திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2009-ம் ஆண்டு மூன்றாம் இதழ்

1. வாசகர்களே!

2. கர்த்தர் பேசுகிறார், காதில் விழுகிறதா?

3. கர்த்தரை மட்டுமே உயர்த்திய ஜோன் கல்வினின் பிரசங்கங்கள்

4. டி. எல். மூடியில் இருந்து பில்லி கிரேகாம் வரை

5. அங்கத்துவ அமைப்பில்லாத திருச்சபையா?

6. தாம்பத்திய உறவில் நெருக்கம்

 

வாசகர்களே!

இந்த இதழை மிகக் குறுகிய நாட்களில் முடித்துவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு கர்த்தரின் கிருபையால் அதை நிறைவு செய்து உங்களுக்கு அனுப்பி வைத் திருக்கிறோம். பல நாடுகளிலும் இருந்து வாசகர்கள் பத்திரிகையால் பலவித நன்மைகளை அடைகிறோம் என்பதைத் தொடர்ந்து நமக்கறியத் தருகிறார்கள். சத்தியத்தை அறிந்துகொள்ளப் பலருக்கும் இருக்கும் ஆவல் எங்களை இந்தப் பணியில் ஊக்குவிக்கிறது. அவர்கள் தரும் ஊக்கமே இப்பணியைக் கர்த்தரின் மகிமைக்காக நாம் தொடர்ந்து செய்ய உதவுகிறது. இந்த இதழில் திருச்சபை அங்கத்துவத்தைப் பற்றி விபரமாக எழுதியிருக்கிறேன். முக்கியமாக அந்தப் போதனை வேதத்தில் எந்த முறையில் தரப்பட் டிருக்கிறது என்பதை விளக்கியிருக்கிறேன். அலன் டன் எழுதியுள்ள கணவன், மனைவிடையே தாம்பத்திய உறவில் இருக்க வேண்டிய நெருக்கமானதும், இருக்கமானதுமான நல்லுறவைப் பற்றிய ஆக்கத்தின் முதல் பாகத்தை இதில் நீங்கள் வாசிக்கலாம்.

கல்வினைப் பற்றிய குறிப்பும், டி. எல் மூடியினால் கிறிஸ்தவ உலகில் ஏற்பட்ட பாதிப்பைப் பற்றிய குறிப்பும் இடம் பெறுகிறது. உலகப் பொருளாதார சரிவு மூலமும், புதிதாக உலகைப் பாதித்து வரும் ஏ. இன்புளுவன்சாவினாலும் நாம் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் ஆக்கத்தையும் இதில் வாசிக்கலாம். இந்த இதழில் வந்திருக்கும் ஆக்கங்கள் நிச்சயம் உங்களுக்குப் பயனளிக்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

பத்திரிகையைத் தொடர்ந்து வெளியிட என்னை ஊக்குவித்து வருகின்ற கர்த்தருக்கும் சவரின் கிறேஸ் சபை அதிகாரிகளுக்கும், அங்கத்தவர்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். நான் எழுதுகின்ற ஆக்கங்களை சரிபார்த்து உதவுகின்ற சகோதரன் ஜேம்ஸுக்கும் எனது நன்றிகள். பல வேளைகளில் அதி காலையிலும், நடு இரவிலும் நான் எழுதிக் கொண்டோ அல்லது எழுதியவற்றை சரிபார்த்துக் கொண்டோ இருப்பதைப் பொறுத்துக்கொண்டு எனக்கு துணைபுரிந்து வரும் என் மனைவிக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது. அவருடைய துணையில்லாமல் இத்தனை வருடமாக இதனை வெளியிட்டிருக்க முடியாது. - ஆசிரியர்.

 

கர்த்தர் பேசுகிறார், காதில் விழுகிறதா?

கடந்த இதழில் உலகப் பொருளாதாரச் சரிவைப் பற்றி எழுதியிருந்தேன். அது மூன்று மாதங்களுக்கு முன் எழுதப்பட்டது. உலகப்பொருளாதாரத்தின் தொடர் விளைவுகள் இன்றும் நின்றபாடில்லை. அமெரிக்க கார் கம்பேனி ஜீ. எம். அமெரிக்க அரசு தந்த பல பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றும் நிலைமையை சரி செய்ய முடியாமல் நஷ்டத்தை ஒத்துக்கொண்டு திவாலாகி விட்டது. நியூசிலாந்து அரசு கடந்த தேர்தலின் போது மக்களுக்கு வரிப்பணத்தில் ஒரு பகுதியை திருப்பித் தருவதாக வாக்களித்திருந்தது. இப்போது அதைச் செய்ய முடியாதபடி பொருளாதார நிலைமை இருப்பதாகக் கூறியிருக்கிறது. பல நாடுகளும், தொழிலகங்களும் ஏற்கனவே இந்த வருடத்தில் இழப்பு பெரிதாக இருக்கும் என்பதை ஏற்கனவே தெரிவித்திருக்கின்றன. சிங்கப்பூர் விமானக் கம்பேனி, பிரிட்டிஷ் விமானக் கம்பேனி, ஹாங்காங் விமானக் கம்பேனி ஆகியன பெரு நஷ்டத்தைப் பொருளாதாரச் சரிவு ஏற்படுத்தி யிருப்பதாக அறிவித்து விமானங்களைத் தரையிறக்கியும், தங்களுடைய பிரயாணங்களைக் குறைத்துக் கொண்டும், வேலையிலிருந்து அநேகரை நீக்கியும் தொழிலைக் காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் நான் மூன்று நாடுகளுக்குப் போய்வந்ததில் எங்கு பார்த்தாலும் பொருளாதாரம் பற்றிய பேச்சே சம்பாஷனையில் முன்னனி இடம் வகிப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. நடக்கும் காரியங்களுக்கும் கர்த்தருக்கும் சம்பந்தமில்லை என்று நினைப்பவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்?

இது போதாதென்று இப்போது உலகை இன்னுமொரு பிரச்சனை தாக்கியிருக்கிறது. அதுதான் இன்புளுயென்சா ஏ (Influenza A). மெக்சிக்கோவில் உருவாகி மிக விரைவாக அமெரிக்காவைத் தாக்கி இன்று அறுபத்தி ஆறு நாடுகளுக்குள் நுழைந்து பதினேழாயிரம் பேரைப் பாதித்திருக்கிறது இந்தப் புதுவித வியாதி. இதுவரை நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் ஒவ்வொரு மாநிலத்திலும் இது பரவியிருக்கிறது. நேற்று நான் வாசித்த எனது நாட்டுப் பத்திரிகையில், இந்த வைரஸ் நான் வாழும் நாட்டை எந்த விதத்தில் பாதிக்கப் போகிறது என்றும் அதை எதிர்நோக்க நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விபரமாக எழுதியிருந்தார்கள். நமது கரையில் வந்திறங்கியிருக்கும் பிரயாணக் கப்பலில் ஒரு நியூசிலாந்து பிரஜைக்கு இது தொற்றியிருப்பதால் நோய் குணமாகும்வரை அவரைத் தனியிடத்தில் வைப்பார்கள். இங்கு வந்திறங்கும் விமானங்கள் தொடர்ந்து சோதிக்கப்படுகின்றன. எங்கள் நாடு இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போகிறது என்றும், அதைத் தவிர்ப்பது கஷ்டம் என்றும், அதனால் இந்தச் சந்தர்ப்பத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்றும் விபரமாக மக்களுக்கு அறிவிக்கப்படு கின்றது. நான்கு ஐந்து நாட்களுக்கு பொருட்களை வாங்கி வீடுகளில் வைத்திருக்குமாறும், திருமண வைபவங்கள் உட்பட சகல பொது இடங்களுக்குப் போவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், நோய் வந்தால் மருத்துவ நிலையத்துக்குப் போகாமல் டாக்டரை வீட்டில் அழைத்துப் பார்க்கும்படியும் ஆலோசனை அளிக்கிறார்கள். நிலைமையைப் பொறுத்து கல்வி நிலையங்கள், ஆபீசுகள் எல்லாம்கூட மூடப்படலாம். ஏற்கனவே இவ்வியாதியால் ஒரு பிள்ளை பாதிக்கப்பட்டிருப்பதால் அந்த பிள்ளைகள் கவனிப்பு நிலையமே தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் வேகமாகப் பரவி வரும் இவ்வைரஸால் உலகின் அறுபது வீத மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது. அத்தோடு இதை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது காதுக்கெட்டி யிருக்கும் செய்தி, நாற்பது வருட்களுக்குப் பிறகு உலகைப் பாதித்திருக்கும் வேகமாகப் பரவும் நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருப்பது தான்.

எந்த வேகத்தில் உலகப் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டு சடுதியாக நாடுகளைப் பாதித்து நம்மைத் திகைக்க வைத்திருக்கிறதோ அதேபோல்தான் இந்த வைரஸும் உலகைப் பாதித்து நம்மைத் திகைக்க வைத்திருக்கிறது. இதற்கும் கர்த்தருக்கும் சம்பந்தமில்லையென்று சொல்லுபவர்களுக்கு நாம் என்ன சொல்ல முடியும்? நம்முடைய அன்றாட வாழ்க்கையைப் பாதித்து, எதிர்காலத் திட்டங்களைப் பாதித்து திகைக்க வைத்திருக்கும் இந்த இரண்டு காரியங்களும் நிச்சயமாக ஜீவனுள்ள கர்த்தர் இவற்றின் மூலமாக நம்மோடு பேசுகிறார் என்பதை நாம் உணராமல் இருக்க முடியாது. இதை எழுதுகிறபோது 2 இராஜாக்கள் நூல் எனக்கு நினைவு வருகிறது. தன்னுடைய கட்டளைகளை மீறித் தொடர்ந்தும் நடந்துகொண்டிருந்த இஸ்ரவேல், யூதா நாடுகளுக்கு அவர்களுடைய பாவச் செயல்களை உணர்த்தவும், அவர்களுடைய இருதயத்தின் போக்கை உணர்த்தவும் கர்த்தர் இயற்கையைப் பயன்படுத்திப் பலவிதங்களில் பேசினார். இயற்கையைப் பயன்படுத்தி சில நேரங்களில் அவர்களைக் காத்துமிருக்கிறார். நேரடியாகவும், தீர்க்கதரிசிகளின் மூலமும் மேலும் பலவிதங்களில் ஆதியில் இருந்து உலக மக்களோடு பேசி வந்திருந்த கர்த்தர் இறுதியில் இயேசு கிறிஸ்து மூலமாகப் பேசி (எபிரெ. 1:1) இன்றைக்கு தன்னுடைய வார்த்தைகளின் மூலமாக தன் சித்தத்தை உலகறிய அறிவித்து வருகிறார். அத்தோடு அவர் தன் படைப்பைப் பயன்படுத்தி இயற்கைக் கோளாறுகளின் மூலமாக மனிதனைத் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிறார். 228 பேரைக் கொண்ட பிரான்ஸ் நாட்டு விமானமொன்று பிரேசில் நாட்டருகில் சமீபத்தில் காலநிலைக் கோளாரினால் கடலில் விழுந்து அத்தனைப் பேரின் உயிரையும் குடித்தது. இது மிகப் பெரிய உயிரிழப்பு. இதன் மூலமாக கர்த்தர் நம்மோடு பேசவில்லை என்று நம்மால் சொல்ல முடியுமா?

நம்முடைய கவனத்தைக் கவரும் விதத்தில் உலகில் நடந்து வரும் அதிர்ச்சி தரும் இந்த நிகழ்ச்சிகள் நமக்கு எதை விளக்குகின்றன? ?

(1) கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த உலகில் தற்காலிகமாக வாழ்வதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த உலகம் நிரந்தரமானதல்ல. கர்த்தரின் வருகையின்போது இது அழிக்கப்படப் போகிறது. அவருடைய வருகை வரையும் இதில் நாம் வாழ்வதும், நமக்கு அவர் தந்திருப்பவற்றை அனுபவிப்பதும், அவருக்காக மட்டும் வாழ்ந்து அவருடைய பணிகளைச் செய்வதும் நமது பெருங்கடமைகளாக இருந்தபோதும் இந்த உலகத்தின் மீதும், அதன் வசதிகளின் மீதும் நாம் தீவிர ஆசை வைப்பதும், நம்பிக்கை வைப்பதும் கிறிஸ்தவ போதனைகளுக்கு முரணானது. உலக ஆசையே கிறிஸ்தவர் களாகிய நம்முடைய கவனத்தைக் கிறிஸ்துவில் இருந்து திசை திருப்பி உலகக் கவலைகளுக்கு நாம் வாழ்க்கையில் இடங்கொடுத்து விடும்படிச் செய்து விடும்.

சமீபத்தில் நான் யாக்கோபு நான்காம் அதிகாரத்தின் ஆரம்ப வசனங்களைப் பயன்படுத்தி பிரசங்கம் செய்தேன். யாக்கோபு அந்த வசனங்களில் சபையில் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் தீவிரமான சண்டைகளை அடையாளங்காட்டி கடுமையான வார்த்தை களைப் பயன்படுத்தி அவர்களைக் குற்றஞ்சாட்டி அத்தகைய அவலட் சணமான சண்டை சச்சரவுகள் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்பட்டதற்கான காரணத்தையும் விளக்குகிறார். அந்தக் காரணங்கள் என்ன தெரியுமா? பொருளாசையும், பதவி மோகமும்தான் (யாக்கோபு 4:1-3). யாக்கோபு இரண்டாம் அதிகாரத்தில் சபையில் வாழ்க்கையில் வசதியோடு வாழ்ந்தவர்களுக்கும், வசதியில்லாதவர்களுக்கும் இடையில் இருந்த பிரச்சனையை யாக்கோபு அடையாளம் கண்டு அதன் நிவர்த்திக்கு ஆலோசனை சொல்லுகிறார். மூன்றாம் அதிகாரத்தில் சபையில் பதவி ஆசைகொண்டு போதனை செய்யத் துடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நாவடக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார். இந்த இரண்டு பிரச்சனைகளும் கிறிஸ்தவ சபையில் தலைதூக்கியிருந்தன. இன்றும் இருந்து வருகின்றன. பொருளாசை கிறிஸ்தவனை உலகத்தில் நம்பிக்கை வைக்கச் செய்து கர்த்தரில் இருக்க வேண்டிய நம்பிக்கைக்கு ஆபத்து ஏற்படுத்தி விடுகிறது. அது கிறிஸ்தவனுக்கு இருக்கக் கூடாத ஆசை. இந்த ஆசை அவனுடைய இருதயத்தைப் பாழாக்கி அவனுடைய சக சகோதரர்களில் அவன் எரிச்சலடையும்படித் செய்துவிடும். இந்த உலகப்பொருட்களுக்காக நாம் வாழக்கூடாது. இந்த உலக ஆசை நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்து வாழத் தடையாகிவிடும்.

சமீபத்தில் என்னுடைய வெளிநாட்டுப் பிரயாணத்தின்போது கான்சர் வியாதியால் அவதிப்படும் ஒருவரைச் சந்திக்க நேரிட்டது. அவரோடு வேதத்தைப் பகிர்ந்துகொண்டு ஜெபித்தேன். வாழ்க்கையில் சகல வசதிகளையும் கொண்டிருக்கும் அந்தக் கிறிஸ்தவருக்கு இந்த வியாதி ஏற்பட்டு ஒரு வருடம் மட்டுமே அவரால் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை நாம் எப்படி எதிர்நோக்க வேண்டும் என்பதை சிந்தியுங்கள். ஒவ்வொரு நாளும் இதற்காக வருத்தப்பட்டு கர்த்தரின் திட்டங்களை சந்தேகிக்கலாம், அவரைக் குறைகூறலாம். இதைச் செய்து வருகிறவர்களும் உண்டு. இல்லாவிட்டால் நம் நேரம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து இருக்கும் நாட்களில் அவரோடு மேலும் நெருக்கமாக ஐக்கியத்தில் வந்து அவருக்கு செய்யக்கூடிய பணிகளை ஆர்வத்தோடு செய்யலாம். நம்மோடு இருப்பவர்களோடு வேதத்தைப் பகிர்ந்துகொண்டு அவர்கள் மீது அதிக அன்பு செலுத்தலாம். நம் குடும்பத்தார் கர்த்தரில் அதிக அன்பு செலுத்தும்படி அவர்களுக்கு அறிவுரை செய்யலாம். இதில் இரண்டாவதையே மெய்க் கிறிஸ்தவன் செய்வான். ஏனெனில், அவனுடைய இருதயம் உலகத்தின் மீது அன்பு வைப்பதில் அக்கறை காட்டவில்லை. அவன் பவுலைப்போல இந்த உலகம் தற்காலிகமானது என்பதை உணர்ந்து பரலோக வாழ்க்கைக்காக இந்த உலகத்தில் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள கற்றுக்கொண்டிருக்கிறான். இந்த உலகத்தின் சோதனைகளும், துன்பங்களும், இயற்கைக் கோளாறுகளும் உலகம் தன் மீட்புக்காக பெருந்துன்பத்தில் இருப்பதையே காட்டுகின்றன.

இந்த உலகத்தை நேசிப்பதைப் பற்றி இயேசு கிறிஸ்து அதிகமாகவே எச்சரித்திருக்கிறார். யாக்கோபு 4ம் அதிகாரத்தில் இந்த உலக நேசம் எந்தளவுக்கு சபையைப் பாதிக்கிறது என்பதை யாக்கோபு விளக்குகிறார். கடுமையான வார்த்தைகளால் கிறிஸ்தவர்கள் அத்தகைய ஆபத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். இந்த உலக நேசமே நம் இருதயத்தில் நாம் கர்த்தரில் வைத்திருக்க வேண்டிய நம்பிக்கையை இல்லாமலாக்கி விடுகிறது. அவரை முழு மனதோடு நேசிக்க முடியாமல் செய்து விடுகிறது. உலக நேசமே இந்த உலகில் ஏற்படும் சோதனைக் காலத்தில் நம் நெஞ்சில் பயத்தை ஏற்படுத்துகிறது. சோதனை களின்போது நாம் மனந்தளரும்படிச் செய்து விடுகிறது. இதை அநேகர் புரிந்துகொள்ளுவதில்லை. கர்த்தரில் நாம் முழுமையாகத் தங்கியிருக்கும் போது தான் நாம் உலகத்தைப் பற்றியும், அதன் கவலைகள் பற்றியும் பயப்பட மாட்டோம். தானியேலால் பயமேயில்லாமல் அரச கட்டளைக் கெதிராக எப்படி ஜெபம் செய்ய முடிந்தது? சிங்கக்கூண்டுக்குள் எப்படி இருக்க முடிந்தது? தீர்க்கதரிசிகள் உயிர் போகும் என்று தெரிந்தும் அரசர்களுக்கெதிராக எப்படி சத்தியத்தை தொடர்ந்து போதித்தார்கள்? ? உலகத்தைத் துச்சமாக எண்ணிக் கர்த்தரை அவர்கள் முழுமையாகப் பின்பற்றியதால்தான். சபை வரலாற்றில் பதினாறாம் நூற்றாண்டு காலத்தில் பலர் கிறிஸ்துவுக்காக இரத்தப்பலி கொடுத்தனர். அதை அவர்களால் எப்படி பயமில்லாமல் செய்ய முடிந்தது என்று சிந்தித்துப் பாருங்கள். அந்தக் காலத்தில் அவர்கள் சந்தித்த பிரச்சனைகளில் அனேகமானவற்றை நாம் இன்று வாழ்க்கையில் சந்திப்பதில்லை. அவர்களுடைய தைரியத்துக் குக் காரணமென்ன? அவர்கள் உலகத்தை நேசிக்க மறுத்து இயேசு கிறிஸ்துவுக்கு முழுவதும் அடிமையாக இருந்ததுதான்.

உலகத்தை நேசிப்பவர்களுக்குத்தான் நம்மை இன்று பாதித்து வரும் பொருளாதார சரிவு நெஞ்சில் பயத்தை ஏற்படுத்தும். வேலை போய்விடுமே என்ற கவலை நெஞ்சில் ஈரமில்லாமல் செய்துவிடும். பாங்கில் இருக்கும் பணத்தைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் அச்சத்தை ஏற்படுத்தும். கிறிஸ்துவை முழுமனத்தோடு விசுவாசிப்பவர்கள் எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்ளுவார் என்று அன்றாட வேலைகளை விசுவாசத்தோடு செய்துகொண்டு போவார்கள். அடுத்த நாளைப் பற்றிய கவலைகளால் வாடி வதங்கிப் போக மாட்டார்கள். அடுத்த நிமிஷத்தில் நடக்கப் போகும் காரியத்தை அறியாமலும், அதை நிறுத்த வகையில்லாமலும் இருக்கும் நாம் அதைப் பற்றிக் கவலைப்படுவதால் என்ன சாதித்து விடப்போகிறோம். உலகத்தில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையும், நேசமும் எந்தளவுக்கு கர்த்தரில் நாம் தங்கியிருக்க முடியாமல் செய்துவிடுகிறது என்பதை இனியாவது புரிந்துகொண்டிருக்கிறீர்களா?

உலகத்தை நேசிப்பதால்தான் நமக்கு இயேசுவில் விசுவாசம் குறைகிறது என்பது பலருக்குத் தெரிவதில்லை. உலகத்தை நேசிக்கவில்லை, நியாயமானதைப் பற்றித்தான் கவலைப்படுகிறோம் என்பார்கள் அவர்கள். அதுதான் உலக நேசம் என்கிறது வேதம். அதாவது, அத்தகைய எண்ணம் இயேசுவில் இருக்க வேண்டிய நம்பிக்கையையும், விசுவாசத்தையும் மழுங்கடித்து விடுகிறது. சகலத்திற்கும் நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்க வேண்டும், அவரில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும். பொருளாதார சோதனையாக இருந்தாலும் சரி, புதிகாக வந்துள்ள வியாதியாக இருந்தாலும் சரி அவர் அனுமதித்து இவை நடக்கின்றன என்ற எண்ணத் தோடு கிறிஸ்துவில் முழு நம்பிக்கை வைத்து நடந்துகொள்ள வேண்டும். ஆதியில் இருந்து பேசிக்கொண்டிருக்கும் கர்த்தர் தொடர்ந்து நம்மோடு கிருபையாய் பேசிக் கொண்டிருக்கிறார். இயற்கைக் கோளாறுகள், வாழ்க்கைச் சம்பவங்கள், உலகில் உருவாகும் அசாதாரண சம்பவங்கள் அனைத்தின் மூலமும் அவரை அறியாதவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக் கவும், நாம் அவரை மேலும் நெருங்கி வாழவும் பேசிக் கொண்டிருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் உலகில் எதுவுமே தற்செயலாக நிகழ்வ தில்லை. அவர் கரம் படாத நிகழ்வுகள் உலகில் ஏற்படுவதில்லை. அவர் அறிந்திராததும், அவரை மீறியதுமான எதுவும் உலகில் இல்லை. கர்த்தர் பேசிக்கொண்டிருக்கிறார், இன்றும் பேசுகிறார். உங்கள் காதில் அது விழுகிறதா? ? இதுவரை பார்த்த சம்பவங்கள் மூலம் உங்களோடு அவர் பேசுகிறார் என்பதை அறிவீர்களா, அவரின் சத்தத்தைக் கேட்கிறீர்களா? இதுவரை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இயேசுவை அறியாதுகூட இருந்திருக்கலாம். இனியாவது அவர் பேசுவதை நீங்கள் ஏன் கேட்டு மனந்திரும்பக் கூடாது, கிறிஸ்துவை விசுவாசிக்கக் கூடாது?

 

கர்த்தரை மட்டுமே உயர்த்திய ஜோன் கல்வினின் பிரசங்கங்கள்

(இலண்டன் இவாஞ்செலிக்கல் நூலக விரிவுரையில் டாக்டர் டெரெக் தோமஸ் கொடுத்த விரிவுரையின் சாரத்தை போதகர் ஜெப்ரி தோமஸ் இங்கே தருகிறார்.)

