திருமறைத்தீபம் 2026 -ம் ஆண்டு மூன்றாம் இதழ்
1. இவ்விதழ் பற்றி . . .
2. நானறிந்த அல்பர்ட் நியூட்டன் மார்டின்
3. நினைவஞ்சலி பிரசங்கம்
4. என் வழிகாட்டியாகிய நண்பரைப் பற்றிய மறக்கமுடியாத நினைவுகள்
5. பேர்கின்ஸை நினைவுறுத்தும் அல்பர்ட் என். மார்டின்
6. அல்பர்ட் நியூட்டன் மார்டின்: கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியரின் வாழ்க்கை வரலாறு
“அல் மார்டின் (Al Martin) அங்கு வருவதாக இருந்தால், எனக்கு ஒதுக்கிய மூன்று மாலைக் கூட்டங்களையும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் கேள்விப்பட்ட பிரசங்கியார்களிலேயே அவர் மிகவும் திறமையான மற்றும் உள்ளத்தைத் தொடும் மிகச்சிறந்த பிரசங்கியாராவார். சமீபத்திய ஆண்டுகளில் அவருக்கு நிகரான ஒருவரை நான் கேட்டதில்லை. பிரசங்கியார்களைப் பற்றிய எனது நினைவு அறுபது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறது. எனவே, அவர் மிகவும் திறமையானவர்களில் ஒருவர் என்று நான் கூறும்போது, அது கடந்த கால மற்றும் நிகழ்காலத்தின் மிகவும் மறக்க முடியாத பிரசங்கியார்களை உள்ளடக்கிய ஒரு மதிப்பீடாகும்.”
பேராசிரியர் ஜோன் மரே
“ஒரு ஊழியக்காரனின் வாழ்க்கையே அவனது ஊழியத்தின் வாழ்க்கை.”
அல்பர்ட் என். மார்டின்
இவ்விதழ் பற்றி . . .
வழமைக்கு மாறாக இத்திருமறைத்தீப இதழ் நான் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கும் மிக முக்கியமான ஒரு தேவ மனிதருக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. அவரைப் பற்றிப் பலதடவைகள் இவ்விதழில் நான் எழுதியிருக்கிறேன்; அவருடைய ஆக்கங்களையும் இதில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறேன். அவர்தான் ஏப்ரல் 7ம் தேதி 2026ல் இறைபதத்தை அடைந்திருக்கும், அவருடைய நண்பர்களால் அன்போடு ‘போதகர் மார்டின்’ என்று அழைக்கப்பட்ட அல்பர்ட் நியூட்டன் மார்டின்.
போதகர் மார்டின் நியூஜேர்சி மாநிலத்திலுள்ள மொன்ட்வில் நகரில், திரித்துவ பாப்திஸ்து சபையில் நாற்பத்தி ஆறு வருடங்கள் விசுவாசமிக்க நீண்ட போதகப் பணிபுரிந்து 2008ல் ஓய்வெடுத்தார். நம் காலத்தில் தலைசிறந்த சீர்திருத்த பிரசங்கி என்ற பெயரைப் பெற்ற இணையற்ற பிரசங்கியாக, போதகராக இருந்தவர் அல்பர்ட் என். மார்டின்.
அவருக்கான இந்தத் திருமறைத்தீப நினைவஞ்சலி மலரை அவருடைய வளர்ப்பு மகனாகிய, திரித்துவ பாப்திஸ்து சபையின் போதகர்களில் ஒருவரான டேவிட் சான்ஸ்கியும், போதகர் மார்டினுக்கு நன்கு அறிமுகமான என் அருமை நண்பர்களான போதகர்கள் மிச் லஷ்சும், ஸ்கொட் மெட்டோஸும், வொரன் பீலும் தங்களுடைய
அஞ்சலிகளால் அலங்கரிக்கிறார்கள்.
போதகர் டேவிட் சான்ஸ்கி அல்பர்ட் என். மார்டின் அவர்களின் நிவைவஞ்சலி ஆராதனையில் அளித்த பிரசங்கம் இதில் வந்திருக்கிறது. கடைசி நேரத்தில் நான் போதகர் மிச் லஷ்சை அணுகியபோதும் அவர் தயக்கம் காட்டாமல் தன்னுடைய அஞ்சலியை அனுப்பி வைத்தார். அதேபோல் ஏனைய இரு நண்பர்களும் தங்களுடைய அஞ்சலிகளை அனுப்பிவைத்தனர். இவற்றோடு என்னுடைய தனிப்பட்ட அஞ்சலியும் இந்த மலரில் வந்திருக்கிறது.
இதைத் தவிர போதகர் மார்டினோடு தொடர்புடைய ஏனைய பலருடைய அஞ்சலிகளோடு ஒரு விசேஷ நினைவஞ்சலி மலரைப் படங்களோடு 120 பக்கங்களுக்கு றிளிஞியில் கலரில் தயாரித்து சிறப்பு மலராக வெளியிட்டிருக்கிறோம். அது தேவையானவர்கள் சீர்திருத்த வெளியீடுகளோடு தொடர்புகொண்டு, அதற்குரிய பணத்தையும், தபால் செலவையும் அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
திருச்சபையின் மெய்த்தலைவனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு வாழ்நாள் முழுதும் விசுவாசமாக உழைத்துப் பணிசெய்திருக்கும் உத்தம மனிதரான அல்பர்ட் என். மார்டின் அவர்களின் நினைவு மலராக வெளிவரும் இவ்விதழ் உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக அமைய கர்த்தர் இதைப் பயன்படுத்தட்டும்.
நானறிந்த அல்பர்ட் நியூட்டன் மார்டின்
ஆர். பாலா, போதகர், சவரின் கிறேஸ் (சீர்திருத்த பாப்திஸ்து) சபை, நியூசிலாந்து
ஆரம்ப ஆறிமுகம்
அல்பர்ட் என். மார்டினின் பெயரை நான் கேள்விப்பட்டது 1980ம் ஆண்டில். வாலிப வயதில் இறையியல் கல்லூரியொன்றில் படித்துக் கொண்டிருந்தபோது என் ஆரம்பகாலப் போதகர் இரண்டு கெசட் ஒலி நாடாக்களை எனக்குத் தந்தார். அவை இரண்டும் போதகர் மார்டினின் கிறிஸ்துவின் தெய்வீக, மானுடத் தன்மைகளை விளக்கிப் பிரசங்கித்திருந்த செய்திகளைக் கொண்டிருந்தன. அதுவே போதகர் மார்டினுடைய பிரசங்க ஊழியத்தின் என் முதல் அனுபவம். அவற்றைக் கேட்டு நான் அதிர்ந்து போயிருந்தேன். ஏனெனில், அவருடைய அதிரடியான குரலுக்கு மந்திரத்தால் கட்டுப்பட்டதுபோன்ற உணர்வடைந்தது மட்டுமல்ல, சத்தியம் எத்தனை வல்லமையானது, உண்மையானது என்பதையும் அவருடைய அசையாத வேத நம்பிக்கையை வெளிப்படுத்தும் அந்தப் பிரசங்கங்களிலிருந்து நான் அறிந்துகொண்டேன்.
அடுத்து வரப்போகின்ற மூன்று வருடங்களுக்குள் அவரை நான் நேரடியாக சந்திக்கப்போகிறேன் என்பதைக் கனவிலும் நினைத்திருக்கவில்லை. வேல்ஸ் நாட்டில் தென் வேல்ஸ் இறையியல் கல்லூரியில் இறையியல் கற்க நான் 1983ல் என் குடும்பத்தோடு போயிருந்தேன். அடுத்த வருடமே போதகர் மார்டின் பேனர் ஆஃப் டுரூத் கிறிஸ்தவ மகாநாட்டில் பிரசங்கமளிக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு என் கல்லூரி அதிபரிடம் அனுமதி பெற்று, இரண்டு நண்பர்களோடும், என் விரிவுரையாளரான ஜோன் குக் அவர்களோடும் காரில் லெஸ்டர் நகரில் நடந்த அந்த மகாநாட்டிற்குப் போனேன். அப்போது எனக்கு முதல் தடவையாக முதுகு வலி வந்திருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் போதகர் மார்டினை சந்திக்கும், அவருடைய பிரசங்கத்தைக் கேட்கும் ஆவலால் நீண்ட பிரயாணத்தை மேற்கொண்டேன்.
அந்த மகாநாட்டில் போதகர் மார்டின் இரண்டு செய்திகளை தீத்து நிருபத்தின் முதலாம் வசனத்திலிருந்து தந்தார். அதுவே முதன்முறையாக நான் அல்பர்ட் என். மார்டின் அவர்களின் பிரசங்கத்தை நேரடியாகக் கேட்ட அனுபவம். அந்தப் பிரசங்கத்தில் கூடியிருந்த கூட்டம் மூழ்கித் திளைத்துப் போயிருந்தது. அத்தகைய வல்லமையான, மனித பயமே அறியாத, வேதவார்த்தைக்கு மட்டுமே கட்டுப்பட்ட, ஆவியின் அனுக்கிரகத்தை முழுமையாகக் கொண்டிருந்த, இருதயத்தைப் பிளக்கும் நடைமுறைப் பயன்பாடுகளோடு கூடிய உயர்தரமான வியாக்கியானப் பிரசங்கத்தை அதுவரை நான் கேட்டிருக்கவில்லை. அற்புதமான அந்தப் பிரசங்கங்கள் என்னுள் அநேக காலம் நிலைத்திருந்தன. அல்பர்ட் என். மார்டின் ஏனைய தரமான நல்ல பிரசங்கிகளுக்கெல்லாம் முன்னோடியாக மிக உயரத்தில் என் கண் முன் அன்று நின்றிருந்தார்.
பிரசங்கம் முடிந்து தேநீர் அருந்தப்போன வேளையில் என் தோளில் எவரோ கையை வைப்பதை நான் உணர்ந்தேன். யார் என்று பார்க்கத் திரும்பியபோது அல்பர்ட் என். மார்டின் என் பெயரைச் சொல்லி எப்படி இருக்கிறீர்கள், என்று கேட்டார். இவருக்கு எப்படி என் பெயர் தெரிந்தது? என்று மனம் அலைமோதிக் கொண்டிருந்தது. யாரிடமோ என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்திருப்பார் என்று எண்ணிக்கொண்டேன். ஐந்து நிமிடம் அன்று அவர் என்னோடு உரையாடினார். அதுவே எங்களுடைய நேரடித் தொடர்பின் ஆரம்பமாக இருந்து, எங்களை சக ஊழியர்களாக, நல்ல நண்பர்களாக அதற்கும் மேலாக என் நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாக ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குக் கர்த்தரின் திருச்சபைப் பணியில் இணைக்கப் போகின்றது என்பது எங்கள் இருவருக்குமே தெரிந்திருக்கவில்லை. நான் மறுபடியும் அடுத்த வருடமும் (1985) அவரை லெஸ்டரில் சந்தித்தேன். அதற்குப் பிறகு தென் வேல்ஸில் இறையியல் பயிற்சி முடிந்து சொந்த நாடு திரும்பினேன்.
நியூசிலாந்து வந்தபின்
கர்த்தருடைய பராமரிப்பின் வழிநடத்துதலால் 1986ல் நியூசிலாந்து நாட்டிற்கு குடியேற வந்தேன். அன்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை, நான் அடுத்த வருடமே அல்பர்ட் என். மார்டினை மீண்டும் சந்திக்கப்போகிறேன் என்று. நான் நியூசிலாந்தில் குடியேறியது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு ஒரு சபை நடத்திய மகாநாட்டில் பேசுவதற்காக வந்திருந்தார். அதில் கலந்துகொள்ள எனக்கும் அழைப்பு வந்தது. அந்த சபையின் மூப்பர்களில் ஒருவர் நான் தென் வேல்சில் இருந்த காலத்தில் அங்கே வேறொரு கல்லூரியில் இறையியல் கற்க வந்திருந்தார். அந்தவகையில் எங்களுக்கிடையில் நட்பு ஏற்பட்டிருந்தது. என்னை சிட்னியில் சந்தித்தது போதகர் மார்டினுக்குப் பெரிய ஆச்சரியமளித்தது. சுருக்கமாக நடந்தவைகளை அவருக்கு விளக்கினேன்.
நான் மறுபடியும் அல்பர்ட் என். மார்டினை அடுத்தடுத்து இரண்டு வருடங்களுக்கு சிட்னியில் சந்தித்தேன். எங்கள் சம்பாஷனையும், உறவும் சிறிது சிறிதாக மேலும் வளர்ந்தது. எங்கள் சபைகளுக்கிடையிலும் நட்பு வளர்ந்தது. நியூசிலாந்தில் எங்கள் சபை மகாநாட்டில் பிரசங்கம் செய்ய நான் அவருக்கு அழைப்புக் கொடுத்தேன். பல வேலைகளுக்கு மத்தியில் அவரால் வரமுடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், உடனடியாக வருவதற்கு ஒப்புக்கொண்டு ஆகஸ்டு மாதம் 1992ல் அல்பர்ட் என். மார்டின் ஆக்லாந்து நகரில் ஒரு வாரமிருந்து ஞாயிறு உட்பட நான்கு நாட்களுக்குப் பிரசங்கமளித்தார். அத்தகைய அதிரடியான, வல்லமையான சீர்திருத்த நெற்றியடிப் பிரசங்கங்களை நியூசிலாந்து நாட்டுக் கிறிஸ்தவர்கள் அதற்கு முன் கேட்டதில்லை. நான்கு நாட்களுக்கும் நல்ல கூட்டமிருந்தது. சத்திய ஆர்வமுள்ளவர்கள் அசையாது பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்தார்கள். அரைகுறை ஊழியம் செய்துகொண்டிருந்த போதகர்கள் தங்கள் நாற்காலிகளில் இருக்கமுடியாது நெளிந்தார்கள். அல்பர்ட் என். மார்டினின் பிரசங்கங்கள் அன்று பொதுவாக பிரசங்க மேடைகளில் கொடுக்கப்பட்ட சரீரத்தின் தோலைக்கூடத் தொடாத பிரசங்கங்களை விட வேறுபட்டதாக, யோவான் ஸ்நானனுடையதை நினைவுபடுத்துவதுபோல் இருந்தது.
போதகர் மார்டினின் நியூசிலாந்து வருகைக்குப் பின் அவரோடு இருந்த உறவு மிகவும் நெருக்கமானதாக, இணக்கமானதாக மேலும் வளர்ந்தது. அவ்வருகையின்போதுதான், ‘பாலா, நீங்கள் ஏன் போதகர்கள் மகாநாட்டுக்கு வருவதில்லை? என்று மார்டின் கேட்டார். அதுபற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நான் பதிலளித்தேன்; அதுதான் உண்மையுங்கூட. அந்த வருடமே அவர் எனக்கு அழைப்பிதழையும் விமான டிக்கட்டையும் அனுப்பி என்னை வரவழைத்துத் தன் சபை மக்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். அன்றிருந்து இன்றுவரை அந்த மகாநாட்டில் நான் கலந்துகொள்ளத் தவறியதில்லை. கர்த்தரின் வழிநடத்தலே அற்புதமானது. போதகர் மார்டின் என் நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாக (Mentor), நண்பராக இருந்த ஆசீர்வாதமான சுகமான அனுபவம் இந்த வருடம் அவர் இறைவனின் பாதத்தை அடையும் வரையில் தொடர்ந்தது. கர்த்தரின் கிருபைக்கு எல்லையே இல்லை.
மறுபடியும் நியூசிலாந்து வர அவருக்கு நான் 2000ங்களில் அழைப்புக்கொடுத்தேன். அவ்வேளையில் அவருடைய மனைவி மெரிலினுக்கு புற்றுநோய் சிகிச்சை இருந்ததால் குணமடைந்தபின் நிச்சயமாக வருவேன் என்று போதகர் மார்டின் சொன்னார். அவருக்கு நியூசிலாந்தின் கீவி பழம் (Kiwi fruit) அதிகம் பிடிக்கும். நியூசிலாந்து வருவது பற்றி மறுபடியும் என்னோடு ஆவலோடு பேசியிருக்கிறார். ஆனால், கர்த்தரின் திட்டம் வேறாக இருந்தது. மெரிலின் மார்டினின் மறைவின் பின்னர் அவரோடு நான் பேசியபோது, நியூசிலாந்து வருவது நடக்குமென்று தான் எண்ணவில்லை என்று அவர் சொன்னார். அந்த நீண்ட பயணத்தைச் செய்வதற்கு அவருடைய சரீர நிலையும் ஒத்துப்போகவில்லை என்பதை நான் உணர்ந்தேன். அல்பர்ட் நியூட்டன் மார்டின் இவ்வருடம் ஏப்ரல் 7ம் தேதி, தனது 92ம் வயது ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன் இறைவனின் சந்நிதானத்தை அடைந்தார்.
அல்பர்ட் என். மார்டின் அவர்களில் நான் அவதானித்ததென்ன? அவர் என் வாழ்க்கையிலும், ஊழியப்பணியிலும் முக்கிய பங்கு வகித்ததற்கான காரணங்கள் யாவை?
- நட்புக்கும், உறவுக்கும் மதிப்புக்கொடுத்த சிறந்த கிறிஸ்தவ மனிதர்
போதகர் மார்டின் ஒரு முறை சொன்னார், “உறவை இலகுவாக அழிப்பதற்கான வழி அதை உதாசீனப்படுத்துவதுதான்” என்று. எத்தனை உண்மை. உதட்டளவில் உறவு வைத்திருப்பதை வாழ்க்கையில் அறியாதவர் அவர். போதகர் மார்டின் தலை சிறந்த பெயர் பெற்ற பிரசங்கி; சீர்திருத்த பிரசங்கிகளுக்கெல்லாம் முன்னோடி. ஆழமான, வேதவியாக்கியான, பகுத்து விளக்கும் பயன்பாட்டுப் பிரசங்கத்திற்கு தன் காலத்தில் உதாரண புருஷனாக இருந்தார். சிறந்த இறையியல் அறிஞர். போதகர்ளுக்கெல்லாம் போதகர் என்று சொல்லக்கூடியளவுக்கு சக சீர்திருத்தப் போதகர்களால் மதிக்கப்பட்டவர்.
இத்தனை மதிப்பும், மரியாதையும் பெற்றவராயிருந்தும் அவர், எந்தவித வேறுபாடும் காட்டாமல் எவரோடும் சமமாகப் பேசிப்பழகுவதை வழமையாகக் கொண்டிருந்தார். உயர்வு தாழ்வு என்பதற்கு அவர் இருதயத்தில் இடங்கொடுத்ததில்லை. மெய்யான கிறிஸ்தவ சகோதர உறவை எல்லோருடனும் கொண்டிருந்தார். அவருக்கு மிகமிக நெருக்கமான சில நண்பர்கள் இருந்திருந்தாலும், ஏனைய நண்பர்களை அவர் ஒருக்காலும் உதாசீனப்படுத்தியதில்லை.
