திருமறைத்தீபம் 2006 -ம் ஆண்டு இரண்டாம் இதழ்
1. நேசமுள்ள வாசகர்களே!
2. ஒரு காலத்தில் பிரின்ஸ்டன்
3. இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு
4. கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியம் – 4
5. சிக்கலான சில வேதப் பகுதிகள் – ஃபிரெட் சீபர்ட்
6. சத்தியம் விடுதலையாக்கும்
7. கிறிஸ்தவக் கோட்பாடுகள்
8. போதக ஊழியம்: தங்க முட்டையிடும் வாத்தா அது?
9. திருச்சபை வரலாறு
10. கவிதை
நேசமுள்ள வாசகர்களே!
சத்தியத்தை அறிந்துகொள்ளுவதிலும், அதில் வளர்வதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிற உங்களை மறுபடியும் இந்த இதழ் மூலம் சந்திப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்த இதழும் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்க கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. போலி எது, சத்தியம் எது என்று பிரித்துப்பார்க்க முடியாதளவுக்கு வேத சத்தியங்களில் வளர்ச்சி குன்றியிருக்கும் நம்மினத்து மக்கள் மத்தியில் சத்தியத்தில் தெளிவுபெற்று, தொடர்ந்தும் குருடர்களாக இருக்கமாட்டோம் என்று விடாப்பிடியாய், குடும்ப ஊழிய அட்டகாசத்திற்கும், பாரம்பரியப் பிசாசுத்தனத்திற்கும் அடிபணிய மறுத்து ஆழி போல் சீறி எழுந்து கொண்டிருக்கும் பலரை இன்று அடையாளம் காண முடிவது நெஞ்சுக்கு இதமளிக்கிறது. உங்கள் சத்திய வாஞ்சையைப் புரிந்துகொள்ள மறுத்து, ‘நாங்கள் போட்ட வட்டத்திற்குள் இருக்கமாட்டேன் என்கிறானே’ என்று அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்யும் கூட்டத்தை நீங்கள் பொருட்படுத்தக்கூடாது. இயேசுவையே திட்டித் தீர்த்தது ஒரு கூட்டம். அதைவிட அதிகமாக உங்களை எவரும் திட்டிவிட முடியாது. பொறுமையைப் பேராயுதமாகப் பயன்படுத்துங்கள்; திட்டல்களை வாடா மல்லிகையாக சூடிக்கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை பெலப்படுத்துவார்; காலம் உங்களுக்கு வரலாறு படைக்கும்.
பத்தோடு பதினொன்றாக இருந்துவிடுவதற்காக இந்தப் பத்திரிகை உருவாகவில்லை; அசத்தியத்தைப் பார்த்தும் பார்க்காமலிருந்துவிடுவதற்காகவும் இது பிறக்கவில்லை. அன்பின் பெயரில், அழிவை நாடிப்போகிறவர்களை அடையாளம் கண்டு திருத்த மறுக்கும் கூட்டத்தில் இதற்கு ஒருபோதும் பங்கிருக்காது. நாம் வாழப்போகும் நாட்கள் குறுகியது; கர்த்தர் மீண்டும் வரப்போகும் காலமும் தூரத்தில் இல்லை. சொல்லவும், செய்யவும், இடிக்கவும், கட்டவும் வேண்டியவைகள் அநேகம். சத்திய வார்த்தைகளில் கர்த்தர் எமக்களித்திருக்கும் வெளிச்சத்தைப் பயன்படுத்தி அவர் கட்டுகின்ற திருச்சபையை அவருடைய வார்த்தையின்படி கட்டுவதில் அக்கறை காட்டுவது மட்டுமே எங்கள் இலக்கும், இறுதி நோக்க முமாகும். இந்த நோக்கம் நிறைவேற நெகேமியாவைப் போல அண்ட வேண்டியவர்களை அண்டி அன்போடு அரவனைத்து, அண்டக்கூடாதவர்களைத் தூரத்தில் தள்ளிவைத்து ஒரு கையால் வேலை செய்து, மறு கையில் வேலைத் தாங்கி சத்தியப் பணியில் நித்தமும் ஈடுபடுவது மட்டுமே நெருப்பாக இருக்கிறது எங்கள் நெஞ்சத்தில். ஜெபியுங்கள் எமக்காக!
– ஆசிரியர்
ஒரு காலத்தில் பிரின்ஸ்டன்
அமெரிக்க வரலாற்றை, அதன் சமுதாய பொருளாதார, அரசியல் கட்டுக்கோப்பை ஒரு குறுகிய காலப்பகுதியில் பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரியைப் பயன்படுத்தி மாற்றியமைத்தது போல் கர்த்தர் உலகில் வேறு எந்தக் கல்லூரியையும் பயன்படுத்தவில்லை. இருநூறு வருட காலத்திற்கு அமெரிக்க வரலாற்றில் பிரின்ஸ்டனின் செல்வாக்கு தலைதூக்கி இருந்தது. பிரின்ஸ்டனின் ஆத்மீக வரலாற்றை நீங்கள் இந்த ஆக்கத்தில் வாசிக்கலாம். பிரின்ஸ்டனின் வரலாறு உங்களில் மாற்றத்தை ஏற்படுத்தட்டும்; சிந்திக்க வைக்கட்டும்; செயல்படச் செய்யட்டும்.
கடந்த வருடம் அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாநிலத்தில் உள்ள பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரி வளாகத்தில் ஒரு முழு நாளையும் செலவிடும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பிரின்ஸ்டனின் வரலாறு பற்றி அறிந்திருந்தபடியால் பிரின்ஸ்டனைப் பார்க்க வேண்டும், வரலாறு படைத்த பிரசங்கிகள் வாழ்ந்து, சாதனைகள் பல படைத்திருந்த மண்ணில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆவல் பல காலமாக என்னுள்ளத்தில் இருந்தது. இருந்தபோதும் அதற்கான வாய்ப்புகள் தள்ளியே இருந்து வந்தன. பிரின்ஸ்டனைச் சுற்றிப்பார்க்கப் போகிறோம் என்பதை அறிந்த உடனேயே உள்ளத்தில் பல எண்ணங்கள் கிளற ஆரம்பித்தன. பிரின்ஸ்டனில் கல்வி பயின்று இன்று நியூ ஜேர்சியில் ஒரு கிறிஸ்தவ கல்லூரி ஆசிரியராக இருக்கும் நோர்மன் பேர்க்கட் வழிகாட்டியாக இருந்தார். நோர்மன் பேர்க்கட் வரலாற்றில் அதிக நாட்டம் உள்ளவர். தன்னுடைய ஓய்வு நேரத்தில் அநேகருக்கு பிரின்ஸ்டனைச் சுற்றிக்காட்டி அதன் வரலாற்றை விபரித்திருக்கிறார். பிரின்ஸ்டன் வரலாறு அவருக்கு அத்துப்படி. பிரின்ஸ்டனின் வரலாற்றை நோர்மன் விபரித்த அன்றைய ஒன்பது மணி நேரங்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். பிரன்ஸ்டனைச் சுற்றிப்பார்த்துவிட்டு அதன் வரலாற்றைக் கேட்டுப் பிரமித்து இரவில் பல மணி நேரங்கள் விழித்திருந்தேன். வரலாற்றில் இருநூறு வருட காலப்பகுதிக்குள் கர்த்தர் பிரின்ஸ்டன் இறையியல் வளாகத்தையும், அதன் மாமனிதர்களையும் பயன்படுத்தி அமெரிக்காவில் செய்திருக்கும் அற்புதம் மிகப் பெரியது. அன்றைய மகத்துவத்தைப் பிரதிபலிக்கும் பிரின்ஸ்டனாக இன்றைய பிரின்ஸ்டன் இல்லாவிட்டாலும் இந்த உலகம் இருக்கும்வரை அதன் வரலாறு திருச்சபை மக்களுக்கு புத்துணர்வூட்டி வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வரலாற்றை சுருக்கமாக உங்கள் முன் வைக்கிறேன்.
வரலாற்றில் இருநூறு வருடங்களுக்கு அமெரிக்க நாட்டின் சீர்திருத்த பிரஸ்பிடீரியன், கொங்கிரிகேஷனல் திருச்சபைகள் மத்தியிலும், அந்த நாட்டின் அரசியல், சமூக வாழ்விலும் பெருந்தாக்கத்தைப் பிரின்ஸ்டன் பிரசங்கிகள் ஏற்படுத்தியிருந்தார்கள். இன்றைய அமெரிக்கர்கள் அனுபவிக்கும் வசதிகள் இல்லாமலிருந்த அந்தக் காலத்தில் பிரின்ஸ்டன் பிரசங்கிகள் ஒரு குறுகிய காலப்பகுதியில் சாதித்திருந்த சாதனைகளைப் பார்க்கும்போது இன்றைய கிறிஸ்தவ சபைகளும், பிரசங்கிகளும் நிச்சயம் தலைகுனியத்தான் வேண்டும். எழுப்புதல் வேண்டும் என்று வாஞ்சிக்கும் நாம் உண்மையில் எழுப்புதலை நம் வாழ்நாளில் சந்திக்கும் அளவுக்கு பிரின்ஸ்டன் பிரசங்கிகள் கொண்டிருந்த சத்திய வேட்கை, வைராக்கியம், தாழ்மை, கடின உழைப்பு ஆகியவற்றோடு கர்த்தரில் தங்கியிருக்கிறோமா என்பது சந்தேகமே. பிரின்ஸ்டனின் வரலாற்றை விளக்கமாக அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள சில நூல்களில் அது பற்றி வாசிக்கலாம். (Princeton Seminary, Vol 1 & 2, Calhoun, Evangelicalism Divided, Princeton & Preaching, Ian Murray).
லொக் கொலேஜ் (Log College)
பிரின்ஸ்டனின் ஆரம்பகாலத்தை ஆராய்கிறபோது நேசெம்னியில் இருந்த பிரெஸ்பிடீரியன் சபையைச் சேர்ந்த வில்லியம் டெனட் என்பவர் ஆரம்பித்த லொக் கொலேஜின் வரலாற்றில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 1726ல் இந்த லொக் கொலேஜ் ஆரம்பமானது. இக்காலப்பகுதியில் கிறிஸ்தவ உலகு சீர்திருத்தவாதப் போதனைகளையே அறிந்திருந்தது. இருந்தபோதும் திருச்சபை உலக இச்சயையால் பாதிக்கப்பட்டிருந்தது. இதன் மத்தியில் வைராக்கியமுள்ள கர்த்தருடைய போதகர்களும் திருச்சபைகளில் இருக்கத் தான் செய்தனர். அவர்களில் ஒருவரே வில்லியம் டெனட். தன்னுடைய பிள்ளைகளுக்கு வீட்டில் வைத்தே கல்வி போதித்த இந்தப் போதகர் முதல் லொக் கொலேஜை, திருச்சபைப் போதகர்களை உருவாக்க ஆரம்பித்தார்.
‘லொக்’ (Log) என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வெட்டப்பட்ட நீளமான மரத்துண்டைக் குறிக்கும். இத்தகைய மரத்துண்டுகளை வைத்துக் கட்டப்பட்ட இடங்களில் இறையியல் பயிற்சி கொடுக்கப்பட்டதால் அவை இந்தப் பெயரைப் பெற்றன. இந்தப் பெயரும் இவர்களை இகழ்வதற்காக சத்தியத்தோடு ஒத்துப்போகாத எதிரிகளால் பயன்படுத்தப்பட்டதாக இருந்தது. இந்தக் கல்லூரியில் இறையியல் பயின்றவர்கள் பயிற்சியளித்த போதகர்களுடைய வீடுகளில் தங்கியிருந்து பயில வேண்டியிருந்தது. சபை ஊழியங்களிலும் ஈடுபடவேண்டியிருந்தது. போதகப் பயிற்சி, பயிற்சியளித்த போதகர்களுடைய வாழ்க்கையோடும், அவர்கள் ஊழியம் செய்த திருச்சபையோடும் பிரிக்க முடியாத தொடர் புடையதாக இருந்தது. போதித்தவர்கள் ஏற்கனவே ஊழியத்தில் ஈடுபட்டிருந்த சபைப் போதகர்களாக இருந்தனர்.
ஹெட்ஜ், அலெக்சாண்டர், வோர்பீல்ட், மேச்சன் போன்றோர் பிரசங்கித்த பிரின்ஸ்டன் பிரசங்க மேடை.
லொக் கொலேஜ் ஆரம்பித்துப் பதினைந்து வருடங்களில் அது அமெரிக்காவின் பல சிறந்த போதகர்களை உருவாக்கிய பயிற்சித் தளமாக இருந்தது. ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த போதகர்கள் இங்கு இறையியல் பயிற்சி பெற்று சிறந்த ஊழியக்காரர்களாக பணி புரிந்தனர். அத்தோடு கல்லூரியோடு தொடர்புடைய பல கல்வி ஸ்தாபனங்களும் உருவாக லொக் கொலேஜ் காரணமாக இருந்தது. இத்தகைய லொக் காலேஜுகள் பல இடங்களில் அக்காலத்தில் உருவாகி போதகர்களுக்கு சிறந்த பயிற்சியளித்து வந்தன. திருச்சபையோடு பிரிக்கமுடியாத தொடர்புடையதாக அமைந்து, போதகர்களினால் மட்டும் பயிற்சியளிக்கப்பட்ட அன்றைய லொக் கொலேஜுகள் இன்று போதக பயிற்சி பற்றி நம்மைச் சிந்திக்க வைக்க வேண்டும்.
பிரின்ஸ்டன் மயானத்தில் ஜொனத்தன் எட்வர்ட்ஸ், ஹெட்ஜ், வோர்பீல்ட் போன்றோரின் கல்லறைகள்.
லொக் கொலேஜுகள் ஆரம்பித்த சிறிது காலத்திற்குப் பிறகு 1740ல் அமெரிக்காவில் எழுப்புதல் ஆரம்பித்தது. இந்த முதல் எழுப்புதல் இரு வருடங்களுக்கு நீடித்தது. இதனை ‘மகா எழுப்புதல்’ என்று அழைப்பார்கள். இந்த எழுப்புதலோடு தொடர்புடையவராக அமெரிக்காவின் பெரும் சிந்தனையாளரும், பிரசங்கியுமான ஜொனத்தன் எட்வர்ட்ஸ் இருந்தார். இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெரும் பிரசங்கியான ஜோர்ஜ் விட்பீல்டுக்கும் பங்கிருந்தது. இந்த எழுப்புதலின் பயனாக அமெரிக்காவின் நியூ இங்கிலாந்துப் பகுதி பிரெஸ்பிடீரியன் திருச்சபைகளில் பெரும் வளர்ச்சி காணப்பட்டது. சபைகள் ஆத்மவிருத்தி அடைந்ததோடு போலிகள் வெகுவிரைவில் இனங்காணப்பட்டனர். எழுப்புதலையும், லொக் கொலே ஜுகளில் பயிற்சி பெற்று வந்த போதகர்களையும், அவர்களுடைய தெளிவான சத்தியங்களையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து இழித்துரைத்தவர்களும் இருந்தனர். சத்தியத்திற்கும், அதற்கு இடங்கொடுக்க மறுத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டத்தில் 1741-58 இடைப்பட்ட காலத்தில் திருச்சபையில் தவிர்க்க முடியாத பெரும் பிரிவு ஏற்பட்டது.
நியூ ஜேர்சி கொலேஜ் (College of New Jersey)
ஜொனத்தன் எட்வர்ட்ஸ் அமெரிக்காவில் அக்காலத்தில் புதிதாக குடியேற்றங்கள் ஏற்பட்ட ஏனைய பகுதிகளில் போதகர்களுக்கான பயிற்சி அளிக்குமுகமாக கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று கருதினார். அக்டோபர் 22, 1746ல் நியூ ஜேர்சி கொலேஜ் ஆரம்பமானது. எலிசபெத் என்ற இடத்தில் போதகர் டிக்கின்சனுடைய (Rev. Dickinson) வீட்டில் 8 முதல் 10 மாணவர்களைக் கொண்டு கல்லூரி ஆரம்பமானது. அடுத்த வருடத்திலேயே டிக்கின்சன் மரணத்தைத் தழுவினார். பின்பு போதகர் ஏரன் பேர் (Rev. Aaron Burr) கல்லூரித் தலைவரானார். அத்தோடு கல்லூரி நியுவர்க்குக்கு (Newark) நகர்ந்தது. அக்காலத்தில் கல்லூரித் தலைவரே சகலதையும் செய்பவராக இருந்தார். அவரே நேரடியாக பல பாடங்களையும் போதிக்கும் ஆசிரியராகவும், மாணவர்களின் ஆத்மீகத் தேவைகளை சந்திக்கும் நல்ல போதகராகவும் இருந்தார். இன்று பிரின்ஸ்டன் கல்லூரித் தலைவர் நிர்வாகத்தை மட்டுமே கவனிக்கிறவராக இருக்கிறார். இந்தக் கல்லூரி ஆரம்பிப்பதற்கு இன்னொரு காரணம் அக்காலத்தில் நியூ இங்கிலாந்துப் பகுதிகளில் காணப்பட்ட போதகப் பயிற்சிக்கான கல்லூரிகளில் ஆர்மீனியனிசமும் (Armenianism), ஏரியனிசமும் (Arianism), சோசீனியனிசமும் (Socenianism) பரவலாகக் காணப்பட்டதுதான். இப்போலிப்போதனைகள் திருச்சபைகளை அலங்கரித்த அக்காலப் போதகர்களின் நண்பர்களாக இருந்தன. இவற்றைத் தவிர்த்து காலத்தால் நிருபிக்கப்பட்டு கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட கிருபையின் போதனைகளைப் பின்பற்றும் போதகர்களைப் பயிற்றுவிப்பதே நியூ ஜேர்சி கல்லூரியின் இலக்காக இருந்தது.
நாசோ மண்டப வரலாறு (Nassau Hall)
1756ல் நியூ ஜேர்சி கல்லூரி பிரின்ஸ்டனுக்கு நகர்ந்தது. கல்லூரி வளர வளர அதற்கான தேவைகளும் அதிகரித்தன. பெரிய இடம் தேவைப் பட்டது. இக்காரணங்களால் பென்சில்வேனியாவில் இருந்த அமைதிமிக்க பிரின்ஸ்டனுக்கு கல்லூரி இடம் பெயர்ந்தது. கல்லூரிக்குத் தேவையான பணத்தைச் சேர்ப்பதில் ஜோர்ஜ் விட்பீல்டும் அதிக பங்குவகித்தார். அக்கறையுள்ளவர்களும், நண்பர்களும் நிலமும், பணமும் தந்துதவ 1757ல் 147 பேருக்கான அறைகளைக்கொண்டு ஆரம்பித்த கல்லூரிக் கட்டிடம் அடுத்த வருடத்தில் நிறைவு பெற்றது. இன்றைய பிரின்ஸ்டன் கல்லூரி வளாகத்தின் ஆரம்பக் கட்டடமாக நாசோ மண்டபம் (Nassau Hall) இருந் தது. ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு எதிராகப் போராடிய நாசோவின் பெயரே கட்டிடத்திற்கு சூட்டப்பட்டது. சில காலங்களுக்குப் பின்பு கல்லூரி பிரின்ஸ்டன் கல்லூரி என்ற பெயரைப் பெற்றது.
பலருடைய வற்புறுத்தல்களுக்குப்பின் 1758ல் கல்லூரியின் தலைவராக ஜொனத்தன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards) பொறுப்பேற்றார். கல்லூரியின் தலைவராகவும், விரிவுரையாளராகவும், பிரசங்கியாகவும் இருந்து மாணவர்களின் ஆத்மீக விருத்திக்கு பெருந்துணையாக இருந்தார். ஆனால், இரண்டு மாதங்களுக்குள்ளேயே சின்னம்மையால் ஏற்பட்ட கடுங்காய்ச்சலால் அவர் இறக்க நேரிட்டது. இக்காலப்பகுதியின் மகா எழுப்புதலில் அதிகமாகக் கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட பிரசங்கியாக எட்வர்ட்ஸ் இருந்தார். நவீன காலத்தில் எழுப்புதல் என்றால் எங்காவது கூட்டமாகக் கூடித் தொடர்ந்து ஜெபிப்பது என்ற தவறான எண்ணம் பரவலாக இருக்கிறது. மெய்யான எழுப்புதல்களை மனிதர்கள் ஒருபோதும் உருவாக்க முடியாது. அவை கர்த்தரின் இறை யாண்மையால் வரலாற்றில் ஏற்படும் தீவிர ஆத்மீகக் கிரியைகளாகும். கர்த்தர் சித்தங்கொண்டு ஆவியினால் உருவாக்கிய எழுப்புதலில் பயன்படுத்தப்பட்டவரே எட்வர்ட்ஸ். இத்தனைக்கும் ஜொனத்தன் எட்வர்ட்ஸ் கல்வி னிசத்தைப் பின்பற்றியவர். கல்வினிசப் போதனைகளைப் பின்பற்றியவர்களாலேயே லொக் கொலேஜுகளும், பிரின்ஸ்டனில் இறையியல் கல்லூரியும் உருவாகியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எழுப்புதல் காலத்தில் பிரசங்கம் உன்னத நிலையில் இருந்ததுமட்டுமல்லாமல் கல்வினிசக் கிருபையின் போதனைகளை அப்பழுக்கில்லாமல் கொண்டிருந்தன.
பிரின்ஸ்டன் போதகர்களில் ஒருவராக இருந்த சார்ள்ஸ் ஹொட்ஜ் வாழ்ந்த வீடு பிரின்ஸ்டன் வளாகத்தில் இன்றும் அப்படியே இருக்கிறது.
எட்வர்ட்ஸுக்குப்பிறகு கல்லூரியை அலங்கரித்த தலைவர்களில் சாமுவேல் டேவிஸும் (Samuel Davies) ஒருவர். பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு இவரும் இறக்க நேரிட்டது. மார்டின் லொயிட் ஜோன்ஸ் இவரைப் பற்றி எழுதும்போது, “அமெரிக்கா உருவாக்கிய சிறந்த பிரசங்கிகளில் ஒருவர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அதற்குப்பிறகு பணியாற்றியவர்களில் ஒருவராக ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் விதர்ஸ்பூன் (John Witherspoon) இருந்தார். இவர் கல்லூரி வளர்ச்சிக்காக அதிகமாக ஊழைத்தார். போதகர்களை உருவாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். பட்டிதொட்டிகளிலெல்லாம் பிரசங்கித்து சத்தியத்தைப் பரப்பினார். இவர் காலத்தில் கல்லூரி மேலும் விரிவடைந்தது. இக்காலத்தில் அமெரிக்கா இங்கிலாந்துக்கு எதிராகப் போரிட்டு விடுதலையை நாடியது. இக்காலத்தில் 1776ல் அமெரிக்கர்கள் வெளியிட்ட இங்கிலாந்திற்கெதிரான விடுதலைப் பத்திரத்தில் (Declaration of Independence) கையெழுத்திட்ட மூவரில் ஜோன் விதர்ஸ்பூனும் ஒருவர். இவர்களில் இவர் மட்டுமே போதகராகவும், கல்லூரித் தலைவராகவும் இருந்தார்.
