2 இராஜாக்கள் 3:4-27 இந்த ஆக்கத்தில் 2 இராஜாக்கள் 3:4-27 வசனங்களை ஆராய்வோம். கடந்த ஆக்கத்தில் ஆகாபின் மரணத்தின் பின் அவனுடைய இடத்தில் யோராம் இஸ்ரவேலின் அரசனாக வந்ததைக் கவனித்தோம்.
அது மட்டுமல்லாமல் அந்த யோராம் எப்படிப்பட்டவன் என்பதை முதல் மூன்று வசனங்களிலிருந்து அறிந்துகொண்டோம். ஆகாப் மோசமானவன்தான், அவனைப் போல மோசமானவன் இஸ்ரவேலில் இருந்ததில்லை. உண்மையில் இஸ்ரவேலிருந்த மோசமான அரசர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்தாலும் அவர்கள் எல்லோரையும்விட மோசமானவனாக ஆகாப் இருந்திருக்கிறான். அவனுடைய இடத்தில் யோராம் அரசனாக வந்தான். இவனும் கூட ஒரு நல்ல அரசன் என்று சொல்ல முடியாது. இந்தப் பகுதி யோராம் அரசனான பிறகு அவன் ஒரு திட்டத்தை போட்டு, மோவாபியருக்கு எதிராக யுத்தம் செய்யப் புறப்பட்டதைப் பற்றி விளக்குகிறது. இது ஒரு நீண்ட வேதப் பகுதி. ஆகவே இதை வார்த்தைக்கு வார்த்தை விளக்கி எழுதமுடியாது. இருந்தபோதும், நான்கு தலைப்புகளின் அடிப்படையில் இந்தப் பகுதியின் மூலமாக ஆண்டவர் எதை விளக்குகிறார் என்பதைப் பயன்பாடுகளோடு நாம் ஆராயலாம்.
1. சந்தர்ப்பவாதக் கூட்டணி
2. கர்த்தருடைய வார்த்தைக்கு ஏற்பட்ட அவமதிப்பு
3. கர்த்தருடைய வார்த்தை செய்கின்ற அற்புதம்
4. கர்த்தரின் வார்த்தை தரும் வசதி
முதலாவதாக, சந்தர்ப்பவாதக் கூட்டணி
இது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். மோவாபின் அரசனான மேசா அதிகமான ஆடு மாடுகளை வைத்திருந்தான். அது அவனுக்குப் பிடித்தமானதாக இருந்திருக்கலாம், அது அவனுக்கு அதிக வருமானத்தைக் கொண்டு வந்திருக்கலாம். அவனுக்கு ஆடுமாடுகள் தொகை தொகையாக இருந்தன. ஆகாப் அரசனாக இருந்தபொழுது அவனுக்குக் கையாளாக இருந்து வந்தவன்தான் இந்த மேசா. அதுமட்டுமல்ல மோவாப் ஆகாபுக்கு கீழ் இருந்ததால் இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், இலட்சம் குறும்பாட்டுக்கடாக்களையும் அவன் கப்பமாகச் செலுத்திவந்தான் என்று வேதம் சொல்லுகிறது. ஆகாப் கொடியவன் மட்டுமல்ல, அதிக பலமுள்ளவனாகவும் இருந்ததால் இந்த மோவாப் அரசனான மேசாவினால் அவனுக்கெதிராக ஒன்றும் செய்யமுடியவில்லை. அவன் தனித்துச் சுதந்திரமாக நாட்டை ஆள விருப்பப்பட்டாலும் அது அவனால் முடியாமல் இருந்தது.
இப்போது ஆகாப் இறந்து விட்டான். அவனுடைய இடத்தில் யோராம் வந்துவிட்டான். ஆகாபைப்போல யோராம் வலிமையானவனாக இல்லை என்று தெரிந்ததால் இவன் கலகம் செய்ய ஆரம்பித்தான். ஆகவே அது யோராமுக்கு ஆபத்தாய் முடிந்தது. மேசா பிரிந்துபோய்விட்டால் யோராமுக்கு ஆபத்து. எந்தவிதத்தில் என்றால், இதுவரை ஒருலட்சம் ஆட்டுக்குட்டிகளும், ஒருலட்சம் குரும்பாட்டுக் கடாக்களும் கப்பமாக வந்து கொண்டிருந்தது, அது முதலில் இல்லாமல் போய்விடும். அது மட்டும் இல்லாமல் இவனும் பிரிந்து போனால் தன் வசம் இருக்கும் மற்றப் பகுதியில் இருப்பவர்களும் இப்படியே கலகம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அது இஸ்ரவேல் நாட்டிற்கு ஆபத்தாகப் போய் முடியும். அதை உணர்ந்த யோராம் ஒரு கூட்டணியை உருவாக்கத் தீர்மானித்தான். ஏனென்றால் தனியாகச் சென்று சண்டைபோட்டு மேசாவை வெல்ல முடியாது என்பது யோராமுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே அதற்காக ஒரு கூட்டணியைத் தாயார் செய்தான் என்பதை 6, 7 வது வசனங்கள் நமக்கு சொல்லுகின்றன.
இந்தக் கூட்டணியில் வரும் முதல் அரசன் இஸ்ரவேலுக்கு தென் பகுதியில் இருந்த யூதாவின் ராஜாவாகிய யோசபாத். யூதாவில் அரசர்களாக இருந்த எல்லோரையும்விட யோசபாத் நல்லவனாகவும், மிகவும் திறமையுள்ளவனாகவும் இருந்தான். இஸ்ரவேல் ராஜாக்களைப்போல இவன் மோசமானவனாக இருக்கவில்லை. இருந்தபொழுதும் இவனிடமும் தவறுகள் இருந்தன. இஸ்ரவேலின் ராஜாக்களோடு இணங்கிப் போவதை இவன் வழக்கமாகக் கொண்டிருந்தான்.
1 இராஜாக்கள் 22:3, 4 வசனங்களில் யோசபாத் ஆகாபிற்கு நண்பனாக இருந்ததைப் பற்றி வாசிக்கிறோம்,
இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி, யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ண என்னோடேகூட வருகிறீரா என்று கேட்டான். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.
இதே வார்த்தைகளை 2 இராஜாக்கள் 3:7 வது வசனத்திலும் யோசபாத் யோராமிடம் சொல்லுவதைப் பார்க்கிறோம்.
மோவாபின் ராஜா எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினான்; மோவாபியர்மேல் யுத்தம்பண்ண, என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு; அவன் நான் வருகிறேன்; நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.
யோசபாத் ஆகாபின் நண்பனாக இருந்தான். அதுவே அவன் தன் வாழ்க்கையில் செய்திருக்கக்கூடாத ஒரு பெரிய தவறு. ஆனால் யோசபாத் அதை செய்திருந்தான் என்று வாசிக்கிறோம். இப்போது யோராம் யோசபாத்தைத் தன்னோடு மேசாவுக்கு எதிராக யுத்தத்திற்கு வர அழைத்தபொழுது முன்பு ஆகாபிடம் ஒத்துக்கொண்டது போலவே இவனோடும் அதற்கு ஒத்துழைத்தான் என்று பார்க்கிறோம். இப்படி யோசபாத்தின் உதவியை நாடுவதற்கு ஆகாபிடமிருந்துதான் யோராமுக்கு யோசனை வந்தது என்று நாம் நினைத்தாலும் அதில் தவறில்லை. ஏனென்றால், இங்கேயும் ஆகாப் பயன்படுத்திய அதேவிதமான வார்த்தைகளைத்தான் யோசபாத் பயன்படுத்துகிறான். யோசபாத் யூதாவின் நல்ல அரசர்களில் முக்கியமானவன். இருந்போதும் அவனுக்கு நல்ல நண்பர்கள் இருக்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. ஆகாபோடும், யோராமோடும் அவன் இணைந்து அவர்களுக்கு நண்பனாக இருந்தது பெரிய தவறு. இவர்கள் தொடர்பான விஷயங்களில் யோசபாத் விசுவாசத்தோடு நடந்து கொள்ளவில்லை என்பதை நாம் வேதத்தில் வாசித்து அறிந்து கொள்ளுகிறோம்.
