வேதாகமம்

கர்த்தருடைய சத்தியத்தைத் தாங்கி வரும் வேதத்தைப் பற்றிய நம்முடைய அறிவும், அணுகுமுறையும் எப்போதும் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். அதாவது, வேதத்தை எப்போதும் தேவபயத்தோடு அணுகுவது அவசியம்.

அது நம்மைப் படைத்தவரின் சித்தத்தைத் தாங்கி வருவதால் அதைத் துல்லியமாக அறிந்துகொள்ளுவதற்கு நமக்குத் தேவபயமும் பரிசுத்த ஆவியானவரின் துணையும் மிகமிக அவசியம். இவை இரண்டும் இல்லாமல் வேதம் படிக்க முயல்வது ஆபத்து.

இவற்றோடு நிதானித்துப் பொறுமையோடு ஆராய்ந்து அறிந்துகொள்ளும் பக்குவமும் தேவை. ஏனெனில், வேதத்தைப் படிக்கும்போது தினசரி செய்தித்தாளை வாசிப்பதுபோல அதைப் படிக்கமுடியாது. இரண்டிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடு தெரியாதவன் கிறிஸ்தவனாக இருக்கமுடியாது. வேதம் ஆராய்ந்து கவனத்தோடு படித்தறிந்துகொள்ள வேண்டிய தெய்வீகச் செய்தி. அதைப் படித்தறிவதற்கு அவசியமான வேதவிதிகளைக் கற்றுத் தேர்ந்து அவற்றை முறையோடு பயன்படுத்தி தேவ செய்தியை அறிந்துகொள்ள நேரமும், நிதானமும், பொறுமையும் அவசியம்.

வெளியரங்கமாகவும், உள்ளரங்கமாகவும்

வேதத்தில் அனைத்துச் சத்தியங்கள் வெளியரங்கமாகவும், உள்ளடக்கமாகவும் விளக்கப்பட்டிருக்கின்றன. வெளியரங்கமாக விளக்கப்பட்டிருப்பவற்றை விளங்கிக்கொள்ளுவது சுலபமானது. உதாரணத்திற்கு, இரட்சிப்பிற்காக நாம் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்ற போதனை. இது குழப்பத்திற்கிடமில்லாமல் புதிய ஏற்பாட்டின் பல்வேறு பகுதிகளில் விளக்கப்பட்டிருக்கின்றது. இதை விளங்கிக்கொள்ள நாம் பெரும் மேதையாக இருக்கவேண்டியதில்லை.

வேதத்தில் வேறு பல சத்தியங்கள், அதுவும் மிக முக்கியமானவையுங்கூட உள்ளரங்கமாக விளக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, வெளிப்படையாக ஒரே வசனத்தில் தரப்படாமல், முழு வேதத்தையும் ஆராய்ந்து அந்த சத்தியத்திற்குரிய அனைத்து வசனப்பகுதிகளையும் தொகுத்து ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டிய விதத்தில் தரப்பட்டிருக்கின்றன. கர்த்தரின் ஆராதனை பற்றிய சத்தியம் இந்தவிதத்தில்தான் தரப்பட்டிருக்கிறது. அதுபற்றிய முழுப் போதனையையும் ஒரு சில வசனங்களை மட்டும் பயன்படுத்தி அதற்குரிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. 1689 விசுவாச அறிக்கையின் 22ம் அதிகாரம் ஆராதனைத் தத்துவங்களை எட்டுப் பத்திகளில் விளக்குகிறது. அந்த விளக்கங்கள் அனைத்தும் முழு வேதத்திலும் இருந்து தொகுக்கப்பட்டவை; ஒரு சில இடங்களில் மட்டும் அவை வெளியரங்கமாக விளக்கப்படவில்லை.  

இந்த இரண்டாவது வகை (உள்ளடக்கமாக) வேதவிளக்கவிதியைப் பயன்படுத்தும்போது நமக்கு நிதானமும், பொறுமையும், உழைப்பும் அவசியம்.  உள்ளடக்கமாக விளக்கப்பட்டிருக்கும் சத்தியங்களை ஆராய்ந்தறிய நேரமும் அதிகம் செலவாகும்.  இந்த இரண்டு வேத விளக்கவிதிகளையும் பயன்படுத்தியே நாம் வேத சத்தியங்களனைத்தையும் அறிந்துகொள்ளுகிறோம். இந்த இரண்டும் மிகமிக முக்கியமானவை.

