வணக்கம் வாசகர்களே! இது இந்த வருடத்திற்கான இறுதி இதழ். நேரத்தோடு இதை முடித்து உங்கள் முன் வைக்கக் கர்த்தர் உதவியிருக்கிறார். இதற்காக உழைத்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.
ஆக்கங்களை எழுதியிருக்கும் என்னோடு ஆடியோ செய்திகளைப் பிரதி எடுத்துத் தந்திருக்கும் சிவாவிற்கும், இதழை வடிவமைப்பு செய்து, அட்டைப் படத்தைத் தேர்ந்தெடுத்து அச்சுக்குப் போகும்வரை உழைத்திருக்கும் பாஸ்டர் ஜேம்ஸுக்கும், இதழை சரிபார்ப்பதில் உதவியிருக்கும் பாலா, ரோஸ்லின் ஆகியோருக்கும் என்றும் போல் இன்றும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.
இவ்விதழில் இரண்டு ஆக்கங்கள் 2 இராஜாக்கள் நூலில் இருந்து கொடுக்கப்பட்ட பிரசங்கங்கள். பழைய ஏற்பாட்டில் இருந்து எவ்வாறு பிரசங்கம் செய்வது? என்பது அநேக பிரசங்கிகளுக்குத் தெரியாமல் இருக்கிறது. அதிலிருந்து வெறும் கதைகளையும், அதில் காணப்படும் நபர்களுடைய குணாதிசயங்களைப் பற்றியும், அதிலுள்ள வாக்குத்தத்த வசனங்களை ஆத்துமாக்களுக்குக் கொடுத்தும் வருவதே நம்மினத்துப் பிரசங்கிகளின் வழக்கம். பழைய ஏற்பாட்டு வரலாற்றுப் பின்னணியும், இறையியலும் அவர்களுக்குத் தெரியாததால் அதை எப்படிப் புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது. புதிய ஏற்பாட்டைவிட பழைய ஏற்பாடு புரிந்துகொள்ளக் கடினமானதுதான்; இருந்தாலும் அதை விளங்கிக்கொள்ள முடியாது என்று எண்ணக்கூடாது. இரண்டு ஏற்பாட்டையும் (உடன்படிக்கைகளையும்) கர்த்தர் தம்முடைய சித்தத்தை நாம் அறிந்துகொள்ளுவதற்காகவே தந்திருக்கிறார். பழைய ஏற்பாட்டை எவ்வாறு விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதையும், அதிலிருந்து எவ்வாறு பிரசங்கம் செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவற்றை இதழில் தந்திருக்கிறேன். இவை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்க கர்த்தர் உதவட்டும்.
இதழில் முதல் ஆக்கமாக, பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் அறிமுக ஆக்கம் வந்திருக்கிறது. ஒரு நூலின் பின்னணி தெரியாமல் அதைப் புரிந்துகொள்ள முடியாது; அதிலிருந்து பிரசங்கிக்கவும் முடியாது. ரோமர் நிருபத்திற்கான இந்த அறிமுகம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன். ஆழமானதும், ஆத்மீகப் பயனுள்ளதுமான வேதசத்தியங்களைத் தன்னி¢ல் தாங்கி இந்த இதழ் உங்கள் கையை வந்தடைந்திருக்கிறது. இந்தப் பணி தொடரவும், பணியாளர்களையும் உங்கள் ஜெபத்தில் வையுங்கள். நன்றி. – ஆசிரியர்