திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2009 -ம் ஆண்டு நான்காம் இதழ்

1. வாசகர்களே!

2. தாம்பத்திய உறவில் நெருக்கம்

3. கிறிஸ்தவக் கோட்பாடுகள்

4. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது

5. மதிப்புக்குரிய ஜோன் வெயிட்

6. பிரியாவிடை பிரசங்கங்கள் -1

 

வாசகர்களே!

கர்த்தரின் அளப்பரிய கிருபையினால் வாசகர்களுக்கு தொடர்ந்து திருமறைத்தீபத்தை அளித்து வர முடிவது எங்களுக்கு நிறைந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஒவ்வொரு முறையும் எங்காவது பழைய, புதிய வாசகர்களை சந்திக்கின்ற போது, அவர்கள் பத்திரிகை யின் மூலம் அடைந்து வருகின்ற பலன்களை அவர்களுடைய வாயால் கேட்கிறபோது எங்களுடைய பொறுப்பு மேலும் அதிகமாகிறதைத்தான் நாங்கள் உணர்கிறோம். அவசியமான சத்தியங்களை சிறிதும் தவறின்றி விளக்கி எழுதவும், அத்தகைய சத்தியங் களை விளக்கிப் போதிக்கின்றவர்களுடைய ஆக்கங் களை இதில் தொடர்ந்து வெளியிடவும் கர்த்தர் எங்களுக்கு எப்போதும் துணை நிற்க ஜெபிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த இதழில் தாம்பத்திய உறவு பற்றிய அலன் டன் அவர்களின் ஆக்கம் தொடர்கிறது. போதகர் அல்பர்ட் என். மார்டினுடைய பிரியாவிடை பிரசங்கங்களில் முதலாவதைத் தந்திருக்கிறோம். இதைத் தமிழாக்கம் செய்துள்ள வினோதா சுரேந்தருக்கு நன்றி. சீர்திருத்த சத்தியத்தைக் கற்றுக் கொள்ள இருக்கும் ஆர்வம் அதை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவதில் இல்லாவிட்டால் எந்தப் பலனுமில்லை என்பதை விளக்கும் ’ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது’ என்ற ஆக்கத்தையும் தந்திருக்கிறேன். தெரிந்திருப்பது கொஞ்ச சத்தியமாக இருந்தாலும் அது நிறைவாக வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் வல்லமையோடு காணப்பட வேண்டும் என்பதை வேதம் வலியுறுத்து கிறது. சத்தியம் வெறும் பேச்சில் மட்டும் அடிக்கடி வந்து போகக் கூடாது. ‘சீர்திருத்த வார்த்தை ஜாலம் செய்கிறவர்கள்’ என்ற நெஞ்சைச் துளைக்கும் குற்றச்சாட்டுக்கு நாம் ஆளாகிவிடக்கூடாது.

சத்தியத்தை அறிவதில் நாம் காட்டும் ஆர்வத்தை கிறிஸ்துவில் தாழ்மையோடு வாழ்வதிலும், வளர்வதிலும் காட்ட வேண்டும் என்ற ஆதங்கத்தோடு இதை உங்கள் முன் வைக்கிறேன். இவற்றோடு தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியின் தலைவராக இருந்த, மறைந்த திரு. ஜோன் வெயிட் அவர்களின் நினைவு ஆக்கமும் வந்திருக்கிறது. கர்த்தர் இந்த இதழின் மூலம் உங்களுக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத் தர ஜெபிக்கிறோம். - ஆசிரியர்.

 

தாம்பத்திய உறவில் நெருக்கம்

அதிகமதிகமாக வழிவிலகுதல்!

மோசே, மனிதனின் சரித்திரத்தை விவரிக்கையில் ஏவாளை, ஆதாமின் மனைவியாகவே விஸ்தரிக்கிறார். வீழ்ச்சிக்கு முன்பாக மனுஷனும் மனுஷியும் திருமணம் ஆனவர்களாகவே காணப்பட்டார்கள் (ஆதி. 2:25). மனுஷன் தலைமைப் பொறுப்பை வகிக்கிறவனாக இருந்தான் (ஆதி. 2:23). அவர்கள் பாவத்தில் விழுந்த நேரத்திலும் அவர்களை கணவன் மனைவியாகவே விவரிக்கிறார் (ஆதி. 3:20). ஆதி. 3:9ல் ஆதாமை தேவன் அழைத்து விசாரிப்பதின் மூலமாக அவனுடைய தலைமைப் பொறுப்பு வெளிப்படுகிறது. பாவத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அவர்கள் அத்தியிலை களைக் கொண்டு தங்களை ஒருவரிடமிருந்து ஒருவர் பிரித்துக் கொண்ட போதிலும், மோசே அவர்களுடைய உறவை கணவன் -மனைவியாகவே குறிப்பிடுகிறார் (ஆதி. 3:16,17,20,21). மனுக்குலத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையும் ஆதாமை பிரதிநிதியாக வைத்தே அளிக்கப்படுகிறது. அவனுடைய தலைமைப் பொறுப்பு அகற்றப்படவில்லை. ஆகவேதான் அவன் வீழ்ச்சிக்குப் பிறகும்கூட பெயர் வைக்கிற தகுதியை உடையவனாக ஸ்திரீக்கு ஏவாள் என்று பெயரிடுகிறான். பொய்களும், எதிர்ப்பும், மரணமும் அங்கு தலைவிரித்தாடிய போதும், தேவன் தாம் சிருஷ்டிப்பை படைத்ததின் நோக்கத்தை மாற்றவில்லை. ஆனால் பாவத்தின் காரணமாக சகல சிருஷ்டிப்புகளும் மரணத்திற்குள்ளாகி விட்டது. திருமணமும் மரணத்தால் தீண்டப்பட்டுவிட்டது. அதன்காரணமாக, கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்ட தம்பதிகளிடையே இருக்க வேண்டிய ஐக்கியம் அழிந்து போகிறதான பயங்கர நிலை உருவாகிவிட்டது . உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும். அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்று ஆதி. 3:16ல் வாசிக்கிறோம். பாவம் வாசற்படியில் படுத்திருக்கும். அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும். நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்று ஆதி. 4:7ல் படிக்கிறோம். இந்த இரண்டு வாக்கியங்களையும் மூலபாஷையாகிய எபிரெய மொழியில் பார்க்கும்போது இரண்டும் ஒரேவிதமான இலக்கணத்தைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆதி. 3:16ல் மோசே, பாவத்திற்கு பின்னாக திருமண வாழ்வில் ஏற்பட்ட ஒரு குழப்பமான நிலையை விவரிக்கிறார். திருமண ஐக்கியத்தை கடவுள் நீக்கிப்போடவில்லை; அவரவருக்கு நியமித்த வேலைகளையும் நீக்கிவிடவில்லை என்பதை அவ்வசனம் மூலமாக நாம் அறிந்து கொண்டாலும், திருமணபந்தத்திலும் மரணம் ஒருவிதமாக பிரவேசித்து விட்டது. இப்போது அதில் துயரங்களும் ஏமாற்றங்களும் நுழைந்துவிட்டது. மரணம் நுழைந்ததின் காரணமாக, ஒருமையை பிரதிபலிக்க வேண்டிய தம்பதியரிடையே போட்டிகளும், பூசல்களும், மாறுபட்ட கருத்துகளும், சண்டைசச்சரவுகளும் ஏற்படலாயிற்று. யாருக்கு தலைமைப் பொறுப்பு என்பதைக் குறித்து அபிப்ராய பேதங்கள் தோன்றலாயின. இந்த காரியம்தான் இப்போதும் திருமண தம்பதிகளாகிய நம்மையும் பாதிப்பதாக இருக்கிறது: திருமண வாழ்க்கையில் யார் தலைமைப் பொறுப்பு எடுத்து நடத்துவது? இப்படியான வழிவிலகுதல்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறதை நாம் நமது வாழ்க்கை முறைகளில் அனுபவிக்கிறோமல்லவா!

ஸ்திரீயை படைப்பதற்கு முன்னதாகவே, கடவுள் ஆதாமுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை கொடுத்திருந்தார். பாவம் செய்ததின் தண்டனையாகத்தான், கடவுள், ஆதாமை பெண்ணின்மீது அதிகாரியாக வைத்தார் என்று சில வேத மாணாக்கர்கள் கூறுவதுண்டு. அது பாவத்திற்கு பிற்பாடு விதிக்கப்பட்ட நிலைமை என அவர்கள் நினைப்பார்கள். ஆணுக்குக் கொடுக்கப்பட்ட தலைமைப் பொறுப்பை, பெண்ணுக்கு கடவுளால் அளிக்கப்பட்ட தண்டனையாக எண்ணுவதற்கு இடமில்லை. சிருஷ்டிப்பில், ஆணுக்கு அளிக்கப்பட்ட தலைமைப் பொறுப்பு, கடவுளாலேயே தெய்வீகமானதாக ஏற்படுத்தப்பட்டதால் பெண்ணுக்கு அது ஓர் ஆசீர்வாதமான நிலையேயாகும். ஜீவராசிகளுக்கு பெயரிட்டு, அவைகளை ஆண்டுகொள்வதின் மூலமாக ஆதாம் தனது தலைமைப் பொறுப்பை நிறைவேற்றினான். கடவுள் முதன்முதலாக ஸ்திரீயை அவனிடம் அழைத்துக் கொண்டு வந்துபோதும், அவன் வெகு இயல்பாக தன் தலைமை வகிக்கும் குணத்தை செயல்படுத்தினான். அவள் தன் எலும்பில் எலும்பு என்பதை சொல்லாமலேயே உணர்ந்துகொள்கிறான். அவளை போஷித்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறதென்பதையும் அறிந்துகொள்கிறான். அவன் வாயிலிருந்து இயல்பாக வந்த வார்த்தைகள் அவனுடைய தலைமை வகிக்கும் குணத்தை காண்பிக்கிறது. பாவத்திற்கு முன்னதாக ஆதாமின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் மூலமாக கடவுளின் சாயல் அவனில் பிரதிபலிப்பதை நாம் காண்கிறோம். ஆனால் சாத்தான் அவனுடைய தலைமை வகிக்கும் குணத்தையும், கடவுளின் சாயலை பிரதிபலிப்பதையுமே குறி வைத்து அடித்து விட்டான். ஆதாம் பெண்ணை தனிமைப்படுத்திவிட்டான்; கடவுளையே எதிர்கேள்வி கேட்கிறவனாகிறான். பெண்ணின் மீதும், கடவுளின் வார்த்தைகளின் மீதும் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நிர்வாகப் பொறுப்பை, கடவுள், இந்த உலகத்திலும் தொடர்ந்து அளித்திருக்கிறார். ஆனால், அழியாமல் விட்டுவைக்கப்பட்டிருக்கிற இந்த உலகமும் பாவத்தினால் வீழ்ச்சியடைந்த உலகம்தான். கடவுள், பிரிந்து நின்ற ஆதிப் பெற்றோரை மீண்டுமாக ஒன்று சேர்த்தார். ஆனால் அவர்களுடைய திருமணபந்தமோ மிகவும் எளிதில் உடைந்து போகக் கூடியதாகவும், சேதப்படக்கூடியதாகவும், பாவம் மரணம் என்பவைகளால் பாதிப்படையக்கூடியதாகவும் ஆகிவிட்டது.

இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற உலகம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டது; ஆனால் மரணத்தினால் பாதிப்புக்குள்ளானது; அது, கடவுளின் கிருபையினால் அழியாமல் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக் கிறது. கடவுள் இன்றும் சிருஷ்டிப்பில் நியமித்த மாதிரியான திருமணபந்தத்தையே கட்டளையிட்டிருக்கிறார். ஆனால் இந்த பாவ உலகில் நாம் வெகு சுலபமாக அந்த நியமனத்தை மீறக்கூடியவர்களாக இருக்கிறோம். பாவத்தினால் பாதிப்பிற்குள்ளான இரண்டு பாவிகள் திருமணம் செய்கிறார்கள். பாவத்தினால் மரணநிலைமைக்குள்ளாகி விட்டபடியால் அது தங்களைப் பிரித்துவிடாதபடிக்கு கஷ்டப்பட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். நெருக்கமான ஐக்கியம் இல்லாத அந்த உறவில் கடவுளின் திரியேக தத்துவம் அரைகுறையாகத்தான் வெளிப்படுகிறது. யார் தலைமை தாங்குவது, யாருக்கு என்ன உரிமை இருக்கிறது, நீயா-நானா, எனது-உனது போன்ற காரியங்களே திருமண பந்தத்தை பலவீனப்படுத்துவதாயிருக்கிறது. வேதத்திற்குப் புறம்பான தாகவும், வெறுமனே அதிகாரம் மாத்திரம் செலுத்துவது என்றும் வரும்போது திருமண உறவே தலைகீழாகி கோணலாகிப் போய்விடுகிறது. தவறுதலான வழிகளில் தலைமை வகிக்க முயற்சிக்கும்போது அது திருமணத்தின் நோக்கத்தையே திசை திருப்பிவிடுகிறது.

இரண்டுவிதமான விபரீதங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்பட் டிருக்கிறது. இவைகளை நான் “உச்சகட்ட விபரீதம்” என்றும் “தலைகீழ் விபரீதம்” என்றும் குறிப்பிட விரும்புகிறேன். இந்த உச்சகட்ட விபரீதத்தில், ஆண் தனது தலைமைப் பொறுப்பை மிதமிஞ்சி எடுப்பவனாகவும், பெண் தனது கீழ்ப்படிகிற கட்டளையை தவறுதலாக அளவுக்கதிகமாக கடைப்பிடிப்பவளாகவும் காணப்படுகிறது. அவன் தனது தலைமைப் பொறுப்பை ஒரு சர்வாதிகாரியைப் போல செயல்படுத்தப் பார்க்கிறான். அவளோ தன்னையே அழித்துக்கொள்ளும் அளவுக்கு கீழ்ப்படியப் பார்க்கிறாள். ஆண் தன்னை சகலத்தையும் ஆளுகிறவனாக நினைக்கிறான்; பெண் தன்னை ஒன்றுமேயில்லாதவளாக கருதுகிறாள். அவன் தன்னுடைய பெலத்தைப் பிரயோகித்து அவளை அடக்கி ஒடுக்கி ஆளப்பார்க்கிறான். அவளோ அந்த ஆளுகையில் தனது பெண்மைக்குரிய குணநலன்களையுங்கூட இழந்து வெறும் மண்ணைப் போல இருக்கிறாள். இந்த மாதிரியான உச்சகட்ட விபரீதங்களை நாம் கீழை நாட்டு திருமணங்களில் காணலாம். அங்கு புருஷர்கள் ஒரு கொடுங்கோல் அரசனைப் போன்று தங்கள் மனைவிகளை அரட்டி, மிரட்டி ஆளுவதைக் காணலாம். சிலபேர் தங்கள் மனைவிகளை அடிப்பதுங்கூட உண்டு. அங்கு புருஷர்களுக்கு அளவுக்கதிகமான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவன் அதை தன் இஷ்டம் போல பிரயோகிக்கிறான். அன்போ அல்லது கணக்குக் கொடுக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியோ இல்லாது தன் அதிகாரத்தை தன் சுயஇஷ்டத்தின்படி மனைவி மீது காட்டுகிறான். மனைவியும் தன்னை மிகவும் கீழானவளாக எண்ணிக்கொள்ளுகிறாள். அவள் தனக்கென சுய விருப்பு வெறுப்பு எதுவுமில்லாத ஒரு பிணத்தைப் போன்ற வாழ்க்கையை நடத்துகிறாள். அவனுக்கு முன்பாக தான் எதுவுமேயில்லை என்கிற திரையைப் போட்டுக் கொண்டு தன்னையே அதன் பின்னால் ஒளித்துக்கொள்கிறாள்.

இதற்கு நேர்மாறாக திருமண வாழ்க்கையின் அர்த்தத்தையே மறுபுறமாக மாற்றி அமைப்பதையே நான் “தலைகீழ் விபரீதம்” என்று குறிப்பிடுகிறேன். இங்கு கணவன் தனது தலைமைப் பொறுப்பை கைவிட்டுவிடுகிறான். மனைவி அதை அபகரித்துக் கொள்ளுகிறாள். இது, மேலை நாட்டு திருமண வாழ்க்கையில் சர்வசாதாரணமாகக் காணப்படும் தவறான காரியமாகும். திருமணத்தில் ஆண், பெண்ணுக்குரிய கடமைகளை மாற்றினோமானால் அது கடவுள் நியமித்த வாழ்க்கையாகாது. ஒரு பெண்ணே குடும்பத்தில் பெற்றோராகி, இருவரது ஸ்தானத்தையும் வகிப்பது போலாகிவிடும். பெண் குடும்பத்தில் வீட்டுக்காரியங்களை கவனித்து அவைகளை நடத்துவதால் அவள் அதை ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து நடத்துகிறவளாயிருக்கிறாள். தலைமைப் பொறுப்பு எடுக்காத கணவனை, அவள், ஒரு தாய் தன் முதிர்ச்சியடையாத மகனைப் பராமரிப்பது போல வழிநடத்த வேண்டியதாகிறது. சிறுவனைப் போல அவன் தன் மனைவியிடம் அனுமதி வேண்டி நிற்கிறான். அப்போது அவளும் ஓர் அதிகாரியைப் போல செயல்பட வேண்டியதாயிருக்கிறது. அதன்மூலமாக அவள் ஆளுகை செய்யும் அதிகாரத்தை அடைகிறாள். இந்த ஏற்பாடு அவர்களுக்கிடையே வசதியாக இருப்பதுபோலத்தான் தோன்றுகிறது. ஆனால் முடிவில் அத்தகைய திருமண வாழ்க்கை மதிப்பை இழந்துவிடுகிறது. தான் ஒரு முதிர்ச்சியடைந்த ஆணை திருமணம் செய்ய வில்லை, ஒரு வளர்ந்த பையனைத்தான் திருமணம் செய்திருக்கிறோம் என்கிற ஆத்திரம் அவளுக்கு பிற்பாடு ஏற்படுகிறது. அவனுக்கும், தன்னை அவள் ஓர் ஆணாக மதிக்க மாட்டேனென்கிறாளே என்கிற ஆதங்கம் மேலிடுகிறது. உண்மையில் சொல்லப்போனால் அவன்தான் இன்னும் சரியான ஆணாக நடந்துகொள்ளவில்லை.

அவரவருக்கு கடவுள் விதித்த அலுவல்களை நாம் மாற்றும்போது, நாம் திருமணத்திற்குள்ளாக மரணத்தை கொண்டுவருகிறவர்களாக இருக்கிறோம். அதனால் நெருங்கிய ஐக்கியம் மரித்துப் போகிறது. நமது திருமண வாழ்வின் மூலமாக கடவுளை மகிமைப்படுத்த வேண்டியதும் செத்துவிடுகிறது. இந்த மாதிரியான உருக்குலைந்த திருமண வாழ்க்கையில் பாவம் நிலைகொள்ளுகிறது. பாவம், நெருங்கிய ஐக்கியம் ஏற்படவிடாமல் தடுக்கிறது. இந்த பாவத்தை சுவிசேஷத்தின் மூலமாக ஏற்படும் அன்பினால் மேற்கொள்ள வேண்டும். அதுவே நமது மீட்பின் கோட்பாடாகும். அதை நாம் இப்போது நான்காவது வழிகாட்டும் நட்சத்திர குறிப்பு மூலமாக விளங்கிக்கொள்ளப் போகிறோம்.

  1. மீட்பின் கோட்பாடு, விவாகத்தில் நெருக்கமான நட்பைப் பெற வழிகாட்டுகின்றது

திருமண உறவின் மூலமாக சுவிசேஷத்தை அறிவித்தல்

மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்கு கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு, தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக் கொடுத்தார். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்த சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான். நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற் கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம். இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும்விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப் பற்றியும் சொல்லுகிறேன். எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக் கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள் (எபே 5:22-33).

சுவிசேஷத்தின் பிரகாரமான திருமணத்தைக் குறித்து நாம் விளக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. நமது திருமணம், கிறிஸ்துவுக்கும் சபைக்குமுள்ள உறவை சுட்டிக் காண்பிப்பதாயிருக்க வேண்டும். நமது திருமணத்தில் “சுவிசேஷத்தின்படியான படியான அன்பை” வெளிப்படுத்துகிறவர் களாய் இருக்க வேண்டும். மீட்பின் திட்டத்திற்கேற்ப நமது திருமணத்தை மாற்றி அமைக்க வேண்டும். இயேசு தன் மணவாட்டியின்பேரில் கொண்ட அன்பே மீட்பின் அன்பாகும். அவர் தம் மணவாட்டியை மிகவும் நேசித்தார். ஆகவே அதற்காகத் தம்மையே ஒப்புக் கொடுத்தார். தம் மணவாட்டியை கறைதிரை ஒன்றுமில்லாமல் பரிசுத்தமாக்க சித்தம் கொண்டார். வசனத்தைக் கொண்டு மணவாட்டியை சுத்தப்படுத்தி, தமக்கு முன்பாக மகிமையானதும் பிழையற்றதுமாக நிறுத்திக்கொள்வதற்காக தம்மையே அதற்காக அர்ப்பணித்தார். இந்தவிதமான அன்பு எப்பேர் பட்டதாயிருக்கிறது! உலகத்தில் பாவக்கறை படிவதற்கு முன்னதாக வாழ்ந்த முதலாவது தம்பதியின் பரிசுத்தமான அன்பை புதிய ஏற்பாட்டின் மூலமாக அப்போஸ்தலர் நமக்கு சுட்டிக் காண்பிக்கிறார். கிறிஸ்தவ திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை எபே. 5:31ல் எடுத்துக் கூறுகின்ற பவுல் அப்போஸ்தலன் அதற்கு இணையான வசனமாக ஆதி. 2:24ஐ மேற்கோள் காட்டி விளக்குகிறார். ஆதியாகமம் 2ம் அதிகாரத்தை நாம் திரும்பிப் பார்க்கின்ற அதே வேளையிலே நாம் நமக்காக வைக்கப் பட்டிருக்கிற எதிர்காலத்தையும் நோக்குகிறவர்களாய் இருக்கிறோம். ஆரம்ப காலங்களை நாம் பார்க்கிறோம். அதே வேளையிலே சபை மீட்பையும் காண்கிறோம். பாவமற்றதாக ஆக்கப்பட்ட சபையானது, மணவாட்டியாக இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவுக்கு அளிக்கப்படவிருப்பதையும் உணருகிறோம். ஆதியாகமம் 2ம் அதிகாரத்தைப் பார்க்கிற வேளையிலேயே கடவுள் தம்முடைய மக்களுக்காக ஏற்படுத்தி வைத்திருந்த மீட்பின் திட்டத்தையும் காண்கிறோம். ஆரம்பத்தைப் பார்த்து முடிவையும் தெரிந்துகொள்ளுகிறோம். மீட்பின் நோக்கத்தோடுதான் கடவுள் மனிதனைப் படைத்திருக்கிறார் என்பது விளங்குகிறது. தேவன், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே . எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் . என்று பவுல் எபே. 3:9,10ல் குறிப்பிடுகிறார். கடவுளின் அநாதி தீர்மானமாகிய மீட்பின் திட்டம், சிருஷ்டிப்பின் ஆரம்பநிலையிலேயே தெரிகிறது. பாவமில்லாத நிலையில் பரிசுத்தமான அன்பை வெளிப்படுத்திய அந்த ஆதிப் பெற்றோர்தான் கிறிஸ்துவுக்கும் சபைக்குமுள்ள பரிசுத்த ஐக்கிய நிலைக்கு உவமையாக காணப்படுகிறார்கள். பவுல் இந்த இரகசியம் பெரியது என்று குறிப்பிடுகிறார். இந்த இரகசியத்தைதான் கிறிஸ்தவர் களாகிய நாம் நமது திருமண வாழ்க்கையின் மூலமாக காண்பிக்க வேண்டும்.