அமெரிக்க இறையியல் அறிஞரான பென்ஜமின் வார்பீல்ட் சொன்னார், எவருமே கல்வினைப்போலக் கர்த்தரோடு அந்நி யோன்யத்துடனும், ஐக்கியத்துடனும் இருந்ததில்லை. கல்வினை நாம் பல கோணங்களில் பார்க்கலாம் - இறையியலறிஞர், வேத விளக்கவுரையாளர், கடிதங்கள் எழுதுவதில் தேர்ந்தவர் போன்று எத்தனையோ கோணங்களைக் குறிப்பிடலாம். இருந்தபோதும் அவர் ஒரு பெரும் பிரசங்கியாக அறியப்பட்டிருந்தார். அவருடைய பிரசங்கங்களில் பெரும் சத்திய ஐசுவரியத்தைக் காணலாம். கடந்த நாற்பது ஐம்பது வருட காலப்பகுதிகளுக்கு முன் அந்த ஐசுவரியத்தைப் பெரும்பாலானோர் அலட்சியப்படுத்தியிருக்கின்றனர்.

கல்வின் ஓய்வு நாளில் இருதடவைகள் பிரசங்கம் செய்ததோடு வார நாட்களிலும் பிரசங்கம் செய்தார். இரண்டு வாரங்களுக்கொரு தடவை அவர் ஒவ்வொரு நாளும் பிரசங்கம் செய்ததோடு ஏனைய வாரங்களில் அவர் ஒரு நாள்விட்டு ஒரு நாள் பிரசங்கம் செய்தார். அவருடைய கடைசிப் பதினைந்து வருட வாழ்க்கையில் இரண்டு வாரங்களுக்கொரு முறை அவர் ஐம்பது அல்லது அறுபது நிமிடங்களுக்கு பத்துப் பிரசங்கங்களை அளித்திருந்தார். அந்தக் காலப்பகுதியில் கல்வின் அளித்திருந்த 2,300 பிரசங்கங்களை டெனிஸ் ரெகூரியர் (Denis Regeurier) என்பவர் குறுக்கெழுத்தில் எடுத்திருந்தார். இவையனைத்தும் 44 வால்யூம்களாக ஜெனீவாவின் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அந்த நூலகம் அவற்றின் எடைக்குத் தகுந்த பேப்பர் விலைக்கு அவற்றை வித்துத் தீர்த்தன. அவ்வாறு குறுக்கெழுத்தில் எடுக்கப்பட்ட கல்வினின் 870 பிரசங்கங்கள் இன்றும் இருக்கின்றன. மேலும் பலவும் கிடைக்கக்கூடும். கல்வினின் பிரசங்கங்கள் 8 வால்யூம்களாக கடந்த இருபது வருடங்களில் தொகுக்கப்பட்டு அச்சில் இருக்கின்றன. கல்வின் எபிரெய, கிரேக்க மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்தி எந்தவிதக் குறிப்புகளும் கையிலில்லாமல் பிரசங்கித்த ஒரு ஞானி.

கல்வின் ஒவ்வொரு வேத நூல்களையும் முறையாக விளக்கிப் போதிப்பதைத் (Systematic expository preaching) தன்னுடைய பிரசங்கத்தில் வழக்கமாகக் கையாண்டார். சில வேளைகளில் அவர் இடையில் வேறு வசனங்களைக் கையாண்டாலும் பொதுவாக வேத நூல்களைத் தொடர்ந்து பிரசங்கிப்பதில் அவர் தவறியதில்லை. இந்த முறையை அவர் இன்னுமொரு சீர்திருத்தவாதியான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுவிங்லியிடம் (Zwingly) இருந்து கற்றுக்கொண்டிருந்தார். சுவிங்லி இந்த முறையை 1519ல் இருந்து கையாண்டு வந்தார். சுவிங்லிக்கு முன் இந்த முறையை 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரிசொஸ்தொம்மிடம் (Chrysostom) இருந்து கல்வின் பயின்றார். கல்வினின் இந்த வகையான பிரசங்கத்தால் அவர் வேத நூல்களில் இருந்து நீண்ட காலத்துக்குப் பிரசங்கம் செய்த உபாகமப் பிரசங்கங்களும் (200), எசேக்கியல் பிரசங்கங்களும் (174), அப்போஸ்தல நடபடிகள் (189), எபேசியர் நூல் பிரசங்கங்களும் (48) இன்று நாம் வாசிக்கும்படியாக அச்சில் இருக்கின்றன.

(2) கல்வின் வேதத்தை மட்டுமே பிரசங்கிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வரலாற்றின் இருண்ட காலப் பகுதியில் பின்பற்றப்பட்ட முறைகளைத் தவிர்த்து வேதத்தின் இலக்கண, வரலாற்று சந்தர்ப்பங்களின் அடிப்படையில் தெளிவான விளக்கவுரையை அளிப்பதில் (grammatico- historical context) அவர் கவனம் செலுத்தினார். தன்னுடைய அதிகாரத்தைத் தானே நியாயப்படுத்துகிறது வேதம் என்று நம்பிய கல்வின் அதைத் திறந்து அதிகாரத்துடன் பிரசங்கிப்பதையே விரும்பினார். கலாத்தியர் நூலில் இருந்து பிரசங்கித்தபோது ஒரு முறை கல்வின் சொன்னார், ‘இப்போது பிரசங்கித்துக் கொண்டிருக்கிற நான் என்னுடைய சொந்த எண்ணங்களை உங்கள் முன் வைக்கக் கூடாது. அத்தோடு ஏனையவர்களை விட என்னை உயர்த்திக் காட்டவும் கூடாது. இதை நான் எல்லோருக்கும் சொல்லி வைக்க விரும்புகிறேன் - நானளிக்கும் இந்தப் போதனைகள் முதலில் எனக்காகத்தான் இருக்க வேண்டும், அதோடு ஒருவர் தவறாமல் சகலருடைய வாழ்க்கையிலும் பின்பற்றப்பட வேண்டும்.

(3) கல்வின் எளிமையாகப் பிரசங்கம் செய்வதில் நம்பிக்கை வைத்திருந்தார். பொதுவாகவே சாதாரணமான விசுவாசிகள் அனைவரும் சாதாரணமான கிருபையின் சாதனங்களின் மூலம் பயனடைகிறார்கள் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. அவர் மக்களுக்குத் தெரிந்திருந்த தன்னுடைய பிரெஞ்சு மொழியிலேயே பிரசங்கம் செய்தார். வேதம் தெளிவானது (Perspicuity of Scripture) என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. கடினமான விளங்கிக்கொள்ள முடியாத வார்த்தைகளை அவர் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. எப்போதும் எல்லோரும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிற வார்த்தைகளையே அவர் பிரசங்கத்தில் பயன்படுத்தினார். பல வேத மொழிபெயர்ப்புகளிலும் நல்ல தேர்ச்சியிருந்த போதும்கூட மொழிபெயர்ப்பு சம்பந்தமான வாதங்களையும், வித்தியாசமான வேத மொழிபெயர்ப்புகளையும் பிரசங்கத்தில் சுட்டிக் [அட்டைப் படத்தில், பிரான்சில் அதன் தலைநகரமாகிய பாரிஸ் நகரத்தின் நடு மையத்தில் காணப்படும் பிரபலமான Arc de Triomphe நினைவுச் சின்னம்.]

காட்டுகின்ற வழக்கத்தை அவர் அடியோடு தவிர்த்தார். அவர் ஒருபோதும் எபிரெய, கிரேக்க, இலத்தின் வார்த்தைகளைத் தன்னுடைய பிரசங்கத்தில் பயன்படுத்தியதேயில்லை. ஏனைய நூலாசிரியர்களைப் பற்றி அவர் பிரசங்கத்தில் குறிப்பிட்ட போதும் அவர்களுடைய பெயர்களை அவர் குறிப்பிட்டதேயில்லை. அவர் அடிக்கடி ரோமன் கத்தோலிக்க மதத்தை சாடினார். இன்று நாம் பயன்படுத்தி வருகின்ற உதாரணங்களை அவர் ஒருபோதும் பயன்படுத்தாவிட்டாலும், அவசியமானபோது வேத உதாரணங்களை மட்டுமே பயன்படுத்தினார்.

(4) கல்வினின் பிரசங்க ஊழியம் எப்போதுமே கர்த்தரை முதன்மைப் படுத்தியதாக இருந்தது. சர்வேடஸ் குற்றஞ்சாட்டப்பட்டு, கொலை செய்யப்பட்ட வருடம் ஜெனிவாவிலும், கல்வினுடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான வருடமாக இருந்தபோதும் அக்காலப்பகுதியில் கல்வினளித்திருந்த எந்தப் பிரசங்கத்திலும் அதன் வாடையைக் கூடக் காணமுடியாது. அந்தளவுக்கு கர்த்தரை மட்டுமே சார்ந்ததாக அவருடைய பிரசங்கங்கள் அமைந்திருந்தன. அவருடைய பிரசங்கங்களில் ஜெனீவாவில் நடந்த அந்த நிகழ்ச்சி பற்றிய ஒரு குறிப்புகூட இருக்கவில்லை. இதை நிரூபிக்க டாக்டர் தொமஸ் கல்வின் யோபுவில் பிரசங்கித்த 147வது பிரசங்கத்தை உதாரணமாகக் காட்டி எந்தளவுக்கு கல்வின் கர்த்தரை முதன்மைப்படுத்திப் பிரசங்கமளித்திருந்தார் என்பதை விளக்கினார்.)

கல்வினை நாம் காப்பியடிக்க முடியாதென்பதை டாக்டர் தொமஸ் தன் விரிவுரையில் நினைவுபடுத்தினார். உதாரணத்திற்கு கல்வின் சபையில் திருவிருந்தளித்தபோது அது மிகவும் கடுமையான முறைகளைப் பின்பற்றியதாக இன்றைக்கு நாம் பின்பற்றுவதற்கு தயங்கும் முறையில் அமைந்திருந்தது என்றார். டாக்டர் தோமஸ், நாம் எப்போதும் கல்வினைப் போல வேத நூல்களை ஒவ்வொன்றாகப் பயன்படுத்தி வியாக்கியானப் பிரசங்கங்கள் அளிப்பதை வழமையாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். கர்த்தர் நமக்குத் தந்திருக்கும் சாதாரண கிருபையின் சாதனங்களின் நித்தியப் பயன்பாட்டில் நம்பிக்கை வைத்து அச்சாதனங்கள் அனைத்திலும் உச்சமானதாக இருக்கும் பிரசங்கத்தில் நம்பிக்கை வைக்கும்படி அறிவுறுத்தினார்.

 

டி. எல். மூடியில் இருந்து பில்லி கிரேகாம் வரை

- மாபெரும் சுவிசேஷ கூட்டங்கள் -

(இது ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த போதகர் ஜோன் ஜெ. மரே வெஸ்ட்மின்ஸ்டர் ஐக்கியத்தில் (Westminster fraternal) சமீபத்தில் போதகர்களுக்கு அளித்த ஒரு விரிவுரையின் சுருக்கம். அனுப்பி வைத்தவர் வேல்ஸைச் சேர்ந்த போதகர் ஜெப்ரி தொமஸ்.)

  1. 1870 களுக்கு முன்பு சீர்திருத்த பிரசங்கங்கள் பொதுவாகவே கர்த்தரை முதன்மைப்படுத்தியதாகவும், கர்த்தரின் வார்த்தையை முதன்மைப்படுத்திய தாகவும், போதனைகள் அதிகம் நிரம்பியதாகவும், கர்த்தரை மகிமைப் படுத்தியதாகவும் இருந்தன. அக்காலங்களில் வேத அடிப்படையிலான பரிசுத்த வாழ்க்கைக்கு முதலிடம் அளிக்கப்பட்டது; சுவிசேஷ ஊழியங்கள் அனைத்தும் சபை சார்ந்ததாக இருந்து சபையாரால் செய்யப்பட்டதாக இருந்து வந்தன.
  2. இந்த நிலை எப்படி மாறுதலடைந்தது? இதற்கு மூன்று காரணிகளைக் கூறலாம். முதலாவதாக பதினெட்டாம் நூற்றாண்டில் மக்களுக்கு ஏற்பட்ட மனிதநலவாத அடிப்படையிலான நம்பிக்கைகள் ஒரு காரணமாக இருந்தன. அதாவது அறிவு சார்ந்த விளக்கங்களில் அவர்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். இது கர்த்தரின் அற்புதங்களில் அதுவும் முக்கியமாக வேத நம்பிக்கைகளில் மனிதனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அடுத்ததாக, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் உருவான வேதத்தை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து விளக்கம் கொடுக்கும் முறை இன்னொரு காரணமாக இருந்தது. இதுவும் கர்த்தரிலும், வேதத்திலும் மனிதனுக்கு இருக்க வேண்டிய நம்பிக்கைகள் சிதையக் காரணமாக இருந்தது. விஞ்ஞான ரீதியில் வேதத்தை ஆராய்ந்து அதன் வரலாறு, அற்புதங்கள் மற்றும் போதனைகள் மனித சிந்தனைக்கு ஒவ்வாததாக மனிதன் அடையாளம் காண ஆரம்பித்தான். மூன்றாவதாக, அமெரிக்காவின் சார்ள்ஸ் பினியின் அர்ப்பணிப்புக் கூட்டங்களும், சுவிசேஷ ஊழிய முறைகளும் அங்கு பிரபல்யமாகி ஏனைய நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்ததும் சத்தியத்தின் அடித்தளத்தை அசைக்க ஆரம்பித்தது. 3. சுவிசேஷகரான டி. எல். மூடி கொண்டு வந்த மாற்றங்கள் யாவை? பொதுவாகவே மூடிக்கு பிரிட்டனில் வரவேற்பு இருந்தது. அத்தகைய வரவேற்புக்கும் மூடியின் வெற்றிக்கும் காரணம் அவருடைய நேர்மையும், தாழ்மையும், வாஞ்சையும்தான். அத்தோடு நிச்சயம் பரிசுத்த ஆவியான வரின் பங்கும் இருந்தது. அவருடைய கூட்டங்களில் கர்த்தரை அறிந்து கொண்டவர்கள் நல்ல விசுவாசக் குடும்பங்களில் இருந்து வந்தவர்களாக இருந்தனர். அத்தோடு பொதுவாகக் கர்த்தரை அறியாத மக்களைத் தன் பிரசங்கத்தால் கவர்ந்து இழுக்கும் திறனையும் மூடி கொண்டிருந்தார். இருந்தபோதும் மூடி ஆர்மீனியனிசத்தைப் பாவிகளுடைய இரட்சிப்பின் நிறைவேற்றத்தில் மனிதனுக்கும் கர்த்தரோடு பங்கிருக்கிறது என்ற போதனை) பின்பற்றியதால் அவருடைய சுவிசேஷம் ஆர்மீனியனிசத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. அதை பிரிட்டனினுள்ள மக்களுக்கு ஏற்றவாறு மூடி பயன்படுத்தினாலும் கூட்டங்களில் அர்ப்பண அழைப்பு கொடுக்கும் (Alter call) அவருடைய சுவிசேஷ முறையும், இசைக்கு முதலிடம் கொடுத்து கூட்டத்தில் இசை சார்ந்த மனித உணர்வு களைத் தூண்டி விளையாடும் சூழ்நிலையைத் தோற்றுவித்த வித்தையும் அவருடைய நோக்கங்கள் பற்றிய அநேகக் கேள்விகளை எழுப்புவ தாயிருந்தன. அவருடைய கூட்டங்களில் லிபரல் கோட்பாடுகளைப் பின்பற்றிய ஹென்றி டிரமன்ட் (Henry Drummond) போன்றோர் அதிக பங்கெடுத்ததும் பெரும் சந்தேகங்களைக் கிளப்பியது.
  3. டி. எல். மூடியின் சுவிசேஷக் கூட்டங்களால் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகள் என்ன? ? கர்த்தரின் இறையாண்மையில் கிறிஸ்தவர்களுக்கு இருந்த நம்பிக்கைக்கு பங்கம் ஏற்பட்டது. பாவத்தை சாதாரணமாகக் கருதுகின்ற ஒரு மனநிலை ஏற்பட ஆரம்பித்தது. விசுவாசம் பெற்றவர் களாகக் கருதப்பட்டவர்களின் வாழ்க்கையில் பரிசுத்தத்தின் அடையாளத் தைக் காண முடியாததாக இருந்தது. கூட்டங்களில் விசுவாசம் பெற்றவர்களாக அறிவிக்கப்பட்ட பலர் அதைத் துறந்து மறுபடியும் உலகத்தை நாடிப் போனார்கள்). குளருபடியான போதனைகள் அதிகரித்து சத்தான இறையியல் அறிவை நாடுவதிலும், பெற்றுக்கொள்ளுவதிலும் ஆர்வம் குறைந்தது. விசுவாச அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமையும் கிறிஸ்தவ சபை ஊழியம் மறைய ஆரம்பித்தது. தனி மனித எண்ணங்களுக்கும், தனி மனிதனை முதன்மைப்படுத்தும் வழக்கமும் பெருகியது. வரலாற்றில் இருந்து வந்த கர்த்தரின் எழுப்புதலில் நம்பிக்கை குறைந்தது. வரலாற்றுக் கிறிஸ்தவத்தில் நம்பிக்கை குறைந்ததோடு அதில் ஆர்வமும் குறைய ஆரம்பித்தது.

நாம் இன்று செய்ய வேண்டியது என்ன? (1) நாம் மறுபடியும் கர்த்தரை முதன்மைப்படுத்த ஆரம்பிக்க வேண்டும். சீர்திருத்தவாதிகள், பியூரிட்டன் பெரியவர்கள், ஜொனத்தன் எட்வர்ட்ஸ், ஜோர்ஜ் வில்பீல்ட் ஆகியோரின் ஊழியங்களால் ஏற்பட்ட சுவிசேஷ விழிப்பு, ஸ்பர்ஜன், மரே மெக்சேன் போன்றோரின் போதனைகள் ஆகியவற்றை நோக்கி நம் கவனத்தைத் திருப்ப வேண்டும். மெய்யான வேத போதனைகளை எப்படி அளிப்பது என்ற வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டும். போர்த்துடிப்போடும் உணர்வோடும் சுவிசேஷத்தை அறிவிக்கும் முயற்சியில் ஆர்வம் காட்ட வேணடும். மெய்யான கர்த்தரின் எழுப்புதலில் அக்கறை காட்டி அதன் அவசியத்தை உணர வேண்டும்.

 

அங்கத்துவ அமைப்பில்லாத திருச்சபையா?

திருச்சபை அமைப்பைப் பற்றி இப்பத்திரிகையில் பல தடவைகள் எழுதியிருக்கிறேன். வேதபூர்வமாக அமையும் திருச்சபைகளில் ஆரம்பத்தில் அமைக்கப்பட வேண்டியது முறையான அங்கத்துவமாகும். அதாவது, விசுவாசிகளைக் கொண்டு அமைக்கப்படுவது திருச்சபையாதலால் அந்தத் திருச்சபை முறையாக வேத போதனைகளைப் பின்பற்றி கர்த்தரின் பணிகளைச் செய்து வர அதற்கு அங்கத்தவர்கள் அவசியம். முறையான சபை அங்கத்துவம் காணப்படாவிட்டால் ஓர் ஆவிக்குரிய அமைப்பை சபையாகக் கருத முடியாது. ஏனெனில், அந்தச் சபையைப் போதனைகளைத் தந்து வழிநடத்த வேண்டிய போதகர்கள், உதவிக்காரர்களை சபை அங்கத்தவர்களே தெரிவு செய்ய வேண்டும். அங்கத்தவர்கள் இல்லாமல், அவர்கள் ஆராய்ந்து பார்த்து தெரிவு செய்யா மல் சபைத்தலைவர்கள் உருவாக வழியில்லை. வேதம் இப்படித்தான் போதிக்கிறது. ஆடுகள் இல்லாமல் மேய்ப்பன் இருக்க வழியில்லை. ஆடுகள் இருக்கின்றபோதே அவர்கள் மத்தியில் இருக்கிறவன் மேய்ப்பனாக அறியப்படுகிறான். இந்த உறவைப் பிரிக்க முடியாது. அநேக சபைகளில் சபைத் தலைவர்கள் தங்களைத் தாங்களே நியமித்துக் கொள்ளுவதும், தங்களுக்குப் பிடித்தமானவர்களை மட்டும் பணிகளுக்கு நியமிப்பதும் நாம் எங்கும் பார்க்கின்ற தவறான வழிமுறையாகும். சபையைக் கூட்டி சபை அங்கத்தவர்களைக் கலந்துகொள்ளாமல் அனைத்து ஆவிக்குரிய காரியங்களையும் நடத்திச் செல்லுகின்ற, வேதத்தில் இல்லாததொரு முறை இன்று எங்கும் இருந்து வருவதை நாம் மறுக்க முடியாது. இக்காரணங் களால் சபை அங்கத்துவ அமைப்பு பற்றி நாம் ஆராய்வது அவசியமாகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜோன் ஏன்ஜல் ஜேம்ஸ் (John James) என்ற பெரியவர் சபை அங்கத்துவம் பற்றிப் பின்வருமாறு எழுதியிருக்கிறார், “எவ்வாறு ஒரு நாட்டின் கட்டுப்பாடு, வளர்ச்சி ஆகியவற்றில் இருந்து அதன் அரசாங்கத்தை வேறுபடுத்திப் பார்க்க முடியாதோ அதைபோல சபை அமைப்பின்றி ஒரு சபையின் ஆத்மீக வளர்ச்சியை எண்ணிப் பார்க்க முடியாது. சபை அமைப்பு சபையின் வளர்ச்சியுடன் பிரிக்க முடியாத தொடர்பைக் கொண்டிருக்கிறது.”

பொதுவாக சபை அங்கத்துவம் பற்றி நம்மினத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் பலவிதமான குழப்பமான கருத்துக்கள் இருந்து வருகின்றன. தெளிவானதும், கட்டுப்பாடுள்ளதுமான அங்கத்துவ அமைப்பில்லா மலேயே ஓய்வு நாளில் கூடி சபை என்ற பெயரில் ஆராதனை செய்து வருகிறவர்கள் நாடெங்களும் பரவிக் காணப்படுகிறார்கள். விசுவாசிகள் கூடிவருவதே சபை அதனால் அதற்கு அமைப்பு என்று ஒன்று அவசிய மில்லை என்ற கருத்தை இவர்கள் கொண்டிருக்கிறார்கள். ஆதி சபைகள் தகுந்த அமைப்பைக் கொண்டு இயங்கி வந்துள்ளன என்பதை இவர்கள் வேதத்தை ஆராய்ந்து படித்துப் புரிந்துகொள்ளத் தவறியிருக்கிறார்கள். அத்தோடு இவர்களில் பலர் பாரம்பரியமாக இயங்கி வரும் சபைகள் அனைத்தும் ஆவியில்லாத சபைகள் என்ற கருத்தைக் கொண்டிருப்பதால் வரலாற்றில் இருந்து வந்திருக்கின்ற சபைகள் பின்பற்றி வந்திருக்கின்ற முறைகள் அனைத்துமே மனித சித்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்டவை என்ற தவறான எண்ணத்தையும் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காரணங்களும் இன்னும் பலவும் இவர்களுடைய கண்களை மறைத்து சபை அமைப்பு, அங்கத்துவம் என்பவை அவசியமற்றவை என்ற தவறான நம்பிக்கையை இவர்கள் வளர்த்துக்கொள்ள உதவியிருக்கின்றன.

