறுகளுக்கும் குறைபாடுகளுக்கும் இதில் இடமில்லை. கர்த்தரின் வேதத்தை வாசிக்கிறோம் என்ற நம்பிக்கையோடு பயமின்றி இதை வாசிக்கலாம்.

இருந்தபோதும் இங்கும் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. இந்த மொழிபெயர்ப்பு வெளிவந்தபோது ஆவலோடு நான் ஒரு பிரதியைப் பெற்று வாசித்துப் பார்த்துவிட்டு சக நண்பர்களையும் இதை வாங்கிப்பயன்படுத்தும்படி ஆலோசனை தந்தேன். ஒரு வருடத்திற்குப் பிறகு மறுபடியும் இதில் வேறு பதிப்புகள் வந்திருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ள சென்னையில் இருந்த இந்திய வேதாகம இலக்கிய செயலகத்துக்குப்போனபோது அதிர்ச்சியான ஒரு விளக்கமே கிடைத்தது. அந்த மொழிபெயர்ப்பை வெளியிடுவதை நிறுத்திவிட்டோம் என்று ஒரேபோடாக போட்டார்கள். ஏன் என்று ஆசுவாசத்துடன் கேட்டேன்? அதற்கு மேசைக்கு முன் நின்றவர், ‘பழைய திருப்புதலையே எல்லோரும் கேட்கிறார்கள்; இந்தப் புதிய மொழிபெயர்ப்பை விற்பனை செய்வது கஷ்டமாய் இருக்கிறது’ என்றார். அத்தோடு, இனி பழைய திருப்புதலோடு இணைத்தே இனி கிங் ஜேம்ஸ் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிடப்போகிறோம் என்றார். இது எந்தளவுக்கு மொழிபெயர்ப்பு பற்றிய விஷயத்தில் நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்கு புரிதல் இல்லை என்பதை உணர்த்தியதோடு, பழைய திருப்புதலைப் பரலோகத்தில் இருந்து விழுந்த மொழிபெயர்ப்புபோல் நம்பி வாழ்கிற நம்மினத்துக் கிறிஸ்தவர்களின் அறியாமையை எண்ணி அழுவதா, சிரிப்பதா என்பதும் தெரியவில்லை. ஒரு நல்ல முயற்சி இப்படி அரைகுறையாக முடிந்து பயனில்லாமல் ஆற்றில் கரைந்துவிட்டதே என்ற வருத்தமே ஏற்பட்டது. தமிழில் நல்ல வேதமொழிபெயர்ப்பில்லாமல் அநேகர் தவித்துக்கொண்டிருக்கும் இந்நாட்களில் இந்தப் புதிய மொழிபெயர்ப்பு இளவேனிற்கால இளங்காற்றுபோல் வீச ஆரம்பித்திருந்தது. அதையும் அனுபவித்து ஏற்றுக்கொள்ளும் வேதஞானமும், முதிர்ச்சியும் இல்லாத நிலையில் நம்மினத்து கிறிஸ்தவம் இருந்துவருகிறது. இந்திய இலக்கிய வேதாகம சங்க பொது முகாமையாளரைச் சந்தித்து இதுபற்றிப் பேசி இனியும் என்ன செய்யலாம் என்று சிந்திக்கலாம் என்று முடிவுசெய்திருக்கிறேன். அப்படி இந்த மொழிபெயர்ப்பு திரும்பவும் இன்னும் அவசியமான திருத்தங்களோடு வெளியிடப்படுமானால் சிந்திக்கின்ற கிறிஸ்தவர்களாவது கிறிஸ்தவ அறிவிலும், கிருபையிலும் மேலும் வளர வசதியாக இருக்கும்.

தமிழ் வேதமொழிபெயர்ப்புகளின் பன்முக பலவீனங்கள்

பொதுவாகவே எல்லோரும் இன்று பயன்படுத்திவரும் பழைய திருப்புதலில் காணப்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டும்போது தமிழ் கிறிஸ்தவர்களில் ஒருதரப்பினர் உண்மையை உணரமறுத்து, கடவுளை நிந்திக்கும் செயலாக அதைக் கணிக்கிறார்கள். அவர்களைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுபோய்விட்டது என்று அர்த்தமல்ல. எதையும் வேதத்தைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கவேண்டிய சமுதாயம் அந்த வேதம் சிறந்தமொழிபெயர்ப்பாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறையுள்ளதாக இருக்கவேண்டும். தமிழ் மொழிபெயர்ப்பில் பலதடவைகள் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்ததற்குக் காரணமே அது நம்மக்களுடைய மொழியில் சரியான மொழிபெயர்ப்பாக இருக்கவேண்டும் என்ற வைராக்கியம் மொழிபெயர்த்தவர்களுக்கு இருந்ததால்தான். தொடக்கத்தில் இருந்த மொழிபெயர்ப்பைத் தொடக்கூடாது, அப்படித் தொடுவது கடவுளை நிந்திக்கும் செயலாகும் என்று அன்றிருந்த திருச்சபைகளோ கடவுளின் ஊழியர்களான பெப்ரீஷியஸோ, இரேனியஸோ, பேர்சிவெலோ, லார்சனோ, பவரோ நினைக்கவில்லையே. தொடர்ந்தும் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு சரியான மொழிபெயர்ப்பை திருச்சபைப்பணிகளில் பயன்படுத்தவேண்டும் என்ற ஆர்வத்தில் தாங்கள் வாழ்ந்த காலப்பகுதியில் அவர்கள் ஏற்கனவே இருந்த மொழிபெயர்ப்பைக் கவனத்தோடு திருத்தியிருக்கிறார்கள். இவர்கள் மேலைத்தேய மிஷனரிகளாக இருந்ததால் இதற்காகத் தமிழையும் பண்டிதர்களிடம் கற்று அதில் பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள்.

ஸ்ரீ லங்காவில், பீட்டர் பேர்சிவெல் 1850ல் தனக்கு முன் இரேனியஸ் 1840ல் செய்திருந்த தமிழ் மொழிபெயர்ப்பைத் திருத்தி வெளியிட்டார். இது ‘பரிசோதனை மொழிபெயர்ப்பாக’ இருந்தது. பேர்சிவெல் மெத்தடிஸ்ட் மிஷனைச் சேர்ந்தவர். நன்கு தமிழ்ப்புலமை கொண்டிருந்தவர். தமிழில் சில நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்பு Jaffna Bible என்று அழைக்கப்பட்டது. இதை மொழிபெயர்க்க அவருக்கு ஆறுமுகநாவலர் என்பவர் பெருந்துணையாக இருந்தார் என்றும், இந்த மொழிபெயர்ப்பு ஆறுமுகநாவலருடைய மொழிபெயர்ப்பே என்றும் சபாபதி குலேந்திரன் தொடக்கம் முக்கியமான பலர் தங்களுடைய நூல்களில் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கருத்து தோமா இந்தியாவுக்கு வந்தார் என்ற வரலாற்றால் நிரூபிக்கப்படாத செய்தியைப்போல நின்று நிலைத்துவிட்டது.

பேர்சிவெல் ஆறுமுக நாவலரிடம் இருந்து தமிழ் கற்றார் என்ற சிரிப்புக்கிடமான செய்திகளும் உள்ளன. இந்தக் கூற்றுக்களில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. நம்மினத்து வரலாற்று ஆய்வுக்கட்டுரைகளில் நம்பக்கூடிய ஆதாரங்கள் இல்லாதபடியால் அவற்றில் எதையும் நம்பி ஏற்பது முடியாததாக இருக்கிறது. ஆறுமுகநாவலர் தீவிர இந்து சிவபக்தர். கிறிஸ்தவர்களை அவருக்குப் பிடிக்காதிருந்தது மட்டுமல்ல, அவர்களோடு வாதம் செய்து வெல்லுவதிலும் அவர் சிரத்தை காட்டியிருக்கிறார். சாதி அமைப்புக்கு பேராதரவு தந்து, இந்து மத வளர்ச்சியில் பேரார்வம் காட்டிய ஒரு மனிதர் வேத மொழிபெயர்ப்பில் பெரும் பங்குகொண்டிருந்தார் என்பதையும், பேர்சிவெல் அதற்கு அவரில் தங்கியிருந்தார் என்பதையும் ஏற்க முடியவில்லை. சிவபக்தரான ஆறுமுகநாவலரை மட்டும் நம்பி மொழிபெயர்ப்புப்பணியில் ஈடுபடவேண்டிய அவசியம் பேர்சிவெலுக்கு இருக்கவில்லை. பேர்சிவெலுக்கு தமிழில் நல்ல பரிச்சயமும், பாண்டித்தியமும் இருந்திருக்கிறது. தமிழ் பாண்டித்தியம் இருந்த கிறிஸ்தவர்களோடும் அவருக்குப் பெருந்தொடர்பு இருந்தது. அத்தோடு மொழிபெயர்ப்புப் பணிக்கான வரையறைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறி அவர் ஆறுமுகநாவலரின் வலையில் விழுந்திருக்க மாட்டார். ஆறுமுகநாவலருக்கு பேர்சிவெலைவிட வயது மிகமிகக்குறைவு. பேர்சிவெல் ஆரம்பித்து நடத்திவந்த கிறிஸ்தவ மிஷன் பள்ளியில் சிறுவனாக இருந்து கல்வி பயின்று பின்பு 25 வயதில் அங்கேயே ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார் நாவலர். இதை மட்டும் வைத்து வேதமொழிபெயர்ப்பு நாவலருடையது என்ற முடிவுக்கு வருவதும், அந்தச் செய்தியைப் பரப்பிவிட்டிருப்பதும் பெருந்தவறு.

இக்காலங்களில் நூல்கள் பெரும்பாலும் செய்யுள் வடிவிலேயே இருந்தன. ஐரோப்பியரே “உரைநடை” தமிழில் உருவாவதற்கு மூலகாரணம். அதேபோல் அடையாளக் குறிகளையும் அவர்களே அறிமுகப்படுத்தினர். இதைக்குறித்து நாம் வெட்கப்படவோ மறுத்துரைக்கவோ வேண்டிய அவசியம் இல்லை. நல்லது எங்கிருந்து, யாரிடமிருந்து வந்தாலும் நல்லதுதான். ஆதிமொழி தமிழ்தான் என்றும், ஆதாம் தமிழன் என்றும் நினைத்தும் பேசியும் வருகிற அடிமுட்டாள்தனத்தை நாம் மனதில் கொண்டிருக்கக்கூடாது. அத்தகைய ஆணவம் நம்மை வளர, உயரவிடாது. முதல் முதலாக மோட்சப் பயணம் 1793ல் வெளிவந்தபோது அது உரைநடையில் இருக்கவில்லை. உரைநடையில் ஆங்கிலத்தில் இருந்த நூலை மொழிபெயர்த்தவர்கள் செய்யுள்வடிவில் வடமொழித் தாக்கம் மிகுந்திருந்த தமிழில் வெளியிட்டார்கள். அன்று சிறந்ததாகக் கருதப்பட்ட சாமுவேல் பால் என்பவருடைய மொழிபெயர்ப்பைத் தழுவி 1887ல் ‘முத்திவழி அம்மானை’ என்ற பெயரில் மோட்சப் பயணத்தை சுவிகரனார் என்பவர் வெளியிட்டார். அம்மானை என்பது செய்யுள் வடிவில் உள்ள நாட்டார் பாடல் இலக்கியம். சமுதாயத்தின் அடித்தள மக்களுக்கு நாட்டார் பாடல் வடிவங்களில் அன்று நல்ல பரிச்சயம் இருந்தது. இதற்குப் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து எச். ஏ. கிருஷ்ணபிள்ளை என்பவர் மோட்சப் பயணத்தைத் தழுவிய ஒரு காப்பியத்தை ‘இரட்சண்ய யாத்திரிகம்’ என்ற பெயரில் வெளியிட்டார். இது கற்றறிந்தவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடிய மொழியில் செய்யுள் வடிவில் இருந்தது. இத்தகைய மொழிநடைக்கே அன்று மதிப்பும், வரவேற்பும் இருந்தது. இதையெல்லாம் நான் விளக்கக் காரணம் தமிழ் வேதமொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்த பெப்ரீஷியஸ், இரேனியஸ், பேர்சிவெல் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் செய்யுள் இலக்கியமே உயர்மட்டத்தில் புழக்கத்தில் இருந்ததோடு, அவையும் வடமொழித் தாக்கத்தை அதீதமாகக் கொண்டிருந்தன என்பதை உணர்த்தத்தான். உரைநடைக்கு இலக்கணம் அமைக்கும் முயற்சிகள் அன்று மெதுவாகத் தலைதூக்கியிருந்தபோதும் இன்று நாம் லாவகமாகப் பயன்படுத்தி வருகின்ற உரைநடைக்கு அன்று இடமிருக்கவில்லை. உரைநடையில் எழுதுவதை அன்று அநேகர் தகுதியற்ற சில்லறைத்தனமான எழுத்துநடையாகக் கருதினர். இந்தச் சூழ்நிலைத் தாக்கத்தைத்தான் அக்காலத்தில் செய்யப்பட்ட தமிழ் வேதமொழிபெயர்ப்புகளிலும் இன்று நம் கையில் இருக்கும் பழைய திருப்புதலிலும் காண்கிறோம். பழைய திருப்புதலின் நடையைப்பற்றி டாக்டர் ரமணி நாயுடு என்பவர், ‘. . . இன்றைய கிருத்துவ தமிழ் தனக்கென ஒரு வரைமுறையை வகுத்துக்கொண்டு வழக்கில் இருக்கும் பேச்சுத் தமிழும் அல்லாத எழுத்துத் தமிழும் அல்லாத ஒருவகைத் தமிழைக்கொண்டிருப்பது குறித்து கிருத்துவ நிறுவனங்கள் மறுமதிப்பீடு செய்தல் கிருத்துவத்துக்கும் தமிழுக்கும் நலன் பயக்கும் என்பது எனது கருத்து’ என்று எழுதியிருக்கிறார் (தமிழ்நேசன்.ஓர்க்).

பேர்சிவெலுடைய மொழிபெயர்ப்புக்கும் அவருக்கு முன் வேதமொழிபெயர்ப்பில் ஈடுபட்ட இரேனியஸுடைய மொழிபெயர்ப்புக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை. இவர்கள் இருவருடைய மொழிபெயர்ப்புகளுமே அதிகம் வடமொழித் தாக்கமுள்ளவையாக இருந்தன. இருந்தபோதும் இரேனியஸ் தனக்கு முன் பெப்ரீஷியஸ் செய்திருந்த மொழிபெயர்ப்பை இலகுவான தமிழில் கொண்டுவர முயன்றார். ‘பண்டிதர்களுக்குங்கூட பெப்ரீஷியஸ் வேதாகமம் புரியக்கடினமாகவே இருந்தது’ என்று சரோஜினி பாக்கியமுத்து எழுதுகிறார் (தமிழ் கூடல் வலைத்தளத்தில்). இரேனியஸ் வடமொழி வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தினார். உதாரணத்திற்கு “ஜலம்” அவருடைய மொழிபெயர்ப்பில் “தண்ணீர்” என்று மாற்றப்பட்டிருந்தது. இரேனியஸின் மொழிபெயர்ப்பு தமிழில் அவசியமான மாற்றங்களைக் கொண்டுவந்திருந்தது. இரேனியஸின் மொழிபெயர்ப்பில் இருந்த பிரச்சனை அவர் எழுத்துபூர்வமான மொழிபெயர்ப்பை விரும்பாது கருத்துபூர்வமான மொழிபெயர்ப்பு வழிமுறையைக் கையாண்டதுதான். இன்று பேசப்படுகிற Dynamic equivalence முறையை இரேனியஸ் அன்றே பின்பற்றியிருக்கிறார். இரேனியஸின் மொழிபெயர்ப்பில் பாராட்டவேண்டிய விஷயம் சகலரும் புரிந்துகொள்ளக்கூடிய இலகுவான தமிழ் வார்த்தைகளையும், உரைநடையையும் பயன்படுத்த முயன்றதுதான். செந்தமிழ் என்று அன்று கருதப்பட்ட கடுந்தமிழைப் பயன்படுத்த அவர் விரும்பவில்லை. இருந்தாலும் அன்றைய நிலையில், வடமொழித் தாக்கமும், ஆர்வமும் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்த சூழ்நிலையில் இத்தகைய மாற்றங்களை அநேகர் விரும்பவில்லை. கல்வியறிவில்லாத அடித்தள மக்கள் மட்டுமே அந்தளவுக்கு வடமொழித் தமிழறியாதவர்களாக இருந்தனர்.