மகிமையை அறிவிக்கும் அடையாளக் குறிப்பு!

சுவிசேஷத்தின் மூலமாக விளக்கப்பட்டுள்ள திருமணமே, கடவுள் ஆதியிலே மனிதன் பாவத்திற்கு முன்னதாக வாழ்ந்த திருமண வாழ்க்கைக்கு ஒத்ததாக இருக்கிறது. அவர் ஆரம்பத்தில் ஏற்படுத்தி, பிற்பாடு பாவத்தின் காரணமாக அழிந்துபோன திருமண வாழ்க்கையை அவர் சுவிசேஷத்தின் மூலம் மீண்டுமாக காப்பாற்றுகிறார். சுவிசேஷத்தைக் கொண்டு அந்த திருமண வாழ்க்கையை மீட்க சித்தங்கொண்டார். இரண்டு கிறிஸ்தவர்கள் திருமணம் செய்துகொள்ளும்போது அவர்கள் திருமண உறவைக் குறித்து கடவுள் ஏற்படுத்தியிருந்த கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறார்கள். புதுசிருஷ்டிகளாக அவர்கள் திருமண வாழ்க்கையை நடத்துகையில் திருமணத்தை அவர்கள் மேன்மைப்படுத்துகிறவர்களாய் விளங்குகிறார்கள். உயிரோடெழுந்த இயேசு கிறிஸ்துவின் ஜீவனைக் கொண்டும், பரிசுத்த ஆவியானவரின் உதவியினாலும் திருமண உறவை பூரணப்படுத்துகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவன் அவர்களுக்கிடையே அன்பை பெருகப்பண்ணுகிறார்; அதை அவர்கள் சுவிசேஷத்தின் மூலமாக விளங்கிக்கொள்ளுகிறார்கள். இந்த “சுவிசேஷ அன்பை” அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் உதவியினாலும் சுவிசேஷத்தின் மூலமாகவும் அவர்கள் திருமண ஐக்கியத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய பாவங்களை மேற்கொள்ளுகிறார்கள்.

அத்தகைய சுவிசேஷ அன்பை அடைந்த தம்பதிகளாக நாம் ஆதி. 2:24ஐ பார்க்கும்போது, நம்முடைய எதிர்காலத்துக்கு வைக்கப்பட்டுள்ள மீட்பின் நிச்சயம் விளங்குகிறது. நமது மீட்பரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதற்கு நமது திருமணமும் ஒரு சாதனமாக அமைகிறது. நமது திருமணம் சிருஷ்டிப்பின் ஒழுங்கை காண்பிப்பதோடு மாத்திரமல்லாமல், இரட்சிப்பைக் குறித்த நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாய் இருக்கிறது. நமது திருமணத்தின் மூலமாக கடவுளின் சிருஷ்டிப்பின் நோக்கம் பிரதிபலிக்கப்படுகிறது. இயேசு தமது சகல மகிமையோடும் தமது சபையை சந்திக்க ஆவலோடு வருவார் என்கிறதான காரியத்தை நமது திருமண வாழ்க்கை பிரதிபலிக்கிறது. அவர் மூலமாகவே நாம் யாவரும் சிருஷ்டிக்கப்பட்டு, அவராலேயே நாம் மீட்கப்பட்டும் இருக்கிறோம். நமது திருமண வாழ்க்கையை அவர் ஏற்படுத்திய சித்தத்தின்படி செய்யும்போது அதை நமது சொந்த முயற்சியினால் அல்ல, உயிரோடெழுந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையினாலும் ஜீவனினாலுமே அதை நடத்துகிறோம். நாம் ஒருவரிலொருவர் சுவிசேஷ அன்பினைக் காட்டும்போது, கிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் தமது மணவாட்டி யினிமித்தமாக வென்றதை காண்பிக்கிறவர்களாக இருக்கிறோம். அத்தோடுகூட வரப்போகின்ற காலத்தை “தீர்க்கதரிசனமாக” நமது திருமண வாழ்வின் மூலமாக அறிவிக்கிறவர்களாகவும் இருக்கிறோம்.

கிறிஸ்து, சபையாகிய தமது மணவாட்டியை சந்திக்க வரப்போவதை ஒவ்வொரு கிறிஸ்தவ திருமணமும் காண்பிப்பதாய் இருக்கிறது. அதை யோவான் அப்போஸ்தலன் தனது தரிசனத்தில் கண்டதை நாம் வெளிப்படுத்தின விசேஷத்தில் வாசிக்கிறோம்: பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின; சமுத்திரமும் இல்லாமற் போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல் ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும் பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனா யிருப்பார் (வெளி. 21:1-3).

மணப்பெண் தயாராகிவிட்டாள். திருமண ஒப்பந்தம் பூர்த்தியாயிற்று. சதாகாலமும் கடவுளோடு நிலைத்திருக்கக்கூடிய பரிசுத்த ஐக்கியநிலையும் ஆரம்பமாகிவிட்டது. இதையே யோவான் தீர்க்கதரிசனமாக காண்கிறார். திருமணத்தில் காணப்படும் நேர்மையான உடன்படிக்கையும், சுவிசேஷ அன்பும் கடவுளுக்கு மகிமையைக் கொண்டுவருகின்ற இரண்டு முக்கிய குறிப்புகளாகும். நமது திருமணத்தை, கடவுள் ஆதியில் ஏற்படுத்தின திட்டத்தின்படி நாம் வாழும்போது நமது சிருஷ்டிகருடைய அளவிட முடியாத மகிமையை அதன் மூலமாக காண்பிக்கிறவர்களாக இருக்கிறோம். சுவிசேஷ அன்பை நமது திருமணத்தில் நாம் செயல்படுத்தும்போது, கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துகிறோம். பாவிகளாகிய நமக்காக, கிறிஸ்துவின் மூலமாக கடவுள் காண்பித்த கிருபையை தெரியப்படுத்து கிறவர்களாய் இருக்கிறோம். அத்தோடு, நமது திருமணம், மகிமையான தொரு எதிர்காலம் வரவிருப்பதையும் சுட்டிக் காண்பிப்பதாய் இருக்கிறது. சிருஷ்டிப்பின் தத்துவம் என்கிற உறுதியான பாறையின்மீது அமைக்கப் பட்டுள்ள கிறிஸ்தவ திருமண வாழ்க்கை, திரித்துவ கடவுளின் மகிமையான ஒன்றுபட்ட நிலையையும் பிரதிபலிப்பதாய் இருக்கிறது. சுவிசேஷத்தின் வெற்றி, கிறிஸ்தவ திருமணங்களிலும் ஊடுருவியுள்ளது. அத்தகைய திருமணங்கள், கிறிஸ்துவின் மூலமாக கடவுள் பேரிலுள்ள பற்றை வெளிப்படுத்துவதாய் இருக்கிறது. வரப்போகின்ற காலத்திலே, பரலோகத்திலே, கிறிஸ்துவின் பூரணப்பட்ட அன்பை சபையானது பெறவிருப்பதை கிறிஸ்தவ திருமணங்கள் சுட்டிக்காண்பிக்கிறது. இவை யாவும் திருமணத்தில் காணப்படும் மகிமையான காரியங்கள் இல்லையா?

மனோதத்துவ நிபுணர்களும், மருத்துவர்களும், சமூகநலவாதிகளும், அரசியல்வாதிகளும் தங்களுக்குத் தெரிந்த வகையில் திருமணத்தைக் குறித்து ஆராய்ந்து அதை மனிதனின் கோணத்திலிருந்து பார்க்கிறவர்களாக இருக்கிறார்கள். நாமோ, கடவுளின் ஜனங்களாக, அவரிடமிருந்து கற்றுக் கொள்கிறவர்களாக, கடவுளையே மையமாகக் கொண்டு திருமணத்தை காண்போம். நமது திருமணத்தின் மூலமாக கடவுளை மகிமைப் படுத்துவதையே நமது நோக்கமாகக்கொள்ளுவோம். நமக்காக அல்ல, கடவுளின் மகிமையை வெளிப்படுத்துகிறவர்களாக நாம் வாழ முயற்சிக்கும்போதுதான் நாம் உயிர்வாழ்வதின் காரணமே நமக்குப் புலப்படும். உங்கள் திருமண வாழ்க்கையின் மூலமாகக் கடவுளை மகிமைப்படுத்துங்கள். அப்போது கடவுளின் சாயலை அடைகின்ற உணர்வைப் பெறுவீர்கள், கர்த்தரால் மீட்கப்பட்டவர்களாகவும் உணர்வீர்கள்.

சகோதரனே, உங்கள் மனைவியின் கரத்தை பற்றிக்கொள்ளுங்கள்! சகோதரியே, உங்கள் கணவனின் கரத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். சிருஷ்டிப்பின் சிகரமாகிய நீங்கள் இருவரும் சேர்ந்து நில்லுங்கள். நீங்கள் இருவருமாக சேர்ந்துதான் கடவுளின் வியக்கத்தகு சாயலை பிரதிபலிக்கிறீர்கள். இருவருமாக சேர்ந்து, உங்கள் வாழ்க்கையின் அஸ்திபாரமாகிய ஆதி. 2:24ம் வசனத்தின் மேல் உறுதியாக நில்லுங்கள். கிறிஸ்துவுக்குள் இணைக்கப்பட்டவர்களாக நில்லுங்கள். நீங்கள் ஒரே மாம்சமாக மேலும் மேலும் முயற்சி செய்கையில் நீங்கள் விரும்புகிற மேன்மையும் கடவுளை மகிமைப்படுத்துகிறதான கம்பீரமும் உங்களை வந்தடையும். சுவிசேஷமானது எப்படி பாவத்தையும் மரணத்தையும் மேற்கொண்டு வெற்றி சிறந்தது என்பதை நீங்கள் உங்கள் திருமண வாழ்க்கையின் மூலமாக உலகிற்கு அறிவிக்கிறவர்களாக வாழலாம். இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறித்த நம்பிக்கையையும், பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ள மகிமையான எதிர்காலத்தையும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகின்ற அடையாளக்குறிப்புகளாக நீங்கள் இருவரும் இணைந்து செயல்படலாம்.

மேற்கூறிய நான்கு நட்சத்திர வழிகாட்டிகளையும் கொண்டு உங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள். கடவுளை மகிமைப்படுத்துங்கள். கடவுளின் சிருஷ்டிப்பின் இரகசியத்தை வெளிப்படுத்துங்கள். பாவத்தை மேற்கொள்ளுங்கள். வரப்போகின்ற காலத்தைக் குறிக்கின்ற நற்செய்தியை உங்கள் வாழ்க்கையின் மூலமாக பிரதிபலியுங்கள். இந்த பயணத்தைத் தொடங்குவது நல்லதே. அது, விவாகத்தில் நெருங்கிய ஐக்கியத்தை நோக்கிய பயணம்!


கர்த்தருக்காக ஆத்துமாக்கள் ஆதாயப்படுத்தப்படுவதற்காக நாம் உழைக்க வேண்டும். அதை நாம் செய்யவில்லையானால் ராகேலைப் போல, “எனக்கு பிள்ளைகளைக் கொடும், இல்லாவிட்டால் நான் மடிந்து விடுவேன்” என்று நாம் கதற வேண்டும். நம்மால் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த முடியாவிட்டால், நிலத்தில் அறுவடையைக் காணமுடியாத நிலச்சொந்தக்காரனைப் போலவும், வெறும் வலையோடு வீடு திரும்பும் மீன்பிடிக்காரனைப் போலவும், மலையாய் ஏறி அலைந்து வேட்டையாடி வெறுங்கையோடு திரும்பும் வேட்டைக்காரனைப் போலவும் வருந்த வேண்டும். ட பாவிகள் தங்களுடைய பாவத்திற்காக வருந்திக் கதறும் வரை சமாதானத்தின் தூதுவர்கள் அவர்களுக்காகக் கதறி அழுவதை நிறுத்தக் கூடாது.

சார்ள்ஸ் ஸ்பர்ஜன்,

('என் மாணவர்களுக்கான விரிவுரை’ எனும் நூலில் இருந்து)




கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி: 109 - முதல் விண்ணப்பத்தில் நாம் எதற்காக ஜெபிக்கிறோம்?

பதில்: ‘உமது நாமம் பரிசுத்தப்படுவதாக’ என்ற முதலாவது விண்ணப்பத்தில் தன்னை வெளிப்படுத்துகிற அனைத்துக் காரியங்களின் மூலமும் நாமும், ஏனையோரும் அவரை மகிமைப்படுத்த கர்த்தர் உதவ வேண்டும் என்றும், அனைத்துக் காரியங்களும் அவருடைய மகிமைக்காக செய்யப்பட வேண்டும் என்றும் கிறிஸ்தவர்கள் ஜெபம் செய்வார்கள்.

(மத்தேயு 6:9; சங்கீதம் 67:1-3; ரோமர் 11:36).

விளக்கவுரை: பிள்ளைகளுக்கு பெயர் வைப்பது உலக வழக்கம். தற்கால சமுதாயத்தில் அர்த்தமே இல்லாமல் புரியாத பெயரையெல்லாம் வைத்து விடுகிறார்கள். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அப்படி இருக்கவில்லை. மக்கள் வைத்திருந்த பெயர்களுக்கு அர்த்தமிருந்தது. அவர்கள் சிந்தித்து பெயர் வைத்திருந்திருக்கிறார்கள். பெயர் அதைக் கொண்டிருப்பவருடைய குணாதிசயத்தையோ அவரைப் பற்றியோ ஒருவிதத்தில் விளக்குவதாக அக்காலத்துப் பெயர்கள் இருந்தன. கர்த்தர் முதல் மனிதனுக்கு ஆதாம் என்று பெயர் வைத்தார். அது மனிதகுலமனைத்தும் அவனில் இருந்து தோன்றியது என்ற அர்த்தத்தைக் கொண்டிருந்தது. பெயர்கள் அந்தக் காலத்தில் ஏதாவதொரு உண்மையை வெளிப்படுத்துபவையாக இருந்தன. இதேபோலத்தான் ஆபிரகாமுக்கும், யாக்கோபுவுக்கும் கர்த்தர் பெயர்களை சூட்டியபோது அவை அவர்களைப் பற்றிய முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்துபவையாக இருந்தன. அவை வெறும் பெயர்களாக மட்டும் இல்லாமல் அந்தப் பெயர்களைக் கொண்டிருந்தவர்களைப் பற்றிய உண்மைகளையும் விளக்குபவையாக இருந்தன.

இயேசு போதித்த ஜெபத்தின் விண்ணப்பத்தில் வரும் தன்னை வெளிப்படுத்துகிற, என்ற வார்த்தைகளை கர்த்தருடைய நாமத்துக்கு சமமானதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். சங்கீதக்காரன் ‘கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது!’ !” (8:1) என்று சொல்லுகிறபோது பூமியும் அதிலுள்ள அனைத்தும் கர்் பற்றி நாம் அறியும்படியாகப் பேசுகின்றன என்று விளக்குகிறான். அவருடைய படைப்பு அவரைப் பற்றிய உண்மைகளை நமக்கு அறிவிக்கின்றன (ரோமர் 1:20-2). படைப்பும் கர்த்தருடைய வேதமும் அவரைப் பற்றி நமக்கு வெளிப்படுத்துகின்றவற்றை நாம் அறிந்துகொள்ளுகிறபோதுதான் அவருடைய நாமத்தின் மகத்துவத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ளுகிறோம்.

‘அவருடைய நாமம் பரிசுத்தப்படுவதாக’ என்பதன் அர்த்தம் என்ன? இதுவரை நாம் கர்த்தருடைய நாமத்தைப் பற்றி நம்முடைய கோணத்தில் விளங்கிக்கொள்ள முயற்சி செய்திருக்கிறோம் என்பதையும் கர்த்தர் தம்மைப்பற்றி நமக்கு விளக்கியிருப்பவையே அவருடைய நாமம் என்பதையும் பார்த்திருக்கிறோம். இனி கர்த்தருடைய நாமத்தைப் பற்றி அவரே என்ன கூறுகிறார் என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்பது அவசியம். சாதாரண மனிதர்களே தங்களுடைய பெயரைப் பாதுகாத்துக்கொள்ள அதாவது, அதற்கு இழிவு தேடிக்கொள்ளக்கூடாது என்பதில் கவனத்தோடு இருக்கும்போது நம்மைப் படைத்த பரிசுத்தரான கர்த்தர் தன்னுடைய பெயருக்கு இழிவு தேடிக்கொள்ளுவாரா? 2 எரிச்சலின் தேவன் தன்னுடைய நாமத்தின் மகிமைக்காகவே அனைத்தையும் செய்கிறவராக இருக்கிறார். இயேசு, “பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்” என்று சொன்னபோது அதற்குப் பதிலளித்த பிதா, “மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்” என்று சொன்னார். (யோவான் 12:28). ‘அவருடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று நாம் ஜெபிக்கிறபோது, கர்த்தர் தாம் செய்யக்கூடாததை ஒருபோதும் செய்து விடக்கூடாது என்ற அர்த்தத்தில் ஜெபிக்கவில்லை. தன்னுடைய நிலையான குணாதிசயங் களுக்கு மாறாக கர்த்தர் நடந்துகொள்ளுவதில்லை; நடந்துகொள்ளவும் மாட்டார். அவர் மாறாத கர்த்தராக இருக்கிறார். உண்மையோடு இந்த ஜெபத்தை நாம் செய்வோமானால் கர்த்தருக்கு என்னென்ன காரியங்களில் ஈடுபாடு இருக்கிறதோ அத்தனைக் காரியங்களிலும் நாம் ஈடுபாடு காட்ட ஆரம்பிக்கிறோம் என்பதுதான் இதற்கு சரியான அர்த்தம். இங்கேதான் நாம் மெய்யான ஜெபங்களுக்கும், போலி ஜெபங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் பார்க்கிறோம். எங்களுடைய ஜெபங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்று பலர் குறைபட்டுக் கொள்ளுவதை நாம் அறிவோம். அவர்களுடைய ஜெபங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை ஒருதடவை சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாக அவர்கள் ஜெபத்தில் கேட்டிருப்பவற்றோடு தர் ஒத்துப்போக வேண்டும் என்றுதான் அவர்கள் ஜெபித்திருப்பார்கள். இல்லாவிட்டால் கர்த்தர் ஜெபத்திற்கு பதில் தரவில்லை என்று அவர்கள் குறைபட்டுக் கொள்ளமாட்டார்கள். ஒரு கிறிஸ்தவர் எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தருடைய நாமம் எல்லாக் காரியங்களிலும் மகிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜெபிக்கிறபோது அந்த ஜெபம் வித்தியாசமாக அமைந்துவிடுகிறது. “ஆண்டவரே, என்னுடைய ஆசையெல்லாம் உங்களுடைய நாமம் எல்லாக் காரியங்களிலும் மகிமையடைய வேண்டும் என்பதுதான். அதற்காக நீங்கள் என்னென்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யுங்கள். அது மட்டுமே என்னுடைய ஜெபமாக இருக்கிறது” என்று கேட்டு ஜெபிக்கிறபோது அந்த ஜெபம் இயேசு தந்திருக்கும் மாதிரி ஜெபத்தை ஒத்துக் காணப்படுகிறதைப் பார்க்கிறோம். இந்த முறையில்தான் தேவனுடைய மனிதர்கள் எல்லோருமே ஜெபித்திருப்பதை வேதம் நமக்கு விளக்குகிறது. உதாரணமாக மோசேயை எடுத்துக் கொள்ளுவோம். வனாந்தரத்தில் இஸ்ரவேலரை அழித்துவிடக்கூடாது என்று கர்த்தரிடம் மோசே ஜெபித்தார். எதற்காக அப்படி ஜெபித்தார்? இஸ்ரவேலின் நன்மைக்காகவா அதைச் செய்தார்? இல்லை, கர்த்தருடைய நாமத்திற்கு புறஜாதியார்கள் மத்தியில் எந்தக் குறையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அப்படி ஜெபித்தார் (யாத்தி. 32:-13). இஸ்ரவேலரைக் கர்த்தர் தண்டித்துவிட்டால் இப்படிச் செய்வதற்காகவே எகிப்தில் இருந்து அவர்களை வனாந்தரத்துக்கு கர்த்தர் அழைத்து வந்தார் என்று புறஜாதியார்கள் நிந்திப்பார்களே என்ற ஆதங்கத்தில் தான் மோசே இப்படி ஜெபித்தார். இதே முறையில்தான் ஆபிரகாம் சோதோம் நகரத்திற்காக ஜெபித்தார். இதை YH). 18:23-32 வரையுள்ள வசனங்களில் வாசிக்கிறோம். தைரியத்தோடு ஆபிரகாம் சோதோமுக்காக கர்த்தரிடம் மன்றாடுவதை இப்பகுதியில் பார்க்கிறோம். ஒரு சில நீதிமான்களுக்காக அந்த நகரத்தை அழித்துவிடக்கூடாது என்று திரும்பத் திரும்ப ஆபிரகாம் கர்த்தரிடம் மன்றாடினார். இதற்குக் காரணம் என்ன என்பதை எண்ணிப் பாருங்கள்? 2 கர்் நாமத்திற்கு பங்கம் ஏற்பட்டுவிடுமே என்பது தான் ஆபிரகாமின் ஆதங்கமாக இருந்தது.

நம்முடைய ஜெபங்களின் குறைபாடுகளை இங்குதான் நாம் கவனிக்கிறோம். ஒரு பெரிய எழுப்புதலைக் கர்த்தர் ஏற்படுத்த வேண்டும், நம் நாட்டில் சுவிசேஷம் பரவ வேண்டும் என்றெல்லாம் நாம் பெரிதாக ஜெபிக்கிறோம். அதேவேளை நம்முடைய சபைகளில் சீர்திருந்தாமல் இருக்கின்ற குறைபாடுகள் சீர்திருந்த வேண்டும் என்று நாம் ஜெபிப்பதில்லை. ஆராதனை முறைகள் சரியாக இல்லாமலும், சயையை வேத அடிப்படையில் நடத்தாமலும், ஆத்துமாக்கள் ஆத்தும விருத்தி இல்லாமல் இருப்பதைக் கண்டும் காணாமலும் இருந்து எழுப்புதலுக்காக மட்டும் ஜெபித்தால் எல்லாம் அறிந்த கர்த்தருக்கு அது தெரியாமல் போகுமா? சபையில் அவருடைய நாமத்துக்கு பங்கம் ஏற்பட்டிருக்கும்போது கர்த்தரின் ஆசீர்வாதத்தைக் கேட்டு எப்படி ஜெபிக்க முடியும்? சமீபத்தில் இதைத் தான் நான் ஒரு ஊழியத்தில் பார்க்க நேர்ந்தது. அடிப்படை வேத போதனைகளையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு சபை என்ற பெயரில் ஒரு கூட்டத்தைக் கூட்டி அவர்கள் ஜெபித்து வருகிறார்கள். அவர்களுடைய ஜெபங்களைக் கர்த்தர் எப்படிக் கேட்பார்? அன்றாடம், வாரா வாரம் அவருடைய வேதத்தை அவர்கள் புறக்கணித்து வருகிறபோது (கர்த்தருடைய நாமத்துக்கு பங்கம் ஏற்படுத்துகிறபோது) அவர்களுடைய ஜெபங்களை அவர் எப்படி ஆசீர்வதிக்க முடியும்? நம்முடைய ஜெபங்களைக் கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டும் என்றுதான் நாம் ஜெபிக்கிறோமே தவிர அவருடைய நாம மகிமைக்காக அவருடைய வேதப் பிரகாரம் அனைத்தும் நடக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு நாம் எதையும் கேட்டு ஜெபிப்பதில்லை. அவருடைய வார்த்தையை ஆராய்ந்து படித்து அவரை அறிகின்ற அறிவில் வளர்ந்து, அவருடைய போதனைகளைக் கடைப்பிடித்து, அவருடைய மீட்பின் திட்டங்களையும், நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு நாம் ஜெபித்திருந்தால் நம்முடைய ஜெபங்களுக்கு பலன் கிட்டாமல் போயிருக்காது. ஏனெனில், இந்த விதத்தில் வாழ்ந்து ஜெபிக்கின்றபோதுதான் கர்த்தரின் நாமம் மகிமையடைகின்றது. நம்முடைய ஜெபங்கள் வல்லமையின்றி கர்த்தருடைய ஆசீர்வாதத்தைக் காணமுடியாமல் இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம்.