மாறுபாடான கருத்துக்கள்

இந்த முறையில் கற்று அறிந்துகொள்ள வேண்டியதாகக் கர்த்தர் வேதத்தைத் தந்திருப்பதால்தான் சில வேளைகளில் அதைப் படிப்பவர்கள் ஒரு சில சத்தியங்களைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கும் நிலை உருவாகின்றது.  உதாரணத்திற்கு, ஞானஸ்நானத்தை எடுத்துக்கொள்ளுவோம்.

புதிய ஏற்பாட்டில் ஞானஸ்நானம் என்ற வார்த்தைக்கு “முழுக்குதல்” என்ற அர்த்தம் மட்டுமே காணப்படுகின்றது. அதை ஜோன் கல்வினும் ஏற்றுக்கொள்ளுகிறார். அத்தோடு, இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது யோவான் ஸ்நானனுடன் தண்ணீருக்குள் போய் தண்ணீரிலிருந்து கரையேறியதாக மத். 3:16 விளக்குகிறது. இந்த முறையிலேயே கிறிஸ்துவைத் தங்களுடைய இரட்சிப்பிற்காகத் தனிப்பட்ட முறையில் விசுவாசித்த அனைவரும் புதிய ஏற்பாட்டில் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் பாப்திஸ்து சபைகள் கிறிஸ்துவை விசுவாசித்து அதை பகிரங்கமாக அறிவித்து சபை அங்கத்தவத்துவத்தை நாடுகிறவர்களுக்கு மட்டும் முழுக்கு ஞானஸ்நானத்தை அளிக்கிறார்கள். பாப்திஸ்து சபைகள் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் அளிப்பதில்லை. ஏனெனில் அவர்களுக்கு சுவிசேஷத்தைக் கேட்டு கிறிஸ்துவை விசுவாசிக்கும் பக்குவமோ, விசுவாசத்தை பகிரங்கமாக அறிவிக்கும் வயதோ, அங்கத்தவராகும் தகுதிகளோ கிடையாது. 

இம்முறைக்கு மாறாக குழந்தை ஞானஸ்நானத்தைப் பின்பற்றும் திருச்சபைகள், பழைய ஏற்பாட்டுப் போதனையைப் பின்பற்றி, ஆபிரகாமுக்குக் கர்த்தர் அளித்த வாக்குறுதியின்படி (ஆதி 15) ஆபிரகாமின் பிள்ளைகளும் விருத்தசேதனத்தின் மூலமாக ஆசீர்வதிக்கப்பட்டார்கள் என்ற விளக்கத்தின் அடிப்படையில், அது புதிய ஏற்பாட்டிலும் தொடர்வதாகக் கருதி பழைய ஏற்பாட்டு விருத்தசேதனத்தின் இடத்தை ஞானஸ்நானம் பிடித்திருக்கிறது என்று கூறி, புதிய ஏற்பாடு விசுவாசிகளாக இருப்பவர்களின் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். இவர்கள் இஸ்ரவேலைப் பழைய ஏற்பாட்டு சபையாகவும், அதுவே புதிய ஏற்பாட்டில் தொடர்கிறதாகவும் கருதுகிறார்கள். புதிய, பழைய உடன்படிக்கைகளுக்கிடையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்பது இவர்களுடைய விளக்கம்.   

மேல் கவனித்த ஞானஸ்நானம் பற்றிய இரண்டு விளக்கங்களையும் கவனித்தால் வேதத்தை இரண்டு தரப்பாரும் விளக்கும் முறையில் வேறுபாடு இருப்பதைக் காண்கிறோம். முதல் தரப்பினரான பாப்திஸ்துகள், பழைய உடன்படிக்கை பெருமளவுக்கு இஸ்ரவேலை நோக்கமாகக் கொண்டு அமைந்திருக்கிறது என்றும், புதிய உடன்படிக்கையிலேயே திருச்சபை கிறிஸ்துவை மையமாகக் கொண்டு உருவாகியது என்கிறார்கள். அந்தவிதத்தில் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் திருச்சபை காணப்படவில்லை என்கிறார்கள். அத்தோடு ஞானஸ்நானம் புதிய உடன்படிக்கை திருச்சபைக்குக் கொடுக்கப்பட்ட திருநியமம் என்றும் அதற்கும் விருத்தசேதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார்கள். இரண்டாம் தரப்பினரான குழந்தை ஞானஸ்நானவாதிகள் இதற்கு மாறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