மேலும் பலர் விசுவாசிகள் ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் சபையில் இணைந்துகொள்வதால் அதுவே அவர்களுக்கு சபை அங்கத்துவத்தை அளித்துவிடுகிறது அதற்கு மேலாக எதுவும் செய்ய வேண்டியதில்லை, அங்கத்துவம் பற்றிய போதனைகளும், விசாரணைகளும் அவசியமற்றவை என்று கருதுகிறார்கள். இதனால் இவர்களும் முறையான அங்கத்துவப் போதனைக் கொடுத்து அங்கத்துவ அமைப்பை சபையில் ஏற்படுத்து வதில்லை. பாப்திஸ்து சபைகள் மத்தியிலும், சகோதரத்துவ சபைகள் மத்தியிலும் இந்த முறையே பொதுவாகக் காணப்படுகின்றது. சபை அங்கத்துவம் உருவாக விசுவாசத்திற்கு அடுத்த படிக்கல்லாக ஞானஸ் நானம் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், ஞானஸ்நானத்தை மட்டும் சபை அங்கத்துவத்திற்கு இருக்க வேண்டிய ஒரே தகுதியாகக் கருதுவது சரியல்ல. ஞானஸ்நானத்திற்கும் சபைக்குமுள்ள உறவை ஆராய்ந்து பார்க்கத் தவறுகிறவர்கள் ஞானஸ்நானத்தை மட்டும் சென்டிமென்டலாகப் பெரிதுபடுத்தி அதையே சபை அங்கத்துவத்திற்கான சகல தகுதிகளையும் அளிக்கும் கிருபையின் சாதனமாகத் தவறாகக் கருதுகிறார்கள்.

வேதசத்தியங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் முறை

இந்த ஆக்கத்தில் சபை அங்கத்துவத்தின் அவசியத்தைக் கர்த்தர் தன்னுடைய வேதத்தில் எந்த முறையில் தந்திருக்கிறார் என்பதை ஆரம்பத் தில் விளக்க விரும்புகிறேன். சபை அங்கத்துவம் என்பது மனித சிந்தனை யில் இருந்து புறப்பட்ட ஒன்றல்ல என்பதே என்னுடைய வாதம். அது வேதம் தெளிவாகப் போதிக்கும் சபை அமைப்புக்கு அவசியமானதும் இன்றியமையாததுமானதொன்று. வேதத்தில் அது வெளிப்படுத்தப்பட் டிருக்கும் முறை பற்றி நான் விளக்க வேண்டியது அவசிமாகிறது. கர்த்தரின் சித்தத்தின் மொத்தத் தொகுப்பே வேதமாகும். தன்னுடைய சித்தத்தைக் கர்த்தர் வேதத்தில் வெளிப்படுத்தியிருக்கும் முறை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதைக் கர்த்தர் திட்டவட்டமாக வெளிப்படையான போதனைகளின் மூலமும் (Explicit teaching), நாம் கருத்தோடு ஆராய்்ந்து படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய விதத்தில் உள்ளடக்கமாகவும் (Necessarily contained) வேதத்தில் தந்திருக்கிறார். முதலாவதற்கு நாம் பத்துக் கட்டளைகளை உதாரணமாகக் காட்டலாம். இரண்டாவதற்கு நாம் திரித்துவப் போதனையைக் குறிப்பிடலாம். பத்துக்கட்டளைகள் எந்தவிதமான குழப்பமுமில்லாமல் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. திரித்துவப் போதனைகள் உள்ளடக்கமாக பல பகுதிகளில் பரவிக் காணப்படுக்கின்றன. அவற்றை நாம் கருத்தோடு படித்தால் மட்டுமே திரித்துவத்தைப் பற்றிய விளக்கங்களைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். எல்லாப் போதனைகளையும் கர்த்தர் வெளிப் படையாக பத்துக் கட்டளைகளைப் போல வேதத்தில் தரவில்லை. நாம் வேதத்தைக் கருத்தோடும், பயத்தோடும், உழைத்தும் படித்துக் கர்த்தருடைய சித்தங்களை அறிந்துகொள்ள வேண்டுமென்பதால் இந்த முறையில் எல்லாப் போதனைகளையும் கர்த்தர் வேதத்தில் தந்திருக்கிறார். ஆகவே, வெளிப்படையான போதனைகள் மட்டுமல்லாமல் வேதத்தில் வரலாற்றின் மூலமும், உவமைகள் மூலமும், உதாரணங்களின் மூலமும் உள்ளடக்கமாக விளக்கப்படும் போதனைகளும் நமக்கு அவசியமானவை. இது பற்றி விளக்கும் 1689 விசுவாச அறிக்கை முதலாவது அதிகாரத்தில் பின்வருமாறு சொல்லுகிறது, “அவரது மகிமைக்கும், மனிதனுடைய இரட்சிப்பிற்கும், விசுவாசத்திற்கும், வாழ்க்கைக்கும் அவசியமான தேவனுடைய எல்லாத் திட்டங்களும் பரிசுத்த வேதாகமத்தில் திட்டவட்டமாக (வெளிப்படையாக) அல்லது உள்ளடக்கமாக (இன்றியமையாத நிலையில்) காணப்படுகின்றது.” வெளிப்படையான போதனைகளும், நாம் வரலாற்றின் மூலமும், உவமைகள் மூலமும், உதாரணங்களின் மூலமும் அறிந்துகொள்ளுகின்ற போதனைகளும் சம அதிகாரமுள்ளவை. அவையனைத்தையும் கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டியது அவசியம்.

கர்த்தர் வேத சத்தியங்களை நமக்குக் கொடுத்திருக்கும் முறை பற்றி நான் இதுவரை விளக்கியதற்கும் திருச்சபை அங்கத்துவத்திற்கும் பெருந் தொடர்பு இருக்கின்றது. ஏனெனில், ‘ஒருவர் சபையில் அங்கத்தவராக இருக்க வேண்டும்’ என்ற வார்த்தைகளை நாம் வேதத்தில் காணமுடியா விட்டாலும் சபை அங்கத்துவம் பற்றிய போதனைகளை வேதம் பல இடங்களில் வரலாற்று நிகழ்ச்சிகள், உதாரணங்கள் மற்றும் போதனைகள் மூலமாகத் தெளிவாக விளக்குகின்றது. அது பற்றிய போதனைகளைக் கர்த்தர் பத்துக் கட்டளைகளைப் போல ஒரே இடத்தில் விளக்கமாகத் தரவில்லை. திருச்சபை பற்றிய சுவிசேஷ நூல்களில் கர்த்தர் தந்திருக்கும் விளக்கங்களைக் கொண்டும், அப்போஸ்தலர் நடபடிகளில் திருச்சபை அமைக்கப்பட்ட விதத்தை அவர் விளக்கியிருக்கும் வரலாற்று நிகழ்ச்சி களைக் கொண்டும், புதிய ஏற்பாட்டு நிருபங்களில் தரப்பட்டிருக்கும் உதாரணங்கள், போதனைகளின் மூலமுமே நாம் திருச்சபை அங்கத்துவத் தின் அவசியத்தைப் பற்றி விளக்கமாக அறிந்துகொள்ள முடிகிறது.

திருச்சபை அங்கத்துவம் அவசியமானது. அதை ஏற்படுத்தி வைத்திருப்பவர் திருச்சபையின் தேவனாகிய இறையாண்மையுள்ள கர்த்தர். அது ஏன் அவசியமானது என்பதற்கான காரணங்களை இப்போது விளக்க விரும்புகிறேன்.

(1) அது பற்றிய போதனைகள் உள்ளடக்கமாக அதே நேரம் தெளிவாக வேதத்தில் விளக்கப்பட்டிருப்பதால் அது அவசியமாகிறது.

இதைப் பின்வரும் வேதப் பகுதிகளை ஆராய்வதன் மூலம் அறிந்து கொள்ளுகிறோம்.

(அ) அப்போஸ்தலர் நடபடிகள் 2:41.

இந்தப் பகுதியில் பெந்தகொஸ்தே தினத்தில் பேதுருவின் பிரசங்கத்தின் காரணமாக யூதர்கள் கூடி வந்திருந்த பெருங்கூட்டத்தில் இருந்து மூவாயிரம் பேர் கிறிஸ்துவை விசுவாசித்து அவர்களைக் கொண்டு புதிய ஏற்பாட்டு சபை நிறுவப்பட்டதாக விளக்கப்படுகின்றது. மேற்கூறப்பட்ட வசனம் விளக்குவதைப் புரிந்துகொள்ள இந்தப் பகுதி முழுவதையும், அத்தோடு அதன் பின்னணியையும் ஆராய்வது அவசியம். பெந்தகொஸ்தே தினத்திற்கு முன்பு இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை ஏற்று பதினொரு அப்போஸ்தலர்களும் எருசலேமுக்கு வந்து ஒரு வீட்டின் மேலறையில் (2:13) தங்கியிருந்தார்கள். யூதாஸ் தற்கொலை செய்து கொண்டதால் அவர்கள் கிறிஸ்துவின் கட்டளையின்படி பன்னிரெண்டாவது அப்போஸ்தலனை தெரிவு செய்தார்கள். அந்த மேலறையில் அப்போஸ்தலர்களைத் தவிர வேறு விசுவாசிகளும் சேர்ந்து 120 பேர் இருந்தனர் (2:13-15). பெந்தகொஸ்தே தினத்தில் கிறிஸ்துவின் வாக்குப்படி பரிசுத்த ஆவியானவர் வந்திறங்கியபின் பேதுருவின் பிரசங்கத்தின் மூலம் பாவ நிவாரணம் பெற்று விசுவாசிகளான 3000 பேர் இவர்களோடு இணைக்கப்பட்டார்கள். இவர்கள் எல்லோருக்கும் அன்று ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. இதன் மூலமாக சபை அன்றைக்கு நிறுவப்பட்டு அவர்கள் எல்லோரும் இணைந்து திருவிருந்தில் கலந்துகொண்டார்கள், ஐக்கியத்தை அனுபவித்தார்கள். இந்தப் பகுதியில் ‘விசுவாசிகளைக் கொண்டு ஆரம்ப சபை இப்படியாக அமைக்கப்பட்டது’ என்ற வார்த்தைகளை நாம் காணாவிட்டாலும் அதைத்தான் விளக்குகிறது என்பதை இந்தப் பகுதியை ஆராய்ந்து படிக்கிறபோது விளங்கிக் கொள்ள முடிகிறது. இங்கே சபை அங்கத்துவத்தை எப்படிக் காண்கிறோம்? அன்று கூடி வந்திருந்த பெரிய கூட்டத்தில் இருந்து 3000 பேர் மட்டும் பிரித்தெடுக் கப்பட்டு ஏற்கனவே இருந்த 120 பேரோடு இணைக்கப்பட்டார்கள் என்பதை 2:41 ‘சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்’ என்ற வார்த்தையின் மூலம் விளக்குகிறது. இது ஆங்கிலத்தில் ‘added to them’ என்றிருக்கிறது. மூவாயிரம் பேர் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்கள் என்று வெறுமனே சொல்லி நிறுத்திவிடாமல் கர்த்தர் அவர்கள் ஏற்கனவே இருந்தவர்களோடு இணைக்கப்பட்டார்கள், அதன் மூலம் சபை நிறுவப்பட்டது என்பதை அழுத்தமாகத் தெரிவிக்கிறார்.

யூதர்களாக இருந்து யூத மதவழக்கங்களைப் பின்பற்றி வந்திருந்த இவர்கள் அன்று ஞானஸ்நானம் பெற்று திருவிருந்தில் கலந்துகொண்டு ஏனைய விசுவாசிகளோடு எப்படி ஐக்கியத்தில் வர முடிந்தது? 42ம் வசனத்தில் விளக்கப்பட்ட காரியங்களைச் எப்படிச் செய்ய முடிந்தது? பேதுரு அவர்களுக்கு சுவிசேஷத்தை மட்டும் சொல்லாமல் அவர்கள் மனந்திருந்தி கிறிஸ்துவை விசுவாசித்த பின் திருச்சபை பற்றியும் அதன் வாழ்க்கை முறை பற்றியும் நிச்சயமாக அவர்களுக்கு விளக்கியிருப்பார். எந்த விஷயத்தைப் பற்றியும் அறிந்துகொள்ளாமல் பின்பற்ற முடியாது. இயேசுவிடம் இருந்து பெற்றுக் கொண்ட போதனைகளை பேதுருவும் ஏனைய அப்போஸ்தலர்களும் அன்றைக்கு புதிய விசுவாசிகளுக்குத் தெளிவாகப் போதித்து சபை அங்கத்துவத்துக்கு அவர்களைத் தயார் செய்த பிறகே ஞானஸ்நானம் அளித்திருப்பார்கள். அதனால்தான் ஞானஸ்நானம் பெற்றவர்களால் ஒருமனப்பட்டு மற்றவர்களோடு குழப்பமில்லாமல் இணைந்து வாழமுடிந்தது.

(ஆ) அப்போஸ்தலர் நடபடிகள் 4:23-37

இந்தப் பகுதி இயேசுவின் பேரில் பிரசங்கம் செய்யக்கூடாதென்று அப்போஸ்தலர்களை யூதர்கள் பயமுறுத்தி அனுப்பியதை விளக்குகிறது. அதற்குப் பிறகு அப்போஸ்தலர்கள் தங்களைச் சார்ந்தவர்களை (4:23) போய்ச் சேர்ந்து, அதாவது சபையைப் போய்ப்பார்த்து நடந்த விஷயங்களை அவர்களுக்கு அறிவித்தார்கள். அதைக்கேட்ட சபையார் அனைவரும் ஒருமனதோடு தேவனை நோக்கி ஜெபித்தார்கள். இதிலிருந்து தெளிவான எண்ணிக்கையைக் கொண்டு சபையிருந்ததையும் பேதுருவும், யோவானும் அவர்களோடு சேர்ந்து ஜெபித்ததையும் பார்க்கிறோம். இந்த சபை பற்றியே மறுபடியும் விசுவாசிகளாகிய திரளான கூட்டம் என்று 32ம் வசனத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சபை, சபைக்கு வெளியிலிருந்த புறஜாதியினர் என்ற இரண்டு கூட்டத்தை மட்டுமே அன்று காண்கிறோம். விசுவாசிகள் சபையோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள். சபை தன்னைச் சார்ந்த அங்கத்தவர்கள் யார் என்ற எண்ணிக்கையைத் தெளிவாக அறிந்திருந்து தொடர்ந்து வளர்ந்தது. அங்கத்துவ அமைப்பில்லாத ஒரு குழப்பமான கூட்டமாக சபையை நான் அப்போஸ்தல நடபடிகளில் பார்ப்பதில்லை.

(இ) அப்போஸ்தலர் நடபடிகள் 11, 13

இந்தப் பகுதியும் சபை அங்கத்துவம் பற்றித் தெளிவாக விளக்குகிறது. ஏற்கனவே 3120 பேராகத் தெளிவான எண்ணிக்கையோடிருந்த சபை மேலும் வளர்ந்து 5000 பேராக இருந்ததை 4:4 விளக்குகிறது. இவர்கள் மட்டுமே திருச்சபை அங்கத்தவர்கள். இவர்களுக்கு வெளியில் இருந்தவர்கள் புறஜாதியினர் என்பதை நாம் உணர வேண்டும். இவர்கள் எங்கு எப்படிக் கூடிவந்து ஆராதனை செய்தார்கள் என்பது அல்ல நமக்கு முக்கியம். திருச்சபை இத்தனைப் பேரை மட்டுமே கொண்டிருந்தது என்பதை பரிசுத்த ஆவியானவர் நமக்கு எண்ணிக்கையைத் தந்து உணர்த்துகிறார் என்பதையும் அதன் மூலம் சபை அத்தனை அங்கத்தவர்களை மட்டும் கொண்டு முறையான சபையாக நடை நடைமுறையில் இருந்து வந்தது என்பதையும் நாம் உணர்வது அவசியம். யார் யார் நம்மைச் சேர்ந்தவர்கள், யார் யார் நம்மைச் சேராதவர்கள் என்ற குழப்ப நிலையில் இன்று பல இடங்களிலும் நாம் பார்ப்பதைப் போல அன்று சபை கூடி வரவில்லை. அப்போஸ்தலர்களுக்கும், சபைக்கும் யார் தங்களைச் சேர்ந்தவர்கள் என்ற தெளிவான விபரமிருந்தது.

இந்த ஐந்தாம் அதிகாரத்தின் 11, 13 வசனங்களும் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றன. இங்கே அனனியாவும், அவனுடைய மனைவி சப்பிராளும் எப்படியோ சபையில் போலித்தனமாக இணைந்து அப்போஸ்தலர்களையும் சபையுைம் ஏமாற்றினார்கள். சபையில் அவர்கள் விசாரிக்கப்பட்டு கர்த்தர் உடனடியாகத் தண்டனையையும் வழங்கினார். அதற்குப் பிறகு நாம் வாசிக்கின்ற வசனங்கள் மிகவும் ஆழமானவை. 11ம் வசனம், இந்த நிகழ்ச்சி சபைக்குப் பெரிய பயத்தை ஏற்படுத்தியதாக விளக்கி இந்நிகழ்ச்சிக்கும் சபைக்கும் இருந்த தொடர்பை விளக்குகிறது. அதற்குப் பிறகு 13ம் வசனம் சபைக்கு வெளியில் இருந்த ஒருவரும் அதன் பிறகு சபையில் சேருவதற்கு துணியவில்லை என்று விளக்குகிறது. அன்றைக்கு அப்போஸ்தலர்கள் செய்து வந்த அற்புதங்களைப் பார்த்தும், வேறு சுய நல நோக்கங்களுக்காகவும் சிலர் சபையில் இணைய விரும்பியிருக்கலாம். கர்த்தர் இந்த நிகழ்ச்சி மூலம் சபை பரிசுத்தமானது என்பதையும், மெய் விசுவாசிகள் மட்டுமே அதில் இணைய முடியும் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறார். அன்று நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சபைக்கு வெளியில் இருந்தவர்கள் சபையில் சேரத் துணியவில்லை. இதிலிருந்து சபை விசுவாசிகளை மட்டுமே அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்கி வந்ததையும், யார் தம்மைச் சார்ந்தவர்கள் என்று தெரியாத ஒரு குழப்பமான அமைப்பாக இருக்கவில்லை என்பதையும் உணர்வது அவசியம். சபை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் குறிப்பிட்டவர்களை அங்கத்தவர்களாகக் கொண்டே இயங்கி வந்தது. அதில் இணைய விரும்புகிறவர்கள் கிறிஸ்துவை விசுவாசித்து சபையால் ஆராயப்பட்டே அதோடு இணைக்கப்பட்டார்கள்.

(ஈ) அப்போஸ்தலர் நடபடிகள் 6:1-7

இப்பகுதியின் முதல் வசனம் ‘அந்நாட்களில் சீஷர்கள் பெருகினபோது’ என்றிருக்கிறது. ஏற்கனவே சபை வேறு பெயர்களிலும் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கவனித்திருக்கிறோம். 2:44லும் 4:32லும் அது ‘விசுவாசிகள்’ (Believers) என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்போது ஆவியானவர் அதை ‘சீஷர்கள்’ (Disciples) என்று அழைக்கிறார். இங்கே சபையில் பந்தி விசாரணை செய்வது பற்றிய பிரச்சனை உருவாகியிருந்ததைப் பற்றி வாசிக்கிறோம் (6:3). அப்போது சபைத் தலைவர்களாக இருந்த அப்போஸ்தலர்கள் அதை நிவர்த்தி செய்வதற்கு ஒரு வழியைக் காட்டினார்கள். அதாவது, தகுதி வாய்ந்த ஏழு பேரைத் தெரிவு செய்து அப்பணியைச் செய்ய நியமிக்கும்படி ஆலோசனை சொன்னார்கள். இந்த யோசனை ‘சபையாரெல்லோருக்கும் பிரியமாயிருந்தது’ (6:5). இதிலிருந்து நாம் எதைத் தெரிந்துகொள்கிறோம். சபை ஏற்கனவே அங்கத்தவர்களையும் அப்போஸ்தலர்களையும் கொண்ட ஓர் இறுக்கமான அமைப்பாக இருந்தது. அதிலிருந்தவர்களுக்கு யார் அதைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்திருந்தது. அதில் சேரத் தகுதியில்லாதவர்கள் அதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஏற்கனவே அங்கத்தவர்களாக இருந்தவர்களில் தகுதியற்றவர்கள் என்று அறியப்பட்டவர்கள் உடனடியாக சபையில் இருந்து அனனியா, சப்பிராள் போல் நீக்கப்பட்டார்கள். சபை இப்படியாக தெளிவானதும், முறையானதுமான அங்கத்துவத்தைக் கொண்டிருந்ததால்தான் அது கட்டுப்பாட்டுடனும், பரிசுத்தமாகவும் இருக்க முடிந்தது.

இப்படியாக அங்கத்தவர்களைக் கொண்டு கட்டுப்பாட்டுடன் சபை இயங்கி வந்தபடியால்தான் அப்போஸ்தலர்கள் அவர்கள் மத்தியில் இருந்து பேரைத் தெரிவுசெய்யும்படி ஆலோசனை சொன்னார்கள். இந்த ஏழு பேரையும் சபையே அப்போஸ்தலர்கள் வழிப்படி சபை அங்கத்தவர்கள் மட்டுமே ஆராய்ந்து தெரிவு செய்ய முடியும். அதுவும் ஏற்கனவே அங்கத்தவர்களாக இருந்தவர்கள் மத்தியில் இருந்து மட்டுமே அவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். சபை அன்று தெளிவான அங்கத்துவ அமைப்பைக் கொண்டிராமல் இருந்திருந்தால் யாரை யார் தெரிவு செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டிருக்கும். சபை அங்கத்துவ அமைப்பைக் கொண்டு முறையாக இயங்கி வந்திருந்தபடியால் ஏழு பேர் உதவிக்காரர்களாகத் தெரிவுசெய்யப்பட்டு அதன் காரணமாக பிரச்சனை தீர்ந்தது. வேத வசனம் விருத்தியடைந்தது. சீஷருடைய (சபையினுடைய) தொகை எருசலேமில் பெருகியது (6:7).

(உ) அப்போஸ்தலர் நடபடிகள் 9:26.

இந்தப் பகுதி முக்கியமானது. பவுல் இயேசு கிறிஸ்துவை தமஸ்கு வீதியில் சந்தித்து பாவநிவாரணத்தையும், விசுவாசத்தையும் அடைந்தபின் அப்பகுதியிலேயே உடனடியாக ஊழியம் செய்ய ஆரம்பித்தான். எருசேலமில் இருந்த சபை பற்றி பவுலுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. பின்பு அவன் எருசலேமுக்கு வந்து அங்கிருந்த திருச்சபை பற்றி அறிந்துகொண்ட பின் அதோடு தன்னை இணைத்துக்கொள்ள முயன்றான் (9:26). ஆங்கில மொழி பெயர்ப்பில் he tried to join the disciples என்றிருக்கிறது. இங்கே சபை பற்றியே இவ்வாறு விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால், திருச்சபைக்கு பவுலுக்கு நடந்தது எதுவும் பற்றித் தெரியாததால் அவர்கள் அவனை சேர்த்துக்கொள்ளப் பயந்தார்கள். பவுலை சபை ஏற்றுக்கொள்ளத் தயங்கியதால் சபை அங்கத்தவராக இருந்த பர்னபா அவனை அப்போஸ்தலர்களிடம் அழைத்துப் போய் நடந்த விபரங்களை விளக்க வைத்தார். அதற்குப் பிறகு தான் சபை பவுலை நம்பி அவனை இணைத்துக்கொண்டது (27-28). கர்த்தரை நேரடியாக சந்தித்து அழைப்பைப் பெற்றுக்கொண்டிருந்தபோதும் பவுல் எருசலேம் சபை நடவடிக்கைகளுக்கு மறுப்புத் தெரிவிக்காமல் இணங்கி நடந்துகொண்டதைக் கவனிக்க வேண்டும். இதிலிருந்து எவரும் தாங்களாகவே தங்களை ஒரு சபையில் இணைத்துக்கொள்ள முடியாதென்பதை உணர வேண்டும். சபை ஆராதனைக்கு ஓய்வு நாளில் கூடிவருகிறபோது எவரும் அதில் கலந்து கொள்ளலாம். சபை நடத்தும் சுவிசேஷ கூட்டங்களில் எவரும் கலந்து கொள்ளலாம். ஆனால், அங்கத்துவக் கூட்டத்திலோ, திருவிருந்திலோ, அங்கத்தவர்களுக்காக நடத்தப்படும் கூட்டங்களிலோ அங்கத்தவர்கள் அல்லாதோர் கலந்துகொள்ள முடியாது. அங்கத்தவர்களுக்கிருக்கும் சிறப்புரிமைகளை சபைக்கு ஆராதனைக்கு வருகின்ற எல்லோரும் பெற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் முறையாக சபையில் அங்கத்தவரான பின்பே அவற்றை அனுபவிக்கலாம்.