பிரின்ஸ்டன் தலைவர்களில் ஒருவராகப் பணிபுரிந்து போதித்த திறமை வாய்ந்த பிரசங்கியான ஆர்ச்சிபால்டு அலெக்சான்டர்.
அமெரிக்காவில் தோன்றிய எழுப்புதலுக்கும் கல்லூரிக்கும் பெருந்தொடர்பு இருந்தது. 1773 வரை எழுப்புதல் கல்லூரியில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்லூரியில் இருந்து வெளிவந்தவர்களில் 49 வீதமானோர் போதகர்களாகப் பணியாற்றினர். பெரும் பிரசங்கிகளாக இருந்து கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பிரசங்க ஊழியத்தில் அனுபவித்தனர்.
இங்கிலாந்துக்கு எதிரான போர்
1776ல் அமெரிக்கா உள்நாட்டு யுத்தத்தைச் சந்திக்க அது கல்லூரியையும் பாதித்தது. பல தடவைகள் கல்லூரிக் கட்டிடங்கள் தாக்குதலுக்குள்ளாகியதுடன் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இருசாராருக்கும் மாறி மாறிப் புகலிடமாகவும் இருந்தது. ஒரு தடவை அதன் வளாகத்திலேயே யுத்தம் நடந்தது. இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் அடைவதற்கான போராட்டத்திற்கு கல்லூரி ஆதரவளித்ததுடன் அதில் பங்கும் கொண்டது. அமெரிக்கா உருவாகுவதில் பிரின்ஸ்டன் கல்லூரியைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் பங்கிருந்தது. கல்லூரித் தலைவராக இருந்த ஜோன் விதர்ஸ்பூனின் மாணவர்கள் அமெரிக்காவின் தலைவர், உப தலைவர் முதற்கொண்டு காங்கிரஸ் அங்கத்தவர்கள், நீதிபதிகள், மந்திரிகள், கவர்னர்கள் மற்றும் செனட்டர்களாகவும் பணி புரிந்தனர். அந்தளவுக்கு கல்லூரி மாணவர்கள் தேசத்தின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் பங்கு கொண்டிருந்தனர். அமெரிக்க விடுதலை அறிவிப்பு அறிக்கையில் கையெழுத்திட்ட மூவரில் ஜோன் விதர்ஸ்பூனும் ஒருவர். 1783ல் நாசோ மண்டபமே நாட்டின் தலை நகரம் போல் ஐந்து மாதங்களுக்கு செயல்பட்டது. அந்த மண்டபத்திலேயே காங்கிரஸ் கூடி வந்தது. இங்கேயே போர் காலத்தில் ஜெனரல் வாஷிங்டன் நாட்டின் தலைவராவதற்கான அழைப்பை ஏற்று காங்கிரஸுக்கு நன்றி கூறிச் செய்தியளித்தார். அமெரிக்கா உருவாகுவதில் கிறிஸ்தவர்களுக்கு அதுவும், கல்வினிசக் கிறிஸ்தவர்களுக்கு இருந்த பங்கை இதனால் அறிந்துகொள்ள முடிகிறது.
விடுதலை யுத்தம் முடிவடைந்தபின் 1795 முதல் 1807 வரை கல்லூரி தோய்வடைந்தது. இக்காலத்தில் கல்லூரித் தலைவர்களாக இருந்தவர்கள் ஜோன் விதர்ஸ்பூனைப் போன்ற சத்திய வாஞ்சையைக் கொண்டிருக்கவில்லை. ஜொனத்தன் எட்வர்ட்ஸின் விசுவாச உறுதியையும் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக கல்லூரியில் ஆத்துமவிருத்தி குன்றியதோடு போலிப் போதனைகளும் கல்லூரிக்குள் தலையெடுக்க ஆரம்பித்தன. 1773வரை ஆத்மீக எழுப்புதலுக்கான எந்தவித அடையாளங்களும் காணப் படவில்லை.
1800 அளவில் கர்த்தர் மறுமபடியும் இரண்டாவது எழுப்புதலைத் தோற்றுவித்தார். 1830கள் வரை இந்த இரண்டாம் எழுப்புதல் அமெரிக்கா எங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் இது சந்தித்தது. அநேக பகுதிகள் மீண்டும் மீண்டும் எழுப்புதலைச் சந்தித்தன. இந்த எழுப்புதல் அமெரிக்க மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தின. இவற்றை விட இந்த இரண்டாம் எழுப்புதலால் திருச்சபைகள் பெருமளவில் வளர ஆரம்பித்தன. அதன் காரணமாக போதகர்களுக்கான தேவையும் அதிகரித்தது. இந்த ஆத்மீக எழுப்புதலால் பிரின்ஸ்டன் கல்லூரியிலும் பாதிப்பு ஏற்பட்டு அப்போதைய தலைவரான ஸ்டேன் ஸ்டென்கோப் சிமித் (Stan Stenhope Smith) இராஜினாமா செய்ய நேரிட்டது. இவர் கல்லூரியின் முன்னைய விசுவாசக் கோட்பாடுகளில் உறுதியற்றவராக இருந்தார். ஏஸ்பெல் கிரின் (Ashbel Green) என்பவரின் தலைமையில் 1807ல் பெரும் மாணவர் கிளர்ச்சி ஆரம்பமாகி கல்லூரியின் நலத்துக்கான நல்ல மாறுதல்கள் ஏற்பட்டன.
பிரின்ஸ்டன் இறையியல் செமினரியின் தோற்றம்
இறையியல் செமினரி ஒன்று தேவை என்பதை உணர்ந்ததால் 1812ல் பிரின்ஸ்டன் இறையியல் செமினரி ஆரம்பிக்கப்பட்டது. இதன் அவசியத்தை வலியுறுத்தி சிமித்துக்கு எதிராக செயல்பட்ட ஏஸ்பெல் கிரீனே புதிய செமினரியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் 1822 வரை அப்பணியை ஆற்றினார். ஆரம்பத்தில் செமினரிக்கு வந்தவர் களுக்கு கர்த்தருடைய காரியங்களில் அதிக நாட்டமிருக்கவில்லை. கிரீனும் அவரோடு இணைந்து பணிபுரிந்து அலெக்சாண்டரும், மில்லரும் மாணவர்களோடு தனிப்பட்ட முறையில் பேசி அவர்களுடைய ஆத்தும விருத்திக்கான உதவிகளை செய்தனர். ஜோன் ஓவன் (John Owen), பிலிப் டொட்ரிஜ் (Philip Doddridge), ரிச்சட் பெக்ஸ்டர் (Richard Baxter), ஐசெக் வொட்ஸ் (Issac Watts) ஆகியோருடைய நூல்களை வாசிக்கும்படி மாணவர்களுக்கு அதிக ஊக்கமூட்டினர். செமினரியில் அன்றாடம் ஜெபக்கூட்டம் நடந்தது. காலஞ் செல்லச் செல்ல ஆத்மீகக் காரியங்களில் மாணவர்கள் அதிக நாட்டம் காட்ட ஆரம்பித்தனர். மாணவர்கள் செமினரியிலும் பக்கத்து ஊர்களிலும் எழுப்புதலில் நாட்டம் காட்டிப் பணி செய்தனர். இக்காலத்திலேயே சார்ள்ஸ் ஹொட்ஜ் (Charles Hodge) கர்த்தரை விசுவாசித்து செமினரியில் இணைந்தார். இக்காலப்பகுதியில் ஜே. டபிள்யூ. அலெக்சான்டர், ஏ. ஏ. அலெக்சான்டர் போன்ற திறமை வாய்ந்த போதகர்கள் செமினரியில் பணிபுரிந்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜேம்ஸ் மெக்கொஸின் (James McCosh) தலைமையில் செமினரி வளர்ச்சி பெற்றது. இவர் சிறந்த தலைவராக இருந்தார். பிரின்ஸ்டனை ஐரோப்பாவில் வளர்ந்து வரும் ஏனைய பல்கலைக்கழகங்களைப் போல மாற்ற மெக்கொஸ் விருப்பங் கொண்டிருந்தார். அதனால் டாக்டர் பட்டம் பெற்றவர்களைக் கொண்டு பாடங்களை நடத்த முயற்சிகள் எடுத்தார். இதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டார். ஆனால், உலக வழிகளைப் பின்பற்றி கர்த்தரின் பணியைச் செய்வதில் ஆபத்து உண்டு என்பதை மெக்கோஸின் செயல்கள் உணர்த்தின. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகமாகப் பெயர் பெற்றாலும் ஆத்மீகத்தில் குறை வடைந்தது. வேதத்தின் அதிகாரத்தைக் குறைவுபடுத்தி விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை உயர்த்தும் புதிய கோட்பாடுகள் செமினரியில் நுழைய ஆரம்பித்தன. டார்வினின் சிருஷ்டி பற்றிய பரிணாமக் கோட்பாடுகளும் பிரபலமாக ஆரம்பித்தன. மெக்கோஸுக்கு பின்பு வந்த பேட்டனும் புதிய போதனைகளின் ஆபத்தை உணரவில்லை. இதெல்லாம் பல்கலைக் கழகத்துக்கும் செமினரிக்கும் இடையில் பிரிவை உண்டாக்கின. நாள் போகப் போக சுவிசேஷத்தின் மகிமையை உணராமல் உலக வழிகளை நாடி மனிதனுடைய வளத்துக்கு வழிகாணும் முயற்சிகளில் பல்கலைக் கழகம் ஈடுபட்டது. வேதபூர்வமான வரலாற்றுக் கிறிஸ்தவத்துக்கும், பெயர் கிறிஸ்தவத்துக்கும் இடையிலான பிரிவும், போராட்டமும் பிரின்ஸ்டன் வளாகத்தில் வளர ஆரம்பித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இதுநாள் வரையும் ஒரு போதகர் கல்லூரித் தலைவராகவும், மாணவர்களின் ஆத்தும விருத்திக்குத் துணை செய்பவராகவும் இருந்த முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு மாணவர்களின் தேவைகளைக் கவனிக்க மாணவர் சங்கங்கள் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் கல்லூரியில் கிறிஸ்தவத் தின் செல்வாக்கு மேலும் மேலும் குறைவடையத் தொடங்கியது. அலெக்சான்டர் (Alexander), ஹொட்ஜ் (AA Hodge) வொட்ஸ் (Watts), மில்லர் (Miller), பெட்டன் (Patton), ஜோன் ஆர் டீ விட் (John R De Witt), பென்ஜமின் வோர்பீல்ட் (Benjamin Warfield), ஜே. ஜி. மேச்சன் (JG Machen), வொஸ் (Vos), ஆர்ம்ஸ்ட்ரொங் (Armstrong) ஆகிய பெரும் இறையியல் வல்லுனர்கள் போதித்த பிரின்ஸ்டன் தன்னுடைய தனித்தன்மையை இழந்து ஏனைய பல்கலைக்கழகங்களைப் போல உலகம் சார்ந்த வெறும் பல்கலைக்கழகமாக மாறிவர ஆரம்பித்தது.
சார்ள்ஸ் பினியின் எழுப்புதல் பற்றிய தவறான போதனைகளும், புதிதாகத் தோன்றிவளரும் சகல போதனைகளும் பிரின்ஸ்டனுக்குள் தலைகாட்ட ஆரம்பித்தன. இதெல்லாம் பிரின்ஸ்டனின் ஆத்மீக அழிவிற்கே வழிகோலின. 1929ல் பிரின்ஸ்டன் தனது ஆரம்பகால கோட்பாடுகளில் இருந்து முற்றாகவே விலகி நின்றது. சத்தியத்தைக் கற்பதைவிட நடைமுறைக்குத் தேவையானது வேண்டும் என்ற குரல் செமினரியில் ஓங்கியது. சத்தியமே எல்லா நடைமுறைக்கும் அத்திவாரம் என்ற வோர்பீல்ட், கிரேச்சம் மெச்சன் போன்றோரின் அறைகூவலைக் கேட்டவர்கள் தொகை குறைந்தது. பல விரிவுரையாளர்கள் பிரின்ஸ்டனைவிட்டு விலகினர். ஜே. ஜி. மேச்சன் (JG Machen), ஒஸ்வால்டு எலிஸ் (Oswald Allis), வில்சன் (Wilson), கொர்நேலியஸ் வென் டில் (Cornelius Van Til), ஆர். பி. கைப்பர் (R. B. Kuiper), ஜோன் மரே (John Murray) போன்ற இறையியல் வல்லுனர்கள் பிரின்ஸ்டனை விட்டு விலகினர். சகோதரர்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும். பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற குரல்கள் எழாமலில்லை. இதற்குப் பதிலளித்த இறையில் வல்லுனரான பென்ஜமின் வோர்பீல்ட், “இது போராட வேண்டிய நேரம், அன்பு காட்டும் நேரமல்ல. சத்தியத்துக்கு ஆபத்து வரும்போது சண்டையிட்டே அதைக் காக்க வேண்டும்” என்றார். மெச்சனும் அதையே நம்பினார். கர்த்தரின் மகிமை பிரின்ஸ்டனைவிட்டு அகன்றது என்று சொல்லுவது மிகையாகாது. தன்னுடைய ஆரம்பகால வரலாற்று அடித்தளத்தை பிரின்ஸ்டன் அன்றோடு இழந்தது. பிரின்ஸ்டன் ஏன் சரிந்தது? என்பதற்கு நோர்மன் பேர்கர்ட் விளக்கமளித்தபோது, “அது அமெரிக்க திருச்சபைக்கு கர்த்தர் அளித்த தண்டனை” என்று கூறினார். உலக ஆசை, பணம், இந்த உலகத்தைச் சார்ந்த சுவிசேஷம், டார்வினின் பரிணாம தத்துவத்தை மக்கள் கர்த்தராக ஏற்றுக்கொண்டமை, விஞ்ஞானத்துக்கு மக்கள் செய்த ஆராதனை, மனிதநல அடிப்படையிலான ஆராதனை போன்ற சபை மக்கள் நாடிச்சென்ற அத்தனைக்கும் எதிராக கர்த்தர் தந்த தண்டனையே மலைபோலிருந்த பிரின்ஸ்டன் சரிந்ததற்கு காரணம் என்று விளக்கினார். சத்திய வெளிச்சத்தை திருச்சபை நிராகரிக்க கர்த்தர் அதை அணைத்து விட்டார்.
பிரின்ஸ்டனின் வரலாற்றிலிருந்து நாம் படிக்கும் பாடமென்ன?
- பிரின்ஸ்டன், வரலாற்றுக் கிறிஸ்தவமான கல்வினிசக் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகி ஆரம்பத்திலிருந்தே சத்தியத்தை அப்பழுக்கில்லாமல் போதித்தது. வரலாற்றில் உருவெடுத்த விசுவாச அறிக்கைகளுக்கு மதிப்பளித்து அவற்றை நடைமுறையில் கைக்கொண்டது. அதிலிருந்து விலகியபோதே கல்லூரி சரிந்தது; கர்த்தரின் தண்டனையையும் அனுபவித்தது. சீர்திருத்தவாத கல்வினிசப் போதனைகளே வேதபூர்வமான கிறிஸ்தவ போதனைகள். அதன் அடிப்படையிலமையாத திருச்சபை ஊழியங்கள் சத்தியத்தை அறியாமல் தள்ளாடத்தான் செய்யும். பிரின்ஸ்டனின் உயர்வும், எழுப்புதல் காலத்தில் அதைக் கர்த்தர் பயன்படுத்திய விதமும், பிரின்ஸ்டன் உருவாக்கிய ஆவிக்குரிய வல்லமையான பிரசங்கிகளும், அங்கு போதித்த போதகர்களான இறையியல் ஜாம்பவான்களும் இதை சந்தேகமில்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இன்று சீர்திருத்தவாத சத்தியங்களின் அடிப்படையில் தமிழினத்தில் திருச்சபைகள் எழவேண்டியது அவசியம். வெறும் பெயருக்கு கிருபையின் போதனைகளை விசுவாசிப்பதாக சாக்குக் காட்டிப் பெருமை பாராட்டிக்கொள்ளுகிற சபைகளாக இல்லாமல் மெய்யாகவே பிரின்ஸ்டன் பெரியவர்களைப் போல அவற்றிற்காக உயிரையும் கொடுத்து போராடுகிற திருச்சபைகள் எழவேண்டியது அவசியம். அப்போதுதான் தமிழினத்தில் மெய்யான எழுப்புதலைப் பார்க்கலாம். (இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள நாம் வெளியிட்டுள்ள ‘சீர்திருத்த விசுவாசம்’ என்ற நூலைப் பெற்று வாசிக்கவும்)
- போதக ஊழியத்தைப் பற்றிய பிரின்ஸ்டனின் வேதபூர்வமான துவக்க கால அடிப்படைக் கோட்பாடுகள் இன்று பின்பற்றப்பட வேண்டியது அவசியம். திருச்சபைப் போதகர்கள் போதக ஊழியத்துக்கு வரப் போகிறவர்களை நேரடியாகக் கண்காணித்து போதித்து ஊழியத்துக்குத் தயார் செய்யும் ‘லொக் கொலேஜ்’ முறை எந்தளவுக்கு பிரசங்கத்தை உயர்த்தியது, போதக ஊழியத்தை சிறப்பாக்கியது, திருச்சபையை வளர்த்தது என்று கண்டோம். அம்முறை இன்று எல்லா இடங்களிலும் பின்பற்றப்பட வேண்டியது அவசியம். திருச்சபையின் கண்காணிப்பில் திருச்சபைப் போதகர்களால் பயிற்சி கொடுக்கப்படுகிறவர்கள் மட்டுமே திருச்சபைக்குப் பயன்பட முடியும். சபையையே கண்ணில் பார்க்காது இறையியல் கல்லூரிக்கு மட்டும்போய் ஏட்டுச் சுரைக்காய் பட்டத்தைப் பெற்றபின் சபை நடத்தப் பார்க்கிறவர்கள் இன்று தாராளமாக உலவுவதால்தான் தமிழினத்தில் தரமான வேத அடிப்படையிலான சபைகளைப் பார்க்க முடியாதிருக்கிறது. இம்முறை மாறவேண்டும். ஆத்துமாக்களோடு அந்நியோன்னியமாகப் பழகவும், அவர்களுடைய ஆத்மீகத் தேவைகளைப் புரிந்துணர்ந்து உதவவும் திருச்சபை வாழ்க்கை ஒரு போதகனுக்கு அவசியம். அதை இறையியல் கல்லூரியால் கனவிலும் தரமுடியாது. திருச்சபையில் வளர்ந்து திருச்சபைப் போதகர்களால் வளர்க்கப்படுகிறவர்கள் மட்டுமே ஆத்துமாக்களுக்கு மெய்யான ஆத்மீக ஊழியத்தை செய்ய முடியும். போதகர்களால் மாணவர்களின் ஆத்மீகக் குறைகளும், பிரச்சனைகளும் தீர்க்கப்பட்ட காலம் மாறி மாணவர்களின் குறைகளைத் தீர்க்க மாணவர்கள் சங்கம் ஆரம்பிக்கும் நிலை உருவாகிய பிரின்ஸ்டனைவிட்டுக் கர்த்தரின் ஆசீர்வாதம் அகன்றதில் ஆச்சரியமெதுவுமில்லை.
- திருச்சபைகள் நன்கு வளர்ந்தபோதே போதகர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக லொக் கொலேஜுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பிறகு பிரின்ஸ்டனும் உருவானது. இன்று தமிழினத்தில் சத்திய வேட்கையுடன் ஆத்மீகவிருத்தியடைந்து வரும் திருச்சபைகளை விரல்விட்டு எண்ணி விடக்கூடிய நிலையில் காளான்கள் போல் இறையியல் கல்லூரிகள் மட்டும் புறப்பட்டுவிடுகின்றன. திருச்சபைகள் வளர்ச்சியடையாமலிருந்து, அங்கே போதகர்களுக்கு அவசியமேற்படாமலிருந்திருந்தால் வரலாற்றில் லொக் கொலேஜுகள் உருவாகியிருந்திருக்காது; பிரின்ஸ்டனும் தோன்றியிருக்காது. இன்றைக்கு இறையியல் கல்லூரிகள் தமிழினத்தில் நல்ல ஆத்மீக வியாபாரம் நடத்தி வருகின்றன. அதில் பணத்தைத் தேடிக்கொள்ளுவதற்கு நல்ல வாய்ப்பு என்பதால் குடிசைத் தொழில்போல் அது பல இடங்களில் வெளிநாட்டுப் பணத்தில் வளர்ந்துவிடுகிறது. அவற்றில் பெரும்பாலும் சத்தி யத்தைவிடப் போலிப் போதனைகளே மாணவர்கள் மேல் திணிக்கப்படுகின்றன. இன்று தமிழினத்தின் தேவை இறையியல் கல்லூரிகளல்ல, தேவனை மகிமைப் படுத்தக்கூடிய சத்தியத்தில் வேறூன்றி வளரும் நல்ல திருச்சபைகளே.
- திருச்சபைகள் வளர்ந்து போதகர்களுக்கு பயிற்சியளிக்க கல்லூரிகள் தேவைப்படுமானால் அவை திருச்சபையோடு பிரிக்க முடியாத தொடர்புள்ள கல்லூரிகளாக, சத்தியத்தைத் தவிர வேறெதையும் எண்ணியும் பார்க்காத கல்லூரிகளாக இருக்க வேண்டும். அவை போதகர்கள் போதிக்கின்ற, அவர்களுடைய நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் கல்லூரிகளாக இருக்க வேண்டும். அப்படியான சத்திய வாஞ்சையுடன் செயல்படும் கல்லூரிகள் கடுகுபோல் சிறிதாக இருந்தாலும் ஆவியின் வல்லமையோடு செயல்பட்டு திருச்சபைகளை அலங்கரிக்கும் நல்ல போதகர்களை ஆரம்பகால பிரின்ஸ்டனைப் போல உருவாக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு
மறுபிறப்பு
கடந்த இதழில் இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் கர்த்தரின் அழைப்பைக் குறித்த விளக்கத்தில், “திட்ப உறுதியான அழைப்பைக் கர்த்தர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு அளிக்கிறபோது அவர்களில் அதே நேரத்தில் உட்புற மாற்றங்களும் உடனடியாக ஏற்படுகின்றன. திட்ப உறுதியான அழைப்பையும், ஆத்துமாவில் நிகழும் உள்ளார்ந்த ஆவிக்குரிய மாற்றங்களையும் வேதம் பிரித்து விளக்குகிறது. இருந்தபோதும் இவை இரண்டும் ஒரே காரியத்தையே குறிப்பதாக இருக்கின்றன. அதாவது, திட்ப உறுதியான அழைப்பும், மறுபிறப்பும் ஒன்றே. இவை இரண்டையும் வேதம் பிரித்து விளக்கினாலும், ஒரே காரியத்தையே நாம் வெவ்வேறு கோணங்களில் பார்க்கிறோம் என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம்” என்ற போதகர் ஜிம் டோமின் (Jim Domm) விளக்கத்தைத் தந்திருந்தோம்.
