வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே! முதல் தடவையாக இதழை நேரத்தோடு பூர்த்தி செய்து உங்கள் முன் படைக்க முடியாமல் போய்விட்டது. சிறிது காலதாமதமானாலும் இதழை வித்தியாசமான முறையில் தயாரித்து உங்கள் முன் படைத்திருக்கிறோம்.

இந்த இதழில் ஒரு ஆக்கம் மட்டுமே புதிதாக எழுதப்பட்டது. ஏனைய ஆக்கங்கள் இக்கால சூழ்நிலையில் நீங்கள் மறுபடியும் வாசித்து சிந்திக்க வேண்டியவை.

தமிழினத்துக் கிறிஸ்தவத்தில் குடும்ப வாழ்க்கை கிறிஸ்தவ வேதத்தைப் பின்பற்றி இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தும்படி அமையாமல் சீரழிந்த பண்பாட்டு வழிமுறைகளுக்கு அடிமையாகியிருப்பதை அநேக தடவை இதழில் நான் விளக்கியிருக்கிறேன். இதைப் பண்பாட்டுப் பித்தர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். மெய்க் கிறிஸ்தவன் வாழ்க்கையின் அனைத்துப் பகுதியிலும் கிறிஸ்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற மனநிலையைக் கொண்டிருப்பதால் கிறிஸ்தவ வேதபோதனைகளின்படி குடும்ப வாழ்க்கையை நடத்தப் பெருமுயற்சி செய்வான். அத்தகைய மெய்க்கிறிஸ்தவர்களின் தொகை நம்மினத்தில் அருகிக் காணப்படுகிறது. அத்தோடு திருச்சபைகளும் பண்பாட்டிற்கு முக்கியத்துவமளித்து கிறிஸ்தவர்களின் திருமணத்தை அவ்வழியில் போவதற்கே வழிநடத்தி வருகிறார்கள். இதனால் சீர்திருத்த கிறிஸ்தவம் நம்மினத்தில் காலூன்றி நிலைத்திருப்பது கல்லில் நாருரிப்பது போன்ற கடுமையான பணி.

நம் பண்பாட்டில் ஆணாதிக்கம் (male chauvinism) வேறு இனங்களில் இல்லாதவகையில் ஊறிப் போயிருக்கின்றது. அதனால் ஆண்களை நம் பண்பாடு தலையில் தூக்கிவைத்து ஆடுவதில் ஆச்சரியமில்லை, பெண்ணுக்கு நம் பண்பாட்டில் இரண்டாவது இடம் மட்டுமே. இதற்கு விதிவிலக்குகள் இருந்துவிடலாம். இருந்தாலும் பொதுவாக ஆணின் கையிலேயே ஆதிக்கம். இந்த ஆணாதிக்கத்தின் அத்துமீறலால் பெண்ணைத் தாழ்வாக நடத்துவதும், அவளுடைய ஆசாபாசங்களுக்கு இடங்கொடுக்காமல் இருப்பதும், மனைவியின் பேச்சுக்கு மதிப்புக்கொடுக்காமல் போவதும், அப்படிப் பேசுவதைத் தனக்கு இழைக்கப்பட்ட அவமானமாகக் (Insult) கணவன் கருதுவதும், இதற்கெல்லாம் மேலாக மனைவியைத் திட்டுவதும், கைநீட்டி அடிப்பதும் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் பொதுவாகக் காணப்படும் வைரஸாக இருக்கிறது. இதை உணர்த்தி, கிறிஸ்தவ குடும்பத்தில் காணப்பட வேண்டிய வேத இலக்கணங்களை விளக்கும் பல ஆக்கங்களை உள்ளடக்கி இந்த இதழ் குடும்ப இதழாக உங்கள் கைக்கு வந்திருக்கிறது. வாசித்து சிந்தியுங்கள். நன்றி. – ஆசிரியர்


© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.