வாசகர்களின் வாசிப்பு அனுபவம்...

1689 விசுவாச அறிக்கை நூலுடனான என் பயணம் அதன் கடைசி இரண்டு அதிகாரங்களில் இருந்துதான் ஆரம்பமானது. பல வருடங்களுக்கு முன்பு ஒருநாள் நண்பர்களாக சேர்ந்து உரையாடிக்கொண்டிருந்தபோது,

நியாயத்தீர்ப்புக்குப் பின்னர் அவிசுவாசிகளின் ஆத்துமாவுக்கு என்ன ஆகும்? என்ற கேள்வி எங்கள் மத்தியில் எழுந்தது. ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்தார்கள். சீர்திருத்த போதனைகளின் ஆதிக்கம் எனக்குள் தலைதூக்கியிருந்த அந்த ஆரம்ப நாட்களில், கேட்பதை எல்லாம் அப்படியே நம்பி விடும் குணம் மாறி, காரணகாரியங்களோடு வேதத்தின் அடிப்படையில் அவற்றை சிந்தித்துப் பார்க்கும் எண்ணம் வேரூன்றியிருந்தது. எனவே இந்தக் கேள்விக்கான சரியான பதிலைத் தேடி, இறுதியில் 1689 விசுவாச அறிக்கையின் கடைசி அதிகாரத்தில் அதனைக் கண்டுகொண்டேன்.

மரணம் மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அதன் விளக்கங்கள் ஒவ்வொன்றையும் சந்தேகத்திற்கிடமின்றி என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. கடந்த ஆறேழு வருடங்களில் தனிப்பட்டவிதத்தில், குடும்ப ஆராதனையில், வேதப்பாட வகுப்புகளில் என்று பலமுறை வாசித்தும், ஆய்வு ரீதியிலான அதன் போதனைகளைக் கேட்டும், அதன் சில பகுதிகளை மனப்பாடம் செய்தும். . . . என்று பலமுறை அலசி ஆராயப்பட்ட ஒரு நூலிது. பலமுறை இதை வாசித்திருந்தபோதும் “போதும்” என்ற எண்ணம் இன்றுவரையில் தோன்றியதில்லை. அத்தோடு ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் தனிப்பட்ட ஆத்மீக அனுபவம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு ஏற்றவகையில் மேலும் மேலும் ஆழமான வேத அறிவை அள்ளிக் கொடுத்து ஆச்சரியப்படுத்திய புத்தகமும் இதுவே.

