வேதாகமம்

யாரை, எதை நம்பமுடியவில்லை என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து வாசியுங்கள், புரியும். இதில் தமிழில் வேதமொழியாக்கத்தைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். அது எப்போதுமே என் மனதை உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்.

நல்ல காலத்திற்கு நான் ஆங்கில வேதத்தையே என்னுடைய சொந்தப் படிப்பிற்கும், பணிகளுக்கும் பயன்படுத்தி வருவதால் தப்பித்தேன். தமிழில் எழுதுவதற்கும், பிரசங்கிப்பதற்கும் கூட ஆங்கில வேதத்தைப் பயன்படுத்தியே தமிழில் விளக்கங்களை அளிக்கிறேன்.

தமிழ் வேத மொழியாக்கத்தை மட்டுமே நம்பி வாழும் நிலை எனக்கு ஏற்பட்டிருந்தால் அது நிச்சயம் எனக்கும் என் பணிகளுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்காது. அதற்கான காரணத்தை இதற்கு முன் இது பற்றி எழுதியிருக்கும் ஆக்கங்களில் விளக்கியிருக்கிறேன். அதனால் மறுபடியும் அதை நான் சொல்லுவதால் வாசகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்காது. முதலாவது, தமிழ் வேத மொழியாக்கம் மூல மொழிகளைப் பயன்படுத்தித் துல்லியமாக, எழுத்துபூர்வமாக மொழியாக்கம் செய்யப்படவில்லை. செய்யப்பட்ட அத்தனை மொழியாக்கங்களும் கிங் ஜேஸ்ஸ் ஆங்கில மொழியாக்கத்தைத் தழுவியே அமைந்திருக்கின்றன. 19ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த மொழிபெயர்ப்பு அமைப்பு (British and Foreign Bible Society)  இதை ஒரு நிபந்தனையாக வைத்திருந்தது. 19ம் நூற்றாண்டு சீர்திருத்த மிஷனரியான ரெனியஸ் தன் நூலில் இதைக் குறிப்பிட்டிருப்பதை அவரைப் பற்றிய ஒரு ஆக்கத்தில் விளக்கியிருக்கிறேன். இம்முறையை அவர் வரவேற்கவில்லை. இரண்டாவது, அதன் மொழிநடை 21ம் நூற்றாண்டுத் தமிழர்களால் அடியோடு புரிந்துகொள்ள முடியாத, அவர்கள் நடைமுறையில் பயன்படுத்தி வராததொரு கர்ணகடூர மொழிநடை. இந்த இரண்டு உண்மைகளும் அந்த மொழியாக்கத்தை நவீன காலத்தில் நம்பிப் பயன்படுத்த முடியாததாக்கிவிடுகின்றன.

நேரடி வெளிப்படுத்தலும், மொழியாக்கமும்

பரிசுத்த வேதாகமம் பரிசுத்த ஆவியினால் நேரடியாக ஊதி அருளப்பட்ட கர்த்தரின் சித்தத்தின் மொத்த வெளிப்படுத்தல். இன்னொருவிதத்தில் சொல்லுவதானால், இது சாதாரண எழுத்துக்களைவிட மிக மேன்மையுள்ள தெய்வீக எழுத்துக்கள். மனிதன் தன்னையும், தன்னுடைய சித்தத்தையும் அறிந்துகொள்ளுமாறு கர்த்தர் வேதத்தை மனிதர்களைக் கொண்டு எழுதவைத்து மனிதனுக்குத் தந்திருக்கிறார். வேதத்தின் தவறுகளற்ற பூரணத்தன்மை எபிரேயம், கிரேக்கம் ஆகிய மூல மொழிகளில் வேதம் வெளிப்படுத்தப்பட்டபோது எழுதப்பட்ட கையெழுத்துச் சுவடிகளுக்கு மட்டுமே பொருந்தும். இன்று அவை எவரிடத்திலும் இல்லை. இருந்தபோதும் கர்த்தரின் பராமரிப்பின்படி அவற்றில் இருந்து பிரதியெடுக்கப்பட்ட மிக மிகப் பழமையான சுவடிகள் வெவ்வேறு நூலகங்களிலும், நிறுவனங்களிலும் சில நாடுகளில் (இத்தாலி, பிரிட்டன், இரஷ்யா) பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இன்று மொழியாக்கத்தில் ஈடுபடுகிறவர்கள் நம்பத்தகுந்த பழமையான எபிரேய, கிரேக்க மொழி வேதப் பிரதிகளைப் பயன்படுத்தி நேரடியாக எபிரேயம், கிரேக்கம் ஆகிய மூலமொழிகளிலிலிருந்தே மொழியாக்கத்தில் ஈடுபடுகிறார்கள்.