தொலைதூரத்தில் நியூசிலாந்தில் நான் இருந்ததால் என்னால் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அவரை சந்திக்க முடிந்தது. அவ்வாறு அமெரிக்க பயணம் போனபோது, எத்தனை வேலைகள் இருந்தபோதும் என்னை சந்திக்கவும், உறவாடவும் அவர் நேரம் ஒதுக்க மறந்ததில்லை; மறுத்ததில்லை. கர்த்தரின் பணியில் எனக்கும் நெருக்கமான போதகர்களாகிய நல்ல சில நண்பர்கள் இருந்தபோதும், அல்பர்ட் என். மார்டின் அவர்களே என்னுடைய நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாக இருந்தார். திருச்சபை ஊழியத்தில் போதகர்கள் இக்கட்டான நிலமைகளை சந்திப்பது இயற்கை. அத்தகைய நேரங்களிலெல்லாம் (அவை மிகக் குறைவானவையே) நான் போதகர் மார்டினின் ஆலோசனையையே அணுகியிருக்கிறேன். எப்போது அவருக்கு நான் மின் அஞ்சல் அனுப்பினாலும் அடுத்த நாளே பதில் வந்துவிடும். அவசியமான நேரங்களில் தொலைபேசியில் ஆலோசனை தந்திருக்கிறார்; என்னோடு ஜெபித்திருக்கிறார். பிரச்சனை தீரும்வரை அவர் தொடர்பிலிருந்து ஜெபித்து ஆலோசனை தந்திருக்கிறார். ஒரு தடவை ஒரு பிரச்சனை பற்றிய கூட்டம் நண்பர்களோடு நடந்தது. அது முடிந்த பிறகு போதகர் மார்டினை நான் சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் மிச்சிகனில் இருந்து அவருடைய வளர்ப்பு மகனின் வீட்டுக்கு வந்திருந்தார். ஆர்வத்தோடு அவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு கூட்டம் எப்படி நடந்தது என்று அன்போடு விசாரித்தார். அவருடைய அன்பும் அக்கறையும் அத்தனை உண்மையானவை; நான் மனம் சிலிர்த்துப் போனேன்.
போதகர் மார்டின் புறம்பேசுவதை விரும்புவதில்லை; தானும் பேசியதில்லை. தன் நண்பர்களைப் பற்றியோ வேறு எவரைப் பற்றியோ எவராவது பேச வந்தால் அதை உடனடியாகத் தடுத்து நிறுத்திவிடுவார். அவரே ஒருமுறை என்னைப் பார்த்து, “பாலா, உங்களைப் பற்றி எவரும் என்னிடம் வந்து எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களைப் பற்றி எதையும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் என் தொலைபேசியைப் பயன்படுத்தி நேரடியாக உங்களைக் கூப்பிட என்னால் முடியும். நிச்சயம் என் விஷயத்திலும் நீங்கள் அப்படித்தான் நடந்துகொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்று சொன்னார். அந்தளவுக்குத் தன் நண்பர்களிடமும், சபை மக்களிடமும் அன்போடும், விசுவாசத்தோடும், நட்போடும் நடந்துகொண்டார் போதகர் மார்டின்.
தன் ஊழியப் பணிக்காலத்தில் பெரும் சவால்களுக்கும், சத்தியப் போராட்டங்களுக்கும் முகங்கொடுத்திருக்கிறார் போதகர் மார்டின். “நாம் விசுவாசிக்கும் சத்தியங்களை நாம் இரத்தம் சிந்தி அடைந்திருக்கிறோம்” என்று அவர் சொல்லுவது வழக்கம். அதாவது பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் அவற்றைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்று அதற்குப் பொருள். அத்தகைய அனுபவத்தை அவர் பெற்றிருந்ததால் சக ஊழியர்களுடைய போராட்டங்களை இனங்கண்டு அவர்களுக்குத் துணை நிற்கவும், உதவவும் அவரால் முடிந்திருக்கிறது. என் விஷயத்தில் நான் அதை அனுபவபூர்வமாக பல தடவைகள் உணர்ந்திருக்கிறேன். போதகர் மார்டின் எனக்கு, மோசேயின் கைகளைத் தாங்கிய ஆரோனையும், ஊரையும் போல உறுதுணையாக இருந்திருக்கிறார்.
ஒரு தடவை மிச்சிகன் மாநிலத்தில் கிரேன்ட் ரெபிட்ஸில் ஒரு சபையில் பிரசங்கிப்பதற்காகச் சென்றிருந்தேன். அப்போது அல்பர்ட் என். மார்டின் நியூஜேர்சியில் இருந்து மிச்சிகனுக்குத் தன்னுடைய மனைவியோடு குடியேறியிருந்தார். அது எனக்குத் தெரிந்திருந்தபோதும், அடுத்த வாரமே அவரை நியூஜேர்சியில் சந்திக்க இருந்ததால் என்னுடைய கிரேன்ட் ரெபிட்ஸ் வருகையை நான் அவருக்குத் தெரிவிக்கவில்லை. அங்கிருந்த ஒரு கிறிஸ்தவ புத்தகசாலைக்கு நான் போயிருந்தபோது அங்கேயிருந்த ஒருவர், நான் யார் என்பதை அறிந்தவுடன் உடனடியாக என் வருகையைப் போதகர் மார்டினிற்குத் தெரிவித்திருந்தார். அது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என் வேலை முடிந்து நான் தங்கியிருந்த போதக நண்பரின் வீட்டிற்குப் போனபோது, அவர், அல்பர்ட் என். மார்டின் உடனடியாகத் தன்வீட்டுக்கு உங்களை வரும்படி அழைத்திருக்கிறார் என்று கூறினார். நானும் உடனே போய் அவரையும் அவருடைய மனைவி டொரத்தியையும் சந்தித்து ஒரு மணிநேரம் உரையாடி மகிழ்ந்தோம். இறுதியில் போதகர் மார்டின் என் இரு கரங்களையும் தன் கைகளில் பிடித்துக்கொண்டு ஜெபித்து வழியனுப்பினார். இது போதகர் மார்டின் எத்தகையவர் என்பதற்கு உதாரணம். நட்பையும், உறவையும் கொச்சைப்படுத்துவது என்பது அவருடைய அகராதியில் இருக்கவில்லை. நட்பை அத்தனை முக்கியமானதாக எடுத்துக்கொள்ளும் வேறு எவரையும் நான் இதுவரை கண்டதில்லை.
போதகர் மார்டின் நண்பர்களில் அதிக நேசம் வைத்திருந்தார்; அவர்களில் நம்பிக்கை வைத்திருந்தார். சிலர் அதைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தனிப்பட்ட விதத்தில் என்னை நம்பி அவர் சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்; ஆலோசனைகளையும் தந்திருக்கிறார். பலவீனமானவர்களின் கையில் அத்தகைய விஷயங்கள் அவருக்குப் பெரும் ஆபத்தை விளைவித்திருக்கும். அல்பர்ட் என். மார்டினும் சாதாரண மனிதரே; அவர் பூரணமானவராக இருக்கவில்லை. இருந்தபோதும் அவர் மெய்யான தேவமனிதர். அவருக்கு நடிக்கத் தெரிந்திருக்கவில்லை. உள்ளத்தில் கபடமில்லாமல் நட்பை மதித்து நம்பிய மானுடம் அவருடையது.
சில வருடங்களுக்கு முன் அவர் நடமாடக்கூடிய நல்ல நிலையில் இருந்தபோது நியூஜேர்சியில் அவருடைய சபையில் அவரோடு உரையாடிக் கொண்டிருந்த வேளையில், “நம்முடைய உறவு கர்த்தரின் கிருபையால் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்குத் தொடர்ந்திருக்கிறது தெரியுமா?” என்று நினைவுபடுத்தினார். அத்தனை காலம் உறவிருந்திருக்கிறது என்பதை அப்போதுதான் நான் எண்ணிப் பார்த்தேன். அதையும்விட அதை எத்தனை முக்கியமானதாக அவர் கணித்து எண்ணிப்பார்த்திருக்கிறார் என்பது என்னை மனம் நெகிழ வைத்தது. அவர் எனக்கு நல்ல நண்பராக, வழிகாட்டியாக இருந்திருக்கிறார் என்பது என்னுடைய ஆசீர்வாதம். இருந்தபோதும் அதை நான் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தவோ, அதை வைத்து என்னைப் பெருமைப்படுத்திக் கொள்வதற்காகவோ முனைந்ததில்லை.
பல வருடங்களுக்கு முன் அவருடைய எழுத்துக்களை நான் தமிழில் வெளியிட விரும்புகிறேன்; பலரும் பயனடைவார்கள் என்று அனுமதி கேட்டேன். சட்டென்று அவர், “உங்களை நான் முழுதும் நம்புகிறேன். எதை வேண்டுமானாலும் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு என் அனுமதியை நீங்கள் கேட்கத் தேவையில்லை” என்று கூறினார். என் ஊழிய வாழ்க்கையில் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுக்க வேண்டிய ஒரு கட்டம் வந்தது. போதகர் மார்டினிடம் அதுபற்றி ஆலோசனை கேட்டேன். அவரிடம் கேட்டதற்குக் காரணம் என் எண்ணங்கள் சரியாகத்தான் இருக்கின்றனவா என்பதைத் தீர்மானித்துக்கொள்ளத்தான். அதைக் கேட்டவுடன் அவர், ‘இதற்கு நான் பக்கபலமாக இருந்து என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்யத் தயாராக இருக்கிறேன்’ என்றார். உண்மையில் கர்த்தரின் பராமரிப்பின்படி நான் அந்தத் திட்டத்தைத் தொடரவில்லை. இருந்தபோதும் போதகர் மார்டினின் அன்பும் ஆதரவும் என்னை நெகிழ வைத்தது.
போதகப் பணியிலிருந்து ஒய்வெடுத்து, அதன் பின் தன் மனைவி டொரத்தியையும் இழந்து, வயோதிபர் விடுதியில் அவர் தங்க வேண்டிய நிலை வந்திருந்தபோது, அவரிருந்த நிலை பற்றி அதிகம் தெரியாமல் அவரோடு தொலைபேசியில் பேசுவதற்காக அவருடைய தொலைபேசி எண்ணை அவருடைய வளர்ப்பு மகனாகிய டேவிட் சான்ஸ்கியிடமிருந்து நான் பெற்றேன். அவருக்கு அப்போது காது கேட்கும் பிரச்சனை இருந்ததால் அதற்கான ஒரு விசேஷ கருவியை அவர் அணிந்திருந்தார். இருந்தும் என் குரலையும், பேச்சையும் அவரால் இனங்காண முடியவில்லை. அதனால் அவர் மனத்துன்பமடைந்ததை என்னால் உணர முடிந்தது. உடனே அவருக்கு என் அமெரிக்க பிரயாணம் பற்றியும், அவரைச் சந்திக்க விரும்புகிறேன் என்றும் செப்டம்பர் 2022ல் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தேன். அதற்கு உடனடியாக பதில் வரவில்லை. நியூஜேர்சியில் அவருடைய சபைக்குச் சென்றிருந்தபோது சபைச் செயலாளர் என் கையில் ஒரு நீண்ட அஞ்சல் கவரைத் தந்தார். அதைத் திறந்தபோது அது போதகர் மார்டினின் கடிதம் என்று அறிந்தேன். அதில் அவர் தன் நிலையை விளக்கி என் மின்னஞ்சலுக்குப் பதிலளிக்காததற்கான காரணத்தையும் விளக்கி, எப்போது சந்திக்கலாம் என்று ஒரு நாளையும் குறிப்பிட்டிருந்தார். தள்ளாத வயதில் வயோதிப விடுதியில் இருந்தபோதும், தன் கடமைகளை அவர் தொடர்ந்து செய்யத் தவறியதில்லை; நண்பர்களோடு உறவாடவோ, அவர்களுக்காக ஜெபிக்கவோ அவர் மறந்ததில்லை. அவர்கள் வாழ்க்கையிலும், அவர்களுடைய குடும்பத்திலும் அக்கறை காட்டவும் அவர் தவறியதில்லை.
அந்தக் கடிதம் இன்றும் என் படிப்பறையில் இருக்கிறது. அதை முடிக்கும்போது அதில் அவர், “நாமொவ்வொருவரும் மகிமையை தேவனுக்கு மட்டுமே செலுத்துவதில் மிகவும் வைராக்கியத்துடன் இருப்போமாக” என்று முடித்திருந்தார்.
நான் கடைசியாக, அக்டோபர் 2023ல் அவரைச் சந்திக்க மூன்று போதகர்களோடு சென்றிருந்தபோது, ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த போதகர் மார்டின் தளர்ந்த நிலையில் தலையைக் கீழே சாய்த்துக் குரலெடுத்துப் பேச முடியாதிருந்தார். நண்பர்களான ஏனைய மூன்று போதகர்களும் நானும் அன்று சங்கீதங்களைப் பாடி வேதத்தை வாசித்தோம். நடுவில் போதகர் மார்டின் தலையைத் தூக்காமலும் கண்களைத் திறக்காமலும் தானும் அதில் முடிந்தளவுக்குக் கலந்துகொண்டார். முடிந்த வேளையில் ‘உம்’ என்று மெதுவாக ஒலியெழுப்ப மட்டுமே அவரால் முடிந்தது. அவர் நாமிருப்பதை உணர்ந்து எதுவும் சொல்லப்போவதில்லை என்று உணர்ந்து கொண்டேன்.
நேரம் போய்க்கொண்டிருந்தபடியால் கடைசியாக என்னோடு வந்திருந்த போதகர் மிச் லஷ் அவரைப் பார்த்துச் சத்தமாக, உங்களைப் பார்ப்பதற்கு போதகர் பாலா நியூசிலாந்திலிருந்து வந்திருக்கிறார் என்று அறிவித்தார். அரை நிமிடத்திற்குப் பிறகு, மார்டின் அவர்கள் கஷ்டப்பட்டு சிறிது சிறிதாகத் தன் தலையை உயர்த்தி என்னை நோக்கிப் பார்த்து ஏதோ முணுமுணுத்தார். கூட இருந்தவர்கள் திகைத்துப் போனார்கள். அவர்களில் அவருடைய மருமகனும் ஒருவர். என்னை மட்டுமே அன்று அவர் அடையாளம் கண்டு கண்களைத் திறந்து தன்னால் முடிந்ததை சொல்ல முயன்றார். உடனே நான் பாய்ந்து அவர் பக்கத்தில் அமர்ந்து அவருடைய கைகளைப் பிடித்துக் கொண்டேன். போதகர் மார்டின், பாலா, நீங்கள் ஜெஃப் சிமித்தைப்போல இருக்கிறீர்கள் என்று நகைச்சுவையாக என் காதில் விழும்படிச் சொன்னார். ஜெஃப் சிமித் அவருடைய சக மூப்பராக திரித்துவ பாப்திஸ்து சபையில் பணியாற்றியவர்; தொடர்ந்தும் பணிபுரிந்து வருகிறார். ஜெஃப் சிமித்திற்கு தலை மயிர் துப்பரவாக வெள்ளை. என் தலை மயிரும் அப்படி மாறிவிட்டிருக்கிறது என்பதை நினைவுபடுத்தினார் போதகர் மார்டின். அந்தத் தள்ளாத பலவீனமான நிலையிலும் அவர் தன் நகைச்சுவையை இழக்கவில்லை.
ஒரு நிமிடம் மட்டுமே அவர் தலை உயர்ந்திருந்தது. அவருக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்கிறேன் என்று சொன்னேன். அதற்குப் பிறகு அவர் தன் தலையை முன்பிருந்ததுபோல் சாய்த்துக்கொண்டார். நான் வந்திருப்பதை அறிந்து எப்படியாவது ஒரு வார்த்தையாவது பேசிவிட வேண்டும் என்று அவர் பெருமுயற்சி செய்திருக்கிறார் என்பதை அங்கிருந்த எல்லோருமே உணர்ந்தோம். இது அல்பர்ட் என். மார்டின் குணத்தில் எப்படிப்பட்டவர் என்பதை விளக்க நல்ல உதாரணம் என்று நினைக்கிறேன். அவரைப் போன்ற மனிதநேயம் கொண்ட நட்புக்கு இலக்கணம் வகுத்த ஒரு மனிதரை இனி எப்போது பார்க்கப் போகிறேன்?
- வேதத்தை மதித்து, அதையே கர்த்தரின் வழியாகப் பயன்படுத்தி வாழ்ந்தவர்
வேதத்தைக் கர்த்தரின் சத்திய வார்த்தையாக மதித்து அன்றாடம் உழைத்துத் தியானித்து அதை மட்டுமே வழிகாட்டியாகக் கொண்டு அதிலிருந்து மட்டுமே பிரசங்கமளித்தவர் அல்பர்ட் என். மார்டின். ஜோன் பனியனின் உடலில் ஊசியால் குத்தினால் அதிலிருந்து வேதம் புறப்படும் என்று வாசித்திருக்கிறேன். அது போதகர் மார்டினுக்கும் பொருந்தும். கிறிஸ்தவ வாழ்க்கையிலும், திருச்சபைப் பணியிலும் எதுவாக இருந்தாலும், அதை ஏன் செய்யவேண்டும், அதுபற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்றே வாழ்நாள் முழுவதும் கேட்டு வேதத்தைப் பயன்படுத்தியே திருச்சபைப் பணி செய்திருக்கிறார் போதகர் மார்டின். இறையியல் பச்சோந்தித்தனத்திற்கு அவர் என்றுமே இடமளித்ததில்லை. வேதத்தைப் பொறுத்தவரையில், அது தீர்க்கமாகச் சொல்லுவதை உதறிவிட்டு மனித சிந்தனைக்கு ஒத்துப் போகின்ற எதையும் திருச்சபைப் பணியில் அவர் செய்ததில்லை. வேதத்தை அந்தளவுக்குப் பயன்படுத்தி, அதையே முன்வைத்து அவர் பிரசங்கித்துக் கிறிஸ்தவ வாழ்க்கையிலும், திருச்சபைப் பணிகளிலும் பயன்படுத்தியதால் அவரைப் பிடிக்காமல் போனவர்களும், எதிரிகளாக மாறியவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் வழியில் கர்த்தரை நம்பிப் பணிசெய்த அருமைப் போதகர்.
அவர் என் நாட்டுக்கு வந்து பிரசங்கமளித்தபோது, திருச்சபை ஜெபக்கூட்டம் ஏன் அவசியம் என்று பிரசங்கமளிக்குமாறு கேட்டிருந்தேன். அதாவது சபையாகக் கூடி ஜெபிக்கும் கூட்டம் பற்றி வேதம் என்ன சொல்கிறது என்பதுதான் நான் அவர் முன் வைத்த விண்ணப்பம். போதகர் மார்டின் அருமையாக அதை வேதத்தில் இருந்து விளக்கி வேத வியாக்கியானப் பிரசங்கத்தைப் பயன்பாடுகளோடு அளித்தார். அந்தளவுக்கு அதுபற்றி நான் சிந்தித்திருக்கவில்லை. அதுவும் திருச்சபை மூப்பர்களின் தலைமையில் கூடிவந்து ஜெபிக்கும் விஷயத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா என்று எண்ணி வியந்திருக்கிறேன். வேதத்தில் அவருக்கு அசையாத நம்பிக்கை இருந்தது. வேதத்தை சீர்திருத்தவாதிகளும், ஜோன் ஓவன் போன்ற பியூரிட்டன்களும் எந்தளவுக்கு மதித்துப் பயன்படுத்தினார்களோ அந்தளவுக்கு அதைப் பயன்படுத்துவதில் ஆற்றலுள்ளவராக இருந்தார் அல்பர்ட் என். மார்டின்.
