திருமறைத்தீபம் 2011 -ம் ஆண்டு முதல் இதழ்
1. வாசகர்களே!
2. பிரசங்கத்தில் எளிமை
3. பிரியாவிடை பிரசங்கங்கள்-6
4. தாம்பத்திய உறவில் நெருக்கம்
வாசகர்களே!
புதிய வருடம் ஆரம்பமாயிருக்கிறது. கர்த்தரின் வருகை சமீபிக்கிறது என்பதை நிச்சயம் அது நினைவூட்டாமலில்லை. இருந்தபோதும் கர்த்தரின் சத்தியமும், சபையும் தமிழினத்தில் இன்னும் காலூன்றி ஆல்போல் தளைத்து வளரவில்லையே என்ற ஆதங்கமும் தொடர்ந்து இருந்து வருகின்றது. இந்தப் புதிய வருடத்தில் சத்தியம் நம்மினத்து மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் உழைத்து வரும் எங்களுக்கு கர்த்தர் கிருபை பாராட்ட தொடர்ந்து ஜெபியுங்கள்.
இந்த இதழில் போதக நண்பர் அல்பர்ட் என். மார்டின் தன் ஆக்கத்தில் ஓய்வுநாள் அநுசரிப்பின் அவசியத்தை அருமையாக விளக்கியிருக்கிறார். ஓய்வுநாளை கடவுள் பக்தியோடு முறையாக அநுசரிப்பதில் நம்மினத்து மக்கள் அக்கறை காட்டுவதில்லை. அந்தளவுக்கு அதுபற்றி வேத அறிவில்லாமல் இருந்து வருகிறார்கள். அது அவசியமில்லை என்ற அறிவீனமும் அநேகருக்கு இருந்து வருகிறது. கர்த்தர் இந்த ஆக்கத்தின் மூலம் உங்கள் இருதயத்தைத் தொடட்டும்; ஓய்வுநாளை நீங்கள் ஒழுங்கோடு பின்பற்ற உதவட்டும்.
ஜே.சி. ரைல், பிரசங்கத்தில் இருக்க வேண்டிய எளிமை பற்றி தெளிவாக தன் ஆக்கத்தில் விளக்கியிருக்கிறார். முதல் தடவையாக 1888ல் வெளியிடப்பட்ட இந்த ஆக்கம் இன்றைய காலகட்டத்தில் எழுதப்பட்டதைப் போல அத்தனைத் தெளிவாகவும், அவசியமானதாகவும் இருக்கிறது. பிரசங்கம் வேதரீதியில் அமைந்ததாக, சத்தானதாக இருக்க வேண்டும். அத்தோடு ஆத்துமாக்களுக்கு புரியும் வகையில் நிகழ்கால சொல் வழக்கையும், சொற்சுருக்கத்தையும் கொண்டு எளிமையோடு இருக்க வேண்டும். இளம் பிரசங்கிகள் பல முறை இதை வாசித்து நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் அவர்களுடைய பிரசங்கங்கள் ஆத்துமாக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
இந்த இதழ் நேரத்தோடு வெளிவர துணை நின்ற அருமை நண்பர்களுக்கு என் நன்றிகள். இணைய தளத்திலும் மாற்றங்களை செய்து வருகிறோம். www.biblelamp.org/ english எனும் புதிய தளத்தை பார்க்கத் தவறாதீர்கள். பல நாடுகளில் இருந்து பத்திரிகையை நேரில் பெற்றும், இணைய தளத்தில் வாசித்தும் பயன்பெற்று வருகிற வாசகர்கள் அனைவருக்கும் எங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- ஆசிரியர்.
பிரசங்கத்தில் எளிமை
(J.C. Ryle)
“அநேகம் புத்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை” என்று பிரசங்கி 12:12ல் ஞானியாகிய சாலமோன் குறிப்பிடுகிறார். பிரசங்கம் செய்வதைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களின் தொகை இந்தக் கூற்று உண்மையென்றே நிரூபிக்கிறது. பிரசங்கம் செய்வது எப்படி என்று ஊழியக்காரர்களுக்காக எழுதப்பட்டிருக்கும் புத்தகங்களை மாத்திரம் வைத்து ஒரு நூலகத்தையே உருவாக்கிவிடலாம். இந்த புத்தகத்தின் மூலமாக அந்த பட்டியலில் நானும் ஒரு சிறிய பங்கெடுக்கிறேன். பிரசங்கம் செய்வதில் இருக்க வேண்டிய ஒரு குணாதிசயத்தை மாத்திரம் நான் இதில் குறிப்பிடப் போகிறேன். அதில் இருக்க வேண்டிய ஆழமான கருத்துக்கள், பக்தி சிரத்தை, சுவாரஸ்யமான நடை, உற்சாகம் இவைகளைப் பற்றி நான் இதில் ஒன்றும் சொல்லப் போவதில்லை. அதுபோல பிரசங்கம் எழுதி வைக்கப்பட்டு பிரசங்கிக்கப்பட வேண்டுமா அல்லது எந்நேரத்திலும் முன் ஆயத்தமில்லாமல் செய்வதற்கு தயாராயிருப்பது சிறந்ததா என்பதைக் குறித்தெல்லாம் நான் இங்கே கருத்துத் தெரிவிக்கப் போவதில்லை. ஒரேயொரு விஷயத்தை மாத்திரமே நான் இதில் எடுத்துக் கூறப்போகிறேன். அநேகமாக யாருமே அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அது என்னவென்றால், பிரசங்கத்தில் காணப்பட வேண்டிய எளிமையான நடைமுறையாகும்.
என்னுடைய நடைமுறை அனுபவத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்வேனாகில் அது ஒருவேளை உங்களுக்கு உபயோகமாக இருக்கலாம். நான் 45 ஆண்டுகளுக்கு முன்னதாக என் பிரசங்க ஊழியத்தைத் தொடங்கினேன். என்னுடைய ஊழியத்தின் ஆரம்பகால கட்டங்களில் நான் சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும், கூலி வேலையில் ஈடுபடுபவர்களுக்கும் பிரசங்கிக்க வேண்டியதாக நேர்ந்தது. அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்து, அவர்களுக்கு ஒரு காரியத்தை விளங்க வைப்பதிலுள்ள சிரமங்களை நான் நன்றாக அறிவேன். மொழித் திறனையும், இலக்கியத்தரம் வாய்ந்த நடையையும் பொறுத்த அளவில் நான் மிகவும் படித்தவர்களின் மத்தியிலோ, பல்கலைக்கழகங்களிலோ அல்லது நாடாளுமன்றக் கூட்டங்களிலோகூட மிகவும் சுலபமாக பேசிவிடுவேன். ஆனால் இப்படிப்பட்ட விவசாயிகளின் மத்தியில் அவர்கள் விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் பேசுவதில் அதிக சிரமப்படுவேன். அதிலும் ஒரு கடுமையான வெயில் நாளின் மத்தியான வேளையிலே பிரசங்கிக்க வேண்டுமானால் எப்படியிருக்கும்? ஒரு விவசாயி, ‘எனக்கு ஞாயிற்றுக் கிழமைகள்தான் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நான் அன்றைக்கு ஆராதனைக்குப் போய், எதைக் குறித்தும் யோசிக்காமல், எந்த வேலையும் செய்யாமல் நாற்காலியில் வசதியாக அமர்ந்து கொண்டு நன்றாக ஓய்வெடுக்கலாம் பாருங்கள்’ என்று கூறினாராம். இப்போது ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் உங்களில் சிலர் ஒருவேளை எப்போதாவது கிராமங்களுக்குச் சென்று இப்படிப்பட்ட சபை மக்களிடம் பிரசங்கிக்கும்படியாக அழைக்கப்படலாம். என்னுடைய இந்த அனுபவங்கள் உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்குமானால் நான் சந்தோஷப்படுவேன்.
அதற்கு முன் முகவுரையாக நான் உங்கள் முன்னால் நான்கு முக்கியமான கருத்துக்களை வைக்க விரும்புகிறேன்.
- இந்த செய்தியை வாசிக்கின்றவர்களாகிய அனைவரும் ஒன்றை நினைவிற்கொள்ள வேண்டும். ஆத்துமாக்களுக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டுமென விரும்புகிற ஒவ்வொரு பிரசங்கியும் எளிமையாக பிரசங்கிக்க வேண்டியதையே தனது மிக முக்கியமான குறிக்கோளாகக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. நீங்கள் எளிமையாகப் பிரசங்கிக்காவிட்டால் நீங்கள் கூறுவதை யாரும் புரிந்துகொள்ளப் போவதில்லை. ஒருவரும் புரிந்துகொள்ளாவிட்டால் உங்கள் ஊழியத்தினால் எந்த நன்மையும் இல்லை. “மற்றவர்கள் விளங்கிக்கொள்கிறார்களா என்பதில் உங்களுக்கு அக்கறையில்லையென்றால், நீங்கள் அலட்சியப்படுத்தப்படுவதைத் தவிர்க்க முடியாது” என்கிற ஒரு பழமொழி உண்டு. ஓர் ஊழியனின் பிரதானமான குறிக்கோள் சத்தியத்தை உண்மையாக உள்ளது உள்ளபடி, கிறிஸ்து வெளிப்படுத்தியுள்ள பிரகாரமாகவே எடுத்துக் கூற வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அதற்கு அடுத்தபடியாக அவன் மிகுந்த கவனத்தை செலுத்த வேண்டியது, தான் கூறுவது அனைவருக்கும் விளங்குகிறதா என்று பார்த்துக்கொள்வதுதான். பிரசங்கம் எளிமையாக இல்லாவிட்டால், பெரும்பாலானவர்களுக்கு அது புரியாமல் போய்விடும்.
- அடுத்தபடியாக நான் சொல்ல விரும்புவது, பிரசங்கிப்பதில் எளிமையைக் கடைப்பிடிப்பதென்பது இலேசான காரியம் அல்ல. அதை இலகுவான காரியமாக எண்ணிக்கொள்வது மிகவும் தவறானதாகும். ஒரு பிஷப் (Archbishop Ussher) இதைக் குறித்து கூறிய கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியது, ‘கடினமான காரியங்களை கடினமான விதத்தில் விளக்குவது என்பது எல்லோரும் செய்யக்கூடியதே. ஆனால், அவைகளை, கேட்பவர்கள் விளங்கிக்கொள்ளத்தக்க வகையில் எளிமையாகவும், புத்திசாலித்தனமாகவும் எடுத்துரைப்பதென்பது ஒரு சில பிரசங்கியாருக்கே கை வந்த கலையாகும்.’ தூய்மைவாதிகளில் மிகவும் ஞானமுள்ளவராகிய ஒருவர் 200 ஆண்டுகளுக்கு முன்னதாக பின்வருமாறு கூறியிருக்கிறார், “அநேகமான பிரசங்கிகள் மக்களின் காதுகளுக்கு போகாமல் அவர்களுடைய தலைகளுக்கு மேலாக போகும் வகையிலேயே பிரசங்கிக்கிறார்கள்”. இது 1887ல் நிருபணமாயிற்று! பிரசங்கிகளாகிய நாங்கள் பிரசங்கிப்பதில் பெரும்பாலான காரியங்கள் அநேகருக்கு விளங்கவில்லை என நான் பயந்தது போலவே ஆயிற்று. நாங்கள் ஏதோ கிரேக்க பாஷையில் எதையோ சொல்வது போல ஜனங்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் எளிமையான செய்தியைக் கேட்கும்போதோ அல்லது நன்கு விளங்கும் வகையில் எழுதப்பட்ட கைப்பிரதியைப் படிக்கும்போதோ, ‘ஆம் எவ்வளவு உண்மை! இவர் கூறுவது எனக்கு நன்றாக விளங்குகிறதே!’ என உணர்ந்து சொல்லுவார்கள். ஆகவே எழுதும் போதும் வாசிக்கிறவர்கள் விளங்கிக்கொள்ளும் வகையிலே எழுதுவதுதான் சிறந்தது. ஆழ்ந்த கருத்துக்களை எளிமையாகவும், இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய வகையிலும், தெளிவாகவும் எழுதுவதென்பது லேசான காரியமல்ல. கிளெப்பம் (Clapham) என்கிற இடத்திலே ஊழியராயிருந்த சார்ல்ஸ் ப்ராட்லி (Charles Bradley) என்பவரின் பிரசங்கங்களை படித்துப் பார்த்தால் தெரியும், எவ்வளவு அருமையாக அவர் சத்தியத்தை விளக்கியிருக்கிறார் என்பது. அவைகள் மிகவும் எளிமையாகவும், இயல்பாகவும், படிப்பவர்களுக்கு அதன் கருத்தை உடனடியாகத் தெள்ளத் தெளிவாக விளங்கிக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. அவர் சரியான பதங்களை சரியான இடங்களில் அருமையாக உபயோகித்திருப்பார். ஆனால் ஒவ்வொரு பிரசங்கத்தை தயாரிப்பதற்கும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சி சாதாரணமானதல்ல. அதற்காக கடினமாக உழைத்திருக்கிறார். உண்மையில் சொல்லப்போனால், படிப்பவர்களை ‘ஆஹா! எவ்வளவு நேர்த்தி!, என்ன சொல்நயம்!’ எனக் கூறவைக்கும் வகையில், மிகவும் மேலான நடையில், கடினமான வார்த்தைப் பதங்களை உபயோகித்தும், நீண்ட வாக்கியங்களை அமைத்தும் பிரசங்கங்கள் எழுதுவதென்பது மிகவும் சுலபமான காரியமாகும். ஆனால் கேட்பவர்களின் இருதயத்தில் தைத்து, ஆழமாகப் பதியத்தக்க வகையில் பேசுவதோ எழுதுவதோ எளிதில் அடையக்கூடிய ஒன்றல்ல. கேட்பவர்கள் விருப்பத்தோடு கேட்டு, அதை நன்றாக விளங்கிக்கொண்டு, என்றுமே மறக்காத வண்ணமாக மனதில் உள்வாங்கிக்கொள்கிற வகையில் பிரசங்கங்கள் இருக்க வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். அந்த இலக்கை அடைவதென்பது மிகவும் கடினந்தான். ஒருசிலர்தான் அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
- மூன்றாவதாக, எளிமையான பிரசங்கம் என நான் குறிப்பிடுவது சிறு பிள்ளைகளுக்குக் கதை சொல்லுவதைப் போன்ற விளையாட்டுத்தனமான பிரசங்கத்தை அல்ல. தங்களை ஒன்றையும் விளங்கிக்கொள்ள முடியாத அறிவீனர்கள் என்று கருதி, குழந்தைத்தனமான விஷயங்களையே நம் முன் சொல்லுகிறார்கள் என்று கேட்கிறவர்கள் எண்ணிவிட்டார்களானால் அவர்களுக்கு நாம் எந்த நன்மையையும் செய்ய முடியாதவர்களாகி விடுவோம். முட்டாள்களுக்குச் சொல்லுவது போன்ற தோரணையில் நாம் செய்தியைப் பிரசங்கித்தோமானால் அதில் மக்களுக்கு விருப்பம் இருக்காது. தங்களை சகமனிதர்களாக பாவிக்காமல், அறிவில் குறைவுள்ளவர்களைப் போல நடத்துவதை மனிதர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. அப்படி பிரசங்கித்தோமானால் அவர்கள் உடனடியாக தங்கள் காதுகளை அடைத்துக் கொண்டு, கோபித்துக் கொண்டு, நாம் சொல்வதைக் கேட்காமல் போய்விடுவார்கள். பிறகு நாம் வீணாக பேசிக்கொண்டிருப்பவர்களாகக் காணப்படுவோம்.
- முரட்டுத்தனமான, பண்பாடற்ற, அநாகரீகமான முறையில் பிரசங்கம் செய்வது சரியல்ல. எளிமையான வகையில், நாகரீகமான முறையில், மரியாதையோடும், கண்ணியமாகவும் பிரசங்கத்தை அளிப்பது சாத்தியமே. கல்வியறிவற்ற மக்கள், தங்களிடம் பிரசங்கிக்க கல்வியறிவற்ற ஒருவரே வரவேண்டும் என எதிர்பார்ப்பார்கள் என்பது தவறான கருத்தாகும். பெரிய பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்ற ஒருவர் தங்கள் மத்தியில் வந்து வேதாகமத்தைப் பிரசங்கிப்பதைக் காட்டிலும் படிப்பறிவற்ற ஒரு சாதாரண பிரசங்கி வந்து தங்களிடம் பிரசங்கிப்பதையே கிராம மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நினைப்பது முற்றிலும் தவறு. வேறு யாருமே கிடைக்காதபட்சத்தில்தான் ஜனங்கள், பண்பாடற்ற முரட்டுத்தனமாக பேசக்கூடிய பிரசங்கிகளை வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டு கேட்பார்கள்.
நான் கூறப்போகிற செய்திக்கு பிரயோஜனமாக இருக்கும்படிக்கு இவைகளை முகவுரையாக உங்களுக்குக் கூறினேன். இப்போது, எளிமையாக பிரசங்கிப்பதை செய்யக்கூடிய ஐந்து வழிமுறைக் குறிப்புகளை உங்கள் முன்னதாக வைக்க விரும்புகிறேன்.
- உங்கள் பிரசங்கம் எளிமையாக இருக்கவேண்டுமென நீங்கள் விரும்பினால், பேசப்போகும் பொருளைக் குறித்து நீங்கள் முதலில் நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்துமாறு நான் அறிவுறுத்துகிறேன். நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிற ஐந்து வழிமுறைகளில் இதுதான் மிகவும் முக்கியமானது. நீங்கள் பேசுவதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிற வசனங்களை நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள். அந்த வசனம் எந்தக் கருத்தை விளக்குகிறது என்பதை ஊடுருவிக் கவனியுங்கள். அதன் மூலமாக நீங்கள் எதை நிரூபிக்க விரும்புகிறீர்கள் என்பதைக் குறித்த தெளிந்த அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும். எதைப் போதிக்க விரும்புகிறீர்கள் என்பதை சிந்தித்துக்கொள்ளுங்கள். உங்கள் பிரசங்கத்தின் மூலமாக எதை நிலைநிறுத்த விரும்புகிறீர்கள் என்பதையும், செய்தியைக் கேட்கிற மக்கள், எந்த விஷயத்தை தங்கள் உள்ளத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் குறித்த சிந்தையோடு பிரசங்கத்தை தயார் செய்யுங்கள். உங்களுக்கே குழப்பமாக இருக்கின்ற ஒரு காரியத்தை எடுத்து நீங்கள் பேசுவீர்களானால், அதைக் கேட்கின்ற மக்களை இன்னமும் இருளில் தள்ளுகிறவர்களாகக் காணப்படுவீர்கள். சிசேரோ (Cicero) என்கிற பழங்காலத்து சொற்பொழிவாளர் ஒருவர் கூறினார்: “தனக்கே சரியாக விளங்காத ஒரு காரியத்தை ஒருவனாலும் தெளிவாகவும் தங்குதடையில்லாமலும் பேச இயலாது.” இது மிகவும் உண்மை என நான் நம்புகிறேன். வெட்லீ (Whately) என்கிற ஆர்ச்பிஷப் மனிதரின் தன்மையை மிகவும் நன்றாக ஆராய்ந்து வைத்திருந்தவர். அதிலும் அவர் பிரசங்கிகளைக் குறித்துக் கூறியுள்ள பின்வரும் கருத்து மிகவும் சரியானது -“இவர்களில் பெரும்பாலானவர்கள் எந்த நோக்கமும் கொண்டிராமல் பேசுகிறவர்களாகக் காணப்படுகிறார்கள். அவர்கள் எதையும் சாதிக்க வேண்டும் என்கிற இலக்கு இல்லாமல் இருக்கிறார்கள். தெரியாத தீவுக்குள்ளே நுழைந்து, எங்கு செல்கிறோம் என்கிற குறிக்கோளே இல்லாமல் பிரயாணம் மேற்கொள்கின்ற அறிவற்ற பிரயாணிகள் போல செயல்படுகிறார்கள். குறிக்கோளற்ற நிலைமையிலேயே அவர்கள் வாழ்நாள் முழுவதும் பயணம் செய்கிறவர்களாகக் காணப்படுகிறார்கள்.”
இந்த முதலாவது வழிமுறையை விசேஷமாக இளம் பிரசங்கிகள் மிகுந்த கவனத்தோடு கடைப்பிடிக்கும்படியாக நான் மீண்டுமாக வலியுறுத்துகிறேன். “உங்களுடைய பிரசங்கத்தின் கருத்தை நீங்கள் முதலாவதாக நன்றாக அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு சரியாக விளங்காத வசனபகுதியை ஒருபோதும் பிரசங்கிப்பதற்கென எடுத்துக்கொள்ளாதீர்கள்.” மறைபொருளாக உள்ள வசனபகுதிகளை பிரசங்கத்திற்கென எடுத்துக்கொள்ளாதீர்கள். அத்தோடு, இன்னும் நிறைவேறாத மறைபொருள் தீர்க்கதரிசனப் பகுதிகளைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். சாதாரண மக்கள் நிறைந்த சபையில் ஒருவன் வெளிப்படுத்தல் புத்தகத்தில் காணப்படுகின்ற முத்திரைகளைக் குறித்தும், கலசம், எக்காளம் ஆகியவற்றைக் குறித்தும், எசேக்கியலின் ஆலயத்தைக் குறித்தும், முன்குறித்தல், மனிதனின் சுயசித்தம், கடவுளின் நித்திய குறிக்கோள் இவைகளைக் குறித்துமே தொடர்ந்து பிரசங்கித்து வருவானென்றால் அவனை எளிமையாக பிரசங்கிப்பவனாக யாரும் கருத முடியாது. இவைகளைக் குறித்துப் பேசவே கூடாது என நான் கூறவில்லை. தகுந்த சந்தர்ப்பங்களில், அவைகளை விளங்கிக்கொள்ளக்கூடிய மக்கள் இருக்கின்ற சூழ்நிலையில் அவைகளைக் குறித்து அவ்வப்போது பிரசங்கிக்கலாம். நான் என்ன சொல்ல வருகிறேனென்றால் அவை யாவும் ஆழ்ந்த கருத்துக்கள் நிரம்பியவை. அவைகளை மிகவும் எளிமையாக பிரசங்கிப்பது கடினமானது. எளிமையான பிரசங்கம் செய்ய வேண்டுமானால் எளிமையான வசனப் பகுதிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வேதாகமத்தில் எளிமையாக விளக்கக் கூடிய பகுதிகள் நூற்றுக்கணக்கில் காணப்படுகிறன.
அதுமாத்திரமல்ல, கவர்ச்சிகரமாகத் தோன்றுகின்ற வசனபகுதிகளைத் (Accomodated text) தெரிந்து கொண்டு, அவைகளிலிருந்து, பரிசுத்த ஆவியானவர் சொல்லியிருக்காத, வேறு வகையான அர்த்தங்களை நீங்களாகவே கற்பனை செய்து கொண்டு, உங்கள் சொந்தக் கருத்துக்களை அவ்வசனங்களில் திணித்து ஜனங்களுக்குப் பிரசங்கிக்கப் பார்க்காதிருங்கள். ஆத்துமாக்களின் நலத்திற்குத் தேவையான சகல கருத்துக்களும் மிகவும் எளிமையாகவே வேதத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆத்துமாக்கள் பேணிக் காக்கப்பட அவைகளைத் தவிர்த்த வேறு கவர்ச்சிகரமான பிரசங்கங்கள் தேவையில்லை. ஆகவே எந்தப் பிரசங்கியும் கடினமான வசனபகுதிகளை எடுத்துக்கொண்டு, ஒரு பல் மருத்துவர் பல்லைப் பிடுங்குவது போல, கஷ்டப்பட்டு அதிலிருந்து புதிதான அர்த்தங்களை தோண்டி எடுத்துக்கூற வேண்டிய அவசியமில்லை. வேதாகமம் நேரடியாகத் தெரிவிக்கிற கருத்துக்களை மக்களுக்குப் பிரசங்கித்தால் போதுமானது. பிரசங்கம் மிகவும் கவர்ச்சிகரமாகவும், ஞானமுள்ளதாகவும் இருப்பது போலத் தோன்றப் பண்ணலாம். ஜனங்கள் அதைக் கேட்டு, ‘ஆஹா, எவ்வளவு விஷயங்கள் இதில் பொதிந்துள்ளது. நமக்கு சிறந்த கல்விமான் பிரசங்கியாகக் கிடைத்திருப்பது நம் பாக்கியம்’ என்றுகூட கூறிவிட்டுப் போகலாம். ஆனால், நன்றாக ஆராய்ந்து பார்த்தார்களானால் அந்தப் பிரசங்கம் தேவனுடைய வார்த்தையின்படி இருந்திருக்காது, வசனமும் பிரசங்கத்தை ஆளுகை செய்யாது. அவர்கள் மனதில் குழப்பமடைவார்கள். வேதாகமமானது மிகவும் ஆழ்ந்த அர்த்தங்களை உள்ளடக்கிய புத்தகம், அதை ஒருவராலும் நன்றாக விளங்கிக்கொள்ள முடியாது என்கிற முடிவுக்கு ஜனங்கள் வந்துவிடுவார்கள். ஆகவே நீங்கள் எளிமையாக பிரசங்கிக்க விரும்பினால் கவர்ச்சிகரமாகத் தோன்றக்கூடிய வசனபகுதிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
கவர்ச்சிகரமாகத் தோன்றக்கூடிய வசனபகுதி என நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்பதை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறேன். இந்த மாதிரியாகப் பேசுவதில் பிரபலமான ஒரு பிரசங்கியை நான் அறிவேன். ஒருமுறை அவர் பேசுவதற்கு எடுத்துக்கொண்ட வசனம் ஏசாயா 40:20 “அதற்குக் கொடுக்க வகையில்லாதவன் உளுத்துப் போகாத மரத்தைத் தெரிந்துகொண்டு . . .” என்பது அந்த வசனம். இந்த வசனத்தை பயன்படுத்தி அவர் எந்தவிதமாக பிரசங்கிக்கிறார் பாருங்கள்: ‘இங்கே ஒரு மனிதன் இருக்கிறான். அவன் மிகவும் ஏழை. அவனுக்குக் கொடுப்பதற்கு எதுவுமில்லை. இப்பேர்பட்டவன் என்ன செய்வான்? அவன் தனது ஆத்துமாவை எப்படி திருப்திப்படுத்துவான்? ஆகவே அவன் என்ன செய்கிறான்? உளுத்துப் போகாத ஒரு மரத்தை தேர்ந்தெடுக்கிறான். பாருங்கள், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரமும் உளுத்துப் போகாத மரம் . . .’ என்கிற ரீதியில் பிரசங்கித்துக் கொண்டு போகிறார். இது கேட்பவர்களுக்கு கவர்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால், விளக்கம் வேதபூர்வமானதாக இல்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் மனிதனில் எஞ்சியிருக்கிற பாவம் (Remaining sin) என்பதைக் குறித்து பிரசங்கிக்க நேர்ந்தது. அதற்கு அவர் எடுத்துக்கொண்ட வசனம், யோசேப்பின் சரித்திரத்திலிருந்து: “நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா?” ஆதி 43:27. இந்த வசனத்தை அவர் வளைத்து, திருப்பி, மனிதகுலத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிற நோய், முதுமை என்றெல்லாம் கூறி அதை எஞ்சியிருக்கிற பாவம் என்கிற உண்மையோடு முடிச்சுப் போட முயன்று கொண்டிருந்தார். மனிதனில் எஞ்சியிருக்கிற பாவம் என்பது உண்மையான நிலைமைதான். ஆனால் இந்த வசனம் அதை விளக்குவதாக இல்லை. இம்மாதிரியாக பிரசங்கிப்பது இளம் ஊழியர்களுக்கு ஒரு எச்சரிப்பாக இருக்கட்டும். இதைத்தான் நான் கவர்ச்சிகரமான வசனப்பகுதி (Acco- modated text) என்கிற வார்த்தையினாலே குறிப்பிடுகிறேன். மனிதனின் பாவத்தைக் குறித்தோ, கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தோ நீங்கள் பிரசங்கிக்க வேண்டுமானால் இம்மாதிரியாக ஏதோவொரு வசனத்தை எடுத்துக்கொண்டு அதை வளைத்து, ஒடித்து நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்கு இழுத்துக் கொண்டு வராதிருங்கள். நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களை நேரடியாகவே சொல்லுகின்ற எளிமையான வசனங்கள் வேதத்தில் ஏராளமாக இருக்கின்றன. அவைகளையே உபயோகியுங்கள்.
