வேதாகமம்

2 இராஜாக்கள் 1:2-22 இந்த ஆக்கத்தில் நாம் 2 இராஜாக்கள் 2:1-22 வசனங்கள்வரை சிந்திப்போம். கடந்த ஆக்கத்தில் பார்த்த முதலாவது அதிகாரத்தைப் போலவே இந்த இரண்டாம் அதிகாரமும் மிகவும் அதிரடியாக ஆரம்பிக்கிறது.

முதலாவது அதிகாரத்தில் ஆகாப் மரணமடைந்தான் என்ற அறிவிப்போடு அது ஆரம்பித்ததைப் பார்த்தோம். இந்த அதிகாரம் எலியா பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறான் என்று ஆரம்பிக்கிறது.

“கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது” (2 இராஜாக்கள் 2:1)

திரைக்கதையிலோ அல்லது நாடகத்திலோ காட்சிகள் மாறி மாறி வருவது போலவே 2 இராஜாக்கள் புத்தகத்தில் நடக்கின்ற நிகழ்ச்சிகளை நாம் பார்க்கிறோம். எலியா பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படப்போவது எல்லாருக்கும் தெரிந்ததொன்றாக இருந்தது. ஏனென்றால் தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் அடிக்கடி எலிசாவினிடத்தில் அதை விளக்குவதை நாம் பார்க்கிறோம். ஆகவே அது இரகசியமாக இருந்த விஷயமல்ல. அதைக் குறித்து 3, 5, 9 வது வசனங்களில் நாம் திரும்பத் திரும்ப வாசிக்கிறோம். அதற்குப் பதிலாக எலிசா அவர்களைப் பார்த்து நீங்கள் சும்மா இருங்கள் என்று சொல்லுகிறார். இதைப் பற்றி யாருமே வெளிப்படையாகப் பேசுவதற்கு விரும்பவில்லை என்பதைக் காண முடிகிறது. இந்த இடத்தில் அமைதியான ஒரு பதற்றம் இருப்பதை நாம் பார்க்கிறோம். கர்த்தரை அன்றைக்கு விசுவாசித்திருந்த இஸ்ரவேலரின் மத்தியில் ஒரு அமைதியின்மை இருந்ததைக் காண முடிகிறது, குறிப்பாக இந்த விஷயத்தில் அதற்குக் காரணமிருந்தது. எலியா இஸ்ரவேலரின் மத்தியில் அத்தனை முக்கியமானவராக இருந்திருக்கிறார். அவர் இப்போது நம்மைவிட்டுப் போகப் போகிறார் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருந்தது.

12வது வசனத்தில் எலிசா சொல்லுவதிலிருந்து எலியா எந்தளவுக்கு நாட்டில் மதிக்கப்பட்டவராக இருந்தார் என்பதை உணர முடிகிறது.

“அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்;” (2 இராஜாக்கள் 2:12).

இரதமும், குதிரையும் போர் வீரர்களோடும் படைகளோடும் சம்மந்தப்பட்ட வார்த்தைப் பிரயோகமாகும். இதிலிருந்து என்ன தெரிகிறது? எலியா நாட்டிலிருந்தது, ஒரு பெரும் படையே அந்த நாட்டோடு இருந்ததற்குச் சமமாக இருந்திருக்கிறது. அந்த நாட்டிற்குப் பெரும் பாதுகாப்புப் படையைப் போல எலியா இருந்திருக்கிறார். அது பற்றி விளக்கவுரையாளர் ஒருவர் சொல்லுகிறபோது, “எலியா நாட்டில் இருந்தது பலமடங்கு போராளிகள் இருப்பதுபோலத்தான் இருந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார். ஆனால் இப்போது இஸ்ரவேலுக்குப் பாதுகாப்புக் கவசமாக இருந்த எலியா பரலோகம் போகப் போகிறார்.

நாட்டில் பாகாலின் காலைப் பிடித்துக் கொண்டிருந்த கூட்டத்திற்கும், தீர்க்கதரிசிகளைக் கொன்று குவிக்கும் கூட்டத்திற்கும் மத்தியில் எலியா இருந்தார். அந்த எலியா எடுத்துக் கொள்ளப்படப் போகிற நேரம் வந்தது. இஸ்ரவேலில் மீதியாக இருந்த கர்த்தரின் மக்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள்? அவர்கள் எப்படி இனித் தொடர்ந்து நாட்டில் வாழ்க்கை நடத்தப்போகிறார்கள்? இப்போது ஒரு சகாப்தம் முடிவுக்கு வரப்போகிறது. தேவ ராஜ்ஜியத்தில் ஒரு மாறுதல் ஏற்படப்போகிற கட்டத்தில் நாடு இருந்தது. நாட்டில் சிங்கம் இல்லாமல் போகப் போகிற நேரம் வந்துவிட்டது.

அமெரிக்காவில் அதிபர்களாக இருந்தவர்களில் தியோடர் ரூஸவெல்ட் (Theodore Roosevelt) ஒருவர் ஆவார். தியோடர் ரூஸவெல்ட் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை ஒரு வேத விளக்கவுரையாளர் குறிப்பிட்டிருக்கிறார். 1912 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விஸ்கான்சின் மாநிலத்திலுள்ள மில்வாக்கி என்ற இடத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் பேசப் போனார். அவர் காரில் ஏறும்போது ஒருவன் அவரைத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறான். அருகிலிருந்த எல்லாருமே உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் ரூஸவெல்ட் அதற்கு இடங்கொடுக்கவில்லை. அவர் காரில் ஏறி கூட்டம் நடக்கிற இடத்திற்கு போகும்படி வலியுறுத்தியிருக்கிறார். அப்படி அவர் அந்த கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தவுடனே அந்த கூட்டத்திற்கு வந்திருந்த மக்களைப் பார்த்து அவர்: நான் நீண்ட ஒரு செய்தியைக் கொடுக்கப் போகிறேன், ஆகவே நீங்கள் எல்லாரும் மிகவும் அமைதியாக இருந்து அதைக் கேட்க வேண்டுமென்று சொன்னார். தனது கோட்டிற்கு உள்ளறையில் இரத்தம் கொட்டிக்கொண்டிருந்த போதும் அதிலிருந்து கூட்டத்தில் பேசுவதற்காக வைத்திருந்த தாள்களை வெளியே எடுத்து ஒன்றரை மணி நேரம் பேசினார். அதற்குப் பிறகுதான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அது நிகழ்ந்து எழு வருடங்களுக்குப் பிறகு தியோடர் ரூஸவெல்ட் 1919 ஆம் ஆண்டு இறந்து போனார். அவர் இறந்த செய்தியை அவரது கடைசி மகன் ஐரோப்பாவில் போர்க்கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தன்னுடைய சகோதரர்களுக்கு அனுப்பினார். அந்தச் செய்தியில் சிங்கம் இறந்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தியோடர் ரூஸவெல்ட் அமெரிக்காவில் ஒரு சகாப்தமாக இருந்திருக்கிறார். ஒரு சிங்கத்தைப்போல இருந்திருக்கிறார். இந்தியாவில் மகாத்மா காந்தி இறந்தபோதும் அப்படிதான் மக்கள் நினைத்திருப்பார்கள். காந்தி, நாட்டை ஒருங்கிணைத்துக் கட்டியிருக்கும் ஒரு கயிறு போல இருந்தார். அவர் இறந்தபோது சிங்கம் போய்விட்டது என்றுதான் மக்கள் நினைத்திருப்பார்கள். என்னைப் பொறுத்தளவில் இந்திரா காந்தியும் அப்படிதான் இருந்திருக்கிறார். உண்மையிலேயே ஒரு திறமை வாய்ந்த தலைவராக அவர் இருந்தார். அவர் இறந்தபோது ஒரு சகாப்தம் மடிந்துவிட்டது என்றுதான் எல்லாரும் நினைத்திருப்பார்கள்.