என் திருச்சபை ஊழியப் பணிகளில் முக்கியமான கட்டங்களில் எல்லாம் போதகர் மார்டின் இந்த விஷயத்தை எப்படி அணுகியிருப்பார், என்ன செய்திருப்பார் என்று நான் கேட்காமல் இருந்ததில்லை. கர்த்தரின் பராமரிப்பு என் சபை மூலமாக கீழைத்தேய சகோதரர்கள் மத்தியில் பணிசெய்ய என்னை வழிநடத்தியபோது ஆரம்பமுதல் அப்பணிகளுக்கு வேத ஆலோசனை தந்து ஜெபித்து எனக்குப் பக்கபலமாக இருந்தவர் போதகர் மார்டின். உண்மையில் கர்த்தருக்கு அடுத்தபடியாக, வேத அடிப்படையில் அவரைத் தவிர அந்த விஷயத்தில் வேறு எவரும் என்னை வழிகாட்டியிருக்க முடியாது. வேதத்தை மதித்து, அதற்கு மட்டும் அடிபணிந்து எதையும் செய்யும் அவருடைய வேத வைராக்கியமே எங்களை இறுக்கமாக இணைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
- ஆவியில் நிறைந்த அதிரடியான அசாத்தியமான பிரசங்க ஆற்றல்
சீர்திருத்த பிரசங்கிகளில் இருபதாம் நூற்றாண்டில் முன்னணியில் இருந்தவர் அல்பர்ட் என். மார்டின். வேதத்தைத் துல்லியமாகப் பிரசங்கிப்பதில் மட்டுமல்லாமல், இருதயத்தைத் தொட்டுக் கிழிக்கும் அருமையான பயன்பாடுகளோடு அவர் பிரசங்கிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தார். ஒவ்வொரு பிரசங்கத்தைத் தயாரிப்பதிலும் அதிக அக்கறையோடு விடியும் நேரத்திலும் ஈடுபடுவதில் அவர் தவறவில்லை.
பிரசங்கத்திற்கு அவசியமான அருமையான குரலை ஆண்டவர் அவருக்கு அளித்திருந்தது மட்டுமல்லாமல், அதற்கான சரீரத்தையும் அளித்திருந்தார். பிரசங்கிக்கும்போது அவருடைய அங்க அசைவுகள், கண் பார்வை, தேவையான வேளையில் குரலைத் தாழ்த்தியோ அல்லது உயர்த்தியோ பேசும் ஆற்றல் மற்றும் பிரசங்கம் கேட்பவர்கள் கவனத்தை ஈர்த்து இறுதிவரை அவர்களைக் கேட்க வைக்கும் வல்லமை அத்தனையும் ஆண்டவர் அவருக்குக் கொடுத்திருந்த ஆசீர்வாதங்கள். முக்கியமாக அவருடைய சுவிசேஷ பிரசங்கங்கள் பெயர் போனவை. அதில் அவர் அசாத்திய ஆற்றலையும் ஆண்டவரின் கிருபையையும் பெற்றிருந்தார்.
பலரும் மதிக்கும் பெரும் சீர்திருத்த இறையியல் அறிஞரான ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் மரே ஒரு தடவை லெஸ்டர் மகாநாட்டில் அதை ஏற்பாடு செய்தவர்கள் மூன்று சுவிசேஷ செய்திகளைக் கொடுக்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டபோது, அதை சிறப்பாகச் செய்யத் தகுந்தவர் அல்பர்ட் என். மார்டினே, அவரையே அதைச் செய்யச் சொல்லுங்கள், அவருக்கு இணையானவரை சமீப காலத்தில் நான் கண்டதில்லை என்று கூறியிருக்கிறார். அந்தளவுக்கு ஜோன் மரே போதகர் மார்டினின் சுவிசேஷப் பிரசங்க வல்லமையை உணர்ந்திருந்தார்.
போதகர் மார்டினின் மூன்று சுவிசேஷ செய்திகளை சீர்திருத்த வெளியீடுகள் மூலம் நாம் தமிழில் வெளியிட்டிருக்கிறோம். சீர்திருத்த சுவிசேஷ செய்தி எவ்வாறிருக்க வேண்டும் என்பதை அவற்றில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். போதகர் மார்டின் கிறிஸ்துவை அறியாதவர்களின் இருதயத்தைக் கத்தி பிளப்பதுபோல் சத்தியத்தைப் பயன்படுத்திப் பிளப்பதில் தேர்ந்தவராயிருந்தார். அவர்கள் இருக்கைகளில் நிம்மதியாக இருக்க முடியாதபடி அவர்களுடைய பாவத்தைப் பற்றிச் சிந்திக்க வைத்து கிறிஸ்துவை நாடியோடும்படிச் செய்தவை அவருடைய சுவிசேஷ செய்திகள். அத்தோடு, இலவசமாகக் கர்த்தர் அளிக்கும் நித்திய ஜீவனை எந்தவிதத்திலும் குறைவுபடுத்தாமல் கேட்பவர்களுக்கு இலவசமாக அளிப்பதில் அவர் அதிக ஜாக்கிரதையாக இருந்தார். கேட்பவர்கள் முன் எந்தவித பரிசேய நிபந்தனையையும் வைக்காமல் கிறிஸ்துவை அவர் இலவசமாக பாவிகள் முன்வைத்தார். பியூரிட்டன் பெரியவர்களை “ஆத்துமாக்களின் வைத்தியர்கள்” என்று சொல்லுவார்கள். அது அல்பர்ட் என். மார்டினுக்கு முற்றிலும் பொருந்தும். தற்காலப் பிரசங்கிகள் அவருடைய சுவிசேஷ பிரசங்கங்களை கேட்டுப் பயிலவேண்டியது காலத்தின் கட்டாயம்.
- திருச்சபைக் கோட்பாடுகளுக்கு பெருமதிப்புக்கொடுத்து திருச்சபைப் பணிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்திருந்தார்
போதகர் மார்டினில் என்னை மிகவும் ஈர்த்த விஷயம் இதுவே. வாலிப காலத்தில் திருச்சபைக் கோட்பாட்டைத் துல்லியமாகக் கற்றுக்கொள்ள முனைந்த வேளையில், சுற்றிவரத் தெளிப்பு ஞானஸ்நான இறையியல் அறிஞர்களின் நூல்களாலும், எண்ணிக்கையற்ற கிறிஸ்தவ நிறுவனங்களின் ஆக்கிரமிப்பாலும் சூழப்பட்டு, சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபை இறையிலுக்காக ஏங்கிக் கொண்டிருந்தபோதுதான் அல்பர்ட் என். மார்டின் அவர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது.
தெளிப்பு ஞானஸ்நானவாதிகளை நாம் எதிரிகளாகக் கருதாவிட்டாலும் சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைக் கோட்பாடு அவர்களுடையதைவிடப் பெரியளவில் மாறுபட்டது. சீர்திருத்தவாதத்தைப் பின்பற்றாத பொதுவான பாப்திஸ்துகளின் திருச்சபைக்கோட்பாடு சகோதரத்துவ சபைகளைவிடப் பெரிதும் வேறுபட்டதல்ல. அதனால், சீர்திருத்த பாப்திஸ்து இறையியல் கோட்பாட்டை முறையாக அறிந்திருப்பது சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைக் கோட்பாட்டை நடைமுறையில் பின்பற்ற முற்றிலும் அவசியமானது. இந்த இறையியலை அறியாமல் சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபையை அமைக்கமுடியாது. இந்த விஷயத்தில் அல்பர்ட் என். மார்டின் திருச்சபைக் கோட்பாட்டிற்கு அளித்திருக்கும் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடக்கூடாது.
தற்போது நான் நம்பி விசுவாசித்துப் பின்பற்றி வரும் திருச்சபைக் கோட்பாடுகளை அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன் என்று சொன்னால் மிகையாகாது. வேறு எந்த நூலையும்விட, இறையியல் அறிஞர்களையும்விட அவருடைய போதனைகளே சீர்திருத்த திருச்சபைக் கோட்பாட்டை எனக்குக் கற்றுத் தந்தது. திருச்சபை பற்றிய எத்தனையோ விஷயங்களில் போதகர் மார்டினின் ஆலோசனையை நான் நாடியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவர் எல்லாச் சிக்கல்களையும் தீர்த்துத் தகுந்த வேத வழிகாட்டியிருக்கிறார்.
திருச்சபையையும், திருச்சபை அமைப்பையும், திருச்சபை அங்கத்துவத்தையும் அவர் ஒருபோதும் உதாசீனப்படுத்தவில்லை. அதுபற்றியெல்லாம் வேதம் தெளிவாக விளக்கவில்லை என்ற அனுமானத்தை அவர் கொண்டிருக்கவில்லை. முறையான வேதரீதியிலான திருச்சபை அமைப்பைக் கொண்டிராத சபைகள் சீர்திருத்தப் பாதையில் போவதற்கு அவர் துணை நின்றாலும், திருச்சபை அமைப்பை உதாசீனம் செய்து கர்த்தரின் பணியாற்றுபவர்களாகக் காட்டிக்கொள்ளுபவர்களை அவர் நியாயப்படுத்தியதில்லை. கடல் தண்ணீரில் இரண்டு படகுகளில் கால் வைத்துப் பயணம் செய்யும் வித்தையெல்லாம் அவரிடம் காணப்படவில்லை. திருச்சபை செய்யவேண்டிய பணிகளை வேறு எந்த நிறுவனமோ, சபைத் தொடர்பில்லாதவர்களோ செய்வதற்கு அதிகாரம் இல்லை என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு திருச்சபைக்குக் கட்டுப்பட்டு அவர் கடைசிவரை பணிசெய்திருந்தார்.
என்னைப் பொறுத்தவரையில் சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபைக் கோட்பாடுகளை அவரைப்போல நுணுக்கமாக ஆராய்ந்து நடைமுறையில் சபையில் பயன்படுத்தி சபைகளுக்கு முன்னுதாரணமாக இருந்தவர்களை நான் அறிந்திருக்கவில்லை. அதற்கு அவரே முன்னோடி என்றுகூட சொல்வேன். அதுவும் போதக இறையியலுமே அவருடைய ஊழியத்தின் விஷேச அம்சங்கள். நாம் வெளியிட்டிருக்கும் “ஆவிக்குரிய அழிவில்லாத ஆலோசனைகள்” என்ற நூலை வாசித்துப் பாருங்கள். திருச்சபைக் கோட்பாட்டை அவர் அத்தனை அருமையாக விளக்கியிருக்கிறார். தன்னுடைய நாற்பத்தி ஆறு வருட கால ஊழியத்தில் திருச்சபைக் கோட்பாட்டை நிதர்சனமாக திரித்துவ பாப்திஸ்து சபையில் எவ்வாறு நிலைநாட்டியிருக்கிறார் என்பதை அந்நூலிலிருந்து அறிந்து கொள்ளலாம். தான் திருச்சபைப் பணியிலிருந்து ஓய்வெடுப்பதற்கு முன்பு தன் சபைக்கு அவர் கொடுத்த பிரியாவிடைச் செய்திகளே அவை.
- போதக ஊழியத்தில் அவர் போதகர்களுக்கு முன்மாதிரி
அல்பர்ட் என். மார்டின் தன் சபையில் நெடுங்காலமாக போதகர்களுக்கான இறையியல் கல்லூரியை நடத்தி வந்திருக்கிறார் (Trinity Academy). அது இப்போது இல்லை. அக்கல்லூரியில் அவர் போதக இறையியலைக் கற்றுத் தந்தார். அவரிடம் பயின்று வளர்ந்த அநேக சீர்திருத்த பாப்திஸ்து போதகர்கள் இன்றும் அருமையாக திருச்சபைப் பணியாற்றி வருகிறார்கள். நாம் நடத்தி வரும் போதகர்களுக்கான வருடாந்தர மகாநாட்டில் பிரசங்கமளித்திருக்கின்ற டேவிட் மெரெக்கும், மிச் லச் அவர்களும் போதகர் மார்டினிடம் பயின்றவர்களே.
தன் வாழ்நாள் முழுவதும் போதக இறையியலை அவர் கற்றுத் தந்திருக்கிறார். அந்த விரிவுரைகளைத் தொகுத்து அவர் மரிப்பதற்கு முன்பாகவே அவருடைய சபை “போதக இறையியல்” என்ற தலைப்பில் மூன்று வால்யூம்களாக வெளியிட்டிட்டிருக்கிறது. இப்போது போதகர் மிச் லச் நம்முடைய போதகர்களுக்கான மகாநாட்டில் அவற்றைத் தொடர்ச்சியாக வருடாவருடம் போதித்து வருகிறார்.
பியூரிட்டன் பெரியவர்கள், அதற்குப் பிறகு சார்ள்ஸ் ஸ்பர்ஜன், மார்டின் லொயிட் ஜோன்ஸ் மற்றும் அவர்களுக்குப் பின்வந்த அநேகர் போதக இறையியல் பற்றி நல்ல நூல்களை வெளியிட்டிருந்தாலும் அவர்கள் அணுகியிராத எத்தனையோ அருமையான அம்சங்களை நான் அல்பர்ட் என். மார்டினின் நூலில் காண்கிறேன். சுவிசேஷ பணியை எப்படிச் செய்வது என்பது உட்பட போதக ஊழியத்தின் சகல அம்சங்களையும் அக்குவேறு ஆணிவேராக நடைமுறைக்குப் பயனளிக்கும் விதத்தில் மார்டின் விளக்கியிருக்கிறார். இந்நூலை அவருடைய வாழ்நாள் சாதனை என்றுதான் நான் கூறுவேன்.
முடிவாக . . .
போதகர் மார்டின் மீது என்னைப் போன்ற அநேகருக்கு ஆழமான அன்பும் மதிப்பும் இருந்தது. அதைச் சிலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் வெறும் மனிதர்தானே என்று அலட்சியமாகக் கருதுகிறவர்கள் இருக்கிறார்கள். அவருடைய ஆவிக்குரிய அசாத்திய அதிரடிப் பிரசங்கமும், துணிச்சலும், மனித சிந்தனைக்கு இடந்தராத வைராக்கியமான போதகப் பணியும், போதக ஆலோசனையும், திருச்சபைக்கு அவர் தந்த மிக உயரிய இடமும் சிலருக்குப் பிடிக்காமலும் போயிருந்திருக்கிறது. அவரோடு நெருங்கிப் பழகி வந்திருக்கும் அவருடைய சபையாருக்கும், அவருடைய நண்பர்களுக்கும் அவர் எத்தனை இளகிய இருதயம் கொண்ட நேசமிக்கவர் என்பதும், தாழ்மையானவர் என்பதும் நன்றாகவே தெரியும். தன் விசுவாசப் பயணத்தை நிறைவு செய்த அல்பர்ட் நியூட்டன் மார்டின் தன்னுடைய ஆண்டவரின் சந்நிதானத்தில் இப்போது ஆறுதலடைகிறார். அவரை இழந்து நிற்கின்ற நாம் அவரோடு பழகிய, அவரிடம் பயின்ற நாட்களை மட்டுமே எண்ணி ஆறுதலைடைய முடிகிறது. அவரில் நான் கண்ட ஆவிக்குரிய வைராக்கியத்தை விசுவாசத்தோடு திருச்சபைப் பணியில் காட்ட கர்த்தர் நமக்கு உதவட்டும்.
நினைவஞ்சலி பிரசங்கம்
டேவிட் சான்ஸ்கி (Dave Chanski), போதகர், திரித்துவ பாப்திஸ்து சபை, மொன்ட்வில், நியூ ஜேர்சி.
அறிமுகம்
பல ஆண்டுகளுக்கு முன்பு போதகர் மார்டின் அவர்கள், தன்னுடைய நினைவஞ்சலி ஆராதனையில் என்னைப் பிரசங்கிக்கக் கேட்டுக்கொண்டதற்குக் காரணம், அவரோடு எனக்கிருந்த நீண்டகால, மாறுபட்ட மற்றும் தனித்துவமான உறவுமுறையாகும்.
ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு, நான் மிச்சிகனில் உள்ள கிராண்ட் ரேபிட்ஸ் (Grand Rapids) கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதுதான் போதகர் மார்டினை முதன்முதலில் சந்தித்தேன். அவருடைய எழுத்துக்களில் நான் முதன்முதலில் வாசித்தது ‘The Practical Implications of Calvinism’ (கல்வினியத்தின் நடைமுறைத் தாக்கங்கள்) என்ற புத்தகத்தைத்தான். அதன் பிறகு, பேனர் ஆஃப் ட்ரூத் (Banner of Truth) வெளியிட்ட ‘What’s Wrong With Preaching Today?’ (இன்றைய பிரசங்கங்களில் உள்ள தவறு என்ன?) என்ற மற்றொரு சிறு புத்தகத்தையும் வாசித்தேன். அச்சில் வந்த இந்த இரண்டு பிரசங்கங்களும் என் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவற்றை வாசித்த சில நாட்களிலேயே, அந்தப் புத்தகங்களை எனக்குக் கொடுத்த என் கல்லூரித் தோழன், கிராண்ட் ரெபிட்ஸில் உள்ள சீர்திருத்த பாப்திஸ்து சபைக்கு வரும்படி என்னை அழைத்தான். “இந்தப் புத்தகங்களை எழுதியவர்தான் அங்கே பிரசங்கிக்கிறார்” என்று அவன் கூறினான். அதற்கு நான், “அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறாரா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். ஏனெனில், அதுவரை அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தையோ பிரசங்கத்தையோ நான் வாசித்ததே இல்லை.
அதற்கடுத்த ஆறேழு ஆண்டுகளில், நான், என் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திரித்துவ ஊழியர் பயிற்சிப் பள்ளியில் (Trinity Ministerial Academy) படிப்பதற்காக நியூ ஜெர்சிக்குக் குடிபெயர்ந்தேன். அங்கே நான் மாணவன்; அவர் ஆசிரியர். மேலும், அந்த நான்கு ஆண்டுகளும் நான் திரித்துவ பாப்திஸ்து சபையின் (Trinity Baptist Church) உறுப்பினராக இருந்ததால், அவர் என் போதகராகவும் நான் சபை உறுப்பினராகவும் இருந்தேன்.
அதன்பின் இருபது ஆண்டுகள் கழித்து, அவரும் என் தாயாரும் (இருவரும் தங்கள் எழுபதுகளில் துணையை இழந்தவர்கள்) திருமண உறவை நோக்கிப் பழகத் தொடங்கினர். அவருடைய சொந்த வார்த்தைகளின்படி, நான் அவர்களுக்கு “முதியோர் காதல் ஆலோசகர்” ஆனேன்; அதன் வழியாய் நான் அவருக்கு வளர்ப்பு மகனானேன். பின்னர், பதினைந்து ஆண்டுகள் கழித்து (2021-ல் என்று நினைக்கிறேன்), அவர் மீண்டும் நியூ ஜெர்சிக்குத் திரும்பியபோது, நான் அவருக்குப் போதகரானேன். இறுதியாக, எங்கள் உறவு ஒரு முதிய தந்தைக்குப் பணிவிடை செய்யும் ஒரு பராமரிப்பாளரின் உறவாக மாறியது - துல்லியமாகச் சொன்னால், ஒரு முதிய பராமரிப்பாளருடன் வாழும் ஒரு முதிய தந்தை. நான் அவரை நீண்ட காலமாக, பல்வேறு கோணங்களில் அறிந்திருக்கிறேன். ஒவ்வொரு கோணத்திலும் அது மிக நெருக்கமான ஒரு பார்வையாகவே இருந்தது.