வேதத்தின் மூலப்பிரதிகளில் காணக்கூடிய பூரணத்தன்மையை மொழியாக்கங்களில் காணமுடியாது. ஏனெனில், மொழியாக்கம் செய்கிறவர்கள் எத்தனை கவனத்தோடு அதைச் செய்தபோதும் மனிதத் தவறுகள் மொழியாக்கத்தில் வந்துவிடுகின்ற வாய்ப்பு உண்டு. அத்தகைய தவறுகள் நிகழ்வதைக் கூடுமானவரையில் தடுப்பதற்காகத்தான், உதாரணத்திற்கு, ஆங்கில வேதமொழியாக்கத்தில் கல்வித்திறமையுள்ளவர்களும், மொழிப்புலமை வாய்ந்தவர்களும், பல்வேறு சபைப்பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்களுமான இறையியல் வல்லுனர்களும் அதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதுவும் அவர்கள் ஒரு குழுவாக ஒருமைப்பாட்டுடன் செயல்படுவார்கள்.

அத்தோடு, செய்யப்போகும் மொழியாக்கத்திற்கு அவசியமான தத்துவங்களையும் அவர்கள் ஆராய்ந்து சிந்தித்து அவற்றை வழிகாட்டியாகக் கொண்டு இந்தப் பணியில் ஈடுபடுவார்கள். வேதமொழியாக்கத்தில் தவறுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவும், வேதமொழியாக்கத்தைப் பயன்படுத்தப்போகின்ற கிறிஸ்தவ சபைகளும், கிறிஸ்தவர்களும் புதிய மொழியாக்கத்தை நம்பிக்கையோடு வாங்கிப் பயன்படுத்தவும் உதவுவதற்காகவே இத்தனை முன்னேற்பாடுகளோடு மொழியாக்கத்தில் ஈடுபடுவார்கள்.

இந்த விஷயத்தில் அவர்கள் எதையும் இரகசியமாக வைத்திருப்பதில்லை. இதில் ஒளிவு மறைவுக்கு இடமிருக்கக் கூடாது. உதாரணத்திற்கு, ஆங்கில ESV (English Standard Version) வேதமொழியாக்கத்தை எடுத்துக்கொண்டால் அது பற்றி என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டுமோ அத்தனையையும் பற்றிய விளக்கங்களைத் தரும் வலைதளமொன்றை அதன் பதிப்பாளர் அனைவரும் வாசிக்கும்படியாக அமைத்திருக்கிறார்கள். யார் வேண்டுமானால் அதை வாசித்து அந்த வேதமொழியாக்கத்தை நம்பலாமா, இல்லையா என்பதை முடிவுசெய்துகொள்ளலாம். இந்தவகையில்தான் ஏனைய ஆங்கில மொழிபெயர்ப்புகளான NKJV, NASB போன்றவை பற்றியும் வாசகர்கள் தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறு செய்வது வேதமொழியாக்கம் செய்கிறவர்களுடைய அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக இருக்கிறது.

