வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே! காலங்கள் வேகமாகக் கடந்து போய்க்கொண்டிருக்கின்றன. பத்திரிகை ஆரம்பித்து முப்பது வருடங்கள் கடந்துவிட்டன. சீர்திருத்த சத்தியங்களை ரேஷன் அரிசி போலக் கலப்படமில்லாமலும்,

எல்லாம் கலந்த சாம்பார் இறையியலை வாசகர்களுக்குப் படைக்காமலும், தனித்துவமுள்ள சீர்த்திருத்த சத்தியங்களை வரலாறு கண்டிருக்கும் விசுவாச அறிக்கைகள் மற்றும் வினாவிடைப் போதனைகளுக்கு சிறிதும் முரண்படாமலும், சீர்திருத்தவாத, பியூரிட்டன் பெரியவர்களின் போதனைகளோடும் நடைமுறைகளோடும் வேறுபட்டு நிற்காமலும், காலத்துக்கும் பண்பாட்டிற்கும், நவீன உத்திகளுக்கும் சிறிதும் இடங்கொடாமலும் சகல போதனைகளையும் இன்றுவரை படைத்தளித்துக் கொண்டிருக்கிறது திருமறைத்தீபம். அது கர்த்தரின் கிருபையால் மட்டுமே ஆகக்கூடிய செயல். அவருக்கே சகல மகிமையும்.

கல்வினித்துவ போதனைகளுக்கு (கிருபையின் போதனைகள்) மட்டும் முக்கியத்துவம் கொடுத்து (அதையும் அறைகுறையாகத் தெரிந்துவைத்திருந்து), சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் அறிந்திராத பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் கோட்பாடுகளை அதோடு திணித்து, கர்த்தரின் ஆராதனையை இசைக்கச்சேரியாகவும், தனிநபர் துதியாகவும் நடத்தும் ஒரு புதுவகைப் பாதையைக் காட்டி வரும் பச்சோந்தித்தனத்திற்கும் இதழ் ஒருபோதும் இடமளிக்கவில்லை; இடமளிக்கப்போவதுமில்லை. கர்த்தரின் உன்னதத் திட்டத்தில் அதிமுக்கிய இடத்தைப் பெறும் திருச்சபைக்கு முதலிடத்தை அளித்து, சீர்திருத்த திருச்சபைக் கோட்பாடுகளுக்கு எந்தவித பங்கமுமில்லாமல் அவற்றிற்கு விளக்கமளித்து வருவதோடு, திருமறைத்தீபப் பணியாளர்கள் அனைவரும், ஒருவர் தவறாமல் நடைமுறையில் திருச்சபை அங்கத்தவர்களாக இருந்து, திருச்சபைக்கு மதிப்பளித்து வாழ்கிறவர்களாகவும் இருந்து வருகிறோம். இதழையும், நம் நூல்களையும் விநியோகம் செய்கிறவர்களும் அதையே பின்பற்றி வருகின்றனர். இது நம்மிதழுக்குரிய தனித்துவம்; கர்த்தர் நமக்களித்திருக்கும் ஆசீர்வாதம்.

இந்த இதழில் தொடர்ந்து 2 இராஜாக்கள் நூலிலிருந்து மூன்று ஆக்கங்களைத் தந்திருக்கிறேன். அத்தோடு, இரட்சிப்பில் விசுவாசத்தின் பங்கு பற்றியும் விளக்கியிருக்கிறேன். இதழைத் தயாரிக்கத் துணைபுரிந்தவர்களுக்கு என் நன்றிகள்! இந்த இதழ் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கக் கர்த்தர் துணைபுரியட்டும். – ஆசிரியர்


© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.