என் பிரசங்கப் பகுதி 1 கொரிந்தியர் 4-ஆம் அதிகாரம், ஒன்றிலிருந்து நான்கு வரையிலான வசனங்கள் - முக்கியமாக ஒன்று மற்றும் இரண்டு ஆகிய வசனங்கள். இந்த வேதப்பகுதியிலிருந்து இரண்டு காரியங்களை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
முதலாவது, பவுல் தன்னைக்குறித்துக் குறிப்பிடும் பெயர்கள். முதலாம் வசனம் இவ்வாறு கூறுகிறது: “கிறிஸ்துவின் ஊழியக்காரராகவும், தேவனுடைய இரகசியங்களின் விசாரணைக்காரராகவும் மனுஷர்கள் எங்களை எண்ணக்கடவர்கள்.” இந்த நிருபத்தின் தொடக்க வரியில் (1 கொரிந்தியர் 1:1), பவுல் தன்னை ஓர் அப்போஸ்தலனாக அறிமுகப்படுத்துகிறார். ஆனால், இந்த நான்காம் அதிகாரத்தில் அவர் பொதுவான இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.
முதல் வார்த்தை “ஊழியக்காரர்” என்பது. இது புதிய ஏற்பாட்டில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை அல்ல. மாறாக, மிகச் சாதாரண வேலை செய்பவர்கள் முதல் ராஜாக்கள் மற்றும் நியாயாதிபதிகள்வரை பரந்த அளவிலான பணியாளர்களைக் குறிக்கக்கூடிய ஒரு கிரேக்க வார்த்தையாகும். இந்த வார்த்தையின் முக்கிய நோக்கம் என்னவென்றால்: அந்த நபரின் குறிப்பிட்ட பொறுப்பு அல்லது அழைப்பு எதுவாக இருந்தாலும், அவர் ஒருவருக்குக் கீழ்ப்படிந்து சேவை செய்பவர் என்பதைக் குறிப்பதாகும். இது ராஜாக்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் கூடப் பொருந்தும், ஏனென்றால் அவர்களும் தேவனுக்குக் கீழ்ப்பட்டவர்களே.
இரண்டாவது வார்த்தை “விசாரணைக்காரர்” (Steward) - அதாவது மற்றொன்றின் சொத்தைப் பராமரிக்கும் மேலாளர். ஓர் அப்போஸ்தலனுக்கோ அல்லது என்னைப் போன்ற ஒரு சாதாரண பிரசங்கிக்கோ மற்றும் இங்கு கூடியிருக்கும் பல தேவ ஊழியர்களுக்கோ இதன் பொருள் என்னவென்றால், நாம் தேவனுக்குக் கீழ்ப்பட்டவர்களும், அவருடைய சொத்தின் மேலாளர்களும் என்பதாகும். அந்தச் சொத்து எதுவெனில், நாம் பிரசங்கிக்கும் சுவிசேஷமும், நாம் மேய்க்கும்படி அழைக்கப்பட்ட சபையுந்தான். லூக்கா 12:42-ஐக் கேளுங்கள்: “தகுதியான காலத்தில் தன் வேலைக்காரருக்கு போஜனங்கொடுக்கத்தக்கதாக எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையுள்ளவனும் விவேகமுள்ளவனுமான விசாரணைக்காரன் யார்?” அப்போஸ்தலருக்குப் பொருந்தியது போலவே, இந்த “விசாரணைக்காரன்” என்ற வார்த்தை ஒரு போதகருக்கோ அல்லது ஊழியருக்கோ ஆன்மீக ரீதியில் எவ்வாறு பொருந்துகிறது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்த இரண்டு வார்த்தைகளையும் (ஊழியக்காரன் மற்றும் விசாரணைக்காரன்) பொறுத்தமட்டில், இந்த வேதப்பகுதி நமக்கு உணர்த்துவது என்னவென்றால், அவர்களுடைய பணி எதுவாக இருந்தாலும், அவர்கள் தங்களுக்கு மேலதிகாரியாய் இருப்பவரிடமிருந்து கட்டளைகளைப் பெறுகிறார்கள். அவர்கள் மேலாண்மை பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் மற்றொருவரின் சொத்தையே மேற்பார்வையிடுகிறார்கள். அவர்கள் அதிகாரப் படிநிலையின் உச்சியில் இல்லை. அவர்கள் தங்களுக்குக் கட்டளையிடும் மேலதிகாரியின் இடத்தில் நின்று, அக்கட்டளைகளை நிறைவேற்றும் ஊழியக்காரர்களாகவும் பராமரிப்பாளர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள்.
நான் சுட்டிக்காட்ட விரும்பும் இரண்டாவது காரியம், ஒரு விசாரணைக்காரனின் முக்கிய கடமை: உண்மையுள்ளவனாய் இருப்பது. இரண்டாம் வசனம் இவ்வாறு கூறுகிறது: “மேலும், விசாரணைக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.”
இந்த வசனந்தான் என்னை இந்த வேதப்பகுதிக்கு நேராக வழிநடத்தியது. போதகர் மார்டின் அவர்களின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் நான் சிந்தித்துப் பார்க்கப் பார்க்க, இந்த வசனம் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. கடந்த ஒரு மாதமாக இரண்டு வேதப்பகுதிகள் என் சிந்தனையிலும் தியானத்திலும் ஆக்கிரமித்திருந்தன. ஒன்று, வெளிப்படுத்தல் 14:13 - “அவர்கள் தங்கள் பிரயாசங்களுக்கு நீங்கி ஓய்ந்திருப்பார்கள்.” மற்றொன்று, 1 கொரிந்தியர் 4:2 - “விசாரணைக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.” இந்த வேதப்பகுதி அவருடைய வாழ்க்கையையும், அவருடைய வாழ்நாள் ஊழியத்தையும் மிகச் சிறப்பாகச் சுருக்கிக் கூறுகிறது என்று நான் நம்புகிறேன்.
உண்மையுள்ளவர் என்பதன் இலக்கணம்
இந்தச் செய்தியில் என் நோக்கங்களில் ஒன்று, நம் அனைவரையும் ஊக்குவிப்பதும், எபிரெயர் 13:7-ன் கட்டளைக்குக் கீழ்ப்படிய நமக்கு உதவுவதுமாகும். அந்த வசனம் ஏற்கனவே வாசிக்கப்பட்டு, குறிப்பிடப்பட்டிருக்கிறது: “தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நோக்கிப் பார்த்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.”
இங்கு முக்கிய வார்த்தை “உண்மையுள்ளவன்” என்பதாகும். நேரத்தை மனதில் வைத்து, இதை நான் சுருக்கமாக விளக்கப்போகிறேன்: உண்மையுள்ள ஒரு நபர் தான் செய்ய வேண்டியதைச் செய்கிறார். கிறிஸ்து தன் ஊழியக்காரர்களிடமிருந்தும், தன் போதகர்களிடமிருந்தும், தன் ஜனங்கள் அனைவரிடமிருந்தும் இதையே எதிர்பார்க்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால், தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒரு நாளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்நாளில் கிறிஸ்துவிடமிருந்து, “நல்லது, உண்மையுள்ள உத்தம ஊழியக்காரனே” என்ற வார்த்தைகளைக் கேட்க நாம் விரும்புகிறோம்.
“உண்மையுள்ளவன்” என்பதற்கு இணையான ஒரு நல்ல வார்த்தை “நம்பகமானவன்” என்பதாகும். இயேசுவின் வார்த்தைகளை நினைவுகூருங்கள்: “அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்டவைகளையெல்லாம் செய்த பின்பு: நாங்கள் அபாத்திரமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையானவைகளை மாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.” தேவனுடைய வார்த்தையில் உண்மையும் நம்பகத்தன்மையும் மிக முக்கியமான நற்பண்புகளாகும். உண்மையற்ற ஊழியக்காரர்களை நோக்கி இயேசு, “என்னை ஆண்டவரே, ஆண்டவரே, என்று நீங்கள் கூப்பிட்டும், நான் சொல்லுகிறபடி நீங்கள் ஏன் செய்யாமல்போகிறீர்கள்?” என்று கேட்பார். நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா இல்லையா என்பது மிக முக்கியமானது. நீதிமொழிகள் 25:19 கூறுகிறது: “ஆபத்துக்காலத்தில் துரோகியை (உண்மையற்றவனை) நம்புவது உடைந்த பல்லுக்கும் சுளுக்குண்ட காலுக்கும் சமானம்.”
நமது வேதப்பகுதி கூறுகிறது, விசாரணைக்காரன் உண்மையுள்ளவனாய் - அதாவது தேவன் தனக்குக் கட்டளையிட்டதைச் செய்பவனாய் காணப்படுவது அவசியமாம்.
உண்மையுள்ள விசாரணைக்காரராக போதகர் மார்டின்
என் வாழ்க்கையில் நான் ஏராளமான பிரசங்கிகளைக் கேட்டிருக்கிறேன். வெவ்வேறு காலகட்டங்களில் எனக்குப் பிடித்தமான பிரசங்கிகள் இருந்திருக்கிறார்கள்; குறிப்பாக திரித்துவ பாப்திஸ்து சபைக்கு வந்து, பயிற்சிப் பள்ளியின் மூலம் பல்வேறு பிரசங்கிகளின் செய்திகளைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தபோது அது அதிகமானது. எனக்கு பிரிட்டிஷ் உச்சரிப்பில் பிரசங்கிப்பவர்களை மிகவும் பிடிக்கும். நான் கேட்க விரும்பும் ஒரு பிரசங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், பொதுவாக அவர்களின் பெயரே என் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். ஆனால், என்னையே நான் இப்படிக் கேட்டுக்கொள்வேன்: “ஒரு வருடம் - ஆமாம், வருடத்திற்குப் பின் வருடமாக யாருடைய பிரசங்கத்தின் கீழ் அமர விரும்புவாய்?” என்று கேட்டால், அதற்கு என்னிடம் ஒரே ஒரு பதில்தான் இருந்தது: அல்பர்ட் என். மார்டின்.
அவர் எப்போதும் வேதப்பகுதிக்கு உண்மையுள்ளவராக இருந்தார். அவர் எப்போதும் முழு வேதாகமத்திற்கும் உண்மையுள்ளவராக இருந்தார். மேலும், அவர் எப்போதும் என் ஆத்துமாவிற்கும் உண்மையுள்ளவராக இருந்தார்.
இன்று உலகத்தில் பல உண்மையுள்ள சுவிசேஷ ஊழியர்கள் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன் - தேவனுக்கு ஸ்தோத்திரம்! அவர்களில் பலர் இப்போது இந்த அறையிலேயே அமர்ந்திருக்கிறார்கள் என்றும் நம்புகிறேன். தேவ ஊழியர்களாகிய உங்களுக்காகவும் உங்கள் ஊழியங்களுக்காகவும் நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால், போதகர் மார்டினைத் தனித்துக்காட்டியது எது? என்னைப் போன்ற ஒருவரை எழுந்து நின்று அவரைப்பற்றியும் அவருடைய நினைவைப்பற்றியும் பிரசங்கிக்கத் தூண்டியது எது? அவர் ஒரு உண்மையுள்ள மனிதராகத் தனித்து விளங்கினார் என்பதே என்று நான் நம்புகிறேன். சில குறிப்பிட்ட அம்சங்கள் அவரைத் தனித்துக் காட்டின.
- முதலாவதாக, தேவனால் அவருக்கு அளிக்கப்பட்ட அசாதாரணமான கிருபைகளும் ஆவிக்குரிய வரங்களும்.
- இரண்டாவதாக, அவருடைய உழைப்பின் மீதிருந்த தேவனுடைய அசாதாரணமான ஆசீர்வாதம்.
- மூன்றாவதாக, இருபதாம் நூற்றாண்டில் ‘பர்டிகுலர் பாப்திஸ்து’ (Particular Baptist) - அல்லது அவர் அழைக்க விரும்பியபடி ‘வேதபூர்வமான’ - சபைகளின் மறுமலர்ச்சியில் அவர் வகித்த முன்னணிப் பங்கு.
- நான்காவதாக, மற்ற சுவிசேஷ ஊழியர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் அவர் வகித்த தனித்துவமான பங்கு. இன்று இங்கு வந்திருக்கும் பல தேவ ஊழியர்கள் தற்செயலாக இங்கே வரவில்லை. அவருடைய விரிவுரைகள், பிரசங்கங்கள், தனிப்பட்ட ஆலோசனைகள் மற்றும் பிற்காலத்தில் அவருடைய எழுத்துக்களின் மூலம் அவர் அவர்களை உருவாக்கினார்.
- ஐந்தாவதாக, அவருடைய வைராக்கியம், ஆற்றல், சுருக்கமாகச் சொல்வதானால் அவருடைய உழைப்பொழுக்கம் (work ethic). அது முற்றிலும் வேதரீதியிலான கிறிஸ்தவ உழைப்பொழுக்கமாக இருந்தது.
‘Assiduous’ (விடாமுயற்சியுள்ள) மற்றும் ‘Sedulous’ (சுறுசுறுப்பான, உழைப்பைக் கொட்டுகிற) ஆகிய ஆங்கில வார்த்தைகளை நான் போதகர் மார்டின் மூலமாகத்தான் கற்றுக்கொண்டேன். வேறு யாராவது அதைப் பயன்படுத்தியிருந்தால் நான் மறந்திருப்பேன். ஏனென்றால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் கேட்ட வார்த்தைகள் அவை. ஆனால், அவர் அதைப் பயன்படுத்தியதால் என்னால் மறக்கவே முடியவில்லை. ‘Assiduous’ என்றால் ஒரு காரியத்தில் தொடர்ச்சியான மற்றும் கவனமான அக்கறை செலுத்துவது, விடாமுயற்சியோடு தொடர்வது. ‘Sedulous’ என்றால் கடினமாகவும் சீராகவும் உழைப்பது. இதனுடன் ‘kopiáō’ என்ற கிரேக்க வார்த்தையையும் நான் சேர்க்கலாம் - இதற்கு ‘பிரயாசைப்படுதல்’ என்று பொருள். 1 தீமோத்தேயு 5:17-ல் இதைக் காண்கிறோம்: “திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்கள்...” அவர் இந்த வார்த்தையைக் கூறும்போது, அந்தப் பிரயாசத்தின் அழுத்தம் அவருடைய உச்சரிப்பிலேயே தெரியும்.
போதகர் மார்டின் ஊழியத்தில் கடினமாக உழைப்பதைக் குறித்து விரிவுரை வழங்கியது மட்டுமின்றி, அவரே அதற்கு ஒரு முன்மாதிரியாகவும் வாழ்ந்து காட்டினார். சீர்திருத்தவாதி உல்ரிச் ஸ்விங்லி (Huldrych Zwingli) கூறினார்: “கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மிகவும் கூர்மையானதும் ஆபத்துக்கள் நிறைந்ததுமான ஒரு யுத்தமாகும்; இதில் எந்த இடத்திலும் நாம் முயற்சியைத் தளர்த்தினால் அது நமக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும்.” போதகர் மார்டின் இந்த ஸ்விங்லியின் கூற்றை மேற்கோள் காட்டி நான் கேட்டதாக நினைவில்லை, ஆனால் அவர் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டார் என்பதை அறிவேன். அது அவருடைய அன்றாட வாழ்க்கையில் தெளிவாகத் தெரிந்தது.
அவர் உண்மையிலேயே யோவான்ஸ்நாகனைப் போல இருந்தார் - எரிகிறதும் பிரகாசிக்கிறதுமாயிருக்கிற விளக்காய் இருந்தார். அவருடைய உண்மையுள்ள வாழ்க்கையின் ரகசியம் இதுதான் என்று நான் நம்புகிறேன்: வேதப்பகுதி கூறுவது போல, தான் உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியான நல்விசுவாசமும், தீர்மானமும் கொண்டிருந்தார். “விசாரணைக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.” அந்த ஆழமான விசுவாசத்தினிமித்தம், அறுபது ஆண்டுகளுக்கும் மேலான பிரசங்க மற்றும் போதக ஊழியத்தில், அவர் உண்மையிலேயே ஒரு உண்மையுள்ள விசாரணைக்காரனாக இருந்தார்.
அவருடைய குணாதிசயமும் விசுவாசக் கோட்பாடுகளும்
அவர் ஒருமுறை தன்னைப்பற்றி விளக்கமளித்தது எனக்கு நினைவிருக்கிறது. ஏனென்றால், சிலர் அவரை ஒரு பிடிவாதக்காரராக, வளைந்துகொடுக்காத மனிதராக நினைத்தனர் - அவர் பிறவியிலேயே அப்படிப்பட்ட குணமுடையவர் என்பது போலப் பேசினர். ஆனால் அவர் கூறுவார்: “உங்களுக்குத் தெரியுமா, ஆவிக்குரிய முக்கியத்துவமில்லாத விஷயங்களிலும், என் இயல்பான குணத்திலும் நான் நூடில்ஸ் (Noodles) போல வளைந்துகொடுக்கக் கூடிய முதுகுத்தண்டு உடையவன் தான்.” ஆனால், தேவனுடைய வார்த்தையில் அவர் கண்ட சத்தியங்களைப் பொறுத்தமட்டில், அவருக்கு இரும்பைப் போன்ற (backbone of steel) பலமான முதுகுத்தண்டு இருந்தது என்பதை அவரே ஒப்புக்கொண்டார்.
மக்கள் அவரிடம், அவர் மிகவும் கற்பனையான உலகத்தில் (too idealistic) வாழ்வதாகக் கூறுவார்கள் - வேதாகமம், கிறிஸ்தவ வாழ்க்கை மற்றும் கிறிஸ்துவின் சபையைக் குறித்த அவருடைய பார்வை நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்று கூறுவார்கள். அதற்கு அவர் பதிலளிப்பார்: “நான் நடைமுறையை உணர்ந்தவன் தான் (realist). வேதத்தில் ஒரு காரியத்தைப் பார்த்தால், அது நிஜ வாழ்க்கையில் அப்படியே நடந்துவிடாது என்பதை நான் அறிவேன். பெரும்பாலும் அந்தப் பூரண நிலை நடந்துவிடுவதில்லை - ஏனென்றால் நாம் பாவிகள். ஆனால், நான் ஒரு லட்சியவாதியும் கூட (idealist). ஏனென்றால், நான் அதை வேதாகமத்தில் காண்பதால், தேவனுடைய உதவியினாலும் கிருபையினாலும் நம்மால் முடிந்தால் அதைத் தொடரவும் செய்யவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்று நம்புகிறேன்; தேவன் தம்முடைய ஆவியினாலே தம்முடைய சபைக்கு அதைச் செய்யப் பெலன் தருவார் என்றும் நம்புகிறேன்.”
திரித்துவ பாப்திஸ்து சபைக்குச் சொந்தமான முதல் கட்டடமான ‘கிராக்கர் பாக்ஸ்’ (Cracker Box) என்ற இடத்தில் அவர் பிரசங்கித்ததைக் கேட்ட ஒரு மனிதரின் கருத்து எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு இறையியல் பேராசிரியராகவோ அல்லது இறையியலாளராகவோ இருக்க வேண்டும். இந்தப் பிரசங்கியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர் செய்தி கேட்க வந்திருந்தார். அவர் எசெக்ஸ் ஃபெல்ஸில் (Essex Fells) உள்ள அந்தச் சிறிய கட்டடத்தில் அமர்ந்து பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு, அதற்குப் பின், “என்ன ஒரு வீணடிப்பு!” என்று கருத்துத் தெரிவித்தார்.
அதாவது: இந்த மனிதர் எங்காவது ஒரு பெரிய சபையில் பிரசங்கித்திருக்கலாம். வடக்கு நியூ ஜெர்சியில் மறைந்திருக்கும் இந்தச் சிறிய பாப்திஸ்து சபையோடு, இந்தச் சிறிய கட்டடத்தில் அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? என்பதுதான் அவருடைய எண்ணமாக இருந்தது.