(2) புதிய ஏற்பாடு போதிக்கும் சபை ஒழுங்கு நடவடிக்கை திருச்சபை அங்கத்துவத்தை நியாயப்படுத்துவதோடு அதை அவசியமாக்குகிறது.

(அ) மத்தேயு 18:15-20

இப்பகுதியில் இயேசு சபை ஒழுங்கு நடவடிக்கை பற்றி விளக்கப்போகிறேன் என்ற எந்தவித முன்னறிவிப்பையும் கொடுக்காமல் அதைப் பற்றி விளக்குகிறார். திருச்சபையைப் பற்றித்தான் பேசுகிறார் என்பதற்கு ஆதாரமாக 17ம் வசனத்தில் ‘சபை’ என்ற பதம் பயன்படுத்தப்பட் டிருப்பதைக் காண்கிறோம். இந்தப் பகுதியில் பிரச்சனைப்பட்டுக் கொண்டிருந்த இருவரும் ஏற்கனவே சபை அங்கத்தவர்கள். அந்த அனுமானத்தோடுதான் இயேசு விளக்கங் கொடுக்கிறார். அவர்களால் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாமல் போகும்போது வேறு இரண்டு மூன்று சாட்சிகளை உடனழைத்து அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இங்கே இந்த ‘இரண்டு மூன்று சாட்சிகள்’ என்ற பதங்கள் முக்கியமாக சபை மூப்பர்களைக் குறிப்பதாகும். அப்படி சபை மூப்பர்களுக்கும் தவறு செய்தவன் பணிய மறுக்கும் போது அந்த விஷயம் முழு அங்கத்தவர்கள் முன்னாலும் கொண்டு வரப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்கிறார் இயேசு. அதுமட்டுமல்லாமல் திருந்தாதவன் சபை நீக்கம் செய்யப்பட்டு அந்நியனாகக் கணிக்கப்பட வேண்டும் என்றும் இயேசு விளக்குகிறார். சபையில் அங்கத்தவராக இல்லாத ஒருவரை இந்த விதத்தில் ஒழுங்கு நடவடிக்கைக்குள் கொண்டு வர முடியாது. இங்கே சபை என்ற வார்த்தை சபை அங்கத்தவர்களைக் குறிக்கிறது. சபை ஆராதனைக்கு வருகின்ற அனைவரையும் அல்ல.

இப்படியாக தவறு செய்கிறவர்கள் மீது வேதபூர்வமான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதானால் முறையான அங்கத்துவத்தைக் கொண்டமைந் திருக்கின்ற ஒரு சபையால்தான் அதைச் செய்ய முடியும். சபை அங்கத்துவமும் சபைத் தலைமையும் (மூப்பர்களும், உதவிக்காரர்களும்) நடை நடைமுறையில் சபை சபையாக ஆத்மீக ரீதியில் இயங்க அவசியமானவை.

கர்த்தருக்கும் சக சகோதரர்களுக்கும் தங்களை ஒப்புக்கொடுத்து அங்கத்தவர்களாக முறையாக சபையில் தங்களை இணைத்துக் கொள்ளாத வர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கொண்டுவருவது முடியாது. அங்கத்துவ அமைப்பில்லாத எந்த சபையும் ஒழுங்கு நடவடிக்கையை நடைமுறையில் செயல்படுத்துவது முடியாத காரியம். சபை அமைப்பையும், அங்கத் துவத்தையும் சபையில் எதிர்பார்த்துத்தான் இயேசு இங்கே ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது எப்படி என்று விளக்கமளிக்கிறார்.

(ஆ) கொரிந்தியர் 5:1-5

கொரிந்து சபையில் ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக் கொண்டிருக்கிறான். பவுல் அவனை உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மூலம் சபையில் இருந்து நீக்கும்படிச் சொல்லுகிறார். அங்கத்துவ அமைப்பில்லாத சபையால் அதை ஒருபோதும் செய்ய முடியாது. கொரிந்து சபையில் முறையான அத்தகைய அமைப்பிருந்தபடியால்தான் மூப்பர்கள் அவனை சபை நீக்கம் செய்தார்கள். அத்தோடு அவன் மனந்திரும்பியபோது (2 கொரி) அவனை மறுபடியும் சபைக்குள் ஏற்றுக்கொண்டார்கள்.

(3) சபையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள உருவகங்களும், பெயர்களும் சபை அங்கத்துவ அமைப்பின் அவசியத்தை விளக்குகின்றன.

1 கொரிந்தியர் 12

சபையைப் பற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரேயொரு பெயரை இங்கே எடுத்துக் கொள்ளுவோம். 1 கொரிந்தியர் 12ல் திருச்சபை கிறிஸ்துவின் சரீரமாக வர்ணிக்கப்படுகிறது. பவுல் சயையை மனித சரீரத்துடன் ஒப்பிட்டு விளக்குகிறார். மனித சரீரத்தில் ஓர் அமைப்பு இருக்கிறது. இதுதான் சரீரம் என்று சொல்லக்கூடியவிதத்தில் அதில் வெவ்வேறு அங்கங்களும் முறையான அமைப்பும் காணப்படுகின்றன. இவையில்லாத ஒன்றை சரீரமாக நாம் கருதமாட்டோம். குறைபாடுடையதாகக் கருதுவோம். முறையான அமைப்பும் அங்கங்களும் இல்லாதது சரீரமாக இருக்க முடியாது. அதேபோல, முறையான அங்கத்துவ அமைப்பில்லாத எந்த ஆத்மீக கூட்டத்தையும் சபையாகக் கருதமுடியாது.

(4) ஆதி சபையில் அங்கத்துவப் பட்டியலொன்றை சபை வைத்திருந்தது.

1 தீமோத்தேயு 5:3-16

இந்தப் பகுதியில் வயது போய் பார்த்துக்கொள்ளுவதற்கு எவரும் இல்லாத சபையைச் சார்ந்த விதவைகளுக்கு சபை எப்படி உதவி செய்ய வேண்டும் என்று பவுல் ஆலோசனை சொல்லுகிறார். இதில் 10ம் வசனத்தில் ‘அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என்கிறார் பவுல். அடுத்த வசனத்தில் ‘இளவயதுள்ள விதவை களை அதில் சேர்த்துக்கொள்ளாதே’ என்கிறார். ஆங்கில மொழி பெயர்ப் பில் ‘taken into the number’ என்றிருக்கிறது. இங்கே பவுல் சொல்லுவது என்ன என்ற கேள்வி எழும். இப்பகுதியிலிருந்து ஆதி சபை தான் உதவ வேண்டிய விதவைகள் யார் என்று ஒரு லிஸ்டை வைத்திருந்ததை இதன் மூலம் அறிந்துகொள்ளுகிறோம். இந்த லிஸ்டில் இல்லாதவர்கள் சபையி னுடைய உதவியைப் பெற முடியாது. லிஸ்டில் இருந்தவர்கள் நிச்சயம் சபை அறிந்திருந்த சபை அங்கத்தவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். உதவ வேண்டிய விதவைகள் பற்றிய லிஸ்ட்டை வைத்திருந்த சபைக்கு தன்னுடைய அங்கத்தவர்கள் யார், அங்கத்தவர்கள் அல்லாதவர்கள் யார் என்று தெரியாமல் இருந்திருக்க முடியுமா? நிச்சயம் இந்த சபை ஒரு நல்ல அங்கத்துவ அமைப்பைக் கொண்டிருந்ததால்தான் பவுலால் இவ்விதமாக ஆலோசனையைக் கொடுக்க முடிந்தது.

இதுவரை நாம் பார்த்த பகுதிகளில் இருந்து திருச்சபையைப் பற்றியும் அதன் அங்கத்துவத்தைப் பற்றியும் என்ன தெரிந்துகொள்ளுகிறோம்? உள்ளூர் சபை எப்பொழுதுமே முறையான அங்கத்துவ அமைப்பைக் கொண்டு அடையாளம் காணக்கூடிய, கண்களால் காணக்கூடிய ஒரு அமைப்பாகவும் (Identifiable), யார் அதைச் சேர்ந்தவர்கள், யார் அதைச் சேராதவர்கள் என்று வரையறுத்து விளக்கக்கூடிய அமைப்பாகவும் (De- 132016) இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுகிறோம். இந்தவகை யிலேயே கர்த்தர் தன்னுடைய சபைகளை இந்த உலகத்தில் ஏற்படுத்தி வந்திருக்கிறார். அந்த முறையைப் பின்பற்றியே நிகழ்கால சபைகள் அமைவது அவசியம்.

திருச்சபையை அமைப்பதற்கு முன்பாக விசுவாசிகள் கூடிவரலாம். ஜெபிக்கலாம். சுவிசேஷத்தை அறிவிக்கலாம். வேதப் படிப்பிலும், ஆராதனையிலும் ஈடுபடலாம். காலப்போக்கில் அவர்கள் வேதம் போதிக்கும் சபை அமைப்பை விளங்கிக்கொண்டு அதன்படி முறையான அங்கத்துவ அமைப்பை உருவாக்கி திருச்சபையாக இயங்குவது அவசியம். அங்கத்துவ அமைப்பிருந்தால்தான் அவர்களால் சரியானதொரு தலைமையையும் தங்கள் மத்தியில் அடையாளம் கண்டு வேதபூர்வமாக அங்கீகரிக்க முடியும். அத்தோடு நியாயமான ஒரு சபையாக பரிசுத்தத்துடன் சமுதாயத்தில் கர்த்தரை ஆராதித்து அவருக்குப் பணிபுரிய முடியும். இதெல்லாம் இல்லாமல் தொடர்ந்து கூடிவருகிறவர்கள் தங்களுக்கும் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் ஆத்மீக விருத்தியளிக்க முடியாது.

இதுவரை நாம் வேதத்தில் பார்த்து வந்திருக்கின்ற சபை அங்கத்துவ அமைப்பு பற்றிய போதனைகள் கர்த்தரே தன்னுடைய வேதத்தில் தந்திருக்கும் போதனைகள். சீர்திருத்தப் போதனைகளை அறிந்துகொண்டு தங்களுடைய அமைப்புகளைத் திருத்தியமைத்துக் கொண்டு வருகிறவர் களுக்கும், புதிதாக அத்தகைய சபை அமைப்புப் பணியில் ஈடுபட்டிருப்ப வர்களும் ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். இந்தப் போதனைகளை மனதளவில் தெரிந்துகொண்டிருப்பதனால் ஓரு பயனுமில்லை. அவற்றைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதாலும், பிரசங்கம் செய்வதாலும் எந்தப் பயனுமில்லை. அவற்றை தேவ பயத்தோடு நடைமுறையில் சபையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முறையான அங்கத்துவ அமைப்பை ஏற்படுத்தி சயையை அமைத்து விட்டால் மட்டும் போதாது. ஏற்படுத்தியிருக்கும் அங்கத்துவ அமைப்பிற்கு சயையை நடத்தும் பொறுப்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறவர்கள் மதிப்பளித்து அங்கத்தவர் களை அங்கத்தவர்களாக மதித்து நடத்த வேண்டும். சபை சட்ட விதிகளுக்கு மதிப்பளித்து சபைக்கூட்டங்களை முறையாகக் காலா காலத் துக்கு நடத்த வேண்டும். அங்கத்தவர்களோடு வேதப் பணிகளைக் கலந்துகொள்ள வேண்டும். அங்கத்தவர்களைப் பயன்படுத்தியே சபைத் தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். அங்கத்தவர்களை அசட்டை செய்தோ அலட்சியம் செய்தோ சபைக்காரியங்களை நடத்தப் பார்க்கக் கூடாது. பொறுப்புள்ள அங்கத்தவர்களாக அவர்கள் இருக்கும்படி எதிர் பார்த்து போதிக்கின்ற மூப்பர்கள் தாங்களும் முதலில் பொறுப்புள்ளவர் களாக நடந்து காட்ட வேண்டும். சபை சட்டவிதிகளுக்கு அங்கத்தவர்கள் உடன்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிற நாமும் அந்தவிதமாக அதே சட்டவிதிகளுக்கு கட்டுப்பட்டு நடந்து அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். சபை சட்ட விதிகள் அங்கத்தவர்களுக்கு மட்டும் ஏற்படுத்தப்பட்டதல்ல. சகல சபை அதிகாரிகளும் அதற்குக் கட்டுப்பட்டு நடப்பது அவசியம். நாம் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டு அங்கத்தவர் களிடம் மட்டும் பொறுப்புள்ள நடத்தையை எதிர்பார்ப்பது சரியல்ல. சத்தியத்தைத் தெரிந்து வைத்திருப்பதனால் மட்டும் பயனில்லை. அந்தச் சத்தியங்களை கர்த்தருக்குரிய பயத்தோடு பரிசுத்தத்துடன் வாழ்க்கையிலும், சபையிலும் பின்பற்றும்போதுதான் ஆவியானவரின் கிரியை சபையில் நிகழ வாய்ப்பிருக்கிறது.

இன்னுமொன்றையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இதுவரை நாம் பார்த்த சத்தியங்களை வேதபூர்வமாக ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் அவற்றை அறியாமல் செயல்பட்டு வருகிறவர்களை குஷ்டரோகிகளைப் போல நடத்த முயலாதீர்கள். எத்தனை சத்தியங்களை அறிந்து வைத்திருந்தபோதும் கிருபையும் அன்பும் இல்லாததொரு இருதயம் கர்த்தருக்கொத்த இருதயம் அல்ல. இவற்றை அறிந்துகொள்ளுவதற்கு முன் நீங்கள் எந்த நிலைமையில் அறியாமையில் இருந்தீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கத் தவறாதீர்கள். இவற்றை அறிந்திராதவர்கள் இந்தச் சத்தியங்களை அறிந்து அவற்றிற்கு தங்களை ஒப்புக்கொடுத்து வாழ நாம் அவர்களுக்கு துணைபோக வேண்டும். அவர்களை நாம் சகோதரர்களாகப் பாவித்து அன்போடு நடத்த வேண்டும். சத்திய வழியை அவர்கள் அறிந்துகொள்ளுமாறு பண்போடு நடந்துகொள்ள வேண்டும்.

 

 

தாம்பத்திய உறவில் நெருக்கம்

[திருமண உறவில் கணவன் மனைவியரிடம் இருக்க வேண்டிய ஆழமான தாம்பத்திய உறவை வேத அடிப்படையில் விபரித்து எழுதியிருக்கிறார் அலன் டன். இதன் முதல் பாகத்தை இவ்விதழில் தந்திருக்கிறோம். ஆங்கில மூலத்தை தமிழாக்கம் செய்தவர் வினோதா சுரேந்தர்.]

மண வாழ்க்கையில் தம்பதிகள் ஆழ்ந்த நெருக்கத்தை அடைய முயற்சிப்பதில் அநேக புதிரான காரியங்களும் அடங்கியிருக்கிறன.

நாம் தாம்பத்திய உறவில் இணைந்து தம்பதிகளாக ஆனதும், ஒருவருக்கொருவர் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முயலுகிறோம். ஆனால் எதிர் பார்க்கின்ற அளவுக்கு நெருக்கத்தை நாம் இன்னமும் அடையவில்லை என்பதை உணருகிறோம். ஆம், நாளுக்குநாள் நாம் ஒருவரையொருவர் அதிகமதிகமாக புரிந்து கொண்டு வந்தாலுங்கூட இன்னும் பல விஷயங்களில் ஒருவருக்கொருவர் அந்நியர்களாகவே இருக்கிறோம் என்பதும் நமக்கு விளங்குகிறது. நாம் ஓரளவிற்கே ஒருவரையொருவர் அறிந்து கொண்டிருக்கிறோம். இன்னும் அறிய வேண்டியது ஏராளமாக இருப்பது விளங்குகிறது. மண வாழ்வில் இணைந்தவர்கள் ஒருவரையொருவர் ஆத்மீகமாகப் புரிந்துகொள்ளுவ தென்பது வாழ்நாள் முழுவதுமாக நடக்கின்ற ஒரு பயணம். சொல்லப் போனால், வாழ்வின் இறுதியில் கூட ஒருவரைப் பற்றி மற்றொருவர் முழுவதுமாக விளங்கிக் கொண்டிருக்கிறோம் என்று கூறமுடியாது. இருந்தாலும், உண்மையான தோழமையை நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறவர்கள் ஆரம்பிக்கின்ற தொடர் பயணம் என அதைக் குறிப்பிடலாம். விவாகத்தில் நெருக்கத்தை அடைய வேண்டுமானால் நீ உண்மையான தோழமை உணர்வைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் நீ எவ்வளவுதான் நெருங்கிப் பழகினாலும், நீ இருக்க வேண்டிய அளவுக்கு தோழமையாக இல்லை என்பதே உண்மை. இதுதான் நாம் விவாக உறவில் காணும் புதிரான காரியம்.

நட்சத்திரங்களை வழிகாட்டியாகக் கொண்டு பழங்காலத்து மாலுமிகள் கடற்பிரயாணத்தை மேற்கொள்ளுவார்கள். அந்தப் பயணத்தை, திருமண உறவின் நெருக்கமான நிலையை அடையும் பயணத்துக்கு ஒப்பிடலாம். திருமண உறவின் நெருக்கத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு வழிகாட்டியாக நான்கு நட்சத்திரக் குறிப்புகளைக் காணலாம். மாலுமிகள் தங்கள் பயணத்தில் எப்படி நட்சத்திரங்களை கவனமாகப் பார்த்துக் கொண்டே தங்கள் கப்பலை செலுத்துகிறார்களோ, அதேவிதமாக நாமும் இந்த நான்கு நட்சத்திர வழிகாட்டிகளைக் கருத்தோடு கவனிப்போம்.

பயணத்தில் எதிர்பாராதவிதமான கடும் புயலும் காற்றும், அகோரமான அலைகளும் நமது பயணத்தை பாதியிலேயே முடித்துவிடும்படியாக அச்சுறுத்தலாம்; சில சமயங்களில், நிலைபெயர்ந்து போகின்ற கருமையான மேகங்கள் நமது பார்வையை மறைக்கலாம்; அல்லது, காற்று சிறிதும் வீசாமல், மேகங்களற்ற சூழ்நிலையில், சூரியனின் கடுமையான வெப்பக்கதிர்கள் நமது கண்களைக் கூசச் செய்து, அவ்விடத்தைவிட்டு நகரமுடியாத நிலைமைக்கு நம்மை ஆளாக்கி, எதுவும் செய்ய முடியாத பிணங்களைப் போன்ற சூழ்நிலைக்கு நம்மைத் தள்ளலாம். நமது கப்பலையே கவிழ்த்துப் போடக்கூடிய பயங்கரமான சுழல்களைக் குறித்தும் நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். கப்பலுக்குள்ளேயே சந்திக்கக்கூடிய எதிர்பாராத பிரச்சனைகளைக் குறித்தும் நாம் விழிப்பாயிருக்க வேண்டும். கப்பலின் வேலையாட்கள் தங்கள் பணிகளை சரிவர செய்யாமல் இருக்கலாம்; மாலுமிகள் மேற்கொள்ள வேண்டிய கடுமையான வாழ்க்கைமுறை மனசோர்வை ஏற்படுத்தி, கப்பலைவிட்டு குதித்து ஓடிவிடலாமா என்கிற மனநிலையைக்கூட தோற்றுவிக்கலாம். சமாதானமோ அல்லது வேதனையோ, எப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கு நேரிட்டாலும் இந்த நான்கு நட்சத்திரக் வழிகாட்டிகளும் நமது எண்ணத்திலிருந்து அகன்றுவிடாதபடிக்கு கவனமாக இருக்க வேண்டும்.

விவாகத்தில் நெருக்கமான நட்பைப் பெற வழிகாட்டுகின்ற அந்த நான்கு நட்சத்திர வழிகாட்டிகளாவன:

  1. கடவுளைப் பற்றிய சத்தியம்
  2. சிருஷ்டிப்பின் தத்துவம்
  3. வீழ்ச்சியின் சரித்திரம்
  4. மீட்பின் கோட்பாடு

திருமணமாகிய கப்பலை வெற்றிகரமாக ஓட்டிச் செல்வதற்கு இந்த நான்கு வழிகாட்டிகளும் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். நமது பயணத்தில் சரியான திசையைக் கண்டறியும் கருவியாக அவை நமக்கு உதவும்; வழிவிலகவிடாமல் பாதுகாக்கும். கடவுளின் மகிமையான துறைமுகத்தை நோக்கி நமது கப்பலை செலுத்த வழிகாட்டும்.

  1. கடவுளைப் பற்றிய சத்தியம், விவாகத்தில் நெருக்கமான நட்பைப் பெற வழிகாட்டுகின்றது

நெருக்கமான உறவும் (being of God) கடவுளின் தன்மையும்

மண வாழ்க்கையில் நெருக்கமான நிலையை அடையும் பயணத்தில் நமக்கு முதலாவது வழிகாட்டியாக இருப்பது கடவுளைக் குறித்து அறிந்துகொள்ளுகின்ற சத்தியமே. சர்வ வல்லவராகிய அவர் ஒருவரே மெய்யானவர். சகலமும் அவராலும், அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது. அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென் (ரோமர் 11:36). திருமணத்தில் ஏற்படும் நெருக்கமான நட்பானது, பிரத்தியேகமானதும், அந்தரங்கமானதும், உள்ளுணர்வில் ஏற்படுகிறதுமான காரியமாகும். இந்த திருமண நெருக்கத்தைக் குறித்து நாம் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டுமானால், பகுத்தறிவுக்கு எட்டாத சத்தியமாக, ஆதியிலே (ஆதி. 1:1) இருந்த தேவனைக் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. நமது திருமண உறவின் நெருக்கத்தை நோக்கிய பயணத்தில், கடவுளை நோக்கி நமது கவனத்தை திசை திருப்பியவர்களாக அதை ஆரம்பிக்க வேண்டும்.

நாம் இயல்பாகவே திருமணத்தில் நெருக்கத்தை நாடுகிறவர்களாக இருக்கிறோம். ஏனென்றால் அதுவே கடவுளின் தன்மையாகவும் இருப்பதால் அத்தகைய எண்ணம் நமக்குள்ளும் இருக்கிறது. திருமண உறவின் நெருக்கம் என்பது, வெறும் சரீரப்பிரகாரமான இச்சைகளையும் மிருக உணர்ச்சிகளையும் விட மேலானது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதாக கூறிக் கொண்டிருக்கும் இயக்கத்தை சேர்ந்தவர்கள், திருமணத்தில் நெருக்கத்தை அடைய மனிதனுக்கு இருக்கும் ஆவல், இனப்பெருக்கத்துக்கு வழிவகுக்கின்ற சாதாரண சரீர உணர்ச்சிதான் என்றும், ஆதிக்கம் செலுத்துவதற்கு ஆண் எடுக்கின்ற முயற்சியென்றும், சரீரப்பசியைத் தீர்த்துக்கொள்கின்ற உணர்வுதான் அது என்றும் கூறிவிடுகிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. நாம் மனிதராக இருப்பதற்கே இத்தகைய தோழமை உணர்வு அவசியமாயிருக்கிறது. ஏனென்றால் நாம் கடவுளின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டிப்புகள். சிருஷ்டிப்பாகிய நாம் சிருஷ்டிகரின் ஒப்பற்ற தன்மையை பிரதிபலிப்பவர்களாக இருக்க வேண்டுமல்லவா! !