இரேனியஸின் பணிகளை ஆராயும் ஓர் ஆய்வுக்கட்டுரையாளர் தமிழில் வேதமொழிபெயர்ப்பை ஆரம்பித்து வைத்த சீகன்பால்குவின் மொழிபெயர்ப்பு பற்றிக் குறிப்பிடும்போது பின்வருமாறு எழுதுகிறார், ‘சீகன்பால்குவின் வசனநடை மரபான தமிழ்நடையில் இருந்து (பிராமணத்தமிழ்) வேறுபட்டிருந்த காரணத்தினால் தரங்கை மிஷனரிகள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழ்ப்பண்டித நடையில்லாத தமிழ் விவிலியநடை இம்மண்ணில் எந்தவித வரவேற்பும் பெறாது என்ற அவதானிப்புகளும் நிலவிவந்தன’ என்று எழுதியிருக்கிறார். (செ. ஜெயசெல்வின், தமிழ் கூடல்). இரேனியஸ் இந்தப் பண்டித நடையை மாற்றமுயன்றார்; அந்த முயற்சியும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பெப்ரீஷியஸின் மொழிபெயர்ப்புக்கு வக்காலத்து வாங்கிய, அன்று தஞ்சாவூரில் இருந்த வேதநாயகம் சாஸ்திரிகள் இரேனியஸின் மொழிபெயர்ப்பை எதிர்த்துப் பேசினார். இரேனியஸ் பெப்ரீஷியஸின் அழகான தமிழ் மொழிபெயர்ப்பை அடித்தள வர்க்கத்தினரான சூத்திரர்களின் அசிங்கமானதும், தகுதியற்றதுமான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கெடுத்துவிட்டார் என்று பகிரங்கக் குற்றச்சாட்டெழுப்பினார். அப்படி இரேனியஸ் பயன்படுத்திய அசிங்கமான அடித்தள சமுதாயத்து சூத்திர வார்த்தை என்ன தெரியுமா? தமிழில் இன்று நாம் சரளமாகப் பயன்படுத்தும் ‘தண்ணீர்.’ பெப்ரீஷியஸின் மொழிபெயர்ப்பில் அதற்கு வடமொழி வார்த்தையான ‘ஜலம்’ பயன்படுத்தப்பட்டிருந்தது. எந்தளவுக்கு அன்று கல்வியறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியிலும், மேல்தட்டு வர்க்கத்தினர் மத்தியிலும் வடமொழி சார்ந்த பிராமணத் தமிழ் மோகம் இருந்திருக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளுகிறோம்.

இரேனியஸின் வேதமொழிபெயர்ப்பை பீட்டர் பேர்சிவெல் விரும்பவில்லை. அவர் அதைத் திருத்தியபோது மறுபடியும் வடமொழி வார்த்தைகளையே பெரிதும் பயன்படுத்தினார்; தண்ணீர் பழையபடி ஜலமாயிற்று. இரேனியஸ் செய்திருந்த மாற்றங்களையெல்லாம் மறுபடியும் திருத்தினார். இருந்தபோதும் பேர்சிவெலுடைய இந்தத் திருத்த மொழிபெயர்ப்பும் அநேகராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்குக் காரணம் அவருடைய மொழிநடை கவிதை நடையாகவும், அளவுக்குமீறிய கடுமையான வடமொழி வார்த்தைப்பிரயோகங்களையும் கொண்டிருந்ததுதான்.

பேர்சிவெலுக்கு பின்வந்த ஹென்றி பவர் என்பவர் செய்த மொழிபெயர்ப்பே இன்றுவரை எல்லோராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. Textus Receptus என்ற கிரேக்க புதிய ஏற்பாட்டையும், பெப்ரீஷியஸின் மொழிபெயர்ப்பையும் அடிப்படையாகக்கொண்டு பவரின் மொழிபெயர்ப்பு அமைந்திருந்தது. இவர் பலமொழி பாண்டித்தியம் பெற்றிருந்த அறிஞர். இவருடைய பழைய, புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்புகள் 1871ல் சென்னையிலிருந்த வேப்பெரியிலுள்ள ஒரு அச்சகத்தில் முதல்தடவையாக அச்சிடப்பட்டது. 1858ல் ஆரம்பமான மொழிபெயர்ப்பு 1871லேயே முழுமை பெற்றது. சகல கிறிஸ்தவ சபைகளும் ஏற்றுக்கொள்ளும்விதமாக இது வெளியிடப்பட்டதால் இதனை ‘ஐக்கியத் திருப்புதல்’ என்று அழைத்தார்கள். ஹென்றி பவருடைய திருப்புதல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பவரின் மொழிபெயர்ப்பிலும் வடமொழித்தாக்கம் அதிகமாக இருந்தபோதும், பேர்சிவெலின் திருத்தப்பதிப்பில் காணப்பட்ட வடமொழித்தாக்கத்திற்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. பேர்சிவெல் பயன்படுத்திய வடமொழி வார்த்தைகளை அன்று கற்றறிந்திருந்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடிந்தது. பவர் சாதாரண மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்த வடமொழி வார்த்தைகளையே அதிகம் பயன்படுத்தினார். இருவருமே வடமொழி வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியபோதும் பவரினுடையது சகலரும் அன்று அறிந்திருந்த வடமொழி வார்த்தைகள். இதிலிருந்து வடமொழித்தாக்கம் எந்தளவிற்கு 140 வருடங்களுக்கு முன் தமிழ் சமுதாயத்தில் புழக்கத்தில் இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சபாபதி குலேந்திரன் எழுதிய ‘கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு’ நூல் 1967ல் வெளியிடப்பட்டது. நூல் முழுவதும் குலேந்திரன் அதிகமாக வடமொழிப்பதங்களை சரளமாகப் பயன்படுத்தியிருக்கிறார். இது இன்றும் வாசிக்கக்கூடியதாக இருந்தபோதும் இந்தளவுக்கு வடமொழிப்பிரயோகங்களை எவரும் எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்துவதில்லை. ஏற்கனவே சுட்டிக்காட்டியதுபோல் தமிழகத்தில் காங்கிரஸ் முதலமைச்சரான பக்தவச்சலத்தின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு தமிழில் அடிப்படையிலேயே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குலேந்திரனுடைய நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தமிழுக்கு ஓர் உதாரணத்தைத் தருகிறேன், ‘தமிழின் விஸ்தாரத்தினால் வரும் மற்றக் கஷ்டம், ஒரே வசனத்திலேயே சொற்களுக்கு வெவ்வேறு விகுதிகளை உபயோகிக்கலாம்.’ இன்னோரிடத்தில், ‘இவை முன்வந்தவைகளைப்போல் சில தடவைகளில் மாத்திரம் வராமல் எப்பொழுதும் எழும்பியதால், இவை சிறியனவெனச் சொல்ல இயலாது. இவையிரண்டும் தமிழ்பாஷையின் விஸ்தாரத்தினால் எழும்பியவை.’

இன்று ‘கிறிஸ்தவ தமிழ்’ என்று ஒன்றிருப்பதை கிறிஸ்தவர்கள் அல்லாதாரும் அறிவார்கள். இந்தத் தமிழ் உருவானதற்கு பெப்ரீஷியஸின் தமிழ் மொழிபெயர்ப்பே காரணம் என்று சபாபதி குலேந்திரன் எழுதியிருக்கிறார். பழைய திருப்புதல் (OV) வேத மொழிபெயர்ப்பு இந்தக் கிறிஸ்தவ தமிழால் நிறைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்துவதால் அநேக கிறிஸ்தவர்களுக்கு பேச்சிலும் எழுத்திலும் இந்தத் தமிழே வந்துவிடுகிறது. முக்கியமாக நம்மினத்தில் பிரசங்கம் செய்கிறவர்களின் பிரசங்கங்களிலும், ஜெபத்திலும் இதன் வாடை அளவுக்குமேல் இருக்கும். இரேனியஸ் இந்த நடையைத்தான் மாற்றமுயன்றார். எபிரெய, கிரேக்க மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்படுகிறபோது வேதம் தமிழில் இருக்கவேண்டுமே தவிர எபிரெய, கிரேக்க வாடை அதில் இருக்கக்கூடாது. எபிரெய, கிரேக்க வாடை மட்டுமல்லாது பிராமணத்தமிழும் நிரம்பிவழியும் பழைய திருப்புதல் இந்த 21ம் நூற்றாண்டில் அவசியமான, தவிர்க்கமுடியாத, தள்ளிப்போடக்கூடாத பெரிய மாற்றத்தை நாடி ஏங்கி நிற்கிறது.

இதையெல்லாம் நான் விளக்கமாக சுட்டி வருவதற்கான காரணம் இன்று நாம் பயன்படுத்திவரும் பழைய திருப்புதல் (OV) தற்காலத் தமிழில் இல்லை என்பதற்காகத்தான். தமிழறிஞர்களாலும் புரிந்துகொள்ள முடியாத, சாதாரணத் தமிழ் வாசகனும் புரிந்துகொள்ள முடியாத மொழியில் வேதம் இருக்குமானால் கடவுளின் வெளிப்படுத்தலான சத்தியத்தை நம்மினத்து மக்கள் முன் நாம் எப்படி வைக்கமுடியும்? சிந்தித்துப் பாருங்கள். வேதத்தைப் பயன்படுத்தியே நாம் சுவிசேஷப் பிரசங்கங்களை அளிக்கவேண்டியிருக்கிறது. ஆண்டவரை அறியாத, திருச்சபையின் பக்கம் காலடி எடுத்துவைத்திராத மக்கள் முன் தற்காலத் தமிழில் இல்லாத வேதத்தை எப்படி வாசிக்க முடியும்? ஆண்டவருடைய வார்த்தை என்பதால் அது மக்கள் புரிந்துகொள்ள முடியாத மொழியில் இருக்க வேண்டுமா? அது சமஸ்கிரதத்தில் அர்ச்சனை செய்யும் கோயில் பூசாரிக்கும், அங்கு சாமி கும்பிடப்போகிறவர்களுக்கும் சரி. நமக்கு சரிப்பட்டு வருமா? மக்கள் தங்களுடைய சொந்த மொழியில் வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான் ஆண்டவர் வேதத்தை எழுத்தில் தந்திருக்கிறார். அதுவே சகலரும் வாசிக்க முடியாமல் இலத்தீனில் மட்டும் இருந்த வேத மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க டின்டேலைத் தூண்டியது. எவரும் வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய மொழியில் வேதம் இருக்கவேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மை. கிராமங்களில் நான் சுவிசேஷம் சொல்லப்போகிறபோது முடிந்தவரை எந்த வேதப்பகுதியையும் நான் என்னுடைய சொந்த வார்த்தைகளில் விளக்குவதே வழக்கம். கல்வியறிவில்லாத அந்த மக்கள் சலித்துப்போகும்படியாக நாம் எதையும் செய்யக்கூடாது. புரிந்துகொள்ளமுடியாத மொழியில் பேசுகிறோம், எதையோ வாசிக்கிறோம் என்று மனதில்பட்டாலே அவர்கள் சலிப்படைந்து எழுந்துபோய்விடுவார்கள் அல்லது கவனத்தை வேறெதிலோ காட்ட ஆரம்பித்துவிடுவார்கள். சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு நமக்கு உதவாத தமிழில், தமிழ் வேதம் இருப்பது நாம் வருந்தவேண்டிய விஷயந்தான். தொடர்ந்து நல்ல புதிய மொழிபெயர்ப்பொன்று உருவாகாதவரையில் சுவிசேஷம் நம்மினத்தில் பரவி ஆழமாகக் கால்பதிப்பதென்பது நடக்காத காரியம். 16ம் நூற்றாண்டில் சுவிசேஷம் பரவ வேதமொழிபெயர்ப்பு பெருங்காரணமாக இருந்திருக்கிறது. சுவிசேஷம் பரவுவதற்கு நம்முடைய மொழிபெயர்ப்பே இன்று தடையாக இருந்துவிடுகிறதே.

திருச்சபையில் கிறிஸ்தவர்கள் வேத அறிவில் வளர வேண்டியவர்களாக இருக்கிறார்கள். வாசிக்கும்போது அவர்களுக்கு வேதம் தடங்கலில்லாமல் புரியவேண்டும். வேதத்தை அன்றாடம் வாசித்து சிந்தித்து அவர்கள் அதை ஆராயவேண்டும். வேதஞானமில்லாத கிறிஸ்தவ சமுதாயம் வளர முடியாது; கிறிஸ்தவ அனுபவத்தில் சிறக்க முடியாது. வீட்டில் வேதத்தை வாசித்துப் புரிந்துகொள்ள முடியாத தமிழில் வேதமிருப்பதை அறிந்திருந்தும் ஒன்றும் செய்யவழியில்லாத நிலையில் கிறிஸ்தவ சமுதாயம் இன்று வாய்பொத்திக் கைகட்டிச் செயலற்றிருக்கிறது. பெரும்பாலான பிரசங்கிகளுக்கு அதை வாசித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் நல்ல பிரசங்கங்களைத் தயாரிக்கும் அளவுக்கு ஞானத்தைக் கொண்டிருக்க பழைய திருப்புதல் தடையாக இருக்கிறது. எத்தனையோ பிரசங்கிகளோடு பேசிப்பார்த்துவிட்டுத்தான் இதை எழுதுகிறேன். ஓய்வுநாட்களில் ஆத்துமாக்கள் சத்தான போதனைகளைக் கேட்க வழியில்லாமல், அரைகுறைப் பிரசங்கங்களாலும், போதனைகளாலும் தமிழினம் தள்ளாடிக்கொண்டிருப்பதற்கு, புரியாத ஒருவகைக் ‘கிறிஸ்தவ தமிழில்’ வேதமொழிபெயர்ப்பு இருப்பதும் ஒரு காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

துணைநூற்பட்டியல்:

  1. கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு, சபாபதி குலேந்திரன் (1967).
  2. விவிலியத் தமிழ், முனைவர் அ. ஆலிஸ்.
  3. கிறிஸ்தவமும் தமிழும், மயிலை சீனி வேங்கடசாமி
  4. தமிழ்நேசன், வலைத்தளம்
  5. தமிழ்கூடல், வலைத்தளம்
  6. Jaffna Version of the Tamil Bible, Internet article
  7. பரிசுத்த வேதாகமம், IBL, Chennai
  8. பரிசுத்த வேதாகமம் (OV)

பக்தி வைராக்கியம் உங்களுக்கு இருக்கிறதா?

[இந்த ஆக்கத்தை எழுதியவரை டே. மெ என்ற அவருடைய பெயரின் ஆரம்ப எழுத்துக்களின் மூலம் மட்டுமே அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அருமை நண்பரான டே. மே அவர்களின் கர்த்தருக்கான விசேஷ ஊழியப்பணிகள் அவருடைய பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட முடியாதபடி செய்கின்றன; இதை அவரே கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆங்கில மூலத்தில் இருந்து தமிழாக்கம் செய்தவர் நண்பர் ஜேம்ஸ். இந்த ஆக்கத்தில் உள்ள வேத வசனங்கள் இந்திய வேதாகம இலக்கியம் (IBL) வெளியிட்டுள்ள புதிய மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. – ஆசிரியர்]

கிறிஸ்தவ வைராக்கியத்திற்கான ஊற்றும் ஆதாரமும்.

தீத்து. 2:13-14 – நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மேன்மையான தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் வருகைக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குக் கற்பிக்கிறது. அவர் நம்மைச் சகல தீமைகளிலிருந்தும் மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த மக்களாகவும், நற்செயல்களைச் செய்ய ஆர்வமுள்ளவர்களாகவும் இருக்கும்படி, தமக்கென நம்மைத் தூய்மையாக்குவதற்காக, தம்மைத்தாமே நமக்காக ஒப்புக்கொடுத்தார்.

இந்த ஆக்கம் பக்தி வைராக்கியத்தைப் பற்றியது; இதைக் கிறிஸ்தவ வைராக்கியம் என்றும் சொல்லலாம். இரண்டும் ஒரே விஷயத்தை விளக்கும் வெவ்வேறு வார்த்தைப்பிரயோகங்கள். சமீப காலமாக இதைப்பற்றி நான் அதிகம் சிந்தித்து வருகிறேன். ஏனென்றால் வயது போய்க்கொண்டே இருப்பதாலும், முதுமை தலைதூக்கி உடல் வலிமையும் குறைந்துகொண்டே போவதாலும், இதற்கு மத்தியில் எப்படி இந்த விஷயத்தில் நான் ஊக்கத்தோடு இருக்கப்போகிறேன் என்பதால்தான் அதிகம் இதைப்பற்றி சிந்தித்து வருகிறேன். நான் வழக்கமாக ஒவ்வொரு நாளும் காலைவேளையில் என் தனிப்பட்ட தியானத்தின்போது ஒரு பாடல் பாடுவேன். கடந்த இலையுதிர்காலத்தின்போது சில பாடல்கள் எனக்கு ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றிய உண்மையை உணரச் செய்தன. அதாவது என் வாழ்க்கைப் போராட்டத்தில் என்னுடைய வலிமையை விட வேறு அநேக விஷயங்களும் சம்பந்தப்பட்டிருந்ததை நான் உணர்ந்தேன். அந்த பாடல் ஒன்றின் சில வரிகளைக் கேளுங்கள்.

நாங்கள் சேவிக்க வேண்டியபடி உம்மை சேவித்தது இல்லை;
ஐயோ, அநேக கடமைகள் செய்யாமல் விடப்பட்டிருக்கிறது,
குறைந்த உற்சாகத்தோடு செய்யப்பட்ட வேலை,
போர்களில் இழப்பு, அல்லது அரிதாகவே வெற்றி!
கர்த்தாவே, வைராக்கியத்தைத் தாரும், வலிமையைத் தாரும்
உமக்கு உழைக்கவும், உமக்கு போராடவும்.