ஆனால் போதகர் மார்டின் அப்போதும் சரி, தன் வாழ்நாளின் இறுதி வரையிலும் சரி, இந்தத் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தார்: “தேவன் என்னை இந்தச் சபையை மேய்க்கவே அழைத்திருக்கிறார், எனக்கென்று ஒரு பெயரை உண்டாக்கிக் கொள்ள அல்ல.” அவர் புகழ்பெற்ற கிறிஸ்தவர்களின் பாராட்டையோ, உலகளாவிய சபையின் அங்கீகாரத்தையோ, அல்லது இந்த உலகத்தின் புகழையோ தேடவில்லை.
போதகர் வொரன் பீல் (Warren Peel) அவர்கள் ‘பேனர் ஆஃப் ட்ரூத்’ பத்திரிகையில் எழுதிய இரங்கல் குறிப்பில் இந்த வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன: போதகர் மார்டினின் பிரசங்க வரங்கள் உலகெங்கிலும் உள்ள குடும்பக் கருத்தரங்குகள், போதகர்கள் மாநாடுகள் மற்றும் பிற நிகழ்வுகளில் தொடர்ந்து நாடப்பட்டன. 1971-ல் தொடங்கப்பட்ட ‘திரித்துவ பிரசங்க மேடை’ (Trinity Pulpit) ஊழியத்தின் மூலம் அவருடைய பிரசங்க ஊழியம் பலமடங்கு பெருகியது. இது உலகெங்கிலும் அவருடைய பிரசங்கங்கள் பதிவு செய்யப்பட்ட 8,00,000க்கும் அதிகமான ஆடியோ கேசட்டுகளை அனுப்பியது. ஆனால், இந்தச் சபை - திரித்துவ பாப்திஸ்து சபை போதகர் மார்டினின் வாழ்நாள் பணியாக மாறியது, அதில் அவர் 46 ஆண்டுகளாகத் தன் முழு பலத்தையும் திறமைகளையும் ஊற்றினார்.
ஏன்? அவர் ஏன் அதைச் செய்தார்? ஒரே ஒரு காரணத்திற்காகத்தான்: தேவன் அவரை அதைச் செய்யவே அழைத்தார். அவர் ஒரு நல்ல, உண்மையுள்ள விசாரணைக்காரனாக இருக்க விரும்பினார். அவர் 2 கொரிந்தியர் 3:2-3-ஐ மேற்கோள் காட்ட விரும்புவார். அங்கே பவுல் கொரிந்து சபைக்குக் கூறுகிறார்: “எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே. ஏனெனில் நீங்கள் எங்களுடைய ஊழியத்தினால் உண்டான கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று விளங்குகிறது; அது மையினால் எழுதப்படாமல், ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும், கற்பலகைகளில் எழுதப்படாமல், இருதயங்களாகிய சதையுள்ள பலகைகளிலே எழுதப்பட்டிருக்கிறது.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் பயிற்சிப் பள்ளி மாணவர்களாகிய நமக்குக் கூறினார்: தேவன் நம்மை ஒரு பீடத்திலும் சபையிலும் வைத்தால், நாம் ஊழியம் செய்யும் ஜனங்கள்தான் நம்முடைய ஊழியத்திற்கான சான்றாவார்கள்.
நியாயத்தீர்ப்பு நாளில் தேவனுடைய சொந்த சத்தத்தைத் தவிர, நமக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரே காரியம் அந்த அங்கீகாரம் மட்டும்தான். அவரைப் பொறுத்தமட்டில், “என் பிரசங்கத்தைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்?” அல்லது “எத்தனை பேர் வருகிறார்கள்?” அல்லது “நான் எத்தனை புத்தகங்களை விற்றிருக்கிறேன்?” என்ற கேள்விகள் முக்கியமல்ல. மாறாக, “சுவிசேஷத்தின் கனி இருக்கிறதா? என் ஊழியத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தேவனுடைய ஜனங்களின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் கனி இருக்கிறதா?” என்ற கேள்விதான் முக்கியமாக இருந்தது. “கிறிஸ்துவின் சபைதான் நம்முடைய நிருபம்” என்று அவர் நமக்குக் கூறுவார்.
நடைமுறைப் பயன்பாடு: இங்கு வந்திருக்கும் அனைவருக்கும்
நான் இதுவரை போதகர்கள், தேவனுடைய விசாரணைக்காரர்கள் மீதே அதிக கவனம் செலுத்தினேன், அது சரியே, ஏனென்றால் இந்த வேதப்பகுதி அவர்களைக் குறித்ததுதான். ஆனால், இதை இங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் பயன்படுத்த விரும்புகிறேன்: வேத பகுதியின்படி போதகர்களுக்கும், இங்குள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும், இந்த அறையில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இது பொருந்தும்.
- இன்னும் கிறிஸ்துவை அடையாதவர்களுக்கு
நீங்கள் கூறலாம், “நான் ஒரு பிரசங்கி அல்ல, தேவனுடைய இரகசியங்களின் விசாரணைக்காரனும் அல்ல. இந்த வார்த்தைகளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” தொடர்பு இதுதான்: எபிரெயர் 9:27 கூறுகிறது, “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.” அப்போஸ்தலர் 17:30 கூறுகிறது, “எங்குமுள்ள மனுஷரெல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று கட்டளையிடுகிறார்” - அதாவது, உங்கள் பாவங்களை விட்டுத் திரும்பி, அவரிடம் இரட்சிப்பை அடைவதற்காக வர வேண்டும். இதைவிடத் தெளிவாகச் சொல்ல முடியாது. கிறிஸ்து முன்னதாக வராவிட்டால், இன்று இங்கு இருக்கும் நாம் ஒவ்வொருவரும் போதகர் மார்டின் சென்ற அதே இடத்திற்குத்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்று எபிரெயர் 9:27 கூறுகிறது. மனித ரீதியாக, சரீர ரீதியாக நான் குறிப்பிடுவது என்னவென்றால், பூமியில் ஒரு மரப்பெட்டி, ஒரு கான்கிரீட் கல்லறை, பின்னர் மண்ணோடு மண்ணாவதுதான் நம் அனுபவமாக இருக்கப்போகிறது. வேதாகமம் கூறுகிறது, “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” ஆனால் அதோடு எல்லாம் முடிவடைந்துவிடுவதில்லை.
நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இல்லாவிட்டால் - விசுவாசத்தினால் இயேசு கிறிஸ்துவோடு இரட்சிப்பின் உறவில் இணைந்திராவிட்டால் - உங்கள் ஆத்துமா நரகத்திற்குச் செல்லும் என்று வேதாகமம் போதிக்கிறது. அந்தப் பயங்கரமான முடிவைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி, உங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, அவற்றை விட்டுத் திரும்பி, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தின் மூலம் தேவனிடம் வருவதே ஆகும்.
ஒருவேளை கடந்த ஆண்டுகளில், போதகர் மார்டின் இதே பீடத்திலிருந்து பாவிகளை நோக்கிக் கெஞ்சுவதை நீங்கள் கேட்டிருக்கலாம், ஆனால் நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களிலேயே இருக்கிறீர்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகும், பல பிரசங்களைக் கேட்ட பிறகும் அப்படியே இருக்கிறீர்கள். நீங்கள் நினைக்கலாம்: “இனி அந்த மனிதனின் இடிமுழக்கக் குரலை நான் கேட்க வேண்டியதில்லை.” ஆனால் தேவனுடைய சொந்த சத்தத்தின் இடிமுழக்கத்திற்கு நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா? ஏனென்றால் ஒரு நாள் நீங்கள் அதைக் கேட்பீர்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இல்லாவிட்டால், அவரிடமிருந்து நீங்கள் கேட்கப்போகும் ஒரே வார்த்தை, “சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டுப் போங்கள்” என்பதாகத்தான் இருக்கும்.
வேதாகமத்தின் நற்செய்தி இதுதான்: நாம் அனைவரும் பாவிகளாக, தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறியவர்களாகவே இந்த உலகத்திற்கு வந்தோம் - தேவனே நம்மை இரட்சிக்காவிட்டால், நம்முடைய சுபாவத்தின்படி நாம் அனைவரும் நரகத்திற்குச் செல்ல வேண்டியவர்கள். தேவன் தம்முடைய குமாரனை பாவிகளின் இடத்தில் மரிப்பதற்கும், அவர்களின் பாவங்கள் தகுதியான ஆக்கினையைத் தன்மேல் ஏற்றுக்கொள்வதற்கும் அனுப்புவதன் மூலம் இதைச் செய்துள்ளார். உங்களை இரட்சிக்க நீங்கள் அவரை நம்பினால், நீங்கள் என்றென்றைக்குமாக நரகத்திலிருந்து இரட்சிக்கப்படுவீர்கள். உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறுவதற்கான ஒரே வழி உங்கள் இடத்தில் சிலுவையில் இயேசு கிறிஸ்து மரணமடைந்ததன் மூலமே ஆகும். நீங்கள் அவரை நம்பினால், நீங்கள் செய்த ஒவ்வொரு பாவமும் மன்னிக்கப்படுவது முற்றிலும் நிச்சயம். இது தேவனுடைய அன்பில் வேரூன்றிய தேவகிருபை, இது இயேசு கிறிஸ்து ஒருவரால் மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. தன் பாவங்களை அறிக்கை செய்து, இயேசுவை விசுவாசிக்கும் எவரையும் தேவன் மன்னிக்கிறார் - இன்று இங்கு இருக்கும் ஒவ்வொருவரையும் நான் இதைச் செய்யவே வலியுறுத்துகிறேன்.
- கிறிஸ்தவர்களுக்கு
விசாரணைக்காரர்களைப் பற்றிய (அப்போஸ்தலர்கள் மற்றும் பிரசங்கிகள்) இந்த வேதப்பகுதிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? தாலந்துகளின் உவமையை நினைத்துப் பாருங்கள். தேவன் நமக்கு அனைவருக்கும் தாலந்துகளைக் கொடுத்துள்ளார், அவற்றை நாம் அவருடைய மகிமைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஒரு கிறிஸ்தவராக, போதகர்களைப் போல நீங்கள் தேவனுடைய வார்த்தையின் அல்லது அவருடைய சபையின் காவலாளியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் தேவன் உங்களுக்கு வரங்களைக் கொடுத்திருக்கிறார். அதிகமோ குறைவோ, ஒவ்வொரு கிறிஸ்தவரிடமும் அது உண்டு. அவர் உங்களுக்குக் கிருபைகளையும், திறமைகளையும், வாய்ப்புகளையும் - அவரைச் சேவிப்பதற்கான அன்றாட வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறார். அது உங்கள் இல்லத்தில், பணியிடத்தில், பள்ளியில் அல்லது கிறிஸ்துவின் சபையில் இருக்கலாம். ஆனால் உங்களிடம் தாலந்துகள் உள்ளன. உங்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. அவர் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது ஒரே ஒரு காரியத்தைத்தான்: உண்மையுள்ளவர்களாக இருப்பது. நீங்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தால், கடைசி நாளில் போதகர் மார்டினுக்குக் கூறப்படும் அதே வார்த்தைகளை அவரே உங்களுக்கும் கூறுவார்: “நல்லது, உண்மையுள்ள உத்தம ஊழியக்காரனே, உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி.”
- திரித்துவ பாப்திஸ்து சபையின் வாலிப உறுப்பினர்களுக்கு
இந்த மனிதரைப் பற்றியும் அவருடைய ஊழியத்தைப் பற்றியும் நீங்கள் அதிகம் கேட்கும்போது, அந்த ‘கிராக்கர் பாக்ஸ்’ நாட்களின் கதைகளைச் சிந்திக்கும்போது - ஞாயிறு காலைகளில் சபையின் இருக்கைகள் நிரம்பி வழிந்த அந்தப் பழைய நாட்களைக் குறித்து நீங்கள் புலம்பவோ அல்லது ஏங்கவோ தூண்டப்படலாம்; பாபிலோனிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிய மக்கள் தேவாலயத்தின் இடிபாடுகளைக் கண்டு அழுதது போல. நீங்கள் அந்தப் பழைய நாட்களை சிலையாக மாற்றவும் (idolize) தூண்டப்படலாம். அப்படிச் செய்யாதீர்கள். ஆனால், அந்த நல்ல நாட்கள் மீண்டும் வர வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லை. அது எப்படிச் சாத்தியம்? சில சுருக்கமான ஆலோசனைகள்: எலிசாவைப் போல ஜெபியுங்கள் - “எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே?” என்று உங்கள் முழு இருதயத்தோடும் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். தேவன் உங்களை எங்கே வைத்திருக்கிறாரோ அங்கே கிறிஸ்துவுக்குச் சேவை செய்யுங்கள்: உங்கள் இல்லத்தில், உங்கள் பிள்ளைகளுக்குப் போதிப்பதில், பணியிடத்தில் அல்லது சபையில். மேலும் வேதாகமத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். போதகர் மார்டின் சபை வாலிபர்களை ஊக்குவித்து ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்; தேவன் அவரை 18 வயது வாலிபனாக இரட்சித்தபோது, அவர் ஒரே வருடத்தில் தன்னுடைய ‘தாம்சன் செயின் ரெஃபரன்ஸ்’ (Thompson Chain Reference) வேதாகமத்தைப் படித்துத் தோய்த்துவிட்டார். உங்கள் வேதாகமத்தைப் படித்துத் தோய்த்துவிடுங்கள்.
மேலும், திரித்துவ பாப்திஸ்து சபையின் இளம் சகோதரர்களே - இந்தச் சபையில் அடுத்த போதகர்களாகவும் தலைவர்களாகவும் மற்றவர்கள் வர வேண்டும் என்று மட்டும் ஜெபிக்காதீர்கள். அதற்காக ஜெபியுங்கள், ஆனால் நீங்களே அந்த மனிதர்களாக மாறுங்கள். வேதாகமத் தகுதிகளை நிறைவு செய்யும் மனிதர்களாக மாறுங்கள்; “என்னால் அவர்களில் ஒருவராக மாற முடியாவிட்டால், தேவனுடைய கிருபையினாலும் பெலத்தினாலும் நான் அதற்கு எவ்வளவு நெருக்கமாக வர முடியுமோ அவ்வளவு நெருக்கமாக வர விரும்புகிறேன்” என்ற மனப்பான்மையோடு அதை நோக்கமாகக் கொண்டு செயல்படுங்கள்.
இது போதகர் மார்டினின் பாரம்பரியத்தைப் (legacy) பற்றியது அல்ல. இங்கே என்ன நடந்ததோ, அல்லது எதிர்காலத்தில் என்ன நடக்குமோ, அதன் மகிமை எந்தவொரு மனிதனுக்கும் சேராது. தேவன் ஒருவரே அதைச் செய்கிறார். போதகர் மார்டின் எதையாகிலும் பிரசங்கித்தார் என்றால், அவர் இதையே பிரசங்கித்தார்.
ஆனால் என் சகோதரர்களே - குறிப்பாக இந்தச் சபையின் இளம் சகோதரர்களே - உங்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. ஏனென்றால் லூக்கா 12:48-ல் வேதாகமம் கூறுகிறது: “எவனுக்கதிகம் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்; மனுஷர் எவனுக்கதிகம் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகம் கேட்பார்கள்.” இந்தச் சபையில் நமக்கு அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது. யாருக்காவது அதிகம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால், அது திரித்துவ ஊழியர் பயிற்சிப் பள்ளியில் படித்த மனிதர்களுக்குத்தான்.
நமக்கு அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது, தேவன் கடந்த ஆண்டுகளில் இங்கே பெரிய காரியங்களைச் செய்துள்ளார். பரிசுத்த ஆவியானவர் பல தசாப்தங்களாக இங்கே வாசம் பண்ணியிருக்கிறார் என்று நாம் கூறலாம். என் முறைப்படுத்தப்பட்ட இறையியல் (Systematic Theology) ஆசிரியர் இதைக் கேட்டால் என்னைக் கண்டிக்கலாம், ஆனால் இத்தனை தசாப்தங்களுக்குப் பிறகும் இந்தச் சபை இன்னும் இங்கிருப்பதும், இன்னும் உண்மையுள்ளதாக இருப்பதும் ஒரு சிறிய அற்புதம்தான். தேவனுடைய உதவியால், உங்கள் நிமித்தம் இந்த வாசல்களின் மேல் ‘இக்கபோத்’ (மகிமை நீங்கிப்போயிற்று) என்று அவர் எழுத வேண்டிய நிலை வராதபடி காத்துக்கொள்ளுங்கள். தேவன் உங்கள் ஆத்துமாவில் ஒரு நெருப்பை மூட்டுவாராக - அது ஏற்கனவே இல்லாவிட்டால் - அது இங்கேயோ அல்லது வரவிருக்கும் ஆண்டுகளில் தேவன் உங்களை அனுப்பும் இடங்களிலோ பிரகாசிப்பதாக.
நடைமுறைப் பயன்பாடு: போதகர்களுக்கும் தேவ ஊழியர்களுக்கும்
நீங்கள் இன்று இங்கே வந்திருப்பதற்கான காரணங்களில் ஒன்று - ஒருவேளை நீண்ட தூரம் பயணம் செய்து வந்திருக்கலாம் - போதகர் மார்டின் போதித்தவை, வாழ்ந்தவை மற்றும் அவர் என்னென்னத்திற்காக நின்றார் என்பதை நீங்கள் அவரை அறிந்திருந்த ஆண்டுகளில் மதித்ததே காரணம். எனவே உங்களுக்காக மூன்று காரியங்களை முன் வைக்கிறேன்.
முதலாவதாக, உங்களிடம் ஒப்புவிக்கப்பட்ட பொக்கிஷத்தைக் காத்துக்கொள்ளுங்கள். பவுல் தீமோத்தேயுவுக்குக் கூறியது போல: “ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதைக் காத்துக்கொள்”. குறிப்பாக தேவ சத்தியங்களை நீங்கள் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள போதகர் மார்டினை தேவன் பயன்படுத்திய அந்த அம்சங்களைக் காத்துக்கொள்ளுங்கள். அதில் சுவிசேஷம், தேவனுடைய இரகசியங்கள், முழு வேதாகமமும் அது போதிக்கும் அனைத்தும், மற்றும் நீங்கள் இன்னும் ஒரு போதகராக இருந்தால் தேவன் உங்கள் பொறுப்பில் ஒப்படைத்திருக்கும் சபையும் அவற்றில் அடங்கும். கிறிஸ்து உங்களிடம் ஒப்படைத்த அந்தப் பொக்கிஷத்தின் விளிம்புகளைத் தேய்த்துவிடாதீர்கள், அதை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.
இரண்டாவதாக, ஊழியம் என்பது உங்கள் அறிவையோ அல்லது உங்கள் வரங்களையோ காண்பிப்பதற்கான ஒரு மேடை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மூன்றாவதாக, போதகர் மார்டின் அவர்கள் போதக இறையியலின் (Pastoral Theology) மூன்றாவது அடிப்படைத் தத்துவம் என்று அழைத்ததை நினைவில் கொள்ளுங்கள்: ஒரு மனிதனின் ஆவிக்குரிய ஜீவனுள்ள தேவபக்தியே, அவனுடைய ஊழியத்தின் செயல்திறனுக்கு இன்றியமையாத முன்நிபந்தனையாகும். அவருடைய விரிவுரையின் சொந்த வார்த்தைகளில் சொல்லப்போனால்: “இது ஒரு பழைய மற்றும் பலமுறை கூறப்பட்ட கூற்றாகும், ஏனென்றால் ஒரு மனிதனின் வாழ்க்கையே அவனுடைய ஊழியத்தின் வாழ்க்கை என்பது உண்மையாகும்.” அவர் டேப்னியை (Dabney) மேற்கோள் காட்டுவார்: “போதகரின் குணாதிசயம் அவனுடைய நாவை விட சத்தமாகப் பேசுகிறது. சொல்லாற்றல் மயக்கி மகிழ்விக்கலாம்; ஆனால் வாழ்க்கையின் பரிசுத்தமே நிருபிக்கிறது.”
