நூல் அறிமுகம்

பிள்ளை வளர்ப்பின் அவசியத்தை உணராத குடும்பங்கள் இருக்கமுடியாது. தங்களுடைய பிள்ளைகள் நாம் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய விதத்தில் நடக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரினதும் கனவாக இருக்கின்றது.

ஆனால், வெறும் கனவும், ஆசையும் மட்டும் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்துவிடாது. பிள்ளை வளர்ப்பில் தமது பொறுப்புக்களை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்காத பெற்றோர்கள் தேவனின் ஆசீர்வாதத்தைத் தங்களுடைய குடும்பங்களில் காண முடியாது.

பிள்ளை வளர்ப்பின் அவசியத்தைக் குறித்தும், அதற்காகப் பெற்றோர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நல்ல ஆலோசனைகளை ஜெ.சி. ரைல் தனது “ஆவிக்குரிய பிள்ளை வளர்ப்பு” என்ற நூலில் வழங்கியுள்ளார்.

ஜோன் சார்ள்ஸ் ரைல் (1816-1900) ஒரு அருமையான பிரசங்கி. இங்கிலாந்தில் சீர்திருத்தவாத பிரசங்கியாக, லிவர்பூலில், இங்கிலாந்து திருச்சபையில் போதகராக இருந்த ரைல் அநேக நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றில் இந்நூலும் ஒன்று. ரைல் இந்நூலில் பிள்ளை வளர்ப்புக்கான பதினேழு சிறந்த அறிவுரைகளை விளக்கமாக வழங்கியுள்ளார். ரைலின் போதனையின்படி பிள்ளைகள் தானாக வளர முடியாது. அவர்களைப் பெற்றோர்கள் பயிற்றுவிக்க வேண்டும். இப்பதினேழு அறிவுரைகளும் பிள்ளைகளை எப்படிப் பயிற்றுவிப்பது என்பது பற்றியே எடுத்துக் கூறுகின்றன.

இன்று அநேக கிறிஸ்தவ பெற்றோர்களுக்கு பிள்ளை வளர்ப்பில் அதிக அனுபவம் இல்லாதிருக்கின்றது. பிள்ளை வளர்ப்பில் அநேகர் பல தவறான செயல்களையும் செய்து வருகிறார்கள். பிள்ளை வளர்ப்பு என்பது ஒவ்வொரு நாட்டிலுமுள்ள பாடசாலைகள், கல்லூரிகளின் பொறுப்பு என்று எண்ணிவருகிறவர்கள்தான் எத்தனைபேர். பிள்ளை வளர்ப்பு பற்றியும் வேதம் போதிக்கின்றதா? என்று கேட்கும்விதத்திலேயே அநேக பெற்றோர்கள் நடந்து வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் பிள்ளை வளர்ப்பு பற்றி அவர்கள் அறியாமலிருப்பதுதான். அதற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்பது போலவே போதகர்களும், திருச்சபைகளும்கூட நடந்து வருகின்றார்கள். இந்நிலைமை மாறவேண்டும். இது மாறவேண்டுமானால் அதற்கு இரண்டு விஷயங்களில் கிறிஸ்தவர்களுக்கு தெளிவு இருக்க வேண்டும்.

(1) முதலாவதாக, கிறிஸ்தவம் என்பது பரலோகத்திற்குப் போவதற்காக கிறிஸ்துவை அறிந்து கொள்வது மட்டும்தான் என்ற தவறான எண்ணத்தை நாம் விட்டுவிட வேண்டும். இந்தவிதத்திலேயே தமிழர்கள் மத்தியில் கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. கிறிஸ்து கொடுக்கும் நித்திய ஜீவனுக்கும் நமது உலகவாழ்க்கைக்கும் தொடர்பில்லை என்பது போலவே பலர் வாழ்ந்து வருகின்றார்கள். இதற்குக் காரணம், இரட்சிப்புப் பற்றிய சரியான போதனை கொடுக்கப்படாததே. ஒருவரை கிறிஸ்து இரட்சிக்கும்போது, அந்நபர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் கிறிஸ்துவின் வேதத்தின் அதிகாரத்திற்குக் கீழ்கொண்டுவர வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கை கிறிஸ்துவின் முழுமையான ஆளுகையின் கீழ் வர வேண்டும். அதன்படி அவனது சொந்த வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் கிற்ஸதுவின் வேத அதிகாரத்தின் கீழ் வரல் அவசியம், கிறிஸ்துவில் நாம் வைக்கும் விசுவாசம் நமது வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும் பாதிக்கின்றது. இந்த உண்மை போதிக்கப்படாததாலும், புரிந்து கொள்ளப்படாததாலுமே இன்று நம்மத்தியில் காணப்படும் கிறிஸ்தவத்திற்கும் நமது குடும்ப வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்புமே இல்லாதுபோல் காணப்படுகின்றது.