இந்த வார்த்தைகள் ஒரு முக்கியமான வேத உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. இவை வலிமையை சுட்டுகின்ற அதேவேளை பக்திவைராக்கியத்தையும் அதோடு தொடர்புபடுத்திக் காட்டுகின்றன. இந்த உண்மையை உணர்ந்ததனால்தான் பக்தி வைராக்கியம் பற்றி இங்கே விளக்க முற்பட்டேன். முதலில் என் சொந்த நலனுக்காகவே இதைச் செய்தேன். இருந்தபோதும், இது நம் ஒவ்வொருவருக்கும்கூட மிகவும் அவசியமானது. குறிப்பாக கர்த்தரின் சிறப்பான பணியைச் செய்து வருகிற போதகர்களுக்கு இது மிகவும் அவசியமானது. வயது பாரபட்சம் எதுவுமில்லாமல் எல்லாருமே அக்கறைகாட்ட வேண்டிய ஒன்றுதான் பக்தி வைராக்கியம் (சங்கீதம் 71:9ஐ ஏசாயா 40:30-31 வசனங்களுடன் ஒப்பிட்டுப்பாருங்கள்).

முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் கனம் குறையும்போது என்னைக் கைவிடாமலும் இரும். (சங்கீதம் 71:9)

இளைஞர் களைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் களைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். (ஏசாயா 40:30-31)

இந்த நேரத்தில், கிறிஸ்தவ வைராக்கியத்தை விளங்கிக்கொள்ளுவதற்கு துணையாக, பக்தி மற்றும் கிறிஸ்தவ வைராக்கியம் பற்றி விளக்கும் வேதத்தின் ஒரு முக்கிய பகுதியில் இப்போது நம்முடைய கவனத்தைச் செலுத்துவோம். நாம் இப்போது கவனிக்கப்போகிற பகுதி தீத்து 2:13-14. (குறிப்பாக 14வது வசனம்). இந்த பகுதியில் ஐந்து காரியங்களைக் கவனிக்கலாம்.

  1. கிறிஸ்தவ வைராக்கியத்தின் அனல்போன்ற வீரியத்தன்மை.இங்கே நான் குறிப்பாக “பக்திவைராக்கியமுள்ள” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை மீது கவனத்தை செலுத்துகிறேன். இந்த வார்த்தை “அதீத ஆர்வம்” என்ற கிரேக்கம் மொழி வார்த்தையைச் சேர்ந்தது. எரிகிற அல்லது கொதிக்கிற என்பது இந்த வார்த்தையின் அடிப்படை அம்சம். இது அடிப்படையில் ஊக்கம், உற்சாகம், ஆர்வம், விருப்பம் இவைகளை தன்னில் கொண்டது. ‘கொதிக்கிற’ என்பது உற்சாகத்துடன் ஒன்றை அல்லது ஒருவரைச் சார்ந்திருப்பது. வேதம் “வைராக்கியம்” என்ற வார்த்தையைக் குறிப்பிடுகிற பெரும்பாலான இடங்களில் ஆத்திரத்தையும் கோபத்தையுமே சுட்டிக்காட்டுகிறது. இன்னும் குறிப்பாக சில இடங்களில் பகைமை, பொறாமை என்றும் அதைக் குறிப்பிடுகிறது. வேறு சில இடங்களில் பேராசை, இச்சை, அல்லது அதீத அன்பு என்பதையும் குறிப்பிடுகிறது. இவற்றில் பெரும்பாலானவைகள் ஒன்றில் நன்மையாகவோ அல்லது தீமையாகவோ இருக்கிறது. எனவே, வேதம் நீதியான வைராக்கியத்தையும் தீமையான வைராக்கியத்தையும் பற்றி நமக்குச் சொல்லுவதைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இந்தப் போதனையைத் தொடர்ந்து படிக்கிறபோது நீதியான வைராக்கியத்திற்கும் தீமையான வைராக்கியத்திற்குமுள்ள வேறுபாடுகளை நாம் கண்டறியலாம். நாம் இப்போது ஆராய்ந்து வருவது நீதியான அல்லது பக்தி வைராக்கியத்தையே.

இதுவரை நாம் பார்த்த காரியங்கள் நமக்கு ஒரு பாடத்தைத் தரும் விதமாக ஒரு கேள்வியை எழுப்புகிறது. சரியான வழியில் நான் ஒரு வைராக்கியமுள்ள கிறிஸ்தவனாக இருக்கிறேனா? நீதியான காரியங்களுக்காக உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் நான் வாழ்ந்து வருகிறேனா? இதற்கான பதிலை பவுல் நாம் பார்த்து வருகிற வேதப்பகுதியில் அற்புதமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

  1. கிறிஸ்தவ வைராக்கியத்தின் நடைமுறை வெளிப்பாடு.இங்கே பக்திவைராக்கியத்தின் மெய்யான வெளிப்பாடான ஒரு குறிப்பிட்ட தன்மை வலியுறுத்தப்படுகிறது. அதுதான் நற்செயல்கள். பவுல் சொல்லுகிறார், “நற்செயல்களைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்கள்” என்று.

பவுல் தீத்துவுக்கு எழுதிய இந்நிருபத்தில் “நற்செயல்” என்பது அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ள செய்தியாக இருக்கிறது. அது வெளிப்படையாக குறைந்தது ஐந்து இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது (2:7, 3:1, 5, 8 மற்றும் 14).

2:7       நற்செயல்களைச் செய்வதின்மூலம் நீயே எல்லாவற்றிலும் உன்னை மாதிரியாகக் காண்பித்து,

3:1       ஆளுகைசெய்பவர்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், நன்மையானவற்றைச் செய்ய ஆயத்தமாயிருக்கவும்,

3:5       நாம் செய்த நீதியான காரியங்களுக்காக அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுபிறப்பின் முழுக்கினாலும், பரிசுத்த ஆவியானவரால் புதுப்பிக்கப்படுதலினாலும் நம்மை இரட்சித்தார்.

3:8       இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்செயல்களைச் செய்யத் தங்களை ஒப்படைக்கும்படி நீ இவைகளை வலியுறுத்திப் போதிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே மேன்மையானவையும் மனிதருக்குப் பயனுமுடையவைகள்.

3:14    நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி அன்றாடத் தேவைகளைச் சந்திக்கும்படி நற்செயல்களைச் செய்யப்பழகட்டும்.

ஒரு புறம், நம்முடைய நீதியான செயல்களின் மூலம் நாம் இரட்சிக்கப்படவில்லை என்பது இங்கே தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது; 3:5 வசனத்தை வாசித்துப் பாருங்கள். எனினும், மற்ற நான்கு வசனங்களும் விசுவாசிகளான நாம் நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. அவை நம்முடைய ஆழ்மனதில் இருந்து கிளம்பும் உணர்வுபூர்வமான முயற்சியாக இருக்க வேண்டும். இவைகளை நாம் எப்படி ஒன்று சேர்த்துப் பார்ப்பது? நற்செயல்கள் என்பது, நாம் எப்படியாவது கிறிஸ்தவராகிவிடவேண்டும் என்பதற்காகச் செய்வது அல்ல, அவை கிறிஸ்தவனின் கனிகள் அல்லது கிறிஸ்தவனாக அவன் இருப்பதனால் அவனில் வெளிப்படும் நடைமுறைச் செயல்களாகும்.

நற்செயல் என்று பவுல் எதைக் குறிப்பிடுகிறார்? தீத்து 3:14ல் பவுல் ஒரு குறிப்பிட்ட வகையை வலியுறுத்துகிறார். நம்மை சுற்றி இருப்பவர்களின் எந்த அவசர தேவைகளையும் பூர்த்தி செய்ய நாம் ஆர்வமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதே அது. அது உண்மையானால், நம்மை சுற்றியிருப்பவர்களின் எந்த அவசரத் தேவையும் நம்மை நற்செயல் செய்யும்படித் தூண்ட வேண்டும்? நம்மை சுற்றியிருப்பவர்களின் ஆவிக்குரிய தேவையே அவர்களின் அவசரத் தேவையாக இருக்கின்றது. இதுவே பாவத்தில் இருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியதுமான ஆத்மீக உண்மை. அவர்கள் பாவத்தில் இருந்து விடுபட்டு கடவுளோடு சரியான உறவை ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் அவர்கள் நரகத்தில் நித்திய வேதனையை அனுபவித்து அழிந்து போக வேண்டியிருக்கும். எனினும், தீத்து 3:14ல் பவுல் குறிப்பிடுகிற இந்த அவசரத் தேவைகள் அவர்களுடைய ஆத்மீகத் தேவைகளை மட்டுமல்லாது சரீரப்பிரகாரமான தேவைகளையும் உள்ளடக்கியது. அதாவது உணவு, உடை, உறைவிடம் என்பவைகளும் அதில் அடங்கும். ஏழை எளியவர்களை நாம் மறந்துவிடக் கூடாது என்று வேதம் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

எளியோரை நினைத்துக்கொள்ளும்படிக்கு மட்டும் சொன்னார்கள்; அதற்கு முன்பே நானும் அவ்வாறு செய்ய ஆர்வமுள்ளவனாயிருந்தேன். (கலாத்தியர் 2:10).

இவை நமக்குப் பாடம் கற்றுத்தரும்படியாக இன்னொரு கேள்வியை எழுப்புகின்றன. அது, நான் நற்செயல்களைச் செய்கிறவனாக இருக்கிறேனா? என்பதுதான். என்னால் முடிந்தவரையில் என்னை சுற்றியிருக்கிறவர்களின் அவசியமான ஆத்மீகம் மற்றும் சரீரத் தேவைகளைத் தீர்த்துவைக்கிறவனாக இருக்கிறேனா? இந்த நற்செயல்களைச் செய்வதற்கான ஆர்வம் நம்மில் இல்லாதபோது நாம் பக்திவைராக்கியமுள்ளவர்கள் என்று நம்மை நாமே அழைத்துக்கொள்ள முடியாது.

இனி தீத்து 2.14ல் இருந்து கிறிஸ்தவ வைராக்கியம் பற்றிய மூன்றாவது விஷயத்தை நாம் பார்ப்போம்.

  1. கிறிஸ்தவ வைராக்கியத்தைக் கொண்டிருப்பதற்கான அடிப்படை வழிமுறை.பவுல் தீத்து 2:14ல் சொல்லுகிறார், நற்செயல்களைச் செய்வதற்கு வைராக்கியமுள்ளவர்களிடத்தில் அந்த வைராக்கியத்துக்கு அவசியமான இரண்டு குறிப்பிட்ட விஷயங்கள் காணப்படும் என்று.

அ. முதலாவது, நற்செயல்களில் ஆர்வமுள்ளவர்கள் மீட்கப்பட்டவர்கள் அல்லது சகல அக்கிரமங்களிலிருந்தும் மீட்கப்பட்டவர்களாக இருப்பார்கள். நாம் அனைவரும் பிறப்பில் பாவத்திற்கு அடிமைகளாகப் பிறந்தவர்கள். கடவுளுக்கும் அவருடைய கட்டளைகளுக்கும் விரோதிகளாக சுயநலமும், சுயத்தை மட்டுமே மையமாக கொண்ட வாழ்க்கை வாழுகிறவர்கள். அந்த நிலையில் மற்றவர்களுடைய அவசரத் தேவைகளைத் தீர்ப்பதற்கான வைராக்கியத்தை நாம் எப்படி கொண்டிருக்க முடியும்? அக்கிரமங்களில் அடிமைகளாக இருப்பதிலிருந்து நாம் மீட்கப்படுவதின் மூலமாக மட்டுமே அது நிகழமுடியும்.

கிறிஸ்தவ வைராக்கியத்திற்கான இன்றியமையாத வழிமுறையான இரண்டாவது விஷயத்தையும் பவுல் விளக்குகிறார். முதலாவதைப் போலவே இரண்டாவதும் மிக முக்கியமானதும் அவசியமானதுமாகும்.

ஆ. நற்செயல்களில் ஆர்வமுள்ளவர்கள் கடவுளால் சுத்திகரிக்கப்பட்ட அவரால் தெரிந்தெடுக்கப்பட்ட அவருடைய சொந்த ஜனங்களாக இருப்பார்கள். இந்த வார்த்தைப்பிரயோகங்களைக் கொஞ்சம் விபரமாகப் பார்ப்போம். முதலாவதாக, நம்முடைய இரட்சிப்பில், கடவுள் நம்மை அவருடைய சொந்த ஜனமாக ஏற்படுத்தியிருக்கிறார். கடவுள் தம்முடைய பெரிதான கிருபையினால், தாமே விரும்பி நம்மைப் போன்றவர்களை தம்முடைய மக்களாக ஏற்படுத்தி நம்முடைய தேவனாகவும் இருக்கிறார்.

இந்த உண்மை மேலும் ஓர் உண்மைக்கு நம்மை வழி நடத்துகிறது. அதாவது, கடவுள் பரிசுத்தராக இருப்பதினால் அவரது சொந்த மக்களும் பரிசுத்தமாக வாழவேண்டும். என்றாலும், நாம் நல்ல செயல்களையல்லாமல், பல தீய செயல்களையே வாழ்க்கையில் செய்திருக்கிறோம். எனவே, நாம் கடவுளின் சொந்த ஜனங்களாக இருப்பதற்கு நம்முடைய தீய செயல்களிலிருந்து சுத்திகரிக்கப்படுவது மட்டுமே ஒரே வழி. இந்த உண்மை இன்னும் ஆழமாக வலியுறுத்தப்பட்டிருக்கிற மற்றொரு வேதப்பகுதியைக் கவனியுங்கள். எபிரெயர் 9:13-14 வசனங்களை வாசியுங்கள்.

அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், உடலில் சுத்தமுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே மாசற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம், வாழும் தேவனுக்கு ஊழியம் செய்யும்படி சாவுக்கேதுவான செயல்களிலிருந்து உங்கள் மனச்சாட்சியைத் தூய்மையாக்குவது எவ்வளவு நிச்சயம்!

தேவனுக்கு நாம் ஊழியம் செய்யவேண்டுமானால், அவருக்குக் கீழ்ப்படிவதோடு, நற்செயல்கள் செய்வதும், செத்த கிரியையிலிருந்து நம்முடைய மனச்சாட்சி சுத்திகரிக்கப்பட வேண்டியதும் அவசியமானது என்று இப்பகுதியில் மிகத்தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக, நம்முடைய மனச்சாட்சி குற்றத்தன்மை கொண்டதாகவும் கண்டனத்திற்குரியதாகவும் இருக்கிறபோது எப்படி நாம் நற்செயல்களைச் செய்வதற்கு வைராக்கியங் கொண்டவர்களாக இருக்க முடியும்?

எபிரெயர் 9:13-14 இதை மேலும் விளக்குகிறது. இந்தப் பகுதி நம்முடைய கெட்ட மனச்சாட்சி கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட முடியும் என்கிறது. அவைகள் கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டுமே சுத்திகரிக்கப்பட முடியும். எபிரெயர் 9:22 தொடர்ந்து சொல்லுகிறது “. . . இரத்தம் சிந்துதல் இல்லாமல், பாவ மன்னிப்பு உண்டாகாது” என்று. நம்முடைய செத்த கிரியைகளிலிருந்து நாம் சுத்திகரிக்கப்பட்டிருக்கிறோம் என்றும் நம்முடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த நேரத்திலும் நாம் உறுதியாக அறிந்திருப்பதற்குக் காரணம் கிறிஸ்துவின் இரத்தம்தான். இது நாம் பாவத்திலிருந்து மனந்திரும்பி இயேசுவை விசுவாசித்தபோது அனுபவித்த ஆரம்ப சுத்திகரிப்பு. இதன் மூலமாகத்தான் நாம் கிறிஸ்தவர்களாக, தொடர்ந்து நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் மனந்திரும்புகிறவர்களாகவும் விசுவாசத்தின் மூலம் தொடர்ந்து கிறிஸ்துவை பற்றிப் பிடித்திருக்கவும் கூடியதாக இருக்கிறது.

விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவொரு வேறுபாடுமிராதபடி செய்தார். (அப்போஸ்தலர் 15:9)

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து அனைத்து அநீதியிலிருந்தும் நம்மைத் தூய்மையாக்குவதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1 யோவான் 1:9)

இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறபடியினால், அன்பானவர்களே, சரீரத்தையும் ஆவியையும் கறைப்படுத்தும் எதையும் நீக்கி, நம்மைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, தூய்மையாக்குதலைத் தேவனிடம் கொண்ட அச்சத்தோடே நிறைவாக்கக்கடவோம். (2 கொரிந்தியர் 7:1)

இந்தவிதமான தொடர்ச்சியான சுத்திகரிப்பின் மூலமாக மட்டுமே சரியான முறையில் நாம் நற்செயல்களுக்காக வைராக்கியம் கொண்டிருக்க முடியும்.

