– அறிமுகம் – பவுல் ரோமருக்கெழுதிய நிருபத்தை இப்போது சபையில் பிரசங்கம் செய்து வருகிறேன். முழு நூலின் வரலாற்று இறையியல் பின்னணியின் அடிப்படையில் தொடர்ச்சியாக வசனம் வசனமாக வியாக்கியானப் பிரசங்கமளிப்பதே என் வழக்கம்.
இப்போதைக்கு கர்த்தரின் கிருபையால் 17 பிரசங்கங்களை 2ம் அதிகாரத்தின் நடுப்பகுதிவரையும் அளித்திருக்கிறேன். இந்நூலைப் பிரசங்கித்து முடிய ஒரிரு வருடங்களாவது எடுக்கும் என்று நினைக்கிறேன்.
ரோமர் நிருபத்தில் இருந்து பல வருடங்களுக்கு முன் பிரசங்கமளித்திருக்கிறேன். இப்போது சபையில் புதியவர்களும் இருப்பதால் மீண்டும் அதில் பிரசங்கம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். வேத நூல்கள் அனைத்திலும் ரோமர் நூலுக்கே அதிகமான விளக்கவுரையாளர்கள் ஆங்கிலத்தில் விளக்கவுரை அளித்திருக்கிறார்கள். ஐம்பதுக்கு மேல் காணப்படும் அருமையான விளக்கவுரைகளோடு இந்த வருடம் வெளிவந்த புதியதொன்றும் இணைந்திருக்கிறது. இது எந்தளவுக்கு ரோமருக்கு பவுல் எழுதிய நிருபம் பிரபலமானதாக இருக்கிறதென்பதை உணர்த்துகிறது. ரோமர் நூலையோ, அதன் ஒரு பகுதியையோ வாசித்து மனந்திரும்புதலை அடைந்தவர்கள் அநேகர்; அவர்களில் முக்கியமானவர் சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர்.
ரோமர் பற்றிய கற்றோரின் கருத்துரை
இந்நூல் எந்தளவுக்கு முக்கியமானது என்பதை உணர ஜோன் கல்வினின் வார்த்தைகளைக் கவனியுங்கள்,
“இந்த நூலை நாம் தெளிவாகப் புரிந்துகொள்வோமானால், வேதத்தில் அடங்கிக்காணப்படும் அற்புதமான போதனைப் புதையல்களை நாமடையக்கூடிய வாசல் நம்முன் திறந்துகாணப்படுகிறது”.
இந்நூலால் அதிகம் பாதிக்கப்பட்டு மனந்திரும்பிய மார்டின் லூதர், “இந்நூலே புதிய ஏற்பாட்டின் மிக முக்கிய நூல், அத்தோடு மிகத் தெளிவாக சுவிசேஷத்தை இது கொண்டிருக்கிறது. இதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் வார்த்தை வார்த்தையாக அறிந்திருப்பதோடு, தன் இருதயத்திற்கான அன்றாட அப்பமாக இதில் ஒவ்வொரு நாளும் தோய்ந்திருக்க வேண்டும். இதற்கு மேல் போதும், இதை வாசிக்கத்தேவையில்லை என்று ஒரு நாளும் ரோமரை நினைக்கமுடியாது. அதிகமாகத் தொடர்ந்து வாசிக்க வாசிக்க மிகவும் அருமையானதாக ரோமர் இருப்பதை நாம் காண்பதோடு, அதனுடைய ருசியும் மேலானதாகக் காணப்படும்“ என்கிறார் லூத்தர்.
இதற்கு விளக்கவுரை எழுதியுள்ளவர்களில் ஒருவரான, மறைந்த சீர்திருத்த பிரசங்கியும், போதகருமான ஆர். சீ. ஸ்பிரவுல், “இது பவுலின் முழுமையானதும், மகத்தானதும், அனைத்தையும் உள்ளடக்கியதுமான சுவிசேஷ செய்தி” என்று எழுதியிருக்கிறார்.
ஹாவார்ட் மார்ஷல் எனும் இறையியல் அறிஞர் ரோமருக்கு வியாக்கியானப் பிரசங்கமளித்துள்ள டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் எனும் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபலமான பிரசங்கியைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்,
“இருபதாம் நூற்றாண்டில் சபையில் ரோமருக்கு விளக்கங்கொடுத்திருப்பவர்களில் மிகவும் செல்வாக்குள்ளவர் யார் என்று கேட்டால், அதில் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவர் டேவிட் மார்டின் லொயிட் ஜோன்ஸ். அவரைப் பற்றிப் பெரும் கல்விமான்களின் மத்தியில் கேள்விப்படமாட்டீர்கள். ஆனால், சுவிசேஷ திருச்சபைகள் மத்தியில் அவரே ரோமர் நிருபத்திற்கு விளக்கமளித்த மிகத்திறமையான பிரசங்கியும், வியாக்கியானப் பிரசங்கியுமாக இருந்திருக்கிறார். ஜோன் கல்வினும், மார்டின் லூத்தரும் அவரில் அதிக செல்வாக்குச் செலுத்தியவர்களாக இருந்திருக்கிறார்கள்.”
