இயேசு கிறிஸ்து

பிரசங்கத்தில் இறையியலின் அவசியத்தை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. இறையியல் இல்லாத பிரசங்கம் உயிரில்லாத உடலைப்போல; அது வெறும் எலும்புக்கூடு மட்டுமே.

தரமான பிரசங்கங்கள் தரமான இறையியலைக் கொண்டிருக்கும். இதை நான் சொல்வதற்குக் காரணம், இன்று சுவிசேஷப் பிரசங்கங்கள் எல்லாம், “இயேசுவை விசுவாசி, இயேசுவை விசுவாசி” என்ற அறைகூவலோடு நின்று விடுகின்றன. விசுவாசிப்பது என்றால் என்ன? என்று எவரும் விளக்குவதில்லை. அதைத் துல்லியமாகப் பிரசங்கிகள் வேதத்தில் இருந்து அறிந்துவைத்திருக்கவில்லை.

பவுல் ரோமர் 1:17ல் “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்கிறார். 3:28ல் “மனுஷன் . . . விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான்” என்கிறார். மாற்கு 1:15 சொல்கிறது, “. . . மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்” என்று. அப்போஸ்தலர் 16:31ல், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது . . . இரட்சிக்கப்படுவீர்கள்” என்றிருப்பதை வாசிக்கிறோம்.

இப்போதனைகள் சரியே. ஆனால், நாம் நீதிமானாக்கப்படுவதில், இரட்சிப்பை அடைவதில் விசுவாசம் எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம்மை இரட்சிப்பது நம்முடைய விசுவாசமா? என்று கேட்டால் அதற்கு வேதம் இல்லை என்றுதான் பதிலளிக்கிறது. இது உங்களுக்கு அதிர்ச்சியளிக்கும். அதற்காக விசுவாசம் தேவையற்றது என்று நான் கூறவில்லை; விசுவாசத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை. நம்மை இரட்சிப்பது விசுவாசம் இல்லை என்றுதான் சொல்ல வருகிறேன். நமது இரட்சிப்பில் நிச்சயம் விசுவாசம் பெரும் பங்கு வகிக்கிறது. அதில்லாமல் இரட்சிப்பு கிடைக்காது என்றும் சொல்வது அவசியம். என்ன இப்படிக் குழப்புகிறீர்களே என்று நினைக்கிறீர்களா? பொறுமையாக வாசியுங்கள்.

நம்மை இரட்சிப்பது எது? நிச்சயம் நம்முடைய விசுவாசம் அல்ல. நம்மை இரட்சிப்பது இயேசு கிறிஸ்துவும், அவருடைய சிலுவை மரணத்தின் பலன்களுந்தான். இதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். கிறிஸ்துவுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை விசுவாசத்திற்குக் கொடுத்துவிடக்கூடாது. கிறிஸ்துவின் நீதியையும், அவருடைய மரணத்தின் பலன்களையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பதுதான் விசுவாசம். அந்தவகையில் விசுவாசம் கிருபையின் ஊடகமாக, நியமமாக செயல்படுகிறது. அது ஒரு ஊடகம் மட்டுமே; அதுவும் கிருபையின் ஊடகம். அதிலில்லாமல் ஒருவர் கடவுளைக் காணமுடியாது, ஒருவர் இரட்சிக்கப்பட முடியாது. இருந்தபோதும் விசுவாசமல்ல நம்மை இரட்சிப்பது; கிறிஸ்துவே நம்மை இரட்சிக்கிறார்.

பவுல் எபேசியர் 2:8ல் சொல்கிறார், “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” என்று. அதாவது, கிருபையின் மூலம், விசுவாசத்தின் ஊடாக இரட்சிக்கப்பட்டீர்கள் என்று இதற்கு அர்த்தம். இதில், “ஆல்”, “ஊடாக” என்ற வார்த்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். விசுவாசம் ஒரு ஊடகம் மட்டுமே என்பதைப் பவுல் “விசுவாசத்தைக் கொண்டு” என்ற வார்த்தைப் பிரயோகத்தின் மூலமாக உணர்த்துகிறார். நம்மை இரட்சிக்கும் கிறிஸ்து, அந்த இரட்சிப்பை நாம் அடைய விசுவாசத்தை ஒரு ஊடகமாகக் கருவியாகப் பயன்படுத்துகிறார். அதனாலேயே பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று விளக்குகிறார். இங்கே விசுவாசம் தேவநீதியைக் கிறிஸ்துமூலம் நம்மிடம் கொண்டு சேர்க்கிறது என்று இதற்கு அர்த்தம்.

இரட்சிப்பை நாம் அடைவதில் விசுவாசம் கொண்டிருக்கும் பங்கை நாம் வேறெதற்கும் கொடுத்துவிடக்கூடாது. ரோமன் கத்தோலிக்க மதமும் அதைப்போன்ற மதங்களும் விசுவாசத்தின் இடத்தைக் கிரியைகளுக்குக் கொடுத்துவிடுகிறார்கள். அதுவே அவர்கள் விடும் பெருந்தவறு. கிறிஸ்து நமக்காக சம்பாதித்திருக்கும் நீதியை செத்த கிரியைகள் ஒருபோதும் நமக்கு அளித்துவிட முடியாது. கர்த்தர் கிருபையால் நமக்களிக்கும் “விசுவாசம்“ மட்டுமே அதை நாம் அடையச் செய்கிறது. அதனால்தான் வேதம் சுவிசேஷத்தை நாம் விசுவாசிக்க வேண்டும் என்றும், விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் என்றும், விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவோம் என்றும் விளக்குகிறது.