அதுவும் தவிர, நீங்கள் உங்கள் பிரசங்கத்தை நன்றாக ஊடுருவிப் பார்த்து விளங்கிக்கொள்வதையும், எளிமையாக பிரசங்கிக்கவும் ஆசைப்படுவீர்களானால், பிரசங்கத்தை பகுதி பகுதியாகப் பிரித்து விளக்குவதைக் குறித்து வெட்கப்படாதிருங்கள். சிலருக்கு இவ்வகை வெறுப்பூட்டலாம். என்ன இது, முதலாவதாக, இரண்டாவதாக, மூன்றாவதாக என்று கூறுபோட்டு பிரசங்கிப்பதா எனக் கேள்வி எழலாம். இப்படி பகுதி பகுதியாகப் பிரிப்பது நவீனமாக இல்லை என்கிற எதிர்ப்பும் வரலாம். நான் என்ன நினைக்கிறேனென்றால், பகுதி பகுதியாகப் பிரிக்கப்படாவிட்டாலும், நல்ல உயிரோட்டத்தோடுள்ள பிரசங்கமே பகுதியாகப் பிரிக்கப்பட்ட ஜீவனற்ற பிரசங்கத்தைவிட மேலானது என்பேன். அவரவர் தங்கள் மனதில் எது நல்லதென்று நிச்சயித்துக்கொள்கிறார்களோ அந்த முறையிலேயே பிரசங்கிக்கலாம். பகுதிகளாகப் பிரிக்கப்படாவிட்டாலும், கேட்பவர்களின் உள்ளத்தில் ஆழப் பதிந்து நீங்காமல் நிலைக்கக் கூடிய வகையிலே ஒருவரால் பிரசங்கிக்கக் கூடுமானால் அவர் அப்படியே செய்யட்டும். ஆனால், பகுதிகளாகப் பிரித்துப் பிரசங்கிக்கிற தன் உடன் ஊழியரை அவர் கேவலமாக எண்ணாதிருக்க வேண்டும். நான் என்ன சொல்லுகிறேனென்றால் ஒரு படையில் படைவீரர்கள் அணிவகுத்து நிற்பது போல எல்லாம் ஒரு ஒழுக்கத்திற்குட்பட்டிருந்தால் பிரசங்கம், கேட்பவர்களுக்கு எளிமையாக இருக்கும். போருக்குச் செல்லுகின்றபோது புத்திசாலியான சேனைத்தலைவன் காலாட்படைகளையும, குதிரைப்படைகளையும், வில்வீரர்களையும் வெவ்வேறாகப் பிரித்து வைக்காமல் எல்லாவற்றையும் கலந்து வைத்துக் கொண்டு போர்புரியச் செல்வானா? அல்லது நல்ல விருந்தளிக்கிற ஒருவன் ஒரே பாத்திரத்திலே சகல விதமான உணவு வகைகளையும், குளிர்பானங்களையும், இனிப்பு வகைகளையும், விருந்து முடிந்தபின் விளையாடுவதற்கென்று வைத்துள்ள விளையாட்டுப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு அதிலிருந்து பரிமாறுவானா? அத்தகையவனை சிறந்த விருந்தளிப்பவன் என்று குறிப்பிட முடியுமா? அதுபோலத்தான் பிரசங்கத்திலும் எல்லாவற்றையும் கலந்து பிரசங்கிப்பது உதவாது. பிரசங்கிப்பதில் ஓர் ஒழுங்குமுறை, நேர்த்தி இருக்கட்டும். நீங்கள், ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்படுத்திப் பிரசங்கிப்பதாக இருந்தாலும் சரி, அல்லது வரிசைப்படுத்தாமல், தொடர்ச்சி விட்டுப் போகாமல் சொல்ல வந்த கருத்துக்களை குழப்பமின்று எடுத்துக் கூறுவதாக இருந்தாலும் சரி, உங்கள் பிரசங்கம் அணிவகுத்துச் செல்லும் படையைப் போல ஒழுங்கோடும் நேர்த்தியாகவும் கருத்துக்கள் கோர்வையாகவும் அமையட்டும்.
என்னுடைய வாழ்க்கையிலே அநேகமாக நான் எல்லா பிரசங்கங்களையும் பகுதிகளாகப் பிரித்துதான் பிரசங்கித்திருக்கிறேன். ஜனங்கள் விளங்கிக்கொள்வதற்கும், ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும், அவைகளை தங்கள் உள்ளத்திலே எப்போதும் எடுத்துச் செல்வதற்கும் இந்த வழிமுறை அவசியமாயிருக்கிறது. அதையே நானும் உபயோகிக்கிறேன். ஓர் அறையில், அந்தந்த பொருள் அதனதன் இடத்தில் வைக்கப்படுவதற்காக ஆணிகளும், கொக்கிகளும், அலமாரிகளும் அமைக்கப்பட்டு இருப்பதைப் போல இப்படியான பகுதியாகப் பிரிக்கப்படும் செய்திகளும் இருக்கின்றன. வெற்றிகரமாக தங்களுடைய பிரசங்க ஊழியத்தை நிறைவேற்றி வருகின்ற எந்தப் பிரசங்கியினுடைய பிரசங்க முறையையும் கவனித்துப் பார்த்தீர்களானால், அதில் ஓர் ஒழுங்கும், கோர்வையும், வகைப்படுத்துதலும் காணப்படும். ஸ்பர்ஜனுடைய பிரசங்கங்களை நான் அடிக்கடி படித்துப் பார்ப்பேன் என கூறுவதற்கு நான் ஒருபோதும் வெட்கப்பட மாட்டேன். பிரசங்கிக்கும் வழிமுறையைப் பற்றிய கருத்துக்களை நான் பலரிடமிருந்தும் சேகரித்துக்கொள்ளுவேன். எப்படியாயினும் பிரசங்கத்தின் நோக்கம் நிறைவேறுவதுதான் எனக்கு முக்கியம். கோலியாத்தின் பட்டயத்தைக் குறித்து தாவீது எந்தக் குறுக்குக் கேள்வியும் கேட்கவில்லை. இதை செய்தது யார்? இதற்கு மெருகேற்றியது யார்? எந்த கொல்லன் பட்டறையில் இது உருவானது? என்றெல்லாம் தாவீது கேட்கவில்லை. ‘இதற்கு நிகர் வேறு எதுவுமில்லை’ என்று மாத்திரம் தாவீது கூறினார். ஏனென்றால் ஏற்கனவே ஒருமுறை அந்தப் பட்டயம் அதனுடைய எஜமானனின் தலையைக் கொய்து, தனது நோக்கத்தை நிறைவேற்றியிருந்ததை தாவீது அறிந்திருந்தார். ஸ்பர்ஜனின் பிரசங்கம் மிகவும் திறமை வாய்ந்தது. அவருடைய பிரசங்கத்தைக் கேட்க வருகின்ற கூட்டமே அதை நிரூபித்திருக்கிறது. ஜனங்களைக் கவர்ந்திழுக்கிற பிரசங்கங்களை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஸ்பர்ஜனுடைய பிரசங்கங்களை நீங்கள் வாசித்துப் பார்த்தீர்களானால், அவர் எவ்வளவு நேர்த்தியாக தனது கருத்துக்களை வகைப்படுத்தி, அந்த ஒவ்வொரு பிரிவுகளுக்குள்ளும் அருமையான கருத்துக்களை எளிமையாக விளக்கியிருக்கிறார் என்பது தெரியும். அப்போது அதன் அர்த்தத்தை நீங்கள் எவ்வளவு சுலபமாக விளங்கிக்கொள்ளுகிறீர்கள்! மிகவும் உன்னதமான அநேக சத்தியங்களை அவர் மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் உங்கள் உள்ளமாகிய அறையிலே இரும்புக் கொக்கிகளிலும், அலமாரிகளிலும் மாட்டி விடுகிறார். அவற்றை நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் மறந்துபோக மாட்டீர்கள்.
என்னுடைய முதலாவது கருத்தை சொல்லிக்கொண்டு வருகிறேன். உங்கள் பிரசங்கங்கள் எளிமையாக இருக்க வேண்டுமானால் நீங்கள் சொல்லப் போவதின் கருத்தை நீங்கள் முதலாவது நன்றாக உணர்ந்துகொள்ளுங்கள். அப்படி நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறீர்களா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு அவைகளைப் பகுதிகளாகப் பிரித்து வகைப்படுத்திப் பாருங்கள். நான் என்னைக் குறித்து மாத்திரந்தான் கூற முடியும், எனது ஊழியப்பணியை ஆரம்பித்த காலந்தொடங்கி நான் இவ்விதமாகத்தான் செய்து வருகிறேன். 45 ஆண்டுகளாக நான் இப்படித்தான் செய்து வருகிறேன். காலியான நோட்டுப்புத்தகத்திலே எனக்குக் கிடைக்கின்ற வசனங்களையும், தலைப்புகளையும் மாத்திரம் குறித்துக் கொண்டே வருவேன். ஒரு வசனத்தைக் காண்கிறபோது, அதனுடைய அர்த்தம் என் மனதில் ஆழப்பதிந்ததானால் அதைக் குறிப்பெடுத்துக்கொள்ளுவேன். அதை தகுந்த சந்தர்ப்பங்களில் பிரசங்கத்தில் உபயோகித்துக்கொள்ளுவேன். சில வசனங்கள் எனக்குத் தெளிவாக விளங்கவில்லையென்றால் அதைக் குறித்து என்னால் பிரசங்கிக்க முடியாது. ஏனென்றால் நான் எளிமையாகப் பிரசங்கிப்பதை விரும்புகிறவனாயிற்றே. எளிதில் விளங்கக் கூடிய வகையில் என்னால் பிரசங்கிக்க முடியாதென்றால், நான் பிரசங்கியாமல் இருப்பதே நல்லது என்பதை அறிந்திருக்கிறேன்.
- உங்கள் பிரசங்கங்களில் கூடுமானவரை எளிமையானதும் இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியதுமான நடைமுறையில் இருக்கும் வார்த்தைகளையே உபயோகியுங்கள். அதாவது வழக்கத்தில் மக்கள் இன்றைக்கு பயன்படுத்தாத வார்த்தைகளை பிரசங்கத்தில் உபயோகிக்காதீர்கள் என்றே சொல்ல வருகிறேன். கிறிஸ்தவனாக இல்லாதிருந்தபோதும் ஞானியாக இருந்த சிசேரோ சொல்லியிருப்பதுபோல அன்றாடம் மக்கள் வழக்கத்தில் பயன்படுத்தி வருகின்ற வார்த்தைகளை நாம் பயன்படுத்த வேண்டும். சொல்ல வருகின்ற கருத்தை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். அகராதியில் பார்த்துதான் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதிருங்கள். மிக உயர்ந்த இலக்கிய நடையிலான வார்த்தைகள், விஞ்ஞான சம்பந்தமான வார்த்தைகள், கல்விமான்கள் உபயோகிக்கிற கடினமான வார்த்தைகள், குழப்பம் விளைவிக்கிற வார்த்தைகள், மிக நீண்ட வாக்கியங்கள் போன்றவைகளை பிரசங்கத்தில் பயன்படுத்தாதீர்கள். அவை மிகவும் உயரிய சொற்பொழிவாகக்கூட இருக்கலாம். ஆனால் கடவுளின் நோக்கம் நிறைவேற அவை பயன்படாது. மிகவும் வல்லமையோடு கேட்பவரின் உள்ளத்தில் கிரியை செய்யக்கூடியவையாக இருப்பவை பொதுவாகவே சுருக்கமான வார்த்தைகளாகத்தான் இருக்கும்.
சாதாரண வார்த்தை உபயோகித்தலுக்கு ஒரு சில உதாரணங்களைப் பார்க்கலாம். ஜோன் பனியன் என்பவர் எழுதின “மோட்சப் பயணம்” (Pilgrims Progress) என்கிற நூலை அறிவீர்கள். எளிமையான தலைப்பை அதற்குக் கொடுத்திருக்கிறார். அதை அந்தக் காலத்துக்குரிய தமிழில் புரியும்படியாக மொழி பெயர்த்திருக்கிறார்கள், அதற்குப் பதிலாக, ‘திவ்யதேச யாத்திரை’ என்றோ, ‘கந்தர்வலோக ஸ்தலயாத்திரை’ என்றோ பெயரிட்டிருந்தால் அது நன்றாக இருந்திருக்குமா? அதையுந்தவிர, உங்கள் சொந்த பாஷையில் பேசும்போது, வேற்று மொழி வார்த்தைகளை உபயோகிப்பதையும் தவிர்க்கலாம்.
Dr. Gee என்பவர் Our Sermons (Longman) என்கிற அருமையான புத்தகத்தை எழுதியிருக்கிறார். பிரசங்கத்தில் மிக நீண்ட வாக்கியங்களை உபயோகிப்பதையும், வழக்கத்தில் இல்லாத சொற்களை பயன்படுத்துவதையும் வன்மையாகக் கண்டிக்கிறார். அப்படி உபயோகிப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை சுட்டிக் காண்பிக்கிறார். அவர் குறிப்பிடுவதற்கு இணையாக சில தமிழ் வார்த்தைகளைக் குறிப்பிடுவோமானால், ‘சிசு’ எனக் கூறுவதைக் காட்டிலும் ‘குழந்தை’ என்று சொல்லிவிடலாம். அதுபோலவே ‘பிரயத்தனம் செய்’ என்பதை ‘முயற்சி செய்’ என்றும், ‘பிரயோகி’ என்பதை ‘உபயோகி’ என்றும், ‘சமுத்திரம்’ என்பதை ‘கடல்’ என்றும், ‘தாவரம்’ என்பதை ‘செடி’ என்றும் எளிதாகக் குறிப்பிட்டுவிடலாம். கடினமான வார்த்தைகளையும், தத்துவரீதியான வார்த்தைகளையும், பொருள் பொதிந்த வார்த்தைகளையும் பல்கலைக்கழக மாணாக்கர்களுக்கு முன்னதாகவும், கற்றறிந்த ஞானிகளுக்கு முன்பாகவும் உபயோகிப்பதில் தவறில்லை. அப்படிச் செய்வது சொற்பொழிவுக்கு மேன்மையைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பிரசங்கிக்கப் போகிற சந்தர்ப்பங்களுக்கும், மக்களுக்கும் ஏற்றாற்போல நமது பிரசங்கம் இருக்க வேண்டும். ஆனால் ஒன்று மாத்திரம் நிச்சயம், பிரசங்கம் எளிமையாக இருக்க வேண்டுமானால், அதில் உபயோகப்படுத்தப்படுகின்ற வார்த்தைகள் எளிமையாக இருக்க வேண்டும்.
- பிரசங்கத்தில் எளிமை காணப்பட வேண்டுமானால், பிரசங்கத்தை எழுத்தில் வடிப்பதிலும் எளிமையைக் கடைப்பிடியுங்கள். இதை சற்று விளக்கிச் சொல்கிறேன். Dr. Chalmers என்கிற அருமையான மனிதர் பிரசங்கித்த பிரசங்கங்களை எடுத்துக்கொள்வீர்களானால், அதில் மிகக் குறைவான முற்றுப்புள்ளிகளே இருப்பதை கவனிக்கத் தவற மாட்டீர்கள். அநேகம் வரிகளுக்குப் பிற்பாடுதான் ஒரு முற்றுப்புள்ளி வரும். இதை ஒரு தவறாகத்தான் நான் கருதுகிறேன். ஸ்காட்லாந்து மக்களுக்கு வேண்டுமானால் அதில் பழக்கம் இருக்கலாம். ஆனால் இங்கிலாந்து மக்களுக்கு அது சரிப்பட்டு வராது. எழுத்தில் எளிமையைக் கடைப்பிடிக்க விரும்பினால், முற்றுப்புள்ளிகளற்ற மிக நீண்ட வாக்கியங்கள் அமைக்கப்படுதலுக்கு எச்சரிக்கையாயிருங்கள். வாசிக்கிறவர்களுக்கு இலகுவாக இருப்பதற்காக சிறு சிறு வாக்கியங்களாக எழுதுங்கள். மிக நீண்ட வாக்கியங்களால் அவர்கள் மூச்சுத் திணறிவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். மிக நீண்ட வாக்கியங்களைப் பேசுவதோ, எழுதுவதோ தவிர்க்கப்பட வேண்டும். மிகப் பெரிய பாராக்களை கொண்டிருக்கும் கட்டுரையானது படிப்பவர்களுக்கு சோர்வைத் தரும். அப்படி செய்வது எளிமையான பிரசங்கம் செய்வதாகாது. கால்புள்ளிகளையும் (,) முற்றுப்புள்ளிகளையும் பயன்படுத்தி மூச்சுத் திணறலுள்ளவரைப்போல சுருக்கமான வசனங்களைப் பயன்படுத்துங்கள். அடிக்கடி முற்றுப்புள்ளிகளளைப் பயன்படுத்தி எழுதி அடுத்த வரிகளுக்குப் போக வேண்டும். அரைப்புள்ளிகள் (;) அதிகமாக உபயோகித்து எழுதப்பட்ட பிரசங்கங்களும், இரண்டு மூன்று பக்கங்களுக்கு நீண்டு கொண்டு போகும் பாராக்களும் உடைய பிரசங்கங்கள் தோல்வியையே தழுவுகிறதாயிருக்கும். எழுதப்பட்ட கட்டுரைகள் வேறு வகை, நேரிடையாக சொல்லுகின்ற பிரசங்கங்கள் வேறுவகை என்பதை பிரசங்கிக்கிறவர்கள் மனதில் கொள்ள வேண்டும். ஒரு கட்டுரை வாசிப்பதற்கு அருமையாக இருந்தாலும் காதால் பிரசங்கமாக கேட்பதற்கு நன்றாக இருக்காது. பிரசங்கம் கேட்கிறவர்களால் நீண்ட வசனங்களை தாங்கிக்கொள்ள முடியாது. அது சலிப்பூட்டுவதாக அமையும். எழுதப்பட்ட பிரசங்கங்களை வாசிக்கக்கூடிய வாய்ப்புடைய விசுவாசிகள், தங்களுக்கு விளங்காத பகுதிகளை மீண்டும் மீண்டுமாக வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய அனுகூலம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் பிரசங்கத்தை நேரிடையாகக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அப்படி இல்லை. சொல்லப்படுபவைகளை அவர்கள் ஒருமுறை மாத்திரமே கேட்கிறார்கள். ஓர் இடத்தில் அவர்களுக்கு தடுமாற்றம் ஏற்படுமானால், திரும்பவும் தங்கள் மனதை பிரசங்கத்தில் ஒருமுகப்படுத்துவது அவர்களுக்குக் கடினமாயிருக்கும்.
எளிமையான பிரசங்கத்திற்கு அர்த்த புஷ்டியுள்ள சிறிய வாசகங்களையும், தகுந்த பழமொழிகளையும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் உபயோகிப்பது மிகுந்த பலனைத் தரும். மாத்யூ ஹென்றியின் விளக்கவுரைகளிலும், பிஷப் ஹாலினுடைய Contemplations என்கிற புத்தகத்திலும் இதுமாதிரியான வாசகங்களை அதிகமாகக் காணலாம். Papers on Preaching by a Wyke- hamist என்கிற ஒரு நல்ல புத்தகத்தைக் குறித்து அநேகர் அறியாமல் இருக்கிறார்கள். அதில் இம்மாதிரியான குறுகிய, நல்ல வாசகங்கள் அதிகமாக இருக்கின்றன. உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்க்கலாம். “தக்க நேரத்திலே நாம் எதை நெய்கிறோமோ அதையே நித்தியகாலத்துக்கும் உடுத்துகிறவர்களாயிருப்போம்.” “Hell is paved with good intensions.” “பாவத்தை விட்டுவிடுவதே பாவம் மன்னிக்கப்பட்டிருப்பதற்கு அடையாளம்.” “நாம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம்.” “எந்த மனிதனுடைய குணாதிசயத்திலும் தலையிடாதே, ஆனால் எந்த மனிதனுடைய பாவத்தையும் கண்டிக்காமல் விடாதே.” “அவரவர் தம் தம் வாசலைத் தூய்மையாக வைத்துக் கொண்டாலே, வீதி வெகு சீக்கிரமாக சுத்தமாகிவிடும்.” “பொய்யானது கடனாளியின் முதுகில் சவாரி செய்கிறது.” “காலியான பை நிமிர்ந்து நிற்காது.” “ஜெபத்தோடு காரியத்தை ஆரம்பிப்பவன் புகழோடு முடிப்பான்.” “மின்னுவதெல்லாம் பொன்னல்ல.” “வியாபாரத்தைப் போலவே, பக்திமார்க்கத்திலும் கஷ்டமில்லாமல் லாபமில்லை.” “வேதத்தில் ஆட்டுக்குட்டி கடக்கக்கூடிய எளிய பகுதிகளும் உண்டு; யானை அமிழ்ந்து போகக்கூடிய ஆழமான பகுதிகளும் உண்டு.” “யாருமே நம்பிக்கையிழந்து விடாதபடிக்கு சிலுவை மரத்திலிருந்தும் இரட்சிக்கப்பட்ட கள்ளன் உண்டு; ஆனால் யாவருக்கும் அது கிட்டும் என ஒருவரும் நினைத்துவிடாதபடிக்கு ஒரே ஒருவன் மாத்திரமே இரட்சிக்கப்பட்டான்.”