இந்த வேதப்பகுதி ஏற்கனவே உதாரணம் காட்டப்பட்டுள்ளது, ஆனால் அதை மீண்டும் கூறுவது தகுதியானது: “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளில் அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.”
யாவருக்கும் - இதன் பொருள் அப்போஸ்தலர்கள், பிரசங்கிகள் மற்றும் போதகர்கள் மட்டுமல்ல, இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் அனைத்து விசுவாசிகளுக்கும் ஆகும். நம்முடைய ஆண்டவர் உங்களுடைய மற்றும் என்னுடைய சேவைக்கு முற்றிலும் பாத்திரமானவர். போதகர் மார்டின் மூலமாக, தேவன் நம்முடைய வாழ்நாளில் எரிகிறதும் பிரகாசிக்கிறதுமான ஒரு விளக்கின் நெருக்கமான முன்மாதிரியை நமக்குக் கொடுத்துள்ளார். அவர் கிறிஸ்துவைப் பின்பற்றியது போல நாம் அனைவரும் அவரைப் பின்பற்ற தேவன் நமக்கு உதவுவாராக. உங்கள் பிரயாசங்கள் வீண்போகாது.
முடிவுரை: அவருடைய இளைப்பாறுதல் எவ்வளவு இனிமையானது!
போதகர் மார்டினின் அடக்க ஆராதனையின்போது நான் குறிப்பிட்டது போல, மனித மற்றும் சரீர ரீதியாக, அவருடைய கடைசி ஆண்டுகள் கடினமாக இருந்தன. கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒவ்வொரு வாரமும் அவரை உண்மையுடன் வந்து சந்தித்த சகோதரர்களை, முன்பு ஹைடி (Heidi) பாராட்டியது போல நானும் பாராட்டுகிறேன். நன்றி, சகோதரர்களே. (ஹைடி போதகர் மார்டினின் மகள்).
தேவனுடைய கிருபையினால், அவருடைய இறுதி நாட்கள் - குறிப்பாக அவருடைய கடைசி வாரம் - அமைதியாகவும் நிம்மதியாகவும் இருந்தன. அவர் அந்த இறுதி வாரம் முழுவதும் தூங்கிக்கொண்டே இருந்தார். அவர் சில கடினமான ஆண்டுகளைக் கடந்து வந்தார், ஆனால் அந்த ஆண்டுகள் இப்போது முடிந்துவிட்டன. இப்போது - அவருடைய இளைப்பாறுதல் எவ்வளவு இனிமையானது!
கடந்த மாலை நாங்கள் குடும்ப வழிபாட்டில் இதை வாசித்துக் கொண்டிருந்தோம். விசுவாசிகள் மரித்ததை வேதாகமம் “நித்திரை அடைந்தார்கள்” என்று கூறுவதைக் குறித்து ஸ்பர்ஜன் (Spurgeon) எழுதிய கருத்து அது. அவர் எழுதினார்: “பரலோகத்தில் இருக்கும் பரிசுத்தவான்கள், தூக்கம் தரக்கூடிய ஓய்வை விடச் சிறந்ததொரு ஓய்வைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு வறுமை இல்லை, உழைப்பு இல்லை, ஆத்தும வேதனை இல்லை, மனஸ்தாபம் இல்லை, தங்களுக்குள் இருக்கும் பாவத்தோடான போராட்டம் இல்லை, வெளியிலுள்ள சத்துருக்களோடும் உள்ளேயுள்ள பயங்களோடும் யுத்தம் இல்லை. அவர்கள் தங்கள் பிரயாசங்களுக்கு நீங்கி ஓய்ந்திருக்கிறார்கள்.” இந்தச் சிந்தனை என்னை ‘அல்லேலூயா’ என்று சொல்ல வைக்கிறது. தேவனுக்கு ஸ்தோத்திரம். அல்லேலூயா.
‘தேவ மனிதன்’ (Man of God) புத்தகத் தொகுப்பில் உள்ள ஜெபங்களின் பகுதிகளைக் கொண்டு என் உரையை முடிக்கிறேன். இவை விரிவுரைகளின் முடிவில் போதகர் மார்டின் உண்மையில் ஏறெடுத்த ஜெபங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. நான் இப்போது ஜெபிக்கப் போவதில்லை - அதை வாசிக்க மட்டும் செய்கிறேன்.
“எங்கள் பிதாவே, உம்முடைய பிரியமான குமாரன் மேல் எங்களுக்குள்ள அன்பு மீண்டும் மூட்டப்பட்டு, தணல் போன்ற தீவிரமான வாஞ்சையாக மாற ஜெபிக்கிறோம். உம்முடைய பிரியமான குமாரன் மேல் ஆழமான மற்றும் எப்போதும் வளரும் அன்பை மீண்டும் மூட்டுவீராக; இதனால் நாங்கள் அவருடைய நாமத்தினாலே ஊழியம் செய்யும்போது, அவர் எங்களை நோக்கி, ‘நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்மேல் எனக்குக் குறை உண்டு’ என்று கூறாதிருப்பாராக. கிறிஸ்து இயேசுவுக்குள் நீர் எங்களுக்குக் கொடுத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கி எப்போதும் தொடரவும், நாங்கள் பலத்தின்மேல் பலமடையவும் கிருபை செய்வீராக.
எங்களுடைய சிந்தனையும் எங்களுடைய நடைமுறையும் உம்முடைய வார்த்தை என்னும் பட்டறையில் அடித்து உருவாக்கப்படுவதாக. உம்முடைய ஆவியினாலே, உம்முடைய கற்பனைகளின் வழியில் ஓடவும், உம்முடைய சித்தத்தின்படி எங்களுடைய ஊழியங்களை நிறைவேற்றவும் எங்களை ஆயத்தப்படுத்துவீராக. நீர் எங்களிடம் ஒப்படைத்தவைகளுக்கு நல்ல விசாரணைக்காரர்களாக இருக்க எங்களுக்கு உதவி செய்யுமாயின், எங்கள் வாழ்நாளின் நாளெல்லாம் உம்மைச் சேவித்து, எங்கள் பணி முடிந்ததும், இயேசுவுக்குள் நித்திரை அடைவோம். அதுவரை, உம்முடைய கிருபையினால் நாங்கள் நிலைத்திருக்கப் பெலன் தாரும்; இதனால் நாங்கள் இறுதியாக எங்கள் கர்த்தராகிய இயேசுவுக்கு முன்பாக நின்று, ‘நல்லது, உண்மையுள்ள உத்தம ஊழியக்காரனே’ என்ற வார்த்தைகளைக் கேட்கும்படி செய்வீராக. இவை யாவற்றையும் அவருடைய நாமத்தினாலும், அவருடைய கிருபையின் மகிமைக்குத் துதியாகவும் வேண்டுகிறோம். ஆமென்.”
என் வழிகாட்டியாகிய நண்பரைப் பற்றிய மறக்கமுடியாத நினைவுகள்
மிச் லஷ் (Mitch Lush), போதகர், கிருபை திருச்சபை, டவுனிங்டவுன், பென்சில்வேனியா
சுவிசேஷ ஊழியத்தில் எனக்குக் கற்றுக்கொடுக்கவும், முன்மாதிரியாக விளங்கவும், என்னை ஊக்குவிக்கவும், இறைவன் வேறு எவரையும் விட அல்பர்ட் நியூட்டன் மார்டின் (Albert Newton Martin) அவர்களையே அதிகம் பயன்படுத்தியுள்ளார். நான்சியும் நானும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டு, வசதிகள் குறைவாக இருந்த காலத்தில், ஆல் மார்டின் அவர்களின் ஐந்து கேசட் நாடாக்களை மட்டுமே என்னால் வாங்க முடிந்தது. திரித்துவ பிரசங்க மேடையிலிருந்து நான் வாங்கிய முதல் செய்திகளில் இவையும் சில. அவை கடவுள் தந்த வரப்பிரசாதமாக அமைந்தன.
போதகர் மார்டின் எபேசியர் புத்தகத்தை அறிமுகப்படுத்தியபோது, அவர் தேவனின் செய்தி (Message of God), தேவ மனிதன் (Man of God), தேவனின் வழிமுறைகள் (Methods of God) ஆகிய தலைப்புகளில் விவரித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதற்கு மேல் கேசட் நாடாக்களை வாங்குவதற்கு என்னிடம் வசதி இல்லாததால், அந்த ஐந்து நாடாக்களையும் நான் மீண்டும் மீண்டும் கேட்டேன்! நான் என் வாழ்நாள் முழுவதும் சுவிசேஷ சபைகளில் இருந்திருக்கிறேன், ஆனால் அதைத் தாண்டி, “ஓ! அப்படியானால், சுவிசேஷ ஊழியம் என்பது இதுதானா! நான் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றன!” என்று எண்ணத் தொடங்கினேன். இந்த நாடாக்களைத் தேர்ந்தெடுப்பதில் கடவுள் என்னை வழிநடத்தியதற்கும், அந்த நேரத்தில் என்னால் இதற்கு மேல் வாங்க முடியாமல் போனதற்கும் நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். ஏனெனில், அந்த ஐந்து நாடாக்களையும் நான் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டியது அவசியமாக இருந்தது!
ஒரு கல்லூரி மாணவனாக இருந்த என் இளம் வயதில், இந்தியானா நெடுஞ்சாலை 15-ன் ஒரு குறிப்பிட்ட பாதையில் கடவுள் என்னைச் சந்தித்து, அல் மார்டின் வழியாக என் வாழ்வில் கிரியை செய்ததை நான் நினைவுகூர்கிறேன். சமீப மாதங்களில், அவருடைய ‘போதக இறையியல்’ (Pastoral Theology) இரண்டாம் பாகத்தை எளிமைப்படுத்தி அதைக் கற்றுக்கொடுப்பதில் நான் முழுமையாக மூழ்கியிருக்கிறேன். அவருடைய போதக ஊழியத்தால் நான் முதன்முதலில் ஈர்க்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும், போதகர் மார்டின் இன்றும் கவனத்தோடுகூடிய வேத வசன உட்பொருள் விளக்கம் (careful exegesis), பரந்த இறையியல் வாசிப்பு, நேர்த்தியான திறன் மிக்க வரைவு (masterful outlining) மற்றும் சக்திவாய்ந்த நடைமுறைப் பயன்பாடுகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
போதகர் மார்டின் ஒரு ஆலோசகராகவும் பலருக்கு அளப்பரிய உதவியாகவும் இருந்தார். நான் அந்த 5 கேசட் நாடாக்களை வாங்கிய ஒரு வருடத்திற்குப் பிறகு, ஒரு நண்பர் எனக்குப் பணம் கொடுத்து, புதிதாகத் தொடங்கப்பட்ட ‘டிரினிட்டி மினிஸ்டீரியல் அகாடமி’க்குச் (Trinity Ministerial Academy - TMA) சென்று வருமாறு கூறினார். நெப்ராஸ்காவின் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்துப் பையனான எனக்கு, அந்த நேரத்தில் நியூ ஜெர்சி என்பது புவியியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மிகவும் தொலைவில் இருப்பதாகத் தோன்றியது. TMAவில் இரண்டு நாட்கள் வகுப்புகளைக் கவனித்த பிறகு, நான் இறையியலையும் ஊழியத்தையும் கற்றுக்கொள்ள வேண்டிய இடம் இந்த அகாடமிதான் என்பதை உணர்ந்தேன்.
வெள்ளிக்கிழமை வகுப்புகளுக்குப் பிறகு, போதகர் மார்டின் தனது சிறிய ஃபியட் காரில் என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார், அங்கே அவரும் திருமதி மார்டினும் எனது மனைவி நான்சிக்கும் எனக்கும் மதிய உணவு அளித்து உபசரித்தனர். நான் அகாடமியின் அனைத்து வகுப்புகளையும் படிக்க விரும்புவதாகவும், ஆனால் இந்தியானாவில் இருந்துகொண்டே பதிவு செய்யப்பட்ட ஆடியோ விரிவுரைகளைக் கேட்பது நல்லது என்று நினைப்பதாகவும் போதகர் மார்டினிடம் கூறினேன். என்னைப் பொறுத்தவரை, இந்தியானாவிலேயே தங்குவது பல வழிகளில் மிகவும் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் தோன்றியது. நாங்கள் காரில் சென்று கொண்டிருக்கும்போது அவர் நான் சொன்னதைக் கவனமாகக் கேட்டுவிட்டு, “அடுத்த முப்பது ஆண்டுகால ஊழியத்திற்கு உனக்கு எது அதிக பலன் தருமோ, அதை நீ இப்பொழுதே செய்” என்றார். அவருடைய அந்தக் கொள்கை முற்றிலும் சரியானது, துல்லியமானது என்பதை உணர்ந்த கணமே என் மனம் தவித்தது. அவருடைய வார்த்தைகளின் அர்த்தத்தை, மத்திய-மேற்குப் (Midwestern) பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதியினராகிய நாங்கள் நியூ ஜெர்சிக்குக் குடிபெயர வேண்டும் என்பதை நான் அறிந்துகொண்டேன். நான் வாழ விரும்பிய முதல் 100 இடங்களின் பட்டியலில் நியூ ஜெர்சி இல்லாதிருந்த போதிலும் அதை ஏற்றுக்கொண்டேன்! இருப்பினும், ஒரு தம்பதியாக அந்த ஆண்டுகள், எங்கள் வாழ்வை வடிவமைத்து இறையியலையும் சபை வாழ்வையும் கற்றுக்கொள்வதற்கு மிகவும் எளிமையான சிறந்த மூன்று ஆண்டுகளாக அமைந்தன!
மறக்க முடியாத மற்றொரு ஆலோசனை ஒரு சபை நெருக்கடியின் போது வந்தது; அப்போது நான் போதகராக இருக்கும் பொறுப்பிலிருந்து விலகுவதே நல்லது என்று நினைத்தேன். எனது நாற்பத்தைந்து ஆண்டுகால ஊழியத்தில் நான் ஒரு ராஜினாமா கடிதத்தை எழுதியது அந்த ஒரே ஒரு முறைதான். ஒரு வெள்ளிக்கிழமை நள்ளிரவில் எனது ராஜினாமா கடிதத்தை தட்டச்சு செய்தேன், ஆனால் போதகர் மார்டினிடம் பேசும் வரை நான் இதைச் சமர்ப்பிக்க மாட்டேன் என்று நான்சியிடம் கூறினேன். சில மணிநேரங்களுக்குப் பிறகு, சனிக்கிழமை அதிகாலையில், அடுத்த நாளுக்கான பிரசங்கத் தயாரிப்புகளில் அவர் மிகவும் பிஸியாக இருப்பார் என்று தெரிந்திருந்தும் நான் போதகர் மார்டினைத் தொலைபேசியில் அழைத்தேன். போதகர் மார்டின் மிகவும் தயவுடன் எனது அழைப்பை ஏற்றார். அவர் அன்போடு எங்கள் சிறிய சபையின் மிகப்பெரிய நெருக்கடிக்குள் தம்மையும் ஈடுபடுத்திக் கொண்டு, நான்சியுடனும் என்னுடனும் பகிர்ந்து கொள்வதற்காக அவர் தேட வேண்டிய ஒரு நீதிமொழி இருப்பதாகக் கூறினார். அவர் தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு, நீதிமொழிகள் புத்தகத்தை வேகமாக வாசித்து, நீதிமொழிகள் 26ல் அதற்கான வசனத்தைக் கண்டுபிடித்து, அதை எங்களுடன் பகிர்ந்துகொள்ள மீண்டும் என்னை அழைத்தார்.
எங்கள் நெருக்கடியான சூழ்நிலையில், போதகர் மார்டின் தனது வேதாகம அடிப்படையிலான துல்லியமான ஆலோசனையின் மூலம் எங்களுக்குக் கடவுளின் தூதராக விளங்கினார். அவர் அன்போடு எனது அழைப்பை ஏற்றதையும், நீதிமொழிகளின் 26 அதிகாரங்களை வேகமாக வாசித்ததையும், தனது பிஸியான சனிக்கிழமை காலையிலும் எங்களை மீண்டும் அழைத்ததையும் என்னால் எப்போதாவது மறக்க முடியுமா? இல்லை, ஒரு ஆலோசகராக அவருடைய முன்மாதிரியான அன்பு, விடாமுயற்சி மற்றும் திறமையை என்னால் மறக்க முடியாது. தமக்கு இருந்த அவசரப் பொறுப்புகளின் காரணமாக, அவர் எனது அழைப்பை அடுத்த வாரம் வரை தாராளமாகத் தள்ளிப் போட்டிருக்க முடியும். இருப்பினும், அவர் தனது சொந்த வேலைகளுக்கு மத்தியிலும் எனது அழைப்பை ஏற்றார், மேலும் அந்த நெருக்கடியிலிருந்து நாங்கள் மீண்டு வர உதவுவதற்காக அடுத்த வாரமும், அதற்கு அடுத்த வாரமும் எங்களை அழைத்து உதவினார்.
போதகர் மார்டின் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு ரசித்த சில நினைவுகளும் என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. கடவுள் படைத்த அழகையும், படைப்பின் மதிப்பையும் அவர் ஆழமாகப் பாராட்டினார். இசைத்துறையில் மிகுந்த விடாமுயற்சியையும் சிறப்பையும் வெளிப்படுத்திய ஓபரா பாடகர்களை அவர் விரும்பினார். அவர் கலைகளையும், தனது குடும்பத்தையும், நண்பர்களையும், மனிதர்களை மனிதர்களாகவும் நேசித்தார். ஒரு உதவிக்காரரின் (deacon) வீட்டில் நடந்த நன்றியறிதல் நாள் விருந்தின் போது, அவர் தரையில் நான்கு கால்களில் குனிந்து சிரித்துக்கொண்டே, குழந்தைகளைத் துரத்திப் பிடித்து, தனது கம்பீரமான குரலில், “நான் உன்னைப் பிடிக்க வருகிறேன்!” என்று கேலி செய்து மிரட்டியது எனக்கு நினைவிருக்கிறது. அவருடைய அன்பான கவனிப்பில் மகிழ்ச்சியடைந்த குழந்தைகள் அலறிக்கொண்டு ஓடினர். ஆஹா, வேடிக்கை நிறைந்த அந்த கம்பீரமான குரல்! ஒரே மூச்சில் மிக உன்னதமான விஷயத்திலிருந்து மிகவும் சாதாரணமான நகைச்சுவைக்கு அவர் மாறும்போது வெளிப்படும் அந்த மனமார்ந்த சிரிப்பு! அவர் எப்போதும் துடிப்புடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தார், அது உண்மையிலேயே மறக்க முடியாதது.
போதகர் மார்டினைப் பற்றிய எனது எல்லா நினைவுகளின் மையமும், கடவுளுடனான அவருடைய பக்திநிறைந்த வாழ்க்கைதான். அவர் கடவுளின் மகிமைக்காக மட்டுமே, கிருபையினால் மட்டுமே, கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தினால் மட்டுமே இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி. அவர் மன்னிக்கும் கிருபையைத் தெளிவாகப் பிரசங்கித்தார், அதே நேரத்தில் கடவுளின் உருமாற்றும் கிருபையைத் தனது சொந்த வாழ்க்கையிலும் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டார். பரலோகப் பிதாவிடம் ஒரு குழந்தையைப் போன்ற விசுவாசத்தை அவர் முன்மாதிரியாகக் காட்டினார். கடவுள் ஒன்றைச் சொல்லியிருந்தால், நாம் அதை நம்பி அதன்படி வாழ வேண்டும். கடவுள் அனைத்தையும் வழங்குவார்.