நாம் “கடவுளின் சாயலை” உடையவர்கள்

ஆதி. 1:26 வசனத்தைக் கவனித்துப் பாருங்கள். அவர் தமது சாயலில் மனிதனை எவ்விதம் உருவாக்குகிறார் என்பதை கவனியுங்கள். “பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக . . . என்றார்.” ஒருவராகிய அந்த தேவன், வேண்டுமென்றே பன்மையில் பேசுகின்றார். “நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக.”

இதைக் குறித்து வேத பண்டிதர்கள் பல்வேறுவிதமாக கருத்து தெரிவிக்கிறார்கள். மரியாதை கலந்த தொனியில் அவர், “நாம்”, “நமது” என்று கூறுகிறார் என கருதுகிறார்கள். எபிரெய மொழியில் மரியாதையையும், மகத்துவத்தையும், ராஜகம்பீரத்தையும் அறிவிக்க அப்படி குறிப்பிடுவது வழக்கம் என்றும் வேறு சிலர், கடவுள் தமது வானசேனையினிடத்தில் அப்படி பேசுகிறார் என்றும் நினைக்கிறார்கள்.

“எலோUம்” என்பது கடவுளைக் குறிப்பிடும் ஒரு சொல்லாக பழங்காலத்தில் இருந்தது. அது தேவதூதர்களையும் குறிக்கும் ஒரு சொல்லாகவும் காணப்பட்டதால், தூதர்களையும் சேர்த்து, “நமது” சாயலாக மனிதனை உருவாக்குவோம் என்று கடவுள் சொல்வதாக அவர்கள் எண்ணுகிறார்கள். தேவன் மனிதனை எலோUமிலும் அதாவது தேவதூதரிலும்) சற்று சிறியவனாக உருவாக்கினார் என்று சங்கீதம் 8:5ல் நாம் பார்க்கிறோம். இந்த வசனத்தைக் கொண்டு அவர்கள், மேற்கூறியபடி நினைக்கிறார்கள். ஆனால் ஆதி. 1:26ல் நாம் காண்பது வெறுமனே ஓர் இலக்கிய சொற்றொடரா அல்லது தேவதூதர்களைக் குறிப்பிடுகிற ஒரு சொல்லா?

ஒரே கடவுளாகிய சர்வ வல்லவரின் திரித்துவ தத்துவமாகிய நபர்களின் இடையே நடைபெறும் சம்பாஷணையாக நான் அவ்வசனத்தை விளங்கிக்கொள்கிறேன். நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோம் என்பது கடவுளின் மாறாத தீர்மானம். சிருஷ்டிப்பின் நோக்கத்தையே அது வெளிப்படுத்துவதாயிருக்கிறது. திரியேக கடவுளின் செயல்பாடுகளை ஆராயத் துணிந்திருக்கிற நாம் அவருடைய பரிசுத்த எல்லைக்குள் பிரவேசிக்கிறவர்களாயிருக்கிறோம். பயபக்தியோடு இதைக் குறித்து சிந்திப்போம். ஆதி. 1:1ல் கடவுளை தனிநபராகக் காண்கிறோம். ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்று வாசிக்கையில் கடவுளை ஒரு தனி நபராகத்தான் காண்கிறோம் ஆனால் 2-ஆம் 3-ஆம் வசனங்களை கவனியுங்கள். “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.” இந்த முதல் மூன்று வசனங்களும் கடவுளின் திரித்துவ தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. கடவுளின் மூன்றுவித செயல்பாடுகளைக் காண்கிறோம். முதலாம் வசனத்தில் நாம் பிதாவாகிய தேவனைக் காண்கிறோம். இரண்டாவது வசனத்தில் ஆவியானவரைக் காண்கிறோம். மூன்றாவது வசனத்தில் தேவன் பேசுகின்ற வார்த்தையைக் கேட்கிறோம். தேவனுடைய வார்த்தையைக் குறித்து அப்போஸ்தலனாகிய யோவான் தனது சுவிசேஷத்திலே எழுதுவதைப் பாருங்கள். “ஆதியிலே வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது; அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை” யோவான் 1:1-3. ஆகவே ஆதியிலே தேவன் பேசின வார்த்தை, மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணின குமாரனேயாகும் என்பது தெளிவாகிறது. ஆதி. 1ல் தேவன் பேசியதே, யோவான் 1ல் கடவுளின் வார்த்தையாக மாறியது. இவ்வுலகில் தேவனுடைய குமாரனாக வந்து பிறக்கவிருந்த நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே தேவனுடைய வார்த்தையாக, திரித்துவத்தின் இரண்டாவது நபராக, ஆதியிலேயே காணப்படுகிறார். ஜலத்தின்மேல் மேல் அசைவாடிக் கொண்டிருந்த தேவஆவியானவரே திரித்துவத்தின் மூன்றாவது நபராகும். ஆதி. 1:1ல் காண்கிற தேவன், திரித்துவத்தின் முதலாம் நபராகும்.

பலராயிருந்தாலும் ஒன்றாயிருக்கிற தன்மை!

மூவராயிருந்தும் ஒன்றாயிருக்கிற கடவுளின் இந்த திரித்துவ தன்மையானது, நாம் யார், நாம் எப்படியிருக்க வேண்டுமென்பதை நமக்கு விபரிப்பதாக இருக்கிறது. ஏனென்றால் நாம் அவரைப் போல இருப்பதற்காக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். இந்த திரித்துவ கடவுளின் சாயலாகவே நாமும் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். கடவுள் அவரது தன்மையை உடையவராக விளங்குவதுபோல அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட நாமும் நமக்குரிய தன்மைகளை உடையவர்களாய் இருக்கிறோம். நாம் யாரென்பதையும் நமது தன்மை எப்படிப்பட்டது என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டுமானால், முதலாவதாக நாம் நம்மை உருவாக்கிய அந்த திரியேக கடவுளைக் குறித்து அறிந்துகொள்ள ஆரம்பிக்க வேண்டும். ஒரே தேவனாகிய அவர் தம்மை மூன்று நபர்களாக வெளிப்படுத்துகிறவராயிருக்கிறார். அந்த ஒரே தேவனாகிய கடவுளின் சாயலிலேதான் நாம் உருவாக்கப்பட்டிருக்கிறோம்.

ஆதி. 1:27ஐ பார்ப்போம். ஆண்களும் பெண்களும் கடவுளின் சாயலை வெளிப்படுத்துகிறவர்களாய் இருக்கிறார்கள். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார்; அவனை தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார். எபிரெய மொழியில் இப்பகுதி ஒரு கவிதை வடிவமாக எழுதப்பட்டிருக்கிறது. இது ஒரு முக்கியமான பகுதி என்பதை படிப்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டுமென்பதற்காக இந்த பகுதியை மோசே பிரத்தியேக விதமாக கவிதை வடிவில் எழுதியிருக்கிறார். நாம் இவ்வசனத்தை நன்றாக கவனிக்க வேண்டுமென்பதற்காக அதை திரும்பத்திரும்ப கூறி அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். மிகவும் ஆழ்ந்த கருத்து இதிலுள்ளதை நாம் கவனிக்க வேண்டுமென்பதற்காக இதை கவிதை வடிவில் எழுதி நமது கவனத்தை அதன் பக்கம் திசைதிருப்புகிறார். ஆணும் பெண்ணுமாகிய நாம் கடவுளின் சாயலாக இருக்கிறோம். ஆணும் பெண்ணுமாகிய நமது வித்தியாசமான தன்மைகளில் கடவுள் தமது சாயலை வெளிப்படுத்தியிருக்கிறார். மனிதகுலம் பாலின வேறுபாடுகளைக் கொண்டதாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மனிதகுலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாலினக் கூருகளைக் கொண்டவர்களாகவே நாம் கடவுளின் சாயலை வெளிப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். நமது பாலின வேறுபாடுகள், சரீரத்தையோ, மனதையோ, அல்லது சமூகநிலையையோ அடிப்படை யாகக் கொண்டதல்ல. ஆனால் ஆணும் பெண்ணுமான இந்த படைப்பு தெய்வீக நிலைமைக்கடுத்தது. கடவுளின் சாயலைத் தரித்துக் கொண்டிருக்கிற ஆணும் பெண்ணுமாகிய இருவர் திருமணத்தில் இணைவதை விளங்கிக்கொள்ள வேண்டுமானால் நாம் கடவுளைக் குறித்த சத்தியத்தை அறிந்துகொள்வதில் ஆரம்பிக்க வேண்டும். ஆணும் பெண்ணுமான மனிதனின் பாலின வேறுபாடு தெய்வீகத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? ஆணும் பெண்ணுமாக வித்தியாசமான தன்மைகளில் நாம் சிருஷ்டிக்கப்பட்டிருப்பதில் கடவுளுடைய முழுசாயலும் அற்புதமாக வெளிப்படுகிறது.

திருமணம், கடவுளைக் குறித்து நமக்கு என்ன கூறுகிறது? இதில் இருவர் ஒரே மாம்சமாகிறார்கள் (ஆதி. 2:24). திரித்துவராயிருந்தாலும் ஒன்றாக இருக்கிற கடவுளை பிரதிபலிப்பதாக திருமண உறவு இருக்கிறது. இரண்டாக (பன்மையில்) இருந்தவர்கள், திருமணத்தில் ஒன்றாக ஆகிறார்கள். நமது பாலின பன்மை (ஆணும் பெண்ணுமான நிலை), திருமணத்தில் ஒன்றாக்கப்பட்டு (ஒரே மாம்சமாகி), திரித்துவ கடவுளின் ஒன்றான சாயலை வெளிப்படுத்துவதாயிருக்கிறது. பலராயிருந்தும் ஒன்றாயிருப்பதில் தெய்வீகத்தன்மையை திரித்துவ கடவுள் வெளிப்படுத்துகிறவராயிருக்கிறார்; திருமணத்தின் மூலமாக இணைக்கப்படும் ஆணும் பெண்ணும் ஒரே மாம்சமாகி, பலராயிருந்தும் ஒன்றாயிருப்பதில் சிருஷ்டிப்பின் தன்மையை வெளிப்படுத்துகிறவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் திருமணத்தின் மூலமாக ஒரே மாம்சமாவதால் கடவுளின் தனித்தன்மை வெளிப்படுகிறது.

பரிபூரணமான நிலை

திரித்துவ கடவுளிடையே நிலவுகின்ற நெருக்கமான உறவை வெளிப்படுத்துவதறக்கு ஓர் அடையாளமாக சரீரப்பிரகாரமான நெருக்கம் மனிதனிடம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. திருமணத்தில் ஏற்படுகின்ற நெருக்கமான ஐக்கியம் என்பது வெறும் சரீரஉறவைக் குறிப்பது மாத்திரமல்ல. அதில் இன்னும் பல காரியங்கள் அடங்கியுள்ளன. இருந்தாலும் தம்பதியரிடையே ஏற்படுகின்ற அத்தகைய நெருக்கமானது, திரியேக கடவுளிடம் காணப்படுகின்ற ஐக்கியத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு சிறு அடையாளமாக இருக்கின்றது. இது, பலராயிருந்தும் ஒன்றாயிருக்கின்ற நிலை. இருவர் ஒரே மாம்சமாகிற நிலை. மனிதனின் நெருக்கமான சரீர உறவை, ஆதி. 2:23,24ல் மோசே அழகாக படம்பிடித்தாற்போல எடுத்துரைக்கிறார். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும் வெட்கப்படாதிருந்தார்கள். அவர்கள் நிர்வாணிகளாக இருந்தார்கள் என்பதை மோசே குறிப்பிடுகிறார். சரீர உறவை மோசே விவேகமாக தெரியப்படுத்துகிறார். உலகத்தின் முதலாவது தம்பதியரிடம் காணப்பட்ட சரீர உறவை கொச்சைப்படுத்தாமல், கண்ணியமாக அவர் எழுதுகிறார். யாரையாவது நிர்வாணமாக பார்ப்பதை சரீர உறவோடு சம்பந்தப்படுத்தி பழைய ஏற்பாட்டு புத்தகத்திலே (லேவி 18:6) எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். அவர்கள் இருவரும் நிர்வாணமாக இருந்தார்கள் என்று மோசே சொல்வதன் மூலமாக, அவர்களிடையே இருந்த சரீர உறவை மரியாதையோடு எடுத்துரைக்கிறார். அவர்களைப் பிரிக்கத்தக்க வகையில் எந்த பாவமும் அங்கு காணப்படவில்லை. ஒளிவுமறைவற்ற தன்மை அவர்களிடையே நிலவியது. தேவன், மிகவும் நல்லதென்று கண்ட, முடிவடைந்த நிலையிலுள்ள பரிபூரணமான அந்த சிருஷ்டிப்புகள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறவர்களாக ஏதேன் தோட்டத்திலே காணப்பட்டதை ஆதி. 2:23,24 வசனங்களில் காண்கிறோம். மோசே அந்த அழகிய காட்சியை தன் கற்பனையில் கண்டு அதை ஓர் அழகிய படமாக நம் கண்முன் கொண்டுவர முயற்சிக்கிறார். கடவுள் படைத்த புராதனமான சிருஷ்டிப்புகள் பின்னணியில் இருக்க, கடவுளின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட ஆணும் பெண்ணும் தோட்டத்தில் உலாவி வருவதை மோசே நம் கண்முன் அழகான படமாக விபரித்துக் காண்பிக்கிறார். அந்த காட்சியை நாம் உற்று நோக்குகையில், ஆணும் பெண்ணுமாக அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமான ஐக்கியத்திலே இணைந்து காணப்படுவதில் கடவுளின் தன்மை பிரதிபலிப்பதை நாம் காண்கிறோம். ஒரே மாம்சமாக அவர்கள் செயல்படுவது, மூவராயிருந்தும் ஒன்றாயிருக்கிற கடவுளின் தன்மையை மனுஷவிதத்தில் வெளிப்படுத்துவதாயிருக்கிறது. திரியேக கடவுளின் சாயலில் உருவாக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஒரே மாம்சமான நிலைமைக் குட்படுத்தப்பட்டு, சிருஷ்டிக்கப்பட்ட சகலத்தையும் ஆண்டுகொள்ளும்படி ஆசீர்வதிக்கப்பட்டார்கள். தனிமையான வாழ்க்கையைத் தெரிந்து கொண்டிருக்கிற ஆணோ அல்லது பெண்ணோ கடவுளின் சாயலில் இல்லை என்று நான் கூறவில்லை. தனித்தனியாகவும் நாம் கடவுளின் சாயலில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறோம். திருமணமே செய்துகொள்ளாத இயேசு கிறிஸ்துவும் கடவுளின் சாயலில்தான் உருவாக்கப்பட்டிருந்தார்- (கொலோ 1:15). மத் 19:12ல் அவர் தனிமையாயிருப்பவர்களை அங்கீகரிப்பதையும் காண்கிறோம். “தேவசாயல்” என்பது சந்ததியரை/ புத்திரரைக் குறிக்கும் சொல்லாகவும் வேதாகமத்தில் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆகவே தனிமையாக இருக்கும் விசுவாசிகள், திருமணத்தில் இணைந்திருக்கும் விசுவாசிகள் ஆகிய அனைவருமே “கடவுளின் புத்திரர்” என்பதில் சந்தேகமில்லை).

தேவனுடைய மகிமையான ஐக்கியநிலையை வெளிப்படுத்துவதற் காகத்தான் மனிதன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுப்பிரிந்து தன் மனைவியோடு இசைந்து இருக்க வேண்டும் என்கிற கட்டளையைப் பெற்றிருக்கிறான். தங்களிடையே இருக்கும் கண்ணியமான நெருக்கத்தின் மூலமாக கடவுளின் தன்மையை அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். என்ன ஓர் அழகான காட்சி! மிகவும் நல்லதென்று காணப்பட்ட அந்த சிருஷ்டிப்புகள் தங்களுடைய ஐக்கியத்தின் மூலமாக சகலத்தையும் ஆளுகிறவர்களாக கடவுளுடைய சாயலையும் மகிமையையும் பிரதிபலிப்பதைக் காண்கிறோம். எல்லாம் ஒழுங்காயிருந்தது; சகலமும் கடவுளின் மகிமையை வெளிப்படுத்தியது.

திருமணத்தில் நெருக்கமான உறவு என்பதில் சரீர நெருக்கத்தையும் தவிர்த்து இன்னும் அநேகவிதங்களில் தம்பதிகள் நெருக்கமாக இருக்க வேண்டியதாயிருக்கிறது. ஒரே மாம்சம் என்பதில் ஆணும் பெண்ணுமாக பல காரியங்களில் நாம் ஒன்றாயிருக்க வேண்டியதின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. நான் ஓர் ஆண் என்னும்போது சரீரப்பிரகாரமாக மாத்திரம் நான் ஆணாக இருக்கிறேன் என்பதல்ல. நான் ஆண்மைக்குரிய மனநிலையையும், ஆண்மைக்குரிய உணர்ச்சிகளையும் கொண்டவனா யிருக்கிறேன். ஒரு பெண்ணும் அதே மாதிரிதான், பெண்மைக்குரிய மனநிலையையும், பெண்மைக்குரிய உணர்ச்சிகளையும் கொண்டிருக் கிறாள். சரீரத்திலும் மனதிலும் நாம் இவ்விதமான வேறுபாடுகளைக் கொண்டவர்களாக இருக்கிறோம். இவ்விரு வகையான மனோநிலையும், உணர்ச்சிகளும் ஒன்றாக சேர்ந்து கூடிவருகையில்தான் நாம் சரீரப்பிரகாரமாகவும் ஆவியின்பிரகாரமாகவும் ஐக்கியநிலையை அடைகிறவர்களாக இருக்கிறோம்.

கேள்விப்படாத வகைகளில் இன்றைய திருமண வாழ்க்கை பாதிப்புகளுக்கு ஆளாகிறதை நாம் பார்க்கிறோம். திருமணத்தின் உண்மையான நோக்கத்தையே சிதைக்கும் வகையில் இன்று பல்வேறு காரணங்களுக்காக திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமணத்தின் மூலமாக அடையப் போகும் உலகநன்மைகளைக் குறிவைத்தே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. மனதுக்கு இதமளிப்பதற்காகவும், சரீரத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், பிள்ளைகளின் நன்மைக்காகவும், பொருளாதார மேன்மை அடையவும், சமூகத்தில் அந்தஸ்த்து பெறவும் . . இப்படி பல காரணங்களை திருமணம் செய்துகொள்ளக் காண்பிக்கிறார்கள். அமெரிக்கர்கள் நடைமுறைவாதிகள். எது அவர்களுக்கு பலனை அளிக்குமோ அதை மாத்திரமே செய்வார்கள். திருமணத்தினால் அடையக்கூடிய நன்மைகளைக் குறித்து எத்தனையோ புள்ளிவிவரங்களை காண்பித்தாலும், நமது சொந்த நன்மையை பெரிதாகக் கருதி அதில் ஈடுபடுகிறவர்களாய் நாம் இருக்கக் கூடாது. நமது முக்கியமான குறிக்கோள், கடவுளை மகிமைப்படுத்துவதும், அவரில் களிகூருவதுமேயாகும். திருமணத்தில் அடையப்போகும் நன்மைகளை காண்பித்து, அதன்காரணமாக திருமணம் செய்வது மிகவும் நியாயமானது என்று நாம் கூறப்போவதில்லை. அப்படி சொல்வோமானால் அது சுயநலமானதும், கடவுளை மையமாகக் கொள்ளாமல் மனிதனுடைய நன்மைகளையே குறிவைத்து செய்வதாகும். கடவுளின் திட்டமே திருமணத்திற்கு ஆதாரமாக இருக்க வேண்டுமே யொழிய மனிதனின் திட்டமல்ல. திருமணத்தில் நாம் கடவுளை மகிமைப்படுத்த வேண்டும். அவரில் மகிழ்கிறவர்களாக இருக்க வேண்டும். நாம் திருமண வாழ்க்கையை மேற்கொள்வதற்குக் கடவுளே காரணம்; அதில் நாம் நிலைத்திருக்க வேண்டும்.

இயேசுவின் பாஷையில் “ஒன்றாயிருத்தல்”

தனக்கும் பிதாவுக்கும், தனக்கும் நமக்கும் இடையேயுள்ள நெருக்கத்தை சுட்டிக் காண்பிப்பதற்கு இயேசு கிறிஸ்து, “ஒன்றாயிருத்தல்” என்கிற வார்த்தையை உபயோகிக்கிறார். இப்படி கூறுவதின் மூலமாக நம்மிடையே இருக்க வேண்டிய நெருக்கமான உறவின் தன்மையையும் எடுத்துரைக்கிறார். யோவான் 10:30ல் நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்கிறார். “ஒன்றாயிருத்தல்” என்கிற இதே வார்த்தையை மோசேயும் ஆதிப் பெற்றோரிடையேயிருந்த நெருக்கத்தைக் குறிப்பதற்கு உபயோகித்திருக்கிறார். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். “ஒரே” என்கிற இந்த வார்த்தை ஒரு பொதுவான வார்த்தை; பிதாவுக்கும் குமாரனுக்கும் சரீரப்பிரகாரமான சொந்தம் இருப்பதாக நிரூபிக்கும்படிக்கு நான் இந்த வாதத்தை உங்கள் முன் கொண்டுவரவில்லை. பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையேயுள்ள உறவு தெய்வீகமானது. அவர்களுக் கிடையிலுள்ள ஐக்கியத்தின் ஆழத்தைக் குறித்து நாம் ஆராய்ச்சி செய்ய முயற்சிக்க வேண்டாம். இருந்தாலும், பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையே காணப்படுகின்ற அந்த தெய்வீக ஒற்றுமையைத்தான் நாம் நமது திருமணத்தில் பிரதிபலிக்கிறவர்களாக இருத்தல் வேண்டும். யோவான் 17ம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து செய்யும் “பிரதான ஆசாரிய” ஜெபத்தை கவனியுங்கள். 20-:23 வசனங்களை படியுங்கள்: நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர் களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

“ஒருமைப்பாடு” என்கிற வார்த்தையை இயேசு உபயோகிக்கிறார். பிதா குமாரனிலும், குமாரன் பிதாவிலும் இருப்பதால் ஏற்படுகின்ற ஆனந்தத்தை சுட்டிக் காண்பித்து, அவர்களிடையே நிலவுகின்ற பலமான உறவை நமக்கு விளக்குகின்றார். அவர்களுடைய ஒருமைப்பாடு, அவர்களிடையே நிலவுகின்ற அன்பின் மூலமாக நமக்கு விளங்குகின்றது. அதேவிதமான அன்பை, கிறிஸ்துவுக்குள் வந்துவிட்டவர்களாகிய நமக்கும் பிதா அருளிச் செய்கிறார். கிறிஸ்துவில் இருக்கிறவர்களாகிய நாமும் அதேவிதமான அன்பை நமது திருமணத்தில் பிரதிபலிக்கிறவர்களாக இருக்க வேண்டும். திரித்துவ கடவுளிடையே இருக்கின்ற அன்பின் ஒருமைப்பாட்டைத்தான் நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட முடியும். அதை கவனத்தில் கொண்டு இயேசுவானவரின் வார்த்தையையும் கவனியுங்கள்.

நமக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும், பிதாவுக்கும் உள்ள ஐக்கியத்தை, ஒருமைப்பாடு என்கிற இந்த வார்த்தையின் மூலமாக இயேசுவானவர் விவரிக்கிறார். நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். என் கற்பனைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான். என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான். நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தாரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். யோவான் 14:20-23. பிதாவோடு நாம் அடையக்கூடிய ஐக்கியத்தின் சந்தோஷத்தைக் குறித்து இயேசுவானவர் இங்கு குறிப்பிடுகிறார். அது, குமாரனாகிய இயேசு தன் பிதாவிடம் அனுபவிக்கின்ற சந்தோஷத்திற்கு ஒத்ததாய் இருக்கிறது.