இந்த ஆக்கத்தில் இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் ‘மறுபிறப்பு’ (Regeneration or New Birth) எத்தகைய இடத்தை வகிக்கிறது என்பதை ஆராய்வோம். மனித சரீரத்தில் எல்லா அங்கங்களும் இணைந்து செயல்பட்டபோதும் அது பல பாகங்களைக் கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஒரு பாகத்தைப் பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள நாம் அந்தப் பாகத்தை மட்டும் தனியாக ஆராய்ந்து பார்ப்பதில்லையா? அதேபோலத்தான், மறுபிறப்பை மட்டும் தனியாக இனிப் பிரித்து ஆராயப் போகிறோம். இப்படி இறையியல் ரீதியாக மறுபிறப்பை மட்டும் தனியாக ஆராய்வதால் இரட்சிப்பைப் பற்றிய தெளிவான இறையியல் விளக்கத்தை நாம் பெற்றுக்கொள்ள முடிகிறது.
இயேசு கிறிஸ்து நிக்கொதேமுவைப் பார்த்து “நீ மறுபடியும் பிறக்க வேண்டும்” என்றார். அதை விளக்கிய இயேசு அந்த அநுபவம் ஒருவனுடைய வாழ்க்கையில் நிகழும்போது அதைப் புறக்கண்களால் காண முடியாது என்பதை யோவான் 3ல் தெளிவாக விளக்கியிருக்கிறார். இரட்சிப்பு சம்பந்தப்பட்ட பல அம்சங்களை நாம் புறக்கண்களால் பார்க்க முடியும். உதாரணத்திற்கு, ஒருவன் மனந்திரும்பி விசுவாசிக்கிறேன் என்று அறிவிப்பதை நாம் காண முடியும். அதன் மூலம் அவன் இப்போது விசுவாசி என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், மறுபிறப்பு என்பதை இரட்சிப்பின் அநுபவத்தில் இருந்து தனியாகப் பிரித்துப் பார்க்கிறபோது, அந்தக் குறிப்பிட்ட ஆவியின் கிரியையை மனிதன் புறக்கண்களால் காண முடியாது என்று இயேசு விளக்கினார். யோவானில் இயேசு பின்வருமாறு விளக்குகிறார்: “காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதன் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனும் அப்படியே இருக்கிறான்” என்றார்.
மேலே நாம் பார்த்த வசனத்தின் மூலம் இயேசு, ஆவியானவர் ஆத்துமாவின் இருதயத்திலே கிரியை செய்து நித்திய ஜீவனை அழிக்கின்ற மறுபிறப்பாகிய அநுபவம் புறக்கண்களால் காண முடியாதது என்று விளக்குகிறார். காற்று வீசுவதை நாம் உணர முடியும்; கண்களால் காண முடியாது. எங்கிருந்து அது வருகிறது என்பதை உணர முடியும்; பார்வைக்கு அது புலப்படாது. அது போலத்தான் மறுபிறப்பாகிய அநுபவமும் என்கிறார் இயேசு. கர்த்தருடைய பிள்ளையாக மாறுவதற்கு புறக்கிரியைகளாகிய சடங்குகளில் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்த யூதப்போதகனான நிக்கொதேமுவுக்கு இந்தப் போதனை தலையைச் சுற்றவைத்ததில் ஆச்சரியமில்லை. இதிலிருந்து இரட்சிப்பாகிய அநுபவத்தில் மறுபிறப்பை ஓர் அம்சமாகத் தனியாக பிரித்துப் பார்க்கின்றபோது அது புறக்கண்களுக்குப் புலப்படாத ஆவியின் கிரியை என்பதை இறையியல் ரீதியாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
மறுபிறப்பைப் பற்றிய கீழ்வரும் இறையியல் சத்தியங்களை நாம் புரிந்துணர்வது அவசியம்:
- மறுபிறப்பு முற்றும் முழுவதுமாக பரிசுத்த ஆவியின் கிரியையாக இருக்கிறது. யோவான் 3ல் இயேசு அதைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். பரிசுத்த ஆவியின் இந்தக் கிரியையில் மனிதனுக்கு எந்தப்பங்கும் இல்லை. அதாவது, மனிதனின் கிரியைக்கு இதில் இடமில்லை. தேவ வார்த்தையைக் கேட்ட ஆத்துமா மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு ஏதுவாக ஆவியானவர் ஆத்துமாவில் செய்யும் கிரியையே மறுபிறப்பு.
- பரிசுத்த ஆவியானவர் ஆத்துமாவின் உள்ளார்ந்த பகுதியில் (Sub-conscience life) விதைக்கும் ஜீவ வாழ்க்கையே மறுபிறப்பாகும். கர்த்தரின் திட்ப உறுதியான அழைப்பை (Effectual Call) ஒரு மனிதன் தன் புறவாழ்வில் அறிந்துணர்வது போல் தன்னுடைய அக வாழ்வில் உள்ளார்ந்த பகுதியில் நிகழும் ஆவியின் கிரியையாகிய மறுபிறப்பை அவன் அது விதைக்கப்பட்ட நேரத்திலேயே அறிந்துணர முடியாது. விதைக்கப்பட்ட வித்து முளைவிட்டு வளரும்போதே அதன் விளைவுகளைப் பின்னால் மனிதன் தன்னில் உணர முடிகிறது. இதைப் பல சீர்திருத்த இறையியல் அறிஞர்கள் பின்வருமாறு விளக்கியிருக்கிறார்கள். இதைப் பற்றி விளக்குகிற லூயிஸ் பேர்க்கொவ் (Louis Berkhof), “கர்த்தர் தன்னுடைய கிரியையினால் மனிதனில் மறுபிறப்பை விதைத்து அவனுடைய சகல அங்கங்களையும் ஆளும் ஆத்துமா முழுமையாகப் பரிசுத்தமடையும்படிச் செய்கிறார்” என்று விளக்குகிறார். இதுபற்றி எழுதும் இறையியல் அறிஞர் ஜோன் தோன்பரி (John Thornbury), “கர்த்தர் மனிதனின் அகவாழ்வில், அவன் தன்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்படியாக விதைக்கும் பரிசுத்தமான வித்தே மறுபிறப்பு. இது அவனில் வெளிப்புறமாக நிகழும் மாறுதல்களைவிட மேலானது. பரிசுத்த ஆவியின் கிரியைகளைப் புரிந்து கொள்வது கடினமானதாக இருப்பதாலும், ஆவியானவர் இரகசியமாக இதனை மனிதனில் விதைப்பதாலும் இதைப் புரிந்துகொள்ளுவது கடினமானது” என்கிறார். அதனால்தான் யோவான் 3ல் இயேசு இதனை காற்றின் கிரியைக்கு ஒப்பிட்டு விளக்கியிருக்கிறார்.
- பரிசுத்த ஆவியானவர் மறுபிறப்பை மனிதனில் முழுமையாக ஒரேயடியாக விதைக்கிறார். அதாவது, படிப்படியாகவோ அல்லது சிறிது சிறிதாகவோ மறுபிறப்பு மனிதனில் விதைக்கப்படுவதில்லை. மறுபிறப்பு விதைக்கப்பட்ட உடனேயே மனிதனில் அனைத்து அகப்பாகங்களும் பரிசுத்த மடைந்து ஜீவ வாழ்க்கையை அவன் வாழ்வதற்கு அவசியமாக இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் தகுதியை அவன் அடைகிறான். மறுபிறப்பின் முழுத்தாக்கத்தையும் மனிதன் உடனடியாக அது நிகழந்த உடனேயே அறிந்துணராது போனாலும் பூரணமாக விதைக்கப்பட்ட வித்து அவனில் கிரியை செய்து அவன் கர்த்தரை விசுவாசிக்கும்படிச் செய்கிறது. இதைப் பற்றி விளக்கும் இறையியல் அறிஞர் ஜோன் மரே (John Murray), “இது மனிதனில் கர்த்தர் ஏற்படுத்தும் முழுமையான ஆவிக்குரிய மாற்றம். இது மனிதனைப் புதுரூபமாக்கும் பூரணமான மாற்றம்” என்று விளக்குகிறார்.
- ஆகவே, இறையியல் ரீதியாக இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் திட்ப உறுதியான அழைப்பிற்குப் பிறகு மறுபிறப்பு வருவதாகவும், மறுபிறப்பின் காரணமாகவே மனிதனுக்கு விசுவாசம் கிடைக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளுவது அவசியம் (Regeneration gives a man the ability to exercise faith in Christ. Therefore faith must come after regeneration in the order of salvation). மறுபிறப்புக்கு முன்னால் விசுவாசம் வர முடியாது. மறுபிறப் படையாத எவராலும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கவும் முடியாது. மனிதனில் முழுமாற்றத்தையும் ஏற்படுத்தும் பரிசுத்த ஆவியின் கிரியை யாகிய மறுபிறப்பே ஏனைய சகல இரட்சிப்பின் ஆவிக்குரிய அம்சங் களையும் மனிதன் அனுபவிப்பதற்கு அடிப்படையாக இருக்கின்றது. இவை அனைத்தையும் ஒன்றில் இருந்து இன்னொன்றைப் பிரிக்க முடியாதிருந்தபோதும், இவை அனைத்தும் நிகழ்வதற்கு கால இடைவெளி இல்லா திருந்தபோதும், இவற்றில் ஒரு படிமுறை ஒழுங்கை நாம் பார்க்கக்கூடியதாக வேதம் இரட்சிப்பின் அநுபவத்தை விளக்குகிறது.
- பரிசுத்த ஆவியானவர் மனிதனுக்கு மறுபிறப்பை அளிக்கும்போது அவனுக்கு புதிதாக ஒரு ஆத்துமாவையோ அல்லது இருதயத்தையோ அல்லது அவனுடைய மானுடத்தோடு புதிதாக எந்தவிதமான உறுப்பு களையோ இணைப்பதில்லை. அவனுடைய அகவாழ்வில் இது வரையிலு மில்லாதிருந்த முழுமையான ஜீவனுக்குரிய ஒரு பெருமாற்றத்தை ஏற்படுத்துவதையே (Radical change) மறுபிறப்பு என்று அழைக்கிறோம்.
- இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கின் சகல கிருபைகளும் (திட்ப உறுதியான அழைப்பு, மறுபிறப்பு, மனந்திரும்புதல், நீதிமானாகுதல், பரிசுத்தமாகுதல்) ஒன்றோடொன்று இணைந்திருந்தபோதும் மறுபிறப்பே திட்ப உறுதியான அழைப்பாகிவிட முடியாது. இவை இரண்டுமே பிரிக்க முடியாத தனித்தனி யான கிருபைகள்.
- இறுதியாக, மறுபிறப்பு மனிதனின் அகவாழ்வில் விதைக்கப்படும் பூரணமான ஆவிக்குரிய ஜீவவித்தாக இருந்தபோதும் மனிதன் முழுமையாக இரட்சிப்பை அடைந்து அநுபவிப்பதற்கு அதோடு தொடர்புடைய ஏனைய சகல கிருபைகளும் அவசியம். மறுபிறப்பை மெய்யாகவே அடந்த மனிதனில் அவன் இரட்சிப்பை அநுபவிக்கும்படியாக ஏனைய கிருபை களும் நிச்சயம் தொடரும்.
குழந்தைகள் மறுபிறப்படைய முடியுமா?
பிரெஸ்பிடீரியன் சபைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் குழந்தைகள் மறுபிறப்படைய முடியும் என்று நம்புகிறார்கள். பிரெஸ்பிடீரியன் இறையியல் வல்லுனரான லுயிஸ் பேர்க்கொவ், “சுவிசேஷச் செய்தியைக் கேட்காமலேயே பரிசுத்த ஆவியின் கிரியையால் குழந்தைகள் மறுபிறப்படைந்துவிட முடியும்” என்று தன்னுடைய முறைப்படுத்த இறையியல் நூலில் விளக்கியிருக்கிறார். பிரெஸ்பிடீரியன் பிரிவினர் விசுவாசிகளின் குழந்தைகள் ஏதோ ஒருவிதத்தில் விசுவாசிகளல்லாதவர்களுடைய குழந்தைகளை விட பரலோக இராஜ்ய அநுபவங்களை அநுபவிப்பதாகக் கருதுவதாலும், அவர்களைத் திருச்சபையின் ஒரு அங்கமாகக் கருதுவதாலும் இந்த முறையில் குழந்தைகளின் மறுபிறப்பைப் பற்றிய விளக்கத்தைக் கொடுக்கிறார்கள். இது வேத அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம். யாராக இருந்தாலும் சுவிசேஷத்தைக் கேட்டே (ரோமர் 10) மறுபிறப்பையும், விசுவாசத்தையும் அடைய முடியும் என்று வேதம் தெளிவாக விளக்குகிறது. ஆவியும், வார்த்தையும் இணைந்து செயல்பட்டே எவருக்கும் மனந்திரும்புதல் ஏற்படுகிறது. வார்த்தையில்லாமல் எவருக்கும் விசுவாசம் கிடைப்பதாக வேதத்தில் நாமெங்கும் வாசிப்பதில்லை. குழந்தைகளுக்கு ஒருவிதமாகவும் பெரியவர்களுக்கு இன்னொருவிதமாகவும் மறுபிறப்பு கிடைப்பதாகவும் வேதம் போதிக்கவில்லை.
விசுவாசிகளின் குழந்தைகளைப் பொறுத்தவரையில், அவிசுவாசிகளின் குழந்தைகளைவிட பல ஆத்மீக வசதிகள் அவர்களுக்கு இருக்கத்தான் செய்கின்றன. அந்த ஆத்மீக வசதிகளே அவர்களுக்கு இரட்சிப்பின் அநு பவமாக மாறிவிடுவதில்லை. அந்த ஆத்மீக வசதிகளை அவர்கள் எல்லோரையும் போலப் பயன்படுத்திக்கொள்கிறபோதே ஆவியின் கிரியையினால் அவர்களுக்கு மறுபிறப்பு கிடைக்கிறது. அதுவும் கைக்குழந்தைகள் சுவிசேஷத்தைக் கேட்டுணரும் பக்குவமில்லாதவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பிள்ளைப் பருவத்தை அடைகிறபோத சுவிசேஷத்தைக் கேட்டுணரும் தகுதியை அடைகிறார்கள். பிள்ளைப் பருவத்தில் தேவசெய்தி கேட்டு அவர்களுக்கு மறுபிறப்பு கிடைத்தாலும் அவர்கள் வளர்ந்து தங்களுடைய விசுவாசத்தை அறிவுபூர்வமாக அறிக்கையிடும் வயதுவரும்வரை திருமுழுக்கையும், சபை அங்கத்துவத்தையும் அடையும் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள்.
இறக்கின்ற கைக்குழந்தைகள் எங்கே போகிறார்கள்?
பிறப்பிலேயோ அல்லது பிறந்து வளர்ந்து வயதுக்கு வருமுன்போ இறக்கும் கைக்குழந்தைகள், அதாவது சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்பும் வயதையும், பக்குவத்தையும் அடையாத குழந்தைகள் இறக்க நேரிடும்போது எங்கே போகிறார்கள்? என்ற கேள்வி அநேகருடைய மனதில் உதிப்பது வழக்கம். சீர்திருத்த பாப்திஸ்து சபையார் பயன்படுத்தும் 1689 விசுவாச அறிக்கை இதைப் பற்றி பின்வரும் விளக்கத்தை அளிக்கிறது: “தம் விருப்பப்படி எங்கேயும் எவ்வாறும் கிரியை செய்யும் கிறிஸ்து, குழந்தைப் பருவத்தில் இறக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட குழந்தைகளை ஆவியின் மூலம் மறுபிறப்பளித்து இரட்சிக்கிறார். வெளிப்படையாக நற்செய்தியின் பிரசங்கத்தினால் அழைக்கப்பட முடியாத (நிலையிலிருக்கும்) தெரிந்து கொள்ளப்பட்ட அனைத்து மனிதர்களையும் பொறுத்தவரையிலும் இது உண்மையே.” நமது பாப்திஸ்து விசுவாச அறிக்கை இத்தகைய விளக்கத்தை அளிப்பது நமக்கு ஆச்சரியத்தைத் தருவதாக இருக்கலாம்.
பிரசங்கிகளின் இளவரசன் என்று அழைக்கப்படும் ஸ்பர்ஜன் எல்லாக் குழந்தைகளுமே கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டு மறுபிறப்படைகின்றனர் என்று நம்பினார். அவர் 1689 விசுவாச அறிக்கையை தன் காலத்தில் மறுவெளியீடு செய்தபோது மேலே நாம் பார்த்த விசுவாச அறிக்கையின் வாக்கியங்களில் மூலத்தில் இருந்த ‘தெரிந்துகொள்ளப்பட்ட’ என்ற பதத்தை நீக்கிவிட்டு வெளியிட்டார். 1677ல் வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் இந்த வார்த்தைகளைக் கொண்டிருந்தது. இறக்கின்ற தெரிந்துகொள்ளப்பட்ட குழந்தைகள் மறுபிறப்படைவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள நாம் முன்வருவோம். ஆனால், பிறக்கின்ற குழந்தைகளில் எவராவது தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்களா என்ற கேள்வி எழுகின்றது? இறக்கின்ற கைக் குழந்தைகள் மறுபிறப்படைகிறார்கள் என்ற போதனைக்கு வலிமை தரும் வகையில் பயன்படுத்தப்படுகின்ற வசனம் 2 சாமுவேல் 12:23. பத்சீபாவோடு ஏற்பட்ட தொடர்பால் தாவீதுக்குப் பிறந்த குழந்தை இறக்கும் என்று கர்த்தர் சொன்னார். அந்தக் குழந்தை இறந்தபின் தாவீது 23ம் வசனத்தில் சொல்கிறான், “அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பி வரப் பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனேயல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.” தாவீதின் இந்த வார்த்தைகளின் அடிப்படையில் தாவீதின் குழந்தை பரலோகத்தில் இருக்கும், அதனால் தான் தாவீது, ‘நான் அதனிடத்துக்குப் போவேன், அது என்னிடத்துக்குத் திரும்பிவரப்போகிறது இல்லை’ என்று சொன்னான் என்று சிலர் எடுத்துக் கொள்ளுகிறார்கள். கைக்குழந்தைகள் இறக்கும்போது பரலோகம் போகி றார்கள் என்பதை இந்த வசனம் ஆதரித்துப் பேசுகிறதா? அப்படியான தோற்றத்தைத் தருகிறதே தவிர அதை ஆதரித்து வலியுறுத்துவதாக இந்த வசனம் காணப்படவில்லை. வேதத்தில் வேறெங்காவது கைக்குழந்தைகள் இறந்தபின் பரலோகம் போகிறார்கள் என்று போதனை இருக்கின்றதா? என்று கேட்டால் அப்படிப் போதிக்கும் எந்தப் பகுதியும் வேதத்தில் இல்லை என்றே கூறவேண்டும். சிலர் யோவான் 3:3-8 வரையுள்ள வசனங்கள் அவ்வாறு போதிப்பதாகக் கூறுவார்கள். ஆனால், அப்பகுதி அப்படி எதையும் வெளிப்படையாக விளக்கவில்லை என்பதே உண்மை.
பியூரிட்டன் பெரியவரான ஜோன் ஓவனும் வேறு சிலரும், சுவிசேஷத்தைக் கேட்காத அனைவரும், சுவிசேஷத்தைக் கேட்டுப்புரிந்துகொள்ளுகிற நிலையில் இல்லாமலிருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் பரலோகத்தை அடைய முடியாது என்று நம்பினர். அவர்களில் எவருமே தெரிந்து கொள்ளப்படவில்லை என்றும் இவர்கள் நம்பினார்கள். இந்த விளக்கங்களும் தவறு என்றே கூறவேண்டும். ஏனெனில், இந்த விதமாக வெளிப்படையாக வேதம் எங்கும் போதிக்கவில்லை. சாமுவேல் வோல்டிரன் (Samuel Waldron) இதைப்பற்றி விளக்கும்போது, “கைக்குழந்தைகள் மறுபிறப் படைவதாக வேதம் எங்கேயும் போதிக்கவில்லை. யெரேமியா 1:5, லூக்கா 1:44 ஆகிய பகுதிகள் யெரேமியாவும், யோவானும் கைக்குழந்தைகளாக இருக்கும்போது மறுபிறப்படைந்தார்கள் என்று விளக்கவில்லை. கைக்குழந்தைகள் எங்காவது மறுபிறப்படைந்திருந்தால் அது எப்படி நிகழ்கிறது என்றுகூட வேதம் எப்பகுதியிலும் விளக்கவில்லை. கைக்குழந்தைகளுக்கு மறுபிறப்பைக் கர்த்தரால் கொடுக்க முடிந்தால், அவர்கள் தேவ வார்த்தையைக் கேட்டு கிறிஸ்துவை விசுவாசிக்கவைக்க கர்த்தரால் முடியாதா? என்ன” என்று வோல்டிரன் கேட்கிறார்.
கைக்குழந்தைகளைப் பற்றி நாம் என்ன முடிவுக்கு வரவேண்டும்? இறக்கின்ற ஒவ்வொரு கைக்குழந்தையின் முடிவும் எப்படியிருக்கும் என்று நம்மால் உறுதியாக எதையும் சொல்ல முடியாது. அவர்கள் பரலோகத்தை அடைவார்கள் என்று நம்மால் எதிர்பார்க்கத்தான் முடியுமே தவிர, வேதம் அப்படி உறுதியான, தெளிவான எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்த விஷயத்தில் ஆதியாகமம் 18:25ன்படி “சர்வலோக நீதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ” என்பதைத்தான் நாம் விசுவாசிக்க வேண்டும். நீதியுள்ள கர்த்தர் எப்போதும் நீதியானதையே செய்வாரென்பதால் வேதம் விளக்கமான போதனையைத் தராத இந்த விஷயத்தை நாம் நீதியின் தேவனுடைய கரத்தில் நம்பி ஒப்படைத்துவிட வேண்டும்.
கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியம் – 4
திருச்சபை இந்த உலகத்தில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு வேதம் காட்டும் தவிர்க்க முடியாத விதிகளை இந்த ஆக்கத்தின் மூலம் ஆராய்ந்து வருகிறோம். இதுவரை இரண்டு முக்கிய விதிகளைக் கண்டிருக்கிறோம். (1) திருச்சபைப் பணிகள் அனைத் தும் கர்த்தருடைய இறையாண்மையின் அடிப்படையில் அதற்குக் கட்டுப்பட்டு அமைய வேண்டும் என்பது முதலாவது விதி. (2) கர்த்தரின் வார்த்தை சகல அதிகாரத்தையும் தன்னில் கொண்டு அனைத்தின் மீதும் அதிகார முள்ளதும், சகலதுக்கும் போதுமானதாகவும் இருக்கின்றது என்பது இரண்டாவது விதி. இனி நாம் சுவிசேஷ ஊழியத்தின் மூலம் திருச்சபை அமைக்கும் பணிக்கான மூன்றாவது விதியை ஆராய்வோம்.
(3) சுவிசேஷ ஊழியத்தில் திருச்சபையே அதிமுக்கியமானதும், அடிப்படையானதுமான இடத்தை வகிக்கிறது. சுவிசேஷ ஊழியங்கள் எப்போதும் திருச்சபையில் ஆரம்பித்து திருச்சபை அமைப்பதிலேயே போய் முடியவேண்டும்.