நம்முடைய சுத்திகரிப்பு மற்றும் மீட்பில் கிறிஸ்துவின் பங்கை மறுக்க முடியாது. ஆனால், இப்போது நாம் கிறிஸ்தவ வைராக்கியத்தைக் கொண்டிருப்பதற்கான அவசியமான செயல்முறையின் மூலம் நமக்கு வருகின்ற பயன்பாடுகளைக் கவனிப்போம். முதலாவதாக, கடவுளுடைய பரிசுத்த மக்களாக இல்லாமலிருந்தால் மெய்யான பக்தி வைராக்கியம் ஒருவனில் ஒருபோதும் இருக்க முடியாது. சுயநலத்திலிருந்தும் அக்கிரமத்திலிருந்தும் விடுவிக்கப்படாத இருதயத்தில் பக்தி வைராக்கியம் இருப்பதற்கு வழியே இல்லை. கடவுளுக்கும் அவருடைய கட்டளைக்கும் விரோதமாக பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படாமல் இருப்பது நம்மை பக்தி வைராக்கியத்திலிருந்து எப்போதும் புறம்பே தள்ளியே வைக்கும்.

இந்த முதலாவது பாடத்தை சற்று எதிர்மாறானவிதத்தில் பார்ப்போம். அதாவது, கிறிஸ்து நம்மை விடுவித்து சுத்திகரித்திருப்பாரானால், நம்மில் நற்செயல்களைச் செய்கிறவராகவும் நம்மில் செயல்பட்டிருப்பார் என்று நாம் நம்பலாம். அவர் நம்மை இரட்சித்ததற்கு இதுவே முக்கிய நோக்கமாக இருக்கிறது. எனவே, நாம் அவரிடம் கேட்கிறபோது நற்செயல்களை செய்வதற்கான வைராக்கியத்தை அவர் நமக்குத் தருவார் என்று எதிர்பார்க்கக் கூடிய ஊக்கத்தை இது நமக்களிக்கிறது.

இதுதான் தீத்து 2:13-14 வசனங்களில் தரப்பட்டிருக்கும் கிறிஸ்தவ வைராக்கியத்தைப் பற்றிய மூன்றாவது குறிப்பு – கிறிஸ்தவ வைராக்கியத்தைக் கொண்டிருப்பதற்கான இன்றியமையாத வழிமுறை. பவுல் இதைப்பற்றித் தொடர்ந்து விளக்குகிறார். மீட்பு மற்றும் சுத்திகரிப்பின் மூலம் நாம் பெற்றிருக்கிற பரிசுத்த வாழ்க்கையின் பலனே கிறிஸ்தவ வைராக்கியம். ஆனால் கிறிஸ்தவ வைராக்கியத்தோடுகூடிய பரிசுத்த வாழ்க்கை எங்கிருந்து வருகிறது? இந்தக் கேள்வி நம்மை அடுத்த விஷயத்துக்கு அழைத்துச் செல்லுகின்றது.

  1. கிறிஸ்தவ வைராக்கியத்திற்குப் பின்னாலிருக்கின்ற கிருபையுள்ள பலி.13-14 வசனங்களை சேர்த்துப் பார்க்கிறபோது, நற்செயல்களுக்கு வைராக்கியங்கொள்ள நம்மை வழிநடத்துகிற நம்முடைய மீட்பு மற்றும் சுத்திகரிப்பு அற்புதமானதும் ஆச்சரியமானதுமான கிறிஸ்துவின் பலியின் விளைவாக வருகிறது. இது கிறிஸ்து தம்மைத்தாமே நமக்காகக் கொடுத்ததன் விளைவாக உண்டாவது. அவர் எங்கே, எப்படித் தம்மைக் கொடுத்தார்? இந்த உலகத்தில் மெய்யான மனிதனாகப் பிறந்து, வாழ்ந்து, ஊழியம் செய்ததன் மூலமே அவர் தம்மைக் கொடுத்தார். எனினும் சிறப்பான வகையில் அவர் தம்மைத் தந்ததைப் பற்றி வேதம் விளக்குகிறது. இதைப் பற்றி ஏற்கனவே நாம் எபிரெயர் 9:14ல் பார்த்தோம், “நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!” இவ்வாறே நாம் சுத்திகரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டோம். இயேசுவே தேவனுடைய குறைபாடுகளற்ற ஆட்டுக்குட்டியாக இருந்து சிலுவையில் நம்முடைய இடத்தில் இருந்து நம்மை அவர் மனமுவந்து ஏற்றார். நாம் அடைய வேண்டிய தண்டனைகளுக்காக அவர் தேவனால் தண்டிக்கப்பட்டார். நாம் முன்பு வாழ்ந்த அக்கிரம வாழ்க்கையிலிருந்து நம்மை விடுவிக்கும்படியான பலியாக கிறிஸ்து தம்மையே கொடுத்தார். நாம் கிறிஸ்தவர்களாக இருந்தால், இந்த பலியின் மூலமாகவே நம்முடைய பாவங்களிலிருந்து நாம் சுத்திகரிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். அதன் விளைவாகவே, தேவனுடைய நீதிமன்றத்தில் நாம் மன்னிக்கப்பட்டவர்களாவும், குற்றமற்றவர்களாகவும், நீதியானவர்களாகவும் நிற்கிறோம். இது அற்புதமான பலி, அற்புதமான அன்பு, அற்புதமான கிருபை.

கிறிஸ்தவ வைராக்கியத்திற்குப் பின்னாலிருக்கின்ற கிருபையின் பலி நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன? நாம் கொண்டிருக்கிற அல்லது எதிர்பார்க்கிற பக்திவைராக்கியம் சிலுவையில் சிந்திய கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டுமே வருகிறது என்பதுதான் அது. “முடிந்தது” என்று அவர் சிலுவையில் சொன்ன உண்மையான வார்த்தைதான் நாம் நற்செயல்களுக்கான வைராக்கியத்தைக் கொண்டிருக்கச் செய்கிறது. இது அவருடைய சுத்த கிருபையினால் உண்டானது. கடவுளின் சாபத்திற்கு உரியவர்களாகிய நமக்கு கிறிஸ்துவின் மூலம் கடவுள் கொடுத்த ஆசீர்வாதம் அது. பக்தி வைராக்கியத்தை கிறிஸ்தவ வைராக்கியம் என்று அழைப்பதற்கு இதுவே காரணம். இந்த வைராக்கியம் கிறிஸ்துவினாலும் அவருடைய சிலுவை பலியினாலுமே உண்டானது.

இந்த நான்காவது உண்மை கிறிஸ்தவ வைராக்கியத்தைப் பற்றிய ஐந்தாவது இறுதி உண்மைக்கு நம்மை வழிநடத்துகிறது.

  1. கிறிஸ்தவ வைராக்கியத்திற்கான ஊற்றும் ஆதாரமும்.எங்கிருந்து இந்த பக்தியுள்ள கிறிஸ்தவ வைராக்கியம் வருகிறது? உண்மையில் இதற்கான பதிலை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். தீத்து 2:13 வசனத்தின் இறுதி வாக்கியம் இதற்கான பதிலைத் தருகிறது. (இங்கு வைராக்கியத்தோடுள்ள தொடர்பை கவனியுங்கள்). நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தே கிறிஸ்தவ வைராக்கியம் ஆரம்பமாகிறது. அவரே அதை ஆரம்பிக்கிறார். நம்மிடம் கிறிஸ்தவ வைராக்கியம் இருக்குமானால் அது நிச்சயமாக அவரிடமிருந்தே வந்திருக்கும்.

இந்த இடத்தில் நான், கடவுளே நம்முடைய கிறிஸ்தவ வைராக்கியத்திற்கான ஊற்றும் ஆதாரமும் என்ற வேத உண்மையைச் சுட்டிக்காட்டுகிற இரண்டு உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

அ. முதலாவதாக, பழைய ஏற்பாட்டில் பக்தியுள்ள பினெகாஸைப் பற்றிய உதாரணத்தைக் கவனியுங்கள். எண்ணாகமம் 25:1-13 (குறிப்பாக 11-13) வாசியுங்கள்.

நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் மக்களை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் மக்கள்மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான். ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன். அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.

இந்த வசனங்கள் கடவுள் வைராக்கியமுள்ளவர் என்பதைத் தெளிவாக நமக்குக் காட்டுகின்றன. கடவுளின் வைராக்கியம் என்பது எப்போதும் பாவிகளின் மீதுள்ள அவருடைய கோபத்தோடும் நியாயத்தீர்ப்போடும் வெளிப்படுகிறது. இந்த இடத்தைக் கொஞ்சம் கவனத்தோடு பாருங்கள் – கடவுளுக்காக வைராக்கியங் கொண்டதற்காக பினெகாஸ் புகழப்படுகிறான். கடவுளுக்கான இந்த வைராக்கியமே கடவுளுடைய வைராக்கியம். வேறுவிதமாக சொல்லப்போனால், ஒழுக்கக்கேடான விக்கிரக ஆராதனைக்காரர்களை சாகடிப்பது என்ற பினெகாஸின் வைராக்கியம் கடவுளிடமிருந்தே அவனுக்கு வந்தது. எனவேதான் அவன் கடவுளின் வைராக்கியத்தைக் கொண்ட வைராக்கியமுள்ளவன் எனப்பட்டான். பழைய ஏற்பாட்டிலுள்ள இந்த பக்திமானின் வைராக்கியத்திற்கு ஊற்றும் ஆதாரமுமானவர் கடவுளே. புதிய ஏற்பாட்டு விசுவாசிகளின் வைராக்கியத்திற்கும் கடவுளே தொடர்ந்து ஊற்றாக ஆதாரமாக இருக்கிறார்.

ஆ. இரண்டாவது, ஜெபத்திற்கான பதிலாக பரிசுத்த ஆவியின் நிரப்புதலின் மூலமாக கடவுள் தம்முடைய புதிய உடன்படிக்கையின் மக்களுக்கு வைராக்கியத்தைத் தருகிறார். இது குறிப்பாக பெந்தெகொஸ்தே நாளன்றும் அதனைத் தொடர்ந்தும் உண்டானது. (அப்போஸ்தலர் 1:12-14; 2:1-4; 4:31 வாசியுங்கள்). (மேலும் வெளிப்படுத்தின விசேஷம் 4:5 – பரிசுத்த ஆவியானவரும் அக்கினியும்).

அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகில் ஓர் ஓய்வு நாள் பயணத் தொலைவிலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் தாங்கள் தங்கிய அறைக்குப் போனார்கள்; அங்கே பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயுவும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். அங்கே இவர்களெல்லாரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, தொடர்ந்து ஜெபித்து வந்தார்கள். (அப்போஸ்தலர் 1:12-14)

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்கள் அனைவரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே கூடிவந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து திடீரென்று ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அதுமட்டுமின்றி நெருப்பு மயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்வதைக் கண்டார்கள். அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின ஈவின்படியே வெவ்வேறு மொழிகளிலே பேசத் துவங்கினார்கள். (அப்போஸ்தலர் 2:1-4)

அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைக்கப்பட்டது, அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் துணிவோடு பேசினார்கள். (அப்போஸ்தலர் 4:31)

அந்தச் சிம்மாசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் குமுறல்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு நெருப்பு தீபங்கள் சிம்மாசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன. (வெளிப்படுத்தின விசேஷம் 4:5)

இங்கு ஓர் ஒழுங்கை உங்களால் பார்க்க முடிகிறதா? ஜெபம் – பரிசுத்த ஆவியின் நிரப்புதல் – தைரியமாகப் பேசுதல். பெந்தகொஸ்தே நாளில் பேதுருவின் தைரியமான பிரசங்கம் வைராக்கியத்தினால் ஏற்பட்டது. இத்தகைய வைராக்கியமான தைரியமே இப்படிப் பிரசங்கித்த அநேகரை கிறிஸ்தவ வரலாற்றில் இரத்த சாட்சியாக மரிக்கச் செய்தது. இப்படிப்பட்ட வைராக்கியம் எங்கிருந்து வந்தது? அது பரிசுத்த ஆவியின் நிரப்புதலினால் வந்தது. பரிசுத்த ஆவியானவர் பெந்தெகொஸ்தே நாளில் ஊற்றப்பட்டபோது எப்படிக் காணப்பட்டார்? “அக்கினிமயமான நாவுகள்போல பிரிந்திருக்கும் நாவுகள்” ஒவ்வொருவரின் மீதும் வந்திறங்கின என்று வாசிக்கிறோம். இங்கே பவுல், அக்கினி என்ற பதத்தை கடவுள் வைராக்கியத்தின் மூலம் ஏற்படுகிற தைரியமுள்ள பேச்சைத் தந்த பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்.

இந்த ஆக்கத்தை நிறைவுசெய்யும்படி இதிலிருந்து நாம் எந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளப் போகிறோம்? அப்போஸ்தலர்களின் மறைவுக்குப் பிறகு கடவுள் தொடர்ந்தும் அந்நிய பாஷைகளையும் தீர்க்கதரிசனங்களையும், அப்போஸ்தலர்களையும் திருச்சபைக்குத் தருகிறதாக நான் நம்பவில்லை. இருந்தபோதும் இந்தப்பகுதியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இருக்கத்தான் செய்கிறது. தொடர்ந்தும் நாம் பரிசுத்த ஆவியினில் நிரப்பப்பட வேண்டும் என்று வேதத்தில் சுட்டுகிறது, “தீயசெயல்களைச் செய்யத் தூண்டும் மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினாலே நிறைந்து.” (எபேசியர் 5:18)

அது உண்மையானால், நாம் எப்படி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படப் போகிறோம்? அப்போஸ்தலர் 2 மற்றும் 4ல் திருச்சபைகள் ஏற்படுத்தப்பட்டபோது நடந்த அதேவிதமாகவே அது நிகழவேண்டும். அதாவது பரிசுத்த ஆவியானவரை அதிகமாகத் தரும்படி நாம் கடவுளிடம் கேட்கவேண்டும். இந்த விஷயத்தில் நம்மை ஊக்கப்படுத்தும்படியான ஓர் அற்புதமான வாக்குத்தத்தம் லூக்கா சுவிசேஷத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. லூக்கா 11:13 படியுங்கள்.

பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக உறுதி அல்லவா என்றார்.

(இந்த இடத்தில் இந்த ஆக்கத்தை எழுதியவர் பரிசுத்த ஆவியானவரின் செயலைப் பற்றி விளக்கும் சத்தியத்தை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும். மெய்க்கிறிஸ்தவர்களாக இருக்கும் அனைவரும் பரிசுத்தஆவியை நிரந்தரமாக இரட்சிப்பை அடையும்போது தம்மில் கொண்டிருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரே நமக்கு மறுபிறப்பளித்து நம்மில் குடிபுகுந்து ஜீவிக்கிறார்; ஒருபோதும் பிரியாதபடி நம்மில் நிரந்தரமாக இருக்கிறார். இருந்தபோதும் ‘பரிசுத்த ஆவியை எங்களுக்குக் கொடும் ஆண்டவரே’ என்று கிறிஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டியதன் காரணம் அவருடைய வல்லமையை நமக்குத் தருமாறு ஆண்டவரிடத்தில் விண்ணப்பிக்கவே. ஆவியானவரைக் கொண்டிருக்கிற நாம் அவருடைய வல்லமைக்காகவும், நிரப்புதலுக்காகவும் புரிந்துகொள்ளுதலோடு உணர்வுபூர்வமாக ஜெபிக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். ஆவியானவரின் நிரப்புதலே நம்மை பக்தி வைராக்கியத்தோடு அவருக்காக செயல்பட வைக்கிறது. இதையே இந்த ஆக்கத்தை எழுதியவர் இங்கே விளக்குகிறார். – ஆசிரியர்)

நமக்கு அதிகமான கிறிஸ்தவ வைராக்கியம் வேண்டுமா? தேவையில்லை என்று சொல்லும் துணிவுள்ளவர் யாரேனும் இருக்கிறார்களா? அந்த வைராக்கியம் கடவுளிடமிருந்தே வருகிறது. அது ஜெபத்திற்கு பதிலளிக்கும் வண்ணமாக பரிசுத்த ஆவியின் நிரப்புதலின் மூலம் வருகிறது. நமக்கு அதிக வைராக்கியம் வேண்டுமா? அப்படியானால் கடவுளின் ஆவியினால் அதிகமாக நிரப்பும்படி கடவுளிடம் கேட்கிறவர்களாக நாம் இருக்க வேண்டும். அதுவே கிறிஸ்தவ வைராக்கியத்திற்கான ஊற்றாகவும் ஆதாரமாகவும் இருக்கிறது. நமக்குத் தேவையான முழுமையான அளவிலான வைராக்கியத்தை அவரிடம் கேட்கும்படி தேவன் நம்மை ஊக்கப்படுத்துவராக.