மாறுபாடான இந்த இரு வேறு கருத்துக்களும் வரலாற்றில் இருந்து வந்திருக்கின்றன. அதனால் இவ்விருவேறு கருத்துக்களின் அடிப்படையில் திருச்சபைகளும் அமைந்து வந்திருக்கின்றன. இவை இரண்டில் எந்தவொரு கருத்தையும் நாம் போலிப்போதனையாகக் கருதக்கூடாது; இவை ஒரே தலைப்பைக் குறித்த வேறுபட்ட வேத விளக்கங்கள் மட்டுமே. சீர்திருத்த பாப்திஸ்தான நான், இந்த விளக்கங்களில் விசுவாசிகளுக்கு மட்டும் முழுக்கு ஞானஸ்நானமளித்து சபை அங்கத்தவர்களாக்க வேண்டும் என்ற கோட்பாட்டை உறுதியாக நம்புகிறேன். அதற்குரிய விளக்கங்களே முற்றிலும் வேதத்தோடு பொருந்திப் போவதாகவும் நம்புகிறேன். அதேவேளை, அதற்கு முரணான கருத்தைக் கொண்டிருக்கும் குழந்தை ஞானஸ்நானவாதிகளை நான் போலிப்போதனையைப் பின்பற்றுகிறவர்களாகக் கருதவில்லை. இந்த விஷயத்திலும், திருச்சபைக் கோட்பாடு மற்றும் கர்த்தரின் உடன்படிக்கை ஆகிய போதனைகளிலும் அவர்களோடு நான் முற்றிலும் வேறுபடுகிறேன். இருந்தபோதும் எனக்கு எதிர்த்தரப்பில் இருக்கும் குழந்தை ஞானஸ்னானவாதிகள் தாங்கள் நம்பும் விளக்கத்தைத்தான் வேதம் தருகிறது என்று நம்புகிறார்கள். அவர்களுடைய கருத்துக்கள் என்னுடையதிலிருந்து முற்றிலும் வேறுபாடானவையே தவிர போலிப்போதனைகள் அல்ல. அவர்கள் இந்த விஷயத்தை விளக்கும் முறையில் தவறிழைக்கிறார்கள், வேதவிளக்க விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை என்பதே என் பதில். இருந்தும் இந்த விஷயத்தில் அவர்களுடைய கருத்துக்கள் போலிப்போதனை என்ற பட்டியலுக்குள் வராதவை.

குழந்தை ஞானஸ்நானம் போலிப்போதனை இல்லை என்பதால் நாம் பாப்திஸ்து சபைகளில் இனி முழுக்கு ஞானஸ்நானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இரண்டையும் பின்பற்றி வரலாமே என்று சிலர் நினைக்கிறார்கள். இது அடிப்படையிலேயே மிகத்தவறான எண்ணம்.  முழுக்குஞானஸ்நானம் வெறும் தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயமல்ல; அது திருச்சபையின் அங்கத்துவ அமைப்போடு தொடர்புடையது, இரட்சிப்போடும் தொடர்புடையது. அதனால் ஒருபோதும் ஒரே சபையில் இரண்டு முறைகளையும் பயன்படுத்த முடியாது; அப்படிப் பயன்படுத்தினால் வேதம் விளக்கும் திருச்சபை பற்றிய கோட்பாட்டை நாம் நடைமுறையில் பின்பற்ற முடியாது. அதைக் குழிதோண்டிப் புதைக்க நேரிடும். இந்தப் பிரச்சனைக்கு என்ன வழி? முழுக்கு ஞானஸ்நானமும், குழந்தை ஞானஸ்நானமும் கிறிஸ்து மறுபடியும் வரும்வரை உலகில் இருக்கத்தான் போகின்றன. அதனால் நாம் நம்பிப் பின்பற்றும் திருச்சபைக் கோட்பாட்டை முறையோடு பின்பற்றி அதில் உறுதியாக இருந்து கர்த்தரை மகிமைப்படுத்தவேண்டும். எதிர்தரப்பைப் போலிப்போதனையாளராகக் கருதக்கூடாது. அவர்களுடைய கருத்தை நாம் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவில்லை; ஆதரிக்கவும் இல்லை; பின்பற்றப்போவதுமில்லை. இருந்தபோதும் அவர்கள் நமக்கு எதிரிகளல்ல. கொசுக்கடியை நாம் பொறுத்துக்கொள்வதில்லையா? அதுபோலத்தான் இந்தப் பூரணமற்ற உலகில் இதையும் நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