அடுத்ததாக இந்தக் கூட்டணியில் வரும் இரண்டாவது நபர் ஏதோம் தேசத்து அரசன். யோராமும் யோசபாத்தும் மேசாவோடு போரிடுவதற்கு உடன்பட்டு அவர்களோடு போகின்றபொழுது எந்த வழியாகப் போகவேண்டுமென்று யோசபாத்து கேட்டபொழுது அவன் ஏதோம் வனாந்திரத்தின் வழியாகப் போவோம் என்று யோராம் சொல்லுவதை நாம் வாசிக்கிறோம். இவற்றைக் கவனிக்கின்றபோது யோராம் ஏற்கனவே நன்றாகச் சிந்தித்து ஒரு திட்டத்தை வகுத்திருந்தான் என்று நாம் பார்க்கிறோம். ஏதோம் தேசத்து ராஜாவாக இருந்தவனுக்கு யோசபாத்தோடு சிறிது நட்பு இருந்தது. யோசபாத்திற்கு கீழ் அவன் இருந்தான் என்று நாம் வைத்துக்கொள்ளலாம். ஆகவே அந்த வழியில் போகலாம் என்று யோராம் சொன்னால், அந்த வழியாகச் சென்று ஏதோமின் ராஜாவையும் இந்தக் கூட்டணியில் யோசபாத்தின் உதவியோடு இணைத்துக் கொள்ளலாம் என்பதுதான் யோராமின் திட்டமாக இருந்தது. ஆகவே ஏதோம் ராஜாவும் இதில் இணைந்து கொண்டான். மோவாபின் மேசாவுக்கு எதிராக மூன்றுபேர் கூட்டணியாக, அதாவது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், ஏதோமினுடைய ராஜாவும் சேர்ந்து ஒரு பெரும் படையோடு ஏதோம் வனாந்தரத்தின் வழியாகப் போனார்கள். இதுவே மோவாபின் மேசாவுக்கு எதிரான ஒரு கூட்டணியாக இருந்தது.
இந்தக் கூட்டணியைப் பற்றிப் பார்க்கிறபோது இது அரசியல் லாபத்திற்காக ஏற்பட்ட ஒரு கூட்டணியாகத் தெரிகிறது. இங்கு சுயநலமே ஆட்சி செய்தது. இதில் நிச்சயமாக யோராமின் திட்டம் இருந்தது, அந்தத் திட்டத்தின் உள்நோக்கத்தை உணராமல் அதை நிறைவேற்றுவதில் மற்ற இரண்டு பேரும் ஒத்துழைத்தார்கள். யோசபாத்தை திருப்திப்படுத்துவதற்காக ஏதோம் ராஜா இந்தக் கூட்டணியில் இணைந்து கொண்டான். யோராமை திருப்தி செய்ய யோசபாத்து இந்தக் கூட்டணியில் இணைந்து கொண்டான். யோசபாத்தை தன்னோடு சேர்த்துக்கொள்ள யோராம் விசுவாச நாடகமாடினான். அதாவது அவன் பாகாலுக்கு ஆகாப் கட்டிய புனிதத் தூணை அகற்றினான். அதைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அது ஒரு முழுமையான ஆவிக்குரிய மாற்றத்துக்கு அடையாளமே இல்லை. அது போலிச் சீர்திருத்தமாக இருந்தது. அது அரசியல் லாபத்திற்காக யோராம் தீட்டிய திட்டம். ஆகவே இந்தக் கூட்டணி ஒரு சௌகரியமான சந்தர்ப்பவாதக் கூட்டணியாக மட்டுமே இருந்தது. இதனை Collision of convenience என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். இதில் யோசபாத் இணைந்தது மிகத் தவறான செயல்.
இதிலிருந்து கற்க வேண்டிய சில பாடங்கள்
1. முதலாவது பாடம் யோசபாத் செய்த தவறை கிறிஸ்தவர்கள் செய்யக்கூடாது.
உலகத்தோடு நாம் நட்பை நாடினால் ஆண்டவருடன் நட்போடு இருக்க முடியாது என்கிறது வேதம். அதனை யோவான் மற்றும் 1 யோவானில் வாசிக்கிறோம். உலகத்தோடு நமக்கு நட்பு இருந்தால் கர்த்தரோடு நட்பு இருக்க முடியாது. பணத்தோடு நட்பு இருந்தால் ஆண்டவருக்கு நாம் நண்பனாக இருக்க முடியாது. யோசபாத் விசுவாச வாழ்க்கையில் அதிக உலக ஆசை இருந்தது. கிறிஸ்தவர்களாகிய நாம் இதனை பின்பற்றக்கூடாது. ஆண்டவரும் உலகமும் ஒரு காலமும் நண்பர்களாக இருக்க முடியாது. நம் நாட்டில் இருக்கிற பிரச்சனை என்ன? முக்கியமாக இந்தியாவில் சபையை சபையாகப் காணமுடியவில்லை. அதுதான் பெரிய பிரச்சனை. அதற்குக் காரணமென்ன? அவற்றை உலகத்தோடு உறவாடுகிற சபைப் பிரிவுகளாகத்தான் காண்கிறோம். எங்கு போனாலும் எந்த சபைப் பிரிவைப் பார்த்தாலும் அங்கு உலகம்தான் ஆட்சி செய்கிறது. போதகர்கள் அரசியல் லாபத்திற்காகவும், தங்களுடைய சுயநலன்களுக்காகவும் எதையும் செய்வதைப் பார்க்கிறோம். சமீபத்தில் நான் தமிழகத்தில் இருக்கும் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தான் போய்க்கொண்டிருக்கிற சபைப் பிரிவு மிகவும் மோசமாக இருக்கிறது என்பதால் இன்னொரு சபைப் பிரிவு நன்றாக இருக்கிறதென்று ஒருவர் சொல்ல அங்கு சென்று பார்த்தாராம். அங்கும் அதேவிதமான சுயநலன்களும் வேதத்திற்கு சிறிதும் இடமளிக்காதபடி அதற்கு விரோதமான அணுகுமுறையுமே இருந்தது என்று என்னிடம் சொன்னார்.
ஒரு போதகனாக வேதம் சொல்லுக்கிறவிதமாக எதையும் செய்ய முடியாத ஒரு நிலை தமிழ் நாட்டில் காணப்படுகிறது. இதற்கெல்லாம் காரணமென்ன? உலகம் சபைக்குள் வந்துவிட்டது. அதனால் அதை ஆளுக்கிறவர்கள், அதற்கு அதிகாரிகளாக இருந்து போதிக்க வேண்டியவர்கள் உலகத்தோடு ஒப்புரவாகி ஆத்துமாக்களை வஞ்சிக்கிறார்கள். அவர்களுக்கு வேதத்தைப் படித்து, அதை ஒழுங்காக விசுவாசத்தோடு பிரசங்கிப்பதற்கு இருதயம் இல்லை. ஏனென்றால் அந்த இருதயம் உலகத்திற்கு விற்கப்பட்டுவிட்டது. இதனால் வஞ்சிக்கப்பட்டு, ஆசீர்வாதமடையாமல் போகிறவர்கள் ஆத்துமாக்கள்தான். அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய சத்தியம் அங்கு போய்ச் சேர முடியாதபடி இந்த உலகத்து மனிதர்களால் சபை துன்பப்படுகிறது. அங்கு சத்தியத்தைக் கேட்க முடியவில்லை. ஆவியானவருடைய பிரசன்னத்தை அங்கு பார்க்க முடியவில்லை. உண்மையான தேவ அன்பையும் சமாதானத்தையும் அங்கு பார்க்க முடியாமல் இருக்கிறது. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மைகள்தான். கிறிஸ்தவர்கள் செய்யக்கூடாத தவறை யோசபாத் செய்தான். அவன் உலகத்தோடு நட்புறவாடினான். என்னைப் பின் தொடர வேண்டுமானால் சிலுவையை சுமக்க வேண்டுமென்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார். அவ்வாறு சிலுவையை சுமக்க முடியாதவர்கள் ஆண்டவரைப் பின் தொடர முடியாது. ஆண்டவரே எனக்கு நீங்களும் வேண்டும், இந்த உலகமும் வேண்டுமென்றுதான் எல்லாரும் கேட்கிறார்கள். அதைத்தான் இன்றைக்கு எல்லா இடங்களிலும் நாம் காண்கிறோம். ஆகவே கிறிஸ்தவர்கள் செய்யக்கூடாத ஒரு காரியம் உலகத்தோடு நட்புறவாடுவதாகும். உலகம் ஆண்டவருக்கு சொந்தமானதாக இருந்தபோதும் பாவத்தில் இருக்கிற உலகமும் பரிசுத்தமாக இருக்க வேண்டிய சபையும் ஒரே விதத்தில் இயங்க முடியாது.