மற்றவர்கள் மீதான அவருடைய கொள்கைபூர்வமான அன்பை என்னால் மறக்க முடியாது. எல்லாவற்றையும் நம்புகிற ஒரு அன்போடு அவர் மக்களை நேசித்தார். எனவே, உண்மை நிலைமை அதற்கு இடந்தராதவரை, மற்றவர்களின் நோக்கங்களை நேர்மறையாகவே பார்க்க அவர் தயாராக இருந்தார். ஆம், எல்லாவற்றையும் நம்பும் அவருடைய இந்த அன்பு அநேகமாக சில நேரங்களில் அவரைச் சிக்கலில் மாட்டியிருக்கலாம். அவருடைய அன்பைச் சிலர் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதையும், மற்றவர்களும் அவ்வாறே செய்யக்கூடும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். இருப்பினும், வேதாகம அன்பு ஒருவரைப் பாதிப்புக்குள்ளாக்கக்கூடியதாக மாற்றும் என்று அவர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். வேறு வழியில்லை. எனவே, எப்போதாவது ஒருமுறை தனது அன்பு தனக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்திருந்தும், அவர் மற்றவர்களிடம் தாராள மனதுடனும் திறந்த மனதுடனும் இருக்கத் தேர்ந்தெடுத்தார். வரவிருக்கும் ஆபத்துகளுக்குத் தன் கண்களைத் திறந்து வைத்தபடியே, அவர் உண்மையான வேதாகம அன்பின் பாதையைத் தேர்ந்தெடுத்தார். குறுகிய மற்றும் சுய பாதுகாப்பிற்கான பாதை கடவுளுக்குக் கனத்தைக் கொடுப்பதும் இல்லை, மகிழ்ச்சியைத் தருவதும் இல்லை.
“நான் எப்போதும் கடவுளுக்கும் மனிதனுக்கும் முன்பாகக் குற்றமற்ற மனச்சாட்சியைக் கொண்டிருக்கப் பிரயாசப்படுகிறேன்” என்று பவுல் கூறியதை எனக்கு முதன்முதலில் சொன்னவர் அவர்தான். இந்த வசனத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தியதும், அதன்படி வாழ்ந்ததும் அதை என்னை மறக்க விடாது. அவர் தன் கடவுளோடு கவனமாக நடந்துகொண்டார். அவரது உடல் எடை சரியான அளவை விட சில பவுண்டுகள் கூடினால் கூட, அவர் மிகவும் தீவிரமாக, “இது ஒரு முழுமையான போர்!” என்று அறிவிப்பார். தன் மனைவியிடம் ஏதேனும் ஒரு விஷயத்தைத் தவறான முறையில் சொல்லிவிட்டதாக அவர் நினைத்தால், பிரசங்க மேடையை விட்டு இறங்கி, தன் மனைவியிடம் அமைதியாக மன்னிப்புக் கேட்டுவிட்டு, பின்னர் பிரசங்கிப்பதற்காக மீண்டும் மேடைக்கு வருவார். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக ஒரு தெளிவான மனச்சாட்சி இல்லாமல் பிரசங்கிக்க அவர் விரும்பவில்லை!
ஒருமுறை வெவ்வேறு சபைகளின் மூப்பர்கள் கூடியிருந்த கூட்டத்தில், போதகர் மார்டின் மீது விருப்பமில்லாத ஒருவர், போதகர் மார்டின் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாத ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டதற்காக அவரை நேருக்கு நேர் எதிர்கொண்டார். போதகர் மார்டினைக் குற்றஞ்சாட்ட தனக்கு ஒரு சிறந்த வாய்ப்புக் கிடைத்துவிட்டதாக அந்த மனிதர் நினைத்தார் என எண்ணுகிறேன். என்னைப் பொறுத்தவரை, அந்தப் பெரிய விஷயத்தில் அது ஒரு சிறிய தவறாகவே இருந்தது. இருப்பினும், போதகர் மார்டினுடன் இருந்த சக மூப்பர்களில் ஒருவர், போதகர் மார்டின் செய்தது விவேகமற்ற செயல் என்று அவரிடம் கூறினார். போதகர் மார்டின் அதை உடனடியாக ஒப்புக்கொண்டு, அந்த இடத்திலேயே மனம் வருந்தி, சம்பந்தப்பட்ட மற்ற நபரிடம் அதைச் சரிசெய்வதாகக் கூறினார். என்னைப் பொறுத்தவரை, அந்தக் குற்றச்சாட்டின் தருணம் ஒரு மறக்க முடியாத கிருபையின் தருணமாக மாறியது. நம்மில் யார் தவறு செய்யாதவர்கள்? ஆனால் நம் தவறுகளை நாம் என்ன செய்கிறோம்? ஒட்டுமொத்தப் பாவங்களின் குவியலில் நம்முடைய தவறு ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், யாராவது அதை நமக்கு எதிராகப் பயன்படுத்த நினைக்கும் போது கூட, நாம் நம் பாவத்தை விரைவாக ஒப்புக்கொண்டு அதற்காக மனம் வருந்த வேண்டும்... அது ஒரு மறக்க முடியாத நினைவு!
ஒருமுறை நான் வயதான, மதிப்பிற்குரிய ஒரு போதகர் நண்பருடன் அமர்ந்திருந்தேன். மற்றொரு மனிதர் என் நண்பரிடம் போதகர் மார்டினின் வாழ்க்கையைப் பற்றியும், ஊழியத்தைப் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த உலகில் விசுவாசிகளாகிய நாம் அனைவரும் பவுலின் ‘நிர்பந்தமான மனிதன் நான்’ என்கிற அனுபவத்தை உணர்ந்திருக்கிறோம் என்பதை என் வயதான, மதிப்பிற்குரிய நண்பர் அறிந்திருந்தார். போதகர் மார்டின் முழுமையானவர் அல்ல என்பதையும் அவர் அறிவார். (போதகர் மார்டின் இப்போது பரலோக மகிமையில் முழுமையடைந்துவிட்டார்!) அப்போது என் நண்பர் அந்த மனிதரிடம் சொன்னார், “நான் சந்தித்த மனிதர்கள் அனைவரிலும், போதகர் மார்டினே தன் சொந்த மனச்சாட்சிக்கு உண்மையாக வாழ்கிறார்.” அது ஒரு மறக்க முடியாத நினைவு!
பேர்கின்ஸை நினைவுறுத்தும் அல்பர்ட் என். மார்டின்
ஸ்கொட் மெட்டோஸ் (Scott Meadows), போதகர், கல்வாரி திருச்சபை, நியூ இங்கிலாந்து
பியூரிட்டன்களின் தந்தை என்று சிலரால் அழைக்கப்படும் வில்லியம் பெர்கின்ஸையும், அவரது போதக இறையியலையும் குறித்து விரிவுரைகள் தயாரித்துக் கொண்டிருந்தபோது, அந்த மனிதரின் சிந்தனைகளில் நான் ஆழமாக மூழ்கிப் போனேன். சுவிசேஷ ஊழியக்காரன் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்ற பெர்கின்ஸின் காட்சியை ஆராய்ந்தபோது, நான் மீண்டும் மீண்டும் - ஏறக்குறைய என்னை அறியாமலேயே - அல்பர்ட் என். மார்டினின் முன்மாதிரிக்கே திரும்பிச் சென்றேன். பதினாறாம் நூற்றாண்டில் பெர்கின்ஸ் வரைந்த அந்த உருவப்படத்தை, பல தசாப்தங்களாக நீண்ட நட்பிலும் வழிகாட்டுதலிலும், நான் என் கண்களால் கண்டும் என் செவிகளால் கேட்டும் இருந்தேன். சிறந்த மேய்ப்பரைப் பற்றி வெறும் கோட்பாடாக எழுதிக்கொண்டிருக்கும்போது, அந்த இலட்சியத்தை இவ்வளவு நிறைவாக வாழ்ந்து காட்டிய மனிதரைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பது, நான் செய்யக்கூடாத நன்றியின்மையாகவே எனக்குத் தோன்றியது. ஆகையால், இந்தச் சாட்சியை எழுதிவைப்பது எனது ஆழ்ந்த தனிப்பட்ட பாக்கியமாகும்.
2026 ஏப்ரல் 7 அன்று தமது ஆண்டவரின் சந்நிதிக்குள் சென்ற அல்பர்ட் என். மார்டின், எனக்குப் பிரியமான நண்பரும், என் வாழ்க்கையை மிக ஆழமாக வடிவமைத்த வழிகாட்டியுமாவார். நான் சுவிசேஷத்தின் உண்மையுள்ள ஊழியக்காரனாக எதுவாயிருந்தாலும், அதில் அவருடைய தடங்கள் காணப்படுகின்றன. ஒரு போதகர் தன் உழைப்பின் மேல் மிகுந்த ஆசீர்வாதத்தை எதிர்பார்க்க வேண்டுமெனில், அவர் போதிப்பதுபோலவே வாழ வேண்டும் என்று பெர்கின்ஸ் வலியுறுத்தினார். போதகர் மார்டின், இந்த நோக்கத்தை வியப்பூட்டும் நிலைத்தன்மையோடு நிறைவேற்றினார்; அது இன்னும் என் ஆச்சரியத்தையும் நன்றியையும் தூண்டுகிறது.
வேதாகமம் அவருக்குள் இருந்தது; அவரிடமிருந்து வல்லமையாக வெளிப்பட்டது. வேறு எந்த மனிதரிடமும் நான் காணாத அளவுக்கு அது அவரிடத்தில் காணப்பட்டது. முழு வேதாகமத்தையும் பற்றிய அதிசயமான அறிவும், அபாரமான நினைவாற்றலும் அவருக்கு இருந்தன. மேலும், ஆயிரக்கணக்கான வேதாகம வசனங்களை ஒருவரின் வாழ்க்கைச் சூழ்நிலைக்கும், ஒரு போதகரின் வாழ்க்கைக்கும், ஒரு குடும்பத்தின் வாழ்க்கைக்கும், ஒரு சபையின் வாழ்க்கைக்கும் துல்லியத்துடனும், அன்புடனும், அதிகாரத்துடனும் பொருத்திக் காட்டும் அரிய வரமும் அவருக்கிருந்தது. ஒரு ஆராதனைக்குப் பிறகு தன்னிடம் ஓடி வந்த சிறுவர்களை அணைத்துக்கொள்ள, ஆலயத்தின் பின்புறத்தில் கரங்களை விரித்தபடி நிற்பதிலும் அவர் இயல்பாக இருந்தார்; அதேபோல், தமது அறையில் அமைதியாக அமர்ந்து, போராடிக்கொண்டிருந்த இளம் ஊழியக்காரனுக்கு தெளிவையும் தைரியத்தையும் அளிக்க பொறுமையோடு ஆலோசனை வழங்குவதிலும் அவர் அதே அளவுக்கு இயல்பாக இருந்தார். இந்த இரு சூழ்நிலைகளிலும், அவர் முற்றிலும் அவராகவே இருந்தார்; முழுமையாக உங்களுக்காகவே இருந்தார்.
அவருடைய பிரசங்கத்தை, எட்வர்ட் டொன்னலி வல்லமையுள்ளதாய், உணர்ச்சி நிறைந்ததாய், விளக்கவுரையாக உறுதியானதாய், சமநிலையுள்ளதாய், தெளிவான அமைப்புடையதாய், பயன்பாட்டில் ஊடுருவிச் செல்லக்கூடியதாய் இருந்ததாக விளக்கினார். மேலும், பரிசுத்த ஆவியினால் வரும் ஒரு விசேஷ அபிஷேகம் அதனோடு இணைந்திருந்தது என்றும் டொன்னலி குறிப்பிட்டார். அவருடைய பிரசங்கத்தின் கீழ் அமர்ந்திருந்த நாங்களும், அரை நூற்றாண்டு கால ஊழியத்தில் பதிவு செய்யப்பட்ட அவருடைய செய்திகளை மீண்டும் மீண்டும் கேட்டவர்களும், டொன்னலி என்ன அர்த்தத்தில் அதைச் சொன்னார் என்பதை நன்றாக அறிந்திருக்கிறோம். ஆயினும், உலகளாவிய அளவில் பரந்திருந்த அவரது ஊழியத்தின் பெருமை, பல சமயங்களில் புகழ்பெற்ற ஊழியக்காரர்களிடம் காணப்படும் தூர உணர்வையோ அணுக முடியாத தன்மையையோ அவரிடத்தில் உருவாக்கவில்லை.
அவர் கடிதங்களுக்கு உடனடியாக பதிலளித்தார்; தமது வீட்டைத் தாராளமாகத் திறந்துவைத்தார்; தமது நேரத்தில் எந்தச் சிறப்பான உரிமையும் இல்லாத இளம் மனிதர்களுக்குத் தம்மையே மனமுவந்து அர்ப்பணித்தார். மேலும், ஆண்டுதோறும் போதகர்களுக்கு பெர்கின்ஸ் உடனே அங்கீகரித்திருக்கும் வாழ்க்கை ஒழுங்கை வலியுறுத்திக் கூறினார்: நாம் முதலில் கிறிஸ்தவர்கள்; பின்னர் கணவர்களும் தகப்பன்களும்; அதன் பின்பே சுவிசேஷ ஊழியக்காரர்கள். அவர் இந்த முன்னுரிமையை வெறுமனே போதிக்கவில்லை; அதை வாழ்ந்தும் காட்டினார்.
என் வாழ்க்கையின் மிகப் பெரிய பாக்கியங்களில் ஒன்றாக, போதகர் மார்டினின் ஓய்வு காலங்களில் அவருடைய ஆசிரியராக நெருக்கமாக இணைந்து பணியாற்றிய வாய்ப்பைக் கருதுகிறேன். காலத்தினாலும் பரஸ்பர நம்பிக்கையினாலும் மேலும் ஆழமடைந்த கூட்டுறவில், பல புத்தகங்களில் நாம் இணைந்து உழைத்தோம். அந்த நூல்கள் அனைத்திலும் அந்த மனிதரின் அடையாளம் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அச்சில் வெளிவந்த அவரது மிக உயர்ந்த சாதனை, மூன்று தொகுதிகளாக வெளிவந்த போதக இறையியல் (Pastoral Theology) ஆகும். அந்த நூல் அச்சுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், ஆசிரியரும் தொகுப்பாசிரியரும் என்ற நிலையில், நான் சொல்ல இயலாத அளவுக்கு மதிக்கும் ஓர் ஆழ்ந்த மனஒற்றுமையை நாம் அடைந்திருந்தோம். அது நீண்ட நட்பினாலும், தேவவசனத்தில் பகிர்ந்து கொண்ட உழைப்பினாலும் பிறந்த கனியாகும்.
முடிவுவரை தன் வாழ்நாளை நன்றாக முடிக்க வேண்டும் என்று அவர் மனதார விரும்பினார். தேவனுடைய கிருபையினால், அதைக் கண்ட அனைவரின் ஆச்சரியத்திற்கிடையில், அவர் அப்படியே நிறைவேற்றினார் என்று நான் நன்றியோடு சொல்லுகிறேன். அல்பர்ட் மார்டினில், தேவபக்தியுள்ள, கல்வியறிவும் உழைப்பும் நிறைந்த மேய்ப்பரைப் பற்றிய பெர்கின்ஸின் காட்சி, வெறும் கோட்பாட்டு வடிவமைப்பாக இல்லாமல், இரத்தமும் மாம்சமும் கொண்ட நிஜ வாழ்வாக இருந்தது; தமது தலைமுறைக்குத் தேவன் கொடுத்த ஒரு வரமாகவும், இத்தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைகளுக்கும் முன்மாதிரியாகவும் இருந்தது.
போதகர் அல்பர்ட் என். மார்டினின் ஆசீர்வதிக்கப்பட்ட நினைவுக்காக நான் முழு இருதயத்தோடு தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவர் கிறிஸ்துவைப் பின்பற்றியதுபோல, நாமும் அவரைப் பின்பற்றுவதற்கு கர்த்தர் மிகுந்த கிருபையை அளிப்பாராக.
அல்பர்ட் நியூட்டன் மார்டின்: கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியரின் வாழ்க்கை வரலாறு
வொரன் பீல் (Warren Peel), போதகர், அயர்லாந்துக் குடியரசு
அல்பர்ட் நியூட்டன் மார்டின் (Albert Newton Martin) தனது 92-வது பிறந்தநாளுக்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், ஏப்ரல் 7 அன்று கர்த்தருக்குள் மகிமை அடைந்தார். அவர் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்தார்; ஜார்ஜ் மற்றும் மில்ட்ரெட் மார்டின் தம்பதியருக்குப் பிறந்த பதினொரு குழந்தைகளில் இவர் இரண்டாவது பிள்ளை ஆவார். அவரது பெற்றோரால் உண்மையுடன் கற்பிக்கப்பட்ட வேத சத்தியங்களை அவர் அறிவுபூர்வமாக ஏற்றுக்கொண்டதோடு, சிறுவயதிலேயே பலமுறை விசுவாச அறிக்கை செய்திருந்தாலும் (அவரது வார்த்தையின்படி, அது மென்மையான மனசாட்சியினாலும் தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்குப் பயந்ததன் விளைவாகவுமாகவே இருந்தது), அவரது வாலிபப் பருவத்தின் பிற்பகுதியில்தான் அவர் உண்மையான மறுபிறப்பை அடைந்தார். அதுவரை பள்ளிப்படிப்பு, கால்பந்து மற்றும் பேஸ்பால் ஆகியவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த அவரது சிறந்த புத்திசாலித்தனம், வைராக்கியம், ஆற்றல் ஆகியவை, அதற்குப் பிறகு அவரது நீண்ட வாழ்நாள் முழுவதும் கிறிஸ்துவின் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டன. வேதத்தை அறிந்துகொள்வதன் மூலம் தேவனை அறிவதும், அவரது வார்த்தையிலிருந்து தேவனைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிப்பதுமே அவரது வாழ்வின் முதன்மையான தாகமாக மாறியது. அக்காலங்களில் அவர் புதிதாக வாங்கிய ‘தாம்சன் செயின் ரெஃபரன்ஸ்’ (Thomson Chain Reference) பைபிளைப் படிப்பதில் எண்ணற்ற மணிநேரங்களைச் செலவிட்டார் (மூன்று வருடங்களுக்குள் அது தேய்ந்துபோகும் அளவுக்குப் படித்தார்). ஸ்டாம்போர்ட் சிடி யில் இருந்த (Stamford CT) உள்ளூர் மிஷன் ஹாலிலும், தெரு முனைகளிலும் அவர் பிரசங்கித்தார், மேலும் புதிதாக விசுவாசத்திற்குள் வந்த மற்ற நண்பர்களுடன் இணைந்து ஜெபித்தார். அவர் பாப் ஜோன்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் கொலம்பியா பைபிள் கல்லூரியில் படித்து, 1956-ல் மிகச்சிறந்த மதிப்பெண்களுடன் (Magna Cum Laude) பட்டம் பெற்றார்.