இந்த நேரத்தில் இந்த ஆக்கத்தை நிறைவு செய்யும் வண்ணமாக, நற்செயல்களுக்கான வைராக்கியத்தோடு தொடர்பில்லாதவர்களுக்கு ஒரு வார்த்தையைக் கூறவிரும்புகிறேன். இதுவரை நான் விளக்கி வந்திருக்கும் இந்த வைராக்கியம், ஏற்கனவே ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட அந்த வார்த்தைகளிலிருந்து ஆரம்பமாகிறது – ‘இயேசு தம்மைத்தாமே சிலுவையில் ஒப்புக்கொடுத்ததோடு’ என்பதே இந்த வார்த்தைகள். உங்களைக் கட்டிவைத்து கண்டனத்திற்கும், தண்டனைக்கும் உரியதாக்கியிருக்கிற பாவத்திலிருந்தும் சுயநலத்திலிருந்தும் உங்களை விடுவிப்பதும் சுத்திகரிப்பதும் கிறிஸ்துவின் சிலுவை பலி மட்டுமே. இதை எப்படி நீங்கள் அனுபவிப்பது? உங்களுக்காகத் தம்மைத்தாமே கொடுத்திருக்கிற, சிலுவையில் அறையுண்ட மீட்பரிடம் போய் அவரை முழுமனதோடு விசுவாசிப்பதினால் மட்டுமே அது உங்களுக்குக் கிடைக்கும்.

 

நிழலும் நிஜமும் – பழையஏற்பாட்டு பலிகளும், கிறிஸ்துவின் பாவநிவாரணபலியும் –

[பேராசிரியர் ஜோன் மரே ‘மீட்பின் நிறைவேற்றம்’ என்ற ஆங்கில ஆக்கத்தில் விளக்கியிருக்கும் கிறிஸ்துவின் பாவநிவாரணபலி பற்றிய ஆழமான சத்தியங்களை எளிமையாக தொடர்ச்சியாக விளக்கப்போகிறேன். அதுபற்றிய இரண்டு ஆக்கங்கள் கடந்த இதழில் வந்திருந்தன. இது அவற்றின் தொடர்ச்சி. – ஆசிரியர்].

கிறிஸ்துவின் பாவநிவாரணபலியின் தன்மையை ஆராய்ந்து வருகிறோம். கடந்த இதழில் அந்தப்பலியில் அடங்கியுள்ள அத்தனை உண்மைகளையும் விளக்கும் ஒரே வார்த்தையாக கிறிஸ்துவின் கீழ்ப்படிவு அமைந்திருப்பதாகக் கண்டோம். அவருடைய முழுமையான கீழ்ப்படிதல் பாவநிவாரணபலியைப் பூரணமாக நிறைவேற்றியிருக்கிறது. இருந்தபோதும் வேதத்தில் கிறிஸ்துவின் பாவநிவாரணபலியை விளக்கும் வேறு தனிப்பட்ட பதங்களும் காணப்படுகின்றன. இந்தப் பதங்கள் ஒவ்வொன்றும் பாவநிவாரணபலியின் விசேட தன்மைகளை பிரித்துக்காட்டுவனவாகவும், அதேநேரம் பாவநிவாரணபலிபற்றிய முழுமையான புரிதலை நாம் அடையும்படியாகவும் உதவுகின்றன. பாவநிவாரணபலி பற்றி நாம் இந்தளவுக்கு சாதாரணமாக சிந்தித்துப் பார்ப்பதில்லை. வேதம் அதுபற்றி விளக்கும் உண்மைகளை அறிந்துகொள்ளுகிறபோதுதான் கிறிஸ்துவின் பலி எத்தனை மகத்தானது என்பதையும், அவர் நமக்களித்திருக்கிற இரட்சிப்பு எத்தனை மேன்மையானது என்பதையும் நாம் அறிந்துணர முடிகிறது. அறிவுக்காக மட்டுமல்லாமல் நாம் கிறிஸ்துவுக்குள்ளாக பரிசுத்தத்தில் உணர்வுபூர்வமாக நடைமுறையில் வளருவதற்கும் பேருதவியாக இருக்கும் பெருஞ்சத்தியங்கள் இவை.

பாவநிவாரணபலியின் பல்வேறு அம்சங்களை விளக்குகின்ற ஏனைய பதங்களாக பலி, கோபநிவாரணபலி (ப.தி. – கிருபாதாரபலி), ஒப்புரவாக்கம், மீட்பு ஆகியவற்றை வேதத்தில் காண்கிறோம். கிறிஸ்துவின் பாவநிவாரணபலியோடு தொடர்புடைய இந்தப்பதங்களை வேதத்தில் அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களின் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும்போது இவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படும் அருமையான சத்தியங்களை அறிந்துகொள்ள முடிகிறதோடு பாவநிவாரணபலியின் மகிமையை இவை இன்னும் உயரத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடுகின்றன. இப்போது இத்தகைய வார்த்தைப்பிரயோகங்களில் ஒன்றான பலியை ஆராய்வோம்.

பலிகள் (Sacrifices)

கிறிஸ்துவின் மீட்புப்பணி பலியாக இருக்கவேண்டுமென்பதை அநாதியிலேயே திரித்துவதேவன் தீர்மானித்துவிட்டார். இந்த நேரத்தில் நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வியொன்று இருக்கிறது. கிறிஸ்துவின் மீட்பின் செயலை விபரிக்கும்விதமாக பலி என்ற வார்த்தை வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறபோது அது எத்தகைய பலியை விளக்குவதாக இருக்கிறது என்பதுதான் அந்தக் கேள்வி. புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் எந்த அர்த்தத்தில் இந்தப் பதத்தை தங்களுடைய எழுத்துக்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே நாம் அதைத் தீர்மானிக்க முடியும். பழைய ஏற்பாட்டு நூல்களில் ஆழமாகவும், பரவலாகவும் இது பயன்படுத்தப்பட்டிருப்பதால், பழைய ஏற்பாடு எந்த அர்த்தத்தில் இந்தப் பதத்தைப் பயன்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்வது அவசியம். அப்படி ஆராய்கின்றபோது பழைய ஏற்பாடு அடிப்படையில் ‘கழுவுதல்’ என்ற அர்த்தத்தில் இந்தப்பதத்தைப் பயன்படுத்தியிருப்பதாக அறிந்துகொள்ளுகிறோம். எதைக் கழுவுதல் என்று கேட்போமானால் அதற்குப் பதில் பாவமும், அதனால் ஏற்படும் குற்றவுணர்வும் என்பதே பதிலாகக் கிடைக்கிறது.

பாவம் ஒருவனைத் தன் செயலுக்கு பொறுப்பானவனாக்கியிருக்கிறது. இதற்கு, ஒருபுறம் கடவுளின் பரிசுத்தமும் இன்னொருபுறம் அந்தப் பரிசுத்தத்திற்கு எதிரான அவனுடைய பாவத்தின் கோரமும் காரணமாக இருக்கின்றது. இந்நிலையில் பலியானது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பெருஞ்செயலாகக் காணப்படுகிறது. அதன் மூலம் ஒருபுறம் அவர் பாவத்தைக் கழுவி மறுபுறம் பாவத்தினால் உண்டாகியிருக்கும் சாபத்தையும், தெய்வீகக் கோபத்தையும் நீக்குகிறார். பழைய ஏற்பாட்டு மனிதன் ஆலயத்துக்குள் ஆராதனை செய்ய வருகிறபோது அங்கிருக்கும் பலிபீடத்தில் தன்னுடைய பாவத்துக்குப் பரிகாரமாக ஓர் ஆட்டை வைக்கிறான். அந்த ஆட்டின் தலையில் அவன் கையை வைக்கிறபோது அவனுடைய பாவமும், அதற்குத் தகுந்த தண்டனையும் அடையாளபூர்வமாக அந்த ஆட்டின் மீது சுமத்தப்படுகிறது. பலிகொடுக்கிறவனின் பாவம் பலிகடாவின் மீது சுமத்தப்படுவதோடு பலிகடா பலிகொடுக்கிறவனுக்காக மரணத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கிறது. இங்கே பாவம் செய்தவனுடைய இடத்தில் இன்னொருவர் அந்தப் பாவத்தை சுமந்து அதன் பலனாகிய மரணத்தை ஏற்பதைக் காண்கிறோம்.

பழைய ஏற்பாட்டில் காணப்படும் இந்தப் பலியை கிறிஸ்துவின் பலியோடு ஒப்பிடும்போது ஆலயத்துக்கு பலிகொடுக்க வந்த மனிதனுக்கும் பலியாட்டுக்கும் இடையிலும், பாவியாகிய மனிதனுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையிலும் இருக்கும் வேறுபாடுகள் சமமானவையல்ல. பழைய ஏற்பாட்டுப் பலிகள் வெறும் நிழல்களும், உதாரணங்களும் மட்டுமே. இருந்தபோதும் அவற்றில் காணப்படும் கழுவும் தன்மையை நம்மால் கவனிக்காமல் இருக்கமுடியாது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த கழுவியெடுக்கும் அம்சமே கிறிஸ்துவின் பலியை நாம் சரியாக விளங்கிக்கொள்ளுவதற்கு துணையாக இருக்கிறது. கிறிஸ்துவின் பலி கழுவியெடுக்கும் பலி மட்டுமல்ல அந்தபலியின் பலாபலன்கள் தொடர்கின்ற தன்மையையும், வலிமையையும் கொண்டிருக்கின்றன. அத்தோடு அது மிருகப்பலிகளோடு ஒப்பிட முடியாத பூரணத்துவத்தைக் கொண்டிருந்து பழைய ஏற்பாட்டுப் பலிகள் நிழலாகக் காட்டும் கழுவும் தன்மையைத் தன்னில் கொண்டிருக்கின்றன. இதெல்லாம் எதைத் சுட்டுகிறதென்றால், எவர்களுக்காக கிறிஸ்து குற்றமற்ற மகத்தான பலியாகத் தன்னை ஒப்புக்கொடுத்தாரோ அவர்களுடைய பாவங்கள் அவர்மீது சுமத்தப்பட்டு அவர்களுடைய இடத்தில் அவர் பலியானார். கிறிஸ்துவின் பலியில் காணப்படும் இந்தப்பரிமாற்றத்தை வேதம் imputation என்று அழைக்கின்றது. தமிழில் இதைக் ‘கணிக்கப்படுதல்’ அல்லது ‘எண்ணப்படுதல்’ என்று சொல்லலாம். கிறிஸ்துவின் பலியில் இந்தக் ‘கணிக்கப்படுதலாகிய’ சத்தியத்தை நாம் காண்கிறோம். இதற்காகவே அவர் நீதியற்றவர்களுக்காக நீதியாகவும், நம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவும் பலியாகி மரித்தார்.

பழைய ஏற்பாட்டில் மிருகபலிகளை விளக்கும் லேவியராகம பலிகளின் அத்தனை அம்சங்களும் எழுத்துபூர்வமாக கிறிஸ்துவின் பலிமூலம் நிறைவேற்றப்படவில்லை என்பது புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களுக்குத் தெரிந்திருந்தபோதும், மோசேயின் பலிகளில் காணப்பட்ட முக்கியமான அம்சமொன்று அவர்களுடைய மனதில் தெளிவாகப் பதிந்திருந்தது. உதாரணத்திற்கு எபிரெயர் 9:6-15 வரையுள்ள வசனங்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் முக்கியமாக பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பாவநிவாரணபலி தினத்தில் நிகழும் சம்பவங்கள் விளக்கப்பட்டாலும், இவற்றின் மூலம் அடையாளமாக வெளிப்படுத்தப்படும் அம்சங்களை அடிப்படையாக வைத்தே கிறிஸ்துவின் பலியின் நிறைவேற்றம் அதன் என்றும் தொடருகின்ற தன்மை, பூரணத்துவம் ஆகியவற்றை நிருபத்தை எழுதியவர் விளக்குகிறார்.

எபிரெயர் 9:11-12 – கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

எபிரெயர் 9:23-24 – ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே. அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.

அதேபோல எபிரெயர் 13:10-13லும் அதை எழுதியவர் பழைய ஏற்பாட்டு பாவநிவாரணத்துக்கான பலிகளையும் அதன் அம்சங்களையும் கிறிஸ்துவின் பலியோடு ஒப்பிட்டு விளக்குகிறார். இங்கே ஆசாரியனுக்கான பலியைப்பற்றியும், அனைத்து மக்களுக்கான பலியைப்பற்றியும், அந்தப் பலியின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பாவநிவாரணத்துக்காகக் கொண்டுபோகப்பட்டு, அதனுடைய சரீரம், இரத்தம், தோல், கால்கள் என்பவை கூடாரத்துக்குப் புறம்பாகக் கொண்டுபோய் எரிக்கப்படுகின்றன என்றும் வாசிக்கிறோம். இந்த இடத்தில் நிருபத்தை எழுதியவர் மிருகபலியின் அத்தனை அம்சங்களையும் கிறிஸ்துவின் பலியோடு ஒப்பிட்டு விளக்கங்கொடுக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுவது அவசியம். மிருகத்தின் எந்தப்பாகங்களும் ஆசாரியனுக்குப் போய்ச்சேராவிட்டாலும் அவற்றை கிறிஸ்துவோடு ஒப்பிட்டு நிருபத்தை எழுதியவர் விளக்குகிறார். அதாவது மிருகத்தின் பாகங்கள் அனைத்தும் கூடாரத்துக்கு வெளியில் கொண்டுபோய் எரிக்கப்பட்டதுபோல கிறிஸ்துவும் வெளியே கொண்டுபோய் பலிகொடுக்கப்பட்டார்.

எபிரெயர் 13:10-13 – நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனைசெய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை. ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும். அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப்போகக்கடவோம்.

லேவியராகமத்தில் விளக்கப்பட்டுள்ள பலிகளின் மாதிரியின்படி இயேசு தன்னைப் பலியாக ஒப்புக்கொடுத்தார். அதன்படி அவர் நம்முடைய குற்றவுணர்வையும் பாவத்தையும் முற்றாகக் கழுவி கடவுளிடமும், பரிசுத்த ஸ்தலத்தினுள்ளும் கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் நாம் விசுவாசத்தின் முழுமையான நிச்சயத்தோடு அணுகவும், நம்முடைய இருதயங்களின் தீய மனச்சாட்சி தெளிக்கப்பட்டு நம்முடைய சரீரங்கள் தூய்மையான தண்ணீரால் கழுவப்படவும் கிருபை செய்தார்.

இந்த இடத்தில் நாம் இன்னுமொரு முக்கிய உண்மையையும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். லேவியராகமத்தில் விளக்கப்படுகின்ற பலிகள் அனைத்தும் எபிரெயருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் ‘பரலோகத்திலுள்ளவைகளுக்கு எடுத்துக்காட்டாக’ விளக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் அந்த உண்மை. கிறிஸ்துவின் மகத்தான பலியின் சாயலுள்ளதாக மோசேயின் இரத்தப்பலிகள் அமைந்திருக்க கிறிஸ்துவின் பலியினால் பரலோகத்திலுள்ளவைகளும் சுத்திகரிக்கப்பட்டன என்கிறார் எபிரெயருக்கு எழுதியவர். எபிரெயர் 9:23 – “ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே.”

இதிலிருந்து லேவியராகம பலிகளுக்கு எந்த அம்சம் முக்கியமானதாக இருந்ததோ அதுவே கிறிஸ்துவின் பலியிலும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்ற உண்மையை மறுபடியும் நினைவில்கொள்ள வேண்டும். லேவியராகமபலிகள் கழுவுதலை அடிப்படையாகக் கொண்டிருக்குமானால் அதன் ஒப்பீட்டுச் சாயலான கிறிஸ்துவின் பலி அதை எந்தளவுக்கு அவசியமானதாகக் கொண்டு அமைந்திருக்கவேண்டும் என்பதை சிந்திக்கவேண்டும். அதுவும் கிறிஸ்துவின்பலி அரைகுறையானதும், இக்காலத்துக்கு மட்டுமுரியதும், தற்காலிகமானதும், இன்னொன்றிற்கு ஒருவரைத் தயாரிப்பதும், ஓரிடத்திற்கு மட்டுமே பொருந்துவதுமானதல்ல; அது பூரணமானதும், நித்தியமானதும், உண்மையானதும், முடிவானதுமாகும். லேவியராகம பலிகளைப் போலல்லாமல் அதன் ஒப்பீட்டுச் சாயல் நடைமுறையில் நிதர்சனமாகப் பயன் தருவது. எபிரெயர் 9:14ல் இந்தக் கருத்தே முன்வைக்கப்படுகிறது.

நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

கிறிஸ்துவின் பலியின் அடிப்படையிலேயே லேவியராகம பலிகளுக்கு நாம் விளக்கங் கொடுக்கவேண்டும், ஏனெனில் அவை கிறிஸ்துவின் பலியின் அடிப்படையிலேயே அதற்குச் சாயலாக தரப்பட்டிருக்கின்றன. லேவியராகம பலிகள் வெறும் சாயலாக மட்டும் இருப்பதனால் கிறிஸ்துவின் பூரணமான பலியோடு ஒப்பிடும்போது அவற்றின் குறைபாட்டை நாம் உணரவேண்டும். லேவியராகம பலிகள் வெறும் சாயலாக அடிப்படையில் அவற்றின் பயனைப் பொறுத்தளவில் குறைபாடுடையதாக இருப்பதால்தான் கிறிஸ்துவின் பூரணப்பலியில் லேவியராகம பலிகளில் காணப்படும் அத்தனை அம்சங்களும் ஒட்டுமொத்தமாக நிறைவேற்றப்படவில்லை என்பதையும், அவ்வாறு நிறைவேறுவது அவசியமில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். பழைய ஏற்பாட்டில் பலிகொடுக்கிறவனுக்கும் பலிக்கும் இடையிலும், பலிகொடுக்கிறவனின் பொறுப்புக்கும், பலியின் இரத்தஞ் சிந்துதலின் இடையில் காணப்படும் ஒப்பீட்டுக் குறைபாடுகளே கிறிஸ்துவின் பலியில் அத்தகைய எந்தவிதக் குறைபாடுகளும் இல்லாமல் இருப்பதை நிலைநிறுத்த அவசியமாயிற்று. இந்த இடத்தில் ஒப்பீடுகள் எப்போதுமே வெறும் ஒப்பீடுகளாக மட்டுமே இருக்கமுடியும் என்பதையும், நிதர்சனமானதன் நேரடிப்பயனை ஒப்பீட்டால் தரமுடியாது என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்து பாவத்துக்கு பலியாகத் தன்னை ஒப்புக்கொடுத்த செயல் விளக்கும் ஒரு முக்கிய உண்மை இன்று அதிகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. கிறிஸ்து தன்னை பலியாகக் கொடுத்தபோது ஆசாரியனாக இருந்து பலியாகத் தந்தார் என்பதுதான் அந்த உண்மை. வேறு எவராலும் பலியாக ஒப்புக்கொடுக்கப்படாமல் தானே தன்னை பலியாக அவர் ஒப்புக்கொடுத்தார். இந்த உண்மையை லேவியராகம பலிகளில் சாயலாக விளக்கியிருக்க முடியாது. பழைய ஏற்பாட்டில் ஆசாரியனோ அல்லது பலிகளோ தங்களைத் தாங்களே ஒப்புக்கொடுக்கவில்லை. ஆனால், கிறிஸ்துவில் இந்த இரண்டையும் நாம் அவதானிக்கிறோம். இந்தவிதத்தில் கிறிஸ்துவின் பலியில் இவை இரண்டுமே தனித்துவமான முறையில் காணப்படுவதோடு, அவருடைய ஆசாரியத்துவப் பணியின் எல்லைகடந்த பூரணத்துவத்தையும் கவனிக்கிறோம். இந்த ஆசாரியத்துவப் பணியின் அடிப்படையிலேயே அவர் பாவங்களுக்குத் தன்னை பலியாகத் தந்திருக்கிறார். உண்மையாகவே அவர் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிதான், அதேவேளை உலகத்தின் பாவத்தை நீக்குவதற்காகத் தன்னை அடிக்கப்படுவதற்காக ஒப்புக்கொடுத்த ஆசாரியராகவும் இருக்கிறார். இந்த இரண்டும் அற்புதமாக இணைவதிலிருந்தே அவருடைய சிறப்பான பலியின் தன்மையை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. ‘எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் அவர் தன்னை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார்’ என்று நாம் அடிக்கடி சொல்லுகிற வார்த்தைப்பிரயோகத்தில் இந்த உண்மை அப்பட்டமாக அடங்கியிருந்தபோதும் அதை நாம் ஆழமாக உணர்ந்து போற்றுவதில்லை. இந்த வார்த்தைப்பிரயோகத்தின் முழு அர்த்தத்தையும், எவரும் எண்ண முடியாத எண்ணில் அடங்காத பெருந்தொகையினர் மேல் இறங்கியிருந்த தெய்வீக கோபத்தை கிறிஸ்து தன்னுடைய இறுதி சிலுவைபலியின் மூலம் பூரணமாக நிறைவேற்றியிருப்பதில் முடிவாகக் காண்கிறோம்.

இறுதியாக, கிறிஸ்துவின் ஆசாரியத்துவப் பணியின் தன்மையை உணர்கிறபோதுதான், நாம் அவருடைய ஒரே பலி அவர் மீட்பராக இருந்து எப்போதும் தொடர்கின்ற அவருடைய ஆசாரியத்துவப் பணியோடு இணைந்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. மெல்கிசெதேக்குவைப்போல அவர் என்றும் ஆசாரியராக இருக்கிறார். பலிகொடுப்பதற்காக வரும் ஆசாரியராக அல்லாமல், ஒரே தடவை செலுத்தப்பட்ட பலியின் அத்தனை அம்சங்களையும் ஆசாரியராக இருந்து நிறைவேற்றிய தொடர்ந்திருக்கும் ஆசாரியராக கிறிஸ்து இன்று இருக்கிறார். இந்தவகையில் அவர் தன்னுடைய மக்களுக்காக இடைவிடாமல் ஜெபிக்கும் ஆசாரியராக இருக்கிறார். இடைவிடாமல் தொடர்ந்து என்றும் பயனளித்து வரும் அவருடைய ஜெபங்கள், ஒரே தடவை செலுத்தப்பட்ட அவருடைய பலியோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தவகையில் மாபெரும் ஆசாரியராக இருந்தே நாம் விசுவாசிக்கும் கிறிஸ்து தன் பலியை நிறைவேற்றியதோடு தன் தொடரும் ஆசாரியத்துவப் பணியையும் செய்துவருகிறார்.

 

உள்ளூர்சபை அங்கத்துவம் – தவிர்க்கமுடியாத நடைமுறைத் தேவை –

மேலைத்தேய நாடுகளில் இன்று கிறிஸ்தவம் தலைகீழாக மாறி சத்தியத்துக்கு விரோதமாக நாளாந்தம் போய்க்கொண்டிருப்பதை அந்நாடுகளில் வாழும் வாசகர்கள் அறிவார்கள். கீழைத்தேய நாடுகளில் அந்தளவுக்கு இன்றுவரையில் தீவிரமான பிரச்சனைகளைக் கிளப்பாமல் இருக்கும் தன்னினச் சேர்க்கை (ஓரினச் சேர்க்கை), ஓரினத் திருமண பந்தம், தீவிர பின்நவீனத்துவ சிந்தனைகளும் போக்கும், திருமணம் செய்யாமல் சேர்ந்துவாழும் வாழ்க்கைமுறை, தகப்பனில்லாத பிள்ளைவளர்ப்பு, உடலுறவு விஷயத்தில் திருமணத்துக்கு வெளியில் கட்டுப்பாடற்ற நடைமுறை போன்றவை சமுதாயத்தில் வெறும் சாதாரண விஷயங்களாக அதோடு ஒன்றிப்போய் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு பெருந்தொல்லை தரும் அம்சங்களாக மாறிவிட்டிருக்கின்றன. திருநங்கைகளுக்கான கழிவறை என்று ஆரம்பித்து, ஆணும் பெண்ணும் ஒரே கழிவறையைப் பயன்படுத்த வேண்டும் என்றளவுக்கெல்லாம் பேச்சு இன்று அடிபடுகிறது. Target என்ற விற்பனையகம் அமெரிக்கா முழுவதும் தன்னுடைய விற்பனையகங்களில் இதை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. இதனால் இதுவரை ஒரு மில்லியன் பேர் Target விற்பனையகத்தைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இவையெல்லாம் சமுதாயத்தின் அடித்தளத்தையே அசைத்து கிறிஸ்தவ சமுதாயத்தையும் அதிரவைத்துக்கொண்டிருக்கின்றன. இத்தகைய ‘சமுதாய அசிங்கங்களை’ (இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது எனக்குத் தவறாகப்படவில்லை. அரசியல் இங்கிதம் (Political correctness) நமக்கு வேதவிஷயங்களில் இருக்கக்கூடாதென்று நான் உறுதியாக நம்புகிறேன்.) கிறிஸ்தவ சமுதாயம் உணர்ந்து அவற்றில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுவதோடு, இத்தகைய சூழ்நிலையில் சுவிசேஷத்தை அறிவிக்கும் அதீததுணிவையும் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இன்றிருக்கிறது.

இவற்றைத் தவிர கிறிஸ்தவர்கள் மத்தியில் திருச்சபைக்கு எந்த மதிப்பும் கொடுக்காத நிலையும் அதிகரித்து வருகிறதை மேலைத்தேய கிறிஸ்தவ சமுதாயத்தில் சாதாரணமாகவே காண்கிறோம். அதாவது, வேதபோதனைகளைப் பின்பற்றி அவற்றின் அடிப்படையில் வேதஒழுங்குகளோடு நடந்து வரும் திருச்சபையை மேலைத்தேய கிறிஸ்தவம் ஒதுக்கிவைத்து வருகிறது. சபை சபையாக இன்று சபை அங்கத்துவம், சபை அமைப்பு, விசுவாச அறிக்கை, சபை ஒழுங்கு, ஓய்வுநாள் அனுசரிப்பு, போதக கண்காணிப்பு, மூப்பர்களின் ஒழுங்காளுகை என்பவற்றையெல்லாம் விரும்பாமல் மட்டுமல்ல, தேவையற்றவை என்று அடியோடு நிராகரித்துவருகின்ற போக்கும் எங்கும் பரவலாக இருந்துவருகிறது. கிறிஸ்தவன் என்று தன்னை அழைத்துக்கொண்டு வேதசிந்தனையின்றி தனக்குப் பிடித்தவிதத்தில் எந்த அதிகாரத்துக்கும் தலைபணிய மறுத்து நடந்துவருபவர்களை எங்கும் சாதாரணமாகக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்தப் போக்கிற்கு 19ம் நூற்றாண்டிலேயே வித்திடப்பட்டிருந்தாலும் இன்று வைரஸ்போல் பரவி கிறிஸ்தவ சமுதாயத்தை இது பெரிதும் பாதித்து வருகிறது.

சமீபத்தில் எங்கள் சபைக்கு வந்த ஒரு நடுத்தரவயதுள்ளவர் இரண்டு மாதங்களாக நமது ஏரியாவிலுள்ள சபைகள் அனைத்திற்கும் போய் அவற்றின் ஆராதனை முறைகள் மற்றும் உலகத்தைப் பின்பற்றும் போக்குகள் பிடிக்காமல் எங்கள் சபையை இணையத்தில் தேடிக்கண்டுபிடித்து வந்ததாகக் கூறினார்; தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கிறார். உண்மையில் இத்தகையவர்கள் இன்று விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய நிலையிலேயே இருக்கிறார்கள். இது அசாதாரண சம்பவமாக கணிக்கப்பட வேண்டிய அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. ஒருகாலத்தில் திருச்சபைக்கு ஒப்புக்கொடுத்து வாழாமல் இருக்கிறோமே என்ற குற்றவுணர்வோடு வாழ்ந்தவர்கள் இருந்த நிலை மாறி அந்த உணர்வு அரவேயில்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு திருச்சபை அத்தியாவசியமானதல்ல என்ற உணர்வோடு வாழுகிறவர்கள் தொகை பெருகியிருக்கிறது. திருச்சபையில் இணைந்து வாழவேண்டும் என்ற போதனை கிறிஸ்தவர்களின் அடிப்படைப் போதனையாக இருந்த காலம் போய் அது இல்லாமல் வாழ்ந்து கிறிஸ்துவை மகிமைப்படுத்தலாம் என்ற ஆணவம் தலைதூக்கியிருக்கிறது.

சுவிசேஷத்தை சொல்லுவது மட்டுமே இன்று இலட்சியமாக இருக்கவேண்டும், வேறு விஷயங்கள் அநாவசியமானவை என்று திமிரோடு சொல்லிக்கொண்டு கிறிஸ்தவப்பணி செய்துவருகிறவர்களை வெளிப்படையாகவே எங்கும் காண்கிறோம். பாகாலுக்குத் தலைகுனிய மறுத்து கடவுளுக்கு விசுவாசமாக வாழ்ந்த 7000 பேரைப்போல, வேதத்தைப் பின்பற்றி திருச்சபைக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து ஓய்வுநாளை அனுசரித்து வாழ்ந்துவருகிற கிறிஸ்தவர்களும், போதகர்களும், திருச்சபைகளும் தொடர்ந்திருந்து வருகிறபோதிலும் திருச்சபை வாழ்க்கைக்கு எதிரான பிசாசின் சிந்தனைகளை இன்றைக்கு வேத அதிகாரத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் முகங்கொடுத்துப் போராடவேண்டியிருக்கிறது. ஒருபுறம் வேதஅடிப்படையில் திருச்சபைக்கு ஒப்புக்கொடுத்து ஆண்டவரை ஆராதித்தும், சுவிசேஷத்தை ஆவியில் நிரம்பி அறிவித்தும் வருகிறவேளை, கிறிஸ்துவின் பெயரில் உலவி வரும் இத்தகைய தீவிர புதுவிதப் போக்கையும் எதிர்த்து வாழவேண்டிய நிலையில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

ஜொனத்தன் லீமன் எழுதிய ‘சபை அங்கத்துவம்’ (Jonathan Leeman, Church Membership, Crossway) மற்றும் ரையன் எம். மெக்ரோவும் ரையன் ஸ்பெக்கும் எழுதிய ‘சபை அங்கத்துவம் வேதபூர்வமானதா’ (Ryan M Mcgraw and Ryan Speck, Is Church Membership biblical, Reformation Heritage Books) ஆகிய புதிய நூல்கள் கிடைக்கப்பெற்று வாசித்தேன். இவை சபை அங்கத்துவம் பற்றி எளிமையாக விளக்கும் வேதபூர்வமான நூல்கள். இந்தத் தலைப்புகளோடெல்லாம் நூல் வெளியிடவும், பிரசங்கம் செய்யவும் தேவையில்லாத காலமொன்றிருந்தது. 16ம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க மதத்தையும் உலகத்தையும் அசைத்த சீர்திருத்தம் ‘திருச்சபை சீர்திருத்தம்’; அதற்குப் பெயர் கிறிஸ்தவ சீர்திருத்தமோ, சுவிசேஷ சீர்திருத்தமோ அல்ல. அன்று கிறிஸ்தவ சீர்திருத்தத்தை சபையில் ஆரம்பிக்கவேண்டுமென்று சீர்திருத்தவாதிகளுக்குப் புரிந்திருந்தது. கத்தோலிக்க மதப்போதனையால் இரட்சிப்புக்கான வழியை மக்கள் அறியமுடியாதிருந்த காலத்திலும், சுவிசேஷம் அரவே பிரசங்கிக்கப்படாத சூழ்நிலையிலும், வேதத்தை மக்கள் வாசிக்கக்கூடிய வசதியில்லாதிருந்த நிலையிலும் இதில் எதையாவது ஒன்றை மட்டும் முதன்மைப்படுத்தி, முன்னெடுத்து ஓர் இயக்கத்தை அவர்கள் ஆரம்பிக்கவில்லை. சுவிசேஷப் பணி மட்டுமே அவசியம் வேறெதுவும் முக்கியமில்லை என்ற நிலையை எடுத்து உயிரைக்கொடுத்துப் பாடுபட்டவர்களாக அவர்களை நாம் வரலாற்றில் காணவில்லை. சுவிசேஷம் வெளிப்படையாகப் பிரசங்கிக்கப்பட வேண்டிய அவசியமும், வேதமொழிபெயர்ப்பும் அத்தனை அவசியமாக இருந்தபோதும் இதையெல்லாம் திருச்சபை சீர்திருத்தமில்லாமல் செய்து பலனில்லை என்பதை லூத்தரும், கல்வினும், சுவிங்லியும், நொக்ஸும் உணர்ந்திருந்தனர். அவர்கள் முன்னெடுத்துச் சென்ற திருச்சபை சீர்திருத்தப் பணியினாலேயே நாம் இன்றும் திருச்சபையில் கூடி ஆராதிக்கவும், வாழவும், வேதத்தை நம்மொழியில் வாசிக்கவும், சுவிசேஷத்தைச் சொல்லவும் முடிகிறது. இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் சுவிசேஷம் சொன்னால் மட்டும் போதுமென்று கிளம்பியிருப்பவர்கள் வரலாற்றையும், வேதத்தையும் சிதைக்கப்பார்க்கிறார்கள்; ஆத்துமாக்களை திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.