நியூ இன்டர்நேஷனல் மொழியாக்கம் (NIV) வெளிவந்தபோது மறைந்த சீர்திருத்த பாப்திஸ்து போதகரும் என் நண்பருமான ரொபட் மார்டின், Accuracy of Translation என்ற ஒரு நூலை எழுதி NIV மொழியாக்கத்தில் காணப்படும் கோளாறுகளை வெட்டவெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். ஒரு மொழியாக்கம் எத்தகைய தத்துவங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அந்நூலில் அவர் விளக்கியிருந்தார். NIV வெளியீட்டாளர்கள் தங்கள் மொழியாக்கத்தை எவரும் ஆய்வு செய்வதற்குத் தேவையான தகவல்களைத் தந்திருந்தனர். அவர்கள் அவற்றைத் தராதிருந்திருந்தால் அம்மொழியாக்கத்தை எவ்வாறு ஆய்வு செய்வது? மேலை நாடுகளில் இந்த விஷயத்தில் பின்பற்றப்பட்டு வரும் சமுக இங்கிதம் நம்மினத்தில் அடியோடு இல்லை.

சாதாரணமான ஒரு உதாரணத்தைத் தருகிறேனே! நான் என் பயணங்களின்போது ஏதாவது ஒரு கடைக்குப்போய் மேற்சட்டை அல்லது கால்சட்டை வாங்கப்போனால் அதில் எந்தக் கம்பேனி அதைத் தயாரித்தது என்பதில் தொடங்கி, அதன் துணி எந்தெந்த நூல்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டது, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள நூல்களின் பயன் என்ன, அதை சலவை இயந்திரத்தில் கழுவலாமா அல்லது கையால் மட்டும் கழுவ வேண்டுமா?, அதை iron செய்யலாமா, கூடாதா, அது தயாரிக்கப்பட்ட கம்பேனி எது, அதை விநியோகித்து விற்பனை செய்யும் கம்பேனி எது, அவர்களுடைய முகவரி மற்றும் தொலைபேசி எண் யாவை என்பதுவரை அனைத்து விபரங்களையும் அதில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு துணியில் அச்சிட்டிருப்பார்கள். அவர்களுக்கு அது விற்பனையாகவேண்டும் என்ற நோக்கம் இருப்பது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு அது பிடித்துப்போய் நம்பிக்கையோடு வாங்கவேண்டும் என்பதிலும் அக்கறை காட்டுகிறார்கள்.

வெறும் கால்சட்டைகோ அல்லது வேறொரு பொருளுக்கோ அதைத் தயாரிக்கிறவர்கள் இத்தனை விபரங்களையும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே அள்ளி வழங்குகிறபோது, இவற்றையெல்லாம்விட மேலான கர்த்தரின் தெய்வீக சத்திய வசனத்தைத் தமிழில் மொழியாக்கம் செய்கிறவர்கள் பணத்தையும் வாங்கிகொண்டு இந்த விஷயத்தில் கிறிஸ்தவ சபைகளையும், வாசகர்களையும் இருட்டில் வைத்திருப்பதற்குக் காரணம் என்ன? இதில் எதற்கு ஒளிவு மறைவு? அவர்கள் இதிலெல்லாம் அக்கறைகாட்ட மாட்டார்கள் என்ற அசட்டுத் துணிவா? அல்லது தங்களுடைய மொழியாக்கத்தை மறுவார்த்தை சொல்லாமல் நம்பிப் பணங்கொடுத்து வாங்கிடுவார்கள் என்ற திமிரா?

இந்திய வேதாகம சங்கம்

இந்திய வேதாகம சங்கம் ஏறக்குறைய 150 வருடங்களாகப் பழைய திருப்புதல் தமிழ் மொழியாக்கத்தில் எந்தவொரு திருத்தத்தையும் செய்யவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதா? இது உண்மைதான். இது மேலை நாடுகளில் ஒருநாளும் நடக்காது. இருந்தும் தமிழ் திருச்சபைகளும் அதில் அக்கறை காட்டாமல் இருந்து வந்திருக்கிறார்கள். இத்தகைய உதாசீனப்போக்கை மேலை நாட்டு சபைகளிடமோ, மொழியாக்கம் செய்யும் நிறுவனங்களிடமோ காணமுடியாது.