(2) இரண்டாவதாக, பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும் என்ற உண்மை பெற்றோர்களுக்கு உறைக்க வேண்டும். அதுவும் அவர்கள் பெற்றோர்களால் வளர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு எழவேண்டும். தங்களுடைய கடமையைத் தட்டிக்கழித்துவிட்டு தாதிகளிடத்திலும்; உறவினர்களிடத்திலும் தங்கள் பிள்ளைகளை வளரும்படி விட்டுவிடும் பெற்றோர்களால் பிள்ளைகளை ஒருபோதும் பயிற்றுவிக்க முடியாது. பெற்றோர்கள் முதலில் இது தங்களுடைய பொறுப்பு என்பதை உணர வேண்டும். ஆகவே, பிள்ளை வளர்ப்பில் அக்கறை காட்டும்படி பெற்றோர்கள் முதலில் திருந்த வேண்டியது அவசியம். தேவன் கொடுத்திருக்கும் இப்பொறுப்பிற்கு அவர்கள் தேவனுக்கு முன் பதில் கூற வேண்டும் என்ற உண்மையையும் அவர்கள் உணர வேண்டும். பணம் வேண்டும். வாழ்க்கையில் வசதி வேண்டும் என்பதற்காக தங்கள் பிள்ளைகளை பூனைக்குட்டிகளைப்போல் அங்கும் இங்குமாக வளரவிடுவது கிறிஸ்தவப் பெற்றோர்கள் செய்யும் காரியமல்ல.

பவுல் எபேசியருக்கு எழுதியுள்ள நிருபத்தில் கூறியுள்ளதை நினைவுகூருங்கள். “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளை கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக (எபேசியர் 6:4) என்று பவுல் கூறுகிறார். சாலமோன் நீதிமொழிகளில், “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து” என்று கூறுகிறார்.

இனி ரைல் எழுதியுள்ள நூலுக்கு வருவோம். இந்நூலில் ரைல் தருகின்ற பதினேழு அறிவுரைகளும் வேதபூர்வமான சிறப்பான அறிவுரைகள். இவற்றைப் பெற்றோர்கள் விசுவாசத்துடனும், கருத்துடனும் பயன்படுத்தினால் தங்கள் பிள்ளைகளை நல்லபடியாக வழிநடத்தியவர்களாவார்கள். இவற்றைப் போதகர்கள் தங்கள் பிரசங்கத்தில் பயன்படுத்தி விளக்கமாக சபைகளில் நிச்சயம் போதித்தல் அவசியம். அத்தோடு தங்கள் சபைக்குடும்பங்கள் இந்நூலை வாசிக்குமாறும் வற்புறுத்த வேண்டும். பிள்ளை வளர்ப்பில் பிரச்சனைகளை சந்திக்கும் குடும்பங்களுக்கு ஆலோசனைகூற இந்நூலைப் போதகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், புதிதாக திருமணம் செய்துகொள்ளவிருப்பவர்களுக்கு போதகர்கள் திருமணம்பற்றி ஆலோசனைகள் கூறும்போது இந்நூலை நிச்சயம் அவர்கள் வாசிக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இறுதியாக, ரைல் கூறும் பதினேழு அறிவுரைகளில் ஒன்றை மட்டும் நான் இங்கே குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். பிள்ளை வளர்ப்பில் அக்கறையுள்ளவர்கள், “உங்களுடைய முன்மாதிரி அவர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை மனதில் கொண்டு அவர்களை பயிற்றுவியுங்கள்” என்று ரைல் கூறுகிறார். “குழந்தைகள் காதுகளினால் கேட்பதைவிட கண்களினால் காண்பவற்றால் அதிகம் கற்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். ஞாபக சக்தியைவிட வலிமையான கொள்கை மற்றவர்களைப்போல நடப்பதாகும். காதால் கேட்பதைவிட, அவர்கள் தங்கள் கண்களால் பார்ப்பவையே அவர்களுடைய வாழ்க்கையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே குழந்தைகளுக்கு முன்னால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்” என்று கூறும் ரைல், “குழந்தைகளுக்கு முன்னால் பாவம் செய்பவன் இரண்டு மடங்கு பாவம் செய்கிறான்” என்பது உண்மையான பழமொழி என்று நினைவுறுத்துகிறார். “குழந்தைகள் எதையும் விரைவாக கவனிப்பார்கள். மாய்மாலமானதை அவர்கள் எளிதில் கவனிப்பார்கள். நீங்கள் உண்மையில் என்ன நினைக்கிறீர்கள், எதை உணர்கிறீர்கள் என்பதை அவர்கள் விரைவில் கண்டுபிடிப்பார்கள். உங்களுடைய வழிகளையும் கருத்துக்களையும் விரைவில் பின்பற்றுவார்கள்; தந்தை எப்படியோ மகனும் அப்படியே என்பதை நீங்கள் பொதுவாகவே காணலாம்.”

ரைலின் இவ்வார்த்தைகள் எத்தனை பொருள் பொதிந்தவை. நாம் என்ன செய்கிறோம், எவ்வாறு வாழ்கிறோம் என்பதில் அக்கறையெடுக்காமல் பிள்ளை வளர்ப்பில் ஈடுபடுவதெப்படி? நமது பிள்ளைகளின் வளர்ச்சியில் பெரும்பங்கு நமது கைகளில் இருக்கின்றது என்பதைப் பெற்றோர்கள் உணரும்வரை அவர்களுடைய பிள்ளைகள் சிறப்பாக, கிறிஸ்துவிற்காக வளரமுடியாது.


© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.