2 இராஜாக்கள் 2 வது அதிகாரத்தில் எலியா எடுத்துக்கொள்ளப்பட போகிறார், ஒரு சிங்கம் போகப் போகிறது. தீர்க்கதரிசி புத்திரர்களின் நடுவில் இதன் காரணமாக ஒரு அமைதியின்மை காணப்பட்டது. எலிசாவாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆகவேதான் அவர் இரண்டொரு தரம் எலியாவைப் போகவிடாமல் பின் தொடர்ந்ததை நாம் பார்க்கிறோம். இந்த இடத்தில் 2 இராஜாக்கள் நூலைப் பற்றி வேத விளக்கவுரையாளர்கள் மத்தியில் பிரச்சனை இருந்திருக்கிறது. 2ம் அதிகாரத்தை அவர்கள் ஒரு இடைச்செருகலாகக் கணித்தார்கள். அதாவது 2 இராஜாக்களை எழுதியவர் இந்த அதிகாரத்தை எழுதவில்லை, இது ஒரு இடைச்செருகல் என்று சொன்னார்கள். அனைத்து விளக்கவுரையாளர்களும் அப்படிச் சொல்லாவிட்டாலும் சிலர் அவ்விதம் சொல்கிறார்கள். அதற்குக் காரணமென்ன? எலியா சால்வையை வைத்து தண்ணீரை இரண்டாக பிளந்தது, அவர் சுழல் காற்றினாலே எடுத்துக் கொள்ளப்பட்டது, எலியா எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு எலிசா அவருடைய சால்வையைப் பயன்படுத்தி தண்ணீரை அடிப்பது போன்றவற்றை வாசித்து விட்டு இதெல்லாம் மனிதன் நம்பும்படியாக இல்லை, இதெல்லாம் கற்பனை கதை (fiction), அதனால் இந்த அதிகாரம் இடைச்செருகலாக இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். வேறுசிலர் இது ஒரு கர்ண பரம்பரைக் கதை, வேதத்தில் காணப்படுகின்ற இம்மாதிரியான நிகழ்வுகளை நாம் வரலாற்று நிகழ்வுகளாகப் பார்க்கக்கூடாது, அவை ஒரு லெஜென்ட் (legend), புராணக் கதைகளாக வந்தவை, ஆகவே அவற்றின் மூலம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம், அந்தப் பாடத்தைப் கற்றுக்கொண்டு ஏனையவற்றை விட்டுவிட வேண்டும் என்று சொல்லுகிறார்கள். வேறு சிலர் இதிலிருக்கிற அற்புதங்களை எல்லாம் நாம் அற்புதங்களாகவே பார்க்கக் கூடாது என்று சொல்லுகிறார்கள். இதெல்லாம் காலத்திற்கு பொருந்தி வருவனவாக இல்லை என்கிறார்கள்.

இந்தியாவில் நீங்கள் எந்த இறையியல் கல்லூரிக்குப் போனாலும் அங்கிருக்கும் நூலகத்தில் 2 இராஜாக்கள் புத்தகத்திற்கு விளக்கவுரைகளை எடுத்து வாசித்துப் பார்த்தால் நான் சொன்ன விதத்தில்தான் அதில் விளக்கமளிக்கப்பட்டிருக்கும். வேதத்தைக் கர்த்தரின் வேதமாக மட்டும் கணித்துப் பயன்படுத்துகிற ஒரு இறையியல் கல்லூரியைப் பொதுவாக இந்தியாவில் காண முடியாது. வேதம் தேவனுடைய சத்தியமாக இருக்கிறது, அது கர்த்தர் பேசிய, வெளிப்படுத்திய அவருடைய வார்த்தைகள், அவருடைய சித்தத்தின் தொகுப்பு. அதில் அவர் தருகின்ற போதனைகள் மட்டுமல்ல, அதில் காணப்படும் அனைத்து வரலாற்று நிகழ்வுகளும் உண்மையானவை. அவற்றை நாம் இடைச்செருகல்கள் என்றோ, கர்ண பரம்பரைக் கதைகள் என்றோ, யாரோ அவற்றைத் திணித்துள்ளார்கள் என்றோ விளக்கமளித்தால் நம்முடைய கண்ணும் இருதயமுந்தான் குளறுபடியாக இருந்து இந்த உலகத்தின் அடிப்படையில் அதற்கு விளக்கமளிக்கிறோம் என்பதை நாம் உணரவேண்டும்.

வேதம் கர்த்தருடைய வார்த்தை என்று நம்புகிறவர்கள் கர்த்தர் வேதத்தைச் சரியாகத்தான் எழுதியிருப்பார் என்று நம்புவார்கள். ஆகவே நாம் வேதத்தை சத்திய வேதமாகப் பார்க்க வேண்டும், உலகத்தான் அணுகுவதைப்போல நாம் வேதத்தை அணுகக்கூடாது. இந்த இரண்டாவது அதிகாரத்தில் வருகிற நிகழ்ச்சிகள் பெத்தேல், எரிகோ, யோர்தான் ஆகிய மூன்று நகரங்களில் நடக்கின்றன. எலியாவும், எலிசாவும் பெத்தேலிலிருந்து எரிகோ சென்று, பிறகு அங்கிருந்து யோர்தானுக்குப் போகிறார்கள். எலியா எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு எலிசா யோர்தானிலிருந்து எரிகோவிற்குப் போகிறார், அங்கிருந்து பெத்தேலுக்குப் போகிறார். 2 வது அதிகாரத்தின் முதலாவது வசனம் பெத்தேலில் ஆரம்பித்து, இறுதியில் பெத்தேலிலேயே முடிகிறது. இந்த அதிகாரத்தைப் புரிந்துகொள்ள இந்தப் பூலோக வரைபட அமைப்பு நமக்கு உதவியாக இருக்கிறது. ஆண்டவர்தான் அதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஆகவே இதை எழுதினவர் ஒரு காரணத்தோடுதான் இதை எழுதியிருக்கிறார்.

முதலாவது அதிகாரத்தை நாம் பார்க்கிறபோது ஆகாபின் மகன் அகசியாவின் ஆட்சிக் காலத்தோடு அது முடிகிறது, மூன்றாவது அதிகாரத்தை வாசிக்கிறபோது அகசியாவிற்குப் பிறகு வந்த அரசனோடு அது ஆரம்பிக்கிறது. இந்த இரண்டாவது அதிகாரம் இந்த நூலில் இல்லாமல் இருந்திருந்தால் எந்தக் குழப்பமும் இல்லாமல் போயிருக்கும். இருந்தபோதும் அது இருப்பதற்குக் காரணம், கர்த்தர் இதை எழுதினவருக்குத் துணை நின்று இவ்வதிகாரம் இந்த இடத்தில் அமையும்படிப் பார்த்துக் கொண்டார். தேவனுடைய மக்களைப் பொறுத்தளவில் இது ஒரு முக்கியமான அதிகாரமாகும்.

இந்த அதிகாரத்தில் (2 இராஜாக்கள் 2:1-22) மூன்று முக்கிய விஷயங்களைக் கவனிப்போம்.

1. நம்மை ஆளும் கர்த்தர் இன்றும் நம் மத்தியில் இருக்கிறார் (2 இராஜாக்கள் 2:1-15)

எலியா எடுத்துக்கொள்ளப் போகிற நேரம் வந்தது.

“எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.” (2 இராஜாக்கள் 2:2).

பிறகு பெத்தேலிலும் எரிகோவிலும் தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவிடம் எலியா எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உனக்குத் தெரியுமா என்று கேட்பதை நாம் பார்க்கிறோம். 7 வது வசனத்தில்,

“தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்” (2 இராஜாக்கள் 2:7) என்று நாம் வாசிக்கிறோம்.

இங்கு நாம் கவனிக்கும் சம்பவம் யோர்தான் கரையில் நடந்திருக்கிறது. அவர்கள் யோர்தானுக்கு வந்தபோது எலியா தன் சால்வையை எடுத்து முறுக்கி அதைத் தண்ணீரில் அடிக்கிறார் என்று நாம் பார்க்கிறோம். அவ்வாறு அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிகிறது, அவர்கள் தண்ணீரின் நடுவில் நடந்து அக்கரைக்குப் போனார்கள் என்றும் வாசிக்கிறோம். இதைப் பின்வருமாறு 2 இராஜாக்கள் 2:8 விளக்குகிறது,

“அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக்கரைக்குப் போனார்கள்.”

இந்த நிகழ்வை நாம் கவனிக்கிறபோது எப்படி கர்த்தர் வனாந்தரத்தில் இஸ்ரவேல் மக்களை கானானுக்கு அழைத்துப் போகிறபோது அங்கிருந்த செங்கடலை இரண்டாகப் பிரித்தாரோ அதேபோல இங்கும் நடந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறது. அவர்கள் அக்கரைக்குப் போன பிறகு 9 வது வசனத்தில்,

“அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்” என்று நாம் வாசிக்கிறோம்.