2. இரண்டாவதாக நாம் இதில் படிக்கும் உண்மை, நம் விசுவாசத்தை சுயநலத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது என்பதுதான்.
கிறிஸ்தவத்தை சுயநலத்திற்காக பயன்படுத்தக்கூடாது. நாம் ஏற்கனவே பார்த்த வண்ணம் யோராம் உண்மையான மனந்திரும்புதலைக் கொண்டிருக்கவில்லை. சுயலாபத்திற்காக அவன் ஒரு நாடகமாடினான். தன்னுடைய சுயநல நோக்கங்களுக்கு அது பயன் தருமென்று அவன் நம்பினான். ஏனென்றால் ஆகாபு பலமுள்ளவனாக இருந்தாலும் மிகவும் கேடான பெயரைப் பெற்றுக்கொண்டான். அவனைப் பிடித்தவர்கள் நாட்டிலேயே ஒருவருமில்லை. ஆகாபைப் போலத் தான் பெயர் வாங்கி விடக்கூடாது, தன்னையும் அவ்வாறு எல்லோரும் நினைத்து விடக்கூடாது என்பதற்காக மக்களுக்கு ஒரு கண் துடைப்பு மாதிரித்தான் அவன் பாகாலுடைய புனிதத்தூணை அகற்றிய செயல். அதைத் தவிர ஆகாபு செய்து வந்த அத்தனை பாவங்களையும் அவன் தன் வாழ்க்கையில் தொடர்ந்தான் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே அவன் தன்னை சீர்திருந்தியது போல காட்டிக் கொண்டது வெளிப்புறமாக மக்களை ஏமாற்றுவதற்காகதான். நாம் ஒருநாளும் ஆண்டவருடைய வேதத்தையும், கிறிஸ்தவத்தையும், விசுவாசத்தையும், வேதத்தோடு முரண்பட்டு சுய நலத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது. அது மிகப்பெரிய பாவம்.
3. மூன்றாவதாக, நாம் இதில் படிக்கும் பாடம், போலியான சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் கர்த்தரை ஒரு போதும் மகிமைப்படுத்தாது என்பதுதான்.
அநேகர் சபைகளின் ஒற்றுமையைப் பற்றி வாய்ப்பேச்சு பேசுவார்கள். அதாவது சபைகள் எல்லாம் இணைந்து இருக்க வேண்டும். போதகர்கள் எல்லோரும் இணைந்து ஜெபம் பண்ண வேண்டும். ஆண்டவர் ஒற்றுமையை எதிர்பார்க்கிறார் என்று சொல்லி வேத வசனங்களை எல்லாம் சுட்டுவார்கள். அது நல்லதுதான். ஆண்டவரே, யோவான் 17 ஆவது அதிகாரத்தில் அப்படியான ஒற்றுமையைப் பற்றி ஜெபம் பண்ணியிருக்கிறார். ஆனால் ஒருநாளும் சத்தியத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு இராமாயணத்து சூர்ப்பனகையைப் போன்ற போலியானதொரு ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும் என்று ஆண்டவர் அறிவுரை செய்யவில்லை. எந்த ஒற்றுமையாக இருந்தாலும் அது சத்தியத்தின் அடிப்படையிலான ஒற்றுமையாக இருக்க வேண்டும்; சத்தியத்திற்குத் துரோகம் செய்வதாக இருக்கக்கூடாது. சத்தியத்தை மட்டும் ஏற்று எல்லோரும் இணைந்து ஒரேவிதமாக விசுவாசிக்கும்போது மட்டுமே அங்கு உண்மையான வேதம் எதிர்பார்க்கின்ற ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் பார்க்க முடியும். சத்தியம் இல்லாத இடத்தில் கிறிஸ்தவ ஐக்கியத்தையோ ஒற்றுமையையோ காண முடியாது. ஆகவே சந்தர்ப்பவாதக் கூட்டணி, அதாவது வெளியில் ஒற்றுமையாக இருப்பதுபோல நடித்து, ஜெபம்பண்ணி, போதக வேஷதாரிகளாக உலவி வந்து, வேதத்திற்குப் புறம்பான விஷயங்களில் நம்பிக்கை வைத்து உலகத்தின் வழியில் போவது ஆண்டவருக்குப் பிடிக்காது. நான் பலிகளையல்ல கீழ்ப்படிதலையே விரும்புகிறேன் என்று ஆண்டவர் சொல்லி இருக்கிறார். கீழ்ப்படிதல் எப்போதுமே முழுமையான கீழ்ப்படிதலாக இருக்க வேண்டும். அரைகுறை கீழ்ப்படிதல் உண்மையான கீழ்ப்படிதல் அல்ல. அது பாவம் மட்டுமே. ஆகவே இந்த மூன்று பாடங்களையும் இங்கிருந்து நாம் படிக்கிறோம்.
இரண்டாவதாக, கர்த்தரின் வார்த்தைக்கு ஏற்பட்ட அவமதிப்பு
இதனை நாம் எங்கு காண்கிறோம்? இப்பகுதியில் 8 லிருந்து 10 வரையும் உள்ள வசனங்களில் அதை நாம் வாசிக்கிறோம்.
2 இராஜாக்கள் 3:8-10
எந்த வழியாய்ப் போவோம் என்று கேட்டான்; அதற்கு அவன்: ஏதோம் வனாந்தரவழியாய் என்றான். அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாள் சுற்றித்திரிந்தபோது, அவர்களைப் பின்செல்லுகிற இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமற்போயிற்று. அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்.
இங்கே என்ன நடந்தது? மூன்று பேரும் இந்தக் கூட்டணியை அமைத்து பெரும் படைகளைத் திரட்டிக் கொண்டு மிருக ஜீவன்களையும் தங்களோடு அழைத்துக்கொண்டு போனார்கள். எதற்காக அவைகளைக் கொண்டுபோனார்கள்? அவர்களுக்கு வழியில் தேவையான உணவை சமைத்து சாப்பிடுவதற்காகத்தான். அந்தக் காலத்தில் இன்றிருக்கும் பிரயாண வசதிகள் இருக்கவில்லை. இன்று ஒரு இடத்திற்குப் போகவேண்டுமென்றால் மிகவேகமாகப் போய்விடலாம். படைகளை நகர்த்துவதற்குக்கூட அதிவேகமாகப் போகும் பெரும் பொருள்தாங்கி விமானங்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கும் காலம் நம்முடைய காலம். ஆனால் அன்று அத்தகைய வசதிகள் இருக்கவில்லை. படைகள்கூட அன்று நடந்துதான் போக வேண்டும், அதற்குப் பல நாட்களாகும். அந்தப் பயணத்தில் அவர்கள் ஏழு நாட்கள் சுற்றித் திரிய வேண்டியிருந்தது. தமிழ் வேதத்தில் “சுற்றித் திரிந்தார்கள்” என்றிருப்பது தவறான வார்த்தைப் பிரயோகமாகும். நாம் அதனை ஏதோ பாதை தெரியாமல் வெறுமனே சுற்றித் திரிந்து அலைந்தார்கள் என்றுதான் எண்ணுவோம். ஆனால், “சுற்றித்திரிந்தபோது” என்று சொன்னால், அவர்களுக்கு நன்றாகப் பாதை தெரிந்திருந்தது, அதேவேளை அதிக தூரம் பிரயாணம் செய்து மலைகள், காடுகள் போன்றவற்றைக் கடந்து சுற்றிச் சுற்றிப் போக வேண்டியதாக இருந்தது என்று அதற்கு அர்த்தம். அப்படிப்போனபோது அவர்கள் கொண்டு வந்திருந்த தண்ணீரும் உணவும் குறைந்து போய்விட்டன. இனிப் போக வேண்டிய தூரமும் மிக அதிகமாக இருந்தது. மூன்று ராஜாக்களும் பெரும் படைகளோடு அத்தூரத்தைக் கடந்து போயிருப்பார்கள். அவ்வளவு பெரிய ராணுவத்திற்கு அவர்கள் கொண்டுபோன மிருக ஜீவன்கள், அவர்களுடைய போர்ப்படையில் இருந்த குதிரைகள், அது மட்டும் இல்லாமல் சமைப்பதற்குக் கொண்டுபோன மிருகங்கள் என எல்லாவற்றிற்கும் தண்ணீர் தேவையாக இருந்தது. அப்போது தண்ணீர்ப் பற்றாக்குறையால் இஸ்ரவேலின் ராஜா கலங்கிப் போய்விட்டான். நன்றாக வந்து மாட்டிக்கொண்டோமோ, நாம் போட்ட திட்டந்தான் சரியில்லையோ என்று குழம்பிப்போனான்.
