திருமறைத்தீபம் வாசிப்பதற்கு

திருமறைத்தீபம் 2006 -ம் ஆண்டு முதல் இதழ்

1. மாய்மாலக்காரர்களும் கிறிஸ்துவும் – தொமஸ் புரூக்ஸ் (1608-1680)

2. சிருஷ்டியின் பிரசவ வேதனை

3. இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு

4. கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியம் – 3

5. சிக்கலான சில வேதப் பகுதிகள்

6. கிறிஸ்தவக் கோட்பாடுகள்

7. உள்ளார்ந்த விசுவாசம்

8. திருச்சபை வரலாறு

9. வாழவிடுமா அவர்கள் கண்ணீர்?

10. பிரசங்கமும், பரிசுத்த ஆவியும் – 2

மாய்மாலக்காரர்களும் கிறிஸ்துவும் – தொமஸ் புரூக்ஸ் (1608-1680)

தொமஸ் புரூக்ஸ் (Thomas Brooks) பியூரிட்டன் பெரியவர்களில் ஒருவர். சீர்திருத்தப் போதகரும், பிரசங்கியுமான அவர் அநேக நூல்களை எழுதியுள்ளார். அவருடைய எழுத்துக்கள் ஆறு வால்யூம்களாக ஆங்கிலத்தில் இன்றும் பதிப்பில் இருந்து வருகின்றன. “பிசாசின் வஞ்சனைகளுக்கெதிரான விலைமதிப்பற்ற மருந்துகள்” என்ற அவருடைய ஆக்கம் சிறப்பானது. ஜோடனைகளெதுவுமில்லாத, உள்ளத்தை அசைக்கும், உணர்வுபூர்வமாக கர்த்தரின் கட்டளைகளுக்கடங்கி பக்திவிருத்தியை நாடும் கிறிஸ்தவத்தைப் பற்றி அதிகம் பிரசங்கித்தும் எழுதியும் இருக்கிறார் புரூக்ஸ். மறுபிறப்பாகிய அனுபவத்தை அடையாமல் கிறிஸ்தவர்களைப் போல பாசாங்கு செய்பவர்களை அடையாளம் காட்டும் தொமஸ் புரூக்ஸின் இந்த ஆக்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கட்டும். – ஆசிரியர்

எந்தவொரு மாய்மாலக்காரரும் இந்த உலகத்தில் கர்த்தரையோ அல்லது கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதையோ, தன் வாழ்வில் நல்லதைச் செய்வதையோ, பரிசுத்தமாக வாழ்வதையோ அதி முக்கிய நோக்கமாகக் கொண்டு வாழ்வதில்லை. உலக இச்சைகளை அனுபவிப்பதும், உலக நன்மைகளை அடைவதும், உலகத்தின் பாராட்டுதல் களைப் பெறுவதுமே மாய்மாலக்காரனின் நோக்கமாக இருக்கும். இந்த மூன்றுமே அவனுடைய திரித்துவம். அவற்றையே அவன் அக்கறையோடு வழிபட்டு, அவைகளுக்காக வாழ்ந்து வருவான் (1 யோவான் 2:16). சுயநலம் கொண்ட அவனுடைய வாழ்க்கை கறைபடிந்ததாக இருக்கும். கர்த்தருக்காக வாழ்வதாக அவன் வெளியில் காட்டிக்கொண்டாலும், சுயமே அவனுள்ளத்தில் ஆட்சி செய்யும். சுயத்தை அவனால் ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது. அதற்காகவே அவன் வாழ்ந்து வருவான். “நான் சகல நன்மைகளையும், சகல பாராட்டுதல்களையும், மகிமையையும் அடைய வேண்டும்” என்பதே அவனுடைய இருதயத்தின் எண்ணமாக இருக்கும்.

பக்திவிருத்தியின் மூலம் தனக்கு நன்மை தேடிக்கொள்ள மாய்மாலக் காரன் முயலும்போது அவன் அதிக பக்திவிருத்தியுள்ளவன் போலத் தென்படுவான். பரிசுத்தத்தின் மூலம் தனக்குப் பெருமை தேடிக் கொள்ள முயற்சி செய்யும்போது மாய்மாலக்காரன் பரிசுத்தத்தில் சிறந்தவனாகத் தென்படுவான். இறுதியில் இந்த ஆத்மீகக் கேடே அவனுடைய முடிவாக வந்து அமையும். தன்னுடைய சுய நன்மையை இலக்காக வைத்தே மாய்மாலக்காரன் எதையும் எப்போதும் செய்வான். ஆத்மீக வாழ்க்கையில் அவன் அதிக அக்கறை காட்டுவானாகில் அதைத் தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காகவே அவன் செய்வான். அவனைப்பற்றிப் பவுல் சொல்லும்போது, “அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வயிற்றுக்கே ஊழியஞ் செய்கிறார்கள்” என்கிறார் (ரோமர் 16:18).

மாய்மாலக்காரன் தான் செய்கின்ற அனைத்துக் காரியங்களையும் நேர்மையான, நீதியான எண்ணங்களோடு செய்யமாட்டான். பிலேயாம், ஆத்மீக விஷயங்களில் அதிக அக்கறை காட்டி, அநேக பலிபீடங்களைக்கட்டி பலிகளைக் கொடுத்தபோதும் அநீதத்தின் கூலியை நாடியே அவற்றை செய்தான் (எண். 22:23; 2 பேதுரு 2:15). யெகூ இரத்தவெறிபிடித்த ஆகாபின் குடும்பத்தை அழித்தான்; அந்தக் குடும்பம் கர்த்தரின் தண்டனையை அனுபவிக்கும்படி அவர்களை நிர்மூலமாக்கினான்; நாட்டில் பாகாலை வணங்கிவந்தவர்களையும் முற்றாக அழித்தான். இதையெல்லாம் யெகூ நாட்டைத் தன்னுடையதாக்கிக் கொள்ளும்பொருட்டு செய்தான் (2 இராஜா.10). கர்த்தரின் தண்டனை தங்கள் மேல் வந்துவிடுமே என்ற பயத்தின் காரணமாக ஆகாபும், நினிவே மக்களும் இரட்டுடித்துக் கொண்டு உபவாசமிருந்து ஜெபித்தார்கள் (1 இராஜா. 21; யோனா 3). பாபிலோனியாவில் இருந்த யூதர்கள் எழுபது வருடங்களாக உபவாசமிருந்து, அழுது ஜெபித்தார்கள். அந்நிய சிறைவாசத்தில் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அப்படிச் செய்தார்களே தவிர பாவத்தில் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல (சகாரியா 7:5, 6). அன்றாடம், தொடர்ந்து தன்னுடைய செயல்கள் எல்லாவற்றின் மூலமும் மனிதர்களுடைய பாராட்டுதலைப் பெறுவதையும், தேவ கோபத்தில் இருந்து தப்பிக்கொள்ளுவதையும், மனச்சாட்சியின் வாயை அடைப்பதையும் மட்டுமே உயரிய இலக்குகளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறவன் மாய்மாலக்காரன்.

அதேவேளை, மெய் விசுவாசி உபவாசிக்கும்போதும், ஜெபிக்கும்போதும், மனந்திரும்பி கர்த்தருக்குக் கீழ்ப்படியும்போதும், கர்த்தரின் மகிமையை இலக்காகக் கொண்டே அவற்றைச் செய்கிறான். தன்னுடய வாழ்க்கையின் மூலம் அதி உயர்ந்த மகிமையைக் கர்த்தர் அடையும்படிச் செய்வதே அவனுடைய இறுதி இலட்சியமாக இருக்கும் (சங். 115:1; 1 தெச. 2:6). கர்த்தரின் நாமம் மகிமையடையும்படியாக மெய்க்கிறிஸ்தவன் கஷ்டங்களைச் சுமக்கவும், வாழ்க்கையில் தாழ்நிலையை அனுபவிக்கவும் தயாராக இருப்

பான். ஆத்மீக, சமூக, உலக வாழ்க்கை அனைத்திலும் ஒருவன் கர்த்தரின் மகிமையை நாடுகிறானெனில் அதற்குக் காரணம் அவனுடைய இருதயம் நேர்மையாக இருப்பதுதான் (வெளி. 9:9-11). மெய்க் கிறிஸ்தவன் மனிதர் களிடம் பெறும் பாராட்டுதல்களையெல்லாம் கர்த்தரின் பாதத்தில் வைக்கிறான். அவன் கிறிஸ்துவின் தலையில் கிரீடத்தைச் சூட்டுவதை வாழ்க்கை இலட்சியமாகக் கொள்கிறான். கர்த்தரை சிம்மாசனத்தில் இருத்தி அனைத்தும் அவருடைய பாதத்தின் கீழ் வரும்படியாக உழைக்கிறான் (ரோமர் 14:7, 8). எல்லோரும் கர்த்தருக்கு முன் மண்டியிட வேண்டும் என்பதே அவனது நோக்கமாக இருக்கும். கர்த்தரின் நெருக்கத்தை உணரவும், கர்த்தரை உயர்த்தவும் உதவுகின்ற எதையும் மட்டுமே அவன் நேசிப்பான். தன்னுடைய சித்தத்தை நிறை வேற்றிக் கொள்ளுவதற்காகவும், இச்சைகளை அனுபவிப்பதற்காகவும், தன்னை வளர்த்துக் கொள்ளுவதற்காகவும், வசதியோடு வாழ்வதையும் இலக்காகக் கொள்ளாது கர்த்தருடைய மகிமைக்காகவே அவன் வாழ்வான். (1 கொரி. 10:28; வெளி. 12:11). “எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்” என்பதே அவனுடைய அன்றாடத் தியானமாக இருக்கும் (சங். 115:1).

கர்த்தரே மகிமைக்கு சொந்தக்காரராக இருக்கிறார்; தன் மகிமையை அவர் விட்டுக்கொடுப்பதில்லை. மெய் விசுவாசி இதை உணர்ந்திருப்பதால் கர்த்தருக்கு சொந்தமான மகிமையை அவன் எல்லா விஷயத்திலும் அவருக்கே அளிக்க முன்வருகிறான். இதற்காக மெய் விசுவாசி எல்லாக் காரியங்களிலும் பூரணமாகக் கர்த்தரை மகிமைப்படுத்துகிறான் என்று தவறாக எண்ணிவிடக்கூடாது. இந்த உலகத்தில் அவன் மகிழ்ச்சியோடு இதைச் செய்வதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருக்கிறான். பரலோகத்தில் மட்டுமே சகலதும் பூரணமாக இருக்கும். மெய் விசுவாசிகளின் இருதயத்தையும் சுயநலப்போக்கு விட்டு வைப்பதில்லை; மெய் விசுவாசிகள் அவற்றிற்காக வருந்தி அவ்வெண்ணங்களுக்கெதிராகப் போராடுவார்கள். தங்களுடைய குறைகளுக்காக அவர்கள் கர்த்தரிடம் மன்றாடுவார்கள். அவற்றை நீக்கிக்கொள்ளுவதையே தங்களுடைய அன்றாடக் கடமையாகக் கொண்டிருப்பார்கள். கர்த்தரை மகிமைப்படுத்துவதைத் தன்னுடைய நோக்கமாகக் கொண்டு வாழும் மெய்க் கிறிஸ்தவன் அன்றாடம் அந்தக் கடமையில் கண்ணுங்கருத்துமாக இருப்பதால் அவனுடைய சுயநல நோக்கங்கள் படிப்படியாக அழிந்து விடுகின்றன.

தங்களுடைய நீதிமானாக்குதலுக்கும் இரட்சிப்புக்கும், கிறிஸ்துவில் தன்னிறைவடையவும் எந்தவொரு மாய்மாலக்காரராலும் முழுமையாக கிறிஸ்துவில் நீதியான வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாது. மாய்மாலக்காரரான பரிசேயரும், சதுசேயரும் அன்றாடம் ஜெபம் செய்தனர், உபவாசமிருந்தனர், ஓய்வுநாளைத் தவறாகக் கடைப்பிடித்தனர், நற்கிரியைகளைச் செய்தனர். அவர்கள் இத்தகைய புறக்கிரியைகளிலேயே தங்கியிருந்து அவற்றைச் செய்வதில் திருப்தியடைந்தனர் (மத். 6; லூக். 18:11, 12). வெளி. 3:16-18ல் எழுதியிருப்பதை வாசியுங்கள். இத்தகைய புறக்காரியங்களைத் தவறாது செய்து தங்களுடைய இரட்சிப்பிற்காக அவற்றிலேயே தங்கியிருந்ததால் அவர்கள் இறுதியில் வீணாய்ப்போனார்கள்.

மாய்மாலக்காரன் தன்னுடைய கிரியைகளிலேயே எப்போதும் கண்ணாயிருப்பதோடு கிறிஸ்துவின் நீதியை ஒருபோதுமே எண்ணிப் பார்ப்பதில்லை. பரலோகத்தில் பணத்தைச் சேர்த்து வைத்திருப்பதுபோல் மாய்மாலக்காரன் தன்னுடைய கிரியைகளிலேயே எப்போதும் கண்ணாயிருக்கிறான். தன்னைப் போர்த்திக்கொள்ளுவதற்கு சுயநீதியாகிய போர்வையைத் தயாரிப்பதில் ஈடுபடுகிறான். நீதிமானாவதற்கு தன்னுடைய கிரியைகளை

விட மேலான கிறிஸ்துவின் நீதியை அவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை (ரோமர் 10:3). இரட்சிப்பை அடைவதற்கான முதல்படி நம்முடைய சுயநீதியை மறுதலிப்பதே. இரண்டாவதுபடி, சுவிசேஷத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படும் கிறிஸ்துவின் நீதியைத் தழுவிக்கொள்ளுவது. ஆனால், மாய்மாலக்காரன் இவற்றையெல்லாம் எண்ணிப்பார்ப்பதுமில்லை; அவற்றில் அக்கறை செலுத்துவதுமில்லை. மாய்மாலக்காரனின் நீதி பூரணமானதல்ல; அது அழுக்கான கந்தைபோலானது. இறுதிவரைக்கும் அதில் தங்கியிருப்பவன் தவறான பாதையில் போய்க்கொண்டிருக்கிறான் (ஏசா. 64:6). சகோதரரே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், தன்னுடைய சொந்தக் கிரியைகளான சிறகுகளில் மட்டும் தங்கி பரலோகத்துக்குப் பறந்து போக முனையும் ஒருவனுக்கு இரட்சகர் எதற்கு? ஒரு மனிதனுடைய சொந்தக் கிரியைகள் தேவ கோபத்தைத் தணித்து அவருடைய நீதியைப் பெற்றுக்கொடுக்க இயலுமானால் கிறிஸ்துவுக்கு நாம் விடை கொடுத்துவிட்டு, நமது கிரியைகளை மட்டும் நாடலாமே.

இரட்சிப்புக்காகவும், கர்த்தருடைய சமாதானத்துக்காகவும் தன்னில் காணப்படும் எதிலுமோ அல்லது தன்னுடைய கிரியைகளிலோ தங்கியிருக்கும் எந்த மனிதனும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளுவதோடு தன்னையே அழித்துக்கொள்ளுகிறான். கிறிஸ்துவின் நீதியின் முன் சரணடையாத மாய்மாலக்காரர்கள் அவரை நெருங்கமுடியாத தூரத்தில் இருக்கிறார்கள். மாய்மாலக்காரரின் அழுக்கான கந்தையாகிய கிரியைகள் மீது தன்னுடைய பரிசுத்தமான வெண்ணிற அங்கியாகிய நீதியைப் போர்த்துவதற்கு கிறிஸ்து ஒருபோதும் விரும்பமாட்டார் (வெளி 19:7, 8). மாய்மாலக்காரன் தன்னுடைய சொந்தக் கிரியைகளில் நம்பியிருப்பானெனில் அந்நம்பிக்கை அவனுடைய கிரியைகளை அழுக்காக்கி விடுகிறன. (நீதி. 21:27).

மெய்க்கிறிஸ்தவன் தன்னுடைய சுயநீதியை மறுதலிக்கிறான். தன்னுடைய சரீரத்தின் கிரியைகளில் அவன் நம்பிக்கை வைப்பதில்லை. தன்னுடைய சொந்த நீதியை அவன் நாய்க்கிடும் உணவைப் போலக் கருதுகிறான். (பிலிப்பியர் 3:8ல் காணப்படும் “நஷ்டம்” என்ற பதத்தின் எழுத்துபூர்வமான விளக்கம் இதுவே). தன்னுடைய கிரியைகளைப் பார்த்து “நீங்களே என்னுடைய தேவர்கள்” என்று அவன் ஒருபோதும் சொல்ல மாட்டான் (ஓசியா 14:3). கர்த்தரின் பரிசுத்தத்தையும், அவருடைய ஆளுகையின் நீதியையும், நீதியின் கட்டுப்பாட்டையும், கோபத்தின் பயங்கரத்தையும் மெய்க்கிறிஸ்தவர்கள் எண்ணிப் பார்க்கிறபோது தங்களுடைய சொந்தக் கிரியைகளையும்விட மகிமையானதும் பூரணமானதும், தவிர்க்கமுடியாததுமான மேலான நீதியின் அவசியத்தை உணர்கிறார்கள். உண்மையுள்ள விசுவாசி கிறிஸ்துவின் நீதியை விலை மதிப்பில்லாததாகக் காண்கிறான்: “உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மை பாராட்டுவேன்.” (சங். 71:16).

மெய்க்கிறிஸ்தவன் எல்லாவற்றையும்விட மேலாக கிறிஸ்துவின் நீதியில் மகிழ்ச்சியடைகிறான். எசாயா சொல்லுகிறார், “கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழ்கிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.” (ஏசாயா 61:10). “ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ அஸ்திவாரமாக ஒரு கல்லை நான் சீயோனில் வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான்.” (ஏசாயா 28:16). மெய்க்கிறிஸ்தவன் கிறிஸ்துவின் நீதியைத் தன்னுடைய ஆத்மீக வாழ்க்கைக்கு அடித்தளமாகக் கொண்டு அதில் ஆனந்தமடைகிறான்.

கிறிஸ்துவின் நீதியே தனக்கு பாதுகாப்பானதும் கர்த்தரின் கண்களுக்கு மகிமையுள்ளதாகவும் தென்படுவதாக மெய்க்கிறிஸ்தவன் கருதுகிறான். வரப்போகும் தேவ கோபத்திலிருந்து தன்னை விடுவித்து பாதுகாப்பளிக்கும் சாதனமாக கிறிஸ்துவின் நீதி மட்டுமே இருப்பதாக மெய்க்கிறிஸ்தவன் கருதுகிறான் (1 தெச. 1:10). தேவ கோபத்திலிலிருந்து தப்புவதற்கு கிறிஸ்துவின் நீதியாகிய போர்வை மட்டுமே உதவும் என்று நம்புகிறான் (ரோமர் 13:14). மாய்மாலக்காரன் தன்னுடைய நீதியைத் தவிர வேறு எதிலும் நம்பிக்கை வைப்பதில்லை. அவன் கிறிஸ்துவின் நீதியில் ஆனந்தமடைவதில்லை, அதுவே போதும் என்று நம்புவதுமில்லை. மாய்மாலக்காரர் அநேக கிரியைகளை வாழ்க்கையில் செய்தபோதும், அந்தக் கிரியைகளுக்கு மேலான வாழ்க்கையை அவர்களால் வாழ முடியவதில்லை. வாழ்வதற்காக கிரியைகளைச் செய்து, அக்கிரியைகளிலேயே தங்கியிருக்கும் மாய்மாலக்காரருக்கு அவையே ஆபத்தாகவும் முடியும்.

மாய்மாலக்காரன் கிறிஸ்துவை பூரணமாகத் தழுவிக்கொள்ளுவதில்லை. அவனால் கிறிஸ்துவில் பூரணமாக தங்கியிருந்து, கிறிஸ்துவே போதும் என்ற எண்ணத்தோடு வாழ முடியவதில்லை. கிறிஸ்துவை ஆனந்தத்தோடு அனுபவிக்க முடிவதில்லை. இந்த உலகத்தில் கிறிஸ்துவை அனுபவிப்பதே தனக்குக்கிடைக்கும் பெரும் பாக்கியமாகக் கருதி எந்த மாய்மாலக்காரரும் அதற்காக ஏங்கி நிற்பதில்லை. தன்னை இரட்சித்து, பரிசுத்தமாக வாழச் செய்யக்கூடியவர் கிறிஸ்து மட்டுமே என்று எந்த மாய்மாலக்காரரும் நம்புவதில்லை. தன்னுடைய பாவத்திலிருந்தும், தேவ கோபத்திலிருந்தும் விடுதலை தரும் வல்லமை கிறிஸ்துவுக்கு மட்டுமே இருக்கிறது என்று எந்த மாய்மாலக்காரரும் நம்புவதில்லை. கிறிஸ்துவில் அன்புகாட்டி அவரில் முழுத்திருப்தி அடையும் இதயம் மாய்மாலக்காருக்கு இருக்காது. கிறிஸ்துவோடு இருக்கும் அந்நியோன்யமான ஐக்கியத்தைப் பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாது (1 தெச. 1:10). தன் நோயைக் கிறிஸ்து குணமாக்க வேண்டும், தன்னை மன்னிக்க வேண்டும், தனக்கு இரட்சிப்பளிக்க வேண்டும் என்றெல்லாம் மாய்மாலக்காரர் விரும்பினாலும், கிறிஸ்துவில் முழு ஆனந்தத்தையும், திருப்தியையும் அடைய அவர்களால் முடியாது. கிறிஸ்துவோடு ஐக்கியத்தை அனுபவிக்க வேண்டும் என்று அவர்களுடைய இருதயம் ஏங்காது, தவிக்காது. ஆனால், மெய்க்கிறிஸ்தவன் கிறிஸ்துவே எல்லாம் என்று எண்ணி வாழ்வான். கிறிஸ்து இல்லாத பரலோகம் கூட அவனுக்கு வெகு சாதாரணமான இடமாகவும், தனக்கு சங்கடமளிக்கும் இடமாகவும் தென்படும். கிறிஸ்துவே மகிமையாகிய மோதிரத்தில் வண்ண ஒளி வீசும் இரத்தினக்கல்லாக அவனுக்குத் தெரிவார் (பிலி. 1:21; 3:7-10).

