வணக்கம் வாசகர்களே! இது இந்த வருடத்திற்கான முதலாவது இதழ். ஒவ்வொரு இதழையும் தயாரிக்க உதவி வந்திருக்கும் ஆண்டவர் இதைத் தயாரிக்கவும் உதவியிருக்கிறார்.
என்னோடு இணைந்து இந்தப் பணியில் ஆர்வத்தோடு உழைத்து வருகின்ற நண்பர்களுக்காக என் நன்றி! முக்கியமாக புது வருட வாழ்த்துக்களை எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். தேவன் இந்த வருடத்தில் நம்மெல்லோரையும் வழிநடத்தித் தன்னுடைய மகிமைக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதே என் ஜெபம்.
ஒன்றை நினைவுபடுத்தாமல் இருக்க முடியாது. திருமறைத்தீபத்தின் செயலி (Android App) இப்போது நல்ல முறையில் உருவாகி வாசகர்கள் அனைவரும் உங்களுடைய Android போனிலோ அல்லது Tablet டிலோ பயன்படுத்தக்கூடிய வசதியைச் செய்திருக்கிறோம். அதை நீங்கள் Google Play Store ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான விளம்பரத்தை இந்த இதழில் காணலாம். விளம்பரத்தில் காணப்படும் QR code ஐப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுவரை அதைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறவர்கள் அதுபற்றிய நல்ல கருத்துக்களையும், நன்றியையும் தெரிவித்திருக்கிறார்கள்.
இவ்விதழில் மூன்று ஆக்கங்கள் 2 இராஜாக்கள் நூலில் இருந்து கொடுக்கப்பட்ட பிரசங்கங்கள். மிகவும் அவசியமான காலத்திற்கேற்ற வசனப்பகுதிகள் அவை. பழைய ஏற்பாட்டுப் பகுதிகளில் இருந்து அநேக ஆவிக்குரிய பயன்பாடுகளையும், சுவிசேஷத்தையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும். இருந்தபோதும் பழைய ஏற்பாட்டை எவ்வாறு புரிந்துகொள்ளுவது என்பது தெரியாமல் அதிலிருந்து பெறக்கூடிய பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியாது. இதற்குத் துணைசெய்யுமுகவாகவே இவற்றை இதழில் வெளியிட்டு வருகிறோம். இவற்றை வாசித்துப் பயனடையுங்கள்.
இதழில் முதல் ஆக்கமாக, ஒரு புது வருட செய்தியளித்திருக்கிறேன். செய்தி வழமைக்கு மாறான செய்தியாக இருக்கிறதே என்று நினைப்பீர்கள். இதைத் தவிர எதை நாம் ஒருவருக்கொருவர் நினைவுபடுத்த முடியும்? அநேகரின் உழைப்பைத் தன்னில் தாங்கி இந்த இதழ் உங்கள் கையை வந்தடைந்திருக்கிறது. இந்தப் பணி தொடரவும், பணியாளர்கள் ஆர்வத்தோடுழைக்கவும் அவர்களை உங்கள் ஜெபத்தில் வையுங்கள். நன்றி. – ஆசிரியர்