மார்டின் லொயிட் ஜோன்ஸ், 1955ல் ஆரம்பித்து 1968 வரை ரோமர் நிருபத்தில் இருந்து தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமைகளில் இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் செப்பலில் 325 பிரசங்கங்களை அளித்திருக்கிறார். அதைக் கேட்பதற்கு அக்காலத்தில் பெருங்கூட்டம் கூடியது. ஏனெனில், வேதபூர்வமான வியாக்கியானப் பிரசங்கம் பெருமளவுக்கு இல்லாதிருந்த காலம் அது. அதனால் அத்தகைய நல்ல பிரசங்கங்களை நாடிக் கூட்டம் அலைமோதியது. அறுநூறு, எழுநூறுக்கு மேல் வார நாளில், வெள்ளிக்கிழமைகளில் வேதப் பிரசங்கம் கேட்க மக்கள் வருவது அன்று அபூர்வம். மார்டின் லொயிட் ஜோன்ஸின் பிரசங்கங்கள் நடைமுறையை அன்று மாற்றியமைத்திருந்தது. என் சபையில் உதவிக்காரராக இருந்து வருகிற ஒருவர் (88 வயது) அந்தக் கூட்டங்களில் அக்காலத்தில் கலந்துகொண்டிருக்கிறார். இங்கிலாந்தில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இருந்து பலர் அத்தொடர்கூட்டங்களில் கலந்துகொண்டு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு லொயிட் ஜோன்ஸின் பிரசங்கங்கள் அன்று பிரசித்தமாயிருந்தன. அப்பிரசங்கங்கள் அனைத்தும் தொடராக இன்று ஆங்கிலத்தில் நூல்களாக விற்பனைக்கு இருந்து வருகின்றன.
ஒரு சபையில் ரோமர் மூன்றாம் அதிகாரத்தில் 1978-1979களில் கொடுக்கப்பட்ட பிரசங்கங்களே இவ்வாக்கத்தின் ஆசிரியரைப் பாதித்து மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வைத்தன. கிறிஸ்தவ வாழ்க்கையில் அந்த ஆரம்பக் காலங்களிலேயே நான் மார்டின் லொயிட் ஜோன்ஸ் ரோமருக்குக் கொடுத்திருந்த வியாக்கியானப் பிரசங்க நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். லொயிட் ஜோன்ஸின் அருமையான விளக்கங்களைப் பொறுமையோடு வாசித்து சிந்திக்க வேண்டும். அந்தளவுக்கு ரோமரின் ஒவ்வொரு வசனத்திற்கும் அவர் மூல மொழியை ஆராய்ந்து, வேத வசன உட்பொருள் விளக்கமளித்து (Exegesis), வியாக்கியானப் பிரசங்கமளித்திருந்தார் (Expository preaching). அவர் பயன்படுத்திய அந்தப் பிரசங்கமுறை ஆத்துமாக்களை வேதத்தை அதிக ஆழமாக வாசித்துப் புரிந்துகொள்ள வைத்தது. இந்த 21ம் நூற்றாண்டிலும் நம்மினத்தில் அத்தகைய பிரசங்கங்களை அளிக்கக்கூடியவர்களை விரல்விட்டு எண்க்கூடியளவுக்குக்கூட இல்லை.
ரோமர் நூலின் விளக்கவுரைகள்
ரோமர் நிருபத்திற்கு ஏராளமானோர் ஆங்கிலத்தில் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள் என்று சொன்னேன். தற்காலத்தில் சிறுவர்களில் இருந்து பெரியவர்கள்வரை வாசிக்கக்கூடிய அளவுக்கு அந்நிருபத்தில் விளக்கவுரைகள் காணப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரையில் பேராசிரியர் ஜோன் மரேயும், வில்லியம் ஹென்றிக்சனும் எழுதியுள்ள விளக்கவுரைகள் சிறப்பானவை.
அந்நிருபத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பிரசங்க விளக்கவுரைகளுக்கு மார்டின் லொயிட் ஜோன்ஸினுடையது மிகச் சிறந்தது; வாசிக்க இலகுவானது. அத்தோடு நவீன காலத்தில் ஆர். சி. ஸ்பிரவுல், ஸ்டுவர்ட் ஒலியொட், ரொப் வென்சூரா போன்றோர் எழுதியுள்ள எளிமையான விளக்கவுரைகள் விற்பனையில் இருக்கின்றன.