இதற்கு மத்தியில் இறையியல் தவறுகளோடும், மொழியாக்கத் துல்லியமுமின்றி மொழிநடைக்கு மட்டுமே முக்கியமளித்து, கத்தோலிக்கரோடு இணைந்து ஒரு பொது மொழியாக்கத்தை 1995ல் ‘திருவிவிலியம்’ என்ற பெயரில் இவர்கள் வெளியிட்டார்கள். சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தரைக் கண்ணீர்விடவைக்கும் செயலிது. இந்தப் பொதுமொழியாக்கத்தை விமர்சித்து திருமறைத்தீபத்தில் ஒரு ஆக்கத்தை எழுதியிருந்தேன். சுவிசேஷ கிறிஸ்தவ திருச்சபைகள் நம்பிப் பயன்படுத்தக்கூடாத மொழியாக்கம் இது.

ஜோன் விக்கிப், வில்லியம் டின்டேல், மார்டின் லூத்தர், வில்லியம் கேரி போன்ற வேத மொழியாக்க ஜாம்பவான்களுக்கிருந்த தேவபயமும், வேதநம்பிக்கைகளும், மொழியாக்கத் தகுதிகளும் இந்திய வேதாகம சங்கப் பொறுப்பாளர்களுக்கும், மொழியாக்கக் குழுவுக்கும் இருந்திருந்தால் தமிழ் கிறிஸ்தவ சபைகளையும், கிறிஸ்தவர்களையும் காலத்துக்கு ஒத்துவராத, புரிந்துகொள்ளக் கடினமான 19ம் நூற்றாண்டு வடமொழித் தமிழில் வாசிக்கிறவர்களுக்கெல்லாம் நெருடலை ஏற்படுத்தித் தலையைச் சுற்றவைக்கும் பழைய திருப்புதல் மொழியாக்கத்தைத் தொடர்ந்து அச்சிட்டு அதற்குப் பூஜை செய்துகொண்டிருப்பார்களா? தற்கால சமுதாயம் ஆக்ரோஷமாக அள்ளிவீசும் எண்ணற்ற சோதனைகளிலிருந்து தங்களுடைய பிள்ளைகளைக் காத்துக்கொள்ள அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ பெற்றோர்கள் எதைச்சொல்லிப் பிள்ளைகளை இந்தப் பழைய திருப்புதல் மொழியாக்கத்தை வாசிக்க வைக்கமுடியும்?

இதையும்விடக் கொடுமையானது, தமிழ் மட்டுமே தெரிந்த தமிழ் போதகர்களும், பிரசங்கிகளும் இத்தனை வருடங்களாக இந்தப் பழைய திருப்புதலோடு போராடி வந்திருக்கிறார்கள் என்பது. அவர்களில் ஒருவர் ஒருமுறை மனந்திறந்து சொன்னார், ‘கடினமான புரியாத வார்த்தைகளை நான் எப்போதும் விட்டுவிட்டு முடிந்தவரை வசனங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்‘ என்று. அவருக்கே வேதத்தை விளங்கிக்கொள்ளக் கடினமாக இந்த வடமொழி சார்ந்த தமிழ் மொழியாக்கம் இருக்கிறபோது, இதை வைத்து அவர் வாராவாரம் என்ன போதனை அளித்திருப்பார் என்பதை எண்ணிப் பாருங்கள்! அவருக்கும் அவர் பணிபுரியும் சபைக்கும் இந்த நிலையை ஏற்படுத்திவிட்டிருக்கும் இந்திய வேதாகம சங்கம் ஆண்டவருக்குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்தப் போதகரைப்போல ஆயிரக்கணக்கானவர்கள் தமிழ் நாட்டிலும் அதற்கு வெளியிலும் கர்த்தரின் செய்தியை அறிந்துகொள்ள என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்களோ? வேதம் ஆத்துமாக்கள் வாசிக்க முடியாதபடி இருந்த இருண்டகாலத்தில் இருந்து சீர்திருத்தவாதம் மேலைத்தேய நாடுகளுக்கு விடுதலையைக் கொண்டுவந்தது. இருந்தும் நம் தேசத்தில் இந்த விஷயத்தில் தொடர்ந்தும் நாம் இருண்ட காலத்தில்தான் இருந்து வருகிறோம்.