பிரதரனிசம் (Bretherenism), டிஸ்பென்சேஷனலிசம் (Dispensationalism), பினியிசம் (Finneyism), மற்றும் கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் (Para-church organizations) அனைத்தும் வேதபூர்வமான திருச்சபைக் கோட்பாடுகளற்ற ஒரு கிறிஸ்தவத்தை இந்நூற்றாண்டில் உலகத்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றன. அதாவது, கர்த்தருடைய திட்டங்களில் இந்த ‘இசங்கள்’ திருச்சபையை உன்னத இடத்தில் வைத்துப் பார்ப்பதில்லை. இந்த உலகத் தில் கிறிஸ்தவனுடைய ஒரே பங்கு சுவிசேஷம் சொல்லுவது மட்டுந்தான் என்ற நிலையை இந்தக் குழுக்கள் உருவாக்கியிருக்கின்றன. இதனால் பெயரளவில் ஓய்வுநாளில் ஆராதனைக்கென்று கூடுவதற்காக திருச்சபை என்ற பெயரில் இவர்கள் சாட்டுக்கு கூடிவருகிறார்களே தவிர திருச்சபை பற்றிய அத்தனை இறையியல் போதனைகளையும் உதாசீனப்படுத்திவிட்டு கிறிஸ்துவின் பெயரில் சுவிசேஷம் சொல்லுவதில் மட்டும் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருச்சபை எந்தளவுக்கு இன்று நிர்த்தாட்சண்யமாக இவர்களால் நிராக ரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஹெரல்ட் கேம்பிங்கின் (Harold Camping) போதனைகள் நல்ல உதாரணம். அமெரிக்காவில் இருந்து ரேடியோ ஊழி யம் நடத்தி வரும் கேம்பிங் கர்த்தர் திருச்சபையை நிராகரித்துவிட்டதாக பகிரங்கமாகப் போதித்து வருகிறார். அத்தோடு, சிந்திக்கும் விசுவாசிகள் அனைவரும் திருச்சபைகளை விட்டுவிலகி வீடுகளில் இருந்து குடும்ப ஆராதனை மட்டும் செய்துவர வேண்டும் என்கிறார். போதகர்கள், உதவிக்காரர்கள், திருமுழுக்கு, திருவிருந்து எல்லாம் இனித் தேவையில்லை, சுவிசேஷம் மட்டும் சொன்னால் போதும் என்பது கேம்பிங்கின் போதனை. கர்த்தரின் அதிகாரம் கொண்ட வேதம் என்று ஒன்று இருக்கின்றதே என்ற நினைப்பே இல்லாமல் இத்தனை தைரியத்தோடு இந்த விஷம் போன்ற போதனைகளை கேம்பிங் போன்றவர்கள் கக்கி வருவதற்கு திருச்சபை இன்று இருக்க வேண்டிய நிலைமையில் இல்லாதிருப்பதுதான் காரணம்.
தமிழினத்தில் இன்று திருச்சபை
இக்காரணங்களால் தழினத்தில் திருச்சபை என்ற பெயரில் இருக்கும் குழுக்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் திருச்சபை பற்றிய எந்த ஞானமும் இல்லாதவர்களெல்லாம் சுவிசேஷத்தை சொல்கிறோம் என்ற பெயரில் எதையெதையோ செய்துகொண்டிருப்பதோடு வெறும் சாட்டுக்கு சபை என்ற பெயரில் கடைநடத்தி வருவதை எவரும் மறுக்க முடியாது. கேள்வி முறையில்லாமல் நினைத்தவர்களெல்லாம் தங்களைத் தாங்களே போதகர்களாக அறிவித்துக் கொண்டு சுவிசேஷம் சொல்லவும், சபை நடத்தவும் புறப்பட்டுவிடுகிறார்கள். கேள்வி கேட்பதற்கு ஒருவரும் இல்லை என்ற தைரியத்தில் இவர்கள் காரியமாற்றுவதால் இவர்களுடைய கட்டுப் பாடற்ற செய்கைக்குப் பலியாகி வருகிறவர்கள் அநேகர். தமிழினத்தில் இன்றைக்கு இத்தகைய ஊழியங்கள் குடிசைத் தொழில் போல் பரவியிருக்கின்றன.
எந்தவிதமான வேதக் கோட்பாடுகளும், கொள்கைகளுமில்லாது, தரமற்றவர்களைத் தலைவர்களாகக் கொண்டு ஊழியங்கள் என்ற பெயரில் நடந்துவரும் போலிக் கிறிஸ்தவத்தின் முகமே தமிழினத்தில் பெரிதாகத் தெரிகிறது. சீர்திருத்தவாதம் உலகில் தோன்றுவதற்கு முன்பு திருச்சபையின் நிலைமை உலகில் எப்படி இருந்ததோ அதே நிலைமையில்தான் இன்றைக்கு தமிழினத்து திருச்சபைகள் இருந்து வருகின்றன. வேத சத்தியங்களுக்கும், பரிசுத்தத்திற்கும் இவற்றின் மத்தியில் இடமில்லை. குடும்ப ஊழியமும், தனிநபரின் காட்டாட்சியும் சபைகளை வதைத்துக் கொண்டிருக்கின்றன. திருச்சபை அமைப்புப் பற்றிய வேத போதனைகள் வேதம் பூராவும் இருக் கின்றன என்ற நினைப்பே இல்லாது, குடும்பங்களும், கமிட்டிகளும், பிசப்பு களும், பிரசிடென்டுகளும் சபைகளை ஆண்டு வருகிறார்கள். டிவி இவேஞ்ச லிஸ்டுகளும், பிணி தீர்க்கும் ‘நவீன அப்போஸ்தலர்களும்’ சுவிசேஷம் விற்றுப் பணம் சம்பாதிப்பதில் மும்முறமாக ஈடுபட்டிருக்கிறார்கள். ஊழிய வாஞ்சையில் அநேகர் திரிவதால் திருச்சபை ஊழியத்தைவிடப் பணம் கொடுக்கும் இறையியல் கல்லூரி நடத்தும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் அநேகர். இத்தகைய எழுப்புதலற்ற, வேத வைராக்கியமற்ற, பாரம்பரியங்களுக்கும், சடங்குகளுக்கும், பண்பாட்டிற்கும், பணத்திற்கும் அடிமைப்பட்டிருக்கிற போலிக் கிறிஸ்தவம் உலா வரும் தமிழினத்தில் சத்தியத்தை அறிய வழி இல்லாது தவித்துக் கொண்டிருக்கும் ஆத்துமாக்கள் அநேகம். கர்த்தர் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் திருச்சபையை அடித்தளமாகக்கொண்டு வளராத எந்தக் ‘கிறிஸ்தவமும்’ இயேசு கிறிஸ்து வினுடைய கிறிஸ்தவமாக இருக்காது. திருச்சபை பற்றிய இறையியல் போதனைகளை வேதத்தில் இருந்து போதிக்கவும், பலரறிய அவற்றை வெளிப்படுத்தவும் வேண்டிய மாபெரும் சீர்திருத்தம் இன்று தமிழினத்தில் தேவைப்படுகிறது.
வேதம் போதிக்கும் திருச்சபை
கர்த்தர் தன்னுடைய திட்டத்தில் திருச்சபைக்கு மிக உன்னதமான உன்னதமான இடத்தைத் தந்திருப்பதாக வேதம் விளக்குகிறது. பழைய ஏற்பாடும் சரி, புதிய ஏற்பாட்டும் சரி கர்த்தரின் திட்டங்கள் அனைத்தும் திருச்சபையை முதன்மையாகக் கொண்டிருப்பதாகவே விளக்குகின்றன. முக்கியமாக புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து திருச்சபை பற்றித் தெளிவான விளக்கங்களைத் தந்திருக்கிறார். மத்தேயு 16, 18 போன்ற அதி காரங்களில் திருச்சபையைப் பற்றி அவர் கூறியிருக்கும் வார்த்தைகள் எந்தளவுக்கு ஓர் உயர்ந்த உன்னதமான இடத்தைக் கிறிஸ்து திருச்சபைக்கு அளித்திருக்கிறார் என்பதை உணர வைக்கின்றன. டிஸ்பென்சேஷனலிசக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் சுவிசேஷ நூல்களில் திருச்சபை பற்றிய போதனைகள் அதிகம் இல்லை, அதனால் அது யூதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட போதனை என்று தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
மத்தேயுவில் இயேசுவின் வார்த்தைகளை ஒருமுறை வாசித்துப்பாருங்கள். சீமோன் பேதுருவுக்கு திருச்சபையைப் பற்றி விளக்கமளித்த இயேசு, “இந்தக் கல்லின் மேல் திருச்சபையை நான் கட்டுவேன். பாதாளத்து வாசல்களும் அதை மேற்கொள்வதில்லை” என்றார். அந்தளவுக்கு உயர்ந்த நிலையில் திருச்சபை இருக்கும் என்றும், அதை அழிக்கக்கூடிய, அதன் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய சக்தி ஒன்றுக்கும் இல்லை என்பது அவரு டைய வார்த்தைகளின் பொருள். அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் இயேசு, பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோ கத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்தில் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்தில் நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்தில் கட்டவிழ்க்கப் பட்டிருக்கும்” என்றார். இந்த வார்த்தைகளின் பொருளை நாம் சரிவர விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். இங்கே இயேசு இந்த உலகத்தில் தான் கட்டப்போகின்ற திருச்சபையின் அதிகாரத்தை விளக்குகிறார். இந்த வார்த்தைகள் பேதுருவைக் குறித்த வார்த்தைகள் அல்ல. இதே வார்த்தை களை மத்தேயு 18:18லும் காணலாம். அங்கேயும் இயேசு தன்னுடைய திருச்சபையைப் பற்றியே 18:15-20 வரையுள்ள வசனங்களில் விளக்கமளித் திருக்கிறார். இந்த இருபகுதிகளுக்குமான முழு விளக்கத்தையும் தருவதற்கு இந்த ஆக்கத்தில் இடமில்லையானாலும், இயேசுவின் வார்த்தைகளின் முக்கிய அம்சத்தை மட்டும் விளக்குவது அவசியமாகிறது. இயேசுவின் வார்த்தைகளின்படி இந்த உலகத்தில் சுவிசேஷத்தை அறிவித்து அதன் மூலம் மனந்திரும்பி விசுவாசிக்கிறவர்களைக் கொண்டு சபை அமைக்கும் திருப்பணி திருச்சபைக்கே அளிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அப்படிக் கட்டப்படுகிற திருச்சபையில் பரிசுத்தத்தைப் பாதுகாக்கிற அதிகாரமும் அதற்கே அளி¢க்கப்பட்டிருக்கிறது. ‘பரலோகத்தின் திறவு கோள்கள்’ என்ற இயேசு பயன்படுத்திய பதங்கள் திருச்சபைக்கு கர்த்தர் அளித்துள்ள ஆத்மீக அதிகாரத்தைக் குறிக்கின்ற வார்த்தைகள். இந்தளவுக்கு திருச்சபையை ஓர் உயர்ந்த, உன்னதமான அமைப்பாக இயேசு இந்த உலகத்தில் கட்டி வருகிறார்.
திருச்சபையின் மகிமையை விளக்கும் மேலும் சில வேதப்பகுதிகளையும் உதாரணமாகத் தரலாம். எபேசியர் முதலாம் அதிகாரத்தின் இறுதிப் பகுதியான 1:16-23 வரையுள்ள வசனங்களை சுருக்கமாகப் பார்ப்போம். இடைவிடாமல் எபேசிய திருச்சபை விசுவாசிகளுக்காக ஜெபித்துவரும் பவுல் அப்போஸ்தலன் இந்தப்பகுதியில் திருச்சபை பற்றிய அற்புதமான ஒரு சத்தியத்தை நமக்கு விளக்குகிறார். கர்த்தர் எந்தளவுக்கு தன்னுடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை உயர்த்தியிருக்கிறார் என்ற உண்மையே அது. அதுவும் என்ன நோக்கத்திற்காக அந்தளவுக்கு உயர்த்தியிருக்கிறார் என்பது நமது சரீரத்தில் இருக்கும் ரோமங்களையெல்லாம் சிலிர்த்தெழச் செய்யும் மாபெரும் சத்தியமாகும். பவுல் சொல்லுகிறார்,
“இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருள வேண்டுமென்றும், . . . . . வேண்டிக்கொள்ளுகிறேன். எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத் தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலது பாரிசத்தில் உட்காரும்படிச் செய்து, எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.”
இந்த வார்த்தைகளின் பொருளை நாம் சிந்தித்துப் பார்த்து விளங்கிக் கொள்ளுவது அவசியம். இவ்வசனங்கள் கர்த்தர், இயேசு கிறிஸ்துவுக்கு சகல அதிகாரத்தையும் தந்து அவருக்கு மேலாக எவரும் அல்லது எதுவும் இல்லாதபடியான இடத்தில் உயர்த்தி அமர்த்தியிருக்கிறார் என்று விளக்குவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், அதைத் திருச்சபையின் பொருட்டு, திருச்சபையின் நன்மைக்காச் செய்திருக்கிறார் என்று விளக்குகிறது. “சரீரமான சபைக்கு” என்ற வார்த்தைகளை நாம் மூலமாகிய கிரேக்க இலக்கணத்தின்படி “சரீரமான சபையின் நன்மைக்காக” என்று தமிழில் வாசிக்க வேண்டும். கிறிஸ்துவுக்கு அந்தளவுக்கு உயர்ந்த ஸ்தானத்தைக் கர்த்தர் தந்தது திருச்சபையின் நன்மை கருதி என்ற உயர்ந்த, மகத்தான போதனையை இந்தப் பகுதி தருகிறது. அத்தோடு, எத்தனை இறையாண்மையுள்ள தேவனாகிய கிறிஸ்துவைத் தலைவராக திருச்சபை கொண்டிருக்கிறது என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இறை யாண்மையுள்ள இராஜாதி இராஜனாகிய கிறிஸ்து தலைமை வகித்து நடத்துகின்ற திருச்சபையை யாரால் அழிக்க முடியும்? அதன் எந்தத் தேவைதான் இந்த உலகில் நிறைவேற்றப்படாமல் போகும்? என்பதை நினைக்கும்போதே சரீரம் புல்லரிக்கின்றதல்லவா.
இதே எபேசியர் நூலில் இன்னுமொரு வேதப் பகுதியான 2:11-16, திருச்சபையின் மகிமையை விளக்கும்போது, கிறிஸ்துவைச் சாராதவர்களாகிய இஸ்ரவேலரையும், புறஜாதியாரையும் ஒன்றாக்கி, அவர்கள் மத்தியில் பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, அதைச் சிலுவையில் அழித்து அதனாலே இருபகுதியினரையும் தமக்குள்ளாக ஒரே புதியமனிதனாகச் சிருஷ்டித்து சமாதானம் பண்ணி ஒரே திருச்சபைக்கும் வாழும்படிச் செய்தார் என்கிறது. இது உலகத்தில், உலக வழிப்படி நடக்கக் கூடிய காரியமல்ல. உலகத்திலுள்ள மனிதர்களால் இத்தகைய சமாதனத் தோடு ஒருபோதும் வாழ முடியாது. ஒருவரில் ஒருவர் நிலையான, மெய் யான அன்பைக் காட்ட முடியாது. திருச்சபையில் மட்டுமே ஜாதி வித்தி யாசமில்லாமல், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடில்லாமல், உ.யர்வு தாழ்வு பார்க்காமல் பிரிவினைக்கிடமில்லாமல் மனிதர்களால் இணைந்து வாழமுடியும். அத்தகைய வாழ்க்கையைக் கர்த்தர் தம்முடைய குமாரனின் சுவிசேஷத்தின் மூலம் உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார். மனந்திரும்பிய மக்கள் திருச்சபையில் மட்டுமே மெய்யான ஒற்றுமையை அநுபவித்து வாழ முடியும். ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்த முடியாத ஒற்றுமையை உலக மக்களுக்கு தரக்கூடியது தேவனுடைய சபை மட்டுமே.
எபேசியர் 2:11&22 ஆகிய வசனங்களை எடுத்துக்கொண்டால் இப்பகுதியில் பவுல் மறுபடியும் திருச்சபையின் மகிமையை விளக்குவதைப் பார்க்கிறோம். 16ம் வசனம் யூதர்களும், புறஜாதியினருக்கும் இடையில் உள்ள பகை சிலுவையால் தீர்க்கப்பட்டிருப்பதையும், 20ம் வசனம் அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் ஆகியோரின் அத்திவாரத்தைக் கொண்டு திருச்சபை கட்டப்பட்டிருப்பதையும், 22ம் வசனம் திருச்சபையே தேவனுடைய வாசஸ் தலமாயிருப்பதாகவும் பவுல் விளக்குகிறார்.
எபேசியர் 3:1-11 வரையுள்ள வசனங்கள் திருச்சபை பற்றிய இன்னுமொரு சத்தியத்தை விளக்குகின்றன. முக்கியமாக வசனங்கள் 9-11க் கவனிப்போம்.
“உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக, இயேசு கிறிஸ்துவைக்கொண்டு எல்லா வற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது.”
இந்தப் பகுதியை ஆரம்பம் முதல் கவனமாக வாசித்துப் பார்த்தால் இதில் பவுல் தனக்குக் கர்த்தரால் கொடுக்கப்பட்டுள்ள ஊழியத்தின் அருமையை விளக்குவதைப் பார்க்கலாம். இதுவரையும் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதாவது புறஜாதியாரும், யூதர்களும் கிறிஸ்துவால் விடுதலை அடைந்து ஒரே திருச்சபையில் இணைந்து வாழும் அற்புதமான இரகசி யத்தை சுவிசேஷத்தின் மூலமாக உலகெங்கும் அறிவிக்கின்ற புனிதமான ஊழியம் தனக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாக பவுல் அறிவிக்கிறார். யூதர்களையும், புறஜாதியாரையும் பற்றிய இந்த உண்மை பழைய ஏற்பாட்டில் வெளிப்படையாக விளக்கப்படவில்லை. புதிய ஏற்பாட்டுக் காலத்திலேயே அது சுவிசேஷத்தின் மூலம் எல்லோரும் அறிய அறிவிக்கப்பட்டது. இதை 6ம் வசனம் விளக்குகிறது. இதில் நம்மைப் புல்லரிக்கச் செய்யும் உண்மை என்னவெனில், சபையின் மூலமாக மட்டுமே நிதர்சனமாகத் தெரியவரும் இந்த இரகசியத்தை சுவிசேஷத்தினால் மூலம் மட்டுமே உலக மக்கள் அறிந்துகொள்ள முடியும் என்று பவுல் இப்பகுதியில் விளக்குகிறார். அந்தச் சுவிசேஷத்தை அறிவிக்கும் பணி தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் பவுல் பேரானந்தம் அடைகிறார். அதுமட்டுமல்லாது தேவ தூதர்களும் (உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும்) இதுவரை தெரிந்து கொண்டிராத, அவர்கள் அறிந்துகொள்ளத் துடித்துக்கொண்டிருக்கிற அந்த உண்மையை அவர்கள் திருச்சபையில் நடைமுறையில் பார்க்கக்கூடியதாக அமையப்போவதை பவுல் சுவிசேஷத் தின் மூலம் அறிவிக்கும் ஈவைப் பெற்றிருக்கிறார். இது மறுபடியும் திருச் சபையி¢ன் மகத்துவத்தை விளக்கும் பகுதியாக இருக்கிறது.
இன்னும் இரு வேதப்பகுதிகளை மட்டும் உதாரணமாகக் காட்ட விரும்புகிறேன். எபேசியர் 4:1-13க் கவனியுங்கள். இந்தப் பகுதியும் திருச்சபை பற்றிய ஆழமான சத்தியத்தை விளக்குகிறது. திருச்சபையில் காணப்படுகின்ற, வளர்க்க வேண்டிய ஒற்றுமையை இப்பகுதி விளக்குகிறது. அந்தப் போதனைக்கு மத்தியில் பவுல் திருச்சபை பற்றிய வேறொரு உண்மையையும் விளக்கிறார். மரித்து, உயிர்த்தெழுந்து, உயரெடுக்கப்பட்டு சகல அதிகாரங்களுடனும் இராஜாதி இராஜனாக வீற்றிருக்கும் இயேசு கிறிஸ்து தான் கொண்டு நடத்தும் திருச்சபையின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் தேவனாக இருந்து வருகிறார். அவரே திருச்சபை உலகில் நல்ல முறையில் இயங்கும் வகையில் அதன் நிர்வாகத்துக்குத் தேவையான சபை அதிகாரிகளைக் கொடுப்பவராக இருக்கிறார். இப்பகுதியில் 13ம் வசனம் அந்த அதிகாரிகள் யார் என்பதைத் தெரிவிக்கிறது. அவர்களில் இன்று திருச்சபையில் இருக்கும் அதிகாரிகள் மேய்ப்பர்களும், போதகர்களும் மட்டுமே. இந்தப் பதங்கள் போதகர்களை மட்டுமே குறிக்கும் ஒரே வார்த்தையாக மூல மொழியில் காணப்படுகின்றது. மனிதர்களாகிய நாமே திருச்சபையில் அத்தகைய போதகர்களை நடைமுறையில் நியமித்தபோதும், இயேசு கிறிஸ்துவால் அழைக்கப்பட்டு, வேத இலக்கணங்களைத் தங்களுடைய வாழ்க்கையில் கொண்டிருந்து, போதக ஊழியத்திற்கு தகுதி பெற்றவர்களை மட்டுமே திருச்சபை அப்பணியில் ஈடுபடுத்த வேண்டுமென்று திருச்சபையின் இராஜாவான கிறிஸ்து கட்டளையிட்டிருக்கிறார். கிறிஸ்துவே நேரடியாக அத்தகைய போதகர்களை சபைக்குக் காட்டித் தருகிறார். கிறிஸ்து எதிர்பார்க்கின்ற, வேதத்தில் தீமோத்தேயு, தீத்து போன்ற வேத நூல்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கின்ற, தவறாமல் போதகர்களுடைய வாழ்க்கையில் இருக்க வேண்டிய இலக்கணங்கள் காணப்படுகிறவர்கள் மட்டுமே கிறிஸ்துவால் சபைக்களிக்கப்படுகின்ற மெய்யான மேய்ப்பர்கள் என்பதை இப்பகுதி தெளிவாக விளக்குகின்றது.
திருச்பையின் மகிமையை விளக்கும் இறுதிப் பகுதியாக நான் உதாரணம் காட்ட விரும்பும் எபேசியர் 5:22-33 வரையுள்ள வசனங்களில் பவுல் குடும்பத்திற்கான போதனைகளை அளிக்கின்றபோது அதற்கு மத்தியில் கிறிஸ்து திருச்சபையாகிய தன்னுடைய மனவாட்டியின் மீது வைத்திருக்கும் அளப்பரிய அன்பையும், அவர் திருச்சபையின் தேவைகளை நிறைவேற்றிப் போஷிக்கும் விதத்தையும் அழகாகவும், ஆழமாகவும் விளக்குகிறார். கிறிஸ்துவுக்கும், திருச்சபைக்கும் இடையில் இருக்கும் பிரிக்கமுடியாத உறவை இந்தப் பகுதி அற்புதமாக விளக்குகிறது. இதுவரை நாம் பார்த்துள்ள வேதப் பகுதிகள் அத்தனையும் திருச்சபையின் மகிமையை விளக்குவதாக இருக்கின்றன.