பிதா, தம்மை நமக்கு வெளிப்படுத்தப் போகிறார் என்று இயேசுவானவர் நமக்கு அறிவிக்கிறார். அதுமாத்திரமல்ல, நாம் ஒருவரிலொருவர் வசிக்கக்கூடிய அனுபவத்தையும் பெறப்போகிறோம் என்று குறிப்பிடுகிறார். அது, அவர் நம்மிலும் நாம் அவரிலும் இருக்கக்கூடியதான அனுபவம். இயேசு மீண்டுமாக ஓர் ஒருமைப்பாட்டை விவரிக்கிறார்: அது அநேகமாயிருந்தும் ஒன்றாயிருக்கக்கூடிய ஒருமைப்பாடு. பிதாவும், குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால், நம்மோடு வந்து ஒன்றாக சேர்ந்து இருக்கப் போவதான ஒருமைப்பாடு. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் ஒன்றாயிருக்கிறார்கள். கர்த்தர், பரிசுத்தஆவியின் உதவியால் சீஷருடைய உள்ளத்திற்குள் ஊடுருவி, அவனது ஆத்துமாவைத் தொடக்கூடியவராக இருக்கிறார். அவருடைய சீஷனாகிய நான் அவரது அன்பை ஏற்றுக் கொண்டு, அதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் முன் ஒளிவுமறைவில்லாமலும், வெட்கப்படாமலும் இருக்கிறேன். அவர் முன்பாக நான் எதையும் ஒளிக்காமல், என் ஆத்துமாவை அவருக்குத் திறந்து காட்டுபவனாகவும், என் இருதயத்தின் அந்தரங்கத்தையெல்லாம் அவர் காணும்படிக்கு வெளிப்படையாகவும் நிற்கின்றேன். நான், எதையும் அவருக்கு மறைத்து வைக்கவில்லை; தடையாக இருக்கும் யாவற்றையும் உடைத்தெறிகிறேன்; தடங்கல் களையெல்லாம் முறித்துப் போடுகிறேன். நாங்கள் ஒருவரிலொருவர் ஈடுபாடுகொள்ளாதபடிக்கு எந்த காரியத்தையும் குறுக்கே வரவிட மாட்டேன். கிறிஸ்து என்னோடு இருக்கிறார் என்கிற சிந்தையை, அவருடைய சீஷனாகிய நான் என்னில் வளர்த்துக் கொண்டே வருகிறேன். தனியாக இருப்பவனாக அல்ல, அவர் என்னில் இருப்பதால் அவரோடுங் கூட சேர்ந்து இந்த சிந்தையை வளர்க்கிறேன். பரிசுத்த ஆவியானவரின் உதவியைக் கொண்டு, கிறிஸ்துவோடு நான் எப்போதும் ஐக்கியத்தில் இருக்கிறேன் என்பதை உணர்ந்தவனாகவே நான் வாழ வோண்டியதா யிருக்கிறது. அவர் பிரசன்னத்தை எப்போதும் உணர்ந்து அறிந்திருக்கிற வனாக நான் ஜீவிக்க வேண்டியதாயிருக்கிறது. நான் அவரில் இருக்கிறேன், அவர் என்னில் இருக்கிறார். நாங்கள் எப்போதும் சேர்ந்தே இருக்கிறோம். என்னோடு கூடவே வசிக்கின்ற அவருக்கும் எனக்குமுள்ள தொடர்பை நான் நினைக்காமல் இருந்தால் நான் என்னைக் குறித்தே சரியாக அறியாதவனாக இருப்பேன்.

இதே விதமான ஐக்கிய நிலைதான் திருமணத்திலும் இருக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார். இதை, பக்திக்குரியதாக இல்லையே என நினைப் பதற்கில்லை. அவர் என்னை அறிந்திருப்பதைக் குறித்தும், என்னில் அன்பு கூருவதைக் குறித்தும் பேசுகிறார்; அது, என் மனைவியை நான் எவ்விதத் தில் அறிந்து அவளை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை எனக்கு ஞாபகப்படுத்துவதாயிருக்கிறது. திருமணமானவனாகிய நான், என் மனைவியையும் கருத்தில்கொள்ளாமல் என்னைப் பற்றி மாத்திரம் குறிப்பிடுவேனாகில் அது என்னை முழுமனிதனாக காண்பிக்காது. இருவரு மாக சேர்ந்த ஒரு நிலைமையை நான் என்னில் வளர்த்துக்கொள்ள வேண்டும். “நான்” என்கிற விதத்தில் நான் செயல்படக்கூடாது; “நாங்கள்” என்கிற விதத்தில்தான் நான் செயல்பட வேண்டும். நான் எதை செய்தா லும் அவளோடு சேர்ந்து ஒருமித்துதான் அதை செய்ய வேண்டும். நான் என் மனைவியோடு ஒரே மாம்சமாயிருக்கிறேன். அவள் தன்னுடைய வாழ்க்கையை என்னில் வாழ்கிறாள்; நானும் என் வாழ்க்கையை அவளில் வாழ்கிறேன். இந்தவிதமாக ஒருவரில் ஒருவராக இருப்பது திரியேக கடவுள் மாத்திரம்தான்.

திருமணத்தில் அடங்கியிருக்கும் ஆவிக்குரிய, தெய்வீகத்தன்மை வாய்ந்த காரியங்களை அலசி ஆராய முற்படும்போது நாம் கடவுளின் மறை பொருள்களை அறிந்துகொள்ளக்கூடியவர்களாகிறோம். என்னுடைய திருமண வாழ்க்கை கடவுளின் தன்மைகளை வெளிப்படுத்துவதாயிருக் கிறது. என் திருமணம், என்னுடைய இறைநம்பிக்கையை வெளிப்படுத்துவ தாயிருக்கிறது. என்னுடைய திருமணத்தில் வெளிப்பட வேண்டிய தன்மைகளை, திரியேக கடவுளிடம் காணப்படும் தன்மைகளே தீர்மானிக்கிறது. நான் என் மனைவியோடு பலவிதங்களில் ஒன்றுபடுவது, கடவுளோடு ஒன்றுபடுதலுக்கு அடையாளமாயிருக்கிறது. என்னுடைய திருமணம் தெய்வீகமானதென்றோ என் மனைவி ஒரு கடவுள் என்றோ நான் கூறவில்லை. அவளை நான் ஆராதிக்கிறேன் என்றும் கூறவில்லை. அவளுடைய படத்துக்கு முன்னால் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து நான் வணங்கிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் வேதாகமத்துக்குக் கீழ்ப்படிந்து நான் அவளோடு ஒன்றுபடும்போது, ஒரு கணவனாக, திருமணத்தைக் குறித்த கடவுளுடைய திட்டத்தோடு ஒன்றுபடு கிறவனாகிறேன். கடவுளோடுள்ள ஆழமான ஐக்கியத்தின் விளைவாகத் தான் அவருடைய திட்டங்களுக்கும் முழுமனதாக செவிசாய்க்க முடிகிறது. கடவுளின் சாயலாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கும் என் மனைவியோடு ஒன்றுபடும்போது, திருமணத்தைக் குறித்த கடவுளுடைய திட்டத்தோடும் நான் ஒன்றுபடுகிறேன். நான் என் மனைவியோடு ஒன்றுபடுதல் தெய்வீகத்தன்மை வாய்ந்த முக்கியமான ஒன்றுபடுதலாகும்.

நாம் தெய்வீகப்பிறவிகளாகும்: கடவுளின் சாயலில் சிருஷ்டிக்கப் பட்டவர்கள். வித்தியாசமான நிலையில் ஆணாகவும் பெண்ணாகவும் படைக்கப்பட்டிருந்தபோதிலும், நாம் கடவுளை வெளிப்படுத்துகின்ற சிருஷ்டிப்புகளாம், ஆணாகவும் பெண்ணாகவும், கணவனாகவும் மனைவியாகவும் நாம் அவருடைய சாயலைத் தரித்தவர்களாக இருக்கிறோம். கடவுளின் பெரிதான கிருபையால் நாம் அவரை அறிந்து கொண்டு, அவரை நேசிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம். கடவுள் மீது நாம் கொண்டிருக்கும் அன்பு, நமது துணையோடு நம்மை ஒன்றாகச் செய்வதாயிருக்கிறது; ஏனென்றால பலராயிருந்தாலும் ஒன்றாயிருக்கின்ற கடவுளின் நிலையை நாம் பிரதிபலிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதை அது நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. அவர் தம்மிலும் நம்மிலும் அன்புகூருகிறவராயிருக்கிறபடியால், நாமும் அவரிலும் நமது துணையினிடத்திலும் அன்புகூருகிறவர்களாய் இருக்க வேண்டும். நாம் ஒரே மாம்சமாயிருக்க வேண்டும் என்கிற இந்த இரகசியத்தை அறியும்படிக்கு அவர் நம்மை வழிநடத்திக் கொண்டு வந்திருக்கிறார். திருமணத்தில் நாம் ஐக்கியமாக இருப்பதின் மூலமாக நாம் அவரை மகிமைப்படுத்துகிறவர்களாக இருக்கிறோம்; திரித்துவமாயிருந்தும் ஒன்றாயிருக்கின்ற கடவுளின் பெரிதான இரகசியத்தையும் உலகிற்கு வெளிப்படுத்துகிறவர்களாய் இருக்கிறோம். நான் எந்தளவுக்கு என் மனைவியோடு ஆவிக்குரியபிரகாரமாகவும், சரீரப்பிரகாரமாகவும் ஐக்கியமாக இருக்கிறேனோ அந்தளவுக்கு நான் கடவுளை மகிமைப்படுத்துகிறவனாக இருக்கிறேன்.

  1. சிருஷ்டிப்பின் தத்துவம், விவாகத்தில் நெருக்கமான நட்பைப் பெற வழிகாட்டுகின்றது.

சிருஷ்டிப்பின் இன்றியமையாத தேவைகள்

நாம் நட்போடு இருக்கும்படிக்கே தேவன் நம்மை சிருஷ்டித்திருக்கிறார். சிருஷ்டிக்கப்பட்ட எந்த காரியமும் தன்னில்தானே இயங்குவதோ, தனிமையாக இருப்பதோ கடவுளின் சிருஷ்டிப்பின் தத்துவத்திற்கே முரண்பாடானது. அனைத்து சிருஷ்டிப்புகளும் ஒன்றையொன்று சார்ந்திருக்கத்தக்க வகையில் ஓர் அழகான துணியைப் போல நெய்யப்பட்டுள்ளது. நூலானது ஒன்றையொன்று ஊடுருவி நேர்த்தியான சால்வையாக உருவாகிறது. அது போல, அனைத்து சிருஷ்டிப்புகளும், தாங்கள் மற்ற சிருஷ்டிப்புகளிடமிருந்து ஏதோவொன்றைப் பெற்றுக் கொள்வதும், தானும் பிறவற்றிற்கு ஏதோவொரு வகையில் பிரயோஜனமாக இருக்கும்படிக்கும் கடவுள் அவைகளை அமைத்துப் படைத்திருக்கிறார். அவ்வகையில் சிருஷ்டிப்புகள் யாவும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை யாகவும், ஒன்றிற்கொன்று உதவிக்கொள்பவையாகவும் இருக்கின்றன. சிருஷ்டிப்பில் எதுவுமே தனித்து இயங்குவதில்லை. ஒவ்வொரு காரியமும், மற்ற ஒரு காரியத்தை சார்ந்து இயங்கும்படியாகத்தான் கடவுள் சிருஷ்டிப்பிலுள்ள அனைத்தையும் படைத்திருக்கிறார். தாவரவியல், வேதியியல், பௌதீகம், சமூகம் இப்படியாக எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதிலுள்ள காரியங்கள் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதை நாம் பாடங்களின் மூலமாக விளங்கிக்கொள்கிறோமல்லவா! ! படைப்பிலுள்ள ஒவ்வொரு காரியமும் ஒன்றையொன்று ஈர்க்கும் வகையிலும், ஒன்றோடொன்று சம்பந்தப்படும் வகையிலுமாக வெகு நேர்த்தியாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு நேர்த்தியான சால்வையில் ஒவ்வொரு நூலும் மற்றொரு நூலை ஊடுருவி அழகாக நெய்யப்பட்டிருப்பதைப் போல, கடவுளின் படைப்பிலுள்ள அனைத்து காரியங்களும் அதனதன் நிலையிலே செயல் படும்போது அழகான வாழ்க்கைமுறை உருவாகிறது. படைப்பிலுள்ள ஒவ்வொன்றும் கடவுள் நியமித்த வகையில் ஒன்றிற்கொன்று உதவியாக இருந்து செயல்படுகிறது. இவ்விதமாக கடவுள் இந்த பூலோக படைப்புகள் அனைத்தையும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் விதமாக படைத்து வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறார். உருவாக்கப்பட்டிருப்பவைகளில் காணப்படும் ஒழுங்கு, பலவிதமான தன்மைகள், ஒற்றுமை இப்படியாக தேவன் சிருஷ்டிப்பை அமைத்திருப்பதில் அவை யாவும், அவரையும் அவருடைய மகிமையையும் வெளிப்படுத்துகிறது.

சிருஷ்டிப்பின் ஒவ்வொரு பாகமும் கடவுளின் திட்டத்தை உணர்ந்து, கடவுள் நியமித்த ஒழுங்கில் தன்னை பொருத்திக்கொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொன்றும் தனக்கு அவசியமானதை மற்ற பாகங்களிலிருந்து அடைந்துகொள்ளவும், பிறவற்றிற்கு தேவையானதை, தான் அவைகளுக்குக் கொடுக்க வேண்டியதுமாக தேவன் அவைகளை உருவாக்கியிருக்கிறார். இப்படியாக பல்வேறு படைப்புகளும் ஒன்றிற்கொன்று உதவிக்கொண்டு வாழ்க்கை சக்கரத்தை சுழல வைக்க வேண்டுமென்பது கடவுளின் திட்டம். இப்படியாக அவை மற்றதின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியிருப்பது, சிருஷ்டிப்பில் ஏதோ தவறுதல் நேர்ந்துவிட்டதாலும் அல்ல, பாவத்தில் முழுஉலகமும் கறைபட்டுவிட்டதாலும் அல்ல. சிருஷ்டிப்பிலுள்ள அனைத்தும் தனது தேவையையும், மற்றவற்றின் தேவையையும் கருத்தில் கொண்டு வாழவேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் அனைத்து சிருஷ்டிப்புகளும் பரஸ்பர உதவிகளைப் பெற்றுக் கொண்டு இயங்கத்தக்க வகையில் உருவாக்கி, வாழ்க்கையெனும் அழகிய சால்வையை அவை ஒன்றையொன்று ஊடுருவி வாழத்தக்க வகையில் உருவாக்கியிருக்கிறார். எவற்றையெல்லாம் அவர் இணைத்திருக்கிறாரோ, அவை தமது தேவைகள் யாவையும் பரஸ்பரமாக நிறைவேற்றிக்கொள்கின்றன. சிருஷ்டிப்பிலுள்ள அனைத்தும் இவ்விதமாக ஒன்றிற்கொன்று பரஸ்பர உதவிகளை நிறைவேற்றிக்கொள்ளத்தக்க வகையில் தேவன் அவைகளை இணைத்திருக்கிறார். “சிருஷ்டிப்பின் தேவைகள்” என்னவாயிருந்தது என்பதைக் குறித்து நாம் சிந்திக்கலாம். சிருஷ்டிப்பிலுள்ள யாவும் மற்றவற்றோடு ஏதாவதொரு வகையில் தொடர்பு கொண்டுள்ளது. தனக்குரிய நிலையில் இருந்து கொண்டு மற்றவற்றோடும் சேர்ந்து, தேவனுடைய திட்டத்திற்கேற்ப செயல்பட வேண்டிய “தேவை” ஒவ்வொன்றிற்கும் இருக்கிறது.

ஆதி. 1:2 ல் நாம் மூன்று “சிருஷ்டிப்பின் தேவைகளைப்” பார்க்கிறோம். அந்தத் தேவைகளை தேவன் சிருஷ்டிப்பின் முதலாம் வாரத்தில் நிறைவேற்றினார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது. ஆழத்தின் மேல் இருள் இருந்தது. தேவஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். கர்த்தர் இவ்விடத்தில் மூன்று சிருஷ்டியை பூர்த்தி செய்தார். அடுத்தபடியாக பூமியின் எல்லைகளை வரையறுத்ததில் அவர் ஒழுங்கு ஏற்படவேண்டியதின் தேவையையும் நிறைவேற்றினார். கடைசியாக, வெறுமையாக இருந்த இவ்வுலகில் குடிமக்களையும் ஏற்படுத்தி அதன் மூலமாக வெறுமையின் தேவையையும் சந்தித்தார்.

மனிதனின் உழைப்பு உலகத்திற்குத் தேவை

ஆதி. 1:1-ல் இருந்து 2:4 வரையுள்ள பகுதியில் சிருஷ்டிப்பைக் குறித்த ஒரு முகவுரையாக மோசே எழுதியிருக்கிறார். ஆதி. 2:5 முதல் வரையுள்ள பகுதியில் மனிதனின் வீழ்ச்சியைக் குறித்து எழுதுகிறார். 2ஆம் அதிகாரத்தில் மனிதனின் வீழ்ச்சிக்கு முந்தைய காலங்களை நமக்கு விவரித்துக் காண்பிக்கிறார். இக்காலகட்டங்களில் ஆதாம் தேவசாயலைக் கொண்டவனாக ஏதேன் தோட்டத்தில் தனிமையில் வசித்து வந்ததை மோசே எழுதுகிறார். தனிமையான வாழ்க்கையைத் தெரிந்து கொண்டிருக்கிற ஆணோ அல்லது பெண்ணோ, அவர்களும் தேவசாயிலை உடையவர்கள்தான் என்பதை இங்கு உணரமுடிகிறது. ஆதியாகமம் 2ம் அதிகாரத்தில் நாம் காண்கிற ஆதாமின் வாழ்க்கையை ஆராய்வதின் மூலமாக தனித்து வாழ்கின்ற விசுவாசிக்கு நல்ல பாடங்கள் கிடைக்கும். ஆதாம் நல்ல முதிர்ச்சி பெறுகின்ற வேளையிலே அவருக்கு தேவன் பலவிதமான பொறுப்புகளை அளிக்கிறார். அவனுக்கு சிருஷ்டிப்புகளின் மீதும், வார்த்தைகளைக் கையாளுவதிலும், கடவுளைத் தொழுதலிலும், மற்றவற்றின் மீதும் பொறுப்புகள் கொடுக்கப்படுகிறது.) ஏவாளை தேவன் உருவாக்குவதற்கு முன்னதாகவே மனிதன் பூமியையும் அதிலுள்ள சகல ஜீவராசிகளையும் ஆளுகிறவனாக (Leadership) காணப்படுகிறான். ஏவாளின் வருகைக்குப் பின்னும் அவனுடைய அந்த ஆளுகை தொடர்கிறது. பிற்காலங்களில் அது தலைமைபதவியென (Headship) அழைக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் கவனிக்க வேண்டியது மனிதனும் ஒரு “சிருஷ்டிப்பின் தேவை”யை சந்திக்கின்றான். இதை தேவனே ஏற்படுத்துகிறார். சிருஷ்டிப்பின் தேவைக்காக மனிதனை கடவுள் உருவாக்குவதாக ஆதி. 2:5,6ல் பார்க்கிறோம், நிலத்தினுடைய சகலவித செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.

மனிதனின் உழைப்பு உலகத்திற்குத் தேவை என்கிற விதத்தில் தேவன் உலகை சிருஷ்டித்திருக்கிறார். அப்போது நிலத்தை பண்படுத்த ஒரு மனிதனும் உலகில் இருக்கவில்லை. கடவுள், உலகத்தினுடைய இந்த தேவையையும் சந்தித்தார். அதை 15ஆம் வசனத்தில் காண்கிறோம். தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டு வந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். மனிதனுடைய உழைப்பின் தடங்களை ஏற்கும்படியாகத்தான் தேவன் இந்த பூமியைப் படைத்திருந்தார். மனித நடமாட்டம் இல்லாத இடங்கள் பாழ்நிலங்களாக தரிசுநிலங்களாக இருப்பதைக் காண்கிறோமல்லவா! ! சகலத்தையும் படைத்த கடவுளுடைய சாயலைத் தரித்துக் கொண்டிருக்கிறவனாகிய மனிதன், ஒரு சிறந்த உழைப்பாளியாக பூமியில் செயல்பட்டபோது, அந்த பூமியும் அவனுடைய வாழ்க்கைக்குத் தேவையான சகல கனிவகைகளையும் தந்தது. 5ம் வசனத்திலும் 15ஆம் வசனத்திலும் மோசே நிலத்தைப் பண்படுத்த என்கிற ஒரே வார்த்தையை உபயோகித்திருக்கிறார். அத்தோடுகூட மனிதன் நிலத்தை காக்கவும் வேண்டும். மனிதன் தன்னுடைய உழைப்பின் மூலமாக பூமியோடு ஒன்றியிருக்கிறான். சிருஷ்டிப்பின் தத்துவத்தில் அவனும் பூமியோடு இணைந்து அழகாக நெய்யப்பட்டிருப்பதை உணருகிறோமல்லவா! ! இன்னும் சொல்லப்போனால், அவன் பூமியோடு தொடர்புள்ளவனாக இருந்ததால்தான் அவன் மனிதன் என்கிற பெயரையே பெற்றான். தேவன் அவனுக்கு ஆதாம் என்று பெயரிட்டிருந்தார். அதற்கு “சிகப்பு மணல்” என்று அர்த்தமாம். கடவுள் மனிதனை உலகோடு இணைக்கிறார். அவன் வாழ அவனுக்கு பூமி தேவைப்படுகிறது; பூமிக்கும் அவனுடைய உழைப்புத் தேவைப்படுகிறது. பூமியின் மீதில் அவனுக்கு வாழ்க்கைக்குரிய இணைப்பு இல்லாவிட்டால், கடவுள் அவனை எதற்காக படைத்தாரோ அந்த நோக்கம் செயல்படாது. தன்னுடைய உழைப்பின் மூலமாக அவன் பூமியோடு இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுகிறான். மனிதனுடைய உழைப்பின் தடங்களை பூமியும் தன்னில் வெளிப்படுத்துகிறது. கடவுளின் சாயலைக் கொண்ட மனிதன், கடவுள் தனக்கு நியமித்த நிலையில் இருந்து கொண்டு அவர் குறித்த வேலையை செய்கிறவன் ஆனான். அதன் பலாபலனானது ஒழுங்கையும், ஒற்றுமையையும் சிருஷ்டிப்புகளிடையே ஏற்படுத்தி கடவுளின் மகிமையை வெளிப்படுத்திக் காண்பிக்கிறதாயிற்று.

வெளிச்சம், எல்லைகள், குடிமக்கள் ஆகியவற்றை ஏற்படுத்தியதின் மூலம் ஆரம்பத்தில் இருந்த சிருஷ்டிப்பின் தேவைகள் பூர்த்தியாயிற்று. மண்ணின் தேவைக்கு மனிதன் ஏற்படுத்தப்பட்டதில் அதன் தேவைகள் நிறைவேறிற்று. இப்போது மனிதனுக்கும் ஒரு தேவை இருப்பதை வேதாகமத்தின் மூலமாகத் தெரிந்துகொள்ளுகிறோம். அவனுக்குத் துணையாக ஒரு பெண்ணை படைத்ததின் மூலமாக தேவன், மனிதனின் தேவைகளையும் நிறைவேற்றினார்.