1689 விசுவாச அறிக்கை 76 பக்கங்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய நூல். ஆனால் பிரித்தானிய அரசரின் கிரீடத்தில் பதிக்கப்பட்டிருக்கும் பலவகையான விலையேறப்பெற்ற வைரங்கள் போல விலைமதிப்பில்லா அடிப்படை வேத சத்தியங்களை முறையாகத் தொகுத்து வழங்கும் ஒரு ஒப்பற்ற புத்தகமாகும். நூலுடனான எனது பயண அனுபவம் மற்றும் அதன் மூலமாக நான் அடைந்த பயன்கள் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. நூல் முழுவதும் இறையியல் போதனைகளாக இருப்பதால் முதல் வாசிப்பிலேயே இதை இலகுவாக, எல்லாவற்றையும் புரிந்துகொள்வது இயலாத காரியம். போதகர் பாலா மூலமாக சீர்திருத்த போதனைகளுடன் தொடர்பு ஏற்பட்ட ஆரம்ப காலங்களில் இந்த நூல் என் கரங்களில் கிடைத்தது. ஆனால் அதை முழுமையாக வாசித்து முடிப்பது என்பது எனக்கு மிகவும் சவாலாகவே இருந்தது. பலமுறை அதன் முதல் சில அதிகாரங்களை மட்டும் வாசித்துவிட்டு தொடர்ந்து வாசிக்கும் ஆர்வம் இல்லாமல் வேறு புத்தகங்களை நாடிச் சென்று விடுவேன். (ஆர்வம் இல்லாமைக்கு காரணம் அதன் இறையியல் போதனையைப் புரிந்து கொள்ளும் அளவுக்குப் போதிய அறிவும் பொறுமையும் இல்லாமையே! என்று பின் நாட்களில்அறிந்து கொண்டேன்). கடைசியில் ஒருமுறையாவது நூலை முழுமையாக வாசித்து முடிப்பது எனத் தீர்மானித்து, அதற்காக நேரம் கொடுத்து கவனத்துடன் வாசித்து முடித்தேன். முதல் வாசிப்பில் மேலோட்டமாக அதன் இறையியல் போதனைகளோடு ஏற்பட்ட பரிச்சயம் என்னை மறுபடியும் நூலை வாசிக்கத் தூண்டியது. அதன் பின்னர் இன்றுவரையிலும் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை என்று தொடர்ந்து அதை வாசித்து வருகிறேன்.
  2. 1689 விசுவாச அறிக்கையை எந்தவித முரண்பாடுகளும் இல்லாமல் நம்பிக்கையுடன் வாசிப்பதற்கு அதன் அறிமுகப் பகுதி மிகவும் உதவி செய்கிறது. குறிப்பாக விசுவாச அறிக்கை உருவான வரலாற்றுச் சூழல், அதற்கான அவசியம் மற்றும் திருச்சபை அரசமைப்பிலும், திருநியமங்களைப் பயன்படுத்துவதிலும் அதன் பயன்பாடுகள் குறித்த பல போதனைகளைத் தருகின்றது. மேலும் இந்த விசுவாச அறிக்கை சில மனிதர்களின் அறிவுசார்ந்த சித்தாந்தப் போதனைகளால் உண்டானதோ அல்லது “வேதம் மட்டுமே” என்ற சீர்திருத்த கொள்கைக்கு எதிரானதோ அல்ல! மாறாக இது “வேதத்தின் அடிமை” என்ற அடிப்படை உறுதியை நமது மனசாட்சிக்கு அளித்து தொடர்ந்து நம்பிக்கையுடன் நூலை வாசிக்க இந்த அறிமுகப் பகுதி மிகவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும் அடிக்குறிப்பாகத் தந்திருக்கும் வசனங்களையும் சேர்த்து வாசிக்கும்போது இந்த உண்மை நமக்கு நன்கு உறுதிப்படும்.
  3. நூலை வாசித்திருக்கும் அனைவரும் பொதுவாகவே ஆச்சரியப்படும் ஒரு விஷயம் அதன் முறையான அதிகார ஒருங்கிணைப்பு. நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் இறையியல் போதனைகளைச் சரியாகப் புரிந்துகொள்ள, ஒரு “நூலேணியில் கீழ் முனையில் இருந்து ஒவ்வொரு படியாக மேலே ஏறுவது போல, புத்தகத்தின் அதிகாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக முறையாக வாசித்து, அதன் இறையியல் போதனைகளை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளும்போது முழுமையாக அதன் பயனை அனுபவிக்க முடியும். எடுத்துக்காட்டாக, நூலின் முதல் அதிகாரம் குறிப்பிடும் வேதாகமத்தின் முழுமையான, தவறிழைக்கவியலாத அதன் தெய்வீக அதிகாரத்தை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளாதவரையில் அதன் அடுத்தடுத்த அதிகாரங்கள் குறிப்பிடும் திரியேகத் தேவனையும், அவரின் ஆணை, படைப்பு, பராமரிப்பு, வீழ்ச்சி, உடன்படிக்கை, இரட்சிப்பு, . . . ஆகியவை குறித்த அடிப்படை வேதசத்தியங்களை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளவே முடியாது. நூலின் ஒரு அதிகாரத்தை அடுத்துவரும் அதிகாரத்தில் இருந்து பிரிக்க முடியாது. அதனால் ஒன்றை மற்றும் விசுவாசித்து இன்னொன்றை ஒதுக்கிவைக்க முடியாது.