அவ்வாறு கேட்டது எலியாவிற்குப் பிடித்திருந்தது. அப்போது 10 வது வசனத்தில்,

“அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது என்றான்.” என்று சொல்லுவதை நாம் காண்கிறோம்.

11-14 வரையுள்ள வசனத்தில்

“அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அப்புறம் காணாமல், தன் வஸ்திரத்தைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான். பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று, எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்.” (2 இராஜாக்கள் 2:11-14)

இங்கு ஒரு பெரிய அருமையான காரியத்தை வேதம் நமக்கு விளக்குகிறது. கர்த்தர் எத்தனை பெரியவர், எத்தனை வல்லமையானவர் என்பதை நாம் இங்கு பார்க்கிறோம்.

நான் ஏற்கனவே அநேக தடவை விளக்கியது போல எலியாவும் எலிசாவும் எங்கு இருக்கிறார்களோ அங்கு ஆண்டவர் இருந்திருக்கிறார். அவர்கள் ஆண்டவரால் தயார் செய்யப்பட்டு அவரால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள். இரண்டு பேரும் இஸ்ரவேலின் வரலாற்றில் மிக முக்கியமான தீர்க்கதரிசிகள். அவர்கள் இருந்த இடத்தில்தான் தேவ வசனம் இருந்தது. அந்நாட்களில் எங்கு தீர்க்கதரிசிகள் இருந்தார்களோ அங்கு தேவ வசனம் இருந்தது. எங்கு தேவ வசனம் இருந்ததோ அங்கு ஆண்டவர் இருந்தார். எங்கு மக்கள் தேவ வசனத்தை விசுவாசித்தார்களோ அவர்களோடு தேவன் இருந்தார். இந்தவிதத்திலேயே அன்று கர்த்தர் தன்னுடைய சித்தத்தை இஸ்ரவேலருக்கு வெளிப்படுத்தினார். இதை நாம் மறுக்க முடியாது. இங்கே நாம் கர்த்தருடைய வல்லமையைப் பார்க்கிறோம். கர்த்தர் எலியாவோடும் இருந்தார், எலிசாவோடும் இருந்தார். அவர்கள் மூலம் நடைபெற்ற காட்சிகளைப் பார்த்து வியந்துவிட்டு அவற்றிற்குப் பின்னால் இருக்கும் கர்த்தரை நாம் மறந்துவிடக் கூடாது. இஸ்ரவேல் மிகவும் மோசமான நிலையில் இருந்தபோதும் ஆண்டவர் அன்றைக்கு அவர்களோடு (தீர்க்கதரிசிகளோடு) இருந்தார்.

கர்த்தர் தன்னை வெளிப்படுத்திய விஷயத்தில் புதிய ஏற்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. எபிரெயர் 1:1-3 விளக்குவதுபோல் இயேசு கிறிஸ்துவின் வருகையோடு வேதம் முழுவதுமாகத் தொகுக்கப்பட்டு நமக்குத் தரப்பட்டிருப்பதால், பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் தன்னை வெளிப்படுத்தி வந்திருந்த அற்புத செயல்கள் அனைத்தும் முதல் நூற்றாண்டோடு நிறுத்தப்பட்டுவிட்டன; இதைத் தேவனே செய்திருக்கிறார்.

எபிரெயர் 1:1-3

பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.

Spiritual Gifts-3d2[1 கொரிந்தியர் 13:8-10; இதற்கான விளக்கத்தைப் பெற நான் எழுதிய “ஆதிசபையின் அற்புத வரங்கள்” நூலைப் பெற்று வாசியுங்கள்.] நாம் வாழும் புதிய உடன்படிக்கைக் காலத்தில் தீர்க்கதரிசிகள் இல்லை, வேதம் மட்டுமே கர்த்தரின் தீர்க்கதரிசனமாக நம் கையில் இருக்கிறது.

அன்று இஸ்ரவேல் எந்தவிதத்தில் மோசமாக இருந்தது? அவர்கள் தேவனை விசுவாசிக்கவில்லை. தேவனுடைய தீர்க்கதரிசிகளுக்கு எந்தவித மதிப்பையும் அளிக்கவில்லை. உடன்படிக்கையின் தேவனையே அவர்கள் நிராகரித்து வாழ்ந்தார்கள். வெறும் கல்லாக இருக்கிற பாகால்சேபூவை வணங்கிக் கொண்டிருந்தார்கள். முதலாம் அதிகாரத்தில் நாம் அதைப் பார்த்தோம். கர்த்தருக்கு நாட்டில் இடங்கொடுக்க மறுத்தார்கள், அது மிகவும் மோசமான பாவம். பத்துக் கட்டளைகளின் முதலாவது கட்டளையை அவர்கள் மீறிக்கொண்டிருந்தார்கள். ஆண்டவர் வேறெந்த தேவனையும் வழிபடக்கூடாது என்று சொன்னபோதும் அவர்கள் அதை மதிக்கவில்லை. இருந்தபோதும் இஸ்ரவேல் கர்த்தருடைய நாடாக இருந்தது. அவர் உருவாக்கிய நாடாக இருந்தது. அவர் ஒரு உடன்படிக்கையை அந்நாட்டோடு ஏற்படுத்தியிருக்கிறார், அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார். அவர்கள் மோசமாக நடக்கிறார்கள் என்பதற்காக கர்த்தர் அந்நாட்டை விட்டு ஓடிப்போக முடியாது. ஏதோ அந்த நாட்டைவிட்டு விரட்டப்பட்டது போல தோல்வியடைந்தவராக நடந்துகொள்ள முடியாது. அவர் தேவன், வல்லைமையுள்ளவர், இறையாண்மையுள்ளவர். அவருடைய வாக்குத்தத்தங்கள் ஒருநாளும் பொய்யாகாது. அந்த நாட்டின் மூலம் அவர் என்னென்ன காரியங்களைச் செய்ய நினைத்தாரோ, என்னென்ன வாக்குறுதிகளை அளித்தாரோ அவைகள் நிகழ்ந்தே தீரும். ஆண்டவர் அதை நமக்கு இங்கு நினைவுபடுத்துகிறார். எலியா அன்றைக்கு தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்துகிறவனாக இருந்தான். நாட்டிற்கு வந்த பலவித ஆபத்துகளிலிருந்து எலியா ஆண்டவர் மூலம் அவர்களைத் தப்புவித்தான். அதேபோலத்தான் எலியா போன பிறகு அந்த ஆவியானவரின் வல்லமை எலிசாவில் இறங்குவதை இங்கு நாம் பார்க்கிறோம்.

இன்றைக்கு நாம் புதிய உடன்படிக்கையின் காலத்தில் இருக்கிறோம். இன்று தேவனுடைய சபை இந்த உலகத்தில் இருக்கிறது. உண்மையான சபைகள் இந்த உலகத்தில் இருந்து, அந்த உண்மையான சபைகள் வேதம் போதிக்கின்ற போதகர்கள், மூப்பர்களைக் கொண்டிருந்து, அந்த சபைகள் மெய்யாகவே ஆண்டவரை விசுவாசிக்கிற அங்கத்தவர்களைக் கொண்டிருந்து, உலகத்தையும் உலகத்தின் சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, கர்த்தரை மட்டுமே நம்பி கர்த்தருடைய வழிகளில் நடந்துவருகிற பரிசுத்தமான சபைகளாக இருந்து வந்தால் அங்கு ஆண்டவர் இருக்கிறார். அந்த சபையை உலகம் ஒன்றும் செய்ய முடியாது. அதுதான் தேவனுடைய சபை, அங்கு ஆண்டவருடைய வல்லமை இருக்கிறது. சபை வரலாற்றில் எலியா, எலிசா போன்று வேறு மக்களையும் ஆண்டவர் எழுப்பியிருக்கிறார். ஜோர்ஜ் விட்ஃபீல்டு என்ற பெரிய அருமையான மனிதனை இங்கிலாந்தில் ஆண்டவர் எழுப்பினார், அவர் பெரிய அதிரடிப் பிரசங்கியாக இருந்தார். மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி அவருடைய செய்தியைக் கேட்டார்கள். அவருடைய பிரசங்கங்கள் மூலம் அதிரடியான மனந்திரும்புதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த ஆக்கத்தில் கூட அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். தேவனுடைய மனிதர்கள் இஸ்ரவேலில் மட்டுமல்ல இன்றும் தொடர்ந்திருக்கிறார்கள். வல்லமையான பிரசங்கிகளை இன்றும் ஆண்டவர் எழுப்புகிறார். அவ்விதமானவர்களை எழுப்பி ஆண்டவர், நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்று சபைக்குக் காட்டுகிறார். ஆண்டவருடைய வார்த்தைகள் சரியானவிதத்தில் தெளிவாகவும், உண்மையாகவும் பிரசங்கிக்கப்படுகிறபொழுது ஆண்டவர் அங்கு இருப்பதை நாம் பார்க்கிறோம்.