பிரபலமாகவிருந்த ஒரு பாப்திஸ்து போதகர், “ரோமர் நிருபத்தில் இருந்து செய்யப்பட்டிருக்கும் பிரசங்கங்கள் கிறிஸ்தவ வரலாற்றில் அதை மாற்றியமைக்கக்கூடிய சீர்திருத்தங்களையும், எழுப்புதல்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ரோமரில் இருந்து கொடுக்கப்படும் உயர்தரமான போதனைகள் திருச்சபையில் உண்டாக்கக்கூடிய வல்லமையான சிற்றலை போன்ற அதிரடி மாற்றங்களை ஒரு நிமிஷம் நின்று நிதானித்துப் பாருங்கள். எந்தக் கேள்வியும் எழமுடியாதபடி நம்முடைய சத்தியங்கள் பலமானதாகவும், நம்முடைய நம்பிக்கைகள் ஆழமானதாகவும் மாறும். நம்முடைய ஆராதனை உயர்தரமானதாகவும், நம்முடைய வாழ்க்கை மேலும் பரிசுத்தமடையும். நம்முடைய ஐக்கியம் நெருக்கமானதாகவும், சுவிசேஷப் பணி பலமானதாகவும் அமையும்” என்று விளக்கியிருக்கிறார்.
பவுல் ரோமருக்கு எழுதிய நிருபம் இத்தாலியில் ரோமாபுரியில் இருந்த சபைக்கு எழுதப்பட்டது (ரோமர் 1:7). அன்று ரோமாபுரி ரோம சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக இருந்தது.
ரோமருக்கான நிருபத்தை யார் எழுதியது?
அப்போஸ்தலன் பவுல் இந்த நிருபத்தை எழுதினார் என்பதை சந்தேகிக்கிறவர்கள் எவரும் இல்லை.
இஸ்ரவேலின் அரசனாக இருந்த சவுலைப் போல பவுலும் பென்யமின் கோத்திரத்தைச் சேர்ந்தவர் (பிலிப்பியர் 3:5). பவுலுக்கு அந்தப் பெயர் கொடுக்கப்படுமுன் சவுல் என்ற பெயர் இருந்திருக்கிறது.
பவுல் ரோமராஜ்யத்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தார் (அப்போஸ்தலர் 16:37; 22:25).
கிறிஸ்து பிறக்கும்போது தர்சு என்னும் நகரத்தில் பவுல் பிறந்திருந்தார் (அப்போஸ்தலர் 9:11). இது ரோமராஜ்யத்தில் சிசிலியா என்ற பிரதேசத்தில் காணப்பட்ட முக்கியமான நகரம் (அப்போஸ்தலர் 21:39). தற்கால நவீன துருக்கி நாட்டில் இது காணப்படுகிறது. பவுல் தன்னுடைய வாழ்நாளில் ஆரம்ப காலங்களை எருசலேமில் செலவிட்டிருக்கிறார். அங்கே மிகவும் பிரபலமான யூத ஆசிரியனாக இருந்த கமாலியலிடம் அவர் கல்வி கற்றிருக்கிறார் (அப்போஸ்தலர் 22:3). தன்னுடைய தகப்பனைப் போலவே பவுலும் ஒரு யூதப் பரிசேயனாக இருந்திருக்கிறார் (பிலிப்பியர் 3:5).
தமஸ்குவில் இருந்த கிறிஸ்தவர்களை சிறைப்பிடிப்பதற்காக பவுல் தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்த பாதையில் மிகவும் அற்புதமான முறையில் இயேசு அவர் முன் தரிசனமளித்தபோது அவருடைய மனந்திரும்புதல் நிகழ்ந்தது (கி.பி. 33-34). அதை அப்போஸ்தலர் 9ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். தமஸ்குவில் தனக்கு வந்த ஆபத்தில் இருந்து அருந்தப்புத் தப்பி (அப்போஸ்தலர் 9:23-25; 2 கொரிந்தியர் 11:32, 33), பவுல் அராபியா (Nabatean Arabia) பகுதியில் மூன்று வருடங்களைக் கழித்திருந்தார். இது மரணக் கடல் (Dead Sea) என்றழைக்கப்படும் கடலின் தென் கிழக்குப் பகுதியில் இருந்தது. இந்தக் காலப்பகுதியில் புதிய உடன்படிக்கைக் காலத்து சத்திய வெளிப்படுத்தலை அவர் நேரடியாக ஆண்டவரிடம் இருந்தே பெற்றுக்கொண்டார் (கலாத்தியர் 1:11, 12).