திருச்சபையும் சுவிசேஷ ஊழியமும்
கர்த்தரின் திட்டத்தில் இத்தனை உன்னதமான இடத்தை வகிக்கும் திருச்சபைக்கே சுவிசேஷத்தை அறிவிக்கும் பணி கொடுக்கப்பட்டிருக்கிறது (மத்தேயு 28:18&20). உலகத்திலுள்ள வேறு எந்த அமைப்புக்கும் அந்தப் பணி கொடுக்கப்படவில்லை. சுவிசேஷத்தின் மூலம் இரட்சிப்புப்பெற்ற ஆத்துமாக்களைக் கொண்டு சபை அமைக்கும் பணியும் திருச்சபைக்கே உரியது. இந்தப் பணியைச் செய்வதற்குரிய அனைத்து உரிமையையும், தகுதிகளையும் கர்த்தர் திருச்சபைக்கே அளித்துள்ளார். கர்த்தரின் திட்டத் தில் இன்று திருச்சபைக்கு இடமில்லை என்று விளக்கும் டிஷ்பென்சேஷனலிசமும், திருச்சபையை விட்டு வெளியில் வந்துகூடி ஆராதிக்க வேண்டும் என்று கூறும் ஹெரல்ட் கேம்பிங் (Herold Camping) போன்றோரின் போதனையும், திருச்சபைக்கு மதிப்புக் கொடுக்காமல் தாம் நினைத்தபடி ஊழியங்களை நடத்திச் செல்லும் ஸ்தாபன ஊழியங்களும் (Para-church organizations) வேதபோதனைகளை நிராகரித்து கிறிஸ்து நேசிக்கும் திருச்சபைக்கு எதிராக நடந்து வருகின்றன.
திருச்சபைகள் நமது இனத்தில் வேதம் போதிக்கும் திருச்சபைகள் போல் அமைந்து நடந்துவராதபடியால்தான் திருச்சபையின் மகிமையையும், கர்த்தரை மகிமைப்படுத்தும் மெய் ஊழியங்களையும் நம்மத்தியில் காண முடியாதிருக்கின்றது. நம்மினத்திற்கு இன்று தேவை தேவனை மகிமைப்படுத்தும் திருச்சபைகளே. சுவிசேஷ ஊழியம் மிகவும் அவசியந்தான்; சுவிசேஷ ஊழியங்கள் வேதபூர்வமான திருச்சபைகள் அமைவதில் போய் முடியாத பட்சத்தில் அந்த ஊழியங்களால் கர்த்தருக்கு எந்த மகிமையுமில்லை. பாவிகள் மனந்திரும்ப வேண்டும் என்பதில் மட்டும் கர்த்தர் கண்ணாயிருக்கவில்லை; அவர்கள் திருச்சபையில் இணைந்து தான் போதிக்கின்ற அனைத்துப் போதனைகளின்படியும் வாழவேண்டும் என்று அவர் கட்டளையிட்டிருக்கிறார் (மத்தேயு 28). திருச்சபைக்கு தலைவராக இருக்கும் கிறிஸ்து அந்தத் திருச்சபையைத் தன்னோடு அழைத்துச் செல்லவே மறுபடியும் வரப்போகிறார். அந்நாள்வரை இந்த உலகத்தில் நமது பணி சுவிசேஷம் சொல்லி திருச்சபைகளை அமைத்து அவை வேதபூர்வமாக இருக்கும்படியாகவும், அவற்றின் மூலம் அனைத்து ஊழியங்களும் நடக்கும்படியாகவும் பார்த்துக்கொள்ளுவதுதான்.
சிக்கலான சில வேதப் பகுதிகள் – ஃபிரெட் சீபர்ட் (Fred Siebert)
வேதத்தில் விளங்கிக்கொள்வதற்கு கடினமான சில பகுதிகள் உண்டு. சிலர் அவற்றைக் குழப்பமான பகுதிகளாகவும், விளங்கிக்கொள்ளவே முடியாத பகுதிகளாகவும் கருதி அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். வேறு சிலர் அப்பகுதிகளுக்கு தவறான விளக்கங்களைக் கொடுத்துவிடுகிறார்கள். வேதத்தை எழுத்தில் தந்திருக்கும் கர்த்தரே விளங்கிக்கொள்வதற்கு கடினமானதாக இருக்கும் பகுதிகளையும் தந்துள்ளார். அவற்றை முறையாக, கவனத்தோடும் ஆவியின் துணையோடும் ஆராய்ந்து படித்தால் கர்த்தர் அவற்றின் மூலம் வெளிப்படுத்தும் சத்தியங்களை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். அத்தகைய வேதப்பகுதிகளை வாசகர்களின் நன்மை கருதி ஆராய விருக்கிறோம். போதகர் ஃபிரெட் சீபர்ட் (Fred Siebert, Australia) இந்தப் பகுதிகளுக்கு விளக்கமளிக்கிறார்.
இந்த இதழில் ஆராய்வதற்கு நாம் எடுத்துக் கொண்டுள்ள வேதப் பகுதி அப்போஸ்தலர் பேதுருவின் முதலாவது நிருபத்தில் காணப்படுகின்றது.
ஏனெனில் கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினி மித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப் பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். (1 பேதுரு 3: 18-20).
இந்தப் பகுதிக்கான விளக்கத்தை நாம் ஆராய்வதற்கு முன்பாக மார்டின் லூதர் இந்தப்பகுதிபற்றி சொன்ன வார்த்தைகளை நாம் மனதில் வைத்துக்கொள்வது நல்லது: “பேதுரு இந்தப்பகுதியில் எதை விளக்குகிறார் என்பதை நாம் அறியேன்.” என்றார் லூதர்.
கர்த்தர் மட்டுமே அனைத்தையும் அறிந்தவராக இருக்கிறார்
வேதத்திலுள்ள சில கடினமான பகுதிகளை நாம் அணுகும்போது அவற்றின் பொருள் நமக்கு விளங்காமற் போனால் அதற்காக நாம் மனந்தளர்ந்து விடக்கூடாது. நம்முடைய விசுவாசம் கர்த்தரின் வேதத்திலுள்ள அத்தனை இரகசியங்களையும் பூரணமாக அறிந்துவைத்திருப்பதில் தங்கியிருக்கவில்லை. வேதத்திலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் நமக்குப் பூரணமான அறிவு இராமற் போனாலும், நாம் விசுவாசிக்கின்ற கர்த்தருக்கு அனைத்தைப்பற்றியும் பூரணமான ஞானம் இருப்பதோடு நாமறிந்து கொள்ள அவசியமான அனைத்தைப்பற்றியும் தமக்குச் சித்தமான வேளையில் நாம் அறியத்தருவார்.
“மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம், செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.” (உபாகமம் 29:29)
இந்த வேதப்பகுதி எதை விளக்குகிறது?
இந்தப்பகுதியை ஆராய்ந்து அதற்கான விளக்கத்தை அளிக்கின்றபோது அந்த விளக்கம் வேதத்தின் வேறு எந்தப்பகுதி தரும் தெளிவான போதனைகளுக்கும் முரணாக இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது முதலாவது கடமையாகும். அந்த அடிப்படையில் பார்க்கின்றபோது, மனந்திரும்பாமல் இறந்துபோனவர்கள் இரட்சிப்பை அடைவதற்கு கர்த்தர் மறுபடியும் ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார் என்ற போதனையை நாம் அடியோடு நிராகரித்துவிட வேண்டும். ஆபிரகாமின் மடியில் ஆறுதலடைந்துகொண்டிருந்த லாசருவைப் பார்த்த ஐசுவரியவான் இந்த உண்மையைக் காலந்தாழ்த்தியே அறிந்துகொண்டான்.
“அதுவுமல்லாமல் இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்கு கடந்து போகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.” (லூக்கா 16:26).
அத்தோடு இந்தப் பகுதியில் ரோமன் கத்தோலிக்க மதப்போதனையான, பரலோகத்திற்கும், இந்த உலகத்திற்கும் இடைப்பட்ட பேர்கட்டரி (Purgatory) என்ற இடத்தில் இறந்தவர்கள் தங்களுடைய பாவநிவாரணத்துக் காகக் காத்திருக்கிறார்கள் என்றப் போதனைக்கும் எந்தவிதமான இடமுமில்லை. அது தவறான போதனை. இறந்துபோனவர்களுடைய ஆத்துமாவின் நிலையைப் பற்றி அருமையாக 1689 விசுவாச அறிக்கையின் 31ம் அதிகாரத்தின் முதலாம் பகுதி பின்வருமாறு விளக்குகிறது.
“1. இறந்தபின் மனிதர்களின் சரீரம் மண்ணை அடைந்து அழுகிப்போகின்றன. ஆனால், அவர்களுடைய நித்தியமான ஆவிகள் இறக்காமலும், உணர்வற்ற நிலையை அடையாமலும், உடனடியாகத் தம்மைப் படைத்த கடவுளை அடைகின்றன. நீதிமான்களின் ஆவிகள் மரணத்தின்போது தங்களுடைய பரிசுத்தம் பூரணமடைந்து பரலோகத்தை அடைகின்றன. அங்கே அவர்கள் கிறிஸ்து வோடிருந்து, மகிமையின் ஒளியில் கடவுளின் முகத்தைப் பார்த்துக்கொண்டு, தங்களுடைய சரீரங்களின் முழு விடுதலைக்கான நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். கேடானவர்களின் ஆவிகள் நரகத்திற்கு தள்ளப்பட்டு கடுமையான இருளில் வேதனையை அநுபவித்து நியாயத்தீர்ப்பு நாளுக்காகக் காத்திருக்கின்றன. மனித சரீரங்களை விட்டகன்ற ஆவிகள் ஒன்றில் பரலோகத்திலோ அல்லது நரகத்திலோ இருக்கின்றன. வேதம் இவை தவிர்ந்த வேறு எந்த இடத்தைப் பற்றியும் போதிக்கவில்லை.”
வேதப்பகுதி அமைந்து காணப்படும் சந்தர்ப்பம்
அடுத்ததாக, இந்த வேதப்பகுதி அமைந்து காணப்படும் சந்தர்ப்பம் இதுபற்றி என்ன சொல்லுகிறது என்பதை நாம் ஆராய வேண்டும். வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்பட்டபோதும் அவற்றிற்கு மத்தியில் பக்தி விருத்தியுள்ள வாழ்க்கை வாழும்படி இப்பகுதியில் விசுவாசிகளுக்கு அறிவுறை கூறுகிறார் பேதுரு. கர்த்தர் அவர்களைப் பாதுகாக்கிறார் என்றும், துன்மார்க்கர்களைத் தகுந்தவேளையில் தண்டிப்பார் என்றும் அவர்களுக்கு ஊக்கமூட்டுகிறார்.
“கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமை செய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோத மாயிருக்கிறது.” (1 பேதுரு 3:12).
துன்மார்க்க வழியில் போய்க்கொண்டிருக்கிறவர்கள் இப்போது “. . . உங்களைத் தூஷிக்கிறார்கள்”. (1 பேதுரு 4:4) ஆனால், “உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயத்தீர்ப்புககொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்பிவிப்பார்கள்.” (1 பேதுரு 4:5) என்கிறார் பேதுரு.
ஆகவே, விசுவாசிகள் இக்கொடிய உலகத்தில் சிறுதொகையினராக இருந்தபோதும், தொடர்ந்து அவர்கள் விசுவாச வாழ்க்கையை வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நோவாவின் காலத்தைச் சுட்டிக்காட்டி ஊக்கமூட்டுகிறார் பேதுரு. நோவா கர்த்தரின் தண்டனையிலிருந்து தப்பியதைப் போலவே, துன்பங்களுக்கு மத்தியில் கர்த்தரை நம்பி வாழ்க்கிறவர்களும் அவருடைய தண்டனைக்கு உட்படமாட்டார்கள் என்கிறார் பேதுரு. அதேவேளை நோவாவைப் பழித்தும், இழித்தும் பேசியவர்கள் கர்த்தரின் தண்டனையை அநுபவித்ததுபோல, விசுவாசிகளுக்கு துன்ப மூட்டுபவர்களும் தண்டனையை அநுபவிப்பார்கள் என்பது பேதுருவின் போதனை.
நோவாவின் காலத்தைச் சுட்டிக்காட்டி, “நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா” (2 பேதுரு 2:5) தன்காலத்தில் விசுவாசமாக வாழ்ந்ததுபோல, “உங்களிடத்திலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல (நீங்களும்) எப்பொழுதும் ஆயத்ததமாயிருங்கள்.” (1 பேதுரு 3:15) என்று விசுவாசிகளுக்கு உணர்த்துகிறார் பேதுரு.
நோவாவின் மூலம் பேசிய கிறிஸ்து
நோவாவின் மூலம் இயேசு கிறிஸ்து நோவாவின் காலத்தில் பேசினாரா? என்று ஆச்சரியப்படுவது மட்டுமல்ல, அது உண்மையா? என்றுகூட நாம் சந்தேகப்படலாம். இப்போது சிறையிலிருப்பவர்களிடம் நோவாவின் காலத்தில் கிறிஸ்து தன் ஆவியின் மூலம் பேசியதாக இப்பகுதி விளக்குகிறது. அதாவது இப்போது சிறையிலிருக்கும் இவர்கள் சிறைப்படுத்தப்படுவதற்கு முன்னால் நோவாவின் காலத்தில் உயிரோடிருந்தபோது கிறிஸ்துவின் பிரசங்கத்தைக் கேட்டிருக்கிறார்கள் என்பது இப்பகுதியின் விளக்கம். கிறிஸ்து மரித்த அதற்குப்பின் உயிர்த்¢தெழுவதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தப் பிரசங்கம் நிகழ்ந்ததாக நாம் பொருள்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இங்கே நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வியொன்று உண்டு. உண்மையில் நோவாவின் மூலம் பிரசங்கம் செய்தது யார்? இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாகப் பிறப்பதற்கு முன்பாக கர்த்தருடைய பிரதிநிதியாக இருந்த அத்தனைத் தேவமனிதர்கள் மூலமும் பிரசங்கித்த கிறிஸ்துவின் ஆவியே அது. கீழ்வரும் வசனம் இதை விளக்குவதைப் பாருங்கள்.
“உங்களுக்குண்டான கிருபையைக்குறித்து தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக்குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனை பண்ணினார்கள்; தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது இன்ன காலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விஷேசம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.” (1 பேதுரு 1:10-11).
இந்த விஷயத்தைப்பற்றி பேதுருவின் இரண்டாம் நிருபம் 2:4-9 வரையுள்ள வசனங்கள் மேலும் விளக்கம் தருகின்றன. “பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து . . . அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.” என்கிறது இந்தப்பகுதி. இன்னொரு விதமாகக் கூறப்போனால், நோவாவின் காலத்தில் நோவாவின் பிரசங்கத்தையும், நோவாவின் மூலமாகப் பேசிய கிறிஸ்துவின் ஆவியின் செய்தியையும் நிராகரித்துவிட்டவர்களின் ஆவிகள் நியாயத்தீர்ப்பு நாளுக்காக சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். பாவஞ் செய்த தூதர்களைப் போலவே இவர்களும் இறுதியில் எரியும் நரகத்தில் நித்தியத்துக்கும் அழிவை அநுபவிக்கும்வரை கட்டிவைக்கப்பட்டிருக்கிறார்கள். கீழ்வரும் யூதாவின் விளக்கத்தையும் வாசியுங்கள்.
“தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய, வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார். அப்படியே சொதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப் போல் விபச்சாரம் பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.” (யூதா 6, 7).
மேலே நாம் தந்துள்ள விளக்கங்களின் காரணமாகத்தான் திருச்சபை வரலாற்றில் சிறப்புமிக்க அறிஞர்களாக இருந்த ஆகஸ்தீன், பியூரிட்டன் மேதையான ஜோன் ஓவன் ஆகியோர் இந்தப் பகுதி நோவாவின் மூலமாகப் பேசிய கிறிஸ்துவின் ஆவியைக் குறிப்பதாக விளக்கமளித்துள்ளார்கள்.
வேறு விளக்கங்கள் பொருந்திவருமா?
இதுவரை நாம் பார்த்துள்ள விளக்கம் மட்டுமே வேதத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள போதனைகளோடு பொருந்தி வரக்கூடிய விளகக்கமாகக் காணப்படுகின்றது. இருந்தபோதும் இந்த விளக்கம் மட்டுமே சரியானது என்று முரண்டுபிடிக்கக்கூடாது. முக்கியமாக, வேதத்தில் காணப்படும் விளங்கிக்கொள்ளக் கடினமான பகுதிகளை நாம் ஆராய முற்படும்போது நமது விளக்கத்தைவிட வேறு விளக்கங்களும் இருந்துவிடக்கூடும் என்பதை மனதில் வைத்துக்கொள்வது அவசியம். அத்தோடு, மார்டின் லூதர் சொன்தைப்போல இப்போதைக்கு இந்தப் பகுதிக்கான விளக்கம் எனக்குத் தெரியாது என்று இருந்துவிடுவதிலும் எந்தத் தப்பும் இல்லை. அப்படிச் சொல்லுவதன் மூலம் வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள வேறு எந்தத் தெளிவான போதனைக்கும் முரணாக நாம் நடந்துகொள்ளவில்லை.
பாவத்தில் வீழ்ந்த தூதர்கள்?
மேலே தந்த விளக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு இந்தப் பகுதிக்கான இன்னுமொரு விளக்கத்தை சுருக்கமாகப் பார்ப்பது அவசியம். ஒருசிலர், இப்போது சிறையிலிருக்கும் ஆவிகள் நியாயத்தீர்ப்பு நாளுக்காகக் கட்டிவைக்கப்பட்டிருக்கும் அவிசுவாசிகளாக இல்லாமலிருந்துவிட்டால் அவர்கள் பாவத்தில் வீழ்ந்த தூதர்களாக மட்டுந்தான் (Fallen Angels) இருக்க முடியும் என்று கூறுவார்கள். சிலுவையில் “எல்லாம் முடிந்தது” என்ற வார்த்தைகளைக் கூறியபிறகு மரித்த இயேசு கிறிஸ்து, அதற்குப் பிறகு நமது கண்களுக்குப் புலப்படாத ஆவியுலகிற்கு தன்னுடைய வெற்றியின் மகத்துவத்தை அறிவித்திருக்கலாம் என்று அவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.
முடிவாக
நாம் மதிக்கக்கூடிய ஒருசில வேத அறிஞர்கள், பேதுரு பாவத்தில் வீழ்ந்த தூதர்களை மனதில் வைத்தே இந்தப் பகுதியை எழுதியிருக்கிறார் என்று எண்ணியபோதும் சிறையிலிருக்கும் ஆவிகள் நோவாவின் காலத்திலும், அதற்குப் பின்பும் சுவிசேஷப் பிரசங்கத்தை நிராகரித்து மனந்திரும்ப மறுத்து மரித்து நியாயத்தீர்ப்பு நாளில் அடையப்போகும் தண்டனைக்காகக் காத்திருக்கும் அவிசுவாசிகளே என்ற விளக்கமே வேதத்தில் தரப்பட்டிருக்கும் ஏனைய அனைத்துத் தெளிவான பகுதிகளோடும் பொருந்தி வரக்கூடிய, முரண்பாடற்ற போதனையாகக் காணப்படுகிறது.
சத்தியம் விடுதலையாக்கும்
“. . நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:31, 32)
இவை இயேசு கிறிஸ்து யூதர்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள். யூதர்களில் பெரும்பாலானோர் இயேசுவைக் கிறிஸ்துவாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். சத்தியத்தை அறிந்துகொள்ள முடியாதபடி அவர்களுடைய கண்கள் குருடாயிருந்தன. சத்தியத்தை அறிந்துகொள்ளாதவர்கள் குருடர்களாக மட்டுமே தங்களுடைய வாழ்க்கையில் இருப்பது மட்டுமல்ல அவர்களுக்கு விடுதலை கிடைக்காது. ஆத்மீக விடுதலை சத்தியத்தினால் மட்டுமே கிடைக்கும் என்பதை இயேசு தெளிவாகவே விளக்கியிருக்கிறார்.
இயேசு வேறு எதையும்விட தன்னுடைய உபதேசத்துக்கு இங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அவருடைய உபதேசமே வேதம் முழுவதிலும் அடங்கியிருக்கிறது. அதனால்தான் அவருக்கு “வார்த்தை” என்ற பெயரும் உண்டு. அவருடைய சீஷராக விரும்புகிற எவரும் அவருடைய உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்கிறார் இயேசு. ஆடிப்பாடுவதாலோ, உணர்ச்சிப் பிரவாகத்தால் நாம் விரும்பியதை இயேசுவுக்காக செய்வதாலோ அல்லது பாரம்பரியமாக இருந்துவரும் சடங்குகளைப் பின்பற்றுவதாலோ எவரும் அவருடைய சீஷராக முடியாது. பாரம்பரியத்துக்கு பாலூட்டி வளர்த்த யூதர்களில் பெரும்பாலானோர் அவருடைய சீஷர்களாக இருக்கவில்லை. அவருடைய உபதேசத்தை மட்டும் பின்பற்றி அவற்றில் நிலைத்திருப்பதால் மட்டுமே எவரும் இயேசுவின் சீஷராக முடியும். இதை இன்று தமிழினத்து கிறிஸ்தவம் புரிந்துகொள்ளாமல் தன் மனம்போன போக்கில் இயேசுவைப் பின்பற்றப் பார்க்கிறது. சபைத்தலைமையிலிருந்து அடிமட்ட விசுவாசிகள்வரை இன்று இதே நிலைமைதான்.
இளம் பங்காளர் திட்டம் என்று ஒன்றை வகுத்து இளம் பிள்ளைகளுக்கு கர்த்தரின் ஆசீர்வாதம் கிடைக்க வகைசெய்வதாகக் கூறி அநேகரிடம் இயேசுவின் பெயரில் பணம் வாங்கித் தன்னை வளர்த்துக்கொள்கிற ஒரு குடும்ப ஊழியம் தமிழகத்தில் இருக்கிறது. இந்தத் திட்டத்துக்குப் பணம் செலுத்தி வந்த ஒரு குடும்பத்தால் அதைத் தொடர்ந்து செலுத்த முடியாமல் போனபோது கொடுக்க வேண்டிய பணத்தை வட்டியும் முதலுமாக உடனடியாக அனுப்பிவைக்கும்படி அவர்களுக்கு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தைப் பார்த்தபிறகே பணம் அனுப்பிவந்த குடும்பத்தின் கண்கள் திறந்தன. இயேசு பெயரில் ஊழியம் செய்கிறவர்கள் இப்படியும் பணத்துக்காக அலைகிறார்களே என்று அந்தக் குடும்பம் வருத்தப்பட்டது. இப்படியெல்லாம் உழியத்தின் பெயரால் நம்மினத்தில் அநியாயங்கள் நடந்து வருவதற்கு சத்தியப் பஞ்சமே முக்கிய காரணம்.