ஆணுக்கு பெண் தேவை

ஆதி. 2:18ல் சிருஷ்டிப்பில் மனிதனுக்கு எது தேவையாக இருந்தது என்றும், அதை மனுஷியை உருவாக்கியதின் மூலம் கடவுள் நிறைவேற்றினதையும் காண்கிறோம். பின்பு தேவனாகிய கர்த்தர் நல்லதல்ல . . . என்றார். நாம் இந்த வசனங்களை பலமுறை படித்திருப்போம். மேற்கொண்டு வாசிக்கும்படி கடந்து சென்றிருப்போம். ஆனால் ஒரு கணம் நின்று கவனியுங்கள். ஏதோ அசம்பாவிதமாக இது சொல்லுகிறதே. இது நமது கவனத்தை சுண்டி இழுக்கிறது. மோசே என்ன சொல்ல வருகிறார்? ஏதோ ஒன்று நல்லதல்ல என்று கூறுகிறாரே! முதலாம் அதிகாரத்தில் ஏழு முறை தேவன் அது நல்லது என்று கண்டார் என்று வாசிக்கிறோம். எல்லாவற்றிற்கும் சிகரம் போல ஆதி. 1:31 ஆம் வசனத்தில் அது மிகவும் நன்றாயிருந்தது என்றும் வாசிக்கிறோம். தொடர்ந்து 2 ஆம் அதிகாரத்தை வாசித்துக் கொண்டு வருகையில் 18 ஆம் வசனத்தில் ஒரு பேரிடி! ஏதோ ஒன்று நன்றாக இல்லை என்கிறதைப் படிக்கிறோம். அது நம் மகிழ்ச்சியை சிதைக்கிறதே! !

எது நன்றாக இல்லை? மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். தனிமையாயிருந்த மனிதன், ஏற்கனவே சகலத்தையும் ஆண்டுகொள்ளுகிறவனாய் ஆதி. 1:28ல் சொல்லியபிரகாரமான கட்டளையை நிறைவேற்றுகிறவனாய் இருந்தான். பூமியின் மீது அதிகாரத்தை செலுத்துகிறவனாய் இருந்தான். பூமியை பண்படுத்தி, அதைக் காத்துக்கொள்வதின் மூலமாக அவன் பூமியில் தனது கட்டுக்குள் வைத்திருந்தான். பெண் சிருஷ்டிக்கப்பட்டவள். கடவுள் ஆதா மின் விலா எலும்பு ஒன்றை எடுத்தார். அதைக் கொண்டு ஒரு பெண்ணை வடிவமைத்தார். தான் வடிவமைத்த அந்த பெண்ணைத் திரும்பவும் அவனிடமே கொண்டு வந்து அவனிடம் ஒன்று சேர்க்கிறார். அவள் தன்னில்தானே சுயாதீன முடையவள்தான், ஆனால் அதே சமயத்தில் அவனோடும் சேர்க்கப்பட்டிருப்பவள். அவனோடு இசைவாக இருக்கும் படிக்கு ஏற்படுத்தப்பட்ட தனிப்பட்ட பிறவி அவள். அவனுடைய எலும் பையும் மாம்சத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டவள். ஆதாமிடம் வெளிப்பிரகாரமாக ஒட்ட வைக்கப்படும் வகையில் பிற்பாடு ஏற்படுத்தப் பட்ட ஒரு சிருஷ்டிப்பல்ல அவள். தேவன் அவளை அவனிடமாக கொண்டுவந்து சேர்த்தது, அவளைத் திரும்பவுமாக ஆதாமின் விலாவிலே வைப்பதற்கு ஒப்பானதாக இருக்கிறது. இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். ஆதாம் கூறிய இவ்வார்த்தை யில், திரித்துவ கடவுளிடையே நிலவுகின்ற ஒப்பற்ற ஐக்கியத்தின் தன்மை எதிரொலிக்கிறது. பலராயிருந்தும் ஒன்றாயிருக்கிற திரித்துவ கடவுளின் நாமம் இங்கு மகிமைப்படுகிறது: அவள் மனுஷி எனப்படுவாள்.

மனிதன் என்பதின் பெண்பால் வார்த்தை மனுஷியாகும். சமஉரிமை கோருகின்ற பெண்கள் கூட்டத்தார், எங்களை அப்படி அழைக்கக்கூடாது, வேறு வார்த்தைகளால் அழைக்கப்பட வேண்டும் என்று போராடுகின்ற கருத்துக்கு இது முரணானது . அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. கடவுள் தனக்கு அளித்த அதிகாரத்தினிமித்தம், ஆதாம் அவளை மனுஷி என்று அழைத்தபடியால் அதுவே அவளது பேராயிற்று. கடவுளைப் போன்றே அன்பின் அதிகாரம் செலுத்துகிறதில் அவனது ஆண்தன்மை மிளிருகிறது. அவளைக் குறித்து பூரணமாக அறிந்தவனாக, தங்களுடைய ஐக்கியநிலையின் தத்துவத்தை உணர்ந்தவனாக அவன் அவளை அவ்வாறு விவரிக்கிறான். பூரணமான ஐக்கியத்திற்கென அவர்கள் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். சரீரப்பிரகாரமான நெருக்கத்துடன், ஒரே மாம்சமாகின்ற நிலைமைக்கென அவர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.

நமது முதல் பெற்றோரை மோசே அவர்களுடைய தெய்வீக ஐக்கியநிலையிலே மனக்கண்களால் கண்டு, இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள் என்று கூறுகிறார் (ஆதி. 2:24-25).

தேவன் இணைத்தது!

திருமணத்தில் காணும் ஐக்கியத்தைவிட உயர்வானதாக ஒரே ஓர் ஐக்கியத்தைதான் இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்றார். அது என்னவெனில், அவர் நம்மை அவருடைய சீஷராகும்படி அழைக்கும்போது எதிர்பார்க் கின்ற ஐக்கியம். மற்ற எந்த உறவைக்காட்டிலும் இயேசுவுக்கும் நமக்குமுள்ள ஐக்கியம் அதிகமானதாக இருக்க வேண்டுமென அவர் கூறுகிறார். திருமண வாழ்க்கை, ஆவிக்குரிய பக்தி நிலைக்கு ஒத்ததாயிருக்கிறது. தெய்வீக நம்பிக்கைக்கு “ஒரே கடவுள்” கோட்பாடு ஏற்புடையதாயிருப்பதுபோல, மனித உறவுகளுக்கு “திருமணம்” என்கிற கோட்பாடு சரியானதாக விளங்கு கின்றது. அது, ஒரே மேலான தெய்வீக அன்பை அடைவதற்காக மற்ற எல்லாவற்றையும் விட்டு விலகிவிடுகின்றதான நிலைமைக்கு ஒத்ததாகும்.

மத். 19:4-6 வசனங்களில் இயேசு கிறிஸ்து திருமணத்தைக் குறித்து உபதேசிக்கும்போது அவர் ஆதி. 1:26ம் வசனத்தை மேற்கோள் காண்பிக்கிறார். முதலாவது அவர் . ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? என்று கேட்கிறார். அடுத்தபடியாக அவர், ஆதி. 2:24ஐ குறிப்பிடுகிறார், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இதைக் கூறியதும் அவர் நடைமுறையில் செய்ய வேண்டியதையும் கூறுகிறார், ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக் கடவன்.

கடவுள் ஏவாளை ஆதாமுக்கென உருவாக்கி அவனிடம் அழைத்து வந்தது எவ்வளவு நிச்சயமோ, அது போலத்தான் தேவன் நம் ஒவ்வொரு வருக்கும் உரிய துணையை தமது திட்டத்தின்பிரகாரம் நிர்ணயித்து ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். நாம் சிலவேளைகளில் நினைப்பதுண்டு: நான் வேறு யாரையாவது திருமணம் செய்திருக்க வேண்டுமோ? நான் இன்னும் அதிக சிநேகமாக இருக்கும்படிக்கு வேறு யாரையோ தெரிந் தெடுத்திருக்க வேண்டுமோ? இவ்விதமான கேள்விகள் எழுவது, தேவனுடைய தெய்வீக திட்டத்தையே அவமதிப்பதும், அன்பை புறக்கணிப்பதுமாகும். அன்பு செலுத்துவது என்பது நமக்கு கடவுள் கொடுத்திருக்கிற துணையை மாத்திரம் நோக்கி பார்வையை செலுத்து வதேயொழிய, துணைக்கு அப்பால் வேறு யாராவது தென்படுகிறார்களா என பார்வையை விரிவுபடுத்துவதல்ல. கடவுள் ஆதாமிடம் ஏவாளை அழைத்துக்கொண்டு வந்தது போல இந்த துணையையே உன்னை சந்திக்கச் செய்து, உன்னிடத்தில் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். நீங்கள் திருமணம் செய்தபோது, உங்களுக்குள்ளாக உறுதிமொழி எடுத்துக்கொண்டு திருமண ஒப்பந்தத்திற்குள்ளாக இணைக்கப்பட் டிருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருக்கிறீர்கள். வேறு யாரையாவது திருமணம் செய்திருக்கலாமோ என நினைப்பது உண்மை யான ஐக்கியத்திற்கு விரோதமாயிருக்கிறது. உண்மையான அன்பு அந்த கேள்வியையே கேட்காது. அதுவும் நீங்கள் உங்கள் துணையோடு ஒரே மாம்சமாக வாழ்ந்து கொண்டிருக்கையில், அப்படிப்பட்ட கேள்வி எழலாகாது. நீங்கள் ஒரே சரீரமாயிருக்கிறீர்கள்: ஒரு மனிதன், ஒரு மனுஷி, ஒரே வாழ்க்கை.- உங்களுடையதோ அல்லது உங்கள் துணையுடையதோ, அந்த வாழ்க்கை முடியுமட்டும், ஒன்றேதான். மரணம் உங்களை பிரிக்கு மட்டும் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஐக்கியத்தில் நிலைத்திருக் கிறீர்கள். மரணம்! இதைக் குறித்து விரிவாக பேசவேண்டும். இது நம்மை மூன்றாவது வழிகாட்டும்நட்சத்திரக் குறிப்பிடம் அழைத்துச் செல்லுகிறது.

  1. வீழ்ச்சியின் சரித்திரம், விவாகத்தில் நெருக்கமான நட்பைப் பெற வழிகாட்டுகின்றது

பிரிவினையை ஏற்படுத்திய மரணம்!

ஆதி. 3ம் அதிகாரத்தில் பாவத்தின் காரணமாக மனிதனின் வீழ்ச்சி ஏற்பட்டு அவன் மரணத்திற்குள்ளான நிலையைக் காண்கிறோம். மரணத்தைக் குறித்து நாம் நன்கு அறிந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருந்தாலும், வேதாகமத்தின்படி மரணம் எதைக் குறிக்கிறது என்பதை ஒரு சிலரே அறிந்து வைத்திருக்கின்றனர். மரணம் என்பது ஒன்றுமேயில்லாமல் அழிந்து போய்விடுவது அல்ல. மாயமாய்ப் போய்விடுவதுமல்ல. ஒன்றுமில்லாமல் ஆவியாகி மறைந்து போய்விடுவது மல்ல. மரணம் என்பது இல்லாமலே போய்விடுவதுமல்ல. பழங்காலத்தில் திருமணத்தின்போது கூறுகின்ற “மரணம் நம்மைப் பிரிக்கும் வரைக்கும்” என்கிற வார்த்தை வேதபூர்வமாக மரணத்தை விளக்குகின்றது எனலாம். மரணம் என்பது விடைபெறுதல், பிரிதல், விலகிச்செல்லுதல் ஆகிய அர்த்தங்களை உள்ளடக்கியது. சிருஷ்டிப்புகளிடையே நிலவிய ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையை மரணம் உடைத்தெறிகிறது. வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் தொடர்புகளை மரணம் அறுத்துவிடுகிறது. கடவுள், அனைத்து சிருஷ்டிகளையும் ஒன்றோடொன்று இணைந்து, சார்ந்து இருக்கும்படியாக உருவாக்கினார். கடவுள் இணைத்ததை மரணம் பிரிக்கிறது. மரணம், சகலத்தையும் அதனதன் இடத்தைவிட்டு பிரித்து அப்புறப்படுத்துகிறது. கடவுள், ஒன்றாக இருக்கும்படியாக சிருஷ்டிப்பில் இணைத்த சகலத்தையும், மரணம், அறுத்துவிட்டு அழிக்கிறது. வேதபூர்வமாக மரணத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமானால், மரணத்தை, பிரிவினையை ஏற்படுத்துவதாகவும், பிளவு உண்டாக்குவ தாகவும், இணைப்புகளைத் தகர்த்துபோடுகின்றதாகவும் கற்பனை பண்ணிக்கொள்ள வேண்டும்.

பொய்காரனும், கொலைகாரனுமாகிய சாத்தான் ஆதிப்பெற்றோருக் கிடையே இருந்த நெருக்கமான நிலைமைக்குள் பிரவேசித்து, அவர்களை ஒருவரோடொருவரிடமிருந்து பிரித்தது மாத்திரமல்ல, சகல சிருஷ்டிப்புகளிடமிருந்தும், கடவுளிடமிருந்துங்கூட பிரித்துவிட்டான். நமது வாழ்க்கையில் நாம் சாத்தானின் செயல்களைக் குறித்து எப்போதாவது தான் சிந்தித்துப் பார்க்கிறோம். நமக்கு வீழ்ச்சியின் “கதை” நன்றாகத் தெரிகிறது; ஆனால் பாவத்தைக் குறித்தும், அதன் ஆரம்பத்தைக் குறித்தும் சிந்திக்கையில், அதில் வஞ்சகனாகிய சாத்தானின் பங்கைக் குறித்து நாம் அதிகமாக நினைப்பதில்லை. நம்மையும் நமது திருமண வாழ்க்கையையும் அழித்துப் போட இன்றைக்கும் சாத்தான் தனது பொய்களாலும், மயக்கும் சூழ்ச்சிகளாலும் சதி செய்து கொண்டுதான் இருக்கிறது.

மரணம் நமது வாழ்க்கையின் சகல காரியங்களிலும் எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதென்று பாருங்கள். மரணம் மனிதனின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அவனது அறிவிலும் உணர்ச்சிகளிலும்கூட ஊடுருவி மாறுதல்களைத் தோற்றுவித்துவிட்டது. அவனுக்குள்ளேயேகூட மரணத்தினால் ஏற்பட்ட பிரிவினைகளை உணருகிறான். நமது எண்ணங்களும் சிந்தனைகளும் இப்போது இருக்கிற மாதிரி, ஆதாமின் சிந்தனைகள், பாவத்தில் விழுவதற்கு முன்னால் இருந்திருக்காது. நமது மனதே, பாவத்தினால் வீழ்ச்சியடைந்த நிலையில்தான் இருக்கிறது. நாம் உலகில் பிறக்கின்ற போதே கடவுளைவிட்டு பிரிந்தவர்களாக, ஆவிக்குரிய மரண நிலையில்தான் பிறக்கிறோம் (எபே. 2:1-3). வீழ்ச்சிக்கு முந்தைய நிலைமையில் ஆதாம் உயிருள்ளவராக இருந்தார். சிருஷ்டிகரோடும், சகல சிருஷ்டிப்புகளோடும் நல்ல ஐக்கியமுள்ள நிலையில் அவர் இருந்தார். அவருடைய உள்ளுணர்வுகள் யாவும் வேறு திசையில் இருந்தன. நாம் இப்போது இருப்பது போல சுயநலமுடையவராக அவர் இல்லை. கடவுளின் சாயலைத் தான் தரித்துக் கொண்டவராக இருப்பதை நன்றாக உணர்ந்த வராக இருந்தார். அதன் காரணமாக கடவுளையும், தனது மனைவியையும், தனக்கு உலகத்தில் அளிக்கப்பட்டிருந்த வேலையையும் சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்டு வாழ்வது அவருக்கு வெகு இயல்பாக இருந்தது. இவைகளை கஷ்டமாகவோ அல்லது இவைகளிலிருந்து விலகிச் சென்று விட வேண்டும் என்கிற எண்ணமோ அவருக்கு ஒருபோதும் ஏற்பட் டிருக்காது. கடவுள் தன்னை இணைத்திருக்கின்ற இந்த இணைப்பு களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தான் தனித்து இயங்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்குள் ஏற்பட்டிருக்கவே ஏற்பட்டிருக் காது. பாவக்கறை ஏற்படாத வரையில் மனிதனுக்கு தன்னைக் குறித்த சுயசிந்தனையே இருந்திருக்காது. அவன் மனமெல்லாம், மனைவியோடு ஐக்கியமாக வாழ்வதும், தனக்கு இப்பூலோகத்தில் நியமிக்கப்பட்ட வேலையை செய்வதும், கடவுளைக் குறித்த சிந்தனையும்தான் ஆக்ரமித்திருக்கும். உயிருள்ள இந்த ஐக்கியமான நிலையையெல்லாம் தனித் தனியாக அறுத்துவிட்டு தான் தனியாக பிரிந்து இருக்க வேண்டுமென அவன் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டான். தன்னை ஒரு தனித்த மனிதனாக அவன் கற்பனை செய்துகூட பார்த்திருக்கமாட்டான். தன்னிலிருந்தே பிரிந்து, சற்று தொலைவிலிருந்து தன்னையே ஆராய்ந்து, “ஓ! இதுதான் நானா” என்கிற ஆராய்ச்சியில் மூழ்கியிருக்க மாட்டான். தான், தனது என்கிற சுயநலமனப்பான்மை அவனிடம் அறவே இருந்திருக்காது.

பாவத்திற்கு முந்தைய ஆதாம் உயிருள்ளதான ஐக்கியநிலையைக் கொண்டவராக இருந்தார்: கடவுளோடு ஐக்கியம்! மனுஷியோடு ஐக்கியம்! தனது உழைப்பின் மூலமாக உலகத்தோடு ஐக்கியம்! தனது ஆளுகையின் மூலமாக மிருகஜீவராசிகளோடும் விருட்சங்களோடும் ஐக்கியம்! இந்த இணைப்புகளிலிருந்து அவரைப் பிரிக்கும்படியாக எந்தக் காரியமும் அவரைத் தூண்டியிருக்க முடியாது. தனது காரியங்களை மாத்திரமே யோசிக்கிறதான சுயநலங்கொண்டவராகவோ, சுயபச்சாதாபத்தை ஏற்படுத்திக்கொள்கிறவராகவோ அவர் இருந்திருக்க மாட்டார். அந்த மாதிரியான ஒரு மனப்பான்மை மரணத்தினால்தான் ஏற்படுகிறது. நமது சுயநலமுள்ள மனப்பான்மையே நாம் மரணத்திற்குள்ளாக இருக்கிறோம் என்பதற்கு நல்ல நிரூபணமாய் இருக்கிறது. இப்படியாக, நமது சிந்தனை களிலும், இவ்வுலகத்திலும் மரணம் ஆட்சி செய்கிறதான ஒரு விழுந்து போன வாழ்க்கையைத்தான் நாம் இவ்வுலகில் அனுபவித்துக் கொண்டுவருகிறோம். கடவுளுடைய மீட்பின் கிருபை நம் வாழ்வில் பிரவேசிக்காவிட்டால் நாம் செத்த மனிதர்களாக, பிரிந்தவர்களாக, இணைக்கப்படாதவர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருப்போம்.

பாவத்திற்கு முந்தைய ஆதாமுக்கு, இப்போது நமக்கிருக்கிற விதமான தன்னுணர்வு இருந்திருக்காது. ஆதாம் அந்தப் பழத்தை சாப்பிட்டவுடன் ஆதாமின் கண்கள் திறக்கப்பட்டன; மரணம் அவனை மேற்கொண்டு விட்டது. அந்த நிலையிலிருந்து ஆதாம் இப்போது உலகத்தைப் பார்க்கிறான். பயங்கரமான, பரிதாபமான ஓர் உணர்வுக்குள்ளாகிறான். பிரிவையும், ஓர் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதையும், தனித்துவிடப் பட்டிருப்பதையும், தனிமையையும் அந்தத் தறுவாயில் உணருகிறான். ஆதி. 2:17ல் தேவன் மனிதனை எச்சரித்திருக்கிறார்: விலக்கப்பட்ட கனியைப் புசிக்கும் நாளிலே நீ சாகவே சாவாய் என்று எச்சரித்திருந்தார். ஆனால் சாத்தானோ, நீங்கள் அதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்கிறதான வாக்கை (ஆதி. 3:5) அளிக்கிறது. ஆகவே அவர்கள் அந்தக் கனியைப் புசித்தார்கள். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது (வசனம் 7). சாத்தான் வாக்களித்ததான அந்த “அறிவை” அவர்கள் அடைந்தார்கள். ஆனால் தேவனோ அதை “மரணம்” என்று குறிப்பிடுகிறார். அவர்கள் அந்தப் பழத்தை சாப்பிட்டு, செத்த பிணங்களாக இந்த உலகத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். மரணம் ஆட்கொண்டுவிட்ட ஓர் உலகத்தையே அவர்கள் இப்போது பார்க்கிறார்கள்; ஒன்றோடொன்று இணைந்திருந்த சகலமும் பிரிந்து போனதான ஓர் உலகமே அவர்கள் கண்முன் தோற்றமளிக்கிறது. மனிதனின் வீழ்ச்சியில் சகல சிருஷ்டிப்புகளுமே உடைந்து போனது. வீழ்ச்சிக்கு முன்னதாக சகலமும் நேர்த்தியாக இணைக்கப்பட்டிருந்தது. மரணம் சகல காரியங்களிலும் ஊடுருவி விட்டதால், எல்லாவற்றிலும் பிரிவு ஏற்பட்டுவிட்டது.

அத்தி இலை மூலமாக எதிர்ப்பு

பாவம் செய்த உடனேயே மனுஷனும் மனுஷியும் செத்தவர்களைப் போல நடந்துகொள்ளுகிறார்கள்: ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போகிறார்கள். பிறகு அவர்கள் அத்தி இலைகளைப் பறிக்கிறார்கள். அதைக் கொண்டு அவர்கள் தங்களுக்கென அலங்காரமான ஆபரணங்களையோ, தொப்பிகளையோ, கண்களை மறைக்கும்விதத்தில் கண்ணாடி போன்றவற்றையோ செய்துகொள்ளவில்லை. மாறாக அவர்கள் தங்களுடைய இடுப்புகளுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணிக் கொண்டார்கள். தங்களை ஒரே மாம்சமாகச் செய்கின்ற சரீரத்தின் அங்கங்களை மறைத்துக் கொண்டார்கள். இருதயத்திலும் ஆத்துமாவிலும் இணைந்திருப்பதை சரீரப்பிரகாரமான நெருக்கம் வெளிப்படுத்துவ தாயிருக்கிறது. பாவத்தின் விளைவாக அவர்கள் தங்களுடைய நெருக்கத்தை அழித்துவிட்டார்கள்; தங்களிடையே இருந்த நெருக்கத்தை கொன்றுவிட்டார்கள். தாம்பத்திய அன்பின் சுருக்கமான வெளிப்பாட்டை அத்தியிலையின் கீழ் புதைத்துவிட்டார்கள்.

இப்போது அவர்கள் கடவுளை முழுவதுமாக வெளிப்படுத்து கிறவர்களாய் இல்லை. அவர்களைப் பாருங்கள். அவர்களில் இனி கடவுளைக் காண இயலாது. பலராயிருந்தாலும் ஒன்றாக இருக்கின்ற ஓர் ஐக்கியத்தை அவர்களிடம் இனி காண முடியாது. அங்கே நீங்கள் பிரிவைப் பார்க்கிறீர்கள், தனிமையைப் பார்க்கிறீர்கள், இணைப்பு துண்டிக்கப்பட்டுப் போன நிலையைப் பார்க்கிறீர்கள். ஆதி. 2:23,24ல் நாம் பார்த்த பூரணமான காட்சி இப்போது கெட்டுப் போய், அவலட்சணமாகத் தோற்றமளிக்கிறது. அந்த பழைய காட்சியில், ஆணும் பெண்ணுமான அவர்கள் இருவரும் நிர்வாணிகளாக இருந்தும் வெட்கப்படாத நிலையில், விவரிக்க முடியாத நெருக்கமுடையவர்களாய், மற்ற சிருஷ்டிப்புகளின் மத்தியில் மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்டோம். இப்போது அவர்கள் அத்தியிலைகளால் தங்களை மூடிக் கொண்டவர்களாக, வெட்கத்தோடு ஒருவரிடமிருந்து ஒருவர் விலகினவர்களாக, கடவுள் தங்களை இணைத்திருந்த சகல சிருஷ்டிப்பு களிடமிருந்தும் விலகிக் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.