இம்மாதிரியான, கவனத்தை ஈர்க்கக்கூடிய குறுகிய வாசகங்களும், பழமொழிகளும் கேட்பவர்களின் கவனத்தைக் கவர்ந்து அவர்கள் மனதில் ஆழப்பதிந்து நற்பலனைக் கொடுக்கும். இம்மாதிரியான வாசகங்களை மனதில் இறுத்திக்கொள்வதற்கு கடும் முயற்சி செய்யுங்கள். அவைகளை உங்கள் பிரசங்கங்களில் தாராளமாக உபயோகியுங்கள். ஒரு கருத்தை சொல்லி முடிக்கும் தறுவாயிலும், பாராவின் முடிவிலும் அவைகளை உபயோகித்துக்கொள்ளுங்கள். அவைகள் உங்கள் பிரசங்கத்தை எளிமையாகச் சொல்லுவதற்கும் எழுதுவதற்கும் மிகவும் உதவியாக இருப்பதை உணருவீர்கள். மிக நீண்டதான குழப்பமான வாக்கியங்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
- உங்கள் பிரசங்கத்தை நேரிடையாகப் பிரசங்கியுங்கள். இதை என்ன அர்த்தத்தில் கூறுகிறேன்? ‘நான்’, ‘நீ’ எனக் குறிப்பிடுவதான பழக்கத்தை சொல்லுகிறேன். ‘நான்’, ‘நீ’ என்று நேரிடையாகக் குறிப்பிட்டுப் பிரசங்கிக்கும் பழக்கமுடைய ஒருவர் இருந்தால், பொதுவாக எல்லோரும் அவரை அகந்தையுள்ளவன் என்றும் தற்பெருமைக்காரன் என்றும்தான் தீர்மானிப்பார்கள். அதன்காரணமாக அநேக பிரசங்கிகள் அப்படி குறிப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு ‘நாம்’ என்று பன்மையிலே பிரசங்கிக்கிறார்கள். அப்படி கூறுவதுதான் தாழ்மையையும், பணிவையும் காண்பிக்கும் என்று கருதுகிறார்கள். Bishop Villiers ஒருமுறை கூறியது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது, ராஜாக்களும், ஆட்சி செய்கின்ற கழகங்களும்தான் ‘நாம்’ எனக் குறிப்பிட வேண்டும். அது அவர்களுக்கே உரிய வார்த்தை. கர்த்தரின் பணியைச் செய்து வருகின்ற ஊழியர்கள் ‘நான்’ ‘நீ’ என்றுதான் குறிப்பிட வேண்டும் என்றார். அதை நான் என் முழுமனதினாலும் ஒத்துக்கொள்கிறேன். பிரசங்க மேடையிலே சொல்லப்படுகின்ற ‘நாம்’ என்கிற வார்த்தை என்ன அர்த்தத்தில் சொல்லப்படுகிறதென்பது எனக்கு விளங்கவில்லை. பிரசங்கியார், ‘நாம்’ எனக் குறிப்பிடுவது அவரையும் சபையையும் குறிப்பிடுகிறாரா அல்லது அவரையும் அங்கு வந்துள்ள கூட்டத்தாரையும் குறிப்பிடுகிறாரா அல்லது அவரையும் ஆதிசபைப் பிதாக்களையும் குறிப்பிடுகிறாரா அல்லது அவரையும் சீர்திருத்தப் பெரியோர்களையும் குறிப்பிடுகிறாரா அல்லது அவரையும் உலகமெங்கிலுமுள்ள சகல ஞானிகளையும் சேர்த்து ‘நாம்’ என்கிறாரா? அல்லது தன்னை மாத்திரமே குறிக்க அந்த வார்த்தையை பயன்படுத்துகிறாரா? தன்னை மாத்திரம் குறிப்பதானால் அவர் ஏன் ‘நாம்’ என்று கூறவேண்டும், வெறுமனே ‘நான்’ என்று கூறிவிடலாமே. அவர் விசுவாசிகளை வீடுகளில் சந்திக்கும்போதும், வியாதியஸ்தரைப் பார்க்கச் செல்லும்போதும், பள்ளிக்கூடத்தில் கற்றுத்தரும்போதும், கடையில் சாமான் வாங்கும்போதும் அவர் ‘நாம்’ என்கிற வார்த்தையை பயன்படுத்துவதில்லை. அங்கெல்லாம் ‘நான்’, ‘எனக்கு’ என்றுதான் பேசுகிறார். பிரசங்க மேடையில் மாத்திரம் ஏன் அவர் ‘நான்’ என்று குறிப்பிடுவதில்லை என்பதை அறிய நான் ஆசைப்படுகிறேன். தன்னைக் குறிப்பதற்கு அவர் ஏன் மற்றவர்களையும் கூட்டு சேர்த்துக்கொள்ள வேண்டும். கர்த்தருடைய நாளிலே பிரசங்க மேடையிலே அவர் எழுந்து நின்று, “வேதாகமத்தை ‘நான்’ வாசித்துக் கொண்டிருக்கையிலே இந்த குறிப்பிட்ட வசனம் ‘எனக்கு’ பல சத்தியங்களை வெளிப்படுத்தியது. அதை இன்று ‘நான்’ உங்களோடு பகிர்ந்துகொள்வதற்காக உங்கள் முன் வைக்கிறேன்” என்று நேரிடையாகச் சொல்லலாமே.
பிரசங்கியார் ‘நாம்’ என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பது அநேக மக்களுக்கு விளங்காது. அது அவர்களை தெளிவற்ற ஒரு நிலையிலே வைக்கும். ‘உங்கள் போதகராகிய நான், உங்கள் ஊழியனாகிய நான், உங்கள் உதவியாளனாகிய நான் உங்கள் முன்னதாக சில காரியங்களைப் பேச வந்திருக்கிறேன். உங்களுடைய ஆத்துமாவைக் குறித்தவை அவை. அதை நீங்கள் நம்ப வேண்டியது அவசியமாயிருக்கிறது. நீங்கள் சிலவற்றை செய்ய வேண்டியவர்களாகவும் இருக்கிறீர்கள்’ இந்த மாதிரியாகப் பேசினீர்களானால் ஜனங்கள் சுலபமாக நீங்கள் கூறுவதை விளங்கிக்கொள்ளுவார்கள். இதை விட்டு ‘நாம் என்ன செய்ய வேண்டுமென்றால்’ என்று பன்மையிலே பேசுவீர்களானால், அநேகருக்கு நீங்கள் மக்களை ஏதாவது செய்யச் சொல்லுகிறீர்களா அல்லது நீங்களே ஏதோ செய்யப் போகிறீர்களா என்ற குழப்ப நிலை ஏற்பட்டுவிடும். இந்த விஷயத்தை இளம் ஊழியர்கள் மறவாமல் இருக்கும்படி புத்திசொல்லுகிறேன். உங்களால் முடிந்தவரை நேரிடையாகப் பேசும் முறையையே கடைப்பிடியுங்கள். அப்படி பேசினால் மற்றவர்கள் என்ன நினைத்துக்கொள்வார்களோ என்பதைக் குறித்து கவலைப்படாதிருங்கள். பிரபலமடைந்திருக்கும் மற்ற பிரசங்கிகளைப் பார்த்து அதே நடையைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யாதிருங்கள். நீங்கள் என்றுக் குறிப்பிட வேண்டியதான சந்தர்ப்பங்களிலே ஒருபோதும் ‘நாம்’ என்று கூறாதிருங்கள். பழங்காலத்து பிஷப் லட்டீமர் (Bishop Lat- imer) செய்தது போல ஒருமையிலே குறிப்பிட்டு பிரசங்கிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வீர்களானால் உங்கள் பிரசங்கமும் எளிமையாக இருக்கும். மக்களும் நீங்கள் கூற வருவதை சுலபமாக விளங்கிக்கொள்ளுவார்கள். விட்பீல்ட் (Whitefield) பிரசங்கங்கள் நேரிடையாக சொல்லும் முறையினை உடையது. அதுவே அதனுடைய சிறப்பாகும்.
- உங்கள் பிரசங்கங்கள் எளிமையாக இலகுவாக புரியக்கூடிய வகையில் இருக்க வேண்டுமானால் நீங்கள் அதில் சிறு கதைகள், சம்பவங்கள், உதாரணங்கள், உவமைகள், செயல்முறை விளக்கங்கள் ஆகியவற்றை தாராளமாகப் பயன்படுத்த வேண்டும். இவைகளெல்லாம் ஓர் அறைக்குள் வெளிச்சத்தைப் பிரவேசிக்கச் செய்கிற ஜன்னல்களைப் போன்றவை. இவைகளின் மூலமாக நீங்கள் சொல்ல வருகின்ற கருத்து, கேட்பவர்களுக்கு நன்கு புலப்படும். இந்த குறிப்பின்பேரில் அதிகமாக சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்த பிரசங்கத்தை நான் சுருக்கமாகக் கூற வேண்டியிருப்பதால் அவைகளையும் சுருக்கமாக்க வேண்டியதாயிருக்கிறது. ‘மனிதர் பேசும் விதமாக பேசாத’ மாபெரும் பிரசங்கியாகிய நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து நான் உங்களுக்கு அதிகம் கூறவேண்டியதில்லையென நினைக்கிறேன். நான்கு சுவிசேஷங்களையும் கவனமாகப் படித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் பிரசங்கங்களில் எவ்வளவு உதாரணங்கள் காணப்படுகிறதென்பதை கவனியுங்கள். அவைகளில் உதாரணங்களும், உவமைகளும், சிறுகதைகளும் நிரம்பி வழிவதை கவனித்திருக்கிறீர்களா? அவர் பார்வையில் பட்ட எந்த காரியத்தையும் அவர் விட்டுவைக்காமல், எல்லாவற்றையும் தனது பிரசங்கத்திற்கு எடுத்து பயன்படுத்திக்கொள்ளுகிறார். ‘ஆகாயத்தின் பறவைகள், கடலின் மீன்கள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள், சோளவயல்கள், திராட்சைத் தோட்டம், உழுகிறவன், விதைக்கிறவன், அறுக்கிறவன், மீன் பிடிக்கிறவன், மேய்ப்பன், திராட்சத் தோட்டக்காரன், மாவு பிசைகிற பெண், காட்டுப் புஷ்பங்கள், புல், காசுக்காரன் வ-ட்டி, கலியாண விருந்து, கல்லறை’ கேட்பவர்கள் மனதில் எளிதில் பதியச் செய்வதற்காக அவர் எடுத்துக் கையாளாத விஷயமே இல்லை எனலாம். கெட்டகுமாரனைப் பற்றிய சிறுகதை, நல்ல சமாரியன் சம்பவம், பத்து கன்னிகைகள், தனது குமாரனுக்கு கலியாண விருந்து செய்த ராஜாவைக் குறித்த உவமை, ஐசுவரியவானும் லாசருவும், திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்த கூலியாட்கள் -இவை எல்லாம் என்ன? கேட்பவர்களின் ஆத்துமாக்களில் மிகவும் முக்கியமான சத்தியங்களை பதியச் செய்ய வேண்டுமென்பதற்காக நமது கர்த்தர் அவர்கள் ஆத்துமாக்களை ஏவும்படியாக சொன்ன உவமைகள். நீங்களும் அவருடைய நடையைத் தொடர்ந்து, அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.
உங்களுடைய பிரசங்கத்தின் இடையில் சற்று நிறுத்திவிட்டு, நான் இப்போது உங்களுக்கு ஒரு சிறுகதையைச் சொல்லப் போகிறேன் என்று கூறுங்கள். அரைகுறைத் தூக்கத்தில் இருந்த ஆத்துமாக்கள் எல்லாம் விழித்துக் கொண்டு கதை கேட்கத் தயாராவார்கள். பொதுவாகவே, ஜனங்கள், செய்வதற்கு வேலை ஒன்றுமில்லாமல் ஓய்வாக இருக்கும்போது கதைகள் கேட்பதிலும், விளக்கங்கள் கேட்பதிலும் ஆர்வமாயிருப்பார்கள். அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டுகின்ற வகையில் நாம் அவர்களுக்கு உதாரணங்கள் சொல்வதற்கு நம்மைச் சுற்றிலும் எத்தனையோ காரியங்கள் இருக்கின்றன. நம்மைச் சுற்றிலும் இருக்கின்ற இயற்கையை கவனித்துப் பாருங்கள். மேலேயுள்ள ஆகாயத்தையும், கீழேயுள்ள உலகத்தையும் பாருங்கள். சரித்திரத்தை கவனித்துப் பாருங்கள். விஞ்ஞானத்தின் சகல கிளைகளையும் பாருங்கள். பூகோளத்தையும், தாவரவியலையும், இரசாயனவியலையும், வானசாஸ்திரங்களையும் பாருங்கள். நீங்கள் சொல்லப் போகிற சுவிசேஷத்துக்கு உதாரணங்கூற இயலாதபடிக்கு மேலே வானத்திலும் கீழே பூமியிலும் இல்லாத காரியம் எதுவும் உண்டோ? பிஷப் லட்டீமர் என்பவரின் பிரசங்கங்களைப் படித்துப் பாருங்கள். அதற்கு ஈடு இணை கிடையாது. தூய்மைவாதிகளாகிய புரூக்ஸ் (Brooks), வொட்சன் (Watson), சுவிநொக் (Swinnock) ஆகியோரின் புத்தகங்களையும் படித்துப் பாருங்கள். கதைகளும், விளக்கங்களும், உவமைகளும், உதாரணங்களும் அவைகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன. மூடி (Moody) என்பவரின் பிரசங்கங்களைப் பாருங்கள். அவர் பிரபலமடைந்ததின் இரகசியம் என்ன? கேட்பவர்களுக்கு ஆர்வமாக இருக்கும் வகையிலான கதைகளால் அவர் தனது செய்தியைக் கொடுப்பார். ‘காதுகளால் கேட்பவரின் மனதில் அதைப் படமாகத் தோன்றச் செய்பவரே மிகச் சிறந்த பேச்சாளி’ என்று ஓர் அரேபியப் பழமொழி கூறுகிறது.
நான் கிராம சபைகளில் பிரசங்கிக்கும்போது, சிறு கதைகள் மூலமாக விளக்குவது மாத்திரமல்லாமல் செயல்முறை விளக்கங்கள் (illustrations) கொடுக்கும் வழியை சிலவேளைகளில் பின்பற்றுவேன். உதாரணமாக, இந்த உலகம் உருவாவதற்கு ஆதிகாரணமாக இருந்தவர் யார் என்கிற கருத்தை விளக்க முற்படுகிறேன் என வைத்துக்கொள்வோம். சிலசமயங்களில் நான் என்னுடைய கைக்கடிகாரத்தைக் கழற்றி சபையார் முன்னால் காட்டுவேன் -‘இந்த கடிகாரத்தைப் பாருங்கள். இது எவ்வளவு நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிறது. இதற்குள்ளே இருக்கின்ற பற்சக்கரங்களும், மிக நுண்ணிய மறைகளும், இதன் சிறிய முள் பெரிய முள் போன்றவையும் தானாக வந்து இதற்குள் பொருந்திக் கொண்டு ஒரு கடிகாரமாக மாறிவிட்டதென்று நீங்கள் நினைப்பீர்களா? இதை கடிகாரம் செய்வதில் நிபுணரான ஒருவர்தான் செய்திருப்பார் என நீங்கள் சொல்லுவீர்கள் இல்லையா. இதுவே இப்படியென்றால் இந்த அருமையான உலகத்தையும் யாரோ ஒருவர்தானே உருவாக்கியிருக்க வேண்டும். அவர் அதை எவ்வளவு நேர்த்தியாக செய்திருக்கிறார் என்பது இவ்வுலகைச் சுற்றி வருகின்ற ஒவ்வொரு கிரகங்களின் மூலமாகவும் தெளிவாகத் தெரிகிறதே. அவை துளிகூட பிசகாமல் தன்தன் பாதையிலே சுற்றி வருவதால் நமக்கு நேரமும், மணியும், விநாடியுங்கூட மிகவும் துல்லியமாக ஆண்டுதோறும் ஓர் ஒழுங்கோடு இருக்கின்றதே. நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றதான இந்த உலகத்தைப் பாருங்கள். அதிலுள்ள அற்புதமான காரியங்களை கவனியுங்கள். அவைகளைப் பார்த்தும், கடவுள் என்று ஒருவரும் இல்லை. இவை யாவும் தானாகவே தோன்றிவிட்டன என்று உங்களால் கூறமுடியுமா?’ எனக்கூறி விளக்குவேன். சில வேளைகளிலே நான் என் சட்டைப் பையிலிருந்து ஒரு கொத்துச் சாவியை எடுத்து அவர்கள் முன்னிலையில் சத்தம் வரும்வகையில் குலுக்கிக் காண்பிப்பேன். அந்தச் சத்தத்தைக் கேட்டு முழு சபையாரும் நிமிர்ந்து பார்க்கும்போது கூறுவேன், ‘எல்லா மனிதர்களும் உண்மையுள்ளவர்களாகவும், யோக்கியர்களாகவும் இருந்தார்களானால் இந்த சாவிக்கு என்ன வேலை? சாவிகள் எதைக் காண்பிக்கிறது? மனிதரின் இருதயம் வஞ்சனையுள்ளது, பொல்லாதது என்பதையே காட்டுகிறது.’ இம்மாதிரியான செயல்முறை விளக்கங்கள் நிச்சயமாக ஒரு பிரசங்கத்தை எளிமையாகவும், விளங்குவதற்கு சுலபமாகவும், தெளிவாகவும் ஆக்குகின்றது என நான் உறுதியாகச் சொல்லுவேன். உதாரணங்களையும், செயல்முறை விளக்கங்களையும் கண்டு உணர்ந்து உங்கள் நினைவில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். அவைகளை தகுந்த சந்தர்ப்பங்களில் நன்றாக உபயோகித்துக்கொள்ளுங்கள். அவைகளை கண்டுணரக்கூடியவரும், நல்ல நினைவாற்றல் உடையவருமான பிரசங்கி மிகவும் சந்தோஷமடைவார். அவர் உண்மையான தேவபக்தனாக இருந்து, நல்ல பிரசங்க வரமும் உடையவராக இருப்பாரானால் அவர் ஒருபோதும் வெறும் சுவருக்கும், ஆளில்லாத நாற்காலிகளுக்கும் பிரசங்கிக்கும்படியாக நேரிடாது.
ஆனால் நான் இத்தோடு கண்டிப்பாக ஓர் எச்சரிப்பையும் சேர்த்து வழங்க வேண்டும். கதைகள், உதாரணங்கள் சொல்வதற்கும் ஒரு வழிமுறை இருக்கிறது. ஒருவருக்கு இயற்கையாக கதை சொல்ல வராவிட்டால் அவர் உதாரணங்களை சொல்லாமல் இருந்துவிடுவதே மேலானதாகும். உதாரணங்களால் உண்டாகும் நன்மை பற்றி இவ்வளவு நல்ல கருத்துக்கள் கூறியபடியால் நீங்கள் அதிலேயே மூழ்கிப் போய்விடாதபடிக்கும் ஜாக்கிரதையாயிருங்கள். இது சம்பந்தமாக குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. வேல்ஸ் தேசத்தில் பிரபல பிரசங்கியாக கிரிஸ்ட்மஸ் எவன்ஸ் (Christmas Evans) என்பவர் இருந்தார். கெதரேன் பகுதியிலே இயேசு கிறிஸ்து செய்த அற்புதத்தைக் குறித்ததான அவருடைய பிரசங்கம் எழுத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. பிசாசுகள் பன்றிக்கூட்டத்தில் போன பிற்பாடு அவைகள் யாவும் கடலில் விழுந்து மாண்டு போயின என்பதை அறிவீர்கள். அந்த சம்பவத்தை அவர் மிகவும் நுணுக்கமாக ஒரு படக்காட்சி போல அதில் விவரித்திருந்த விதம் மிகவும் அபத்தமாகத் தென்பட்டது. பன்றியை மேய்த்தவர்கள் தங்கள் எஜமானனிடம் சென்று நடந்த சம்பவத்தை எவ்விதமாக சொன்னார்கள் என்பதில் அவர் அதீத கற்பனைக்குச் சென்றுவிட்டிருந்தார். அந்த உரையாடல் கீழ்கண்ட விதமாக இருந்தது ‘எஜமானரே, பன்றிகள் எல்லாம் போய்விட்டன.’ ‘எங்கே போய்விட்டன?’ ‘அவை கடலுக்குள் பாய்ந்து அழிந்து விட்டன.’ ‘யார் அவைகளைக் கடலுக்குள் விரட்டியது?’ ‘ஓ, அவர் ஓர் அருமையான மனிதர் ஐயா.’ ‘என்ன மாதிரியான மனிதன் அவர்? அவர் என்ன செய்தார்?’ ‘அவர் வந்து ஏதேதோ காரியங்களைப் பேசினார். அதைக் கேட்டதும் பன்றிகள் எல்லாம் திடீரென மேட்டில் ஏறி கடலுக்குள் பாய்ந்துவிட்டன.’ ‘அப்படியா, அந்த வயதான காட்டுப்பன்றிகூடவா?’ ‘ஆம் ஐயா, அந்த ஆண் காட்டுப்பன்றியும் கடலுக்குள் பாய்ந்துவிட்டது. ஏனென்றால் நாங்கள் பார்க்கும்போது அதனுடைய வாலின் நுனி மலை உச்சியிலிருந்து மறைவதைக் கண்டோம்’ இது அளவுக்கு அதிகமான கற்பனையாக நீண்டு கொண்டே போகிறதல்லவா. டாக்டர் கத்ரீ (Dr. Guthries) என்பவரும் அருமையான பிரசங்கங்கள் செய்வார். ஆனால், சிலசமயங்களில் அவர் அதில் கொடுக்கிற உதாரணங்கள் அளவுக்கு அதிகமாகப் போய் பிரசங்கத்தின் கருத்தையே மறைத்துவிடும். கேக் செய்யும்போது அதில் அளவுக்கு அதிகமான ப்ளம் (plum) சேர்க்கப்பட்டுவிட்டால் அதில் கேக்கே இல்லாமல் வெறும் ப்ளம்கள்தான் நிறைந்ததாயிருக்குமல்லவா? உங்களுடைய பிரசங்கத்திலும் நீங்கள் எவ்வளவோ உதாரணங்களையும், செயல்முறை விளக்கங்களையும் உபயோகிக்கலாம். வானத்திலும், பூமியிலும், சிருஷ்டிப்புகளிலும், சரித்திரம், விஞ்ஞானம் போன்றவைகளிலிருந்தும் ஏராளமான உதாரணங்களை எடுத்துக் கையாளலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு வரம்பு இருக்கிறதல்லவா? நீங்கள் ஓவியராக இருந்தால் வர்ணங்களை கரண்டியால் எடுத்து ஊற்ற மாட்டீர்கள் அல்லவா? தூரிகையை உபயோகித்தலே அதற்குச் சரியாக இருக்கும். அதுபோல, கற்பனைக் கதைகள் எளிமையான பிரசங்கத்திற்கு உதவியாக இருக்கும் என்றாலும், அது எல்லை மீறிவிடாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நான் கூறிய 5 குறிப்புகளை கவனமாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
- நீங்கள் எதைப் பிரசங்கிக்கப் போகிறீர்களோ அதைக் குறித்துஉங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.
- சாதாரணமான வார்த்தைகளையே உபயோகிக்க வேண்டும்.
- உங்கள் பிரசங்கத்தை சிறு சிறு வாக்கியங்களால் அமைந்தகட்டுரையாக எழுதிக் கொண்டால்தான் பிரசங்கமும்எளிமையாக இருக்கும். நீண்ட வாசகங்கள் தவிர்க்கப்படவேண்டும்.
- நேரிடையாகப் பேசுகின்ற முறையைக் கடைப்பிடியுங்கள்.
- பிரசங்கத்தில் உதாரணங்களையும், உவமைகளையும், செயல்முறை விளக்கங்களையும் அதிகமாகப் பயன்படுத்துங்கள்.
இவை எல்லாவற்றிற்குமாகச் சேர்த்து ஒரு நடைமுறை விஷயத்தை சொல்லிவிடுகிறேன். அதிகக் கஷ்டமில்லாமல், எளிமையாகப் பிரசங்கித்தலை அடைந்துவிட முடியாது. மீண்டும் அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறேன், எளிமையாகப் பிரசங்கிக்கும் திறமையை அடைய வேண்டுமானால் கஷ்டங்களும் பாடுகளும் படத்தான் வேண்டும். டர்னர் (Turner) என்கிறவர் ஒரு மிகச்சிறந்த ஓவியர். அவர் தனது வர்ணங்களை மிகவும் சரியான விகிதத்தில் கலக்குவார். ஆகவே அவருடைய ஓவியத்தில் காணப்படும் வண்ணங்கள் மிகவும் அருமையாக இருக்கும். ஒருவர் அவரைக் கேட்டாராம், ‘எப்படி நீங்கள் மற்றவர்களைக் காட்டிலும் இவ்வளவு அருமையான வர்ணங்களை உருவாக்குகிறீர்கள். எதைக் கொண்டு அந்தக் கலவையை உருவாக்குகிறீர்கள்?’ ‘நான் என் மூளையையே உபயோகித்து அக்கலவையை கலக்குகிறேன்’ என்று அவர் பதில் அளித்தார். நானும் அதையே வலியுறுத்துகிறேன், பாடுகளும் கஷ்டமும்படாமல் பிரசங்கத்தில் எதுவும் செய்ய முடியாது.
ஒருமுறை ரிச்சட் செசில் (Richard Cecil) என்பவரிடம் சோம்பேறியும் கவலையற்றவருமான ஓர் இளம் பாதிரியார் கூறினாராம், ‘எனக்கு இன்னும் விசுவாசம் தேவை என நான் நினைக்கிறேன்’ என்று. ஞானமுள்ள அந்த வயதானவர் கூறினார், ‘இல்லை, நீ இன்னும் உழைக்க வேண்டியதுதான் தேவையாயிருக்கிறது. நீ இன்னும் அதிகமாக பாடுபட வேண்டும். கர்த்தர் உனக்காக வேலை செய்து முடிப்பார் என்று நீ நினைத்துக் கொண்டிராதே. அவர் உன்னை வேலை செய்ய வைத்துதான் தன் பணியை நிறைவேற்றுவார்.’ இளம் ஊழியர்களே, இதை நினைவில் வையுங்கள். உங்கள் பிரசங்கங்களை கட்டுரைகளாக எழுதிக்கொள்வதற்கு நேரம் செலவிடுங்கள். அதிகமாகப் படிப்பதில் உங்கள் மூளைக்குப் பயிற்சி கொடுங்கள். உபயோகமானதையே படிப்பதற்கு எச்சரிக்கையாயிருங்கள்.