எது போலிப்போதனை?

போலிப்போதனை வேதத்தின் (கிறிஸ்தவத்தின்) அடிப்படைச் சத்தியங்களுக்கு (Foundational doctrines or essential teachings) முற்றிலும் விரோதமானது. அது கிறிஸ்தவத்தைத் தாங்கும் சத்தியத் தூண்களைத் தகர்க்கிறது. உதாரணத்திற்கு, திரித்துவப்போதனையில் நாம் மாறுபாடான விளக்கங்களைக் கொண்டிருக்க முடியாது. அப்படிச் செய்வது போலிப்போதனைக்கு வழிகோளும். (இதற்குள் நுழையத் துணிந்திருக்கும் வெயின் குரூடமின் தவறான போதனை பற்றி இந்த இதழில் விளக்கியிருக்கிறேன்). கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பற்றியும் நாம் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கக் கூடாது.

இயேசு கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு, அவருடைய தெய்வீக, மானுடத் தன்மைகள், அவருடைய அற்புதச் செயல்கள், அவருடைய பூரணப் பரிகாரப்பலி, அவருடைய மரணம், உயிர்த்தெழுதல், அவருக்கும் பிதாவுக்கும் இடையில் காணப்படும் ஐக்கியம், திரித்துவ அங்கத்தவர்களுக்கிடையில் காணப்படும் ஐக்கியம், அவர்களுடைய தன்மை, பணிகள் ஆகியவை பற்றியும், இறையாண்மை, நீதிமானாக்குதல், ஜென்மபாவம், மறுபிறப்பு, மனந்திரும்புதல், விசுவாசம், பரிசுத்தமாக்குதல் ஆகியவை பற்றியும், வேதம் பரிசுத்த ஆவியினால் ஊதித் தரப்பட்ட தன்மை, அதன் குறைபாடுகளற்ற தன்மை, அதனுடைய அதிகாரம், அதன் போதுமான தன்மை, பரலோகம், நரகம் ஆகியவை பற்றியும் நாம் ஒத்த கருத்துள்ளவர்களாகவே இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் போதனைகளைப் பற்றி வேதம் விளக்குகின்ற முறையான போதனைகளை நாம் அறிந்து பின்பற்ற உதவவும், போலிப்போதனைகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கவுமே வரலாற்றில் திருச்சபை விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப் போதனைகளையும் உருவாக்கி நமக்குத் துணை செய்திருக்கிறது. இவை போலிப் போதனைகளுக்கு நம்மிருதயத்தில் இடங்கொடுத்துவிடாதிருக்க உதவும். (போலிப்போதனைகள் பற்றிய மிக ஆழமான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள, “போலிப்போதனைக்கு விலகி நில்லுங்கள்” எனும் ஆக்கத்தை 2021, மலர் 27, இதழ் 4ஐ வாசியுங்கள்).