கிறிஸ்துவைப் பற்றிய சகல போதனைகளின் அடிப்படையிலும், சுவிசேஷ நிபந்தனைகளின் அடிப்படையிலும் கிறிஸ்துவை முழுமனதோடு ஏற்றுக்கொள்ள இந்த உலகத்தில் எந்த மாய்மாலக்காரரும் விரும்புவதில்லை. கீழ் வரும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கிறிஸ்துவை அடைய முடியும் என்று சுவிசேஷத்தில் வாசிக்கிறோம். முழு இருதயத்தோடும் சுவிசேஷம் காட்டும் கிறிஸ்துவை நாம் முழுமையாக அடைய வேண்டும் (மத். 16:24).

பூரணமான கிறிஸ்து என்று சொல்லுகிறபோது, நாம் அவருடைய அத்தனைக் குணாதிசயங்களையும், பணிகளையும் குறிக்கிறோம். அதேபோல் முழு இருதயத்தோடும் என்று சொல்லுகிறபோது நம்முடைய சரீரத்தின் அத்தனைப் பாகங்களையும் குறிக்கிறோம். பிதா, கிறிஸ்துவை தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும், இராஜாவாகவும் சுவிசேஷத்தில் விளக்கியிருக்கிறார். கிறிஸ்துவின் இந்தப் பணிகளில் ஒன்றால் மட்டும் மாபெரும் இரட்சிப்பிற்கான அனைத்தையும் செய்திருக்க முடியாது. கிறிஸ்து தீர்க்கதரிசியாக இருந்து நமக்கு போதனை செய்கிறார், ஆசாரியராக இருந்து நமது பாவங்களிலிருந்து நமக்கு விடுதலை தந்து நமக்காக பரிந்துரைக்கிறார், இராஜாவாக இருந்து நம்மைப் பரிசுத்தமாக்கி இரட்சிக்கிறார். பவுல் சரியாகவே சொல்லுகிறார், “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1 கொரி. 1:31).

தேவ கோபத்திலிருந்தும், நரகத்திலிருந்தும், அக்கினிக் கொப்பறையின் நித்திய எரிவிலிருந்தும், சாபத்திலிருந்தும் தப்பிக்கொள்ளுவதற்காக கிறிஸ்துவை ஆசாரியராக ஏற்றுக்கொள்ள மாய்மாலக்காரர் முன்வரலாம். ஆனால், தீர்க்கதரிசியாக இருந்து தொடர்ந்து போதிக்கவும், இராஜாவாக இருந்து தன்னை ஆளவும் கிறிஸ்துவை முழுமனதோடு உண்மையாகத் தழுவிக்கொள்ள மாய்மாலக்காரர் ஒருபோதும் விரும்புவதில்லை. கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள முன்வரும் அநேகர் அவரை ஆண்டவராக ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுவார்கள். தன்னை ஆளுகின்ற, தனக்குக் கட்டளையிடுகின்ற கிறிஸ்துவை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

கிறிஸ்துவின் ஆனந்தத்தில் பங்குகொள்ள விரும்பும் மாய்மாலக்காரருக்கு அவருடைய பரிசுத்தத்தில் பங்குகொள்ள விருப்பமிருக்காது. அவரால் பாவ நிவாரணமடைய விரும்பும் மாய்மாலக்காரர், அவருடைய அரசாங்கத்துக்கும், அவருடைய நீதிக்கும் கட்டுப்பட மனதில்லாதிருக்கிறார்கள். சுவிசேஷம் அளிக்கும் வசதிகளை அனுபவிக்க முன்வரும் மாய்மாலக்காரர் அது எதிர்பார்க்கின்ற கடமைகளைச் செய்ய முன்வருவதில்லை. அதுவும் சுவிசேஷம் எதிர்பார்க்கும், மனித இருதயத்தின் ஆழத்தில் இருந்து வர வேண்டிய கடமைகளைச் செய்ய விரும்புவதில்லை. மாறாக, மெய்க்கிறிஸ்தவன் கிறிஸ்துவை அவரது பணிகளனைத்தோடும், இரட்சகராகவும், ஆண்டவராகவும் தழுவிக்கொள்ளுகிறான். கொலோசெயர் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டதைப்போல ஏற்றுக்கொள்ளுகிறான் (கொலோ. 2:6). மாய்மாலக்காரரால் இதைச் செய்ய முடிவதில்லை.

(இந்த ஆக்கம் Free Grace Broadcaster என்ற சஞ்சிகையில் வெளிவந்த ஆங்கில ஆக்கத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. – ஆசிரியர்.)

 

சிருஷ்டியின் பிரசவ வேதனை

சுனாமி 2004ல் இலட்சக்கணக்கான மக்களை ஆசியாக் கண்டத்தின் பல நாடுகளில் சின்னாப்பின்னமாக்கியது. கடந்த வருடம் வருடம் அமெரிக்காவின் தென்பகுதியில் கட்ரீனா சூறாவளி ஒரு நகரத்தையே அழிவுக்குக் கொண்டுவந்து உலகத்தின் செல்வமிக்க நாட்டை நிலைகுழைய வைத்தது. அதே நாட்டின் புளோரிடா மாநிலத்தை இருபது தடவைகளுக்கு மேலாக சூறாவளிகள் இந்த வருடம் மட்டும் தாக்கியிருக்கின்றன. சமீபத்தில் “வில்மார்” சூறாவளி மறுபடியும் புளோரிடாவைத் தாக்கி சேதமேற்படுத்தியது. இதெல்லாம் போதாதென்று பாகிஸ்தானைச் சேர்ந்த காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு என்பதினாயிரம் பேர்வரை மாண்டனர். பனிக்குளிரால் பரிதவித்து அங்கே இன்றும் இறந்து கொண்டிருப்பவர்கள் அநேகர். கடந்த ஒரு வருடத்துக்குள்ளாக இந்த உலகத்தில் இத்தனையும் நிகழ்ந்து நாலு இலட்சம் மக்கள் வரையில் இந்தப் பேரழிவுகளால் மட்டும் உயிரிழந்திருக்கிறார்கள். அன்றாடம் இறந்து கொண்டிருப்பவர்களைத் தவிர சடுதியாக எதிர்பாராத விதத்தில் இத்தனைப் பெருந்தொகையினர் இந்த உலகத்தைவிட்டே போய்விட்டார்கள். இதையெல்லாம் எண்ணிப்பார்க்கும் உலகத்து மனிதன் கடவுள் இருக்கிறாரா? அவருக்கு உண்மையிலேயே கண்களிருக்கின்றனவா என்று அலறித் துடித்துக் கேட்கிறான். அவனால் இதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.

வேதமறிந்தவர்களாகிய, கிறிஸ்துவை இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டிருக்கிற நாம் இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது. உலகத்து மனிதனைப் போல, அறிவற்று அநாவசியமான சிந்தனைகளை நாம் வளர்த்துக்கொள்வதில்லை. இவையெல்லாம் உலகத்தில் நிகழும் என்று இயேசு சொல்லியிருப்பதை நாம் ஏற்கனவே வேதத்தில் இருந்து வாசித்து அறிந்துகொண்டிருக்கிறோம் (மத். 24). அதுவும், இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபிக்கும்போது இவையெல்லாம் உலகத்தில் அதிகரிக்கும் என்றும் வேதம் சொல்லுகிறதை நாமறிவோம். பவுல் அப்போஸ்தலர் ரோமர் 8ல், பாவத்திலிருந்து விடுதலை அடையத் தவிக்கும் உலகத்தின் பிரசவ வேதனையின் அடையாளமாக இவற்றை வர்ணித்திருக்கிறார். பயங்கரமான அழிவுகளான இவை ஏன் நிகழுகின்றன என்பதை விசுவாசத்தின் அடிப்படையில் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த அழிவுகளின் மத்தியில் துன்பப்படுகிறவர்களுக்கு உதவ வேண்டியதும் நமது கடமை. உலகத்தில் விசுவாசி மட்டுமே பிரதிபலன் எதிர்பார்க்காது எல்லோருக்கும் உதவி செய்யக்கூடிய இருதயத்தைக் கொண்டிருக்கிறான். பல நாடுகளில் திருச்சபைகள் ஒன்றினைந்து, சுனாமியால் துன்பப்படுகிறவர்களுக்கும், கட்ரீனாவால் கஷ்டப்படுகிறவர்களுக்கும், பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் உதவி வருவது கிறிஸ்துவின் அன்பை விசுவாசிகள் வெளிப்படுத்துவதன் அடையாளமாக இருக்கின்றன. இதை நான் எழுதிக்கொண்டிருக்கிறபோதே சீர்திருத்த போதகரான எனது பாகிஸ்தான் நண்பரொருவர் நிலநடுக்கத்தால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற மக்களுக்கு, அந்த உயர்ந்த மலைப்பகுதியில் எங்கோ ஒரு மூலையில் இருந்து முடிந்த உதவிகளை செய்து கொண்டிருப்பதை நினைத்துப் பார்க்கிறேன். விசுவாசிகள் இல்லாத உலகத்தில் மக்கள் படும் துன்பமும் வேதனையும் சொல்ல முடியாததாய்த்தான் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

இந்த நேரத்தில் விசுவாசிகள் போல் பாசாங்கு செய்கின்ற சிலரும் துன்பப்பட்டவர்களுக்கு சேர்க்கப்பட்ட பணத்தையும், பொருளையும் தங்களுடைய சுயநலப்போக்கால் தமதாக்கிக் கொண்டிருக்கிற அவலத்தைப் பற்றிய செய்திகளும் நமது காதுகளை எட்டுகின்றன. இவர்கள் இதயமில்லாதவர்கள்; கிறிஸ்துவின் அன்பை அறியாத கொடுமைக்காரர்கள். சுனாமியால் எந்தப் பாதிப்பும் அடையாமல் சுனாமியைச் சாட்டி தன்னுடைய வீட்டுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொண்ட ஒரு போதகரைப் பற்றிக் கேள்விப்பட்டபோது எனக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. தேவ பணியை யூதாசின் இடத்தில் இருந்து வயிற்றுக்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இந்தக் கயவர்கள் கர்த்தரிடம் இருந்து தப்ப முடியாது.

இவற்றையெல்லாம்விட இந்தப் பேரழிவுகள் மூலம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய சில உண்மைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

(1) இந்தப் பேரழிவுகள் நமது கர்த்தர் பேசுகிற தேவனாக இருக்கிறார் என்பதை உணர்த்துகின்றன. பாவத்தையும் அதன் கொடுமைகளையும் சிலைகளால் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடியும். அவற்றால் பேச முடியாது. எதையும் செய்யவும் முடியாது. பணத்தை வாரிக்கொட்டி, நீரால் கழுவிப் பூச்சூடி பிராத்தனைகளைச் செய்தாலும் கல்லுச்சாமி கல்லாய்த்தான் எப்போதும் இருக்கும். நம் கர்த்தர் ஜீவனுள்ளவர். அவர் பரிசுத்தர். நீதியானவர். நம்மைப் படைத்தவர். தன் சித்தப்படி சகலதையும் பார்த்துப் பராமரித்து வருகின்ற கர்த்தர் தன்னுடைய மக்களோடு மட்டுமல்லாமல், தன்னை அறியாத மக்களோடும் தொடர்ந்து பேசி வருகிறார். மனிதன் தன்னை விசுவாசித்து தன்னோடு ஐக்கியத்தில் வர வேண்டும் என்று விரும்பும் கர்த்தர் சுவிசேஷத்தின் மூலம் அவனை அன்றாடம் மனந்திரும்பித் தன்னிடம் வரும்படி அழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் பேசுகிற தேவனாக இருக்கிறார் என்கிறது வேதம். மனிதன் கர்த்தரைத் துச்சமாக எண்ணிப் பாவச்செயல்களை அகம்பாவத்தோடு செய்து வருகிறபோது பேசுகிற கர்த்தர் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. தன் சிருஷ்டிகளைப் பாரமரிக்கும் கர்த்தர், தன்னுடைய மகிமையைப் பாதிக்கும் எதையும் உலகத்தில் அனுமதிப்பதில்லை. மனிதனின் அகம்பாவமும், பாவச்செயல்களும் அதிகரிக்கும்போது கர்த்தர் பேரழிவுகளை அனுமதித்து மனிதனை எச்சரிக்கிறார். ஜீவனுள்ள தேவனாக, பேசுகிற தேவனாக, மனிதனைப் படைத்த தேவனாகத்தான் இருக்கிறேன் என்பதை அவர் மனிதனுக்கு புலப்படுத்துகிறார். தன்னுடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமே மக்களுக்கு பாவநிவாரண முண்டு என்பதை உணர்த்துகிறார். என்னை நோக்கிப் பார், நான் இருப்பதை உணர்ந்துகொள், என் மகனை விசுவாசி என்கிறார். கர்த்தரின் பேச்சே பாகிஸ்தான் நிலநடுக்கத்தின் மூலம் கேட்டது. கட்ரீனா அழிவின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. சுனாமி மூலம் ஆசியா முழுதும் அறிவிக்கப்பட்டது. இந்தப் பேரழிவுகள் ஜீவனுள்ள பேசுகிற கர்த்தர் நம்மோடு பேசுகிறார் என்பதை உணர்ந்து நாம் பரிசுத்தத்தில் வளர வேண்டும். இன்று அவர்கள், நாளை நாமாகக்கூட இருந்துவிடலாம்.

(2) இந்தப் பேரழிவுகள் கர்த்தரின் பார்வையில் பாவம் எத்தனைக் கோரமானது என்பதை உணர்த்துகின்றன. கட்ரீனா கோரமாகத் தாக்கிய அமெரிக்காவின் தென் பகுதி ஒரு காலத்தில் பைபில் வட்டம் என்று அழைக்கப்பட்டது. அங்கே அநேக நீக்ரோ மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இன்று அங்கே பாவம் படமெடுத்து ஆடிவருகிறதாகக் கேள்விப்படுகிறேன். குடியும், போதை மருந்தும், கொள்ளையும், கொலையும், தாதாக்களும், வறுமையும் நிறைந்திருக்கும் பகுதியாக அது இருக்கிறது. கட்ரீனா தாக்கு வதற்கு முன்பாக நியூ ஆர்லியன்சில் தன்னினப் புணர்ச்சியில் ஈடுபட்டு வருகிறவர்களின் பெருங் கூட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. கட்ரீனா அது நடக்க முடியாமல் செய்துவிட்டது. மோசமான பாவம் எல்லை கடந்து போகிறபோது கர்த்தர் பேரழிவுகளின் மூலம் பாவத்தின் கோரத்தை மக்களுக்கும், முக்கியமாக நமக்கும் புலப்படுத்துகிறார். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்களும், அவர்களுடைய அரசர்களும் கர்த்தரை விட்டு விலகிப் போய் அந்நிய தேவர்களை வணங்கி பாவச் செயல்களில் ஈடுபட்டு அதில் இன்பம் கண்டுகொண்டிருந்தபோது கர்த்தர் அந்நிய நாடுகளான அசிரியா, சிரியா, பாபிலோனியா போன்றவற்றைப் பயன்படுத்தி அவர்களைத் தாக்கி அழித்திருக்கிறார். அதன் மூலம் பாவத்தின் கோரத்தையும், அதில் ஈடுபடுவதால் வரும் ஆபத்தையும் கர்ததர் சுட்டிக்காட்டுகிறார்.

தெலிபானும், அல்காய்டாவும் வளர்ந்து இன்று உலகைப் பயமுறுத்திக்கொண்டிருப்பதற்கு பாகிஸ்தான் ஒருகாரணம் என்பததை எவரும் மறுக்க முடியாது. அக்கிரமக்காரர்களை அந்நாடு ஒரு காலத்தில் வளர்த்துவிட்டது. இன்றும் அத்தகையவர்களுக்கு புகலிடமாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அபின் வளர்ப்பில் ஈடுபட்டு அதை ஏனைய நாடுகளுக்கு அனுப்பி மக்களைப் போதைப் பொருளால் அழிக்கும் செயலுக்கு பாகிஸ்தானும் ஒரு காலத்தில் பின்பலமாக, இருந்திருக்கிறது. இதையெல்லாம் மனிதர்கள் மறந்து விடுவது சகஜம். நம்மை ஆளுகின்ற கர்த்தர் மறப்பதில்லை. பாவத்தை அவர் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுவதில்லை என்பதை உலகில் நிகழும் பேரழிவுகள் உணர்த்தி வருகின்றன. இதை வாசிக்கின்ற சகோதரனே! பாவத்தைப் பற்றிய உன்னுடைய எண்ணங்கள் வேத அடிப்படையில் இருக்கின்றனவா? பாவங்களை மன்னிக்கத் தயாராக இருக்கும் கர்த்தர் நீ பாவத்தில் வளருவதை சகிப்பதில்லை என்பதை உணருகிறாயா? விசுவாசியான நீ, பாவத்தோடு அன்றாடம் போராடி அதை உன் சரீரத்தில் அடக்கி ஆளும் பணியில் நீ ஈடுபட்டு வருகிறாயா? பாவம் மோசமானது, அகோரமானது என்பதை அறிந்துகொள். பேரழிவுகளை அனுமதிக்கும் கர்த்தர் பாவத்தின் கோரத்தை நாம் அறிந்து கொள்ளும்படியாக நம்மோடு தொடர்ந்து பேசுகிறார்.

(3) இந்தப் பேரழிவுகள் கிறிஸ்துவின் வருகையை உணர்த்தி, சுவிசேஷப் பணியில் நாம் மும்முரமாக ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. நாலு இலட்சத்துக்கு மேலானோர் பன்னிரண்டு மாதங்களில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். அவர்களில் கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களின் தொகையே அதிகம். இன்னும் அழியாமல் வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் கிறிஸ்துவை அறியாதவர்கள் எண்ணிக்கை பெரிது. அவர்கள் நம்மைச் சுற்றியிருக்கிறார்கள். நம் வீட்டுக்கு அருகில் இருக்கிறார்கள். நம் வேலைத்தளங்களில் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாத இடமில்லை. அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

உலகப் பேரழிவுகள் கிறிஸ்துவின் வருகையின் நாள் சமீபிக்கிறது என்பதை நிச்சயமாகத் தெரிவிக்கின்றன. உலகம் நியாயத்தீர்ப்புக்கு தயாராகிறது என்பதை உணர்த்துகின்றன. உலகத்தின் பிரசவ வேதனை இனி அதிகரிக்கத்தான் செய்யும் என்பதைக் காட்டுகின்றன. கிறிஸ்து வரப்போவதால் அவருடைய சபை அவரை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும், போராட்டங்களுக்கும் மத்தியில் விசுவாசிகள் பரிசுத்தத்தில் வளருவதோடு, இயேசுவின் நற்செய்தியை சகலருக்கும் மும்முரமாக எடுத்துச் சொல்லி சபை வளர்ப்புப் பணியில் ஊக்கத்தோடு ஈடுபட வேண்டும். இயேசுவின் வருகை சமீபிக்கிறதென்றால் சபை வளர்ப்பில் ஈடுபடுவதில் என்ன பிரயோஜனம் என்று சிலர் கேட்கிறார்கள். இவர்கள் வேதபோதனைகளை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. திருச்சபை அமைப்பும், சபை வளர்ப்புப் பணியுமே இந்த உலகத்தில் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பணிகள். இயேசு வருகிறபோது தன்னுடைய சபைக்காக வரப்போகிறார். தன் சபையை அரவணைத்து தன்னோடு அழைத்துச் செல்ல வருகிறார். சுவிசேஷத்தை மட்டும் சொல்லிவிட்டு, ஆதாயப்படுத்திக்கொண்ட ஆத்துமாக்களை கர்த்தரின் வழியில் சபையில் இருந்து வளரச் செய்யாதவர்கள் நிலத்தில் விதை விதைத்துவிட்டு அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பதில் அக்கறை காட்டாதவர்களைப் போலத்தான் இருப்பார்கள்.

இன்று நாம் ஊக்கத்தோடு ஈடுபட வேண்டிய ஊழியம், சுவிசேஷப்பணி மூலமான திருச்சபை அமைப்பே. அதுவும், சீர்திருத்த சத்தியங்களின் அடிப்படையில் சபைக்கிருக்க வேண்டிய அத்தனை இலக்கணங்களையும் கொண்ட சபைகளை அமைப்பதே நமது பணியாக இருக்க வேண்டும். நண்பர்களே, சுவிசேஷத்தைத் தவறாது அறிவியுங்கள். மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களை சபைக்குள் அழைத்து வந்து வேத போதனைகளின்படி வளரும்படிச் செய்யுங்கள். ஆரோக்கியமான உபதேசங்களை அவர்கள் பின்பற்றும்படிச் செய்யுங்கள். இதை வாசிக்கும் எவராவது இதுவரை கிறிஸ்துவை விசுவாசிக்காதிருந்தால் வரப்போகும் தேவ கோபத்திலிருந்தும், பேரழிவிலிருந்தும் தப்ப இன்றே இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள்.

இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு

அழைப்பு

இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு என்ற போதனை எதைக் குறிக்கிறது என்பதையும், அந்தப் போதனையை அறிந்திருப்பதன் அவசியத்தைப் பற்றியும் கடந்த இதழில் ஆராய்ந்திருந்தோம். இந்தப் போதனையை நாம் விபரமாக தொடர்ந்து ஆராயவிருப்பதால் வாசகர்கள் இதற்கு முன்பு வந்துள்ள ஆக்கத்தையும் ஒருமுறை வாசித்து விட்டு இந்த ஆக்கத்தை வாசிப்பது பயன்தரும். இதே முறையில் ஒவ்வொரு இதழிலும் வரும் தொடர்களைப் படிக்கும்போது அதற்கு முன்வந்துள்ள ஆக்கத்தை வாசித்துவிட்டுப் படிப்பது நல்லது.

இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கை ஆராய்கிறபோது அதோடு தொடர்புடைய கிருபைகளில் எது முதலில் இடம்பெற வேண்டும் என்பதில் சீர்திருத்த இறையியல் போதகர்கள் கருத்து வேறுபாடுகள் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கருத்து வேறுபாடு இறையியல் போதனை பற்றிய கருத்து வேறுபாடு அல்ல. படிமுறை ஒழுங்கில் முதலில் வரவேண்டியது எது, அடுத்து வர வேண்டியது எது என்பது பற்றிய ஆரோக்கியமான கருத்து வேறுபாடு மட்டுமே. வேத சத்தியங்களைத் துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் வேதத்தைத் தீவிரமாக ஆராய்கிறபோது ஏற்படுகிற வேத அடிப்படையிலான ஆரோக்கியமான கருத்துவேறுபாடுகள் நல்லதே. அவற்றை இறையியல் குளருபடிகள் கொண்ட கருத்து வேறுபாடுகளாக நாம் கருதக்கூடாது.

அழைப்பு (Call)

நாம் கடந்த முறை பார்த்தபடி புதிய ஏற்பாட்டில் ரோமர் 8:29-30 ஆகிய பகுதியில் காணப்படும் இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் அழைப்பு (Call) முதலாவது இடத்தைப் பெறுகிறது. அது சரியே. இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு அழைப்பிலேயே ஆரம்பமாக வேண்டும். இரட்சிப்பைப் பற்றிய வேதபோதனைகள் இரட்சிப்பு கர்த்தருடையது என்பதை விளக்குகின்றன. கர்த்தர் முதலடி எடுத்துவைத்து நம்மில் கிரியை செய்யாமல் இரட்சிப்பு நமக்கு ஒருபோதும் கிடைக்காது. மனிதன் இரட்சிப்பை அடைவதற்கு செய்யக்கூடிய கிரியைகள் ஒன்றுமேயில்லை. ஆகவே, இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் அழைப்பே முதலில் இடம்பெற வேண்டும்.

அழைப்பை வேத அடிப்படையில் இரண்டுவிதமாகப் பிரித்துப் பார்ப்பது அவசியம். அழைப்பில் இத்தகைய இரு பிரிவுகள் இருப்பதை வேதம் பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றது. அப்பிரிவுகளை வெளிப்புற அழைப்பு (External Call), உள்ளார்ந்த அழைப்பு (Internal Call) என்று அழைப்பார்கள். வெளிப்புற அழைப்பு மனிதர்கள் அனைவரும் அனுபவிக்கக் கூடிய கிருபை. இதனைப் பொதுவான கிருபை (Common Grace) என்றும் கூறுவார்கள். உதாரணத்திற்கு மழை நல்லவர், தீயவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோர் மேலும் பெய்கின்றது. அதேபோல் கர்த்தர் எத்தனையோ நன்மையான காரியங்களை உலக மக்கள் அனைவரும் சமமாக அனுபவிக்கும்படி கிருபை புரிந்திருக்கிறார். அத்தோடு, உலக மக்கள் அனைவரும் சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திருந்த மறுத்தாலும் அவர்கள் அனைவரும் சுவிசேஷத்தைக் கேட்கக் கூடிய வாய்ப்பைக் கர்த்தர் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். இவ்வுதாரணங்கள் கர்த்தரின் பொதுவான கிருபையைச் சுட்டிக்காட்டுகின்றன. வெளிப்புற அழைப்பு அல்லது பொதுவான கிருபையை சுட்டிக்காட்டும் வேத வசனங்கள் உள்ளன. மத்தேயு 22:14; 1 கொரிந்தியர் 1:23-24; ரோமர் 1:6; 8:28; யூதா 1 ஆகிய வசனங்களை வாசிக்கவும். மத்தேயு 22 ம் அதிகாரத்தின் 14ம் வசனத்தில் இயேசு, “அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்” என்றார். இது சுவிசேஷ செய்தியின் மூலம் அநேகர் வெளிப்புறமான பொதுவான அழைப்பைப் பெற்றிருந்தாலும், அவர்கள் எல்லோருமே தெரிந்துகொள்ளப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

பொதுவான, வெளிப்புற அழைப்பு சுவிசேஷத்தின் மூலம் மனித இனம் முழுவதற்கும் கொடுக்கப்பட்டாலும், திட்ப உறுதியான அழைப்பின் மூலமே மனிதன் இரட்சிப்பை அடைவதால் வெளிப்புற அழைப்பின் மூலம் என்ன பயன்? என்ற கேள்வி எழலாம். அது நியாயமான கேள்வியே. வெளிப்புற அழைப்பின் மூலம் கர்த்தரின் சுவிசேஷத்தை மனிதன் கேட்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுவதால் அதன் மூலம் கர்த்தர் அவனுடைய பாவத்தைக் கண்டிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் வருகிறபோது (பெந்தகொஸ்தே தினத்தில்) அவர் இந்த உலகத்தின் பாவத்தைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார் (யோவான் 16:8) என்று இயேசு சொன்னார். ஆவியானவர் சுவிசேஷ செய்தியின் மூலமே இந்தக் காரியத்தை உலகத்தில் செய்து வருகிறார். உலகம் பாவத்தைப் பற்றியும், வரப்போகிற நியாயத் தீர்ப்பைப் பற்றியும் அறிந்துகொள்ள சுவிசேஷம் பொதுவான விதத்தில் உதவுகிறது. அத்தோடு, பாவத்தில் இருக்கும் உலக மக்கள் சுவிசேஷத்தின் மூலமான பொதுவான, வெளிப்புற அழைப்பால் வேறுசில பலன்களையும் பெற்றுக்கொள்ள முடிகின்றது. அதை எபிரேயர் 6:4&8 வரையிலுள்ள வசனங்கள் விளக்குகின்றன. பாவத்தைப் பற்றியும், கர்த்தரைப் பற்றியும், பரலோகத்தைப் பற்றியும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், ஆவியானவரின் வல்லமையைக் குறித்தும் அறிந்துகொள்ளுவதோடு சுவிசேஷத்தைக் கேட்டு குற்றவுணர்வடைந்து தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற உணர்வையும் அவர்கள் அடையும்படி வெளிப்புற அழைப்பு அவர்களுக்கு உதவுகிறது. இத்தனை பொதுவான பலன்களை அது தந்தபோதும் இரட்சிப்பை மட்டும் அதால் மனிதனுக்கு அளிக்க முடியாது.

உள்ளார்ந்த அல்லது திட்ப உறுதியான அழைப்பு (Effectual Call)

உள்ளார்ந்த அழைப்புக்கு (Internal Call) உரித்தானவர்கள் மட்டுமே வாழ்க்கையில் இரட்சிப்பை அடைகிறார்கள். இதைத் திட்ப உறுதியான அழைப்பு (Effectual Call) என்றும் அழைப்பார்கள். இந்தப் பதத்தையே இந்த ஆக்கத்தில் தொடர்ந்து பயன்படுத்தப் போகிறோம். ஆரம்பகால சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியவர்களும் இந்தத் திட்ப உறுதியான அழைப்புக்குள்ளேயே இரட்சிப்போடு தொடர்புடைய ஏனைய கிருபைகளையும் இணைத்து விளக்கியிருந்தார்கள். அதாவது, மறுபிறப்பு, பாவத்தை உணர்தல், மனந்திரும்புதல் அனைத்தையும் திட்ப உறுதியான அழைப்புக்குள் அடக்கி இரட்சிப்புக்குரிய விளக்கத்தைத் தந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு கிரிஸ்டோபர் லவ்வினுடைய (Christopher Love) இரட்சிப்பை விளக்கும் போதனைகளை அளிக்கும் நூலைக் கூறலாம். இதன் தலைப்பு “திட்ப உறுதியான அழைப்பு” என்பதாகும். இந்தத் தலைப்புக்குள் உள்ளடக்கி இரட்சிப்புப் பற்றிய அனைத்துப் போதனைகளையும் தந்திருக்கிறார் நூலாசிரியர். இம்முறையையே அநேக பியூரிட்டன்களும் பின்பற்றியுள்ளார்கள். 1689 விசுவாச அறிக்கையில்கூட அதன் 10ம் அதிகாரமான திட்ப உறுதியான அழைப்பில் மறுபிறப்பிற்கான விளக்கமும் உள்ளடங்கியுள்ளது. இப்படி விளக்குவதில் எந்தவிதமான தவறும் இல்லை. பவுல் கொரிந்து சபை விசுவாசிகளையும், ரோம சபை விசுவாசிகளையும் “அழைக்கப்பட்டவர்கள்” என்ற பெயரில் அழைத்தார் (ரோமர் 1:2; 1 கொரி. 1:2). இங்கே “அழைக்கப்பட்டவர்கள்” என்ற பதம் அவர்கள் இரட்சிப்பை அடைந்தவர்கள் என்ற அர்த்தத்தையும் கொண்டிருப்பதைக் கவனிக்கவும் இந்தப் பதத்தில் இரட்சிப்புக்குரிய ஏனைய கிருபைகளும் உள்ளடங்கியுள்ளன.

பியூரிடன்களுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும் பின் எழுந்த சீர்திருத்தவாத அறிஞர்களும், சமகால சீர்திருத்த அறிஞர்களும் திட்ப உறுதியான அழைப்பை இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கின் ஒரு அங்கமாக தனியாகப் பிரித்து விளக்கியிருக்கிறார்கள். அதேவிதமாக மறுபிறப்பு, பாவத்தை உணர்தல், மனந்திரும்புதல் ஆகிய இரட்சிப்போடு பிரிக்கமுடியாத தொடர்புடைய ஏனைய கிருபைகளையும் தனித்தனியாக விளக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இரட்சிப்பாகிய கிருபையில் பங்கு வகிக்கும் வெவ்வேறு அங்கங்களைப் பிரித்து விளக்கி ஆழமான இறையியல் அறிவைப் பெற்றுக் கொள்வதற்காகவே சமகால சீர்திருத்தவாத அறிஞர்கள் இம்முறையைக் கையாண்டுள்ளார்கள். இப்படிப் படிப்பதில் எந்தத் தவறும் இல்லை. இது இரட்சிப்பு பற்றிய தெளிவான அறிவைப் பெற்றுக்கொள்ள உதவும். உதாரணத்திற்கு, லூயிஸ் பேர்கொவ், ரொபட் ரேமன்ட், ஜோன் மரே போன்ற சீர்திருத்தவாத அறிஞர்களின் ஆக்கங்களில் இந்த முறையிலேயே இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு விளக்கப்பட்டிருக்கிறது.

இறையாண்மையுள்ள கர்த்தர் புறச்சாதனங்களின் தொடர்புகளெதுவுமின்றி தன்னுடைய மக்களைத் திட்ப உறுதியாக அழைக்கிறார். இந்தத் திட்ப உறுதியான அழைப்பு கர்த்தரின் வார்த்தையினூடாக, ஆவியினால் மனித குலத்தில் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுவதாக இருக்கிறது. இதை விளக்கும் வசனங்களாக 1 கொரிந்தியர் 1:23-24; 1 பேதுரு 2:9 ஆகியன உள்ளன. கர்த்தரின் இந்த வல்லமையான அழைப்பு தெரிந்துகொள்ளப்பட்டவர்களை இரட்சிக்கும் வல்லமை கொண்டது. புறஜாதியார் மத்தியில் பவுலும், பர்னபாவும் பிரசங்கித்தபோது அவர்கள் அதைக் கேட்டு சந்தோஷப்பட்டு கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். அதேவேளை, “நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்ட வர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்” என்கிறது அப்போ. 13:28. நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் திட்ப உறுதியாத அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்த வசனம் போதிக்கிறது. திட்ப உறுதியான அழைப்பில் ஒருபோதும் மாற்றங்கள் ஏற்பட முடியாது. திட்ப உறுதியாக அழைக்கின்ற கர்த்தர் தன் மனதை ஒருபோதும் மாற்றிக்கொள்வதில்லை (ரோமர் 11:29).

திட்ப உறுதியாக கர்த்தர் தன் மக்களை அழைக்கிறபோது அது அவர்களுடைய முழு இருதயத்தையும் பாதிக்கிறது. ஆத்துமாவினுடைய மனம் புது ரூபமாகிறது (எபேசி 1:17, 18). கல்லான இருதயம் அகற்றப்பட்டு நவமான இருதயம் நமக்குக் கொடுக்கப்படுகிறது (எசேக்கியல் 36:26-27). ஆத்துமாவின் சித்தம் புதுப்பிக்கப்படுகிறது (பிலிப்பியர் 2:13). மேலும் விளக்குவதானால், ஆத்துமாவின் இருதயத்தை அது தாக்கி அவனுடைய பாவத்தை உணர்த்தி அதற்காக வருந்தும்படிச் செய்கிறது. கிறிஸ்து யார் என்பதை அறிந்துணரும்படிச் செய்கிறது. கிறிஸ்துவைத் தேவனாக ஏற்று விசுவாசிக்கும்படிச் செய்கிறது. வெளிப்புற அழைப்பு மனிதனுடைய சிந்தனையைத் தாக்கி அவனுக்கு அறிவைத் தந்தபோதும், அவனுடைய உள்ளுணர்வுகளை ஆழமாகப் பாதிப்பதில்லை. திட்ப உறுதியான அழைப்பு ஆத்துமாவின் சகல பகுதிகளையும் அதாவது, அவனுடைய மனம், சிந்தனை, உணர்வுகள், அத்தனையையும் வல்லமையாகப் பாதிக்கிறது. திட்ப உறுதியான அழைப்பு இத்தகைய பலன்களைத் தருகிறபோது மறுபிறப்பு ஏற்கனவே ஆத்துமாவில் நிகழ்ந்துவிட்டதன் பலனாக இவை இடம்பெறுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் மறுபிறப்பு முதலில் வர வேண்டுமா? அல்லது அழைப்பா? என்ற கேள்வியும் எழலாம். கால அடிப்படையில் அல்லாது இறையியல் விளக்க அடிப்படையில் அழைப்பே முதலில் வருவதாக விளங்கிக் கொள்வது பொருந்தும் என்கிறார் இறையியல் அறிஞரான ஜோன் மரே. திட்ப உறுதியான அழைப்பைப் பெற்றுக்கொண்ட ஆத்துமா நிச்சயம் மறுபிறப்பின் அனுபவத்தை உணரும். இவை இரண்டை யும் பிரிக்க முடியாது. அத்தோடு, கால இடைவெளி அடிப்படையில் இவற்றைப் பிரித்துப் பார்ப்பதும் தவறு. சீர்திருத்த பாப்திஸ்து போதகர் ஜிம் டோம் (Jim Domm) எழுதி இதுவரை வெளியிடப்படாத, திட்ப உறுதியான அழைப்பு பற்றிய ஆக்கத்தில் பின்வருமாறு விளக்குகிறார்: “திட்ப உறுதியான அழைப்பைக் கர்த்தர் தெரிந்துகொள்ளப் பட்டவர்களுக்கு கொடுக்கும்போது அவர்களில் அதேநேரத்தில் உட்புற மாற்றங்களும் உடனடியாக ஏற்படுகின்றன. திட்ப உறுதியான அழைப்பையும், ஆத்துமாவில் நிகழும் உள்ளார்ந்த ஆவிக்குரிய மாற்றங்களையும் வேதம் பிரித்து விளக்குகிறது. இருந்தபோதும் இவை இரண்டும் ஒரே காரியத்தையே விளக்குகின்றன. அதாவது, திட்ப உறுதியான அழைப்பும், மறுபிறப்பும் ஒன்றே. இவை இரண்டையும் வேதம் பிரித்து விளக்கினாலும், ஒரே காரியத்தையே நாம் வெவ்வேறு கோணத்தில் பார்க்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.”

பாவத்தை உணர்தலும், அதற்காக வருந்துதலும்

திட்ப உறுதியான அழைப்போடு தொடர்புடையதாக பாவத்தை உணர்தல், அதற்காக வருந்துதல், மறுபிறப்படைதல் எல்லாம் இணைந்திருந்த போதும் இறையியல் விளக்கம் கருதி திட்ப உறுதியான அழைப்பின் காரணமாக தெரிந்துகொள்ளப்பட்ட ஆத்துமாவில் ஏற்படும் பாவ உணர்வை அடுத்துக் கவனிப்போம்.

கர்த்தருடைய வார்த்தையின் மூலமாக திட்ப உறுதியான அழைப்பு ஆத்துமாவுக்கு அளிக்கப்படுகிறபோது, ஆத்துமா பாவத்தைத் தன்னில் உணர ஆரம்பிக்கிறது. அதுமட்டுமல்லாமல் பாவத்திற்காக வருந்தவும் செய்கிறது. வெளிப்புறமான, பொதுவான அழைப்பின் மூலம் ஆத்துமாக்களுக்கு குற்றவுணர்வு ஏற்பட்டாலும், திட்ப உறுதியான அழைப்பின் மூலமாக மட்டுமே மெய்யான பாவ உணர்வும், வருந்துதலும் ஏற்படுகின்றது. இதை கெட்ட குமாரனின் உவமையில் இருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது (லூக்கா). திட்ப உறுதியான அழைப்பைப் பெற்றுக்கொண்டதாலேயே கெட்ட குமாரன் மெய்யாகவே பாவத்திற்காக வருந்தினான். மெய்யாகவே மனந்திரும்பினான். பாவத்தின் பாவத்தை உணர்ந்து அதற்காக வருந்தாதவர்கள் திட்ப உறுதியான அழைப்பைப் பெற்றவர்களாக இருக்க முடியாது. ஜோன் நியூட்டன், ஜோன் பனியன் போன்றவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பெற்ற இந்த அனுபவத்தை தங்கள் சரிதத்தில் விளக்கியிருக்கிறார்கள். இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டு மரித்தகள்வர்களில் ஒருவன் திட்ப உறுதியான அழைப்பை மரிக்கும் தறுவாயில் பெற்று தன்னுடைய பாவங்களுக்காக மெய்யாக வருந்தியதை வேதத்தில் வாசிக்கிறோம்.

இரட்சிப்பை முழுமையாக அடைவதற்கு முன்னர் சில ஆத்துமாக்கள் இந்தப் பாவ உணர்தலையும், அதற்காக வருந்தும் அனுபவத்தையும் சில காலம் வாழ்க்கையில் அனுபவிக்க நேரிடும். ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் இந்தவகையில் குறுகிய ஒரு காலப்பகுதிக்கு எல்லோரும் இரட்சிப்பை அடையுமுன் பாவத்திற்காக வருந்த வேண்டியதில்லை. ஜோன் பன்யனுடைய வாழ்க்கையில் அவர் இதை சில காலம் அனுபவித்ததாக எழுதியிருக்கிறார். இருந்தாலும், மனந்திரும்புகிற ஒவ்வொரு பாவியும் பாவத்தின் பாவத்தை உணர்ந்து அதற்காக வாழ்க்கையில் வருந்தாமல் இரட்சிப்பை அடையமுடியாது என்பதை மட்டும் வேதம் தெளிவாகப் விளக்குகிறது. விபச்சாரியான சமாரியப் பெண் தன் வாழ்க்கையில் தன்னுடைய பாவத்தை உணர்ந்து அதைத் துறந்தாள் என்று யோவானில் வாசிக்கிறோம். தன் மனமாற்றத்தையும், மனந்திரும்புதலையும் அவள் தன் கிராம மக்களுக்கு முன் எடுத்துரைக்கத் தவறவில்லை. கர்த்தரின் திட்ப உறுதியான அழைப்பு ஆத்துமாவில் இதைச் செய்வதாக இருக்கிறது. சிலருடைய வாழ்க்கையில் பாவத்திற்காக வருந்துகிற இந்த அனுபவம் அசாதரணமானதாக இருந்துவிடலாம். பவுல் அப்போஸ்தலன், ஜோன்

நியூட்டன், ஜோன் பனியன் ஆகியோரின் வாழ்க்கையில் அதை வாசிக்க முடிகிறது. ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கையிலும் இது அசாதாரணமாக நிகழ வேண்டும் என்பதில்லை. இத்தகைய அசாதாரணமான அனுபவம் இல்லாமல் இயேசுவை விசுவாசிப்பது விசேஷமான அனுபவமாக இருக்காது என்று சிலர் தறவாக எண்ணிவிடுகிறார்கள். இயெசு கிறிஸ்துவை விசுவாசிப்பதும், இரட்சிப்பை அடைவதும் அசாதாரணமான அனுபவங்களே. மனிதன் இயற்கையாக அடையக்கூடிய அனுபவம் அல்ல அது. கர்த்தர் தன்னுடைய வல்லமையால் ஆவியின் மூலம் ஆத்துமாவில் செய்யும் அற்புதம் இது. அப்படியிருக்க வேறு அசாதாரண அனுபவங்களை நாம் தேடிப் போகக் கூடாது. அதுவும் வேதத்தில் காணமுடியாத, வேதம் விளக்காத அனுபவங்களைத் தேடி ஓடுவது மெய்யான விசுவாசத்தை நம்மில் ஏற்படுத்தாது.