உங்கள் பிரசங்கத்தில் பயன்படுத்திக்கொள்ளுவதற்காக, சபைப் பிதாக்களின் போதனைகளைப் படிப்பதில் நேரம் செலவிடுங்கள் என நான் கூற மாட்டேன். அவைகள் ஒருவிதத்தில் உபயோகமானவைதான். ஆனால் நவீனகால எழுத்தாளர்களின் புத்தகங்களில் பல மிகவும் உபயோகமாயிருக்கின்றன. ஆனால், நீங்கள் கவனமாக அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நல்ல முன்மாதிரியானவைகளைப் படியுங்கள். எளிமையாகப் பிரசங்கிப்பதற்கு அவைகளினால் பயிற்சி பெறுங்கள். பரிசுத்த வேதாகமத்தையே உங்கள் மாதிரிப் புத்தகமாக எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எழுதப்பட்டிருக்கிற நடையிலேயே நீங்களும் பிரசங்கிக்கக்கூடுமானால் நீங்கள் நல்ல பிரசங்கியாவீர்கள். ஜான் பனியனின் மோட்சப் பயணம் புத்தகத்தை வாசியுங்கள். எளிமையாகப் பிரசங்கிக்க வேண்டுமானால் அதைத் திரும்பத் திரும்ப வாசியுங்கள். தூய்மைவாதிகளின் புத்தகங்களில் பல மிகவும் கடினமாக இருக்கும். அதை வாசிப்பதில் அதிக நேரம் செலவிடுவது, எளிமையாக பிரசங்கம் செய்வதற்கு உதவியாக இராது. குட்வின் (Goodwin), ஓவன் (Owen) ஆகியோரின் புத்தகங்களில் ஆழ்ந்த கருத்துக்கள் இடம் பெற்றிருந்தாலும் அவை வாசிப்பதற்குக் கடினமானவை. பெக்ஸ்டர் (Baxter,), வொட்சன் (Watson), டிரெயில் (Traill), பிளேவல் (Flavel), சார்நொக் (Charnock), ஹோல் (Hall), மெத்தியூ ஹென்றி (Matthew Henry) போன்றோரின் புத்தகங்களை வாசிக்கலாம். அவை பழங்காலத்து எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் மொழியும் மாறுகிறது என்பதை நினைவில் வையுங்கள். அவர்களும் ஆங்கிலம்தான் பேசினார்கள். ஆனால், பழங்காலத்து மொழிநடை வித்தியாசப்படுகிறது. அதையுந்தவிர்த்து, நவீன காலத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து அவைகளை மாதிரிகளாக வைத்துக்கொள்ளுங்கள். வில்லியம் கொபெட் (William Cobbett) என்பவரைக் கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளராக கருதுகிறேன். அவருடைய ஆக்கங்கள் எளிமையான Saxon ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. தற்காலத்தில் அவருக்கு இணையாக ஜோன் பிரைட் (John Bright) என்பவர் இருக்கிறார். பழங்காலத்து அரசியல் சொற்பொழிவாளர்களில் Lord Chatham, Patric, Henry ஆகியோர் நல்ல ஆங்கில மொழி பேசும் வல்லுநர்கள். வேதாகமத்திற்கு அடுத்தபடியாக நல்ல ஆங்கிலத்திற்கு மாதிரியாகக்கொள்ள வேண்டியது ஷேக்ஷ்பியரிலுள்ள சில சொற்பொழிவுகள் என்பதையும் நினைவில் கொள்ளலாம். அவைகளில் எளிமையும், சரளமான சொல்வன்மையும், அதிகாரமும் கலந்து காணப்படும். பிரசங்கத்தில் இவ்விதமான தன்மைகள் காணப்பட வேண்டுமானால், புத்திசாலித்தனத்தோடு இவை போன்றவற்றையும் படித்து மாதிரிகளாக வைத்துக்கொள்ளலாம். அதையுந் தவிர்த்து, மக்களோடு சம்பாஷிக்கும் பழக்கத்தை விட்டுவிடாதீர்கள். சபை மக்களை வீடுகளில் சந்திக்கும்போது அவர்களோடு அமர்ந்து எல்லாவற்றையும் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளுங்கள். அவர்கள் என்ன விதமாக சிந்திக்கிறார்கள், எப்படி தங்கள் சிந்தனைகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் கவனியுங்கள். அவர்களுக்கு விளங்கும் வகையில் பிரசங்கிப்பதற்கு இது பேருதவியாக இருக்கும். அதன் மூலமாக நீங்களும் கற்றுக்கொள்கிறவர்களாக இருக்கிறீர்கள். அவர்களுடைய சிந்தனைகளை நீங்கள் அறிவதால், பிரசங்க மேடையில் என்ன விதமான செய்தி கொடுப்பது சிறந்தது என்பதை நீங்களும் உணருவீர்கள்.
ஒரு பக்தியுள்ள கிராம ஊழியரை அங்கிருந்த ஒருவர் கேட்டார், ‘நீங்கள் பிதாக்களை நன்றாக அறிந்திருக்கிறீர்களா?’ என்று. ஆதித்திருச்சபைப் பிதாக்களின் புத்தகங்களை வாசித்திருக்கிறீர்களா என்கிற அர்த்தத்தில் கேட்டார். அதற்கு அவ்வளவாக சந்தர்ப்பம் கிடைத்திராத அந்த ஊழியர், வேடிக்கையாக, ‘பிதாக்களை அதிகமாக அறிந்ததில்லை. ஏனென்றால் நான் போகும்போதெல்லாம் அவர்கள் வயல்வேலைக்குச் சென்று விடுகிறார்கள். ஆனால் அம்மாமார்களை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். ஏனென்றால் அவர்கள்தான் எப்போதும் வீட்டில் இருக்கிறார்கள்’ என்றார். இந்த மனிதர் மிகவும் உண்மையான ஒரு காரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். புத்தகங்களைப் படிப்பது ஒருபுறம் இருந்தாலும், சபையாரைச் சந்தித்து, அவர்களோடு பேசுவது, பிரசங்க மேடையிலே எப்படி பேச வேண்டும் என்று அறிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும்.
(அ) முடிவாக நான் உங்களுக்குச் சொல்லுவது, நீங்கள் எதைப் பிரசங்கித்தாலும், எந்தப் பிரசங்க மேடையிலே பிரசங்கித்தாலும், எளிமையாகவோ எளிமையில்லாமலோ பேசினாலும், ஆயத்தம் பண்ணி பேசினாலோ, முன் ஆயத்தமின்றி பேச நேர்ந்தாலோ ‘பிரசங்கம் வெறும் இடிமுழக்கமாக மாத்திரம் இல்லாமல், அது கேட்பவர்களின் உள்ளங்களிலே என்றென்றும் நிலைத்திருந்து நன்மை செய்வதாயிருக்க வேண்டும்’ என்பதையே குறிக்கோளாக கொண்டிருங்கள். நமது பிரசங்கத்தில் இடிமுழக்கங்கள் இருப்பதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். எத்தனையோ பிரசங்கங்கள், ‘என்ன நேர்த்தி!, எவ்வளவு ஞானம்!, ஆஹா! அருமை! பிரமாதம்!’ என்றெல்லாம் புகழப்பட்டிருக்கிறது. ஆனால் அவை சபையாரில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராமல், அவர்களைக் கிறிஸ்துவிடம் அழைத்து வராமலேயே போயிருக்கிறது. நாம் பிரசங்கிப்பவை மனிதர்களின் மனதுக்குள் ஊடுருவி அவர்களது மனசாட்சியையும் இருதயத்தையும் தொடுவதாகவும், அவர்கள் அதைக் குறித்து சிந்தித்து ஏற்றுக்கொள்ள வைப்பதாகவும் இருக்க வேண்டும். அதுவே நமது பிரசங்கத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
(ஆ) பிரசங்கத்தில் எவ்வளவுதான் எளிமையைக் காண்பித்தாலும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தெளிவாகவும், முழுமையாகவும் எல்லோரும் விளங்கிக்கொள்ளும் வகையிலும் எடுத்துக் கூறாவிட்டால் அதனால் பிரயோஜனம் இல்லை. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் குறித்த செய்தி உங்கள் பிரசங்கத்தில் காணப்படாவிட்டால் அது வீண். பாவத்தைக் குறித்தும், மக்கள் எதை விசுவாசிக்க வேண்டும், அவர்கள் எப்படி நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பவைகளைப் பற்றியெல்லாம் நீங்கள் பிரசங்கத்தில் கூறாவிட்டால், உங்களுடைய பிரசங்கத்திற்கு ஒரு பலனும் இல்லை.
(இ) எவ்வளவுதான் எளிமையைக் காண்பித்தாலும், பிரசங்கம் உயிர்த்துடிப்போடு செய்யப்படாவிட்டால் அதனால் பயனில்லை. நீங்கள் நிமிர்ந்து நின்று பிரசங்கிக்காமல் உங்கள் தலையைத் தாழ்த்திக் கொண்டு, நீங்கள் எழுதிக் கொண்டு வந்திருக்கிற பிரசங்கத்தை மந்திரம் ஓதுவது போல முணுமுணுவென்று படித்தால் அது ஜனங்களுக்கு புரியவும் புரியாது. உங்கள் பிரசங்கமும் வீண்தான். நமது சபைகளில் பிரசங்கங்கள் உயிர்த்துடிப்போடு செய்யப்படுவதில்லை. இந்தக் கருத்து பிரசங்கம் குறித்ததான மற்ற எல்லாக் கருத்துக்களோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து சபைகளில் இந்தக் குறைவு இருப்பதை நான் காண்கிறேன். New Forest என்கிற இடத்திலேதான் நான் முதன்முதலாக எனது பிரசங்க ஊழியத்தை ஆரம்பித்தேன். என் கூட பணியாற்ற யாருமில்லாமல் நான் தனி ஆளாக அதைச் செய்தேன். பிரசங்க மேடையில் செய்யப்பட்டவை சரியா தவறா என்பதை யாரும் எனக்கு எடுத்துக் கூறியதில்லை. அதன் காரணமாக முதலாவது ஆண்டு முழுவதுமாக அது எனக்கு பலவிதங்களில் பரிசோதனை செய்து பார்ப்பதாகவே அமைந்தது. இவ்விஷயங்களில் பல்கலைக்கழகங்கள் நமக்கு உதவாது. பிரசங்க மேடைக்கு பயிற்சி கொடுக்கும் பணியானது இங்கிலாந்து சபைகளுக்கு மிகவும் தேவையாக இருக்கிறது.
(ஈ) எல்லாவற்றிற்கும் மேலாக, பிரசங்கத்தில் எவ்வளவுதான் எளிமையைக் கொண்டு வந்தாலும் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாட்டையும், கடவுளின் ஆசீர்வாதத்தையும் வேண்டி ஏறெடுக்கிற ஜெபம் இல்லாவிட்டால் பிரயோஜனம் இல்லை. நமது பிரசங்கத்திற்கு ஏற்றாற்போல் நமது வாழ்க்கையும் இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பிரசங்கிப்பதில் எளிமையைக் கடைப்பிடிக்க முயற்சிப்பதற்கு, மனிதர்களின் ஆத்துமாக்களின் மீது கொண்ட கரிசனையே காரணமாக இருக்கட்டும். நமது பரிசுத்த வாழ்கையும், இடைவிடாத ஜெபமும் நமது பிரசங்கத்திற்கு துணையாயிருக்க வேண்டும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
பிரியாவிடை பிரசங்கங்கள்
-6-
அல்பர்ட் என். மார்டின் 46 ஆண்டுகளாக, அமெரிக்காவில், நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள டிரினிட்டி பாப்திஸ்து சபையின் மூப்பர்களில் ஒருவராக பணி புரிந்து தமது 74ம் வயதில் அந்த மாகாணத்தை விட்டுச் செல்லுவதற்கு முன்பாக, தமது இறுதி அறிவுரைகளாக தம் மக்களுக்கு 9 பிரசங்கங்களை அளித்தார். அந்த அறிவுரைகள் உலகமெங்கிலுமுள்ள சகல விசுவாசிகளுக்கும், உண்மையான சபைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமானதால், அனைவரும் இதை அறிந்துகொள்ளும்படியாக அந்தப் பிரசங்கங்களின் சாராம்சத்தை தமிழில் தந்திருக்கிறோம்.
ஒரு போதகன் தன் மக்கள் மத்தியில், பவுல் எபேசிய மூப்பர்களுக்கு கொடுத்த பிரியாவிடைப் போதனையில் சொல்லியிருப்பதுபோல இரவும் பகலும், கண்ணீரோடும் பாரத்தோடும் உழைத்து வேத சத்தியங்கள் சபை வாழ்க்கையில் நடைமுறையில் இருப்பதற்காக சக மூப்பர்களோடு பாடுபட்டிருக்காவிட்டால் அல்பர்ட் என். மார்டின் இங்கே தந்திருக்கும் அறிவுரைகளை சுத்த மனச்சாட்சியோடும் தைரியத்தோடும் பிரசங்கிக்க முடியாது. அந்தளவுக்கு தம் மக்கள் மத்தியில் நேர்மையோடு பணிபுரிந்திருக்கிறார் போதகர் மார்டின். அவருடைய அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையில் மாறுதல்களை ஏற்படுத்தி கர்த்தருக்காக ஆத்துமாக்களை இருதய சுத்தத்தோடு ஆதாயப்படுத்த துணை புரியுமானால் அதுவே இந்தப் பிரசங்கங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதமாக இருக்கும். இதைத் தமிழில் குறிப்பெடுத்துத் தந்த வினோதா சுரேந்தருக்கு என் நன்றி.- ஆசிரியர்.
கர்த்தருடைய நாளாகிய ஓய்வுநாள்!
உங்களுடைய போதகராக 46 ஆண்டுகள் உங்கள் மத்தியில்
பணிபுரிந்து, இப்போது ஓய்வு பெற்று விடைபெறும் இந்த வேளையில் நான் கடைசியாக, விசுவாசிகளாகிய உங்களுக்கு கூறுகின்ற பொதுவான அறிவுரைகளில் 6ம் பாகத்தை விளக்கப் போகிறேன். அதற்கு முன்னதாக நான் இதுவரை கூறியதை மீண்டும் சுருக்கமாக கூறி உங்கள் நினைவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
எந்தவொரு விசுவாசியின் விசுவாசத்திற்கும் அத்திவாரமாக இருக்க வேண்டிய இரண்டு கொள்கைகள்:
- கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஒரு நபராக எண்ணி,விசுவாசத்தோடும் அன்போடும் அவரை விடாமல் பற்றிக்கொள்ளுங்கள்;
- அந்த விசுவாசத்தினாலும் அந்த அன்பினாலும் அவருடையவார்த்தைகள் எல்லாவற்றையும் கைக் கொண்டே தீருவேன்என்கிற தீவிரமான வைராக்கியம் கொள்ளுங்கள்.
இந்த அத்திவாரத்தின் மீது நீங்கள் உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை நடைமுறைப்படுத்த பல முக்கியமான காரியங்களை சொல்லிக் கொண்டு வருகிறேன். அதில் ஆறாவது புத்திமதியை இன்று பார்க்கப் போகிறோம். இந்த நடைமுறை பயிற்சிகளுக்கு ஆதாரமாக நான் எடுத்துக் கொண்ட வசனம், தியத்தீரா சபைக்கு நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறின புத்திமதியை அடிப்படையாகக் கொண்டது. “உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக் கொண்டிருங்கள்” வெளி 2:25. இதன் அடிப்படையில், “சபை அங்கத்தினராக” நீங்கள் செயல்பட வேண்டிய விதத்தை அவர் வருமளவும் விடாமல் பற்றிக்கொண்டிருக்கும்படி நான் உங்களுக்கு புத்தி கூறிவருகிறேன். சபை உறுப்பினராக ஒரு விசுவாசி எந்த முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் குறித்து இதுவரை 7 கொள்கைகளை வசன ஆதாரத்துடன் குறிப்பிட்டேன். கடவுளுக்கு சித்தமானால் இன்னும் 2 கொள்கைகளை நான் விளக்க விரும்புகிறேன். அதில் ஒன்றை இப்போது பார்ப்போம்.
கர்த்தருடைய நாளாகிய ஓய்வுநாளைக் குறித்ததான உங்களுடைய கொள்கையையும், அதை செயல்படுத்துவதையும் விடாமல் பற்றிக் கொண்டிருங்கள். அந்த நாள் மற்ற விசுவாசிகளோடு சேர்ந்து நாம் கடவுளை ஆராதிக்க அவரால் குறிக்கப்பட்ட நாளாகும். அதுமாத்திரமல்லாமல், அத்தியாவசியமான வேலைகளை மாத்திரம் செய்வதும், நமது சரீர ஓய்வுக்காகவும், பிறருக்கு இரக்கம் காண்பிக்கும் செயல்களை நடப்பிக்கும் நாளாகவும், இயேசு இரட்சிப்பை முற்றிலுமாக நிறைவேற்றி முடித்ததைக் கொண்டாடும் நாளாகவும் அந்நாளை செலவிட தேவன் குறித்திருக்கிறார்.
இந்த புத்திமதியைக் குறித்து நான் உங்களுக்குக் கூறுவதற்கு முன்னதாக அதற்கு முகவுரையாக இரண்டு காரியங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். முதலாவதாக, நான் ஏன் கர்த்தருடைய நாளாகிய ஓய்வுநாள் என்று குறிப்பிடுகிறேன் என்பதை விளக்க ஆசைப்படுகிறேன். புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்களின் சம்மதத்தின்பேரில் ஒரு விசேஷமான நாள் கர்த்தருடைய நாளாக குறிக்கப்பட்டதை வேதத்தில் பல இடங்களில் பார்க்கிறோம் (அப் 20:7; 1 கொரி 16:2; வெளி 1:10). வாரத்தின் முதல்நாளாகிய அந்த நாளை ஆதி திருச்சபையாரும் “கர்த்தருடைய நாள்” என்றே குறிப்பிட்டார்கள். நாமும் நமது விசுவாச அறிக்கையிலே அந்நாளைக் கர்த்தருடைய நாளாகவே அறிக்கையிடுகிறோம். இது ஏதோ அப்போஸ்தலர் காலத்தில் வானத்திலிருந்து புதிதாக தோன்றிய ஒரு கருத்து அல்ல. சிருஷ்டிப்பின் தத்துவத்திலேயே தொடர்புடைய ஒரு கருத்து இது. சிருஷ்டிப்பின் காலத்திலேயே தேவன் ஒரு நாளைக் குறித்து அதை ஓய்வுநாளாக பரிசுத்தம் பண்ணினார் (ஆதி 2:3). தமது கிரியைகளை முடித்தபின்பு தாம் ஓய்ந்திருந்த நாளை ஆசீர்வதித்து அதைப் பரிசுத்தமாக்கினார். ஓய்வுநாளை தமது ஜனம் பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் என்பதை தேவன் ஒரு கட்டளையாகவே 10 கற்பனைகளில் 4ஆம் கற்பனையில் இடம் பெறச் செய்ததினால் அவர் ஓய்வுநாளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் அறிய முடிகிறது. கடவுள் 6 நாட்களும் சிருஷ்டிப்பின் பணிகளைச் செய்து 7ஆம் நாளிலே ஓய்ந்திருந்தார். இந்த ஏற்பாட்டைக் குறித்து இயேசு கிறிஸ்துவும் மாற் 2:27ல் தெளிவாகக் குறிப்பிடுகிறார். மனிதன் ஓய்வுநாளுக்காக ஏற்படுத்தப்படவில்லை; ஓய்வுநாள்தான் மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்டது. தேவனுடைய கரம் உருவாக்கிய மனிதனாகிய ஆதாமும், அவருடைய சாயலைத் தரித்திருப்பவனாகையால் அவரைப் போலவே செயல்பட எதிர்பார்க்கப்படுகிறான். மனிதன் தன்னுடைய வாழ்நாளை 7 நாட்கள் அடங்கிய பகுதிகளாகப் பிரித்து, அதில் 6 நாளும் வேலை செய்து 7ஆம் நாளை ஓய்வெடுக்கவும், கடவுளை பிரதிபலிக்கவும், அவரை பரிசுத்தமாக ஆராதிக்கவும் வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறான். இதைப் பார்க்கையில் இது நமக்கு யூதப் பழக்கமாகவும், அவர்களுக்கென தனிப்பட்டவிதத்தில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையாகவும் தோன்றலாம். ஆனால், யூதர்களின் ஓய்வுநாள் அநுசரிப்பின் முறைமையில் ஒரு பகுதி இயேசு கிறிஸ்துவோடு மரணம் அடைந்து அவரோடுகூட அடக்கமும் செய்யப்பட்டுவிட்டது; ஆனால் அவர் உயிர்த்தெழுந்து கல்லறையைவிட்டு வெளியே வந்தபோது, மகிமையானதொரு “கர்த்தருடைய நாள்” புத்துயிர் பெற்று வந்து அவருடைய விசுவாசிகளிடையே என்றென்றைக்குமாகத் தங்கிவிட்டது. அந்த நாள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு பரிசுத்தமான நாளாக விளங்கி வருகிறது; அந்த நாளில் விசுவாசிகள் அனைவருமாகக் கூடி கடவுளை ஆராதிக்கும் நாளாகவும், மிகவும் அத்தியாவசியமான வேலைகளை மாத்திரம் அந்நாளில் செய்து, அதை ஓய்வெடுக்கும் நாளாகவும், அன்பின் ஊழியங்களும் இரக்கத்தைக் காண்பிக்கும் ஊழியங்களும் மாத்திரம் செய்கின்ற நாளாகவும் செலவிடப்பட்டது. அந்த நாளிலே, முக்கியமாக மனிதர்களின் பாவமன்னிப்புக்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்துமுடித்த இரட்சிப்பின் திட்டத்தை நினைவுகூரும் நாளாகவும் அது அநுசரிக்கப்பட்டது. பழைய ஓய்வுநாளின் சாயலே இருப்பதுபோலத் தோன்றினாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கல்லறையைவிட்டு வெளியே வந்த போது, யூதப் பழக்கவழக்கங்களை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, கிறிஸ்துவினுடைய பரிசுத்தநாளாக, “கர்த்தருடைய ஓய்வுநாளாக” அது உதயமாயிற்று. புதிய உடன்படிக்கையாகிய இரட்சிப்பின் திட்டத்திற்கு ஏற்றவிதமாக இனி வரும் காலம் முழுவதற்கும் விளங்கும்படிக்கு அப்படியாயிற்று. நமது வேதத்தை நாம் தியானிக்கையில் கடவுள் தமது சிருஷ்டிப்பின் திட்டத்திலேயே இந்தவிதமான ஒரு பரிசுத்த ஓய்வுநாளை புதிய ஏற்பாட்டு காலத்தை சேர்ந்த நமக்காகவும் ஏற்படுத்தியிருக்கிறார் என்பது நமக்கு விளங்கும்படிக்கே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அந்த நாள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சிருஷ்டிப்பின் திட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட பரிசுத்த நாளுக்கும், மோசேயின் நியாயப்பிரமாணத்தில் ஏற்படுத்தப்பட்ட பரிசுத்தநாளுக்கும், தொடர்பு இருக்கின்றதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அதுபோலவே கர்த்தருடைய நாளாகிய இந்த பரிசுத்தநாளும் கிறிஸ்து இயேசுவில் உருவான பரிசுத்த ஓய்வுநாளாகும்.
எதற்காக நாம் இந்த நாளை “கர்த்தருடைய நாளாகிய ஓய்வுநாள்” என்கிற வார்த்தையிலே அழைக்கிறோம் என்பதைக் குறித்து நான் இதற்கு மேல் அதிகமாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. வேதபூர்வமாகவும், சரித்திரபூர்வமாகவும் இந்த வார்த்தையின் நிச்சயமான தன்மையைக் குறித்து நான் பலமுறை பிரசங்கங்களிலும், சிறுவர் வகுப்புகளிலும் கூறியிருக்கிறேன். அநேக நல்ல புத்தகங்களையும் உங்களுக்கு மேற்கோள் காட்டியிருக்கிறேன். ஆகவே இந்த நாளிலே அந்த வார்த்தை எவ்வளவு சரியானது என்பதை உங்களுக்கு நிரூபிக்க முற்படாமல், கர்த்தருடைய நாளாகிய ஓய்வுநாளை எப்படி அநுசரிக்க வேண்டும் என்பதைக் குறித்த சில அறிவுரைகளையே உங்களுக்கு கூற விரும்புகிறேன்.
கர்த்தருடைய நாளாகிய ஓய்வுநாளைக் குறித்ததான உங்களுடைய கொள்கையையும், அதை செயல்படுத்துவதையும் விடாமல் பற்றிக் கொண்டிருங்கள்.
இது சம்பந்தமாக நான் உங்களுக்கு விளக்கம் கொடுப்பதற்கு முன்னால் இரண்டு கேள்விகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
- கர்த்தருடைய நாளாகிய ஓய்வுநாள் என்பது எதனால் மிகவும் முக்கியமான விஷயமாக எண்ணப்படுகிறது? ஜோன் ஓவன் என்கிற பிரபல பிரசங்கி எழுதிய வார்த்தைகளைக் கொண்டே இதற்கு பதில் கூற விரும்புகிறேன். அவர் எபிரெயருக்கு எழுதின நிருபத்திற்கு 4 பாகங்களைக் கொண்டதான மிகப் பெரிய விளக்கவுரையை எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்திற்கு முகவுரையாக அவர் எழுதியிருப்பதைக் கொண்டு இந்த கேள்விக்கு பதிலளிக்கிறேன். கடவுள் நியமித்த மற்ற அனைத்து கட்டளைகளையும் பாதுகாக்கின்ற ஒரு வேலியாக கர்த்தருடைய நாளாகிய ஓய்வுநாளை அவர் நியமித்திருக்கிறார் என ஓவன் குறிப்பிடுகிறார். அந்த வேலியை பிடுங்கிவிட்டாலோ, வெட்டிப் போட்டுவிட்டாலோ, அழித்துவிட்டாலோ, அலட்சியப்படுத்தினாலோ கொஞ்ச காலத்திற்குள் சபையின் பக்திவிருத்திக்காகவும், மனிதகுல நன்மைக்காகவும் கடவுள் ஏற்படுத்தியிருக்கிற மற்ற எல்லா கட்டளைகளும் மனிதர் மூலமாகவே கெட்டுப்போய்விடும். சில இடங்களில் அவைகள் மறைந்தும் போய்விடும். உதாரணமாக, வேதத்தில் எத்தனையோ விதமான கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளது: விசுவாசிகள் அனைவரும் கூடி சபையாக கடவுளைத் தொழுதல், பிரசங்கம், கர்த்தருடைய பந்தி, ஞானஸ்நானத்தைப் பற்றிய கட்டளைகள், ஒருவரிலொருவர் அன்புகூருகிறதான கட்டளைகள், இப்படியாக வேதாகமத்தில் அநேக ஆவிக்குரிய கட்டளைகளைக் காண்கிறோம். ஆனால் கர்த்தருடைய நாளாகிய ஓய்வுநாளை பரிசுத்தத்துடனும், பொறுப்புடனும் அநுசரிக்கத் தவறினால் மற்ற கட்டளைகள் யாவும் பிரயோஜனமற்றுப் போய், அதன் உள்ளான அர்த்தம் தெரியாமல் அழிந்தே போய்விடும்.