வேறு எவரையும்விட, ரோம ராஜ்யம் முழுவதும் சுவிசேஷத்தைக் கொண்டு சேர்த்திருப்பவர்களில் பவுலுக்கே பெரும் பங்குண்டு. மத்தியதரைக் கடல் பகுதிக்கு அவர் மூன்று தடவை மிஷனரிப் பிரயாணங்களைச் செய்தார். ஆரம்பத்தில் தான் அழிப்பதற்குக் கங்கணம் கட்டித் துடிப்போடு இயங்கிக் கொண்டிருந்த அதே சுவிசேஷத்தை அவர் தளர்ச்சியில்லாமல் பிரசங்கித்து வந்தார் (அப்போஸ்தலர் 26:9). அவர் எருசலேமிலிருந்த சபையில் துன்பப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு உதவித்தொகையோடு மறுபடியும் திரும்பி வந்தபோது சில யூதர்களால் தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டு (அப்போஸ்தலர் 21:27-29), ஆத்திரங்கொண்டிருந்த கூட்டத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டு (அப்போஸ்தலர் 21:30-31), ரோமப் படைகளால் சிறைசெய்யப்பட்டார். பீலிக்ஸ், பெஸ்டஸ் ஆகிய இரு கவர்னர்களும், ஹெரட் அக்கிரிப்பாவும் அவர் பவுலின் மேல் எந்தக் குற்றத்தையும் காணமுடியாதிருந்தும் யூதர்களின் பிடிவாதத்தால் அவர் தொடர்ந்தும் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, பவுல் தன்னுடைய ரோமக் குடியுரிமையைப் பயன்படுத்தி ரோமப் பேரரசனாகிய சீசருக்குத் தன் நிலையை விளக்கி விண்ணப்பம் அனுப்பினார். பவுல் ரோமுக்குக் கப்பல் பிரயாணத்தில் கொண்டு வரப்பட்டபோது வழியில் மிகவும் ஆக்ரோஷமான கடல் கொந்தளிப்பில் இரண்டு வாரங்களுக்கு அகப்பட்டுப் பெருந்துன்பத்தை அனுபவித்து, கப்பலும் உடைந்து கவிழும் நிலையை அடைந்து அருந்தப்புத் தப்பி இறுதியாக ரோமாபுரியை அடைந்தார் (அப்போஸ்தலர் 27, 28). ரோமாபுரியில் குறுகிய காலத்துக்கு பவுல் தன் ஊழியத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டார். அதன் பின் மறுபடியும் அவர் சிறைபிடிக்கப்பட்டு இறுதியில் ரோமாபுரியில் கி.பி. 65-67களில் கிறிஸ்துவுக்காக இரத்தப் பலியானர் (2 தீமோத்தேயு 4:6).
பவுல், இஸ்ரவேலின் அரசனான சவுலைப்போல் உயரமான ஆணழகனாக இல்லாதிருந்தபோதும் (2 கொரிந்தியர் 10:10; கலாத்தியர் 4:14) பரிசுத்த ஆவியின் வல்லமையால் தனக்குள் தைரியத்தையும், பயமின்மையையும் கொண்டிருந்தார் (பிலிப்பியர் 4:13). அவருடைய தேவைகளனைத்தையும் கர்த்தர் கிருபையாக நிறைவேற்றி (2 கொரிந்தியர் 12:9, 10), பவுல் தன்னுடைய தியாகபூர்வமான ஆவிக்குரிய ஓட்டப்பந்தயத்தை வெற்றிகரமாக முடிக்க உதவினார் (2 தீமோத்தேயு 4:7).
பவுல் ரோமருக்கெழுதிய நிருபத்தைக் கொரிந்துப் பட்டணத்தில் இருந்து எழுதினார். அதற்கு ஆதாரமாக கொரிந்து சபையைச் சேர்ந்த பெபேயாளின் பெயரும் (ரோமர் 16:1), கெங்கிரேயா என்ற கொரிந்து நகரின் கப்பல்துறையின் பெயரும் (ரோமர் 161), கொரிந்து சபையோடு தொடர்புடையவர்களாயிருந்த காயு மற்றும் ஏரஸ்து ஆகியோரின் பெயர்களும் (ரோமர் 16:23) காணப்படுகின்றன. இந்நிருபத்தைப் பவுல் தன்னுடைய மூன்றாவது மத்தியதரைக்கடல் பிரதேசத்திற்குச் செய்த பயணத்தின் இறுதிப் பகுதியில் எழுதியிருக்கிறார் என்பது தெரிகிறது (கி.பி. 56 களில்). இக்காலப்பகுதியிலேலே பவுல் எருசலேம் சபையில் வறுமையை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு உதவிசெய்வதற்காக சேர்த்த பணத்தோடு பாலஸ்தீனம் போகத் தயாராகிக்கொண்டிருந்தார் (ரோமர் 15:25). இந்த நிருபத்தை ரோமாபுரியில் இருந்த சபைக்குக் கொண்டு சேர்க்கும் பெரும் பொறுப்பு பெபேயாளுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது (ரோமர் 16:1, 2).