ஆவியானவரால் ஆத்துமாவில் நிகழும் பாவ உணர்தலும், பாவத்திற்கான வருந்துதலும், அந்த ஆத்துமா இரட்சிப்பை அடைவதற்கு ஆவியானவர் அவரைத் தயார் செய்யும் கிரியையே (Preparatory work of the Spirit) என்று விளக்கியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லுவதில் உண்மையிருந்த போதும் அதை நாம் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. அதாவது, ஆத்துமா இரட்சிப்பை அடைவதற்கு முன்பாக ஆவியானவர் அவர்களை இரட்சிப்புக்காகத் தயார் செய்து, அதற்குப்பிறகு அவர்களுக்கு இரட்சிப்பை அளிப்பதாகக் கருதிவிடக்கூடாது. இப்படிப் பொருள் கொள்வது தவறு. உண்மையில் திட்ப உறுதியாக கர்த்தரால் அழைக்கப்படுகிறவர்கள் தங்களில் மறுபிறப்பை அடைந்து பாவ உணர்வு பெற்று, அதற்காக வருந்தி, மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள். இவையெல்லாம் திட்ப உறுதியான அழைப்போடு தொடர்புடையதும், அந்த அழைப்போடு பிரிக்க முடியாதபடி இணைந்து ஒரே நேரத்தில் நிகழும் அனுபவங்களாகும். திட்ப உறுதியான அழைப்பு கிடைக்கப்பெற்றவர்களில் இந¢தக் கிருபையின் அம்சங்கள் நிச்சயம் காணப்படும். இவை இல்லாத இடங்களில் திட்ப உறுதியான அழைப்பை நாம் பார்க்க முடியாது.

“என்னுடைய ஆத்மீக வெளிப்பாடுகள் எல்லாம் வெறும் பாசாங்கு மட்டுமே. என்னுடைய சரீரத்தில், மற்றவர்கள் பாராட்டும்படியான செயல்களைச் செய்ய எத்தனை தடவை முயற்சித்திருக்கிறேன். மற்றவர்கள் என்னைப் பற்றி நல்லவன் என்று நினைக்க வேண்டுமென்பதற்காக நல்லவனாக நடித்திருக்கிறேன். அகங்காரமும், சுய நீதியும என்னைத் தவறான வழிகளில் போக வைத்தனவே. எத்தனை முறை பிரசங்க மேடையில் தவறாக நடந்திருக்கிறேன். முன்னால் இருக்கிறவர்கள் கேட்கும்படி ஜெபிக்கவில்லை. தொழுநோயாளனின் நிலையில் இருந்து ‘நான் சுத்தமானவனல்ல, சுத்தமானவனல்ல’ என்று கதறுமளவுக்கு என்னில் தவறுகள் நிறைந்திருக்கின்றன.”

– எ. டபிள்யூ. பிங்க் (A. W. Pink) –

 

கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியம் – 3

வேத போதனைகளின்படி திருச்சபை இந்த உலகத்தில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு வேதம் காட்டும் தவிர்க்க முடியாத விதிகளை இந்த ஆக்கத்தின் மூலம் விரிவாக ஆராய்ந்து வருகிறோம். கடந்த இதழில் முதலாவது விதியான, “திருச்சபைப் பணிகள் அனைத்தும் கர்த்தருடைய இறையாண்மையின் அடிப்படையில் அதற்குக் கட்டுப்பட்டு அமைய வேண்டும்” என்பதை விளக்கியிருந்தோம். கிறிஸ்து இயேசு ஆண்டு வருகின்ற சபை அவருடைய அதிகாரத்தின்படி, அவருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அமைய வேண்டும் என்பதே இந்த விதியாகும். இனி நாம் இரண்டாவது விதியை ஆராய்வோம்.

(2) கர்த்தரின் வார்த்தை சகல அதிகாரத்தையும் தன்னில் கொண்டு அனைத்தின் மீதும் அதிகாரமுள்ளதும், சகலதுக்கும் போதுமானதாகவும் இருக்கின்றது என்பதே இரண்டாவது விதி.

சுவிசேஷத்தை அறிவித்து திருச்சபை அமைப்பாகிய மிஷன் ஊழியத்தில் ஈடுபடுகின்ற சபைகள் வேதம் பற்றிய இந்த நம்பிக்கை இல்லாமல் அந்தப் பணியில் ஈடுபட முடியாது. வண்டிகள் ஓடுவதற்கு பாதைகள் தேவை. அதே போல்தான் திருச்சபை அமைப்புக்கு வேதம் பற்றிய அசைக்க முடியாத நம்பிக்கைகள் அவசியம். வீடு கட்டுவதற்கு திட்டமிடும் என்ஜினீயர் அதற்கு வரைபடம் போடுவார். அந்த வரைபடத்தைக் கவனமாக வரைந்து அந்த அடிப்படையில் வீட்டைக் கட்டுவார். நமக்கு வரைபடம் வேதம்தான். வரை படத்தை மீறிக் கட்டடத்தைக் கட்டினால் கட்டிடம் உறுதியாக இருக்காது; சட்டரீதியானதாகவும் இருக்காது. பியானோ ஒன்றின் முன் நின்று அதை லாவகமாக இசைக்கின்றவர் தனக்கு முன்பாக இசை நோட்ஸை வைத்திருப்பார். அது அழகுக்காக வைக்கப்படவில்லை. அந்த நோட்ஸை மீறி அவர் பியானோ வாசித்தால் இசை இசையாக இருக்காது. நோட்ஸுக்கு ஏற்ப அதன்படியே இசை அமைய வேண்டும். அதே போல் தான் திருச்சபை ஊழியத்திற்கும் வேதம் பற்றிய உறுதியான நம்பிக்கைகள் அவசியம்; அந்நம்பிக்கைகளின்படி செயல்படுவதும் அவசியம்.

மேலே நாம் பார்த்த விதியை விளக்குகின்ற பல்வேறு வேதப் பகுதிகள் இருந்தபோதும் அவற்றில் முக்கியமானதொரு வசனத்தைப் பார்ப்பது அவசியம். 2 தீமோத்தேயு 3:16-17 வரையிலான வசனங்களில் பின்வரும் வாக்கியங்களை வாசிக்கிறோம். “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”

முதலில், பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில் இந்த வசனங்கள் அமைந்திருக்கும் விதத்தை நாம் புரிந்துகொள்ளுவது அவசியம். இந்த வசனங்களை பவுல் எழுதுகின்ற வேளையில் அப்போஸ்தலப் பிரதிநிதியாகிய தீமோத்தேயு எபேசிய சபை நிர்வாகங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். அந்த சபையில் தீமோத்தேயு நிர்வாகத்தை எப்படிக் கொண்டு நடத்த வேண்டும், சபை மக்களை எந்த முறையில் வழிநடத்த வேண்டும் என்பது பற்றிய விளக்கங்களை பவுல் இந்த நிருபம் முழுவதும் தந்திருக்கிறார். அவ்வாறாக சபையை நடத்திச் செல்லுகிற வேளையில் தீமோத்தேயு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய முக்கிய உண்மை ஒன்று இருந்தது. அதையே பவுல் மேலே நாம் பார்த்த வசனங்களில் விளக்குகிறார். அதை விரிவாகச் சொல்லுவதானால் பின்வருமாறு விளக்கலாம். சபையை வழிநடத்தும் போதகனாக இருக்கின்ற தீமோத்தேயு அந்த சபைக்கு ஆதாரமாக இருக்கின்ற கர்த்தர் தந்திருக்கின்ற வார்த்தையின் தன்மையைப் பூரணமாக உணர்ந்திருந்து, அந்த வார்த்தையின் அடிப்படையில் சபை நடத்த வேண்டும் என்பதே பவுல் கொடுத்த ஆலோசனை. கர்த்தரின் வார்த்தை எத்தன்மையுள்ளதாக இருக்கின்றது என்பதை பவுல் விளக்கும் விதத்தை இனிப் பார்ப்போம். வேதத்தின் தன்மையை விளக்கும் பவுல் மூன்று உண்மைகளை இந்த வசனங்களில் ஆணித்தரமாகக் கூறுகிறார்.

(1) வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கின்றன.

(2) வேத வாக்கியங்கள் நமக்கு அவசியமான அத்தனைப் போதனைகளையும் தருகின்றன.

(3) ஒரு மனிதன் நற்போதகனாக இருந்து பணிபுரிவதற்குத் தேவையான அத்தனையையும் வேத வாக்கியங்கள் தரக்கூடியதாக இருக்கின்றன.

இந்த மூன்று உண்மைகளையும் நாம் நன்றாகப் புரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், கர்த்தரின் வார்த்தையின்படி திருச்சபைப் பணிகளை இந்த உலகத்தில் நடத்திச் செல்வதற்கு இந்த சத்தியங்கள் அவசியமாக இருக்கின்றன. அத்தோடு, கர்த்தரின் வார்த்தையை மீறாமல் சபைக் காரியங்களைக் கொண்டு நடத்துவதற்கும் இந்த உண்மைகள் நமக்கு உதவுகின்றன.

முதலில், ஆதியாகமம் முதல், வெளிப்படுத்தல் விசேஷம் வரையிலான வேதத்தின் அத்தனை நூல்களும் பரிசுத்த ஆவியானவரால் வேதத்தை எழுத்தில் வடித்த நூலாசிரியர்களுக்கு தரப்பட்டன. நூலாசிரியர்கள் கர்த்தர் சொன்னதை மட்டுமே எழுத முடிந்தது; தங்களுடைய சொந்த சிந்தனைகளை அவர்களால் வேதத்தில் புகுத்த முடியவில்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை பரிசுத்த ஆவியானவர் அவர்களில் இருந்து அவர்களைப் பயன்படுத்தி கர்த்தரின் வார்த்தையை எழுத்தில் வடித்தார். அந்த அடிப்படையில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமான சத்தியம் வேதம் தவறுகளற்றது, குறைவில்லாதது, தெளிவுள்ளது, பூரணமானது என்பதாகும் (சங்கீதம் 19; 119).

இந்த உண்மைகளின் அடிப்படையில், விசுவாசிகளான நாம் வேதம் எந்தத் தவறுகளுமில்லாத பூரணமான கர்த்தரின் வார்த்தை என்பதை ஆணித்தரமாக விசுவாசிப்பது அவசியம். பழைய, புதிய ஏற்பாடுகளைக் கொண்ட வேதம் கர்த்தரின் சத்தியமான வார்த்தை. அவற்றில் எந்தவிதமான குளறுபாடுகளோ, மனித சிந்தனைகளோ, காலத்துக்குதவாத போக்குகளோ துப்பரவாகக் காணப்படவில்லை. அத்தோடு, அவற்றில் எந்தப் பகுதியாவது, அவை வரலாறாக இருந்தாலும் சரி அல்லது போதனைகளாக இருந்தாலும் சரி அல்லது பெயர்ப்பட்டியல்களாக இருந்தாலும் சரி, நமக்கு விளங்காததாகவும், தவறானதாகவும் தென்பட்டால் அதற்குக் காரணம் நமது அறிவுக் குறைவே தவிர வேதத்தில் எந்தத் தவறுமில்லை என்பதையும் நாம் ஆணித்தரமாக நம்ப வேண்டும். வேதத்தின் ஒரு பகுதியை ஏனைய பகுதிகளோடு ஒப்பிட்டு, உழைத்துப் படித்தால் அதன் போதனைகளைத் தெளிவாக எப்போதும் விளங்கிக்கொள்ள முடியும். வேதத்தில் நமக்கு வெளிப்படுத்தப்படாத எதுவும் இருந்தால் அதைக் கர்த்தர் நமக்கு வெளிப்படுத்த சித்தங்கொள்ளவில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

வேதம் தவறுகளற்ற, தெளிவான, பூரணமான கர்த்தரின் வார்த்தை மட்டுமல்லாமல், அது நமக்குத் தேவையான அனைத்துப் போதனைகளையும் தருவதாகவும் இருக்கின்றது. சாதாரண மனிதனையோ, அல்லது தொடர்ந்து மாற்றமடைந்து அழிவை மட்டுமே நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் இந்த உலகத்தையோ சார்ந்து நிற்பதற்கு அவசியமில்லாது இந்த உலகத்தில் விசுவாசிகள் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் கொண்டு நடத்தவும், திருச்சபை சம்பந்தமான அனைத்துக் காரியங்களை நடத்திச் செல்லவும் அவசியமான அத்தனைப் போதனைகளையும் வேதம் தவறாது அளிக்கிறது. காலை உணவுக்கு இட்டிலி சாப்பிடுவதா? அல்லது தோசை சாப்பிடுவதா? என்பது போன்ற விஷயங்களைத் தீர்மானிப்பதற்கு மட்டும் நமக்கு சகல சுதந்திரத்தை தந்திருக்கின்ற கர்த்தர் நமது ஆத்மீக வாழ்க்கைக்கும், சபைக்கும் உரிய காரியங்களை எப்படி நடத்துவது என்பதைத் தம்முடைய தெளிவான வல்லமையுள்ள வார்த்தையின் மூலமே வெளிப்படுத்துகிறார். மேற்குறிப்பிட்ட காரியங்களுக்கான அத்தனைப் போதனைகளும் கர்த்தருடைய வார்த்தையில் காணப்படுகின்றன. இது வரை நாம் விளக்கியதிலிருந்து விளங்கிக் கொள்ள வெண்டிய உண்மையென்னவென்றால், கர்த்தரின் வார்த்தை சகலதுக்கும் போதுமானது என்பதுதான். அதாவது நமது ஆத்மீக வாழ்க்கைக்கும், திருச்சபை பற்றிய காரியங்களுக்கும், உலகம் பற்றிய காரியங்களுக்கும் வேதத்தை மட்டுமே நாம் நம்பியிருக்க வேண்டும்; வேதம் நமது சகல தேவைகளையும் தீர்த்து வைக்கும் வல்லமையைக் கொண்டிருக்கிறது. வேதம் மட்டுமே போதும், நமது ஆத்மீக, திருச்சபைத் தேவைகளுக்கு வேறு எதையும் நாட வேண்டிய அவசியமில்லை என்ற ஆணித்தரமான நம்பிக்கையில்லாதவர்கள் சுவிசேஷப்பணி மூலம் திருச்சபையைக் கர்த்தருடைய வழியில் அமைக்க முடியாது, நடத்தவும் முடியாது.

அடுத்ததாக, ஒரு சபைப் போதகன் ஊழியத்துக்குரிய தகுதிகளைக் கொண்டு நற்கிரியையுள்ள போதகனாக இருக்கவும், சகல இறையியல் அறிவைப் பெற்றுக்கொள்ளவும் வேதம் போதுமானதாக இருக்கிறது. அதாவது, போதகனுக்குத் தேவையான அனைத்து இறையியல் அறிவும் வேதத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். வேதத்தில் இருந்து தன்னுடைய இறையியல் அறிவைப் பெற்றுக் கொள்ளுகிறவனே முழுமையான போதகனாக இருக்க முடியும். போதகனுக்கு அவசியமான அத்தனை வேத அறிவையும் தரக்கூடிய பூரணமான வார்த்தையாக கர்த்தரின் வேதம் அமைந்திருக்கிறது.

அப்போஸ்தலப் பிரதிநிதியாகிய திமோத்தேயு நற்போதகனாக இருந்து எபேசிய சபைக் காரியங்களை நடத்திச் செல்லுவதற்கு வேதத்தைத் தவிர வேறு எதிலும் தங்கியிருக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. சபை ஆராதனை, சபை நிர்வாகம், சுவிசேஷப் பணி, போதக ஊழியப்பணி என்று சபை சம்பந்தமான அத்தனைக்கும் தீமோத்தேயுவுக்கு வேதம் மட்டுமே தேவையானதாகவும், போதுமானதாகவும் இருந்தது.

கர்த்தர் நமக்களித்துள்ள வேதம் பற்றிய இத்தகைய நம்பிக்கைகள் நம்மிடம் ஆணித்தரமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த நம்பிக்கைகளைக் கொண்டிராமல் நாம் சபை நிறுவுதலாகிய மிஷனரி வேலையில் ஈடுபடுவது தன் கையிலிருக்கும் துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாமலும், அதில் நம்பிக்கை வைக்காமலும் போருக்குப் புறப்படும் போர்வீரனைப் போலாகிவிடும். அத்தகைய நிலைமையில் இன்று அநேகர் இருந்துவருகிறார்கள்.

இதுவரை வேதத்தைக் குறித்து நாம் பார்த்த சத்தியங்களிலிருந்து நாம் எதை அறிந்துகொள்ளுகிறோம்? வேதத்தின் அதிகாரத்திலும், போதுமான தன்மையிலும் உறுதியான, அசைக்க முடியாத நம்பிக்கையில்லாமல் சபை நிறுவும் பணியில் எவரும் ஈடுபட முடியாது என்ற உண்மையை அறிந்துகொள்ளுகிறோம். சபை அமைப்பு சம்பந்தமான அத்தனைப் பணிகளுக்கும் சாவி போல் அமைந்திருப்பது வேதமே.

வேத அதிகாரத்திலும், அதன் போதுமான தன்மையிலும் நம்பிக்கையில்லாதவர்கள்

வேத அதிகாரத்தில் நம்பிக்கையில்லாததால்தான் ஹெரல்ட் கேம்பிங் திருச்சபை அமைப்பில் நம்பிக்கையிழந்து, விசுவாசிகள் திருச்சபைகளை விட்டு விலகிவந்து வீட்டில் ஆராதனையில் ஈடுபட வேண்டுமென்று அமெரிக்காவில் போதித்து வருகிறார். கர்த்தரின் வார்த்தையை விசுவாசத்தோடு வாசித்து, கர்த்தரும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் சபை மேல் வைத்திருக்கும் ஆழமான அன்பையும், மதிப்பையும் புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு திருச்சபைக்கெதிராகப் பேசவும் நடக்கவும் சிந்தனை வராது.

வேதம் போதிக்கும் திருச்சபை பற்றிய போதனைகளில் நம்பிக்கையில்லாததால்தான் ஜே. என், டார்பியும் (J. N. Darby), ஸ்கோபீல்டும் (Scofield) திருச்சபையில் நம்பிக்கை வைக்காமல் சுவிசேஷ ஊழியப்பணிகளை வித்தியாசமான வழிகளில் பார்க்கவும், செய்யவும் ஆரம்பித்தார்கள். கிறிஸ்து இயேசு தன்னுடைய சபையைப் பார்க்கும் கண்ணோட்டத்தில் இவர்களுக்கு சபையைப் பார்க்கத் தெரியவில்லை. வேத அதிகாரத்தை ஆத்துமாக்கள் புறக்கணிக்க ஆரம்பித்ததால்தான் பரா-சர்ச் ஸ்தாபனங்கள் என்று அழைக்கப்படும், கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் உலகெங்கும் தலைவிரித்தாட ஆரம்பித்தன; திருச்சபைப் பணிகளைக் கையிலெடுத்துக் கொண்டு சபையை அடிமைப்படுத்த ஆரம்பித்தன.

வேத அதிகாரத்திலும், அதன் போதுமான தன்மையிலும் அறிவும், நம்பிக்கையும் இல்லாவிட்டால் நம்மை ஆள ஆரம்பிப்பது பிரெக்மட்டிஸம் (Pragmatism) மட்டுமே. வேதத்தை நம்பியிருக்காமலும், அதன் வழிகளில் கவனம் செலுத்தாமலும் நமக்கும், எல்லோருக்கும் பிடித்தமானது எதுவோ அதன்படி நடப்பதே பிரெக்மட்டிஸப்போக்கு. யெரொபெயாம் தானிலும், பெத்தேலிலும் கர்த்தருக்கெதிராக ஆலயமெழுப்பிய பிரெக்மட்டிஸ்ட்டாக இருந்தான் என்பதைப் பழைய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். ஆராதனை விதிகளை சபை ஆராதனையில் கைக்கொள்ளாது, ஆத்துமாக்களுக்கு இசை விருந்தளித்தும், அவர்கள் ஆசைப்படுவதை செய்ய அனுமதித்தும் செயல்படுகிறவர்களும், திருச்சபை அமைப்பு, போதகப்பணி பற்றிய வேத போதனைகளை அலட்சியப்படுத்தி தானே தனக்கு இராஜாவாக தனி ஊழியத்தையும், ஸ்தாபனங்களையும் நடத்தி வருகிறவர்களும் பிரெக்மட்டிஸ்டுகளே. இவர்கள் வேத அதிகாரத்தில் நம்பிக்கை வைத்து செயல்படவில்லை. அதற்குக் கட்டுப்பட்டு நடக்கும் இருதயத்தைக் கொண்டிருக்கவில்லை.

தமிழ் இனத்தில் பிரெக்மட்டிஸம் இன்று நேற்றில்லாமல் தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதை நாம் உணராமலிருக்கிறோம். சாதிவழிச் சபைகள் நடத்துவதும், திருச்சபை அங்கத்துவத்தை சபையில் கடைப்பிடிக்காமலும், வேதபூர்வமான திருச்சபை அமைப்பை ஏற்படுத்தாமலும் சபை என்ற பெயரில் ஒரு கூட்டத்தை வைத்து சபைக்குரிய வேத இலக்கணங்களே நடைமுறையில் இல்லாமல் அதை நடத்துவதும், சபையில் சாதி பார்த்தும், தரம் பார்த்தும், வரதட்சனையை அனுமதித்தும் திருமணக்காரியங்களை நடத்துவதும் பிரெக்மட்டிஸப் போக்கிற்கான உதாரணங்கள். தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில் நம்மைப் பிடித்தாட்டும் இந்துப் பண்பாட்டில் இருந்து விலக மனமில்லாமல் கிறிஸ்துவின் பெயரைப் பயன்படுத்தி இந்துக்களைப்போல வாழ்ந்து வருகிற கூட்டங்கள் தங்களைச் சபைகள் என்று அழைத்துக் கொண்டாலும் கர்த்தரின் பார்வையில் சபைகளாக இருக்க முடியாது. கர்த்தரின் சபைக்குரிய வேத இலக்கணங்களைக் கொண்டிராத கூட்டம் எதுவுமே சபையாக இருக்க முடியாது. பிரெக்மட்டிஸத்தின் அடிப்படையில் நடந்துவரும் ஊழியங்களைச் திருச்சபை ஊழியங்களாக வேதம் எப்போதுமே அங்கீகரிக்கவில்லை. வேதத்தின் அதிகாரத்தை நிராகரிக்கும் பிரெக்மட்டிஸம் வேத அதிகாரத்திற்கு முதல் எதிரி என்பதை நாம் உணர வேண்டும். பிரெக்மட்டிஸ சிந்தனைகளையும், போக்கையும் தவிர்த்துக் கொண்டால் மட்டுமே நமக்கு விடிவு உண்டு.