சபை அங்கத்துவம் – ஜொனத்தன் லீமென்

ஜொனத்தன் லீமென்னின் நூலில் அருமையான பல நல்ல அம்சங்கள் காணப்படுகின்றன. இதை வாசித்தது எனக்கு குதூகலத்தைத் தந்தது. ஒத்த கருத்துள்ள ஒரு விசுவாச நண்பனோடு கூடிப்பேசுகின்ற ஓர் அனுபவத்தைத் தந்தது. லீமென் ஒரு திருச்சபைப் போதகர். சபை அங்கத்துவத்தின் அவசியத்தைப்பற்றி மட்டுமல்ல தான் அங்கத்துவத்திற்காக விண்ணப்பம் செய்கிறவர்களோடு நடத்துகிற ஆரம்ப விண்ணப்பத்தெரிவு சந்திப்பில் எப்போதுமே அதிக மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் விளக்குகிறார். ‘அங்கத்துவ விண்ணப்பத்தேர்வு’ என்ற வார்த்தைகளே இன்றைக்கு கிறிஸ்தவர்களில் பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது. புதுவிதப் போக்காளர்களைத் தூக்கிவாரிப்போட வைக்கும் வார்த்தைகள் இவை. அங்கத்துவத் தேர்வை விளக்கும் இந்தப் பகுதிக்கு லீமென் அளித்திருக்கும் தலைப்பே அருமை, ‘யார் உள்ளே நுழையலாம்’ என்பதே அது. யார் வேண்டுமானாலும் திருமுழுக்கு கொடுக்கலாம், எடுக்கலாமென்றும், அப்படித் திருமுழுக்கு எடுப்பதே சபை அங்கத்துவத்தின் அறிகுறி, வேறெதுவும் தேவையில்லை என்றும் தான்தோன்றித்தனமாகப் பேசுகிறவர்களுக்கும், நடந்துகொள்ளுகிறவர்களுக்கும் மத்தியில் நாம் வாழ்கிற சூழ்நிலையில் லீமென்னின் வார்த்தைகள் என் நெஞ்சில் பாலை வார்க்கின்றன. லீமென் சொல்லுகிறார், ‘ஒருவன் சபைக்குள் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும்’ என்கிற வார்த்தைகள் மிகவும் தப்பானவை. அப்படி இணைத்துக்கொள்ளுவதற்கு சபை ஒன்றும் வருகிறவர்களுக்கெல்லாம் வளைந்துகொடுத்துவிடுகிற தன்னார்வ நிறுவனமல்ல. சபைக்கு ஒருவன் தன்னை ஒப்புக்கொடுத்து அதற்குக் கட்டுப்பட வேண்டுமென்பதே சரியான வார்த்தைகள்.’

சபை அங்கத்துவத்தைப்பற்றி எத்தனையோ நூல்களை நான் வாசித்திருக்கிறேன். ஏர்ல் பிளெக்பேர்ன் (Jesus Loves The Church And So Should You), டொன் விட்னி (Spiritual Disciplines within the Church) ஆகியோர் தங்களுடைய நூல்களில் இதுபற்றி நன்றாகவே எழுதியிருக்கிறார்கள். இருந்தாலும் அவற்றிலும் ஏதோ ஒன்று உதைப்பதாகத்தான் எனக்குத் தோன்றியது. அவர்கள் விளக்கியிருப்பவற்றில் எனக்கு எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை; நூறுவிதம் சம்மதமே. இருந்தாலும் அவர்கள் சொல்லவேண்டிய சிலவற்றை சொல்லாமல் விட்டிருக்கிறார்கள். சபை அங்கத்துவம் அவசியமென்றும், அதற்கான வேத ஆதாரங்கள் இத்தியாதி என்றும், சபையில் அங்கத்தவராக இருக்க வேண்டும் என்றும் ஆணித்தரமாக விளக்கினாலும் நடைமுறையில் அது எப்படி எந்தவிதத்தில் சபையில் இருக்கவேண்டும், ஒருவர் அதை எப்படி, எந்த மனநிலையோடு அணுக வேண்டும் என்பதை ஜொனத்தன் லீமென் அருமையாக, அடித்து விளக்கியிருப்பதுதான் எனக்கு அத்தனை சந்தோஷத்தைக் கொடுத்தது. இதெல்லாம் எழுத்தில் எழுதாவிட்டாலும் பிரசங்கத்தில் விளக்கியிருக்கின்ற, எனக்குத் தெரிந்த ஒரே மனிதர் அல்பர்ட் என். மார்டின் மட்டுமே. ஜொனத்தன் லீமென் அவற்றை எழுத்தில் தந்திருப்பதன் மூலம் அவசியமான ஒரு தேவையைப் பூர்த்தி செய்திருக்கிறார்.

எளிமையான ஆங்கிலத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கும் நூலிது. சபை அங்கத்துவத்துக்கான வேத ஆதாரங்களை ஒவ்வொன்றாக முன்னெடுத்து வைக்கிறார் லீமென். வேதத்தை எப்படி வாசித்துப் புரிந்துகொள்ளுவது என்பதை அறியாத அரைகுறையொன்று தூரத்தில் வேதத்தில் ‘அங்கத்துவம்’ என்ற வார்த்தையைப் பார்க்க முடியாது என்று அடிக்குரலில் சத்தமிடுவது கேட்கிறது. அந்த வார்த்தை இருந்துவிட்டால் மட்டும் நீ சபையில் விசுவாசமாக அங்கத்துவனாக இருந்துவிடுவாய் என்று என்னால் நம்பமுடியவில்லை. ஒருநாளும் அதிகப்பிரசங்கிகள் சபை அங்கத்தவர்களாக இருப்பதில்லை. வேதத்தில் அங்கத்துவம் என்ற வார்த்தை இல்லை என்பது அதைத் தந்த ஆவியானவருக்கு நன்றாகத் தெரியும். அதா இப்போது அவசியம்? சபைகள் அங்கத்துவ அமைப்பு இல்லாமல் அமைக்கப்படவில்லை; தொடரவில்லை என்பதற்கு எண்ணிலடங்காத அசைக்கமுடியாத வேத ஆதாரங்கள் இருக்கின்றன என்பதுதான் என் வாதம். அதை லீமென் 13 பக்கங்களில் நன்றாகவே விளக்கியிருக்கிறார். கி.பி. 30ல் இருந்து ஆரம்பித்து உலகத்தையே வலம் வருவதுபோல் நாடுகள் எல்லாவற்றையும் சுற்றிக்கடந்து அங்கிருந்த சபைகள் அமைக்கப்பட்ட விபரங்களை அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து புதிய ஏற்பாடுவரை நமக்குச் சுட்டி ‘அங்கத்தவர்களைப் பற்றிப் பேசாமல் ஒருநாளும் நம்மால் உள்ளூர் சபையைப் பற்றிப் பேசமுடியாது’ என்று முடிக்கிறார் லீமென். இதில் இருபத்தைந்து புத்தகங்களையாவது உடனடியாக வாங்கி சபையில் வைக்கலாமென்றிருக்கிறேன். இன்றைய இளம் தலைமுறைக்கு இதையெல்லாம் போதித்து வளர்க்காவிட்டால் வெளியில் அவர்கள் சிந்தையைக் குழப்புவதற்காக ஊழியம் செய்துவரும் ஊதாரிகள் கையில் அகப்பட்டு அவர்கள் சின்னாபின்னமாகிவிடுவார்கள்.

இந்த நூல் கையடக்கமானதாக இருந்தாலும் இதில் விளக்கப்பட்டிருக்கும் உண்மைகளையெல்லாம் நான் சுட்ட ஆரம்பித்தால் இந்த ஆக்கம் நீண்டதாகிவிடும். அதனால் முக்கியமானவற்றை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன். இதில் லீமென் உள்ளூர் சபையைப் பின்வருமாறு விளக்கியிருக்கிறார்.

  1. விசுவாசிகள் மட்டும்
  2. வழமையாக ஓரிடத்தில் கூடிவரும் கூட்டம்
  3. கண்காணிகளின் கண்காணிப்புக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் கூட்டம்
  4. இயேசுவின் அதிகாரத்தை இந்த உலகத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி அவருடைய பெயரில் கூடிவரும் கூட்டம்.

மேற்குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பிரசங்கத்தைச் செய்து திருநியமங்களைப் பின்பற்றும் கூட்டம்.

லீமென் சொல்லுகிறார், ‘ஒரு போதகர் திருமண விழாவொன்றின் முடிவில் திருமணம் செய்துகொள்கிறவர்களை கணவனும் மனைவியுமாக அறிவித்து அவர்களைக் குடும்பமாக இணைப்பதுபோல, மேற்குறிப்பிட்ட பட்டியலில் உள்ள கடைசி நான்கு அம்சங்களுமே சாதாரணமாக வேறு இடங்களில் கூடிவருகின்ற (பார்க்கிலோ அல்லது சாப்பாட்டுக்கடையிலோ) கிறிஸ்தவர்களை ஓர் உள்ளூர் சபையாக்குகின்றன.’ அதாவது, இந்த நான்கு அம்சங்களுமே கிறிஸ்தவர்கள் வேறு எந்த இடத்தில் கூடுகிற கூட்டங்களில் இருந்து பிரித்துக்காட்டி அவர்களை ஒரு சபையாக அடையாளங்காட்டுகின்றன. இந்தவிதத்தில் அதிகாரபூர்வமாக கிறிஸ்தவர்கள் சபையாகக் கூடிவருதலையே பவுல் அப்போஸ்தலர் 1 கொரிந்தியர் 11-14 வரையுள்ள அதிகாரங்களில் ‘ஓரிடத்தில் கூடிவருகிறபோது’ என்ற வார்த்தைப்பிரயோகங்களைப் பயன்படுத்தி இனங்காட்டுகிறார். கிறிஸ்தவர்கள் சபையாகக் கூடிவருதற்கும் தனிப்பட்டவிதத்தில் வேறுநோக்கங்களுக்காக வேறிடங்களில் கூடிவருவதற்கும் இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறதென்பதை லீமென் உணர்த்துகிறார். சபைகூடிவருகிறபோது அது ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் அவருடைய அதிகாரத்தின் பிரதிநிதியாக அதிகாரபூர்வமாகக் கூடிவருகின்றது.

இதேபோல லீமென் சபை அங்கத்துவத்தையும் விளக்குகிறார், ‘ஒரு கிறிஸ்தவனுக்கும் திருச்சபைக்கும் இடையில் இருக்கும் அதிகாரபூர்வமான உறவே சபை அங்கத்துவம். இந்த உறவை ஏற்படுத்திக்கொள்ளுவதற்காக தன்னுடைய கிறிஸ்தவ சீடத்துவத்தை சபையின் நன்மை கருதி கீழ்ப்படிவோடு அவன் சபையின் மேற்பார்வைக்கு ஒப்புக்கொடுக்கிறபோது உள்ளூர்சபை கூடி அவனை அங்கீகரிக்கிறது.’ இந்த விளக்கத்தை லீமென் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

  1. உள்ளூர் சபை ஒருவனின் விசுவாசத்தை நம்பத்தகுந்தது என்று திருமுழுக்கை அவனுக்கு அளிப்பதன் மூலம் அங்கீகரிக்கிறது.
  2. அவனுடைய சீடத்துவத்திற்கு மேற்பார்வை அளிப்பதை அது வாக்குறுதியாக அளிக்கிறது.
  3. அந்த விசுவாசி அதிகாரபூர்வமாக சபையினதும், அதன் தலைவர்களினதும் அதிகாரத்திற்கும், மேற்பார்வைக்கும் உட்பட்டுத் தன்னுடைய சீடத்துவத்தைப் பின்பற்றுகிறான்.

இதன் மூலம் அந்த உள்ளூர் சபை அவனைப்பார்த்து, ‘உன்னுடைய விசுவாசம், திருமுழுக்கு, சீடத்துவம் ஆகியவற்றை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆகவே, நீ கிறிஸ்துவுக்கு உரியவன் என்பதையும், எங்களுடைய சபையின் மேற்பார்வைக்கு உட்பட்டவன் என்பதையும் நாங்கள் பகிரங்கமாக அறிவிக்கிறோம்’ என்று சொல்லுகிறது. அதேபோல, அந்த விசுவாசியும் சபையை நோக்கி, ‘நீங்கள் விசுவாசத்தோடு, சுவிசேஷத்தை அறிவிக்கின்ற சபையாக இருக்கின்றவரை நான் தனிப்பட்டவிதத்தில் உங்களோடு இணைந்து வாழ்வதோடு, என்னுடைய சீடத்துவத்தையும் உங்களுடைய அன்பின் அடிப்படையிலான மேற்பார்வைக்கு கீழ்ப்படிவோடு சமர்ப்பிக்கிறேன்’ என்கிறான். இந்த இடத்தில் ‘சுவிசேஷத்தை அறிவிக்கிற சபையாக இருக்கின்றவரை’ எனும் வார்த்தைகளுக்குப் பொருள் வேதத்தை மீறி நடக்கும் சபையாக மாறிவிடாமல், அதாவது ‘லிபரல்’ சபையாக மாறிவிடாமல் இருக்க வேண்டும் என்பதே.

இதுவரை நாம் பார்த்திருப்பது நமக்கு திருமணத்தை நினைவுக்குக் கொண்டுவரவேண்டும். திருமண வைபவத்தில் திருமணத்தில் இணையப்போகிறவர்கள் கடவுளின் முன் வாக்குறுதிகளை எடுத்துக்கொள்ளுவதுபோலத்தான் இதுவும். அந்த உடன்படிக்கையைப்போலத்தான் ஒரு விசுவாசி உடன்படிக்கையை எடுத்து புதிய உடன்படிக்கை சமுதாயமான உள்ளூர் சபையில் சேரவேண்டும். சபை அங்கத்துவம் என்பது சபை உங்களுடைய சீடத்துவத்துக்கான பொறுப்பையும், நீங்கள் சபையின் நலனுக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளுவதுதான். இந்த இடத்தில்தான் சபையின் தலைவர்களான மூப்பர்கள் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.

லீமென் சபை அங்கத்துவத்தை மிக அழகாக விளக்குகிறார். நாம் கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற கடமைப்பாட்டைக் கொண்டிருப்பதுபோல உள்ளூர் சபையில் இணையும் கடமைப்பாட்டையும் கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவை விசுவாசித்தபின் உள்ளூர் சபையில் இணைந்து வாழ்வது நம்முடைய தவிர்க்கமுடியாத கடமையாக இருக்கின்றது என்கிறார் லீமென். அதேவேளை உள்ளூர் சபை அங்கத்துவத்திற்கு விண்ணப்பம் செய்கிறவர்களைச் சந்தித்துப் பேசி தகுந்த வழிமுறைகளின்படி அவர்களை ஆராய்ந்து சபையாருக்கு அவர்களை பரிந்துரை செய்கின்ற பொறுப்பு சபை மூப்பர்களுடையது. உள்ளூர் சபை அங்கத்தவர்களாக இருக்கவேண்டியவர்கள் ஆடுகள்; ஓநாய்களல்ல. ஓநாய்கள் உள்ளூர்சபைக்குள் நுழைவதைத் தாங்களே தவிர்த்துக்கொள்ளாது; சபையின் நன்மை கருதி அதைத் தடுக்கவேண்டியது மூப்பர்கள் பொறுப்பு. அதற்காகத்தான் அங்கத்துவ விண்ணப்பத்தை ஆராய்ந்து ஒருவர் மூப்பர்களின் கண்காணிப்பிற்கும், சீடத்துவத்தை அவர்களுடைய மேற்பார்வையின் கீழ் கொண்டுநடத்தத் தயாராக இருக்கிறாரா என்பதைக் கருத்தோடு கவனிக்க வேண்டிய பணி மூப்பர்களுடையதாக இருக்கிறது. இறுதியில் மூப்பர்களின் பரிந்துரையின்படி சபை அவர்களை அங்கத்துவத்திற்கு அங்கீகாரம் செய்யும். இதையெல்லாம் லீமென் அருமையாகவும், தகுந்த உதாரணங்களுடனும் வேதபூர்வமாக விளக்கியிருக்கிறார். திருச்சபைப் போதகனாக இருக்கும் எனக்கு இந்த நூல் கையில் கிடைத்து வாசிக்க முடிந்தது ஆவிக்குரிய ஆசீர்வாதமாக இருந்தது.

‘கிறிஸ்தவன் எவ்வாறு சபைக்குக் கீழ்ப்படிய வேண்டும்’ என்ற அதிகாரத்தில் லீமென், ‘கிறிஸ்தவர்கள் சபைக்குள் இணைந்து கொள்வதில்லை, அவர்கள் சபைக்குக் கட்டுப்பட வேண்டும்’ என்கிறார். ‘இயேசு எவரையும் கட்டவும், அவிழ்ப்பதற்குமான அதிகாரத்தை சபைக்குக் கொடுத்திருக்கிறார்’ என்கிறார் லீமென். அதனால் சபையே ஒருவரை உள்ளே அனுமதிக்கும் பொறுப்பையும் அதிகாரத்தையும் கொண்டிருக்கிறது. கட்டுப்படுவது, கீழ்ப்படிவது என்ற வார்த்தைகள் இன்று அநேகரை பயமுறுத்துவதாகவும், விரும்பத்தகாததாகவும் மாறிவிட்டிருக்கின்றன. முக்கியமாக நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் போதகர்களின் மோசமான செயல்களினால் சபைக்குக் கெட்டபெயர் வந்திருப்பது மட்டுமல்ல கிறிஸ்தவர்கள் சபைக்குக் கட்டுப்படவும் தயங்குகிறார்கள். இந்த நடைமுறைத் தவறுகளினால் நாம் வேதத்தை மாற்றியமைத்துவிட முடியாது; வேறு விளக்கங்கள் கொடுக்க முடியாது. கிறிஸ்தவர்கள் சபைக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென்பதே சபையின் தலைவராகிய இயேசு கிறிஸ்துவின் தவிர்க்கமுடியாத கட்டளை. சபைக்கு எப்படி கட்டுப்படுவது என்பதை எட்டு அம்சங்கள் மூலமாக லீமென் விளக்குகிறார். (1) முதலாவது, பகிரங்கமாகக் கட்டுப்பட வேண்டும். அதாவது, அதிகாரபூர்வமாக அனைவரும் அறியும்படியாக. (2) பிரதேச ரீதியாக சபையிருக்கும் இடத்தில் வாழ்ந்து சபை வாழ்க்கைக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். வெகுதூரம் போய் வாழ்ந்தால் சபை வாழ்க்கையை அனுபவிக்கவோ, அதற்கு உழைக்கவோ முடியாது. பணத்தை மட்டும் காரணமாகக் கொண்டு தூரத்தில் போய் வாழ்வது கிறிஸ்துவில் வைக்கின்ற நம்பிக்கைக்கு அர்த்தமல்ல. (3) நிதர்சனமான சமூகத்தொடர்பை சக அங்கத்தவர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். (4) ஒருவர் மீது ஒருவர் ஆழமான அன்பை நடைமுறையில் காட்டவேண்டும். (5) பணத்தால் சபையின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். (6) தங்களுடைய சரீர உழைப்பை சபைக்குக் கொடுக்கவேண்டும். எல்லோரும் முழுநேர ஊழியராக இருக்கவேண்டுமென்று கிறிஸ்து எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னுடைய நேரத்தையும், உழைப்பையும் சபையின் முன்னேற்றத்திற்காகக் கொடுக்க வேண்டும். முக்கியமாக ஓய்வுநாளை சபைக்குக் கொடுக்கவேண்டும். அந்த நாள் ஆண்டவருடையது, அந்நாளிலேயே சபைகூடுகிறது. (7) சபையின் ஒழுக்கப்போதனைகளுக்கு முழுமனதோடு கட்டுப்பட்டு சீடத்துவ ஒழுங்குக்கட்டுப்பாட்டுக்குக் கீழ்ப்படிய வேண்டும். (8) ஆவிக்குரியவிதத்தில் சபைக்குக் கட்டுப்பட வேண்டும்.