இந்நிருபத்தின் பின்னணியும், அமைப்பும்
ரோமப் பேரரசின் தலைநகரமாகவும், மிக முக்கிய நகரமாகவும் ரோமாபுரி இருந்தது. அது கி.மு. 753ம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஆனால், புதிய ஏற்பாட்டுக் காலத்துக்கு முன்பு இது வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. டைபர் ஆற்றங்கரையையொட்டி, மத்தியத்தரைக் கடலில் இருந்து 15 மைல்கள் தூரத்தில் ரோமாபுரி இருந்தது. நகரின் அருகே இருந்த ஒஸ்டியா என்ற இடத்தில் கப்பல் துறை அமைக்கப்படுவதற்கு முன், 150 மைல்களுக்கு அப்பாலிருந்த பியூடியோலி (Puteoli) என்ற இடத்திலேயே ரோமாபுரியில் பிரதான கப்பற்துறை காணப்பட்டது. பவுலின் காலத்தில் ரோமாபுரியில் ஒரு மில்லியன் மக்கள் வாழ்ந்திருந்தனர்; அவர்களில் பெரும்பாலானோர் அடிமைகள். ரோமில் இருந்தோர் நகரின் அருமையான கட்டடங்களான பேரரசனின் மாளிகை, மெக்ஸிமஸ் விளையாட்டுத் திடல் போன்றவற்றால் பெருமைபாராட்டி வந்தனர். இருந்தபோதும் நகரின் பெரும்பாலான மக்கள் வாழ்ந்த சேரிப்பகுதி அதன் அழகைக் கலங்கப்படுத்தியது. பாரம்பரியச் செய்திகளின்படி, நீரோவின் காலத்தில் நகருக்குப் புறம்பான பகுதியான ஒஸ்டியன் பாதையருகே பவுல் இரத்தப் பலி கொடுக்கப்பட்டார் (கி.பி. 54-68).
எருசலேமில் பெந்தகொஸ்தே தினத்தில் பேதுருவின் பிரசங்கத்தின் மூலமாக இரட்சிப்பை அடைந்தவர்கள் ரோமாபுரியில் இருக்கும் சபையை அமைத்திருக்கக்கூடும் (அப்போஸ்தலர் 2:10). ரோமாபுரிக்குப் போக வேண்டும் என்ற ஆவல் பவுலுக்கு அநேக காலம் இருந்தது. இருந்தபோதும் போகமுடியாதபடிப் பல தடைகள் ஏற்பட்டிருந்தன (ரோமர் 1:13). கர்த்தரின் பராமரிப்பினால், பவுலால் ரோமாபுரிக்குப் போகமுடியாதிருந்தபோதும் அவரால் எழுதப்பட்ட சுவிசேஷத்தின் அருமையான சத்தியங்களை விளக்கும் இந்த நிருபம் நமக்குக் கிடைத்திருக்கிறது.
பவுலின் போதனைகளை நேரடியாகக் கேட்கக்கூடிய ஆசீர்வாதத்தை அடைந்திருந்திராத ரோமாபுரியில் இருந்த கிறிஸ்தவ சபையாருக்கு ஆழமான சுவிசேஷ சத்தியங்களை இந்நூலின் மூலம் விளக்கி எழுதுவதே பவுலின் முக்கிய நோக்கமாக இருந்தது. தனிப்பட்டவிதத்தில் பவுலை நேரில் சந்தித்திராத ரோம கிறிஸ்தவ சபையாருக்கு இந்நூல் பவுலை அறிமுகம் செய்து வைத்தது. ரோமாபுரிக்குத் தான் போகமுடியாதிருந்தபோதும்,
- இந்நிருபத்தின் மூலம் கிறிஸ்தவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதும் (ரோமர் 1:15),
- விசுவாசிகளுக்கு சத்தியப் போதனையளித்து ஊக்குவிப்பதும் (ரோமர் 1:13),
- ரோம கிறிஸ்தவ சபையாரோடு ஐக்கியத்தில் வருவதும், அவர்களால் தான் ஊக்குவிக்கப்படுவதும் (ரோமர் 1:13),
- அவர்களுக்காக ஜெபிப்பதுமே (ரோமர் 15:32)
- பவுலின் முக்கிய நோக்கங்களாக இருந்தன. இவற்றோடு தான் ஸ்பானியாவுக்குப் போகப் போட்டிருக்கும் திட்டத்திற்கு அவர்கள் தனக்கு உதவியாக இருப்பதும் (ரோமர் 15:28) பவுலின் நோக்கமாக இருந்தது.