வேத அதிகாரத்திற்கு தமிழினத்தில் இன்று இடமில்லாமலிருப்பதற்கான காரணங்கள்

(1) வேதத்தைப் பற்றிய வேதபூர்வமான சிந்தனைகள் அநேகர் மத்தியில் இன்னும் வளரவில்லை. – அதாவது, வேதத்தை மதிக்கின்ற அநேகர் இருந்த போதும் அவர்களுக்கு வேதத்தின் தன்மை, அதன் பயன்பாடு குறித்த வேதமே விளக்குகின்ற சத்தியங்களை அறியாதிருக்கிறார்கள்; அல்லது அறிந்திருந்தும் அவற்றை அலட்சியப்படுத்துகிறார்கள். இரட்சிப்பை அடைவதற்கான சுவிசேஷ செய்தியைத் தருவதற்கும், கர்த்தரைக் குறித்து தியானிப்பதற்கும் மட்டுமே வேதம் தரப்பட்டிருக்கிறது என்று எண்ணி வாழ்கிறவர்கள் தொகை நம்மத்தியில் அதிகம். இதற்குக் காரணம் திருச்சபைகளும், போதகர்களும் வேதத்தின் தன்மையைப் பற்றிய அவசியமான, ஆழமான அறிவை வளர்த்துக்கொள்ளாமல் அவற்றை ஆத்துமாக்கள் அறிந்துகொள்வதற்குத் தடையாக இருப்பதுதான். வேத அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு போதித்து, நடக்கின்ற போதகர்களின் தொகை தமிழினத்தில் மிகக்குறைவு. காளான்கள் போல் விடிவதற்கு முன் முளைத்து, வளர்ந்து, எவருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமலும், எந்தச் சபைத் தொடர்பும் இல்லாமலும் இருந்து வரும் தன்னார்வத் தனி ஊழியங்கள் வேத அதிகாரம் நம்மத்தியில் எந்தளவுக்கு நிராகரிக்கப்படுகிறது என்பதற்கு நல்ல உதாரணம். இன்று ஆத்துமாக்கள் வேதத்தின் அதிகாரத்தைப் பற்றியோ, அதன் போதுமான தன்மை பற்றியோ எந்த உணர்வும் இல்லாமல் வாழ்ந்து வருகிற அலங்கோலத்தை நாம் தமிழினத்தில் பார்க்கிறோம்.

(2) வேத போதனைகளின்படி அமைந்து வளரும் திருச்சபைகள் அரிதாகக் காணப்படுகின்றன. – வேத அடிப்படையில் திருச்சபைகள் அமைந்து வளருகிறபோது ஆத்துமாக்களுக்கு ஆழமான வேத அறிவு கிடைக்கிறது. வேத அடிப்படையில் அமைந்து வளரும் திருச்சபைகள் இல்லாத நிலைமையில் ஆத்துமாக்கள் வேத அறிவு இல்லாமல் சுய சிந்தனைகளின் அடிப்படையில் போலிக் கிறிஸ்தவ வாழ்க்கை நடத்த நேரிடுகிறது. நம் மக்கள் மத்தியில் வேதபூர்வமாக அமைந்து செயல்படும் சபைகளின் தொகை குறைவானபடியால் வேத அதிகாரத்துக்கு மதிப்புத் தருகிறவர்களின் தொகையும் குறைந்தே காணப்படுகிறது. தனி மனிதர் களின் குடும்பங்கள் ஆண்டாண்டுக்கும் சபைகளை சொந்த வியாபாரத்தைப் போல நடத்தி வருவதும், போலிப் போதனைகளை இனங்கண்டு அவற்றையும், அவற்றைப் போதிப்பவர்களையும் தம் மத்தியில் இருந்து அகற்றத் தெரியாது, சபை ஒழுங்கைக் கடைப்பிடிக்க வழிதெரியாது சபைகள் என்ற பெயரில் அநேக அமைப்புகள் இருந்து வருவதும், ஒழுக்கக் குறைவானவர்களும், பண ஆசை பிடித்தவர்களும் ஊழியத்தில் சாவகாசமாக நுழைந்து வாழ்க்கை நடத்தி வருவதும் எந்தளவுக்கு சபை ஊழியங்கள் கவலை தரக்கூடிய நிலைமையில் நம்மத்தியில் இருக்கின்றன என்பதை விளக்குகின்றன. வேதபூர்வமான திருச்சபைகள் குறைவாக இருப்பதும் ஆத்துமாக்கள் மத்தியில் வேத அதிகாரம் பற்றிய தெளிவான அறிவில்லாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகின்றது.

திருச்சபை அமைப்புப்பணியும் வேத அதிகாரமும்

திருச்சபை அமைப்புப் பணியாகிய மிஷனரி ஊழியத்தைப் பற்றி ஆராய்ந்து வருகிற நாம், வேத அதிகாரத்துக்குட்படாமல் அந்தப் பணியில் ஈடுபட முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கர்த்தருக்கு மகிமையளிக்கும்படி, ஆவியின் ஆசீர்வாதத்தை நமது ஊழியம் அடைய வேண்டுமானால் அது வேத அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். சாட்டுக்காக வேதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு நாம் விரும்பியபடியோ அல்லது உலகப்பிரகாரமாகவோ சபை அமைப்பதில் ஈடுபட்டால் அது கர்த்தருடைய வார்த்தையை மீறிய சுயநல நோக்கத்தில் அமைந்த ஊழியமாகவே இருக்கும்.

தவறுகளைத் தவிர்த்து மெய்யூழியத்தில் ஈடுபடுவதானால் முதலில் வேதம் பற்றிய நம்பிக்கைகளை நம்மில் நாம் வளர்த்துக் கொள்வது அவசியம். வேதத்தின் அதிகாரத்தை ஏற்று வேதம் சுவிசேஷப்பணி பற்றியும், சபை அமைப்புப் பணி பற்றியும் என்ன சொல்லுகிறது என்பதை ஆராய்ந்து அந்தப் போதனைகளுக்கு நாம் கட்டுப்பட வேண்டும். வேத போதனைகளை எதிர்த்து நடக்கும் இதயத்தைக் கொண்டிருக்கக் கூடாது. நமது சொந்த நோக்கங்களுக்கு வேதபோதனைகள் இடையூறாக இருப்பதுபோல் தென்பட்டால் நமது சுயநல நோக்கங்களை அழித்துக் கொள்ளுவது அவசியம். கர்த்தரின் வார்த்தை மெய்யானது, நிலையானது என்ற எண்ணத்தைக் கொண்டு அதற்கு அடிமையாக இருக்க முயல வேண்டும்.

சமீபத்தில் எங்களுடைய நியூசிலாந்து சபைக்கு வந்த சிலர் புதியதொரு சபை ஆரம்பிக்கும் எண்ணத்தோடு ஆலோசனை கேட்டார்கள். வேதத்தைத் திறந்து சபை அமைப்புக்கு இருக்க வேண்டிய தகுதிகளை சுட்டிக்காட்டி, அவை இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கும்படி அவர்களைக் கேட்டேன். அப்பகுதிகளை ஆராய்ந்து பார்த்தபோது சபை அமைப்பதற்கான தகுதிகள் தங்களிடம் இல்லாததை அவர்கள் உணர்ந்தார்கள். ஆவிக்குரிய வரங்கள் இருந்தபோதும், முதலில் உள்ளூர் சபையில் இணைந்து, வளர்ந்து, பின்பு சபையை£கவே சபை அமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்பதை உணர்ந்தார்கள். தனி மனிதர்கள் சுய ஆர்வக் கோளாறால் தாம் நினைத்த விதத்தில் அப்பணியில் ஈடுபடக் கூடாது என்பதை உணர்ந்து எங்களுடைய சபையில் அங்கத்தவர்களாக சேருவதற்கு அனுமதி கேட்டார்கள். திருச்சபை அமைப்புக்கு அவசியமான அத்தனைப் போதனைகளையும் வேதம் தருகிறது என்றும், வேதம் நம்மேல் அதிகாரம் செலுத்தும் கர்த்தரின் வார்த்தையானதால் அதன் போதனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அவர்கள் நம்பியதால்தான் தங்களுடைய மனம்போன போக்கில் போகாது, சுய விருப்பத்தின் அடிப்படையில் நடக்காது சபைக்கு தங்களை ஒப்புக் கொடுக்க முடிந்தது. வேதம் பற்றிய இந்த நம்பிக்கைகள் திருச்சபை அமைப்பாகிய மிஷனரி ஊழியத்துக்கு அவசியமானது. இந்த நம்பிக்கைகளைக் கொண்டிராது அந்த ஊழியத்தில் ஈடுபடுவது நியாயாதிபதிகளின் காலத்தில் நிகழ்ந்ததைப் போல, அவனவன் தன்தன் மனம் போன போக்கில் நடப்பதற்கே வழிவகுக்கும். அதுவே இன்று தமிழினத்தில் தாராளமாக நடந்து வருகிறது.

சிக்கலான சில வேதப் பகுதிகள்

வேதத்தில் விளங்கிக்கொள்வதற்கு கடினமான சில பகுதிகள் உண்டு. சிலர் அவற்றைக் குழப்பமான பகுதிகளாகவும், விளங்கிக்கொள்ளவே முடியாத பகுதிகளாகவும் கருதி அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். வேறு சிலர் அப்பகுதிகளுக்கு தவறான விளக்கங்களைக் கொடுத்துவிடுகிறார்கள். வேதத்தை எழுத்தில் தந்திருக்கும் கர்த்தரே விளங்கிக்கொள்வதற்கு கடினமானதாக இருக்கும் பகுதிகளையும் தந்துள்ளார். அவற்றை முறையாக, கவனத்தோடும் ஆவியின் துணையோடும் ஆராய்ந்து படித்தால் கர்த்தர் அவற்றின் மூலம் வெளிப்படுத்தும் சத்தியங்களை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். அத்தகைய வேதப்பகுதிகளை வாசகர்களின் நன்மை கருதி ஆராய விருக்கிறோம். போதகர் ஃபிரெட் சீபர்ட் (Fred Siebert, Australia) இந்தப் பகுதிகளுக்கு விளக்கமளிக்கிறார்.

இந்த இதழில் நாம், விசுவாசிகள் விழுந்துபோகலாம் அல்லது இரட்சிப்பை இழந்துபோகலாம் என்று விளக்குவதுபோல் தோற்றமளிக்கின்ற ஒரு முக்கிய வசனத்தை ஆராயப்போகிறோம்.

“ஏனெனில், ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும் மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்பு தற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.” (எபிரேயர் 6:4-6).

விசுவாசிகள், தங்களுடைய இரட்சிப்பை இழந்துவிடுவார்களா இல்லையா என்பது பற்றி இந்த உலகத்தில் வாழ்கிறபோது நிச்சயமாக அறிந்துகொள்ள முடியாது என்று சில சபைகள் போதிக்கின்றன. ஆனால், 1689 விசுவாச அறிக்கையும் வரலாற்று சிறப்புமிக்க ஏனைய விசுவாச அறிக்கைகளும் விசுவாசிகள் கிறிஸ்துவால் பாதுகாக்கப்படுவார்கள் என்றும், கிறிஸ்து தன்னுடைய எந்த ஆட்டையும் இழந்துவிடமாட்டார் என்றும் விளக்குகின்றன.

“கடவுளால் திட்ப உறுதியாய் அழைக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் பரிசுத்தமாக்கப்பட்டு கடவுளால் கிறிஸ்துவுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களே பரிசுத்தவான்கள். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அனைவருக்கும் உரித்தான அரிதான விசுவாசத்தை கடவுள் அவர்களுக்குக் கொடுத்துள்ளார். அத்தகைய ஆசீர்வாதங்களை அடைந்தவர்கள் கிருபையின் ஸ்தானத்திலிருந்து முழுதாகவோ அல்லது இறுதியிலோ விழமுடியாது. ஆனால், அவர்கள் நிச்சயமாக இறுதிவரை விடாமுயற்சியுடன் கிருபையின் தொடக்கத்திலிருந்து நித்திய ஜீவனை அடைவார்கள். ஏனெனில், அவர்களை அழைத்து ஈவுகளைத் தந்த கடவுள் ஒருபோதும் மனம்மாற மாட்டார். இதன் விளைவாக அவர்களில் அவர் நிலைபேறான வாழ்விற்கு இட்டுச் செல்லும் விசுவாசம், மனந்திரும்புதல், அன்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை ஆகியவற்றோடு ஆவியின் அனைத்துக் கிருபைகளையும் தொடர்ந்து தோற்றுவிப்பதோடு அவற்றை ஊட்டி வளர்க்கவும் செய்கிறார். அநேகப் புயல்களும் வெள்ளங்களும் அவர்களைத் தாக்கினாலும் விசவாசத்தின் மூலம் அவர்கள் உறுதியாக நிறுவப்பட்டிருந்த தளத்தின் மீதிருந்தும் கல்லின் மீதிருந்தும் ஒருபோதும் அவர்களை அசைக்க முடியாது. அவநம்பிக்கை, பிசாசின் ஆறுதல் என்பவற்றிலிருந்து அவர்களை வழிதவறிப் போகச் செய்தாலும் மாறாக் கடவுள் தொடர்ந்தும் அவர்களுடைய கடவுளாக இருப்பதோடு அவர்கள் கிறிஸ்துவால் விலைகொடுத்து வாங்கப்பட்ட தங்களுடைய உடைமையை அனுபவிக்கும்வரை கடவுள் தன்னுடைய வல்லமையால் அவர்களைப் பாதுகாத்து இரட்சிப்பார். ஏனெனில், அவருடைய உள்ளங்கையில் அவை செதுக்கப்பட்டிருப்பதோடு அநாதிக்கால முதலே அவர்களுடைய பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.” (1689 விசுவாச அறிக்கை, 17:1).

விசுவாச அறிக்கையை எழுதிய நமது சீர்திருத்தவாத பெரியவர்கள் பின்வரும் வேத வசனங்களின் அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட விளக்கத்தைத் தந்திருக்கிறார்கள்.

“என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவி கொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின் செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையில் இருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை.” (யோவான் 10:27-29).

“மரணமானாலும் ஜீவனானாலும், தேவ தூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சியித்திருக்கிறேன்.” (ரோமர் 8:38-39)

“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ் சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார். நம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.” (1 கொரிந்தியர் 1:8-9).

“நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.” (பிலிப்பியர் 1:6).

மேலே நாம் பார்த்த வசனங்களுக்கு எதிரானவை போலத் தோற்றமளிக்கும் கீழ்வரும் வசனங்களை எவ்வாறு விளங்கிக் கொள்வது? என்று இனி ஆராய்வோம்.

“சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால் பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.” (எபிரேயர் 10:26-27).

“கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையைவிட்டு விலகுவதைப் பார்க்கிலும் அதை அறியா திருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.” (2 பேதுரு 2:20-21).

இந்த வசனங்களைப் பார்க்கும்போது நாம் ஒன்றை மட்டும் நிச்சயமாக நம்பலாம். அதாவது, கர்த்தருடைய வார்த்தை ஒருபோதும் தன்னில் முரண்பாடான போதனைகளைக் கொண்டிருக்காது. ஆகவே, வேதத்தின் எந்தவொரு பகுதிக்கும் நாமளிக்கும் விளக்கம் வேதத்தின் இன்னொரு பகுதியில் தரப்பட்டுள்ள போதனைக்கு முரணானதாக இருக்கக் கூடாது.

எபிரேயர் 6:4-6க்கான விபரமான விளக்கம்

இந்தப் பகுதியில் ஆத்மீக வாழ்க்கையில் மிக மோசமாக வீழ்ந்துபோய் மனந்திரும்பி மீளமுடியாத நிலையிலிருப்பவர்களைப் பற்றி வாசிக்கிறோம்.

“ஏனெனில், ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும் மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்பு தற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.” (எபிரேயர் 6:4-6).

வேதத்தின் ஏனைய பகுதிகளோடு தொடர்புபடுத்தி இந்த வசனத்தை ஆராய்ந்து பார்க்கிறபோது பாவத்தில் வீழ்ந்துவிட்ட விசுவாசிகளைக் குறித்து இது விளக்குவதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை அறிகிறோம். ஏனெனில், பெரும் பாவத்தைச் செய்த தாவீது தன்னுடைய பாவத்துக்காக வருந்தி மனந்திரும்ப முடிந்தது. 2 சாமுவேல் பின்வருமாறு விளக்கமளிக்கிறது.

“அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்.” (2 சாமுவேல் 12:13).

அப்போஸ்தலனான பேதுரு இயேசு கிறிஸ்துவை மூன்று முறை மறுதளித்தான் என்று வேதத்தில் வாசிக்கிறோம். இருந்தபோதும் அவனும் மனந்திரும்ப முடிந்தது. யோவான் சுவிசேஷத்தில் விசுவாசிகளை நோக்கி யோவான் பின்வருமாறு கூறுகிறார்:

“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ் செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்கு கிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. (1 யோவான் 1:9-2:1)”

இவ்வுண்மைகளைப் பார்க்கும்போது, எபிரேயர் 6:4-6 வரையிலான வேதப்பகுதி விசுவாசிகள் பாவத்தில் விழுவதைப் பற்றி விளக்கவில்லை என்பதை உணர முடிகிறது. இந்தப் பகுதியில் விளக்கப்படும் மனிதன் இயேசு கிறிஸ்துவை அறவே நிராகரித்து, விசுவாசத்தை முற்றாக நிராகரித்துவிட்ட நிலைமையில் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. உலகத்தோற்றத்திற்கு முன்பே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இப்படியான காரியம் நிகழ்வது சாத்தியமா? என்று எவராவது கேட்டால் அதற்கு பதில் “நிகழவே முடியாது” என்பதுதான்.

“தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேரானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.” (ரோமர் 8:29-30).

விசுவாசிகளைப்போல வெறுந் தோற்றமளிப்பவர்கள்

ஒரு பொருளைப் போலத் தோற்றமளிக்கும் விதத்தில் கவனத்தோடு தயாரிக்கப்பட்ட போலிப்பொருள், மூலப்பொருளைப் போன்ற அடையாளங்களைத் தன்னில் பெருமளவில் கொண்டிருக்கும். எந்தளவுக்கு ஒரு மெய்யான விசுவாசியைப் போலப் போலி விசுவாசி தோற்றமளிப்பான் என்று வேதம் விளக்கமளிக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தால் விதைக்கிறவனுடைய உவமை நமக்கு இந்த விஷயத்தில் துணை செய்கிறது. இந்த உவமையில் இயேசு நான்குவிதமான மனிதர்கள் கூட்டத்தைப் பற்றி விளக்குகிறார். அவர்களில் ஒரு வகையினரே மெய்யான விசுவாசிகள். அதாவது, தங்களுடைய வாழ்க்கையில் கனி கொடுக்கிறவர்களே மெய்யான விசுவாசிகள். அதேவேளை, இந்த நான்கு வகையினரில் இரண்டு வகையினர் மெய்யான விசுவாசிகளைப் போலத் தோற்றமளிக்கும் கூட்டத்தாராக இருப்பதைப் பார்க்கிறோம். மாற்கு சுவிசேஷத்தில் கீழ் வரும் வசனங்களை வாசியுங்கள்.

“அப்படியே வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும், தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்திநிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக் கேட்டும் உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப் பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப் போகிறார்கள்.” (மாற்கு 4:16-19).

சுவிசேஷ செய்தியின் மூலம் இவர்கள் உண்மையிலேயே விழிப்படைந்துவிட்டதாக சொல்லுமளவுக்கு இவர்களில் பல நல்ல அடையாளங்களைப் பார்க்க முடிகிறது. ஆனால், இவர்கள் இயேசுவை விசுவாசிக்கவே இல்லை என்பதை உவமை தெளிவாக விளக்குகிறது.

இதைத்தவிர இன்னொரு வகையினரைப் பற்றி இயேசு மத்தேயு 7ல் தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் விளக்கியிருக்கிறார். இவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் அற்புதங்களைச் செய்யும் ஆற்றலைப் பெற்றிருந்தார்கள். இருந்தபோதும், அவர்கள் மெய்யாகவே தன்னை ஒருபோதும் விசுவாசிக்கவில்லை என்பதை இயேசு இப்பகுதியில் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

“அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.” (மத்தேயு 7:22-23).

மேலே நாம் கவனித்த வேத விளக்கங்கள் பற்றிய ஞானம் நமக்கில்லாமலிருந்திருந்தால், எபிரேயர் 6:4-6 வரையுள்ள பகுதிகள் விசுவாசிகளைப் பற்றித்தான் விளக்குகிறது என்று நாம் தவறாக எண்ணிக் கொண்டிருந்திருப்போம். இன்று அநேகர் இந்தத் தவறைச் செய்து வருகிறார்கள். இதுவரை நாம் பார்த்த விளக்கங்களின் அடிப்படையில் எபிரேயர் நிருபத்தை எழுதியவர் யூதாசு இஸ்காரியோத்து போன்ற மனிதர்களைப் பற்றித்தான் இந்தப் பகுதியில் விளக்கமளிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுகிறோம். யூதாசு ஏனைய அப்போஸ்தலர்களோடு இணைந்து ஊழியத்தில் ஈடுபட்டு பிரசங்கம் செய்து, அற்புதங்களும் செய்து வந்திருந்தபோதும் இறுதியில் கிறிஸ்துவை ஒருபோதுமே விசுவாசிக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளுகிறோம். தன்னுடைய ஊழியத்தின் ஆரம்ப காலத்திலேயே இயேசு யூதாசைப் “பிசாசு” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். காலம் செல்லச் செல்ல உண்மையில் யூதாசு எப்படிப்பட்டவன் என்பதை எல்லோரும் தெரிந்துக்கொண்டார்கள்.

“இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்து கொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்.” (யோவான் 6:70).

இரண்டு முக்கியமான கேள்விகள்

இந்த ஆக்கத்தை முடிப்பதற்கு முன்பாக இரண்டு முக்கிய கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டியது அவசியம். முதலாவதாக, போலிகள் மெய்க்கிறிஸ்தவர்களைப் போன்ற அடையாளங்களோடு உலவி வருவார்களானால் ஒரு விசுவாசி, தான் மெய்விசுவாசிதான் என்பதையும் ஏனையோர் விசுவாசிகளா, இல்லையா என்பதையும் எப்படி நிச்சயித்துக்கொள்ள முடியும்? இரண்டாவதாக, மெய்விசுவாசிகள் ஒருபோதுமே பாவத்தை உணர்ந்து மனந்திரும்ப முடியாதளவுக்கு விழுந்துபோக முடியாதெனில், வேதத்தில் விழுந்துபோவது பற்றிய கடுமையான எச்சரிக்கைகள் ஏன் தரப்பட்டிருக்கின்றன?

முதலாவது கேள்வியான விசுவாசிகளின் நிச்சயத்துவம் பற்றிய கேள்விக்கு இந்தப் பகுதியில் நாம் விரிவான பதிலைக் கொடுக்க முடியாதிருந்தாலும் ஒருவர் விசுவாசியா? இல்லையா? என்பதை அறிந்துகொள்ள உதவும் இரு முக்கிய பகுதிகளை வேதத்தில் இருந்து உதாரணம் காட்ட விரும்புகிறேன். மெய் விசுவாசிகளுடைய ஆத்மீகக் கனிகளின் மூலம் அவர்களை நாம் அடையாளங் கண்டுகொள்ள முடியும். மெய்யான மனந்திரும்புதல் ஒரு மனிதன் பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கான வல்லமையைக் கொடுக்கும். இதைக் கீழ்வரும் வசனங்கள் விளக்குகின்றன.

“ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” (மத்தேயு 7:20).

“ஆவியின் கனியோ, அன்பு சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இப்படிப் பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.” (கலாத்தியர் 5:22-23).

அடுத்ததாக, மெய்விசுவாசிகள் தங்களுடைய பரிசுத்த வாழ்க்கையில் விடாமுயற்சியோடு முன்னேறிச் செல்வார்கள். விசுவாசத்தை முற்றாக நிராகரிக்கிறவன் மெய்யான விசுவாசத்தை ஒருபோதுமே கொண்டிருக்கவில்லை என்பதைத் தான் வெளிப்படுத்துகிறான். கீழ்வரும் வசனம் அதையே சுட்டிக்காட்டுகிறது. “அவர்கள் நம்மைவிட்டு பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள்.” (1 யோவான் 2:19).

இரண்டாவது கேள்விக்கான பதிலை ஆராயும்போது, விசுவாசியின் இறுதி நிலையை மட்டுமல்லாது அந்நிலைக்குப் போகும் பாதையில் விசுவாசி எடுத்து வைக்க வேண்டிய ஒவ்வொரு படியையும் கர்த்தர் தீர்மானித்திருக்கிறார் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். தன்னுடைய மக்கள் அந்தப் பாதையில் செல்லுவதற்கு அவசியமான அனைத்தையும் கர்த்தர் சில சாதனங்களைக் கொண்டு செய்து வருகிறார். அப்படியாக, அவர் பயன்படுத்துகிற சில சாதனங்களைக் கவனிப்போம்.

அ. கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள்

“தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டு, மகாமேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அருளப்பட்டிருக்கிறது.” (2 பேதுரு 1:3-4).

ஆ. கர்த்தருடைய தகப்பனுக்குரிய சிட்சை

“அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.” (எபிரேயர் 12:10).

இ. கர்த்தருடைய அவசியமான எச்சரிக்கைகள்

“இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 10:11-12)

முடிவாக

எபிரேயர் நிருபத்தை எழுதியவர் 6ம் அதிகாரத்தின் இறுதிப்பகுதியில் விசுவாசிகள் இறுதிவரை எச்சரிக்கையோடும், கவனிப்போடும் விசுவாச வாழ்க்கையை நடத்தவேண்டும் என்றும், அதில் கவனக்குறைவாகவோ, சோம்பேரித்தனத்தோடோ இருந்துவிடக்கூடாது என்றும் போதிக்கிறார். இந்த அதிகாரத்தை அவர் பின்வரும் ஆலோசனையைத் தந்து முடிவுக்குக் கொண்டு வருகிறார்.

“பிரியமானவர்களே, நாங்கள இப்படிச் சொன்னாலும், நன்மையானவைகளும் இரட்சிப்புக்குரியவைகளுமான காரியங்கள் உங்களிடத்தில் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம். ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே. நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாக்கும்படி நீங்கள் யாவரும் முடிவு பரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். (எபிரேயர் 6:9-12).

கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி 95: வார்த்தை எந்தவிதத்தில் ஆத்துமாவின் இரட்சிப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

பதில்: பரிசுத்த ஆவியானவர் வேத வாசிப்பை, சிறப்பாகப் பிரசங்கிக்கப்படும் வார்த்தையை பாவிகள் விசுவாசத்தின் மூலம் இரட்சிக்கப்படும்படிக்கு, அவர்களில் உணர்த்தி மனமாற்றமடையச் செய்யும் கிருபையின் சாதனமாகப் பயன்படுத்துவதோடு, விசுவாசத்தின் மூலம் இரட்சிப்பை அடையும்படியாக விசுவாசிகள் பரிசுத்தத்திலும், ஆறுதலிலும் வளரும்படியாகவும் செய்கிறார்.

(நெகேமியா 8:8; 1 தீமோத்தேயு 4:13, 16; 1 கொரிந்தியர் 1:21; ரோமர் 10:13-17; சங்கீதம் 19:7-8; 1 கொரிந்தியர் 14:24-25; அப்போஸ்தலர் 20:32; ரோமர் 15:4; 1 தெசலோனிக்கேயர் 1:6; ரோமர் 1:16; 2 தீமோத்தேயு 3:15-17)

கேள்வி 96: இரட்சிப்பை அடைவதற்கு ஏதுவாக வார்த்தையை எவ்வாறு வாசிக்கவும், கேட்கவும் வேண்டும்?

பதில்: இரட்சிப்பை அடைவதற்கு ஏதுவாக வார்த்தை அமையும்படி நாம் ஊக்கத்தோடும், கவனத்தோடும், ஆயத்தத்தோடும், ஜெபத்தோடும் அதைக் கேட்டு அல்லது வாசித்து; விசுவாசத்தோடும், அன்போடும் அதை ஏற்று, நமது இருதயத்தில் இருத்தி வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

(நீதிமொழிகள் 8:34; 1 பெதுரு 2:1-2; சங்கீதம் 119:18; எபிரேயர் 4:2; 2 தெசலோனிக்கேயர் 2:10; சங்கீதம் 119:11; லூக்கா 8:15; யாக்கோபு 1:25)

விளக்கவுரை: கர்த்தருடைய வார்த்தை புனிதமானது மட்டுமல்ல, கிருபையின் சாதனங்களில் முதன்மை வாய்ந்தது. திருவிருந்து, திருமுழுக்கு ஆதியவற்றையும்விட சிறப்பானது. மனிதர்கள் இரட்சிப்பை அடைவதற்கு கர்த்தர் வேதத்தையே அதுவும் வேதப்பிரசங்கத்தைப் பிரதானமாகப் பயன்படுத்துகிறார். உலகத்துக்குப் பயித்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று என்று பவுல் கூறுகிறார் (1 கொரி. 1:21). வார்த்தையைக் கேட்பதனால் விசுவாசம் கிடைக்கிறது என்கிறார் பவுல், ரோமர் 10:17ல்.

இந்த வகையில் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து பவுல் பேசுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில், திருமுழுக்கு, திருவிருந்து ஆகிய கிருபையின் சாதனங்களின் மூலம் எவரும் இரட்சிப்பை அடைய முடியாது. உண்மையில் வார்த்தையோடு இணைந்ததாக, வார்த்தைப் பிரசங்கத்தோடு அமையாத திருமுழுக்காலும், திருவிருந்தாலும் ஆத்துமாக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. திருமுழுக்கும், திருவிருந்தும் பாவிகள் இரட்சிக்கப்படும்படியான சுவிசேஷச் செய்தியைத் தம்மில் கொண்டிருக்கவில்லை. கர்த்தரை ஒருபோதும் அறிந்திராத ஒரு மனிதன் திருமுழுக்கையும், திருவிருந்தையும் கண்ணால் பார்த்தும், கிறிஸ்துவைப் பற்றிய எதையும் தெரிந்துகொள்ளாமல் இருந்துவிடலாம். கிறிஸ்துவை அறிந்துகொள்ள அவன் வார்த்தைப் பிரசங்கத்தைக் கேட்கக்கூடியதாக இருக்க வேண்டும். பல வருடங்களுக்கு முன் தமிழகத்தில் ஒரு சபைப் போதகர் இதுபற்றி அதிக ஞானமில்லாததால் வார்த்தையின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கும்படி என்னைக் கேட்டபோது, அந்தச் சபையில் “வார்த்தை எல்லாவற்றையும்விட மேன்மையானது” என்ற தலைப்பில் நான் பிரசங்கித்தது நினைவுக்கு வருகிறது. அந்தப் போதகர் அறியாமையால் வார்த்தைப் பிரசங்கத்துக்கு அதிக முக்கியத்துவம் தராமல் இருந்தார்.

திருமுழுக்கும், திருவிருந்தும் அவற்றிற்கான விளக்கங்களுக்கு வார்த்தையிலேயே தங்கியிருக்கின்றன. வேதம் தெளிவாகப் பிரசங்கிக்கப்படுகிறபோது செய்தி தெளிவாகவும், விளக்கமாகவும் அமைகிறது. வார்த்தைப் பிரசங்கத்தின் மூலமாகவே கர்த்தர் சாதரணமாக பாவிகள் இரட்சிப்பை அடைவதற்கு வழிசெய்கிறார். வார்த்தையை வாசிப்பது அவசியம், அதை வாசிக்கக் கேட்பதும் அவசியம். அதற்கும் மேலாக அந்த வார்த்தை தெளிவாகப் பிரசங்கிக்கப்படுவது அவசியம். பிரசங்கத்தின் மூலமாகவே கர்த்தர் பாவிகளின் இருதயத்தில் ஆவியின் மூலம் இடைப்படுகிறார்.

பாவிகளின் இருதயம் பாவத்தின் காரணமாகப் பாழாகி இருக்கிறது. பாவிகளின் கண்கள் குருடாகி, சிந்தனைகள் கர்த்தரைப் பற்றியதாக இல்லாமல் பாவசிந்தனைகளோடு இருக்கின்றன. அவர்கள் இயற்கையாகவே கர்த்தரைத் தேடும் இருதயத்தைக் கொண்டிராமல் இருக்கிறார்கள். தன்னை இரட்சித்துக்கொள்ளக்கூடிய எந்த வல்லமையும் இல்லாமல் பாவிகள் இருந்து வருகிறார்கள். இரட்சிப்புக்கான வழிவகைகளையும் புரிந்துகொள்ள முடியாத நிலையில் அவர்கள் இருந்து வருகிறார்கள். அவர்கள் இரட்சிப்பை அடைவதானால் கர்த்தர் மட்டுமே அவர்களுக்கு உதவக்கூடியவராக இருக்கிறார். கர்த்தர் மட்டுமே அவர்களுடைய குருடான கண்களைத் திறந்து சத்திய வெளிச்சத்தை அவர்களுக்கு அளிக்க முடியும். அந்தக் காரியத்தைக் கர்த்தர் தன்னுடைய வார்த்தையின் மூலமாக செய்கிறார். ஆகவேதான், பாவிகள் மனந்திரும்பும் பொருட்டாக வார்த்தை பிரசங்கிக்கப்பட வேண்டும் என்கிறார் கர்த்தர். ரோமர் 10ம் அதிகாரம் 14-17 வரையிலான வசனங்கள் இந்த உண்மையைத்தான் தெளிவாக விளக்குகின்றன. பவுல் அங்கே, ஒரு மனிதன் கர்த்தரை விசுவாசிக்க வேண்டுமானால், அந்த மனிதன் விசுவாசத்தை அடையும்படியாக ஒருவர் அனுப்பப்பட வேண்டும் என்கிறார். அவர் அனுப்பப்பட சபை அவசியம் என்கிறார். அத்தோடு, அனுப்பப்படுகிறவர் பிரசங்கியாக இருப்பதோடு, அவர் பிரசங்கிக்கவும் வேண்டும் என்கிறார். கேள்வி விசுவாசத்தின் மூலம் வருகிறபடியால், அந்த மனிதன் கேட்கும்விதத்தில் தெளிவாக சுவிசேஷப் பிரசங்கத்தைப் பிரசங்கி பிரசங்கிக்க வேண்டும் என்றும் விளக்குகிறார். விசுவாசம் வாசிப்பதனால் அல்லாமல் சாதாரணமாக கேள்வியின் மூலமாக வருகிறதை இப்பகுதியில் இருந்து தெரிந்துகொள்ளுகிறோம். இதனால் வேதத்தை வாசிப்பதால் பிரயோசனம் இல்லை என்று தப்புக்கணக்குப் போட்டுவிடக்கூடாது. வாசிப்பதால் அநேக பலன்கள் இருந்த போதும், சாதாரணமாக கர்த்தர் வார்த்தைப் பிரசங்கத்தைக் கேட்பதன் மூலம் பாவிகளை மனந்திரும்பச் செய்கிறார். இதற்கு உதாரணமாக எத்தியோப்பிய மந்திரியின் வாழ்க்கை நிகழ்ச்சியை வேதத்தில் வாசிக்கிறோம். எருசலேம் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டு திரும்பி வந்து கொண்டிருந்த எத்தியோப்பிய மந்திரி ஏசாயா நூலை வாசித்திருந்த போதும், பிலிப்பு ஆவியினால் அனுப்பப்பட்டு மந்திரியைச் சந்தித்து அப்பகுதியை விளக்கிப் பிரசங்கித்தபோதே மந்திரியின் அகக்கண்கள் திறந்தன என்பதையும், அவன் கிறிஸ்துவை விசுவாசித்தான் என்றும் வேதத்தில் வாசிக்கிறோம். (அப்போ. 8:27-39). வேத வாசிப்பு அவசியம். அதேவேளை வாசிக்கும் பகுதி விளக்கப்படுத்தப்பட்டு, அதை நாம் கேட்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறபோது சிலர் மட்டும் கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்களே, அது ஏன்? என்று சிலர் எப்போதுமே கேட்பது வழக்கம். அதற்குக் காரணம், சுவிசேஷத்தைக் கேட்கும் மனிதர்களுடைய இருதயத்தை மாற்றும் வல்லமை சுவிசேஷத்தில் தங்கியிராததால்தான். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். “இரட்சிப்பு உண்டாவதற்கு சுவிசேஷம் தேவபலனாக இருக்கிறது” என்று பவுல் ரோமர் 1:16ல் கூறியிருப்பதைக் கவனியுங்கள். சுவிசேஷம் எந்தவிதத்தில் இரட்சிப்பு உண்டாவதற்கு காரணமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளுவது அவசியம். “அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்த நம்மைக் கிறிஸ்து உயிர்ப்பித்தார்” என்று பவுல் எபேசியர் 2:1ல் விளக்குகிறார். “ஆவியே உயிர்ப்பிக்கிறது” என்று விளக்கினார் இயேசு, யோவான் 6:63ல். இவற்றிலிருந்து பரிசுத்த ஆவியானவரே ஆத்துமாக்களை பாவத்திலிருந்து உயிர்ப்பிக்கிறார் என்று அறிந்துகொள்ளுகிறோம். அந்த உயிர்ப்பித்தலாகிய ஜீவனை அளிக்கும் கிரியையை ஆவியானவர் சுவிசேஷச் செய்தி பிரசங்கிக்கப்படும்போது அதன் மூலம் செய்கிறார் என்கிறது வேதம். இதைத்தான் பவுல் ரோமர் 10ல் விளக்கி, “கேள்வியின் மூலம் விசுவாசம் வருகிறது” என்கிறார்.

சுவிசேஷச் செய்தியைக் கேட்டு பாவி மனந்திரும்புவதற்கு ஆவியானவரின் ஜீவனளிக்கும் கிரியை அவசியமாக இருக்கிறது. அதனால்தான் சுவிசேஷத்தைப் அநேகர் கேட்கும்போதும், சிலர் மட்டுமே அதன் மூலம் பலனடைகிறார்கள். அந்தச் சிலரில் ஆவியானவர் கிரியை செய்திருக்கிறார்; அவர்களுக்கு ஜீவனளித்திருக்கிறார். ஆவியானவரே ஆத்துமாக்களின் இருதயங்களைப் புதுப்பித்து அவர்களுக்கு மறுபிறப்பளிக்கிறவராயிருக்கிறார். நிக்கொதேமு மறுபிறப்படைய வேண்டும் என்று இயேசு சொன்னார். அது ஆவியினால் நிகழும் காரியம் என்றும் இயேசு விளக்கினார். புறக்கண்களால் நம்மால் பார்க்க முடியாத அந்த மறுபிறப்பு ஆவியினாலேயே ஒருவரில் நிகழ்கிறது. பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய நிருபத்தில், “நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக் கொள்ளாமல், தேவ வசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவ வசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.” என்றார் (1 தெசலோ. 2:13). இதை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் விளக்கலாமென்று நினைக்கிறேன். இரண்டு பேர் ஒரு கூட்டத்தில் சுவிசேஷத்தைக் கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். ஒருவர் அதை முற்றாக அலட்சியம் செய்து தூங்கிவிடுகிறார். இன்னொருவரோ காதுகொடுத்து கேட்கிறார். அவருக்கு சொல்லுகிற செய்தி ஒருவிதத்தில் பொதுவாகப் புரிகிறது. அந்த செய்தி என்ன என்பதை அவரால் அறிவின் அடிப்படையில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அகக் கண்கள் திறந்து, இருதயம் புதுப்பிக்கப்பட்டு இரட்சிப்பை அடைய அது மட்டும் போதாது. கர்த்தர் அந்த மனிதருக்கு உதவ வேண்டும். மனத்தளவில் அறிவின் அடிப்படையில் புரிந்துகொள்ளக் கூடிய செய்தியைக் கர்த்தர் தன் ஆவியின் மூலமாக அந்த மனிதரின் இருதயத்தில் பேசி அவருக்கு ஜீவனளிக்க வேண்டும்.

எல்லாவற்றையும் கர்த்தரே செய்கிறாரென்றால் இதில் மனிதன் செய்ய வேண்டியது ஒன்றுமே இல்லையா? மனிதன் செயலிழந்தவனா? பொறுப்பற்றவனா? என்று நீங்கள் நினைக்கக்கூடும். அப்படியல்ல. இரட்சிப்புக்குரிய எதையும் மனிதனால் செய்ய முடியாது என்பது உண்மைதான். வேதம் அப்படித்தான் விளக்குகிறது. அதற்காக, அவன் பொறுப்பற்றவன் என்று நாம் நினைத்துவிடக்கூடாது. அவனால் தன்னை இரட்சித்துக் கொள்ள முடியாது என்பதற்காக அவன் பொறுப்பற்றவனல்ல. பொறுப்புள்ளவனாகவே கர்த்தர் மனிதனைப் படைத்திருக்கிறார். தன்னை இரட்சித்துக்கொள்ளத் தகுதியற்ற, வலிமையற்ற அவனுடைய நிலமை அவனுடைய பொறுப்புக்களிலிருந்து அவனை விலக்கி வைக்கவில்லை. ஆவியானவர் அவனுக்கு மறுபிறப்பளிக்கிறார் என்பதற்காக மனிதன், தான் செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை என்றிருந்துவிட முடியாது. வார்த்தையைக் கேட்பதில் அவன் சிரத்தை காட்ட வேண்டும் என்கிறது வேதம். கர்த்தரின் வழிகளை அவன் நாட வேண்டும் என்கிறது வேதம். அது மனிதனுடைய பொறுப்பு. “நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்கே கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்” என்றார் இயேசு கிறிஸ்து (லூக்கா 8:18). வார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்ளக்கூடிய வல்லமையைக் கர்த்தரே தருகிறார் என்பதை இயேசுவின் சீடர்கள் உணர்ந்திருந்தார்கள். அதேவேளை, காதுகொடுத்து கவனத்தோடு அந்த வார்த்தைகளைக் கேட்டுணர வேண்டிய கடமை தங்களுக்கு இருந்ததையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். வார்த்தையைக் கவனத்தோடும், ஊக்கத்தோடும் கேட்கும்படி வினாவிடை வற்புறுத்துவது நியாயமானதே. கிறிஸ்துவின் வார்த்தைகளை ஊக்கத்தோடும், தாகத்தோடும் தேடியோடாத எவர் வாழ்விலும் ஆவியானவர் இரட்சிப்புக்குரிய விதத்தில் கிரியை செய்வதில்லை. புதிதாகப் பிறந்திருக்கும் பிள்ளையைப் போல நாம் வார்த்தையாகிய பாலை நாடி வர வேண்டும்.