இன்னுமொரு பெரிய பிரச்சனை தமிழ் கிறிஸ்தவ சபைகள் இந்திய வேதாகம சங்கத்தின் பழைய திருப்புதல் மொழியாக்கத்தைப் பரலோகத்திலிருந்து தரப்பட்ட பரலோக மொழியிலுள்ள வேதம் என்று நம்பி வருவதுதான். இந்த எண்ணத்தைக் கொண்டிருக்கும் பெரும்பாலானோர் எந்தவிதப் புதிய மொழியாக்கத்திற்கும் இடங்கொடாமல் அடியோடு அத்தகைய முயற்சிக்கு எதிர்த்து நிற்கிறார்கள். அதனால் இந்திய வேதாகம சங்கம் முழுமையான, முற்றிலும் புதிய மொழியாக்கமொன்றில் ஈடுபடுவதைத் தவிர்த்து வருகிறது. மக்கள் பணங்கொடுத்து வாங்காவிட்டால் தங்கள் கதி என்னாவது என்ற கவலை அவர்களுக்கு.

ஒருபுறம் இந்திய வேதாகம சங்கத்தின் உதாசீனத் தன்மை. இன்னொருபுறம் தமிழ் கிறிஸ்தவ சபைகளின் வேதமொழியாக்கத்தைப் பற்றிய தவறான நம்பிக்கை. இந்த இரண்டிற்கும் இடையில் அகப்பட்டு விசுவாசிகளும், அவிசுவாசிகளும் ஆண்டவரின் வசனத்தை கேட்கவோ, நல்ல எளிய தமிழில் அதை வாசிக்கவோ முடியாதபடி பாக்குவெட்டியில் அகப்பட்டுத் தவிக்கும் பாக்கைப்போல இருந்து வருகிறார்கள்.

உதாசீனத்துக்கு ஒரு உதாரணம்

என் கரத்தில் இருக்கும் 2023-24ல் இந்திய வேதாகம சங்கம் வெளியிட்ட பழைய திருப்புதலின் (OV) ஒத்தவாக்கிய மொழியாக்கத்தின், ஆங்கிலத்திலும் தமிழிலும் காணப்படும் முன்னுரை அவர்களுடைய கவனக்குறைவுக்கும், தமிழ் கிறிஸ்தவர்களை அவர்கள் அசடர்கள் என்று நினைத்து வரும் மனப்பான்மைக்கும் நல்ல உதாரணமாக இருக்கின்றது. இதில், ‘இந்திய வேதாகம சங்கத்தினால் தற்போது வெளியிடப்பட்டு வரும் பழைய மொழிபெயர்ப்பு வேதாகமத்தை (Old Version) இதற்கு முன்பு 1871ல் வெளியிடப்பட்ட ஐக்கிய மொழிபெயர்ப்பு வேதாகமத்துடன் ஒப்பிடும்போது, சற்று மாற்றங்கள் நிறைந்ததொன்றாகக் காணப்படுகின்றது‘ என்று தமிழ் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் ஆங்கில முன்னுரையில், ‘Thus the present day Bible Society of India’s Old version publication is quite different from the earlier Union Version Bible published in 1870’ என்றிருக்கிறது.