இஸ்ரவேலில் அன்று விசுவாசிகள் அதிகமானோர் இருக்கவில்லை. அன்று தீர்க்கதரிசிகள் அதிகம் பேர் இல்லை, ஏனென்றால் ஆகாபும் அவனுடைய மகனும் தீர்க்கதரிசிகள் எல்லாரையும் அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அப்படியிருந்தும் அங்கிருந்த தீர்க்கதரிசிகளோடு தேவன் இருந்தார் என்று நாம் பார்க்கிறோம். இன்றைக்கு நம் காலத்திலும் நல்ல சபைகளும், ஆத்தும அக்கறை இருந்து வல்லமையாகப் பிரசங்கத்தை பிரசங்கிக்கிற போதகர்களும் கைவிட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே இருக்கிறார்கள் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். சபைகள் என்ற பெயரை வைத்துக்கொண்டு அநேகர் சுயநலத்தோடு என்னென்னவோ செய்து வருகிறார்கள். ஊழியக்காரர்களாகத் தங்களை அறிவித்துக்கொள்கிறவர்கள் தேவனுக்கேற்ற பயத்தோடு சத்தியத்தைத் தெளிவாக, சரியாக விளக்கி வருகிறவர்களைக் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். இருந்தாலும் கூட ஆண்டவர் ஒரு சில நல்ல பிரசங்கிகளைக் கொடுத்து நம்மோடு இருக்கிறார் என்பதைக் காட்டுகிறார். வசனப் பஞ்சம் இன்றிருக்கிறது; அதன் மத்தியிலும் வசனம் போகவேண்டியவர்களைப் போயடைவதற்கான வழியை ஆண்டவர் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். ஆண்டவர் எப்போதும் நம்மோடு இருக்கிறார்.

2 இராஜாக்கள் 2 வது அதிகாரத்தில் நாம் கவனித்த, ஆண்டவர் வல்லமையாகச் செய்த காரியம் தீர்க்கதரிசியின் புத்திரருக்கு எத்தனை பெரிய பெலத்தைக் கொடுத்திருக்கும்! எலிசாவிற்கு அது எவ்வளவு பெரிய சந்தோஷத்தையும் பெலத்தையும் கொடுத்திருக்கும்! அதன் மூலம் நான் உன்னோடு இருக்கிறேன் என்று கர்த்தர் அங்கு எலிசாவுக்குக் காட்டுகிறார்.

14 வது வசனத்தில் நாம் இன்னொரு பாடத்தைப் படிக்க முடியும், கர்த்தரின் வல்லமை ஒரு காலப்பகுதியோடு மட்டும் தொடர்புடையது அல்ல என்பதே அது.

“எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்.” (2 இராஜாக்கள் 2:14) என்று நாம் வாசிக்கிறோம்.

கர்த்தரின் வல்லமை என்பது அந்தக் காலத்தில் எலியாவோடும் எலிசாவோடும் மட்டும் இருந்தது, ஆகவே இதுபோல ஆண்டவர் இனிமேல் வல்லமையானவர்களைக் கொடுக்க மாட்டார் என்று நாம் நினைக்கக்கூடாது. வேதத்தை நாம் ஆரம்பத்திலிருந்து வாசித்துப் பார்க்கிறபோது ஆண்டவர் அநேக தேவமனிதர்களை எழுப்பியிருக்கிறார். ஆபிரகாம், மோசே, தாவீது, சாலொமோன், தீர்க்கதரிசிகள் என்பவர்களையும், பிறகு இருண்ட காலம் முடிந்த பிறகு யோவான் ஸ்நானனை எலியாவை நினைவுபடுத்தும் விதமாக அனுப்பி வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு உலகத்திலிருக்கும் எல்லாப் பிரசங்கிகளையும் விட மேலான பிரசங்கியான இயேசு கிறிஸ்துவே மனிதனாக இந்த உலகத்திற்கு வந்தார் என்று நாம் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்து போன பிறகும் கூட அவர் தன்னுடைய அப்போஸ்தலர்களை உலகத்திற்குக் கொடுத்தார் என்று பார்க்கிறோம். ஆகவே கர்த்தருடைய வல்லமை என்பது ஒரு காலப் பகுதியோடு மட்டும் தொடர்புடையது அல்ல. 2 இராஜாக்கள் புத்தகத்தில் நடந்திருக்கும் அற்புதமான காரியங்கள் அந்தக் காலத்தோடு மட்டும் தொடர்புடையவையல்ல, அதற்கு முன்பும் அதுபோல நடந்திருக்கிறது, அதற்கு பின்பும் நடந்திருக்கிறது. சபை வரலாற்றில், இயேசு இந்த உலகத்தில் இருந்தபோது நடக்காத அற்புதங்களா? அவர் சென்ற பிறகு அவருடைய அப்போஸ்தலர்கள் செய்யாத அற்புதங்களா? இன்றைக்கு முதல் நூற்றாண்டில் நடந்தது போன்ற அற்புதங்களைச் செய்யக்கூடிய வல்லமையை ஒரு மனிதனுக்கு ஆண்டவர் கொடுக்காமல் இருந்தபோதும், நாம் சபையாகக் கூடி வியாதியாக இருக்கிற ஒருவருக்காக ஜெபிக்கிறபோது, அந்த ஜெபத்தைக் கேட்டு ஆச்சரியமான விதத்தில் ஆண்டவர் வியாதிஸ்தனுக்கு விடுதலையைக் கொடுக்கிறார். அது கர்த்தரிடத்தில் இருந்து வந்த வல்லமையாக இருக்கிறது. ஆண்டவர் தனது வல்லமையை எல்லாக் காலங்களிலும் காண்பிக்கிறார்.

இந்த உலகத்தில் நாம் இந்நாள் மட்டும் நன்றாக வாழ்ந்து வருகிறோம். உலகத்தில் எத்தனையோ பேர் எத்தனையோ வியாதிகளாலும், விபத்துக்களாலும் பாதிக்கப்பட்டு இந்த உலகத்தை விட்டே போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்டவர் இந்நாள் மட்டும் நம்மை காத்து வருகிறார், இதையெல்லாம் தற்செயலாக நடக்கின்றன என்று நாம் நினைக்கலாமா? கொஞ்சக் காலத்திற்கு முன்பு ஒரு சிறிய புள்ளி போன்ற கொரோனா என்ற கிருமி உலகத்தையே நடுங்க வைத்தது அல்லவா! கர்த்தர் அதிலிருந்து நம்மை காப்பாற்றினார் அல்லவா! அதில் ஆண்டவருடைய செயல் இல்லையென்று நினைக்கிறீர்களா? நாம் அணிந்த முகக் கவசத்தினாலும், பயன்படுத்திய கிருமி நாசினியினாலும் தப்பினோம் என்று நினைக்கிறீர்களா? இல்லை ஆண்டவருடைய சித்தத்தினாலே நாம் அதிலிருந்து காக்கப்பட்டிருக்கிறோம். எலியாவை ஆண்டவர் சுழல் காற்றின் மூலம் எடுத்துக்கொண்டு போனதுபோல இல்லாமல் இருந்தாலும் நாம் கொரோனாவில் இருந்து தப்பினது அற்புதம் இல்லையா? அது ஒரு பெரிய அற்புதம். இன்றுவரையும் ஆண்டவர் நம்மைப் பாதுகாத்து வருவதும் பெரிய அற்புதமாகும். கர்த்தருடைய வல்லமை ஒரு காலத்தோடு மட்டும் தொடர்புடையதல்ல. அதை நாம் நம்ப வேண்டும், நம் மக்களில் பலர் எலியா சுழல்காற்றில் எடுத்துக் கொண்டு போனதுபோல் ஏதாவது நடந்தால்தான் அற்புதமே தவிர வேறெதுவும் அற்புதமல்ல என்று தவறாக எண்ணுகிறார்கள். அற்புதம் அந்தவிதத்தில்தான் நடக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. நாம் செய்கிற ஜெபத்தைக் கேட்டே ஆண்டவர் அற்புதங்களைச் செய்வார். அவற்றை சாதாரணமாக நாம் நினைத்துவிடக் கூடாது. உண்மைதான், அவர் எதையும் தம்முடைய சித்தப்படித்தான் செய்வார், இருந்தபோதும் தம்முடைய சித்தபடி நம்முடைய ஜெபத்தைக் கேட்டு பதில் தருவதும் அவர் செய்கிற அற்புதமாக இருக்கிறது. ஆண்டவர் எவ்வாறு அந்தக் காலங்களில் அற்புதங்களைச் செய்தாரோ அதேபோல இன்றைக்கும் தொடர்ந்து செய்கிறார். ஆண்டவர் செய்கிற அற்புதங்களை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது.