உள்ளார்ந்த விசுவாசம்

தொமஸ் பொஸ்டன் (1676-1732)

தொமஸ் பொஸ்டன் (Thomas Boston) பியூரிட்டன் பெரியவர்களில் ஒருவர். ஸ்கோட்லாந்தில் டன்ஸ் (Duns) என்ற இடத்தில் பிறந்த பொஸ்டன், ஸ்கொட்லாந்து பிரெஸ்பிடீரியன் சபையில் போதகராக பணிபுரிந்தார். இவர் திறமை வாய்ந்த இறையியல் அறிஞர். “நான்கு நிலைகளின் மனிதனின் தன்மை” ஆகிய நூலையும் வேறு பல சிறந்த கிறிஸ்தவ இலக்கியங்களையும் படைத்துள்ளார். சிறந்த சீர்திருத்தப் போதகரும், பிரசங்கியுமான பொஸ்டனின் எழுத்துக்கள் பன்னிரண்டு வால்யூம்களாக இன்றும் பதிப்பில் இருந்து வருகின்றன. இந்த ஆக்கத்தின் முழுப்பகுதியும் ஒன்பதாம் வால்யூமில் காணப்படுகின்றது.
– ஆசிரியர்

மெய்க்கிறிஸ்தவனில் கிறிஸ்தவ விசுவாசம் உள்ளார்ந்து காணப்படும். வெறும் வார்த்தை ஜாலமாக அவனுடைய விசுவாசம் இருக்காது. ஆவியின் அடிப்படையில் அமைந்ததாக இருக்கும். நாங்கள் கர்த்தரை ஆவியின் மூலம் துதிக்கிறோம்; ஆகையால், சரீரத்தில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்றார் பவுல் (பிலி. 3:3). தனக்கு விசுவாசம் இருக்கிறது என்று மெய்க் கிறிஸ்தவன் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்துவிடுவதில்லை. அதை அடைவதற்காக உழைத்து, அடைந்ததைப் பாதுகாத்து கர்த்தரிடம் இறுதியில் நல்வார்த்தை பெறுவதை அவன் நோக்கமாகக் கொண்டிருப்பான். இங்கேதான் நாம் மெய்க்கிறிஸ்தவனின் நேர்மையையும், மெய்யான இருதயத்தையும் காண்கிறோம். அவனில் ஆவியையும், ஜீவனையும் பார்க்கலாம். மாய்மாலக்காரர்களில் இவற்றைப் பார்க்க முடியாது.

மெய்க்கிறிஸ்தவன் மாய்மாலக்காரர்களைவிட கீழ்வரும் ஐந்து விஷயங்களில் வேறுபட்டு நிற்பான்.

(1) தான் புதிதாக அடைந்திருக்கிற புதிய இருதயத்துக்கு ஏற்றவகையில் மெய்க்கிறிஸ்தவனுடைய வாழ்க்கைப் போராட்டங்கள் அமைந்திருக்கும்; தன் வாழ்க்கையில் தொடர்ச்சியாக பரிசுத்தத்தை நாடுவதையும், பரிசுத்த மற்றவற்றைத் தவிர்ப்பதும் அவனுடைய இலட்சியமாக இருக்கும். – “மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும் ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இருக்கிறது; நீங்கள் செய்ய வேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாக இருக்கின்றது.” (கலா. 5:17). மாய்மாலக்காரன் பாவத்திற்கெதிராகப் போராடும்போது அது அடிமைத்தனமான ஒரு பயத்தின் அடிப்படையில் அமைந்த போராட்டமாகவே இருக்கும் அல்லது குறைந்தது நன்னடத்தையை நாடி அமைந்ததாக இருக்கும். இந்த எண்ணங்களும் பழைய இருதயத்தின் ஒரு அங்கமாகவே இருப்பதால் அவனால் பாவத்தை வெற்றிகொள்ள முடியாது.

(2) மெய்க்கிறிஸ்தவன் எல்லாப் பாவங்களுக்கும் எதிராகப் போராடுவான். வேத போதனைகளின் அடிப்படையில் தான் பாவமாகக் காண்கிற அனைத்தையும் எதிர்த்து நிற்பான். ஆவியினாலும், சரீரத்தினாலும் தனக்கு உணர்த்தப்பட்ட பாவங்களையும், அவை எந்த நிலையில், எத்தகைய தன்மையுள்ளவையாக இருந்தபோதும் அவை எல்லாவற்றையும் தன்னில் அறவே இல்லாமல் செய்யப்பாடுபடுவது அவனது வாழ்க்கைப் போராட்டமாக இருக்கும். – சங்கீதக்காரன் சொல்லுகிறான், “எல்லாவற்றைப் பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.” (சங். 11:128). ஆகவே, மெய்கிறிஸ்தவனின் போராட்டம் அவிசுவாசத்துக்கெதிரானதாகவும், பல்வேறு விதங்களில் தன்னில் எழுந்து நிற்க முயலும் சுயஇச்சைகளை இல்லாமலாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும். மாய்மாலக்காரர்களின் போராட்டம் கொலை போன்ற மோசமான பாவங்களுக்கெதிரானதாக மட்டும் இருந்துவிடுவதோடு சகல பாவத்திற்கெதிரானதாகவும் இருக்காது. அங்கும் இங்குமாக ஒருசில இச்சைகளை மட்டுமே அறைகுறையாக அடக்க முயல்வதோடு நினறுவிடுவார்கள். இது இறுதியில் அவர்களை நித்திய மரணத்தின் பாதையில் அழைத்துச் சென்றுவிடுகிறது. மெய்க்கிறிஸ்தவனில் அவனுடைய புதிய இருதயத்தின் வெளிப்பாடாக இருக்கும் பாவத்திற்கெதிரான போராட்டம், இயற்கையாக மாய்மாலக்காரர்களில் இருக்காது. மாய்மாலக்காரர்களில் இருக்கும் எந்தப் பாவப் போராட்டமும் தற்செயலானதொரு நிகழ்ச்சியாகவே இருக்கும்.

(3) மெய்க்கிறிஸ்தவன் பாவத்தோடு போராடுகிறபோது அதை வேரோடு பிடுங்கி எறிவதைத் தன் கடமையாகக் கொண்டிருப்பான். வேரும், மரமும், கனியுமாக அந்தப் பாவங்கள் தன்னில் துளியும் செயல்படாதபடி தன்னைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடுவான். – இந்தப் போராட்டத்தின் மூலமாக பாவத்தை அறவே தன்னில் இருந்து நீக்கி, பூரணமான பரிசுத்தத்தை நாடி (இவ்வுலகில் அது கிடைக்காமல் போனாலும்), அதை அடையப் பாடுபடுவதே மெய்க்கிறிஸ்தவனின் இலட்சியமாக இருக்கும். அவனுடைய புதிய இருதயமும், புதிய வாழ்க்கையும் இதை அடையும் உறுதியான சித்தத்தையும், ஆவலையும் கொண்டிருப்பதோடு, பாவத்தை இல்லாமலாக்கும் வரைக்கும் கையிலிருக்கும் கத்தியையும் கீழே போட இயலாதவனாக இருக்கிறான். இந்த உலகத்தில் பாவத்தைத் தன்னில் முற்றாக இல்லாமலாக்கிக்கொள்ள அவனால் முடியாததால், மரணபரியந்த மும் பாவத்திற்கெதிரான போராட்டத்தை நடத்தி இறுதியில் பின்வருமாறு வெற்றிக் குரலெழுப்புவான், “சகோதரரே! அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனழைத்த பரம பந்தயப் பொருளுக்கான இலக்கை நொக்கித் தொடருகிறேன்.” (பிலி. 3:13, 14). மாய்மாலக்காரர்கள் மெய்க்கிறிஸ்தவர்களைப் போல இந்தவிதமாக ஆக்ரோசத்தோடு பாவத்திற்கெதிராகப் போராடமாட்டார்கள். தங்களுக்கு இடையூறாக இருக்கும் அல்லது மரியாதை தராத ஒரு சில இச்சைகளை மட்டுமே அடக்கிக்கொள்ளுவார்கள்.

(4) மெய்க்கிறிஸ்தவன் பாவத்தோடு போராடுகிறபோது பரிசுத்தமானதொரு வாழ்க்கை தன்னில் தொடர்ந்து அமைவதை நோக்கமாகக் கொண்டுழைப்பான். – தன் வாழ்க்கையில் பல முறை தவறியபோதும், பூரணமான வாழ்க்கையை வாழமுடியாதபோதும் மெய்க்கிறிஸ்தவன் பரிசுத்தமாக வாழ்வதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருப்பான். (யோவான் 3:9, 10). பவுல் சொல்லுவதை அவனுடைய வாழ்க்கையில் காணமுடியும், “மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ் சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.” (2 கொரி 1:12). ஆனால், மாய்மாலக்காரர்கள் பரிசுத்தமற்ற வாழ்க்கையையே தொடர்ந்து வாழ்வார்கள்.

(5) மெய்க்கிறிஸ்தவன் தன்னுடைய சித்தத்தைத் தொடர்ந்து புதுப்பித்து, கடந்த வாழ்க்கையின் எச்சங்களை உதிர்த்துப் போட்டுத் தன்னில் புதிய கிருபையின் அம்சங்களை வளர்த்துக்கொள்ளப் பாடுபடுகிறபோது, எஞ்சியிருக்கும் பாவம் அவனில் தொல்லை கொடுக்காமலிருக்காது. – சரீரம் ஆவிக்கெதிராகவும், ஆவி சரீரத்துக்கெதிராகவும் போராடுகிறது. அவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஆகவே, நாம் செய்ய நினைக்கிறதை செய்யாமலிருக்கிறோம் (கலா. 5:17). ஆனால் மாய்மாலக்காரர் பூரணமாகக் கர்த்தரை நாடாத இருதயத்தைக் கொண்டிருப்பதால், தங்களுடைய கேடான இருதயத்தின் இச்சைகளுக்கும், பாவங்களுக்கும் எதிராக பரிசுத்த நீதிச்சட்டத்தின் அடிப்படையில் போராட முடியாதவர்களாக இருக்கின்றனர்.

திருச்சபை வரலாறு

மறுமலர்ச்சிக் காலம்

வரலாற்றில் பதினாறாம் நூற்றாண்டு சபை சீர்திருத்தம் ஆரம்பிப்பதற்குத் துணையாக இருந்த பல காரணிகளில் முதன்மை வாய்ந்தது மறுமலர்ச்சியே (Renaissance). மறுமலர்ச்சி இயக்கம் ஆத்மீகம் சம்பந்தமான இயக்கமல்ல. இருந்தபோதும் இது ரோமன் கத்தோலிக்க உயர்பீடத் தலைவர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த பாரம்பரிய எண்ணங்கள், கட்டுப்பாடுகளில் இருந்து சீர்திருத்தவாதிகள் விடுதலை அடையும்படி அவர்களை சிந்திக்க வைத்து சீர்திருத்தத்திற்கு அவர்களைத் தயார்செய்தது. மறுமலர்ச்சி என்ற வார்த்தைக்கு மறுபிறப்பு என்பது எழுத்துபூர்வமான அர்த்தம். இது நவீன காலத்தின் ஆரம்பப்பகுதியில் இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளின் இலக்கியம், கலை ஆகியவற்றில் ஏற்பட்ட விழிப்புணர்வு, எழுப்புதலைக் குறிப்பதாக இருந்தது. இக்காலத்தில் புதிது புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனைகள் உருப்பெற்றன. கடல் கடந்து சென்று நாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதல் பலருக்கு இருந்தது. அறிவியலில் வளர்ச்சி ஏற்பட வேண்டும், புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும் என்றெல்லாம் மக்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள். புகழ் பெற்ற கிரேக்க எழுத்தாளரான அரிஸ்டோட்டிலின் எழுத்துக்கள் அரேபிய மொழியல் மொழிபெயர்க்கப்பட்டதால் ஐரோப்பாவில் தளர்ந்த நிலையில் காணப்பட்ட கிரேக்க மொழியின் கலாச்சாரம் புத்துணர்வு பெற்றது. பதினான்காம் நூற்றாண்டில் தாந்தே, பெட்ராக், பொக்காசியா ஆகியோர் கிளெசிக்கல் எழுத்துக்களில் ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தனர். அச்சுக்கூடங்கள் தோன்றியதால் எக்காலத்திலும் இல்லாத வகையில் மக்கள் மத்தியில் அறிவு வளர்ச்சி ஏற்பட்டது. வெறும் வார்த்தை ஜாலங்களால் விளக்கப்பட்டு வந்த விஷயங்களுக்கு முடிவு ஏற்பட்டு எல்லாமே அறிவியல் விஞ்ஞான அடிப்படையில் துல்லியமாக விளக்கப்பட வேண்டும் என்ற கருத்து பரவியது. தத்துவம்கூட ஒரு புதிய நிலையை எட்டியது.

1453ல் கொன்ஸ்தாந்திநோபில் துருக்கியர்களின் கையில் விழுந்தபோது, பேரறிஞர்களில் பலர் மேற்கத்திய நாடுகளுக்கு போய்ச் சேர்ந்தனர். அவர்கள் தங்களோடு அறிவை மட்டுமல்லாமல், பலகாலமாக பொக்கிஷமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கிரேக்க இலக்கியங்களையும் கொண்டு சென்றனர். நிகழ்ந்து வரும் அறிவியல், விஞ்ஞான மறுமலர்ச்சி தங்களுடைய அதிகாரத்தளத்தை அசைத்துத் தூக்கி எறியப்போகிறது என்பதை உணராமல் பல போப்புக்களும் கிரேக்க இலக்கியங்களிலும், அறிவியல் சிந்தனை வளர்ச்சியிலும், கண்டுபிடிப்புகளிலும் ஆர்வம் காட்டினர். வத்திக்கன் நூல்நிலையத்தை ஏற்படுத்திய ஐந்தாம் நிக்கொலஸே (Nicolas V) இந்த மறுமலர்ச்சியில் ஆர்வம் காட்டிய முதல் போப்பாக இருந்தார். அறிவியலறிஞர்களும், கலைஞர்களும், சிற்பிகளும் இவரால் ஊக்குவிக்கப்பட்டதோடு அநேக கிரேக்க இலக்கியங்களையும் இலத்தீன் மொழியல் மொழிபெயர்க்க இவர் கட்டளையிட்டார். உலகின் மிகச் சிறந்த கலைஞர்களும், சிற்பிகளும், கட்டிடக் கலைஞர்களும் இந்தக் காலப்பகுதியை சிறப்பித்தனர். டொனாடோ பிராமென்டே (Donato Bramante), ரபாயெல் (Raphael), மைக்கல் ஆஞ்சலோ (Michael Angelo), லியனார்டோ டார்வின்சி (Leonardo da Vinci) ஆகியோர் இதற்கு உதாரணம். ரோமின் புனித பேதுரு ஆலயத்தைக் கட்டுவதிலும், புதுப்பிப்பதிலும் இவர்கள் பயன்படுத்தப்பட்டனர். அந¢தக் கத்தோலிக்க ஆலயத்தைப் பார்க்க வருகிறவர்களை அதன் கலை வண்ணம் இன்றும் மூக்கில் கையை வைக்குமளவுக்கு வியக்கச் செய்கிறது.

புதிது புதிதாக எதையும், கண்டுபிடிக்க வேண்டும், படிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியவர்களை மனிதவியலாளர் (Humanists) என்று அழைப்பார்கள். இத்தாலி நாட்டில் இருந்த மனிதவியலாளர்களை ஒல்லாந்திலும், ஜெர்மனியிலும் இருந்தவர்கள் கிறிஸ்தவப் பார்வையைக் கொண்டிருந்தனர். இதற்குக் காரணம், 1376ல் டெவன்டர் என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகள் கல்வியில் ஆத்மீகத்தின் அவசியத்தைப் பெரிதும் வற்புறுத்தியிருந்ததுதான். இந்தக் கல்லூரிகள் இராஸ்மஸ், மூட்டியானஸ் ரூபஸ், குரெனிங்கனைச் சேர்ந்த ஜோன் வெஸல் ஆகியோரை உருவாக்கியிருந்தன. இவர்கள் சீர்திருத்தவாதம் தோன்றுவதற்கு ஒருவிதத்தில் காரணமாக இருந்திருக்கிறார்கள். சிறிது சிறிதாக புதிய கண்டுபிடிப்புகள் கல்லூரிகளையும், கலாசாலைகளையும், பல்கலைக்கழகங்களிலும் நுழைய ஆரம்பித்தன. இதற்குக் காரணமாக இருந்தவர்கள் மிகக்கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர், பேரறிஞரான ரோச்சிலின் (Reuchlin). கிறிஸ்தவ மனிதவியலாளர்களில் (Christian Humanists) சிறப்பானவர்களில் சிலரை இனிப் பார்ப்போம்.

  1. செவனரோலா (Sevonalora 1452-1498) –செவனரோலா இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். செவனரோலாவின் பக்திவிருத்தியான வாழ்க்கையும், ஆணித்தரமான பிரசங்கமும் அநேக மக்களைக் கவர்ந்தன. புத்திஜீவிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தின. அழகுடை தரிக்கும் பெண்கள்கூட அவற்றையெல்லாம் பொது இடங்களில் போட்டு எரிக்கும் அளவுக்கு செவனரோலாவின் பிரசங்க ஊழியம் அமைந்திருந்தது. புலோரன்ஸை கர்த்தராளும் குடியரசாக மாற்ற அவர் எண்ணங் கொண்டிருந்தார். 1498ல் அவர் போலிப்போதனைகளைப் பரப்புவதாக குற்றஞ்சாட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தன்னுடைய சபையைச் சார்ந்திருந்த ஒரு அருமையான மனிதனை இந்த வகையில் ரோமன் கத்தோலிக்க மதம் கொன்று, எந்தவித மாற்றத்திற்கும் சீர்திருத்தத்திற்கும் தன்னில் இடமில்லை என்பதைக் காட்டியது.
  2. ஜோன் கோலெட் (John Colet 1466-1519) –ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகப் பட்டதாரியான இவர் செவனரோலாவி¢ன் போதனைகளினால் அதிகம்- கவரப்பட்டிருந்தார். பவுலின் நிருபங்களை இவர் விளக்கிப் போதித்தவிதம் அவற்றிற்கு உயிரூட்டி பலர் மத்தியில் பெரும் ஆர்வத்தைக் கிளரின. புனித பவுல் ஆலயத்தில் டீனாகப் பதவியேற்ற கோலெட் 1512ல் ஒரு பிரசங்கத்தில் மதகுருமாரின் வாழ்க்கையைப் போன்ற போலித்தனம் வேறில்லை என்று பேசினார். பிசப்புக்களின் வாழ்க்கையில் மாற்றமேற்பட்டால் எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும் என்றார். பிசப்புக்கள் புதிய மனிதர்களாக மாறாதவரை சபையில் சட்டங்களை அமுல் நடத்தமுடியாது என்று கூறினார். தன்னுடைய மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன கோலெட் வேதப்புத்தகத்தையும், அப்போஸ்தலருடைய போதனையையும் எப்போதும் கடைப்பிடிக்கும்படியாக சொன்னார். ஆசாரித்துவ முறையையும், திருவிருந்து பற்றிய கத்தோலிக்க போதனையான டிரான்சப்ஸ்டேன்ஷியேசனையும் மறுதலித்தார்.

இவருடைய மாணவர்களில் ஒருவராக இராஸ்மஸ் இருந்தார். தன்னுடைய கிரேக்கப் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பை வெளியிடும்படி இராஸ்மஸை இவர் தூண்டினார். ஆங்கில மொழியில் வேதத்தை மொழிபெயர்த்ததற்காக கொலை செய்யப்பட்ட வில்லியம் டின்டேலும் இவருடைய மாணவர்களில் ஒருவர்.

  1. டெசிடேரியஸ் இராஸ்மஸ் (Desiderius Erasmus 1467-1536) –ரொட்டடாமில் பிறந்த இராஸ்மஸ் எல்லா மனிதவியலாளரிலும் புகழ் பெற்றவராக இருந்தார். குறுகிய காலத்துக்கு கேம்பிரிட்ஜில் கிரேக்க புரொபஷராகவும், ஆத்மீகத்துறை புரொபஷராகவும் இருந்தார். இவருடைய இலக்கிய சேவை அபாரமானது. மதகுருக்களுக்கெதிராகவும், சடங்குகளுக்கெதிராகவும் இவர் அதிகம் எழுதியிருக்கிறார். சீர்திருத்தவாத காலத்தில் அநேகர் கத்தோலிக்க மதத்தைவிட்டு விலகிப்போனபோது இராஸ்மஸ் அதற்குள்ளேயே இருந்து அதை சீர்திருத்த விரும்பினார். ரோமன் கத்தோலிக்கர்களும், அதைவிட்டு விலகிப்போன சீர்திருத்தவாதிகளும் தைரியமில்லாதவர் என்று இராஸ்மஸைத் தாக்கிப் பேசினார்கள். இவருடைய கிரேக்க புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு சிறப்பானது.

இக்காலத்தில் ரோம, கிரேக்க இலக்கியங்களைப் படிப்பதில் மனிதன் காட்டிய ஆர்வம் அவனை புறஜாதிக் கோட்பாடுகளைத் தழுவத்தூண்டின. இதன்காரணமாக மனிதனின் ஒழுக்கம் பாதிக்கப்பட்டது. ஒருபுறம் புனித பவுல் ஆலயம், வத்திக்கன் மற்றும் இத்தாலி முழுவதிலுமுள்ள கட்டிடங்கள் கலை அழகில் பிரமிக்கும்படியாக இருக்க, மறுபுறம் மனிதர்கள் சுய இச்சைகளுக்கு அடிமையாகி ஒருவரை ஒருவர் தவறாக நடத்தி வந்தனர். தங்களுடைய சுய இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ள விஷத்தையும், கத்தியையும், துப்பாக்கியையும் மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தி வந்தனர். போப்புக்களும் இக்காலத்தில் மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் நல்லுதாரணமாக இருக்கவில்லை. எத்தனை அழகானவைகளாக இருந்தபோதும் புதிய கண்டுபிடிப்புகளையும், கலை ஆர்வத்தையும்விட மேலானதொன்று மனிதனைப் பரிசுத்தமாக வாழ வைப்பதற்கு தேவைப்பட்டது. மனிதனுடைய சிந்தனையையும், ஆராய்ச்சி மனப்பான்மையையும் அடிமைத்தளையில் வைத்திருந்து ஆதிக்கம் செலுத்திவந்த ரோமன் கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தை ஒடுக்கியதே மறுமலர்ச்சி இயக்கம் உலகுக்கு அளித்த பங்கு.