பவுல் ஏனைய சபைகளுக்கு எழுதியிருந்த நிருபங்களில் காணப்படுவதுபோல் (கொரிந்தியர், கலாத்தியர்) தவறான இறையியலைத் திருத்துவதோ, பக்தியற்ற தவறான வாழ்க்கையைச் சுட்டிக்காட்டித் திருத்துவதோ ரோமருக்குப் பவுல் எழுதிய நிருபத்தின் நோக்கமாக இருக்கவில்லை. ரோமாபுரியில் இருந்த சபை சரியான இறையியல் போதனைகளைக் கொண்டிருந்தது; இருந்தபோதும் எல்லாச் சபைகளையும்போல அவர்களுக்கும் ஆழமான சத்தியங்களும், நடைமுறைக்குத் தேவையான ஆலோசனைகளும் தேவைப்பட்டன. அவற்றை இந்நிருபம் அவர்களுக்கு அளித்தது.
நிருபத்தின் கருப்பொருள்
இந்நிருபம் பிரதானமாக இறையியல் அமைப்பைக் கொண்டிருப்பதால் இதில் அதிகமாக வரலாற்று விபரங்களைக் காணமுடியாது. அதில் பவுல் பழைய ஏற்பாட்டில் காணப்படும் நமக்குப் பரிச்சயமான முக்கிய மனிதர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.
- ஆபிரகாம் (அதி. 4)
- தாவீது (4:6-8)
- ஆதாம் (5:12-21)
- ரெபேக்காள் (9:10)
- யாக்கோபுவும் ஈசாவும் (9:10-13)
- பாரோன் (9-11)
ஆகியோரைப் பவுல் இந்நிருபத்தில் உதாரணங்களாகப் பயன்படுத்தியிருக்கிறார். அத்தோடு இஸ்ரவேலின் வரலாற்றையும் திரும்பிப் பார்த்து இதில் பவுல் விளக்கமளித்திருக்கிறார் (9-11). முதல் நூற்றாண்டு சபையின் தன்மையைப் பற்றியும், அதன் அங்கத்தவர்களின் குணாதிசயங்களைப் பற்றியும் ஓரளவுக்கு நூலின் பதினாறாம் அதிகாரத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்நிருபத்தின் அடித்தளப் போதனையாக கர்த்தர் நமக்களிக்கும் நீதி காணப்படுகிறது; கர்த்தரே குற்றம் சாட்டப்பட்டு நிற்பவர்களுக்கு நீதிதேடித் தருகிறார்; தண்டனைக்குட்பட்டவர்களாக நிற்கும் பாவிகளை கிருபையின் மூலமாக, கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினூடாக நீதிமான்களாக்குகிறார். சமீபத்தில் ரோமர் பற்றி விளக்கமளித்திருக்கும் ஒரு இறையியல் போதகன் நீதிமானாக்குதல் ரோமரில் காணப்படும் பல்வேறு போதனைகளில் ஒன்று மட்டுமே என்றும், அது அதன் பிரதான போதனையல்ல என்றும் எழுதியிருந்தார். அதுமட்டுமல்லாமல் சீர்திருத்தவாதிகளே நீதிமானாக்குதல் ரோமரின் அடிப்படைப் போதனை என்ற எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கிறார்கள் என்றும் விளக்கியிருந்தார். இந்த இறையியல் போதகனின் விளக்கம் முழுத் தவறானது. இதுபற்றி திருமறைத்தீப இதழில் நான் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதலே ரோமர் நூலின் முக்கிய அடிப்படைப் போதனை. ஏனெனில் அதுவே இந்நூலின் பவுல் விளக்கும் சுவிசேஷம். அந்த சுவிசேஷமளிக்கும் நீதிமானாக்குதலால் நீதிமானாக்கப்பட்டவன் எத்தகைய வாழ்க்கையை வாழவேண்டும் என்பதையும் பவுல் இதில் விளக்குகிறார்.
பவுல் ரோமருக்கெழுதிய நூலை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
- 1-11 வரையுள்ள அதிகாரங்கள் நீதிமானாக்குதலாகிய இறையியல் போதனையை விளக்குகின்றன.
- 12-16 வரையுள்ள அதிகாரங்கள் நீதிமான்களாக்கப்பட்ட தனிப்பட்டவர்களிலும், சபையிலும் அந்நீதிமானாக்குதலின் நடைமுறைத் தாக்கங்கள் இருக்கவேண்டிய விதத்தை விளக்குகின்றன.
இந்நூலில் பவுல் கிறிஸ்துவில் விசுவாசத்தின் மூலம் நீதிமானாகுதலாகிய, நூலின் பிரதான தலைப்பின் அடிப்படையில் சில குறிப்பிட்ட இறையியல் போதனைகளையும் விளக்குகிறார்.