நாம் ஒவ்வொரு வாரமும் சபைக்குச் சென்று ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்கிறோம், அதன் மூலம் நம்மோடு பேசி நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்களைக் கொண்டு வருகிறார், நம்மை திருந்தி வாழும்படி செய்கிறார், மனமாற்றங்களை சில பேருடைய வாழ்க்கையில் கொடுக்கிறார், நம் வாழ்க்கையில் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இது அற்புதமில்லையா? ஆண்டவர் வேத பிரசங்கம் மூலம் தொடர்ந்து நம்மோடு பேசுகிறார் இது அற்புதமில்லையா? அவர் அற்புதங்களின் தேவன் ஒரு காலத்திற்கு மட்டும் தம்முடைய வல்லமையைக் காட்டவில்லை எல்லா காலத்திலும் அவர் தொடர்ந்து செய்கிறார். அப்போஸ்தலருடைய காலத்திற்கு பிறகு வரலாற்றை வாசித்துப் பார்க்கிற போது அற்புதங்கள் நடந்திருக்கிறது. 16 ஆம் நூற்றாண்டில் ஜோன் கல்வின், மார்டின் லூத்தர் மூலமாக பெரிய அற்புதங்களை ஆண்டவர் செய்தார். 18 வது நூற்றாண்டில் ஜோர்ஜ் விட்ஃபீல்டு இங்கிலாந்திலும், ஜொனத்தன் எட்வர்ட்ஸ் அமெரிக்காவிலும் ஆண்டவர் எழுப்பி பெரிய அற்புதங்களைச் செய்தார். அந்தந்தக் காலத்திற்கு ஏற்றபடி தம்முடைய மக்களை எழுப்பி தன் வல்லமையை வெளிப்படுத்தி வருகிறார். சத்தியம் தொடர்ந்து பிரசங்கிக்கும் படியாக எலியாவிற்கும் எலிசாவிற்கும் வரங்களைக் கொடுத்ததுபோல தம்முடைய பிரசங்கிகளுக்கும் வரங்களைக் கொடுத்து பிரசங்கிக்க வைக்கிறார்.

14 வது வசனத்தில் இன்னொரு காரியத்தைப் பார்க்கிறோம், கர்த்தருடைய வல்லமை ஒரு மனிதனோடு மட்டும் தொடர்புடையதல்ல. எலியா உயர எடுத்துக் கொள்ளப்படுவது எலிசாவிற்கே பிடிக்கவில்லை. மூன்று முறை அவரைப் போகவிடாமல் தடுத்ததை நாம் பார்க்கிறோம். ஏன் அப்படிச் செய்தார்? ஒரு பெரிய படையைப் போல நாட்டைப் பாதுகாத்துக் கொண்டு வந்தவர் போய்விட்டால் இனி என்ன செய்யப் போகிறோம் என்று தான் அவ்வாறு செய்தார். அதுமட்டுமல்ல எலியாவின் மீது நிச்சயம் நல்ல பாசம் இருந்திருக்கும். ஆனால் ஆண்டவர் இங்கு 14 வது வசனத்தில், எலியா போனாலும் நான் இல்லாமல் போகப் போவதில்லை, என்னுடைய வார்த்தை இல்லாமல் போகப்போவதில்லை, என்னுடைய வல்லமையை நான் காட்டாமல் இருந்துவிடப் போவதில்லை என்று காண்பிக்கிறார். அதனால் எலியாவில் இருந்த ஆவி எலிசாவின் மேல் வந்து இறங்கியதைப் பார்க்கிறோம். அதைத்தான் எலிசாவும் கேட்டார், அதேவிதமாக ஆவி வந்து இறங்கியது. அப்படி இறங்கியதற்கு அத்தாட்சியாகத்தான் எலியாவின் சால்வையை எலிசா தண்ணீரில் அடித்தபோது அது இரண்டாகப் பிரிந்தது. அப்பொழுது உடனே தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலியாவின் ஆவியும் அதன் வல்லமையும் எலிசாவின்மேல் வந்திறங்கியிருக்கிறது என்று நன்றாக விளங்கிக் கொண்டனர். ஆகவே கர்த்தருடைய வல்லமை ஒரு மனிதனோடு மட்டும் தொடர்புடையது அல்ல என்பது இதன் மூலம் விளங்குகிறது. கர்த்தருடைய வல்லமையினால் ஆபிரகாம், மோசே, தாவீது, சாலொமோன் போன்று பல மனிதர்களை ஆண்டவர் எழுப்பி வெவ்வேறு காலங்களில் பயன்படுத்துகிற தேவனாக இருக்கிறார். எலியா போக வேண்டிய நேரம் வந்தது, இருந்தபோதும் எலியா எவ்விதம் அதிரடியாக அற்புதங்களைச் செய்தாரோ அதேவிதமாக எலிசாவும் அற்புதங்களைச் செய்ய ஆரம்பித்தார் என்று 2 இராஜாக்கள் புத்தகத்தை தொடர்ந்து வாசிக்கிறபோது அறிந்துகொள்ள முடிகிறது. அந்த இரண்டு பேரோடும் இருந்தது யார்? அவர்களோடு இருந்தது ஜீவனுள்ள ஒரே தேவன்.

16 ஆம் நூற்றாண்டில் கல்வின், மார்டின் லூத்தர் எனப் பலவிதமான மனிதர்களை ஆண்டவர் எழுப்பினார். அன்றைக்கு இருந்த மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் குறைவானவர்களாக இருந்தனர். ஆனாலும் அவர்களுடைய பெயர் இன்றைக்கும் கேள்விப்படுகிற விதம் எலியா, எலிசாவைப் போல ஆண்டவர் அவர்களையும் பயன்படுத்தினார். 17 ஆம் நூற்றாண்டில் பியூரிட்டன் பெரியோர்களான ஜோன் ஓவன், ஜோன் பனியன் எனப் பலரை ஆண்டவர் எழுப்பியிருக்கிறார். தேவன் வித்தியாசமான மனிதர்களை எழுப்பித் தனது வல்லமையை சபைக்குக் காட்டுகிறார். நம்மில் சிலர் ஒருவரை மிகவும் உயர்வாக ஹீரோவைப் போலப் பார்ப்பார்கள். ஒருவரின் மீது அன்பு இருக்கலாம், பாசம் இருக்கலாம் ஆனால் கடவுளைப் போல் எவரையும் கணிக்கக்கூடாது. எல்லாரும் சாதாரண மனிதர்கள்தான். எல்லா மனிதர்களுக்கு இருக்கின்ற பலவீனம் அவர்களுக்கும் இருக்கும். நிச்சயம் அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கு மேலாகச் சென்று கடவுளை வைக்க வேண்டிய இடத்தில் அவர்களை வைத்துவிடக் கூடாது. நாம் ஆராதிக்க வேண்டியது கர்த்தரை மட்டுமே. மனிதர்களை நாம் மதிக்க வேண்டும், பாராட்ட வேண்டும். ஆனால் கடவுளின் இடத்தில் அவர்களைத் தூக்கி வைத்துவிடக் கூடாது. ஆண்டவர் எலியாவின் மூலம் பெரிய அற்புதங்களைச் செய்தது போல எலிசாவைக் கொண்டும் செய்தார். அதை வரலாறு முழுக்க நாம் பார்க்கிறோம்.