முதலில், இதில் வருடம் தவறாகத் தரப்பட்டிருக்கிறது. 1870 ஆ, 1871ஆ எது சரி? இரண்டாவதாக, தமிழில் ‘சற்று மாற்றங்கள்‘ செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஆங்கிலத்தில் quite different என்றிருக்கிறது. எது சரி? Quite different என்றால் மிகவும் மாறுபட்டது அல்லது பெரியளவில் மாறுபட்டது என்றே அர்த்தம். இவர்களின் தமிழ் முன்னுரையில் ‘சற்று மாற்றம்’ என்றிருப்பது சிறு மாற்றம் என்ற அர்த்தத்தையே தருகிறது. வெறும் முன்னுரையிலேயே இத்தனைப் பெரிய தவறுவிடுகிறவர்களை நம்பி அவர்களின் வேதமொழியாக்கத்தைப் பயன்படுத்தலாமா?

இதைவிடக் கொடுமை, இந்த முன்னுரை அது காணப்படும் பழைய திருப்புதலுக்கு உரியதல்ல. ஏனெனில், என் கையில் இருக்கும் 2023-2024 பழைய திருப்புதல் பதிப்பு எந்தவொரு மாற்றமும் செய்யப்படாமல் 150 வருடங்களாக இருந்து வரும் பழைய (OV) மொழியாக்கம். நிச்சயமாக இந்தப் பதிப்புக்காக எழுதப்பட்ட முன்னுரையல்ல இது. இத்தகைய கவனக்குறைவையும், தவறுகளையும் இந்திய வேதாகம சங்கம் எப்படி அனுமதித்து வருகிறது?

இந்த இலட்சணத்திற்கு இவர்களுடைய மொழியாக்கத்தை திருச்சபை தீர்மானித்து அங்கீகரிப்பதனால் ‘திருச்சபையின் வேதாகமம்’ என்று அழைக்கப்படுகிறதாம். தமிழ் நாட்டில் மட்டுந்தான் இத்தகைய மோசடிகள் நடக்கமுடியும். இவர்கள் யாருக்கு காதுகுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.  இந்தியா சுந்திரமடைந்த பின் இந்திய மொழிகளில் வேதத்தை மொழியாக்கம் செய்யும் தார்மீக உரிமை British and Foreign Bible Society யால் தங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது என்று மார்தட்டிக்கொள்ளுகிற இந்திய வேதாகம சங்கம் இத்தனைப் பொறுப்பற்றவிதமாக நடந்துகொள்ளுவதை கிறிஸ்தவ சமுதாயம் எப்படி அனுமதிக்கிறது?

பழைய (OV) திருப்புதலின் மறு திருத்தப் பதிப்பு

இப்போது 2024-2025 ல் பழைய திருப்புதலைத் திருத்தி ஒரு புதிய மறு திருத்தப் பதிப்பை இந்திய வேதாமக சங்கம் வெளியிட்டிருக்கிறது. இந்தப் பதிப்பு நல்லவிதமாகத் தயாரிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் தமிழ் கிறிஸ்தவ உலகம் அதனால் நன்மையடையும்; பல்லாண்டு கால ‘எரிகோ சாபம்’ நம்மைவிட்டு அகலும். இது மறு திருத்தப் பதிப்பே தவிர முற்று முழுதாக மூலமொழிகளிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட புதிய மொழியாக்கம் அல்ல. இந்திய வேதாகம சங்கத்தின் அக்கறையற்ற போக்கைக் கவனிக்கும்போது இந்தப் புதிய பதிப்பைப் பற்றியும் எனக்கு சந்தேகம் எழத்தான் செய்கிறது. இந்தப் பதிப்பு நன்மையானதா என்பதை ஆராய்ந்து பார்த்த பிறகே தீர்மானிக்க முடியும்.