நம்முடைய ஜெபங்கள் பலனில்லாது காணப்பட்டாலும் கர்த்தருடைய நாமத்தின் மகிமைக்காக எல்லாமே நடந்துவரும். கர்த்தருடைய நாமம் மகிமையடைய வேண்டும் என்ற வைராக்கியத்தோடு நாமும், நம்முடைய சபைகளும் ஜெபிக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்? அதைத்தான் நாம் திருச்சபை வரலாற்றில் சீர்திருத்தவாத காலத்திலும், பதினேழாம் நூற்றாண்டு பியூரிட்டன் பெரியவர்களின் காலத்திலும் பார்க்கிறோம். பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பு மக்கள் குருமடங்களிலும், அழகான ஆலய கட்டடங்களிலும் எண்ணற்ற ஜெபங்களை செய்துதான் வந்திருக்கிறார்கள். போப்புக்களும், குருக்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் செய்யாத ஜெபங்கள் இல்லை. ஆனால், மார்டின் லூதரும், ஜோன் கல்வினும், ஜோன் நொக்ஸும், சுவிங்லியும் அவர்களைப் போன்ற இன்னும் அநேகரும் கர்த்தரின் நாமத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதுமட்டுமே தங்களுடைய வாழ்க்கை இலட்சியம் என்று செயல்பட்டு வாழ்ந்து காட்டியபோது கர்த்தரின் ஆசீர்வாதம் மழைபோலப் பெய்ய ஆரம்பித்தது. சத்தியமான வேத போதனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வேத உணர்வே இல்லாமல், கர்த்தரைப் பற்றிய மெய்யான வேத அறிவைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்காமல் ஜெபம் என்ற பெயரில் நாட்கணக்காகவும், வாரக்கணக்காகவும், முழு இரவும், உபவாசத்தோடு ஜெபித்தாலும் அந்த ஜெபங்கள் கர்த்தரின் காதுகளை எட்டவே எட்டாது, அவற்றால் எந்தவிதமான பலன்களும் இல்லை.

இந்த வினாவிடைத் தொகுப்பின் ஆரம்பத்தில் முதலாவது கேள்விக்கான பதில் மனிதனுடைய வாழ்க்கை இலட்சியம் கர்த்தரை எப்போதும் தன் வாழ்க்கையில் மகிமைப்படுத்தி, அவர் தரும் பலன்களை எப்போதும் அனுபவிப்பது என்று கூறுகிறது. மனிதன் பிறப்பில், பாவத்தின் காரணமாக கர்த்தரை மகிமைப்படுத்துவதை ஒருபோதும் நோக்கமாகக் கொண்டு பிறப்பதில்லை. பிறக்கின்ற ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுவதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்வார்கள். தனக்காக வாழ்கிறவனாகத் மனிதனை பாவம் மாற்றியிருக்கிறது. அவனால் தன்னைத் தவிர வேறெதையும் முன்னிலைப்படுத்தி வாழமுடியாதபடி பாவம் அவனை வழிநடத்துகிறது. இது உலகில் பிறக்கின்ற ஒவ்வொருவருடையதுமான நிலைமையாக இருக்கிறது. இந்த நிலையில் இருந்து விடுபட்டு சுயநலத்தைக் கைவிட்டு கர்த்தரை வாழ்க்கையில் முதன்மைப்படுத்தி மனிதன் வாழ வேண்டுமானால் அவனில் சுனாமி ஏற்படுத்தக்கூடிய பெரிய மாறுதல் தேவை. அவன் அடியோடு பாவத்தில் இருந்து விடுபட்டால் மட்டுமே அவனால் கர்த்தரை மகிமைப்படுத்தி வாழ முடியும். இத்தகைய மாற்றத்தைத் தன்னில் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய நிலையில் மனிதன் இல்லை. அவன் பாவியாக இருப்பதால் இத்தகைய ஆத்மீக மாற்றத்தைத் தன்னில் ஏற்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் அவன் இருக்கிறான். கர்த்தர் அவனை மாற்றினால் தவிர அவனில் மாற்றத்திற்கு வழியே இல்லை. அப்படியான மாற்றத்தை கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மூலம் கர்த்தர் மனிதனில் ஏற்படுத்துகிறபோதே அவன் கர்த்தரின் மகிமைக்காக வாழ்கின்ற வாழ்க்கை மாற்றத்தைத் தன்னில் காண முடியும். கர்த்தரைக் கொண்டு நாம் விரும்புவதை சாதித்துக் கொள்ளுவதல்ல நம் முன்னிருக்கும் பிரச்சனை. கர்த்தரை எதிர்த்து நிற்கும் இருதயத்தைக் கொண்டிருக்கும் மனிதன் மாறி கர்த்தருடைய நாம மகிமைக்காக வாழுவதே இந்த விண்ணப்பத்தின் இலக்காக இருக்கிறது.


மனந்திரும்பிய பிய ஒவ்வொரு மனிதனின் இருதயத்திலும் எழுதப்பட்டிருந்து அவனுடைய ஒவ்வொரு ஜெபத்திலும் ஆராதனையிலும் அப்பட்டமாக வெளிப்படும் இரண்டு நம்பிக்கைகள் ஜோன் கல்வினினுடைய வாழ்க்கையில் குறிக்கோள்களாக இருந்தன. முதலாவது, கர்த்தரே எல்லாம், அவருக்கு முன் மனிதன் ஒன்றுமேயில்லாதவன் என்பது. இரண்டாவது, நல்லவைகளாகிய அனைத்திற்கும் கர்த்தருக்கே சகல ஸ்தோத்திரங்களும் செலுத்தப்பட வேண்டும் என்பது. இவை இரண்டும் அவருடைய சரீரம் மயானத்தை அடையும்வரை அவருடைய வாழ்க்கையில் ஊறிப்போயிருந்தன. அதற்கு அடையாளமாக அவர் தன் கல்லறையில் தன்னைப் பற்றிய எந்தவிதமான குறிப்பும் எழுதப்பட்டிருக்கக் கூடாதென்றும், தன்னை அடக்கம் செய்யும்போது எந்த மரியாதைப் பேச்சையும் கொடுக்கக் கூடாதென்றும் வலியுறுத்தியிருந்தார். கர்த்தரை முதன்மைப்படுத்தி அவருக்கு மகிமை செலுத்தாமல் தன்னை முதன்மைப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம் தான் இதற்குக் காரணம்.

- ஜிம் பெக்கர் -



ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது

சத்தியம் சத்தியம் என்று நாம் அடிக்கடி பேசி வருகிறோம். சத்தியத்தை அறியாமல் இருந்து வருகிறவர்களைப் பார்த்து பரிதாபப்படுகிறோம். சத்தியம் பரவ வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம். இதெல்லாம் மிகவும் அவசியமானதுதான். சத்தியத்தின் மேல் இத்தனை ஆர்வமும், வாஞ்சையும் இன்று பலருக்கு இருந்து வருவது மனதுக்கு இதமாகத்தான் இருக்கிறது. அதேவேளை சத்தியத்தைக் குறித்த முக்கியமானதொரு உண்மையை நாம் மறந்து விடக்கூடாது. அது சத்தியம் நடைமுறையில் பயன்படுத்த வேண்டிய தொன்று என்ற அடிப்படையான உண்மைதான். சத்தியத்தை கர்த்தர் நாம் அறிவில் சிறந்தவர்களாக வர வேண்டும் என்பதற்காக நமக்குக் கொடுக்கவில்லை. அதைப் பற்றி நாம் அடிக்கடி பேசி ஆனந்தப்பட வேண்டும் என்பதற்காகக் கொடுக்கவில்லை. அவரைப் பற்றியும், அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றியும், அவர் நாம் எத்தகைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்பதைப் பற்றியும் நமக்கு விளக்குவதுதான் சத்தியம். அதை அறிந்துகொள்வது நாம் பிஎச். டி. பட்டம் பெறுவதற்காக அல்ல. மேடை அதிரப் பேசுவதற்காக அல்ல. அதன்படி விடாமுயற்சியோடு நடந்து கர்த்தரை மகிமைப்படுத்துகின்ற வாழ்க்கையை அன்றாடம் வாழ வேண்டும் என்பதற்காக மட்டுந்தான். இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் சத்தியத்தைப் படிப்பதாலோ அறிந்துகொள்ள முயல்வதாலோ எந்தப் பயனுமில்லை.

சத்தியத்தை எந்தளவுக்கு அறிந்து வைத்திருக்கிறோம் என்பதல்ல முக்கியம். மற்றவர்களைவிட அதிகமாக அதைத் தெரிந்து வைத்திருந்தால் அதில் எந்தப் பாதகமும் இல்லை. ஆனால், சத்தியத்தை அறிந்து வைத்திருக்கிற அளவுக்கு அதை வாழ்க்கையில் பயன்படுத்தி அதற்குரிய கனிகளைக் கொடுக்காமல் இருப்பது போன்று பாதகமானதொன்றுமில்லை. இதற்காகத் தான் வேதம் எந்தளவுக்கு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்தளவுக்கு நம்மிடம் கர்த்தர் எதிர்பார்ப்பார் என்று எச்சரிக்கிறது. அறிந்து வைத்திருக்கிற கொஞ்ச சத்தியத்தின்படி நீங்கள் வாழ்கிறீர்களா? அதிகமாக சத்தியத்தை அறிந்து வைத்திருப்பதால் நாம் பரிசுத்தமாகி விடுவதில்லை. சத்தியத்தின் வல்லமையை அதன் மூலமாக நம்மில் பார்க்க முடியாது. அறிந்து வைத்திருப்பது கொஞ்சமாக இருந்தாலும் அதன்படி வைராக்கியத் தோடு வாழ்கிறபோதுதான் அதன் வல்லமையைப் பார்க்கிறோம்.

இதையெல்லாம் நான் விளக்குவதால் சத்தியத்தை அறிந்துகொள்வதில் இனி நாம் ஆர்வம் காட்டத் தேவையில்லை என்று நினைத்துவிடாதீர்கள். அதை அறிந்துகொள்ள நாம் எத்தனை பாடுபட்டாலும் தகும். அதேவேளை அதை அறிந்து வைத்திருக்கின்ற அளவுக்கு அது நடைமுறையில் நம் வாழ்க்கையில் அன்றாடம் கனிகொடுக்காமல் இருந்துவிடுமானால் அது செத்த பிணமாகத்தான் இருக்க முடியும். இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? இதைப் பற்றி இயேசு அடிக்கடி எச்சரித்திருக்கிறார். மலைப்பிரசங்கத்தில் இதைத்தானே இயேசு சுட்டிக்காட்டுகிறார். கர்த்தரின் கட்டளைகளை அதிகமாக பரிசேயர்கள் அறிந்து வைத்திருந்தபோதும் அவர்களுடைய வாழ்க்கையில் அதன் வல்லமையைப் பார்க்க முடியவில்லை. சத்தியத்தை அவர்கள் அறிந்தும், போதித்தும், மற்றவர்கள் அவற்றைப் பின்பற்றச் செய்வதற்கு அதிகமாக உழைத்தும் வந்திருந்தபோதும் அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் அதை நடைமுறையில் பார்க்க முடியவில்லை. சத்தியத்தினால் அவர்கள் விடுதலையை அடையவில்லை.

அன்பைப் பற்றி பிஎச். டி. பட்டம் பெறுமளவுக்கு ஒருவர் வேத ஆராய்ச்சி செய்திருக்கலாம். அந்த அன்பை அவரால் அன்றாடம் வாழ்க்கையில் காட்ட முடியாவிட்டால் அத்தனைப் படிப்பிலும் என்ன பயன்? 2 ஒருவர் பெரிய வேத பிரசங்கியாக இருந்து மக்களை அசைத்து விடும் அளவுக்கு அவருக்கு பேச்சுத் திறமை இருக்கலாம். அந்த நாவை அவர் நல்லபடியாக வேதம் சொல்லுகிறபடி பயன்படுத்தாமல் இருந்து விட்டால் அவருடைய வேத அறிவு செத்த பிணத்துக்கு ஒப்பானதுதானே. இதைத் தான் யாக்கோபு தமது நிருபத்தில் நமக்கு நினைப்பூட்டுகிறார். நாம் கர்த்தரில் மெய்யான அன்பைக் காட்ட உதவுவது சத்தியம். நம்மை சுற்றியிருப்பவர்களில் நாம் அன்பு காட்ட உதவுவது சத்தியம். நம் நாவாலும், நடத்தையாலும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நாம் எந்த விதத்திலும் தீங்கு செய்து விடாமல் அவர்கள் கர்த்தரில் வளர உதவி செய்ய நமக்குதவுவது சத்தியம். திருக்குள்ளதாகவும், கேடானதாகவும் இருக்கும் நம்முடைய இருதயத்தை அன்றாடம் சுத்தமாக வைத்திருக்க உதவுவது சத்தியம். இதைத் தான் பத்துக்கட்டளைகள் விளக்குகின்றன. இதுவரை நான் சொன்னவற்றை நம் வாழ்க்கையில் பார்க்க முடியவில்லை என்றால் நாம் அறிந்து வைத்திருப்பது நிச்சயம் சத்தியமா என்று நாம் கேட்கத்தான் வேண்டும்.

சத்தியத்தைக் கொஞ்சமாக அறிந்து வைத்திருந்தாலும் அதன்படி அருமையாக வாழ்கிற சிலரை, என்னையே அதிசயிக்க வைத்திருக்கிற சிலரை நான் அறிவேன். அவர்களை என் வாழ்க்கையில் அறிமுகப்படுத்திய கர்த்தருக்கு நான் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. அன்பு, நட்பு, எளிமையான பண்பு, மென்மையான இருதயம், சத்தியத்தில் உண்மையான பற்று, மற்றவர்களுக்கு உதவும் நல்ல மனப்பான்ைமை இதையெல்லாம் அவர்களில் பார்த்திருக்கிறேன். இந்தக் கேடான சமுதாயத்தில் இவர்கள் நான் படிக்க உதவும் கல்லூரி என்றுதான் கூறவேண்டும். அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம். என்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் நேசித்து வருகின்ற நல்ல மனிதர்கள் இவர்கள். தெரிந்து வைத்திருக்கின்ற கொஞ்ச சத்தியத்தின்படி வாழ்ந்து சத்தியத்தின் வல்லமையை அப்பட்டமாக, நிதர்சனமாக வாழ்க்கையில் வெளிப்படுத்து கிற நல்ல உள்ளங்கள் இவர்கள். இவர்களுக்கு சீர்திருத்த சத்தியம் சிறிதளவுதான் தெரிந்திருக்கிறது. ஆனால், அதை முழு அளவில் வாழ்க்கையில் நிதர்சனமாகத் தெரியும்படி வாழ்ந்து காட்டுகிறார்களே. அதுதான் மெய்யான சீர்திருத்த வாழ்க்கை, கல்வினிச வாழ்க்கை.

இன்றைக்கு சீர்திருத்த சத்தியத்தில் நாட்டம் காட்டி வருகிறவர்கள் சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறார்கள். ஒருவிதத்தில் அது நாம் சந்தோஷப்பட வேண்டிய காரியம். சத்தியத்தை அதிகமாக, வேதபூர்வமாக அறிந்துகொள்ள எவர் ஆர்வம் காட்டினாலும் அது ஆனந்தத்திற்குரிய விஷயம்தானே. இருந்தாலும் என் அடிமனதில் ஓர் உறுத்தல் இருந்துகொண்டு இருக்கிறது. சத்தியத்தில் இவர்கள் காட்டுகின்ற ஆர்வமும், அக்கறையும் வெறும் பேச்சாக இருந்துவிட்டால் என்ன ஆவது என்ற உறுத்தல் தான் அது. இது நான் அநாவசியத்துக்குப் படுகின்ற சந்தேகம் அல்ல. சத்தியத்தில் ஒருவர் காட்டுகிற ஆர்வம், வைராக்கியம் எல்லாம் நிச்சயமாக நடைமுறை வாழ்க்கையில் கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதெல்லாம் இல்லாமலேயே ஒருவர் சத்தியத்தில் வைராக்கியம் காட்டிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. இதை வேதம் பல இடங்களில் விளக்குகிறது. தேமா சத்தியத்தில ஆர்வம் காட்டினான், பவுலுக்கு துணையாக இருந்து ஊழியத்தில் உதவி செய்தான். பவுலோடுகூட இருந்து ஊழியத்திலும் ஈடுபட்டிருந்தான். இறுதியில் பவுலின் இருதயம் உடைந்து போகும் வகையில் இந்த உலகத்தை நேசித்து அவரை விட்டுப் பிரிந்து போகவில்லையா? ? (2 தீமோ. 4:9). இந்த உதாரணத்தை வேதம் நமக்குத் தந்திருக்கும் காரணமே இந்த ஆபத்தை நாம் உணர வேண்டும் என்பதற்காகத்தான்.

சீர்திருத்த சத்தியத்தைப் பற்றி சில உண்மைகளை நான் சொல்ல வேண்டும். அது அறிவுபூர்வமான சத்தியம். தத்துவரீதியாக, முறைப்படுத்தி வேத சத்தியங்களை சிந்தித்துப் புரிந்துகொள்ளும் வகையில் விளக்குகின்ற அருமையான போதனை. இதனை மார்டின் லூதர், ஜோன் கல்வின் மற்றும் ஜோன் ஓவன் போன்ற பியூரிட்டன் பெரியவர்களின் பிரசங்கங்களிலும், எழுத்துக்களிலும் கவனிக்கலாம். அத்தோடு வரலாற்றில் சீர்திருத்தவாதிகள் எழுதி நமக்குத் தந்துள்ள விசுவாச அறிக்கைகளிலும், வினாவிடைப் போதனைகளிலும் இதனைப் பார்க்கலாம். இவற்றிற்காக நாம் கர்த்தருக்கு மிகவும் கடமைப்பட்டவர்கள். சிந்திக்க விரும்புகிறவர்கள் நிச்சயம் சீர்திருத்த சத்தியத்தில் ஆர்வம் காட்டுவார்கள். அந்தளவுக்கு அது ஒருவரில் வேத அறிவை வளர்க்க உதவுகிற சத்தியமாக இருக்கிறது. அத்தோடு சீர்திருத்தப் போதனைகளை அள்ளி வழங்கும் நூல்களும் எண்ணிக்கை யில்லாமல் இருக்கின்றன. அவற்றை வாசிக்க வேண்டும் என்ற துடிப்பும் வாசித்தவற்றில் இருந்து பெற்றுக்கொண்ட அறிவில் இன்பம் காண்பதும் அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற துடிப்பும் ஒருவருக்கு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. இதெல்லாம் சீர்திருத்த சத்தியத்தில் நாட்டம் காட்டுகின்ற ஒருவரை வெறும் புத்திஜீவியாக (Intelectual) மாற்றிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதை உணர்வது அவசியம். கிறிஸ்தவ வாழ்க்கையில் சாதாரணமாக இருக்க வேண்டிய தீவிர ஜெபம், வேத வாசிப்பு, கர்த்தரோடு இடைவிடாத அந்நியோந்நிய மான ஐக்கியம், கர்த்தரிலும், கர்த்தரின் பிள்ளைகளிலும் நிலையான அன்பு, மெய்யான மனத்தாழ்மை, சுயத்தில் இல்லாமல் பரத்தில் மட்டுமே நம்பிக்கை ஆகிய பரிசுத்தமான கிருபைகள் எல்லாமல் இல்லாமல் வெறும் சீர்திருத்த சத்திய அறிவை மட்டும் பெற்றுக்கொள்வது மிகச் சுலபம். இந்த ஆபத்தில் விழுந்திருக்கிறவர்கள் பலர். இதற்கு சீர்திருத்த சத்தியம் எந்த விதத்திலும் காரணமல்ல. சீர்திருத்தவாதிகளும் காரணமல்ல. சீர்திருத்த சத்தியத்தில் நாட்டம் காட்டுகிறவர்களின் இருதயம் மட்டுமே இதற்குக் காரணம். தங்களுடைய இருதயத்தை அவர்கள் சரியாகப் பார்த்துக்கொள்ளத் தவறுவதாலேயே இந்த ஆபத்தில் விழ நேர்கிறது. கிறிஸ்தவராக இருந்து கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அன்றாடம் அவரோடு ஐக்கியத்தில் வந்து, அவருடைய மக்களிடம் தாழ்மையோடு நடந்துகொள்ள உதவுவது தீவிரமான அன்றாட மனந்திரும்புதலும், தாழ்மையோடு கூடிய ஜெபமும்தான். இதை சீர்திருத்த விசுவாசம் நமக்கு கற்றுக் கொடுக்கத்தான் முடியமே தவிர நம்மில் அதைத் திணிக்க முடியாது. நம்முடைய இருதயம் சரியாக இல்லாவிட்டால் எந்த சத்தியத்தாலும் நமக்குப் பயனிருக்காது. அதுவே சீர்திருத்த சத்தியமாக இருந்தாலும் சரி.

அல்பர்ட் என். மார்டினின் பின்வரும் வார்த்தைகள் கவனத்துக்குரியவை: “கல்வினுடைய போதனைகள் தெளிவான இறையியல் நம்பிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற உன்னுடைய உள்ளத்தின் அரிப்பைப் போக்கியிருப்பதனால் உன்னைக் கல்வினித்துவவாதி என்று சொல்லிக் கொள்ளாதே. கர்த்தரை நீ சந்தித்திருக்கிறாயா? ? அவருக்கு அருகாமையில் நிற்கும் பாக்கியத்தை அடைந்திருக்கிறாயா? அதுதான் கேள்வி. பென்ஜமின் வோர்பீல்ட் சொன்னார், ‘கர்த்தரைப் பார்த்திருப்பவனே கல்வினித்துவ வாதி’ என்று. தற்பெருமை பிடித்த கல்வினித்துவவாதி, என்ற வார்த்தைகள் சரியானவையல்ல. கர்த்தரை சந்தித்திருக்கும் மனிதனே கல்வினித்துவவாதி. கர்த்தருடைய சிம்மாசனத்துக்கு முன்னால் இருதயம் நொறுக்கப்பட்டு ‘ஏசாயாவைப்போல நின்றிருப்பவன் கல்வினித்துவவாதி. கல்வினித்துவம் என்ற பெயரில் நீ விளங்கிக் கொண்டிருக்கும் போதனை உன்னுடைய சுதந்திரத்தில் உன்னைப் பெருமை பாராட்டச் செய்து பாவத்தைச் செய்வதற்கு அச்சுதந்திரத்தை அனுமதிப் பத்திரமாகப் பயன்படுத்தச் செய்திருக்குமானால் நீ வேதபூர்வமான கல்வினித்துவவாதியாக ஒருபோதும் மாறவே இல்லை. கர்த்தர் ஏசாயாவை எப்படி உருவாக்கி னாரோ அப்படித்தான் இன்றும் கல்வினித்துவாதியை உருவாக்குகிறார்.’