அவர் ஜூன் 1956ல் மெரிலின் ஹார்ட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் 48 ஆண்டுகள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ்ந்தனர், மேலும் மூன்று குழந்தைகளைப் பெற்று ஆசீர்வதிக்கப்பட்டனர். திருமதி மார்டின் ஆறு ஆண்டுகள் புற்றுநோயுடன் போராடி, 2004ல் கர்த்தருடைய பாதத்தை அடைந்தார். 2006ல் போதகர் மார்டின் டொரதி சான்ஸ்கி என்பவரை மணந்தார். அவர் மார்டினின் ஓய்வு காலத்தில் அவருக்கு ஒரு சிறந்த ஆதரவாகவும் ஆசீர்வாதமாகவும் இருந்தார். அவர் 2020ல் மார்டினுக்கு முன்பாகவே மரணமடைந்தார்.
ஊழியப் பாதையும் கிருபையின் கோட்பாடுகளும்
போதகர் மார்டின் 1957 முதல் 1961 வரை, முதல் குழந்தையான ஜொயல் பிறக்கும்வரை ஊர் ஊராகச் சென்று சுவிசேஷ ஊழியம் (itinerant ministry) செய்து வந்தார். சூழ்நிலை மாற்றம், தனது பயண ஊழியம் அனுமதித்ததை விட, தான் அதிக நேரம் வீட்டில் இருக்க வேண்டும் என்பதை அவருக்கு உணர்த்தியது. செப்டம்பர் 1962-ல், நியூயார்க் நகரத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரத் தொலைவில் உள்ள நியூ ஜெர்சியின் நார்த் கால்டுவெல்லில் (North Caldwell, NJ) இருந்த ‘கிறிஸ்தவ மிஷனரி அலையன்ஸ்’ (CMA) ஐச் சேர்ந்த ஒரு சபையின் போதகராக இருக்கும்படி அவருக்கு அழைப்பு வந்தது. இந்த ஆண்டுகளில், அவர் வேதப் புத்தகங்களை வரிசையாகப் பிரசங்கித்து வந்தபோது, தேவ கிருபையின் கோட்பாடுகளைக் கண்டடைந்தார். இக்காலத்தில் போதகர் மார்டினின் வேதாகமக் கோட்பாடுகள் குறித்த புரிதல் வளர்வதற்கு ஒரு முக்கியக் கருவியாக இருந்தவர் எர்னஸ்ட் ரைசிங்கர் (Ernest Reisinger) ஆவார் (இவர் 1967ல் ‘பேனர் ஆஃப் ட்ரூத் டிரஸ்ட்டின் முதல் அமெரிக்க அறங்காவலரானார்). திரு. ரைசிங்கர் மூலமாக, போதகர் மார்டின் ஆர்தர் டபிள்யூ பிங்க் எழுதிய ‘தேவனுடைய இறையாண்மை’ (The Sovereignty of God) மற்றும் ஜான் ஓவன் எழுதிய ‘கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்’ (The Death of Death in the Death of Christ) போன்ற புத்தகங்களை வாசித்தார். சுமார் பத்து ஆண்டுகள் வாசிப்பு, பிரசங்கம், ஜெபம் மற்றும் தீவிர சிந்தனைக்குப் பிறகு, சீர்திருத்தக் கிறிஸ்தவம் (Reformed Christianity) என்பது வேதக் கிறிஸ்தவத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்றும், அது ஆழமான மற்றும் உண்மையான பக்தியின் கனியைத் தர வேண்டும் என்றும் போதகர் மார்டின் அசைக்க முடியாத நம்பிக்கையை அடந்தார். போதகர் மார்டினின் ஊழியத்திற்கு வழிகாட்டியாக இருந்த வசனங்களில் ஒன்று 1 தீமோத்தேயு 4:16 ஆகும்:
“உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைத்திரு; இப்படிச் செய்வதினால் உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.”
அவர் இந்த வசனத்தைக் குறித்து எண்ணற்ற முறை பிரசங்கித்திருக்கிறார், விரிவுரையாற்றியிருக்கிறார், எழுதியுமிருக்கிறார். ஆனால் அவரைப் பற்றி அறிந்த பாக்கியம் பெற்ற எவரும் சாட்சியமளிப்பது போல, அவருடைய சொந்த வாழ்க்கையும் ஊழியமும் இந்த வசனத்திற்கான ஒரு வாழும் பிரசங்கமாகத் திகழ்ந்தன.
திரித்துவ பாப்திஸ்து சபையின் தோற்றம்
போதகர் மார்டின் 1962 முதல் 1966 வரை நார்த் கால்டுவெல்லில் உள்ள CMA சபைக்கு உண்மையுடன் ஊழியஞ்செய்தார். ஆனால் அவரது நம்பிக்கைகள் சீர்திருத்தக் கோட்பாடுகளின் (Reformed) திசையில் வளர்ந்ததால், தனது சொந்த விசுவாசத்திலிருந்து மிகவும் மாறுபட்ட விசுவாசத்தைக் கொண்ட ஒரு சபைப்பிரிவில் (denomination) தொடர்ந்து போதகராக இருக்க முடியாது என்பதை உணர்ந்து, தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார். இருப்பினும், சபை மக்கள் அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர்! அவர்கள் அவரிடமும் அவரது போதனைகளிடமும் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்ததால், அவர்கள் CMA சபையாகத் தொடரவிரும்பாமல், அந்தச் சபைக் கட்டடங்களையும் போதகர் இல்லத்தையும் அப்படியே விட்டுவிட்டு வெளியேறினர். செப்டம்பர் 1967-ல், அவர்கள் 1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கையை (1689 Baptist Confession of Faith) தங்களின் வழிகாட்டியாகக் கொண்டு, திரித்துவ பாப்திஸ்து திருச்சபை (Trinity Baptist Church) என்ற பெயரில் மறுசீரமைத்துக் கொண்டனர்.
இந்தச் சபையே போதகர் மார்டினின் வாழ்நாள் பணியாக மாறியது. அடுத்த நாற்பத்தி ஆறு ஆண்டுகளுக்கு அவர் தனது முழு பலத்தையும் திறமைகளையும் இந்தப் பணியில் ஊற்றினார். நியூ ஜெர்சியின் கால்டுவெல்லில் ‘கிராக்கர் பாக்ஸ்’ (Cracker Box) என்று அன்போடு அழைக்கப்பட்ட வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு சிறிய கட்டடத்தில் சிறிய தொடக்கமாக ஆரம்பித்த சபை, நியூ ஜெர்சியின் மான்ட்வில்லில் (Montville, NJ) ஒரு கிறிஸ்தவப் பள்ளியையும் உள்ளடக்கிய இன்றைய பெரிய கட்டட வளாகமாக வளர்ந்தது. உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற விசுவாசிகளின் மனதில் திரித்துவ பாப்திஸ்து சபையின் பெயரும் அல்பர்ட் மார்டினின் பெயரும் இணைபிரியாதவையாக மாறின. (இக்கட்டுரையை எழுதும் என்னைப்போல) உலகெங்கும் உள்ள பலர் கிறிஸ்துவின் இந்த ஊழியக்காரரின் ஊழியத்திற்கும், அவர் உண்மையோடு வழிநடத்திய சபைக்கும் ஈடுகட்ட முடியாத கடன்பட்டிருக்கிறார்கள்.
உலகளாவிய தாக்கமும் போதகர்களுக்கான ஊழியமும்
எர்னஸ்ட் ரைசிங்கர் போதகர் மார்டினுக்குப் புத்தகங்களை மட்டுமல்ல, அவரது வாழ்க்கையை வடிவமைக்கக்கூடிய மனிதர்களையும் அறிமுகப்படுத்தினார். குறிப்பாக இயன் எச். மரே (Iain H. Murray) மற்றும் பேராசிரியர் ஜோன் மரே (John Murray) ஆகியோர். இவர்களின் நட்பின் விளைவாக, போதகர் மார்டின் தனது முற்பத்தி நான்காவது வயதில், இங்கிலாந்தின் லெஸ்டரில் நடந்த ‘பேனர் ஆஃப் ட்ரூத் போதகர்கள் மாநாட்டில்’ (Banner of Truth Ministers’ conference) முதன்முறையாகப் பிரசங்கிக்க அழைக்கப்பட்டார். 1967ம் ஆண்டு நடைபெற்ற அம்மாநாட்டின் மூன்று மாலைக் கூட்டங்களில் பேசுவதற்குப் பேராசிரியர் ஜோன் மரே அழைக்கப்பட்டபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார்:
“அல் மார்டின் (Al Martin) அங்கு வருவதாக இருந்தால், எனக்கு ஒதுக்கிய மூன்று மாலைக் கூட்டங்களையும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் கேள்விப்பட்ட பிரசங்கியார்களிலேயே அவர் மிகவும் திறமையான மற்றும் உள்ளத்தைத் தொடும் மிகச்சிறந்த பிரசங்கியாராவார். சமீபத்திய ஆண்டுகளில் அவருக்கு நிகரான ஒருவரை நான் கேட்டதில்லை. பிரசங்கியார்களைப் பற்றிய எனது நினைவு அறுபது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறது. எனவே, அவர் மிகவும் திறமையானவர்களில் ஒருவர் என்று நான் கூறும்போது, அது கடந்த கால மற்றும் நிகழ்காலத்தின் மிகவும் மறக்க முடியாத பிரசங்கியார்களை உள்ளடக்கிய ஒரு மதிப்பீடாகும்.”
போதகர் மார்டினின் பிரசங்க வரங்கள் உலகெங்கிலும் உள்ள குடும்ப மாநாடுகள், போதகர்கள் மாநாடுகள் மற்றும் ஏனைய கூட்டங்களால் தொடர்ந்து நாடப்பட்டன. ‘திரித்துவ பிரசங்க மேடை’ (Trinity Pulpit, 1971-ல் தொடங்கப்பட்டது) இதன் மூலம் அவரது பிரசங்க ஊழியம் பன்மடங்கு பெருகியது. போதகர் மார்டினின் பதிவு செய்யப்பட்ட பிரசங்கங்களின் 8,00,000க்கும் அதிகமான கேசட்டுகள் உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டன. 1977ல் திரித்துவ பாப்திஸ்து சபையின் ஒரு ஊழியமாக ‘டிரினிட்டி மினிஸ்டீரியல் அகாடமி’ (Trinity Ministerial Academy) தொடங்கப்பட்டது. போதகர் மார்டின், அந்த அகாடமி 1998-ல் மூடப்படும் வரை அங்கு பயின்ற தலைமுறை தலைமுறையாக வந்த மாணவர்களுக்குப் ‘போதக இறையியலைக்’ (Pastoral Theology) கற்பித்தார்.
இத்தகைய பலதரப்பட்ட பொது ஊழியங்களுடன், போதகர் மார்டின் ‘போதகர்களின் போதகராகவும்’ திகழ்ந்தார்; ஏனெனில் ஊழியர்கள் போதக ஊழியத்தின் அனைத்து அம்சங்களிலும் அவரது ஆலோசனையை நாடினர். அவர் ஒரு சுறுசுறுப்பான மற்றும் மனச்சாட்சியுள்ள கடிதத் தொடர்பாளராக இருந்தார். தனது மேசைக்கு வந்த ஒவ்வொரு கேள்விக்கும் தனிப்பட்ட முறையில் அவர் கவனமாகப் பதிலளித்தார். அதோடு, அவரது ஞானமும் ஊக்கமும் தேவைப்பட்ட போதகர்களுக்குத் தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்குவதில் எண்ணற்ற மணிநேரங்களைச் செலவிட்டார். இதன் விளைவாக, அவரும் அவரது சக மூப்பர்களும் இணைந்து ஒரு வருடாந்தர போதகர்கள் மாநாட்டைத் தொடங்க முடிவு செய்தனர். இதன் மூலம் அவரிடம் ஆலோசிக்கப்படும் தொடர்ச்சியான பிரச்சினைகளுக்குக் குறைந்த நேரத்தில் தீர்வு காண முடிந்தது. இந்த மாநாடு இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மேலும் இதில் தவறாமல் கலந்துகொள்ளும் பலருக்கு இது வருடத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது.
ஒரு தனிப்பட்ட சாட்சியம்
நான் தனிப்பட்ட முறையில் பேசுவதானால், திரித்துவ பிரசங்க மேடை ஒலிநாடாக்கள் மூலமாகவே போதகர் மார்டினை முதன்முதலில் அறிந்துகொண்டேன். நான் செமினரியில் (Seminary) சேருவதற்கு முந்தைய ஆண்டில் போதக இறையியல் குறித்த அவரது 90-க்கும் மேற்பட்ட விரிவுரைகளைக் கேட்டேன். அவை எனது முறையான ஊழியப் பயிற்சிக்கு ஒரு சிறந்த ஆயத்தமாக அமைந்தன. போதகர் மார்டின் போதக இறையியல் தொடர்பான ஒவ்வொரு முக்கியமான நூலையும் படித்து, அவற்றிலுள்ள ஒவ்வொரு ஞானத்தின் முத்தையும் தோண்டி எடுத்தது மட்டுமல்லாமல், அவற்றின் செல்வங்களைச் சுருக்கித் தனது விரிவுரைகள் முழுவதும் பிணைத்திருப்பது போலத் தோன்றியது. தலைப்பு எதுவாக இருந்தாலும், போதகர் மார்டின் வேதாகமத்தின்படி உண்மையுள்ள மற்றும் நடைமுறைக்கேற்ற ஞானமுள்ள ஆலோசனைகளை வழங்கினார். யாருடைய குரலும் போதனையும் எனக்கு மிகவும் பரிச்சயமானதோ, அந்த மனிதரை ஒரு நாள் சந்தித்து திரித்துவ போதகர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் எர்வர்ட் டொன்னலியின் (Ted Donnelly) அன்பான வற்புறுத்தலால் நான் ஒவ்வொரு ஆண்டும் கலந்துகொண்டு, அந்த விரிவுரைகளுக்குப் பின்னால் இருந்த மனிதரை அறிந்துகொண்டேன்.
அந்த விரிவுரைகளின் ஒவ்வொரு வார்த்தையும், பல தசாப்த கால உண்மையுள்ள ஊழியத்தின் மூலம் போதக அனுபவம் எனும் பட்டறையில் செதுக்கப்பட்டது என்பதையும், இந்த விரிவுரைகள் கற்பிக்கப்படுவதற்கு முன்பே அவை வாழ்க்கையில் நிதர்சனமாகக் காணப்பட்டன என்பதையும் நான் கண்டுகொண்டேன். போதகர் மார்டின் அவற்றை எழுத்து வடிவில் கொண்டு வந்து, வருங்காலப் போதகர்களுக்காகத் தனது மூன்று தொகுதிகள் கொண்ட ‘போதக இறையியல்’ (Pastoral Theology) நூலில் ஒரு அழியாத பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார் என்பதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஒவ்வொரு பக்கமும் போதகர் மார்டினின் சொந்த வாழ்க்கை மற்றும் ஊழியத்தைப் பார்க்கும் ஒரு சாளரமாகத் திகழ்கிறது: நான் அரிதாகவே கண்ட ஒரு சீரான தன்மையுடன், தான் கற்பிக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் அவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடிக்க முயன்றார். அவருடைய சொந்தக் குணமும், ஊழியமும், அவருடைய போதனையை உறுதிப்படுத்துகின்றன, மேலும் அவர் அடிக்கடி மேற்கோள் காட்ட விரும்பிய ஒரு பழமொழியை அது உதாரணமாக்குகிறது: “ஒரு ஊழியக்காரனின் வாழ்க்கையே அவனது ஊழியத்தின் வாழ்க்கை.”
முடிவுரை
இருப்பினும், மொன்ட்வில்லிலும் சரி, உலகெங்கிலும் சரி, போதகர் மார்டின் ஒரு சிறந்த பிரசங்கியாகவே பெரிதும் பயன்படுத்தப்பட்டார். பிரசங்க மேடையில் அவருடைய அனைத்து வரங்களும் குணங்களும் முழுமையாக வெளிப்பட்டன. ஒரு வாழ்நாள் முழுவதும் ஜெபம் மற்றும் கடின உழைப்பின் மூலம் வேதப்பகுதிகளை ஆராய்ந்து அவர் பெற்ற புரிதல், பிரசங்க மேதைகளின் நூல்களைப் பல தசாப்தங்களாக வாசித்ததன் மூலம் பலப்படுத்தப்பட்ட அவரது இயல்பான பேச்சுத்திறன், அவரது மனதின் தெளிவு, அவரது வாதத்தின் சக்திவாய்ந்த தர்க்கம், சத்தியத்திற்கான அவரது தீவிர வைராக்கியம், அவரது கர்த்தர் மீதான பக்தி மற்றும் அவர் பிரசங்கித்த மக்கள் மீதான அன்பு ஆகியவை அதில் வெளிப்பட்டன. ராபர்ட் மரே மெக்செயின் (Robert Murray M’Cheyne) என்பவரைக் குறித்துச் சொல்லப்பட்டதை அவர் மேற்கோள் காட்டுவது வழக்கம்: “அவர் நீங்கள் மறுபிறப்பு அடைய வேண்டும் என்பதற்காகத் தனது உயிரையே கொடுப்பது போலப் பிரசங்கித்தார்”; போதகர் மார்டின் நீங்கள் மறுபிறப்பு அடைய வேண்டும் அல்லது பரிசுத்தமடைய வேண்டும் என்பதற்காகத் தனது உயிரையே கொடுப்பது போலப் பிரசங்கித்தார். மேலும் அவரது பிரசங்கத்திற்கு ஆதரவாக இருந்தது, தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக ஒரு தூய்மையான மனசாட்சியைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஒரு மனிதனின் மிக உன்னிப்பான சீரான வாழ்க்கைமுறையாகும். தேவனுடைய கிருபையால் அவர் தனது ஓட்டத்தை நன்றாய் முடித்து, இறுதிவரை அந்தத் தூய்மையான மனசாட்சியைக் காத்துக்கொள்ள முடிந்தது.
“தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.” (எபிரெயர் 13:7)
“அல் மார்டினின் பிரசங்கம் ஆழமான வேத அடிப்படையிலானது, அழுத்தமானது... அவர் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறார்”
ஜோன் மெக்காத்தர்
“நான் அல் மார்டினை மிகவும் மதிக்கிறேன், அவருடைய ஊழியத்தின் உலகளாவிய செல்வாக்கை நான் கண்டிருக்கிறேன். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் சீரான தன்மையும் எளிமையும் அவரது சிறப்பம்சங்கள்-அவர் பிரசங்க மேடையில் எப்படியோ அப்படித்தான் அன்றாட வாழ்க்கையிலும் இருக்கிறார்”
இயன் மரே, கிறிஸ்தவ வரலாற்றறிஞர்
“அவருடைய பிரசங்கம் வல்லமையானது, உணர்ச்சிமிக்கது, வேத ஆய்வின்படி உறுதியானது, சமநிலையானது, தெளிவான கட்டமைப்புடையது, நடைமுறை வாழ்க்கையில் ஊடுருவக்கூடியது. அவரால்தான் ஆழமான விஷயங்களை எளிமையோடு இணைக்க முடிந்தது, இதனால் அனைவரும் போஷிக்கப்பட்டனர். நன்கு வேதமறிந்த விசுவாசிகள் முதல் அவிசுவாசிகள் வரை, அனைத்து வயது மற்றும் சமூகப் பின்னணியைக் கொண்ட பல நாட்டு மக்களை அவர் பிரசங்கத்தால் தொடுவதை நான் கண்டிருக்கிறேன். அவருடைய ஊழியம் பெரும்பாலும் பரிசுத்த ஆவியானவரின் ஒரு தனித்துவமான அபிஷேகத்தோடு கூடியதாக இருந்தது.”
எர்வர்ட் டொன்னலி, மறைந்த சீர்திருத்த போதகர்