  4. விசுவாச அறிக்கையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, ஆழமான பொருள் பொதிந்து காணப்படுகின்றன. எனவே ஒவ்வொரு வார்த்தையையும் அதன் சரியான அர்த்தம், அவற்றின் இலக்கண அமைப்பு ஆகியவற்றைப் புரிந்து வாசிப்பது மிகவும் அவசியம். உதாரணமாக, 2ம் அதிகாரத்தில் திரியேக தேவனின் குணாதிசயமாக “அவர் மாறாதவர்; அளக்க முடியாதவர்; என்றுமுள்ளவர்; புரிந்துகொள்ள முடியாதவர் (மனிதனுடைய சிந்தனைகளுக்கும், அறிவிற்கும் அப்பாற்பட்டவர்); எல்லாம் வல்லவர்; எல்லாவிதத்திலும் எல்லையற்றவர்; மிகப்பரிசுத்தர்; மிகுந்த ஞானமுள்ளவர்; பெருஞ் சுதந்திரம் உள்ளவர்; முழுமையானவர்; . . .” என்று அந்த பட்டியல் நீளுகிறது. அந்த வார்த்தைகளின் அர்த்தத்தைச் சரியாக அறிந்து விசுவாசிக்கும்போதுதான் கர்த்தரின் பிரசன்னத்தைத் தரிசித்த பரிசுத்தவான்கள் ஏன் செத்தவனைப்போல அவர் பாதத்தில் விழுந்தார்கள் என்பதன் அர்த்தம் புரியும்; என் தேவன் எத்தனை உயர்ந்தவர்! என்ற மரியாதை, அதிர்ச்சி, பயம், பிரமிப்பு, ஆச்சரியம், நம்பிக்கை என பலவகை உணர்வுகளைக் கடந்து அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் கர்த்தர் மேலுள்ள நமது விசுவாசமும் அன்பும் உறுதிப்படும்; சர்வ வல்லமையும் ஞானமும் நிறைந்த நல்லவராகிய தேவனுடைய பராமரிப்பில் உறுதியான நம்பிக்கையும், திருப்தியும், மெய்யான சந்தோஷமும் உண்டாகும்.
  5. 1689 விசுவாச அறிக்கையை நமது கிறிஸ்தவ வினாவிடைப் போதனைகளோடு சேர்த்து வாசிப்பது, வாசிப்பை இலகுவாக்கி நமது புரிந்து கொள்ளுதலை மேம்படுத்த உதவும். அத்தோடு அடிப்படை சத்தியங்களைக் குறித்த பிரசங்கங்கள் கேட்பது, அது குறித்த விளக்கவுரை புத்தகங்களை வாசிப்பது, கிறிஸ்தவ வரலாறு குறித்த பரவலான அறிவைக் கொண்டிருப்பது ஆகியவை இந்த விசுவாச அறிக்கையின் மூலம் மேலான பயனைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும். குறிப்பாக, மனித சித்தம் என்ற இறையியல் போதனையை விளக்கமாக அறிந்துகொள்ள போதகர் பாலா அவர்களின் “மனித சித்தம்” என்ற நூல் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது, “மனித சித்தம்” என்ற வார்த்தையைக் கேட்கும்போதெல்லாம் கூடவே ஆர்மீனிய, பேலேஜியனிச போலிப் போதனைகளும் அவற்றிற்கு எதிராகப் போராடிச் சத்தியத்தை நிலைநாட்டிய ஆகஸ்தீனும் நினைவில் தோன்றாமல் போவதில்லை. அதுபோலவே தேவமனிதனாகிய கிறிஸ்து “மனித உருவெடுத்து, ஒரே ஆளில் கடவுள், மனிதன் ஆகிய இருவேறு தனித் தன்மைகளைக் கொண்டு அன்றும் இன்றும் என்றும் தொடர்ந்து நித்திய தேவகுமாரனாக இருக்கிறார்” என்ற வரிகளை மனனம் செய்து படித்திருந்தும், “நித்திய தேவகுமாரன்” என்பதன் முழுமையான அர்த்தம் அடிப்படைச் சத்தியம் தொடர்பான ஒரு பிரசங்கத்தைக் கேட்டபோதுதான் சட்டென்று எனக்குப் புரிந்தது.
  6. “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பது போல வெறுமனே சத்திய அறிவை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவர் கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்து விடமுடியாது. அதற்கு பரிசுத்த ஆவியாகிய தேவனின் உயிரூட்டலும், விசுவாச நண்பர்களின் அனுபவ உதவியும் மிகவும் அவசியம். எனவே நூல் விளக்கும் இறையியல் போதனைகளை விசுவாசித்து அதன்படி வாழ ஆவியானவரின் உதவிக்காக தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படும்போது அவற்றை சபை மூப்பர்கள் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு சக விசுவாச நண்பர்களோடு நல்ல நட்புறவை வளர்த்து அவர்கள் பெற்றிருக்கும் கிருபையின் வரம், கிறிஸ்தவ அனுபவம், இறையியல் அறிவு ஆகியவற்றை நாம் பயன்படுத்திக்கொள்ளும்போது இந்த விசுவாச அறிக்கையின் போதனைகளை நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும் செயல்படுத்தி ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வு வாழ முடியும்.