இந்திய வேதாகம சங்கம் (BSI) பரம இரகசியம் போல மொழியாக்கத் தத்துவங்களையும், மொழியாக்கம் செய்த குழு பற்றிய விபரங்களையும், அவர்களுடைய இறையியல் நம்பிக்கை பற்றிய விபரங்களையும் தம்வசம் வைத்திருப்பது புத்திக்கெட்டாததொரு செயல். உண்மையில் அவர்கள் தாங்களே முன்வந்து, அது தங்களுடைய கடமை என்பதை உணர்ந்து தமிழ் கிறிஸ்தவர்களுக்கு மறு திருத்தப் பதிப்பு பற்றிய அத்தனை தகவல்களையும் உடனடியாகத் தந்திருக்கவேண்டும். மேலை நாடுகளில் காணப்படுவதைப் போல அவற்றை அவர்கள் தங்களுடைய இணைய தளத்திலேயே வெளியிட்டிருக்கலாம். அதைவிட்டுவிட்டு புதிய பதிப்பு வந்திருக்கிறது, இதுதான் விலை என்ற அறிவிப்பை மட்டும் தந்திருப்பது இந்த நவீன 21ம் நூற்றாண்டில் ஏற்றுக்கொள்ள முடியாத எதேச்சாதிகாரப்போக்கு.

ஜூலை 12ம் தேதி இந்திய வேதாகம சங்கத்தின் பொதுச்செயலாளருக்கு ஒரு மின் அஞ்சலை அனுப்பினேன். அதில் என்னை யார் என்று அறிமுகப்படுத்தி, அவர்கள் புதிதாக வெளியிட்டிருக்கும் பழைய திருப்புதலின் மறு திருத்தப் பதிப்பு (Re-edited) பற்றிய விபரங்களைக் கேட்டு எழுதியிருந்தேன். அதற்கான காரணத்தையும் விளக்கியிருந்தேன். அதற்குப் பதில் வரும் என்ற நம்பிக்கை எனக்கு அடியோடு இருக்கவில்லை. ஏனென்றால், முந்தைய அனுபவம் அப்படி. பேராச்சரியமாக 17ம் தேதி அவர்களிடமிருந்து ஒரு நீண்ட பதில் வந்தது. அந்த பதில் மிகவும் மரியாதை கலந்த வார்த்தைகளோடு என்னை வரவேற்று என் ஆதரவையும் நாடியது. இந்திய வேதாகம சங்கத்தின் மொழிபெயர்ப்புப் பகுதிக்குத் தலைவரான என். சுப்பிரமணி அதை எழுதியிருந்தார். மறு திருத்த மொழியாக்கம் பற்றிய சில அவசியமான விபரங்களையும் கூடவே அனுப்பியிருந்தார்.

என் கைக்குக் கிடைத்த விபரங்களில் எனக்குத் தேவைப்பட்ட முக்கியமானதொரு விபரம் இல்லை. அதாவது, மொழிபெயர்ப்புக் கமிட்டியில் உள்ளவர்களின் பெயர்களும், அவர்களுடைய இறையியல் பின்னணி மற்றும் கல்வித்தரம் பற்றிய விபரங்களும் காணப்படவில்லை. அது எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். ஒரு மனிதனின் கல்வித்தரமும், இறையியல் பின்னணியுமே அவர் ஈடுபட்டிருக்கும் மொழியாக்கத்தைப் பற்றிய உண்மைகளைப் புரியவைக்கும். முக்கியமாக இறையியல் பின்னணி மிகவும் அவசியம். ஏனெனில், மொழியாக்கத்தில் ஈடுபடுகிறவர்களின் இறையியல் பின்னணி மொழியாக்கத்தைப் பாதித்துவிடுகிற ஆபத்து இருக்கிறது.