அநேக கிறிஸ்தவ மனிதவியலாளர்கள் ரோமன் கத்தோலிக்க சபையில் இருந்தே இறந்த போதும் திருச்சபை சீர்திருத்தம் ஏற்படுவதற்கு அவர்கள் அளித்திருந்த பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. மறுமலர்ச்சிக்கால ஆய்வும், அறிவியல் ஆர்வமும் தரக்குறைவான கத்தோலிக்க இலத்தீன் வல்கேட் மொழிபெர்ப்புகளுக்கு அப்பால் போய் கிரேக்க, எபிரேய மொழிகளிருந்த வேத மூலத்தை மனிதர்கள் படிக்கத் தூண்டுவதைப் பெரு நோக்கமாகக் கொண்டிருந்தன. இதனால் இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆதி சபையின் ஆரம்பப் போதனைகளை மறுபடியும் கற்று சத்தியத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு மக்களுக்கு ஏற்பட்டது.

வாழவிடுமா அவர்கள் கண்ணீர்?

மத்தளம் இல்லாவிட்டாலும்
மங்கலம் பாடாவிட்டாலும்
விசுவாசத்தின் அடிப்படையில்
வேதத்தைப் பின்பற்றி
மனங்கள் பொருந்தி வந்து
ஆணும், பெண்ணும் இணைவதற்குப்
பெயர்தான் விசுவாசத் திருமணம்
சமூகத் தரத்திற்கு அங்கு இடமில்லை
சாதி பேதத்திற்கு வேலையில்லை
குலம் கோத்திரத்திற்கு அனுமதியில்லை
மனங்களைப் புரிந்து கொள்ளாமல்
விசுவாசத்திற்கு இடந்தராமல்
வேதத்திற்கு சமாதி கட்டி
சாக்கடைச் சடங்குகளுக்கும்
பாரம்பரியமெனும் பிசாசுக்கும்
வேலியைத் திறந்துவிட்டு,
சுயகெளரவத்தால்
பொருந்திவராத மனங்களை
திருமணமென்ற பந்தத்தில்
பொருத்தி வைத்து
விருந்தில் களிக்கிறீர்களே
விசுவாசிகளா நீங்கள்?
அவர்கள் அடக்கி வைத்திருக்கும்
அடங்காக் கண்ணீரும்,
இதயத்தில் மறைந்து வைத்திருக்கும்
நிறைவேறாத ஆசைகளும்,
உங்களை வாழவிடுமா என்றைக்கும்?

பரம்பரை ஊழியம்!

தாத்தா வளர்த்த
ஸ்தாபனமாம் அது
இன்று அவர் மகன் அதற்கு
தலைமை வகிக்கிறான்
வாழும்போதே அவரும் தன்
மகனைத் தயார் செய்கிறார்,
தன்னிடத்தை ஒருநாள்
தக்கவைத்துக் கொள்ளுவதற்கு.
நேருவும், இந்திராவும்
சஞ்சேயும், ரா ஜீவும்
அதற்குப் பிறகு ராகூலும்
பிரியங்காவும்கூட
பரம்பரையாக நாட்டை
நடத்திச் செல்லும்
பாரம்பரியம் இந்தியாவில்,
இதற்கு எது இடம்
பரலோக ஊழியத்தில்?
சபைகளிலும், கிறிஸ்தவ
ஸ்தாபனங்களிலும்
பரம்பரை பரம்பரையாக
குடும்ப ஊழியம் நடத்தும்
பாவத்தைக் கேட்பார்
யாருண்டு இந்நாட்டில்
வேதம் சொல்வதொன்று
இவர்கள் போகும் வழியொன்று
கேட்பாரில்லாததால் இங்கே
கூத்தாடிகளுக்குத்தான்
ஏகக் கொண்டாட்டம்

சுபி . . .

பிரசங்கமும், பரிசுத்த ஆவியும் – 2

பிரசங்கத்தின்மூலம் பரிசுத்த ஆவியானவர் செய்கின்ற கிரியைப் பற்றிய இந்த ஆக்கத்தில், பிரசங்கியில் ஆவியானவர் செய்யும் கிரியையைப் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். இனி ஆவியானவர் பிரசங்கத்தின் மூலம் செய்யும் கிரியையைப் பற்றி அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. திரித்துவத்தின் மூன்றாம் ஆள்தத்துவமான பரிசுத்த ஆவியானவரின் குணாதிசயங்களைப் பற்றியும், கிரியைகளைப் பற்றியும் தமிழினத்தில் பலவிதமான தவறான எண்ணப்போக்குகள் நிலவி வருகின்ற இக்கால கட்டத்தில் ஆவியானவரின் கிரியைகளைப் பற்றிய நல்லறிவு விசுவாசிகளுக்கு அவசியம் தேவை. ஆவியானவரின் கிரியை என்ற பெயரில் புறஜாதி மனிதன்கூட வெட்கப்பட்டு விலகியோடும் அளவுக்கு அநாவசியமான செயல்களை கிறிஸ்தவத்தின் பேயரில் அநேகர் இன்று நடத்தி வருகின்றார்கள். அத்தகைய தவறான போதனைகளிலிருந்தும், நடவடிக்கைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஆவியானவரின் பரிசுத்தமான ஆத்மீகக் கிரியைகளைப் பற்றி நாம் சிந்திப்பது அவசியமாகிறது.

இயேசு கிறிஸ்துவும், அவருடைய அப்போஸ்தலர்களும் நம்மத்தியில் சரீரப் பிரகாரமாக இல்லாத இந்தக் காலத்தில், அவர்கள் இருந்த காலத்தில் ஆவியானவரின் மூலம் நிகழ்ந்த காரியங்களை நாம் எதிர்பார்க்க முடியாது. அப்போஸ்தலர்கள் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் திருச்சபையை நிறுவிய போது பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய ஊழியத்தை உறுதிப்படுத்த இயேசுவின் வழிப்படி அவர்களோடு இருந்து, அவர்கள் மூலமாக அநேக கிரியைகளைச் செய்தார். திருச்சபை இந்த உலகத்தில் நிறுவப்பட்டு, அப்போஸ்தலர்களுடைய காலம் முடிவடைந்தபின் ஆவியானவர் அத்தகைய நடவடிக்கைகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லாது போயிற்று. கர்த்தர் வலிமையுள்ள தன்னுடைய வசனத்தை முழுமையாக வேதப்புத்தமாக திருச்சபைக்கு அளித்து அதைத் தொடர்ந்து பிரசங்கிக்கும்படியாக கட்டளையிட்டார். வேதப்பிரசங்கம் மூலமாக ஆத்துமாக்களில் ஆவியானவரின் மூலம் கிரியை செய்து அவர்களை தேவ இராஜ்யத்துக்குள் அழைத்துக்கொள்வதும், திருச்சபையின் அங்கத்தவர்களாக்குவதும் கர்த்தரின் திட்டமாக இருந்தது. ஆத்துமாக்கள் இரட்சிப்பை அடைய சுவிசேஷப் பிரசங்கம் அத்தியாவசியமானதாக இருந்தது (ரோமர் 10). சுவிசேஷப் பிரசங்கத்தை உறுதிப்படுத்த எந்தவிதமான அசாதாரணமான அற்புதச் செயல்களும் தேவையற்றுப் போயிற்று. இதைத்தான் இன்று பலர் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அற்புதங்களின் தேவன் தொடர்ந்து அற்புதங்களைச் செய்து கொண்டிருந்தாலொழிய எவரும் இரட்சிப்பை அடைய முடியாது என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். சுவிசேஷப் பிரசங்கத்தை மட்டும் செய்யமுற்படாமலும், அதன் வல்லமையில் நம்பிக்கை வைக்காமலும் சுவிசேஷக் கூட்டங்களில் எல்லாம் நோய் தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். புதிய ஏற்பாட்டுப் போதனைகளை விளங்கிக் கொள்ளாமலும், அதைத் தவறான அனுகுமுறையோடு எழுத்துபூர்வமாகக் கையாண்டு தவறான ஊழியங்களையும் செய்து வருகிறார்கள். இதையெல்லாம் நான் விளக்குவதற்குக் காரணம் இன்றைக்கு பரிசுத்த ஆவியானவர் எப்படிக் கிரியை செய்கிறார் என்று வேதம் விளக்கும் உண்மைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்.

ஏற்கனவே, நாம் பரிசுத்த ஆவியானவர் பிரசங்கியில் செய்யும் கிரியை பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். இனி பரிசுத்த ஆவியானவர் பிரசங்கங்களின் மூலம் ஆத்துமாக்களில் செய்யும் கிரியைகளைப் பற்றி சரிவரப் புரிந்துகொள்வதும் அவசியம்.

(2) பரிசுத்த ஆவியானவர் பிரசங்கங்களின் மூலம் செய்யும் கிரியை

பரிசுத்த ஆவியானவர் தேவவசனத்தின் மூலமாக ஆத்துமாக்களில் கிரியை செய்கிறார். அவரே வேத வசனங்களை நாம் புரிந்துகொள்ளும் படிச் செய்கிறார் (யோவான் 14). ஆவியானவரின் கிரியையில்லாமல் வசனமும், பிரசங்கமும் எவருக்கும் பயன்பட முடியாது. பரிசேயர்களும், வேதபாரகர்களும் பழைய ஏற்பாட்டைக் கரைத்துக் குடித்து யூதர்களுக்குப் போதித்த போதும் அவர்களுக்கு அதில் ஆத்மீக ஞானமில்லாதிருந்தது. அவர்களால் கர்த்தரின் செய்தியைப் புரிந்துகொள்ள முடியவில்லை; அவர்களுடைய இருதயத்தை வார்த்தை ஒருபோதும் தொடவில்லை. இதிலிருந்து இரண்டு உண்மைகளை விளங்கிக் கொள்ள வேண்டும். 1. ஆவியானவரின் துணையில்லாமல் வார்த்தையின் செய்தியை ஒருவரும் விளங்கிக் கொள்ள முடியாது. 2. ஆவியானவர் வார்த்தையின் மூலம் கிரியை செய்யாவிட்டால் கர்த்தரை ஒருவரும் விசுவாசிக்க முடியாது. ஆவியின் கிரியையின் மூலமே வசனத்தின் வல்லமையை நம்மால் அறிந்துணர்ந்துகொள்ள முடியும்.

பரிசுத்த ஆவியானவர் பிரசங்கங்களின் மூலம் கிரியை செய்கிறபோது அவருடைய கிரியை பொதுவாக நமது கண்களுக்குப் புலப்படாமலேயே இருந்துவிடும். கண்களால் பார்க்க முடியாத எதையும் ஆவியானவரின் கிரியையாக ஒப்புக்கொள்ள மறுக்கிறது பெந்தகொஸ்தே/கெரிஸ்மெடிக் இயக்கங்கள். ஆவியானவரின் கிரியையைப் பற்றி அவர்கள் கொண்டுள்ள தவறான எண்ணங்களின் விளைவு அது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பற்றி விளக்கிய இயேசு, அவர் காற்று வீசுகிறதைப் போல நமது கண்களுக்குப் புலப்படாமல் செயல்படுகிறார் என்றார் (யோவான் 3). இயேசு இங்கே ஆவியானவர் ஆத்துமாக்களின் இருதயத்தில் செய்கின்ற ஆத்மீகக் கிரியையைப் பற்றியே விளக்குகிறார். பெந்தகொஸ்தே/கெரிஸ்மெடிக் இயக்கங்கள் ஆவியானவரின் ஆத்மீக் கிரியைகளைவிட அவர் மனிதர்களின் சரீரத்தில் செய்யும் புறக்கிரியைகளை மட்டுமே எப்போதும் நாடி வருகிறார்கள். அதுவே அவர்கள் விடும் பெரிய தவறு. கர்த்தர் இன்று பிரசங்கத்தைப் பயன்படுத்தி ஆவியானவரின் கிரியைகள் மூலம் தன்னுடைய இராஜ்யத்துக்குள்ளும், திருச்சபைக்குள்ளும் ஆத்துமாக்களைக் கொண்டுவருவதையே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார். இயேசு கிறிஸ்து மறுபடியும் வருகிறபோது தன்னுடைய சபையைத் தன்னோடு கொண்டுபோக வரப்போகிறார்; அவர் தன்னுடைய மக்களுக்காக வரப்போகிறார்.

பிரசங்கிகள் பிரசங்கத்தைக் கர்த்தரில் தங்கியிருந்து பிரசங்கிக்கிற போது கர்த்தர் தன்னுடைய சித்தப்படி ஆத்துமாக்களின் இருதயத்தில் வசனம் செயல்படுமாறு ஆவியானவர் மூலம் கிரியை செய்கிறார் என்று பார்த்தோம். அப்படி ஆவியானவர் வசனத்தைப் பயன்படுத்தும்போது ஆத்துமாக்கள் துள்ளிக்குதிப்பதையோ, நிலத்தில் புரளுவதையோ, கூக்குரலிடுவதையோ, மிருகங்களைப் போல சத்தமிடுவதையோ, வலிப்பு வந்தது போல் துடிப்பதையோ. சாமி வந்ததுபோல் ஆடுவதையோ நாம் பார்க்க முடியாது. இத்தகைய சரீர நடவடிக்கைகள் எதுவும் இல்லாமலேயே ஒரு மனிதனின் இருதயத்தில் ஆவியானவர் வசனத்தின் மூலம் கிரியை செய்ய முடியும். இந்த புறச்சரீர நடவடிக்கைகள் ஆத்துமாக்களின் இருதயங்களில் ஆவியானவர் செய்யும் கிரியையின் அடையாளங்களல்ல. மாறாக, ஆவியின் கிரியை நிகழ்ந்த இருதயங்களின் சிந்தனைகளும், உணர்வுகளும் மாற்றமடைகின்றன. அவர்கள் சில வேளைகளில் பிரசங்கத்தைக் கேட்டு துள்ளிக்குதிக்காமலேயே இருதய ஆழத்தில் ஆனந்தப்படலாம். அவர்கள் ஆடாமல் அசையாமல் இருந்த இடத்தில் இருக்கும்போதே அவர்களுடைய கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகலாம். இவையெதுவும் இல்லாமல்கூட அவர்கள் அமைதியாக இருதய மாற்றத்தை மட்டும் அடைந்து தங்களுடைய வாழ்க்கை நடைமுறைகளை மாற்றிக் கொள்ளலாம். வசனத்தின் மூலம் ஆவியானவர் செய்யும் கிரியையின் அடையாளமாக மனிதரில் சரீரத்தின் புறஅடையாளங்ளில் ஆர்வம் காட்டி வருகிறவர்கள் ஆவியின் கிரியையைப் பற்றிய வேத அறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

ஆத்துமாவின் இரட்சிப்புக்காக வசனத்தின் மூலம் ஆவியானவர் செய்யும் கிரியையை மறுபிறப்பு என்று அழைக்கிறோம். இது மனித இருதயத்தில் ஆழத்தில் உள்ளார்ந்து நிகழ்கின்ற அனுபவம். இதை நாம் கண்களால் பார்க்க முடியாது. ஆவிக்குரிய இந்த அனுபவம் கர்த்தரின் வார்த்தையை ஆவியானவர் பயன்படுத்துவதன் மூலம் மனிதனில் நிகழ்கின்றது. இது வசனத்தின் துணை இல்லாமலும் நிகழலாம் என்று பிரெஸ்பிடீரியன் இறையியலாளர் தவறாகப் போதிக்கிறார்கள். அவர்களுடைய சபை வழக்கப்படி பிறந்த குழந¢தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் வழக்கத்தை நியாயப்படுத்துவதற்காக இந்தவிதமாக விளக்கங் கொடுக்கிறார்கள். வசனத்தைக் காதால் கேட்டு மனந்திரும்பாத எவருக் கும் இரட்சிப்பின் அனுபவம் கிடையாது என்று வேதம் போதிக்கின்றது. பிறந்த குழந்தையால் வசனத்தைக் கேட்டு ஒருபோதும் மனந்திரும்ப முடியாது.

மறுபிறப்பாகிய அனுபவத்தை அடைந்த ஆத்துமா உடனடியாக அது நிகழ்ந்த நேரமே அதை அறிந்திருப்பதில்லை. உள்ளார்ந்து நிகழ்கின்ற இந்த ஆவியின் கிருபை புற அடையாளங்களைக் கொண்டு உடனடியாக எவரிலும் நிகழ்ந்ததாக வரலாறும் இல்லை; வேதம் அதற்கு எந்தவிதமான சாட்சியமும் அளிக்கவில்லை. மறுபிறப்பு மனிதனின் இதயத்தில் உள்ளார்ந்து நிகழ்கிறபோது சுவிசேஷப் பிரசங்கக் கூட்டத்தில் ஆவியானவரின் வெளிப்புற கிரியைகளுக்காக மட்டும் அலைகிறவர்கள் பெருந்தவறு செய்கிறார்கள். பிரசங்கத்தைக் கேட்டு வலிப்பு வந்ததுபோல் துடிக்கின்ற கூட்டத்தைத் தேடாமல், மெய்யான மறுப்பிறப்பை அடைந்த ஆத்துமாக்களை இனங் கண்டுகொள்ளும் பக்குவத்தைக் கொண்டவ்களாக நாம் இருக்க வேண்டும்.

வரலாற்றில் பரிசுத்த ஆவியினால் எழுப்புதல்கள் நிகழ்ந்த காலத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பிரசங்கத்தைக் கேட்டு மறுப்பிறப்படைந்து மனந்திரும்பியதாக வாசிக்கிறோம். ஜோர்ஜ் விட்பீல்ட், ஜொனத்தன் எட்வர்ட்ஸ், ஹொவல் ஹெரிஸ், டேனியல் ரோலன்ட்ஸ், ஸ்பர்ஜன் போன்றோரின் பிரசங்க ஊழியங்கள் இந்தவிதமாக கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பெற்றதாக அமைந்திருந்தன. கர்த்தர் தன்னுடைய சித்தப்படி வரலாற்றில் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் எழுப்புதல்களை உண்டாக்கியிருக்கிறார். இக்காலங்களில் உலகம் பிரசங்கத்தில் வல்லமையுள்ளவர்களை சந்தித்திருக்கிறது. பிரசங்கம் மிக உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறது. அத்தோடு, எழுப்புதல்களை மனிதன் ஜெபத்தாலோ, வேறு எதையும் செய்தோ உருவாக்கிவிட முடியாது. இறையாண்மையுள்ள கர்த்தர் தன் சித்தப்படி அதை உண்டாக்குகிறார்.

வரலாற்றில் எழுப்புதல்கள் நிகழ்ந்த காலங்களில் ஆவியின் கிரியை யினால் பெருந்தொகையானோர் இரட்சிப்பை அடைந்தார்கள். அப்படி அவர்கள் இரட்சிப்பை அடைந்தபோதும் இன்று நாம் கேள்விப்படுகின்ற விதமாக அவர்கள் வலிப்பு வந்து ஆடவுமில்லை, நிலத்தில் விழுந்து புரளவுமில்லை. மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசித்ததற்கான அடையாளங்கள் மட்டுமே தெளிவாக இருந்தன. அப்படி இரட்சிப்பை அடைந்தவர்கள் அந்தக் காலங்களில் கர்த்தரின் சபைகளை நாடிச் சென்று ஜெபத்திலும், வேத வாசிப்பிலும், ஆத்மீக வாழ்க்கையிலும் வளர்ச்சியடைந்தார்கள் என்று வாசிக்கிறோம். ஜொனத்தன் எட்வர்ட்சின் காலத்தில் எழுப்புதல் நிகழ்ந்தபோது எட்வர்ட்ஸ் ஆவியின் கிரியையோடு தொடர்பற்ற சில நிகழ்வுகள் கூட்டங்களில் இருந்ததைக் கவனித்து அவற்றைத் தடுத்து வந்தார். மெய்யான இரட்சிப்பின் அனுபவத்தை அறிந்துகொள்ளுவதற்காக அதற்கான அடையாளங்களை விபரித்து அவர் ஒரு நூலையும் எழுதினார். பிசாசின் கிரியைகளை எட்வர்ட்ஸ் ஆவியின் செயல்களாக ஏற்றுக்கொள்ள மறுத்தார் என்பதை இது விளக்குகிறது. ஆவியின் கிரியை என்ற பெயரில் வரும் எதையும், எட்வர்ட்ஸோடு ஏனைய பிரசித்தி பெற்ற பிரசங்கிகளும் ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை நிதாதனத்தோடு சோதித்துப் பார்த்தார்கள்.

எழுப்புதல் நிகழ்ந்த காலங்களில் சில பிரசங்கிகளின் ஊழியத்தைக் கர்த்தர் பேரளவில் ஆசீர்வதித்திருக்கிறார். ஜோர்ஜ் விட்பீல்ட் இதற்கு ஒரு நல்ல உதாரணம். அவருடைய பிரசங்கங்கள் ஆத்துமாக்களை அசைத்து வரப்போகும் நியாயத்தீர்ப்பைக் குறித்து எச்சரித்து மனந்திரும்பும்படி அறைகூவலிட்டன. ஆயிரக்கணக்கில் மக்கள் அவருடைய பிரசங்கங்களைக் கேட்க அலை மோதினார்கள். இவருடைய பிரசங்கங்களை ஆவியானவர் அற்புதமாகப் பயன்படுத்தினார்.

 

 

© 2026 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.