ஸ்காட்லாந்தில் இருந்த இரண்டு பிரசங்கிகள் எனக்கு அடிக்கடி ஞாபகத்திற்கு வருவார்கள். ஒருவர் ரொபர்ட் மரே மெக்செயின். அவர் 29 வயதில் இறந்துபோனவர். வாழ்ந்த அந்தக் கொஞ்சக் காலத்தில், ஆண்டவர் அவர் ஊழியத்தின் மூலம் செய்த அற்புதங்களை அநேக காலம் வாழ்ந்த ஊழியர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கவில்லை. மரே மெக்செயினுடைய பிரசங்கத்தின் மூலம் அநேகர் ஆண்டவரிடத்தில் வந்திருக்கிறார்கள். இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கிற பிரசங்கங்கள் போலல்லாமல், உண்மையான சீர்திருத்த வேதப் பிரசங்கங்களை அவர் செய்திருக்கிறார். ரொபர்ட் மரே மெக்செயினுடைய சம காலத்தில் வாழ்ந்தவரும், அவருடைய நெருங்கிய நண்பருந்தான் ஆண்ட்ரூ போனர். ஆண்ட்ரூ போனர் 82 வயது வரைக்கும் வாழ்ந்தார். இந்த ஆண்ட்ரூ போனர் எவ்வாறு பிரபலமானார் என்றால் ரொபர்ட் மரே மெக்செயினுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியே பிரபலமானார். மெக்செயினுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆண்ட்ரூ போனர் என்றே அவர் பலராலும் அழைக்கப்பட்டார். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஆண்டவர் ரொபர்ட் மரே மெக்செயினைப்போல ஆண்ட்ரூ போனரைப் பயன்படுத்தவில்லை. அப்படி இருந்த போதும் ஆண்ட்ரூ போனர் ஆண்டவருடைய கருவியாக இருந்திருக்கிறார். ஆண்டவர் அவரை இன்னொருவிதத்தில் பயன்படுத்தியிருக்கிறார். ஆண்ட்ரூ போனர், தன் நாட்குறிப்பில் தன்னுடைய தியானத்தையும், அன்றாட நடவடிக்கைகளையும் எழுதி வைத்திருக்கிறார். அது அருமையானது, தமிழில் இல்லை, ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. அவர் எவ்வளவு பெரிய ஆவிக்குரிய மனிதனாக எந்தளவுக்கு ஆண்டவரை விசுவாசித்து வாழ்ந்திருந்தார் என்பதை எல்லாம் அதில் எழுதி வைத்திருக்கிறார். ஆண்டவர் ரொபர்ட் மரே மெக்செயினை ஒருவிதத்தில் பயன்படுத்தினார், அதே ஆண்டவர் ஆண்ட்ரூ போனரை இன்னொரு விதத்தில் பயன்படுத்தினார். ஆண்டவர் வித்தியாசமான வரங்களை வெவ்வேறு மனிதர்களுக்குக் கொடுக்கிறவராக இருக்கிறார். அதனால் ஒருவரைப் பார்த்து ஒருவர் எரிச்சலடையக்கூடாது. ஆண்டவர் தன்னுடைய வல்லமையை வெவ்வேறு மனிதர்களில் வெவ்வேறு விதங்களில் பயன்படுத்துகிறார். ஆகவே கர்த்தருடைய வல்லமை ஒரு மனிதனோடு மட்டும் சம்மந்தப்பட்டதல்ல; ஒரேயொரு மனிதனை அடிப்படையாகக்கொண்டும் அமைந்ததல்ல.

Robert McCheyne

சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின் இறக்குமுன் தனது கல்லறை பெரிதாகத் தெரியக்கூடாது, அதில் எதையும் தன்னைப்பற்றிப் பாராட்டி எழுதக்கூடாது என்று சொன்னார். அது இருந்த இடமே பெரியளவில் தெரியும்படி இருக்கக்கூடாது என்று எழுதி வைத்துவிட்டுப் போனார். ஏனென்றால் என்னைவிட எனக்கு இரட்சிப்பைக் கொடுத்துப் பயன்படுத்திய ஆண்டவருடைய பெயர்தான் பெரிதாகத் தெரிய வேண்டுமே தவிர என் பெயர் பெரிதாகத் தெரியக்கூடாது என்று கல்வின் நினைத்தார். அவ்விதமான தாழ்மை நமக்கு இருக்கிறதா? சிந்தித்துப்பாருங்கள். இன்றைக்கு இருபது வயதிற்கு முன்பே கிறிஸ்தவனாக வந்தவன் ஆறுமாதத்தில் ஜோர்ஜ் விட்ஃபீல்டு போல ஆகிவிட வேண்டும் என்று கனவு காண்கிறான். முறையாகக் கற்றுக்கொண்டு, நடைமுறையில் தவறிழைத்து, பின்பு அதைப் பக்குவமாய் சரிசெய்து கொண்டு முன்னேறி வர வேண்டும் என்கிற பொறுமை இல்லாமல் இருக்கிறான். உடனடியாக உயர்ந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுவது எத்தனை பெரிய தவறு. மனிதனுக்குப் பொறுமை அவசியம், தாழ்மை வேண்டும், பக்திவிருத்தியில் அவன் வளரவேண்டும், அவ்வாறு வளரும்போது அனுபவம் வளரும். இளம் வயதிலேயே ஒருவனுக்கு எல்லாம் கிடைத்துவிடாது. ஒருமுறை அமெரிக்காவில் பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரிக்குச் சென்று மாபெரும் கிறிஸ்தவப் பிரசங்கிகளுடைய கல்லறைகளும் ஒரே இடத்தில் இருந்ததைப் பார்த்தேன். அங்கு அவர்களைப் பற்றி பெரியதாக அக்கல்லறைகளில் ஒன்றிலாவது எழுதி வைக்கப்படவில்லை. வரலாற்றில் அவர்களைப் பற்றிப் படித்ததனால் அவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்கள் என்று அறிந்து கொண்டேனே தவிர அவர்களுடைய கல்லறைகளில் ஒன்றும் எழுதி வைக்கப்படவில்லை. அவர்களிடத்தில் தாழ்மை மிகவும் அதிகமாக இருந்தது.

2. இப்பகுதி கர்த்தருடைய ஞானம் எத்தனை பெரியது என்பதைக் காட்டுகிறது (2 இராஜாக்கள் 2:15-18)

“எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி: இதோ, உமது அடியாரோடே ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்தரவு கொடும்; ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து, பர்வதங்களில் ஒன்றின் மேலாகிலும் பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு அவன்: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்.” (2 இராஜாக்கள் 2:15-16).

இங்கு தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலியாவைத் தேடும்படி எலிசாவிடம் கேட்கிறார்கள். தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் ஆண்டவருடைய இரதம் நாம் ஓட்டுகிற வண்டியைப்போலப் பாதியிலேயே எங்காவது நின்று போயிருக்கும் என்று எண்ணியது போலிருக்கிறது. அதனால் அவர்கள் அவரைத் தேடும்படி எலிசாவிடம் கேட்கிறார்கள். எலிசா அவர்களை அனுப்ப வேண்டாம் என்று பதில் சொன்னார். ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை. அவர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தபடியால் போய்த் தேடுங்கள் என்று எலிசா சொன்னார்.

“அவன் சலித்துப்போகுமட்டும் அவர்கள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால் அனுப்புங்கள் என்றான்; அப்படியே ஐம்பதுபேரை அனுப்பினார்கள்; அவர்கள் மூன்று நாள் அவனைத் தேடியும் காணாமல், எரிகோவிலிருந்த எலிசாவிடம் திரும்பிவந்தபோது, அவர் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றார்.” (2 இராஜாக்கள் 2:17-18).

இதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? கர்த்தருடைய ஞானம் எவ்வளவு பெரியது என்பதைக் கற்றுக்கொள்கிறோம். எலியாவுக்கு இருந்த ஞானம் எலிசாவிடம் இருந்தது. எலிசாவிடம் அவர்கள் கேட்டபோது போக வேண்டாம் என்று அவர் சொன்னது ஞானமான வார்த்தை. எலிசாவிற்கு நன்றாகத் தெரிந்திருந்தது எலியா போனது கர்த்தருடைய செயல் என்று. எலியா போனது தனக்கே விருப்பமில்லாததாக இருந்தபோதும் எலியா போன பிறகு அவர் திரும்பி வரமாட்டார் என்று எலிசாவிற்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அப்போது எலிசா அவர்களுக்குப் புத்தி சொல்லியும் அவர்கள் கேட்க மறுத்தார்கள். கடைசியில் தேடிச் சலித்துப் போய்த் திரும்பி வந்தார்கள்.

கிறிஸ்தவர்களுக்கு ஞானம் வேண்டும். சபையில் இருக்கிற வாலிபரை நான் கவனித்துப் பார்க்கிறேன். அவர்கள் எப்போதும் ஒரு காரியத்தை சொன்னவுடனே சரியாகக் காதுகொடுத்துக் கேட்காமல் தங்கள் வழியில்தான் போகப் நினைப்பார்கள். ஏனென்றால் அவர்களிடம் ஞானம் இல்லை என்பதைக் காட்டுகிறார்கள். சொன்னவுடனேயே கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும், ஞானம் இல்லாதவர்கள் தவறாகத்தான் நடக்க முடியும். இங்கு இவர்கள் தீர்க்கதரிசிகளின் புத்திரராக இருந்தபோதும் ஞானம், நிதானம் எல்லாம் குறைவாகவே அவர்களிடம் இருந்தது. ஞானம் இல்லாமல் நடப்பது மிகவும் மோசமானது. அதற்குதான் ஆண்டவர் நமக்கு வேதத்தைக் கொடுத்திருக்கிறார். இந்த வேதத்திலிருந்து தேவனுடைய சத்தியத்தையும் ஞானத்தையும் பெற்றுக்கொள்ளுகிறோம். எல்லா காரியங்களிலும் சத்தியத்தைப் பயன்படுத்த வேண்டும், ஆண்டவர் என்ன சொல்லுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் ஆண்டவருடைய வல்லமையைக் கண்டார்கள், ஆனால் ஞானம் இல்லாததனால் எலியாவை எடுத்துக் கொண்டதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எலிசா சொன்னதை அவர்களால் நம்ப முடியவில்லை. எலிசா ஞானமாகப் புத்தி சொன்னபோதும் அதைக் காதில் வாங்காமல் தொடர்ந்து அவர் சலித்துப் போகிறவரைக்கும் கேட்டுக் கொண்டிருந்தது மிகவும் தவறு. ஞானம் இல்லாததனால் அது எங்கு சென்று முடிந்தது? மூன்று நாட்களை அவர்கள் வீணாக்கினார்கள்.

ஞானம் இல்லாததனால் தங்கள் வாழ்க்கையையே வீணாக்கிக் கொள்ளுகிறவர்களும் உண்டு. ஆண்டவரை அறியாத பெண் மீது ஆசைப்படுவது மிகவும் தவறு என்று வாலிபர்களுக்கு புத்தி சொன்னால் உடனே அதைக் கேட்டுச் சிந்திக்க வேண்டும் அல்லவா? கேட்டுச் சிந்தித்து இது ஆபத்தான வழிதான் என்று உணர்ந்து அதிலிருந்து மனந்திரும்ப வேண்டும் அல்லவா? ஆனால் அவர்கள் அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் தங்கள் இச்சைக்கு இடம் கொடுத்து வாழ்க்கையையே அழித்துக் கொண்டவர்கள் அநேகர். நமக்கு ஞானம் இருக்க வேண்டும், அதற்காக ஜெபிக்க வேண்டும். அதுமட்டுமல்ல வாழ்க்கையில் பல காரியங்களில் போதகர்கள் ஆலோசனை சொன்னால் அவர்கள் கேட்பதில்லை. ஏனென்றால் இறுமாப்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள், அதைவிட மோசமானது ஒன்றுமில்லை. இறுமாப்பு உள்ளவர்களுக்கு ஞானம் வராது, அவர்கள் எப்போதும் தங்கள் முடிவுதான் சரி என்று நினைப்பார்கள். இறுமாப்பு உள்ள இடத்தில் தாழ்மை இருக்காது. ஞானமாய் சொல்லுகிற காரியத்தை அவர்கள் தங்களுக்கு விரோதமாய் அது இருக்கிறது என்று பார்ப்பார்கள். அவர்களுடைய இருதயம் சரியில்லை, ஞானத்திற்காக ஜெபிக்க வேண்டும். ஒரு காரியத்தில் நாம் ஞானமாக நடக்கிறபோது தவறான வழியில் போகாமல் நம்மைக் காத்துக்கொள்ள முடியும். ஆண்டவருடைய வார்த்தையின் மூலம் எலிசாவிடம் ஞானம் இருந்ததை நாம் பார்க்க முடிகிறது. ஆண்டவர் கொடுக்கும் ஞானம் மிகவும் பெரியது.

3. இப்பகுதியில் கர்த்தருடைய கிருபையின் மகத்துவத்தைக் காண்கிறோம் (2 இராஜாக்கள் 2:19-22)

இந்தப் வேதப் பகுதியிலிருந்து மட்டுமே கர்த்தருடைய கிருபை எவ்வளவு பெரியது என்று ஒரு செய்தியைக் கொடுத்துவிட முடியும்.

“பின்பு அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள். அப்பொழுது அவன்: ஒரு புதுத்தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டு வாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது, அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.” (2 இராஜாக்கள் 2:19-22).

இங்கு இந்தப் பட்டணம் என்று எரிகோ பட்டணத்தைக் குறித்து சொல்லப்படுகிறது. இங்கு “இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம்” என்று சொல்லுவதை சற்று விரிவாகப் பார்க்க வேண்டும். உண்மையிலேயே தண்ணீரும் நிலமும் மோசமாக இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. இந்த நிலம் பாழ்நிலம் என்று சொல்லப்படுவது அங்கிருந்த மக்களுக்கு அடையாளமாக இருக்கிறது. அங்கிருந்த மக்கள் மோசமான நிலையில் இருந்தார்கள். என்ன மோசமான நிலையில் இருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, பாழ்நிலம் என்று சொல்லப்படும் வார்த்தைக்கு மூல மொழியை ஆராய்ந்தால், அந்தத் தண்ணீர் அந்த நிலத்தையும் மக்களையும் மிகவும் பாதித்திருந்தது என்று சொல்லப்படுகிறது. என்ன பாதிப்பு என்றால் தண்ணீர் மிகவும் மோசமான நிலையில் இருந்து அந்த நிலத்தையும் அங்கிருந்த மனிதர்களுக்கும், மாடுகள் போன்ற ஜீவன்களுக்கும் ஆபத்தாய் போய் முடிந்தது. அந்தத் தண்ணீரைக் குடித்த மிருக ஜீவன்கள் இறந்து போயின. அதுமட்டுமல்ல அந்த தண்ணீரைக் குடித்த பெண்களுக்கு குழந்தைகள் இல்லாமல் மலட்டுத்தன்மை ஏற்பட்டது.

ஏன் இவ்வாறு ஏற்பட்டது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதைப் பற்றி அறிந்துகொள்ள நாம் யோசுவா புத்தகத்தைத் வாசிக்க வேண்டும். இதெல்லாம் காரணமில்லாமல் நடக்கவில்லை.

“அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்.” (யோசுவா 6:26) என்று நாம் வாசிக்கிறோம்.

இங்கு யோசுவா தன் படையோடு எரிகோ பட்டணத்தைக் கைப்பற்றிய பிறகு இந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார். எரிகோ பட்டணத்திற்கு உள்ளே போகும் போது யோசுவா அதிலிருந்து ஒன்றையும் எடுக்கக்கூடாது என்று சொல்லியிருந்தார். ஆனால் ஆகான் அதையும் மீறி சில பொருட்களை எடுத்து மறைத்து வைத்து மாட்டிக்கொண்டு அழிந்து போனான். ஆண்டவர் அந்த எரிகோ பட்டணத்தைச் சபித்தார். இதெல்லாம் நடந்து அநேக ஆண்டுகளுக்குப் பிறகு 1 இராஜாக்கள் 16:34 வது வசனத்தில்,

“அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்” என்று சொல்லப்படுகிறது.