அப்போது உடனே அவனுக்கு யாரைப் பற்றிய நினைவு வந்தது? யாரை அவனுக்குப் பிடிக்காதோ அவர்கள் நினைவுதானே வரும். அவனுக்கு யாரைப் பிடிக்காமல் இருந்தது? அவன் தகப்பனுக்கு யாரைப் பிடிக்காமல் இருந்தததோ அதே கர்த்தரைத்தான். ஆகவே இங்கு அவன் பழியைக் கர்த்தர்மேல் போடுகிறான். “இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்”. ஏதோ பார்ப்பதற்கு இவ்வளவு தூரம் வனாந்தரத்தில் எல்லாம் நடந்து அலைந்து மனந்திரும்பிவிட்டான் என்று நீங்கள் தவறாக நினைக்கக் கூடாது. மாறாக, நான் படுகிற கஷ்டத்துக்கும் துன்பத்துக்கும் காரணம் அந்தக் கர்த்தர்தான், ஏனென்றால், அவர்தான் நமக்கு எப்போதுமே தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறார். இப்போது அவர்தான் ஏற்கனவே ஒரு திட்டத்தைப்போட்டு என்னுடைய திட்டங்களையெல்லாம் நாசமாக்கி மூன்றுபேரையும் சேர்த்து அழிப்பதற்காக இங்கு கொண்டுவந்துவிட்டிருக்கிறார், என்று இருதயத்தில் கடுங்கோபத்தோடு சொல்லியிருப்பான். யோராமின் இந்த வார்த்தைகள் கர்த்தரை அவமதிக்கிற வார்த்தைகளாகும்.
கர்த்தர் இஸ்ரவேல் தேசத்தோடு உடன்படிக்கையை ஏற்படுத்தினவர் என்பதையெல்லாம் விசுவாசிக்காமல், இஸ்ரவேலின் வரலாறு மற்றும் இஸ்ரவேல் ஆண்டவரை மகிமைபடுத்தி அவரை உயர்த்திய எத்தனையோ பெரும் தலைவர்களைப் பற்றியெல்லாம் அவன் அறிந்திருந்தும் அவையெல்லாவற்றையும் மறந்து கர்த்தரை அவமதிக்கும் வகையில் யோராம் பேசுகிறான். இங்கு அவன் கர்த்தரின் இறையாண்மையை மிகவும் உதாசீனப்படுத்துகிறான். மேலும் அவனுடைய சுயரூபத்தை வெளிப்படுத்துகிறான். அவன் வெறும் உருவ வழிபாட்டுக்காரன் மட்டுமல்ல, உருவ வழிபாட்டோடு வருகிற அத்தனை அசிங்கங்களும், பாவங்களும் அவனிடத்தில் காணப்பட்டது. அவனுக்கு ஒருநாளும் கூட இஸ்ரவேலின் தேவன் மேல் நம்பிக்கை இருக்கவில்லை, அவரை வணங்கவில்லை, அவருடைய வழிகளை நாடிப் போகவில்லை. அதே நேரம், அவர் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சிந்திக்கின்ற இருதயத்தையும் கொண்டிருந்தான் இந்த யோராம். ஆகவே, நமக்கு எதிரியாக இருக்கிற கர்த்தர் இந்த மோவாபியர் கையில் நாம் அகப்பட்டுக்கொள்வதற்காகத்தான் இவ்வாறு செய்தார், என்று சொன்னது கர்த்தருடைய இறையாண்மைக்கே சவாலான வார்த்தைகளாகும்.
ஆனால் யோசபாத் அவ்வாறு இல்லை, அவனுக்குக் கொஞ்சம் புத்தி இருந்தது. யோராம் அளவிற்கு மோசமானவனல்ல யோசபாத். இப்படிச் சொல்லுவதால் யோசபாத் தவறுகள் செய்யாத மனிதன் என்று அர்த்தமல்ல. யோராம் போன்ற மோசமான மனிதர்களோடு நட்பு கொண்டிருந்ததே அவன் செய்த பெரிய தவறு. இருந்தபோதும் யோசபாத் தன்னுடைய புத்தியை இழந்து முட்டாளாகக் கர்த்தருக்கு விரோதமாக இங்கு நடக்கவில்லை. யோசபாத் என்ன சொல்லுகிறான் என்பதை 11, 12 வது வசனங்களில் நாம் பார்க்கலாம்.
2 இராஜாக்கள் 3:11-12
அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான். அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்தில் போனார்கள்.
இஸ்ரவேலோ, யூதாவோ சரி, அந்நாட்டு அரசர்களும் சரி, ஆலோசனை கேட்கப் போகவேண்டியது கர்த்தரிடத்தில் என்பதை யோசபாத் நன்றாக அறிந்திருந்தான். கர்த்தர் தான் அவர்களுக்கு அரணாக இருந்தார். கர்த்தர்தான் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தார். கர்த்தர் அவர்களோடு இருந்தபோதுதான் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது, பாதுகாப்புக் கிடைத்தது. எப்பொழுது அவர்கள் பாவம் செய்தார்களோ, கர்த்தரை விட்டு விலகிப் போனார்களோ, அவர் தன்னுடைய பாதுகாப்பு அரணையும் அகற்றிக்கொள்ளுகிறார். இதெல்லாம் யோசபாத்திற்கு நன்றாகத் தெரிந்திருந்தது. எந்த ஆலோசனைக்கும் மக்களும் அரசர்களும் சேர்ந்து கர்த்தரிடத்தில் தான் போக வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அந்தக் காலத்தில் கர்த்தருடைய ஆலோசனை தீர்க்கதரிசிகளிடம் இருந்தே வந்தது. தீர்க்கதரிசிகளே கர்த்தரின் செய்தியாளர்கள். ஆகவேதான் யோசபாத் “கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா” என்று கேட்டான். அவன் இந்த நாட்டில் ஒருவரும் தீர்க்கதரிசி இல்லையா என்று கேட்கவில்லை, மாறாக பக்கத்தில் ஒருவரும் இல்லையா என்று கேட்டான். எலிசா அங்கே இருக்கிறார் என்று அவன் கேள்விப்பட்டபொழுது “கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது” என்று சொன்னான். நாம் போட்ட திட்டம் நிறைவேற வேண்டுமானால் எலிசாவைப் போய்ப் பார்க்க வேண்டும், அப்போது கர்த்தருடைய வார்த்தையும், ஆலோசனையும் நமக்கு கிடைக்கும் என்று யோசபாத் சொன்னான். இஸ்ரவேல் ராஜாவுக்கு வேறு வழியில்லாமல் அவனும் அதற்கு ஒத்துக்கொண்டான். அப்பொழுது மூன்று ராஜாக்களும் சேர்ந்து எலிசாவிடம் போனார்கள்.