“என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் சத்தியத்தை அறிவீர்கள்” என்கிறார் இயேசு. சத்தியத்தைத் தொடர்ந்து படித்து, சிந்தித்து, ஆராய்ந்து வருகிறபோதே அதன் போதனைகள் நமக்குத் தெளிவாகப் புரியவரும். சத்திய வேதத்தை ஒதுக்கிவைத்துவிட்டு சத்தியத்தில் வளர முடியாது. வேதத்தை அன்றாடம் ஜெபத்தோடு படிக்காவிட்டால் சத்தியத்தை அறிந்து கொள்ள முடியாது. சத்தியத்தை அறிந்துகொண்டால் மட்டுமே போலிப் போதனைகளிடம் இருந்து நாம் தப்பமுடியும். சத்தியம் தெரியாவிட்டால் போலி எது? உண்மை எது? என்று உணர முடியாத மூடர்களாக நாம் இருந்துவிடுவோம். இந்த ஆபத்து ஏற்படாதிருக்க இயேசு தன்னுடைய உபதேசத்தை மட்டும் பின்பற்றி அதில் நிலைத்திருக்கச் சொல்லுகிறார். யூதர்களின் இருதயம் அதற்கு இடங்கொடுக்கவில்லை. அவர்கள் தங்களுடைய சொந்தப் போதனையை சத்தியத்தோடு இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
’சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்கிறார் இயேசு கிறிஸ்து. அவர் கூறுகிற விடுதலை ஆத்மீக விடுதலை. பாவத்திலிருந்தும், பாரம்பரியப் பிசாசுகளிடம் இருந்தும், உலக இச்சைகளில் இருந்தும் நமக்கு சத்தியமே விடுதலை அளிக்கிறது; மனந்திரும்புதலையும் இரட்சிப்பையும் அளிக்கிறது. அதுமட்டு மல்லாமல் இரட்சிப்பின் அனுபவத்தை அடைந்தபிறகு தொடர்ந்து சத்தியத்தில் நாட்டம் காட்டி இயேசுவின் உபதேசங்களைப் படித்து நம்முடைய வாழ்க்கையில் அவற்றை மட்டும் பின்பற்றுகிறபோது இந்த விடுதலையை நாம் அடையலாம். உலகத்தின் போதனையின்படியும், சிந்தனைகளின்படியும் போய்விடாமல் இருக்கவேண்டுமானால் சத்தியத்தை நடைமுறையில் கைக்கொள்ளவேண்டும். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் சத்தியத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தவறை ஒதுக்கி சரியானதைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன்மூலமே இயேசுவின் உபதேசத்தில் நிலைத்திருக்க முடியும்.
என்னைப் பொறுத்தவரையில் இன்றைக்கு நம்மினத்தைப் பிடித்திருக்கும் பெரும் வியாதி சத்தியப் பஞ்சமே. இதைப் புரிந்துகொள்ளாதவரை நமக்கு விமோசனமில்லை. இதுபுரியாமல், எல்லோர் மேலும் அன்புகாட்ட முயற்சித்தால் கிறிஸ்தவ எழுப்புதல் ஏற்படும் என்று சிலர் குரல் கொடுக்கிறார்கள். யூதர்கள்மேலும், பரிசேயர்மேலும், சதுசேயர்மேலும், தம்மை எதிர்த்து அழிக்கமுற்பட்டவர்கள் மேலும் இயேசுவுக்கு அன்பில்லாமலில்லை. அதே நேரம் அவர்களுடைய தவறுகளை அவர் கடுமையாக சாடினார்; வரப்போகும் தண்டனையை அவர்களுக்கு உணர்த்தினார். திருந்தி வாழும்படி நாளும் மன்றாடினார். கிறிஸ்தவன் காட்ட வேண்டிய அன்பு உலகத்தைச் சார்ந்த சுயநலமான அன்பல்ல; சுத்த உள்ளத்தோடு தவறுகளைச் சுட்டிக் காட்டி சத்தியத்தைப் பின்பற்றும்படி ஊக்கமூட்டும் கர்த்தருக்குரிய அன்பு. சுயநலவாதிகளுக்கு இந்த தேவஅன்பு புரியாது. அவர்கள் உலகத்தைச் சார்ந்த போலி அன்பை நாடுகிறார்கள். தங்களுடைய சொந்தத் தவறுகளை மறைத்தும், தங்களைச் சார்ந்திருப்பவர்களின் தவறுகளைக் கண்டும் காணா மலுமிருந்து பரிசேயர்களைப் போலக் காலத்தைப் போக்க முயற்சிக்கிறார்கள். இயேசுவுக்கு இங்கு இடமில்லை. சத்தியம் மட்டுமே விடுதலையாக்கும்; சத்தியமிருக்கும் இடத்தில் மட்டுமே மெய்யான அன்பிருக்கும்.
கிறிஸ்தவக் கோட்பாடுகள்
கேள்வி 97: புதிய உடன்படிக்கையின் திருவருட் சாதனம் என்பது என்ன?
பதில்: கிறிஸ்துவும், புதிய உடன்படிக்கையின் பலாபலன்களும் உணரக்கூடிய அடையாளங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு, முத்திரையிடப்பட்டு விசுவாசிகளுக்கு வழங்கும்படியாக கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்ட பரிசுத்த நியமனமே புதிய உடன்படிக்கையின் திருவருட் சாதனமாகும்.
(1 கொரிந்தியர் 11:23-26)
கேள்வி 98: புதிய உடன்படிக்கையின் திருவருட்சாதனங்கள் யாவை?
பதில்: திருமுழுக்கும் (ஞானஸ்நானம்), திருவிருந்துமே (கர்த்தருடைய பந்தி) புதிய உடன்படிக்கையின் திருவருட்சாதனங்களாகும்.
(மத்தேயு 28:19; 1 கொரிந்தியர் 11:23-26).
விளக்கவுரை: ரோமன் கத்தோலிக்க மதம் ஏழு திருவருட்சாதனங்கள் இருப்பதாக போதிக்கிறது. சீர்திருத்தவாதம் இவற்றில் திருமுழுக்கையும், திருவிருந்தையும் மட்டுமே வேதபூர்வமான திருவருட்சாதனங்களாக ஏற்றுக்கொண்டன. சீர்திருத்தவாதகாலத்தில் சீர்திருத்த சபைகள் இந்த முடிவுக்கு வருவதற்கு தகுந்த காரணங்கள் இருந்தன. திருச்சபைகள் பின்பற்ற வேண்டிய திருவருட்சாதனங்களாக இருப்பதற்குரிய சில வேத இலக்கணங்களை அவர்கள் விளக்கியிருந்தார்கள். (1) அவை இயேசு கிறிஸ்துவினால் கட்டளையிட்டு நியமிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். (2) கர்த்தரின் கிருபையினால் நிகழ்ந்த கண்களால் காணமுடியாத உள்ளார்ந்த கிரியைகளை விளக்கும் அடையாளங்களாக, வெளிப்புறச் சாதனங்களாக இருக்க வேண்டும். (3) கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் திருச்சபை தொடர்ந்து நடைமுறையில் பின்பற்ற வேண்டிய சாதனங்களாக வேதத்தில் விளக்கப்பட்டிருக்க வேண்டும். (4) கடைசியாக, இவற்றைப் பெற்றுக்கொள்ளும் விசுவாசிகளின் விசுவாசத்தை உறுதிப்படுத்தி, பெலப்படுத்தும் முத்திரையாக வேதத்தில் விளக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விளக்கங்களின் அடிப்படையில் திருமுழுக்கும், திருவிருந்தும் மட்டுமே இத்தகுதிகளைக் கொண்டிருப்பனவாக வேதம் போதிப்பதால் அவற்றை மட்டுமே சீர்திருத்த திருச்சபைகள் திருவருட்சாதனங்களாக ஏற்றுக்கொண்டன.
திருவருட்சாதனங்களின் விஷயத்தில் ரோமன் கத்தோலிக்க மதம் இன்னுமொரு பெருந்தவறையும் இழைத்தது. விசுவாசிகள் இவற்றின் மூலம் தகுந்த பலனை அடைய வேண்டுமானால் (1) திருத்தந்தையர் அதை சரியான முறையில் கொடுக்க வேண்டும் என்றும் (2) அப்படிக் கொடுக்கும் திருத்தந்தையரின் நோக்கங்கள் சரியானவையாக இருக்க வேண்டும் என்றும் விளக்கியது. திருவருட்சாதனங்களிலேயே கர்த்தரின் கிருபையும், வல்லமையும் இருப்பதாக கத்தோலிக்க மதம் போதிக்கிறது. சீர்திருத்தவாத கிறிஸ்தவர்களான நம்மால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், திருவருட்சாதனத்தைக் கொடுக்கும் போதகரில் கர்த்தரின் கிருபையும் வல்லமையும் தங்கியிருக்குமானால் அவற்றை நாம் பெற்றுக்கொண்டிருக் கிறோமா என்பதை நாம் ஒருநாளும் தெரிந்துகொள்ள முடியாது. வேதமோ, நாமே நம்மைச் சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்து கிறது (1 கொரிந்தியர் 11:20-30). இதன் மூலம் திருவருட்சாதனங்களினால் நாமடையும் பலன்கள் நமது பக்திவிருத்திக்குரிய நோக்கங்களில்தான் தங்கியிருக்கின்றனவே தவிர அவற்றைக் கொடுக்கும் போதகர்களில் தங்கியிருக்கவில்லை என்பதை வேதம் தெளிவாக விளக்குகிறது. போதகர்கள் திருவருட்சாதனங்களை முறையாக தேவபயத்துடன் கொடுக்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் வேதபோதனைகளைக் கவனத்தோடு பின்பற்ற வேண்டியதும் அவசியம். தகுந்த முறையில் அவற்றை நடைமுறையில் பயன்படுத்தாவிட்டால் கர்த்தரின் ஆசீர்வாதத்தை நாம் அவற்றால் அடைய முடியாது. அதேநேரம் கர்த்தர் தம்முடைய இறையாண்மையுள்ள சித்தத்தின்படி திருவருட் சாதனங்களைப் பயன்படுத்துகிறார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
திருவருட்சாதனங்கள் அடையாளங்களாகவும், முத்திரைகளாகவும் இருக்கின்றன. இதைப் புரிந்துகொள்ள நாம் திருவருட்சாதனங்களின் தன்மையைக்குறித்து சிந்தித்துப் பார்ப்பது அவசியம். அடையாளமென்றால் அது ஏதோவொன்றை விளக்கும் ஓர் படம் என்பது அர்த்தம். அதாவது, நாம் கண்களால் பார்க்க முடியாததொன்றை விளக்கும் பார்க்கக்கூடிய ஓர் அடையாளம். நாம் விமான நிலையத்துக்குள் நுழையும்போது நமது விமானம் நிற்கும் பகுதியைக் காட்டும் அடையாளத்தை நாம் பார்க்க முடியும். அந்த அடையாளம், நாம் உடனடியாகக் கண்களால் பார்க்க முடியாத நமது விமானம் நிலையத்தின் எந்தப் பகுதியில் இருக்கிறதென் பதை விளக்கும் புறஅடையாளமாக இருக்கிறது. அந்த முறையில் திருவருட் சாதனங்கள் கர்த்தரின் கிருபையின் கிரியைகளை விளக்குவனவாக இருகின்றன.
அத்தோடு திருவருட்சாதனங்கள் முத்திரைகளாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு நாம் பல்கலைக்கழகங்களில் பெற்றுக்கொள்ளும் கல்விச் சான்றிதழை எடுத்துக்கொள்ளுவோம். அது நமது படிப்பை நாம் வெற்றி கரமாக முடித்துவிட்டோம் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கின்றது. அதில் நமது பெயர் இருக்கும். பல்கலைக்கழகத்தின் முத்திரை இருக்கும். துணை வேந்தரின் கையொப்பமும் இருக்கும். இவையெல்லாம் நாம் படிப்பை முடித்து பட்டம் பெற்றிருப்பதற்கான உறுதியான அத்தாட்சிகள். இந்த முறையில் கிறிஸ்துவிடம் இருந்து விசுவாசிகள் பெற்றுக்கொள்ளும் பலன்கள் மெய்யானவை என்பதை திருவருட்சாதனங்கள் உறுதிப்படுத்துகின்றன. அதனால்தான் திருவிருந்தின்போது நாம் விசுவாசத்துடன் அதில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம். அதில் நம்பிக்கையில்லாது கலந்து கொள்ளுகிறபோது நம்மேல் நாமே தண்டனையை வரவழைத்துக் கொள்கிறோம்.
திருவருட்சாதனங்கள் பற்றிய இந்த வினாவிடைகள் திருவருட்சாதனங்களை ‘உணரக்கூடிய‘ சாதனங்களாக விளக்குகின்றன. அவிசுவாசிகளைப் பொறுத்தவரையில் இவற்றின் மூலம் அவர்கள் எதையுமே உணரமுடியாது. “உணரக்கூடிய” என்ற பதம் எதை விளக்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளுவது அவசியம். இந்தத் திருவருட்சாதனங்களை நாம் பார்க்க முடியும்; காதால் அவை பற்றிக் கேட்டறியமுடியும்; தொட்டுணர முடியும்; சுவைத்துப் பார்க்க முடியும்; நாசியால் மணந்து பார்க்க முடியும். உணர்வு சம்பந்தமான இந்த ஐந்து காரியங்களையும் அநுபவிக்கக்கூடிய வகையில் திருவருட்சாதனங்கள் இருப்பதாலேயே அவற்றை ‘உணரக்கூடிய‘ சாதனங்கள் என்று வினாவிடை விளக்குகின்றது. கர்த்தர் நம்மை சரீரத்தோடு மட்டுமல்லாமல் ஆத்துமாவோடும் படைத்திருக்கிறார். அவரே புறஉல கோடு தொடர்புடைய திருவருட்சாதனங்கள் மூலம் ஆத்மீக பலன்களை நாம் அடையும் வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். இச்சாதனங்கள் மூலம் நாம் சுவிசேஷத்தால் அடையும் அதே பலன்களை அடைகிறோம். இவை நமக்குக் கண்களால் காணக்கூடிய பிரசங்கமாக இருக்கின்றன.
இறுதியாக, இத்திருவருட்சாதனங்கள் வெளிப்புறச் சாதனங்களாக மட்டும் இருந்துவிடுவதில்லை. ஒரு திருவருட்சாதனம், திருவருட்சாதனமாக இருக்கவேண்டுமானால் அதற்கும் உள்ளார்ந்த கிருபைக்கும் இடையில் தெய்வீக நியதிப்படி ஓர் உறவு ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும். நாம் ஏற்கனவே தந்த உதாரணத்தின்படி விமான நிலையத்தில் நமது விமானம் இருக்கும் பகுதியைக் காட்டும் அடையாளம் அந்தப் பகுதியில் குறிப்பிட்ட விமானம் இருக்கும¢வரையில்தான் பொருளுள்ளதாக இருக்கும். அந்த அடையாளம் அந்த விமானத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. குறிப்பிட்ட விமானம் அப்பகுதியில் இல்லாதிருக்குமானால் அடையாளம் பொருளற்றதாகிவிடும். ஆகவே, திருவருட்சாதனங்கள் பொருளுள்ளவையாய் உள்ளார்ந்த ஆத்மீகத் தொடர்புள்ளவையாய் இருக்கின்றன. அவை ஆத்மீக உண்மையை விளக்குபவையாக இருக்கின்றன. அவை ஒருபோதுமே அர்த்தமற்றவையாக இருந்துவிட முடியாது. திருவிருந்துக்கு வருகிற எந்த விசுவாசியும் ஆசீர்வாதத்தையோ அல்லது தண்டனையையோ அடைந்தேயாக வேண்டும். விசுவாசிக்கு அர்த்தமற்றதாக அது ஒருபோதும் இருந்துவிட முடியாது.
அத்தோடு, ஓர் அடையாளத்தை அந்த இடத்திலிருந்து அகற்றிவிட்டால் அது குறிக்கும் பொருளோடு அதற்குள்ள தொடர்பு முறிந்து விடுகிறது. அதுபோலத்தான் ஒருவன் தனக்குத் தானே திருமுழுக்கு கொடுக்க முயற்சிப்பதும், தன் வீட்டிலேயே திருவிருந்தை நடத்தப் பார்ப்பதும். திருச்சபைக்கு வெளியில் அதோடு தொடர்பற்றதாக திருமுழுக்கையும், திருவிருந்தையும் பெற்றுக்கொள்ளப் பார்ப்பது வேதபோதனைகளுக்கெல்லாம் முரணானது. திருச்சபையிலிருந்து திருவருட்சாதனங்கள் பிரிக்கப்படும்போது அவை திருவருட்சாதனங்கள் என்ற பெயரை இழந்துவிடுகின்றன. திருச்சபை மக்களும், பிரசங்கமும் இல்லாத திருவருட்சாதனங்களால் எந்தப் பயனும் இல்லை. இவற்றை இனிவரும் வினாவிடைகளில் விபரமாகப் படிக்கப் போகிறோம்.
போதக ஊழியம்: தங்க முட்டையிடும் வாத்தா அது?
நீலகத்தில் உயர்ந்த, புனிதமான ஊழியமாகக் கருதப்படுவது போதக ஊழியம். போதக ஊழியம் என்று நான் குறிப்பிடுவது வேத இலக்கணங்களுக்குப் பொருந்தி வந்து திருச்சபையால் தெரிவு செய்யப்பட்டு திருச்சபையில் ஆத்துமாக்களுக்குப் போதித்தும், அவர்களுடைய ஆத்மீகத் தேவைகளைக் குறிப்பறிந்து தீர்த்தும் வைக்கிற ஊழியக்காரரின் பணியையே குறிக்கும். வேறெதையும் நாம் போதக ஊழியமாகக் கருதுவதற்கு வேதம் இடம் தரவில்லை. இதனை ஆங்கிலத்தில் Pastoral Ministry என்று குறிப்பிடுவார்கள். இப் பணிபுரிபவர்களை வேதம் ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி அழைக்கிறது. போதகர் (Pastor), மூப்பர் (Elder), கண்கானி (Overseer), உபதேசியார் (Teacher) போன்ற பல வார்த்தைகள் போதக ஊழியத்திலிருப்பவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழினத்தில் இந்த ஊழியம் இன்றைக்கு தள்ளாடும் நிலை யிலிருக்கிறதைப் புறஜாதியாரும் அறிவர். வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுகிற ஒரு சாதாரண பதவியாகவும், ஆத்துமாக்கள் மேல் அதிகாரம் செலுத்தக்கூடிய ஒரு அதிகாரப் பதவியாகவும், குடும்பத்தை வளர்த்துக்கொள்ள வசதியான ஒரு தொழிலாகவுந்தான் பெரும்பாலும் போதக ஊழியம் இன்றைக்கு திருச்சபைகளில் இருந்து வருகிறது. இதற்கு ஒரிரு விதிவிலக்குகள் நம்மத்தியில் நிச்சயம் இருக்கலாம்.
இது பகட்டான பணியல்ல
போதக ஊழியத்தில் ஈடுபட்டிருக்கின்ற அநேகர் அதை ஒரு பகட்டான பதவியாகக் கருதி வருகின்றனர். உண்மையில் ஆத்துமாக்கள் போதகர்களுக்கு மரியாதை தந்து அவர்களை நாடி வந்து ஆத்தும காரியங்களில் உதவி கேட்பதை வேதம் எதிர்பார்க்கிறது. இப்படி ஆத்துமாக்கள் தங்களை நாடி வருக்கிறார்கள் என்ற எண்ணமே அநேக போதகர்களுக்கு இதயத்தில் ஆணவத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஆத்துமாக்கள் தங்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள் என்பது அவர்களுடையது மனதைக் குளிர வைக்கிறது. இத்தகைய மரியாதையை அவர்கள் எப்போதும் நாடுபவர்களாக மாறிவிடுகிறார்கள். ஆத்துமாக்களின் பாராட்டையும், அவர்களிடம் பெயர் வாங்குவதையும், அவர்களுக்குமுன் தங்களுடைய பதவிப் பெருமையைக் காட்டுவதிலும் பலர் சிந்தை குளிர்ந்து போகிறார்கள். நான் ஒரு பாஸ்டர் என்று சொல்லிக் கொள்ளுவதிலும், மற்றவர்கள் தங்களைப் பாஸ்டர் என்று அழைப்பதிலும் அவர்களுக்கு கொள்ளை ஆசை. அந்தப் பெயரைச் சொல்லி பாஸ்டர்கள் அழைக்கப்படுவது நியாயமே. இருந்தாலும் அப்படி ஆத்துமாக் கள் அழைப்பதைக் கேட்டு உச்சி குளிர்ந்து அதே நினைவாக தங்கள் பதவியின் பெருமையை எண்ணி வாழ்ந்து வருகிறவர்கள் நல்ல பாஸ்டர்களாக இருக்க முடியாது.
இது உலக ரீதியான பணியல்ல
உலகத்தில் எத்தனையோ பதவிகள், தொழில்கள் இருக்கின்றன. அவற்றில் நேர்மையானவையும், நியாமானவையும் அநேகம். இருந்தபோதும் உலகத்திலிருக்கும் அநேக பதவிகளுக்கும் போதக ஊழியத்துக்கும் இடையில் பெரும் வித்தியாசம் உண்டு. உலகத்துத் தொழில்களைப் போல போதக ஊழியத்தைக் கருத முடியாது. உலகத்துத் தொழில்களை அந்தந்தத் தொழில்களுக்கு தகுதியிருக்கும் எவரும் செய்துவிடலாம். உலகத்துத் தொழில்களுக்கு போட்டியிருக்கும். அத்தொழில்களைச் செய்ய விண்ணப்பிப்பவர்கள் தங்களுக்கு கிடைக்கப் போகும் சம்பளத் தொகையைப் பார்த்துக்கூட அந்தத் தொழிலைச் செய்ய ஆசைப்படுவார்கள், இல்லாவிட்டால் வேறு தொழிலை நாடுவார்கள். இந்த எண்ணங்களுக்கெல்லாம் போதக ஊழியத்தில் இடமில்லை. போதக ஊழியத்தில் எவருக்குமே பொருளாதார நிச்சயத்தையும், நிரந்தர பாதுகாப்பையும் எதிர்பார்க்க முடியாது. கர்த்தர் நம்மோடிருக்கும்வரைதான் அந்தப் பணியை நாம் செய்ய முடியும். உலகரீதியான எண்ணங்களோடு போதக ஊழியத்துக்கு வருகிறவர்களால் ஆத்துமாக்களின் இருதயத்துக்குத் தான் பேராபத்து.