இங்கு எரிகோ பட்டணம் மீண்டும் கட்டப்பட்டது என்பதையும், அப்போது யோசுவா சொன்னபடி அங்கு நடந்ததென்பதையும் அறிந்துகொள்கிறோம். பிறகு 2 இராஜாக்கள் புத்தகத்திற்கு நாம் வரும்போது அதில், தண்ணீர் சரியில்லை, மிருக ஜீவன்கள் எல்லாம் இறந்து போயின, பெண்கள் எல்லாருக்கும் மலட்டுத்தன்மை ஏற்பட்டது என்பதை வாசிக்கிறோம். இந்த நிலையில் பல காலங்களுக்குப் பிறகு அந்தப் பட்டணத்திற்கு விடுதலை வருகிறது.

“அப்பொழுது அவன்: ஒரு புதுத்தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டு வாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது, அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.” (2 இராஜாக்கள் 2:20-21).

இங்கு எலியாவோடு இருந்த ஆண்டவர் எலிசாவோடு இருக்கிறதைப் பார்க்கிறோம். வெறும் உப்பை அந்தத் தோண்டியில் போட்டு அவர் செய்த செயல் ஒரு மாபெரும் அற்புதம். அதுவரை சபிக்கப்பட்டிருந்த எரிகோவிற்கு அன்றைக்கு விடுதலை வந்ததைக் காண்கிறோம்.

அதே எரிகோ நகருக்கு மனித குமாரனாகிய இயேசு புதிய ஏற்பாட்டுக் காலத்தில் போனதை வாசிக்கிறோம், “அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்” (லூக்கா 19:1) என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இங்கு இயேசு எரிகோ வழியாகப் போகிறார். அங்கே அவர் சகேயுவைப் பார்க்கிறார். கிருபையின் மூலமாக, மிக மோசமானவனாக, யூதர்களின் வெறுப்புக்குள்ளாகியிருந்த சகேயுவுக்கு அன்று மனந்திரும்புதலாகிய விடுதலை வந்தது. சபிக்கப்பட்ட இடங்களுக்கும் ஆண்டவர் விடுதலையைக் கொடுத்திருக்கிறார். அவ்விடங்களில் தேவகோபத்தைச் சுமந்து நின்ற மனிதர்களுக்கும் அவர் விடுதலையை அளிக்கிறார்.

மனிதர்கள் சபிக்கப்பட்டவர்களைப் போல பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாவம் அவர்கள் கண்களைக் குருடாக்கியிருக்கிறது, அவர்கள் போகிற இடமெல்லாம் தீமையாக இருக்கிறது, தீமையைத் தவிர நல்லதைச் சிந்திக்க அவர்களால் முடிவதில்லை. யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்றளவுக்கு பாவம் அவர்களை மோசமான நிலையில் வைத்திருக்கிறது. ஆண்டவரை விசுவாசிக்காத நம் பிள்ளைகள் அப்படித்தான் இருக்கிறார்கள். நம்முடைய அப்பாவோ, அம்மாவோ உறவினர்களோ அவர்கள் யாராக இருந்தாலும் ஆண்டவரை அவர்கள் விசுவாசிக்காதபோது மிகவும் மோசமாக எரிகோ பட்டணம் இருந்தது போலதான் இருக்கிறார்கள். பாவம் அவர்களை ஆண்டவரை விசுவாசிக்காமல் இருக்கச் செய்கிறது. ஆண்டவரை விசுவாசிக்காதவர்களை எல்லாம் அழித்திருக்கலாம், அவ்வாறு அவர் அழித்திருந்தாலும் அது நீதியாகத்தான் இருந்திருக்கும். அவரிடத்தில் நீதிக் குறைவையோ பரிசுத்தக் குறைவையோ பார்க்க முடியாது. ஆண்டவர் எவ்வளவு கிருபையாக இருக்கிறார் என்பதைப் பாருங்கள்.

நாம் செய்த பாவத்தினால் நாம் பாவிகளாகவும் மீறினவர்களாகவும், கர்த்தரை நேசிக்காதவர்களாகவும், அன்பு காட்டாதவர்களாகவும் இருக்கிறோம். அது ஆண்டவருடைய தவறல்ல, நாம் செய்த பாவத்தின் விளைவு. நாம் பாவஞ் செய்தபடியால் நிச்சயமாக தண்டித்து அழிக்கப்பட வேண்டியவர்களாக இருந்தபோதும் ஆண்டவர் நம்மை அழிக்காமல் தன்னுடைய ஒரே குமாரனை நம்முடைய விடுதலைக்காகப் பலியாக மரிக்க ஒப்புக்கொடுத்தார். நாம் யாரும் கெட்டழிந்து போவது அவருடைய விருப்பமாக இருக்கவில்லை. அவர் தொடர்ந்து நம்மீது நீடிய பொறுமையுள்ளவராக இருக்கிறார். அவருடைய சுவிசேஷம் உலக நாடுகள் முழுவதும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்படியாக அதற்கான வழிகளை அவர் ஏற்படுத்தினார். அவ்வாறு சாட்சியாக அறிவிக்கப்பட்ட பின்பு இயேசு நான் மீண்டும் வருவேன் என்று சொல்லியிருக்கிறார். சுவிசேஷம் எல்லோருக்கும் அறிவிக்கும்படியாக அவர் ஏன் செய்தார்? நாம் மனந்திரும்ப வேண்டும், தொடர்ந்து பாவ நிலையிலேயே இருந்து அழிந்துபோகக் கூடாது, இருதயம் கடினப்பட்டுப் போய்விடக்கூடாது, ஆகாபைப் போல அகசியாவைப் போல இல்லாமல் போய்விடக் கூடாது, நாம் பரலோகம் போக வேண்டும், ஆண்டவரோடு இருக்க வேண்டும், அவரோடு பேசி உறவாடி சந்தோஷப்பட்டு இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் தொடர்ந்து நம்மோடு வார்த்தையின் மூலம் பேசிக்கொண்டிருக்கிறார்.

ஜீவனுள்ள இயேசுவை விசுவாசிக்கிறவர்களுக்கு எரிகோவிற்கு வந்த விடுதலை வரும், சகேயுவிற்கு வந்த விடுதலை வரும். சகேயுவிற்கு ஆண்டவரின் மீது அன்பு ஏற்பட்டது. ஆண்டவராகிய இயேசுவின்மீது ஏன் உங்களுக்கு அன்பு இல்லாமல் இருக்கிறது? அவருடைய அன்பை அறிந்து, வாழ்க்கையில் அவருடைய இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டு வாழுகிறவர்கள் உங்களைச் சுற்றி அநேகர் இருக்கிறார்கள். ஆனால் உங்கள் இருதயம் இன்னும் மாறாமல் இருப்பதற்கு காரணம் ஆண்டவர் அல்ல, நீங்கள்தான். இருதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். இயேசுவை நேசிக்கப் பாருங்கள், அவர் ஒருநாளும் உங்களைக் கைவிடமாட்டார். தன்னுடைய வல்லமையான கரங்களினால் உங்களை கடைசி வரையிலும் பாதுகாப்பார். ஆகாப் என்னென்னவோ முயற்சி செய்து எலியாவை இல்லாமல் ஆக்கிவிட பார்த்தான். ஆனால் ஆண்டவர் எலியாவோடு இருந்தார். அவனைப் பரலோகத்திற்கு எடுத்துக் கொண்டார். இறக்காமல் பரலோகம் போன இரண்டு மனிதர்களில் எலியாவும் ஒருவர். தேவன் உங்களையும் பாதுகாப்பார். இறக்காத ஆத்துமாவை உங்களுக்கு கொடுத்திருக்கிற தேவன், உங்கள் ஆத்துமா பாவத்தினால் நரகத்தில் அழியாதபடி பரலோகத்திற்கு கொண்டுபோவதற்காகதான் தன்னுடைய ஒரே குமாரனை அனுப்பினார். இனி இருக்கிற நாட்களில் அவரை விசுவாசித்து அவரில் அன்பு காட்டி அவருக்காக வாழுங்கள். அதைவிட பெரிய கிருபை வேறெதுவும் இருக்க முடியாது.


© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.