இவற்றோடு, வேதம் அறுபத்தி ஆறு நூல்களில் விளக்கமாகத் தரும் போதனைகளுக்கு அடிப்படையில் முரணான எந்தப் போதனையும் போலிப்போதனையே. கருக்கலைப்புக்கு வேதம் அனுமதி தரவில்லை. அதற்கு ஒத்துப்போவது போலிப்போதனைக்கு நம் வாழ்வில் இடங்கொடுப்பதற்குச் சமம். இஸ்லாமியரைப்போல இரண்டு மனைவிகளைக் கொண்டிருப்பது போலிப்போதனைக்கு இடங்கொடுப்பதாகும். அதற்கு கிறிஸ்தவன் வாழ்வில் இடந்தரக்கூடாது. சிலைவணக்கத்தில் ஈடுபடுவதும், தேவதூதர்களை வணங்குவதும், பிறமதப் போதனைகளைப் பின்பற்றுவதும், இந்து மதப் போதனைகளுக்கு ஏற்றவிதத்தில் கிறிஸ்தவப் போதனைகளுக்கு விளக்கங்கொடுப்பதும் போலிப்போதனைக்கான உறுதியான அடையாளங்கள். கிறிஸ்துவின் பரிகாரப்பலியை இழிவுபடுத்தும் கத்தோலிக்க மத “மாஸ்” (Mass) ஆணித்தரமான போலிப்போதனை. தள்ளுபடி ஆகமங்களை ஒதுக்கிவைக்காமல் இருப்பதும் போலிப்போதனைக்கான அடையாளம். அதனால்தான் கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவமாகக் கருதமுடியாது. இன்று அநேகரை வஞ்சித்துக்கொண்டிருக்கும் செழிப்புபதேசப் போதனை (Prosperity gospel) போலிப்போதனையே. அது வேதத்தில் அடியோடு காணப்படாததொரு போதனையை அளித்து ஆத்துமாக்களை வஞ்சிக்கிறது. போலிப்போதனை எந்த ரூபத்தில் வந்தாலும் அது நம் உயிரை மாய்க்கும் நஞ்சு.

அடிப்படைச் சத்தியங்களும் அவ்வாறில்லாத சத்தியங்களும்

நிச்சயம் வேதத்தில் அடிப்படைச் சத்தியங்களும், அவ்வாறில்லாத ஆனால் அவசியமான சத்தியங்களும் காணப்படுகின்றன. உண்மையில் இப்படிப் பிரித்துப் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஏனெனில், இது தவறானதொரு கருத்து உருவாகக் காரணமாக அமைந்துவிடுகிறது. சிலர் தவறான புரிந்துகொள்ளுதலால் அடிப்படைப் போதனைகளாக இல்லாத சத்தியங்கள் அவசியமற்றவை என்று கருதி அவற்றை ஓரங்கட்டிவிடுகிறார்கள். இது பொதுவாகவே கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படுகிறது. அவ்வாறு நினைப்பது மிகவும் ஆபத்தானது; ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஜோன் கல்வின் சொல்லுகிறார், “மெய்யான சத்தியத்தின் எல்லாப் பகுதிகளும் ஒரேவிதமானவையல்ல” என்று. கெவின் டீ யொங்கின் பின்வரும் விளக்கம் இந்த விஷயத்தில் கைகொடுக்கிறது, “சில சத்தியங்கள் விசுவாசம் நிலைத்திருப்பதற்கு அத்தியாவசியமானவை, ஏனையவை அது பூரணமடைய அவசியமானவை. சில தவறான போதனைகள் நாம் அவற்றை விளக்குகின்ற விதத்தில் தங்கியுள்ளன; ஏனையவை அவற்றின் நம்பிக்கையில் அடங்கியுள்ளன. சில சத்தியங்கள் நமது இரட்சிப்புக்கு அவசியமானவை, ஏனையவற்றை நாம் ஒருபோதும் நிராகரிக்க முடியாது.  சில சத்தியங்கள் நாம் பரலோகத்தை அடைய அவசியமானவை; ஏனையவை நாம் பரலோகம் போகும் வழியில் துணை செய்பவை” (Daily Doctrine, Kevin DeYong, pg 19-20, Crosway, USA)