யோசபாத்திற்கு ஏற்கனவே நான் கூறியபடி இரண்டு உண்மைகள் தெரிந்திருந்தன. ஒன்று, எதற்கும் எப்போதும் கர்த்தருடைய வார்த்தையைத்தான் நாடவேண்டும் என்பது. இன்னொன்று, கர்த்தரின் அவ்வார்த்தை தீர்க்கதரிசியிடம் இருந்தது என்பது. இருந்தபோதும், அவன் நண்பர்களைத் தெரிவு செய்வதில் கர்த்தருடைய உதவியை நாடவில்லை. அவ்வாறு செய்திருந்தால் அவன் ஒருநாளும் ஆகாபோடும் யோராமோடும் நட்பைக் கொண்டிருந்திருக்க மாட்டான். இப்போது மூவரும் சேர்ந்து எலிசாவிடம் போகிறார்கள். எலிசா வெகு தொலைவில் இருக்கவில்லை. மாறாக அருகில்தான் இருந்திருக்கிறார். இப்போது ஒரு கேள்வி வரும், இந்த வனாந்தரத்தில் அவர்கள் ஏழு நாள் சுற்றித் திரிந்தபோது எலிசாவுக்கு அங்கே என்ன வேலை இருந்தது? ஏன் அவர் அங்கே இருந்தார்? இம்மாதிரியாக நாம் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் வேதம் பதில் கொடுக்கவில்லை. வேதம் அதற்குப் பதில் கொடுக்கவில்லை என்றால் அதை நாம் தெரிந்து கொள்ளுவதற்கு அவசியமே இல்லை என்பதுதான் அர்த்தம். ஆகவே, அதற்கெல்லாம் நாம் பதிலைத் தேடிக்கொண்டிருக்கக்கூடாது, எலிசா அங்கு இருந்தார் என்பதுதான் முக்கியம்.
எலிசா இங்கே நடந்து கொண்ட முறையே வித்தியாசமாக இருக்கிறது. மூன்று ராஜாக்களும் அவரிடத்தில் வருகிறார்கள். இஸ்ரவேல் ராஜா, யூதா ராஜா, ஏதோம் ராஜா என மூன்று ராஜாக்களும் வந்தால் மரியாதை கொடுக்க வேண்டுமல்லவா? ஆரம்ப மரியாதைகளையெல்லாம் செய்துவிட்டுப் பின்னால் பேச வேண்டிய விஷயத்திற்கு வருவதற்கு செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கிறது. ஆனால் எலிசா ஒன்றுமே செய்யவில்லை. நம் தமிழ் வேதம் கொஞ்சம் மரியாதையான மொழியில் எலிசா செய்ததை மொழிபெயர்த்திருக்கிறது. ஆனால் உண்மையில் அந்த அளவுக்கு மரியாதையாக எலிசா அங்கு பேசவே இல்லை. 13 வது வசனத்தில் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்.
2 இராஜாக்கள் 3:13
எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பனின் தீர்க்கதரிசிகளிடத்திலும், உம்முடைய தாயாரின் தீர்க்கதரிசிகளிடத்திலும் போம் என்றான். அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான்.
யோராமைப் பார்த்து நீ ஏன் என் முன்னால் நிற்கிறாய் என்று கேட்கிறார் எலிசா. இவ்வாறு அவனை அவமதிக்கும் அளவிற்கு அவருக்குக் கோபம் இருந்திருக்கிறது. ஏனென்றால் எலிசாவிடம் வருவதற்கு முன்பாக யோராம் என்ன பேசினான் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்திருக்கும். இதே 2 இராஜாக்கள் 6 ஆம் அதிகாரத்தில் சீரிய ராஜாவின் திட்டங்களையெல்லாம் எலிசா இஸ்ரவேல் ராஜாவுக்கு முன்கூட்டியே சொன்னதை நாம் பார்க்கிறோம். சீரிய ராஜா படுக்கை அறையில் பேசுகிற வார்த்தைகளையும் அவர் கர்த்தர் மூலம் அறிந்திருந்தார்.
2 இராஜாக்கள் 3:11-12
இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான். அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்.
இப்படியிருக்கையில் யோராம் கர்த்தரை அவமதிப்பாகப் பேசினான். அதை ஆண்டவர் நிச்சயமாக எலிசாவிற்கு வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் அது யோராமுக்குத் தெரியாது. யோராம் மீண்டும் தான் முன்பு சொன்னதையே சொல்லுகிறான்.
2 இராஜாக்கள் 3:13
அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான்.
இப்போது எலிசாவுக்கு கோபம் கூடிவிடுகிறது. முதலில், தான் பார்க்கக் கூடாத ஒருவரைப் பார்த்தாலே எவருக்கும் பிடிக்காது இல்லையா? காலையில் நன்றாகத் தூங்கி சமாதானத்தோடு எழுகிற நேரத்தில் நாம் பார்க்கவே விருப்பப்படாத ஒருவர் வந்து கதவை தட்டினால் எப்படி இருக்கும்? இருக்கிற சந்தோசமெல்லாம் போய்விடும். எலிசாவுக்கு இஸ்ரவேலில் பிடிக்காதவர்கள் என்று சொன்னால் யோராம்தான் முதல் நபராக இருப்பான். அவன் மோசமான விதத்தில் ஆண்டவரைப் பற்றிச் சொன்னால் எலிசா சும்மா இருப்பாரா? 14 வது வசனத்தில் அவர் சொல்லுகிறார் பாருங்கள்.
2 இராஜாக்கள் 3:14
அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால் நான் உம்மை நோக்கவுமாட்டேன், உம்மைப் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய கர்த்தருக்கு முன் நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
உன் முகத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. இவ்வளவு நேரம் அதை சகித்துக்கொண்டு இருப்பதற்கு காரணமே யோசபாத்தான். ஏனென்றால் யோசபாத் நல்ல அரசன். அதையே மேற்குறிப்பிட்ட வசனத்தில் எலிசா சொல்லுகிறார். இங்கே நாம் என்ன பாடத்தைப் படிக்கிறோம்?
முதலாவது பாடம், கர்த்தரின் வார்த்தையையும், அவருடைய இறையாண்மையையும் அவமதிக்கக்கூடாது.
அது மிகவும் தவறானது. எனக்கு தெரிந்த ஒருவர் பிரச்சனை அதிகமானதால் நிதானமில்லாமல் ஆண்டவரைக் குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார். பிரச்சனை யாருக்குத்தான் இல்லை? எல்லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. அவர் சொன்னதைக் கேட்டு எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இவ்வாறு பேசுகிற இருதயம் நல்ல இருதயம் இல்லையே என்று நான் யோசித்தேன். நாம் சிலநேரம் கவனக்குறைவாகப் பிரச்சனைகள் அதிகமாவதால் ரூத்தின் மாமியார் நகோமியைப் போல ஆண்டவருக்கு எதிராகப் பேசிவிடுகிறோம். அது மிக மிக ஆபத்தானது. அவ்வாறு நாம் ஒருபோதும் செய்யக்கூடாது. கர்த்தருடைய வார்த்தை, இறையாண்மை மற்றும் அவரது செயல்களையெல்லாம் நாம் அவமதிக்கக் கூடாது. கர்த்தர் ஒருநாளும் அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார். இங்கு யோராமின் இருதயம் மிகவும் மோசமானதாக இருந்தது. அவன் ஆண்டவருடைய பிள்ளையே அல்ல. அவனுக்கு ஆண்டவரின் மீது எந்தவித நேசமுமில்லை. ஆகவே அவனுடைய இருதயத்தில் கர்த்தருக்கு எதிரானவைதான் இருக்கும். ஆனால், அவன் தான் செய்கிற பாவம் என்னவென்று தெரியாமல் இருந்தான். சிலநேரங்களில் நாம் செய்கிற பாவம் இன்னும் கூடுதலான பாவங்களைச் செய்யவைக்கும். பாவத்திற்குத் தன்னை சீர்திருத்திக்கொள்ளத் தெரியாது. நல்ல வேளையாக சாத்தான் சாத்தானாக இருக்கிறான். அவன் அதற்கு மேலாக அவனால் வளர முடியாது. ஆனால், நம்மோடிருக்கிற பாவம் தொடர்ந்து விருத்தியடைந்து இன்னும் மேலும் மோசமான பாவமாகத்தான் கடைசிவரைக்கும் போய்கொண்டிருக்கும் என்று வேதம் சொல்லுகிறது. யோராமின் வார்த்தைகள் மிகவும் மோசமானவை. ஆகவே கர்த்தருடைய வார்த்தையையும், இறையாண்மையையும், அவரது செயல்களையும் அவமதிக்கிறவிதமாக ஒருநாளும் பேசாதீர்கள், சிந்திக்காதீர்கள். ஏனென்றால் ஆண்டவர் ஒருநாளும் அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்.