- 1:8-15 – ஆவிக்குரிய தலைமைத்துவத்தின் அடிப்படைத் தத்துவங்கள்
- 1:18-32 – பாவிகளாக நிற்கும் மானுடத்தின் மீதான கர்த்தரின் கோபம்
- 2:1-16 – தெய்வீக நியாயத்தீர்ப்பின் தத்துவங்கள்
- 3:9-20 – அனைத்துலகையும் பாதித்திருக்கும் பாவம்
- 3:21-4:25 – விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதல் போதனை பற்றிய விளக்கமும், அதை நிரூபிக்கும் வாதமும்
- 5:1-11 – இரட்சிப்பின் பாதுகாப்பு
- 5:12-21 – ஆதாமின் பாவம் முழுமானுடத்தையும் பாதித்திருக்கும் போதனை
- 6-8 – பரிசுத்தமாக்குதல்
- 9 – இறையாண்மையுள்ள தெரிந்துகொள்ளுதல்
- 11 – இஸ்ரவேலருக்கான கர்த்தரின் திட்டம்
- 12 – ஆவிக்குரிய ஈவுகளும், நடைமுறை பக்திவிருத்தியும்
- 13 – இவ்வுலக அரசோடு தொடர்புடைய விசுவாசிகளில் பொறுப்புகள்
- 14:1-15:12 – கிறிஸ்தவ சுதந்திரம் பற்றிய தத்துவங்கள்
நூலின் சிக்கலான பகுதிகள்
புதிய ஏற்பாட்டின் முக்கிய இறையியல் போதனையை சுமந்து காணப்படும் பவுல் ரோமாபுரிச் சபைக்கெழுதிய நிருபம் சில சிக்கலான பகுதிகளையும் சுமந்து நிற்கிறது. 5ம் அதிகாரத்தில் விளக்கப்பட்டிருக்கும் மனுக்குலத்தைப் பாதித்து அதில் தொடர்கின்ற பாவம் மிகவும் ஆழமானதும், முழு வேதத்திலும் மிகமுக்கியமான இறையியல் போதனையாக இருக்கின்றது. ஆதாமோடு மனுக்குலத்திற்கு இருக்கும் தொடர்பும், ஆதாமின் பாவம் அனைத்து மனுக்குலத்தையும் பாதித்திருக்கும் போதனை தொடர்ந்தும் வாதிக்கப்பட்டு வருகின்ற இறையியல் போதனை. வேதக் கிறிஸ்தவர்களில் சிலர் ரோமர் 7:7-25 வரையுள்ள பகுதியில் பவுல் தன்னுடைய கிறிஸ்தவ அனுபவத்தை விளக்குகிறாரா அல்லது கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு முன் தானிருந்த நிலையை விளக்குகிறாரா? அல்லது அது எந்த வரலாற்று அனுபவத்தையும் கொண்டிராத, பவுல் பயன்படுத்துகிற ஒரு இலக்கிய வகையா என்ற விவாதங்களும் இன்றும் தொடர்கின்றன. அத்தோடு இதோடு நெருக்கமான போதனைகளான கர்த்தரின் தெரிந்துகொள்ளுதலையும் (ரோமர் 8:28-30), கர்த்தரின் இறையாண்மையையும் (ரோமர் 9:6-29) அநேக கிறிஸ்தவர்கள் விளங்கிக்கொள்ளக் கஷ்டப்படுகிறார்கள். இன்னுமொரு கேள்வி ரோமர் 9-11 வரையுள்ள அதிகாரங்கள் இஸ்ரவேல் தேசத்திற்காகக் கர்த்தர் ஒரு திட்டத்தைக் கொண்டிருக்கிறாரா? என்பது. சிலர் மானுட அரசாங்கங்களுக்கு விசுவாசிகள் கீழ்ப்படிய வேண்டுமென்ற (13:1-7) பவுலின் போதனையை உதாசீனப்படுத்துகிறார்கள்; இவர்களில் சிலர் கிறிஸ்தவ செயலாற்றல் (Christian activism) என்ற பெயரில் இப்போதனையை நிராகரிக்கிறார்கள். ஏனையோர் இதைப் பயன்படுத்தி மோசமான சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கும் கிறிஸ்தவர்கள் பணிந்து நடக்கவேண்டும் என்று விளக்குகிறார்கள்.
பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளுகின்ற கூற்று, ரோமர் 1:16-17 ஆகியவையே முழு நூலுக்கும் ஆதாரமாக இருந்து அதன் போதனைகளுக்கு வழிநடத்துகின்றன என்பது. இவற்றிலேயே நாம் நூலின் பிரதான போதனையான விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதல் என்ற தத்துவத்தைக் காண்கிறோம்.