இயேசு கிறிஸ்து சொல்லுவதை நினைவுகூருங்கள்: ஓய்வுநாள் மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்டது. மனிதன் தனது வாழ்வின் செயல்பாடுகளை ஏழு நாள் சுழற்சியில் செய்யும்போது அதில் ஒரு நாளை அவன் கர்த்தருக்கென்று பரிசுத்த ஓய்வுநாளாக அநுசரிப்பதற்காக அவர் அந்நாளை ஏற்படுத்தியிருந்தார். அந்த நாளிலே அவன் விசுவாசிகளோடு சேர்ந்து கடவுளைத் தொழுவதில் ஈடுபடுகிறான். அவன் தன்னுடைய இருதயத்தை மற்ற உலக காரியங்கள், பேச்சுகள், எண்ணங்கள், செய்கைகளில் இருந்து விடுவித்துக் கொண்டு, தன் இருதயத்தை கடவுளுக்கு ஏற்கும்விதமாக ஆயத்தப்படுத்திக் கொண்டு அந்த நாளிலே கடவுளை நாடி வருகையிலே அந்நாள் ஒரு பரிசுத்தமான ஓய்வுநாளாக அவனுக்கு இருக்கிறது. கடவுளைத் தொழுவதையும் தவிர்த்து அவன் மற்ற கேளிக்கைகள் உல்லாசங்களிலே ஈடுபடாமல் அந்நாளில் தானும் ஓய்வெடுத்து, அதன்பின் அவசியமுள்ளவர்களுக்கு அன்பும் இரக்கமும் காண்பிக்கிறதான செய்கைகளிலே ஈடுபடுவானாகில் அந்நாள் அவனுக்கு ஆசீர்வாதமான நாளாயிருக்கும். நானும் ஜோன் ஓவனைப் போலவே நினைப்பதால்தான் கர்த்தருடைய ஓய்வுநாளாகிய இந்த நாளை மிகவும் முக்கியமான விஷயமாகக் கருதுகிறேன். நம்முடைய இரட்சிப்பின் நிமித்தமாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய மற்ற கட்டளைகளை உறுதியோடும் கவனத்தோடும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் நினைத்தோமானால், கர்த்தருடைய ஓய்வுநாளைக் குறித்த கட்டளையை மிகவும் உறுதியாக பின்பற்ற வேண்டியவர்களாகவும் இருக்கிறோம். மாற்கு 2:27ல் “மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கு அதிகாரியாயிருக்கிறார்” என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். அவர் அதை அழிப்பதற்கு வராமல், பரிசேயர்களாலும் வேதபாரகர்களாலும் உருவாக்கப்பட்ட பாரம்பரியங்களையும், மோசே மூலமாக ஏற்படுத்தப்பட்ட யூதபழக்கவழக்கங்களைக் களைந்து போடுகின்ற அதிகாரியாக வந்தவராயிருக்கிறார். தாம் உயிர்த்தெழுந்த நாளாகிய வாரத்தின் முதல்நாளோடு அந்த ஓய்வுநாளை இணைக்கின்ற அதிகாரியாக இருக்கிறார். அவரே ஓய்வுநாளுக்கு அதிகாரி! நான் படித்த ஒரு புத்தகத்தில் ஒருவர் எழுதியிருந்தது என்னை மிகவும் பாதித்தது. அந்த புத்தகத்தை எழுதியவர், “நமக்கு பரிசுத்த ஓய்வுநாள் மாத்திரம் இல்லையென்றால் நமக்கு மதம் என்கிற ஒன்றே இருக்காது” என்று எழுதியிருக்கிறார்.
பரிசுத்த ஓய்வுநாள் ஆசரிக்கப்படாவிட்டால் ஞாயிறுதோறும் ஆராதனைக்கு வருவதில் என்ன பலன்? கர்த்தருக்கு பயப்படுகிற பரிசுத்த பயம் இல்லாவிட்டால் ஜனங்கள் ஓய்வுநாளில் என்ன செய்வார்கள்? காலையில் எழுந்திருக்கும் பழக்கமுள்ளவர்கள் எழுந்து விளையாட்டு மைதானத்துக்குப் போய் தங்களுக்குப் பிரியமான விளையாட்டுகளை சற்று நேரம் விளையாடி உடற்பயிற்சி செய்து கொள்வார்கள். விலையுயர்ந்த மோட்டார் பைக், கார் போன்றவற்றை வைத்திருப்பவர்கள் அந்நாளிலே உல்லாசமாக அதிலே பயணம் செய்து பல இடங்களுக்கும் போய்வர பிரியப்படுவார்கள். சோம்பேறித்தனமானவர்கள் அந்நாளிலே வெகுநேரம் தூங்கி எழுவார்கள். அதன்பிறகு வீட்டிலே தொலைக்காட்சி பெட்டியின் முன்னாலே உட்கார்ந்து கொண்டு தங்களுக்கு பிடித்தமான விளையாட்டு நிகழ்ச்சிகளையோ, சினிமாவையோ பார்த்து பொழுதைப் போக்குவார்கள். பெரிய விருந்தை ஆயத்தப்படுத்தி உண்ண ஆசைப்படுவார்கள். ஏன்? அவர்கள் அந்நாளை கர்த்தருடைய பரிசுத்த ஓய்வுநாளாக நினைக்காததால் தங்கள் நேரத்தை இப்படியாக வீணடிக்கிறார்கள். கடவுள் பக்தி அவர்களில் இல்லை. தங்களை உருவாக்கிய கடவுள், “ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக” என்று கூறியதை உணராமலேயே வாழ்கிறார்கள். நமக்கு பரிசுத்த ஓய்வுநாள் இல்லையென்றால் வெகு சீக்கிரத்தில் கடவுளை விட்டு விலகி தூரமாகப் போய்விடுவோம். ஓய்வுநாள் மனிதனுக்காகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. அவனுடைய நன்மைக்காகத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாள்தோறும் செய்துகொண்டு வரும் உலக வேலைகளிலிருந்து ஓய்வு எடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. அது அவனுடைய சரீரத்திற்கும், உணர்ச்சிகளுக்கும், மனதிற்கும் ஓய்வைக் கொடுத்துப் புத்துணர்ச்சியை அளிப்பதாயிருக்கிறது. இது முதலாவது கேள்வியாகிய “ஓய்வுநாளின் முக்கியத்துவம் என்ன?” என்பதற்கு விடையளிப்பதாக இருக்கிறது. ஓய்வுநாள் மற்ற எல்லா கட்டளைகளையும் பாதுகாக்கின்ற வேலியாக செயல்படுகின்றது. வேலியைத் தகர்த்துவிட்டால் எதற்கும் பாதுகாப்பில்லை. ஒன்றுமே இல்லாமல் போய்விடும்.
- இரண்டாம் கேள்வி: வாரத்தின் முதல்நாளை முழுமையாக கர்த்தருடைய பரிசுத்த ஓய்வுநாளாக ஆசரிக்க வேண்டும் என்கிற கட்டளையை ஏன் பெரும்பாலானவர்கள் மிகவும் வலிமையோடு எதிர்க்கிறார்கள்? நமது விசுவாச அறிக்கையில் (1689 விசுவாச அறிக்கை), கடவுளுக்கென்று நாம் நமது நேரத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி அவர் சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபடவேண்டும் என்று சொல்லுகிறோம். யாராலும் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என்பதை இயற்கையே நமக்கு போதிக்கிறது. அந்த ஓய்வு நேரத்தில் சிருஷ்டிகரை நினைப்பது சிருஷ்டிப்புகளாகிய நமக்குப் பொருத்தமானதாகவும் இருக்குமல்லவா! கடவுளும் தமது கற்பனைகளில் ஓய்வுநாளை எல்லா மனிதருக்கும் எக்காலத்திற்குமான ஒரு கட்டளையாகவே ஏற்படுத்தித் தந்திருப்பது நல்லதல்லவா! 7 நாட்களில் ஒரு நாளை அவருக்கு பரிசுத்தமாக ஆசரிக்கும்படியாக அவர் நியமித்திருக்கிறார். சிருஷ்டிப்பின் காலம் தொடங்கி, இஸ்ரவேலரின் காலத்தையும் கடந்து, சபையும் ஏற்பட்டு, புரொட்டஸ்டண்டு சபைகளின் பல்வேறு பரிணாம மாற்றங்களின் இடையேயான ஒரு காலத்தில் நாம் இப்போது இருக்கிறோம். கடவுள் நியமித்த 10 கட்டளைகள், அவர் ஏற்படுத்திய மற்ற எல்லா கட்டளைகளின் சாராம்சமாக இருக்கிறதென்றும், அவைகள் சகல காலத்திற்கென்றும், சகல மனிதர் மீதும் விழுந்த கட்டளை என்று நாம் விசுவாசிக்கிறோம். இதில் மற்ற 9 கட்டளைகளையும் ஏற்றுக்கொள்பவர்கள்கூட ஓய்வுநாளை பரிசுத்தமாக நினைக்க வேண்டியதான இந்தக் கட்டளைக்கு மாத்திரம் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அதை எதிர்ப்பது ஏன் என்று விளங்கவில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நான் அதில் ஒரு காரணத்தைக் கூறுகிறேன். கடவுள் தம் கைப்பட எழுதிக் கொடுத்த பத்து கற்பனைகளில் நான்காவது கற்பனைதான் மிகவும் உறுதியானதாகவும், எளிதில் மீற முடியாததாகவும், ஏமாற்ற முடியாததாகவும் இருக்கிறது. ஒருவன் அதைக் கைக்கொள்ளுகிறானா இல்லையா என்பது வெளிப்படையாகத் தெரிவதாக இருக்கிறது. என்னோடு சேர்ந்து சற்று சிந்தித்துப் பாருங்கள்.
முதலாம் கற்பனை என்ன? உனக்கு என்னைத் தவிர வேறே தேவர்கள் இருக்க வேண்டாம் என்பதே. ஒருவன், வெளிப்படையாகப் பார்த்தால் அதை கடைப்பிடிக்கிறவன் போலத் தோன்றலாம். மரத்திலோ கல்லிலோ ஒரு கடவுளை அவன் செதுக்கி வைத்து வணங்காதவனாயிருக்கலாம். விக்கிரக கோவில்களுக்குப் போகாதவனாகவும் இருக்கலாம். ஆனால் அவன் உள்ளத்துக்குள்ளே என்ன நடக்கிறதென்பதை ஒருவராலுமே கண்டுபிடிக்க முடியாது. அவன் உள்ளத்தில் கடவுளைத் தவிர்த்து அநேக காரியங்களை அவன் அடுக்கி வைத்துக் கொண்டு அவைகளை பூஜிக்கிறவனாகவும் இருக்கலாம். ஆகவே அவன் முதலாம் கற்பனையை கடைப்பிடிக்கிறானா இல்லையா என்பதை நம்மால் அறிய முடியாது. இதை ஒத்துக்கொள்கிறீர்களா?
ஏழாம் கற்பனையை எடுத்துக்கொள்ளுவோம் “விபச்சாரம் செய்யாதிருப்பாயாக”. மனிதன் தன் சரீரத்தில் பரிசுத்தமாக இருக்கும்படிக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. ஒருவன் தன் மனைவியைத் தவிர்த்து எந்தவொரு பெண்ணையும் தொடாதவனாக இருக்கலாம். யாரையும் வக்கிரமமாகப் பார்க்காதவனாக இருக்கலாம். ஆனால் அவன் ஒரு மணி நேரத்துக்குள் 20 விதமான பெண்களை தன் மனதிலே கற்பனையிலே கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கலாம். அவன் ஏழாம் கற்பனையை மீறிக் கொண்டிருக்கிறான் என்பது யாருக்குமே தெரியாமல் இருக்கும். ஆனால், ஓய்வுநாளை ஆசரிக்க நினைப்பாயாக என்கிற கட்டளையை அப்படியாக மனதுக்குள் மறைத்து செய்ய முடியாது. அது வெளிப்படையாக தெரிவதாகும். ஓய்வுநாள்! நாள் என்பது என்ன? நேரத்தின் ஒரு பகுதி அது. நிமிடங்களும், மணித்துளிகளுமாகச் சேர்ந்து ஒரு நாள் ஆகிறது. காலத்தின் ஒரு பகுதியை கடவுள் விசேஷித்தவிதமாகக் குறித்து, அதை தன்னுடையதாக தெரிவிக்கிறார். ஓய்வுநாளை அவர் தன்னுடையதாக்கி அதை மனிதனுக்கென்று நியமித்துவிட்டார். ஓய்வுநாளைக் குறித்து கடவுள் இவ்வளவு உறுதியான கட்டளையைப் பிறப்பித்திருக்கையில், அந்நாளை நாம் மற்ற காரியங்களுக்காக செலவிட முற்படுவோமானால் அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அந்த நாளின் காலையில் எழுந்திருந்து, நாம் உல்லாசமான கேளிக்கைகளில் ஈடுபடுவதோ, கடைகளுக்குப் போவதோ, விருந்து உபச்சாரங்களில் ஈடுபடுவதோ, விளையாடுவதோ, டிவி போன்ற பொழுதுபோக்கும் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு நேரத்தை வீணடிப்பதோ கர்த்தருக்கு உகந்த ஓய்வுநாள் ஆசரிப்பாக இருக்குமா என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை. அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக் கூடாமலும் இருக்கிறது (ரோமர் 8:7). கடவுள் தமது பிரமாணத்தை ஆதியிலே ஆதாமின் இருதயத்திலே எழுதியிருந்தார். ஆனால் மனிதன் பாவத்தில் விழுந்த காரணத்தினாலும், வெகு காலங்கள் கடந்துபோய்விட்டபடியினாலும் அவர் எழுதிய பிரமாணம் மனிதனின் உள்ளத்திலிருந்து கெட்டுப் போய், பலபேரிடம் முற்றிலுமாகவே அழிந்துவிட்ட நிலைமையிலிருக்கிறது. இருந்தாலும், அவர்களுடைய மனசாட்சி அவர்களுடைய சிந்தனைகளைக் குறித்து தீர்ப்பளிக்கிறதினாலே, பவுல் அப்போஸ்தலன், இன்னமும் அவர்கள் இருதயத்தில் நியாயப்பிரமாணம் எழுதப்பட்டே இருக்கிறது என்கிறார். அதன் காரணமாகவே மனிதன், தான் கடவுளுக்கு செய்ய வேண்டிய ஏதோ ஒன்றை சரிவர செய்யவில்லை என இருதயத்தில் குத்தப்படுகிறான். அதன் காரணமாகவே நமது விசுவாச அறிக்கையிலும், கடவுளால் நியமிக்கப்பட்டதான ஒரு குறிப்பிட்ட நேரத்தை நாம் அவரைத் தொழுது சேவிப்பதற்கென செலவிடுவது உத்தமமாயிருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த விசுவாச அறிக்கையை எழுதிய விசுவாசிகளுக்கு அந்த கருத்து ஒன்றும் வானத்திலிருந்து வந்து குதிக்கவில்லை. தங்களுடைய வேதாகமத்தை ஆராய்ந்து பார்த்ததினாலேயே அவர்கள் இது சரியான கருத்தென்று சொல்லுகிறார்கள்.
இதற்கு விரோதமாக பேசுபவர்கள், ஓய்வு நாளில் இத்தனை மணிநேரத்தை அவருக்கென செலவிட வேண்டும் என்று எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது என்று விதண்டாவாதம் செய்கிறார்கள். இதைக் கடைப்பிடிக்க ஏன் அவ்வளவு எதிர்ப்பு? ஓய்வுநாளைக் குறித்ததான இந்த கற்பனையை ஒருவன் செயல்படுத்தாவிட்டால் அதை அனைவரும் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளும் விதத்தில் இருக்கிறதல்லவா? அதனால்தான் இந்த கற்பனையை புதிய ஏற்பாட்டு காலத்தில் நடைமுறைப்படுத்துவதைக் குறித்து அவ்வளவு எதிர்ப்புகளும், சாக்குபோக்குகளும் ஏற்பட்டிருக்கிறது. மனிதனுடைய இருதயம் கடவுளுக்கு விரோதமாகவே செயல்படத் துடிப்பதால், அவருடைய கட்டளைகளுக்கு சுலபமாக இடம் கொடுக்க விரும்புவதில்லை. இத்தனை மணி நேரம், இத்தனை நிமிடங்கள் கடவுளுக்கென்று ஒதுக்க வேண்டும் என்று வேதத்தில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்று விதண்டாவாதம் செய்யத்தான் அவனுக்கு ஆர்வம் ஏற்படும். அது உங்களுக்கு விளங்குகிறதா? அதன் காரணமாகத்தான் இந்த நான்காம் கற்பனையை நிறைவேற்றுவதைக் குறித்து மனிதனுக்கு அவ்வளவு வெறுப்பு! சலிப்பு! விசுவாசிகளிடம் எஞ் சியிருக்கும் பாவத்தின் (Remaining Sin) காரணமாகவும், அவிசுவாசிகளை முழுவதுமாக ஆட்கொண்டிருக்கும் பாவத்தின் நிமித்தமாகவும் இந்த சலிப்பு எல்லாரிடமும் காணப்படுகிறது. பவுல் அப்போஸ்தலன் ரோமர் 7:19 முதல் கூறுகின்ற வசனங்களைப் படித்துப் பாருங்கள். நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல் விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆனபடியால் நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன். நான் மறுபடியும் பிறந்த மனிதனாக இருந்தால் என்னுடைய உள்ளான மனிதனுக்கேற்றபடி நான் அவருடைய கற்பனைகளின் பேரில் பிரியமாயிருக்கிறேன். என்னிலிருந்த கல்லான இருதயத்தை அவர் எடுத்துப் போட்டுவிட்டு, அவருடைய கற்பனைகளை நேசிக்கக் கூடிய சதையான இருதயத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் பவுல் மேலும் கூறுவதை கவனியுங்கள்: ஆகிலும் என் மனதின் பிரமாணத்திற்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன். அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப் பிரமாணத்திற்கு என்னை சிறையாக்கிக் கொள்ளுகிறது. ஆகவே உண்மையான விசுவாசிகளின் இருதயத்தில் ஒளிந்திருக்கும் இந்த மீதியான பாவம் என்பது அவனையும்கூட கடவுளின் கட்டளைகளுக்கு விரோதமாக நடக்கும்படியே தூண்டுவதாயிருக்கிறது. கடவுளுடைய கட்டளைகளுக்குள் வராத அவிசுவாசிகளுக்கும்கூட இந்த 4ம் கற்பனை பொருத்தமானதாயிருக்க, அவருடைய கட்டளைகளில் மகிழ்ந்து பிரியமாயிருக்க வேண்டிய விசுவாசிகளுக்கு இந்த 4ம் கற்பனையை அநுசரிப்பது கடினமானதாக இருக்க வேண்டுமா? கர்த்தருடைய நாளிலே நான் இந்தச் செய்தியைக் கொடுக்கிறேன்! இதை நான் எவ்வாறு மதித்து நடக்கப் போகிறேன்! இதை கர்த்தருடைய ஓய்வுநாளாக அநுசரிக்கப் போகிறேனா?
கர்த்தருடைய பரிசுத்த ஓய்வுநாள் என்பது சிருஷ்டிப்பின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு, மோசேயின் நியாயப்பிரமாணத்தில் விசேஷித்தவிதமான சடங்குகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. கிறிஸ்துவின் மரணத்தில் அந்த யூத பாரம்பரிய சடங்காச்சாரங்களெல்லாம் அவரது கல்லறைக்குள்ளாக புதைக்கப்பட்டு, இப்போது கர்த்தருடைய நாளாகிய ஓய்வுநாளாக அது நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சடங்குகள், பாரம்பரியங்கள் இவைகளையெல்லாம் உரித்துவிட்டு, கர்த்தருக்கென்று பரிசுத்தமாக அநுசரிக்கும்படிக்கு வாரத்தில் ஒரு நாள் நமக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அது கர்த்தருடைய நாளாகிய ஞாயிற்றுக் கிழமை. இந்த நாளிலே நான் எழுந்தது முதற்கொண்டு இதை எப்படி அநுசரிக்கப் போகிறேன்? காலையில் எழுந்ததும் எந்த விளையாட்டு வீரர்கள் வென்றார்கள் அல்லது தோற்றார்கள் என்று பார்ப்பதற்காக ரேடியோவையோ, தொலைக்காட்சிப் பெட்டியையோ திருப்ப வேண்டிய நாளா இது? இன்றைக்கு எனக்குள் ஒரு பெரிய போராட்டமே நிகழ்ந்தது. ஒரு முக்கியமான விளையாட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. நேற்றைய இரவு 6.35 மணிக்குப் பிற்பாடு நான் ரேடியோவை முற்றிலுமாக மறந்து போயிருந்தேன். ஆனால் காலையில் எழுந்ததும் எனக்கு முதலாவதாக வந்த சிந்தனை என்ன தெரியாமா? என்னுடைய அபிமான விளையாட்டு வீரர் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான். (அதை நீங்கள் யாரும் என்னிடம் இப்போது இரகசியமாக சொல்லாதீர்கள். அது இப்போது எனக்குத் தெரிய வேண்டியதில்லை). நான்காவது கற்பனைக்காக இன்று நான் போராடினேன். ஓய்வுநாளை கர்த்தருக்கென்று பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக என்கிற கற்பனைக்குக் கீழ்ப்படிந்து நடக்க இன்று நான் போராடினேன். இந்த நாள் முழுவதையும் அவருக்கென்று செலவிட கிறிஸ்துவின் வல்லமை எனக்கு உதவி செய்தபடியால், கடவுளால் எனக்குக் கிருபையாகக் கொடுக்கப்பட்ட இந்த பரிசுத்த ஓய்வுநாளை அநுசரிப்பதில் நான் வெற்றியடைந்தேன். அந்த விளையாட்டு வீரர் ஜெயித்தாரா இல்லையா என்பது இன்னும் எனக்குத் தெரியாது. அதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் எனக்கு இல்லை. பரிசுத்த ஓய்வுநாள் முடியுமட்டும் நான் அதைக் குறித்து நினைக்கப் போவதுமில்லை. கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவிடாதபடிக்கு என்னை கெடுத்துப் போடுகின்ற ஒரு பிரமாணம் என்னிடத்தில் கிரியை செய்வதை நான் உணர்ந்தேன். ஆகவேதான் கர்த்தருடைய நாளாகிய ஓய்வுநாளை சரியாக அநுசரிப்பதற்கு விரோதமாக ஏகப்பட்ட எதிரிகள் இருக்கிறார்கள். விசுவாசியாகிய உனக்கு எதிராக கிரியை செய்கிற எதிரி உன்னிடமே இருக்கிற போது, இந்த சமுதாயமும் கடவுளுக்கு விரோதமாக நடப்பதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.
இக்காலங்களில் கர்த்தருடைய நாளில்தான் பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டிகளும், அரசாங்க வேலைக்கான பரீட்சைகளும், வேலைக்கான நேர்முகத் தேர்வு போன்றவைகளும் நடத்தப்படுகின்றன. 30 வருஷங்களுக்கு முன்னால் இப்படியெல்லாம் இருந்ததில்லை. கர்த்தருடைய நாளில், மக்களுக்கு கடற்கரைக்குச் செல்வதிலும், நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி சினிமாக்கள் பார்ப்பதிலும், விருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு நேரத்தை உல்லாசமாக செலவிடுவதிலுந்தான் ஆர்வம் இருக்கிறது. இதற்கு வசதியாக சில சபைகள் ஆராதனையை சனிக்கிழமையே வைத்துவிடுவதும்கூட சில இடங்களில் நடைபெறத்தான் செய்கிறது. ஜனங்களின் உல்லாசத்துக்கு வழிவகுப்பதற்காக சனிக்கிழமை இரவு ஆராதனை ஏற்பட்டிருக்கிறது. கடவுள் பயமோ, மத சிந்தனையோ இல்லாத ஒரு சமுதாயத்திடம் இன்று கிறிஸ்தவம் சரணடைந்து கொண்டிருக்கிறது. சுயநலத்தையும், உல்லாசங்களையும் கடவுளாக கொண்டுள்ளதான சமுதாயம் இது. பக்தியுள்ள சில மனிதர்களை எனக்குத் தெரியும். அவர்களை மற்ற உலக காரியங்களிலிருந்து தடுப்பது எது தெரியுமா? ஆதி 2:13-, யாத் 20, உபா 5 ஆகிய வசனங்களே அவர்களுடைய சிந்தனைகளுக்குள் எப்போதும் இருந்து அவர்களை ஓய்வுநாளைக் குறித்ததான கட்டளையை மீறவிடாமல் செய்கிறது. உலகப்பிரசித்தி பெற்ற எழுத்தாளராகிய ஜோன் பனியன் மனம் மாற முக்கியமான தூண்டுதலாக இருந்தது எது தெரியுமா? ஓய்வுநாளை மீறுதலும் அதனால் ஏற்படும் சாபத்தைக் குறித்ததான காரியமுமேயாகும். இவ்விரண்டு காரியத்தின் மூலமாகத்தான் கிறிஸ்துவும் இரட்சிப்பும் தனக்கு எவ்வளவு அவசியம் என்பதை ஜோன் பனியன் உணர்ந்து கொண்டார்.