இரண்டாவது பாடமாக, கர்த்தருடைய வார்த்தையோடு நாம் விளையாடக்கூடாது.
அதாவது அதை நாம் சாதாரணமாக எடுத்து நம் சுயநலத்திற்காகவோ, சுய ஆதாயத்திற்காகவோ பயன்படுத்திவிடக்கூடாது. சிலபேர் ஆபத்துக் காலத்தில்மட்டும் அதைத் தேடுவார்கள். சபைக்கு ஒழுங்காக முறையாகப் போவதில்லை, கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதில்லை, போதகர்கள் அறிவுரை சொன்னாலும் கேட்பதில்லை ஆனால் ஆபத்து என்று வந்துவிட்டால் சபைக்குச் செல்லுவார்கள், கர்த்தருடைய வார்த்தையைத் தேடுவார்கள், போதகரின் ஆலோசனையை நாடுவார்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் யாராவது இவ்வாறு தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் ஒருநாளைக்கு கர்த்தருடைய வார்த்தை உங்கள் பக்கத்திலேயே வராமல் போய்விடும். யோராமுக்கு அந்த ஆபத்து இருந்தது. ஏனென்றால் அவன் அடிக்கடி கர்த்தருடைய வார்த்தையோடு விளையாடிக் கொண்டிருந்தான். அது ஆண்டவருக்குப் பிடிக்காத காரியம். ஆகவேதான் எலிசா உன் முகத்தையே நான் பார்க்க விரும்பவில்லை என்று சொல்லுகிறார். கர்த்தருடைய வார்த்தையைப் பொறுத்தளவில் எப்போதுமே அதற்குக் கீழ்ப்படிகிற மனப்பான்மையோடுதான் அதைப் படிக்கவேண்டும், சிந்திக்கவேண்டும், செயற்படுத்த வேண்டும். வேறு எதற்காகவும் அதைப் பயன்படுத்தவோ, அதோடு விளையாடவோ கூடாது. சுய ஆதாயத்துக்காக அதைப் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் ஆண்டவர் சும்மா விடமாட்டார்.
மூன்றாவதாக, கர்த்தருடைய வார்த்தை செய்யும் அற்புதம்
யோராம் கர்த்தருடைய வார்த்தையில் நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால் 16-19 வது வசனங்களில் ஆண்டவர் செய்கிற அற்புதத்தை நாம் வாசிக்கிறோம்
2 இராஜாக்கள் 3:16-19
இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி, அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள். நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்; மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார். நீங்கள் சகல கோட்டைகளையும் சகல சிறந்த பட்டணங்களையும் தகர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான்.
எதற்காக இங்கு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று எலிசா சொன்னார்? வேதம் அதற்கு பதில் சொல்லவில்லை. இருந்தபோதும் இந்த இடத்தில் எலிசாவின் கோபம் மிகவும் அதிகரித்து இருந்தது. அவருடைய கோபம் தணிவதற்காக வாத்தியக்காரனை அழைத்து வரும்படி அவர் கேட்டிருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன். அவன் வந்து சுரமண்டலத்தை வாசித்தபோது கர்த்தருடைய கரம் எலிசாவின்மேல் இறங்கியது. இன்னொருவிதத்தில் பார்த்தால் ஆண்டவருடைய கோபம் தணிந்துவிட்டது என்றுகூட சொல்லலாம்.
அடுத்ததாக தண்ணீருக்காக வாய்க்கால்களை வெட்டச் சொல்லுகிறார் எலிசா. எதுவும் இல்லாததை வைத்து எல்லாவற்றையும் செய்பவர்தானே நம் ஆண்டவர்! ஒன்றுமில்லாததிலிருந்துதானே நம் ஆண்டவர் உலகத்தைப் படைத்தார். இந்த வனாந்தரத்தில் தண்ணீர் வரவழைப்பதெல்லாம் அவருக்கு அற்பமான காரியம். யெகோவா தேவனுக்கு இந்த இடத்தில் தண்ணீர் வரவழைப்பதா பெரிய விஷயம்? ஏனென்றால் யோராம் தண்ணீர் இல்லையென்றுதான் புலம்பிக்கொண்டிருந்தான். தண்ணீர் மட்டுமல்ல, அதற்கு மேல் அவர் மோவாபியரையும் உன் கையில் கொடுப்பார் என்று எலிசா சொன்னார். யோராம் கர்த்தரின் வார்த்தையை உதாசீனப்படுத்தி அவருடைய இறையாண்மையையே அவமதிக்கும்விதமாகப் பேசினான். ஆனால், எலிசா இது அற்பமான காரியம் என்று யோசபாத்திற்காகச் சொல்லுகிறார், யோராமிற்காக அல்ல. கர்த்தருக்கு அது மிகவும் சாதாரண காரியம், அதுமட்டுமல்ல மோவாபியரையும் உங்கள் கையில் கொடுப்பார் என்று சொன்னார். கர்த்தர் அவர்களுக்குத் தேவையான உடனடித் தேவையை மட்டுமல்லாமல் அதற்கு மேலானதையும் செய்யக்கூடியவர் என்று எலிசா இந்தப் பகுதியில் விளக்குவதை நாம் பார்க்கிறோம். அதற்குப் பின்பு என்ன நடந்தது?
2 இராஜாக்கள் 3:20-25
மறுநாள் காலமே பலிசெலுத்தப்படும் நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாய் வந்ததினால் தேசம் தண்ணீரால் நிரம்பிற்று. தங்களோடு யுத்தம்பண்ண ராஜாக்கள் வருகிறதை மோவாபியரெல்லாரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் தரிக்கத்தக்க வயதுள்ளவர்களையும், அதற்கு மேல்தரமானவர்கள் எல்லாரையும் கூட்டி அழைத்துக்கொண்டு வந்து எல்லையிலே நின்றார்கள். மோவாபியர் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின்மேல் பிரகாசித்ததினால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தம்போல் சிவப்பாய்க் காணப்பட்டது. அதினால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாண்டுபோனார்கள்; ஆதலால் மோவாபியரே, கொள்ளைக்கு வாருங்கள் என்று சொன்னார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில், இஸ்ரவேலர் எழும்பி, மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறிய அடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியரை முறிய அடித்து, பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலத்திலும் கல்லெறிந்து நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலே மாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிபடாதிருக்கிறபோது; கவண்காரர் அதைச் சுற்றிக்கொண்டு அதையும் சேதமாக்கினார்கள்.
காலை நேரத்தில் பலி செலுத்தப்படும்போது அவர்கள் ஏதோம் தேசம் வழியாய் வந்திருந்தார்கள். அந்த தேசம் தண்ணீரால் நிரம்பியது. மோவாபியர்கள் தங்கள் படைகளையெல்லாம் தயார் செய்து எல்லைகளில் வந்து நிற்கிறார்கள். தண்ணீர் வந்ததெல்லாம் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஆண்டவர் இங்கொரு அற்புதம் செய்கிறார், சூரியன் காலையில் வருகிற நேரம் சிவப்பாகத்தானே காணப்படும். ஆண்டவர் முதலில் அந்த இடத்தைத் தண்ணீரால் நிரப்புகிறார் பிறகு காலையில் சூரியக் கதிர்கள் அந்தத் தண்ணீரில் பட்டு தண்ணீர் முழுவதும் இரத்தமாக மோவாபியருக்குக் காட்சியளித்தது. ஆண்டவர் ஒரு காரணத்திற்காக இதைச் செய்தார். தண்ணீரைக் கொடுத்த தேவன் அதைப் பயன்படுத்தி மோவாபியரைக் கலங்கடித்தார் என்று நாம் வாசிக்கிறோம். எதிரிகள் எல்லோரும் தங்களைத் தாங்களே வெட்டிக்கொண்டு மரித்துப்போனார்கள் என்று அவர்கள் எண்ணிக் கொள்ளைக்குப் போகப் புறப்பட்டார்கள். ஆனால் எலிசா சொன்னபடி மோவாபியர்கள் அனைவரும் மூன்று ராஜாக்களினால் முறியடிக்கப்பட்டார்கள். இதுதான் கர்த்தர் செய்த அற்புதமாகும். இதை அவர் பெரிய காரியங்களைக் கொண்டு செய்யவில்லை. சூரியனையும் தண்ணீரையும் படைத்த ஆண்டவர் தண்ணீரில் சூரியன் ஒளிவிசுகிற நேரம் தண்ணீரை இரத்தமாகக் காட்சியளிக்கச் செய்து மோவாபியரையும் அவர்கள் நாட்டையும் மிகவும் சுலபமாக இஸ்ரவேல் அரசன், யூதா அரசன், ஏதோம் அரசன் ஆகியோரின் கையில் ஒப்படைத்தார் என்று நாம் கவனிக்கிறோம்.