அத்தி இலையை இங்கு கலகத்தின் அடையாளமாகப் பார்க்கிறோம். மனிதனையும், பூமியையும், விருட்சங்களையும் மரணம் பிரித்துவிட்டதற் கான அடையாளத்தை அது காண்பிக்கிறது. கடவுள், மனிதன் உயிர்வாழ்வதற்காக, தாவரங்களை மனிதனுக்கு உணவாக இருக்கும் படிக்குக் கொடுத்திருந்தார். மனிதன் நிலத்தை உழுது பண்படுத்தி பூமியை பராமரிக்கும்படிக்கு நியமிக்கப்பட்டிருந்தான். கடவுளின் கட்டளையையும், நோக்கத்தையும் குலைத்துப் போட்டதற்கு அடையாளமாக அத்தியிலை காணப்படுகிறது. பூமியை பண்படுத்தி, அதை ஆளுகின்ற நியமனத்தை மனிதன் கைவிட்டுவிட்டான் என்பதை அத்தியிலை அறிவிக்கிற தாயிருக்கிறது. கடவுள் தங்களுக்கு உணவாக பயன்படும்படி கொடுத்திருந்த தாவரவகைகளை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்துவதின் மூலமாக அவன் தாவரங்களையுங்கூட கடவுளுக்கு விரோதமாகத் திருப்பிவிட்டான்.

கடவுள் தங்களை உருவாக்கியதின் நோக்கத்தை மனிதன் தள்ளிவிட்டதைக் காண்பிக்கிறதான ஓர் அடையாளமாகவும் அந்த அத்தியிலை இருக்கிறது. கடவுள், மனிதனை பலுகிப் பெருகி பூமியை நிரப்பும்படி கூறியிருந்தார். அந்த நோக்கத்தை சிதைக்கும்வண்ணமாக அவர்கள் நடந்து கொண்டார்கள். இதை அவர்கள் நிறைவேற்றாதபடிக்கு தங்களுக்கு அரைக்கச்சைகளை உருவாக்கிக் கொண்டார்கள். ஒரு தாவரத்தை எடுத்தார்கள்; அதை இரண்டாகப் பிரித்தார்கள். அதைக் கொண்டு தங்களுக்கிடையே ஓர் அந்தரங்கமான பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டார்கள். சொல்லப் போனால், அந்த சம்பவம் அவர்களிடையே விவாகரத்தை ஏற்படுத்தியது போலாயிற்று. தங்களுக்கென சில அந்தரங்கமான நியதிகளை ஏற்படுத்திக் கொண்டு ஒருவரை விட்டு ஒருவர் விலகி நின்றார்கள். கடவுள் ஏற்படுத்தியிருந்த திருமண அமைப்பிலிருந்தும் விலகிப் போனார்கள். அத்தியிலையை கடவுளுக்கு விரோதமான ஓர் ஆயுதமாக தரித்துக் கொண்டார்கள். கடவுளின் சமூகத்தில் நிற்கமுடியாமல், கடவுளுக்கும் தங்களுக்கும் இடையே அத்தியிலையை தடுப்பாக வைத்துக் கொண்டு ஒளிந்திருக் கிறார்கள். குளிர்ச்சியான வேளையிலே கடவுள், வழக்கம் போல தோட்டத்தில் உலாவ வருகையிலே, அவர்கள் இருவரும் ஓடிச் சென்று மரங்களின் பின்னாலே ஒளிந்துகொள்ளுகிறார்கள். சிருஷ்டிப்பையே, சிருஷ்டிகருக்கு முன்பாக ஒரு தடுப்பாக உபயோகிக்கிறார்கள்.

கடவுளுடைய நாமம் மகிமைப்படும்படியாக அந்த மரங்களையும் அவர்கள் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் அவைகளை மனிதனுக்குக் கொடுத்திருந்தார். ஆனால், அதற்கு மாறாக அவர்கள் அந்த மரங்களையே தங்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான ஒரு தடுப்புச் சுவராக பயன்படுத்தினார்கள்; அதனால் அவரை எதிர்க்கிறவர்களாகக் காணப்பட்டார்கள்.

கடவுளின் ஆரம்ப திட்டத்தின்படி, கடவுள் மனிதனுக்கு அதிகாரியாகவும், மனிதன் தன் துணையோடு சேர்ந்து படைக்கப்பட்ட சகல தாவரங்களையும் மிருகங்களையும் ஆளும்படியாகவும் உலகை அமைத்திருந்தார். இத்திட்டத்தில் சாத்தானுக்கு அவர் இடங்கொடுக்க வில்லை. ஆனால், இப்போதோ எல்லாமே தலைகீழாயிற்று; அவர் அமைத்த ஒழுங்கு சீர்குலைந்து போயிற்று. சாத்தான் ஒரு மிருகத்தை தனது சேவைக்கு இழுத்துக் கொண்டது; மனுஷியை வஞ்சிக்க ஒரு மரத்தை பயன்படுத்தி, அவளை மனுஷனுடைய ஐக்கியத்திலிருந்து பிரித்து, அவளை தன்னுடைய இடத்தைவிட்டு நிலைபெயர வைத்தது. மனிதனும் இப்போது சாத்தானுடைய பொய்யை நம்புகிறவனாக ஆகிவிட்டான். கடவுளுடைய உதவியில்லாமலேயே, தெய்வீக நிலையை அடைந்து தேவதூதர்களைப் போல ஆகிவிடலாம் என்ற வஞ்சக வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறான். கடவுள் இணைத்து அமைத்திருந்த காரியங்கள் யாவும் துண்டுதுண்டாக சிதறிப் போய்விட்டன. அது வெட்கத்தையும், துக்கத்தையும் உண்டுபண்ணுகிறதாயிற்று. ஆதாம் ஒரு செடியின் மறைவிலும், ஏவாள் மற்றொரு புதரின் மறைவிலும் தங்களை ஒளித்துக் கொண்டிருப்பதை நான் என் மனக்கண்களால் காண்கிறேன். இருவரும் ஒருவரையொருவர் பார்க்கக்கூட வெட்கப்பட்டுக் கொண்டு விலகி இருக்கிறார்கள். தங்களை உருவாக்கியவரும், பிதாவும், நியாயாதிபதியுமான கடவுளின் எல்லாம் அறிந்த தன்மையை மறந்தவர்களாக, தங்களுடைய நிலைமையைக் குறித்தான சிந்தனையிலேயே அவர்கள் வெகுவாக மூழ்கி, தங்களை ஒளித்துக்கொள்ள வீணாக பிரயாசப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். அத்தியிலை மூலமாக அவர்கள் தெரிவித்த எதிர்ப்பையும், நம்முடைய நிலையையும் நாம் பார்க்க வேண்டும்.

தெய்வீக நீதி!

கடவுள் மூன்று பிரதான குற்றவாளிகளையும் தமக்கு முன்பாக நிறுத்தி, அவர்களின் பொறுப்பாளியாகிய ஆதாமை விசாரிக்கிறார்: நம்முடைய ஆதிப்பிதா கூறுகின்ற விளக்கத்தை ஆதி. 3:12ல் பாருங்கள். அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள். நான் புசித்தேன் என்றான். இதைக் கேட்கிற நமக்கு, “பாவம் ஆதாம். அவனை மாட்ட வைத்துவிட்டார்களே. எங்கிருந்தோ வந்த அந்த தந்திரமான சர்ப்பம் அவனை தன் வலைக்குள் விழ வைத்துவிட்டதே, அவன் என்ன செய்வான்!” !” என்று ஆதாமின் மீது பரிதபிக்கத் தோன்றும். பாவத்திற்கும் வீழ்ச்சிக்கும் சாத்தான்தான் ஆதி காரணமானவன் என்பதை நாம் ஆணித்தரமாக கூறத்தான் வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதில் ஆதாமின் அக்கிரம செய்கையும் இருக்கிறது என்பதை மறைக்கக்கூடாது. 12ம் வசனத்தில் ஆதாம் சொல் வதை மறுபடியும் கவனியுங்கள். அவனுடைய கரம் யாரைக் குற்றப்படுத்து கிறது என்பதை பாருங்கள். என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த (கடவுளைப் பார்த்து ஒரு கரத்தை நீட்டி) ஸ்திரீயானவள் (மறுகரத்தை மனுஷியின் பக்கம் நீட்டி) அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்.

ஸ்திரீயானவள் . . . எனக்குக் கொடுத்தாள். இதற்குத்தான் அடுத்தவர் மீது பழி போடுவது என்று பெயர். ஆதாம் விவாகரத்துப் பெறும் முயற்சியில் இருக்கிறான். அவளிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டவனாக, அதிகாரிகளின் முன்னால் நின்று கொண்டு, “எனக்குத் தெரியாது. அவளைக் குறித்து இனிமேல் நான் பொறுப்பேற்கப் போவதில்லை. அவள் என் மனைவியல்ல. அங்கே நிற்கிற அந்த ஜந்து, யாரோ ஒரு மனுஷியாகும்” என்கிற தோரணையில் விளக்கம் கொடுக்கிறான். ஆதாம் அவளுக்கு மரித்தவனானான்; அவளையும் மரித்தவளாகக் காண்கிறான். நீர் மரணதண்டனை அளிக்கப் போகிறீரா தேவனே! அதோ, அந்த மனுஷிதான்! இதினிமித்தமாக யாராவது மரணமடைய வேண்டுமானால் அதை அவளுக்குத்தான் கொடுக்க வேண்டும். அது மாத்திரமல்ல. அவளை எனக்குக் கொடுத்ததே நீர்தான் என்பதையும் சிந்தித்துப் பாரும். ஆகவே இவை யாவும் நடந்ததற்கு உம்மைத்தான் குற்றப்படுத்த வேண்டும்.” என்ன துணிகரமான அக்கிரம பேச்சு! ஆதாம் ஆழமான மரணகுழிக்குள்ளாக விழுந்துவிட்டான். கடவுளிடமிருந்தும், அவருடைய நோக்கங்களிலுருந்தும் மிகவும் தள்ளிப் போய்விட்டது மாத்திரமல்லாமல், தான் செய்த பாவத்திற்கு கடவுளையே காரணங்காட்டி குற்றப்படுத்தும் அளவுக்கு அவன் அவருக்கே விரோதமாக செயல்படுகிறான். தான் செய்த பாவத்திற்கு மற்றவர்களைக் குற்றப்படுத்திய பிறகு, போனால் போகிறதென்று, நான் புசித்தேன் என்று தான் செய்ததையும் பட்டும்படாமலும் அறிவித்துக்கொள்ளுகிறான். மனுஷியும் அதேவிதமாக குற்றத்தை அடுத்தவர் மீது சுமத்தியபிறகு, தான் புசித்ததையும் அறிவித்துக்கொள்ளுகிறாள். ஆனால் அவள் ஒரு காரியத்தை சரியாக சொல்லுகிறாள். வஞ்சனைக்கு காரணமான சர்ப்பத்தை கடவுளிடம் காண்பித்துக் கொடுக்கிறாள். இதை ஆதாம் குறிப்பிடவில்லை. ஆதாம் தன் பேச்சின் மூலமாக தன்னை சாத்தானுடைய குணங்களைக் கொண்டவனாகக் காண்பிக்கிறானேயொழிய, தேவசாயலை அவன் பிரதிபலிக்கிறவனாக காணப்படவில்லை. கடவுள், அவ்விருவரையும், சாத்தானையும், அதன் தூதர்களையும் சேர்த்து அப்போதே அக்கினிக் கடலில் தள்ளியிருந்திருப்பாரேயானால் சட்டத்தின்படி அவர் ஒரு சிறந்த நியாயாதிபதியாக இருந்திருப்பார். அவர்கள் இருவரும் தங்களை கடவுளோடு நெருங்கிய சம்பந்தம் உள்ளவர்களாக எண்ணுவதைவிட சாத்தானோடு உறவு வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வமுடையவர்களாகக் காணப்படுகிறார்கள். கடவுளுடைய உண்மையான வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைப்பதைவிட சாத்தானின் பொய்பேச்சுகளில் அதிகமான நம்பிக்கை வைக்கிறார்கள். பாவம் செய்துவிட்டு எப்படியாவது தப்பித்து விடலாம் என்று நம்புகிறார் களேயொழிய அதன்காரணமாக மரிக்கத்தான் வேண்டும் என்கிற வார்த்தைகளை நம்பவில்லை. தாங்கள் வேறுவிதமான நம்பிக்கை வைக்கும் படி தங்களுக்கென கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டு, பொய்களை நம்புகிறார்கள். பாவம் உருவானதின் காரணமாகத் தான் அவர்கள் தங்களை நிர்வாணிகளாக உணர்ந்து, அத்தியிலைகளைக் கொண்டு தங்களிடையே மரணபிரிவினையை ஏற்படுத்திக் கொண்டார் கள். அவர்கள் தங்கள் குற்றத்தை அரைகுறையாகத்தான் ஒப்புக் கொள்கிறார்கள். இருந்தாலும் அவர்களின் குற்றத்திற்குக் கொடுக்கப்பட வேண்டிய தண்டனையை கொடுத்தே ஆவது கடவுளின் நீதியான நியாயத்தீர்ப்பு.

தெய்வீகக் கிருபை!

ஆனால் கடவுள் அந்தத் தோட்டத்திற்குள்ளே வந்து அந்த தம்பதிகளை அழைத்தது அவர்களை அழித்துப் போடுவதற்காக அல்ல, அவர்களைக் காப்பாற்றவே! ! தான் எவ்வளவு இரக்கமுள்ளவர் என்பதை அவர் அங்கு அவர்களுக்கு வெளிப்படுத்தினார். சிருஷ்டிப்பு முற்றிலும் அழிந்துவிடாமல் பார்த்துக் கொண்டார். தான் முன்னால் திட்டமிட்டபிரகாரமே, மனிதனுக் கும் மனுஷிக்கும் கொடுத்த வேலையை அவர் எடுத்துப் போடாமல் அதை நிலைக்கச்செய்தார். ஆனால் கடவுள் கூறியிருந்த பிரகாரமே மரணம் அங்கு பிரவேசித்துவிட்டது. நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்ளுகிறவர்களாக இருக்கக் கூடாது. மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். மனிதன் கீழ்ப்படியாமல், விலக்கப்பட்ட பழத்தைத் தின்றான். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன் (ரோமர் 6:23). விழுந்து போன மனுக்குலத்திற்கு தேவனுடைய இலவசமான கிருபைவரம் அளிக்கப்பட்டிருக்கிறது. பாவக்குற்றமுடையவனாகவும், மரணத்தில் அமிழ்ந்திப் போனவனாகவும், சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட வனாகவும் அவன் காணப்படுகிறான்.

ஆதி. 3:15-16ல் தேவன் மனுஷியிடம் பேசின கிருபையுள்ள வார்த்தைகளை கவனியுங்கள்: உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்கு வார். நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப் பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய். உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும். அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார். கடவுள் அந்த இக்கட்டான சூழ்நிலையில் தலையிடுகிறார். மரணத்தினிமித்தமாக சிருஷ்டிப்பு அழிந்துபோய்விடாதபடிக்கும், பாவத்திற்குரிய தண்டனையை பெற்று மனிதகுலம் அழிந்துவிடாத படிக்கும் ஒரு திட்டத்தோடு அச்சூழலில் குறுக்கிடுகிறார். ஸ்திரீயானவள் சாத்தான் சொற்கேட்டு, அதற்கு உடன்பட்டு, சாத்தானோடு ஐக்கியமாகி விட்டபோதிலும், அந்த ஐக்கியத்தை தேவன் அறுத்துவிடுகிறார். அவள் இனி தொடர்ந்து சாத்தானோடு சேர்ந்துவிடாதபடிக்கு, மனிதனோடுள்ள ஐக்கியத்தில் அவள் தொடர்ந்து இருக்கும்படிக்கு தேவன் மீண்டும் அவர்கள் உறவை வலுப்படுத்துகிறார். முதல் பிரசங்கியாக, கடவுள், தானே, வரப்போகிற மேசியாவைக் குறித்து, ஆதாம் ஏவாள் முன்னிலையிலேயே சாத்தானுக்கு தீர்க்கதரிசனமாக அறிவிக்கிறார். கடவுள், மனிதனையும் மனுஷியையும் அழிவிலிருந்து காப்பாற்றி, அவர்களுக்கு நியமித்திருந்த வேலையை பறித்துவிடாமல் அதை தொடர்ந்து செய்ய அனுமதிக்கிறார். விழுந்துபோன மனுக்குலத்திற்கு ஒரு நற்செய்தியையும் அவ்விடத்தில் அறிவித்தார். மனுஷி, தொடர்ந்து மனைவியாகவும் தாயாகவும் இருப்பதற்கு தேவன் அநுக்கிரகம் அளித்தார். அதேபோல மனிதனும் உலகத்தில் பண்படுத்துகிறவனாகவும், பெயரிடுகிறவனாகவும் தன் பணியை தொடர்ந்து செய்வதற்கு அனுமதித்தார்.

இருந்தாலும், மரணம் உலகத்தில் பிரவேசித்ததின் நிமித்தமாக, அது மனிதனுடைய தொழிலிலும், ஸ்திரீயின் கர்ப்பகாலத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடவுள் மனிதனுக்கு நியமித்த வேலையை அவன் தொடர்ந்து செய்வான். ஆனாலும் அவன் அதில் கஷ்டங்களையும், ஏமாற்றங்களையும் சந்திக்க வேண்டியதாயிருக்கும். அதே போல மனுஷியும் அவளுக்கு நியமித்த காரியமாகிய தாய்மைப் பொறுப்பை அவர் தொடர்ந்து அளித்தாலும், அதில் அவள் வேதனையை சந்திக்க வேண்டியதாயிருக்கும் என்று கடவுள் கூறுகிறார். மனிதனின் வருத்தத்தைக் குறிக்க அவர் பயன்படுத்திய அதே வார்த்தையை மனுஷியின் வேதனை யைக் குறிக்கவும் பயன்படுத்தியிருக்கிறார். பெண்ணுக்கு பிரசவ சமயத்தில் பிரசவ வலி ஏற்படுகிறது. போகப்போக வலி கூடிக்கொண்டே போகிறது. வலிகளுக்கிடையில் அவள் என்னத்தை எதிர்பார்க்கிறாள்? இன்னும் அதிகமதிகமான வலியே தொடர்ந்து ஏற்படுகிறது. இதே போல மனிதனும் தனது வேலையின் நிமித்தமாக அநேக வருத்தங்களை தொடர்ந்து சந்திக்க வேண்டியதாயிருக்கிறது. வருத்தத்தின்மேல் வருத்தமே அவனுக்கு மிஞ்சுகிறது. கர்ப்பகாலத்தில் பெண் வேதனையை அனுபவிக்கிறாள். பூமியில் வேலை செய்கிற மனிதன், வருத்தத்தையே அனுபவிக்கிறான். எபிரெய மொழியில் எழுதப்பட்ட ஒரே வார்த்தையை, வேதனை என்றும் வருத்தம் என்றும் நமது மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். வேதனையின் பலனாக அவள் என்னத்தை அடைகிறாள்? ஒன்றுமே யில்லை. பாவத்தில் விழுந்துவிட்ட உலகத்தில் ஏமாற்றங்களையே அனுபவிக்க வேண்டியதாயிருக்கிறது.

பாவத்தில் விழுந்து, மரணத்தின் காரணமாகக் கஷ்டப்பட்டுக் கொண் டிருந்தபோதிலும், கடவுள் நம்மை ஆணாகவும் பெண்ணாகவும் தொடர்ந்து நிலைநிற்கச் செய்து, நமக்கு நியமித்த பணிகளையும் தொடர் ந்து செய்வதற்கு அனுமதித்திருக்கிறார். பாவத்தில் விழுந்த பின்னும் ஆதாமுக்கு பெயரிடுகிற நியமனம் மாறவில்லை. ஆதி. 3:20ல் ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிடுகிறான். மனுஷி என்கிற அவளுடைய பெயரை ஏவாள் என்று மாற்றுகிறான். அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள் என்பது அதற்கு அர்த்தமாம். சர்ப்பத்தின் தலையை நசுக்கப் போகிற ஒருவரை அவள் பெறுவாள் என்கிற கடவுளின் வாக்குத்தத்தத்தை அவன் நம்புகிறான். ஆகவே அவன் மனுஷி என்கிற அவளுடைய பெயரை மாற்றி ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாய் என்கிற நம்பிக்கையின் பெயரைக் கொடுக்கிறான். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அவர் வந்து சாத்தானின் தலையை நசுக்கி, அனைவருக்கும் ஜீவனைக் கொடுப்பார்- அவர் மூலமாக மரணம் ஒழிந்து மீண்டுமாக உலகில் ஜீவன் தலைதூக்கும் என்பதை அவன் விசுவாசித்தவனாக அவளுக்கு ஏவாள் என்று பெயரிடுகிறான். ஏவாளின் மூலமாக ஒருவர் வருவார். அவர் ஜீவனை அளிக்கிறவராக வந்து, சாத்தானின் செயல்களையெல்லாம் அழித்துப்போடுவார். ஆதி. 3:21ல் பிதாவா கிய கடவுளே, தகுதியற்ற இந்த பாவிகளுக்கு சில வேலைகளை செய்து கொடுப்பதைப் பார்க்கிறோம். ஜீவனுள்ள இன்னொரு சிருஷ்டியின் இரத்தத்தை சிந்தி, அதன் மூலமாக இவர்களின் பாவக்கறையை மூடுகிறார். அவர்களுடைய பாவத்தின் காரணமாக ஏற்பட்ட கறையை மூடுவதற்காக தேவன் அவர்களுக்கு ஒரு தோல் ஆடையை தயாரித்ததின் மூலமாக பாவநிவாரணபலியாகிய ஒரு புதிய திட்டம் ஆரம்பமாகிறது. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து உலகத்தில் மனிதனாக வந்து தன்னையே பரிகார பலியாக கொடுக்கும் சமயத்தில் அந்த திட்டம் முற்றிலுமாக முற்றுப் பெறுகிறது. அவருடைய பரிகாரபலி, ஒரு குறைவுமற்றதும், பூரண மானதும், கடைசியானதுமாகும். பாவத்தில் விழுந்து போன தம்பதிகளை கடவுள் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார். கடவுளின் வாசஸ்தல மாக, அவர் பிரசன்னத்தையுடைய ஆலயமாக இருந்த அந்த இடத்தி லிருந்து அவர்கள் துரத்தப்பட்டனர். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த வித்து வந்து, தன்னையே பரிகாரபலியாக செலுத்தி, சர்ப்பத்தின் தலையை நசுக்கி வெற்றி சிறக்குமட்டாக மனிதனுக்கும் தேவனுக்கும் இடைய நீக்க முடியாத ஒரு பெரும் பிளவு ஏற்பட்டுவிட்டது. இயேசு கிறிஸ்துவின் மூல மாகத்தான் மனிதனுக்கு நித்திய ஜீவனுக்குள் பிரவேசித்து, பிதாவினுடைய இளைப்பாறுதலில் பங்கடையக்கூடிய சிலாக்கியம் கிடைக்கும். நாம் ஆதாமை மோட்சத்தில் சந்திப்போமா? சந்திப்போம் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால், மீண்டும் இரட்சிப்பு மனுக்குலத்துக்கு கிடைக்கும் என்கிற விசுவாசத்தினால்தான் ஆதாம் ஸ்திரீயின் பெயரை மாற்றி அவளுக்கு, ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாய் என்கிற அர்த்த முடைய பெயரைக் கொடுக்கிறான். அவனும் பாவத்தில் விழுந்து போன வன்தான். ஆனாலும் கடவுளின் வாக்குத்தத்தமாகிய வித்தை இயேசு கிறிஸ்துவை) விசுவாசித்தான். பரலோகத்தில் இருக்கிறவர்கள் யாவருமே, இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவன் தங்களுக்கு கிருபையாக அளித்த இரட்சிப்பை விசுவாசித்தவர்களாகவே இருப்பார்கள்.

[இதன் மறுபாகத்தை அடுத்த இதழில் வாசிக்கலாம்.]

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.