‘சீர்திருத்த இலக்கியங்களில் இருந்து தான் கற்றுக்கொண்ட வசனங்களைக் கிளி போல ஒப்புவிப்பதனால் ஒருவன் தன்னைக் கல்வினித்துவவாதி என்று சொல்லிக்கொள்ள அதிகாரமில்லை. பரிசுத்த ஆவியானவர் தன்னில் தாழ்மையாகிய கிருபையை ஏற்படுத்தி கர்் பற்றிய உணர்வுகளை உருவாக்கியிருக்கிறாரா என்று அவன் கேட்க வேண்டும்’ . ‘கூச்ச சுபாவத்திற்கு பெயர் தாழ்மையல்ல. கர்த்தர் படைத்தவர், நான் படைக்கப்பட்டவன் என்ற நேர்மையான உணர்வைக் கொண்டிருப்பவனே தாழ்மையுள்ளவன். என்னிடம் இருப்பவையெல்லாம் அவரிடத்தில் இருந்து வருபவை, அவருக்கு நான் எல்லாவற்றிலும் சகல மகிமையையும், ஸ்தோத்திரங்களையும் செலுத்த வேண்டும். அத்தோடு அது அவனில் ஏசாயாவில் நாம் பார்ப்பது போன்ற கீழ்ப்படிதலையும் கொண்டுவரும். ‘ஆண்டவர், சிம்மாசனத்தில் இருக்கிறார். நான் அவரால் படைக்கப்பட்டவன். இங்கேயிருக்கிறேன் தேவனே! என்று சொல்லுவதைவிட என்னால் வேறு எதைச் செய்ய முடியும்’ என்று ஏசாயாவைப் போலக் கேட்பவனாக அவன் இருப்பான்.’ ‘அத்தோடு அவனில் நருங்குண்டதும் நொறுங்கியதுமான இருதயத்தையும் பார்க்கலாம்.’ ‘கர்த்தர் உன்னைக் கல்வினித்துவவாதியாக மாற்றியிருக்கிறாரா? போயெட்னர், கைப்பர், வோர்பீல்ட் ஆகியோருடைய நூல்களை வாசித்து நீ கல்வினித்துவவாதியாக வந்திருக்கிறாயா? என்று நான் கேட்கவில்லை. கர்த்தர் தன்னை உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறாரா என்றுதான் நான் கேட்கிறேன். உன்னை அவர் நொறுக்கி கிருபையாகிய தாழ்மை, கீழ்ப்படிவு, நொறுங்கிய இருதயம், நன்றியறிதல், அவரில் நம்பிக்கை, ஆனந்தம் ஆகியவற்றை அனுபவிக்கச் செய்திருக்கிறாரா? இவையே ஒருவனை கல்வினித்துவவாதியாக்குகின்றது.” (from ‘Implications of Calvinism’, A. N. Martin)

சமீபத்தில் சீர்திருத்தவாதியான ஜோன் கல்வினைப் பற்றிய ஓர் ஆக்கத்தை நான் வாசிக்க நேர்ந்தது. அதில் கல்வினின் வாழ்க்கையைப் பற்றி அதை எழுதியவர் விளக்கியிருந்தது என்னை சிந்திக்க வைத்தது. சீர்திருத்த விசுவாசத்தை, கல்வினிசத்தை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டியவர் ஜோன் கல்வின். அது வெறும் ஏட்டுப் படிப்பாக, இறுமாப்போடு நம் அறிவை வெளிப்படுத்திக் கொள்ளுவதற்கு உதவும் வெறும் கருவியாக அது கல்வினின் வாழ்க்கையில் இருக்கவில்லை. கர்த்தரின் இறையாண்மையைக் குறித்து அவர் அறிந்துகொண்டிருந்த அறிவு அவருடைய இருதயத்திலும், வாழ்க்கை நடைமுறையிலும் பெருமாறுதல்களை ஏற்படுத்தியிருந்தது. வாழ்க்கையில் பல இன்னல்களை அந்தக் காலத்தில் சந்தித்திருந்த கல்வின் துன்பங்களை வரவேற்று வாழக் கற்றுக்கொள்ள கர்த்தரின் இறையாண்மையாகிய சத்தியம் உதவியது. கல்வினை ‘துன்பப்பட்ட சீர்திருத்தவாதி’ (Suffering reformer) என்று அழைப்பார்கள். ‘கிறிஸ்துவோடு நாம் இணைக்கப்பட்டிருப்பதன் அடை யாளமே வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகின்ற துன்பங்கள்’ என்று கல்வின் ஒருமுறை எழுதியிருந்தார். ‘கிறிஸ்துவோடு நாம் இணைக்கப்பட்டிருந்தால் அவருடைய மரணத்திலும் நாம் இணைக்கப்பட்டிருக்கிறோம். சிலுவையை சுமக்கத் தயங்கும் நீ உண்மையிலேயே கிறிஸ்தவனா?’ என்று கல்வின் அங்கலாய்க்கிறார். துன்பங்களைப் பற்றி சத்தியம் ஏற்படுத்தியிருந்த தெளிவினால்தான் அதை வாழ்க்கையில் நடைமுறையில் வரவேற்று அமைதியோடு வாழ கல்வினால் முடிந்தது. தன் அறிவைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்ளுவதற்காக அவர் கர்த்தரின் இறையாண்மை பற்றிய போதனையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதற்கு கல்வின் தன் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களும் அவற்றிற்கு அவர் முகம் கொடுத்த விதமும் சாட்சிகளாக இருக்கின்றன.

துன்பங்களுக்கான காரணங்களை கர்த்தரின் இறையாண்மை (Sovereignty of God) பற்றிய போதனைகள் மூலம் அறிந்துகொண்ட கல்வின் அவற்றிற்கு முகங்கொடுத்து வெற்றிகான கர்த்தரின் பராமரிப்பு (Providence of God) பற்றிய போதனையைப் பயன்படுத்திக்கொண்டார். ‘நாம் வாழ்க்கையில் கடுமையான துன்பங்களை சந்தித்தாலும் நம் வாழ்க்கைக் கப்பலை ஓட்டிச் செல்லும் கர்த்தர் நாம் மூழ்கிவிட ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையாதலால் நம் இருதயத்தில் பயமும் சலிப்பும் ஏற்படுவதற்கு எந்த நல்ல காரணமும் இருக்க முடியாது’ என்று கல்வின் எழுதியிருக்கிறார். தன் மகன் இறந்தபோது அதைக் கர்த்தரிடம் இருந்து வந்த கசப்பான புண்ணாகவே கல்வின் கருதினார். அதேநேரம், அத்தகைய கசப்பை வாழ்க்கையில் அனுமதித்த கர்த்தரை அவர் தன்னுடைய பிதாவாகவும் பார்க்கத் தவறவில்லை. தன்னுடைய பிள்ளைகளுக்கு எது நல்லது என்பது பிதாவுக்கு நிச்சயமாகத் தெரியும் என்று கல்வின் ஆணித்தரமாக நம்பி தன் துன்பத்தை ஏற்றுக்கொண்டார். கர்த்தரின் பராமரிப்பாகிய போதனை இந்த வகையில் கல்வினின் வாழ்க்கையில் நடைமுறையில் உதவியது. சத்தியம் வெறும் ஏட்டுப் படிப்பாக கல்வினின் வாழ்க்கையில் இருக்கவில்லை. அநேக துன்பங்களை சந்தித்திருந்த கல்வின் அவற்றைப் பரிசுத்த ஆவியின் வல்லமையால் மட்டுமே கடந்து போயிருக்க முடியும். ‘நமக்கு கருணை மிகுந்த தகப்பனும், இறையாண்மை கொண்ட ஆண்டவரும் இருக்கிறார். அவரை நாம் நம்புவதற்குக் காரணம் நமக்கு நன்மையானதையே அவர் எப்போதும் செய்வார்’ என்று கல்வின் எழுதியிருக்கிறார். கல்வின் சொல்லுவது போல, ‘கர்த்தரின் பராமரிப்பை அறியாமல் இருப்பதே வாழ்க்கையில் சகல துன்பங்களுக்கும் மூல காரணமாக இருக்கின்றது, அதை அறிந்துகொள்ளுவதனாலேயே வாழ்க்கையில் சகல ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளுகிறோம்’. கல்வினைப் பற்றி எழுதிய இன்னொருவர் அவருடைய வாழ்க்கையில் காணப்பட்ட தாழ்மையைக் குறிப்பிடத் தவறவில்லை. கல்வினைப் புரிந்துகொள்ளாமல் அவரைப் பற்றித் தவறாக எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். வரலாறு அவரைத் தாழ்மையின் மொத்த உருவமாகப் பார்க்கிறது. கத்தோலிக்க மதத்தை எதிர்த்து கடுமையாக, ஆணித்தரமாக அவர் பிரசங்கித்த போதும் அவருடைய இருதயம் மென்மையானதாக இருந்தது. சக மனிதர்களிடம் அவர் மிகுந்த தாழ்மையோடு பழகினார். ஜெனீவாவில் அவர் பெரும் பிரசங்கியாக, பெரும் இறையியல் வல்லுனராக, சீர்திருத்தத் தலைவராக, பிரசித்தி பெற்ற சபைப் போதகராக இருந்தபோதும் கல்வினை அறிந்தவர்கள் எல்லோரும் அவருடைய தாழ்மையால் கவரப்பட்டார்கள். சத்திய வாஞ்சையும், சத்தியத் தாகமும், சத்திய வளர்ச்சியும் அவரில் அகங்காரத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாததற்கு என்ன காரணம்? கல்வினின் சத்தியம் அவரைக் கிறிஸ்துவில் மனந்திரும்புதலோடு வளர வைத்த சத்தியமாக இருந்ததுதான் அதற்குக் காரணம். கல்வினின் சீர்திருத்த போதனை அவருக்குக் கிறிஸ்துவில் தாழ்மையைக் கற்றுக்கொடுத்ததுதான் காரணம். வாழ்க்கைக்குப் பயனளிக்க முடியாத போதனைகளல்ல கல்வினிசப் போதனைகள். கிறிஸ்துவின் தாழ்மையை ஒருவரில் நிதர்சனமாகப் பார்ப்பதற்கு வழிவகுக்கும் போதனைகள் அவை. நீங்கள் சீர்திருத்தப் போதனைகளில் நாட்டம் காட்டுகிறவர்களாக இருப்பீர்களானால் உங்களுடைய இருதயங்களில் அவை மாற்றங்களைக் கொண்டுவருகிறதா என்று பார்த்துக் கொள்ள நீங்கள் தவறிவிடக்கூடாது. இருதய மாற்றத்தை ஏற்படுத்தி கிறிஸ்துவுக்குள் தாழ்மையோடு நடந்துகொள்ள உதவாத எதுவும், அது சீர்திருத்த சத்தியம் என்ற பெயரில் வந்தாலும் கூட கர்த்தருடைய போதனையாக இருக்க முடியாது. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவுமா? என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.


மனிதன் பாவத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்ற கிருபையின் போதனைகளில் ஒன்றை ஓர் இறையியல் கருத்தாக மட்டும் கொண்டிருந்து சாத்தானைப் போலத் தீயவனாகவும், மமதை பிடித்தவனாகவும், சுயநீதியை உடையவனாகவும் ஒருவன் இருந்து விடலாம். இருதயத்தில் ஆவியின் வறுமையை நீ அனுபவித்திருக்கிறாயா? பரிசுத்தமான வருந்துதலை வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறாயா? இறையாண்மையுள்ள கர்த்தருக் கெதிரானது உன்னுடைய பாவம் என்ற உணர்வு உண்டாயிருக்கிறதா? உன்னுடைய பாவத்தை அடியோடு வெறுத்து ஒதுக்கி கிறிஸ்துவை மட்டும் பற்றிக்கொள்ளுகிற நிலைமையை அடைந்திருக்கிறாயா? இறா பழம் எழுத்தாளர் சொன்னார், இறா மனிதனில் பரிசுத்த ஆவியானவர் கிருபையாகிய சங்கீதத்தின் தாளத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போது அதை எப்போதுமே அடிப்படையான தாளத்தில் இருந்துதான் ஆரம்பிப்பார்.’ ஓர் இரட்சகர் நமக்குத் தேவை என்ற அடிப்படைத் தாளமான நம்பிக்கை யோடுதான் அதை ஆரம்பிப்பார். அதை நான் உணர்ந்திருக்கிறேனா? அவர் அதை நம்மில் ஆரம்பித்திருக்காவிட்டால் அது ஒருபோதும் நம்மில் நிகழ

- அல்பர்ட் என். மார்டின் -




மதிப்புக்குரிய ஜோன் வெயிட்

(1925–2009)

இருபத்தி ஆறு வருடங்களுக்கு முன் அருமையான கர்த்தரின் மனிதர் ஒருவரிடமிருந்து நான் இறையியல் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிரிட்டனின் தென் வேல்சில் இருந்த இறையியல் கல்லூரியில் ஜோன் வெயிட் (John C. J. Waite) அவர்களை நான் முதன் முதலாக சந்தித்தேன். பல பழைய ஏற்பாட்டு நூல்கள், எபிரெய மொழி, வெளிப்படுத்தல் விசேஷம் ஆகியவற்றை அவருடைய வகுப்புகளில் நான் கற்றுக்கொண்டேன். அந்தக் கல்லூரியின் தலைவராகப் பணிபுரிந்து பின்பு ஓய்வு பெற்றுக்கொண்ட ஜோன் வெயிட் இந்த வருடம் மே மாதம் கிறிஸ்துவின் பாதத்தை அடைந்தார். கல்லூரியை விட்டு வெளிவந்த பிறகு அவரை சந்திக்க முடியாமல் போனது இன்றும் ஒரு குறைதான். என் வாழ்க்கையில் குறிப்பிட்டுக் கூற வேண்டியவர்கள் என்று என்றாவது எழுத வேண்டி வந்தால் நிச்சயமாக திரு. ஜோன் வெயிட்டின் பெயர் அதில் இருக்கும். பொதுவாகவே அவரை எல்லோரும் திருவாளர் வெயிட் என்றே அழைப்பார்கள். அந்தளவுக்கு மற்றவர்களின் நன் மதிப்பைப் பெற்றிருந்த மனிதர் அவர். அவரை உங்களுக்குத் தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. இருந்தாலும் கிறிஸ்தவத்தை நிதர்சனமாக வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய மனிதர்களைப் பற்றித் தெரிந்து கொள்வது நமக்கு வாழ்க்கையில் நல்ல பயனைத் தரும்.

பிரிட்டனின் விமானப்படையில் பணிபுரிந்த பிறகு இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் செப்பலில் டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்சி னுடைய ஊழியத்தின் கீழ் வளர்ந்து இலண்டன் வேதாகமக் கல்லூரியில் சேர்ந்து கிறிஸ்தவ ஊழியத்துக்கு தன்னைத் தயார் செய்து கொண்டார் ஜோன் வெயிட். அதற்குப் பிறகு திருச்சபையொன்றில் இரண்டு வருடங்கள் பணிபுரிந்த பிறகு தென் வேல்சின் வேதாகமக் கல்லூரியின் பழைய ஏற்பாட்டு விரிவுரையாளராகவும், தலைவராகவும் 1961ல் இணைந்தார். போதக ஊழியத்திற்கு மாணவர்களைத் தயார் செய்யும் பணியில் அவர் எந்தவித நவீன முறைகளையும் நாடவில்லை. 2 தீமோ. 2:15 அவருடைய குறிக்கோளாகவும் இலட்சியமாகவும் இருந்தது. “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும், சத்திய வசனத்தை நிதானமாகப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.” இந்த வசனத்தை அவர் மாணவர்கள் முன் வலியுறுத்தாத சந்தர்ப்பங்கள் குறைவு. இந்த வசனங்களுக்கு உயிரளிக்கும் விதத்தில் தான் கல்லூரிப் பாடங்களும் இருந்தன. எபிரெய, கிரேக்க மொழிகள், பழைய புதிய ஏற்பாட்டு நூல்களுக்கான இலக்கண, இலக்கிய, வரலாற்று அடிப்படையிலான வியாக்கியானம், முறைப்படுத்தப்பட்ட இறையியல், போதக இறையியல் இவற்றைத்தான் வருடா வருடம் அவர் மாணவர்கள் முன் வைத்தார். இன்றைய இறையியல் கல்லூரிகளில் போதிக்கப்படும் அநாவசிய பாடங்களுக்கு அவர் இடங்கொடுக்கவில்லை. இதை எழுதுகிறபோது ஒன்று நினைவுக்கு வருகிறது. அவர் கல்லூரியில் சுவிசேஷ ஊழியம் எப்படிச் செய்வது என்ற பாடத்தைப் போதிக்கவில்லை. ஒரு சிலர் அதைக் குறையாகப் பார்த்திருக்கிறார்கள். வேதத்தை சுத்தமாக விளங்கிக்கொள்ளவும், அதைப் பரிசுத்த ஆவியின் வல்லமையோடு பிரசங்கிக்கவும் அவசியமான போதனைகள் கொடுக்கப்படும்போது சுவிசேஷத்தை சொல்ல விசேஷ டெக்னீக்குகளைத் தேடி அலைய வேண்டியதில்லை என்பது அவருடைய முடிவு. தேவ மனிதனுக்கு கர்த்தர் தந்திருக்கும் அருமையான சாதனமான பிரசங்கத்தால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை அவர் உறுதியாக நம்பினார். அந்த விதத்தில் அவர் ஒரு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி.

வேத வசனங்களை அவை அமைந்திருக்கும் சந்தர்ப்பத்தின்படி இலக்கண, இலக்கிய, வரலாற்று அடிப்படையில் பூரணமாக விளங்கிக் கொண்ட பின்பே அவற்றில் இருந்து செய்தியளிக்க வேண்டும் என்பதில் ஜோன் வெயிட் உறுதியாக இருந்தார். அதையே மாணவர்களிடம் அவர் அடிக்கடி வலியுறுத்தினார். வேத ஞானமில்லாமல் ஒருவன் போதக ஊழியத்தில் ஈடுபட முடியாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். கல்லூரியில் இணைந்த ஆரம்பத்தில் எபிரெய மொழிப் பாடத்தை எடுக்கும்படி முதல் வருடமே என்னை வற்புறுத்தி ஊக்குவித்து அந்தப் பாடத்தை அவர் நடத்தியதை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். பழைய ஏற்பாட்டு நூல்களுக்கு அவர் விளக்கங் கொடுத்தபோது எபிரெய மொழி அவர் கையில் துள்ளி விளையாடியது. எசேக்கியேல் தீர்க்கதரிசனத்துக்கு அவர் கொடுத்த விளக்கங்கள் இன்றும் என் நினைவில் நிற்கின்றன. அதை அவர் நூலாக எழுதி வெளியிட விரும்பியபோது வெளிfட்டாளர் அதில் சில மாற்றங்களைச் செய்ய விரும்பியபோது ஜோன் வெயிட் அதற்கு இடங்கொடுக்காமல் இன்று வரையும் அது அச்சிடப்படாமலேயே இருக்கிறது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எவருக்காகவும் சத்திய மாற்றத்தில் ஈடுபட அவர் இடங்கொடுக்கவில்லை. அதே போல வெளிப்படுத்தல் விசேஷம் நூலை அவர் விளக்கிப் போதித்த அனுபவத்தையும் என்னால் மறக்க முடியாது. அவர் வேதத்தைக் கையில் எடுத்துப் பிரித்து விளக்கியபோது அதன் அதிகாரமும், போதுமான தன்மையும் பூரணமாகப் பாதுகாக்கப்பட்டதை ஒவ்வொரு வகுப்பிலும் நான் உணர்ந்திருக்கிறேன். சீர்திருத்த விசுவாசத்தை உறுதியாக விசுவாசித்த ஜோன் வெயிட் வேதத்தில் எந்தப் பகுதியில் இருந்து விளக்கங்கொடுத்தாலும் அச்சத்தியங்களை வல்லமையோடு விளக்கத் தவறவில்லை. ஒவ்வொரு பாடமும் ஜெபத்தோடேயே ஆரம்பிக்கப்பட்டு ஜெபத்தோடேயே முடிந்தன. ஒவ்வொரு வாரமும் திங்களில் விசேட பிரசங்கம் வேல்ஸ்ஸைச் சேர்ந்த முக்கியமான சீர்திருத்தவாத போதகர்களால் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாகத் தான் பாடங்கள். ஒவ்வொரு வெள்ளியும் இரண்டு மணி நேரத்துக்கு கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் கூடி ஜெபித்தனர். கர்த்தரோடு தொடர்பில்லாத ஒரு மாணவன் இந்தக் கல்லூரியில் ஒன்று, விலகு முன்பு கர்த்தரை அறிந்துகொண்டிருந்திருப்பான் அல்லது நிலைத்திருந்திருக்க மாட்டான். அந்தளவுக்கு கர்த்தரின் வேதம் சம்மட்டி போல் மாணவர்களின் காதுகளில் வாரா வாரம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.

தன்னுடைய குரலை உயர்த்தி அவர் பேசியதை நான் ஒருபோதும் கண்டதில்லை. என்னோடு படித்த ஒரு நண்பனைப் பற்றி எனக்கு நினைவு வருகிறது. அவன் ஓர் ஆப்ரிக்க ஆங்கில நண்பன். அவன் இங்கிலாந்தில் ஏதோ ஒரு பகுதியில் இப்போது ஊழியத்தில் இருக்கிறான் என்பது மட்டும் எனக்குத் தெரியும். கல்லூரியை விட்ட பிறகு அவனை நான் பார்த்ததில்லை. ஆரம்பத்தில் அவனோடு பழகுவதற்கு நான் தயங்கினேன். இவனை யார் கல்லூரிக்குள் விட்டது என்று கூட என் மனதில் கேட்டுக் கொண்டதுண்டு. அந்தளவுக்கு அவனுடைய பேச்சும் நடத்தையும் அந்தக் காலத்தில் இருந்தது. சுருள் சுருளாக கத்தையாக நீண்ட தலை முடியோடும், பெரிய மீசையோடும் அவனிருந்தான். அவனுடைய உடைகள் கூட நம் கண் இமைகளை உயர்த்தச் செய்யும். பல தடவைகளில் அவன் எந்த நேரத்தில் எதைப் பேசுவது என்பதையும் அறிந்து வைத்திருந்தவனாகத் தெரியவில்லை. இதெல்லாம் இருபத்தி ஆறு வருடங்களுக்கு முன் நடந்தவை. இப்போது அவன் எவ்வளவோ மாறியிருக்கலாம். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் அமைதியோடு வார்த்தைகள் ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பொறுக்கியெடுத்துப் பேசி, சிரிக்கும்போது கூட அளந்து வைத்தது போல் அளவோடு சிரிப்பை உதட்டில் தவழ விட்டு, நடையுடை பாவனைகள் அத்தனையும் செதுக்கி வைத்ததுபோல் எங்கும் எந்தவிதத்திலும் கொஞ்சமும் இடம் மாறி இருந்துவிடாதபடி தன்னில் கொண்டு, தாழ்மையின் முன்னுதாரணமாக, சாப்பாட்டு மேசைப் பழக்க வழக்கங்களில் இருந்து தான் முன்னால் போய்விட்டால் பின்னால் வருகிறவர்களுக்கு கதவைத் திறந்துவிட்டு நிற்பது வரை அத்தனை விஷயத்திலும் பூரணமான ஜென்டில்மேன் (Perfect gentleman) போல் நடந்து வந்த ஜோன் வெயிட் இந்த நண்பனை ஏற்று அவனுடைய பழக்க வழக்கங்களைப் பொறுத்துக்கொண்டு அவருக்கும் இவனுக்கும் பழக்க வழக்கங்களில் வட துருவத்திற்கும் தென்துருவத்திற்கும் இடையில் இருப்பது போல் நீண்ட இடைவெளி இருந்தது) அவனுடைய ஆத்மீக வாழ்க்கை வளர்ச்சிக்கு உதவிய விதம் இன்றும் என் மனக்கண்ணில் நிற்கிறது. அந்தளவுக்கு அவனுக்கு உதவ அவர் எந்தளவுக்கு தன் நிலையில் இருந்து இறங்கி வந்திருக்க வேண்டும் என்பது எனக்குத் தான் தெரியும். அந்தளவுக்கு தாழ்மையின் மொத்த உருவமாக மனிதனை மனிதனாக மட்டும் பார்த்துப் பழகியவராக இருந்தார் ஜோன் வெயிட்.