நம் வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை அடியோடு இல்லாமல் செய்வதற்கு ஆண்டவருக்கு ஒரு நொடி கூடத் தேவையில்லை. நூற்றுக்கு அதிபதி இயேசுவினிடத்தில் வந்து ஆண்டவரே! என் வேலைக்காரன் சாகும் நிலையில் இருக்கிறான், நீங்கள் உதவி செய்யுங்கள் என்று கேட்டான். அதற்கு இயேசு நீ போ நான் வருகிறேன் என்று சொன்னார். அதற்கு அவன் அதெல்லாம் வேண்டாம், நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பேசுங்கள், அவன் சுகமாவான் என்றான். அவனுக்குத் தெரிந்திருந்தது ஆண்டவர் சர்வ இறையாண்மையுள்ளவர், வல்லமையுள்ளவர் என்று. ஆனால் இந்த யோராமிற்கு அது தெரியவில்லை. ஆண்டவர் எவ்வளவு கிருபையுள்ளவர் என்பதை யோசித்துப்பாருங்கள். யோராம் பேசின வார்த்தைக்கு அவனை ஆண்டவர் இல்லாமல் செய்திருக்க வேண்டும். ஆனால் யோசபாத்தினால் அவர்கள் எல்லோருமே அன்று தப்பினார்கள். இந்த இடத்தில் ஆண்டவர் ஒரு அருமையான அற்புதத்தை செய்து, தான் இறையாண்மையுள்ள தேவன் என்பதை எல்லோரும் அறிந்துகொள்ளும்படிச் செய்கிறார். யோராம் திருந்துவதற்கு அதுகூட ஒரு வாய்ப்புதான். நம்மிலும் சிலபேர் அப்படி இருப்பார்கள். எத்தனையோ சுவிசேஷ செய்திகளைக் கேட்டும் கல்லைப் போல அசையமாட்டார்கள். யோராமிற்கு கிருபையுள்ள தேவன் இவ்வளவு பெரிய அற்புதத்தைக் காணும்படியாகச் செய்தார். ஆனால் அவன் எங்கு திருந்தினான்? வானத்திலிருந்து மரித்தவன் உயிரோடு பூமிக்குப் போனால் மக்கள் திருந்துவார்கள் என்று ஐஸ்வரியவான் சொன்னதற்கு ஆண்டவர் என்ன சொன்னார்? என்னுடைய வார்த்தைகளைக் கேட்டுத் திருந்தாதவன் மரித்தவன் உயிரோடு எழுந்தாலும் திருந்தமாட்டான் என்றுதான் இயேசு சொல்லியிருக்கிறார். இந்த அற்புதங்களையெல்லாம் வேதத்தில் அவர் பதிவு செய்திருப்பதற்குக் காரணம் நாம் வாசித்துத் திருந்துவதற்காகத்தான். இறையாண்மையுள்ள தேவனால் செய்ய முடியாதது ஒன்றுமேயில்லை. அவருக்கு எல்லாம் அற்பமான காரியம்.
கடைசியாக, கர்த்தரின் வார்த்தை தரும் வசதி
இப்பகுதியின் கடைசி வசனங்கள் புரிந்துகொள்ள சிறிது கடினமானவை. அந்த வசனங்களுக்கு நான்கு விளக்கங்களை விரிவுரையாளர்கள் கொடுத்திருக்கிறார்கள். அதை நாம் இப்போது பார்க்கப்போவதில்லை. எது சரியானது என்பதை மட்டும் நான் இதில் விளக்குகிறேன். கடைசி இரண்டு வசனங்கள் இவ்வாறு சொல்லுகின்றன.
2 இராஜாக்கள் 3:26-27
யுத்தம் மும்முரமாகிறதென்று மோவாபியரின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் வலுமையாய் விழுகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டுபோனான்; ஆனாலும் அவர்களாலே கூடாமற்போயிற்று. அப்பொழுது அவன் தன் ஸ்தானத்தில் ராஜாவாகப்போகிற தன் சேஷ்டபுத்திரனைப் பிடித்து, அலங்கத்தின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாகப் பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம் மூண்டதினால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள்.
மோவாப் அரசன் இங்கு என்ன செய்கிறான்? யுத்தம் மிகவும் மோசமாகிவிட்டது, நாடெல்லாம் போய்விட்டது, எல்லாவற்றையும் சூறையாடிவிட்டார்கள். இனிமேல் தோல்வி உறுதி என்கிற நிலைக்கு வந்து தூரத்தில் தன் போர் வீரர்கள் 700 பேர்களோடு மட்டும் அவன் இருந்தான். அவர்களைக் கொண்டு முயற்சித்தும் எதுவும் முடியாமல் போய்விட்டது. இங்குதான் அவன் ஒரு காரியத்தைச் செய்கிறான். நம் ஊரில் அதிக நாட்கள் மழை வராமல் இருந்தால் என்ன செய்வார்கள்? கோயிலுக்குச் சென்று பூசை செய்வார்கள். பிறகு மிகவும் மோசமான நிலை ஏற்பட்டால் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணச் சடங்கு நடத்துவார்கள். இதை மேலை நாட்டாரிடம் விளக்கினால் அவர்களுக்குப் புரியாது; சிரிப்பார்கள். மூளை இருக்கிற ஒருவனும் இதைப்போல எதையும் செய்யமாட்டான். இத்தகைய ஒரு செயலைத்தான் மோவாப் அரசன் செய்கிறான். உண்மையில் மிகவும் கொடூரமான செயலைச் செய்தான். மோவாப் அரசன் புறஜாதிக்காரன். அவனுக்கு ஆண்டவரைப் பற்றித் தெரியாது. தான் வணங்கும் விக்கிரகத்திடம் சென்று தன் மூத்த மகனை அதற்கு சர்வாங்க தகனமாகப் பலியிட்டான். இஸ்ரவேல் மக்கள் அந்நிய மக்களோடு சேரக்கூடாது என்று ஆண்டவர் ஏன் சொன்னார் தெரியுமா? இதுபோன்று கடவுளுக்கு விரோதமான எந்தக் காரியத்தையும் அவர்கள் பின்பற்றக்கூடாது என்பதற்காகத்தான். இதைவிடக் கேவலமான செயலை ஒருவரும் செய்யமாட்டார்கள். தன் வெற்றிக்காகத் தன் சொந்த மகனையே இவன் பலிக்கொடுக்கிறான்.