திருச்சபைக்கு தசம பாகத்தைக் கொடுப்பது அடிப்படைச் சத்தியமல்ல; அது அவசியமற்ற, அக்கறை காட்டத் தேவையில்லாத சத்தியமுமல்ல. அது அடிப்படைச் சத்தியப் பட்டியலில் வராவிட்டாலும், திருச்சபை கோட்பாட்டோடு தொடர்புடைய அவசியமான போதனை. அப்படியில்லாமலிருந்திருந்தால் நேரத்தை செலவிட்டு அதற்கான  வேத விளக்கங்களைத் தந்து ஏ. டபிள்யூ. பிங்க் ஒரு சிறு ஆக்கத்தை எழுதியிருப்பாரா? கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் அது பழைய ஏற்பாட்டோடு மட்டும் தொடர்புடையது, புதிய ஏற்பாட்டிற்கும் அதற்கும் தொடர்பில்லை என்பார்கள். அது அவர்களுடைய காலப்பாகுபாட்டுக் கோட்பாட்டின் தாக்கத்தினால் ஏற்பட்ட கருத்தே தவிர வேதத்தில் இருந்து புறப்பட்டதல்ல. தசமபாகம் கொடுப்பது புதிய ஏற்பாட்டிலும் தொடர வேண்டிய ஒரு போதனை.

இறுதிக்காலப் போதனைகள் அடிப்படைச் சத்தியங்களின் பட்டியலில் வரவில்லை. ஏனெனில், அப்போதனைகளுக்கும் இரட்சிப்பிற்கும் தொடர்பில்லை. அப்போதனைகளை விசுவாசிக்காதவர்களை இரட்சிப்படையாதவர்கள் என்று அழைக்கமுடியாது. இருப்பினும் இறுதிக்காலப் போதனைகள் அவசியமானவை; அக்கறைகாட்ட வேண்டியவை. அவை கர்த்தர் உலகத்தில் எந்தவகையில் செயல்படுகிறார் என்பதையும், மீட்பின் வரலாறு எவ்வாறு முடியப்போகிறது என்பதையும் விளக்குகின்றன. இல்லாதிருந்தால் தானியேலை தைரியப்படுத்த கர்த்தர் வரலாற்றில் நடக்கவிருக்கும் காரியங்களைத் தரிசனத்தில் வெளிப்படுத்தியிருப்பாரா?

துன்புறுத்தப்பட்ட திருச்சபைக்கு ஆறுதலளித்து அவர்களைத் தைரியப்படுத்தவே ஆண்டவர் வெளிப்படுத்தல் விசேஷத்தை, அவர்களுடைய முதல் நூற்றாண்டின் ஆவிக்குரிய தேவையை நிறைவேற்ற அளித்தார். ஆவிக்குரிய விதத்தில் நமக்குதவும் இறுதிக்காலப் போதனைகள் அடிப்படைப்போதனைகளாக இல்லாதிருந்தாலும், அவசியமற்றவையோ, ஒதுக்கித்தள்ளிவிட வேண்டியவையோ அல்ல. கெவின் டீ யொங்க் குறிப்பிடுவதுபோல், “ஆயிரம் வருட அரசாட்சி பற்றிய போதனை திரித்துவப் போதனையைப் போலவோ, கிறிஸ்துவின் தெய்வீக மானுடத் தன்மையைப் போலவோ அல்லது நீதிமானாக்குதலைப் போலவோ முக்கியமானதாக அல்லாவிட்டாலும் அது நாம் இந்த உலகத்தை எவ்வாறு அணுகவேண்டும், அதன் பண்பாட்டோடு நமக்கு எத்தகைய உறவு இருக்கவேண்டும் எனும் விஷயங்களில் நம்மில் செல்வாக்கு செலுத்துகின்றது. . . . ஆகவே, அதை ஒதுக்கிவைத்துவிடாமல் கவனத்தோடு ஆராய்ந்து படித்து வேதம் அதுபற்றி என்ன சொல்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்” (Daily Doctrine, Kevin DeYong, pg 367-368, Crossway, USA).