கல்லூரியில் இருந்த காலத்தில் அவர் பல திருச்சபைகளில் பிரசங்கம் செய்தார். அவருடைய பிரசங்கங்களை நான் கேட்டு வியந்திருக்கிறேன். அவர் வேதத்தைத் திறந்து விளக்கிப் பிரசங்கித்தபோது அதன் அதிகாரத்தை ஒருவராலும் உணராமல் போக முடியாது. அந்தளவுக்கு தெளிவோடும், உறுதியோடும் அவர் பிரசங்கித்தார். ஜோன் வெயிட்டினுடைய வாழ்க்கையில் என்னை எப்போதுமே கவர்ந்த விஷயம் அவர் எந்தப் பெருமையையும் வாழ்க்கையில் நாடிப்போகாததுதான். அவருக்கிருந்த திறமைகளுக்கும், ஞானத்துக்கும் அவர் எத்தனையோ பெரிய பதவிகளை வகித்திருந்திருக்கலாம், பெருங்கூட்டங்களில் பேசியிருந்திருக்கலாம், பட்டங்களைப் பெற்றுக் கொண்டிருந்திருக்கலாம். பட்டங்களுக்காக வேதப்படிப்பில் ஈடுபடாதீர்கள் என்று அவர் மாணவர்களுக்கு நினைவுபடுத்தாத நாளில்லை. வேதத்தை சரியாக விளங்கிக்கொள்ளவும், சரியாகப் பிரசங்கிப்பதற்காகவும் மட்டும் படியுங்கள். பட்டங்களைத் தர வேண்டியது கர்த்தரின் பொறுப்பு. அதற்காக வேதத்தைப் படிக்காதீர்கள் என்ற அவருடைய குரல் இன்றும் என் காதுகளில் கேட்கிறது. எத்தனையோ தகுதிகள் இருந்தும் அவர் கர்த்தர் கொடுத்த பணியைக் கடைசி வரை முழு இருதயத்தோடு செய்தார். வேறு எந்த ஆசைக்கும் அவர் இருதயத்தில் இடங்கொடுக்கவில்லை. கல்லூரியை ஓர் ஏணியாக தன்னுடைய சொந்த வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டதுமில்லை. எத்தனையோ கல்லூரிகள் அந்தக் காலத்தில் வளர்ச்சியை மனதில் கொண்டு உலகத்தோடு ஒத்துப் போக ஆரம்பித்தபோது ஜோன் வெயிட் தன்னுடைய குறிக்கோளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாது வேத மனிதராக பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியின் கூர்ந்த பார்வையையும், நெஞ்சுறுதியையும் கொண்டு நிமிர்ந்து நடந்தார். அவரோடு கல்லூரியில் பணிபுரிந்தவர்களும் கடைசிவரை அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள். நம் காலத்தில் வாழ்ந்த சிறந்த ஒரு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியாகவே அவரை நான் பார்க்கிறேன்.

கல்லூரியின் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டபோது 1985ம் ஆண்டில் தன்னுடைய பிரியாவிடை பிரசங்கத்தை வல்லமையோடு ஜோன் வெயிட் கல்லூரி மாணவர்களுக்கு அளித்தார். கர்த்தர் அவருடைய ஊழியப்பணியை அங்கீகரித்து இங்கிலாந்தில் செப்பீல்ட் என்ற இடத்தில் இருந்த ஒரு சீர்திருத்த சபையில் போதகராக இருக்கும் வசதியை அவருக்கு அளித்தார். இந்த ஊழிய ஆரம்பத்திலேயே அவருடைய பிரசங்க ஊழியத்தின் மூலம் பலர் கர்த்தரை மனந்திரும்பி விசுவாசித்தார்கள் சபையும் வேகமாக அவருடைய பிரசங்க ஊழியத்தின் கீழ் வளர்ந்தது. 1997 ல் அவருடைய மனைவி லோனா (Lorna) கர்த்தரை அடைந்தார். கணவனுக்கு உண்மையான மனைவியாக இருந்து விசுவாசமாக காலம் முழுவதும் அவர் பணியாற்றி இருந்தார். அதற்குப் பிறகு அல்சைமார்ஸ் (Alzheimers) நோயின் அறிகுறிகள் அவரில் தென்பட ஆரம்பித்ததால் 1990ல் தன்னுடைய போதகப் பணியில் இருந்து விலகிக் கொண்டு தென் வேல்ஸுக்கே மறுபடியும் போய் தன் மகளும், மருமகனும் இருந்த இடத்தில் வாழ்ந்தார். 2001ல் டோரீனை (Doreen) மறுமணம் செய்து கொண்டிருந்த ஜோன் வெயிட் தன்னுடைய இறுதிக் காலத்தை அல்சைமார்ஸ் வியாதியுடன் போராடியே கழிக்க நேர்ந்தது. இருந்தபோதும் அவர் வேத சத்தத்தைக் கேட்கும் போதெல்லாம் கூர்ந்து கேட்கத் தவறவில்லை. அருமையான இறையியல் வல்லுனராகவும், வேத விரிவுரையாளராகவும், மெய்ப் போதகராகவும் மொத்தத்தில் தாழ்மையின் மொத்த உருவான நல்ல மானுடராகவும் இருந்த திரு. ஜோன் வெயிட் இந்த வருடம் கர்த்தரின் பாதத்தில் அடைக்கலம் புகுந்தார். அவருடைய நினைவாக மே மாதம் 19ம் திகதி நடத்தப்பட்ட ஆராதனையில் பழைய மாணவர்களும் அவருடைய ஊழியத்தால் பயனடைந்தவர்களும் கலந்து கொண்டு அவருக்காக கர்த்தரைத் துதித்தார்கள். அந்நாளில் இது நடப்பதே அறியாமல் நான் இலண்டன் போய்ச் சேர்ந்தேன். நான் மிகவும் மதிக்கின்ற திரு. ஜோன் வெயிட்டின் நினைவு ஆராதனையில் கலந்துகொள்ள முடியாமல் போனது என்னுடைய இழப்புத்தான்.


கல்வினுடைய பணிகளை நான் பார்க்கிறபோது, 16ம் நூற்றாண்டில் முழு ஐரோப்பாவுமே பின்பற்றிய கல்வின் வகுத்த தனித்துவமுள்ள சீர்திருத்தக் கோட்பாட்டொன்றை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். இதைக் கல்வின் தன்னுடைய நூலில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:

எந்தத் தவறுகளும் இல்லாத விதத்தில் நம்முடைய சிந்தனைகளும், பேச்சும் அமைந்திருக்க நாம் வேதத்தில் இருந்தே அனைத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்; அதன் மூலமாகவே நம்முடைய மனதில் தோன்றும் அனைத்து சிந்தனைகளும், நம் வாயிலிருந்து புறப்படும் அனைத்து வார்த்தைகளும் பரிசோதிக்கப்பட வேண்டும்.

எந்தளவுக்கு இன்று கல்வினுடைய போதனைகளைப் பின்பற்றுகிறவர்கள் இந்தக் கோட்பாட்டைக் கைக்கொள்ளு கிறார்கள் என்பது தொடர்ந்தும், சிலவேளைகளில் கடுமையாகவும் விவாதத்துக்குரியதாக இருந்து வருகிறது.

- ஜேம்ஸ் பெக்கர் -




பிரியாவிடை பிரசங்கங்கள் – 1

[அல்பர்ட் என். மார்டின் 46 ஆண்டுகளாக, அமெரிக்காவில், நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள டிரினிட்டி பாப்திஸ்து சபையின், மூப்பர்களில் ஒருவராக பணி புரிந்து, தமது 74ம் வயதில் அந்த மாகாணத்தை விட்டுச் செல்லுவதற்கு முன்பாக, தமது இறுதி அறிவுரைகளாக தம் மக்களுக்கு 9 பிரசங்கங்களை அளித்தார். அந்த அறிவுரைகள் உலகமெங்கிலுமுள்ள சகல விசுவாசிகளுக்கும், உண்மையான சபைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமானதால், அனைவரும் இதை அறிந்துகொள்ளும்படியாக அந்தப் பிரசங்கங்களின் சாராம்சத்தை தமிழில் தந்திருக்கிறோம்.

ஒரு போதகன் தன் மக்கள் மத்தியில், பவுல் எபேசிய மூப்பர்களுக்கு கொடுத்த பிரியாவிடைப் போதனையில் சொல்லியிருப்பதுபோல இரவும் பகலும், கண்ணீரோடும் பாரத்தோடும் உழைத்து வேத சத்தியங்கள் சபை வாழ்க்கையில் நடைமுறையில் இருப்பதற்காக சக மூப்பர்களோடு பாடுபட்டிருக்காவிட்டால் அல்பர்ட் என். மார்டின் இங்கே தந்திருக்கும் அறிவுரைகளை சுத்த மனச்சாட்சியோடும் தைரியத்தோடும் பிரசங்கிக்க முடியாது. அந்தளவுக்கு தன் மக்கள் மத்தியில் நேர்மையோடு பணிபுரிந்திருக்கிறார் போதகர் மார்டின். அவருடைய அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையில் மாறுதல்களை ஏற்படுத்தி கர்த்தருக்காக ஆத்துமாக்களை இருதய சுத்தத்தோடு ஆதாயப்படுத்த துணை புரியுமானால் அதுவே இந்தப் பிரசங்கங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதமாக இருக்கும். இதைத் தமிழில் குறிப்பெடுத்துத் தந்த வினோதா சுரேந்தருக்கு என் நன்றி. - ஆசிரியர்.]

2006-ம் ஆண்டின் வருடாந்திர சபை கூட்டத்தில் நான் அறிவித்ததை நீங்களெல்லாரும் நினைவில் வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நான் மூப்பர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று, 2008-ம் ஆண்டுவாக்கில் மிக்சிகன் நகருக்கு குடிபெயர இருப்பதை உங்களுக்கு அறிவித்திருந்தேன். ஜூன் 15ம் தேதி 2008ல் அந்த பயணம் இருக்கலாம். ஆகவே நான் இன்னும் உங்களோடு 7 அல்லது 8 ஓய்வு நாட்களை செலவிடப் போகிறேன் என்பது தெரிகிறது. 1962-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நான் நார்த் கோல்ட்வெல் என்கிற இந்த நகரத்திற்கு வந்ததிலிருந்து, இப்போது 46 ஆண்டுகள் முடிவடைகிறது. இந்த 46 ஆண்டுகளாக நான் என்னுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக உங்கள் மத்தியிலே மற்ற உடன்மூப்பரோடும், மேய்ப்பரோடும் சேர்ந்து ஊழியம் செய்தேன். நான் ஒரு தனித்த மூப்பராக செயல்பட வேண்டிய அவசியம் நேரிடாததை எண்ணி கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். பல மேய்ப்பர்களும், மூப்பர்களுமாக சேர்ந்து பணி புரிவதில் உள்ள நன்மைகளை நான் நன்கு அறிந்திருக்கிறேன். உங்களிடம் விடைபெறும் இந்த வேளையிலே உங்கள் மத்தியில் போதகராக பணிபுரிந்து விடைபெறுவதைக் குறித்து எனக்கு அதிக சந்தோஷம்.

நான் விடைபெறுவதற்கு முன்னதாக நான் உங்களுக்கு என்ன செய்தியைக் கூறிவிட்டு செல்வது என்பதைப் பற்றி நான் மிகவும் அதிகமாக சிந்தித்துப் பார்த்தேன். அதைப் பற்றி அதிகமதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு சில எண்ணங்கள் தோன்றின. கடந்த 46 ஆண்டுகளில் இந்த சபையில் நான் போதித்திராத முக்கியமான போதனைகள் எவையாவது இருக்கின்றனவா என்று யோசித்துப் பார்த்தேன். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் அல்லது முக்கியமான வேத சத்தியங்களில் அல்லது நடைமுறை காரியங்களில் அப்படி ஏதாவ தொன்றைத் தவற விட்டிருக்கிறேனா என்று ஆராய்ந்து பார்த்தபோது நாம் கூடித் தியானிக்காமல் விட்டுவைத்த காரியங்கள் எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. பிரசங்கங்கள் மூலமாக மாத்திரம் அல்லாமல் ஞாயிறு தின ஆராதனை வேதவாசிப்புகளின் மூலமாகவும் நாம் திரும்பத் திரும்ப அவற்றை ஆராய்ந்திருக்கிறோம்.

வேதவாசிப்பு என்று சொல்லும்போது இந்த 46 வருடங்களில் நாம் சபையாகக் கூடி வருகையில் புதிய ஏற்பாடு முழுவதையும் மத்தேயு முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை) குறைந்தது 8 முறைகளாவது நாம் வாசித்திருக்கிறோம். அது போலவே பழைய ஏற்பாடு முழுவதையும் (ஆதியாகமம் முதல் மல்கியா வரைக்கும்) 3 முறைகள் வாசித்திருக்கிறோம். அப்படி வாசித்து வரும்போது எங்கேயாவது வசனத்தில் நமக்கு தெளிவு ஏற்பட வேண்டியதாக இருந்தால் மூப்பர்களாகிய நாங்கள் யாவரும் சேர்ந்து அதைக் குறித்து விவாதித்து பின்னர் அதை சபையாராகிய உங்கள் வாழ்க்கைக்குப் பிரயோஜனமாயிருக்கும்படிக்கு அவற்றை விளக்கியிருக் கிறோம். ஆகவே இந்த 46 ஆண்டுகளில் நான் பிரசங்கித்திராத எதை உங்களுக்குப் பிரசங்கிக்கப் போகிறேன் என்கிற கேள்வி எனக்குள் எழுந்தவண்ணமாக இருந்தது. கடைசியாக நான் என்னதான் முடிவு செய்தேன் என்பதை அறிய ஆவலாக இருக்கிறீர்கள் அல்லவா? ? கர்த்தரின் சித்தத்தின்படி கீழ்கண்டவற்றை நான் உங்களுக்குப் பிரசங்கிக்க இருக்கிறேன்:

உங்கள் மத்தியில் 46 ஆண்டுகள் ஊழியம் செய்வதற்கு எனக்கு உற்சாகம் அளித்த அடிப்படையான ஆவிக்குரிய சத்தியங்களின்பேரில் பேரில் ஒரு பொதுவான பிரசங்கத்தை அளிக்க வேண்டுமென எண்ணினேன். அதற்கு நான் ஒரு தலைப்பு கொடுத்திருக்கிறேன். அந்த தலைப்பு கவர்ச்சியானதோ அல்லது விளங்கிக்கொள்ள முடியாததோ அல்ல. மிகவும் சாதாரணமான தலைப்புத்தான்: “டிரினிட்டி பாப்திஸ்து சபையின் அங்கத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது பிரிவு உபதேசங்கள்”. இந்த பிரசங்கங்களில் நான் குறிப்பாக ஏதாவதொரு வசனத்தையோ அல்லது பிரச்சனையையோ குறித்துப் பேசப் போவதில்லை. ஏனென்றால் நாம் இந்த 46 வருடங்களில் மிகவும் கவனத்தோடும், ஆராய்ச்சியோடும், ஜெபத்தோடும் வசனங் களையும், பிரச்சனைகளையும் குறித்து ஆராய்ந்து அவற்றை நமது வாழ்க்கையில் செயல்படுத்தியும் வந்திருக்கிறோம். சில சந்தர்ப்பங்களில் நாம் ஏற்கனவே பேசின வசனங்களையும், கருத்துக்களையும் புதிதாக சபைக்கு வருபவர்களின் நிமித்தமாகத் திரும்பவும்கூட பேசியிருக்கிறோம். ஆகவே நான் இப்போது என்ன பேச உத்தேசித்திருக்கிறேனென்றால், நமது இருதயத்தையும், ஆத்துமாவையும், நமது வாழ்க்கையையும்கூட ஒன்று சேர்த்த மிகவும் பிரதானமான, முதுகெலும்பைப் போன்ற சத்தியங்களை மறுபடியுமாக உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன். கடவுளின் மக்களாகிய நீங்கள் உங்கள் எதிர்கால வாழ்க்கைக்காகவும், ஊழியங்களுக் காகவும் அந்த சத்தியங்களை மறுபடியுமாக நினைவிற் கொண்டு கர்த்தருக்கென்று உங்களை மீண்டும் ஒப்புக்கொடுக்கும்படியாக உங்களை அழைக்கிறேன். நான் உங்களுக்கு முதலாவதாக சொல்லப்போகிற புத்திமதி, நான் இனிமேல் சொல்லப்போகின்ற மற்ற பிரசங்கங்களுக்கெல்லாம் அஸ்திபாரமாய் இருப்பதோடு மாத்திரமல்லாமல், இனி சொல்லவிருக்கிற செய்திகளுக்கெல்லாம் ஒரு மேற்கூரையாகவும் இருந்து அனைத்தையும் இணைத்துக் கட்டுகின்ற காரியமாக இருக்கிறது. நான் உங்களுக்கு கூறுகிற அந்த முதலாவது உபதேசம் என்ன? அது இதுதான்:

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசமும் அன்பும் உடையவர்களாக, அவரை ஒரு நபராக எண்ணி, விடாமல் இறுக்கமாகப் பற்றிக்கொள்ளுங்கள்; அந்த விசுவாசத்தினாலும் அந்த அன்பினாலும் அவருடைய வார்த்தைகள் எல்லாவற்றையும் கைக் கொண்டே தீருவேன் என்கிற வைராக்கிய வாஞ்சை உடையவர்களாய் இருங்கள்.

இந்த வார்த்தைகளுக்கு நான் உருவம் கொடுத்த விதத்தைப் பற்றி சற்று விளக்க விரும்புகிறேன். ஏன் இப்படியான வார்த்தைகளை உபயோகித்து இந்த வாக்கியத்தை அமைத்தேன்? ? இந்த வாக்கியத்தை நான் வெகு சுலபமாக எழுதிவிடவில்லை. என் மனதிலுள்ள இந்த கருத்தை எப்படி எழுதுவது என பல மணி நேரங்கள் போராடினேன். நான் எழுதிப் பார்த்த விதங்கள் எதுவும் எனக்கு திருப்தியாக இல்லை. முடிவில் மேற்குறிப்பிட்ட படியான வார்த்தைகள் எனக்குக் கிடைத்தது. அவை என் மனதிலுள்ளதை சரியாகத் தெரிவிக்கிறதென்று நினைக்கிறேன். இந்த வார்த்தைகளின் அர்த்தம்தான் என்ன? முதலாவது வாக்கியத்தை எடுத்துக்கொள்ளலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசமும் அன்பும் உடையவர்களாக, அவரை ஒரு நபராக எண்ணி, விடாமல் இறுக்கமாகப் பற்றிக்கொள்ளுங்கள் (உங்களுக்கு மிகவும் வேண்டிய அம்மாவையோ, அப்பாவையோ, சகோதரனையோ எப்படி ஒரு நபராக எண்ணி அவருடன் உறவாடுகிறீர்களோ அதுபோல இயேசுவையும் ஒரு நபராக எண்ணி உறவை வலுப்படுத்திக்கொள்ள புத்திகூறுகிறேன்). நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்பதை இன்னும் சற்று அதிகமாக விளக்குகிறேன்.

ஒரு கிறிஸ்தவ ஆணோ அல்லது கிறிஸ்தவ பெண்ணோ, கிறிஸ்தவ வாலிபனோ, கிறிஸ்தவ வாலிபப் பெண்ணோ விசுவாசத்தைக் கொண்டுதான் இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்படுகிறார்கள் என்று வசனம் கூறுகிறது. கிறிஸ்தவம் என்பது சில சட்டதிட்டங்களை வைத்துக்கொள்ளுவதால் ஏற்படுவதல்ல. கிறிஸ்தவத்திற்கு சட்டதிட்டங்கள் அவசியம்தான். ஆனால், அவற்றைப் பூரணப்படுத்திய ஒரே நபராகிய இயேசுவோடு இணைக்கப்படுவதே கிறிஸ்தவம் ஆகும். அவர் அவைகளை தனது மகிமையாலும் தனது நிறைவேற்றுதலாலும் பூரணப்படுத்தி முடித்தார். அப்படியாக இயேசு கிறிஸ்துவுடன் இணைக்கப்படுகின்ற ஓர் உண்மையான கிறிஸ்தவனை சீஷன் என்று வேதாகமம் குறிப்பிடுகிறது. சீஷன் என்பவன் யார்? ஒரு குருவானவரிடமோ, ஓர் ஆசிரியரிடமோ பக்தியும் பாசமும் கொண்டிருப்பவனே அவருடைய சீஷன் ஆவான். அதே போல தன்னுடைய விசுவாசத்தின் காரணமாக இயேசுவின் மீது பக்தியும் நேசமும் கொண்டவனை கிறிஸ்துவினுடையவன் என்கிற அர்த்தத்தில் “கிறிஸ்தவன்” என வேதாகமம் குறிப்பிடுகிறது. அவர்மீதுள்ள விசுவாசத்தினால் அவருடைய சீஷன் ஆகிறானே, அந்த விசுவாசமும்கூட கடவுளின் அற்புதமான வரம்தான். பரிசுத்த ஆவியைக் கொண்டு அந்த விசுவாசத்தை அவனுடைய உள்ளத்தில் கடவுள் ஏற்படுத்துகிறார். அப்படி உண்டான விசுவாசத்தின் நிமித்தமாக அவனுக்கு இயேசுவின் மீது மிகுந்த அன்பு ஏற்படும். விசுவாசமும் அன்பும் எப்போதும் இணைந்தே காணப்படும். இயேசுவின் மீது நமக்கு இருதயத்தில் இருந்து அன்பு ஏற்படவில்லையென்றால் அந்த விசுவாசம் உண்மையான விசுவாசமாக இருக்க முடியாது. இயேசுவின் மீது அன்பில்லாமல் வெறும் விசுவாசத்தை மாத்திரம் கொண்டிருந்தால் அது நம்மை இரட்சிப்புக்கு கொண்டு செல்லுகிற விசுவாசமாயிராது. சிதறியிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகின்ற பேதுரு, இந்த அன்பைக் குறித்து தமது நிருபங்களில், எப்போதும் எழுதத் தவறுவதில்லை. “அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்” 1 பேதுரு 1:8. அவர் என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. இப்போது அவரை பார்க்காமல் இருந்தும் அவர் மீது விசுவாசம் வைத்திருக்கிறீர்கள் என்பதையும் குறிப்பிடுகிறார். இந்த கடிதத்தை பேதுரு எங்கும் சிதறியிருக்கிற சகல பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறார். அவரை விசுவாசிக்கின்ற அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இவை பொருந்தும். இந்த காலகட்டத்தில் வசிக்கின்ற நமக்கும் அவை பொருந்தும். அவரை உண்மையாக விசுவாசிக்கிற ஒவ்வொரு விசுவாசியும் அவரில் அன்புகூருகிறவனாயிருக்கிறான். அவரில் அன்புகூருகிறவன் அவரை விசுவாசிக்கிறான்.