நான் இதுவரைக்கும் இரண்டு கேள்விகளுக்கு விளக்கமளித்தேன். கர்த்தருடைய நாள் ஏன் மிகவும் முக்கியமானது? கர்த்தருடைய நாளை அநுசரிப்பதை மக்கள் எதற்காக இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறார்கள்? என்பதே. இப்போது, கர்த்தருடைய நாளை அநுசரிக்க விரும்புகின்ற கடவுளுடைய மக்களாகிய உங்களுக்கு நான் சில நடைமுறைப் பயிற்சிகளைக் கொடுக்க விரும்புகிறேன். இது சம்பந்தமாக நான் உங்களுக்கு 4 புத்திமதிகளைக் கூற விரும்புகிறேன்.
- கர்த்தருடைய நாளை பயனுள்ளதாக அநுசரிப்பதற்கு, சனிக்கிழமை சாயங்கால வேளையை ஞானத்தோடும், வைராக்கியத்தோடும் செலவழிக்கத் திட்டமிடுங்கள். நமது 1689 விசுவாச அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது இதற்கு உதவியாக இருக்கும். விசுவாசிகள் ஓய்வுநாளைக் குறித்து முன்னதாகவே திட்டமிட்டு, அதற்கு தங்கள் இருதயத்தை ஆயத்தப்படுத்திக் கொண்டு வந்தால் அவர்களுடைய கர்த்தருடைய ஓய்வுநாள் அநுசரிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் என்ன கருத்து சொல்லப்படுகிறதென்றால் கர்த்தருடைய நாள் உனக்கு பலன் தருவதாக இருக்கவேண்டுமானால், அதற்கு உன்னுடைய சனிக்கிழமை சாயங்கால வேளை மிகவும் முக்கியமானது. அடுத்த நாளில் அணியப் போகிற உடைகள் தயாராக இருக்க வேண்டும். ஏற்கனவே துவைக்கப்பட்டு, அயர்ன் செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். காலையில் எழுந்து, நான் இதை உடுத்தவா அல்லது அதை உடுத்தவா, இதில் பட்டன் இல்லையே என்பது போன்ற குழப்பங்களில் ஈடுபட்டு, அம்மாவை சரிசெய்து தரச் சொல்லி தொந்தரவுபடுத்தக் கூடாது. காலை, மதிய உணவுகளெல்லாம் ஏற்கனவே திட்டமிடப்பட்டுவிட வேண்டும். படுக்கும் நேரமும் திட்டமிடப்படவேண்டும். அடுத்தநாள் கர்த்தருடைய நாள் என்பதை உணர்ந்தவர்களாக அதற்கேற்ப படுக்கைக்கு முன்னதாகவே செல்ல வேண்டும். நான் என் பிள்ளைகளையும் படிப்பு, வெளியே செல்லுதல் ஆகிய நேரங்களை சனிக்கிழமைகளில் மிகவும் திட்டமிட்டு செயல்படுத்த பழக்கினேன். இன்று வரைக்கும் நான் என்னுடையதும் என் குடும்பத்தாருடையதுமாகிய சனிக்கிழமை சாயங்கால ஆயத்தவேளைகளை மிகுந்த வைராக்கியத்தோடு கடைப்பிடித்து வந்திருக்கிறேன். ஆகவே கர்த்தருடைய நாள் எங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக காணப்படுகிறது. சனிக்கிழமை சாயங்காலங்களில் நாம் ஈடுபடும் காரியங்கள் நமது மனதையும் இருதயத்தையும் கடவுளுடைய பக்கமாகத் திருப்பி அவருடைய நாளுக்கு நம்மை ஆயத்தப்படுத்த வேண்டுமேயொழிய, அவை நமது கவனத்தை திசை திருப்புவதாக இருக்கக் கூடாது.
சமீபத்தில் நான், ஆவிக்குரிய வளர்ச்சியடைந்த, கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிற இரண்டு பேரைக் குறித்து கேள்விப்பட்டேன். அவர்களில் ஒருவர் சனிக்கிழமை சாயங்கால வேளைகளில் சினிமாவுக்கு போவதை வழக்கமாகக் கொண்டிருப்பாராம். கொலை, கொள்ளை போன்றவை நிறைந்த திகில் படங்களுக்குப் போவதற்கு அவருக்கு மிகவும் பிரியமாம். தன்னோடு தனது நண்பர்களையும் அழைத்துச் சென்று மகிழ்வாராம். மற்றொரு மனிதர் என்ன வகையான படங்களுக்கு செல்வார் என்பதைக் குறித்து என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. இவை எந்தவிதத்தில் உங்களை கர்த்தருடைய நாளுக்கு ஆயத்தப்படுத்தும் என்பதை சிந்தித்துப் பார்த்தீர்களா? படத்தில் நீங்கள் கேட்ட நவீன இசையும், பார்த்த காட்சிகளும் உங்களை அவருடைய நாளுக்கு ஆயத்தப்படுத்துமா? இரவில் வெகுநேரம் கண்விழித்திருந்து, காலையில் அவசர அவசரமாக எழுந்து தயாராகி, கர்த்தருடைய வீட்டில் வந்து உட்காருவதால் அவருடைய ஊழியக்காரரால் பகிர்ந்து கொடுக்கப்படுகிற வசனம் உங்கள் இருதயத்தில் கிரியை செய்து உங்களுக்கு பலன் தருவதாயிருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா? அது ஒருபோதும் நடக்காது. அருமையானவர்களே! நான் உங்களுக்கு கூறும் புத்திமதி, கர்த்தருடைய நாளை நீங்கள் பிரயோஜனமானதாக ஆக்கிக்கொள்ள வேண்டுமானால், சனிக்கிழமை மாலை வேளைகளை பரிசுத்தத்தோடு காத்துக்கொள்ள வேண்டும் என்கிற வாஞ்சையையும் வைராக்கியத்தையும் உங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். புருஷர்களே, குடும்பத்தின் தலைவர்களே, “நானும் என் வீட்டாருமோவென்றால் சனிக்கிழமை மாலை வேளைகளை இப்படித்தான் அநுசரிப்போம்” என்று சொல்லக் கூடிய பரிசுத்த வைராக்கியத்தை கைக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளையும் அதற்குக் கீழ்ப்படியச் செய்யுங்கள். உங்களுடைய பராமரிப்புக்குள் இருக்கும் பிள்ளைகளை இவ்விஷயத்தில் அடிக்கவும் தயங்க வேண்டாம். பிரம்பைக் கையாளுங்கள். உபயோகப்படுத்தாத பிரம்பினால் ஒரு பிரயோஜனமும் இல்லை. கடவுளின் கிருபையினால் இவைகளை உங்கள் குடும்பத்தில் நடைமுறைப்படுத்துங்கள். உடை, உணவு குறித்த திட்டங்கள் போன்றவை தயாராக இருக்கவும் பழக்கப்படுத்துங்கள். அப்போது உங்கள் குடும்பத்தார் கர்த்தரின் நாளின் காலையிலே புத்துணர்ச்சியோடு எழும்பி, உயிரோடெழுந்த நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மகா உன்னதமான இரட்சிப்பைக் குறித்து புகழ்ந்து ஸ்தோத்தரிக்க சபைகூடுதலிலே சிறப்பாக பங்கெடுப்பார்கள். அதன்பின்னர் அத்தியாவசியமான வேலைகளை மாத்திரம் அந்நாளிலே செய்து, ஓய்வெடுத்து, இரக்கத்தை வெளிப்படுத்துகின்ற காரியங்களில் ஈடுபட்டு அந்நாளை மிகுந்த மகிழ்ச்சியோடும் கர்த்தருக்கு உகந்ததாகவும் செலவிடலாம்.
- உங்கள் குடும்பத்தாரின் திறனுக்கேற்ப அந்த நாளில் என்ன காரியங்களில் ஈடுபடுவது என்பதை யோசித்துத் திட்டமிடுங்கள். கடவுள் எப்படிப்பட்டவர் என்று சங்கீதம் 103:14ல் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார். நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். நம்முடைய நிலையை அவர் நன்றாக உணர்ந்திருக்கிறார். நமது நிலைமைக்கேற்பதான் அவர் நம்மிடம் எதிர்பார்ப்பார். அது போலவே, நீங்களும் உங்கள் குடும்பத்தாரிடம் நடந்துகொள்ளுங்கள். பிள்ளைகளின் வயது, அவர்களின் புரிந்துகொள்ளும் திறமை, அவர்களது ஆவிக்குரிய நிலைமை இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு அவரவர் குடும்பத்தின் நிலைமைக்கேற்ப கணவனும் மனைவியுமாக சேர்ந்து திட்டமிட வேண்டும். என்ன செய்தால் ஆவிக்குரிய வகையில் பிரயோஜனமாகவும் உதவியாகவும் இருக்கும் என்பதைத் திட்டமிடுவதற்கே நீங்கள் இருவருமாக நேரம் செலவிட வேண்டும். அதன்பின் அதை செயல்படுத்த வேண்டும்.
நான் ஒரு சில ஆலோசனைகளை உங்களுக்குக் கூறலாம். அநேக குடும்பங்களுக்கு காலாற நடந்து விட்டு வருவது பிரயோஜனமாக இருந்திருக்கிறது. அநேகருக்கு அப்படி குடும்பமாக நடக்கும்போது ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் பயனுள்ளதாக இருந்திருக்கிறது. அத்தோடு அப்படி நடப்பது சரீரத்திற்கும் பயிற்சி அளித்து புத்துணர்ச்சியைத் தூண்டுகிறது. அதையும் தவிர நீங்கள் சாப்பிட உட்காரும் வேளைகளில், அன்று கேட்ட கர்த்தருடைய செய்தியைக் குறித்து பிள்ளைகளிடம் கலந்துரையாடலாம். மதிய உணவுக்குப் பிறகு சற்று நேரம் தூங்கி இளைப்பாறச் சொல்லுங்கள். அவர்களுக்கு தூக்கம் வரவில்லை என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். ஏனென்றால் சாயங்காலம் சபையில் வந்து உட்கார்ந்த மாத்திரத்தில் அவர்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது? சபையில் வந்து தூங்கக்கூடாது. வீட்டிலேயே மதியம் தூங்கிவிட வேண்டும்.
குடும்பமாக வாசிக்கும் பழக்கம்! இது, நமது ஆவிக்குரிய ஆதிப்பிதாக்கள் கர்த்தருடைய நாளில் கடைப்பிடித்து வந்த ஒரு மிக நல்ல ஆவிக்குரிய பழக்கமாகும். என்னிடத்தில் இவ்விதமாக வாசிக்கக்கூடிய 16 புத்தகங்கள் இருக்கிறது. அமெரிக்கன் ட்ராக் சொசைட்டி இதை அழகாக பைண்டு செய்து அளித்திருக்கிறார்கள். இவை குடும்பமாக வாசிக்க ஏதுவான புத்தகமாகும். அந்த புத்தகத்தின் அட்டையிலே ஓர் அழகான படம் இருக்கும். அப்பாவும் அம்மாவும் சோபாவில் புத்தகத்தை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, பிள்ளைகள் அப்பா அம்மா தோள்களுக்கு இடையிலிருந்து எட்டிப் பார்த்த வண்ணம் அந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருப்பது போன்ற ஓர் அழகிய காட்சி அது. குடும்பமாக படிக்கிறார்கள். மிக நல்ல, கிறிஸ்தவ இலக்கியதரம் வாய்ந்த புத்தகத்தை அவர்கள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் நாங்கள் பல ஆண்டுகளாக செய்து கொண்டு வந்த மற்றொரு காரியம், பாடல்களை மனப்பாடம் செய்துகொள்வதாகும். அதனால்தான் நான் இன்றைக்கும்கூட அவைகளில் அநேகம் பாடல்களை பாராமல் பாடக்கூடிய திறனைப் பெற்றிருக்கிறேன். கர்த்தருடைய நாளுக்கு பிள்ளைகளையும் ஆயத்தப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தாரின் நிலைமைக்கு ஏற்ப நன்கு யோசித்து, ஆவிக்குரிய பிரயோஜனமான திட்டங்களை வகுத்து செயல்படுத்துங்கள்.
- கர்த்தருடைய நாளைக் கடைப்பிடிப்பதில் கடுமையான சட்டதிட்டங்கள் ஏற்படுத்தி சர்வாதிகாரியைப் போல நடந்துகொள்ளுகிற சோதனைக்கு உட்படாதிருங்கள். அவ்வப்போது குடும்பத்தாரின் நிலையை மறுபரிசீலனை செய்து பாருங்கள். சில குடும்பத்தில் அந்த பிள்ளைகளின் வரம்புக்கு மிஞ்சி அவர்களை மிகுந்த கெடுபிடியில் வைப்பதைப் பார்த்திருக்கிறேன். பெற்றோரின் மிதமிஞ்சிய எதிர்பார்ப்பினாலே அவர்களின் தகுதிக்கு மீறிய காரியங்கள் அவர்கள் மீது திணிக்கப்படுவதைக் கண்டிருக்கிறேன். அவர்களை சிறுபிள்ளைகளாக நினைத்து நடத்தாமல் பெரியவர்கள் அளவுக்கு அவர்கள் மீது சட்டதிட்டங்கள் திணிக்கப்பட்டு அவர்களை திணறடிப்பது பரிதாபகரமான நிலைமை. ஒரே நாளிலே 100 பக்கங்கள் 1000 பக்கங்கள்கூட அவர்களை வாசிக்கச் செய்கின்ற பரிதாபம். ஜோன் ஓவன் என்கிற பிரசித்தி பெற்ற பிரசங்கி நகைச்சுவையாகக் கூறுகிறார்: கர்த்தருடைய நாளில் எதை செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்று சிலர் வகுத்திருக்கின்ற சட்டதிட்டங்களுக்கு அளவேயில்லை. எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதை ஒருவன் அந்நாளிலே படித்து முடிப்பதிற்குள்ளாக அந்த நாளே முடிந்து போய் அவன் அந்நாளில் எந்தவித பயனையுமே பெறாதவனாகத்தான் போவான். ஓய்வுநாளை அநுசரிப்பதிலும் பரிசேய சட்டதிட்டம் நுழைந்துவிடக்கூடாது என அவர் குறிப்பிடுகிறார். புதியஏற்பாட்டில் ஓய்வுநாள் அநுசரிப்பைக் குறித்து எங்கே எழுதப்பட்டிருக்கிறது என சிலர் வாதாடுகிறார்கள். எந்த புதிய ஏற்பாட்டை அவர்கள் படிக்கிறார்கள்? ஓய்வுநாளைக் குறித்த பரிசேய சட்டதிட்டங்களின் உண்மையை தோலுரித்துக் காட்டுவதில் இயேசு எடுத்துக்கொண்ட அளவு நேரத்தை 10 கற்பனைகளிலுள்ள வேறு எந்த கற்பனைக்கும் அவர் செலவிடவில்லை என்பது புதிய ஏற்பாட்டில் தெளிவாக இல்லையா? ஓய்வுநாளை குறித்து பரிசேயர் வகுத்த சட்டதிட்டங்களை இயேசு மலைப்பிரசங்கத்தில் தோலுரித்துக் காட்டுகிறார். அதையும் தவிர்த்து வேறு அநேக பரிசேய கெடுபிடியான விதிகளையும் அவர் மலைப்பிரசங்கத்தில் ஜனங்களுக்கு விவரித்துக் காண்பிக்கிறார். மீண்டும் மீண்டுமாக பரிசேயரிடம் ஓய்வுநாளைக் குறித்தே பிரச்சனை பண்ணுகிறார். அவர் என்ன செய்கிறார்? பரிசேயர் விதித்த கெடுபிடிகளை தோலுரிக்கிறார். எதற்காக? ஓய்வுநாளையே முற்றிலுமாக அழித்துவிடுவதற்காகவா? இல்லை. பழைய ஓய்வுநாளை அவருடைய கல்லறையிலேயே புதைத்து விட்டு, முற்றிலும் புதிதான “கர்த்தருடைய ஓய்வுநாள்” என்கிற புதிய உடன்படிக்கையை நிலைநிறுத்துவதற்காகவே அப்படி செய்கிறார். மோசேயின் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதற்காக மாத்திரமல்ல, பரிசேயர் விதித்த கடுமையான சட்டதிட்டங்களிலிருந்து விடுதலை அளிக்கவுமே அவர் வந்தார். ஆகவே ஓய்வுநாளைக் குறித்த கடினமான கெடுபிடிகள் அந்த நாளை உற்சாகமற்றதாக செய்துவிடாதபடிக்கு கவனமாக இருங்கள்.
ஏசாயா 58:13 சொல்லுகிறது, கர்த்தருடைய நாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும். அதை அவருடைய பரிசுத்த நாளென்றும் எண்ணி அதை உற்சாகத்தோடு அநுசரிப்பாயென்றால், கிறிஸ்துவுக்குள்ளான சகலவிதமான ஆசீர்வாதங்களாலும் கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கக் காண்பாய்.
நீங்கள் இப்போது என்ன நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரிகிறது. கடவுள் மீதோ, வேதத்தின் மீதோ என் பிள்ளைகளுக்கு ஆர்வம் இல்லையே. என்ன செய்வது? என்கிறீர்கள். அப்படித்தான் இருக்கும் என்பதை நீங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கலாம். ஆனால் நீங்கள் அந்த நாளையும் அதில் செய்ய வேண்டிய காரியங்களையும் குறித்து முன்னதாகவே திட்டமிட்டு அதில் பிள்ளைகளையும் கட்டாயத்தின்பேரில் ஈடுபட வைக்கலாம். வாரத்தின் இடைநாட்களிலேயே உங்கள் திட்டங்களை பிள்ளைகளிடம் அன்போடும், இடைவிடாமலும் கூறி ஞாபகப்படுத்திக் கொண்டேயிருங்கள். பிள்ளைகளே, இப்பொழுது உங்களுக்கு உற்சாகமில்லாமல் காணப்படும் இந்த காரியம், நீங்கள் கடவுளை ஏற்றுக்கொண்டபிறகு மிகவும் ஆர்வத்தைக் கொடுப்பதாக மாறிவிடும் என நினைவுபடுத்துங்கள். உங்கள் பிள்ளைகளின் உற்சாகக் குறைவை நீங்கள் மாற்றிவிட முடியும் என நான் கூறவில்லை. ஏனென்றால் மனந்திரும்பாத நிலையிலுள்ள அவர்களுடைய இருதயம் கடவுளுக்கு விரோதமாக செயல்படுகிறது. கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியக்கூடாமல் இருக்கிறது. நான்காம் கற்பனைக்கும் அதனால் கீழ்ப்படிய முடியவில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் கவனமாக இருங்கள். கர்த்தருடைய நாளை அநுசரிக்கிறேன் என்று தேவையற்ற, வேத சம்பந்தமற்ற சட்டதிட்டங்களை புகுத்தி அந்நாளின் விசேஷத்தையும் அர்த்தத்தையும் உணராதவர்களாக ஆகிவிடாமல் இருங்கள்.
- கர்த்தருடைய நாளாகிய ஓய்வுநாள் மிகவும் முக்கியமாக குறிப்பிட்டுக் காண்பிக்கின்ற, கர்த்தர் நிறைவேற்றி முடித்த பணியை அந்நாளிலே பிரதிபலியுங்கள். அது மிகவும் அழகான ஒரு காரியம். இது பரிசுத்தமானதும் வேதபூர்வமானதுமான ஒரு காரியம். யாத் 20ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வுநாள் அநுசரிப்பில் அவர்கள் எதைக் கொண்டாடுகிறார்கள்? யாத் 20:8, “ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக. ஆறுநாளும் நீ வேலை செய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள். அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். ஆகையால் கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து அதை பரிசுத்தமாக்கினார்.” சிருஷ்டிப்பின் ஓய்வுக்கு இங்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கடவுள் ஆறுநாளும் சிருஷ்டிப்பில் ஈடுபட்டு ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். அவருடைய சாயலிலே உருவாக்கப்பட்டிருக்கும் மனிதனிடம் அவர், ஆறு நாளும் நீ உன்னுடைய வேலைகளை செய். ஏழாம் நாளிலே நீ ஓய்ந்திருக்க வேண்டும் என்கிறார். சிருஷ்டிப்பின் ஓய்வை கடவுள் அநுசரித்தது போல மனிதனும் கர்த்தருடைய ஓய்வுநாளை விசேஷித்தவிதத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறான்.
இதைக் குறித்து மோசே சொல்லுவதைப் பாருங்கள். உபா 5:12, “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக. ஆறுநாளும் நீ வேலை செய்து உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள். 15ம் வசனத்தில் பாருங்கள். நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக. ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.” கடவுள் தமது நோக்கத்தை ஜனங்களுக்கு வெளிப்படுத்துகிறார். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற விதத்தில் வித்தியாசமான போதனையை அவர் தரவில்லை. ஜனங்களுக்கு விளங்குவதற்காக அதை அவர் சிறிதுசிறிதாக வெளிப்படுத்தும்போது அவரது நோக்கம் முன்னைய போதனைகளுக்கு முரண்பட்டதாயிராமல், இன்னும் சற்று மேம்படுத்தப்பட்டதாக காட்சியளிக்கிறது. இந்த வசனத்தில் நாம் பார்க்கிற புதிய காரியம் எகிப்திலிருந்து அவர் உன்னை மீட்டு வந்ததை அந்த நாளிலே கொண்டாடுவாயாக என்பது. நீ ஒரு காலத்தில் அடிமையாயிருந்தாய். உன்னை அடிமைப்படுத்தினவர்களின் சொற்படி கேட்டு நடந்து கொண்டிருந்தாய். கடவுள் தமது வல்லமையான செயலினால் உன்னை அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்தார். ஆகவே எகிப்திலிருந்து மீண்ட அந்த மீட்பின் ஓய்வைக் கொண்டாடுங்கள் என்கிறார் கர்த்தர்.
புதியஏற்பாட்டுக்கு நாம் வருவோம். இங்கு நாம் என்ன பார்க்கிறோம்? யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்கு உட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக்குறித்து சொல்லியிருக்க மாட்டாரே. ஆகையால் தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. ஏனெனில் அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்திருந்தது போல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான் (எபி 4:8-11). இப்போது சுவிசேஷ ஓய்வு (Gospel rest) ஏற்பட்டிருக்கிறது. கிறிஸ்து இவ்வுலகில் தமது கிரியைகளை நடப்பித்து, அவைகளை ஒரு வெள்ளிக்கிழமையிலே முடித்தார். அடுத்த நாள் ஓய்வுநாள். அன்றைக்கு இயேசு எங்கே இருந்தார். தமது கல்லறையிலே உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு அன்று ஓய்ந்திருந்தார். வாரத்தின் முதல் நாளிலே அவர் மரித்தோரில் இருந்து உயிர்த்தெழுந்தார். பிசாசையும் பாவத்தையும் வென்றவராக உயிர்த்தெழுந்தார். அவர் தன்னை சீஷர்களுக்கு வெளிப்படுத்தியதின் மூலமாக உறுதிப்படுத்தினார். இதை யோவான் 20ஆம் அதிகாரத்தில் காண்கிறோம். யோவான் அதிலே “எட்டாம் நாளிலே” எனக் குறிப்பிடத் தவறவில்லை. எட்டாம் நாள்! யோவான் பின்னாளில் வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதியபோது அதில் “நான் கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானபோது” என எழுதியதை காண்கிறோம். அதற்குள்ளாக “கர்த்தருடைய நாள்” என்கிற வார்த்தை ஏற்பட்டுவிட்டது. அது என்ன என்பது அப்போது ஆசியா மைனரில் இருந்த விசுவாசிகளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. சபையார் அனைவருமாகக் கூடி இயேசு கிறிஸ்து மூலமாக ஏற்பட்ட பூரண இரட்சிப்பைக் கொண்டாடுவதற்காக நியமிக்கப்பட்ட கர்த்தருடைய நாளாகிய ஓய்வுநாள் அது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே பிரியமானவர்களே! கர்த்தருடைய ஓய்வுநாளாகிய வாரத்தின் முதல்நாள், கிறிஸ்து செய்து முடித்த பூரண இரட்சிப்பை எப்போதும் வெளிப்படுத்துவதாயிருக்கிறது.
பிரியமானவர்களே, இவைகளைத்தான் நான் உங்களுக்கு புத்திமதியாகக் கூற விரும்புகிறேன். கர்த்தருடைய நாளாகிய ஓய்வுநாளைக் குறித்தான உங்களுடைய வாஞ்சையையும் வைராக்கியத்தையும் தளரவிடாமல் உறுதியாகப் பற்றிக்கொண்டிருங்கள்.