இது உங்களை வளர்த்துக் கொள்வதற்கான பணியல்ல
போதக ஊழியத்துக்கு வருகிற அநேகர் வேறு தொழில்களை செய்ய விரும்பாமல், பெயர் பெறுவதற்கும், தங்களை வளர்த்துக் கொள்வதற்கும் இந்தப் பணியை நாடி வருகிறார்கள். அதுவும் எந்தச் சபையிலும் வாழாது, எந்தச் சபையையும் கலந்தாலோசிக்காது, தாமே தங்களை போதகர்களாக அறிவித்துக் கொண்டு ஊழியம் செய்கிறவர்கள் தமிழினம் முழுவதும் கருவேலச் செடிபோல் பரவிப் படர்ந்திருக்கிறார்கள். தேவனுக்கடுத்த உயர்ந்த நோக்கங்களைக் கொண்டிராமல் இப்படியாக குறுக்கு வழியில் போதகப் பணியைப் பலர் நாடுவதற்குக் காரணம் சமுதாயப் படிக்கட்டில் தங்களை உயர்த்திக் கொள்வதற்காகவே. அப்பணியை வைத்து எதையாவது செய்து நாலு பேர் மதிக்கும்படி உயர்ந்துவிட்டால் வாழ்க்கையில் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிடலாம் என்பது இவர்களுடைய எண்ணம். இவர்களுக்கு துணைபோவதற்காகவே நூற்றுக்கணக்கில் பணம் வாங்காமலேயே பட்டங்களைக் கொடுக்கும் இறையியல் கல்லூரிகளும் புற்றீசல்கள போல் பரவியிருக்கின்றன. போதகப் பணியை இந்தளவுக்கு தெருவரைக் கொண்டு வந்திருக்கும் இந்தப் பேர்வழிகளால் கர்த்தரின் புனிதமான ஊழியம் புறஜாதியினராலும் இன்று மதிக்கப்படாத நிலையை அடைந்திருக்கிறது.
இது பணம் தேடுவதற்கான பணியல்ல
பணம் சம்பாதிப்பதற்கு தங்க முட்டையிடும் வாத்தைப் போல போதகப் பணியைப் பயன்படுத்திக் கொள்ளுகிறவர்கள் தமிழினத்தில் அதிகம் என்பது மிகைப்படுத்திச் சொல்லும் வார்த்தையல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. காணிக்கைக் கொடுப்பதை மட்டுமே கருத்தோடு பேசிக் காரியத்தை முடித்துக் கொள்ளுகிற நூற்றுக்கணக்கான ஊழியக்காரர்களால் தமிழினத்தில் கிறிஸ்தவம் இன்று தலைகுனிந்து நிற்கிறது. பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள். பணம் என்றால் பிணமாகவும் தயாராக இருக்கும் ஊழியக்காரர்களை நம்மினம் தாங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இன்று. முழு நேர ஜெபக்கூட்டம், எழுப்புதல் கூட்டம், ஐக்கியக் கூட்டம், பிணி தீர்க்கும் கூட்டம், ஆத்துமவிருத்திக் கூட்டம் என்று வைக்கிற கூட்டங்கள் அனைத்திலும் காணிக்கை எடுப்பதே முக்கியப் பணியாகவும், அதுவும் ஒரே கூட்டத்தில் பல தடவைகள் காணிக்கை எடுப்பதை வழக்கமாகவும் இந்த ஊழியக்காரர்கள் கொண்டிருக்கிறார்கள். இதையும் விட இன்று டிவி சேனல்களிலும் தோன்றிப் பணம் கேட்பவர்களாக அநேகர் மாறியிருக்கிறார்கள். ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுகிறவர்களுக்கு கொண்டாட்டந்தான் என்பதற்கிணங்க சத்தியம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களை இவர்கள் தங்கள் பேச்சால் மயக்கிப் பணம் சம்பாதித்துவிடுகிறார்கள். ஆத்துமாக்களுக்கு ஆவிக்குரிய உணவு வழங்க வேண்டிய புனிதமான போதகப் பணியை பணம் பண்ணுவதற்கு பயன்படுத்துகிறவர்கள் கொடுமைக்காரர்களே.
இது தகுதி இல்லாதவர்களுக்கான பணியல்ல
புனிதமான போதக ஊழியத்தை நாடுகிறவர்களுக்கென்று கர்த்தர் கட்டளையாக பல தகுதிகளை பவுல் தீமோத்தேயுவுக்கும், தீத்துவுக்கும் எழுதிய நிருபத்தில் விளக்கியிருக்கிறார். அந்தத் தகுதிகளைக் கொண்டிருக் காத எவரும், சபைக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, சபையால் சோதிக்கப்பட்டு, சபையால் அங்கீகரிக்கப்படாத எவரும் போதக ஊழியத் துக்கு வரக்கூடாது. தகுதியில்லாதவர்களால் ஆத்துமாக்களுக்கு பேராபத்து. இந்தத் தகுதிகளை உதாசீனம் செய்துவிடுகிறபடியால்தான் திருச்சபைகளில் மோசமான மனிதர்கள் போதகப் பணிக்குள் நுழைந்துவிடுகிற நிலை ஏற்படுகிறது. போதகப் பணிக்கும், உதவிக்காரர்களுக்கும் அவசியமான, அவர்களில் காணப்பட வேண்டிய தகுதிகளை வேதம் கோடிட்டுக் காட்டுகிறதென்ற உணர்வே இல்லாமல் தகுதியற்றவர்களை, அவர்கள் சபையில் நெடுங்காலமாக இருந்திருக்கிறார்கள் என்பதற்காகவும், தலை நரைத்திருக்கிறதென்பதற்காகவும், போதகருக்கு உறவுக்காரர் என்பதற்காகவும், சபைக்கு காணிக்கை அதிகமாகக் கொடுக்கிறார் என்பதற்காகவும், இப்படி இன்னும் அநேக உலகரீதியான காரணங்களுக்காக சபை ஊழியத்துக்கு தெரிவு செய்யும் கர்த்தர் இருக்கிறார் என்ற பயமேயில்லாத சபைகள் நம்மினத்தில் ஏராளம். இத்தனையையும் செய்து விட்டு சபை ஆத்தும விருத்தி அடைந்து வருகிறது என்று ஆணவத்தோடு சொல்லி ஆராதனை நடத்தி வருகிறார்கள் இவர்கள். போதகப் பணியை, ஊழியத்தை இந்தளவுக்கு மோசமாக வைத்திருக்கும் நம்மினத்தில் கிறிஸ்தவம் வளராமலும், சத்திய வாஞ்சை இல்லாமலும் இருப்பதில் பேராச்சரியமெதுவுமில்லை.
இது அதிகமாகப் படித்துப் போதிக்காதவர்களுக்கான பணியல்ல
போதகப் பணியின் பிரதான ஆயுதம் பிரசங்கப் போதகம், அதற்கடுத்தபடியானது சபை ஆத்துமாக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்டி அருகே இருந்து பார்த்து வளர்ப்பது. இரண்டாவதை அடுத்தபடியாகப் பார்க்கப் போகிறோம். இனி படித்துப் போதிக்க வேண்டியதன் அவசியத்தைப் பார்ப் போம். இதைப் பற்றி வேதம் தெளிவாகப் பல இடங்களில் போதிக்கிறது. வேதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி அதை ஆராய்ந்து படித்து அதிலுள்ளதை உள்ளவாறு அருமையான பிரசங்கங்களின் மூலம் பிரசங்கித்து ஆத்து மாக்களுடைய ஆத்தும தாகத்தைத் தீர்க்க வேண்டியது போதகனின் பெருங்கடமை. கல்வியறிவற்றவர்கள் போதக ஊழியம் செய்ய முடியாது. கிராமவாசிக்கு சுவிசேஷம் சொல்லக்கூட கல்வித்திறன் அவசியம். இங்கே கல்வியறிவு என்று நான் சொல்வது எழுதப்படிக்கவும், சீராக சிந்திக்கவும் தெரிந்திருந்து தாழ்மையோடு கற்றுக்கொள்ளும் மனப்பான்மையைக் கொண்டிருப்பதைத்தான். அத்தோடு, உலக நடப்புகளில் அக்கறை காட்டவும், சமூக இங்கிதங்களும் (Social behaviour) தெரிந்திருக்க வேண்டும். மொத்தத்தில் சொல்லப் போனால் ஒரு போதகன் உலகந்தெரியாத முட்டாளாக இருக்கக் கூடாது. காலேஜ் ‘டிகிரிகள்’ வைத்திருப்பவர்களையெல்லாம் கல்வித்திறன் கொண்டவர்களாக உடனடியாகக் கணித்துவிட முடியாது. காலேஜ் ‘டிகிரி’ இருந்தாலும் கூடவே மனத்தாழ்மை இருக்க வேண்டும். மனத்தாழ்மையுள்ளவர்கள் மட்டுமே கற்றுக்கொள்ளும் மனப்பான்மையைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லாம் தெரிந்ததுபோல் நடிக்கும் அதிகப்பிரசங்கிகளாக இருக்கமாட்டார்கள். “கற்றது கையளவு கல்லாதது உலகளவு” என்று எண்ணுபவனே மனத்தாழ்மையுள்ளவன். எத்தனை அறிவிருந்தும் மனத்தாழ்மை இல்லாவிட்டால் பிரயோஜனமில்லை. இன்னும் சொல்லுவ தானால் இவை எல்வாவற்றோடும் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும், வேத அறிவில் வளரவேண்டும் என்ற தீவிர வாஞ்சை இருக்க வேண்டும். அத்தகைய வாஞ்சை இருப்பவர்களே நேரத்தைப் பயன்படுத்தி தங்களுடைய சொந்த ஆத்தும விருத்திக்காகவும், ஆத்துமாக்களுக்கு உணவளிப்பதற்காகவும் கஷ்டப்பட்டுப் படிப்பார்கள். அக்கறையோடு வேதத்தை ஆராய்ந்து படித்துப் பிரசங்கிக்காதவர்களின் சபை ஒரு நாளும் ஆத்தும விருத்தி அடைய முடியாது.
பழைய, புதிய ஏற்பாடு நூல்களில் அறிவற்றவர்களும், பிரசங்கிக்கும் வல்லமையற்றவர்களும் பெருகியிருப்பதாலேயே இன்றைக்கு சத்தியத்தின் அடிப்படையில் அமையாது கிறிஸ்தவ ஊழியங்கள் என்ற பெயரில் அநேக போலி ஊழியங்கள் கிறிஸ்தவத்தின் பெயரில் நம்மத்தியில் காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கின்றன. வேதப்பகுதிகளை ஆராய்ந்து படிக்காது மேலெழுந்தவாரியாக நுனிப்புல் மேய்ந்துவிட்டு வெறும் ‘டிவோஷனல்’ செய்திகளையும், தியானச் செய்திகளையும், வாக்குத்தத்த வசனங்களையும் மட்டும் வாரித்தந்து கொண்டிருக்கும் போதகர்களை இவை வளர்த்து வாழ்வளித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களை போதகர்களாக நம்பியிருக்கும் ஆத்துமாக்களும் வேத அறிவில்லாது, ஆத்தும பெலமில்லாது, விசுவாச நிச்சயமும் இல்லாது காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கின்றன. இது இன்றைய தமிழினத்தைப் பிடித்துள்ள பெருவியாதி.
இது ஆத்துமாக்களில் அக்கறை இல்லாதவர்களுக்குரிய பணியல்ல
போதக ஊழியத்துக்கான அடிப்படைத் தகுதியே ஆத்துமாக்களில் இருக்க வேண்டிய ஆத்மீகக் கரிசனையும், அன்பும்தான். இன்றைக்கு ஆத்துமாக்களில் எந்தவிதமான அக்கறையும் காட்டாதவர்கள் போதகர்களாக இருந்து வருகிறார்கள். ரிமோட் கண்ட்ரோல் மூலம் போதக ஊழியம் செய்துவிட முடியாது. மந்தை மேய்க்கிறவன் ஆடுகளுக்கு பக்கத்தில் இருப்பான்; அவற்றின் தேவைகளை அறிந்திருப்பான்; தேவையான நேரங்களிலெல்லாம் தண்ணீரையும், மேய்வதற்கான வசதிகளையும் செய்து கொடுப்பான். அவற்றைச் செய்யாதவன் மேய்ப்பனே அல்ல. ஆத்துமாக்களை நெருங்காமல் தூரத்தில் இருந்து மட்டும் பார்த்து, ஓய்வு நாளில் மட்டும் பிரசங்கத்தை செய்துவிட்டுப் போகிறவர்கள் போதகர்களே அல்ல. அதைச் செய்வதற்கு நேரமில்லை என்று சொல்லுகிற மனிதன் போதக ஊழியத்தில் இருக்க ஒருபோதும் தகுதியில்லாதவன்.
உண்மையில் போதக ஊழியத்தைப் பற்றி அதிகம் தெரியாதவர்களாக தமிழினத்தில் அநேகர் இருந்து வருகிறார்கள். பிரசங்கம் செய்வதும், யாருக்காவது உடம்பு சரியில்லாவிட்டால் வீடுகளுக்குப் போய் ஜெபித்துவிட்டு வருவதையும் மட்டுமே போதக ஊழியமாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். கலாச்சாரம், பண்பாடு என்று சாக்குப் போக்குச் சொல்லி சபையாரைப் பற்றிய எந்த விஷயத்திலும் அக்கறை காட்டாதிருக்கிறார்கள். சபைக்கு ஒருவர் வருவது குறைந்தால் மட்டும் ஏன் என்று கேட்டுவிட்டு அத்தோடு நிறுத்திக் கொள்வது அநேகருடைய வழக்கமாக இருக்கிறது. சபை ஆத்து மாக்களில் வாழ்க்கை பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்ளாது, அவர்களுடைய வாழ்க்கையில் அக்கறை காட்டாமல் இருக்கிறவன் போதகனே இல்லை. சபையின் விசுவாசிகளே ஒருவருக்கொருவர் அந்நியோன்னியமாக இருந்து, ஒருவர் வாழ்க்கையில் மற்றவர் அக்கறை காட்டி, ஒருவர் பிரச்சினைக்காக மற்றவர் ஜெபித்து, ஒருவரையொருவர் தாங்கவேண்டுமென்று வேதம் போதிக்குமானால், அதைவிட எந்தளவுக்கு அதிகமாக ஒரு போதகன் தன் சபை மக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்ட வேண்டும்? அதைச் செய்யாதவர்கள் போதக ஊழியத்திற்கே தகுதியற்றவர்கள்.
ஆத்மீகப் பிரச்சனைகளையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் வெளியே சொல்ல முடியாமல், அவற்றைத் தீர்த்துக்கொள்ளவும் வழிதெரியாமல், “இதைப் போதகரிடம் சொல்ல முடியாது ஐயா, அவருக்கு எங்களைப் பார்க்கவே நேரமில்லை” என்றும், சொன்னால் “எங்களைத் தவறாக நினைத்து விடுவார்” என்று சொல்லி மீள வழி தெரியாது கண்ணீரோடு காலத்தைக் கழித்து வரும் ஆத்துமாக்கள் இன்று சபை சபையாக இருக்கின் றன. “போதகருக்கு எங்களைக் கண்டாலே பிடிக்காது” என்று சொல்லி மனதுக்குள் குமைந்து தங்களுடைய பிரச்சனைகளை எவரோடும் பகிர்ந்து கொள்ள வழிதெரியாது தவிக்கும் வாலிபர்கள் சபை சபையாக இருக்கிறார்கள். ஆடுகளின் தேவைகளையே அறிந்திராது ‘போதகன்’ என்ற போர்வைக்குள் ஒழிந்துகொண்டு ஆடுகளை உதாசீனப்படுத்தும் மனிதர்கள் போதகர்களல்ல. மெய்ப்போதகன் ஆத்துமாக்களுக்கு அருகில் இருப்பான்; அவர்களின் தேவைகளை அறிந்திருப்பான்; அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளைத் தந்து, அவர்களுடைய ஆத்துமவிருத்திக்கு பெருந்துணையாக இருப்பான். பெரியவர்கள், வாலிபர்கள் என்ற பேதத்தை எல்லாம் உதறி விட்டு, பாரம்பரியம், கலாச்சாரம் என்ற சாக்கடைகளைத் தூர எறிந்துவிட்டு, ஆத்துமாக்களின் ஆத்துமவிருத்தி ஒன்றையே இலட்சியமாகக் கொண்டு பணிபுரிகிறவனே போதக ஊழியத்தின் புனிதத்தைக் காக்கிறவன்.
திருச்சபை வரலாறு
ஜெர்மனியில் ஆரம்பமான திருச்சபை சீர்திருத்தம்
மனிதநலவாதிகள் (Humanists) திருச்சபை சீர்திருத்தத்திற்கான பாதையை அமைப்பதில் அதிக பங்கைப் பெற்றிருந்தபோதும் அவர்களால் திருச்சபையில் மெய்யான வேத அடிப்படையிலான சீர்திருத்தத்தைக் கொண்டுவர முடியவில்லை. திருச்சபை சீர்திருத்தமாகிய எழுப்புதல் ஏற்படுவதற்கு ஒரு மனிதன் ஆழமான ஆத்மீக தாகத்தையும், விசுவாசத்தையும், நெஞ்சுரத்தையும் கொண்டிருக்க வேண்டும். சுவிசேஷத்திலும், அதை அறிவிப்பதிலும் நெருப்பாக எரியும் வாஞ்சையையும், உத்வேகத்தையும் தனக்குள் கொண்டிருக்க வேண்டும். இவற்றோடு அதிக திறமைகளையும், பெருந்தைரியத்தையும் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய மனிதனாகவே ஜேர்மனியில் திருச்சபை சீர்திருத்தத் திற்காகக் கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட மார்டின் லூதர் (Martin Luther) இருந்தார்.
நவம்பர் 10ம் நாள் 1483ல் லூதர் வறுமையில் வாடிய ஒரு சுரங்கத் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தார். இதனால் தொழிலாளிகளின் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை அவர் நன்றாக ஆரம்ப காலத்தில் இருந்தே அறிந்துவைத்திருந்தார். ஆரம்பக் கல்வியை முடித்தபின் ஏர்பர்ட் பல்கலைக்கழகத்தில் (Erfurt University) 1501ல் சேர்ந்தார். அங்கே ஜோன் வெசல் (John Wesel) என்ற மனிதநலவாதியின் நட்பு அவருக்குக் கிடைத்தது. சட்டக் கல்வி பயிலுவதில் திறமைசாலியாகவும், தத்துவம், இசை ஆகியவற்றில் அதிக திறமையும் கொண்டிருந்த லூதர் பலரும் ஆச்சரியப்படும்படியாக ஆகஸ்தீனியன் குருப்பயிற்சிக்காக (Augustinian Eremites) தன்னை அர்ப்பணித்தார். சிறுவனாக இருந்த காலத்தில் இருந்தே லூதருக்கு ஆத்மீகத்தில் பெரும் பிடிப்பு இருந்தது. இப்போது பெலேஜியன் (Pelagian) போதனையைப் பின்பற்றிய அவருடைய வழிகாட்டிகள் உபவாசத்தாலும், ஜெபத்தாலும், பாவங்களுக்கு பலிகளைச் செலுத்துவதன் மூலமும் இரட்சிப்பை அடைய வழிதேடிக்கொள்ளும்படிப் போதித்தார்கள். வேதத்தை வாசிக்க அவருக்கு அனுமதியிருக்கவில்லை. பாவப்பலிகளைச் செலுத்தியும், தொடர்ந்து பாவங்களை அறிக்கையிட்டும் தனக்கு மேலிருந்த வர்களுக்கு அவர் அதிகம் தொல்லை கொடுத்தார். இருந்தும் அவருக்கு சமாதானம் ஏற்படவில்லை. அவருக்கு வயது இருபதாக இருந்தபோது கையில் இலத்தீன் மொழியில் இருந்த ஒரு வேதப்புத்தகம் கிடைத்தது. அவருக்கு மேல் மடத்தில் பதவியில் இருந்த ஜோன் ஸ்டௌபிட்ஸ் (John Staupitz), அந்த வேதப்புத்தகத்தை வாசிக்கும்படியும், கிறிஸ்து மட்டுமே பாவங்களில் இருந்து விடுதலை தரக்கூடியவர் என்றும் லூதருக்கு அறிவுரை கூறினார். இலத்தீன் மொழியில் இருந்த வேதத்தை லூதர் கவனத்தோடு வாசிக்க ஆரம்பித்தார். புதிய ஏற்பாட்டில் பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தை அவர் தொடர்ந்து வாசித்தபோது தேவ சமாதானம் அவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து அவர் அகஸ்தீனின் (Augustine) நூல்களை வாசித்த போது இயேசு கிறிஸ்துவின் மூலமே கர்த்தர் பாவிகளுக்கு பாவநிவாரணம் தருகிறார் என்பதையும், அவர்கள் தங்களுடைய சொந்த நற்கிரியைகளின் மூலம் பாவத்தில் இருந்து விடுதலை அடைய முடியாது என்பதையும் தெளிவாக அறிந்துகொண்டார். இரட்சிப்பு கர்த்தருடைய கிருபையின் மூலமாக மட்டுமே கிடைக்கிறது என்பதும் அவருக்குத் தெளிவாயிற்று. அதற்குப் பிறகு குருமட வாழ்க்கையிலும், மதத்தின் பெயரால் செய்து வந்த புறக்கிரியைகளிலும் அவருக்குப் பிடிப்பில்லாமல் போனது. தொடர்ந்து அவர் எபிரேய மொழியிலும், கிரேக்க மொழியிலும் வேதத்தைப் பயில ஆரம்பித்தார். முக்கியமாக பவுல் அப்போஸ்தலன் எழுதிய நூல்களை ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்தார்.
டெட்செலும் பாவமன்னிப்பு பத்திரங்களும் (Tetzel and the Indulgences)
இக்காலத்தில் போப்பாக இருந்த லியோவுக்கு (1513-1521) புனித பேதுருவின் ஆலயத்தைக் கட்டி முடிக்கவும், தன்னுடைய ஆடம்பர வாழ்க்கைச் செலவிற்கும் அதிகம் பணம் தேவைப்பட்டது. அப்பணத்தைச் சேர்க்க பாவமன்னிப்பு பத்திரங்களை சபை மக்களுக்கு விநியோகிக்க லியோ திட்டம் போட்டார். இத்தகைய வியாபார உத்தி இதற்கு முன்பே சபையில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்தப் புதிய ஆத்மீக வியாபாரத் தந்திரம் மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. டொமினிக்கன் பிரிவைச் சேர்ந்த டெட்செல் விட்டன்பேர்கில் (Wittenberg) இந்தப் பத்திரங்களை விற்பதற்கு போப்பால் நியமிக்கப் பட்டார். தன்னிடம் இருக்கும் பெட்டியில் பணத்தை ஒருவர் போட்ட உடனேயே அவருடைய இறந்துபோன உறவினரின் ஆவி பேர்கட்டரியில் (Purgatory) இருந்து உடனடியாக விடுதலை அடையும் என்று கூசாமல் பொய் சொன்னார் டெட்செல். இதைக் கேட்ட மார்டின் லூதரின் இதயம் ஆக்ரோஷத்தால் வெம்பி விம்மியது. போப் லியோ பணம் சேர்ப்பதற்கு ஆடிய ஆட்டங்களும், கொடூரமான பாவங்களைச் செய்தவர்களும், ஏனையோரும் பத்திரங்களைப் பணங்கொடுத்து வாங்குவதற்கு அலைந்து திரிந்த அட்டூழியத்தையும் பார்த்துச் சகித்துக்கொள்ள முடியாத லூதர் அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
1517ம் ஆண்டு அவர் விட்டன்பேர்க் சபையின் பெருங்கதவில் கத்தோலிக்க மதத்திற்கும் போப்புக்கும் எதிரான தொன்னூற்றைந்து உண்மைகளை ஒரு தாளில் எழுதி அறைந்து சகல மக்களும் அவற்றை வாசித்தறிந்து கொள்ளும்படிச் செய்தார். அக்காலத்தில் சபைக் கதவில் இப்படியான முக்கியமான செய்திகளை பலரும் அறிந்துகொள்ளும்படி எழுதி வைப்பது வழக்கம். கூட்டங்கூட்டமாக மக்கள் வந்து சபைக்கதவில் லூதர் எழுதி வைத்திருந்தவற்றை வாசித்தார்கள். அதில் லூதர், (1) பாவமன்னிப்பு பத்திரங்கள் ஒருநாளும் எவருடைய பாவங்களிலும் இருந்தும் விடுதலை தராது; கர்த்தர் மட்டுமே அதைச் செய்யக்கூடியவராக இருக்கிறார் என்றும் (2) தேவகோபத்திலிருந்து அதால் விடுதலை கொடுக்க முடியாது; அதையும் கர்த்தர் மட்டுமே செய்ய முடியும் என்றும் (3) மனந்திரும்பி வாழ்கின்ற கிறிஸ்தவன் ஏற்கனவே கர்த்தரிடம் இருந்து பாவமன்னிப்பு பெற்று விட்டான். ஆகையால், அவனுக்குப் பாவமன்னிப்பு பத்திரங்கள் தேவையில்லை என்றும் எழுதியிருந்தார். இவை ஜெர்மானிய மொழியிலும், இலத்தீன் மொழியிலும் பிரதிகள் எடுக்கப்பட்டு லூதரின் நண்பர்களால் ஆயிரக்கணக்கில் ஜெர்மனி முழுவதும் விநியோகிக்கப்பட்டன. திருச்சபை சீர்திருத்தத்திற்கான போராட்டம் இவ்விதமாக ஆரம்பமானது.