இதே கருத்தை பவுல் அப்போஸ்தலனும் சிறிதும் தயக்கமின்றி வெளிப்படுத்தியிருக்கிறார். ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன் 1 கொரிந்தியர் 16:22. இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தினால் ஒருவன் இரட்சிக்கப்படுகிறான் என்று நாம் அறிந்திருக்கிறோமல்லவா? அப்படியானால் இரட்சிப்புக்கு விசுவாசம் போதுமா? அன்பு அவசியமில்லையா? என்கிற கேள்வி எழலாம். வேதாகமத்தில் எங்குமே, நாம் அவர்மீது அன்புகூர்ந்ததினால் அவரோடு இணைக்கப்பட்டவர் களாயிருக்கிறோம் என்று வாசிக்கவில்லை. விசுவாசத்தினால்தான் நாம் அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறோம். கிருபையினாலே, விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்களால் உண்டானதல்ல.

மனிதன் பெருமை பாராட்டாதபடிக்கு இது கடவுளால் அருளப்பட்ட ஈவு. நாம் அவரால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். இதை வேதம் தெளிவாக சொல்லுகிறது. அப்படியிருந்தும் பவுல், இயேசுமீது ஒருவனுக்கு அன்பு இருக்க வேண்டியதின் அவசியத்தை இங்கே சொல்லுகிறார்: ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற் போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கர்த்தரை விசுவாசியாதவன் ஆக்கினைத் தீர்ப்படைவான் என்றிருக்கிறது. அவரில் அன்புகூராதவன் சபிக்கப்பட்டவன் என்று பவுல் குறிப்பிடுகிறார். ஏன்? இவைகளில் வெவ்வேறான காரியங்கள் சொல்லப்பட்டிருக்கிறதா? இல்லை. அவரில் அன்புகூராதவன் அவரை உண்மையாக விசுவாசிக்க மாட்டான் என்பதுதான் இதன் கருத்து. உண்மையான விசுவாசம் அன்பை பிறப்பிக்கும். ஆகவேதான் யோவான் தமது நிருபத்தில் நாம் அவரிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் முந்தி அன்புகூர்ந்தார் (1 யோவான் 4:10,19) என்று எழுதியிருக்கிறார். அவர் பாவிகளாகிய நம் மீது அன்புகூர்ந்தபடியால் தமது ஒரே பேறான குமாரனை நமது பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாக அனுப்பினார். இப்படியாக தேவனுடைய அன்பு நமக்காக வெளிப்பட்டது. பாவிகளாகிய மக்கள் தேவனுடைய இந்த மகத்தான அன்பைக் குறித்து கேள்விப்பட்டு, அதை விளங்கிக்கொள்ளும்போது பரிசுத்த ஆவியினால் தமது உள்ளத்தில் ஏற்படும் விசுவாசத்தைக் கொண்டு மீட்பராகிய அவரை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். கடவுளின் அன்பு, நம்மிடத்தில் அன்பைப் பிறப்பிக்கிறது. அவர் நம்மில் அன்பு வைத்தபடியால்தான் நாம் அவரில் அன்புகூருகிறோம். ஆனால் நாம் ஒவ்வொருவரும் தனித்தபிரகாரமாக அவரில் அன்புகூருகிறோமா என்பதே கேள்வி. யோவான் தமது நிருபத்தில், தாம் எழுதுகிற ஒவ்வொரு கிறிஸ்தவனும், தனிப்பட்ட விதத்தில் கர்த்தராகிய இயேசுவின் மேல் அன்பு வைத்திருக்கிறவன் என்கிற எண்ணத்தில் எழுதுகிறார்.

நாம் வேதாகமத்தைப் படிக்கும்போது இயேசு கிறிஸ்துவும் இதை மிகவும் தெளிவாக விளக்குவதைக் காண்கிறோம். ஒவ்வொருவனும் தன்மீது இப்படிப்பட்ட அன்பை வைத்திருக்க வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார். கர்த்தரின் மேல் வைக்கும் அன்பு என்பது சாதாரணமான அன்பல்ல. இந்த உலகத்தில் எந்தவொரு சிருஷ்டியின் மீது வைத்திருக்கும் அன்புக்கும் அது ஒப்பாகாது. லூக்கா 14:26, இயேசு கிறிஸ்து எதிர்பார்க்கின்ற அந்த அன்பைக் குறித்து தெளிவாக விளக்குவதைப் பாருங்கள். “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும் தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்கு சீஷனாய் இருக்க மாட்டான்.” அவன் தன் சொந்தபந்தங்களை மாத்திரமல்ல, தனது ஜீவனையுங்கூட வெறுக்காவிட்டால் எனக்கு சீஷனாயிருக்க முடியாது என்கிறார். இயேசுவுக்கு ஒருவன் யாவற்றைக் காட்டிலும் முதலிடம் கொடுக்காவிட்டால் அவன் பேரில் இயேசுவுக்கு இரட்சிக்கத்தக்கதான பிரியம் ஏன் ஏற்படவேண்டும்? சகோதர சகோதரிகளை வெறுக்காவிட்டால் என்று அவர் சொல்வது அவர்களை பகைக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் அல்ல. இயேசுவைக் காட்டிலும் அவர்கள் மீது அதிகமான அன்பு இருக்க வேண்டியதில்லை என்கிறார். அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் இயேசுவின் மீது வைத்திருக்கும் அன்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இயேசுவின் மீதுள்ள அன்புதான் பிரதானமானதாக இருக்க வேண்டும். இயேசுவின் மீது ஒவ்வொருவரும் பிரதானமான அன்பை செலுத்த வேண்டும் என்று வேதாகமம் போதிக் கிறது. உங்கள் மகனையோ, மகளையோ, தாயையோ, தகப்பனையோ, மனைவியையோ, ஜீவனையோ இரண்டாவதாகத்தான் நேசிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் இயேசுவுக்கு சீஷனாய் இருக்க முடியும். அதை உங்களுக்கு விளக்கிக் கூறவே நான் இங்கு உங்களுக்குப் பிரசங்கியாக இருக்கிறேன். அதை சொல்லாமல் மற்றவற்றை பிரசங்கிப்பதால் பிரயோஜனம் என்ன? இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் அனைவருமே அவரை ஒரு நபராக எண்ணி அவர் மீது அளவுகடந்த பிரியமும் வைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர் மீது ஒருவன் வைத்திருக்கிற இந்த அன்பு உலகத்தில் காணப்படுகிற மற்ற எல்லா வகையான அன்பு, பாசம், நேசம் இவைகளைக் காட்டிலும் மிகமிக மேலானதாக இருக்க வேண்டும்.

கிறிஸ்து சயையை நேசிப்பது போல நான் என் மனைவியை நேசிக்க வேண்டும் என்ற கட்டளையைப் பெற்றிருக்கிறேன். ஆனாலும் நான் என் மனைவியின் மீது வைத்திருக்கிற அன்பு ஒருபோதும் இயேசுவின் மீதுள்ள அன்புக்கு இடைஞ்சலாக வரவே கூடாது. இந்த இருவர் மீதான அன்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இயேசுவின் மீது நான் கொண்டிருக்க வேண்டிய அன்பே அதிகமானதாக இருக்க வேண்டும். இயேசுவின் மீதுள்ள அன்பை ஒப்பிடுகையில் நான் என் மனைவியை வெறுக்க வேண்டியவனாக இருக்கிறேன். அப்படியே என் பிள்ளைகளையும், என் கூடப்பிறந்தவர்களையும் வெறுக்க வேண்டியவனாக இருக்கிறேன். இயேசுதான் எல்லா உறவைக்காட்டிலும் பிரதானமாக இருக்க வேண்டும். இதைத்தான் இயேசு அங்கு கூடி வந்த கூட்டத்தாரிடம் கூறிக் கொண்டிருக்கிறார். மிகவும் தெளிவாக சொல்லுகிறார். என்னுடைய இந்த “பிரிவின் செய்தியாக” சபையிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நான் சொல்ல விரும்புவது: விசுவாசத்தைக் கொண்டு இயேசு கிறிஸ்துவில் இணைக்கப்பட்டுள்ள நீங்கள் அவரில் அன்புகூர்ந்தவர்களாயும் இருக்கிறீர்கள். அந்த விசுவாசத்தையும் அன்பையும் விடாமல் பற்றிக் கொண்டு அவரோடு எப்போதும் இணைக்கப்பட்டவர்களாய் இருங்கள்.

அப்போஸ்தலர் 11ம் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எருசலேமில் விசுவாசிகளுக்கு எதிராக உபத்திரவங்கள் ஆரம்பித்தபோது, விசுவாசிகள் பல இடங்களில் சிதறிப் போனார்கள். போன இடங்களிலே அவர்கள் சுவிசேஷத்தை அறிவித்தார்கள். வெகு தொலைவிலுள்ள சீப்ரு தீவு, அந்தியோகியா ஆகிய இடங்களுக்குங்கூட சில விசுவாசிகள் சென்றார்கள். அந்தியோகியாவில் அவர்கள் சுவிசேஷத்தை பிரசங்கித்தபோது ஆவியானவர் அங்கு செயல்பட்டார். கர்த்தரின் கரம் அவர்களோடு இருந்தது. கேட்டவர்களில் அநேகம்பேர் கர்த்தரை விசுவாசித்து அவரிடமாக திரும்பினார்கள். அங்கு என்ன நடந்தது என்று கவனியுங்கள். அநேகர் கர்த்தரை விசுவாசித்தார்கள். அவர்களது விசுவாசம் மிகவும் அழகாக இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. விசுவாசித்தவர்கள் கர்த்தரிடமாகத் திரும்பினார்கள். இயேசுவின்பேரில் பிரதானமான அன்பும் விசுவாசமும் கொண்டபடியினாலே அவர்கள் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி விட்டு, முழுவதுமாக அவர் பக்கமாகத் திரும்பினார்கள். அங்குள்ள காரியங்களை அறிந்து வரும்படி எருசலேம் சபையிலிருந்து பர்னபாவை அந்தியோகியாவுக்கு அனுப்பினார்கள். 11:23 ஆம் வசனம் சொல்லுகிறது: “அவன் போய் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்தி சொன்னான்”. ஆங்கில வேதாகமத்திலே ‘நிலைத்திருங்கள்’ என்கிற வார்த்தைக்கு (Cleave) இணைந்திருங்கள் என்கிற பதம் காணப்படுகிறது. இந்த வார்த்தை இரண்டுபேர் இணைக்கப்படும் காரியத்தைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. திருமணத்தில், மனிதன் தன் தாயையும் தகப்பனையும் விட்டு மனைவியோடு இசைந்திருக்கக் கடவன் என்கிற கட்டளையை வேதாகமத்தில் பார்க்கிறோமல்லவா? அந்தவிதமான இணைப்பைத்தான் பர்னபா இங்கு அந்தியோகியா சபையாருக்கு புத்திமதியாகக் கூறுகிறார். அதற்கு ‘நெருக்கமான உறவு’, ‘தொடர்பில் இடைவிடாமல் நிலைத்திருத்தல்’ என்கிற அர்த்தங்கள் உண்டு. அந்தியோகியா பட்டணத்து ஜனங்கள் தேவனுடைய கிருபையினால் விசுவாசிகளாகி கர்த்தரிடத்தில் திரும்பியதை பர்னபா கண்டபோது, “நீங்கள் விசுவாசித்த அந்த கர்த்தரை விடாமல் பற்றிக் கொண்டிருங்கள்” என்று புத்தி சொன்னார். ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு மிகவும் இன்றியமையாத ஆணி வேர் இது. கிறிஸ்துவின் மீது விசுவாசத் தையும் அன்பையும் உடையவர்களாக அவரை விடாமல் இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்.

நான் உங்களுக்குக் கூறிய புத்திமதியின் இரண்டாவது பகுதி என்ன? அந்த விசுவாசத்தினாலும் அந்த அன்பினாலும் அவருடைய வார்த்தைகள் எல்லாவற்றையும் கைக் கொண்டே தீருவேன் என்கிற வைராக்கிய வாஞ்சை உடையவர்களாய் இருங்கள்.

(1) விசுவாசத்தினாலும் அன்பினாலும் இயேசு கிறிஸ்துவை விடாமல் பற்றிக் கொண்டிருங்கள்.

(2) அதே விசுவாசத்தினாலும் அன்பினாலும் அவருடைய வார்த்தைகள் யாவையும் கைக்கொள்ளுவேன் என்கிற வைராக்கியம் உடையவர்களாய் இருங்கள்.

இந்த இரண்டு காரியத்தையும் பிரிப்பதற்கு வேதாகமம் நம்மை அனுமதிப்பதே இல்லை. இயேசுவின் மேல் வைக்கும் அன்பு! அவருடைய வசனங்களுக்குக் கீழ்ப்படிதல்! இவ்வுலகில் அநேகர் இயேசுவின் மேல் தாங்கள் வைத்திருக்கும் அன்பைக் குறித்தும், அவர் தங்களோடு விசேஷித்த விதத்தில் தொடர்பு கொள்வதைக் குறித்தும் அநேகவிதமான சம்பவங் களை சாட்சியாக சொல்லுவார்கள். ஆனால் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வசனத்தைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால், அதில் கர்த்த ருடைய வசனங்களின் ஆளுகை இருக்காது. கர்த்தருடைய வசனங்கள் அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தியிருக்காது. இயேசுவின் மேல் இருக்கும் அன்பையும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. அவரிடம் விசுவாசமும் அன்பும் உடைய வன் நிச்சயமாக அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தே தீருவான்.

இதற்கு சில வசனங்களை உதாரணமாகப் பார்ப்போம். யோவான் 6ம் அதிகாரத்தை எடுத்துக்கொள்வோம். ஜீவ அப்பத்தைக் குறித்ததான பகுதி இது. 66ம் வசனத்தைப் பாருங்கள். அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப் போனார்கள். இவர்கள் இயேசுவுக்கு சீஷர்களாக இருந்தவர்கள்; அவரை விசுவாசித்தவர்கள். இப்போது அவர்கள் இயேசுவிடமிருந்து பிரிந்து போய்விட்டார்கள். அதுவரைக்கும் இயேசு சென்ற இடங்களிலெல்லாம் அவரைத் தொடர்ந்து போனவர்கள்தான். அவர் கொடுத்த அப்பங்களையும் மீன்களையும் உண்டு அவரைத் தொடர்ந்து சென்றவர்கள்தான். அவருடைய பிரசங்கங்களையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அதிகாரத்தில், இயேசு உபதேசித்துக் கூறின வசனங்களுக்கு கீழ்ப்படிய முடியாதவர்களாக பின்வாங்கிப் போய்விட்டார்கள். இயேசுவின் மீது வெறும் அன்பு மாத்திரம் கொண்டு அவர் போகும் இடங்களுக்கெல்லாம் அவரைப் பின்பற்றினவர்கள், வசனத்திற்குக் கீழ்ப்படிய வேண்டிய நேரம் வந்தபோது, அதற்குக் கீழ்ப்படியக்கூடாமல் விலகிக் கொண்டார்கள். அன்பையும் வசனத்தையும் பிரித்தவர்கள் இயேசுவிடமிருந்து பிரிந்து போய்விட்டார்கள். அன்பு செலுத்துவது வேறு, வசனத்திற்குக் கீழ்ப்படிதல் வேறு என நினைத்தால் இயேசுவையே பிரிய நேரிடும்.

அதைப் பார்த்து இயேசு கிறிஸ்து நீங்களும் போய்விட மனதாயிருக் கிறீர்களா என்று சீஷர்களிடம் கேட்கிறார். நீங்களும் என்னை விட்டு பிரிந்து போகப் போகிறீர்களா? என்னோடுள்ள இணைப்பைத் துண்டித்துவிடப் போகிறீர்களா? என்று 12 சீஷர்களைப் பார்த்துக் கேட்கிறார். 68ம் வசனத்தில் சீமோன் பேதுரு அழகாக பதில் சொல்லுகிறார்: “ஆண்டவரே யாரிடத்தில் போவோம்? நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே”. பேதுருவுக்கு எப்படி விளங்கியிருக் கிறது பாருங்கள். நாங்கள் உம்மை விட்டுப் பிரிந்தோமானால் எங்களை நித்தியஜீவனுக்கு வழி நடத்துகிற வசனங்களை விட்டும் பிரிந்து போவோமல்லவா என்கிறார். உம்மையும் வசனத்தையும் பிரிக்க முடியாது. உம்மைப் பிரிந்தால் நித்தியஜீவனுக்கு அழைத்துச் செல்லுகிற வசனங்களையும் பிரிய நேரிடுமே என்கிறார். இயேசுவையும் வசனத்தையும் பிரிக்க முடியாது. இயேசுவை நேசிக்கிறேன். ஆனால் அவர் வசனத்தை அறியேன் என்று யாரும் சொல்ல முடியாது.

மாற்கு 8:38ல் இது சம்பந்தமாக இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். “ஆதலால் விபச்சாரமும் பாவமுமுள்ள இந்த சந்ததியில் என்னைக் குறித்தும், என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படு வானோ, அவனைக் குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப் படுவார் என்றார்”. இங்கும் இயேசு கிறிஸ்து ஒரு பிரிக்கப்பட முடியாத இணைப்பை காண்பிக்கிறார். என்னைக் குறித்தும், என் வார்த்தைகளைக் குறித்தும்! அவரைக் குறித்தும் அவருடைய வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படுகிறவன் - இவைகளை பிரிக்க முடியாது. ஒன்று இல்லாமல் அடுத்தது இருக்க முடியது.

அடுத்தபடியாக யோவான் 17:8ஐ பாருங்கள். பிரதான ஆசாரிய ஜெபம் என்று அழைக்கப்படுகிற இந்த பகுதியிலே இயேசு ஜெபிக்கிறார்: “பிதாவே நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேனென்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்”. பிதா தமக்குத் தந்தவர் களுடைய அடையாளங்களை அவர் சொல்லுகிறார். அவர்கள் என் மீது பிரியம் வைத்திருப்பது மாத்திரமல்லாமல் நான் கொடுத்த வார்த்தை களையும் அன்போடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவைகளை அரவணைத்து ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே எனக்குப் பிரியமான வர்களே, இந்த வேளையிலே நான் உங்களுக்குக் கூறும் புத்திமதியாவது, விசுவாசத்தோடும் அன்போடும் இயேசு கிறிஸ்துவை ஒரு நபராக எண்ணி, அவரை விடாமல் இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்; அதே விசுவாசத்தினாலும் அன்பினாலும் அவர் கட்டளைகள் யாவையும் கைக்கொண்டே தீருவேன் என்கிற வைராக்கியமான உறுதிக்கொள்ளுங்கள். ஏனென்றால் அவர் மீதுள்ள அன்பும் அவர் வசனங்களுக்குக் கீழ்ப்படிதலும் இரட்சிப்பின் அனுபவத்தில் பிரிக்க முடியாதது.

சரி. இவைகளுக்கு என்ன அர்த்தம்? அவர் வசனங்களுக்கு எவ்விதமாக கீழ்ப்படிவது? ? இயேசு கிறிஸ்துவின் வசனங்களுக்குக் கட்டாயம் கீழ்ப்படிய வேண்டும் என்று நீங்களோ நானோ தீர்மானித்துக் கொண்டால் அந்த கீழ்ப்படிதல் இரண்டு காரியங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. அது ஒருபுறம் மிகவும் சுலபமானதாக இருந்தாலும் மறுபுறம் மிகவும் ஆழ்ந்த அர்த்தமுடையது. வசனங்களுக்குக் கீழ்ப்படிதலில், முதலாவதாக, எல்லா காரியங்களையும் குறித்ததான என்னுடைய சகல அறிவும் கிறிஸ்துவின் ஞானத்துக்கு ஒத்துப் போவதாக இருக்க வேண்டும். என்னுடைய எண்ணங்கள் யாவும் கிறிஸ்துவின் எண்ணங்கள் போலவே இருக்க வேண்டும். சகல காரியத்திலேயும் இயேசுவைப் போல சிந்திக்கப் பழக வேண்டும். அவருடைய ஞானத்தைப் பெற்று வசனங்களை விளங்கிக் கொண்டு அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். கொலோசெயர் 2:3ல் ஓர் அற்புதமான சத்தியம் மிகவும் எளிமையான விதத்தில் சொல்லப்பட் டிருக்கிறது. அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங் களெல்லாம் அடங்கியிருக்கிறது. இயேசு கிறிஸ்துவைக் குறித்து நாம் அறியக்கூடியவற்றையெல்லாம் வேதாகமம் நமக்கு விளக்கிக் காண்பிக்கிறது. அவரும் சிருஷ்டிப்பின் தத்துவம், அதன் நோக்கம் யாவற்றையும் நமக்கு தமது வார்த்தையின் மூலமாக விளக்கியிருக்கிறார். இந்த சகல ஞானமும் அறிவும் அவருக்குள் அடங்கியிருக்கிறது. அதை நமக்காக அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆகவே அவரில் அன்புகூர்ந்து அவரது கட்டளைகளின்படி நடப்பேன் என்று சொல்லுகிற நம்முடைய சகல எண்ணங்களும் அவருடைய அறிவுக்கும் ஞானத்துக்கும் இணங்கிப் போவதாக இருக்க வேண்டும். அவருடைய எண்ணங்களுக்கு விரோதமான வகையில் நமது எண்ணங்கள் இருக்கலாகாது. வசனங்களை அவருடைய ஞானத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளாதவன் அவைகளை தவறாக விளங்கிக் கொண்டு அதற்கு விரோதமாக நடப்பான்.