இதுபற்றி விளக்கமளிக்கும் டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் சொல்லுகிறார், “வேதம் எந்த இடத்திலும் நம்முடைய விசுவாசத்தினால் நாம் நீதிமானாக்கப்படுகிறோம் என்று சொல்லவில்லை. வேதம் எந்த இடத்திலும் நம்முடைய விசுவாசத்தின் காரணமாக நாம் நீதிமானாக்கப்படுகிறோம் என்றும் சொல்லவில்லை. அவ்விதமாக வேதம் போதிக்கவில்லை. வேதம் சொல்லுகிறது, நாம் விசுவாசத்தினால் அல்லது விசுவாசத்தின் ஊடாக நீதிமானாக்கப்படுகிறோம் என்று. விசுவாசம் கிறிஸ்துவின் நீதியை நாம் அடையுமாறு செய்யும் வெறும் கருவி மட்டுமே. விசுவாசம் நம்மை இரட்சிப்பதில்லை; நம்மை இரட்சிப்பது கிறிஸ்துவும் அவருடைய பரிபூரணமான சிலுவை மரணமுமே. . . . அவருடைய பரிபூரண வாழ்க்கையே நம்மை இரட்சிக்கிறது. நமக்காக அவர் பிதாவின் முன் தரிசனமாகிப் பரிந்துரையாடுவது நம்மை இரட்சிக்கிறது. கர்த்தர் நம்முடைய கணக்கில் கிறிஸ்துவின் நீதியைப் பதிவு செய்வது நம்மை இரட்சிக்கிறது. இந்த நீதியே நம்மை இரட்சிக்கிறது. விசுவாசம் அந்த நீதியை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும் கருவி மட்டுமே. அந்த நீதி முழுமுற்றாகக் கிறிஸ்துவைச் சார்ந்தது. என்னுடைய விசுவாசம் என்னுடைய நீதியல்ல, விசுவாசத்தை நான் ஒருபோதும் நீதியாக எண்ணி விளக்கமளிக்கக்கூடாது. இயேசு கிறிஸ்துவோடும் அவருடைய நீதியோடும் நம்மை இணைப்பதே விசுவாசம்.’

லொயிட் ஜோன்ஸ் தொடர்ந்து சொல்கிறார், “இதை இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், நாம் விசுவாசத்தைத் தனித்து நிற்கக்கூடியதொன்றாக எண்ணக்கூடாது. விசுவாசம் ஒருபோதும் தனியாக நிற்காது அல்லது ஒன்றோடும் சேராத நிலையில் இருக்காது. நாம் விசுவாசத்தை அதனுடைய இலக்கிலிருந்து ஒருபோதும் பிரிக்கக்கூடாது. விசுவாசம் எப்போதும் ஒரு இலக்கோடு இணைந்து காணப்படும். அந்த இலக்கு இயேசு கிறிஸ்துவும், அவருடைய பரிபூரண நீதியும். இதை எப்போதும் நினைவில் கொண்டிருந்தால் நீங்கள் இந்த விஷயத்தில் தவறு செய்ய வழியிருக்காது. அதனால் நாம் ஒருபோதும் நம்முடைய விசுவாசத்தைப் பற்றிப் பெருமை பாராட்டிக்கொள்ளக்கூடாது. விசுவாசம் நம்மை இரட்சிப்பதில்லை, அது ஒரு கருவி மட்டுமே.” (Romans, Martyn Lloyd Jones, An exposition of chapters 3:20-4:25, Atonement and Justification, Pg 120).

இப்போது புரிகிறதா, நம் இரட்சிப்பில் விசுவாசத்திற்கு இருக்கும் பங்கு என்னவென்று? சிலர் இந்தளவுக்கெல்லாம் சிந்திக்க வேண்டுமா என்பார்கள். வேதம் விளக்கும் சத்தியங்களை சிறிதளவும் அவற்றின் தன்மையை மீறிச் சிந்திப்பது கர்த்தருக்கெதிரான சிந்தனையாகிவிடும். ஆகவே, வேத சத்தியங்களை வேதம் விளக்கும் வகையில் மட்டுமே சிந்தித்துப் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் விளக்கவேண்டும். போலிப்போதனைகள் எப்படி உருவாகின்றன தெரியுமா? வேதம் விளக்குகின்ற வகையில் சிந்திக்கும் சோம்பேறித்தனத்தைக் கொண்டிருந்து மேலெழுந்தவாரியாக சிந்திப்பதால்தான். அத்தகைய பொறுப்பற்ற சிந்தனை நாம் சத்தியத்தைவிட்டு விலகிப்போகச் செய்துவிடும். இரட்சிப்பைப் பற்றிய போதனைகளை விளங்கிக்கொள்ளுவதில் நாம் அத்தகைய சோம்பேரித்தனத்தைக் கொண்டிருக்கக்கூடாது. நாம் கிறிஸ்துவின் நீதியை அடைவதற்குக் கருவியாக இருக்கும் விசுவாசத்தை இனியாவது அதற்குரிய இடத்தை மட்டும் கொடுப்பதில் கவனத்தோடிருங்கள்.


© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.