மார்டின் லூதர் நினைத்தும் பார்த்திராத அளவுக்கு பெரும் விளைவுகளை போப்புக்கு எதிரான அவருடைய எழுத்துக்கள் ஏற்படுத்தின. ஆரம்பத்தில், குருமாருக்கிடையிலான வெறும் சச்சரவு மட்டுமே இது என்று எண்ணிய போப் லியோ இனியும் வாளாவிருக்கக்கூடாது என்றெண்ணி 1518ல் லூதரை ரோமுக்கு வருமாறு பணித்தார். அந்த அழைப்பை ஏற்று ரோமுக்குப் போயிருந்தால் லூதரின் உயிர் போயிருக்கும். அதையுணர்ந்த லூதர் அழைப்பை நிராகரித்துவிட்டார். உடனே லியோ, இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும்படி ஜெர்மனியில் தன்னுடைய பிரதிநிதி யாக இருந்த கார்டினல் கெஜெட்டனுக்குக் (Cardinal Cajetan) கட்டளையிட்டார். ஒக்ஸ்பேர்கில் (Augsburg) லூதரைச் சந்தித்துப் பேசிய போப்பின் பிரதிநிதி, போப்பின் தலையீடு இல்லாமல் கிறிஸ்துவிடம் இருந்து பாவிகள் மன்னிப்புப்பெற முடியாது என்று விளக்கி லூதரின் நிலைப்பாட்டில் குறை கண்டார். தன்னுடைய போதனையில் எந்தக் குறையும் இல்லை என்று சாதித்த லூதர், போப் தன்னுடைய போதனைகளை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு விட்டன்பேர்கிற்கு திரும்பினார். இதுவரையிலும் போப்பின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டிருந்த லூதர், அதைப்பற்றி மேலும் ஆராய்ந்து பார்த்தபோது ரோமன் கத்தோலிக்க மதத்தின் புரட்டையும், போப்பின் அதிகாரத்திற்குக் காரணமாக இருந்தது கத்தோலிக்க மதம் ஏற்படுத்தி வைத்திருந்த போலி ஆவணங்களுமே என்பதை உணர்ந்து பெருங்கோபங் கொண்டார்.
லிப்சிக்கில் (Leipsic) நிகழ்ந்த வாதங்கள்
1519ல் போப்பின் பிரதிநிதியாகிய ஜோன் எக்கிற்கும் (John Eck), லூதரின் நண்பரான கார்ல்ஸ்டட்டிற்கும் (Carlstadt) இடையிலான வாதத்திற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் லூதர் அனைவரும் திகைத்துப்போகும்படியான ஒரு குற்றச்சாட்டைப் போப்பிற்கு எதிராக வெளியிட்டார். அதாவது, போப்பிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை வேதத்தில் எங்குமே காணமுடியாது என்று லூதர் அறிவித்தார். அத்தகைய அதிகாரம் கடந்த நானூறு வருட காலங்களிலேயே ரோமன் கத்தோலிக்க மதத்தால் ஏற்படுத்தப்பட்டது என்றும், சபைக் கவுன்சில்கள் அத்தகைய அதிகாரத்துக்கு இடங்கொடுத்து பெருந்தவறிழைத்துவிட்டன என்றும் லூதர் குற்றஞ்சாட்டினார்.
தன்னுடைய குற்றச்சாட்டின் முழுத்தாக்கத்தையும் லூதர் நன்றாகவே உணர்ந்திருந்தார். எந்தப் போப்பினதும், கவுன்சில்களினதும் அதிகாரத்திலிருந்தெல்லாம் விடுபட்டு வேதத்திற்கு மட்டுமே கட்டுப்படுவேன் என்றும், விசுவாசத்தைப் பற்றிய விஷயங்களில் வேதம் மட்டுமே அதிகார பூர்வமான முடிவைத் தரக்கூடியது என்றும் லூதர் நம்பினார். போப்பின் அதிகாரத்துக்குட்படாதவராக சுதந்திரம் பெற்ற கிறிஸ்தவராக அவர் உலகத்தின் முன் நின்றார். இளைய மனிதநலவாதிகளின் கூட்டம் அவருக்குப் பின்னால் இருந்தது. மெய்க்கிறிஸ்தவத்தின் விடுதலை மட்டுமல்ல, தங்களுடைய நாட்டின் விடுதலையும் மார்டின் லூதரின் போராட்டத்தின் வெற்றியில்தான் இருந்தது என்பதை ஜெர்மன் மக்களும் புரிந்துகொண்டார்கள். நூறு மனிதர்களின் வல்லமை தன்னில் இருப்பது போல் உணர்ந்த லூதர் அக்காலத்தில் உதயமாகியிருந்த அச்சுக்கூடத்தின் உதவியுடன் தொடர்ந்து அதிகமான பிரசங்கங்களையும், கைப்பிரதிகளையும் வெளியிட்டு வந்தார்.
லூதர் லிப்சிக்கிற்குப் (Leipsic) போனபோது அவருக்குத் துணையாக 200 மாணவர்களும், விட்டன்பேர்கில் கிரேக்கப் பேராசிரியராக இருந்த இளம் மெலாங்த்தனும் (Melanchthon) உடன் சென்றனர். மெலாங்த்தன் லூதரின் இணைபிரியா சீடராகவும், அவரது உற்ற நண்பராகவும், அவருக்குப்பின் அவருடைய இடத்தைப்பிடித்தவராகவும் இருந்தார். இருவருடைய குணங்களும், தகுதிகளும் அவர்களுடைய நட்புக்கு அதிகம் உதவின. சிங்கம் போல் சீறிப் பயமறியாதிருந்த மார்டின் லூதருக்கு, கனிவும், தாழ்மையும் உருவான மெலாங்த்தனின் குணம் தேவையாயிருந்தது. சீர்திருத்த கிறிஸ்தவத்தின் தொகுப்பாளரும், வியாக்கியானம் செய்பவராகவும் இருந்த மெலாங்த்தன் விரைவிலேயே புகழடைந்து லூதர் மரித்தபோது, லூதரைப் பின்பற்றியவர்களுக்குத் தலைவரானார்.
1520 ல் லூதர் தன்னுடைய மூன்று கைப்பிரதிகளை போப்புக்கு அனுப்பிவைத்தார். மிகவும் கடுமையாக போப்பின் அதிகாரத்தை எதிர்த்த அந்தக் கைப்பிரதிகள் எவரும் இலகுவாக வாசிக்கக் கூடியதாகவும், புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்தன. 1520, ஜூன் 15ம் நாள் போப் லியோ லூதரை சபை நீக்கம் செய்து அவருடைய எழுத்துக்களைப் பறிமுதல் செய்து எரிக்கும்படி உத்தரவிட்டார். அதற்கு லூதர் ஏற்ற பதிலளித்தார். விட்டன்பேர்கிற்கு புறத்தில் ஓரிடத்தில் தீயை உருவாக்கி, பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களும், தன்னைப் பின்பற்றிய சாதாரண மக்களும் கூடியிருந்த ஒரு கூட்டத்தின் முன் போப்பின் கட்டளையையும், ரோம சபைச் சட்டவிதிகளையும், அதன் போலி ஆவணங்களையும் தீயிலிட்டு எரித்தார். வேறெந்த செயலும் இதைவிடவும் உறுதியான பதிலைப் போப்புக்கு எதிராகத் தந்திருக்க முடியாது.
வேர்ம்ஸில் (Worms) கூடிய சபைக் கவுன்சில் கூட்டம்
இக்காலப்பகுதியில் ஸ்பெயினின் அரசனாக இருந்த ஐந்தாம் சார்ள்ஸ் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அதிகமான பகுதிகளைத் தன்வசம் கைப்பற்றி உலகத்திலேயே மிகவும் பலமும், அதிகாரமுமுடைய அரசனாக இருந்தான். அவன் தீவிரமான ரோமன் கத்தோலிக்கனாக இருந்ததுடன், ஒற்றுமையுள்ள நீண்ட சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவதிலும், எவரும் எதிர்க்கமுடியாத பெரும் சபையை அமைப்பதிலும் கருத்தாயிருந்தான். ரோமன் கத்தோலிக்க மதத்தை எதிர்த்த எதிர்ப்பாளர்களை அவன் உடனடியாக அழித்திருக்க முடியும். இரண்டு காரணங்களின் நிமித்தம் அவன் அதைச் செய்யாமலிருந்தான். பிரான்சின் அரசனாக இருந்த முதலாம் பிரான்ஸிஸோடும், துருக்கியர்களோடும் நடந்து வந்த போரில் எதிர்ப்பாளரின் துணை தனக்குத் தேவைப்பட்டதால் அவன் அவர்களை விட்டுவைத்திருந்தான்.
1521ல் அவன் வேர்ம்ஸில் (Worms) ஒரு சபைக் கவுன்சிலைக் கூட்டினான். இதற்கு, இளவரசர்கள், அவர்களுக்குக் கீழிருந்தவர்கள், முக்கியஸ்தர்கள் என்று சமூகத்தின் பெரிய மனிதர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். லூதரைத் தனக்குக் கட்டுப்படச் செய்வது மட்டுமே அரசனுடைய நோக்கமாக இருந்தது. கூட்டத்துக்கு வரும்படி லூதருக்கு அழைப்பு அனுப்பி பாதுகாப்போடு திரும்பிச்செல்ல தான் உத்தரவாதம் அளிப்பதாக வும் அரசன் செய்தியனுப்பினான். லூதரின் நண்பர்கள் ஜோன் ஹஸ்ஸுக்கு நடந்ததை நினைவுறுத்தி கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என்று லூதருக்கு அறிவுரை தந்தார்கள். லூதர் வேர்ம்ஸுக்கு போகத் தீர்மானித்தார். அரசனின் முன்னிலையில் நிகழ்ந்த கூட்டம் லூதரை மதிக்கவில்லை. லூதரெழுதிய நூல்கள் பற்றிய கேள்விகளைக் கேட்டு, அவற்றை மறுதலிக்கும்படி அவர் எச்சரிக்கை செய்யப்பட்டார். ஹஸ்ஸைப் போலவே அவர் இறந்து நூறுவருடங்களுப் பிறகு லூதரும், தானெழுதிய அனைத்தும் வேதத்திற்கெதிராக இருந்தால் மட்டுமே தன்னால் அவற்றை மறுதலிக்க முடியும் என்று பதிலளித்தார். “இதுவே என்னுடைய தீர்மானம்; இதைவிட வேறெதையும் என்னால் செய்ய முடியாது. கர்த்தரே எனக்குத் துணை. ஆமேன்!” என்று கூறி முடித்தார் லூதர். அவருடைய வார்த்தைகள் ஐரோப்பாவெங்கும் சுதந்திரத்தை நாடி நின்ற மனிதர்களின் இதயங்களை யெல்லாம் புல்லரிக்கச் செய்தன.
ஏற்கனவே லூதரைப் பாதுகாப்போடு அனுப்பி வைப்பதாக அரசன் உறுதிமொழி கொடுத்திருந்ததால் அவருக்கு திரும்பிப்போக உத்தரவு கிடைத்தது. இருந்தபோதும், அவர் குற்றவாளியாக அறிக்கையிடப்பட்டு சாம்ராஜ்யத்தின் தண்டனைக்குரியவராக குற்றஞ்சாட்டப்பட்டார். லூதருக்கு வழியில் ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய சாக்சனியின் அதிபதி இரகசியமாக ஒரு குதிரைப்படையை அனுப்பி வழியில் லூதரைக் கைது செய்யும்படிப் பணித்தார். லூதர் அங்கிருந்து வொட்பேர்கிற்கு (Wartburg) கொண்டு செல்லப்பட்டார். லூதரின் எதிரிகள் அவர் தொலைந்துவிட்டார் என்று எண்ணி ஆனந்தப்பட்டார்கள். லூதர் இப்படியாக ஒருவருடத்துக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் தனது மறைவிடத்திலிருந்து புதிய ஏற்பாட்டை கிரேக்க மொழியில் இருந்து ஜெர்மானிய மொழிக்கு மொழி பெயர்த்தார். வேதம் மக்களுடைய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அவர்கள் வாசிக்கும் வசதி ஏற்படுவது திருச்சபை சீர்திருத்தத்திற்கு மிகவும் அவசியமாக இருந்தது.
வொட்பேர்கில் இருந்து விட்டன்பேர்கிற்கு மார்ச் 1522ல் திரும்பிய லூதர் தன்னுடைய ஆதரவாளர்கள் விட்டன்பேர்கில் உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள்வதைக் கண்டு அவர்களைத் திருத்த முயன்றார். எட்டே நாட்களில் அவர்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சீர்திருத்தத்தின் வழியில் செல்லப் பாதை அமைத்தார்.
1523ல் நிகழ்ந்த தேச முக்கியஸ்தர்களின் (Nobles) புரட்சியும், 1525ல் நிகழ்ந்த விவசாயிகளின் புரட்சியும் மார்டின் லூதருக்கு மனத்தளர்ச்சியை ஏற்படுத்தி அவருடைய பணிகளுக்குத் தடையேற்படுத்தின. இத்தகைய புரட்சிகளுக்கு நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார, சமூகக் குறைபாடுகளே காரணமாக இருந்தன. ஆனால், இதற்கெல்லாம் லூதரே காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டார். விவசாயிகளின் புரட்சியை உடனடியாக அடக்கும்படி அதிகாரிகளை லூதர் கேட்டுக்கொண்டார். இந்த விஷயத்தில் லூதர் செய்தது சரியல்ல. இதனால் அவருடைய ஆதரவாளர்களில் அநேகமானோர் அனாபாப்திஸ்துகளாக (Anabaptists) மாறினர்.
ஸ்பியரில் (Speier) கூடிய ஆலோசனைக் கூட்டங்கள்
தனது எதிரியான முதலாம் பிரான்ஸிஸைத் தோற்கடித்து லூதரைப் பின்பற்றுபவர்களைத் தொலைப்பதற்கு தனக்கு உதவவேண்டுமென்ற வாக்குறுதியையும் பெற்றுக்கொண்டபின் ஐந்தாம் சார்ள்ஸ் ஸ்பியரில் சீர்திருத்தவாதிகளுக்கெதிராக நடவடிக்கையெடுக்குமுகமாக ஒரு கூட்டத் தைக் கூட்டினார். அதேநேரம் போப்புடனும் கடுமையான வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார். ஸ்பியரில் கூடிய கூட்டமோ லூதரைக் கண்டிக் காமல் பொறுத்துப்போக வேண்டுமென்றும், ஜெர்மனியில் உள்ள ஒவ்வொரு மாகாணமும் அதை ஆளும் இளவரசன் பின்பற்றும் மதத்தைப் பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் தீர்மானித்தது. இந்தத் தீர்மானம் 1555ல் ஒக்ஸ்பேர்கில் (Augsburg) கூடிய சமாதானக்கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1529ல் ஸ்பியரில் மறுபடியும் கூடிய கூட்டத்தில், இதுவரை ஜெர்மனியில் 1526ம் ஆண்டு கூட்டத்தின் பின் லூதரைப் பின்பற்றத் தீர்மானித்துள்ள மாகாணங்கள் அதைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், ஏனைய மாகாணங்கள் சீர்திருத்தவாதத்திற்கு எந்தவிதத்திலும் இடமளிக்காமல் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட சிறுபான்மையினரான சுவிசேஷப் பிரிவினர் இதை எதிர்த்து எந்தக் கூட்டமும் மதசம்பந்தமான விஷயங்களில் மனித னின் மனச்சாட்சியின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தலாகாது என்று கூறினர். இப்படி எதிர்த்துப் பேசியதால் அவர்கள் ‘புரொட்டஸ்தாந்துகள்’ (Protestants), அதாவது ‘எதிர்ப்பாளர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். ‘புரொட் டெஸ்ட்’ (Protest) என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘எதிர்ப்பு’ என்பது பொருள். இந்த வகையிலேயே இந்த வார்த்தை திருச்சபை வரலாற்றில் உருவானது. அதேசமயம் கத்தோலிக்கர்கள் தங்களுடைய மதத்தைக் காக்கவும், வளர்க்கவும் ஒரு அமைப்பையும் ஏற்படுத்திக்கொண்டனர். பேரரசனான ஐந்தாம் சார்ள்ஸ் புரொட்டஸ்தாந்து (சீர்திருத்த) கிறிஸ்தவத்தை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தபடியால் சாக்சனியைச் சேர்ந்த இளவரசரும் ஏனைய இளவரசர்களும் புரொட்டஸ்தாந்து அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி கத்தோலிக்க மதத்திற்கெதிராக செயல்படத் தீர்மானித்தனர்.
இவ்வாறாக சீர்திருத்தத்தின் எதிரிகள் அதற்கெதிராக ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்த வேளையில், லூதரின் போதனையைப் பின்பற்றிய வர்களுக்கும், சுவிட்சர்லாந்து இறையியல் அறிஞர்களுக்குமிடையில் திருவிருந்தைப் பற்றிய இறையியல் கருத்து வேறுபாடுகள் உருவாகின. இக்கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துவைப்பதற்காக 1529ல் மார்பேர்க் என்ற இடத்தில் ஹெசியைச் சேர்ந்த பிலிப் ஒரு மாகாநாட்டைக் கூட்டினார். இதுபற்றி அடுத்த இதழில் விபரமாகப் பார்ப்போம்.
ரோமன் கத்தோலிக்க மதத்திற்கெதிராகப் போராடி வேதபூர்வமான கிறிஸ்தவ திருச்சபைகளை நிலைநாட்ட சீர்திருத்தவாதிகள் போராட ஆரம்பித்திருந்தாலும் பதினாறாம் நூற்றாண்டில் அவர்கள் சகல இறை யியல் கோட்பாடுகள் பற்றியும் தெளிவான விளக்கத்தைக் கொண்டிருந்தார்கள் என்று கூற முடியாது. இதுவரை ரோமன் கத்தோலிக்க சபையால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சத்தியங்கள் ஒவ்வொன்றையும் அவர்கள் வேதத்தைப் படித்து ஆராய்ந்து இறையியல் கோட்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அந்நிலையில் அவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆனால், அவர்கள் எல்லோருமே வேதத்தில் இருந்துதான் எந்தப் போதனையையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதிலும், வேதம் மட்டுமே திருச்சபையில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதிலும் சந்தேகமில்லாமல் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
கவிதை
தன்மானம்
இரவெல்லாம் உறக்கமில்லை;
உடம்பெல்லாம் தகிக்கிறது – சுகந்தன்
ஜெபிக்கிறான்; வேதத்தைப் படிக்கிறான்
துடிக்கின்றன இதய நாடிகள்
முடிவெடுக்க வேண்டிய நேரமிது
முதலையும் இழக்க நேரிடும்
ஏற்கனவே வயிற்றுக்கு
காலும், அரையுந்தான்
காலைச்சுற்றிக் குழந்தைகள் வேறு
ஒட்டிக்கொள்ள வந்தவளுக்கும்
இதுவரை செய்ததில்லை
எதுவும் பெரிதாய்.
அலையலையாய் எண்ணங்கள்
தலைப் பாறைகளை மோத
மூச்சுக் காற்றின் உஷ்ணம்
முகத்தைச் சூடாக்க
முடிவெடுத்தான் நொடியில்
அவன் முகமும் மலர்ந்தது
கர்த்தரே இனிக் கதியென்று
பிசப்பின் வீட்டை நோக்கிப்
படு வேகமாய் நடந்தான்
கதவை ஓங்கித் தட்டினான்
திறந்த கதவுக்குப் பின்னாலிருந்து
முகத்தை நீட்டிய பிசப்பின் கையில்
திணித்தான் கடிதத்தை
அது ‘இராஜினாமாக் கடிதம்’
நெஞ்சிலிருந்த பாரமெல்லாம்
இறங்கிய நிம்மதி; இலேசானதுபோல்
இருந்தது தலையும் அவனுக்கு
எத்தனை நாட்கள்தான்
வாழ்வது இந்த வாழ்க்கை
சத்தியத்தை விற்றுப் பிணம்போல
சகட்டு மேனிக்கு வாழ்வதா?
பிசப்புக்குப் பணிந்து
பிசாசுக்கு உழைக்கும்
வேலை இனித் தேவையில்லை
வருவது வரட்டும் இருக்கிறார் இயேசு
என்றியம்பித் தலை நிமிர்ந்து
எட்டி நடக்கிறான் வீட்டை நோக்கி
எந்தக் கவலையுமில்லாமல்.
வயிறுகள் வீட்டில் வாடலாம்
கண்களில் கண்ணீர் வற்றலாம்
கொண்டவளின் கழுத்தில்
இருப்பதும் போகலாம்
நெஞ்சில் மட்டும் நிம்மதி
நேர்மையாய் இனி வாழலாம்
கர்த்தரின் பெயரில்
காணிக்கை பல வாங்கி
வாய் நிறையப் பொய்களால்
சபையாரைத் தினம் ஏய்த்து
தன்னை வளர்த்து ஊரை அழிக்கும்
தன்மானமற்ற வாழ்க்கை
மட்டுமில்லை அவனுக்கினி
தெளிந்தது அவன் புத்தி.
பாதையோ கரடு முரடு;
பாடுகள் காட்டாறாய்ப் பெருகும்
தூற்றுவார் தொகை அதிகரிக்கும்
தொல்லைகளும் தேடி வரும்
பிசப்புகளின் காலை வருடித்தன்
மானத்தைத் தரையில் வீசி
பொய்யால் இதயமழுகிப்
புழுப்பூத்த வாழ்வுக்கு
முடிவு இன்றோடு
இயேசு இனித் தஞ்சம்
என்றெடுத்த முடிவோடு
எதற்குந் துணிந்துத்
தரையதிர நடக்கிறான் – சுகந்தன்
தலையுயர்த்தி வீடு நோக்கி.
சுபி . . .