2 கொரிந்தியர் 10:3-5 வரையுள்ள வசனங்களைப் பாருங்கள். அங்கே ஒரு போராட்டமே நடக்கிறது. தர்க்கங்களுக்கும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமான எல்லா மேட்டிமைக்கும் விரோதமான ஒரு போர் அது. இரண்டு மல்யுத்த வீரர்கள் ஒருவரையொருவர் விழச் செய்ய போராடுவது போன்ற ஒரு காட்சி! நமது எண்ணங்கள் இங்கேயும் அங்கேயுமாக சிதறி மனம்போன போக்கில் போவதை நாம் தடுத்து ஆட் கொள்ள வேண்டும். நமக்கு நியாயமாகத் தோன்றுபவை, நம்முடைய சொந்தக் கருத்துக்கள், நம்மை கிறிஸ்துவிலிருந்து பிரிக்கின்ற காரியங்கள், மேட்டிமையான காரியங்கள் யாவற்றையும் சிறைப்பிடித்து, அடக்கி, சகல எண்ணங்களையும் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படியப்பண்ணுகிறவர்களாயிருக்க வேண்டும். எந்த எண்ணத்தையும், கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படுத்தி, சிறைப் படுத்த வேண்டும். இது மூளைச்சலவை (Brain Washing) செய்வதைப் போல உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்படியே இருக்கட்டும். நமது மூளை சலவை செய்யப்பட வேண்டிய ஒன்றுதான். நம்மைக் குறித்ததான மாம்ச சிந்தைகளில் இருந்து சலவை செய்யப்பட வேண்டும். நான் யார், நான் ஏன் இங்கிருக்கிறேன், என்னுடைய தன்மை என்ன, நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மற்றவர்களைக் குறித்து என்னுடைய எண்ணம் என்ன, எது சரி? எது தவறு? என்பதைக் குறித்த என்னுடைய கருத்துக்கள், சகமனிதரோடு எனக்குள்ள தொடர்பு - இவை குறித்த என்னுடைய சகல எண்ணங்களையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிய சிறைப்படுத்த வேண்டும்.

நம்முடைய எண்ணங்கள், சிந்தனைகள் யாவும் கிறிஸ்துவின் ஞானத்துக்கும் அறிவுக்கும் ஒத்ததாய் இருக்க வேண்டும் என்று பார்த்தோம். இரண்டாவதாக, நம்முடைய செய்கைகள் யாவும் கிறிஸ்துவின் சித்தத்துக்கு ஏற்றதாய் இருக்க வேண்டும். என்னுடைய சிந்தனை கிறிஸ்துவின் ஞானத்தை பிரதிபலிப்பதாயும், என்னுடைய செய்கையோ கிறிஸ்துவின் சித்தத்தை நிறைவேற்றுவதாயும் இருக்க வேண்டும். விசுவாசத்தினாலும் அன்பினாலும் கிறிஸ்துவை இறுகப் பற்றிக் கொண்டு, அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுவேன் என்கிற உறுதியை விடாமல் பற்றிக் கொண்டிருங்கள் என்று நான் உங்களுக்குக் கூறின புத்திமதியின் அர்த்தம் இதுதான்: அவரது வசனத்தைக் கைக்கொள்ளுவதில், எனது எண்ணம் கிறிஸ்துவின் ஞானத்துக்கு ஒத்ததாயும், என்னுடைய செய்கை அவர் சித்தத்தையே நிறைவேற்று வதாயும் இருக்க வேண்டும் என்பதே.

மத்தேயு 28:19-20 வசனங்களில் இயேசு கிறிஸ்துவின் பிரதான கட்டளையைக் காண்கிறோம். அதில் அப்போஸ்தலரிடம் அவர் என்ன கூறுகிறார்? நீங்கள் உலகமெங்கிலும் புறப்பட்டுப் போய் சகல ஜாதியாரையும் என்னுடைய சீஷராக்குங்கள். பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதத்தைக் கொண்டு எனது வார்த்தைகளை அவர்களுக்குப் போதியுங்கள். ஒவ்வொரு சீஷனும் என்னோடு பிரத்தியேகமான தனிப்பட்ட உறவை ஏற்படுத்திக்கொள்ள அவனுக்கு உதவுங்கள். அவர்களுக்கு எனது வார்த்தையை விவரித்துச் சொல்லுங்கள்? அதனை அவர்கள் விசுவாசிக்கும்படியாகச் செய்து, பிதா குமாரன் பரிசுத்தஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் என்று அப்போஸ்தலரிடம் கூறிய இயேசு கிறிஸ்து அவர்களிடம் மேலும் என்ன கூறுகிறார்? நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள் என்கிறார். யாவையும் என்பதில் இயேசு அழுத்தந்திருத்தமான கட்டளை கொடுக் நான் கட்டளையிட்ட யாவையும் என்கிறார். மதசம்பந்தமான காரியங்களில் மாத்திரம் எது FA? எது தவறு? என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு, குடும்ப உறவுகள், சமூக உறவுகள், உலகத்தைப் பற்றின காரியங்கள், மனோதத்துவ காரியங்கள் ஆகியவைகளிலெல்லாம் அந்தந்த துறை வல்லுநர்களை அவர்கள் கேட்டறிந்து கொள்ளட்டும் என கிறிஸ்து கூறவில்லை. ஏனென்றால் அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷம் யாவும் அடங்கியிருக்கிறதே. ஆகவேதான் நான் கட்டளையிட்ட யாவையும் என்று உறுதிப்பட கூறுகின்றார். சகல காரியங்களிலும் அவர்கள் கிறிஸ்துவின் சிந்தையை உடையவர்களாகும்படி யாவையும் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்கிறார்.

யோவான் 10:28ல் இயேசு, தனது ஜனத்தை ஆடுகள் என அழைக்கிறார். அவைகள் எப்படிப்பட்டவைகள் என அறிய உங்களுக்கு விருப்பமா? இதோ, அவைகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கும். ‘கொடுத்தது’ என கடந்துபோன காலமாக அவர் குறிப்பிடவில்லை. அவை எப்போதும் என் சத்தத்துக்கு செவிகொடுத்துக் கொண்டேயிருக்கும் என்கிற விதத்தில் குறிப்பிடுகிறார். நான் அவைகளை அறிவேன். அவைகள் என்னை பின்பற்றி வருகின்றன. இங்கேயும் பார்த்தீர்களா? இயேசுவுக்கும் வார்த்தைக்கும் எப்போதும் இருக்கின்ற இணைபிரியாத தன்மையை? ? இயேசுவையும் அவருடைய வார்த்தையாகிய சத்தத்தையும் இங்கே குறிப்பிடுகிறார். அவைகள் என் சத்தத்தைக் கேட்கின்றன. அவைகள் என் சத்தத்துக்கு செவிகொடுக்கின்றன. அவைகள் என் சத்தத்தைக் கேட்பது மாத்திரமல்ல, அதை கைக்கொள்ளுகின்றன. அவைகள் என்னை பின்பற்றுகின்றன. அவைகள் எனக்குக் கீழ்ப்படிகின்றன. அவைகள் வசனத்தின் பாதைக்கு தங்கள் கால்களைத் திருப்பி அதில் நடக்கின்றன.

யோவான் 15:16ல் இயேசு கூறுகிறார், நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால் எனக்கு சிநேகிதராயிருப்பீர்கள். மேலும் லூக்கா 6:46ஐ பாருங்கள். அவரிடம் அன்புகூருகிறதாக சொல்லியும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதவர்களைக் குறித்து இயேசுவே இங்கு குறிப்பிடுகிறார். என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும் நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற் போகிறதென்ன? வெறும் வாய்வார்த்தையினாலே என்னை ஆண்டவரே ஆண்டவரே என்று அருமையாக அழைக்கிறீர்கள். ஆனால் உங்கள் செய்கையோ நீங்கள் என்னை ஆண்டவராக ஏற்றிருப்பதாக காண்பிக்கவில்லை. நான் சொல்லுகிறதெல்லாம் உங்களுக்கு ஏதோ அற்பமான காரியமாகத் தோன்றுவதால் அவைகளை அலட்சியம் செய்து கீழ்ப்படியாமல் விட்டுவிடுகிறீர்கள். ஆனால் என்னிடத்தில் வருபவனோ, நான் சொல்லுகிற வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செய்வான். அவன் எப்படிப்பட்டவன் என்பதை உங்களுக்கு விளக்குகிறேன் பாருங்கள். அவன் ஒரு நல்ல உறுதியான வீட்டைக் கட்டுகிற மனுஷனுக்கு ஒப்பானவன். அவன் நல்ல ஆழமாகத் தோண்டி, கற்பாறையின் மேலே தன் வீட்டின் அஸ்திபாரத்தைப் போட்டு அதை கட்டுகிறான். பெருவௌ்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின் மேல் மோதியும் அது சற்றும் அசையவில்லை. ஏனென்றால் அது அவ்வளவு உறுதியாக கட்டப்பட்டிருந்தது. என் வார்த்தைகளைக் கேட்டும் அதன்படி செய்யாதவனோ பாருங்கள் இவன் வசனத்தை கேட்கக்கூட செய்கிறான். சபையில் வந்து உட்கார்ந்து வாரா வாரம், மாதா மாதம், வருஷா வருஷம் வசனங்களைக் கேட்கிறான். கேட்டுக் கொண்டேயிருக் கிறான். ஆனால் அவைகளில் எதையும் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட மனுஷனை நான் எதற்கு ஒப்பிடுவேன்? ? அஸ்திபாரமே இல்லாமல் தன் வீட்டைக் கட்டுகிற மனுஷனுக்கு இவன் ஒப்பாவான். தூரத்திலிருந்து பார்த்தால் அவனுடைய வீடும் அழகாகத்தான் இருந்தது. சாதாரணமான நாட்களில் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் ஒரு நாள் மழையும் காற்றும் கடுமையாக ஏற்பட்டபோது, பெரு வௌ்ளம் வந்து, அந்த வீட்டின்மீது மோதியபோது அது நொறுங்கிப் போயிற்று. அதன் அழிவு வெகுவாக இருந்தது. நீங்கள் வாய்வார்த்தையால் ஆண்டவரே, ஆண்டவரே என பகிரங்கமாக அறிவிப்பதெல்லாம் நியாயத்தீர்ப்பின் நாளிலே வெறும் குப்பையாகத்தான் காட்சியளிக்கும். இயேசு கிறிஸ்துவோடு விசுவாசத் தினாலும் அன்பினாலும் இணைக்கப்பட்டவர்களாக அவர் சொல்லிய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்தே தீருவேன் என்கிற உறுதியான வைராக்கியத் தின் மேல் கட்டப்பட்ட ஆவிக்குரிய வீடே நியாயத்தீர்ப்பின் நாளிலே நிலைநிற்கும்.

இந்த இடத்தில் ஒரு காரியத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இயேசுவின் வார்த்தைகள் என்று நான் குறிப்பிடுவது, இயேசு இவ்வுலகில் வாழ்ந்த காலங்களில் பேசிய வார்த்தைகள் மாத்திரம் அல்ல. சில வேதாகம பதிப்பின், சுவிசேஷ புத்தகங்களில் இயேசு கூறிய வார்த்தைகள் மாத்திரம் சிவப்பு எழுத்துகளில் அச்சிடப்பட்டிருக்கும். அந்த வார்த்தைகளை மாத்திரம் இயேசுவின் வார்த்தையாக நான் குறிப்பிடவில்லை. வேதாகமம் முழுவதுமே கர்த்தருடைய வார்த்தை என்பதை பேதுரு தமது முதலாம் நிருபத்தின் முதலாம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். பூர்வகாலத்து தீர்க்கதரிசிகள் தங்களிலிருந்த கிறிஸ்துவின் ஆவியினாலே ஏவப்பட்டு வேதாகமத்தை எழுதினார்கள். அப்போஸ்தலனாகிய பவுலும் இதே கருத்தை கூறி அதை உறுதிப்படுத்துகிறார். “ஒருவன் தன்னை தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகள் என்று ஒத்துக்கொள்ளக்கடவன்” (1 கொரிந்தியர் 14:37). கர்த்தருடைய வார்த்தைகள் சரியானவிதத்தில் விவரிக்கப்பட்டு, அவைகள் வாழ்க்கையில் கடைப்பிடிக் கப்பட வேண்டும். வேதாகமம் முழுவதுமே கர்த்தருடைய வார்த்தைதான். கர்த்தரை ஏற்றுக் கொண்டு அறிக்கையிடுகிற விசுவாசிகளாகிய என் அருமை மக்களே, உங்களுக்கு நான் கூறும் புத்திமதி: விசுவாசத்தினாலும், அன்பினாலும் அவருடைய வார்த்தைகள் எல்லாவற்றையும் கைக் கொண்டே தீருவேன் என்கிற வைராக்கிய வாஞ்சை உடையவர்களாய் இருங்கள். “வைராக்கிய வாஞ்சை” என்கிற வார்த்தையை நான் மீண்டும் மீண்டுமாக வலியுறுத்துகிறேன்.

இந்த தியானத்தை முடிக்கும் முன்னதாக நான் சில நடைமுறை பயிற்சிகளை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அதற்கு முன்னதாக நான் ஏற்கனவே கூறிய புத்திமதிகளை சாதாரணமானதாக சிலர் எண்ணி அதை அலட்சியப்படுத்தி விடாமல் இருக்கும்படிக்கு அது சம்பந்தமாக மேலும் சில காரியங்களை குறிப்பிட விரும்புகிறேன். கிறிஸ்துவின் பெயரை சொல்லிக் கொண்டு ஊழியங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், கிறிஸ்துவை உண்மையாக நேசிக்காமலும், அவருடைய கட்டளைகளை வைராக்கிய வாஞ்சையோடு கடைப்பிடிக்காமலும் இருந்தால் அது மிகவும் வெட்கக்கேடான காரியம். அத்தகைய விசுவாசம் போலியானது. அப்படிப்பட்ட மனிதனுக்கு கிறிஸ்துவின் இரட்சிப்பு இல்லை. இந்த கருத்தை வெளிப்படையாகக் கூறுகிற இரண்டு வசனங்களை உங்கள் முன்னதாக வைக்கிறேன். எபிரெயர் 5 ஆம் அதிகாரம். இந்த வசனங்கள் ஒருவேளை அவர் கெத்சமனே தோட்டத்தில் அடைந்த வேதனைகளை குறிப்பிடுவதாய் இருக்கலாம். “அவர் மாம்சத்தில் இருந்த நாட்களில் தம்மை மரணத்திலிருந்து இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல் செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டு, தாம் பூரணரான பின்பு தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி .” எபிரெயர் நித்திய இரட்சிப்பைக் குறிப்பிடுகிற ஒருசில வசனங்களில் இதுவும் ஒன்று. நித்திய இரட்சிப்பை மனிதகுலத்திற்குப் பெற்றுத் தருவதற்காக இயேசு கிறிஸ்து இவ்விதமாக பாடுபட்டு, கீழ்ப்படிந்து அதை அடைந்தார். அந்த கீழ்ப்படிதலையே இரட்சிப்பை அடையப்போகிறவர்களுக்கு முக்கியமான அடையாளமாகக் குறித்தார். மெய்யான விசுவாசியை அடையாளங் காட்டுகின்ற காரியங்களில் கீழ்ப்படிதலும் ஒன்று. கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே விசுவாசியின் கொள்கையாய் இருக்க வேண்டும். குமாரனே கீழ்ப்படிந்தாரென்றால் மனிதர்களாகிய நாம் எவ்வளவு அதிகமாய் கீழ்ப்படிய வேண்டியவர்களாக இருக்கிறோம். கர்த்தருடைய வசனம் என்ன சொல்லுகிறதோ அதன்படி என் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்கிற உறுதி காணப்பட வேண்டும். சில வசனங்களுக்கு மாத்திரம் கீழ்ப்படிதல், சிலவற்றை விட்டுவிடுதல் என்பதாக இருக்கக் கூடாது. தேவனுடைய வேதாகமம் முழுவதற்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். “நான் சொல்லிய யாவையும் கைக் கொள்ளும்படி” என்பதுதான் கர்த்தரின் கட்டளையாயிருக்கிறது.

அடுத்தபடியாக, இன்னொரு வசனத்தைப் பார்க்கலாம். அவரை “அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான். அவனுக்குள் சத்தியமில்லை” (1 யோவான் 2:3, க. அவரை எப்படி அறிந்திருக்கிறீர்கள் என்று கேட்டால் பலரும் பலவிதமான காரணங்களைக் கூறுவார்கள். ஒரு குறிப்பிட்ட நாளிலே அவர் எனக்கு ஓர் அற்புதமான அனுபவத்தைக் கொடுத்தார். அதனாலே நான் அவரை அறிந்திருப்பதாக உணருகிறேன் என்பர் சிலர். அல்லது நான் எனக்குத் தெரிந்த அளவுக்கு மரியாதையாக வாழ்கிறேன்; நல்லவனாக இருக்கிறேன்; பாரம்பரியமான வேதசத்தியங் களை பின்பற்றி வருகிறேன். அதனால் நான் அவரை அறிந்திருக்கிறேன் என்று வேறொருவர் சொல்லுவார். இன்னொருவர், அவருடைய கட்டளைகளில் சிலவற்றை நான் கைக் கொள்ளுவதினாலே அவரை அறிந்திருக்கிறேன் என்பார். இவை யாவும் சரியா? இவை யாவும் அவரை அறிந்திருப்பதற்கான சரியான காரணங்கள் அல்ல. அவரை அறிந்திருப் பதை எதனால் அறியலாம்? அவருடைய கற்பனைகள் யாவற்றையும் கைக் கொள்ளுவதினாலேயே அறியலாம். இதை மிகவும் தெளிவாக யோவான் அப்போஸ்தலன் எழுதியிருக்கிறார் அல்லவா? இவை இல்லாதவன் கிறிஸ்துவின் கிருபையின் இரட்சிப்பில் பங்குபெற முடியாது. ஆகையால்தான் இயேசுவை நேசிப்பதை வெறும் வாய்வார்த்தைகளினால் கூறாமல், அவருடைய வசனங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதின் மூலம் தெரியப்படுத்துங்கள் என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றேன். நான் இப்பொழுது உங்களுக்கு, என்னுடைய முதலாவது புத்திமதியின் கீழ் சில நடைமுறைப் பயன்களைக் கூறலாம் என நினைக்கிறேன். டிரினிட்டி பாப்திஸ்து சபையைச் சேர்ந்தவர்களாகிய இதன் அங்கத் தினர்களுக்கும், இங்கு வருகின்ற நண்பர்களுக்கும் நான் அன்போடு கூறின முதலாவது புத்திமதி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசமும் அன்பும் உடையவர்களாக, அவரை ஒரு நபராக எண்ணி, விடாமல் இறுக்கமாகப் பற்றிக்கொள்ளுங்கள்; அந்த விசுவாசத்தினாலும் அந்த அன்பி னாலும் அவருடைய வார்த்தைகள் எல்லாவற்றையும் கைக்கொண்டே தீருவேன் என்கிற வைராக்கிய வாஞ்சை உடையவர்களாய் இருங்கள். இயேசுவின் மீது விசுவாசமும் அன்பும் உடையவர்களாக, அவருடைய வார்த்தைகள் யாவுக்கும் கீழ்ப்படிய வேண்டிய வைராக்கிய வாஞ்சை உங்கள் உள்ளத்தில் ஏற்பட்டுவிட்டதென்றால், உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில புத்திமதிகளை இப்போது கூறப் போகிறேன். உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய புத்திமதியின் கீழ் 3 காரியங்களைக் குறிப்பிடுகிறேன்.

  1. முற்றிலுமான பரிசுத்தம்!

இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள அன்பினாலும் விசுவாசத்தினாலும் அவர் கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் வைராக்கிய வாஞ்சையை உடையவர்கள் அவர் சத்தத்துக்கு கீழ்ப்படிந்து அவருக்கு செலுத்துகின்ற காணிக்கையாக இதை கொள்ளலாம். இது எந்த வசனத்தில் காணப்படுகிறதென நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. இந்த 46 வருட காலத்தில் நீங்கள் அதை அநேகம் முறை கேட்டிருக்கிறீர்கள். இது, என்னுடைய ஊழியத்தில் நான் அடிக்கடி உபதேசிக்கிற காரியம் “ பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்கவும் நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லையே” (எபிரெயர் 12:14). கிரேக்க மொழியிலே பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்க “போராடுங்கள்” என்கிற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. சுறுசுறுப்போடும், எச்சரிக்கையோடும், விவேகத்தோடும் பரிசுத்த வாழ்க்கை வாழ்வதில் கவனத்தோடு போராடுங் கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிக்க முடியாது. அவரை மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும், மகிமையோடும் சந்திக்க வேண்டு மானால் பரிசுத்தம் தேவை. இல்லையென்றால் அவரை இரக்கமுள்ள வராக காணாமல், பயங்கரமான நியாயாதிபதியாக சந்திக்க நேரிடும். “இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க நம்மை சுத்திகரித்துக் கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக் கடவோம்” (2 கொரிந்தியர் 7:1). இருதயத்திலும், வாழ்விலும் இருக்க வேண்டிய பூரணபரிசுத்தம் என்று இதைத்தான் ஆதிகாலத்து தூய்மைவாதிகள் குறிப்பிட்டார்கள். 6ம் அதிகாரத்தின் கடைசி வசனத்தில் காணப்படுகிற மிக உன்னதமான வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் பவுல் நமது சுத்திகரிப்பின் அவசியத்தை இங்கு கூறுகிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம்தான் நம்மை சுத்திகரிக்கிறது என்பது அவருக்கும் தெரியும். இயேசு கிறிஸ்துவின் வல்லமையான ஆவி நமக்கு கிருபையைத் தருகிறது என்பதையும் அவர் அறிவார். சரீரத்தின் செய்கைகளை ஆவியின் மூலமாகத்தான் அழிக்க முடியும் என்பதும் அவருக்குத் தெரியும். இருந்தாலும், சுத்திகரிப்போம் என்று எழுத அவர் தயங்கவில்லை. ஏனென்றால் மீட்கப்பட்ட மனிதகுலம் நடக்க, சில வழிமுறைகளை தேவன் நியமித்திருப்பதை அவர் தெளிவுபடுத்துகிறார்.

அது மாத்திரமல்ல, பரிசுத்தமாகுதலை பூரணப்படுத்தக் கடவோம் என்றும் எழுதுகிறார். இது எப்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒரு தொடர்ச்சியான காரியமாக அவர் குறிப்பிடுகிறார். தேவபயத்தோடே பரிசுத்தமாகுதலைக் கடைப்பிடிக்க வேண்டும். கடவுளுடைய கண்கள் பார்த்துக் கொண்டேயிருக்கிறது. சகலமும் அவருக்கு முன்பாக நிர்வாணமாகவும், வெளியரங்கமாகவும் இருக்கிறது. மாம்சமும் இரத்தமுமாக இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிற நான், என் வாழ்வின் எல்லா பகுதிகளிலும், சந்தர்ப்பங்களிலும் பூரணமான பரிசுத்தத்தோடு வாழ மிகுந்த வைராக்கியத்தோடு போராட வேண்டியவனாக இருக்கிறேன்.