ரோமர் 1:16-17
கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.
இந்தப் போதனையையே பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் மிகவும் ஆற்றலோடு அருமையாக விளக்கியிருக்கிறார். கிறிஸ்துவின் சுவிசேஷம் இதையே நம்முன் வைக்கிறது. சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர் பாவத்தைத் தன்னில் உணர்ந்து அதிலிருந்து விடுபடுவதற்கான சகல முயற்சிகளிலும் ஈடுபட்டபோது ரோமரின் இந்த வசனங்களே அவருக்குக் கைகொடுத்து கிறிஸ்துவை நோக்கி வழிகாட்டின. கத்தோலிக்க சபைக்கு விசுவாசமாக இருந்து அது விளக்கும் கிரியைகளைச் செய்வதின் மூலமே இரட்சிப்பு மனிதனுக்குக் கிடைக்கிறதென்று ரோமன் கத்தோலிக்க மதம் போதித்தது. லூத்தர் அதைக் கடுமையாக எதிர்த்தார். அவர், விசுவாசத்தின் மூலம் மட்டுமே பாவி நீதிமானாக்கப்படுகிறான் என்பதை இவ்வசனங்களில் இருந்து அறிந்து அதை ஆணித்தரமாக நம்பினார். இதில் 17ம் வசனத்தை லூத்தர் ஜெர்மானிய மொழியில் மொழியாக்கம் செய்தபோது அதை “விசுவாசத்தின் மூலம் மட்டுமே நீதிமான் பிழைப்பான்” என்று மொழிபெயர்த்தார். அவர் ”மட்டுமே” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அதன் மூலம் அவர் ஆணித்தரமாக எந்தவொரு கிரியையின் மூலமாகவும் எவரும் இரட்சிப்பை அடைய முடியாது, தேவநீதியைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்த்த முயன்றார். ஆரம்பம் முதல் முடிவுவரை விசுவாசத்தின் மூலம் மட்டுமே இரட்சிப்பு. இந்த “மட்டுமே” என்ற வார்த்தையே பின்னால் சீர்திருத்தப் போதனைகளில் அவசியத்தின் காரணமாகப் பயன்படுத்தப்பட்டன. அதாவது கிருபை மட்டுமே, விசுவாசம் மட்டுமே, கிறிஸ்து மட்டுமே என்ற வார்த்தைப் பிரயோகங்களில் “மட்டுமே” என்பது இணைந்து வருவதற்குக் காரணம், எந்தவித மானுடக்கிரியைகளோடும் இவற்றை இணைக்கக்கூடாது என்பதற்காகத்தான்.
ரோமருக்கான இந்த அறிமுகத்தை வாசிக்கின்ற அன்பான வாசகர்களே!
- உங்களுடைய விசுவாசம் எதில் தங்கியிருக்கிறது?
- உங்களுடைய சொந்தக் கிரியைகளிலா அல்லது கிறிஸ்துவில் மட்டுமா?
- யாரோ ஒரு பிரசங்கி உங்கள் நோயைக் குணப்படுத்தினார் என்பதற்காக நீங்கள் ஞானஸ்நானம் பெற்றிருந்தால் அது வேதத்தில் காணப்படாத ஒரு செயல் என்பதை நீங்கள் அறிவீர்களா?
- உங்கள் நம்பிக்கை நோய் குணப்படுத்தப்பட்டதிலோ, ஞானஸ்நானத்திலோ அல்லது ஒரு பிரசங்கியிலோ அல்லது வேறெதன் மீதிலோ தங்கியிருக்குமானால் உங்கள் விசுவாசம் சந்தேகத்துக்குரியது தெரியுமா?
எந்தவொரு உலக நன்மைக்காகவும் நீங்கள் இயேசுவிடத்தில் வந்திருந்தால் அதற்குப் பெயர் கிறிஸ்தவ விசுவாசமல்ல. எந்தக் கிரியையிலும் தங்கியிராமல், சுயத்திலும் தங்கியிராமல் வெறும் பிச்சைக்காரனைப்போல உங்கள் பாவத்தை உணர்ந்து, அதற்காக வருந்தி, அதை வெறுத்து, அதற்குப் பரிகாரம் செய்திருக்கிறவர் இயேசு கிறிஸ்து மட்டுமே என்று அவர் மீது மட்டும் நீங்கள் விசுவாசம் கொண்டு அவரை அரவணைத்துக் கொண்டால் மட்டுமே நீங்கள் கர்த்தர் முன் நீதிமானாவீர்கள்; இரட்சிப்பைக் கிறிஸ்துவிடம் இருந்து பெற்றுக்கொள்ளுவீர்கள்.