சபை அங்கத்துவம் இடத்துக்கு இடம் மாறி அமையமுடியாது என்கிறார் லீமென். இயேசு கிறிஸ்துவே சபையையும், அங்கத்துவத்துவ முறையையும் அமைத்து எக்காலத்துக்கும் உரிய முறையில் வேதத்தில் தந்திருப்பதால் அது இடத்துக்கு இடம், நாட்டுக்கு நாடு வேறுபட்டிருக்க முடியாது என்கிறார் லீமென். எல்லா நாடுகளுக்கும் எல்லா இடங்களுக்கும் ஒரேவிதமான அம்சங்களையே இந்த விஷயத்தில் பயன்படுத்த இயேசு கொடுத்திருக்கிறார். இருந்தபோதும் இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தைக் குழப்புவதற்கு பிசாசு தன் தந்திரங்களைப் பயன்படுத்துவது நாமறிந்ததே. அந்தத் தந்திரங்களில் ஒன்றுதான் கலாச்சாரத்தின் அடிப்படையில் சபை அமைக்க முயல்வது. மேலைத் தேசங்களிலும், கீழைத்தேய நாடுகளிலும் இதை இன்று பெருமளவிற்குப் பார்க்கிறோம். ஆள் எண்ணிக்கை தேவை என்பதற்காக இனிப்புக்கொடுப்பதுபோல் ஐந்துவயதுள்ள பிள்ளைக்கும் இருபத்தைந்து வயதுள்ளவனுக்கும் ஒரேவிதமான அழைப்பைக் கொடுத்து பரலோக இராஜ்ஜியத்தில் இணைக்கும் வழிமுறைகளை பிசாசு பயன்படுத்தி வருகிறான். அர்ப்பண அழைப்பு போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி, இயேசு சபைபற்றிப் போதித்திருக்கும் போதனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கிறிஸ்தவ ஊழியங்கள் நடந்துவருவது ஊரறிந்த காரியமே. சுவிசேஷம் என்னவென்று தெரியாமல், “கிறிஸ்துவிடம் வா உன்னைக் குணப்படுத்துவார்” என்று பொய்சொல்லி ஆள்சேர்க்கும் ஊழியங்கள் மலிந்துபோயிருக்கின்றன. கடவுளின் கிருபையை இந்தளவுக்கு சாதாரண பத்து பைசா மிட்டாயைப்போல ஆளாளுக்கு இலவசமாகக் கொடுத்து அவர்களைத் திருமுழுக்குக்கு உட்படுத்தி அத்தகையவர்களை ஒன்றுகூட்டி ‘சபை’ எனப் பெயர்சூட்டி நடந்துவரும் எத்தனை ஊழியங்களைப் பிசாசு பயன்படுத்தி வருகிறான். இவர்களுக்கு இந்த உலகத்து பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் மட்டும் கையில் இருக்குமே தவிர பரலோக இராஜ்யம் தொடர்ந்து தூரத்தில் அல்லவா இருக்கிறது.

சபை அங்கத்துவனாவது என்பது ஒரு விசுவாசி புதிய உடன்படிக்கை சமுதாயமான ஒரு குறிப்பிட்ட உள்ளூர்சபையில் இணைந்து அதற்குள் இருந்து விசுவாசத்தோடு வாழத் தன்னை ஒப்புக்கொடுப்பது. அந்த சபையைப் பற்றி அந்த விசுவாசி நன்றாகத் தெரிந்துகொள்ளவும், அந்த சபை அந்த விசுவாசியைப் பற்றியும் அவனுடைய விசுவாசத்தைப் பற்றியும் நன்றாகத் தெரிந்துகொண்டு உள்ளே அனுமதிக்கவும் அங்கத்துவ விண்ணப்பமும், அங்கத்துவ வகுப்புகளும் அவசியமாகின்றன. உலகத்தில் இல்லாததொன்றை இந்த விஷயத்தில் சபை செய்யவில்லை. ஒரு கிளப்பிலோ ஜிம்மிலோ இணைவதற்குக்கூட இதையெல்லாம்விட கட்டுப்பாடுகள் இன்று உண்டு. எவரையும் சும்மா உள்ளே விட்டுவிடமாட்டார்கள். ஒரு மனிதன் உண்மையான விசுவாசியா என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு அவன் வேதத்திற்குக் கட்டுப்பட்டு வாழத் தீர்மானித்து அதை வார்த்தையால் வெளிப்படையாக மூப்பர்களுக்குத் தெரிவிப்பதற்கு வசதியாகவே சபைகள் அங்கத்துவ வகுப்புகளை நடத்துகின்றன. அங்கத்துவ வகுப்புகளில் கலந்துகொள்ளும்போது ஒரு விசுவாசி சபை பற்றியும், சபை வாழ்க்கை பற்றியும் தெளிவாகத் தெரிந்துகொண்டு அந்தச் சபையில் இணைவதற்கான தீர்மானத்தை அறிவுபூர்வமாக எடுக்க வசதியாக இருக்கும். அங்கத்துவ அமைப்பும், வகுப்புகளும் இல்லாமல் சபை என்ற பெயரில் இருந்துவருகின்ற குழுக்களில் எல்லாம் கர்த்தர் எதிர்பார்க்கின்ற ஒழுங்கைக் காணமுடியாது. ஆவிக்குரியவர்கள் ஒழுங்கில்லாமல் இருக்கவேண்டும் என்று வேதம் எங்கே சொல்லுகிறது? இது தெரிந்திருந்தும் அநேகர் இந்த விஷயத்தில் ஒழுங்கில்லாது நடந்துவருகிறார்கள். சரியான அங்கத்துவ அமைப்பு இல்லாதிருந்தால் போதகக் கண்காணிப்பை மூப்பர்கள் வேதபூர்வமாக செய்வதென்பது முடியாத காரியம். போதகக் கண்காணிப்புக்கு ஒருவன் தன்னை ஒப்புக்கொடுத்தால் மட்டுமே அதை ஒரு மூப்பனால் அவனுக்கு கொடுக்க முடியும். வலியப்போய் வற்புறுத்தி, அடங்கமாட்டேன் என்கிறவனுக்கு போதக கண்காணிப்பை வழங்க முடியாது. அதற்குக் கீழ்ப்படிந்து தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறவர்களுக்கே அதன் அருமை தெரியும்; அதன் பலனையும் அவர்கள் நிதர்சனமாக அடைவார்கள்.

சபை அங்கத்துவம் வேதபூர்வமானதா?

ரையன் மெக்ரோவும் ரையன் ஸ்பெக்கும் எழுதியிருக்கும் இந்தக் கையடக்கமான 31 பக்கங்கள் கொண்ட நூல் புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை. சபை அங்கத்துவத்திற்கான நியாயங்களை இது வேதபூர்வமாக நம்முன் வைக்கின்றது. சபை அங்கத்துவம் அவசியமில்லை என்று சொல்லுகிறவர்களுடைய வாதத்திலிருக்கும் தவறுகளையும் இது சுட்டுகிறது. இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் எதிலும் எனக்கு எதிர்மறைக் கருத்து இல்லை. இது அவசியமான நூலாக இருந்தாலும் ஜொனத்தன் லீமென்னின் நூலின் பயன் இதைவிட மேலானதாக எனக்குத் தெரிகிறது. உண்மையில் திருச்சபை பற்றியும், திருச்சபை அங்கத்துவம், ஒழுங்கு நடவடிக்கை, மூப்பர்களின் கண்காணிப்பு, சபைக்கூட்டங்கள் நடத்த வேண்டிய முறை, சபை அங்கத்தவர்களின் பொறுப்புக்கள் ஆகியவை பற்றி நடைமுறைக்குத் தகுந்த முறையில், ஏற்கனவே அரைத்த மாவை அரைத்துக்கொண்டிராமல் நூல்கள் வரவேண்டிய அவசியம் இன்றிருக்கிறது. எந்தளவுக்கு தற்கால பின்நவீனத்துவ பாதிப்புக்குள்ளாகியிருக்கும் கிறிஸ்தவர்கள் சபையையும், சபை அமைப்பையும், அங்கத்துவத்தையும் நிராகரிக்கிறார்களோ அந்தளவுக்கு அவற்றின் தவிர்க்க முடியாத அவசியம் பற்றிய நல்ல நூல்கள் பெருகவேண்டும்.

நம்மினத்து கிறிஸ்தவத்தையும், அதிலிருக்கும் திருச்சபைகளையும் முப்பத்தாறு வருடங்களாகக் கவனித்து வருகிறேன். கூடில்லாக் குருவிகளாகப் புற்றீசல்போல் மலிந்து காணப்படும் என். ஜி. ஓக்கள் போன்ற ‘இயேசுவுக்காக வாலிபர்கள்’ மற்றும் அதுபோன்ற கிறிஸ்தவ நிறுவனங்கள் எண்பதுகளிலேயே திருச்சபைக்கு பேராபத்தாக இருந்து வாலிபர்களை வளைத்திழுத்துப் பயன்படுத்திக்கொள்ளுகிற போக்கைக் கவனித்திருக்கிறேன். எந்தெந்த திருச்சபை அமைப்பு தங்களுக்குப் பணத்தைக்கொடுத்து ஆதரிக்கின்றனவோ, தங்களைப் பயன்படுத்திக்கொள்ளுகின்றனவோ அவற்றில் இணைந்து ஆராதனை செய்யும்படி இந்த வாலிபர்களை இந்த நிறுவனங்கள் வற்புறுத்துகின்றன. தங்களுடைய சொந்த நோக்கங்களுக்காக சபைகளைப் பயன்படுத்திக்கொள்ளுவதே இந்த நிறுவனங்களின் பொது நோக்கம். இவை இன்றும் சபைக்கு ஆபத்தானவைகளாகவே இருந்துவருகின்றன. இவை ஒருபுறமிருக்க, தனிமனிதனொருவன் தான் ஊழிய அழைப்பைப் பெற்றிருக்கிறேன் என்று தீர்மானித்து, தன்னைப் பாஸ்டராகத் தானே அறிவித்து, சுவிசேஷத்தைப் பத்துப்பேருக்கு சொல்லி எந்த சபைத்தொடர்பும் இல்லாமல் ஒரு சிறுகூட்டத்தை சேர்த்து எந்தவித சபை அமைப்பு, முறையான அங்கத்துவம், சபை சட்டவிதிகள், விசுவாச அறிக்கை என்று ஒன்றுமேயில்லாமல் சபை என்ற பெயரில் அதை நடத்திவருவதே தமிழினம் முழுவதிலும் பரந்து பரவிக் காணப்படுகின்ற கிறிஸ்தவ ஊழியமாக இன்றும் தொடருகின்றது. இதற்கு வெளியில் இருப்பவை வேதத்திற்கு சமாதி கட்டிவிட்டு பாரம்பரியத்திற்கு மகுடி ஊதிக்கொண்டிருக்கும் பாரம்பரிய திருச்சபைகள்.

பக்திவிருத்தியோ, வேத உணர்வோ, வேத வைராக்கியமோ இல்லாத நம்மினத்து மோசமான கிறிஸ்தவ சூழ்நிலையில் சுவிசேஷத்தை மட்டும் சொல்லுவதோடு நின்றுவிட முடியாது. சுவிசேஷத்தைச் சொல்லி ஒருவன் கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது அவனைத் தொடர்ந்து என்ன செய்வது? விசுவாசி, விசுவாசத்தில் நிலைத்திருந்து கிறிஸ்து கட்டளையிட்டுப் போதித்திருக்கும் கடமைகளை வாழ்க்கையில் பின்பற்றி வளரத்தானே சபை நிறுவியிருக்கிறார். சுவிசேஷ ஊழியங்கள் அனைத்தின் இறுதி இலக்காக சபை இருக்கவேண்டுமே. திருச்சபையை மனதில் கொண்டு செய்யப்படாத சுவிசேஷப்பணி கிறிஸ்துவை ஒருநாளும் மகிமைப்படுத்த முடியாது. மத்தேயு 28:18-20 வரையுள்ள வசனங்களில் கிறிஸ்து சுவிசேஷத்தை மட்டும் சொல்லுங்கள் என்று அப்போஸ்தலர்களை அனுப்பிவைக்கவில்லை; அவர்கள் சபையை நிறுவவேண்டும் என்பதே அந்தக் கட்டளையின் நோக்கமாக இருந்தது. கால சூழ்நிலை வசதியாக இல்லை என்பதற்காக வேதம் வலியுறுத்திப் போதிக்கும் திருச்சபையின் அவசியத்தைப் பற்றி நாம் பேசாமலும், எழுதாமலும், பிரசங்கிக்காமலும் இருக்கமுடியாது. கிறிஸ்து நேசிக்கும் திருச்சபைக்குக் கட்டுப்பட்டு அதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து ஒருவன் வாழவேண்டுமென்பதற்காகத்தான் ஒரு பாவிக்கு நாம் சுவிசேஷத்தை சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த நோக்கத்தைக் கொண்டிருக்காத சுவிசேஷம் எத்தகைய சுவிசேஷமாக இருக்கும்? திருச்சபையில் இருந்து வாழுவதற்குரிய தகுதிகளைக் கொடுக்காத மனந்திரும்புதல் எப்படி மெய்யான மனந்திரும்புதலாக இருக்க முடியும்? கிறிஸ்துவை நேசிக்கின்ற ஒருவனுக்கு திருச்சபையை நேசித்து அதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து வாழமுடியவில்லை என்றால் அவனுடைய நேசம் வெறும் சுயநலமும், மாய்மாலமும் மட்டுமே. ஒரு பெண்ணை விரும்புகிறேன், அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்கிற ஒருவன் கணவனாக அந்தப் பெண்ணோடு குடும்பம் நடத்தத் தயாரில்லை என்றால் ஒத்துக்கொள்ளுவீர்களா?

சபையை நேசிக்காத, அதற்கு மதிப்புக்கொடுக்காத ஒருவனைத் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்று வைராக்கியத்தோடு இருபது வருடங்களுக்கு முன் பேசியிருக்கிறேன். அது வெறும் வார்த்தை ஜாலமல்ல; ஆணவ வார்த்தைகளும் அல்ல; மற்றவர்கள் மேல் அன்பில்லாததனாலும் சொல்லப்பட்டவையல்ல. திருச்சபையைப் பற்றி நம்மவர்கள் சிந்திக்கவேண்டும், கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு தாங்கள் நேசிப்பதாகக் கூறும் கிறிஸ்துவின் அன்பு மனைவியை அலட்சியப்படுத்தி, அவளை ஒருபொருட்டாகக்கூட எண்ணாமல் வாழ்கிறார்களே என்ற ஆதங்கத்தாலும், வைராக்கியத்தாலும் சொல்லப்பட்ட வார்த்தைகள். இன்று அந்த வார்த்தைகளை நான் அடிக்கடி பயன்படுத்தாவிட்டாலும் சபை பற்றிய என் வைராக்கியம் அன்றுபோல் இன்றும் அப்படியேதான் இருக்கிறது. சபையும், சபை அமைப்பும், சபை அங்கத்தவமும் இன்று தவிர்க்கமுடியாத தேவைகளாக இருக்கின்றன. கிறிஸ்து மீண்டும் வரப்போவது தன்னுடைய சபைக்காக. அந்த சபைக்கு ஒப்புக்கொடுத்து வாழாத ஒருவன் அவருடைய வருகையை எப்படி எதிர்பார்த்து வாழமுடியும்?

 

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.