ஜோன் ஓவன் என்கிற தூய்மைவாதி அநேக காரியங்களை சொல்லி யிருக்கிறார். அதற்காக நான் மிகுந்த நன்றியுடையவனாக இருக்கிறேன். அவர் கூறுகிறார்: “மனிதனுடைய ஆத்துமாவை அழிக்கக்கூடிய இந்த இரண்டு மாயையைக் காட்டிலும் பெரிதான மாயை வேறொன்றும் இல்லை.” (1) முதலாவது, ஒருவன் மறுபடியும் பிறக்காமலேயே, கிறிஸ்துவின் நித்திய ராஜ்யத்தில் தனக்கும் பங்குண்டு என நினைத்துக் கொண்டிருப்பது. ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் அவன் பரலோக ராஜ்யத்தை காணவும் முடியாது, அதில் பிரவேசிக்கவும் முடியாது என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். ஆனால் மனிதன் அதை அறியாதவனாக, மோட்ச ராஜ்யத்தை தானும் அடையலாம் என்று மாயையாக எண்ணிக் கொண்டிருப்பது பரிதாபமே. (2) இன்னொருவன் தான் மறுபடியும் பிறந்திருப்பதாக சொல்லிக் கொண்டு பரிசுத்தம் இல்லாமல் வாழ்வது. அவன் தான் மறுபடியும் பிறந்ததாக சொல்லுவான். ஆனால் பரிசுத்த வாழ்க்கை என்றால் என்னவென்று அவனுக்குத் தெரியாது. இந்த மனிதனும் முதலாவது மனிதனைப் போலவே மாயையான எண்ணத்தைக் கொண்டிருக்கிறான். பேதுரு தனது முதலாவது நிருபத்திலே மிகவும் தெளிவாக எழுதியிருக்கிறார். “உங்களை அழைத்தவர் பரிசுத்தராய் இருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே . இங்கே பரதேசிகளாய் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்து கொள்ளுங்கள்” (1 பேதுரு 1:15-17). “பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாய் இருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய் போர் செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி . . . நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்து கொள்ளுங்கள் என்று உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன்” (1 பேதுரு 2:11). இந்த வசனங்களைத்தான் நீங்கள் இந்த சபையிலே அநேகம் முறை கேட்டிருக்கிறீர்கள். ஆனால் உங்களில் எத்தனை பேர் இந்த வசனத்தை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி இருக்கிறீர்கள்? உங்களில் எத்தனை பேருக்கு ஆத்துமாவுக்கு விரோதமாக போர் செய்கிற மாம்ச இச்சைகளைக் குறித்து தெரியும்? எத்தனை பேர் அப்படியாக போராடிக் கொண்டிருக்கிறீர்கள்? ? பாவத்திற்கு இழுத்துச் செல்லுகிற கண், கால், கைகளுக்கு விரோதமாக போராடுகிறீர்களா? இரட்சிக்கப்பட்ட உங்களுக்குள்ளும் இருக்கின்ற எஞ்சியுள்ள பாவத்தை (Remaining Sin) எப்படிக் கையாளுகிறீர்கள்? ? விசுவாசத்தினாலும் அன்பினாலும் இயேசுவின் வசனத்துக்குக் கீழ்ப்படியும் வைராக்கிய வாஞ்சை உடையவர்களாய் இருக்க புத்தி சொல்லுகிறேன். அந்த வசனமே உங்களை பூரணமான பரிசுத்தமாகுதலை அடைய போராடும்படிக்கு அழைக்கிறது.

  1. உலகத்திடமிருந்து முழுவதுமாக பிரிந்து வாழ்தல்!

கர்த்தருடைய வசனம் அடுத்தபடியாக உங்களையும் என்னையும் என்ன செய்ய அழைக்கிறது தெரியுமா? உலகத்திடமிருந்து பிரிந்து வந்து கர்த்தருடைய வசனத்தின்படியான வாழ்க்கையை வாழும்படி கூறுகின்றது. பாவம் நிறைந்த காரியங்களிலிருந்தும், பொல்லாங்கான காரியங்களி லிருந்தும், ரௌடிகளிடமிருந்தும் பிரிந்து வருவதை மாத்திரம் வேதம் குறிப்பிடவில்லை. அதற்கும் மேலாக உலகத்தின் நுண்ணிய பாதிப்புகளி லிருந்தும் நாம் விலகி நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம். உதாரண மாக, எது சரி? எது தவறு? எது பிரயோஜனமானது? எது பிரயோஜன மற்றது? என்பதை உலகத்தார் போல நாம் தீர்மானிக்கக் கூடாது. நமது சிந்தனையையும், நேரத்தையும், தாலந்துகளையும், பொருட்களையும் உலகம் ஆளவிடக்கூடாது. வேதம்தான் நம்மை ஆள வேண்டும். நான் இந்த சபையில் எத்தனையோ முறை குறிப்பிட்டிருக்கிற வசனங்களை இந்த சந்தர்ப்பத்தில் திரும்பவும் கூறுகிறேன்.

“நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும், பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத் தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” ரோமர் 12:2).

“விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறிfர்களா? ஆகையால் உலகத்துக்கு சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான் (யாக்கோபு 4:4). உலகத்தி லும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம் சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகள் எல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல. அவைகள் உலகத்தினால் உண்டானவைகள். உலகமும் அதன் இச்சையும் ஒழிந்து போகும். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” (1 யோவான் 2:15-17).

உலகத்திடமிருந்து விலகி வா என்ற வசனத்தின் எச்சரிப்புக்கு செவிகொடுத்து, உலகத்திடமிருந்து பிரிந்து வாழ்பவனே கர்த்தருடைய சித்தத்தின்படி செய்கிறவனாவான். உலகத்திலும் உலகத்திலுள்ள பொருட்களிலும் பிரியம் வைக்காதிருங்கள். உலகத்தால் உண்டான அந்த பொருட்கள் யாவும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவைகள். கடவுளின் கிருபையை உணராத மக்களுடைய ஆசை இச்சைகளுக்கு அவை தீனி போடுகின்றன.

இயேசு கிறிஸ்துகூட தமது பிரதான ஆசாரிய ஜெபத்தில் என்னவிதமாக ஜெபிக்கிறார் பாருங்கள். நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல. நாமும் இயேசுவைப் போல உலகத்தாரல்லாதவர்களாக இருக்கிறோமா?

“எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, நாம் அவபக்தியையும் லௌகீக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ணி, நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. அவர் நம்மை சகல அக்கிரமங்களினின்று மீட்டுக் கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மை சுத்திகரிக்கும்படி, நமக்காக தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார்” (தீத்து 3:11-14). பக்திவைராக்கியமுள்ள வர்களாக நாம் என்ன செய்ய வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார்? தேவன் கொடுத்திருக்கிற தங்களுடைய சுதந்திரத்தின் எல்லையை உலக காரியங்களில் அதிகமதிகமாக விரிவுபடுத்திக்கொள்வதையா? இல்லை. நற்காரியங்களை செய்யும்படிக்கு மேலும் சுத்திகரிப்பை அடைவதில் நாம் பக்தி வைராக்கியத்தைக் காண்பிக்க வேண்டும். உலகத்தின் போக்கு அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. அவைகள் என்னதான் கவரக்கூடிய விதத்தில் இருந்தாலும் அவைகளின் மீது ஆசை இச்சை வைக்காமல் விலகி வா என எச்சரிக்கிறார். உலகத்தின் விளையாட்டு களிலும், நேரத்தைக் கெடுத்துப் போடுகிற காரியங்களிலும், அற்பமானவை களிலும், பிரயோஜனமற்றவைகளிலும் ஆவல் கொள்ளாதே என்கிறார். உங்களில் சிலபேரிடம் காணப்படுகிற உலகப்பிரகாரமான காரியங்களை நான் கண்டு மிகுந்த வேதனைப்படுகிறேன். பொழுதுபோக்கும் நிகழ்ச்சி களில் நீங்கள் ஏன் இவ்வளவு ஆர்வமுடையவர்களாக இருக்கிறீர்கள்? ? உங்கள் கண்களெல்லாம் களைத்து சோர்ந்துவிடும் அளவுக்கு அவைகளை கண்டு இரசிக்க ஆவலுடையவர்களாக இருக்கிறீர்களே! உங்கள் கம்ப்யூட்டர், இன்டர்நெட், டி.வி. மூலமாக மணிக்கணக்கில் உங்கள் நேரத்தை விரயமாக்குகிறீர்களே. உங்கள் அருகாமையிலேயே கர்த்தருடைய வார்த்தைகள் இருக்க நீங்கள் அதைத் தவிர்த்துவிட்டு பல்வேறு காரியங்களில் உங்கள் நேரத்தை செலவிடத் துடிக்கிறீர்களே! உலகத்தின் போக்கு உங்களை தனது பிடிக்குள் கொண்டுவந்து தனது இஷ்டத்தின்படி உங்களை செயல்பட வைக்கிறது. கர்த்தருடைய வசனமோ உங்களை இந்த உலகத்திலிருந்து விடுவித்துக் கொண்டு வாருங்கள் என எச்சரிக்கிறது. ஆனால் நீங்களோ உலகம், தன் பிடியை இன்னும் அதிகமதிகமாக உங்களை இறுக்கிப் பிடிக்க அனுமதிக்கிறீர்கள்.

நான் உங்களை பழங்காலத்து உடைகளைத் தரித்துக் கொண்டு ஒரு சந்நியாசியைப் போலவோ, வேற்று கிரகத்து மனுஷனைப் போலவோ இங்கு வாழவேண்டும் என்று கூறவில்லை. போதகர் அல்பர்ட் என். மார்டின் அப்படி கூறுகிறார் என்று சொல்லாதீர்கள். நான் என்ன சொல்லுகிறேன் என்பது உங்களுக்கே தெரியும். உலகம் உங்களை எதிலே பிடித்து வைத்திருக்கிறது? எதற்கு நீங்கள் அதிகமான நேரத்தை செலவிடுகிறீர்கள்? எந்தெந்த காரியங்களில் நீங்கள் உலகத்தின் கவர்ச்சிகளுக்குட்பட்டிருக்கிறீர்கள்? ? என்பதெல்லாம் உங்களுக்கே தெரியும். அதன் கோரப்பிடிகளிலிருந்து வெளியே வாருங்கள் என்று கர்த்தர் உங்களை அழைக்கிறார். அரைகுறையாக அல்ல முற்றிலுமாக உலக வழக்கங்களில் இருந்து விலகி நிற்கச் சொல்லுகிறார். முடிவு காலம் வரைக் கும் நீங்களும் நானும் என்னவாக இருக்கும்படி அழைக்கப்பட்டிருக் கிறோம்? நீங்கள் பூமிக்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்று கர்த்தர் கூறினார். நமது வாழ்க்கை முறை உலகத்தாரின் வாழ்க்கை முறைகளிலிருந்து வேறுபட்டதாய் இருக்க வேண்டும். நமது வித்தியாசமான நிலையைப் பார்த்து மக்கள் உங்களிலுள்ள நம்பிக்கைப் பற்றிக் கூறுங்கள் என கேட்பார்கள் என பேதுரு எதிர்பார்க்கிறார். சமுதாயம் அழுகி கெட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. அவைகளில் நாம் சிக்கிக்கொள்ளாமல், அவற்றிலிருந்து வேறுபட்டவர்களாக நாம் வாழ்ந்து காட்டும்போது, அது உலகத்தாரிடம் பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் டி.வி.யிலோ, சினிமா, இன்டர்நெட் போன்றவைகளிலோ பொழுதைப் போக்க மாட்டே னென்கிறீர்களே. அப்படி உங்களுக்கு எதில்தான் இன்பமும் நிறைவும் கிடைக்கிறது என்று உங்களைக் கேட்பார்கள். கிறிஸ்து எங்களுக்கு பூரணராய் இருக்கிறார்; கிறிஸ்துவின் ஊழியமும், கிறிஸ்துவின் ஜனங்களும், அவருக்கு செய்யும் பணியும் எங்களுக்கு மனமகிழ்ச்சியையும், நிறைவையும் தருகிறது என்று சொல்லத் தக்கவர்களாய் வாழுங்கள்.

  1. கிறிஸ்துவை மாத்திரமே சார்ந்திருந்து, அவரிடமிருந்து பெலனைப் பெற்றுக்கொள்ளுதல்!

தனிப்பட்ட வாழ்க்கையிலே நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைப் பயிற்சிகளை சொல்லிக்கொண்டு வருகிறேன். முதலாவதாக, நீங்கள் பரிசுத்தமாக வாழ அழைக்கப்பட்டிருப்பதைக் கூறினேன்; இரண் டாவதாக உலகத்திலிருந்து விலகி வாழும்படியாக அழைக்கப்பட்டிருப் பதை குறிப்பிட்டேன். இப்போது எனது மூன்றாவது கருத்தை சொல்லப் போகிறேன். இது என்னுடைய ஊழியத்திற்கு ஆணிவேர் போல இருந்த நடைமுறை பயிற்சியாகும். கடவுள் உங்களை ஏற்றுக் கொள்வதற்கு நீங்கள் முழுவதுமாக கிறிஸ்துவை சார்ந்தே உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும்; அப்படியான வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவைப்படும் பலத்தை கிறிஸ்துவிடமிருந்து தொடர்ந்து பெற்றுக் கொண்டேயிருக்க வேண்டும். இவை இரண்டையும் நான் என் ஊழியத்தில் பலமுறை உங்களுக்குப் போதித்திருக்கிறேன். பாவிகளாகிய உங்களுக்கும் எனக்கும் மனதை வாதிக்கும் ஒரு கேள்வி உண்டு. பாவியாகிய என்னை கடவுள் எப்படி தமது பரிசுத்தமுள்ள சந்நிதானத்திலே ஏற்றுக்கொள்ளுவார்? இன்னும் விளக்கமாக சொல்லுவதானால் ஆதாமின் சந்ததியாகிய நான், பிறந்தது முதற்கொண்டு பாவ சிந்தனையிலேயே இருக்கிறேனே! சிறு குழந்தையாக இருந்தபோது பொய் பேசினேன்; வளர்ந்துவரும் நிலையிலும் பொய் பேசினேன்; விடலைப்பருவத்தில் பொய் பேசினேன். எனது மனமாற்றத் திற்குப் பின்னும், இப்போதுங்கூட எஞ்சியிருக்கும் பாவநிலையினால் நிர்பந்தமான மனுஷனாகிய நான் பரிசுத்த பிதாவின் முன்னிலையிலே எப்படி நிற்க முடியும்? அவர் மகா பரிசுத்தராயிற்றே. பாவத்தைக் காணக் கூடாத சுத்தக்கண்ணராயிற்றே! நியாயத்தீர்ப்பின் நாளிலே நான் அவர் முன்னிலையில் எப்படி நிற்பேன்? ? என்கிற கேள்வி வதைத்துக் கொண்டே யிருக்கிறது. அதற்கு விடை இதோ இருக்கிறது. இயேசு கிறிஸ்துவினாலும் அவர் நிறைவேற்றி முடித்த ஊழியத்தினாலும் நான் பிதாவின் முன் நிற்க அவர் வழிச் செய்திருக்கிறார். அவர் பட்ட பாடுகளினாலே, அவருடைய கீழ்ப்படிதலினாலே, தம்மையே அவர் மரணத்திற்கு உட்படுத்திக் கொண்டதினாலே, அவர் எனக்காக ஒரு நீதியை சம்பாதித்தார். அந்த நீதியைக் கொண்டு போர்த்தி அவர் என்னை பிதாவின் முன்னிலையில் நிறுத்தப் போகிறார். ஆகவே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாய் இருந்து . ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை என்கிற வாக்குத்தத்தமுள்ள வசனத்தை மனதில் நிறுத்திக் கொண்டு ஆறுதலை அடைகிறேன். இவ்விதமாக கிறிஸ்துவை மாத்திரமே முழுவதுமாக சார்ந்திருக்கும்படி நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

பவுலோடே கூட சேர்ந்து நாமும் இப்படி சொல்லும்படியாக வாழ வேண்டும்: “கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டேன்; ஆயினும் பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காக தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலாத்தியர் 2:20). தனக்காக சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, உயிரோடே எழுந்து, மகிமையடைந்த இரட்சகரை விசுவாசிப்பதினால் தான் தான் பிழைத்திருப்பதை பவுல் ஒருபோதும் தன் வாழ்நாளில் மறக்கவேயில்லை. அவரில்தான் பூரணமான நீதியிருப்பதை அவர் உணர்ந்திருந்தார். தன்னுடைய வாழ்வின் இறுதிகட்டத்தில் அவர் பிலிப்பிய சபைக்கு எழுதுகின்ற நிருபத்தில், “நான் நியாயப்பிரமாணத் தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும், விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கு . . .” (பிலிப்பியர் 3:9) விரும்புகிறேன் என்று எழுதுகிறார். அதாவது, பிதாவின் முன் நிற்பதற்கு நான் கிறிஸ்துவை மாத்திரமே சார்ந்திருக்கிறேன் என்கிறார். அவராலேயல்லாமல் ஒருவனாலும் பிதாவின் முன் நிற்கக்கூடாது.

மேலும் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையை இவ்வுலகில் வாழ நான் இயேசுவிடமிருந்தே பெலனைப் பெற்றுக்கொள்ளுகிறேன். “நானே திராட்சைச்செடி. நீங்கள் கொடிகள் . என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (யோவான் 15:5). அவரில் நிலைத்திருப்பவன் கனி கொடுப்பான். அதிக கனிகளைக் கொடுப்பான்! மிகுந்த கனிகளைக் கொடுப்பான்! அவரில் நிலைத்திருந்தால் அதன் பலாபலன்கள் அதிகரித்துக் கொண்டே போகும்.

“. உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்” (கொலோசெயர் 3:4).

“ஆகையால் நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டபடியே அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும் அவருக்குள் நடந்துகொண்டு பெருகுவீர்களாக” (கொலோசெயர் 2:6).

இதைத்தான் நான் சொல்லுகிறேன். ஒருபுறம், பிதாவால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இயேசுவாகிய நபரை மாத்திரமே நம்பி அவரை இறுகப் பற்றினவர்களாகவும், மறுபுறம் இவ்வுலகில் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்வதற்கு இயேசுவிடமிருந்து பெலனைப் பெற்றுக்கொள்கிறவர்களாகவும் வாழ வேண்டும். எனக்கு அருமையானவர் களே, உங்களைக் குறித்ததான என்னுடைய வாஞ்சை அதுதான். வருங்காலங்களிலே, இந்த சபையிலே பாவிகளுக்காக மரித்த இயேசு கிறிஸ்து மிகவும் மகிமைப்பட வேண்டும். கிறிஸ்துவே உங்கள் பெலனா யிருக்க வேண்டும். கடவுளுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ வேண்டு மென்ற ஆவல் உங்களுக்குள் அதிகமதிகமாகப் பெருக வேண்டும்.

இந்த முதலாவது புத்திமதியை முடிக்கும் முன்பதாக, நான் இங்கு ஊழியம் செய்ய வந்த ஆரம்ப நாட்களை சொல்லி முடிக்கிறேன். 1962ஆம் ஆண்டு நான் நார்த் ஜெர்சி என்கிற இடத்திற்கு வந்தபோது, நான் இங்குதான் ஊழியம் செய்ய வேண்டும் என்பதை கடவுள் எனக்கு விளங்கப்பண்ணினார். ஒருசில பேருக்கு மேய்ப்பனாக நான் என் ஊழியத்தை தொடங்கினேன் பின்னாளில் அது டிரினிட்டி பாப்திஸ்து சபையாக உருவாயிற்று. நான் கடைசி வரைக்கும் உங்கள் மத்தியிலேயே ஊழியம் செய்து இங்கேயே மரித்துப் போக வேண்டும் என்பது என் எண்ணமாயிருந்தது. அல்லது ஊழியம் செய்யக்கூடாதபடிக்கு வயதினால் பெலவீனம் ஏற்பட்டாலும் இங்கேயே உங்களோடு வாழ்ந்து முடிக்க நினைத்திருந்தேன். ஆனால் கடவுளின் சித்தம் வேறுவிதமாக இருப்பதை உணருகிறேன். எனது வாழ்க்கையை அவர் திசைதிருப்புவதை உணர முடிகிறது. நான் என்னுடைய புது இடத்தில் இருந்து சமயங் கிடைக்கும் போது உங்களை வந்து சந்திக்க எண்ணியிருக்கிறேன். நாமெல்லோரும் ஆண்டவருடைய உன்னதமான மறு உலகில் சந்திப்போமானால் நாம் அனைவரும் ஒரு பொதுவான காரியத்தை கடந்து வந்தவர்களாகத்தான் இருப்போம். அது என்ன தெரியுமா? குறுகலான வழி. நமது சொந்த நீதியை விலக்கி வைத்துவிட்டு, கடவுளின் கிருபையினாலே, இயேசுவின் நீதியை பெற்றவர்களாக அவராலே ஏற்றுக்கொள்ளப்பட வந்திருப்போம்;

பாவத்தை எதிர்த்து போராடுவதில் ஆனந்தம் பெற்றவர்களாக இருந்திருப்போம்; சுயநலத்தை வெறுத்து ஒதுக்குகிறவர்களாக மாறியிருப் போம். உலகசிநேகத்தை பகைக்கிறவர்களாக வாழ்ந்திருப்போம். பரிசுத் தத்தை அடையும்படிக்கு குறுகலான பாதையைத் தெரிந்து கொண்டு நாமெல்லோரும் அதில் நடந்து வந்திருப்போம். உலகத்திலிருந்து முற்றிலுமாக விலகினவர்களாகவும், நமது நீதிக்கு இயேசுவை மாத்திரமே சார்ந்து கொண்டவர்களாகவும், பரிசுத்த வாழ்க்கை வாழ அவரிடமிருந்து பெலனைப் பெறுகிறவர்களாகவும் இருப்போம். இப்படியாக நாம் வாழ்ந்து முடித்திருந்தால் மாத்திரமே கடவுளுடைய உன்னதமான அந்த மறுஉலகத் திலே நாம் சந்திக்க முடியும். குறுகலான பாதையில் வராவிட்டால் நீங்கள் அவ்விடத்தை அடைய முடியாது. நாங்களும் இயேசுவாகிய வாசல் வழியாகத்தானே வருகிறோம் என்று நீங்கள் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் குறுகலான பாதை என்பது மிகவும் அத்தியாவசியமானது. இயேசு தெளிவாக சொல்கிறார்: இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள். கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாய் இருக்கிறது. ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சில பேர். வாசல் - வழி - ஜீவன்! உன்னதமான மறு உலகை அடைய வேறு வழியில்லை - இயேசுவாகிய வாசல், குறுகலான வழி, நித்தியஜீவன்! நான் உங்களை அந்த உன்னதமான மறுஉலகில் சந்தித்தால் பவுலைப் போல நானும் கூறுவேன்: எனக்கு நம்பிக்கையும், சந்தோஷமும், மகிழ்ச்சியின் கிரீடமுமாய் இருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்!

ஆனாலும் நான் உங்களில் ஒருசிலரைக் குறித்து மிகுந்த கவலையாயிருக் கிறேன். நீங்கள் கேட்கிறீர்கள். கவனிக்கிறீர்கள். ஆனால் கீழ்ப்படியாமல் இருக்கிறீர்கள். கடவுள் தமது மிகுந்த கிருபையினாலும் இரக்கத்தினாலும் உங்களை உங்களுடைய ஆவிக்குரிய தூக்க நிலையிலிருந்து விழிக்கச் செய்து, கிறிஸ்துவின் உண்மையான சீஷராக்குவாராக. இயேசுவின் மீது விசுவாசமும் அன்பும் கொண்டவர்களாக அவரை உறுதியாகப் பற்றிக் கொண்டு, அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்தே தீருவேன் என்கிற வைராக்கிய வாஞ்சையை அடைவீர்களாக.

ஜெபிப்போம்:

பிதாவே உமது வசனங்களின் பல பகுதிகளை நாங்கள் இங்கு படித்தோம். தேவனே, அவைகள் இருபுறமும் கருக்குள்ள பட்டயங்களாக செயல்பட்டு, எங்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும், மனதையும் ஊடுருவுவதாக. உமது சத்தியம் எங்கள் ஒவ்வொருவருடைய இருதயத்தையும், வாழ்க்கை யையும் உமக்கு முன்பாக சரிப்படுத்தி, உமது நாமம் மகிமைப்படும்படிக்கு கனிகொடுக்கிறவர்களாக வாழும்படி எங்களை பலப்படுத்துவதாக. இயேசுவின் நாமத்தில் - ஆமேன்.

 

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.