மோவாப் அரசன் மிகவும் மோசமான காரியத்தைச் செய்தான். “அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம் மூண்டதினால்” என்று நாம் வாசிக்கிறோம். இங்கு ஒரு கேள்வியை நாம் கேட்கவேண்டும். இஸ்ரவேல்மேல் யாருக்குக் கடுங்கோபம் வந்தது? மோவாபியருக்கா? கர்த்தருக்கா? இங்கு கர்த்தருக்கு இஸ்ரவேல் மேல் கடுங்கோபம் மூண்டது என்று வசனம் சொல்லவில்லை. அவ்வாறு ஏற்படுவதற்கு எந்தவிதமான சந்தர்ப்பத்தையும் நாம் பார்க்க முடியவில்லை. ஆகவே நிச்சயமாக இது கர்த்தருடைய கோபத்தைப் பற்றிச் சொல்லவில்லை. இதனை எப்படி மொழிபெயர்த்திருக்க வேண்டும் தெரியுமா? “அப்பொழுது இஸ்ரவேலர் கடுங்கோபம் கொண்டதினால் அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டுத் தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள்” என்றிருக்க வேண்டும். ஏன் அவர்கள் அப்படிச் செய்தார்கள்? இஸ்ரவேலர்கள் கர்த்தரை ஆராதித்து வந்தார்கள், பிறகு பாவம் செய்து தாணிலும் பெத்தேலிலும் கன்றுக்குட்டியை வைத்து வழிபட ஆரம்பித்தார்கள். ஆனால் அந்த இஸ்ரவேலர்கள் கூட, பாவத்தில் இருந்தபோதும் இந்தளவுக்குப் பாவம் செய்வதற்குத் துணியவில்லை. மோவாப் அரசன் தன் வெற்றிக்காகத் தன் மூத்த மகனைப் பலியிட்டதைக் சிறிதும் இஸ்ரவேல் மக்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அக்கொடுமையான செயல் அவர்களுக்கு அவ்வளவு தூரம் கடுங்கோபத்தை உண்டாக்கியது. அதனால் அவர்கள் எங்களுக்கு நாடும் வேண்டாம், எதுவும் வேண்டாம் என்று தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிப் போய்விட்டார்கள். மோவாப் அரசன் இப்படிச் செய்தது மிகவும் பயங்கரமான காரியம். இதிலிருந்து நாம் எதைக் கவனிக்கிறோம்? தன் காரியங்கள் நடக்கவில்லை, தனக்குத் தோல்வி வரப்போகிறது என்றுணர்ந்தால் உருவ வழிபாட்டு மக்கள் எல்லாம் இப்படித்தான் கேவலமான காரியத்தைச் செய்வார்கள் என்பதுதான்.
மூன்று ராஜாக்களும், இஸ்ரவேலர்களும் அன்று பார்த்தது என்ன தெரியுமா? எந்த அளவுக்கு உருவ வழிபாடு மனிதனை மோசமாக்கி வைத்திருக்கிறது என்பதைத்தான். நம் நாட்டிலும் உருவ வழிபாடு நிறைந்து காணப்படுகிறது. படித்தவன், படிக்காதவன் என எல்லோரும் அதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். படித்தவனுக்கும் புத்தி இல்லை, படிக்காதவனுக்கும் புத்தி இல்லை. அந்த அளவுக்கு உருவ வழிபாட்டுப் பிசாசு அவர்களுடைய இருதயத்தில் குடிபுகுந்து அதை விடமுடியாதபடி அவர்களை ஆண்டுவருகிறான். அது எங்கு கொண்டு போய்விடும்? இங்குதான் கொண்டுவந்து விடும். ஒரு நாளும் நல்லது செய்யாமல் இதைவிடக் கேவலமானது வேறெதுவும் இல்லை என்று சொல்லுகிற அளவுக்குக் கேவலமான காரியங்களையெல்லாம் செய்ய வைக்கும். ஏசாயாவை வாசித்துப் பாருங்கள், உருவ வழிபாட்டைப் பற்றி எவ்வளவு தூரம் எழுதியிருக்கிறார். நீயே நடந்து போன மண்ணை எடுத்து ஒரு உருவத்தைச் செய்து அதற்கு முன்னால் விழுந்து வணங்குகிறாய், உனக்கு புத்தி இருக்கிறதா என்று கேட்கிறார். இதையேதான் பவுல் ரோமர் முதலாவது அதிகாரத்தில் சொல்லுகிறார். ஆண்டவர் படைத்த காரியங்களை வைத்து மிருகங்களை வழிபடுகிறார்கள், உனக்குப் புத்தி இருக்கிறதா என்று பவுல் கேட்கிறார்.
உருவ வழிபாட்டைப் போலக் கேவலமானது, கோரமானது, பாவமானது ஒன்றுமில்லை. இதனால்தான் ஆண்டவர் இஸ்ரவேலரை அதிகமாகத் தண்டித்தார். இஸ்ரவேலர்களே கடுங்கோபம் கொண்டு அதைப் பார்க்கச் சகிக்காமல் இருதயம் தாங்காமல் அந்த இடத்தில் இருந்து ஓடிப்போக வைத்தது அந்த மோவாப் அரசனுடைய செயல். அன்றைக்கு அவன் தப்பி இருக்கலாம், அவனுக்குப் பழையபடி அழிந்து போன நாடு மீண்டும் கிடைத்திருக்கலாம், தோல்வி அடையாமல் தப்பி இருக்கலாம். ஆனால் உலகமே பார்த்துப் பயப்படும்படியான ஒரு காரியத்தை அவன் செய்தான்.
உங்கள் ஊரில் உருவ வழிபாட்டை நீங்கள் தினமும் பார்க்கிறீர்கள். இதை வாசிக்கிற உங்களில் சிலபேர் இன்னும் உருவ வழிபாட்டைச் செய்து வரலாம். உங்களுடைய நிலை எவ்வளவு மோசமானது என்பதை நினைத்துப் பாருங்கள். இதை வாசிக்கிற கிறிஸ்தவர்கள் உருவ வழிபாடு செய்கிறவர்களுக்கு மிகவும் ஜெபம் பண்ணி அன்போடும் கனிவோடும் ஆண்டவரைப் பற்றி அவர்களுக்குச் சொல்லப்பாருங்கள். நீங்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளும்படியான எத்தனையோ பெரிய ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறதில்லையா? ஆகவே, உருவ வழிபாட்டைத் தொடர்கிறவர்களுக்கு நிச்சயமாக ஆண்டவரைப் பற்றிச் சொல்ல வேண்டும். உருவ வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு சொல்லுகிறேன், வாசித்த இந்தப் பகுதியை வாசித்த பிறகாவது திருந்தப் பாருங்கள். ஒருநாளும் உருவ வழிபாடு உங்களை ஒழுங்காக வாழவிடாது. அது மனிதனுடைய மனத்தைச் சிறைபிடித்து தப்பான காரியங்களைத் தொடர்ந்து செய்ய வைக்குமே தவிர உண்மையான விடுதலையை அது கொடுக்காது. உங்களை அது தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருக்கும். நீங்கள் அழிந்து போவதற்கு அதுதான் கடைசியான காரணமாக இருக்கும்.
ஆண்டவரை ஆராதிக்கிறவர்கள் எந்த உருவத்தையும் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்லுவதற்கு என்ன காரணம்? உருவ வழிபாடு கேவலமானது, மோசமானது, பயங்கரமானது அழிவைக் கொண்டு வரும். இயேசு படம் வைத்திருக்கிறவர்களும், சிலுவை வைத்திருக்கிறவர்களும் நன்றாக யோசித்துப் பாருங்கள். ஒருநாளும் அது உங்களுக்கு உதவாது. ஜீவனுள்ள தேவனை இறையாண்மையுள்ள ஆண்டவரை எந்தப் பொருள்களுக்குள்ளும் அடக்க முயற்சி செய்யக்கூடாது. அவர் எரிச்சலுள்ள தேவன். உருவ வழிபாட்டை விட்டு விலகுங்கள். உண்மையாக ஜீவிக்கிற தேவனை மனந்திரும்பி விசுவாசியுங்கள். உங்கள் பழைய வாழ்க்கைக்கு முடிவுகட்டிவிட்டு கர்த்தரை ஆராதனை செய்யுங்கள். அவருடைய வார்த்தைகளைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவர் உங்களுக்கு விடுதலையைத் தருவார். என்னிடத்தில் வருகிறவர்களை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன் என்று சொல்லியிருக்கிற இயேசு, உங்களைப் பாவங்களிலிருந்து விடுதலை செய்து தன்னுடைய குமாரர்களாக்கிக் கொள்வதற்காக தன்னுடைய ரத்தத்தை சிலுவையில் சிந்தி இருக்கிறார். அவர் உங்களுக்கு விடுதலையைக் கொடுப்பார், புத்தியைக் கொடுப்பார், ஞானமாய் வழிநடத்துவார். எவ்வளவு கோரமான விளைவுகளை உருவ வழிபாடு ஏற்படுத்துகிறது என்று தெரியுமா? இந்தவழியில் வாழ்ந்து நீங்கள் கெட்டுப் போக வேண்டுமா? இன்றைக்கே மனந்திரும்புங்கள். இயேசுவை விசுவாசியுங்கள். அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்!