அடுத்தபடியாக 1689 விசுவாச அறிக்கையின் மூலம் அடைந்த நன்மைகள் சிலவற்றைச் சுருக்கமாக இங்கு குறிப்பிடுகிறேன்.

  1. Pelagianism, Arminianism, Pragmatism, Gap theory, Dispensationalism, Pre-Millennialism போன்ற பல தவறான போதனைகளின் பிடியிலிருந்து விடுபட இந்த விசுவாச அறிக்கையின் மூலமாக கர்த்தர் உதவி செய்தார்.
  2. பல வருடங்களுக்கு முன் பிரசங்கி, உன்னதப் பாடல் போன்ற புத்தகங்கள் தேவனால் அருளப்படாத மனித சித்தாந்தங்கள் எனும் எண்ணம் எனக்குள் வேரூன்றி இருந்தது. ஆனால் முழு வேதமும் தேவ ஆவியானவரால் ஊதி அருளப்பட்டது என்ற உண்மையையும், தவறிழைக்கவியலாத வேதத்தின் தெய்வீக அதிகாரத்தையும் அறிந்து விசுவாசத்தோடு அதற்குக் கீழ்ப்படிய இந்த விசுவாச அறிக்கை மிகவும் உதவியது.
  3. சில வருடங்களுக்கு முன்பு இரட்சிப்பின் ஆசீர்வாதங்கள் குறித்த இதன் இறையியல் போதனைகள் என் எண்ணத்தில் ஏற்படுத்திய மாற்றத்தையும், உள்ளத்தில் உண்டாக்கிய சந்தோஷத்தையும் இன்றும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
  4. வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளால் பிரச்சனைகளும் குழப்பங்களும் சோர்வும் உண்டாகும் நேரங்களில் எல்லாம் விசுவாச அறிக்கையின் 17 மற்றும் 18ம் அதிகாரங்களான, பரிசுத்தவான்களின் விடாமுயற்சி மற்றும் கிருபையின் நிச்சயமும் இரட்சிப்பும் ஆகிய அதிகாரங்களை வாசித்து அதன் மூலம் மிகுந்த ஆறுதலும் தைரியமும் அடைவதோடு, பராமரிப்பில் கர்த்தர் அளித்திருக்கும் கிருபையின் சாதனங்களை வைராக்கியத்தோடு பயன்படுத்தி இன்றுவரையிலும் தொடர்ந்து கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்க உதவி செய்திருக்கிறது.
  5. தனிப்பட்ட வேத வாசிப்பில் ஒரு வேதப் பகுதியின் மையக் கருத்தைக் கண்டுபிடித்து அதனடிப்படையில் அந்த இறையியல் போதனையைப் புரிந்துகொள்ள விசுவாச அறிக்கை மிகவும் உதவி செய்கிறது.
  6. தெய்வீக பராமரிப்பு, கிறிஸ்துவின் மத்தியஸ்த பணிகள், உடன்படிக்கை இறையியல், நீதிமானாக்குதல், கிறிஸ்தவ சுதந்திரமும் மனசாட்சியின் சுதந்திரமும் போன்ற இறையியல் போதனைகளால் நடைமுறை வாழ்வில் நான் அடைந்த நன்மைகள் மிகவும் அதிகம். அவற்றை எல்லாம் விவரமாக எழுதினால் இந்த ஆக்கம் இன்னும் பல பக்கங்கள் நீண்டு விடும், எனவே இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இளம் பிள்ளைவாதம் நோய் வராமலிருக்க, குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் “போலியோ” சொட்டு மருந்து கொடுப்பார்கள். அதுபோலவே இளம் ஆத்துமாக்களின் நரம்பு மண்டலத்தை எளிதாகத் தாக்கி அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்திவிடும் கொடிய “போலிப்போதனை வைரஸ்”களிடமிருந்து விசுவாசிகளைக் காப்பாற்ற இந்த விசுவாச அறிக்கையின் இறையியல் போதனைகள் குறிப்பிட்ட இடைவேளையில் புகட்டப்பட வேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான் “போலியோ அட்டாக்” இல்லாத ஆத்துமாக்களைக் கொண்ட ஆரோக்கியமான சபைகள் உருவாகும்; “சீர்திருத்தம்” எனும் சொல் சபையின் பெயர் பலகையில் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு சபை அங்கத்தினர்களின் இதயத்திலிருந்து ஆரம்பித்துச் செயலில் வெளிப்படும். அத்தோடு ஒவ்வொரு விசுவாசியும் தான் எதை விசுவாசிக்கிறேன் என்று உறுதியாக அறிந்து தயக்கம் இன்றி தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடவும் இந்த விசுவாச அறிக்கை மிகவும் உதவி செய்கிறது.

தமிழ் கிறிஸ்தவத்தின் வரலாற்று ஏடுகளில் பொறிக்கப்படவேண்டிய ஒரு மிகப்பெரியச் சாதனை! என்று 1689 விசுவாச அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பைச் சொன்னால் அது மிகையாகாது. போதகர் பாலா அவர்களின் கடினமான உழைப்பையும், மொழிபெயர்ப்புத் திறனையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. எங்கள் பிள்ளைகள் விசுவாச அறிக்கையை ஆங்கிலத்தில் கற்று வருவதால் இதே விசுவாச அறிக்கையை ஆங்கிலத்திலும் வாசித்திருக்கிறேன். எனவே மிகச்சரியான தமிழ் வார்த்தைகளைக் கண்டுபிடித்து எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்! என்று அவரின் மொழிபெயர்ப்பைப் பார்த்து பலமுறை வியந்து போயிருக்கிறேன். கண்டிப்பாக இது தேவனுடைய கிருபையின் ஈவு என்பதில் சந்தேகமே இல்லை. போதகர் பாலா அவர்களுக்கும், சீர்திருத்த வெளியீடுகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- ஷேபா, ஓமான்

© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.