இந்த மறு திருத்தப் பதிப்பைப் பற்றியதொரு ஆக்கத்தை வெளியிடத் தீர்மானித்திருக்கிறேன். அதில் அதுபற்றிய முக்கிய விபரங்களைத் தரவிருக்கிறேன். இந்தப் பதிப்பைப் பற்றி இப்போதைக்கு ஒரு உண்மையை மட்டுமே முன்வைக்க முடியும். பழைய திருப்புதலின் வாய்க்குள் நுழையக் கடினமான 19ம் நூற்றாண்டு வடமொழித் தமிழ் எந்த மாற்றமுமில்லாமல் இதில் தொடர்ந்து காணப்படுகின்றது. கடினமான வார்த்தைகளுக்குத் தற்கால வார்த்தைகள் தரப்பட்டிருக்கின்றனவாம்; மொழிநடை முற்றிலும் பழையதே. அந்த மொழிநடையே எனக்குப் பெருந்தடையாக இருக்கிறது. இலக்கியவாதியான முனைவர் ஔவை நடராஜன் என்னிடம் ஒருமுறை சொன்னதுபோல், இது புரியாத மொழியில், எட்டாத இடத்தில் இருக்கிறது. இந்திய வேதாகம சங்கத்தின் கருத்துப்படி இந்த மொழிநடையைத்தான் பெரும்பாலானோர் தொடர்ந்து விரும்புகிறார்களாம். தமிழ் பேசி, தமிழில் எழுதும் எனக்கு அதைப் புரிந்துகொள்வது மிகக் கடினமாக இருக்கிறது. வாசித்து விளங்கிக்கொள்ள முடியாத ஒரு மொழிநடையை தமிழ் கிறிஸ்தவம் விரும்புகிறது என்றால் அதன் தரத்திலேயே சந்தேகம் ஏற்படுகிறது.

வாசகர்களின் சிந்தனைக்கு

அதேவேளை, வாசகர்களுக்கு ஒரு வார்த்தை – முழுமையாகத் தெரிய வேண்டிய விபரங்கள் தெரியாமல் ஒருபோதும் அவசரப்பட்டுப் புதிய மொழியாக்கங்களைப் பணம் கொடுத்து வாங்காதீர்கள். வேதம் துல்லியமாக மொழியாக்கம் செய்யப்பட்ட, நம்பக்கூடிய நூலாக இருக்கவேண்டும். கர்த்தருடைய வார்த்தை என்று நம்பி சபையிலும், வீட்டிலும் பயன்படுத்தக்கூடிய தன்மையுள்ளதாக அது இருக்கவேண்டும். அவ்வாறில்லாவிட்டால் நீங்கள் ஒரு போலியான நூலைப் பயன்படுத்தி வரும் ஆபத்து ஏற்படும். தவறான ஒரு நூலால் நம் ஆவிக்குரிய வளர்ச்சியும், வாழ்க்கையும் பாதிக்கப்படும். சிலர் 80% நல்லதாகத்தானே இருக்கிறது, வெறும் 20% குறைபாட்டைப் பெரிதுபடுத்தக்கூடாதென்பார்கள். பாலில் 20% விஷமிருந்தால் குடித்துவிடுவீர்களா? வேதம் அப்பழுக்கில்லாத மொழியாக்கமாக இருக்கவேண்டும். நிச்சயம் 100% மொழியாக்கத்தை எதிர்பார்க்க முடியாது. அதற்கு நெருங்கி வரக்கூடிய அளவில் மொழியாக்கம் சீரானதாகத் துல்லியமாக இருக்க வேண்டியது அவசியம். அதனால்தான் புதிய மொழியாக்கங்களைச் செய்கிற இந்திய வேதாகம சங்கத்தைப் போன்றவர்கள் வாசர்களுக்கு உதவுமுகமாக அம் மொழியாக்கம் பற்றிய சகல விபரங்களையும் தாங்களாகவே முன்வந்து தரவேண்டும். அதுவே நேர்மையான செயல்; கிறிஸ்தவ நடைமுறைப் பண்பாடு.


© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.