ஒரு குறிப்பிட்ட பகுதியினர் முன்குறித்தல், தெரிந்துகொள்ளுதல் ஆகிய போதனைகளில் நாம் அக்கறைகாட்டத் தேவையில்லை, இரட்சிப்பை அடைவதும், அதை அனுபவிப்பதும் மட்டுமே அவசியம் என்கிறார்கள். இவர்களுக்கு முன்குறித்தலாகிய போதனையும், தெரிந்துகொள்ளுதலாகிய போதனையும் கசப்பானவை. இவை அந்தளவுக்கு அவசியமற்றவையாக இருந்தால் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் இவை பற்றிய போதனைகள் ஏன் தரப்பட்டிருக்கின்றன? பவுல் அப்போஸ்தலனும், பேதுருவும் தங்களுடைய நிருபங்களில் ஆழமாகவும், ஆணித்தரமாகவும் இவற்றை விளக்கி விசுவாசிகளைத் தைரியப்படுத்தியிருக்கிறார்கள். இயேசுவும், “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நாம் புறம்பே தள்ளுவதில்லை” என அறிவித்திருக்கிறார். இயேசுவின் இந்த வரிகள் முன்குறித்தலையும், தெரிந்துகொள்ளுதலையும் விளக்குகின்றன என்பது புரியவில்லையா? இவை இரண்டையும் உதாசீனப்படுத்துகிறவர்கள் மீட்புக்கான திரித்துவ தேவனின் நித்திய திட்டத்தையும் இறையாண்மையையும் கொச்சைப்படுத்தி உதாசீனப்படுத்துகிறார்கள். அவற்றை அவசியமற்றவையாகக் கருத இவர்களுக்கு யார் உரிமை தந்தது? இறையாண்மைகொண்ட கர்த்தரின் வார்த்தைக்கு எதிராக நிற்க இவர்களுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது? இதெல்லாம் அறியாமையின் அறிகுறிகள்.

புதிதாக சீர்திருத்த போதனைகளை அறிந்துகொள்கிற சிலர் கல்வினித்துவ ஐம்போதனைகள் மட்டுமே முக்கியமானவை, அடிப்படையானவை; வேறெதைப் பற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை என்கிறார்கள்.  இதுவும் மிகவும் அறிவீனமான வார்த்தைகள். ஐம்போதனைகள் ஆர்மீனியத்துவத்திற்கெதிராக டோர்ட் கவுன்சிலால் தொகுக்கப்பட்டவை. அவை கல்வினித்துவத்தை எதிர்த்தவர்களுக்கு எதிரான வரலாற்றில் எழுந்த காலத்துக்கேற்ற பதில்கள் மட்டுமே. அவை மட்டுமே வேதமாகிவிடாது. இவற்றிற்கு மேல் அடிப்படைச் சத்தியங்கள் வேதத்தில் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஐம்போதனைகளைத் தாண்டி முன்னோக்கிப் போகாதவர்கள் வேதஞானத்திலும், கிறிஸ்தவ வாழ்க்கையிலும் பின்தங்கிப்போய் குறைபாட்டோடு மட்டுமே வாழ்வார்கள்.

கர்த்தர் தன்னுடைய வெளிப்படுத்தலான வேதத்தில் அவசியமற்ற எதையும் நமக்கு விளக்கவில்லை. பரிசுத்த ஆவியானவர் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய அனைத்தையும் நமக்கு அருளித்தந்திருக்கிறார். அவரே எந்தெந்த சத்தியங்கள் அதிமுக்கியமான அடிப்படைப் போதனைகள், எந்தெந்த சத்தியங்கள் அவ்வாரில்லாத, ஓரங்கட்டப்படக்கூடாத சத்தியங்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள உதவுகிறார். அதனால் நாம் நினைத்தபடி சுயமாக எந்தப் போதனையையும் நம்முடைய வசதிக்கும், எண்ணங்களுக்கும் ஏற்றபடி அவசியமானவை, அவசியமில்லாதவை என்று தீர்மானித்து ஒதுக்கித்தள்ள முடியாது. கர்த்தரின் வார்த்தை தனக்குத் தானே விளக்கமளிக்கிறது. இயேசு கிறிஸ்துவும், அப்போஸ்தலர்களும், வரலாற்றில் திருச்சபையும், விசுவாச அறிக்கைகளும் இனங்காட்டி அவசியமானவையாக விளக்கும் போதனைகள் எல்லாமே நமக்குத் தேவையானவை.

உயிரை மாய்க்கும் நஞ்சிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியவேண்டும். அதேநேரம் கொசுத்தொல்லையைப் பொறுத்துக்கொள்ளவும் வேண்டும்! அடிப்படைப் போதனைகளில், ஒற்றுமை. அவ்வாறல்லாத போதனைகளில், சுதந்திரம். எல்லாவற்றிலும், அன்பு! எனும் தத்துவத்தை நாம் கைக்கொள்ள வேண்டும்.


© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.