அவரை இன்னமும் ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு நான் கூறுவதாவது, அவர் நியமித்த அவருடைய நாளைக் குறித்து நீங்கள் என்னவிதமான எண்ணத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்கள் முன்னால் தெளிவுபடுத்தினேன். இந்த நாளை நீங்கள் எப்படி அநுசரிக்கிறீர்கள் என்பது உங்களுக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள தொடர்பைப் பொறுத்திருக்கிறது. அவர் ஏற்படுத்தின பூரண இரட்சிப்பிற்குள் வராதவர்களாய் இருந்தால் இந்த நாளைக் குறித்து உங்கள் எண்ணம் வேறுவிதமாக இருக்கும். வந்தவர்களாய் இருந்தால் இந்த நாளை அநுசரிப்பதைக் குறித்து நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். இந்த ஆராதனையைக் குறித்து மகிழ்வீர்கள். கர்த்தருடைய ஜனங்களோடு கூடி வருவதை விரும்புவீர்கள். அவர்களோடு பேசி மகிழ்வீர்கள். இப்போது அலுப்பாகவும், எரிச்சலூட்டுவதாகவும் இருக்கிற காரியங்கள் இயேசுவிடம் வந்தால் மாறிப்போகும். இயேசு சொல்லுவதை கவனியுங்கள்: வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே! என்னிடத்தில் வாருங்கள். நீங்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் பாரம் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்! இப்போது உங்களுக்கு சலிப்பாகவும், எரிச்சலாகவும் தோன்றுகின்ற காரியங்கள் இயேசுவிடம் வந்தால் மாறிப் போகும். அவர் என்ன சொல்லுகிறார்? நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்கிறார். நீங்கள் அவருடைய இரட்சிப்பின் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும்போது உங்களுக்கு ஓய்வுநாள் மகிழ்ச்சியானதாகும். அவருடைய பிள்ளைகளோடு இருப்பது இன்பமாக இருக்கும். அவரைப் புகழ்ந்து பாடல்கள் பாடுவது சந்தோஷத்தைத் தரும். நீங்கள் சீக்கிரமாக இயேசுவிடம் ஓடோடி வந்து அவர் தருகின்ற இளைப்பாறுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று நான் உங்களை வேண்டிக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, பிற விசுவாசிகளோடு சேர்ந்து கடவுளைத் தொழுவதிலும், ஓய்வு எடுப்பதிலும், மிக முக்கியமான இரக்கம் பாராட்டும் பணிகளில் ஈடுபடுவதிலும் இந்த நாளை செலவழிக்க வேண்டும் என்கின்ற உறுதியை விடாமல் பற்றிக்கொண்டிருங்கள். அவை எல்லாவற்றையும்விட இயேசு கிறிஸ்துவையும் அவர் நிறைவேற்றி முடித்த பூரணமான இரட்சிப்பையும், வருங்காலத்திற்குரிய வாக்குத்தத்தத்தையும் மறவாமல் நினைத்துக் கொண்டேயிருங்கள்.
இந்த தியானத்தை நான் எப்படி முடிக்கலாம் என சிந்தித்துக் கொண்டிருந்தபோது எனக்கு இவ்வாறு தோன்றியது. நான் இவ்விடத்தை விட்டு வேறு இடத்திற்கு குடிபோன பிற்பாடும் தொடர்ந்து இங்குள்ள என்னுடைய சக மூப்பர்களோடு தொடர்பு வைத்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். இன்றிலிருந்து 6 மாதங்கள் கழித்து நான் அவர்களுடன் தொலைபேசி மூலமாக பேசும்போது, அவர்கள் பாஸ்டர் மார்டீன், உங்களுடன் செலவிட எங்களுக்கு சிறிது நேரம்தான் இருக்கிறது. ஆகவே தயவுசெய்து இந்த சபையைக் குறித்து இரண்டு கேள்விகள் மாத்திரம் கேளுங்கள் என சொல்வார்களானால் நான் என்ன முக்கியமான இரண்டு கேள்விகளை அவர்களிடம் கேட்பேன் என சிந்தித்துப் பார்த்தேன். உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா?
சரி. என்னுடைய முதல் கேள்வி, புதன்கிழமை நடைபெறும் ஜெபக் கூட்டத்திற்கு எத்தனை பேர் வருகிறார்கள்? அதில் ஜெப ஆவி நன்றாக செயல்படுகிறதா? என்பதே. கடவுளின் பிள்ளைகளாகிய நீங்கள் உங்கள் நேரத்தை சரிவர செயல்படுத்தத் திட்டமிட்டு, ஜெபவேளைக்கு ஆயத்தமாகிக் கூடிவருகையில் கடவுள் தமது கிருபையின் ஆவியை உங்களுக்கு அருளிச் செய்கிறார். இதனால் அவர் உங்களை கைவிடவில்லை என்பதை நன்றாக உணர்ந்துகொள்ளுகிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தாதபடி நடந்துகொள்வதால் அவரும் உங்களைவிட்டு விலகி விடாமல் இருப்பார். இது எனது முதல் கேள்வி.
என்னுடைய இரண்டாம் கேள்வி என்ன தெரியுமா? சபை மக்கள் கர்த்தருடைய நாளை எவ்விதமாக அநுசரிக்கிறார்கள்? பிற சபை மக்களைப் பார்த்து புதிதான காரியங்களை புகுத்த விரும்புகிறார்களா? மாலை ஆராதனை முடிந்ததும், பெருமூச்சு விட்டவர்களாக, அப்பாடா கர்த்தருடைய நாள் முடிந்து விட்டது. இப்போது நான் போய் சீட்டு விளையாடலாம். அல்லது ஒரு சினிமாவுக்குப் போய் வரலாம் என்கிற எண்ணம் வருகிறதா? கர்த்தருடைய நாளை ஒரு சுமையாக நினைத்து அது எப்போது முடிவுக்கு வரும் என்ற சிந்தனை ஏற்படுகிறதா? அப்படியிருந்தால் அது என்னை மிகவும் பாதிக்கிறது. நான் இங்கேயே இருந்து, சபை மக்களோடு பேசி உறவாடி, கடவுளைப் புகழ்ந்து பாடல்களைப் பாடி மகிமைப்படுத்திக் கொண்டே இருப்பேனேயாகில் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதை விட்டுவிட்டு அதை ஒரு சுமையாகக் கருதினீர்களானால் அது என்னை மிகவும் பாதிக்கிறது. என்னவிதமாக அதை அநுசரிக்கப் போகிறீர்கள்? ஓய்வுநாள் அநுசரிப்பு என்கிற அந்த வேலி அசையத் தொடங்கிவிட்டால், அது துண்டுதுண்டாக மாறத் தொடங்கிவிட்டால், கடவுளின் மற்ற கட்டளைகளை அநுசரிப்பதில் ஆட்டங்காண அதிக நாளாகாது.
சில ஆண்டுகள் முன்பு வரைக்கும், சுவிசேஷ சபை என்று சொல்லப் படுகிறவைகள் ஞாயிறு காலை, மாலை வேளைகளில் வேதவகுப்புகள் நடத்தி வந்தனர். இப்போது அப்படியா இருக்கிறது? அவர்கள் தங்களுடைய ஞாயிறு மாலை நேர வேதபாட வகுப்புகளை விட்டுவிட்டார்கள். புதன்கிழமை ஜெபத்திற்காக கூடுவதை விட்டுவிட்டார்கள். எதனால் அப்படி ஆனது? அவர்கள் ஓய்வுநாள் ஆசரிப்பைக் குறித்த தியானங்களை கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டதால், ஒவ்வொன்றாக அவர்கள் மத்தியிலிருந்து விலகிப்போயிற்று. ஓய்வுநாள் அநுசரிப்பு ஒரு வேலி. இதை எந்த தீர்க்கதரிசியுமோ, தீர்க்கதசிரியின் புத்திரனோ ஏற்படுத்தவில்லை. கடவுளே ஏற்படுத்தினார். அதை முறையாக அநுசரிக்கும்போது அதனோடு சேர்ந்த மற்ற ஆசீர்வாதங்களையும் அவர் அதனுள்ளேயே வைத்திருக்கிறார். ஓய்வுநாள் அநுசரிப்பு, கடவுளுடைய மற்ற எல்லா கட்டளைகளையும் பாதுகாக்கின்ற ஒரு காவலனாக விளங்குகிறது.
கடவுளின் வல்லமையினாலும், பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு இயேசு கிறிஸ்து கிரியை நடப்பிக்கிறதின் மூலமாகவும் இங்கே கூடிவருகின்ற நீங்கள் கர்த்தருடைய நாளாகிய ஓய்வுநாளையும் அதில் செய்கின்ற காரியங்களையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும் நாள்வரைக்கும் கவனத்தோடு தேவனுக்குப் பிரியமாக நடப்பிப்போம் என்கிற வைராக்கிய வாஞ்சையை உடையவர்களாக இருக்க வேண்டும் என நான் தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.
தாம்பத்திய உறவில் நெருக்கம்
திருமண உறவில் கணவன் மனைவியரிடம் இருக்க வேண்டிய ஆழமான தாம்பத்திய உறவை வேத அடிப்படையில் விபரித்து எழுதியிருக்கிறார் அலன் டன். கடந்த இதழின் தொடர்ச்சியை இவ்விதழில் தந்திருக்கிறோம். ஆங்கில மூலத்தை தமிழாக்கம் செய்தவர் வினோதா சுரேந்தர்.& ஆசிரியர்
பாகம் 3
திருமண நெருக்கம் சந்திக்கும் சவால்களை மேற்கொள்ளுதல்
முகவுரை
முன்பின் சம்பவித்திராத குழப்பங்களும், அலட்சியப்போக்கும், திருமணத்திற்கு விரோதமான தாக்குதல்களை எதிர்நோக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறியாதவர்கள் இன்று இருக்க முடியுமா? ஆணும் பெண்ணுமாக திருமணம் செய்யக்கூடியவர்கள் (Heterosexuals) இன்று திருமண வாழ்க்கையே வேண்டாம் என்கிறார்கள். ஆணும், ஆணுமாக அல்லது பெண்ணும், பெண்ணுமாக (Homosexuals) இணைந்து வாழ விரும்புகிறவர்கள் திருமண வாழ்க்கையை தங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். முறையாகத் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிற ஜோடிகளின் எண்ணிக்கை (மேலை நாடுகளில்) பெருகிக் கொண்டே போகிறது. வேதாகமம் சொல்லுகின்ற ஒழுங்குமுறையெல்லாம், தன்னினச் சேர்க்கையாளர் சங்கங்கள் (Homosexuals) மூலமாக வெகுவாக அலட்சியப்படுத்தப்படுகிறது. அவர்களின் தவறுதலான எண்ணங்கள் எல்லாம் டிவி, இன்டர்நெட், பத்திரிகைகள் மூலமாகவும், கல்லூரிகளிலும், நீதிமன்றத்திலுங்கூட ஊடுருவி ஜனங்களை ஒட்டு மொத்தமாக அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்லுகின்றன. இந்த மாதிரியான காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சில நபர்களை பிஷப் பதவிக்கு சில பாரம்பரிய சபைகளில் தெரிவு செய்திருப்பதைக் கண்டித்து, உலகளாவிய அளவிலான பாரம்பரிய சபைகளுக்கிடையே பிரிவு ஏற்படக்கூடிய நிலைமைகளையும் நாம் செய்தித்தாள்களில் வாசிக்கிறோம். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மாத்திரந்தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று நியாயச்சட்டத்தைத் திருத்தி எழுத வேண்டிய நிலையில் உலகம் இருக்கிறது. அத்தோடு, சமுதாயமும் தனது கெளரவமான பண்பையும், வேத ஒழுங்குகளையும் புறக்கணித்துவிட்டு, மேலைநாட்டு ஒழுக்கமான கலாச்சாரங்களை சிதைத்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவ திருமணங்கள் மாத்திரமல்ல, திருமணம் என்கிற காரியமே இன்று பாதுகாக்கப்பட வேண்டியதாயிருக்கிறது.
வஞ்சிக்கிற ஆவிகள், அசுத்தமான கொள்கைகளை உருவாக்கி, நமது சிருஷ்டிகரின் மகிமையை மாசுபடுத்தி, குலைத்துப் போடுவதற்குத் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. 1 தீமோ 4:1-5 வசனங்களில் பவுல் வஞ்சிக்கிறதான கொடிய ஆவிகளின் செயல்பாடுகளைக் குறித்து விவரிக்கிறார். அவைகளின் திட்டம் சிருஷ்டிகரின் மகிமையைக் குறைப்பதேயாகும். சிருஷ்டிப்பின் நோக்கங்களை கைவிட்டு, பிசாசின் கொள்கைகளை கடைப்பிடிக்க வைப்பதின் மூலமாக அசுத்த ஆவிகள் மனிதனுடைய மனசாட்சியில் சூடுபோட்டு அதை எரித்துப் போட்டுவிடுகிறது. முக்கியமாக திருமணத்திலும், உணவு உட்கொள்ளுவதிலும் தவறான கொள்கைகளை அசுத்த ஆவிகள் உபதேசிப்பதாக இந்த வசனங்களில் பவுல் எச்சரிக்கிறார். “தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது.” சிருஷ்டிப்பின் அடிப்படைத் தேவையான நல் ஒழுங்குகளை, வஞ்சிக்கிற பிசாசின் ஆவிகள் மறைத்து, தெளிவில்லாததான ஒரு நிலையை உண்டு பண்ணுகின்றன. இவ்விதமான வஞ்சிக்கிற ஆவிகளின் பொய்களையும் திரித்துக் கூறுவதையும் நம்புகிற மக்கள், அழிவின் பாதைக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். பொய்யனும் மனுஷ கொலைபாதகனுமாயிருக்கிற பிசாசானவன் (யோவான் 8:44) இவ்விதமான சிருஷ்டிப்பின் ஒழுங்குகளில் ஜனங்களைக் கெடுத்துப் போட அதிக கடுமையாக உழைக்கிறான். அந்த வஞ்சிக்கிற ஆவியின் பலாபலனை, திருமண காரியங்களின் ஒழுக்கம் இவ்வளவாக சீர்குலைந்து, பரவிக்கொண்டு வருவதின் மூலமாக அறிகிறோமல்லவா!
நமது சமுதாயத்தில் திருமணமானது பல தலைமுறைகளாக இவ்விதமான பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறது. கடவுள் பிதாக்களுடைய அக்கிரமங்களைக் குறித்து மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராய் இருக்கிறார் (யாத் 20:5). திருமண நெருக்கத்தை நோக்கிய நமது பயணத்தில் நம்மை வழிநடத்தும் நான்கு நட்சத்திரக் குறிப்புகளையும், பிசாசின் வஞ்சிக்கிற ஆவிகள் வெகு காலமாக மறைத்துக் கொண்டிருக்கின்றன. ஜீவனுள்ள மெய்யான கடவுளை அறிந்திருப்பவர்கள் ஒரு சிலரே. அவர்கள் மாத்திரந்தான் வாழ்க்கையை சிருஷ்டிப்பு, வீழ்ச்சி, மீட்பு ஆகிய கொள்கைகள் அடங்கியதாக காண்கிறார்கள். உப்பு தன் சாரத்தை இழந்து போனதான கிறிஸ்தவமும், பொதுவான கிருபை குறைவுபடத் தொடங்கியிருப்பதுமான சமுதாயத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிற நமக்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டளை: கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக, சுவிசேஷ அன்பும், உண்மையான நெருக்கமும் கொண்ட பரிசுத்த திருமண வாழ்க்கையை நாம் உலகில் அதிகரிக்கப் பண்ண வேண்டும்.
கடைசி பாகமாகிய இந்த தியானத்திலே நாம் திருமண நெருக்கத்திற்கு சவாலாக இருக்கும் இடையூறுகளைப் பற்றியும், அவைகளை மேற்கொள்ள வேண்டிய விதங்களைக் குறித்தும் பார்க்கலாம். இவ்விதமான இடையூறுகளை நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்தும், சபையின் மேய்ப்பராக பணியாற்றிய அநுபவத்திலிருந்தும் கூறுகிறேன். இந்த சவால்கள் எவ்வளவு பயங்கரமானதாக இருந்தாலும் சுவிசேஷ அன்பினாலே அவைகளை மேற்கொள்ள முடியும். சுவிசேஷ அன்பினால் அன்பு செலுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் இந்த கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும், கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாய், உலகத்தின் சுடர்களைப் போல பிரகாசிப்பீர்கள் (பிலி 2:15).
அத்தியாயம் 9
தலைமை வகித்தலும், அடங்கியிருத்தலும் சந்திக்கும் சவால்கள் “ஆதிகாரணர்” அல்ல, தலைமைப் பதவியே
வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் மாறிப்போன உலகத்தில் நாம் இன்று வசிக்கிறோம். இன்றைக்கும் சர்ப்பமானது நம்மை நோக்கி, “கடவுள் அப்படியா சொன்னார்”? என்று கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான். வேதாகம வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்களை மாற்றி வேறுவிதமாக எண்ண வைக்கும் கபட வேலையை சாத்தான் செய்துகொண்டு வருகிறான். திருமணத்தின் உண்மையான அர்த்தத்தையும், அதை விளங்கப்பண்ணுகிற வார்த்தைகளையும் குறித்து நம்மை குழப்ப முற்படுபவர்களுக்கு நாம் விழிப்போடு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
வேதத்தில் காணப்படும் “தலை” அல்லது “தலைமைத்துவம்” ஆகிய வார்த்தைகளையும் அதன் கருத்துக்களையும் எடுத்துக்கொள்வோம். நவீன யுகத்து பெண்ணுரிமை என்கிற நோய்க்கிருமியினால் வேதகருத்துக்களும் பாதிக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்க விஷயம். வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு இந்த பெண்ணுரிமைவாதிகள் நியாயம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். இந்த உலகில் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகிறவர்கள் பெண்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. அநியாயமாக வதைபடும் பெண்களை விடுவிக்க கிறிஸ்தவர்கள் ஆர்வம் காண்பிக்க வேண்டும். என்றாலும் பெண்ணுரிமைவாதிகள் அநியாயத்துக்காக குரல் கொடுப்பதைக்காட்டிலும், பெண்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றுதான் போராடுகிறவர்களாய் இருக்கிறார்கள். ஆதாமுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் யாவும் எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறவர்களாய் இருக்கிறார்கள். கடவுளின் வார்த்தைகளுக்கு தங்களுக்கேற்றவிதமான அர்த்தத்தை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறவர்களாய் காணப்படுகிறார்கள்.
வேதாகமத்தில் “தலை” என்று காணப்படுகிற வார்த்தையின் உண்மையான அர்த்தம் கெட்டுப்போய் விட்டது. கிரேக்க மொழியின் சில நவீனகாலத்து அகராதிகள் அதற்கு “ஆதிகாரணம்” என்கிற வார்த்தையை அர்த்தமாகக் கொடுக்கிறது. அதாவது, நதி பிறக்கின்ற ஆரம்ப இடம் (மூலஸ்தனம்) என்பது போன்ற அர்த்தத்தில் அது சொல்லப்படுகிறது. வேறு வகையாக கூறினால், தலை என்பதற்கு ஏதாவதொன்று ஆரம்பமாகின்ற இடம் என்று கூறலாம். பெண்ணுரிமை கிருமிகளால் தாக்கப்பட்டிருக்கும் சில வேதபண்டிதர்கள் வேதவசனங்களை இந்த கோணத்தில் விளக்க முற்படுகிறார்கள். உதாரணமாக, “கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராக இருக்கிறார்” (எபே 5:23) என்கிற வசனத்திற்கு அவர்கள் கொடுக்கிற வியாக்கியானம்: கடவுள் மனுஷியை மனிதனின் விலா எலும்பிலிருந்து உருவாக்கினார். ஆகவே பெண்ணின் ஆரம்பம் மனிதனிலிருந்து உருவானதுதான். அதைத்தான் இங்கு எபேசியரில், கிறிஸ்து சபைக்கு ஆரம்பமாக இருந்ததுபோல, புருஷனும் மனைவிக்கு பிறப்பிடமாக/ ஆதிகாரணனாக இருக்கிறான் எனக் கடவுள் கூறுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். புருஷனை தலைவன் எனக் கடவுள் குறிப்பிடவில்லை என்பது பெண்ணுரிமைக் கிறிஸ்தவர்களுடைய வாதம். இந்தவிதமாக நினைக்கக்கூடிவர்கள் ஆதியாகமத்தின் முதல் சில அதிகாரங்களை கட்டுக்கதையாக எண்ண வாய்ப்பிருக்கிறது. ஆகவே, தலை என்பதற்கு அவர்கள் தரும் வியாக்கியானமும் மிகவும் வேகமாக மறைந்துபோகிறது. எல்லாவற்றையுமே கட்டுக்கதை என்று எண்ணிவிட்டோமானால் பேசுவதற்கு என்ன இருக்கிறது? வேதாகம கருத்தை அலட்சியம் செய்துவிட்டு, வேதாகமத்தின் அதிகாரத்தை தங்களுடைய கொள்கைகளுக்கு ஏற்றதாகத் திருப்பிட விரும்பும் பெண்ணுரிமைக் கிறிஸ்தவர்களுக்கு “தலை”யைக் குறித்து இந்தவிதமாக கொடுக்கப்படும் வியாக்கியானமே விருப்பமாயிருக்கும்.
வேதாகமத்தின் வார்த்தைகளை வேதமே விளக்குவதற்கு நாம் இடமளிப்போம். பெண்ணுரிமைவாதிகளுக்கு வேதாகமம் ஒரு பிரச்சனையைத் தருகிறது. பழைய ஏற்பாட்டிலோ அல்லது புதிய ஏற்பாட்டிலோ “தலை” என்ற வார்த்தை ஒருபோதும் “ஆரம்பம்” என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை. கிரேக்க பழைய ஏற்பாடு, செப்டுஜியன்ட், புதிய ஏற்பாடு ஆகிய புத்தகங்களில் தலை என்கிற வார்த்தையானது ஆளுகை, அதிகாரம், அரசாங்கம் என்ற அர்த்தங்களையே கொடுப்பதாக இருக்கிறது. இதைக் குறித்து யாரும் வேறுவிதமாக உங்களுக்குப் போதிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். வெய்ன் க்ரூடம் (Wayne Grudem) என்பவர் இதைக் குறித்து ஓர் ஆராய்ச்சி செய்தார். 2000க்கும் மேற்பட்ட பகுதிகளை வேதத்திலிருந்தும் மற்ற கிரேக்க இலக்கியங்களிலிருந்தும் எடுத்துக் கொண்டு அதில் “தலை” என்கிற வார்த்தை என்ன அர்த்தத்தில் வருகிறது என்று பார்த்தார். எதிலுமே “ஆரம்பம்” என்ற அர்த்தததில் அவ்வார்த்தையானது காணப்படவில்லை என்கிறார். ஆனால் இன்றைக்கும் தலைமைப் பதவியைக் குறிப்பிடும் இந்த வார்த்தையை வேறுவிதமான அர்த்தத்தில் பார்க்கிற போக்கு உலகெங்கும் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.
கடவுளின் வார்த்தைகளுக்கு நவீனகாலத்துக் கொள்கைகளுக்கு ஏற்றாற்போல நாம் அர்த்தங்களை மாற்றிக்கொள்ளக் கூடாது. திருமணமான புருஷர்களை, அவர்களுடைய வீட்டிற்கு அவர்கள்தான் தலைவர்கள் என்று வேதாகமம் கூறுகிறது. அது புருஷர்களுக்குக் குறிக்கப்பட்டிருக்கும் கடமை. அது நமது உக்கிராண உத்தியோகம். “குடும்பத்தில் தலைமைத்துவம் அவசியமா”? என பெண்ணுரிமைவாதிகள் போல கேள்வி கேட்கக்கூடாது. புருஷன் “தலை”யாய் இருக்கிறான் என்பது வேத உண்மை. என்ன கேள்வி கேட்க வேண்டுமென்றால், “புருஷன் நல்ல தலைவனாய் இருக்கிறானா? கெட்ட தலைவனாய் இருக்கிறானா?” என்பதே. திருமணத்தில் ஒரு தலைமைப்பதவி இருக்கும் வகையில்தான் கடவுள் அதை வடிவமைத்திருக்கிறார். குடும்பம் ஒரு சிறிய அரசாங்கம் போன்றது. அதற்குரிய உக்கிராணப் பொறுப்பை அவர் புருஷன் கையில் கொடுத்திருக்கிறார். “கணவன்”, “தந்தை” ஆகிய வார்த்தைகள் அதிகாரத்தை உள்ளடக்கியுள்ளது. புருஷன், தந்தை ஸ்தானத்தை எடுப்பது அதிகாரப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கே. திருமணமான கணவனோ அல்லது தந்தையோ வேதாகமத்தின்படியான அதிகாரத்தை கடவுளின் நாமத்துக்கு மகிமை உண்டாக்கும்படியாகவும், தனது மனைவி குழந்தைகளுக்கு பிரயோஜனமாகவும் செலுத்துகிறானா என்பதே கேள்வி. சமத்துவம் அல்ல கீழ்ப்படிந்திருத்தலே
அடுத்தபடியாக, தலைமைத்துவத்துக்கு இணை வார்த்தையான ‘கீழ்ப்படிந்திருத்தல்’ என்பதைக் குறித்தும் வேதாகமம் விளக்கமளிக்க நாம் இடந்தர வேண்டும். வேதாகம அர்த்தத்திற்குப் புறம்பாக வேறுவிதமான அர்த்தங்களை இதற்கும் கொடுக்க இன்றைக்கு அநேகர் முயற்சி செய்கிறார்கள். “தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். மனைவிகளே . . . உங்கள் சொந்த புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்” (எபே 5:22). இதற்கும் இன்றைய நவீன கிறிஸ்தவர்கள் கொடுக்கும் விளக்கம் வித்தியாசமானது. ஒருவருக்கொருவர் கீழ்ப்படிய வேண்டும் என்றிருக்கிறதல்லவா? ஆகவே, மனைவி புருஷனுக்கும், புருஷன் மனைவிக்கும் கீழ்ப்படிய வேண்டும் என பவுல் கூறுகிறார் என்பதாக இவர்கள் வியாக்கியானம் அளிக்கிறார்கள்.
“ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்” என்பதில் பவுல் என்ன சொல்லுகிறார் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டுமானால், எபே 5:22 - 6:9 வரையுள்ள வசனங்களில் பவுல் எந்த வரிசையில் தனது விவாதத்தை எடுத்துரைக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். 21ஆம் வசனத்தில் காணப்படும் கருத்து, பவுல் அடுத்ததாக சொல்லும் காரியங்களுக்கெல்லாம் தலைப்பு போல அமைந்திருக்கிறது. இதில் பவுல் ஒரு நடவடிக்கையைக் கூறுகிறார் “ஒருவருக்கொருவர் கீழ்ப்படிதல்!” இந்த தலைப்பின் கீழ் கிறிஸ்தவர்கள் எவ்வாறு கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்பதை அடுத்து வரும் வசனங்களில் மூன்றுவிதமான அமைப்புகளில் விவரிக்கிறார். இம்மூன்று அமைப்புகளிலும் கடவுள் மனிதர்களையே அதிகாரிகளாக ஏற்படுத்திக் கிறிஸ்தவர்களைக் கீழ்ப்படியும்படி கட்டளையிடுகிறார்.
அதில் முதலாவது அமைப்பு திருமணம். இதில் மனைவி கணவனுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் (எபே 5:22-33). இரண்டாவது அமைப்பு குடும்பம். இதில் பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் (6:1-4). மூன்றாவது, வேலை செய்யும் இடம். இதில் வேலையாட்கள் தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் (6:5-9). இந்த மூன்று அமைப்புகளிலும் கீழ்ப்படிய வேண்டியவர்களுக்குத்தான் பவுல் முதலாவதாக கட்டளை கொடுக்கிறார். அதன் பின்னதாகத்தான் சம்பந்தப்பட்ட அதிகாரமுள்ளவர்களுக்குக் கட்டளையிடுகிறார்.
21ஆம் வசனத்தில் காணப்படுகிற கீழ்ப்படிந்திருங்கள் என்கிற கட்டளையை அதற்கு முன்னால் இருக்கிற வசனங்களை ஒப்பிட்டுப் பார்த்து, அதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். 18ஆம் வசனத்தில் பவுல் நம்மை ஆவியினால் நிறைந்தவர்களாயிருக்கும்படி கட்டளையிடுகிறார். அதன் மூலமாக எதைக் குறிப்பிடுகிறார் என்பதை ஐந்து காரியங்களைக் கூறி விளக்குகிறார். ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பதை இந்த ஐந்து காரியங்களின் மூலமாக ஒரு விசுவாசி வெளிப்படுத்த வேண்டும் என்கிறார். புத்திசொல்லுதல், பாடுதல், இருதயத்தில் கர்த்தரைக் கீர்த்தனம் செய்தல், பிதாவை ஸ்தோத்தரித்தல், கீழ்ப்படிந்திருத்தல். இதில் முதல் 4 காரியங்களும் ஆவியினால் நிறைந்த ஆராதனை சம்பந்தமானது. ஐந்தாவது காரியமாகிய கீழ்ப்படிதல் ஆவியினால் நிறைந்த வாழ்க்கை சம்பந்தமானது. அதற்குப் பின் வரும் வசனங்களில் (5:22 - 6:9) ஆவியினால் நிறைந்த கீழ்ப்படிதலை, நம்மோடு தொடர்புள்ளவர்களோடு எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை பவுல் விவரிக்கிறார். ஆவியில் நிறைந்தவர்களாக நாம் கடவுள் ஏற்படுத்தியிருக்கும் மனித அதிகாரங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். திருமணத்திலும், குடும்பத்திலும், தொழில் புரியும் இடங்களிலும் நாம் இப்படியாகக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். ஆவியினால் நிறைந்த வாழ்க்கை சபையில் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் (5:18-21) கற்றுக் கொண்டபின், வீட்டிலும் ஆவியில் நிறைந்த வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதை பின்வரும் (5:22 - 6:9) வசனங்களினால் அறிகிறோம்.
21ஆம் வசனத்தில் வருகிற “கீழ்ப்படியுங்கள்” என்கிற வார்த்தையானது, குடும்பத்திலும் ஆவியினால் நிறைந்த (5:18) வாழ்க்கையை வாழுங்கள் என்ற அழைப்புக்கு ஆதாரமாய் இருக்கிறது. “தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். மனைவிகளே, கர்த்தருக்குப் போல உங்கள் சொந்த புருஷருக்கு” என்று மூலபாஷையாகிய கிரேக்க மொழியில் பவுல் இக்காரியத்தை நேரிடையாக குறிப்பிடுகிறார். படிப்பதற்கு சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக மொழிபெயர்ப்பாளர்கள் இதை சற்று விவரித்து எழுதியிருக்கிறார்கள். 21 ஆம் வசனத்தின் தொடர்ச்சியாக பவுல் இதை சேர்த்துக் குறிப்பிடுகிறார்.
பவுலினுடைய சிந்தனைகள் இவ்விடத்திலே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். 21ஆம் வசனத்தில் காணப்படுகிற கீழ்ப்படிதலுக்கும், 18ஆம் வசனத்தில் காணப்படுகிற ஆவியினால் நிறைந்து என்பதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. ஆவியினால் நிறைந்தவர்களாகிய நாம், கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மனித அதிகாரங்களுக்குக் கீழ்ப்படியாதவர்களாக வாழப் போவதில்லை. கடவுளை ஆராதிக்கின்ற வாழ்க்கை (5:18-22) கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கை (5:21). அதை பின்வரும் வசனங்களில் பவுல் விவரிக்கிறார். வேறுவிதமாக சொன்னால், கடவுளுக்கு நாம் ஆவியினால் நிறைந்த ஆராதனையை செலுத்துகிறவர்களாக இருந்தோமானால், கடவுள் நியமித்திருக்கும் மனித அதிகாரிகளுக்கு கீழ்ப்படிகிறதான, ஆவியினால் நிறைந்த வாழ்க்கையை வாழுவோம். கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கையே, தேவனை ஆராதிக்கிற வாழ்க்கையாகும்.
‘கீழ்ப்படிதல்’ என்கிற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்ன? அதிலும் பவுல் ஒருவருக்கொருவர் கீழ்ப்படியுங்கள் என்று கூறும்போது என்ன அர்த்தத்தில் கூறுகிறார். ஒவ்வொருவரும் சமமாக அடுத்தவருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்கிறாரா? நவீன காலத்து பெண்ணுரிமைவாதிகள் தலைமைத்துவத்தை தவறாக அர்த்தப்படுத்திக் கூறும்போது, சமத்துவம் என்கிற நோய்க்கிருமியால் பீடிக்கப்பட்டு, வேதபூர்வக் கீழ்ப்படிதலாகிய இந்தக் காரியத்துக்கும் தவறான விளக்கத்தை அளிக்கிறார்கள். சமத்துவக் கொள்கையானது எல்லாருமே சரிநிகர் சமானம் என்பதை வலியுறுத்துகிறதாயிருக்கிறது. பல விஷயங்களில் எல்லாருக்கும் சம உரிமை இருப்பது நியாயமே. ஆனால், இந்த சமத்துவக் கொள்கையில் பலவிதமான விஷத்தன்மைகள் ஊடுருவி கலகத்தை தோற்றுவிக்கிறது. எங்கும் உயர் அதிகாரங்கள், ஆட்சி போன்றவை இருக்கலாகாது, எல்லாரும் சரிசமமே என்பது போன்ற காரியங்களை இவர்களுடைய கொள்கையில் காணலாம்.
சமத்துவவாதிகள் 21 ஆம் வசனத்திலுள்ள ‘ஒருவருக்கொருவர்’ என்கிற வார்த்தையைப் பிடித்துக் கொண்டு, அது சமத்துவத்தையே குறிப்பிடுவதாக கூறுகிறார்கள். கிறிஸ்தவர்கள் தாழ்மையோடு, ஒருவருக்கொருவர் தாமே முன்வந்து பரஸ்பர தேவைகளை தியாக மனப்பான்மையோடு நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று பவுல் இந்த வசனத்தின் மூலமாகக் கட்டளையிடுவதாகவும் இந்த தியாக பணியானது ஒவ்வொரு கிறிஸ்தவனும் மற்ற கிறிஸ்தவர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பணியாகும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அடுத்தவருக்கு கீழ்ப்படிதலில் சமமான பங்கிருப்பதாக கூறுகிறார்கள். ஒருவருக்கொருவர் ஐக்கியமாகவும் அன்பாகவும் இருக்க வேண்டியதைக் குறித்து வேதாகமத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கும் வகையிலேதான் இந்த 21 ஆம் வசனத்திலும் சொல்லப்பட்டிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆகவே நாங்கள் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிகிறோம், கீழ்ப்படிதலைப் பெற்றும் கொள்ளுகிறோம் எனக் கூறுகிறார்கள், இந்த 21 ஆம் வசனத்தின் காரணமாக, யாருக்கும் எந்த அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை என நினைக்கிறார்கள். பவுல் அப்போஸ்தலன் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் என்று கூறின உடனேயே அடுத்த வசனத்தில் மனைவிகளைக் குறித்துக் கூறுவதால் அதே கருத்து திருமணத்திலும் பிரதிபலிக்கப்படுகிறதாகக் கருதுகிறார்கள். கீழ்ப்படிதலுக்கு அந்த சமத்துவவாதிகள் கொடுக்கிற மாதிரியான அர்த்தத்தைக் கொடுத்து நாம் திருமணத்தைப் பார்ப்போமேயாகில், அங்கு கணவன் தலைவனாயிருக்க மாட்டான். மனைவியும் கணவனும் சமமான விதத்தில் தலையாயிருப்பார்கள். அப்படியிருந்து ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து கொண்டிருப்பார்கள். தலைமைத்துவத்தையும், கீழ்ப்படிந்திருத்தலையும் குறித்து நாம் வேதாகமத்தின் பிரகாரமான அர்த்தம் கூறுவதை அவர்கள் ஏற்பதில்லை. அதிலுள்ள உண்மையான அர்த்தத்தை நாம் எடுத்துவிட்டு, கணவனுக்கு அதிக அதிகாரம் இருப்பதாக நமது சொந்தக் கருத்தை அதில் செலுத்தியிருக்கிறோம் என நம்மைக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
உதாரணமாக வீட்டன் கல்லூரி (Wheaton College) பேராசிரியராகிய கில்பர்ட் பிலேஸிக்கியான் (Gilbert Bilezikian) என்பவர் கீழ்கண்டவாறு தமது கருத்தை ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கிறார்: “ஒருவருக்கொருவர் உள்ள உறவில் இவ்விதமான அதிகார படிகளை அமைப்பது கிறிஸ்தவ சமுதாயத்துக்கும் குடும்பங்களுக்கும் பொருத்தமானதல்ல.” வேறு வகையில் கூறினால் சபையிலோ, குடும்பத்திலோ அதிகார ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்கிறார். தலைமைத்துவம் கிடையாது, சபை ஊழியப் பணிகளிலும் தலைமைப் பொறுப்பு கூடாது. ஆகவே யாரும் யாருக்கும் கீழ்ப்பட்டு அடங்கியிருக்கத் தேவையில்லை என்கிறார். மைக் மேஸன் (Mike Mason) என்பவரும், 25 ஆம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற புருஷனுடைய அன்பும், 22 ஆம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற கீழ்ப்படிதலும் ஒரே கருத்தை வெளிப்படுத்துகிற சொற்கள் என்கிறார். அவருடைய கூற்றின் பிரகாரம் அன்பும், அடங்கியிருத்தலும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருப்பதை குறிக்கிறதாம். புருஷன் மனைவியை நேசிக்கும்போது அவன் அவளுக்கு அடங்கியிருக்கிறான். மனைவி புருஷனுக்கு அடங்கியிருக்கும்போது அவள் அவனை நேசிக்கிறாள் என்கிறார்.
“மற்றவரின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தன்னுடைய நலன்களைத் துறந்து வாழுதல்தான் கீழ்ப்படிதல்” என்று சமத்துவவாதிகள் அளிக்கும் விளக்கம் சரியானதாக இருக்குமானால், அந்த விளக்கம் அன்பு செலுத்துதலுக்கு ஒத்ததாயிருக்கிறதைப் பார்க்கலாம். ஆனால் அன்பு செலுத்துதலும், கீழ்ப்படிதலும் ஒரே அர்த்தத்தைக் கொண்டதாயில்லையே. இந்த மாதிரியாக சமத்துவவாதிகள் வேத அர்த்தத்தை மாற்றி விளக்கம் கொடுப்பது, சிருஷ்டிப்பின் தத்துவத்தில் கடவுள் அமைத்துக் கொடுத்த ஒழுங்குமுறையையே குலைத்துப் போடுவதாக இருக்கிறது. வேதாகமத்தின் மற்ற இடங்களில் சிருஷ்டிப்பின் வரிசைக்கிரமமான ஒழுங்கு முறையைக் காண்கிறோம். இன்றைக்கும் கடவுள் அமைத்த சிருஷ்டிப்பின் ஒழுங்கு முறைதான் சபைக்கும் குடும்பத்துக்கும் இலக்கணமாயிருக்கிறது.
‘கீழ்ப்படிதல்’ என்கிற வார்த்தையை புதிய ஏற்பாட்டில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் காண்கிறோம். அத்தனை இடங்களிலும், “அதிகாரத்துக்குக் கீழாக” வைக்கப்பட்டிருப்பதான அர்த்தத்தில்தான் அவை சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே இங்கு எபே 5:21 ஆம் வசனத்தில் “ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்” என்பதிலும் அதே அர்த்தம்தான் தொனிக்கிறது. நாம் ஆவியினால் நிறைந்த வாழ்க்கையை வாழப் போகிறோமென்றால், நாம் அனைவரும் கீழ்ப்படிய வேண்டியதான ஒரு பொதுவான கட்டளையை பவுல் இதிலே கூறுகிறார். கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிகிற குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற அதிகாரங்களை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். ஐந்தாவது கற்பனைக்கு ஏற்றவிதமாக பவுல் நமது குணாதிசயத்தைத் திருப்புகிறார். கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு முழுமனதோடு கீழ்ப்படிய வேண்டும் என்கிற பொதுவான கட்டளையை பவுல் சொல்லிய பிறகு, அதை எப்படியெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறார். திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையிலும், பணி செய்யும் இடங்களிலும் கிறிஸ்தவ கீழ்ப்படிதல் ஒரு விசுவாசியை அலங்கரிக்க வேண்டும். 21ஆம் வசனத்தில் காணப்படும் ‘கீழ்ப்படிதல்’ என்கிற வார்த்தையும் 25 ஆம் வசனத்தில் காணப்படுகிற ‘அன்பு’ என்கிற வார்த்தையும் மைக் மேஸன் கூறுவதைப் போல ஒரே அர்த்தங் கொண்டதல்ல. ‘கீழ்ப்படிதல்’ என்கிற வார்த்தையின் ஒத்த கருத்தை தெரிவிக்கிற வார்த்தையானது, 6:1, 6:5ல் காணப்படுகிற ‘அடங்கியிருத்தல்’ என்கிற அர்த்தம் தொனிக்கிற கீழ்ப்படிதலாகும்.
பீட்டர் ஓ பிரயன் (Peter O’Brien) என்பவர் சொல்லுகிறார், “கீழ்ப்படிதலில், அடங்கியிருத்தல் என்கிற கருத்து உள்ளது. குடும்பம் என்கிற அமைப்பில் கடவுள் சில அதிகார பதவிகளை அமைத்திருக்கிறார். அந்த தெய்வீகக் கட்டளையை தாழ்மையோடு அநுசரிப்பதே கீழ்ப்படிதலாகும். அப்போஸ்தலனாகிய பவுல், எல்லா பெண்களும் எல்லா ஆண்களுக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மனைவிகள் தங்கள் சொந்த புருஷருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்கிறார். அவர்கள் முழுமனதோடு தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களாய் இருக்க வேண்டும். பெண்கள், அதிகாரத்தை தவிர்க்கிறவர்களாகவோ, இஷ்டமில்லாதவர்களாகவோ, அடிமைத்தன கீழ்ப்படிதலைக் கொண்டவர்களாகவோ இராமல் சுதந்திரமுள்ளவர்களாகவும், பொறுப்புணர்ச்சியை உடையவர்களாகவும் முழுமனதோடு அதிகாரத்துக்குக் கீழ்ப்படிகிறவர்களாய் இருக்கும்படி பவுல் புத்தி சொல்லுகிறார்.”
பவுல் இவ்விடத்தில் தன்னுடைய புத்திமதியை இன்னும் சற்று விரிவாக சொல்லுகிறார். ஒருவருக்கொருவர் என்பதில் யார் அந்த ஒருவர்? அவர்களுக்கிடையிலுள்ள உறவின் தன்மை எத்தகையது? என்பதை விளக்குகிறார். இந்த உறவின் தன்மைகளை பவுல், சாதாரணமானதாகவோ, ஏற்றத்தாழ்வு இல்லாததாகவோ, சரிநிகர் சமானமானதென்றோ கருதவில்லை. கடவுள் தமது தீர்மானத்தின்படி ஒவ்வொருவரையும் அதிகார வரிசையில் எந்த இடத்தில் வைத்திருக்கிறாரோ அதைப் பொறுத்ததான கீழ்ப்படிதலைக் குறிப்பிடுகிறார். ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் என்கிற கட்டளை, குடும்பத்திலுள்ள அதிகாரத்தையோ, வேலை செய்யும் இடத்திலுள்ள அதிகாரத்தையோ, சபையிலுள்ள அதிகாரத்தையோ எந்தவிதத்திலும் குறைப்பதில்லை. ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் என்பது பொதுவான கொள்கை. அந்தக் கொள்கையை எப்படி வாழ்வில் செயல்படுத்துவது என்பதற்கு பவுல் மூன்று உதாரணங்களைக் குறிப்பிடுகிறார். தம்பதிகளிடையேயும், பெற்றோராகவும், பணி செய்யும் இடத்திலும் இதை நடைமுறைப்படுத்துவதற்கு புத்தி சொல்லுகிறார். மனைவி-கணவன், பிள்ளை-தந்தை, வேலையாள்-எஜமான் இவர்களின் கடமையை, “ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்” என்கிற பொதுவான புத்திமதி, ஒருபோதும் நீக்குவதில்லை. பெண்ணுரிமைவாதிகள், சமத்துவவாதிகள் போன்றவர்கள் “கீழ்ப்படிதல்” என்பதை “அன்பு” என மாற்றி விளக்கப்படுத்தி சொல்லுகிறார்களே என்பதற்காக, சிருஷ்டிப்பிலேயே தேவன் நல்லதென்று கண்டு, ஏற்படுத்தி வைத்த அதிகார ஒழுங்குகளை நாம் உதாசீனம் செய்துவிடக்கூடாது.
கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பலவிதமான மனித அதிகாரிகளுக்கு நாம் கீழ்ப்படிந்து நடக்கையில், நாம் உண்மையிலேயே கடவுளுக்குத்தான் கீழ்ப்படிந்து கொண்டிருக்கிறோம். மனைவிகளே கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள் (5:22). பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள் (6:1). வேலைக்காரரே நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறது போல உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படியுங்கள் (6:5). நாம் மனித அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிவதின் மூலமாக, கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறோம் என்பதை தெரியப்படுத்துகிறோம். கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது எப்படியிருக்கும் என்பதை வேலைக்காரருக்கு கூறும் புத்திமதியில் பவுல் விவரமாக தெரிவிக்கிறார்: “மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாய் பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்” (6:7). இதுவே கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் எல்லா மேலான அதிகாரங்களுக்கும் பொருந்தும். கொலோ 3:18 - 4:1 வரையுள்ள வசனங்களில் பவுல் கீழ்ப்படிதலைக் குறித்து சொல்லும்போது இப்படியாக சொல்லுகிறார்: “. . . நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய் செய்யுங்கள்.”
இந்த இடத்திலே நாம் ஒரு சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதிகாரங்கள், கீழ்ப்படிதல் இவைகளைக் குறித்து நாம் செய்கிற இந்த தியானம் உங்களுக்கு ஏற்க முடியாததாக இருக்கிறதா? அப்படி இருக்குமானால், வேதாகமத்தைக் காட்டிலும், இந்த உலகம் உங்களை இவ்விஷயத்தில் தன்வசப்படுத்தியிருக்கிறது என அறியலாம். “நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், . . . உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2).
ஒருவருக்கொருவர் கீழ்ப்படியுங்கள் என்பதற்கு சமத்துவவாதிகள் கொடுக்கிற வியாக்கியானம் நம்மைக் கவருவதற்கு ஒரு காரணம் இருக்கலாம். கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை இன்று வேதபூர்வமாக செலுத்துபவர்கள் மிகவும் குறைவாக இருப்பதே அதற்குக் காரணமாயிருக்கலாம். வேதபூர்வமாக அதிகாரம் செலுத்துவதற்கு வேதஞானம் தேவை. தங்களுக்குக் கீழாக இருப்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே ஞானமுள்ளவர்கள் அதிகாரம் செலுத்துவார்கள். ஞானமும் அன்பும் கொண்டவர்களான அதிகாரிகள் தங்களுக்குக் கீழாக இருப்பவர்களை ஒருபோதும் அலட்சியப்படுத்த மாட்டார்கள். தங்களுக்குக் கீழாக உள்ளோரை மரியாதையோடும் கனத்தோடும் நடத்துவார்கள். அத்தகைய ஞானத்தைக் குறித்து யாக்கோபு 3:17ல் காணலாம். “பரத்திலிருந்து வருகிற ஞானமோ, முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும், சாந்தமும், இணக்கமும் உள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயும் இருக்கிறது.” கிறிஸ்தவ கணவர்கள், தந்தைமார்கள், எஜமான்கள் மற்றும் மேய்ப்பர்கள் ஞானத்தோடு தலைமைப் பொறுப்பை கையாள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். கணவர்கள் தலைமைப் பொறுப்பு எடுக்கும்போது, புறமதத்து மக்களைப் போல “ஆண்டு கொள்கிறவர்களாய்” இருக்கக் கூடாது. சீஷர்களின் பாதங்களைக் கழுவ மேஜையை விட்டிறங்கின கிறிஸ்துவைப்போல இருக்க வேண்டும். பாதங்களைக் கழுவுதல் வேலையாள் செய்கிற வேலை போலத் தோற்றமளிக்கிறது. ஆனால், சீஷர்களின் பாதங்களைக் கழுவி முடித்ததும் இயேசு கிறிஸ்து அவர்களிடம் என்ன சொன்னார்?: “நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்” (யோவான் 13:13). வேலைக்காரனைப் போல அவர் நடந்து கொண்டதால், அவருக்குத் தலைமை வகிக்கும் தன்மை இல்லையென்றோ, அவர் தமது அதிகாரத்தை செலுத்தவில்லை என்றோ கூற முடியாது. ஆண்டவரும் போதகருமாய், அதிகாரம் படைத்த அவர், ஒருவர் பாதத்தை ஒருவர் கழுவுகிறவர்களாக, தமது மாதிரியைப் பின்பற்றி நடக்கக் கட்டளையிடுகிறார். இயேசுவைப் போல, கணவன்கள், ஊழியனாக தமது தலைமைப் பொறுப்பை நிறைவேற்ற பயிற்சி செய்ய வேண்டும்.
கிறிஸ்து அமைத்துக் கொடுத்திருக்கும் மனித அதிகாரங்களுக்கு ஏற்றபடி ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் என்பதைத்தான் பவுல் எபே 5:21 - 6:9 வரையுள்ள வசனங்களில் குறிப்பிடுகிறார். அதன் அடிப்படையில் அவர் சொல்லுவதாவது, மனைவிகளே, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்; பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள்; வேலைக்காரரே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படியுங்கள். புதிய உடன்படிக்கையில் நாம் ஒருவருக்கும் கீழ்ப்பட்டவர்களல்ல என அவர் கூறவில்லை. அதாவது கணவன், பெற்றோர், எஜமான் ஆகிய ஸ்தானங்களெல்லாம் இனி இல்லை. யாவரும் சமம் என்று அவர் கூறவில்லை. அதிகாரப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள கணவன், பெற்றோர், எஜமான் பற்றி கூறுகிறவர் எப்படி அவ்விதமான அர்த்தத்தில் கூறியிருக்க முடியும்? ஆகவே, கீழ்ப்படியுங்கள். இவ்வளவு விளக்கங்களைக் கேட்ட பிறகும், கீழ்ப்படிதல் என்கிற வார்த்தையைக் கேட்டாலே உங்களுக்கு எரிச்சலாக வருகிறதா? கீழ்ப்படிதல் என்பது என்ன ஓர் அருமையான வார்த்தை! அந்த வார்த்தையைக் கேட்கும்போதே இதமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக நீங்கள் உணரவில்லையா? இல்லை. அப்படி இல்லை. என்னை ஒரு முள் கம்பியைக் கொண்டு யாரோ சுற்றி இறுகக் கட்டுவது போல இருக்கிறது என்கிறீர்களா? கீழ்ப்படியுங்கள்! இல்லை முடியாது. நான் போராடுவேன் என்று பற்களைக் கடிக்கிறீர்களா? பாவத்தினால் விழுந்து போன நிலையிலுள்ள இயற்கை சுபாவம் எதிர்ப்பைக் காண்பிக்கிறது. எந்த அதிகாரத்திற்கும் விரோதமாக போராடுவேன். எனது பாவநிலையின் காரணமாக, அது நியாயமான அதிகாரந்தானா, அன்போடு கூடிய அதிகாரமா என்பதையெல்லாம் நான் பார்க்க மாட்டேன். அதை சந்தேகித்து, அதற்கு விரோதமாகவே செயல்பட நினைப்பேன் என்று நினைக்கிறீர்களா? ஆனால், அப்போஸ்தல அதிகாரத்துடன், பவுல், நம்மைக் கீழ்ப்படியும்படி கட்டளையிடுகிறார், இயேசு கிறிஸ்துவிடமிருந்து கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளுங்கள் என நம்மை வழிநடத்துகிறார்.
(வளரும்)